9/30/2006

வயது ஆவது பற்றிய உணர்வு

நான் சமீபத்தில் 1971-ல் மத்தியப் பொதுப்பணி துறையில் இள நிலை பொறியாளராக சேரும்போது எனக்கு இன்னும் 25 வயது நிரம்பவில்லை. என் மேலதிகாரிகள் என்னை விட வயதில் பெரியவர்கள். என் சக ஜூனியர் இஞ்சினியர்கள் என் வயதினர். மேலதிகாரிகள் என்னைவிட வயதில் பெரியவர்கள் என்பதால் குழப்பம் ஒன்றுமில்லாமல் வேலை செய்ய முடிந்தது.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே மேலதிகாரிகளில் சிலர் என்னை விட வயதில் இளையவர்களாக இருப்பதைப் பார்க்க முடிந்தது. முக்கியமாக யூ.பி.எஸ்.சி. மூலம் நேரடியாகவே உதவி/உதவிக் கோட்டகப் பொறியாளர்கள் வந்தனர். அவர்களில் பிந்தையவர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் அடுத்தப் பதவிக்கு பிரமோஷன் கொடுப்பது டிஃபால்ட் ஆன நிலை. ஆகவே சில கோட்டகப் பொறியாளர்கள் கூட என்னை விடச் சிறியவர்கள் என்ற நிலை வரத் தொடங்கியது. நல்ல வேளையாக 1981-ல் ஐ.டி.பி.எல். சென்றதில் தப்பித்தேன். இதில் என்ன பிரச்சினை என்று கேட்பவர்களுக்கு ஒரே பதில்தான். அதாவது தன்னை விட வயது குறைந்தவர் கீழ் வேலை செய்யும் போது, மேலே போஸ்டிங்குகள் காலி இல்லையென்றால், பதவி உயர்வு கிடைப்பது என்பது என்னை மாதிரி இருப்பவர்களுக்கு எட்டாக்கனியே.

ஐ.டி.பி.எல்லில் பிரச்சினை இல்லையா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும், ஏனெனில் நான் ஏற்கனவே கூறியபடி நான் சேர்ந்த நேரம் ஐ.டி.பி.எல். தளர ஆரம்பித்த நேரம். ஆகவே புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பது அதுவும் அதிகாரி லெவலில் எனக்கப்புறம் இல்லை என்றே ஆயிற்று. ஆகவே எனது மேலதிகாரிகளாக, அதிலும் முக்கியமாக எனது துறையில் என்னை விட இளையவர் யாருமே இல்லை என்பதுதான் நிஜம்.

ஆக நான் சொல்ல வருவது என்ன? ரொம்ப நாளைக்கு எனக்கு வயதாகி விட்டது என்ற எண்ணமே வரவில்லை. என் மன நிலை 25 வயது வாலிபனாகவே என்னை நடக்கச் செய்தது. தினமும் போகவர 40 கிலோமீட்டர் சைக்கிள் விட்டதும் இதற்குக் காரணம்.

அவ்வப்போது சில நிகழ்ச்சிகள் நடந்தன. என்னிடம் கணிதம் கற்றுக் கொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி என்னை அங்கிள் என்று அழைப்பார். ஆனால் ஒரு நாள் அப்பெண்ணின் அன்னையே என்னை அங்கிள் என அழைக்க எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அப்போது எனக்கு வயது 45. அதே போல பாக்கிஸ்தானின் பிரதம மந்திரியாக பேனஜீர் புட்டோ பதவியேற்றப் போது அவர் என்னை விட 8 வயது இளையவர். இப்போதும் அதே வயது வித்தியாசமே:)) ஆனால் முதலில் அது ஷாக்கிங்காக இருந்தது. அவருக்கு அடுத்தப் பிரதமர் நவாஜ் ஷரீஃப் என்னை விட இரண்டு வயது இளையவர். ஜான் மேஜர், டோனி ப்ளேர் மற்றும் பில் க்ளிண்டனும் என்னை விட வயதில் குறைந்தவர்கள். அதே போல தெருவில் போகும்போது நான் காணும் போலீஸ் அதிகாரிகள் கூட சிறுவர்களாக என் கண்ணுக்குப் பட்டனர்.

இதெல்லாம் முக்கியமாக நான் மொழிபெயர்ப்பு வேலைகளுக்குச் சென்ற கம்பெனிகளின் மேலதிகாரிகளைக் காணும்போது அதிகம் மனதுக்குப் பட்டது.இப்போது கூட பாருங்கள், நான் கடைசியாக மொழிபெயர்ப்பு வேலை செய்து அனுப்பிய கம்பெனியின் தலைமை அதிகாரி என்னை விட 26 வயது சிறியவர்.

நேற்றுக் கூட ஒரு குட்டிக் குழந்தையை கொஞ்ச, அதுவும் என்னைப் பார்த்து சிரிக்க, அதன் பெற்றோருடன் பேசிவிட்டு நான் விடை பெற்ற போது குழந்தையின் தந்தை "தாத்தாவுக்கு டாட்டா" காட்டுமாறு அதனிடம் கூற, அதுவும் அவ்வாறே செய்ய நானும் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டு வீட்டுக்கு வந்து வீட்டம்மாவிடம் இதை பற்றிக் கூறியபோது அவர் எனக்கு அறுபது வயதாகி விட்டதை எடுத்துக் கூறினார்.

பெங்களூருக்கு சென்றபோது எனது டிக்கெட்டிலும் சீனியர் சிடிஸன் என்பதற்காக கட்டணக் குறைப்பு வேறு.

ஆனால் என்ன, என் மனதின் வயது 25-ஐ தாண்டவே இல்லை. நல்ல ஃபிகர் தென்பட்டால் பார்க்காமல் இருக்க முடிகிறதா என்ன? இதில் என்ன சோகம் என்றால் எனது கனவுக் கன்னிகளுக்கும் வயது ஆகிவிட்டது என்பதுவே. காஞ்சனாவுக்கு அறுபது வயதுக்கு மேலாகி விட்டதாமே? வைஜயந்தி மாலாவுக்கு 72 வயதாம், ஹூம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/28/2006

சுனாமி நிவாரணப் பணிகளில் R.S.S-ன் பங்கு - a conspiracy of silence!

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் பற்றி இப்போது பேச்சுக்கள் வரும்போது நான் சுமார் 20 மாதங்களுக்கு முன் போட்ட இந்த இடுகை ஞாபகத்துக்கு வந்தது. ஆகவே அதை மீள்பதிவு செய்கிறேன். அப்போதையப் பின்னூட்டங்களும் அப்படியே இருக்கின்றன. பார்ப்போம் இப்போதைய எதிர்வினைகளை. இப்போது பதிவுக்கு போவோம்.

எல்லாரும் சொல்லி வைத்தது போல ஒரு விஷயத்தில் மௌனம் காக்கின்றனர்.

சுனாமியின் பின் தொடரும் மீட்பு நடவடிக்கையில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மிகுந்த மனிதாபத்துடன் தொண்டாற்றி வருகின்றனர். மற்றவர்கள் தொடக் கூசும் பிணங்களை அறுவெறுப்பின்றித் தொட்டுத்தூக்கி அந்திமக் கிரியைகள் செய்கின்றனர்.

தலைவரின் குடும்ப சேனல் மற்றும் அதன் எதிரிச் சேனல் இவ்விரண்டும் இதில் மௌனம் கடைப் பிடிக்கின்றன. என்ன ஒற்றுமை போங்கள்! கண்ணேறுதான் கழிக்க வேண்டும்!

ஆனால் ஒன்று. இது பல வருடங்களாகவே நடைப் பெற்று வருகிறது.

நெருக்கடி நிலையின் உச்சக் கட்டத்தில் விசாகப் பட்டினத்தில் புயல். அதிலும் இத்தொண்டர்கள் அரும்பணியாற்றினர். நியூஸ் ரீல் காட்சி பிரேமில் ஒரு சில நிமிடங்கள் ஆர்.எஸ்.எஸ் சேவா மண்டல் என்ற பேனர் அரங்கில் இருந்த நான் காணக் கிடைத்தது. அதற்காக சம்பந்தப்பட்ட கேமரா மேன் சஸ்பெண்ட் செய்யப் பட்டார் என்பதைப் பற்றிப் பிறகுப் படித்தேன்.

சுனாமி போது கூட சம்பந்தப்பட்டக் கலெக்டர்களே உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் காரர்களின் உதவி நாடினர் என்றுத் துக்ளக்கில் (Issue dated 12-01-05, page 36) படித்தேன்.

ஜெயமோகன் இதைப் பற்றி எழுதியதற்கு பதிலளிக்கும் வகையில் பதிவை வெளியிட்ட ரோஸா வஸந்த் (postings dated 7th and 8th Jan, 2005) அவர்களும் அவர் கருத்துக்குப் பின்னூட்டம் இட்டவர்களும் சுழற்றிச் சுழற்றி பத்தி பத்தியாக எழுதினாலும் ஆர்.எஸ்ஸ்.எஸ்ஸின் பங்கை அவர்களால் மறைக்க முடியவில்லை.

"ஜெயமோகன் இது பற்றி எழுதியது உண்மை என்றுதான் ஒத்துக் கொள்ள வேண்டும்" என்று ரோஸா வசந்த் எழுதியுள்ளார். ஆனால் இவர்கள் யாரும் இத்தனை ஆண்டுகளாக கடைப் பிடிக்கப்பட்டு வரும் மௌன சூழ்ச்சியைப் பற்றிக் கூறாது சௌகரியமாகத் தவிர்த்து விட்டார்கள்.

போகட்டும் எத்தனை நாட்களுக்குத்தான் இது நடக்கும் என்பதையும் பார்த்து விடுவோமே?

அன்புடன்,
ராகவன்

மென் பொருளில் வேலை செய்யும் காதலிக்குக் கடிதம்

என் இனிய நண்பர் ரவி பாலசுப்பிரமணியம் எனக்கு அனுப்பிய இந்த மின்னஞ்சலை இங்கு பதிவாய் இடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிலும் பின் குறிப்பு சூப்பர். "நான் உனக்கு எழுதிய இந்தக் காதல் கடிதம் உனக்கு பிடிக்கவில்லை என்றால் அதை உன் தங்கையிடம் தந்து விடவும்" என்று எழுதிய காதலன் நினைவுக்கு வருகிறான்.

இதே ரவி அனுப்பிய முந்தைய மின்னஞ்சல் பதிவின் சுட்டி இதோ. அதிலேயே அதற்கும் முந்தைய மின்னஞ்சல்களின் சுட்டியும் இருக்கின்றன.

இப்போது கடிதத்தைப் பார்ப்போமா?



அன்புடன்,
டோண்டு ராகவன்

9/22/2006

பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு - 3

18-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று எங்கும் வெளியில் செல்லவில்லை. மைத்துனன் வீட்டுக் கணினி முன் உட்கார்ந்து ஒரு ராட்சச வேலை செஷன். என்னுடைய ஜீ மெயில் ஆர்கைவ்ஸிலிருந்து கோப்புகளை இறக்கி அவற்றை மொழிபெயர்ப்பு செய்யும் வேலை நெட்டி முறித்தது. ஒவ்வொரு கோப்பாக முடித்து வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் செய்வது தனி சுகம்.

மாலை சந்திப்புக்கு குமரன் எண்ணமும் செந்தழல் ரவியும் மறுபடி வரப்போவதாகப் பேச்சு. முந்தைய நாள் மீட்டிங் நான் மேலக்கோட்டைக்கு சென்றதால் சற்று தாமதமாகவே ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. ஆகவே இன்னும் பேச விஷயங்கள் இருந்ததாக அவர் கருதினார். ஆனால் இன்று ரவி அவர்கள் வாடிக்கையாளர் வரவில் சிக்கிக் கொண்டார். குமரன் எண்ணமும் வர இயலவில்லை. ஆனால் நான் கேட்டுக் கொண்டபடி தேசிகன், ஜடாயு மற்றும் ம்யூஸ் வருவதாக வாக்களித்தனர். அதே போல் வந்தனர்.

முதலில் தேசிகன் வந்தார். அவர் சுஜாதாவின் அதிகாரபூர்வ பயாக்ரஃபர் என்றதும் என் மைத்துனனும் அவருடன் உட்கார்ந்து பேசினான். சுஜாதா எங்கள் இருவருக்குமே அபிமான எழுத்தாளர் ஆயிற்றே. தேசிகன் லூசண்ட் டெக்னாலஜியில் பணி புரிகிறார். ஜடாயு அவர்கள் ஒரு விளம்பர நிறுவனத்தில் Design Manager -ஆக பணி புரிகிறார். கம்ப ராமாயணத்தில் நல்ல ருசி. மனுஷர் கம்பன் கழகத்தின் பட்டிமண்டபங்களில் பேசுகின்ற ஆள் என்று ம்யூஸ் எழுதியிருந்தார். ஆகவே கடன் பட்டார் நெஞ்சம் போல பதிவு சம்பந்தமாக எனக்கு எழுந்த ஒரு சந்தேகத்துக்கு விடையளிக்க ம்யூஸ் அவருடன் கலந்தாலோசித்திருந்தார்.

ம்யூஸ் இரண்டாவதாக வந்தார். வந்ததும் எனக்காக தான் வாங்கிய புத்தகத்தைக் கொடுத்து அசத்தி விட்டார். அரேபிய இஸ்ரேலிய யுத்தங்களின் தொகுப்பு அந்த புத்தகம். அதை முடித்து விட்டு சில இஸ்ரேல் ஆதரவு பதிவுகள் போட வேண்டும். ஜடாயு அவர்கள் கடைசியாக வந்தார்.

தேசிகன் நான் முன்னமே சென்னையில் பார்த்திருந்ததற்கு இளைத்திருக்கிறார். நிறைய வாக்கிங் போவதாகக் கூறினார். என் மைத்துனன் அவரிடம் சரமாரியாக சுஜாதா அவர்களை பற்றி கேள்வி கேட்டான். தேசிகன் வரைந்த பெரியாரின் ஓவியத்தை யாரோ சுட்டு விட்டதைப் பற்றி அவரே பதிவு போட்டிருக்கிறார். அதைப் பற்றிப் பேசும்போது அந்த ஓவியத்தில் இருந்த தனது கையெழுத்தையும் சுரண்டி எடுத்திருந்தனர் என்று கூறினர். இந்த செய்தி சுஜாதா ஆரம்பகாலக் கதை ஒன்றை எனக்கு ஞாபகப்படுத்தியது. அதை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டேன். சுஜாதா அவர்களுடன் பெங்களூரிலிருந்து காட்பாடி வரை சமீபத்தில் 1971 ஜனவரியில் பயணம் செய்த நினைவையும் கூறினேன்.

சுஜாதா அவர்கள் வீட்டு புத்தக அலமாரியில் உள்ள புத்தகங்களை சட்டென்று எடுக்கும் வண்ணம் அவருக்கு தான் அரேஞ்ச் செய்து கொடுத்ததைப் பற்றி தேசிகன் கூறினார். சுஜாதா இந்த சந்திப்புக்கு வராவிட்டாலும் அவரது நினைவு தேசிகன் மூலம் அங்கே இருந்தது. மெக்ஸிகோ நகரத்து சலவைக்காரி ஜோக் என்னவென்று அவரிடம் தனக்குக் கேட்கத் தோன்றியதே இல்லை என்று தேசிகன் கூற, நான் ஒரு வெர்ஷனை கூறி அதுதான் சரியான வெர்ஷனா என்று சுஜாதாவிடம் கேட்டு கன்ஃபர்ம் செய்யச் சொன்னேன். அவரும் சரி என்றார்.

பிறகு ஜடாயு அவர்களும் வந்து சேர்ந்து கொண்டார். ரத்தச் சர்க்கரை கட்டுப்படுத்துவது பற்றி பேச்சு வந்தது. தேசிகன் தனக்கு அந்தக் கோளாறு வரும் வாய்ப்பு இருப்பதால் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பதாகக் கூறினார். மருந்து எதுவும் எடுத்துக் கொள்ளாது வெறும் வாக்கிங்கில் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதாகக் கூறினார். ஜடாயு அவர்கள் சில யோகா பயிற்சிகளை செய்யலாம் என்று பரிந்துரைத்தார். ம்யூஸுக்கும் அந்த பிராப்ளம் இருந்ததால் அவர் இருவர் சொல்வதையும் தனது வழக்கமான கவனத்துடன் கேட்டுக் கொண்டார்.

பேசிக் கொண்டேயிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அவர்கள் மூவரும் விடை பெற்று என்றதும் செந்தழல் ரவியிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. அவரால் வர இயலவில்லை என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அடுத்த நாள் காலை 6.30 மணியளவில் சென்னைக்கு வண்டி பிடிக்க வேண்டியிருந்ததால் கணினியை மூடி விட்டு நான் படுக்கச் சென்றேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/20/2006

பெங்களூர் வலைப்பதிவாளர் சந்திப்பு - 2

போன பதிவில் எழுதியது முதல் சந்திப்பைப் பற்றியது. அதில் செந்தழல் ரவி சற்று தாமதமாக வந்தார். அவருக்காகக் காத்திருந்த மற்றவர் அடுத்த சில நிமிடங்களிலேயே போண்டா சாப்பிட அவரையும் அழைத்துப் போய் விட்டோம். போன இடத்திலும் போண்டா, ரவா இட்டலி ஆகியவற்றின் ஒப்பீடு நடந்ததுதான் அதிகம். மைசூர் போண்டாவை பெங்களூரில் என்ன பெயர் வைத்து அழைப்பார்கள் என்ற அதி முக்கியமான விஷயத்தைப் பற்றி வேறு அலசல். ஆகவே ரவி என்னுடன் பேச நினைத்ததையெல்லா பேச முடியவில்லை என்று நாங்கள் இருவருமே அபிப்பிராயப்பட்டோம்.

ஆகவே அடுத்த நாள் ஞாயிறு மாலை ரவியும் குமரன் எண்ணமும் நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்தனர். அவர்களுடன் வேறு ஒருவர் வந்தனர். ஜெர்மன் கற்றுக் கொள்வதை பற்றி என்னிடம் ஆலோசனை கேட்க வந்தனர். மேக்ஸ் ம்யுல்லரை விட்டால் வேறு வழியே இல்லை என்று நான் ஒரே வரியில் கூறிவிட, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டது அவர்கள் விடை பெற்று சென்றனர்.

மாலை 8 மணி முதல் இரவு 10 வரை பெரிய மீட்டிங் நடந்தது. குமரன் எண்ணம் எனது ஆண் பெண் கற்பு நிலை பற்றிய பதிவுகளைப் பற்றி கேள்விகள் கேட்டார். பார்ப்பனனாக நான் இருப்பதை பற்றிய எனது வெளிப்படையான எண்ணங்களைப் பற்றியும் கேள்விகள் கேட்டார். ஆணித்தரமான கேள்விகள். இது சம்பந்தமாக நாங்கள் பரிமாறிக் கொண்ட பின்னூட்டங்களை இப்பதிவில் பார்க்கலாம். உதாரணத்துக்கு:

குமரன் எண்ணம் எழுதியது:
"நீங்கள் ஜாதி மத பேதத்தை ஒரு சீரிய முயற்சியான தமிழ் மணத்தில் கூட விட்டு வைக்காமல் பரப்பிக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் வயதில் பெரியவராக இருந்தாலும் எண்ணங்களில் சிறுமை கொண்டுள்ளீர்கள். இதை உங்கள் மணம் புண்படுத்த சொல்ல கூறவில்லை".
எனது பதில்:
"இதிலெல்லாம் நான் மனம் புண்பட்டு விட மாட்டேன். உங்கள் கருத்து உங்களுக்கு, என் கருத்து எனக்கு. அவ்வளவுதான் விஷயம். நான் வெளிப்படையான எண்ணங்கள் பதிவு போட்டதற்கானக் காரணத்தை பல முறை வெளிப்படையாகவே கூறி விட்டேன். நீங்கள் ஒரு நாள் நான் சொல்ல வருவதை சரியான முறையில் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் let us agree to disagree என்ற முத்தாய்ப்புடன் இது பற்றி மேலும் பேசுவதை நிறுத்திக் கொள்கிறேன்."

அது பற்றி மேலும் பேசினோம் இந்த சந்திப்பில். அதை பற்றி தன் கருத்தை குமரன் எண்ணம் இங்கு பின்னூட்டமாகவோ அல்லது தனிப்பதிவாகவோ வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கிறேன்.

ஆண் பெண் கற்பு நிலை பற்றிய எனது பதிவுகள் பற்றியும் பேசப்பட்டது. ஈ.வே.ரா. அவர்கள் கூறியதுடன் கம்பேர் செய்தால் நான் கூறியது ஒன்றுமேயில்லை. அதே சமயம் அவர் கூறியதற்காகத்தான் நானும் கூறினேன் என்றும் கூறவரவில்லை. ஆனால் கூறியவர்களைப் பொருத்துத்தான் மற்றவர்களின் எதிர்வினை அமைகிறது என்பதையும் இங்கு கூறிட வேண்டும். இதை பின்னணியாக வைத்துத்தான் ரவி மற்றும் குமரன் எண்ணத்தின் கேள்விகளுக்கு பதிலளித்தேன். அதை பற்றியும் அவர்கள் கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன்.

அடுத்து பேசிய விஷயம் போலி டோண்டுவை பற்றியே. நான் எவ்வாறெல்லாம் அவன் செய்த வேலைகளுக்கு செக் வைத்து வந்தேன் என்பதைப் பற்றி எடுத்துக் கூறினேன். இப்போது தமிழ்மணம் மட்டுறுத்தலால் எவ்வாறு தன்னைக் பாதுகாத்துக் கொண்டது என்பது பற்றியும் பேசினோம். அதர் மற்றும் அனானி ஆப்ஷன்கள் சேர்ந்து வருவதால் அவற்றை மொத்தமாக தடை செய்ய வேண்டியுள்ளது என்றும் கூறினேன். ரவி அவர்கள் பெயரில் அதர் ஆப்ஷனை உபயோகித்து ஒரு போலி கமெண்ட் வந்ததையும் அவருக்கு சுட்டிக் காட்டினேன். அவரும் தான் ஜாக்கிரதையாக இருந்து மட்டுறுத்தலை சரியாக நிறைவேற்றப்போவதாக கூறினார்.

இவ்வாறாக இந்த மீட்டிங் முடிந்தது. இதற்கு அடுத்த நாளும் அவரும் குமரன் எண்ணமும் மறுபடி வருவதாகக் கூறினர் ஆனால் வர இயலவில்லை.

திங்கள் கிழமை வந்தது தேசிகன், ம்யூஸ் மற்றும் ஜடாயு. அது பற்றி அடுத்தப் பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/16/2006

பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு

நான் இந்தப் பதிவில் குறிப்பிட்டதற்கேற்ப இன்று மாலை 6 மணியளவில் லால்பாக் க்ளாஸ் கவுஸில் சந்திப்பதாக தீர்மானம் செய்யப்பட்டது. இன்று காலை சதாப்தியில் புறப்பட்டு 11 மணியளவில் பெங்களூர் வந்து சேர்ந்தேன். வந்தவுடன் செந்தழில் ரவி, ம்யூஸ், கோபி மற்றும் சிவப்பிரகாசம் ஆகியோரிடம் டெலிஃபோன் செய்து சந்திப்பை உறுதி செய்து கொண்டேன்.

மாலை 5.30 மணியளவில் அங்கு போய் சேர்ந்தேன். இன்னும் யாரும் வரவில்லை. நான் போன கேட்டிலிருந்து உள்ளே சென்றபோது ஒரு பாறை தென்பட்டது. பலர் அதில் ஏறிக் கொன்டிருந்தனர். அது 10 லட்சம் வருடங்களுக்கு மேல் பழமையானது என்பதை இப்போதுதான் ம்யூஸ் அவர்கள் கூறத் தெரிந்து கொண்டேன். அச்சமயம் எனக்கு அது தெரியாது. க்ளாஸ் கவுஸுக்கு போகும் மும்முரத்தில் அதை சரியாக கவனிக்கவில்லை.

மற்றவர்களுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் இந்த லால் பாக் 1889-ல் அப்போதைய வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் பெங்களூர் வந்ததைக் கொண்டாடும் வகையில் நிர்மாணிக்கப்பட்டது என்பதை ஒரு அறிவிப்பு போர்டிலிருந்து அறிந்து கொண்டேன். பிறகு அது 2004-ல் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது என்பதையும் அறிந்தேன்.

முதலில் ம்யூஸ் வந்தார். சற்று நேரம் கழித்து சிவப்பிரகாசம் மற்றும் குமரன் எண்ணம் வந்தனர்.அதன் பிறகு மவுல்ஸ் என்னும் சந்திரமௌலி, கோபி வந்தனர். செந்தழல் ரவி அவர்கள் புகழ் பெற்ற பெங்களூர் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டதால் லேட்டாக வந்தார். அவருடன் அவர் நண்பர் மோகன் குமார் என்பவரும் வந்தார். இதற்கு முன்னால் பி.எஸ்.என்.எல்-லில் டிவிஷனல் இஞ்சினியராக இருக்கும் மகாலிங்கம் வந்தார். பல விஷயங்களைப் பற்றி பேசினதில் நேரம் போனதே தெரியவில்லை. போட்டோகளும் எடுக்கப்பட்டன. செந்தழல் ரவி, ம்யூஸ் மற்றும் கோபி கேமரா கொண்டு வந்திருந்தனர். அவர்களிடம் போட்டோக்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். அவை வந்ததும் அவற்றை பதிவிலும் ஏற்றுவேன். என் மைத்துனன் வீட்டு கணினியில் நெருப்பு நரி இருக்கிறது என்று என் மருமான் ஹரீஷ் இப்போதுதான் கூறினான். படத்தை ஏற்ற முடியும் என்று நம்புகிறேன். பார்க்கலாம். எக்ஸ்ப்ளோரர் சாதாரணமாக இந்த விஷயத்தில் சொதப்புகிறது.

சிவப்பிரகாசம் பிர்லா சாஃப்டில் வேலை செய்கிறார். மவுலி சத்யம் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறார். ம்யூஸ் நெஸ் டெக்னாலஜி கம்பெனியை நடத்துகிறார். தொழில்நுட்ப எழுத்தில் நிபுணர். அவருக்கு நான் தென்னாட்டு வினோத் துவா என்று பெயர் வைத்துள்ளேன். செந்தழல் ரவி எல். ஜி-யில் மென்பொருளில் வேலை செய்கிறார். செல்பேசியில் முழுபடத்தையும் இறக்கிக் கொள்ளலாம் என்று காண்பித்து பிரமிப்பூட்டினார். குமரன் எண்ணம் சிஸ்டம் அனாலிஸ்டாக வேலை செய்கிறார். கோபி ஆரக்கிளில் மென்பொருள் வேலை செய்கிறார்.

பேச்சு பல விஷயங்களைத் தொட்டது. மென் பொருள் தொழில் நுட்பங்கள் பெரிதும் அடிப்பட்டன. இங்கும் போலி டோண்டுவை பற்றி பேச்சு வந்தது. அவன் யார் என்பதை நான் எனக்குத் தெரிந்த அளவில் கூறினேன். அதற்கு பிறகு அதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்துக்குத் தாவினோம்.

இதற்கிடையில் மணி 7.30 ஆகிவிட்டது. லால் பாக்கை மூட ஆரம்பித்தனர். அங்கிருந்து பேசிக் கொன்டே வெளியில் ஒரு கோட்டலுக்கு சென்றோம். போண்டா, ரவா இட்லி, மசால் தோசை, வெங்காய ஊத்தப்பம், சாதா தோசை, சாத்துக்குடி ஜூஸ், காப்பி ஆகியவை அவரவர் விருப்பத்திற்கேற்பா ஆர்டர் செய்யப்ப்பட்டன. பில் டட்ச் முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

ம்யூஸும் மகாலிங்கம் அவர்களும் என்னை அன்புடன் ஆட்டோ பிடித்து அனுப்பி விட்டு பிறகே தங்கள் வழி சென்றனர். மிக நல்ல சந்திப்பு நடந்த திருப்தியில் வீடு வந்து சேர்ந்தேன். ஆட்டோ டிரைவர் செய்த சொதப்பலில் பெங்களூரை சற்று அதிகமாகவே சுற்றிப் பார்க்க முடிந்தது.

நான் எழுதியது முதல் படிவம் மட்டுமே. ம்யூஸ், ரவி ஆகியோர் பின்னூட்டங்கள் வழியே மேலே பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

போட்டோக்களை ஏற்றியிருக்கிறேன். ம்யூஸுக்கு நன்றி. ரவி அவர்கள் எடுத்த போட்டோக்களையும் எதிர்ப்பார்க்கிறேன். இப்போது படங்கள்.


மஹாலிங்கம், டோண்டு, குமரன் எண்ணம் மற்றும் சிவப்பிரகாசம்


ஹாய் கோபி (back to camera),மௌல்ஸ், டோண்டு, மஹாலிங்கம, சிவப்பிரகாசம் மற்றும் குமரன் எண்ணம். (டோண்டுவின் அறுவை தாங்காமல் சற்றே விலகி நிற்கின்றனர்)
ஹாய் கோபி மற்றும் செந்தழல் ரவி

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/14/2006

பொருளாதார மனிதன்

பொருளாதாரத்தில் பொருளாதார மனிதன் என்ற ஒரு கோட்பாடு கடைபிடிக்கப்படுகிறது. அந்த மாதிரி உண்மையிலேயே ஒரு மனிதன் இருப்பானா என்பதே கேள்விக்குரியதே. இருப்பினும் அந்த கோட்பாட்டை உபயோகித்து சில பொருளாதாரப் புரிதல்களை அளிக்க முடிந்தது என்பதும் உண்மையே. ஒரு பொருளாதார மனிதன் பொருளாதார நிர்பந்தத்திற்கேற்ப நடந்து கொள்வதாக ஐதீகம்.

ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியையாகவும், உதவி முதல்வராகவும் பணி புரியும் என் தங்கையிடம் பல ஆண்டுகளுக்கு முன்னால் இது பற்றி பேசிக் கொண்டிருந்த போது அவள் "உன்னை மாதிரி நாலுபேர் இருந்தா போதும் பொருளாதார மனிதன்னு ஒருத்தன் இருக்கானா என்பதே சந்தேகமாகி விடும். உன்னை மாதிரி பொருளாதார லாஜிக்கை மீறும் சில நபர்களால் பல பொருளாதார தியரிகள் விதிவிலக்குகளை பற்றிப் பேச வேண்டியிருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே கூறினாள். அதாவது நான் பொருளாதாரக் கோட்பாட்டுக்கு உட்பட்டு நடக்கவில்லையாம். சம்பாத்தியம் அதிகரிக்க, அதிகரிக்க செலவை அதற்கு ஏற்ப அமைத்துக் கொள்வதில்லையாம். இத்யாதி, இத்யாதி. அப்போது அவளிடம் நான் கேட்டேன், நான் எம்மாதிரி மனிதன் என்று அவள் ஒரே வார்த்தையில் பதில் கூறினாள், அதன் ஹிந்தி மொழி பெயர்ப்பு "வன மானுஷ்". அதை பற்றி மேலும் அறிய இப்பதிவை பார்க்கவும். ஆனால் இம்மாதிரி இருக்கக் கொண்டுதான் நான் டெலிமார்க்கெட்டிங் கூத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவும் முடிகிறது!

நான் மட்டும்தான் இப்படியா என்று யோசித்துக் கொண்டிருந்த போது நண்பர் சந்திரசேகரனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் அவர் சுட்டியுள்ள இந்தக் கட்டுரையை பாருங்கள். என்னை மாதிரியே பலர் இருக்கின்றனர். ஏன் அவ்வாறு அவர்கள் இருக்கின்றனர் என்பதற்கும் ஒரு தியரி வைத்திருக்கிறார் ஆசிரியர். புரிகிறதா என்று பாருங்கள். ஆல் தி பெஸ்ட்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/13/2006

பெங்களூர் விஜயம்

வரும் சனிக்கிழமை சதாப்தியில் பெங்களூர் வருகிறேன். அடுத்த வாரம் செவ்வாயன்று லால்பாக்கில் சென்னை திரும்புகிறேன்.

பெங்களூரில் உள்ள வலைப்பூ நண்பர்களை கண்டு பேச ஆசை. சனிக்கிழமை மாலை சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். எங்கு வைத்து என்பது புரியவில்லை. நண்பர் ம்யூஸ் மற்றும் ஹமீத் அவர்களுடன் தொலை பேசினேன். ஐயப்பன் அவர்கள் செல்பேசி வாய்ஸ் மெயிலுக்கு அழைத்து செல்கிறது. கோபி அவர்களது தொலைபேசி எண் தெரியாது.

ஆகவே இப்பதிவைப் போட்டேன். எனது செல்பேசி எண் 09884012948 மற்றும் லேண்ட்லைன் 04422312948.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/12/2006

மனித இயற்கைக்கு புறம்பான ஒரு தத்துவம்

மனித இயற்கையை மறுத்து ஒரு தத்துவம் எழுபது ஆண்டுகள் ஆட்டம் இட்டு விட்டு சென்றது. அதை செயல் படுத்திய நாடுகளிலேயே அதை மறுத்து புத்திசாலித்தனமாக காரியம் செய்கின்றனர். ஆனாலும் அசுரன் போன்றவர்கள் இன்னமும் இறந்து போன அந்த தத்துவத்தை நினைத்து மருகுவது ஒரு புறம் வேடிக்கையாயுள்ளது, மறு புறம் வியப்பாக உள்ளது.
தேவைக்கேற்ற ஊதியம், திறமைக்கேற்ற வேலை என்ற ஒரு கழிசடை கோட்பாட்டால் தொழில் முறை கம்மிஸ்ஸார்கள்தான் வளர்ந்தனர். சோவியத் யூனியன் வீழ்ந்து ஒவ்வொரு ரகசியங்களாக வெளி வரவரத்தான் ஸ்டாலின் என்ற அரக்கன் எவ்வாறெல்லாம் நாட்டை குட்டிச்சுவராக்கினான் என்பது தெரிய வந்தது. 1991-ல் சோவியத் யூனியன் அழிந்ததோ உலகம் உருப்பட்டதோ. கிழக்கு ஜெர்மனி ஒழிந்து போனதும்தான் ஷ்டாஸியிடம் (Staatssicherhait --> Stasi) ஒருவரையொருவர் எவ்வாறெல்லாம் காட்டிக் கொடுத்தனர் என்ற விவரமே வெளிப்பட்டது. சோவியத் யூனியனிடம் இந்திய கம்யூனிஸ்டுகள், ஸ்ரீலங்கா கம்யூனிஸ்டுகள் ஆகியோர் பெற்ற துரோகத் தொகைகளும் வெளியில் வர ஆரம்பித்தன. கொஞ்ச நாளைக்கு இந்திய கம்யூனிஸ்டுகள் முக்காடு போட்டுக் கொண்டு அமைதி காத்தனர்.

இப்போது சிலரை வெளியில் விட்டு ஆழம் பார்க்கின்றனர் போலும்.

எது எப்படியாயினும் சுதந்திரப் பொருளாதாரத்தை பற்றி மாமனிதர் ராஜாஜி அவர்கள் கூறியவையெல்லாம் பலித்து அந்தப் பொல்லாத கிழவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பது இப்போதுதான் எல்லோருக்கும் புரிய ஆரம்பித்துள்ளது.

புள்ளி விவரங்கள்? கைப்பூணுக்கு கண்ணாடி எதற்கு? கம்யூனிசம் மரணித்தது என்பதற்கு நாம் கண்ணால் பார்த்து, தீர விசாரித்து அறிந்தவையே போதும். எனது 13 வயதிலிருந்தே நான் கம்யூனிசத்தின் தீவிர எதிரி. இருப்பினும் சோவியத் யூனியன் அழிந்த போது மகத்தான ரஷ்ய மக்கள் எவ்வாறு ஒரு டுபாக்குர் சித்தாந்தத்தால் இவ்வாறு ஏமாற்றப்பட்டனர் என்பதை பார்த்த போது பரிதாபமாகத்தான் இருந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

துல்லியமான, முழுமையான

சில நாட்களுக்கு முன் நடந்து சென்னையில் நடந்து முடிந்த பிளாக்கர் மகாநாட்டுக்கு தமிழ் பிளாக்கர்கள் மிகக் குறைந்த அளவிலேயே வந்தனர் என்று ஒரு பதிவாளர் வருத்தப்பட்டிருந்தார். அப்பதிவில் நான் இட்டப் பின்னூட்ட்ங்கள், மற்றும் அவற்றுக்கான பதில்கள் பின்வருமாறு.

"டோண்டு says:
September 11th, 2006 at 4:43 pm
யாரும் சரியாக ரெஸ்பாண்ட் செய்யவில்லை என்று நீங்கள் ஆச்சரியப்பட்டதுதான் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. எங்கோ மூலையில் ஒரு பதிவு போட்டு விட்டு, எல்லாவற்றையும் ஆங்கிலப் பதிவிலேயே போட்டால் இப்படித்தான் நடக்கும். உங்கள் முந்தையத் தமிழ் இடுகைக்கு ஒரு பின்னூட்டமும் வராதபோதே விழிப்புடன் செயலாற்றியிருக்க வேண்டும். அப்போது கோட்டை விட்டு இப்போது வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்?

இப்போது கூட நிகழ்ச்சிகளை ஏனோதானோ என்றுதான் எழுதியிருக்கிறீர்கள். பெட்டர் லக் அடுத்த முறை."

அதற்கான பதில்:
"விக்னேஷ் says:
September 11th, 2006 at 6:31 pm
@ டோண்டு,
// யாரும் சரியாக ரெஸ்பாண்ட் செய்யவில்லை என்று நீங்கள் ஆச்சரியப்பட்டதுதான் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.
;)
// எங்கோ மூலையில் ஒரு பதிவு போட்டு விட்டு, எல்லாவற்றையும் ஆங்கிலப் பதிவிலேயே போட்டால் இப்படித்தான் நடக்கும்.
நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். மற்றபடி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இது ஒரு நிறுவனமோ அல்லது தனிநபர் ஒருவரோ நடத்தும்/நடத்திய நிகழ்ச்சி அல்ல. தன்னார்வத்தில் பல வலைப்பதிவு நண்பர்கள் பலரும் சேர்ந்து நடத்துவது/நடத்தியது. அதனால் Spread of word என்பது இது குறித்த செய்திகளை படித்தோ/கேட்டோ தெரிந்தவர்கள் தன்னால் முடிந்தளவுக்கு மற்ற நண்பர்களுக்கு பரப்புவதினால்தான் முடியுமே ஒழிய ஒருவரே செய்தியை அனைவருக்கும் தெரிவிக்க நினைத்தால் அது இயலாத காரியம். (அல்லது அந்த ஒருவருக்கு அதிகமான தனித்திறமை வேண்டும்). நான் என் பங்குங்கு இரண்டு பதிவுகளை பதிவிட்டேன். அந்த உரிமையில் தமிழ் வலைப்பதிவர்கள் (குறைந்தது அதனைப் படித்த நண்பர்களாவது) ஏன் விருப்பபடவில்லை என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் பதிவில் எழுதியிருந்தேன்
// உங்கள் முந்தையத் தமிழ் இடுகைக்கு ஒரு பின்னூட்டமும் வராத போதே விழிப்புடன் செயலாற்றியிருக்க வேண்டும்.
வழக்கமாகவே நம்ம பதிவுக்கெல்லாம் 1, 2 comments வர்றதே ஆச்சரியமான விஷயம்
// இப்போது கூட நிகழ்ச்சிகளை ஏனோ தானோ என்றுதான் எழுதியிருக்கிறீர்கள்
\”நான் எழுத விரும்பும் சுவாரசியமான நிகழ்வுகள் நிறைய இருக்கிறது. முடிந்தளவுக்கு வரும் பதிவுகளில் கோர்வையாக எழுத முயற்சிக்கிறேன்.\” என்றுதான் எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன்."
அதற்கு எனது பதில்:
"டோண்டு says: September 12th, 2006 at 7:20 am
“வழக்கமாகவே நம்ம பதிவுக்கெல்லாம் 1, 2 comments வர்றதே ஆச்சரியமான விஷயம்”
அதைத்தான் நானும் கூறுகிறேன். தமிழ்மணம் இப்போது இருக்கும் நிலையில் எந்த ஒரு பதிவும் சில நிமிடங்களுக்கு மேல் முதல் பக்கத்தில் நிற்பதில்லை. ஆகவே உங்கள் பதிவு எதையும் பார்த்ததாக ஞாபகமேயில்லை.
என்னுடைய இம்மாதிரியான பதிவுகளில் அடிக்கடி பின்னூட்டமிட்டு (இதில் சிவஞானம்ஜி ஐயா முக்கியப் பங்கு வகிப்பார்) பதிவு மேலே வருமாறு பார்த்துக் கொண்டோம். அப்படியும் 11 பேர்தான் வந்தனர். ஃபோனில் பலருடன் தொடர்பு கொண்டு அவர்கள் வருவதாக உறுதி கூறியபோதும் அவர்களையும் இதே காரணத்துக்காகப் பின்னூட்டமிட அழைத்தேன்.
உங்கள் மகாநாட்டின் முதல் நாள் பதிவிலேயே பார்த்தேன். எங்கு மீட்டிங் நடக்கிறது என்ற அடிப்படைத் தகவல் கூட கிடைக்கவில்லை. அதையும் நான் பின்னூட்டமாக இட்டிருந்தேன்.

இது மிக அண்மையான உதாரணம் என்பதாலேயே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி இப்பதிவின் நோக்கம் வேறு. கொடுக்கும் செய்திகளில் துல்லியம் மற்றும் முழுமை வேண்டும் என்பதே அது.

சமீபத்தில் 1978-ல் தி. நகர் ராஜகுமாரி தியேட்டரில் (இப்போது அது இடிக்கப்பட்டு விட்டது) ஒரு படம் பார்க்க எண்ணினோம். பேப்பரில் வெறுமனே தினசரி 3 காட்சிகள் என்று போட்டிருந்தார்கள். மாட்டினி ஷோ எத்தனை மணிக்கு என்ற விவரமே இல்லை. சரி தியேட்டரில் போட்டிருப்பார்களே பார்த்துக் கொள்ளலாம் சென்றால் அங்கும் அந்தத் தகவல் இல்லை. மேனேஜர் அறைக்கு சென்று என்ன விஷயம் என்று கேட்டால் "எங்கள் தியேட்டரில் மேட்டினி காட்சி 2.45 மணிக்கு என்பது எல்லோருக்கும் தெரியுமே" என்ற பொறுப்பற்ற பதில் வந்தது. ஆனால் அதே தியேட்டரில் சில நாட்கள் கழித்து இன்னொரு படத்துக்காக மேட்டினி ஷோவுக்கு 2.30 மணிக்கு சென்றால் படம் 2.15-க்கே ஆரம்பித்திருந்திருக்கிறார்கள். இது என்னப்பா புதுக்கதை என்று பார்த்தால் சம்பந்தப்பட்ட படம் (மாமன் மகள்) பெரிய படமாதலால் 2.15-க்கே ஆரம்பித்து விட்டார்களாம். ஏன் அதற்கான அறிவிப்பு இல்லை என்று பார்த்தால் அவ்வாறு அவர்கள் செய்வது எல்லோருக்குமே தெரியுமாம். எங்கு போய் அடித்துக் கொள்வது?

அண்ணா சாலையில் சிம்ப்ஸன் எதிரில் பல பஸ் ஸ்டாப்புகள் உண்டு. செல்லும் டெர்மினஸ்களை பொருத்து பஸ்கள் வேவேறு இடங்களில் நிற்கும். ஆனால் எந்த ஸ்டாப்பில் எந்த பஸ் நிற்கும் என்பதை மட்டும் போடவேயில்லை. ஒரு பஸ் கண்டக்டரிடம் கேட்டால் அவர் தனது பஸ் எந்த ஸ்டாப்பில் நிற்கும் என்பது எல்லோருக்குமே தெரியும் என சத்தியம் செய்கிறார்.

சிங்கார வேலன் படத்தில் கமல் ஆட்டோ டிரைவரிடம் கேட்பார், "என்னப்பா மனோ வீடு தெரியாதுங்கறையே, அது குழந்தைக்குக் கூடத் தெரியும் என்று மனோ சொல்லியிருக்கானே" என்று. ஆட்டோ டிரைவர் (கமல் கொண்டு வந்த கருவாட்டுக் கூடையின் வாசத்தால் பொங்கி வரும் வாந்தியை அடக்கிக் கொண்டு) கூறுவார், "நான் என்ன குழந்தையா" என்று.

ஆனால் சில சமயம் வேண்டுமென்றே சரியான செய்தியை தருவதில்லை. சமீபத்தில் 1975-ல் ரஜனிகந்தா என்ற ஹிந்தி படம் பார்ப்பதற்காக கியூவில் நின்று கொண்டிருந்தபோது திடிரென ட்ரன்ஸ்ஃபார்மர் அறையில் நெருப்பு பிடித்துக் கொண்டது. அடுத்த நாள் ஹிந்துவில் பார்த்தால் சென்னை மவுண்ட் ரோட்டில் ஒரு தியேட்டரில் என்று செய்தி போட்டிருந்தார்கள். என்ன விஷயம். சம்பந்தப்பட்ட தியேட்டர் நிர்வாகம் ஹிந்துவை சரிகட்டியுள்ளது. ஆனால் அதனால் என்ன ஆயிற்றென்றால் விஷயம் தெரியாத பலருக்கு என்ன தியேட்டர் என்று தெரியவில்லை. ஆனந்தாக இருக்குமா, சாந்தியாக இருக்குமா என்றெல்லாம் வதந்திகள் பரவின. அதே போல கையெழுத்திடும்போது வேண்டுமென்றே தேதி போடுவதில்லை, அப்படியே போட்டாலும் வெறுமனே 24/08 என்று போட்டு விடுகின்றனர் வருடம் போடுவதில்லை. இதே மாதிரி பொறுப்பின்றி வருடங்களில் இரண்டு எண்களை மட்டும் போட்டுத்தானே Y2K பிரச்சினையே வந்தது? எவ்வளவு கால மற்றும் பணவிரயங்கள்?

இதெல்லாம் பார்த்தால் ஒன்று புலப்படுகிறது. விஷயங்களைத் தரும்போது அவை துல்லியமாக முழுமையாக இருக்கின்றனவா என்பதைப் பார்க்கக்கூட யாருக்கும் பொறுமை இருப்பதில்லை.

இந்தத் தருணத்தில் நியாயப்படுத்த முடியாத துல்லியம் பற்றியும் பதிவிட்டுள்ளேன். அதாவது துல்லியம் கொடாது இருப்பதும் சில இடங்களில் அவசியம். அது பற்றி துல்லியமாக அறிய அப்பதிவைப் பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/05/2006

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

என்றென்றும் அன்புடன் பாலா அவர்கள் இட்ட இப்பதிவில் மருத்துவக் கல்லூரி மாணவி கவுசல்யா அவர்களுக்காக இவ்வருடமும் செய்யப் போகும் உதவி பற்றி எழுதியுள்ளார். போன ஆண்டு நானும் அவருடன் டெக்கான் க்ரானிகல் பத்திரிகை அலுவலகம் சென்றிருந்தேன். அவருக்காக கலெக்ட் செய்த தொகையின் காசோலையை பாலா அந்த மாணவியிடம் அளித்தார். அதை பற்றிப் பதிவும் இட்டேன்.

முதலாம் ஆண்டின் தேர்வுகளை நல்ல முறையில் எழுதியிருப்பதாக பாலா அவர்களிடம் அந்த மாணவி கூறியுள்ளார். ப்ளஸ் 2 தேர்வில் 98 சதம் பெற்ற பெண் இங்கு எழுதி முடித்த பரீட்சையில் 75 முதல் 80 சதம் பெறும் வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார். மதிப்பெண் து பற்றி அவர் சற்று கவலையும் அடைந்துள்ளார். அவருக்கு முக்கியத் தடை ஆங்கிலம் சரளமாகப் பேச வராததே. அதற்காக அவர் ஆங்கிலத்தில் தனியாகத் தேர்ச்சி பெற விரும்புகிறார். மிண்ட் அருகில் வசிக்கும் அவருக்கு வீட்டிற்கருகே யாராவது ஆங்கிலப் பயிற்சி அளித்தால் நன்றாக இருக்கும்.

இந்த இடுகை அது சம்பந்தமாக சக பதிவாளர்கள் மற்றும் ரீடர்ஸிடம் உதவி கேட்டு போடப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/04/2006

மினி வலைப்பதிவாளர் சந்திப்பு

இம்மாதம் நாகேஸ்வரராவ் பார்க்கில் நடந்த வலைப்பதிவாளர் மீட்டிங்கிற்கு சில காரணங்களால் வர இயலவில்லை. அதற்கு முத்துக்குமரனும் வந்திருந்தார் என்று படித்ததும் அவரை மிஸ் செய்து விட்டோமே என வருந்தினேன். அவர் சென்னை வருவதாக செய்தி தெரிந்ததும் அவரைப் பார்க்க விருப்பம் தெரிவித்திருந்தேன். அவரும் சந்திக்க ஆவல் கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார். ஆகவே அவரை மிஸ் செய்தது வருத்தமளித்தது.

ஆனால் நேற்று (03.09.2006) காலை அவர் என்னுடன் தொலைபேசினார். என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். அவர் தான் வள்ளலார் நகரில் (மிண்ட்) தங்கியிருப்பதாகக் கூற, ஒரு மையமான இடமாக கண்ணகி சிலையை தேர்ந்தெடுத்தோம். மாலை ஆறரை மணிக்கு சந்திப்பதாகப் பேச்சு.

நேற்று நான் திருவல்லிக்கேணி வந்த போது மணி ஐந்து. என்றென்றும் அன்புடன் பாலா வீட்டிற்கு சென்றேன். அவர் வீட்டுக்கு போகும் வழியில் முத்து தமிழினிக்கும் போன் செய்து கண்ணகி சிலைக்கு மாலை ஆறரை மணிக்கு வருமாறு கேட்டுக் கொள்ள அவரும் சம்மதித்தார். பாலா வீட்டிற்கு சென்று அவரையும் என்னுடன் கன்ணகி சிலைக்கு வரச் சொல்ல அவரும் வந்தார். ஆக, ஒரு மினி வலைப்பதிவாளர் சந்திப்பு இப்படியாக ஏற்பாடு செய்யப்பட்டது.

நானும் பாலாவும் பைக்ராஃப்ட்ஸ் சாலையில் கோஷா ஆஸ்பத்திரியை கடக்கும் தருணத்தில் முத்துக் குமரனிடமிருந்து எனக்கு செல்பேசியில் அழைப்பு வந்தது. கண்ணகி சிலை அருகில் இருப்பதாகக் கூறினார். கண்ணகியை கைவிடாமல் அங்கேயே இருக்கும்படி கூறி விட்டு அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்giருந்தோம். அதே தருணத்தில் முத்து தமிழினியும் அங்கு வந்து சேர்ந்து கொண்டார். அவர் வந்த பஸ் அண்ணா சாலையிலேயே நிறுத்தப்பட, மனிதர் வாலாஜா சாலை, உழைப்பவர் சிலை என்றெல்லாம் நடந்து வந்திருக்கிறார்.

பேசிக் கொண்டே கடலை நோக்கி நடந்தோம். கடலில் கால் நனைக்க வேண்டும் என்ற என் குழந்தைத்தனமான ஆசைக்கு மதிப்பளித்து மற்றவர்கள் கூட வந்தனர். பாலா முத்துவையும் முத்துக் குமரனையும் சந்திப்பது இதுவே முதல் முறை. முத்துவை நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். முத்துக்குமரன் புகை படத்திலிருந்து அவரை ஒரு கோபமுள்ள இளைஞனாக கற்பனை செய்து வைத்திருக்க அவரோ இவ்வளவு சாதுவாக இருப்பார் என நினைக்கவில்லை. ஆனால் மனிதரிடம் நிறைய விஷயம் இருக்கிறது. பல விஷயங்களில் நிலையான கருத்து உறுதியாக வைத்திருக்கிறார்.

பல விஷயங்களை பற்றிப் பேசினோம். போலியார் விஷயமும் அதில் அடக்கம். இப்பிரச்சினையை தீர்க்க முத்து தமிழினி மிகவும் மெனக்கெட்டார். அவர் தான் செய்த முயற்சிகளை பட்டியலிட்டார். அவை சுவாரசியமாகவே இருந்தன. முத்துக்குமரன் அவர்களும் தனக்கு போலி ஒரே ஒரு முறை மிரட்டல் தொனியில் எழுதியதையும் அவர் அதை தன் முறையில் கையாண்டதையும் விளக்கினார். பாலா அவர்கள் தனக்கு இரு முறை மிரட்டல் வந்ததாகக் கூறினார். நான் என்ன கூறியிருப்பேன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம், ஆகையால் இப்பதிவில் மறுபடியும் கூற விரும்பவில்லை.

மழை வரும் போலிருந்ததால் கடற்கரையை விட்டு வேகமாக விலகி வந்தோம். அவ்வளவு தூரம் வந்து ரத்னா கஃபேயை விட முடியுமா? திருவல்லிக்கேணிக்காரர்களான பாலாவும் நானும் வழிகாட்ட மற்ற இருவரும் கூட வந்தனர். ரத்னா கஃபேயில் முதலில் எல்லோரும் டிஃபால்டாக ஆர்டர் செய்யும் இட்லி சாம்பாருடன் துவக்கினோம். சட்னியும் வைத்தார்கள். தொடுவோமா அதை. சாம்பாரில் முக்கிய இட்லிதானே ரத்னா கஃபே ஸ்பெஷல். பாலா இட்லிக்கு மேல் ஒன்றும் வேண்டாம் மினி காப்பி போதும் என்று கூறிவிட, நான் எனக்கு பிடித்த கீ ரோஸ்ட் மசாலா தோசை ஆர்டர் செய்ய, முத்துவும் முத்துக்குமரனும் சப்பாத்தி ஆர்டர் செய்தனர். புதிய இருவருக்கும் ரத்னா கஃபே பிடித்து விட்டது என்று கூறினர்.

பெரியார், சிதம்பர தீட்சிதர்கள், இட்லி வடை, முகமூடி, இட ஒதுக்கீடு என்றெல்லாம் நாங்கள் பாட்டுக்கு தமிழ்மண விவாதங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்க, சுற்றி ஒரே கும்பல் கூடி விட்டது. எங்கள் பேச்சை கேட்க இல்லை. எப்படா இவர்கள் இடம் காலி செய்வார்கள், தாம் உட்கார என்று வந்த கூட்டம்தான் அது. ஆகவே வெளியில் வந்தோம். மணி இரவு எட்டை தாண்டி விட்டது. வெளியில் பஸ் ஒன்றும் கிடைக்கவில்லை. விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் இரண்டாம் தினமாதலால் பஸ்கள் டைவர்ட் செய்யப்பட்டிருந்தன. அங்கேயே விடை பெற்றுக் கொண்டு அவரவர் வழி சென்றோம்.

நேற்று இரவே இப்பதிவை போட முயற்சி செய்தேன். ஆனால் பிளாக்கர் ஒத்துழைக்கவில்லை. ஆகவே இப்போதுதான் போட முடிந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/01/2006

'ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்'

இது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் பின்னூட்டத்தில் மகிழ்ச்சியே தெரிவித்தார். இப்போது மீள்பதிவு செய்வதற்கான காரணங்களைப் பார்ப்போம். சில நாட்களாக அவர் வாழ்க்கை வரலாறுக்காக எடுக்கவிருக்கும் திரைப்படத்தில் குஷ்பூ மணியம்மையாராக நடிக்கலாமா என்பது குறித்து ஒரு பெரிய விவாதம் நடை பெற்று வருகிறது. அதே போல, அவர் சிலைக்கு யாரோ சந்தனம் பூசி பொட்டிட்டு, மாலை அணிவித்து ஊதுவத்தி எல்லாம் கொளுத்தி வழிபட்டதாக ஒரு செய்தி அல்லோல்லகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பகுத்தறிவு சிங்கங்கள் அதை ஒரு பெரிய அவமரியாதையாகக் கருதி பார்ப்பனர்கள்தான் செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் சீற்றத்துடன் குறிப்பிட்டனர். பிறகு அது சம்பந்தமாக கைதையிருக்கும் இருவரில் ஒருவர் படையாச்சி இன்னொருவர் நாடார் என்றானதும் சங்கடமான மௌனம் கடைபிடிக்கின்றனர்.

ஈவேரா அவர்கள் கற்பு சம்பந்தமாகக் கொண்டிருந்த, அடிக்கடி வெளிப்படுத்திய கருத்துக்களைத்தான் குஷ்புவும் வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டிருந்தார் என்பதைப் பார்க்கும்போது அதற்காகவே அவர் மணியம்மையாக நடிக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.

இப்போது மீள்பதிவு செய்யப்பட்டதிற்கு செல்வோம். சில ஸ்பெல்லிங் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன. மற்றப்படி மாற்றம் ஏதுமில்லை. பழைய பின்னூட்டங்களும் அப்படியேயுள்ளன.

Please read the following posting by Kanchi Films carefully.

'ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்'
இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இதை எழுதியிருப்பவர்
கண்டிப்பாக ஒரு பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு. நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்' என்று தொடங்கும் இந்த நூலில் பல அரிய தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தாம், இந்த நூலினை எழுத முற்பட்டதின் காரணங்களையும் முதலிலேயே பின்வருமாறு பட்டியலிட்டு விடுகிறார் ஆசிரியர்.

"நான் முதன்முதலில் ஈவே ராமசாமி நாயக்கரைப் பற்றி நினைத்துக்
கொண்டிருந்த எண்ணம் இதுதான்:
1. ஈவேரா தமிழுக்காக பாடுபட்டவர்
2. தாழ்த்தப்பட்டவர்களுக்காக தொண்டாற்றியவர்
3. பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்
4. பொய் பேசாதவர்; முரண்பாடு இல்லாதவர்

இந்த எண்ணத்தின் காரணமாக இவரைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்தேன். பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள புத்தகங்கள் அனைத்தையும் படித்தேன்.

அது மட்டுமில்லாமல் ஈவெராவின் சமகாலத்தில் வாழ்ந்த மபொ.சிவஞானம், ப.ஜீவானந்தம், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், உ.முத்துராமலிங்கத்தேவர், கி.ஆ.பெ.விசுவநாதம், காமராஜர், பாவாணர் போன்றவர்கள் எல்லாம் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் முரண்பாட்டை எல்லாம் தோலுரித்துக் காட்டியிருப்பதையும் படித்தேன்.

அதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரைப் பற்றி எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ - அந்தக் கருத்துக்கு - அந்த எண்ணத்திற்கு முரண்பாடாகவே அவர் செயல்பட்டு இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

ஈவேராவின் ஒரு பக்கத்தை மட்டுமே காண்பித்துள்ள அவரது அடியார்கள் அவருடைய மறுபக்கத்தை மூடி மறைத்து விட்டார்கள். ஆகவே அவர்கள் மூடிமறைத்த மறுபக்கத்தை நான் பாரத தேசத்தின் ஒரு நல்ல குடிமகனின் கடமையெனக் கருதி இந்தப் பணியை மேற்கொண்டு வெளிச்சத்திற்கு இன்று கொண்டு வந்திருக்கிறேன்.

இந்த நூலைப் படித்து நான் எழுதியிருப்பது சரிதான் என்று திராவிடர்கழக மாயையில் இருக்கும் தோழர்கள் ஒருவராவது ஏற்றுக் கொள்வாரானால்அதுவே இந்த நூலுக்கு உண்மையான வெற்றியாகும்." மேற்படி அறிமுகத்துடன் தொடங்கும் இந்தப் புத்தகத்தில் -


ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தமிழ்மொழி வெறுப்பு, இஸ்லாத்தில் சாதியைப் பற்றிய பொய்கள், ஈவேராவின் போலிக் கடவுள் மறுப்புக் கொள்கை, சொல்லும் செயலும் முரணானவையே, வரலாற்றுத் திரிபுகள், தாழ்த்தப் பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈவேரா?, வைக்கம் போராட்டம் - ஈவேராவின் புளுகும், காந்தியடிகளின் பங்கும், ஈவேராவின் ஆணாதிக்க மனோபாவம், தேசப்பற்றில்லாத ஈவேரா,பின்னாளில் மணியம்மையின் புளுகும், மூடநம்பிக்கைகளும், சீடர் வீரமணியின் முரண்பாடுகளும், மூடநம்பிக்கைகளும் என்று பல்வேறு தலைப்புகளில் ஆதாரத்துடன் தம் கருத்துகளை நிறுவுகிறார் ஆசிரியர் வெங்கடேசன்.

பிற்சேர்க்கையாய் 'ஈவேராவைப் பற்றி இவர்கள்' என்று முத்துராமலிங்கத் தேவர், பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், காமராஜர், ஜீவானந்தம் ஆகியோரின் மேடைப் பேச்சுகளும் தொகுக்கப் பட்டுள்ளன.

'ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தமிழ்மொழி வெறுப்பு' என்ற முதல் அத்தியாயத்தில் இருந்து சில சுவையான பகுதிகளைப் பார்ப்போம்.

"ஈவேரா நாட்டாலும், பழக்கவழக்கங்களாலும் தமிழராயினும், மொழியால் கன்னடர்தான். ஆம், அவரது வீட்டுமொழி கன்னடம். தாம் கன்னடர் என்பதை அவரே தமது பேச்சிலும், எழுத்திலும் பன்முறை மிகவும் பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டவர். - (டாக்டர் ம.பொ.சிவஞானம், நூல்-தமிழகத்தில் பிறமொழியினர்) என்ற குறிப்போடு முதல் அத்தியாயம் தொடங்குகிறது."

ஈவேரா தமிழரா?

"ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடு பட்டவர் என்றெல்லாம் இன்று ஈவெராவின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்ஹ்தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் 'தமிழர் தலைவர்' என்றெல்லாம் ஈ.வே.ராமசாமி நாயக்கரைச் சொல்கிறார்களே - அவரே தம்மை பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?

'கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், அண்ணாதுரை தமிழர்' (பெரியார் ஈவேரா சிந்தனைகள் - முதல் தொகுதி) என்றும், 'நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்' (குடியரசு 22/8/1926) என்றும் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்."

'நான் கன்னடியன்' என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் தமிழர் என்றும், தமிழர் தலைவர் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். 'நான் கன்னடியன்' என்று சொல்லிக் கொண்டே ஈவேரா தமிழ்மொழியையும், தமிழ்ப்புலவர்களையும் விமர்சித்தது கொஞ்சநஞ்சமல்ல.

'தமிழும் தமிழரும்' என்ற நூலில் ஈவேரா கூறுகிறார்:

''இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் சில புலவர்களின் பெயர்கள் அடிக்கடி அடிபடுகின்றன. அவர்கள் 1.தொல்காப்பியன், 2.திருவள்ளுவன், 3.கம்பன்.

இம்மூவரில்,
1. தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட மாபெரும் துரோகி.
2. திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.
3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் - தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை, தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுபடுத்திக் கூலிவாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழ்த்துரோகியே ஆவான். இவன் முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான் கூட சொல்லப் பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கி விட்ட துரோகியாவான். இம்மூவருமே ஜாதியையும் ஜாதித்தொழிலையும் ஏற்றுக் கொண்டவர் ஆவார்கள்."

20/1/1929 குடியரசு இதழில் திருவள்ளுவரைப் பற்றி மேலும் சொல்வது:
"அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்."

இதுதான் மாபெரும் தமிழ்ப்புலவர்களைப் பற்றிய இவரது பார்வை. தொல்காப்பியரும், கம்பரும், வள்ளுவரும் துரோகிகள். சரியான பட்டம்!

தமிழ்வளர்க்கப் பார் புகழும் இலக்கண இலக்கிய நூல்களைப் படைத்த இவர்கள் தமிழ்த் துரோகிகள் என்றால் அதே தமிழைப் பழித்த ஈவேராவும் துரோகிதானே?

இப்படிப் பல தகவல்களை தக்க நூலாதாரத்துடன் பட்டியலிடும் ஆசிரியர் பிற்சேர்க்கையாய் அக்காலத்திய தேசியவாதத் தலைவர்கள் சிலரின் பேச்சுகளையும் தொகுத்திருப்பதும் அரிய தகவல்களஞ்சியமாய் உள்ளது.

இதில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957'ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது அருமை. தெய்வ பக்தியையும், தேச பக்தியையும் தன் இரு கண்களாக எண்ணிய பொன்முத்துராமலிங்கத் தேவரின் உரையை வெங்கடேசன் தன் புத்தகத்தில் எடுத்து இட்டுள்ளார். பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை:

"தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும்" என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ் அபிமானம் வேண்டியதுதான். ஆனால் இவர்கள் தமிழின் மேல் அபிமானம் கொண்டாடுகிற முறை எப்படியிருக்கிறது என்றால், அவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறபோது, "வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள்; வடநாடு, தென்னாடு" என்று பிரிப்பதிலேயே குறியாய் இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபோது ஜின்னா
பார்க்கில் கூட்டம் நடை பெறுகிறது என்கிறார்கள். அடுத்தாற்போல் ராபின்சன் பார்க்கில் நடைபெற்றால் ராபின்சன் பார்க் என்று போடுகிறார்கள். அதே நேரத்தில் திலகர் கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றால் அவர் பெயரைச் சொல்ல இவர்களுக்குக் கோபம் வருகிறது. வட இந்தியர் என்று சொல்லி அவர் பெயரைப் போடாமல் தந்தை திடலில் நடை பெறுகிறது என்று போடுகிறார்கள்.
(கிண்டலாக ஆங்கிலத்துக்கு மாறி)
In what way Jinnah is not a North Indian? How is the names Jinnah and Robinson so sweet to you Sir? How is the name of poor Tilak so bitter to you Sir? I am not
able to understand.
ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில் ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன்? திலகர் பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன்? இது இந்த நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம்
அல்லவா?
ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக் காட்டுகிறது? அதற்கு மேல் "வடநாட்டான் திராவிட நாட்டை
சுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்க வேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம்" என்று சொல்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி.
டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச் சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம் பண்ணவில்லை? வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில்
'டால்மியாபுரம்' என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன் கேட்பானா?
ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியன் வகையறா பங்கு இருக்கிறது. அந்த சௌந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது.
ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.
அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடு யார்கிட்டே கேட்கிறாய்? முறையாக இருந்து வெள்ளையன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள் பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது
சொல்லலாம்.
வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு அனுகூலமாக யுத்த 'புரபகண்டா''செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு கேட்டால் என்ன அர்த்தம்? பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசிய
ஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம் படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.
'தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம்' என்கிறார்கள். 1937-லேயே ஹிந்தி எதிர்ப்பு வருகிறபோது, 'ஹிந்தியைப் புகுத்தாதே' என ராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இது சரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் 'தமிழ் மாகாணம்' என்று பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள். ஆனால் தமிழ் என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய
போராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்று சொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
'ரோமாபுரி ராணி' என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர் அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை? எத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி? ரோமாபுரி ராணி கதை போதாது என்று 'தங்கையின் காதல்' என்று ஒரு கதை எழுதியிருக்கிறாய். தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான் அண்ணன் என்று எழுதியிருக்கிறாய். அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியதுதானே? வேறு என்ன?
இதுவா தமிழ் நாகரீகம்?
சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். -உரை முடிந்தது-

இப்படிப் பல சுவையான தகவல்கள் இருக்கும் இந்தப் புத்தகம், திராவிட இயக்கங்களின் பித்தலாட்டங்களை, ஏமாற்று வேலைகளை ஆவணப் படுத்துகிறது.

தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அரசியல்வாதிகளின் மறுபக்கத்தை அறிய விழைபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் 'ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்'. -விஸ்வாமித்ரா- viswamitra12347@rediffmail.com

திண்ணையிலிருந்து சுட்டது : http://www.thinnai.com/ar0311053.html

காஞ்சி ஃபிலிம்ஸின் இந்தப் பதிவைப் பாருங்கள். அடடா என்ன அற்புதம்! விஸ்வாமித்ராவுக்கு நன்றி. காஞ்சி ஃபிலிம்ஸின் பதிவை சுட்டியிட்டுக் காட்டாது முழுதும் எடுத்துப் போட்டது காரணமாகத்தான். ஒரு வேளை அப்பதிவு ப்ளாக்கர் சொதப்பலில் திடீரெனக் காணாமல் போய் விட்டால்? மேலும் நான் கூற நினைப்பது இதோ.
அறுபதுகளில் ராமாயண எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. அப்போது பெரியார் ஒரு அரியக் கருத்தை வைத்தார். நினைவிலிருந்து எடுத்துக் கூறுகிறேன் என்பதையும் இப்போதே கூறி விடுகிறேன்.
"ராமாயணம், வால்மீகி ராமாயணம் மற்றும் கம்ப ராமாயணம் என்று ஒரு தாளில் எழுதி அதை எரித்து விடுங்கள். இம்மூன்று நூல்களும் கெடுதியானவை." ராமாயணம் என்றுத் தனிப்பட்ட நூல் இல்லை என்பது கூட இந்தப் பகுத்தறிவுப் பகலவனுக்குத் தெரியவில்லை.
1930-களில் தான் எதிர்த்த அதே ஹிந்தியைத் தாங்கி 1965-ல் விடுதலை கட்டுரைகள் வெளியிட்டது? ஏன்? அப்போது அவர் காமராஜ் ஆதரவாளர். அதாவது அவருடைய சமுதாய சீர்திருத்தச் செயல்கள் என்றுக் குறிப்பிடப் பட்டதெல்லாம் அவர் அரசியல் சார்பைப் பொருத்தே இருந்து வந்துள்ளது என்பது வெளிப்படையாகிறது அல்லவா?
தான் யாரை வேண்டுமானாலும் திட்டலாம், ஆனால் தன் முரண்பாடுகளை எதிர்த்துக் கேட்டால் அது தேசத் துரோகத்துக்கு சமம் என்றுதான் அவர் இயங்கி வந்துள்ளார் என்பதற்கு அவர் அரங்கண்ணலைப் பார்த்துக் கூறிய வார்த்தைகளே சாட்சி. "பெருமாள் போட்ட சோத்தைத் தின்று, பெருமாளுக்கு எதிராகவே காரியம் செய்வது" என்பதை வேறு எவ்வாறு புரிந்துக் கொள்வது? பெண்ணுரிமைக்காகப் பேசிய அவர் தன் முதல் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது தன் நண்பர்களை விட்டுக் கேலி செய்வித்து அந்த உத்தமப் பெண்மணியின் மனத்தை நோகடித்தது எங்கனம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது