Showing posts with label பகுத்தறிவு. Show all posts
Showing posts with label பகுத்தறிவு. Show all posts

9/24/2010

ஈ.வே. ராமசாமி அவர்கள் சார்பில் இங்கு யாராவது சில பகுத்தறிவு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கப்பூ!!

ஆசிட் தியாகுவின் இப்பதிவைப் பார்த்து எனக்குள் தோன்றியதே பகுத்தறிவுக் கேள்விகளை எல்லோருமே கேட்பாங்களே, என்ன செய்வது என்னும் கேள்விதான்?

நீலாவதி - ராமசுப்பிரமணியம் திருமணத்தை முன்னிட்டு கூடியிருந்தவர்கள் இடையே ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஆற்றிய உரைக்கு முன்னால் ஒருவர் கேட்ட கேள்வியும், நாயக்கரின் பதிலும்:

ஒருதாரமிருக்கிற பொழுது மறுதாரம் கட்டலாமென்பது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையா? ஹிந்து மதக் கடவுள்கள் பல மனைவிகளையுடையவர்களாய் இருக்கின்றனர். அந்த மதம் தப்பிதமானது என்று கூறும் சுயமரியாதை இயக்கம் ஒரு மனைவியிருக்க மற்றொரு மனைவியை மணம் செய்ய அனுமதிக்கலாமா? என்று கேட்டார்.

திரு. இராமசாமி அவர்கள் பதில் கூறியதாவது:-

இப்பொழுது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியது நமது கடமையேயாகும். சுயமரியாதை இயக்கம் என்ன சொல்லுகிறதென்றால், ஒவ்வொருவரும் எல்லா விஷயங்களிலும் தங்கள் பகுத்தறிவை உபயோகப் படுத்த வேண்டுமென்றும், ஆண், பெண் இருவருக்கும் சமத்துவம் இருக்க வேண்டுமென்றும் சொல்லுகிறது. சுயமரியாதை இயக்கத்தால் கண்டிக்கப்படுகிற தேவர்கள் செய்யும் காரியங்களையெல்லாம் செய்யக் கூடாதென்பது நோக்கமல்ல. தேவர்கள் சாப்பிடுகின்றார்கள். மூச்சு விடுகிறார்கள் என்பதால் நாமெல்லோரும் சாப்பிடக் கூடாது, மூச்சுவிடக் கூடாது என்பது முட்டாள் தனமாகும். பகுத்தறிவிற்கு எது பொருத்தமாயிருக்கிறதோ அதைக் கைக் கொள்ளவேண்டுமென்பதுதான் சுய மரியாதை இயக்கத்தின் நோக்கமாகும். கல்யாணம் என்பது ஒரு மனிதனுடைய இன்பத்தைப் பொறுத்ததேயன்றி வேறொன்றுமில்லை. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் ஒத்துவராவிட்டால் வேறு கல்யாணம் செய்து கொள்வதில் பிசகொன்றுமில்லை. அதே உரிமையை பெண்ணுக்கும் கொடுக்க ஆண் தயாராயிருக்கிறார்.

கல்யாணத்தை கத்தரிக்காய், வாழைக்காய் போல நினைத்து பொருத்தமற்ற முறையில் கல்யாணத்தைச் செய்து வைத்து வாழ்க்கை முழுமையும் துன்பத்திலும் அடிமைத்தனத்திலும் இருக்கும்படி செய்வது அறியாமையாகும். சமீபத்தில் நகர் என்ற ஊரில் ஒரு சுயமரியாதை கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளை கிறிஸ்தவர். கிறிஸ்து மதச் சட்டப்படி ஒரு மனைவி யிருக்க மற்றொரு மனைவியை விவாகம் செய்து கொள்ள அனுமதியில்லை என்றாலும் அவரவர் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துதல் விரோதமாகும். எனவே அக்கல்யாணத்தைச் சிறப்பாக முடித்து வைத்தோம். இங்கு நடைபெற்ற திருமணத்தின் தம்பதிகள் மிகச் சிறந்தவர்கள் என்பது என் கருத்து. தகுதி வாய்ந்த இத்தம்பதிகள் சிறந்து வாழ விரும்புகிறேன்.


குடி அரசு - சொற்பொழிவு - 12.10.1930
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

இப்போது எனது கேள்விகள்:

1. //தேவர்கள் சாப்பிடுகின்றார்கள். மூச்சு விடுகிறார்கள் என்பதால் நாமெல்லோரும் சாப்பிடக் கூடாது, மூச்சுவிடக் கூடாது என்பது முட்டாள் தனமாகும்.//
ஆக இரண்டாம் பெண்டாட்டி கட்டுவது சாப்பிடுவது, மூச்சு விடுவது போல அடிப்படைத் தேவை அப்படித்தானே? பேஷ், பேஷ், நல்ல பகுத்தறிவு.

2. //ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் ஒத்துவராவிட்டால் வேறு கல்யாணம் செய்து கொள்வதில் பிசகொன்றுமில்லை. அதே உரிமையை பெண்ணுக்கும் கொடுக்க ஆண் தயாராயிருக்கிறார்.//
அற்புதமான சொற்கள். பெண்ணுக்கு ஆண் உரிமை தரவேண்டும் ஆனால் ஆணோ அதை தானே எடுத்துக் கொள்வான் அப்படித்தானே? அது இருக்கட்டும், நாயக்கர் அம்மாதிரி பெண்ணுக்கான இரண்டாம் திருமணங்கள் எத்தனைக்கு தலைமை தாங்கியுள்ளார்? பெண் அப்படிப் போக மாட்டாள் என்ற தைரியத்தில்தானே பேசினார் அவர்? (இதில் டைவர்ஸ் ஆன பெண்ணின் திருமணத்தைச் சேர்க்கவில்லை. இரண்டாம் திருமணம் செய்யும் ஆண்கள் அவர்கள் காலகட்டத்தில் இரு மனைவியருடனுமேயே வாழ்ந்து வந்துள்ளனர். அம்மாதிரி வாழ நினைத்த எத்தனைப் பெண்களின் இரண்டாம் திருமணத்தில் இவர் கலந்து கொண்டார் என்பதுதான் எனது கேள்வி).

அதிலும் சொந்த மனைவியையே ஊருக்கு வந்துள்ள புது தாசி என தம் நண்பர்களுக்கு அடையாளம் காட்டி அவர்களை விட்டு அந்த உத்தமப் பெண் நாகம்மையாரை கேலி செய்வித்து, கோவிலுக்கு வந்த மற்ற பெண்டிரை பயம்காட்டி, அவரது மனதையும் நோவடித்த ஈ.வே. ரா. அவர்கள் பற்றி என்ன கூறுவீர்கள்?

இதுதான் போதாது என்றால், ஒரு முறை மனைவிகளும் கள்ள புருஷன் வைத்துக் கொள்ளலாம் என ஈ.வே.ரா. அவர்கள் ஒரு கூட்டத்தில் கூற, நாகம்மையிடம் தான் செல்லலாமா என ஒருவர் கூட்டத்தில் கேட்டு வைக்க, “நாம் இருவருமே நாகம்மையிடம் இது சம்பந்தமாக பேசுவோம், அவர் கொடுப்பதை வாங்கி வருவோம்” என்று பொருள்பட திருவாய் மலர்ந்தருளினது பற்றியும் என்ன கூறுவது, தமிழகத்தின் தலைவிதியை நொந்து கொள்வதை விட அல்லது நாகம்மை கற்புடையவள் அம்மாதிரியெல்லாம் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையைத் தவிர? ஆணாதிக்கம், ஆணாதிக்கம்....

3. அப்போதும் சரி இப்போதும் சரி ஒரு பெண்ணால் அம்மாதிரி முடிவெடுக்க சரியான சூழ்நிலை இருந்ததில்லை. அச்சூழ்நிலை வேண்டுமென்பதற்காக எங்காவது போராடியிருக்கிறாரா? நிற்க.

அதே பேச்சில் நாயக்கர் திருவாய் மலர்ந்தருளிய மேலும் சில பாயிண்டுகளை இங்கு சுருக்கமாகத் தருகிறேன். அதனையையும் காப்பி பேஸ்ட் செய்து விட்டால் உண்மைத் தமிழனின் மிக நீண்ட பதிவுகளையும் விடப் பெரிதாகி விடும் அபாயம் உண்டு.

எப்படிப்பட்ட மனைவி அமைந்தால் கணவன் மறுமணம் செய்து கொள்ளலாம் என ஒன்பது விஷயங்களை அக்கறையாக பட்டியலிடுபவர், ஒரு பாயிண்டைக் கூட கணவன் மோசமாக இருக்கும் உதாரணங்களையே தராது ஜாக்கிரதையாகத் தவிர்த்து தனது ஆணாதிக்கத் திமிரைத்தான் காட்டியுள்ளார். கடைசியில் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என மனைவியும் வேறு கணவனைத் தேடிக் கொள்ளலாம் என கூறி நழுவி விடுகிறார்.

ஈவே ராமசாமி நாயக்கரா ஆணாதிக்கவாதி என சீறிக் கொண்டு வரும் பகுத்தறிவுத் திலகங்களுக்கான் பதிலை நாயக்கரின் சொற்களிலிருந்தே தந்து விடுகிறேன்.

எனது இப்பதிவிலிருந்து கோட் செய்கிறேன். கீழே இடப்பட்டவற்றை நாயக்கரே அவரது முதல் மனைவி நாகம்மையார் மறைந்தபோது எழுதியுள்ளார்.

நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை.

நான் சுயலநல வாழ்வில் ‘மைனராய்', ‘காலியாய்', ‘சீமானாய்' இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார் என்பது மறுக்க முடியாத காரியம்.

பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லம்ம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.
அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநல சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாகச் சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நான் காங்கிரசிலிருக்கும் போது, நாகம்மாள், மறியல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே! எது எப்படியிருந்த போதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கையை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை.

ஆதலால், நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் "குடும்பத் தொல்லை' ஒழிந்தது என்கின்ற ஓர் உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.

இது நிற்க. நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும் லாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக் கொள்கின்றேனோ, அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ளமாட்டார். அதற்கு நேர்ரெதிரியடையாக்குவதற்காக உபயோகித்துக் கொள்வார். ஆதலால், நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.


ஆக, பெரியார் ஆணாதிக்கவாதி இல்லையென்பதை நிறுவ சப்பைக்கட்டெல்லாம் கட்டி சிரமப்பட வேண்டாம்.

இன்னொரு விஷயம். பொருந்தாத் திருமணத்தின் முக்கிய எதிர்ப்பே, கிழவரால் குமரிக்கு மன மகிழ்ச்சி அளிக்கக் கூடிய மணவாழ்க்கை தர இயலாது என்பதுதான். அப்படிப்பட்டவர் தானே ஒரு பொருந்தாத் திருமணத்தை செய்து கொண்டாரே, அதற்கு என்ன சமாதானம் கூறுவது?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது