5/30/2008

சோ அவர்கள் எழுதிய 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' - 1

சென்ற ஆண்டு துக்ளக் ஆண்டு விழா கூட்டத்திற்கு சென்ற சமயம் நான் இவ்வாறு எழுதியிருந்தேன். "ஆனால், இந்த களேபரத்தின் நடுவிலும் அரங்குக்கு வெளியில் அலயன்ஸ் பதிப்பகத்தார் போட்டிருந்த ஸ்டாலில் சோ புத்தகம் ஒன்றை வாங்க மறக்கவில்லை. (அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் என்னும் அப்புத்தகத்தை வைத்து சோ பற்றிய பதிவுகள் இன்னும் சில போடப் போவதையும் இங்கே கூறிவிடுகிறேன்)". அதற்கு இப்போதுதான் நேரம் வந்தது.

முதலில் சோ அவர்களது சட்ட அனுபவங்களுடன் புத்தகம் ஆரம்பிக்கிறது. அவரது குடும்பத்தினரில் பலர் வக்கீல்கள். ஆகவே இவரும் அந்த தொழிலுக்கு போனதில் ஆச்சரியமே இல்லை. ஆரம்பத்திலிருந்தே அவர் தனது உழைப்பால் வெற்றிகள் பல பெற்றார். ஆனால் அவற்றைப் பற்றி இந்த புத்தகத்தில் குறிப்பிடும்போது அவற்றுக்கெல்லாம் தனது அதிர்ஷ்டமே காரணம் என்று குறிப்பிடுகிறார். அதுதான் சோ. அவர் எப்போது என்ன செய்வார், என்ன சொல்வார் என்பதை கணிப்பது கடினம். அதை அவர் திரும்பத் திரும்ப நிரூபித்து வருகிறார்.

ஒரு கொலை குற்றவாளிக்காக வாதாடும்படி அவர் கோர்ட்டாலே நியமிக்கப்பட்டிருக்கிறார். குற்றவாளியோ 23 வயதே ஆன இந்த இளம் வக்கீலின் மேல் நம்பிக்கை இல்லாமல் பேசி, ஒத்துழைப்பு தர மறுத்து விட்டார். அவர் தான் தனது மனைவியை கொலையை செய்ததாக ஒப்பு கொண்டாலும் சோ அவர்கள் விடாது வாதாடி, சந்தர்ப்ப சூழ்நிலை, இறந்தவர் தன் கணவனுக்கு உண்மையின்றி நடந்து கொண்டது ஆகிய சூழ்நிலைகளை நிறுத்தி (extenuating circumstances) ஆயுள் தண்டனையாக வந்திருக்க வேண்டிய தண்டனையை ஏழு ஆண்டுகள் தண்டனையாக குறைக்க செய்தார்.

தனது சீனியரின் (சோ அவர்களது தாத்தா) வழக்கை அவர் இல்லாத நேரத்தில் திறமையாக நடத்தி, கடைசியில் வாதங்கள் செய்ய வேண்டிய நிலையில் கட்சிக்காரர் சீனியர் வந்துதான் வாதாட வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, இவருக்கு சங்கடமான நிலைமை ஏற்பட்டது. அப்போது நடந்ததை அப்புத்தகத்திலிருந்தே மேற்கோள் காட்டி எழுதுகிறேன்.

நான் பேசாமல் நின்று கொண்டிருந்தேன். இந்தக் கட்சிக்காரர், இப்படி நடு நீதிமன்றத்தில் காலை வாரிவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தலையை நிமிர்த்தி யாரையும் பார்க்கக்கூட முடியவில்லை. இந்த அவமானத்தை எப்படி சகிப்பது என்பது புரியாமல் நின்றேன்.

நீதிபதி திரு. ராபர்ட் செல்லையா ஒரு முடிவுக்கு வந்தார். "சீனியர் வக்கீல் வந்து வாதங்களை நடத்தும் வரை, வாய்தா தருவதற்கு நான் தயாராக இல்லை. வழக்கு முடிகிற நிலையில், இந்த வாய்தா அனாவசியமானது. இவரே (நான்) வாதங்களை சமர்ப்பிக்கட்டும். அது உமக்கு பிடித்தமில்லையென்றால், வாதங்கள் இல்லாமலே வழக்கை முடித்து, தீர்ப்பு வழங்குகிறேன்" என்றார்.

கட்சிக்காரருக்கு வேறு வழியில்லாமற் போயிற்று. பேசாமல் சம்மதித்தார். நீதிபதி என்னைப் பார்த்து, "இப்போதே வாதங்களை வைத்துக் கொள்ள உமது மனநிலை இடம் தரவில்லையென்றால், இடைவேளைக்கு பிறகு வாதங்களை வைத்து கொள்ளலாம்" என்றார். நான் மனம் ஒடிந்து போயிருப்பேன் என்பது அவருடைய நினைப்பு. ஆனால் சூடு, சொரணை - இதற்கெல்லாம் அப்பாற்பட்டவனாக நான் இருந்ததால், அப்போதே வாதங்களைத் தொடங்கி விட்டேன் (நேரம் கழித்தால் - கட்சிக்காரர் மீண்டும் மனம் மாறி விட்டால் என்ன செய்வது?)

இரண்டு நாள் எனது ஆர்க்யுமெண்ட்ஸ் நடந்தது. எதிர்த் தரப்பு வாதமும் முடிந்தது.. தீர்ப்பு என் தரப்புக்கு சாதகமாக வந்தது.


எல்லோரும், தாத்தாவும் பாராட்டினாலும் சோ இப்புத்தகத்தில் அது பற்றி எழுதும்போது, இந்த வெற்றியால் மேலும் மேலும் வக்கீல் தொழிலில் தான் ஆழ்த்தப்பட்டு நாடக உலகத்துக்கு வரமுடியாமல் போய் விடுமோ, அது தன்னிடமிருந்து தப்பித்து கொண்டு விடுமோ என்றெல்லாம் தனது பயத்தைப் பற்றி தமாஷாக எழுதுகிறார். அதுதான் சோ.

பிறகு நாடகங்களிலும் ஈடுபடும் வசதிக்காக டி.டி.கே. கம்பெனிகள் குழுமத்தில் சட்ட ஆஃபீசராக சேர்ந்தார். அதில் சேருவதற்கான தேவையான சட்டப்பிரிவுகள் பற்றி அப்போது அவருக்கு அவ்வளவாகத் தெரியாத நிலை அப்போது. பின் எப்படி அவர் இவ்வேலைக்கு பொருத்தமானவராக வர இயலும் என்ற கேள்வி நேர்க்காணலில் அவரிடம் வைக்கப்பட, பதினைந்தே நாட்களில் அவற்றை படித்து தயாராக வருவதாக அவர் வாக்களித்தார். அவாறே 15 நாட்களில் சம்பந்தப்பட்ட சட்டங்களையெலாம் அலசித் தீர்த்திருக்கிறார். சட்டங்களைப் பொருத்தவரையில் எது எங்கே இருக்கிறது என்று அறிந்து, உடனே அந்த இடத்தில் பார்வையை செலுத்தத் தெரிந்தால் போதும்; எல்லாவற்றையும் மனப்பாடம் செய்யத் தேவையில்லை என்ற விஷயத்தையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிறார் அவர். வேலையும் கிடைத்தது. அதுதான் சோ.

அக்காலக் கட்டத்தில் நடந்தது என்னவென்பதை புத்தகத்திலிருந்து பார்ப்போம்.

தொழில் கோர்ட்டுகளிலும், ட்ரேட் மார்க்குகள் பதிவகத்திலும், கம்பெனிகளின் சார்பில் ஆஜராகி, விசாரணை, வாதங்கள் ...இவையெல்லாம் ஒரு புறம். நான் எழுதிய 23 நாடகங்களில் இந்தக் காலக்கட்டத்தில் சுமார் 10 எழுதப்பட்டன. நாடக நிகழ்ச்சிகள் சுமார் 2000. நடித்த சினிமாக்கள் 100க்கும் மேல். நான் திரைக்கதை - வசனம் எழுதிய 12 படங்களில் 7 இந்த நேரத்தில்தான் உருவாயின; கல்கி பத்திரிகையில் ஒரு தொடர் நாடகம், ஒரு தொடர் நாவல், ஸ்தாபன காங்கிரஸுக்காகவும் மற்றப்படியும் நூற்றுக்கணக்கான பொதுக் கூட்டங்கள். இவையெல்லா தவிர துக்ளக் பத்திரிகையின் ஆரம்ப வருடங்கள். 1961-லிருந்து, எமெர்ஜ்நென்ஸி காலமாகிய 1975 வரை இத்தனை காரியங்களையும் ஒரே சமயத்தில் நான் செய்து கொண்டிருந்தேன். இவற்றில் ஏதேனும் ஒன்றில் மட்டும் நான் முனைந்திருந்தால், ஏதாவது உருப்படியாகச் செய்திருக்கலாம். இந்த புத்தி அப்போது வரவில்லை. ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தேன்.

இத்தனையையும் செய்துவிட்டு கேஷுவலாக அதற்கெல்லாம் காரணமே தான் ஒரு குழப்பவாதியாக இருந்ததே காரணம் என்று கூறி விடுகிறார். அதுதான் சோ.

இத்தனை செய்தாலும் எல்லாவற்றிலும் கணிசமான வெற்றியைப் பெற முக்கியக் காரணமே அவரது அயராத உழைப்புதான் என்று நான் அடித்து கூறுவேன். மீண்டும் இந்த விஷயத்தில் திரும்ப வந்து உங்களைப் படுத்துவேன் என்று கூறி எச்சரிக்கையும் செய்து விடுகிறேன். அதுதான் டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் - 30.5.2008

கோமண கிருஷ்ணன்:
1. உறவினரை ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க உதவி செய்ய முயன்ற டாக்டர் பூங்கோதை ராஜிநாமா செய்திருக்கிறார். அது ஏற்கப்பட்டிருக்கிறது, சரி. ஆனால் தனது சொந்த குடும்ப நிறுவனத்திற்கு உதவ, தானே நேரில் வற்புறுத்தியதாக நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கும் மத்திய கப்பல், தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பாலு மட்டும் அமைச்சராகத் தொடர்கிறாரே, அதுமட்டும் ஏன்?
பதில்: இது போன்ற கேள்விக்கு துக்ளக் 28.05.2008 தேதியிட்ட இதழில் சோ அளித்த பதில் இதற்கும் சரியாக இருக்கும். என் கருத்தும் அதுவே.
"பயம்தான் காரணம். 'நாம் ஏதாவது பேசினால், கூட்டணியைக் கெடுப்பதாகக் கூறி, சோனியா காந்தி கோபப்படுவாரோ?' என்பது மன்மோகன் சிங்கின் பயம்.
'நாம் ஏதாவது சொல்லப் போய், டி.ஆர். பாலு வேறு ஏதாவது விவகாரம் பற்றிய தகவல்களைக் கசிய விடுவாரோ?' என்பது கலைஞரின் பயம்.
'நாம் இந்த முறைகேடு பற்றிப் பேசினால் - மத்திய அமைச்சரவையில், வேறொரு தமிழக அமைச்சர் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பது பற்றிய பட்டியல் என்னிடம் இருக்கிறது' என்று நெடுமாறனை எச்சரித்த ஸ்டைலில் கலைஞர் ஒரு எச்சரிக்கை விடுவாரோ?' என்பது ராமதாஸின் பயம்.
அதனால்தான் முப்பெரும் மௌனம்".
ஆனால் பூங்கோதைக்கு அந்த அனுகூலங்கள் இல்லையே, ஆகவே அவர் விஷயத்தில் கலைஞர் தன் தார்மீகக் கோபத்தைக் காட்டுவதில் என்ன ஆச்சரியம்?
2. தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க. அழகிரி விடுதலை செய்யப்பட்டுவிட்டார். ஒரு துணை மேயர் இன்னும் பன்னிருவர் என அனைவருமே ஒட்டுமொத்தமாக விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில்: இப்போது போலீஸ் நிஜமான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடிக்கும்போது விடுவிக்கப்பட்டவர்களின் குற்றம் உண்மையில் நிரூபணம் ஆனாலும் அவர்களை மறுபடியும் கோர்ட்டில் நிறுத்த இயலாது என்பதுதான் சட்டம் என நினைக்கிறேன். இதற்கு double jeopardy என்று சட்டத்தில் கூறுவார்கள். அதாவது ஒரே குற்றத்துக்காக ஒருவரை இருமுறை குற்றம் சாட்ட முடியாது என்று வரும். Anglo-saxon jurisprudence-ல் இது வருகிறது. இந்தியாவும் அதே சட்டமுறையைத்தான் பின்பற்றுகிறது.
3. என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என அதற்கு ஒருமாதம் முன்பே கருணாநிதி ஜல்லியடித்தது ஏன்? பின் அன்பழகன் போன்ற அடிப்பொடிகளை விட்டு வேண்டுகோள் டிராமா போட்டபின் இப்போது பெரியமனது பண்ணி ஒத்துக் கொண்டிருக்கும் கருணாநிதியின் பெருந்தன்மை பற்றி?
பதில்: 'நான் அடிப்பதுபோல அடிக்கிறேன், நீ அழுவதுபோல அழு' என்று கேள்விப்பட்டதில்லையா?
4. இந்த அளவுக்கு இறங்கிய அன்பழகனின் நிலை பற்றி?
பதில்: ஐயோ பாவம். எப்போதுமே இரண்டாம் இடத்தை தக்கவைத்துகொள்ள இவர் படும்பாடு நெடுஞ்செழியனை நினைவுபடுத்துகிறது.

கூடுதுறை:
1) எரிந்துபோன SSLC விடைத்தாள்களுக்கு என்ன மதிப்பெண்கள் கொடுத்தால் சரியாக் இருக்கும் என நினைக்கிறீர்கள்?
பதில்: கண்டிப்பாக யாரையும் ஃபெயில் ஆக்க முடியாது. ஒருவேளை மற்ற பாடங்களில் வாங்கிய சராசரி மார்க்கை தரலாம். ஆனால் எல்லாமே கஷ்டம் தருவனதான்.
2) பெட்ரோல் டீசல் விலையேற்றிய தீரவேண்டிய கட்டாயத்தில் அரசு, ஆனால் அதை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள் சூழ்நிலையில் இருப்பர். என்னதான் செய்ய இயலும் அரசால்?
பதில்: அரசும் சரி, கம்யூனிஸ்டுகளும் சரி அவர்தம் நிலை பொறாமைப்படத்தக்கதல்ல.
3) கேள்வி பதில் படுசீரியசாக உள்ளது மொக்கைகளையும் அதில் நுழைத்து சிறிது கலகல உண்டாக்குங்கள்
பதில்: நான் என்ன ரூம் போட்டா யோசித்து தீர்மானம் போட்டேன், எல்லாமே சீரியஸ் கேள்விகளாகத்தான் வேண்டுமென்று? கேட்ட கேள்விகளுக்கு ஏற்பத்தானே பதில் சொல்ல முடியும்? மொக்கைகளை கேட்டால்தான் பதிலும் மொக்கை போட முடியும். நானே மொக்கை கேள்விகள் கேட்டு, அதற்கான பதில்கள் நானே மொக்கையாக போடுவதற்கு நான் ஒன்றும் காண்டு கஜேந்திரன் இல்லையே. நான் டோண்டு ராகவன்.

குமார்:
1. //அவரவர் சாப்பாட்டுக்கு அவரவர்தான் உழைக்க வேண்டும். அதுதான் சாத்தியம். உழைக்காத சோம்பேறிகளுக்கு இல்லாமைதான் நிச்சயம்.// இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாகக் கூறப்படும் 60 கோடிபேரும் சோம்பேறிகளா?
பதில்: கண்டிப்பாக அந்த அர்த்தத்தில் கூறவிலை. சுய முயற்சி செய்யக்கூட விருப்பம் இல்லாதவர்களைப் பற்றித்தான் கூறினேன். அப்படியும் பல பேர் இருக்கிறார்கள்.

கருணாகரன்:
1. Why do you insist on providing so many links to your old blog posts in each of your new posts? (And almost every such link leads in turn to more links).
இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. எனது விடைகள் உளமாரக் கூறப்படுபவை. எனது கேள்வி பதில்கள் பதிவு போடும் எண்ணம் துளிக்கூட இல்லாத காலக் கட்டத்திலேயே நான் வெளியிட்டுள்ள எனது கருத்துக்களையும் துணைக்கழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? எனக்கு அது சாத்தியமாவதன் காரணமே வேளைக்கு ஒன்று என கருத்துக்களை வாய்க்கு வந்தபடி Plitical correctness-ஐ எண்ணி சமயத்துக்கு ஏற்ப மாற்றி எழுதுவதில்லை. அப்படி ஏதேனும் கருத்து மாற்றம் இருந்தால் அதை வெளிப்படையாகவே சொல்லித்தான் செய்வேன். மேலும், நடக்காத ஒன்றை நான் எழுதாததால் நான் எந்த பொய்யை எங்கே சொன்னேன் என்றெல்லாம் யோசிப்பதில்லை. உதாரணத்துக்கு எனக்கு மிகவும் தெரிந்த ஒரு பதிவருக்கு திருமணம் ஆகிவிட்டது. தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு அவர் போனபோது நான் அவருக்கு ஃபோன் செய்ய, தான் மாமனார் வீட்டில் இருப்பதாகக் கூறியவர். ஆனால் இப்போதெல்லாம் ஏனோ மணம் ஆகாதது போல மாற்றி எழுதுகிறார். நான் அப்படியெல்லாம் செய்யாததால் எனக்கு ஹைப்பர் லிங்க் தருவதில் சிக்கல் ஏதும் இல்லை.

அனானி: (மே 26 காலை 07.18க்கு கேள்வி கேட்டவர்)
1. பாராட்டுக்கள் டோண்டு சாருக்கு.எப்படி சார் கர்நாடக தேர்தல் முடிவை மிகச் சரியாக கணித்தீர்கள்.அப்படியே அடுத்த மத்திய அரசு, தமிழக அரசு பற்றி?
பதில்: கிரெடிட் அப்படியே துக்ளக்கிற்கு ஃபார்வேர்ட் செய்யப்படுகிறது. அடுத்த மத்திய அரசு பாஜக அரசாகலாம், என்ன பாஜகவினர் அதற்கு இப்போதிருந்தே உழைக்க வேண்டும். தமிழக அரசு விவகாரத்தில் நல்ல கூட்டணி அமைப்பதில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரில் யார் குறைந்த தவறு செய்கிறார்களோ, அவர்கள் வாய்ப்பு பிரகாசம்தான்.
2. அடுத்த முதல்வர் அழகிரியா?, ஸ்டாலினா?, கனிமொழியா?, ஆர்காட்டாரா?, தயாநிதியா?, ரஜினியா? (ஜெயலலிதா, வை.கோ,சரத், விஜய்காந்த இவர்கள் ரேசில் பின்தங்குவது போல் உள்ளது)
பதில்: ஸ்டாலினும் அழகிரியும் முறையே ராஜீவையும் சஞ்ஜையையும் நினைவுபடுத்துகின்றனர். தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்தால், அழகிரிதான் அதிகம் பொருத்தமாக இருப்பார் என்பது எனது எண்ணம். இது சரியான நீதியாகுமா என்று கேட்டால், அது இந்த இடத்தில் ரெலெவண்ட் இல்லை என்றுதான் கூற வேண்டும். அடாவடிக்குத்தான் காலம் இது. அதுவே அதிமுக பிடித்தால் இந்த கேள்விக்கே இடம் இல்லை.
3. மீண்டும் தாமரையுடன்,ஆதவன் கைகோர்க்கும் போலுள்ளதே?
பதில்: 'அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா' என்று பேரறிஞர் கவுண்டமணி கூறிவிட்டார்.
4. ராஜஸ்தானில் நடைபெறும் மலைவாழ் பட்டியலில் சேர நடைபெறும் போராட்டம் நியாம்தானா?
குஜ்ஜார்களுக்கும் ஜாட்டுகளுக்கும் தள்ளுமுள்ளு. இருவருமே ராஜஸ்தானில் ஓ.பி.சி.யில் வருகின்றனர். பி.ஜே.பி. குஜ்ஜார்களை மலைவாழ் பட்டியலில் சேர்ப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்றவும் தயார்தான். ஆனால் ஜாட்டுகள் அதை தடுப்பதாகத்தான் முதலில் பேப்பர்களில் படித்திருக்கிறேன். இப்போது தேடினால் அது கிடைக்கவில்லை. பதிவர்கள் யாரேனும் விவரம் தெரிந்தால் பின்னூட்டமாக தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
5. இதேபோல் எல்லா மாநிலங்களிலும் போராட்டம் ஆரம்பிப்பதற்கு இது வழி ஏற்படுத்தி விட்டால், நாம் அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் என்னவாகும்? (போராட்டக்காரர்கள் பொருளாதாரச் சேதம்தான் சிறந்த வழி என காரியம் ஆற்றுவதால்)
பதில்: கஷ்டம்தான். முதலில் எஸ்.சி./எஸ்.டி.க்கு மட்டும் முதல் பத்தாண்டுகளுக்கு மட்டும் பார்லிமெண்டில் பிரதிநிதித்துவத்துக்காக வந்த ரிசர்வேஷன் நேருவின் சொதப்பல் காரணமாக விரிவுபடுத்தப் பட்டு, அதன் காலமும் நீட்டிக்கப்பட்டு, 1990-ல் வி.பி. சிங் தன் ஆட்டையைபோட இப்போது எங்கும் இந்த பஜனை ஆரம்பித்துவிட்டது.
6. ஆயில் கம்பெனிகள் நஷ்டம் என்றதும் அந்த துறையின் அமைச்சரின் வேகமான நடவடிக்கைகள் எடுக்கும்போது பிற பொதுத்துறை நிறுவனங்களின் சீர்கெட்ட நிதிநிலமை பற்றி (உதாரணம்: ஊட்டி பிலிம் தொழிற்சாலை) அந்த அந்த அமைச்சர்கள் பாராமுகமாய் உள்ளனரே?
பதில்: ஆயில் கம்பெனிகள் லாபம் ஈட்டுபவை. அவற்றுக்கு பங்கம் வந்தால் முதலுக்கே மோசமாகி விடும். ஊட்டி ஃபிலிம் தொழிற்சாலை அவ்வளவு essential sector-ல் இல்லை. இங்கு விளையாட்டு விதிகளே வேறு.
7. அரசுத்துறைகளில் உயர் தொழில்நுட்ப பயிற்சி முடித்த கையோடு தனியார் துறைகளுக்கு மாறும் ஊழியர்களின் செயல் நம்பிக்கை துரோகம் அல்லவா?(குன்னூர் அரசு தடுப்பூசி நிறுவனம் to தனியாரின் நிறுவனம் (பெரியவர்களின் ஆதரவுடன்)-பத்திரிக்கை செய்தி)
பதில்: பெரிய நம்பிக்கை துரோகமே, அதில் என்ன சந்தேகம்? அதே சமயம், அரசும் பலமுறை சொதப்புகிறது. உதாரணத்துக்கு பால்வளத்துறையில் பயிற்சிக்கு அனுப்பப்பட்ட அதிகாரிகள், பயிற்சி முடிந்ததும் அரசியல் ஆட்டைகள் காரணமாக சம்பந்தமே இல்லாத வேறு துறைகளுக்கு அனுப்பப்படுவது ரொம்ப சர்வ சாதாரணம். அரசே இவ்வாறு செய்யும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செய்கையை ஆதரிக்காவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறது.
8. கச்சா எண்ணெய் 35 டாலர் இருக்கும்போது வசூலித்த 5 % கலால் வரியை, 135 டாலாராய் உள்ள போதும் அதே அளவு வேண்டும் என வாதிடும் நிதிஅமைச்சரின் கூற்று சரியா?
பதில்: வரியை எல்லாம் குறைப்பதாகக் கூறுகிறார்கள் போலிருக்கிறதே. பார்க்கலாம், எனக்கு நம்பிக்கை இல்லை.
9. அரசே இப்படி இருக்கும்போது இரும்பு, சிமெண்ட் வணிகர்கள் எப்படி தங்கள் லாபத்தை குறைப்பார்கள்?
பதில்: கண்டிப்பாக மாட்டார்கள்தான். குறைக்கச் சொன்னால் குரைப்பார்கள்.
10.ஓய்வில்லாச் சூரியனாய், ஓங்குபுகழ் சோழனாய், அகவை 86 என்றாலும் அறிவிற் சிறந்தும் இலக்கியச் செம்மலாயும் இனிய மொழித்திறமையுடனும் ஆட்சியாற்றும் திறமையுடனும் ஆர்பரிக்கும் ஆற்றலுடன் வாழும் வள்ளுவர்,சோழனின் மறு மதிப்பு,பொதுவுடமைப் பூங்கா என அனைவராலும் பாரட்டப்படும் தமிழினத் தலைவரின் 86ம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பற்றிய தங்கள் விமர்சனம் யாது?
பதில்: மேலே ஏற்கனவே கலைஞர் பிறந்த நாள் சம்பந்த கேள்விக்கு பதில் கூறிவிட்டேன். மற்றப்படி இவ்வளவு புகழுரைக்கு அவர் தகுதியானவர் என்று நான் எண்ணவில்லை. மனிதர் வல்லவர், உழைப்பாளி, தமிழறிவு மிக்கவர் என்பதில் ஐயம் இல்லை, அவ்வளவுதான்.

அனானி: (26.05.2008 மாலை 8.55 மணிக்கு கேள்வி கேட்டவர்)
1. மனித உறவுகளில் (ரத்த சம்பந்த) பொருளாதர ரீதியாக மோதல்கள் அதிகரித்ததன் காரணம் யாது?
பதில்: தாயும் பிள்ளையானாலுமே வாயும் வயிறும் வேறுதான் என்று ஆனபிறகு, என்ன உறவினர் வேண்டியிருக்கிறது?
2. தென் மாவட்டங்களில் சைவ வேளாளர் குடும்பங்களில் பெண்களின் திருமணச் செலவுக்காக குடும்ப நிலங்களை விற்பது வாடிக்கை.(ஒரு பெண்ணின் திருமணத்திற்கு ரொக்கம்,30 பவுண் நகை,வெள்ளிப் பாத்திரங்கள்,பிற பாத்திரங்கள்,துணிமணிகள்,சீர்வரிசைகள்.... ஒரு பெரும் தொகை தேவைபடுவது வாடிக்கை). 2 ,3 மகள்களின் திருமணத்திற்கு பிறகு மீதமாகும் வீட்டில் பங்கு கேட்டு சகோதரனுடன் கோர்ட் படிகளில் ஏறும் பெண்கள் பற்றி தங்கள் கருத்து யாது?
பதில்: அதற்காக வருந்தும் அதே சகோதரனே தன் மனைவியை தன் மச்சான்களுக்கு எதிராகத் தூண்டிவிடுவதும் சகஜமாகத்தானே நடக்கிறது?
3. தாய் தந்தையரை வயதான காலத்தில் காப்பதில் பிராமணர்( ஐயர்,ஐயங்கார்)சமுதாயம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாய் திகழ்வது எப்படி?
பதில்: அப்படியெல்லாம் பொதுப்படையாகக் கூற முடியாது. தாய் தந்தையரை பேணும் மற்றும் பேணாத பிள்ளைகள் எல்லா சாதியிலுமே உள்ளன. இதில் பார்ப்பனர் ஒன்றும் உயர்ந்த நிலையில் இல்லை.
4. பிற தெய்வ பக்தியுள்ளவர்கள் கூட இந்த விஷயத்தில் வேறு மாதிரி இருப்பது ஏன்?
பதில்: தனது பெற்றோருக்கு தாம் செய்வதை தமது பிள்ளைகளும் செய்வார்கள் என்னும் அறிவில்லாதவர்கள் பக்திமான்களிலும் உண்டு. பை தி வே, எனது ரிடயர்மெண்டுக்கு பிறகு வாழ்க்கை பற்றிய இப்பதிவில் பெற்றோர்கள் செய்ய வேண்டியதைப் பற்றி நான் எழுதியதிலிருந்து இங்கு தருகிறேன். "ரிடயர்மெண்ட் பணம் கைக்கு வந்ததும் அதை யாருக்கும் தராது பத்திரமான முதலீட்டில் இட வேண்டும். மனதை உருக்கும் சோகக் கதைகளை உறவினர் கூறி பணம் கேட்பார்கள். மூச், ஒருவருக்கும் தரக்கூடாது. முக்கியமாக பிள்ளைகளுக்கு. ரொம்பக் கடுமையாகப் படுகிறதா? ஏமாந்தால் அதே பிள்ளைகள் கையில் கடுமையான சோதனைகளை சந்திக்க வேண்டுமே ஐயா? எதற்கும் ஒரு நல்ல வேலை தேடிக் கொள்வதும் நலமே. கடைசி வரை தன் தேவைகளுக்கான செலவுகளுக்கு யாரிடமும் கையேந்தக் கூடாது. தனது சொத்தையெல்லாம் தான் இருக்கும்போதே பசங்களுக்கு made over செய்து விட்டு கடைசி காலத்தில் பசங்களால் பந்தாடப்பட்டு, சந்தியில் நின்றவர்கள் அனேகம்.
விசு சினிமா கூட ஒன்று அதே பின்னணியில் வந்தது. ரிடையர்மெண்ட் பெற்றவர்களே, இதெல்லாம் உங்களுக்கு நடந்தால் இதற்கு முக்கியக் காரணம் நீங்களே. உங்கள் கையில் எல்லா கண்ட்ரோலையும் வைத்திருக்கவும். இல்லாவிட்டால் ஸ்கூல் மாஸ்டர் படத்தில் வருவது போல கணவன் மனைவியையே பிரித்து ஒருவர் முதல் பிள்ளை வீட்டிலும் இன்னொருவர் இன்னொரு பிள்ளை வீட்டிற்கும் சென்று தொண்டு செய்ய நேரிடும். சினிமாதானே என்று கூறுபவர்களுக்கு நான் கூறுவது, இதெல்லாம் நடக்கக் கூடியதே. உங்கள் சலுகைகளை விட்டுக் கொடுக்காதீர்கள் என்பதே. இதையெல்லாம் சரி செய்து கொண்டு உங்கள் சமூக சேவைகளை ஆரம்பிக்கவும். ஒன்றும் அவசரம் இல்லை.
இதைப் படிக்கும் இளைய தலைமுறையினருக்குக் கூறுவேன், தயவு செய்து பெற்றோர்களை கண்ணீர் விட வைக்காதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் உருப்படவே மாட்டீர்கள்.
5. முதியோர் இல்லங்கள் பெருக்கம் பண்புள்ள பாரதத்துக்கு ஏற்புடையதா?
பதில்: இல்லைதான், என்ன செய்யலாம்? அவரவர் கையில்தான் சொர்க்கமும் நரகமும் இருக்கின்றன.

அனானி (27.05.2008 காலை 05.49-க்கு கேள்வி கேட்டவர்):
1. தமிழ் சினிமா உலகம் இன்று பெரிய பெரிய கார்பொரேட் கைகளுக்கு போய் விட்டது போல் தெரிகிறதே?
பதில்: பணம் அதிகம் வரும் என்றால் பிணத்துக்கு வரும் கழுகுகள் போல கார்ப்பரேட்டுகள் வருவது தவிர்க்க முடியாதுதான்.
2. உச்ச நடிகர்களின் சம்பளம் 3-4 கோடிகள் என்பது உண்மையா?
பதில்: இதற்கனவே துறை சார்ந்த பத்திரிகைகள் உள்ளன. அங்கு நிலவரம் தெரியும். சென்னையில் தாயார் சாஹிப் தெருவில் உள்ள பல அவுட்லெட்டுகளில் படங்களின் ஜாதகங்கள் கண்காணிக்கப்படுகின்றன.
3. ரஜினிக்கு அடுத்த நிலை விஜய்க்கு என்பது உறுதியாகிவிட்டதா?
பதில்: ஏன் விக்ரம், சூர்யா எல்லாம் எங்கே போனார்கள்?
4. விஜயின் தற்சமய படங்கள் (தமிழ் மகன், குருவி) சரியில்லையே?
பதில்: அதே பழைய கதைதான். கில்லி நன்றாக போயிற்று என்பதற்காக அதே போல மசாலா சேர்த்திருக்கிறார்கள். இம்முறை மசாலா ஓவராகப் போனதில் தும்மல்தான் வந்தது எனக் கேள்வி.
5. விஜயின் இந்த உச்ச நிலையிலும் எளிமை எப்படி அவருக்கு ஏதுவாகிறது?
பதில்: குருவி மாதிரி இன்னும் சில படங்கள் வந்தால் அவர் நிஜமாகவே எளிமையாக இருக்க வேண்டியதுதான்.
6.காமெடி நடிகர்கள் (நாகேஷ், சுருளிராஜன், கவுண்டமணி....) பலர் உச்ச நிலையில் இருக்கும் பொது அவர்கள் செய்யும் அலம்பல்களால் மார்கட் போய்விட்டதை கண்ணால் பார்த்த பிறகும் அடுத்த தலைமுறை கலைஞர்கள் அதே அலம்பலை செய்கின்றனரே?
பதில்: மகாபாரதத்தில் யட்சன் நச்சுப் பொய்கையில் வைத்து யுதிஷ்டிரனை கேள்விகள் கேட்கிறான். அதில் கடைசி கேள்வி "உலகில் மிகப்பெரிய அதிசயம் எது?" அதற்கு அஜாத சத்ரு யுதிஷ்டிரனின் பதில்: "தினம் தினம் மக்கள் சாகின்றனர். அதையெல்லாம் பார்த்த பிறகும் இன்னும் உயிருடன் இருப்பவர்கள் தாங்கள் மட்டும் சாஸ்வதம் என்று நினைக்கின்றனர்".
7. தியேட்டர்களில் அரசு அனுமதிக்கும் கட்டணங்களை விட சாதாரணமாக 10 ருபாய் அதிகமாக வசூலிக்கும் போக்கு சினிமா டிக்கட் ஐ "on line trading" க்குள் கொண்டுவந்து விடும் போல் உள்ளதே?
பதில்: ச்ப்ளை மற்றும் டிமாண்ட் விஷயம்தான். முதல் சில வாரங்களுக்கு அரசின் அனுமதியுடனேயே விலை உயர்வு நடைபெறுகிறது. சிவாஜி படம் பத்தாம் வாரம் ரங்கா தியேட்டரில் சாதாரண விலைக்கே போயிற்று. அதென்ன முதல் நாள் முதல் ஷோ ஆசை? அவ்வாறு அன்பே சிவம் படத்துக்கு போய் நான் சந்தியில் நின்றது இங்கு ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. அடேடே, இதிலும் ஆன்லைன் வணிகமா? பலே. நண்பர் வால்பையன் சந்தோஷப்படுவார்.
8. எவையெல்லாம் (உடைகள்,ஆபாசநடன அசைவுகள், இரட்டை அர்த்த வசனங்கள்,பாடல்கள்) முன்பு சென்சாரின் கத்திரிக்கு பலியானதோ அவையெல்லாம் இப்போது கொக்கரிக்கின்றனவே? திடீர் மாற்றம் யார் கொடுத்த தைரியம்? (கோடிகள் கை மாறுகின்றனவா?)
பதில்: 'பத்தாம் பசலி' என்னும் பாலசந்தர் படம் சமீபத்தில் 1970-ல் வந்தது. அதில் ஜெமினி ராஜஸ்ரீ டூயட்டில் "காதல் மன்னன் கைகளில் என்னைத் தரவேண்டும்" என்று ஒரு சரணம் பாட்டில் வர அதை வெட்ட வேண்டும் என ஒரு சென்சார் பேர்வழி கூற, பாலசந்தர் பாட்டையே கத்தரித்து விட்டதாக அவர் எழுதியிருந்தார். 'எப்படியிருந்த சென்சார் இப்படி ஆயிட்டாங்க'! மற்றப்படி கோடிகள் மாறுவது பற்றி தெரியவில்லை.
9. மல்டிபிளக்ஸ் தியேட்டர் காலங்களிலும் சகாதாரக் குறைவுள்ள திரை அரங்குகள் பற்றி அதிகாரிகளின் கண்டுகொள்ளா நிலை ஏன்? (அழுக்குடனும், துர்நாற்றத்துடனும், மூட்டைப் பூச்சிகளின் வாசஸ்தலமாகவும் உள்ள இருக்கைகள் - இப்போ அரசின் கேளிக்கை வரிகூட கிடையாதே!))
பதில்: கவனிக்க வேண்டியவர்களை கவனிப்பதிலேயே பணம் செலவழித்தவர்கள் எதற்கு தேவையின்றி மேலே செலவு செய்யப் போகிறார்கள்? அது இருக்கட்டும், என்னது! கேளிக்கை வரி கிடையவே கிடையாதா? இது என்ன புதுக்கதை?
10. முன்னணி நடிகைகளில் சிலர் கூட மிக குறைந்த ஆடையுடன் (பிக்னி ஆடை-உள்ளாடை தெரிவது போல்) நடிப்பதைப் பார்க்கும் போது அந்தக்கால நடிகைகள் பானுமதி, சாவித்திரி அவர்களின் ஆடை கண்ணியம் பாராட்டத்தக்கதல்லாவா?
பதில்: பானுமதியை 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் பார்த்திருக்கிறீர்களா? உடலை கவ்விய உடையுடன் கே.ஆர். விஜயா 'தட்டுங்கள் திறக்கப்படும்' படத்தில் 'தித்திப்பது எது' என்று பாடியவாறே தன் மார்புகளை நோக்கும் பாடல் காட்சியை பார்த்திருக்கிறீர்களா? சமீபத்தில் 1963-ல் வந்த ரத்த திலகம் படத்தில் சாவித்திரி அவர்கள் சிக் உடை அணிந்து "ஆன் தி மெர்ரி கோ ரௌண்ட்" என்ற ஆங்கிலப் பாடலுக்கு கவர்ச்சியான அசைவுகளைத் தந்ததை பார்த்துள்ளீர்களா? அதே சாவித்திரி சமீபத்தில் 1952-ல் வந்த பாதாள பைரவி படத்தில் ஒரே ஒரு கவர்ச்சி நடனம் ஆடிவிட்டு சென்றதை கேள்விப்பட்டுள்ளீர்களா?

அனானி (27.05.2008 மாலை 06.25க்கு கேள்வி கேட்டவர்:
1. மறு ஜென்மத்தை இந்து மதம் நம்புவதுபோல் பிற மதத்தவர்கள் நம்பாததன் காரணம் என்னாவாயிருக்கும்?
பதில்: இந்திய துணைகண்டத்தில் உண்டான எல்லா மதங்களுக்குமே பூர்வ ஜன்ம நம்பிக்கை உண்டு.
2. எகிப்தியர்கள் நம்புவதால் தான் பிரமிடுகள் தோன்றின சரிதானா?
பதில்: எகிப்தியர்கள் மேலுலகத்தில் சௌகரியமாக வாழவே பிரமிடுகள் கட்டி கொண்டனர். அதற்கும் இந்துக்களின் நம்பிக்கைகளுக்கும் பல ஆறு வித்தியாசங்கள் உண்டு.
3. தனது வாழ் நாள் முடிவதற்குள் அகால மரணமடைவோர் ஆவியாய் அலைவதாக காலம் காலமாக கதைகள் சொல்லப் பட்டனவே. ஆவியை பார்த்ததாக சொல்வது எல்லாம் கடைசியில் கட்டுக் கதையாகி விடுகிறதே.
பதில்: நானும் ஆவிகளை நம்புவதில்லை. ஆகவே அவற்றுக்கு கடனெல்லாம் தர மாட்டேன்.
4. கேரளா மாந்திரிகர்கள் கெட்ட ஆவிகளை வைத்து செய்வினை செய்வதாக செய்திகளில் உண்மை இருக்கிறதா?
பதில்: தெரியாது. கிட்டே போய் பரிசோதிக்கும் தைரியம் இல்லை. எதற்கு வம்பு?
5. 20 வருடங்களுக்கு முன்னால் " குரளி வித்தை" தெருசந்திப்புகளில் நடைபெறுமே அதை இப்போது காணோமே?(வா இந்தப் பக்கம்,வந்தால் சொல்லுவியா)?"
பதில்: கழைக்கூத்தாடி வித்தைகளுக்கு போட்டியாக கோலங்கள், ஆனந்தம், சித்தி ஆகிய சீரியல்கள் போட்டியாக வந்து விட்டதே. 'இந்த குடும்பத்தை அழிக்காது ஓய மாட்டேன்' என்று புவனேஸ்வரிகள் வெள்ளிக்கிழமை மாலை விளக்கு வைக்கும் நேரத்தில் கர்ஜிப்பதை பார்க்கவே நேரமில்லை. குரளியாவது ஒன்றாவது! குரளிக்காரர்களே இப்போதெல்லாம் சீரியல்களில் ஒன்றிவிட்டதாக சில வட்டாரங்கள் கூறுகின்றன.

அனானி (28.05.2008 காலை 06.10-க்கு கேள்வி கேட்டவர்)
1. ஒடுக்கபட்ட இனமக்களுக்காக அரசு அறிவிக்கும் இட ஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள்அங்கே உள்ள பொருளாதார வலிமை உள்ளவர்கள்(and numerical strength) கைக்கு சென்று விடுகின்றனவே.இதை மாற்ற எந்த முற்போக்குவாதி(இடது சாரி கட்சிகள் உட்பட)அரசியல் வாதியும் முயலுவதில்லையே ஏன்?
பதில்: கிரீமி லேயரை எதிர்ப்பவர்கள் அன்னியனின் கிருமி போஜன தண்டனைக்கு உரியவர்கள் என்று கூறிக் கொண்டு ஒரு கோஷ்டி அலைகிறது. ஜாக்கிரதையாக இருக்கவும்.
2. கலைஞர் அவர்கள் கூட இதில் கவனம் செலுத்தாதன் காரணம் புரியவில்லையே?
பதில்: கிரீமி லேயரைச் சேர்ந்தவரே அதை எதிர்ப்பாரா? ரொம்பத்தான் பேராசை உங்களுக்கு.
3. உண்மையில் சொல்லப் போனால் பாதிக்கப்படும் ஏழைகள் கையில்தான் பெரிய ஓட்டு வங்கி உள்ளது.அவர்களை காப்பாற்ற முயலவேண்டாமா?
பதில்: அந்த ஓட்டு வங்கி பரவலாக இல்லையே.
4. ஜாதி அரசியல் அரசின் ஒப்பந்த திட்டங்களில் கூட தன் கரங்களை நீட்டி
விளையாடுவதாக பத்திரிக்கை செய்திகள் சொல்வது நல்லதுக்கா?

பதில்: ஜாதீயம் என்பது மிகவும் கசப்பான உண்மை. நல்லதுக்கு இல்லைதான்.
5. இட ஒதுக்கீட்டு கொள்கையினால் பலனடைந்தவர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தி மறு ஆய்வு செய்து, நிஜமாகவே பாதிக்கபட்ட பின்தங்கிய மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் வசதி இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் கொடுக்கப்படுமா?
பதில்: ரொம்பத்தான் பேராசை உங்களுக்கு.
6. பெரிய கார்போரேட் நிறுவனங்கள் கூட அவர்கள் வாழ்வில் வசந்தம் வீச வழிவகை செய்ய முயலுகின்றன (பொருளாதார அளவுகோல் - ஆண்டு வருமான கட்டுப்பாடு)
பதில்: கார்ப்பொரேட் நிறுவனங்கள் என்ன செய்வதாகக் கூறுகிறீர்கள்? புரியவில்லையே.
7. கொள்கை முழக்கமிடும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் மாற்றம் வருமா?
பதில்: அப்புறம் அவர்கள் பூவாவுக்கு என்ன செய்வது?
8. M.G.R. அவர்களின் ரூபாய் 9000 ஆண்டு வருமானத் திட்டம் தோல்வி அடைந்தது ஏன்?
பதில்: அவரே அதை தனது 1980 லோக் சபா தேர்தலில் தோல்வி அடைந்த போது அவசரம் அவசரமாக விலக்கி கொண்டார்.
9. நகரங்களில் கூட நல்ல முற்போக்கு சிந்தனை உள்ள உயர் சாதிப் பிரிவினர் தங்களுடன் பணியாற்றும் தலித் இன நண்பர்களுக்கு தங்கள் விடுகளில் உள்ள சைட் போர்ஷனை வாடகைக்கு விடத் தயங்குவதாக உள்ள செய்தி தங்களுக்கு தெரியுமா?
பதில்: தெரியும், கேள்விப்பட்டுள்ளேன். என்னதான் படித்தாலும் ஆழ்மனதில் உள்ள வெறுப்பு போகுமா என்று கேட்பது சுலபம்தான். ஆயினும் ஒரே வளவுக்குள் என்று வரும்போது மனத்தளவில் பல சமாதானங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கும். முக்கியமாக உணவு பழக்க வழக்கங்கள். வீட்டை வாடகைக்கு விட்டாலும் தங்கள் வீடுகளில் குடியிருப்பவர் அசைவம் சமைக்கக் கூடாது என்று கண்டிஷன்கள் போடுவதும் இதில் அடங்கும். இதை சுலபமாக வார்த்தைகளில் அடக்க இயலாது.
10. உண்மையான சமத்துவபுரம் என்று காண்போம்?
பதில்: கனவு காண வேண்டும் என்று அப்துல் கலாம் வேறு விஷயத்தில் சொன்னார். இங்கும் அது அப்படித்தான் என அஞ்சுகிறேன்.

அனானி (28.05.2008 மாலை 05.53-க்கு கேட்டவர்):
1. பெட்ரோல் basic price 1 லிட்டர் ரூபாய் 30 தான் எனவும்,மத்திய,மாநில அரசுகளின் பலவித வரிகளால் தான் இந்த உச்ச விலை உயர்வு என்கின்றபோது,நிதிஅமைச்சகம் வரியின் சதவிகிதத்தை ஒரு சிறு சதவிகிதம் கூட குறைக்க மறுப்பதில் தார்மீகம் இருக்கிறதா?
பதில்: வரியை குறைத்தால் டெஃபிசிட் அதிகரிக்குமே. அதுவும் கஷ்டம்தானே. அந்த வரி முதலில் ஆயில் ரிசர்வ் என்ற பெயரில் புகுத்தப்பட்டு, பெட்ரோலியம் தொழிலுக்காக உபயோகப்படுத்தப்பட்டது. பிறகு தொண்ணூறுகளில் அதை பொது நிதியில் கொண்டு வந்து பொங்கலோ பொங்கல் வைத்து விட்டனர். இன்னும் அப்பழக்கம் தொடர்கிறது. ஒரேயடியாக அதை குறைக்கவும் இயலாதுதான்.
2. பெட்ரோல் கம்பெனிகளின் வீண் செலவினங்களை குறைக்க முயலாதது ஏன்?
பதில்: அதற்கான மோட்டிவேஷன்கள் இல்லையே.
3. பொதுத்துறை நிறுவனங்களிலே சாதாரண கடைநிலை ஊழியரின் சம்பளம் கூட ஆயில் கம்பெனிகளில் மிக அதிகம் என்பது உண்மையா?
பதில்: ஆம்.
4. வேலைநிறுத்தம் என்னும் ஆயுதம் கொண்டு தங்கள் சம்பள விகிதங்களையும், பிற சலுகைகளையும் மிக அதிகமாக உயர்த்திகொள்வதும் பற்றாக்குறைக்கு ஒரு காரணமா?
பதில்: சம்பளம் செலவுகளில் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கிறது என அறிகிறேன். இதற்கு காரணமே தேவைக்கு மேல் ஊழியர்களை சேர்த்ததுதான். அவனவன் தன் மாமன் மச்சானை இதில் தத்தம் லெவலில் கொண்டு வந்திருக்கிறான். இந்த அழகில் இவர்கள் வெட்டி முறிக்கும் வேலைக்கு போராடி சம்பளம் வேறு உயர்த்தி கொள்கிறார்கள்.
5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 16-17 வரை கூடினால் பணவீக்க விகிதம் 10 % தாண்டிவிடுமா?
பதில்: கண்டிப்பாகக் கூடும்தான். ஆனால் வேறு வழி?

அனானி (28.05.2008 மாலை 07.38-க்கு கேட்டவர்):
1. நாகரிக உலகில் வாலிப ஆண்கள்,பெண்கள் ஆகியோரின் ஆடைகள், அலங்காரங்கள், பாஸ்ட் புட் முதலியவை மிக (பண்பாடு,கலாசாரம் தாண்டி)அதிகமாய் கொண்டே செல்கிறதே இது எதில் கொண்டு போய் விடும்?
2. மேலை நாடுகள் கூட நமது பாரத இந்து கலாச்சாரம் தான் நல்லது என் முடிவெடுத்து நமது யோகக் கலை,காய்கறி உணவு முறை, arranged marriage, ஆகியவற்றில் ஈடுபாடு காட்டும் போது இங்கே செய்வது சரியா?
3. இந்தியா கலாசார சீரழிவின் விளிம்பை நோக்கி செல்கிறதா?
4. மென்பொருள் துறையில் கொட்டும் பெரும் பணம் செய்யும் புண்ணியம் இதுவா?
5. பெரியவர்கள் சொல்வார்களே "எதை இழந்தாலும் இழக்கலாம் நமது பண்பாட்டை இழக்கக்கூடாது". அந்த மாபெரும் தவறு நடந்துவிடும் போல் தெரிகிறதே?
பதில்: ஐந்து கேள்விகளுக்கும் எனது ஒரே பதில். நான் இட்ட இந்தக் காலத்து பசங்க ஹூம் என்னும் பதிவிலிருந்து தருகிறேன் அதை.
"இக்காலப் பசங்களுக்கு சொகுசே பிரதானமாகி விட்டது, சுத்தமா மரியாதையே இல்லை. அரசைத் துச்சமாக நினைக்கிறார்கள். தேகப் பயிற்சி செய்வதை விட வாய்க்கு அதிகப் பயிற்சி கொடுத்து வம்பு பேசவே ஆசைப்படுகிறார்கள். குழந்தைகள் கொடுங்கோலர்களாகி விட்டார்கள். வீட்டுக்கு அடங்குவதில்லை. தாய் தந்தையரை எதிர்த்து பேசுகின்றனர். பெரியவர்கள் வந்தால் மரியாதையாக எழுந்து நிற்பதையே விட்டு விட்டனர். நாசூக்கிலாமல் வாயில் உணவை அடைத்துக் கொள்கின்றனர். ஆசிரியர்களிடம் அடாவடி செய்கின்றனர்."
மேலே இருப்பது சமீபத்தில் கி.மு. 399-ல் காலமான சாக்ரட்டீஸ் கூறியதாக இப்போது அறியப்படுகிறது. இல்லை, இது சாக்ரட்டீஸ் சொன்னது இல்லை என்று சிலர் வாது புரிய தயாராகலாம். சரி, சாக்ரட்டீஸ் சொல்லவில்லை. யாரோ பொலோனியஸ் கூறியிருப்பார், அரிஸ்டாட்டிலாகக் கூட இருக்கலாம். அதை விடுங்கள். நான் சொல்ல வருவது வேறு.
அந்தக் காலம் போல வருமோ என்று பெரிசுகள் என்னைப் போன்ற இளைஞர்களிடம் இப்போதும் பெருமூச்சு விடும்போது, நான் அவர்களிடம் சாக்ரட்டீஸ் கூறியதாகச் சொல்லப்படுவதை பெயர் குறிப்பிடாமல் கூற, அவர்களும் ஆவலுடன் யார் சொன்னது என்று கேட்க நான் சாக்ரட்டீஸ் கூறியது என்று போட்டு உடைப்பேன். நேற்றுக் கூட அறுபது வயது இளைஞனாகிய இந்த டோண்டு ராகவன், 55 வயசான ஒரு பெரிசிடம் இதைக் கூற அவர் ரொம்பவே நொந்துப் போனார்.:)))" (தற்சமயம் 62 வயது என்ற இற்றைப்படுத்தல் தவிர மேலே சொன்ன பதில் அப்படியே வைக்கப்படுகிறது)

அனானி (29.05.2008 மாலை 06.11-க்கு கேட்டவர்)
1. கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி எப்படி சாத்தியமாயிற்று? கூட்டணி குழப்பத்தையும் தாண்டி (போன ஆட்சி கடைசி நேர கவிழ்ப்பு)
பதில்: பி.ஜே.பி. வெற்றி பெற காங்கிரசும் தேவ கௌடாவும் ஓவர்டைம் போட்டு வேலை பார்த்துள்ளார்கள். :))))
2. வழக்கம் போல் ஓட்டு சதவிகிதத் கணக்கு கொஞ்சம் வேடிக்கை காட்டுகிறதே?
பதில்: ஏன், கூட்டினால் 100% வரவில்லையா?
3. முழு 5 ஆண்டு ஆட்சியை முடிக்க விடுவார்களா சயேச்சைகள்?
பதில்: காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
4. காவிரி பிரச்சனை,ஹோகனேக்கல் குடி நீர் பிரச்சனைகளில் தமிழகத்துக்கு இப்போதாவது மத்திய அரசின் சலுகை கிடைக்குமா?
எந்த அடிப்படையில் கேட்கிறீர்கள்?
5. குஜராத் புகழ் மோடி போல் எடியூரப்பாவும் திறமைசாலியா?
பதில்: மோடியின் கேஸ் வேறு. அவருக்கு பெரும்பான்மையில் சோதனை ஏதும் இல்லை. கறைபடாத கை அவருடையது என்பதை அவர் எதிரிகளே ஒத்து கொள்வார்கள். அரசியல் மனவுறுதி அவரிடம் உண்டு. அவற்றில் பாதியாவது எடியூரப்பாவிடம் இருந்தால் கர்நாடகத்துக்கு அது நல்லது.
6. துக்ளக் சோ அவர்களும் தாங்கள் சந்தோஷப்பட்டு தனிப் பதிவு போட்டது போல் சிறப்பு தலையங்கம் எழுதி பகுத்தறிவு கட்சிகளின் கடும் கோபத்துக்கு ஆட்படுவார் போல் தெரிகிறதே? இனி கச்சேரி சூடு பிடிக்குமா?
பதில்: அவர் தலையங்கம் எழுதியாகி விட்டதே. அதைப் பார்த்துத்தானே நானும் பதிவு போட்டேன்.
7. தமிழகத்தில் உயர் சாதி பிரிவுகளில் பெரும்பான்மை பிராமண குலத்தவர் மட்டும் பா.ஜ.க.வை ஆதரிப்பது ஏன்?
தமிழ்க பி.ஜே.பி. யில் பார்ப்பனர் மட்டுமா உள்ளனர்?
8. உ.பி.யில் செல்வி மாயாவதி பின்னால் அவர்கள் அணிவகுத்ததற்கு பா.ஜ.க வின் மேல் உள்ள கோபமா?
பதில்: யாருக்கு?
9. தமிழகத்திலும் மாயாவதி பாணி செயல் படுத்த முயலுவதாக தகவல்கள் உண்மையா?
பதில்: தலித் பார்ப்பனர் கூட்டணியா? சான்ஸே இல்லை. ஏனெனில் பார்ப்பனர்கள் உ.பி. மாதிரி இங்கு கணிசமான அளவில் இல்லையே.
10. தலித்களும்,உயர் சாதி பிரிவினரும் (பிராமணர்)சேர்ந்தால் வெற்றி என்பது இங்கு (கட்டுக் கோப்பான மைனாரிட்டி மற்றும் வலிமையான பிற்படுத்த பட்ட மக்களின் வாக்கு வங்கிஐ எதிர்கொண்டு)) சாத்தியமா?
மேலே உள்ள கேள்விக்கும் இதற்கும் ஒரே பதில்தான்.

அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/29/2008

மனம் நிறைவு தரும் பி.ஜே.பி.யின் வெற்றி கர்நாடகாவில் !

முதல் தடவையாக பி.ஜே.பி. ஒரு தென்னிந்திய மாநிலத்தில் ஆட்சியை பிடித்ததற்கு முதற்கண் அதற்கு வாழ்த்துக்கள். இடதுசாரி பத்திரிகையாளர்களின் சங்கடமான எதிர்வினைகள் பார்க்கக் கண்கொள்ளா காட்சி. மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. என்ன, இன்னும் ஒரு 4 சீட்டுகள் கிடைத்திருந்திருக்கலாம். பரவாயில்லை, அதனாலாவது பி.ஜே.பி. கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கும். அதுவும் நல்லதுக்குத்தான் என வைத்து கொள்வோமே.

வழக்கம்போல தங்களுக்கு சாதகமான நிலை வரவில்லை என்றவுடன் எல்லா தரப்பினருமே மேற்கொள்ளும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைக்கு சாதகமாக எழுதுவது இம்முறை இடது சாரியினரின் முறை. நம்ம ஞாநியும் தனது லேட்டஸ்ட் ஓ பக்கத்தில் எழுதி விட்டார். அது நம்ம நாட்டுக்கு ஒத்து வராது என்பதுதான் என் எண்ணம். அதன்படி இம்முறை கர்னாடகாவில் சீட்டுகளின் எண்ணிக்கை காங்கிரஸ் 77, பி.ஜே.பி. 42 தேவகௌடா 42. கூடவே ஒரு சதவிகித அளவில் ஓட்டுக்களை பெற்ற உதிரிக் கட்சிகளுக்கும் ஆளுக்கு 2 சீட்டுகள். இதை வைத்து என்ன செய்வது? நாக்கை வழிக்க வேண்டியதுதான். இதையெல்லாம் யோசித்துதான் பிரிட்டனின் முறையை இந்தியா மேற்கொண்டது. அமெரிக்காவில் கூட ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக வோட்டு பெறும் குடியரசுத் தலைவர் வேட்பாளர்களுக்கு அந்த மாநிலத்தின் மொத்த எலெக்டோரல் காலேஜின் ஓட்டுகளும் கிடைக்கும். இல்லாவிட்டால் இஸ்ரேல் போல ததிங்கிணத்தோம் போட வேண்டியதுதான்.

ஞாநி கிளப்பிய இன்னொரு விஷயம் கர்நாடகாவில் உள்ள எல்லா பெரிய கட்சிகளின் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்தான். எடியூரப்பா வசம் 4 வீடுகள், அவற்றில் ஒன்றின் மதிப்பு மட்டும் 2 கோடி, தவிர நஞ்சை 32 ஏக்கர்கள். குண்டு ராவ் மகன் தினேஷுடைய சொத்து 20 கோடி. காங்கிரஸ் வேட்பாளர் சிவக்குமார் என்பவர் சொத்து 77 கோடி. சில வேட்பாளர்களின் சொத்து போன தேர்தலில் காட்டியதையும் இப்போது காட்டுவதையும் வைத்து பார்க்கும் போது 6 மடங்கு உயர்ந்திருக்கிறது.

அப்படியா ஞாநி சார்? தமிழகத்தின் நிலை என்ன? கருணாநிதி அவர்களது சொத்து விவரம் என்ன? அது கடந்த முறையிலிருந்து எவ்வளவு மடங்கு உயர்ந்தது? கூடவே மருத்துவர், டி.ஆர். பாலு, அன்புமணி ஆகியோர் விஷயம் என்ன? நம்மவருடன் ஒப்பிடும்போது கர்நாடகா அரசியல்வாதிகள் பாப்பாக்களாக இருப்பது போன்று தோன்றவில்லை?

அது சரி, மோடியின் சொத்து விவரம் என்ன ஞாநி அவர்களே? அத்துடன் அவரால் குஜராத் அரசின் வருமானம் சரியான வரிவசூல் முறையால் எவ்வளவு அதிகம் ஆனது? இதையெல்லாம் எழுதும் தில் இருக்கிறதா? எழுத மாட்டீர்களே! பாம்பு பிடுங்கியது போல துடிப்பீர்களே!

எல்லாவற்றையும் விட மனதுக்கு நிறைவு அளிப்பது ஜூனியர் அன்னை மாதா தாயார் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் பிரசாரத்துக்கு பலன் இல்லாது போனதுதான். அவர்களால் காங்கிரசுக்குத்தான் இழப்பு அதிகம் என்பதை அக்கட்சி உணரும் வரை கதை கந்தல்தான். வரிசையாக பல மாநிலங்களில் அடைந்து வரும் தோல்விகள் இருந்த செல்வாக்கையும் சோனியா இழந்து வருகிறார் என்பதைத்தான் காட்டுகின்றனர். இதை காங்கிரஸ் உணராதவரை பி.ஜே.பி. -க்கு நல்லது என்று துக்ளக் எழுதுவதில் உண்மை இருக்கிறது.

தமிழகத்திலும் பி.ஜே.பி. அதிகம் உழைக்க வேண்டும். ஓரிரு தேர்தல்களில் தோற்றாலும் பரவாயில்லை. தனி ஆட்சியை அடைய முழுநேர வேலை செய்ய வேண்டும். திருநாவுக்கரசர் போன்றவர்களை ஊக்குவிக்க வேண்டும். வரும் தேர்தலில் ஜெயிக்கக் கூடிய தொகுதிகளாக ஒரு பத்தை தேர்ந்தெடுத்து தனியாக வேட்பாளர்களை நிறுத்தி பார்க்கலாம். அப்படி வரும் தோல்வியும் கவுரமானதாகவே இருக்கும். திராவிடக் கட்சிகள் முதுகில் சவாரி செய்வது நிரத்தர அடிமை சாசனம் எழுதித் தருவதற்கு சமம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு (29.05.2008 பிற்பகல் 3.00 மணிக்கு சேர்க்கப்பட்டது)
பி.ஜே.பி.யின் வெற்றி மனதுக்கு நிறைவை தந்த ஜோரில் மனதுக்கு மிக்க மகிழ்ச்சியளித்த செய்தியை சேர்க்க மறந்து விட்டேன். அந்தாள் முட்டாள் வட்டாள் நாகராஜ் டிபாசிட் இழந்தார். இது தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும்.

5/27/2008

சினிமா படங்கள் சில ஏன் இன்னும் மனதில் நிற்கின்றன? (பூர்வ ஜன்ம படங்கள்)

இது சம்பந்தமாக நான் இட்ட எனது முந்தைய பதிவை தொடர்வதாக முதலில் எண்ணம் இல்லை. ஆயினும் அப்பதிவு கிளப்பிய எண்ணங்கள் மேலும் பதிவுகளை போட தூண்டுகின்றன ('கிழிஞ்சுது கிருஷ்ணகிரி' என கத்தும் முரளி மனோஹர் சற்றே அமைதி காக்கட்டும்).

பகவத் கீதையை பார்த்தனுக்கு உபதேசிக்கும் கிருஷ்ணர் கூறுகிறார். "அருச்சுனா, நீயும் நானும் இதற்கு முன்னால் எண்ணற்ற பிறவிகள் எடுத்துள்ளோம். நம்மிருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், உனக்கு அவற்றில் ஒன்று கூட ஞாபகம் இல்லை, எனக்கு எல்லாமே நினைவில் உள்ளன". முந்தைய பிறவி என்னும் கான்சப்ட் இந்து மதம், புத்த மதம் ஆகிய மதங்களில் ஒப்பு கொள்ளப்பட்ட தத்துவம். அது உண்மை என்பதால் நம்புகிறோமா, அல்லது அது தேவை என்பதால் அதை உறுதிபடுத்துகிறோமா என்பதற்கு சாதகமாகவும் பாதகமாகவும் பல கருத்துக்கள் உள்ளன. அவை இப்பதிவின் விஷயம் அல்ல.

இந்தியாவில் பல வெற்றிப் படங்கள் இந்த பூர்வ ஜன்ம ஞாபகத்தை வைத்து எடுக்கப்பட்டவை. நான் தரும் உதாரணங்கள் நான் பார்த்த அல்லது கேட்டு அறிந்த இந்தி மற்றும் தமிழ் படங்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

மதுமதி
சமீபத்தில் 1960-ல் நான் இப்படத்தை பார்த்தபோது அப்படம் ஏற்கனவே ஒரு வருடம் பழையது. அப்போது ஹிந்தி படிக்க மட்டும் தெரியும், வேகமாக பேசினால் புரிந்து கொள்ள இயலாது. அப்படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு, ந்ல்ல பாட்டு, திலீப் குமார் வைஜயந்திமாலா நடிப்பு ஆகியவை. இன்னொரு காரணமும் உண்டு, அதுதான் பூர்வ ஜன்ம விஷயம். பல பிறவிகள் உண்டு என்பதை உறுதியாக நம்புகிறது இந்திய மனம். ஒரு பிறவியில் நிறைவேறாத ஏக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள ஆத்மாக்கள் அலைகின்றன என்பதை நினைக்கும்போதே மயிர் கூச்செரிகிறது. அதே படத்தை நான் 1975-ல் பார்த்தபோது வரிக்கு வரி ரசித்து இன்னும் அதிகம் அனுபவிக்க முடிந்தது. முந்தைய பிறவியில் காதலி முதலில் இறந்து, பிறகு அவளது ஆவி காதலனையும் தன்னுடன் மரணத்துக்குள் அழைத்து செல்கிறது. அடுத்த பிறவியில் காதலன் தன் மனைவியை வரவேற்க ரயில் நிலையம் செல்லும் சமயத்தில் புயலில் சிக்கி தன் நண்பனுடன் ஒரு மாளிகையில் அடைக்கலம் புக, அங்கு அவனுக்கு முந்தைய ஜன்மம் ஞாபகத்துக்கு வர, தன் நண்பனுக்கு அக்கதையை கூறுகிறான். கடைசியில் இன்னொன்றும் கூறுகிறான், இந்தப் பிறவியில் அதே காதலிதான் அவனுக்கு மனைவியாக வந்திருக்கிறாள் என்று. ரயில் வந்ததும் அவளை பார்த்து, அணைத்து தங்களது பந்தம் ஜன்ம ஜன்மமாக தொடர்கிறது என்று கூறுகிறான். அதற்குள் குழந்தை அழும் சத்தம் கேட்க, அவன் மனைவி நாணத்துடன் ரயிலிலேயே பிரசவம் ஆகிவிட்டது எனக்கூறுகிறாள். காமெரா அக்குழந்தையின் கள்ளமற்ற முகத்தை ஜூம் செய்கிறது படமும் முடிகிறது. பிறகு அவன் அக்கதையை மனைவிடம் கூறுகிறானா, அவளும் அதை நம்புகிறாளா என்பதையெல்லாம் பார்ப்பவர்களின் ஊகத்துக்கே விட்டு விடுகிறார், கதையை சரியான இடத்தில் முடிக்க தெரிந்த படத்தின் இயக்குனர். இம்மாதிரி அக்கதையில் பின்னால் என்ன நடந்திருக்கும் என்பது பற்றிய ஊகங்களே அம்மாதிரி படங்களின் வெற்றிக்கு ஒரு காரணம். "ஆ ஜா ரேஏஎ பர்தேசி", "கடீ கடீ மெரா தில் தட்கே", "ஜுல் மே சங் ஆன்க் லடீ", "தில் தடப் தடப் ரஹே ஹை"

கரண், அர்ஜுன்:
தொண்ணூறுகளில் வந்து சக்கைபோடு போட்ட படம். கரண், அர்ஜுன் என்னும் தன் இரு புதல்வர்கள் உள்ளூர் மிராசுதாரரின் ஆட்களால் கொல்லப்பட, சீறி எழுந்த அந்த தாய் தன் புதல்வர்கள் மீண்டும் பிறந்து வந்து தனக்காக பழி வாங்குவார்கள் என சபதம் செய்து அதே ஊரில் இருக்கிறாள், எல்லோரது கேலியையும் பொறுத்து கொண்டு. அதே மாதிரி பிள்ளைகள் பிறந்து வந்து தாய்க்காக பழி வாங்குவதுதான் கதை. ராக்கி, சல்மான் கான், ஷாருக் கான் ஆகியோரது அமர்க்களமான நடிப்பு ஆகியவை கதையின் ப்ளஸ் பாயிண்டுகள்.

மிலன்:
சமீபத்தில் 1967-ல் வந்த படம். நான் அதை 1969-ஆம் ஆண்டுதான் பார்த்தேன். 'நாம் இருவரும் யுகயுகமாக உள்ளங்கள் ஒன்றுபடும் இப்பாட்டை பாடிக் கொண்டே வருகிறோம்' என்னும் பொருள் வரும் 'ஹம்தும் யுக் யுக் மே தோ கீத் மிலன் கே காதே ரஹேன் ஹைன்' என்ற அந்தப்பாடலுடன் கம்பீரமாக படம் ஆரம்பிக்கிறது. நாயகன் நாயகி திருமணத்துக்கு பிறகு தேனிலவின் போது கங்கையில் படகில் செல்லும் தருணம் கதாநாயகனுக்கு முந்தைய பிறவி ஞாபகத்துக்கு வர, கதை விறுவிறு என்று செல்கிறது. 'மூகமனசுலு' என்ற பெயரில் சாவித்திரி நாகேஸ்வரராவ் நடித்த இந்த தெலுங்கு படத்தின் ஹிந்தி மொழியாக்கம்தான் மிலன். நான் அதைத்தான் பார்த்தேன். இதிலும் கதாநாயகனும் நாயகியும் ஒன்று சேராமல் மரணிக்க, அடுத்த பிறவியில் சேர என பார்வையாளர்களின் மனதுக்கு இதமான முறையில் அளிக்கப்பட்ட இப்படம் வெற்றியடைந்ததில் ஆச்சரியமே இல்லை. 'சாவன் கா மஹீனா' பாடலை கேட்காத செவியும் செவியோ. சுனில் தத் மற்றும் நூதன் அமர்க்களமான நடிப்பு இன்னொரு ப்ளஸ் பாயிண்ட். அதே படத்தை சாவித்திரி 'பிராப்தம்' என்ற பெயரில் தயாரித்து படம் வெற்றியடையாது ஊற்றிக் கொண்டது அவர் வாழ்க்கையில் மாறாத சோகமே.

The re-incarnation of Pter Proud:
மறுபிறவி கான்சப்டை வைத்து வந்த ஆங்கிலப்படம். பாவம் அதன் தயாரிப்பாளர். ஒரு சராசரி இந்தியத் தயாரிப்பாளர் அனாயாசமாக முடித்திருக்கக் கூடிய கதையை நம்பும்படி காட்ட ரொம்பவே கஷ்டப்பட்டார். ஆனால் அதன் ஹிந்தி மொழியாக்கம் அமர்க்களமான வெற்றி பெற்றது. ரிஷி கபூர், சிமி கரேவால், டீனா முனீம் நடித்தது. "ஓம் சாந்தி ஓம்" என்னும் பாடல் பெரிய ஹிட். படம் சமீபத்தில் 1985-ல் வந்தது. முந்தைய பிறவியின் அநீதியை இப்பிறவியில் வந்து சரி செய்யும் இக்கதை இந்திய பார்வையாளர்களது ஏகோபித்த பாராட்டை பெற்றது. என்ன, படத்தின் பெயரை மறந்து விட்டேன். யாராவது தெரிந்தால் கூறவும். (அப்படத்தின் பெயர் KARZ என்று எழுதி என் நினைவை தூண்டிய செய்யார் தமிழ் அவர்களுக்கு என் நன்றி). ஆனால் அவர் சொன்ன 'நெஞ்சம் மறப்பதில்லை'ன் கதை 'மதுமதியின்' கதை அல்ல. அந்த ரேஞ்சில் இப்படம் இருந்தது என்று கூறினால் மறுப்பு இல்லை).

தமிழில்? எனக்கு தெரிந்து 'நெஞ்சம் மறப்பதில்லை' இருக்கிறது, ஆனால் நான் பார்க்கவில்லை. சில பாடல்கள் மட்டும் கேட்டுள்ளேன். ஆகவே அது பற்றி நான் எழுதினால் சரியாக இருக்காது. பிராப்தம்? மிலன் இருக்கும்போது அது ரிஜக்டட்.

நான் உணர்ந்தவரை பூர்வ ஜன்ம படங்கள் வெற்றி பெறும் காரணங்கள் சில: 1. அந்த கான்சப்ட் நம் ரத்தத்தில் ஊறியுள்ளது. 2. ஒரு பிறவியில் கெட்டது நடந்தால் அடுத்த பிறவியில் அதை சரி செய்கிறார்கள். 3. மரணத்துக்கு பின் என்ன என்ற பயத்தை அது சுமாராக போக்குகிறது.

இந்த வரிசையில் இன்னும் பதிவுகள் வரக்கூடும். முரளி மனோகர், மன்னித்துவிடு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

28.05.2008 காலை சேர்க்கப்பட்டது:
திடீரென நினைவுக்கு வந்தது. சந்திரமுகியை எப்படி மறந்தேன்? மேலே குறிப்பிட்ட படங்களைப் போல நேரடியான பூர்வ ஜன்ம கதை இல்லாததால் இதை நான் முதலில் சேர்க்காமல் விட்டேன் என நினைக்கிறேன்.

ஆனால் யோசித்து பார்த்ததில் இதையும் சேர்த்திருக்க வேண்டும். என்ன ஒரே ஒரு பாத்திரத்துக்குத்தான் பாதிப்பு பழைய கதையால் வருகிறது. அதுவும் ஜோதிகாதான் முற்பிறப்பில் சந்திரமுகி எனக்கூட கூறவில்லை. ஆவியாக அலைந்த சந்திரமுகி ஜோதிகாவின் உடலில் புகுந்தது என கதை போகிறது. இருப்பினும் ஒரிஜினல் சந்திரமுகியின் சோகம் மனதை தாக்குகிறது. அவளது தாபத்தை ஜோதிகா 'ரா ரா சரசுக்கு ரா ரா' என்ற பாட்டில் தனது கண்களாலேயே அழகாகக் காட்டுகிறார். ரஜனி நடித்த அந்த பாத்திரம் புதுமுறையில் அந்த ஆவியை சாந்தப்படுத்துகிறார். அதுவும் திருப்தியடைந்து சென்று விடுகிறது. ஆக, எல்லோருக்கும் இதில் திருப்தியே.

இங்கு இன்னொரு விஷயம் கூற வேண்டும். சந்திரமுகி ஏற்கனவே சமீபத்தில் 1978-ல் "ஆயிரம் ஜன்மங்கள்" என்னும் பெயரில் வந்து சுமாரான வெற்றி பெற்றுள்ளது. ஜோதிகா ரோலுக்கு லதா, அவரை பீடிக்கும் ஆவி ரோலுக்கு பத்மப்பிரியா, பிரபு ரோலுக்கு விஜயகுமார், ரஜனி ரோலுக்கு அதே ரஜனியே. இதுவும் உண்மையாக பார்த்தால் பூர்வ ஜன்ம கதை இல்லைதான். பத்மப்பிரியா விஜயகுமாரின் முன்னாள் காதலி. அவர் கொலை செய்யப்படுகிறார். அவரது ஆவி லதாவின் உடலில் புகுந்து கொள்கிறது என்று கதை போகிறது. இங்கும் ரஜனி வந்துதான் ஆவியை விரட்டுகிறார். என்ன, இக்கதையில் ஆவி மறுபடியும் அலைகிறது. அந்த விஷயத்தில் சந்திரமுகி ரொம்பவும் மேல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/26/2008

சினிமா படங்கள் சில ஏன் இன்னும் மனதில் நிற்கின்றன?

எனது பாண்டவர் பூமியும் டோண்டு ராகவனும் பதிவு கிளப்பிய எண்ணங்கள் இப்பதிவின் விஷயம். அப்பதிவில் குறிப்பிட்ட விஷயங்களால் அப்படத்தை நான் எப்போதுமே மறக்கக் கூடியவன் அல்ல. அதே போல வேறு சில படங்களும் என் மனதில் எப்போதும் நிலைத்துள்ளன. முதலில் பாண்டவர் பூமி.

இதில் ஒரு அதிசய விஷயம் ஆனால் உண்மை. அப்படத்தை நான் முதலிலிருந்து கடைசி வரை ஒரேயடியாக ஒருமுறையும் பார்த்ததில்லை என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். கதையை முதலில் அவுட்லைனாகக் கேள்விப்பட்டேன். சரி நம்ப ஊர் ரங்காவுக்கு வந்தால் பார்த்து விடவேண்டியதுதான் என்று தீர்மானமும் செய்தேன். படமும் ரங்காவுக்கு வந்தது. ஆனால் பார்க்க நேரம் வரவில்லை. ஏனெனில் அவ்வளவு வேலை, தில்லி வாடிக்கையாளரிடமிருந்து. படத்துக்காக 3 மணி நேரம் கூட ஒதுக்க இயலவில்லை. சரி, தொலைக்காட்சியில் பார்த்து கொள்ளலாம் என்றால் அதுவும் நடக்கவில்லை. எப்போதெல்லாம் அது வந்ததோ, ஏதாவது நடந்து என்னை பார்க்கவே விடவில்லை. கேபிள் கட், மின்சாரம் கட் என்று படுத்தியது.

இருந்தாலும் ஒரு வழியாக பகுதி பகுதியாகப் பார்த்தேன் என வைத்து கொள்ளுங்கள். மற்ற படங்களை பற்றி பேசுமுன் சில வார்த்தைகள் இப்படத்தைப் பற்றி.

எல்லா காட்சிகளுமே காவிய ரேஞ்சுக்கு உள்ளன. ராஜ்கிரண்தான் கதையின் உண்மையான கதாநாயகன். அருண்குமார் செகண்ட் ஹீரோ என்று வேண்டுமானால் கூறலாம். அப்படி பின்னிபெடலெடுத்து விட்டார் ராஜ்கிரண். ரஞ்சித் சிறையிலிருந்து திரும்பி வந்து தனக்காக காத்திருக்கும் தன் அக்கா மகளை பார்த்து காட்டும் ரியேக்‌ஷன் சூப்பர். தான் வெட்டி சாய்த்த சகோதரியே திரும்பவும் அவள் ரூபத்தில் வந்துள்ள அப்பெண்ணை தான் எப்படி மணம் முடிப்பது என்று கேட்கும் காட்சியில் கவிதையே ஓடுகிறது.
(ரஞ்சித் என்று சரியான பெயரை தந்து உதவியதற்கு நன்றி ஸ்ரீதர் நாராயணன் அவர்களே).

ஓக்கே என்னை பாதித்த மற்ற திரைப்படங்களை பற்றி.

காதலிக்க நேரமில்லை: சமீபத்தில் 1964-ல் வெளிவந்த இப்படத்தை பார்க்கும்போதெல்லாம் விடுமுறை மூட் வந்து விடுகிறது. கதையிலும் ராஜஸ்ரீயும் காஞ்சனா கோடை விடுமுறைக்குத்தானே வீட்டுக்கு வருகிறார்கள். நான் கூட அப்படத்தை எனது முதல் ஆண்டு தேர்வுகள் முடிந்து கடை நாள் மாலை காட்சியில்தான் அப்படம் பார்த்தேன். ஸ்ரீதர் கூறியிருந்தது போல ஒருவரும் அப்படத்தில் அழவில்லை. சோகக் காட்சியே லேது. எல்லாமே ஜாலியாகப் போயிற்று. "என்னப் பார்வை இந்தப் பார்வை, இந்தப் பார்வை" பாடல் படமாக்கப்பட்டதுதான் அப்படத்தின் கடைசி ஷூட்டிங் என கேள்விப்பட்டேன்.

கலங்கரை விளக்கம்: இப்படத்தை நான் பார்க்கவில்லை. எனது முரட்டு வைத்தியம் - 1 பாதிப்பில் நான்கு ஆண்டுகள் படம் பார்க்காது இருந்தேன். அதில் மிஸ் செய்த படங்களில் இதுவும் ஒன்று. ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் Vertigo (starring James Stewart, kim Novak) படத்தின் தழுவல் இப்படம். படம் ரொம்ப சுமார்தான். ஆனால் அதன் பாடல்கள் என்னை மிகவும் பாதித்தன. "பொன்னெழில் பூத்தது"என்ற பாடல் மனத்துள் இன்னும் ஒலிக்கிறது. இதனுடைய இன்னொரு பாடல் "காற்று வாங்கப் போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன், அதை கேட்டு வாங்கிப் போனாள் அந்த கன்னி என்னவானாள்" பாட்டு நான் மாலை நேரத்தில் பரீட்சையில் தோல்வியடைந்த வெறுப்பில் கடற்கரையில் பைத்தியம் போல உலவும்போது ட்ரான்ஸிஸ்டர்களிலிருந்து நான் போகுமிடமெல்லாம் என்னைத் தொடர்ந்து வந்தது. அப்பாட்டைக் கேட்கும் போது சமீபத்திய 1965 இன்னும் சமீபத்தில் வருகிறது.

காக்கும் கரங்கள்:
நான் மேலே சொன்ன முரட்டு வைத்தியத்துக்கு முன்னால் கடைசியாகப் பார்த்த படம். அதன் பாடல்கள் எல்லாமே என்னைக் கவர்ந்தன, முக்கியமாக "ஞாயிறு என்பது பெண்ணாக" என்ற பாடல். அப்படம் ஜூன் 1965-ல் வந்த போதே பேசும்படத்தில் எழுதி விட்டார்கள், இந்த ஆண்டின் சிறந்த நடிகர் எஸ்.எஸ்.ஆர். என்று. உண்மை வாழ்க்கையில் கணவன் மனைவியே இப்படத்திலும் அதே ரோலில் நடித்தது எனக்கு பிடித்தது. அந்த விஷயத்தில் நான் சற்று செண்டிமெண்ட் பேர்வழி. இதனாலேயே எனக்கு ஜெமினி-சாவித்திரி ஜோடி பிடிக்கும்.

பார் மகளே பார்:
முரட்டு வைத்தியம் -1 முடிந்து நான் பார்த்த முதல் படம். பிடித்த பாடல்கள் "என்னைத் தொட்டு சென்றன கண்கள்" "நீரோடும் வைகையிலே" "அவள் பறந்து போனாளே".

புதிய பூமி:
என்னைப் புரட்டிப் போட்ட அந்த ஞாயிற்று கிழமையன்று பார்த்த படம் அல்லவா. அதற்காகவே அந்தப் படம் அந்தப் படம் என் மனதில் நிற்கும். வேறு காரணங்களே இல்லை.

எனது வாழ்வில் நடந்த பல முக்கிய நிகழ்ச்சிகளை நினைவுக்கு கொண்டு வருவதே நான் மேலே குறித்த படங்கள் என் மனதில் நிற்பதற்கு காரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/24/2008

பாண்டவர் பூமியும் டோண்டு ராகவனும்

எனது என்னைத் தொடர்ந்த கனவு ஒன்று பதிவில் குறிப்பிட்டதை இங்கு விரிவுபடுத்தி கூற இன்றுதான் வேளை வந்தது.

2001-ல் நாங்கள் சென்னைக்கு நிரந்தரமாக திரும்பிய அதே சமயத்தில் ராஜ்கிரண் நடித்த 'பாண்டவர் பூமி' படமும் திரைக்கு வந்தது. அப்படத்தின் கதை என் கதை போலவே இருந்தது. அதாவது சொந்த ஊருக்கே, பழைய வீட்டுக்கு குடிவருவது என்ற கதையின் கான்சப்டை மட்டும் கூறுகிறேன். அப்படத்தின் 'அவரவர் வாழ்க்கையில்' என்று தொடங்கும் பாட்டை எதேச்சையாக இன்று ரேடியோவில் கேட்டேன். சட்டென்று எனது ஞாபகம் 2001-க்கு சென்றது. ஆகவே இப்பதிவு. அதற்கு முன்னால் அதை வீடியோவாக பார்க்க: கீழே.



2001-ஆம் ஆண்டு மே மாதம் வரை சென்னைக்கு திரும்பும் எண்ணமே வரவில்லை. எனது மொழிபெயர்ப்பு வேலை அமோகமாக தில்லியில் நடந்து கொண்டிருந்தது. சென்னைக்கு சென்றால் அதெல்லாம் கிடைக்காதே என்ற எண்ணத்தில்தான் சென்னைக்கு திரும்புவதைப் பற்றி நினைக்கவே இல்லை. அந்த மாதத்தின் இரண்டாம் ஞாயிற்று கிழமை வீட்டு சொந்தக்காரர் வீட்டை சீக்கிரம் காலி செய்ய சொன்னார். அவருக்கு வீடு தேவை எனவும் கூறினார். தில்லி வாழ்க்கையில் இதுதான் ஒரு சிரமம். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோமா அதிலேயே இருந்தோமா என்று இருக்க இயலாது. ஒரு வீட்டில் சேர்ந்தாப்போல கடைசியாக நான் குடியிருந்த அந்த வீட்டில்தான் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இருந்திருக்கிறேன். அதுவே ஒரு ரிகார்ட் என்னைப் பொருத்தவரை. தில்லியில் இருந்த 20 ஆண்டுகளில் மொத்தம் ஏழு வீடுகள் மாறியிருக்கிறேன். திடீரென வீடு மாற்றவேண்டியிருக்கிறதே என்று ஆயாசமாக இருந்தது. அப்போதுதான் என் வீட்டம்மா கூறினார், பேசாமல் சென்னைக்கே திரும்பலாம் என. நான் தயங்கினேன், மொழிபெயர்ப்பு வேலைகள் என்னாகும் என்று. அதற்கும் அவர் பதில் வைத்திருந்தார். வீட்டு வாடகை தர வேண்டியிராது, ஆகவே மாதம் 5000 ரூபாய் இருந்தால் போதும் என்று உறுதியாகக் கூறினார். நானும் கணக்கு பார்த்தேன். தில்லியில் சேமித்த தொகைகளை அவ்வப்போது யூ.டி.ஐ. மாதவட்டி திட்டத்தில் போட்டு சுமார் 6000 ரூபாய் மாதவருமானம் வரும் நிலையிருந்தது. அப்போதைக்கு அது போதும் என அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். மேலும் என்னால் சும்மா இருக்க முடியாது என்றும், ஏதாவது செய்து மொழிபெயர்ப்பு வேலையை சென்னையிலும் வெற்றிகரமாக முடிப்பேன் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். என்னை சமீபத்தில் 1953-லிருந்து பார்த்து வருபவர் என்பதால் என்னைப் பற்றி நான் அறிந்ததைவிட அவர் அதிகமாகவே அறிந்திருந்தார் என்பதை நான் ஏற்கனவே அதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் சொல்லைக் கேட்டு வி.ஆர்.எஸ். வாங்கி வெற்றிகரமாக செயல்பட்டதன் மூலமும் அதற்கு முன்னால் பலமுறையும் அறிந்திருந்தேன்.

உடனே சென்னை நங்கநல்லூரில் எனது வீட்டை வாடகைக்கு விட்டு என் சார்பில் வசூல் செய்து வங்கியில் செலுத்தும் எங்கள் குடும்ப நண்பரின் மகளை டெலிஃபோனில் தொடர்பு கொண்டு இது பற்றி பேசினேன். அவர் குடித்தனக்காரர் இரு மாத வாடகை பாக்கி எனக் கூறினார். நல்லதாய்ப் போயிற்று, அம்மாத இறுதியில் வீட்டை காலி செய்யச் சொல்லி விட்டேன். அவரும் செய்து விட்டார். தில்லி வீட்டுக்காரரிடம் ஜூலை வரை நேரம் வாங்கிக் கொண்டு உடனே சென்னை விரைந்தோம். நாங்கள் சென்னைக்கு சென்ற அன்றுதான் குடித்தனக்காரரும் காலி செய்து போயிருக்கிறார். வீட்டை எங்கள் வசம் எடுத்து கொண்டோம். அடுத்த நாளைக்கு காண்ட்ராக்டர் ஒருவரை வரச்செய்து செய்ய வேண்டிய ரிப்பேர்கள் எல்லாவற்றையும் முடிவு செய்தோம். வீட்டில் இருந்த கிணற்றில் தண்ணீர் வற்றியிருந்தது. போர்வெல் போட ஏற்பாடு செய்தோம்.

இதில் ஒரு அதிசய விஷயம் என்னவென்றால், சென்னைக்கு திரும்பும் முடிவை மட்டும் நான் எடுத்தேன். உடனே காரியங்கள் நூல்பிடி கணக்காக நடந்தன. எல்லாமே முன்னோக்கிய படிகள்தான். செட்பேக் என்று ஒரு நொடியும் இல்லை. அதிலும் எங்கள் வீட்டில் இருந்த கடைசி குடித்தனக்காரன் ஒரு ஃபிராடு என்பது பிறகுதான் தெரிந்தது. அவன் வீட்டை காலி செய்து போனதையே பலர் அதிசயமாகப் பார்த்தனர். அந்த நேரம் பார்த்து அவன் பிள்ளை போலீஸ் கேசில் மாட்டிக் கொள்ள, அதிலிருந்து தப்பிக்கவே அவர்கள் அவசர அவசரமாக காலி செய்து சென்றனர் என்பது பின்னால் தெரிய வந்தது. எது எப்படியானால் என்ன, எங்கள் வீடு திரும்பக் கிடைத்தது எங்களுக்கு.

போர்வெல் போட கம்பெனி ஆட்கள் வந்தபோது அவர்கள் எங்கள் வீட்டுக்கு வருவதற்கு முன்னால் காலையிலிருந்து நான்கு வீடுகளில் முயற்சித்துள்ளனர். எல்லா இடங்களிலும் 100 அடிக்கு மேல் தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை. எங்கள் வீட்டிலோ 35 அடியிலேயே தண்ணீர் பீறிட்டு வந்தது. என் காலம் சென்ற தந்தை ஒரு புண்ணியாத்மா, அவரால்தான் அது நடந்தது. போர்வெல்லுக்காக இயந்திரம் சப்தத்துடன் குழாயை இறக்கும் பணியில் இருக்க, நான் பாட்டுக்கு வீட்டுக்கு முன்பக்கத்தில் மாடிப்படிக்கட்டில் அமர்ந்து தில்லி வாடிக்கையாளர் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய மொழிபெயர்ப்புக்கான ஆவணத்தின் ப்ரிண்ட் அவுட்டை வைத்து வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது கணினியோ இணைய இணைப்போ இல்லை. கையால்தான் மொழிபெயர்ப்பை காகிதத்தில் எழுதி தட்டச்சு செய்வித்து மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டியிருந்தது. பக்கத்தில் வைத்திருந்த அகராதிதான் துணை. சென்னைக்கு வந்து இரண்டே நாளில் வேலையும் பின்னாலேயே வந்தது அன்றைக்குத்தான். திடீரென போஸ்ட்மேன் ஒரு கவரை கொடுத்து விட்டு சென்றான். அதில் பொறியியல் கல்லூரி பழைய மாணவ சங்கத்திலிருந்து ஒரு அறிவிப்பு இருந்தது. சமீபத்தில் 1969-ல் கடைசி ஆண்டு மாணவர்கள் பெயர், புகைப்படம் மற்றும் முகவரி அடங்கிய கையேட்டிலிருந்து எனது முகவரியை எடுத்து அனுப்பியிருந்தனர். அந்த 32 வருட பழைய முகவரி மறுபடி 2001-ல் லேட்டஸ்ட் முகவரியானது எனக்கு நல்ல சகுனமாகவே பட்டது. தண்ணீரும் 35 அடியிலேயே கிடைத்தது. வேலையும் கைமேல் கிடைத்தது. ஆக, 'அது ஒரு நிலாக்காலம்' என்று நினைத்து ஏங்கிய 1969-ஆம் ஆண்டு 2001-ல் திரும்ப வந்ததுதான் எல்லாவற்றையும் விட மகிழ்ச்சி அளித்தது.

ஜூன் மாதம் முழுக்க வீட்டு வேலைதான். தில்லி வாடிக்கையாளரும் என்னை விடுவதாக இல்லை. மொழிபெயர்ப்பு வேலை பாட்டுக்கு தனியே நடந்து கொண்டிருந்தது. நான் சந்தோஷமாக மச்ச மச்சினியே பாட்டை கேட்டவண்ணம் வேலை செய்து வந்தேன். அந்த மாதம் நங்கநல்லூரில் இருந்த இந்தியன் வங்கி மற்றும் எங்கள் வீடுக்கு மிக அருகாமையில் இருந்த சிண்டிகேட் வங்கி ஆகியவற்றில் கணக்கு துவக்கி வைத்தேன்.

ஜூலை 4-ஆம் தேதி தில்லிக்கு திரும்பினேன், அங்குள்ள வீட்டை காலி செய்ய. ஓக்லாவில் இருந்த கண்டைனர் டிப்போவுக்கு சென்று புக் செய்தேன். அங்கிருந்த ஒரு லோடிங் ஒப்பந்தக்காரரை வீட்டுக்கு வரவழைத்து சாமான்களை கட்ட ஏற்பாடு செய்தேன். எரிவாயு சிலிண்டரை ரிடர்ண் செய்து, யூ.டி.ஐ. அலுவலகத்துக்கு போய் அங்கிருந்த அத்தனை மாத வட்டி திட்டங்களிலும் முகவரி மற்றும் வங்கி விவர மாறுதல்களையும் முறைப்படி தெரிவித்து கையொப்பமும் பெற்று கொண்டேன். இதற்கிடையில் தில்லி வாடிக்கையாளர் நான் அங்கு கடைசியாக தங்கியிருந்த அந்த சில தினங்களில் ஒரு பெரிய வேலை வேறு என்னை வைத்து செய்து கொண்டார். கண்டைனர் 12-ஆம் தேதி வந்து சாமான்களை ஏற்றி சென்றது. அன்றே வீட்டுக்காரர் வந்து விட்டார். அவரிடம் வீட்டை ஒப்படைத்து கீழே நண்பர் வீட்டில் தங்க வேண்டியிருந்தது. அடுத்த நாள் என் மனைவியின் அத்தை வீட்டுக்கு சென்று, 15-ஆம் தேதி ரயில் ஏறி 17 சென்னை திரும்ப வந்துதான் மூச்சு விட முடிந்தது. அதற்குள் கண்டைனரும் வந்து சேர்ந்து விட்டிருந்தது. 18-ஆம் தேதி அதை சென்னை வீட்டில் இறக்கினேன். உடனேயே வீட்டம்மா புது கேஸ் இணைப்பை பெற்று சிலிண்டர்களையும் ஆட்டோவில் ஏற்றி வந்து விட்டார். கேபிள் டி.வி. கனெக்‌ஷன் வேறு தனி சேனலில் நடந்தது. சாதாரணமாக சோம்பேறியான எனக்கு உட்காரக் கூட நேரமின்றி சுற்ற வேண்டியிருந்தது. ஜூலை 25 தில்லி வாடிக்கையாளர் கிட்டத்தட்ட 12 Access கோப்புகளை அனுப்பினார் ஜெர்மனிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்புக்கு. அது ஒரு பெரிய ப்ராஜக்ட். திசம்பர் வரை தொடர்ந்தது.

இத்தனை விஷயங்களும் நூல் பிடித்தது போல ஒரே நேர்க்கோட்டில் முன்னேற்ற திசையிலேயே நடந்ததுதான் இப்போதும் அதிசயமாக இருக்கிறது. ஒரு தடங்கலும் இல்லை. உதாரணத்துக்கு 12-ஆம் தேதி கண்டைனரில் சாமான்களை ஏற்றி அனுப்பி, அது ரயில்வே யார்டுக்கும் சென்ற பிறகு தில்லியில் அடுத்த இரண்டு நாளைக்கு பேய் மழை. காலையில் பெய்திருந்தால், நினைக்கவே நடுங்குகிறது மனது. அதே போல இங்கே 18-ஆம் தேதி எங்கள் வீட்டில் சாமான் இறக்கி விட்டு கண்டைனர் லாரி திரும்பச் சென்ற போது எம்.ஜி.ஆர். சாலையில் ஓவர்ஹெட் எலக்ட்ரிக் இணைக்கும் கேபிள் கண்டைனரால் அறுபட்டு, பெரிய சண்டை வந்து 19-ஆம் தேதி மாலை வரை அங்கேயே நின்றது. சாமானை இறக்கும் முன்னால் அது ஆகியிருந்தால் எங்கள் கதை கந்தல்தான். கண்டைனர் டிரைவர் திரும்ப வீட்டுக்கு ஓடி வந்து உதவுமாறு கேட்க, எலெக்ட்ரிகல் ஆட்களிடம் பேசி அவர்களுக்கு கொஞ்சம் ரூபாய் கையில் அழுத்தி டிரைவரை காப்பாற்றினேன்.

சென்னையில் மொழிபெயர்ப்பு வேலை சரியாக வருமா என நான் பயந்தது முழுக்கவே பொய்யானது என் தந்தையின் ஆசியால்தான். பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அக்கனவும் பிறகு வரவில்லை. 2002 பிப்ரவரியில் கணினி வாங்கி டெலிஃபோன் இணைய இணைப்பைப் பெற்றேன். அதே ஆண்டு 2002-ல் பிராட் பேண்ட் இணைப்பு. 2004 வரை தில்லி வாடிக்கையாளர்தான் அதிக வேலைகள் தந்தார். ஆகவே என்னால் சென்னையில் உள்ளவர்களுடன் தன்னம்பிக்கையுடன் பேரம் பேசி நல்ல விலைக்கு எனது சேவைகளை விற்க முடிந்தது. அந்த தில்லி வாடிக்கையாளரும் எனக்கு 2000 ஆண்டுதான் அறிமுகம். எனது மொழிபெயர்ப்பு வேகம் அவரை மிகவும் கவர்ந்து விட்டது. ஆகவே நான் சென்னைக்கு சென்றாலும் என்னை அவர் விட்டுத் தரவே இல்லை. அவருக்கு எனது நன்றி எப்போதுமே உரியது. ஆக, 2001-க்கு முன்னால் சென்னைக்கு கிளம்பியிருந்தால் இத்தனை வெற்றி கிடைத்திருக்குமா என்றால் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

சரியான நேரத்தில் திரும்பி சென்னைக்கு வந்ததில் வாழ்க்கை அற்புதமயமானது எனப் புரிந்தது. நான் பயந்ததற்கு மாறாக என் மொழிபெயர்ப்பு வேலைகள் மிக வேகமாக அதிகமாயின. தில்லியில் இருபது வருட மொழிபெயர்ப்புத் தொழிலில் சம்பாதித்ததை சென்னைக்கு வந்த பிறகு முதல் மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே மிஞ்ச முடிந்தது. இங்கு வந்ததில் கணினி அறிவு பெற்று, தமிழ்மணத்தில் வந்து, தமிழ் மொழிபெயர்ப்பிலும் முன்னேற்றம் பெற்று, இணையத்தில் இணையற்ற நண்பர்களை பெற முடிந்தது. இப்போது வயது அறுபத்திரண்டானாலும் மனதுக்கு என்னவோ 25வயதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/23/2008

டோண்டு பதில்கள் - 23.5.2008

அனானி: (16.05.2008 காலை 10.54-க்கு கேட்டவர்)
1. வெளிநாடுகளில் கடன்வாங்கி அந்தப் பணத்தில் இந்திய அரசாங்கம், இந்தியர்களின் உழைப்பையும் அறிவையும் பயன்படுத்தி பல முன்னேற்றங்களைச் செய்துவருகின்றது. அவை இந்தியர்களின் சாதனையாகவே கருதப்படுகின்றன. உதாரணமாக, இஸ்ரோ தயாரிக்கும் ராக்கெட் தொழில்நுட்பங்கள். வெளிநாட்டுப்பணம் இல்லாவிட்டால் இவர்களால் இதைச் செய்திருக்க முடியாது. இருப்பினும், வெளிநாட்டு மூலதனத்தை வைத்துக்கொண்டு இந்தியர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான பெருமை வெளிநாட்டினருக்கு போய்ச் சேரவேண்டுமா?
பதில்: யார்தான் கடன் வாங்கவில்லை? அமெரிக்காவையே எடுத்து கொள்ளுங்கள். கடன் வாங்கித்தான் தனது நாட்டையே நடத்துகிறது. ஆகவே இந்தியா இந்த விஷயத்துக்கு கடன் வாங்குவதில் தவறில்லை. அந்தக் கடனை ஒழுங்கான விஷயத்துக்கு செலவு செய்வது முக்கியம். அதைத்தான் இஸ்ரோ செய்கிறது. அவர்களுக்கு முழு பாராட்டுகள்.

2. இஸ்லாமிய, கம்யூனிஸ, ஆபிரகாமிய தீவிரவாதிகள் மிகத் தெளிவாக தாங்கள் இந்தியத் தீவிரவாதிகள் என்று சொல்லிவருகிறார்கள். ஆனால், இந்தியாவில் எப்போது குண்டு வெடித்தாலும் இது வெளிநாடுகளால் நடத்தப்படுவது என்று மீடியாக்கள், அரசியல்வாதிகள், அரசாங்கம் சொல்லிவருகின்றன. தீவிரவாதங்கள் இந்தியர்களால்தான் நடத்தப்படுகின்றது என்பதை இவர்கள் ஏன் மறைக்கவேண்டும்?
பதில்: யாரும் மறைப்பதில்லையே. இந்தியத் தீவிரவாதிகள் 90 விழுக்காட்டுக்கும் மேல் அயல் நாட்டு சதிக்காரர்களின் அல்லக்கைகள்.

3. கடந்த பத்து ஆண்டுகளில் இருபத்தி இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்துவிட்டன. இந்த சூழ்நிலையில் இருந்து நீங்களும், உங்களது குடும்பத்தினரும், அன்பர்களும் விடுபட்டு பாதுகாப்பாக இருக்கமுடியும் என்று நம்புகிறீர்களா?
பதில்: வாழ்க்கையின் நிலையாமையே அதுதான். நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. மேலும் தீவிரவாத சூழ்நிலை உலகின் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும்தான் உள்ளன. மரணம் எப்போது வேண்டுமானாலும் வரட்டும். இருக்கும் ஒவ்வொரு கணத்தையும் அணுஅணுவாக ரசித்து வாழ்வதுதான் புத்திசாலித்தனம்.


அரசன்:
1. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படங்களில் தங்களுக்கு பிடித்த படம் எது? விளக்குக
பதில்: சந்திரமுகி. அதுவும் அந்த கடைசி சீன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. களிதெலுங்கில் ரா ரா சரசுக்கு ராரா என்ற பாடலில் காதலியின் ஏக்கம் மிக அழகாகக் காட்டப்பட்டிருந்தது. அதே போல ரஜனி ஏற்ற பாத்திரம் தனது உயிரையும் பயணம் வைத்து செயல்பட்ட அந்தக் காட்சி கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. வினீத் மட்டும் லேசுப்பட்டவரா என்ன? அனாயாசமான அவரது நடன அசைவுகள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன.

2. பிரபாகரன் மறைவுக்கு பின்னர் ஈழ விடுதலை போராட்டம் தொய்வு அடைந்து விடுமா?
பதில்: ஈழ விடுதலைக்கு இந்தியா ஆதரவு தந்த நிலையில் அதை அனாவசியமாக கெடுத்து கொண்ட பிரபாகரனின் செயல் முட்டாள்தனமானது. இப்போது மிகக் குழப்பமான நிலை நிலவுகிறது. நாட்டை விட்டு வெளியேறிய ஈழமக்களது துயரம் மகத்தானது. ஆனால் பிரபாகரன் போன்றவர்களிடம்தான் அவர்களுக்கு விமோசனம் என்ற நிலைப்பாடு சரியானதாகப் படவில்லை.

3. கலைஞர் கருணாநிதிக்கு பிறகு திமுக உடையும் வாய்ப்பு உள்ளதா?
பதில்: தி.மு.கா வில் வாரிசுகளுக்கு பஞ்சம் இல்லை. அதே சமயம் உட்கட்சி ஜனநாயகமும் லேது என்ற நிலை வந்துவிட்ட நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

4. ஜெயலலிதாவிற்க்கு பிறகு அதிமுக என்ன ஆகும்?
பதில்: திமுகாவுக்கு எதிர் நிலை அதிமுகாவில். வாரிசு என்று யாரும் அடையாளம் காட்டப்படவில்லை. ஜெயலலிதா தான் எப்போதும் இருக்கப் போவதாக எண்ணியிருக்க வேண்டும், அல்லது தானே இல்லை என ஆகிவிட்ட நிலையில் அதிமுகாவுக்கு என்ன ஆனால் என்ன என்ற எண்ணம் அவருக்கு வந்திருக்க வேண்டும்.

5. ஈழப் போராட்டத்தில் இந்து ராம் நிலை என்ன? அவர் நிலை சரியா?
பதில்: ராம் பற்றி இந்த உரலில் நன்றாக தந்திருக்கிறார்கள், படியுங்கள். அவரது நிலை அவருக்கு. அது சரியா என்று கூறும் அளவுக்கு எனக்கு இந்த விஷயத்தில் நான் படித்ததைத் தவிர அதிகம் தெரிந்திராதவன். ஆகவே அவர் நிலை சரியா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.


அனானி (17.05.2008 அன்று காலை 08.34-க்கு கேட்டவர்):
1. துக்ளக் சோ பார்வையில் "உத்தப்பபுரம்" சுவர் விவகாரம் வேறு கோணத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஹிந்து நாளிதழ்கூட தகவலை தவறான புகைப்படத்துடன் வேறுமாதிரி பிரசுரித்ததாக (மின்வேலி பாதுகாப்புச் சுவர்) எழுதியுள்ளார் (துக்ளக் dated 21-05-2008). அந்த சுவர் பற்றி பல புதுத் தகவல்கள் தந்துள்ளார். உங்கள் கருத்து என்ன?
பதில்: எனது கருத்தை நான் எனது பதிவில் கூறிவிட்டேன். பிறகுதான் துக்ளக்கின் நிலையைப் பார்த்தேன். அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரடியாகச் சென்றுள்ளார்கள். அங்குள்ளவர்களுடன் பேசியுள்ளார்கள். உதாரணத்துக்கு சுவற்றில் மின்கம்பி பொருத்தவில்லை எனக சிலர் அவர்களிடம் கூறியுள்ளார்கள். அவ்வளவுதான். துக்ளக் இந்த பிரச்சினையை மைக்ரோ அளவிலதான் பார்க்கிறது என நினைக்கிறேன். ஆனால் தமிழகத்தில் இம்மாதிரி பல இடங்களில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற விசனத்துக்குரிய நிலைமைதான் இருக்கிறது.

2. தமிழக முதல்வர் மெல்லிய அணுகுமுறைக்கு அவரது பாசம்தான் (பிள்ளைமார் சமுகம் மீது)காரணமா? (அநேகமாக பிள்ளைமார் சமுகத்தில் பல உட்பிரிவுகள் உட்பட கழகத்தின் தீவிர ஆதரவாளர்கள்தான்).
பதில்: வேறு என்ன காரணம் இருக்க முடியும்? அவரும் சரி பெரியாரும் சரி, தலித்துகள் மற்றும் பார்ப்பனரல்லாத உயர்சாதியினரிடையே மோதல் வந்தால் அனுதாபம் பின்னவரிடமே உள்ளது. கீழ்வெண்மணியில் தலித்துகள் உயிருடன் எரிக்கப்பட்ட விவகாரத்தில் பெரியார் ஒரு விளக்கெண்ணெய் விளக்கம் கூறியது இதனால்தான்.
அவர் கூறியது என்ன என்பதைப் பார்ப்போமா? அதற்கு இந்தப் பதிவுக்கு போக வேண்டும்.
//கேள்வி: கீழ்வெண்மணியில் விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட போது பெரியார் கண்டு கொள்ளவில்லை என்று ஒரு பிரச்சாரம் நடை பெறுகிறதே?
பதில்: அக்கொடுமை நடந்த மறுநாள் விட்டு மறுநாள் (28-12-1968) தந்தை பெரியார் ஒரு நீண்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள்.
"கடைசி நடவடிக்கையாக நேற்று முன் தினம் தற்காப்புக்காக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உள்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டை பூட்டிக் கொளுத்தி, 42 பேரும் கருகிச் சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளையும் இது போன்ற அராஜகங்களையும் சட்ட விரோதங்களையும் அடக்கிட ஆட்சிகளால் முடியவில்லை. இந்தியாவை ஆள இந்தியருக்கு தகுதியில்லை. இதற்காக நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும் என்று கருதத் தேவையில்லை. அதற்காக அந்நியர் ஆண்டாலும் பரவாயில்லை" என்று எழுதி இருக்கின்றாரே - உண்மை இவ்வாறு இருக்க புழுதி வாரித் தூற்றுவோர் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்
(திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் பதில் - விடுதலை ஞாயிறு மலர் 11.2.2006)//

3. இல்லை (உயர் சாதிப்பிரிவினர் மீது)மேலும் கலைஞர் அவர்களின் அணுகு முறையில் இது நல்ல ஒரு மாற்றமா? (தாங்கள் ஒத்துக்கொள்ளமாட்டீர்களே!)
பதில்: மாற்றமாவது புடலங்காயாவது. ப்யூர் ஓட்டு வேட்டை சுவாமி.

4. வால்பையன் அவர்கள் ஆதரவுதரும் online trading ( உலகத்தின் பொருளாதாரத்தை உலுக்கும்) சாதகபாதங்களை துக்ளக் திரு எஸ்.குருமீர்த்தி அவர்கள் கட்டுரையை படித்தீர்களா? உங்கள் கருத்து யாது?
பதில்: உலகமயமாக்கல் பற்றிய எனது சிந்தனைகளைப் பார்க்கவும். மற்றபடி குருமூர்த்தி அவர்கள் ஆன்லைன் வர்த்தகத்தைப் பற்றி எழுதிய கருத்துகள் கவனத்துக்குரியவையே.

5. மத்திய அரசு ரயில்வே துறையில் மட்டும் தனியார் துறையில் உள்ளது போல் வசதிப்பெருக்கம்,நுகர்வோர் நலம் பேணுதல் எப்படி சாத்தியமாகிறது? அங்கு நடைபெறும் கட்டிட மாற்றங்கள் (தரை, கூரை, இடவசதிகள்....)மிகவும் தரமான போற்றுதலுக்கு உகந்த முறையில் நடை பெறுகிறதே? வழக்கமாக "hc/lq" (Highest commission lowest quotation)
தாரக மந்திரம் (அரசுத் துறையை சிரழித்த அணுகுண்டு)அங்கே கடைபிடிக்கப் படவில்லையா? அல்லது லல்லு அவர்கள் அதிகாரிகளுக்கு கொடுத்த முழுச் சுதந்திரம் காரணமா?

பதில்: லல்லு அவர்கள் மொத்தமான தனது நிலைப்பாட்டை கூறி அதிகாரிகளை அதன் செயலாக்கத்துக்கு பொறுப்பாக்கினார். அதை செய்ய அவர்களுக்கு பவர் தந்தார். அதே சமயம் அதை சரியாக பிரயோகிக்காது ஆட்டம்போட்டால் சங்குதான் என்பதையும் தெளிவாக்கினார்.

6. லல்லு அவர்கள் பாரத்தின் பிரதம அமைச்சராக மாறினால் எல்லா அரசுத்துரைகளும் (குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்கள்) புதுப்பிறவி எடுத்து எதிர்காலம் என்னவாகும் என்ற பயத்தில் இருக்கும் உழியர்களின் மனக் கலக்கம் மறையுமா.( அரசு மற்றும் உயர் அதிகாரிகளின் தவறான கொள்கை முடிவுகளால் அழிவின் விளிம்பில் பல பொதுத்துறை (உதாரணத்துக்கு-/ITI(TELEPHONE)-OOTY PHOTO FILM INDUSTRY.....) நிறுவனங்கள் உள்ளதாக செய்திகள் சொல்லுகின்றன.)
பதில்: எதை வேண்டுமானாலும் செய்யலாம். மனதுதான் வேண்டும். மோடி குஜராத்தில் செய்யவில்லையா. அவர் செய்ததை நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.


அனானி (18.05.2008, காலை 6.03-க்கு கேள்வி கேட்டவர்):
1. கூட்டணிக் கட்சி அமைசர்கள்(முதலில் டி.அர். பாலு அவர்கள்,இப்போது அன்புமணி அவர்கள்) செய்யும் தவறுகளை காங்கிரஸ் தலைவர்களின் சமாளிப்பு பற்றி தங்கள் கருத்து யாது?
பதில்: வெட்கம் கெட்ட பதவி ஆசை தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

2. அரசின் கையிலுள்ள அதிகார பவரை வைத்துக் கொண்டு அரசின் துறைகளை
முடக்கி தனியாருக்கு தாரை வார்ப்பது போன்ற "வல்லமைத்தனம்" கடவுளுக்கே அடுக்குமா?

பதில்: வியாபாரம் செய்வது அரசின் வேலை இல்லை என்பதை ஐம்பதுகளிலேயே மாமனிதர் ராஜாஜி கூறினார். அதை அப்போதே ஏற்றிருந்தால் நம் நாடு இவ்வளவு பின்தங்கியிருந்திராது.

3. அரசுத்துறையை.நலிவடைய செய்து பின் அத்துறையின் கடல் போன்ற சொத்துக்களை book value க்குவாங்கும் (market value வைவிட 10 ல் ஒரு பங்கு மதிப்பு) போக்கை உங்ளை போன்ற கடவுள் பக்தியுள்ளவர்கள் வன்மையாக கண்டிக்க வேண்டாமா? [51 % பங்குகளை மிக சொற்ப (பங்கு விலை குறைக்கவோ கூட்டவோ இவர்களுக்கு (இந்தியாவின் பங்கு வணிபத்தில்)சர்வ சாதாரணம்)) விலைக்கு வாங்கி owner ஆகும் "வல்லமை"]
பதில்: சொத்தை வெறுமனே வைத்து கொண்டு என்ன செய்வது? நாக்கை வழிக்க வேண்டியதுதான். மூலதனத் தொகையைப் போல பலமடங்குகள் விழுங்கிய வெள்ளை யானையாக செயல்பட்ட அரசுத் துறைகளால் நாட்டுக்கு எவ்வளவு நட்டம்? இந்த நிலை இந்தியாவில் மட்டும் இல்லை. சமீபத்தில் 1979-ல் பதவிக்கு வந்த மார்க்கரெட் தாச்சர் அம்மையார் இங்கிலாந்தில் சந்தித்த நிலையும் அதுவே. பல அரசு நிறுவனங்கள் வெள்ளை யானைகளாக இருந்து பணத்தை முழுங்கின. தாட்சண்யமே இன்றி ஒவ்வொன்றாக தனியார் மயமாக்கினார் அவர். மக்களும் அவரை ஆதரித்து எண்பதுகள் முழுக்க பிரதமராக இருந்து ஒரு ரிகார்டையே படைத்தார். நம் தேசத்திலும் அவரைப் போன்ற தலைவர்கள் தேவை. இந்த விஷயத்தில் லாலு அவர்களும் மோடி அவர்களும் தத்தம் இடத்தில் சரியாகவே செயல் படுகின்றனர்.

4. வறுமை கோட்டுக்கு கீழே வாழும் சுமார் 60 கோடி பேர்களும் கடவுளின் பிள்ளைகள் தானே.அவர்களுக்கு கொடுக்கவேண்டிய கல்வி,மருத்துவ உதவி,காப்பீட்டு உதவி,தங்கும் இட வசதி,உண்ண உணவு(விலைஏற்றம்) எல்லாம் கானல் நீராய் மாறி வருகிறதே.இது நல்லதற்கா?
பதில்: நல்லதற்கில்லைதான்.

5. தவறான முறையில் பணம் குவித்தவர்கள்(பெரும் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்கள்,அரசியல் தலைவர்கள்,ஹர்சத் மேத்தா போன்ற பங்குவர்த்தக மோசடிப் பேர்வழிகள்,உணவுப் பொருட்களை பதுக்கி கொள்ளை லாபம் அடித்தவர்கள்,கடத்தலில் கொடிகட்டி பறந்தவர்கள்,கள்ள சாராயம்,போலி மருந்து,அரசின் சொத்துகளை வளைத்து போட்டு புது தொழில் அதிபர்களாக வலம் வந்தவர்கள்.......etc..) இந்தியாவில் உள்ள சட்ட ஓட்டைகளை பயன் படுத்தி சுதந்திரமாக வலம் வருகிறார்களே இது தர்மமா?
பதில்: இது ஒரு விஷச்சுற்று. அநியாய முறையில் பணம் சம்பாதிப்பது, அதை நிலை நிறுத்திக் கொள்ள அதே அனியாய முறையில் அதே பணத்தை உபயோகிப்பது. நிலைமை சிக்கல்தான்.

6.தவறான முறையில் பணம் சேர்த்தால் தவறாமல் துன்பம் வரும் என்பது உண்மையாகுமா?
பதில்: கண்டிப்பாக வரும் அல்லது வரவேண்டும் என்பதே எனது பதில். இது பற்றி கவியரசு கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்து மதம்' அழகாக குறிப்பிடுகிறது.

7. ஆன்மீகத் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டால் தப்பிக்காலாமெனும் எண்ணம் என்னாவாகும்?
பதில்: அது மனித இனம் நாகரிகம் பெற ஆரம்பித்ததுமே தொடங்கி விட்டது. எந்த மதத்தினரும் இதற்கு விலக்கில்லை.

8. எல்லோரும் எல்லாமே பெறவேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும். இது இங்கே சாத்தியம் போல் தெரியவில்லயே?
பதில்: அவரவர் சாப்பாட்டுக்கு அவரவர்தான் உழைக்க வேண்டும். அதுதான் சாத்தியம். உழைக்காத சோம்பேறிகளுக்கு இல்லாமைதான் நிச்சயம்.

9. எல்லோரும் யாரை வேண்டுமென்றாலும் ஏமாற்றலாம், ஆனால் கடவுளை ஏமாற்றமுடியுமா?
பதில்: ஏமாற்றத்தானே, முடியும். ஆனால் கடவுளை அல்ல, நம்மை நாமே.

10."உப்பைத் தின்றவர்கள் தண்ணி குடிக்கவேண்டும் " என்று நம் முன்னோர்கள் சொன்னது என்னவாகும்?
பதில்: அது எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மையல்லவா?


அனானி (18.05.2008 இரவு 9.38-க்கு கேள்விகள் கேட்டவர்):
1. ஜனதாக் கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி அவர்கள் புதிதாகத் தொடங்கியிருக்கும் "தொலைபேசி பேச்சை ஒட்டுக்கேட்டு வெளியுடும் மகாமாத்யம்' பற்றிய தங்கள் கருத்து யாது?
ஆட்சியில் இருப்பவர்கள் ஒட்டுக் கேட்பது உலகளாவியது. சாணக்யர் காலத்திலிருந்தே நடந்து வந்திருக்கிறது. இனிமேலும் நடக்கும்.

2. அடுத்து மாட்டப் போவது யார் என்பது அ.தி.மு.க தலைமையின் கண் அசைவுக்கு காத்திருப்பதாக செய்திகள் கூறுகிறதே. எதிர் கட்சியாய் இதே போல் செய்யும் போது (எதிர் வழக்குகள்)அவருக்கு செய்த செயல்களை எப்படி மறந்தார்?
பதில்: அரசியலில் சீக்கிர மறதிகள் அதிகம்தானே

3. பா.ம.க வின் தலைவரின் போக்கில் திடீர் மாற்றம் கூட்டணி மாற்றங்கள்
எற்படுவதற்கு கட்டியம் கூறுவது போல் உள்ளதே?

அஇஅதிமுகாவுடன் கூட்டு வரும் என நினைக்கிறீர்களா? அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா.

4. தமிழக முதல்வரின் மனவலிக்கு அவரும் ஒரு காரணமா?
தமிழக முதல்வருக்கு நிம்மதி அளிப்பது எதிர்க்கட்சித் தலைவரின் வேலை இல்லை.

5. பாரளுமன்ற தேர்தலுக்குப் பின் அரசியல் மாற்றம்( ஆட்சி மாற்றம்-மூன்றாம் அணி அல்லது பா.ஜ.கா.)நடை பெறுமா?சாத்யமா?
பா.ஜ.க. வரும் வாய்ப்பு உள்ளது, ஆனால் அதற்கு அக்கட்சி இன்னும் உழைக்க வேண்டும். மூன்றாம் அணிக்கு வாய்ப்பு இல்லை.

6. கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்புகள் (இரண்டு கட்டங்கள்)இதை உறுதி செய்வது போல் உள்ளதே ( B.J.Pக்கு ஆதரவாக-பத்திரிக்கையாளர் துக்ளக் சோ அவர்களின் கணிப்பும்)
இன்று கேட்ட நிலவரப்படி பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக வரும் வாய்ப்பு உண்டு, ஆனால் பெரும்பான்மை? அது கஷ்டம்தான்.

7. தமிழகத்திலும் மீண்டும் அ.தி.மு.க,பா.ஜ.க,ம.தி.மு.க,விஜயகாந் கட்சி,சரத் கட்சி(ஒரு வேளை ரஜினி சாரின் ரசிகர்கள்) கூட்டணி அமைவது போல் இட்டுகட்டி எழுதப் படுகிறதே இது சாத்யமா?
தமிழகத்தில் எல்லா கட்சியினருமே கூட்டணிகளுக்கு தயார்தான். பேரம் படிந்து விட்டால் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும்.

8. கலைஞர் அவர்களின் ஆட்சியில் பெரிய குறை மக்களுக்கு இல்லாவிட்டாலும்,உணவு மற்றும் சிமெண்ட்,மணல்,இரும்பு ஆகியவைகளின் உச்ச விலையுயர்வு அள்ளிக் கொடுத்த இலவசங்களை இல்லாமல் ஆக்கிவிடும் போலுள்ளதே
இலவசம்தான் பெரிய குறை. அதனால் திருப்தியடைந்தவர்கள் கட்சிக்காரர்கள் மட்டுமே. மற்றவர்கள் அதிருப்தியாளர்களே.

9. அவரது சொந்த பந்தங்களும் மற்றும் சில அரசியல் சகாக்களும் அவரது மன அமைதியை குலைத்து அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடை பெறுமா என வினா வலம் வருகிறதே?
பிறந்த நாள் வேண்டாம் என இவர் தன் கடமைக்கு கூறிக் கொள்வார். இல்லை கொண்டாடுவோம் என கட்சிக்காரர்கள் சொல்வார்கள். (அப்படி சொல்லாதவருக்கு சங்குதான் என்பது எழுதப்படாத விதி).

10. தமிழினத் தலைவர், பாரம்பரியம் மிக்க தேசியத் தலைவர்கள் போல் 'குணவாளானாக' "யார்க்கும் இனியனாய்', "யார்க்கும் தோழனாய்", "யார்க்கும் வழிகாட்டியாய்" "யார்க்கும் தலைவனாய்" மாறி கொண்டிருக்கும் நல்ல மன மாற்றத்தை நடை பெறும் செயல்கள் தடுத்து விடும் போல் உள்ளதே?
பதில்: யாரைப் பற்றி அவ்வாறு கூறுகிறீர்கள்? கருணாநிதியைப் பற்றியா?


அருண்:
1. அரசியல்: கருணாநிதி, தயாநிதி மாறன் சண்டை ஓயுமா? கருணாநிதிக்கு பிறகு மாறன் கட்சியை கைபற்ற முயலுவாரா?
பதில்: அரசியலில் எதுவும் நடக்கலாம்.

2. கலை: திரைப்படங்களுக்கு மொழி மாற்றம் செய்யும் எண்ணம் உள்ளதா?
பதில்: அதற்கான வேலை நல்ல சம்பளத்துடன் வந்தால் செய்வதில் என்ன பிரச்சினை இருக்க முடியும்? ஆனால் இம்மாதிரி வேலைகளுக்கு கட்டை சம்பளம்தான். நான் படப்பிடிப்புக்கு சென்று வந்த என் அனுபவங்களைப் பற்றி எழுதியுள்ளேனே.

3. இலக்கியம்: படிப்பதற்கும், வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? நிறைய இலக்கிய எழுத்தாளர்கள் புத்தகம் வாசிப்பதாக சொல்கிறார்களே?
பதில்: நான் புரிந்து கொண்டவரை ஒன்று மேலோட்டமாகப் பார்ப்பது இன்னொன்று ஆழ்ந்து கவனத்துடன் அவதானிப்பது. எது எதை குறிக்கும் என்பதை இராமகி ஐயா போன்றவர்கள்தான் சொல்ல வேண்டும்.


அனானி (20.05.2008 மாலை 8.07-க்கு கேள்வி கேட்டவர்):
1. ப்ளாக்குகளில் நேரம் செலவழிக்கும் இச்சையை வேலை நேரத்தில் எப்படி கட்டுப்படுத்துகிறீர்கள்?
இதில் என்ன கஷ்டம்? மொழிபெயர்ப்பு வேலை என்று வந்து விட்டால் அதை செய்யும் இச்சை எல்லாவற்றையுமே மிஞ்சிவிடுமே. அப்போது பிளாக்காவது ஒன்றாவது? உண்மை கூறப்போனால் எனது வேலை மேல் உள்ள மோகத்தை மீறி என்னை கோவில்களுக்கு இழுத்து செல்ல ஒவ்வொரு முறையும் என் வீட்டம்மா படாத பாடுபடுகிறார். ஆக, உங்கள் கேள்வி சற்றே மாற்றி கேட்கப்படவேண்டிய ஒன்றாகும். அதாவது, 'அவ்வப்போது வேலை இச்சையை மீறி எப்படி ஓய்வு எடுத்து ஊர்களுக்கு செல்கிறீர்கள்' என்று கேட்க வேண்டியிருக்கும்.


அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/21/2008

டோண்டு ராகவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்

சமீபத்தில் 1970 ஜனவரியில் துக்ளக் துவக்கப்பட்ட நாளிலிருந்து சோ அவர்கள் அதை ஒரு தரமுள்ள அரசியல் பத்திரிகையாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது. அவரது கொள்கையை ஒத்து கொள்ளாதவர்களும் கூட அவரது உழைப்பையோ, சின்சியரிடியையோ பயமின்மையையோ, ஆபாச எழுத்துக்கள் மற்றும் கிசிகிசுக்கள் உபயோகிக்காது நல்ல முறையில் எழுதுகிறார் என்பதையோ மறுக்க இயலாது.

அரசியலில் தவறு செய்த பலரை அவர் சாடி வந்திருக்கிறார். அவரால் நல்ல அரசியல்வாதி என அடையாளம் காண்பிக்கப்பட்டவர்கள் அவ்வளவு அதிகமாக இல்லை. என் நினைவில் அவர் அவ்வாறு முதலில் அடையாளம் காட்டியது சுதந்திரா கட்சியில் இருந்த எம்.எல்.ஏ. டாக்டர் ஹண்டேயைத்தான். ஒரு கார்ட்டூனில் தமிழக சட்டசபையையே அவராக உருவகம் காட்டியவர் இவர். ஆனால் அவர் ராஜாஜி அவர்களின் மறைவுக்கு பிறகு அண்ணா திமுகவில் சேர்ந்து விசிலடிச்சான் குஞ்சு ரேஞ்சுக்கு செயல்பட்டு.. விடுங்கள்.

பிறகு அடையாளம் காட்டியது பா. ராமச்சந்திரன் அவர்களை. காமராஜ் அவர்களின் அணுக்கத் தொண்டராக இருந்து தமிழகத்தில் காமராஜ் காங்கிரசை அவர் காலத்துக்கு பிறகும் இந்திரா அவர்கள் வேட்டையிலிருந்து காப்பாற்றினார். அவரை அட்டைப் படத்திலேயே போட்டு கௌரவித்தார் சோ. ஆனால் அந்தோ, வெகு சீக்கிரம் அவர் கட்சி மாறி, சத்தியமூர்த்தி பவனை இந்திரா காங்கிரசுக்கு தாரை வார்த்து கொடுத்தார். பரிசாக ஒரு மாநிலத்தின் கவர்னர் பதவியை பெற்றார்.

அதிமுகவில் எஸ்.டி. சோமசுந்தரம் அவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக தன் சுயமரியாதையைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு அதற்காக சோவால் அட்டைப்பட கார்ட்டூனில் புகழப்பட்டார். ஆனால் அதே எஸ்.டி.எஸ். ஜெயலலிதாவின் தயவுக்காக அவர் வந்த பிரசார வேனின் ஃபுட்போர்டில் தொங்கிக் கொண்டு வந்தார்.

ஒரு கேள்வி பதிலில் சோ அவர்களிடம் அவர் ஏன் சிறந்த அரசியல்வாதிகளை அடையாளம் கண்டுகொண்டு அவர்களை கௌரவித்து எழுதக்கூடாது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பாதி நகைச்சுவையாகவும் பாதி சீரியசாகவும் தான் யாரையெல்லாம் அவ்வாறு குறிப்பிட்டாரோ அவர்கள் உடனேயே தங்கள் செய்கையால் தங்கள் நல்ல பெயரை கெடுத்து கொண்டு இவர் மூக்கை உடைத்து விடுகின்றனர் என பதிலளித்தார்.

கடைசியாக கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணுவை நல்ல அரசியல்வாதியாக அடையாளம் காட்டினார். என்ன ஆகிறதோ பார்ப்போம்.

சோவின் இந்த ரியேக்சன் பல முறை வேவ்வேறு தருணங்களில் பார்த்துள்ளேன். துக்ளக் மீட்டிங் ஒன்றிலும் இதை வெளியிட்டதாக ஞாபகம். அப்போது எல்லோரும் சிரித்தோம். ஆனால் சோ மட்டும் சிரிக்கவில்லை. அது என்ன சமாச்சாரம் என்பது இப்போதுதான் எனக்கும் புரிகிறது.

இதில் டோண்டு ராகவன் எங்கு வந்தான்? அதைக் கூறுவதுதான் இந்தப் பதிவு. எனது டோண்டு பதில்கள் 25.04.2008 பதிவில் இவ்வாறு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எனது பதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

"கண்ணன், பாங்காக்
1. தமிழகத்தைச் சேர்ந்த தற்போதுள்ள மத்திய அமைச்சர்களில் யார் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்? உங்கள் அளவில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு மார்க் போடுவீர்கள் (Out of 10) இந்தியா டுடே பாணியில்).
அப்படியெல்லாம் மதிப்பெண் தர எனக்கு ஒரு தகுதியும் இல்லைதான். இருப்பினும் ப.சிதம்பரமும் டி.ஆர். பாலுவும் அன்புமணியும் மனதைக் கவர்கின்றனர்".

முதலில் டி.ஆர். பாலு எனது மூக்கை உடைத்தார். தன் குடும்பத்தினர் நலம்தான் பொது நலம் என வாதாடி, சரித்திரமே படைத்தார். அன்புமணி தனது தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒரு சட்டத் திருத்தம் வரக் காரணமாக இருந்து அது சுப்ரீம் கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டு வேறுவித பெருமை அடைந்தார். ப.சிதம்பரத்தை என்னவென்று கூறுவது? கோல்ட் க்வெஸ்ட் விவகாரத்தில் அவரது மனைவி நளினி சிதம்பரம் அளித்த சான்றிதழால் பலர் ஏமாந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் அது பற்றி அப்புறம் பேச்சு இல்லை. சிதம்பரம் அவர்கள் நிதியமைச்சராக தொடரும் வரையில் இது சம்பந்தமாக ஏதேனும் நடக்கும் எனத் தோன்றவில்லை.

இப்போதுதான் சோ அவர்களின் frustration எனக்கு புரிகிறது. இந்த அழகில் முரளி மனோஹர் வேறு வந்து கத்துகிறான். "டோண்டு ராகவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்" என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/20/2008

படப்பிடிப்பில் டோண்டு ராகவன் அனுபவங்கள் - Tourism shoot

நான் தில்லியை விட்டு கிளம்பி சென்னைக்கு வந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு, அதாவது 2000-த்தில் சுற்றுலா சம்பந்தமாக ஒரு டாகுமெண்டரி படம் எடுப்பதற்காக சென்றகுழுவில் தமிழ் ஸ்க்ரிப்ட் ரைட்டராகச் சென்றேன். நைனிதாலை சுற்றி டூரிசம் சம்பந்தமான ஷூட்டிங். இதில் நானும் சேர்க்கப்பட்டது மிகவும் எதேச்சையாகவே நடந்தது.

சுஜீத் என்பவரிடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. அதில் இம்மாதிரி படப்பிடிப்பு நடக்கப் போவதை குறிப்பிட்டு, ஆவணப்படத்தை ஹிந்தியிலும் தமிழிலும் தயாரிக்க இருப்பதாகவும் தமிழ் ஸ்க்ரிப்ட்டுக்கு பொறுப்பேற்க முடியுமா என்றும் அவர் கேட்டார். விரும்பினால் நேரே வந்து சந்திக்கலாம் என்றும் கூறினார். போய்த்தான் பார்ப்போமே என்று சென்றேன். சுஜீத்தின் கூடவே இருந்தவர் பார்க்க ரொம்ப பரிச்சயமானவராகத் தோன்றினார். கிரிக்கெட் ஆட்டக்காரர் அஜய் ஜடேஜாவின் ஜாடை அப்படியே இருந்தது. அதை அவரிடம் கூறியபோது அவர் தான் அஜய் ஜடேஜாவின் சொந்த அண்ணன் என்பதை கேஷுவலாகச் சொன்னார். அவர் பெயர் அஜீத் ஜடேஜா. அவர் எனது வேலைக்காக குறிப்பிட்ட தொகை மிகவும் குறைவு. ஆகவே நான் மரியாதையாக மறுத்து விட்டேன். சரி வீட்டுக்கு கிளம்பலாம் என நினைத்தபோது ஒரு அழகான இளம் பெண் உள்ளே வந்தார். அவர்தான் ஹிந்தி வெர்ஷனுக்கான மாடல். அஜீத் ஜடேஜா இப்போது சற்றே விலையை அதிகரித்து சொல்ல சரி என்று ஒத்து கொண்டு விட்டேன். நான்கு நாள் நைனிதாலில் ஷூட்டிங். அப்பெண்ணும் வருகிறார் என்பதுதான் அதற்கு காரணம் என்பதைக் கூறவும் வேண்டுமோ.

இப்போது தமிழ் வெர்ஷனுக்கான மாடல் உள்ளே வந்தார். இவரும் அழகுதான், ஆனால் அந்த ஹிந்திப் பெண்ணின் அழகுக்கு ஈடில்லை. ஆனால் இவர் துறுதுறுவென செயல்பட்டது மனதைக் கவர்ந்தது. ஆனால் இந்தப் பெண்ணிடம் ஒரே ஒரு குறை இருந்தது. அதாவது இவர் தாய்மொழி தமிழ்தான், தமிழை நன்றாகவும் பேசினார். ஆனால் தமிழ் படிக்கத் தெரியாதாம். என்ன கொடுமை பாருங்கள். தில்லியில் இது சர்வசாதாரணம். தமிழ் படிப்பவர்கள் குறைவுதான். தமிழ்க்குழந்தைகளும் ஹிந்தியையே படிக்கின்றனர். பேச மட்டும் இயலும், ஆனால் படிக்கத் தெரியாது.

இரண்டு நாள் கழித்து நைனிதாலுக்கு சென்றோம். காலையில் கிளம்பிய மினிவேன் மாலை 5.30 அளவில் நைனிதால் சென்றது. நடுவில் ஒரே ஒரு இடத்தில் சாப்பாட்டுக்காக நிறுத்தினர், அவ்வளவே. இந்த ஷூட்டிங் முழுக்கவுமே சாப்பாடு விஷயத்தில் ரொம்ப சிரமம் ஏற்பட்டது. இந்த ஜடேஜா அந்த விஷயத்தில் சரியான பிசுனாறி. சாப்பாட்டுக்கு பிரேக் விடவே ரொம்ப யோசித்தார். அது பற்றி மேலும் பிறகு கூறுகிறேன்.

ஹிந்தி தமிழ் இரண்டுக்கும் ஷூட்டிங் ஒவ்வொரு இடத்திலும் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்றது. நைனிதாலில் உள்ள பல டூரிஸ்ட் இடங்களில் ஷூட்டிங் நடந்தது. ஹிந்தியில் மிக அழகாக காவிய நடையில் ஸ்க்ரிப்ட் தந்து அப்பெண் அமர்க்களமாக செய்தாள். ஆனால் தமிழில், அந்தோ, காவிய நடையில் எழுத நான் ஆசை கொண்டாலும் தமிழ்ப் பெண்ணுக்கு சுட்டுப்போட்டாலும் படிக்க இயலவில்லை. ஆகவே எல்லாவற்றையும் நான் ஆங்கில எழுத்துக்களில் எழுத வேண்டியிருந்தது. உதாரணத்துக்கு "மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே, தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே" என சூரியனை விளித்து நான் ஆங்கில லிபியில் எழுத வேண்டியிருந்ததுதான் கொடுமை. அப்படி கஷ்டப்பட்டு நான் எழுதியதை அப்பெண் கொச்சை நடையில் "முங்கில் இலைமெலே துங்கும் பனிநிரே" என்று காரே மோரே எனப் படிக்க வாழ்க்கையையே வெறுத்தேன். இம்மாதிரி ஒரு தலைமுறையே தாய் மொழியில் படிக்க இயலாது, அதே சமயம் ஆங்கிலம் ஹிந்தியிலும் கூட சொல்லிக்கொள்ளும்படியான திறமையின்றி திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கும் நிலை விசனத்தை அளித்தது. அது மேக்ரோ அளவில், ஆனால் உடனடி பிரச்சினை அப்பெண்ணை சரியாக தமிழ் உச்சரிக்க வைப்பதே. செந்தமிழை விடுங்கள் சாதாரண பேச்சுத் தமிழே தகராறுதான் படிப்பதற்கு, அதுவும் ஆங்கில லிபியில். என்ன செய்வது ஒத்து கொண்டாகி விட்டது, ஆகவே எப்படியோ செய்தேன் என்று வைத்து கொள்ளுங்கள்.

இந்தக் கஷ்டத்தைத் தவிர்த்து நைனிதால் நல்ல அனுபவங்களையே தந்தது. ஊரே நைனி ஏரியைச் சுற்றித்தான் அமைந்துள்ளது. நம்மூர் மதுரை வீரனைப் போல அங்கே கோலு தேவதா என்ற பெயரில் உள்ளூர் வீரனை நினைவுபடுத்தும் வகையில் அவருக்கு கோவில் எழுப்பியிருந்தார்கள்.

ஏற்கனவே கூறியபடி ஜடேஜா சாப்பாடு விஷயத்தில் ரொம்பவும் பிசுநாறியாக இருந்தார். ஆனாலும் நான் பாட்டுக்கு அவ்வப்போது ஏதோ வாங்கி சாப்பிட்டு கொண்டேன் என வைத்து கொள்ளுங்கள். ஆனால் அந்த மாடல்கள் ரொம்பவும் நொந்து போயினர். அதிலும் ஹிந்திப் பெண் முறைத்து கொண்டு சரியான சாப்பாடு தந்தால்தான் வேலை செய்யப் போவதாகக் கூறி ஜடேஜாவின் வயிற்றில் புளியைக் கரைத்தாள். இரு மாடல்களும் முறைத்து கொள்ள ஜடேஜா தன்னை திருத்திக் கொள்ள வேண்டியிருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே அவர் கணக்கில் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொள்ளலாம் எனக்கூற வேண்டியதாயிற்று.

நான்கு நாட்கள் கழித்து தில்லி திரும்பினோம். எடிட்டிங் வேலைகள் பாக்கி இருந்தன. பிலிம் ஓட்டிப் பார்த்தால் ரொம்ப ஏமாற்றமாக மிகத் தட்டையாக இருந்தது. ஜடேஜா சன் டீவி சேனலில் இடம் பிடிக்க எண்ணியிருந்திருக்கிறார். ஆனால் அதில் வெற்றியடையவில்லை. மேலும் தமிழ் மாடலின் தமிழ் பற்றாக்குறை நன்றாகவே தெரிந்தது. அப்போதுதான் நான் ஜடேஜாவிடம் தமிழ் படிக்கவும் தெரிந்த மாடலை செலக்ட் செய்திருக்க வேண்டும் என்பதை எடுத்து காட்டினேன். அவரும் சோகத்துடன் ஒத்து கொண்டார். இரண்டு மூன்று முறை அவர் அலுவலகத்துக்கு சென்றும் முன்னேற்றம் ஏற்படவில்லை. பிறகு அவர் தமிழ் வெர்ஷனின் ஐடியாவை துறந்து விட்டதாகத் தோன்றியது. நானும் அப்புறம் செல்லவில்லை, அவரும் கூப்பிடவில்லை. வேலையை முடிக்காததால் பணமும் கேட்கவில்லை.

எது எப்படியானாலும் ஒரு பிராஜக்டை எப்படியெல்லாம் நடத்தக் கூடாது என்பதை ஜடேஜாவிடமிருந்து தெரிந்து கொண்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/19/2008

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு - 18.05.2008

எனது கார் சாந்தோம் சர்ச்சைத் தாண்டும்போது பதிவர் டாக்டர் ப்ரூனோவிடமிருந்து செல்பேசி அழைப்பு வந்தது. தான் காந்தி சிலைக்கருகில் நிற்பதாகவும் இன்னும் வேறு யாரையும் காண இயலவில்லை என்று அவர் கூறினார். அவரிடம் நான் காந்தி அருகிலேயே நிற்கும்படியும் இன்னும் சில நிமிடங்களில் நானும் வந்து விடுவேன் எனக் கூறினேன். எனது கார் காந்தி சிலைக்கு வரும்போது மணி சுமார் 05.45.

என்னை அங்கு இறக்கி விட்டு என் வீட்டம்மா மகளுடனும் தன் தங்கையுடனும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு விரைந்தார். நான் கண்டுபிடிக்கும் முன்னமே ப்ரூனோ என்னை கண்டுபிடித்தார். அவர் போட்டோவிலிருந்து பெரிதும் மாறுபட்டு இருந்தார். பிறகு நான் அதியமானை தொடர்பு கொள்ள அவர் தானும் காந்தி சிலைக்கு அருகிலேயே நிற்பதாகக் கூறினார். அடுத்த நிமிடத்தில் அவரை பார்த்தேன். கூடவே ஏற்கனவே வந்துள்ள பலரையும் பார்த்தேன். சிலைக்கு பின்புறம் ஒருமாதிரி ஓவல் வட்டத்தில் இருந்த தண்ணீர் இல்லாத செயற்கைக் குளக்கரையில் அமர்ந்திருந்தனர். நான் பார்த்தவர்கள். முரளி கண்ணன், பாலபாரதி, லக்கிலுக், இராமகி ஐயா, லிவிங் ஸ்மைல் வித்யா, கோவி கண்ணன் ஆகியோர். சற்று நேரத்தில் வந்து சேர்ந்தவர்கள் வளர்மதி, ஜ்யோவ்ராம் சுந்தர், ஆதிஷா, தருமி ஆகியோர். இந்திய எக்ஸ்பிரஸிலிருந்து ஒரு நிருபர் வந்திருந்தார். அவர் பெயரைக் கேட்டறிந்தேன், ஆனால் இப்போது மறந்து விட்டேன்.

சந்திப்பு வெறுமனே ஒருவரை ஒருவர் சந்தித்து அளவளாவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதால் ஒரு குறிப்பிட்ட அஜெண்டா ஏதுமின்றி பேச ஆரம்பித்தோம். ப்ரூனோ அவர்கள் பெயர் புனைப்பெயர் என்று நினைத்திருந்தேன். இல்லை அது ஒரிஜினல் பெயரே என அவர் தெளிவுபடுத்தினார். ப்ரூனோ என்பவர் சரித்திரத்தில் பெயர் பெற்றவர். விஞ்ஞானி. அவரது நவீன விஞ்ஞான கொள்கைகளால் சர்ச்சால் துன்புறுத்தப்பட்டு சூனியக்காரராக குற்றம் சாட்டப்பட்டு உயிருடன் சிதையில் வைத்து 1600-ஆம் ஆண்டு எரிக்கப்பட்டவர். அவரைப் பற்றி புகழ் பெற்ற ஜெர்மன் எழுத்தாளர் Berthod Brecht எழுதிய ஒரு சிறுகதை எங்களுக்கு பாடமாக வைக்கப்பட்டிருந்தது. ப்ரூனோ பற்றி பதிவர் ப்ரூனோவிடம் கூறியபோது அவரும் தனக்கு அந்த ப்ரூனோ ஞாபகார்த்தமாகத்தான் பெயர் வைத்ததாகக் கூறினார். அவரிடம் மேலே பேசும்போது இதய நோய்வரும்போது சாதாரணமாக இடது தோள், கை பக்கம் ஏன் குடைச்சல் வலி ஏற்படுகிறது எனக்கேட்டேன். மிகச்சில வார்த்தைகளில் அவர் அதை அழகாக விளக்கினார். அதாவது இதயத்துக்கு சப்ளை செய்யும் நரம்புகளும் இடது கை / தோள் போன்ற இடங்களிலிருந்து தொடு உணர்ச்சி, வலி போன்ற உணர்ச்சிகளை மூளைக்கு எடுத்து செல்லும் நரம்புகளும் முதுகு தண்டின் ஒரே செக்மண்ட் வழியாகத்தான் செல்கின்றனவாம் (செக்மண்ட் எண் C8, T1). மேலும் இதயத்தில் வலி ஏற்பட்டால் அது கையில் வலி ஏற்படுவது போன்ற தோற்றத்தைத்தான் தருமாம். அதற்கு அவர் சொன்ன பெயர் referred pain. பிறகு எனது கண்பார்வை பற்றி நான் எழுதிய - 1 + 1 = 0 என்னும் பதிவில் அவர் அளித்தப் பின்னூட்டத்தைப் பற்றி கேட்டேன். [அவர் அதில் எழுதியது: "I was just telling the possibilities. (I did not diagnose nuclear cataract for you sitting 600 kilometres away). May be you are an exception. But it is always better to be on the safer side. I am sorry if I had frightened you too much :) :)]" எனது கேஸ் விதிவிலக்காகத்தான் தோன்றுகிறது என்று அவர் கூறினார், ஏனெனில் nuclear cataract என்பதின் விளைவு சில தினங்களிலேயே தெரிந்து விடும் என்று கூறினார்.

இப்போது கோவி கண்ணனிடம் வருகிறேன். நான் இச்சந்திப்புக்கு வந்ததன் முக்கியக் காரணமே அவரைப் பார்க்கத்தான். மனிதர் சீயர்ஃபுல்லாக தோற்றமளித்தார். சிங்கப்பூரில் பத்தாண்டுகளாக இருப்பதாகக் கூறினார். அங்கு குடியுரிமை பெற யோசிக்கிறாரா எனக் கேட்டதற்கு தன் குழந்தையின் தேவையை பொருத்தது அது என்று கூறினார். அவர் குழந்தை இரண்டாம் வகுப்பில் படிப்பதாகவும் கூறினார். நல்ல பாசமுள்ள தந்தைதான். அதியமான் அவருடன் பேசும்போது வழக்கப்படி அவரது பிறந்த தினத்தைக் கேட்க அவரும் சொன்னார். அதியமான் தனதுபிறந்த தினமும் அதுவேதான் என குதூகலத்துடன் கூறினார். என்ன கோவி கண்ணன் ஓர் ஆண்டு முந்தி பிறந்துள்ளார். உடனே அவர் பிறந்த தேதி திங்கள் கிழமையா என்று நான் கேட்க அவரும் ஆமாம் எனக் கூறினார். தேதியைக் கூறினால் கிழமையை என்னால் கூறமுடியும் என்பதை அதியமான் அவரிடம் கூறினார். எல்லோரையும் பிறந்த தேதி கேட்பது அதியமான் மற்றும் எனது வழக்கம். நான் உடனே அதற்கானக் கிழமையைக் கூறுவேன், அதியமான் விறுவிறு என அந்த தேதிக்கான ராசி ஆகியவற்றைக் கூறி ஜோஸ்யம் கூறிவிடுவார். இது பற்றி ப்ரூனோவிடம் கூறியபோது அவர் தானும் இதைச் செய்ய இயலும் எனக்கூறினார். அவரிடம் உடனே மே 27, 1964 பற்றி கேட்டேன். அவர் சிறிது அவகாசம் கேட்டார். பிறகு நான் அதை மறந்து விட்டேன். எனது காரில் நான் திரும்பச் செல்லும்போதுதான் ஞாபகம் வந்து அவரிடம் செல்பேசியில் கேட்டேன். அவர் அக்கேள்வியை மறந்து விட்டதாகக் கூறினார்.

லக்கிலுக் தனது விளம்பரத்துறையைப் பற்றி பேசினார். விளம்பரப் படங்களுக்கென்றே cannes விழா போல விருது வழங்கும் ஏற்பாடுகள் உண்டென்றும், விளம்பரம் பற்றி அறிய இந்த உரலுக்கு செல்லுமாறும் கூறினார். சில நாட்களுக்கு முன்னால் தடை செய்யப்பட்ட வோடாஃபோன் விளம்பரத்தைப் பற்றியும் பேசினார். அதில் ஒரு சுட்டித்தனம் நிறைந்த நாய்க்குட்டியை காண்பித்திருந்தனர். ரொம்ப க்யூட்டான விளம்பரம் அது. அதில் நாயைக் கொடுமைப்படுத்தியதாக யாரோ வழக்கு போட்டதால் அந்த விளம்பரத்தை வாபஸ் பெற்றனர் என்றும் கூறினர். என்ன செய்வது இம்மாதிரி பல ஆர்வக்கோளாறுகள் வந்து சேர்கின்றனர். ஒரு விளம்பரப்படம் எடுக்க என்ன செலவாகின்றது எனத் தெரிந்தால் நிஜமாகவே விசனமாகத்தான் இருக்கும்.

கோவி கண்ணன் புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தார். எங்கோ போய் மினரல் தண்ணீர் ஜில்லென்று சில போத்தல்கள் வாங்கி வந்தார். பதிவர் சந்திப்பில் எல்லோருக்கும் தரப்பட்ட சாக்லேட்டும் அவர் உபயம்தான் என நினைக்கிறேன். எது எப்படியாயினும் வலைப்பதிவுகளில் அவருடன் பலமுறை கருத்து மோதல்கள் நடந்துள்ளன. அதையெல்லாம் தனிப்பட்ட முறையில் எடுத்து கொள்ள வேண்டாம் என நான் அவரைக் கேட்டு கொண்டேன். அவரும் அப்படியெல்லாம் எடுத்து கொள்ளவில்லை எனக் கூறினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் தனி சேனலில் ஒவ்வொருவராக பேட்டி கண்டார். நான் எனது வலைப்பூவைப் பற்றி கூற அவர் டோண்டு என்ற பெயர் பற்றி கேட்டார். அவருக்கு விளக்கினேன்.

இப்படியே பேசிக்கொண்டிருந்ததில் பொழுது போனதே தெரியவில்லை. திடீரென எனது செல்பேசி சிணுங்கியது. வீட்டம்மாதான் பேசினார். கார் லேடிவில்லிங்க்டன் பள்ளியின் அருகில் பீச் ரோடில் திரும்புவதாகக் கூறினார். நான் அவரிடம் காந்தி சிலையைத் தாண்டி நிற்பதாகக் கூறினேன். பிறகு எல்லோரிடமும் விடை பெற்று விரைந்தேன். வீட்டுக்கு செல்லும்போது மணி 09.30 ஆகி விட்டது. ரொமபவும் களைப்பாக இருந்ததால் பதிவை அடுத்த நாளைக்கு ஒத்திப் போட்டேன். இன்று காலை பார்த்தால் கோவி கண்ணன் முந்திக் கொண்டுள்ளார். ஃபோட்டோக்களும் அப்பதிவில் போட்டுள்ளார். அவருக்கு என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/18/2008

துச்சாசனன் அவிழ்த்து போட்ட புடவைகள் என்னாயின?

எனக்கு தெரிந்து இக்கேள்வியை ஒரே ஒருவர்தான் கேட்டு அதை வைத்து கதையும் எழுதியுள்ளார். அவ்ர்தான் எழுத்தாளர் நாடோடி. அவரைப் பற்றி நான் ஏற்கனவே போன ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு பதிவு போட்டுள்ளேன். இப்பதிவை அதன் தொடர்ச்சியாகக் கொள்ளலாம்.

எங்கே விட்டேன்? துச்சாசனன் அவிழ்த்த புடவைகளிடம் விட்டேன். அவை என்ன ஆயின என்பதை வைத்து நாடோடி ஒரு நாடகம் எழுதியுள்ளார். சமீபத்தில் எழுபதுகளில் வெளிவந்த அதை என் நினைவிலிருந்து எழுதுகிறேன்.

துரோபதையின் வஸ்திரத்தை இழுக்கிறான் துச்சாசனன். அவள் கண்ணனிடம் அடைக்கலம் கேட்க, புடவைகள் விறுவிறு என்று உற்பத்தியாகி துரோபதையை சுற்றுகின்றன. சபையே நடுங்குகிறது. கர்ணனும் துரியனும் தலையை சொறிகின்றனர். துச்சாசனோ வெறிபிடித்தவன் போல புடவையை இழுத்து கொண்டே போகிறான். பீஷ்மர், துரோணர் போன்ற பெரியவர்கள் கையை பிசைகின்றனர். புடவைகள் மலையாய் குவிகின்றன. துச்சாசனன் களைத்து போய் கீழே விழுகிறான். இதுவரை பேச வாய்ப்பு இல்லாத விதுரர் அடுத்த அரைமணிக்கு பேச ஆயத்தம் செய்து கொள்கிறார்.

துச்சாசனன் குழப்பத்துடன் தன் இருக்கைக்கு வருகிறான். அருகில் இருக்கும் துரியனிடம் பேசுகிறான்.

துச்சாசனன்: அண்ணா என்னவோ தெரியவில்லை, ஒரே களைப்பாக இருக்கிறது. மனதுக்கு கலக்கமாகவும் உள்ளது.

துரியன்: இருக்காதா பின்னே. எவ்வளவு பெரிய காரியம் செய்தாய் எனக்காக, சபாஷ். அது இருக்கட்டும் துச்சாசனா, அந்தப் புடவைகளைப் பார்த்தாயா? அடாடா என்ன அழகு அவை? அமர்க்களமான வண்ணத்தில் தலைப்புகள், ஜரிகை வேலைப்பாடுகள். நம்ம அஸ்தினாபுரத்து ஜவுளிக் கடைகளில் இம்மாதிரி புடவைகள் வருவதில்லையே. ஒன்று செய்கிறேன். எல்லா புடவைகளையும் மடிக்க செய்கிறேன். எல்லாவற்றையும் உன் மாளிகைக்கு அனுப்புகிறேன். உன் மனைவி அவற்றை அணிந்து கொள்ளட்டும்.

துச்சாசனன்: வேண்டவே வேண்டாம் அண்ணா, அவற்றைப் பார்த்தாலே மனதில் ஒரு பீதி ஏற்படுகிறது.

துரியன்: சரி அவற்றை விற்று காசாக்கி கஜானாவில் சேர்ப்பித்து விடுவோம். நீ உன் மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்து கொள்ளவும். இன்று இரவு உணவு என் வீட்டில்தான். மனைவியுடன் வந்துவிடு. நான் இப்போதைக்கு வர இயலாது. விதுரர் சித்தப்பா உளற ஆரம்பித்துள்ளார். இருந்து கேட்டுவிட்டு வருகிறேன்.

துச்சாசனன் தேர் ஏறி தன் மாளிகைக்கு திரும்புகிறான். மனம் பாரமாக இருக்கிறது. ஏன் என்று தெரியவில்லை. மாளிகையின் வாசல் வெறிச்சோடி கிடக்கிறது. துச்சாசனன் இது எதையும் கவனிக்காமல் உள்ளே சென்று படுக்கையறையில் படுக்கையில் வீழ்கிறான். "யாரங்கே, பழரசம் கொண்டுவா" என்று கத்திவிட்டு கண்ணை மூடுகிறான். சுமார் கால் மணி கழித்து "இந்தாருங்கள் பழரசம், சீக்கிரம் பிடியுங்கள். உள்ளே கொள்ளை வேலை கிடக்கிறது" என்ற கோபமான குரல் வருகிறது. வாரிச்சுருட்டி எழுந்து கொள்கிறான். அவனது மனைவி (அவள் பெயர் துச்சாசனி என்று வைத்து கொள்வோமே) நிற்கிறாள்.

துச்சாசனன்: இதென்ன கூத்து, பணிப்பெண்கள் எங்கே?

துச்சாசனி: எல்லோரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு வேலையை விட்டு நின்று, ஓடி விட்டார்கள். உங்கள் 'வீரச்செயல்' பற்றிய செய்தி உடனேயே தலைமை பணிப்பெண் வம்பினி மூலம் எல்லோருக்கும் தெரிய வந்து விட்டது.

துச்சாசனன்: இதென்ன சோதனை. என்னை எடுத்து வளர்த்த பாமினி பாட்டி எங்கே?

துச்சாசனி: அவள்தான் எல்லோருக்கும் முன்னால் ஓடினாள்.

துச்சாசனன்: ஒழியட்டும். ஒரே வெறுப்பாக இருக்கிறது. பணியாளர்கள் எங்கே?

துச்சாசனி: நான் அவர்கள் அணைவரையும் வேலையிலிருந்து நீக்கி விட்டேன்.

துச்சாசனன்: ஏன்?

துச்சாசனி: நல்ல கதையா இருக்கே. வேறு பொம்மனாட்டிகளே இல்லாத இந்த மாளிகையில் இத்தனை தடிமாடுகளிடமிருந்து என்ன பாதுகாப்பு எனக்கு? எல்லோரும் எஜமான் வழியே சிறந்தது என்று முடிவெடுத்தால் என் கதி என்ன? எது எப்படியானாலும் தலைமை சமையற்காரன் போக்கிரி முத்துவின் முழியே சரியில்லை.

துச்சாசனன்: இது என்ன தொல்லையாகப் போய் விட்டது? இம்மாதிரி நடக்கும்னு நான் நினைக்கவே இல்லையே!

துச்சாசனி: என்ன இருந்தாலும் துரோபதை உங்கள் மன்னி இல்லையா? நீங்கள் நடந்து கொண்டது சரியா?

துச்சாசனன்: அதெல்லாம் அரசியல், உனக்கு புரியாது.

துச்சாசனி: சரி என்னமோ போங்கள். எனக்கு வேலை இருக்கிறது. நாளைக்கு நம் பெண் குழந்தைகளை அழைத்து கொண்டு என் பிறந்தகம் போகிறேன்.

துச்சாசனன் திகைத்து நிற்கிறான். அச்சமயம் துரியனின் ரதசாரதி வேகமாக உள்ளே வருகிறான்.

துச்சாசனன்: அண்ணனிடம் கூறு, இரவு உணவுக்கு மாலையே வந்து விடுகிறேன். அவருடன் பேச வேண்டும்.

சாரதி (சங்கடத்துடன்): ஐயா. இன்று இரவு உணவுக்கு வரவேண்டாம் என கூறத்தான் என்னை அனுப்பினார்.

துச்சாசனன் தலையில் கை வைத்து நிற்கிறான். அவன் மனைவி அவன் பின்னாலிருந்து அவனுக்கு அழகு காட்டிவிட்டு செல்கிறாள்.

சிறிது நேரத்துக்கு பிறகு. துரியனே வருகிறான்.

துரியன்: அருமைத் தம்பி துச்சாசனா, விருந்துக்கு வரவேண்டாம் எனக் கூறியதால் என் மேல் கோபம் இல்லையே?

துச்சாசனன்: இன்று நடப்பதையெல்லாம் பார்த்து தலை சுற்றுகிறது அண்ணா. அது இருக்கட்டும், ஏன் என்னை வரவேண்டாம் என கூறினீர்கள்?

துரியன்: என்ன செய்வது தம்பி. நீ வருகிறாய் என்றதுமே அரண்மனைப் பணிப்பெண்கள் அலற ஆரம்பித்து விட்டனர். வேலையை விட்டுப்போவதாக கூறிவிட்டனர். பானுமதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆகவே தற்சமயம் உன்னை வரவிடாமல் தடுக்க சொன்னாள்.

துச்சாசனன்: என்ன செய்வது கடமை தவறாத எனக்கு இக்கதி. முதல் நாளன்றே இப்படி மூச்சு திணறுகிறது. இதற்கு என்ன வழி?

துரியன்: எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அந்தப் புடவைகள் எண்ணற்ற அளவில் உள்ளன. அவற்றைப் பார்த்தாலே உனக்கு பயம் என்கிறாய். பேசாமல் அவை எல்லாவற்றையும் பணிப்பெண்களுக்கு கொடுத்து விடலாம். அவர்கள் அதை அணிந்து வந்தால் உன்னிடமிருந்து தப்பிக்கலாம் அல்லவா? (சிரிக்கிறான்).

துச்சாசனன் தனக்குள் முணுமுணுக்கிறான், "எல்லாம் நேரந்தேன்"

அதற்குள் துச்சாசனி வெளியே வருகிறாள்.

துச்சாசனி: வணக்கம் மூத்தவரே. அது நல்ல யோசனை. அப்புடவைகள் மிக அமர்க்களமாக இருந்தன என்று தலைமைப் பணிப்பெண் வம்பினி மூலம் அறிந்தேன். இதோ செய்தி அனுப்புகிறேன். புடவைகளை நீங்கள் அனுப்புங்கள். எல்லோரும் புடவைக்காக ஓடி வந்துவிடுவார்கள்.

துரியன்: அப்படியே செய்கிறேன் பெண்ணே. நீயும் இரண்டு புடவைகள் எடுத்து கொள். தேவையானால் அவற்றை அணிந்து அவ்வப்போது பயலை பயமுறுத்து. வரட்டுமா?

பிறகு சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/16/2008

டோண்டு பதில்கள் - 16.05.2008

குசேலன்:
1. What do you think of the judgement that M F Husain's painting are not obscene?
பதில்: பல தவறான முன்னுதாரணங்களை இது அனுமதிக்கும் என அஞ்சுகிறேன். கடவுளர்களை நிர்வாணமாக காட்டுவது அவமதிப்பு இல்லை என்று கூறுவது போன்ற தோற்றம் துரதிர்ஷ்டவசமானது. யாராவது முகம்மது, கதீஜா அம்மையார், ஏசு ஆகியோரையும் அக்கோலத்தில் படம் வரைவது கலைஞனின் சுதந்திரமே என வாதிடும் வகையில் இந்த தீர்ப்பு முன்னோடியாக அமைந்து விட்டால் குழப்பமே.
2. Did the judges see the paintings before giving the judgement?
பதில்: பார்த்திருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.
3. The mainstream media while being happy for the victory of artistic freedom; they are not showing the actual paintings to the public. why don't they publish the paintings and show it to the people if it is not obscene?
பதில்: காட்டினார்கள் போலிருக்கிறதே. இப்போது இல்லை, சர்ச்சைகள் முதலில் எழுந்த அச்சமயத்தில். கராத்தே ஹுசைனி அம்மாதிரியான சரஸ்வதியின் படத்துக்கு அனாயாசமாக சில பிரஷ் வீச்சுகளில் அழகான புடவை போட்டு விட்டார். மேலும் எம். எஃப். ஹுசைனையும் நிர்வாணமாக வரைந்தார். இதை ஏனோ சுதந்திர உணர்ச்சி கொண்ட அந்த நிர்வாணக் கலைஞன் ரசிக்கவில்லை.
4. When nude paintings are not obscene because they are artistic, why are porn films being banned and its participants prosecuted, don't they have their own artistic freedom?
பதில்: அம்மாதிரியும் கேஸ் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கூடுதுறை:
1) பார்த்தால் இந்தவருடமே பொதுத்தேர்தல் வந்துவிடும் என்று தோன்றுகிறதே?
பதில்: மத்தியில் வரக்கூடும் என்று தோன்றுகிறது. குஜராத்தில் மட்டும் தில்லு முல்லு செய்து காங்கிரஸால் நிஜமாக ஜெயிக்க முடிந்திருந்தால் இடை தேர்தல் நிஜமாகவே வந்திருந்திருக்கும். கம்யூனிஸ்டுகள் காங்கிரசை அவ்வளவு வெறுப்பேற்றி வந்தனர்.
2)நக்மா போய் 10 வருடம் ஆகிவிட்டது உங்களின் லேட்டஸ்ட் ஜொள்ளூ யார்?
பதில்: சொன்னா போச்சு. இதுக்கென்ன காசா பணமா? நான் போன வருடம் என்னுடைய காரில் தள்ளிக் கொண்டு போன த்ரிஷா, அசின், ஷ்ரேயா, நமீதா ஆகிய அந்த 4 பேருமேன்னு வைத்து கொள்ளலாமே. :)))
3. எனக்கு ஒரு கனவு: 2008 பொதுத்தேர்தலில் கம்யூனிஸ்டுகள் இரண்டு, மாயாவதி,அஸ்ஸாம் கணபரிஷத்,தெலுங்குதேசம், அ இ அதிமுக,, விஜய்காந்த் ஆகியோர் இணைந்த மந்திரி சபையும் அதற்கு பிஜேபி யின் வெளியில் இருந்து தருவதாகவும் கண்டேன். இது உருப்படியாகுமா???
ஸ்ஸப்பா, கனவே கண்ணைக் கட்டுதே. இப்படியெல்லாம் கனவு கண்டுண்டே போனாக்க, பேசாம காங்கிரசும் பி.ஜே.பி.யும் சேர்ந்து ஆட்சி அமைஞ்சாக்கூட ஆச்சரியப்படறதுக்கு இல்லைன்னுதான் சொல்லணும். நான் கூறுவதும் அப்படியொன்றும் நடக்க முடியாத விஷயம் இல்லை. சமீபத்தில் 1966-ல் மேற்கு ஜெர்மனியில் வழக்கமான எதிரிகளான சி.டி.யு/சி.எஸ்.யு. -ம் எஸ்.பி.டி.யும் சேர்ந்து மகா கூட்டணி அமைத்தது எனக்கு இன்னும் மறக்கவில்லை.

ஜயசங்கர் ஜகன்னாதன்:
1. சிலையை எறிந்தது கிருமிகண்ட சோழனா. இப்போ இருக்கும் சிலை எப்போ செய்தது?
பதில்: கடலில் போட்ட கோவிந்தராசர் மூலவர் சிலை மூழ்கிப் போனது! ஆனால் உற்சவரின் சிலையை மட்டும் எப்படியோ காப்பாற்றிய வைணவக் குடும்பங்கள், அந்தச் சிலையை இராமானுசரிடம் சேர்பிக்கிறார்கள். சிலையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதே இடத்தில் வைத்தால் மீண்டும் பிரச்சனை தான்!
பிரச்சனை சிலைக்கா? இல்லையே!...அதைச் சுற்றியுள்ள அப்பாவி மக்களுக்குத் தானே! இதை நன்கு உணர்ந்த "உண்மையான" சமயத் துறவி அவர்! ஈகோ பார்க்காமல் சிலையைக் கொண்டு போய், கீழ்த் திருப்பதியில் நிறுவுகிறார்! அங்கு புதிதாகக் கோவிந்தராசப் பெருமாள் ஆலயம் ஒன்றை எழுப்புகிறார்! இன்றளவும் கீழ்த் திருப்பதியில் இருப்பது தில்லை கோவிந்தராசரின் உற்சவரே!
ஆண்டுகள் உருண்டோட சோழன் மறைகிறான்! நல்லிணக்கம் நிலவும் போது, புதிதாக மூலவர்-உற்சவர் சிலைகளைச் செய்து மீண்டும் தில்லையில் இருந்த இடத்திலேயே,(சில தீட்சிதர்கள் எதிர்ப்பையும் மீறி) நிறுவுகிறார்கள்! இன்றும் தில்லை நடராசப் பெருமான் ஆலயத்துக்குள் கோவிந்தராசரும் பள்ளி கொண்டுள்ளார்! - கதை இம்புட்டு தான்! நன்றி ரவிசங்கர் கண்ணபிரான் (கே.ஆர்.எஸ்.) அவர்களது பதிவுக்கு.

அனானி (பிற்பகல் 03.01 மணிக்கு, 11.05.2008 அன்று கேள்வி கேட்டவர்)
1. மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் உயர் சாதிப்பிரிவினர் (பிராமணர் அல்ல))(மலையில் வாழும்)நடத்தும் போராட்டம் தேவையா?
பதில்: நான் இட்ட பொங்கி எழுங்கள் தலித் சகோதரர்களே என்னும் பதிவில் விவரமாக பதில் கூறியுள்ளேனே. சம்பந்தப்பட்ட உயர்சாதியினர் பார்வையில் அவர்தம் போராட்டம் தேவையே. அதே சமயம் கலைஞர் அரசு அவர்களிடம் பல்லிளித்து கெஞ்சுவதும் அவரைப் பொருத்தவரை ஓட்டு பெறும் அரசியலுக்கு தேவையே.
2. சாதிச் சுவர் இரட்டை குவளையை விட கொடியது அல்லவா-தங்கள் கருத்து என்ன?
பதில்: இதில் என்ன சந்தேகம்? மேலும் இது சிவில் வழக்காகக்கூட வரும் வாய்ப்புள்ளது. இவ்வளவு நாட்கள் பொதுவழியை மறித்த உயர்சாதியினர் கூட்டு தண்டனைகளுக்கு உரியவர்கள்.
3. திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இது போல் கோட்டை சுவர்(கோட்டைப் பிள்ளைமார்) இருந்ததாக சொல்வார்கள்.அது போல் தான் இதுவுமா?
பதில்: தெரியவில்லை. நான் இப்போது கூகளிட்டு பார்த்ததில் கோட்டை சுவருக்குள் அவர்கள் தாங்களாகவே விரும்பி வாழ்ந்தனர் எனத் தெரிகிறது. ஆனால் உத்தபுரத்தில் உயர் சாதியினர் தலித்துகளை சுவற்றுக்கு பின்னால் தள்ளினர். ஆக இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.
4. 300 குடும்பங்களின் போராட்டம் தேவையான ஒன்றா?
பதில்: இல்லை. அதை அரசு கண்டுகொள்வதோ அதைவிட நிச்சயமாக வேண்டாத வேலைதான்.
5. இதுவும் அரசியலா?
பதில்: ஆமாம், ஓட்டு பொறுக்கும் அரசியல்.
6. கலைஞர் இந்த விஷயத்தில் நேர்மையாகத்தான் நடந்துள்ளார் போல் தெரிகிறது?
பதில்: நன்றாகவே வழிந்தார், சில நூறு ஓட்டுகளுக்காக. அதில் நியாயம் புதைகுழிக்கு போனதில் அவருக்கு கவலையில்லை எனத் தெரிகிறது.
7. அரசின் முயற்சிகள் பலன் அளிக்குமா?
பதில்: எது, ஆளும் கட்சிக்காக ஓட்டுகளை காபந்து பண்ணும் முயற்சிகளா?
8. ஜாதி அரசியல் வானவேடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்குமா தமிழகம்?
பதில்: அப்படியெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தால் அரசியல் வாதிகளின் பிழைப்புக்கு என்ன வழி?
9. வழக்கம் போல் B.J.P இதில் தலையிட்டு தலித்துகளின் வாக்கு வங்கியை முழுவதும் இழக்க முயலுமா? (பிள்ளைமார் சமுகத்தினர் b.j.p உதவியை நாடுவதாக தகவல்(j.vikatan-14.5.08)
பதில்: பி.ஜே.பி.யினர் தமிழகத்தில் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்னும் நிலையில் உள்ளனர். பாவம் அவர்கள்.
10. புரட்சித் தலைவியின்(ஜெயலலிதா அம்மையார்)கருத்து என்ன என்றே தெரியவில்லை,ஏன்?
பதில்: கிட்டிமுட்டிப் போனால் திராவிடக் கட்சிகள் எல்லாமே உயர் சாதியினரிடம் பயப்படுவதாகத்தான் தோன்றுகிறது. ஜெயலலிதா மட்டும் எப்படி மாறி சிந்திக்க இயலும்?

அனானி (12.05.2008 அன்று மாலை 06.13-க்கு கேள்வி கேட்டவர்)
1. பிராமணர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளனர் என்பதால் தான் திராவிட கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன என்பது உண்மையா?(பிராமணர் அல்லாத பிற உயர் சாதிப் பிரிவினர்,குறிப்பாக முதலியார்,பிள்ளைமார்,கார்காத்தார்,சமுகத்தார்.)
பதில்: பிராமணர்கள் ஓட்டு வங்கியில்லாத சிறுபான்மையினர். அவர்களை பத்திரமாக எதிர்க்கலாம். மற்ற உயர் சாதியினரை எதிர்க்க இயலாது. அவர்களிடம் கெஞ்ச வேண்டியதுதான். உத்தபுரத்தில் நடப்பது போல.
2. கேரள மன்னர்கள் பிராமணர்களின் முக்கியத்துவத்தை கட்டுபடுத்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிள்ளைமார் சமுகத்தை கேரளாவில் குடியமர்த்தினர் என்ற செய்தி உண்மையா?
பதில்: தெரியாது. நீங்கள் சொல்லித்தான் இதைப் பற்றி கேள்விப்படுகிறேன். கேரள தேசம் ஜாதி குழப்பங்களுக்கு பேர்போனது என்பதை மட்டும் அறிவேன்.
3. எட்டுவீட்டு பிள்ளைமார் செய்த கலகத்தை அடக்க சிங்கம்பட்டி ஜமீந்தார் கேரளா சென்றார் என்ற தகவல் உண்மையா?
பதில்: விஜயநகர சாம்ராஜ்யம் விரிவடைந்த போது மதுரைக்கு வைஸ்ராயாக வந்த நாகமநாயக்கும், அவரது மகன் விஸ்வநாத நாயக்கும் தாங்கள் தான் மதுரைக்கும், திருநெல்வேலிக்கும் சுதந்திரம் பெற்ற ஆட்சியாளர்கள் என்று அறிவித்தனர். குறுநில ஆட்சிப்பரப்புகளை பிரித்து 72 பாளையங்களாக கி.பி.1433 ம் ஆண்டு மாற்றியமைத்தனர். அப்போது சிங்கம்பட்டி பாளையம் பிறந்தது. இப்படி பட்ட பரம்பரையில் வந்த சிங்கம்பட்டி இளவரசர் ஒருவர் கேரள ராஜ்யத்திற்கு எதிராக நடந்த எட்டு வீட்டு பிள்ளைமார் கலகத்தை அடக்கியதால், சிங்கம்பட்டிக்கு பத்மநாபபுரம் ராணி உமையம்மை ரத்ததான வீரப்பதக்கமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் 74 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினார். சிங்கம்பட்டி பரம்பரை வழி வந்தவர் தான் புலித்தேவன். முப்பதாவது தலைமுறையாக அரசாண்டவர் சிவசுப்பிரமணிய தீர்த்தபதி. இவர் நீதிக்கட்சியில் இருந்துள்ளார். தந்தை பெரியாரின் நண்பர். இவருடைய பெயரால் அம்பாசமுத்திரத்தில் அரசு மருத்துவமனை, பள்ளிகள் இயங்குகின்றன. இவரது மகன் 31 வது ஜமீன் ,சென்னை இளவரசர் கல்லூரியில் படிக்கும் போது ஒரு கொலை காரணமாக சட்டத்தின் பிடியில் சிக்கினார். இந்த கொலை வழக்கிற்காக செலவு செய்ய சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் வெள்ளைக்கார தேயிலை கம்பெனிக்கு விற்கப்பட்டது. அதுதான் தற்போதைய மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். நன்றி பி.என்.எஸ். பாண்டியன் அவர்கள். அவர் எழுதிய இப்பதிவுக்கு முழுவிவரங்களை அறியச் செல்லவும்.
4. பிராமணர்களும் தலித்துகளும் உ.பி. மாநிலத்தில் கைகோர்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது போல் தமிழகத்தில் நடைபெற வாய்ப்புள்ளதா?
பதில்: இல்லை. ஏனெனில் பார்ப்பனர்கள் தமிழகத்தில் போதுமான வாக்குவங்கி தங்களிடம் வைத்திருக்கவில்லை. உத்திரப்பிரதேசத்தின் கதை வேறு.
5. அதை தாங்கள் வரவேற்கிறீர்களா?
பதில்: தேவையில்லை
6. சமதர்ம சமுதாயம் உருவாக அது வழி கோலுமா?
பதில்: இக்கேள்வியை எழுப்பவே முகாந்திரம் இல்லை.
7. கலப்புத் திருமணங்கள் இதற்கு உறுதுணையாகுமா?
பதில்: ஆகாது.
8. தலித் குடும்பங்கள் தங்கள் இல்ல வைபோகங்களுக்கு பிராமண வைதீகர்களை அழைப்பது தற்சமயம் சர்வசாதாரணம்; கோயில் தர்ம காரியங்களிலும் தலித் சகோதரர்கள் ஈடுபடுவது கண்கூடு. ஆக, தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,தமிழினத் தலைவர் கலைஞர்
கனவு நனவாகுமா?

பதில்: இதில் தந்தை பெரியாரோ அறிஞர் அண்ணாவோ, கலைஞரோ திடீரென எங்கிருந்து வந்தனர்? ஒரிஸ்ஸாவில் தலித்துகள் தங்களுக்காக கட்டிக் கொண்ட கோவிலில் பார்ப்பனரைத்தான் அர்ச்சகராக நியமித்து கொண்டனர். பக்தி செலுத்துவதில் தலித்துகள் மற்ற யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. அவர்களை ஒதுக்கி வைப்பது ஹிந்து மதம் தனக்கு தானே செய்து கொள்ளும் தீது. வன்கொடுமைக்கு எதிராக எனது மிக பலமான கண்டனத்தை இங்கு இடுகிறேன். ஆகவேதான் மிக ஆதங்கத்துடன் அவர்கள் தங்களை தாங்களே உயர்த்தி கொள்ள பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். தங்கள் சேவைகளை மலிவாக தரக்கூடாது. நான் மட்டும் தலித்தாக பிறந்திருந்தால் அவர்கள் அளவு பொறுமையாக இருந்திருக்க மாட்டேன். சமுதாயப் பெரியவர்களுக்கு பல ஆலோசனைகள் தந்து உயர்சாதிக்காரர்களை டரியல் ஆக்கியிருப்பேன். நான் தலித்தாக இருந்தால் என்ன செய்திருப்பேன் என்பதையும் ஒரு பதிவாகப் போட்டுள்ளேன்.

அனானி (12.05.2008, மாலை 07.24-க்கு கேள்வி கேட்டவர்)
1. பணவீக்கம் உயர்வுக்கு தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமா?
பதில்: பணப்புழக்கம் அதிகரித்து உற்பத்தி குறையும் போது பணவீக்கம் சாதாரணமாக ஏற்படும். உற்பத்தியை அட்ஜஸ்ட் செய்வது trial and error ஆகவே போகிறது.
2. தனியார்மயம்,தாரளமயம்,உலகமயம் இந்தியாவை இன்னொரு எத்தியோப்பியா ஆக்குமா?
பதில்: அதையெல்லாம் நடக்காது தடுத்து உலகமயமாக்கலை நமக்கு சாதகமாகத் திருப்புவதுதான் அறிவுள்ளவன் செய்யக்கூடிய செயல்.
3. தொழில் தர்மம் இல்லா வணிகர்கள் (ஒரு பகுதியினர்) தான் இதற்கு காரணமா?
பதில்: அவர்களும் பங்கு வகிக்கிறார்கள். அரசின் கொள்கை குழப்பங்களும் ஒரு காரணமே.
4. Online trading செய்யும் சேட்டை இதுவா?
பதில்: Online trading பற்றி நான் அதிகம் அறியவில்லை.
5. பங்குவர்த்தகம் குழி தோண்டி குப்புறத் தள்ளும் குதிரையாய் மாறும் போல் உள்ளதே?
பதில்: பங்குவர்த்தகத்தை சூதாட்டமாக நினைத்து ஆடினால் அதுதான் கதி.
6. வழக்கம் போல் விலை வாசி எதிர்ப்பு செயலில் இடது சாரிகள் "வாய்ச் சொல் வீரரா?
பதில்: அவர்கள் என்ன செய்வார்கள்? அறிவை வைத்துகொண்டா தர மாட்டேன் என்கிறார்கள்?
7. இடைத்தேர்தல் count down தொடக்கமா?
பதில்: எந்த இடைத்தேர்தல்?
8. எல்லா மாநிலங்களை விட தமிழகத்தின் நிலை பாராட்டுவது போல் உள்ளதற்கு கழக நிர்வாக ஆட்சி முறை காரணமா?
பதில்: நமது முதல்வரின் தமிழறிவுக்கு ஈடான தமிழறிவு மற்ற மாநிலத்து முதல்வர்களுக்கில்லை என்று வேண்டுமானால் பெருமை பட்டுக் கொள்ளுங்களேன். யார் தடுப்பது? மற்றப்படி வேறெந்த நிலையை பற்றி கேட்கிறீர்கள்?
9. பழைய மொரார்ஜி தேசாயின் ஜனதா ஆட்சி போல் வருவதற்கு வாய்ப்புள்ளதா?
பதில்: அந்த ஆட்சி மிகக் குறுகிய காலமே இருந்தது. அதுவும் உட்கலகங்களால் பீடிக்கப்பட்டது. அதன் ஆட்சி மதிப்பீடு செய்யும் அளவுக்கு நீடிக்கவில்லை.
10. நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் நடைபெற வாய்ப்புள்ளதா? நன்மை பயக்குமா?
பதில்: அவருக்கு 1996-ல் சான்ஸ் கிடைத்தது. கோட்டை விட்டார். அவ்வளவுதான் விஷயம்.

விக்ரம்:
1) As far as you dont cheat, be honest, work hard, is it such a big crime to earn for you and your family and be selfish? Why, then, some fellows see that as a big crime?
பதில்: உண்மை என்னவென்றால், எல்லோருமே தத்தம் நலனை பார்த்துக் கொண்டுதான் போகிறார்கள். மேலுக்கு மட்டும் பொது நலம் என்றெல்லாம் கோஷம் எழுப்புகிறார்கள். அவர்கள் என்ன நினைத்தால் யாருக்கென்ன நஷ்டம்? அவரவர் நலனை கவனித்து கொண்டு போவதுதான் நல்லது.
2) Any plan of starting some post on mild harmless, A Jokes to make the readers happy?
பதில்: இல்லை. நேரில் பார்த்தால் பல அசைவ ஜோக்குகள் கைவசம் உள்ளன. எழுத்தில் அவை வேண்டாம். ஆளை விடுங்கள்.
3) Like in some countries such as Dubai, is there a possibility in India too, that there will be no income tax, someday?
பதில்: எண்பதுகளில் வருமான வரி ஒழிக்கப்படும் என்ற மாதிரி ஒரு எண்ணம் வந்தது. அதாவது முதலில் எஸ்டேட் டியூட்டி ஒழிக்கப்பட்டது. பிறகு சென்றது கிஃப்ட் டாக்ஸ். கம்பெனிகள் மேல் விதிக்கப்பட்ட surtax-ம் எடுக்கப்பட்டது. "இதே மாதிரி நடந்து கொண்டே போனால், என்னைப் போன்ற வரி ஆலோசகர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவது திண்ணம்" என்ற ரேஞ்சுக்கு ஒரு வருமானவரி ஆலோசகர் குறிப்பு எழுதும் அளவுக்கு அது சென்றது என்று அதே வருமானவரி ஆலோசகரிடமிருந்து அறிந்தேன். உங்கள் கேள்வியைப் பார்த்ததும் அதே ஆலோசகரிடம் எஸ்.டி.டி. மூலம் பேசி கன்ஃபர்ம் செய்து கொண்டேன், எனது ஞாபகசக்தியில் பிழை ஏதும் இல்லை என்று. ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை. நடந்தால் நல்லதுதான்.
4) When do you think that the big and widening gap between the rich and poor will be narrowed?
பதில்: பழைய சோஷலிச காலங்களில் செல்வந்தர்களை ஏழையாக்குவதன் மூலம் அந்த இடைவெளியை குறைக்க முயற்சி செய்தனர். அதனால் இடைவெளிய் குறைந்ததோ இல்லையோ பணக்காரர்களை சதாய்ப்பது ஏழைகளுக்கு சந்தோஷம் தரும் என்ற நினைப்பில் காய்கள் நகர்த்தப்பட்டன. ஆனால் தற்சமயம் அது நடக்காது. பணக்காரர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. மனது இருந்து, விடாமுயற்சியும் இருந்தால் யார் வேண்டுமானால் முன்னேறலாம் என்ற நிலை வந்துள்ளது. அதே சமயம் சோம்பித் திரிந்தால் சங்குதான் என்பதும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே இப்போது என்ன நடக்கிறதென்றால் புது பணக்காரர்கள் ஏழைகளை வஞ்சித்துதான் உயர்ந்துள்ளனர் போன்ற தோற்றம் தருகின்றனர். புது பணக்காரர்களை பலருக்கு ஏன் பிடிப்பதில்லை என்ற எனது பதிவில் நான் இது பற்றி எழுதியுள்ளேன்.
5) Is there a way to make the politicians (who always enjoy all facilities like a/c, car, bungalow, good food etc), suffer like ordinary people like us, by exposing them to crowd, queue, sweat, unclean,dirty, smelly public toilets, garbage, bad roads, traffic jam etc etc? so that they will realize the common man's problems....?
பதில்: நல்ல கனவு. நிறைவேற என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்.

அனானி (14.05.2008 மாலை 07.55க்கு கேள்விகள் கேட்டவர்):
1. புதிய பொருளாதாரக் கொள்கை கடைபிடிக்கபட்ட நாள் முதல் நமது GDP 8% என்று சொல்லப்பட்டு வந்ததே திடிரென என்னாவாயிற்று? ஏன் பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு (7.5%) உள்ளதாக கூறப்படுகிறது? யார் காரணம்,விளக்குக?
பதில்: பணவீக்கம் என்பது பல காரணங்களால் வருவது. இது பற்றி நான் மேலே ஒரு கேள்வியில் ஏற்கனவே பதிலளித்து விட்டேன்.
2. பங்கு சந்தையில் ஏற்படும் திடீர் உயர்வு/குறைவு ஏன் ஏற்படுகிறது?
பதில்: அதற்கு முக்கிய காரணம் வெளி நாட்டு கம்பெனிகளும்தான். அவர்கள் திடீரென முதலீட்டை அதிகரிக்கின்றனர். திடீரென குறைக்கின்றனர். நம் ஷேர் மார்க்கெட்டும் எகிறுகிறது, தாழ்கிறது. மேலே விவரங்களைப் பார்க்க அணுகவும் நண்பர் வால்பையனை.
3. உணவுப் பொருள்களின் திடீர் 50 -60% விலையேற்றம் யாரால் ஏற்படுகிறது?
பதில்: நாளை என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற நிலை ஏற்படும்போது பொருட்களை பதுக்குதல் மிக சாதாரணம். அதுவும் அமெரிக்காவில் பல விளைநிலங்கள் எரிபொருள் உற்பத்திக்கு திசை திருப்பப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இரு ஆண்டுகள் பயிர்கள் சாவியாகப் போனது. இப்படி பல காரணங்கள் உண்டு. நமது பொது தானியசேமிப்பும் குறைந்துள்ளது.
4. விவசாயிகளின் தற்கொலைக்கு யார் காரணம்?
பதில்: மேலே உள்ள கேள்வியில் குறிப்பிடப்பட்ட உணவு விலைகள் விவசாயிகளுக்கு போகாது இடை தரகர்களுக்கு சென்றதும் ஒரு காரணம்.
5. 60,000 கோடி கடன் தள்ளுபடிக்கும் பின்னும் அவர்கள்(பொருளாதர) நிலை பரிதாபமாக உள்ளதே ஏன்?
பதில்: முதற்கண் சம்பந்தப்பட்ட தொகை அவ்வளவு அதிகம் இல்லை. அதனில் பாதிக்கும் குறைவே. அதுவும் கூட்டுறவு/ பாங்கு கடன்கள் மட்டுமே, தள்ளுபடி செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் விவசாயிகல் மாட்டி கொண்டிருப்பது கந்து வட்டிக்காரர்களிடம். அதற்கு எந்த நிவாரணமும் தரப்படவில்லை.
6. பாரம்பரிய தொழில்கள் நலிந்து வருகிறதே,அந்தப் பணியாளர்களின் எதிர்காலம் என்னவாகும்?
பதில்: உதாரணம் கூறுங்கள். எந்த தொழிலாக இருந்தாலும் அது தற்காலத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இப்போது மேன்யுவல் தட்டச்சு யந்திரங்களை யார் வாங்குகிறார்கள்? ஆகவே அதை மட்டும் செர்வீஸ் செய்யத் தெரிந்தவர்கள் பாடு திண்டாட்டம். வி.சி.ஆர். மெக்கானிக்குகளுக்கும் அதே கதி. பல கம்பெனிகளில் இப்போதெல்லாம் ஸ்டெனோக்கள், டைப்பிஸ்டுகள் ஆகியோரை வேலைக்கெடுப்பது மிகவுமே குறைந்து விட்டது. பேங்குகளில் இத்தனை பேர் வி.ஆர்.எஸ்ஸில். போனாலும் இன்னும் வேலை நன்றாகத்தானே நடக்கிறது, கணினியின் தயவால். உண்மை கூறப்போனால் ஏற்கனவே பல காரணங்களுக்காக மிக அதிக அளவில் ஆட்கள் சம்பளத்துக்கு எடுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பது இப்போதுதான் புலப்பட ஆரம்பித்துள்ளது.
7. இந்தியாவின் வெளி நாட்டுக் கடன் குறைந்துள்ளதா?இல்லையா?
பதில்: கண்டிப்பாக இல்லை. அதுவும் எண்ணெய் இறக்குமதி நாடாக நாம் இருக்கும் வரை அதுதான் நிலைமை.
8. பொருளாதார வளர்ச்சி 70 % மக்களுக்கு போய் சேரவில்லை என இடதுசாரி கட்சிகளின் ஆதங்கம் உண்மையா?
பதில்: ஆதங்கம் படுவதோடு சரி. மேற்கு வங்கம் மற்றும் கேரளத்தில் அதற்கான முயற்சிகள் ஒன்றும் எடுப்பதாகக் காணோமே.
9. தேர்தல் அறிக்கை மூலம் வாக்களர்களுக்கு இலவசங்கள் அள்ளி கொடுக்கப்படுகிறதே? இது எங்கே கொண்டுபோய் விடும்?(ஒரு ஓட்டுக்கு மாதம் ரூபாய் 1000/= கொடுப்பதாக கூட அறிக்கை கண்ணில் படுகிறதே)
பதில்: யார் வீட்டு பணத்தை யார் அளிப்பது? எனக்கு தெரிந்து இலவசம் எல்லாம் தரமாட்டேன் என்று சொல்லியும் மிகப் பெரிய வெற்றி பெற்ற முதல்வர் ஒருவர் இருக்கிறார். அவர் யார் என்று ஊகித்து கூறுவதற்கெல்லாம் பரிசு கிடையாது என்பதையும் கூறிவிடுகிறேன். :)))))))
10. வங்க மாநிலத்தில் தனியார்மயத்தை ஆதரிக்கும்,இடதுசாரிகள் அதை எதிர்த்து நடுவண் (central government)ஆட்சியையே கவிழ்க்க முயலுவதுபோல் காட்சிகள் செய்விக்கப்படுகின்றனவே, ஏன், விளக்குக?
பதில்: பார்ப்போம், இந்த கண்ணாமூச்சி எத்தனை நாளுக்கென்று. மிக திறமையான பிரதமரை கோமாளியாக செயல்பட செய்யும் கம்யூனிஸ்டுகள் கண்டனத்துக்குரியவர்கள்.

சரவணன்:
1. தாங்கள் கிண்டி காலேஜ், அண்ணா யுனிவர்சிடியில் படிக்கும்போது நடந்த சுவையான சம்பவம் ஒன்று... (நானும் அங்கதான் படிச்சேன் அதான் காலேஜ் பாசத்துல வந்து உங்க பதிவுல கும்மியடிக்கறேன்)
பதில்: பொறியியல் கல்லூரி நினைவுகள் மிகவும் இனிமையானவை. நான் சமீபத்தில் 1963-ஆம் வருடம் முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்த சமயம் என் நண்பர்களுக்கு ஒரு நீதிக்கதை கூறினேன். அதை படித்து கருத்து சொல்லவும்.

அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது