இப்பதிவின் ஐந்தாம் பாகத்துக்கு செல்லும் முன்னால் ஒரு சிறு டைவர்ஷன். நேருவின் திருமகள் இந்திரா காந்தி அவர்களின் லெகசியை இப்போதெல்லாம் இந்திய அரசு குடும்ப திருச்செல்வர் ராகுல் காந்தி நன்றாகவே உணர்த்தி வருகிறார். எப்படி? இசுலாமிய செண்டிமெண்டை வைத்து நாட்டைத் துண்டாடியவர்களுக்கு செருப்படி கொடுப்பது போல பாக்கிஸ்தானை இரண்டாக பிளந்தது தன் பாட்டி என்று பெருமிதப்பட்டு பாக்கிஸ்தான் மற்றும் பங்களா தேஷுடனான நமது உறவை ஓகோ என்ற லெவலுக்கு உயர்த்தியச் செம்மல் இவரே. அவர்தான் நம் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாம். எங்கு அடித்து கொள்வது? சரி அதை சரியான தருணத்தில் கவனிப்போம். இப்போது நமது வரிசைக்கு செல்வோம்.
1969-மே மாதத்திலிருந்து 1971 மார்ச் வரை
மே மாதம் 3-ஆம் தேதி 1969-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் அவர்கள் மறைந்தார். இந்தச் சம்பவம் இந்திய சரித்திரத்தில் ஒரு மைல்கல் என்றால் மிகையாகாது. இவருக்கு அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் செயலில்தான் காங்கிரசின் உட்கட்சிப் பூசல் வெளிச்சத்துக்கு வந்தது. இந்திரா காந்திக்கு சஞ்சீவரெட்டி குடியரசுத் தலைவராவதில் விருப்பம் இல்லை. ஆனால் மற்ற தலைவர்கள் பெங்களூரில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பெரும்பானமை பலத்தில் சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக தேர்ந்தெடுத்தனர். அவர் பெயரை இந்திரா காந்தியே பிறகு முன்மொழிய வேண்டியதாயிற்று.
இது இந்திரா அவர்கள் மனதை மிகவும் உறுத்தியிருந்திருக்கிறது. தற்காலிக ஜனாதிபதியாக இருந்த துணை ஜனாதிபதி வி.வி. கிரி அவர்களும் தானே ஜனாதிபதியாகலாம் என்ற தனது எண்ணத்தில் மண் விழுந்தது கண்டு மனம் புழுங்கினார். ஆகவே அவர் சுயேச்சையாக தேர்தலுக்கு நின்றார். கிரியை ஆதரிக்க முடிவு செய்தார் இந்திரா காந்தி. அது பற்றி பிறகு.
காமராஜ் அவர்களும் ஒதுக்கப்பட்டார். இப்போது மெதுவாக இந்திரா தனது அரசியல் நகர்வுகலை நிகழ்த்தத் துவங்கினார். அப்போதுதான் மன்னர்களின் மான்யத்தில் கை வைத்தார். ஒரேயடியாக அவற்றை ஒழித்தார். ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பல சுதேசி மன்னர்கள் தத்தம் ராஜ்ஜியங்களில் அதிகாரத்தில் இருந்தனர். அவர்கள் பிரிட்டிஷாரின் செல்லப் பிள்ளைகள். சுதந்திரம் வந்த சமயத்தில் பிரிட்டன் அம்மன்னர்களுடன் தான் போட்ட ஒப்பந்தங்களை ஒரு தலை பட்சமாக செல்லாக்காசாக்கி விட்டு பாக்கிஸ்தானுடனோ அல்லது இந்தியாவுடனோ சேருங்கள் அல்லது முடிந்தால் தனியாக இருந்து கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு பைய நழுவி விட்டது. பிறகு படேல் அவர்கள் பாடுபட்டு 600க்கும் மேலான சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கச் செய்தார். நேரு தன்னால் ஆன உதவியாக காஷ்மீர் விஷயத்தை சொதப்பி இன்னும் அது நமக்கு தலைவலியாக இருந்து வருவதை நான் முதல் பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.
படேல் அவர்கள் மன்னர்களுக்கு மானியம், அந்தஸ்து எல்லாம் தர ஏற்பாடு செய்து, இந்தியாவில் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட செய்தார். அந்த மானியங்களும் மன்னர்களது ஒவ்வொரு தலைமுறையும் வயதுக்கு வரும்போது குறையும் அளவிதான் கணிக்கப்பட்டிருந்தது. ஆக, தானாகவே மறைந்திருக்க வேண்டிய இதை இந்திரா அவர்கள் திடீரென வெட்டினார். இதனால் அரசுக்கு மிச்சம் ஆனது என்று ரொம்பவெல்லாம் இல்லை. இந்தியாவின் வாக்கு நம்பிக்கையுரியதல்ல என்ற அவப்பெயர்தான் மிச்சம். இதை அவர் செய்ததும் அரசியல் காரணமே. ஏனெனின்ல் மன்னர்கள் அரசியலில் ஈடுபட்டு தமது தனி பலத்தில் பாராளுமன்ற மெம்பர்கள் எல்லாம் ஆனார்கள். சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஜயப்பூர் மகாராணை காயத்ரி தேவி 1962 தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற பத்து வேட்பாளர்களையும் டிபாசிட் இழக்கச் செய்தார். அதில் காங்கிரஸ் வேட்பாளரும் அடக்கம். ஒரிஸ்ஸாவிலோ மன்னர்களை உறுப்பினராகக் கொண்ட சிங் தியோவின் சுதந்திரக் கட்சி ஆட்சியையே கைபற்றியது.
ஆகவே மன்னர்களை மட்டம் தட்டவே அதை இந்திரா செய்தார். அதுவும் உச்ச நீதிமன்றத்தால் செல்லாதென அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசியல் சட்டத் திருத்த பிரேரணை ஒரெ ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது. அந்த ஒரு ஓட்டு லட்சிய நடிகர் என அழைக்கப்படும் நமது எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களுடையது (பூம்புகார், காக்கும் கரங்கள், அவன் பித்தனா ஆகிய படங்களில் நடித்தவர்). பாவம் மனிதர் வயிற்றுக் கடுப்பில் பாத்ரூம் சென்று திரும்புவதற்குள் பார்லிமெண்ட் கதவை சாத்தி விட்டார்களாம். Very costly stomach disorder indeed!
பிறகு ஏதோ படாத பாடுபட்டு அதை நிறைவேற்றினார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு காரியம் வங்கிகளை அரசுடைமையாக்கியது. அதற்கு ஆறு நாள் முன்னால் உதவிப் பிரதமர் மொரார்ஜி தேசாயிடமிருந்து ஒருதலை பட்சமாக நிதித் துறையை பறித்து கொள்ள, அவர் உடனடியாக உதவிப் பிரதமர் பதவியையும், மந்திரி பதவியையும் ராஜினாமா செய்தார். ஜூலை 21-ஆம் தேதி 1969-ஆம் ஆண்டு வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன.
வங்கிகள் நாட்டுடைமையாக்கியதையும் உச்ச நீதி மன்றம் நிராகரித்தது. அதற்காக மறுபடியும் அரசியல் சட்டத் திருத்தம் எல்லா கொண்டு வர வேண்டியிருந்தது. பல அரசு வங்கிகள் காங்கிரசுக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் கடன், வேலை எல்லாம் தரும் சத்திரங்களாகப் போயின. ஜனார்த்தன் பூஜாரி என்ற மகானுபாவர் இல்லாத சாமியாட்டம் எல்லாம் ஆடினார். என்ன செய்வது நாட்டின் தலைவிதி இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல் பட்டவர்களால் பாதிக்கப்பட வேண்டுமென்று. இந்தத் தருணத்தில் நம்ம ஜோசஃப் சார் இட்ட இப்பதிவையும் அதற்கு அடுத்தப் பதிவையும் பார்த்து விடுங்கள்.
இதிலெல்லாம் சங்கடங்களை சந்தித்த இந்திரா காந்தி அவர்கள் ஒரேயடியாக தனது அரசியல் எதிரிகளையெல்லாம் கட்சியிலிருந்து ஓரம் கட்ட நினைத்தார். அதற்கு அவர் எடுத்து கொண்ட அஸ்திரம் சுயேச்சையாக குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நின்ற வி.வி. கிரிக்கு ஆதரவளிக்க எடுத்த முடிவு. தானே முன்மொழிந்து கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக சஞ்சீவ ரெட்டியை நிறுத்திய இந்திராவே தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தத்தம் மனசாட்சியின்படி ஓட்டளிக்க சொன்னார். நிகழ்கால அரசியலில் இதற்கு முன்னால் நடக்காத நிகழ்ச்சி அது. காங்கிரஸ் கட்சியே இரண்டாகப் பிளந்தது. ஸ்தாபன காங்கிரஸ், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்று இரண்டானது. இரண்டாவதின் தலைவராக இந்திரா விளங்கினார். வெவ்வேறு துறையில் வேலை செய்த எளிய மக்களை வாடகைக்கு எடுத்த லாரிகளில் வரவழைத்து, பிரியாணி அளித்து தனது இல்லத்துக்கு முன்னால் தனக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் செய்ய வைத்தார். இச்செயல் முறை பிற்காலத்தில் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளாலும் வெவ்வேறு சமயங்களில் இன்னமும் நடத்தப்படுவதும் இந்திரா அவ்ர்களின் லெகசிதான் என்பதைக் கூறவும் வேண்டுமா? திடீரென 1971-ல் ஒரு ஆண்டுக்கு முன்னாலே பாராளுமன்ற தேர்தலுக்கு வழி செய்தார். இந்திராவின் தயவில் பதவிக்கு வந்த கிரி அவர்கள் இம்மென்றால் பத்து கையெழுத்துகள் போடவும் தயாராக இருந்தார். ரப்பர் ஸ்டாம்ப் என்ற செல்லப் பெயருக்கும் பாத்திரமானார்.
அதே சமயம் அவருடன் கூட்டு வைத்துக் கொண்டிருந்த தி.மு.க.வும் அதே மாதிரி சட்ட சபை தேர்தல் நடத்தும்படி பரிந்துரை செய்தது. இப்போது நடந்ததுதான் வேதனை தரும் செயல். சட்டசபை தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு ஒரு சீட்டு கூட இல்லை. பாராளுமன்ற தேர்தலுக்கான சீட்டுகளிலேயே இந்திரா குறியாக இருந்தார். இதற்கு பிறகு காங்கிரசோ மற்ற தேசீய கட்சிகளோ தமிழகத்தை பொருத்தவரை செல்லாக் காசாகவே போயின. இதற்கு முக்கியக் காரணமே இந்திராவின் அப்போதைய சுயநல அடிப்படையில் எடுத்த முடிவுகளே. ஆக, இந்த லெகசியும் தமிழ்நாட்டை பொருத்தவரை இந்திராவுடையதுதான்.
1971-ல் இந்திரா காந்தி பெற்றது அமோக வெற்றி. நேரு அவர்களின் காலத்தில் கூட இவ்வளவு பெரிய வெற்றியில்லை என்றுதான் கூறிட வேண்டும். இந்திராவால் காங்கிரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால் அதனால் இந்திராவின் செயல்பாடுகளில் முரட்டுத்தனம் ஏற்பட்டு அது அவருக்கே தீங்காக முடிந்தது பற்றி வரும் பதிவுகளில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இரா.முருகன் விமர்சனப்போட்டி
-
விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம்
விருது இரா.முருகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி ஒரு கட்டுரைப் போட்டி
அறிவிக்கிற...
10 hours ago