9/29/2010

வி.எஸ். திருமலை கதைகள் - 3. தவறாத தீபாவளி

இக்கதையை ஐம்பது/அறுபதுகளில் ஏதோ ஒரு பத்திரிகையின் தீபாவளி மலரில் படித்த நினைவு. அப்போதே மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டது. எழுதியவர் பெயரை அப்போது பார்க்கவில்லை. ஆனால் திருமலை சாரின் இக்கதைத் தொகுப்பில் இதன் முதல் வரியை படிக்கும்போதே, அடேடே இதை அவர்தான் எழுதியதா என நிமிர்ந்து உட்கார்ந்தேன். இதை அவரது அவரது மனைவியிடம் கூறியபோது தானும் அதே மாதிரி முன்பு படித்து மனதில் நின்ற பல கதைகள் தனது திருமணத்திற்கு பிறகுதான் இவர் எழுதியது எனக் கண்டறிந்ததாகக் கூறினார். இப்போது ஓவர் டு திருமலை:

“அம்மா, நேரமாச்சு. நீ போய் படுத்துக்கோயேன்!”

“இதென்னடி வேடிக்கையாயிருக்கு! பத்தடித்து விட்டது. இன்னம் மாப்பிள்ளையைக் காணோம்! உன் குடும்பம் நன்னாத்தான் நடக்கிறது!”

“எவ்வளவு கடுதாசுலே எழுதியிருக்கேன்! எவ்வளவு தரம் நான் உனக்குச் சொல்றது, அவர் சாதாரண டாக்டரில்லைன்னு? அவர் வேலை பூராவும் முடியற மட்டும் அவருக்கு வேறு நினைவே வராது ... காரணமில்லாமல் அவர் தாமதிக்க மாட்டார். நீ போய் படுத்துக்கோ. நேர்று ராத்திரி ரயிலிலே என்ன தூக்கம் கண்டிருப்பாய்? நாள் பூராவும் அடுப்பண்டை உட்கார்ந்து வேலை வேறு செய்திருக்கே! இவ்வளவு பட்சணங்களையும் யார்தான் திங்கப் போறாளோ! அவ்வளவும் வீணாப் போகப் போறது!”

“தன் பெண் தலை தீபாவளி இவ்வளவு ஜோரா நடந்ததுன்னு தெரிஞ்சா உங்க அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டுப்பா! அது என்ன அப்படி ஒழியாத வேலை உன் அகமுடையானுக்கு? ‘தலை தீபாவளிக்கு நீங்கள் ரெண்டு பேரும் வருவேள். பிரமாதமா கொண்டாடலாம்’னு, உன் அண்ணா, மன்னி, அப்பா, நான் எல்லோரும் என்ன என்னமோ திட்டம் போட்டுண்டிருந்தோம். அதுதான் நடக்கவில்லை. முதல் தடவையாக நான் இங்கு வந்தால் வீடு வெறிச்சிட்டு கிடக்கு.எஜமானனைக் காணோம். நீ கவலையில்லாமல் ரேடியோவைத் திருப்பிண்டு உட்கார்ந்திருக்கே. பண்டிகைக்கு முன்னாளே இப்படியிருந்துதுன்னாக்கே சாதாரண நாளெல்லாம் எப்படியிருக்குமோ...?

“அம்மா தீபாவளிக்கு இன்னம் ஆறேழு மணி இருக்கு. நீ நிம்மதியாய்த் தூங்கு. நாளைக்குப் பண்டிகை நன்றாக, குறையில்லாமல் நடக்கும்”.

“எனக்கென்னவோ பிடிக்கவில்லை, பாமா! என் தலை தீபாவளி என்னமா நடந்தது! அதையும் நெனைச்சு, இப்போ இங்கே நடப்பதைப் பார்த்தால்...”

“அம்மா, என் நிலை முற்றிலும் வேறு மாதிரி, அதோ அவரது கார் சப்தம் கேட்கிறது. அவர் வந்து விட்டார்!”

உள்ளே வந்தார் டாக்டர் முரளி. அவர் முகத்தில் வழக்கத்தைவிட அதிகமான சோர்வும், யோசனையும், கவலையும் இருப்பதைக் கண்டாள் பாமா.

“என்னம்மா சௌக்கியமா? ஊரில் எல்லாரும் சௌக்கியம்தானே? ரயில் நேரத்துக்கு வந்துதோல்லியோ? தலை தீபாவளிக்கு என்று அங்கே வர முடியவில்லை. நல்ல வேளை நீங்கள் இங்கு வந்தீர்கள், பாமாவுக்கு ஏமாற்றத்தை விலக்க! ... ஓ இது என்ன பாமா, இது? பக்ஷணமா? ஹும் ஹூம்! இப்போ வேண்டாம். ஊச்! ரொம்ப களைப்பாயிருக்கு. ஒரு ஆப்பிள் கொடு. பாலில் இரண்டு ஸ்பூன் அதிகமாகவே க்ளூக்கோஸ் போடு. நாளைக்கு சீக்கிரம் போனால் தேவலை. ஒரு சிக்கலான ஆப்பரேஷன் பண்ணியாகணும்...”

“நல்ல டாக்டர் வேலை! தீபாவளிக்கு, அதுவும் தலை தீபாவளிக்குக் கூட ஓய்வு கிடையாதா?” என்று மாமியார் கேட்டாள்.

“தன் தலை தீபாவளியன்று தான் கண்ட இன்பத்தைத் தன் பெண் பாமாவும் அனுபவிக்க வேண்டும், தானும் அதைக் கண்டு மகிழ வேண்டும் என்பது அவள் உள்ளூற ஆசை.

“நோயும் விபத்தும் தீபாவளிக்கு என்று விடுமுறை எடுத்துக் கொள்ளவில்லையே, அம்மா! என் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் பெரும்பாலானோர் சிறுவர்கள். இன்றைக்கு சாயங்காலம் நான் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தபோது இரண்டு அபாய நிலைக் கேசுகள் வந்து சேர்ந்தன. அதிலே ஒரு பையனுக்கு உடனேயே ரண சிகிச்சை செய்யும்படியாக இருந்தது. ஐந்து மணி நேரம் பிடித்தது அந்த ஆப்பரேஷனுக்கு. மற்றவனுக்கு நாளைக்கு ஆப்பரேஷன் பன்ணியாகணும். அதுக்கு உதவி செய்ய இரண்டு டாக்டர்களை வேறு வரச் சொல்லியிருக்கேன்”.

“உங்களுக்குத் தீபாவளி வேண்டாமா?”

“அவசியம் வேணும்! இன்றைக்கு அந்தப் பையன் பிழைத்தான், இப்போ பாருங்கோ, அவன் வீட்டில் நிற்கவிருந்த தீபாவளி தவறாது நடக்குமோல்லியோ? எனக்கு அது போதும், அம்மா” என்று சிரித்தவாறு கூறி டாக்டர் முரளி முகம் கழுவச் சென்றார்.

பாமா பாலும் பழமும் எடுத்து வந்தாள். டெலிபோன் கூப்பிட்டது.

“டாக்டர் முரளிதரன் வீடு!... இல்லை; அவர் இன்னும் வரவில்லை...ஊம் வந்தவுடன் டெலிஃபோன் செய்யச் சொல்கிறேன்...”

பாமா பேசி முடிந்த பிறகே டாக்டர் ஸ்னான அறையிலிருந்து திரும்பி வந்தார்.

“பாமா! டெலிபோன் மணி சப்தம் கேட்டுதே, யாரு?”

“யாரோ, தவறான எண்ணைக் கூப்பிட்டு விட்ட போலிருக்கு!” என்று பாமா பொய் சொன்னாள்.

படுத்தவுடன் அயர்ந்து தூங்கி விட்டார் முரளி. சிறு விளக்கை அணைக்கு முன் உறங்கும் கணவனைப் பார்த்து வெய்துயிர்ந்தாள் பாமா. அவர் தலைமயிர் கலைந்து நெற்றியில் தவழ்ந்தது; அகன்ற மர்பு விம்மிவிம்மித் தாழ்ந்தது! மார்பின் மேல் ஒரு கை, பக்கத்தில் ஒரு கை. நீண்ட, மெல்லிய பலமுள்ள விரல்கள். குணமாக்கும் கத்தி பிடித்து, ஜீவ வீணையில் தவறிய சுருதியை மீண்டும் கோக்கும் விரல்கள்...ஆம்! அபூர்வ சமயங்களில் பாமாவின் ஆவியில் இன்ப நாதம் எழச்செய்யும் கரங்கள்தான்.

“குழந்தை மாதிரி தூங்குகிறாரே! நான் ‘நர்ஸிங் ஹோமிலிருந்து டெலிபோன் வந்ததை உண்மையாகவே சொல்லியிருந்தால், இத்தனை நேரம் அங்கல்லவா ஓடியிருப்பார்! என்ன தொழில் இது! ஓய்வு, நிம்மதி, தூக்கம் எதற்கும் இடம் தராத தொழில்!” என்று எண்ணியவளாய், பாமா லேசாக அவர் மீது போர்வையைப் போட்டு சரிசெய்தாள்.

திடீரென்று ஞாபகம் வந்து, பரபரவென்று போய் டெலிபோன் ரிசீவரை எடுத்துத் தனியாக வைத்தாள். இந்தத் தீபாவளி இரவாவது அவரைத் தொந்தரவு செய்யாது இருக்கட்டும் அந்த ராக்ஷஸ டெலிபோன்! தன் அந்தரங்க ஆசைக்கு என்றில்லையானாலும், அம்மாவின் திருப்திக்காகவாவது தலை தீபாவளியைத் தடங்கலில்லாது கொண்டாட வேண்டாமா?

டெலிபோன் ரிசீவர், தொடர்பு அறுக்கப்பட்டக் கருவியாய் அதன் தொட்டிலைப் பிரிந்து கிடந்தது.

பாமா தயங்கினாள்.

அவசரமாக டாக்டர் தேவையாயிருந்து யாரேனும் டெலிபோன் செய்தால்! தன் இச்செய்கையாக் டாக்டர் டெலிபோனில் கிடைக்காது ஓர் உயிர் பலியானால்!

தன் காரியம் தகாதது என்று உணர்ந்து அதை நிவர்த்தி செய்தாள். இதற்கே காந்த்திருந்தது போல் மணி உடனே அடித்தது!

நர்ஸ் சுப்ரியாதான் கூப்பிட்டது. மறுநாள் ஆப்பரேஷன் செய்யலாம் என்று இருந்த சிறுவன் நிலை மோசமாகி வந்தது. உதவி டாக்டரும் அவளும் கொடுத்த தற்காலிகச் சிகிச்சை பலன் அளிக்கவில்லை. பெரிய டாக்டரின் நித்திரையை கலைக்கக் கூடாது என்ற தன் தீர்மானத்தை மீறித்தான் சுப்ரியா டெலிபோன் செய்தாள்.

“காலை மட்டும் தள்ளிப் போட முடியாதா சிஸ்டர்? ரொம்பச் சோர்ந்து போயிருக்கிறாரே, அவரை எப்படி எழுப்புவது” என்று கேட்டாள் பாமா.

“எனக்குத் தெரியாதா? நிர்ப்பந்தமிருந்தால் ஒழிய நன் கூப்பிடுவேனா? என் மேல் கோபிக்கிறீர்களே என்றாள் சுப்ரியா.

கோபமாகப் பேசியதற்கு மன்னிக்கவும், சுப்ரியா! இதோ பார், இன்று எங்கள் தலைதீபாவளி. காலை ஐந்தரை மணிக்கு அவரை அனுப்பி விடுகிறேன். அவருக்கு ஓய்வும் உறக்கமும் மிக அவசியம். எங்கள் பண்டிகை முக்கியம். தடை எதுவும் வராதிருக்க வேண்டுமே என்பதுதான் என் பிரார்த்தனை. தயவு செய்து வேறு ஏதாவது செய்ய முடியுமா, பார்! உனக்குக் கோடி புண்ணியம் உண்டு!”

மணி பதினொன்று அடித்தது. வெளியே மழை சற்று நேரம் பிசுபிசுத்தது. குளிர் அதிகரித்தது. எங்கோ தொலைவில் ஒரு பட்டாசு வெடித்தது. பாமாவுக்குத் தூக்கம் கொள்ளவில்லை.

அவளுக்கு 26 வயதானதும் கல்யாணம். உடனே தனிக்குடித்தனம். அதற்க்காகவெல்லம் பண்டிகையின் முக்கியத்துவமும் இன்பப் பெருக்கும் குறைந்து விடுமா? அதோடு வாழ்க்கையில் எந்த உணர்ச்சியையும் தன் சொந்த அனுபவத்தில் கண்டால் தவிர பிறர் சொல்லக்கேட்டு உணர்வது கூடாத காரியமல்லவா?

சிருங்காரம் என்பதற்கு டாக்டர் முரளிக்கு அதிக அவகாசமில்லை. அவர் தொழில், இல்லை - அவர் கலை அவர் வாழ்க்கையில் பிரதான ஸ்தானம் வகித்தது. “என் கண்ணே, மூக்கே, காதே” என்றெல்லாம் அவர் பாமாவை அழித்து என்றும் குலாவியதே இல்லை. சில சமயங்களில் தான் ஒருத்தி மனைவி என்றிருப்பது அவருக்கு நினைவில்லாமல் போய் விடுகிறதே, தன்னைப் பற்றி அவர் அன்புடன் சிந்திப்பதாகப் பிரமாணமாகத் தெரியவில்லையே என்று பாமா நினைப்பதுண்டு. தேக சௌக்கியம், பண லாபம், சௌகர்யம் என்பதையெல்லாம் கருதாது உழைத்துத் தேய்கிறாரே என்ற அங்கலாய்ப்புடன்தான், பாமா அவரைப் போற்றி வந்தாள்.

பன்னிரண்டு மணியும் போய் விட்டது. பாமா புரண்டாள். கண்ணிமையை மூட முடியவில்லை. அவள் மனப்பாரம் தூக்கத்தை அழுத்திவிட்டது. படுக்கை நொந்தது. நீர் குடித்துவிட்டு பாகனியில் போய் நின்றாள்.

“க்ரீங், க்ரீங் ... க்ரீங், க்ரீங்....”

“ஐயோ அவரை எழுப்பாது இருக்க வேண்டுமே இவ்வலறல்” என்று திடுக்கிட்டு ஓடி டெலிபோனை எடுத்தாள்.

உதவி டாக்டர் சுந்தராச்சாரி பேசினான், நர்சிங் ஹோமிலிருந்து.

“இந்தப் பையன் உடம்பு ரொம்ப மோசமாகி விட்டதம்மா... இன்னம் ஒரு மணி நேரத்தில் எமெர்ஜென்சி ஆப்பரேஷன் செய்தாக வேண்டும். இல்லையானால்...”

“சரி. அவரை வரச்சொல்கிறேன்.”

“நாங்கள் இங்கு தியேட்டரை தயார் செய்து வைக்கிறோம்”. அவர் வந்தவுடனே வேலை துவக்கலாம்...”

“அவரிடம் அதையும் சொல்கிறேன்!” என்று ரிசீவரைக் கீழே வைத்தாள்.

பரபரவென்று எலெக்ட்ரிக் ஸ்டவ்வில் இரண்டு டம்ளர் காப்பி தயாரித்தாள். டாக்டரின் உடைகளைத் தயாராக எடுத்து வைத்து விட்டு, அவரை எழுப்பி, காப்பி குடிக்கச் சொல்லிவிட்டு, ஷெட்டுக்கு ஓடினாள். காரை அவள் எடுத்து வருவதற்கும், டாக்டர் வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

“நானே ஓட்டிச் செல்கிறேன், பாமா!”

“ஏறிக் கொள்ளுங்கள் சீக்கிரம்!” என்று பாமா க்ளச்சை அழுத்தினாள்.

நர்சிங் ஹோம் கட்டடத்தின் வாசலில் அவள் காரை நிறுத்தியவுடன், “நீ வீட்டுக்குப் போய் தூங்கு, பாமா, நான் எப்போ திரும்புவேனோ தெரியாது...” என்று சொல்லி ஆப்பரேஷன் தியேட்டருக்கு விரைந்தார் முரளி.

வீட்டுக்குத் திரும்பிய பாமா மறுபடியும் படுக்கச் செல்லவில்லை. இன்னும் கொஞ்சம் காப்பி அருந்தி விட்டு, விளக்கைப் போட்டு ஒரு நாவலைப் படிக்க முயற்சி செய்தாள். வகையறியாத ஓர் உணர்ச்சி அவளைக் குழப்பிற்று. எப்படியோ காலம் கழிந்து ஐந்தரை மணியாயிற்று. நர்சிங் ஹோமை டெலிபோனில் கூப்பிட்டு விசாரித்தாள்.

“இன்னம் அரை மணிக்கு மேல் ஆகும். இப்போதுதான் தையல் போட ஆரம்பித்திருக்கிறார், டாக்டர்...”

“உங்கள் ஆஸ்பத்திரியையே இடித்து விட வேண்டும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. டாக்டருக்குத் தீபாவளி இல்லாது அடித்து விட்டீர்களே!”

“டாக்டருக்கு மட்டுமென்ன அம்மா! இங்கு வேலை செய்யும் எங்களுக்கும் தீபாவளி கிடையாதுதான். நாங்கள் பெரியவர்கள், பரவாயில்லை!... இப்போது இங்கே நாற்பது சிறுவர்கள் இருக்கிறார்களே. தீபாவளியை இழக்க அவர்களுக்கு எப்படி மனம் ஒப்பும்? யோசித்தீர்களா?... இதைப் பார்த்துப் பார்த்துத்தான் எனக்கும் ஒருவித விரக்தி ஏற்பட்டு விட்டது! ... தவிர்க்க முடியாததைத் தைரியமாக ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்...”

“நன்றாகப் பேசுகிறாயே, சிஸ்டர்!”

தீபாவளி ஆரம்பித்து விட்டது. அம்மா புது ஜவுளியை எடுத்து வைத்திருந்தாள். கிண்ணத்தில் எண்ணெய், ஸ்னான அறையில் வெந்நீர், தட்டுத் தட்டாக பக்ஷணம், டபராவில் லேகியம், கூடை நிறைய புருசு, மத்தாப்பு, பட்டாசு வெடி வகையறா எல்லாம் காத்திருந்தும் பயனென்ன?

வெளி எங்கிலும் மங்கள வெடி ஓசை முழங்கியது. இன்னம் சற்று நேரத்தில் அக்கம் பக்கத்தினர் கங்கா ஸ்னானம் விசாரிக்க வந்து விடுவார்கள்.

“சீ! இது இழந்த தீபாவளியா?” என்று சலிப்புடன் தன்னையே வினவினாள் பாமா.

அவள் தாய் அதுவரை ஒன்றும் பேசாமலிருந்தாள்.

“என்ன, யோசனையில் ஆழ்ந்து விட்டாய், பாமா?” வருத்தப்படக்கூடாதம்மா. அவர் வந்தவுடன் பண்டிகையைக் கொண்டாடி விட்டால் போச்சு” என்றாள்.

பாமா சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சொன்னாள். “இல்லை, இல்லை. வருத்தமா? நான் மட்டுமா...” அவள் பெச்சு திடீரென நின்று விட்டது, குறுக்கிட்ட ஒரு நினைவால்.

நர்ஸ் சற்றுமுன் என்ன சொன்னாள்? “இங்கே இப்போது நாற்பது நோயாளிச் சிறுவர்கள் இருக்கிறார்களே! தீபாவளியை இழக்க அவர்களுக்கு எப்படி மனம் ஒப்பும்?... என்றல்லவா கேட்டாள்!

ஏன் அவர்களும், நானும், தன் கணவனும் தீபாவளியை இழக்க வேண்டும்? ஏதாவது தன்னால் செய்ய முடியாதா?

ஆம்! சந்தர்ப்ப சௌகர்யமில்லாத எல்லோரும் சேர்ந்து பண்டிகையை நடத்தினால்: ஏன் அவ்வாறு செய்யக்கூடாது?

உற்சாகமாகக் குதித்தாள் பாமா. வெறி பிடித்தவள் போல், “அம்மா, என் தலை தீபாவளியை வீணாக்கவே வேண்டாம்! ஆனந்தமாகக் கொண்டாடலாம்... ஊம்...கிளம்பு!” என்று ஒரு கூடையில் மத்தாப்பு, புருசு வாணங்களைப் போட்டாள். பட்டாசு வெடிகளை ஒதுக்கி விட்டாள். ஒரு பெரிய பூனா டப்பா நிறைய திரட்டுப் பாலும் ஜிலேபியும் வைத்தாள். கூடை, டப்பாவைக் காரில் எடுத்து வைத்தாள். ஒரு பிளாஸ்கில் காப்பியையும் எடுத்துக் கொண்டாள்.

திகைத்துக் குழம்பிய தன் தாயை இழுத்து, காரில் ஏற்றி, தீபாவளி முழங்கும் தெருக்கள் வழியே நர்சிங் ஹோமை நோக்கி வேகமாக ஓட்டினாள்.

தன் வேலை முடிந்து, தன் அறைக்குத் திரும்பிய டாக்டர் முரளிதரன் திகைத்து நின்றார்.

வார்டின் நடுவே ஒழிக்கப்பட்ட இடத்தில் புருசு வாணங்களை ஒவ்வொன்றாகக் கொளுத்திக் கொண்டிருந்தாள் பாமா. தத்தம் படுக்கையில் சாய்ந்தவாறு கிரீச்சிட்டு க்தூகலமாகக் கத்தினார்கள் சிறுவர் சிறுமியர். வழக்கமாக அந்த இடத்தை ஆண்ட நோய், மௌனம் எங்கே? நர்ஸ் சுப்ரியா மத்தாப்பு வினிஒயோகத்தில் ஈடுபட்டிருந்தாள். வேலைக்காரர்கள், சில குட்டி டாக்டர்கள் எல்லோரும் இந்த நர்சிங் ஹோம் தீபாவளியில் பங்கெடுத்துக் கொண்டிருந்த்னர்.

“என்ன அருமையான யோசனை என் பாமாவுக்கு!” என்று டாக்டர் முரளி எண்ணமிட்டபோது, “வாருங்கள் டாக்டர்! உங்களுக்கென்று உங்கள் மனைவி தனியாக வாணங்கள் பங்கு வைத்திருக்கிறார்!” என்றாள் நர்ஸ் சுப்ரியா.

“உங்கள் உத்திரவில்லாமல் தின்பண்டங்கள் எதுவும் கொடுக்கக் கூடாதென்கிறாளே நர்ஸ்!” என்றாள் பாமா.

“தாராளமாக பக்ஷணம் கொடு. எல்லாரும் ரண சிகிச்சை கேசுகள்தானே? அந்த மூலையில் மார்பியா மயக்கத்தில் சூழ்ந்து கிடக்கும் இரண்டு புது கேசுகளை மட்டும் விட்டுவிடு. பாவம்; அவர்களுக்கு இன்னும் எட்டு மணி நேரத்துக்கு நினைவே வராது!”

“வாருங்கள், டாக்டர். இந்த புருசைக் கொளுத்துங்கள். என் மத்தாப்பை பத்த வையுங்களேன்... எனக்கு இன்னொரு கைக்கும் ஜிலேபி வேணும்!... டேய், என் மத்தாப்பைப் பாரடா, எவ்வளவு ஜோரா பூ விடுகிறது!”

அன்று வார்டில் ஆழி மழைக் கண்ணனே வந்திருந்து களித்தான் என்றபடி டாக்டர் முரளி - பாமா தம்பதியினரின் தவறாதத் தலைதீபாவளி அமோகமாக நடந்தது.

ஒருவரும் எண்ணெய் தேய்த்து, புத்தாடை உடுத்தவில்லை. அதனால் என்ன? வேறு விதத்தில் ஜமாய்த்தல்லவா விட்டனர்! குழந்தைகளுக்குக் கரை காணா ஆனந்தம். அதற்குக் காரணமாயிருந்த பாமாவுக்குப் பூரண திருப்தி. பழைய காலத்து மனுஷி, அவள் அம்மாவுக்கு ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்பும்போது மணி எட்டாகி விட்டது. தெருவெல்லாம் வெடித்த பட்டாசுக் குப்பை. பண்டிகையின் ஜாலவித்தையுடைய உஷஸுடன் கழற்றி, உலகம் தன் பழைய துணிகலைப் போட்டுக் கொண்டு விட்டது போல் தோன்றியது.

பாமாவுக்கு அரைத் தூக்கம். டாக்டர் மெதுவாகக் காரை ஓட்டினார். அவர் தோள்மீது தலையைச் சாய்த்து, கண்களை மூடினாள் பாமா. அவர்கள் அந்நியோன்னிய நிலையைப் பின்னால் உட்கார்ந்திருந்த அம்மா பார்த்து பெரிதும் மகிழ்ந்தாள்.

“பாமா! பாமா! தூங்கி விட்டாயா? நான் என்னமா கார் ஓட்டுவது?” என்றார் முரளி.

பாமா கண்களைத் திறக்கவில்லை. பதில் பேசவில்லை. அன்றைய சம்பவங்களை நினைவில் மீண்டும் அனுபவித்துக் கொண்டிருந்தாள் அவள். அத்தினத்தை அவள் என்றென்றும் மறவாள்.

சிறிது நேரம் கழித்து டாக்டர் தன் மாமியாரிடம் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் பாமாவின் செவியில் புகுந்தது.

“ஊம்! பாமா தூங்கிப் போய்விட்டாள்! சோர்வு! அம்மா, இன்று உங்கள் பெண் எவ்வளவு பெரியதொரு காரியம் செய்தாள்! எங்கள் எல்லாத் தீபாவளிகளையும் இம்மாதிரி பிறருடன் இன்பம் பகிர்வதில் கொண்டாடுவோம்!... உங்கள் பெண் ரொம்ப தைரியசாலி, அம்மா! என் வேலையில் கருத்தாயிருந்து நான் அவளை அதிகம் கவனிப்பதேயில்லை. அதனால் குறைப்பட்டுத் தேயாது, மனமிடியாது இருக்கிறாளே, அதுதான் உண்மை தைரியம்! உங்களிடம் பெருமைக்காக நான் இதைச் சொல்லவில்லை... பாமா எனக்கு எவ்வளவு துணை, பல, ஆதரவு என்பதை விவரிக்கவே முடியாது! அவளை மனைவியாக அடைந்தது என் பாக்கியம்தான்... சீதை போட்ட பாதையில் நடக்கும் பெண் அவள்.”

பாமா புளகாங்கிதமானாள். அவள் குறைவு, ஏக்கம், பசப்பு, மனவிருள் எல்லாம் கண்ணன் முன் ந்ரகாசுரன் போல் தகர்ந்தொழிந்தன.


அன்புடன்,
டோண்டு ராகவன்

Hello how are you?

இது என்னப் புதுக்கதை என விழிக்கும் முரளி மனோகரக்கான விளக்கம் நான் பெனாத்தல் சுரேஷுடன் நிகழ்த்திய chat-ல் உள்ளது. அது பிறகு. முதலில் இப்பதிவின் பின்புலன்:

பதிவின் தலைப்பை செண்டர் ஜஸ்டிஃபை செய்வது பற்றி நான் சசிகுமாரின் பதிவொன்றில் இட்டப் பின்னூட்டம் பற்றிய எதிர்வினை சசிகுமாரிடமிருந்து, மற்றும் அதற்கு எனது பதில் ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன.

சசிகுமார் said... 12
/dondu(#11168674346665545885) said... 4
இதற்கு ஏன் இத்தனை பாடுபடவேண்டும்?

பிளாக்கர் புதுப்பதிவு பக்கத்தில் compose mode-ஐ ஐ செலக்ட் செய்தால், தானே நடுசெண்டருக்கு செல்ல ஐக்கான் கிடைத்து விட்டு போகிறது.

சாதாரண வேர்ட் எடிட்டர் போல எல்லா ஐக்கான்களும் உள்ளனவே//.


நண்பரே நீங்கள் சொல்கிற முறையில் பதிவின் தலைப்பை மாற்ற முடியாது பரிசோதிக்கவும்

September 29, 2010 11:01 AM
dondu(#11168674346665545885) said...
@Sasikumar

Of course you can. Let me explain.
1. Let us say the title is "Hello how are you?"
2. Type the title in the body portion of the new post in the compose mode.
3. Center it using the center justified setting.
4. Come back to html edit mode.
5. You will get an entry for center justification with the necessary HTML code as.

Hello how are you?

6. Cut and paste it in the title box.

7. There you are!! I checked it by seeing the preview in a trial post I just now did.

8. Now it has been published. See: http://dondu.blogspot.com/2010/09/hello-how-are-you.html

அவ்வாறு போட்டதுமே பெனாத்தல் சுரேஷிடமிருந்து பேச அழைப்பு வந்தது. அது கீழே:

Suresh: அருமையான பதிவு

Suresh: இப்படியே எல்லா பதிவும் போட்டீர்கள் என்றால் இந்த நாள் மட்டுமல்ல, எல்லா நாளும் இனிய நாளே!

Narasimhan: எந்தப் பதிவை குறிப்பிடுகிறீர்கள்?

Suresh: hello how are you

Narasimhan: அதுவா, செண்டர் ஜஸ்டிஃபிகேஷன் தலைப்பில் கொண்டு வர முடியாது எனச் சொன்னதற்காக போட்டது

Suresh: :)

Narasimhan: பார்க்க: கணவன் மனமறிந்து நடப்பவளே மனைவி

Suresh: ellaam paathuduven

Narasimhan: உண்மை கூறப்போனால் எனக்கே இது புதிய விஷயம்தான். அப்படித்தான் புதிது புதிதாகக் கற்க வேண்டியுள்ளது.

Regards,
Dondu N. Raghavan

9/28/2010

Dulhan wohi jo piya man bhaaye (கணவன் மனமறிந்து நடப்பவளே மனைவி)

சமீபத்தில் 1978 ஏப்ரலில் எனக்கு பிரெஞ்சு கடைசி டிப்ளமா பரீட்சை. குல வழக்கப்படி ஜெர்மன்/பிரெஞ்சு பரீட்சைக்கு செல்லும் முன்னால் சினிமா பார்த்து விட்டு வந்தேன். ஈகா சினிமாவில் மேலே சொன்ன படம் ஓடிக் கொண்டிருந்தது. வில்லன்/குணசித்திர நடிகர் (ஜானி மேரா நாம் புகழ்) பிரேம்நாத் மகன் பிரேம் கிஷன், ராமேஷ்வரி, மதன்புரி (ஆராதனா திரைப்படத்தில் ஜெயிலர்), இஃப்தீகர், ஜக்தீப், சசிகலா ஆகியோர் நடித்த இப்படம் ராஜஸ்ரீ புரொடக்‌ஷன்ஸுக்கு உரியது.

பலர் இப்படம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அதே பலருக்கு தெரிந்திருக்க முடியாத விஷயம் இப்படத்தின் மூலம் “யோனதான், யோனதான் (Jonathan, Jonathan) என்னும் ஜெர்மன் படம் என்பதுதான். முதலில் ஜெர்மன் படத்தை மாக்ஸ் ம்யுல்லர் பவன் உபயத்தில் பார்த்துள்ளேன். அப்போதே நினைத்தேன் இப்படம் இந்தியச் சூழ்நிலைக்கு நன்கு பொருந்தி வரும் என. அது உண்மையானதில் எனக்கு மிக மகிழ்ச்சியே.

பிரேம் பணக்கார வாலிபன், தாத்தாவிடம் வளர்கிறான். அவன் அப்பா அம்மா அவனது சிறு வயதிலேயே இறந்து விட்டனர். தாத்தாவுக்கு சீரியசாக உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. தான் சாவதற்கு முன்னால் பேரனின் திருமணத்தை நிகழ்த்த ஆசைப்படுகிறார். அவனோ ரீட்டா என்னும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். தாத்தாவிடமும் கூற அவரோ அப்பெண்ணைத் தன்னிடம் அழைத்துவரச் சொல்கிறார்.

துரதிர்ஷ்டவசமாக அப்பெண்ணும் அவள் அம்மாவும் காஷ்மீர் சென்றிருக்கின்றனர். பனிப்புயல் காரணமாக தேசத்துடன் பிற பகுதிகளுடன் எல்லா தொடர்பும் கட். தாத்தாவின் நிலைமை திடீரென சீரியசாக, அவருக்கு பெண்ணை அழைத்து வந்து காட்ட வேண்டும் என குடும்ப நண்பரும் டாக்டருமான இஃப்தீக்கர் கூறுகிறார். ஆகவே அவன் கம்மோ என்னும் பூக்கார பெண்ணை தன் காதலியாக நடிக்கச் சொல்கிறான். அவளும் நடிக்க தாத்தாவுக்கும் அவர் நண்பருக்கும் அவளைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி வீட்டுக்கு சரியான மருமகள் கிடைத்தாள் என்று.

இதற்கு மேல் கதையை நம்ம ஜனங்களே ஊகிக்கலாம். நடுவே நிஜமான காதலியும் அவளது ஷோக்கு அம்மாவும் வந்து குழப்பம் விளைவிக்க, தாத்தாவுக்கு கடைசியில் இந்த நடிப்பு விவகாரம் தெரிந்தாலும், கம்மோதான் மருமகள் எனத் தீர்மானிக்க ஒரே கலாட்டாதான். கடைசியில் உண்மைக் காதலி ரீட்டாவின் சுயரூபம் தெரிந்து பிரேமும் கம்மோவையே மனைவியாக வரிக்கிறான்.

அப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி கீழே தந்துள்ளேன். பார்த்து ரசிக்கலாம்.



வேற்று மொழியிலிருந்து சுட்டாலும் ராஜஸ்ரீ புரொடக்‌ஷன் இந்திய பாரம்பரியத்துக்குள் அதைக் கொண்டு வருவதில் மிகவும் வெற்றி பெற்றுள்ளது மனதுக்கு நிறைவைத் தருகிறது.

படத்தின் பாடல்கள் மிக அருமையாக வந்துள்ளன. அதில் வரும் ஆர்த்தி பாடல் கீழே.



ஜய் ஸ்ரீராம்!

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/27/2010

எனக்குப் பிடித்த பாடல்கள்

வால்பையன் கேட்டுக் கொண்டதற்கிணங்க எனக்கு பிடித்த பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன்.

அவர் சொன்னதுஇ போல எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் முக்கிய இடம் வகிப்பது மச்ச மச்சினியே பாட்டுதான், ஸ்டார் படத்தில் பிரசாந்த் மும்தாஜ் நடனத்துடன் வருகிறது. அப்பாட்டை யூட்யூபில் இருந்து ஏதோ ஒரு நாதாரி சொன்னான் என எடுத்து விட்டார்கள். ஆகவே அதே ட்யூனில் வரும் ஹிந்தி பாடலை இங்கு சுட்டுகிறேன். ருத் ஆ கயீ ரே என வரும் அப்பாடலில் நடிப்பு ஆமிர்கான் (லகான் புகழ்) மற்றும் (அழகி புகழ்) நந்திதா தாஸ்.



ஆனால் ஆல் டைம் ஃபேவரைட் என்றால் சமீபத்தில் 1964 தீபாவளி ரிலீசாக வந்த படகோட்டி பாடல்கள்தான்.

எல்லா வகைகளுக்கும் சேர்த்து என் மனதில் முதல் ரேங்க் பெறும் பாடல் பெண் தனிக்குரல், படகோட்டியில் வரும் என்னை எடுத்து தன்னைக் கொடுத்து என்னும் பாடல்:



டூயட் ஒரு பக்க ரிகார்டிங், தொட்டால் பூமலரும். இதைத்தான் ரீமிக்ஸ் எனக்கூறி பின்னால் எஸ்.ஜே. சூர்யா என்பவர் கற்பழித்தார். அப்பாடல்:



ஆண்குரல் சோலோ, அதே படகோட்டி படம்தான், கடல் மேல் பிறக்க வைத்தான்:



டூயட் இரு பக்க ரிகார்டிங்கிலும் படகோட்டிதான் மன்னிச்சுக்கங்கப்பூ. அதன் வீடியோ தலைகீழாக நின்றாலும் எம்பெட் செய்யக் கிடைக்கவில்லை, ஆகவே முழு பாடல் வரிகள்:

பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ

கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ

இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக
இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு
இல்லாத ஆசையில என் மனச ஆடவிட்டான்
ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே
ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே

ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு


மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து
பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு
மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போனேனே
மை எழுதும் கண்ணாலே போய் எழுதிப் போனாளே

ஆசைக்கு ஆசை வச்சேன்
நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய்
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு

வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து
ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன்
நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க
நான் மட்டும் இங்கிருக்க ...நான் மட்டும் இங்கிருக்க

தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க
சாட்சி சொல்லும் சந்திரனே நீதான் ஓடிப்போய் தூது சொல்லு

பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ


அன்புடன்,
டோண்டு ராகவன்

எல்லா ஆண்களுமே ஆணாதிக்க வாதிகள்தான், அதுதான் இயற்கை

இப்பதிவின் தலைப்பைப் பார்த்ததுமே சீறி எழுந்து முரளிமனோகர் “அதெல்லாம் இருக்கட்டும், உன் கதை என்ன அதைச்சொல்லு பெரிசு” என்னைக் கேட்கும் முன்னால், நானே கூறிவிடுகிறேன், நானும் ஆணாதிக்கவாதிதான் என்று.

எனத மதத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், எந்த நாட்டை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். பென்ணுக்கு இரண்டாம் இடத்தைத்தான் கொடுத்திருக்கிறார்கள். நம் நாட்டில் எந்த சாதியானாலும் சரி, எந்த மதமானாலும் சரி, எந்தக் கட்சியானாலும் சரி பெண்களுக்கு இரண்டாம் இடத்தைத்தான் தந்த்ருக்கிறார்கள்.

இதன் அடிப்படைக் காரணமே இயற்கை செய்த லீலைதான். இது சம்பந்தமாக நான் இட்ட சில பதிவுகளிலிருந்தே கோட் செய்கிறேன்.

ஆண் பெண் கற்புநிலை - 2
உடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதை பற்றி இங்கு விவரமாக எழுதுவேன்.உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன்னை பெருக்கிக் கொள்வதற்கான உந்துதல். ஆகவே அது தவறு என்று கூறுபவர்கள் முட்டாள்கள். திருமணத்தை துறந்து சன்னியாசிகளாக போகிறவர்களில் பலர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபடுவது இதனால்தான். இது எல்லா மதத்தினாருக்கும் பொருந்தும்.

இதிலும் ஆண்களுக்கு அவ்வளவு பாதிப்பில்லை. இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் பெண்கள் பாடுதான் திண்டாட்டம். கருவுறுவது அவர்களே. ஆண் ஓடிவிடுவான். மாட்டிக் கொண்டு அவமானப்படுவது இவர்களே. சில சமயம் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வரை அவர்களுக்குக் கிடைத்து விடுகிறது.

இந்த அழகில் ஊடகங்கள் வேறு பாடாய் படுத்துகின்றன. சில உதாரணங்கள் இங்கு கூறலாம். எழுபதுகளில் "இளமை ஊஞ்சலாடுகிறது" என்ற தலைப்பில் ஸ்ரீதர் இயக்கிய படம் திரையிடப்பட்டது. அதில் ஜயசித்திரா ஒரு விதவையாக வருவார். அவர் கூறிய வசனம் ஒன்றில் இவ்வாறு வரும். "பலர் என்னை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார்கள். ஆனால் எல்லோரும் என் உடலையே விரும்பினார்கள். ஆகவே நான் மறுத்து விட்டேன்." என்ன அபத்தமான கற்பனை இந்த வசனத்தை எழுதியவருக்கு. விதவை திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஆனால் உடல் உறவுக்காக அல்ல என்று கூற ஆசைப்படுகிறாரா? அதே போல "மன்மத லீலை" என்னும் படத்தில் ஜயப்பிரதா கமலிடம் கூறுகிறார்: "நான் உடல் ஊனமுற்ற போர்வீரனை கல்யாணம் செய்து கொண்டேன். அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது. ஆக, நான் செக்ஸுக்காக கல்யாணம் செய்து கொள்ளவில்லை." இதில் என்ன பெருமையோ. செக்ஸையே தப்பு என்றெல்லாம் எழுதுவார்கள். அதெல்லாம் பெண்களுக்குத்தான் ஆண் கதாபாத்திரங்களுக்கு ஒன்றுக்கு மேல் துணை வைப்பார்கள்.

சரி நம் விஷயத்துக்கு வருவோம். ஒரு ஆண் ஏன் உடலுறவின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கிறான்? அவன் கருவுருவதில்லை அதனால்தானே? பெண் என்ன செய்வாள்? அறுபதுகளில் கருத்தடை மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கருவுராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்ததும் பெண்கள் பொங்கி எழுந்தனர். அமெரிக்க ஆண்களே அஞ்சும் அளவில் உடல் உறவில் ஈடுபட்டனர். செயல்பட இயலாத ஆண்துணையை விடுத்து வேறு துணை தேடினர். இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று இன்றும் விவாதங்கள் தொடர்கின்றன. அதில் நான் போக விரும்பவில்லை. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்று மட்டும் கூறுவேன்.

குஷ்பு சொன்னதையே நானும் வழிமொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக் கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.

(மேலே சொன்னதில் கடைசி பத்தியை மட்டும் அவுட் ஆஃப் காண்டக்ஸ்டாக எடுத்துக் கொண்டு சக ஆணாதிக்கவாதிகள் ஆட்டம் போட்டது இப்போதைக்கு தேவைல்லாத விஷயம் என்பதால் ஒதுக்கி விடுகிறேன்.


ஆண் பெண் கற்பு நிலை - 1
கற்பு நிலையை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாய் வைப்போம் எனப் பாடினான் முண்டாசுக் கவிஞன். கேட்கவே நன்றாக இருக்கிறது. ஆனால் உண்மை நிலை? இதைப் பற்றி இங்கு பார்ப்போமா.

ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபடுகின்றனர். குழந்தை உண்டானால் பெண்தான் சுமக்க வேண்டும். ஆண் ஓடிவிடுவான், அவளுக்குத்தான் கஷ்டம். இதுதான் உண்மை நிலை. இதற்காகவே பெண்ணை ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார்கள். சமூகத்தில் கன்னித் தாய்கள் பெறும் அவமானம் கால தேச வர்த்தமானங்களைக் கடந்தது. ஆகவே கர்ணர்கள் கூடையில் வைத்து நதியில் விடப்பட்டனர். அக்குழந்தைகள் பெற்ற அவமானமோ அதற்கும் மேல். கர்ணனின் கதையே இதற்கும் சாட்சி. இந்த பயமும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதற்கு ஒரு முக்கியக் காரணமே.

ஆண் பெண் உடற்கூறுகளே இந்த நிலைக்கு மூல காரணம். விந்துவை அளிப்பதுடன் ஆணின் வேலை முடிந்து விடுகிறது. பெண்ணுக்கோ அப்போதுதான் எல்லாமெ ஆரம்பம் ஆகிறது. மனித நாகரிகம் வருவதற்கு முன்னால் தந்தை என்ற கான்சப்டே இருந்திராது. அதேபோல அப்போதெல்லாம் கன்னித்தாய் என்று பழிப்பவர்களும் இருந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் கல்யாணம் என்பதே நாகரிகத்தின் அறிகுறிதான். கருவானதும் குழந்தை பெற்று பேணுவது பெண்ணின் வேலையாகவே இருந்தது. அது காரியத்துக்கு ஆகாது என்பதாலேயே குடும்பம், தந்தை என்றெல்லாம் உருவாயின. பகுத்தறிவை பெற்ற மனித இனத்துக்கு மான அவமான எண்ணங்கள் உண்டாயின. தன் மனைவி, தன் பிள்ளை என்ற எண்ணங்களும் உண்டாயின. ஆணை கட்டுப்படுத்துவதற்காக பெண் பல விலைகளை தர வேண்டியதாயிற்று. அவன் தந்தை என்ற கடமையை நிறைவேற்றவேண்டுமென்றால் அவன் மனைவி அவனுக்கு மட்டும் என்ற என்ணம் வேரூன்ற வேண்டும். ஆகவே பெண்ணுக்கு பல கட்டுப்பாடுகள் வந்தன. உண்மையாய் இருந்தால் மட்டும் போதாது, உண்மையாக இருப்பது போன்ற தோற்றமும் தேவைப்பட்டது.

ஆகவேதான் ஆண் எப்படியிருந்தாலும் பெண் மட்டும் கற்புடையவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. இதை பெண்கள் கூட அதிகம் வலியுறுத்தினர். அதே நேரத்தில் மனித இனம் தழைக்க வேண்டுமானால் மக்கள் தொகை பெருக்கம் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இப்போது நம்மிடம் இருக்கும் அதிக ஜனத்தொகை என்பது மனிதவரலாற்றில் புதியது. இருப்பினும் இப்போது கூட பல ஐரோப்பிய தேசங்களில் ஜனத்தொகை குறைந்து அரசுகள் கூப்பாடு போடுவதையும் நாம் பார்க்கிறோமே. திடீரென்று பெரிய விபத்து ஏற்பட்டு மனிதர்கள் பல்லாயிரக்கணக்கில் அழிந்தால் அப்போது நம் மனநிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆகவே இப்போதைய உண்மைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பார்க்கலாம்.

"ஜாலியான பிரும்மச்சாரியாக இருப்பது எப்படி" என்றெல்லாம் புத்தகங்கள் ஆணுக்காக வந்தால் "கணவன் பெறுவதற்கான வழிகள்" என்று பெண்ணுக்கான புத்தகங்கள் வருகின்றன. பல பெண்களுடன் ஆண் உறவு வைத்தால் அவனுக்கு மச்சம் என்றெல்லாம் பேசுகின்றனர். அதே சமயம் பெண்ணுக்கு ஒன்றுக்கு மேல் ஆண் நண்பர்கள் இருந்தால் அவளுக்கு பெயர் அளிப்பதில் மற்ற பெண்களே முன்னால் நிற்கின்றனர்.

ஆனால் உடல் இச்சை என்பது இருபாலருக்கும் பொதுதான். தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை. அதற்குள் ஆண்களுக்கு ரத்தக் கொதிப்பு ஏறிவிடுகிறது. ஏறினால் ஏறிவிட்டுப் போகட்டும். உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது? அடுத்த பதிவில் பார்ப்போம்.


இப்போதைய நிலை என்ன? ரொம்ப மாற்றமெல்லாம் இல்லை என்பதுதான் நிஜம்.

இம்மாதிரியாக இயற்கையின் செட்டிங்ஸால்தான் ஆணாதிக்கம் ஏற்படுகிறது. அவ்வாறு ஓர் ஆண் ஆதிக்கம் காட்டாவிட்டால் அவன் மனைவி கூட அவனை மதிக்காமல் போகும் நிலை கூட சிலதருணங்களில் வந்திருக்கிறது.

இப்பதிவின் நோக்கம் என்ன? ஆணாதிக்கம் பெண்ணடிமை என சீன் காட்டும் சீமான்கள் அடங்கட்டும். உள்ளே புகுந்து பார்த்தால் ஒவ்வொருத்தனும் ஆணாதிக்கவாதியே, அப்படி இல்லை என்றால் அவன் ஆணாகவே மதிக்கப்பட மாட்டான்.

ஆகவேதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. அப்பதிவை நான் போட்டது கூட அவர் ஆணாதிக்கத்தை எதிர்த்து செயல்பட்டார் என பலர் அவதூறாக சொல்வதாலேயே. Setting the record straight என்று கூறுவார்கள். அதுதான் இது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/24/2010

ஈ.வே. ராமசாமி அவர்கள் சார்பில் இங்கு யாராவது சில பகுத்தறிவு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கப்பூ!!

ஆசிட் தியாகுவின் இப்பதிவைப் பார்த்து எனக்குள் தோன்றியதே பகுத்தறிவுக் கேள்விகளை எல்லோருமே கேட்பாங்களே, என்ன செய்வது என்னும் கேள்விதான்?

நீலாவதி - ராமசுப்பிரமணியம் திருமணத்தை முன்னிட்டு கூடியிருந்தவர்கள் இடையே ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஆற்றிய உரைக்கு முன்னால் ஒருவர் கேட்ட கேள்வியும், நாயக்கரின் பதிலும்:

ஒருதாரமிருக்கிற பொழுது மறுதாரம் கட்டலாமென்பது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையா? ஹிந்து மதக் கடவுள்கள் பல மனைவிகளையுடையவர்களாய் இருக்கின்றனர். அந்த மதம் தப்பிதமானது என்று கூறும் சுயமரியாதை இயக்கம் ஒரு மனைவியிருக்க மற்றொரு மனைவியை மணம் செய்ய அனுமதிக்கலாமா? என்று கேட்டார்.

திரு. இராமசாமி அவர்கள் பதில் கூறியதாவது:-

இப்பொழுது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியது நமது கடமையேயாகும். சுயமரியாதை இயக்கம் என்ன சொல்லுகிறதென்றால், ஒவ்வொருவரும் எல்லா விஷயங்களிலும் தங்கள் பகுத்தறிவை உபயோகப் படுத்த வேண்டுமென்றும், ஆண், பெண் இருவருக்கும் சமத்துவம் இருக்க வேண்டுமென்றும் சொல்லுகிறது. சுயமரியாதை இயக்கத்தால் கண்டிக்கப்படுகிற தேவர்கள் செய்யும் காரியங்களையெல்லாம் செய்யக் கூடாதென்பது நோக்கமல்ல. தேவர்கள் சாப்பிடுகின்றார்கள். மூச்சு விடுகிறார்கள் என்பதால் நாமெல்லோரும் சாப்பிடக் கூடாது, மூச்சுவிடக் கூடாது என்பது முட்டாள் தனமாகும். பகுத்தறிவிற்கு எது பொருத்தமாயிருக்கிறதோ அதைக் கைக் கொள்ளவேண்டுமென்பதுதான் சுய மரியாதை இயக்கத்தின் நோக்கமாகும். கல்யாணம் என்பது ஒரு மனிதனுடைய இன்பத்தைப் பொறுத்ததேயன்றி வேறொன்றுமில்லை. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் ஒத்துவராவிட்டால் வேறு கல்யாணம் செய்து கொள்வதில் பிசகொன்றுமில்லை. அதே உரிமையை பெண்ணுக்கும் கொடுக்க ஆண் தயாராயிருக்கிறார்.

கல்யாணத்தை கத்தரிக்காய், வாழைக்காய் போல நினைத்து பொருத்தமற்ற முறையில் கல்யாணத்தைச் செய்து வைத்து வாழ்க்கை முழுமையும் துன்பத்திலும் அடிமைத்தனத்திலும் இருக்கும்படி செய்வது அறியாமையாகும். சமீபத்தில் நகர் என்ற ஊரில் ஒரு சுயமரியாதை கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளை கிறிஸ்தவர். கிறிஸ்து மதச் சட்டப்படி ஒரு மனைவி யிருக்க மற்றொரு மனைவியை விவாகம் செய்து கொள்ள அனுமதியில்லை என்றாலும் அவரவர் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துதல் விரோதமாகும். எனவே அக்கல்யாணத்தைச் சிறப்பாக முடித்து வைத்தோம். இங்கு நடைபெற்ற திருமணத்தின் தம்பதிகள் மிகச் சிறந்தவர்கள் என்பது என் கருத்து. தகுதி வாய்ந்த இத்தம்பதிகள் சிறந்து வாழ விரும்புகிறேன்.


குடி அரசு - சொற்பொழிவு - 12.10.1930
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

இப்போது எனது கேள்விகள்:

1. //தேவர்கள் சாப்பிடுகின்றார்கள். மூச்சு விடுகிறார்கள் என்பதால் நாமெல்லோரும் சாப்பிடக் கூடாது, மூச்சுவிடக் கூடாது என்பது முட்டாள் தனமாகும்.//
ஆக இரண்டாம் பெண்டாட்டி கட்டுவது சாப்பிடுவது, மூச்சு விடுவது போல அடிப்படைத் தேவை அப்படித்தானே? பேஷ், பேஷ், நல்ல பகுத்தறிவு.

2. //ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் ஒத்துவராவிட்டால் வேறு கல்யாணம் செய்து கொள்வதில் பிசகொன்றுமில்லை. அதே உரிமையை பெண்ணுக்கும் கொடுக்க ஆண் தயாராயிருக்கிறார்.//
அற்புதமான சொற்கள். பெண்ணுக்கு ஆண் உரிமை தரவேண்டும் ஆனால் ஆணோ அதை தானே எடுத்துக் கொள்வான் அப்படித்தானே? அது இருக்கட்டும், நாயக்கர் அம்மாதிரி பெண்ணுக்கான இரண்டாம் திருமணங்கள் எத்தனைக்கு தலைமை தாங்கியுள்ளார்? பெண் அப்படிப் போக மாட்டாள் என்ற தைரியத்தில்தானே பேசினார் அவர்? (இதில் டைவர்ஸ் ஆன பெண்ணின் திருமணத்தைச் சேர்க்கவில்லை. இரண்டாம் திருமணம் செய்யும் ஆண்கள் அவர்கள் காலகட்டத்தில் இரு மனைவியருடனுமேயே வாழ்ந்து வந்துள்ளனர். அம்மாதிரி வாழ நினைத்த எத்தனைப் பெண்களின் இரண்டாம் திருமணத்தில் இவர் கலந்து கொண்டார் என்பதுதான் எனது கேள்வி).

அதிலும் சொந்த மனைவியையே ஊருக்கு வந்துள்ள புது தாசி என தம் நண்பர்களுக்கு அடையாளம் காட்டி அவர்களை விட்டு அந்த உத்தமப் பெண் நாகம்மையாரை கேலி செய்வித்து, கோவிலுக்கு வந்த மற்ற பெண்டிரை பயம்காட்டி, அவரது மனதையும் நோவடித்த ஈ.வே. ரா. அவர்கள் பற்றி என்ன கூறுவீர்கள்?

இதுதான் போதாது என்றால், ஒரு முறை மனைவிகளும் கள்ள புருஷன் வைத்துக் கொள்ளலாம் என ஈ.வே.ரா. அவர்கள் ஒரு கூட்டத்தில் கூற, நாகம்மையிடம் தான் செல்லலாமா என ஒருவர் கூட்டத்தில் கேட்டு வைக்க, “நாம் இருவருமே நாகம்மையிடம் இது சம்பந்தமாக பேசுவோம், அவர் கொடுப்பதை வாங்கி வருவோம்” என்று பொருள்பட திருவாய் மலர்ந்தருளினது பற்றியும் என்ன கூறுவது, தமிழகத்தின் தலைவிதியை நொந்து கொள்வதை விட அல்லது நாகம்மை கற்புடையவள் அம்மாதிரியெல்லாம் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையைத் தவிர? ஆணாதிக்கம், ஆணாதிக்கம்....

3. அப்போதும் சரி இப்போதும் சரி ஒரு பெண்ணால் அம்மாதிரி முடிவெடுக்க சரியான சூழ்நிலை இருந்ததில்லை. அச்சூழ்நிலை வேண்டுமென்பதற்காக எங்காவது போராடியிருக்கிறாரா? நிற்க.

அதே பேச்சில் நாயக்கர் திருவாய் மலர்ந்தருளிய மேலும் சில பாயிண்டுகளை இங்கு சுருக்கமாகத் தருகிறேன். அதனையையும் காப்பி பேஸ்ட் செய்து விட்டால் உண்மைத் தமிழனின் மிக நீண்ட பதிவுகளையும் விடப் பெரிதாகி விடும் அபாயம் உண்டு.

எப்படிப்பட்ட மனைவி அமைந்தால் கணவன் மறுமணம் செய்து கொள்ளலாம் என ஒன்பது விஷயங்களை அக்கறையாக பட்டியலிடுபவர், ஒரு பாயிண்டைக் கூட கணவன் மோசமாக இருக்கும் உதாரணங்களையே தராது ஜாக்கிரதையாகத் தவிர்த்து தனது ஆணாதிக்கத் திமிரைத்தான் காட்டியுள்ளார். கடைசியில் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என மனைவியும் வேறு கணவனைத் தேடிக் கொள்ளலாம் என கூறி நழுவி விடுகிறார்.

ஈவே ராமசாமி நாயக்கரா ஆணாதிக்கவாதி என சீறிக் கொண்டு வரும் பகுத்தறிவுத் திலகங்களுக்கான் பதிலை நாயக்கரின் சொற்களிலிருந்தே தந்து விடுகிறேன்.

எனது இப்பதிவிலிருந்து கோட் செய்கிறேன். கீழே இடப்பட்டவற்றை நாயக்கரே அவரது முதல் மனைவி நாகம்மையார் மறைந்தபோது எழுதியுள்ளார்.

நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை.

நான் சுயலநல வாழ்வில் ‘மைனராய்', ‘காலியாய்', ‘சீமானாய்' இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார் என்பது மறுக்க முடியாத காரியம்.

பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லம்ம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.
அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநல சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாகச் சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நான் காங்கிரசிலிருக்கும் போது, நாகம்மாள், மறியல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே! எது எப்படியிருந்த போதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கையை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை.

ஆதலால், நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் "குடும்பத் தொல்லை' ஒழிந்தது என்கின்ற ஓர் உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.

இது நிற்க. நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும் லாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக் கொள்கின்றேனோ, அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ளமாட்டார். அதற்கு நேர்ரெதிரியடையாக்குவதற்காக உபயோகித்துக் கொள்வார். ஆதலால், நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.


ஆக, பெரியார் ஆணாதிக்கவாதி இல்லையென்பதை நிறுவ சப்பைக்கட்டெல்லாம் கட்டி சிரமப்பட வேண்டாம்.

இன்னொரு விஷயம். பொருந்தாத் திருமணத்தின் முக்கிய எதிர்ப்பே, கிழவரால் குமரிக்கு மன மகிழ்ச்சி அளிக்கக் கூடிய மணவாழ்க்கை தர இயலாது என்பதுதான். அப்படிப்பட்டவர் தானே ஒரு பொருந்தாத் திருமணத்தை செய்து கொண்டாரே, அதற்கு என்ன சமாதானம் கூறுவது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/23/2010

சங்கிலி முருகனாக சுப்ரீம் கோர்ட், வடிவேலுவாக சி.பி.ஐ. - பார்க்க, துக்ளக் 29.09.2010 தேதியிட்ட இதழை

இன்று விற்பனைக்கு வந்த மேற்சொன்ன துக்ளக் இதழில் வந்துள்ள அட்டைப்பட கார்ட்டூன் தூள் ரகத்தைச் சேர்ந்தது. “நேசம் புதிது” என்னும் படத்தில் வரும் சங்கிலி முருகன் மற்றும் வடிவேலு பங்கேற்கும் பஞ்சாயத்து காட்சியை இங்கு அரசியல் கார்ட்டூனாக்கியிருக்கிறார்கள்.

சங்கிலி முருகனாக சுப்ரீம் கோர்ட், வடிவேலுவாக சி.பி.ஐ.

கார்ட்டூனை ஸ்கேன் செய்து போட நேரமில்லாததால் வசனத்தை மட்டும் போட்டு விடுகிறேன். படம் இல்லாத குறையை ஈடு செய்ய சம்பந்தப்பட்ட அக்காட்சியின் நேரொளியையும் கீழே தருகிறேன். முதலில் வசனம்.

சுப்ரீம்கோர்ட்: 2 G ஸ்பக்ட்ரம்லே...
சி.பி.ஐ.: என்ன 2 G ஸ்ப்க்ட்ரம்லே?

சு: முறையா ஏலம் விடாம...
வ: என்ன முறையா ஏலம் விடாம?

சு: வேண்டியவங்களுக்கே ஒதுக்கீடு செஞ்சு...
வ: என்ன வேண்டியவங்களுக்கே ஒதுக்கீடு செஞ்சு?

சு: 70000 கோடி ரூபா ஊழல்...
வ: என்ன 70000 கோடி ரூபா ஊழல்?

சு: இதைப் பத்தி ஒண்ணுமே தெரியாதா?
வ: என்ன இதைப் பத்தி ஒண்ணுமே தெரியாதா?

அப்படத்தில் அடாவடி செய்த அப்பாத்திரமே உயிருடன் இருந்து சி.பி.ஐ.யின் இந்த அழிச்சாட்டியத்தைப் பார்த்தால், நம்மள இப்படியெல்லாம் காப்பி அடிக்க ரூம் போட்டு யோசனை செய்யறாங்களேப்பா, அவ்வ்வ்வ்வ்வ் என அழும்போல ஆகிவிடுவார்.

நான் ஏற்கனவே எனது இப்பதிவில் கூறியபடி:
“ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மதம், இனம், ஜாதி எல்லாவற்றையும் கடந்தவர்கள். ஊழல் செய்கிறார்கள். மாட்டிக் கொண்டாலும் தங்களுக்கிருக்கும் பிற திறமைகளை உபயோகித்து பிழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் சற்றே சலுகை தர முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதாகப்பட்டது தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த அரசியல்வாதி என்றால், ஒரு குறிப்பிட்டத் தொகை அளவுக்கு ஊழல் செய்யலாம் என நிர்ணயித்து விடலாம். அந்தக் குறிப்பிட்ட தொகையும் ராசா போன்றவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டுமானால் 2000 கோடி ரூபாய்க்கு குறையாமல் இருக்க வேண்டும். அப்படி வைத்தால் தினகரனும் automatically covered. ஆகவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய்”.

அது அப்படித்தான் என ஆயாசம் கொள்பவர்கள் கொஞ்சமாவது வடிவேலு “நேசம் புதுசு” படத்தில் வரும் அக்காட்சியைப் பார்த்து சிரித்தாவது ரிலேக்ஸ் ஆகிக்கொள்ளட்டுமே.

அக்காட்சி எப்படத்தில் வருகிறது எனத் தெரியாததால் கேபிள் சங்கருக்கும் உண்மைத் தமிழனுக்கும் ஃபோன் போட்டுக் கேட்டால் ‘தெரியாது’ன்னு சொல்லிட்டாங்கல்ல. இருந்தாலும் இந்த டோண்டு ராகவன் விடுவானா, யூ ட்யூப்பில் வடிவேலு பஞ்சாயத்துக் காமெடிகள் என (ஆங்கிலத்தில்தான்) போட்டு தேடியதில் கெடச்சுச்சு இல்ல! இப்ப பாருங்க!



அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் சேர்க்கை: இட்லி வடையின் உபயத்தால் துக்ளக் அட்டைப்பட கார்ட்டூனும் இப்போது இங்கே. நன்றி இட்லிவடை.:

9/22/2010

ஏன் சார் சாரு நிவேதிதா அப்படியாவது உங்கள் வலைப்பூவை பார்க்க வேண்டும் என எங்களுக்கு என்ன முடை?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சாரு நிவேதிதாவுடன் ஒரு சந்திப்பு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடியில் நடந்தது. அதற்கு சற்று நாள் முன்னால்தான் சாரு தனது வலைப்பூவை கட்டணத்தளமாக மாற்றப்போவதாகக் கூறியிருந்தார். நான் அவரிடம் அவர் அதை செய்து விட்டாரா இல்லை இனிமேல்தான் செய்யப் போகிறாரா எனக் கேட்டதற்கு அவர் அந்த எண்ணத்தையே விலக்கிக் கொண்டுவிட்டதாகக் கூறினார். ஏன் எனக்கேட்டதற்கு ஆனானப்பட்ட சுஜாதாவின் வாசகர்களே அம்பலம் கட்டண தளமாக மாறியதும் அதை பார்ப்பதை நிறுத்தியதாக கேள்விப்பட்டாராம். அவரே அப்படியென்றால் தான் எம்மட்டு என்ற பிரமிப்பு வந்ததுமே ஓசைப்படாமல் அதை கைவிட்டுள்ளார்.

அதன் பிறகு அவர் (அல்லது அவரது புரவலர்கள்) காசு கொடுத்து நடத்தும் தளத்தின் பதிவுகள் திடீரென வைரஸ் தாக்குதலில் மறைந்து போயின. அந்த சந்தர்ப்பத்திலும் அவரை நான் சுஜாதா நினைவுநாள் கூட்டத்தில் சந்தித்து பேசியபோது பேசாமல் பிளாக்கர் சேவைக்கு மற்றிக் கொள்ள ஆலோசனை கூறினேன்.

தேவையின்றி பணம் கொடுத்து இம்மாதிரி வலைப்பூவெலாம் வைத்துக் கொள்ளும் இம்சை பற்றியும் ஒரு பதிவு போட்டேன்.

இதெல்லாம் திடீரென ஏன் மறுபடியும் கூறுகிறேன் என்றால், சாருவின் தளத்துக்கு க்ளிக் செய்து பதிவுகளைப் பார்க்க முயன்றால் இந்தப் பக்கம் வருகிறது. பல விவரங்களை கேட்கிறார்கள். ஆளை விடுங்கள் என அணைத்து விட்டேன். இது யாருடைய அற்புத யோசனை என்பது புரியவில்லை. அப்படியாவது எல்லா கட்டங்களையும் பூர்த்தி செய்து அவரது கட்டுரைகளை படிக்க வேண்டுமா, ஆளை விடுங்கள் என வந்து விட்டேன்.

இந்த தருணத்தில் trade india என்னும் அமைப்பு செய்யும் கூத்துதான் நினைவுக்கு வருகிறது. கணினி வாங்கிய புதிதில் அதன் தளத்தில் இலவச உறுப்பினராகச் சேர்ந்தேன். அதில் இருந்து ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் ஆகியோரது பட்டியல்களை பெற்று மொழிபெயர்ப்பு சேவைகள் பற்றிய ஆஃபர்களை நான் தேர்ந்தெடுக்கும் கம்பெனிகளுக்கு அனுப்பலாம் எனப் பார்த்தேன். அதற்காக ஒரு குறிப்பிட்ட கம்பெனியைத் தெரிவும் செய்தேன். ஆனால் அதன் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை காசு கொடுத்து உறுப்பினரானால்தான் தருவார்களாம்.

அதன் பட்டியல்களில் உள்ளவர்களுக்கு இம்மாதிரி நிபந்தனை இருப்பது தெரியுமா என எனக்குத் தெரியவில்லை. அவர்கள் பட்டியலில் இடம் பெறவே கட்டணம் கட்டியுள்ளனர். நாலு வாடிக்கையாளர்களோ, சேவை அளிப்பவர்களோ அவர்களை தொடர்பு கொண்டால்தானே அவர்கள் வியாபாரமே நடக்கும்? அவர்களிடம் பணம் வாங்கியது போதாது என கேஷுவலாக எப்போதாவது அவர்களது தொடர்பு விவரங்கள் தேடுபவர்களும் பணம் செலுத்த வேண்டும் என்பது எந்த நியாயம்? ஆகவே நான் கண்டு கொள்ளாமல் விட்டேன். கம்பெனியின் பெயர்களை கூகளில் அடித்து கேட்டால் தானே விவரங்கள் தெரிகின்றன, ஆகவே அதில் பிரச்சினை இல்லைதான்.

இதில் தமாஷ் என்னவென்றால், அதே trade india-வின் பிரதிநிதி ஒருவர் என் வீட்டுக்கு வந்து என்னையும் கட்டண உறுப்பினராக்க முயன்றார். இதனால் எனக்கு என்ன லாபம் எனக்கேட்டதற்கு என் பெயரும் மொழிபெயர்ப்பாளர்களின் பட்டியலில் வரும் என்றார். ஆனால் அதனால் எனக்கு என்ன பிரயோசனம்? என்னைப் போலவே இன்னொருவன் என்னை இப்பட்டியல் மூலம் தொடர்பு கொள்ள என்ணினால் அது அவன் கட்டண உறுப்பினனாக இல்லாவிட்டால் அது நடக்காதே? இதை அந்த பிரதிநிதியிடம் கூற அவர் என்ன பதில் தருவதெனத் தெரியாது இடத்தைக் காலி செய்தார்.

பெயரை பதிவு செய்ய கட்டணம் கேட்பது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கேஷுவலாக பார்ப்பவனும் பணம் கட்ட வேண்டும் என்றால் எப்படி? எல்லோரும் கேனையன் என நினைத்தார்களா இவர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/21/2010

இன்றைய பெண் - அவள் மட்டும்தானா அப்படி

தினம் ஒரு தகவல் என்னும் தலைப்பில் எனக்கு மின்னஞ்சல்கள் வந்ததுண்டு. அனந்தகுமார் என்பவர் அனுப்புகிறார். இன்று வந்த மின்னஞ்சல் என் கவனத்தைக் கவர்ந்தது. முதலில் அதை பார்ப்போம். பிறகு நான் பேசுவேன்.

சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் இன்றைய பெண்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். இவர் கூறுவது பெண்களை இழிவுபடுத்துவதற்காகவோ அல்லது குறை கூறுவதற்காகவோ கிடையாது. பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே!!! எந்த ஒரு பெண்ணும், பெண்களை இழிவுபடுத்துகிறார்கள் அல்லது தாழ்வுபடுத்துகிறார்கள் என்று தவறாக கருத வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாரப் பத்திரிக்கை, மாதப் பத்திரிக்கை படிக்கிற பெண்கள் அதிகம். ஆனால் தினப்பத்திரிக்கை படிக்கிற பெண்கள் எத்தனை பேர்? நாட்டு நடப்பு பற்றி எத்தனை பெண்கள் அக்கறை காட்டுகிறார்கள்? மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்.

தொலைக்காட்சிப் பெட்டியில் சினிமா பார்க்கும் போது குடும்பமே பார்க்கிறது. ஆனால் செய்திகள் தொடங்கியதும் பெண்கள் அடுப்படிக்குள் பாய்ந்து உணவை தயார் செய்வது ஏன்? செய்தி நேரம் வந்ததும் சினிமாவில் இடைவெளி மாதிரி அதை சாப்பாட்டுக்குப் பயன்படுத்த பல பெண்கள் விரும்புவது உண்மைதானே! இது சரிதானா? செய்தி நேரம் என்ன சினிமா இடைவெளியா? இப்படி இருந்தால் பெண்ணின் பொது அறிவு எப்படியிருக்கும்?

பெண்களின் அழகுணர்ச்சிக்கான விலை இன்று மிகமிக அதிகம். காலக் கொலையோ அதைவிட அதிகம். எப்படி? நகங்களை வண்ணப்படுத்தி, பழைய வண்ணங்களை நீக்கப் புது வண்ணம் பூச நெயில் பாலிஷ் ரிமூவர், உதடுகளை உயரிப்பேற்ற உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்), கன்னங்களில் கவர்ச்சி கூட்ட ரூஜ், கண்ணிமைகளை பெரிதுபடுத்தி அழகைக் கூட்ட மஸ்காரா, அழகாய்க் காட்ட ஐ லைனர், கழுத்தை, முகத்தைக் கழுவிக் காட்ட கிளன்சிங் மில்க், மாஸ்க் பிளீச், தோலின் இயற்கை மணத்தை வாசனையில் புதைக்க பாடி ஸ்ப்ரே மற்றும் சென்ட் வகைகள். கொண்டை தொடங்கி கெண்டைக்கால் வரை ‘மாட்சிங்’ பார்த்து அலங்கரிக்கத் தேவையான விதவிதமான உபகரணங்கள். பொருட்ச்செலவும், நேரச் செலவும் இவ்வளவு தேவையா? யோசியுங்கள். அறிவார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். அதற்காக மம்தா பானர்ஜியாகவும், மாயாவதியாகவும் மாறச் சொல்லவில்லை. கொஞ்சம் சிக்கனம்… தேவை இக்கணம்!!!

இந்த பெண்மையின் நிலை நமது இந்தியப் பெண்ளுக்கு மட்டுமல்ல. எல்லா நாடுகளிலும் இந்த வியாதி இருக்கிறது. உதாரணமாக, அமெரிக்காவில் பல விஞ்ஞானிகள் பங்கேற்ற விருந்து ஒன்றினுக்கு உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போயிருந்தார். அவர் மனைவி அவருடன் போக வேண்டியவர். போக முடியவில்லை. கடைசி நேரத்தில் உடம்பு சரியில்லை.

விருந்து முடிந்து வீட்டுக்குத் திரும்பிய ஐன்ஸ்டீனிடம் அவர் மனைவி கேட்டார்…. விருந்து எப்படி நடந்தது? “நன்றாக இருந்தது?” என்று சுருக்கமாக கூறிவிட்டு அங்கு தாம் சந்தித்த விஞ்ஞானிகள் பற்றியும், அவர்களுடன் விவாதித்த அறிவு பூர்வமான விஷயங்கள் பற்றியும் ஆவலுடன் ஐன்ஸ்டீன் சொல்லத் தொடங்கினார். அவர் மனைவிக்குப் பிடிக்க வில்லை.

ஐன்ஸ்டீன் மனைவி சற்றே கோபமாக, “நான் இந்த அறுவையைக் கேட்க்கவில்லை. அங்கு விருந்துக்கு வந்திருந்த பெண்கள் எந்த மாதிரி கவுன் அணிந்திருந்தார்கள் கவனித்தீர்களா?” என்று சீறினார். ஐன்ஸ்டீன் பொறுமையாக, “இதோ பார்… விருந்து மேஜைக்கு மேலே பெண்களின் முகம் மட்டும் தான் தெரிந்தது. அதனால் அவர்கள் அணிந்து வந்த ஆடை எப்படிப்பட்ட ஆடை என்று எனக்குத் தெரியாது. உனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் நான் மேஜைக்கு கீழே குனிந்து பார்த்திருக்க வேண்டும். அது அவ்வளவு கவுரமாக இருந்திருக்காது” என்றார்.

பெண்கள் வாழ்விற்கு எது தேவை என்பதை முழுமையாக புரிந்து கொண்டால் அவர்களது வாழ்க்கை வளமானதாகவும் இனிமையானதாகவும் அமையும்!!!


மீண்டும் டோண்டு ராகவன். பெண்கள் ஏன் அவ்வாறு இருக்கவேண்டுமென்றால், அது இயற்கையின் நியதி. இன்றைய பெண்கள் மட்டும்தானா அப்படி. காலங்காலமாக நடந்து வருவதுதானே. மேலே உள்ள உதாரணத்தையே எடுத்துக் கொண்டால், ஐன்ஸ்டைன் மறைந்தே 55 ஆண்டுகளுக்கு மேலாயிற்றே.

இங்கு இன்னொரு இடத்தில் இது சம்பந்தமாக படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒன்றுமில்லை பொதிகை தொலைகாட்சியில் ஷோபனா ரவி அவர்கள் முக்கிய செய்தி படிக்க, அதை கணவன் மனைவி இருவரும் பார்க்கின்றனர். பி.எச்.டி. எல்லாம் படித்த அந்த மனைவி ஷோபனா ரவியின் காதுத் தோட்டை கவனிக்கிறார். கணவருடனும் டிஸ்கஸ் செய்கிறார்.

நான் என் மனைவியிடம் இக்கால நாகரிகப் பெண்கள் நகைகளில் அக்கறை காட்டுவதில்லை என்று கூறிவைக்க, அவரோ அப்படியெல்லாம் இல்லை என அழுத்தந்திருத்தமாகக் கூறினார்.

இவ்வாறே கூறிக்கொண்டே போகலாம். ஆனால் பெண்களிடம் யார் உதை வாங்குவது? இப்போதே சுகிசிவம் அவர்கள் வீட்டுக்கு மாயாவதி மம்தா பானர்ஜியின் தரப்பிலிருந்து எவ்வளவு ஆட்டோக்கள் வரப்போகுதோ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/20/2010

வி.எஸ். திருமலை கதைகள் - 2. அடுத்த வீட்டுப் பெண்

அமரர் திருமலை உருக்கமான கதைகள் மட்டும்தான் எழுதுவாரா என்ற தயக்கமே வேண்டாம். நகைச்சுவையிலும் பின்னி எடுப்பார். உதாரணம் இப்பதிவுக்கான கதை.

நினைவிருக்கட்டும். கதை எழுதிய காலகட்டம் ஐம்பதுகளில். அப்போதெல்லாம் ட்ரங்க் காலில்தான் உரக்கக் கத்திக் கத்தித்தான் பேச வேண்டும். செல்பேசி பற்றி யாருக்கும் கனவுகூட இருந்திருக்க முடியாது. மேலும், அப்போதெல்லாம் 200 ரூபாய் சம்பள உயர்வெல்லாம் பெரிய உயர்வுதான். இப்போது ஓவர் டு திருமலை.

வீட்டிலிருந்து வரும் கடிதங்கள் வழக்கமாக, “உன் கடிதம் கிடைத்தது. க்ஷேமம். க்ஷேமத்திற்கு எழுதவும். இங்கு நாங்கள் எல்லோரும் சௌக்கியம். நீ சௌக்கியமா? இரண்டு நாட்களாக சிரஞ்சீவி கண்ணனுக்கு சற்று இருமல். வேறு விசேஷமில்லை. உன் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள். உடனே பதில். ஆசீர்வாதம்...” என்ற ரீதியில் அமைந்திருக்கும். என் குடும்பத்தினர் கடிதம் எழுதும் கலையைப் பயிலாதவர்கள்.

ஆனால் அந்த சனிக்கிழமையன்று வந்த கடிதத்தில் அதிகப்படியாக சில வரிகள் இருந்தன. தற்செயலாக எழுதப்பட்ட வரிகள். அடுத்த வீட்டுப் பெண் அகல்யாவுக்கு வரன் அநேகமாக நிச்சயமாகி விட்டது. போன வருஷம் உன்னைக் கேட்டார்கள். நீதான் என்னவோ, கல்யாணமே பண்ணிக் கொள்ளப் போவதில்லை என்று நிராகரித்தாய். பிள்ளை வீட்டார் வரும் ஞாயிறன்று முடிவு சொல்வதாகச் சொல்லிவிட்டுப் போனார்கள். பிள்ளை உன்னைப் போல வெளுப்பு இல்லை. அட்டைக்கரி! ரதி மாதிரி இவள் கிடைக்க அவன் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும்...”

அதற்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. அம்மாவின் கடிதம் கையிலிருந்து நழுவித் தரையில் விழுந்தது.

ஏன்தான் நான் மாட்டேன் என்று சொன்னேனோ! எதையாவது மனதில் நினைத்துக் கொண்டு தீர்மானமாக ஒரு வார்த்தை சொல்லி விடுகிறோம்; பிறகு வருந்த நேரிடுகிறது. போன வருஷம் நான் ஒரு மாதம் லீவில் ஊருக்குப் போனேன். அப்பொழுது அகல்யாவை எனக்குக் கொடுப்பதாகப் பேச்சு வந்தது. என் நண்பர்கள் பலர், உறவினர் பலர் எல்லோரும் சம்சார சாகரத்தில் மாட்டிக் கொண்டு தவிப்பதாக என் புத்திக்கு அப்போது பட்டது. குழந்தைகள் அமளி, ரேஷன் தொல்லை, டாக்டர் “பில்” இதெல்லாமல்லவா பெண்டாட்டியைப் பின்பற்றி வரும் என்று பயந்தேன். தவிர, என் அப்பொழுதைய வருமானம் எனக்கே போதாததாக இருந்தது. அவசரப்பட்டுக் கல்யாணம் செய்து கொண்டு ஒரு பெண்ணையும் வறுமையில் இழுப்பானேன் என்றும் பட்டது.

விடுமுறை கழித்து கல்கத்தா திரும்பிய பின் என் நிலை மாறி விட்டது. வைரத்தைப் போல் கடின நெஞ்சுடையவர் என்று நான் என் எஜமானரைப் பற்றிக் கொண்டிருந்த அபிப்பிராயம் தவறாகி விட்டது. அவர் எனக்கு இருநூறு ரூபாய் சம்பள உயர்வு கொடுத்தார். கூலியைக் கருதாது ஏழு வருஷம் உழைத்ததற்கு முதல் பலன் கிடைத்து விட்டது.

கலிகாலமாச்சே என்று வியக்காதீர்கள்! இது உண்மை! விவாகத்திற்கு ஒரு தடை அகன்றது. என் மனம் மாற இன்னொரு முக்கியக் காரணம் வைத்தா ஹோட்டல் சாப்பாடுதான். வைத்தா நளபாகமே செய்து போட்டாலும் வீட்டுச் சாப்பாட்டுக்கு ஈடாகுமா! ஹோட்டல் சாப்பாட்டினால் நாக்கு செத்தே விட்டது. தினம் கங்கைக் கரையில் அமர்ந்து சூரிய அஸ்தமனத்தின் ஜாலத்தைக் காணுகையில் என்னுள் தவிர்க்க முடியாத தனிமையுணர்ச்சி தோன்றும்; அதைத் தொடர்ந்து அகக்கண் முன் அகல்யாவின் மதிமுகம் எழுந்து என்னை வேதனை செய்யும்.

என் மன மாறுதலைப் பற்றி என் தாய் தந்தையருக்கு எழுத வகை தெரியாது சும்மா இருந்தேன். அவர்கள்தான் ஆகட்டும், கல்யாண விஷயமாக முதலில் எழுதக் கூடாதோ? இப்போதோ மேற்சொன்ன கடிதம் கோடையிடி போல் வந்து என்னைத் தாக்கியது.

நான் என்ன செய்வது? அகல்யா மாதிரி வேறு பெண் கிடைப்பாளா? எப்படியாவது...

வீட்டிற்குத் தந்தியடித்தால்? குறுகிய என் தந்தியில் என் மனப்போக்கையும் விருப்பத்தையும் முழுமையாக விளக்கிச் சொல்ல முடியுமா? தந்திக்காக அடுத்த வீட்டார் கல்யாணப் பேச்சை நிறுத்துவார்களா?

திடீரென தோன்றிய அதியற்புத யோசனையால் துள்ளிக் குதித்தேன்.

டெலிஃபோனை எடுத்த கால் மணிக்கெல்லாம் ‘ஆபரேட்டர்’ குரல் கேட்டது. என் அதிருஷ்டம்! ஏனெனில் கல்கத்தாவில் ஒரு தரம் டெலிஃபோன் செய்வதற்குக் குறைந்தது ஒரு மணி நேரம். ‘ட்ரங்க்’ என்றேன். ‘ட்ரங்க’ கிடைத்ததும் ‘மதராஸ் இன்ன நம்பர், அவசரக் கூப்பாடு, குறித்த நபருடன் பேச வேண்டும். அந்த நபர் பெயர் மிஸ்டர் வரதராஜன். டெலிஃபோன் இருக்குமிடத்துக்கு பக்கத்து வீட்டிலிருக்கிறார்’ என்று விளக்கம் சொல்லி ரிசீவரைக் கீழே வைத்தேன்.

மதராஸ் எண் எப்பொழுதடா கிடைக்கும் என்று ஆவல்டன் தவம் செய்தேன்.

என் சிந்தனையில் உருவெடுத்து அகல்யா என்னை ஏசல் செய்தாள். நான் அவளை எவ்வாறு வர்ணிப்பேன்! அன்றலர்ந்த மலரென மிளிரும் வதனம், அதில் பளிச்சென்று கதுப்புக் கன்னங்களில் குழி விழச் செய்யும் வெற்றிப் புன்னகை; பிறையைப் போல இயங்கும் அவள் நுதலில் திகழ்ந்தது ஒரு திலகம்; கருமை தீட்டிய அகன்ற விழிகள்; எப்பொழுதும் இயற்கையோ என்று கண்டவர் ஐயுறும் புதுமைப் பொலிவு; நாளுக்கு நாள் அதிக எழிலோங்கும் சருமம்; பிரகாசமாகச் சலவை செய்யப்பட்டுள்ள வாயில் புடவை, மல் ரவிக்கை (ஆம், வாசகர்கள் பலர் ஊகித்த மாதிரி என் வேலை விளம்பர சம்பந்தமுடையதுதான்).

மாதமிருமுறையாவது நான் வேலை நிமித்தமாக என் காரியாலயத்தாருடன் ‘ட்ரங்க்’ டெலிஃபோனில் பேசுவதுண்டு. ஆனால் என் வீட்டில் யாருமே அது மாதிரி தூரதேசப் பேச்சுப் பேசினதே இல்லை. அப்பாவுக்குக் கூட இதுதான் முதல் அனுபவமாக இருக்கும். பக்கத்து வீட்டு அம்பி போய், “கல்கத்தாவிலிருந்து டெலிஃபோன் வந்திருக்கு மாமா” என்று சொன்னவுடன் அப்பா மட்டுமென்ன, வீட்டில் எல்லோருமே அப்படியே எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு டெலிஃபோனுக்கு ஓடுவார்கள் என்று எண்ணினேன். இந்த எண்ணம் எனக்கு அடக்கமுடியாத சிரிப்பை உண்டாக்க்கியது. அது நிஜமாகவே நடந்து விட்டபோது சிரிப்புக்கு பதில் கண்ணீர்தான் உண்டாயிற்று.

அப்பாவிடம் என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்ற பிரச்சினை.

நான் ஏன் பயந்து தயங்க வேண்டும்? நான் என்ன குழந்தையில்லையே? மீசை வைத்துக் கொண்டிருக்கிறேன்! (ஊருக்குப் போகுமுன் அதை எடுத்து விடுவது வழக்கம். அதனால் என்ன?) நிதானமா, அழுத்தமா பேச வேண்டும் என்று என் மனதைத் திடம் செய்து கொண்டேன்.

டெலிஃபோன் மணி நீண்டு கதறிற்று. ரிசீவரை எடுத்துக் காதில் வைத்தேன். மார்பு படபடத்தது; உடல் முழுவதும் குப் என வியர்த்து விட்டது.அப்பாவுடன் பேசுவது ஆபீசுடன் பேசுவது போலாகுமா?

ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிலிருந்து கிணற்றிலிருந்து பேசுவது போல் குரல் கேட்டது.

“ஹல்லோ! நான்தான் முரளி பேசறது! ஹல்லோ நான் சொல்வது காதில் விழுகிறதா?” என்று கத்தினேன்.

“யாருடா, முரளியா? உன் குரல் மாதிரியே கேட்கவில்லையே? என்னடா விசேஷம்? ஏதாவது உடம்பு சரியில்லையா? ஏதாவது ஆபத்தில் மாட்டிக் கொண்டு விட்டாயா?...” பேசியது என் தாய். அப்பாவுக்கு முந்தி ஓடிவந்து டெலிஃபோனை எடுத்துக் கொண்டுவிட்டாள் என்பதை பின்னர் அறிந்தேன்.

“உடம்பெல்லாம் சரிதான் அம்மா. ஆபத்து ஒன்றுமில்லை. சும்மாத்தான் கூப்பிட்டேன்.”

சும்மாவா கூப்பிட்டாய்? டெலிஃபோன்காரன் சும்மா விட மாட்டானே?” ஏகப்பட்டப் பணம் செலவழியுமே? நல்ல பிள்ளையடா நீ!”

“இல்லைம்மா, அடுத்தவீட்டுப் பெண்...” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கையில் அம்மாவிடமிருந்து அப்பா டெலிஃபோனைப் பிடுங்கிக் கொண்டு விட்டார்.

“என்னடா முரளி! கல்கத்தாவிலே ராத்தூக்கம் இல்லாம ஊர் சுத்துகிறாயாமே?” என்று அதட்டினார் அப்பா.

“நான் சொல்வதைத் தயவு செய்து கேளேன் அப்பா!” அடுத்த வீட்டுப் பெண்...”

“அடுத்த வீட்டுப் பெண் கிடக்கிறாளடா! உன்னை இரவு பன்னிரண்டு மணிக்கு சௌரங்கியில் பார்த்தேன் என்று கோண்டு கடிதாசு எழுதியிருக்கிறான்... அங்கு கண்டிக்க ஆளில்லை போலிருக்கு!... ஒழுங்காக இருப்பதாக உத்தேசம் ஏதாவது உண்டா காவாலிப் பயலே!”

“ஒழுங்காத்தான் இருக்கேம்பா! வந்து... அடுத்த வீட்டுப் பெண்...”

“ஆமாண்டா அவளுக்குக் கல்யாணம் அநேகமா நிச்சயமாயிடுத்து. முகூர்த்தத்தேதி வைக்க வேண்டியதுதான் பாக்கி! ... இதோ சரோ பேசணும் என்கிறாள்” என்று சொல்லி அப்பா டெலிஃபோனை சரோவிடம் கொடுத்து விட்டார்.

“நான்தான் சரோ பேசறது! டேய் முரளி, எனக்கு நீ பெங்கால் சில்க் புடவை வாங்கி அனுப்பறேன்னு சொன்னியேடா! சொல்லி ஒரு வருஷமாச்சு!”

“அதுக்கென்ன பிரமாதம் சரோ. அடுத்த மாதம் கட்டாயம் வாங்கி அனுப்பிச்சுடறேன். அப்பாவிடம் கொடு. அடுத்தவீட்டுப் பெண்...”

“ஆமாம் அகல்யாவுடைய பெங்கால் சில்க் புடவை மாதிரியேதான் எனக்கும் வேணும். மஞ்சளிலே கறுப்புப் பொட்டு போட்டு, அஜந்தா பார்டரோட...இந்தாடீ அங்கச்சீ, நீ பேசு!” என்று சரோ, டெலிஃபோனை அங்கச்சியிடம் கொடுத்து விட்டாள். அங்கச்சிக்குத்தான் வீட்டில் அதிகாரம் ஜாஸ்தி.

“முரளி! உன் பிராமிஸை தண்ணீலேதாண்டா எழுதணும். ரிஸ்ட் வாட்ச் வாங்கித் தரேன்னு எவ்வளவு நாளா ஏமாத்திண்டிருக்கே!”

“வாட்ச் கிடக்கட்டும். அப்பாகிட்டே ஃபோனைக் கொடம்மா தயவு செய்து”

“வாட்ச் கிடக்கட்டுமா? நன்னாயிருக்கு! என் கிளாசிலே என்னைத் தவிர ஒருத்தியாவது வாட்ச் இல்லாமல் மூளிக் கையோட வரதில்லை. நீ வாட்ச் சீக்கிரம் அனுப்பலைன்னா நான் காலேஜ் போவதையே நிறுத்தி விடுவேன்”.

“அடுத்த மாதம் நல்ல வாட்சா அனுப்பறேன் அங்கச்சி. அடுத்த வீட்டுப் பெண்ணைப் பற்றி அப்பாவிடம்...”

“அகல்யாவா! ஐய, அதுக்கு இருக்கிற மண்டை கர்வத்தைப் பாரேன்! என்கூட பேச மாட்டென் என்கிறது! தான் ரதி என்கிற என்ணம்டா அதுக்கு!”

“அப்பாவிடம் ஃபோனைக் கொடேன் அங்கச்சி, நேரமாச்சு” என்று கத்தினேன். அங்கச்சி இதற்கெல்லாம் பயப்படுவாளா?

“அப்பாகிட்டேதான் பேசியாச்சேடா? இந்தா குழந்தை கிட்டே பேசுடா!” என்று கடைக்குட்டி கன்ணனிடம் கொடுத்து விட்டாள்.

“கண்ணன் பேசறேண்டா, தெரியறதா முரளி? நான் ரொம்பப் பெரியவனாப் போயிட்டேன்! ரசகுல்லா அனுப்பவே மாட்டேங்கறயே!”

“நாலு டப்பா அனுப்பறேண்டா கண்ணா! நாளைக்கே அனுப்பறேன்.”

கூட ஒரு ட்ரைசைக்கிளும் அனுப்பு!”

“சரி”

“அப்புறம் இரண்டு கிரிக்கெட் பேட் வேணும்”

“சரி. அப்பாவிடம் டெலிஃபோனைக் கொடுடா ராஜா!”

“என்ன முரளி...” என்றார் அப்பா.

“அப்பா! வந்து அடுத்த வீட்டில்” என்று நான் சொல்ல ஆரம்பிக்கையில் ஆப்பரேடர் இடை மறித்து “மூன்று நிமிஷம்” ஆகிவிட்டது!” என்றார். அப்பா டெலிஃபோனை அதன் தொட்டியில் வைத்து, தொடர்பை அறுத்து விட்டார்.

எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இதுமாதிரி ஒரு குடும்பத்தில் பிறந்த எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் என்று எண்ணிக் கசந்தேன். என்ன வாழ்க்கையிது, ஏமாற்றம் நிறைந்த வாழ்க்கை! சீ! இன்று மாலை அகல்யாவுக்கு எல்லாம் நிச்சயமாகிவிடும். இப்பொழுது வேறு ஒருவன் அந்தக் கிளியை கவ்விக் கொண்டு போய்விடப் போகிறான்.

சனி இரவு தூக்கம் கொள்ளவில்லை. ஞாயிறன்று பூராவும் ரூமில் தங்காது ஸிட்பூர் பொட்டானிகல் கார்டனில் போய் அலைந்தேன். சுற்றிச் சுற்றிக் கால்கள் இரண்டும் சளைத்துப் போய் விட்டன. பெரும் களைப்பினால் ஞாயிறு இரவு நல்ல நித்திரை.

திங்களன்று காலை அம்மாவிடமிருந்து கடிதம் வந்தது.

“...நீ ஏதோ டெலிஃபோனில் எல்லாரிடமும் ‘அடுத்த வீட்டுப் பெண்’, ‘அடுத்த வீட்டுப் பெண்’ என்று உளறினாயாம்! சொல்வதைச் சரியாக சொல்ல வயசாகவில்லையா என்று அப்பா கோபிக்கிறார்... ஒருவேளை, கல்யாண விஷயமாக உன் மனது மாறியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றிற்று.... அடுத்த வீட்டார் மற்ற வரன் பேச்சை புதன் வரை ஒத்திப்போட ஒப்புக் கொண்டார்கள்... அகல்யா நம் வீட்டில் வாழ்க்கைப்பட வேண்டும்னு எனக்கு நெடுநாளாக ஆசை. நீதான் குரங்கு புத்தி படைத்தவன்!...உன் அபிப்பிராயத்தைத் தந்தி மூலம் தெரிவிக்கவும். ‘ட்ரங்க்’ டெலிஃபோன் செய்யாதே. உனக்கு டெலிஃபோனில் பேசவே தெரியவில்லை....”

என் குடும்பத்தாரைப் பற்றி சற்று முன் நானா குறை சொன்னேன்?


அன்புடன்,
டோண்டு ராகவன்

9/19/2010

நக்கீரனிடம் திணறிய விஞ்ஞானி! - விஷயம் சீரியஸ் ஆகவேதான் காப்பி பேஸ்ட்

நக்கீரனிடம் திணறிய விஞ்ஞானி! என்னும் தலைப்பில் பதிவர் ஷொக்கன் இட்ட பதிவு மிக சீரியசான விஷயத்தைக் கூறுவதாகவே நான் கருதுகிறேன். மேலும் அவரது அப்பதிவில் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதை பலரும் விவாதிக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன். அத்துடன் அந்த வலைப்பூவில் ஒருவேளை ஏதேனும் சூழ்நிலையில் அந்த இடுகை நீக்கப்பட்டால் நான் வெறுமனே சுட்டி கொடுப்பதில் பலனிருக்காது. ஆகவே இந்த காப்பி பேஸ்ட். நன்றி ஷொக்கன் அவர்களே. இப்போது அப்பதிவுக்குப் போகலாம்.

இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்லும் வெளிநாட்டினர்களை அந்தந்த நாட்டின் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக சென்னையிலிருந்து செல்லும் வெளிநாட்டினருக்கு கொஞ்சம் கூடுதலாகவே பரிசோதனை செய்யப்பட்டு வருகிறதாம்.

காரணம்? வேறென்ன... தமிழக விஞ்ஞானி கே.கார்த்தி கேயன் குமாரசாமியுடன் இணைந்து லண்டன் விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சியில் எந்த மருந்துக்கும் கட்டுப்படாத "சூப்பர் பக்' கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் உலகத்திலேயே இந்தியாவில் -அதுவும் சென்னையில்தான் அதிகமாக (44 பேர்) இருக்கிறார்கள். மேலும்... இந்தியாவிலிருந்துதான் இந்த பாக்டீரியா கிருமி உலகம் முழுக்க பரவுகிறது. அதனால், இந்தியாவுக்கு போய் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு ஆபத்து என்றெல்லாம் பிரபல பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலான "தி லான்செட்' இதழில் இந்த விஞ்ஞானிகள் வெளியிட்ட செய்திதான் இந்தளவுக்கு பரபரப்பையும் சர்ச்சையையும் உருவாக்கியிருக்கிறது.

இந்த சூப்பர் பக் ஆராய்ச்சியின் முடிவு குறிப்பிட்ட மல்ட்டி நேஷனல் மருந்து கம்பெனியின் மருந்துக்கு (ஆன்டிபயாடிக்) விளம்பரமாகவே அமைந்திருக்கலாமோ? என்ற கேள்வியை கடந்த ஆகஸ்ட் 18-ந் தேதி நக்கீரனில் "திக் திக் சூப்பர் பக்' என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருந்தோம்.

இந்த நிலையில்தான்... "யாரிடம் அனுமதி பெற்று "சூப்பர் பக்' ஆராய்ச்சியைச் செய்தீர்கள்? இதற்கான பதிலை 14 நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும்' என்று தமிழக விஞ்ஞானிகள் உட்பட இந்த ஆராய்ச்சியில் சம்பந்தப்பட்ட அனைத்து இந்திய விஞ்ஞானிகளுக்கும் கெடு விதித்து அதிரடி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை. இன்னும் பலவித சந்தேகக் கேள்விகள் நம் இதயத்தில் பக்பக்கை உண்டாக்க... "சூப்பர் பக்' சர்ச்சையை கிளப்பிய சென்னை தரமணியிலுள்ள மைக்ரோபயாலஜி துறையின் விஞ்ஞானியான கே.கார்த்திகேயன் குமாரசாமியிடமே கேட்டோம். பலவித தயக்கத்திற்குப் பிறகே நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

உலகம் முழுக்க இந்த பாக்டீரியா கிருமி இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியிருக்க இந்தியாவிலிருந்துதான் பரவுகிறது என்று எப்படி சொல்ல முடியும்? உலகத்திலேயே சென்னையில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக எதை வைத்து ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினீர்கள்?

உலகம் முழுக்க இந்தக் கிருமி இருப்பது உண்மைதான். ஆனால் இந்தியாவிலிருந்து சிகிச்சை பெற்றுச் செல்லும் வெளிநாட்டுக்காரர்களை இந்த நோய் தொற்றியிருப்பதால் லண்டன் விஞ்ஞானியான திமோதி ஆர்.வால்ஷும், டேவிட் எம்.லிவர்மோரும் அப்படி குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளிலும், மூன்று அரசு மருத்துவமனைகளிலும் உள்ள நோயாளிகளிடம் செய்த ஆய்வில்தான் 44 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

சரி... எத்தனை நோயாளிகளிடம் செய்த ஆய்வில் 44 பேருக்கு இந்த சூப்பர் பக் கிருமி தொற்றியிருக்கிறது?

அது வந்து... (நா தடுமாறுகிறது) சரியான புள்ளிவிபரத்தை பார்த்துவிட்டுச் சொல்றேங்க. (இதழ் அச்சாகும் வரை சொல்லவில்லை).

சூப்பர் பக் நோய்க்கிருமி "பாசிட்டிவ்' ஆனவர்கள் எந்த மாதிரியான அறிகுறிகளோடு வந்திருந்தார்கள்? எந்தெந்த மருத்துவமனையில் எடுத்தீர்கள் என்கிற விபரங்களை (ப்ரஃபோர்மா) தர முடியுமா?

ஸாரி... மருத்துவ எத்திக்ஸ்படி அந்த விபரங்களை தரக்கூடாது.

எந்த பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்து 44 பேருக்கு நோய் தொற்றி யிருப்பதை உறுதி செய்தீர்கள்?

நம்ம தரமணியில் இருக்கிற "லேப்'லதான்.

இல்லையே.. நீங்க லண்டனுக்கு அனுப்பி ஆய்வு செய்ததாகத்தானே எங்களுக்குத் தகவல் கிடைத்தது?

ஆ... ஆமாம்.... இந்த லேப்ல கன்ஃபார்ம் பண்ணிட்டு அதுக்கப்புறம்தான் லண்டனுக்கு நோயாளிகளிடம் எடுக்கப்பட்ட ஸாம்பிளை அனுப்பி வெச்சேன்.

லண்டனில் ஆய்வு செய்த லேப் தரச்சான்று பெற்ற லேப்தானா?

நிச்சயமாக... லண்டனில் உள்ள பிரபல கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய தரச்சான்று பெற்ற லேப்லதான் சோதிக்கப்பட்டது.

நோயாளிகளின் உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட ஸாம்பிள்களை அவ்வளவு எளிதாக வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாதே? ஐ.சி.எம்.ஆர். உள்ளிட்ட அரசு சார்ந்த அனுமதிகள் வாங்கணுமே?

சிறு அமைதிக்குப் பிறகு... ""ஸார்... எங்களோட நோக்கம் இந்தியாவில் (சென்னையில்) பாதிக்கப்பட்டவர் களுக்கு எந்த மருந்தைக் கொடுத்தா குணமாக்கலாம்? 44 எண்ணிக்கையை படிப்படியாக எப்படி குறைப்பதுங்கிறதாத்தான் இருந்தது. அதனால அவசரத்துல முழுமையான அனுமதி பெற முடியல.

இப்போ அந்த 44 பேஷன்டுகளின் நிலைமை?

அது... அந்தந்த மருத்துவமனையின் டாக்டர்கள் பார்த்துப்பாங்க சார். நாம தலையிட முடியாது. (அய்யய்யோ!)

முதன் முதலில் இந்த நோய்க்கிருமியை யார் கண்டுபிடிச்சது?

ஸ்வீடன் நாட்டில் வாழும் இந்தியருக்கு இந்தக் கிருமி தொற்றியிருப்பது தெரிஞ்சுதான் 2008-ல் ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் இதற்கு "மெட்டல்லோ பீ-லேக்டமஸ் 1' என்று பெயர் வெச்சாங்க.
அப்புறம் எப்படி "மெட்டல்லோ பீ-லேக்டமஸ் 1'-ங்கிற பெயருக்கு முன்னால, நியூ டெல்லிங்கிற பெயர் வந்தது?

ஆன்டிபயாடிக் மருந்தையே எதிர்க்கும் திறன்கொண்ட இந்த கிருமி குறித்து லண்டன் விஞ்ஞானிகளான திமோதி ஆர். வால்ஷ், டேவிட் எம்.லிவர்மோர் என்கிற இரண்டு பேரும்தான் நோய் பாதிக்கப்பட்ட ஸ்வீடன் நாட்டுக்காரர் இந்தியர் என்பதால் அப்படி ஒரு பெயரை சூட்டிட்டாங்க. அதுக்கப்புறம்தான் நக்கீரனில் குறிப்பிட்டிருந்த மாதிரி மும்பை பி.டி.ஹிந்துஜா மருத்துவ ஆராய்ச்சி மைய டாக்டர்கள்... முதன் முதலில் "ஜர்னல் ஆஃப் தி அசோசியேஷன் ஆஃப் ஃபிஸிஷியன் இன் இண்டியா' (ஜே.ஏ.பி.ஐ.) இதழில் மூணு மாசத்துக்கு முன்னால கட்டுரை எழுதினார்கள். அந்தக் கட்டுரையைத்தான் அப்பல்லோ மருத்துவமனை யின் மைக்ரோ பயாலஜி துறையின் தலைவர் டாக்டர் அப்துல் கஃபூரும் ஆதரிச்சு எழுதினாரு. அதுக்கப்புறம்தான் உலகளாவிய ஆய்வில் சென்னையில் அதிகமா இருக்குன்னு "லான் செட்' இதழில் வெளியிட்டோம்.

உங்களின் ஆராய்ச்சிக்கு பண உதவி செய்த "வைத்' என்கிற மல்டி நேஷனல் மருந்துக் கம்பெனியின் மருந்துதான் இந்த நோய்க்கு சரியான மருந்து என்று பரிந்துரை செய்திருக்கிறீர்களே? இது வியாபார நோக்கமாக இல்லையா?

வைத் கம்பெனி எனக்கு லண்டன் போறதுக்கு ஃப்ளைட் சார்ஜ் மட்டும்தான் பண்ணினது. ஆனா, மீதியெல்லாம் எங்க நிலம், சொத்து பத்தெல்லாம் விற்று ஏழு லட்சம் செலவு பண்ணி (?) இந்த ஆய்வை பண்ணி யிருக்கேங்க.

ஐரோப்பிய யூனியனும், வெல்கம் ட்ரஸ்ட்டும் லண்டன் விஞ்ஞானிகளின் ஆய்வுக்குத்தான் பணம் கொடுத்தாங்க. இந்தியாவுல எந்தத் தொண்டு நிறுவனமும் பணம் கொடுத்து எனக்கு உதவலைங்க..

அப்படீன்னா வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள்+ஆன்டிபயாடிக் மருந்து கம்பெனிகள், வெளிநாட்டு விஞ்ஞானிகள் உங்கள் திறமையையும், வறுமையையும் பயன் படுத்திக்கிட்டு இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் குலைக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கு உங்களையும்... அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் அப்துல் கஃபூரையும் கருவியா பயன்படுத்தியிருக்காங்க இல்லையா?

அமைதியாக இருக்கிறார்... பதில் இல்லை.

இதுவே லண்டனிலிருந்து தான் சூப்பர் பக் கிருமி பரவுதுன்னு லண்டன் விஞ்ஞானி இந்திய விஞ்ஞானியோடு சேர்ந்து ஜர்னலில் செய்தி வெளியிட்டா... லண்டன்காரன் அந்த லண்டன் விஞ்ஞானியை சும்மா விட்டுருவானா? என்றபோது...

""இதுக்கு நான் எதுவும் சொல்ல விரும்பலைங்க'' என்று பேச்சை முடித்துக்கொண்டார்.

சரி... இந்த நோய்க்கிருமி தொற்றாமல் பாதுகாத்துக்கொள்வது எப்படி? பி.டி.கத்திரிக்காய்க்கு தடை விதிக்கப் போராடிய பிரபல விஞ்ஞானி பார்கவா, "எவ்வளவு பெரிய நோய்க்கிருமியா இருந்தாலும் நமது செல்லுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தாமல் பாதுகாக்கும் தன்மை (Membrance Stabilizing effect) நம் ஊரிலுள்ள மஞ்சளுக்கு இருக்கிறது.

இதை ஆய்வு செய்தால் இந்த சூப்பர் பக் கிருமிக்கு நமது நாட்டிலேயே மருந்து கண்டுபிடித்து விடலாம்' என்றிருக்கிறார். இதைச் சுட்டிக்காட்டும் டாக்டர் அபிராமியோ, ""மருந்து கண்டுபிடிக்கும்வரை தினமும் சமையலில் மஞ்சள் பொடியை 1/4 டீஸ்பூன் அளவு பயன்படுத்தினாலே போதும்... மஞ்சளை தனியாக சாப்பிட வேண்டாம். அப்படியே பாலில் கலந்து சாப்பிட வேண்டும் என்றால் கூட 2 பல் பூண்டை நசுக்கி கொதிக்கிற பாலில் போட்டு ஒரு சிட்டிகை அளவு (ஒரு கிளாஸ் பாலுக்கு) பயன்படுத்தினாலே போதும். பெரும்பாலும் கசப்பு, துவர்ப்பு சுவை உணவுகளை சாப்பிடுவது நல்லது. வயிற்றைச் சுத்தமாக வைத்துக் கொண்டு இயற்கையான உணவு வகைகளைச் சாப்பிட்டாலே சூப்பர் பக் என்ன... சூப்பர் கிக்கு, சூப்பர் கொக்கு... என எந்த நோய்க்கிருமியும் அண்டாது'' என்கிறார் ஆலோசனையாக.

ஒவ்வொரு வருடமும் உலக சுகாதாரத்தினத்தன்று பரபரப்பு நோய் குறித்து அலசப்படும். இந்த வருட (2011 ஏப்ரல்) உலக சுகாதார மையத்தின் (WHO) ஹாட் டாபிக்கே "சூப்பர் பக்' பற்றிதான். ஆக... உண்மையிலேயே மக்களுக்கு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தால் தமிழக விஞ்ஞானி கே.கார்த்திகேயனை இந்திய அரசு பாராட்டி கௌரவிக்க வேண்டும். வீண் வதந்தியையும் பீதியையும் பரப்பியிருந்தால் தண்டிக்க வேண்டும்.


இதில் முக்கியமாகத் தெரிவது நம்மவர்களின் அடிமை புத்திதான். வெள்ளைக்காரன் எது சொன்னாலும் அது உண்மையாகத்தான் இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கை. வெகு நாட்களுக்கு முன்னால் ஒளிபரப்பப்பட்ட ஹிந்தி சீரியல் “ஜுனூனில்” ஒரு காட்சியில் ஹோட்டல் ரிசப்ஷனிஸ்டுக்கும் வெள்ளைக்கார விருந்தாளிக்கும் விவாதம் ஏற்பட அங்கு வந்த மேலாளர் என்ன ஏது என்றுகூட விசாரியாது “வெளிநாட்டினர் பொய் சொல்லவே மாட்டார்கள்” எனத் திருவாய் மலர்ந்தருளுகிறார். அந்த புத்திதான் தரமணி விஞ்ஞானியையும் பீடித்துள்ளது என நினைக்கிறேன்.

//வைத் கம்பெனி எனக்கு லண்டன் போறதுக்கு ஃப்ளைட் சார்ஜ் மட்டும்தான் பண்ணினது. ஆனா, மீதியெல்லாம் எங்க நிலம், சொத்து பத்தெல்லாம் விற்று ஏழு லட்சம் செலவு பண்ணி (?) இந்த ஆய்வை பண்ணி யிருக்கேங்க.//
ஆமாங்க, ஆனால் இது என்னவோ அப்பா குதிருக்குள்ள இல்லைங்கற மாதிரியாகத்தானே இருக்கு. ஏழு லட்சம் செலவழிக்கிற அளவுக்கு இவருக்கு என்ன மோட்டிவேஷன் ஐயா? அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் இவர் ஏமாளியாகத்தான் இருக்க வேண்டும். வைத் கம்பெனியிடமிருந்து எல்லா செலவுகளையும் அதட்டிக் கேட்டு ஈடு செய்து கொண்டிருக்க வேண்டாமோ?

எனக்கென்னவோ இது முழுக்க பனிக்கட்டியின் மேலே தெரியும் பகுதி மட்டுமே எனத் தோன்றுகிறது. அடியில் கிளறினால் இன்னும் என்னென்ன வருமோ? லண்டன் நிறுவனங்கள் இந்தியாவுக்கு பலர் வைத்தியத்துக்காக வந்து போவதைக் கண்ட வயிற்றெரிச்சலில் இதையெல்லாம் செய்கிறார்கள் எனத் தோன்றுகிறது. வயிற்றெரிச்சல் எல்லாம் படாமல் இருக்க வெள்ளைக்காரன்கள் எல்லாம் புத்தர்களா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/18/2010

25 நிமிடங்களில் மரணம்

நான் அந்தச் சிறைக்குச் செல்லும்போது நேரம் விடியற்காலை 04.00 மணி அளவில்.
.
நான் யார்? என் பெயர் எமர்சன். நான் ஒரு கத்தோலிக்கப் பாதிரி. அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் வசிக்கிறேன். இன்று காலை சரியாக 05.00 மணிக்கு வில்சனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. விஷவாயு மூலம் மரணம். அவன் செய்த குற்றம்? அது இருக்கும் நான்கைந்து. அதில் மூன்றில் அவனுக்கு 999 ஆண்டுகள் சிறைத் தண்டனை. நான்காவதுக்குத்தான் மரண தண்டனை.

சிறை அதிகாரி அறைக்குச் சென்றேன். வாருங்கள் ஃபாதர் என்றார் அவர் (மாத்யூ). அச்சிறையில் இம்மாதத்தில் இது ஏழாவது மரணதண்டனை. அவர் கண்கள் களைப்புடன் காணப்பட்டன. “என்ன செய்வது ஃபாதர். பல மாதங்களாக மரண தண்டனைகள் ஏதும் இல்லை. இப்போது சொல்லி வைத்தற்போல பல தண்டனைகள் க்ளியர் செய்யப்பட்டுள்ளன.

அவருடன் சேர்ந்து வில்சனின் அறைக்கு சென்ற போது நேரம் சரியாக விடியற்காலை 04.30 மணி.

“வில்சன்” என கூப்பிட்டார். கீழே தலை குனிந்து உட்கார்ந்திருந்த கைதி முகத்தை நிமிர்த்தினான். அப்பெயரில் இருப்பவனே இங்கும் இருக்கிறான் என்றான். உடம்புக்கு ஒன்றுமில்லையே எனக்கவலையுடன் கேட்டார் சிறை அதிகாரி. அவர் கவலை அவருக்கு. உடம்புக்கு முடியாதவர்களை குணப்படுத்தித்தான் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது விதி.

அப்போது சிறை மருத்துவரும் அங்கு வந்தார். அவனைப் பரிசோதித்து ஓக்கே எனக்கூறிவிட்டு புறப்பட்டார். ஒரு ஃபார்மாலிடி முடிந்தது. சிறை அதிகாரி என்னை அவனுடன் தனியே விட்டு விட்டு சென்றார். நேரம் 04.35 மணி. அவனது வாழ்நாளில் கடைசி 25 நிமிடங்கள் ஆரம்பமாயின.

அவன் பாவமன்னிப்பு கேட்கத் தயாரா என்று கேட்டேன். வேண்டாம் என தலையசைத்து விட்டான். அதிலெலாம் நம்பிக்கை இல்லை எனவும் கூறினான். எது பற்றி பேசுவது எனத் தெரியவில்லை. ஏதாவது வேண்டுமா எனக் கேட்டதற்கு ரேடியோவில் ஏதேனும் நிகழ்ச்சியைக் கேட்கலாமா எனக் கேட்டான். எனது பாக்கெட் ட்ரான்சிஸ்டரை காரில் வைக்க மறந்ததும் நல்லதாயிற்று.

ரேடியோவில் ஷோப்பன்ஹவர் இசை ஒலித்தது. அவன் கண்களை மூடியவாறு கேட்டான். திடீரென 04.50 க்கு இசை நின்றது. ஓர் அறிவிப்பு வந்தது. “நகரத்தின் மார்க்கெட் தெருவில் போக்குவரத்து நெரிசல். கார்கள் ஒரு மைல் தூரத்துக்கு நிற்கின்றன. புதிதாக அங்கு யாரும் காரை எடுத்துச் சென்று மாட்டிக் கொள்ளாதீர்கள். மாட்டிக் கொள்ளாதீர்கள். இந்த நெரிசல் அடுத்த இருபது நிமிடங்களில் சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது”.

சரேலென வில்சன் தலைஅயை உயர்த்தி என்னைப் பார்த்தான். போக்குவரத்து நெரிசல் சரியாகும் போது அவன் ஏற்கனவே இறந்திருப்பான் என்ற எண்ணம் அவன் மனத்துள் எழுவதை என்னால் உணர முடிந்தது. பிறகு இசை தொடர்ந்தது. 04.58-க்கு அவனுக்கு அழைப்பு வந்தது. அவனுடன் கூட நானும் சென்றேன். அது எனது கடமைகளில் ஒன்று. மரண தண்டனை நிறைவேர்றப்படுவதையும் பார்த்துத் தொலைக்க வேண்டும்.

விஷ வாயு அறையில் அவனை நாற்காலியில் வைத்துக் கட்டினார்கள். விஷவாயு கோப்பையை வெளியிலிருந்து உடைத்தார்கள். அந்தச் சத்தமே அவன் வாழ்நாளில் கடைசியில் கேட்டது. வாயு வெளியான சில நொடிகளிலேயே அவன் சுய நினைவை இழந்தான். அவன் மரணிப்பது அவனுக்கே தெரியாது எனக் கூறப்படுவதை நான் நம்பித்தான் ஆக வேண்டும்.

எல்லாம் முடிந்து பேப்பர்களில் கையெழுத்திட்டு வெளியே வரும்போது நேரம் காலை 06.00 மணி. போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வந்ததாக ரேடியோவில் ஒரு புது அறிவிப்பு கூறியது.

இது ரீடர்ஸ் டைஜஸ்டில் சமீபத்தில் 1960களில் வந்த ஒரு கட்டுரையை நினைவிலிருந்து வரவழைத்து எழுதியது. இப்பதிவைப் போடும் முன்னால் ஒரு வேளை அது கிடைத்தாலும் கிடைக்கலாம் என்னும் நப்பாசையில் கூகளிட்டால் இந்த வீடியோவும் அதில் வரும் பாடலின் வார்த்தைகளும் கிடைத்தன. முதலில் வீடியோ, பிறகு பாடல் வரிகள்.

மேலே உள்ள பதிவில் வரும் மரண தண்டனை போல் இல்லாது கீழே வருவதில் தூக்கு போட்டு தண்டனை நிறைவேற்றப்படுகிறது..

+18 வயதுக்காரர்கள் மட்டுமே வீடியோ பார்ப்பது நலம்.




Pearl Jam - 25 Minutes To Go Lyrics

They're buildin' the gallows outside my cell.
I got 25 minutes to go.

And in 25 minutes I'll be in Hell.
I got 24 minutes to go.

Well, they give me some beans for my last meal.
23 minutes to go.

And you know... nobody asked me how I feel.
I got 22 minutes to go.

So, I wrote to the Gov'nor... the whole damned bunch.
Ahhh... 21 minutes to go.

And I call up the Mayor, and he's out to lunch.

I got 20 more minutes to go.

Well, the Sheriff says, "Boy, I wanna watch you die".
19 minutes to go.

I spit in his face... and I kicked him in the eye.
I got 18 minutes to go.

Well...I call out to the Warden to hear my plea.
17 minute to go.

He says, "Call me back in a week or three.
You've got 16 minutes to go."

Well, my lawyer says he's sorry he missed my case.
Mmmm....15 minutes to go.

Yeah, well if you're so sorry, come up and take my place.
I got 14 minutes to go.

Well, now here comes the padre to save my soul
With 13 minutes to go.

And he's talkin' about burnin', but I'm so damned cold.
I got 12 more minutes to go.

Now they're testin' the trap. It chills my spine.
I got 11 minutes to go.

''cause the goddamned thing it works just fine.
I got 10 more minutes to go.

I'm waitin' for the pardon... gonna set me free
With 9 more minutes to go.

But this ain't the movies, so to hell with me.
I got 8 more minutes to go.

And now I'm climbin up the ladder with a scaffold peg
With 7 more minutes to go.

I've betta' watch my step or else I'll break my leg.
I got 6 more minutes to go.

Yeah... with my feet on the trap and my head in the noose...
5 more minutes to go.

Well, c'mon somethin' and cut me loose.
I got 4 more minutes to go.

I can see the mountains. I see the sky.
3 more minutes to go.

And it's too damned pretty for a man to die.
i got 2 more minutes to go

I can hear the buzzards... hear the crows.
1 more minute to go.

And now I'm swingin' and here I gooooooooo....

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/17/2010

வி.எஸ். திருமலை கதைகள் - 1. விடுதலை

சில மாதங்களுக்கு முன்னால் திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லத்தில் உள்ள கஸ்தூரி சீனுவாசன் நூலகத்தில் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன். திடீரென “கிருஷ்ணன் பொம்மை” என்னும் தலைப்பில் சிறுகதை தொகுப்பொன்று கிடைத்தது. ஆசிரியர் வி.எஸ். திருமலை என்றிருந்தது. என் மாமாவின் மாப்பிள்ளைகளில் ஒருவர் பெயரும் அதேதான். பின்னட்டையில் பார்த்தால் அவரேதான், அதாவது அமரர் வி.எஸ். திருமலை.

புத்தகத்தை எடுத்துகொண்டு 12-ஆம் பஸ்ஸில் ஏறினேன். மாம்பலம் செல்வதற்குள் அத்தனை கதைகளையும் படித்துவிட்டு பிரமிப்பில் ஆழ்ந்தேன். மனிதரிடம் இவ்வளவு திறமை இருந்ததா, இது முன்னாலேயே தெரியாமல் போயிற்றே, தெரிந்திருந்தால் திருமலை அவர்களிடம் அப்போதே அவற்றை எல்லாம் விவாதித்து ஆனந்தம் அடைந்திருக்கலாமே என்ற ஏக்கம் எழுந்தது. அவரது மனைவி மும்பையில் வசிக்கிறார். அவரது தொலைபேசி எண்ணைப் பெற வேண்டி மாமா வீட்டுக்கு போன் செய்ததில் அவரே லைனுக்கு வந்தார். பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல் ஆயிற்று.

அவருடன் எல்லா கதைகளையும் டிஸ்கஸ் செய்தேன். அடுத்த முறை அவரைச் சந்தித்தபோது அப்புத்தகத்தின் ஒரு காப்பியை எனக்கு அன்புடன் தந்தார். திருமலை அவர்கள் மறைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு 1997-ல் அவர் இப்புத்தகத்தை அச்சில் ஏற்றியுள்ளார். விக்ரமனின் அணிந்துரை இத்தொகுப்பில் உண்டு. இதில் உள்ள சில கதைகளை நான் ஏற்கனவேயே பத்திரிகைகளில் அவை வெளியானபோது படித்துள்ளேன். ஆனால் எழுத்தாளர் பெயரை கவனிக்கவில்லை (அப்போது அவர் இன்னும் என் மாமாவின் மாப்பிள்ளையாக இன்னும் ஆகவில்லை என நினைக்கிறேன்). ஆனால் இத்தொகுப்பில் அவற்றின் முதல் சில வரிகளை படித்ததுமே, “அடேடே இதை இவர்தான் எழுதினாரா” என்னும் வியப்பு வந்தது நிஜம்.

கதைகள் ஐம்பதுகள், அறுபதுகளில் எழுதப்பட்டவை. ஆகவே மொழிநடை சற்றே பழக்கமில்லாததாக இருக்கலாம். இருப்பினும் நான் அதை இற்றைப்படுத்தவில்லை. அவை இப்போது பலரால் படிக்கப்பட வேண்டும் என்னும் நோக்கத்திலேயே இங்கு அவற்றை தட்டச்சு செய்து வெளியிடுகிறேன். அமரர் திருமலையின் மனைவி திருமதி (ஜம்பகா) சித்ரா திருமலை அன்புடன் அனுமதி அளித்துள்ளார். அவருக்கு என் நன்றி.

இப்பதிவுக்கு நான் தேர்வு செய்த இக்கதையை தொகுப்பில்தான் படித்தேன், முன்னால் படிக்கவில்லை. இப்போது கதைக்கு போவோம்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

அன்று என்னவோ கிழவரின் சுபாவமான அமைதி அவரைக் கைவிட்டு விட்டது போலும்! காலையில் நடந்த ஒரு சம்பவம் அவர் மனத்தைச் சிறிது கலக்கி விட்டது. பகவான் நாமத்தை ஜபித்தும் மனவேதனை அடங்கவில்லை.

காயும் வயிறு கதறியது, அன்று ஒன்றும் சாப்பிட வேண்டாம் என்று அவர் கொண்டிருந்த தீர்மானம் நிலை குலைந்தது. சுவையும் பசியும் மனிதனை ஆட்டி வைக்கும் துரோகிகள் அல்லவா என்று என்ணினார்.

அவர் சிறுவனாக இருந்த காலத்தில் முதுமைக்கும் ஞானத்துக்கும் குணத்துக்கும் மரியாதையுண்டு, மதிப்புண்டு. அவர் வாழ்நாளில் உலகம் பொருளாதார உலகமாக மாறிவிட்டது. மனிதனின் முயற்சியை வெற்றி தோல்வியைக் கொண்டும், மனிதனின் தரத்தை செல்வத்தைக் கொண்டும் எடை போட்டது சமூகம். அவர் மாட்டுப் பெண் விஜயம் இப்பண்பற்ற மனப்போக்கைக் கொண்டவள். காலையில் அவள் சொன்ன வார்த்தைகள் “ அவர் வாழ்க்கையில் என்னதைச் சாதித்து விட்டார்? ஐநூறு ஆயிரம் என்று சம்பாதித்தாரே இன்று காலணாவுக்குப் பிரயோசனம் உண்டா? பணம் சேர்த்து வைத்திருந்தாரானால்...”

ஆம்! அவள் சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்தது. இன்று அவரிடம் பணமிருந்தால் பிள்ளை ரகு, அவன் மனைவி விஜயம் இருவரின் போக்கே வேறு மாதிரியாக இருந்திருக்கும். அவரும் பிள்ளையின் தயவை அண்டாமல் சுதந்திரமாக வாழ்ந்திருக்க முடியும்.

நாளையென்பது படைத்தவன் பொறுப்பு என்று அவர் என்றும் திண்ணமாகக் கொண்டு பணம் சேர்க்கவில்லை. அவர் சம்பாத்தியத்தில் பெரும் பங்கு ஆஸ்பத்திரிகளுக்கு அனாமதேய நன்கொடைகளாகச் சென்றது. ரகுவின் தாயார் வெகு நாள் ஆஸ்பத்திரியில் இருந்து காலமானாள். அவளுக்கு நடந்த வசதிகளுக்கோர் நன்றியாகவும், பிணியால் வாடும் சமூகத்துக்கு ஆஸ்பத்திரிகளின் அவசிய உதவியை உணர்ந்ததாலும், அவர் சம்பாதித்த காலத்தில் மேற்சொன்னவாறு செய்தது. புகழையோ பிறர் மதிப்பையோ கருதிச் செய்யும் கொடை தர்மமாகாது என்று அவர் தமது நன்கொடைகளை பெயரில்லாமல் ரகசியமாகச் செய்தார். தன் தகப்பனார் சம்பாத்யம் எல்லாம் எப்படி மறைந்தது என்று ரகு வியப்பு கொள்வான். “எனக்குச் சேர வேண்டிய அவர் பணமெல்லாம் யாருக்குப் போகிறதோ!” என்று ஆத்திரப்படுவான்.

ரகுவுக்கு உண்மையில் பணக்குறைவு ஒன்றுமில்லை. நல்ல வேலையில் இருந்தான். விஜயாவும் பணம் படைத்தவள்.செல்வந்தர் வீட்டுப் பெண். “காலணாவுக்குப் பிரயோசனம் உண்டா”? என்றல்லவா கேட்டாள். ஒரு காசுக்குப் பிரயோசனம் இல்லாவிட்டாலும் இவ்வுடலால் கூட அவர்களுக்கு ஒருவித உபயோகமும் இல்லாது போகிறதே என்று கிழவர் வருத்தப்பட்டார். ‘அவர்களுக்கு ஒரு வீண் பாரமாகத்தானே நாம் இருக்கிறோம்’ என்று தோன்றியது. வேறு போக்கிடமுமில்லை. போகுமுன் அவர் மனைவி இன்னும் ஒரு மகவைத் தந்திருந்தால்! அது அவர் பழைய குறை. போகட்டும். இன்று எவரும் லட்சியம் செய்யாத தனி ஆளாக ஆகிவிட்டோமே என்ற அவர் த்யவிப்பைத் தவிர்க்க ஒரு பேரக் குழந்தை வரக்கூடாதா? ஏதோ குடும்பக் கட்டுப்பாடு என்று இயற்கையை ஏமாற்றும் முறைகளை ரகுவும் விஜயாவும் அனுசரித்துத் தங்களையே ஏமாற்றிக் கொண்டு விட்டனர். இப்போது குழந்தை பிறக்காதா என்று ஏங்கினர் அவர்கள்.

தன் குழந்தைகளின் மூலம்தான் மனிதன் அழியா அமரத்துவம் அடிகிறான்.

தளிகை அறையினுள் சென்றார் கிழவர். க்ண் மங்கியது. காது அடைத்துக் கொண்டது. சுவரின் மேல் சாய்ந்து கீழே விழாமல் சமாளித்தார். மயக்கம் தெளிந்தது.

மேடையில் ஒரு பாத்திரத்தில் அரிசி உப்புமா செய்து வைத்திருந்தாள் விஜயம். ஷெல்பில் நெய்க் கிண்ணத்தைத் தேடினார்; காணோம். பூட்டப்பட்ட வலைபீரோவினுக்குள்ளிருந்த நெய் ஜாடியும் கிண்ணமும் கிழவரைக் கண்டு சிரித்தன. அரிசி உப்புமா என்றால் அவருக்கு அதிகம் பிடிக்கும். எதிலும் நெய் நிறைய ஊற்றிச் சாப்பிட்டே பழக்கமாகி விட்டது.

இன்று ஒரு முட்டை நெய்க்கு அவர் மருமகள் தயவை நாட வேண்டியிருந்தது. கிழவருக்கு நெய் தேவை என்பதை விஜயம் மறந்து விடவில்லை; ஆனால் கிழமாமனாருக்கு எது செய்தாலும் வியர்த்தமாகப் பட்டது.

இந்த உப்புமாவை சாப்பிட்டுத்தான் ஆகவேண்டுமா? கிழவர் தயங்கினார். காலை நிகழ்ச்சிக்கு இதுதானே காரணம்?

காலை காப்பியானவுடன், “அப்பா! இன்று நானும் விஜயமும் ஒரு கல்யாணத்துக்குப் போகிறோம். திரும்பிவர நேரமாகலாம்...” என்றான் ரகு.

“யாருக்குக் கல்யாணம்?”

“அவாளை உனக்குத் தெரியாது.”

சரியாகப் பதிலளித்தான் மேல்கொண்டு பெண்வீட்டார் யார், பிள்ளைக்கு என்ன படிப்பு, வேலை, ஆஸ்தி, சீர் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி ஜாபிதா எழும் என்று என்ணினான் ரகு. தன் நண்பர்களுடன் இந்த விவரங்களை மணிக்கணக்கில் பேசுவதில் அவனுக்கு சுவாரசியம் இருந்திருக்கும். ஆனால் தன் தந்தை கிழவருடன் எந்தப் பேச்சும் அவனுக்கு அனாவஸ்யமாகப் பட்டது.

வாயில் அருகே நின்ற விஜயம் “யாராயிருந்தால் அவருக்கு என்ன இப்போ? நேரமாகிறது. போய்க் குளித்துவிட்டுக் கிளம்புங்கள். முஹூர்த்தத்துக்குப் போக வேண்டாமா?” என்றாள்.

உன் எஜமானி உத்திரவு போட்டு விட்டாளா! என்னுடன் நேரத்தை வீணாக்காதே” என்று சிரித்தார் கிழவர்.

“ராத்திரி மாதிரி உனக்கு நாலு தோசை வார்த்து வைக்கிறேன் என்கிறாள்” என்றான்.

முன்னிரவு கடனே என்று விஜயம் செய்து கொடுத்த தோசை கிழவர் நினைவிலொ இருந்தது. எண்ணெய் என்பதே காணாது சுட்டு வரண்ட தோசை.

“தோசையா?...” என்று இழுத்தார்.

“பின் என்ன வேண்டும்?” என்றான் ரகு எரிச்சலை மறைக்காமல்.

“அவருக்கு அரிசி உப்புமா வேண்டியிருக்கும். அதை நேரில் சொல்வதுதானே!” என்றாள் விஜயம், பக்கத்து வீட்டுக்கும் கேட்கும்படியான துணிவுக் குரலில்.

“தோசையே போதும்” என்றார் கிழவர்.

“உனக்கும் கோபம் வந்துவிட்டதா!” ... காலையில் பால்காரன் மேல் தன்ணீர் கலந்ததாகப் பொய்குற்றச்சாட்டு செய்து அடைந்த தோல்வி ரகுவை உறுத்திக் கொண்டிருந்தது.

“எனக்கென்னடா கோபம்? ... கடைசி காலத்தில் பிறர் தயவு வேண்டியிருக்கு. தனியாயிருக்க வழியில்லை. போக வேறு இடமுமில்லை. பகவான் எனக்கு இரண்டு குழந்தைகளாகக் கொடுத்திருக்கலாம்....”

ரகு பேசாமல் இருக்கவே விஜயம், “ஒரே பிள்ளை நீங்கள் பார்த்துக்கற அருமை அவருக்குப் போதும்னு சொல்லுங்கோ! தான் சேர்த்து வச்சிருக்கிற சொத்தையெல்லாம் அனுபவிக்க இன்னம் ஒரு பிள்ளையில்லையேன்னு போற காலத்திலே குறையாயிருக்கும்! அவர் வாழ்க்கையில் என்னத்தைச் ஆதித்து விட்டார்? எல்லாம் வீண்!... ஐநூறு ஆயிரம் என்று சம்பாதித்தாரே! இன்று காலணாவுக்குப் பிரயோசனமுண்டா?” என்று பொரிந்து கொட்டினாள்.

விஜயத்தின் இது போன்ற பிரசங்கங்கள் கிழவருக்குப் புதிதல்ல. அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் வழக்கம் போல அசட்டை செய்ய முயற்சித்தார். “சிறிசு, அறியாமையால் சொல்கிறது, எல்லாம் நாளைக்குச் சரியாகிவிடும், பெரிய புத்தி வந்துவிடும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். ஆனால் இன்றென்னவோ இம்மொழிகள் சுய ஆறுதலை உண்டாக்கவில்லை. எழும் மனவருத்தத்தை ஏமாற்ற முடியாது போயிற்று.

இவ்வெண்ணங்களையெல்லாம் நினைவிலிருந்து அகற்ற முயன்றவாறு, இலை ஒன்றை எடுத்துக் கீழே போட்டார். மணையை எடுத்து வைத்தார். அதிக கனமாகப் பட்டது. கை நடுங்கியது. மறுபடியும் மயக்கம் வரும் போலிருந்தது. நீர்ச்சொம்பையும் லோட்டாவையும் எடுத்து வைத்தார். பாத்திரத்திலிருந்த உப்புமாவை சிறிது ருசி பார்த்தார். சுள்ளென்றது. எண்ணெயில் கையாண்ட சிக்கனத்தை விஜயம் மிளகாயில் காட்டவில்லை.

ஒரு சொட்டு நெய் இருந்தால்!

வலை பீரோவின் சாவியைத் தேடினார் கிழவர். அஞ்சறை பெட்டியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. ஜாடியை எடுத்துக் கீழே வைத்தார். அதிலும் நெய் அதிகம் இல்லை. அதில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு விட்டால் விஜயம் கோபிப்பாளே என்ற பயம் கண்டது கிழவருக்கு. “நான் செய்யும் இச்செய்கையும் கேவலம்தான். விருப்பமற்றவர்கள் ஆதரவில் வாழும் நான் ஏன் ஊனை வளர்க்க வேண்டும்? ஏன் எனக்கு நப்பாசை? சீ!” என்று தன்னையே வெறுத்துக் கொண்டார். அவர் சோகம் உணர்ச்சியின் எல்லையைத் தொட்டுவிட்டது. “இருந்து எவர்க்கும் பயனில்லை. பூமிக்குப் பாரம்தான். ஏன் என்னை இருத்தி வைத்து ஆட்டுகிறாய்? கருணாமூர்த்தி என்கிறார்களே! இதுவோ உன் கருணை?” என்று அவர் மனம் அரற்றியது.

இயந்திரப் போக்கில் அவர் கை உப்புமாவை இலையில் தள்ளீயது. பசி ‘சாப்பிடு’ என்று வற்புறுத்தியது. மனக்கசப்பு ‘அதைத் தொடாதே’ என்று தடுத்தது. இப்போராட்டம் பெரிதாகாமல் குறிக்கிட்டது வாசலில் யாரோ கூப்பிட்டது. எழுந்து தள்ளாடியவாறு சென்று வாசல் கதவைத் திறந்தார் கிழவர்.

வாசற்படியில் ஒரு ஸ்வாமி உட்கார்ந்திருந்தார். அவருக்கு நிற்கக்கூட சக்தியில்லை போலும். தேசமெங்கும் சுற்றிச் சுற்றி அவர் உடல் மிகக் கறுத்துக் கிடந்தது. இடுப்பில் காவி படிந்த கிழிசல் வேஷ்டி. உடலெலும்பு தோலைப் பிய்த்து வெளிவர முயற்சி செய்தது. நெற்றியில் பளிச்சென்று பட்டை நாமம். ஆழ்ந்த கண்களில் ஒரு தனி ஒளி. வயதை மதிப்பிட முடியாது. மிக மிக வயதானவர் போல் தோன்றியது.

“இங்கே அடியேன் இங்கு அமுது செய்ய முடியுமா” என்று ஈனக்குரலில் கேட்டார் ஸ்வாமிகள்.

‘இவரை முன் எங்கு பரிச்சயம், வெகு நாட்களுக்கு முன் பார்த்த முகமாயிருக்கிறதே’ என்று யோசனையில் ஆழ்ந்திருந்தார் கிழவர்.

“இல்லையென்றால் கொஞ்சம் மோர் தீர்த்தமாவது குளிர்ந்த தீர்த்தமாவது கொடுக்க சௌகரியப்படுமா? ... இரண்டு நாட்களாக அன்னமில்லை... கேட்ட இடத்திலெல்லாம் போ போ என்று விரட்டுகிறார்கள்...”

“உள்ளே எழுந்தருளுங்கோ ஸ்வாமிகளே!” என்று கிழவர் அவரை மெல்ல அழைத்துச் சென்று, தயாராகப் போட்டிருந்த இலையில் உட்கார வைத்தார். கிழவரின் சோர்வு எங்கோ மறைந்து புதிய தெம்பு தோன்றியது. நான்கு தரம் நெய் போட்டு அதிதியை உபசரித்தார். “அமிர்தமாயிருக்கிறது” என்று ஸ்வாமிகள் உப்புமாவைக் காலி செய்தார். விஜயம் இரவுக்கென்று வைத்திருந்த தயிரை மோராக்கி, அவருக்குக் கொடுத்தார் கிழவர்.

தேவிகள் வீட்டில் இல்லையா?

“குழந்தை வெளியே போயிருக்காள். இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவாள்.”

“தயிர், நெய் ஒன்றும் ராத்திரிக்கு எஞ்சவில்லை போலிருக்கே. உங்களுக்குக்கூட ஒன்றும் வைக்கவில்லை. அபசாரம்!”

“தேவாள் அப்படிச் சொல்லக்கூடாது. எனக்குப் பசியில்லை. குழந்தை வந்தாளானால் எனக்கு வேறு செய்து போடுவாள். தாங்கள் வந்தது என் பாக்கியம். அசக்தன் நான், சரியாக உபசரிக்க முடியவில்லையே என்று குறை.. தங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு! ஸ்ரீரங்கத்தில் இருக்குமோ?”

“இருக்கலாம்” என்றார் ஸ்வாமிகள்.

கிழவரின் நினைவு திருவரங்கத்தை நாடியது. “ரங்கநாதனைச் சேவித்து ரொம்ப நாளாச்சு. இனி எப்போ அந்த பாக்கியமோ! நான் போவேன் என்று நம்பிக்கையே இல்லை”.

“நீர் போகாவிட்டால் அவன் உங்களைத் தேடி வருகிறான்” என்று ஸ்வாமிகள் சிரித்தார். “நீர் கர்ணனைப் போல” என்று விடை பெற்றுச் சென்றார்.

வாசல் கதவைக்கூட தாளிடாது சாய்வு நாற்காலியில் சாய்ந்தார் கிழவர். காதில் ஏதோ சப்தம் கேட்டது. கடலோசையின் ஓங்காரம் போல் தோன்றியது. இல்லை சாமகானமா அது? கண்ணை மூடினார். ஒரு பெரிய மனப்பாரம் நீங்கியதுபோல் ஒரு விடுதலை உணர்ச்சி ஏற்பட்டது. உடலில் பந்தமும் கனமும் மறைந்து ஆடிப்பாடி ஓடி கூத்தாடி வானவீதியில் பறந்து செல்லலாம் என்ற ஓர் உன்மத்தம் தோன்றியது. கிழவர் உள்ளத்தில் சுரந்த இந்த விவரிக்க முடியாத ஆனந்தம் உடல் பூராவும் பரவி புல்லரிக்கச் செய்தது. பூரண சந்திரனைக் கண்டு பொங்கும் கடலினைப் போல் இம்மகிழ்ச்சியால் அவர் உள்ளம் விம்மியது. திடீரென இப்பெருங்களிப்பு மறைந்து சாந்தியடைந்தார்.

“இது என்ன வாசல் கதவு திறந்தபடி கிடக்கிறதே?” என்று பட்டுப்புடவை சலசலக்க கையில் கல்யாணத் தேங்காயுடன் வீடு திரும்பினாள் விஜயம். “இந்தக் கிழத்தால் வீட்டைக்கூட ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள முடியாதா? நிம்மதியாகத் தூங்குகிறதைப் பாருங்கள்” என்றாள் பின்தொடர்ந்த ரகுவிடம். தளிகை அறைக் காட்சி அவளை வரவேற்றது. கோபத்தால் ஒரு கணம் சொல் எழவில்லை.

“இதோ பாருங்கோன்னா, உங்கப்பா பண்ணியிருக்கிற அக்கிரமத்தை. பூட்டி வச்சால் கூட சாமானுக்கு ஆபத்துன்னா ஒரு மனுஷி என்னதான் பன்ணமுடியும்?...இந்த மாதிரி நெய்யையும் தயிரையும் எடுத்துக் கொட்டிண்டா அவருக்குத்தான் உடம்புக்காகுமா? குடும்பம்தான் உருப்படுமா?...” என்று அடுக்கினாள்.

மனைவியின் கோபத்துக்குப் பயந்து கிழவரைக் கண்டிக்க என்ணிய ரகு, “அப்பா!” என்று கூப்பிட்டான்.

“என்ன தூக்கம்? அப்பா! அப்பா! ஐயய்யோ!” இதைக்கேட்டு விஜயம் ஓடி வந்தாள்.

“உங்கள் தயவு எனக்கு இனித் தேவையில்லை” என்று ஏளனம் செய்தது கிழவரின் முகத்தின் கடைசிப் புன்முறுவல்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/14/2010

கொட்டும் மழையில்

என் தந்தை அமரர் நரசிம்மன் அவர்களுக்கு சிறுகதை எழுத வேண்டுமென ஓர் ஆசை வெகு நாட்களாக இருந்து வந்திருக்கிறது. நான், என் அக்கா, என் பெரியப்பாவின் குழந்தைகள் ஆகியோருக்கு அவர் சொல்லும் கதைகள் மிகவும் பிடிக்கும். பீமன் துரியோதனனின் சண்டையை வர்ணித்த அவர் சமீபத்தில் 1952-ல் துரியோதனனின் மரணாவஸ்தையை அபிநயத்துடன் கூறியதை நான் பயத்துடனும் அதே சமயம் ஆர்வத்துடனும் கேட்டுள்ளேன்.

ஹெலன், பாரீஸ், யுலிஸெஸ், அகில்லீஸ், ஹெக்டார் ஆகிய பாத்திரங்களின் இரு கதைகளையும் மிக தத்ரூபமாக கூறியிருக்கிறார். ஆகவேதான் ஹெலன் ஆஃப் ட்ராய் மர்றும் யுலிஸெஸ் திரைப்படங்களை என்னால் மனம் ஒன்றிப் பார்க்க முடிந்தது. பத்துக்கட்டளைகள் நிகழ்வு பற்றி ஏற்கனவேயே எழுதிவிட்டேன்.

அவர் கையெழுத்தில் எழுதி என்னிடம் ஒரு கதையை படிக்கக் கொடுத்தார். அதன் பிறகு சில நாட்களிலேயே உடம்புக்கு வந்து மறைந்து போனார் (செப்டம்பர் 1979). அதை உடனுக்குடனேயே படித்தவனே, தந்தையுடனும் விவாதித்திருக்கிறேன். பிறகு வந்த வீடு மாற்றங்களில் கண் பார்வையிலிருந்து மறைந்து போனது அது. இத்தனை நாட்கள் கழித்து அக்கதை நேற்று எதேச்சையாக என்னிடம் கிடைத்தது. அதை நான் இங்கு தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அக்கதையின் தலைப்புதான் இப்பதிவுக்கும் தலைப்பாகும். ஓவர் டு ஆர். நரசிம்மன்.

நடுப்பகல், ஆனால் வானம் இருண்டிருந்தது. கடல் பக்கமிருந்து ஊதல் காற்று பலமாக வீசியது. எங்கும் கடும் புயலின் சின்னங்கள், செடிகள், பிரவாகமெடுத்தோடும் அருவிகள், மின்னல்கள், இடி.

அடையாற்றின் கரையில் ஒரு சிறிய மேடு. அதில் ஒரு பாறை மீது வீற்றிருந்த அந்த முதியவர் சொட்டச் சொட்ட நனைந்து விட்டார். நீண்ட வெள்ளை கலந்த தாடி மீசை. தீட்சண்யமான பார்வை, கூரிய வளைந்த மூக்கு, மாநிறம். முதியவர் ஆளைத் தள்ளும் மழையையும் காற்றையும் கவனித்ததாகத் தெரியவில்லை.

“சாமீ, சாமீ, இப்படி திறந்த வெளியில் கொட்டும் மழையில் ஒக்கார்ந்திருக்கீங்களே. குடிசைக்குள்ள போலாம், வாங்க” என்றான் ஒரு இளைஞன். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வந்த அவன் அப்போதுதான் வந்த அவன் அரையில் ஒரு வேட்டி மட்டும் கட்டியிருந்தான். தலையில் ஒரு சிறு முண்டாசு. அவன் பேசி முடிக்கவில்லை, அப்போதுதான் காதைப் பிளக்கும் சத்தத்துடன் அவர்கள் அருகாமையில் ஒரு இடி நெடிய பனைமரம் ஒன்றைத் தாக்கி, அதன் முடியை வீழ்த்தியது.

முதியவர் அதைப் பொருட்படுத்தவில்லை. கனிவு கலந்த குரலில் “குள்ளா, நீ கூடத்தான் நனைந்து விட்டாய். இது உனக்கும் எனக்கும் ஒரு ஞான ஸ்நானம். நம் பாபங்கள் கரைகின்றன”. இந்த வேதாந்தம் குள்ளனுக்கு அவ்வளவாகப் புரியவில்லைதான். அவ்வளவு பெரியவரை, மதிப்புக்குரியவரை எப்படி உள்ளே போகச் சொல்வது என்று அவன் தயங்கினான்.

அவன் கண்கள் நாலாபுறமும் சுழன்றன. கீழே அடையாறு ஹோவென்று வெள்ளமெடுத்து ஓடியது. சுற்றிலும் சுள்ளி, சப்பாத்தி, ஏனைய முட்செடிகள், புதர்கள், சிறிய மரங்கள், நீண்ட பனைமரங்கள் தெரிந்தன. பார்வைக்கு சுற்றிலும் அமானுஷ்யமான பிரதேசமாக இருந்த பொழுதிலும் நடுநடுவே சிறிய கிராமங்கள் இருந்தன. சிலவற்றின் இருப்பிடத்திற்கான அறிகுறிகள் கூர்ந்து கவனிப்போர்க்கு மழை சற்று தணிந்த நேரங்களில் தென்பட்டன.

காலம் கடந்தது. முதியவர் என்ன நினைத்தாரோ, பிறகு தானே அருகாமையிலுள்ள குடிசிக்குள் சென்றார். சிறிய குடிசைதான், ஆனால் சாந்தம் தவழும் தூய ஆசிரமம். முதியவர் மண்டியிட்டு பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்.

அவர் மண்டியிட்டபொழுதுது, குள்ளன் - தாய் தந்தையர் இட்ட பெயர் சாத்தன் என்பது - ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். சுமார் நான்கு கல் தூரத்திலுள்ள மயிலை - திருவல்லிக்கேணியிலே உள்ள ஜனங்கள், ஏன் அவனும்தான், ஆண்டவனை சாஷ்டாங்கமாக நிலம் தோய விழுந்து அஞ்சலி செலுத்துவர். கடந்த சிலகாலமாக, தாடி சாமியார் இங்கு வந்த காலத்திற்கு பின்பு, அவனும் இப்போதெல்லாம் அவருடன் கூடி மண்டியிட்டுத்தான் பிரார்த்தனை செய்கின்றான் என்றாலும், இன்னமும் அவ்வாறு மண்டி போடுவதின் புதுமை அவனை அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தத் தவறுவதில்லை. ஓரோர் தடவை அவன் பழையபடியே கீழே விழுந்து நமஸ்கரிப்பதுண்டு. பிறகுதான் ஞாபகம் வரும்.

“யப்பா” என்ற ஒரு மழலைக்குரல் அவன் சிந்தனையைக் கலைத்தது. ஒரு மூன்று வயதுப் பெண்குழந்தை ஓடிவந்து அவன் கால்களைக் கட்டிக் கொண்டது. கூடவே வந்த மனைவியையும் கண்டான். ஒதுக்குப்புறமாக மறுபடியும் வலுக்கத் தொடங்கியிருந்த மழையில் சற்றுத் தள்ளி, ஒரு சிறிய மரத்தடியில் ஒதுங்கியிருந்தவளைப் பார்த்து, “மங்கா ஏன் வந்த? நான் பெரியவருடன் இருப்பதை கிராமத்துலதான் தடுக்கற.இங்குமா வரணும்”? என்று சற்று தணிந்த குரலில் ஆனால் உஷ்ணத்துடன் கேட்டான்.

ஒரு கணம் அவள் பதில் பேசவில்லை. அவள் முகம் பயத்தால் வெளிறியிருப்பதையும், அவள் கெஞ்சும் கண்களையும் பார்த்த பிறகு, அவன் சற்று பரிவுடன் அவளை நோக்கி ஓரடி வைத்தான். அவள் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு, “சீக்கிரம், சீக்கிரம், நாம் ஓடிப்போகணும் மச்சான். எதிர்க்கரை ஊர்க்காரர்கள் திரண்டு வருகிறார்கள். அவரோடு உன்னையும் கொன்று விடுவார்கள்”, என்றாள். அவள் கண்கள், சுழித்துக் கொண்டு, சிறிய மரங்களையும், செடி, கொடிகளையும் அடித்துக் கொண்டு விரைந்தோடும் ஆற்றிற்கப்பால் பார்வையைச் செலுத்தி, குறிப்பாக உணர்த்தின.

பிரம்மாண்டமான அரச மரத்துக்கருகில் ஒரு சிறிய இடைவெளியில், மழை நடுவே வேல்கம்புகளும், ஈட்டிகளும் கொண்டிருந்த சில மனிதர்கள் தென்பட்டனர்.

ஒரு கணத்தில் நிலைமையைக் குள்ளன் ஊகித்தான். வருபவர்களில் சிலர் அவன் நண்பர்களாக, சமுத்திரத்தில் அவன் மீன் பிடிக்கச் செல்லும்போதெல்லாம் அவனுடன் கூடவே தாங்களும் அதே பரம்பரைத் தொழிலைச் செய்து வந்தனர். அந்தக் காலம் போய் விட்டது. இப்பொழுது அவர்கள் அவனை நஞ்சைப் போல வெறுத்தனர். சாமியார், மேற்கே ஏதோ கடல் இருக்கிறதாமே, அந்தப் பக்கத்திலிருந்து இங்கு வந்ததிலிருந்து ஏற்பட்டப் பிளவின் காரணமாகத்தான் அந்த விரோதம் ஏற்பட்டது. இப்பொழுது அவன் தன் மனைவியின் கிராமத்தில்தான் வசிக்கிறான்.

அவன் மனைவியைப் பார்த்து, “சரி, சரி நீ போ. குழந்தையை பத்திரமாக எடுத்துப் போ” என்றான். மங்காவும் வேறொரு பக்கமாக விரைந்து சென்று, புதர்களிடையில் மறைந்தாள்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

அந்தச் சிறியகும்பல் அடையாற்றங்கரையை அடைந்தபோது சூரியன் உச்சியைக் கடந்து மேற்கே சிறிது தூரம் சென்றுவிட்டிருந்தது. ஐப்பசி மாதம், வடகிழக்குப் பருவ மழை. கூடவே பெரும்புயல் வேறு. ஓரிரண்டு வாரங்களாக அவர்களில் யாருமே கடலுக்குப் போகவில்லை. காரணம் கடல் கொந்தளிப்பு. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு கடற்காற்று அடிக்கடி தவறிவிட்டது.

சாதாரணமாக மீனவர்கள் காலை வேளையில் நிலக்காற்றின் உதவியோடு கடலுக்குள் வெகுதூரம் சென்று - அதாவது இக்காலக் கணக்குப்படி பத்து, பதினைந்து மைல், கரை மறையும் அளவுக்கு - மீன் பிடிப்பார்கள். ஜூன் ஜூலை மாதங்களில் கோலா மீன் கும்பல்கள் வரும். நீண்ட தூரத்துக்கு நீண்ட தூரம் என்ற பரப்பளவில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்று கொண்டேயிருக்கும். கைகளால் கூட மீன்களைப் பிடித்து விடலாம் போல தோன்றும். அந்த மீன்களைத்தான் செம்படவர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிடிப்பார்கள். அவர்றுக்கு சுற்று வட்டாரத்தில் நல்ல கிராக்கி வேறு.

ஆனால் கடற்காற்று - கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசுவது - தவறியதால் அவ்வாண்டு மீனவர்கள் வழக்கம்போல பாய் விரித்து கரையை நோக்கி வர இயலவில்லை. திசை தவறி தவிக்கவும் நேரிட்டது. சிலர் கரைக்குத் திரும்பவேயில்லை. இதற்கெல்லாம் காரணமே அந்தச் சாமியார்தான் என அவர் தலையில் பழியைச் சுமத்தினர். மேலும், அவர் கொண்டு வந்த புதிய மதம் ஏழை எளியவர்களுக்கும், இன்னம் மிகுந்த பாபம் செய்தவர்களுக்கும் அவர்கள் மனம் திருந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டால் அவருக்கும் விமோசனம் உண்டு என்றெல்லாம் போதித்ததை புரிந்து கொள்ளாதவர்களே பெரும்பான்மையினராக இருந்தனர். அவர்களுக்கு இம்மதம் ஒரு புரியாத புதிராகவே ஆயிற்று.

நிற்க. தங்கள் தொழிலைப் புயல் காரணமாக செய்ய முடியாத மீனவர்கள் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து இப்போது ஏதோ ஒரு சக்தியால் உந்தப்பெற்று வந்து விட்டனர். மயிலை - திருவல்லிக்கேணி கடற்கரை எங்கே, இன்றைய சைதாப்பேட்டை - கிண்டி பக்தி எங்கே, அங்கேயே வந்து விட்டனர், நடுவே இருந்த அடர்ந்த முட்காட்டையும் பொருட்படுத்தாமல்.

ஆனால் அடையாறு பயங்கர வெள்ளத்தால் அல்லவா பீடிக்கப்பட்டிருக்கிறது? புயல் வேறு, கேட்க வேண்டுமா?.

ஆற்றங்கரையில் அவர்களில் பலர் திடுக்கிட்டு நின்றனர். அவர்களின் தலைவன் போன்றிருந்த ஒருவன் “ஏன், என்ன பயம்? கடலில் அலைகள் மத்தியில் போகும் எனக்கு இதைக் கண்டு ஏன் பயம் வரவேண்டும்? நான் முன்னேறுகிறேன், தைரியமுள்ளவர்கள் என்னோடு வரட்டும்” என்றான். அவனுக்கு நல்ல கட்டுமஸ்தான தேகம், அகன்ற மார்பு, நல்ல கறுப்பு நிறம், நீளக்கைகள், குட்டையான கால்கள். கையில் ஓர் எரி ஈட்டி வைத்திருந்தான்.

அவன் தைரியம் சொன்னாலும் பலர் பின்தங்கினர். அவர்களில் ஆறுபேர் மட்டும், “மஞ்சனி நாங்கள் உன்னுடன் வருகிறோம்” என்றனர். அவர்களில் இருவர் மஞ்சனியின் தம்பிகள், மீன் குஞ்சு மாதிரி நீந்துபவர்கள். மூன்றாமவனுக்கும் நீச்சல் தெரியும். எஞ்சிய இருவருக்குத் தெரியாது. நீந்தத் தெரிந்தவர்கள் அவர்களை ஒவ்வொருவராக அக்கரையில் சேர்ப்பதில் முனைந்தனர்.

குள்ளனுக்கு சற்றுக் களைப்புதான். மிகுந்த பிரயாசையுடன் சாமியாரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்து விட்டான். அவர்கள் சின்ன மலையை விட்டு நீங்கி மூன்று நாழிகையாகியிருக்கும்.

சாமியார் முதலில் அவனுடன் வரச்சம்மதிக்கவில்லைதான். ஆனாலும் தான் உயிருடன் இருந்தால்தான் மேலும் பலரைப் புது மார்க்கத்தில் ஈடுபடுத்த முடியும் என்ற காரணத்தால் அவனுடன் செல்லச் சம்மதித்தார். அவர் சாவதானமாகவே இருந்தார். அவரிடம் சிறிதும் பரபரப்பில்லை. இதோ அவர்கள் இப்போது ஒரு சிறிய குன்றை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். காலில் செருப்பில்லாவிடினும் குள்ளன் மிகுந்த லாவகமாக முட்செடிகளின் ஊடே விரைவாக நடந்தான், பயம் அவனை உந்த. செருப்பணிந்த சாமியாரின் கால்களோ அவரது பழக்கமின்மையைப் பறைசாற்றின. முட்கள் கீறி, முழந்தாள்கள் மற்றும் தொடைப்பகுதிகளில் ஆடை கிழிந்து இருந்தது, ரத்தம் வழிந்தோடியது. அவரது நினைவுகள் பின்னோக்கி விரைந்தன. எரூசலத்திலும், காலிலீ கடல் பிராந்தியத்திலும், நாஜரெத்திலும் இப்படியான முட்செடி, மர வளர்த்தி உண்டா? அங்கிருந்த பாலைவனங்களையும், நடுவே ஓடும் ஜோர்டான் நதியையும், புனித நகரமாகிய எரூசலத்தையும் நினைத்தபொழுது அவருக்கு ஓர் ஏக்கம் ஏற்பட்டது. அது ஓரிரு நிமிடங்கள்தான் நீடித்தது. இப்போது அடர்ந்த தாவர வளர்ச்சியூடே அவர் மலை ஏறி, மறுபக்கம் இறங்க வேண்டும்.

மறுபக்கம் இறங்கியதும் என்னாகும்? குள்ளன் கூறியது ஞாபகம் வந்தது.

“சாமி, மலையோட அப்பக்கச் சரிவுல ஒரு குகை இருக்கு. சற்றே சீக்கிரம் நடங்க. நாம அங்கே போயி ஒளிஞ்சிக்கிட்டா யாராலயும் நம்மள சட்டுனு கண்டு பிடிக்க முடியாது. நாளைக்கி காலையோ அல்லது இந்த விரோதிப்பசங்க திரும்பிப் போனப்புறமோ நாம அந்த இடத்திலேருந்து ரண்டு கல் தூரத்துல இருக்கற பெரிய மலைக்குப் போயிடலாம் (இக்காலத்திய பல்லாவரம் மலை). அதனோட அடிவாரத்துல என் மாமன் வீடு இருக்கு. அவரோ மணிமங்கலம் பிரபுவோட ஆள். இந்த ஊர்க்காரர்கள் பாச்சா அங்கே பலிக்காது. ஒங்களை எப்படியும் காப்பாதிடுவோம்”.

“காப்பாதிடுவோம்”, இச்சொல் அவர் காதுகளில் பெரும் ஓசையுடன் ஒலித்தது நெடுநேரம் வரை. கல்லிலும் செடிகளிலும் தான் இடறி வீழ்ந்து சென்றதை அவர் உணரவே இல்லை. அவர் எண்ணங்களோ கட்டுக்கடங்காமல் ஓடின.

“ஆம், நான் ஓடுகிறேன், ஓடிக்கொண்டே இருக்கிறேன். அமலன், பரமபிதாவின் குமாரனைச் சிலுவையில் அறைந்த காலத்திலிருந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. இன்னும் எனக்கு ஆத்மசாந்தி கிடைக்கவில்லை. நிலையான இருப்பிடமும் கிடைக்கவில்லை.

“பரமபிதாவே, உம்குமரன் மூலம் உம்மைச் சரணடைந்தேன். சாந்தி அளிப்பீராக.”

அவர் எண்ணங்கள் இவ்வாறு ஓடும்போது அவரையும் அறியாமல் அவர் கால்கள் மடிந்தன. மண்டியிட்டு அமர்ந்தார். அவர் பிரார்த்தனையை ஆரம்பித்தது. குள்ளனுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. அவனைப் பொருத்தவரை தெய்வாம்சம் நிறைந்த சாமியார், ஆச்சு கிட்டத்தட்ட மலையுச்சியை அடைந்த இத்தருணத்தில் இப்படிக் காலதமதம் செய்வதை எவ்வாறு தடுப்பது?

இன்னும் பத்தடி நடந்தால் போதும் மலையுச்சி வந்து விடும். இந்த இடத்தில் மரங்களோ முட்செடிகளோ அவ்வளவாக இல்லை. பெரியதாகவும் சிறியதாகவும் பாறைகள் மட்டுமே இந்த உச்சிப் பகுதியில் இருந்தன.

“சாமீ, சாமீ நடங்க, நடங்க” என அவன் கெஞ்சியது அவர் காதுகளில் விழவே இல்லை. அவர் கண்கள் உச்சி மேலிருந்த ஒரு பெரிய பாறையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.

அப்போது ஒரு வேங்கையின் உறுமல் கேட்டது. நெருப்பு போல ஜொலிக்கும் அதன் கண்களைப் பார்த்ததும் “ஐயோ” என அலறியவண்ணம் குள்ளன் மலைச்சரிவில் ஒரு பக்கமாக குள்ளன் ஓடினான். அச்சமயத்தில் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் மட்டுமே அவன் உள்ளத்தில் இருந்தது.

அவன் ஓடியதை சாமியார் அறியவில்லை. அந்த பயங்கரமான வேங்கையையும் அவர் பார்க்கவில்லை. வேங்கை மறுபடியும் உறுமிற்று. வலை இப்பக்கமும் அப்பக்கமும் சுழற்றி அடித்தது. அப்போழுதும் தன் சூழ்நிலையின் பிரக்ஞையே இல்லாமல், சிந்த்னையிலாழ்ந்திருந்த அந்த வணக்கத்துக்குரிய மனிதர் வேங்கைக்கு ஒரு விளங்காப்புதிராகவே இருந்திருக்க வேண்டும்.

சிறிது தொலைவில் மனிதர்கள் வரும் சப்தம் கேட்டது. கூடவே கானகத்தின் சிறுபிராணிகளும் சப்தம் செய்தும், பறவைகளும் மேலே பறந்தும் பிறகு மறைவிடம் தேடுவதும் வேங்கைக்கு புலனாயின. ஆகா இதென்ன? சற்றே கீழே கிறீச், கிறீச் என்னும் சப்தம்? ஆகா ஒரு குரங்குக் கூட்டம். நல்ல வேட்டைதான் என வேங்கை நினைத்தாற்போல சரேலென கீழே நோக்கி ஓடி, அந்தக் காட்டினூடே மறைந்தது.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

அடையாற்றை சிரமப்பட்டு கடந்து வந்த அந்த அறுவரும் முதலில் சற்றே திகைத்து நின்றனர். ஏனெனில் சாமியார் அந்தச் சின்னமலைமீது இல்லை. ஆனால் அவர் அணிந்திருந்த அன்னிய நாட்டுக்காலணிகளின் சுவட்டைப் பின்பற்றி விரைந்தே பின்தொடர்ந்தனர். ஏனெனில் அவர்களில் ஓரிருவர் மிருக வேட்டையாடுவதில் வல்லவர்கள். பல இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் குட்டைகளால் அவர்களது முன்னேர்றம் அவ்வப்போது தடைபட்டது, ஏனெனில் சுவடுகள் அவற்றில் மறைந்தன. ஆனாலும் சாமியாரின் உடைத்துண்டுகள் முட்செடிகளில் மாட்டியிருந்தது அவர்களது வேலையைச் சுலபமாக்கியதும் நிஜமே. ஆனால் மொத்தத்தில் அவர்களது முன்னேர்றம் தாமதப்பட்டதைத் தவிர்க்கவியலவில்லை. கடைசியில் அவர்கள் சாமியார் அச்சமயம் இருந்த குன்றின் அடிவாரத்துக்கு வந்து விட்டிருந்தனர். அடையாற்றைவிட்டு அவர்கள் காட்டுப் பகுதிக்குள் வந்து இரண்டு நாழிகைகளாகியிருக்கும். இப்போது மலைச்சரிவில் அவர்களது தடையங்களை கண்டுகொள்வது கடினமாக இருந்தது.

அவர்களில் ஒருவன், சிகப்பன், சொன்னான், “மஞ்சனி, இப்போ என்ன பண்ணறது? இன்னும் ஒரு நாழிகையிலே கும்மிருட்டாகிவிடும். இந்தக்கட்டின் மத்தியிலே அப்போ அதிகத் தொல்லையாயிடும். பேசாம இப்போ திரும்பிப்போவோம், இன்னொரு நாள் பாத்துக்கலாம்” என்றான்.

மஞ்சனி முடியாது என தலையை அசைத்தான். “சிகப்பா, இந்த மஞ்சனி முன்வச்சக் கால பின்னால வைக்க மாட்டான். யாருக்கு இஷ்டமிருக்கோ அவங்க மட்டும் என்னோட வரட்டும்” என்றான். கூடவே தன் கையிலிருந்த எரியீட்டியை குத்தும்பாவனையில் தூக்கிப் பிடித்தான்.

அப்போது “ஐயோ” எனக்கத்தியக் குள்ளனின் குரல் கேட்டது. அவர்கள் பார்வில் மலைச்சரிவை நோக்க அங்கு தூரத்தில் பாதிரியாரின் முள்ளில் மாட்டிய அங்கி தெரிந்தது.

கோபமும் ஆத்திரமும் வெறியும் அவர்களை ஆட்கொள்ள, அந்த அறுவரும் மேல்நோக்கி விரைந்தனர்.

சிறிது நேரத்தில் மழை விட்டுவிட்டது. வெளியில் சூந்திருந்த இருட்டும் சற்றே குறைந்தது. வெளிச்சம் வரவர குள்ளனின் மனதிலும் தைரியம் மீண்டும் பிறந்தது.

“ஐயோ என்னக் காரியம் செஞ்சேன்? செய்யாகூடாத காரிமாச்சே அது” என பச்சாதாபத்துடன் அவன் திரும்ப பாதிரியாரின் இடம் நோக்கி ஓடினான். அந்த வேங்கை அவரை என்ன செய்ததோ தெரியவில்லையே. எனக்கு என்ன ஆனாலும் சரி, முதல்ல அவரோட சௌகரியத்தை பார்க்கோணும்” என புலம்பியவாறே அவன் விரைந்தான்.

மலை உச்சிக்கருகில் சாமியார் அதே மண்டியிட்ட நிலையில் இருந்ததைப் பார்த்த அவன் மனம் நிம்மதியால் நிரம்பியது. பொல்லாத வேங்கையையும் காணோம்.

குள்ளனின் கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் பெருகிற்று. கூடவே அவமான உணர்ச்சியும் தோன்றிற்று. அவன் வாய் புலம்பியது, “சாமீ என்னப்போல ஒரு பதரும் இருக்க முடியுமா? ஆபத்துக் காலத்தில் பறந்து விட்டேனே”!

சாமியார் அருகே இருந்த பாறைமீது அமர்ந்து அருளுடன் அவனை நோக்கினார். “மகனே வீண்கவலை வேண்டாம். என் ஆசான் சிலுவையில் அறையப்பட்டு இறந்த பல வருஷங்களாச்சு. நானும் யூததேசத்தை விட்டு வந்து பலதேசங்களாக சுற்றிவிட்டு இங்கே வந்துள்ளேன். எங்குமே நான் தேடிய அமைதி கிடைக்கவில்லை. அதே சமயம் சிலுவையில் கொடூரமாக அறையப்பட்ட நிலையிலும் தேவகுமாரனது முகத்தில் இருந்த அந்த சாந்தமும் கருணையும் என் மனக்கண் முன்னே அப்படியே உள்ளன.

இத்தருணத்தில் நானும் இப்பூவுலகை விட்டு விலக வேண்டும் என்றே என் குருநாதரின் கட்டளை வந்ததாகவே உணர்கிறேன். என் காலமும் முடியப்போகிறது. அதை முடிக்க வைக்கும் தூதுவர்கள் இதோ மலைமேல் ஏறிவருவதை நான் இப்போது உணர்கிறேன்” என்று அவர் கூறி முடித்தார்.

குள்ளனும் இப்போது கூர்ந்து கவனிக்க, தங்கள் வழியை மறித்து நிற்கும் மூங்கில்களை பின் தொடர்பவர்கள் வெட்டுவது அவனுக்கும் துல்லியமாகக் கேட்டது.

“சாமீ, வரமாட்டீங்களா” என தீனமாக அவன் கேட்க, மாட்டேன் எனத் தலைய்சைத்தார் அவர்.

“குள்ளா வருத்தப்படாதே. நீ என் பிரிய சிஷ்யனாக இருந்தாய். நீ என்னை விட்டு ஓடியது குறித்து வருந்தாதே. பல ஆண்டுகளுக்கு முன்னால் என் ரட்சகரை சிலுவையில் அறைவதற்காக அவரைக் காவலர்கள் கைது செய்தபோது அவர் சீடர்கள் நாங்கள் எல்லாம் இப்படித்தான் ஓடினோம். கடைசி சாப்பாட்டின்போது அவரே தனது பிரதமச் சீடனான பெட்ருவிடம் சொன்னார், ‘நாளைக்காலை சேவல் கூவும் முன்னால் நீ என்னைத் தெரியவே தெரியாது என மூன்றுமுறை மறுப்பாய்’ என. அப்படியேதான் நடந்தது.

இதற்கு முன்னால் என் எஜமானிடம் பலரும் முழுநம்பிக்கையும் வைத்திருந்தனர். நான் மட்டும் அவரைப் பரிசோதித்த வண்ணமே இருந்தேன். அவரைப் புதைத்த இடத்திலிருந்து அவர் மீண்டு வந்தாலும் அதனால் உடனே மகிழ்ச்சியடையாது அவர்தான் உண்மையான ஏசுவா என்பதை நான் அவர் காயங்களைத் தொட்டுப்பார்த்து உறுதி செய்து கொண்டவன். அவ்வளவு நம்பிக்கையின்மை என்னிடம் அப்போது இருந்திருக்கிறது. அவர் என்னை மந்தஹாசத்துடன் நோக்கிக் கூறினார், “தோமா, எல்லோரும் கேள்வியே கேட்காது நம்பினர். ஆனால் நீ மட்டும் என்னைச் சோதித்தாய். நீ அற்புதங்களைப் பார்த்து சரிசெய்த பிறகே என்னை நம்பினாய். ஆனால் அவற்றைக் காணாதவர்கள், என்னை ஒருபோதும் காணாதவர்கள் கூட என் மேல் நம்பிக்கை வைத்தனர். என்றும் அவர்களுக்கு மேன்மை உண்டாவதாகுக” என்றார்.

இப்போ என்ன ஆகி விட்டது? வேங்கையைக் கண்டு ஓடினாய். அது மனித இயற்கைதானே. பயப்பட வேண்டியதற்கு பயப்படாதவன் முழுமூடன். என்னை விடு, நான் வந்த காரியம் முடிந்து விட்டது. போகும் நேரமும் வந்து விட்டது. நான் சாகவும் துணிந்து விட்டேன். அத்ற்காக என் ஆண்டையின் உத்திரவும் கிடைத்து விட்டது.

குள்ளன் அவரை வணங்கிக் கூறினான். “சாமீ இப்போதும் கூட கடற்கரை கிராமங்களில் நம் மதத்தவர்கள் உள்ளனர் நூற்றுக் கணக்கில். ஆனால் அவர்கள் செம்படவர்கள், பள்ளர், பறையர் ஆகிய எளிய சாதியினரே. ஏழைகள். மற்றப்படி உயர் சாதியினர், பணக்காரர்கள், அதிகாரிகள் ஆகியோர் எப்போது நம் மதத்துக்கு வருவார்கள்” என ஏக்கத்துடன் கேட்டான்.

“ஏழைகளே எண்ணத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் விண்ணுலகின் அரசு அவர்களுடையதே” என ஏசுவே தனது மலைப்பிரசங்கத்தில் கூறிவிட்டார். நீ கவலை கொள்ளாதே. நான் உனக்கு போதித்ததை நீ மற்றவருக்கும் பரப்புவாயாக. ஒரு தானியம் பூமியில் விழுந்து மன்ணானால் என்ன அதிலிருந்து பல்லாயிரக்கணக்கான தானியங்கள் வரும் அல்லவா? அதுதான் ஆண்டவன் கட்டளை. நீ தப்பித்துச் செல் எனக்கூறிவிட்டு அவர் மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.

குள்ளன் மனமின்றி அங்கிருந்து சென்றான். சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்த்தான். மற்றவர்களால் சூழப்பட்ட தோமாவுக்கு என்ன நடக்கிறது என்பதை அவனால் பார்க்கவியலவில்லை.


அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது