டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.
சமீபத்தில் 1976-ல் வந்த இப்படம் இன்னும் என் மனதில் நிற்கிறது. அதன் முழு வீடியோ யூ டியூப்பில் இப்போது. கிடைக்கவில்லை, ஆனால் ஒரு பாட்டு உண்டு, எஞ்சாய்!!
இப்போது பார்த்தாலும் அதே புதுமையை இழக்காமல் உள்ளது அப்படம். பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டா என்றெல்லாம் எனக்கு தெரியாது.ஹிட் ஆகவில்லையென்றால் நமது ரசிகர்க்கு ரசனை போதாதுஎன்றுதான் கூறுவேன்.
கவர்ச்சி நடிகை ஹலத்தை முழுக்க முழுக்க போர்த்திய புடவையுடன் பார்ப்பது சிறந்த மாறுதலாக உள்ளது.
பெண் சபலம் மிக்க மது பார்க்கும் பெண்களுடன் எல்லாம் கற்பனையிலேயே காதல் செய்கிறான்.முக்கியமாக டைட்டில் சாங்க் “மன்மதலீலை” மிக அழகான முறையில் படமாக்கப்பட்டுள்ளது (பாடல் பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாகவே அவ்வப்போது வசனங்களுடன் வருகிறது).
ஒவ்வொரு பெண்ணின் அறிமுகமும் சுவையானது. அவ்வப்போது மனைவியிடம் மாட்டிக் கொண்டு பேய்முழி முழிப்பதும் சுவையானதே.
இப்படத்தில் வரும் பல ஆண்களும் பெண் சபலத்துடன் இருப்பது சற்றே இடிக்கிறது என்று கூறத் தோன்றினாலும் அதையும் சுவைபட சொல்கிறார் டைரக்டர்.
டாக்டரின் ஆலோசனைப்படி பாவமன்னிப்பு கேட்கிறேன் பேர்வழி என தனது கிளார்க்கிடம் எல்லாவற்றையும் கன்ஃபெஸ் செய்ய அவர் படும் பாடும் பிரமாதம்.
பதிவு இப்பாடலுடன் துவங்கினாலும் பதிவு முழுக்க அது பற்றியே அல்ல. அது பற்றி பிறகு, முதலில் பாட்டைக் கேட்டு, பார்த்து மகிழ்வோம்.
இப்படத்தில் வரும் கீழ்க்கண்ட வரிகளுடனெயே என் பிரச்சினை. “நிகழும் பார்த்திப ஆண்டின் ஆவணித் திங்கள் 20-ஆம் நாள்” எனத் துவங்கும் அவ்வரிகளை கல்யாணங்களில் பாடும் மெல்லிசைக் குழுவினர் சம்பந்தப்பட்ட கல்யாணம் நடக்கும் சரியான தமிழாண்டு, மாதம் ஆகியவற்றுடன் பெண்ணின் தந்தையின் பெயரையும் நுழைத்துப் பாடுவார்கள்.
இருக்கட்டுமே இதில் உன் பிரச்சினை என்ன என கேட்கும் முரளி மனோகருக்கான எனது பதில் இதுதான்..
இப்பாடல், வரும் நெஞ்சிருக்கும் வரை என்னும் திரைப்படம் சமீபத்தில் அறுபதுகளில் வந்தது. சென்னை மெரீனா பீச்சருகில் இப்போதும் காணக்கிடைக்கும் உழைப்பவர் வெற்றி சிலை அப்படத்தில் காட்டப்படும். அச்சிலையோ சமீபத்தில் 1959-ல்தான் வந்தது. ஆனால் பார்த்திப ஆண்டு? 1945 ஏப்ரல் முதல் 1946 ஏப்ரல் வரை (நான் அந்த ஆண்டில்தான் பிறந்தேன்). ஆக, இதைத்தான் பொருட்குற்றம் என்பார்கள். ஆக, இப்பாட்டில் வரும் நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் 20-ஆம் நாள், என்பது சுமாராக செப்டம்பர் மாதம் 5, 1945 ஆக இருக்கும். பை தி வே அன்று புதன்கிழமை.
ஆனால், சமீபத்தில் அறுப்துகளின் துவக்கத்தில் வந்த “பார் மகளே பார்” படத்தில் 18-கேரட் தங்கம் பற்றிய பிரஸ்தாபம் கதையின் காலகட்டத்திற்கு ஏற்ப வந்ததை நோக்கினால் காட்சிகளில் லாஜிக்குக்காக எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம். எதற்கும் இருக்கட்டும் என அப்படத்திலிருந்தும் ஒரு பாடலை இங்கே போடுகிறேன்.
ஆனால் சில காட்சிப் பிழைகள் காலப்போக்கில் அடித்துச் செல்லப்பட்டு விடுவதும் நடக்கும்.உதாரணத்துக்கு பார்த்தால் பசி தீரும் என்னும் படம்.
அது அறுபதுகளின் துவக்கத்தில் வந்தது. கதை நடக்கும் காலமோ 1945-46. அப்படத்தில் அறுபதுகளில் உற்பத்தியான ஸ்டேண்டர்ட் ஹெரால்ட் கார் வரும். இப்போது அப்படத்தைப் பார்த்தால் யாருக்கு அந்த உண்மை தெரியப் போகிறது?
நான் ஏற்கனவேயே ஒரு பதிவில் குறிப்பிட்ட குழந்தையும் தெய்வமும் படத்தின் ஒரிஜினல் ஜெர்மானிய படமான Das dopplete Lottchen-ன் ஒரு படக்காட்சி கீழே தந்துள்ளேன். பாஷை புரியாவிட்டால் என்ன, குழந்தையும் தெய்வமும் படம் பார்த்தவர்களுக்கு அதைப் புரிந்து கொள்ள கஷ்டம் இருக்கலாகாது. சகோதரிகள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ளும் காட்சி.
நான் ஏற்கனவேயே சொன்னது போல, தமிழ் மற்றும் ஹிந்தி வெர்ஷன்களை நான் அவை முதன் முதலாக வந்த சமயம் பார்க்கவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் வெர்ஷன்களில் சம்பந்தப்பட்ட குழந்தை நடிகைகள் இரட்டை பாத்திரத்தில் வந்தனர். ஆனால் சமீபத்தில் 1950-ல் Erich Kaestner-ராலேயே திரைக்கதை எழுதப்பட்ட Das doppelte Lottchen படத்தில் நிஜ இரட்டையரே நடித்தனர். இப்போது அந்த சகோதரிகளின் வயது 74-க்கு மேல் இருக்கும்.
ராமானந்த் சாகரின் உத்தர ராமாயணத்தில் வந்த லவன் குசனும் இரட்டை பிறவிகள். அப்படி இருந்தால் பல ட்ரிக் ஷாட்டுகள் மிச்சம்தானே.
என்ன தமிழ் படத்தில் வரும் அன்புள்ள மான்விழியே பாடல்கள் எல்லாம் வராது. அந்த சிசுவேஷனே கிடையாது. அதெல்லாம் இந்திய சூழ்நிலைக்கான மசாலா சேர்ப்பு. ஆனால் எனக்கு பிடித்த மசாலா சேர்ப்பு.
போகிற போக்கில் இப்படத்தின் ஆங்கில ரூபத்தையும் பாருங்கள், படம் Parent trap. காட்சி: சகோதரிகள் ஒருவரை ஒருவர் அடையாளம் காணும் நேரம். இங்கு ஹேய்லி மில்ஸ் இரட்டை பாத்திரம்.
சமீபத்தில் 1961-ஆம் ஆண்டில் சென்னையில் நடத்தப்பட்ட ஒரு திரைப்பட விழாவில் இந்தப் படம் செக்கோஸ்லாவிக்கியா நாட்டின் தரப்பிலிருந்து திரையிடப்பட்டது. அண்ணாசாலை அண்ணா சிலைக்கருகே இருந்த நியூ எல்ஃபின்ஸ்டன் தியேட்டரில் அதை அக்கால கட்டத்தில் பார்த்த போது எனக்கு வயது கிட்டத்தட்ட 15. டிக்கெட் விலை 84 பைசா.
அப்படத்தின் பின்னணியில் இருந்த சரித்திர விவரங்கள் எனக்கு அப்போது தெரியாது. ஒரு முன்முடிவும் இன்றித்தான் அப்படத்தைப் பார்த்தேன். படம் முழுக்க செக் மொழியிலும் ஜெர்மானிய மொழியிலும் இருந்தது. ஆங்கிலத் துணை தலைப்புகளால்தான் கதைப் போக்கை நிர்ணயிக்க முடிந்தது. அப்படத்தின் யூ ட்யூப் சுட்டி கீழே.
அப்படத்தை இத்தனை ஆண்டுகளாக நினைவில் வைத்திருந்ததற்கு முக்கியக் காரணமே செக் மற்றும் ஜெர்மானிய மொழி வசனங்களைக் கேட்டதுதான். அத்தருணத்தில் தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளை மட்டும் அறிந்திருந்த நான், முதன் தடவையாக ஜெர்மன் மற்றும் செக் மொழிகளை அவற்றைத் தாய்மொழியாக கொண்டவர்கள் மூலம் கேட்டேன். அவற்றில் ஜெர்மன் பேசும்போது ஏதோ சம்ஸ்கிருதம் கேட்பது போல இருந்தது.
இப்போது படத்துக்கு போவோம். இன்றுதான் (20.09.2011) முழு படத்தையும் யூ ட்யூப்பில் பார்த்தேன். முதலில் பார்த்த பல புரியாத விஷயங்கள், பின்னணிகள் இப்போது புரிந்தன. Reinhard Heydrich என்பவன் ஹிட்லரால் நியமிக்கப்பட்ட செக்கோஸ்லாவாக்கியாவின் முழு அதிகாரம் பெற்ற தலைவன். அவன் சொல்வதுதான் சட்டம். அவனை மே 1942 இறுதியில் கொல்ல முயற்சிக்கின்றனர் செக் போராளிகள். அதில் காயமுற்று அவன் ஜூன் 4-ஆம் தேதி இறந்து போகிறான். அந்தக் கொலைக்கு நாஜிக்கள் கொடூரமான முறையில் பழிதீர்க்கின்றனர். ஜூன் 3, 4 மற்றும் ஐந்தாம் தேதி நடந்த நிகழ்வுகளில் பள்ளியிறுதித் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் 3 மாணவர்களும் பலியாகின்றனர். அதுதான் கதை.
அந்த சில நாட்களின் நிகழ்வுதான் படம் முழுக்க வருகிறது. பரீட்சைநேர ஜுரங்கள், காப்பி அடிப்பது ஆகியவை சகஜமாகவே காட்டப்ப்டுகின்றன. லாண்டிரி நடத்திப் பிழைக்கும் ஒரு பெண்மணி, அவள் மகன் (மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மூவரில் ஒருவன், அந்த மகனின் வகுப்புத் தோழி, அவளது தந்தை (ஒரு வழக்கறிஞர்) ஆகியோர் மிக இயல்காக கதைக்குள் இணைக்கப்படுகின்றனர்.
ஹெய்ட்ரிச்சுக்கு பதிலாக நியமிக்கப்படுபவன் செக் மொழி, லத்தீன மொழிகள் ஆகியவற்றை நன்றாகவே பேசுகிறான். தங்க மீனை உயிருடன் பிடிக்கும் தனது சிறு மகனிடம், அந்த மீனை கொல்லாமல் குளத்தில் விடுமாறும் கூறுகிறான். மொத்தத்தில் நாம் அன்றாடம் காணும் சாதாரண மனிதன் மட்டுமே. இருப்பினும் ஒரு அல்ப காரணத்துக்காக மரணதண்டனை பெற்ற அந்த மூன்று மாணவர்கள் விஷயத்தில் கருணை காட்ட மறுத்து அவர்களும் இறக்கின்றனர்.
நேரம் இருந்தால் அப்படத்தை நிச்சயம் பார்க்கவும். அது கம்யூனிச பிரசாரம் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அது என்னமோ உண்மையாக இருப்பதாகத்தான் எனக்கு படுகிறது. ஸ்டாலின், சோவியத் ஒன்றிய அரசு அதிகாரிகள் செய்விக்காத கொலைகளா? இருப்பினும் அதையெல்லாம் மறந்து இப்படத்தைப் பார்க்குமாறு சிபாரிசு செய்கிறேன்.
ஐம்பது ஆண்டுகள் கழித்து பார்த்த அப்படத்தில் பல காட்சிகளை அவை வருவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்னால் அவற்றுக்கான துணைத் தலைப்புகள் சேர்த்து என்னால் ஊகிக்க முடிந்தது. நான் 14 ஆண்டுகளுக்கு பின்னால் பார்த்த சபாஷ் மீனா, பத்துக் கட்டளைகள் ஆகிய படங்கள் விஷயத்தில் நடந்தது போலத்தான் இங்கும் நடந்தது. அதைக் குறிப்பிட்ட எனது ஜெயா டிவியின் நேர்காணல் இதோ.
அந்த ஜெயா டிவி பேட்டிக்கான மீதி வீடியோக்களை பார்க்க எனது இந்த இடுகைக்கு செல்லவும்,
சமீபத்தில் 1964-ல் வெளி வந்த இப்படம் உருவாக்கம் பெற நீண்ட காலம் (கிட்டத்தட்ட 6 ஆண்டுகள்) பிடித்தாலும் அதன் தயாரிப்பாளர் பாலச்சந்தரை அது ஏமாற்றவில்லை. சக்கைப்போடு போட்டது. அக்கால சென்னைத் தெருக்கள் பார்க்கப் பரவசம் தரும். மீனம்பாக்கம் பழைய ஏர்போர்ட்தான் அப்போதைய விமான நிலையம். ஒரு செக்யூரிட்டி பந்தாவும் இல்லாமல் ஏர்ப்போர்ட்டில் எல்லோரும் சகஜமாகப் புழங்கியது வேடிக்கையாக இருக்கும்.
காலை ஒன்பது மணி முதல் மாலை 6 மணி வரை ஒரே நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள்தான் படம்.
முதல் பகுதி:
இரண்டாம் பகுதி:
இதில் வரும் “தத்தித் தத்தி நடந்து வரும் சின்னப்பாப்பா” பாடலுக்கு வாயசைக்கும் அப்பெண் குழந்தை மங்களாவுக்கு இப்போது வயது 57 இருக்கும். வி.எஸ். ராகவனை இளைஞனாகப் பார்க்கலாம். எல். விஜயலட்சுமி மட்டும் சளைத்தவரா என்ன? துள்ளிக் கொஞ்சும் இளமை!!!
மூன்றாம் பகுதி:
அடாடா என்ன கொடுமை. மீதிப் பகுதிகள் கிடைக்கவில்லையே? யூ ட்யூப்பில்தான் தேட வேண்டும். பார்ப்போம். இப்போதைக்கு பதிவைப் போடுகிறேன். உங்களில் ஆர்வமுள்ளவர்கள் முயற்சி செய்யுங்களேன். அவற்றின் எம்பெட்டிங் கோட் கிடைத்தால் பின்னூட்டமாகத் தரவும்.
அந்தப் பொம்மைக்காக எல்லோரும் நாய் படாத பாடுபட்டு அலைவதுதான் படம். கத்திபாராவிலிருந்து மீனம்பாக்கத்துக்கு டாக்சி 1.40 ரூபாய், மீட்டர்படி.
ஆறுதலாக அவர் புது முறையில் டைட்டில்ஸ் தந்ததையாவது பார்ப்போம்.
கடைசியாக டைட்டில்ஸ்:
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: என் வேண்டுகோளுக்கு இணங்கி இப்படத்தில் திரையிடப்பட்ட, ஜேசுதாஸ் தமிழில் பாடிய முதல் பாட்டுக்கான வீடியோவின் சுட்டியைத் தந்த செந்திலுக்கு என் நன்றி. பாடல் இதோ:
03.11.2011 அன்று சேர்த்தது:
நண்பர் பால ஹனுமானுக்கு நன்றி. அவர் அன்புடன் விட்டுப் போன பகுதிகளுக்கான சுட்டிகள் தந்துள்ளார். அவற்றை வைத்து வீடியோக்களை எம்பெட் செய்கிறேன்.
இன்று காலை எதேச்சையாக உத்தம புத்திரன் படத்தின் ஒரு காமெடி க்ளிப்பிங்கை டி.வி.யில் பார்த்தேன். அமர்க்களமாக இருந்தது. சரி மீதி காமெடி காட்சிகளையும்தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் யூ ட்யூப்புக்கு போய் உத்தமபுத்திரன் என ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சிட்டு, தேடினால் பழம் நழுவி பாலில் விழுந்தது போல முழுப்படமே கிடைத்தது.
அது கீழே:
என்ன, கிட்டத்தட்ட ஒரு ஜிபி பிடிக்கும் அதை உங்கள் கணினியில் பார்க்க. எது எப்படியாயினும் பார்க்க வேண்டுமானால் உடனே பார்த்து விடவும். ஏதாவது போட்டுக் கொடுக்கும் பசங்கள் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி இந்த வீடியோவையே தூக்கி விடலாம். கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் அந்த டேப்.
நான் ஏற்கனவேயே ஓரிடத்தில் குறிப்பிட்டது போல, முதன் முதலில் தனுஷை பார்க்க எனக்கு பிடிக்காமலிருந்தாலும், இப்போது பிடித்து விட்டது. காமெடியில் பின்னுகிறார். அதுவும் விவேக்கை வயிறு கலங்க வைக்கும் காட்சிகளும் அற்புதம்.
அப்படி ஒன்றும் ஆட்சேபகரமாகத் தெரியவில்லையே (இந்த வீடியோ முழு வசனங்களையும் உள்ளடக்கியது என அறிகிறேன்)
இப்படத்தில் எனக்கு பிடித்ததே தனுஷின் நேர்மறையான எண்ணங்கள்தான். இது ஒரிஜினலாக தெலுங்கில் வந்ததாக கேள்விப்பட்டேன். ஆனால் எனக்கென்னவோ இது ஒரு ஹிந்திப்படமாகத்தான் முதலில் வந்திருக்கும் எனத் தோன்றுகிறது.
இன்றைய அவசர உலகில் தபால்காரர்கள் கிட்டத்தட்ட பார்க்க முடியாத உயிரினங்கள் ஆகிவிட்டனர் என்பது விசனத்துக்குரியதே. அதுவும் கிராமங்களில் அவர்களது வரவை எதிர்பார்க்கும் மக்களின் மகிழ்ச்சி எல்லாமே பழங்கதையாகப் போய் விட்டன.
மற்ற நாடுகள் பற்றித் தெரியாது, ஆனால் இந்தியாவில் மொழி பேதமின்றி எல்லா ஊர்களிலும் அவர்களது சேவை போற்றப்பட்டதெல்லாம் இப்போது கனவு போலத்தான் இருக்கிறது. (குறைந்த பட்சம் சென்னை போன்ற பெரிய நகரங்களில்).
முதலில் பல்கோன் கீ சாவோன் மே (இமைகளின் நிழலில்) என்னும் ஹிந்திப் படத்தில் இந்தக் காட்சியில் ராஜேஷ் கன்னா தபால்காரனாக வந்து அமர்க்களப்படுத்துவதை கீழே உள்ள வீடியோவில் கண்டு களியுங்கள். இப்படம் சமீபத்தில் 1977-ல் வெளி வந்தது.
தமிழில் கிட்டத்தட்ட அதே மூடில் ஒரு பாட்டு, சமீபத்தில் 1966-ல் வெளி வந்த கௌரி கல்யாணம் என்னும் படத்தில் ஜெயசங்கர், “ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவையிது” எனப் பாடிக்கொண்டே உலா வருகிறார் தன் சைக்கிளில். அப்பாடலின் வீடியோ கிடைக்க மாட்டேன் என்கிறது, பாடல் வரிகளையாவது பார்ப்போம், ஆக்கம் கண்ணதாசன்.
ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் சேவை இது,- வாழ்வை
இணைக்கும் பாலம் இது !
தாயைப் பிரிந்த பிள்ளை என்றாலும்,
தாரம் பிரிந்த கணவன் என்றாலும்,
உடன் பிறந்தோரின் பிரிவென்ற போதும்
பிரிவுத் துயரை பேசிடும் கடிதம் ! ( ஒருவர் )
காலம் என்னும் தெய்வமகள்
கலங்க வைப்பாள் - சிரிக்க வைப்பாள் !
எந்த்ந்த முறையில் என்ன என்ன கதையோ,
எந்தெந்த முகத்தில் என்ன என்ன வருமோ ,
சுகமும் வரலாம் , துன்பமும் வரலாம்,
இறைவன் அருளால் நலமே வருக ! ( ஒருவர் )
கன்னியரே காலம் வரும் ,
காதலரின் தூது வரும் !
பிள்ளை அனுப்பும் வெள்ளிப் பணம் நூறு,
அன்னை முகத்தில் ஆனந்தம் பாரு !
மகனை நினைத்து மயங்கும் மனமே,
விரைவில் வருவான் முருகன் அருள்வான் ! ( ஒருவர் )
அதன் வீடியோ எப்படி இருக்கும்? அதை அறிய மேலே உள்ள ஹிந்திப்பட வீடியோவையே பார்த்தால் போதுமானது. ராஜேஷ் கன்னா இடத்தில் ஜெயசங்கரை கற்பனை செய்து கொள்ளலாம். அப்படியே பொருந்தும்.
போகிற போக்கில் மால்குடி தினங்கள் புகழ் ஆர்.கே. நாராயணனது கற்பனை எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்களேன். தபால்காரர் எவ்வாறு கிராம மக்களின் சுக துக்கங்களில் பங்கு பெறுகிறார் என்பதை மனதைக் கொள்ளை கொள்ளூம் முறையில் ஆர்.கே.என். சித்தரிக்கிறார்.
மனித மனங்களின் சலனங்கள், ஆசாபாசங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ள மொழியும் ஒரு தடையாகுமோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் சேர்க்கை: கௌரி கல்யாணம் பாட்டின் வீடியோ இங்கே.
ஜெயமோகனுக்கு முதற்கண் என் நன்றிகள் உரித்தாகுக. அவரது ஆடும் கூத்து என்னும் பதிவில் இப்படத்தைப் பற்றி எழுதியிருப்பதைப் பார்த்தேன். அங்கிருந்து இந்தப் பதிவுக்குச் சென்றேன். அதில் இப்படத்தின் சுட்டி கொடுக்கப்பட்டிருந்தது. யூ ட்யூப்பில் இருக்கிறது என்பதை அறிந்தேன்.
நான் கூற நினைத்ததை பதிவர் வினாயக முருகனே கச்சிதமாகக் கூறியுள்ளார்.
என் வாழ்வின் மகத்தான மணித்துளிகள். வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்த திரைப்படத்தில் சேரன்,நவ்யாநாயர்,தலைவாசல் விஜய், பாண்டியராஜன், பிரகாஷ்ராஜ், சீமான் ,மனோரமா, கொச்சின் ஹனீஃபா,ரேகா இன்னும் பலர் நடித்துள்ளார்கள்.இருந்தும் ஏன் இந்த படம் பேசப்படவில்லை? வருத்தமாக இருக்கிறது. தமிழ் சமூகத்தின் மீது ஆத்திரமாகவும் இருக்கிறது. தமிழ் சமூகத்தை தரமற்ற குப்பை படங்களால் நிரப்பி வைத்திருக்கும் ஆட்கள் மீது கோபம் வருகிறது . இந்த படம் ஏன் வெற்றியடையவில்லை. சாட்டிலைட் டிவிக்களை, தமிழின் கமர்ஷியல் டைரக்டர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. இது போன்ற படங்களை ஊக்குவிக்காத பேசாத நானும், நீங்களும் கூட குற்றவாளிதான். ஈரானிய டைரக்டர் மஜீத் மஜீதியின் படங்களை இந்த படம் தரமானது. அடித்து சொல்வேன். உலக சினிமா,உலக சினிமா என்று சொல்கிறார்களே.. அந்த தர வரிசையில் இந்த திரைப்படத்தை தாராளமாக சேர்க்கலாம். மிக தேர்ந்த பிண்ணனி இசை. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ,திரைக்கதை, ஒவ்வொரு நடிக, நடிகைகளின் கச்சிதமான நடிப்பு, முகபாவங்கள், கேமரா கோணம் என்று எல்லாம் சமச்சீரான விகிதத்தில் அடுத்தடுத்து நிற்க ஒரு வானவில் போல என் மனதில் அழகாய் விசுவரூபமெடுத்து நிற்கிறது அந்தப்படம். இன்னும் பல வருடங்களுக்கு என் நினைவில் இந்த படம் நிற்க போவது உறுதி.
அப்படத்தின் முதல் பகுதி கீழே. அடுத்த பகுதிக்கான சுட்டி முதல் பகுதி பக்கத்திலேயே உண்டு. அவ்வாறே அடுத்தடுத்தப் பதிவுகளுக்குப் போகலாம். சீக்கிரம் பார்த்து விடுங்கள். எப்போது வேண்டுமானாலும் எடுத்துவிடும் அபாயம் உண்டு.
படத்தின் மீதி விமரிசனங்களை வினாயக முருகன் கூறுவதை விட நான் என்ன அதிகமாகக் கூறிட இயலும்? அருமையான விமரிசனத்துக்காக அவருக்கு என் வாழ்த்துக்கள்.
எனது இப்பதிவை பொருத்தவரை இன்னொரு விஷயமும் கூறிவிடுகிறேன். படம் நன்றாகத்தான் இருக்கும் நான் இதுவரை எழுதியது எதையும் மாற்ற வேண்டியிராது என்னும் நம்பிக்கையில்தான் முதல் பகுதியை எம்பெட் செய்த இடத்துக்கு மேலே உள்ள வரிகளை படத்தை முழுமையாகப் பார்க்காமலேயே எழுதிவிட்டு, ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து முடித்தப் பிறகே (12 பகுதிகள்) இப்போது மேலே எழுதுகிறேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை.
இப்படம் ஓரிடத்தில் எனக்கு சீவலப்பேரி பாண்டியின் கதையை நினைவுபடுத்தியது. அதில் அவன் ஒரு கிராமத் தலையாரியைக் கொன்றதால்தான் பெரிய கொள்ளைக்காரனாகிறான். அக்கொலை அறுபதுகளில் நடந்தது. ஆகவே அப்படத்தை பின்னால் நெப்போலியனை வைத்து எடுத்தபோது பிரச்சினை கொல்லப்பட்ட அத்தலையாரியின் உறவினர்களால் வந்தது. இம்மாதிரி உண்மைக்கதையை எடுக்கும்போது இவ்வாறெல்லாம் பிரச்சினை வரும் என்பது சாதாரணமாக எல்லோரும் அறிந்ததே. ஏன், கீழ்வெண்மணி படுகொலைகளை செய்வித்த கோபாலகிருஷ்ண நாயுடுவின் கதை எடுத்தாலும் அவரது உறவினர்கள் பிரச்சினை செய்யத்தான் செய்வார்கள்.
இப்படத்தின் முடிச்சு சமீபத்தில் 1968-ல் வந்த நீல் கமல் என்னும் படத்தையும் நினைவுபடுத்தியது. வஹீதா ரஹ்மான், ராஜ்குமார், பால்ராஜ் சஹானி, மனோஜ் ஆகியோர் நடித்தது. அதில் பூர்வ ஜன்ம நிகழ்வுகள் இந்த ஜன்மத்துடன் சேர்ந்து வரும். இந்த ஜன்மத்தில் வஹீதாவின் கணவனாக வரும் மனோஜ் குமார் அவளது முன் பிறவியொன்றில் அவளைக் காதலித்த ராஜ்குமாரின் எலும்புகளைப் பார்க்கும்போது, அவன் காதில் பகவத் கீதையில் கண்ணன் அர்சுச்சுனனுக்கு சொன்ன வார்த்தைகள் ரீங்காரமிடும்.
கண்ணான் கூறுவான்: அருச்சுனா, நீயும் நானும் பல ஆயிரக்கணக்கான பிறவிகளை ஏற்க்கனவேயே எடுத்துள்ளோம். உனக்கும் எனக்கும் இதில் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், எனக்கு அவை எல்லாம் நினைவில் உள்ளன, உனக்கு இல்லை, அவ்வளவுதான்”
அதற்காக ஆடும் கூத்து படம் பூர்வ ஜன்மம் என்றெல்லாம் கூற வரவில்லை. அதற்கான சில சமிக்ஞைகள் தென்படுகின்றன என்று மட்டும் கூறி வைக்கிறேன்.
ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி. ஆனால் அதே சமயம் ஏதோ சிக்கல்களால் இது சரிவர திரையிடப்படவில்லை என்பதில் வருத்தமே.
மூன்றாம் தேதியன்று மாலை காட்சிக்கு எங்கள் வீட்டருகில் உள்ள வெற்றிவேல்/வேலன் சினிமா காம்ப்ளக்சுக்கு சென்றிருந்தேன். வெற்றிவேல் தியேட்டரில் எந்திரன் படம் போட்டிருந்தார்கள். டிக்கெட்டுகள் 300, 250 மற்றும் 200. கவுண்டரில் டிக்கெட்டு போடுபவர் அமர்ந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார். அப்படியே வேலன் தியேட்டர் பக்கம் போனால் அங்கு பாஸ் என்னும் பாஸ்கரன் படத்தின் போஸ்டர் ஒட்டியிருந்தார்கள்.
முன்ஜாக்கிரதையாக கவுண்டரில் பாஸ் படம்தானே எனக்கேட்டது நல்லதாகப் போயிற்று. ஏனெனில் அன்றைக்கு அங்கும் எந்திரனே போட்டிருந்தார்கள் (அதே விலையில் டிக்கெட்டுகள் 300, 250 மற்றும் 200). கிழிஞ்சது கிருஷ்ணகிரி என தலையில் அடித்துக் கொண்டு கிளம்பி வீட்டுக்கு திரும்பினேன்.
இன்று காலை 11.30 மணிக்கு போனால் வேற்றிவேலில் எந்திரன் ஆனால் டிக்கெட்டுகள் விலை 150, 120 & 100. அப்போதும் சீந்துவார் இல்லை. இதைப் பார்த்து எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதென்ன, முதல் வாரத்தில் அப்படியா அதிகமாக விலை வைப்பது? பேராசைக்கும் ஓர் அளவு வேண்டாமா? நங்கநல்லூர் மக்கள் பாய்காட் செய்தது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.
வேலனில் பாஸ் என்னும் பாஸ்கரன் காட்டினார்கள். பால்கனி 70 ரூபாய், ஸ்டால் 50 ரூபாய். கவுண்டரை ஓப்பன் செய்த பிறகும் யாரும் அணுகவில்லை. பிறகு “டிக்கெட் வேணுங்கறவங்க வாங, எல்லா டிக்கெட்டும் ஒரே கவுண்டர்தான்” என டிக்கெட் போடுபவர் கூவ வேண்டியிருந்தது. 475 சீட்டுகள் உள்ள வேலனில் இன்று வந்தவர்கள் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டியிருந்தால் அதிசயமே.
தின்பண்ட ஸ்டால்களில் விலைகள் ரீசனபிள்தான். காப்பி 10 ரூபாய் (மிக நன்றாகவே இருக்கிறது, வெஜிடபில் பஃப், வறுவல் பாக்கெட், கோன் ஐஸ் ஆகியவை 10 ரூபாய்கள்தான். இங்கும் வெளியிலிருந்து தின்பண்டங்கள் கொண்டுவரக்கூடாது என்று அறிவிப்பு இருந்தாலும் யாரும் செக் செய்ததாகத் தெரியவில்லை.
என் மனதுக்கு ரொம்ப நாட்களாகவே ரொம்பப் புதிராக இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், வேலன் மற்றும் வெற்றிவேலில் ஹவுஸ்ஃபுல் ஆவதை விடுங்கள். ஒரு ஷோவுக்கு சமயத்தில் 20 பேர் கூடத் தேறுவதில்லை. அதெப்படி அவற்றை நடத்துவது கட்டுப்படியாகிறது? அந்த காம்ப்ளெக்ஸின் முதலாளியிடம் 7 தியேட்டர்கள் மேல் இருக்கின்றனவாம். மனிதர் எப்படி சமாளிக்கிறார்? கேபிள் சங்கர்/உண்மை தமிழன்/லக்கிலுக் போன்ற விஷயமறிந்தவர்கள் யாராவது சொல்லுங்கப்பூ!
பாஸ் படத்துக்கு ரொம்ப எதிர்ப்பார்ப்புகளுடன் போகாமல் இருந்தால் படத்தை ரசிக்கலாம். சந்தானம் பட்டை கிளப்புகிறார். நயனதாரா ஆர்யாவின் அக்கா போல இருக்கிறார். டியூட்டோரியல் காலேஜுக்கு அந்த பார்வையற்றப் பெண் வந்து பாடம் நடத்திய சீன்கள் மனதுக்கு நிறைவைத் தந்தன. ஏனெனில் அவ்வளவு பாசிடிவாக இருந்தன. கடைசியில் வந்த ஜீவா ரொம்பவுமே க்யூட்.
சமீபத்தில் 1978 ஏப்ரலில் எனக்கு பிரெஞ்சு கடைசி டிப்ளமா பரீட்சை. குல வழக்கப்படி ஜெர்மன்/பிரெஞ்சு பரீட்சைக்கு செல்லும் முன்னால் சினிமா பார்த்து விட்டு வந்தேன். ஈகா சினிமாவில் மேலே சொன்ன படம் ஓடிக் கொண்டிருந்தது. வில்லன்/குணசித்திர நடிகர் (ஜானி மேரா நாம் புகழ்) பிரேம்நாத் மகன் பிரேம் கிஷன், ராமேஷ்வரி, மதன்புரி (ஆராதனா திரைப்படத்தில் ஜெயிலர்), இஃப்தீகர், ஜக்தீப், சசிகலா ஆகியோர் நடித்த இப்படம் ராஜஸ்ரீ புரொடக்ஷன்ஸுக்கு உரியது.
பலர் இப்படம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அதே பலருக்கு தெரிந்திருக்க முடியாத விஷயம் இப்படத்தின் மூலம் “யோனதான், யோனதான் (Jonathan, Jonathan) என்னும் ஜெர்மன் படம் என்பதுதான். முதலில் ஜெர்மன் படத்தை மாக்ஸ் ம்யுல்லர் பவன் உபயத்தில் பார்த்துள்ளேன். அப்போதே நினைத்தேன் இப்படம் இந்தியச் சூழ்நிலைக்கு நன்கு பொருந்தி வரும் என. அது உண்மையானதில் எனக்கு மிக மகிழ்ச்சியே.
பிரேம் பணக்கார வாலிபன், தாத்தாவிடம் வளர்கிறான். அவன் அப்பா அம்மா அவனது சிறு வயதிலேயே இறந்து விட்டனர். தாத்தாவுக்கு சீரியசாக உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. தான் சாவதற்கு முன்னால் பேரனின் திருமணத்தை நிகழ்த்த ஆசைப்படுகிறார். அவனோ ரீட்டா என்னும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். தாத்தாவிடமும் கூற அவரோ அப்பெண்ணைத் தன்னிடம் அழைத்துவரச் சொல்கிறார்.
துரதிர்ஷ்டவசமாக அப்பெண்ணும் அவள் அம்மாவும் காஷ்மீர் சென்றிருக்கின்றனர். பனிப்புயல் காரணமாக தேசத்துடன் பிற பகுதிகளுடன் எல்லா தொடர்பும் கட். தாத்தாவின் நிலைமை திடீரென சீரியசாக, அவருக்கு பெண்ணை அழைத்து வந்து காட்ட வேண்டும் என குடும்ப நண்பரும் டாக்டருமான இஃப்தீக்கர் கூறுகிறார். ஆகவே அவன் கம்மோ என்னும் பூக்கார பெண்ணை தன் காதலியாக நடிக்கச் சொல்கிறான். அவளும் நடிக்க தாத்தாவுக்கும் அவர் நண்பருக்கும் அவளைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி வீட்டுக்கு சரியான மருமகள் கிடைத்தாள் என்று.
இதற்கு மேல் கதையை நம்ம ஜனங்களே ஊகிக்கலாம். நடுவே நிஜமான காதலியும் அவளது ஷோக்கு அம்மாவும் வந்து குழப்பம் விளைவிக்க, தாத்தாவுக்கு கடைசியில் இந்த நடிப்பு விவகாரம் தெரிந்தாலும், கம்மோதான் மருமகள் எனத் தீர்மானிக்க ஒரே கலாட்டாதான். கடைசியில் உண்மைக் காதலி ரீட்டாவின் சுயரூபம் தெரிந்து பிரேமும் கம்மோவையே மனைவியாக வரிக்கிறான்.
அப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி கீழே தந்துள்ளேன். பார்த்து ரசிக்கலாம்.
வேற்று மொழியிலிருந்து சுட்டாலும் ராஜஸ்ரீ புரொடக்ஷன் இந்திய பாரம்பரியத்துக்குள் அதைக் கொண்டு வருவதில் மிகவும் வெற்றி பெற்றுள்ளது மனதுக்கு நிறைவைத் தருகிறது.
படத்தின் பாடல்கள் மிக அருமையாக வந்துள்ளன. அதில் வரும் ஆர்த்தி பாடல் கீழே.
இயக்கம்: Cecil B. DeMille, Charlton Heston (டைட்டில்ஸில் பெயர் வரவில்லை)
தயாரிப்பு: Cecil B. DeMille
திரைக்கதை: Joseph Holt Ingraham (novel Pillar of Fire), A.E. Southon (novel On Eagle's Wings), Dorothy Clarke Wilson (novel Prince of Egypt), Æneas MacKenzie, Jesse L. Lasky, Jr.
Jack Gariss, Fredric M. Frank
கதைசொல்லி: Cecil B. DeMille
நடிப்பு:
Charlton Heston, Yul Brynner, Anne Baxter, Edward G. Robinson, Yvonne De Carlo, Debra Paget, John Derek
இசை: Elmer Bernstein
சினிமாட்டோக்ராஃபி: Loyal Griggs, ASC
எடிட்டிங்: Anne Bauchens
விநியோகம்: Paramount Pictures
வெளியீடு: October 5, 1956
சினிமா ஓடும் நேரம்: 220 minutes
நாடு: United States
மொழி: English
பட்ஜெட்: $13,000,000
பாக்ஸ் ஆஃபீஸ்: $65,000,000 (அமெரிக்காவில் மட்டும்) நன்றி விக்கீபீடியா:
சமீபத்தில் 1958-59 கல்வியாண்டில் நான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் எட்டாவது படித்துக் கொண்டிருக்கும்போது என் தந்தை அமரர் நரசிம்மன் என்னையும் என் அத்தைப் பிள்ளையையும் இப்படத்துக்கு அழைத்துச் சென்றார். படம் ஓடியனில் திரையிடப்பட்டது. ஒரு ஆங்கிலப் படத்துக்கு அதன் நேரம் மிகவும் அதிகமே (3 மணி நேரம் 40 நிமிடங்கள்).
இப்படத்தின் விசேஷம் என நான் இன்றும் கருதுவது எனது தந்தையின் இடைவிடாத மொழிபெயர்ப்புதான். திரையில் பேச்சோ எழுத்துக்களோ வர,வர தனது கம்பீரமான குரலில் மெதுவாக எங்களுக்காக தமிழில் மொழிபெயர்த்தார். அப்படத்தை பார்த்த சில நாட்களுக்கு எனக்கு அத்தனை காட்சிகளும் நெட்டுருவாகியிருந்தன. அந்தந்த காட்சிகளுக்கான வசனங்களின் தமிழாக்கமும்தான்.
ஆகவேதான் அடுத்த நாளைக்கே எனது பெரியப்பா பிள்ளைகளுடன் நான் அதே படத்துக்கு சென்றபோது அவர்களுக்கு சீன் பை சீன் நான் தமிழில் சொல்ல முடிந்தது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், சுமார் 16 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் 1975-ல் அதே படத்தை காசினோவில் பார்த்தேன். அதில் குறிப்பிட்ட சீன் வந்து கதாபாத்திரம் வாயைத் திறக்க சில நொடிகள் இருக்கும்போது தமிழாக்க வசனம் ஞாபகத்துக்கு வந்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க கிட்டத்தட்ட அப்படியே வந்தது. அச்ச்மயம் என் தங்கைகள் கூட வந்திருந்தனர். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம் டயலாக் எனக்கு நினைவில் இருப்பதில். இதே மாதிரி அனுபவம் எனக்கு ஏற்கனவே அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் சபாஷ் மீனா படம் பார்க்கும்போது ஏற்பட்டிருந்தபடியால், நான் அவ்வளவாக வியப்படையவில்லை. மறுபடியும் அப்படத்தைப் பார்த்தால் ஞாபகம் வருமாக இருக்கும். இது பற்றி நான் ஜெயா டிவி நேர்காணலிலும் குறிப்பிட்டுள்ளேன்.
அந்த வீடியோ:
ஆனால் எனது தந்தையின் அபார மொழிபெயர்ப்பு பற்றி சில உதாரணங்களுடன் கூறியே ஆக வேண்டும். (டிஸ்கி: இப்பதிவு போடும்போது ஆங்கில மூலத்தில் எனது நினைவுக் குறைவால் தவறு ஏற்படக்கூடாது என்பதற்காக அப்படத்தின் ஸ்க்ரிப்டிலிருந்து எடுத்து எழுதுகிறேன். அதைப் பார்த்ததுமே என் தந்தையின் மொழிபெயர்ப்பு நினைவுக்கு வந்து விடுகிறது).
முதல் காட்சி:
And God said, "Let there be light." And there was light. And from this light, God created life upon earth. And man was given dominion over all things upon this earth and the power to choose
between good and evil. But each sought to do his own will because he knew not the light of God's law.
Man took dominion over man, the conquered were made to serve the conqueror, the weak were made
to serve the strong, and freedom was gone from the world.
So did the Egyptians cause the children of Israel to serve with rigor, and their lives were made bitter with hard bondage.
என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
"வெளிச்சம் உருவாகட்டும்." என்றார் கடவுள். அது உருவாயிற்று. அதன் ஒளியிலிருந்து கடவுள் இந்த பூமியில் உயிர்களை உருவாக்கினார். அவை எல்லாவற்றையும் நிர்வகிக்கும் வேலை மனிதனுக்குத் தரப்பட்டது, நன்மை தீமை அறிந்து தெரிவு செய்யும் சக்தியும் அவனுக்கு அவர் கொடுத்தார். ஆனால் ஒவ்வொருவனும் தன்னிச்சைப்படியே நடந்தான், ஏனெனில் கடவுளின் ஆணையை அவன் சரியாக உணரவில்லை.
மனிதன் மனிதனை அடிமைப்படுத்தினான். அவ்வாறு அடிமையானவர்கள் ஜெயித்தவர்களுக்கு சேவை செய்ய வேண்டியதாயிற்று. உலகிலிருந்து சுதந்திரம் மறைந்தது.
அப்படித்தான் எகிப்தியர்கள் இஸ்ரேலின் மக்களை தங்களுக்காக கடுமையாக உழைக்க வைத்தனர். அவர்கள் வாழ்க்கை அடிமைத்தனத்தால் துன்பம் நிறைந்ததாயிற்று.
ஹீப்ரூக்களின் ஆண் குழந்தைகளைக் கொல்ல பரோவா இடும் ஆணைக்கான காட்சி:
Every newborn Hebrew man-child shall die. So let it be written. So let it be done. So speaks Rameses I.
என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
ஹீப்ரூக்களின் அப்போதுதான் பிறந்த எல்லா ஆண்குழந்தைகளும் கொல்லப்படட்டும். அவ்வாறே என் ஆணை எழுதப்படட்டும், அது நிறைவேற்றவும் படட்டும், எனக்கூறினான் முதலாம் ரமேசஸ்.
(அடுத்த நாள் என் பெரியப்பா பிள்ளைகளுக்கு இதை நான் அக்காட்சியின் போது தமிழில் கூறுகையில் என் குரல் உடைந்து கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்ததும் நினவிலுள்ளது).
குழந்தை மோசஸை கூடையில் வைத்து கர்ணன் வேலை செய்கிறார்கள் குழந்தையின் அன்னையும் அக்காவும். அக்காட்சி:
God of Abraham, take my child into Thy hands, that he may live to Thy service.
But, Mother, we have not even given him a name.
God will give him a name.
என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
அப்ரஹாமின் கடவுளே, என் குழந்தையை உன் ஆதரவில் ஏற்றுக் கொள். அவன் நன்கு வாழ்ந்து உனக்கு சேவை செய்யட்டும்.
அம்மா, தம்பிக்கு பெயர் வைக்கவில்லையே.
அது கடவுளின் வேலை.
கூடையில் வைத்து நைல் நதியில் மிதந்த குழந்தை பரோவாவின் சகோதரியிடம் கிடைக்கிறது. குழந்தையை சுற்றியிருந்த துணியின் நெய்தல் வேலைப்பாடு ஹீப்ரூக்களுக்கானது என்பதை உணர்ந்த அரசகுமாரியின் தாதி அவளைத் தடுக்கப் பார்க்கிறாள். ஆனால் அவள் கேட்கவில்லை. அதை எடுத்து வளர்க்க நிச்சயிக்கிறாள். தாதி யாரிடமும் இது பற்றிய உண்மையைக் கூறக்கூடாது என ஆணை பிறப்பிக்கிறாள். பிறகு குழந்தையை நோக்கிப் பேசுகிறாள்.
You will be the glory of Egypt, my son, mighty in words and deeds. Kings shall bow before you. Your name will live when the pyramids are dust. And... because I drew you from the water, you shall be called "Moses." Moses! Moses! Moses. Moses! Moses! Moses!
என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
என் மகனே, நீ எகிப்துக்கு பெருமை தேடித் தருவாய். சொல்லிலும் செயலிலும் வல்லவனாக இருப்பாய். அரசர்கள் உன் முன்னால் மண்டியிடுவர். பிரமிடுகள் மண்ணோடு மண்ணாகி போனாலும் உன் பெயர் நிலைக்கும். நீரிலிருந்து நான் உன்னை அடைந்ததால் உன்னை மோசஸ் என அழைக்கிறேன். மோசஸ், மோசஸ், மோசஸ், மோசஸ்!
இவ்வாறே கூறிக் கொண்டு போகலாம். ஆனால் நான் மிகவும் அதிகமாக நினைவில் வைக்கும் வசனங்கள்.
முதலாம் ரமேசஸின் ஆணைப்படி மோசஸ் நாடு கடத்தப்படும்போது, பின்புலத்தில் ஒரு குரல் பிரலாபிக்கிறது.
Into the blistering wilderness of Shur, the man who walked with kings now walks alone. Torn from the pinnacle of royal power, stripped of all rank and earthly wealth, a forsaken man without
a country, without a hope,
என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
அதோ போகின்றான் அம்மனிதன், வெயில் தகிக்கும் பாலைவனத்தில். அரசர்களுக்கு இணையாக நடந்தவன் இப்போது தனியே நடக்கின்றான். அரசு அதிகாரம் பிடுங்கப்பட்டு, பதவிகள் பறிக்கப்பட்டு, செல்வமெல்லாம் இழந்து, எல்லோராலும் கைவிடப்பட்டு போகிறான் அந்த நாடற்றவன், நம்பிக்கைக்கு ஏதும் இடமின்றி,
முதலாம் ரமேசஸ் இறந்தபோது, இரண்டாம் ரமேசஸ் கூறுவான்:
The royal falcon has flown into the sun.
என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
ராஜாளிக் கழுகு சூரியனை நோக்கி பறந்துவிட்டது.
சில ஆண்டுகள் கழித்து எகிப்துக்கு திரும்ப வரும் மோசஸிடம் இரண்டாம் ரமேசஸ் கேட்கிறான்:
What gifts do you bring? We bring you the word of God.
என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
என்ன கொண்டு வந்தாய்? கடவுளிடமிருந்து கட்டளை கொண்டு வந்தேன்.
சாதாரணமாக திரைப்படம் ஓடும்போது யாராவது இம்மாதிரி பேசிக் கொண்டேயிருந்தால், மற்றவர்கள் கடுமையாக ஆட்சேபிப்பார்கள். ஆனால் என்னவோ தெரியவில்லை என் தந்தை தனது கம்பீரமான குரலில் மெதுவாக மொழிபெயர்த்துக் கொண்டே வந்தபோது, சுற்றிலிருந்தவர்கள் ஒரு காதை என் தந்தை பக்கம் வைத்தது இடைவேளை போதுதான் தெரிந்தது. பலர் அவரிடம் வந்து சில காட்சிகள் பற்றி சந்தேகம் கேட்டுப் போனார்கள்.
பத்துக் கட்டளைகளையும் கடவுள் தரும் குரல் சார்ல்டன் ஹெஸ்டனுடையதே என்றும், ஆனால் அது டைட்டில்ஸில் இல்லை என்பதும் இப்போதுதான் எனக்கு தெரிந்தது. குழந்தை மோசஸாக வந்தது சார்ல்டன் ஹெஸ்டனின் மூன்று மாதக் குழந்தை என்பதை என்னவோ நான் 1975-ல் இரண்டாம் முறையாக அப்படத்தைப் பார்க்கும்போது தெரிந்து கொண்டேன்.
செங்கடல் பிளக்கும் காட்சி அற்புதம். தியேட்டரில் ஒரே கைத்தட்டல்.
மோசஸ், ஔவையார், கர்ணன், கிருஷ்ணர் ஆகிய எல்லோருக்கும் உள்ள ஒற்றுமை எனப் பார்த்தால் பிறந்ததுமே இடம் பெயரும் நிலைதான். மோசஸின் கூடை நைல் நதியில் போக தனது அன்னையின் ஆணப்படி குழந்தையின் அக்கா பின்னால் கரையிலிருந்த வண்ணம் ஓடுகிறாள். அச்சுட்டிப் பெண்ணின் முகத்தில் எவ்வளவு உணர்ச்சிகள், கவலைகள்? கல்லையும் உருக்கும் காட்சியல்லவா அது.
பத்துக் கட்டளைகளில் பல தகவல் பிழைகள் இருந்ததென விக்கிபீடியா கூறுகிறது. I just don't care.
இப்படத்தின் பிளாட்டை முன்பு படித்த நினைவிருக்கிறது. ஆனால் படம் வெளியானபோது பார்க்கவில்லை. நேற்று கூட எதேச்சையாக சன் டிவியில் இப்படத்தைப் பாதியிலிருந்துதான் பார்த்தேன். அச்சமயம் நிறைய காட்சிகள் போயிருந்திருக்கும்.
ஜெயம் ரவியை மதர் சுப்பீரியரிடம் மாட்டிவிட ஐந்து பெண்கள் முயற்சி செய்தபோதுதான் படம் பார்த்தேன். ஆனால் பார்த்தவுடனேயே என்னக் கதை என்பது புரிந்ததாலும், வேறு உருப்படியான வே;லைகள் கைவசம் இல்லாதிருந்ததாலும் படத்தைத் தொடர்ந்து பார்க்க முடிவு செய்தேன். அதற்காக மகிழ்ச்சியடைகிறேன்.
பிறகு இப்படம் பற்றி இணையத்தில் என்ன கூறினார்கள் என்பதைப் பார்த்ததில் இது The dawns here are quiet" என்ற ரஷ்ய படத்தின் காப்பி என்பதை அறிந்தேன்.
இப்படத்தின் விஸ்தாரமான விமரிசனத்தை கேபிளார் கொடுத்து விட்டார். வேறு பலரும் கொடுத்து விட்டனர். ஆகவே எனது எண்ணங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். கவனிக்க, இது விமரிசனம் அல்ல.
ஏற்கனவேயே சொன்னது போல பாதியிலிருந்துதான் படம் பார்த்ததால், விட்டுப் போனதை இணையத்தின் மூலம் பார்க்கலாம் என நினைத்தால் முடியவில்லை. சிறப்பான காட்சிகள் என தொகுத்து போட்டிருந்தாலும் அவை ஓப்பன் ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொண்டன. அதுவும் நல்லதுக்குத்தான். இப்படத்தின் மூலக்கருவே இனிமேல்தான் வர வேண்டும் என்னும் நிலையில் படம் பார்க்க ஆரம்பித்ததால் இழப்பு அதிகம் இல்லை.
ரஷ்யன் படமும் அப்படித்தான் ஆரம்பமாகியிருக்கும். தமிழில்தான் மசாலா சேர்த்திருப்பார்கள். அவற்றை பார்க்காததால் ஒன்றும் குடி முழுகிவிடாது. இதில் ஜெயம் ரவியின் மேலதிகாரியாக வரும் பொன்வண்ணனை கிட்டத்தட்ட ஒரு சாடிஸ்டாகவே காட்டியுள்ளனர். கடைசி வரை அவர் கொழித்து, மெடலையும் தட்டிச் செல்வது போல அமைந்த கதையமைப்பு மனதுக்கு நிறைவைத் தரவில்லை. அதுதானே ரியலிசம் என ஜனநாதன் கூறினாலும், தீமை வெற்றி பெறுவது போல காட்டியது ஆரோக்கியமாக இல்லை. கடைசியில் ஏதோ டாகுமெண்டரி பார்ப்பது போன்ற உணர்வு. அது சரி, கடைசியில் மிஞ்சிய மூன்று பெண்கள் உண்மையைக் கூறாமலேயாவா கேம்பிலிருந்து சென்றிருப்பார்கள்? நம்பும்படியாக இல்லையே.
காட்டில் ஒரு பெண் ஜெயம் ரவியிடம் அவரை பெண்சபலக்காரராக காட்டி மாட்டி விட்டதற்காக மன்னிப்பு கேட்கும்போது, தன்னை நம்பி தனது கிராமத்தில் பெண்களுக்கு பிரசவம் பார்க்க விடுவார்கள் என்ற செய்தியை சர்வசாதாரணமாகக் கூறுவார்.
அதே போல வெள்ளைக்கார கொலைஞனிடம் ஆங்கிலத்தில் அவர் பேசுவதை அதிசயத்துடன் பார்க்கும் ஒரு பெண் தங்கள் எதிரில் அவ்வளவு அதிகமாக ஆங்கிலம் பேசவில்லையே எனக்கேட்க, ஜெயம் ரவி ரிசர்வேஷன் கோட்டாவில் வந்த தான் அவ்வாறு பேசுவதை அவர் போன்ற மேட்டுக்குடி பெண்கள் விரும்ப மாட்டார்கள் என அனாயாசமாகக் கூறிவிட்டுச் செல்லும் காட்சியும் நன்றாக இருந்தது.
காட்டுவாசிகளின் குழந்தை படித்துக் கொண்டிருக்கும்போது பொன்வண்ணன் அதன் முதுகில் கட்டையால் அடிக்க குழந்தை வீறிட்டு அழும் காட்சி ரத்தத்தை உறையச் செய்தது. சர்வ சாதாரணமாக வனவாசிகளை அதிகார வர்க்கம் எவ்வாறு விரோதித்துக் கொள்கிறது என்பது அழுத்தந்திருத்தமாகவே காட்டப்பட்டது.
தில்லியில் இருக்கும்போதே கேபிள் டீவி வந்ததும் தூர்தர்ஷனுக்கு குட்பை கிட்டத்தட்டச் சொல்லிவிட்டேன், டிடி-5 தமிழ் சேவைகள் தவிர. இங்கு சென்னைக்கு வந்ததும் அதுவும் போயிந்தி. எல்லாமே கேபிள் சேனல்தான்.
அதே போல முழுநீள ஹிந்திப் படங்கள் பார்ப்பதும் கிட்டத்தட்ட போயே போயிந்தி. ஆகவே தேசீய தூர்தர்ஷனில் இந்த முழுநீள ஹிந்திப் படத்தைப் பார்த்தது ரொம்பவுமே தற்செயலான நிகழ்வுதான். விஷயம் என்னவென்றால் எங்கள் கேபிள் கனெக்ஷனில் கோளாறு, வெறுமனே தூர்தர்ஷன் தேசீய சேனல் மட்டுமே வந்தது. ஏதோ கேஷுவலாக சேனலைப்போட, அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் நடித்தா பாஆஆஆஆ படம் என்று பார்த்ததும் சரி அதில் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என ஒரு ஆர்வத்தில் பார்க்க அம்ர்ந்தேன்.
இப்படம் பற்றி நான் கேள்விப்பட்ட விஷயங்கள் என்னை இதற்கு முன்னால் பார்க்க விடவில்லை. Progeria ennum நோயின் பாதிப்பால் 12 வயது கூட நிரம்பாத வோரோ என்னும் சிறுவன் 90 வயது கிழவனின் வளர்ச்சி மற்றும் சிதைவுகளைப் பெறுவது என்பது கொடுமையான செயலே. ஆகவே முதலிலேயே இது மனதை பாதிக்கும் படம் என்பது தெரிந்ததால் இதை நான் பார்க்காமலேயே தவிர்த்தேன். அம்மாதிரி தவிர்த்த படங்கள் பல, உதாரணத்துக்கு அங்காடித்தெரு, சுப்பிரமணியபுரம், பருத்திவீரன், விருமாண்டி ஆகியவை.
ஆனால் இன்று என்னவாயிற்று எனத் தெரியவில்லை. முதல் சீனில் படம் பார்க்க ஆரம்பித்த நான் அப்படியே ஆழ்ந்து அமர்ந்து விட்டேன். அப்படியே கேபிள் கனெக்ஷன் சரியானாலும் இப்படத்தை முடித்தபிறகுதான் மீதி சேனல்கள் என்பதையும் என் வீட்டம்மாவிடம் ஸ்ட்ரிக்டாகக் கூறிவிட்டு அமர்ந்தேன்.
தந்தையும் தாயும் திருமணமாகாமலே பிரிய, மகன் பிறந்ததையே தந்தை அறியாது பிற்காலத்தில் அவனைக் கண்டு ஏதோ ஒரு பாசத்தில் அவனுடன் இணைவது போன்ற கதைகள் சாகுந்தல காலத்திலிருந்தே வந்து விட்டது. இந்த பிளாட்டில் எண்ணற்றத் திரைப்படங்கள் பல மொழிகளில் வந்து விட்டன. அதற்கென்றே ஒரு தனி அப்பீலும் இருக்கிறது. ஆனால் பிறந்த மகன் இவ்வளவு பெரிய ஊனத்துடன் பிறப்பது அதிகம் முறை வந்ததில்லை என்றே கூறலாம். அப்படிப்பட்ட குழந்தையாக வருவது நமது ஒன் அண்ட் ஒன்லி அமிதாப்தான்.
ப்ரொஜேரியா நோயால் பீடிக்கப்பட்ட இக்குழந்தை வோரோ முதலிலிருந்தே இளம் அரசியல்வாதியான அமோலைக் கவர்ந்து விடுகிறான். ஆனால் அவன்தான் தனது சொந்த மகன் என்பதை அவன் அப்போது அறியவில்லை. அக்குழந்தையின் அன்னை வித்யாவுக்குத் தெரியும் ஆனால் அவளோ அவனிடம் தன் பிள்ளையைக் காட்டுவதாக இல்லை. மற்றப்படி கதை சாதாரணமாக இம்மாதிரி பிளாட்டுகளில் உள்ளபடியே செல்கிறது. இருப்பினும் எங்குமே தேவையற்ற மெலோட்ராமாக்கள் இல்லை.
ஓரோதான் தன் மகன் என்பதை அமொல்ல் அறிந்து காட்சி ஒரு கவிதை என்றால், கடைசிக் காட்சியில் தன் அன்னை தந்தையை வோரோ சப்தபதி செய்ய வைக்கும் காட்சி ஒரு காவியம் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படம் முடிந்து டைட்டில்ஸ்கள் ஓடி முடிந்தவரை பிரமித்துப் போய் அமர்ந்திருந்த நான் சற்று நேரத்துக்கு வேறு எந்தக் காட்சிகளையும் காண விரும்பாமல் டிவியை ஆஃப் செய்து விட்டு இப்பதிவை ஒரே மூச்சில் போட்டு முடித்தேன்.
இந்த வேஷத்துக்கான மேக்கப் போட்டுக் கொள்ள அமிதாப் பட்ட கஷ்டங்களைக்காண இந்த வீடியோவைப் பார்க்கலாம். இம்மாதிரி ஒரு படத்துக்காக உயிரைக் கொடுத்து மேக்கப்புகள் போட்டு நடிக்கும் அமிதாப், கமல் (ஔவை ஷண்முகி), விக்ரம் (சேது), சூர்யா (பேரழகன்) ஆகிய கலைஞர்கள் இருக்கும்போது இந்தியத் திரைப்படத்துக்கு ஏது குறை?
எப்படியும் கமல் அடுத்த படத்தையும் எங்கேயிருந்தாவதுதான் சுடப்போகிறார். ஏன் இந்தப் படத்தை சுடக்கூடாது? படத்தின் பெயரின் தமிழாக்கம் “பேஷ் பேஷ், வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கணும்” (Waah, life ho toh aisi).
நேற்று மாலை Zee டிவியில் இப்படத்தை உறவினர் வீட்டில் எதேச்சையாக பாதியிலிருந்து எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி டைம்பாசுக்காகப் பார்த்தேன். பிரமித்தேன். ஆனால் அந்தோ படம் முடிவதற்கு முன்னாலேயே வீட்டுக்கு வர வேண்டியிருந்தது. அதனால் எல்லாம் துவண்டுவிடுவானா இந்த டோண்டு ராகவன்? படத்தின் பெயரை ஆங்கில எழுத்துக்களில் நோட் செய்து கொண்டு வந்ததும் வராததுமாக கணினியை இயக்கி இணைய இணைப்பு தந்து யூ ட்யூப் மச்சான் உதவியால முழு படத்தையும் பாத்துட்டோமுல்ல.
அதாகப்பட்டது, படத்தின் பெயரை ஆங்கிலத்தில் டைப் அடித்து, தேடும் ஆணை தந்ததுமே முழு படமும் 14 பகுதிகளாக வந்தது. பிறகு என்ன இரவு ஒரு மணி வரை படத்தைப் பார்த்து விட்டுத்தான் தூக்கம். முதல் பகுதி இங்கே.
சரி அப்படி என்ன இப்படத்தில் என்று கேட்கலாம். அதிலும் இதில் கமல் ஏன் குறிப்பிடப்படுகிறார் என்பதைக் கூறுவதுதான் இப்பதிவின் நோக்கம். முதலில் கதையை பார்ப்போம்.
தனது பெரிய குடும்பத்தை தன் உழைப்பால் பராமரித்து வெற்றி மேல் வெற்றி பெறும் இளைஞன் ஆதி. அவனுடைய அண்ணன் குடிபோதையிலே எப்போதுமே இருப்பவன். அவன் குழந்தைகளும் ஆதியின் பராமரிப்பில்தான். பெரிய அண்ணனும் அண்ணியும் விமான விபத்தில், இறக்க அவர்கள் குழந்தைகளையும் இவன்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டில் இருக்கும் பிரேம் சோப்ரா சித்தப்பா தன் குல வழக்கப்படி ஆதியின் வீட்டை அபகரிக்க என்ணும் பில்டருக்கு துணை போகிறார். ஆதிக்கு விளங்காத ஒரு பார்ட்னர். ஆதியின் 32 லட்சத்தை எடுத்து இன்வெஸ்ட் செய்து விட்டு எப்போது அவனுக்கு நாமம் போடலாம் எனக் காத்திருக்கிறான்.
இதெல்லாம் தெரியாத ஆதி மோட்டார் விபத்தில் உயிரிழக்கிறான். அவனை அழித்துச் செல்லும் யமர் அற்புதமான கூறை திறந்த காரில் வானத்தில் பறக்கிறார். கூடவே சக்தி என்னும் ஆறு வயது சிறுவன். அவனும் இறந்திருக்கிறான். தான் மரணமடைந்ததை அறிந்து ஆதி துணுக்குற்று தன் வீட்டை ஒரு முறை காட்டுமாறு யமரைக் கேட்க, அவரும் சரியென காட்டுகிறார். ஆதியின் குடும்பம் படும்பாட்டைக் கண்ட யமர் ரொம்ப ஃபீலிங்ஸாகி அழுகிறார்.
அவரது உதவியுடன் ஆதி பேயாக வந்து குடும்பத்துக்கு எல்லா உதவியும் செய்கிறான். இப்போதே புரிந்திருக்கும் முழம் முழமாக காதில் பூவை சுற்றுவார்கள்/சுற்றுகிறார்கள் என. இருப்பினும் அந்த சுற்றலும் எனக்கு மனதுக்கு இதமாக இருந்தது என்பதும் நிஜம். சஞ்சய் தத் யமராக தூள் கிளப்புகிறார். அந்த அளவுக்கு செய்ய நம்ம கமலை விட்டால் வேறு ஆள் இல்லை. படத்தின் முடிவை யூட்யூப் திரையில் காண்க.
நிஜமாக சொல்கிறேன். கமல் அடித்து தூள் செய்ய வேண்டிய படம் இது. ஆதியாக தனுஷைப் போடலாம். பிரேம் சோப்ரா ரோலுக்கு மணிவண்ணன் இருக்கவே இருக்கிறார்.
ரொம்ப நாளைக்கப்புறம் தியேட்டரில் சென்று படம் பார்த்தேன். எங்களூர் வேலனில் வெற்றிகரமாக 25-ஆம் நாளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது இப்படம். பால்கனியில் ஹவுஸ்ஃபுல், கீழே ஸ்டால் விஷயம் தெரியாது. அதுவே பெரிய அதிசயம்தான். ஏனெனில் வேலன் தியேட்டர் பால்கனி சாதாரணமாக காலியாகத்தான் இருக்கும். அதுவும் இம்மாதிரியான ஆவிகள் படமென்றால் பயமாகவும் இருக்கும்.
ஒரு புது அப்பார்ட்மெண்டில் குடிபுகுந்த ஒரு கூட்டுக் குடும்பத்தின் அனுபவம் என்பதை விட அதில் உள்ள ஒருவரின் அனுபவம் என்று கூறுவதே சாலப் பொருந்தும். அந்த ஒருவர்தான் மாதவன், ஒரு கட்டுமானப் பணி பொறியாளர். அவருக்கு மட்டும் லிஃப்ட் வேலை செய்வதில்லை, அவரை வைத்து எடுக்கும் புகைப்படங்கள் கோணவாயன் கொட்டாவி விட்டது போல மாறுகின்றன. முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்கள் வீட்டில் மட்டும் “யாவரும் நலம்” என்னும் சீரியல் ஒளிபரப்பாகிறது. அதே சீரியல் வேறு இடங்களில் முற்றிலும் மாறுபடுகிறது. இவர்கள் வீட்டின் டிவியில் வரும் சீரியலில் மட்டும் இவர்கள் வாழ்க்கை சம்பந்தமான நிகழ்ச்சிகளே நடக்கின்றன. அதையெல்லாம் நான் வர்ணிப்பதைவிட படத்தை நீங்களே பார்த்து கொள்ளல் நலம்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் தில்லியில் இருந்தபோது படித்த ஒரு ஜெர்மானிய மொழி நாவல் நினைவுக்கு வந்தது. அதிலும் வீட்டில் இருக்கும் டிவியில் வரும் நிகழ்ச்சிகள் விசித்திரமாக இருக்கும். அதாகப்பட்டது, ஒரு கலவரக்காட்சி நியூஸில் காண்பிக்கப்பட்டால் அதில் பங்கு பெறுபவர்கள் டிவி பிரேமில் மட்டும் இல்லாது, அறைக்குள்ளும் வருவார்கள். பார்வையாளரின் நாற்காலிக்கு பக்கத்தில் கீழே ஒருவன் படுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பான். ஆனால் அதெல்லாம் வெறும் இமேஜ்கள்தான். நிகழ்ச்சி சேனலை மாற்றினால், சம்பந்தப்பட்ட இமேஜ்கள் மறைந்து, புது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் இப்போது அறைக்குள் தென்படுவார்கள்.
இப்படம் சென்னையில் வெற்றி பெற்றுள்ளது, ஆனால் பி மற்றும் சி மையங்களில் அவ்வளவாக வெற்றி பெறாது என்பதுதான் என் எண்ணம். அதை உறுதி செய்து கொள்ள லக்கிலுக்குக்கு ஃபோன் செய்தால் மனிதர் ஒரு மீட்டிங்கில் இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பினார். அப்படியானால் கேபிள் சங்கரின் தொலைபேசி எண்ணைத் தருமாறு கேட்டேன், அவரும் தந்தார்.
கேபிள் சங்கரிடம் இது சம்பந்தமாக கேள்வி கேட்டதற்கு அவர் இப்போபோதெல்லாம் ஏ செண்டரே மிகவும் விரிவடைந்து வருகிறது என்றார். முன்னெல்லாம் கிண்டியுடன் சென்னை முடிவடையும், ஆனால் இப்போதெல்லாம் மதுராந்தகம் வரை சென்னையின் ஆளுமை நீடிக்கிறது என்றார். ஆகவே ஏ செண்டரில் பெறுகின்ற வெற்றியே படத்துக்கு லாபமான வசூல் தந்து விட்டது என்றும், இனிமேல் வரப்போவது எல்லாம் மேலும் அதிக லாபமே என்றும் கூறினர்.
இது ஏதோ ஆங்கிலப் படத்தை சுட்டது போல இருக்கிறதே எனக் கேட்க, அவர் அப்படியில்லை என்றும், இப்படத்தை ஆங்கிலத்தில் எடுக்க இப்படத்தின் டைரக்டரிடமிருந்து ரைட்ஸ் வாங்கியிருக்கிறார்கள் என்ற புதிய தகவலையும் தந்தார். மற்றப்படி உலகிலேயே மொத்தம் 7 கதைக்கருக்களே உள்ளன என பொதுவாகக் கூறப்படுவதையும் அவரும் கூறினார். உண்மைதான்.
படம் எனக்கு மிகவும் பிடித்தது. எல்லோருமே ஒரு முறை பார்க்கலாம்.
இதுவும் மீள்பதிவே. முதலில் இப்பதிவு போட்ட தேதி 19.02.2006 விடியற்காலை 03.51-க்கு. இப்போது மீள்பதிவு செய்ய என்ன காரணம்? யூ ட்யூப்தேன். முதல்ல பதிவு போடச்ச யூட்யூப்பின் மகத்துவம் தெரியாது. இப்போ தெரிஞ்சுக்கிட்டேன். அம்புடுத்தேன். நான் ரசிச்ச சீன்களுக்கு ஹைப்பர்லிங் தர முடியறது.
மேலும் இது எனக்கு ரொம்ப பிடிச்ச படம் வேற. கேக்கணுமா? இப்ப முதலில் போட்ட பதிவை பார்க்கலாமா?
அன்பே சிவம் பார்த்து விட்டு, நேராக வந்து ஒரு தூக்கம் போட்டேன். அவ்வளவு மனம் கனமாக இருந்தது. இப்போது விடியற்காலை (19.02.2006) 03.25-க்கு முழிப்பு வந்து இப்பதிவை போடுகிறேன்.
இப்படம் ஒரு பொங்கலன்று எங்கள் நங்கநல்லூர் வேலன் திரையரங்கில் புதிதாக ரிலீஸ் செய்யப்பட்டபோது முதல் நாள் முதல் ஷோ டிக்கட் வாங்கி பார்க்கும் தவற்றை செய்தேன். ஆம் வெறுமனே பார்த்தேன் அவ்வளவுதான். வசனம் காதில் விழாதபடி ஒரு மாணவ ரௌடி கும்பல் ஒன்று ஒவ்வொரு சீனிலும் ஓ என்று கத்தி கலாட்டா செய்தது. இருந்தாலும் காதில் அப்படியும் இப்படியுமாக விழுந்த வசனங்கள் இன்னமும் சரியாக கேட்க முடியவில்லையே என்ற விசனத்தை ஏற்படுத்தியது.
நேற்றுத்தான் ஆசை தீர படம் பார்த்தேன். உறைந்து போனேன். "அன்பே சிவம்" பாட்டு simply haunting. கமல் கமல்தான். சாதாரணமாக அவர் நிலையில் இருக்கும் எந்த பெரிய ஸ்டாரும் செய்யக்கூடிய தவற்றை அவர் செய்யவில்லை, அதாவது எல்லா காட்சிகளிலும் தானே டாமினேட் செய்வது. மாதவன் பாத்திரத்துக்கு உயிர் கொடுத்தார். அவர் எரிச்சலுடன் கமலுடன் பேசும் ஒவ்வொரு வசனமும் சுபர்ப். இப்படத்திற்கு பிறகு பிறகு ரொம்ப நடிக்காமல் போய் விட்டார். நடித்திருந்தால் கமலுக்கு ஏற்ற வாரிசாக வந்திருக்கலாம்.
ஆனால் இந்த கவிதை டச்சே படத்தின் பாக்ஸ் ஆபீஸை பாதித்தது என்றாலும் மிகையாகாது. நம்மூர் ஆடியன்ஸ் எதிர்பார்ப்பதே வேறு. வீர பாண்டிய கட்டபொம்மனாக எம்.ஜி.ஆர். நடித்திருந்தால் தனக்கு தூக்கு போட விட்டிருந்திருக்கவே மாட்டார் என்று அங்கலாய்த்தாராம் ஒரு ரசிகர்!
பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் என் வீட்டம்மா வந்து காதை பிடித்து திருகும் முன்னால் கணினியை மூடி ஜூட் விடுகிறேன்.
சமீபத்தில் 1983-ல் வந்தது ஜானே பீ தோ யாரோ என்னும் ஹிந்திப்படம். முதலில் அதிலிருந்து ஒரு காட்சியைப் பாருங்கள். ஹிந்தி தெரியாவிட்டாலும் பரவாயில்லை, நான் பிறகு விளக்குகிறேன்.
முதலில் கதை ரவி பாஸ்வானி மற்றும் நஜுருத்தீன் ஷா ஆகிய இருவரும் லட்சிய நோக்கை கொண்டுள்ள புகைப்படக்காரர்கள். அவர்கள் ஒரு சமூக பிரச்சினைகளை அலசி விவாதிக்கும் பத்திரிகையில் சேருகின்றனர். பத்திரிகையின் ஆசிரியை ரொம்பவும் லட்சியவாதி (என காட்டி பந்தா செய்பவர்). அதே நகரத்தில் இரண்டு ஒப்பந்தக்காரர்கள், பங்கஜ் கபூர் மற்றும் ஓம்புரி. அவர்களுக்குள் போட்டி. அதில் முன்னவர் நகரசபை கமிஷனரை தன் வசப்படுத்தி பல ஒப்பந்தங்களை பெறுகிறார். இன்னொருவரும் கமிஷனரை தன்வசப்படுத்த, முதல் ஒப்பந்தக்காரர் கமிஷனரை போட்டுத் தள்ளிவிடுகிறார். கமிஷனரின் பிணத்தை சவப்பெட்டியில் வைத்து தான் கட்டிய மேம்பாலத்திலேயே ஓரிடத்தில் புதைத்து விடுகிறார்.
துரதிர்ஷ்டவசமாக சரியாக கட்டப்படாத அந்த மேம்பாலம் இடிந்து விழுகிறது.
எதேச்சையாக பிணத்தை கண்டெடுக்கின்றனர் நம் கதாநாயகர்கள். இதை அறிந்த பத்திரிகை ஆசிரியை பிணத்தைத் தன்வசப்படுத்த அவர்களை அனுப்ப, பிணம் காணாமல்போக, எப்படியோ பிணத்தை கண்டுபிடித்து இவ்விருவரும் அதற்கு ஸ்கேட்டிங் உருளைகளை அணிவித்து தங்களுடன் எடுத்து செல்ல என்று படம் விறுவிறுவெனச் செல்கிறது. கடைசியில் மகாபாரதத்தில் பாஞ்சாலி சபதம் காட்சி நடக்கும் கட்டத்தில் கிரீன்ரூமுக்குள் இவ்விருவரும் பிணத்துடன் வருகின்றனர். அதன் பிறகு வரும் காட்சிதான் மேலே உள்ள யூட்யூப் க்ளிப்பிங். பிணத்தை பாஞ்சாலி என துச்சாசனன் இழுத்து வருகிறான். துரியோதனன் பேசிக் கொண்டிருக்கும்போதே துரோபதை அவன் மேல் சாய்கிறாள். வியர்த்து விறுவிறுத்து போகிறான் துரியோதனன். நடுவில் நசிருத்தீன் ஷா துரியோதன வேடதாரியை அடித்து போட்டுவிட்டு தானே துரியோதனனாக மாறி துரோபதை தனது அண்ணி ஆகவே துகிலுரிய விடமாட்டேன் எனக் கூற, துச்சாசன நடிகர் குழம்ப பிறகு அவர் இடத்தில் ரவி பாஸ்வானி வந்து அண்ணன் துரியோதனன் சொல்வதுபோல அண்ணி அன்னைக்கு சமம் என டயலாக் விட, யுதிஷ்டிரர் துரியனிடம் சீறுகிறார், “தம்பி துரியோதனா, நீ இங்கு என்ன செய்ய்ய வேண்டுமோ அதைச் செய்யாது ஏன் சொதப்புகிறாய் எனக் கேட்க நாடக ஆடியன்ஸில் விசில் அமளி.
ஓம்புரி பீமன் நடிகரை சாய்த்துவிட்டு பீமனாக வந்து, அவர் வேறு அலம்பல் செய்கிறார். இதில் திருதிராஷ்டிரனாக வருபவர்தான் முடிந்தவரை நாடகத்தைக் காப்பாற்ற நினைக்கிறார். காப்பாற்றியும் இருப்பார், ஆனால் பங்கஜ் கபூர் அக்பராக உள்ளே வர, “this is too much, யே அக்பர் கஹான் சே ஆயா (இந்த அக்பர் எங்கேயிருந்து வந்தான்)” என சீறுகிறார்.
பிறகு போலீஸ் வருகிறது என வைத்து கொள்ளுங்கள். கதாநாயகர்கள் போலீஸ்காரனிடம் எல்லா உண்மைகளையும் கூறுகின்றனர். ஆனால் பயன் ஏதும் இல்லை. நகரசபை உதவி கமிஷனர் சண்டைக்கார ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியை இவர்களுக்கிடையில் சமாதானம் செய்வித்து யார் யாருக்கு எவ்வளவு பணம் என்பதையும் தீர்மானம் செய்கிறார். அது சரி யாரை கைது செய்வது? குழப்பமே இல்லை. பங்கஜ் கபூர் கட்டிய மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கு கதாநாயகர்களே பொறுப்பு என குற்றம் சாட்டி அவர்களை கைது செய்கின்றனர்.
இப்போது பங்கஜ் கபூர் ஸ்க்ரீனுக்கு வந்து நம்மிடம் பேசுகிறார். “எல்லாம் ஒருவழியாக முடிந்தது. இவ்விருவரும் ஜெயிலில். கேஸ் நடக்கும். ஆறு மாதங்களுக்கு பிறகு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். அதற்குள் எல்லோரும் இந்த விஷயத்தை மறந்திருப்பார்கள்” என கதையை முடிக்கிறார்.
அதாவது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் முடிந்துபோன கதை என்று சொல்வது போல.
அமோல் பாலேக்கர் எனக்கு ரொம்ப பிடிக்கும். மராட்டிய நடிகர். பார்ப்பதற்கு நம்ம அடுத்த வீட்டுப் பையன் போல இருப்பவர். சிட் சோர், ரஜனி கந்தா, சோட்டீ ஸீ பாத், கோல்மால் (நம்ம ரஜனி நடித்த தில்லுமுல்லு) ஆகிய படங்கள் மூலம் அகில இந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர். அதிலும் முக்கியமாக தில்லு முல்லுவில் நடித்த ரஜனியை விட கோல் மாலில் நடித்த அமோல் பாலேக்கர் அந்த பாத்திரத்துக்கு அதிக பொருத்தமாக இருந்தார் என்பது என் கருத்து.
ஆனால் நான் இங்கு பேசப்போவது அவர் நடித்து நம்ம ஊர்களில் அதிகப் பிரபலம் ஆகாத படமான ராம் நகரி. 1982-ல் வந்தது. அப்போது தில்லியில் வசித்து வந்தேன். இப்படத்தைப் பற்றி அப்போதைக்கு அறியாமலிருந்தேன். திடீரென 1986-ல் தொலைகாட்சியில் பார்த்தேன். அப்போது வீ.சி.ஆர். வாங்கிய புதிது. படங்களை பதிவு செய்யும் பழக்கம் உண்டு. ஆகவே இதையும் பதித்து வைத்தேன். பிறகு பலமுறை போட்டுப் பார்த்தேன். என் மனதை கவர்ந்தது அப்படம்.
முதலில் கதை சுருக்கம். ராம் நகரி பிறப்பால் நாவிதர். மராட்டியக் கலைவடிவமான தமாஷாவில் ஈடுபாடு உடையவர். திருமணம் ஆகும் வரை தாய் தந்தையருடன் வசித்து வந்த அவருக்கு திருமணத்திற்கு பிறகு தனி வீடு தேவைப்படுகிறது. தனது தமாஷா நாடகங்களால் அவருக்கு பல அறிமுகங்கள் கிடைக்கின்றன. அதை வைத்து ஒரு ஹவுஸிங் காலனியில் வீடு வாடகைக்கு கிடைக்கிறது. அரசு அலுவலகம் ஒன்றில் பணி புரியும் அவர் நாடகம் போடுவதற்காக லீவு எடுக்க கூறும் காரணங்கள் புன்னகையை வரவழைக்கின்றன.
பிறகு பல நிகழ்ச்சிகள். கோர்வையில்லாதது போல தோற்றம் தந்து, பிறகு யோசிக்கும்போது அவற்றின் காரண காரியங்கள் விளங்குகின்றன. மொத்தத்தில் கூற வேண்டுமென்றால், சாதாரணமாக ஒருவர் வாழ்க்கையில் வரும் மாறுதல்கள் எவ்வாறு சம்பந்தப்பட்டவர் குண நலன்களை பாதிக்கின்றன என்பதைப் பார்க்க இயலுகிறது.
முதலிலிருந்தே காட்சிகளை எடுத்து கொள்வோம். ராம் நகரி ஒரு வசனம் இல்லாது வெறுமனே நடிப்புடன் கூடிய காமெடி காட்சியை ஒரு சக நடிகருடன் நடத்துகிறார். ஒருவர் இன்னொருவருக்கு முடிவெட்டுவதாகக் காட்சி. அப்போது இருவருடைய முகபாவங்களும் சிரிப்பை வரவழைப்பதற்காகச் செய்யப்பட்டவை. கையில் ஆயுதம் ஒன்றுமில்லாமல் எல்லாமே பாவனையாக, ஒரு வித pantomome ஆகக் காட்டியிருப்பார். எல்லோரும் சிரிக்க பார்வையாளர்களில் ஒருவர் மட்டும் சிரிக்காமல் கோபப்படுவார். அடுத்த காட்சியில்தான் தெரிகிறது அவர் ராம் நகரியின் அப்பா என்று. "அதெப்படி நம்ம குலத்தொழிலை நீ கேலி செய்யலாயிற்று" என்று கோபப்படுவார். அப்போதுதான் கதாநாயகன் நாவிதர் சாதி என்று தெரியும். படமும் சீரியஸ் வகை எனப் புரிந்து போயிற்று.
ஆபீசில் லீவு எடுக்கச் செய்யும் கூத்தை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டு விட்டேன். பிறகு ராம் நகரியின் கல்யாணம் நடக்கும். அங்கு அவர் சாதிக்கான திருமண சடங்குகள் எல்லாம் சம்பிரமாகக் காட்டப்படுகின்றன. எதுவானால் என்ன, கல்யாணம் கல்யாணம்தானே. நாமும் அந்த உல்லாசத்தில் இழுக்கப்படுகிறோம். கல்யாணம் முடிந்ததும் கூட்டுக் குடும்பமாக வாழ்க்கை ஆரம்பிக்கிறது. புதுமண தம்பதிகளுக்கு ஏற்ப தனிமை கிட்டவில்லை. அதில் சில குழப்பங்கள். வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு வேடிக்கை ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சங்கடம். அப்போதுதான் தனது டிராமா செயற்பாடுகளால் கிடைத்த அறிமுகத்தை வைத்துக் கொண்டு அவருக்கு ஹவுஸிங் காலனியில் வீடு வாடகைக்கு கிடைக்கிறதையும் ஏற்கனவே குறிப்பிட்டேன். இங்கு ஒரு தமாஷ். 24 மணி நேர தண்ணீர் என்பது இது வரை அவருக்கோ அவர் மனைவியின் பிறந்த வீட்டினருக்கோ கிடைத்ததே இல்லை. அதுதான் சாக்கு என அவர் மனைவி முதல் நாளே வீட்டிலிருக்கும் அத்தனை துணிகளையும் தோய்த்து போடுகிறார். அதுவே ஒரு பெரிய புகாராகப் போய் விடுகிறது.
இடையில் தந்தைக்கு உடல் நலம் சரியாக இல்லாது போக அவ்ரை மருத்துவ மனையில் சேர்க்கிறார்கள். அங்கிருக்கும் மருத்துவர் ராம் நகரியின் தூரத்து உறவுக்காரர். ராம் நகரி அவரிடம் "நல்ல வேளை நம்ம சாதி ஆள் நீ இங்க இருக்க.." என்று இழுக்கும்போதே, மருத்துவர் ஒரு மாதிரி சங்கடத்துடன் கனைத்து விட்டு அவரை தனியாக அழைத்து சென்று தனது சாதி யாருக்கும் அந்த மருத்துவ மனையில் தெரியாது, ஆகவே தயவு செய்து அங்கு அதைப் பற்றி பேச வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார். பிறகு வரும் ஒவ்வொரு காட்சியிலும் இந்த சாதி பிரச்சினை ராம் நகரியை ஒவ்வொரு மாதிரி பாதிப்பதையே பல வகையில் காண்பிக்கிறார்கள்.
ஒரு தமாஷா நாடகத்தில் அவருடன் உயர் சாதியை சேர்ந்த நடிகை கதாநாயகியாக நடிக்க, அந்த நடிகையின் கணவர் நாடகம் முடிந்ததும் தலைமை தாங்குபவரிடம் தனது மனைவியின் புராணம் பாடி ராம் நகரியை சாதி காரணமாக ஓரம் கட்ட செய்கிறார். அப்போதுதான் ராம் நகரிக்கு எல்லோரும் தன்னிடம் காரியம் ஆகும் வரை குழையடித்து விட்டு ஆனவுடன் சாதியைக் காரணம் காட்டி அலட்சியம் செய்கிறார்கள் என்பது அவருக்கு புரிகிறது. இதைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கே கோபம் வரும் போது ராம் நகரியின் கோபத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம்.
இம்மாதிரி காட்சிகள் துணுக்குகளாக வந்தாலும் சொல்ல வந்த செய்தி பார்வையாளர்களை அடைந்து விடுகிறது. அது என்ன செய்தி? சாதி பிரச்சினை தீர்ப்பதற்கு இன்னமும் உழைக்க வேண்டும் என்பதே அது. இந்தப் படம் பற்றி தொண்ணூறுகளில் எனது மராத்திய நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் ராம் நகரி என்னும் தமாஷா நாடகக் கலைஞன் உண்மையாகவே வாழ்ந்தவன் என்று சொன்னார். அதனால்தானோ என்னவோ திரைப்படத்தில் பிரச்சினைக்கு என்ன செய்ய வேண்டும் எனச் சொல்ல முயலவில்லை. ஒரு மாதிரி டிராவிலேயே அதை முடித்து விட்டார்கள். கடைசி காட்சியில் ராம் நகரி தனது மகனுடன் பேசும்போது தனது சாதியை மறக்க மற்றவர்கள் தன்னை அனுமதிக்கவேயில்லை என குறைபட்டு கொள்கிறார். மகனது தலைமுறையிலாவது நல்லது நடக்கும் என்ற ஒரு மெல்லிய நம்பிக்கையுடன் நாம் திருப்தி பட்டு கொள்ள வேண்டியுள்ளது. எனக்கு இந்த முடிவு மன நிறவை அளிக்கவில்லைதான். ஆனால் என்ன செய்வது வாழ்க்கை நாம் எதிர்பார்ப்பது போல இல்லையே. என்ன செய்வது?
நான் சமீபத்தில் 1979-ல் இப்போது நான் இருக்கும் எனது சொந்த வீட்டிலிருந்து காலி செய்து தி.நகர், அங்கிருந்து தில்லி என்றெல்லாம் சென்று விட்டு திரும்பவும் 2001-ல் அந்த சொந்த வீட்டுக்கே வந்தது பற்றி இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் இப்பதிவு அதைப் பற்றியல்ல.
தற்காலிகமாக திரும்பி வந்ததும் ஒருமாதம் முழுக்க மராமத்து வேலை, பிறகு தில்லி சென்று வீடு காலி செய்து கண்டையனரில் வீட்டு பொருட்களை ஏற்றி விட்டு திரும்ப சென்னைக்கு வருவதற்கும், கண்டையனர் வந்து சேருவதற்கும் சரியாக இருந்தது. அதுவும் இப்பதிவில் கூறப்போவதில்லை. நான் கூறவந்தது மராமத்து வேலைகள் சமயத்தில் ஒரு மாதம் நங்கநல்லூரிலேயே நண்பர் வீட்டில் தங்கியபோது நடந்தது பற்றி.
தில்லியில் உள்ள வாடிக்கையாளர் மின்னஞ்சலில் மொழிபெயர்ப்புக்கான கோப்புகளை அனுப்ப, நண்பரின் இரு மகன்கள் அவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து என்னிடம் தர, நானும் மராமத்து வேலைகளை அவ்வப்போது மேற்பார்த்துக் கொண்டே மொழிபெயர்ப்புகளை கையால் எழுதியதை அவ்விரு இளைஞர்களும் கணினியில் தட்டச்சு செய்து முடிக்க, அதை கணினி திரையிலேயே படித்து நான் திருத்தங்களைக் கூற அவர்கள் அதை அனாயாசமாக நிறைவேற்றி பிறகு மொழிபெயர்ப்பை நான் மின்னஞ்சல் பெட்டி மூலம் அனுப்ப என்று விடாது வேலை. திங்கள் தெரியாது, சனி தெரியாது, கிழமைகளே தெரியாது அப்படி வேலை. என் அக்காவின் கணவர் கூட வேடிக்கையாகக் குறிப்பிடுவார், "நம்ம டோண்டு சென்னைக்கு வந்துட்டான்னுதான் பேரு. ஆனால் இப்பவும் அவனை தில்லி மூலமாகத்தான் பிடிக்க வேண்டியிருக்கு" என்று.
ஆக, மராமத்து, மொழிபெயர்ப்பு தவிர மீதி எல்லாம் கனவைப் போலவே இருந்தன. அப்போதுதான் இந்தப் பாட்டு அடிக்கடி எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் வரும்.
"மச்சினியே மச்சமச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டு நீயே
துள்ளி துள்ளி இங்கு விளையாடும் ...." அப்பாட்டை கீழே தருகிறேன்.
ஒரு நதி அருவி வழியாக வீழ்ந்து, சிற்றோடையாகச் செல்லும் அழகில் இப்பாட்டு செல்லும். நதியில் விளையாடி கொடியில் தலைசீவி என்ற உணர்ச்சி எனக்கு அப்பாட்டை முதலில் சின்னத்தரையில் கண்டு கேட்கும்போதே தோன்றியது. இப்பாட்டு அடிக்கடி வந்து, என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இப்பாடலுக்கு நடன அசைவுகளும் ஒரு வித மேன்மை கணித நேர்த்தியுடன் (advanced mathematical precision) இருந்ததும் என் மனதைக் கவர்ந்தது. அதுவும் நான் அந்த வீட்டில் கணினி இருந்த அறையில் அமர்ந்து மொழிபெயர்ப்பு வேலை செய்தது என் வேலைக்கு அது ஒரு பின்னணி இசை கொடுத்தது போலத் தோன்றியது.
இப்பதிவை எழுதும்போதும் அப்பாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படியே 2001-க்கு போன உணர்வு. அதுவும் சென்னையில் தில்லி போல நன்றாக மொழிபெயர்ப்பு வேலை நடக்குமா என்று சற்றே அஞ்சியபடி வந்தவன் நான். அப்படியெல்லாம் பயம் தேவையில்லை எனக்கு உணர்த்திய அந்த ஒரு மாதம் என் இனிய தருணங்கள் பலவற்றை அடக்கியுள்ளது. அவற்றில் ஒன்று இந்த மச்சமச்சினியே பாட்டு என்றால் மிகையாகாது.
பிறகு பிப்ரவரி 2002-ல் நானே சொந்த கணினியை வீட்டில் நிறுவிக் கொண்டதும் மேலே நான் குறிப்பிட்ட அந்த இரு இளைஞர்களது உதவியாலேயே நிகழ்ந்தது. பெரியவன் எனது கணினிக்காக பாட்டுகளை தெரிவு செய்ய, சின்னவன் கூவினான், "டேய் அந்த மச்சமச்சினியே பாடலை முதலில் லோட் செய். அந்தப் பாட்டு டோண்டு மாமாவுக்கு பிடிக்கும்" என்று சீரியசாகவே கூறினான். பெரியவனோ "அப்பாடல் மட்டுமென்ன அந்தப் படத்தில் வரும் மீதி பாட்டுக்களையும் லோட் செய்வேன்" என்றான். அப்போதுதான் அப்பாட்டு ஸ்டார் படத்தினுடைய பாட்டு என்பதை அறிந்து கொண்டேன். எல்லா பாட்டுக்களுமே அப்படத்தில் அருமைதான். ஆனால் இப்போதும் அவற்றுள் என் விருப்பப் பாடல் அந்த மச்ச மச்சினியேதான். இப்பாடல் மெட்டில் ஹிந்தியிலும் ஒரு பாடல் ஒரு முறை கேட்டேன். ஆனால் எந்தப் படம் எனத் தெரியவில்லை. இப்போது இதே பாட்டை ஹிந்தியில் கேளுங்கள், ருத் ஆ கயீ ரே எனத் துவங்கும் பாடல் எர்த் 1947 என்னும் படத்தில்.
ஆனால் அப்படத்தை முழுதாக இந்த ஆண்டுதான் சின்னத் திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படமும் அருமையாகத்தான் இருந்தது. வாழ்வின் செல்லும் போக்குக்கெல்லாம் செல்லும் பிரசாந்த ஜோதிகாவின் காதல் கிடைத்ததும் எப்படி தன் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறார் என்பது கதை. காதலின் சக்தி என்னவென்பதை அலட்டிக் கொள்ளாமல் காட்டியது. அப்படக்கதையை சற்றே விரிவாகப் பார்ப்போம்.
காசுக்காக மற்றவர் செய்யும் சிறு குற்றங்களை தான் ஏற்று அடிக்கடி சிறை செல்பவன் பிரசாந்த். சிறையே அவனுக்கு பிறந்த வீடு போலத்தான். அம்மாதிரி வாழ்க்கையை கவிதையாகக் காட்டுவது அப்படத்தில் முதலில் காண்பிக்கப்படும் இந்த மச்ச மச்சினியே பாடல்தான். உருதுவில் பிந்தாஸ் என்று கூறுவார்கள். அது ஒரு அலட்சிய, விட்டேற்றியான, அனாயாசமான பாணி. அப்படி வாழ்ந்தவன் பிரசாந்த். ஒரு முறை சாதாரண ஈவ்டீசிங் வழக்கு என நினைத்து குற்றத்தை ஏற்றுக் கொள்ள, அதில் பாதிக்கப்பட்ட பெண் கோமா ஸ்டேஜில் இருப்பதை பார்த்து வீறு கொண்டெழுந்து குற்றவாளியான திமிர் பிடித்த அந்தப் பணக்காரப் பையனைப் பந்தாடி போலீஸில் ஒப்படைக்கிறான். பிறகு ஜோதிகாவின் காதல் கிட்டுகிறது. ஜோதிகாவின் மாமா விஜயகுமார் பிரசாந்தை கொலை மிரட்டலுக்காளாகியிருக்கும் தன் மகனைக் காப்பாற்ற பிரசாந்தை தன் மகனாக நடிக்கக் கேட்டு கொள்கிறார். ஆனால் உண்மை காரணத்தை மறைத்து தன் மனைவி ஸ்ரீவித்யாவுக்காக அதை செய்வதாகவும், பிள்ளை இறந்து விட்டாலும் அவன் இறந்தது மனைவிக்கு தெரியாது என்று செண்டிமெண்ட் பேசி பிரசாந்தை இணைய வைக்கிறார்.
இதொன்றும் தெரியாத பிரசாந்த் ஸ்ரீவித்யா, விஜயகுமார் இருவரையுமே அன்னை தந்தையாக பாவித்து உருக, விஜயமுமாரின் உண்மை மகன் வில்லனுடன் சேர்ந்து கொள்ள என்றெல்லாம் கதை பல திருப்பங்களுடன் சென்று க்ளைமேக்ஸை அடைகிறது. ஆனால் ஒன்று. எல்லா திருப்பங்களுமே லாஜிக்கலாக காட்டப்பட்டுள்ளன.
இதற்கு மேல் கதையை இங்கு கூற விரும்பவில்லை. சான்ஸ் கிடைத்தால் பார்த்து கொள்ளுங்கள். முக்கியமாக சண்டைக் காட்சிகள் அபாரம் என்று கூறுவது இந்த 61 வயது இளைஞன் டோண்டு ராகவன்.
நான் கூறவருவது நாயக நாயகி ஜோடி அல்ல. வெற்றி நடிகர்கள் இருவரது ஜோடி. இது ஒரு மீள்பதிவு. கமலுக்கு ஷெவாலியே விருது வருவதாக பேச்சு எழுந்துள்ள இந்தத் தருணத்தில் இந்தப் பதிவும் ரெலெவண்ட் ஆகிறது.
சில வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம். தமிழ்த் திரையுலகில் ஒவ்வொருக் காலக் கட்டத்திலும் ஏதாவது இரு நடிகர்கள் நன்குப் பேசப் படுவார்கள்.
பி. யூ. சின்னப்பா மற்றும் தியாகராஜ பாகவதர்.
முன்னவர் பின்னவரை விட அதிகத் திறமை வாய்ந்த நடிகர். இருந்தாலும் பின்னவருக்கு அதிக முகராசி (charisma?).
அடுத்த இருவர் சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜியார். அதே மேலே கூறப்பட்ட முன்னவர் பின்னவர் குணதிசயங்கள்.
இப்போது கமல் மற்றும் ரஜினி.
இப்போதைய நிலை சற்றே வித்தியாசமானது. ரஜினிக்கும் நடிப்புத் திறமை உண்டு- கமல் அளவுக்கு இல்லாவிட்டாலும்.
சிவாஜியின் விஷயத்தில் எம்ஜியார் மாதிரித் தன்னை நல்லவனாக காண்பித்து கொள்ளச் செய்த முயற்சிகள் அனேகமாகச் சொதப்பலாயின. உதாரணம்: உத்தமன். ஆ கலே லக் ஜாவில் சஷி கபூர் மாதிரி லைட்டாக வர இயலவில்லை. ரொம்பவே பொறுமையைச் சோதித்தார். சிவாஜி தன் இயல்பிலிருந்துக் கொண்டு நடித்தப் படங்களே இன்றும் பேசப்படுகின்றன. உதாரணத்துக்கு கப்பலோட்டிய தமிழனில் அப்பாத்திரமாகவே மாறினீர்களா என்று கேட்கப் பட்ட கேள்விக்கு, இல்லை, அவ்வாறு நடிக்கத்தான் செய்தேன் என்று உண்மையாக கூறினார். திரும்பிப் பார் என்னும் படத்தில் முழு வில்லனாகவே வருவார். அதற்கெல்லாம் கவலைப்பட்டதேயில்லை.
அதே மாதிரி கமலும் ரஜினியைப் போல் ஸ்டைல் காண்பிக்க முயன்றால் தன் அடையாளத்தை இழப்பது நிச்சயம். அவ்வாறு செய்ய அவர் முயற்சிப்பதில்லை என்பது மனத்துக்கு ஆறுதலைத் தருகிறது. ரஜனி கூட கமல் மாதிரி இப்போதைய நிலையில் எல்லாவித ரோல்களையும் எடுக்க முயன்றால் தோல்விதான் கிடைக்கும். அவருக்கு இருக்கும் இமேஜை விட்டு வெளியே வர இயலாத நிலையிலேயே அவர் இருக்கிறார்.
இந்த இரட்டையர் ஜோடி எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்டு இருப்பதில்லை. 1977-ல் எம்ஜியார் நடிப்பிலிருந்து ஓய்வுப் பெற்ற பின்புதான் கமல் ரஜினி ஜோடி வந்தது. இருவருமே இன்னும் களத்தில் இருப்பதால் இன்னொரு ஜோடி இப்போதைக்கு இல்லை என்றே தோன்றுகிறது.
தொன்மங்களுக்கான மனநிலை
-
அன்புள்ள ஜெ, மேடையுரை பயிற்சி வகுப்பின் இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளை
நேரம் அது. பலமுறை மனதிற்குள் கேள்விகளை ஒத்திகை பார்த்த பின்னர், அந்த
கேள்வியாகவே நா...
விநாயக சதுர்த்தி வாழ்த்து
-
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி சமூக, அரசியல் மாற்றங்களில் அடிபடும்
முதன்மையான இந்துப் பண்டிகை. கிட்டத்தட்ட எல்லா இந்துப் பண்டிகைகளுமே தமிழக
அரசியல் சிக்க...
𝑹𝒆𝒂𝒅 𝒕𝒉𝒆 𝑷𝒐𝒆𝒎 𝑴𝒐𝒓𝒆 𝑻𝒉𝒂𝒏 𝑶𝒏𝒄𝒆
-
இத்தனை வருடங்களும்
இதன் நிழல்வாங்கி
இதன் பழம் தின்னும்
பறவைகள் பார்த்து
இதன் துளிரில் துளிர்த்து
சருகில் சரசரக்க நடந்து
திரிகிறவன் எனினும்
இந்த மரத்தை முழ...
மெட்ராஸ் பேப்பர் – சுதந்தர நாள் விழா
-
Pa Raghavan
இன்று மாலை (ஆகஸ்ட் 15, 2025) ஆறு மணிக்கு மெட்ராஸ் பேப்பர் வார இதழ் நடத்தும்
சுதந்தர நாள் விழாவுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன். நிகழ்ச்சி zo...
Paris – Drancy Tamil Sangam : M. Alain Anandan
-
Nous, les Tamouls, avons du mal à vivre sans chercher constamment à nous
promouvoir nous-mêmes. Au fil des années, notre ami Alan Anandan s’est
distingué c...
நைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்!
-
நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது
புரிந்துகொள்கிறார்? யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை
அனுபவிக்கும் போது அல்லத...
Einige Angela Merkel Witze
-
Eine beiäufige Erwähnung seitens Kevin Lossner hat mich auf die Witze
über die deutsche Bundeskanzerin Angela Merkel aufmerksam gemacht. Sehen
wir zuerst...
I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.