Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

11/02/2007

நான் அமெரிக்க ஆதரவாளன்

சமீபத்தில் அறுபதுகளில் டாக்டர் பெஞ்சமின் ஸ்போக் என்பவர் அமெரிக்காவின் வியட்னாம் கொள்கையை விமரிசனம் செய்த போது நான் எரிச்சலை காண்பித்தேன். அதை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த என் தந்தை "உன்னைப் போன்ற உண்மை அமெரிக்கர்களுக்கு கோபம் வருவது புரிந்து கொள்ள முடிகிறது" என்று என்னை கிண்டல் செய்தார். கிண்டலாக இருந்தாலும் அது உண்மையாக இருந்தது, ஆகவே நான் ஒன்றும் கூறவில்லை. You are more pro-American than an American" என்றும் அவர் என்னை கிண்டலடித்திருக்கிறார். அதிலும் உண்மை இருந்தது. இஸ்ரேலுக்கு அடுத்து நான் ஆதரிக்கும் நாடு அமெரிக்காவே. ஏன்?

முதல் காரணம் அது இஸ்ரேலை ஆதரிப்பதாலேயேதான் என்று கூறினால் மிகையாகாது. அதை நான் பலமுறை ஏற்கனவே கூறியதால் இங்கு அதை அப்படியே அடக்கி வாசிக்கிறேன். இல்லாவிட்டால் இது இன்னொரு இஸ்ரேல் ஆதரவு பதிவாகப் போய்விடும் அபாயம் உள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் நான் தீவிர இஸ்ரேலிய ஆதரவாளனாகப் போனது சமீபத்தில் 1967-ல் நடந்த ஆறுநாள் யுத்தத்தின் பிறகுதான். அதற்கு முன்பும் இஸ்ரேலிய ஆதரவாளனே, ஆனால் அந்த அளவுக்கு இல்லை. ஆனால் அமெரிக்காவின் ஆதரவாளனது அறுபதுகளின் துவக்கத்திலிருந்தேதான். அதற்கு முக்கியக் காரணம் ரீடர்ஸ் டைஜஸ்ட் என்றால் மிகையாகாது.

அமெரிக்கா எனக்கு பிடிக்கும் முக்கியக் காரணமே அதன் தனிமனித சுதந்திரத்தைப் போற்றும் மனப்பாங்குதான். கென்னடியின் கொலைக்கு பிறகு பிராட்வேயில் ஒரு நாடகம் வந்து சக்கை போடு போடப்பட்டது. அதில் அப்போதையக் குடியரசுத் தலைவர் லிண்டன் ஜான்சனுக்கு அக்கொலையில் பங்கு உண்டு என்று வெளிப்படையாக கருத்து கூறி கதை சென்றது. இதுவே இந்தியாவாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஆட்டோக்கள் அணிவகுப்பே வந்திருக்குமே. ஒரு சாதாரண வாட்டர்கேட் விவகாரம் ஒரு ஜனாதிபதியையே துரத்தியது. "சாதாரண" என்ற பெயரெச்சத்தை வேண்டுமென்றே போடுகிறேன். நம்ம ஊர் இந்திரா காந்தி செய்யாததையா நிக்ஸன் செய்து விட்டார்? ஒரு பிரெஞ்சு பத்திரிகையாளர் தனிப்பட்ட முறையில் பேசும்போது கூறினார்: "வாட்டர்கேட்? எங்க ஊரில் நாங்கள் எத்தனை முறை வாட்டர்கேட் செய்யப்பட்டுள்ளோம் தெரியுமா"? சோவியத் யூனியனின் அள்ளக்கையான ப்ளிட்ஸ் கரஞ்சியாவே வாட்டர்கேட் விவகாரத்தின்போது அமெரிக்க பத்திரிகைகளுக்கு இருந்த சுதந்திரத்தை வேண்டா வெறுப்பாக ஒத்து கொண்டார்.

அடுத்து அமெரிக்காவிடம் எனக்கு பிடிப்பது அதன் கம்யூனிச எதிர்ப்பு. இது ஐம்பதுகளின் ஆரம்பத்தில் மிக தீவிரமடைந்தபோது, அதே அமெரிக்கர்கள்தான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தனர். அந்தக்காலக் கட்டத்தில் பாப் ஹோப் ஒரு ஜோக் சொல்லுவார்.

"சென்னட்டர் மெக்கார்த்தி ஒரு பெரிய தீவிர கம்யூனிஸ்டு மெம்பர்கள் அடங்கிய லிஸ்டை கண்டு பிடித்துள்ளார். யாரோ அவருக்கு மாஸ்கோவின் டெலிபோன் டைரக்டரியைத் தந்துவிட்டார்".

பை தி வே இதில் இன்னொரு உள்குத்தும் உண்டு. அதாவது அக்காலக் கட்டத்தில் மாஸ்கோவில் டெலிஃபோன் வசதி பெற கம்யூனிஸ்டு கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்பதே அது.

சோவியத் யூனியன் தனது புளுகுப் பிரசாரங்களினால் அங்கு தேனும் பாலும் ஓடுவதாகவும், குற்றங்களே நடப்பதில்லை என மாய பிம்பத்தைத் தந்து நம்மூர் கம்யூனிஸ்டுகளும் அதை முழுதும் நம்பி அங்கு ரஷ்யாவைப் பார், சீனாவைப் பார் என்றெல்லாம் பிரசாரம் செய்தனர். அமெரிக்காவிலோ நாளெல்லாம் கொலை, கற்பழிப்பு நடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அமெரிக்க தலைவர்களை எதிர்த்து செய்திகளும் வந்தன. ஒரு சமயம், ராஜீவ் கொலைவழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்த கார்த்திகேயன் அவர்களே சுஜாதாவக்கு தந்த நேர்க்காணலில் சோஷலிச நாடுகளைத் தவிர்த்து மற்ற எல்லா நாடுகளிலும் குற்றங்கள் மலிந்துள்ளன என்னும் பொருள்பட பேசினார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

ஆனால் இந்த நிலையும் சோவியத் யூனியன் திவாலானதிற்கு காரணங்களில் ஒன்று என்பதை அறிவீர்களா? அதாவது தேனும் பாலும் சோவியத் யூனியனில் ஓடுகின்றன என்னும் புளுகு பிரசாரத்தை அதன் தலைவர்களே நம்பியதுதான் காரணம். நம்மூர் இந்திரா காந்தி அவர்கள்கூட அவசர நிலை சமயத்தில் பத்திரிக்கை தணிக்கைகள் போட்டு எதிர் கருத்துகளை கேட்க விடாமல் செய்து, தான் ஜெயிப்போம் என நம்பி தேர்தலை அறிவித்து மண்ணைக் கவ்வியது இங்கு நடந்ததும் தெரிந்ததே.

மறுபடியும் அமெரிக்கா. முழுக்க முழுக்க திறமைக்கு மதிப்பு தரும் நாடு அது. எப்பொருள் யார் யார் கேட்பினும் அதன் மெய்ப்பொருளை கேட்கும் ஆர்வத்தால் நல்ல வேலை செய்பவர்களை ஆதரித்து முன்னேற்றம் கண்டது.

அமெரிக்காவில் குறைகளே இல்லை என்று சொல்ல முடியுமா? அமெரிக்கர்களே அதை ஒத்து கொள்ள மாட்டார்களே. தென் மாநிலங்களில் காணப்படும் நிறவெறி, மற்ற நாடுகளை பற்றி அதிக அறிவு இல்லாமை ஆகியவை அங்கு உண்டு. ஆனால் அவையும் அமெரிக்க பத்திரிகைகள் மூலமாகவே நமக்கு தெரிய வருகின்றன என்பதை நாம் சிந்திக்கிறோமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/12/2006

ரீடர்ஸ் டைஜஸ்ட்

ரீடர்ஸ் டைஜஸ்டின் ஆரம்பம் மிக சாதாரணமானது. பல பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றிலிருது தொகுத்து அவற்றை அவற்றை தங்கள் வாசகர்கள் படித்து பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் டெவி வாலஸ் மற்றும் அவரது மனைவி லீலாவால் ஆரம்பிக்கப்பட்டது இது. முதல் இதழ் 1922-ல் வந்தது. ஒரு இதழ் பத்து அமெரிக்க டாலர் செண்டுகள் விலைக்கு சந்தாதாரர்களுக்கு தபால் மூலம் அனுப்பட்ட இந்த பத்திரிகை 1929-ல் கடைகளுக்கு வந்தது. பத்து லட்சம் காப்பிகள் இலக்கு 1935-ல் எட்டப்பட்டது. 1994-ல் சர்குலேஷன் 100 கோடியை எட்டியது. ஆகஸ்ட் 2005 ஆயிரமாவது மாத இதழாகும் (80 வருடங்களுக்கு மேல்). தற்சமயம் ரீடர்ஸ் டைஜஸ்ட் 49 எடிஷன்களாக, 20 மொழிகளில் அச்சிடப்பட்டு 61=க்கும் அதிகமான நாடுகளில் வாங்க முடிகிறது. 2005-ல் கூட ஒரு புது ருமேனிய எடிஷனைக் கொண்டு வந்தார்கள்.

புள்ளி விவரங்கள் போதும் என நினைக்கிறேன். இனிமேல் ரீடர்ஸ் டைஜஸ்ட் என் வாழ்க்கையில் என்ன பங்கு வகித்தது என்பதைப் பார்க்கலாம். நான் 1962-லிருந்து ரீடர்ஸ் டைஜஸ்டை மாதா மாதம் படிக்க ஆரம்பித்தேன். அதன் கம்யூனிச எதிர்ப்பு, இஸ்ரேல் ஆதரவு, அமெரிக்க நிலையின் பிரதிபலிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டேன். பல கட்டுரைகள் வெவ்வேறு மூலங்களிலிருந்து திரட்டப் பட்டவை. அவை புத்தகங்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றை அமெரிக்க நூலகத்தில் தேடி படித்தேன். அறுபதுகள் முழுக்க அதனால் நான் நல்ல முறையில் பாதிக்கப்பட்டேன். வீட்டில் இந்திய எடிஷன் வந்தது. அமெரிக்க எடிஷனுக்கு அமெரிக்க நூலகம் செல்வேன். அதனுடைய It pays to increase your word power, drama in real life, book of the month, humor in uniform, life's like that, laughter the best medicine ஆகிய பகுதிகள் என்னை மிகவும் கவர்ந்தன. கம்யூனிசத்தின் புளுகு பிரசாரங்கள், சோவியத் யூனியன் சரித்திரத்தை தங்களுக்கேற்ப திருத்தி எழுதுவது ஆகியவற்றை இப்பத்திரிகை தோலுறுத்திக் காட்டியது. என்னைப் போலவே இளைஞர்கள் பலரும் இப்பத்திரிகையால் ஈர்க்கப்பட்டனர். அவ்வப்போது ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ்களிலிருந்து எனக்கு பிடித்த கட்டுரைகளை சேர்த்து, பைண்ட் செய்து வைத்துக் கொள்வது என் வழக்கம்.

வயதானவர்களும் ரீடர்ஸ் டைஜஸ்டின் பிடியிலிருந்து தப்பவில்லை. முக்கியமாக சீதாப்பாட்டி. அவர் டைஜஸ்டை படித்துவிட்டு அவ்வப்போது அப்புசாமி தாத்தாவை படுத்துவது தமிழ் கூறும் நல்லுகம் முழுதும் அறிந்த செய்தியாகும். முதல் கதையிலேயே டைஜஸ்டில் வந்த கட்டுரை ஒன்றில் பொடி போடுவதின் கெடுதியைப் பற்றி படித்துவிட்டு அப்புசாமிக்கு பொடிபோட தடா விதித்தவர் சீதாப்பாட்டி.

போன வருடம் அமெரிக்க நூலகத்துக்கு சென்றிருந்தேன். செக்யூரிடி சோதனைகள் என்று படுத்தினார்கள். எல்லாம் முடிந்து உள்ளே போனால் ரீடர்ஸ் டைஜஸ்ட் கிடைக்கவில்லை. விசாரித்தால் அதை வரவழைப்பதை நிறுத்தி விட்டார்களாம். பிறகு நான் அமெரிக்க நூலகங்களுக்கு செல்லவில்லை. ஒரு சகாப்தமே முடிந்த உணர்வு எனக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது