12/31/2004

உலகம் ஒரு கிராமமாகிப் போனது

சுனாமியைப் பற்றி பல வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன். அதை என் வாழ்நாளில் பார்ப்பேன் என்றுக் கனவிலும் கருதியதில்லை.

ஞாயிறன்று சென்னை மற்றப் பிற இடங்களைத் தாக்கிய கோரத்தைக் கண்டு உறைந்துப் போனேன். "நடுங்கு துயர் எய்த" என்று சிலப்பதிகாரத்தில் படித்ததன் பொருள் இப்போதுதான் விளங்கியது.

நான் வசிக்கும் நங்கநல்லூரில் ஒன்றும் உணர இயலவில்லை. டெலிஃபோன் மூலம் செய்தி கிடைக்கப் பெற்று தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கிப் பார்த்த போதுதான் நிகழ்ச்சியின் தீவிரம் உறைத்தது.

திருவல்லிக்கேணியில் வசிக்கும் பாலா அவர்களுக்கு ஃபோன் செய்தேன். அவரிடமிருந்து நேரடித் தகவல் பெற முடிந்தது.

உணர்ச்சிக் கொந்தளிப்பால் என்ன எழுதுவது என்றுப் புலப்படவில்லை. ஆகவே முன்பே எழுதவில்லை.

இதற்கிடையில் proz.com வலை வாசலில் இருந்து சுனாமியில் சிக்கியிருக்கக் கூடிய அவர்கள் உறுப்பினர்கள் சம்பந்தமாகக் கவலைத் தெரிவிக்கப் பட்டது. எனக்கும் சில மின் அஞ்சல்கள் வந்தன. மனதுக்கு மிக ஆறுதலாக இருந்தது.

இணையத்தின் உபயத்தால் உலகமே ஒரு கிராமமாகிப் போனது. வேறு என்னச் சொல்ல?

துயரம் மிக்க இத்தருணத்தில் நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் செயலாற்றுவதே இறந்தவர்கள் ஆத்மாவுக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/22/2004

வெளிப் பகட்டில் நாம் நம்மை இழந்து வருகிறோம்

ஆங்கிலம் தெரிவது மட்டும் புத்திசாலித்தனமா?

பல தமிழ்ப் படங்களில் பார்த்திருக்கிறோம். கதாநாயகன் அப்பாவியாகத் தமிழ் பேசும் வரை கதாநாயகி அவனை மதிக்காமல் கேலி வேறு செய்வாளாம். ஒரு காட்சியில் அவன் ஆங்கிலத்தில் பேசுவானாம். அவள் உருகிப் போய் அவன் மேல் காதல் கொள்வாளாம்.

அடித்துக் கொள்ள ஆயிரம் கைகள் வேண்டும் ஐயா.

மாட்டுக்கார வேலனுக்கு (1970) முந்தையக் காலத்திலிருந்து இதுதான் நடந்து வருகிறது. அப்படியே ஆங்கிலம் பேசும் போது பேன்ட் சட்டை முடிந்தால் கோட் மற்றும் டை கட்டிக் கொண்டு வந்தால் மதிப்பு இன்னும் பல மடங்குக் கூடும்.

பீட்டர் விடுவதும் இந்தப் போலி நாகரிகப் பகட்டிற்குள் (snobbism) அடங்கும்.

தமிழுக்காக உயிர் விடுவதாகப் பீலா விடும் தலைவர் குடும்ப டி.வி. சேனலில் தமிழ்ச் செய்தி வாசிப்பவர்கள் கோட்டு, ஸூட் மற்றும் டையுடன் திவ்யக் காட்சி. வேட்டி சட்டை அல்லது ஜிப்பா அணிந்து வந்தால் நன்றாக இருக்காதோ? இந்தச் சேனலின் எதிரிச் சேனலிலும் இதே கதைதான்.

என்னமோ போங்க. ஆதங்கத்தில் எழுதி விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/13/2004

இன்னொரு அமிதாப் படத்தைப் பற்றி

ஷேக்ஸ்பியரின் ஹேம்லட் நாடகத்தில் ஒரு காட்சி.

கதாநாயகனின் தந்தையாகிய மன்னரை அவர் தம்பியே மன்னர் தூங்கும் போது காதில் விஷத்தை விட்டுக் கொன்று விடுவான். கதாநாயகனின் தாயும் தன் மைத்துனனையே மணந்துக் கொண்டு விடுவாள்.

நாடகத்தின் கடைசிக் காட்சியில் கதாநாயகன் தான் எழுதி புது மன்னனாகியத் தன் சிற்றப்பனுக்குப் போட்டுக் காட்டிய நாடகத்தில் இக்கொலையை நடந்தது நடந்தபடி ஒரு காட்சியில் காட்டுவான்.

வில்லனும் குற்ற உணர்ச்சியில் கதாநாயகனுடன் சண்டையிடுவான். மற்ற விஷ்யங்கள் வழக்கம் போல நடை பெறும்.

அவை நமக்கு இங்குத் தேவையில்லை. குற்ற நிகழ்ச்சியை மறுபடியும் செய்துக் காட்டியதுதான் இப்பதிவுக்கு முக்கியம்.

இதில் அமிதாப் எங்கு வருகிறார் எங்கிறீர்களா? பொறுமை.
"தோ அஞ்சானே" (இரு பரிச்சயமற்ற நபர்கள்) என்னும் படம் 1977-ல் வந்தது.
அமிதாப், ரேகா மற்றும் பிரேம் சோப்ரா நடித்திருந்தனர்.

பிரேம் அமிதாப்பை ஓடும் ரயிலிருந்துத் தள்ளி விடுவார். நல்ல வேளையாக அமிதாப் சொற்பக் காயங்களுடன் தப்பித்து ஒரு பணக்காரரின் வளர்ப்பு மகனாக சில காலம் கழித்துத் தன் சொந்த ஊராகிய கல்கத்தாவுக்கு வருகிறார்.

இதற்கிடையில் அமிதாப்பின் மனைவியான ரேகா பிரேமின் உதவியுடன் ஒரு சினிமா நட்சத்திரமாக உருவெடுத்திருப்பார்.

அமிதாப் அவரிடம் தான் ஒரு சினிமா தயாரிப்பதாகக் கூறி அவரை புக் செய்வார். தன்னுடையக் கதையையே அவரிடம் கூறி ஒரு காட்சியைப் படமும் பிடிப்பார்.

இந்தக் காட்சியில்தான் வில்லன் கதாநாயகனை ரயிலிலிருந்து தள்ளி விடுவான். இக்காட்சியைக் கண்ட ரேகா திடுக்கிடுவார். ஏனெனில் பிரேம் அவரிடம் அமிதாப் கால் தவறி வண்டியிலிருந்து விழுந்து விட்டதாகக் கூறியிருப்பார்.

இப்போது காட்சியமைப்பைப் பார்ப்போம். ஹேம்லட் நாடகம் போலவே இங்கும் காட்சி. ஆனால் ஒரு சிறு வித்தியாசம்.

திரைப்படத்தில் முதலில் வந்த உண்மையானக் காட்சியில் அமிதாப்பும் ப்ரேமும் இந்தியில் பேசிக் கொள்வார்கள். ஆனால் இரன்டாவதாக வந்த ரீப்ளே காட்சியில் பேச்சு முழுக்க பெங்காலியிலேயே இருக்கும்.

இது ஒரு புது மாதிரியான அனுபவம். மிகவும் ரசித்தேன்.

அன்புடன்,
ராகவன்

12/12/2004

யாராவது உதவ முடியுமா?

இந்த ஹேலோ ஸ்கேன் பின்னூட்டத்தில் இரண்டுத் தொல்லைகள் காணப்படுகின்றன.

ஒன்று பின்னூட்டத்தின் அனுமதிக்கப்படும் அளவு. அது மிகவும் குறைவு என்று எனக்குப் படுகிறது. அதன் பலன் நீண்டப் பின்னூட்டங்கள் இரண்டு மூன்று என வெட்டப்பட்டுப் பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன.

இரண்டாவதாக இது பெயரிலிப் பின்னூட்டங்களுக்கு இடம் கொடுக்கிறது. அது விருந்தினர்களுக்கானப் பதிவு எனக் கூறப்படுகிறது. எது எப்படியானாலும் இது தவறாக உபயோகப்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

நான் கேட்கும் உதவிகள் இவைதான்.

1) பின்னூட்டங்களின் அனுமதிக்கப்பட்ட அளவை அதிகரிக்க வேண்டும்.

2) பெயரிலிப் பதிப்பைத் தடுக்க வசதி வேண்டும்.

3) தேவையானல் ஹேலோ ஸ்கேனைச் செயலிழக்கச் செய்ய முடிய வேண்டும்.

இம்மூன்று கோரிக்கைகளும் பார்ப்பதற்கு ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகத் தோன்றினாலும் உண்மை அல்ல என்பதையும் கூறி வைக்கிறேன்.

அத்துடன் இன்னொரு கோரிக்கை. ஹேலோ ஸ்கேன் என் வலைப்பூவில் ரொம்ப நாளைக்கு இருக்காது என்றுத் தோன்றுகிறது. ஆகவே அதைப் பின்னூட்டங்களுக்கு உபயோகப் படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னொரு விஷயம். நான் மும்பையிலிருந்துத் திரும்பும்போது பத்ரி அவர்களிடமிருந்து எனக்குச் செல்பேசியில் ஒரு call வந்தது. வரும் வாரத்துக்கு தினசரி ஒரு முறையாவது பதிவு கொடுக்குமாறுக் கேட்டுக் கொண்டார்.

நானும் அதன்படி முதல் இரண்டு நாட்கள் கொடுத்தேன். பிறகு இன்றுதான் கொடுக்கிறேன்.

காரணம் ஒரு மிகப் பெரிய மொழிபெயர்ப்பு வேலையில் முழி பிதுங்குவதுதான். எது எப்படியிருப்பினும் மற்றப் பதிவுகளைப் படிப்பதில் தொய்வு இல்லை. பின்னூட்டங்களும் கொடுத்து வருகிறேன்.
அன்புடன்,
ராகவன்

12/07/2004

அன்னிய மொழியைக் கற்பதன் பயன்கள்

ஒரு வீட்டில் இரண்டு குட்டி எலிகள் வசித்து வந்தன. அம்மா எலிக்கு டிமிக்கி கொடுத்து விட்டு இரண்டும் ஊர் சுற்றிக் கொண்டிருந்தன.

அப்போது ஒரு கடுவன் பூனை அந்த எலிகளைத் துரத்த ஆரம்பித்தது.

இரண்டும் உயிரைக் கையில் பிடித்து ஓடின.

அப்போது அந்தப் பக்கம் வந்த அம்மா எலி ஒரு ஓரமாகப் போய் ஒளிந்துக் கொண்டு "வள், வள்" என்றுக் குலைத்தது.

பூனை நடு நடுங்கிப் போய் "மியாவ்" என்றுக் கத்திக் கொண்டே ஓடி விட்டது.

அம்மா எலி தன் குட்டிகளிடம் வந்துப் பெருமையுடன் கூறியது:

"அன்னிய மொழியைக் கற்பதனால் என்ன நன்மை என்பதைப் பார்த்தீர்களா?"

12/06/2004

Proz.com powwow

இன்றுதான் மும்பையிலிருந்துத் திரும்பினேன்.
4-ஆம் தேதி அங்கு மொழிபெயர்ப்பாளர்கள் மாநாடு இனிதே நடந்தது.
ப்ரோஜ்.காம் என்ற மொழிபெயர்ப்பாளர்களின் வாசலைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.
சுமார் 50 மொழிபெயர்ப்பாளர்கள் கலந்துக் கொண்டோம்.
தொழிலில் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் அலசப்பட்டன.
இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்த எல்லா முயற்சிகளையும் எடுத்தவர் என்ற முறையில் சந்தியா அவர்கள் ஏகோபித்தப் பாராட்டுகளைப் பெற்றார்.
ஹாரி பாட்டரை குஜராத்தியில் மொழிபெயர்த்த பெண்ம்ணி எல்லோரையும் அசத்தினார்.
75%-க்கு மேல் தொழில் நுட்ப விஷய்ங்களை மொழிபெயர்ப்பவர்கள் ஆகவே விவாதங்கள் அவற்றை ஒட்டியே அமைந்தன.
ஆங்கிலத்திலிருந்து அன்னிய மொழிகளில் (ஜெர்மன், பிரெஞ்சு ஆகியவை) மொழிபெயர்க்கலாமா கூடாதா என்பது பற்றியெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன.
என் முந்தைய ஒரு வலைப் பதிவில் கூறியதையே இங்கும் முன் வைத்தேன். அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இம்மாதிரியானச் சந்திப்புகள் தொழிலுக்கு மிக்க உதவியாக இருக்கும்.

(Please avoid halo scan comments feature for your feedbacks. I am disabling it shortly and I do not want to lose the comments entered therein. Further, the haloscan functionality limits the number of characters in a feedback and it is not nice to see one comment coming in two or more entries. The detailed comments feature is quite fine, I think.)
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது