கோமண கிருஷ்ணன்:1. உறவினரை ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க உதவி செய்ய முயன்ற டாக்டர் பூங்கோதை ராஜிநாமா செய்திருக்கிறார். அது ஏற்கப்பட்டிருக்கிறது, சரி. ஆனால் தனது சொந்த குடும்ப நிறுவனத்திற்கு உதவ, தானே நேரில் வற்புறுத்தியதாக நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கும் மத்திய கப்பல், தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பாலு மட்டும் அமைச்சராகத் தொடர்கிறாரே, அதுமட்டும் ஏன்?பதில்: இது போன்ற கேள்விக்கு துக்ளக் 28.05.2008 தேதியிட்ட இதழில் சோ அளித்த பதில் இதற்கும் சரியாக இருக்கும். என் கருத்தும் அதுவே.
"பயம்தான் காரணம். 'நாம் ஏதாவது பேசினால், கூட்டணியைக் கெடுப்பதாகக் கூறி, சோனியா காந்தி கோபப்படுவாரோ?' என்பது மன்மோகன் சிங்கின் பயம்.
'நாம் ஏதாவது சொல்லப் போய், டி.ஆர். பாலு வேறு ஏதாவது விவகாரம் பற்றிய தகவல்களைக் கசிய விடுவாரோ?' என்பது கலைஞரின் பயம்.
'நாம் இந்த முறைகேடு பற்றிப் பேசினால் - மத்திய அமைச்சரவையில், வேறொரு தமிழக அமைச்சர் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பது பற்றிய பட்டியல் என்னிடம் இருக்கிறது' என்று நெடுமாறனை எச்சரித்த ஸ்டைலில் கலைஞர் ஒரு எச்சரிக்கை விடுவாரோ?' என்பது ராமதாஸின் பயம்.
அதனால்தான் முப்பெரும் மௌனம்".
ஆனால் பூங்கோதைக்கு அந்த அனுகூலங்கள் இல்லையே, ஆகவே அவர் விஷயத்தில் கலைஞர் தன் தார்மீகக் கோபத்தைக் காட்டுவதில் என்ன ஆச்சரியம்?
2. தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க. அழகிரி விடுதலை செய்யப்பட்டுவிட்டார். ஒரு துணை மேயர் இன்னும் பன்னிருவர் என அனைவருமே ஒட்டுமொத்தமாக விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.இது பற்றிய உங்கள் கருத்து என்ன?பதில்: இப்போது போலீஸ் நிஜமான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடிக்கும்போது விடுவிக்கப்பட்டவர்களின் குற்றம் உண்மையில் நிரூபணம் ஆனாலும் அவர்களை மறுபடியும் கோர்ட்டில் நிறுத்த இயலாது என்பதுதான் சட்டம் என நினைக்கிறேன். இதற்கு double jeopardy என்று சட்டத்தில் கூறுவார்கள். அதாவது ஒரே குற்றத்துக்காக ஒருவரை இருமுறை குற்றம் சாட்ட முடியாது என்று வரும். Anglo-saxon jurisprudence-ல் இது வருகிறது. இந்தியாவும் அதே சட்டமுறையைத்தான் பின்பற்றுகிறது.
3. என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என அதற்கு ஒருமாதம் முன்பே கருணாநிதி ஜல்லியடித்தது ஏன்? பின் அன்பழகன் போன்ற அடிப்பொடிகளை விட்டு வேண்டுகோள் டிராமா போட்டபின் இப்போது பெரியமனது பண்ணி ஒத்துக் கொண்டிருக்கும் கருணாநிதியின் பெருந்தன்மை பற்றி?பதில்: 'நான் அடிப்பதுபோல அடிக்கிறேன், நீ அழுவதுபோல அழு' என்று கேள்விப்பட்டதில்லையா?
4. இந்த அளவுக்கு இறங்கிய அன்பழகனின் நிலை பற்றி?பதில்: ஐயோ பாவம். எப்போதுமே இரண்டாம் இடத்தை தக்கவைத்துகொள்ள இவர் படும்பாடு நெடுஞ்செழியனை நினைவுபடுத்துகிறது.
கூடுதுறை:1) எரிந்துபோன SSLC விடைத்தாள்களுக்கு என்ன மதிப்பெண்கள் கொடுத்தால் சரியாக் இருக்கும் என நினைக்கிறீர்கள்?பதில்: கண்டிப்பாக யாரையும் ஃபெயில் ஆக்க முடியாது. ஒருவேளை மற்ற பாடங்களில் வாங்கிய சராசரி மார்க்கை தரலாம். ஆனால் எல்லாமே கஷ்டம் தருவனதான்.
2) பெட்ரோல் டீசல் விலையேற்றிய தீரவேண்டிய கட்டாயத்தில் அரசு, ஆனால் அதை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள் சூழ்நிலையில் இருப்பர். என்னதான் செய்ய இயலும் அரசால்?பதில்: அரசும் சரி, கம்யூனிஸ்டுகளும் சரி அவர்தம் நிலை பொறாமைப்படத்தக்கதல்ல.
3) கேள்வி பதில் படுசீரியசாக உள்ளது மொக்கைகளையும் அதில் நுழைத்து சிறிது கலகல உண்டாக்குங்கள்பதில்: நான் என்ன ரூம் போட்டா யோசித்து தீர்மானம் போட்டேன், எல்லாமே சீரியஸ் கேள்விகளாகத்தான் வேண்டுமென்று? கேட்ட கேள்விகளுக்கு ஏற்பத்தானே பதில் சொல்ல முடியும்? மொக்கைகளை கேட்டால்தான் பதிலும் மொக்கை போட முடியும். நானே மொக்கை கேள்விகள் கேட்டு, அதற்கான பதில்கள் நானே மொக்கையாக போடுவதற்கு நான் ஒன்றும் காண்டு கஜேந்திரன் இல்லையே. நான் டோண்டு ராகவன்.
குமார்:1. //அவரவர் சாப்பாட்டுக்கு அவரவர்தான் உழைக்க வேண்டும். அதுதான் சாத்தியம். உழைக்காத சோம்பேறிகளுக்கு இல்லாமைதான் நிச்சயம்.// இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாகக் கூறப்படும் 60 கோடிபேரும் சோம்பேறிகளா?பதில்: கண்டிப்பாக அந்த அர்த்தத்தில் கூறவிலை. சுய முயற்சி செய்யக்கூட விருப்பம் இல்லாதவர்களைப் பற்றித்தான் கூறினேன். அப்படியும் பல பேர் இருக்கிறார்கள்.
கருணாகரன்:1. Why do you insist on providing so many links to your old blog posts in each of your new posts? (And almost every such link leads in turn to more links).
இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. எனது விடைகள் உளமாரக் கூறப்படுபவை. எனது கேள்வி பதில்கள் பதிவு போடும் எண்ணம் துளிக்கூட இல்லாத காலக் கட்டத்திலேயே நான் வெளியிட்டுள்ள எனது கருத்துக்களையும் துணைக்கழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? எனக்கு அது சாத்தியமாவதன் காரணமே வேளைக்கு ஒன்று என கருத்துக்களை வாய்க்கு வந்தபடி Plitical correctness-ஐ எண்ணி சமயத்துக்கு ஏற்ப மாற்றி எழுதுவதில்லை. அப்படி ஏதேனும் கருத்து மாற்றம் இருந்தால் அதை வெளிப்படையாகவே சொல்லித்தான் செய்வேன். மேலும், நடக்காத ஒன்றை நான் எழுதாததால் நான் எந்த பொய்யை எங்கே சொன்னேன் என்றெல்லாம் யோசிப்பதில்லை. உதாரணத்துக்கு எனக்கு மிகவும் தெரிந்த ஒரு பதிவருக்கு திருமணம் ஆகிவிட்டது. தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு அவர் போனபோது நான் அவருக்கு ஃபோன் செய்ய, தான் மாமனார் வீட்டில் இருப்பதாகக் கூறியவர். ஆனால் இப்போதெல்லாம் ஏனோ மணம் ஆகாதது போல மாற்றி எழுதுகிறார். நான் அப்படியெல்லாம் செய்யாததால் எனக்கு ஹைப்பர் லிங்க் தருவதில் சிக்கல் ஏதும் இல்லை.
அனானி: (மே 26 காலை 07.18க்கு கேள்வி கேட்டவர்)1. பாராட்டுக்கள் டோண்டு சாருக்கு.எப்படி சார் கர்நாடக தேர்தல் முடிவை மிகச் சரியாக கணித்தீர்கள்.அப்படியே அடுத்த மத்திய அரசு, தமிழக அரசு பற்றி?பதில்: கிரெடிட் அப்படியே துக்ளக்கிற்கு ஃபார்வேர்ட் செய்யப்படுகிறது. அடுத்த மத்திய அரசு பாஜக அரசாகலாம், என்ன பாஜகவினர் அதற்கு இப்போதிருந்தே உழைக்க வேண்டும். தமிழக அரசு விவகாரத்தில் நல்ல கூட்டணி அமைப்பதில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரில் யார் குறைந்த தவறு செய்கிறார்களோ, அவர்கள் வாய்ப்பு பிரகாசம்தான்.
2. அடுத்த முதல்வர் அழகிரியா?, ஸ்டாலினா?, கனிமொழியா?, ஆர்காட்டாரா?, தயாநிதியா?, ரஜினியா? (ஜெயலலிதா, வை.கோ,சரத், விஜய்காந்த இவர்கள் ரேசில் பின்தங்குவது போல் உள்ளது)பதில்: ஸ்டாலினும் அழகிரியும் முறையே ராஜீவையும் சஞ்ஜையையும் நினைவுபடுத்துகின்றனர். தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்தால், அழகிரிதான் அதிகம் பொருத்தமாக இருப்பார் என்பது எனது எண்ணம். இது சரியான நீதியாகுமா என்று கேட்டால், அது இந்த இடத்தில் ரெலெவண்ட் இல்லை என்றுதான் கூற வேண்டும். அடாவடிக்குத்தான் காலம் இது. அதுவே அதிமுக பிடித்தால் இந்த கேள்விக்கே இடம் இல்லை.
3. மீண்டும் தாமரையுடன்,ஆதவன் கைகோர்க்கும் போலுள்ளதே?பதில்: 'அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா' என்று பேரறிஞர் கவுண்டமணி கூறிவிட்டார்.
4. ராஜஸ்தானில் நடைபெறும் மலைவாழ் பட்டியலில் சேர நடைபெறும் போராட்டம் நியாம்தானா?குஜ்ஜார்களுக்கும் ஜாட்டுகளுக்கும் தள்ளுமுள்ளு. இருவருமே ராஜஸ்தானில் ஓ.பி.சி.யில் வருகின்றனர். பி.ஜே.பி. குஜ்ஜார்களை மலைவாழ் பட்டியலில் சேர்ப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்றவும் தயார்தான். ஆனால் ஜாட்டுகள் அதை தடுப்பதாகத்தான் முதலில் பேப்பர்களில் படித்திருக்கிறேன். இப்போது தேடினால் அது கிடைக்கவில்லை. பதிவர்கள் யாரேனும் விவரம் தெரிந்தால் பின்னூட்டமாக தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
5. இதேபோல் எல்லா மாநிலங்களிலும் போராட்டம் ஆரம்பிப்பதற்கு இது வழி ஏற்படுத்தி விட்டால், நாம் அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் என்னவாகும்? (போராட்டக்காரர்கள் பொருளாதாரச் சேதம்தான் சிறந்த வழி என காரியம் ஆற்றுவதால்)பதில்: கஷ்டம்தான். முதலில் எஸ்.சி./எஸ்.டி.க்கு மட்டும் முதல் பத்தாண்டுகளுக்கு மட்டும் பார்லிமெண்டில் பிரதிநிதித்துவத்துக்காக வந்த ரிசர்வேஷன் நேருவின் சொதப்பல் காரணமாக விரிவுபடுத்தப் பட்டு, அதன் காலமும் நீட்டிக்கப்பட்டு, 1990-ல் வி.பி. சிங் தன் ஆட்டையைபோட இப்போது எங்கும் இந்த பஜனை ஆரம்பித்துவிட்டது.
6. ஆயில் கம்பெனிகள் நஷ்டம் என்றதும் அந்த துறையின் அமைச்சரின் வேகமான நடவடிக்கைகள் எடுக்கும்போது பிற பொதுத்துறை நிறுவனங்களின் சீர்கெட்ட நிதிநிலமை பற்றி (உதாரணம்: ஊட்டி பிலிம் தொழிற்சாலை) அந்த அந்த அமைச்சர்கள் பாராமுகமாய் உள்ளனரே?பதில்: ஆயில் கம்பெனிகள் லாபம் ஈட்டுபவை. அவற்றுக்கு பங்கம் வந்தால் முதலுக்கே மோசமாகி விடும். ஊட்டி ஃபிலிம் தொழிற்சாலை அவ்வளவு essential sector-ல் இல்லை. இங்கு விளையாட்டு விதிகளே வேறு.
7. அரசுத்துறைகளில் உயர் தொழில்நுட்ப பயிற்சி முடித்த கையோடு தனியார் துறைகளுக்கு மாறும் ஊழியர்களின் செயல் நம்பிக்கை துரோகம் அல்லவா?(குன்னூர் அரசு தடுப்பூசி நிறுவனம் to தனியாரின் நிறுவனம் (பெரியவர்களின் ஆதரவுடன்)-பத்திரிக்கை செய்தி)பதில்: பெரிய நம்பிக்கை துரோகமே, அதில் என்ன சந்தேகம்? அதே சமயம், அரசும் பலமுறை சொதப்புகிறது. உதாரணத்துக்கு பால்வளத்துறையில் பயிற்சிக்கு அனுப்பப்பட்ட அதிகாரிகள், பயிற்சி முடிந்ததும் அரசியல் ஆட்டைகள் காரணமாக சம்பந்தமே இல்லாத வேறு துறைகளுக்கு அனுப்பப்படுவது ரொம்ப சர்வ சாதாரணம். அரசே இவ்வாறு செய்யும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செய்கையை ஆதரிக்காவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறது.
8. கச்சா எண்ணெய் 35 டாலர் இருக்கும்போது வசூலித்த 5 % கலால் வரியை, 135 டாலாராய் உள்ள போதும் அதே அளவு வேண்டும் என வாதிடும் நிதிஅமைச்சரின் கூற்று சரியா?பதில்: வரியை எல்லாம் குறைப்பதாகக் கூறுகிறார்கள் போலிருக்கிறதே. பார்க்கலாம், எனக்கு நம்பிக்கை இல்லை.
9. அரசே இப்படி இருக்கும்போது இரும்பு, சிமெண்ட் வணிகர்கள் எப்படி தங்கள் லாபத்தை குறைப்பார்கள்?பதில்: கண்டிப்பாக மாட்டார்கள்தான். குறைக்கச் சொன்னால் குரைப்பார்கள்.
10.ஓய்வில்லாச் சூரியனாய், ஓங்குபுகழ் சோழனாய், அகவை 86 என்றாலும் அறிவிற் சிறந்தும் இலக்கியச் செம்மலாயும் இனிய மொழித்திறமையுடனும் ஆட்சியாற்றும் திறமையுடனும் ஆர்பரிக்கும் ஆற்றலுடன் வாழும் வள்ளுவர்,சோழனின் மறு மதிப்பு,பொதுவுடமைப் பூங்கா என அனைவராலும் பாரட்டப்படும் தமிழினத் தலைவரின் 86ம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பற்றிய தங்கள் விமர்சனம் யாது?
பதில்: மேலே ஏற்கனவே கலைஞர் பிறந்த நாள் சம்பந்த கேள்விக்கு பதில் கூறிவிட்டேன். மற்றப்படி இவ்வளவு புகழுரைக்கு அவர் தகுதியானவர் என்று நான் எண்ணவில்லை. மனிதர் வல்லவர், உழைப்பாளி, தமிழறிவு மிக்கவர் என்பதில் ஐயம் இல்லை, அவ்வளவுதான்.
அனானி: (26.05.2008 மாலை 8.55 மணிக்கு கேள்வி கேட்டவர்)1. மனித உறவுகளில் (ரத்த சம்பந்த) பொருளாதர ரீதியாக மோதல்கள் அதிகரித்ததன் காரணம் யாது?பதில்: தாயும் பிள்ளையானாலுமே வாயும் வயிறும் வேறுதான் என்று ஆனபிறகு, என்ன உறவினர் வேண்டியிருக்கிறது?
2. தென் மாவட்டங்களில் சைவ வேளாளர் குடும்பங்களில் பெண்களின் திருமணச் செலவுக்காக குடும்ப நிலங்களை விற்பது வாடிக்கை.(ஒரு பெண்ணின் திருமணத்திற்கு ரொக்கம்,30 பவுண் நகை,வெள்ளிப் பாத்திரங்கள்,பிற பாத்திரங்கள்,துணிமணிகள்,சீர்வரிசைகள்.... ஒரு பெரும் தொகை தேவைபடுவது வாடிக்கை). 2 ,3 மகள்களின் திருமணத்திற்கு பிறகு மீதமாகும் வீட்டில் பங்கு கேட்டு சகோதரனுடன் கோர்ட் படிகளில் ஏறும் பெண்கள் பற்றி தங்கள் கருத்து யாது?பதில்: அதற்காக வருந்தும் அதே சகோதரனே தன் மனைவியை தன் மச்சான்களுக்கு எதிராகத் தூண்டிவிடுவதும் சகஜமாகத்தானே நடக்கிறது?
3. தாய் தந்தையரை வயதான காலத்தில் காப்பதில் பிராமணர்( ஐயர்,ஐயங்கார்)சமுதாயம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாய் திகழ்வது எப்படி?பதில்: அப்படியெல்லாம் பொதுப்படையாகக் கூற முடியாது. தாய் தந்தையரை பேணும் மற்றும் பேணாத பிள்ளைகள் எல்லா சாதியிலுமே உள்ளன. இதில் பார்ப்பனர் ஒன்றும் உயர்ந்த நிலையில் இல்லை.
4. பிற தெய்வ பக்தியுள்ளவர்கள் கூட இந்த விஷயத்தில் வேறு மாதிரி இருப்பது ஏன்?பதில்: தனது பெற்றோருக்கு தாம் செய்வதை தமது பிள்ளைகளும் செய்வார்கள் என்னும் அறிவில்லாதவர்கள் பக்திமான்களிலும் உண்டு. பை தி வே, எனது
ரிடயர்மெண்டுக்கு பிறகு வாழ்க்கை பற்றிய இப்பதிவில் பெற்றோர்கள் செய்ய வேண்டியதைப் பற்றி நான் எழுதியதிலிருந்து இங்கு தருகிறேன். "ரிடயர்மெண்ட் பணம் கைக்கு வந்ததும் அதை யாருக்கும் தராது பத்திரமான முதலீட்டில் இட வேண்டும். மனதை உருக்கும் சோகக் கதைகளை உறவினர் கூறி பணம் கேட்பார்கள். மூச், ஒருவருக்கும் தரக்கூடாது. முக்கியமாக பிள்ளைகளுக்கு. ரொம்பக் கடுமையாகப் படுகிறதா? ஏமாந்தால் அதே பிள்ளைகள் கையில் கடுமையான சோதனைகளை சந்திக்க வேண்டுமே ஐயா? எதற்கும் ஒரு நல்ல வேலை தேடிக் கொள்வதும் நலமே. கடைசி வரை தன் தேவைகளுக்கான செலவுகளுக்கு யாரிடமும் கையேந்தக் கூடாது. தனது சொத்தையெல்லாம் தான் இருக்கும்போதே பசங்களுக்கு made over செய்து விட்டு கடைசி காலத்தில் பசங்களால் பந்தாடப்பட்டு, சந்தியில் நின்றவர்கள் அனேகம்.
விசு சினிமா கூட ஒன்று அதே பின்னணியில் வந்தது. ரிடையர்மெண்ட் பெற்றவர்களே, இதெல்லாம் உங்களுக்கு நடந்தால் இதற்கு முக்கியக் காரணம் நீங்களே. உங்கள் கையில் எல்லா கண்ட்ரோலையும் வைத்திருக்கவும். இல்லாவிட்டால் ஸ்கூல் மாஸ்டர் படத்தில் வருவது போல கணவன் மனைவியையே பிரித்து ஒருவர் முதல் பிள்ளை வீட்டிலும் இன்னொருவர் இன்னொரு பிள்ளை வீட்டிற்கும் சென்று தொண்டு செய்ய நேரிடும். சினிமாதானே என்று கூறுபவர்களுக்கு நான் கூறுவது, இதெல்லாம் நடக்கக் கூடியதே. உங்கள் சலுகைகளை விட்டுக் கொடுக்காதீர்கள் என்பதே. இதையெல்லாம் சரி செய்து கொண்டு உங்கள் சமூக சேவைகளை ஆரம்பிக்கவும். ஒன்றும் அவசரம் இல்லை.
இதைப் படிக்கும் இளைய தலைமுறையினருக்குக் கூறுவேன், தயவு செய்து பெற்றோர்களை கண்ணீர் விட வைக்காதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் உருப்படவே மாட்டீர்கள்.
5. முதியோர் இல்லங்கள் பெருக்கம் பண்புள்ள பாரதத்துக்கு ஏற்புடையதா?பதில்: இல்லைதான், என்ன செய்யலாம்? அவரவர் கையில்தான் சொர்க்கமும் நரகமும் இருக்கின்றன.
அனானி (27.05.2008 காலை 05.49-க்கு கேள்வி கேட்டவர்):1. தமிழ் சினிமா உலகம் இன்று பெரிய பெரிய கார்பொரேட் கைகளுக்கு போய் விட்டது போல் தெரிகிறதே?பதில்: பணம் அதிகம் வரும் என்றால் பிணத்துக்கு வரும் கழுகுகள் போல கார்ப்பரேட்டுகள் வருவது தவிர்க்க முடியாதுதான்.
2. உச்ச நடிகர்களின் சம்பளம் 3-4 கோடிகள் என்பது உண்மையா?பதில்: இதற்கனவே துறை சார்ந்த பத்திரிகைகள் உள்ளன. அங்கு நிலவரம் தெரியும். சென்னையில் தாயார் சாஹிப் தெருவில் உள்ள பல அவுட்லெட்டுகளில் படங்களின் ஜாதகங்கள் கண்காணிக்கப்படுகின்றன.
3. ரஜினிக்கு அடுத்த நிலை விஜய்க்கு என்பது உறுதியாகிவிட்டதா?பதில்: ஏன் விக்ரம், சூர்யா எல்லாம் எங்கே போனார்கள்?
4. விஜயின் தற்சமய படங்கள் (தமிழ் மகன், குருவி) சரியில்லையே?பதில்: அதே பழைய கதைதான். கில்லி நன்றாக போயிற்று என்பதற்காக அதே போல மசாலா சேர்த்திருக்கிறார்கள். இம்முறை மசாலா ஓவராகப் போனதில் தும்மல்தான் வந்தது எனக் கேள்வி.
5. விஜயின் இந்த உச்ச நிலையிலும் எளிமை எப்படி அவருக்கு ஏதுவாகிறது?பதில்: குருவி மாதிரி இன்னும் சில படங்கள் வந்தால் அவர் நிஜமாகவே எளிமையாக இருக்க வேண்டியதுதான்.
6.காமெடி நடிகர்கள் (நாகேஷ், சுருளிராஜன், கவுண்டமணி....) பலர் உச்ச நிலையில் இருக்கும் பொது அவர்கள் செய்யும் அலம்பல்களால் மார்கட் போய்விட்டதை கண்ணால் பார்த்த பிறகும் அடுத்த தலைமுறை கலைஞர்கள் அதே அலம்பலை செய்கின்றனரே?பதில்: மகாபாரதத்தில் யட்சன் நச்சுப் பொய்கையில் வைத்து யுதிஷ்டிரனை கேள்விகள் கேட்கிறான். அதில் கடைசி கேள்வி "உலகில் மிகப்பெரிய அதிசயம் எது?" அதற்கு அஜாத சத்ரு யுதிஷ்டிரனின் பதில்: "தினம் தினம் மக்கள் சாகின்றனர். அதையெல்லாம் பார்த்த பிறகும் இன்னும் உயிருடன் இருப்பவர்கள் தாங்கள் மட்டும் சாஸ்வதம் என்று நினைக்கின்றனர்".
7. தியேட்டர்களில் அரசு அனுமதிக்கும் கட்டணங்களை விட சாதாரணமாக 10 ருபாய் அதிகமாக வசூலிக்கும் போக்கு சினிமா டிக்கட் ஐ "on line trading" க்குள் கொண்டுவந்து விடும் போல் உள்ளதே?பதில்: ச்ப்ளை மற்றும் டிமாண்ட் விஷயம்தான். முதல் சில வாரங்களுக்கு அரசின் அனுமதியுடனேயே விலை உயர்வு நடைபெறுகிறது. சிவாஜி படம் பத்தாம் வாரம் ரங்கா தியேட்டரில் சாதாரண விலைக்கே போயிற்று. அதென்ன முதல் நாள் முதல் ஷோ ஆசை? அவ்வாறு
அன்பே சிவம் படத்துக்கு போய் நான் சந்தியில் நின்றது இங்கு ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. அடேடே, இதிலும் ஆன்லைன் வணிகமா? பலே. நண்பர் வால்பையன் சந்தோஷப்படுவார்.
8. எவையெல்லாம் (உடைகள்,ஆபாசநடன அசைவுகள், இரட்டை அர்த்த வசனங்கள்,பாடல்கள்) முன்பு சென்சாரின் கத்திரிக்கு பலியானதோ அவையெல்லாம் இப்போது கொக்கரிக்கின்றனவே? திடீர் மாற்றம் யார் கொடுத்த தைரியம்? (கோடிகள் கை மாறுகின்றனவா?)பதில்: 'பத்தாம் பசலி' என்னும் பாலசந்தர் படம் சமீபத்தில் 1970-ல் வந்தது. அதில் ஜெமினி ராஜஸ்ரீ டூயட்டில் "காதல் மன்னன் கைகளில் என்னைத் தரவேண்டும்" என்று ஒரு சரணம் பாட்டில் வர அதை வெட்ட வேண்டும் என ஒரு சென்சார் பேர்வழி கூற, பாலசந்தர் பாட்டையே கத்தரித்து விட்டதாக அவர் எழுதியிருந்தார். 'எப்படியிருந்த சென்சார் இப்படி ஆயிட்டாங்க'! மற்றப்படி கோடிகள் மாறுவது பற்றி தெரியவில்லை.
9. மல்டிபிளக்ஸ் தியேட்டர் காலங்களிலும் சகாதாரக் குறைவுள்ள திரை அரங்குகள் பற்றி அதிகாரிகளின் கண்டுகொள்ளா நிலை ஏன்? (அழுக்குடனும், துர்நாற்றத்துடனும், மூட்டைப் பூச்சிகளின் வாசஸ்தலமாகவும் உள்ள இருக்கைகள் - இப்போ அரசின் கேளிக்கை வரிகூட கிடையாதே!))பதில்: கவனிக்க வேண்டியவர்களை கவனிப்பதிலேயே பணம் செலவழித்தவர்கள் எதற்கு தேவையின்றி மேலே செலவு செய்யப் போகிறார்கள்? அது இருக்கட்டும், என்னது! கேளிக்கை வரி கிடையவே கிடையாதா? இது என்ன புதுக்கதை?
10. முன்னணி நடிகைகளில் சிலர் கூட மிக குறைந்த ஆடையுடன் (பிக்னி ஆடை-உள்ளாடை தெரிவது போல்) நடிப்பதைப் பார்க்கும் போது அந்தக்கால நடிகைகள் பானுமதி, சாவித்திரி அவர்களின் ஆடை கண்ணியம் பாராட்டத்தக்கதல்லாவா?
பதில்: பானுமதியை 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் பார்த்திருக்கிறீர்களா? உடலை கவ்விய உடையுடன் கே.ஆர். விஜயா 'தட்டுங்கள் திறக்கப்படும்' படத்தில் 'தித்திப்பது எது' என்று பாடியவாறே தன் மார்புகளை நோக்கும் பாடல் காட்சியை பார்த்திருக்கிறீர்களா? சமீபத்தில் 1963-ல் வந்த ரத்த திலகம் படத்தில் சாவித்திரி அவர்கள் சிக் உடை அணிந்து "ஆன் தி மெர்ரி கோ ரௌண்ட்" என்ற ஆங்கிலப் பாடலுக்கு கவர்ச்சியான அசைவுகளைத் தந்ததை பார்த்துள்ளீர்களா? அதே சாவித்திரி சமீபத்தில் 1952-ல் வந்த பாதாள பைரவி படத்தில் ஒரே ஒரு கவர்ச்சி நடனம் ஆடிவிட்டு சென்றதை கேள்விப்பட்டுள்ளீர்களா?
அனானி (27.05.2008 மாலை 06.25க்கு கேள்வி கேட்டவர்:1. மறு ஜென்மத்தை இந்து மதம் நம்புவதுபோல் பிற மதத்தவர்கள் நம்பாததன் காரணம் என்னாவாயிருக்கும்?பதில்: இந்திய துணைகண்டத்தில் உண்டான எல்லா மதங்களுக்குமே பூர்வ ஜன்ம நம்பிக்கை உண்டு.
2. எகிப்தியர்கள் நம்புவதால் தான் பிரமிடுகள் தோன்றின சரிதானா?பதில்: எகிப்தியர்கள் மேலுலகத்தில் சௌகரியமாக வாழவே பிரமிடுகள் கட்டி கொண்டனர். அதற்கும் இந்துக்களின் நம்பிக்கைகளுக்கும் பல ஆறு வித்தியாசங்கள் உண்டு.
3. தனது வாழ் நாள் முடிவதற்குள் அகால மரணமடைவோர் ஆவியாய் அலைவதாக காலம் காலமாக கதைகள் சொல்லப் பட்டனவே. ஆவியை பார்த்ததாக சொல்வது எல்லாம் கடைசியில் கட்டுக் கதையாகி விடுகிறதே.பதில்: நானும் ஆவிகளை நம்புவதில்லை. ஆகவே அவற்றுக்கு கடனெல்லாம் தர மாட்டேன்.
4. கேரளா மாந்திரிகர்கள் கெட்ட ஆவிகளை வைத்து செய்வினை செய்வதாக செய்திகளில் உண்மை இருக்கிறதா?பதில்: தெரியாது. கிட்டே போய் பரிசோதிக்கும் தைரியம் இல்லை. எதற்கு வம்பு?
5. 20 வருடங்களுக்கு முன்னால் " குரளி வித்தை" தெருசந்திப்புகளில் நடைபெறுமே அதை இப்போது காணோமே?(வா இந்தப் பக்கம்,வந்தால் சொல்லுவியா)?"பதில்: கழைக்கூத்தாடி வித்தைகளுக்கு போட்டியாக கோலங்கள், ஆனந்தம், சித்தி ஆகிய சீரியல்கள் போட்டியாக வந்து விட்டதே. 'இந்த குடும்பத்தை அழிக்காது ஓய மாட்டேன்' என்று புவனேஸ்வரிகள் வெள்ளிக்கிழமை மாலை விளக்கு வைக்கும் நேரத்தில் கர்ஜிப்பதை பார்க்கவே நேரமில்லை. குரளியாவது ஒன்றாவது! குரளிக்காரர்களே இப்போதெல்லாம் சீரியல்களில் ஒன்றிவிட்டதாக சில வட்டாரங்கள் கூறுகின்றன.
அனானி (28.05.2008 காலை 06.10-க்கு கேள்வி கேட்டவர்)1. ஒடுக்கபட்ட இனமக்களுக்காக அரசு அறிவிக்கும் இட ஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள்அங்கே உள்ள பொருளாதார வலிமை உள்ளவர்கள்(and numerical strength) கைக்கு சென்று விடுகின்றனவே.இதை மாற்ற எந்த முற்போக்குவாதி(இடது சாரி கட்சிகள் உட்பட)அரசியல் வாதியும் முயலுவதில்லையே ஏன்?பதில்: கிரீமி லேயரை எதிர்ப்பவர்கள் அன்னியனின் கிருமி போஜன தண்டனைக்கு உரியவர்கள் என்று கூறிக் கொண்டு ஒரு கோஷ்டி அலைகிறது. ஜாக்கிரதையாக இருக்கவும்.
2. கலைஞர் அவர்கள் கூட இதில் கவனம் செலுத்தாதன் காரணம் புரியவில்லையே?பதில்: கிரீமி லேயரைச் சேர்ந்தவரே அதை எதிர்ப்பாரா? ரொம்பத்தான் பேராசை உங்களுக்கு.
3. உண்மையில் சொல்லப் போனால் பாதிக்கப்படும் ஏழைகள் கையில்தான் பெரிய ஓட்டு வங்கி உள்ளது.அவர்களை காப்பாற்ற முயலவேண்டாமா?பதில்: அந்த ஓட்டு வங்கி பரவலாக இல்லையே.
4. ஜாதி அரசியல் அரசின் ஒப்பந்த திட்டங்களில் கூட தன் கரங்களை நீட்டி
விளையாடுவதாக பத்திரிக்கை செய்திகள் சொல்வது நல்லதுக்கா?பதில்: ஜாதீயம் என்பது மிகவும் கசப்பான உண்மை. நல்லதுக்கு இல்லைதான்.
5. இட ஒதுக்கீட்டு கொள்கையினால் பலனடைந்தவர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தி மறு ஆய்வு செய்து, நிஜமாகவே பாதிக்கபட்ட பின்தங்கிய மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் வசதி இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் கொடுக்கப்படுமா?பதில்: ரொம்பத்தான் பேராசை உங்களுக்கு.
6. பெரிய கார்போரேட் நிறுவனங்கள் கூட அவர்கள் வாழ்வில் வசந்தம் வீச வழிவகை செய்ய முயலுகின்றன (பொருளாதார அளவுகோல் - ஆண்டு வருமான கட்டுப்பாடு)பதில்: கார்ப்பொரேட் நிறுவனங்கள் என்ன செய்வதாகக் கூறுகிறீர்கள்? புரியவில்லையே.
7. கொள்கை முழக்கமிடும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் மாற்றம் வருமா?பதில்: அப்புறம் அவர்கள் பூவாவுக்கு என்ன செய்வது?
8. M.G.R. அவர்களின் ரூபாய் 9000 ஆண்டு வருமானத் திட்டம் தோல்வி அடைந்தது ஏன்?பதில்: அவரே அதை தனது 1980 லோக் சபா தேர்தலில் தோல்வி அடைந்த போது அவசரம் அவசரமாக விலக்கி கொண்டார்.
9. நகரங்களில் கூட நல்ல முற்போக்கு சிந்தனை உள்ள உயர் சாதிப் பிரிவினர் தங்களுடன் பணியாற்றும் தலித் இன நண்பர்களுக்கு தங்கள் விடுகளில் உள்ள சைட் போர்ஷனை வாடகைக்கு விடத் தயங்குவதாக உள்ள செய்தி தங்களுக்கு தெரியுமா?பதில்: தெரியும், கேள்விப்பட்டுள்ளேன். என்னதான் படித்தாலும் ஆழ்மனதில் உள்ள வெறுப்பு போகுமா என்று கேட்பது சுலபம்தான். ஆயினும் ஒரே வளவுக்குள் என்று வரும்போது மனத்தளவில் பல சமாதானங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கும். முக்கியமாக உணவு பழக்க வழக்கங்கள். வீட்டை வாடகைக்கு விட்டாலும் தங்கள் வீடுகளில் குடியிருப்பவர் அசைவம் சமைக்கக் கூடாது என்று கண்டிஷன்கள் போடுவதும் இதில் அடங்கும். இதை சுலபமாக வார்த்தைகளில் அடக்க இயலாது.
10. உண்மையான சமத்துவபுரம் என்று காண்போம்?பதில்: கனவு காண வேண்டும் என்று அப்துல் கலாம் வேறு விஷயத்தில் சொன்னார். இங்கும் அது அப்படித்தான் என அஞ்சுகிறேன்.
அனானி (28.05.2008 மாலை 05.53-க்கு கேட்டவர்):1. பெட்ரோல் basic price 1 லிட்டர் ரூபாய் 30 தான் எனவும்,மத்திய,மாநில அரசுகளின் பலவித வரிகளால் தான் இந்த உச்ச விலை உயர்வு என்கின்றபோது,நிதிஅமைச்சகம் வரியின் சதவிகிதத்தை ஒரு சிறு சதவிகிதம் கூட குறைக்க மறுப்பதில் தார்மீகம் இருக்கிறதா?பதில்: வரியை குறைத்தால் டெஃபிசிட் அதிகரிக்குமே. அதுவும் கஷ்டம்தானே. அந்த வரி முதலில் ஆயில் ரிசர்வ் என்ற பெயரில் புகுத்தப்பட்டு, பெட்ரோலியம் தொழிலுக்காக உபயோகப்படுத்தப்பட்டது. பிறகு தொண்ணூறுகளில் அதை பொது நிதியில் கொண்டு வந்து பொங்கலோ பொங்கல் வைத்து விட்டனர். இன்னும் அப்பழக்கம் தொடர்கிறது. ஒரேயடியாக அதை குறைக்கவும் இயலாதுதான்.
2. பெட்ரோல் கம்பெனிகளின் வீண் செலவினங்களை குறைக்க முயலாதது ஏன்?பதில்: அதற்கான மோட்டிவேஷன்கள் இல்லையே.
3. பொதுத்துறை நிறுவனங்களிலே சாதாரண கடைநிலை ஊழியரின் சம்பளம் கூட ஆயில் கம்பெனிகளில் மிக அதிகம் என்பது உண்மையா?பதில்: ஆம்.
4. வேலைநிறுத்தம் என்னும் ஆயுதம் கொண்டு தங்கள் சம்பள விகிதங்களையும், பிற சலுகைகளையும் மிக அதிகமாக உயர்த்திகொள்வதும் பற்றாக்குறைக்கு ஒரு காரணமா?பதில்: சம்பளம் செலவுகளில் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கிறது என அறிகிறேன். இதற்கு காரணமே தேவைக்கு மேல் ஊழியர்களை சேர்த்ததுதான். அவனவன் தன் மாமன் மச்சானை இதில் தத்தம் லெவலில் கொண்டு வந்திருக்கிறான். இந்த அழகில் இவர்கள் வெட்டி முறிக்கும் வேலைக்கு போராடி சம்பளம் வேறு உயர்த்தி கொள்கிறார்கள்.
5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 16-17 வரை கூடினால் பணவீக்க விகிதம் 10 % தாண்டிவிடுமா?பதில்: கண்டிப்பாகக் கூடும்தான். ஆனால் வேறு வழி?
அனானி (28.05.2008 மாலை 07.38-க்கு கேட்டவர்):1. நாகரிக உலகில் வாலிப ஆண்கள்,பெண்கள் ஆகியோரின் ஆடைகள், அலங்காரங்கள், பாஸ்ட் புட் முதலியவை மிக (பண்பாடு,கலாசாரம் தாண்டி)அதிகமாய் கொண்டே செல்கிறதே இது எதில் கொண்டு போய் விடும்?2. மேலை நாடுகள் கூட நமது பாரத இந்து கலாச்சாரம் தான் நல்லது என் முடிவெடுத்து நமது யோகக் கலை,காய்கறி உணவு முறை, arranged marriage, ஆகியவற்றில் ஈடுபாடு காட்டும் போது இங்கே செய்வது சரியா?3. இந்தியா கலாசார சீரழிவின் விளிம்பை நோக்கி செல்கிறதா?4. மென்பொருள் துறையில் கொட்டும் பெரும் பணம் செய்யும் புண்ணியம் இதுவா?5. பெரியவர்கள் சொல்வார்களே "எதை இழந்தாலும் இழக்கலாம் நமது பண்பாட்டை இழக்கக்கூடாது". அந்த மாபெரும் தவறு நடந்துவிடும் போல் தெரிகிறதே?பதில்: ஐந்து கேள்விகளுக்கும் எனது ஒரே பதில். நான் இட்ட
இந்தக் காலத்து பசங்க ஹூம் என்னும் பதிவிலிருந்து தருகிறேன் அதை.
"இக்காலப் பசங்களுக்கு சொகுசே பிரதானமாகி விட்டது, சுத்தமா மரியாதையே இல்லை. அரசைத் துச்சமாக நினைக்கிறார்கள். தேகப் பயிற்சி செய்வதை விட வாய்க்கு அதிகப் பயிற்சி கொடுத்து வம்பு பேசவே ஆசைப்படுகிறார்கள். குழந்தைகள் கொடுங்கோலர்களாகி விட்டார்கள். வீட்டுக்கு அடங்குவதில்லை. தாய் தந்தையரை எதிர்த்து பேசுகின்றனர். பெரியவர்கள் வந்தால் மரியாதையாக எழுந்து நிற்பதையே விட்டு விட்டனர். நாசூக்கிலாமல் வாயில் உணவை அடைத்துக் கொள்கின்றனர். ஆசிரியர்களிடம் அடாவடி செய்கின்றனர்."
மேலே இருப்பது சமீபத்தில் கி.மு. 399-ல் காலமான சாக்ரட்டீஸ் கூறியதாக இப்போது அறியப்படுகிறது. இல்லை, இது சாக்ரட்டீஸ் சொன்னது இல்லை என்று சிலர் வாது புரிய தயாராகலாம். சரி, சாக்ரட்டீஸ் சொல்லவில்லை. யாரோ பொலோனியஸ் கூறியிருப்பார், அரிஸ்டாட்டிலாகக் கூட இருக்கலாம். அதை விடுங்கள். நான் சொல்ல வருவது வேறு.
அந்தக் காலம் போல வருமோ என்று பெரிசுகள் என்னைப் போன்ற இளைஞர்களிடம் இப்போதும் பெருமூச்சு விடும்போது, நான் அவர்களிடம் சாக்ரட்டீஸ் கூறியதாகச் சொல்லப்படுவதை பெயர் குறிப்பிடாமல் கூற, அவர்களும் ஆவலுடன் யார் சொன்னது என்று கேட்க நான் சாக்ரட்டீஸ் கூறியது என்று போட்டு உடைப்பேன். நேற்றுக் கூட அறுபது வயது இளைஞனாகிய இந்த டோண்டு ராகவன், 55 வயசான ஒரு பெரிசிடம் இதைக் கூற அவர் ரொம்பவே நொந்துப் போனார்.:)))" (தற்சமயம் 62 வயது என்ற இற்றைப்படுத்தல் தவிர மேலே சொன்ன பதில் அப்படியே வைக்கப்படுகிறது)
அனானி (29.05.2008 மாலை 06.11-க்கு கேட்டவர்)1. கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி எப்படி சாத்தியமாயிற்று? கூட்டணி குழப்பத்தையும் தாண்டி (போன ஆட்சி கடைசி நேர கவிழ்ப்பு)பதில்: பி.ஜே.பி. வெற்றி பெற காங்கிரசும் தேவ கௌடாவும் ஓவர்டைம் போட்டு வேலை பார்த்துள்ளார்கள். :))))
2. வழக்கம் போல் ஓட்டு சதவிகிதத் கணக்கு கொஞ்சம் வேடிக்கை காட்டுகிறதே?பதில்: ஏன், கூட்டினால் 100% வரவில்லையா?
3. முழு 5 ஆண்டு ஆட்சியை முடிக்க விடுவார்களா சயேச்சைகள்?பதில்: காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
4. காவிரி பிரச்சனை,ஹோகனேக்கல் குடி நீர் பிரச்சனைகளில் தமிழகத்துக்கு இப்போதாவது மத்திய அரசின் சலுகை கிடைக்குமா?எந்த அடிப்படையில் கேட்கிறீர்கள்?
5. குஜராத் புகழ் மோடி போல் எடியூரப்பாவும் திறமைசாலியா?பதில்: மோடியின் கேஸ் வேறு. அவருக்கு பெரும்பான்மையில் சோதனை ஏதும் இல்லை. கறைபடாத கை அவருடையது என்பதை அவர் எதிரிகளே ஒத்து கொள்வார்கள். அரசியல் மனவுறுதி அவரிடம் உண்டு. அவற்றில் பாதியாவது எடியூரப்பாவிடம் இருந்தால் கர்நாடகத்துக்கு அது நல்லது.
6. துக்ளக் சோ அவர்களும் தாங்கள் சந்தோஷப்பட்டு தனிப் பதிவு போட்டது போல் சிறப்பு தலையங்கம் எழுதி பகுத்தறிவு கட்சிகளின் கடும் கோபத்துக்கு ஆட்படுவார் போல் தெரிகிறதே? இனி கச்சேரி சூடு பிடிக்குமா?பதில்: அவர் தலையங்கம் எழுதியாகி விட்டதே. அதைப் பார்த்துத்தானே நானும் பதிவு போட்டேன்.
7. தமிழகத்தில் உயர் சாதி பிரிவுகளில் பெரும்பான்மை பிராமண குலத்தவர் மட்டும் பா.ஜ.க.வை ஆதரிப்பது ஏன்?தமிழ்க பி.ஜே.பி. யில் பார்ப்பனர் மட்டுமா உள்ளனர்?
8. உ.பி.யில் செல்வி மாயாவதி பின்னால் அவர்கள் அணிவகுத்ததற்கு பா.ஜ.க வின் மேல் உள்ள கோபமா?பதில்: யாருக்கு?
9. தமிழகத்திலும் மாயாவதி பாணி செயல் படுத்த முயலுவதாக தகவல்கள் உண்மையா?பதில்: தலித் பார்ப்பனர் கூட்டணியா? சான்ஸே இல்லை. ஏனெனில் பார்ப்பனர்கள் உ.பி. மாதிரி இங்கு கணிசமான அளவில் இல்லையே.
10. தலித்களும்,உயர் சாதி பிரிவினரும் (பிராமணர்)சேர்ந்தால் வெற்றி என்பது இங்கு (கட்டுக் கோப்பான மைனாரிட்டி மற்றும் வலிமையான பிற்படுத்த பட்ட மக்களின் வாக்கு வங்கிஐ எதிர்கொண்டு)) சாத்தியமா? மேலே உள்ள கேள்விக்கும் இதற்கும் ஒரே பதில்தான்.
அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்