டோண்டு பதில்கள் ஆரம்பித்து விளையாட்டு போல ஓராண்டு ஆகிவிட்டது. இன்றைய டோண்டு பதில்கள் பதிவுடன் முதல் ஆண்டு முடிவடைகிறது. நடுவில் ஒரே ஒரு வெள்ளியன்று (12.09.2008) இப்பதிவு கேள்விகள் ஏதும் வராததால் வெளியாகாமல் போயிற்று. இருப்பினும் சில எக்ஸ்ட்ரா பதிவுகளும் வந்ததில் இப்பதிவு இப்போது முடியும் ஆண்டின் 57-வது பதிவாக வந்துள்ளது. (52 வாரம் = ஒரு வருடம்). பதிவுலக நண்பர்களுக்கு மிகவும் நன்றி. இப்போது இப்பதிவுக்கு போகலாம். (இப்போதைக்கு கைவசம் இருக்கும் எல்லா கேள்விகளையும் தீர்த்து விட்டேன். அடுத்த ஆண்டுக்கு சீரோ பேலன்ஸில்தான் செல்கிறேன். சாதாரணமாக அதுதான் டீஃபால்ட் நிலை என்றாலும் கடந்த சில வாரங்களாக சிலர் ஒரேயடியாக நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்டதில் அடுத்த வாரத்துக்கு பல கேள்விகளை கேரி ஓவர் செய்ய வேண்டியதாயிற்று). ஓக்கே, ஸ்டார்ட் மியூஜிக்.
அனானி (120 கேள்விகள் கேட்டவர். ஆனால் சில கேள்விகளை நான் கம்பைன் செய்ததால் 116 தான்):91. ஒரு லிட்டர் பாலுக்கு 20 ரூபாய் கேட்பது நியாயம்தானே? (ஒரு லிட்டர் மினரல் வாட்டர் விலையை ஒப்பிடுக)பதில்: நியாயமே. ஆவின் பால் மினிமம் விலை லிட்டருக்கு 18 ரூபாய். அது சரி தண்ணீருடன் ஏன் ஒப்பிட வேண்டும்? ஏதேனும் உள்குத்து?
92. ரஜினியின் அரசியல் பிரவேசம் கலைஞருக்கு பின்னால் நடக்க வாய்ப்புள்ளதா? (அவரது ஜாதகம் வேறு சாதகமாய் உள்ளதாம்)பதில்: நான் என்ன நினைக்கிறேன் என்றால் 1996-ல் அவரும் தமிழக காங்கிரசும் சேர்ந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு தேசீய கட்சியின் ஆட்சியை தமிழகத்தில் நிறுவியிருக்கலாம். நரசிம்மராவின் சொதப்பலால் அது நடக்காமல் போயிற்று. மாநில காங்கிரஸ் திமுகவுடன் கூட்டு சேர்ந்து திராவிட ஆட்சிதான் தமிழகத்தின் தலைவிதி என நிர்ணயம் செய்து விட்டது வேறு கதை. ரஜனியை பொருத்தவரை இப்போது நேரம் சரியில்லை. கலைஞருக்கு பின்னால்? வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை.
93. பாதாளச் சாக்கடை திட்டம் பகல் கொள்ளைதிட்டமாமே (சென்னையில் வீட்டு வரியின் சமமான பணம் (amount equal to house tax as maintenace charge for u/g mtce) அதற்காக கட்டுவது உண்மையா)?பதில்: இல்லை, உண்மையில்லை. என் வீடுக்கான வரிக்கு 20%க்கும் குறைவாகத்தான் பாதாளச் சாக்கடைக் கட்டணம் உள்ளது.
94. தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி வருமா? (மீண்டும் திமுக பிளவு பட்டால்)பதில்: அதற்கு முன்னால் காங்கிரஸ் பிளவுபடாமல் இருக்க வேண்டும் அல்லவா?
95. செஞ்சி,எல்ஜி -ஆப்பை புடுங்கிய குரங்குகளின் நிலையில் முன்னேற்றம் உண்டா?பதில்: யார் அவர்கள் என்பதைக் கூறுங்கள் முதலில்.
96. சமீபத்தில் தமிழக அரசியலில் பிள்ளையையும் கிள்ளிவிட்டு,தொட்டிலையும் ஆட்டியது யாரெல்லாம்?பதில்: கலைஞர், ஜெயலலிதா, மருத்துவர் ஆகிய எல்லோருமேதான்.
97. பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம், நல்லொழுக்கம் ஆகியவற்றின் இன்றைய உண்மையான நிலை?பதில்: வழக்கம்போலவே அவை இன்னமும் மைனாரிட்டியில் உள்ளன.
98. as on date: அரசியல்/அலுவலக/வாணிப உலகில் நீல மலைத் திருடன் யார், கொல்லிமலை கொள்ளைக்காரன் யார்?பதில்: நான் அறிந்த நீலமலைத் திருடன் ரஞ்சன் மட்டுமே. அப்பெயர் கொண்ட படத்தில் வரும் வெள்ளைக் குதிரை நன்றாக ஓடுவதாக அறிகிறேன். மற்றப்படி கொல்லிமலைக் கொள்ளைக்காரன் பற்றி ஏதும் அறியேன். அப்படியிருக்க, தற்கால அரசியல்/அலுவலக/வாணிப உலகில் உள்ளவர்களில் யார் அவர்களுடன் கம்பேர் செய்யப்படவியலும் என்னும் கேள்வியிலிருந்து எஸ்ஸாகிறேன்.
99. பொருளாதாரத்தில் இந்தியா சீனாவை மிஞ்சுமா? இல்லை மக்கள் பெருக்கத்தில்?பதில்: மக்கள் பெருக்கத்தில் மிஞ்சிவிடுவோம் என்றுதான் தோன்றுகிறது, ஏனெனில் சீனா மிகக்கடுமையாகவே குடும்பக் கட்டுப்பாட்டை அனுசரித்து வருகிறது. பொருளாதாரம் பற்றி எதுவும் இப்போது சொல்வதற்கில்லை.
100. பாரதியார் இப்போது இருந்தால் என்ன பாடுவார்?பதில்: நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு கோடியென் றாலது பெரிதாமோ? எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார் நண்ணிய பெருங்கலைகள் - பத்து நாலாயிரங் கோடி நயந்து நின்ற புண்ணிய நாட்டினிலே - இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்
101. கேரளா சட்ட மன்றம்-தமிழக சட்ட மன்றம் தற்போதைய சூழ்நிலையில் ஒப்பிடுக?பதில்: கேள்விக்கு ஏதேனும் விசேஷ காரணம்? ஒன்று மட்டும் கூறலாம் என நினைக்கிறேன், அரசியல் எதிரியாக இருந்தாலும் கேரள அரசியலில் தனிப்பட்ட அளவில் சுமுகமாகவே பழகுவார்கள், நம்மூரைப் போன்று ஜன்ம விரோதிகளாக இல்லை.
102. விஜயன் -அச்சுதானந்தன் மோதல் சின்னத்திரை சீரியல்களையும் மிஞ்சுமா?பதில்: கேரள மாநில அரசியல் பற்றி அதிகம் தெரியாது.
103. தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு சொன்னதில் இப்போது எதைச் சேர்க்கலாம்?பதில்: அர்த்தமே இல்லாத கருத்து இது. இதற்கு விளக்கம் வேறு ஒரு கேடா?
104. முக்கிய தமிழக அரசியல் கட்சிகளின் இன்றைய நிலைபற்றி விமர்சனம் தனித்தனியாக ஒரு வரியில் சொல்ல முடியுமா?பதில்: முக்கிய இரு திராவிடக் கட்சிகள்: ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். பாமக: அன்புமணிக்கு மந்திரிப் பதவி யார் தந்தாலும் சரிதான் என்னும் நிலை. பாஜக: ஐயோ பாவம் அனாதை. காங்கிரஸ்: சவலைக் குழந்தை. தேதிமுக: ரகசியமாக திமுகாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். சரத்குமார் கட்சி: இருக்கிறார்களா என்ன?
105. உலகில் கம்யூனீசம்- இந்தியாவில் பொதுயுடமைதத்துவம் என்ன ஒற்றுமை-வேறுபாடு?இந்தியாவும் உலகில்தானே இருக்கிறது? எல்லா இடங்களிலும்
கம்யூனிசம் என்பது மனித இயற்கைக்கு புறம்பான தத்துவம்தான்.
106. மீண்டும் தேர்தல் கமிஷன் ஆளும் கட்சியின் கைப்பாவை ஆகிவிடுமா?பதில்: அப்படித்தான் தோன்றுகிறது.
107. இந்த வருடம் தண்ணிர்ப் பிரச்சனை தமிழகத்தை ஒரு வழி பண்ணிவிடும் போலிருக்கே?பதில்: தண்ணீர் பிரச்சினை என்பது எப்போதுமே நம்மீது கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி. எப்போது வேண்டுமானாலும் நம்மீது கயிறு அவிழ்ந்து விழலாம்.
108. தமிழக மாணவர்கள் புத்திசாலி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனரா? (வேலை நிறுத்தம் நீண்டு விடாமல் செய்ததின் அடிப்படையில்)பதில்: எந்த நிகழ்ச்சியை சுட்டுகிறீர்கள் நீங்கள்?
தூங்கியது போதும் மாணவர்களே, விழிமின் எழுமின் என்று எத்தனை முறை கூறினாலும் போதாது.
109. மக்கள் தொலை காட்சி பார்ப்பீர்களா? இலங்கையில் அதற்கு தடையாமே?பதில்: இல்லை, பார்ப்பதில்லை.
110. குடிகாரன் பேச்சு-அரசியல் வாதியின் பேச்சு ஒப்பிடுக?பதில்: குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னு சொல்லற அதே நேரத்துல, நிறைய அரசியல்வாதிங்க பேச்சைக் கேட்டா விடியாமலேயே போயிடும் போலிருக்கே.
111. கள்ள ஓட்டை தடுக்க என்னவெல்லாம் கமிஷன் கெடுபிடி செய்தாலும் திருமங்கல வீரர்கள் கெலித்துவிடுவது எப்படி சாத்யமாகிறது?பதில்: மக்கள் ரெண்டுங்கெட்டானாக இருப்பதாலேயே நிகழ்கிறது. ஒன்று ஒரேயடியாக நேர்மையுடன் இருக்க வேண்டும். இல்லை அது இயலாது என்றால், முழுக்கவே நேர்மையைத் தொலைக்க வேண்டும். அதாவது ஓட்டளிக்க பணம் எல்லாம் வாங்கிக் கொள் ஆனால் ஓட்டு மட்டும் நல்லவனாகப் பார்த்துப் போடு. அங்கு போய் செய்து கொடுத்த சத்தியம் என்றெல்லாம் குழம்பாதே. இரண்டு மூன்று தேர்தல்களில் இம்மாதிரி நடந்தாலே போதும். வேட்பாளர்கள் திருந்தி விடுவார்கள்.
112. 2010ல் பொருளாதார சரிவு சரி ஆகிவிடும் என்பதை?பதில்: நம்பிக்கையாவது வைப்போமே, காசா பணமா?
113. பதவி ஆசை இல்லாத ஒருவரின் பேர்? (வாழும் மனிதர்களில்)பதில்: யாரும் என் கண்களில் படவில்லையே.
114. அரசியல் அம்மா-ஆன்மீகத்தில் அம்மா- யோகக்(அன்பை பரவலாக்குவதில்) கலையில் அம்மா- இதில் யார் சூப்பர்?பதில்: அரசியல் அம்மாவை அறிவேன். மீதி இருவர் யார்?
115. அரசியல்/ஆன்மீகம்/சாதிக் கட்சி மாநாடு இவற்றில் கட் அவுட் கலாச்சாரம் போய் ப்ளக்ஸ் பேனர் கலாசாரம் -அடுத்து வருவது?பதில்: தொழில் நுட்பரீதியாக எலக்ட்ரானிக் பலகை என தெரிவிக்கிறார், விளம்பரத் துறையில் இருக்கும் நண்பர் லக்கிலுக்.
116. விதி வலியது விதியை மதியால் வெல்லலாம். உங்கள் ஓட்டு யாருக்கு? என்ன காரணம்? சான்றுகள் உண்டா? உங்களின் அனுபவம்?பதில்: இதற்கு நான் இப்போது தனியாக பதிலளிப்பதை விட
ஏற்கனவே எங்கே பிராமணன் சீரியல் பகுதி - 15-ல் எழுதியதையே தருகிறேன்.
“அடுத்த சீனில் வசுமதி வீட்டுக்கு வரும் ஒரு பைராகி பிட்சை கேட்க, வசுமதி அவரை பிட்சை போட மாட்டேன் எனக்கூறி விரட்டுகிறார். சமையற்கார மாமி சமயோசிதமாக பேசி, பிட்சை இடுகிறார். இதையெல்லாம் வெளியிலிருந்த வண்ணம் பார்த்த பாகவதர் வசுமதியிடம் நாதன் குடும்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் அவரது கொள்ளுத்தாத்தா காலத்தில் இம்மாதிரி அவாத்து மாமி பெண் துறவிக்கு பிட்சையிட மறுக்க, இனி அக்குடும்பத்தில் தலைமுறைக்கு ஒருவர் சந்நியாசியாக போவார்கள், அவ்வாறு போகிறவருக்கு என்னவோ புண்ணியம்தான், ஆனால் மற்றவருக்கு பிரிவுத் துயரமே என அருள்வாக்கு கூறி அத்துறவி செல்கிறார். இதை கேட்டு திகைப்படந்த வசுமதி நாதனிடம் பிறகு அது பற்றி கேட்க, அவரும் சில உதாரணங்களைக் கூறி அதை ஊர்ஜிதம் செய்கிறார்.
மீண்டும் சோவும் நண்பரும். எல்லாமே விதிப்படித்தான் என்றால் ஏன் முயற்சி செய்து நேரத்தை வீணாக்க வேண்டும் என நண்பர் கேட்க, சோ அது பற்றி நீண்ட விளக்கமே அளிக்கிறார். மழை வருவது விதி. அது வந்தால்தான் விளைச்சல் இருக்கும். ஆனால் அது மட்டுமே போதாது. மற்ற முயற்சிகளும் வேண்டும். இல்லாவிட்டால், மழை வந்தும் என்ன பலன்? அதே சமயம் எல்லா முயற்சிகளும் செய்து கடைசியில் எதிர்ப்பாராத காரணங்களால் கைகூடாமல் போவதும் உண்டு. அதுதான் விதி. ஆக, முயற்சி எப்போதுமே தேவைதான். அல்லாவை நம்பு, அதே சமயம் ஒட்டகத்தையும் நன்றாக கட்டிப்போடு என்னும் பொருளில் இசுலாமிய நண்பர்களிடையே ஒரு சொலவடை உண்டு. அதுவும் இதைத்தான் வலியுறுத்துகிறது. சோவுக்கு தயாரிப்பாளராக இந்த நண்பர் வரவேண்டும் என்பது விதி, ஆனால் அவரையும் அவ்வப்போது பதில்கள் மூலம் சமாளிப்பது சோவின் முயற்சிகள்தானே.
யாதவர்கள் அழிந்தனர். கிருஷ்ணர் யாதவப் பெண்மணிகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லுமாறு அருச்சுனனை பணிக்க, அவனும் அவ்வாறே செய்கிறான். அப்போது அவனை தாக்கிய கொள்ளைக்கூட்டத்தாரை எதிர்த்து அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவனது காண்டீப வில்லும் பயன்படவில்லை. அப்போது திகைப்படைந்த அருச்சுனனுக்கு வியாசர் விளக்குகிறார், அருச்சுனனின் விதி முடிந்தது என்று. ஆக, அம்மாதிரி சந்தர்ப்பங்களில்தான் விதி பற்றிய விளக்கம் புரிந்து கொள்ள முடியும்.
கடைசியா முரளி மனோகர் ஒன்று கூற ஆசைப்படுகிறான். “அதானே, பாருங்களேன். பெரிசு சீரியலை துறந்தாலும் சீரியல் பெரிசை விடவில்லை. ஆகவே இப்பதிவு மற்ற பிளாக்கர்களையும் விடுவதாக இல்லைதானே. ஹூம், விதியின் விளையாட்டே தனி”.
வஜ்ரா:1. எஸ்.வீ.சேகர் பிராமணர்களுக்கு 7% இடஒதுக்கீடு வாங்குவேன் என்கிறாரே? இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நீங்கள் பிராமணர்களுக்கு 7% இடஒதுக்கீடு கிடைத்தால் சந்தோஷம் அடைவீர்களா?பதில்: இதில் மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது? வேறு வகைகளில் இட ஒதுக்கீடு இல்லாத, ஆனால் பொருளாதார நிலையில் பின்னிலையில் உள்ளவர்களுக்கு என மொத்தமாக இட ஒதுக்கீடு வேண்டுமானால் தரலாம், அவர்களில் பார்ப்பன ஏழைகளும் வரலாம். அதற்காக பார்ப்பனருக்கு மட்டும் என இடஒதுக்கீடு கேட்பது சரியாகாது. எது எப்படி ஆனாலும் எல்லா ஒட்டுமொத்த இடஒதுக்கீடுகளுமே சேர்ந்து 50% தாண்டலாகாது.
எம்.கண்ணன்:1. தினகரன் கூட தலையங்கம் வெளியிட ஆரம்பித்துவிட்டதே? (2ஆம் பக்கம்)எழுதுவது யார்? கலாநிதியா? தயாநிதியா? அவர்களுக்கு இந்த அளவு தமிழில் எழுதவருமா?பதில்: ஏன் அவர்கள் எழுத வேண்டும்? இருவருமே மேலாண்மையில் தேர்ந்தவர்கள்தானே? இதனை இவனால் முடிக்கும் என நாடி அதனை அவன்கண் விடுபவர்கள் அல்லவா?
2. சன் டிவி, சன் எஃப்.எம், சன் பிக்சர்ஸ் போன்றவற்றின் வெற்றிக்குக் காரணம் கலாநிதியா இல்லை அவரது ஆப்த நண்பர் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் பிஸினஸ் உத்திகளா? (என்ன தான் அரசியல்/ஆட்சி பலம் உபயோகித்தாலும்)பதில்: இட ஒதுக்கீடு, மனவாடு என்றெல்லாம் பார்க்காது நல்ல ஆட்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை பொறுப்பான பதவிகளில் அமர்த்திய கலாநிதியின் மேலாண்மை உத்தியே காரணம்.
3. ஸ்டாலின் மனைவி துர்கா ஏன் சாந்தா என பெயர் மாற்றிக்கொண்டுள்ளார்?பதில்: அது அவரது தனிப்பட்ட விருப்பம். அதை தெரிந்து கொள்ள ஏன் இந்தக் கொலைவெறி?
4. அழகிரி மதுரைக்கு எம்.பி ஆனால் பாராளுமன்றத்தில் பேசுவாரா? இந்தி தெரியுமா?பதில்: ஹிந்தி பேச வேண்டிய அவசியம் இல்லை. மொழிபெயர்ப்பாளர்கள் எதற்கு இருக்கிறார்களாம்.
5. மலைச்சாமி, மைத்ரேயன் போன்ற அதிமுக ராஜ்யசபை எம்.பி.க்கள் இதுவரை தமிழ்நாட்டுக்காக என்ன செய்துள்ளனர்?பதில்: மலைச்சாமி அதிகாரியாக இருந்தபோது ந்ன்கு பணி செய்துள்ளார். அரசியலில் வந்த பிறகு அவ்வளவாகப் போதாது. மைத்திரேயன் பற்றி ஒன்றுமே தெரியாது.
6. ஹிண்டு என்.ராம் பற்றியும் அவர் ஹிண்டுவை நடத்தும் விதம் பற்றியும் உங்கள் கருத்து என்ன? (இட்லிவடை பதிவைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்
http://idlyvadai.blogspot.com/2009/03/blog-post_1577.html)பதில்: இது பற்றி எனது கருத்தை அறிய நான் வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதிய
தந்தைக்கு பெருமை சேர்த்த மகள் என்னும் பதிவைப் பின்னூட்டங்களுடன் பார்க்கவும்.
7. ஜனதா நகர் காலனி என சோ வின் சீரியல் ஒன்று (தமிழ் தூர்தர்ஷன்?) பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பானதே? பார்த்ததுண்டா? அவரின் தம்பியும் அதில் நடித்திருப்பார்.பதில்: கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. 1981 முதல் 1995 வரை தில்லியில் தமிழ்ச்சேனல் ஏதும் பார்க்க இயலவில்லை. அந்த 14 ஆண்டுகால வனவாசத்தில் பல நல்ல தொடர்களை கோட்டை விட்டிருக்கிறேன். அவற்றில் இதுவும் ஒன்று.
8. தமிழில் சிறந்த கொக்கோகக் கதைகள் யாவை? (சரோஜாதேவியை குறிப்பிடாதீரும்). அவை இப்போது புத்தகமாக கிடைக்கிறதா? தமிழ்வாணன் பதிப்பகம் சில (பல?) புத்தகங்கள் வெளியிட்டுள்ளனரே? படித்ததுண்டா?பதில்: இதென்ன போங்கு, சரோஜாதேவி கதைகளைச் சொல்லாமல் இருக்க முடியுமா? மற்றப்படி தமிழில் போர்னோ சம்பந்தமாக நான் இட்ட
சரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும் பதிவையும் பாருங்களேன்.
9. ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிக்கைகளில் வார தொடர் (உதா. பா.ராகவன்) எழுதுபவர்களுக்கு ஒரு வாரக் கட்டுரைக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் ? அதை ஒழுங்காக கொடுப்பார்களா ? (சாரு நிவேதிதா - யாரும் சரியாக பணம் கொடுப்பதில்லை என எழுதியுள்ளாரே?)பதில்: இந்த விஷயத்தில் குமுதத்தைவிட விகடன் அதிக தாராளம் எனக் கேள்விப்படுகிறேன்.
10. இந்தக் கோடை மிக கடுமையாக இருக்கும் என சுற்றுப்புற சூழ்நிலை வல்லுனர்கள் சொல்கிறார்களே ? எப்படி (மின்வெட்டையும் சேர்த்து) சமாளிக்கப்போகிறீர்கள்? என்ன பிளான்?பதில்: ஆச்சி மோர், ஆவின் லஸ்ஸி, இளநீர் ஆகியவையே துணை. வீட்டிலிருந்து கொண்டே கணினியில் வேலை செய்வதால் வெய்யிலில் அலைவதைத் தவிர்க்க இயலும். என் வீட்டைச் சுற்றி மரங்கள் இருப்பதால் அந்தளவுக்கு கதிரவனின் கொடுமைகள் குறையும்தானே.
அனானி (10.03.2009 காலை 06.32-க்கு கேட்டவர்):1. ஜெயலலிதாவின் திடீர் இலங்கை கரிசனம் அவரை கரை சேர்க்குமா? ஒரேடியாய் கவிழ்க்குமா?பதில்: ஜெயலலிதா சரியான அரசியல்வாதி. அவரது இந்த நிலையும் அவரது அரசியல் வியூகமே.
2. இடியாப்பச் சிக்கலில் தேர்தல் களத்தில் தற்சமயம் யார்?பதில்: எனக்குத் தெரிந்து கருணாநிதி மற்றும் மருத்துவர்.
3. சோவின் நிலை தர்ம சங்கடமா?பதில்: அவருக்கென்ன, மயிரே போச்சு என விடக்கூடியவரே.
4. அவரது பாஜகாவும் இலங்கை பிரச்சனையில் "டகால்டி" வேலை காட்டுதே?பதில்: பாஜக மட்டும் வானத்திலிருந்தா குதித்து விட்டது? அதுவும் ஓர் அரசியல் கட்சிதானெ.
5. ஒருவேளை கூட்டணி பலம், விலைவாசி உயர்வு, கலைஞரின் உடல் நலக்குறைவு ஆகியவற்றால் ஜெ வெற்றிபெற்றுவிட்டால், காங்கிரஸ் கலைஞரை கைகழுவுமா?பதில்: சமீபத்தில் 1962-ல் வெளிவந்த போலீஸ்காரன் மகள் படத்தில் வந்த ‘கண்ணிலே நீர் எதற்கு’ என்னும் பாடலின் மெட்டில் பாடவும். கூட்டணி என்பதெதற்கு? (சீர்காழி கோவிந்தராஜன்) தருணத்தில் காலை வாருவதற்கு (எஸ். ஜானகி)
6. மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டு இப்படி அநியாயமாய் அதன் உழியர்களின் வருமானத்தை கூட்டிகொண்டே போவதை பார்த்தால்?பதில்:
இந்த இடத்தில் என் நண்பர் அரோரா அவ்ர்கள் நினைவுக்கு வருகிறார். அவர் சென்னைக்கு டூர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் பஸ்ஸில் அவர் பர்ஸை ஜேப்படி செய்துவிட்டார்கள். அவர் குய்யோ முறையோ என ஊரைக் கூட்டி தன் பர்ஸில் 500 ரூபாய் நோட்டுகளாக பத்தாயிரம் ரூபாய்கள் வரை வைத்திருந்ததாகக் கூறி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார், நானும் அவர் ஹிந்தியில் கூறியதை தமிழில் மொழிபெயர்த்து கூற பஸ்ஸில் ஒரே கலாட்டா.
பஸ்ஸிலிருந்து இறங்கி அவர் தில்லி திரும்பச் செல்வதற்காக சென்ட்ரல் சென்றார். நானும் அவர் கூடவே சென்று போலீஸ் புகார் கொடுக்கச் சொன்னதற்கு, அவர் சிரித்துக் கொண்டே, பர்ஸில் ரூபாய் ஒன்றும் இல்லை என்றும் சில பில்கள் மட்டும் இருந்ததாகவும் கூறி, பணம் தன் உள்பையில் பத்திரமாக இருந்ததாகக் கூற, எனக்கு ஒரே திகைப்பு. ஏன் அவ்வாறு பஸ்ஸில் கத்தினார் என்று கேட்டப்போது ஜேப்படி செய்பவர்கள் போலிஸுக்கு மாமூல் கொடுக்க வேண்டியிருக்கும், சக ஜேப்படித் திருடர்களுக்கும் பங்கு தர வேண்டியிருக்கும் என்றும், அவர் பர்ஸை கொள்ளையடித்த அந்த அப்பன் பெயர் தெரியாத பயல் பத்தாயிரம் ரூபாய்க்கேற்ப போலீஸ் மாமூலைக் கொடுத்து சாகட்டும் என்று கூறிவிட்டு ரயிலேறினார்.
இது ஏன் இப்போது நினைவுக்கு வர வேண்டும் என்பதை ஊகிப்பவர்கள் மேலே கேட்ட கேள்வியின் பதிலையும் அறிவார்கள்.
7. அரிசி விலை கிலோவுக்கு ரூ. 50 ஐ தாண்டுமாமே?பதில்: ஏற்கனவேயே இந்த விலை சில இடங்களில் வந்து விட்டதாக அறிகிறேன்.
8. குறள் டீவி எப்படி?பதில்: இக்கேள்விக்கு பதில் கூறவே கூகளிட்டு பார்த்தேன். நீங்களும் பாருங்களேன்,
டி.ராஜேந்தர் செய்திகளை அளிக்கும் காட்சியை.
9. அடுத்த தொலைதொடர்பு அமைச்சர் அழகிரியா?பதில்: தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக ஏன் வரக்கூடாது?
10. கனிமொழி?பதில்: சங்கமம்?
வி. குமார்:1) உங்களிடம் வாரா வாரம் கேள்வி கேட்கும் வாசகர்கள் எதற்காக கேள்வி கேட்கிறார்கள் என ஆய்ந்ததுண்டா? உங்கள் பதில்கள் சுவாரசியமானதாகவோ, இல்லை அறிவார்த்தமானதாகவோ, புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளும் விதமாகவோ இல்லாத போது - மாங்கு மாங்கென்று எதற்கு கேள்விகள் கேட்கிறார்கள்?பதில்: (டி. ராஜேந்தர் குரலில்) நீங்களும்தான் கேட்டீர்கள் இக்கேள்வி, உங்களுக்கு அது ஏன் என்பது தெரியும்தானே என்பது எனது பதில் கேள்வி. அதே போல மற்றவருக்கும் அவரவர் காரணம் ஏன் இருக்கக்கூடாது என்பது எனது மறு கேள்வி. இன்னும் புரியவில்லையா என்பது கடைசி சிறு கேள்வி.
2) யார் இந்த கேள்வி கேட்கும் நபர்கள் / அனானிகள்? உங்களிடம் கேள்விகள் கேட்பதால் அவர்களுக்கு என்ன பயன்?பதில்: உங்களுக்கே ஏதோ பலன் இருப்பதால்தானே கேட்டீர்கள்?
சேதுராமன்:1. வழக்கறிஞர்களுக்கு ஒரு சங்கம் போதாதா? அதில் பிரிவு தேவையா - தி.மு.க/அ.தி.மு.க என்று?பதில்: தேவை இல்லைதான். சங்கமே தேவையில்லை. அவர்கள் ஸ்டேட்டஸுக்கு பார் கவுன்சிலே போதும்தான். ஆனால் யார் கேட்கிறார்கள்?
2. ஸ்ரீகிருஷ்ணா அறிக்கைக்கு இந்த வக்கீல்கள் கொடுத்த மரியாதை சரிதானா?பதில்: சரியில்லைதான். ஆனால் இம்மாதிரி நடந்து கொள்வதால் அவர்களே மரியாதைக்குரியவர்கள் இல்லாமல் போனதுதான் நடக்கிறது.
3. உச்ச நீதி மன்றம் சொல்லிய பிறகும் இவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்வது சரியா?பதில்: ரிங் லீடர்களை பிடித்து வழக்கு போட்டு கடைசியில் குற்றம் ஸ்தாபிதம் ஆனால் சன்னதைப் பிடுங்குவதுதான் சரியாக இருக்கும்.
4. எல்லா கட்சி தலைவர்களும், போர் நிறுத்தம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே, யாராவது புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்றார்களா? அது மட்டும் நடந்தால் போரே இருக்காதே!பதில்: பெரிய இடியாப்பச் சிக்கலாகி விட்டது. அவரவர் தத்தம் நிலையில் கெட்டியாக உட்கார்ந்து விட்டனர். தீர்வு கஷ்டம்தான்.
5. தமிழ் நாட்டில் பா.ஜ.க. தேறுமா? அல்லது அதோகதிதானா? பதில்: தேறுவதற்கு ரொம்பவுமே மெனக்கெட வேண்டும். அது ஆரம்பமாகும் அறிகுறிகள் எதுவும் இப்போதைக்கு காணவில்லையே.
கமலக்கண்ணன்:1. கடைசியில் காரோட்டி கண்ணப்பனும் கைவிரித்துவிட்டாரே, கன்னித்தமிழ் காவலராம் வைகோவின் அரசியல் எதிர்காலம் இனி? மதிமுக அதிமுகவில் இணையுமா?பதில்: எந்த கண்ணப்பனை குறிப்பிடுகிறீர்கள்? மிஸ்டர் சுகன்யா? (பின்னால் சேர்த்ததது: சாரி, சாரி. நீங்கள் சொல்லற கண்ணப்பன் மிஸ்டர் சுகன்யா இல்லைதான். கலைஞரைப் போய் ஆஸ்பத்திரியில் மனிதாபிமான அடிப்படையில் பார்த்த கண்ணப்பன் வேறு அல்லவா. வைக்கோவுக்கு காலம் கைகொடுக்கவில்லை, நான் சொல்வது கோவி. கண்ணனை இல்லை.
2. பாமக ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகால்?பதில்: ஆம், இதில் ஒருக்காலும் ஐயமே இருக்கலாகாது.
3. மயிலை சேகர் ஏன் (அம்மா) (அதிமுகா)வால் ஒரங்கட்டப்படுகிறார்?பதில்: மகாபாரதத்தில் விதுர நீதி, பீஷ்ம நீதி என்று பல நீதிகள் உண்டு. அவை அரசன் நல்லது செய்து உன்னதம் அடைய வேண்டும் எனக் கூறும்போது. அவற்றுக்கெல்லாம் நேர்மாறான இன்னொரு நீதியும் உண்டு. அதுதான் கணிகர் நீதி. அதாவது அரசன் யாரையும் நம்பக்கூடாது. தன்னிடம் வேலை செய்பவர்கள் எக்காலத்திலும் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்க விடலாகாது. யாரையுமே தான் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை ஊகிக்க விடக்கூடாது. வேண்டாதவர்களை முழுமையாகவே அழிக்க வேண்டும் என்ற ரேஞ்சில் இந்த நீதி செல்கிறது. ஜெயலலிதாவும் அதையே செய்ய முயற்சிக்கிரார். இப்போது சேகர்தான் எதிர்வினையாற்ற வேண்டும். அவருக்கு இருக்கும் நடிப்புத் திறமைக்கு அவர் அளவிலேயே அவர் ராஜாவாக இருக்கலாம். ஜெயலலிதா போன்ற அபாயகரமான அரசியல் நண்பர்கள் அவருக்குத் தேவையில்லை. அப்படியே அரசியல் தேவை என்றாலும் சோ அவர்கள் மாதிரி விலகி நிற்பதே அவருக்கு மரியாதை தரும். சேகர் சம்பந்தமாக நான் இட்ட
பதிவு பலே எஸ்.வி. சேகர் இதோ.
4. பாஜகவின் எதிர்க்கட்சி அந்தஸ்து தொடருமா?இல்லை சீட் குறையுமா?பதில்: எனக்கு ஜோஸ்யம் தெரியும் என்று நான் எங்குமே கூறவில்லையே.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்