கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
அனானி (10.08.2009 காலை 09.49-க்கு கேட்டவர்)1. உலக அளவில் நடை பெறும் டென்னீஸ் போட்டிகளில் மகளிர் அடிக்கும் குட் சாட்களின் படங்களை எடுக்கும் புகைப்பட ஆங்கிள் விவகாரமாய் இருப்ப்து பற்றி?பதில்: பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம் - கறந்த இடத்தை நாடுதே கண்! என்று பாடிய பட்டினத்தார் நினைவுக்கு வருகிறார்.
2. சட்டக் கல்லூரி வளாக மாணவர் மோதல் பிரச்சனையின் செயலுக்கு பிறகு இப்போது அங்கு நிலை சுமுகமா?பதில்: பல மாணவர்களுக்கு ஓராண்டு படிப்பு போனது, அதனால் பிற்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களை பற்றியெல்லாம் யார் கவலைப் படுகிறார்கள். மாணவர்கள்தான் சுதாரித்து கொள்ள வேண்டும்.
தூங்கியது போதும் மாணவர்களே, விழிமின், எழுமின்.
3. சத்துணவு ஊழியர் திடீர் போராட்டம் சென்னையில்?பதில்: நான் கூகளில் தேடியவரை கிடைத்தது
ஒரு மாதத்துக்கு முந்தைய இந்த செய்திதான். வேறு ஏதேனும் புதிய செய்தி? அதில் காட்டப்பட்டுள்ள சம்பள விகிதங்கள்தான் இந்தியாவிலேயே அதிகமாம். நாசமாப் போச்சு. அரசு அலுவலக பியூன் இதை விட அதிக சம்பளம் வாங்குகிறானே ஐயா.
4. உச்சமன்ற போலிஸ்-வக்கீல் மோதல் விவகாரம் வழக்கு எந்த நிலையில்?பதில்: தெரியவில்லை. இரு தரப்புமே வாய்தா வாங்கி காலம் கழிக்கும் என நினைக்கிறேன். கடந்த மாதம் நான்
போலீசார் வக்கீல்கள் பிரச்சினை பற்றி எழுதியதில் மாற்றம் ஏதும் இல்லை. எனது எண்ணங்கள் அப்படியே உள்ளன.
5. பாலிவுட் படங்களின் வசூலை விட கோலிவுட் படங்கள் முந்துவது சரியா?பதில்: இதில் சரி என்ன தவறு என்ன? எது வலிமையுடன் இருக்கிறதோ அது முந்துகிறது. எனக்கென்னவோ பாலிவுட்டுக்குத்தான் சான்ஸ் அதிகம் என தோன்றுகிறது.
6. பெங்களுரில் தியேட்டர்கள் மூடல்-சென்னயில் எதிர்நிலை-இப்படியே போனால்?பதில்: இங்கே மட்டும் என்ன வாழுகிறதாம்? இங்கேயும் தியேட்டர்கள் ரொம்ப திறந்து கொண்டா வருகிறார்கள்?
7. கேரளாவிலும் ஏதாவ்து ஒரு சிலை திறந்து விட்டால்?பதில்: யார் சிலை திறக்கலாம் என நினைக்கிறீர்கள்? அங்கு பாரதியார் இங்கு வள்ளத்தோல்/தகழி/பொற்றேகாட்/வயலார்? அப்பத்தானே யார் சிலை எங்கு உடைக்கப்படும் என அறியலாம்?
நிஜாம்1) நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பதால் இந்த கேள்வி. சில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்மொழி குறித்து "தமிழ்மொழியை முழுமை பெற்ற மொழி என்பவர்கள் தன் கால்களை தானே நக்கிக்கொள்ளும் நாய்களைப் போன்றவர்கள்" என சொல்லியிருந்தார். இது குறித்து உங்களின் கருத்து?பதில்:
இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது பற்றித்தானே கேட்கிறீர்கள்? வடமொழியை உயர்த்திப் பேச வந்தவர் தேவையின்றி தமிழை சீண்டியுள்ளார். அவை இரண்டுமே நமது கண்கள்.
2) ஜெயா டிவி விசுவின் மக்கள் அரங்கம், சன் டிவி விஜய டி ஆரின் அரட்டை அரங்கம் ஒப்பிடுக?பதில்: விசுவின் அரட்டை அரங்கத்தை ஓரளவுக்காவது ரசிக்கலாம். பேசுபவர்கள் காட்டுக் கத்தலாக கத்துவது, சிறுவர்கள்/சிறுமிகள் வயதுக்கு மீறிய முதிர்ச்சியில் பேசுவது ஆகிய எரிச்சல்கள் இரண்டு நிகழ்ச்சிகளிலுமே உண்டு என்றாலும், விசு சற்றே கௌரவமாக பேசுவார். ஆனால் இந்த டி.ஆர். என்கிற அராத்து பேர்வழி அடுக்கு மொழி பேசியே கொல்வார். சகிக்காது.
அனானி (11.08.2009 காலை 08.51-க்கு கேட்டவர்)1. கலைஞரின் ஜெ பற்றிய அழைப்பு திருமதி ஜெ.-அவரது வயதுக்கு,அனுபவத்துக்கு ஏற்புடையதா? நாகரீகம் மீறிய செயலாகாதா?பதில்: கலைஞர், ஜெயலலிதா ஆகிய இரு அரசியல்வாதிகளுமே தமிழகத்தின் துர்பாக்கியம். நாகரிகம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்பார்கள். ஒருவருக்கு மற்றவர் சரியான தண்டனைதான்.
ஆனால் ஒன்று. மைனாரிட்டி அரசு என்பது அரசியல் உண்மை. ஆனால் தன் பெயருக்கு முன்னால் செல்வி என்றோ திருமதி என்றோ போட்டு கொள்வது ஜெயலலிதாவின் தனிப்பட்ட உரிமை. அதில் கலைஞர் தலையிடுவது சரியில்லை. ஒன்றுக்கு மேல் ஒருவர் மனைவிகளை திருமணம் செய்து கொண்டு எல்லோரையும் தனது மனைவிகளாக அங்கீகாரம் தந்திருக்கிறார் என வைத்து கொள்வோம். ஆனால் ஒருதாரமணச்சட்டப்படி முதல் மனைவிதான் மனைவி. மற்றவர் வைப்பாட்டிகள்தான் என்பது நிலை. அதற்க்காக மற்ற மனைவியரது பெயருக்கு முன்னால் வப்பாட்டி என வைத்து அழைத்து விடுவீர்களா?
2. பொதுவுடமை கட்சிகளின் சாயம் 5 தேர்தலில் வெளுத்துவிடும் போலுள்ளதே?பதில்: அவர்கள் சாயம் எப்போதோ வெளுத்து விட்டதே. தமிழகத்தைப் பொருத்தவரை அவர்க: ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியைத்தான் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
3. சரத் கட்சியும் போட்டியில் இருக்கா?பதில்: தெரியவில்லையே. அது போட்டியில் இருந்தால் தேவலையா இல்லாவிட்டால் தேவலையா?
4. பன்றிக் காய்ச்சல் வேகமாய் பரவி பல உயிர்களை காவு வாங்கிவிடும் போலுள்ளதே?பதில்: பத்திரிகைகள் செய்யும் ஓவர் பில்ட்அப் சகிக்கவில்லை. விஷயம் என்னவென்றால் பன்றிக் காய்ச்சல் பற்றிய நம்ம்பகத்தன்மை வாய்ந்த புரிதல்கள் குறைவே. அந்த புரியாமையே பயத்தை அதிகப்படுத்துகிறது.
5. வைகோவின் அரசியல் சகாப்தம் இறுதிக்கட்டத்திலா? பதில்: அப்படித்தான் தோன்றுகிறது. வரவர அவர் ஒரு ஜோக்கர் ஆகிகொண்டு வருகிறார்.
கோபால்1. நிகழ்காலத்தில் வாழும் தமிழினவாதிகளுக்கும் பெரியாரிஸ்ட்டுகளுக்கும் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?பதில்: இருவருமே சமய சந்தர்ப்பங்கள், சுய லாபங்கள் ஆகியவற்றை மனதில் இருத்தி பேசுபவர்கள். என்னைப் பொருத்தவரை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
2. காதல் ஜாதியை ஒழிக்குமா?பதில்: கண்டிப்பாக ஒழிக்காது.
3. போலியாய் தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் பற்றி உங்கள் கருத்து?பதில்: நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி
4. திமுக ஏற்படுத்திய தமிழ் உணர்வு தற்சமயம் எப்படியுள்ளது?பதில்: தமிழ் மானத்தலைவரின் பேரன் ஹிந்தி படித்ததாலே மத்திய மந்திரி ஆனார் என பிரஸ்தாபிக்கப்பட்ட தமிழ்மானத்தலைவரே பெருமை அடித்துக் கொள்ளும் நிலையில்தான் தமிழ் உணர்வு உள்ளது.
5. வாழ்வு பற்றி உங்கள் கருத்து?பதில்: வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும் ஜனனம் என்பது வரவாகும்; அதில் மரணம் என்பது செலவாகும் போனால் போகட்டும் போடா ஜாட்டான்.
6. சர்தார்ஜிகள் மிகவும் தைரியசாலிகள். நல்ல உழைப்பாளிகள், இருந்த போதிலும் அவர்களை கிண்டல் பண்ணி?பதில்: அவர்கள் மேல் ஏனையோருக்கு இருக்கும் லேசான பொறாமைதான் காரணம். பிச்சைக்காரகளில் நான் சர்தார்ஜிகளை பார்த்ததில்லை. அந்த அளவுக்கு தன்மானம் உடையவர்கள். அவர்களில் பலவீமானவர்களை அந்த சமூகமே தத்தெடுத்துக் கொண்டு குருத்வாராக்களில் அவர்களால் இயலக்கூடிய வேலை வாஙிக்கொண்டு அவர்களுக்கு இருக்க இடம், உடுக்க உடை உணவு எல்லாம் தர ஏற்பாடு அசெய்கிறார்கள். அந்த கட்டுமானம், கட்டுப்பாடு இல்லாதவர்கள் அதனால் பொறாமை கொண்டு அவர்களை மட்டம் தட்டியாவது தங்கள் தளத்துக்கு கொண்டுவரப் பார்க்கிறார்கள். அதுதான் சர்தார்ஜி ஜோக்குகளுக்கு காரணம்.
7. பாஜக மதவாத கட்சி என்ற குற்றச்சாட்டு இப்போது?பதில்: சிறுபான்மையினரை சாதாரண குடிமகன்களாக நடத்தாமல் தேவையற்ற சலுகைகளை அளித்து அவர்களுக்கு செல்லம் கொடுப்பதை அது ஏற்காத கட்சி. அது மதவாதக் கட்சி அல்ல. தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையாக சட்டம் இயற்றினால் இசுலாமியர் வருந்துவார்கள் என பம்மும் காங்கிரஸ்தான் இசுலாமியர் அனைவருமே தீவிரவாதிகள் எனச்சொல்லாமல் சொல்கிறது. உண்மையில் அதுதான் மதவாதக் கட்சி.
8. சிக்கலில் மாட்டிய வருண்காந்தியின் நிலை?பதில்: நாகாக்க வேண்டும் என புரிந்து கொண்டால் சரி.
9. பொதுவாய் பொருளாதார வளர்ச்சிக்காக நியாய நெறிமுறை மீறல்கள், நுணுக்கங்கள் தந்திரங்கள் என்ற பெயரில் நடைபெறும் நிகழ்வுகள்?பதில்: சில சமயங்களில் அவை தவிர்க்க இயலாது போய்விடுகின்றன. அதற்கு பல நேரங்களில் அரசின் யதார்த்தத்துக்கு விரோதமான சட்ட திட்டங்களே.
10. உங்கள் அனுபவத்தில் தனிமனித பொருளாதார முன்னேற்றத்திற்கு எது தடை?பதில்: ரிஸ்க் எடுக்க பயப்படுவது.
11. கொண்டாடப்படும் பண்டிகைகள், திருவிழாக்கள், வீட்டு விசேஷ நிகழ்ச்சிகள் தேவையில்லை என்போர்?பதில்: தலைமுறை தலைமுறைகளாய் வரும் சந்தோஷங்களை இழக்கிறார்கள்.
12. வாக்குச்சீட்டுத்தான் வேணும்னு புரட்சித் தலைவி ஜெயலலிதா கோருவதின் நோக்கம்?பதில்: எந்த ஏற்பாடுமே 100% ஃபூல் ப்ரூஃப் ஆக இருக்கவியலாது. ஆனால் வாக்களிக்கும் எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய ஒவ்வொரு யந்திரமாக போக வேண்டும். கட்டுக்காவல்கள் அதிகம். தேவையானால் ஓட்டளிப்பு ஆரம்பிக்கும் முன்னால் அவற்றை டெஸ்ட் செய்து கொள்ளலாம். ஆனால் வாக்குச்சீட்டு விஷயத்தில் கட்டுக்கட்டாக தில்லுமுல்லு செய்ய இயலும், செய்யவும் செய்தார்கள். வாக்களிக்கும் யந்திரம் பற்றி அதை உருவாக்கியவர் என்னும் முறையில் நம்ம வாத்தியார் சுஜாதா கோர்ட்டுக்கு முன்னாலேயே விளக்கம் எல்லாம் செய்து காட்டியுள்ளார். ஜெ சொல்வது பொறுப்பற்ற குற்றச்சாட்டு.
13. தமிழகத்தில் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதால் என்ன நடக்கும்?பதில்: அதன் சவப்பெட்டியில் இன்னொரு ஆணி அடிக்கப்படும்.
14. மத்திய அரசு "பொடா" சட்டத்தைத் திரும்ப கொண்டுவந்தால்?பதில்: காங்கிரஸ் அரசு அதை செய்யும் எனத் தோன்றவில்லை.
15. இதிகாசங்கள்,புராணங்கள் சொல்வது போல் உலகை படைத்த ஆண்டவன் ஏன் பூமிக்கு கலிகாலத்தில் வருவதில்லை? ஏன்?பதில்: மக்களின் எதிர்ப்பார்ப்பு இது சம்பந்தமாக அதிகரித்துள்ளது. அம்மாதிரி வருகைக்கான ஸ்பெசிஃபிகேஷன்களும் அதிகரித்துள்ளன. ஆகவே இறைவனே நேரில் வந்தாலும் சட்டென அதை ஒத்துக்கொள்வது இல்லை.
கர்னல் Lionel Blaze 1795-98 காலக்கட்டத்தில் செங்கல்பட்டு கலெக்டராக இருந்தார். அச்சமயம் புயல், மழை காரணமாக மதுராந்தகம் ஏரிக்கரை உடையும் அபாயம் இருந்தது. கலெக்டர் மனவியாகூலத்தில் ஆழ்ந்தார். கோவிலுக்கும் வருகை தந்தார். தாயார் சன்னிதிக்காக கட்டிடப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததை கண்டார். பணத்தட்டுப்பாட்டால் வேலை முன்னேறவில்லை என்பதையும் கண்டார். இந்த ஏரியை ராமர் உடைப்பெடுக்காது காத்தார் என்றால் தாயார் சன்னிதியை தானே கட்டித்தருவதாக அவர் கூறிவிட்டு, சுவாமி தரிசனம் கூட செய்யாமல் தன் இருப்பிடத்துக்கு சென்றார். அன்றிரவு அவர் ஏரிக்கரைக்கு சென்றார். ஏரிக்கரையின் மேல் வில்லம்புகளுடன் இருவர் அங்குமிங்கும் நடப்பதை அவர் கண்டார். பிறகு இருப்பிடம் திரும்பி விட்டார். அடுத்த நாள் காலை புயல் மழையும் ஓய்ந்தன. இப்போது மனம் லேசான நிலையில் சுவாமி தரிசனம் செய்ய சென்றார். சன்னிதியில் தான் முந்தைய தினம் பார்த்த அந்த இருவரின் மூர்த்திகளையும் கண்டார். அவர்கள் ராம லட்சுமணர் என அவரிடம் கூறப்பட்டது. மனம் மகிழ்ந்த அவர் தான் சொன்னபடி தாயார் சன்னிதியை கட்டித் தந்தார். இது ஒரு கல்வெட்டில் அந்த கோயிலுக்கு சென்றால் காணக்கிடைக்கும். எதற்கும் இந்த
சுட்டிக்கு செல்லுங்களேன்
இதை என்னவென்று கூறுவீர்கள்? (வால்பையனின் இதற்கான கமெண்ட் இப்போதே எனக்கு தெரிகிறதே - வெள்ளைக்காரர்களிலும் முட்டாள்கள் உண்டு).
16. இன்றைய விலைவாசி உயர்வின் முக்கியகாரணம் என்ன என்ன?பதில்: The same old law of supply and demand. Too much money chasing too few goods.
17. வங்கியில் பர்சனல் லோன் வாங்கலாமா இல்ல கன்ஸ்யூமர் லோன் வாங்கலாமா, எது நல்லது?பதில்: பிணை ஏதும் இன்றி கடன் பெறுபவரின் நாணயம் மற்றும் கடனை திருப்பித் தரும் திறன் ஆகியவற்றை வைத்து தரும் கடனைத்தான் பெர்சனல் லோன் என்கிறார்கள் என நான் புரிந்து வைத்துள்ளேன். சில பொருட்களை வாங்க பிணை பெற்று கடன் தருவதுதான் கன்ஸ்யூமர் லோன் என்றும் நினைக்கிறேன். என்னைப் பொருத்தவரை கடன் வாங்குவதையே தவிர்க்க நினைக்கிறேன்.
சந்தோஷமா கடன் வாங்குவது பற்றி நண்பர் டி.பி.ஆர். ஜோசஃப் அவர்களை கேளுங்களேன்.
18. மாதா மாதம் சம்பளத்தில் பிடிக்கற வரியைக் குறைக்க ஏதாவது வழி இருக்கா?பதில்: சில வகை சேமிப்புகளுக்கு ரிபேட்டுகள் உண்டு. அவை எல்லாவற்றையும் முதலிலேயே கண்டுணர்ந்து செய்வதும் வரிபிடிப்பை குறைக்க வழி செய்யும். எது எப்படியாயினும் திசம்பர் 31-க்குள் ஒரு தெளிவான நிலைக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் முதலில் சொல்லி குறைவாகக் கழிக்கப்பட்ட தொகை ஜனவரி முதல் மார்ச் வரைக்கும் எகிறும் வாய்ப்பு உண்டு.
19. மனிதர்கள், எல்லாருக்கும் இன்ஸுரன்ஸ் தேவை தானா? எது பெஸ்ட் தனியார் அல்லது எல் ஐ சி?பதில்: எனது இன்ஸூரன்ஸ் நாட்கள் எல்லாமே எல்.ஐ.சி. யின் வசத்தில்தான் கழிந்தன. ஆகவே தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பற்றி அறிவு ஏதும் இல்லை.
மற்றப்படி நான் எடுத்த சில முடிவுகள் என்னையறியாமலேயே நல்லதாக அமைந்து விட்டன. உதாரணத்துக்கு நான் பம்பாயில் இருந்தபோது இரண்டு பாலிசிகள் எடுத்தேன். பிறகு சென்னைக்கு வந்ததும் ஒரு பாலிசி. நான் என்ன செய்தேனென்றால் எந்த அலுவலகத்தில் பாலிசி எடுத்தெனே அங்கேயே என் கணக்கை வைத்துக் கொண்டேன். ஊர் மாற்றும்போதெல்லாம் பாலிசிகளை மாற்றம் செய்யவில்லை. முதலிலிருந்து கடைசி வரை அந்தந்த பாலிசி அந்தந்த அலுவலகத்திலேயே இருந்ததால், மாற்றங்களில் வழக்கமாக நடக்கும் “ஆவணங்கள் தொலைந்துபோவது” எல்லாம் இல்லை.
இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் எல்.ஐ.சி. பிரீமியம் கட்டுவதற்காக அனுப்பப்படும் செக்குகளுக்கு அவுட்ஸ்டேஷன் கமிஷன் கிடையாது. ஆகவே சென்னையிலிருந்து பம்பாய்க்கும், பிறகு தில்லியிலிருந்து சென்னைக்கும் பம்பாய்க்கும் செக்குகள் அனுப்பித்து வந்தேன். எல்லா பாலிசிகளும் முதிந்து பணமும் கிடைத்தாகி விட்டது.
20. இந்தியாவில் பரதம், டிஸ்கோ இரண்டையும் நல்லா ஆடுறவங்க யார்?பதில்: தெரிந்த பெயராக வேண்டுமென்றால் கமலஹாசன். மற்றப்படி எல்லா கோலிவுட் டான்ஸ் மாஸ்டர்களுக்கும் இருவகை நாட்டியங்களும் தெரியும், தெரிய வேண்டும்.
அனானி (13.08.2009 காலை 08.47-க்கு கேட்டவர்)1. சமீபத்தில் தாங்கள் மிகவும் ரசித்த நகைச்சுவை?பதில்: சைவமா, அசைவமா? சைவம் என்றால் கீழே நான்காம் கேள்விக்கான பதிலைப் பார்க்கவும். சமீபத்தில் 1953-ல் படித்து ரசித்த நகைச்சுவை.
2. மனிதர்களுக்கு நெற்றி அகலமாக இருந்தால்?பதில்: அதிக அறிவு என்பார்கள். என்னைக் கேட்டால் நன்றாக நாமம் போட ஏற்றது என பலரால் உணரப்படும் என்பேன்.
3. கால் பெருவிரலை விட அடுத்த விரல் அதிக நீளமாய் இருந்தால்?பதில்: அது ஒரு பெண்ணுக்கு இருந்தால் அவள் புருஷன் அவளிடம் படாதபாடு படுவான் எனப் பொருள்படும்படி ஒரு திரைப்பட க்ளிப்பிங் பார்த்த ஞாபகம் இருக்கிறது. யாராவது படத்தின் பெயர் சொல்லுங்கப்பு. (திருடா, திருடி படமோ)?
4. காமராஜின் வெற்றிக்கு காரணம் அவரது நீண்ட கைகள்?பதில்: அது என்னமோ தெரியாது. ஆனால் இக்கேள்வி விகடனில் சமீபத்தில் 1953-ல் நான் படித்த ஒரு ஜோக்கை நினைவுபடுத்தி விட்டது (காமராஜுக்கும் இந்த ஜோக்குக்கும் சம்பந்தமில்லை).
சிறைச்சாலையில்:
ஏகாம்பரம்: நீ எப்படி பிடிப்பட்டாய்?
மாணிக்கம்: என் கால்கள் குட்டையாக இருந்ததால் என்னால் வேகமாக ஓட இயலவில்லை.
ஏ: அது சரி, ஏன் உன்னைத் துரத்தினார்கள்?
மா: என் கைகள் நீளமாக இருந்ததால்.5. சாமுத்திரிகா லட்சணத்துக்கும் வாழ்வின் வெற்றிக்கும் தொடர்பு உண்டா?பதில்: சாமுத்திரிகா லட்சணம் ஒருவருக்கு சரியாக அமைந்து, அது அவருக்கும் புரிந்தால் அவருக்கு ஒரு சுய மரியாதையும் தன்னம்பிக்கையும் வரும். அதனால் வாழ்க்கையில் வெற்றியடைய வாய்ப்பு உண்டு.
6. பரதக் கலையின் இன்றைய நிலை?பதில்: கொஞ்சம் காஸ்ட்லியான கலை. நன்கு கற்றுக் கொண்டு அரங்கேற்றம் செய்ய பல லகரங்கள் தேவை. எதற்கும்
இந்த சுட்டிக்கு போய் பாருங்கள். உங்களுக்கு தேவையான விஷயம் கிடைக்கலாம்.
7. அணு ஆயுத ஒப்பந்த விவகாரம்?பதில்: அது காலத்தின் கட்டாயம். இது சம்பந்தமாக நான்
இப்பதிவை எழுதிய பின்னால் எனது கருத்துகளில் மாற்றம் ஏதுமில்லை.
8. அரசியலில் பெண்கள் கொடி பறக்கிறதே?பதில்: இட ஒதுக்கீடு வேறு வரப்போகிறது. நடக்கட்டும், நடக்கட்டும்.
9. மகளிருக்கு தனி ரயில். அடுத்து?பதில்: திருமணத்துக்கு பின்னால் மகளிருக்கு மட்டும் தனி தேன்நிலவு என்று இல்லாமல் இருந்தால் சரிதான்.
10. இந்தியில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? ஏன்?பதில்: சஞ்சீவ்குமார். ஏன் என்றால் பதில் கூறுவது கஷ்டம். அவரது அலட்டிக் கொள்ளாத நடிப்பு எனக்கு பிடிக்கும். உதாரணத்துக்கு
கணவன், மனைவி மற்றும் சின்னவீடு என்னும் ஹிந்தி படத்தின் இந்த க்ளிப்பிங்கை பாருங்கள்.
11. காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியின் மைனஸ் பாயிண்ட்?பதில்: சரியான எதிர்க்கட்சி அமையாததால் இவர்கள் தலை கால் தெரியாமல் ஆடுகிறார்கள். அது அவர்களுக்கே நல்லதல்ல.
12. தளபதி ஸ்டாலின் மகள் மருமகன் ரகசியமாய் திருவண்ணாமலை கிரிவலம். கலைஞரின் பதில் என்னவாயிருக்கும்?பதில்: ஏன் ரகசியம் வெளியே தெரியுமாறு விட்டீர்கள் எனக் கேட்டிருப்பாராக இருக்கும்.
எம். கண்ணன்1. ப.சிங்காரம் எழுதிய 'புயலிலே ஒரு தோணி' படித்ததுண்டா ? கரிச்சான் குஞ்சுவின் 'பசித்த மானுடம்' ? இவையெல்லாம் மாஸ்டர் பீஸ் என சொல்கிறார்களே? அப்படி என்ன சிறப்பு (அல்லது வாசிப்பனுபவம்) இக்கதைகளில் ?பதில்: படித்ததில்லை, ஆகவே இதற்கான பதில் என்னிடம் இல்லை.
2. தற்கால (பெரும்பாலான) இளைஞர்கள் மொபைல் ஃபோன், சினிமா, இன்டர்நெட், குடி, செக்ஸ் - இந்த விஷயங்களிலேயே முழ்கி இருக்கிறார்களே? உழைப்பில் ஏன் அத்தனை அக்கறை இல்லாமல் எல்லாமே மேற்சொன்ன விஷயங்களைச் சுற்றியே உலாவுகிறார்கள்?பதில்: மொபைல் ஃபோன், இணையம் ஆகியவற்றை மேற்சொன்ன லிஸ்டுகளில் நான் சேர்க்க மாட்டேன். எனது லேண்ட்லைன் ஃபோனின் இன்கமிங் அழைப்புகள் எனது செல்பேசிக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இணையம் இன்றி எனது மொழிபெயர்ப்பு வேலைகள் நடக்காது. மற்றப்படி தற்கால இளைஞர்கள் என்று ஒன்றுமே கிடையாது. அவர்களை பற்றிய புகார்கள் பற்றி நான் இட்ட
இப்பதிவைப் பாருங்களேன்.
3. மீண்டும் ஜெ.ஆட்சிக்கு வந்தால் எஸ்.வி.சேகர் மீது கஞ்சா வழக்கு வருமா ? இல்லை ஆடிட்டர் டைப் டிரீட்மெண்டா ? எந்த தைரியத்தில் அவர் கட்சியை முறைத்துக் கொண்டே இந்த நிலைமைக்கு தன்னை கொண்டுவந்துள்ளார்?பதில்: அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
4. தஸ்தாவ்யெஸ்கி எல்லாம் படித்ததுண்டா ? சாருவும், எஸ்.ரா.வும் இவ்வளவு புகழ்ந்து எழுதுகிறார்களே ? அப்படி என்னதான் இருக்கிறது அக்கதைகளில்? (படிக்காததால் தான் கேட்கிறேன்) - வலைபதிவர்கள் மூலம் தான் இந்த உலக சினிமா, இலக்கியம் எல்லாம் அறிமுகமாகிறது - எனவே அவர்களுக்கு நன்றி)பதில்: நான் படித்த ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் மட்டுமே. தஸ்தாவ்யெஸ்கி எல்லாம் படித்ததில்லை. எனக்கென்னவோ ரஷ்ய நாவல்களில் வரும் பெயர்கள் வாயில் நுழைந்ததில்லை.
5. வாசல் திண்ணை, ரேழி, கேமரா உள், கூடம், முற்றம், ரெண்டாம் கட்டு போன்ற டைப் வீடுகளில் வசித்ததுண்டா ? அந்த அனுபவங்கள் பற்றி எழுதுங்களேன் ? (மும்பாய், டில்லி, சென்னை வீடுகளைப் பற்றியும் வசதிகள், வாடகைகள் பற்றியும் சில பதிவுகள் போடுங்கள்)பதில்: எனது முதல் 23 ஆண்டுகள் அம்மாதிரி வீடுகளில்தான் கழிந்தன. இப்போது கூட அம்மாதிரி வீடுகளைப் பார்த்தால் பழைய ஞாபகங்கள் வருகின்றன. அவற்றைப் பற்றி நீங்கள் கேட்டு கொண்டது போல பதிவுகள் போட்டால் போயிற்று.
6. பாக்யராஜ் ரோகிணி நடித்த 'பவுனு பவுனுதான்' படத்தில் ஐஸ் புரூட் அய்யர் என ஒரு கதாபாத்திரம் வருமே? ஐஸ்புரூட் என தெருக்காரர்கள் (சிறு பசங்கள் உட்பட) கேலி செய்வார்கள். அது என்ன ஒய் ஐஸ் புரூட்? ( ) கிளுகிளுப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?பதில்: ஓரல் செக்ஸை குறிக்கும் ஒரு அசிங்கமான வர்ணனைப் பெயர் அது.
7. 1990களுக்குப் பிறகு வரும் பெரும்பாலான தமிழ் படங்களில் படத்தின் கிரெடிட்ஸ் எனப்படும் பணியாற்றிய அனைவரின் பெயர்களும் படம் ஆரம்பத்தில் வெளியிடாமல் படம் முடிந்தபின் வெளியிடுகின்றனர் - அதுவும் மிகவும் பொடி எழுத்துக்களில்.! ஹாலிவுட்டைப் பார்த்து காப்பியடித்து இந்தப் பழக்கத்தை பெரிது படுத்தியவர்கள் மணிரத்னமும் கமல்ஹாசனும் தான். எத்தனை பேர் படம் முடிந்தவுடன் பணியாற்றவர்களின் பெயரைப் பார்க்கப் போகின்றனர் அல்லது தியேட்டரில் பிரொஜக்டரை கடைசி சீனிலேயே ஆஃப் செய்துவிடுகின்றனர். படத்தின் ஆரம்பத்தில் எல்லோருடைய பெயரும் வந்தால் தானே பணியாற்றியவர்களுக்கும் ஒரு வெளிச்சம் கிடைக்கும் (தொழில்நுட்பக் கலைஞர்கள் / உதவியாளர்கள், பிஆரோ, இசை, காமெரா, ஸ்டுடியோ உதவி என பலர்)பதில்: படத்தை பொருத்தது அது. அன்பே சிவம் பட விஷயத்தில் ஆடியன்ஸ் ஒரு மாதிரியான டிரான்ஸ் நிலையில் இருந்தனர். அப்போது கிரெடிட்டுகள் கீழிருந்து மேலே சென்றது மனதுக்கு உவந்ததாகவே இருந்தது. 80 நாட்களில் உலகைச் சுற்றி என்னும் ஆங்கிலப் படத்தில் இந்த டைட்டில்ஸ்கள் சிறப்பான முறையில் காட்டப்பட்டன. அதே போல ஜான் போல் பெல்மோண்டோ நடித்த
L'héritier என்னும் பிரெஞ்சு படத்தில் கடைசி காட்சியில் கதாநாயகன் சுட்டுக் கொல்லப்படுவார். உடனே படம் முடிந்து டைட்டில்ஸ் ஆரம்பிக்கும். பின்னணியில் அந்த கொலைக் காட்சியை வேவ்வேறு கோணங்களில் காண்பிப்பார்கள். கிட்டத்தட்ட 10 கோணங்கள் என்று எனது ஞாபகம். ஆகவே டைட்டில்ஸை விடாது பார்த்தோம். மற்றப்படி நீங்கள் சொல்வதும் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.
8. வலைப்பதிவுகளில் இவ்வளவு விவரமாக அரட்டை அடிக்க முடிகிறதே - பல்வேறு வயது கொண்டவர்களுடனும், பல்வேறு வித பின்னணி கொண்டவர்களுடனும். இதுமாதிரி அரட்டையை (சண்டையில் முடியாமல்) உங்கள் தெரு பெரிசுகள்/சிரிசுகளுடனோ அல்லது உறவினர்களுடனோ தொடர்ந்து நட்பு பேண முடியுமா? வலைப்பதிவு கொடுத்த பேறு தானே இது?பதில்: இதில் சந்தேகம் என்ன?
9. சுஜாதாவின் சிங்கமய்யங்கார் பேரன் நாடகம் பார்த்ததுண்டா / படித்ததுண்டா ? அந்தக் கதை பற்றி உங்கள் கருத்து என்ன ? உங்கள் வீட்டில் / குடும்பங்களில் / உறவுகளில் அதுமாதிரி ஒரு நிகழ்வுக்கு ஒப்புக் கொள்வீர்களா? சாதக பாதகம் என்ன?பதில்: இந்த புத்தகம் பற்றி முன்பே ஒரு கேள்வி வந்தது. ஆனால் நான் இப்புத்தகத்தை படிக்காததால் பதில் கூற இயலவில்லை - அப்போதும், இப்போதும்.
10. பிராமண கதாபாத்திரங்கள் இல்லாத கதை கொண்ட திரைப்படங்களை விட பிராமண கதாபாத்திரங்கள் கொண்ட (அல்லது அவர் ஒரு பிராமண வேடத்திலாவது நடித்த) கமல்ஹாசனின் படங்கள் தான் வெற்றி பெற்றதில் அதிகம். தன்னைச் சுற்றியும் எப்போதும் பிராமண ஜீவிகளையே படத்திற்கு உபயோகப்படுத்துகிறார். அப்புறம் ஏன் இந்த பெரியார், கருப்புச் சட்டை போன்ற வேஷம்?பதில்: கமலஹாசன் அற்புதமான கலைஞர். அவரது படைப்புகளால் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார். அவை போதுமே. அவரது நம்பிக்கைகள் அவர் இஷ்டம். நான் ஏன் அது பற்றிக் கருத்து சொல்ல வேண்டும்?
கிருஷ்ணகுமார்1. Does the Indian govt do enough to stop swine flu?பதில்: இதற்கு மேல் எப்படி செயல்பட முடியும்?
2. Is there any difference between swine flue and bird flue?பதில்: கண்டிப்பாக வேற்றுமைகள் உண்டு. மருத்துவர் ப்ரூனோ இன்னும் சரியான பதில் தருவார்.
இந்தச் சுட்டியில் உங்களுக்கு பதில் கிடைக்கலாம்.
3. What is a true government?பதில்: மக்களின் தினசரி வாழ்க்கையை அவரவர் திறமைகளுக்கேற்ப வாழ்ந்து வாய்ப்புக்களை பயன்படுத்தி முன்னேறத் தெவையான பின்புலனை தருவதே உண்மையான அரசு.
4. Which is your favouite video clipping in youtube?பதில்:
நாஸ்டால்ஜியாவுக்கு
பாண்டவர் பூமி பாடல்2001-ல் நாங்கள் சென்னைக்கு நிரந்தரமாக திரும்பிய அதே சமயத்தில் ராஜ்கிரண் நடித்த 'பாண்டவர் பூமி' படமும் திரைக்கு வந்தது. அப்படத்தின் கதை என் கதை போலவே இருந்தது. அதாவது சொந்த ஊருக்கே, பழைய வீட்டுக்கு குடிவருவது என்ற கதையின் கான்சப்டை மட்டும் கூறுகிறேன். அப்படத்தின் 'அவரவர் வாழ்க்கையில்' என்று தொடங்கும் பாட்டை எதேச்சையாக இன்று ரேடியோவில் கேட்டேன். சட்டென்று எனது ஞாபகம் 2001-க்கு சென்றது. அதன் சுட்டியைத்தான் மேலே கொடுத்துள்ளேன்.
பக்திக்கு: ஸ்ரீகிருஷ்ணா சீரியலில்
இக்காட்சியின் க்ளிப்.
ராமானந்த் சாகரின் கிருஷ்ணாவில் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் இதுவும் ஒன்று. அற்புதமாக குழல் வாசிக்கும் ஒருவனிடம் குழந்தை கண்ணன் வருகிறான். குழந்தைக்கு தானும் அதே மாதிரி வாசிக்க வேண்டும் என்ற விருப்பம், அதை அது வெளியிட, அன்புடன் குழந்தையை பார்த்து அந்த மனிதன் குழல் வாசிக்க தேவையான நீண்ட பயிற்சிகளை குறிப்பிட, குழந்தைக்கு பொறுமை இல்லை. பிறகு குழலூதுபவன் சொன்னது போல, தன் குழலை கையில் ஏந்தி பிரார்த்திக்கிறது, “அன்னை சரஸ்வதியே வணக்கம்” என்கிறது. மனதில் புல்லரிப்புடன் அன்னை கலைவாணியும் மேலேயிருந்து குழந்தை கண்ணனை நமஸ்கரித்து “என்ன கட்டளை பிரபோ” என்கிறாள். “அன்னை சரஸ்வதியே! இன்று நீ என் குழலை நினது இசையின் ஸ்வரங்களால் நிரப்புவாயாக” என்று. மேலே சரஸ்வதி தேவிக்கோ மட்டற்ற மகிழ்ச்சி, “தங்கள் சித்தம் என் பாக்கியம் என்கிறாள் கலைவாணி. அவள் தன் கையை மேலே உயர்த்தி அருள் புரிய, கண்ணனின் குழலிலிருந்து மிக இனிமையாக கானம் எழுகிறது. தேவர்கள் மேலிருந்து வணங்குகின்றனர். குழல் கலைஞனோ திகைப்படைந்து கண்ணன் காலில் விழுகிறார்.
5.who is the best Spiritual Motivatator in india/world? பதில்: என்னைப் பொருத்தவரை விவேகானந்தர்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்