இது பற்றிய எனது முந்தைய பதிவுராஜநாயகம் அவர்களது பதிவுஎன்றென்றும் அன்புடன் பாலாவின் பதிவுரவி சீனிவாஸ் அவர்களது பதிவுவக்கீல்கள் நடந்து கொண்டது போன்று வேறு யாராவது நடந்திருந்தால் இன்னேரத்துக்கு கம்பி எண்ண வேண்டியிருந்திருக்கும்.
இன்று ஸ்ரீகிருஷ்ணா சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனிடம் இடைக்கால அறிக்கை தந்திருக்கிறார். இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தபோது கிருஷ்ணா அறிக்கைக்கு வக்கீல்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து இந்த அறிக்கையை பரிசீலிக்கப் போவது இல்லை என்றும், ஏற்கனவே சென்னை அக்கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு இருப்பதால், அவர்களே இந்த விசாரணையை தொடருமாறு உத்திரவிடப் போவதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்ததாக டெல்லி சென்றிருந்த வக்கீல்கள் தெரிவித்தனர். தான் இந்த விசாரணையைத் தொடர முடியாது என்றும் ஸ்ரீகிருஷ்ணா அறிவித்து விட்டார் (நன்றி மாலைமுரசு).
சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற கலவரத்துக்கு வக்கீல்களும், போலீசாரும்தான் பொறுப்பு என இடைக்கல அறிக்கையில் ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகிறார் (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் டோண்டு ராகவன்):
“முதல் பார்வையில் எனக்குப் படுவது என்னவென்றால், சென்னை உயர் நீதி மன்றம் இந்த விஷயத்தில் ரொம்ப மென்மையாக நடந்து கொண்டதே ஆகும். தவறான சமிக்ஞைகள் வக்கீல்களுக்கு தரப்பட்டன. அதனால் தாங்கள் கோர்ட் கட்டிடத்துள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்ததாகத் தோன்றுகிறது. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய வக்கீல்களே அதெல்லாம் செய்யாது ரவுடிகள், காலிகள் போன்று நடந்து கொண்டுள்ளது மிகவும் வருந்தத்தக்கதே. கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த விஷயங்கள் தாங்கள் நீதிமன்ற அதிகாரிகள் ஆனதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என வக்கீல்கள் நினைப்பது போல தோற்றத்தைத் தருகின்றன. இவ்விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆக்டிங் தலைமை நீதிபதி மற்றும் நிர்வாகத்தின் மென்மையான அணுகுமுறை தவறான சமிக்ஞையை அனுப்பி வக்கீல்கள் சட்டத்தை மீறச் செய்துள்ளது. அதே சமயம் அரசியல் தளத்தில் இலங்கை விவகாரம், சாதிப் பிரச்சினைகள் ஆகியவையும் நிலைமையை மேலும் சீர்குலைத்தன என்பதிலும் சந்தேகம் இல்லை. முதலிலேயே வக்கீல்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அதாகப்பட்டது, அவர்கள் அரசியல் கருத்துகள் ஏதாக இருப்பினும், அதையெல்லாம் கோர்ட்டுக்குள் கொண்டு வரலாகாது.”
ஐஏஎஸ் அதிகாரிகள் ஸ்டேட்மெண்ட் பாலா அவர்கள் பதிவிலிருந்து:
சென்னை ஐகோர்ட்டு சம்பவம் ஒரு சில வக்கீல்களின் வன்முறையால்தான் உருவானது என்று ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களின் விவரம் வருமாறு:-
அனைவரும் சமம்
சென்னை ஐகோர்ட்டில் நடந்த வன்முறை சம்பவத்தில் காவல்துறையினர் மீது ஊடகங்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருவது எங்களுக்கு வேதனையளிக்கிறது. இந்த விஷயத்தில், நீதிக்கான அடிப்படை கோட்பாடுகளுக்கும், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்ற நியதிக்கும் ஆபத்து வந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
ஒரு சில வக்கீல்களின் வன்முறையால்தான் ஐகோர்ட்டில் மோதல் சம்பவம் நடந்துள்ளது. ஒரு வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட வக்கீல்களை போலீசார் சட்டப்படி கைது செய்ய வந்தபோது சில வக்கீல்கள் எதிர்த்தனர். மேலும் அவர்கள், போலீசார் தங்களது கடமையை செய்யவிடாமல் தடுத்தனர்.
தரக்குறைவான பேச்சு
கடந்த 19-ந் தேதி அன்று பிற்பகல் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களும், வக்கீல்கள் என்ற போர்வையில் சிலரும் சட்டவிரோதமாக கூடி போலீசாரை தரக்குறைவாக பேசியதுடன் அவர்கள் மீது செங்கல், கற்களை வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.
வக்கீல்கள் சட்டவிரோதமாக கூடி இதுபோன்ற வன்முறையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டுள்ளனர். போலீசார் கண் எதிரே வன்முறைக் கும்பல் ஐகோர்ட்டு வளாகத்தில் இருந்த போலீஸ் நிலையத்தை தீ வைத்துக் கொளுத்தியுள்ளது. இந்த கும்பலால் ஏராளமான போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் படுகாயமடைந்தனர். பெண் போலீசார் மானபங்கம் செய்யப்பட்டார்கள். ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள பொதுச்சொத்துகள் போலீசாரின் நடவடிக்கையால் சேதமடையவில்லை. மாறாக வக்கீல்களின் வன்முறை செயல்களால்தான் பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டன என்பதற்கு தேவையான போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளன.
அத்துமீறலை ஆதரிக்கவில்லை
கோர்ட்டு வளாகத்திற்குள் போலீசார் செல்லக்கூடாது என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்படவில்லை. அதற்கு மாறாக, சட்டத்தை நிலை நிறுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும், பொதுசொத்துகள் சேதப்படுத்தப்படுவதை தடுக்கவும் தேவைப்பட்டால் கோர்ட்டு வளாகத்திற்கு போலீசார் செல்லலாம் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அதற்காக போலீசார் அத்துமீறியிருந்தால் அதனையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. இதில் போலீசாரின் நடவடிக்கையை மட்டுமே ஒருதலைப்பட்சமாக பெரிதுபடுத்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டை மதிக்கவில்லை
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட வக்கீல்கள் மட்டும் சுதந்திரமாக பேசியும், பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுக்கிறார்கள். இதனால் ஒருதலைப்பட்சமான செய்திகள் மட்டும் ஊடகங்களில் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், போலீசார் இதுபோல சுதந்திரமாக போராட்டம் நடத்தி தங்களது தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறுவதற்கு நன்னடத்தை விதிகளில் இடமில்லை.
இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி போலீஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வக்கீல்கள் இன்னமும் பணிக்குத் திரும்பவில்லை.
சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் கோர்ட்டுகளைப் போலவே, ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளும் பணியாற்றுகிறார்கள். எனவே, ஐகோர்ட்டு சம்பவத்தில் இருதரப்பினருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்ட வக்கீல்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாடுபட்ட போலீசார் காப்பாற்றப்பட வேண்டும். இந்த சம்பவத்தில், போலீசார் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த சட்ட உதவியும், போதுமான நிதியும் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
ஒப்புதல்
இந்த தீர்மான நகலில், ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பி.ராம்மோகன் ராவ், எஸ்.ராமசுந்தரம், டி.வி.சோமநாதன், டி.என்.ராமநாதன், பி.சிவசங்கரன், எஸ்.தங்கசுவாமி உள்பட ஏராளமானோர் கையெழுத்துப் போட்டுள்ளனர். மேலும், பி.அமுதா, ராகேஷ் காக்கர், கே.ராமலிங்கம், எம்.எஸ்.சண்முகம் உள்பட பல்வேறு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் சங்கத்தின் தீர்மானங்களுக்கு இ-மெயில் மூலம் ஒப்புதல் அளித்துள்ளனர். .
நன்றி: தினத்தந்தி
வக்கீல்கள் ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை புறக்கணிப்பது ஆச்சரியமே இல்லை.
மறுபடியும் கூறுவேன்:
அராஜகம் செய்த போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை தேவை. ஆனால் அதே சமயம் போக்கிரித்தனமாக செயல்பட்ட வக்கீல்கள் யார் யார் என்று தெரியும் நிலையில் அவர்களது சன்னதுகள் பிடுங்கப்பட வேண்டும். இம்மாதிரியான ரௌடிகள் வழக்கறிஞர் தொழிலுக்கே அகௌரவம் விளைவிக்கிறவர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்