Showing posts with label வி.எஸ். திருமலை. Show all posts
Showing posts with label வி.எஸ். திருமலை. Show all posts

12/04/2010

வி.எஸ். திருமலை கதைகள் - 7. அத்தையின் பரிசு

தட்சனின் யாகத்துக்கு தாட்சாயிணி போகக் கூடாது என சங்கரன் ஆணையிட்டது அவளுக்கு வரக்கூடிய அவமரியாதையை உத்தேசித்தே என்கிறது சிவபுராணம். ஆனால் தாட்சாயினிக்கு மனம் கேட்கவில்லை, சென்றாள் சதியானாள், தட்சவதம் நடந்தது.

அதே தாட்சாயினியின் கதை பின் வரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் திரும்பத் திரும்ப நடக்கும் ஒன்றாக ஆனது பல விஷயங்கள் மாறவே மாறாது என்பதையே வலியுறுத்துகிறது. இப்போது ஓவர் டு திருமலை, அவரது வெர்ஷன் எப்படி என்று பார்ப்போம்.

“ஹூம். ஜானகி! போகக் கூடாது, கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன்” என்று உத்தரவிட்டு விட்டு ஆபீசுக்கு சென்றார் அவள் அகத்துக்காரர் நாராயணாச்சாரி

பசங்களும் பள்ளிக்கூடத்துக்குச் சென்றுவிட்டனர். குழந்தைகளின் கலகலப்பைப்போல் அவர்கள் இல்லாத போது இயங்கும் நிசப்தமும் வாழ்க்கையின் முக்கிய பாகம். ஆனால் இன்று அதனால் ஜானகியின் மனம் நிம்மதி கொள்ளவில்லை. கணவன் கட்டளையை மீறிச் செல்வதா? பெண்மனம் காரணங்களை அறிய முயலாமல், அறிவையும் தர்க்கத்தையும் சில சமயங்களில் உபயோகிக்காமல் வெளியர்த்தமற்ற விளங்காத உணர்ச்சிக்குக் கட்டுப்பட்டு பிடிவாதம் பிடிக்கிறது. ஜானகியை அப்போது வாட்டிய பிரச்சினை தன் மருமகள் கலாவின் கல்யாண முஹூர்த்தத்துக்குச் செல்வதா வேண்டாமா என்பதுதான். கணவன் நாராயணாச்சாரி வேண்டாம் என்று உத்தரவிட்டதற்குக் காரணம் தங்களைக் கலா வீட்டார் நேரில் வந்து அழைக்கவில்லை என்பதுதான்.

ஜானகியின் அண்ணன் கிருஷ்ணஸ்வாமி மயிலாப்பூர் பெரிய பணக்காரர்களில் ஒருவன். ஏதோ இருபது வருஷங்களுக்குமுன் ஷேர் மார்க்கெட்டில் குருட்டதிர்ஷ்டம் அடித்தது. ஐசுவரியம் குவிந்தது. பணத்துடன் வந்த புது கௌரவ உணர்ச்சி அவன் மனநிலையை மாற்றி விட்டது. மாம்பலத்தில் எளிய வாழ்க்கை நடத்தி வந்த அவன் தங்கை ஜானகி குடும்பத்துடன் அவன் குடும்பத் தொடர்பு சில மாதங்களில் மெதுவாக மறைந்து விட்டது. கிளப்புக்கும் ஷாப்பிங்குக்குமே அவகாசம் போதுமானதாக இல்லாத அவள் மன்னிக்கு ஜானகியை போய்ப் பார்க்க நேரம் கிடைக்காததில் விந்தையில்லை. அவர்கள் பெண் கலாவின் கல்யாணத்துக்கு ஊரிலுள்ள எல்லா பெரிய மனிதர்களையும் காரில் போய் அழைத்தனர். ஏழை உறவு ஜானகிக்கு வெறும் அழைப்புக் கடிதம் மட்டுமே அனுப்பினர்.

“முஹூர்த்தத்துக்கு மட்டும் போய் வந்து விடுகிறேன். இல்லையென்றால் என் மனது கேட்காது. அம்மா இருந்திருந்தால் இதுமாதிரி நடந்திருக்காது... நாத்தனார் நான் போய்க் கல்யாணத்தை நடத்திக் கொடுத்து வைக்கும்படி ஆகியிருக்கும். இருந்தாலும் நான் அவசியம் சென்று ஆசீர்வதிக்க வேண்டும் என்று படுகிறது” என்றெல்லாம் வாதாடினாள் ஜானகி.

“நான் இரண்டு மாதம் வேலையில்லாமல் திண்டாடினேன். உன் அண்ணா உதவி செய்ய ஒரு விரலைக்கூட மடக்கவில்லை. போன வருஷம் நீ உடம்பு சரியில்லாமல் மூன்று மாதம் சாகக் கிடந்தாய், அவர்கள் யாராவது செய்தி தெரிந்தும் ஒரு தரமாவது வந்து பார்த்தார்களா? முறையாவது, உறவாவது என்ன வேண்டிக்கிடக்கு? நாம் என்ன யாசகமா கேட்டு விட்டோம்? நம்முடன் பழகுவது அவர்கள் அந்தஸ்துக்குக் குறைவு என்று என்ணுகிறார்கள். நாம் ஒன்றும் அவர்கள் கடாக்ஷத்தை நோக்கி உயிர் வாழவில்லையே. பைத்தியக்காரத்தனமாகப் போய் உன் மதிப்பைக் குறைத்துக் கொள்ளாதே” என்றார் நாராயணாச்சாரி.

“ஒரு வேளை நேரில் வந்து கூப்பிட சௌகரியமில்லாது போயிருக்கலாம்”.

“போடி, அசடே!” என்று சிரித்தார் அவள் கணவன்...

மணி பத்தடித்தது. “இத்தனை நேரம் அங்கு முஹூர்த்தம் நடந்து கொண்டிருக்கும். இப்பொழுது கிளம்பினால் சுளுவாக பஸ்ஸில் இடம் கிடைக்கும். கலா கழுத்தில் தாலியேறும் நேரத்துக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். இரண்டு மணி நேரத்தில் திரும்பவும் வந்து விடலாம். ஒருவருக்கும் தெரியாது செய்யக்கூடிய காரியம்!” என்று ஜானகி என்ணமிட்டாள். அதைத் தொடர்ந்தே, ‘நாம் போனால் நம்மை அசட்டை செய்து அவமதித்தால் என்ற பயமும் தோன்றியது. “என்னவானாலும் சரி, போய்வந்து விடுவோம்” என்று தீர்மானித்து பரபரவென்று நல்ல புடவை மாற்றிக் கொண்டு பன்னிரண்டாம் பஸ்ஸில் ஏறி கிளம்பினாள்.

ஸாந்தோம் ஹைரோட்டில் ஒரே கார் வரிசை, ஜனத்திரள். கொட்டுமேளம் முழங்கியது. பங்களாவுக்கு வெளியே நின்ற கும்பலில் சமாளித்துக் கொண்டு கேட்டை நெருங்கினாள் ஜானகி. வாசலில் வாழை மரத்தடியில் நின்ற இரண்டு கூர்க்காக்கள் அவளை, “அழைப்பின் பேரில்தான் வந்தீர்களோ? அல்லது கூப்பிடாமல் வரும் கும்பலைச் சேர்ந்தவர்களோ?” என்று கேட்கிற மாதிரி பார்த்தனர். ஜானகியின் மனம் படபடத்தது. திரும்பிச் செல்ல முடியாத நிலைமை. விடுவிடென்று உள்ளே நடந்து சென்றாள். கல்யாணப் பந்தலில் ஒரே ஜரிகை அங்கவஸ்திரம், சலசலக்கும் பட்டுப் புடவைகள், மின்னும் நகைப்பு, பளபளக்கும் நகைகள் சந்தடி. யாரும் ஜானகியை ‘வா’ என்று உள்ளழைக்கவில்லை. உள்ளெழுந்த கூச்சத்தை அடக்கி மணமேடையருகே என்று உட்கார்ந்தாள். அண்ணாவும் மன்னியும் கன்னியைத் தானம் கொடுப்பதில் முனைந்திருந்த்னர்.

கொட்டுமேளம் கொட்டியது, தாலி கட்டியாயிற்று. ஜானகி புது தம்பதிகளுக்கு அக்ஷதை போட்டாள். “பண மன வறுமையின் நிழல் உங்கள் மீது என்றும் விழாது இருக்கட்டும்” என்று பிரார்த்தித்துக் கொண்டே கிளம்ப எழுந்திருந்தாள். பக்கத்தில் உட்கார்ந்திருந்த வயதான அம்மணி, “இதற்குள் போவானேன் அம்மா, இதோ ஆசீர்வாதம் நடக்கப் போகிறது. பிறகு சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்றாள். மர்றவர்கள் அந்த அம்மாவிடம் நடந்து கொண்ட முறையிலும், பேச்சிலிருந்தும் அவள் மணமகனின் பாட்டி என ஊகித்துக் கொண்டாள்”.

பாட்டியைத் தம்பதிகள் நமஸ்கரித்தனர். அப்பொழுதும் கலாவின் கண்களிலோ கிருஷ்ணஸ்வாமியின் கண்களிலோ ஜானகி படவில்லை.

ஆசீர்வாதம் ஆரம்பமாயிற்று. அம்மான் ஓதி கழிந்ததும் வாத்தியார், “பெண்ணுக்கு அத்தை எங்கே? அத்தை ஆசீர்வாதத்துக்கு அப்புறம்தான் மற்றவர்களுடையது” என்று கத்தினார்.

“பெண்ணின் அத்தையைக் கூப்பிடும் ஸ்வாமி” என்று சம்பந்தி உத்தரவிட்டார்.

கிருஷ்ணஸ்வாமி, “அவள் அத்தை கல்யாணத்துக்கு வர சௌகரியப்படவில்லை” என்று மழுப்பினான். உடனே மணமகனின் பாட்டி எழுந்து,”ஏன் வரவில்லை? அத்தையில்லாமல் ஒரு கல்யாணம் நடக்குமா, அவள் வராததற்கு ஏதோ காரணமிருக்க வேண்டும்” என்று சொன்னாள்.

“அதான் அவளுக்கு வர சௌகரியப்படவில்லை என்று சொன்னேனே! ஹூம் மேலே ஆகட்டும் பிரகஸ்பதி ஸ்வாமிகளே”! என்றான் கிருஷ்ணஸ்வாமி.

சம்பந்தி லேசில் விடுபவராக இல்லை. “என்னங்காணும் எதையோ ஒளிக்கப் பார்க்கிறீர்? அத்தை வரவில்லைன்னாலும் அவள் வீட்டார் ஒருவருமா வரவில்லை? உங்கள் உறவினர் வராததற்குக் காரணம் என்னவோ”?

வாதம் முற்றிவிடும் போலிலிருந்தது. பரிசு கொடுப்பதென்றால் எதைக் கொடுப்பது? அவள் எதையும் வாங்கி வரவில்லையே? ஒரு வெள்ளி வட்ட ரூபாய் கொடுக்கக்கூட அவளிடம் இல்லை. பளிச்சென்று யோசனை தோன்றியது. தன் பவழமாலையிலிருந்து தன் தாயின் நினைவுப்பொருளான கஜலக்ஷ்மி உருவமும் ‘நித்திய மங்களம்’ என்ற எழுத்தும் பொறிக்கப் பெற்ற தங்க மெடலை கழற்றினாள்.

“இதோ அத்தை நான்தான். நாராயணாச்சாரியார் ஆசீர்வாதம் என்று ஓதியிடுங்கள்” என்று நடுங்கும் கையால் அந்த மெடலை நீட்டினாள்.

திடீரென்று தோன்றிஒய சச்சரவுப் புயல் மறைந்தது. பல முகங்களிலிருந்து கவலையும் கோபமும் கலைந்தன. சிரிப்பு தோன்றியது.

“சோபனோ சோபமான...” என்று உபாத்தியாயர் கம்பீரமாக முழங்கினார்.

ஜானகி எழுந்து வெளியே வந்தாள். நிதானமாகக் கேட்டை நோக்கி நடந்தாள்.
“அம்மாவோட மெடலை என் பெண்ணுக்குக் கொடுக்க வந்த உன் உதாரம் மகா பெரியது ஜானகி! என் மானத்தைக் காப்பாற்றினாய். நீ இப்பொழுது போகக்கூடாது. என்னை மன்னித்து விடு. தயவு செய்து இங்கேயே இன்றும் நாளையும் தங்கு” என்று மன்றாடிக் கொண்டே அண்ணாவும் மன்னியும் பின் தொடர்ந்தனர்.

அவர்கள் சிறுமைக்கும் பிரதியாக பெருந்தன்மையானதொரு காரியம் செய்துவிட்ட மன நிறைவில் ஜானகியின் செவியில் அவர்கள் கூற்று விழவில்லை போலும். கம்பீரமாக உலகத்துக்கு நான் ராணி என்ற தோரணையில் வெளி நடந்து மறுபடியும் பன்னிரண்டாம் நெம்பர் பஸ் ஏறி வீடு சென்றாள் ஜானகி.


அன்புடன்,
டோண்டு ராகவன்

11/11/2010

வி.எஸ். திருமலை கதைகள் - 6. அதிசயச் சாமியார்

இது ஒரு லைட்டான கதை. அதிலும் சோபிப்பார் திருமலை அவர்கள் என்பதை இன்னேரம் புரிந்து கொண்டிருப்பீர்கள்தானே. நேரே கதைக்குப் போவோம் நாம்.

கவலை நிறைந்த உள்ளத்தினளாய் பார்வதியம்மாள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். அவள் கையில் இருந்த பெரிய புராணம் அவள் கவனத்தைக் கவராது இருந்தது.

“பரமசிவம்!” என்று கனத்த, அதிகாரக் குரல் வாசலில் கேட்டது. தெருவில் நின்ற சாமியாரை சரிவரக்கூட பார்க்கவில்லை பார்வதியம்மாள். வழக்கமாகத் தானே உள்ளிருந்து வந்து கனிவுடனும், தாழ்மையுடனும் அளிப்பாள்; இன்று அதற்கு மாறாகத் தன் சமையற்காரியைக் கூப்பிட்டு பிச்சை போடச் சொன்னாள்.

“அந்த சாமி பிச்சை வாங்குவதில்லையம்மா... ஆரூடம் தெரியும் என்கிறது. அதைக் கூப்பிடட்டுமா?” என்றாள் அவள், கையில் அரிசிப் படியுடன் திரும்பி வந்து.

“சரி, அந்தச் சாமியைத்தான் கேட்போமே, நம் மனக்குழப்பத்தைத் தீர்க்குதா, பார்ப்போம்” என்று எண்ணிய பார்வதியம்மாள், “திண்ணையில் உட்காரச் சொல்” என்று உத்தரவிட்டாள்.

அவள் ஒரே மகன் ஆறுமுகத்தைப் பற்றியதுதான் அவள் கவலை. தன் கல்வியை அவன் பூர்த்தி செய்து ஒரே மாதம் கூட ஆகவில்லை. கலாசாலையின் தன்கூட படித்த மீனாக்ஷியைக் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அவன் ஒற்றைக் காலில் நின்றான். மீனாக்ஷியின் குடும்பம் பண விஷயத்தில் ஆறுமுகத்தின் குடும்பத்துக்கு எந்த விதத்திலும் சமம் இல்லை. அவன் தகப்பனார் கதிர்வேலு முதலியாருக்குச் சற்று டாம்பீக மனப்பான்மை. கல்யாணம் என்றால் அவருக்கு ஒருவன் தனது வாழ்க்கைத் துணைவியை ஏற்றுக் கொள்ளும் சுபசம்பவம் மட்டும் அல்ல; பகட்டுக்குரிய ஒரு சந்தர்ப்பமும் ஆகும். அவர் எப்படித் தம் மகன் இஷ்டத்திற்குச் சம்மதிப்பார்?

அதற்கு முன் தினம்தான் கதிர்வேலு முதலியார் தனது ஸ்டாலின் மீசை துடிதுடிக்க, காளி போன்ற பெரிய உருண்டைக் கண்களில்தீ ஜொலிக்க இடி முழக்கம் செய்தார், மகனைப் பார்த்து.

“மைனர்வாள்! என்ன ஐயா இது? கன்றுக்குட்டிக் காதலா?.. ரொம்பத் தெரிந்தவன்தாண்டா நீ. நீயே பெண் பார்த்து விட்டாயோ..? வீட்டிலே பெரியவங்க இருக்கிறாங்க என்பதே உனக்கு ஞாபகம் இல்லை போலிருக்கு! சினிமாவில நடக்கிற மாதிரின்னு நெனைச்சுட்டியோ? அடேய், துஷ்யந்தா! இந்தப் பைத்தியக்காரத்தனமெல்லேம் இந்த வீட்டிலே நடக்காது, அதை மனசுலே வச்சுக்கோ!...”

இவ்வாறு இன்னும் என்னென்னவோ சொன்னார்.

வாயடைத்து நின்ற ஆறுமுகம், தன் அம்மாவை நோக்கிப் பல கண்வீச்சுக்களை வீசினான். “நீ குறுக்கிட்டு ஒரு வார்த்தை என் பக்கம் பேசாவிட்டால் அப்பா அடிக்க வருவார், அம்மா” என்று தீனமாக பேசின அவன் கண்கள். அவள் பேசாது இருந்து விட்டாள். “மனிதனுக்கு மிகச் சிறந்த நண்பன் அவன் தாய் என்று சொன்னவன் மடையன்!” என்று எண்ணிக் கசந்தான் ஆறுமுகம்.

ஆறுமுகத்தை அன்று காலை முதல் காணவில்லை. மத்தியானம் போஜனத்துக்குக் கூட வரவில்லை அவன். மகன் உணவில்லாமல் பட்டினியாகக் கிடக்கிறானே என்ற கவலை பார்வதியமாளுக்கு. அவனுக்கு மீனாக்ஷியின் மேல் உண்மையான காதலா என்பதை அறியமுடியாது தவித்தாள் பார்வதியம்மாள். நேசத்தையோ இச்சையுணர்ச்சியையோ சிறுவயதில் தவறாகக் காதல் என்று கொண்டு விடுகிறார்கள் என்பதை அவள் அனுபவபூர்வமாகவே உணர்ந்தவள். தன் மகனுக்கு அப்பெண்மேல் உண்மையான அன்பு இருந்ததா என்பதைச் சந்தேகமற உணர விரும்பினாள் அவள்! அவன் காதல் உண்மை என்ற நிருபணத்துக்காகவே அவளது சம்மதமும் ஆசியும் தயாராகக் காத்துக் கிடந்தன. எஜமானி சரி என்றால் கதிர்வேலு முதலியார் மாற்றிப் பேசுவாரா என்ன?

“ஓம் நமச்சிவாயா” என்று சாமியார் வாசலில் முழங்கினார். அங்கே சென்றாள் பார்வதியம்மாள்.

“திருக் கயிலையங்கிரியில் இருப்பவள் பெயருடையவளே! உனக்குச் சிவனருள்!” என்று ஆசி கூறினார் சாமியார்.

சாமியாரின் கம்பீரத் தோற்றத்தில் நல்ல சிவனடியாரின் லட்சணங்களைக் கண்டாள் பார்வதியம்மாள்.

பெரிய பெரிய செஞ்சடைகள், நீண்ட தாடி, வன்மை பொருந்திய உடலெங்கும் திருநீறு ஜொலித்தது. நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு, அடர்த்தியான புருவங்கள், பெரிய பெரிய ருத்ராக்ஷ மணிமாலை; சாமியார் பத்மாசனத்தில் உட்கார்ந்திருந்தார்; அவர் கை கண்டத்தில் இருந்தது; மற்றக் கை ருத்ராக்ஷ மணிகளை உருட்டிக் கொண்டிருந்தது.

“சாமி இளமை தாண்டவில்லை போலிருக்கு... ஆனால் என் பெயருக்குக் குறிசொல்லிவிட்டதே” என்று எண்ணினாள் பார்வதியம்மாள்.

“இச்சிவம் யாவும் அறியும்” என்றார் சாமியார், அவள் நினைப்பதை ஊகித்து. “நடந்ததைச் சொல்லும், நடக்கப் போவதையும் சொல்லும்.”

“கொஞ்சம் பால் பழம்...”

“சிவம் இன்றையப் பொழுதுக்கு ஆகாரம் உண்டுவிட்டது. இனி நாளைக்குத்தான்.”

“என் மனதில் ஒரு கவலை இருக்கிறது. சாமி ஏதேனும் சொன்னால்...” என்று இழுத்தாள் பார்வதியம்மாள். இதற்குள் அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள் கூடிவிட்டனர்.

“சிவம் சொல்வதைக் கேள், தாயே! உன் மகனைப் பற்றியல்லவா கவலை உனக்கு?... நல்ல பையன், பெயர் ஆறுமுகமோ? ஊம், புத்திசாலி... பூர்வஜன்ம பாக்கியம் இஅவன் மகனாகக் கிடைத்தான்” என்று பேசிக் கொண்டே போனார் சாமியார்.

சாமியார் மேலும் சொன்னார்: “ஆனால் உன்மகன் வாழ்வில் ஒரு கண்டத்தைக் காண்கிறது இச்சிவம். ஏமாற்றத்தால் அவன் துர்மரணம் அடையலாம்! சிவனருள் கிட்டட்டும் தாயே, நீ யோசித்து அவன் இஷ்டத்தைப் பூர்த்தி செய்; உனக்கு புதிய மகள் கிடைப்பாள்; மதுரைவாழ் அம்மன் பெயர் கொண்டவள் அப்பெண். அவள் கால் வைத்தால் உன் வீடு இன்னும் செழிக்கும்!”

பக்கத்து வீட்டு அம்மாவைப் பார்த்து சாமியார் சொன்னார்: “உன் மகள் ரேடியோவில் பாட விரும்புகிறாள்.. நடக்காத காரியம்; நற்குரலும், இசை இயல்பும் அவள் சுபாவ அணிகளில் காணப்படவில்லை... மாலையில் அவள் இசைப்பயிற்சி அபஸ்வரம் பிறருக்குத் தலைவேதனை கொடுப்பதைத் தவிர வேறு பலன் அளிக்காது...”

எதிர் வீட்டுப் பெண்ணின் வேண்டுகோளுக்கு சாமியார் சொன்னது: “உன் மகன் படிப்பு உனக்குக் கவலை தருகிறது. குற்றம் உன்னுடையதுதான்! அவன் வெளியே விளையாட வேண்டிய சமயத்தில் அவனை வீட்டினுள் அடைத்து வைத்தால் அவன் மனம் எப்படிப் புஸ்தகத்தில் செல்லும்?... ஆசைதீர விளையாடி வந்தானானால், அவன் கண் படிப்பதை அவன் அறிவு கிரஹித்துக் கொள்ளும்.

இப்படியாகப் பல குறிகள் சொல்லி, அவர்களை வியப்பில் மூழ்க அடித்து விட்டுச் சென்றார் சாமியார்.

அன்றிரவு பார்வதியம்மாளுக்கும் கதிர்வேலு முதலியாருக்கும் ஒரு சிறு விவாதம் நடந்தது. பார்வதியம்மாள் கட்சி ஜெயித்தது என்று சொல்லத் தேவையில்லை.

ஊரில் உள்ள எல்லோரும் அந்தக் கல்யாண வைபவத்துக்கு வந்து ஆறுமுகம்-மீனாக்ஷி தம்பதியை ஆசீர்வதித்தனர்.

கல்யாணச் சந்தடியெல்லாம் ஓய்ந்து தனிமை பெற்று, ஆனந்தமாக நிலா வெள்ளி முலாம் பூசிய தோட்டத்தில் நடக்கையில் நம் கதாநாயகன் கேட்டான்: “மீனா நான் சாமியார் வேஷம் போட்டு, அம்மாவை ஏமாத்தி, அப்பாவின் சம்மதம் பெற்ற சம்பவத்தை நீ நம்பவில்லையே?”

“அன்று சொன்னதை கெட்டால் எனக்குக் கதை மாதிரித்தான் இருந்தது. ஆனால் அத்தையே நேற்று சொன்னார்கள்!” என்றாள் அவன் சகதர்மிணி.

“அம்மாவே சொன்னாளா, என்ன உள்ருகிறாய்?” என்றான் ஆறுமுகம் வியப்புடன்.

“ஆமாம், பெற்ற தாயை ஏய்க்க முடியும்னு பார்த்தீங்களா?... அத்தைக்கு உங்கக் குரலைக் கேட்டவுடனேயே விஷயம் புரிஞ்சுடுத்தாம்! உங்க பொய்த் தாடியைப் பிச்சு, தலையில் தண்ணியைக் கொட்டலாமான்னு ஒரு கணம் யோசிச்சாங்களாம். அதுக்குள்ளே, ‘சீ, பாவம்! நம்ம பிள்ளைதானே? அந்தப் பெண் மேல் எவ்வளவு ஆசை இருந்தா இம்மாதிரி வேஷம்போடத் துணிவான்’ என்று தோணித்தாம். உடனே சரி, மகன் இஷ்டப்படியே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்துட்டாப் போச்சுன்னு அவங்க தீர்மானிச்சுட்டாங்களாம்” என்று விளக்கிச் சொன்னாள் மீனாக்ஷி.


அன்புடன்,
டோண்டு ராகவன்

10/27/2010

வி.எஸ். திருமலை கதைகள் - 5. கிருஷ்ணன் பொம்மை

வி.எஸ். திருமலை அவர்களது சிறுகதை தொகுப்பின் தலைப்பே இக்கதைக்கும் தலைப்பாகும். நேராகவே கதைக்கு போய் விடுகிறேன். ஓவர் டு திருமலை.

நான் அதற்குமுன் காந்தி நகருக்குள் சென்றதே கிடையாது. அன்று வெயிலில் நான் என் நண்பன் ஒருவனுடைய வீட்டைத் தேடித் தேடி அலுத்துப் போனேன். கடைசியில் அந்தக் காரியத்தைக் கைவிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு திருபி நடக்கும்பொழுது ஒரு வீட்டின் வாசலில் நின்ற ஒரு குழந்தை என் கண்ணில் பட்டாள். அவளைப் பார்த்ததும் என் மார்பு படபடத்தது. நெருங்க நெருங்க என் வியப்பு அதிகரித்தது. ‘அப்படியும் இருக்கக்கூடுமோ’ என்று தோன்றியது.

கமலாவின் குழந்தைதான் அவள். அதில் சிறிதளவேனும் சந்தேகமே இல்லை. என் கண்கள் மட்டுமா சாட்சியம் கூறின? என் சமுசயம்தான் அலறிற்றே!

அருகில் சென்றேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். வேறு ஒருவரும் தென்படவில்லை.

அவளுக்கு ஐந்து வயது இருக்கும். அவள் என்னைப் பார்த்து நெடுநாள் பழக்கமானவள் போல் முறுவலித்தாள். போக்கிரி! அன்று காலேஜில் முதல் சந்திப்பின்போது சிரித்தாளே கமலா, அதே சிரிப்பு. இரட்டைப் பின்னல் போட்டுக் கொண்டிருந்தாள் குழந்தை. அவளுடைய கையில் ஒரு பந்து இருந்தது.

வேறு யாரேனும் ஒருவரது குழந்தையாக இருந்தால்! தயங்கினேன். அவள் கமலாவின் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மறுபடியும் ஓங்கியது.

உலோபி போல் நான் என் மனத்துள் புதைத்து வைத்திருந்த கமலாவின் பல்வேறு தோற்ற ஞாபகப் படங்களைப் புரட்டிப் பார்த்தேன். எதிரே நின்ற குழந்தையின் தோற்றத்துடன் ஒப்பிட்டேன்.

கன்னங்களில் அதே குழிவு. தலைமயிர் சிறிது செம்பட்டையாக இருந்தது. சிறிய அழகிய மோவாய்க் கட்டை.

“உள்ளே வாங்கோ மாமா”.

குழந்தையின் பேச்சும் கமலாவின் இன்னிசைக் குரலையே எதிரொலித்தது.

இதற்குள் குழந்தையின் தகப்பனாரோ, “மைதிலி! வெயிலில் என்ன விளையாட்டு என அதட்டிக் கொண்டே வெளியே வந்தார்.

“மன்னிக்கவும், ஈஸ்வரி பாங்க் கோபாலன் வீடு எங்கே இருக்கிறது தெரியுமா?” என்று கேட்டேன்.

“அப்படி ஒருவரும் இந்தத் தெருவில் இருப்பதாகத் தெரியவில்லையே” என்று அவர் புருவங்களை நெரித்தார்.

“ஒரு டம்ளர் ஜலம் கொடுக்க முடியுமா, தயவு செய்து?” என்றேன் கைகுட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு.

“வெயிலில் நிற்பானேன்?” என்றார் அவர்.

சரி, குழந்தையின் அம்மாவைப் பார்த்து விடலாம் என ஆவலுடன் அவரைத் தொடர்ந்தேன்.வாயிற்படியைத் தாண்டியவுடன் இருந்த ரேழியில் செருப்பை விட்டுவிட்டு அதற்கப்புறம் இருந்த ஹாலுக்குள் நுழைந்தேன். கமலாவைத் தேடிய என் கண்கள் ஏமாற்றமடைந்தன. உள்ளே உட்கார்ந்திருந்த பெண்மணியிடம் குழந்தை மைதிலி, “அம்மா!” என்று அழைத்தவாறு ஓடினாள்.

“பார்வதி, ஒரு டம்ளர் ஜலம் கொண்டு வருகிறாயா?” என்று அவர் கேட்டு முடிப்பதற்குள் அந்த ஸ்திரீ உள்ளே சென்று விட்டாள்.

என்ன மடத்தனம்! கமலாவின் குழந்தை அவள், கமலாவையே சந்தித்து விடுவோம் என்றெல்லாம் எண்ணித் தவித்தேனே!

கமலா எங்கிருக்கிறாளோ? சுமார் பத்து வருஷங்களுக்கு முன் நான் கடைசியாகக் கமலாவைப் பார்த்த தினம் ஞாபகத்துக்கு வந்தது. ரயில்வே ஸ்டேஷனுக்கு அவள் வந்திருந்தாள். யுத்தம் என்றால் எப்படி இருக்கும் என்று பார்த்து விடலாமே என்று உற்சாகத்துடன் நான் ஆகாயப்படையில் சேர்ந்துவிட்டேன். அம்பாலா பயிற்சிக் கலாசாலைக்கு நான் போனபொழுதுதான் என்னை வழியனுப்ப அவள் வந்திருந்தாள்.

ரயில்வே ஸ்டேஷனில் எங்களுக்குள் பேச்சே இல்லை. இருவர் மனத்திலும் ஆயிரம் எண்ணங்களும் கேள்விகளும் இரைச்சலிட்டன. வெளியே மனிதர் சந்தடி எங்கள் மனநிலையைப் பிரதிபலித்தது. உள்ளத்தில் இருந்த வருத்தத்தையும் குழப்பத்தையும் மறைத்து சம்பந்தா சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றி வார்த்தையாடினோம். ரயில் நகர ஆரம்பித்தது. நான் ஜன்னல் வழியே அவளைப் பார்த்து நின்றேன். அவள் உருவம் பின்னுக்குச் சென்று கொண்டே இருந்தது. பிளாட்பாரத்தில் இருந்த மற்ற கும்பலுடன் கலந்தது. என் பார்வையிலிருந்து மறைந்து விட்டது.

டெல்லியிலிருந்து அவளுக்கு நான் தந்தத்தில் கடைந்தெடுத்த கிருஷ்ணன் பொம்மை ஒன்றை அனுப்பினேன், என் நினைவுப் பொருளாக. அதன் கூட ஒரு கடிதமும் எழுதியிருந்தேன். “நான் மரணத்துடன் வாழப்போகிறேன். என் வேலையில் நான் காலனின் முகத்தை எப்போதும் காணலாம். நாளைக்கு இருப்பது நிச்சயமற்ற, அபாயம் நிறைந்த விமானியாகிய நான் ஏன் உன் வாழ்வில் குறுக்கிட வேண்டும்? என்னை மறந்துவிடு” என்று எழுதியிருந்தேன். வேறு யாரோ ஒருத்திமேல் காதல் கொண்டேன் என்றும் அவள் எண்ணீயிருக்கலாம். மூன்று வருடங்கள் கழித்து நான் மறுபடியும் லீவில் சென்னை வந்தேன். ஆனால் கமலாவைக் காணமுடியவில்லை. அவளைப் பற்றித் தகவல் கூட ஒன்றும் அகப்படவில்லை. தேடியதெல்லாம் வீண். பக்கத்து வீட்டில் யார் குடியிருக்கிறார்கள் என்றுகூடக் கவலைப்படாத இந்தக் காலத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் எந்த ஊருக்கு மாற்றிப் போனார்கள் என்றா சொல்லப் போகிறார்கள்?

எதிரே ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வந்தாள் அந்த வீட்டுக்காரி. என் சிந்தனைத் தொடர் அறுந்தது. தலையை நிமிர்த்தி அந்த அம்மாளைப் பார்த்தேன். கமலா எங்கே? எதிரே நின்றவள் எங்கே?

“மிகவும் வந்தனம்” என்று சொல்லிவிட்டு ரேழிக்கு வந்து செருப்பை மாட்டிக் கொண்டபொழுது கீழே கிடந்த பொம்மையைப் பார்த்தேன். குனிந்து அதை எடுத்தேன்.

நான் கமலாவுக்கு அனுப்பிய தந்தக் கிருஷ்ணன்! யோசியாமல் அதை என் பையில் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன்.

பத்து வருஷங்களின் சின்னங்கள் மஞ்சளாகப் போயிருந்த அந்த தந்தப் பொம்மையின் மீது காணப்பட்டன. ஒருகை உடைந்து ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. உடலில் பல கீரல்கள்.

அந்தப் பொம்மை அங்கே எப்படி வந்தது? அதை வைத்துக் கொண்டு மைதிலி விளையாடியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவ்வளவு கீறல்கள் எப்படி வந்தன? ஒருகால் மதிலி கமலாவின் குழந்தைதானோ என்னவோ? இம்மாதிரி என் மனதில் பல கேள்விகள் எழுந்தன.

மைதிலி, கமலாவின் குழந்தையாகவேதான் இருந்தால் எனக்கென்ன? கடந்த பத்து வருஷங்களில் கமலாவின் வாழ்விலும் உள்ளப்பாட்டிலும் எவ்வளவு மாறுதல்களோ? அறுந்த நட்பை மீண்டும் ஒட்டவைக்க முடியுமா? மறுபடியும் அவள் வாழ்க்கையில் நான் எப்படி பிரவேசிக்க முடியும்?

ஆறு நாட்கள் என் ஆவலை அடக்கி வைத்திருந்தேன். பித்துப் பிடித்தவன் போல் ஆனேன். எப்படியாகிலும் கமலாவைப் பற்றிய விவரங்களை அறிய வேண்டும் என்கிற ஆசை அதிகரித்தது.

தந்தக் கிருஷ்ணனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற சாக்கை வைத்துக் கொண்டு மறுபடியும் ஒரு வாரம் கழித்து காந்தி நகருக்கு சென்றேன்.

பொழுது சாய்ந்து விட்டது. நான் அந்த வீட்டை நெருங்கிய பொழுது ஒரு டாக்டர் வெளியே வந்து காரில் போகக் கண்டேன். மைதிலிக்கு உடம்பு சரியில்லையோ என்று நினைத்துக்கொண்டே கதவைத் தட்டினேன். கதவு தாழிடவில்லை. உள்ளே நுழைந்தேன்.

ரேழியில் கமலா நின்று கொண்டிருந்தாள். “கமலா!” என்று கூவினேன்.

அவள் பதிலில் பத்து வருஷத்திற்கப்புறம் ஏற்படும் சந்திப்பின் வியப்பையோ, ஆர்வத்தையோ காணோம்.

“நல்ல வேலை செய்தாய், முரளி! குழந்தையின் பொம்மையையா திருடுவது?” என்று என்னைக் கமலா கடிந்தாள்.

மாறாத இளமையைப் பெற்றவளா அவள்? அவள் முகத்தில் காலத்தின் அடிச்சுவடுகளைக்கூட காணோமே! வயது ஆனதாகத் தெரியவில்லையே!

“இதோ!” என்று தந்தக் கிருஷ்ணனை நீட்டினேன். கமலா அதை வாங்கிக் கொள்ளவில்லை.

“அதைக் காணாத ஏக்கம், மைதிலியை ஜுரத்தில் கொண்டு வந்து விட்டது. பாவம், தவிக்கிறாள்! நல்ல வேளையாய்த் திருப்பிக் கொண்டு வந்தாயே. ஓடு, கொண்டுபோய் கொடு. அவளுக்கு உடம்பு சரியாகி விடும்”.

“உன் குழந்தையா மைதிலி!”

“பார்த்தால் தெரியவில்லை உனக்கு?”

“பின் ஏன் பார்வதியை அம்மா என்று அழைக்கிறாள் அவள்?” என்று கேட்டேன்.

கமலா சிரித்தாள். வெண்கல மணியின் சுத்த நாதம் போல் கேட்டது, அந்தச் சிரிப்பொலி. “பார்வதிதான் மைதிலிக்கு இப்பொழுது அம்மா. என் ஞாபகம் கூடக் கிடையாது குழந்தைக்கு... என் மீது மைதிலி காட்ட வேண்டிய பாசம் எல்லாம் அந்தப் பொம்மையின் மீது திரும்பி விட்டது.”

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

கமலா மேலும் சொன்னாள்: “நீ என் வாழ்விலிருந்து மறையும் முன் கொடுத்த அன்பளிப்பை என் பெண்ணுக்கு, அவளிடம் நிரந்தரமாக விடை பெறுமுன் கொடுத்தேன்... நான் அந்தக் கிருஷ்ணனை எவ்வளவு மதித்தேனோ, அதைவிட அதிகமாக மைதிலி நேசிக்கிறாள்!”

காலடிச் சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். மறுபடி கமலாவை நோக்கிய போது அவளைக் காணவில்லை. அவள் நின்ற இடம் சூன்யமாக இருந்தது.

“ஸார்” என்று குரல் கொடுத்தேன். உள்ளே சென்றேன். ஹாலில் மைதிலி கட்டிலின் மீது அப்படியும் இப்படியும் புரண்டு கொண்டிருந்தாள் ஜுர வேகத்தில்.

அவள் தகப்பனார் அருகே ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.

“போன வாரம் இந்தப் பொம்மையை வாசலில் கண்டெடுத்தேன். ஒரு வேளை உங்கள் குழந்தையின்...”

என்னை இடைமறித்து அவர் “மைதிலி, இதோ பார்! கண்ணைத் திற அம்மா! உன் கிருஷ்ணன் அகப்பட்டுவிட்டது” என்று கத்தினார்.

குழந்தை “அம்மா பொம்மை” என்று அதைக் கையில் வாங்கிக் கொண்டது. இரண்டே நிமிஷத்தில் நிம்மதியாக அயர்ந்து தூங்கவும் ஆரம்பித்தது.

சுவரில் மாட்டப்பட்டிருந்த கமலாவின் படம் என் கவனத்தைக் கவர்ந்தது. அன்றே அதைக் கவனிக்காமல் போனேனே!

என் பார்வையைக் குறித்த அவர் என் சந்தேகத்தைத் தாமாகவே நிவர்த்தி செய்தார்.

“தாயில்லாக் குழந்தை ஸார்! அந்தப் படத்தில் இருப்பவள்தான் தாய் - என் முதல் தாரம். நான் கொடுத்து வைக்கவில்லை. அவள் போய் நான்கு வருஷங்களாச்சு”.

அவர் அதைச் சொல்லும்பொழுது தொண்டையை அடைத்துக் கொண்டது. எத்தனையோ இன்ப நாட்களின் துன்ப நினைவுகள் ஏக காலத்தில் அவரைத் தாக்குகின்றன என்று ஊகித்தேன்.

என் கண்களில் தூசியோ ஏதோ விழுந்து விட்டது. கைக்குட்டையை எடுத்து ஒற்றிக் கொண்டேன்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

10/08/2010

வி.எஸ். திருமலை கதைகள் - 4. மாயக் குதிரை

ஏற்கனவேயே நான் சொன்னதுதான். அமரர் திருமலை உருக்கமான கதைகள் மட்டும்தான் எழுதுவாரா என்ற தயக்கமே வேண்டாம். நகைச்சுவையிலும் பின்னி எடுப்பார்.

திருமலை சாரின் இச்சிறுகதை பற்றி நான் கூறுவதைவிட நீங்களே படித்துக் கொள்வது நலம். எனக்கு மிகவும் பிடித்த கதை.

“நான் மகா மகா துரதிஷ்டக்காரன் சார் !” என்று கூறிய வண்ணம் கணேசய்யர் என் வீட்டுக்குள் நுழைந்தார். என்னிடம் கடன் கேட்க வரும்போதெல்லாம் அவர் அப்படி தமது துரதிர்ஷ்டத்தை நொந்துக் கொண்டு வருவார்; இல்லாவிட்டால் அவரிடம் எனக்கு அனுதாபம் உண்டாகாது என்பது அவருடைய அபிப்பிராயம்.

“நீங்கள் சொல்வது ரொம்பவும் உண்மைதான் சார்!... நீங்கள் அதிர்ஷ்டக்காரராக இருந்தால், இந்த நிமிடம் உங்களுக்குக் கடன் கொடுக்க என்னிடம் கொஞ்சம் கூடப் பணம் இல்லாமல் போகுமா?” என்று நான் பதில் சொன்னேன்.

“ஒரு ஐந்து ரூபாய் கூடவா இல்லை?” என அதிர்ச்சியடைந்து கேட்டார்.

“ஆமாம் சார்! என்ன செய்வது? ஒரு ரூபாய் கூட இல்லை!”

நான் மட்டும் ஒரு விஷயத்தில் சற்று அவசரப்படாமல் நிதானமாக யோசனை செய்திருந்தால், இப்போது நான் உங்களிடம் இப்படிக் கடன் கேட்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது சார்! சொன்னால் நீங்கள் நம்பவே மாட்டீர்கள்! ஆனால் உண்மையில் அது மாதிரி, போன திங்கட்கிழமையன்று என் வீட்டில் நடந்தது”.

“எது மாதிரி சார் நடந்தது?”

“நான் ஒரு பெரிய லட்சாதிபதியாக மாறியிருக்க வேண்டும்”.

“லட்சாதிபதியாகவா! அதிசயமாக இருக்கிறதே!”

“அதிசயம்தான் ! ஆனால் அவ்வளவும் உண்மை!”

“விஷயத்தை சற்று விளங்கும்படிதான் சொல்லுங்களேன்!”

கணேசய்யர் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, “போன திங்கட்கிழமை சாயங்காலம் ஒரு குடுகுடுப்பைக்காரன் வந்து, ‘மாயக் குதிரை உங்களுக்கு வேணுமா?’ என்று ஒரு குதிரை பொம்மையைக் கையில் வைத்துக் கொண்டுக் கேட்டான். “மாயக் குதிரை என்றால், மாயவித்தையெல்லாம் அது செய்யுமா? என்று நான் கேட்டேன்.

”மாயக் குதிரையாவது மண்ணாங்கட்டியாவது” சார்!... அவனை நீங்கள் நம்பி விட்டீர்களா என்ன?”

“அவனை முதலில் நம்பவில்லை. நம்பாமல்தான் அவன் குதிரையின் மாய சக்திகளைப் பற்றிக் கேட்டேன்.”

“அவன் என்ன சொன்னான்?”

“அவனிடமிருந்த மாயக் குதிரை நாம் வேண்டும் வரம் எதுவானாலும், அப்படியே கொடுத்து விடுமாம். ஆனால் இரண்டே தடவைகள்தான் அதை வரம் கேட்கலாமாம். அப்புறம் அதன் சக்தி மறைந்து விடுமாம்!”

“ஆச்சரியமாக இருக்கிறதே! ... நீங்கள் அதை விலை கொடுத்து வாங்கினீர்களாக்கும்?...”

“முழு விலையையும் கொடுத்து விடுவேனா? ... முன் பணமாக ஐந்தே ரூபாய்தான் கொடுத்தேன். அதன் சக்தி நிரூபிக்கப்பட்ட பின் அவன் கேட்ட இருபது ரூபாயைத் தருவதாகச் சொன்னேன். சரிதான் என அவன் போய் விட்டான்”.

“இப்படிக்கூட ஒருவர் அசட்டுக் காரியம் செய்வார்களா சார்?... போயும் போயும் ஒரு குடுகுடுப்பைக்காரன் வார்த்தையை நம்பலாமா?”

“முதலில் நான் நம்பத்தான் சார் இல்லை! ஆனால் அதை நம்பும்படி என் மனைவிதான் எனக்கு யோசனை சொன்னாள். ‘எல்லோருமே மோசக்காரர்களாக இருப்பார்களா என்ன? இவன் கொண்டு வந்திருக்கும் குதிரைப் பொம்மைக்கு மாய சக்தி இருக்காது என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்த மாதிரி அதிசயம் முன்பு ஒரு முறை நடந்திருப்பதாக என் தாத்தா சொல்லியிருக்கிறார்’ என்று அவள் பிடிவாதமாகச் சொன்னதன்பேரில், நான் அந்தப் பொம்மையை வாங்கி விட்டேன்.

“அப்புறம்?”

“உண்மையிலேயே அந்த குதிரைப் பொம்மைக்கு மாய சக்தி இருந்தது என்பது அன்று இரவுக்குள்ளாகவே தெளிவாகி விட்டது எங்களுக்கு”!

“என்ன! மாய சக்தியா! நிஜமாகவா?”

“நிஜமாகத்தான் சார், நிஜமாகத்தான்! அந்தக் குதிரை சாதாரண குதிரை இல்லை. மகா மாயாவிக் குதிரை”.

“அப்படி என்ன மாயா சக்தி இருந்தது அதனிடத்தில்?”

“நாம் கேட்கும் வரத்தைக் கொடுக்கும் சக்தி அதனிடம் இருந்தது சார்”!

“அப்படியா?”

ஆமாம், குடுகுடுப்பைக்காரன் அந்தக் குதிரையை கொடுத்துவிட்டுப் போன அரை மணி நேரத்திற்கெல்லாம், முதல் வரத்தைக் கேட்டு விட்டேன். வரம் கேட்டு இருபத்திரண்டு மணி நேரம் ஆவதற்குள் அதன்படி நடந்து விடும் என்று சொல்லியிருந்தான். ஆனால், கேட்டு நான்கு மணி நேரத்துக்குள்ளாகவே நான் கேட்ட வரம் அப்படியே பலித்து விட்டது...!”

“என்ன வரம் கேட்டீர்கள்?...”

“அதில்தான் நான் சற்று அவசரப்பட்டு விட்டேன்! மெள்ள நிதானமாக யோசித்து வரம் கேட்டிருக்க வேண்டும். என் மனைவி சொன்ன யோசனைகளையெல்லாம் கூட லட்சியம் செய்யாமல் ஒரு அழகான மோட்டார் கார் வேண்டும் என்று அவசரப்பட்டுக் கேட்டு விட்டேன்! ஆபீசுக்குப் போக ரொம்ப சௌகரியமாக இருக்குமே என்று அவ்வாறு கேட்கத் தோன்றிற்று!”

“அது கிடக்கட்டும்; நீங்கள் கேட்டபடியே உங்களுக்கு மோட்டார் கார் கிடைத்ததா என்ன?”

“பேஷாகக் கிடைத்தது”

“கிடைத்ததா? எப்படி கிடைத்தது? வானத்திலிருந்து வந்து குதித்ததா?”

“இல்லை! ...இரவு பத்து மணி இருக்கும். நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது என் மனைவி என்னைத் தட்டி எழுப்பி, ‘வாசலில் ஏதோ மோட்டார் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கிறது. சீக்கிரம் போய் பாருங்கள்!’ என்று சொன்னாள். அப்படியே நான் எழுந்திருந்து போய் வாசலில் பார்த்தேன்! அங்கே நிஜமாகவே வெகு அழகான பச்சை நிற மோட்டார் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.. அதன் பக்கத்தில் இருந்த ஒரு ஆசாமி ‘இந்த மோட்டார் கார் உங்களுடையதுதான்’ என்று கூறிவிட்டு சட்டென்று இருட்டில் எங்கோ மறைந்து விட்டான்”.

“அதிசயமாக இருக்கிறதே!”

“அதிசயம் என்றுதானே அப்போதிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன்?”

“ஆமாம், அந்த மோட்டார் நிஜமாகவே ஓடக்கூடியதுதானா?”

“அதே சந்தேகம்தான் என் மனைவிக்கும் உண்டாயிற்று. உடனே அவளைக் காரில் ஏறச்சொல்லி, நானே அதை ஓட்டிக் கொண்டு போனேன், பரீட்சித்துப் பார்ப்பதற்காக”.

“நன்றாக ஓடிற்றோ?”

“அதிவேகமாக ஓடியது. ஆனால், அது ஓடிய வேகத்தில் ஒரு புளீய மரத்தின் மேல் மோதிக் கொண்டது”.

“ஐயையோ,... அப்புறம்?”

“அந்த இடத்தில் என் மனைவி காயமடைந்து, அந்த இடத்திலேயே இறந்து விட்டாள்!”

“ஐயையோ, நிஜமாகவா?”

“பொய்யா சொல்வேன்?... பாக்கி சமாசாரத்தையும் கேளுங்கள்! நல்ல வேளையாக அப்போது மாயக் குதிரையின் சக்தி சட்டென்று நினைவுக்கு வந்தது. உடனே அதைக் கையில் எடுத்து இரண்டாவது வரத்தைக் கேட்டேன்”.

“மனைவி பிழைத்து எழுந்திருக்க வேண்டுமென்றா?...”

“பிழைத்து எழுந்திருந்தால், தேகமெல்லாம் காயங்கள் இருக்குமே சார்! விகாரமாகவல்லவா இருக்கும் பார்ப்பதற்கு?...”

“காயங்களும் மறைய வேண்டும் என்று கேட்டிருக்கலாமே?”

“கேட்பதற்கு ஒரே ஒரு வரம்தானே சார் பாக்கியிருந்தது.?

“அட ராமா!... சரி, அப்புறம் என்னதான் செய்தீர்கள்?”

“நடந்ததெல்லாம் ஒரு கனவாகப் போய்விடட்டும்’ என்று நான் வரம் கேட்டேன்! அப்படியே அதுவும் பலித்து விட்டது.”

“எப்படி?”

“யாரோ என்னைத் தட்டி எழுப்புவது போலிருந்தது. ‘அடேடே இதுவரை கண்டதெல்லாம் கனவுதானா!” என்று நான் உடனே விழித்துக் கொண்டேன். குதிரையும் மறைந்து போய் விட்டது”.

“எல்லாம் விசித்திரமாக இருக்கிறது சார்!”

“விசித்திரம்தான்! நான் மட்டும் அவசரப்பட்டு ஒரு மோட்டார் காருக்கு ஆசைப்படாதிருந்தால் விபத்தே நேர்ந்திருக்காது. இரண்டாவது வரத்தை அநியாயமாக வீணாக்கியிருக்க வேண்டாம். நான் ஒரு கோடீஸ்வரனாக வேண்டும் எனக்கேட்டிருக்கலாம்! அவசரப்பட்டு விட்டதால் எல்லாம் எல்லாம் வெறும் கனவாகி விட்டது! அதனால்தான் இப்போது உங்களிடம் கடன் கேட்கும் நிலைமைக்கு நான் வந்திருக்கிறேன்”.

கணேசய்யர் கூறிமுடிந்ததும், “கதை பேஷாக இருக்கிறதே சார்! இதை எந்தப் புத்தகத்திலாவது படித்தீர்களா?” என்று நான் அவரைக் கேட்டேன்! நான் கேட்டதுதான் தாமதம், அவர் சட்டென்று எழுந்திருந்து, “இந்தக் கதையை நீங்கள் ஏற்கனவே புத்தகத்தில் படித்தாகி விட்டதா?” என்று முணுத்த வண்ணம் நடையைக் கட்டி விட்டார்!


அன்புடன்,
டோண்டு ராகவன்







9/29/2010

வி.எஸ். திருமலை கதைகள் - 3. தவறாத தீபாவளி

இக்கதையை ஐம்பது/அறுபதுகளில் ஏதோ ஒரு பத்திரிகையின் தீபாவளி மலரில் படித்த நினைவு. அப்போதே மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டது. எழுதியவர் பெயரை அப்போது பார்க்கவில்லை. ஆனால் திருமலை சாரின் இக்கதைத் தொகுப்பில் இதன் முதல் வரியை படிக்கும்போதே, அடேடே இதை அவர்தான் எழுதியதா என நிமிர்ந்து உட்கார்ந்தேன். இதை அவரது அவரது மனைவியிடம் கூறியபோது தானும் அதே மாதிரி முன்பு படித்து மனதில் நின்ற பல கதைகள் தனது திருமணத்திற்கு பிறகுதான் இவர் எழுதியது எனக் கண்டறிந்ததாகக் கூறினார். இப்போது ஓவர் டு திருமலை:

“அம்மா, நேரமாச்சு. நீ போய் படுத்துக்கோயேன்!”

“இதென்னடி வேடிக்கையாயிருக்கு! பத்தடித்து விட்டது. இன்னம் மாப்பிள்ளையைக் காணோம்! உன் குடும்பம் நன்னாத்தான் நடக்கிறது!”

“எவ்வளவு கடுதாசுலே எழுதியிருக்கேன்! எவ்வளவு தரம் நான் உனக்குச் சொல்றது, அவர் சாதாரண டாக்டரில்லைன்னு? அவர் வேலை பூராவும் முடியற மட்டும் அவருக்கு வேறு நினைவே வராது ... காரணமில்லாமல் அவர் தாமதிக்க மாட்டார். நீ போய் படுத்துக்கோ. நேர்று ராத்திரி ரயிலிலே என்ன தூக்கம் கண்டிருப்பாய்? நாள் பூராவும் அடுப்பண்டை உட்கார்ந்து வேலை வேறு செய்திருக்கே! இவ்வளவு பட்சணங்களையும் யார்தான் திங்கப் போறாளோ! அவ்வளவும் வீணாப் போகப் போறது!”

“தன் பெண் தலை தீபாவளி இவ்வளவு ஜோரா நடந்ததுன்னு தெரிஞ்சா உங்க அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டுப்பா! அது என்ன அப்படி ஒழியாத வேலை உன் அகமுடையானுக்கு? ‘தலை தீபாவளிக்கு நீங்கள் ரெண்டு பேரும் வருவேள். பிரமாதமா கொண்டாடலாம்’னு, உன் அண்ணா, மன்னி, அப்பா, நான் எல்லோரும் என்ன என்னமோ திட்டம் போட்டுண்டிருந்தோம். அதுதான் நடக்கவில்லை. முதல் தடவையாக நான் இங்கு வந்தால் வீடு வெறிச்சிட்டு கிடக்கு.எஜமானனைக் காணோம். நீ கவலையில்லாமல் ரேடியோவைத் திருப்பிண்டு உட்கார்ந்திருக்கே. பண்டிகைக்கு முன்னாளே இப்படியிருந்துதுன்னாக்கே சாதாரண நாளெல்லாம் எப்படியிருக்குமோ...?

“அம்மா தீபாவளிக்கு இன்னம் ஆறேழு மணி இருக்கு. நீ நிம்மதியாய்த் தூங்கு. நாளைக்குப் பண்டிகை நன்றாக, குறையில்லாமல் நடக்கும்”.

“எனக்கென்னவோ பிடிக்கவில்லை, பாமா! என் தலை தீபாவளி என்னமா நடந்தது! அதையும் நெனைச்சு, இப்போ இங்கே நடப்பதைப் பார்த்தால்...”

“அம்மா, என் நிலை முற்றிலும் வேறு மாதிரி, அதோ அவரது கார் சப்தம் கேட்கிறது. அவர் வந்து விட்டார்!”

உள்ளே வந்தார் டாக்டர் முரளி. அவர் முகத்தில் வழக்கத்தைவிட அதிகமான சோர்வும், யோசனையும், கவலையும் இருப்பதைக் கண்டாள் பாமா.

“என்னம்மா சௌக்கியமா? ஊரில் எல்லாரும் சௌக்கியம்தானே? ரயில் நேரத்துக்கு வந்துதோல்லியோ? தலை தீபாவளிக்கு என்று அங்கே வர முடியவில்லை. நல்ல வேளை நீங்கள் இங்கு வந்தீர்கள், பாமாவுக்கு ஏமாற்றத்தை விலக்க! ... ஓ இது என்ன பாமா, இது? பக்ஷணமா? ஹும் ஹூம்! இப்போ வேண்டாம். ஊச்! ரொம்ப களைப்பாயிருக்கு. ஒரு ஆப்பிள் கொடு. பாலில் இரண்டு ஸ்பூன் அதிகமாகவே க்ளூக்கோஸ் போடு. நாளைக்கு சீக்கிரம் போனால் தேவலை. ஒரு சிக்கலான ஆப்பரேஷன் பண்ணியாகணும்...”

“நல்ல டாக்டர் வேலை! தீபாவளிக்கு, அதுவும் தலை தீபாவளிக்குக் கூட ஓய்வு கிடையாதா?” என்று மாமியார் கேட்டாள்.

“தன் தலை தீபாவளியன்று தான் கண்ட இன்பத்தைத் தன் பெண் பாமாவும் அனுபவிக்க வேண்டும், தானும் அதைக் கண்டு மகிழ வேண்டும் என்பது அவள் உள்ளூற ஆசை.

“நோயும் விபத்தும் தீபாவளிக்கு என்று விடுமுறை எடுத்துக் கொள்ளவில்லையே, அம்மா! என் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் பெரும்பாலானோர் சிறுவர்கள். இன்றைக்கு சாயங்காலம் நான் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தபோது இரண்டு அபாய நிலைக் கேசுகள் வந்து சேர்ந்தன. அதிலே ஒரு பையனுக்கு உடனேயே ரண சிகிச்சை செய்யும்படியாக இருந்தது. ஐந்து மணி நேரம் பிடித்தது அந்த ஆப்பரேஷனுக்கு. மற்றவனுக்கு நாளைக்கு ஆப்பரேஷன் பன்ணியாகணும். அதுக்கு உதவி செய்ய இரண்டு டாக்டர்களை வேறு வரச் சொல்லியிருக்கேன்”.

“உங்களுக்குத் தீபாவளி வேண்டாமா?”

“அவசியம் வேணும்! இன்றைக்கு அந்தப் பையன் பிழைத்தான், இப்போ பாருங்கோ, அவன் வீட்டில் நிற்கவிருந்த தீபாவளி தவறாது நடக்குமோல்லியோ? எனக்கு அது போதும், அம்மா” என்று சிரித்தவாறு கூறி டாக்டர் முரளி முகம் கழுவச் சென்றார்.

பாமா பாலும் பழமும் எடுத்து வந்தாள். டெலிபோன் கூப்பிட்டது.

“டாக்டர் முரளிதரன் வீடு!... இல்லை; அவர் இன்னும் வரவில்லை...ஊம் வந்தவுடன் டெலிஃபோன் செய்யச் சொல்கிறேன்...”

பாமா பேசி முடிந்த பிறகே டாக்டர் ஸ்னான அறையிலிருந்து திரும்பி வந்தார்.

“பாமா! டெலிபோன் மணி சப்தம் கேட்டுதே, யாரு?”

“யாரோ, தவறான எண்ணைக் கூப்பிட்டு விட்ட போலிருக்கு!” என்று பாமா பொய் சொன்னாள்.

படுத்தவுடன் அயர்ந்து தூங்கி விட்டார் முரளி. சிறு விளக்கை அணைக்கு முன் உறங்கும் கணவனைப் பார்த்து வெய்துயிர்ந்தாள் பாமா. அவர் தலைமயிர் கலைந்து நெற்றியில் தவழ்ந்தது; அகன்ற மர்பு விம்மிவிம்மித் தாழ்ந்தது! மார்பின் மேல் ஒரு கை, பக்கத்தில் ஒரு கை. நீண்ட, மெல்லிய பலமுள்ள விரல்கள். குணமாக்கும் கத்தி பிடித்து, ஜீவ வீணையில் தவறிய சுருதியை மீண்டும் கோக்கும் விரல்கள்...ஆம்! அபூர்வ சமயங்களில் பாமாவின் ஆவியில் இன்ப நாதம் எழச்செய்யும் கரங்கள்தான்.

“குழந்தை மாதிரி தூங்குகிறாரே! நான் ‘நர்ஸிங் ஹோமிலிருந்து டெலிபோன் வந்ததை உண்மையாகவே சொல்லியிருந்தால், இத்தனை நேரம் அங்கல்லவா ஓடியிருப்பார்! என்ன தொழில் இது! ஓய்வு, நிம்மதி, தூக்கம் எதற்கும் இடம் தராத தொழில்!” என்று எண்ணியவளாய், பாமா லேசாக அவர் மீது போர்வையைப் போட்டு சரிசெய்தாள்.

திடீரென்று ஞாபகம் வந்து, பரபரவென்று போய் டெலிபோன் ரிசீவரை எடுத்துத் தனியாக வைத்தாள். இந்தத் தீபாவளி இரவாவது அவரைத் தொந்தரவு செய்யாது இருக்கட்டும் அந்த ராக்ஷஸ டெலிபோன்! தன் அந்தரங்க ஆசைக்கு என்றில்லையானாலும், அம்மாவின் திருப்திக்காகவாவது தலை தீபாவளியைத் தடங்கலில்லாது கொண்டாட வேண்டாமா?

டெலிபோன் ரிசீவர், தொடர்பு அறுக்கப்பட்டக் கருவியாய் அதன் தொட்டிலைப் பிரிந்து கிடந்தது.

பாமா தயங்கினாள்.

அவசரமாக டாக்டர் தேவையாயிருந்து யாரேனும் டெலிபோன் செய்தால்! தன் இச்செய்கையாக் டாக்டர் டெலிபோனில் கிடைக்காது ஓர் உயிர் பலியானால்!

தன் காரியம் தகாதது என்று உணர்ந்து அதை நிவர்த்தி செய்தாள். இதற்கே காந்த்திருந்தது போல் மணி உடனே அடித்தது!

நர்ஸ் சுப்ரியாதான் கூப்பிட்டது. மறுநாள் ஆப்பரேஷன் செய்யலாம் என்று இருந்த சிறுவன் நிலை மோசமாகி வந்தது. உதவி டாக்டரும் அவளும் கொடுத்த தற்காலிகச் சிகிச்சை பலன் அளிக்கவில்லை. பெரிய டாக்டரின் நித்திரையை கலைக்கக் கூடாது என்ற தன் தீர்மானத்தை மீறித்தான் சுப்ரியா டெலிபோன் செய்தாள்.

“காலை மட்டும் தள்ளிப் போட முடியாதா சிஸ்டர்? ரொம்பச் சோர்ந்து போயிருக்கிறாரே, அவரை எப்படி எழுப்புவது” என்று கேட்டாள் பாமா.

“எனக்குத் தெரியாதா? நிர்ப்பந்தமிருந்தால் ஒழிய நன் கூப்பிடுவேனா? என் மேல் கோபிக்கிறீர்களே என்றாள் சுப்ரியா.

கோபமாகப் பேசியதற்கு மன்னிக்கவும், சுப்ரியா! இதோ பார், இன்று எங்கள் தலைதீபாவளி. காலை ஐந்தரை மணிக்கு அவரை அனுப்பி விடுகிறேன். அவருக்கு ஓய்வும் உறக்கமும் மிக அவசியம். எங்கள் பண்டிகை முக்கியம். தடை எதுவும் வராதிருக்க வேண்டுமே என்பதுதான் என் பிரார்த்தனை. தயவு செய்து வேறு ஏதாவது செய்ய முடியுமா, பார்! உனக்குக் கோடி புண்ணியம் உண்டு!”

மணி பதினொன்று அடித்தது. வெளியே மழை சற்று நேரம் பிசுபிசுத்தது. குளிர் அதிகரித்தது. எங்கோ தொலைவில் ஒரு பட்டாசு வெடித்தது. பாமாவுக்குத் தூக்கம் கொள்ளவில்லை.

அவளுக்கு 26 வயதானதும் கல்யாணம். உடனே தனிக்குடித்தனம். அதற்க்காகவெல்லம் பண்டிகையின் முக்கியத்துவமும் இன்பப் பெருக்கும் குறைந்து விடுமா? அதோடு வாழ்க்கையில் எந்த உணர்ச்சியையும் தன் சொந்த அனுபவத்தில் கண்டால் தவிர பிறர் சொல்லக்கேட்டு உணர்வது கூடாத காரியமல்லவா?

சிருங்காரம் என்பதற்கு டாக்டர் முரளிக்கு அதிக அவகாசமில்லை. அவர் தொழில், இல்லை - அவர் கலை அவர் வாழ்க்கையில் பிரதான ஸ்தானம் வகித்தது. “என் கண்ணே, மூக்கே, காதே” என்றெல்லாம் அவர் பாமாவை அழித்து என்றும் குலாவியதே இல்லை. சில சமயங்களில் தான் ஒருத்தி மனைவி என்றிருப்பது அவருக்கு நினைவில்லாமல் போய் விடுகிறதே, தன்னைப் பற்றி அவர் அன்புடன் சிந்திப்பதாகப் பிரமாணமாகத் தெரியவில்லையே என்று பாமா நினைப்பதுண்டு. தேக சௌக்கியம், பண லாபம், சௌகர்யம் என்பதையெல்லாம் கருதாது உழைத்துத் தேய்கிறாரே என்ற அங்கலாய்ப்புடன்தான், பாமா அவரைப் போற்றி வந்தாள்.

பன்னிரண்டு மணியும் போய் விட்டது. பாமா புரண்டாள். கண்ணிமையை மூட முடியவில்லை. அவள் மனப்பாரம் தூக்கத்தை அழுத்திவிட்டது. படுக்கை நொந்தது. நீர் குடித்துவிட்டு பாகனியில் போய் நின்றாள்.

“க்ரீங், க்ரீங் ... க்ரீங், க்ரீங்....”

“ஐயோ அவரை எழுப்பாது இருக்க வேண்டுமே இவ்வலறல்” என்று திடுக்கிட்டு ஓடி டெலிபோனை எடுத்தாள்.

உதவி டாக்டர் சுந்தராச்சாரி பேசினான், நர்சிங் ஹோமிலிருந்து.

“இந்தப் பையன் உடம்பு ரொம்ப மோசமாகி விட்டதம்மா... இன்னம் ஒரு மணி நேரத்தில் எமெர்ஜென்சி ஆப்பரேஷன் செய்தாக வேண்டும். இல்லையானால்...”

“சரி. அவரை வரச்சொல்கிறேன்.”

“நாங்கள் இங்கு தியேட்டரை தயார் செய்து வைக்கிறோம்”. அவர் வந்தவுடனே வேலை துவக்கலாம்...”

“அவரிடம் அதையும் சொல்கிறேன்!” என்று ரிசீவரைக் கீழே வைத்தாள்.

பரபரவென்று எலெக்ட்ரிக் ஸ்டவ்வில் இரண்டு டம்ளர் காப்பி தயாரித்தாள். டாக்டரின் உடைகளைத் தயாராக எடுத்து வைத்து விட்டு, அவரை எழுப்பி, காப்பி குடிக்கச் சொல்லிவிட்டு, ஷெட்டுக்கு ஓடினாள். காரை அவள் எடுத்து வருவதற்கும், டாக்டர் வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

“நானே ஓட்டிச் செல்கிறேன், பாமா!”

“ஏறிக் கொள்ளுங்கள் சீக்கிரம்!” என்று பாமா க்ளச்சை அழுத்தினாள்.

நர்சிங் ஹோம் கட்டடத்தின் வாசலில் அவள் காரை நிறுத்தியவுடன், “நீ வீட்டுக்குப் போய் தூங்கு, பாமா, நான் எப்போ திரும்புவேனோ தெரியாது...” என்று சொல்லி ஆப்பரேஷன் தியேட்டருக்கு விரைந்தார் முரளி.

வீட்டுக்குத் திரும்பிய பாமா மறுபடியும் படுக்கச் செல்லவில்லை. இன்னும் கொஞ்சம் காப்பி அருந்தி விட்டு, விளக்கைப் போட்டு ஒரு நாவலைப் படிக்க முயற்சி செய்தாள். வகையறியாத ஓர் உணர்ச்சி அவளைக் குழப்பிற்று. எப்படியோ காலம் கழிந்து ஐந்தரை மணியாயிற்று. நர்சிங் ஹோமை டெலிபோனில் கூப்பிட்டு விசாரித்தாள்.

“இன்னம் அரை மணிக்கு மேல் ஆகும். இப்போதுதான் தையல் போட ஆரம்பித்திருக்கிறார், டாக்டர்...”

“உங்கள் ஆஸ்பத்திரியையே இடித்து விட வேண்டும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. டாக்டருக்குத் தீபாவளி இல்லாது அடித்து விட்டீர்களே!”

“டாக்டருக்கு மட்டுமென்ன அம்மா! இங்கு வேலை செய்யும் எங்களுக்கும் தீபாவளி கிடையாதுதான். நாங்கள் பெரியவர்கள், பரவாயில்லை!... இப்போது இங்கே நாற்பது சிறுவர்கள் இருக்கிறார்களே. தீபாவளியை இழக்க அவர்களுக்கு எப்படி மனம் ஒப்பும்? யோசித்தீர்களா?... இதைப் பார்த்துப் பார்த்துத்தான் எனக்கும் ஒருவித விரக்தி ஏற்பட்டு விட்டது! ... தவிர்க்க முடியாததைத் தைரியமாக ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்...”

“நன்றாகப் பேசுகிறாயே, சிஸ்டர்!”

தீபாவளி ஆரம்பித்து விட்டது. அம்மா புது ஜவுளியை எடுத்து வைத்திருந்தாள். கிண்ணத்தில் எண்ணெய், ஸ்னான அறையில் வெந்நீர், தட்டுத் தட்டாக பக்ஷணம், டபராவில் லேகியம், கூடை நிறைய புருசு, மத்தாப்பு, பட்டாசு வெடி வகையறா எல்லாம் காத்திருந்தும் பயனென்ன?

வெளி எங்கிலும் மங்கள வெடி ஓசை முழங்கியது. இன்னம் சற்று நேரத்தில் அக்கம் பக்கத்தினர் கங்கா ஸ்னானம் விசாரிக்க வந்து விடுவார்கள்.

“சீ! இது இழந்த தீபாவளியா?” என்று சலிப்புடன் தன்னையே வினவினாள் பாமா.

அவள் தாய் அதுவரை ஒன்றும் பேசாமலிருந்தாள்.

“என்ன, யோசனையில் ஆழ்ந்து விட்டாய், பாமா?” வருத்தப்படக்கூடாதம்மா. அவர் வந்தவுடன் பண்டிகையைக் கொண்டாடி விட்டால் போச்சு” என்றாள்.

பாமா சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சொன்னாள். “இல்லை, இல்லை. வருத்தமா? நான் மட்டுமா...” அவள் பெச்சு திடீரென நின்று விட்டது, குறுக்கிட்ட ஒரு நினைவால்.

நர்ஸ் சற்றுமுன் என்ன சொன்னாள்? “இங்கே இப்போது நாற்பது நோயாளிச் சிறுவர்கள் இருக்கிறார்களே! தீபாவளியை இழக்க அவர்களுக்கு எப்படி மனம் ஒப்பும்?... என்றல்லவா கேட்டாள்!

ஏன் அவர்களும், நானும், தன் கணவனும் தீபாவளியை இழக்க வேண்டும்? ஏதாவது தன்னால் செய்ய முடியாதா?

ஆம்! சந்தர்ப்ப சௌகர்யமில்லாத எல்லோரும் சேர்ந்து பண்டிகையை நடத்தினால்: ஏன் அவ்வாறு செய்யக்கூடாது?

உற்சாகமாகக் குதித்தாள் பாமா. வெறி பிடித்தவள் போல், “அம்மா, என் தலை தீபாவளியை வீணாக்கவே வேண்டாம்! ஆனந்தமாகக் கொண்டாடலாம்... ஊம்...கிளம்பு!” என்று ஒரு கூடையில் மத்தாப்பு, புருசு வாணங்களைப் போட்டாள். பட்டாசு வெடிகளை ஒதுக்கி விட்டாள். ஒரு பெரிய பூனா டப்பா நிறைய திரட்டுப் பாலும் ஜிலேபியும் வைத்தாள். கூடை, டப்பாவைக் காரில் எடுத்து வைத்தாள். ஒரு பிளாஸ்கில் காப்பியையும் எடுத்துக் கொண்டாள்.

திகைத்துக் குழம்பிய தன் தாயை இழுத்து, காரில் ஏற்றி, தீபாவளி முழங்கும் தெருக்கள் வழியே நர்சிங் ஹோமை நோக்கி வேகமாக ஓட்டினாள்.

தன் வேலை முடிந்து, தன் அறைக்குத் திரும்பிய டாக்டர் முரளிதரன் திகைத்து நின்றார்.

வார்டின் நடுவே ஒழிக்கப்பட்ட இடத்தில் புருசு வாணங்களை ஒவ்வொன்றாகக் கொளுத்திக் கொண்டிருந்தாள் பாமா. தத்தம் படுக்கையில் சாய்ந்தவாறு கிரீச்சிட்டு க்தூகலமாகக் கத்தினார்கள் சிறுவர் சிறுமியர். வழக்கமாக அந்த இடத்தை ஆண்ட நோய், மௌனம் எங்கே? நர்ஸ் சுப்ரியா மத்தாப்பு வினிஒயோகத்தில் ஈடுபட்டிருந்தாள். வேலைக்காரர்கள், சில குட்டி டாக்டர்கள் எல்லோரும் இந்த நர்சிங் ஹோம் தீபாவளியில் பங்கெடுத்துக் கொண்டிருந்த்னர்.

“என்ன அருமையான யோசனை என் பாமாவுக்கு!” என்று டாக்டர் முரளி எண்ணமிட்டபோது, “வாருங்கள் டாக்டர்! உங்களுக்கென்று உங்கள் மனைவி தனியாக வாணங்கள் பங்கு வைத்திருக்கிறார்!” என்றாள் நர்ஸ் சுப்ரியா.

“உங்கள் உத்திரவில்லாமல் தின்பண்டங்கள் எதுவும் கொடுக்கக் கூடாதென்கிறாளே நர்ஸ்!” என்றாள் பாமா.

“தாராளமாக பக்ஷணம் கொடு. எல்லாரும் ரண சிகிச்சை கேசுகள்தானே? அந்த மூலையில் மார்பியா மயக்கத்தில் சூழ்ந்து கிடக்கும் இரண்டு புது கேசுகளை மட்டும் விட்டுவிடு. பாவம்; அவர்களுக்கு இன்னும் எட்டு மணி நேரத்துக்கு நினைவே வராது!”

“வாருங்கள், டாக்டர். இந்த புருசைக் கொளுத்துங்கள். என் மத்தாப்பை பத்த வையுங்களேன்... எனக்கு இன்னொரு கைக்கும் ஜிலேபி வேணும்!... டேய், என் மத்தாப்பைப் பாரடா, எவ்வளவு ஜோரா பூ விடுகிறது!”

அன்று வார்டில் ஆழி மழைக் கண்ணனே வந்திருந்து களித்தான் என்றபடி டாக்டர் முரளி - பாமா தம்பதியினரின் தவறாதத் தலைதீபாவளி அமோகமாக நடந்தது.

ஒருவரும் எண்ணெய் தேய்த்து, புத்தாடை உடுத்தவில்லை. அதனால் என்ன? வேறு விதத்தில் ஜமாய்த்தல்லவா விட்டனர்! குழந்தைகளுக்குக் கரை காணா ஆனந்தம். அதற்குக் காரணமாயிருந்த பாமாவுக்குப் பூரண திருப்தி. பழைய காலத்து மனுஷி, அவள் அம்மாவுக்கு ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்பும்போது மணி எட்டாகி விட்டது. தெருவெல்லாம் வெடித்த பட்டாசுக் குப்பை. பண்டிகையின் ஜாலவித்தையுடைய உஷஸுடன் கழற்றி, உலகம் தன் பழைய துணிகலைப் போட்டுக் கொண்டு விட்டது போல் தோன்றியது.

பாமாவுக்கு அரைத் தூக்கம். டாக்டர் மெதுவாகக் காரை ஓட்டினார். அவர் தோள்மீது தலையைச் சாய்த்து, கண்களை மூடினாள் பாமா. அவர்கள் அந்நியோன்னிய நிலையைப் பின்னால் உட்கார்ந்திருந்த அம்மா பார்த்து பெரிதும் மகிழ்ந்தாள்.

“பாமா! பாமா! தூங்கி விட்டாயா? நான் என்னமா கார் ஓட்டுவது?” என்றார் முரளி.

பாமா கண்களைத் திறக்கவில்லை. பதில் பேசவில்லை. அன்றைய சம்பவங்களை நினைவில் மீண்டும் அனுபவித்துக் கொண்டிருந்தாள் அவள். அத்தினத்தை அவள் என்றென்றும் மறவாள்.

சிறிது நேரம் கழித்து டாக்டர் தன் மாமியாரிடம் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் பாமாவின் செவியில் புகுந்தது.

“ஊம்! பாமா தூங்கிப் போய்விட்டாள்! சோர்வு! அம்மா, இன்று உங்கள் பெண் எவ்வளவு பெரியதொரு காரியம் செய்தாள்! எங்கள் எல்லாத் தீபாவளிகளையும் இம்மாதிரி பிறருடன் இன்பம் பகிர்வதில் கொண்டாடுவோம்!... உங்கள் பெண் ரொம்ப தைரியசாலி, அம்மா! என் வேலையில் கருத்தாயிருந்து நான் அவளை அதிகம் கவனிப்பதேயில்லை. அதனால் குறைப்பட்டுத் தேயாது, மனமிடியாது இருக்கிறாளே, அதுதான் உண்மை தைரியம்! உங்களிடம் பெருமைக்காக நான் இதைச் சொல்லவில்லை... பாமா எனக்கு எவ்வளவு துணை, பல, ஆதரவு என்பதை விவரிக்கவே முடியாது! அவளை மனைவியாக அடைந்தது என் பாக்கியம்தான்... சீதை போட்ட பாதையில் நடக்கும் பெண் அவள்.”

பாமா புளகாங்கிதமானாள். அவள் குறைவு, ஏக்கம், பசப்பு, மனவிருள் எல்லாம் கண்ணன் முன் ந்ரகாசுரன் போல் தகர்ந்தொழிந்தன.


அன்புடன்,
டோண்டு ராகவன்

9/20/2010

வி.எஸ். திருமலை கதைகள் - 2. அடுத்த வீட்டுப் பெண்

அமரர் திருமலை உருக்கமான கதைகள் மட்டும்தான் எழுதுவாரா என்ற தயக்கமே வேண்டாம். நகைச்சுவையிலும் பின்னி எடுப்பார். உதாரணம் இப்பதிவுக்கான கதை.

நினைவிருக்கட்டும். கதை எழுதிய காலகட்டம் ஐம்பதுகளில். அப்போதெல்லாம் ட்ரங்க் காலில்தான் உரக்கக் கத்திக் கத்தித்தான் பேச வேண்டும். செல்பேசி பற்றி யாருக்கும் கனவுகூட இருந்திருக்க முடியாது. மேலும், அப்போதெல்லாம் 200 ரூபாய் சம்பள உயர்வெல்லாம் பெரிய உயர்வுதான். இப்போது ஓவர் டு திருமலை.

வீட்டிலிருந்து வரும் கடிதங்கள் வழக்கமாக, “உன் கடிதம் கிடைத்தது. க்ஷேமம். க்ஷேமத்திற்கு எழுதவும். இங்கு நாங்கள் எல்லோரும் சௌக்கியம். நீ சௌக்கியமா? இரண்டு நாட்களாக சிரஞ்சீவி கண்ணனுக்கு சற்று இருமல். வேறு விசேஷமில்லை. உன் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள். உடனே பதில். ஆசீர்வாதம்...” என்ற ரீதியில் அமைந்திருக்கும். என் குடும்பத்தினர் கடிதம் எழுதும் கலையைப் பயிலாதவர்கள்.

ஆனால் அந்த சனிக்கிழமையன்று வந்த கடிதத்தில் அதிகப்படியாக சில வரிகள் இருந்தன. தற்செயலாக எழுதப்பட்ட வரிகள். அடுத்த வீட்டுப் பெண் அகல்யாவுக்கு வரன் அநேகமாக நிச்சயமாகி விட்டது. போன வருஷம் உன்னைக் கேட்டார்கள். நீதான் என்னவோ, கல்யாணமே பண்ணிக் கொள்ளப் போவதில்லை என்று நிராகரித்தாய். பிள்ளை வீட்டார் வரும் ஞாயிறன்று முடிவு சொல்வதாகச் சொல்லிவிட்டுப் போனார்கள். பிள்ளை உன்னைப் போல வெளுப்பு இல்லை. அட்டைக்கரி! ரதி மாதிரி இவள் கிடைக்க அவன் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும்...”

அதற்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. அம்மாவின் கடிதம் கையிலிருந்து நழுவித் தரையில் விழுந்தது.

ஏன்தான் நான் மாட்டேன் என்று சொன்னேனோ! எதையாவது மனதில் நினைத்துக் கொண்டு தீர்மானமாக ஒரு வார்த்தை சொல்லி விடுகிறோம்; பிறகு வருந்த நேரிடுகிறது. போன வருஷம் நான் ஒரு மாதம் லீவில் ஊருக்குப் போனேன். அப்பொழுது அகல்யாவை எனக்குக் கொடுப்பதாகப் பேச்சு வந்தது. என் நண்பர்கள் பலர், உறவினர் பலர் எல்லோரும் சம்சார சாகரத்தில் மாட்டிக் கொண்டு தவிப்பதாக என் புத்திக்கு அப்போது பட்டது. குழந்தைகள் அமளி, ரேஷன் தொல்லை, டாக்டர் “பில்” இதெல்லாமல்லவா பெண்டாட்டியைப் பின்பற்றி வரும் என்று பயந்தேன். தவிர, என் அப்பொழுதைய வருமானம் எனக்கே போதாததாக இருந்தது. அவசரப்பட்டுக் கல்யாணம் செய்து கொண்டு ஒரு பெண்ணையும் வறுமையில் இழுப்பானேன் என்றும் பட்டது.

விடுமுறை கழித்து கல்கத்தா திரும்பிய பின் என் நிலை மாறி விட்டது. வைரத்தைப் போல் கடின நெஞ்சுடையவர் என்று நான் என் எஜமானரைப் பற்றிக் கொண்டிருந்த அபிப்பிராயம் தவறாகி விட்டது. அவர் எனக்கு இருநூறு ரூபாய் சம்பள உயர்வு கொடுத்தார். கூலியைக் கருதாது ஏழு வருஷம் உழைத்ததற்கு முதல் பலன் கிடைத்து விட்டது.

கலிகாலமாச்சே என்று வியக்காதீர்கள்! இது உண்மை! விவாகத்திற்கு ஒரு தடை அகன்றது. என் மனம் மாற இன்னொரு முக்கியக் காரணம் வைத்தா ஹோட்டல் சாப்பாடுதான். வைத்தா நளபாகமே செய்து போட்டாலும் வீட்டுச் சாப்பாட்டுக்கு ஈடாகுமா! ஹோட்டல் சாப்பாட்டினால் நாக்கு செத்தே விட்டது. தினம் கங்கைக் கரையில் அமர்ந்து சூரிய அஸ்தமனத்தின் ஜாலத்தைக் காணுகையில் என்னுள் தவிர்க்க முடியாத தனிமையுணர்ச்சி தோன்றும்; அதைத் தொடர்ந்து அகக்கண் முன் அகல்யாவின் மதிமுகம் எழுந்து என்னை வேதனை செய்யும்.

என் மன மாறுதலைப் பற்றி என் தாய் தந்தையருக்கு எழுத வகை தெரியாது சும்மா இருந்தேன். அவர்கள்தான் ஆகட்டும், கல்யாண விஷயமாக முதலில் எழுதக் கூடாதோ? இப்போதோ மேற்சொன்ன கடிதம் கோடையிடி போல் வந்து என்னைத் தாக்கியது.

நான் என்ன செய்வது? அகல்யா மாதிரி வேறு பெண் கிடைப்பாளா? எப்படியாவது...

வீட்டிற்குத் தந்தியடித்தால்? குறுகிய என் தந்தியில் என் மனப்போக்கையும் விருப்பத்தையும் முழுமையாக விளக்கிச் சொல்ல முடியுமா? தந்திக்காக அடுத்த வீட்டார் கல்யாணப் பேச்சை நிறுத்துவார்களா?

திடீரென தோன்றிய அதியற்புத யோசனையால் துள்ளிக் குதித்தேன்.

டெலிஃபோனை எடுத்த கால் மணிக்கெல்லாம் ‘ஆபரேட்டர்’ குரல் கேட்டது. என் அதிருஷ்டம்! ஏனெனில் கல்கத்தாவில் ஒரு தரம் டெலிஃபோன் செய்வதற்குக் குறைந்தது ஒரு மணி நேரம். ‘ட்ரங்க்’ என்றேன். ‘ட்ரங்க’ கிடைத்ததும் ‘மதராஸ் இன்ன நம்பர், அவசரக் கூப்பாடு, குறித்த நபருடன் பேச வேண்டும். அந்த நபர் பெயர் மிஸ்டர் வரதராஜன். டெலிஃபோன் இருக்குமிடத்துக்கு பக்கத்து வீட்டிலிருக்கிறார்’ என்று விளக்கம் சொல்லி ரிசீவரைக் கீழே வைத்தேன்.

மதராஸ் எண் எப்பொழுதடா கிடைக்கும் என்று ஆவல்டன் தவம் செய்தேன்.

என் சிந்தனையில் உருவெடுத்து அகல்யா என்னை ஏசல் செய்தாள். நான் அவளை எவ்வாறு வர்ணிப்பேன்! அன்றலர்ந்த மலரென மிளிரும் வதனம், அதில் பளிச்சென்று கதுப்புக் கன்னங்களில் குழி விழச் செய்யும் வெற்றிப் புன்னகை; பிறையைப் போல இயங்கும் அவள் நுதலில் திகழ்ந்தது ஒரு திலகம்; கருமை தீட்டிய அகன்ற விழிகள்; எப்பொழுதும் இயற்கையோ என்று கண்டவர் ஐயுறும் புதுமைப் பொலிவு; நாளுக்கு நாள் அதிக எழிலோங்கும் சருமம்; பிரகாசமாகச் சலவை செய்யப்பட்டுள்ள வாயில் புடவை, மல் ரவிக்கை (ஆம், வாசகர்கள் பலர் ஊகித்த மாதிரி என் வேலை விளம்பர சம்பந்தமுடையதுதான்).

மாதமிருமுறையாவது நான் வேலை நிமித்தமாக என் காரியாலயத்தாருடன் ‘ட்ரங்க்’ டெலிஃபோனில் பேசுவதுண்டு. ஆனால் என் வீட்டில் யாருமே அது மாதிரி தூரதேசப் பேச்சுப் பேசினதே இல்லை. அப்பாவுக்குக் கூட இதுதான் முதல் அனுபவமாக இருக்கும். பக்கத்து வீட்டு அம்பி போய், “கல்கத்தாவிலிருந்து டெலிஃபோன் வந்திருக்கு மாமா” என்று சொன்னவுடன் அப்பா மட்டுமென்ன, வீட்டில் எல்லோருமே அப்படியே எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு டெலிஃபோனுக்கு ஓடுவார்கள் என்று எண்ணினேன். இந்த எண்ணம் எனக்கு அடக்கமுடியாத சிரிப்பை உண்டாக்க்கியது. அது நிஜமாகவே நடந்து விட்டபோது சிரிப்புக்கு பதில் கண்ணீர்தான் உண்டாயிற்று.

அப்பாவிடம் என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்ற பிரச்சினை.

நான் ஏன் பயந்து தயங்க வேண்டும்? நான் என்ன குழந்தையில்லையே? மீசை வைத்துக் கொண்டிருக்கிறேன்! (ஊருக்குப் போகுமுன் அதை எடுத்து விடுவது வழக்கம். அதனால் என்ன?) நிதானமா, அழுத்தமா பேச வேண்டும் என்று என் மனதைத் திடம் செய்து கொண்டேன்.

டெலிஃபோன் மணி நீண்டு கதறிற்று. ரிசீவரை எடுத்துக் காதில் வைத்தேன். மார்பு படபடத்தது; உடல் முழுவதும் குப் என வியர்த்து விட்டது.அப்பாவுடன் பேசுவது ஆபீசுடன் பேசுவது போலாகுமா?

ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிலிருந்து கிணற்றிலிருந்து பேசுவது போல் குரல் கேட்டது.

“ஹல்லோ! நான்தான் முரளி பேசறது! ஹல்லோ நான் சொல்வது காதில் விழுகிறதா?” என்று கத்தினேன்.

“யாருடா, முரளியா? உன் குரல் மாதிரியே கேட்கவில்லையே? என்னடா விசேஷம்? ஏதாவது உடம்பு சரியில்லையா? ஏதாவது ஆபத்தில் மாட்டிக் கொண்டு விட்டாயா?...” பேசியது என் தாய். அப்பாவுக்கு முந்தி ஓடிவந்து டெலிஃபோனை எடுத்துக் கொண்டுவிட்டாள் என்பதை பின்னர் அறிந்தேன்.

“உடம்பெல்லாம் சரிதான் அம்மா. ஆபத்து ஒன்றுமில்லை. சும்மாத்தான் கூப்பிட்டேன்.”

சும்மாவா கூப்பிட்டாய்? டெலிஃபோன்காரன் சும்மா விட மாட்டானே?” ஏகப்பட்டப் பணம் செலவழியுமே? நல்ல பிள்ளையடா நீ!”

“இல்லைம்மா, அடுத்தவீட்டுப் பெண்...” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கையில் அம்மாவிடமிருந்து அப்பா டெலிஃபோனைப் பிடுங்கிக் கொண்டு விட்டார்.

“என்னடா முரளி! கல்கத்தாவிலே ராத்தூக்கம் இல்லாம ஊர் சுத்துகிறாயாமே?” என்று அதட்டினார் அப்பா.

“நான் சொல்வதைத் தயவு செய்து கேளேன் அப்பா!” அடுத்த வீட்டுப் பெண்...”

“அடுத்த வீட்டுப் பெண் கிடக்கிறாளடா! உன்னை இரவு பன்னிரண்டு மணிக்கு சௌரங்கியில் பார்த்தேன் என்று கோண்டு கடிதாசு எழுதியிருக்கிறான்... அங்கு கண்டிக்க ஆளில்லை போலிருக்கு!... ஒழுங்காக இருப்பதாக உத்தேசம் ஏதாவது உண்டா காவாலிப் பயலே!”

“ஒழுங்காத்தான் இருக்கேம்பா! வந்து... அடுத்த வீட்டுப் பெண்...”

“ஆமாண்டா அவளுக்குக் கல்யாணம் அநேகமா நிச்சயமாயிடுத்து. முகூர்த்தத்தேதி வைக்க வேண்டியதுதான் பாக்கி! ... இதோ சரோ பேசணும் என்கிறாள்” என்று சொல்லி அப்பா டெலிஃபோனை சரோவிடம் கொடுத்து விட்டார்.

“நான்தான் சரோ பேசறது! டேய் முரளி, எனக்கு நீ பெங்கால் சில்க் புடவை வாங்கி அனுப்பறேன்னு சொன்னியேடா! சொல்லி ஒரு வருஷமாச்சு!”

“அதுக்கென்ன பிரமாதம் சரோ. அடுத்த மாதம் கட்டாயம் வாங்கி அனுப்பிச்சுடறேன். அப்பாவிடம் கொடு. அடுத்தவீட்டுப் பெண்...”

“ஆமாம் அகல்யாவுடைய பெங்கால் சில்க் புடவை மாதிரியேதான் எனக்கும் வேணும். மஞ்சளிலே கறுப்புப் பொட்டு போட்டு, அஜந்தா பார்டரோட...இந்தாடீ அங்கச்சீ, நீ பேசு!” என்று சரோ, டெலிஃபோனை அங்கச்சியிடம் கொடுத்து விட்டாள். அங்கச்சிக்குத்தான் வீட்டில் அதிகாரம் ஜாஸ்தி.

“முரளி! உன் பிராமிஸை தண்ணீலேதாண்டா எழுதணும். ரிஸ்ட் வாட்ச் வாங்கித் தரேன்னு எவ்வளவு நாளா ஏமாத்திண்டிருக்கே!”

“வாட்ச் கிடக்கட்டும். அப்பாகிட்டே ஃபோனைக் கொடம்மா தயவு செய்து”

“வாட்ச் கிடக்கட்டுமா? நன்னாயிருக்கு! என் கிளாசிலே என்னைத் தவிர ஒருத்தியாவது வாட்ச் இல்லாமல் மூளிக் கையோட வரதில்லை. நீ வாட்ச் சீக்கிரம் அனுப்பலைன்னா நான் காலேஜ் போவதையே நிறுத்தி விடுவேன்”.

“அடுத்த மாதம் நல்ல வாட்சா அனுப்பறேன் அங்கச்சி. அடுத்த வீட்டுப் பெண்ணைப் பற்றி அப்பாவிடம்...”

“அகல்யாவா! ஐய, அதுக்கு இருக்கிற மண்டை கர்வத்தைப் பாரேன்! என்கூட பேச மாட்டென் என்கிறது! தான் ரதி என்கிற என்ணம்டா அதுக்கு!”

“அப்பாவிடம் ஃபோனைக் கொடேன் அங்கச்சி, நேரமாச்சு” என்று கத்தினேன். அங்கச்சி இதற்கெல்லாம் பயப்படுவாளா?

“அப்பாகிட்டேதான் பேசியாச்சேடா? இந்தா குழந்தை கிட்டே பேசுடா!” என்று கடைக்குட்டி கன்ணனிடம் கொடுத்து விட்டாள்.

“கண்ணன் பேசறேண்டா, தெரியறதா முரளி? நான் ரொம்பப் பெரியவனாப் போயிட்டேன்! ரசகுல்லா அனுப்பவே மாட்டேங்கறயே!”

“நாலு டப்பா அனுப்பறேண்டா கண்ணா! நாளைக்கே அனுப்பறேன்.”

கூட ஒரு ட்ரைசைக்கிளும் அனுப்பு!”

“சரி”

“அப்புறம் இரண்டு கிரிக்கெட் பேட் வேணும்”

“சரி. அப்பாவிடம் டெலிஃபோனைக் கொடுடா ராஜா!”

“என்ன முரளி...” என்றார் அப்பா.

“அப்பா! வந்து அடுத்த வீட்டில்” என்று நான் சொல்ல ஆரம்பிக்கையில் ஆப்பரேடர் இடை மறித்து “மூன்று நிமிஷம்” ஆகிவிட்டது!” என்றார். அப்பா டெலிஃபோனை அதன் தொட்டியில் வைத்து, தொடர்பை அறுத்து விட்டார்.

எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இதுமாதிரி ஒரு குடும்பத்தில் பிறந்த எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் என்று எண்ணிக் கசந்தேன். என்ன வாழ்க்கையிது, ஏமாற்றம் நிறைந்த வாழ்க்கை! சீ! இன்று மாலை அகல்யாவுக்கு எல்லாம் நிச்சயமாகிவிடும். இப்பொழுது வேறு ஒருவன் அந்தக் கிளியை கவ்விக் கொண்டு போய்விடப் போகிறான்.

சனி இரவு தூக்கம் கொள்ளவில்லை. ஞாயிறன்று பூராவும் ரூமில் தங்காது ஸிட்பூர் பொட்டானிகல் கார்டனில் போய் அலைந்தேன். சுற்றிச் சுற்றிக் கால்கள் இரண்டும் சளைத்துப் போய் விட்டன. பெரும் களைப்பினால் ஞாயிறு இரவு நல்ல நித்திரை.

திங்களன்று காலை அம்மாவிடமிருந்து கடிதம் வந்தது.

“...நீ ஏதோ டெலிஃபோனில் எல்லாரிடமும் ‘அடுத்த வீட்டுப் பெண்’, ‘அடுத்த வீட்டுப் பெண்’ என்று உளறினாயாம்! சொல்வதைச் சரியாக சொல்ல வயசாகவில்லையா என்று அப்பா கோபிக்கிறார்... ஒருவேளை, கல்யாண விஷயமாக உன் மனது மாறியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றிற்று.... அடுத்த வீட்டார் மற்ற வரன் பேச்சை புதன் வரை ஒத்திப்போட ஒப்புக் கொண்டார்கள்... அகல்யா நம் வீட்டில் வாழ்க்கைப்பட வேண்டும்னு எனக்கு நெடுநாளாக ஆசை. நீதான் குரங்கு புத்தி படைத்தவன்!...உன் அபிப்பிராயத்தைத் தந்தி மூலம் தெரிவிக்கவும். ‘ட்ரங்க்’ டெலிஃபோன் செய்யாதே. உனக்கு டெலிஃபோனில் பேசவே தெரியவில்லை....”

என் குடும்பத்தாரைப் பற்றி சற்று முன் நானா குறை சொன்னேன்?


அன்புடன்,
டோண்டு ராகவன்

9/17/2010

வி.எஸ். திருமலை கதைகள் - 1. விடுதலை

சில மாதங்களுக்கு முன்னால் திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லத்தில் உள்ள கஸ்தூரி சீனுவாசன் நூலகத்தில் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன். திடீரென “கிருஷ்ணன் பொம்மை” என்னும் தலைப்பில் சிறுகதை தொகுப்பொன்று கிடைத்தது. ஆசிரியர் வி.எஸ். திருமலை என்றிருந்தது. என் மாமாவின் மாப்பிள்ளைகளில் ஒருவர் பெயரும் அதேதான். பின்னட்டையில் பார்த்தால் அவரேதான், அதாவது அமரர் வி.எஸ். திருமலை.

புத்தகத்தை எடுத்துகொண்டு 12-ஆம் பஸ்ஸில் ஏறினேன். மாம்பலம் செல்வதற்குள் அத்தனை கதைகளையும் படித்துவிட்டு பிரமிப்பில் ஆழ்ந்தேன். மனிதரிடம் இவ்வளவு திறமை இருந்ததா, இது முன்னாலேயே தெரியாமல் போயிற்றே, தெரிந்திருந்தால் திருமலை அவர்களிடம் அப்போதே அவற்றை எல்லாம் விவாதித்து ஆனந்தம் அடைந்திருக்கலாமே என்ற ஏக்கம் எழுந்தது. அவரது மனைவி மும்பையில் வசிக்கிறார். அவரது தொலைபேசி எண்ணைப் பெற வேண்டி மாமா வீட்டுக்கு போன் செய்ததில் அவரே லைனுக்கு வந்தார். பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல் ஆயிற்று.

அவருடன் எல்லா கதைகளையும் டிஸ்கஸ் செய்தேன். அடுத்த முறை அவரைச் சந்தித்தபோது அப்புத்தகத்தின் ஒரு காப்பியை எனக்கு அன்புடன் தந்தார். திருமலை அவர்கள் மறைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு 1997-ல் அவர் இப்புத்தகத்தை அச்சில் ஏற்றியுள்ளார். விக்ரமனின் அணிந்துரை இத்தொகுப்பில் உண்டு. இதில் உள்ள சில கதைகளை நான் ஏற்கனவேயே பத்திரிகைகளில் அவை வெளியானபோது படித்துள்ளேன். ஆனால் எழுத்தாளர் பெயரை கவனிக்கவில்லை (அப்போது அவர் இன்னும் என் மாமாவின் மாப்பிள்ளையாக இன்னும் ஆகவில்லை என நினைக்கிறேன்). ஆனால் இத்தொகுப்பில் அவற்றின் முதல் சில வரிகளை படித்ததுமே, “அடேடே இதை இவர்தான் எழுதினாரா” என்னும் வியப்பு வந்தது நிஜம்.

கதைகள் ஐம்பதுகள், அறுபதுகளில் எழுதப்பட்டவை. ஆகவே மொழிநடை சற்றே பழக்கமில்லாததாக இருக்கலாம். இருப்பினும் நான் அதை இற்றைப்படுத்தவில்லை. அவை இப்போது பலரால் படிக்கப்பட வேண்டும் என்னும் நோக்கத்திலேயே இங்கு அவற்றை தட்டச்சு செய்து வெளியிடுகிறேன். அமரர் திருமலையின் மனைவி திருமதி (ஜம்பகா) சித்ரா திருமலை அன்புடன் அனுமதி அளித்துள்ளார். அவருக்கு என் நன்றி.

இப்பதிவுக்கு நான் தேர்வு செய்த இக்கதையை தொகுப்பில்தான் படித்தேன், முன்னால் படிக்கவில்லை. இப்போது கதைக்கு போவோம்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

அன்று என்னவோ கிழவரின் சுபாவமான அமைதி அவரைக் கைவிட்டு விட்டது போலும்! காலையில் நடந்த ஒரு சம்பவம் அவர் மனத்தைச் சிறிது கலக்கி விட்டது. பகவான் நாமத்தை ஜபித்தும் மனவேதனை அடங்கவில்லை.

காயும் வயிறு கதறியது, அன்று ஒன்றும் சாப்பிட வேண்டாம் என்று அவர் கொண்டிருந்த தீர்மானம் நிலை குலைந்தது. சுவையும் பசியும் மனிதனை ஆட்டி வைக்கும் துரோகிகள் அல்லவா என்று என்ணினார்.

அவர் சிறுவனாக இருந்த காலத்தில் முதுமைக்கும் ஞானத்துக்கும் குணத்துக்கும் மரியாதையுண்டு, மதிப்புண்டு. அவர் வாழ்நாளில் உலகம் பொருளாதார உலகமாக மாறிவிட்டது. மனிதனின் முயற்சியை வெற்றி தோல்வியைக் கொண்டும், மனிதனின் தரத்தை செல்வத்தைக் கொண்டும் எடை போட்டது சமூகம். அவர் மாட்டுப் பெண் விஜயம் இப்பண்பற்ற மனப்போக்கைக் கொண்டவள். காலையில் அவள் சொன்ன வார்த்தைகள் “ அவர் வாழ்க்கையில் என்னதைச் சாதித்து விட்டார்? ஐநூறு ஆயிரம் என்று சம்பாதித்தாரே இன்று காலணாவுக்குப் பிரயோசனம் உண்டா? பணம் சேர்த்து வைத்திருந்தாரானால்...”

ஆம்! அவள் சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்தது. இன்று அவரிடம் பணமிருந்தால் பிள்ளை ரகு, அவன் மனைவி விஜயம் இருவரின் போக்கே வேறு மாதிரியாக இருந்திருக்கும். அவரும் பிள்ளையின் தயவை அண்டாமல் சுதந்திரமாக வாழ்ந்திருக்க முடியும்.

நாளையென்பது படைத்தவன் பொறுப்பு என்று அவர் என்றும் திண்ணமாகக் கொண்டு பணம் சேர்க்கவில்லை. அவர் சம்பாத்தியத்தில் பெரும் பங்கு ஆஸ்பத்திரிகளுக்கு அனாமதேய நன்கொடைகளாகச் சென்றது. ரகுவின் தாயார் வெகு நாள் ஆஸ்பத்திரியில் இருந்து காலமானாள். அவளுக்கு நடந்த வசதிகளுக்கோர் நன்றியாகவும், பிணியால் வாடும் சமூகத்துக்கு ஆஸ்பத்திரிகளின் அவசிய உதவியை உணர்ந்ததாலும், அவர் சம்பாதித்த காலத்தில் மேற்சொன்னவாறு செய்தது. புகழையோ பிறர் மதிப்பையோ கருதிச் செய்யும் கொடை தர்மமாகாது என்று அவர் தமது நன்கொடைகளை பெயரில்லாமல் ரகசியமாகச் செய்தார். தன் தகப்பனார் சம்பாத்யம் எல்லாம் எப்படி மறைந்தது என்று ரகு வியப்பு கொள்வான். “எனக்குச் சேர வேண்டிய அவர் பணமெல்லாம் யாருக்குப் போகிறதோ!” என்று ஆத்திரப்படுவான்.

ரகுவுக்கு உண்மையில் பணக்குறைவு ஒன்றுமில்லை. நல்ல வேலையில் இருந்தான். விஜயாவும் பணம் படைத்தவள்.செல்வந்தர் வீட்டுப் பெண். “காலணாவுக்குப் பிரயோசனம் உண்டா”? என்றல்லவா கேட்டாள். ஒரு காசுக்குப் பிரயோசனம் இல்லாவிட்டாலும் இவ்வுடலால் கூட அவர்களுக்கு ஒருவித உபயோகமும் இல்லாது போகிறதே என்று கிழவர் வருத்தப்பட்டார். ‘அவர்களுக்கு ஒரு வீண் பாரமாகத்தானே நாம் இருக்கிறோம்’ என்று தோன்றியது. வேறு போக்கிடமுமில்லை. போகுமுன் அவர் மனைவி இன்னும் ஒரு மகவைத் தந்திருந்தால்! அது அவர் பழைய குறை. போகட்டும். இன்று எவரும் லட்சியம் செய்யாத தனி ஆளாக ஆகிவிட்டோமே என்ற அவர் த்யவிப்பைத் தவிர்க்க ஒரு பேரக் குழந்தை வரக்கூடாதா? ஏதோ குடும்பக் கட்டுப்பாடு என்று இயற்கையை ஏமாற்றும் முறைகளை ரகுவும் விஜயாவும் அனுசரித்துத் தங்களையே ஏமாற்றிக் கொண்டு விட்டனர். இப்போது குழந்தை பிறக்காதா என்று ஏங்கினர் அவர்கள்.

தன் குழந்தைகளின் மூலம்தான் மனிதன் அழியா அமரத்துவம் அடிகிறான்.

தளிகை அறையினுள் சென்றார் கிழவர். க்ண் மங்கியது. காது அடைத்துக் கொண்டது. சுவரின் மேல் சாய்ந்து கீழே விழாமல் சமாளித்தார். மயக்கம் தெளிந்தது.

மேடையில் ஒரு பாத்திரத்தில் அரிசி உப்புமா செய்து வைத்திருந்தாள் விஜயம். ஷெல்பில் நெய்க் கிண்ணத்தைத் தேடினார்; காணோம். பூட்டப்பட்ட வலைபீரோவினுக்குள்ளிருந்த நெய் ஜாடியும் கிண்ணமும் கிழவரைக் கண்டு சிரித்தன. அரிசி உப்புமா என்றால் அவருக்கு அதிகம் பிடிக்கும். எதிலும் நெய் நிறைய ஊற்றிச் சாப்பிட்டே பழக்கமாகி விட்டது.

இன்று ஒரு முட்டை நெய்க்கு அவர் மருமகள் தயவை நாட வேண்டியிருந்தது. கிழவருக்கு நெய் தேவை என்பதை விஜயம் மறந்து விடவில்லை; ஆனால் கிழமாமனாருக்கு எது செய்தாலும் வியர்த்தமாகப் பட்டது.

இந்த உப்புமாவை சாப்பிட்டுத்தான் ஆகவேண்டுமா? கிழவர் தயங்கினார். காலை நிகழ்ச்சிக்கு இதுதானே காரணம்?

காலை காப்பியானவுடன், “அப்பா! இன்று நானும் விஜயமும் ஒரு கல்யாணத்துக்குப் போகிறோம். திரும்பிவர நேரமாகலாம்...” என்றான் ரகு.

“யாருக்குக் கல்யாணம்?”

“அவாளை உனக்குத் தெரியாது.”

சரியாகப் பதிலளித்தான் மேல்கொண்டு பெண்வீட்டார் யார், பிள்ளைக்கு என்ன படிப்பு, வேலை, ஆஸ்தி, சீர் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி ஜாபிதா எழும் என்று என்ணினான் ரகு. தன் நண்பர்களுடன் இந்த விவரங்களை மணிக்கணக்கில் பேசுவதில் அவனுக்கு சுவாரசியம் இருந்திருக்கும். ஆனால் தன் தந்தை கிழவருடன் எந்தப் பேச்சும் அவனுக்கு அனாவஸ்யமாகப் பட்டது.

வாயில் அருகே நின்ற விஜயம் “யாராயிருந்தால் அவருக்கு என்ன இப்போ? நேரமாகிறது. போய்க் குளித்துவிட்டுக் கிளம்புங்கள். முஹூர்த்தத்துக்குப் போக வேண்டாமா?” என்றாள்.

உன் எஜமானி உத்திரவு போட்டு விட்டாளா! என்னுடன் நேரத்தை வீணாக்காதே” என்று சிரித்தார் கிழவர்.

“ராத்திரி மாதிரி உனக்கு நாலு தோசை வார்த்து வைக்கிறேன் என்கிறாள்” என்றான்.

முன்னிரவு கடனே என்று விஜயம் செய்து கொடுத்த தோசை கிழவர் நினைவிலொ இருந்தது. எண்ணெய் என்பதே காணாது சுட்டு வரண்ட தோசை.

“தோசையா?...” என்று இழுத்தார்.

“பின் என்ன வேண்டும்?” என்றான் ரகு எரிச்சலை மறைக்காமல்.

“அவருக்கு அரிசி உப்புமா வேண்டியிருக்கும். அதை நேரில் சொல்வதுதானே!” என்றாள் விஜயம், பக்கத்து வீட்டுக்கும் கேட்கும்படியான துணிவுக் குரலில்.

“தோசையே போதும்” என்றார் கிழவர்.

“உனக்கும் கோபம் வந்துவிட்டதா!” ... காலையில் பால்காரன் மேல் தன்ணீர் கலந்ததாகப் பொய்குற்றச்சாட்டு செய்து அடைந்த தோல்வி ரகுவை உறுத்திக் கொண்டிருந்தது.

“எனக்கென்னடா கோபம்? ... கடைசி காலத்தில் பிறர் தயவு வேண்டியிருக்கு. தனியாயிருக்க வழியில்லை. போக வேறு இடமுமில்லை. பகவான் எனக்கு இரண்டு குழந்தைகளாகக் கொடுத்திருக்கலாம்....”

ரகு பேசாமல் இருக்கவே விஜயம், “ஒரே பிள்ளை நீங்கள் பார்த்துக்கற அருமை அவருக்குப் போதும்னு சொல்லுங்கோ! தான் சேர்த்து வச்சிருக்கிற சொத்தையெல்லாம் அனுபவிக்க இன்னம் ஒரு பிள்ளையில்லையேன்னு போற காலத்திலே குறையாயிருக்கும்! அவர் வாழ்க்கையில் என்னத்தைச் ஆதித்து விட்டார்? எல்லாம் வீண்!... ஐநூறு ஆயிரம் என்று சம்பாதித்தாரே! இன்று காலணாவுக்குப் பிரயோசனமுண்டா?” என்று பொரிந்து கொட்டினாள்.

விஜயத்தின் இது போன்ற பிரசங்கங்கள் கிழவருக்குப் புதிதல்ல. அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் வழக்கம் போல அசட்டை செய்ய முயற்சித்தார். “சிறிசு, அறியாமையால் சொல்கிறது, எல்லாம் நாளைக்குச் சரியாகிவிடும், பெரிய புத்தி வந்துவிடும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். ஆனால் இன்றென்னவோ இம்மொழிகள் சுய ஆறுதலை உண்டாக்கவில்லை. எழும் மனவருத்தத்தை ஏமாற்ற முடியாது போயிற்று.

இவ்வெண்ணங்களையெல்லாம் நினைவிலிருந்து அகற்ற முயன்றவாறு, இலை ஒன்றை எடுத்துக் கீழே போட்டார். மணையை எடுத்து வைத்தார். அதிக கனமாகப் பட்டது. கை நடுங்கியது. மறுபடியும் மயக்கம் வரும் போலிருந்தது. நீர்ச்சொம்பையும் லோட்டாவையும் எடுத்து வைத்தார். பாத்திரத்திலிருந்த உப்புமாவை சிறிது ருசி பார்த்தார். சுள்ளென்றது. எண்ணெயில் கையாண்ட சிக்கனத்தை விஜயம் மிளகாயில் காட்டவில்லை.

ஒரு சொட்டு நெய் இருந்தால்!

வலை பீரோவின் சாவியைத் தேடினார் கிழவர். அஞ்சறை பெட்டியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. ஜாடியை எடுத்துக் கீழே வைத்தார். அதிலும் நெய் அதிகம் இல்லை. அதில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு விட்டால் விஜயம் கோபிப்பாளே என்ற பயம் கண்டது கிழவருக்கு. “நான் செய்யும் இச்செய்கையும் கேவலம்தான். விருப்பமற்றவர்கள் ஆதரவில் வாழும் நான் ஏன் ஊனை வளர்க்க வேண்டும்? ஏன் எனக்கு நப்பாசை? சீ!” என்று தன்னையே வெறுத்துக் கொண்டார். அவர் சோகம் உணர்ச்சியின் எல்லையைத் தொட்டுவிட்டது. “இருந்து எவர்க்கும் பயனில்லை. பூமிக்குப் பாரம்தான். ஏன் என்னை இருத்தி வைத்து ஆட்டுகிறாய்? கருணாமூர்த்தி என்கிறார்களே! இதுவோ உன் கருணை?” என்று அவர் மனம் அரற்றியது.

இயந்திரப் போக்கில் அவர் கை உப்புமாவை இலையில் தள்ளீயது. பசி ‘சாப்பிடு’ என்று வற்புறுத்தியது. மனக்கசப்பு ‘அதைத் தொடாதே’ என்று தடுத்தது. இப்போராட்டம் பெரிதாகாமல் குறிக்கிட்டது வாசலில் யாரோ கூப்பிட்டது. எழுந்து தள்ளாடியவாறு சென்று வாசல் கதவைத் திறந்தார் கிழவர்.

வாசற்படியில் ஒரு ஸ்வாமி உட்கார்ந்திருந்தார். அவருக்கு நிற்கக்கூட சக்தியில்லை போலும். தேசமெங்கும் சுற்றிச் சுற்றி அவர் உடல் மிகக் கறுத்துக் கிடந்தது. இடுப்பில் காவி படிந்த கிழிசல் வேஷ்டி. உடலெலும்பு தோலைப் பிய்த்து வெளிவர முயற்சி செய்தது. நெற்றியில் பளிச்சென்று பட்டை நாமம். ஆழ்ந்த கண்களில் ஒரு தனி ஒளி. வயதை மதிப்பிட முடியாது. மிக மிக வயதானவர் போல் தோன்றியது.

“இங்கே அடியேன் இங்கு அமுது செய்ய முடியுமா” என்று ஈனக்குரலில் கேட்டார் ஸ்வாமிகள்.

‘இவரை முன் எங்கு பரிச்சயம், வெகு நாட்களுக்கு முன் பார்த்த முகமாயிருக்கிறதே’ என்று யோசனையில் ஆழ்ந்திருந்தார் கிழவர்.

“இல்லையென்றால் கொஞ்சம் மோர் தீர்த்தமாவது குளிர்ந்த தீர்த்தமாவது கொடுக்க சௌகரியப்படுமா? ... இரண்டு நாட்களாக அன்னமில்லை... கேட்ட இடத்திலெல்லாம் போ போ என்று விரட்டுகிறார்கள்...”

“உள்ளே எழுந்தருளுங்கோ ஸ்வாமிகளே!” என்று கிழவர் அவரை மெல்ல அழைத்துச் சென்று, தயாராகப் போட்டிருந்த இலையில் உட்கார வைத்தார். கிழவரின் சோர்வு எங்கோ மறைந்து புதிய தெம்பு தோன்றியது. நான்கு தரம் நெய் போட்டு அதிதியை உபசரித்தார். “அமிர்தமாயிருக்கிறது” என்று ஸ்வாமிகள் உப்புமாவைக் காலி செய்தார். விஜயம் இரவுக்கென்று வைத்திருந்த தயிரை மோராக்கி, அவருக்குக் கொடுத்தார் கிழவர்.

தேவிகள் வீட்டில் இல்லையா?

“குழந்தை வெளியே போயிருக்காள். இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவாள்.”

“தயிர், நெய் ஒன்றும் ராத்திரிக்கு எஞ்சவில்லை போலிருக்கே. உங்களுக்குக்கூட ஒன்றும் வைக்கவில்லை. அபசாரம்!”

“தேவாள் அப்படிச் சொல்லக்கூடாது. எனக்குப் பசியில்லை. குழந்தை வந்தாளானால் எனக்கு வேறு செய்து போடுவாள். தாங்கள் வந்தது என் பாக்கியம். அசக்தன் நான், சரியாக உபசரிக்க முடியவில்லையே என்று குறை.. தங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு! ஸ்ரீரங்கத்தில் இருக்குமோ?”

“இருக்கலாம்” என்றார் ஸ்வாமிகள்.

கிழவரின் நினைவு திருவரங்கத்தை நாடியது. “ரங்கநாதனைச் சேவித்து ரொம்ப நாளாச்சு. இனி எப்போ அந்த பாக்கியமோ! நான் போவேன் என்று நம்பிக்கையே இல்லை”.

“நீர் போகாவிட்டால் அவன் உங்களைத் தேடி வருகிறான்” என்று ஸ்வாமிகள் சிரித்தார். “நீர் கர்ணனைப் போல” என்று விடை பெற்றுச் சென்றார்.

வாசல் கதவைக்கூட தாளிடாது சாய்வு நாற்காலியில் சாய்ந்தார் கிழவர். காதில் ஏதோ சப்தம் கேட்டது. கடலோசையின் ஓங்காரம் போல் தோன்றியது. இல்லை சாமகானமா அது? கண்ணை மூடினார். ஒரு பெரிய மனப்பாரம் நீங்கியதுபோல் ஒரு விடுதலை உணர்ச்சி ஏற்பட்டது. உடலில் பந்தமும் கனமும் மறைந்து ஆடிப்பாடி ஓடி கூத்தாடி வானவீதியில் பறந்து செல்லலாம் என்ற ஓர் உன்மத்தம் தோன்றியது. கிழவர் உள்ளத்தில் சுரந்த இந்த விவரிக்க முடியாத ஆனந்தம் உடல் பூராவும் பரவி புல்லரிக்கச் செய்தது. பூரண சந்திரனைக் கண்டு பொங்கும் கடலினைப் போல் இம்மகிழ்ச்சியால் அவர் உள்ளம் விம்மியது. திடீரென இப்பெருங்களிப்பு மறைந்து சாந்தியடைந்தார்.

“இது என்ன வாசல் கதவு திறந்தபடி கிடக்கிறதே?” என்று பட்டுப்புடவை சலசலக்க கையில் கல்யாணத் தேங்காயுடன் வீடு திரும்பினாள் விஜயம். “இந்தக் கிழத்தால் வீட்டைக்கூட ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள முடியாதா? நிம்மதியாகத் தூங்குகிறதைப் பாருங்கள்” என்றாள் பின்தொடர்ந்த ரகுவிடம். தளிகை அறைக் காட்சி அவளை வரவேற்றது. கோபத்தால் ஒரு கணம் சொல் எழவில்லை.

“இதோ பாருங்கோன்னா, உங்கப்பா பண்ணியிருக்கிற அக்கிரமத்தை. பூட்டி வச்சால் கூட சாமானுக்கு ஆபத்துன்னா ஒரு மனுஷி என்னதான் பன்ணமுடியும்?...இந்த மாதிரி நெய்யையும் தயிரையும் எடுத்துக் கொட்டிண்டா அவருக்குத்தான் உடம்புக்காகுமா? குடும்பம்தான் உருப்படுமா?...” என்று அடுக்கினாள்.

மனைவியின் கோபத்துக்குப் பயந்து கிழவரைக் கண்டிக்க என்ணிய ரகு, “அப்பா!” என்று கூப்பிட்டான்.

“என்ன தூக்கம்? அப்பா! அப்பா! ஐயய்யோ!” இதைக்கேட்டு விஜயம் ஓடி வந்தாள்.

“உங்கள் தயவு எனக்கு இனித் தேவையில்லை” என்று ஏளனம் செய்தது கிழவரின் முகத்தின் கடைசிப் புன்முறுவல்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது