4/28/2005

ராஜாஜி என்னும் மாமனிதர் - 3

1952 - 54 பற்றி இன்னும் சில வார்த்தைகள். நான் ஏற்கனவே கூறியபடி, ராஜாஜி முதலமைச்சர் ஆக வேண்டும் என்று காங்கிரஸார் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். அவரும் யோசனை செய்ய ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொண்டார். அவரின் தீவிர ஆதரவாளரானக் கல்கிக்கு அவர் முதல் மந்திரியாவதில் இஷ்டமே இல்லை. ஏனெனில் தலைவரின் உடல் நிலை பாதிக்கப்படும் என்றக் கவலையே அது.
1952 - ல் நாற்பது வருடங்கள் தேசத்துக்காக உழைத்த நிலையில் இருந்தவர் ராஜாஜி அவர்கள். கவர்னர் ஜெனெரல் பதவியே அவரால் கௌரவம் பெற்றது என்றால் மிகையாகாது. எல்லாவித கஷ்டமான வேலைகளும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டன. முதல் பதிவில் அவ்ர் ஒரு குள்ளநரித் தந்திரம் பொருந்திய அரசியல் வாதியாக ஒருவர் பின்னூட்டம் இட்டிருந்தார். 200 சீட்டுகள் இருந்தால்தான் நிலையான அரசு அமைக்க முடியும். காங்கிரஸிடம் இருந்ததோ 152 சீட்டுகள் மட்டுமே. அதையெல்லாம் சமாளிக்க சாதுர்யம் வேண்டும். அவர் அதைப் பயன்படுத்தினார். மனித உரிமை பற்றியும் பேசப்பட்டது. தூக்குமரத்தின் நிழலில் புத்தகத்தை எழுதிய திரு சி.ஏ. பாலன் அவர்களின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அவர் உயிரைக் காப்பாற்றியதில் ராஜாஜி அவர்களின் பங்கு மிகப் பெரியது. அதை பாலன் அவர்கள் தன் புத்தகத்தில் குறிப்பிட்டதை நான் படித்துள்ளேன்.

ராஜாஜி அவர்களால் செய்ய முடியாத காரியம் ஒன்றைப் பற்றி 8, ஜூன் 1952 இதழில் எழுதினார் கல்கி அவர்கள். அதாவது ராஜாஜி மக்களை சினிமா பார்ப்பதிலிருந்துத் தடுக்க முடியாது. இதைத் தவிர அவர் ஏறக்குறைய மற்ற எல்லாவற்றையும் செய்ய முடிந்தது.

அவர் கிட்டத்தட்ட இரண்டு வருடம் பதவியிலிருந்தார். இரண்டாம் வருடத்தில் காங்கிரஸாரிடமிருந்தே எதிர்ப்பு வந்தது. அவரை எதிர்த்துக் கையழுத்து வேட்டை ஆரம்பித்தனர் காங்கிரஸின் அதிருப்தியாளர்கள். டிசம்பர் 1953 - ல் அவர்கள் நேருவை தில்லியில் சந்தித்தனர். அவர் போட்ட சத்தத்தில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று சென்னை திரும்பினர். கையெழுத்துப் போராட்டம் பிசுபிசுத்தது. 1954 - ல் ராஜாஜி அவர்களின் உடல் நலம் திடீரென்று சீரியசாகப் பாதிக்கப்பட்டது. கல்கி முதலானோர் மிகுந்தத் துயரம் அடைந்தனர். ஏப்ரல் 194 - ல் ராஜாஜி அவர்கள் ராஜிநாமா செய்தார். மே 1954 - ல் அவர் பிரேரிபித்த கல்வித் திட்டம் கைவிடப்பட்டது. பற்றற்ற ராஜரிஷி இலக்கியத்தை நோக்கி தன் பார்வையைத் திருப்பினார். அது பற்றி அடுத்தப் பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/27/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 6

மற்றத் தொழில் நிபுணர்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனால் மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு பிரச்சினை உண்டு. தங்கள் விலை என்ன என்றுக் கூறுவதில் சற்றே கூச்சம் அவர்களுக்கு உண்டு. இதனால் பல வாடிக்கையாளர்கள் அவர்களைக் குறைந்தவிலைக்கு ஒப்பந்தம் செய்து விடுகிறார்கள். முழு நேர வேலைகளில் கூட மொழிபெயர்ப்பாளர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். மேலும் ஒரு நிறுவனத்தில் ஆட் குறைப்பு வரும்போது சீட்டுக் கிழிவது அவர்களுக்கே முதலில் நடந்து விடுகிறது. முக்கியமாக, புதிதாக இத்தொழிலுக்கு வருபவனின் மனதில் மிகுந்த கலக்கம் ஏற்படுகிறது. இவை எல்லாம் சேர்ந்து அவன் அகப்பட்ட விலைக்கு ஒத்துக் கொண்டுவிடுகிறான். சாதாரணமாகவே பிறருடன் சேர்ந்து பழகாது அவன் படிப்பதிலேயே காலம் கழிப்பதும் ஒரு முக்கியக் காரணமே. இதையெல்லாம் மீறி ஒருவன் வரும்போதுதான் வெற்றிபெற முடியும். அப்போது எதிர்க்கொள்ளவேண்டியவை வாடிக்கையாளர்களின் சவடால் வாக்குறுதிகளே.

அவற்றை அப்படியே நம்பி விடாதீர்கள். தங்களிடம் ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருப்பதாகவும் நிறைய வேலை கொடுக்க முடியும் என்றும் ஆசை காட்டுவார்கள். ஆகவே குறைந்தவிலைக்கு ஒத்துக் கொள்ளச் சொல்வார்கள். இது அனேகமாக ஒரு உதாராகத்தான் இருக்கும். அவர்களிடம் ஒரே ஒரு வேலை இருந்தாலும் அவ்வாறுதான் கூறுவார்கள். அவர்கள் அக்கறை முடிந்த அளவுக்கு விலையைக் குறைப்பதே ஆகும். இதை நான் என்னளவில் எவ்வாறு கையாண்டேன் என்பதை இப்போது பார்க்கலாம்.

ஆயிரக்கணக்கானப் பக்கங்கள் என்றால் ஒரு முழுநேர மொழிபெயர்ப்பாளனுக்கு ஏற்ற வேலை. ஆனால் எனக்கு முழுநேர வேலையில் நாட்டம் இல்லை. ஆகவே வாடிக்கையாளரிடம் வாரத்துக்கு மூன்று நாட்கள் தினம் 8 மணிநெரம் வாடிக்கையாளர் அலுவலகத்துக்கே வந்து வேலை செய்வதாகவும், மணிக்கு இவ்வளவு ரூபாய் கொடுத்துவிடவேண்டியது என்று நான் முதலில் அடியெடுத்துக் கொடுப்பேன். ஒரு வருட ஒப்பந்தம் போடலாம் என்றும், ஒரு வருடத்துக்கு 156 நாள் அதாவது மாதத்துக்கு 13 நாள் என்று கணக்கு வரும் என்பேன். திடுக்கிடும் வாடிக்கையாளர் உடனே அவ்வளவு நாட்களுக்கு வேலை இல்லை என்று மழுப்புவார். உடனே வாரத்துக்கு இரு நாட்கள், அதுவும் இல்லையென்றால் வாரத்துக்கு ஒரு நாள் என இறங்கி வருவேன். வாடிக்கையாளரால் அதுவும் முடியாது போனால் அவரிடம் மரியாதையாக விலையைக் குறைக்க மறுத்து விடுவேன். பிறகு என்ன, பேரம் வேறு தளத்தில் தொடரும்.

ஒரு வாடிக்கையாளர் என்னிடம் தான் கேட்ட விலைக்கு வேலை செய்ய மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் தயாராக இருக்கும்போது எனக்கு ஏன் அதிக விலை கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அவருக்கெல்லாம் அதே தொனியில்தான் பதிலளிக்க வேண்டும். ஆகவே கூறினேன்: "என்னுடைய விலைக்கு என் மற்ற வாடிக்கையாளர்கள் வேலை கொடுக்கும்போது, உங்களுக்கு ஏன் நான் குறைந்த விலையில் வேலை செய்ய வேண்டும்?" வேலை கொடுத்தார்.

நான் மேலும் கூறுவேன். ஒரு முறை ஒரு வாடிக்கையாளருக்குக் குறைந்த விலைக்கு ஒத்துக் கொண்டு விட்டால், அவரிடம் பிறகு விலையை அதிகரிப்பது மிகக் கடினமே. ஒரு வாடிக்கையாளர் நம்மிடம் திரும்ப வருவதற்கானக் காரணம் நம் வேலை சுத்தம் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும். விலை குறைவு என்பதற்காக அல்ல என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

மேலும் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/25/2005

ராஜாஜி என்னும் மாமனிதர் - 1

1959-ல் ராஜாஜி அவர்கள் சுதந்திரக் கட்சியை திருவாளர்கள் என்.ஜி. ரங்கா மற்றும் மசானி அவர்களுடன் சேர்ந்து நிறுவினார். அப்போது எனக்கு வயது 13. முதலிலிருந்தே நான் அதன் ஆதரவாளன். காங்கிரஸை சுதந்திரத்துக்குப் பிறகு காந்திஜி கலைக்கச் சொன்னார். அதை கேட்கும் மனநிலையில் காங்கிரஸார் இல்லை. உண்மையாகத் தியாகம் செய்தவர்களைப் பின்னுறுத்தி, புதுசாகக் காங்கிரஸில் சேர்ந்தவர்களால் அது பீடிக்கப்படும் என்று அவர் பயந்தார். அவ்வாறே நடந்தது. ஆனால் உடனே இல்லை. அதை எதிர்த்து அதைத் தாமதப்படுத்தியவர்களில் ராஜாஜி முக்கியமானவர்.

போன வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமை கல்கி அலுவலகத்தில் இருந்தேன். 1952 ஜனவ்ரி முதல் 1954-ல் அவர் சென்னை மாகாணத்தின் முதல் மந்திரிப் பதவியை ராஜினாமா செய்தது வரையில் நடந்த விஷயங்களைப் பற்றி கல்கி அவர்களால் எழுதப்பட்ட தலையங்கங்கள் மற்றும் கட்டுரைகளை கூர்ந்து படித்தேன். என்னுடைய ஆறு வயதிலிருந்து எட்டு வயது வரையான இக்காலக் கட்டத்தில் வெறுமே கதைகள் மற்றும் துணுக்குகள் மட்டுமே அச்சமயம் படித்துள்ளேன். இவ்வளவு ஆண்டுகள் கழித்து அவற்றை மீண்டும் படிக்க நேர்ந்ததில் பழைய நண்பர்களைப் பார்ப்பது போல இருந்தது. அரசியல் கட்டுரைகளில் கண்டவையோ எனக்குப் புதியவை. இப்பதிவில் அவற்றைப் பற்றியே பேசுவேன்.

1952 தேர்தல் சென்னை மாகாணத்தைப் பொருத்தவரை காங்கிரஸுக்குத் தலைவலியாகவே முடிந்தது. மொத்தம் 375 இடங்களில் காங்கிரஸ் 152 இடத்தில் மற்றுமே வெற்றி பெற்றது. கம்யூனிஸ்டுகள் கணிசமான வெற்றி பெற்றனர். தனிப்பட்டப் பெரிய கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும் மந்திரி சபை அனைக்கும் நிலையில் அது இல்லை. சுமார் 200 பேர் ஆதரவாக இருந்தால் மட்டுமே மந்திரிசபை அமைக்க முடியும் என்பதுதான் உண்மை நிலை.

மாகாணத்தின் நிதிநிலைமை ரொம்ப மோசமாக இருந்தது. கடந்த 5 வருடங்களாக மழையில்லை. மிகுந்த மண்டைக் காய்ச்சலுக்குப் பின்னால் ராஜாஜி அவர்கள் உதவியைக் கோர முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவரோ கவர்னர் ஜெனெரலாக இருந்தவர். அவர் முதல் மந்திரி பதவிக்கு இறங்கி வர மாட்டார் என்றே பலர் நினைத்தனர். ராஜாஜி அவர்கள் ஒரு நாள் அவகாசம் கேட்டுப் பிறகு ஒத்துக் கொண்டார். கவர்னர் அவரை எம்.எல்.சி. ஆக நியமனம் செய்தார்.

அச்சமயத்தில் கல்கி எழுதியவை சுவையானவை. கல்கிக்கு ராஜாஜி மேல் இருந்த பக்தி எல்லோருக்கும் தெரிந்ததே. 30- 03 - 1952 கல்கி இதழில் அவர் ராஜாஜி அவர்கள் முதன் மந்திரி ஆவது நடவாத வெறும் பேச்சு என்றே எழுதினார். அவருக்கு ராஜாஜியின் உடல் நலத்தைப் பற்றி மிகவும் கவலை. இந்த நச்சுப் பிடித்த வேலையை ஏறுக் கொண்டு எங்கே தன் தலைவர் உடல் நலத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயம். ராஜாஜியிடம் அதே மாதிரி பக்தி வைத்துள்ள என் போன்றவருக்குப் புரியக் கூடிய கவலை அது. எவ்வளவு நல்லது செய்தாலும் காரியம் ஆனவுடன் ராஜாஜி கைகழுவிவிடப்படுவார் என்பதை அவர் உறுதியாக நம்பினார். அவ்வாறே நடந்தது. ஆனல் அவை பற்றிப் பிறகு. அடுத்த இதழிலேயே (6 - 4 - 1952) கல்கி எழுதினார்: "நடவாதது நடந்து விட்டது". தான் கூறியமாதிரி நடக்காததைப் பற்றி பெரு மகிழ்ச்சியடைந்தார். அதுதான் கல்கி.

முதல் நாளிலேயே ராஜாஜி அவர்கள் தன் முழு சக்தியுடன் வேலையை ஆரம்பித்தார். இக்கிழவருக்குள் இவ்வளவு சக்தியா என்று அவர் எதிரிகளே மூக்கின் மேல் விரலை வைத்தனர். அது அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது வேறு விஷயம். என்.ஜி.ஓ.க்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியுடன் அவர் சேவை ஆரம்பித்தது. உணவு மற்றும் அதன் கட்டுப்பாடு, அதில் இருந்த லஞ்ச லாவண்யங்கள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்தார். பிறகு தைரியமாக உணவுக் கட்டுப்பாட்டை நீக்கினார். பிரளயமே வரும் என்னும் அளவில் அதிகாரிகள் பயம் காட்டினர். நேருஜி அவர்களே சிறிது மனக்கலக்கம் அடைந்தார். ஆனால் பின்னால் நடந்தவை ராஜாஜி அவர்கள் முடிவே சரி என்பதை நிரூபித்தன. சென்னை மாகாணத்தின் உதாரணத்தைப் பின்பற்றி மற்ற இடங்களிலும் கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது. கல்கியின் ஆனந்தத்தைப் பார்க்க அப்போதைய அவர் கட்டுரைகளை படிக்க வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் என்னுடைய இப்பதிவைப் படிக்கலாம்.

பதவிக்கு வந்து மூன்று மாதங்களில் தன் மந்திரிசபைக்கு ராஜாஜி அவர்கள் நம்பிக்கை வாக்கு கோரினார் ராஜாஜி. எதிர் கட்சி அங்கத்தினர்கள் மட்டும் முதலில் பேச அழைக்கப்பட்டனர். காங்கிரஸ் தரப்பில் சி. எஸ். அவர்கள் ராஜாஜி அவர்கள் மட்டும் பேசினர். ராஜாஜி ஒன்றரை மணி நேரம் பேசினார். எதிர்த்தரப்பு வாதங்களுக்கு ஆணித்தரமாக பதிலளித்தார். 200-க்கு 151 என்னும் அளவில் நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறியது.

இக்குழப்பங்களுக்கு நடுவில் ஆந்திரப் பிரிவினை பிரச்சினையும் சேர்ந்துக் கொண்டது. "மதறாஸ் மனதே" என்று ஆந்திர சகோதரர்கள் கோஷமிட்டனர். இதைப் பற்றி ஆராயப் புகுந்த நீதிபதி வான்சூ அவர்கள் சென்னையை இரு மாநிலங்களுக்கும் பொதுவானத் தலைநகராக வைக்கப் பரிந்துரை செய்தார். இது மட்டும் நடந்திருந்தால் மிகுந்தக் குழப்பம் நேர்ந்திருக்கும். ராஜாஜி அவர்கள் கடைசி வரை உறுதியாக இருந்தௌ சென்னையைத் தமிழ்நாட்டுக்குக் காப்பாற்றித் தந்தார். அப்போது ஆந்திரப் பகுதிகளில் எழுப்பிய கோஷம்: "ராஜாஜி சாவாலி, ஆந்திர ராஷ்ட்ரம் ராவாலி". என்ன வேண்டுமானாலும் கத்திக் கொள் ஆனால் சென்னை கிடையாது என்று அவர் இருந்த உறுதியால் நேரு மற்றும் மற்ற மத்தியத் தலைவர்கள் சென்னை தமிழ் நாட்டுக்கே என்று முடிவு செய்து அதிகாரபூர்வ அறிக்கை விட்டனர். இவ்விஷயத்தில் ராஜாஜியின் பின்னால் எல்லா தமிழகக் கட்சியினரும் திரண்டு நின்றதையும் இங்கு குறிப்பிட வேண்டும். 05 - 04 - 1953 இதயில் கல்கி இதை "மதறாஸ் நமதே" என்று தலையங்கம் எழுதி வரவேற்றார்.

ராஜாஜி அவர்கள் பதவியேற்ற முதல் வருடத்தில் செய்த சாதனைகள்.

1. அரசியல் குழப்பத்தைத் தடுத்தார்
2. உணவுக் கட்டுப்பாடை எடுத்தார்
3. சென்னையைத் தமிழ்நாட்டுக்குக் காப்பாற்றிக் கொடுத்தார்.

இரண்டாம் வருடம் அவருக்கு கட்சியின் உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு வர ஆரம்பித்தது. அவர் ஆட்சி செய்த போது கட்சிக்காரர்களை அரசு அலுவகத்துக்குள் விடவில்லை. பலரது வளமான வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சும்மா இருப்பார்களா அவர்கள்? இவற்றைப் பற்றி அடுத்தப் பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/22/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 5

நான் பகுதி - 1-ல் ஏற்கனவே கூறியது:"உங்கள் விலை என்ன என்பதில் தெளிவாக இருங்கள். மொழி பெயர்ப்பாளர்கள் பலர் இதில்தான் கோட்டை விடுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை வேலை சுலபமாகவே இருக்கலாம். அவர்களுக்கு மிகவும் பிடித்ததாகவே கூட இருக்கலாம். அதை எல்லாம் வாடிக்கையாளரிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. பிறகு அவர் உங்களுக்கு ஏதோ சலுகை காட்டுவது போலத் தோற்றம் வந்து விடும். இது பற்றிப் பின்னால் மேலும் விவரமாகக் கூறுகிறேன்"

உங்களிடம் ஒரு திறமை உள்ளது, அதாவது மொழிபெயர்ப்பு. வாடிக்கையாளரிடம் அது இல்லை அல்லது இருப்பினும் நேரம் இல்லை. ஆகவே உங்களைக் கூப்பிட்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை நிலை. இப்போது அதற்கான விலை நிர்ணயிப்பதுதான் செய்ய வேண்டும். சில வாடிக்கையாளர்கள் கூறலாம்: "உங்களுக்கு பிடித்த வேலையிது. ஆகவே இதைச் செய்வதற்காக அதிகப் பணம் கேட்பது இக்கலையைக் கொச்சைப்படுத்துவதாக அமையும் அல்லவா?" அதற்கெல்லாம் அசரக் கூடாது. வாடிக்கையாளருக்கு அவர் பணச்செலவைக் குறைப்பதே நோக்கம். இதை நான் மரியாதையாகப் பேசியே ஒரே வாதத்தில் தகர்த்து விடுவேன்: "ஐயா நீங்கள் கலையை ஆராதிப்பவராகவே இருங்கள். நான் ஒரு வியாபாரி, அவ்வளவுதான்." அதற்கு மேல் இந்தத் தடத்தில் எந்த வாடிக்கையாளரும் மேலே செல்ல மாட்டார்கள். ஏனெனில் அவரும் உண்மையில் ஒரு வியாபாரிதானே!

வாடிக்கையாளரின் அடுத்தத் தாக்குதலுக்கு வருவோம். ஒரு 10 பக்கக் கட்டுரையில் சில வாக்கியங்கள் திரும்பத் திரும்ப வரும். முக்கியமாக பேட்டன்டுகளில் பார்க்கலாம். ஒரு விஷ்யத்தையே பல உதாரணங்களுடன் விளக்குவார்கள். மூக்கியமாக பேட்டன்ட் க்ளைம்ஸில் முதலில் சொன்னவை அனைத்தும் வார்த்தை பிசகாமல் அப்படியே வரும். இதை வாடிக்கையாளர் அறிந்து கொண்டால் உடனே திரும்ப வரும் வாக்கியங்களுக்கு பணம் கேட்கக் கூடாது என்பார்கள். ஏனெனில் அவை நமக்கு சுலபமாம். இந்தக் கதை என்னிடம் நடக்காது. ஒரேயடியாக இக்கோரிக்கையை மறுத்து விடுவேன். திரும்ப வரும் வாக்கியங்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு கட்டுரையாக வந்ததை மொழிபெயர்க்க அதற்கான மொத்த விலையும் வேண்டும் என்று கூறி விடுவேன். நான் குறிப்பிடும் விலை ஒரு வார்த்தைக்கு இவ்வளவு என்ற அடிப்படையில்தான். வார்த்தைகளை எண்ண என்றே தனி மென் பொருட்கள் உள்ளன. அதைத்தான் நான் அடிப்படையாக எடுத்துக் கொள்வது. இதிலும் நிலைமைக்கேற்ப மாறுதல்கள் வரும், அவையெல்லாம் இப்போதைய பதிவின் வீச்சுக்கு அப்பாற்பட்டவை. ஆக வாடிக்கையாளரின் இந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்படவேண்டியதே.

அதைச் செய்யும் போதும் வார்த்தைகளில் கடுமையிருக்கக்கூடாது. சிரித்துக் கொண்டே உறுதியாகக் கூறிவிடலாம். அவர் ஒத்துக்கொள்ளவிடினும் சுமுகமாகவே அவ்விடத்தை விட்டு அகலுதல் நலம். அப்போதைக்கில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்?

வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப விலைகளை கோட் செய்வது முக்கியம். உதாரணத்துக்கு ஒரு வாடிக்கையாளர் என்னிடம் 100 பக்கம், மற்றும் 30,000 வார்த்தைகள் உள்ள ஒரு கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதை அவருக்கு வாய்மொழியாகக் கூற வேண்டும் என்றார். இதற்கு வார்த்தை சார்ந்த விலை சொல்ல இயலாது. அவரிடம் நான் இதற்கு ஒரு மணிக்கு இவ்வளவு ரூபாய்கள் என்ற அளவில்தான் பேச முடியும். இம்மாதிரியான நிலைக்கு நான் கோட் செய்வது, மணிக்கு ---- ரூபாய்கள் + போக வர கால் டாக்ஸி கட்டணம் + காப்பி, டீ மற்றும் சாப்பாடு அந்தந்த நேரத்துக்கு, மற்றும் முக்கியமாக குறைந்தப் பட்சமாக இரண்டு மணிநேரத்துக்கு சார்ஜ். வாடிக்கையாளருக்கும் சுமாராக எத்தனை குறைந்தபட்ச செலவு என்பது புரிந்து விடும். எவ்வளவு நேரத்தில் 100 பக்கத்தையும் கவர் செய்ய முடியும் என்பதை முதலிலேயே கூற இயலாது, ஏனெனில் வாடிக்கையாளரின் புரிதலும் நேரம் எடுத்துக் கொள்ளும், அது என் கட்டுப்பாட்டில் இல்லை.

உங்களில் ஒரு சிலர் நினைக்கலாம், இது என்ன இவன் சாப்பாட்டைப் பற்றியெல்லாம் பேசுகிறான் என்று. அதுவும் முக்கியமே. என் நண்பன் ஒருவன் அது பற்றிப் பேசாததால் ரொம்ப லோல் பட்டான். திருச்சிக்கு அழைதுச் சென்றனர் அவனை. வாடிக்கையாளருடன் சேர்ந்து ஒரு ஹோட்டலில் தங்கும்படியாயிற்று. அவனுடைய பில்லை அவனே செட்டில் செய்ய நேர்ந்ததில் அவனுக்கு நிகர நட்டம் ரூ. 200. (இது 1981-ல்). மணிசார்ந்த விலையும் ஒரு அடிப்படையில்தான் கூறவேண்டும். ஒரு மணிக்கு என்னால் எவ்வளவு வார்த்தைகள் எழுத முடியும் என்று பார்த்து அத்துடன் வார்த்தையின் விலையைப் பெருக்கினால் தீர்ந்தது விஷயம்.

மற்றவை அடுத்தப் பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/18/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 4

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 4
மேலே செல்வதற்கு முன்னாலேயே ஒன்றைக் கூறி விடுகிறேன். நான் கூறியவை, கூறவிருப்பவை எல்லாமே எல்லோருக்கும் பொருந்தும். நான் என்னுடைய அனுபவத்திலிருந்துக் கூறுவதால் மொழி பெயர்ப்பு வேலை முன்னிறுத்தப்படுகிறது, அவ்வளவுதான். படிப்பவர்கள் தங்கள் தேவைக்கேற்ப அவற்றை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

நிறுவனத்துக்கு கடிதம் எழுதி அவர்களும் உங்களை அழைத்துள்ளனர். இப்போது நிறுவனத்தினுள்ளே இருக்கிறீர்கள். சிறிது நேரம் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்கள். காத்திருத்தலும் ஒரு கலையே. சிலர் தேவையில்லாது டென்ஷன் அடைகிறார்கள். நகத்தைக் கடிப்பது, அடிக்கடி கடிகாரத்தைப் பார்ப்பது போன்ற சேஷ்டைகள் இருக்கும். அவற்றையெல்லாம் தவிர்க்கவும்.

நான் அவ்வாறு காத்திருக்கும் நேரத்துக்காகவே கையில் ஒரு குண்டு புத்தகம் எடுத்துச் செல்வேன். நான் பாட்டுக்கு படித்துக் கொண்டிருப்பேன். நேரம் போவதே தெரியாது. அவ்வாறு படித்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் என்னப் பேச வேண்டும் என்பதை மனத்துக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பேன். நிர்வாகி எம்மாதிரியெல்லாம் கேள்விகள் கேட்பார், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்றும் யோசிப்பேன். நானே சில ஓபனிங்குகளைக் கொடுத்துப் பேச்சுவார்த்தையை ஒரு மாதிரி என் கட்டுக்குக் கீழே கொண்டு வர ஏற்பாடு செய்வேன்.

நிறுவனத்தில் இருக்கும் சூழ்நிலையையும் பார்க்க வேண்டும். யாரைப் பார்த்துப் பேச நேரினும் ஒரு புன்னகையுடன் பேச்சைத் துவங்கல் நலம். அது ரிஷப்ஷனிஸ்டாகக் கூட இருக்கலாம். நிறுவனத்துடன் வேலைத் தொடர்பைப் பெற்றப் பிறகு, எல்லார் தயவும் தேவைப்படும். ஆகவே சுமுகமாக இருப்பதை முதலிலேயே துவங்கல் நலம்.

இப்போது அலுவகங்களில் புகை பிடிப்பது அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் எண்பதுகளில் நிலை வேறு. நிர்வாகி சிகரெட்டை ஆஃபர் செய்தால் முதல் தடவை நான் மறுப்பதில்லை. இதற்காகவே என்னுடைய சிகரெட் கோட்டா 12 - ஒரு வருஷத்துக்கு. அவர் சிகரெட்டை நீட்ட அதை ஏற்றுக் கொண்டாலே ஒரு சுமுக உறவு ஏற்படுகிறது. இதில் ஒரு சூட்சுமம் உள்ளது. சாதாரணமாக சிகரெட் புகைப்பவர்கள் அதை எப்படியாவது விட வேண்டும் என்ற அழுத்தத்தில் இருப்பார்கள். அப்போது நான் சிகரெட்டே பிடிப்பதில்லை என்று கூறினால் தேவையில்லாது அவரை நான் மட்டம் தட்டுவதாகத் தோன்றலாம். அதனால் எதற்கு வம்பு? இப்போதெல்லாம் அவ்வாறு நிர்ப்பந்தம் வருவதில்லை என்பதில் சந்தோஷம்.

நிர்வாகி சொலவதை கவனமாகக் காது கொடுத்துக் கேளுங்கள். நிறுவனத்தின் தேவை என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் அளிக்க வேண்டிய சேவைகளைப் பற்றி நம்பிக்கையுடன் பேச முடியும்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டப்படி பல நேரத்தில் தலைமை நிர்வாகி எப்படி ஒருவன் பொறியாளனாக வேலை செய்து கொண்டே மொழிபெயர்ப்பாளனாகவும் செயல்படுகிறான் என்பதை அறிய ஆவலாக இருப்பார். பொறியாளனின் மொழி அறிவைப் பற்றி எங்குமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. தவறானக் கண்ணோட்டம்தான், ஆனால் பலருக்கு இந்த அபிப்பிராயம் உண்டு என்று நான் கூறினால் நீங்கள் நம்புவதை தவிர வேறு வழியே இல்லை. ஆகவே தவறின்றி ஆங்கிலத்தில் உரையாட வேண்டும். சிறு விஷயம் என்று எதையும் அலட்சியப்படுத்தக் கூடாது. எல்லாம் சேர்ந்துதான் உங்களுக்கு ஆதரவான நிலை உருவாக வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

வேலையை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலநேரத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். வாடிக்கையாளருக்கு எப்போதுமே அவசரம்தான். எப்போது வேலையை முடிக்க வேண்டும் "நேற்றைக்கு" என்று பதில் வரும். உங்களால் முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே ஒத்துக் கொண்ட மற்ற வேலைகளை மறக்கக் கூடாது. அதற்காக இப்போது முரட்டுத்தனமாகப் பேசக்கூடாது. மறுப்பை நாசூக்காக்த் தெரிவிக்க வேண்டும். நான் செய்வது என்ன? எப்போதுமே சற்று முன்சாக்கிரதையுடனேதான் செயல் படுவேன். ஆகவே தேவையானால் அட்ஜஸ்ட் செய்ய முடியும். ஒரு முறை இவ்வாறு அவசரம் என்று கூறியவரிடம் "ஐயா, என்னால் 10 நாட்களில் வேலையை முடிக்க முடியும். நீங்கள் ஒரு வாரத்திலேயே கேட்கிறீர்கள். ஆகவே அதிக நேரம் உழைக்க நேரிடும். உங்களுக்கான விலை 50% அதிகரிக்க வேண்டியிருக்கும், பரவாயில்லையா?" என்று கேட்க, அவரோ அவசரமாக "10 நாட்களே எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார். அவ்வளவுதான் விஷயம். ஆனால் ஒன்று. ஒத்துக்கொண்ட நேரத்துக்குள் வேலையை முடித்துத் தரவேண்டும். இதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது.

புது வாடிக்கையாளருடன் ரேட் பேசும்போது மிகக் கவனம் தேவை. இதைப் பற்றிப் பின்னால் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/17/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 3

எதை எழுத வேண்டும் அல்லது கூடாது, எப்படி எழுத வேண்டும் அல்லது கூடாது என்பவை மிக முக்கியம். நான் முதலில் கூறியபடியே அனேகமாக எப்போதும் எழுதுவேன். இருந்தாலும் மாறுதலுக்காகச் அவ்வப்போது சிறிதே மாற்றியிருக்கிறேன்.

உதாரணத்துக்கு ஒரு கடிதத்தில் நான் முதலில் பொறியாளன் என்பதைக் குறிப்பிட்டுப் பிறகு மொழிபெயர்ப்பாளர் என்பதை எழுதினேன். பின் நடந்தது என்ன? எனக்கு வந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

"ஐயா, எங்கள் நிறுவனத்தில் விற்பனைப் பொறியாளராகச் சேர நீங்கள் அனுப்பியக் கடிதம் சம்பந்தமாக" என்று இருந்தது. இது என்னடா கஷ்டம் என்றுதான் முதலில் நினைத்தேன். இருந்தாலும் தலைமை நிர்வாகியைச் சந்தித்தேன். அவரிடம் விஷயத்தை எடுத்துக் கூற அவர் சிரித்தார். மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது பற்றி ஒரு தெளிவு நிலை அடைந்தேன்.

சுருக்கமாகக் கடிதம் எழுத வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் சொல்ல நினைப்பது அத்தனையும் கடிதத்தில் இருக்க வேண்டும். அவையும் பெறுநரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும். அவர்தம் தேவைகளைப் பற்றி எழுத வேண்டும். தலைமை நிர்வாகிக்கே எழுத வேண்டும். தட்டச்சிடவில்லை நான். என் கடிதங்கள் அதனால் ஒரு தனித்தன்மை பெற்றன. தில்லியில் 2001 ஜூலை வரை இருந்தேன். எல்லா மொழிபெயர்ர்ப்புகளும் கையாலேயே எழுதப் பட்டன. அங்கிருந்த கடைசி கட்டத்தில் மொழி பெயர்ப்புகள் கையெழுத்திலேயே கொடுக்கப்பட்டன. இம்மாதிரி ஆயிரக்கணக்கானப் பக்கங்கள். ஆகவே என் கையெழுத்து நல்லத் தோற்றம் பெற்றது.

நல்லது. உள்ளே நுழைந்து விட்டீர்கள். தலைமை நிர்வாகி எதிரில் உள்ளீர்கள். மேலே? அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/16/2005

நட்சத்திரக்குறியீட்டை எவ்வாறு பொருள் கொள்வது?

உதாரணத்துக்கு ஒரு பதிவு 0/100 என்று குறிப்பிடப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். இது கூறுவது என்ன? 50 பேர் ஆதரித்து, 50 பேர் எதிர்த்து ஓட்டுப் போடப்பட்டதாகப்படுகிறது. முதலில் ஒரு ஓட்டு ஆதரவாகப் போட்டால் ஸ்கோர் 1/1 என்று வருகிறது. அடுத்த ஓட்டு எதிர்ப்பாக போடப்பட்டால் ஸ்கோர் 0/2 ஆகிறது. இதன் லாஜிக் புரியவில்லை. 1000-ல் 500 பேர் ஆதரவு, 500 பேர் எதிர்ப்பு, ஸ்கோர் 0/1000. அபத்தமாக இல்லை?

இங்கிலாந்தில் க்ளப்புகளில் புது உறுப்பினரை தேர்வு செய்யும்போது இரண்டு வர்ணஙள் உடையப் பந்துகளை உபயோகிப்பார்கள். அவற்றில் ஒரு வர்ணம் கறுப்பு. புது அங்கத்தினர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது. அதற்கு இரட்டை மதிப்பு. அவ்வாறு செய்வதை "blackballing" என்பார்கள். அதைத்தான் இங்கும் பின்பற்றுகிறோமா? யாராவது விளக்குவார்களா? ஸ்கோரின் பின்னத்தில் மேலே ஆதரவு வோட்டையும் கீழே மொத்த வோட்டையும் போடுவதுதானே முறை? Or vice versa?

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/15/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 2

நான் கூறும் ஆலோசனைகள் யாவையும் சொந்த முறையில் தொழில் செய்பவருக்கே. நீங்கள் ஒரு நிறுவனத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரிந்தால் வேலை உங்களை நாடி வரும். நான் ஐ.டி.பி.எல்லில் முழுநேர பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளராக இருந்ததைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

வாடிக்கையாளர்களை எங்கெல்லாம் பிடிக்கலாம்? எங்கிருந்து வேண்டுமானாலும் என்பதே என் பதில்.

1982. ஹிந்துஸ்தான் டைம்ஸைப் புரட்டிக் கொண்டிருந்தேன். வேலை வாய்ப்புகள் பகுதியை மேய்ந்து கொண்டிருந்தேன். அதில் ஒரு நிறுவனத்துக்கு அக்கௌண்டன்ட் வேலைக்கு ஆள் கேட்டு விளம்பரம். அதில் நான் பார்த்தது என்ன? அது ஒரு ஜெர்மானிய ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்துக்கானது என்பதே. ஷ்யாம் ஆன்டென்னா என்பது நிறுவனத்தின் பெயர். ஒரு இன்லேண்ட் லெட்டரை எடுத்தேன். அதில் தலைமை நிர்வாக அதிகாரி என்று விலாசமிட்டு ஒரு கடிதம் கையால் எழுதினேன். தட்டச்சிடவில்லை. என்ன ஆச்சரியம். உடனே பதில் வந்தது. போய் பார்த்தேன். வேலை கொடுக்கப்பட்டது. திரும்பத் திரும்ப வேலை கொடுத்தார்கள்.

இந்திய அரசு அனுமதிக்கும் வெளிநாடுகளுடனான கூட்டு முயற்சிகள் ஒரு அரசு மாதப்பதிப்பில் வரும். அதிலிருந்து ஜெர்மன், ஃபிரெஞ்சு மொழி பேசும் நாடுகளுடன் கூட்டு முயற்சி அனுமதிக்கப்பட்ட, தில்லியில் உள்ள நிறுவனங்களின் பெயரை எடுக்க வேண்டியது. சம்பந்தப்பட்டத் தலைமை நிர்வாகிகளுக்கு எழுதுவது, போய் பேசுவது, வேலை கிடைத்தால் ஒழுங்காகச் செய்வது எல்லாம் கனவு போலவே நடந்தன.

இன்னொரு முறை, கண்ணையும் காதையும் தீட்டி வைத்துக் கொள்வது. யாராவது அறிமுகமானால் அவர்கள் வேலை செய்யும் கம்பெனியைப் பற்றி விசாரிப்பேன். அந்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளுடன் கூட்டு முயற்சிகள் உண்டா என்றுத் தெரிந்துக் கொள்ள முயற்சிப்பேன். தேவையானால் ஒரு கடிதத்தை அனுப்புவேன். பிறகு எல்லாம் வழக்கம் போல. இந்தோ-ஜெர்மானிய மற்றும் இந்தோ-ஃபிரெஞ்சு வணிக அமைப்புகளுக்குப் போய் தில்லியில் நிலைகொண்டிருக்கும் அவற்றின் உறுப்பினர்கள் பட்டியலைத் தயாரிப்பது கூட இவ்வேலையில் அடக்கம்.

எல்லாம் சரி, புது வாடிக்கையாளருக்கு அனுப்பும் முதல் கடிதத்தில் என்ன எழுதுவது? கடவுள் அருள் என்றுதான் கூற வேண்டும். நான் 1982-ல் எழுதிய முதல் கடிததின் உள்ளடக்கமே இப்போது நான் எழுதும் கடிதங்களிலும் ஏறக்குறைய அப்படியே உள்ளது. சிறிய மாற்றங்கள் வேண்டுமானால் உண்டு, அவ்வளவுதான். ஒரு மாதிரிக் கடிதத்தைப் பார்ப்போமா? இது 1982-ல் ஷ்யாம் ஆன்டென்னாவிற்கு எழுதப்பட்டது.

ஐயா,
பொருள்: ஜெர்மானிய, பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வேலைகள்
நான் சொந்த முறையில் தொழில் புரியும் ஒரு ஜெர்மானிய/பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளன் மற்றும் துபாஷி. இம்மொழிகளில் எனக்கு 7/4 வருடங்கள் அனுபவம் உண்டு. நான் கடந்த 11 வருடங்களாக ஒரு மின்பொறியாளனாகவும் பணி புரிகிறேன். ஆகவே நான் தொழில்நுட்பக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன்.

ஜெர்மானியக் கம்பெனியுடன் கூட்டு முயற்சி வைத்திருக்கும் உங்களுக்கு என் சேவை அடிக்கடித் தேவைப்படும் என்று நான் உறுதியாக எண்ணுகிறேன். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். நாம் மேற்கொண்டு பேசலாம்.

அன்புடன்,
ராகவன்.

ஒரு விஷயம். அப்போது என்னிடம் தொலை பேசி கிடையாது. ஆகவே எல்லாமே கடிதம் மூலம்தான். தொலைபேசி தொடர்பு கிடைத்ததும் அதையும் கடிதத்தில் குறிப்பிட ஆரம்பித்தேன்.

1982 விஷயத்துக்கு மறுபடி வருவோம். என்னைக் கூப்பிட்ட அந்த நிறுவனத்தின் தலைவர் என்னுடன் பேசும்போது நான் எழுதியக் கடிதத்தில் அவரை எது கவர்ந்தது என்பதைக் குறிப்பிட்டார். "பொறியாளராகத் தொழில் புரியும் ஒரு நபர் மொழிபெயர்ப்பாளராகவும் இருப்பதில் அவர் மிக வியப்பை அடைந்தார். அப்படிப்பட்ட ஒருவரை நேரில் காணவே என்னை முக்கியமாக அழைத்ததாகக் கூறினார். எந்தக் காரணமாக இருந்தால் என்ன? போனதில் வேலை கிடைத்தது. நான் தில்லியில் இருந்தவரை அவர் பல முறை வேலை கொடுத்தார்.

என்ன எழுதக் கூடாது என்பதையும் பார்க்க வேண்டும். அதையும் என் அனுபவத்திலிருந்தே அடுத்தப் பதிவில் கூறுவேன். வாடிக்கையாளரிடம் முதலில் என்ன பேசுவது, என்ன பேசாக்கூடாது என்பதையும் அதில் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது