8/31/2009

ஆயிரம் வருஷங்களுக்கு அப்பால் ஜாதிகள்!! வால்பையனுக்கு வரப்போகும் கோபம்!!!

துஷ்யந்தன், சகுந்தலை விஷயத்தில் உண்மையாகவே என்ன நடந்திருக்கும் என கற்பனை செய்து எழுதிய நாடோடி, துச்சாசனன் அவிழ்த்துப் போட்ட புடவைகளால் வந்த பிரச்சினையை சுவையுடன் அலசிய நாடோடி, தமிழ்நாட்டில் நடக்கும் விஷயங்களை பகிடி செய்ய அதிசயபுரி என்ற பிரத்தியேக நாட்டை சிருஷ்டி செய்து, தனது மனோரதத்தில் ஏறி கால பரிமாணங்களை தாண்டி தமிழகத்துக்கு சென்று தான் கண்டதை எழுதும் நாடோடி பற்றி நான் ஏற்கனவே பதிவுகள் போட்டபோது கைவசம் அவர் புத்தகங்கள் ஏதும் இல்லை. ஆனால் இம்முறை ஒரு புத்தகம் கிடைத்தது, அதன் தலைப்பு “ஆயிரம் வருஷத்துக்கு அப்பால்”.

“அதானே, வெறுங்கையிலேயே முழம் போடற இந்தப் பெரிசு இப்போது நம்மை விட்டுவிடுமா என்ன”? என அலுத்துக் கொள்ளும் முரளிமனோகர் அமைதி காக்க வேண்டும். பை தி வே, நீ சந்தேகப்படுவதெல்லாம் உண்மையே. உங்களையெல்லாம் விடுவதாக இல்லைதான்.

புத்தகத் தலைப்பையே தன் தலைப்பாக கொண்ட அவரது இக்கட்டுரையில் அவர் தனது மனோரதத்தில் ஏறி ஆயிரம் ஆண்டுகள் எதிர்க்காலத்தில் செல்கிறார். அவர் அவ்வாறு போகப் போகிறார் என்பதை அறிந்த அவரது வக்கீல் நண்பரும் தனது மனோரத்தத்தில் ஏறி அவரைப் பின்தொடர்கிறார். திடீரென நண்பரைக் காணவில்லை. இவரும் தான் இருந்த 1957-லிருந்து 2957-க்கு வந்து விட்டார். திடீரென அங்கு தனது ந்ண்பரைக் கண்டதும் இருவரும் பாசத்துடன் தழுவிக் கொள்கின்றனர்.

திடீரென அங்கு தோன்றும் இரண்டு போலீஸ்காரர்கள் அவர்களிடம் அவர்கள் ஜாதி பற்றி கேட்க, அவர்கள் கோபத்துடன் அதை சொல்ல மறுக்கின்றனர். அவர்கள் அந்த ஊரைச் சேர்ந்த்வர்களா எனக்கேட்க, அதே ஊர்தான் இருந்தாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவர்கள் எனக்கூறினால் எங்கே தங்களை பைத்தியம் எனச் சொல்லிவிடுவார்களோ என அஞ்சி வேறு ஊர்க்காரர்கள் எனச்சொல்லி சமாளிக்கின்றனர்.

இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு பால்வியாபாரி ஜாதியைச் சேர்ந்தவன் ஒரு பழவியாபார ஜாதிக்காரனை தொட்டுவிட்டது சம்பந்தமாக தகராறு வர அங்கு செல்கின்றனர். வேடிக்கை பார்ப்பவர்கள் எல்லோரும் தனிதனிக் குழுக்களாக நிற்கின்றனர். வேற்று ஜாதிக்காரர்களை தொடக்கூடாது என்ற முனைப்பில் அவர்கள் அவ்வாறு நிற்பதாக நாடோடிக்கு படுகிறது. பிறகு அந்த சண்டைக்கார்கள் இருவர்களுடன் இவர்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு மறுபடியும் இவர்கள் ஜாதி பற்றிக் கேட்க தாங்கள் பிராமண ஜாதியைச் சார்ந்தவர்கள் என நாடோடி கூற, அந்த ஜாதியெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே அழிந்து விட்டதை இன்ஸ்பெக்டர் கூறுகிறார். பிறகு அவராகவே நாடோடி உடை பாவனைகளை பார்த்து அவர் எழுத்தாளர்தானே எனக்கேட்க நாடோடியும் ஆமாம் என்கிறார். நண்பரோ தான் வக்கீல் எனக் கூற அதெப்படி வக்கீல் ஜாதிக்காரரும் எழுத்தாள ஜாதிக்காரரும் ஒருவரை ஒருவர் தொடலாம் என இன்ஸ்பெக்டர் கேட்டு விட்டு அடுத்த நாள் கோர்ட்டுக்கு வருமாறு அவர்களிடம் கூறுகிறார்.

அன்றிரவு தங்குவதற்காக ஹோட்டலுக்கு பாகலாம் என்றால் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி ஹோட்டலாக இருந்தது. ஆக வக்கீலும் எழுத்தாளரும் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்க வேண்டி வருகிறது. நாடோடி தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள இன்னொரு எழுத்தாளர் அப்போதைய ஜாதிக் கட்டுப்பாடு பற்றி விளக்குகிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வர்ணாசிரமம் வந்து அதிலிருந்து ஜாதிகள் வந்ததை விளக்குகிறார். பிறகு அவற்றின் கட்டுக்கோப்பு குலைந்து போனதால் யார் வேண்டுமானாலும் எந்தக் குலத்தொழிலையும் செய்யலாம் என நிலை ஏற்பட, சம்பளம் அதிகம் வராத தொழில்களுக்கு ஆட்கள் கிடைக்காது, சம்பளம் அதிகம் கிடைக்கும் வேலைகளுக்கு ஒட்டுமொத்தமாக ஜனங்கள் போய் விழ அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் வந்தது. ஆகவே 500 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போது நிலவிய தொழில்களின் அடிப்படையில் மீண்டும் ஜாதிகளை வகுத்து ஒரு ஜாதிக்காரர் இன்னொரு ஜாதிக்காரரின் வேலையை செய்யக்கூடாது என்ற நிலை நிறுவப்பட்டது.

ஜாதிப் பிரிவுகள் இருந்தனவே தவிர இந்த ஜாதிதான் உயர்ந்தது இன்னொரு ஜாதி தாழ்ந்தது என்ற எண்ணங்களும் வராமல் பார்த்து கொள்ளப்பட்டன. தலைமுறை தலைமுறையாக ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் ஒரு தொழிலை மட்டும் செய்ததால் அத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆகவேதான் ஒரு ஜாதியினர் இன்னொரு ஜாதியினரைத் தொடுவது கூட குற்றமாகக் கருதப்பட்டது. போலீஸ் ஜாதியைச் சார்ந்தவர்கள் திருடர்களை பிடிக்கும்போது மட்டும் தங்கள் தொழில் தர்மப்படி அவர்களைத் தொடலாம். பிறகு தீட்டு கழிய அவர்கள் குளிப்பதற்கு சோப்பு டவல் எல்லாம் வழங்கப்படும். திருடர்களும் போலீஸ் ஜாதியினர தங்களைத் தொட்டு விட்டதால் அவர்களும் குளிப்பார்கள்.

இதையெல்லாம் கேட்ட நாடோடிக்கு தலை சுற்றி தெரியாத்தனமாக தான் 1957-லிருந்து வருவதாகக் கூற, “பைத்தியம் டோய்” எனக் கூறி எல்லோரும் அவரை அடிக்க வருகின்றனர். திடீரென விழித்துக் கொள்ளும் நாடோடி தான் 1957-லேயே இருப்பதை உணர்ந்த் நிம்மதி அடைகிறார்.

மனிதர்களுக்குள் குழுமனப்பான்மை என்பது இயற்கையாகவே வரும். ஆனால் அதற்காக இம்மாதிரி ஜாதி என்றெல்லாம் சொல்வது ஓவர் என்பவர்கள் சரித்திரத்தை பற்றி சரியாக அறியாதவர்கள். இப்போது கூட பார்க்கிறோமே, டாக்டர்களின் பிள்ளைகள் பெற்றோர்கள் அறிவுரைப்படி டாக்டர்கள் ஆகின்றனர். அதே மாதிரித்தான் மற்ற தொழில்களிலும்.

இதையெல்லாம் ஒத்துக் கொள்வதும் ஒத்துக் கொள்ளாததும் அவரவர் விருப்பம். ஆனால் நாடோடியின் இந்தக் கட்டுரை நல்ல முறையில் நகைச்சுவையுடன் எழுதப்பட்டுள்ளது.

அடுத்தப் பதிவில் சிறுவயதில் பெண்களுக்கு திருமணம் செய்து வழக்க, பற்றி எழுதியுள்ளதை பற்றி பதிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/30/2009

பிராமணர்களுக்காக வாதாடிய முரசொலி அடியார்

இக்கட்டுரையை நான் அது வெளிவந்த காலகட்டத்திலேயே (சமீபத்தில் 1980-ல்) படித்துள்ளேன். அதை இத்தலைமுறையினருக்காக இங்கு மீள்பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இக்கட்டுரையை எனக்கு சுட்டியாக தந்த இப்பதிவருக்கும் நன்றி. திண்ணைக்கும் நன்றி.

பிராமணர்களைப் பொறுத்தவரை நமக்கு மறுபரிசீலனை தேவை!

பிராமணர்கள் அனைவருமே வெறுக்கத்தக்க பிராணிகள், பச்சை விஷம் கொண்டோர், பரம சண்டாளர்கள் என்ற கருத்திலிருந்து...

'பிராமணர்களை எதிர்க்கவில்லை; பிராமணியத்தை எதிர்க்கிறோம் ' - என்று அந்தக் கருத்தை வளப்படுத்தியவர் அறிஞர் அண்ணா!

ஆகவே, நாமும் 'பிராமணர் ' பற்றி மறுபரிசீலனை செய்ய முன்வர வேண்டும்.

இதைக் கூறுவதற்கு எனக்கு உரிமை உண்டு! 'ஆரிய மாயை ' நூல் எழுதினார் அறிஞர் அண்ணா அவர்கள்! அதே தலைப்பில் 'ஆரிய மாயை ' என்ற நாடகம் எழுதியவன் நான்!

எனது நாடகத்தைப் பார்த்துப் புகழ்கிறபோது பெரியார் அவர்கள் சிதம்பரத்தில் 'அறிஞர் அடியார் ' என்று கூறினார்.

நான் பேசுகிறபோது அந்தப் பட்டத்துக்கு தகுதியற்றவன் என்று பெரியார் முன்னிலையிலேயே கூறினேன்.

ஆரிய மாயை இருந்தது உண்மை! சமுதாய ஏற்றத் தாழ்வு 'ஆழப்பட்டதற்கு ' ஆரியமே முதல் காரணம் என்பதும் உண்மை.

ஆனால் அதெல்லாம் பழைய காலம்; பெரியாரின் கடுமையான உழைப்புக்குப் பின்னர் ஆரியமும் - வர்ணாசிரமத் திமிரும் தவிடு பொடியாகி விட்டன.

'இல்லை; இல்லை! அது இன்னமும் இருக்கிறது என்றால் பெரியார் தொண்டு வீண்; திராவிடர் இயக்கம் - கையாலாகாத இயக்கம் ' என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

நேற்று ஒரு பிராமணன் - மற்றவர்களைப் பார்த்து 'டேய்! இங்கே வாடா! ' என்று அழைத்ததுண்டு.

இன்று பிராமணத் தோழனை நமது பிள்ளைகளே வாடா போடா என்று அழைப்பதைப் பார்க்கிறோம்.

நேற்று புனிதமாகக் கருதப்பட்ட தொழில்களையே பிராமணர்கள் செய்து வந்தார்கள்! இன்று... தோல் பதனிடும் தொழிற்சாலையிலும் அவர்களைக் காணலாம்! 'பாட்டா ஷீ ' கடையில் நமது காலுக்கு செருப்பு மாட்டுகிற தொழிலை 'தொழிலே தெய்வம் ' என நினைத்துச் செய்கிறார்கள்!

பெரியாரின் பணியால் பிராமண சமுதாயம் மேல் தட்டிலிருந்து கீழிறங்கி சமமாக வந்துவிட்டது என்பதை ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும்!

பிராமணர்கள் என்றதுமே பழமைவாதிகள், தமிழருக்கு எதிரானவர்கள்; வீரமற்றவர்கள் என்றெல்லாம் நினைப்பது தவறு!

'கடவுள் இல்லை ' என்று வேத காலத்திலேயே கூறியவர் சார்வாக மகரிஷி.

தென்னாட்டில் நாத்திகம் பேசிய பிராமணப் புலவர் கபிலர்! மறுபிறப்புத் தத்துவத்தைத் தூள் ஆக்கிய 18 சித்தர்களில் சிலர் பிராமணர்கள்!

வேதக் கருத்துக்களை மறுத்த சமணம் புத்தம் போன்ற மதங்களில் முதன்மையான சீடர்களாய் விளங்கியவர்கள் பிராமணர்களே!

கருத்துப் புரட்சிகளை முதலில் வரவேற்று நடந்தவர்களும் பிராமணர்களே!

உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தல், விதவா விவாகம் போன்றவற்றை ஆதரித்துப் போர் நடத்தியவர்களூம் அவர்களே!

வேதத்திற்கு நிகராக தமிழ் மொழியில் 'திராவிட வேதம் ' என்ற திவ்யப் பிரபந்தத்தை உருவாக்கியவர்களும் அவர்களே!

வேதத்தை வெளியே சொல்லக்கூடாது என்ற சட்டத்தை மீறி உடைத்து திருக்கோட்டியூர் மதில் மீதி நின்று வேதகீதம் கிளப்பிய புரட்சிக்காரர் ராமானுஜர்.

நாய்களோடு திரிந்த சண்டாளனைத் தனது குருவாக ஏற்றுக்கொண்ட இன்னொரு புரட்சிக்காரர் ஆதிசங்கரர் என்ற பகவத் பாதாள்.

ஆதிதிராவிடர்களைத் தீண்டக் கூடாது என்றிருந்த காலத்தில் திருப்பாணாழ்வார் என்ற ஆதிதிராவிடரை ஸ்ரீரங்கம் பூசுரர்களின் தோள்மீது ஏற்றி கோவிலுக்குள் கொண்டு வந்ததும் அவர்களே!

மேலை நாட்டவரே வியக்கும் சித்தாந்த வேதாந்தங்களையும் ஆக்கியவர்களும் அவர்களே.

வான சாத்திரத்தில் பலநூறு ஆண்டுகளூக்கு முன்பு சீரிய சிந்தனையைப் படைத்தது ஆரியப் பட்டரே! கலைகளில் இலக்கணங்களை வகுத்ததும் பிராமணர்களே! அரசியலில் சாத்திரங்களை இயற்றியதும் அவர்களே! சர்.சி.வி ராமனும் பிராமணனே. கணக்கு மேதை ராமானுஜமும் பிராமணனே!

(செக்ஸி) பால் உறவுகளையும் இலக்கணமாக்கிச் சொன்னதும் வாத்ச்யாயனர் என்ற பிராமணரே!

அண்மைக் காலத்தில் - கம்யூனிசத்தை இந்தியாவில் பரப்பியவர்களும் அவர்களே!

காந்தியாருடன் பணியாற்றிக் கொண்டே நாத்திகம் பேசிய 'கோரா 'வும் பிராமணரே!

பி.ஆர்.அம்பேத்கார் என்ற புரட்சிக்காரரின் பெயரிலுள்ள 'அம்பேத்கார் ' அவரை ஆதரித்து வளர்த்த பிராமணரின் பெயரே!

காந்தியார் என்ற வைசியரின் மகனுக்குத் தனது திருமகளைத் தந்த பிராமணர்தான் மூதறிஞர் ராஜாஜி.

அந்தப் புரட்சி வழியில் இப்போதுகூட இதயம் பேசுகிறது மணியன் தனது மனைவியின் சகோதரிக்கு மனோரமா வீட்டில் மணம் முடித்தார்!

ஆதி திராவிட வீரர்களை மணந்த பிராமணப் பெண்கள் தங்கப்பதக்கம் பெற்ற நிகழ்ச்சிகளை நாம் படங்களாகவே பார்த்திருக்கிறோம்.

ஆகவே புரட்சிக் கருத்துக்களுக்கு ஊற்றுக் காலாக ஊன்றுகோலாக முன்னோடும் பிள்ளைகளாக இருந்தவர்களும் இருப்பவர்களும் அவர்களே!

தமிழைப் பேணிக் காப்பதிலும் அவர்கள் முன்னணியில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்!

தமிழின் முதல் முனியான அகத்தியனே பிராமணன்தான்! தொல்காப்பியரைக் கூட அப்படிக் கூறுவதுண்டு! தமிழின் அழகிய பனுவல்கள் அவர்களால் ஆக்கப்பட்டதுண்டு! வடமொழிக்கு நிகரான தமிழ் இலக்கணங்களை - இலக்கியங்களை ஆக்கிட முனைந்து நின்றவர்களும் அவர்களே!

ஆரியர்கள்தான்! உலகத்தில் முதன்முதலாகத் தோன்றிய இனம்! உலகை ஆண்ட இனம் என்று கூறி வந்த கருத்துக்கு எதிராக...

தமிழனே முதலில் தோன்றிய இனம்; குமரிக் கண்டத்து நாகரீகமே - முதல் நாகரீகம் என்று ஆதாரத்தோடு பேசியவர்கள் ராகவ ஐயங்காரும் சீனிவாச ஐயங்காரும்.

அழிந்துபட்ட தமிழ் நூல்களைத் தேடி எடுத்து அச்சேற்றிக் காத்த உ.வே.சுவாமிநாத ஐயருக்கு தமிழகமே கடமைப்பட்டுள்ளது.

சமஸ்கிருதம் கலவாத தனித்தமிழ் இயக்கத்தின் தூண் பரிதிமாற் கலைஞர் என்ற சூரியநாராயண சாஸ்திரி.

தமிழ்க் கவிதையுலகில் புரட்சி செய்த பாரதியாரும் பிராமணரே! இன்றைக்கும் புதுக்கவிதை என்ற புரட்சியைச் செய்யும் சி.சு.செல்லப்பாவும் பிராமணரே!

காண்டேகரைத் தமிழுக்குத் தந்த கா.ஸ்ரீ.ஸ்ரீ.யும், சகல கலா வல்லவராய் இருந்து அகில இந்தியப் பத்திரிகையுலகில் சாதனை புரிந்த கல்கியும் வாசனும் பிராமணர்களே!

வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்களைக் காத்து நிற்பவர்களூம் அவர்களே!

வெளிநாட்டுக்குச் சென்றால் அந்த நாகரீகத்தை ஏற்காமல்... நமது நாகரீகம் காத்து, விடாப்பிடியாக வீடுகளில் தமிழ்பேசும் குடும்பங்களும் பிராமணக் குடும்பங்களே!

தமிழில் புரட்சி செய்து - விஞ்ஞானக் கருத்துகளை - புதுமைக் கருத்துகளைத் துணிவுடன் சொல்லிவரும் சுஜாதா போன்றவர்களும் பிராமணர்களே!

வீரமற்றவர்கள், பேடிகள் பிராமணர்கள் என்ற கருத்தும் பிழையானதே! எப்படி ?

கண்களை இழந்தபோதும் ஏற்றுக்கொண்ட கொள்கையை உரக்கக் கூவியவன் கூரத்தாழ்வான்!

முகலாய சாம்ராஜ்யத்தின் ஆதிக்கம் தென்னாட்டில் நுழைய விடாமல் ஹரிஅரபுக்கர்களை உருவாக்கிய வித்யாதரரும் பிராமணரே!

தென்னாட்டுப் போர்க்களங்களில் வீரசாகசம் நிகழ்த்தி - மைசூர் அரசை நடுநடுங்க வைத்த திருமலை நாயக்கரின் படைத் தளபதியே ராமப்பையர்தான்!

வெள்ளையனை எதிர்த்த சுதந்திரப் போரில் (வட நாட்டில்) பிராமண மன்னர்களூம், தளபதிகளும் இருந்தார்கள்.

தென்னாட்டில்... பகத்சிங்குக்கு முன்பு மணியாச்சி ஸ்டேஷனில் வெள்ளைக்காரனைத் துப்பாக்கியால் சுட்ட வீரனான வாஞ்சிநாதன் - பிராமணனே!

வெள்ளையரை கிடுகிடுக்க வைத்த ஆயுதப் புரட்சியைத் தமிழகத்தில் நிகழ்த்தியவர் வ.வே.சு. அய்யர்.

திருப்பூர் குமரனின் குருவாய் இருந்து போலீஸ் தடியடிக்கு ஆளாகி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எலும்புகளில் முறிவு ஏற்பட்ட திருப்பூர் பி.எஸ். சுந்தரம் பிராமணரே.

1938 இந்தி எதிர்ப்புப் போரில் துணிவாக ஈடுபட்டவர் சி.வி.ராஜகோபாலாச்சாரியார்!

1965-ல் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு தமது போலீஸ் வேலையைத் தூக்கி எறிந்த போலீஸ் வெ.கண்ணனும் பிராமணரே!

இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்து வீரப்பதக்கம் பெற்ற தமிழர்களில் பலர் - செங்கற்பட்டு சென்னை மாவட்டங்களைச் சார்ந்த பிராமணர்களே!

இப்போதும் மார்வாடிகளை எதிர்த்து - வட்டி வாங்குவதை எதிர்த்து சிறை புகுந்து கடுமையான வீரப்போர் நிகழ்த்துகின்ற மாவீரன் எம்.கே. சீனிவாசனும் பிராமணரே!

இதுமட்டுமில்லை; நவீன - மார்டன் துறைகளிலும் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். புதிய பாஷன்களை, புதிய டிசைன்களை விரும்பி ஏற்பதும் அவர்களே!

முன்பு இருந்த உச்சிக்குடுமியில்லை; 'ஸ்டெப்கட் 'தான்! மழுங்கச் சிரைப்பது இல்லை; கிருதாதான்; சைட் பர்ன்தான்!

மீசை வைப்பது பிராமண தர்மத்துக்கு விரோதம்; ஆனால் மீசையோடு தாடியும் வைத்து அழகாகப் பவனி வருபவர்கள் பிராமணர்கள்!

மடிசார் அதிகமாக இல்லை; மேக்சி - பெல்பாட்டம் - ஜீன்ஸ்தான் அதிகம்!

உடையில் - உணவில் - பழக்கவழக்கத்தில் மட்டுமில்லாமல் மன ஒப்பனையிலும் (மெண்டல் மேக்கப்) அவர்களுக்கு பழைய பஞ்சாங்கத் திமிர்த்தனம் கிடையாது! மேல்மதிப்பு என்ற மமதை இல்லை!

இந்த நிலையில் அந்தப் பிராமணர்களை என்ன செய்தோம் ?

அரசியலில் - சமுதாயத்தில் - அரசுப் பணிகளில் பல்வேறு குறுக்கு வழிகளில் தள்ளி வைத்தோம் ?

அரசுப் பணிகளை விட்டு அவர்கள் தனியார் நிறுவனங்களில் - அயல்நாடுகளில் பிழைப்பைத் தேடி அலைந்து வாழ்கிறார்கள்.

கர்நாடகமான நிலையிலிருந்து பிராமண சமுதாயம் காஸ்மாபாலிட்டன் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இனியும் நாம் கர்நாடகத்தனமான வெறுப்பிலும் - ஒதுக்குதலிலும் இருக்கத் தேவை இல்லை!

மனந்திருந்திய மகனாக (பிராக்டிகல் சன்) மதித்து, ஏற்றுத் தரவேண்டியதைத் தந்தாக வேண்டும்.

1967-ம் ஆண்டு முதல் பிராமண சமுதாயத்துக்கு அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை.

ஆட்சி பீடத்திலிருந்து அவர்கள் 13 ஆண்டு காலம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர்.

13 ஆண்டு காலம் அவர்கள் ஆளப்படுபவராய் இருந்தது போதும். இனிவரும் அமைச்சரவையில் பிராமணர் ஒருவர் அமைச்சராக வரவேண்டும்.!

நூற்றுக்கு 3 சதவிகிதம் பிராமணர் என்பது உண்மைதான். ஆனால் நூற்றுக்கு அரை சதவிகிதம் கூட இல்லாத இசை வேளாளர்கள் முதலமைச்சராய் இருக்கலாம்; ஒரு சதவிகிதம் கூட இல்லாத சமுதாயத்தினர் அமைச்சர்களாக இருக்கலாம்.

மூன்று சதவிகித பிராமணர்களுக்கு மட்டும் அமைச்சர் பதவி இல்லை இல்லை என்றால் இதுதான் சமூக நீதியா ?

ஆக இந்த முறை பிராமணர்களுக்கென்று அமைச்சர் பதவி கொடுத்தே ஆக வேண்டும்.

சாதி அடிப்படையில் அமைச்சர்கள் நியமிக்கப்படுகிறபோது அவர்களுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு ?

இந்தக் கோரிக்கையை அவர்கள் கேட்டால் சுயநலம். நாங்கள் கேட்கிறோம். பொதுநலத்தின் பெயரால் கேட்கிறோம்.

பிராமணரே அமைச்சரவையில் கூடாது என்றால் இந்தியாவின் பிரதம மந்திரியாக இந்திரா காந்தி எப்படி இருக்க முடியும் ? அவரும் பிராமண குலத்தைச் சார்ந்தவர் தானே ?

நிதி அமைச்சராக ஆர்.வெங்கறாமன் எப்படி இருக்க முடியும் ?

அந்தப் பிராமணத் தலைவர்களின் தலைமையில் நடக்கும் இந்திரா காங்கிரஸ் ஆட்சியை - கட்சியை எப்படி ஆதரிக்கிறார்கள் ?

பிராமண மந்திரிகள் தமிழ்நாட்டுக்குக் கூடாது என்றால் இந்தியாவுக்கும் கூடாது! அவர்களது கட்சியைத் தேர்தலில் ஆதரிக்கவும் கூடாது! செய்வார்களா ?

அத்தைக்கு மீசை முளைத்து - குதிரைக்குக் கொம்பு முளைத்து கருணாநிதி-இ.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டால்...

ஆகவே, பிராமண மந்திரி தமிழகத்திற்கு வருவது தவிர்க்க முடியாதது. மனம் ஒப்பி நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கருணாநிதி மெளனம் சாதிக்கலாம். நீதி தேவனான வள்ளல் - இதயம் பேசுகிறது இதழுக்குப் பேட்டி அளித்த போது -

'அண்ணா நகரில் ஹண்டே வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு ஒரு அமைச்சர் கிடைப்பார் ' எனக் கூறிவிட்டார்.

பிராமணர்கள் ஏற்ற 13 ஆண்டுகால தண்டனை போதும்! அவர்கள் அமைச்சர் பதவி கேட்க முன்வர வேண்டும்.

அவர்கள் அதைக் கேட்கிறார்களோ... இல்லையோ... அந்தக் கோரிக்கையை வலியுறுத்த இந்தப் பேனாவும்... நாவும் தொடர்ந்து வாதாடும், போராடும்.

வாதாடவும் - போராடவும் அவசியம் இல்லாமல் போக வேண்டுமானால் வள்ளலின் ஆட்சிவர வேண்டும். இரட்டை இலை வெற்றிபெற வேண்டும்.

பிராமணப் பெரியோர்களே! தோழர்களே இறுதியாகச் சொன்னதை உறுதியாக உங்கள் மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள்.

(தமிழகச் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்தபோது நீரோட்டம் இதழில் மே 24, 25 தேதிய இதழ்களில் அடியார் எழுதிய கட்டுரை இது! இந்தக் கட்டுரைக்கேற்ப புதிய அமைச்சரவையில் டாக்டர் ஹண்டே இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)


நன்றி: பிராமணர்களுக்காக நான் வாதாடுகிறேன் - இலக்கியத் தென்றல் அடியார் - முதற்பதிப்பு: 1980 - நீரோட்டம் வெளியீடு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/28/2009

மென்பொருள் நிபுணராக விஜயகாந்த்

பதிவர்களின் எவர்கிரீன் இலக்காக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த். அவரை கருப்பு நம்பியாராக ஆக்கிய வலைமனையின் இப்பதிவு எனது நினைவலைகளை 2005 டிசம்பர் மாதத்துக்கு பின்னோக்கித் தள்ளிவிட்டன. அப்போது நான் இட்ட இப்பதிவை இப்போது மீள்பதிவு செய்கிறேன். மாற்றங்கள் ஏதும் தேவைப்படாது இப்போதும் அது current ஆகவே காட்சியளிக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணமே கேப்டனின் மாறாத அலம்பல் டயலாக்குகள்தான். Over to மென்பொருள் நிபுணராக விஜயகாந்த்!!!!!

என் இனிய நண்பர் ரவி பாலசுப்பிரமணியன் எனக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலைப் பதிவாக்க அன்புடன் அனுமதி கொடுத்தார். "துணைவியின் பிரிவு" பற்றி பதிவு போட எனக்கு உதவிய அவரேதான் இது. அவருக்கு என் நன்றி உரித்தாகுக. மொழிபெயர்ப்பில் சிறிது விளையாடி இருக்கிறேன். மன்னிக்கவும். ஆங்கில் மூலத்தையும் பார்க்கலாம்.

தன் மென்பொருள் அறிவை வைத்து கேப்டன் அவர்கள் தீவிரவாதிகளைப் பிடிக்கிறார்.

மென்பொருள் வித்தகராக இப்படத்தில் விஜயகாந்த் என்ட்ரி செய்கிறார்.



தீவிரவாதிகளைப் பிடிக்க விஜயகாந்த்தால்தான் முடியும் என்று கம்பெனி தலைமை அதிகாரி அவரிடம் கூறுகிறார்.


புது ப்ராஜக்டை எப்படி முடிப்பது என்னும் தீவிர சிந்தனையில் விஜயகாந்த்.


ப்ராஜக்டை முடித்த பின்பே குளியல் என்பதில் கேப்டன் திடமாக இருக்கிறார்.


ப்ராஜக்டுக்கு தேவையான அறிவை தன் கைமுட்டிக்குள் வைத்திருக்கிறார் அவர். (கற்றது கைம்மண் அளவு?)


டெஸ்ட் செய்பவர்கள் தன்னுடைய மென்பொருளில் பக்ஸ் எதையும் இடக்கூடாது என்று எச்சரிக்கிறார் கேப்டன்.


கேப்டனின் ப்ரொக்ராமிங் திறமையைக் கூறவும் வேண்டுமோ?


தொப்புளில் பம்பரம் விட்டாலும் அவர் தன் கொள்கையை மறக்கவே மாட்டாராக்கும்.


இன்ஸ்பெக்டர் மன்சூர் அலி கானுக்கு தீவிரவாதிகளைப் பிடிக்கும் தன் ப்ராஜக்டை அவர் விவரிக்கிறார்.


பயங்கரத் தீவிரவாதிகள் அவர் வீட்டை நொறுக்கி அவர் அன்னையையும் கடத்தி விடுகின்றனர்.


அப்படிப்பட்ட பயங்கரத் தீவிரவாதிகளில் ஒருவர் இவர்தான். (அவர் பெயர் காசிம் அய்யர்)


தன் ப்ராஜக்டைப் பற்றித் தெருத்தெருவாகப் பிரசாரம் செய்கிறார் அவர்.


புரியாதவர்களுக்காகப் பாடியும் காட்டுகிறார்.


அவர் குழு உறுப்பினர்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி பின் பாட்டுப் பாடவும் செய்கின்றனர் (இசை: எம்.பி. ஸ்ரீனிவாசன், பொதிகை)


ப்ராஜக்ட் வெற்றிகரமாக முடிந்து கம்பெனியின் தலைமை நிர்வாகி ஆகிறார் அவர். பழைய தலைமை அதிகாரிக்கு சங்குதான்.


அவருடைய வெற்றியை எல்லோரும் கொண்டாடுகின்றனர். புது வேலையையும் கையில் எடுக்கிறார் அவர்.

இப்போது வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். நான்தான் இப்பதிவைப் போட்டேன் என்று யாரும் அவரிடம் போட்டு தந்து விடாதீர்கள். எதற்கும் இருக்கட்டும் என்று மாறுவேடத்தில் செல்கிறேன்.



அன்புடன்,
டோண்டு ராகவன்

8/27/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 27.08.2009

கணினியில் தமிழ்
நான் கோவில்களுக்கு செல்வதற்காக பல ஊர்களுக்கு செல்லும்போதெல்லாம் அதை விருப்பத்துடன் செய்ததில்லை. ஏனெனில் எனது மொழி பெயர்ப்பு வேலை அப்படிப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் அது வரும். ஆகவே வீட்டை விட்டுப் போவது என்றாலே அலர்ஜிதான். மடிக்கணினி/வைர்லஸ் இணைய இணைப்பு வைத்துக் கொள்ளலாம்தான். அதையும் செய்வேன்தான். ஆனால் அது இப்பதிவுக்கு அப்பாற்பட்ட விஷயம்.

கையில் எனது அடையாள அட்டையை எப்போதுமே இருக்குமாறு பார்த்து கொள்வேன். எனது ‘காரில்’ ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போதும் வழிகளில் எங்கேனும் சைபர் மையங்கள் தென்பட்டால் அவற்றை நோட் செய்து வைத்து கொள்வேன். எங்காவது ஊர்களில் தங்க நேர்ந்தால் ஹோட்டலில் ரூம் போட்ட பிறகு அருகில் பார்த்து வைத்துக் கொண்ட சைபர் கஃபேக்கு செல்வேன். போலீஸ் கெடுபிடிகள் காரணமாக அங்கு செல்பவர்கள் அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது. அதற்குத்தான் எனது அடையாள கார்டை வைத்திருப்பேன். அதுவும் இப்பதிவுக்கு அப்பாற்பட்டதுதான். அது பற்றி பிறகு எப்போதாவது பேசுவோம்.

அது என்னவோ தெரியவில்லை, நான் செல்லும் சைபர் கஃபேக்கள், அதுவும் சத்யம் ஐவேயாக இருந்தால், கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் இயங்கு ஏற்பாடுகள் விண்டோஸ் 98-ஆக இருந்து தொலைக்கும். ஆகவே எனது மொழி பெயர்ப்பு வேலைகளில் தமிழ் தேவையாக இருந்தால் கதை கந்தல்தான். ஆங்கில எழுத்துருக்கள் மட்டுமே இருக்கும். ஏன் எனக் கேட்டால் தமிழ் எழுத்துகளை கேட்பவர் இல்லை என கதை விடுவார் சைபர் கஃபேக்காரர். அதற்காகவெல்லாம் விட்டுவிடுவேனா என்ன? சுரதா எழுதி பெட்டி எதற்கு இருக்கிறது? தமிழ்மணத்தின் பக்கத்தைத் திறந்து (எல்லாமே ஜாங்கிரி ஜாங்கிரியாகத் தென்படும்), பொங்குதமிழ் தளத்தை திறக்க வேண்டியதுதான். என்ன, விடாமல் நகலெடுத்து ஒட்டுதல் நடத்த வேண்டியிருக்கும்.

அது என்ன ஐயா தமிழகத்தில் தமிழ் தட்டச்சு செய்ய இவ்வளவு தடைகள் சைபர் கஃபேக்களில்? விண்டோஸ் எக்ஸ்பி இருந்தால் கூட பரவாயில்லை. தமிழ் படிக்கவாவது செய்யலாம். ஆனால் விண்டோஸ் 98? குஷ்டமடா சாமி என்று கவுண்டமணியின் குரலில் கூவ வேண்டியதுதான் போலிருக்கிறது.

எனது கணினியிலும் கூட Word கோப்புகளில் தமிழில் தட்டச்சு செய்ய சில கட்டுப்பாடுகள் உண்டு. நான் என்.எச்.எம். மென்பொருள் நிறுவியுள்ளேன். ஆல்ட் + 2 போட்டு தமிழ் ஒருங்குறி டைப்பிங் செய்வேன். ஒரே ஒரு கஷ்டம் என்னவென்றால் பரணரில் அடிக்க முடிகிறது. லதா மற்றும் ஏரியல் யூனிகோட் எம் எஸ் என்றால் பார்மாட்டில் போய் ஸ்டைல் எல்லாம் மாற்ற வேண்டியிருக்கிறது. அப்போதும் அது பிரச்சினையை எப்போதுமே சால்வ் செய்வதில்லை. நானும் என் எச் எம் நாகராஜனை படுத்தி பல செய்முறைகள் பாவித்து பார்த்து விட்டேன். அவர் சொன்ன அமைவுகள் மாற்றங்கள் எல்லாமே செய்தும் பல நேரங்களில் பரணர் மட்டும்தான் அடிப்பேன் என கணினி பிடிவாதம் பிடிக்கிறது. அதுவே ஆங்கிலத்திலோ, பிரெஞ்சு, ஜெர்மனிலோ அந்த பிரச்சினைகள் இல்லை. எழுத்துருவை தெரிவு செய்து அடிக்க வேண்டியதுதான். தமிழ் விஷயம் போல பலமுறை செட்டிங்ஸ் மாற்றி ஐயா அப்பா என தாஜா செய்ய வேண்டியதில்லை.

அதே சமயம் எக்ஸல், பவர் பாயிண்ட் ஆகியவற்றில் ஒரு பிரச்சினையும் இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்த Word-க்கு மட்டும் ஏன் இந்தப் பாடுபட வேண்டியிருக்கிறது?

தமிழகத்தில் தமிழ் உடை அநாகரிகமானதாம் - சொல்கிறது ஜிம்கானா கிளப்
அப்புசாமி சீதா பாட்டியை சிருஷ்டித்த ஜ.ரா. சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) பலருக்கும் தெரிந்தவர். கண்டாலே கையெடுத்த் கும்பிடும் கண்ணியமான தோற்றம். எட்டுமுழ வேஷ்டி, ஸ்லாக் சட்டையுடன் ஒரு அங்கத்தினரை பார்க்க ஜிம்கானா கிளப் போயிருக்கிறார். போனவரை ஜிம்கானா கிளப்பில் விரட்டியடித்திருக்கிறார்கள். இது பற்றி அவரது மருமகள் “வேட்டியனே வெளியேறு” என்னும் தலைப்பில் சாவி பத்திரிகையில் எழுதியிருந்தார். ஜிம்கானா பிரகஸ்பதிகளின் கூற்றுப்படி தமிழக உடையான வேட்டி, சட்டை தமிழகத்தில் இருக்கும் ஜிம்கானா கிளப்பால் அநாகரிகமான உடையாகக் கருதப்படுகிறதாம்.

அடி செருப்பாலே. என்ன தைரியம் இருந்தால் இதைக் கூறுவார்கள்? மவுண்ட் ரோட் வட்டாரத்தில் பிரதானமான இடத்தில் நிலத்தை வளைத்து போட்டுக்கொண்டு இந்த வெள்ளைக்காரனின் அல்லக்கைகள் செய்யும் அலம்பல் சகிக்கவில்லை. எனக்கு ஒரு சந்தேகம். அந்த கிளப் முக்கால்வாசி அந்த இடத்தை அரசிடமிருந்து நீண்ட நாள் லீசுக்குத்தான் எடுத்திருகும், அதுவும் அடிமாட்டு விலையில். தமிழக அரசு அதை கவனித்து ஆவன செய்ய வேண்டும். டிரெஸ் கோட் மாற்றாவிட்டால் அதுகளை அங்கே செயல்பட விடக்கூடாது. அப்படியே சொந்த நிலமாக இருந்தாலும் இந்த மாதிரி தமிழக உடையையே தடை செய்வது திமிரின் உச்சக்கட்டம். வெள்ளைக்காரன் போய் அறுபது ஆண்டுக்கு மேல் ஆகியும் அங்குள்ள அல்லக்கைகளுக்கு அது தெரியவில்லையே.

ஊதற சங்கை ஊதி விட்டேன். பார்க்கலாம். இது சம்பந்தமான தகவலை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் பொருட்டு பாக்கியம் ராமசாமி சாரிடம் இன்றுதான் பேசினேன். அவர் சம்பவம் நடந்ததை உறுதி செய்தார். அடையார் போட் கிளப்பிலும் கூட இம்மாதிரி அநாகரிகமான, வெட்ககரமான உடை விதிகள் உண்டு எனக் கூறினார்.

சமீபத்தில் 1995 மே மாதத்தில் நான் ஒரு பிரெஞ்சுக்காரனுக்கு துபாஷியாக இருக்கும்படி அக்ர்வால் என்பவரால் அழைக்கப்பட்டேன். அவர் என்னை அழைத்து கொண்டு அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்றார். அந்த படபடக்கிற வெய்யிலில் மனிதர் கோட்டு, சூட்டு, டை எல்லாம் கட்டியிருந்தார். அதை பார்க்கும்போதே எனக்கு வியர்வை வந்து விட்டத்து. கார் ஏசி செய்யப்பட்டிருந்தாலும் காரிலிருந்து இறங்கி நடக்கும்போது அவர் அப்பனா வந்து ஏசி தரப்போகிறான்? பிரெஞ்சுக்காரன் வெளியில் வந்தான், ஒரு பெர்மூடாஸ் மற்றும் டீ ஷர்ட்டுடன். அகர்வாலை பார்த்ததுமே என்னிடம் பிரெஞ்சில் “இந்த லூசு ஏஎன் இம்மாதிரி உடை அணிந்திருக்கிறது? வேணும்னா மாத்திக்க சொல்லு, காத்திருக்கிறேன்” எனக் கூறினான். நானும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு பிரெஞ்சுக்காரன் அகர்வால் விரும்பினால் ஏதேனும் சௌகரியமான உடையை உடுத்திக் கொண்டு வரலாம், தேவையானால் அதற்காக அவர் காத்திருப்பதாக சொல்வதாகக் கூறி ஒப்பேற்ற வேண்டியிருந்தது. பிறகு நடந்தவை இப்பதிவுக்கு தேவையில்லாத விஷயம். நான் சொல்ல வருவது என்னவென்றால், வெள்ளைக்காரனே தேவைப்பட்டால் சௌகரியமான உடை அணிந்தாலும் இந்த அல்லக்கைகள் செய்யாது போலிருக்கிறதே என்றுதான். அவ்வளவு தாழ்வு மனப்பான்மை அதுகளுக்கு.

அதெல்லாம் தாழ்வு மனப்பான்மை கிடையாது என்கிறான். முரளி மனோகர். அவன் என்ன சொல்கிறானென்றால், These whiteman's lackeys do not have any inferiority complex. They are actually inferior. நன்றி முரளி மனோகர்.

ஹோட்டல்கள் தரும் உபத்திரவம்
சமீபத்தில் 1981-ல் தில்லிக்கு மாறும்வரை எல்லாமே தமிழகத்தில் நன்றாகத்தான் இருந்தது. அது என்னமோ தெரியவில்லை நான் 2001-ல் திரும்பி வந்ததும் பார்த்தால் இந்த 20 ஆண்டுகளில் நிலைமை மாறியுள்ளது.

எது மாறியுள்ளது? முன்பெல்லாம் சாப்பாடு ஓட்டல்களில் இரவும் சாப்பாடு கிடைக்கும். இப்போது என்னவென்றால் 90 சதவிகிதத்துக்கும் மேல் ஹோட்டல்களில் இரவுச் சாப்பாடு (அதாவது அரிசி, சாம்பார், ரசம், தயிர், பொறியல்) கிடைக்காது. எல்லாமே டிபன் ஐட்டங்கள்தான். அதுவே பம்பாய் மீல்ஸ், பஞாபி மீல்ஸ், குஜராத்தி மீல்ஸ் எல்லாம் இப்பவும் கிடைக்கின்றன. மதறாஸ் மீல்ஸ் சென்னையில் கிடைக்காது. என்ன பிரச்சினை?

இதில் ஒரு விஷயத்தில் நான் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தது இதுதான். இரவில் மதறாஸ் மீல்ஸ் கீழ்க்கண்ட ஹோட்டல்களில் இன்னும் கிடைக்கிறது. எழும்பூர் , வடபழனி சரவணா ஹோட்டல்கள், நியூ உட்லேண்ட்ஸ். வேறு ஏதாவது உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கப்பூ. நன்றியுடன் இருப்பேன். நினைவிருக்கட்டும், சென்னை மீல்ஸ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் - 27.08.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?

அனானி (14.08.2009 காலை 09.31-க்கு கேட்டவர்)
டோண்டுவின் புதுமொழிகள்?
1. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
பதில்: இதற்கான பதில் ஏற்கனவேயே டோண்டு பதில்கள் - 13.08.2009-ல் கொடுக்கப்பட்டு விட்டது.

2. அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
பதில்: அதுக்காக வில்லன் சிரிப்பு புகழ் வீரப்பாவையும் அழுகை திலகம் எம்.வி ராஜம்மாவையும் நம்பலாம்னு சொல்லுவீங்களா?

3. அழுத பிள்ளை பால் குடிக்கும்.
பதில்: கேளுங்கள் தரப்படும்.

4. அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்
பதில்: அதுக்காக சிரிச்சு வைக்காதீங்க, லூசுன்னு சொல்லிடப்போறாங்க.

5. அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
பதில்: வீட்டுல வார்த்து வார்த்து போட்டா பத்து தோசைக்கு மேல், ஹோட்டலிலோ ஒரு தோசைக்கு மேல் பேசப்படாது.

6. அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
பதில்: பரவாயில்லை, மெத்தையாவது கிடைக்குமா?

7. அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன
பதில்: எப்படியும் ஜோதி தியேட்டர் பிட்டு பட க்யூவில அப்பா கண்ணில் பட்டாச்சு, அவரும் கருவிக்கிட்டே வீட்டுக்கு போயாச்சு. இப்போ போய் பிட்டை பாக்காம போனாக்க எப்படியும் விழப்போற அடி என்ன குறைச்சலாகவா விழப்போவது?

8. அறப்படித்தன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான்
பதில்: தானும் வாழமாட்டான், பிறத்தியானையும் வாழவிடான்.

9. அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
பதில்: அதுக்காக அறிவுள்ளவர் பெண்ணாக இருந்தால் அங்கே போய் ஆண்மையை எதிர்ப்பார்க்கலாங்களா?

10. அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
பதில்: ஆனால் அறிவில்லாதவர்கள்தான் தேவை என கட்சித் தலைவர்கள் கூறுகிறார்களே.

எவனோ ஒருவன் (பெஸ்கி)
1) மதனின் கிபி-கிமு படித்தேன். அசோகர் கிமுவில் புத்த மதத்தை உலகமெங்கும் பரப்பினார் என்றிருக்கிறது. அதன் பின் வந்த கிறித்தவ மதம் தென்னிந்தியாவில் பரவலாக இருக்கும்போது, புத்த மதம் பரவாதது ஏன்? இல்லை, அசோகர் தென்னிந்தியாவிற்கு ஆளே அனுப்பவில்லையா?
பதில்: இல்லையே புத்த மதமும் பரவியதே. என்ன், பிற்காலத்தில் சைவம் வைணவம் அதிகமாக பரவியதில் புத்தமதமும் சரி சமணமதமும் சரி நலிந்தன.

2) நெய்வேத்தியம் சரியா அல்லது நைவேத்தியமா? விளக்கம் ஏதும் தர முடியுமா?
பதில்: நைவேத்தியம் என்பதன் ஆரம்பகால அர்த்தம் "அறிவிப்பது" என்பதுதான். தெய்வத்துக்கு முன்னர் படையல் இட்டு, அதனை தெய்வத்திற்கு அறிவிப்புச்செய்தல் அந்த சடங்காகும். அதுதான் "நெய்வேத்தியம்" என்றாகி, நெய்யில் செய்யப்பட்ட சோற்று
வகையாக்கப்பட்டுவிட்டது என்பது எனது புரிதல்.

3) தாவணி, மாராப்பு இதெல்லாம் (தமிழ் நாகரிகத்தில்) பழைய காலத்தில் கிடையாது என்கிறார் என் நண்பர், உண்மையா?
பதில்: தெரியவில்லையே. ஏன் இந்த தேவையற்ற ஆராய்ச்சி? இருந்தாலும் தாவணி, மாராப்புன்னு கூகளிட்டா பலான சைட்டுகள் சில பார்க்கக் கிடைத்தன.

4) SWINE FLU க்கு துளசி சிறந்த மருந்து, ஹோமியோபதியில் INFLUENZNIUM 30, OCCILOTOCCINUM 30 என்பதெல்லாம் மருந்து என SMS கள் வருகின்றன, உண்மையா? (இதற்கு உடனே பதில் சொன்னால் நல்லாயிருக்கும்)
பதில்: எஸ்.எம்.எஸ்கள் வருவது மட்டும்தான் உண்மை. மற்றப்படி குணமாகிறது என்பதை நான் நம்பவில்லை.

5) பல மனைவிகள் வைத்திருந்த அக்காலத்தில் எய்ட்ஸ் இருந்திருக்குமா? (பலருடன் உடலுறவு வைத்துக்கொள்வதும் எய்ட்சுக்கு ஒரு காரணம்தானே?)
பதில்: கணவன் ஒருவனுக்கு எயிட்ஸ் இருந்தாலே போதுமே. அத்தனை மனைவிகளுக்கும் வந்து விடுமே. பல மனைவிகள் இருந்தால் என்ன ஓசியில் கிடைப்பதை விட்டு விடுவானா?

6) சென்னை நகரப் பேருந்துகளில், இடது பக்கம் பெண்கள் எனவும் வலது பக்கம் ஆண்கள் எனவும் இருப்பது ஏன்? (எங்களது பக்கத்தில், முன் பகுதியில் பெண்கள் என்பதும், பின் பகுதிகளில் ஆண்கள் என்பதும் எழுதப்படாத வழக்கம்... பார்க்கப்போனால் இதில்தான் ’இடிபாடு’ கம்மி.)
பதில்: இடது பக்கம் பெண்கள் மட்டுமே என்பது உண்மையே. ஆனால் வலது பக்கம் பொதுதான். வெறுமனே ஆண்களுக்கு மட்டும் எனக் கூறவியலாது. உங்களது எந்த ஊர்?

7) ஹிந்தி வார்த்தைகள் தமிழில் (பேச்சில்) கலந்திருப்பதுபோல (சாவி) தமிழ் வார்த்தைகள் ஏதும் ஹிந்தியில் கலந்திருக்கிறதா?
பதில்: கலந்திருக்க வேண்டும், ஆனால் எனக்கு குறிப்பிட்டு சொல்லத் தெரியவில்லை. இராமகி ஐயாவுக்கு போக வேண்டிய கேள்வி இது.


ரமணா
1. சரித்திர நாவல்களில் சாண்டில்யன் பாணி/கல்கி பாணி/கோவி மணிசேகரன் பாணி என்ன என்ன வேறுபாடுகள் விளக்குக?
பதில்: கல்கியின் எழுத்துக்கள் ஆபாசக் கலப்பின்றி எல்லா தரப்பினரையும் படிக்க வைத்தன. சாண்டில்யனின் எழுத்துக்கள் சிருங்கார ரசத்தில் தோய்ந்தவை. ஆனால் கல்கி அளவுக்கு சரித்திர கதைக்கான உழைப்பு இல்லை. கோவி மணிசேகரனது எழுத்துக்கள் என்னைப் பொருத்தவரையில் எரிச்சல் கிளப்பக் கூடியவை. வைரமுத்து கவிதைகள் போல நிரம்பவே செயற்கைத்தன்மை வாய்ந்தவை, அலட்டுபவை.

2. தற்சமயம் யாருடைய சரித்திர நாவல்களுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு?
பதில்: சாதாரணமாக சரித்திரக் கதைகள் பத்திரிகைகளில் தொடர்கதைகளாகத்தான் வந்து கொண்டிருந்தன. இப்போது தொடர்கதைகளே ரொம்பவும் புழக்கத்தில் இல்லாதபோது சரித்திரக் கதாசிரியர்கள் என்று இப்போது யாரும் என் கண்ண்ல் படவில்லை. ரவிகுலதிலகன் போன்ற சரித்திரக் கதைகளை கி.ராஜேந்திரன் எழுதியிருந்தாலும் அது கல்கியின் நடையையே அதிகம் நினைவூட்டியது.

3. வைமுகோதை நாயகி,லட்சுமி போன்ற பழைய நாவலாசிரியர்கள் போல் தற்சமயம் யார் பிரபலம்?
பதில்: ரமணி சந்திரன், அனுராதா ரமணன், தேவிபாலா, ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்கள் எழுதினால் இப்போதும் படிக்க ஆட்களிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்தவர்கள் ரமணி சந்திரன், அனுராதா ரமணன், ஜோகிர்லதா கிரிஜா.

4. தமிழ்வாணன் துப்பறியும் நாவல்கள் (சங்கர்லால்,மாது,கத்திரிக்காய்) மாணவப் பருவத்தில் படித்தது உண்டா?
பதில்: படிக்காமல் இருந்திருக்க முடியுமா. ஆனால் இப்போது திரும்பிப் பார்த்தால் அவையெல்லாம் Sexton Blake கதைகளைத்தான் நினைவூட்டுகின்றன.

5. மந்திரஜாலக் கதைகள் ,அம்புலிமாமா கதைகள் வாசிப்பதில் சிறுவயதில் ஆர்வம் இருந்ததா? அனுபவம் எப்படி?
கண்டிப்பாக. அப்போது த்ரில்லிங் அனுபவங்கள்தான். இப்போது மட்டும் என்ன வாழுகிறதாம்? ஹாரி பாட்டர் புத்தகங்களை விடவா?


அனானி (15.08.2009 மாலை 05.29-கு கேட்டவர்)
1. Bird flue virus and swine flu virus will join and become new virus and the people all over the world will be affted as 1918-19 spanish flu-AS PER WHO NEWS. IS it nature's punishment to the people, who have endangered the eco set up?
பதில்: முன்பெல்லாம் இது கடவுளின் கோபத்தால் வருகின்றன என்றார்கள். இப்போது சற்றே விஞ்ஞான முலாம் பூசி சுற்றுப்புறச் சூழலை கடவுளாக்கி விட்டார்கள். மற்றப்படி இங்கு சொல்வதற்கு ஏதும் அடிப்படை இருப்பதாகத் தெரியவில்லை.

2. Is the recent meeting( statue function) between cms of tamilnadu and karnataka, a perlude to jont political action at india level by BJP and DMK?
பதில்: அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. உடைப்பதற்கு இரண்டு சிலைகள் அதிகமாகக் கிடைத்துள்ளன. அவ்வளவே.

3. Dmk decided to face all elections with thirumangalam formula (rich nv food, money,freebies), what will happen to other parties (less money) in tamilnadu?
பதில்: நான் ஒரு சாத்தியக்கூறை சொல்கிறேன், பாருங்கள். 2010 வாக்கில் காங்கிரஸ் திமுக பிரிவு ஏற்பட்டு தமிழக மந்திரிசபை கவிழ்கிறது. கருணாநிதியை கேர்டேக்கர் முதன் மந்திரியாக வைக்காது கவர்னர் ஆட்சியை கொண்டு வருகிறார்கள். அப்போது தேர்தல் நடந்தால் திருமங்கல பஜனை நடத்தவியலாது. அப்போது ஏதேனும் நல்லது நடக்கலாம்.

4. will rahul formule work in tamilnadu.?
பதில்: ராகுலின் பாட்டி செய்த குளறுபடியால் தமிழகத்தில் வீழ்ந்த காங்கிரஸ் மறுபடி எழ ராகுலின் ஃபார்முலா போதும் என நினைக்கிறீர்களா?

5. Will the central government put an end to the on line trading of rice and other food grains to save the poor people?
பதில்: உற்பத்தி அதிகமானால் ஒழிய அரசின் வேறு எந்த நடவடிக்கையும் இதில் பலன் தரவியலாது. அது சரி, வால் பையன் போன்றவர்கள் மேல் உங்களுக்கு இந்த கோபம்?


அனானி (17.08.2009 இரவு 08.26-க்கு கேட்டவர்)
1. டோண்டுவைப் பற்றி டோண்டுவின் கருத்து?
பதில்: வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி அவனே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறவன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் அவனுக்கு ஆசை.


2. டோண்டுவைப் பற்றி முரளிமனோகரின் கருத்து?
பதில்: வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி அவனே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறவன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் அவனுக்கு ஆசை.
(டோண்டு, முரளிமனோகர் ஆகிய இருவரும் ஒருவரே என்னும் போது வேறு என்ன பதில் வரும் என எதிர்ப்பார்த்தீர்கள்?)

3. டோண்டுவைப் பற்றி போலிடோண்டுவின் கருத்து?
பதில்: @#$%^ ***** <>/[]{} @@@@@@@@@@@@@!!!!!!!!!!!!!!!!!

4. டோண்டுவைப் பற்றி ஓவியாவின் கருத்து?
பதில்: எத்தனை முறை பெரியார் சொன்னதையெல்லாம் கட் அன் பேஸ்ட் செய்து போட்டாலும் கீழ்வெண்மணி விஷயத்தையும், 1965-ல் நடந்ததையும் மறக்க விட மாட்டேன் என்கிறாரே.

5. டோண்டுவைப் பற்றி அன்புடன் பாலாவின் கருத்து?
பதில்: தெரியாத்தனமா இவருக்கு வலைப்பூவுக்கு வருவதற்கு இன்ஸ்பிரேஷனா இருந்தாலும் இருந்தேன், அடிக்கடி அதை எடுத்து கூறி, எனக்கு அவ்வப்போது நன்றி சொல்லி, போட்டுக் கொடுத்து, எல்லோரையும் என்னை திட்ட வைத்துவிடுகிறதே இந்தப் பெரிசு.

ரமணா:
1. டோண்டுவைப் பற்றி வால்பையன் கருத்து?
பதில்: ஒவ்வொரு முறையும் பதில்கள் பதிவு வந்ததும் எனது ஒவ்வொரு பதிலுக்கும் மாற்று பதிலை அளித்து கலகல்ப்பூட்டும் அவரையே இக்கேள்விக்கான பதிலை கூறுமாறு கேட்டு கொள்கிறேன்.

அனானி (18.08.2009 காலை 06.04-க்கு கேட்டவர்)
1. சமவேலைக்கு சம ஊதியம் எனும் கோரிக்கையின் இன்றைய நிலை எப்படியுள்ளது?
பதில்: சமவேலைக்கான சம ஊதியம் என்பது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்குள்ளேதான் பார்க்க வேண்டும். வங்கி ஊழியருடன், கூட்டுறவு வங்கி ஊழியரை ஒப்பிடுதல் என்பதெல்லாம் பிராக்டிகல் அல்ல. அதை விடுத்துப் பார்த்தால் இந்தியாவில் நிலை ஒத்து கொள்ளக்கூடியதாகவே உள்ளது. இதை விளக்க கல்ஃபில் உள்ள நிலையை பார்க்க வேண்டும். நம்மவர்கள் பொறுப்பான வேலையில் பெறும் சம்பளம் அதே வேலையை செய்யும் உள்ளூர்காரர்கள், மேல்நாட்டவர் ஆகியோர் பெறும் சம்பளத்தைவிட மிகக்குறைவாகவே இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப் பார்க்கும்போது நம் நாட்டில் நிலைமை எவ்வளவோ மேல்.

2. உள்ளாட்சித்துறை, மாநில அரசுத்துறை, மாநில தலமைசெயலகத்துறை, மத்திய அரசுத்துறை, அஞ்சல்துறை, பொதுத்துறை, காப்பிட்டுதுறை, வங்கித்துறை ஆகிய துறைகளில் எழுத்தர் பணியாளர்களுக்குள் அடிப்படை கல்வித்தகுதி சமமாய் இருக்கும்போது சம்பள வித்தியாசங்கள் மலைக்கும் மடுவுக்கும் போல இருப்பது நியாயமா?
பதில்: அந்தந்த நிறுவனங்களுக்குள் சம ஊதிய நிலை இருக்கும் என்பதைப் பார்த்தோம். அதையே எல்லா நிறுவனங்களுக்கும் ஒரே பொதுவிதியாக மாற்றவியலாது. அது பிராக்டிகல் இல்லை.

3. லாப அடிப்படையில் இந்த சம்பளங்கள் என்றால், சேவைத்துறையில் பணிஆற்றுவோர் செய்த பிழை என்ன?
பதில்: நான் இருப்பதும் சேவைத்துறைதான். இங்கு என்ன பிரச்சினை? நீங்கள் செய்யும் மார்க்கெட்டிங் பொருத்துத்தான் உங்கள் சம்பாத்தியம் இருக்கும்.


அனானி (18.08.2009 பிற்பகல் 01.56-க்கு கேட்டவர்)
1. As per latest rules in India will the benefits of reservation be extended to a girl who belongs to general category and has married to a boy who belongs to schedule caste.
பதில்: அம்மாதிரி திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும்தான் சலுகை என நினைக்கிறேன். எதற்கும் இங்கும் போய் பாருங்களேன். ஆகவே நீங்கள் சொல்வது போல முற்பட்ட சாதியில் இருக்கும் பெண் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவரை மணப்பதால் அப்பெண்ணுக்கு சலுகை கிடைக்காது என்றுதான் நினைக்கிறேன்.

2. Tell whether the present reservation policy helped the poor among the poorest?
பதில்: இல்லை. அதனால்தான் கிரீமி லேயர் சித்தாந்தமே வருகிறது.

3. In India all the political parties are supporting the reservation to sc/st with out any question.Is it for vote bank or real concern?
பதில்: விடையைத் தெரிஞ்சுண்டே கேள்வி கேட்டால் என்ன சொல்லறது?

4. There is demand for reservation quota in time bound promotions also. Will it be granted? when?
பதில்: தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் மலை சாதியினருக்கு இது ஏற்கனவேயே இருக்கிறதே.

5. will the inter caste marriage be the final solution to eradicate the cast sysytem?
பதில்: இட ஒதுக்கீடுகள் இருக்கும்வரை சாதிகள் ஒழியாது, ஒழிய விட மாட்டார்கள். கூடவே தேர்தல்களும் வருகின்றன. சாதி போவதாவது? நோ சான்ஸ்.

அனானி (18.08.2009 இரவு 08.38-க்கு கேட்டவர்)
1. தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் ஆட்களுக்கு கறியும் சோறு படைத்து, ஓசி கலர் டிவி பாருண்ணு கவர் செய்து, ஓட்டுக்கு ரூபாய் 200 கொடுத்த பிறகும் 2010 பொது தேர்தலில் அனைத்தும் கோவிந்தாவானால் இவர்கள் என்ன சொல்லி சமாளிப்பார்கள்
1. திருவாரூரார்; 2. தளபதியார்; 3. அஞ்சாநெஞ்சார்; 4. கவிதாயினியார்; 5. நகரத்தார்
6.வட புலத்து அம்மையார் 7.வருங்கால பிரதமர்

பதில்: கேள்வி கேட்டபோது இடைதேர்தல் முடியவில்லை. இப்போது முடிந்து விட்டது. ஆகவே அக்கேள்வியை அடுத்த பொதுத் தேர்தலுக்காக மாற்றுகிறேன்.

பதில்: விடை ரொம்ப சுலபம். ஜெயித்தால் உண்மை வென்றது என்பார்கள். தோற்றால் தமிழன் சோற்றால் அடித்த பிண்டம் என்பார்கள். அதைத்தானே பெரிய தலை ஒவ்வொரு முறை தோற்றபோதும் சொன்னார்? அது சரி, யார் அது நகரத்தார்? ப.சி.தானே?

அனானி (20.08.2009 காலை 06.42-க்கு கேட்டவர்)
1. பாஜக வின் மூத்த தலைவர்களில் சிறந்த அறிவுஜீவி என பல நிலைகளில் நிரூபித்த ஜஸ்வந்த் சிங் ஜின்னாவை பாராட்டி புத்தகம் எழுதியதின் அடிபடை நோக்கம், அதன் விளவு பற்றி?
பதில்: ஜின்னா என்பவர் ரொம்ப காம்ப்ளிகேடட் ஆசாமி. அவரை எல்லாம் கருப்பு வெள்ளை ரேஞ்சில் வகைபடுத்த இயலாது. நமக்கு காந்தி எப்படியோ, அப்படித்தான் ஜின்னா பாகிஸ்தானுக்கு. அவரைப் பற்றி எழுதினால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அது கிடக்கட்டும். பாஜக இப்போதிருக்கும் சூழ்நிலையில் இம்மாதிரி கருத்து மோதல்கள் பா.ஜ.கா.வுக்கு நல்லதல்ல. நம் நாட்டு ஜனநாயகத்துக்கும் நல்லது அல்ல. சம்பந்தப்பட்டவர்கள் அதை புரிந்து கொள்வது நல்லது.

2. ஒருவரை ஒருவர் புரிந்து பல வருடங்களாய் காதலித்து காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை சோனியா அகர்வாலும், இயக்குனர் செல்வராகவனும் விவாகரத்து செய்ய பரஸ்பர சமரச முயற்சி‍‍ .இது மாதிரி செயல்களுக்கு அடிப்படை காரணம்‍, சந்தேக உணர்வுகளா, தட்டு மீறும் செயல்களா?
பதில்: சினிமா கலைஞர்களும் நம்மைப் போன்றவர்களே. என்ன, சற்று அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள். அவர்கள் செயல்பாடுகளை எல்லோரும் கூர்ந்து பார்ப்பதுதான் துரதிர்ஷ்டவசமானது. பிரபலமானதற்கான விலை அது. இதற்கு மேல் அவர்கள் பிரச்சினை பற்றி பேச எனக்கு விருப்பமில்லை.

3. சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிட்டு தீட்சதர்கள் ஆதிக்கத்தை அரசின் கட்டுக்குள் கொண்டு வந்ததது சரியா? அரசு இந்து மதத்தில் மட்டும் இப்படி செய்வது மாறும் நாளும் வருமா?தீட்சதர்கள் பார்ப்பனர் என்பதால் கழக அரசின் இந்த தலயீட்டுக்கும் கரணமா? உயர்/உச்ச‌ நீதி மன்றம் ஒருவேளை அரசின் செயல்களுக்கு மாறிய தீர்ப்பை வழங்கினால்?
பதில்: வழக்கு கோர்ட்டில் நடக்கிறது. இப்போதுன் கருத்து சொல்வது உசிதம் அல்ல. மற்றப்படி இந்து மதத்தில் மட்டும் இம்மாதிரி அரசு நுழைந்து குளறுபடிகள் செய்வது நமது அரசியல் நிர்ணயச்சட்டத்திற்கே புறம்பானது. ஒன்று எல்லா மதங்களையும் கட்டுப்படுத்து. இல்லாவிட்டால் பேசாமல் இரு என்பதுதான் சரியான நிலை என நான் கருதுகிறேன்.

4. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை சட்ட விரோதமான மிரட்டல்கள் மூலம் கட்டுபடுத்த முடியாது என வீர வசனம் பேசும் பழநெடுமாறனின் இனப்பற்று தூய்மையானதா? இல்லை பிற வாய்ச் சொல்வீரர்கள் மாதிரிதானா?ஒரு சமயம் திமுகவின் பயங்கர தாக்குதலில் இருந்து இந்திரா அம்மையாரை காப்பாற்றிய இந்த காங்கிரஸ்காரார் இப்படி மாறியது எதனால்?யார் காரணம்? உங்கள் விமர்சனம்?
பதில்: இந்திரா காந்தியை காப்பாற்றியது 1977-ல். அது நடந்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டன. நிலைமை மாறாதா என்ன? சமீபத்தில் 1977 என்று டோண்டு ராகவன் வேண்டுமானால் கூறுவான். எல்லோரும் கூறுவார்களா?

5. இன்றைய தொழில் நுட்ப வசதிகளில் பொறிவைத்து பிடிக்கும் தன்மைகள் தெரிந்த பெங்களூரு இளைஞர் பொறியாளர் இனியன் நடிகை சிநேகாவுக்கு காதல் டார்ச்சர் கொடுத்து மாட்டிக்கொண்டதற்கு காரணம் மன்ப்பிறழ்வு என சட்டத்தில் உள்ள ஓடைகளை காட்டி தப்பிக்கும் வாய்ப்பு உள்ளதே.இது மாதிரி செயல்களை அவர்கள் செய்யத் தூண்டுவது நடிகைகளின் கவர்ச்சி செயல்களா இல்லை அவர்கள் பற்றி வலையுலகில் ஆபாசமாய் கிராபிக்ஸ் முறையில் பரப்பும் படச் செய்திகளா?
பதில்: இதைத்தானே கூறுகிறீர்கள்? I feel revolted. அந்த இனியனுக்கு மனோதத்துவ சிகிச்சை தேவை.



கிருஷ்ணகுமார்:
1. Tell the causes for economic slowdown?
பதில்: எம்.ஏ. பொருளாதார பேப்பருக்கான கேள்வியை என்னிடம் வைப்பது நியாயமா? இதற்கு சாதாரணமாக 100 அதிகப்படியான பேப்பர்களை மாணவர்கள் வாங்கி எழுதுவார்களே?

2. How do we get rid of our past and guilt of mistakes and still be bold?
பதில்: முக்கியமாக உங்களை நீங்களே மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள். பலர் தாங்கள் செய்த தவறுகளுக்காக பாச்சாதாபப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். தங்களைத் தாங்களே சாடுவார்கள். இது ஒரு சுய துன்புறுத்தல் விஷயம். இதிலிருந்து மீள வேண்டும். செய்த தவறுக்காக உங்களுக்கு நீங்களே மன்னிப்பு கொடுத்து கொள்ளுங்கள். ஆனால் அவற்றை மறக்காதீர்கள். அப்போதுதான் அவற்றைத் திரும்பச் செய்யாது இருக்கலாம். வாழ்க்கை வாழ வேண்டியிருக்கிறது என்பதை மறவாதீர்கள்.

3. Differnce between phsycologists and pshychiartists?
பதில்: குன்ஸா சொல்லணும்னாக்க, சைக்கியாட்ரிஸ்ட் என்பது டாக்டர் படிப்பு படித்த டாக்டர். சைக்காலஜிஸ்டுன்னா மனோதத்துவம் படித்து பி.எச்.டி. வாங்கும் டாக்டர். மருத்துவர் ப்ரூனோ மேலே சொல்லுவார்னு நினைக்கிறேன்.

4. Narrate one of your embarrassing moments ever?
பதில்: அதெல்லாம் சொல்லறதுக்கு ரொம்பவுமே எம்பராஸ்ஸிங்கா இருக்குங்கோவ்.

5. The reasons for the economic weakness of a country like India?
பதில்: பொருளாதார முன்னேற்றம் பரவலாக இல்லை. அதற்காக சோஷலிச முறையெல்லாம் திரும்ப கொண்டு வரவியலாது. அவ்வாறு செய்தால் மறுபடியும் எல்லோரும் ஏழையாவதுதான் நடக்கும். மக்களது கல்வியறிவு மேலும் பலருக்கும் பரவ வேண்டும். தமது சுயநலத்தால் அரசியல்வியாதிகள் தரும் பிச்சைக்காசுக்காக கண்டவருக்கு ஓட்டளிப்பது குறைய வேண்டும். இன்னும் என்னென்னவோ நடக்க வேண்டும். அவற்றையெல்லாம் இங்கே கூற இடமில்லை. ஆனால் ஏற்கனவே கூறியவை முக்கியமானவை.

6. Tell the problem of elder brother in life and family?
பதில்: சம்பந்தப்பட்ட நபர் எப்படிப்பட்ட அண்ணனாக இருந்தார் என்பதை பொருத்துத்தான் அவரது கஷ்டமோ சுகமோ அமையும். தங்கை தம்பிகளுக்கு உழைக்க வேண்டியதுதான், ஆனால் அதற்காக தியாக தீபமாக எல்லாம் ஆகக்கூடாது. குடும்பத்தின் சுமையை மற்றவர்களும் சுமக்கச் செய்ய வேண்டும்.

7. Ways to overcome shyness?
பதில்: இந்த சங்கோஜம் என்பது தாழ்வு மனப்பான்மையால் வருகிறது. அதற்கு அடிமையாகாது இருக்க வேண்டும். தம்மைப் போலத்தான் பிறருக்கும் தயக்கங்கள் இருக்கும் என்பதையும் மறக்கலாகாது.

8. The easier steps for becoming mentally rich?
பதில்: கற்கக் கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. இதற்கு மேல் என்ன சொல்ல உள்ளது?

9. The difference between Love and Infatuation?
பதில்: பிள்ளைகள் பெற்று இனவிருத்தி செய்யத்தான் காம உணர்வையே இயற்கை
நமக்கு தந்திருக்கிறது. அதை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்த காதல் உதவுகிறது.

ஒன்றுக்கொன்று துணையாகவே இருத்தல் நலம்.

10. If given a chance, what a normal person will select between life and wife and why?
பதில்: மனைவியே வாழ்க்கை என இருக்கும் டோண்டு ராகவனிடம் இக்கேள்விக்கான பதில் இல்லை.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/26/2009

உண்மையென நம்பப்பட்ட பொய்களும் இலக்கியத் திருட்டுகளும்

அமெரிக்காவின் முதல் குடியரசு தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் என்பது தெரிந்ததே. அவர் சிறுவனாக இருந்தபோது அவருக்கு பரிசாக கிடைத்த கோடாலியை வைத்து தன் வீட்டு தோட்டத்தில் உள்ள செர்ரி மரம் ஒன்றை வெட்டியதும் தெரிந்ததே. அவர் தந்தை அந்த மரத்தை யார் வெட்டியது என்று கேட்க, ஜார்ஜ் தானே அதை வெட்டியதாக உண்மை உரைத்ததும், மரம் போன வருத்தம் இருந்தாலும், பிள்ளை உண்மை சொன்னானே என அவர் தந்தை மகிழ்ந்ததும் தெரிந்ததே.

மேலே கூறப்பட்ட நிகழ்வு பள்ளிப் பரீட்சைகளில் கேட்கப்பட்டு மேலே உள்ளது போல எழுதினால் ஐந்து மார்க்குகள் கொடுக்கப்பட்டதும் தெரிந்ததே.

ஆனால் உண்மையில் அம்மாதிரி நிகழ்ச்சி நடக்கவேயில்லை என்பது மட்டும்தான் பலருக்கு தெரியாததே என ஆகியுள்ளது. ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய Mason L. Weems என்னும் பிராடஸ்டண்ட் மினிஸ்டரின் கைவரிசை அது என அறிகிறோம். அவர் அக்கதையை எழுதிய 1800-ஆம் ஆண்டு அமெரிக்கர்களுக்கு ஒரு கதாநாயகர் தேவைப்பட்டிருக்கிறார். அதற்கு கிடைத்தவர் ஜார்ஜ் வாஷிங்டன் அவ்வளவே.

நான் ஒரு கனவு கண்டேன் எனத் துவங்கும் மார்ட்டின் லூதர் கிங்கின் பேச்சை பலர் நினைவு வைத்திருப்பார்கள். அது இலக்கியத் திருட்டு என்று ஒரு கோஷ்டி கூறுகிறது. Archibald Carey என்னும் நீக்ரோ ஆத்திகப் பிரசாரகர் 1952-ல் ரிபப்ளிக்கன் கட்சி கூட்டத்தில் பேசியதைத்தான் மார்ட்டின் லூதர் சுட்டார் என இங்கு கூறுகிறார்கள். அது உண்மையாக இருப்பின் மார்ட்டின் லூதரின் செயல்பாடு கண்டனத்துக்குரியது. யாரும் எப்போதுமே ஒரிஜினலாக பேச இயலாது என்பது உண்மைதான். ஒருவர் படிக்கும் பல விஷயங்களிலிருந்துதான் பேச வேண்டிய விஷயங்களை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. ஆனால் அம்மாதிரி செய்யும்போது மூலத்தையும் சுட்டிவிட்டு பேசியிருந்தால் யார் குறை கூறப்போகிறார்கள். அதை செய்யாததுதான் இங்கு பிரச்சினையானது.

அலெக்ஸ் ஹாலி என்பவர் தான் எழுதிய “வேர்கள்” என்னும் புத்தகத்தின் மூலம் தனது ஆப்பிரிக்க வேர்களை சுட்டிக் காட்டியுள்ளார். இப்புத்தகம் மிகப்பிரபலமானது. ஆனால் இப்போது பார்த்தால் இதெல்லாமே Kunta Kinte என்பவரது எழுத்துக்களையும், கண்டுபிடிப்புகளையும் சுட்டுத்தான் பெறப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

Urban legends என்ற வகை கதைகளை கேள்விப்பட்டுள்ளீர்களா? உதாரணத்துக்கு குவளைக்கண்ணன் என்னும் பெயருடைய ஒருவன் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தானாம். அவனுக்கு முன்னால் ஒரு பெரிய லாரியில் இரும்புத் தகடு எடுத்து சென்று கொண்டிருந்தார்களாம். திரேனெ ஒரு தகடு சரிந்து தெருவில் பின்னால் பைக்கில் வந்து கொண்டிருப்பவன் மேல் விழுந்து அவன் தலையை துண்டித்ததாம். தலை துண்டிக்கப்பட்ட முண்டம் மோட்டார் பைக்கில் லாரியை ஓவர்டேக் செய்ய, அதைப் பார்த்த லாரி ட்ரைவர் கதிரேசன் பயத்தில் தாறுமாறாக வண்டியை ஓட்டி, தெருவில் நின்று கொண்டிருந்த பூங்கொடி (16 வயது), இசக்கி (23 வயது) ஆகியோர் மீது ஏற்றி அவர்கள் மரணத்துக்கு காரணமாக இருந்தானாம். இதே கதையை பல வெர்ஷன்களில் கூறுவார்கள். இக்கதையை முதன்முறையாக சமீபத்தில் 1955-ல் கேட்டுள்ளேன். அதற்கு பிறகும் பலமுறை கேட்டுள்ளேன். எதை நம்புவது. இம்மாதிரி அர்பன் லெஜெண்டுகளில் ஒரு விஷயம் என்னவென்ற்றல், அக்கதையை சொல்பவர் தானே நேரில் கண்டதாகக் கூற மாட்டார். அவரது நண்பர் கூறியதாகக் கூறிக்கொள்வார். இதைத்தான் ஆங்கிலத்தில் FOAF (friend of a friend) சொன்ன கதை என்போம்.

சொல்லப்படும் கதைக்கு தரப்படும் ருசுக்களும் தமாஷானவை. ஒருவன் தேமேனென்று தன் வேலையைப் பார்க்க போய்க் கொண்டிருந்தானாம். திடீரென ஒரு பேய் அவன் முன்னால் தோன்றி அவன் மேல் ஒரு கல்லை எறிந்ததாம் என்று கதை விடுவான். கடைசியில் இதற்கெல்லாம் என்னப்பா ஆதாரம் என்றால், “இதோ அந்தக் கல்” எனக்கூறி ஒரு அரை செங்கலை எடுத்துக் காண்பிப்பானாம்.

அதே போல மகாத்மா காந்தி இறக்கும் தருவாயில் ஹே ராம் எனக்கூறவில்லை அவரது உதவியாளர் கல்யாணம் திட்டவட்டமாகக் கூறியும், நம்மவர்களுக்கு காந்தி அவ்வாறு கூறியிருப்பார் என்று நம்புவதுதான் பிடித்திருக்கிறது. மனிதர்களுக்கு சில நம்பிக்கைகள் தேவைப்படுகின்றன.

ஜெர்மனியிலும் சரி, ஸ்டாலினின் ரஷ்யாவிலும் சரி அச்சமயங்களில் நடந்த அட்டூழியங்கள் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு தெரியாது, அவற்றை அவருக்கு தெரியாது கீழ்மட்ட அதிகாரிகள்தான் நடத்தினார்கள் என்பதை நம்ப பெரும்பான்மையினர் தயாராகவே இருந்தனர். லேட்டஸ்டாக ஜூனியர் விகடனில் தனது அதிமுக வாழ்க்கை பற்றி எஸ்.வி. சேகர் எழுதிய தொடரிலும் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லாது சசிகலா வகையறாக்கள்தான் செயல்பட்டுள்ளார்கள் என நம்ப ரொம்பவுமே முயற்சித்துள்ளார். அது முற்றிலும் தவறான நம்பிக்கை என்பது வெளியில் உள்ள நமக்குத் தெரியும். அவருக்கும் அது தெரியுமாகத்தான் இருக்கும். ஆனால் ஒத்துக்கொள்ளத்தான் தயக்கம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/24/2009

யுதிஷ்டிரர்களை ஏன் பலருக்கும் பிடிப்பதில்லை?

மார்க்கபந்து எப்போது என்ன கூறினாலும் அது அவ்வண்ணமே நடக்கும் என்பதில் அவன் நண்பர்களுக்கு படு டென்ஷன் & பேஜார். அப்படித்தான் பாருங்கள், திடீரென வீட்டுக்கு தேவையான பொருட்களை பாதி விலைக்கு விற்கும் விஷயம் ஊருக்கு வந்தது. எல்லோரும் அதில் போய் விழ இவன் மட்டும் அது நல்ல விஷயம் அல்ல எனக்கூறி, முழுக்கவே ஒதுங்கி இருந்தான். முதலில் சிலருக்கு மட்டும் பொருட்களை தந்து விட்டு ஒரு நல்ல சுபயோக சுபமுகூர்த்தத்தில் அந்த வியாபாரி எல்லோர் பணத்தையும் சுருட்டிக் கொண்டு கடுக்காய் கொடுத்து போனான்.

ஏமாந்த அவன் நண்பர்களுக்கு பணம் போனதை விட இவன் “அப்போதே நான் சொன்னேன், யாருமே கேட்கவில்லை” என்று கூறும் தோரணையில் முகத்தை வைத்து கொண்டதுதான் தாங்கவில்லை. இம்மாதிரியே ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் ஒன்றரைக்கண்ணனுக்கு தனி வழி என்றுதான் இவன் இருந்தான். ஒவ்வொரு முறையும் இவன் சொன்னதுதான் நடந்தது.

அவன் நண்பன் சாம்பமூர்த்திக்கு அது தாங்கவில்லை. “என்னடா இது, ஒவ்வோர் முறையும் நீ சொல்லறபடி நடக்குது? ஒரு முறை கூட நீ தப்பா யோசிச்சதே இல்லையா”? என ஆதங்கத்துடன் கேட்டான் அவன். “ஏன் இல்லை? ஒரு முறை நான் யோசித்தது தப்பா போயிருக்கே” என்றான் மார்க்கபந்து. “அது என்ன சமாச்சாரம்”? என ஆவலுடன் சாம்பமூர்த்தி கேட்டான்.

“அதாகப்பட்டது, போன வருடம் குபேரா கம்பெனி ஷேர்கள் விலை திடீரென விழும்னு நான் சொன்னேனே, ஞாபகமிருக்கா”? என்று அவன் கேட்க, “ஏன் இல்லை? ஆனால் நீ சொன்னபடித்தானே நடந்தது? எனக்குக்கூட அதில் ஒரு லட்சம் பணால் ஆயிற்றே. அதுக்கென்ன இப்போ?” என சாம்பமூர்த்தி வயிற்றெரிச்சலுடன் சொன்னான். “அதுல என்ன விஷயம்னா, நான் கூட ஒரு கட்டத்துலே நான் இந்த ஷேர்கள் பற்றி சொன்னது தவறாக இருக்கும்னு நினைச்சேன். ஆனால் அவற்றின் விலை திடீரென விழுந்து அவ்வாறு நான் முதல்லே நினைத்தது தப்புன்னு நினைத்ததுதான் தப்புன்னு நிருப்பிச்சதைத்தான் இப்போ சொன்னேன்” என்றான் மார்க்கபந்து.

ஏனோ தெரியவில்லை, மார்க்கபந்துவை அவன் நண்பர்கள் யாருக்குமே பிடிக்கவில்லை.

வேறு சில மார்க்கபந்துகள் எப்போதுமே நல்லவர்களாக இருப்பது கூட மற்றவர்களுக்கு எரிச்சலாக இருக்கும். மகாபாரதத்திலேயே பார்க்கலாம். துரியன் மிகக்கொடியவன். யுதிஷ்டிரன் நல்லவன், தர்மவான். ஆனாலும் பலருக்கு துரியனைத்தான் பிடிக்கும். மனிதர்களின் இயல்பான பலவீனங்கள் அவன் குணத்தில் உண்டு. ஆகவே அவனுள் தங்களைக் காண்பார்கள். ஆனால் யுதிஷ்டிரனை போல இருப்பது மிகக் கடினம். ஆகவே அவ்வாறு இருப்பவர்கள் மீது டீஃபால்டாக ஒரு பொறாமை கலந்த எரிச்சல் ஏற்படுகிறது. எப்படா அவன் சருக்குவான், கைகொட்டி சிரிக்கலாம் என எல்லோரும் காத்திருக்கின்றனர்.

யுதிஷ்டிரனின் உதாரணத்தையே இங்கு பார்ப்போம்.

மஹாபாரத யுத்தத்தின் பதினைந்தாம் நாள்.

முதல் தடவையாக இரவிலும் யுத்தம் தொடர்ந்தது. கிருஷ்ணரின் திட்டப்படி பீமசேனனின் மகன் கௌரவ சேனையைப் படாதபாடுபடுத்தியதால், கர்ணனின் பொறுமையை சோதித்து அருச்சுனனைக் கொல்ல அவன் வைத்திருந்த சக்தி ஆயுதத்தை அவன் மேல் பிரயோகிக்க வேண்டியிருந்தது. குரு துரோணாச்சாரியார் தன்னை மறந்து யுத்தம் செய்கிறார். அவர் பிரும்மாஸ்திரத்தை எடுத்துவிட யோசித்து கொண்டிருக்கிறார்.

இப்போது பார்த்தசாரதியின் அடுத்தத் திட்டம். பீமன் காதோடு ஒரு விஷயம் சொல்ல அவன் விரைந்து சென்று, கௌரவர் சேனையில் இருந்த அஸ்வத்தாமன் என்னும் யானையைக் கொன்று விட்டு பிறகு வெற்றி கோஷத்துடன் துரோணர் இருக்கும் இடத்துக்கு வந்து அவர் காது கேட்க "கொன்றேன் அசுவத்தாமனை" என கொக்கரிக்கின்றான். அஸ்வத்தாமா துரோணரின் ஒரே மகனின் பெயரும் கூட. அவனும் சிறந்த போர்வீரன். இருப்பினும் சொன்னது பீமன் ஆயிற்றே, அவன் பலமும் உலகம் அறிந்ததே என துரோணர் மனம் மயங்குகிறார். அவருக்கு இச்செய்தியை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம்.

பொய்யே பேசாத யுதிஷ்டிரனைப் பார்த்து கேட்கிறார் அவர், "எனது மகன் அஸ்வத்தாமா மாண்டானா, கூறு யுதிஷ்டிரா" என்று. யுதிஷ்டிரனோ இறுதலைக் கொள்ளி எறும்பாகிறான். திணறிக் கொண்டே "கூறுகிறான் "அஸ்வத்தாமா ஹதஹ,...குஞ்சரஹ" (இறந்தது அஸ்வத்தாமன் ... என்னும் யானை). இறந்தது அஸ்வத்தாமன் என்பதை உரக்கக் கூறிவிட்டு, தயங்கியவாறு இரண்டாவது பாகத்தைக் கூறும்போது பார்த்தசாரதி தனது பாஞ்சஜன்ய சங்கை எடுத்து ஊத, துரோணருக்கு 'என்னும் ஒரு யானை' என்பதே காதில் விழவில்லை. அவர் உடனே யுத்தத்தை நிறுத்தி தரையில் அமர்ந்து தியானத்தைத் துவங்குகிறார். அப்போது புயல்போல கிளம்பிய த்ருபத ராஜாவின் மகனும், துரோணரைக் கொல்லவே பிறவி எடுத்த திருஷ்டத்யும்னன் தன் கத்தியை எடுத்து ஆச்சாரியரின் தலையைச் சீவி அவரைக் கொல்கிறான். ஆனால் இது இப்பதிவின் முக்கிய விஷயம் அல்ல.

இப்போதுதான் இப்பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். யுதிஷ்டிரனின் வாயில் இருந்து அந்த வார்த்தைகள் வந்த வினாடியிலேயே அவன் தேர்ச் சக்கரங்கள் பூமியைத் தொட்டனவாம். அதுவரை அவை தரையிலிருந்து நான்கு அங்குலம் உயரத்திலேயே இருந்தனவாம். அவனும் பொய் சொன்ன பிறகு பொய்மை நிறைந்த பூமியின் பகுதியாக அவனும் ஆகிவிட்டான் என வியாசர் அழகாகக் கூறுகிறார்.

அது மட்டுமா, பிற்காலத்தில் சொர்க்கம் செல்ல நேர்ந்த போது ஒரு முகூர்த்த காலம் நரகத்துக்கும் போய் விட்டு வருகிறான். இவ்வளவு பொய் புனைசுருட்டு எல்லாம் செய்து பாரத யுத்தத்துக்கே காரணமாக இருந்த துரியனுக்கு கூட அவ்வளவு வசை சேரவில்லை. ஆனால் யுதிஷ்டிரன் பெற்ற கெட்ட பெயர் மிகப்பெரியது. இதற்கு முக்கியக் காரணமே அவன் பொய் சொல்ல மாட்டான் என்ற மக்களது அசைக்கமுடியாத நம்பிக்கை அசைந்ததே ஆகும்.

அதே போல எப்போதும் தியாகம் செய்து வருபவர்களும் ரொம்பவுமே போர். உதாரணத்துக்கு குடும்பத்துக்கு மூத்த மகன் தன் தம்பி தங்கைகளுக்காக தியாகம் செய்து எல்லோரையும் முன்னேற்றி தான் மட்டும் சந்தியில் நிற்பது பல தமிழ், இந்தி ஆகிய மொழிப்படங்களில் காட்டப்பட்டுள்ளன. படிக்காதவன், ஆறிலிருந்து இருபது வரை, குலவிளக்கு ஆகிய பல படங்கள் வந்து பார்வையாளர்களின் கண்களை குளமாக்கிச் சென்றுள்ளன.

ஆனால் எனக்கு மட்டும் இம்மாதிரி தியாகம் செய்பவர்களைக் கண்டாலே பற்றிக் கொண்டு வரும். அது என்ன இவங்க மட்டும் பெரிய புடுங்கிகள் மாதிரி வளைய வராங்கன்னு என்ணுவேன். சரி, எனக்குத்தான் பிடிக்கவில்லை சம்பந்தப்பட்ட கதைகளில் கூட மற்ற பாத்திரங்கள் அவர்களை விரும்புவதில்லை, ஏன்? இத்தனைக்கும் அவர்கள் இந்த தியாகங்களின் பலன்களை பெற்றவர்களே.

இதில்தான் மனித மனத்தின் ஒரு சூட்சுமம் புலன்படும். தாங்கள் ஒரு முயற்சியும் செய்யாது மற்றவர்கள் செய்யும் தியாகத்தின் பலனை மட்டும் அனுபவிப்பவர்கள் மிகுந்த தாழ்வுணர்ச்சியை அடைகின்றனர். அவர்களது நன்றிக்கடன் அளவுக்கு மீறி போகிறது, ஒரு நிலைக்கு அப்புறம் அவர்களது மனது கடுமையாகிறது. என்ன பெரிசா செஞ்சு கிழிச்சான் இவன். செய்ய வேண்டிய கடமை அதனால்தானே செஞ்சான் என்றெல்லாம் விட்டேற்றியாக யோசித்து பிறகு ஒரு புள்ளியில் வெளிப்படையாக சொல்லவும் சொல்கின்றனர்.

தேவையான அளவுக்கு மட்டுமே உதவி, பிறகு அவரவர் தத்தம் பலத்தால் தங்களை பார்த்து கொள்ள செய்வதுதான் மிகச்சரியான அணுகுமுறை. அதை விடுத்து, “அவனுக்கு என்ன தெரியும் அவன் குழந்தைதானே” என்று சம்பந்தப்பட்ட குழந்தையே 30 வயது தாண்டிய பிறகும் தியாகம் செய்யும் அண்ணாவோ அக்காவோ கூறினால் குழந்தைக்கு என்ன போச்சு? எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு தியாகம் செய்பவரை அம்போ என விடுவதுதான் நடக்கிறது.

இங்கு அளவுக்கு மீறி தியாகம் செய்பவர்களைத்தான் நான் குற்றம் சொல்வேன். அவர்களை மன நோயாளிகளாகத்தான் நான் பார்க்கிறேன். ஒரு பதிவில் கூட பார்த்தேன், “கோலங்கள் சீரியலில் அபி மனநோயாளியா, தொல்காப்பியன் மன நோயாளியா” என்று கேட்டிருந்தார்கள். இருவருக்குமே இதில் சம அளவு போட்டிதான். இப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடைசி அரை எபிசோடில் ஆதி திருந்தி, “அக்கா என்னை மன்னிச்சுடுன்னு” சொல்ல அபியும் மன்னிச்சு தொலைப்பாள். நேயர்கள் வாயில் விரலை வச்சுண்டு பாத்திண்டிருப்பாங்க.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/23/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 23.08.2009

டோண்டு ராகவனது அறியாமைகள்
சமீபத்தில் 1966-67 கல்வியாண்டில் நான் மூன்றாம் ஆண்டு பொறியியல் வகுப்பில் படித்து கொண்டிருக்கும்போது எங்களுக்கு கணக்கில் சாத்தியக்கூறு கோட்பாடு (probability theory) பற்றி சில பாடங்கள் எடுக்கப்பட்டன.

அவற்றை ஆரம்பிக்கும் முன்னால் எங்கள் கணித ஆசிரியர் வீரராஜன் அவர்கள் சொன்னது இன்னும் நினைவிலிருக்கிறது. “ஒரு குறிப்பிட்ட கணக்கை நான் உங்களுக்கு முழுக்க போட்டு காட்டியதுமே உங்களுக்கு புரிந்து விடும். அதன் முடிவுக்கான வாதங்கள் உங்களுக்கு எளிமையாகவே தோற்றமளிக்கும். ஆனால் பிரச்சினை என்ன வென்றால் நீங்களே ஒரு புதிய கணக்கில் அவற்றைத் தர நேரும்போதுதான் என்ன செய்வதென்றறியாது பலர் விழிப்பார்கள். அந்த பிரச்சினையை ஓரம் கட்டிவிட்டால் probability theory-யை ஊதித்தள்ளிவிடலாம்”.

அதில்தானே பிரச்சினையே. ஒரு முறை சீட்டுக்கட்டை வைத்து ஒரு கணக்கு கொடுத்தார். சுத்தம். ஏனெனில் எனக்கு சீட்டு விளையாடத் தெரியாது. இப்போதும் தெரியாது என்பது வேறு விஷயம். பரிதாபமாக முகத்தை வைத்து கொண்டு அவரிடம் சீட்டுக் கட்டில் என்னென்ன சீட்டுகள் எவ்வளவு எண்ணீக்கையில் உள்ளன என்பதே தெரியாத நிலையில் இக்கணக்கை எப்படிப் போடுவது என கேட்டேன். உட்காரச் சொல்லிவிட்டு அவர் சீட்டுக்கட்டுகளின் உள்ளடக்கம் பற்றி விளக்கினார். கடைசியில் சொன்னார், “என்ன ராகவன், சீட்டு விளையாடத் தெரியாதா? நானெல்லாம் ஏழாம் வகுப்பிலிருந்தே இதிலெல்லாம் தேர்ந்து விட்டேனே” என்றார். சக மாணவர்களும் ஏதோ விசித்திர ஜந்துவை பார்ப்பது போல என்னைப் பார்த்தனர். என்னைத் தவிர எல்லோருமே சீட்டு ஆடுவதில் தேர்ந்தவர்களாம்.

அதற்காகவெல்லாம் நான் அதை கற்றுக் கொண்டு விடுவேனா என்ன? இரவு பகலாக சீட்டு ஆடி குடும்ப மகிழ்ச்சியையே தொலைத்த பலரது கதைகள் அப்போதெல்லாம் கல்கி, விகடன், குமுதம் பத்திரிகைகளில் வரும். அவற்றையெல்லாம் படித்து அந்த ஆட்டத்தை கற்றுக் கொள்ளக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தேன், இன்னும் இருக்கிறேன்.

ஆனால் ஒன்று. அதை ஆடுபவர்களை பார்ப்பது மிகச் சிறந்த பொழுதுபோக்கு. முன்பெல்லாம் ரயிலில் இரண்டாம் வகுப்பில் மூன்றடுக்கு பெட்டிகளில்தான் பயணம். எல்லோரும் செட்டில் ஆப்னதும் திடீரென ஒருவன் சீட்டுக் கட்டை வெளியில் எடுப்பான். எதிரில் இருப்பவர்கள் கண்களில் ஒளி தெரியும். இன்னொருவன் இரண்டு சூட்கேஸ்களை சீட்டுக்கு அருகில் அடுக்குவான். அதற்குள் எங்கிருந்தோ இன்னும் சிலர் வந்து சேர்ந்து கொள்ள ஒரு சீட்டுக்கச்சேரி அமர்க்களமாக ஆரம்பிக்கும். நால்வர் ஆடினால், வேடிக்கை பார்க்க ஐந்தாறு பேர். அப்படியே கம்பார்ட்மெண்டில் நடந்தால் இம்மாதிரி நான்கைந்து சீட்டாடும் தீவுகளைப் பார்க்கலாம்.

ஒருமுறை பாண்டிச்சேரியில் அருகிலிருந்த வில்லியனூரில் ஒரு உள்ளூர் தியேட்டரில் படம் பார்க்கச் சென்றிருந்தேன். வெஸ்டர்ன் படம். டுமீல் டுமீல் என துப்பாக்கி ஓசைகள் வந்தவண்ணம் இருக்கும். அம்மாதிரி படங்களுக்கு கிராமத்து ரசிகர்கள் அடிமைகள். மொழி புரியாது. ஆனால் சண்டைகள் தமாஷாக இருக்கும். இன்னொன்று மட்டும் துல்லியமாக புரியும். அதுதான் திரைப்படத்தில் வரும் சீட்டாடும் காட்சி. அதுவும் மூன்று சீட்டு மட்டும்தான் அதிகமாக ஆடப்படும். வில்லன் தனது சீட்டுகளை காண்பிப்பான். ராஜா, ராணி, க்ளாவர் என வைத்து கொள்வோம். இப்போது கதாநாயகன் தனது சீட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து போடுவான். ஏஸ், ஏஸ் என இரண்டு சீட்டுகள் வரும். ஸ்லோ மோஷனில் மூன்றாவது சீட்டு வந்து விழும். அதுவும் ஏஸ். அவ்வளவுதான். இங்கே தியேட்டர் முழுவதும் “ஆ” என்ற சத்தம் கேட்கும். எனக்கு வேடிக்கையாக இருக்கும். உலகப் பொதுமொழி என்கிறார்களே, அது இதுதான் போலிருக்கிறது.

தன் மாப்பிள்ளைக்கு சீட்டாடவே தெரியவில்லை என குப்புசாமி ஐயங்கார் ராமகிருஷ்ணமாச்சாரியிடம் குறைபட்டுக் கொள்கிறார். “என்ன ஓய் குப்பு, சந்தோஷமான விஷயம்தானே” என ஆர்.கே. சாரி கேட்கிறார். “நீங்க வேற ஸ்வாமி. அப்படி ஆடத்தெரியாமல் சீட்டாடி பணத்தையல்லவா இந்த அபிஷ்டு தொலைச்சிட்டு வரது”? என நொடிக்கிறார், குப்புசாமி ஐயங்கார்.

ஆக, சீட்டாடத் தெரியாமல் இருந்தால் போதாது. ஆடாமலும் இருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சிகரெட் பிடிக்கும் பழக்கம்
வாழ்க்கையில் ஒருவர் சிகரெட் பிடிக்க கற்றுக் கொள்ள பல வாய்ப்புகள் உண்டு. பள்ளீகளில், கல்லூரிகளில், ஹாஸ்டல்களில், குளிர்பிரதேசங்களில் என்றௌ அவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். முக்கியமாக சக நண்பர்கள் பிடிக்க, அவர்களுக்குள் ஒரு நட்பு வட்டம் வருகிறது. அதற்கு வெளியே நிற்கக்கூடாது என்பதற்காக அந்த பழக்கத்தில் போய் விழுவதும் அதிகம் நடக்கிறது. சினிமா ஹீரோக்கள் ஸ்டைலாக புகை பிடிப்பதை பார்த்தே பலர் இந்த வழக்கதை மேற்கொண்டுள்ளனர். “திரும்பிப்பார்” என்னும் படத்தில் சிவாஜி எல்லா சீன்களிலும் சிகரெட் பிடித்து கொண்டுதான் வருவார். சிகரெட்டை தூக்கிப்போட்டு வாயில் பிடிக்கும் ரஜனி பற்றி கூறவும் வேண்டுமோ?

ஆனால் ஏனோ தெரியவில்லை, இந்த சிகரெட் பழக்கம் என்னைக் கவரவேயில்லை. அதை பிடிப்பவர்கள் அருகில் வரும்போதே ஒரு வித வியர்வை நாற்றம் சகிக்காது. அவர்கள் விடும் புகை பிடிக்காது என்பது ஒரு விஷயம். அதனால் வரும் கெடுதிகள் பற்றி பிறகுதான் படித்து அறிந்து கொண்டேன். Passive smoking விளைவிக்கும் விபரீதங்கள் வேறு.

அதற்காக சிகரெட்டே பிடிக்காமல் விட்டேனா என்ன. எனது 32-ஆம் வயதில் முதல் முறையாக பிடித்தேன். ஒரு வாடிக்கையாளரை பார்த்து மொழிபெயர்ப்பு வேலை பிடிக்க வேண்டியிருந்தது. அவர் சிகரெட் பற்ற வைத்து கொண்டு, எனக்கும் ஆஃபர் செய்ய அதை தயக்கத்துடன் பெற்று கொண்டேன். அவரே எனக்கு நெருப்பும் கொடுத்தார். ஆனால் என்ன ஆச்சரியம், உடனே ஒருவித நட்பு சூழ்நிலை உருவாயிற்று. வேலையும் பெறமுடிந்தது.

எனது புதிய பழக்கத்தை ஒரு நாள் என் தந்தை நேரிலேயே பார்த்து விட்டார். அப்போது ஒன்றும் சொல்லவில்லை. பிறகு ஒரு நாள் தனியாக அது பற்றி என்னுடன் பேசினார். தானும் சிகரெட் பிடிப்பதாக கூறினார். நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். ஏனெனில் அவர் சிகரெட் பிடித்து நான் பார்த்ததேயில்லை. அவர் விளக்கினார். சில நேர்காணல்களுக்கு செல்லும்போது சம்பந்தப்பட்டவர் தான் சிகரெட்டை புகைக்க தொடங்குமுன் என் தந்தைக்கும் நீட்ட அவரும் அதை பற்று கொண்டார். நல்ல இண்டர்வ்யூ கிடைத்தது. அப்படியே எனது அனுபவம். ஆனால் ஒன்று சொன்னார். சிகரெட் நம்மை அடிமைப்படுத்த விடக்கூடாது. ஆகவே தான் வருடத்திற்கு 12 சிகரெட்டுகள் மட்டும் பிடிப்பதாகக் கூறினார். நானும் அதையே பின்பற்றத் தீர்மானித்தேன். இத்தனை ஆண்டுகளாக அவ்வாறே செய்து வருகிறேன். மாதத்துக்கு ஒன்று என்ற கணக்கில் வருகிறது. ஒரு மாதம் அதை பிடிக்காவிட்டால் அந்த கோட்டா கேரி ஓவர் ஆகாது. அம்மாதிரியே செய்வதால் ஓரிரு ஆண்டுகள் ஒரு சிகரெட் கூட இல்லாது கழிந்துள்ளன.

சிகரெட் ஏன் பாப்புலர் ஆகிறது? நிக்கோடின் போதை ஒரு காரணம். டென்ஷனாக இருக்கும்போது சிகரெட் பற்றவைத்தால் அமைதியாகிறார்கள் சிலர். அது முக்கியமாக மூச்சை இழுத்துவிடுவதால் மட்டுமே வருகிறது. அதை சுலபமாகவே வெறுமனேயே மூச்சை இழுத்துவிடுவதாலேயே செய்யலாமே? சில கிலோமீட்டர்கள் மூச்சை நன்றாக இழுத்த வண்ணம் நடந்தால் எல்லா டென்ஷன்களும் காணாமல் போகுமே.

சிகரெட் பழக்கத்தால் வரும் இழப்புகளுக்கு முன்னால் அதனால் வரும் நன்மைகளாக நாம் கற்பனை செய்து கொள்பவை ஒன்றுமே இல்லை என்பதுதான் நிஜம்.

சரியான விவரங்கள் தராது படுத்துவது
சமீபத்தில் 1978-ல் தி. நகர் ராஜகுமாரி தியேட்டரில் (இப்போது அது இடிக்கப்பட்டு விட்டது) ஒரு படம் பார்க்க எண்ணினோம். பேப்பரில் வெறுமனே தினசரி 3 காட்சிகள் என்று போட்டிருந்தார்கள். மாட்டினி ஷோ எத்தனை மணிக்கு என்ற விவரமே இல்லை. சரி தியேட்டரில் போட்டிருப்பார்களே பார்த்துக் கொள்ளலாம் சென்றால் அங்கும் அந்தத் தகவல் இல்லை. மேனேஜர் அறைக்கு சென்று என்ன விஷயம் என்று கேட்டால் "எங்கள் தியேட்டரில் மேட்டினி காட்சி 2.45 மணிக்கு என்பது எல்லோருக்கும் தெரியுமே" என்ற பொறுப்பற்ற பதில் வந்தது. ஆனால் அதே தியேட்டரில் சில நாட்கள் கழித்து இன்னொரு படத்துக்காக மேட்டினி ஷோவுக்கு 2.30 மணிக்கு சென்றால் படம் 2.15-க்கே ஆரம்பித்திருந்திருக்கிறார்கள். இது என்னப்பா புதுக்கதை என்று பார்த்தால் சம்பந்தப்பட்ட படம் (மாமன் மகள்) பெரிய படமாதலால் 2.15-க்கே ஆரம்பித்து விட்டார்களாம். ஏன் அதற்கான அறிவிப்பு இல்லை என்று பார்த்தால் அவ்வாறு அவர்கள் செய்வது எல்லோருக்குமே தெரியுமாம். எங்கு போய் அடித்துக் கொள்வது?

அண்ணா சாலையில் சிம்ப்ஸன் எதிரில் பல பஸ் ஸ்டாப்புகள் உண்டு. செல்லும் டெர்மினஸ்களை பொருத்து பஸ்கள் வேவேறு இடங்களில் நிற்கும். ஆனால் எந்த ஸ்டாப்பில் எந்த பஸ் நிற்கும் என்பதை மட்டும் போடவேயில்லை. ஒரு பஸ் கண்டக்டரிடம் கேட்டால் அவர் தனது பஸ் எந்த ஸ்டாப்பில் நிற்கும் என்பது எல்லோருக்குமே தெரியும் என சத்தியம் செய்கிறார்.

சிங்கார வேலன் படத்தில் கமல் ஆட்டோ டிரைவரிடம் கேட்பார், "என்னப்பா மனோ வீடு தெரியாதுங்கறையே, அது குழந்தைக்குக் கூடத் தெரியும் என்று மனோ சொல்லியிருக்கானே" என்று. ஆட்டோ டிரைவர் (கமல் கொண்டு வந்த கருவாட்டுக் கூடையின் வாசத்தால் பொங்கி வரும் வாந்தியை அடக்கிக் கொண்டு) கூறுவார், "நான் என்ன குழந்தையா" என்று.

ஆனால் சில சமயம் வேண்டுமென்றே சரியான செய்தியை தருவதில்லை. சமீபத்தில் 1975-ல் ரஜனிகந்தா என்ற ஹிந்தி படம் பார்ப்பதற்காக Safire group theater Emerald-ல் கியூவில் நின்று கொண்டிருந்தபோது திடிரென ட்ரன்ஸ்ஃபார்மர் அறையில் நெருப்பு பிடித்துக் கொண்டது. அடுத்த நாள் ஹிந்துவில் பார்த்தால் சென்னை மவுண்ட் ரோட்டில் ஒரு தியேட்டரில் என்று செய்தி போட்டிருந்தார்கள். என்ன விஷயம். சம்பந்தப்பட்ட தியேட்டர் நிர்வாகம் ஹிந்துவை சரிகட்டியுள்ளது. ஆனால் அதனால் என்ன ஆயிற்றென்றால் விஷயம் தெரியாத பலருக்கு என்ன தியேட்டர் என்று தெரியவில்லை. ஆனந்தாக இருக்குமா, சாந்தியாக இருக்குமா என்றெல்லாம் வதந்திகள் பரவின.

அதே போல கையெழுத்திடும்போது வேண்டுமென்றே தேதி போடுவதில்லை, அப்படியே போட்டாலும் வெறுமனே 24/08 என்று போட்டு விடுகின்றனர் வருடம் போடுவதில்லை. இதே மாதிரி பொறுப்பின்றி வருடங்களில் இரண்டு எண்களை மட்டும் போட்டுத்தானே Y2K பிரச்சினையே வந்தது? எவ்வளவு கால மற்றும் பணவிரயங்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/20/2009

டோண்டு பதில்கள் - 20.08.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?

அனானி (10.08.2009 காலை 09.49-க்கு கேட்டவர்)
1. உலக அளவில் நடை பெறும் டென்னீஸ் போட்டிகளில் மகளிர் அடிக்கும் குட் சாட்களின் படங்களை எடுக்கும் புகைப்பட ஆங்கிள் விவகாரமாய் இருப்ப்து பற்றி?
பதில்: பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம் - கறந்த இடத்தை நாடுதே கண்! என்று பாடிய பட்டினத்தார் நினைவுக்கு வருகிறார்.

2. சட்டக் கல்லூரி வளாக மாணவர் மோதல் பிரச்சனையின் செயலுக்கு பிறகு இப்போது அங்கு நிலை சுமுகமா?
பதில்: பல மாணவர்களுக்கு ஓராண்டு படிப்பு போனது, அதனால் பிற்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களை பற்றியெல்லாம் யார் கவலைப் படுகிறார்கள். மாணவர்கள்தான் சுதாரித்து கொள்ள வேண்டும். தூங்கியது போதும் மாணவர்களே, விழிமின், எழுமின்.

3. சத்துணவு ஊழியர் திடீர் போராட்டம் சென்னையில்?
பதில்: நான் கூகளில் தேடியவரை கிடைத்தது ஒரு மாதத்துக்கு முந்தைய இந்த செய்திதான். வேறு ஏதேனும் புதிய செய்தி? அதில் காட்டப்பட்டுள்ள சம்பள விகிதங்கள்தான் இந்தியாவிலேயே அதிகமாம். நாசமாப் போச்சு. அரசு அலுவலக பியூன் இதை விட அதிக சம்பளம் வாங்குகிறானே ஐயா.

4. உச்சமன்ற போலிஸ்-வக்கீல் மோதல் விவகாரம் வழக்கு எந்த நிலையில்?
பதில்: தெரியவில்லை. இரு தரப்புமே வாய்தா வாங்கி காலம் கழிக்கும் என நினைக்கிறேன். கடந்த மாதம் நான் போலீசார் வக்கீல்கள் பிரச்சினை பற்றி எழுதியதில் மாற்றம் ஏதும் இல்லை. எனது எண்ணங்கள் அப்படியே உள்ளன.

5. பாலிவுட் படங்களின் வசூலை விட கோலிவுட் படங்கள் முந்துவது சரியா?
பதில்: இதில் சரி என்ன தவறு என்ன? எது வலிமையுடன் இருக்கிறதோ அது முந்துகிறது. எனக்கென்னவோ பாலிவுட்டுக்குத்தான் சான்ஸ் அதிகம் என தோன்றுகிறது.

6. பெங்களுரில் தியேட்டர்கள் மூடல்-சென்னயில் எதிர்நிலை-இப்படியே போனால்?
பதில்: இங்கே மட்டும் என்ன வாழுகிறதாம்? இங்கேயும் தியேட்டர்கள் ரொம்ப திறந்து கொண்டா வருகிறார்கள்?

7. கேரளாவிலும் ஏதாவ்து ஒரு சிலை திறந்து விட்டால்?
பதில்: யார் சிலை திறக்கலாம் என நினைக்கிறீர்கள்? அங்கு பாரதியார் இங்கு வள்ளத்தோல்/தகழி/பொற்றேகாட்/வயலார்? அப்பத்தானே யார் சிலை எங்கு உடைக்கப்படும் என அறியலாம்?

நிஜாம்
1) நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பதால் இந்த கேள்வி. சில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்மொழி குறித்து "தமிழ்மொழியை முழுமை பெற்ற மொழி என்பவர்கள் தன் கால்களை தானே நக்கிக்கொள்ளும் நாய்களைப் போன்றவர்கள்" என சொல்லியிருந்தார். இது குறித்து உங்களின் கருத்து?
பதில்: இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது பற்றித்தானே கேட்கிறீர்கள்? வடமொழியை உயர்த்திப் பேச வந்தவர் தேவையின்றி தமிழை சீண்டியுள்ளார். அவை இரண்டுமே நமது கண்கள்.

2) ஜெயா டிவி விசுவின் மக்கள் அரங்கம், சன் டிவி விஜய டி ஆரின் அரட்டை அரங்கம் ஒப்பிடுக?
பதில்: விசுவின் அரட்டை அரங்கத்தை ஓரளவுக்காவது ரசிக்கலாம். பேசுபவர்கள் காட்டுக் கத்தலாக கத்துவது, சிறுவர்கள்/சிறுமிகள் வயதுக்கு மீறிய முதிர்ச்சியில் பேசுவது ஆகிய எரிச்சல்கள் இரண்டு நிகழ்ச்சிகளிலுமே உண்டு என்றாலும், விசு சற்றே கௌரவமாக பேசுவார். ஆனால் இந்த டி.ஆர். என்கிற அராத்து பேர்வழி அடுக்கு மொழி பேசியே கொல்வார். சகிக்காது.

அனானி (11.08.2009 காலை 08.51-க்கு கேட்டவர்)
1. கலைஞரின் ஜெ பற்றிய அழைப்பு திருமதி ஜெ.-அவரது வயதுக்கு,அனுபவத்துக்கு ஏற்புடையதா? நாகரீகம் மீறிய செயலாகாதா?
பதில்: கலைஞர், ஜெயலலிதா ஆகிய இரு அரசியல்வாதிகளுமே தமிழகத்தின் துர்பாக்கியம். நாகரிகம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்பார்கள். ஒருவருக்கு மற்றவர் சரியான தண்டனைதான்.

ஆனால் ஒன்று. மைனாரிட்டி அரசு என்பது அரசியல் உண்மை. ஆனால் தன் பெயருக்கு முன்னால் செல்வி என்றோ திருமதி என்றோ போட்டு கொள்வது ஜெயலலிதாவின் தனிப்பட்ட உரிமை. அதில் கலைஞர் தலையிடுவது சரியில்லை. ஒன்றுக்கு மேல் ஒருவர் மனைவிகளை திருமணம் செய்து கொண்டு எல்லோரையும் தனது மனைவிகளாக அங்கீகாரம் தந்திருக்கிறார் என வைத்து கொள்வோம். ஆனால் ஒருதாரமணச்சட்டப்படி முதல் மனைவிதான் மனைவி. மற்றவர் வைப்பாட்டிகள்தான் என்பது நிலை. அதற்க்காக மற்ற மனைவியரது பெயருக்கு முன்னால் வப்பாட்டி என வைத்து அழைத்து விடுவீர்களா?

2. பொதுவுடமை கட்சிகளின் சாயம் 5 தேர்தலில் வெளுத்துவிடும் போலுள்ளதே?
பதில்: அவர்கள் சாயம் எப்போதோ வெளுத்து விட்டதே. தமிழகத்தைப் பொருத்தவரை அவர்க: ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியைத்தான் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

3. சரத் கட்சியும் போட்டியில் இருக்கா?
பதில்: தெரியவில்லையே. அது போட்டியில் இருந்தால் தேவலையா இல்லாவிட்டால் தேவலையா?

4. பன்றிக் காய்ச்சல் வேகமாய் பரவி பல உயிர்களை காவு வாங்கிவிடும் போலுள்ளதே?
பதில்: பத்திரிகைகள் செய்யும் ஓவர் பில்ட்அப் சகிக்கவில்லை. விஷயம் என்னவென்றால் பன்றிக் காய்ச்சல் பற்றிய நம்ம்பகத்தன்மை வாய்ந்த புரிதல்கள் குறைவே. அந்த புரியாமையே பயத்தை அதிகப்படுத்துகிறது.

5. வைகோவின் அரசியல் சகாப்தம் இறுதிக்கட்டத்திலா?
பதில்: அப்படித்தான் தோன்றுகிறது. வரவர அவர் ஒரு ஜோக்கர் ஆகிகொண்டு வருகிறார்.

கோபால்
1. நிகழ்காலத்தில் வாழும் தமிழினவாதிகளுக்கும் பெரியாரிஸ்ட்டுகளுக்கும் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?
பதில்: இருவருமே சமய சந்தர்ப்பங்கள், சுய லாபங்கள் ஆகியவற்றை மனதில் இருத்தி பேசுபவர்கள். என்னைப் பொருத்தவரை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

2. காதல் ஜாதியை ஒழிக்குமா?
பதில்: கண்டிப்பாக ஒழிக்காது.

3. போலியாய் தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் பற்றி உங்கள் கருத்து?
பதில்: நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி

4. திமுக ஏற்படுத்திய தமிழ் உணர்வு தற்சமயம் எப்படியுள்ளது?
பதில்: தமிழ் மானத்தலைவரின் பேரன் ஹிந்தி படித்ததாலே மத்திய மந்திரி ஆனார் என பிரஸ்தாபிக்கப்பட்ட தமிழ்மானத்தலைவரே பெருமை அடித்துக் கொள்ளும் நிலையில்தான் தமிழ் உணர்வு உள்ளது.

5. வாழ்வு பற்றி உங்கள் கருத்து?
பதில்: வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும் ஜனனம் என்பது வரவாகும்; அதில் மரணம் என்பது செலவாகும் போனால் போகட்டும் போடா ஜாட்டான்.

6. சர்தார்ஜிகள் மிகவும் தைரியசாலிகள். நல்ல உழைப்பாளிகள், இருந்த போதிலும் அவர்களை கிண்டல் பண்ணி?
பதில்: அவர்கள் மேல் ஏனையோருக்கு இருக்கும் லேசான பொறாமைதான் காரணம். பிச்சைக்காரகளில் நான் சர்தார்ஜிகளை பார்த்ததில்லை. அந்த அளவுக்கு தன்மானம் உடையவர்கள். அவர்களில் பலவீமானவர்களை அந்த சமூகமே தத்தெடுத்துக் கொண்டு குருத்வாராக்களில் அவர்களால் இயலக்கூடிய வேலை வாஙிக்கொண்டு அவர்களுக்கு இருக்க இடம், உடுக்க உடை உணவு எல்லாம் தர ஏற்பாடு அசெய்கிறார்கள். அந்த கட்டுமானம், கட்டுப்பாடு இல்லாதவர்கள் அதனால் பொறாமை கொண்டு அவர்களை மட்டம் தட்டியாவது தங்கள் தளத்துக்கு கொண்டுவரப் பார்க்கிறார்கள். அதுதான் சர்தார்ஜி ஜோக்குகளுக்கு காரணம்.

7. பாஜக மதவாத கட்சி என்ற குற்றச்சாட்டு இப்போது?
பதில்: சிறுபான்மையினரை சாதாரண குடிமகன்களாக நடத்தாமல் தேவையற்ற சலுகைகளை அளித்து அவர்களுக்கு செல்லம் கொடுப்பதை அது ஏற்காத கட்சி. அது மதவாதக் கட்சி அல்ல. தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையாக சட்டம் இயற்றினால் இசுலாமியர் வருந்துவார்கள் என பம்மும் காங்கிரஸ்தான் இசுலாமியர் அனைவருமே தீவிரவாதிகள் எனச்சொல்லாமல் சொல்கிறது. உண்மையில் அதுதான் மதவாதக் கட்சி.

8. சிக்கலில் மாட்டிய வருண்காந்தியின் நிலை?
பதில்: நாகாக்க வேண்டும் என புரிந்து கொண்டால் சரி.

9. பொதுவாய் பொருளாதார வளர்ச்சிக்காக நியாய நெறிமுறை மீறல்கள், நுணுக்கங்கள் தந்திரங்கள் என்ற பெயரில் நடைபெறும் நிகழ்வுகள்?
பதில்: சில சமயங்களில் அவை தவிர்க்க இயலாது போய்விடுகின்றன. அதற்கு பல நேரங்களில் அரசின் யதார்த்தத்துக்கு விரோதமான சட்ட திட்டங்களே.

10. உங்கள் அனுபவத்தில் தனிமனித பொருளாதார முன்னேற்றத்திற்கு எது தடை?
பதில்: ரிஸ்க் எடுக்க பயப்படுவது.

11. கொண்டாடப்படும் பண்டிகைகள், திருவிழாக்கள், வீட்டு விசேஷ நிகழ்ச்சிகள் தேவையில்லை என்போர்?
பதில்: தலைமுறை தலைமுறைகளாய் வரும் சந்தோஷங்களை இழக்கிறார்கள்.

12. வாக்குச்சீட்டுத்தான் வேணும்னு புரட்சித் தலைவி ஜெயலலிதா கோருவதின் நோக்கம்?
பதில்: எந்த ஏற்பாடுமே 100% ஃபூல் ப்ரூஃப் ஆக இருக்கவியலாது. ஆனால் வாக்களிக்கும் எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய ஒவ்வொரு யந்திரமாக போக வேண்டும். கட்டுக்காவல்கள் அதிகம். தேவையானால் ஓட்டளிப்பு ஆரம்பிக்கும் முன்னால் அவற்றை டெஸ்ட் செய்து கொள்ளலாம். ஆனால் வாக்குச்சீட்டு விஷயத்தில் கட்டுக்கட்டாக தில்லுமுல்லு செய்ய இயலும், செய்யவும் செய்தார்கள். வாக்களிக்கும் யந்திரம் பற்றி அதை உருவாக்கியவர் என்னும் முறையில் நம்ம வாத்தியார் சுஜாதா கோர்ட்டுக்கு முன்னாலேயே விளக்கம் எல்லாம் செய்து காட்டியுள்ளார். ஜெ சொல்வது பொறுப்பற்ற குற்றச்சாட்டு.

13. தமிழகத்தில் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதால் என்ன நடக்கும்?
பதில்: அதன் சவப்பெட்டியில் இன்னொரு ஆணி அடிக்கப்படும்.

14. மத்திய அரசு "பொடா" சட்டத்தைத் திரும்ப கொண்டுவந்தால்?
பதில்: காங்கிரஸ் அரசு அதை செய்யும் எனத் தோன்றவில்லை.

15. இதிகாசங்கள்,புராணங்கள் சொல்வது போல் உலகை படைத்த ஆண்டவன் ஏ‌ன் பூமிக்கு கலிகாலத்தில் வருவதில்லை? ஏன்?
பதில்: மக்களின் எதிர்ப்பார்ப்பு இது சம்பந்தமாக அதிகரித்துள்ளது. அம்மாதிரி வருகைக்கான ஸ்பெசிஃபிகேஷன்களும் அதிகரித்துள்ளன. ஆகவே இறைவனே நேரில் வந்தாலும் சட்டென அதை ஒத்துக்கொள்வது இல்லை.

கர்னல் Lionel Blaze 1795-98 காலக்கட்டத்தில் செங்கல்பட்டு கலெக்டராக இருந்தார். அச்சமயம் புயல், மழை காரணமாக மதுராந்தகம் ஏரிக்கரை உடையும் அபாயம் இருந்தது. கலெக்டர் மனவியாகூலத்தில் ஆழ்ந்தார். கோவிலுக்கும் வருகை தந்தார். தாயார் சன்னிதிக்காக கட்டிடப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததை கண்டார். பணத்தட்டுப்பாட்டால் வேலை முன்னேறவில்லை என்பதையும் கண்டார். இந்த ஏரியை ராமர் உடைப்பெடுக்காது காத்தார் என்றால் தாயார் சன்னிதியை தானே கட்டித்தருவதாக அவர் கூறிவிட்டு, சுவாமி தரிசனம் கூட செய்யாமல் தன் இருப்பிடத்துக்கு சென்றார். அன்றிரவு அவர் ஏரிக்கரைக்கு சென்றார். ஏரிக்கரையின் மேல் வில்லம்புகளுடன் இருவர் அங்குமிங்கும் நடப்பதை அவர் கண்டார். பிறகு இருப்பிடம் திரும்பி விட்டார். அடுத்த நாள் காலை புயல் மழையும் ஓய்ந்தன. இப்போது மனம் லேசான நிலையில் சுவாமி தரிசனம் செய்ய சென்றார். சன்னிதியில் தான் முந்தைய தினம் பார்த்த அந்த இருவரின் மூர்த்திகளையும் கண்டார். அவர்கள் ராம லட்சுமணர் என அவரிடம் கூறப்பட்டது. மனம் மகிழ்ந்த அவர் தான் சொன்னபடி தாயார் சன்னிதியை கட்டித் தந்தார். இது ஒரு கல்வெட்டில் அந்த கோயிலுக்கு சென்றால் காணக்கிடைக்கும். எதற்கும் இந்த சுட்டிக்கு செல்லுங்களேன்

இதை என்னவென்று கூறுவீர்கள்? (வால்பையனின் இதற்கான கமெண்ட் இப்போதே எனக்கு தெரிகிறதே - வெள்ளைக்காரர்களிலும் முட்டாள்கள் உண்டு).

16. இன்றைய விலைவாசி உயர்வின் முக்கியகாரணம் என்ன என்ன?
பதில்: The same old law of supply and demand. Too much money chasing too few goods.

17. வங்கியில் பர்சனல் லோன் வாங்கலாமா இல்ல கன்ஸ்யூமர் லோன் வாங்கலாமா, எது நல்லது?
பதில்: பிணை ஏதும் இன்றி கடன் பெறுபவரின் நாணயம் மற்றும் கடனை திருப்பித் தரும் திறன் ஆகியவற்றை வைத்து தரும் கடனைத்தான் பெர்சனல் லோன் என்கிறார்கள் என நான் புரிந்து வைத்துள்ளேன். சில பொருட்களை வாங்க பிணை பெற்று கடன் தருவதுதான் கன்ஸ்யூமர் லோன் என்றும் நினைக்கிறேன். என்னைப் பொருத்தவரை கடன் வாங்குவதையே தவிர்க்க நினைக்கிறேன். சந்தோஷமா கடன் வாங்குவது பற்றி நண்பர் டி.பி.ஆர். ஜோசஃப் அவர்களை கேளுங்களேன்.

18. மாதா மாதம் சம்பளத்தில் பிடிக்கற வரியைக் குறைக்க ஏதாவது வழி இருக்கா?
பதில்: சில வகை சேமிப்புகளுக்கு ரிபேட்டுகள் உண்டு. அவை எல்லாவற்றையும் முதலிலேயே கண்டுணர்ந்து செய்வதும் வரிபிடிப்பை குறைக்க வழி செய்யும். எது எப்படியாயினும் திசம்பர் 31-க்குள் ஒரு தெளிவான நிலைக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் முதலில் சொல்லி குறைவாகக் கழிக்கப்பட்ட தொகை ஜனவரி முதல் மார்ச் வரைக்கும் எகிறும் வாய்ப்பு உண்டு.

19. மனிதர்கள், எல்லாருக்கும் இன்ஸுரன்ஸ் தேவை தானா? எது பெஸ்ட் தனியார் அல்லது எல் ஐ சி?
பதில்: எனது இன்ஸூரன்ஸ் நாட்கள் எல்லாமே எல்.ஐ.சி. யின் வசத்தில்தான் கழிந்தன. ஆகவே தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பற்றி அறிவு ஏதும் இல்லை.

மற்றப்படி நான் எடுத்த சில முடிவுகள் என்னையறியாமலேயே நல்லதாக அமைந்து விட்டன. உதாரணத்துக்கு நான் பம்பாயில் இருந்தபோது இரண்டு பாலிசிகள் எடுத்தேன். பிறகு சென்னைக்கு வந்ததும் ஒரு பாலிசி. நான் என்ன செய்தேனென்றால் எந்த அலுவலகத்தில் பாலிசி எடுத்தெனே அங்கேயே என் கணக்கை வைத்துக் கொண்டேன். ஊர் மாற்றும்போதெல்லாம் பாலிசிகளை மாற்றம் செய்யவில்லை. முதலிலிருந்து கடைசி வரை அந்தந்த பாலிசி அந்தந்த அலுவலகத்திலேயே இருந்ததால், மாற்றங்களில் வழக்கமாக நடக்கும் “ஆவணங்கள் தொலைந்துபோவது” எல்லாம் இல்லை.

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் எல்.ஐ.சி. பிரீமியம் கட்டுவதற்காக அனுப்பப்படும் செக்குகளுக்கு அவுட்ஸ்டேஷன் கமிஷன் கிடையாது. ஆகவே சென்னையிலிருந்து பம்பாய்க்கும், பிறகு தில்லியிலிருந்து சென்னைக்கும் பம்பாய்க்கும் செக்குகள் அனுப்பித்து வந்தேன். எல்லா பாலிசிகளும் முதிந்து பணமும் கிடைத்தாகி விட்டது.

20. இந்தியாவில் பரதம், டிஸ்கோ இரண்டையும் நல்லா ஆடுறவங்க யார்?
பதில்: தெரிந்த பெயராக வேண்டுமென்றால் கமலஹாசன். மற்றப்படி எல்லா கோலிவுட் டான்ஸ் மாஸ்டர்களுக்கும் இருவகை நாட்டியங்களும் தெரியும், தெரிய வேண்டும்.


அனானி (13.08.2009 காலை 08.47-க்கு கேட்டவர்)
1. சமீபத்தில் தாங்கள் மிகவும் ரசித்த நகைச்சுவை?
பதில்: சைவமா, அசைவமா? சைவம் என்றால் கீழே நான்காம் கேள்விக்கான பதிலைப் பார்க்கவும். சமீபத்தில் 1953-ல் படித்து ரசித்த நகைச்சுவை.

2. மனிதர்களுக்கு நெற்றி அகலமாக இருந்தால்?
பதில்: அதிக அறிவு என்பார்கள். என்னைக் கேட்டால் நன்றாக நாமம் போட ஏற்றது என பலரால் உணரப்படும் என்பேன்.

3. கால் பெருவிரலை விட அடுத்த விரல் அதிக நீளமாய் இருந்தால்?
பதில்: அது ஒரு பெண்ணுக்கு இருந்தால் அவள் புருஷன் அவளிடம் படாதபாடு படுவான் எனப் பொருள்படும்படி ஒரு திரைப்பட க்ளிப்பிங் பார்த்த ஞாபகம் இருக்கிறது. யாராவது படத்தின் பெயர் சொல்லுங்கப்பு. (திருடா, திருடி படமோ)?

4. காமராஜின் வெற்றிக்கு காரணம் அவரது நீண்ட கைகள்?
பதில்: அது என்னமோ தெரியாது. ஆனால் இக்கேள்வி விகடனில் சமீபத்தில் 1953-ல் நான் படித்த ஒரு ஜோக்கை நினைவுபடுத்தி விட்டது (காமராஜுக்கும் இந்த ஜோக்குக்கும் சம்பந்தமில்லை).
சிறைச்சாலையில்:
ஏகாம்பரம்: நீ எப்படி பிடிப்பட்டாய்?
மாணிக்கம்: என் கால்கள் குட்டையாக இருந்ததால் என்னால் வேகமாக ஓட இயலவில்லை.
ஏ: அது சரி, ஏன் உன்னைத் துரத்தினார்கள்?
மா: என் கைகள் நீளமாக இருந்ததால்.


5. சாமுத்திரிகா லட்சணத்துக்கும் வாழ்வின் வெற்றிக்கும் தொடர்பு உண்டா?
பதில்: சாமுத்திரிகா லட்சணம் ஒருவருக்கு சரியாக அமைந்து, அது அவருக்கும் புரிந்தால் அவருக்கு ஒரு சுய மரியாதையும் தன்னம்பிக்கையும் வரும். அதனால் வாழ்க்கையில் வெற்றியடைய வாய்ப்பு உண்டு.

6. பரதக் கலையின் இன்றைய நிலை?
பதில்: கொஞ்சம் காஸ்ட்லியான கலை. நன்கு கற்றுக் கொண்டு அரங்கேற்றம் செய்ய பல லகரங்கள் தேவை. எதற்கும் இந்த சுட்டிக்கு போய் பாருங்கள். உங்களுக்கு தேவையான விஷயம் கிடைக்கலாம்.

7. அணு ஆயுத ஒப்பந்த விவகாரம்?
பதில்: அது காலத்தின் கட்டாயம். இது சம்பந்தமாக நான் இப்பதிவை எழுதிய பின்னால் எனது கருத்துகளில் மாற்றம் ஏதுமில்லை.

8. அரசியலில் பெண்கள் கொடி பறக்கிறதே?
பதில்: இட ஒதுக்கீடு வேறு வரப்போகிறது. நடக்கட்டும், நடக்கட்டும்.

9. மகளிருக்கு தனி ரயில். அடுத்து?
பதில்: திருமணத்துக்கு பின்னால் மகளிருக்கு மட்டும் தனி தேன்நிலவு என்று இல்லாமல் இருந்தால் சரிதான்.

10. இந்தியில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? ஏன்?
பதில்: சஞ்சீவ்குமார். ஏன் என்றால் பதில் கூறுவது கஷ்டம். அவரது அலட்டிக் கொள்ளாத நடிப்பு எனக்கு பிடிக்கும். உதாரணத்துக்கு கணவன், மனைவி மற்றும் சின்னவீடு என்னும் ஹிந்தி படத்தின் இந்த க்ளிப்பிங்கை பாருங்கள்.

11. காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியின் மைனஸ் பாயிண்ட்?
பதில்: சரியான எதிர்க்கட்சி அமையாததால் இவர்கள் தலை கால் தெரியாமல் ஆடுகிறார்கள். அது அவர்களுக்கே நல்லதல்ல.

12. தளபதி ஸ்டாலின் மகள் மருமகன் ரகசியமாய் திருவண்ணாமலை கிரிவலம். கலைஞரின் பதில் என்னவாயிருக்கும்?
பதில்: ஏன் ரகசியம் வெளியே தெரியுமாறு விட்டீர்கள் எனக் கேட்டிருப்பாராக இருக்கும்.

எம். கண்ணன்
1. ப.சிங்காரம் எழுதிய 'புயலிலே ஒரு தோணி' படித்ததுண்டா ? கரிச்சான் குஞ்சுவின் 'பசித்த மானுடம்' ? இவையெல்லாம் மாஸ்டர் பீஸ் என சொல்கிறார்களே? அப்படி என்ன சிறப்பு (அல்லது வாசிப்பனுபவம்) இக்கதைகளில் ?
பதில்: படித்ததில்லை, ஆகவே இதற்கான பதில் என்னிடம் இல்லை.

2. தற்கால (பெரும்பாலான) இளைஞர்கள் மொபைல் ஃபோன், சினிமா, இன்டர்நெட், குடி, செக்ஸ் - இந்த விஷயங்களிலேயே முழ்கி இருக்கிறார்களே? உழைப்பில் ஏன் அத்தனை அக்கறை இல்லாமல் எல்லாமே மேற்சொன்ன விஷயங்களைச் சுற்றியே உலாவுகிறார்கள்?
பதில்: மொபைல் ஃபோன், இணையம் ஆகியவற்றை மேற்சொன்ன லிஸ்டுகளில் நான் சேர்க்க மாட்டேன். எனது லேண்ட்லைன் ஃபோனின் இன்கமிங் அழைப்புகள் எனது செல்பேசிக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இணையம் இன்றி எனது மொழிபெயர்ப்பு வேலைகள் நடக்காது. மற்றப்படி தற்கால இளைஞர்கள் என்று ஒன்றுமே கிடையாது. அவர்களை பற்றிய புகார்கள் பற்றி நான் இட்ட இப்பதிவைப் பாருங்களேன்.

3. மீண்டும் ஜெ.ஆட்சிக்கு வந்தால் எஸ்.வி.சேகர் மீது கஞ்சா வழக்கு வருமா ? இல்லை ஆடிட்டர் டைப் டிரீட்மெண்டா ? எந்த தைரியத்தில் அவர் கட்சியை முறைத்துக் கொண்டே இந்த நிலைமைக்கு தன்னை கொண்டுவந்துள்ளார்?
பதில்: அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

4. தஸ்தாவ்யெஸ்கி எல்லாம் படித்ததுண்டா ? சாருவும், எஸ்.ரா.வும் இவ்வளவு புகழ்ந்து எழுதுகிறார்களே ? அப்படி என்னதான் இருக்கிறது அக்கதைகளில்? (படிக்காததால் தான் கேட்கிறேன்) - வலைபதிவர்கள் மூலம் தான் இந்த உலக சினிமா, இலக்கியம் எல்லாம் அறிமுகமாகிறது - எனவே அவர்களுக்கு நன்றி)
பதில்: நான் படித்த ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் மட்டுமே. தஸ்தாவ்யெஸ்கி எல்லாம் படித்ததில்லை. எனக்கென்னவோ ரஷ்ய நாவல்களில் வரும் பெயர்கள் வாயில் நுழைந்ததில்லை.

5. வாசல் திண்ணை, ரேழி, கேமரா உள், கூடம், முற்றம், ரெண்டாம் கட்டு போன்ற டைப் வீடுகளில் வசித்ததுண்டா ? அந்த அனுபவங்கள் பற்றி எழுதுங்களேன் ? (மும்பாய், டில்லி, சென்னை வீடுகளைப் பற்றியும் வசதிகள், வாடகைகள் பற்றியும் சில பதிவுகள் போடுங்கள்)
பதில்: எனது முதல் 23 ஆண்டுகள் அம்மாதிரி வீடுகளில்தான் கழிந்தன. இப்போது கூட அம்மாதிரி வீடுகளைப் பார்த்தால் பழைய ஞாபகங்கள் வருகின்றன. அவற்றைப் பற்றி நீங்கள் கேட்டு கொண்டது போல பதிவுகள் போட்டால் போயிற்று.

6. பாக்யராஜ் ரோகிணி நடித்த 'பவுனு பவுனுதான்' படத்தில் ஐஸ் புரூட் அய்யர் என ஒரு கதாபாத்திரம் வருமே? ஐஸ்புரூட் என தெருக்காரர்கள் (சிறு பசங்கள் உட்பட) கேலி செய்வார்கள். அது என்ன ஒய் ஐஸ் புரூட்? ( ) கிளுகிளுப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
பதில்: ஓரல் செக்ஸை குறிக்கும் ஒரு அசிங்கமான வர்ணனைப் பெயர் அது.

7. 1990களுக்குப் பிறகு வரும் பெரும்பாலான தமிழ் படங்களில் படத்தின் கிரெடிட்ஸ் எனப்படும் பணியாற்றிய அனைவரின் பெயர்களும் படம் ஆரம்பத்தில் வெளியிடாமல் படம் முடிந்தபின் வெளியிடுகின்றனர் - அதுவும் மிகவும் பொடி எழுத்துக்களில்.! ஹாலிவுட்டைப் பார்த்து காப்பியடித்து இந்தப் பழக்கத்தை பெரிது படுத்தியவர்கள் மணிரத்னமும் கமல்ஹாசனும் தான். எத்தனை பேர் படம் முடிந்தவுடன் பணியாற்றவர்களின் பெயரைப் பார்க்கப் போகின்றனர் அல்லது தியேட்டரில் பிரொஜக்டரை கடைசி சீனிலேயே ஆஃப் செய்துவிடுகின்றனர். படத்தின் ஆரம்பத்தில் எல்லோருடைய பெயரும் வந்தால் தானே பணியாற்றியவர்களுக்கும் ஒரு வெளிச்சம் கிடைக்கும் (தொழில்நுட்பக் கலைஞர்கள் / உதவியாளர்கள், பிஆரோ, இசை, காமெரா, ஸ்டுடியோ உதவி என பலர்)
பதில்: படத்தை பொருத்தது அது. அன்பே சிவம் பட விஷயத்தில் ஆடியன்ஸ் ஒரு மாதிரியான டிரான்ஸ் நிலையில் இருந்தனர். அப்போது கிரெடிட்டுகள் கீழிருந்து மேலே சென்றது மனதுக்கு உவந்ததாகவே இருந்தது. 80 நாட்களில் உலகைச் சுற்றி என்னும் ஆங்கிலப் படத்தில் இந்த டைட்டில்ஸ்கள் சிறப்பான முறையில் காட்டப்பட்டன. அதே போல ஜான் போல் பெல்மோண்டோ நடித்த L'héritier என்னும் பிரெஞ்சு படத்தில் கடைசி காட்சியில் கதாநாயகன் சுட்டுக் கொல்லப்படுவார். உடனே படம் முடிந்து டைட்டில்ஸ் ஆரம்பிக்கும். பின்னணியில் அந்த கொலைக் காட்சியை வேவ்வேறு கோணங்களில் காண்பிப்பார்கள். கிட்டத்தட்ட 10 கோணங்கள் என்று எனது ஞாபகம். ஆகவே டைட்டில்ஸை விடாது பார்த்தோம். மற்றப்படி நீங்கள் சொல்வதும் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

8. வலைப்பதிவுகளில் இவ்வளவு விவரமாக அரட்டை அடிக்க முடிகிறதே - பல்வேறு வயது கொண்டவர்களுடனும், பல்வேறு வித பின்னணி கொண்டவர்களுடனும். இதுமாதிரி அரட்டையை (சண்டையில் முடியாமல்) உங்கள் தெரு பெரிசுகள்/சிரிசுகளுடனோ அல்லது உறவினர்களுடனோ தொடர்ந்து நட்பு பேண முடியுமா? வலைப்பதிவு கொடுத்த பேறு தானே இது?
பதில்: இதில் சந்தேகம் என்ன?

9. சுஜாதாவின் சிங்கமய்யங்கார் பேரன் நாடகம் பார்த்ததுண்டா / படித்ததுண்டா ? அந்தக் கதை பற்றி உங்கள் கருத்து என்ன ? உங்கள் வீட்டில் / குடும்பங்களில் / உறவுகளில் அதுமாதிரி ஒரு நிகழ்வுக்கு ஒப்புக் கொள்வீர்களா? சாதக பாதகம் என்ன?
பதில்: இந்த புத்தகம் பற்றி முன்பே ஒரு கேள்வி வந்தது. ஆனால் நான் இப்புத்தகத்தை படிக்காததால் பதில் கூற இயலவில்லை - அப்போதும், இப்போதும்.

10. பிராமண கதாபாத்திரங்கள் இல்லாத கதை கொண்ட திரைப்படங்களை விட பிராமண கதாபாத்திரங்கள் கொண்ட (அல்லது அவர் ஒரு பிராமண வேடத்திலாவது நடித்த) கமல்ஹாசனின் படங்கள் தான் வெற்றி பெற்றதில் அதிகம். தன்னைச் சுற்றியும் எப்போதும் பிராமண ஜீவிகளையே படத்திற்கு உபயோகப்படுத்துகிறார். அப்புறம் ஏன் இந்த பெரியார், கருப்புச் சட்டை போன்ற வேஷம்?
பதில்: கமலஹாசன் அற்புதமான கலைஞர். அவரது படைப்புகளால் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார். அவை போதுமே. அவரது நம்பிக்கைகள் அவர் இஷ்டம். நான் ஏன் அது பற்றிக் கருத்து சொல்ல வேண்டும்?


கிருஷ்ணகுமார்
1. Does the Indian govt do enough to stop swine flu?
பதில்: இதற்கு மேல் எப்படி செயல்பட முடியும்?

2. Is there any difference between swine flue and bird flue?
பதில்: கண்டிப்பாக வேற்றுமைகள் உண்டு. மருத்துவர் ப்ரூனோ இன்னும் சரியான பதில் தருவார். இந்தச் சுட்டியில் உங்களுக்கு பதில் கிடைக்கலாம்.

3. What is a true government?
பதில்: மக்களின் தினசரி வாழ்க்கையை அவரவர் திறமைகளுக்கேற்ப வாழ்ந்து வாய்ப்புக்களை பயன்படுத்தி முன்னேறத் தெவையான பின்புலனை தருவதே உண்மையான அரசு.

4. Which is your favouite video clipping in youtube?
பதில்: நாஸ்டால்ஜியாவுக்கு பாண்டவர் பூமி பாடல்
2001-ல் நாங்கள் சென்னைக்கு நிரந்தரமாக திரும்பிய அதே சமயத்தில் ராஜ்கிரண் நடித்த 'பாண்டவர் பூமி' படமும் திரைக்கு வந்தது. அப்படத்தின் கதை என் கதை போலவே இருந்தது. அதாவது சொந்த ஊருக்கே, பழைய வீட்டுக்கு குடிவருவது என்ற கதையின் கான்சப்டை மட்டும் கூறுகிறேன். அப்படத்தின் 'அவரவர் வாழ்க்கையில்' என்று தொடங்கும் பாட்டை எதேச்சையாக இன்று ரேடியோவில் கேட்டேன். சட்டென்று எனது ஞாபகம் 2001-க்கு சென்றது. அதன் சுட்டியைத்தான் மேலே கொடுத்துள்ளேன்.

பக்திக்கு: ஸ்ரீகிருஷ்ணா சீரியலில் இக்காட்சியின் க்ளிப். ராமானந்த் சாகரின் கிருஷ்ணாவில் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் இதுவும் ஒன்று. அற்புதமாக குழல் வாசிக்கும் ஒருவனிடம் குழந்தை கண்ணன் வருகிறான். குழந்தைக்கு தானும் அதே மாதிரி வாசிக்க வேண்டும் என்ற விருப்பம், அதை அது வெளியிட, அன்புடன் குழந்தையை பார்த்து அந்த மனிதன் குழல் வாசிக்க தேவையான நீண்ட பயிற்சிகளை குறிப்பிட, குழந்தைக்கு பொறுமை இல்லை. பிறகு குழலூதுபவன் சொன்னது போல, தன் குழலை கையில் ஏந்தி பிரார்த்திக்கிறது, “அன்னை சரஸ்வதியே வணக்கம்” என்கிறது. மனதில் புல்லரிப்புடன் அன்னை கலைவாணியும் மேலேயிருந்து குழந்தை கண்ணனை நமஸ்கரித்து “என்ன கட்டளை பிரபோ” என்கிறாள். “அன்னை சரஸ்வதியே! இன்று நீ என் குழலை நினது இசையின் ஸ்வரங்களால் நிரப்புவாயாக” என்று. மேலே சரஸ்வதி தேவிக்கோ மட்டற்ற மகிழ்ச்சி, “தங்கள் சித்தம் என் பாக்கியம் என்கிறாள் கலைவாணி. அவள் தன் கையை மேலே உயர்த்தி அருள் புரிய, கண்ணனின் குழலிலிருந்து மிக இனிமையாக கானம் எழுகிறது. தேவர்கள் மேலிருந்து வணங்குகின்றனர். குழல் கலைஞனோ திகைப்படைந்து கண்ணன் காலில் விழுகிறார்.

5.who is the best Spiritual Motivatator in india/world?
பதில்: என்னைப் பொருத்தவரை விவேகானந்தர்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது