2/24/2005

ஃபிரெஞ்சு கற்றுக் கொண்டக் கதை

எந்தக் கோவிலில் வேண்டுமானாலும் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வேன். இந்த மொழியை பகுதி நேரத்தில் கற்றுக் கொள்ள அல்லியான்ஸ் ஃபிரான்சேஸை விடச் சிறந்த இடம் வேறில்லை. ஜே.என்.யூ. படிப்பை இதற்குச் சமமாகச் சொல்லலாம். ஆனால் அதில் படிக்க ரொம்ப மெனக்கெட வேண்டும். ப்ளஸ் 2 முடித்த பிறகு பி.ஏ. மற்றும் எம்.ஏ. (ஃபிரெஞ்சு படிக்க வேண்டும்). எல்லோராலும் முடிகிற காரியம் இல்லை.

ஜூலை 1975-ல் செர்டிஃபிகா வகுப்பில் சேர்ந்தேன். ஆசிரியை சாரதா லாற்டே. அவரைப் பற்றி ஏற்கனவே நான் முன்னொரு பதிவில் எழுதியதை இங்கே மறுபடியும் பதிக்கிறேன்.

"சாரதா அவர்கள் வகுப்பு எடுப்பதே ஒரு அழகு. மாணவர்களின் சந்தேகங்களை மிக அன்புடன் தீர்த்து வைப்பார். மொத்தம் நான்கு நிலைகளில் மொழி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவை "செர்டிபிகா", "ப்ரே டிப்ளோம்", "டிப்ளோம்" மற்றும் "டிப்ளோம் ஸுபேரியேர்" ஆகும்.

வாரத்துக்கு நான்கு முறை மாலை வகுப்புகள். ஒவ்வொரு நிலைக்கும் வருடத்தை மூன்றாகப் பிரித்து பிரெஞ்ச் கற்பிக்கப் பட்டது. அவசரக் குடுக்கையான நான் ஆர்வக் கோளாறில் முதல் மூன்று மாதத்திலேயே முதல் நிலைப் புத்தகத்தில் உள்ள எல்ல பயிற்சிகளையும் எழுத்தில் செய்து முடித்து அதன் பின் இரண்டாம் நிலைக்கானப் புத்தகத்தையும் முடித்தேன்.

மூன்றாம் நிலைக்கானப் புத்தகத்தை வாங்கப் போனால் ஒரே ரவுஸுதான். சாரதா அவர்கள் துணையை நாட அவர் அலட்டிக் கொள்ளாமல் தானே அப்புத்தகத்தைத் தன் பெயரில் வாங்கிக் கொடுத்தார். என் முயற்சிகளுக்கு உறு துணையாக இருந்தார்.

இரண்டாம் நிலைக்கான வகுப்பில் இருந்த போது எங்கள் வகுப்பு மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் கலைக்கப் பட்டது. நாங்கள் வேறு வகுப்பு நேரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே என்று ஆலோசனை கூறப்பட்டது.

ஆனால் என்னால் அது முடியாத காரியமாயிற்று. மறுபடியும் சாரதா அவர்கள் உதவி செய்தார். என்னை தன் கணவர் நடத்திய மூன்றாம் நிலைக்கான வகுப்பில் சேர்த்து விட்டார். நானும் அவர் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்காமல் அத்தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். இரண்டாம் நிலைத் தேர்வு எழுதவே இல்லை.

நான்காம் நிலைக்கான இறுதித் தேர்வு சமயத்தில் ஸாரதாவும் அவர் கணவரும் ஸ்பெயினுக்கு மாற்றம் பெற்றனர்.

ஏதோ ஒரு தேவதையைப் போல வந்து எனக்கு உதவிகள் செய்திராவிட்டால் நான் சாதாரணப் பொறியாளனாகவே ஓய்வு பெற்றிருப்பேன். வாழ்க்கை அற்புதமயமானது."

அங்கு தேசிகன், இங்கு சாரதா. அவர் வகுப்பில் வரிசைக் கிரமத்தில் கேள்விகள் கேட்பார். என் முறை வரும்போது மட்டும் என்னை அடக்கி விட்டு என் பக்கத்து மாணவருக்குத் தாவி விடுவார். முதல் முறை நான் திகைப்புடன் பார்த்தப் போது என்னிடம் "மற்றவர்கள் முதலில் முயற்சிக்கட்டும், உங்கள் முறை எல்லோருக்கும் கடைசிதான். நீங்கள் விடை கூறி விடுவீர்கள். அதனால் மற்றவருக்குப் பயனில்லை" என்று வேகமாக ஃபிரெஞ்சில் கூறி விட்டார். அடுத்த நாள் ஒரு டெஸ்ட் வைப்பதாக ஒரு சமயம் கூறியபோது நான் அவரிடம் அன்று என்னால் வர இயலாது என்று வருத்தத்துடன் கூற, உடனே டெஸ்டை அதற்கு அடுத்த நாளுக்குத் தள்ளிப் போட்டார். இவரை ஆசிரியையாக அடைய முன் பிறவியில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

இப்போது திரும்பிப் பார்க்கும்போது நான் ஜெர்மனிலும் ஃபிரெஞ்சிலும் ஒரே யுக்தியைக் கையாண்டுள்ளேன் என்று புரிகிறது. எல்லாப் பாடப் பயிற்சிகளையும் எழுத்து ரூபத்தில் செய்து முடிக்க வேண்டும். சம்பந்தப் பட்ட மொழியில் பேசத் தயங்கவே கூடாது. பாடங்களை வகுப்புக்கு வரும் முன்னரே படித்து வைத்து விட்டால் ரொம்ப உத்தமம். உண்மையைக் கூறப் போனால் வகுப்பு என்னைப் பொருத்தவரை ஒரு விளையாட்டாயிற்று. இங்கும் டிக்டேஷன் ஒரு நண்பனாகவே இருந்தது. இரண்டாம் மாதத்திலேயே நூலகத்திலிருந்துப் புத்தகம் எடுக்க ஆரம்பித்தேன். அவற்றால் என் ஃபிரெஞ்சு இன்னும் கூர்மையடைந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் போதனா மொழி ஃபிரெஞ்சுதான். அம்மாதிரி இத்தாலிய வகுப்பு இல்லாததால் நான் இப்போது திரிசங்குச் சொர்க்கத்தில் அதைப் பற்றிப் பின்னொரு பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/23/2005

கேளுங்கள் கொடுக்கப்படும்

இது முற்றிலும் உண்மையே. நம் தேவை எதுவாக இருப்பினும் கேட்க வேண்டியவர்களிடம் கேட்டால் அது கிடைக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம். என் வாழ்வில் இதை நிரூபிக்கும் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அவற்றில் ஒன்றை இங்கே கூறுவேன்.

வருடம் 1971. வேண்டா வெறுப்பாக சென்னையை விட்டு பம்பாய் சென்றேன். என்னுடைய முதல் போஸ்டிங் அந்த நகரில்தான். முக்கியமாக ஜெர்மன் புத்தகங்கள் படிக்கக் கிடைக்குமா என்ற சஞ்சலம். பம்பாய் மேக்ஸ் ம்யுல்லர் பவனுக்குச் சென்று நூலகத்தில் உறுப்பினராகச் சேர விண்ணப்பத் தாள் கேட்டேன். இங்கு நூலகம் ஒன்றும் கிடையாது என்றுத் திட்டவட்டமாகக் கூறப் பட்டது. ஆனால் ஒரு அறையில் பல புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். என்ன செய்வது என்று ஒரு நிமிடம் திகைத்தேன். பிறகு பம்பாயில் உள்ள நேற்கு ஜெர்மனியின் துணைத் தூதருக்கு ஒரு இன்லேண்ட் லெட்டரில் கடிதம் எழுதினேன். மேக்ஸ் ம்யுல்லர் பவனில் நடந்ததைக் கூறி கான்ஸுலேட்டில் ஏதாவது நூலகம் உள்ளதா என்றுக் கேட்டிருந்தேன்.

இரண்டே நாட்களில் பதில் வந்தது. அக்கடிதத்தில் மேக்ஸ் ம்யுல்லர் பவனில் நூலகம் இல்லை என்பதைக் கேட்டதில் அதிர்ச்சி அடைந்ததாக எழுதப்பட்டிருந்தது. பதில் கடிதத்தை எடுத்துக் கொண்டு உடனே மேக்ஸ் ம்யுல்லர் பவன் செல்லுமாறு எனக்கு ஆலோசனை கூறப்பட்டது.

அங்கு சென்றால் இம்முறை வரவேற்பு முற்றிலும் மாறுபட்டிருந்தது. என்னிடம் 10 ரூபாய் பெற்றுக் கொண்டு நூலக அட்டை வழஙப்பட்டது. அட்டை எண் 2. எண் 1 டைரக்டருடையது.

பிறகுதான் தெரிந்துக் கொண்டேன், டைரக்டர் கான்ஸுலேட்டுக்கு அழைக்கப்பட்டுக் கண்டனம் செய்யப்பட்டார் என்று. விஷயம் என்னவென்றால் ஜெர்மன் அரசிடமிருந்து நிதியுதவியைப் பெற்று வாங்கும் புத்தகங்கள் டைரக்டர், அவர் குடும்பத்தினர் மற்றும் இதர அதிகாரிகளால் தனிப்பட்ட முறையில் உபயோகிக்கப்பட்டது என்று. நான் எப்போது சென்றாலும் எனக்குத் தாராளமாகப் புத்தகம் படிக்கக் கொடுக்கப் பட்டது.

கேளுங்கள் கொடுக்கப்படும். நம்மில் பலர் கேட்கக் கூச்சப்பட்டுக் கொண்டுப் பேசாமல் இருக்கிறோம். அது தவறு. தப்பு நடந்தால் தட்டிக் கேட்க வேண்டும். ஆனால் எங்கே யாரிடம் எப்படி விஷயத்தைக் கொண்டுச் செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். கடிதம் எழ்தும்போது உணர்ச்சி வசப்படாமல், யாரையும் திட்டாமல் நம் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். கேட்டால் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். கேட்கா விட்டால் நிச்சயமாகக் கிடைக்காது. அப்படிக் கிடைப்பது எல்லாம் அம்புலிமாமா கதைகளில்தான் சாத்தியம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜெர்மன் கற்றுக் கொண்டக் கதை - 2

ஜெர்மன் கற்றுக் கொண்டக் கதை - 2
தேசிகன் எனக்குச் செய்த உதவி அளவற்றது. எம்- 1 வகுப்பில் கடைசி ஒரு மாதம் படித்ததற்குக் கட்டணம் பெற மறுத்து விட்டார். ஆக நான் ஜெர்மன் வகுப்புக்களுகாகக் கட்டிய மொத்தப் பணம் 48 ரூபாய்கள்தான்.
1971 ஜனவரியில் மத்தியப் பொதுப் பணித் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பதவி நியமனம் பெற்றேன். வேலை பம்பாயில். அங்கிருந்த மேக்ஸ் ம்யுல்லர் பவன் என்னைக் கவரவில்லை. தவறு என்னுடையதுதான். சென்னை மேக்ஸ் ம்யுல்லர் பவனை மறக்க இயலவில்லை. அவ்வாண்டு ஜூலையில் பூனா மேக்ஸ் ம்யுல்லர் பவனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். இந்தியாவிலேயே மிகச் சிறப்பானது அது. முழு நேரப் பாடங்கள் அங்கே. நான் எம்- 2 வகுப்புக்கானத் தேர்வை பிரைவேட்டாக எழுத முடியுமா என்றுக் கேட்டிருந்தேன். கடிதம் எழுதியது ஆங்கிலத்தில். அவர்கள் பதில் வந்ததோ ஜெர்மனில். இம்மாதிரி அவர்களுக்கு ஒரு கடிதமும் வந்ததில்லை என்பதைப் பிறகு அறிந்தேன். நானும் ஜெர்மனில் எழுத, அவர்கள் பதில் போட, ஆகஸ்டில் எம்- 2 எழுதி தேர்ச்சிப் பெற்றேன். இரண்டாம் ரேங்க்தான் கிடைத்தது. நவம்பரில் ஒரு டிப்ளொமா பரீட்சைக்குப் பணம் கட்டி நவம்பரில் அதிலும் தேர்ச்சி பெற்றேன். இது ம்யுன்ஷென் சர்வகலாசாலைக்காக கதே இன்ஸ்டிட்யுட்டால் உலகெங்கும் உள்ள பல தேர்வு மையங்களில் நடத்தப் படும் தேர்வு. விடைத் தாள்கள் ஜெர்மனியில் மதிப்பீடு செய்யப் படும். பூனாவும் தேர்வு மையங்களில் ஒன்று.
அத்துடன் ஜெர்மன் பரிட்சைகள் என்னைப் பொருத்தவரை முடிவுக்கு வந்தன. பிறகு ஜெர்மனில் புத்தகங்கள் படிப்பதே வேலையாகப் போயிற்று. ஆனால் மொழி பெயர்ப்பு வேலைகள் ஒன்றும் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. அதைச் செய்ய 1975-ல் தான் வாய்ப்பு கிடைத்தது. 1974-ல் எனக்குச் சென்னைக்கே மாற்றல் வந்து விட்டது. தேசிகன்தான் வழக்கம் போல மொழி பெயர்ப்பு வேலைகள் பெறுவதற்கும் உதவினார். எப்போது அவரைப் பார்த்தாலும் என்னுடன் ஜெர்மனிலேயே பேசுவார்.

1975-ல் ஃபிரெஞ்சு கற்பதற்காக சென்னை அல்லியான்ஸ் ஃபிரான்சேஸில் சேர்ந்தேன் அந்தக் கதை பின்னால் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/22/2005

ஜெர்மன் கற்றுக் கொண்டக் கதை

1969, ஜூலை 1. எல்லோரும் எங்கள் முதல் ஜெர்மன் வகுப்புக்காக உட்கார்ந்திருந்தோம். சரியாக 9 மணிக்கு மிடுக்காக உள்ளே நுழைந்தார் எங்கள் ஆசிரியர் சர்மா அவர்கள். சிறு அறிமுகம் - 1 நிமிடத்திற்கு, ஆங்கிலத்தில். அதில் அவர் கூறியதன் சாராம்சம் தான் இனி ஜெர்மனில்தான் பேசப் போவதாகவும் அம்மொழியிலேயே ஜெர்மன் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

உடனே பாடத்தை ஆரம்பித்து விட்டார். முதலில் பாடத்தை அவர் நிறுத்தி நிதானமாக உரக்கப் படித்தார். பிறகு எங்களை அதே உச்சரிப்புடன் படிக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம், தட்டுத் தடுமாறிப் படிக்க ஆரம்பித்தோம். பயிற்சி மிக உபயோகமாக இருந்தது. இது புது முறையைச் சார்ந்தது என்பதை அறிந்தோம். பிறகு டேப் ரிக்கார்டர் வழியே ஒரு ஜெர்மானியரின் உச்சரிப்பையும் பெற்றோம். எல்லாவற்றையும் கான்டக்ஸுடன் படித்துக் கேட்டதால் ஜெர்மன் மொழி எங்களை அறியாமலேயே எங்களிடம் குடி புகுந்தது.

கூடவே உரக்க நாங்களும் பாடத்தைத் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது. பலருக்கு உரக்கக் கத்துவதில் கூச்சம். ஆகவே உதட்டை மட்டும் அசைத்தனர். ஆனால் நான்? கூச்சமா? மூச், பேசப்படாது என்பது என் தாரக மந்திரம். என்னைப் பொருத்தவரை சர்மா தன் தெளிவானக் குரலில் ஜெர்மனில் எதைக் கூறினாலும் எனக்குப் புரிய ஆரம்பித்தது.

மெதுவாக வகுப்பில் மாணவர் நிலை ஒரு சமன்பாட்டுக்கு வரத் துவங்கியது. முதலில் வகுப்பறையில் உட்காரக்கூட இடம் இருக்காது. ஓரிரு வாரத்திலேயே சட சடவென்று பல மாணவர்கள் வகுப்புக்கு வருவதை நிறுத்தினர். மிஞ்சியவர்கள் அபார முன்னேற்றம் அடைந்தனர்.

நான் சேர்ந்தது Grundstufe - 1 வகுப்பில். ஒவ்வொருக் கல்வியாண்டிலும் இரண்டு செமஸ்டர்கள். முதல் செமஸ்டர் தேர்வு நவம்பர் 1969-லும், இரண்டாம் செமஸ்டர் தேர்வு ஏப்ரல் 1970-லும் நடப்பதாகத் திட்டம். அப்போது G - 1 சான்றிதழ் கிடைக்கும்.

இப்போது நான் ஒரு காரியம் செய்தேன். வாரத்துக்கு மூன்று வகுப்புகள், காலை 8-லிருந்து 9 வரை. மீனம்பாகத்திலிருந்து மாம்பலத்துக்கு மின் ரயில் வண்டியில் பயணம், அங்கிருந்து அண்ணா சாலை டி.வி.எஸுக்கு பேருந்துப் பயணம். ஆக, பயண நேரம் ஒரு மணிக்கு மேல். அப்போது விளையாட்டாக அடுத்தப் பாடங்களைப் படிக்க ஆரம்பித்து, அதில் கூறப்பட்டப் பயிற்சிகளைச் செய்யத் தலைப் பட்டேன். ஒரு வேளை ஏதாவது ஒரு நாள் வகுப்புக்குச் செல்ல முடியாவிடினும் சமாளித்துக் கொள்ளலாம் என்பதே இதற்குக் காரணம். ஆனால் நடந்ததென்னவென்றால் முதல் செமஸ்டர் முடியும் முன்னரே முழுப் புத்தகத்தையும் எல்லப் பயிற்சிகளையும் எழுத்தால் செய்து முடித்து விட்டேன். இப்போது ஜெர்மனில் நானே வாக்கியங்களை உருவாகிப் பேச ஆரம்பித்தேன். முதலில் என்னை வியப்புடன் பார்த்த சர்மா அவர்கள் என்னுடன் ஜெர்மனில் பேச ஆரம்பித்தார். நான் செய்தத் தவறுகளை நாசூக்காகத் திருத்தினார். மொழி வகுப்புகளில் எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய டிக்டேஷன் எனக்கு ஒரு ஒரு விளையாட்டாயிற்று.

நவம்பர் 1969-ல் ஒரு நாள் மாலை 7 மணிக்கு முதல் செமஸ்டர் தேர்வு. சித்ரா திரையரங்கில் பாமா விஜயம் பகல் நேரக் காட்சியைப் பார்த்து விட்டு, மாலை தேர்வுக்குச் சென்றால் எல்லா மாணவர்களும் கடைசி நேரக் கொந்தளிப்பில். நான் பாட்டுக்கு ஒரு ஜெர்மன் தினசரிப் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்து விட்டு இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மையரின் கட்சிக்குத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று என் நண்பர்களிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அவர்களுக்கோ வாழ்க்கையே வெறுத்து விட்டது. பரீட்சை முடிவு வந்தது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு எனக்கு முதல் பரிசு கிடைத்தது.

இன்னொரு போனஸ். முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவர்கள் அடுத்த வகுப்புக்கான முதல் மாதக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டது. (மாதக் கட்டணம் 12 ரூபாய்!). ஆனால் ஒரு நிபந்தனை. பின் வரும் எல்லா மாதத் தேர்விலும் முதல் வகுப்பு மதிப்பெண்களை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அம்மாதத்திலிருந்து கட்டணம் கட்ட நேரிடும். நான் முதல் செமச்டருக்காகக் கட்டிய நான்கு மாதக் கட்டணமான 48 ரூபாய்களுக்கு மேல் ஒரு பைசாவும் கட்டவில்லை. வெறுமனே பரீட்சைக் கட்டணம் (ரூ. 10) மட்டுமே கட்டினேன்.

நவம்பர் 1969-ல் இரண்டாம் செமஸ்டர். கல்யாணி ஜானகிராமன் என்ற ஒரு அருமையானப் பெண்மணி வகுப்பெடுத்தார். ஏப்ரல் 1970-ல் இரண்டாம் செமஸ்டர் தேர்விலும் தேறி அடுத்த வகுப்புக்கான கட்டணத்திலிருந்து விலக்குப் பெற்றேன். இப்போது G - 2 வகுப்பை ஒரே செமஸ்டரில் முடிக்கத் திட்டமிட்டு, வாரத்துக்கு 5 நாள் வகுப்பில் சேர்ந்தேன். ஆசிரியை சியாமளா அவர்கள். வயலின் வித்தகர் துவாரம் வெங்கடசாமி நாயுடுவின் பெண். (மாதக் கட்டணம் 18 ரூபாய்கள், நான் கட்டவில்லை). பாதி செமஸ்டரில் Mittelstufe - 1 வகுப்புக்கானப் புத்தகம் வாங்கி பயிற்சிகளைச் செய்யலாமா என்று தேசிகனுடன் ஆலோசனை செய்ததில் அவர் மிகுந்த உற்சாகத்துடன் எனக்கு உதவி செய்தார். அவ்வகுப்பில் கடைசி மாதத்துக்கு மட்டும் வகுப்புக்குச் சென்றேன். சர்மாதான் ஆசிரியர். பிறகு நடந்ததுதான் தமாஷ். இரண்டு பரீட்சைகளையும் சில நாட்கள் இடைவெளியில் எழுதி இரண்டிலும் முதல் பரிசு பெற்றேன். முதல் பரிட்சை (G-1) அன்றுப் பார்த்தப் படம் சிராக் என்ற ஹிந்திப் படம், அடுத்தப் பரீட்சை (M1) தினத்தன்றுப் பார்த்தது லட்சுமி கல்யாணம்!

பதிவு மிக நீள்வதால் இங்கு நிறுத்துகிறேன். அடுத்தப் பதிவில் மேலே எழுதுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/20/2005

சோ என்னும் சிறந்தப் பத்திரிகையாளர்

வருடம் 1975. நெருக்கடி நிலை வருவதற்கு இன்னும் சில நாட்களே இருந்தன. அப்போது தமிழக அரசை எதிர்த்து எழுதுவது ஊக்குவிக்கப்பட்டது. தன்னுடையப் பதவிக்காக நாட்டின் எதிர்க்காலத்தையே அடகு வைக்கத் துணிந்த ஒரு சர்வாதிகார மனப்பான்மை கொண்ட பிரதம மந்திரி அப்போது கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். தமிழகப் பத்திரிகைகள் சகட்டுமேனிக்கு தி.மு.க. அரசை எதிர்த்து எழுதி வந்தன.

கௌரவர் சபையில் அனைத்துப் பெரியவர்களும் பயத்தாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ வாய்ப் பொத்தி அமர்ந்திருக்க, வீறு கொண்டெழுந்தான் விகர்ணன். அது மஹபாரதத்தில் ஒரு அருமையான இடம். அதற்குச் சற்றும் குறைந்திராத அளவில் வீறு கொண்டு எழுந்தது துக்ளக்.

ஜூன் 25, 1975 தேதிக்கு முன்னால் வந்த துக்ளக்கில் அதன் ஆசிரியர் சோ ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி எப்போது மத்திய அரசை எதிர்த்து எழுதச் சுதந்திரம் இல்லையோ தான் மானில அரசையும் எதிர்த்து ஒன்றும் எழுதப் போவதில்லை என்றுத் திட்டவட்டமாக அறிவித்தார் அவர். இத்தனைக்கும் அவருக்கு எதிராக தி.மு.க. அரசு பல அடாவடி நடவடிக்கை எடுத்து வந்திருந்தது. ஆனாலும் கீழே வீழ்த்தப்பட்டவரை அவர் எப்போதுமே மேலே தாக்கியதில்லை. அதற்கும் மேல் 1976-ல் தி.மு.க அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டப் போது அவர் நேரடியாகக் கருணாநிதி அவர்கள் இல்லத்திற்குச் சென்று அவரிடம் தன் தார்மிக ஆதரவைத் தெரிவித்தார். அப்போது யாருமே கருணாநிதி அவர்கள் அருகில் செல்லத் துணியவில்லை.

துக்ளக்கை அதன் முதல் இதழிலிருந்துப் படித்து வருபவன் என்னும் முறையில் திட்டவட்டமாகக் கூறுவேன். அவர் ஒருபோதும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமரிசனம் செய்தது இல்லை. பாறாளுமன்ற உறுப்பினராக இருந்துக் கொண்டுத் தனக்களிக்கப்பட்ட ஃப்ண்ட்ஸ்களை பலப் பொதுக்காரியங்களுக்காக நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் செலவழித்து வருகிறார். எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும் எல்லா தரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டுதான் தன் கட்டுரைகளை எழுதுகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த அவர் பத்திரிகையின் 35-ஆம் ஆண்டு முடிந்ததற்கானத் தன் மீட்டிங்கில் அவர் பேசியதுடன் 100% ஒத்துப் போகிறேன் என்றுக் குறிப்பிட்டிருந்தேன். இப்போது அதை மறுபடி அழுத்தம் திருத்தமாக உறுதி செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

சினிமாக் கவர்ச்சி, இலவசப் பரிசுத் திட்டம் ஒன்றும் இல்லாது வெற்றிகரமாகத் தன் பத்திரிகையை நடத்தி வருகிறார். அவர் பேசும் பொதுக் கூட்டங்கள், நடத்தும் நாடகங்கள் ஆகியவை அடையும் வெற்றியைக் கண்டு பொறாமைப் படுபவர் பலர். என்ன செய்வது ஐயாமார்களே? உண்மையை உண்மை என்றுதான் ஒத்துக் கொள்ள முடியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/18/2005

அன்னிய மொழியைக் கற்கும் முறை - Part 1

மீனாக்ஸ் அவர்கள் பதிவில் மூன்றுக்கு மேற்பட்ட மொழிகள் கற்பது பற்றிக் குறிப்பிடப் பட்டிருந்தது. அது ஒன்றும் பிரும்ம சூத்திரம் இல்லை என்று அங்கு நான் பின்னூட்டமிட்டேன். அதையே விரிவுபடுத்தி இங்கே ஒரு தனிப் பதிவு இடுவது உசிதம் என நினைக்கிறேன்.

எனக்கு 6 மொழிகள் தெரியும். அவை தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், ஃபிரெஞ்சு, ஹிந்தி மற்றும் இத்தாலியன் ஆகும். முதல் நான்கையே நான் நன்கு அறிந்த மொழிகள் என்றுக் குறிப்பிடுவேன். ஹிந்தி பேசுவதிலோ, துபாஷியாகச் செயல் படுவதிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை, ஹிந்தியிலிருந்து மொழிப் பெயர்க்கவும் முடியும் ஆனால் வேறு மொழியிலிருந்து ஹிந்திக்கு மொழி பெயர்ப்பதில் தயக்கம் உண்டு. இத்தாலிய மொழியைப் பொருத்த வரை அம்மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பதோடு சரி. எதிர்த்திசையில் மொழி பெயர்ப்பதோ அல்லது துபாஷியாக இருப்பதோ என்னால் இயலாது. ஆகவே 6 மொழிகளில் முதல் நான்கை மட்டுமே எனக்கு முழுமையாகத் தெரியும் என்றுக் கூறிக் கொள்வேன்.

தற்கால மொழி வல்லுனர்கள் கூறுவது என்னவென்றால் ஒரு மொழியைக் கற்க ஒரு குழந்தையின் மனோபாவம் வேண்டும் என்பதுதான். சற்று விளக்குகிறேன் இதை. நம் தாய் மொழியை கற்றது எப்படி? தாய் கூற குழந்தை திருப்பிக் கூறுகிறது. அப்போது அதற்கு மொழியைப் பற்றி எந்த முன் அனுபவமும் இல்லை. தாய் திட்டினால் குழந்தை உடனே புரிந்துக் கொள்கிறது. மொழியை கற்பது அது பாட்டுக்கு நடக்கிறது.

ஆனால் இன்னொரு மொழி? தில்லியில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகள் வெகு விரைவில் ஹிந்தியையும் பிடித்துக் கொண்டு விடுகின்றர்கள். ஏனெனில் வீட்டிற்கு வெளியே தொழர்களுடன் பேசும்போது அம்மொழியே பிரதானமாக உள்ளது. நான் தில்லியில் 20 வருடங்கள் இருந்தேன். அங்கு செல்வதற்கு முன்பே அதன் இலக்கண அடிப்படைகளில் தேர்ந்திருந்தேன். அம்மொழியைப் பேசும் சரள பாவம் அங்கு அலுவலக நண்பர்களுடன் பேசும்போது தானே வந்து விட்டது. எழுதும் ஹிந்தியில் எனக்கு சிறிது தகராறு உண்டு. அதன் காரணம் தமிழில் இல்லாத 4 க, 4 ச முதலியன.

ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு மொழிகள்? இவற்றை அடுத்தப் பதிவுகளில் குறிப்பிடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/16/2005

யாராவது உதவி செய்ய முடியுமா?

கடலில் அடிக்கும் வெவ்வேறு வகைக் காற்றுகளுக்கு மீனவர்கள் தனிப் பெயர்கள் வைத்துள்ளனர். நடுக்கடலில் மீன் பிடிக்கும் போது அவற்றை அவதானித்து புயல் வருமா இல்லையா என்பதைக் கண்டுக் கொள்ளுகின்றனர். நான் இப்போது ஒரு கட்டுரையைத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். இதில் கீழ்க்கண்டக் காற்றுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவை: கொண்டைக்காற்று, கோடைக்காற்று, கச்சாவ்கார்று, வாடைக்காற்று மற்றும் வாடைக்கொண்டைக்காற்று ஆகும். இவற்றின் ஆங்கிலப் பெயர்கள் தேவை. உதாரணத்துக்கு வாடைக் காற்று என்பது தென்றலுக்கு எதிர்ப்பதம் என்று படித்திருக்கிறேன். வடக்கு திசையிலிருந்து வரும் காற்று என்றளவில் அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதை உறுதி செய்ய இயலுமா?

க்ரியா அகராதியில் கச்சான்காற்று என்றுக் குறிப்பிட்டு இது மேற்கிலிருந்து வரும் காற்று என்றுக் கூறப்பட்டுள்ளது. இதையும் உறுதி செய்ய வேண்டுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/12/2005

சாரு யார்?

இந்தத் தலைப்பில் தான் எழுதிப் பதிவு செய்ததை நாகூர் ரூமி நீக்கி விட்டார். கோணல் பக்கப் புகழ் சாருவைப் பற்றிய இப்பதிவும் முதலும் கோணல் முற்றும் கோணலாய் மாறியது ஒரு சோகமே. "எண்ணித் துணிகக் கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பதிழுக்கு" என்றுதான் இங்குக் கூற வேண்டியுள்ளது.

நான் பார்த்தவரை சாரு என்னும் மனிதர் சுயநலத்தின் உருவமாகத்தான் காணப்படுகிறார். சுயநலக் காரனுக்குத் தேவையானத் தந்திரமும் அவரிடம் இல்லை. ஆபிதீன் விஷயத்தைத்தான் குறிப்பிடுகிறேன். ஒரு சிறு நன்றிக் குறிப்பைக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுத்திருந்தால் ஒரு பிரச்சினையும் இருந்திருக்காது. இவருக்கு ஏதோ தன்னையே அழித்துக் கொள்ளும் ஆசை வந்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. (death wish).

சாருவை இப்போதைக்கு விட்டு விடுவோம். ரூமியும் சொதப்பி விட்டார் என்றுதான் தோன்றுகிறது. ஆபிதீன் தனக்கெழுதியக் கடிதத்தை அது ஒரு பின்னூட்டம் போலத் தோன்றவைத்து வெளியிட்டதில் குழப்பம் இன்னும் அதிகமானது. சரி செய்வதாக நினைத்து பின்னூட்டங்களைத் நீக்க அது மேலும் குழப்பம் விளைவித்தது. இப்போது பார்த்தால் மொத்தப் பதிவையே நீக்கியிருக்கிறார். சுத்தம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/11/2005

சைட் பிசினெஸ் செய்யலாமா? - an analysis

மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் மருத்துவக் கல்லூரிப் பேராசியர்களாகவோ அல்லது ஏதாவது கம்பெனிகளுக்கு முழு நேர மருத்துவப் பணிக்கோ போகும் போது. தனி ப்ராக்டீசில் ஈடுபடக் கூடாது என்று விதி உண்டு. ஆனால் அதற்குப் பதில் அவர்களுக்கு அம்மாதிரி தனித் தொழில் செய்யாததற்கான ஈட்டுத் தொகை சம்பளத்துடன் வழங்கப்படும். அதே போல ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கக் கூடாது என்றும் விதி இருப்பதாக அறிகிறேன். இங்கு இதற்காக ஏதும் ஈட்டுத்தொகை வழங்கப் படுவதாகத் தெரியவில்லை. எது எப்படியாயினும் அதைப் பற்றி நான் இங்குப் பேச வரவில்லை.

சில வேலைகளில் நிறைய மிகுதி நேரம் கிடைக்கிறது. நான் கடைசியாக வேலைப் பார்த்த நிறுவனத்தில் தினப்படி வேலையை ஒரு மணி நேரத்தில் முடித்து விடலாம். பிறகு என்ன செய்வது? எல்லோருக்கும் புத்தகம் படிப்பதில் விருப்பம் இருக்கும் என்றுக் கூற இயலாது. 90 சதவிகிதத்துக்கும் மேலான அளவில் அவ்வாறு ஓய்வு நேரம் அதிகம் உள்ளவர்கள் பேசிப் பேசியே அலுவலக வம்புகளுக்கு வழி வகுக்கின்றனர். ஆனால் திறமையுள்ள் சிலர் அலுவலக வேலைக்கு ஒரு பங்கமும் வாராது மற்ற வேலைகள் செய்துப் பொருள் ஈட்டுகின்றனர்.

எனக்குக் கீழே ஒரு மெக்கானிக் பணி புரிந்தார். ஏர் கண்டிஷன் தொழில் நுட்பத்தில் திறமை அதிகம் அவருக்கு. கம்பெனி வேலைகளை உடனுக்குடன் முடித்துப் பிறகுத் தன் சொந்தத் தொழிலையும் கவனிப்பவர். பழகுவதற்கு இனிமையானவர். (அப்போதுதானே வெளி வாடிக்கையாளர்களைப் பிடிக்க முடியும்). அவரிடன் கம்பெனி வேலையிருந்தால் அதற்குத்தான் முதலுரிமை என்று இருப்பார். வெகு வேகமாக அந்த வேலையை முடித்து வேறு வேலையில் ஈடுபடுவார். எனக்குத் தெரியும் அவர் இம்மாதிரி வெளி வேலைகளை எடுத்துச் செய்கிறார் என்று. அதனால் என்ன? வெளி வேலை எதையும் செய்யாது அதே சமயம் கம்பெனி வேலையையும் சொதப்பும் மற்ற மெக்கானிக்குகளை விட அவர் பல மடங்கு மேலானவர்.

நான் மட்டும் என்ன? நான் பொறியாளர் பற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும் நான் பாட்டுக்கு வெளி மொழிபெயர்ர்ப்பு வேலைகளையும் செய்து வந்தேன். ஆகவே 11 வருடங்களுக்கு முன் விருப்ப ஓய்வு எடுக்கும் சமயம் ஒரு பிரச்சினையும் இல்லை. எனக்காக வாடிக்கையாளர்கள் தயாராக இருந்தனர். கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு ஒரு மொழி பெயர்ப்பு வேலையும் என் கம்பெனியில் நடக்கவில்லை என்றாலும், திடீரென்று வந்து 21 நாட்கள் தங்கிய ஒரு பிரெஞ்சுக்காரருக்கு எங்கள் தலைமை நிர்வாகியே வியக்கும் வண்ணம் துபாஷியாக என்னால் செயல் பட முடிந்தது.

இதனால் கூறப்படும் நீதி யாது?

பொது நலனுக்கு பங்கம் வராது செயல்பட முடிந்தால் இம்மாதிரி தனி வேலையில் ஈடுபடுவது வேலை செய்யாமல் வம்பு பேசிக் கொண்டிருப்பதை விடச் சிறந்தது. அதே நேரத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது முக்கியம். முழு நேர வேலையும் சைட் பிசினெஸும் ஒன்றுக்கொன்று எவ்விதத் தொடர்பும் இல்லாது இருக்க வேண்டும். முக்கியமாக நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் தெரியக் கூடாது. தேவையற்ற அச்சுறுத்தல்கள்தான் அதன் பலன். அதே மாதிரி வெளி வேலைகளைப் பற்றி உங்கள் கம்பெனியில் மூச்சு விடக் கூடாது. யாருடனும் சண்டைப் போடக் கூடாது. அதெல்லாம் வம்பு பேசுபவர்களின் உரிமை. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது உத்தமம். இதனால் கிடைக்கும் நல்லப் பெயர் ஒரு தனி போனஸ்.

பதிவை முடிக்குமுன் ஒரு சிறு தமாஷ். எனக்கு இஞ்சினியராக 23 வருடங்கள், ஜெர்மன் மொழிப் பெயர்ப்பாளனாக 30 வருடங்கள் மற்றும் பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளனாக 27 வருடங்கள் அனுபவம் ஆக மொத்த அனுபவம் 80 வருடங்கள் ஆனால் என் வயது 59-க்கும் கீழேதான் என்று நேற்றுத்தான் ஒரு வாடிக்கையாளரிடம் கூற அவர் வியப்புடன் இது எவ்வாறு சாத்தியம் என்றுக் கேட்க, "ஓவர்டைம்" என்றேன் சிரிக்காமல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/10/2005

மிளகாய் அரைத்தல் - 153

என் அனுபவங்கள் மற்றத் தொழில் வல்லுனர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

என் தூரத்து உறவினர் ஒருவர் என்னிடம் "ஏண்டா டோண்டு, என்னவோ மொழி பெயர்க்கறயாமே, என்னிடம் ஒரு ஜெர்மன் கட்டுரை இருக்கு. அதில் என்ன இருக்கு என்றுப் பார்த்துச் சொல்லேன்" என்று கேட்டார்.

நான் உடனே "அதற்கென்ன மாமா செஞ்சாப் போச்சு. கட்டுரையைக் காண்பியுங்கள்" என்றேன். அதைப் பார்த்தேன். கிட்டத்தட்ட 50 பக்கம் இருக்கும். "ரொம்பக் காசாகுமே பரவாயில்லையா" என்றுக் கேட்டதற்கு அவர் உடனே "அடே என்னிடமே துட்டு கேட்கிறாயா? நான் பார்த்து வளர்ந்தப் பையன் நீ, என்னிடம் துட்டு கேட்கலாமா?" என்றுக் கேட்டார். அவரிடம் "மாமா இது ஒரு பெரிய கட்டுரை. வெறுமனே படித்து முடிக்கவே மணிக் கணக்காக ஆகும். மேலும் எனக்கு ஏற்கனவே நிறைய வேலைகள் இருக்கின்றன. என்னை விட்டு விடுங்கள். வேண்டுமானால் இன்னொரு நண்பனை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். அவன் இலவசமாகச் செய்தால் எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை" என்றுக் கூறி விட்டு வந்தேன். அதை விடுத்து நான் செய்திருந்தால் தொலைந்தேன். இதே வேலையாக எல்லோரும் என்னை முற்றுகை இட்டிருப்பர்.

ஒரு தடவை கெட்டப் பெயர் வாங்கினாலும் பரவாயில்லை என்றுத் துணிய வேண்டும். இல்லாவிடில் நிம்மதியே இருக்காது வாழ்வில்.

வக்கீல்களிடம் சில பேர் வருவார்கள். அதாவது ஏதாவது பார்ட்டிகளில். தங்கள் பிரச்சினையைத் தங்கள் நண்பர் பிரச்சினையாகக் கூறித் தீர்வு கேட்பார்கள். மருத்துவர்களுக்கோ இன்னும் அதிக சங்கடம். விருந்துக்கு வந்த மருத்துவரிடம் தன் குழந்தை எந்தக் கலரில் வெளிக்குப் போகிறது என்றெல்லாம் கூறி வயத்தைக் கலக்குவர். ஓசியில் பிழைப்பதே வேலையாகி விட்டது பலருக்கு.

இப்படித்தான் ஒருவர் ஒரு வக்கீலிடம் சரியான விவரம் கூறாது ஆலோசனை கேட்க, அவரும் யதார்த்தமாக ஏதோ சொல்லிவைக்க அதன்படி நடந்ததில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அவர் வக்கீலிடம் வந்து சண்டை போட, அதற்குள் சுதாரித்துக் கொண்ட வக்கீல் இவ்வறு அவரிடம் கூறினார். "நான் உனக்குக் கொடுத்த ஆலோசனையின் மதிப்பு நீ எனக்குக் கொடுத்த ஃபீஸின் அளவுதான். அதற்கு மேல் இல்லை".

153 என்றால் என்ன? 15 = O, 3 = C, அவ்வளவுதான்

அன்புடன்,
டோண்டு ராகவன்

உழைப்புத் திருட்டு - negative side

மற்றவர்கள் உழைப்பைத் திருடித் தான் செய்ததாகக் கூறிக் கொள்வது எல்லா துறையிலும் உள்ளது. எழுத்துத் துறை மட்டும் விதி விலக்கா? சாரு நிவேதிதா ஆபிதீன் அவர்கள் எழுதியக் கதை தான் எழுதியதாகக் கூறிக் கொண்டது பற்றி நாகூர் ரூமி எழுதியதற்குப் பின்னூட்டமிட்ட பிறகு இப்போது இதை எழுதுகிறேன்.

பிரபல எழுத்தாளர்கள் எல்லோருமே இதை செய்திருக்கிறார்கள். கல்கியையே எடுத்துக் கொள்வோம். ஏட்டிக்குப் போட்டியில் தான் ஏதோ கட்டுரை படித்து விட்டு தனக்கு ஏதோ மருத்துவக் கோளாறு என்று பயந்ததை நகைச்சுவையுடன் கூறியிருப்பார். ஆனால் அது "ஒரு படகில் மூவர், அதில் நாயைப் பற்றிச் சொல்லாமலா" என்று ஜெரோம் கே. ஜெரோம் ஆங்கிலத்தில் எழுதிய கதையிலிருந்து அப்படியே சுடப்பட்டது. கல்கியின் வாழ்க்கை வரலாற்றை "பொன்னியின் புதல்வர்" என்றத் தலைப்பில் எழுதிய சுந்தா அவர்களிடம் இதை சுட்டிக் காட்டிய போது அவரும் அதை ஒத்துக் கொண்டு தன் புத்தகத்திலும் குறிப்பிட்டிருந்தார்.

தேவி பாலாவையே எடுத்துக் கொள்ளுங்கள். குங்குமத்தில் அவர் எழுதிய "சக்தி" தொடர்கதை எழுபதுகளின் ஆரம்பத்தில் வெளியான "சபதம்" என்றத் திரைப்படத்தின் அப்பட்டக் காபி. இதை நான் குங்குமம் பொறுப்பாசிரியர் சாருப்ரபா சுந்தரிடமும் கூறினேன். அவர் தேவி பாலாவிடம் அதைப் பற்றிக் கூறியிருப்பார் போல. பின்னவரும் வலுக்கட்டாயமாக சக்தியில் சம்பவங்கள் மற்றும் புது கதாபாத்திரங்களைப் புகுத்தி என்னென்னவோ செய்தார். அவை அனைத்தும் கதையுடன் ஒட்டவேயில்லை. நான் கூறியதை அப்படியே நம்ப வேண்டாம். சபதம் படத்தை உங்களில் நிறையப் பேர் பார்த்திருப்பீர்கள். சக்தி தொடர்கதையை இப்போது படித்துப் பாருங்கள். நான் கூறியது உண்மை என்று தெரிந்து விடும்.

அதே போல தேவி பாலாவின் "மடிசார் மாமி" கதைக் கரு ஏற்கனவே அறுபதுகளில் விகடனில் வெளியான கிருஷ்னாவின் " சந்தன மரம்" கதையிலிருந்தே எடுக்கப் பட்டது.

மற்ற எழுத்தாளர்கல் செய்ததைப் பற்றி நான் பிறகு எழுதுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/09/2005

M.G.R. - சடையப்ப வள்ளல்!

என்ன ஆச்சரியம்? இந்த 5 கேள்விகளுக்கும் ஒருவரும் முழு விடைகளைக் கூறவில்லை.

சடையப்ப வள்ளல் கம்பரின் புரவலர். அவரைப் புகழ்ந்துக் கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் தன் ராமாயணத்தில் எழுத, மற்றப் புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாட்டில் குறிப்பிட்டால் போதும் என்றுக் கூறிவிட, கம்பர் இவ்வாறுக் கூறுவார். "சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி அவர் 'ஆயிரத்தில் ஒருவர்' ஆகிறார். அப்படியே செய்கிறேன்." ஆக எம்.ஜி.ஆர் சடையப்ப வள்ளலாக நடித்தப் படத்தில் வில்லன் நடிகர்கள் ராமதாஸ், மனோகர் மற்றும் நம்பியார் ஆவர். அடிக்காதீங்கப்பா!

யோசிப்பவர் பகவத் கீதையில் பேசும் முதல் இருவரைச் சரியாகக் கூறினார். அடுத்த இருவர்தான் தவறு. சரியான வரிசை: திருதராஷ்ட்ரன், சஞ்சயன், துரியோதனனன் மற்றும் துரோணர். திருதராஷ்ட்ரன் சஞ்சயனிடம் நடப்பதைக் கூறுமாறுக் கேட்பது முதலில். பிறகு சஞ்சயன் பதில் கூற ஆரம்பிக்கிறான். பாண்டவர் சேனையைக் கண்ட துரியோதனன் ஆச்சாரியர் அருகில் சென்றுப் பேச ஆரம்பிக்கிறான். அதற்கு துரோணர் விடை கூறுகிறார். ஆதாரம் பகவத் கீதை.

சரியான வரிசை: உத்திரன், சவ்யசாசி, கண்ணன், சாத்யகி. விராட பர்வத்தின் கடைசியில் உத்திரன் தேரோட்ட, அர்ஜுனன் (சவ்யசாசி) அம்பு மழை பொழிந்து கௌரவர் சேனையை விரட்டி அடிக்கிறான். பிறகு சவ்யசாசிக்குக் கண்ணன் மஹாபாரதப் போரில் தேரோட்டுகிறான். சாத்யகி? அவன் கண்ணனின் டிஃபால்ட் தேரோட்டி. வரிசை பூர்த்தியாகிறது அல்லவா? கடைசியாகக் கர்ணனைக் கூடக் கூறியிருந்தாலும் ஒத்துக் கொண்டிருக்கலாம். ஏனெனில் ஒரு சமயம் கண்ணன் கர்ணனிடம் தனியேப் பேச வேண்டும் என்றுக் கூற கர்ணன் தானே தேரைச் செலுத்தி கண்ணனை அழைத்துச் செல்கிறான். ஆனால் இது வியாச பாரதத்தில் வருகிறதா என்றுத் தெரியவில்லை. பி. ஆர். சோப்ராவின் மஹாபரதத்தில் வருகிறது.

ராமும் ஷ்யாமும் சயாமீஸ் இரட்டையர்கள். ராம் இடது பக்கத்தில் இருப்பவனாதலால் அவன் அமெரிக்காவில் கார் ஓட்ட வேண்டியது. ஷ்யாமுக்கு கார் ஓட்டத் தெரியாது. ஆகவே இங்கிலாந்தில் அவன் கார் ஓட்ட முடியாது. ராமாலும் முடியாது. வலது, இடது போக்குவரத்து விதியைப் பற்றிக் கூறிய பாலாவும் துளசியும் இன்னும் ஒரு அடி எடுத்திருந்தால் விடை வந்திருக்கும். முக்கால் கிணறுதான் தாண்டினர்.

மருத்துவ மனையில் இருந்த மனைவி இதயம் - நுரையீரல் இயந்திரத்தில் இணைக்கப் பட்டிருந்தாள். அதன் ஆதரவு பேட்டரியில் பழுது ஏற்பட்டதால் வேறொன்று ஏற்பாடு செய்யக் கணவன் வேகமாக கீழே வருகிறான். அப்போது ஹோட்டலில் டோட்டல் பவர் கட் ஏற்படுகிறது. மேலே கூற எனக்குக் கல்மனது இல்லை. நிஜமாகவே நடந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/08/2005

ஆரோகணத்திலேயே பாடுவது - music

சிந்து பைரவி திரைப்படத்தில் கடைசிப் பாடலை ஜே.கே.பி. அவர்கள் ஆரோகணத்திலேயே பாடியிருப்பார். "கலைவாணியே" என்று அரம்பிக்கும் பாடல் அது. என்னுடையக் கேள்வி இதுதான். இதைப் போல வேறு ஏதாவது பாடல்கள் உண்டா? வேறு யாராவது பாடியிருக்கிறார்களா? உதாரணமாக சங்கீத மும்மூர்த்திகளில் யாராவது?

அல்லது இது திரு பாலசந்தரின் ஒரிஜினல் ஐடியாவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

விடுவதாக இல்லை -third time lucky?

1. எம்.ஜி.ஆர் சடையப்ப வள்ளலாக நடித்தப் படத்தின் வில்லன் நடிகர்கள் யார் யார்?

2. உத்திரன், சவ்யசாசி, கண்ணன் .... அடுத்து வருவது யார்?

3. பகவத் கீதையில் பேசும் முதல் 4 பேரை வரிசைப் படுத்த இயலுமா?

4. ராமும் ஷ்யாமும் இரட்டையர்கள். இருவரும் வசிப்பது அமெரிக்காவில். ராமுக்கு அமெரிக்கா போர் அடித்து விட்டது. அவன் ஷ்யாமிடம் இங்கிலாந்துக்குக் குடி பெயரலாம் என்றுக் கூற, ஷ்யாம் தனக்குக் கார் ஓட்டத் தெரியாது என்றுக் கூறி மறுத்து விடுகிறான். என்ன நடக்கிறது இங்கு? (இன்னும் முழுமையான விடை இங்கு வரவில்லை).

5. நிஜமாக நடந்த நிகழ்ச்சி இது. ஒருவன் மருத்துவ மனையில் இருக்கும் அவன் மனைவியைப் பார்த்து விட்டு ஒரு முக்கியப் பொருளை வாங்குவதற்காக அவள் வார்டு இருக்கும் 14-வது மாடியிலிருந்து லிஃப்டில் கீழே வருகிறான். வெளி கேட்டை தாண்டும் போது அவனுக்குத் தெரிகிறது, அவன் மனைவி இறந்து விட்டாள் என்று. எப்படி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/07/2005

Some French jokes translated into Tamil

நகைச்சுவைக்குப் பெயர்போன ஒரு பிரெஞ்சு இணையப் பத்திரிகையிலிருந்து (www.humour.com) எனக்கு மின்னஞ்சல் செய்யப்பட்டவையை இங்கு அளிக்கிறேன்.

ஓர் ஆணுடன் உணர்வு பூர்வமான, சந்தோஷமான வாழ்க்கையைப் பகிர்ந்துக் கொள்ள சில டிப்சுகள்.

1. வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டு, அவ்வப்போது சமையல் செய்து, கடைக்குப் போய் சாமான் வாங்கி, ஒரு வேலையிலும் இருக்கும் ஆணைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
2. உன்னிடம் ஜோவியலாகப் பேசி உன்னைச் சிரிக்க வைக்கக் கூடிய ஒரு ஆண் உனக்குத் தேவை.
3. நம்பத் தகுந்த, உன்னை ஏமாற்றாத ஒரு ஆண் தேவை.
4. படுக்கையறையில் உன்னைத் திருப்திப் படுத்த ஓர் ஆண் தேவை.
5. எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக இந்த 4 ஆண்களுக்கும் ஒருவர் இருப்பது இன்னொருவருக்குத் தெரியக் கூடாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/06/2005

Some more puzzles for Sunday

இன்னும் சில கேள்விகள். (அடங்குடா டோண்டு)
1. ஒருவன் ஹோடலுக்கு வந்து சர்வரிடம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னான். சர்வரோ அவன் கழுத்தில் சரேலென்று ஒரு கத்தியை வைத்தான். வந்தவன் பயத்தில் கீழே விழுந்தான். பிறகு மெதுவாக எழுந்து சர்வருக்கு நன்றி கூறி விட்டு இரண்டு இட்லி ஒரு தோசை ஆர்டர் செய்தான். ஏன்?

2. ஆண்டனியும் க்ளியோபாட்ராவும் எகிப்து அரண்மனை அறையில் இறந்துக் கிடக்கின்றனர். அவர்கள் பக்கத்தில் ஒரு கிண்ணம் தலைகிழாகக் கிடக்கிறது. ஆனால் அதில் வெறும் தண்ணீர்தான் இருந்தது. ஆண்டனியும் கிளியோபாட்ராவும் விஷமருந்தி இறக்கவில்லை ஒருவரும் அவர்களை கத்தியாலோ அல்லது வேறு முறையாலோ கொலை செய்யவில்லை. அவர்கள் தற்கொலையும் செய்துக் கொள்ளவில்லை. இது வெறும் விபத்துதான். என்ன நடந்தது?

3. ஷெர்லாக் ஹோம்ஸ் இறந்தப் பிறகு சொர்க்கம் சென்றார். கடவுள் அவரை வரவேற்று அவருக்கு ஒரு பரீட்சை வைத்தார். ஆதாமையும் ஏவாளையும் கண்டு பிடிக்க வேண்டும். ஷெர்லாக் ஹோம்ஸ் கண்டு பிடித்தார். எவ்வாறு?

4. மறுபடியும் இரட்டையர்! ராமும் ஷ்யாமும் ஒரே பிரசவத்தில் ஒரே தாய்க்குப் பிறந்த இரட்டையர். ராமின் பிறந்த தினம் ஷ்யாமின் பிறந்த தினத்துக்கு இரண்டு நாள் முன்னால் வருகிறது. எவ்வாறு?

ஆங்கிலத்தில் நான் கேட்டக் கேள்விக்கு பாலா ஒருவர்தான் இது வரை முயற்சி செய்தார். ஆகவே அவருக்கு இன்னொரு க்ளூ கொடுத்தேன். மற்றவர்களும் முயற்சி செய்யலாம் (விடை தெரிந்தவுடன் நிஜமாகவே உனக்கு உதைதாண்டா டோண்டு!)

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/05/2005

Worth a thousand words

ஒரு நல்லப் படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்று சரியாகத்தான் கூறுகிறார்கள். அம்மாதிரி சிலப் படங்களையும் காட்சிகளையும் உங்களுடன் இங்குப் பகிர்ந்துக் கொள்கிறேன்.

1968. பெர்க்லீ கலாசாலையில் மாணவர் போராட்டம். துப்பாகிச் சூடு அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. ஒரு மாணவன் கீழே இறந்துக் கிடக்கிறான். அவன் பக்கத்தில் அவன் 14 வயதுத் தோழி அமர்ந்துக் கொண்டு, ஒரு கையை அவன் உடல் மேல் வைத்து, இன்னொரு கையை மேலே உயர்த்திக் காட்டி, பார்வையையும் மேல் நோக்கிக் கதறுகிறாள். அது ஒரு ஸ்டில்லில் உலகம் முழுதும் பயணம் செய்தது. என்னைப் பல நாட்கள் தூங்க விடாமல் செய்தது.

1968 (?). தென் வியட்னாமில் ஒரு நெடுஞ்சாலையில் நெருப்புக் குண்டால் காயமடைந்தக் குழந்தைகள் நெருப்பில் உடைகள் எரிந்து நிர்வாணமாக ஓடி வருகிறார்கள். எல்லோருக்கும் முன்னால் ஓடி வரும் சிறுமி இப்போதும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறாள். சில வருடங்கள் கழித்து அதே பெண்னை டிரேஸ் செய்து இன்னொரு ரிப்போர்ட் வந்தது. நலமாக இருக்கிறாள் என்றுப் படித்ததும்தான் அமைதி வந்தது.

எண்பதுகளில் தூர் தர்ஷனில் ஒரு காட்சி. ஜனாதிபதி திரைப்பட விருதுகளை ஏசியாட் கிராமத்து அரங்கில் வழங்குகிறார். ராஜ் கபூரின் முறை. அப்போது பார்த்து அவருக்கு மாரடைப்பு. மூச்சுத் திணறல் மற்றும் இருமல். ஒரு நிமிடம் அரங்கமே உறைந்துப் போனது. பிறகு? வெங்கட்ராமன் கீழே இறங்கி வேகமாக ராஜ் கபூரை நோக்கி நடக்க, சுதாரித்துக் கொண்டு மெய்க்காப்பாளர்கள் அவர் பின்னாலேயே ஓடி வருகின்றனர். ராஜ் கபூரிடம் வந்து விட்டார். அத்தருணத்திலும் ராஜ் கபூர் இருக்கையிலிருந்து மெதுவாக எழுந்து வணக்கம் போடுகிறார். வெங்கட்ராமன் அவருக்கு பதக்கச் சங்கிலியை அவர் கழுத்தில் இடுகிறார். தனக்காக வைத்திருந்த ஆம்புலன்ஸில் ராஜ் கபூரை மருத்துவ மனைக்கு அனுப்புகிறார். என்னை மிகவும் பாதித்தது இந்த நிகழ்ச்சி.

இன்னும் மேலே பின் வரும் பதிவுகளில் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Now the answers

பாக்கி விடைகள் இதோ.

இங்கிலாந்தில் ஏரியல் சர்வே விஷயத்துக்கு முதலில் வருவோம். அது வரை நிலத்திலிருந்தபடியே அளவுகள் எடுக்கப்பட்டன. ஏரியல் சர்வேயில் அதுவரை குறைந்த பரப்பளவுக்குத்தான் வரி விதிக்கப்பட்டது என்பது அரசுக்குத் தெரிய வந்தது. பிறகு என்ன. சரியான வரி விதிக்கப்பட்டது. அதிகப்படி வருமானம் ஏரியல் சர்வேயின் விலையை சுலபமாக ஈடு கட்டியது. நிலையான லாபமும் வந்தது.

சீரீஸ் 1, 1, 1, 2, 1, 3, 4 இத்யாதி, இத்யாதி....1, 12, 1, 1....
புரியவில்லையா? மணியடிக்கும் கடிகாரம் அன்பர்களே. 12=30, 1=00, 1=30, 2=00, 2=00 ஆகிய மணிகள்தான் அவை. மெரினா பீச்சைக் குறிப்பிட்டால் உங்களுக்கு மணிக்கூண்டு நினைவுக்கு வருகிறதா என்று பார்த்தேன். அவ்வளவுதான்.

ஐயோ அடிக்காதீர்கள் ஐயா!

ஆனால் ஒன்று தெரிந்துக் கொண்டேன். சிறிதளவே க்ளூ கிடைத்தாலும் நம்மவர்கள் விடை கண்டு விடுகிறார்கள். ஆனால் நான் பார்த்த வட இந்தியர்கள் அவ்வளவுக் கூர்மையாக இல்லை. உதாரணத்துக்கு ரங்கமணி ஐயங்கார் விஷ்யம். பென்ணியவாதிகள் என்றுத் தங்களைச் சொல்லிக் கொள்ளும் பெண்களும் ஒரு ஆணைத்தான் கற்பனை செய்துக் கொண்டனர். ஆனால் இங்கோ முதல் விடையே அதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

One more puzzle for the day

This I am posting deliberately in English, as I am tired. It is already 00=57 hrs here in Chennai.

Three friends Ram, Shyam and Arun go to the coffee shop. Each of them orders one cup of coffee. The waiter brings the 3 cups of coffee along with a bowl containing sugar cubes. Each of them puts an odd number of sugar cubes in his cup and the total number of sugar cubes for the 3 of them together is 12. Can you give the distribution?

Remember, no one takes zero number of cubes. No breaking of cubes. Each has taken an odd number of sugar cubes.

Regards,
N.Raghavan

2/04/2005

இன்னும் சில கேள்விகள் - some more!

1. எகிப்தில் ஆஸ்ப்ரோ மாத்திரை வியாபாரத்துக்குக் கொண்டு வந்தப் புதிதில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அதை சந்தைப்படுத்த அமெரிக்காவிலிருந்து ஒரு பெரிய நிபுணர் வரவழைக்கப்பட்டர். அவரும் ஆர்டிஸ்ட்களும் சேர்ந்து பல மணி நேரங்கள் ஆலோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தனர். ஒரு பெரிய ஹோர்டிங்கில் 3 படங்கள் ஏ - பி - சி என்று வெளியிட்டனர். ஏ-யில் ஒருவன் தலைவலியால் அழுதுக் கொண்டிருப்பான். பி-யில் அவனுக்கு ஆஸ்ப்ரோ கொடுக்கப்படும். சி-யில் அவன் தலைவலி நீங்கிச் சிரித்துக் கொண்டிருப்பான். இம்மாதிரி ஹோர்டிங்குகள் தெருவுக்குத் தெரு கட் அவுட் ரேஞ்சில் நிறுத்தப்பட்டன. ஆனால் ஆஸ்ப்ரோவின் வியாபாரம் முழுதுமாக நொடித்துப் போயிற்று. ஏன்?

2. இப்போது கூறப்போவது என் நண்பனுக்கு நிஜமாகவே நடந்தது. அவன் ஒரு பஞ்சாபி. பெயர் மல்லிக். நாங்கள் இருவரும் ஐ.டி.பி.எல்லில் வேலை செய்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் மல்லிக் தன் மனைவியிடம் தன்னுடன் வேலை செய்யும் சௌத்ரி என்ற பெங்காலி ஒருவன் தன்னை அன்று இரவு சாப்பாட்டுக்கு அழைத்திருப்பதாகக் கூறிச் சென்றான். நல்ல மீன் வறுவல் கிடைக்கும் என்ற ஆவலுடன் சென்றான். சென்றவன் அடுத்த நாள் விடியற்காலையில் நொந்துப் போய் திரும்ப வந்தான். இரவு முழுவதும் சௌத்ரி வீட்டில் பக்திப் பாடல்கள் பாடிய பின் கடைசியில் சிறிது பொறி கடலைதான் கிடைத்தது. என் கேள்வி. பெங்காலி என்ன சொன்னான்? பஞ்சாபி என்னப் புரிந்துக் கொண்டான்?

3. 15 டிசம்பர் 1996-ல் மாரடைப்பால் இறந்த ஒருவன் 14 டிசம்பர் 1996-ல் புதைக்கப்பட்டான். என்ன நடந்தது? (புதைத்ததால் இறக்கவில்லை என்பதையும் கூறி விடுகிறேன்).

4. கோவிந்தனும் ராமனும் அவர்கள் தாய் பத்மாவுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள் ஆனால் இரட்டையர் அல்ல. எங்கனம்?

5. இந்த வரிசையை பாருங்கள். 1, 1, 1, 2, 1 ... அடுத்தது என்ன எண்? ஏன்?

6. This question is addressed to Mathy Kandaswamy only. Did you locate the reference to my hyperlink. I have already posted it.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சில கேள்விகள் - some puzzles

"கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா" என்று எந்த சிவ பெருமானும் என்னைக் கேட்கவுமில்லை நான் தருமியுமில்லை. இருந்தாலும் சில கேள்விகள்.

1. டாக்டர் ரங்கமணி ஐயங்கார் ஒரு பெரிய மூளை அறுவை சிகிச்சை நிபுணர். அவருடைய ஒரே பையன் பிரேம். பிரேம் அவர் பையன் தான் ஆனால் டாக்டர் ரங்கமணி ஐயங்கார் அவன் தந்தை இல்லை. இது எப்படி சாத்தியம்?

2. ஒரு வகுப்பில் 6 மாணவர்கள் இருந்தனர். அவர்கள் ஆசிரியர் ஒரு கூடையில் அவர்களுக்காக ஆறு ஆப்பிள்கள் கொண்டு வந்தார். ஒவ்வொரு மாணவனாக வந்து ஆளுக்கு ஒரு ஆப்பிளை எடுத்துக் கொள்ளச் சொன்னார். அதே போல ஆறு மாணவர்களுக்கும் ஒவ்வொரு ஆப்பிள் கிடைத்தது. இருந்தாலும் கடைசியில் பார்த்தால் கூடையில் ஒரு ஆப்பிள் இன்னும் இருந்தது. எப்படி?

3. நிஜமாக நடந்தது இப்போது கூறப்போவது. இங்கிலாந்தில் நிலங்களை ஏரியல் சர்வே செய்தனர். நிறைய அரசாங்கப் பணம் செலவாயிற்று. இருப்பினும் இதனால் அரசுக்கு நிகர லாபமே ஏற்பட்டது. எப்படி?

4. ஒரு லெவல் க்ராஸிங். அதிலிருந்து ஒரு ரயில் வண்டியும் ஒரு காரும் சரியாக 1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றன. இரண்டும் ஒரே வேகத்தில் லெவல் க்ராஸிங்கை நோக்கி வருகின்றன. ஒரே நேரத்தில் அதைக் கடந்து செல்கின்றன. இருப்பினும் ஒரு விபத்தும் நடக்கவில்லை. எப்படி?

விடைகள் அடுத்தப் பதிவில் போடத் தேவையிருக்காது என்று நினைக்கிறேன். ஏனெனில் சகப் பதிவாளர்கள் இதை விடப் பெரியவற்றை ஏற்கனவெ பார்த்திருப்பார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/03/2005

குமுதம் ஜங்ஷன் - irresponsible behavior

ஒரு அறிவிப்புமில்லாமல் இந்த மாதப் பத்திரிகை டிசம்பர் 2004 இதழுடன் நின்று விட்டது. நிறுத்துவதா அல்லது நடத்துவதா என்பது முதலாளியின் விருப்பம் போலத்தான் என்பதை ஒத்துக் கொள்ல வேண்டியதுதான். ஆனாலும்...

அதன் தொடர்களை வாசித்து வரும் வாசகர்களைப் பற்றி குமுதம் நிர்வாகம் கவலைபடவேயில்லை என்றுதான் தோன்றுகிறது. முக்கியமாக அதில் வரும் நளசரிதம் முடிய இன்னும் ஒரு இதழ்தான் பாக்கி. அதாவது ஜனவரி 2005 இதழ் குமுதம் இணையப் பக்கத்தில் வாசிக்க முடிந்தது. இப்போது டெலிஃபோனில் தொடர்பு கொண்டு கேட்டால் பத்திரிகை நின்றதைப் பற்றி சாவகாசமாகத் தெரிவிக்கிறார்கள். இது யாருக்கும் தெரியவில்லை. பத்திரிகைக் கடைக்காரர்களையும் சேர்த்துத்தான் கூறுகிறேன். இதை விட பொறுப்பில்லாமல் இவ்வாறு ஒரு நிர்வாகம் நடக்க முடியுமா என்றத் திகைப்புதான் உண்டாகிறது.

இன்னொரு விஷயம். அதற்கு சந்தா கட்டியவர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் பணமும் கோவிந்தாதானா? ஏன் இவ்வாறு ஒரு நிர்வாகம் நடக்க வேண்டும்? அதை பிறகு யார் நம்புவார்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது