12/31/2011

ஆஸ்பத்திரி வாசம்

கெட்டதிலும் நல்லது நடந்தது
மரணத்துடன் ஒரு சிறு சந்திப்பு என்ற பதிவின் தொடர்ச்சியாகவும் இதை வைத்துக் கொள்ளலாம், அதன் பின் இது நடந்தது என்னும் அடிப்படையில். ஆனால் விஷயம் சற்றே சிக்கலானது.

முதலில் எட்டு நாட்கள் போல ஆஸ்பத்திரியில் தங்கியதில் உடல் பருமன் குறைய, அதனால் அதுவரை கண்பர்ர்வைக்குப்படாத ட்யூமர் ஒன்று இடது தொடையில் வெளிப்பட்டது. ஏதோ சாதாரண வீக்கம் என சத்ய நாராயணாவிடம் போக அவர் அதை பார்த்த போதே புன்னகையை தொலைத்து கேட் ஸ்கேனுக்கு ஆர்டர் செய்ய, அதன் ரிசல்ட் வந்ததும்தான் நிலைமை சற்றே சீரியஸ் என எனக்கே பட்டது. ஐந்து நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி, 23-ஆம் தேதி அன்றுதான் ட்யூமரை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். டாக்டர் ரவிச்சந்திரன் என்னும் புகழ் பெற்ற ஓன்காலஜிஸ்ட்தான் அதை செய்தார். நேற்று டிஸார்ஜ்.

ஆஸ்பத்திரியில் எல்லாமே படுக்கையில் என ஆயிற்று. சிறுநீர் கழிக்க கதீட்டர், காயத்திலிருந்து கெட்ட நீர் வடிவதை மானிட்டர் செய்யும் ட்ரைன் என்றெல்லாம் அமர்க்களப்படுத்தி விட்டார்கள். பெட்பான் ஒத்துக் கொள்ளாததால் அடல்ட் டையப்பரை வேறு மாட்டி விட்டனர். கண்றாவி. ஆனால் என்ன செய்வது.

இப்போது டிஸ்சார்ஜ் ஆனாலும் கெட்ட நீர் வடிகால் பாத்திரம் அப்படியே உள்ளது. ஆகவே வீட்டை விட்டு வெளியேறுவது அசாத்தியமாயிற்று. வரும் செவ்வாயன்று அதை எடுப்பதாக ஐடியா. பார்ப்போம், கடவுள் விட்ட வழி. பிறகு இருக்கவே இருக்கின்றன தொடர் சிகிச்சைகள்.

இடது காலை நேராகவே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பெல்ட் போட்டுள்ளார்கள். ஆகவே ஒரு காலை இழுத்து இழுத்துத்தான் நடக்க வேண்டும். கூடவே கையில் டிரைனையும் ஏந்திக் கொள்ள வேண்டும்.

ஈரோட்டு பிடிவாதக் கிழவர் அக்காலகட்டங்களில் தன் மூத்திரச் சட்டியை சுமந்து செல்ல வேண்டியிருந்தாலும், மன உறுதியுடன் தன் வேலையை தான் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்வரை செய்தார் அவர். Hats off to him!!!

எனக்கும் அதே மனவுறுதியை அளிக்குமாறு என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பான் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை வேண்டிக் கொள்கிறேன்.

நடுவில் ராஜேஷ் கன்னா என்னும் ஒரு அன்பர் எனக்கு ஃபோன் செய்து ஏன் எனது பதிவுகள் வரவில்லை எனக் கேட்டார். அவருக்கு அப்போது காரணத்தைக் கூறினேன். இப்போது இப்பதிவு.

நண்பர்கள் யாவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/12/2011

உன்மத்த நிலையை அடைதல்

நண்பர் ஜெயமோகனது இடுகையான யோகமும் பித்தும் என்ற பதிவு எனக்குள் எழுப்பிய எண்ணங்களே இப்பதிவு. அதிலிருந்து முதலில் சில வரிகள்.

பிரக்ஞையை மழுங்கடிக்கக்கூடிய சில அம்சங்கள் உண்டு. முக்கியமானது சீரான தாளம். பிரக்ஞை என்பது பெருமளவுக்குத் தாளத்தால் கட்டுப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தாளத்தைக் கேட்டுக்கொண்டிருந்தால் நம்முள் பிரக்ஞையாக ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் அந்தத் தாளத்திற்கு இயைப அமைவதைக் காணலாம் –ரயில்தாளத்தில் இதைப் பெரும்பாலானவர்கள் உணர்ந்திருப்பார்கள். தாளத்துடன் ஒளியும் காட்சிகளும் இணைக்கப்பட்டிருந்தால் அது இன்னும் தீவிரமாகிறது. ஒரு தாளத்துக்கு ஏற்பப் பத்துப்பேர் நம்மைச்சுற்றி ஆடினால், அந்தத் தாளத்துக்கு ஏற்ப வண்ணவிளக்குகள் மின்னினால் நம்மை அந்தத் தாளம் ஆட்கொள்கிறது. அது பிரக்ஞைநிலையை மழுங்கடிக்கிறது.

அதை சமீபத்தில் 1968-ல் வெளி வந்த ஷிகார் என்னும் இந்தி படத்தின் இப்பாடல் காட்சியில் காணலாம். ஆஷா, பரேக், பேலா போஸ் என்னும் இரு நாட்டிய நாரீமணிகளின் அந்த ஆட்டத்தில் பாடல் வரிகள் அற்புதமான ஹிந்தியின் ஒரு வட்டார வழக்காக அமைந்துள்ளன. என்னைப் போன்றவர்களுக்கு அது கூடுதல் போனஸ். நிற்க.

அப்பாடலில் டிரம்ஸ் இசை ஆஷா பரேக்கை படிப்படியாக ஆட்கொள்வதை இப்பாடல் காட்சியில் அற்புதமாக காட்டியுள்ளனர். அவரது அவஸ்தையை தர்மேந்திரா உற்று நோக்குவதும் கதையின் போக்குக்கு உதவி செய்வதாகவே அமைந்துள்ளது. பை தி வே அப்படத்தை நான் பார்க்கவில்லை. அப்பாடலை கீழே காணுங்கள்.அதே போல சமீபத்தில் 1964-ல் வெளி வந்த நவராத்திரி படத்தில் வரும் கூத்துப் பாடலில் ஆரம்ப வரிகள் என்னை ஒரு மோன நிலைக்கே கொண்டு செல்லும். அப்பாடலின் வீடியோ கிடைக்கவில்லை. யாருக்காவது கிடைத்தால் சுட்டி தாருங்கள் அப்பு.

நண்பர் காளிராஜ் அவர்கள் தயவால் அக்காட்சியின் வீடியோவை கீழே எம்பெட் செய்கிறேன். என்ன ஆரம்ப வரிகள் மிஸ்ஸிங். பரவாயில்லை. காளிராஜ் அவர்களுக்கு என் நன்றி.மற்றப்படி நான் சினிமா படங்கள் சில ஏன் இன்னும் மனதில் நிற்கின்றன? என்ற தலைப்பில் நான் வெளியிட்ட செண்டிமெண்டுகள் இங்கும் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

காதலிக்க நேரமில்லை: சமீபத்தில் 1964-ல் வெளிவந்த இப்படத்தை பார்க்கும்போதெல்லாம் விடுமுறை மூட் வந்து விடுகிறது. கதையிலும் ராஜஸ்ரீயும் காஞ்சனா கோடை விடுமுறைக்குத்தானே வீட்டுக்கு வருகிறார்கள். நான் கூட அப்படத்தை எனது முதல் ஆண்டு தேர்வுகள் முடிந்து கடை நாள் மாலை காட்சியில்தான் அப்படம் பார்த்தேன். ஸ்ரீதர் கூறியிருந்தது போல ஒருவரும் அப்படத்தில் அழவில்லை. சோகக் காட்சியே லேது. எல்லாமே ஜாலியாகப் போயிற்று. "என்னப் பார்வை இந்தப் பார்வை, இந்தப் பார்வை" பாடல் படமாக்கப்பட்டதுதான் அப்படத்தின் கடைசி ஷூட்டிங் என கேள்விப்பட்டேன்.

கலங்கரை விளக்கம்: இப்படத்தை நான் பார்க்கவில்லை. எனது முரட்டு வைத்தியம் - 1 பாதிப்பில் நான்கு ஆண்டுகள் படம் பார்க்காது இருந்தேன். அதில் மிஸ் செய்த படங்களில் இதுவும் ஒன்று. ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் Vertigo (starring James Stewart, kim Novak) படத்தின் தழுவல் இப்படம். படம் ரொம்ப சுமார்தான். ஆனால் அதன் பாடல்கள் என்னை மிகவும் பாதித்தன. "பொன்னெழில் பூத்தது"என்ற பாடல் மனத்துள் இன்னும் ஒலிக்கிறது. இதனுடைய இன்னொரு பாடல் "காற்று வாங்கப் போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன், அதை கேட்டு வாங்கிப் போனாள் அந்த கன்னி என்னவானாள்" பாட்டு நான் மாலை நேரத்தில் பரீட்சையில் தோல்வியடைந்த வெறுப்பில் கடற்கரையில் பைத்தியம் போல உலவும்போது ட்ரான்ஸிஸ்டர்களிலிருந்து நான் போகுமிடமெல்லாம் என்னைத் தொடர்ந்து வந்தது. அப்பாட்டைக் கேட்கும் போது சமீபத்திய 1965 இன்னும் சமீபத்தில் வருகிறது.


அன்புடன்,
டோண்டு ராகவன்

12/06/2011

ஹிந்தி - தமிழ் மொழிபெயர்ப்பு

ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்
ஹிந்தி/உருது மொழிகளை நான் சித்தி மொழி என்றே குறிப்பிடுவேன். அதாவது அன்னையின் தங்கை. மௌஸீ என்பார்கள். அதன் பொருள் தாயைப் போன்றவள் என்பதாகும். ஒரு குழந்தைகளின் அன்னை இறந்து விட்டால், அன்னையின் தங்கையையே அவர்களது அப்பாவுக்கு கட்டி வைப்பதும் ஒரு பழக்கமே. அதாவது தனது அக்காவின் குழந்தைகளை மாற்றாந்தாய் போலன்றி உண்மையாகவே அன்புடனும் அக்கறையுடனும் பார்த்துக் கொள்வாள் என்பதே அதன் தாத்பர்யம். நிற்க.

அவ்வாறு சித்தி மொழி எனக்கூறிவரும் நான் இத்தனை ஆண்டுகாலத்தில் ஒரு முறை கூட ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்ததில்லை. சான்ஸ் கிடைக்கவில்லை அல்லது அவ்வாறு வந்த வாய்ப்புகளையும் தவிர்த்தேன். காரணம் ஹிந்தியில் உள்ள எழுத்துக்களே. க, ச, ட, த ஆகியவை தலா நான்கு உச்சரிப்பில் உள்ளன. அவற்றில் எனக்கு எப்போதுமே தகராறுதான்.

இருப்பினும் ஒரு பிரபல வங்கியின் ரூரல் துறையிலிருந்து ஒரு மொழிபெயர்ப்புக்கான வாய்ப்பு வந்தது. அந்த வங்கியின் கிராம சேவைகளை காட்டும் வண்ணம் போஸ்டர்கள், படக்கதைகள் ஆகியவை. இம்முறை துணிச்சலுடன் ஏற்றுக் கொண்டேன். அடாடா மொழிபெயர்ப்பு வேலை தன்னைப் போல ஸ்மூத்தாக சென்றது. ஹிந்தியிலிருந்து தமிழுக்கான மொழிபெயர்ப்பு இய்ல்பாகவே வந்தது.

என்ன, சில மாறுதல்கள் செய்ய வேண்டியிருந்தது. சூரஜ் தமிழில் முருகன் ஆனார், அவர் மனைவி ரூபா வள்ளி என அழைக்கப்பட்டார், அவர்கள் மகள் ஜூஹி மேகலாவானாள். அவர்கள் ஊர் ராம்புர் புதூராயிற்று. கண்ஷ்யாம் கணேசன் ஆனார்.

இந்த வேலையில் மொழி பெயர்ப்பை விட DTP வேலைதான் அதிக. அதையும் செய்தேன் என வைத்துக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் நல்ல அனுபவம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/01/2011

மரணத்துடன் ஒரு சிறு சந்திப்பு

வடிவேலு சொல்வது போல சென்ற செவ்வாய் 22.11.2011 அன்று எல்லாம் நல்லபடியகத்தானே போய் கொண்டிருந்தது. காலையில் வீட்டம்மாவுடன் வீட்டெதிரில் இருந்த உழவர் சந்தைக்கு சென்ற போதும், வரவிருக்கும் நிகழ்ச்சிகள் பற்றி ஒரு ஐடியாவும் இல்லைதானே.

வீட்டம்மா காய்கறிகள் வாங்க நான் பணம் பட்டுவாடா செய்யும் வேலையை மற்றும் மேற்கொண்டிருந்தேன். திடீரென உடலில் ஏதோ மாறுதல் வந்தது போன்ற உணர்வு. மயக்கம் வரப்போகிறது என்பதை மட்டும் உணர்ந்து ஜாக்கிரதையாக அருகில் உள்ள காலியான ஒரு ஸ்டாலில் அமர்ந்ததுதான் தெரியும். நினைவுக்கு வரும்போது என்னைச் சுற்றி என் வீட்டம்மாவும் மர்றவர்களௌம் என்னை நினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்த வண்ணம் இருந்தனர். யாரோ ஒரு கடைக்கார புண்ணியவான் எனக்கு ஹார்லிக்ஸ் புகட்டிக் கொண்டிருந்தார்.

தினமும் என்னை அப்பாவென்றும், என் வீட்டம்மாவை அம்மா என அழைத்து வரும் அந்த எளிய மக்களின் முகத்தில் உண்மையான தவிப்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன். சும்மா சொல்லக் கூடாது அந்த நிலையிலும் மன உறுதியுடன் என்னை வீட்டுக்கு பத்திரமாக அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்ட என் வீட்டம்மா என் மதிப்பில் இமயமென உயர்ந்தார். சத்தியமாகவே சொல்கிறேன், அவர் நிலையில் நான் இருந்திருந்தால் என் கோழை மனது என்னை உறுதியுடன் செயல்பட விட்டிருக்காது.

வீட்டுக்கு வந்ததுமே, என்னை அவர் அருகில் உள்ள ஹிந்து மிஷன் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு இசிஜி எடுத்து, ஒரு நாள் அவதானிப்பில் வைத்திருந்தனர். அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியே, எனது இப்பதிவின் தலைப்புக்கு இன்ஸ்பிரேஷன். ஒரே நொடியில் என்னிடமிருந்த செல்பேசி, கடிகாரம், மோதிரம், பணம் ஆகியவை என்னிடமிருந்து எடுக்கப்பட்டு என் வீட்டம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஒரு தருணத்தில் என் மனது எண்ணாதவற்றையெல்ல்ம் எண்ணீயது. மரணத்தின் தருவாயில் இருப்பவன் எந்த வகைச் செல்வனாயினும் ஓட்டாண்டியாகத்தான் இவ்வுலகை விட்டு செல்கிறான்.

இப்போது பின்னால் பார்க்கும் போது நான் கூறுவது மிகைப்படுத்தலாகவே இருக்கட்டும். இருப்பினும், அத்தருணத்தில் அந்த எண்ணமே டாமினேட் செய்தது என்பதுதான் நிஜம். செவ்வாயன்றே ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த நான் மறுபடியும் வியாழனன்று உடல்நலம் சீர்க்கெடவே டாக்டர் சத்தியநாராயணாவின் ஸ்ரீசக்ரா ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன். இம்முறை எனக்கு எம்ஆர்ஐ ஸ்கேன், பல முறை இசிஜி, ஸ்கல் எக்ஸ்ரே, எக்கோ டெஸ்ட் எல்லாம் செய்ய்ப்பட்டன. எல்லாம் நல்லபடியாக முடிந்து இன்றுதான் நல்லபடியாக டிஸ்சார்ஜ் ஆனேன்.

இப்போது எனக்கு வேறுவகை அனுபவம் ஏற்பட்டது. எனது முக்கிய வாடிக்கையாளருக்கு நான் தினசரி அளித்து வந்த மின்னஞ்சல்களின் மொழிபெயர்ப்பு வேலை பிளாக் ஆயிற்று. விஷயம் அறிந்து விரைந்து வந்த எனது வாடிக்கையாளர், கவலை வேண்டாம் எனவும், நான் ஆஸ்பத்திரியில் இருக்கும் வரை, ஜெர்மன் மின்னஞ்சல்களுக்கு தானே கூகள் டிரான்ஸ்லேட் மூலம் கண்டெண்ட் அறிந்து, அவற்றுக்கான பதில்களை ஆங்கிலத்திலேயே போட்டுக் கொள்வதாக அவர் கூறியதும்தான் நானும் நிம்மதி பெருமூச்சு விட்டேன். ஆக நாம் இல்லையென்றாலும் உலகம் இயங்கும், நாம் ஒன்றும் நாமே நினைத்துக் கொள்வது போன இன்றியமையாதவர்கள் இல்லை என்பதும் நான் இப்போது நேரடியாக கண்டுணர்ந்த இன்னொரு உண்மை.

எது எப்படியோ, இதை பதிவாக போட்டதும்தான் மனம் நிம்மதி அடைந்துள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது