என் கணினி குரு முகுந்தனிடமிருந்து இன்னொரு மின்னஞ்சல் வந்தது. அதை கீழே தமிழாக்கித் தந்துள்ளேன்.
"இது எப்படி இருக்கு?
தந்தை: "நான் சொல்லும் பெண்ணைத்தான் நீ கட்ட வேண்டும்"
மகன்: "எனது மனைவியை நானே தேர்ந்தெடுத்து கொள்வேன்!"
Father: "நான் சொல்லும் பெண் பில் கேட்ஸின் மகளாயிற்றே."
Son: "ஓ அப்படியா, ... சரிப்பா. நீங்கள் சொல்லற மாதிரி நடந்து கொள்வேன்"
இப்போது - தந்தை பில் கேட்ஸிடம் செல்கிறார்.
தந்தை: "உங்கள் பெண்ணுக்கு ஒரு நல்ல வரன் கொண்டு வந்துள்ளேன்."
பில் கேட்ஸ்: "ஆனால் என் பெண் இன்னும் சிறுமிதான். கல்யாண வயதில்லை அவளுக்கு!"
தந்தை: "ஆனால் நான் சொல்லும் வரன் உலக வங்கியின் வைஸ் பிரசிடெண்ட்."
பில் கேட்ஸ்: "ஓ, அப்படீன்னாக்க... சரி"
கடைசியில் தந்தை உலக வங்கியின் பிரசிடண்டை காணச் செல்கிறார்.
தந்தை: "வைஸ் பிரசிடண்டாக வருவதற்கு ஒரு அருமையான இளைஞன் தயார்."
பிரசிடெண்ட்: "சரியாப்போச்சு. இருக்கற வைஸ் பிரசிடண்டுகளே எதேஷ்டம்!"
தந்தை: "ஆனால் நான் சிபாரிசு செய்பவன் பில் கேட்ஸின் மாப்பிள்ளையாச்சே."
பிரசிடெண்ட்: "ஓ, அப்படீன்னா...சரி"
இப்படித்தான் பிசினஸ் செய்யோணும்!!
நீதி: உங்க கிட்டே ஒண்ணுமேயில்லேன்னாலும் நீங்கள் முயன்றால் எதை வேண்டுமானாலும் பெறலாம். ஆனாக்க அதற்கு நேர்மறை எண்ணங்கள் அவசியம்.
நாம் என்னவாகவும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். என்ன செய்ய முடியும் என்பதை யோசிக்க வேண்டும்....பிறகு..... அதைத் திட்டமிட வேண்டும்....நிறைவேற்ற வேண்டும்.....
பகல் கனவோ இரவுக் கனவோ, அவற்றால் பலன் என்ன?
முயற்சி...முயற்சி....துவக்கு...துவக்கு .துவக்கு.......
வெற்றிதான் கிடைக்கும் ...நல்ல விளைவுகள்தான் கிட்டும்.....
முயற்சித்துத்தான் பாருங்களேன்…"
சற்று ஓவர் கற்பனைதான், வெறுங்கை முழம் போடும் வேலைதான். இல்லையென்று சொல்லவில்லை. இருப்பினும் கதையின் நீதி நன்றாக உள்ளது. நான் முன்பொருமுறை சொன்ன கதையின் நீதியை விட நன்றாகவே உள்ளது.
டால்ஸ்டாய் கதை ஒன்று. ஒரு போர்வீரன் போர்முனையிலிருந்து வீட்டுக்கு திரும்புகிறான். நீண்ட பயணம். ரொம்ப தூரம் நடக்க வேண்டும், ஊர் ஊராக. சாப்பாட்டு வேளையில் ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறான். கதவைத் திறந்த பெண்மணியிடம் தன்னிடம் ஒரு அதிசயக்கல் இருப்பதாகவும் அதை வைத்து நல்ல சூப் தயாரிக்க முடியும் என்றும் கூறுகிறான். அவளும் சரியென்று உள்ளே அனுமதிக்கிறாள். அடுப்பை பற்ற வைத்து பாத்திரத்தை அதன் மேல் வைக்கிறான். பாதியளவு தண்ணீர் விடுகிறான். சிறிது உப்பையும் போட்டு விட்டு, பெண்மணியிடம் பேச்சு கொடுக்கிறான். சற்று வெங்காயம் இருந்தால் அவன் தயாரிக்கும் சூப் இன்னும் சூப்பராக இருக்கும் எனக் கூற அவளும் கறிகாய் கூடையை எடுத்து வருகிறாள். விறுவிறுவென வெங்காயத்தை உரித்து அரிந்து பாத்திரத்தில் இட்டு கலக்குகிறான். பிறகு "அடேடே கொத்தமல்லியும் இருக்கிறதே" என்று அதையும் சேர்க்கிறான். பேசிக் கொண்டேயிருக்கையில் அப்பெண்மணி ஏற்கனவே வேக வைத்து கொண்டிருந்த உருளைக்கிழங்கு வாசனை அறையில் நிறைகிறது. அவளிடம் கேட்டு ஒரு வேக வைத்த உருளைக்கிழங்கையும் உதிர்த்து சூப்பில் போடுகிறான். சூப் தயார். பெண்மணிக்கு சந்தோஷம். போர் வீரனோ அவளுக்கு அக்கல்லைப் பரிசாகத் தந்து விட்டு தன் வழியே செல்கிறான். அடுத்த ஊருக்கு செல்லும் முன்னால் இதே மாதிரி இன்னொரு கல்லித் தேர்ந்தெடுக்கிறான். அடுத்த ஊரில் இதே மாதிரி இன்னொரு வீட்டின் கதவைத் தட்டுகிறான்.
இதுவும் ஓவராக இருக்கிறது என்று நினைப்பவருக்கு எனது அனுபவத்தையும் கூறுவேன்.
சமீபத்தில் 1971-ல் பம்பாயில் வசித்த போது ஒரு திங்கள் கிழமை காலை 10 மணியளவில் விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கிராஸ் செய்ததற்காக ஸ்க்வாடிடம் மாட்டிக் கொண்டேன். என்னையும் இன்னும் பத்து பேரையும் ரயில்வே மேஜிட்ரேட்டிடம் அழைத்து சென்று அவர் முன்னால் நிறுத்தினர். அவரும் எனக்கு ஐந்து ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் மூன்று நாள் சிறை தண்டனையும் அளித்து தீர்ப்பு வழங்கினார். என் பாக்கெட்டில் இருந்தது வெறும் 95 பைசாக்கள் மட்டுமே. கூடவே சீசன் டிக்கெட் அவ்வளவே. என் அலுவலகத்துக்கு ஃபோன் செய்து யாராவது நண்பரை வரவழைக்கலாம் என்றால் அதற்கு அனுமதி தர மறுத்து விட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது கனக் ராய் என்னும் ஒருவர் என்னை அணுகினார். ஐந்து ரூபாயை தான் எனக்கு அளிப்பதாகவும் நான் வெளியில் சென்றதும் அவர் தந்த போன் எண்ணில் பேசி அவர் மாட்டிக் கொண்டிருப்பதைக் கூற வேண்டும் என கேட்டு கொண்டார். அத்தனை பேரையும் விட்டு என்னை ஏன் தொடர்பு கொண்டார் எனத் தெரியவில்லை. அவருக்கு எத்தனை அபராதம் என்று கேட்க அவர் தான் லேடீஸ் கம்பார்ட்மெண்டில் ஏறியதால் 15 ரூபாய் அபராதம் என்றும், தன்னிடம் ஐந்து ரூபாய் மட்டுமே இருந்ததால் வெளியே செல்ல இயலவில்லை என்றும் கூறினார்.
அதே போல வெளியில் வந்து நேரே அலுவலகம் சென்றேன். எனது மேஜை இழுப்பறையில் இருந்த 15 ரூபாயை எடுத்து திரும்ப கனக் ராய் இருந்த இடத்துக்கு வந்தேன். என்னைப் பார்த்ததும் அவர் ஆவலுடன் நான் தொலைபேசியில் செய்தி அனுப்பினேனா எனக் கேட்டார். நான் அவரிடம் 15 ரூபாயைக் கொடுத்து பேசாமல் வெளியில் வந்து விடுமாறு கூறினேன். அவரும் நன்றியுடன் வாங்கிக் கொண்டார். அவர் என்னிடம் கொடுத்திருந்த அவர் பெயர் முகவரி அடங்கிய சீட்டை அவரிடமே திருப்பித் தந்தேன். நான் அவருக்கு எனது முகவரி அடங்கிய சீட்டைக் கொடுத்து பாக்கி பத்து ரூபாயை மணியார்டர் செய்யுமாறு கூறிவிட்டு வந்து விட்டேன். இரண்டே நாளில் மணியார்டர் வந்தது, "நன்றியுடன் கனக் ராய்" என்று.
காலத்தினால் எனக்கு கனக் ராய் செய்த உதவி ஞாலத்திலும் மாணப் பெரிது. அதற்கு எதிர் மரியாதையே அவரை முழுக்க நம்பியது. அவரும் எனது நம்பிக்கையை காப்பாற்றினார். பிறகு அவரை நான் எப்போதுமே பார்க்கவில்லை. இருப்பினும் அவர் என் நினைவில் எப்போதும் இருப்பார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சைவ சித்தாந்த அறிமுக வகுப்புகள்
-
சைவசித்தாந்த அறிமுக வகுப்புகளை நடத்த தகுதியான ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது
வணக்கத்திற்குரிய சாந்திகுமார அடிகளைப் பற்றி அறிந்துகொண்டோம். சைவசித்தாந்தம்
ஒரு ...
2 hours ago