9/13/2005

விடாது துரத்தும் கேள்விகள்

என்னுடைய முந்தைய கேள்விகளில் இரண்டுக்கு பதில் வரவில்லை ஆதலால் அவற்றை இங்கு முதல் இரண்டு கேள்விகளாக கேரி ஓவர் செய்கிறேன்.

1. ஓட்டப் பந்தயத்தில் ராமமூர்த்திக்கு முதலிடம் கிடைத்தது ஆனால் பரிசு கிடைக்கவில்லை. ஏன் இந்த அக்கிரமம்?

2. இக்கதை அக்கால மேற்கு ஜெர்மனியில் நடந்ததாகக் கூறுவர். அப்போது Adenauer பிரதம மந்திரி (Bundeskanzler). தேசத்தின் அணுசக்தித் துறையின் தலைமை பதவி காலியாக இருந்தது. மூவர் போட்டியிட்டனர். ஒருவர் Karl Fritz. அவர் கணித நிபுணர். இன்னொருவர் Arendt. அவர் இயல்பியல் நிபுணர். மூன்றாவர் Schmidt. அவர் ரசாயனத் துறையில் வல்லவர். மூவருமே ஒரே அளவில் மதிப்பெண்கள் பெற்றனர். Adenauer வேலையை யாருக்குக் கொடுத்திருப்பார்?

3. டொனால்ட் டக் கார்ட்டூனில் வால்ட் டிஸ்னி செய்த பொருள் குற்றம் என்ன? (குற்றத்துக்கு குறைத்துக்கொண்டு மீதிக்கு பரிசளியுங்கள் என்று அவர் கேட்கக்கூட இல்லை).

4. ஆங்கிலத் தேர்வில் ஆசிரியர் ராமுவிடம் entertainment-க்கு ஸ்பெல்லிங் கேட்டார். ராமு e n t e r t a i n m e n t என்று நிறுத்தி நிதானமாகக் கூற ஆசிரியர் கோபத்துடன் wrong get out என்று கத்த, ராமு வெளியேறினான். இதே மாதிரி மற்ற சரியான விடைகள் கூறிய ஒவ்வொரு மாணவனிடமும் இதையே கூற அவர்களும் வகுப்பிலிருந்து வெளியேறினர். கடைசியில் கஸ்தூரிரங்கன் மட்டும் சமாளித்து வகுப்பில் தங்கினான். எப்படி?

5. ஒரு குதிரை பாதிரியாரைத் தாண்டி குதித்து ஒரு மனிதன் மேல் விழ அவன் மறைந்து போனான். பாதிரியார் ஒன்றுமே நடக்காதது போல தன் வேலையைக் கவனித்தார். என்ன விஷயம்?

6. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலின் வெளிப்புறம் பெயின்ட் அடிக்க வேண்டியிருந்தது. பெயின்டர் வெளியே தொங்கவிடப்பட்ட நூலேணியின் கடைசி படிக்கட்டின் மேல் நின்று வேலை செய்கிறார். அப்படிக்கட்டு நீர்மட்டத்தின் மேல் இரண்டு அடி உயரத்தில் உள்ளது. கடல் ஏற்றம் (hightide) காரணமாக நீர்மட்டம் 10 அடி உயருகிறது. பெயின்டர் நீரில் கால் நனையாமல் இருக்க எவ்வளவு படிகள் மேலே ஏற வேண்டியிருக்கும்? ஒவ்வொரு படியும் ஒரு அடி உயரம்.

7. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாத்தா, இரண்டு தந்தைகள், இரண்டு மகன்கள், ஒரு பேரன் ஆகியோர் வேட்டைக்கு செல்கின்றனர். 12 வாத்துக்கள் கிடைக்கின்றன. ஆளுக்கு எவ்வளவு வாத்துக்கள் கிடைக்கும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/12/2005

நவ்யா மாதிரி ப்ராக்டிகலாக இருங்கள்

தங்கர்பச்சான் பற்றி பேச மறுக்கும் நவ்யா

இயக்குநர் தங்கர்பச்சானை திரைப்பட நடிகர், நடிகைகள் நடத்திய விதம் குறித்து தமிழ் தேசியவாதிகள் கொதித்துப் போயுள்ள நிலையில், அந்தப் பிரச்சினைக்கு மூல காரணமான நவ்யா நாயர், அதைப் பற்றி எதுவும் கூற விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:

"இந்தப் பிரச்சினை குறித்து எந்த எதிர்வினையும் ஆற்ற விரும்பவில்லை. சினிமாவில் நடிகைகளுக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது. அதேபோல் இயக்குநர்களுக்கும் ஒரு கண்ணியம் இருக்கிறது. அந்தப் பிரச்சனை இப்போது முடிவடைந்து விட்டது. எனவே அதைப் பற்றி நான் எதையும் கூற விரும்பவில்லை" என்று கூறி அடுத்த டாபிக்குக்குத் தாவியவர்,

"நான் பதினைந்து வயதில் நடிக்க வந்தேன். அப்போது சினிமாவில் நடித்தால் போதும் என்று இருந்தேன். இப்போது நல்ல கதையா என்று கேட்டு நடிக்கிறேன். 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். 'அமிர்தம்' படத்தில் இயல்பில் நான் எப்படிப்பட்ட பெண்ணோ அதேபோல் நடிக்கிறேன்.

2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பது குறித்து எனக்கு எந்தக் கவலையோ, பயமோ கிடையாது. கமர்ஷியல் படங்களையும் இவற்றையும் குழப்பிக்க விரும்பலை.

எனக்கு கிளாமர் வேடம் எடுபடுமா என்பது நான் கிளாமரா நடிக்கும்போதுதான் தெரியும். மக்களுக்கு நான் அவ்வாறு நடிப்பது பிடிக்கவில்லை என்றால் நான் அதை நிறுத்தி விடுவேன்.

'அழகிய தீயே' படம் எனக்கு தமிழில் நல்ல பெயர் வாங்கித் தந்திருக்கிறது. அடுத்தடுத்து நல்ல வேடங்களில் நடித்து, தமிழில் முக்கிய இடத்தைப் பிடிப்பேன்" என்றார்.

பார்க்க ஸ்டில்லுடன்: http://www.keetru.com/cinema/sep-05/nayar.html

நாமும் உழக்கில் கிழக்கு மேற்கு பார்ப்பதை விட்டு விட்டு வேறு ஏதாவது நல்ல வேலையைப் பார்ப்போமே!

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/11/2005

வாடகை நூலகங்கள்

எழுபதுகளில் வாடகை நூலகங்கள் என் வாழ்வில் பெரும் பங்கு வகித்தன. பிரிட்டிஷ் கௌன்சில், அமெரிக்க நூலகம், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு நூலகங்களில் உறுப்பினராக இருந்தாலும் அங்கெல்லாம் கிடைக்காத புத்தகங்கள் வாடகை நூலகங்களில் கிடைத்தன.

இந்த வகையில் சென்னை லாயிட்ஸ் ரோடில் (அவ்வை ஷண்முகம் சாலை) இருந்த (இன்னும் இருக்கும்?) ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி மிக முக்கியமானது. அதன் உரிமையாளர் பழனி என்பவர். அதிகம் படிக்காதவர். இருப்பினும் புத்தகங்களை தேர்வு செய்து தன் நூலகத்தில் சேர்ப்பதில் மன்னன். ஒரு பேட்டியில் அவர் கூறினார்: "ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கும்போதே அது தேறுமா தேறாதா என்பதை என் உள்ளுணர்வு கூறிவிடும்". நல்லவனுக்கு நல்லவன், அடாவடிப் பேர்வழிக்கு அடாவடி என்று அசத்தியவர். இந்த நூலகத்திலிருந்து நான் 1974-81 காலக் கட்டத்தில் பல புத்தகங்கள் எடுத்துப் படித்திருக்கிறேன். நான் சாதாரணமாக மிக சீக்கிரம் புத்தகங்களைத் திருப்புவதால் ரீடிங் சார்ஜ் எனக்கு கம்மிதான். நான் உள்ளே வந்ததுமே அவர் நான் எடுக்கும் புத்தகங்களுக்கு ரீடிங் சார்ஜை தானே நிர்ணயிடத்து விடுவதாகத் தன் உதவியாளர்களிடம் கூறிவிடுவார். நானும் ஒரு சமயத்தில் இரண்டு புத்தகங்களுக்கு மேல் எடுத்ததில்லை.

அதே போல 1971-74-ல் பம்பாயில் இருந்த போது அங்கு மாதுங்காவில் இருந்த துரை லெண்டிங் லைப்ரரி எனக்கு நிரம்பப் பிடிக்கும். அதன் உரிமையாளர் துரைக்கு என்னிடம் ஒரு அபிமானம். ஒரு முறை எதிர் நடைபாதையில் சென்று கொண்டிருந்த என்னை ஆள் விட்டனுப்பிக் கூப்பிட்டார். என்னடாவென்று பார்த்தால் எனக்கு பிடித்த எழுத்தாளர் Taylor Caldwell-லின் புத்தகம் அவரிடம் புதிதாக வந்திருந்தது! நானும் அங்கு பலவகைப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.

சீரியஸ் புத்தகங்கள், வேடிக்கை புத்தகங்கள், காமிக்ஸ் (ஆர்ச்சி காமிக்ஸ், டாட், லோட்டா, காஸ்பர், வெண்டி த குட் விட்ச், ரிச்சி ரிச் முதலியன, அவற்றைக் கட்டுக் கட்டாக எடுத்துப் போய் படிப்பேன்.). திடீரென்று ஒரு நாள் துரையிடம் போய் "ரொம்ப போர் அடிக்கிறது துரை, சரோஜாதேவி புத்தகம் ஏதாவது இருக்கிறதா" என்று கேட்டால் கூட அசர மாட்டார். தமிழிலும், ஹிந்தியிலும் இந்திய ஆங்கிலத்திலும் அம்மாதிரி புத்தகங்கள் ஏராளம். என்ன, "உங்களை புரிஞ்சுக்கவே முடியல சார்" என்று கூறிக் கொண்டே கேட்டப் புத்தகங்களை எடுத்துக் கொடுப்பார்.

அதெல்லாம் ஒரு பொற்காலம். இப்போதும் லெண்டிங் லைப்ரரிகள் உள்ளன. எனக்குத்தான் அங்கெல்லாம் போகும் பொறுமை போய் விட்டது. கணினி வந்ததில் இது ஒரு கஷ்டம். அதுவே நம் நேரத்தை ஆக்கிரமித்து விடுகிறது. புத்தகங்கள் மாறவில்லை. நான்தான் மாறி விட்டேன். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/10/2005

அன்பே ஆருயிரே (அஆ)

வழக்கத்துக்கு மாறாக ஒரு புது படத்தை இரண்டாம் நாளே பார்த்தேன். நான் சூர்யாவின் அன்பே ஆருயிரையே குறிப்பிடுகிறேன். எங்களூர் (நங்கநல்லுர்) வேலன் தியேட்டரில் டிக்கட் சுலபமாக கிடைத்தது. வழக்கத்துக்கு மாறான கூட்டமும் இருந்தது.

படத்தின் கருத்து நல்லதுதான் ஆனால் அது தவறான ஆளிடம் சிக்கியதுதான் சோகம். மணிரத்தினம், சுஜாதா, கமல் காம்பினேஷனில் இப்படம் நன்றாக சோபித்திருக்கும். இங்கு குரங்கு கையில் பூமாலையாக ஆயிற்று. படம் முழுக்க ஒரே கூச்சல், பாடல் வரிகள் புரியவே இல்லை. தியேட்டரில் இருந்த விசிலடிச்சான் குஞ்சுகள் நிலைமையை இன்னும் மோசமாக்கினர் என்றுதான் கூற வேண்டும்.

மன வேறுபாட்டால் காதலர் பிரிகின்றனர். இன்டர்வல். பிறகு நீல உடையில் கடல் மேல் நடந்த வண்ணம் மறுபடி சந்திக்கின்றனர். அவர்கள் நாயக மற்றும் நாயகியின் நினைவுகளாம். நினைவுகளின் அரசன் நம்பியார் வேறு அங்கு வந்து அவர்களுக்கு விளக்குகிறார். அதாவது நினைவுகள்தான் காதலர்களை ஒன்று சேர்க்குமாம். காதலியின் நினவு காதலனிடம் போராட வேண்டுமாம் and vice versa. காதலன் காதலியையோ, காதலி காதலனையோ நினைவு கூர்ந்தால்தான் ஒருவர் மற்றவரின் நினைவை பார்க்க இயலுமாம்.

காதலியின் நினைவுக்கு வெற்றி சீக்கிரம் கிட்டி விடுகிறது. காதலனின் நினைவோ காதலியைச் சுற்றி அலைகிறது. அவள் பார்வைக்கு அது தென்படுவதில்லை. அவ்வப்போது நினைவுகள் கூடிப் பேசி ஆலோசனை செய்கின்றன. எப்படி கதை முடிகிறது? வெள்ளித் திரையில் காண்க.

சொதப்பல் 1. Living together (cohabitation in French) அதாவது கல்யாணமாகாமல் ஓர் ஆணும் சேர்ந்து ஒரு பெண்ணும் ஒரே வீட்டில் வசிப்பது என்ற கோட்பாடு தமிழகத்தில் இன்னும் வேறூன்றவில்லை. பேசாமல் அவர்களைக் கணவன் மனைவியாகவே சித்தரித்திருக்கலாம். ஏதோ அமெரிக்கக் கதையை சுட்டது போலத் தோன்றுகிறது. சிறிது உழைத்து இந்தியாவுக்கு ஏற்றதாகக் கதையை மாற்றாமல் ரொம்பவும் படுத்தி விட்டார் சூர்யா.

சொதப்பல் 2. சண்டைக் காட்சிகள் நம்பும்படியாக இல்லை. ரொம்பவும்தான் கிராஃபிக்ஸை நம்பியிருக்கிறார்கள்.

பிளஸ் பாயிண்டுகள். இரண்டே காட்சிகளில் வந்தாலும் மயில்சாமி நினைவில் நிற்கிறார். சூர்யா காதலியின் நினைவுடன் பேசிக் கொண்டே செல்லும் போது விஷயம் புரியாத மற்றவர் குழம்புவது தமாஷ். என்ன யோசித்தும் வேறு ஒன்றும் தோன்ற மாட்டேன் என்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/09/2005

IDPL நாட்கள் - P.G.Zalani

சிலரைப் பார்த்த உடனேயே பிடித்து விடும். அவர்களுக்கும் நம்மை அதே போல பிடித்து விடுவது மிக அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். நான் இப்போது பி.ஜி. ஜலானியைப் பற்றிப் பேசப் போகிறேன்.

ஐ.டி.பி.எல்லுக்கு அல்ஜீரியாவில் சில ஒப்பந்தங்கள் கிடைக்கும் போலிருந்ததால் ஒரு பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டார். அதற்கான நேர்முகத் தேர்வுக் குழுவின் தலைவர் ஜலானி அவர்கள். ஜே.என்.யூ-விலிருந்து ஒரு பிரெஞ்சுப் பேராசிரியை இதற்காகப் பிரத்தியேகமாக வந்திருந்தார். நாங்கள் இருவரும் பிரெஞ்சில் சரளமாகப் பேசுவதை ஜலானியும் மற்றவரும் ஆர்வமாகப் பார்த்தனர். பிறகு வேலை சம்பந்தமாகப் பேசினோம்.

ஜலானி:"ராகவன், நீங்களோ ஒரு இஞ்சினீயர். அத்துறையை விட்டு ஏன் மொழித் துறைக்கு வர ஆசைப் படுகிறீர்கள்?"
நான்: ஐயா, மொழி பெயர்க்கப் போவது என்னவோ இஞ்சினீயரிங் சம்பந்தப்பட்ட விஷயங்கள்தானே. என் இஞ்சினீயரிங் அறிவு தேனீரில் சர்க்கரைப் போல கரைந்திருக்கும். ஆகவே அத்துறை அறிவை இழக்க மாட்டேன்.

அவருக்கு இந்த பதில் பிடித்திருந்தது. இருந்தாலும் அவர் விடவில்லை.

ஜலானி:"எனக்கென்னவோ பிரெஞ்சு மொழி பெயர்ப்பு வேலை அதிக நாட்கள் நீடிக்கும் என்றுத் தோன்றவில்லை. இங்கு இஞ்சினியர் வேலை ஒன்றும் காலியாக உள்ளது. அதையும் எடுத்துக் கொள்ளுகிறீர்களா?"
நான்: "கண்டிப்பாக".

"இஞ்சினியர் மற்றும் மொழி பெயர்ப்பாளர்" என்ற டெஸிக்னேஷன் எனக்குத் தெரிந்து இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை. இனிமேலும் யாருக்காவது அது கிடைக்கும் என்று தோன்றவில்லை. இத்தனைக்கும் மூல காரணங்களில் ஒருவராக இருந்த ஜலானி எப்போதும் என் நன்றிக்குரியவர். இப்போது ஐ.டி.பி.எல். நாட்களைப் பற்றிக் கூறுவேன்.

மொழி பெயர்ப்பாளர்கள் உலகில் சில விஷயங்கள் எப்போதும் கண்டிக்கப்படும். அவற்றில் ஒன்று தாய் மொழியிலிருந்து அன்னிய மொழியில் மொழி பெயர்ப்பதாகும். இந்த விஷயத்தில் ஆங்கிலத்தை நாம் தாய் மொழியாகக் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கலாம், ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சிற்கல்ல. ஆனால் இத்தடையைப் பற்றி நான் சமீபத்தில்தான் தெரிந்துக் கொண்டேன்.

நல்ல வேளை 1981-ல் ஐ.டி.பி.எல்லில் சேர்ந்தப் போது இது எனக்குத் தெரியாமல் போயிற்று. தெரிந்திருந்தால் நான் ஐ.டி.பி.எல்லில் குப்பை கொட்டியிருக்க முடியாது. அறியாமையே இவ்விஷயத்தில் ஒரு வரமாய் அமைந்தது.

இங்கு மொழி பெயர்ப்பு வேலை இருவகைப்பட்டது. அல்ஜீரியாவிலிருந்து ஒப்பந்த சம்பந்த ஆவணங்கள் வரும். அவை பிரெஞ்சு மொழியில் இருக்கும்.

நான் அவற்றை ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்க வேண்டும். ஐ.டி.பி.எல் வல்லுனர்கள் தங்கள் பதிவுகளை ஆங்கிலத்தில் கொடுக்க நான் அவைகளை பிரெஞ்சில் மொழி பெயர்க்க வேண்டும்.

இங்கும் நான் முதலில் வேலை செய்த மத்தியப் பொதுப்பணித் துறையின் தொழில் நுட்பமே பின்பற்றப் பட்டதால் நான் ஒரு கஷ்டமுமின்றி வேலை செய்ய முடிந்தது. ஐ.டி.பி.எல்லுக்கும் மிகத் திருப்தி. எனக்கு முன் அங்கு வேலை செய்த மொழி பெயர்ப்பாளரின் செயலின்மை அவர்களை அவ்வளவு பாதித்திருந்தது. அவர் பிரெஞ்சு மொழியில் எம்.ஏ. தேர்ச்சி பெற்றவர். இருந்தாலும் தொழில் நுட்ப விஷயங்களில் ஒன்றும் தெரியாதவர்.

பிறகு இஞ்சினியர் மற்றும் பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளர் என்ற பெயரில் அங்கு நான் 12 வருடம் வேலை செய்தேன். 2 வருடங்கள் பிறகு அல்ஜீரியா வேலை இல்லை என்றாயிற்று. இங்குதான் திரு ஜலானியின் தீர்க்க தரிசனம் வெளிப்படையாயிற்று. அடுத்த 10 வருடங்கள் இஞ்சினியராக வேலை செய்தேன்.

பெரிய வேலை ஒன்றுமில்லை. நிறைய ஓய்வுதான். நான் பாட்டுக்கு சந்தோஷமாக வெளி மொழி பெயர்ப்பு வேலைகளை மேற் கொண்டு என் வாடிக்கையாளர்கள் வட்டத்தைப் பெருக்கிக் கொண்டேன். 1990-ல் திடீரென ஒரு நாள் ஒரு பிரெஞ்சு நிபுணர் 21 நாட்கள் எங்கள் ரிஷிகேஷ் தொழிற்சாலைக்கு வேலை விஷயமாக வந்துத் தங்கினார். அவருக்கு நான் துபாஷியாகச் சென்றேன்.

எங்கள் டைரக்டர் நான் சரளமாக பிரெஞ்சு பேசுவது குறித்து மிக வியப்படைந்தார். அவர் என்னிடம் "ராகவன் இங்கு கடந்த 7 வருடங்களாக ஒரு பிரெஞ்சு வேலையும் இல்லை என்பதை நான் அறிவேன். நீங்கள் என்னவென்றால் நேற்றுதான் தொடர்பு விட்டது போல பிளந்து கட்டுகிறீர்களே" என்று கேட்டார்.

அவரிடம் உண்மையைக் கூற முடியுமா? அவரை நான் "நீங்கள் எப்போதாவது சைக்கிள் ஒட்டியிருக்கிறீர்களா?" என்று கேட்டதற்கு அவர் தான் சிறு வயதில் ஓட்டியிருப்பதாகக் கூறினார். "இப்போது கூடத் தேவையானால் நீங்கள் சைக்கிள் ஓட்ட முடியும். அது போலத்தான் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு ஒரு மொழியில் தேர்ச்சி பெற்ற பிறகு அதை மறப்பது என்பது இயலாது" என்றேன். வேறு என்னதான் கூறியிருக்க முடியும்?

பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் நான் பெற்ற திறமை மற்றும் என் பொறியியல் அறிவு நான் இப்போது வேலை ஓய்வுக்குப் பிறகும் சுறுசுறுப்பாய் இருக்க உதவுகின்றன. பண வரவுக்கும் கடவுள் கிருபையால் பஞ்சமில்லை. எல்லாம் என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருள்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்னிய மொழிகளுடன் என் அனுபவங்கள்

நான் ஜெர்மன் கற்றுக் கொண்டப் பிறகு யுத்தக் காலத் திரைப்படங்களைப் பார்க்கும் போது ஜெர்மானியர் தோற்றுப் போகும் போது வருத்தமாக இருக்கும். மொழி என்பது ஒரு கலாச்சாரத்துக்கு ஒரு ஜன்னல் என்பது உண்மையே. இதைத் தவிர வேறு பலன்களும் உண்டு.

நான் மத்தியப் பொதுப்பணித் துறையில் இளநிலைப் பொறியாளராக பணி புரிந்த காலத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. புதிதாக வந்த கோட்டகப் பொறியாளருக்கும் எனக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. நான் என்ன செய்தாலும் தவறு கண்டு பிடித்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் அவர் அறையில் வைத்து பெரிய ஆலோசனை நடந்துக் கொண்டிருந்தது. வழக்கம்போல என்னுடைய யோசனைகள் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. திடீரென்று அவர் பார்வை என் கையில் இருந்த ஒரு குண்டுப் புத்தகத்தின் மேல் விழுந்தது.

அதை நோக்கிக் கரம் நீட்ட அவர் கையில் புத்தகத்தைக் கொடுத்தேன். புரட்டிப் பார்த்தார். "இது என்ன மொழியில் எழுதப்பட்டுள்ளது?" என்று கேட்டார்.

"ஜெர்மன்" என்று பதில் சொன்னேன். "உங்களுக்கு ஜெர்மன் தெரியுமா?" என்று கேட்டார்.

நான் பதில் கூறுவதற்குள் என் மேலதிகாரியான உதவிப் பொறியாளர் "ஜெர்மன் மட்டுமல்ல, பிரெஞ்சும் ராகவனுக்குத் தெரியும்" என்று கூறினார்.

உடனே அவர் என்னைப் பார்த்த பார்வையில் ஒரு புது மரியாதை தெரிந்தது. பேச்சு மறுபடியும் நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்த விஷயத்துக்குத் திரும்பியது. ஆனால் இம்முறை நான் சொன்னதை அதிகக் கவனத்துடன் கேட்டுக் கொண்டார்.

அன்றிலிருந்து அவர் என்னை நடத்தும் முறை முற்றிலும் மாறி விட்டது. அது வரை என்னை நிற்க வைத்துப் பேசிக் கொண்டிருந்தவர் என்னை உட்காரச் சொல்லுவார்.

ஐ.டி.பி.எல்லில் அனுபவம் வேறு மாதிரியானது. அங்கு சென்றது பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளர் வேலைக்கு. ஆனால் நேர்முகத் தேர்வில் எனக்கு இஞ்சினியர் வேலையும் கொடுக்கப்பட்டது. "மின் பொறியாளர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்" என்று போஸ்டிங் கிடைத்தது.

அங்கு எனக்கு முன் இருந்த மொழி பெயர்ப்பாளரை ரொம்பத்தான் ஏய்த்து வந்தனர். அந்தப் பெண்மணி பிரெஞ்சில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். ஆனால் தொழில் நுட்ப வர்ணனைகளைப் பற்றி ஒன்றும் அறியாதவர்.

நான் போன பிறகு நிலைமை தலைகீழ் ஆனது. நான் வேலை தெரிந்த பொறியாளன் என்பது அங்கு என் மரியாதையை அதிகரித்தது. அதிலும் ஆஃபீஸராக வேறு ஆகியிருந்தேன். கேட்க வேண்டுமா?

இக்கம்பெனியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றபோது கைவசம் வேறு வேலை ஆஃபர் இல்லாது ஓய்வு பெற்றது அக்காலக் கட்டத்தில் நான் மட்டுமாகத்தான் இருக்கும். ஆனால் கைவசம்தான் தொழில் இருந்ததே. ஆகவே கவலை இல்லாது முன்னேற முடிந்தது. அடுத்த 8 வருடங்கள் டில்லியிலேயே குப்பை கொட்ட முடிந்தது. 2001-ல் சென்னைக்கு வந்து இன்னும் அதிகமாக முன்னேற முடிந்தது எல்லாமே கடவுள் அருள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/08/2005

ஜெர்மானிய அத்தைகள்

நான் படித்து ரசித்த ஒரு ஜெர்மன் நாவலைப் பற்றிப் பேச ஆசை. இது மொழி பெயர்ப்புடன் சம்பந்தப்பட்டது என்பதால் டபுள் ஓக்கே.

1946- ஜெர்மனி. இரண்டாம் உலக யுத்த அழிவுகள் இன்னும் நேர் செய்யபடவில்லை. எங்கும் இடிபாடுகள். ஜெர்மனி நான்கு நேசப் படை நாடுகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

அலெக்ஸாண்டர் ஸ்பொரெல் என்ற எழுத்தாளர் எழுதியக் கதைப் பற்றித்தான் நான் இங்குப் பேசப் போகிறேன்.

அதன் கதாநாயகன் அமெரிக்கத் தலைமை அலுவலகத்தில் மொழி பெயர்ப்பாளனாகப் பணி புரிபவன்.

ஒரு நாள் ஒரு ஜெர்மானியன் மிகுந்த ஆவேசத்துடன் அலுவலகத்துக்கு வருகிறான். அவ்னுக்கு ஆங்கிலம் தெரியாது. அமெரிக்கனுக்கோ ஆங்கிலம் தவிர வேறு ஒன்றும் தெரியாது. ஆகவே வந்தான் நம் கதாநாயகன் மொழி பெயர்க்க.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சம்பாஷணை நடுவில் கதாநாயகன் மொழி பெயர்த்தது தேனீரில் கலந்தச் சர்க்கரையாக இருக்கும்.

ஜெர்மானியன்: "ஐயா என் பக்கத்து வீட்டுக்காரனுடம் இருக்கும் அவன் அத்தைகள் எனக்கு மிகவும் தொல்லைத் தருகிறார்கள்."

அமெரிக்க அதிகாரி: "என்ன செய்வது ஐயா. என் அத்தைகளை நீ பார்த்ததில்லை என நினைக்கிறேன். ஒவ்வொருத்தியும் ஒரு ராட்சசி தெரியுமா?"

ஜெர்மானியன்:" நாள் முழுவதும் கத்திக் கூச்சல் போடுகிறார்கள்."

அமெரிக்க அதிகாரி: "இது கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது. அமெரிக்க அத்தைகள் ஜெர்மன் அத்தைகளை விட எவ்வளவோ தேவலை."

ஜெர்மானியன்: "இதை விட மோசம் ஒன்றுண்டு. தினமும் விடியற்காலை என் வீட்டு வாசலில் எச்சம் இட்டுச் செல்கின்றனர்."

அமெரிக்க அதிகாரி (துள்ளிக் குதித்து): "ஜெர்மன் அத்தைகள் கூட அவ்வாறு செய்ய மாட்டார்கள். நான் நம்ப மாட்டேன்.

(கதாநாயகன் பக்கம் திரும்பி): "அத்தை"?

கதாநாயகன் பாவம் மென்று விழுங்குகிறார்.

நடந்தது இதுதான்:

ஜெர்மானியன் புகார் கூறியது பக்கத்து வீட்டுக்காரனின் வாத்துக்களைப் பற்றி. வாத்துக்கு ஜெர்மனில் "என்டெ" என்றுக் குறிப்பிடுவார்கள். கதாநாயகன் அதை ஆன்ட் என்றுக் கூறியதால் வந்த சிறு குழப்பம்தான் அது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது