ராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ராவணனை பீடிக்க ஆரம்பிக்கின்றன. அவனது அஸ்திரங்கள் ஒவ்வொன்றாகத் தீர்ந்துபோக, அவன் கிரீடமும் ராமர் விட்ட அம்பால் கவர்ந்து போக செய்வதறியாது நிற்கிறான். என்னதான் தவறிழைத்திருந்தாலும் சுத்த வீரனல்லவா. ஓடாமல் நிற்கிறான். அதே சமயம் ராமரும் சாமான்யமானவரா? பகைவனுக்கே அருள்பாலிக்கும் திருமாலின் அவதாரமல்லவா? அப்போதே நினைத்திருந்தால் நிராயுதபாணியாக நின்ற ராவணனை கொன்றோ சிறையெடுத்தோ யுத்தத்தை முடித்திருக்கலாம். ஆனாலும் அவ்வாறு செய்யவில்லை அக்கோதண்டபாணி.
"நீ களைத்திருக்கிறாய். இப்போது உன்னுடன் யுத்தம் செய்தல் ஆகாது. ஆகவே நீ போய் ஓய்வெடுத்து, இன்று போய் நாளை வா" எனக் கூறுகிறான் தசரத மைந்தன், சீதாராமனாகிய காகுத்தன். இவ்வாறு தன்னை அனுப்பித்ததற்கு பதில் தன்னைக் கொன்றே போட்டிருக்கலாமே என்று மனம் நொந்த நிலையில் அரண்மனை திரும்புகிறான் தசகண்டன் ராவணன். அன்றிரவு அவன் இருந்த மனநிலையைத்தான் "கடன்பட்டார் நெஞ்சம் போல..." என்று கம்பர் அவ்வளவு அழகாக வர்ணிக்கிறார்.
சமீபத்தில் 1959-ல் வந்த "சம்பூர்ண ராமாயணம்" படத்தில் ராமராகிய என்.டி.ஆர். ராவணனாகிய பகவதியிடம் இவ்வாறு கூற பகவதியும் அன்றிரவு சிவனை நோக்கிப் பாடுகிறாரே, "இன்று போய் நாளை வாராய், என எனை ஒரு மனிதனும் புகலுவதோ" என்று. ஞாபகம் இருக்கிறதா? "மண்மகள் முகம் கண்டேன் மனம் கலங்கிடும் நிலை இங்கு ஏன் கொடுத்தாய், ஈஸா" என்றும் பிரலாபிக்கிறானே எண்திசையும் முன்னர் ஒரு முறை வென்ற ராவணன். அக்கட்டத்தைத்தான் கம்பர் "கடன்பட்டார் நெஞ்சம் போல..." என்று விவரிக்கிறார்.
அது என்ன கடன்பட்டார் நெஞ்சம்? அதற்கு கம்பரின் காலக் கட்டத்தைப் பார்க்க வேண்டும். அப்போதெல்லாம் சோழ நாட்டில் ஒரு வழக்கம் இருந்தது. அதாவது வாங்கிய கடனை கட்ட முடியாதவர்களை சுற்றி கடனளித்தவர் பொதுவிடத்தில் ஒரு வட்டம் வரைந்து விட்டுச் சென்று விடுவார். கடனைத் தரும்வரை அவர் அக்கட்டத்தை விட்டு வெளிவர இயலாது. அரசனாயிருந்தாலும் அதே கதிதான். ஆனால் ஒன்று இது கடனைத் திருப்பிப் பெற எல்லா முயற்சிகளும் தோற்றபிறகே கடனளித்தவர் செய்யும் காரியம்.
அதற்கு ஆளாகும் கடன்காரர்கள் இறந்ததற்குச் சமம். அப்படிப்பட்ட கடன்பட்டவர் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்ப நாட்டார் ராவணனின் மன நிலையை அவ்வளவு சுருக்கமான ஆனால் சக்தி மிகுந்த வார்த்தைகளில் வர்ணிக்கிறார். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியே கவிதை பாடும்போது கம்பரே பாடமாட்டாரா என்ன.
மேலே italics bold-ல் உள்ள இரு பாராக்கள் மாற்றப்பட்டுள்ளன. கீழே பார்க்கவும்.
பை தி வே, இந்த வட்டத்திலிருந்து அரசன் கூட தப்ப முடியாது என்பது மார்க்கோ போலோ அவர்களது பிரயாணக் குறிப்பிலிருந்து தெரிய வருகிறது. நண்பர் இரா. முருகன் இதை அழகாக எழுதியுள்ளார். அதில் வரும் செந்தர் பந்தி என்னும் அரசன் பெயர் சுந்தர பாண்டியனைக் குறிக்கும். அவர் வார்த்தைகளில்:
"யாராவது கடன் வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்தாவிட்டால், அந்த ஆள் தெருவில் போகும்போது, கடன் கொடுத்தவன் சரசரவென்று அவனைச் சுற்றி ஒரு வளையம் வளைந்து விடுகிறான். பணத்தைத் திரும்பத் தரும் வரை அவன் அந்த வளையத்துக்குள்ளேயே நிற்க வேண்டியதுதான். செந்தர் பந்தியே ஒரு சந்தர்ப்பத்தில் அந்நிய நாட்டு வணிகன் ஒருவனிடம் இப்படிக் கைமாற்று வாங்கி, இந்தோ தரேன் .. அந்தோ தரேன் என்று நழுவிக்கொண்டிருந்தான். அவன் ஒரு நாள் குதிரையில் போகும்போது கடன் கொடுத்தவ்ன் அவசர அவசரமாகத் தரையில் அவனைச் சுற்றிக் கோடு வரைய, அரசன் கட்டுப்பட்டு அப்படியே நின்றான். அரண்மனையிலிருந்து பணம் எடுத்து வந்து அடைத்து சுந்தரபாண்டியனன விடுவித்துப் போனார்கள். (மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் அதற்கு முன் அடகு வைத்தானா என்ன?)"
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் கடன் வாங்குவது/அளிப்பது, அதற்கான வட்டி தருவது/பெறுவது ஆகிய அனைத்துமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் தூண்கள். இதில் அரசு தேவைக்கு மேல் தலையிடாமல் இருப்பதே நல்லது. அரசியல் காரணங்களுக்காக திடீரென ஒரு சாராரின் அத்தனைக் கடன்களையும் தள்ளுபடி செய்வதன் மூலம் பல தவறான சமிக்ஞைகளே மக்களிடம் செல்லுகின்றன. கடன் தள்ளுபடியால் சிலர் சந்தோஷப்படலாம். ஆனால் அக்கடனை முதலிலேயே ஒழுங்காகக் கட்டியவன் ஏமாளியாகவல்லவா ஆகிறான். அடுத்த முறை அவன் கடனை ஒழுங்காகக் கட்ட விரும்புவானா? அதே நேரத்தில் பேங்குகளும் சம்பத்தப்பட்டப் பிரிவினருக்குக் கடன் வழங்க முன்வருமா? இப்படியே போனால் "கடன் அளித்தார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்" என்றுதான் மாற்றி எழுத வேண்டியிருக்கும். இந்த அழகில் முன்னாள் மந்திரி ஒருவரின் கடனும் இம்மாதிரி குருட்டுத்தனமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை படித்த போது எங்கு அடித்துக் கொள்வது என்றே தெரியவில்லை.
இப்பதிவின் உந்துதல் எனது முந்தையப் பதிவு ஒன்றில் நான் பொருளாதாரக் காரணிகளைப் புறக்கணித்து காரியம் செய்ததில் இரண்டு நாடுகளே வரை படத்திலிருந்து மறைந்ததைப் பற்றி குறிப்பிட்டதேயாகும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: எல்லப்பன அவர்கள் கேட்ட ஒரு கேள்வி என்னை மறு பரிசீலனை செய்ய வைத்து விட்டது. அதாவது கடன் பட்டார் நெஞ்சம் போல என்று கம்பர் கூறவில்லை. அது ராமாயணம் பற்றிய தனிப்பாடலில் வருகிறது. இது பற்றி ராமாயண நிபுணரான ஹரி கிருஷ்ணன் அவர்கள் அழகான முறையில் எழுதியுள்ளார். அது பின்னூட்டதிலிலுள்ளது. இப்போது இப்பதிவில் சிறிது மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அதை மூலப் பதிவில் செய்வது யோக்கியமான வேலையாக இருக்காது. நான் செய்த தவறை அவ்வாறு மறைக்க விருப்பம் இல்லை. ஆகவே இங்கு அதை செய்கிறேன்.
அது என்ன கடன்பட்டார் நெஞ்சம்? அதற்கு தமிழகத்தில் சில நூற்றண்டுகளுக்கு முந்தைய காலக் கட்டத்தைப் பார்க்க வேண்டும். அப்போதெல்லாம் ஒரு வழக்கம் இருந்தது. அதாவது வாங்கிய கடனை கட்ட முடியாதவர்களை சுற்றி கடனளித்தவர் பொதுவிடத்தில் ஒரு வட்டம் வரைந்து விட்டுச் சென்று விடுவார். கடனைத் தரும்வரை அவர் அக்கட்டத்தை விட்டு வெளிவர இயலாது. அரசனாயிருந்தாலும் அதே கதிதான். ஆனால் ஒன்று இது கடனைத் திருப்பிப் பெற எல்லா முயற்சிகளும் தோற்றபிறகே கடனளித்தவர் செய்யும் காரியம்.
அதற்கு ஆளாகும் கடன்காரர்கள் இறந்ததற்குச் சமம். அப்படிப்பட்ட கடன்பட்டவர் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று இப்புலவர் ராவணனின் மன நிலையை அவ்வளவு சுருக்கமான ஆனால் சக்தி மிகுந்த வார்த்தைகளில் வர்ணிக்கிறார். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியே கவிதை பாடும்போது ஒரு புலவர் பாடமாட்டாரா என்ன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சைவ சித்தாந்த அறிமுக வகுப்புகள்
-
சைவசித்தாந்த அறிமுக வகுப்புகளை நடத்த தகுதியான ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது
வணக்கத்திற்குரிய சாந்திகுமார அடிகளைப் பற்றி அறிந்துகொண்டோம். சைவசித்தாந்தம்
ஒரு ...
2 hours ago