பாலா:
1. சாதி வெறி பிடித்து அலையும் உயர் சாதி திராவிடர்கள்,ஆயிரம் ஆண்டுகளாக ஆதிக்க சக்திகளாக அரசு,மற்றும் நில புலன்,வியாபாரம் என்று எல்லா துறைகளிலும் முன்னணியில் இருந்தார்கள்.இருந்தும் கூட தங்களை பிற்படுத்தப்பட்டவர்கள்/ஒடுக்கப்பட்டவர்கள் என்று வெட்கமில்லாமல் கூறிக் கொள்வது அரசியலுக்காகவா அல்லது இந்த மூஞ்சிகள் உண்மையிலேயே மிகவும் கீழ்த்தரமான,அறிவே இல்லாத காட்டுமிரண்டி கும்பலா?பதில்: உண்மையிலேயே வெட்கக்கேடுதான். வன்கொடுமைகள் எல்லாம் இன்னும் செய்து கொண்டு, அதே சமயம் தங்களை பிற்படுத்தப்பட்ட சாதியினர் எனக் கூறிக் கொண்டு பல சலுகைகளையும் கேட்பவர்கள் அனேகம். கூர்ந்து பார்த்தால் வலங்கையினர் இடங்கையினர் என்றெல்லாம் பாகுபாடு கொண்டு பல நூற்றாண்டுகளாகவே சாதிக் கொடுமை செய்திருக்கிறார்கள். பிரபஞ்சன் அவர்களது 'மானுடம் வெல்லும்' புதினத்தில் இவை நன்றாகக் கையாளப்பட்டுள்ளன. ஆனந்தரங்கம் பிள்ளை என்னும் பிரெஞ்சு <> தமிழ் மொழிபெயர்ப்பாளரது (துபாஷ்) நாட்குறிப்பில் அக்காலக் கட்டத்தில் நேரடியாகக் குறிக்கப்பட்ட குறிப்புகள் சுவாரசியமாகவே உள்ளன. அப்புத்தகத்தை இப்போது மறுவாசிப்பு செய்து வருகிறேன். சீக்கிரம் ஒரு பதிவு போடுகிறேன்.
வால்பையன்
அரசியல் கேள்விகள்
1.இடது சாரி, வலது சாரிகளுக்கு உள்ள வேறுபாடு என்ன? அவர்களின் முக்கிய கொள்கைகள் என்ன?பதில்: "இடதுசாரிகள்" என்றால் சோஷலிச சிந்தனைக்காரர்கள் என்றும் "வலதுசாரிகள்" என்பவர்கள் கன்சர்வேடிவ்கள் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
விக்கிபீடியாவில் அவை இவ்வாறு கூறப்படுகின்றன.
இடது சாரியினர்வலது சாரியினர்1789-ல் பிரெஞ்சு புரட்சிக் காலத்தில் தேசீய பாராளுமன்றத்தில் பொதுமக்களின் பிரதிநிதிகள் சபாநாயகரின் இடப்பக்கத்திலும் பிரபுக்களின் பிரதிநிதிகள் சபாநாயகரின் வலப்புறத்திலும் அமர்ந்தனர். ஆகவே அவர்கள் முறையே இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகள் என்றும் அறியப்பட்டனர். இந்தியாவில் சாதாரணமாக ஆளும் கட்சிகள் வலப்புறத்திலும் எதிர்க்கட்சிகள் இடப்புறத்திலும் அமர்வர். மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அப்படிப் பார்த்தால் இடதுசாரிகள் வலதுசாரிகளே. என்ன தலை சுற்றுகிறதா?
2.முந்தைய ஜெ ஆட்சி, இப்போதைய கருணாநிதி ஆட்சி, வேறுபாடு என்ன?பதில்: ஊழல், பத்திரிகைகளை பயமுறுத்துவது, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றில் ஒரு வேறுபாடும் இல்லை. ஒரே ஒரு வேறுபாடு தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவதின் அணுகுமுறையில் மட்டும் உள்ளது. அதில் ஜெயலலிதா கலைஞரை விட ரொம்பவுமே அதிகச் சிறப்பாகவே செயல்படுகிறார்.
3.குடும்ப அரசியலை விமர்சிக்கும் விஜயகாந்த் தன் மனைவியை முன்னிறுத்துவது ஏன்?பதில்: ஊரோடு ஒட்டி வாழ் என்னும் கோட்பாட்டினால்தான். :))
மொக்கை கேள்விகள்
1.அனைவரையும் கவருவது போல் தலைப்பு வைப்பது எப்படி?தமிழ் வலைப்பூக்களில் வரும் தலைப்புகள் மாதிரி வைக்கலாமே. என்ன, சற்றே படிப்பவர்களின் ஆவலைத் தூண்ட வேண்டும்.
நான் அம்மாதிரி வைத்த சில தலைப்புகள்:
'சோவும் மோடியும்' 'எம்ஜிஆருக்கும் எனக்கும் என்ன பிரச்சினை'? 'நபியில்லாமல் டோண்டு இல்லை',
'சரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும்',
'கலைஞர் செய்வது சரியே, அதை நான் ஆதரிக்கிறேன்',
'நான் அமெரிக்க ஆதரவாளன்',
'கள்ளா வா புலியைக் குத்து' 'டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவானா,' 'மச்சமச்சினியே,'ஆகியவை.
2.உங்களுக்கு பைக் ஓட்ட தெரியுமா? சின்ன வயதில் எந்த பைக் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?நான் ஓட்டிய டூ வீலர்கள் எல்லாம் சைக்கிள்களே. ஸ்கூட்டரோ பைக்கோ ஓட்டத் தெரியவே தெரியாது.
ஒரே முறை ஸ்கூட்டர் ஓட்டிய அனுபவம் உண்டு. அது பற்றியும் எழுதியுள்ளேன்.
3.கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டா அல்லது பணம் காய்க்கும் விளையாட்டா?பதில்: பணம் காய்க்கும் விளையாட்டாக மாறிப் போனதால் ஜெண்டில்மேன் விளையாட்டு என அழைக்கப்படும் தகுதியை அது இழந்து விட்டது.
எல்.எல்.தாசு:
1. 16/03/08 துக்ளக் முதல் பக்கத்தில் சோ ..
கனகசபை (அர்த்த மண்டபம்)யில் நின்று , தீட்சிதர்கள் தினமும் பூஜையில் ஒரு பகுதியாக தேவாரம் இசைத்துதான் வருகிறார்கள். அதே பத்திரிகையில் 8 ஆம் பக்கத்தில் ...
கோவிலில் கனகசபை தவிர எங்கு வேண்டுமானாலும் பக்தர்கள் தேவாரம் , திருவாசகம் பாட எந்த தடையும் இல்லை. பிறகு ஏன் பிரச்சினை?பதில்: முதலில் கூறியது சோவின் தலையங்கம், இரண்டாவது இதயா என்பவரது ரிப்போர்ட். இருப்பினும் இரண்டிற்கும் நடுவில் ஒரு முரண்பாடும இல்லை. தேவாரம், திருவாசகத்தை தீட்சிதர்களே கனகசபையில் பாடுகிறார்கள், அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதிலும் கல்யாணம் ஆன தீட்சிதர்களுக்குத்தான் அந்த உரிமை. கிராப் வைத்துள்ள தீட்சிதர்களுக்கும் அனுமதி இல்லை. மற்றப்படி பக்தர்கள் (தீட்சிதர் அல்லாதவர்கள் என்றுதான் இங்கு பொருள் கொள்ளவேண்டும்) கனகசபை தவிர மீதி எல்லா இடங்களிலிருந்தும் பாடலாம். கனகசபையில் ஆறுமுகசாமியை பாடவைத்தது அரசின் அடாவடிச் செயல். இவ்வாறு செயல்படும் அரசு இசுலாமியர் ஒருவர் மசூதிகளில் தமிழில் பாடுவேன் என்றால் அக்கோரிக்கையை நிறைவேற்றுமா? அவ்வாறே பாடிய பலர் தேவார வார்த்தைகள் தெரியாது பேப்பர் வைத்து பாடியதையும் வார்த்தைகளை முழுங்கியதையும் பற்றி கூடத்தான் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சும்மா ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல அரசு நடந்து வருகிறது. அந்த அரசை நடத்துபவர் ஹிந்து என்றால் திருடன் என்று கூறினார். அப்படியானால் அவரும் ஹிந்துதானே என்று மட்டும் கேட்டு நிறுத்துகிறேன். பகுத்தறிவாளர்கள் மேலே கூறட்டும்
சர்வேசன்:
1. இந்த கேள்விகளில் எத்தனை மற்றவர்களிடமிருந்து பெறப்பட்டது. எத்தனை, தனக்குத்-தானே அடிப்படையில் உங்களை நீங்களே கேட்டுக் கொள்வது? :)பதில்:
உண்மையான பதில் இது வரைக்கும் எல்லா கேள்விகளுமே மற்றவர் கேட்டதுதான் என்பதே. ஆகவேதான் வரப்போகும் வாரத்துக்கான கேள்விகள் முதலிலேயே வெளியிடப்படுகின்றன. உங்களது இக்கேள்வியும் அப்படித்தான். கூறுபவர்களுக்கு என்ன, விட்டால் சர்வேசன்தான் டோண்டு என்றும் கூறலாம். அதியமான் டோண்டு ராகவனே என்று ஒரு கோஷ்டி கூறிக்கொண்டு திரிந்தது. என்ன ஆயிற்று?
எல்.எல். தாசு:
1) சில மேல்நாட்டு பெயர்களை தமிழ் சிறப்பெழுத்து 'ழ'வுடன் தொடங்குகிறார்களே. அது எப்படி சரியான மொழிபெயர்ப்பாகும்?பதில்: Jeanne, Jean, Janvier முதலிய பெயர்களை ழான்ன், ழான், ழான்வியே என்றெல்லாம் உச்சரிப்பார்கள். அதிலும் முதலில் இருக்கும் எழுத்தின் ஒலி 'ழ'வும் 'ஜ'வும் கலந்த ஒலி. அதை நாம் வடிவுக்கு கொண்டுவர இயலாததால்தான் வெறுமனே ழ போடுவோம்.
இப்படித்தான் சாதாரணமாக Hoechst என்னும் பெயரை ஹெக்ஸ்ட் என்று கூறுமாறு அந்த கம்பெனியே விளம்பரம் செய்தது. ஏனெனில் ஒவ்வொருத்தர் அதை ஹோக்கஸ்ட், ஹோச்சஸ்ட் என்றெல்லாம் உச்சரித்து பிராணனை வாங்கினார்கள். 'ஆகவே ஐயா சாமி ஹெக்ஸ்ட்' என்றாவது கூறுங்கள் என்று கெஞ்ச வேண்டியதாயிற்று. மற்றப்படி அவ்வார்த்தையின் உச்சரிப்பை தமிழில் எழுதுவது கடினம். இருந்தாலும் முயற்சிக்கிறேன். Hoechst-ல் வரும் oe-ஐ o என்று உச்சரித்து அப்படியே e-ஐயும் சேர்த்து கூற வேண்டும். என் போன்ற கூட்டாளிகள் ஒரு நிமிடமும் தயங்காமல் கூற இயலும். சுமாராக ஹோயிக்ஸ்ட் என்பது போல வரும். நான் அக்கம்பெனிக்கு சென்றபோது அக்கம்பெனி நிர்வாகி ஒருவரிடம் (அவர் ஜெர்மானியர்) நான் அவ்வாறே உச்சரிக்க, அருகில் இருந்த இந்திய அதிகாரி என்னை ஹெக்ஸ்ட் என்று கூறுமாறு திருத்தி மேலே குறிப்பிட்ட கம்பெனி விளம்பரத்தைப் பற்றியும் கூறினார். நான் அதற்கு மேலே சொன்ன ஜெர்மன் மொழியின் உச்சரிப்பு விதிகளை பற்றி பேசி அவர் கூறியதுபோல சொல்ல ஏலாது என்று மறுத்துவிட, ஜெர்மானியர் நான் கூறியதை இந்திய அதிகாரியிடம் உறுதி செய்தார். அது சரி, Hoechst அல்லது Höchst என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அது Hoch Höher Höchst (High Higher Highest) என்று வரும் டிக்ரீஸ் ஆஃப் கம்பேரிசனில் வருகிறது.
இன்னொரு விஷயம், நீங்கள் கூறுவதுபோல ழான்ன் என்றெல்லாம் உச்சரிப்பதோ எழுதுவதோ மொழிபெயர்ப்பு அல்ல, அது ஒரு மொழி சொல்லை உச்சரிப்பது பற்றிய விஷயம். தமிழில் ழான்ன் என்று எழுதுவதை Transliteration என்று கூற வேண்டும்.
2) ஒவ்வொரு பெயர்சொல்லையும் அதன் உரிமையாளர் உச்சரிப்பது போல் உச்சரிக்கவேண்டும் . உ.தா திருவல்லிக்கேணியை ட்ரிப்ளிக்கேன் என அவன் உச்சரிக்க முடியாமல் சொன்னான். ஆனால் நாம் ஏன் 'இங்லீஷ்' என்ற பெயர்சொல்லை ஆங்கிலம் என மொழிபெயர்த்துள்ளோம்.இதற்கு ஒரு பெரிய பாரம்பரியமே உண்டு. இங்லீஷை ஆங்லே என்று பிரெஞ்சுக்காரரும், இங்லேஸ என்று இத்தாலியரும் கூறுவர். அதாவது வேற்றுமொழிச் சொல்லை இன்னொருவர் தம் தாய்மொழியில் கூறும்போதோ எழுதும்போதோ அந்த தாய்மொழியின் விதிகளுக்குட்படுத்துதால் உலகளாவிய செயல். நான் போய் ஜெர்மன் மொழியை உங்களிடம் டாய்ட்ச் என்று கூறினால், 'வந்துட்டாண்டா அல்டி மயிராண்டி, இவனுக்கு ஜெர்மன் தெரியுங்கறதை சொல்லறதை எப்போத்தான் நிறுத்தப் போறானோ' என்று நீங்கள் நினைத்தால் நான் உங்களிடம் தவறு காண இயலாது. (விஷயம் என்னவென்றால் சமீபத்தில் 1969-ல் ஜெர்மன் படிக்க ஆரம்பித்தபோது அவ்வாறு கூற நான் சொன்ன அதே
நீதிக்கதையை கூறி உதை வாங்கிய என் நண்பன் ஆர்.எஸ். ராமநாதன் அப்படித்தான் சொன்னான்). அதே போலத்தான் ம்யூனிக்கை ம்யுன்ஷன் என்று கூறுவதும். ஆனால் Hoechst-ஐ மட்டும் சரியாகத்தான் உச்சரிப்பேன். ஏன்? அதுதான் டோண்டு ராகவனின் முரண்பாடு. அதேபோல Volkswagen-ஐ வோக்ஸ்வாகன் என்று கூற மாட்டேன் ஃபோக்ஸ்வாகென் என்றுதான் கூறுவேன் (மக்கள் கார்). ஓக்கே?
Triplicane என்றதும் எனது
இந்தப் பதிவின் பின்னூட்டம் ஞாபகத்துக்கு வருகிறது. CPWD-ல் பில்கள் அனுப்பும்போது கவரிங் லெட்டர் என்பதன் வாசகங்கள் ஒரு டெம்பிளேட் போல மனதில் அமைந்து விட்டன. உதாரணத்துக்கு: Please find herewith enclosed in triplicate, the cc3 and final bill for the work of .... (cc --> contractor current) என்று வாசகம் ஆரம்பிக்கும். பிறகு என்னென்ன இணைத்துள்ளோம் என்றெல்லாம் எழுதி அனுப்ப வேண்டும். இதிலும் ஒரு குறும்பு செய்தேன். அதாவது, மேலே கூறிய வாசகத்தை இவ்வாறு மாற்றினேன்: Please find herewith enclosed in triplicane, the cc3 and final bill for the work of .... என்று மாற்றினேன். அவ்வாறு பல பில்கள் சென்றிருக்கின்றன. ஒரு தடவை கூட ஏண்டா பாவி இப்படியெல்லாம் படுத்துகிறாய் என்று என்னை யாருமே கேட்கவில்லை. பிறகு பல ஆண்டுகள் கழித்து சம்பந்தப்பட்ட கிளர்க்கிடம் இதை கேட்க, அவர் கூறினார், "சார் எனக்கு இது முதலிலேயே கண்ணில் பட்டது, ஆனால் ராகவன் சார் தப்பாக எழுத மாட்டார், ஆகவே எனக்குத்தான் தெரியவில்லை என விட்டு விட்டேன்" என்று கூற. நான் கொஞ்சம் ஃபீலிங்ஸாகி விட்டேன். அது ஒரு தமாஷ் காலம்.
செந்தழல் ரவி:
1. இதுவரை வாழ்க்கையில் எதையாவது சாதித்ததாக எண்ணுகிறீர்களா? அப்படி என்றால் அதில் முதலில் நிற்கும் சாதனை எது?பதில்: ஒவ்வொரு மனிதனுக்கும் வேலையிலிருந்து ஓய்வு பெறுவது என்பது டென்ஷனை வரவழிக்கும் விஷயமே. அது பற்றி நான்
இப்பதிவிலும் எழுதியுள்ளேன். இப்போது சுயமாக மொழிபெயர்ப்பு வேலைகள் எடுத்து செய்வதால் அந்த ஓய்வு என்பது என் வாழ்க்கையில் இப்போதைக்கு இல்லை. அதுதான் என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய சாதனை.
கடைசி நிமிடம் வரை வேலை செய்ய வேண்டும். கடைசி மொழிபெயர்ப்பை அதன் பில்லுடன் சேர்த்து மின்னஞ்சல் மூலம் அனுப்பிய பிறகு தட்டச்சு பலகை மீது விழுந்து பிராணன் போவதுதான் என்னைப் பொருத்தவரை உயர்ந்த சாவு. சங்கராபரணம் சங்கர சாஸ்திரிகள் பாடல் மேடையில் உயிர் விட்டது இன்றும் என் கண்ணுக்குள்ளேயே உள்ளது.
2. தமிழ் சமுதாயத்துக்கு இதுவரையில் நீங்கள் செய்த பெரிய தொண்டு என்ன? தானம் தருமம் செய்வதில் ஆர்வம் உண்டா?பதில்: ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லைதான். தான தர்மம் செய்வதில் ஆர்வமேல்லாம் இதுவரை இல்லை.
3. இளமைப்பருவத்தில் காதலித்ததுண்டா? யாரை? அந்த கதையை சொல்லமுடியுமா?பதில்: சமீபத்தில் 1953-லிருந்து நான் எனக்காக நிச்சயம் செய்து கொண்ட பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன். எனக்கு வயது 7 அவளுக்கு 4. பிறகு 21 ஆண்டுகள் கழித்து அவளையே கல்யாணம் செய்து கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்
மறுபடியும் அவளைத் திருமணம் புரிந்து கொண்டேன். எங்கள் பக்கத்தில் அதை
சஷ்டியப்தபூர்த்தி (மணிவிழா) என்பார்கள்.
4. மோடியை நேரில் சந்தித்தால் என்ன கேட்பீர்கள்?சென்னைக்கு வந்தால் அவருக்காக மொழிபெயர்க்கும் வாய்ப்பை கேட்பேன். அதுவும் துக்ளக் ஆண்டுவிழா பொதுக்கூட்டத்தில் குருமூர்த்தி அவர்கள் மோடிக்கு மொழிபெயர்ப்பை செய்ததைப் பார்த்ததும் இதுதான் தோன்றியது. குருமூர்த்தி அவரிடம் ஆங்கிலத்தில்தான் பேசியிருப்பார் என நினைக்கிறேன். நான் அவரிடம் ஹிந்தியில் பேசியிருந்திருப்பேன்.
5. தமிழ்மணத்தில் எழுத வரவில்லை என்றால் என்ன செய்துகொண்டிருப்பீர்கள்?பதில்: தமிழ்மணம் என்பது ஒரு திரட்டி மட்டுமே. அதில் எழுதுவது என்ற எண்ணமே உண்மைக்கு புறம்பானது. நான் எழுதும் பதிவுகள் அதனால் திரட்டப்படுகின்றன அவ்வளவே.
6. கொலைவெறியோடு பின்னூட்டம் போட்டுத்திரியும் பாலா என்பவர் யார்?
பதில்: தெரியாது.
அனானி (விக்ரம் பெயரில் வந்தவர்)
1) பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வு தொடர் நீங்கள் ஆரம்பித்தால் என்ன?பதில்: அவ்வளவு அறிவு எனக்கில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.
2) www.dondu.com தளம் ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா?பதில்: இல்லை.
3) உங்களை திராவிடம் பேசுபவர்கள் அடிக்கடி கருத்து தாக்குதல் நடத்துவது ஏன்? அப்படி என்ன செய்துவிட்டீர்கள்?பதில்: சாதாரணமாக பார்ப்பனர்கள் தாக்கப்பட்டால் பதில் கூறாது நகர்ந்து விடுவார்கள். தங்களைப் பார்த்து பயந்துதான் அவ்வாறு செல்கிறார்கள் என்று இவர்களும் சந்தோஷப்பட்டு கொள்வார்கள். முதன் முறையாக நான் வந்து 'ஆ ஊ என்றால் பாப்பானை குறை சொன்னால் இந்த பாப்பான் வந்து கேட்பான்' என்று நான் எதிர்த்து நிற்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.
அருண்
1. 'சோ' அவர்களுக்கு பிறகு துக்ளக் நாளேடு எப்படி இருக்கும். நானும் சோ வின் விசிறி தான். அதனால் தான் கவலையோடு இந்த கேள்வியை கேட்கிறேன்?பதில்: கல்கி போனப்புறமும் கல்கி இருக்கிறதே. துக்ளக்குக்கும் யாராவது வராது போய்விடுவார்களா என்ன?
2. நீங்கள் ஏன் நல்ல ஆங்கில புதினங்களை தமிழில் மொழி பெயர்க்க கூடாது? பணம் அதிகமாக வராது என்பது மட்டும்தான் காரணமா?பதில்: அதிகமாக வராதா? ஒருவரும் என்னை கமிஷன் செய்யாமல் நான் பாட்டுக்கு ஆங்கில புதினங்களை மொழிபெயர்த்தால் பணம் வரவே வராது ஐயா. அப்படியே பணம் வந்தாலும் கொஞ்சமாகத்தான் வரும் என்பது பற்றி எனது
ஜெயா டி.வி. பேட்டியிலேயே இது பற்றி பேசியுள்ளேன். இது முதல் பகுதி. மொத்தம் நான்கு பகுதிகள் உள்ளன.
அனானி (24.03.2008-ல் கேள்வி கேட்டவர்)
1. பெண்களைக் கவருவது எப்படி? பதில்: சமீபத்தில் 1954-ல் வந்த மிஸ்ஸியம்மா படத்தில் எனது அபிமான நடிகர் ஜெமினி கணேசன் வாயசைக்க ஏ.எம். ராஜா பாடுவதையே இங்கு பதிலாக வைக்கிறேன்.
முடியும் என்றால் படியாது
படியும் என்றால் முடியாது
வஞ்சியரின் வார்த்தையிலே
அர்த்தமே வேறுதான்
அர்த்தமெல்லாம் வேறுதான்
அகராதியும் வேறுதான்.
அலுக்குக் குலுக்கி ஒதுங்கி நின்றால்
அருகில் ஓடி வாரும் என்றே
வலியப் பேசி வாரும் என்றால்
வந்த வழியைப் பாரும்- என்றே
வஞ்சியரின் வார்த்தையிலே
அர்த்தமே வேறுதான்
அர்த்தமெல்லாம் வேறுதான்
அகராதியும் வேறுதான்.
Indian
1. நேபாள மக்களின் உரிமைக்காக சமீபத்துல பொங்கியெழுந்து சென்னையில் போராட்டம் நடத்தின அசுரன், தியாகு, ஸ்டாலின் வகையறாக்கள் திபெத் விவகாரத்துல கள்ள மவுனம் சாதிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (என்னதான் 'முதலாளித்துவ' சீனாவை எதிர்க்கிறோம் என்று பீலா விட்டாலும் பூனைக்குட்டி வெளியே வந்திடுச்சே)?
பதில்: 1962-ல் இந்தியாதான் சீனாவைத் தாக்கியது என்று கூறும் புண்ணியவான்கள் வேறு எப்படி ரியேக்ட் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கிறீர்கள்? இந்த அழகில் அமெரிக்கா இதை பற்றி பேச ஆட்சேபம் தெரிவிப்பது இதே கம்யூனிஸ்டுகள்தான்.
வேல்பாண்டி:
1. பெரியாரின் பூணூல் அறுப்பு மற்றும் கொண்டை அறுப்பு போராட்டத்துக்கு பிராமணர்கள் எவ்விதம் எதிர்ப்பு தெரிவித்தார்கள்?பதில்: பெரியாரின் இச்செயல்பாடுகளெல்லாம் தனியாக மாட்டிக் கொண்ட சில நோஞ்சான் பார்ப்பனர்களிடம்தாம் நடந்தது. மற்றப்படி ரொம்ப பரவியதாக நினைவில்லை. யாருக்காவது இதற்கு மாற்று கருத்து இருந்தால் கூறலாம். நானும் தெரிந்து கொள்வேன்.
2. காஞ்சி சங்கர மட கொலை வழக்கில் உங்கள் "தீர்ப்பு" எப்படி இருக்கும்?பதில்: கேஸ் விவரங்கள் சரிவரத் தெரியவில்லை. ஆகவே கருத்து கூறுவதற்கில்லை.
3. காஞ்சி ஜெயேந்திரர் பற்றி சில வார்த்தைகள்...பதில்: நேர்மையானவராக இருந்தால் மட்டும் போதாது அவ்வாறு இருக்கும் தோற்றமும் அளிக்க வேண்டும் என்று உயர் பொறுப்பில் உள்ளவர்களைப் பற்றி கூறுவார்கள். அக்கருத்தின்படி பார்த்தால் ஜெயேந்திரர் தேறவில்லை என்றுதான் கூறவேண்டும். சந்தேகம் அவர்பேரில் அழுத்தமாகவே விழுந்துள்ளது. கேஸ் நடந்து முடிந்தால்தான் தெளிவு பிறக்கும். மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் தெளிவு இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானதே.
4. அப்துல் கலாம் - பிரதீபா பட்டீல் ஒப்பிடுக.பதில்: இதை விட அப்துல் கலாமை யாராவது அவமானப்படுத்த இயலுமா?
எம்.கண்ணன், பாங்காக்
1. 108 திவ்யதேசங்களில் எத்தனை திவ்யதேசங்களுக்குச் சென்றுள்ளீர்கள் ? தரிசனம் செய்துள்ளீர்கள் ? ஏதாவது இண்டரஸ்டிங் அனுபவம்?பதில்: கிட்டத்தட்ட 90 திவ்யதேசங்கள் பார்த்திருப்பேன் என நினைக்கிறேன். அவற்றில் ஒன்றுதான் தென்திருப்பேரை. என் வீட்டம்மா என்னை விட அதிகம் பார்த்திருப்பார். மலை நாட்டு திருப்பதிகள், நைமிசாரண்யம், முக்திநாத் ஆகிய தலங்களைப் பார்க்க வேண்டும்.
2. நரசிம்மம் என்பதை ந்ருசிம் 'ந்' எழுத்தில் துவங்குகிறார்களே சிலர்? ஏன்? (சமஸ்கிருதம் மட்டும் காரணமாக இருக்காது என நினைக்கிறேன்)பதில்: நரசிம்மஹ, நாரசிம்மஹ, ந்ருசிம்மஹ ஆகிய மூன்று முறைகளிலும் இப்பெயரைக் கூறலாம். எல்லாவற்றுக்கும் ஒரே பொருள்தான். சுலோகங்களில் வரும்போது யாப்பு, சந்தி, எதுகை, மாத்திரை ஆகிய தேவைகளுக்கேற்ப வெர்ஷன்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆக வடமொழியின் இலக்கணத் தேவைகளே இதற்கு காரணம் என்றெல்லாம் என்னிடம் கூறியவர் சென்னை பல்கலைக்கழக வைஷ்ணவத் துறையின் தலைவர் டாக்டர் வி.கே.எஸ்.என். ராகவன் அவர்கள்.
3. எந்தெந்த வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறீர்கள் ? சுவையான அனுபவம்?
(இதுவரை செல்லவில்லையெனில் - எந்த நாடுகளுக்குச் செல்ல விருப்பம்? ஏன்)பதில்: பாஸ்போர்ட்டே இல்லாத நிலையில் எங்கு போவது? அப்படியே கிடைத்தாலும் வெளிநாட்டு பயணங்களில் மோகம் ஒன்றும் இல்லை.
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்றிருப்பதே சுகமாக இருக்கிறது. அமெரிக்காவோ, பிரிட்டனோ, பிரான்ஸோ, ஜெர்மனியோ எந்த நாடாக இருந்தாலும் அங்கு தினசரி வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அது ஒன்றும் விரும்பத்தக்கதாக இல்லை.
அப்படியும் நான் போக வேண்டும் என்று விரும்பும் நாடு ஒன்றே ஒன்றுதான். அதுதான் இஸ்ரேல். இஸ்ரவேலர்களிடம் எனக்கு இருக்கும் ஈடுபாட்டை ஒரு
பூர்வ ஜன்ம பந்தமாகவே பார்க்கிறேன்.
4. வாழ்க்கையில் இன்னும் அடையவேண்டிய லட்சியம் ஏதாவது உண்டா? பதில்: மொழிபெயர்ப்பு துறையில் செய்ய வேண்டியவை ஏராளம்.
5. விவேக்- வடிவேலுக்குப் பிறகு யாரும் பெரிய நகைச்சுவை நடிகர்கள் வரவில்லையே ஏன்?பதில்: வருவார்கள். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவார்கள்.
அனானி1 (26.03.08 அன்று கேட்டவர்)
1. ப்ளாக்கர்களில் மிக அருமையாக எழுதக்கூடியவர் என்று யார் யாரை கருதுகிறீர்கள்?பதில்: மா.சிவக்குமார், பத்ரி, ஜெயமோகன், பா.ராகவன், நேசமுடன் வெங்கடேஷ், என்றென்றும் அன்புடன் பாலா
2. dogma என்பதற்கான சரியான தமிழ் வார்த்தை என்ன?பதில்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகரமுதலியில் கொடுக்கப்பட்ட பொருள்கள்: உறுதிக் கோட்பாடு, வறட்டியம். மொண்டித்தனம் என்றும் கூறலாம். நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான் என்று கூறுவதையும் இதில் சேர்க்கலாம்.
Vajra
1. வலைப்பதிவுகளால் தமிழ் ஊடகத்திற்கு என்ன நன்மை?பதில்: பலருக்கு எழுத வாய்ப்பளிக்கிறது. ஆகவே புதிய எழுத்தாளர்கள் வருபவார்கள். அதுதான் நன்மை.
2. ஆங்கில வலைப்பதிவுகள் அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு மக்களை அடைவது போல், தமிழ் வலைப்பதிவுகள் இருப்பதில்லையே. என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?பதில்: இப்போதைக்கு இல்லைதான். ஆனால் பின்னால் நிலைமை சீராகும் என்ற நம்பிக்கை உண்டு.
3. அச்சு ஊடகங்கள் அதிகப்படியான left of centre கண்ணோட்டத்தையே கொண்டவையாக இருப்பதாக என் எண்ணம்? தங்கள் கருத்து?பதில்:
என் கருத்தும் அதுவேதான். எல்லோரையும் பணக்காரர்களாக ஆக்குவதை விட எல்லோரையும் ஏழைகளாக ஆக்குவது எளிது என்ற சோஷலிச கோட்பாடே பணக்காரர்களை பார்த்து பொறாமைப்பட மட்டும் ஊக்குவிக்கிறது. ஜெமினி வாசன் எடுத்த படங்களில் ஏழைகள் எல்லோரும் நல்லவர்கள், பணக்காரர்கள் கெட்டவர்கள் என்ற கருப்பு வெளுப்பு சிந்தனைதான் மேலோங்கி நிற்கும். ஆனால் வாசன் பெரிய பணக்காரரே, அதுவும் இம்மாதிரியான படங்கள் எடுத்தே அவர் மேலும் பணக்காரர் ஆனார். அதே லாஜிக்கால்தான் அச்சு ஊடகங்கள் இடது சாரி சிந்தனைகளில் உள்ளன.
அனானி2 (26.03.2008 அன்று கேட்டவர்)
(கடலோர பகுதிகளிலும், கடற்கரைகளிலும் பொது மக்களை எச்சரிக்க (Public Address System) எதுவும் நிறுவபடாமலே இருக்கும்போது, ஹைதிராபாத்தில் ஒரு காலி பில்டிங்கை திறந்துவைத்துவிட்டு சுனாமி எச்சரிக்கை சிஸ்டெம் நிருவிவிட்டதாக பொய் சொல்லிக்கொண்டு திரிகிறது இந்திய அரசு).
கேள்விகளுக்கு வருகிறேன்..
1. இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை சிஸ்டம் எப்போது நிறுவப்படும் ? (உண்மையான எச்சரிக்கை செய்யும் சிஸ்டமாக இருக்க வேண்டும், பொது மக்களை உடனடியாக எச்சரிக்கை செய்யும் அளவுக்கு திறன் இருக்க வேண்டும்)பதில்: அம்மாதிரி எச்சரிக்கை அளிக்கும் ஏற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும்? கண்டிப்பாக கடலே இல்லாத ஹைதராபாத்தில் காலிக் கட்டிடமெல்லாம் இதில் சேராது. வேறு எப்படி இருக்க வேண்டும்?
ஒரு சிறு கற்பனை செய்வோமா? பூகம்பம் 7 ரிக்டர்களுக்கு மேல் போனால், சுனாமி வரும் சாத்தியக்கூறு அதிகரிக்கிறது. கடைசியாக வந்த சுனாமி நிலநடுக்கம் வந்த ஓரிரு மணி நேரத்தில் வந்தது. அப்போதும் தகவல் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் எச்சரிக்கையை சீரியசாக எடுத்து துடியாகச் செயல்பட வேண்டிய யாருமே டியூட்டியில் இல்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலைமைதான்.
ஆகவே இதற்காக எச்சரிக்கை மையம் ஒன்றை 24 மணி நேர வேலையாக நிறுவ வேண்டும். கடற்கரைகளில் பல இடங்களில் ஒலி பெருக்கிகள் எப்போதும் மின்சார விநியோகம் தடைபடாது இருக்க வேண்டும். சாத்தியக் கூறு விதிகள்படி சுனாமி வரும் வாய்ப்பு ஒன்றின் கீழ் பல ஆயிரங்கள் என்ற கணக்கில் இருக்கும். அப்படியே எல்லாம் அமைத்தாலும் யார் அதையெல்லாம் மானிட்டர் செய்யப் போகிறார்கள்? அவர்களுக்கு யார் சம்பளம் கொடுப்பது? அதுதான் முக்கிய வேலையாக வைப்பது பிராக்டிகலாக இருக்குமா? கொஞ்ச நாளைக்கு வேலை பார்ப்பவர்களாக இருக்கும், பிறகு சுனாமியெல்லாம் வராது என்ற அசட்டையுடன் தமிழ் வலைப்பூக்களை மேயச் செல்ல மாட்டார்களா?
2. இப்படி பொது மக்கள் நலன் பற்றி கவலைபடாமல் இருக்கும் அரசு, அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள்/ விஞ்யானிகளுக்கு சம்பளத்தை குறைக்காமல் ஏன் உயர்த்த வேண்டும்?பதில்: சுனாமி எச்சரிக்கை போன்றவை பலரது ஒருங்கிணைந்த செயலாக்கத்தால்தான் வரும். அதில் தனிப்பட்ட யார்மீதும் பொறுப்பை நிர்ணயிக்க இயலாது. ஆகவே நீங்கள் நினைப்பது கற்பனைக்கு நன்றாக இருப்பினும் நிஜமாகும் சாத்தியக்கூறு குறைவுதான்.
அனானி (Competition is Liberty என்னும் பெயரில்)
1. When will the Monopoly of The Hindu end?ஹிந்துவின் பலம் சென்னையில் இருக்கும் வரை அப்படித்தான் இருக்கும். நல்ல போட்டி வந்தால் மோனாபிளி நிலைமை மாறிவிடும். அது வரை இழுபறிதான்.
அனானி (26.03.08 அன்று கேள்வி கேட்டவர்)
1. என்ன சார், லக்கிலுக் பதிவை தமிழ்மணத்தை விட்டு தூக்கியிருக்கிறார்கள். நீங்க ஒண்ணுமே சொல்லலையே? உங்களுக்கு ஜெயா டிவி சிடி எல்லாம் கொடுத்த நண்பர் ஆச்சே?பதில்: அவர் திரும்ப வரவேண்டும் என்று விரும்புவதாலும், நான் ஏதாவது இப்போது கூறப்போக அவ்வாறு நடக்காமல் போகக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாலும், இப்போதைக்கு அது பற்றி பேசப்போவதில்லை. எப்படியும் வரும் ஞாயிறன்று அவரை மெரினா கடற்கரை பதிவர் சந்திப்பில் பார்க்கத்தான் போகிறேன். அப்போது நேரில் சில விஷயங்களை வாய்ப்பு கிடைத்தால் அவருடன் விவாதிக்க ஆசை. பிறகு பார்க்கலாம்.
அடுத்த வாரத்துக்கான கேள்விகளை இப்பதிவில் பின்னூட்டமாக இடவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்