கடந்த ஒருவாரமாக மனதில் ஒரு போராட்டம். அது என்ன என்பது தமிழ்மண பக்கங்களை இந்த காலக் கட்டத்தில் பார்த்தவர்களுக்கு புரியும்.நானாக தேடிக் கொண்டதுதான் அது என்பதை முதற்கண் கூறிவிடுகிறேன். திடீரென முரளி மனோஹர் வெளிப்பட்டு விட்டான். நல்ல வேளையாக அவன் தேவை இனிமேல் இல்லை என்ற நிலையெடுத்து எனது வலைப்பூவில் மாறுதல் செய்து கொண்ட அடுத்த நாள். எனக்கு ஆதரவளிக்கவே நான்
இந்தப் பதிவில் கொடுத்த ஆலோசனையின்படி வந்த நண்பர்களின் ஆலோசனை பெற்று கொண்டு செய்த முடிவு அது. அதற்கு முன்னால் முரளி மனோஹர் வெளியே வந்திருந்தால் கதை கந்தர கோளமாக ஆகியிருக்கும். நல்ல வேளை.
இப்போது டோண்டு ராகவனது மூன்றாம் யோம் கிப்பூருக்கு செல்லும் முன்னால் சில வார்த்தைகள்.
சமீபத்தில் 1962-ல் வெளிவந்த "ஆலய மணி" படத்தை இன்றும் கூட யாரும் மறக்கவில்லை. அப்போது பிறந்திராதவர்களின் குழந்தைகள் கூட இப்படத்தின் பாடல்களை இன்றும் விரும்பி கேட்கின்றனர். முதலில் அதை இங்கு முழுமையாக போடுகிறேன்.
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா
பாதி மனதில் தெய்வம் இருந்து
பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து
ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று
அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில்
கோயில் கொண்டதடா
ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா
தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா
எறும்புத்தோலை உரித்துப் பார்க்க
யானை வந்ததடா - நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க
ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்
இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி
வந்து விட்டதடா!
என்ன அருமையான பாடல், சிம்மக்குரலோன் சிவாஜியின் நடிப்புடன்! சகபதிவர் SP.VR.சுப்பையா அவர்கள் இப்பாடல் பற்றிய
இந்த அருமையான பதிவுக்கும் நன்றி. இப்பாடலில் வரும்
ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா
தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா
என்ற அடிகளே இப்பதிவின் அடிப்படை. இதுவும் கடந்து போகும் என்றாலும், அது நல்லபடியாக கடந்து போக வேண்டாமா. அந்த வேலையில்தான் எனது வலைப்பூ நண்பர்கள் சிலர் குதித்தனர்.
தமிழ்மணம் நன்கு அறிந்த ஒரு பதிவர் முந்தாநேற்று திடீரென சேட்டில் வந்தார். அருமையான ஆலோசனை தந்தார். அதிலும் இந்த சேட் அனுபவம் வேறு வகையிலும் புதிதாக இருந்தது. அவர் பேச நான் ஸ்பீக்கர் மூலம் கேட்டேன். ஆனால் என்னால் மைக்கை என்னுடைய தட்டுமுட்டு சாமான் குவியலிலிருந்து கண்டு பிடிக்க இயலவில்லை. ஆகவே அவர் இன்னொரு ஆலோசனை தந்தார். தான் பேசுவதாகவும், நான் தட்டச்சு செய்து பதிலளிக்கலாம் என்பதுதான் அது. அவர் தந்த ஆலோசனையும் இந்தப் பதிவுக்கு ஒரு காரணம். அவருக்கு என் நன்றி.
நேற்று பிற்பகல் இன்னொரு பதிவர் வந்து அதே ஆலோசனையைத் தந்தார். அவருக்கும் என் நன்றி. அதைவிட முக்கியம் எதிர்த்தரப்பில் இருந்தாலும் என்னிடம் அன்பாக பழகிய ராஜா வனஜ் அவர்களிடம் வெற்றிகரமாக எனது நிலையை சொல்லி அவரது மனவருத்தத்தை போக்கியது ஆகும். அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது கடைசியில் 'எனது கார்' வலைப்பதிவர் மீட்டிங்கிற்கு என்னை அழைத்து செல்ல எப்போது வேண்டுமானலும் வரலாம் எனக் கூற வெடிச்சிரிப்புடன் முகமன் கூறி போனை வைத்தார். இந்த முழு முரளி மனோஹர் விவகாரத்தில் எனக்கு மிக வருத்தம் அளித்தது இந்த மனவேற்றுமைதான். அதுவும் சற்று பொறுமையுடன் செயல்பட்டதின் மூலம் தீர்த்து கொண்டது நான் போடவிருக்கும் இந்தப் பதிவை உடனே போடும்படி செய்துள்ளது. நல்ல காரியத்தை தள்ளிப் போடுவானேன். இந்த விஷயத்தில் நான் முரளி மனோஹராக இருந்து செல்வன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் போட்ட பின்னூட்டத்தை அப்படியே தேவையான சுட்டிகளுடன் தனது ஜிமெயிலில் வந்ததை எனக்கு அப்படியே நான் கேட்டு கொண்டதின் பேரில் அனுப்பி வைத்தார். அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து செல்வன் அவர்களுடைய மின்னஞ்சல் ஐடியை மட்டும் மறைத்து (சூடு கண்ட பூனை) நான் ராஜா வனஜுக்கு அனுப்பித்ததுநிலைமை சரியாக பெரிதும் உதவியது. அந்தச் சொல்லின் செல்வனுக்கும் நன்றி.
(சீக்கிரம் விஷயத்துக்கு வருமாறு முரளி மனோஹர் கூச்சலிடுகிறான்). இதோ வந்தேன்.
முதற்கண் என்னால் மனவருத்தம் அடைந்தவர்கள் எல்லோரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். முக்கியமாக எனக்கு பிரச்சினை ஆரம்பித்ததிலிருந்து பின்னூட்டம் இட்டு அதனால் அசிங்கமாக தாக்கப்பட்டவர்கள் என்னை மன்னிக்குமாறு கேட்டு கொள்கிறேன். அவற்றில் முக்கியமானவர்கள் கோபமான இளைஞன் முத்துக்குமரன், பதிவர் தமிழச்சி, நாமக்கல் சிபி (என் வருத்தத்தை உணர்ந்து ஒரு பதிவையே எடுத்தவர்), செந்தழல் ரவி (அடையாறிலிருந்து ட்ரைடெண்ட் ஹோட்டல் வரை நான் எனது காரில் செல்லும்போது என்னிடம் தொலைபேசியில் எஸ்.டி.டி. பேசியவர்), டி.பி.ஆர்.ஜோசஃப், லக்கிலுக், பால பாரதி, என்றென்றும் அன்புடன் பாலா (என் நண்பன் கிருஷ்ணன் என்னும் செர்வாண்டஸ் செய்த ஒரு அசட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்), துளசி மேடம், ஜெயராமன், ஓகை, மரபூரார், தன் விடாத முயற்சியால் என்னை போலியிடமிருந்து காப்பாற்றிய முத்து தமிழினி (
அவர் பற்றிய பதிவு படித்திருப்பீர்கள்) ஆகியோர்.
அழையா விருந்தாளியாய் நான் வந்து என்னால் படுத்தப்பட்ட வரவனையானும் என்னை மன்னிக்க வேண்டும். மிதக்கும் வெளியிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.
எனக்காக மெனக்கெட்டு களத்தில் வந்த நாட்டாமை, தினகர், அறவாழி அந்தணன், வெங்கடேஷ் ஷர்மா, பிரகாஷ், நெப்போலியன், புதியவன், வரதன் ஆகியோருக்கும் நான் மிக்க கடமைப்பட்டவன். யாராவது விட்டு போயிருந்தால் அது எனது ஞாபகசக்தியின் குறைபாடு என்று எண்ணி மன்னிக்கவும்.
மாசிவகுமாருக்கு தனிப்பட்ட நன்றி. அவர் நான் சரியான மனப்பக்குவத்துடன் இருந்த சமயத்தில் சொன்ன ஆலோசனைதான் முதல் யோம் கிப்பூர் பதிவுக்கு காரணம் என்பதையும் இவ்விடத்தில் கூறி விடுகிறேன்.
சாதி பற்றி நான் எழுதிய
இப்பதிவின் முதல் பாதியை கிட்டத்தட்ட எல்லோரும் ஏற்று கொண்டனர். ஆனால் அத்துடன் நில்லாது கலப்புத் திருமணத்தை எதிர்த்து சில கருத்து வெளியிட்டது ஒரு புயலைக் கிளப்பியது. பாரத சமூகத்தை பிரிக்கும் விதமாக எந்த முயற்சியும் செய்யக்கூடாது என்பதை தங்கள் பதிவுகளின் மூலம் உணர்த்திய அரவிந்தன் நீலகண்டன், ஐயன் காளி ஆகியோரது கருத்தை ஏற்று, இனி இம்மாதிரி சாதி உணர்வை பற்றி எழுதியே ஆகவேண்டும் என்னும் பட்சத்தில் ரொம்பவும் டிஸ்கிகள் போட்டு எழுதவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். அளவுக்கு மீறி ஒரு பதிவில் டிஸ்கிகள் போட வேண்டியிருந்தால் அதற்கு அப்பதிவையே கைவிடுவதும் உத்தமமே. (அது சம்பந்தமாக வேறு பதிவர் யாராவது போடும் இடுகையில் பின்னூட்ட கும்மி அடித்தால் போயிற்று - "டோண்டு இப்போதாவது சீரியசாக இருடா என்று கூறுவது முரளி மனோஹர்).
கடைசியாக, ஆனால் முக்கியமாக, வளர்ந்த குழந்தையாக (நன்றி மாசிவகுமார்) செயல்பட்டு, தமிழ்மணம் யுத்த பூமியாக மாறுவதற்கு காரணமாக இருந்து படுத்திய இந்த டோண்டு ராகவனை முதலிலிருந்தே சகித்து வந்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கு எனது மனப்பூர்வ நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
இப்போது மேலே என்ன?
பல விஷயங்களில் கருத்து சொல்லி எனது நிலையை தெளிவாக்கி விட்டேன். அக்கருத்துக்களில் மாற்றம் இல்லை. ஆனால் இனிமேலும் அதை சொல்லித் திரிய வேண்டாம் என்றே நினைக்கிறேன். ஆகவே இனிமேல் நடேசன் பூங்காதான். டோண்டு ராகவையங்காரும் வரமாட்டான் (ஓசை செல்லா அவர்கள் கவனிக்க).
ஆனால் டோண்டு ராகவன் மட்டுமே வந்து ஹைப்பர் லிங்குகள் எல்லாம் போட்டு தீவிரமாகப் படுத்துவான். இஸ்ரேல், ராஜாஜி, சோ, வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை ஆதரவாளன் டோண்டு ராகவனும் அப்படியே இருப்பான். வாடிக்கையாளர்களை படுத்தும் டோண்டு ராகவன் வேறெங்கே செல்ல முடியும்.? வாடகைக் கார் முதலாளிகள் எனது பதிவுகளைப் படிக்காது மன அமைதியுடன் இருப்பார்களாக. லாலு ப்ரசாத் யாதவும் பயப்பட வேண்டாம். புதிர்கள் பலவும் போடும் டோண்டு ராகவன் அப்படியே இருப்பான் என்பதை கூறவும் வேண்டுமோ.
ஆனால் ஒரு விஷயம். எந்தப் பழைய பதிவுகளையும் இப்போது எடுக்கும் முடிவுகள் காரணமாக திருத்தவோ நீக்கவோ போவது இல்லை. சொன்னவை சொன்னதுதான். வில்லிருந்து விடுபட்ட அஸ்திரங்களை பெறுவது அர்ஜுனனால்தான் முடிந்தது. அஸ்வத்தாமனால் முடியவில்லை. நான் இந்த விஷயத்தில் அஸ்வத்தாமா. அடேடே பரவாயில்லையே இந்த அர்ஜுன அஸ்வத்தாமன் கதையையும் பதிவாக பிற்காலத்தில் போடலாமே.
அவை எனது பழைய அணுகுமுறையால் உருவானவை.அப்படியே ஃப்ரீஸ்தான். சரித்திரத்தை ஏன் திருத்த வேண்டும்? வேண்டாத வேலை. அவை எனது அசட்டுத்தனத்துக்கு சான்றாக அப்படியே இருக்கட்டும்.
இப்போது கூற நினைத்ததையெல்லாம் கடந்த இரண்டு மணி நேரம் மனம் விட்டு கூறியதால்,
ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா
தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா
அன்புடன்,
டோண்டு ராகவன்