நான் ரொம்ப நாட்களாக தேடிக்கொண்டிருந்த விஷயத்தை தந்த
தமிழ் ஓவியாவுக்கு நன்றி, கூடவே விடுதலைக்கும். முதலில் பதிவைப் படிப்போம், பிறகு நான் கூற நினைப்பதை கூறி விடுகிறேன்.
நான் ஏறக்குறைய சுமார் 50- ஆண்டு காலமாகவே பார்ப்பனரல்லாத"கீழ்மக்கள்"-பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்குக் கேடாகப் பயன்படுத்தப்படும் எல்லா சாதன வாய்ப்புகளையும் ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டு வருகிறேன். என்னுடைய பிரதான ஒரே தொண்டு இது தான். இனியும் என் வாழ்நாள் வரையிலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற தொண்டும் இதுதான். பார்ப்பனரால் ஏற்பட்டு வருகிற கொடுமைகள், அநீதிகள் குறிப்பிடத் தகுந்த அளவுக்காவது குறைந்திருக்கிற அளவுக்குச் செய்திருந்த போதிலும் அவை நிலைத்திருக்குமா என்று அய்யப்படுகிறேன்.
இவ்வளவு எடுத்துக் காட்டுவதற்கும் வெட்கப்படுகிறேன். தறுதலைகளும், பொறாமைக்காரர்களும், சொந்த எதிரிகளும், ஒரு பொது மனிதன் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமோ, அதை விட்டு குற்றம் குறைகூற வழி காணத் துடிக்கிறார்கள். இருந்தாலும் நான் இதை இவ்வளவு எடுத்துக்காட்டுகிறேன் என்றால், துரோகம் செய்து அயோக்கியனாய் வாழ வேண்டிய அவசியம் எனக்கு எந்தக் கட்டத்திலும் வந்ததில்லை என்பதை எடுத்துக் காட்டவே ஆகும். எல்லாத் துறைகளிலும் குறையாத அனுபவமும், திறமையும் உண்டு என்பதைக் கூறவுமேயாகும். எனது கருத்து மாறுதல்கள் எல்லாம் எனது கண்ணியமான அனுபவம் ஆராய்ச்சிக் கொண்டே இருக்குமே, தவிர பணம் சேர்க்கவோ, பதவி பெறவோ, பெரிய ஆள் ஆகவோ, இழிவை மறைத்துக் கொள்ளவோ, கடுகளவு கூடக் காரணம் கொண்டதாய் இருக்காது. இப்படிப்பட்ட என்னை இந்நாட்டு விடுதலைக்குக் குறுக்கேயிருந்தவன், துரோகம் செய்தவன் என்று சொல்லும் போது எவ்வளவு மனவுரம் இருந்தாலும் நிதானம் தவறவும் தூண்டுவதாகிறது. என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு.
என்னைப் பொறுத்த வரையில் என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்குக் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து என் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள் தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா?என்பது பற்றி எனக்குக் கவலையில்லை.என் நண்பர் பா.வே. மாணிக்க நாயக்கர் ஈரோட்டில் எக்சிகியூடிவ் எஞ்சினியராக இருந்த போது தனக்கு இரு கொல்லர்கள் வேண்டுமென்றுக் கேட்கையில், அவர் சொன்னார். "கெட்டிக்காரர்களாயிருந்தால் இருவருக்குள்ளும் கெட்டிக்காரத்தனத்தனப் போட்டியால் வேலை கெட்டு விடும். அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்தி என் திட்டம் ஆட்டம் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, நான் சொல்வதைப் புரிந்து அதன்படி வேலை செய்யக்கூடிய சுத்தி, சம்மட்டி பிடித்துப் பழகிய படிமானமுள்ள முட்டாளாயிருந்தால் போதும்" என்றார்.
ஆகவே தான் நான் நீடாமங்கலம் மாநாட்டிலும் தெளிவாகக் கூறினேன்.
என்னைப் பின்பற்றுபவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று கூறினேன். யாராவது ஒருவன் (தலைமை ஏற்று) நடத்தக் கூடியவனாக இருக்க முடியுமே தவிர எல்லோரும் தலைவர்களாக முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள்தான்.தோழர்களே! நான் இப்போது ஒருபடி மேலாகவே சொல்லுகிறேன்.
நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல; உங்கள் மனசாட்சி என்பதைக் கூட நீங்கள் மூட்டைக் கட்டி வைத்து விட வேண்டியது தான். கழகத்தில் சேரும் முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்! என்னுடன் வாதாடலாம். ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம். ஆனால் உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து கழகத்தில் சேர்ந்துவிட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனசாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்து விட்டுக் கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்ற வேண்டியது தான் முறை.
மனசாட்சியோ, சொந்த பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால் உடனே விலகிக் கொள்வதுதான் முறையே ஒழிய, உள்ளிருந்துக் கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
சிலருக்கு நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படுகிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்கு சர்வாதிகாரம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தோழர்களே! நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "இந்தச் சர்வாதிகாரம் எதற்குப் பயன்படுகிறதென்று?" என்னுடைய சர்வாதிகாரத்தைக் கழக இலட்சியத்தின் வெற்றிக்காக பொது நன்மைக்காகப் பயன்படுகிறதே ஒழிய, எந்தச் சிறு அளவுக்கும், எனது சொந்தப் பெருமைக்காகவோ, ஒரு கடுகளவாவது எனது சொந்த நன்மைக்காகவோ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.------------- 10-02-1963- அன்று பெரியார் தூத்துக்குடி மாநாட்டிலும் மற்றும் பல சமங்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.- "விடுதலை"-10-02-1963.
மீண்டும் டோண்டு ராகவன்.
நான்
ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்ற எனது பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். “அச்சமயம் பலப் பொருந்தாத் திருமணங்கள் நடந்தன. அதாவது 50 வயதுக்காரர் 14 வயதுப் பெண்ணை மூன்றாம் அல்லது நான்காம் தாரமாகத் திருமணம் செய்துக் கொள்வது சர்வ சாதாரணம். இத்திருமணங்களை எதிர்த்து தி.க. ஒரு தார்மீகப் போராடமே நடத்தி வந்தது. பெரியார் அவர்களே அவற்றைக் கண்டித்து எழுதியும் இருக்கிறார். அச்சமயத்தில் பெரியார் இவ்வாறு செய்தது அக்கட்சியினரை ஒரு கேலிக்குரியப் பொருளாக்கி விட்டது. "எனக்கு புத்திசாலிகள் சீடர்களாகத் தேவையில்லை. முட்டாள்களே போதும்" என்று பெரியார் அக்காலக் கட்டத்தில் கூறியதாகவும் செய்திகள் படித்துள்ளேன்”. அதை படித்தபோது எங்கே எந்த சந்தர்ப்பத்தில் கூறினார் என்று சொல்ல என்னிடம் போதுமான சுட்டிகள் இல்லை. மேலே உள்ளது அக்குறையை போக்குகிறது. அது 1963-ல் கூறப்பட்டிருந்தாலும் 1949-லும் அதே கருத்தைத்தான் அவர் வைத்திருந்தார் என்பது வெள்ளிடைமலை.
அதாவது “நான் சொன்னேன் என்பதற்காக நீங்கள் அதை அப்படியே ஒப்பு கொள்ளாதீர்கள், உங்கள் பகுத்தறிவையும் உபயோகித்து கொள்ளவும்” என்று அவர் கூறியது தன் கட்சியில் இல்லாதவர்களுக்கு மட்டும்தான், அப்படித்தானே? மேலும்,
தமிழர்களைப் பற்றி பெரியார் அவர்கள் கூறியவை என்னும் தலைப்பில் வந்த எனது பதிவில் வந்த இந்த வரிகளையும் பார்ப்போம்: “"தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்!' -
சொன்னது யார்? ஆரியர்களா? தமிழை வெறுப்போர்களா? வட நாட்டுக்காரர்களா? சம்ஸ்கிருதுதத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஆடுபவர்களா? காஞ்சி மடாதிபதியா? மும்பை எக்ஸ்பிரஸ் எடுக்கும் கமலஹாசனா?
இல்லை ஐயா,. இல்லை, தமிழர்களின் தந்தை என்றும் பெரியார் என்றும் ஒரு கூட்டத்தினரால் அழைக்கப் படும் ஈ வெ ராமசாமி நாயக்கர் என்னும் கன்னடியர். இப்படிப் பட்ட ஒரு ஆசாமியை, தமிழர்களை கருங்காலிகள் என்று அழைத்தவரையே, தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று அழைத்தவரையே கொஞ்சம் கூட வெட்கமின்றி, மான ரோஷமின்றி, தமிழர் தலைவர் என்று ஒரு கூட்டம் அழைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றி வருகிறது. அவரது உண்மையான முகம் என்ன? அவர் தமிழர்களை பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருந்தார்? மேலே படியுங்கள்.
'தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்!' -
ஈ.வே.ரா.வின் முழக்கம்
தமிழ்மொழி பிற்போக்கான மொழி, மூவாயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழில்
பெருமை கொள்ளும்படி, மூடநம்பிக்கை இல்லாத ஒரு நூலுமில்லை,
தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர் போன்ற வான்புகழ் கொண்ட தமிழ்ப்புலவர்கள் எல்லாம் ஹிந்துமத வெறியர்கள், ஆரிய அடிவருடிகள், துரோகிகள் என்றெல்லாம் முத்துக்களை உதிர்த்துவந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரை எதிர்த்து மனசாட்சி கொண்ட ஒரு தமிழனும் கொதித்து எழவில்லையா என்று இன்றைய இளைஞர்கள், தன்மானத் தமிழர்கள் ஆச்சரியப்படலாம். அப்படிக் கொதித்தெழுந்த பலர் இருந்தனர். ஆனால் அவர்களின் நியாயமான பேச்சுகள் எதுவுமே இன்று கிடைப்பதில்லை. பெருவாரி பத்திரிகைகள் அவற்றைப் பிரசுரிப்பதும் இல்லை.
சொல்லப் போனால் ஈவேராவின் தமிழ்மொழி மற்றும் தமிழ்மரபு வெறுப்பினைக் காலப்போக்கில்
உணர்ந்து கொண்ட அவர் தொண்டரடிப்பொடிகளில் சிலரே அவருக்கு எதிராகக் கொந்தளித்து
எழுந்ததும் இன்று திரிக்கப்பட்டுள்ள திராவிட வரலாற்றில் பதிவு செய்யப் படவில்லை.
உதாரணமாய் ம.வெங்கடேசன் அவர்கள், தனது ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்னும் புத்தகத்தில், திரட்டியிருக் கொடுத்திருக்கும் மேலும் சில தகவல்களை இங்கு பார்க்கலாம். .
சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலம் அமையச் செய்த அறப்போராட்டங்களை அறவே வெறுத்து வந்தார் ஈவேரா. தமிழ்நாடு என்ற பெயரே அவருக்கு ஒவ்வாமல் இருந்தது. திராவிடநாடு என்ற பெயரைப் புறம்தள்ளிவிட்டு மபொசியின் தமிழரசுக் கழகம் 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' என்று முழக்கமிட்டு வந்தது ஈவேராவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இன்னதைத்தான் பேசுவது என்ற விவஸ்தை எப்போதும் இல்லாத நாயக்கர், மபொசியை மனதில் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாய்த் தமிழர்களைத் திட்ட ஆரம்பித்தார்.
11.4.1947 தேதியிட்ட விடுதலையில் ஈவேரா எழுதியது:
"தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழர் ஆட்சி, தமிழ் மாகாணம்
என்றும் பேசப்படுவனயெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்." தொடர்ந்து மேடைகளில் தமிழர் என்போர் கருங்காலிகள், பித்தலாட்டக்காரர்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்.
ஈவேரா இப்படி மனம்போனபடி பொதுவாய்த் தமிழர்களை வைதுவருவதைக் கண்டித்து திருச்சி
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார்.
யார் இந்த கி.ஆ.பெ.?
ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய முன்னாள் சீடர்தான் அவர்.
ஈவேராவுடன் ஒன்றாகப் பணியாற்றிப் பின்பு கட்சியின் கொள்கைகளில் இருந்து ஈவேராமசாமி நாயக்கர் நழுவி விட்டதாகக் கூறி வெளிவந்தவர். தமிழுக்காக அரும்பாடு பட்டவர்.
அவர் 25.1.1948 அன்று தமிழர்நாடு என்ற ஏட்டில் வரைந்த கட்டுரை பின்வருமாறு:-
அண்மையில் சென்னை கோகலே ஹாலில் திரு.சி.டி.டி.அரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற
கூட்டத்தில் 'தமிழர் என்பதும், தமிழர் கழகம் என்பதும், தமிழரசுக் கட்சி என்பதும், தமிழர் ராஜீயம்
என்பதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள்' என்று பெரியார் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார். இது ஏற்கனவே பத்திரிகைகளில் வெளி வந்திருக்கிறது.
இப்பொழுது 'தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்' என்று எழுதியும், பேசியும்
வருகிறார்கள். ஆகவே வேண்டுமென்றே திட்டம் போட்டு வைய முன்வந்திருப்பதாக நன்கு விளங்குகிறது.
இதனால் தமிழ், தமிழர், தமிழ்நாடு தமிழ் அரசு என்று கூறக்கூடாதென்றும், திராவிடம், திராவிடர்,
திராவிடக்கழகம், திராவிடநாடு, திராவிட அரசு என்றே கூறவேண்டுமென்றும் அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது தமிழ்நாட்டின் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து
வருகிறது. காரணம், ஆந்திர, மலையாள, கன்னட மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும்
திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும், நாட்டையுமே முன்னெடுத்துக் கூறிவரும்போது தமிழ்நாட்டு மக்கள் மட்டும் தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக்கூடாது? இதற்கு மாறுபட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்கவில்லை.
எவ்விதமாயிருந்தாலும் மாறுபட்ட கருத்தும், கொள்கையும் உடையவர்களை பித்தலாட்டக்காரர்கள்,
கருங்காலிகள் என்று கூற வேண்டியது அவசியம்தானா என்பதையும் பெரியாரே எண்ணிப் பார்க்க
வேண்டும். ஒரு கழகத்தின் தலைவர் வாயிலிருந்து இக்கடுஞ்சொற்கள் வருவது நேர்மையானதுதானா
என்பதைப் பொதுமக்களே கருதிப்பார்க்க வேண்டும்.
ஆந்திர நாட்டுக்குச் சென்று, ஆந்திரர், ஆந்திரநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?
கேரள நாட்டுக்குச் சென்று, கேரளர், கேரளநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?
கன்னடிய நாட்டுக்குச் சென்று, கன்னடியர், கன்னடநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?
இனியேனும் சொல்வாரா?
இதுவரை சொல்லவில்லையென்றால் தமிழர், தமிழ்நாடு என்று சொல்லுகிறவர்களை மட்டும்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று சொல்லுவானேன்?
பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று சும்மா சொல்லி விடுவது மட்டும் போதாது. காரணம் காட்டிக் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறாதது அவர்களுடைய ஆத்திரத்தைக் காட்டுகிறதே தவிர உண்மையைக் காட்டுவதாக அறிவாளிகளால் ஒப்ப முடியாது.
மற்றொரு நண்பர், கிராமணியார் (ம.பொ.சி) அவர்களைத்தான் அவ்வாறு கூறியிருக்கிறார் என்று நினைத்து நமக்கு எழுதி இருக்கிறார். இது உண்மையானால் நேரடியாக எழுதி இருக்கலாமே! அப்படி இருந்தாலும் கூட கிராமணியார் ஒரு மாறுபட்ட கருத்தினர் என்பதற்காக அவரது தமிழ்ப்பற்றும், தமிழ்நாட்டுப்பற்றும் நமக்குத் தேவையில்லாமல் போய்விடுமா?
இதற்காக அவரைப் பித்தலாட்டக்காரர் என்றும் கருங்காலி என்றும் கூறுவது முறையா என்பதையும் அன்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழர் கழகத்தையும், தமிழரசுக் கழகத்தையும் நேரடியாகத் தாக்கி, தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டுப் பற்றுள்ள மக்களை வேண்டுமென்றே வைதிருக்கிறார் என்று முடிவாகத் தெரிகிறது.
இதை மெய்ப்பிக்க கழகம் என்ற சொல்லை எடுத்துவிட்டு, தமிழர், தமிழரசு என்று சுட்டிக்காட்டி வைத்திருப்பதே போதுமான சான்றாகும்.
நம்மைப் பொறுத்தவரையில் பெரியாரின் தன்மைக்கு இச்சொற்கள் ஏற்றதல்ல என்றே கூறுவோம்.
இப்போது கூறியதை அவர் திரும்பப் பெற வேண்டும். இன்றேல் தாம் கூறியதைக் காரணம் காட்டி மெய்ப்பிக்க வேண்டும். இதுவே தமிழர், தமிழரசு, தமிழ்நாடு தமிழருக்கே என்று கூறுகிற 'பித்தலாட்டக் கருங்காலி'களின் கோரிக்கையாகும்.
(நன்றி: புதிய தமிழகம் படைத்த வரலாறு - ம.பொ.சி)”
அவ்வாறு தான் போதித்த பகுத்தறிவை தனக்கெதிராக தன் சீடர்களே பிரயோகம் செய்வதை அவர் ஒத்து கொள்ளவில்லைதான். ஆனாலும் அவர் எந்த காண்டெக்ஸ்ட்களில் இப்பொருள் வருமாறு கூறி வந்தார் என்பதைப் பார்த்தோமானால் அவ்வாறு சீடர்கள் பேசுவதை தன்னால் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க இயலாது என்ற நிலையில்தான் என தெரியவருகிறது.
ஒரு சமயம் கதிர்வேல் பிள்ளை என்னும் ஏழைப்புலவர் அவரிடம் வந்திருக்கிறார். அவருக்கு அருந்த பால் கொடுத்திருக்கிறார். அதே சமயம் புலவர்கள் எல்லோருமே பிச்சைக்காரர்கள்தானே என்ற தொனியில் பேச அப்புலவரோ அவர் கொடுத்தப் பாலை வாயில் விரல்விட்டு வாந்தி எடுத்துவிட்டு அப்புறம் சென்றார். அந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பேசும் பெரியார் அவர்களே "கதிர்வேல் பிள்ளை என்னும் வாயாடிப் புலவர்" என்று அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இப்போது கூறுங்கள், தான் பிச்சை போடுகிறோம், அதைப் பெறுபவன் அதை அவமானத்துடன் சேர்ந்துதான் விழுங்க வேண்டும் என்ற இவரின் மனோபாவம்தானே இங்கு முன்னால் தெரிகிறது?
பெண்ணுரிமையை பேசியவரே தனது சொந்த வாழ்க்கையில் ஆணாதிக்க மனோபாவத்துடன் நடந்து கொண்டதை அவரே ஒத்துக் கொண்டது பற்றி
நான் இட்ட விடாது கருப்புவுக்கு நன்றி
என்ற தலைப்பில் வந்த இப்பதிவில் வரும் சில வரிகளைப் பார்க்கலாம். “பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.
ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.
நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லம்ம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.
அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநல சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாகச் சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நான் காங்கிரசிலிருக்கும் போது, நாகம்மாள், மறியல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.
ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே! எது எப்படியிருந்த போதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கையை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை.
ஆதலால், நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் "குடும்பத் தொல்லை' ஒழிந்தது என்கின்ற ஓர் உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.
இது நிற்க. நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும் லாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக் கொள்கின்றேனோ, அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ளமாட்டார். அதற்கு நேர்ரெதிரியடையாக்குவதற்காக உபயோகித்துக் கொள்வார். ஆதலால், நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை”. ஒரு கையறு நிலையில் அவர் எழுதிய இவ்வரிகள்தான் என்னை அவர்மேல் பெருமதிப்பு கொள்ளச் செய்தன என்பதையும் இங்கு இன்னொரு முறை வலியுறுத்துவேன். “மகாத்மா காந்தி அவர்கள் தனது சத்திய சோதனையில் தன்னைப் பற்றி பல குறைகளை வெளிப்படையாக எழுதியதற்கு எவ்வகையிலும் பெரியார் அவர்கள் மேலே எழுதியது நேர்மையில் சிறிதும் குறைந்ததல்ல. உண்மையிலேயே அவர் பெரியார்தான். அவரை அப்படிப்பட்ட வரிகளை எழுத வைத்த உத்தமப் பெண்மணியான அமரர் நாகம்மாள் பற்றி கூறவே வேண்டாம். மறுபடியும் கூறுகிறேன், ஈவேரா அவர்கள் உண்மையிலேயே பெரியார்தான்”.
இப்பதிவை முடிப்பதற்கு முன்னால் தமிழ் ஓவியாவின் பதிவிலிருந்து சில வரிகள்: “கழகத்தில் சேரும் முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்! என்னுடன் வாதாடலாம். ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம். ஆனால் உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து கழகத்தில் சேர்ந்துவிட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனசாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்து விட்டுக் கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்ற வேண்டியது தான் முறை”. அப்படியே இசுலாமிய மதக் கொள்கைதான். ஒரு தடவை உள்ளே வந்தவர்கள் வெளியே போவதை அங்கும் விரும்புவதில்லை. ஆனால் ஒரே ஒரு பெரிய வித்தியாசம், பெரியார் விஷயத்தில். விட்டுப் போனவர்களுக்கெதிராக ஃபத்வா எல்லாம் போடப்படுவதில்லை. திட்டுவதோடு சரி.
சரி, எனக்கு ஒரு சந்தேகம். ஹிந்து என்றால் திருடன் என்னும் பொருள் என்று பாரசீக மொழி அகராதியை வைத்து பேசுபவர்கள் ஏன் இன்னும் அதே மதத்தில் இருந்து லோல்பட வேண்டும்?
“மனசாட்சியோ, சொந்த பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால் உடனே விலகிக் கொள்வதுதான் முறையே ஒழிய, உள்ளிருந்துக் கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்” என பெரியார் அவர்களே கூறியது வேறு இங்கு நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
இப்போது முரளி மனோஹர் கூறுவதாவது “அப்படியெல்லாம் மதத்தை விட்டுப் போனால் அவரது சந்ததியினர் பெறும் இடஒதுக்கீடு சலுகைகள் பறிபோய்விடுமே, அவற்றை நீயா வாங்கித் தருவே பெரிசு”? Your point is well noted, Murali! :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்