பத்தொன்பதாம் நூற்றாண்டில் 1873-ல் பிறந்த பம்மல் சம்பந்த முதலியார் பல துறைகளில் ஈடுபட்ட சாதனையாளர். அவர் அதிகம் பேசப்படுவது நாடகத் துறை சம்பந்தமாகவே.
பம்மல் அவர் சொந்த ஊர். ஆனால் அவர் அதிகம் வசித்தது சென்னையில்தான்.
சென்னை நகரவாழ்க்கை இவருடைய பல்துறை வளர்ச்சிக்கு பயனாக இருந்தது. திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். தொடர்ந்து ஆங்கிலக் கல்வியுடன் கூடிய நவீன கல்வி கேள்வியிலும் சிறப்புற்று விளங்கினார். மாநிலக் கல்லூரியில் பிஏ படித்து பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடப்பிரிவிலும் சேர்ந்து படித்தார்.
பின்னர் வழக்கறிஞராக வேண்டி சட்டக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். சிறந்த வழக்கறிஞராக எல்லோராலும் பாராட்டுப் பெறும் வகையில் உயர்ந்தார். சிறுவழக்கு நீதிமன்றதின் நீதிபதியானார். நீதிக்கும் நேர்மைக்கும் தான் வழங்கும் தீர்ப்புகள் முன்மாதிரியாக அமைய வேண்டுமென்பதில் உறுதியாக இருந்து செயல்பட்டார்.
"என்னுடைய பதினெட்டாவது வயதுக்கு முன், யாராவது ஒரு ஜோசியன் 'நீ தமிழ் நாடக ஆசிரியனாகப் போகிறாய்' என்று கூறியிருப்பானாயின், அதை நானும் நம்பியிருக்க மாட்டேன், என்னை நன்றாயறிந்த எனது வாலிப நண்பர்களும் நம்பியிருக்க மாட்டார்கள். அதற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு. நான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு மிகவும் அருகாமையில் பல வருடங்களுக்கு முன் ஒரு கூத்துக் கொட்டகையிருந்தபோதிலும், சென்னை பட்டணத்தில் அடிக்கடி பல இடங்களிலும் தமிழ் நாடகங்கள் போடப்பட்டபோதிலும், அதுவரையில் ஒரு தமிழ் நாடகத்தையாவது நான் ஐந்து நிமிஷம் பார்த்தவனன்று. நான் தமிழ் நாடகங்களைப் பாராமலிருந்தது மாத்திரமன்று; அவைகளின் மீது அதிக வெறுப்புடையவனாகவுமிருந்தேன்."
இந்த அளவுக்கு தமிழ் நாடகங்களில் ஆரம்பத்தில் வெறுப்புற்றிருந்தார் அவர். பிறகு வெறுப்பு நீங்கி தமிழ் நாடகங்கள் மீது விருப்பம் உண்டாகி, தமிழ் நாடக வரலாற்றின் போக்கில் திசை திருப்பங்களை, புதிய வளங்களை ஏற்படுத்தி மறுமலர்ச்சி உருவாகக் காரணமாகயிருந்தார்.
ஆங்கிலேய வழித் தாக்கத்தினால் உருவான மாற்றங்களைத் தமிழ் அரங்கக் கலை உள்வாங்கத் தொடங்கிற்று. 'பார்ஸி தியேட்டர்' மேடை நாடக மரபில் புதிய செழுமைப் பாங்குகளைக் கொண்டு வந்து சேர்த்தது. இக் காலத்தில் தமிழ் நாடக மரபை, கால மாற்றத்தின் அசை வேகத்துக்கு ஏற்ப மாற்றியமைத்து வளர்ச்சிக்குத் தளம் அமைத்துச் சென்றவர்களுள், அந்த மரபின் வழியே திருப்புமுனையாக வந்தவர் பம்மல் சம்பந்த முதலியார்.
19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் நாடகத்தின் நிலை மிகவும் கவலைப்படக்கூடியதாகவேயிருந்தது. கற்றவர்களால் நாடகக்கலை வெறுத்து ஒதுக்கப்பட்டிருந்தது. நடிகர்களைக் கூத்தாடிகள் என ஏளனமாக நோக்கும் பார்வையே பரவலாகயிருந்தது. இந்தக் காலகட்டத்தில் பட்டதாரிகள், நீதிபதிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என கற்றோர் குழாம் நாடகத்தில் ஈடுபாடு கொண்டு நடிகர்களாக நடிப்புத் திறனில் வெளிப்பட்டு நாடகத்துக்குப் புத்துணர்வும் புதுப்பொலிவும் ஏற்படக்கூடிய சூழலைப் பம்மல் கொண்டு வந்தார்.
நகரம் சார்ந்த கற்றோர் குழாம் நாடகத் துறையில் ஈடுபாடு கொண்டு தொழிற்படும் போக்கு உருவாவதற்கு அடிப்படையான தளத்தை உருவாக்கிக் கொடுத்தவர். இதிகாச நாடகங்களையும் புராண நாடகங்களையும் நடத்தி வந்த தொழிற்முறை நாடகக் குழுவினரின் போக்கையும் மாற்றினார். சபா நாடகங்கள் என்னும் போக்கில் புதுத் திருப்பம் ஏற்படுத்தினார். 1891-ஆம் ஆண்டில் 'சுகுண விலாச சபா' என்ற பயில் முறைக் குழுவைத் தோற்றுவித்து சுமார் நூறு நாடகங்களுக்கு மேல் எழுதியும் தயாரித்தும் தாமே நடித்தும் நாடகக் கலைக்குப் புது ஊற்றை வழங்கிச் சென்றார். ஆங்கில நாடகங்களையும் வட மொழி நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்து அவற்றை மேடைகளில் நடித்தும் தமிழ் நாடகத்திற்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்தார். ஆங்கில நாடகங்களின் அமைப்பைப் பின்பற்றி உரைநடையில் நாடகங்களை அமைத்தார்.
அந் நாட்களில் தமிழ் நாடகங்கள் விடிய விடிய நடப்பதுண்டு. இந்நிலையை மாற்றித் தமிழ் மேடை நாடகங்களை மூன்று மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற கால எச்சரிக்கையை முன்னிறுத்தினார். இவ்வாறு நாடகத்திற்குரிய கால எல்லையை வரைமுறை செய்தவர்.
தனது நாடக அனுபவங்களை ஒரு புத்தகமாகத் தொகுத்துள்ளார். நல்ல சுவாரசியமான புத்தகம் அது. முதலாம் ஆண்டிலிருந்து பல ஆண்டுகளுக்கு தனது நாட சபாவின் முழு பிராக்ரஸ் ரிப்போர்ட் கொடுத்துள்ளார் அவர். எந்தெந்த ஊரில் நாடகம் நடத்தினர், எவ்வளவு வசூல் ஆயிற்று என்பதையெல்லாம் விவரமாக எழுதினார். அக்கால வாழ்க்கை முறையையும் அதிலிருந்து அறியலாம்.
அதே போல நாடகத்தில் ஒருவர் வசனம் பேசும்போது மற்றவர்கள் அவல் மென்று கொண்டிருக்கக் கூடாது என்று சுவைபட விளக்கினார்.
ரங்கத்தில் ஆபாசங்கள் என்பது பற்றியும் எழுதினார்.
வளர்ச்சியுற்ற பார்ஸி நாடக மரபின் வருகையினால் பழைய மரபு செல்வாக்கிழந்தது. நாடகம் என்பது ஒரு சமூக நிறுவனமாகத் தோற்றம் பெற்றது. இந்த வளர்ச்சியில் பம்மல் சம்பந்த முதலியாரின் பங்கு முக்கியமானது.
சம்பந்தனாரின் கலைப் பணிகளென: நாடகத்தில் நடிப்பு, நாடகங்களை இயக்குதல், நாடகப் பிரதி உருவாக்கல், நாடக மேடையைச் சீர்திருத்தல், கற்றோர் குழாமை நாடகத்துடன் இணைத்தல் என பல பணிகளைக் குறிப்பிட முடியும். ஆக்கமான சிந்தனை, அயராத உழைப்பு, தொடர்ந்த தேடல், கால மாற்றத்துக்கு ஏற்ப நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படும் பாங்கு இவற்றின் மூலம் பம்மல் நாடகக் கலைக்குப் புத்துயிர்ப்புக் கொடுத்தார்.
பம்மல் இளமையாகயிருந்தபொழுது தலைமைப் பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். பின்னர் வயது ஏற ஏற அந்தந்தப் பருவத்துக்குத் தக்கவாறு பாத்திரங்களை ஏற்று நடித்தார். அந்த அளவுக்கு நடிப்புக்கலை மீதான ஈடுபாட்டில் அதிகம் அக்கறை செலுத்தினார். தன்னை முதன்மைப்படுத்தும் நிலையில் நடிப்புக்கான நடிகர்களைத் தேர்வு செய்வதில் அதிகம் அக்கறை காட்டாதவர்.
நாடகக் காட்சி அமைப்பில் புதிய நுணுக்கங்களைக் கையாண்டார். பல்வேறு நாடகக் குழுக்களின் நாடகங்களை பம்மல் பார்க்கக்கூடியவர். 'மதராஸ் டிரமாடிக் சொசைட்டி' என்னும் பெயரில் அமைந்த நாடகக் குழு நடத்திய நாடகங்களில் காட்சிகளுக்கு ஏற்பவும் இடங்களுக்கு ஏற்பவும் திரைகளைப் பயன்படுத்தியதைக் கண்ணுற்ற பம்மல், தன்னுடைய நாடகங்களிலும் அதே நுணுக்கங்களைக் கையாண்டார். இதுபோல் பாரசீக நாடகக் குழுவினர் நடத்திய நாடகங்களில் திரைகள், பக்கத் திரைகள், மேல் தொங்கட்டான்கள் முதலியவை புதிய முறையில் அமைந்திருந்தன. அவற்றையும் தனது நாடகங்களில் பம்மல் சிறப்பாகக் கையாண்டார்.
அதுவரையான தமிழ் நாடக மேடை அமைப்பில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இதற்கு பாரசீக நாடகக் குழுவினரின் வருகையே காரணம் எனலாம். அதாவது இதற்கு முன்னர் தமிழ் நாடகங்களில் ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்குமிடையே இடைவெளி விடப்பட்டிருந்தது. இக்குறை பாரசீகக் குழுவினர் வருகையுடன் களையப்பட்டது.
பம்மல் இத்தகைய நுணுக்கங்களை உள்வாங்கித் தமிழ் நாடக மேடையேற்றத்தில் அதனை இயல்பாகக் கையாண்டார். மேடையில் காட்ட முடியாத சில கடினமான காட்சிகளைத் துணிவாக மேடையேற்றிய தனிச்சிறப்பு பம்மலுக்கே உண்டு என்பர். ஒரே மாதிரியான புராண நாடகங்களையே நடித்து வரும் மரபு காணப்பட்டது. மக்கள் முன்பே அறிந்த கதைகளையே நாடகமாக்கி வந்தனர். இந்நிலைமையைப் போக்க, மாற்றியமைக்கப் பம்மல் பலவிதமான நாடகங்களை எழுதினார். மேல்நாட்டு அமைப்பு முறையில் பலவகையான நாடகங்களை எழுதி மேடையேற்றினார்.
தமிழ் நாடகம் புதுமையாகவும் சிறப்பாகவும் வளர்ச்சியடைய நாடகத்தின் பல்வேறு ஆக்கக்கூறுகள் குறித்த புதிய சிந்தனைக்கும் மாற்றத்திற்கும் உரிய வகையில் முயற்சி செய்தார். தக்க பலன் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு நாடக உருவாக்கத்தையும் திட்டமிட்டு உருக்கொடுத்தார்.
வழக்கறிஞர் ஆவதற்கு முன்பே சம்பந்தனாரின் மனம் நாடகக் கலைமீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தது. அவருடைய ஆவலுக்கு உறுதுணையான நண்பர்கள் பலருடைய ஒத்துழைப்புடன் 1891-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் ஒன்றாம் நாள் சென்னையில் சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவைத் தொடங்கி நாடகங்கள் நடிக்கத் தொடங்கினார். ''ஆந்திர நாடகப் பிதாமகன்'' என்று மிகச் சிறப்பாக அழைக்கப்படும் பல்லாரி வி. கிருஷ்ணமாச்சார்லு என்ற வழக்கறிஞர் சம்பந்தனாரின் நல்ல நண்பர்களில் ஒருவராக விளங்கினார். அவர் நாடகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தன் அனுபவத்தின் பயனாக சம்பந்தனாருக்கு ஓர் அறிவுரை கூறினார். வழக்கறிஞர் தொழில் சிறப்பாக முன்னேற வேண்டுமானால் நாடகத்தை அப்பால் ஒதுக்கிவிடுவதே முறை என்பதே அவரது கருத்து.
சம்பந்தனார் வழக்கறிஞராக இருந்துகொண்டே தமிழ் நாடகத்துக்கு முதன்மை கொடுத்து உழைக்கவேண்டும் என்று விரும்பினார். வழக்குகளை அதற்குத் தக்கவாறு ஏற்று வாதாடினார். தன்னிடம் வழக்குத் தொடர்பாக வரக்கூடியவர்கள் காலை 9 1/2 மணி முதல் மாலை 5 மணி வரை நெருங்கிப் பேசலாம் என்ற விதியை வகுத்துக் கொண்டார். இந்த நேர எல்லையைக் கடந்து எவரும் அவரிடம் வழக்குகள் பற்றிப் பேச அனுமதிக்கப்படுவதில்லை. மாலை நேரம் நாடகப் பணிக்காக ஒதுக்கப்பட்டது. அவர் சுகுண விலாச சபைக்குச் சென்று கலைக்காகத் தொண்டு செய்யும் நேரத்தில் நீதிமன்றைத்தையும் வழக்குகளையும் பற்றி நினைப்பதே இல்லை.
பம்மலின் சாதனைகளைக் கெளரவிக்கும்விதத்தில் இந்திய அரசு 1959-ல் 'பத்மபூஷன்' விருதை அளித்துப் பாராட்டியது. இவை தவிர சென்னை நாட்டிய சங்கம் பம்மலுக்கு சிறப்புச் செய்தது.
அவர் எழுதிய 100 நாடகங்களில் முக்கியமானவை மனோகரா, புஷ்பவல்லி, அமலாதித்யன் ஆகியவை. புஷ்பவல்லி நாடகத்தை நான் எனது பள்ளியில் போட்ட நாடகமாகப் பார்த்திருக்கிறேன். அவரது நாடகங்களில் பெண்கள் வேடத்தையும் ஆண்களே ஏற்று நடித்தனர். அவர்களில் ரங்கவடிவேலு என்பவர் முக்கியமானவர். லேடி ரங்கா என்றும் அவரை அழைப்பார்கள். அவர் இவருடன்தான் லேடி பார்ட் போடுவார் என்னும் அளவுக்கு அந்த ஜோடி திகழ்ந்தது. லேடி ரங்கா சில ஆண் பாத்திரங்களை ஏற்று நடித்தாலும் அதில் அவ்வளவாக சோபிக்கவில்லை என்றும் இவர் குறிப்பிடுகிறார். சற்றே புருவங்களை உயர்த்த வைத்தன ரங்கவடிவேலு அவர்களை பற்றி இவர் குறிப்பிட்டவை.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாடக வளர்ச்சியை நோக்கும்பொழுது பம்பல் சம்பந்த முதலியார் என்பவரின் முக்கியத்துவம் தவிர்க்க முடியாதது. பம்பலின் நாடக முயற்சிகள், சிந்தனைகள் தமிழ் நாடக வளர்ச்சி புதுப் பரிமாணம் பெறுவதற்கு தக்க தளம் அமைத்துக் கொடுத்தது.
இத்தகைய சிறப்புக்குரிய பம்மல் 24.9.1964இல் தனது கலைப் பயணத்தை நிறுத்திக் கொண்டார்.
நன்றி:
1.
தெ.மதுசூதனன், "தமிழ் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார்"
2. "தமிழ் நாடகத்தின் தந்தை பம்மல் சம்மந்த முதலியார்", எழுதியது திரு. ஏ.என்.பெருமாள்
3. "நாடகமேடை நினைவுகள்" எழுதியது பம்மல் சம்பந்தம் முதலியார்