3/31/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 58 & 59)

எபிசோடு - 58 (29.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
நாதனின் சஷ்டியப்தபூர்த்தி காட்சிகளை டிவிடியில் பார்த்து எல்லோரும் குதூகலத்துடன் ஒருவரை ஒருவர் கலாய்க்கிறார்கள். அசோக் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வதை பார்த்த சோவின் நண்பர் அதென்ன சாஷ்டாங்க நமஸ்காரம் என கேட்க, சோ விடை கூற ஆரம்பிக்கிறார்.

அஷ்டாங்க நமஸ்காரம்: தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புக்களும் பூமியில் படும்படி வணங்குதல். "என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை. எல்லாம் உன் செயல்” என்று இறைவனை சரணாகதி அடைவதே சாஷ்டாங்க நமஸ்காரத்தின் நோக்கமாகும்.

பஞ்சஅங்க நமஸ்காரம்: தலை, கைகள், முழந்தாள் ஆகிய அங்கங்கள் மட்டும் தரையில் படும் விதத்தில் வழிபாடு செய்வது (முக்கியமாக பெண்களுக்கு, ஆனால் ஆண்களும் செய்யலாம் என சோ கூறுகிறார்). இந்த நமஸ்காரத்தை சுந்தரமூர்த்தி நாயனார் செய்ததாக சேக்கிழாரின் பெரிய புராணத்தில் வருவதாக மாஹாபெரியவா கூறியுள்ளார் என்றும் சோ சொல்கிறார்.

வேம்பு சாஸ்திரிகளை பார்க்க அவரது சம்பந்தி சிகாமணி முதலியார் வருகிறார். வேம்பு வீட்டை காலி செய்ய வேண்டிய நிலையில் இருப்பதால் தன் வீட்டுக்கே வேம்புவின் குடும்பத்தினர் வரலாமென்று அவர் சொல்கிறார். ஆஃபருக்கு நன்றி தெரிவித்த வேம்பு அது சரியாக வராது எனவும், வேறு வீடு பார்க்க தாங்கள் முயற்சிப்பதாகவும் அப்படி ஒன்றும் தகையவில்லை என்றால் அவரை தொடர்பு கொள்வதாகவும் கூற அவரும் விடை பெற்று செல்கிறாள். அதற்குள் வேம்புவின் மனைவி சுப்புலட்சுமிக்கு மகள் ஜயந்தியிடமிருந்து ஃபோன் வருகிறது. தன் மாமனார் சொன்னதற்காகவெல்லாம் வேம்பு குடும்பத்தினர் அங்கு வரவேண்டாமென அவள் கறாராக கூறி விடுகிறாள். “நம்ம பொண்ணு சுபாவத்தை புரிஞ்சுக்காம இந்த சம்பந்தி வெகுளியாக இருக்கிறாரே என சுப்புலட்சுமி அங்கலாய்க்கிறாள். வேம்பு தன் பெண்ணை ஃபோனில் கூப்பிட்டு அவளை ஒரு பிடி பிடிக்கிறார். என்ன ஆனாலும் தாங்கள் அவள் வீட்டுக்கு வரமாட்டோம் என்று வேறு சூளுரைக்கிறார்.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு போகலாம் என வேம்புவுக்கு அவர் தமக்கை ஆலோசனை சொல்ல, அவர் அதையும் நிராகரிக்கிறார்.

கைலாசபுரி தொகுதிக்கு இடைதேர்தல் வர காலஞ்சென்ற வையாபுரியின் சகோதரர் (இருவரும் இரட்டை பிறவிகள், ஆகவே அதே ஆக்டர்) தான் அங்கு நிற்க கட்சியின் டிக்கெட்டை பெறுகிறார். அந்த கட்சி அத்தொகுதியில் எப்போதுமே ஜெயித்ததில்லை என்றும், அப்படி ஜெயிக்க வேண்டுமானால் அங்கு பெரும்பான்மையில் இருக்கும் பிராமணர்கள் ஆதரவு வேண்டுமென்றும் அங்கு வரும் சிங்காரம் ஒரு பிட்டையை போட அந்த அரசியல்வாதி கலக்கமடைகிறார். மேலும் அசோக் தனது செயல்பாடுகளால் அங்கு நல்ல பெயர் பெற்றிருப்பதாகவும், அவன் சொன்னால் பிராமணர்கள் ஆதரவு கிடைக்கும் என இன்னொரு திரியை அவன் கொளுத்திப்போட அரசியல்வாதி மேலும் ஆர்வமாகிறார். அவனுக்கான விலையை கொடுத்து அவனை வாங்குவதாக கூற, சிங்காரமோ அசோகரை எல்லாம் விலைக்கு வாங்க முடியாது எனக்கூறுகிறான்.

கிருபாவின் தம்பி ஜட்ஜ் வீட்டுக்கு போய் தன் வேலைக்கு சிபாரிசு செய்யும்படி கேட்டிருக்கிறான். அதை அறிந்த கிருபா தன் மாமனாரிடம் செல்லும் முன்னால் தன்னை கேட்டிருக்க வேண்டும் என கோபப்படுகிறான். சாம்புவும் செல்லம்மாவும் வந்து கிருபாவை சமாதானம் செய்தாலும் அவன் கேட்கவில்லை. பிரியாவின் சீமந்தத்தை அவர்கள்தான் நடத்தியிருக்க வேண்டும் என்பதையும், ஆனால் அதை ஜ்ட்ஜ் வீட்டினர்தான் செய்ததையும் சுட்டிக் காட்டி அதனால் தன் மானமே போய் விட்டது என கோபப்படுகிறான். சாம்பு மனம் கலங்குகிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 59 (30.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
ாதன் சஷ்டியப்த பூர்த்தி டிவிடியை அவருக்கு திருப்பிக் கொடுக்க அசோக் வீட்டுக்கு வருகிறான். பேச்சுவாக்கில் நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்னும் சித்தர் பாடல் பற்றி பேச்சு வருகிறது. அப்பாட்டின் உண்மையான பொருளை சோ விளக்குகிறார்.

கடுவளி சித்தர் என்று ஒரு சித்தர் பாடிய பாடல் இது.

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல்தான். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக கூறுகிறார் என சோ எடுத்துரைக்கிறார்.

மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப் பட்டு இருக்கிறது. இங்கே படைக்கும் கடவுள் குயவன் என்று அழைக்கப்படுகிறான். ஜீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று "நா + லாறு மாதமாய்க்" அதாவது பத்து மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான்.

இப்போது ஜீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் குயவன் அதை செய்து கொடுத்த்திருக்கிறான்.

ஆனால் அது கிடைத்தவுடன் ஆண்டி என்ன செய்கிறான்? கண் மண் தெரியாமல் கூத்தாடுகிறான், தோண்டியை போட்டு உடைக்கிறான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை, தோண்டியை தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.

ஆகவே, ஜீவாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று இருக்கிறது. அப்படிப் பெற்ற உடலை தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை வெளிப்படுத்துகின்றார் கடுவளி சித்தர். ஆனால் சாமான்யமாக பார்த்தால் அது ஒரு நையாண்டிப் பாடலே. இம்மாதிரி பல சித்தர்கள் உண்டு. அதே போல திருமூலரும் பாடியுள்ளார்:
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாருமின்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான்பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே! இதில் பசு என நேரடியாக பொருள் கொள்ளலாகாது. அவை ஐம்புலன்கள். அவற்றை அடக்குவது பற்றித்தான் பேச்சு.

அசோக் நாதனுக்கு உடல் குளிர்ச்சிக்கு ஸ்படிக மாலை தருகிறான். அவரும் நன்றியுடன் வாங்கிக் கொள்கிறார்.

சாரியாரும் அசோக்கும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அசோக்கிடம் சாரியார் அவனது தந்தையின் உடல்நலம் பற்றி விசாரிக்கிறார். பிறகு கைலாஷ் நகர் வாசிகள் அசோக்குக்கு அவன் வேதபாடசாலை உருவாக்கியதை பாராட்டும் வகையில் அவனுக்கு வேதபுருஷ் என்னும் பட்டம் தருவதாக உத்தேசித்ததை கூறுகிறார். மரியாதையுடன், அதே சமயம் உறுதியுடன் அசோக் அவரிடம் இந்த பட்டம் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறிவிட்டு செல்கிறான்.

இங்கு டோண்டு ராகவன் தரப்பிலிருந்து சில வார்த்தைகள். அசோக்கின் முன்னேற்றம் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. என்னதான் இருந்தாலும் அவன் வசிஷ்டர் அல்லவா? முழு ஈஸ்வர கிருபை அவனுக்கு உண்டல்லவா? வேறு என்னத்தான் இங்கு எதிர்பார்க்க முடியும். பாராட்டுகளையும் வசைகளையும் அவன் ஒரே பாவத்தில் எதிர்கொள்கிறான். விளாம்பழ ஓட்டில் உள்ள பழம், தாமரை இலைத் தண்ணீர் ஆகியவற்றுடன் அவனை ஒப்பிட முடியும்.

வசுமதியின் உறவினன் பிச்சுமணி இப்போதெல்லாம் நாதன் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவருக்காக வேலைகள் பல செய்து கொடுக்கிறான். அதற்காக அவனது அக்காவும் அத்திம்பேரும் அவனை குறை கூறுகின்றனர்.

பர்வதத்துக்கு உமா பற்றி திடீரென ஒரு கெட்ட கனவு வருகிறது. அவள் அழுதுக் கொண்டே தன்னிடம் வருவதாக அவள் கனவு காண அலறி அடித்துக் கொண்டு எழுந்திருக்கிறாள். நீலகண்டன் அவளுக்கு ஆறுதல் சொல்லி நெற்றியில் விபூதி பூசுகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சகபதிவாளர்களே, உங்களுக்கு வேண்டியது என்ன?

இது ஒரு மீள்பதிவு. இதற்கு காரணமே இப்போது பதிவர் ருத்ரனுடன் நடக்கும் கருத்து மோதலே. நான் எதிர்ப்பர்த்தது போலவே பார்ப்பனீயம் என்னு வார்த்தையை உயர்சாதீயத்துக்காக பிரயோகிக்கின்றனர். அவ்வப்போது ஆஷாடபூதித் தனமான விளக்கங்கள் வேறு, அதாவது பார்ப்பனீயம் என்பது பார்ப்பனர்களை மட்டும் குறிப்பிடவில்லை, மற்ற உயர்சாதியினர் செய்யும் வன்கொடுமையையும் குறிக்கிறது என்று. நான் கேட்கிறேன், அப்புறம் எந்த மயித்துக்குன்னு பார்ப்பனீயம் என்னும் வார்த்தையை பிரயோக்கிக்கிறீர்கள்? உயர் சாதீயம் எனச் சொல்லாமல் உங்களைத் தடுப்பது எது? ஒரு கலைச்சொல் இம்மாதிரி தவறான பொருள் தரும் என்றால் அதை சரியான சொல்லால் ரிப்ளேஸ் செய்வதுதானே அறிவியல் ஒத்த செயல்? ஆனால் செய்ய மாட்டார்கள். நான் சொன்னது போலவே பார்ப்பனீயம் எனச் சொல்லுவது பார்ப்பனர்களை இழிவுபடுத்துவதே என்பதை வினவு, ருத்திரன படித்த வகையறாக்கள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றனர்.

இப்போது ஒரிஜினல் பதிவைப் பார்ப்போமா?

சகபதிவாளர்களே, உங்களுக்கு வேண்டியது என்ன? தலித்துகள் மேல் வன்கொடுமையை நிறுத்துவதா அல்லது எல்லாவற்றுக்கும் பார்ப்பனர் மேல் பழியைப் போட்டு வன்கொடுமை செய்யும் ஏனைய உயர்சாதியினரை மூடி மறைப்பதா என்பதை உங்களுக்குள்ளேயே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ஒரு பதிவர் எழுதுகிறார் "இது "சூத்திர ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?" என்று. அவருக்கு நான் கூறுவேன், ஐயா நடப்பது என்னவோ சூத்திரர் ஆட்சிதான். ஏனெனில் முதல்வர் தன்னை சூத்திரர் என்றுதான் கூறிக் கொள்கிறார். ஆகவே உங்களுக்கு ஏன் சந்தேகம் வரவேண்டும் இந்த விஷயத்தில்? உங்களது அப்பதிவிலேயே வன்கொடுமை செய்வது பார்ப்பனர் இல்லை தேவர்களே என்றுதான். அப்படியிருக்க ஏன் பார்ப்பன சாதியை இழுக்க வேண்டும்?

உண்மை கூறப்போனால் பார்ப்பனர்களும் வன்கொடுமைக்கு எதிரானவரே. இரட்டைக் குவளை கொடுமையை எதிர்த்து நான் பதிவும் போட்டுள்ளேன். என்ன, அதற்கு எதிர்ப்பார்த்த ஆதரவு கிட்டவில்லை. அதில் நான் தலித்துகள் தங்கள் சுயமரியாதையைப் பேணுமாறு ஆலோசனை கூறி வழியையும் கூறினேன். விடுங்கள், அது இங்கு வேண்டாம்.

சிலர் கூறலாம் நாங்கள் பார்ப்பனியத்தைத்தான் எதிர்க்கிறோம், பார்ப்பனரை அல்ல. பார்ப்பனியம் என்று உயர்சாதீயத்தையே கூறுகின்றனர். உயர்ச்சாதீயம் என்ற ஒரு தனிச்சொல் இருக்கும்போது தேவையற்று பார்ப்பனீயம் என்று பேசி பார்ப்பனரை ஏன் இழிவுபடுத்த வேண்டும்? இப்போது என்ன நடக்கிறது என்றால் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட பார்ப்பனருக்கு மோட்டிவேஷன் இல்லாமல் போகிறது. என்ன வேண்டுமானாலும் அடித்து கொள்ளுங்கள் நாங்கள் ஓரமாக நிற்கிறோம் என்ற மனநிலையில்தான் அவர்கள் உள்ளனர்.

இதே போல ஒரு பதிவர் தமிழிசைக்கு ஆதரவாக பதிவுபோடும்போது தேவையின்றி "தமிழில் பாட மறுக்கும் பாப்பாத்திகள்" என்று கொச்சையான தலைப்பை வைத்து பார்ப்பனரை இப்போதைய நிலைக்கு பொறுப்பாக்க முயற்சி செய்ததில், தமிழிசைக்கு ஆதரவு தெரிவிக்கும் குரல்கள் அப்பதிவில் அந்த அளவுக்கு பலமிழந்தன.

ஏதோ என்னால் ஆனது, ஊதற சங்கை ஊதியாயிற்று.


இதற்காகவே நான் வினவு பதிவுக்கு போவதை விட்டு விட்டேன். நண்பர் வால்பையன் நான் எவ்வளவு சொல்லியும் பார்ப்பனீயம் என்று இருப்பதாலேயே அவரது பல பதிவுகளுக்கு செல்வதை நிறுத்தினேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/30/2010

பதிவர் குழுமம் - குழந்தைக்கு பல் முளைக்கும் பிரச்சினைகள்

ஒரு முயற்சிக்கு முதலில் வரும் தடைகளை குறிக்க ஆங்கிலத்தில் teething troubles என்பார்கள். பல் முளைக்கும்போது குழந்தைக்கு பேதியாகும், காரணம் என்னவென்றால் அது கையில் கிடைப்பதையெல்லாம் வாயில் போட்டு கடிக்க முயல்வதே. இந்த வலைப்பதிவாளர்களின் குழுமம் சம்பந்தப்பட்ட சலசலப்புகள் எனக்கு அதைத்தான் நினைவுபடுத்துகின்றன.

எனது இது சம்பந்தப்பட்ட பதிவையும் சேர்த்து இது பற்றி பல பதிவுகள் வந்து விட்டன. முதல் வரிசையில் உட்கார்ந்தவர் எல்லோருமே பார்ப்பனர் என்ற பொறாமை பிடித்த உள்ளடக்கம் கூட ஒரு பதிவுக்கு உண்டு. அப்பதிவு அதை எழுதியவர் பார்ப்பனர்களை வெறுப்பவர் என்ற ஒரு தகவலை விட வேறு என்ன உருப்படியான தகவல் தந்தது என்னவென்றால், அவரது கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்த கருத்து கந்தசாமிகள், மனநலமில்லாத மருத்துவர் ஆகியோரது பார்ப்பன வெறுப்பு அவர்களிடம் வேறு விஷயங்களை பகுத்தறிவுடன் பேசும் திறனை பாதிக்கிறது என்பதுதான்.

பிறகு வருகிறார் உண்மை தமிழன். அவரது பதிவில் சோகம் இழையோடுகிறது. வருத்தமாகத்தான் இருக்கிறது. இம்மாதிரியான எல்லா முயற்சிகளுக்குமே இப்படித்தான் ஆரம்பத்தில் அதைரியப்படுத்தும் போக்குகள் வரும். அதற்காகவெல்லாம் கண்டு மனம் தளரக்கூடாது என்று மட்டுமே நான் கூறுவேன்.

அவர் பதிவிலிருந்து சில வரிகள்:

அடுத்தது அந்த டிராப்ட் பேப்பர். தண்டோரா அண்ணனிடம் "நான் ஒரு டிராப்ட்டை வடிவமைப்பு அனுப்புகிறேன். பாருங்கள்.. பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.. ஏதேனும் திருத்தம் இருந்தால் திருத்திக் கொள்ளலாம்.." என்றேன். கேபிளிடமும் இதையே சொன்னேன். சரி என்றார்கள். ஆனால் என் நேரம் பாருங்கள்.. என் அப்பன் முருகன் இடையில் புகுந்து விளையாடிவிட்டான்.

நான் அனுப்பிய பாண்ட் தண்டோரா அண்ணன் சிஸ்டத்தில் ஓப்பன் ஆகவே இல்லை.. கேபிளுக்கும் இதே கதிதான்.. சரி.. சூர்யாவிடமாவது கருத்துக் கேட்கலாம் என்று சொல்லி அவருக்கும் அனுப்பி வைத்தேன். அவரும் இதையேதான் சொன்னார்.. நேரமும் கடைசி நாள் என்பதாகிவிட்டதால் "நீங்க பிரிண்ட் அவுட் எடுத்திட்டே வந்திருங்க.. பார்த்துக்கலாம்.." என்று தண்டோரா அண்ணனும், கேபிளும் சொல்ல.. எடுத்து வந்தேன்.


போகிறபோக்கில் தெரியாமல்தான் கேட்கிறேன். ஏன் இந்த பிரச்சினை வர வேண்டும்? ஏன் யூனிகோட் லதாவில் அடிக்கக் கூடாது? நீங்கள் தட்டச்சிடும்போது பார்த்திருக்கிறேன். ஏதோ ஒரு பழைய சிஸ்டத்தை கடைபிடிக்கிறீர்கள் என்று (பெயர் மறந்து விட்டது). ஏன் இந்த கஷ்டங்கள்? இகலப்பை இல்லையா? இதெல்லாம் இங்கு ஏன் கேட்கிறேன் என்றால், மேலே சொன்ன கஷ்டத்தால்தான்.

உண்மை தமிழன் சொன்ன மற்ற சில பாயிண்டுகள்:
நான் முதலில் மைக்கை பிடித்தவுடனேயே தெளிவாகச் சொன்னேன். "சங்கம் ஆரம்பித்தால் என்னென்ன செய்ய வேண்டும்..? எப்படியெல்லாம் செயல்பட வேண்டும்..? யார், யாரெல்லாம் இருக்க வேண்டும்..? அதற்கான அரசு வழிமுறைகள் என்னென்ன..? அதை நாம் எப்படி பின்பற்றுவது.. இதைத்தான் இந்தக் கேள்விகளில் கேட்கப்பட்டிருக்கிறது. பதிவர்கள் தயவு செய்து இந்தக் கேள்விகளுக்கு தங்களது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்குமாறுதான்" நான் கேட்டுக் கொண்டேன்.

"நமக்காக ஒரு அமைப்பை ஆரம்பிக்கலாமா? வேண்டாமா?" என்று நான் கேட்பதாக இருந்தால், எதற்கு இப்படி ஒரு வில்லங்கத்தை தட்டச்சு செய்து கொண்டு வர வேண்டும்..? ஒரு அமைப்பு நமக்கு வேண்டும் என்று நினைத்துதான் நான் அதனை கொண்டு வந்து கொடுத்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது..? அமைப்பு ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்பதுதான் அன்றைய அஜெண்டா என்றால் கடைசி நேரத்தில் அண்ணன் ஞானி கேட்டதுபோல் கையைத் தூக்கும்படி நான் முதலிலேயே கேட்டிருப்பனே..?

மேதகு சிவராமன் எங்களது பதிவுகளைப் படித்ததாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் என்ன, எப்படி படித்தார் என்று எனக்குத் தெரியவில்லை.

அமைப்பைத் துவக்க ஆலோசனைக்காகத்தான் அழைத்திருந்தோம். அமைப்பாக உருவெடுக்க எங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை ஒரு வரியில் சொல்லி முடித்திருக்கலாம். தேவையில்லாமல் நாங்கள் ஏதோ திட்டமிட்டே முன்பே சதி வேலை செய்து அமைப்பை உருவாக்கிவிட்டு பின்பு வெறும் கண்துடைப்புக்காக அவர்களை அழைத்ததாக கதையைத் திரித்துவிட்டார் மேதகு சிவராமன்.

வலையுலகத்திற்கு அமைப்பு எதற்காக இப்போது தேவை என்று இந்த மேதகுதான் கேட்டார். வெறும் இரண்டு பேர் மட்டுமே சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி மாதந்தோறும் ஒரு திரைப்படத்தினை காட்டும்போது, கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 5000 வலைப்பதிவர்கள் இயங்கி வரும் இந்தத் தமிழ்ச் சூழலில் அவர்களை வைத்து ஒரு அமைப்பாக்கி என்னவெல்லாம் செய்யலாம் என்று ஏன் இந்த பின்னவீனத்துவ ஐயாவுக்குத் தோணவில்லை என்பது எனக்குப் புரியவே இல்லை.

எதற்குத் தேவை என்று கேட்டதற்குக்கூட நான் ஒரு இடத்தில் பதில் சொன்னேன்..

அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இணையத்தில் எழுதும் ஆர்வமுள்ளவர்களை நாம் வலையுலகத்திற்குள் இழுக்கலாம்.

அவர்களுக்கு வலையுலகத்தை அறிமுகப்படுத்தலாம்.

ஒரு அலுவலகம் அமைத்து அங்கே வலையுலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு நாமே சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

மாநகராட்சி பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கு அமைப்பின் சார்பாக வலைப்பதிவர் பட்டறையை நடத்தலாம்.

வலையுலகத்திற்குள் பலரும் வருவதால் அவர்களுக்கு நிச்சயமாக பலன்கள் கிடைக்கும். நட்புகள் கிடைக்கும்.. இதனால் எனக்குக் கிடைத்ததுபோல் நல்லவைகளும் நிச்சயம் நடக்கும்..

என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன்.

இதையெல்லாம் தனி நபர்களாக இருந்து செய்கின்றபோது பல்வேறு விமர்சனங்களும் பணச்சிக்கல்களும் ஏற்படக்கூடிய சூழல் உண்டு. ஒரு அமைப்பின்கீழ் என்றால் உடனடியாக எங்கே வேண்டுமானாலும் அனுமதி கிடைக்கும்.. ஏன் ஸ்பான்ஸர்ஷிப்கூட உடனடியாக கிடைக்கும். அதனை வைத்து நாம் நடத்த வேண்டியவைகளை பெரிய அளவில் பேர் சொல்லக் கூடிய அளவுக்கு நடத்தலாமே.. தனி நபர்களாக இருக்கின்றபோது இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்..

ஒரு அமைப்பின் கீழ் இருந்தால் நாளை எந்தவொரு அதிகார வர்க்கத்திடமும் நாம் தைரியமாகப் பேசலாம். குரல் கொடுக்கலாம். தனி நபர்களாக போய் பேசுவதற்கும், அமைப்பின் பெயரில் போய் பேசுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

இனி வரும் காலங்களில் அரசும், ஆட்சி நிர்வாகமும், அரசியல் சட்டமும் வலையுலகத்தினரை பத்திரிகையாளர்களில் ஒருவராக அங்கீகரிக்காவிட்டால் பலவித பிரச்சினைகள் பதிவர்களுக்குத்தான் ஏற்படப் போகிறது. ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட் வழக்கொன்றில் "வலைத்தளங்களில் யார் என்ன எழுதினாலும் அதற்கு அவரே பொறுப்பு.. அது குற்றச்சாட்டாக இருந்தாலும், அவதூறாக இருந்தாலும், வெளியில் இருந்து எடுத்துக் கையாண்டதாக இருந்தாலும் சரி.. அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.." என்று தீர்ப்பு சொல்லியுள்ளது.

இது எப்படி இருக்கிறது எனில், ஒரு பத்திரிகையில் ஒரு அரசியல்வாதியை ஊழல்வாதியாக எழுதியிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தச் செய்தியை நீங்கள் உங்களது பதிவில் காப்பி செய்து வெளியிட்டீர்களேயானால் அந்த ஊழல் அரசியல்வாதி உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அந்த அரசியல்வாதி ஊழல் செய்தார் என்பதை நீங்கள்தான் நிரூபித்தாக வேண்டும். அந்தப் பத்திரிகையில் இருந்ததை நான் காப்பி செய்தேன் என்று சொல்லி ஜகா வாங்க முடியாது.

இதே செய்தி பத்திரிகையில் வந்திருந்தால் கட்டுரையை எழுதிய கட்டுரையாளர் நமது நிருபர் என்று எழுதியிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அப்போது அது பத்திரிகையின் ஆசிரியரைத்தான் தாக்கும். ஆனால் எந்தவொரு அரசியல்வாதிகளும் இப்போதைய நிலையில் பத்திரிகைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து மறுப்பு அறிக்கை போடச் சொல்வதோடு விட்டு விடுவார்கள். ஆனால் நமக்கு என்ன பாதுகாப்பு..?

அதற்காக "அதையெல்லாம் ஏன் எழுதுற.. போய் நாலு சினிமா விமர்சனம் எழுதிட்டு போய்க்கிட்டே இரு"ன்னு சொல்லாதீங்க.. யோசித்துப் பாருங்கள்.. எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றுதான் இதனை சொல்கிறேன். அதற்காக இதுவே முக்கியக் காரணமும் அல்ல.. முக்கியக் காரணங்கள் நான் மேலே சொன்னவைகள் மட்டுமே..

ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், மீன்பாடி ஓட்டுநர்கள் சங்கம், டிரைகிளீனர்ஸ் சங்கம் என்று அவர்கள்கூட ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு தங்களது தொழிலுக்கு எந்தவிதத்தில் யாரால் பங்கம் வந்தாலும் அதனை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள் அமைப்பின் சார்பில்.. யாரும் தனி நபராகக் குரல் கொடுப்பதில்லை. நமக்குத்தான் பிரச்சினையே இல்லையே.. நாமதான் ஜம்முன்னு மகாராஜா மாதிரி இருக்கோம்னு சொன்னால் எப்படி..?

கிட்டத்தட்ட 7 அல்லது 8 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வலைப்பதிவுகள் அறிமுகமாகி அதில் தலைநகரான சென்னையில் மட்டும் முகம் தெரிந்து வெறும் 60 பதிவர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்..? சென்னையில் இருக்கின்ற வார்டுகளின் எண்ணிக்கையே நூற்றுக்கும் மேல்..

பலரும் வாசிக்கிறார்கள்.. ஆனால் எழுதத் தயங்குகிறார்கள். அவர்களை நாம் எப்படி இழுப்பது..? இப்படி பொதுச் சேவை செய்வதற்கு யாருக்கு, எத்தனை பேருக்கு இங்கு இப்போது நேரம் இருக்கிறது..? நாம் மட்டுமே போதுமா..? நாம் இந்த இடத்தில் இருந்து விலகும்போது நமக்குப் பின்பாக ஒரு ஐயாயிரம் பேராவது சென்னையில் இருக்க வேண்டாமா..? நாம் நினைத்தால் முடியும்.. மனம் வைத்தால் முடியும்..

அமைப்பை உருவாக்குவோம்.. சந்தா உருவாக்குவோம்.. அவரவர் முடிந்த அளவுக்கு பணத்தைக் கொடுப்போம்.. நிதியினை மேம்படுத்துவோம்.. அதனை முறைப்படி பராமரிப்போம். பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்போம். வலைப்பதிவுகளை ஆரம்பிக்க நினைப்போர், எழுத நினைப்போர் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். அழையுங்கள் என்று நாம் அவர்களை அழைப்போம்.

அழைப்பு விடுத்தவர்களை சங்க அல்லது அமைப்பின் அலுவலகத்தில் ஒரு நாளில் பயிற்சி கொடுத்தனுப்புவோம்.. அவர்களது சந்தேகங்களை தீர்த்து வைப்போம்.. மாதத்தில் 15 நாட்களில் ஒரு நாளைக்கு ஒருவர் என்றால்கூட மாதம் 15 பேர், வருடத்திற்கு 180 பேரை நமது அலுவலகத்தின் வாயிலாகவே நாம் உருவாக்கலாமே..?

இதன் பின் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது தனியார் கல்லூரியில் அமைப்பின் சார்பில் பேசி பட்டறைகளை நடத்தினால் எத்தனை பேரை நாம் வலையுலகத்திற்குள் இழுக்க முடியும்..?

இதற்கு முதலில் என்ன தேவை..? ஒரு அலுவலகம்.. போதுமான கணினிகள்.. சொல்லித் தருவதற்கு ஒரு நபர்.. முதலில் அமைப்பில் இருப்பவர்கள் முறை வைத்து சொல்லித் தருவோம். பின்பு இதற்கென்றே தனியாக ஒருவரை சம்பளத்திற்கு நியமித்து செய்வோம்.. ஏன் முடியாது..?

எடுத்த எடுப்பிலேயே ஏன்.. எதுக்கு.. என்று கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தால் அடுத்தக் கட்டத்திற்கு எப்படிச் செல்வது..?

இப்படியே மாதந்தோறும் நமக்கு நாமே ஒரு திரைப்படத்தைப் பார்த்து ஒப்பேத்திவிட்டு.. சென்னை வரும் பதிவர்களுக்கு வரவேற்பு கொடுத்து அவர்களை மனம் குளிரவைத்து அனுப்பிவிட்டு டாட்டா.. பை.. பை.. சொல்லிவிட்டுச் செல்வதில் யாருக்கு என்ன புண்ணியம்..?

ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப்களில் சமூக சேவைகளையும் செய்கிறார்கள். அதோடு தங்களுக்கிடையிலான குடும்ப உறுப்பினர்களையும் அறிமுகப்படுத்தி குடும்பமாக பழகுகிறார்கள். நாம் என்றைக்காவது இதனைச் செய்திருக்கோமா..?

இரண்டாண்டுகளுக்கு முன்பெல்லாம் எந்தவொரு பதிவர் சந்திப்பிலும் "எங்க வேலை பார்க்குறீங்க..?" அப்படீன்ற கேள்விக்கு மட்டும் சரியான பதில் கிடைக்கவே கிடைக்காது.. ஏதோ ஒரு கம்பெனின்னு மட்டும்தான் சொல்வாங்க.. "வீடு எங்க இருக்கு?"ன்னு கேட்டாலும் அதுக்கும் அதுதான் பதில் கிடைக்கும். அப்போதிருந்த சூழல் அப்படி.. ஆனால் இன்றைக்கு அப்படியல்ல..

இரண்டு மாதங்களுக்கொரு முறை அமைப்பின் சார்பில் எங்கேயாவது அனைத்துப் பதிவர்களும் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளலாம்.. பரஸ்பரம் குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ளலாம்.. தனி நபர்களாக இருந்து இதனை எப்படிச் செய்ய முடியும்..?

இது எதுவுமே வேணாம்.. ச்சும்மாவே இருப்போம் என்றால் என்ன மயித்துக்கு, என்ன எழவுக்கு.. என்ன வெங்காயத்துக்கு.. பின்னவீனத்துவத்தையும், இலக்கியத்தையும், அரசியலையும், சினிமாவையும் எழுதணும்.. அதையும் எழுதாம விட்டுட்டு அவங்கவங்க சோலியைப் பார்த்துட்டுப் போகலாமே..? எதுக்காக அங்க வாங்க. இங்க வாங்கன்னு சொல்லிக் கூப்பிட்டு பெட்ரோலையும் வேஸ்ட் பண்ணி.. நேரத்தையும் ஏன் நாம வீணாக்கணும்..? நாம செத்த பின்னாடி நூறு பேரு இரங்கல் தெரிவிச்சு பதிவு மட்டும் போட்டுட்டு அதை நம்ம பிள்ளைககிட்ட காட்டிட்டு அமைதியா இருக்கவா..?

மெஜாரிட்டியாக ஆரம்பிக்கலாம் என்பது தெரிந்த பின்பு "நான் அதனை எதிர்க்கவில்லை. ஏன் முன்பே பிளான் செய்தீர்கள் என்பறுதான் கேட்டேன்.." என்று இடக்கு மடக்காக கேள்வி கேட்டு மீண்டும் பிரச்சினையைத் திரித்ததும் 'மேதகு' பார்ட்டிதான்.. அந்தப் படபடப்பில், அனைவருமே நண்பர்களாக இருந்ததினாலும் யாரையும் கண்டித்துப் பழக்கமில்லாத காரணத்தினாலும் எனக்கும், கேபிளுக்கும் வேறு வழியே இல்லாமல் மீட்டிங்கை முடிக்க வேண்டியதாகிவிட்டது.

இத்தனையும் செய்துவிட்டு "இப்போது நீங்கள் அமைப்பை ஆரம்பித்தால் நிச்சயம் நான் சேருவேன்" என்று சொல்கின்றவரை என்னவென்று சொல்வது..? பின்பு எதற்காக இவ்வளவு பெரிய வெட்டி ஆர்ப்பாட்டம்..? இந்த அறிவுஜீவித்தனமான பேச்சுக்களுக்கெல்லாம் இந்த அர்த்தராத்திரியில் கண் முழித்து பதில் சொல்லித் தொலைய வேண்டியிருக்கிறது..

இதிலும் சினிமா பி.ஆர்.ஓ.க்கள் மாதிரி கதை ஒன்றையும் சொல்கிறார் மேதகு சிவராமன்.. அவர் கீழே இறங்கி வந்தபோது தண்டோராவும், கேபிளும் அங்கே இல்லவே இல்லையாம்.. எப்படி இருப்பார்கள்..? யாருக்காவது பேசுவதற்கு மனசு வருமா..?

பந்தல் கட்டி, தோரணம் அமைத்து தாலி கட்டுற நேரத்துல பொண்ணை இழுத்துக்கிட்டு ஓடுறவன், சொல்லிட்டுப் போறதுக்கு மாப்பிள்ளை சொந்தங்களையே காணோம்னு புலம்பினானாம்.. இப்படித்தான் இருக்கு இது..

எனக்கும் அங்கே இருப்பதற்கு மனசில்லைதான். ஆனால் டிவிஆர் ஸார், "கண்டிப்பா டீ வாங்கிக் கொடுத்தே ஆகணும்.." என்று வற்புறுத்தியதால் கடைக்கு வந்து நிற்க வேண்டியதாகிவிட்டது.

கேபிள் மற்றும் தண்டோரா, சூர்யா, அகநாழிகை வாசுதேவன், பலாபட்டறை இவர்களுடன் நானும் இரவு பத்தே கால் மணிவரையில் அந்தப் பகுதியில்தான் இருந்தோம்.

ஏதோ எழுதுவதற்கு ஒன்றுமே இல்லை என்று பக்கத்தை நிரப்பும் பத்திரிகை பாணியில் மேதகு சிவராமன் எழுதியிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை படித்துப் பார்த்தபோது ழான்சத்தார் ஏன் முன்பே செத்துப் போனார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது..

இதில் இன்னுமொரு காமெடி அருமைத் தம்பி அதிஷா. ஆதரித்துப் பேசிய அனைவரையும் குறுக்குக் கேள்வி கேட்டு அமைப்பை உருவாக்க எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டேயிருந்தவர், கடைசியில் வீட்டிற்குப் போகும்போது கேபிளிடம் "நானும் சேர்கிறேன்" என்றாராம்.

நான் கடையருகே பார்த்தபோது அதிஷாவிடம் பேசினேன். "நீ பத்திரிகையாளர் சங்கத்தில் சேர்ந்துவிட்டாயா..?" என்றேன். "ஆமாண்ணே.. சேரப் போறேன்.." என்றார். "அங்க ஏன் சேரப் போற..?" என்றேன். "முதல்வர் வீடு கொடுக்கப் போறாரு.. எனக்கு வீடு வேணும்.. அதுக்காக சேரப் போறேன்.." என்றார். "சந்தோஷம்.. அதே மாதிரி நாம ஒரு அமைப்பா சேர்ந்து நாலு பேருக்கு உதவி செய்யலாமே.. இதை ஏன் எதிர்க்குற..?" என்று கேட்டேன்.. "ஏன் இப்படியே செய்யலாமே..?" என்று திருப்பிப் பதில் சொன்னார். "அப்ப உனக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா..?" என்று என் தொண்டைவரையில் கேள்வி எழுந்தது.. ஆனாலும் அப்போதைய நாகரிகம் காரணமாக அடக்கிக் கொண்டேன். இப்போது இங்கே எழுதிவிடத் தோன்றுகிறது. எழுதிவிட்டேன்.

இவருக்கு வீடு கிடைக்கிறது என்பதற்காக இவர் ஒரு அமைப்பில் உறுப்பினராகச் சேரலாமாம். ஆனால் நாம் யாராவது ஒருத்தருக்கு ஒரு நூறு ரூபாய் உதவி செய்வதற்குக்கூட அமைப்பை உருவாக்கக் கூடாதாம்.. ம்ஹும்.. தாங்க முடியவில்லை..

எப்படியிருப்பினும் அமைப்போ, அல்லது சங்கமோ, அல்லது அஸோஸியேஷனோ எதுவோ ஒன்று அரசு அங்கீகாரத்துடன் அமைப்பதாக முடிவாகிவிட்டது. இந்த அளவுக்கு பதிவர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்..



இவருடைய பதிவையும் மற்றவர்களது பதிவுகளையும் பார்த்து நீ என்ன சொல்கிறாய் என முரளி மனோகர் என்னை கேட்டு படுத்துகிறான். நான் அவற்றை கூரும் முன்னால் முகமூடி சொன்ன சில விஷயங்களையும் இங்கே குறிப்பிட்டு விடுகிறேன்.

மொதல்ல இது மாதிரி ஆலோசனை கூட்டத்துக்கு முக்கிய சமாச்சாரம் :: ஒரு கண்டிப்பான ஒருங்கிணைப்பாளர், ஒரு தெளிவான அஜெண்டா. இது ரெண்டுமே இல்லாம வாங்க பேசிக்கலாம்னு ஒரு கூட்டத்த கூட்டிட்டு அப்புறம் சரியாவே முடிவு ஏற்படலன்னா எப்பூடி?

பக்கத்து வூட்டுக்காரன் புள்ள பெத்துக்குரானேன்னு நாமளும் புள்ள பெத்துக்க ஆசைப்பட்டா இப்படித்தான்... முதல்ல வலைப்பதிவாளர்களுக்கு எதுக்கு சங்கம்? உங்க mission statement என்ன? இதுக்கு தெளிவான ஒரு பதில முடிவு பண்ணுங்க. விஜய் கூடத்தான் முதல்வர் ஆகணும்னு (அவங்கப்பன் கவர்னர்?) ஆசைப்படுறான்.

//ஆனால் எந்தவொரு அரசியல்வாதிகளும் இப்போதைய நிலையில் பத்திரிகைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து மறுப்பு அறிக்கை போடச் சொல்வதோடு விட்டு விடுவார்கள். ஆனால் நமக்கு என்ன பாதுகாப்பு..? //

பத்திரிக்கைகாரனுக்கு கிடைக்கும் அதிகாரமும் அங்கீகாரமும் சங்கம் வைச்சா கிடைச்சிடுமா? அது பத்திரிக்கையின் ரீச்சை பொறுத்தது அல்லவா? உண்மையான ‘சுதந்திர’ நாட்டில் என்னதான் மட்டமான பத்திரிக்கைனாலும் தராசு பத்திரிக்கையிலும் முரசொலியிலும் நடத்திய கூத்தையெல்லாம் செய்துவிட்டு எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்துவிட முடியாது... ஆனால் தமிழகத்தில்...?

//ஒரு அமைப்பின் கீழ் இருந்தால் நாளை எந்தவொரு அதிகார வர்க்கத்திடமும் நாம் தைரியமாகப் பேசலாம். குரல் கொடுக்கலாம். தனி நபர்களாக போய் பேசுவதற்கும், அமைப்பின் பெயரில் போய் பேசுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு... ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், மீன்பாடி ஓட்டுநர்கள் சங்கம், டிரைகிளீனர்ஸ் சங்கம்..//

மேற்கண்ட எல்லா சங்கத்திலும் அதன் உறுப்பினர்களுக்கென்று ஒரு பொது புள்ளி உண்டு. அப்புளிக்கென்று ஒரு பாதிப்பு வரும்பட்சத்தில் அதில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். பல்வேறு தொழிலை செய்துகொண்டு குடும்பத்திற்கும் இதர பொழுதுபோக்கிற்கும் நேரம் செலவிட்டது போக மிச்சமிருக்கும் நேரத்தில் மீத பர்ஸ்டேய் போடும் சிலர் சங்கம் வைத்துதான் நட்பு வளர்க்க வேண்டும் என்பதில்லை. சும்மா காந்தி சிலைக்கருகில் சுண்டல் சாப்பிட்டும் வளர்க்கலாம்.

செவ்வாய், மார்ச் 30, 2010 இரவு 3:22:00
முகமூடி said...
//ச்சும்மாவே இருப்போம் என்றால் என்ன மயித்துக்கு, என்ன எழவுக்கு.. என்ன வெங்காயத்துக்கு.. பின்னவீனத்துவத்தையும், இலக்கியத்தையும், அரசியலையும், சினிமாவையும் எழுதணும்.. அதையும் எழுதாம விட்டுட்டு அவங்கவங்க சோலியைப் பார்த்துட்டுப் போகலாமே..? //

அதாங்க வலைப்பதிவளர்களின் அடிப்படை சோலியே.. எவனவனுக்கு எழுத்து வருதோ, அல்லது எழுதறதுக்கு ஏதாவது ஒண்ணு நம்மகிட்ட இருக்கோன்னு தோணுதோ அவனவன் தன்னளவில் கட்டற்ற சுதந்திரத்தோட எந்தவித நிர்பந்தமோ கவலையோ இல்லாமல் எழுதுவதுதான் வலைப்பதிவு. ஏற்கனவே அதெல்லாம் மாறிப்போய் கொஞ்ச கொஞ்சமா கூட்டணி சேர்ந்துகிட்டு இப்படி எழுதினா அந்த பிரபல பதிவருக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு சென்சர்... தனக்கு பிடிச்ச பதிவர் எழுதினா அது குப்பைனா கூட ஆகா ஓகோன்னு முதுகு சொறிதல்னு இருக்கிற கூத்து போதாதுன்னு இப்போ சங்கம் வேறயா...

// அமைப்பை உருவாக்குவோம்.... to ....செல்வதில் யாருக்கு என்ன புண்ணியம்..? //

சித்தூர் சோசியன் ஒருத்தன் இருக்கான்... அவன்கூட இந்த மாதிரி பல திட்டங்கள் வச்சிருக்கான்னு அப்பப்போ சனாதிபதிக்கு எல்லாம் தந்தி அடிப்பானாம். அதுல எதையாவது படிச்சிட்டு இவன் ஒரு மறை கழண்ட கேஸுன்னு நினைக்காதவங்க கைதூக்குங்க பாப்போம். பொது புத்தி அப்படித்தான் நினைக்கும். அது மாதிரி பலருக்கும் பல நினைப்பு வரத்தான் செய்யும்.. உடனே ஓவரா அதுக்கு செண்டிமெண்ட் பீலிங் கொடுக்காதீங்க.

// பலரும் வாசிக்கிறார்கள்.. ஆனால் எழுதத் தயங்குகிறார்கள். அவர்களை நாம் எப்படி இழுப்பது..? இப்படி பொதுச் சேவை செய்வதற்கு // இது எப்படி சேவை என்ற கணக்கில் வருகிறது?

மீண்டும்.. முதல்ல வலைப்பதிவாளர்களுக்கு எதுக்கு சங்கம்? உங்க mission statement என்ன? இதுக்கு தெளிவான ஒரு பதில முடிவு பண்ணுங்க. சங்கத்தின் சட்ட திட்டங்கள் என்ன? அடிப்படை அம்சங்கள் என்ன? என்ன குறிக்கோள், அதை அடையும் வழிமுறைகள் என்ன? சங்கத்தின் எல்லை எது? மூர்த்தி மாதிரி ஆட்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு சங்கம் வக்கீல் அமைக்குமா? உறுப்பினர்களுக்கு தகுதிகள் என்ன? ஜோக்குகள் காப்பி பேஸ்ட் செய்து அதை பதிவாக்கி மற்ற பதிவுகளில் மீதபர்ஸ்டேய் அல்லது ரிப்பீட்டேய் சொல்பவர்கள் பதிவர்களா இல்லை பர்ஸ்டு பெஞ்சில் உட்கார்ரவ்ன் எல்லாம் பூணுல் போடுறானா என்று உன்னிப்பாக பார்த்து பதிவு எழுத வேண்டுமா? இதெல்லாம் முதல்ல சொல்லுங்க... அவசியமில்ல அமைப்போ, அல்லது சங்கமோ, அல்லது அஸோஸியேஷனோ எதுவோ ஒன்று (என்ன எழவுடா இது, இதுல கூட எதுன்னே தெரியாம எதையாவது ஒன்னா) அமைச்சே தீருவோம் அப்படீன்னு வெறியோட இருந்தீங்கன்னா.. ஆல் த பெஸ்ட்...

- நேர்மையான தலைமையோ தேவையான குறிக்கோளோ இல்லாத எந்த சங்கத்திலும் இதுவரை சேராத உங்க பெயர் தெரியாத கன்ப்யூஸ்ட் குழுமத்தில் ரிடையர்டு பதிவர் (ரிடையர்டு பதிவர்கள எல்லாம் உங்க சங்கத்துல உண்டா?)

செவ்வாய், மார்ச் 30, 2010 இரவு 3:22:00
முகமூடி said...
- நேர்மையான தலைமையோ தேவையான குறிக்கோளோ இல்லாத எந்த சங்கத்திலும் இதுவரை சேராத (உங்க பெயர் தெரியாத கன்ப்யூஸ்ட் குழுமத்த சொல்லல..அதில் சேரும் குறிக்கோளும் இல்லை) ரிடையர்டு பதிவர் (ரிடையர்டு பதிவர்கள எல்லாம் உங்க சங்கத்துல உண்டா?)



என்னோட கருத்துக்கள்? எல்லாத்துக்கும் முன்னால் ஒரு கோ-ஆர்டினேட்டர் முதலிலிருந்தே செயல் பட்டிருக்க வேண்டும் என்பதை கூற விரும்புகிறேன். பேசாமல் ஞாநியையே அந்த வேலையை செய்ய விட்டிருக்கலாம்.

வேறு என்ன சொல்ல வேண்டும்? குழுமம் அமையட்டும். அதன் செயல்பாட்டை பார்த்து முடிவு செய்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/28/2010

குஷ்பு விவகாரம் - விடுதலை சிறுத்தைகளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை

தலித்துகள் முன்னேற்றம் என்னும் பெரிய கடமை முன்னால் நிற்க கிடக்கிறபடி கிடக்கட்டும், கிழவியை தூக்கி மணையில் வை என்னும் கணக்காக குஷ்பு இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியை வைத்து கொண்டு விசியினர் இத்தனை ஆண்டுகள் குதித்தாயிற்று. அவர்களுக்கு செவுளில் அடிப்பது போல நீதிபதியின் கேள்விகள் வைக்கப்பட்டன.

அதுவும் குஷ்புவை harass செய்ய வேண்டும் என்பதற்காகவே பல நீதிமன்றங்களில் பல பினாமிகளை விட்டு வழக்கு போட வைத்தனர். அவர் தலைமை நீதிமன்றத்தை அணுகிய நிலையில் நீதிபதிக்ள் வழக்கு போட்டவர்களை பார்த்து கேள்விகள் கேட்டு மானத்தை வாங்கியுள்ளனர்.

தங்கர்பச்சானை குஷ்பு விமர்சித்தபோதே அவருக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தவர் திருமாவளவன் என்பதையும் நாம் மறக்கலாகாது. ஆகவே இந்த வழக்கு விவகாரத்தில் திருமாவளவனுக்கு உள்நோக்க இருக்கிறது என்பது வெள்ளீடைமலை.

இந்த அழகுக்கு தான் அட்டெண்ட் செய்த நிகழ்ச்சியில் குஷ்புவும் இருக்க, அவர் இவருக்கு வணக்கம் தெரிவிக்கவில்லை என்ற பொருமல் வேறு. அவ்வாறு வணக்கத்துக்கு நிஜமாகவே அவர் உரியவரா என்பதை பார்த்துத்தான் குஷ்பு வணக்கம் தெரிவிக்காது இருந்திருக்க வேண்டும். குஷ்பு பிறகு பேச ஆரம்பிக்கும்போது ஒரு வணக்கம் போட்டார். அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் அதைக் கூட செய்திருந்திருக்க மாட்டேன்.

நான் எனது ஆண்பெண் கற்பு நிலை சம்பந்தமாக இட்ட இப்பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்,
“உடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதை பற்றி இங்கு விவரமாக எழுதுவேன்.உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன்னை பெருக்கிக் கொள்வதற்கான உந்துதல். ஆகவே அது தவறு என்று கூறுபவர்கள் முட்டாள்கள். திருமணத்தை துறந்து சன்னியாசிகளாக போகிறவர்களில் பலர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபடுவது இதனால்தான். இது எல்லா மதத்தினாருக்கும் பொருந்தும்.

இதிலும் ஆண்களுக்கு அவ்வளவு பாதிப்பில்லை. இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் பெண்கள் பாடுதான் திண்டாட்டம். கருவுறுவது அவர்களே. ஆண் ஓடிவிடுவான். மாட்டிக் கொண்டு அவமானப்படுவது இவர்களே. சில சமயம் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வரை அவர்களுக்கு கிடைத்து விடுகிறது.

இந்த அழகில் ஊடகங்கள் வேறு பாடாய் படுத்துகின்றன. சில உதாரணங்கள் இங்கு கூறலாம். எழுபதுகளில் "இளமை ஊஞ்சலாடுகிறது" என்ற தலைப்பில் ஸ்ரீதர் இயக்கிய படம் திரையிடப்பட்டது. அதில் ஜயசித்திரா ஒரு விதவையாக வருவார். அவர் கூறிய வசனம் ஒன்றில் இவ்வாறு வரும். "பலர் என்னை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார்கள். ஆனால் எல்லோரும் என் உடலையே விரும்பினார்கள். ஆகவே நான் மறுத்து விட்டேன்." என்ன அபத்தமான கற்பனை இந்த வசனத்தை எழுதியவருக்கு. விதவை திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஆனால் உடல் உறவுக்காக அல்ல என்று கூற ஆசைப்படுகிறாரா? அதே போல "மன்மத லீலை" என்னும் படத்தில் ஜயப்பிரதா கமலிடம் கூறுகிறார்: "நான் உடல் ஊனமுற்ற போர்வீரனை கல்யாணம் செய்து கொண்டேன். அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது. ஆக, நான் செக்ஸுக்காக கல்யாணம் செய்து கொள்ளவில்லை." இதில் என்ன பெருமையோ. செக்ஸையே தப்பு என்றெல்லாம் எழுதுவார்கள். அதெல்லாம் பெண்களுக்குத்தான் ஆண் கதாபாத்திரங்களுக்கு ஒன்றுக்கு மேல் துணை வைப்பார்கள்.

சரி நம் விஷயத்துக்கு வருவோம். ஒரு ஆண் ஏன் உடலுறவின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கிறான்? அவன் கருவுருவதில்லை அதனால்தானே? பெண் என்ன செய்வாள்? அறுபதுகளில் கருத்தடை மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கருவுராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்ததும் பெண்கள் பொங்கி எழுந்தனர். அமெரிக்க ஆண்களே அஞ்சும் அளவில் உடல் உறவில் ஈடுபட்டனர். செயல்பட இயலாத ஆண்துணையை விடுத்து வேறு துணை தேடினர். இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று இன்றும் விவாதங்கள் தொடர்கின்றன. அதில் நான் போக விரும்பவில்லை. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்று மட்டும் கூறுவேன்.

குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்”.


சும்மா வறட்டுத்தனமாக கற்பை பெண்களுக்கு மட்டும் கட்டாயமாக்குவது பற்றி பெரியார் அவர்கள் பல இடத்தில் சாடியுள்ளார். அவருடைய பல கருத்துக்களில் எனக்கு ஒப்புதல் இல்லாவிடினும் இந்த விஷயத்தில் அவரை முற்றும் ஆதரிக்கிறேன். இப்படி சொன்னவுடனேயே பெரியார் இவ்வாறு நினைத்து சொல்லவில்லை அவ்வாறு நினைத்து சொல்லவில்லை என்றெல்லாம் நீட்டி முழக்கிக் கொண்டு வருவார்கள். வரட்டும், தமாஷாக இருக்கும். முதற்கண் அவர் சொன்னதில் சிலவற்றை பார்ப்போம்:

பெண்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியும், உலக நடப்புக் கல்வியும், தாராளமாகக் கொடுத்து, மூட நம்பிக்கை, பயம் ஆகியவற்றை ஊட்டக்கூடிய கதைகளையோ, சாத்திரங்களையோ, இலக்கியங்களையோ காணவும் கேட்கவும் சிறிதும் இடமில்லாமல் செய்ய வேண்டும். (வி.22.3.43;4:2)

பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள்ளும் சொத்துரிமை இல்லாதது ஒன்றே மிகவும் முக்கியமானதாகும். (பெ.சி.மி:170)

ஆண்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது மொழிகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம், ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை. (கு.8.1.28;6:3)

கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும். (கு.8.1.28;15:1)

பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால் மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா அது? (பெ.க.மு.தொ;134)

பெண்களுக்குத்தான் கற்பு: ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால்,பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை. (கு.1.3.36;11:3)

நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக ஒழுக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டுமல்லவா? (வி.1.6.68;3:5)

சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ''ஆண்மை''க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டன. ''ஆண்மை''க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.உலகத்தில் இந்த “ஆண்மை” மேலோங்கி நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலன்றி பெண்களுக்கு விடுதலையில்லை என்பது உறுதி. (கு.12.8.28;10:2)


குஷ்புவைத் தாக்கியவர்கள் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் பெண்கள் சித்திரிக்கப்படும் முறையை எதிர்த்து தொடர் போராட்டங்களை பல முனைகளில் இருந்து முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், கடந்த காலங்களில் இதற்கான அடையாளங்களே இல்லை. பெண்களின் தனித்துவங்கள் அங்கீகரிக்கப்படாமல் சுயமரியாதை நிறுவப்படும் பாத்திரங்களாக அல்லாமல் பாலியல் பண்டமாகவே சித்திரிக்கப்படுகின்றனர். தமிழ் உணர்வாளர்கள் இதற்கெதிராக பெருமளவில் போராடவில்லை.

ஆக, வெறுமனே தங்கர் பச்சானுக்கு எதிராக போராட்டம் நடத்திய குற்றத்துக்காக குஷ்புவை பழிவாங்கத் துணிந்ததே இந்த தமாஷா காட்சிகளின் அரங்கேற்றத்துக்கு காரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/27/2010

சென்னை வலைப்பதிவர் கலந்துரையாடல் சந்திப்பு 27.03.2010

வலைப்பூக்களை பாவிப்பதில் இன்னொரு மைல்கல்லை தாண்டும் எண்ணத்தில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. உண்மை தமிழன், கேபிள் சங்கர், நர்சிம் ஆகியோர் இதற்காக இனிஷியேட்டிவ் எடுத்தவர்களில் சிலராவர்.

எனது கார் டிஸ்கவரி புக்பேலசை அடையும்போது மணி மாலை 06.15. வாசலில் தண்டோரா, உண்மை தமிழன், கேபிள் சங்கர் ஆகியோரை பார்த்தேன். வருபவர்களை வரவேற்று கூட்டம் நடக்கும் இரண்டாம் தளத்துக்கு அவர்களை அனுப்பிய வண்ணம் இருந்தனர்.

மாடியில் ஏற்கனவே சிலர் குழுமியிருந்தனர். எனது நோட் புத்தகத்தில் என்னால் முடிந்த அளவு பெயர்களை குறித்து கொண்டேன். அவை பின்வருமாறு:

தண்டோரா, கேபிள் சங்கர், டி.வி. ராதாகிருஷ்ணன், உண்மை தமிழன், ஜெய மார்த்தாண்டம், விந்தை மனிதன், செந்தில் (எங்கே செல்லும் இந்த பாதை), பலாபட்டறை சங்கர், பூங்குன்றன், ஜி. பாண்டியன் (வேர்கள்), விநாயக முருகன் (என்விஎம் ஆன்லைன்), தினேஷ் (புது தமிழ்.காம்), அரவிந்தன், கன்ணன், கே.என். ஹரிஹரன், ராஜேஷ்வரி (மூடுபனி), தளபதி, மணி (ஆயிரத்தில் ஒருவன்), துளசி மற்றும் அவர் கணவர் கோபால் (பின்னவர் நைசாக எஸ்ஸானார்), உழவன் (நவநீத கிருஷ்ணன்), அப்துல்லா, ஜ்யோவ்ராம் சுந்தர், சிவராமன், ஜாக்கி சேகர், ஸ்ரீவத்சன், கே. ரவிசங்கர், அனந்த கிருஷ்ணன், சுந்தரராஜ், வானம்பாடிகள், அதியமான், ஞாநி, பழனியப்பன், ஹேம சந்திரன், சுகுமார், நர்சிம், பட்டர்ஃப்ளை சூர்யா, லிவிங் ஸ்மைல் வித்யா, மணிகண்டன், விதூஷ், அதிஷா, லக்கிலுக், குகன், பாண்டியன், சுகுணா திவாகர், நந்தா, அகிலன், காவேரி கணேஷ் ஆகியோர். (பெயர் விட்டு போனவர்கள் பின்னூட்டங்கள் மூலம் தெரிவித்தால் பெயர் சேர்க்கப்படும்).

மீட்டிங் ஹாலில் பயங்கர எதிரொலி. அகௌஸ்டிக் சரியில்லை. மிகவும் கஷ்டப்பட்டு பேச்சுக்களை கேட்க வேண்டியிருந்தது. ஆகவே அவற்றை இங்களிப்பதில் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. சம்பந்தப்பட்டவர்கள் திருத்துமாறு கேட்டு கொள்கிறேன்.

முதலிலே ஒரு பேப்பரை எல்லோருக்கும் வினியோகம் செய்தனர். அதில் சில கேள்விகள் இருந்தன.

1. இனி வலைப்பதிவர்கள் சமூகம் என்ன செய்ய வேண்டும்?

2. எப்படி செயல்பட வேண்டும்?

3. குழுமமாகவா அல்லது ஒரு தொழிற்சங்கத்தைப் போன்றா அல்லது ஒரு கட்சியைப் போன்றா?

4. அந்தக் குழுமத்தின் நோக்கம் என்ன?

5. குழுமத்தின் நோக்கங்கள் யாவை (கேள்வி 5 ஏற்கனவே 4-ல் வரவில்லை?)

6. அதன் செயல்பாடுகளை எப்படி வடிவமைப்பது?

7. எப்படியெல்லாம் செயல்பட வைக்க வேண்டும்?

8. குழுமத்தின் லோகோ எப்படி இருக்க வேண்டும்?

9. குழுமத்தை நிர்வகிப்பது எப்படி?

10. அலுவலகம் எங்கே, எப்படி அமைக்கப்படுதல் வேண்டும்?

11. நிர்வாகச் செலவுகளை யார் ஏற்பது?

12. குழுமத்தின் செலவுகளுக்காக பணம் எப்படி வசூலிப்பது?

13. அதனை பொறுப்பாகக் கவனித்துக் கொள்வது யார்?

14. நிர்வாகக் குழுவில் என்னென்ன பொறுப்புகளை அமைப்பது?

15. முதல் அமைப்பில் யார், யார் குழுமத்தில் பொறுப்பேற்பது?

16. முதல் அமைப்பாளர்களை எப்படி தேர்வு செய்வது?

17. தேர்தல் நடத்தி ஜனநாயக முறையில் தேர்தல் என்றால் தேர்தலை நடத்திக் கொடுக்க முன்வருவது யார்?

18. தேர்தலில் போட்டியிட விதிமுறைகள் என்ன?

19, எந்த மாதம், எந்த தேதியில் தேர்தலை வைத்து கொள்வது?

20. தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளவர்களை எப்படி தேர்வு செய்வது?

21. தேர்தல் நடத்தாமல் ஒரு மனதாக தேர்வு செய்து விடலாமா?

22. ஒரு மனதாக என்றால் யார், யாரை தேர்வு செய்வது?

மேலே உள்ள பட்டியல் முழுமையானதல்ல. மேலும் கேள்விகள் மீட்டிங்கிற்கு வருபவர்கள் மனத்தில் இருக்கலாம். அவற்றை தயங்காமல் வெளியிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

முதலில் உண்மை தமிழன் மேலே சொன்ன பாயிண்டுகளை படித்தார். பிறகு மைக்கை கையில் எடுத்த கேபிள் சங்கர் இது ஒரு அதிகாரபூர்வமற்ற சந்திப்பே என்பதை வலியுறுத்தினார். அடுத்து பேசிய மணிகண்டன் பிளாக்கர்கள் ஏற்கனவேயே குழுவாகத்தான் செயல்படுகின்றனர். இப்போது என்ன புதிதாக வந்தது எனக் கேட்டார். கேபிள் சங்கர் மீண்டும் தான் முதலில் சொன்னதை வலியுறுத்தினார்.

விக்னேஷ் தமிழ் வலைப்பதிவர் அமைப்பு வேண்டும் ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்னே பேசப்பட்டது என்பதை சுட்டிக் காட்டினார்.

ஞாநி அவர்கள் முதற்கண் வலைப்பதிவர் குழுமம் தேவையா என்பதை குறித்தே விவாதம் வேண்டுமென்றும், அதற்கு ஒரு மட்டுறுத்துனர் இருந்தால் நலம் எனக் கூறினார். அப்படியே குழுமம அமைந்தாலும் அதை எந்த அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும், அதன் சட்ட ஹோதா என்ன? வலைப்பதிவர்கள் எல்லோருமே ஒரே கருத்துடன் இருப்பவர்கள் அல்ல. அத்தனை பேரும் மாற்று கருத்துகளுடன் உள்ளவர்கள். அப்படிப்பட்டவர்கள் கூடி செயலாற்ற, ஒரு மினிமம் காமன் ப்ரொக்ராம் உருவாக்கி அதன்படி நடப்பதே முக்கியம். குழுமம் என்ன செய்ய இயலும், என்னென்ன செய்ய இயலாது என்பதையெல்லாம் வக்த்துக் கொள்ள வேண்டும். அதன் எல்லையை மீறி குழுமம் செயல்பட்டால் அது உடைந்துதான் போகும் எனவும் அவர் கூறினார்.

முதலில் நான்கு மாற்று கருத்துடையவர்கள் கூடி இந்த மினிம காமன் செயல்திட்டத்தை வரைவது நலம் எனவும் கூறினார். அதை மின்னஞ்சல்கள் மூலம் மற்ற பதிவர்களுக்கு சர்குலேட் செய்து எல்லோரது கருத்தையும் அறியலாம் என்றும் அவர் கூறினார். அவர் சொன்ன மினிமம் ப்ரொக்ராம் தொழில்நுட்ப பிரச்சினைகள், சைபர் கிரைம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகிய மூன்று விஷயங்களையே தொட்டன. அவற்றில் ஒத்த கருத்துடையவர்கள் பலர் இருப்பார்கள் என்பது அவரது துணிபு.

அவர் மேலும் சொன்னது: பணம் சேர்ந்தாலே சங்கங்களுக்கு பிரச்சினை, பிறகு வரும் பதவிப் போட்டிகள். இவை இரண்டும் எந்த சங்கத்திலும் பிரச்சினையே என அவர் கூறினார்.

பிறகு பேசிய சிவராமன் குழுமம் என்னென்ன செய்யலாம் எனக்கேட்டார். சில சங்கங்கள் சுற்றுலா செல்வது, போட்டிகள் நடத்துவது ஆகியவற்றை செய்கின்றன. பெங்களூர் அரவிந்தன் ஏதேனும் ஒரு அமைப்பு என இருந்தால்தான் அரசு மற்றும் அதிகார மையங்களுடன் பேச இயலும் என்றார்.

பிறகு நான் மைக்கை எடுத்து கொண்டேன். போலி டோண்டு விஷயத்தில் நான் போலீசை தனியாக சந்தித்தபோது என்னை அவனுடன் சமாதானமாக போவதையே வலியுறுத்தினர் என்றும், பிறகு பல பதிவர்களாக சேர்ந்துதான் அவனை மாட்டிவிட முடிந்தது என்றும் கூறினேன். அதே சமயம் ஞாநி சொல்வதுபோல காமன் மினிமம் செயல்பாட்டை வைத்து கொண்டு அதை மீறாதிருப்பதே நலம் என்றும் கூறினேன்.

டி. வி ராதாகிருஷ்ணன் பேசும்போது இந்த லிஸ்ட் பூனைக்கு மணி கட்டுவது போன்ற இனிஷியேட்டிவ் என்றார். சிங்கைநாதன் ஆப்பரேஷனுக்கு முப்பத்தைந்து லட்சம் ரூபாய் சேமிப்பு பதிவர்கள் ஒற்றுமையால் வந்தது என்றார். முக்கியமாக பொது நிகழ்ச்சிகள் நடக்கும்போது அதற்கான செலவை தனிப்பட்டவர்கள் ஏற்பதற்கு பதிலாக சங்கமே ஏற்பது நல்லது என்றார். ஜ்யோவ்ராம் சுந்தரும் பைத்தியக்காரனும் சேர்ந்து ஆர்கனைஸ் செய்த சிறுகதை பட்டறையிலும் செலவை அவர்கள் இருவரே ஏற்றுக் கொண்டது சரியல்ல என்றும் கருதினார். இங்கும் குழுமமே இருந்திருக்க வேண்டும் என்றார். அதே போல இண்ட்ர்னெட் குழுமம் சென்னைக்கென்று தனியாக பிரிக்க வேண்டாம் என்றார். தமிழ் பதிவர்கள் இணையத்தின் மூலம் ஒன்று பட்டிருக்கும்போது இம்மாதிரி பிரிவினை வேண்டாம் என்றும் கூறினார்.

பாண்டியன் பேசும்போது சங்கமாக இருப்பதே நலம் என அபிப்பிராயப்பட்டார். மொழிக்கு மரியாதை செய்ய வேண்டும் எனவும் கூறினார். மறுபடியும் பேசிய சிவராமன் குழுமத்தின் இருப்பையே கேள்வி கேட்பது கடைசியில் அதன் நன்மைக்கே என்றார். சிறுகதை பட்டறைக்கு தானும் ஜ்யோவ்ராம் சுந்தர் செய்ததும் தங்கள் விருப்பத்தினாலேயே என்றும் சொன்னர்.

மீண்டும் மைக்கை கையில் பிடித்த ஞாநி உதவிகள் செய்வதிலும் பிரச்சினைகள் வரலாம் என சுட்டிக் காட்டினார். சங்கத்தின் அஜெண்டாவுக்கான வரைவை மீண்டும் வலியுறுத்தினார். அதே போல தற்போதைக்கு சென்னை பதிவர்களுக்கு மட்டுமே ஆரம்பிப்பது நலம், ஏனெனில் அதன் அங்கத்தினர்கள் நேரடியாக சந்திப்புகளில் பங்கேற்பது நலம் என அவர் கருத்து தெரிவித்தார்.

லக்கிலுக் பேசும்போது சங்கம் தேவை என வலியுறுத்தினார். அவர் பேசும்போது எனக்கு செல்பேசி கால் வந்து வெளியே செல்ல வேண்டியதாயிற்று. ஆகவே சரியாக கேட்க இயலவில்லை. அதிஷாவும் லக்கிலுக்கும் இந்தவ்விஷயத்தில் மாறுபட்ட கருத்துகளை வலியுறுத்தியதாக எனக்கு பட்டது. அதிஷா நாம் ஏற்கனவேயே ஒற்றுமையாக இருக்கும்போது ஏன் சங்கம் தேவை என கேள்வி எழுப்பினார்.

சுகுணா திவாகர் அடுத்து பேசினார். சங்கம் அமைப்பதில் உள்ள சிக்கல்களையும் எடுத்துரைத்தார். தனிநபர் தாக்குதலுக்கெல்லாம் சங்கம் ஏன் தலையிட வேண்டும் எனவும் கேட்டார்.

செந்தில் குமார் பேசுகையில் சங்கம் வேண்டுமா வேண்டாமா எனப்தை முதலில் முடிவு செய்யலாம் என்றார். ஏற்கனவே மட்டற்ற சுதந்திரம் உள்ளது. முதலில் சங்கம் ஆரம்பித்து பார்ப்போம், பிரச்சினை வந்தால் பிரிவோம் என்றார். (சிவாஜி படத்தில் அங்கவை சங்கவையை வைத்து சாலமன் பாப்பையா பேசியது ஏனோ என் மனதுக்கு வந்தது) சங்கம் தேவை என அவர் கடைசியில் கூறினார்.

உண்மை தமிழன் பேசுகையில் தான் வலைப்பூ ஆரம்பித்த தருணம் என்ன செய்வது என்று கூட தெரியாத நிலை என்றார். இப்போது சங்கம் மூலம் புதியவர்களுக்கு சொல்லித் தரலாம் என கூறினார். சங்கம் மூலம் நட்புகளும் பெருகும் என்றார்.

நந்தா பேசும்போது, முதலில் சங்கம் வேண்டாம் என்பவர்கள் பேசட்டும், ஏனெனில் அதுவரை பேசியவர்கள் பொதுவாக சங்கம் வேண்டும் எனவே அபிப்பிராய படுகின்றனர் என்றார்.

குடிசை படத்தின் இயக்குனரின் உதவியாளரான அகிலன் தாங்கள் குடிசை படத்தை உண்டியல் குலுக்கி வந்த கலெக்சனிலேயே தயாரித்ததாக கூறினார். மனதிருந்தால் மார்க்கமுண்டு என அவர் கூறுவதாக எனக்கு பட்டது. தயாரிப்புடன் சம்பந்தப்படாவிட்டாலும் சமையற்காரர்கள் சங்கம் நினைத்தால் ஷூட்டிங்கையே நிறுத்தும் வலிமை வாய்ந்தது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஞாநி மறுபடியும் மினிமம் காமன் செயல்பாட்டுக்கான வரைவின் அவசியத்தை வலியுறுத்தினார். இனிமேலும் சங்கம் வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி தேவை இல்லை, ஏனெனில் வேண்டம் என்றிருப்பவர்கள் மீட்டிங்கிற்கு வரமாட்டார்கள், அல்லது இன்னேரத்துக்கு போயிருந்திருப்பார்கள் என கருத்து தெரிவிக்க, அதை மறுத்தார் அதிஷா. வேண்டாம் என்பவர்கள கையை தூக்கலாம் என கூறப்பட இருவர் மட்டும் கை தூக்கினர். அவர்களில் ஒருவராக கே. ரவிசங்கர் என்பவர் பேச வந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சரை கோட் செய்து சும்மா இருப்பதே சுகம் என்னும் கதையை சொன்னார்.

பின்னால் வந்த லிவிங் ஸ்மைல் வித்யா இம்மாதிரி எந்த கருத்துக்கும் வேண கதைகள் கூறலாம் என்றார். நாம் செய்யும் பிளாக்கர் வேலைகளை செய்யலாம். பிடிமானத்துடன் வேலை செய்யலாம். காமன் மினிமம் செயல்பாட்டை அமைப்போம் என அவர் கூறினார்.

தொழிற்சங்கம் போல செயல்பட முடியாது என சிவராமன் கூறினார். லயன்ஸ் க்ளப், ரோட்டரி கிளப் போன்றுதான் செயல்பாடுகள் இருக்கும் எனவும் கூறினார். ரத்ததான முகாம், ப்ளஸ் 2 மாணவர்களுக்கு புத்தகங்கள் அளிக்க உதவி செய்வது ஆகியவற்றையும் அவர் உதாரணங்களாக் குறிப்பிட்டார்.

பிறகு பேசிய காவேரி கணேஷும் ஜாக்கி சேகரும் சங்கம் வேண்டும் என்றனர்.

கேபிள் சங்கர் இந்த சங்கத்துக்கு ஆஃபீஸ் பேரர்கள் எக்லாம் கிடையாது, எல்லாமே இன்ஃபார்மலாகவே நடக்கும் என கூற, ஞாநி அதுவும் சாத்தியமில்லை என்றார். ஒரு சங்கத்தை பதிவு செய்ய குறைந்த பட்சம் ஏழு ஆஃபீஸ் பேரர்ஸ் வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கேபிள் சங்கர் எல்லோருக்கும் நன்றி கூற கூட்டம் இனிமையாக முடிந்தது.

போகிற போக்கில் எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவத்தை வாங்கி சென்றேன். பத்து சதவிகிதம் டிஸ்கௌண்ட் தந்தனர்.

துளசி அவர்கள் நான் கேட்டுக்கொண்டதற்குஇணங்க அன்புடன் தான் எடுத்த புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அவை கீழே:

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/26/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 56 & 57)

எபிசோடு - 56 (24.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சாம்பு சாஸ்திரிகளின் இரண்டாம் மகன் அந்த கேட்டரர் வீட்டில் கணக்கு விவகாரங்களை பார்த்து கொண்டிருக்கிறான். அவர்கள் வீட்டில் அவர் பையன் பட்டாபியின் கல்யாண சம்பந்தம் ஒன்று தவறிப்போனதை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர் கேட்டரர் என்பதால் அவரை வெறுமனே சமையல்காரர் என மட்டம் தட்டுவதாக அவருக்கு தோன்றுவதை அந்த கேட்டரர் கூறுகிறார். தன் செய்வது சமையல், அது ஓர் கலை என அவர் ஒரு தருணத்தில் அழுத்தந்திருத்தமாக கூற, அப்படியா என சோ வின் நண்பர் அவரைக் கேட்கிறார்.

ஆம் என்னும் சோ, ஆயகலைகள் 64 உண்டு, அவை என்னென்ன என்பதற்கு சில பட்டியல்களே உண்டு. அவற்றில் சிலவற்றில் சமையல் சேர்க்கப்பட்டுள்ளது, சிலவற்றில் சேர்க்கப்படவில்லை என்க்கூறிவிட்டு, ஏ. சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணியிலிருந்து ஒரு லிஸ்டை உரக்கப்படிக்கிறார். சோவின் நண்பர் திறந்த வாய் மூடாமல் கேட்கிறார். அதில் போஜன சாத்திரம் என ஒரு மென்ஷன் வருகிறது. அவர் கூறிய வேகத்துக்கு என்னால் நோட்ஸ் எடுக்கவியலவில்லை. ஆகவே என்னால் ஆனது, கூகளண்ணன் தயவில் இன்னொரு லிஸ்டை இங்கே தருகிறேன். அதை மூச்சு விடாமல் உரக்க ஒரேயடியாக படிப்பவர்களுக்கு வலையுலக (கேளடி கண்மணி புகழ்) எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்னும் பட்டத்தை தருகிறேன். சும்மா வச்சுக்குங்க சார், காசா பணமா?

1. அக்கரவிலக்கணம் 2. இலிகிதம் 3. கணிதம் 4. வேதம் 5. புராணம் 6. வியாகரணம் 7. நீதி சாஸ்திரம் 8. ஜோதிடம் 9. தர்ம சாஸ்திரம் 10. யோக சாஸ்திரம் 11. மந்திர சாஸ்திரம் 12. சகுன சாஸ்திரம் 13. சிற்ப சாஸ்திரம் 14. வைத்திய சாஸ்திரம் 15. உருவ சாஸ்திரம் 16. இதிகாசம் 17. காவியம் 18. அலங்காரம் 19. மதுர பாடனம் 20. நாடகம் 21. நிருத்தம் 22. சத்தப்பிரும்மம் 23. வீணை 24. வேணு (புல்லாங்குழல்) 25. மிருதங்கம் (மத்தளம்) 26. தாளம் 27. அத்திரப் பரிட்சை 28. கனகப் பரிட்சை (பொன் மாற்று பார்த்தல்) 29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம்) 30. கஜப் பரிட்சை (யானை ஏற்றம்) 31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்) 32. இரத்தினப் பரிட்சை 33. பூமிப் பரிட்சை
34. சங்கிராம விலக்கணம் 35. மல்யுத்தம் 36. ஆகருடனம் 37. உச்சாடனம் 38. வித்து வேடனம்(ஏவல்) 39. மதன சாஸ்திரம் 40. மோகனம் 41. வசீகரணம் 42. இரசவாதம் 43. காந்தருவ வாதம் (சங்கீத வித்தை) 44. பைபீலவாதம் (மிருக பாஷை) 45. கவுத்துவ வாதம் 46. தாதுவாதம் (நாடி சாஸ்திரம்) 47. காருடம் 48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது நாட்டியம்
பழகுவித்தல்) 49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்) 50. ஆகாய கமனம் வானத்தில் ஊர்ந்து செல்லுதல்) 51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்) 52. ஆகாயப் பிரவேஷம் (ஆகாயத்தில் மறைந்து கொள்வது) 53. அதிரிசியம் 54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை) 55. மகேந்திர ஜாலம் 56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்) 57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்) 58. வாயுஸ்தம்பம் 59. திட்டி ஸ்தம்பம் 60. வாக்கு ஸ்தம்பம் 61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம் 63. கட்கத்தம்பம் 64. அவத்தைப் பிரயோகம்

இதே மாதிரி வேறு பட்டியல்களும் இந்த 64 கலைகளுக்குண்டு. அவற்றுள் சிலவற்றில் சமையற்கலையும் இருக்கிறது என சோ கூறுகிறார். எப்படியும் பட்டாபிக்கென்று ஒரு பெண் இனிமேலா பிறக்கப் போகிறாள், நிச்சயம் வருவாள் என்றும் கூறுகிறார். இதையெல்லாம் அவர்கள் உரக்கவே பேசுவதால், சாம்பு சாஸ்திரியின் இரண்டாம் மகன் இந்த வீட்டில் ஒரு பிரும்மச்சாரி பையன் இருக்கிறான், அப்பாவிடம் சொல்லி தனது தங்கை ஆர்த்திக்கு பார்க்கச் செய்யலாம் என யோசித்து, ஒரு அண்ணன் செய்ய வேண்டிய கடமையை உருப்படியாக செய்கிறான்.

நீலகண்டன் வீட்டில் நாதன் சஷ்டியப்தபூர்த்திக்கு தங்கள் தரப்பிலிருந்து என்னென்ன செய்ய வேண்டும் என அவரும் பர்வதமும் பேசிக் கொள்கின்றனர். அவர்கள் மகன் ராம்ஜியும் அப்பேச்சில் கலந்து கொள்கிறான்.

நாதன் வீட்டில் சிங்காரமும் சமையற்கார மாமியும் ஒருவரை ஒருவர் கலாய்க்க முயற்சி செய்கின்றனர். சிங்காரத்துக்குத்தான் வெற்றி. அவன் போடும் போட்டில் சமையற்கார மாமி தலை தெறிக்க ஓடுகிறாள்.

ரமேஷ் வீட்டில் அவனுக்கு நள்ளிரவில் அழைப்பு வருகிறது. கீழே யாரோ வந்திருக்கிறார்கள் என்பது அவனுக்கு செல்பேசி மூலம் செய்தி வருகிறது. அவனும் கீழே போய் திரும்பும்போது கைநிறைய பணத்துடன் வருகிறான். உமா கேட்கும் கேள்விகளுக்கு மழுப்பலாகவே பதில் தருகிறான்.

(தேடுவோம்)

எபிசோடு - 57 (25.03.2010) சுட்டி - 1 சுட்டி - 2
நாதன் கம்பெனிக்கு எம்.டி. ஆக வசுமதியின் சிபாரிசை பெற்றும் வரமுடியாது போன பிச்சுமணி முதன் முதலாக சீரியலில் பிரவேசம். கேட்டரர் வீட்டில் குடியிருக்கும் எல்.ஐ.சி. ஏஜெண்டின் மச்சினன் அவன்.

வேம்பு சாஸ்திரிகள் குடியிருக்கும் வீட்டு சொந்தக்காரர் அவரிடம் வாடகையை ஆயிரத்து ஐநூறிலிருந்து மேலும் ஆயிரம் ரூபாய உயர்த்தியிருப்பதாகவும், அவரால் அதை தரவியலாவிட்டால் அவர் வீட்டை காலி செய்ய வேண்டும் எனக் கறாராக கூறிவிட்டு செல்கிறார்.

சாரியார் வீட்டில் அவர் தனது மகன் பாச்சு சரியாக ஆடியோ கேசட் கடையை கவனிக்கவில்லை என அவனிடம் கோபப்படுகிறார். கயிலை டைம்ஸ் என்னும் வட்டார பத்திரிகையை வெளியிடும் ராமய்யருடன் பேசுகிறார். பேச்சு ஸ்தல புராணங்கள் பற்றி திரும்ப, அவை ஒவ்வொரு தலத்துமாக உருவாக்கப்பட்டு வருகிறது, அது உண்மையான விவரங்களையே தருகிறதா, என சோவின் நண்பர் கேட்க, சோ பல உதாரணங்கள் தந்து அவை உண்மையே என ஸ்தாபிக்கிறார்.

அசோக் பாடுபட்டு, பலரிடமும் நன்கொடை பெற்று ஒரு புது வேதபாடசாலையை உருவாக்கியிருப்பதை சிலாகித்து கூறி அது சம்பந்தமாக கயிலை டைம்ஸில் போடுமாறு ராமய்யரிடம் சாரியார் கேட்டு கொள்கிறார். அசோக் ஒரு துருவ நட்சத்திரம் எனக் கூறுகிறார்.

நாதன் சஷ்டியப்தபூர்த்தி டிவிடியை வீட்டில் நாதன், வசுமதி, நீலகண்டன், பர்வதம், சிங்காரம் ஆகியோர் பார்க்கின்றனர். நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்கள் அவரவர் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப வருகின்றன. எல்லோரும் நாதன் வசுமதியை சேவிக்க, அசோக் கீழே சாஷ்டாங்கமாக விழுந்து சேவிக்கிறான்.

சாஷ்டாங்க நமஸ்காரம் என்றால் என்ன என சோவின் நண்பர் கேட்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/25/2010

கற்றது கை மண்ணளவு, டோண்டு ராகவனே

மந்தரை சூழ்ச்சிப் படலத்தில் கம்பர் இவ்வாறான வரிகளை எழுதியுள்ளார்.

தனக்கு துர்போதனை செய்த மந்தரையின் வார்த்தைகளை கேகயன் புதல்வியான கைகேயி உடனே ஏற்றுக் கொண்டுவிடவில்லை. மந்தரையை பார்த்து அவள் சினத்துடன் கூறும் வரிகளை கம்பன் வாய்மொழியில் பார்ப்போம்:

வாய் கயப்புற மாந்தரை வழங்கிய வெஞ் சொல்,
காய் தனல்தலை நெய் சொரிந்தென, கதம் கனற்ற,
கேகயர்க்கு இறை திருமகள், கிளர் இள வரிகள்
தோய், கயல் கண்கள் சிவப்புற நோக்கினள், சொல்லும்;

வெயில் முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர்,
உயிர் முதல் பொருள் திறம்பினும், உரை திறம்பாதோர்;
மயில் முறைக் குலத்து உரிமையை, மனு முதல் மரபை;
செயிர் உற, புலைச் சிந்தையால், என் சொனாய்? - தீயோய்!


பிறகு மந்திரை தன் நோக்கத்தில் வெற்றியடைந்து ராமாயணத்தை மேற்கொண்டு நகர்த்துவது இப்பதிவில் வராது. அது பற்றி பிறகு பார்ப்போம்.

"மயில் முறைக் குலத்துரிமை" பற்றி மந்தரை சூழ்ச்சிப் படலத்தில் கம்பர் பாடியதற்குப் பல வித விளக்கங்கள் கூறுவர். நாமக்கல் கவிஞர் முதலில் தான் படித்த கம்பராமாயண உரைநூலில் மயில் முட்டைகளில் முதலில் உருவான முட்டை முதலில் குஞ்சாக பொரியும், பிறகுதான் அடுத்து உருவான முட்டைகள் பொரியும், அதுபோல மூத்தவனுக்கே அரசுரிமை என்பதாக விளக்கம் தரப்பட்டிருந்ததை கண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு குழப்பம் என்னவென்றால், இது எல்லா பறவைகளின் முட்டைகளுக்குமே பொருந்துமே, மயில் என்ன ஸ்பெஷல் இதில் என்பதே.

எதேச்சையாக ஒரு நாள் அவர் 'ஸயண்டிபிக் அமரிக்கன்' என்ற பத்திரிக்கையில்
ஒரு விளக்கம் கண்டார். அது பின்வறுமாறு:
மயிலானது தன்னுடைய எல்லாக் குஞ்சுகளுடனும் குடும்ப சகிதமாகத்தான் ஓர் இடத்திலிருந்து
இன்னோர் இடம் போகும். அப்படி மயில் குஞ்சுகளுடன் சேர்ந்திருக்கும் போது, குஞ்சுகளின் மூத்தது
தான் தோகைவிரித்து ஆடத் தொடங்கும். அதன் பிறகே மற்றக்குஞ்சுகள் தோகை விரிக்கும்.
இவ்வாறு மயில்களைப் பற்றிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைக் கண்டார் நாமக்கல் கவிஞர்.

இதைக் கண்டுபிடிக்க மயில் குஞ்சு பொரித்தவுடன் ஒவ்வொரு குஞ்சுக்கும் ஒரு வளையம்
விதம் விதமான வண்ணத்தில் காலில் மாட்டிவிடப்பட்டதாம். அதிலிருந்தே மூத்த மயில் அடையாளம்
அறியப்பட்டது என்றும் அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

மயிலிடம் உள்ள இந்தத் தனிவிசேடத்தைத்தான் கம்பர் பாடியிருக்கிறார்’ மன மாற்றம் ஏற்படும் முன் கைகேயி, ராமனுக்கு முடி சூடிவிடவேண்டியது முறை எனக் கூனிக்கு உணர்த்தும் அப்பாட்டில் என்பதை அவர் உணர்ந்தார்.

அதன் பிறகு பல காலம் இதை வைத்தே அவர் பலரை அசத்தி வந்திருக்கிறார். வேண்டுமென்றே பேச்சை கம்பர் பக்கம் திருப்ப வேண்டியது, பிறகு இந்த குறிப்பிட்ட பாடலை கூறி, மயில் இதில் எங்கே வந்தது என கேட்பது, அவர்களை சிறிது நேரம் அலையவிட்டு பிறகு சயண்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகையில் வந்ததைக் கூறுவது என்றிருந்திருக்கிறார். ஆனால் இதிலும் முழு உண்மையை கூறமாட்டார். அதாகப்பட்டட்து மற்றவர்கள் இதை அவர் எங்கிருந்து கற்றார் எனக்கேட்டால், பறவை சாஸ்திரம் தெரிந்தவர்களுக்குத்தன் இந்த விஷயம் தெரியும் என பூடகமாக கூறிவிடுவார். மறந்தும் சயண்டிஃபிக் அமெரிக்கன் கட்டுரை பற்றி கூறமாட்டார்.

இவ்வாறு சில ஆண்டுகள் சென்றன. ஒரு வயதான தமிழ்ப்புலவரை பார்த்திருக்கிறார். அவரிடம் இக்கதையை எடுத்து விட்டு விளக்கம் கேட்டிருக்கிறார். அவரோ சர்வ சாதாரணமாக, “ஓ, அதுவா, மயிலானது தன்னுடைய எல்லாக் குஞ்சுகளுடனும் குடும்ப சகிதமாகத்தான் ஓர் இடத்திலிருந்து
இன்னோர் இடம் போகும். அப்படி மயில் குஞ்சுகளுடன் சேர்ந்திருக்கும் போது, குஞ்சுகளின் மூத்தது
தான் தோகைவிரித்து ஆடத் தொடங்கும். அதன் பிறகே மற்றக்குஞ்சுகள் தோகை விரிக்கும். கம்பர் இதைத்தான் தனது பாடலில் சுட்டியுள்ளார்” எனச் சொல்ல, இவருக்கு மூச்சே நின்றுவிட்டதாம். முகத்தில் ஏதோ கரி பூசியது போலவும், மூக்கு நுனி சற்றே பங்கப்பட்டது போலவும் பிரமையாம். அப்புலவர் ஆங்கிலம் அறியாதவர், அவராவது சயண்டிஃபிக் அமெரிக்கன் இதழை பார்த்திருப்பதாவது என்றெல்லாம் மனம் மயங்கியுள்ளார். பிறகு அவரிடமே மேலும் விளக்கம் கேட்க, அவர் சர்வ இயல்பாக ஒரு தமிழ் இலக்கிய படைப்பின் பெயரைக் கூறி விட்டு அதில் இன்ன இடத்தில் இன்ன செய்யுளில் இந்த சேதி உள்ளது எனக் கூறிச் சென்றார்.

துரதிர்ஷ்டவசமாக ராமலிங்கம் பிள்ளை அவர்கள் அந்த சுட்டியின் விவரங்களை குறித்து வைத்துக் கொள்ள தவறிவிட்டார். பிறகு எவ்வளவு முயன்றும் அவருக்கு அது கிடைக்கவில்லை. போகும் இடமெல்லாம் இது பற்றி கேட்டிருக்கிறார். ஆனால் இம்முறை மரியாதையாக சயண்டிஃபிக் அமெரிக்கன் விஷயங்களையும் வெளிப்படையாக கூறி, தமிழ்ப்புலவர் தன்னை கர்வபங்கம் செய்ததையும் சொல்லி யாருக்கேனும் மயில் முறை குலத்துரிமை எந்த நூலில் எந்த இடத்தில் வருகிறது என்பது பற்றி தெரியுமா என கேட்டிருக்கிறார். இவ்வாறு இக்கேகேள்வியுடனேயே அவர் பல ஆண்டுகள் மேலும் தேடியிருக்கிறார்.

ஒரு நாள் திடீரென அவருக்கு ஒரு முதல் நிலை தமிழ் மாணவனிடமிருந்து கடிதம் வந்தது. அதில் பலான நூலில் பலான செய்யுள் எண்ணில் அவர் கேட்ட தகவல் இருக்கிறது என காணப்பட்டிருந்ததாம்.

ஆக, பல ஆண்டுகள் பெரிய பயணம் நடந்த உணர்வுடன் அவர் இவ்வாறு கூறி முடிக்கிறார், “இவ்வாறுதான் நான் உணர்ந்தேன், கற்றது கைம்மண்ணளவு என்று” என.

இங்கு டோண்டு ராகவன் தரப்பிலிருந்து சில வரிகள். வெ. ராமலிங்கம் பிள்ளையின் இது குறித்த கட்டுரையை நான் கலைமகள் கதம்பத்தில் படித்ததாக நினைவு. அதே சமயம் கடைசியில் குறிப்பிடப்பட்டுள்ள நூலின் பெயர் என்ன என்பதையும் மறந்து விட்டேன். யாராவது தெரிஞ்சால் சொல்லுங்கப்பு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்குறிப்பு:
kasaikannan said...
இந்த செய்யுள் கந்தபுராணத்தில் வருகிறது.
''பலாவம் பொழில் சூழ் பல் கானத்துள்
கலாவம் புனைந்த களிமயில் மூத்தது ''
March 25, 2010 2:04 PM

அதுவேதான். மிக்க நன்றி கசைகண்ணன் அவர்களே. இப்பதிவிலுள்ளேயே ஏற்றப்பட வேண்டிய இற்றைப்படலாக இப்பின்னூட்டம் உள்ளது.

இலங்கையில் தற்போது உள்ள தமிழர்களின் உடனடி தேவைகள் பற்றி சில எண்ணங்கள்

சுகி சிவம் இலங்கையில் தற்போது வாழும் தமிழர்களின் அவல நிலை பற்றி பேசிய வீடியோ இதோ:
 

அவர் கூறியவை சரியாகவே எனக்கு படுகின்றன. சமாதானம் ஏதேனும் ஏற்பட்டாலும் கூட அதை கெடுத்துவிடவே புலிகளின் ஆதரவாளர்கள் முயல்கின்றனர். அதிலும் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றெல்லாம் வதந்தியை கிளப்பி விடுபவர்கள் ராஜபக்சே அங்குள்ள தமிழர்கள் மீதான கொடுமைகளை இன்னும் அதிகமாக செய்யவே வாய்ப்பளிக்கின்றனர்.

சுகிசிவம் சொல்வது போல இப்போதைய ஈழத் தமிழர்கள் தேவை செயல்களே, வெட்டி வீறாப்பு பேச்சுக்கள் அல்ல. உள் நாட்டு போர் நடந்து முடிந்த எந்த நாட்டிலும் வெவேறு பிரிவினரிடையே அவநம்பிக்கையே அதிகம் நிலவும். அதை குறைப்பதை விட்டு இப்போது பல இடங்களிலும் பொறுப்பில்லாமல் பேசுவதை தவிர்ப்பதே நலம்.

சுகிசிவத்தை தனிப்பட்ட முறையில் தாக்குவதை விடுத்து அவர் கூறவருவதை முதலில் கேளுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்குறிப்பு:
இப்பதிவில் எம்பெட் செய்யப்பட்ட வீடியோ வேலை செய்யவில்லையெனில் அதை இங்கு சென்றும் பார்க்கலாம்.

3/24/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 54 & 55)

எபிசோடு - 54 (22.03.2010) சுட்டி - 1 & >சுட்டி - 2
(வழக்கம்போல முதல் சுட்டிதான் படுத்துகிறது என்றால், இம்முறை இரண்டாவது சுட்டியும் படுத்தியது. டெக்சதீஷ் தளமே வெகு நேரத்துக்கு செயலற்றிருந்தது).
நாதன் வீட்டுக்கு நீலகண்டனும் பர்வதமும் வந்திருக்கின்றனர். வரப்போகும் சஷ்டியப்தபூர்த்திக்கான ஏற்பாடுகள் பற்றிய பேச்சு உல்லாசமாக நடக்கிறது. நியாயமாக அசோக் கையில் எடுத்து நடத்த வேண்டிய இந்தச் விசேஷம் அவன் அதை செய்யாததால் நீலக்ண்டனும் பர்வதமும் சேர்ந்து நன்றாக நடத்தித் தருமாறு வசுமதி அவர்களை கேட்டு கொள்கிறாள். கேட்டரிங் யார், என்னென்ன சாப்பாட்டு மெனுக்கள் ஆகியவை விவாதிக்கப்படுகின்றன. கடைசியாக போகிற போக்கில் அவ்வளவு அமர்க்களமாக சமையல் செய்யும் கல்யாண சமையற்காரர்கள் என்னவோ அந்த சாப்பாட்டைத் தொடுவதே இல்லை எனவு, அவரவர் தங்கள் வீட்டிற்கு சென்று மோர் சாதம் சாப்பிடுவதோடு திருப்தி அடைகின்றனர் எனவும் கூறப்படுகிறது. இதை நானே நேரில் பார்த்துள்ளேன். அதுவும் சரிதான், எவ்வளவு நாட்கள்தான் விடாது கல்யாண சமையல் சாப்பிடுவது. இரண்டு நாள் தொடர்ச்சியாக சாப்பிட்டால் நமக்கே அலுப்பு தட்டிவிடுகிறதுதானே.

பாகவதர் வீட்டில் மணிக்கு ராஜி காப்பி கொண்டு வந்து தருகிறாள். மணி யாருக்கும் தெரியாமல் ஷேர் மார்க்கெட்டில் செயல்பட்டு பணம் சேர்த்து வங்கி கணக்கை வீட்டில் யாருக்கும் தெரியாமல் வைத்திருப்பதை எல்லோரிடமும் போட்டு உடைகிறாள். மணியின் பெயரில் தவறு இருப்பதால் அவன் முதலில் வாதிட்டாலும், கடைசியில் மௌனமாகவே இருக்கிறான்

நீலகண்டன் வீட்டுக்கு அழைக்க நாதனும் வசுமதியும் செல்கின்றனர். அவர்களுக்காக அந்த வீட்டு வாசலில் அசோக் காத்திருக்கிறான். நாதன் அசோக்கையும் வசுமதியையும் அனுப்பிவிட்டு வெளியில் காரிலேயே அமர்ந்திருக்கிறார். அதையறிந்த நீலகண்டன் அவரை உள்ளே அழைத்து வருகிறார். சஷ்டியப்தபூர்த்தியை அமர்க்களமாக கொண்டாட வேண்டும் என எல்லோரும் கூற, அது வேண்டாம் என அசோக் வாதம் புரிகிறான். வைதீக காரியங்களே அதிகமாக இருக்க வேண்டும் என அவன் கூறுகிறான்.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு நாதன் சஷ்டியப்த பூர்த்தி பத்திரிகை வருகிறது. அது பற்றி அங்கு விவாதம் நடக்கிறது. சாம்பு சாஸ்திரிகளை ஏன் அதற்காக புரோகிதத்துக்கு கூப்பிடவில்லை என பேசுகின்றனர். பல நிகழ்ச்சிகள் சங்கிலித் தொடர் போல நடந்து இந்த நிகழ்வு வந்தது என அலசப்படுகிறது. சாம்புவின் மகள் ஆர்த்தி முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜிம் கார்ட்டரின் வாழ்க்கையில் நடந்த சங்கிலி சம்பவங்களால் அவர் கடைசியில் அமெரிக்க ஜனாதிபதியானார் என தான் எங்கோ படித்ததை நினைவு கூறுகிறாள்.

இதே மாதிரியான இந்திய உதாரணத்தை சோ அவர்கள் தருகிறார். ஹரியானா போலீசார் தன்னை கண்காணித்ததாக நினைத்து வெகுண்ட ராஜீவ் சந்திரசேகரின் அரசுக்கான ஆதரவை நீக்கிக் கொள்ள, சந்திரசேகர் அரசு கவிழ்ந்து லோக்சபா தேர்தல் வர, ராஜீவ் ஜெயித்து விடுவாரோ என்னும் பயத்தில் புலிகள் அவரை போட்டுத்தள்ள, அனுதாப வோட்டுகளால் காங்கிரஸ் வெற்றிபெற்று, அரசு அமைக்க, அதிகம் சர்ச்சைக்குள்ளாகாத மனிதர் என்னும் ஹோதாவில் நரசிம்ம ராவ் பிரதமராக வர என்னும் பல நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தன. இதை பகுத்தறிவின் கீழே ஆராய்தல் கடினம் என சோ கூறுகிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 55 (23.03.2010) சுட்டி -1 & சுட்டி - 2
நாதன் வீட்டுக்கு அவரது சஷ்டியப்தபூர்த்தி ஏற்பாடுகள் பற்றி பேச புரோகிதர் வருகிறார். செய்ய வேண்டிய சடங்குகள் குறித்து பட்டியல் தருகிறார். இம்மாதிரி சஷ்டியப்த பூர்த்தியும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் செய்ய வேண்டிய நாற்பது சம்ஸ்காரங்களில் வருமா என சோவின் நண்பர் கேட்க, அப்படியெல்லாம் இல்லை என அவர் கூறுகிறார். அதே சமயம், அறுபதாம் ஆண்டு நிறைவுக்கான சடங்கின் பெயர் உக்ர ரத சாந்தி எனவும், 70 வயது பூர்த்தியாகும்போது பீமரத சாந்தி செய்வது வழக்கம் எனவும் அவர் கூறுகிறார். இம்மாதிரியான சடங்குகள் எல்லாமே எதையும் செலிப்ரேட் செய்வதில்லை. செய்த பாவங்களுக்கான சாந்தியே என அவர் கூறுகிறார். ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வது முக்கியம், எல்லோருடை க்ஷேமங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யப்படும் எனவும் அவர் கூறுகிறார்.

நீலகண்டன் வீட்டில் உமாவும் அவள் அன்னை பர்வதமும் பேசுகின்றனர். உமா தன் மாமியாருக்கு ஒரு நகை செய்து போட்டிருக்கிறாள். அவள் மாமியார் அதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது குறித்து பர்வதம் சந்தோஷமடைகிறாள்.

வேம்பு சாஸ்திரி வீட்டிலும் நாதனின் சஷ்டியப்தபூர்த்தி குறித்து பேசுகின்றனர். அவருக்கு அழைப்பு இல்லை என்பதை அவர் மனைவியும் தமக்கையும் குறை கூறுகின்றனர். வேம்பு அவர்களை சமாதானப்படுத்துகிறார். வசுமதி நகைக்கடை விளம்பரம் போல நகைகளை அணிந்து மினுக்கு காட்டுவதையும் கேலி செய்கிறார்கள்.

சாம்புவின் இரண்டாம் மகன் தான் கங்காதரன் அன்பு சுந்தரமூர்த்தி (GAS for short) ஏனும் கேட்டரரிடம் கணக்கு எழுதும் வேலைக்கு போகப்போவதாக கூறி தன் தந்தையிடம் அனுமதி பெறுகிறான். ஆர்த்திக்கும் வரன் பார்க்க வேண்டும் என சாம்புவின் மனைவி செல்லம்மா கூற, அவர் தனது சகபுரோகிதரின் பிள்ளைக்கு ஆர்த்தியை தரலாம் என கூற, தன் பெண் புரோகிதர் வீட்டில் வாழப்போக வேண்டாம் என அவர் மனைவி கூறுகிறாள்.

நாதனின் சஷ்டியப்த பூர்த்திக்கு வரும் கேட்டரரின் வீட்டில் குடியிருப்பவர் ஒரு இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட். அவரும் அவர் மனைவியும் பிசினஸ் பிடிப்பது பற்றி பேசுகின்றனர். அவரது மனைவி அவரது அப்ப்ரோச்சை குறை கூறுகிறாள். அவரோ தன் நண்பனை விபத்துக்கான காப்பீடு செய்து கொள்ளும்படி கூறியதற்கு அவனோ தான் சிவபக்தன் எனவும், சிவன் தன்னைக் காப்பான் எனக் கூறிவிட்டதாகவும் சொல்லி அயற்ச்சி அடைகிறார்.

மார்க்கண்டேயன் சிவபக்தனல்லவா, அவன் உயிரையும் சிவன்தானே காப்பாற்றியது என சோவின் நண்பர் கேட்க, அவர் மார்க்கண்டேயனின் கதை பற்றி கூறுகிறார். அவன் சிவ பக்தன் மட்டுமல்ல, விஷ்ணு பக்தனும் எனக்கூறி அதற்கான ஆதாரங்களை அடுக்குகிறார். இம்மாதிரி பல இடங்களில் சைவ வைணவ ஒற்றுமை போற்றப்படுவதையும் அவர் எடுத்துரைக்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/21/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 52 & 53)

எபிசோட் - 52 (17.03.2010) சுட்டி - 1 & சுட்டி -2
(இசைதமிழ் தளத்தில் இந்த எபிசோட் அப்லோட் ஆகாததால், முதல் சுட்டி வேலை செய்யாது).

அசோக்கும் வசுமதியும் கோவிலில் சந்திக்கின்றனர். அவன் தங்களது சஷ்டியப்த பூர்த்தி பத்திரிகையில் தனது பெயரை போட வேண்டாம் எனக் கூறியதை அவள் குறை கூறுகிறாள். தன் அன்னையை சமாதானப்படுத்தும் அவன் கோவில் குருக்களின் பெண்ணுக்கு அவள் கல்யாணத்துக்காக தங்க சங்கிலி போட வேண்டியிருக்கிறது என்றும், சஷ்டியப்தபூர்த்திக்காக தனக்கு தரப்போகும் உடை வகையறாக்களுக்கு பதிலாக அப்பெண்ணின் திருமணத்துக்காக 15000 ரூபாய் அவள் நன்கொடையாகத் தரவேண்டுமென அவன் கேட்டுக் கொள்ள அவளும் செக் தருகிறாள்.

சிங்காரத்தின் மகனுக்கு இதயத்தில் ஓட்டை என்றும், அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்ச ரூபாய் போல செலவு வரலாம் என்பதால் சிங்காரம் இடிந்து போய் அசோக்கிடம் ஆறுதல் தேடி வருகிறான். அவனிடம் அசோக் மரணத்தின் தவிர்க்கமுடியாத தன்மை பற்றிக் கூற, சோவின் நண்பர் “ஏன் சார் இவனுக்கு வேறுவேலையே கிடையாதா, எல்லோரிடமுன் மரணத்தை பற்றியே பேசுகிறானே” என அலுத்து கொள்ள அவரோ அசோக் பேசுவது அப்படியே கீதையில் உள்ளதை மேற்கோள் காட்டியே என சுட்டிக் காட்டுகிறார்.

அதற்காகவெல்லாம், ஓர் உயிர் மரண அபாயத்தில் இருக்கும்போது அதைக் காப்பாற்ற போராடாமல் இருக்கக் கூடாது எனவும், தன்னால் முடிந்த அளவுக்கு அப்பையனின் ஆப்பரேஷனுக்காக செலவு செய்யத் தேவையான பொருளை பலரிடமும் கேட்டு பெர்று தருவதாக அசோக் சிங்காரத்திடம் வாக்கு தருகிறான்.

சமையற்கார மாமியும் அவள் கணவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். வழக்கம்போல அந்த கணவன் தன் கையாலாகாத்தனத்தின் பிரகடனம் செய்கிறான். நாதன் தனக்கு வேலை கொடுத்ததியும் சொல்கிறான். இருப்பினும் அவனது குறைகளை கழுத்துமட்டும் சுமக்கிறான்.

வேம்பு சாஸ்திரியின் சம்பந்தி சிகாமணி முதலியாரின் கார் திருட்டு போயிருக்கிறது. அது இப்போது ஆந்திராவின் தாதா ஒருவரிடம் இருப்பதாகவும் அவனது பிரைவேட் டாக்சியாக செயல்படுகிறது என்பதை அறிந்து அவர் அதிர்ச்சியடைகிறார். ஆனால் அதை மீட்டுத் தரவியலாது என போலீஸ் அதிகாரி வெளிப்படையாகவே கூறி, அது தொலைந்து போனதற்கான சான்றிதழைத் தருவதாகக் கூறி அவரை சமாதானம் செய்ய முயல்கிறார். ஆனால் முதலியார் ஒத்து கொள்ளவில்லை.

சிங்காரத்தின் மகன் ஆபரேஷன் சம்பந்தமாக அசோக் தன் மேல் இரட்டைவட சங்கிலியை திருடியதாக பழி சுமத்தி லாக்கப்பில் தள்ளீய அப்பெண்ணின் கணவரிடம் ஏதேனும் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்ள அதே பெண்மணி அதே சங்கிலியையே அசோக்கிடம் கொடுத்து அதை விற்று பணத்தை ஆபரேஷனுக்காக உபயோகித்து கொள்ள கூறுகிறாள். அசோக் அதற்கென்ன அவசியம், இந்த சங்கிலி அவளது பிரியமான உடைமை அல்லவா எனத் தயங்க, அவளோ இதை பிராயச்சித்தமாக வைத்து கொள்ளும்படி கூறுகிறாள்.

(தேடுவோம்)

எபிசோட் - 53 (18.03.2010) சுட்டி - 1 & சுட்டி -2
காசி யாத்திரைக்காக குருவிபோல சேர்த்த 15000 ரூபாயை வேம்புவின் சகோதரி சிங்காரத்தின் மகனது ஆப்பரேஷனுக்காக தர, வேம்பு சாஸ்திரி ஆடிப்போகிறார். அவரது மனைவி சுப்புலட்சுமியோ தனது நாத்தனாரின் இச்செயலை ஆதரிக்கவே இல்லை. இருப்பினும் வேம்புவின் சகோதரி திடமாகவே இருந்து அப்பணத்தை அசோக்கிடம் தருகிறாள்.

கங்கையில் பாபம் கரைப்பது பற்றி சோவின் ந்ண்பர் அவரிடம் கேட்க, அவரும் விளக்குகிறார். கங்கையில் ஸ்நானம் செய்வதை விட அதிகப்பலன் காவேரியில் ஸ்நானம் செய்வதால் வருகிறது என்றும், அதுவும் துலாக்காவேரி ஸ்நானம் மிகவும் விசேஷம் என்றும் கூறுகிறார்.

நாதனின் நடக்கவிருக்கும் சஷ்டியப்தபூர்த்தி பற்றி பாகவதரின் மனைவியும், அவளது இரண்டாம் பிள்ளை மணியும் விவாதிக்கின்றனர். அசோக் தான் பிரும்மச்சரியம் கடைபிடிப்பதால் அந்த சஷ்டியப்தபூர்த்தி பத்திரிகையில் தன் பெயரை போடக்கூடாது என கூறியது பற்றியும் பேச்சு வருகிறது.

பர்வதமும் அவள் வீட்டுக்கு அருகில் குடிவந்திருக்கும் சமையற்கார மாமியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். தனது கணவனுக்கு இருக்கும் உடல் உபாதைகள் பற்றி சமையற்கார மாமி கூற, பர்வதம் அவள் ஆயுர்வேத முறையை முயற்சிக்கலாம் என ஆலோசனை தருகிறாள்.

சோ தனது நண்பரிடம் ஆயுர்வேத வைத்தியம், தன்வந்திரி அவதாரம் ஆகியவை பற்றி கூறுகிறார்.

நீலகண்டன் வீட்டில் உமா இருக்கிறாள். அவளது மாமியாரின் போன் வருகிறது. அவள் தன் மாமியாரிடம் பேசிவிட்டு, ரமேஷுக்கு போன் செய்ய முயன்றால், ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. ஆபீசுக்கு போன் செய்தால் ரமேஷ் மாலை ஆறுமணிக்கே புறப்பட்டுவிட்டதாக செக்யூரிட்டி கூறுகிறான்

வீட்டில் ரமேஷ் தான் ஆஃபீசில் இருந்ததாக வழக்கமான பொய்யைக் கூற, அதற்குமேல் பொறுக்கமுடியாது அவள் அவன் பொய் சொல்வது தனக்குத் தெரியும் எனக்கூறுகிறாள். அவனோ தான் எப்போதுமே தனது உடல் ஆரோக்கியத்தை பேணுவதாகவும் ஆகவே தினமும் ஜிம்முக்கு போய்விட்டு இரவு லேட்டாக வருவதாகவும் விடாப்பிடியாக கூறுகிறான்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/20/2010

வேழம் இணைய பத்திரிகையில் எனது செவ்வி பகுதி - 2

செவ்வியின் முதற்பகுதி

6. சுஜாதா தமிழில் அனைவருக்கும் பிடித்த எழுத்தாளர். அவரை தவிர்த்து உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர் யார்? என்ன காரணம்?
ஒருவர் என்ன பலர் உண்டு. ஆனால் அவர்களில் முக்கியமானவர்கள் கல்கி, தேவன், நாடோடி, ரமணி சந்திரன், சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி ஆகியோர். காரணங்கள் என்னவென்றால் அவர்களது உழைப்பு, கதையை சுவாரசியமாக கொண்டு செல்லும் பாணி ஆகியவைதான்.

7. அது என்ன டோண்டு? எதாவது காரணம் உள்ளதா?
என் அன்னைக்கும் தந்தைக்கும் கருத்து வேறுபாடு என்று ஏதாவது ஒன்றிருந்தால், அது இக்கேள்விக்கான பதிலில்தான் இருக்கும். என் தந்தை அது ஒரு மராட்டிப் பெயர் என்றும், நான் பிறந்த செய்தி அவர் பம்பாய் போஸ்டிங்கில் இருந்த போது அவருக்கு வந்தது என்றும் கூறிக்கொள்வார். எனது அன்னையோ டோண்டு என்றால் அசடு என்று அர்த்தம் என அழுத்தம் திருத்தமாகக் கூறுவார். அதுவும் குழந்தையாக இருந்தபோது திருதிருவென்று முழிப்பேனாம், ஆகவே இது என்ன டோண்டு மாதிரி முழிக்கிறது என்று யாரோ சொல்ல, என் அன்னை அதை எனக்கு செல்லமாக சூட்டி, டோண்டு, மண்டு, குண்டு என்றெல்லாம் கொஞ்சியிருக்கிறார். மற்றப்படி டோண்டு என்ற பெயர் எனது தனித்தன்மையை காப்பாற்றி வந்திருக்கிறது.

8. உங்கள் பதிவுகளில் நீங்கள் வருடங்களை குறிப்பிடும்பொழுது சமீபத்தில் என்று சொல்லுவீர்கள்.(1953 என்று சொல்லும்பொழுது கூட). அதற்கு ஏதேனும் காரணம் உண்டா?
"சமீபத்தில் 1955-ல் நான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் படித்த போது" என்று ஆரம்பித்து நான் எழுதிய/எழுதும் போதெல்லாம் பல வலைப்பதிவர்கள் டென்ஷன் ஆவது வழக்கம். என்ன செய்வது, எனக்கு எல்லாமே சமீபத்தில் நடந்தது போலவே தோன்றுகிறதே. என் வாழ்வில் நான் நேரடியாக அனுபவித்த பல நிகழ்ச்சிகள் என் நினைவுக்கு வரும்போது சும்மா வருவதில்லை. முழு அளவில் வருகின்றன. அவற்றை மறுபடியும் உணர முடிகிறது.

நான் சாதாரணமாக குறிப்பிட்ட தேதி ஒன்றுக்கான கிழமையைக் கூறவியலும். அதற்கு சில நிமிடங்கள் ஆகும். கூறப்பட்டத் தேதிக்கு மிக அருகில் உள்ள தேதியில் என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஏதாவது இருந்தால் அதிலிலிருந்து வொர்க் அவுட் செய்வேன். ஒருவர் 1964 ஜனவரி முதல் தேதிக்கானக் கிழமையைக் கேட்க, அவரிடம் புதன் என்று கூற, எப்படி கண்டு பிடித்தீர்கள் என்று கேட்க, அவரிடம் ஏப்ரல் முதல் தேதி 1957 ஆம் வருடம் திங்கள், அதிலிருந்து கண்டுபிடித்தேன் என்று கூறி விடுவேன். ஆகவே நேரம் பிடிக்கும். அதே நேரத்தில் என் வாழ்வில் நடந்த அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை அசைபோடவும் நேரம் கிடைக்கும். அதனால்தான் நான் என் பதிவுகளில் சமீபத்தில் 1955 வருடத்தில் என்றெல்லாம் எழுத முடிகிறது.

உதாரணமாக, மேலே குறிப்பிட்ட 1957, ஏப்ரல் 1-ஆம் தேதி நயா பைசா அமுலுக்கு வந்தது, அதன் சம்பந்தப்பட்ட நினைவுகள், அன்று என் வாத்தியார் கே. ராமஸ்வாமி அய்யர் அவரிடம் உதை வாங்கியது, நான் மட்டும் உதை வாங்குவானேன் என்ற நல்லெண்ணத்தில் என் நண்பன் டி.வி. ரங்காச்சாரியையும் போட்டுக் கொடுத்தது எல்லாம் ஞாபகம் வரும். மறுபடியும் என் வயது 11 ஆகி விடும். அம்புடுத்தேன்."

பொதுவாகவே என்னை மாதிரி பெருசுகள் காலம் எவ்வளவு வேகமாகச் செல்கிறது என்பதை குறித்து வியப்படைந்துள்ளோம். இது பற்றி யோசித்ததில் எனக்கு சில விஷயங்கள் தோன்றின. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

முதலில் தோன்றுவது வாழ்நாளின் சதவிகிதம். விளக்குவேன். உதாரணத்துக்கு 1955-ஐயே எடுத்து கொள்வோம். கல்கியில் "அமரதாரா" என்ற தொடர்கதை வந்து கொண்டிருந்தது. அதில் ஒரு கோர்ட் சீன். நான்கு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை பற்றி ஒரு சாட்சி வாக்குமூலம் அளிக்க எனக்கு சற்றே வியப்பு. அதாவது, அவ்வளவு ஆண்டுகளுக்கு பின்னால் சாட்சி எப்படி ஞாபகம் வைத்து கொண்டு சாட்சி அளிக்கிறார் என்று. ஆனால் இப்போது? 2006 ஜனவரி நமக்கு சமீபத்தில் இருப்பது போலத்தானே தோன்றுகிறது? என்னைப் பொருத்தவரை இப்போது நான்கு ஆண்டுகள் என்பது என் வயதில் 6.25% தான். ஆனால் 1954-ல் அதே காலம் என் ஆயுளில் 50%-க்கு மேல். இன்னும் கூறப்போனால் எனக்கு நினைவு தெரிந்து அப்போது 5 ஆண்டுகள்தான் ஆகியிருந்தன, ஆகவே 80% என்றுகூட கூறலாம். இதே கணக்கில் பார்த்தால் நான் திருவல்லிக்கேணியை விட்டு 23-ஆம் வயதில் நங்கநல்லூருக்கு குடிபெயர்ந்தபோது நான் நினைவு தெரிந்தபின் அங்கு வாழ்ந்த 14 ஆண்டுகள் என் அப்போதைய வயதில் 50%-க்கு மேல். ஆகவே ரொம்ப நாள் நான் திருவல்லிக்கேணியில் வாழ்ந்த உணர்வு. அதே உணர்வு இப்போது வர வேண்டுமானால் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தேவைப்படும்.

இப்போது வேறு கோணத்திலிருந்து நோக்குவேன். Windows 95 என்பது எவ்வளவு பழையதாகத் தோன்றுகிறது? பத்து ஆண்டுகளிலேயே பலருக்கு அது அரதப் பழசாகத் தோன்றுகிறதே. ஆகவே இங்கே இன்னொரு மெக்கானிஸம் வேலை செய்கிறது. கணினித் துறையில் உள்ள தொழில் நுட்பங்களின் ஆயுள் ஓரிரு ஆண்டுகளே. ஏனெனில் நிகழ்ச்சிகள் அவ்வளவு அடர்த்தியாக வருகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்புவரை கூட இருந்த வி.சி.ஆர்கள் எங்கே போயின?

நான் சமீபத்தில் 1971-ல் விமானப்படையில் பொறியாளர் தேர்வுக்காக மைசூரில் மூன்று நாட்கள் நேர்க்காணலுக்காக சென்றிருந்தேன். எல்லா நாட்களும் நிகழ்ச்சிகளால் நிரம்பியிருந்தன. மூன்றாம் நாள் அன்று அங்கு ரொம்ப நாள் இருந்தது போல் உணர்வு.

Now to sum up:
காலத்தை பற்றி நம் புரிதல்கள் இரண்டு தளங்களில் நடக்கின்றன. சாதாரண ரொட்டீன் வாழ்க்கை மற்றும் பல நிகழ்ச்சிகளால் நிரம்பிய வாழ்க்கை ஆகியவையே அவை. வெறுமனே தினமும் எழுந்து, சாதாரணமாக பொழுதைக் கழிக்கும்போது நாட்கள் வெகு சீக்கிரம் ஓடி விடுவது போலத் தோன்றுகிறது. ஆனால் அதுவே ஒரு குறிப்பிட்ட காலநேரம் (உதாரணத்துக்கு ஒரு மாதம்) பல நிகழ்ச்சிகள் நிரம்பியிருந்தால் கணிசமானதாகவே தோன்றுகிறது. வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருந்து பல நிகழ்ச்சிகளால் அதை நிரப்பிக் கொள்கிறவர்கள் தங்கள் வாழ்நாளை இன்னும் அதிக அளவில் அனுபவிக்கின்றனர் என்றே தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

9. 60-70 களில் மிக தீவிரமாக இருந்த பார்ப்பனீய எதிர்ப்பு இப்பொழுது புத்துணர்வு பெற்று இருப்பதுபோல் தோன்றுகிறது? இதை பற்றிய உங்கள் கருத்து?
அது எப்போதுமே அப்படியேதான் இருந்து வந்திருக்கிறது. என்ன, இப்போதெல்லாம் வலைப்பூக்கள் பெருகியதால் எல்லாமே சீக்கிரமாகவே பதிவாகி எதிர்வினைகளும் அதிகமாகின்றன.

10. ஒரு இனத்தை அழிக்கிறார்கள்(இலங்கையில்) என்று குரல் குடுக்கும் சிலர் இங்கும் அதே பணியை (பார்ப்பனிய எதிர்ப்பு) செய்கிறார்கள். அதை பற்றிய உங்கள் கருத்து?
பார்ப்பன இனத்தையெல்லாம் அவ்வாறு அழித்துவிட முடியாது. இது சம்பந்தமாக நான் மேலும் கூறியதை இங்கேயும் பார்க்கலாம்.

11. மொழிபெயர்ப்பை பிரதான வேலையாக எடுத்து செய்ய இயலுமா? ஒரு நல்ல மொழி பெயர்ப்பாளருக்கு தேவையான தகுதிகள் என்ன?
எடுத்தவுடனேயே ஃப்ரீலேன்சராக வருவது கஷ்டம். எங்காவது முதலில் மாத சம்பளத்துக்கு வேலை பார்ப்பது நலம். என் விஷயத்தில் நான் பொறியாளராக முழுநேர வேலையில் இருந்தபோதே மொழிபெயர்ப்புகளும் செய்தேன். இந்த இரட்டை செயல்பாடு 18 ஆண்டுகள் நடந்தது. பிறகுதான் விருப்ப ஓய்வு பெற்றேன். அதற்குள்ளேயே எனது வாடிக்கையாளர்களின் லிஸ்ட் நல்லபடியாக உருவானது.

மொழிபெயர்ப்பு ஒரு புறம். கூடவே பொறியியல், மருத்துவம், விஞ்ஞானம், சட்டம் ஆகிய ஏதேனும் துறையில் ஸ்பெஷலைஸ் செய்வது அவசியம். ஏனெனில் மொழிபெயர்ப்புகள் எல்லாமே கிட்டத்தட்ட 90% இம்மாதிரியான தொழில்நுட்ப விஷயங்களுக்குத்தான் தேவைப்படுகின்றன. வெறுமனே எம்.ஏ. ஜெர்மன் அல்லது பிரெஞ்சு காரியத்துக்காகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/19/2010

Good riddance Hussain, adieu

அப்பாடா ஒரு வழியக இந்த சில்லுண்டி பயல் ஹுசைன் கத்தார் நாட்டுக்கு சென்றான். கத்தாருக்கு அவனும் அவனுக்கு கத்தாரும் ஒருவருக்கொருவர் தண்டனையே என்பது வேறு விஷயம். அது அவர்கள் பாடு.

ஹுசைனுக்காக கச்சை கட்டி வந்தவர்களிடம் பல முறை பல கேள்விகள் வைத்திருந்தேன். யாரும் நேரடியான பதில் தரவில்லை. இங்கு அவற்றில் சிலவற்றை மறுபடி வைக்கிறேன்.

1. ஹிட்லரை நிர்வாணமாக வரைந்தது அவனை அவமானப்படுத்தவே என திருவாய் மலர்ந்தருளியுள்ள ஹுசைன் சரஸ்வதி, சீதை, பார்வதி ஆகிய பெண் கடவுளரை வரைந்தது எதில் சேர்த்தி?

2. நிர்வாணமாகக் கூட வேண்டாம், முகம்மதுவின் படத்தை துணியுடன் வரையத் துணிவானா அவன்?

3. முகம்மது பற்றிய ரெஃபரன்ஸ் வந்ததற்கே இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகள் கலவரம் செய்ய, துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடி ஒளிந்து அதை நீக்கியவன் இங்கு மட்டும் ஏன் மொண்டித்தனம் செய்ய வேண்டும்?

4. சல்மான் ருஷ்டி விவகாரத்தில் அவருக்கு வந்த மரண மிரட்டலை எங்காவது இவன் எதிர்த்திருக்கிறானா? (முக்கால்வாசி அதற்கு ஆதரவு கூட தெரிவித்திருப்பான்)

5. தஸ்லீமா விவகாரத்தில் இவனது நிலைப்பாடு என்ன?

6. மேலே உள்ள இரண்டு கேள்விகளுக்கான விடைகள் அவனுக்கு சப்பைக்கட்டு கட்டும் போலி மதச்சார்பற்றவர்களிடமாவது அவர்களை பொருத்து உள்ளனவா?

கோவில்களில் இருக்கும் நிர்வாணத்தை பற்றி கூறினார்கள். அவை ஆகம விதிகளுக்குட்பட்ட விஷயம். பக்தி நோக்கில் செய்வது. சில்லுண்டி பயல்கள் எல்லாம் செய்யலாகாது. அப்படி செய்தால் இப்படித்தான் நாடுவிட்டு ஓட வேண்டியிருக்கும்.

நல்ல வேளையாக ஏதோ ஒரு வகையில் இந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது. இல்லாவிட்டால் அவன் இந்தியா திரும்பி, அவனது பாதுகாப்புக்கு என இந்திய மக்களின் வரிப்பணம்தான் விரையம் செய்யப்பட்டிருக்கும். அது மிச்சமாகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/17/2010

நிறுவனமாக்கப்பட்ட பிச்சைக்காரத்தனம்/போக்கிரித்தனம்

கேரள தொழிலாளர்களை பிச்சைக்காரர்கள் ரேஞ்சுக்கு கொண்டு சென்ற இடதுசாரி இயக்கம் பற்றி நான் இட்ட பதிவு ரொம்பவும் சுட்டு விட்டது போலிருக்கிறது. எண்ணையில் பொரித்த அப்பமாக வினவு துடிக்கிறார். அதில் வரும் ஒரு பின்னூட்டத்தில் தான் பாண்டி என்பதை அறிந்து அடாவடி செய்த போர்ட்டர்களை பற்றி கூற, இன்னொருவர் உடனே திருத்துகிறார். அதாகப்பட்டது கேரள மக்களிடமும் அவ்வாறே நடந்து கொள்வார்களாம். ஆனால் இந்த கேவலமான சிஸ்டம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாதுதானே. இந்த சுயமரியாதையற்ற நிலைக்கு சப்பைகட்டு கட்டும் இப்பதிவுக்கு ஒரு மனநல மருத்துவர் வேறு சான்றிதழ் தருகிறார். வேலை செய்யாது சம்பாதிக்க நினைப்பதற்கு மருத்துவரீதியாக ஒரு பெயர் இருக்குமே? அது என்ன என்பதை அறிவாரா அவர்? அல்லது பரீட்சையில் அக்கேள்வியை விடை தெரியாமல் சாய்சில் விட்டு விட்டாரா?

என்ன துடித்தென்ன வினவு? உண்மையை மறைக்க முடியுமா? பஸ்ஸிலிருந்து இறங்கும் ஒருவன் கையில் ஒரே ஒரு ப்ரீஃப் கேஸ் இருக்கிறது. அவன் தானே அதை சுமந்து செல்ல முயல்கிறான். கேரளாவாக இருந்தால் உடனே ஒரு அடாவடி கும்பல் போர்ட்டர் ரூபத்தில் வந்து போர்ட்டர் வைத்துத்தான் அந்த ப்ரீஃப் கேசை எடுத்து செல்ல வேண்டும் என கேட்கிறது. அப்படியே இவன் தானே எடுத்து சென்றாலும் கவலையில்லை அதற்காக சங்கம் நிறுவியுள்ள அடாவடி கூலியை கொடுத்து போ என்று கூறுகிறது. இதற்கு என்ன பெயர்? பேசாமல் ஐயா பசியாக இருக்கிறது, சோறு போடுங்கள் என்றே கேட்கலாமே. அவ்வளவு சுயமரியாதையற்றவர்களாக ஆக்கி வைத்தவர்களை வையாமல் வாழ்த்துவார்களாமா?

இதற்கு தலைக்கூலி அல்லது அட்டிமறி என பெயர் கொடுத்து ஞானஸ்நானமே செய்திருக்கிறார்கள் கம்யூனிஸ்டு பெரியவர்கள். ஐயா, சாதாரணமாக குழந்தைக்கு பெயர் வைத்தால் மூன்று பெயர்களாவது வைக்க வேண்டும். நான் சஜஸ்ட் செய்யும் பெயர் மூன்றாம் பிச்சைக்காரத்தனம். என்ன வினவு ஓக்கேவா? வினவின் துரதிர்ஷ்டம் என்னுடைய இந்த பார்வைகோணத்தை ஏற்ற மற்றொருவர் ஜெயமோகன். வேறு யாராவது பார்ப்பன பதிவராக இருந்தால் பார்ப்பனர்களின் திமிர் என்றும் போட்டு கொள்வாராக இருக்கும். ஐயோ பாவம் வினவு. Better luck next time!!!

நோக்குக்கூலியையும் நியாயப்படுத்துகிறார் வினவு. எந்த வேலைக்கு எந்த கருவி தேவையோ அதைத்தான் உபயோகிப்பார்கள். ஏன், அவ்வாறு பெறும் தண்ட சம்பளத்துக்கு வேறு ஏதேனும் துணை வேலைகளை செய்யலாமே. இயந்திரம் வைக்கும் இடங்களை சுத்தம் செய்யலாமே? மாட்டார்கள். வெறுமனே சோற்று மூட்டையை கொண்டுவந்து வேடிக்கை பார்க்கவே விரும்புவார்கள். கேட்கவே அருவெறுப்பாக இல்லை? அதுதான் இடது சாரி இயக்கம் சொல்லித் தந்த விஷயம்.

வளைகுடா பகுதிகளுக்கு போன கேரள சகோதரர்களே கூட தாங்கள் சம்பாதித்த பணத்தை நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களாகத்தான் வாங்குகின்றனர். ஏதேனும் தொழிலில் போட்டால் கூட அதை நிச்சயமாக கேரளாவில் செய்ய மாட்டார்கள். சராசரி கேரள தொழிலாளியின் இந்த மனப்பாங்கை மற்ற எல்லோரையும் விட அவர்களே அதிகம் அறிவார்கள்.

இந்த உலகில் இலவச சாப்பாடு என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றுக்கும் விலை உண்டு. அப்படி போடும் ஓசி சாப்பாட்டுக்கும் பெரிய விலையையே கேரளா தருகிறது. அங்கு தொழில் துவங்காது வேறு இடங்களுக்கு செல்லும் வேலைகளால் வரும் இழப்பை அறியும் கற்பனை அங்கு இல்லை. அப்படியே கற்பனை செய்ய முடிந்தவர்கள் இத்தனை காலத்துக்கு கேரளாவை விட்டு வெளியே சென்றிருப்பார்கள்.

கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து தொழிற்சாலைகள் ஓட்டம் எடுப்பதேன்? இரண்டிலும்தான் கம்யூனிஸ்டு மேட்டிமை இருப்பது வெறும் தற்செயலான நிகழ்ச்சிதானா? இதில் என்ன ஆச்சரியம் என்றால் கம்யூனிஸ்டுகளால் ஆளப்பட்ட தேசங்களில் தொழிலாளர்கள் நிலைமை பரிதாபத்துக்குரியதாகவே இருந்து வந்திருக்கிறது. ஸ்ட்ரைக் செய்யும் உரிமை அவர்களுக்கு இருந்ததே இல்லை. Ayn Rand-ன் Atlas shrugged என்னும் புதினத்தில் கற்பனையாக அந்த நாவலாசிரியை சித்தரித்த அபத்தங்களெல்லாம் கம்யூனிச நாடுகளில் நிஜமாகவே நடந்தன. அதன் மரண காலத்தில் சோவியத் யூனியனில் வேலைக்கு வரும் முக்கால்வாசி தொழிலாளிகள் ஃபுல்லாக வோட்கா போட்டுவிட்டே வேலைக்கு வருவார்கள். மேனேஜர்களால் ஒன்றும் செய்ய முடியாது. சம்பளம் மட்டும் தர வேண்டும். அதே நோக்குக்கூலி விஷயத்தின் இன்னொரு வெர்ஷன். அதே நிலைமை மற்ற கம்யூனிஸ்டு நாடுகளிலும் இருந்தது.

அதனாலேயே எண்பதுகளின் இறுதியில் ஒவ்வொரு கம்யூனிஸ்டு அரசாக விழுந்தது. அதற்கப்புறம் இரண்டு ஆண்டுகளிலேயே சோவியத் யூனியனே உலக வரைபடத்திலிருந்து மறைந்தது. இருந்தாலும் நம்ம உள்ளூர் கம்யூனிஸ்டுகளின் சவடால்கள் அடங்கவில்லை என்ன செய்வது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 50 & 51)

எபிசோட் - 50 (15.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
நாதன் சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென நீலகண்டன் வாதங்களை முன்வைக்கிறார். முதலில் மறுக்கும் நாதன் பிறகு பார்க்கலாமென்கிறார். வீட்டில் வசுமதியும் தன் தரப்பில் சஷ்டியப்த பூர்த்திக்கான வாதங்களை தொடர, அவரும் கடைசியில் ஒத்து கொள்கிறார்.

அசோக்கை போலீசில் புகார் கொடுத்து மாட்டிவிட்ட பெண்மணி தன் கணவனுடன் அசோக் பற்றி பேசுகிறாள். அவன் தங்களை மன்னிப்பான எனத் தெரியவில்லை என கலங்க அவள் கணவன் தான் நேரிலேயே போய் அச்சோகிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக கூறி அவன் பிட்சைக்கும் வருவான் என கூற, அப்பெண் அதை நம்பவில்லை.

இது என்ன சார் இப்பெண்தான் அசோக்கை இன்சல்ட் செய்கிறாள், பிறகு மன்னிப்பும் ஏன் எதிர்பார்க்கிறாள் என சோவின் நண்பர் கேட்க, சோவும் இந்த விஷயத்தில் இரண்டு நிலைப்பாட்டை கூறுகிறார். மகாபாரதத்திலேயே வீமனும் பாஞ்சாலியும் யுதிஷ்டிரரது அதீத மன்னிக்கும் பாவனையை சாட, அவரோ மன்னிப்பின் பெருமையை கூறுகிறார்.

ஆனால் அதே தருணத்தில் அசோக்கே பிட்சை கேட்டு வர, கணவன் மனைவி இருவருமே பச்சாத்தாப உணர்ச்சியில் தத்தளிக்கின்றனர்.

பாகவதர் வீட்டில் அவரது பேரன் தனது ஸ்கூட்டியை தொலைத்து விட்டு வருகிறான். போன இடத்தில் அதை நிறுக்த்திவிட்டு சென்றபோது அதை லாக் செய்யாமல் போனதையும் ஒத்து கொள்கிறான். அவனது தாய் தந்தையர் அவனைத் திட்ட, சித்தப்பா மணி அந்த ஸ்கூட்டி லாக் செய்யப்படாமல் இருந்ததை தான் கவனித்து, அதை வீட்டுக்கு எடுத்து வந்ததை கூறுகிறான். மேலே நடக்கும் பேச்சிலோ மணியே தான் வங்கி பாஸ்புக்கை தவற விட்டதை ஒத்துக் கொள்ள வேண்டியதாகிறது. இப்போது ராமசுப்பு பாஸ்புக்கை தான் வீதியில் கண்டெடுத்ததாக கூறி அதை எடுத்து தர, இப்போது சித்தப்பா மணியின் முறை அசடுவழிய. ரொம்பவுமே எதார்த்தமான குடும்பக் காட்சி.

நீலகண்டனின் மாப்பிள்ளை தினமும் ஆஃபீசில் வேலை இருப்பதாகக் கூறி வீட்டுக்கு லேட்டக இரவு 11 மணிக்கு வருகிறான். ஆனால் உண்மையில் அவன் ஆஃபீசை விட்டு மாலை 6 மணிக்கே கிளம்புவதை அறிந்த நீலகண்டன் குழம்புகிறார்.

(தேடுவோம்)

எபிசோட் - 51 (16.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சிவன் கோவிலில் சாரியாரும் அசோக்கும் பேசிக் கொண்டே பிரதட்சணம் செய்கின்றனர். சைவ வைணவ ஒற்றுமையை ஓங்கச் செய்ய வேண்டிய அவசியம் பற்றி பேசுகின்றனர். மகாபெரியவாள் சிவன் கோவிலில் ஆண்டாள் கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்ததாக சாரியார் கூறுகிறார். அம்மாதிரியே தாங்களும் செய்யலாம் என ஆலோசனை தருகிறார்.

சோவோ அவ்வாறு ஒட்டு மொத்தமாகச் சொல்லவியலாது என அபிப்பிராயப்படுகிறார். மகாபெரியவா சம்பிரதாயங்களில் ஊறியவர் என்றும், ஆகம விதிப்படி நடத்தப்படும் கோவில்களில் பிரதம கடவுளை தவிர மற்ற சம்பிரதாய கடவுள்கள் சாதாரண தேவதையாகத்தான் கருதப்படுவர் என்றும், மகா பெரியவா பழைய சம்பிரதாயங்களை மீறுபவர் அல்ல என்றும் கூறுகிறார். இருப்பினும் தனிப்பட்ட முறையில் கட்டப்படும் கோவில்களில் இம்மாதிரி பரிசோதனைகள் செய்வது ஆட்சேபத்துக்குரியவை அல்ல என்றும் கூறுகிறார். இம்மாதிரியான செயல்பாட்டு சுதந்திரமே இந்து மதத்தின் சிறப்பு எனவும் அவர் எடுத்துரைக்கிறர்.

அசோக்கும் சாரியாரும் இரண்டு சம்பிரதாயத்தையும் சேர்ந்த பெரியவர்களை கொண்ட கமிட்டி அமைக்க முடிவு செய்கின்றனர். அசோக் இது சம்பந்தமாக தனது தந்தையுடன் பேசுவதாக கூறுகிறான்.

நாதனுக்கு சாப்பாடு எடுத்துவரும் சிங்காரம் அவரிடம் ஆறுதலாக பேசுவதாக நினைத்து தனது மகனும் தன்னைப் பிரிந்து இருப்பதை கூறி, அவரது மனநிலையை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது என கூறுகிறான். பிறகு சஷ்டியப்த பூர்த்தி விஷயமாக அசோக்குடன் பேச வேண்டியிருப்பதால் அவனை அழைத்துவருமாறு கூறி சிங்காரத்தை அனுப்புகிறார். பிறகு அசோக் தன்னையும் சிங்காரத்தின் ரேஞ்சுக்கு கொண்டுவந்து விட்டதாகக் கூறி தனக்குள்ளேயே புலம்புகிறார்.

சிங்காரம் அசோக்கை பார்த்து கல்யாண விஷயமாக நாதன் அவனை பார்க்க விருபுவதாக கூற, அவனோ அவர் ஆண்டாள் கல்யாணம் விஷயமாக பேசுவதாக நினைத்து கொண்டு நாதனை பார்க்க விரைகிறான்.

நாதன் அலுவலகத்தில் ரமேஷுடன் அவன் தினமும் லேட்டாக வீட்டுக்கு போவது பற்றி கேட்க அவன் ஜெர்மன் கிளாஸ், ஜிம் என்றெல்லாம காரணங்களை அடுக்குகிறான். அவரோ அதெல்லாம் அவனது சொந்த விஷயம், ஆனால் அதற்காக ஆஃபீசை சாக்காக வீட்டில் கூறக்கூடாது என எச்சரிக்கிறார்.

அசோக்கும் நாதனும் பேசுகின்றனர். இவன் ஆண்டாள் கல்யாணத்தை நினைத்து பேச அவரோ சஷ்டியப்தபூர்த்தி கல்யாணம் பற்றி பேச முதலில் குழப்பம். பிறகு தெளிவு பிறக்கிறது. ஆண்டாள் கல்யாண விஷயத்தை நாதன் ஒத்துகொண்டு தனது முழு ஒத்துழைப்பையும் தருவதகக் கூறுகிறார். ஆனால் அசோக் சஷ்டியப்தபூர்த்தி விஷயத்தில் ஒரு பிரச்சினையை கிளப்புகிறான். அதாவது தந்தைக்கு சஷ்டியப்தபூர்த்தியை நடத்துவது பிரும்மச்சர்ய ஆஸ்ரமத்தை கடைபிடிக்கும் தன்னால் இயலாது, ஆகவே பத்திரிகையை தன் பெயரில் வெளியிட வேண்டாமென கேட்டு கொள்கிறான்.

இதென்ன என சோவின் நண்பர் கேட்க, அசோக் சொல்வதற்கு காரணம் சரியாக இல்லை என்கிறார். அவன் சன்னியாசி இல்லை, ஆகவே தாய் தந்தையருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய எந்த தடையும் இல்லை என்கிறார். ஆனால் அசோக் இங்கு ஒரு பரிசோதனை முயற்சியில் இருப்பதாக மட்டும் புரிந்து கொள்ள வேண்டியது என்றும் கூறுகிறார். ஆனானப்பட்ட சன்னியாசிகளான பட்டினத்தாரும் ஆதி சங்கரருமே தாயின் ஈமச்சடங்குகளை செய்ததையும் எடுத்துரைக்கிறார்.

அசோக் தான் சஷ்டியப்தபூர்த்திக்கு நிச்சயம் வருவதாகவும், ஆசிகள் பெற்றுக் கொள்ளப்போவதாகவும் கூறிவிட்டு அப்பால் செல்கிறான். நாதன் மனம் குமைகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/14/2010

முரளிமனோகரின் மொக்கைகள்

அம்புலிமாமா கதை
இன்று டோண்டு பெரிசு ஒரு பதிவரின் இடுகையை பார்த்து பகபகவென சிரித்துக் கொண்டிருந்தது. எட்டிப் பார்த்தேன், எனக்கும் சிரிப்பு வந்தது. பிறகு அது தனது பதிவில் புது இடுகையை போட தயார் ஆனது. நான் அதை தடுத்து, இம்முறை நானே போட்டுவிடுகிறேன் எனச் சொல்லி அதை தள்ளீப் போக சொல்லிவிட்டு நானே இப்போது பதிவை போடுகிறேன். அதுவும் நானும் ஒன்று என்பதால் அது போட நினைத்த பதிவை நான் போடுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

இப்போது அம்புலிமாமாவில் சமீபத்தில் 1954-ல் வந்த ஒரு கதை.

வீரபுரம் என்னும் ஊரில் பாணபத்திரன் என்னும் ஒரு வியாபாரி இருந்தார். அவர் தெருவில் செல்லும்போது மாட்டுச்சாணியில் காலை வைத்து வழுக்கி விழுந்தார். அதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. வைத்தியரிடம் போய் கட்டு போட்டுக் கொண்டு வந்தார்.

அவரைப் பார்ப்பவர்கள் எல்லாம் என்ன ஆயிற்று எனக்கேட்டு கேட்டு அவருக்கே அலுத்து விட்டது. ஆகவே அவர் ஒரு காரியம் செய்தார். கஷ்டப்பட்டு கோவில் கோபுரத்தின் மேலேறி எல்லோரையும் உரக்க அழைத்தார். எல்லோரும் என்னவோ ஏதோ என எண்ணி கீழே கூடினர். அவர் அப்போது உரக்க, “நான் சாணி வழுக்கி கீழே விழுந்து காலில் அடிப்பட்டு கொண்டேன். ஆகவே கட்டு போட்டு கொண்டேன். இது உங்கள் தகவலுக்காக. இனிமேல் யாரும் என்னிடம் காலில் எப்படி அடிப்பட்டது என கேட்காதீர்கள்”.

கோபம் அடைந்த ஊர்க்காரர்கள் அவர் கீழே இறங்கியதும் மொத்து மொத்து என மொத்தியதில் இன்னொரு காலிலும் அடிப்பட்டு, அதிலும் கட்டு போட வேண்டியதாயிற்று. ஆனால் இந்த முறை அவர் மீண்டும் கோபுரம் ஏறத் துணியவில்லை.

அப்படி என்ன பதிவால டோண்டு பெரிசுக்கு இந்தக் கதை ஞாபகம் வந்ததுன்னு கேட்டா அது ஏதோ ஹைப்பர்லிங் என்று சொல்லி படுத்தும். ஆகவே நானே இப்பதிவை போட்டு விட்டேன். அந்த ஹைப்பர்லிங் பதிவு இதோ.

நித்யானந்தரும் சோவும்
நித்யானந்தர் விஷயத்தில் எல்லா பத்திரிகைகளும் ருத்ர தாண்டவமே ஆடிவிட்டன, துக்ளக் தவிர. முக்கிய செய்திகளை கூறினாலும் கிளுகிளுப்புகளுக்காக எந்த மசாலாவையும் சேர்க்கவில்லை. அதுதான் சோ.

2002-க்கான துக்ளக் ஆண்டுவிழா மீட்டிங் என ஞாபகம். அதில் சோ நகைச்சுவையாக பல விஷயங்களை கூறினார். சரவணபவன் அண்ணாச்சி சம்பந்தப்பட்ட பலான விஷயங்கள பற்றி பேசுகையில் அது பற்றியெல்லாம் தனது பத்திரிகை ஆசிரியர் குழாம் விவாதிப்பதில் ஒன்றும் குறைவு இல்லை என்றும், ஆயினும் அவை எதுவும் பத்திரிகையில் வரவுமில்லை என்றும் அவர் சொன்னபோது ஒரே சிரிப்பு.

இந்த நித்தியானந்தர் விஷயத்திலும் அவ்வாறே நடந்து கொண்டது மனதுக்கு நிறைவை தருகிறது. சோ அவர்களின் தரத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கும் நக்கீரன் கோபால்/குமுதம் ரிப்போர்டர் போன்ற அரைகுறைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை இந்த ஒரு விஷயமே நன்றாக காட்டி விடுகிறது.

அன்புடன்,
முரளி மனோகர்

தினக்குரல் 14.03.2010 இதழில் டோண்டு ராகவனின் வலைப்பூ

இன்று காலை இலங்கை தினக்குரல் பத்திரிகையிலிருந்து வந்த மின்னஞ்சல்:

2010/3/14 Yaaldevi.com webmaster

அன்பின் டோண்டு ராகவன்,

ஞாயிறுதினக்குரலில் வந்த உங்களது வலைப்பூ தொடர்பான செய்தி நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அன்புடன்
யாழ்தேவி நண்பர்கள்

இந்த இதழ் தினக்குரலில் 32-ஆம் பக்கத்தில் வந்த செய்தியின் ஸ்க்ரீன்ஷாட் இதோ:


அதில் காட்டப்பட்டுள்ள இடுகை நித்யானந்தரும் பெரியாரும்

நன்றி தினக்குரல் மற்றும் யாழ்தேவி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/13/2010

வேழம் இணைய பத்திரிகையில் எனது செவ்வி பகுதி - 1

கார்த்திக் என்பவரிடமிருந்து கீழ்கண்ட பின்னூட்டம் வந்தது.

LK has left a new comment on your post "சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 42 ...":

@ராகவன்

நான் அடுத்த வாரம் துவங்க உள்ள தமிழ் இணைய பத்திரிக்கை முதல் இதழில் உங்களுடய பேட்டி ஒன்றை வெளியிடலாம் என்று எண்ணி உள்ளேன். உங்களுடைய மின்னஞ்சல் முகவரி எனக்கு அனுப்ப இயலுமா?

நானும் எனது மின்னஞ்சல் முகவரியை அனுப்பினேன். பிறகு அவரிடமிருந்து 11 கேள்விகள் வந்தன.

2010/3/6 LK

திரு ராகவன் அவர்களுக்கு ,

முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

1. உங்களை பற்றிய சிறு சுய விபரம்
நான் சொந்த முறையில் தொழில் புரியும் ஒரு ஜெர்மானிய/பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளன் மற்றும் துபாஷி. இம்மொழிகளில் எனக்கு 1975/1978-லிருந்து அனுபவம் உண்டு. நான் 23 வருடங்களாக ஒரு மின்பொறியாளனாகவும் பணி புரிந்திருக்கிறேன். ஆகவே நான் தொழில்நுட்பக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். கூடவே அவ்வப்போது இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழி பெயர்க்கிறேன். சென்னைக்கு நிரந்தரமாக திரும்ப வந்தது 2001-ல். தமிழ் வலைப்பூ தொடங்கியது 2004-ல். அதிலிருந்து ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்க்கும் வேலைகளும் வருகின்றன.


2. பொறியியல் வல்லுனராக இருந்த நீங்கள் எவ்வாறு மொழிபெயர்ப்பு துறைக்கு வந்தீர்கள்?
எல்லாமே தற்செயலாக நிகழ்ந்ததே. பொறியியல் கடை ஆண்டில் இரு சப்ஜெக்டுகளில் ஃபெயில் ஆனேன். மனப்புழுக்கத்தில் இருந்த என்னை எனது தந்தைதான் தேற்றி, மேக்ஸ் ம்யுல்லர் பவனில் அப்போது துவங்கவிருந்த ஜெர்மானிய மொழிவகுப்பில் சேரச் சொன்னார். பிறகு நடந்தவை எல்லாம் தாமாகவே நூல்பிடி கணக்காக நடந்தன.

1971-லிருந்து பொறியியலாளராக மத்திய பொதுப்பணி துறையில் வேலைக்கு சேர்ந்தேன். கூடவே இணையாக 1975-லிருந்து ஜெர்மன் மொழிபெயர்ப்பு வேலைகளையும் ஆரம்பித்தேன். அதே ஆண்டு பிரெஞ்சு வகுப்பிலும் சேர்ந்து 1978-ல் முடித்தேன். அப்போதிலிருந்து பிரஞ்சு மொழிபெயர்ப்பும் சேர்ந்து கொண்டது. இங்கு நான் செயலாற்றியது பற்றி மேல்விவரங்கள் இங்கே.

பிரெஞ்சு ஜெர்மன் கற்ற கதையை இங்கே பார்க்கலாம்.

1981-ல் ஐ.டி.பி.எல். என்னும் அரசு மருத்துவ நிறுவனத்தில் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் தேவை என கேட்டிருந்தனர். நானும் விண்ணப்பம் அனுப்பினேன். நேர்காணலில் பொறியியல் வேலையும் தந்தனர். ஆகவே இரட்டை டெசிக்னேஷனில் அடுத்த 12 ஆண்டு காலம். தில்லி வாசம். 1993-ல் விருப்ப ஓய்வுக்கு பின்னால் எட்டு ஆண்டுகள் தில்லியிலேயே இருந்து ஃப்ரீலேன்சராக மொழிபெயர்ப்பு வேலைகளை ஏற்று செய்தேன். 2001-ல் சென்னைக்கு வந்து அதையே இதுவரை செய்து வருகிறேன். ஐ.டி.பி.எல். விவரங்கள் இங்கே.

3. எந்த ஒரு தொழிலிலும் ஏமாற்றுபவர்கள் உண்டு? உங்களிடம் அந்த மாதிரி யாராவது ஏமாற்றியது உண்டா?
அது இல்லாமலா. ஆனால் கடவுள் புண்ணியத்தால் அம்மாதிரி சந்தர்ப்பங்கள் கடந்த 35 ஆண்டுகளில் மூன்றோ நான்கோதான். எல்லாம் வாடிக்கையாளர்களை அணுகும் முறையில்தான் உள்ளது. அது பற்றி எனது எண்ணங்கள் இங்கே.

4. தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு பிரதானமாக இருந்த சமயத்தில் நீங்கள் படித்துகொண்டு இருந்திருப்பீர்கள். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை பற்றி உங்களுடைய கருத்து என்ன?
அப்போது சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன். ஜனவரி 25 முதல் மார்ச் 15 வரை நடந்த அப்போராட்டத்தல் நான் இரண்டாம் ஆண்டில் மூன்று பேப்பர்களில் தோல்வியடைந்து ஓர் ஆண்டு வீட்டில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். அப்போராட்டத்தை எதிர்த்தவர் பெரியார் என்பது இக்காலத்தில் பலருக்கும் நியூஸ்.

5. உங்களுடைய பதிவை படிப்பவர்களுக்கு உங்கள் எழுத்துகளை பற்றி நன்கு தெரியும். எல்லோருக்கும் ஒருவித வழிகாட்டி அல்லது முன்மாதிரி என்று யாரவது ஒருவர் இருப்பார். அப்படி உங்களின் முன்மாதிரியாக நீங்கள் கருதுவது யார்?
சோ அவர்கள்தான் எனக்கு ரோல் மாடல். அவரது தரத்தில் எழுதவே எனது முயற்சி எப்போதும் இருக்கும். அதே போல செயற்கரிய செயல்கள் செய்த இஸ்ரவேலர்களும் எனது ரோல் மாடல்களே.

இன்று வேழம் பத்திரிகையில் முதல் ஐந்து கேள்விகள்/பதில்கள் வந்துள்ளன. அடுத்த பகுதி இம்மாத நான்காம் சனிக்கிழமை, அதாவது 27.03.2010 அன்று வரும் என அறிகிறேன்.

அவருக்கு எனது எல்லா பதில்களையும் அனுப்பிய மின்னஞ்சலில், அவற்றை நான் எனது பதிவிலும் போட்டுக் கொள்வேன் என்பதையும் தெரிவித்திருந்தேன். அவரும் அதற்கு சம்மதம் அளித்தார். ஆனால் முதலில் தனது இணைய பத்திரிகையில் அவை வரட்டுமே என்றார். நானும் வெயிட் செய்தேன். இப்போது முதல் தவணையாக அவர் முதல் ஐந்து பதில்களை ரிலீஸ் செய்துள்ளார். நானும் அவற்றை இங்கே ரிலீஸ் செய்கிறேன்.

நன்றி

அன்புடன்,
டோண்டு ராகவன்

கருணாநிதியும் சங்கமமும்

சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த சங்கமம் என்னும் படத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். ரஹ்மான், விந்தியா, விஜயகுமார், மணிவண்ணன், ராதாரவி ஆகியோரின் சிறப்பான நடிப்போடு அப்படம் வந்தும் வசூலில் அவ்வளவு உற்சாகமானதாக இல்லை. உலகத்திரைகளிலேயே முதன்முதலாக என்னும் முழக்கத்துடன் சன் டிவி அதை படம் வெளியான வெகு குறுகிய காலத்தில் ஒளிபரப்பியது வசூல் பிரச்சினையால் வந்ததா அல்லது அதற்கு காரணமாக அமைந்ததா என்ற விவரங்களெல்லாம் இப்பதிவுக்கான விஷயமும் இல்லை.

அப்படத்தில் விஜயகுமார் ஒரு பரத நாட்டிய கலைஞர். ஒரு அறிவிப்பை வெளியிடுவார். ஏதோ கலைகளுக்கான நினைவுச்சின்னமாம், அதை தனது காலத்துக்குள்ளேயே முடிக்க வேண்டுமாம். ஆகவே அதற்கான முழுபணத்தையும் தானே தந்து விடுவதாக கூறுவார். மற்றவர்களிடமிருந்து பணம் ஏதும் வேண்டாம் என்பார். நாட்டுப்புற நடனக்கலைஞரான மணிவண்ணனோ இம்மாதிரியான பெரிய விஷயங்களுக்கு எல்லோரும் சேர்ந்து பணம் தருவதே முறை என விஜயகுமார் சொன்னதை மறுத்து பேச, அதுவே கதையின் முக்கிய கருவாக போனது.

இப்பதிவில் நான் எடுத்து கொள்ள நினைப்பது விஜயகுமாரின் சுய புகழ்ச்சிக்கான பேராசையையே. அம்மாதிரி கூட யாராவது இருப்பார்களா என்ன? இருக்கிறார்களே. நான் குறிப்பது நமது மாண்புமிகு முதல்வர் கருணாநிதி அவர்களையே.

முதலில், 13.03.2010 தேதியிட்ட துக்ளக்கின் இந்த அட்டைப்பட தூள் கார்ட்டூனை பாருங்கள்.

அதுதான் இப்பதிவின் விஷயம். அப்படியாவது தோட்டாதரணியை வைத்து டோம் செட் போட்டு, உடனே களையப்படப்போகும் அந்த செட்டுக்காக இரண்டு கோடி ரூபாயை விரயம் செய்து, சட்டசபை கட்டிடத்தை திறந்து வைக்க என்ன அவசியம் சார்? ஒரு கட்டிடம் நிர்மாணத்தில் இருக்கும்போது அதற்குள் செல்லும் அனுமதியே மிகவும் குறுகிய அளவிலேயே இருக்கும். வேலை நடக்கும் இடத்தை ஒப்பந்தக்காரரிடம் ஹேண்ட் ஓவர் செய்தபிறகே காரியங்கள் துவங்கும். கட்டிடத்தின் முழுமை சான்றிதழ் என ஒரு விஷயம் உண்டு. அது வந்தபிறகே கட்டிடத்தை உபயோகிக்கவே ஆரம்பிக்க இயலும். இந்த இடைபட்ட காலத்தில் ஒப்பந்தக்காரர் போகலாம், அவருக்கு வேலை தந்த அரசு துறை பொறியாளர்கள் செல்லலாம், போனால் போகிறது என அரசு அமைச்சர்கள் வேலையை பார்க்கிறேன் பேர்வழி என போகலாம். அவ்வளவுதான். அதை துவங்க என்ன தேவைப்படும்? முக்கியமாக கட்டிடம் முடிவடைத்திருக்க வேண்டும். இப்போது நிலைமை என்னவென்றால் இன்னும் டோம் கட்டவில்லை. சீவின இளநீர் ரூபத்தில் மேல்பகுதி திறந்திருக்கிறது. அதன் மூலம் மழை தாராளமாக உள்ளே வரும். வெய்யில் பற்றி கேட்கவே வேண்டாம்.

நான் இம்மாதிரி கட்டுமானங்களை வெவ்வேறு கோலங்களில் மத்திய பொதுப்பணி துறை வேலை செய்த மத்திய ரிசர்வ் போலீஸ் வளாகத்தில் பார்த்தவரை, மேல்கூரை இல்லாமல் உள்ளே எந்த ஃபினிஷிங் வேலைகளும் நடைபெறாது. ஏன் என்பது வெளிப்படையான விஷயம். சிறு குழந்தை கூட சொன்னால் புரிந்து கொள்ளும் விஷயம் அது. அதில் போய் மேலே டோம் மாதிரி செட் போட்டு பிரதம மந்திரி, நாட்டின் “அன்னையார்” ஆகியோரை வரவழைத்து கூத்தடிப்பது பொறுப்பற்ற செயல். இந்த இரண்டு கோடி ரூபாய்க்கு யார் பொறுப்பு? முத்துவேலரா தருவார்? சங்கமத்திலாவது விஜயகுமார் தன் கைப்பணத்தைத்தான் செலவழித்தார்.

அப்படியாயினும் இதை ஏன் செய்திருப்பார்? சில ஊகங்கள்:
1. மஞ்சள் துண்டை அணியுமாறு அவருக்கு ஆலோசனை தந்த ஜோசியர் இது நல்ல நாள் என்றிருப்பாரோ?
2. அல்லது குறிப்பிட்ட தேதியில் இந்த நிகழ்ச்சி நடைபெறாவிட்டால் அன்றை கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சி நிரலில் பிரச்சினை வருமா? எவ்வளவு தடவைதான் மானாட மயிலாடு எல்லாம் பார்த்து கொண்டிருப்பது?

முழுமை சான்றிதழை ஒருவேளை அதிகாரிகளின் கையை முறுக்கி வாங்கியிருப்பார்களோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

புதுவை சிவாவின் விருப்பத்தை ஒட்டி இரு படங்களை இணக்கிறேன். செய்திக்கு இங்கே செல்லவும்.

முதலாவது, இந்த சட்டசபையின் ஒட்டுமொத்த பறவை பார்வை.

இரண்டாவதுதான் டோம் செட். முதுகை காட்டி நிற்பவர் தோட்டா தரணியோ அல்லது வேறு யாரோ. நல்ல கொழுத்த வேலையை பிடித்த அவருக்கு சக ஃப்ரீலேன்சர் என்னும் முறையில் இந்த டோண்டு ராகவனின் வாழ்த்துக்கள்.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது