மூன்றரை வருடங்கள்தான் பம்பாயில் இருந்தேன். ஆனால் என் வாழ்வின் போக்கை அவை முற்றிலும் மாற்றி விட்டன. அந்த மாற்றங்களில் முக்கியமானது என் எண்ணப்போக்கில் நிகழ்ந்த மாறுதல். 25 வயது வரை சென்னையிலேயே இருந்து பழக்கப்பட்டவன் நான். ஐந்து வருடங்கள் பொறியியல் கல்லூரியில் படித்தபோதும் டே ஸ்காலராகத்தான் இருந்தேன். பெற்றோர் பராமரிப்பில் இருந்து பழகி விட்டிருந்தேன். முதலில் பம்பாய்க்கு சென்றபோது கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. ஆனால் சில நாட்களிலேயே பம்பாய் பழகிவிட்டது. எனக்கு ஹிந்தி ஏற்கனவே நன்றாக தெரியுமாதலால் ஒரு பிரச்சினையும் இல்லை. அது தவிர தங்கியது மாதுங்காவில். இன்னொரு மாம்பலம் என்றே கூறலாம்.
இருந்தாலும் முதலில் வேண்டாவெறுப்பாகத்தான் சென்னையை விட்டு பம்பாய் சென்றேன். என்னுடைய முதல் போஸ்டிங் அந்த நகரில்தான். முக்கியமாக ஜெர்மன் புத்தகங்கள் படிக்கக் கிடைக்குமா என்ற சஞ்சலம். பம்பாய் மேக்ஸ் ம்யுல்லர் பவனுக்குச் சென்று நூலகத்தில் உறுப்பினராகச் சேர விண்ணப்பத் தாள் கேட்டேன். இங்கு நூலகம் ஒன்றும் கிடையாது என்றுத் திட்டவட்டமாகக் கூறப் பட்டது. ஆனால் ஒரு அறையில் பல புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். என்ன செய்வது என்று ஒரு நிமிடம் திகைத்தேன். பிறகு பம்பாயில் உள்ள மேற்கு ஜெர்மனியின் துணைத் தூதருக்கு ஒரு இன்லேண்ட் லெட்டரில் கடிதம் எழுதினேன். மேக்ஸ் ம்யுல்லர் பவனில் நடந்ததைக் கூறி கான்ஸுலேட்டில் ஏதாவது நூலகம் உள்ளதா என்றுக் கேட்டிருந்தேன்.
இரண்டே நாட்களில் பதில் வந்தது. அக்கடிதத்தில் மேக்ஸ் ம்யுல்லர் பவனில் நூலகம் இல்லை என்பதைக் கேட்டதில் அதிர்ச்சி அடைந்ததாக எழுதப்பட்டிருந்தது. பதில் கடிதத்தை எடுத்துக் கொண்டு உடனே மேக்ஸ் ம்யுல்லர் பவன் செல்லுமாறு எனக்கு ஆலோசனை கூறப்பட்டது. அங்கு சென்றால் இம்முறை வரவேற்பு முற்றிலும் மாறுபட்டிருந்தது. என்னிடம் 10 ரூபாய் பெற்றுக் கொண்டு நூலக அட்டை வழஙப்பட்டது. அட்டை எண் 2. எண் 1 டைரக்டருடையது.
பிறகுதான் தெரிந்துக் கொண்டேன், டைரக்டர் கான்ஸுலேட்டுக்கு அழைக்கப்பட்டுக் கண்டனம் செய்யப்பட்டார் என்று. விஷயம் என்னவென்றால் ஜெர்மன் அரசிடமிருந்து நிதியுதவியைப் பெற்று நூலகத்துக்காக வாங்கும் புத்தகங்கள் டைரக்டர், அவர் குடும்பத்தினர் மற்றும் இதர அதிகாரிகளால் தனிப்பட்ட முறையில் உபயோகிக்கப்பட்டன என்று. நான் எப்போது சென்றாலும் எனக்குத் தாராளமாகப் புத்தகம் படிக்கக் கொடுக்கப்பட்டது.
கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும். நம்மில் பலர் கேட்கக் கூச்சப்பட்டுக் கொண்டு பேசாமல் இருக்கிறோம். அது தவறு. தப்பு நடந்தால் தட்டிக் கேட்க வேண்டும். ஆனால் எங்கே யாரிடம் எப்படி விஷயத்தைக் கொண்டுச் செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். கடிதம் எழுதும்போது உணர்ச்சி வசப்படாமல், யாரையும் திட்டாமல் நம் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். கேட்டால் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். கேட்காவிட்டால் நிச்சயமாகக் கிடைக்காது. அப்படிக் கிடைப்பது எல்லாம் அம்புலிமாமா கதைகளில்தான் சாத்தியம்.
இன்னொரு அதிசயம் என்னையே பிரமிக்கவைத்த என் ஞாபகசக்தி.
வருடம் 1972. பம்பாயில் விநாயக சதுர்த்தி தினம். பல பொது இடங்களில் இலவச சினிமா காட்சிகள் காண்பிக்கப்படும். மாதுங்காவில் ஒரு இடத்தில் "சபாஷ் மீனா" படம் போட்டார்கள்.
இப்படத்தை நான் முதலில் 1958-ல் சென்னையில் ஒரு முறை பார்த்ததோடு சரி. கடந்த 14 வருடங்களில் அப்படத்தைப் பற்றி நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.
ஆனால் என்ன ஆச்சரியம்! காட்சிகள் ஒவ்வொன்றாகத் திரைக்கு ஒவ்வொரு காட்சியும் வருவதற்கு சில நொடிகள் முன்னால் அதற்குரிய வசனங்கள் தாமாகவே என் நினைவுக்கு வந்தன. சிவாஜியும் மற்றவர்களும் வாயைத் திறப்பதற்கு முன்னமேயே அவர்களின் வசனங்களை நான் கூற ஆரம்பித்தேன். என் நண்பர்களுக்கு ஒரே ஆச்சரியம். எனக்கும்தான்.
பம்பாயில் நான் இருக்க, என் தந்தை தனியாக சென்னையில். என் தாயார் 1960-லியே இறந்துவிட்டார். அதைக் காரணம் காட்டி சென்னைக்கு விருப்ப மாற்றல் வேண்டி விண்ணப்பித்தேன். கடவுள் அருளால் 1974-ல் கிடைத்தது. அதற்கு சிலநாட்கள் முன்னால்தான் என் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு வேலையில் சேர்ந்து ஒரே வாரத்தில் மாற்றல் உத்தரவு வந்தது ஒரு கல்யாணப் பரிசாகவே எனக்குப்பட்டது. விரும்பி பெற்ற மாறுதல் ஆதலால் மாற்றல் பயணப்படிகள் கிடையாது, ஆனால் எங்கள் S.E. கண்ணன் அவர்கள் அவர்கள் ஜாயினிங்க் டைம் கொடுத்தார். அதற்காக நன்றிசொன்னபோது அவர் "முடிந்திருந்தால் மாற்றல் பயணப்படிகள் கூட அளித்திருப்பேன், ஆனால் மாற்றல்கள் அப்போது தடையிலிருந்ததால் அதை செய்ய இயலவில்லை" என்று கூறினார். இதே கண்ணன் அவர்கள் நான் 1981-ல் ஐ.டி.பி.எல்லில் சேருவதற்காக மத்திய பொதுப்பணி துறையிலிருந்து விலகியபோதும் அரிய உதவி செய்தார். அது பற்றி பிறகு.
Back to Bombay. மாதுங்காவில் இருந்த துரை லெண்டிங் லைப்ரரி எனக்கு நிரம்பப் பிடிக்கும். அதன் உரிமையாளர் துரைக்கு என்னிடம் ஒரு அபிமானம். ஒரு முறை எதிர் நடைபாதையில் சென்று கொண்டிருந்த என்னை ஆள் விட்டனுப்பிக் கூப்பிட்டார். என்னடாவென்று பார்த்தால் எனக்கு பிடித்த எழுத்தாளர் Taylor Caldwell-லின் புத்தகம் அவரிடம் புதிதாக வந்திருந்தது! நானும் அங்கு பலவகைப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.
சீரியஸ் புத்தகங்கள், வேடிக்கை புத்தகங்கள், காமிக்ஸ் (ஆர்ச்சி காமிக்ஸ், டாட், லோட்டா, காஸ்பர், வெண்டி த குட் விட்ச், ரிச்சி ரிச் முதலியன, அவற்றைக் கட்டுக் கட்டாக எடுத்துப் போய் படிப்பேன்.). திடீரென்று ஒரு நாள் துரையிடம் போய் "ரொம்ப போர் அடிக்கிறது துரை, சரோஜாதேவி புத்தகம் ஏதாவது இருக்கிறதா" என்று கேட்டால் கூட அசர மாட்டார். தமிழிலும், ஹிந்தியிலும் இந்திய ஆங்கிலத்திலும் அம்மாதிரி புத்தகங்கள் ஏராளம். என்ன, "உங்களை புரிஞ்சுக்கவே முடியல சார்" என்று கூறிக் கொண்டே கேட்டப் புத்தகங்களை எடுத்துக் கொடுப்பார், அவ்வளவுதான்.
என்னுடைய பதிவுகளில் வாழ்க்கையில் எனக்கு நடந்த ஹைப்பலிங்குகளை பற்றி எழுதியுள்ளேன். அவற்றில் ஒன்று பம்பாயில் நடந்தது. அதை இங்கு சுருக்கமாக மறுபதிவு செய்கிறேன்.
1972-ல் ஒரு நாள் எங்கள் அலுவலக கேன்டீனில் வைத்து என் நண்பர் வெங்கடராமன் எனக்கு ஒரு புது நபரை அறிமுகப் படுத்தினார். "ராகவன் இவர்தான் ஆடுதுறை ரகு" என்று. அவரும் ஹல்லோ என்று கை குலுக்கினார். அவர் வயதும் என் வயதும் ஏறத்தாழ ஒன்று போலவே இருந்தது. திடீரென்று என் தலைக்குள் ஒரு பல்ப் எரிந்தது போல் இருந்தது.
உடனே ரகுவை நான் கேட்டேன்: "உங்கள் பெரியப்பா பெயர் T.P. கிருஷ்ணமாச்சாரியா?"
ரகு (திகைப்புடன்): "ஆமாம், உங்களுக்கு எப்படி...?"
நான்: "அவருடைய ஷட்டகர் பெயர் சீனுவாசந்தானே?"
ரகு: "ஆமாம், ஆனால் நீங்கள் எப்படி...?"
நான்: "சீனுவாசன் என்னுடைய மாமா."
வெங்கடராமன்: "சே, இதுதான் ஐயங்கார்களுடன் பிரச்சினை. ஏதாவது உறவைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். "(அவர் ஐயர்)
ரகு: "இப்போது நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?"
நான்: "உங்கள் பெரியப்பாவின் மனைவியும் என் மாமியும் சகோதரிகள்".
ரகு (அழும்போல ஆகி விட்டார்): "எப்படி சார் கண்டு பிடித்தீர்கள்?"
நான்: "இது ஒன்றும் பெரிய விஷயமில்லை ரகு. 1955-ல் என் சின்ன மாமாவுக்குப் பெண் பார்ப்பதற்காக என் அம்மா, சின்ன மாமா மற்றும் உங்கள் பெரியப்பா கும்பகோணம் சென்றனர். திரும்பி வரும் வழியில் ஆடுதுறையில் உங்கள் வீட்டில் தங்கியிருந்தார்கள். அப்போது அந்த வீட்டில் ரகு என்று என் வயதுடையப் பையன் இருந்ததாக என் அம்மா கூறியிருந்தார். இப்போது ஆடுதுறை ரகு என்று என் காதில் விழுந்தவுடனேயே அந்த ஞாபகம் வந்தது. ஆகவே உங்களைக் கேட்டேன்."
போன வருடம் பம்பாய்க்கு ஒரு செமினார் சம்பந்தமாக சென்றேன். இரண்டே நாட்கள்தான் தங்கினேன். வாய்ப்பு கிடைத்ததும் மாதுங்கா சென்றேன். நான் தங்கியிருந்த கட்டிடம் இடிக்கப்படும் நிலையில் இருந்தது. இன்னேரத்துக்கு அது புதிய கட்டிடமாக உருவாகியிருக்கும். இருப்பினும் என் நினைவுகள் பழைய கட்டிடத்தில்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: இப்பதிவின் சில பகுதிகள் வெவ்வேறு நேரங்களில் என்னால் எழுதப்பட்டவை. இருந்தாலும் அவற்றிற்கு சுட்டி கொடுப்பதற்கு பதில் இப்பதிவில் சிறிய மாறுதல்களுடன் புகுத்தியுள்ளேன். இதில் எனக்கு சந்தோஷமே. ஏனெனில் பம்பாய் நினைவுகள் மறுபடி என்னுள் கிளர்ந்து எழுந்தன.
அன்புடன்,
டோண்டு ராகவன்