1/31/2006

பேரறிஞர் அண்ணா அவர்கள் - 2

இப்போது திண்ணையில் வெளியான மலர் மன்னனுடைய கட்டுரையின் இரண்டாம் பாகத்துக்கு வருவோம்.

அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா - 2

அண்ணாவைப் பற்றி நான் எழுதுகையில் உடனுக்குடன் படித்துக்கொண்டே வந்த நண்பர் ஒருவர், மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராய்க் கண்ணீர் சிந்தலானார். 'அண்ணாவிடம் இவ்வளவு சிறப்பியல்புகள் இருந்தனவா? ஆனால் அவருடைய வழிவந்தவர்கள் நடந்துகொள்ளும் முறைக்கும் அண்ணாவின் குணநலன்களுக்கும் ஒரு சிறிதும் தொடர்பு இல்லையே! கருணாநிதி 'ஆட்சி மாறப்போகிறது என்பது நினைவிருக்கட்டும்' என்று இப்போதே மறைமுகமாக எச்சரிக்கை செய்யத் தொடங்கிவிட்டார். ஜயலலிதாவும் அதிகாரிகளிடம் பழிவாங்கும் போக்கில்தான் நடந்துகொள்கிறார். எத்தனை அதிகாரிகள் இவர் ஆட்சியில் பந்தாடப்படுகிறார்கள்! சிலருக்கு மாற்று இடம் தராது வீட்டில் உட்காரும்படிச் செய்துவிடுகிறார். இவர்களுக்கும் அண்ணாவுக்கும் சம்பந்தமே இல்லையே!' என்று ஆச்சரியப்பட்டார்.

இதற்கு நான் என்ன பதில் சொல்வது? ஜயலலிதாவுக்கு அண்ணாவிடமிருந்து கேடயம் வாங்கியதற்குமேல் வேறு பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கருணாநிதி அண்ணாவுடன் நெருக்கமாக இருந்தவர். அண்ணாவிடமிருந்து அவரது இதயத்தை இரவலாகக் கேட்டு வாங்கியிருப்பதாக வேறு சொல்பவர். மேலும் இன்று எண்பது பிராயம் தாண்டிவிட்டவர். அவரே இப்படியிருக்கும்போது ஜயலலிதாவிடம் எப்படி அன்ணாவின் பிரதிபலிப்பை எதிர்பார்க்கமுடியும்?

அண்ணாவிடம் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களே, அவரால் நீங்கள் அடைந்த பலன் என்ன என்றும் அந்த நண்பர் கேட்டார். அவர் மீது பிழை இல்லை. பலன் கிடைத்தால்தான் ஒருவர் மீது பாசம் இருக்கும் என எண்ணத் தோன்றும் காலத்தில் வாழ்பவர் அவர்!

உலகாயதப்படிப்பார்த்தால் எனக்கோ என் குடும்பத்திற்கோ ஒரு துரும்பின் அளவுக்கும் அண்ணாவால் பலன் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப்பார்த்தால் யாரால்தான் என்ன பலன் லௌகீகமாய்? மேலும் லௌகீகப் பலன் பார்த்தா ஒருவருடன் பழகுவதும், ஒருவரை நேசிப்பதும்? அண்ணாவிடமிருந்து சில நற்பண்புகளையேனும் கற்றுக்கொள்ளமுடிந்ததே, அதனைக் காட்டிலும் சிறந்த பலன் என்ன இருக்க முடியும்? உலகாயதப் பலன்களை எதிர்பார்த்து நான் அவரோடு பழகவும் இல்லையே! அப்புறமென்ன?

அண்ணா முதலமைச்சரான பிறகு முன்போல அவருடன் நெருங்கியிருக்க இயலாது போயிற்று என்றாலும் செய்தியாளன் என்ற முறையில் தினந்தோறும் கோட்டைக்குச் செல்வதும் அடிக்கடி அவரைச் சந்திப்பதும் நிகழ்ந்து வந்தது. முதலமைச்சராக அண்ணா தமது முதல் செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டியபோது ஒரு நிருபர் மதுவிலக்கு தளர்த்தப்படுமா என்று கேட்டார். கேள்வி முடிவதற்கு முன்னதாகவே அண்ணா பதிலிறுத்துவிட்டார்: I am an adict to prohibition என்பதாக. அன்ணாவின் அந்த வாக்குச் சாதுரியம் கேட்டு, adict என்ற பிரயோகத்தின் பொருத்தம் கண்டு, நிருபர்கள் அனைவரும் ஆஹாஹா என்று வாய்விட்டுக் கூவி ரசித்தனர், கச்சேரியில் ஒரு ஸ்வரப் பிரயோகம் கேட்டு மகிழ்வது போல!

அண்ணா சொன்னார்: '' நான் சிறுவனாயிருக்கையில் பள்ளியிலிருந்து திரும்புகையில் தெருவோரங்களில் பலர் உருண்டு கிடப்பது கன்ணில் படும். அது என்னை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஆனால் கடந்த பல தலைமுறைகளாக அம்மாதிரியான காட்சியினைக் காணும் நிலைமை நம் குழந்தைகளுக்கு இல்லை. இதனை நான் மாற்றிவிடமாட்டேன், எவ்வளவுதான் நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும்.''

அண்ணாவை மிகக் கேவலமாக மேடையில் பேசுபவர்கள் பலர் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் சின்ன அண்ணாமலையும் ஒருவர். ஒரு தடவை அண்ணா முதல்வரான பிறகு வெளியூர் சென்று ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தார். நடு நிசி. விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயிலில் இடம் தேடி சின்ன அண்ணாமலை அல்லாடிக் கொண்டிருப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டார் அண்ணா. சின்ன அன்ணாமலை இடம் கிடைக்காமல் திண்டாடுகிறார் போலிருக்கிறது. நாம் அழைத்துச் செல்வோம், உடனே அவரை அழைத்துவாருங்கள் என்று காவலரை அனுப்பினார் அண்ணா. முதல்வர் அழைக்கிறார் வாருங்கள் என அவரை அழைத்து வந்தார் காவலர். சின்ன அண்ணாமலைக்கு நம்பவே முடியவில்லை. இங்க இடமிருக்கு, வாங்க என்று அவரை அழைத்துக் கொண்டார், தமிழக முதலமைச்சர் அண்ணா. இச்சம்பச்வத்தைப் பதிவு செய்த சின்ன அண்ணாமலை, அந்தக் கணமே அண்ணா மீது தமக்கு இருந்த துவேஷம் நீங்கியதாகவும் பதிவு செய்திருக்கிறார்.

யேல் பல்கலைக் கழக அழைப்பின் பேரில் அமெரிக்கா செல்லும் வழியில் அண்ணா வாடிகன் சென்று போப் ஆண்டவரைப் பார்த்தார். நம் நாட்டு சமயத் தலைவர்களைப் பார்க்காத அண்ணா மாற்று சமயத் தலைவரைப் பார்ப்பதா எனப் பலர் கடுமையாக விமர்சித்தனர். அண்ணாவோ ஒரு நோக்கத்துடன்தான் அந்தச் சந்திப்பை மேற்கொண்டார். அந்தச் சமயத்தில் கோவா விடுதலைப் போரில் பங்கேற்ற சிலரைப் போர்ச்சுகல் அரசு கைது செய்து லிஸ்பனுக்கு அழைத்துச்சென்று சிறைவைத்திருந்தது. அந்த கோவா விடுதலைப் போராட்டத் தியாகிகள் தம் வாழ்நாள் முழுவதும் அன்னிய நாட்டுச் சிறையிலேயே கழிந்துவிடும் என்றுதான் எண்ணியிருந்தனர். அவர்களை விடுதலை செய்யுமாறு போர்ச்சுகல் அரசுக்கு அறிவுறுத்துமாறு போப் ஆண்டவரிடம் விண்ணப்பித்தார், அண்ணா. போப் அதற்கு இணங்கி போர்ச்சுகல் அரசிடம் கோவா விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறையில் இருப்போரை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். போப் ஆண்டவரே கேட்டதால் அதற்குப் போர்ச்சுகல் அரசு இணங்கியது. ஆனால் நடைமுறைகளின் காரணமாக அதில் தாமதமேற்பட்டது. விடுதலையாகி வந்த கோவா விடுதலைப் போராட்டத் தியாகிகள் தமது விடுதலைக்குக் காரணமான, தங்களை முன்பின் அறியாத அண்ணாவைச் சந்தித்து நன்றி கூற விழைந்தனர். அதற்குள் அண்ணா காலமாகிவிட்டிருந்தார்.

''அண்ணா ஈஸ் ஜெம் ஆப் எ மேன்'' என்பார் மெயில் ராமனாதன். அவர் ஒரு பிராமணர். அண்ணா முதலமைச்சராகப் பணியாற்றுவதை மதிப்பீடு செய்த மெயில் இதழ், பதவியினால் சிலர் பெருமை அடைகிறார்கள், சிலர் தாம் வகிப்பதால் தமது பதவிக்குப் பெருமை அளிக்கிறார்கள். அண்ணா தாம் வகிக்கும் பதவிக்குப் பெருமை தேடித்தருபவர் என்று தலையங்கம் எழுதியது. நூற்றாண்டு கண்ட மெயில் ஆங்கில மாலை நாளிதழ், பிராமணர் வசமிருக்கும் சிம்சன் குரூப் நிர்வாகத்தில் நடந்த பத்திரிகை.

அண்ணா மறைந்தபோது, தினமணியில் தலையங்கம் எழுதிய ஏ என் சிவராமன், வெறும் சம்பிரதாயதிற்காக அல்லாது அண்ணாவைப் போற்றித் தலையங்கம் எழுதினார். அவரும் பிராமணர் மட்டுமல்ல, தேசிய உணர்வில் ஊறித் திளைத்தவரும்தான்.

அண்ணா முதல்வர் பதவியேற்ற சில நாட்கள் வரைதான் அப்பதவிக்குரிய மரியாதையைக் காக்கவேண்டும் என்பதற்காக தினமும் முக சவரம் செய்து, சலவை ஆடை அணிந்து காட்சியளித்தார். பிறகு வழக்கம் போல் குறைந்தது மூன்று நாள் சவரம் செய்யாத முகமும் கசங்கிய சட்டையும் அழுக்கேறிய நான்கு முழ வேட்டியுமாக எமக்கு நன்கு பரிச்சயமான அண்ணாவாகத் தோற்றமளிக்கத் தொடங்கிவிட்டார்!

அன்ணாவைப் பற்றிப் பேசுவதற்கு என்னிடம் இன்னுமின்னும் செய்திகள் உள்ளன. சமயம் வரும்போது அவற்றைப் பதிவு செய்ய வேண்டியதுதான். ஏனெனில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இக்கட்டுரையை முடித்தாகவேண்டுமேயன்றி எவ்வளவுதான் வளர்த்திக் கொண்டு போவது?

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, எவ்விதப் பிரதிபலனும் எதிர்பாராத அபிமானிகள் உள்ளவரை அண்ணா இருந்துகொண்டுதானிருப்பார். அவர் இல்லை என்று யாரால் சொல்ல முடியும்?

மலர் மன்னன்
திண்ணையில் வெளியானக் கட்டுரை

பேரறிஞர் அண்ணா அவர்கள்

பழம்பெரும் பத்திரிகையாளர் மலர் மன்னன் அவர்கள் திண்ணை பத்திரிகையில் எழுதிய இக்கட்டுரையை அவர் அனுமதி பெற்று இங்கிடுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். அவர் கட்டுரை முடிந்ததும் அண்ணா அவர்களைப் பற்றி என்னுடைய நினைவுகளை முதல் பின்னூட்டமாக வெளியிடுவேன். இப்போது மலர்மன்னன் அவர்கள்.

அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா?

அண்ணா அவர்கள் மறைந்து விளையாட்டுப்போல் முப்பத்தாறு ஆண்டுகளாகிவிட்டன என்கிறார்கள். எனக்கென்னவோ அவர் இன்னமுங்கூடத் தமிழ் நாட்டின் ஏதோ ஒரு மூலையில், வேளை கெட்ட நடுநிசியில், மிகத்தாமதமாகக் கூட்டத்திற்கு வந்து, அப்படி வந்து சேருகிறவரை அனைவரின் எரிச்சலுக்கும் ஆளாகி, ஆனால் வந்துசேர்ந்ததுமே அனைவரின் மகிழ்ச்சிக்கும் ஆளாகி, பொடி போட்டுப்போட்டுத் தொண்டையிலிருந்து வரவேண்டிய குரல் நாசியின் வழியாகவும் வர நேர்ந்து, தமக்கே உரிய கரகரப்பான குரலில் பேசிக்கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது.

அண்ணா மாதம் முப்பது நாளும் வெவ்வேறு ஊர்களில் பேசிக்கொண்டிருப்பவராக இருந்ததால் அவர் எங்கோ இருந்துகொண்டிருப்பதான உணர்வே எனக்கு இருந்துவருகிறது.

அண்ணாவை நன்கு அறிந்தும், அவரோடு பழகியும் மகிழ்ந்தவர்களின் தலைமுறை அருகி வருகிறது. ஆகையால் அவர் தொடங்கிய தி.மு.கழகம் மற்றும் திராவிட இயக்கங்களின் வழியாக மட்டுமே அவரைப் பற்றிய புரிதலும் தெரிதலும் அமைந்துவிடும் சாத்தியக்கூறு உள்ளது.

முதலில் நான் கூறவிரும்புவது அண்ணாவின் அபிமானிகள் திராவிட இயக்கத்திற்கும் கட்சிகளுக்கும் வெளியேயும் இருந்தார்கள்; இன்னமுங்கூட இருப்பார்கள் என்றே நம்புகிறேன். அதுபோலவே அண்ணாவை வெறுப்பவர்களும் இருந்தார்கள், இன்னமும் இருக்ககூடும். ஆனால் அண்ணாவுடன் ஒரு மணிநேரம் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியிருந்தாலே போதும், அவரை வெறுக்கத் தோன்றாது என்பது மட்டுமல்ல, அவரை மிகவும் மதிக்கவும் நேசிக்கவுமான மனநிலையும் தானாகவே உருவாகிவிடும். எவராயினும் அவரிடமிருந்து தொலைவில் இருக்கிறவரைதான் அவரைத் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்க முடியும்.

அண்ணாவுடனான எனது முதல் அறிமுகம் ஐம்பதுகளின் தொடக்கத்தில்தான். சிதம்பரத்தில், மாணவப் பருவத்தில். சூரி என்கிற நண்பர் வரைந்து கொடுத்த அண்ணாவின் உருவப் படத்தில் அண்ணாவிடம் கையொப்பம் வாங்கியதிலிருந்து அது தொடங்கியது.

எனது பால பருவம், தமிழ் என்று ஓர் உயர்தனிச் செம்மொழி இருப்பதாகவோ, விந்திய பர்வதத்திற்குத் தெற்கே ஒரு நாகரிகம் இருப்பதாகவோ படித்தவர்கள் மத்தியிலே கூட அறியப்படாத பிரதேசங்களில் கழிந்தது. பாரதத்தின் தெற்குப்பகுதியிலிருந்து வருவோர் மொத்தமாக மதராசிகள் என்றே அறியப்பட்ட காலம்.

எனவே தமிழ் நாட்டிற்கு வரநேர்ந்து, முதல் முதலில் அண்ணாவின் மேடைப்பேச்சைக் கேட்கவும் நேர்ந்தபோது பரவசமடைந்தேன். எனது தாய்மொழி கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக, எத்தனை வளமாக உள்ளது என்பதை முதலில் உணர்ந்தது அவரது பேச்சைக் கேட்டபோதுதான். அதன் பிறகு ரா.பி. சேதுப் பிள்ளை, பொன். முத்துராமலிங்கத் தேவர், சோமசுந்தர பாரதியார், ம.பொ.சி. எனப் பலரது மேடைப் பேச்சுகளைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்று மகிழ்ந்தபோதிலும், என்ன இருந்தாலும் முதல் காதலுக்கு உள்ள மகிமையே தனிதான் அல்லவா, தமது மேடைப் பேச்சால் என்னைக் கவர்ந்தவர் அண்ணாவுக்கு இணையாக வேறெவரும் இல்லையென ஆயினர்.

சிதம்பரத்திலிருந்து ஐம்பது மைல் சுற்றளவுக்கு அண்ணா எங்கு பேசினாலும் ஒரு போதைக்கு அடிமையானவன் போலப் போய்க் கேட்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.

எனினும், அன்ணாவிடம் பேசிப்பழகும் வாய்ப்பு சேத்தியா தோப்பு என்ற ஊரில்தான் கிட்டியது. இவ்வாறு ஊர், ஊராகப் போய் அண்ணாவின் பேச்சைக் கேட்கத் தொடங்கியதாலேயே உள்ளூர் தி.மு.க வினரின் நட்பும் ஏற்படலாயிற்று.

சேத்தியா தோப்பில் அண்ணா பேசிய கூட்டம் முடிந்தபோது நடுநிசி தாண்டிவிட்டிருந்தது.

சாப்பாட்டுக்கு என்ன செய்ய? அதன்பின் எப்படி ஊர் திரும்புவது? புவனகிரி ரத்தின. பாலகுருசாமி, சாப்பாட்டிற்கு ஏற்பாடாகியுள்ளது, வா என்னுடன் என்று அழைத்துச் சென்றார். அதன் பயனாக ஒரு சத்திரத்தில் அண்ணாவின் அருகில் அமர்ந்து உண்ணும் வாய்ப்பினைப் பெற்றேன்.

அது எனக்குப் பழக்கமில்லாத, முழுக்க முழுக்க அசைவச் சாப்பாடு!

+++

பலப்பல ஆண்டுகளுக்குப் பின் புதுச்சேரியில் காரை சிபியின் வீட்டில் சாப்பிடுகிறேன். என்னுடன் என் மகள் பூரணியும் இருக்கிறாள். இலையில் சோற்றுக்கு அயிரை மீன் குழம்பும் தொட்டுக் கொள்ள வஞ்சிர மீன் வறுவலும்! மகள் பூரணிக்கு சாம்பாரும் ஏதோவொரு மரக் கறியும்.

மீன் சாப்பிடும் பழக்கம் எனக்கு உண்டு என்கிற அதிர்ச்சியான உண்மை அப்போதுதான் என் மகளுக்குத் தெரிய வந்தது.

"எப்படியப்பா, இவ்வளவு அனாயாசமாக மீனை உரித்து உரித்துச் சாப்பிடுகிறாய்?' என்று திகைப்புடன் கேட்டாள், பூரணி.

முள்ளையும், சதையையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ளாமல், எப்படிப் பதமாக மீனை உண்ண வேண்டும் என்று எனக்குக் கற்றுக் கொடுத்தவர் அண்ணா அவர்கள். சேத்தியா தோப்பில், வேளை கெட்ட வேளையில் அளிக்கப்பட்ட அசைவ விருந்தில். இதனை அன்று நான் பூரணியிடம் சொல்லாமல் சிரித்தேன் என்றாலும் இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

மீன் இல்லையேல் சாப்பாடே இல்லை என்னும்படியான மேற்கு வங்கத்தில் பிற்காலத்தில் நான் வசிக்க நேர்ந்தபோது, அண்ணா கற்றுத் தந்த பாடம் மிகவும் உதவியாக இருந்தது.

அண்ணா மீன் குழம்புப் பிரியர். முக்கியமாக நெத்திலிக் கருவாட்டுக் குழம்புப் பிரியர். எனினும், மன்னார்குடி செல்ல நேர்ந்தால் அவர் மன்னை நாராயணசாமி வீட்டு மீன் குழம்பைவிட சவுரிராஜ ஐயங்கார் வீட்டு வற்றல் குழம்பைத்தான் சோற்றுக்குப் பிசைந்துண்ணவோ, இட்டலிக்குத் தொட்டுக்கொள்ளவோ விரும்புவார்.

கட்டுக் குடுமியும், நெற்றியில் பட்டை நாமமுமாகப் பொலியும் மன்னார்குடி நகராட்சித் தலைவர் சவுரி ராஜ ஐயங்கார் அண்ணாவின் நண்பர். பிற்காலத்தில் எம்ஜிஆருக்கும்தான்!

சவுரி ராஜ ஐயங்கார் மட்டுமா, எத்தனையோ பிராமண நண்பர்கள், அண்ணாவுக்கு. காஞ்சியிலே பிறந்து வளர்ந்தவர் வேறு, வைணவ அந்தணர் மிகுந்த பிரதேசம்!

அண்ணாவை ஒரு இலக்கியப் படைப்பாளியாக என்னால் கருத முடிந்ததில்லை. ஆனால் அவர் நல்ல படைப்புகளை அடையாளம் கண்டு படிக்கக் கூடியவராக இருந்தார். தமிழில் புதுமைப் பித்தன், கு.ப.ராஜகோபாலன் ஆகியோரின் படைப்புகளை அவர் ரசித்துப் படித்தார். பாரதியாரின் கவிதைகள் மட்டுமின்றி, கட்டுரைகளும், வ.ரா.வின் உரைநடையும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன. சரஸ்வதி, சாந்தி, ஆகிய பத்திரிகைகளை விரும்பி வாசித்தார். புதிதாக ஜயகாந்தன்னு ஒருத்தர் எழுதுகிறார், நன்றாக இருகிறது, படி என்று பரிந்துரைத்தார். தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள எவரும்அருகே இல்லாததை ஒரு குறையாக உணர்ந்தார். தி.மு.க. வுக்குப் பின்னர் வந்த க. ராஜாராம்தான் அண்ணாவுக்கு ஈடாகத் தரமான படைப்புகளை அடையாளங்காணக் கூடியவராக இருந்தார்.

கண்ணதாசனும் அத்தகையவராக இருந்தார்.

அண்ணாவின் எழுத்தை என்னால் சிலாகிக்க இயலாது என்றாலும், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அவர் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராகத் திகழ்ந்தார் என்பதை அறிவேன். கட்சி தொடர்பில்லாத பொதுவான கூட்டங்களில் அவர் கலந்துகொள்வதாக இருப்பினும் அவரைத்தான் கடைசியாகப் பேசுமாறு கேட்டுக்கொள்வார்கள். ஏனெனில் அவர் பேசிவிட்டால் வந்ததன் பயன் கிட்டிவிட்டது என்பதுபோல் கூட்டம் கலைந்து போய்விடும்!

சென்னை ராயப்பேடையில் லாயிட்ஸ் சாலையிலிருந்து உள்வாங்கும் தெரு ஒன்று உண்டு; லட்சுமிபுரம் என்பது அதன் பெயர். அங்கு லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் நடத்தி வந்தார்கள். அதில் விசேஷம் என்னவென்றால், உறுப்பினர் பெரும்பாலும் ஐம்பது வயதைத் தாண்டிவிட்ட "யுவர்'கள்! அதிலும் அநேகமாக அனைவரும் பிராமணர்கள். வழக்கறிஞர்கள், கல்விமான்கள், உயர் உத்தியோகஸ்தர்கள். இந்தச் சங்கம் அடிக்கடி ஆசை ஆசையாக அழைப்பது அண்ணாவைத்தான். கச்சேரியை ரசிப்பதுபோல் அண்ணாவின் பேச்சை ரசித்து மகிழ்வார்கள். அன்ணாவுக்கும் அங்குபோய்ப் பேசுவதில் விருப்பம் அதிகம். சபையினர் நாடிபிடித்துப் பார்த்தவர் போல் அவர்களின் ரசனைக்கும் அறிவுநிலைக்கும் ஏற்பப் பேசுவார்.

எனக்குத் தெரிந்து கட்டணம் செலுத்திப் பேச்சைக் கேட்கும் ஏற்பாடு அண்ணா பேசும் கூட்டத்தில்தான் இருந்தது. எல்லாம் ?வுஸ் புல் கூட்டங்கள்! மக்கள் கச்சேரி கேட்கப் போவதுபோலத்தான் அண்ணாவின் பேச்சைக் கேட்கப் போவார்கள். கண்ணதாசன் தாம் நடத்திய "தென்றல்' வார இதழில் ஒருமுறை "கடற்கரையில் அண்ணா' என்ற தலைப்பில் ஒரு சிறு கவிதை எழுதியிருந்தார். அதன் இறுதி வரி, "பாட்டென விளம்பிப் போனார்' என்று முடியும். கூட்டத்திற்கு வந்தவர்களின் கருத்தைப் பிரதிபலிப்பதாக. அது முற்றிலும் உண்மை.

ஆனால் இதையெல்லாம்விட, அண்ணாவின் பெருந்தன்மை, மனிதாபிமானம், சக மனிதனுக்காகப் பதறித் துடித்து, இயன்ற உதவிகளைச் செய்ய முற்படும் இயல்பு, எவ்வளவு ஆத்திரமூட்டப்படினும் நிதானமிழக்காத, அதற்காக வெறுத்து ஒதுக்காத பண்பு, ஆகியவையே இன்றளவும் அண்ணாவின் அபிமானியாக என்னை இருத்தியுள்ளன.

1957ல் அண்ணா முதல் முதலாகத் தமது சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் சட்டமன்றத் தேர்தலில் நின்றபோது, ஈ.வே.ரா அண்ணா மீது பழி தீர்த்துக்கொள்ள தொகுதி முழுவதும் எதிர்ப்புப் பிரசாரம் செய்தார். பொதுக் கூட்டங்களில் மிகவும் தரக்குறைவாக அண்ணாவை விமர்சித்தார். தி.க.வினர் அண்ணாவின் பிறப்பையே கேள்விக்குறியாக்கி இழிவாகப் பேசினார்கள். ஆனால் ஈ.வே.ரா வுக்கு எதிராக ஒரு வார்த்தையும் எம் அண்ணாவின் வாயிலிருந்து வரவில்லை.

அண்ணாவின் உயர் பண்புகளுக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை என்னால் தரமுடியும். அவற்றுள் சிலவற்றையாவது பதிவு செய்யப் பார்க்கிறேன்.

அண்ணாவுக்குத் தமது கட்சியில் மிகவும் விருப்பமான நபர் ஒருவர் உண்டென்றால் அது ஈ.வி.கே. சம்பத்துதான். அவரை மட்டும்தான் பொதுக் கூட்டங்களிலும் உரிமையுடனும் பாசத்துடனும் "அவன்' என்று ஒருமையில் குறிப்பிடுவார். "நான் பிரித்துண்ணும் பகடா பொட்டலத்திலிருந்து எடுத்துண்பவன் சம்பத்" என்பார். அவ்வளவு அந்நியோனியமாக இருந்த சம்பத்துதான் 1962ல் தி முகவிலிருந்து விலக நேர்ந்தது, கருணாநிதியின் போக்கு காரணமாக. அண்ணா அவரே சொன்னதுபோலச் சூழ்நிலையின் கைதியாகிவிட்டிருந்தார்.

பொதுவாக அரசியல் கட்சிகளில் ஒருவர் வெளியேறிச் சென்றால் அவர்மீது குற்றம் சொல்வதுதான் கட்சித் தலைமையின் வழக்கம். ஆனால் சம்பத் விலகியது பற்றி அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?

"சமபத்து ஒரு வைரத் தோடு (தோடு என்றுதான் சொன்னார், கடுக்கன் என்றல்ல). என் காதுகளில் புண் வந்திருக்கிறது. அதனால் அந்தத் தோட்டைக் கழற்றி வைத்திருக்கிறேன்' என்றுதான் சொன்னார், எம் அண்ணா.

1967 தேர்தல் முடிவு அடுக்கடுக்காக வெற்றிச் செய்திகளைக் குவித்துக்கொண்டிருந்தபோது மற்றவர்கள் உற்சாகத்தால் அகமகிழ்ந்திருக்கையில் அண்ணா பிரமிப்புடனும் சிறிது கவலையுடனும்தான் காணப்பட்டார். ஆட்சி செய்யும் பொறுப்பு தி.மு.க.வுக்கு மிக விரைவாக வந்துவிட்டதாகவே எண்ணுவதாகக் கூறினார்.

விருதுநகரில் பெ.சீனிவாசன் என்ற மணவர் தலைவரான தமது கட்சி வேட்பளரிடம் காமராஜர் தோல்வியடைந்த செய்திகேட்டு மற்றவர்கள் உற்சாகத்தில் எகிறிக்குதித்தபோது, அண்ணா மிகவும் வியாகூலத்துடன் "அவர் தோற்றிருக்கக் கூடாது' என்று வருந்தினார். இவ்வளவுக்கும் காமராஜர் வன்மத்துடன் 1962 தேர்தலில் நடேச முதலியார் என்ற பஸ் முதலாளியை நிறுத்தி ஏராளமாகப் பணச் செலவு செய்யவைத்து அண்ணாவைத் தோற்கடித்து மகிழ்ந்தவர்தான்!

காமராஜர் தோற்ற செய்தி கிடைத்தவுடன் எம் அண்ணா எடுத்த முதல் நடவடிக்கை விருதுநகரில் வெற்றிக் கொண்டாட்டம், ஊர்வலம் என்று தம் கட்சியினர் அட்டகாசம் எதுவும் செய்துவிடக்கூடாது என்பதுதான். காங்கிரசின் தலையாய தூணான காமராஜரையே தோற்கடித்த விருதுநகர் அன்று ஏதோ துக்க தினம் அனுசரிப்பதுபோலத்தான் காணப்பட்டது, தி முக வெற்றிபெற்ற போதிலும்!

ஆட்சிப் பொறுப்பு தி முகவைத் தேடி வந்தவுடன் எம் அண்ணா செய்த முதல் காரியம் காமராஜர், அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றதோடு, அவர்களின் ஆலோசனையையும் ஒத்துழைப்பையும் வேண்டியதுதான்!

பதவி ஏற்றதும் அதுவரையில் இரு ந்த அரசுச் செயலர்கள், காவல் துறை உயர்

அதிகாரிகள் ஆகியோர் முந்தைய காங்கிரஸ் ஆட்சியினரால் நியமிக்கப்பட்டு அதற்கே விசுவாசமாயிருப்பார்கள் ஆதலால் அவர்களையெல்லாம் மாற்றவேண்டும் எனத் தம்பிமார் வலியுறுத்தினார்கள். ஆனால் எம் அண்ணா அதற்கு இணங்கவில்லை. "அப்படிச் செய்வது அவர்கள் மேலும் நம்மிடமிருந்து விலகியிருக்கச் செய்துவிடும். நமக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வதுபோலாகும். பார்க்கப் போனால் அவரக்ள்தான் ஆட்சிப் பொறுப்பில் நிரந்தரமாக இருப்பவர்கள். அரசியல் கட்சிக்கார்களான நமது ஆயுள் ஐந்தாண்டுகள்தான். பக்தவத்சலம் ஆட்சியில் யார் யார் எங்கெங்கு இருந்தார்களோ அங்கங்கு தொடரட்டும் ' என்று சொன்னார் எம் அண்ணா.

ஐ.ஜி. யாக இருந்த அருள், அண்ணாவை ஒரு சந்தர்ப்பத்தில் மிகவும் அவமரியதையாக நடத்தினார். அருளைப் பழிவாங்கத் தம்பிமார் துடித்தனர். "அருள் தோள் மீது ஒரு ஈ உட்காரவும் அனுமதிக்க மாட்டேன்' என்றார் எம் அண்ணா.

இருபதாண்டு காங்கிரஸ் ஆட்சியில் பழகிப்போன தலைமைச் செயலக அதிகாரிகள் புதியவர்களான தி.மு.க வினர் எப்படி நடந்துகொள்வார்களோ எனச் சஞ்சலத்துடன் இருந்தனர். அவர்களின் கலக்கம் களைவதற்காகவே கோட்டைக்குள் நுழையுமுன் கொடிமரம் எதிரில் அனைவரையும் அழைத்துக் கூட்டம் நடத்தி அவர்களையும் தம் தம்பிமார்களாக்கிக் கொண்டுவிட்டார் எம் அண்ணா!

தி முக பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாகவே மாணவர்களுக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மிகப் பெரிய மோதல் வெடித்தது. அந்தச் சமயம் முதல்வர் அண்ணா மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதிக்குத் தாமகவே சென்று மாணவர்களிடம் மன்னிப்புக் கோரினார்! "ஏன் முன்னதாக வரவில்லை?' என்று மாணவர்கள் அதட்டினார்கள். போக்குவரத்துத் தொழிலாளர்கள் பஸ்களை சாலையில் குறுக்கும் நெடுக்குமாய் ஸிக் ஸாகாக நிறுத்தியிருந்ததால் வரமுடியவில்லை என்று ஒரு குழந்தையைப் போலச் சமாதானம் சொன்னார் எம் அண்ணா.

தொண்டை வறள்வதால் குடிக்கத் தண்ணீர் கேட்டார். கோபத்தில் இருந்த மாணவர்கள் அவ்ருக்குத் தண்ணீர் கொடுக்கவும் மறுத்தனர். அதற்காக அவர்க்ள் மீது ஆத்திரம் கொள்ளவில்லை எம் அண்ணா.

இன்றோ, உயர் பதவி வகிப்போர் போராடுவோரின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவதே அரும் பெரும் செயலாகப் பாராட்டப்படுகிறது.


இவை எல்லாம் எனது கற்பனை அல்ல. 1967-68 என்பது சமீப காலம்தான். ஹிந்து அலுவலகம் சென்று அந்தக் காலத்து ?ஹிந்து இதழ்களைப் புரட்டினால் இவையெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள்தாம் என்பது தெரியவரும்.

இன்னும் சொல்வதற்கு என்னிடம் செய்திகள் உண்டு. ஆனால் அண்ணாவின் ஞாபகம் மிகுந்த வேதனைக் குள்ளாக்குகிறது. நுங்கம்பாக்கம் அவென்யு சாலையில் ஒன்பதாம் எண் இல்லத்திற்கு ஓடிச் சென்று அண்ணாவின் குறும்புப் புன்னகை தவழும் முகத்தைக்காண மனம் துடிக்கிறது. ஆனால் எம் அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா?

அடுத்த தவனையில் மேலும் சிறிது சொல்கிறேன், எம் அண்ணாவைப் பற்றி.

மலர்மன்னன்
திண்ணையில் வெளியானது.

1/30/2006

நேற்று நடந்தது போல இருக்கிறது

நேற்று நடந்தது போலவே என் பல ஞாபகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சமீபத்தில் 1958-ல் ஜனவரி 30ஆம் தேதியன்று நடந்த அந்த நிகழ்ச்சி. அதாவது சரியாக 48 வருடங்களுக்கு முன்னால்.

அப்போது நான் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஜனவரி 30 அன்றும் 11 மணிக்கு பள்ளியில் ஒரு பெல் ஒலிக்கும். வகுப்பில் இருக்கும் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும். சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான அஞ்சலி. மகாத்மா காந்தி அவர்கள் சுடப்பட்ட தினம் அல்லவா? (இப்போதும் அவ்வாறுதானே?)

அன்று பார்த்து எதுவும் சரியாக அமையவில்லை. பெல் அடித்தது. நாங்கள் எழுந்து நின்றோம். பத்து நொடிக்கு ஒரே அமைதி. திடீரென்று சடகோப ராமானுஜம் களுக் என்று ஒரு சிரிப்பை விட்டான்.

ஹிந்தி ஆசிரியர் V.G. சேஷாத்ரி ஐயங்கார் "உஷ்" என்று ஒரு எச்சரிக்கை ஒலி எழுப்பினார். மிகவும் கோபக்காரர். அன்றைக்கென்று முகச் சவரம் செய்திருந்தார்.

அறிவு கெட்ட இன்னொரு மாணவன் "குபுக்" என்று சிரித்துத் தொலைத்தான். ஜி. ஜயராமனுக்கு அன்று நல்ல ஜலதோஷம். அவனாவது சும்மா இருந்திருக்கலாம். சனியன் பிடித்தவன் சளியுடன் கூடியத் தொண்டையில் "ஹள் ஹள் ஹள்" என்ற சிரிப்பை விட்டான். அவ்வளவுதான் எல்லா கட்டுப்பாட்டையும் இழந்து எல்லாரும் சிரிக்க ஆரம்பித்தோம்.

இந்தக் கூத்தில் இரண்டு நிமிடம் கழித்து அடிக்கும் பெல் ஒலித்தது. சேஷாத்ரி சார் எங்கள் எல்லோரையும் அப்படியே நிற்கச் சொல்லி விட்டார். வகுப்பு மானீட்டராகிய என்னை "ராகவையங்கார் முன்னால் வந்து நில்லும்" என்றார். (அவருக்கு கோபம் வரும்போது என்னை ஐயங்கார் என்றுதான் கூப்பிடுவார். அப்போது நல்ல உதை நிச்சயம்). பிறகு பெஞ்ச் பெஞ்சாக வந்து ஒவ்வொருவருக்கும் உள்ளங்கையில் பிரம்பால் அடி கொடுத்தார். ஜி. ஜயராமனுக்கு இரண்டு அடிகள். வகுப்பின் துரதிர்ஷ்ட மானீட்டராகிய எனக்கு மூன்று அடிகள்.

இப்போது நினைத்தாலும் சுரீர் என்ற அவ்வலியை உணர்கிறேன். கூடவே வெட்கம் கலந்த சிரிப்பும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின் குறிப்பு: இது ஒரு மறு பதிவு.

1/29/2006

நெருக்கடி நிலை பற்றிய சில எண்ணங்கள்

ஜூன் 12, வருடம் 1975. இந்திரா காந்தி தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து அவருடன் போட்டியிட்ட ராஜ் நாராயண் அவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார். அதன் தீர்ப்பு வந்து நாட்டையே தலைகீழாக்கியது. வழக்கை விசாரித்த நீதியரசர் சின்ஹா அவர்கள் இந்திரா காந்தி பதவியைத் தவறாகப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றதை உறுதி செய்து அவர் வெற்றி செல்லாது என்று அறிவித்தார். அது மட்டுமின்றி அவர் ஆறு வருடங்களுக்கு அரசியலில் ஈடுபடக்கூடாது என்று வேறு தீர்ப்பு கொடுத்து வைத்து விட்டார்.

இந்திரா காந்தி இந்தத் தீர்ப்பை சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை. ஏன், அவருக்கு எதிராக கேஸ் போட்ட ராஜ் நாராயணனே எதிர்ப்பார்க்கவில்லை. அடுத்த நாள் நாடே திகைத்து போனது. தீர்ப்பு நடைமுறைக்கு வர நீதிபதி சில நாட்கள் அவகாசம் அளித்தார்.

இந்தத் தீர்ப்புக்கு எதிர் வினையாய் பல அடாவடி காரியங்களை இந்திரா காந்தியும் அவர் ஜால்ராக்களும் நிகழ்த்தினர். பல கூலிப்படைகள் பணம் கொடுத்து லாரிகளில் வரவழைக்கப்பட்டு இந்திரா காந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பச் செய்யப்பட்டனர்.

அச்சமயம் விடுமுறைக் கால நீதிபதியாக இருந்த கிருஷ்ண ஐயர் அவர்களிடம் இந்திரா காந்தியின் மேல் முறையீடு வந்தது. அவர் அலஹாபாத் தீர்ப்பை சில ஷரத்துகளின் அடிப்படையில் ஜூன் 24-ஆம் தேதி நிறுத்தி வைத்தார். அதன்படி இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கலாம் ஆனால் சபையில் ஓட்டெடுப்புகளில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது. இது காரியத்துக்காகாது என்று இந்திரா காந்தி செயல்பட்டு June 25 அன்று அவசர நிலை பிரகடனம் செய்தார்.

இந்திரா காந்தியின் நிலையை பலப்படுத்த தேர்தல் விதிகள் மாற்றப்பட்டன. அரசியல் நிர்ணயச் சட்டம் 39-வது முறையாக திருத்தப்பட்டது. அதில் பிரதம மந்திரி மற்றும் சபாநாயகரின் தேர்தல் வழக்குகளுக்கு தனி முக்கியத்துவம் தரப்பட்டன. அதாவது அந்த வழக்குகள் நடத்துவது கடினமாக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்துக்கு வந்த இந்திராவின் தேர்தல் வழக்கும் இதன் கீழ் சேர்க்கப்பட்டது. ஆனால் நல்ல வேளையாக சுப்ரீம் கோர்ட் இந்த திருத்தத்தை சட்ட விரோதம் என்று தள்ளுபடி செய்தது.

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதால் அரசியல் நிர்ணயச் சட்டப் பிரிவுகள் 14, 19 மற்றும் 21 தொங்கலில் வைக்கப்பட்டன. பல மாநிலங்களில் பலர் காவலில் வைக்கப்பட, பல ஆள் கொணர்வு கோரிக்கைகள் பல உயர் நீதி மன்றங்களுக்கு முன்னால் வந்தன. அங்கெல்லாம் அரசுக்கு எதிராகத் தீர்ப்புகள் வர, விஷயம் உச்ச நீதி மன்றத்திற்கு முன்னால் வந்தது. அந்த நீதி மன்றமோ 4:1 விகிதத்தில் அவசர நிலையின் கீழ் சட்டப் பிரிவு 21 செயல்படாததால் அடிப்படை உரிமைகள் எதுவும் தற்சமயம் செல்லாது என்று தீர்ப்பு அளித்தது. மனித உரிமை செல்லாக்காசாகியது. இதை எதிர்த்து மைனாரிடி தீர்ப்பை அளித்த நீதிபதி கன்னா அவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது.

இந்தப் பெரும்பான்மை தீர்ப்பு நாட்டிலும் சட்ட வல்லுனர்களிடத்திலும் பெரிய நிராசையை உண்டாக்கியது. 1976-ல் அ.நி.ச. வின் 42-வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இது பல அடாவடி காரியங்களுக்கு வழி வகுத்தது.

நாட்டிற்கு பெரும் அபாயம் வரும் நிலையில் மட்டும் வந்திருக்க வேண்டிய அவசர நிலை சர்வாதிகார மனப்பான்மை கொண்ட இந்திரா காந்தியின் நலனைக் காக்கவே கொண்டுவரப்பட்டது. நாடு முழுக்க உறக்கத்தில் இருந்த நடுநிசியில் இது நுழைக்கப்பட்டது. அடுத்த 19 மாதங்களுக்கு நாடு இருட்டிலேயே இருக்க வேண்டியதாயிற்று. தனிமனித உரிமைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. எதிர்கட்சித் தலைவர்கள் இரவோடிரவாகக் கைது செய்யப்பட்டனர்.

அவசர நிலை வந்தபோது எனக்கு வயது 29. எல்லா விஷயங்களுமே நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. அப்போது துக்ளக், இண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற வெகுசில பத்திரிகைகளைத் தவிர்த்து எல்லாம் அரசு அடக்குமுறைக்கு பயந்து மிகச் சத்தமாக ஜால்ரா அடித்தன. அப்போதைய தி.மு.க. அரசு மட்டும் தைரியமாக அவசர சட்டத்தை எதிர்த்தது. முரசொலியில் இந்திரா காந்தியை ஹிட்லராக வர்ணித்து கார்ட்டூன் போடப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் எல்லா பத்திரிகைகளும் தி.மு.க. அரசுக்கு எதிராக எழுதுமாறு ஊக்குவிக்கப்பட்டன.

இங்குதான் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஓர் அறிவிப்பை பத்திரிகை தணிக்கை அமுலுக்கு வரும் முன்னர் வெளியிட்டார். மத்திய அரசை எதிர்த்து ஒன்றும் எழுத முடியாத நிலையில் மாநில அரசையும் தான் விமரிசனம் செய்வதற்கில்லை என்று தெளிவாகக் கூறினார். ஏனெனில் அவர் தைரியம் மிக்கவர். அதே போல சினிமா விமரிசனம் பகுதியில் சமீபத்தில் ஐம்பதுகளில் வந்த சர்வாதிகாரி என்ற படத்துக்கான விமரிசனம் வெளியிட்டார். அதில் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் மட்டும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவார் என்று பொருள்பட ஒரு வாக்கியம் சேர்த்தார். பிறகு தணிக்கை முறை தீவிரமானது.

அவசர நிலை கொடுமைகள் நல்ல வேளையாக தெற்கில் அவ்வளவாக இல்லை. ஆனால் வட இந்திய மாநிலங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு மானாவாரியாக அகப்பட்டவர்களையெல்லாம் உட்படுத்தினர். கைதான பலரும் தடயம் இன்றி மறைந்தனர். இந்திராதான் இந்தியா என்று பரூவா என்னும் கோமாளி திருவாய் மலர்ந்தருளினார். தேர்தல்களே நாட்டுக்குத் தேவையில்லை, அன்னிய மொழிகளை படிப்பது தேசவிரோதம் என்றெல்லாம் கூறி சஞ்சய் காந்தி தமாஷ் செய்தார். பத்திரிகை தணிக்கை முறை மிகவும் கடுமையாக்கப்பட்டது. சில காலம் வெளியிடப்படாமல் வைத்திருந்த துக்ளக்கை சோ அவர்கள் மறுபடி வெளியிட்டார். பத்திரிகை தணிக்கை அதிகாரிகளை நன்றாக ஏய்த்தார். அவசர நிலை இருந்த 19 மாதங்களிலும் அவர் வெறுமனே இந்திரா காந்தி என்றுதான் எழுதினாரே தெரிய பிரதமர் இந்திரா காந்தி என்று எழுதவேயில்லை. (நானும் இப்பதிவில் அவ்வாறே செய்திருக்கிறேன் என்பதை கவனிக்க).

1976 பிப்ரவரி ஒன்றாம் தேதி தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. ஸ்டாலின் அவர்கள் உள்பட தி.மு.க.வினர் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது கருணாநிதி அவர்கள் தனிமையாக்கப்பட்டார். அந்த நேரத்தில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஒரு ஆண்மை மிக்க காரியத்தை செய்தார். கருணாநிதி அவர்கள் வீட்டிற்கே போய் அவருக்கு நடந்தது அநியாயம் என்று கூறி அவருக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார். அத்தருணத்தில் அதை செய்தது அவர் உயிருக்கே கூட கேடாக முடிந்திருக்கலாம். என்னதான் இருந்தாலும் அவர் தைரியம் யாருக்கு வரும்? 1976-ல் வந்திருக்க வேண்டிய பொது தேர்தலை இந்திரா காந்தி ஓராண்டுக்கு தள்ளி வைத்தார். இந்த அக்கிரமம் முன்னாலும் நடக்கவில்லை, அதற்கு பின்னாலும் தற்சமயம் வரை நடக்கவில்லை.

சிலர் கூறலாம், அவசர நிலை காரணமாக ரயில்கள் எல்லாம் நேரத்துக்கு ஓடின, விலைவாசிகள் கட்டுப்பாட்டில் இருந்தன என்று. இருக்கலாம், ஆனால் இந்திரா காந்தியின் கெட்ட எண்ணத்திற்கு அவையெல்லாம் ஈடாகாது.

1977-ல் பத்திரிகை தணிக்கை முறை தேர்தலுக்கு முன்னோடியாக விலக்கப்பட்டது. அப்போது சோ அவர்கள் சீரணி அரங்கில் ஒரு மீட்டிங் வைத்தார். தணிக்கை முறை தமாஷ்கள் பலவற்றை அவர் கூறினார். ஜனநாயகத்தை ஆதரித்து பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் கூறியவற்றை சோ அவர்கள் மேற்கோள் காட்ட, அது தணிக்கை அதிகாரியால் தடுக்கப்பட்டது. இந்திரா காங்கிரஸ் தமிழகத்தில் நன்றாக நிலை கொண்டுள்ளதாக ஒரு இந்திரா காங்கிரஸ் தலைவர் உளறியதை சோ அவ்ர்கள் அப்படியே மாறுதலின்றி செய்தியாகப் போட இது ரொம்ப ஓவர், தேவையில்லாத கிண்டல் என்று தணிக்கை அதிகாரி நீக்கினார். அதை சோ அவர்கள் கூறியபோது மெரினா கடற்கரையே சிரிப்பலைகளில் மூழ்கியது. அப்போதுதான் மேலே கூறியபடி இந்திரா காந்தியை வெறுமனே பெயரிட்டு அழைத்ததையும் பிரதமர் என்று குறிப்பிடாததையும் கூறினார். இன்னொரு சிரிப்பலை.

இதில் நான் தனிப்பட்ட முறையில் ஒன்று கண்டறிந்தேன். அப்போதெல்லாம் எனக்கு ரீடர்ஸ் டைஜஸ்ட் ஜெர்மன் இதழ் வீட்டிற்கு வரும். திசம்பர் 1975 இதழில் "Diktatorin Indira Gandhi" (சர்வாதிகாரி இந்திரா காந்தி) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது. தணிக்கையதிகாரிகளுக்கு ஜெர்மன் தெரியாதது சௌகரியமாகப் போயிற்று.

தேர்தல் வந்தது. இந்திரா காந்திக்கு சரியான தோல்வி. அவரும் அவர் பிள்ளை சஞ்சயும் தேர்தலில் மண்ணைக் கவ்வினர். அப்போதுதான் பத்திரிகைத் தணிக்கை தனக்கே பாதகமாக முடிந்ததை இந்திரா காந்தி அவர்கள் கண்டு நொந்து போனார். அதாவது பத்திரிகைகள் சுதந்திரமாக இல்லாது போனதால் வசவசவென்று உப்புசப்பில்லாத செய்திகள் வர, உண்மை நிலை மறைக்கப்பட, நாட்டின் நாடியை பார்க்க அரசு தவறியது. என்னமோ அப்போது தேர்தல் வைத்து பெரிய மெஜாரிடியை வைத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கலாம் என்று மனப்பால் குடித்துத்தான் அவர் தேர்தலையே அறிவித்தார். பிளாங்கியும் அடித்தார்.

தேர்தலில் தோற்றதும் இந்திரா காந்தி புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தார். ஜனாதிபதியிடம் ராஜினாமா தரும் முன்னால் அவசரநிலையையும் நீக்குமாறு சிபாரிசு செய்தார். அது அப்படியே இருந்தால் தான் உடனேயே கம்பியெண்ணவேண்டும் என்று அவர் பயந்ததே அதன் முக்கியக் காரணம். மற்றப்படி வேறு நல்லெண்ணம் எல்லாம் இல்லை.

அவசர நிலையை அவசர அவசரமாக வலது கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க, இடது கம்யூனிஸ்டுகள் அதை எதிர்த்து நாட்டுக்கு நல்லது செய்தனர் என்பது ஆறுதல் அளித்தது. 3 ஆண்டுகளுக்கு பின்னால் இந்திரா காந்தி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தார். ஆனால் மறுபடியும் அவசர நிலையை கொண்டுவர அவருக்கோ மற்ற யாருக்குமோ முடியாதபடி சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/26/2006

மிக்க நன்றி காசி அவர்களே

தமிழ்மணம் நிர்வாகியிடமிருந்து ஒரு பொது மின்னஞ்சல் வந்தது. அது எல்லா பதிவாளர்களும் தத்தம் பதிவுகளில் மட்டுறுத்தலை செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. இப்போது அசிங்கப் பின்னூட்டங்கள் வரும் சூழ்நிலையில் இம்மாதிரி செய்வது அவசியமே. இதை வற்புறுத்துவதற்காக பலர் குறை கூறலாம். ஆயினும் இந்த நடவடிக்கை மிக்க இன்றியமையானதே.

வற்புறுத்தல் இருந்ததால் மட்டுமே தமிழ் நாட்டுக்கு இப்போது வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் மழை நீர் சேமிப்புத் திட்டம் சாத்தியமாயிற்று. சில மிக அவசிய காரியங்கள் நடக்க வேண்டுமானால் வற்புறுத்தல் அவசியமே.

மிகச் சரியான செயலுக்காக தமிழ்மணம் காசி அவர்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/24/2006

11 கேள்விகள்

நம்பவே முடியவில்லை. இம்மாதிரி நான் கேள்விகள் கேட்டப்போதெல்லாம் விடைகள் சீறிக்கொண்டு வரும். ஒரே நாளில் கிட்டத்தட்ட அத்தனையும் விடையளிக்கப்பட்டு விடும். ஒன்று அல்லது இரண்டு விடைகள் மட்டும் கேரி ஓவர் ஆகும். ஆனால் இம்முறை நான் கேட்ட 10 கேள்விகளில் ஒன்றுக்கு மட்டும் இலவசக் கொத்தனார் அவர்கள் பதிலளித்தார். ஆகவே 9 கேள்விகள் கேரி ஓவர் செய்யப்படுகின்றன. மேலே இரண்டு கேள்விகளை சேர்க்கிறேன். ஆக 11 கேள்விகள்.

1. சிறையிலிருது தப்பித்த ஒரு கைதி ஒரு நேர்ப்பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறான். அப்போது தூரத்தில் அவன் ஓடும் திசைக்கு எதிரிலிருந்து ஒரு போலீஸ் கார் அவனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் அவன் போலீஸ் காரை நோக்கியே ஓடி, நூறு அடி தூரத்தில் வண்டி இருக்கும்போது பாதைக்கு வலப்புறம் காட்டில் நுழைந்து தப்பிக்கிறான். ஏன்?

2. கோடைகால நடுவில் ஒரு பூங்காவின் நடுவில் ஒரு பிணம். உடல் எலும்பெல்லாம் முறிந்துள்ளது. இருப்பினும் பிரேதப் பரிசோதனையில் மரணம் கடும் குளிரால் ஏற்பட்டது எனத் தெரிய வருகிறது. விளக்கவும் (இது உண்மையாக நடந்த நிகழ்ச்சி).

3. கண்ணிழந்த ஒருவன் தன் பணம் எல்லாம் செலவு செய்து அறுவை சிகிச்சை முடிந்து பார்வை பெற்று வீடு திரும்ப ரயிலில் பயணம் செய்கிறான். அவன் பயணம் செல்லும் கம்பார்ட்மெண்டில் அன்றி வேறு எங்கு பயணம் செய்திருப்பினும் அவன் தற்கொலை செய்து கொண்டிருப்பான்.

4. அழகிய பெண் நடக்கிறாள். பின்னணியில் ஒரு இசை. இசை நின்றது அவள் இறந்தாள். ஏன்?

5. அவனுக்கு ஒரு நாற்காலி கிடைக்காததால் இறந்தான். ஏன் இந்தக் கொடுமை?

6. வேலு நாயக்கர் ஒரு கடையில் 100 ரூபாய் கொடுத்து பொருள் வாங்குகிறார். கடைக்கு வந்த அழகான ஃபிகரிடம் பேசிக்கொண்டே கடைக்காரன் அவருக்கு மீதி சில்லறையாக நூறு ரூபாய் கொடுக்கிறான். வேலு நாயக்கர் கூலாக அதை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடையை கட்டுகிறார். வேலு நாயக்கர் நல்லவரா கெட்டவரா?

7. பாலிண்ட்ரோம் பற்றிய என் பதிவைப் பார்த்திருப்பீர்கள்தானே. ஆகவே நேரடியாகக் கேள்வி. பாலிண்ட்ரோமை மொழிபெயர்க்க முடியாது என்று நான் சொன்னால் ஒத்துக் கொள்வீர்கள்தானே. ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழி சார் பாலிண்ட்ரோம் இன்னொரு மொழியில்தான் வரும். அது என்ன?

8. மீன் தின்னும் சீல்கள் மிக புத்திசாலிகள். அவற்றை வைத்து விளையாட்டெல்லாம் காட்டுவார்கள். அம்மாதிரி ஒரு கேம் ஷோவில் சீல்கள் விளையாட வந்தன. பார்வையாளர்களை பார்த்ததும் எல்லாம் நீரில் மறுபடி குதித்து ஓடி விட்டன. ஏன்?

9. கமலஹாசன் ஒரு புது நண்பருடன் ஓர் அறையில் சீட்டாடிக் கொண்டிருக்கிறார். சுற்றுமுற்றும் பார்த்த அவர் திடீரென ஆபத்தை உணருகிறார்? ஏன்?

10. தன் வீட்டிலேயே ஒரு பெண் ஆபத்தில் இருப்பதைப் பார்த்தும் டோண்டு ராகவன் ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டான். ஏன் அவனுக்கு பயமா?

11. லண்டனில் உள்ள அந்த ரகசிய க்ளப்பிற்குள் போக நம்ம வடிவேலு ஆசைப்படுகிறார். ஆனால் உள்ளே செல்ல அவருக்குக் கடவுச்சொல் வேண்டும். அது கிடைக்கவில்லை. அதனாலெல்லாம் அவர் விட்டு விடுவாரா? வாயிற்காப்போன் பார்த்திபன் நிற்கும் இடத்தருகே உள்ள தூண் ஒன்றின் பின்னே அவர் ஒளிந்து கொள்கிறார், மற்ற உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம் என்று. முதலில் வருபவரிடம் பார்த்திபன் 12 என்று கூற அவர் 6 என்று கூறுகிறார். அவரை உள்ளே விடுகிறார் பார்த்திபன். அடுத்த வருபவரிடம் பார்த்திபன் 6 என்று கூற அவர் 3 என்று கூறுகிறார். அவரும் உள்ளே சொல்கிறார். வடிவேலுவுக்கு ஒரே குஷி. தன் டையை சரி செய்து கொண்டு, மீசையை ஒதுக்கி விட்டுக் கொண்டு பெரிய மனிதத் தோரணையோடு பார்த்திபனிடம் வருகிறார். பார்த்திபன் 20 என்று கூற வடிவேலு ஸ்டைலாக 10 என்று கூறி விட்டு நன்றாக உதை வாங்குகிறார். என்ன ஆயிற்று?

இக்கேள்வியை எனக்கு அனுப்பியது என் நண்பர் ரவி பாலசுப்பிரமணியன் அவர்கள். அவருக்கு என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/23/2006

Palindrome (இரு வழி ஒக்குஞ்சொல்)

Palindrome என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே. இது எல்லா மொழிகளிலும் உண்டு. இடதிலிருந்து வலமாகவோ வலதிலிருந்து இடமாகவோ எப்படி படித்தாலும் ஒன்று போலவே வரும் அவை. தெனாலிராமன் கதையிலும் வருகிறது அது.

அவன் மேல் கருணை கொண்டு காளி அவனுக்கு வரமளிக்கிறாள். "நீ நல்ல விகடகவி ஆவாய், அரசவையில் பேரும் புகழும் பெற்று நல்ல பொருளும் ஈட்டுவாய் என காளி அவனிடம் கூற, அவன் காளியை இவ்வாறு துதிக்கிறான். "அன்னையே, விகடகவி என்னும் சொல் திருப்பிப் போட்டாலும் அப்படியே வருகிறது, நல்ல வரம் தந்தீர்கள்".

நான் சமீபத்தில் 1953-ல் சென்னை திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் உள்ள சாமாராவ் ஆரம்ப பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கையில் எங்கள் ஆசிரியர் அம்மாதிரியான இரண்டு சொற்றொடர்களை தந்தார்.

1. தேரு வருதே
2. மோரு போருமோ

மூன்று சொற்கள் இம்மாதிரியும் கொடுத்தார்.

சி வா ஜி
வா யி லே
ஜி லே பி

Row மற்றும் Column இரண்டு வகையிலும் அவை ரிபீட் ஆகும்.

என் நண்பர் ரவி பாலசுப்பிரமணியன் எனக்கு ஆங்கிலத்தில் அனுப்பிய மின்னஞ்சலை அப்படியே தருவேன். இதே ரவி எனக்கு முன்னால் அனுப்பிய இரு மின்னஞ்சல்கள் கீழ்க்கண்ட பதிவாய் வந்துள்ளன. அவருக்கு என் நன்றி.

துணைவியின் பிரிவு

மென் பொருள் நிபுணராக விஜயகாந்த்

இப்போது அவர் அனுப்பிய மின்னஞ்சல்:

Dan Hoey, who had recently graduated, wrote a C program to look for and construct the following beauty:

A man, a plan, a caret, a ban, a myriad, a sum, a lac, a liar, a hoop, a pint, a catalpa, a gas, an oil, a bird, a yell, a vat, a caw, a pax, a wag, a tax, a nay, a ram, a cap, a yam, a gay, a tsar, a wall, a car, a luger, a ward, a bin, a woman, a vassal, a wolf, a tuna, a nit, a pall, a fret, a watt, a bay, a daub, a tan, a cab, a datum, a gall, a hat, a fag, a zap, a say, a jaw, a lay, a wet, a gallop, a tug, a trot, a trap, a tram, a torr, a caper, a top, a tonk, a toll, a ball, a fair, a sax, a minim, a tenor, a bass, a passer, a capital, a rut, an amen, a ted, a cabal, a tang, a sun, an ass, a maw, a sag, a jam, a dam, a sub, a salt, an axon, a sail, an ad, a wadi, a radian, a room, a rood, a rip, a tad, a pariah, a revel, a reel, a reed, a pool, a plug, a pin, a peek, a parabola, a dog, a pat, a cud, a nu, a fan, a pal, a rum, a nod, an eta, a lag, an eel, a batik, a mug, a mot, a nap, a maxim, a mood, a leek, a grub, a gob, a gel, a drab, a citadel, a total, a cedar, a tap, a gag, a rat, a manor, a bar, a gal, a cola, a pap, a yaw, a tab, a raj, a gab, a nag, a pagan, a bag, a jar, a bat, a way, a papa, a local, a gar, a baron, a mat, a rag, a gap, a tar, a decal, a tot, a led, a tic, a bard, a leg, a bog, a burg, a keel, a doom, a mix, a map, an atom, a gum, a kit, a baleen, a gala, a ten, a don, a mural, a pan, a faun, a ducat, a pagoda, a lob, a rap, a keep, a nip, a gulp, a loop, a deer, a leer, a lever, a hair, a pad, a tapir, a door, a moor, an aid, a raid, a wad, an alias, an ox, an atlas, a bus, a madam, a jag, a saw, a mass, an anus, a gnat, a lab, a cadet, an em, a natural, a tip, a caress, a pass, a baronet, a minimax, a sari, a fall, a ballot, a knot, a pot, a rep, a carrot, a mart, a part, a tort, a gut, a poll, a gateway, a law, a jay, a sap, a zag, a fat, a hall, a gamut, a dab, a can, a tabu, a day, a batt, a waterfall, a patina, a nut, a flow, a lass, a van, a mow, a nib, a draw, a regular, a call, a war, a stay, a gam, a yap, a cam, a ray, an ax, a tag, a wax, a paw, a cat, a valley, a drib, a lion, a saga, a plat, a catnip, a pooh, a rail, a calamus, a dairyman, a bater, a canal-Panama.
This is the world's longest PALINDROME. (The letter in bold italics is the center of the palindrome)

தமிழில் இம்மாதிரி நிரல் எழுத முடிந்தால் நம் மென்பொருள் வித்தக நண்பர்கள் யாராவது இதை முயற்சி செய்யலாமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/22/2006

குட்டி ரேவதியும் CPWD-யும்

C.P.W.D. அனுபவங்கள் - 5

இந்த வரிசையில் வந்த முதல் நான்கு பகுதிகள் பின் வருமாறு:

1)
2)
3)
4)

இன்று 22-01-2006. சரியாக 35 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 22-01-1971 அன்று இந்தத் துறையில் இளம்பொறியாளராக பம்பாயில் சேர்ந்தேன். சேர்ந்ததும் வெளியே வந்து நான் செய்த முதல் வேலை என் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கொடுத்த அடையாள அட்டையை சென்னை நந்தனத்தில் இருந்த அந்த அலுவலகத்துக்கு எனக்கு வேலை கிடைத்த செய்தியை பதிவு செய்து தபால் பெட்டியில் போட்டேன். அதற்கு தபால் தலை தேவையில்லை என அட்டையிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.

அறிமுகம் போதும். இந்தப் பதிவுக்கான விஷயத்துக்கு வருவேன்.

சென்னையில் மத்திய ரிஸர்வ் போலீஸ் வளாகத்தில் வேலை. நான் மின்பொறியாளன். எங்கள் மின் துறைக்கும் கட்டுமானப் பணித் துறைக்கும் ஏழாம் பொருத்தம். ஒரே வாத விவாதங்கள்தான். நாங்கள்தான் அப்படியென்றால் சிவில் காண்ட்ராக்டருக்கும் எலெக்ட்ரிகல் காண்ட்ராக்டருக்கும் சண்டை தூள் பறக்கும். சிவில்காரர்கள் கூரைகளுக்கு கம்பி கட்ட எலெக்ட்ரிகல்காரர்கள் மின்சார இழைகளை கொண்டு செல்ல தோதாக காண்ட்யூட் பைப்புகள் இட வேண்டும். கம்பி கட்டினால்தான் காண்ட்யூட் போட முடியும், காண்ட்யூட் போட்டால்தான் கான்க்ரீட் போட முடியும். மின்சாரக்காரர்கள் சுவற்றை உடைத்து விட்டார்கள் என்று சிவில்காரர்கள் கத்த, சிவில்காரர்கள் தாங்கள் இட்ட மின் இழைகளை அறுத்து விடுகிறார்கள் என்று பதிலுக்கு இவர்கள் கத்த, ஒரே கலாட்டாதான்.

சிவில் காண்ட்ராக்டர் ஒருவர் பெயர் மந்திரமூர்த்தி. அவரைக் கண்டாலே எலெக்ட்ரிகல் ஆட்களுக்கு ஆகாது. ஏனெனில் அவர் அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவார். ஆகவே தங்கள் முதலாளியிடம் கூடக் கூறாமல் ஒரு வேலை செய்தார்கள். அவர்கள் குழுவில் மந்திரமூர்த்தி என்ற அதே பெயரில் ஒரு பையன் இருந்தான். முதலில் அவனிடம் விஷயத்தை விளக்கித் தயார் செய்தார்கள். பிறகு எலெக்ட்ரிகல் ஆட்கள் எப்போது சிவில் கண்ட்ராக்டர் வேலை நடக்கும் இடத்தில் இருந்தாலும் வேண்டுமென்றே உரத்த குரலில் தங்களுடன் வேலை செய்யும் மந்திரமூர்த்தியை வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள். அவனும் தலையைத் தொங்கப் போட்டபடி கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொள்வான். ஏனெனில் திட்டத் திட்ட அவனுக்கு பின்னால் பல சலுகைகள் அவன் தோழர்கள் செய்து தருவார்கள். "அடேய் மந்திரமூதி, முட்டாப் பயலே" என்பதுதான் இருந்த வசவுகளிலேயே மிக நாகரிக வசவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!! அவ்வப்போது ஓகார வசவுகளும் வரும். சிவில் காண்ட்ராக்டருக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.

ஒரு நாள் அவரே தாங்க முடியாமல் எலெக்ட்ரிகல் காண்ட்ராக்டர் நாதன் அவர்களிடம் நேரில் இது பற்றி புகார் செய்தார். நாதனும் தன் ஆட்களை கண்டிக்க இந்த வேலை நின்றது.

குட்டி ரேவதி விவகாரத்தைப் பற்றி படிக்கையில் இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. ஹி ஹி ஹி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/21/2006

போலி டோண்டு

டி. ராஜ் அவர்கள் அமெரிக்கக் காப்புரிமை பற்றி உபயோகமுள்ள தகவல்கள் நிறைந்த ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதற்கு வந்த முதல் பின்னூட்டமே போலி டோண்டு போட்டது. அவன் எழுதுகிறான்:

19 January, 2006 13:25மணிக்கு, எழுதியவர்: நம்பிக்கையானவன்
டோண்டு என்ற விஷப் பன்றியின் வலைப்பதிவில் உங்கள் பின்னூட்டத்தினை நான் பார்க்க நேரிட்டால் எனது இலக்குக்கு நீங்கள் ஆட்பட நேரிடும். எனவே தயவு செய்து அவனுக்கு பின்னூட்ட வேண்டாம்.

உங்கள் நலம் விரும்பி

அவன் கவலை அவனுக்கு. இதை நான் எதேச்சையாகத்தான் பார்த்தேன். இப்படி தைரியமாக ஒருவருக்கு பயமுறுத்தல் விடுகிறான், அவன் தன்னை என்னவென்று நினைத்துக் கொண்டான்? அவனால் என்ன கழட்ட முடியும்? இப்படித்தான் கே.வி.ஆர். அவர்கள் பதிவில் மிகத் தரக்குறைவான வார்த்தைகளில் எச்சமிட்டான். அவர் அவன் மூக்கை அறுத்தார். அப்பதிவைப் பின்னூட்டங்களுடன் படிக்கவும்.

இதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. Call his bluff. அதே சமயம் மேலும் செய்ய வேண்டியவை பின்வருமாறு:

தத்தம் பதிவுகளில் அனானி மற்றும் அதர் ஆப்ஷன்களைச் செயலற்றதாக்குங்கள். பதிவாளர்கள் மட்டும் பின்னூட்டமிட வகை செய்யுங்கள். மட்டுறுத்தலை செயலாக்குங்கள். உங்களுக்குத் தெரிந்த பதிவாளர் பெயரில் உங்கள் பதிவுகளில் ஏதேனும் ஒரு வகையில் சந்தேகம் அளிக்கும் வகையில் பின்னூட்டங்கள் வந்தால், சம்பந்தப்பட்ட நண்பரை எவ்வகையிலேனும் தொடர்பு கொண்டு அப்பின்னூட்டத்தை எழுதியது அவர்தானா என்பதைப் பாருங்கள். மட்டுறுத்தலுக்கான பின்னூட்டங்களை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வருமாறு செய்து கொண்டால் அதில் பின்னூட்டமிடுபவரின் டிஸ்ப்ளே பெயர் ஹைப்பர்லிங்காக வரும். அதை க்ளிக்கிட்டு சரியான நபரா என்பதை சரி செய்து கொள்ளலாம்.

போலி பின்னூட்டங்கள் எவ்வாறு இன்னொருவர் பெயரில் உருவாகின்றன என்பதைப் பற்றி முகமூடி அவர்கள் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் பல உபயோகமானக் குறிப்புகள் உள்ளன.

போலி டோண்டு யார் என்பது பலருக்கும் தெரியும். என்ன செய்வது, அவன் மனம் பிறழ்ந்தவன் என்று அவனை விட்டுப் பிடிக்கிறார்கள். இருப்பினும் எவ்வளவு நாட்களுக்குத்தான் பொறுமை காப்பது? எதற்கும் இட்லி வடையின் இப்பதிவைப் பார்க்கவும்.

வலைப்பூக்கள் பல வகையில் உபயோகமானவை. அவற்றில் நஞ்சு போல வந்து புகுந்திருக்கும் போலி டோண்டு போன்ற இழிபிறவிகளுக்கெல்லாம் பயந்து கொண்டிருந்தால் நம்மை நாமே கண்ணடியில் தரியமாகப் பார்த்துக் கொள்ள முடியாது.

புத்தகக் கண்காட்சியில் முத்து (தமிழினி) அவர்களுடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கூட என்னிடம் "உங்கள் நடை எல்லோருக்கும் தெரியும்தானே. இனியும் நீங்கள் மற்றப் பதிவுகளில் இடும் பின்னூட்டங்களின் நகல்களை உங்கள் தனிப்பதிவில் போடத்தான் வேண்டுமா" என்று கேட்டார். "போட வேண்டும்தான் முத்து" என்று அப்போது பதிலளித்தேன். இப்போதும் அதே பதில்தான்.

ஒன்று நிச்சயம். போலி டோண்டு செய்யும் அட்டகாசத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஒவ்வொருவராக மட்டுறுத்தலை செயலாக்குகிறார்கள். அது முழுக்க நடைபெற்றாலே இவனால் மேலும் ஒன்றும் செய்ய முடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/20/2006

10 கேள்விகள்

கோட்ஸே நல்லவனா கெட்டவனா என்பதை பின் வரும் பத்து கேள்விகளுக்கு பதிலளித்தப் பிறகு பார்க்கலாம்.

1. சிறையிலிருது தப்பித்த ஒரு கைதி ஒரு நேர்ப்பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறான். அப்போது தூரத்தில் அவன் ஓடும் திசைக்கு எதிரிலிருந்து ஒரு போலீஸ் கார் அவனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் அவன் போலீஸ் காரை நோக்கியே ஓடி, நூறு அடி தூரத்தில் வண்டி இருக்கும்போது பாதைக்கு வலப்புறம் காட்டில் நுழைந்து தப்பிக்கிறான். ஏன்?

2. கோடைகால நடுவில் ஒரு பூங்காவின் நடுவில் ஒரு பிணம். உடல் எலும்பெல்லாம் முறிந்துள்ளது. இருப்பினும் பிரேதப் பரிசோதனையில் மரணம் கடும் குளிரால் ஏற்பட்டது எனத் தெரிய வருகிறது. விளக்கவும் (இது உண்மையாக நடந்த நிகழ்ச்சி).

3. கண்ணிழந்த ஒருவன் தன் பணம் எல்லாம் செலவு செய்து அறுவை சிகிச்சை முடிந்து பார்வை பெற்று வீடு திரும்ப ரயிலில் பயணம் செய்கிறான். அவன் பயணம் செல்லும் கம்பார்ட்மெண்டில் அன்றி வேறு எங்கு பயணம் செய்திருப்பினும் அவன் தற்கொலை செய்து கொண்டிருப்பான்.

4. அழகிய பெண் நடக்கிறாள். பின்னணியில் ஒரு இசை. இசை நின்றது அவள் இறந்தாள். ஏன்?

5. அவனுக்கு ஒரு நாற்காலி கிடைக்காததால் இறந்தான். ஏன் இந்தக் கொடுமை?

6. வேலு நாயக்கர் ஒரு கடையில் 100 ரூபாய் கொடுத்து பொருள் வாங்குகிறார். கடைக்கு வந்த அழகான ஃபிகரிடம் பேசிக்கொண்டே கடைக்காரன் அவருக்கு மீதி சில்லறையாக நூறு ரூபாய் கொடுக்கிறான். வேலு நாயக்கர் கூலாக அதை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடையை கட்டுகிறார். வேலு நாயக்கர் நல்லவரா கெட்டவரா?

7. ஒருவன் ஒரு சதுர வீடு கட்டுகிறான். அதனுள் நான்கு அபார்ட்மெண்டுகள். அதன் நான்கு பக்கங்களிலும் ஒரு கதவு, ஒவ்வொரு அபார்ட்மெண்டுக்கும். நான்கு குடித்தனக்காரர்கள். எல்லோருக்கும் வாசல் கதவு வடக்கு நோக்கியே உள்ளது. எப்படி?

8. மீன் தின்னும் சீல்கள் மிக புத்திசாலிகள். அவற்றை வைத்து விளையாட்டெல்லாம் காட்டுவார்கள். அம்மாதிரி ஒரு கேம் ஷோவில் சீல்கள் விளையாட வந்தன. பார்வையாளர்களை பார்த்ததும் எல்லாம் நீரில் மறுபடி குதித்து ஓடி விட்டன. ஏன்?

9. கமலஹாசன் ஒரு புது நண்பருடன் ஓர் அறையில் சீட்டாடிக் கொண்டிருக்கிறார். சுற்றுமுற்றும் பார்த்த அவர் திடீரென ஆபத்தை உணருகிறார்? ஏன்?

10. தன் வீட்டிலேயே ஒரு பெண் ஆபத்தில் இருப்பதைப் பார்த்தும் டோண்டு ராகவன் ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டான். ஏன் அவனுக்கு பயமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

காந்தியும் கோட்ஸேயும் - 2

இது மலர் மன்னன் அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல். என்னுடைய போன பதிவில் சீறி வந்த பல பின்னூட்டங்களுக்கு இதிலும் இதைத் தொடர்ந்து வரும் மலர் மன்னன் அவர்கள் இன்னொரு கட்டுரையின் பகுதியிலும் விடைகள் உள்ளன. எல்லாம் சேர்ந்து மிகப் பெரியதாகி விட்டதால் தனிப்பின்னூடமாகவே போடத் துணிந்தேன்.

In my article in Thinnai on Gandhi-Godse, I did NOT say that Godse did NOT belong to RSS or Hinsdu Maha Saba, because that qestion did NOT arise. Godse was a known Hindutva activist, editor of Agrani and Hindu Rashtra. The denial was about the involvement of RSS and Hindu Maha Saba or Savarkarji in the assassination.

To explain further, there was no evidence for a plot to kill Gandhiji in RSS or Hindu Maha Saba or involving Savarkarji and Godse was deputed to execute the plot. According to Godse, it was his own decision. For your info, Godse was once in the Congress also and courted arrest, imprisonned.

In my earlier related article, I have also said that we need NOT regret for having failed to safeguard Gandhiji even for a year whereas the British raj protected him for many years. This was the sircastic remark of Churchil as an attempt to prove Bharatiyas' inefficiency in the statecraft and it is a disgrace if we repeat his comment. Before my article on Gandhi-Godse, I had to write an intro (as a sequel to Sri Karpaka Vinayakam) entitled "Vidai UNdu vinaakkaLukku viLakkam vENdumenil." That article has answers to many of the commnets the readers put forth in your blog. (அக்கட்டுரையின் காந்தி கொலை சம்பந்தப்பட்ட பகுதியைக் கீழே தருவேன் - டோண்டு)

Kalyanam himself has said to me that he was posted to be Gandhiji's typist clerk a few days before the assaassination. He had even said Gandhiji's behaviour was very rude toward him but all those details were irrelevant to our topic. Kalyanam is still in Chennai and I know even his eldest daughter. Now that many years have passed, he may NOT be able to fill up every dotted line but the main points would remain intact. The plot hatched at Hindu Maha Saba quarters is his own reading without any vaild reasons because there was no evidence to such conspiracy, produced in the court. Had there been any smallest evidence for their involvement, the prosecution would have brought to the notice of the court to bring disgrace to Savarkarji because immediately after the partition, due to the loss of lives and properties and also outrage of modesty, Hindus were turning slowly to Hindu Maha Saba. In the first general elections, there were many Hindu Maha Saba candidates elected to Lok Sabha.

The bloggers quote from the press whereas I know kalyanam, I stayed with him for many days in his T.Nagar kalyana mandapam, spending night after night talking about many matters including Gandhiji's assassination and Kalyanam's nearness to gandhiji. I don't remember what he said about his past but he definitely told me that his posting as Gandhiji's typist with access to him was very recent, a few days before his death. I need to remember this fact because this is what is necessary for recording the incident.

எனக்கு அனுப்பிய இன்னொரு மின்னஞ்சலில் அவர் கூறியது:
I could go through Irainesan's blog in the matter and also your rejoinder to him in his blog as well as in your blog.

Whether Godse was in RSS or in Hindu Maha Saba is a non issue because he was NOT a stranger but a known Hindutva activist. It is also a non issue as to whether I subscribe to his action or not because it has got nothing to do with the intention of writing on the topic.

No cold blooded murder could be appreciated but I admit that I have no regrets for the liqudation of Gandhiji from our political scene at that crucial hour. In fact, many Hindus heaved a sigh on hearing his death at that time. Why, inwardly, Nehru and Patel would have beem felt relieved because Gandhi was a thorn in their flesh in those days.

மலர் மன்னனின் "விடையுண்டு வினாகளுக்கு, விளக்கம் வேண்டுமெனில்" என்ற திண்ணை கட்டுரையில் காந்தி கொலை சம்பந்தமாகப் பேசும் பகுதி இங்கே. முழுக்கட்டுரைக்கு பார்க்க: http://www.thinnai.com/pl0106065.html

1947க்குப் பிறகு சிலர் சில காரியங்களைத் துணிந்து செய்ய நேர்ந்தது வாஸ்தவந்தான். மத நல்லிணக்கம், சிறுபான்மையினர் மனங் கோணாது இருக்கச் செய்தல் என்பன போன்ற கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு துணிவை இழந்து உண்மையான வரலாற்றைப் பதிவு செய்யத் தவறிவிட்டதால் வந்த வினை, தவறான அனுமானங்கள் நிஜமெனப் பதிவாகிவிட்டிருக்கின்றன. மாறாகச் சிலராலாவது துணிந்து செயல்பட முடிந்திருக்கிறதே! ஆச்சரியந்தான்.

நாதுராம் விநாயக கோட்ஸே இன்றைய பயங்கரவாதிகளைப் போல் ஒரு நபரைக் கொல்வதற்காகப் பல அப்பாவி உயிர்களைக் காவு வாங்கியவர் அல்ல. தன்னந்தனியாகச் சென்று காந்திஜியின் நேர் எதிரே நின்று காந்திஜிக்கு மாத்திரமே பாதிப்பு நேருமாறு துப்பாக்கியால் சுட்டவர். காந்திஜியைச் சுட்டதும் சூழ்ந்துள்ளோர் ஆவேசச் சீற்றத்தில் தன்னைக் குற்றுயிரும் குலை உயிருமாகச் சிதைத்துப் போடுவார்கள் என்பது தெரிந்தே அவ்வாறு வினையாற்றினார். காந்திஜியைச் சுட்டுக் கொலை செய்த சமயத்தில் கோட்ஸேயின் வயது முப்பத்து ஒன்பது. நன்கு ஆலோசித்து, முடிவு எடுக்கும் வயது. வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் திடீர் என முடிவு செய்யும் பருவமல்ல. அவர் மூர்க்கத்தனமான வெறி¤யூட்டப்படும், மூளைச் சலவை செய்யப்படும் மதரஸாக்களில் இளமை முதல் பயின்றவருமல்ல. மேலும் ஒரு பத்திரிகையின் ஆசிரியர். பெரிய படிப்பு ஏதும் படிக்காவிடினும் தனது தரப்பு நியாயத்தைத் தௌ¤வான ஆங்கிலத்தில் சொல்லத் தெரிந்து நீதிபதியை வியக்கச் செய்தவர். நீதிமன்றத்தில் கோட்ஸே அளித்த வாக்குமூலம் நெடுங்காலம் பிரசுரிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இனி வெளியில் வந்தால் ஒன்றும் குடிமுழுகிவிடாது என்று அரசு உறுதி செய்துகொண்ட பின்னரே அது பகிரங்கப் படுத்தப்பட்டது. ''மே ஐ ப்ளீஸ் யுவர் ஹானர்'' என்ற தலைப்பில் கோட்ஸேயின் நீதிமன்ற வாக்குமூலம் புத்தகமாக வெளிவந்துள்ளது. அதனைப் படித்துப் பார்த்தால் முன்னரே ஒரு முடிவு செய்துகொண்டு, எதிராளியை மடக்குகிறோம் என்கிற நினைப்பில் என்னிடம் கேள்விகளை எழுப்பத் தோன்றாது.


காந்திஜி கொலை வழக்கு பகிரங்கமான நீ¦திமன்ற விசாரணையாக நடைபெறவில்லை. இன் காமரா என்பார்களே அதற்கு இணங்க அறைக்குள்ளே ரகசியமாக நடந்தது. நிருபர்கள் வடிக்கட்டப்பட்டே அனுமதிக்கப்பட்டனர். அதுமட்டுமல்ல, நிருபர்கள் விசாரணைபற்றிப் பதிவு செய்யும் செய்திகள் நீதிபதியின் பார்வைக்குச் சென்று அவரது தணிக்கைக்குப் பிறகுதான் பிரசுர அனுமதியைப் பெற்றன. ஏனெனில் பொது ஜன அபிப்பிராயமே தலைகீழாக மாறிவிடக் கூடிய நிலையில் விசாரணையின் போக்கு அமையலாயிற்று.


1947 ஆகஸ்டு 15 உண்மையான சுதந்திர நாள் அல்ல. டொமினியன் அந்தஸ்து தரப்பட்ட தினம்தான் அது. பர்மாவில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ வீரர்களை (அவர்களில் முக்கால்வாசியும் தமிழர்கள்), பூச்சிகளை நசுக்கிக் கொல்வதுபோல் கொல்லச் செய்த தளபதி, அதற்குப் பரிசாக பிரிட்டிஷ் துரைத்தனத்தால் வைசிராய் பதவியில் நியமிக்கப்பட்டவரான மவுண்ட் பேட்டனையே தொடர்ந்து தங்களின் அதிபதியாக இருக்குமாறு காங்கிரஸ் விண்ணப்பித்துக் கொண்டதற்கு இணங்க, அவர் கவர்னர் ஜெனரலாகவும் பெரும்பாலான ஆங்கிலேய அதிகாரிகள் முக்கிய பொறுப்பில் நீடிப்பவர்களாகவும் இருந்த சமயத்தில்தான் காந்தி சுடப்பட்டார். ஆகவே காலனி ஆதிக்க இந்தியா கண்ணில் வைத்துப் போற்றிய காந்தியை சுதந்திர பாரதம் காப்பாற்ற வக்கல்லாது போனதாக ஒரு குற்ற உணர்வு நமக்குத் தேவை இல்லை. சர்ச்சில் நம்மை ஏளனம் செய்வதற்காகச் சொன்ன விமர்சனம் அது. நாம் துப்புக் கெட்டவர்கள் என்று நம்மைக் குத்திக் காட்டுவதற்காகச் சொல்லப்பட்ட, வெளிப்படையான பாரத துவேஷயின் வார்த்தைகள் அவை. அவற்றையே திருப்பிச் சொல்வது ஈ.வே.ரா. அவர்கள் கற்றுத் தந்த சுய மரியாதைக்கே இழுக்கு.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அல்ல, அதற்காகக் காங்கிரசார் பீற்றி¤க் கொள்வது அர்த்தமற்றது எனத் திருச்சி நகர தூதன் திருமலைசாமி அந்தக் காலகட்டத்தில் கிண்டலும் கேலியுமாக எழுதிய வயணம் தெரிய வேண்டுமானால் எஸ்.வி. ராஜதுரையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஈ.வே.ராவுக்குப் பரிந்தும் அண்ணாவை உரிமையுடன் கடிந்தும் திருமலைசாமி அற்புதமாக எழுதிய கட்டுரையைத் தேடி எடுத்துப் பிரசுரித்தவர் என் பழைய சினேகிதர் ராஜதுரை. திருமலைசாமியின் புதல்வர்(பெயர் மறந்துவிட்டது) மிகவும் சிரம தசையில் இருந்தபோது அவருக்குக் கார்ட்டூன் வரையும் திறன் இருப்பதைக் கண்டு அதன் மூலம் அவர் ஓரளவு வருவாய் பெற ஏற்பாடு செய்தவன்தான் நான். அவர்கள் குடும்பம் கடைந்தெடுத்த ஜஸ்டிஸ் கட்சிக் குடும்பம். அதற்காகத் திருமலைசாமியின் மகனை ஒதுக்கிவிடவில்லை. என்னால் முடிந்ததைச் செய்தேன். இன்று அவர் இருக்குமிடம் தெரியவில்லை. தெரிந்தால், இப்போதும் அவர் சிரம தசையில் இருந்தால் அவருக்கு ஒரு நல்ல ஏற்பாடு செய்துதரக் காத்திருக்கிறேன். ஏனென்றால் திருமலைசாமி நாம் மதித்து நினைவில் கொள்ள வேண்டிய திறமை மிக்க கட்டுரையாளர். அவரால் கல்கியே மிகவும் கவரப்பட்டு, தமது ஆசிரியர் குழுவில் சேருமாறு அவரை அழைத்ததுண்டு. ஜஸ்டிஸ் கட்சியின் மீது இருந்த ஈடுபாட்டின் காரணமாகத் திருமலைசாமி கல்கியின் அழைப்புக்கு மசியவில்லை.

சரி, அடிப்படையான விஷயத்திற்கு வருவோம். ரகசியமாக நடந்த காந்திஜி கொலை வழக்கு விசாரணை முடிவில், கோட்ஸேயின் வாக்குமூலத்தையும் கருத்தில் கொண்டு தீர்ப்பு அளித்த நீதிபதி சொன்னது என்ன தெரியுமா?

''அமெரிக்காவில் உள்ளது போன்ற ஜூரர் முறைத் தீர்ப்பு நம் நாட்டில் இருக்கும் பட்சத்தில் குற்றம் சாப்பட்டிருப்பவரை நான் நிரபராதியென விடுதலை செய்யவேண்டியிருக்கும்'' என்பதுதான்!

இவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பதிவுகளே. கற்பனை அல்ல. பத்திரிகைகளுக்கு அன்று இதனை வெளியிட அனுமதி தரப்படவில்லை. ஆனால் இன்று நீதிமன்றப் பதிவாளரிடம் அனுமதி பெற்று ஆய்வுக்காக எனக்கூறி சரிபார்த்துக் கொள்ளலாம். வசதியுள்ள சரித்திர பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு இது எளிதாக முடியும்.

வழக்கை விசாரித்துத் தீர்ப்பு அளித்த நீதிபதியே பகிரங்கமாக அப்படிச் சொன்னார் என்றால் காந்திஜி கொல்லப்பட்டமைக்கு வெறும் மூர்க்கத்தனமான வெறி காரணமாக இருக்கமுடியாது, அதனையும் மீறி ஏதோ ஒரு ஆழமான நோக்கம் இருக்கக்கூடும் என யோசிக்கத் தோன்றுகிறதா இல்லையா?

இவ்வாறெல்லாம் நான் பதிவு செய்வதால் காந்திஜி கொல்லப்பட்டதை நான் நியாயப்படுத்துவதாகத் திசை திருப்பி விடக்கூடாது. காந்திஜி கொலை ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாகிவிட்டிருக்கிற ஒரு சரித்திர நிகழ்வு. உணர்ச்சிவசப்படாமல் ஆராயக் கூடிய சூழல் உருவாகிவிட்டிருக்கிற தருணம் இது. சலனப்படாமல் அந்த நி¤கழ்வை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து விவரங்க¬ளைப் பதிவு செய்வதுதான் நமது நோக்கமாயிருக்க வேண்டுமேயன்றி, ஓட்டுகளுக்காக அலையும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளைப் போல மதவெறி, மிருகத்தனம் என்றெல்லாம் மனம் போன போக்கில் ஏதும் சொல்லிக் கொண்டிருக்கலாகாது.

புற்றீசல் மாதிரி இப்போது வந்து கொண்டிருக்கும் புலன் விசாரணை முக்காடு போட்டுக் கொண்டு விற்பனை யொன்றே குறிக்கோளாகப் பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிட்டு வரும் பத்திரிகைகளில் ஒன்றாகத் திண்ணையை ஆக்கிவிடக்கூடாது, கண்டதையும் எழுதி. இந்த விஷயத்தில் நான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறேன். எதிர்வினை ஆற்றுவோரும் இதே மாதிரியான எச்சரிக்கையுடன், எழுதப்படுவதற்கு உள்நோக்கம் கற்பிக்காமல், உண்மைகள் பதிவு செய்யப்படவேண்டும் என்ற அக்கரையுடன் செயல்படவேண்டும் என எதிர்பார்க்கிறேன். வாருங்கள், நாம் எல்லோரும் ஓர் வட்ட மேஜையை மனதால் வரித்துக் கொண்டு ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கடந்துபோன நிகழ்வுகளைப் பற்றி ஆற அமர அவரவர் குறி¤ப்புகளைப் பகிர்ந்து கொள்வோம். உணர்ச்சி வசப்படாமல் விவாதங்கள் செய்து முடிவுகளுக்கு, அவை மிகவும் கசப்பானவையாகவே இருப்பினும் வருவோம். நமக்கு வரலாற்றுப் பார்வை இல்லை என்பதாக ஏற்கனவே நம்மீது ஒரு வசை உள்ளது. நம் தலைமுறையிலாவது அதனைக் களைய நாம் முற்படலாம் அல்லவா? அதற்காக நம் சந்ததியார் நம்மைப் பாராட்டுவார்கள் அல்லவா?

ஒன்று நினைவிருக்கட்டும். நமது வரலாற்றை வேறு எவரோ எழுதிவைக்க, அதனை ஆதாரமாக வைத்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். இது நமக்குப் பெருமை தருவதாகாது. நாமே நிகழ்வுகளை ஆய்ந்து விருப்பு வெறுப்பு இன்றி நம் வரலாற்றைப் பதிவு செய்வோம். நமக்கு அதற்கான அருகதை இல்லையா என்ன? குறைந்த அளவிலான கால கட்டத்தில் சம்பவித்துள்ள நம் காலத்து நிகழ்வுக¬ளை இவ்வாறு பரிசீலித்துப் பதிவுகள் செய்வது சாத்தியம்தான்.

இப்படியான மனப்போக்குடன் என் எழுத்தை அணுகுவதாயின் எல்லாக் கேள்விகளுக்குமே என்னிடம் ஆதாரப் பூர்வமான விடைகள் உண்டு. இன்னொன்றும் தௌ¤வுபடுத்திவிடுகிறேன்:

நான் வேலை வெட்டி இல்லாமல் பொழுதுபோக வேண்டுமே என்பதற்காகச் சாய்வு நாற்காலியில் கிடந்தவாறு திண்ணையில் கதைக்க வரவில்லை. மிகவும் சலித்துக் கொண்டும், எழுதியாக வேண்டுமேயென்று நொந்து கொண்டும் தான் எழுதுகிறேன். ஆகையால் எதிர்வினைகள் தீவிர சிந்தனையின் அடிப்படையிலும் ஓரளவுக்கேனும் விஷய ஞானத்துடனும் அமையவேண்டும் என நான் எதிர்பார்த்தால் அதில் தவறு இருக்காது என நம்புகிறேன்.

அடுத்த தவணையில் காந்திஜியைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு ஏன் ஒரு விவரம் தெரிந்த, நடு வயது மனிதன் வரப் போயிற்று, தன்னந் தனியாக காந்திஜியின் பக்தர்கள் மத்தியில் அவ்வாறு சுடுவதால் பத்திரமாகப் போலீஸ் வசம் அகப்படுவதற்கு மாறாகச் சின்னாபின்னமாகி விடுவோம் என்று தெரிந்திருந்தும் எதனால் அதற்குத் துணிந்தான் என ஆராய்வோம். (அதுதான் என்னுடைய முந்தையப் பதிவில் வந்தது - டோண்டு).

இப்போது மறுபடியும் டோண்டு ராகவன். நான் ஏற்கனவே ஓரிடத்தில் கூறியபடி மலர் மன்னன் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். அவர் கூறுவதை பொறுமையுடன் கேட்டால் பல விஷயங்கள் தெரிய வரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/18/2006

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு

சில நினைவுகள் என்ன முயன்றாலும் நம்மை விட்டு அகலுவதில்லை. அவற்றில் ஒன்று இளமையில் வறுமை. என் தாத்தா இறக்கும்போது என் தந்தைக்கு 19 வயதுதான். அவருக்கு ஒரு அண்ணா, ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை (என் வருங்கால மாமியார்). என் சித்தப்பா அந்தச் சமயம் 5 வயது குழந்தை. தாத்தா இருந்தவரை குடும்பத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை. அவர் ஏ.ஜி. அலுவலகத்தில் சுப்பிரண்டண்ட் ஆக பணி புரிந்தார். 1931 ஆம் வருடம் அவர் இறந்தபோது மாதச் சம்பளம் 390 ரூபாய்கள். அக்காலத்தில் அது ரொம்பப் பெரிய தொகை. இக்கால விலைவாசிகளுக்கு அட்ஜஸ்ட் செய்து பார்த்தால் மாதம் 60,000-க்கு குறையாது.

திடீரென குடும்பத்தலைவன் இறந்த நிலையில் அக்காலத்தில் விதவைக்கு பென்ஷன் எல்லாம் கிடையாது. பொறுப்பு முழுதும் என் பெரியப்பா தலைaயில் விழுந்தது. அவர் பி.எல். படித்திருந்தார். சொல்லிக் கொள்ளும்படியான பிராக்டீஸ் ஏதும் இல்லை. கல்யாணம் வேறு ஆகியிருந்தது. எப்படியோ சமாளித்தார். அதற்காக குடும்பத்தில் கடுமையான முறையில் சிக்கனம் கடை பிடிக்கப்பட்டது. துணிமணிகள் எல்லாம் எவ்வளவு தேவையோ அவ்வளவுக்கு மட்டும் வாங்கப்பட்டன. அரை வீசை (700 கிராம்) கறிகாய் வாங்கினால் இரண்டு வேளைக்கு வைத்துக் கொள்வார்கள். குழம்பு இருந்தால் ரசம் இருக்காது. துவையல் செய்து அப்பளம் மட்டும் காய்ச்சிய நாட்களும் உண்டு.

பிற்காலத்தில் என் தந்தை ஹிந்து நிருபராக வேலை செய்த காலத்தில் அவ்வளவு கஷ்டம் இல்லையென்றாலும் சிக்கனமாக இல்லையென்றால் மாதக் கடைசியில் கஷ்டம்தான். என் தந்தைக்கு அது பிடிக்காது. ஆகவே சிக்கன வாழ்க்கை தொடர்ந்தது. திடீரென என் அத்தையின் கணவர் மரணமடைய அவர் முதல் இரண்டு குழந்தைகள் எங்கள் வீட்டிலும், அத்தை மற்றும் மிகுதி 3 குழந்தைகளும் பெரியப்பா வீட்டிலுமாக இருக்க வேண்டிய நிலை. சிக்கன வாழ்க்கை இன்னும் கடுமையாக அனுசரிக்கப்பட்டது. அதனால்தான் நாங்கள் எப்போதுமே மாதக் கடைசி கஷ்டங்களைப் படவில்லை.

1971-ல் நான் பம்பாய் சென்றபோதும் என் சிக்கன வாழ்க்கை தொடர்ந்தது. 540 ரூபாய் சம்பளத்தில் 100 ரூபாய் அப்பாவுக்கு மாதா மாதம் அனுப்பிவிட்டு, சாப்பாடு, வாடகை மற்றச் செலவுகள் போல மாதம் 200 ரூபாய் மிச்சம் பிடிக்க முடிந்தது. இது பற்றி நான் இப்பதிவிலும் அதன் பின்னூட்டங்களிலும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஆக இங்கும் எனக்கு மாசக் கடைசி தொல்லைகள் எல்லாம் இல்லை.

1974-ல் சென்னைக்கு மாற்றல் பெற்று வந்தேன். என் தந்தை 1979-ல் இறக்கும் வரை என்னுடனேயே இருந்தார். இந்த 5 வருடங்களில்தான் முக்கியமான ஒன்றைப் பார்த்தேன். பணக்கஷ்டம் சுத்தமாக இல்லை. சொந்த வீடு வாடகை இல்லை. நன்றாக தாராளமாக செலவழித்தாலும் பிரச்சினை இருந்திருக்காது. ஆனாலும் எங்களால் சிக்கன வாழ்க்கையை மாற்ற முடியவில்லை. முக்கியமாக என் தந்தைக்கு அது முடியாத காரியமாகவே இருந்தது. தேவையில்லாது ஃபேன் சுற்றக் கூடாது, விளக்குகள் எரியக்கூடாது என்றெல்லாம் கூறுவார். எனக்கும் அவர் கூறியது சரி என்றுதான் பட்டது. ஆகவே சிக்கன வாழ்க்கைதான். என் வீட்டம்மாவும் (என் அத்தை பெண்) சிறு வயதில் கஷ்டப்பட்டு விட்டதால் அவருக்கும் இம்முறை பழக்கமானதே.

இப்போது? என் அப்பன் மகர நெடுங்குழைகாதன் அருளால் காசுக்கு பஞ்சமில்லை. ஆனால் இப்போதும் வரவுக்குள்ளேயே செலவுதான். என்ன, வரவு அதிகம் ஆகவே செலவு சற்றே அதிகரித்துள்ளது. மொழிபெயர்ப்பு வேலைகள் வீட்டில் தலைக்கு மேல் இருப்பதால் எங்காவது வெளியில் சென்றால் கால் டாக்ஸி எடுத்து செல்வது அதிகம் ஆகி விட்டது. நேரம் பொன்னானது அல்லவா? கார் வாங்க வேண்டாம் என்று தீர்மானித்ததும் சிக்கன நடவடிக்கையே. அது எப்படி என்பதைப் பற்றி இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

ஆனால் ஒரு சிறு சந்தேகம். நான் காலத்துக்கேற்ப இல்லையென்று பலர் கூறுகின்றனர். ரொம்ப கருமி என்றும் அழைக்கப்படுகிறேன். ஆனால் அவ்வாறு அழைக்கும் பலர் என்னிடம் கடன் கேட்டு அது கிடைக்காதவர் என்பதால் அதன் நம்பகத்தன்மை குறைந்து காணப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/15/2006

காந்தியும் கோட்ஸேயும்

நண்பர் மலர்மன்னன் ஒரு அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். அவருடைய "மெல்லத் திறக்கும் மனக்கதவு" என்ற கதை விகடனில் தொடர்கதையாக வந்த போது, அதை நான் வாரா வாரம் படித்தவன்.

மகாத்மா காந்தி என்றாலே கோட்ஸேயை நினைக்காமல் இருக்க முடியாது. அந்த கேட்ஸே ஏன் காந்தியைக் கொல்ல வேண்டும் என்பது பலர் மனத்தை அரித்து கொண்டிருக்கும். அதற்கு பதில் மலர்மன்னன் திண்ணையில் திஸ்கியில் எழுதிய கட்டுரை. அவர் அனுமதி பெற்று இங்கு யூனிகோடில் தரப்படுகிறது. மலர் மன்னனுக்கு என் நன்றி உரித்தாகுக. அவர் திண்ணையில் கொடுத்த தலைப்பு சற்று நீளமாகத் தோன்றியதாலும், நீளத் தலைப்புள்ள பதிவுகளை ப்ளாக்கர் விழுங்கி விடும் அபாயம் இருப்பதாலும் இங்கு அது சுருக்கப்பட்டுள்ளது.

இப்போது மலர்மன்னன் கூறுவார்:


மோகன்தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும்
மலர் மன்னன்


(காந்திஜி, கோட்ஸே ஆகிய பெயர்களின் சேர்மானம் காலங் காலமாக ஒரு முன்கூட்டிய அபிப்பிராயத்தை மக்களிடையே உருவாக்கி விட்டிருப்பதால் எனது கட்டுரையின் தலைப்பில் இவ்வாறான பெயர்களைப் பயன்படுத்தியுள்ளேன். இவ்வாறு தலைப்பிடுவதன் மூலம் எவ்வித முன் முடிவுகளோடும் கட்டுரையுள் புகும்விதமாக வாசகருக்கு மனத்தடை ஏற்படாது தவிர்க்கலாம் என்ற நம்பிக்கையில்!)
-மலர் மன்னன்-


போர்க்களத்தில் எதிரெதிர் தரப்பு சிப்பாய்கள் ஒருவரையொருவர் எதிர்கொள்கையில், ஒருவரை இன்னொருவர் கொன்றும் போடுகிறபோது, அதில் ஒருவர் நிராயுதபாணியாகவே இருந்தாலும் கூட அது ஒரு கொலைக் குற்றமாகக் கருதப்படுவதில்லையே, ஏன்?

அந்த இரு மனுஷர்களும் ஒருவரை யொருவர் முன்பின் அறியார். அவர்களில் ஒருவரால் மற்றவருக்கு மரணமே சம்பவித்தாலும், அதற்கு சொந்தக் காரணத்தின் அடிப்படையிலான உள்நோக்கம் ஏதும் இல்லாததால் அது ஒரு கடமையின்பாற்பட்ட கருமமாக அங்கீகரிக்கப்படுமேயன்றி மரண தண்டனை விதிப்பதற்கான குற்றமாகக் கொள்ளப்படமாட்டாது.

பாரத தேசத்துப் பெரும்பாலான அப்பாவி ஹிந்து ஜனங்களும், ஓரளவு கணிசமான கிறிஸ்தவர்களும், மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான முகமதியரும் மஹாத்மா என்றும், பாபு (தந்தையார்) என்றும் அழைக்கும் மாபெரும் சக்தியாக சுதந்திரப் போராட்ட காலத்தில் விளங்கிய, 'காந்திஜி' என மரியாதையுடன் அறியப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் அரசியல் நடவடிக்கைகள் தொடக்கத்திலிருந்தே அவருடைய மிகப் பெரும்பாலான பக்தர்களான ஹிந்துக்களின் நலனுக்குப் பாதகமாகவே இருந்தன. நமது தேசம் ஹிந்துக்கள் பெரும்பாலானவர்களாக உள்ள ஹிந்துஸ்தானம் என அறியப்பட்ட தேசமாதலால், அவரது அரசியல் நடவடிக்கைகள் இறுதியில் தேசப் பிரிவினை என்ற உச்ச கட்டமாக, ஹிந்து-முகமதியர் என்று மத அடிப்படையில் இரு நாடுகள் தோன்றி, ஹிந்துஸ்தானத்திற்கு இன்றளவும், இந்த நிமிடம் வரையிலும் பாதகமாகவே அமைந்து போயின.

காந்திஜிக்கு ஹிந்துக்களின் பேராதரவு, அவரே எதிர்பாராத வண்ணம் அரசியல் தலைமை ஸ்தானத்தை எளி¤தில் தந்துவிட்டது. எனினும் காந்திஜிக்குத் தேவைப்பட்டது பாரத மக்களனைவர் சார்பிலுமான ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம், அல்லது தலைமை ஸ்தானம். தம்மை பாரதநாட்டவர் அனைவர் சார்பிலும் பேசும் அரசியல்தலைவராகத்தான் அவர் முன்னிலைப் படுத்திக்கொண்டார். ஆனால் காய் நகர்த்துவதில் சாமர்த்தியம் மிக்க ஆங்கிலேய தர்பார், பெருகிவரும் அவரது செல்வாக்கிற்கு அணைகட்டும் பொருட்டு, சில முகமதியத் தலைவர்களை (ஜின்னாவை அல்ல) கைக்குள் போட்டுக் கொண்டு, 'நீ பாரத நாட்டு மக்களின் ஒட்டுமொத்தமான பிரதிநிதியல்ல, ஹிந்துக்களின் கட்சியான காங்கிரசின் தலைவர் மட்டுமே. குறிப்பாக ஹிந்துக்களுக்கு அடுத்தபடிப் பெரும்பான்மையினராக உள்ள முகமதியர் உன்னைத் தங்கள் பிரதிநிதியாக ஏற்றிருப்பதாகக் கூறுவதற்கு இல்லை. அதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. எனவே உன்னை ஹிந்துக்களின் பிரதிநிதியாகக் கருத இயலுமே யன்றி பாரத தேசத்தவரின் பிரதிநிதியாக ஏற்கமுடியாது. அதிலும் ஹிந்து சமூகத்திலேயே உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் பிரநிதிதியாகக் கூடக் கருத இயலாது. வேண்டுமானால் இதோபார், இந்த முகமதியப் பிரமுகர்களை, இவர்கள் உன்னைத் தங்கள் பிரதிநிதியாக அங்கீகரிக்கவில்லை' என்று கூறியது. காந்திஜி இதற்கு என்ன சொல்லியிருக்க வேண்டும்? "பாரத தேசத்தவரை மதத்தின் அடிப்படையில் பிரித்துப் பேச நீ யார்? இங்கே நகரத்திற்கு நகரம், ஊருக்கு ஊர், ஹிந்து, முகமதியர், கிறிஸ்தவர் ஆகிய அனைவரும் சேர்ந்தே வாழ்ந்து வருகிறோம். 1857-ல் நடந்த எமது முதல் சுதந்திரப் போர்கூட ஹிந்துக்களும் முகமதியரும் இணைந்து உங்களை வெளியேற்றும் முயற்சியாகத்தான் இருந்தது. மேலும் நீ சொல்கிறாற்போல நான் ஒரு தரப்பு ஹிந்துக்களின் பிரதிநிதியாகவே இருந்தாலும் இது ஹிந்துக்கள் மொத்த மக்கள் தொகையில் தொண்ணூறு சதம் இருக்கிற, ஹிந்துஸ்தானம் என்றே அறியப்படுகிற தேசமாதலால் இந்த தேசம் முழுமைக்குமான பிரதிநிதியாக வாதாடும் உரிமை எனக்கு உண்டு'' என்றுதானே? ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த பாரிஸ்டர் ஆங்கிலேய தர்பாரின் சூழ்ச்சிக்குப் பலியாகி, முகமதியரின் ஆதரவையும் தமக்குத் தேடிக்கொள்ளும் முயற்சியில் இறங்கிவிட்டார். அதற்காகவே முகமதியர் மனதில் இடம் பெறுவதற்கான முஸ்தீபுககளை மேற்கொள்ளலானார். அன்றே தொடங்கியது, காந்திஜியால் ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களுக்குச் சேதாரம். (தாம் தாழ்த்தப்பட்டோரின் தலைமையையும் பெறவேண்டும் என்பது உறைத்ததால்தான் அவர்களின் பக்கமும் அவர் கவனம் செலுத்தத் தொடங்கி, நாமனைவருமே கடவுளின் குழந்தைகளென்ற போதிலும் ஹரியாகிய இறைவனின் ஜனங்கள் என அவர்களுக்குப் பெயர் சூட்டி, முழு மூச்சில் அவர்களுக்கான ஆலயப் பிரவேசம் போன்ற இயக்கங்களையும் ஆரம்பித்துவைத்தார்).

முகமதிய சமயத்தின் பிறப்பிடமான அராபிய தேசமே குப்பையில் தூக்கியெறிந்துவிட்ட, துருக்கியரின் மத ஆளுமைக்கு ஒரு முடிவு வந்தமைக்காக அராபியர் உள்ளூற அகமகிழ்ந்த, ரத்து செய்யப்பட்ட 'கலீபா' என்கிற நடைமுறையைத் திரும்பப் பெறவேண்டும் எனக் கோரி இங்கே கிலாபத் என்கிற போராட்டத்தை காந்திஜி தொடங்கினார். பாரத தேசத்து முகமதியர்களுக்கு அதில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற போதிலும்! கிலாபத் இயக்கத்தின் மூலம் தாம் முகமதியரின் பிரதிநிதியுங்கூட என்பதை அவர் நிறுவ முற்பட்டதால் ஹிந்துக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் கிலாபத் துருக்கியிலேகூட நடந்ததில்லை! அது காந்தியால் காந்திக்காகவே தொடங்கப்பட்ட அரசியல் காய் நகர்த்தல்!

காந்திஜி பாரத தேசத்து ஆங்கில அரசை முன்வைத்து அல்ல, ஒட்டு மொத்த பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராகத்தான் கிலாபத் இயக்கம் தொடங்கினார். ஏனெனில் கிலாபத் என்பது துருக்கி சுல்தானுக்கு கலீபா என்கிற முகமதிய மதத் தலைமை ஸ்தானத்தைத் திரும்ப அளிக்கக் கோரும் இயக்கம்தான். பாரதத்தில் கோலோச்சிய ஆங்கிலேய அரசாங்கத்திற்கு இதில் எவ்விதத் தொடர்பும் இல்லாத போதிலும், பிரிட்டிஷ் சாம்ரஜ்ஜியத்தின் பிரதிநிதியாக அதனை அடையாளப்படுத்தி, அதற்கு எதிராகப் போராட வேண்டும் என்பது காந்திஜியின் திட்டம். ஆங்கிலேய துரைத்தனம் காந்திஜியைவிடப் புத்திசாலித்தனமாக அவரது திட்டத்தை முறியடித்தது. தனது கைக்குள் போட்டுக் கொண்டிருந்த முகமதியப் பிரமுகர்களைத் தூண்டிவிட்டு, 'நீங்கள் கவனக்குறைவாக இருந்தால் உங்கள் சமுதாயத்தில் மதிப்பிழந்து போவீர்கள். காந்தியை உங்கள் மக்களும் தலைவராக ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ஆகையால் எப்படியாவது காந்தி தொடங்கியிருக்கிற கிலாபத் இயக்கத்தை முறியடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு' என்று எச்சரித்தது. முகமதியப் பிரமுகர்களும் அதற்கு இசைந்து கிலாபத் இயக்கத்தை ஹிந்துக்களுக்கு எதிராகத் திசை திருப்பிவிட்டார்கள். ஆக, எவ்வித நியாயமும் இன்றி ஹிந்துக்கள் திடீரென முகமதியரின் வன்முறைத் தாக்குதலுக்கு இலக்கானார்கள். இத்தாக்குதல் கேரளத்தில் மிக உக்கிரமாக நடந்தது.

மலையாளம் தவிர வேறு மொழியெதுவும் தெரியாத முகமதியரான மாப்பிள்ளமார்கள், ஹிந்து தறவாடுகளைத் தாக்கிச் சூறையாடுவதற்கும் ஹிந்துப் பெண்களைக் கடத்திச் சென்று பாலியல் கொடுமைகள் செய்வதற்கும் வாகான வாய்ப்பாக காந்திஜியின் கிலாபத் இயக்கம் பயன்பட்டது. சரி, யாரய்யா இந்த மாபிள்ளமார்கள்? எங்கிருந்து உற்பத்தியானார்கள் இவர்கள்?

நமது மேற்குக் கடலோரம், எப்போதுமே மேற்கிலிருந்து வரும் மாற்றுச் சமயத்தினர் கரை ஒதுங்கி, ஹிந்துக்களுக்கே இயல்பான சமரச மனப்பான்மை, பெருந்தன்மை, ஆகியவற்றின் பயனாக, அந்நியர்கள் பத்திரமாக வசிக்கத் தொடங்குவதற்கு வசதியான சரணாலயமாக இருந்து வந்துள்ளது. தம் தாயகத்திலிருந்து விரட்டப்பட்ட யூதர்கள், பார்சிகள், வியாபாரம் செய்ய வந்த அராபியர், ஐரோப்பிய வணிகர், கிறிஸ்தவ மதப் பிரசாரகர், இப்படிப் பலதரப்பட்டோருக்கும் நுழைவு வாயிலாக அது இருந்து வந்துள்ளது. இப்படி வந்த அராபிய வியாபாரிகள், அதிக காலம் பெண் வாசனை இல்லாமல் இருக்க மாட்டாமல் உள்ளூர் ஹிந்து மலையாளப் பெண்களுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டார்கள். தாயகம் திரும்பும் தருணம் வந்ததும் அவர்களை அம்போ என்று விட்டுவிட்டு ஓடியும் போனார்கள்(இப்போதுகூட அராபியர்களிடையே இந்த வழக்கம் தொடர்வது தெரியும்தானே? தாற்காலிகத் திருமணம் செய்து, தலாக்கும், பிள்ளையும் ஒருசேரக் கொடுத்துவிட்டு அவர்கள் போய்க் கொண்டிருப்பதும், ஹைதராபாத், கேரளம், மேற்கு கர்னாடகம் ஆகிய இடங்களில் தகப்பன் முகம் தெரியாத பிள்ளைகளின் எண்ணீ¤க்கை முகமதிய சமூகத்தில் அவர்களுடைய காஜிகளின் சம்மதத்துடனேயே அதிகரித்துவருவதும் தெரிந்த விஷயமே அல்லவா?) இதன் விளைவாகக் கேரளத்தில் தோன்றிய ஒரு புதிய வகை வகுப்புதான் மாப்பிள்ளமார்! அதனால்தான் அவர்கள் பெயரே மாப்பிள்ளைகள்!


இந்த மாப்பிளமார்கள் ஹிந்து நிலச்சுவாந்தார்களிடம் குத்தகையாளர்களாகப் பணியாற்றி வந்தனர். உங்களுக்கே நிலம் சொந்தமாகும் என ஆசை காட்டப்பட்டும், சமய உணர்வோடு பொருளதாரக் காரணங்கள் சொல்லப்பட்டும் இந்த மாப்பிள்ளமார்கள் கலவரத்திற்குத் தயார் செய்யப்பட்டார்கள். விளைவு, ஹிந்துக்களுக்கு உயிர்ச் சேதம். பொருள் சேதம், மானச் சேதம்!

மாப்பிள்ளாக் கலவரம் என அறியப்பட்ட இதனை அரசாங்கம் கடுமையாக ஒடுக்கியது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைக் காணச் சகியாமல்! இதுதான் ஆங்கில துரைத்தனத்தின் சாதுரியம்! பிள்ளையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுதல்!

ஆக, காந்திஜி தமக்கு முகமதியர்களின் அங்கீகாரமும் கிட்ட வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட முயற்சி ஹிந்துக்களுக்குப் பெரும் பாதகமாக முடிந்தது. அப்படியும் காந்திஜிக்கு ஆசைவிடவில்லை. போக்கிரித்தனம் செய்த மாப்ப்¤ள்ளமார்களை மகத்தான தியாகிகளாக வர்ணித்தார்! அப்படியாகிலும் முகமதியர் மனங்களைக் கவர முடியாதா என்கிற ஆதங்கத்தில்!


(ஒரு தருணத்தில் ஆங்கிலேய தர்பாரை எதிர்க்க ஆப்கானிஸ்தானத்து அமீரை அழைப்பேன் என்றுகூட அவர் சொன்னதுண்டு! ஆனால் அவரே இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயரை எதிர்க்க இன்னொரு அன்னிய சக்தியிடம் தஞ்சமடைவதா என்று சுபாஷ் போஸைக் கண்டித்தார்!)


இப்படியாகக் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான முகமதியரின் கலவரத்தைத் தொடங்கிவைத்த புண்ணியம் காந்தியையே சாரும்.


முகமதியருக்கும் சேர்த்துத் தலைமை ஸ்தானம் வகிக்க வேண்டும், ஆங்கிலேயர் ஆட்சி தம்மை பாரத தேசத்து மக்கள் அனைவருக்குமான பிரதிநிதி என்று அங்கீகரிக்க வேண்டும் என்றெல்லாம் தேவையின்றியே தமக்கு அவர் நிபந்தனை விதித்துக்கொண்டு அதற்காக முகமதியருக்கு மேலும் மேலும் பரிவுகள் காட்டிவந்தபோதிலும் முகமதியரின் பிரதிநிதி என்கிற அங்ககாரம் ஜின்னாவுக்குத்தான் கிடைத்தது. தலித்துகளை ஹரியின் ஜனங்கள் எனப் புகழ்ந்து ஆலயப் பிரவேசத்தின் மூலம் அவர்களுக்கு சமூகத்தில் சம அந்தஸ்து கிடைக்கப் பாடுபட்ட போதிலும், தலித்துகளின் பிரதிநிதித்துவங்கூட அம்பேத்கருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது. தலித்துகளல்லாத ஹிந்துக்களின் பிரதிநிதியாகவே ஆங்கிலேய அரசு அவரை அடையாளப்படுத்தயது. ஹிந்துக்களின் நலனுக்காக ஏதும் செய்யாதது மாத்திரமல்ல, முகமதியரை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக ஹிந்துக்களை விட்டுக் கொடுத்துக் கூடச் செயல்பட்டவருக்கு ஹிந்துக்களின் பிரதிநிதி என்கிற அடையாளம்! இப்படியொரு விசித்திரமான நிலைமை ஹிந்துக்களைத்தவிர வேறு யாருக்கு வாய்க்கும்? அப்படியிருந்தும் "பாபு, பாபு' என்று ஹிந்துக்கள் அவரைக் கொண்டாடிக்கொண்டுதான் இருந்தார்கள்.


முகமதியர் மனம் கவர்வதற்காக காந்தி வரம்பு மீறியே நடந்துகொண்டிருக்கிறார், பல சந்தர்ப்பங்களில்.


சிரத்தானந்தர் என்ற ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த விடுதலைப் போராளியை ஒரு முகமதியன் கொலை செய்தபோது, அது திடீரென்று ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பில் நேர்ந்துவிட்ட சம்பவம். அதனால் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கூடாது என்று சொன்ன காந்தி, பிற்காலத்தில் பகத்சிங் விஷயத்தில் மட்டும் தண்டனையைக் குறைக்குமாறு வாதாடவில்லை. பகத்சிங் மக்களிடையே பிரபலமடைந்து விட்டால் தமக்கு செல்வாக்கு குன்றி விடும் என்பதற்காகவே அவர் வாளாவிருந்துவிட்டார் என்று கருதுவோரும் உண்டு. இதை ஊர்ஜிதம் செய்வது போலத்தான் அவர் அதற்குப் பின் சுபாஷ் சந்திர போஸ் விஷயத்திலும் நடந்துகொண்டார். சுபாஷ் பாபுவுக்கு மின்னல் வேகத்தில் மக்கள் ஆதரவு பெருகுவதைக் கண்டு அவரை முடக்கிப் போட்டார் காந்தி, சுபாஷ் பாபுவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியே காந்தியின் சொல்லை மீறித் தலைவராகத் தேர்வு செய்த பின்னரும்! காரியக் கமிட்டி உறுப்பினர்களையெல்லாம் விலகச் செய்து, உனக்கு எங்கள் ஆதரவு இல்லை என்று சொல்லாமல் சொல்ல வைத்தார்.


சுபாஷ் பாபுவும் ஹிந்து--முகமதியர் ஒற்றுமையின் அவசியம் உணர்ந்தவர்தான். ஆனால் முகமதியரைத் தமது பக்கம் வரச் செய்யவேண்டும் என்பதற்காக அவர்களுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுக்கவில்லை! ஒத்துழைக்க மறுத்து விட்ட காங்கிரசில் இனி இருந்து பயனில்லை எனப் புரிந்து கொண்ட சுபாஷ் தம் வழியில் போர்க்களம் காண ரகசியப் பயணம் மேற்கொள்ளுமுன் நம்பிக்கையுடன் சந்தித்த பாரத நாட்டுத் தலைவர், ஹிந்துத்துவக் கோட்பாட்டை நிறுவிய சாவர்கரைத்தான்! சுபாஷின் முன்னோடியான ராஷ்பிகாரி போஸ் ஒருபடி மேலே போய், ஜப்பானில் ஹிந்து மஹா சபையின் கிளையைத் தொடங்கியவர்!


ஹிந்துக்களின் நலனைக் காவு கொடுத்து முகமதியரின் ஆதரவைப் பெற காந்திஜி மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. விவரிக்கத் தொடங்கினால் நீண்டுகொண்டே செல்லும். அதன் முற்றுப் புள்ளிதான் தேசப் பிரிவினையில் முடிந்தது என்று பார்த்தால் அதன் பிறகும் அது நீடித்தது!


பாகிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக 1946-ல் ஜின்னாவின் முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை என்பதாக ஒரு கிளர்ச்சியினை நடத்தியது. கோரிக்கையை முன் வைக்கும் கிளர்ச்சியென்றால் நியாயப்படி அரசுக்கு எதிரானதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் லீ¦கர்களின் கிளர்ச்சி ஹிந்துக்களைக் குறிவைத்துக் கொன்றுகுவிப்பதற்கும், சூறையாடுவதற்கும், பெண்கள் மீது பாலியல் வன்முறையைப் பிரயோகிக்கவும்தான் நடத்தப்பட்டது. அப்போது ஒன்றாக இருந்த வங்காள மாநிலத்தை முஸ்லிம் லீக் கட்சிதான் சுரவர்த்தி என்பவர் தலைமயில் ஆண்டுவந்தது. இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு முகமதியர் ஹிந்துக்கள் மீது தங்கு தடையின்றித் தாக்குதலைத் தொடங்கினார்கள். அதற்கு சுரவர்த்தியின் அரசும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தது. ஹிந்துக்கள் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு பதிலடி கொடுக்க முன்வந்தபோது சுரவர்தியின் அரசு விழித்துக் கொண்டு தன் ராஜ தர்மத்தை நிலை நாட்ட முற்பட்டது. போதாக் குறைக்கு காந்தியும் வந்து சேர்ந்தார், சமரசம் என்றபெயரில் முகமதியரைக் காப்பாற்ற! நவகாளி யாத்திரை என்று பேசப்படுகிறதே, அது உண்மையில் ஹிந்துக்கள் முகமதியர் மீது பதில் தாக்குதல் தொடுக்காமல் தடுப்பதற்கு காந்திஜி மேற்கொண்ட முயற்சிதான்!


ஹிந்துக்கள் முகமதியர் மீது பதில் நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்க சுரவர்த்தி சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கவும், அவருக்கு காந்தி ஷஹீத் (தியாகி) என்று பட்டம் வழங்கிப் பாராட்டினார். ஹிந்துக்களை செயலிழக்கச் செய்வதற்காகத் தமது வழக்கமான ஆயுதமான உண்ணாவிரத நிர்ப்பந்தததையும் தொடங்கிவிட்டார்!


காந்திஜியை மஹாத்மா என்றும் பாபு என்றும் கொண்டாடியதற்குப் பிரதியாக ஹிந்துக்கள் எதிர்கொள்ள நேர்ந்த அவலங்களுக்கும் கொடுமைகளுக்கும் எழுதி மாளாத அளவுக்கு ஆதாரங்கள் உள்ளன. பாரதம் துண்டாடப் படுமெனில் அது என் சவத்தின் மீதுதான் நிகழமுடியும் என்று பிரகடனம் செய்த காந்திஜி, பிரிவினையைத் தடுக்கத் தமது வழக்கமான உண்ணாவிரத ஆயுதத்தைக் கையில் எடுக்கவில்லை. அந்த ஆயுதம் ஹிந்துக்களிடம்தான் செல்லுபடியாகும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது! தம்மை முகமதியருக்கும் பிரதிநிதியாக முன்னிலைப் படுத்திக்கொண்ட அவர், பிரிவினைக் கோரிக்கையை நீங்கள் கைவிடாதவரை நான் முன்னெச்சரிக்கையாக எனிமா எடுத்துக் கொண்டு, எலுமிச்சைச் சாறு பிழிந்த நீ¦ரை மட்டும் பருகிக்கொண்டு உண்ணாவிரதமிருக்கப் போகிறேன் என்று எச்சரிக்கவில்லை! மாறாக, காங்கிரஸ் காரியக் கமிட்டி தேசப் பிரிவினையை ஏற்றுத் தீர்மானம் நிறைவேற்றியதும், இது தவிர்க்க முடியாத துரதிர்ஷ்டம் என அதற்கு சமாதானம் சொல்லலானார்.


நேருவிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சத்தியாக்கிரகம்செய்து சோர்ந்துபோய், எப்போதடா பதவியில் நிரந்தரமாய் உட்காருவோம் என்று தவிக்கும் நிலைக்கு வந்துவிட்டிருந்ததால், போதும் போராடியது, இனி ஆள்வதற்கு வழி பார்ப்போம் என்று பிரிவினைக்கு ஒப்புதல் தந்துவிட்டார்கள். காங்கிரஸ் காரியக் கமிட்டியில் பிரிவினை பற்றிய தீர்மானம் விவாதத்திற்குவந்தபோது ஒரே ஒரு குரல்தான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. என் தாயகம் துண்டாடப் பட்டுத்தான் விடுதலை கிடைக்கும் என்றால் அந்த விடுதலை நமக்கு வேண்டாம். நிலைமை சாதகமாகும் வரை காத்திருப்போம் என்று தனி நபராக வாதாடித் தோற்றவர் புருஷோத்தம்தாஸ் தாண்டன்.ஆக, நம் பாரதம் துண்டாடப் பட்டமைக்குக் காங்கிரஸ§ம்தான் பொறுப்பாளி. அதற்குப் பரிசாக நாம் அதற்குத் தந்த பரிசு, நீ¦ண்ட நெடுங்கால பதவி சுகம்! பிரதமர் பதவி பெறுவதற்காகத் தேசம் துண்டாடடப் படுவதை ஒப்புக்கொண்ட நேருவுக்கு தேசமெங்கணும் சிலைகள், சாலையின் பெயர்கள், குழந்தைகள் பெயரால் பிறந்த தினக் கொண்டாட்டங்கள்! அதனால்தான் சோஷலிஸ்ட்கட்சித் தலைவர் ராம் மனோஹர் லோஹியா, தமது விருப்பம் என்னவென்று கேட்கப்பட்டபோது, '' மக்கள் நேரு இழைத்த குற்றங்களைப் புரிந்துகொண்டு, அதற்குத் தண்டனையாக அவரைச் சிறையில் தள்ளும்வரை அவர் உயிரோடு இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஒரே ஆசை'' என்று சொன்னார்!


ராஜாஜியின் வக்கீல் மூளை, தேசம் என்பது ஏதோ ஸ்தவர ஜங்கம சொத்து என்பதுபோல, சகோதரர்களுக்கிடையே மனவேற்றுமை வந்து விட்டால் பாகப் பிரிவினை செய்துகொள்வதுதான் உத்தமம் என்று அதன் பங்கிற்கு அனைவரையும் முந்திக்கொண்டு பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கைக்கு ஆதரவும் தெரிவித்துவிட்டது! பாகப்பிரிவினை செய்துகொண்டு விட்டால் பங்காளிகளுக்கிடையே பகைமை மறைந்துவிடும், நல்லது கெட்டதுக்கு ஒன்று சேர்ந்துகொள்வார்கள் என்பது ராஜாஜியின் வாதம். அதற்குப் பரிசாக வரப் போகும் பாகிஸ்தானில் அவருக்கு ஓர் உயர் பதவி கொடுக்க ஜின்னாவும் தயாராக இருந்தார்! ராஜாஜிக்கும் திருவிதாங்கூர் திவான் சர் சி.பி. ராமஸ்வாமி அய்யருக்கும் உருவாகப் போகும் பாகிஸ்தானில் ஜின்னா பதவி நாற்காலிகளைத் தயாராகப் போட்டு வைத்திரு ந்தார்! அய்யருக்கு நாற்காலி போடக் காரணம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தைப் பாகிஸ்தானத்துடன் இணைப்பேன் என்று அவர் மிரட்டியதற்காக! அய்யரின் முதுகெலும்பை முறித்துப் போட்டார், வல்லபாய் பட்டேல்!


சீக்கிரம் எப்படியாவது பிரச்சினைக்குத் தீர்வு வரவேண்டும் என்பதற்காக இறுதியில் காங்கிரஸ் பொறுமையிழந்து பிரிவினயை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தது. எனவே ராஜாஜி சொற்படி முன்கூட்டியே அதற்கு உடன்பட்டிருந்தால் ஒருவேளை பெருமளவுக்கு உயிர், பொருள் மானச் சேதாரங்களைத் தவிர்த்திருக்க முடிந்திருக்கலாம். ஆனால் எப்படியும் பாகிஸ்தானாக வரையறுக்கப்பட்ட பகுதியில் ஹிந்துக்களின் என்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டோ, துரத்தப்பட்டோதான் இருப்பார்கள். ஏனென்றால் ஜிஹாத் முகமதியருக்கு மிகவும் அவசியமான சமயக் கடமையாகும்.


பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகும் காந்தியால் ஹிந்துக்களுக்கு சோதனை தொடர்ந்தது. பாகிஸ்தானிலிருந்து குற்றுயிரும் குலையுயிருமாகத் தப்பி வந்த ஹிந்துக்கள் இருக்க இடமின்றி தில்லியில் பாழடைந்து கிடந்த முகமதிய மன்னர்களீன் சமாதிகள், இடிபாடுகளுடன் சிதைந்து போன, வழிபாடு ஏதுமற்ற பள்ளிவாசல்கள் ஆகியவற்றில் ஒண்டிக்கொண்டார்கள். குளிர்காலம் வேறு வந்துவிட்டிருந்தது. குழந்தைகளும் முதியோரும் உடல் நலம் குன்றியவர்களும் சரியான பாதுகாப்பின்றி அவதிப் பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் முகமதியருக்குச் சொந்தமான கட்டிடங்களை ஹிந்துக்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பது தவறு; அவை கவனிப்பாரற்றுக் கிடந்தாலும் சரியே. எனவே ஹிந்துக்கள் உடனே அந்த இடங்களைக் காலி செய்து வெளியேறவேண்டும் என காந்தி அறிக்கையிட்டார். அரசுக்கும் ஹிந்துக்களை அக்கட்டிடங்களிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தினார். ஹிந்துக்கள் வேறு வழியின்றி சாலை ஓரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். குளிருக்குச் சரியான பாதுகாப்பின்றிப் பலர் இறந்தனர்.


முகமதியர் புறக்கணித்த இடங்களை ஹிந்துக்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாகாது என்று சொன்ன காந்தி, நிர்கதியாக வந்த ஹிந்து அகதிகளுக்கு ஒரு மாற்றிடம் கொடுக்க வற்புறுத்தியிருக்கலாகாதா? கூடரங்கள் பல அமைத்திருந்தும் அவை போதாததால்தானே அகதிகளய் வந்தவர்கள் பாழடைந்த சமாதிகளிலும் மசூதிகளிலும் ஒண்ட நேர்ந்தது? காந்திதான் பாரதத்தில் அரசாளுவோருக்கு மாளிகைகள் இருக்கலாகாது என்றவராயிற்றே! பிரதமர் நேருவின் இல்லத்தையும் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் வசித்த வைசிராய் மாளிகையையும் அகதிகளுக்கு ஒழித்துக் கொடுக்கச் சொல்லியிருக்கலாமே!


அகதிகள் முகாமைப் பார்வையிடத் தம் அருமை மகள் இந்திராவுடன் நேரு ஒருமுறை சென்றபோது, அகதி ஒருவன் இந்திராவின் சேலைத் தலைப்பை லேசாகப் பற்றி இழுத்தான். உடனே நேரு சீறிப் பாய்ந்து அவன் கன்னத்தில் அறைந்தார்.


"பண்டிட்ஜீ, உங்கள் மகளின் சேலைத் தலைப்பை லேசாகப் பிடித்து இழுத்ததற்கே இவ்வளவு ஆத்திரப்படுகிறீர்களே, எங்கள் தாயை, சகோதரியை, மனைவியை, மகளை, எங்கள் கண் எதிரில் பலர் கதறக் கதறப் பாலியல் பலாத்காரம் செய்தார்களே, எங்களுக்கு மட்டும் பொறுமை காக்க உபதேசம் செய்வது சரிதானா?'' என்று அந்த அகதி கேட்டதற்கு நேருவால் பதிலிறுக்க இயலவில்லை.


இவையெல்லாம் பத்திரிகைச் செய்திகளாக வந்தவைதாம், கற்பனை அல்ல.


ஒன்றுபட்டிருந்த பாரத கஜானாவிலிருந்து பாகிஸ்தானின் பங்காக அறுபது கோடி ரூபாய் தர பாரத சர்க்கார் ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால் அத்தொகையைக் கொடுத்தால் பாகிஸ்தான் அதனை பாரதத்திற்கு எதிராகப் போர் புரிவதற்குத்தான் பயன்படுத்தும் எனத் தெரிந்ததால் அதனைக் கொடுக்க அப்போதைய துணை பிரதமர் வல்லபாய் பட்டேல் முட்டுக்கட்டை போட்டார். கொடுத்த வாக்கை மீறலாகாது, உடனே அறுபது கோடியைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டும் என்று காந்தி அடம் பிடித்து உண்ணாவிரதமும் தொடங்கிவிட்டார். அவர் பட்டினி கிடப்பதைக் காணச் சகியாது அரசாங்கம் அவரது விருப்பத்திற்கு அடிபணிந்தது.


இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இன்னொரு காரியமும் செய்தார், காந்தி. பாகிஸ்தானிலிருந்து ஹிந்துக்களும் சீக்கியர்களும் ஓடிவந்தது தவறு, என்ன நேர்ந்தாலும் சரி, எமது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அங்கேயே இருந்திருக்க வேண்டும். ஆகவே நான் பிப்ரவரி முதல் தேதி அகதிகளாய் வந்த ஹிந்து, சீக்கியர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு பாகிஸ்தானுக்குப் போய் அவர்களை அங்கே விட்டுவிட்டு வரப் போகிறேன் என்று அறிவித்தார்!


மஹாத்மா சொல்லைத் தட்டாத சில ஹிந்துக்களும் அதற்குத் தயாராக, பாபுதான் சொல்லிவிட்டாரே, அவர்கூடப் போகலாம் என்று துணிந்திருக்கக் கூடும். அப்படி அவர்கள் திரும்பிச் சென்றிருப்பின் என்ன நேர்ந்திருக்கும்? காந்திஜி அவர்களைப் பாகிஸ்தானில் விட்டு வந்த மறுகணமே அவர்களின் மானம் மூதலிலும் உயிர் அதன் பிறகும் பறிக்கப்பட்டிருக்கும் என்பதல்லாமல் வேறென்ன?


பாரதத்தில் முகமதியரின் உயிர், உடமைகளுக்குப் பாதுகாப்பளிக்க நேருவும் பட்டேலும் அவர்களுக்குமேல் காந்தியும் உண்டு. அதுபோல் பாகிஸ்தானில் ஹிந்துக்களின் உயிர், உடமைகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்க யார் உண்டு?


காந்தியின் பின்னால் போய் ஹிந்துக்களும் சீக்கியரும் மீண்டும் ஒரு கொடிய தாக்குதலுக்கு இரையாகும் அசம்பாவிதம் நிகழாதுதடுக்க என்ன வழி? காந்தியோ பிடிவாதக்கார மனிதர். தம் பேச்சைத் தான் மற்றவர்கள் கேட்கவேண்டுமேயன்றிப் பிறர் சொல்லைத் தாம் கேட்கத் தேவையில்லை என்று இருந்தே பழகிப் போனவர்.


இந்நிலையில் ஹிந்துக்களுக்கு நிச்சயமாக நேரவிருந்த அசம்பாவிததைத் தவிர்க்க நாதுராம் வினாயக கோட்ஸேவுக்கு ஒரு வழிதான் தெரிந்தது. அந்த வழியை அவர் மேற்கொண்டார்.


தமது வாக்குமூலத்தில் கோட்ஸே விடுதலைப் போரில் காந்தியின் பங்களிப்பைப் பெரிதும் போற்றிப் பேசத் தவறவில்லை. அதற்காக காந்திக்கு அஞ்சலி செலுத்தவும் தயங்கவில்லை.


காந்திஜியைக் கொன்ற செயலுக்குத் தாம் மட்டுமே பொறுப்பு என்று நாதுராம் வினாயக கோட்ஸே நீதிமன்றத்தில் குற்றம் முழுவதையும் தாமே ஏற்றுக்கொண்டார். எனினும், வழக்கை ஜோடிப்பதற்காகக் காவல் துறை அதற்கே உரிய வழக்கப்படி, வேறு பலரையும் குற்றவாளிகளாகச் சேர்த்து நாதுராமுடன் கூண்டில் ஏற்றி, கூட்டுச் சதியெனக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அவர்களில் சிலர் நாதுராமின் திட்டத்தை அறிந்திருந்ததோடு அதற்குத் துணை புரியவும் முன்வந்தவர்கள்தான்.ஆனால் சாவர்கரையும் கூடக் கொலையில் பங்குபெற்றவர் எனக் குற்றப் பத்திரிகை கூறியது. விசாரணை முடிவில் அவர் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார். கவனியுங்கள், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று அல்ல (குற்றத்தைக் காவல்துறை சரிவர நிரூபிக்கத் தவறிவிட்டது, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சட்ட நுணுக்க ரீதியாகப் பிழை உள்ளது என்கிற காரணங்களுக்காகக் குற்றவாளிகள் விடுதலை செய்யபட்டால்கூட, நீதிமன்றமே எங்கள் மீது தவறு இல்லையென விடுதலை செய்து விட்டது என்று அரசியல்வாதிகள் தீர்ப்பைத் திருத்திப் பேசுவது இக்காலத்தில் வழக்கமாகிவிட்டிருக்கிறது! அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகக் காவல் துறை வேறு வழியின்றி வேண்டுமென்றே குற்றப் பத்திரிகையைச் சரிவரத் தாக்கல் செய்யாமல் விடுவதும், குற்றத்தை உறுதிசெய்வதற்கான சாட்சியங்களை முன்னிறுத்தாமல் வழக்கை நீர்த்துப் போகச் செய்வதுமான முறைகேடுகள் இன்று சர்வ சகஜமாகிவிட்டிருக்கின்றன! ராஜீவ் காந்தி மீதான போபர்ஸ் வழக்கு இப்படித்தான் குற்றம் நிரூபணமாவதற்குப் போதிய சான்றுகளைத் தரப் ப்ராசிக்கியூஷன் தவறிவிட்டது என்கிற அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அதைத் தங்களின் வெற்றியாகக் காங்கிரஸ் கொண்டாடுகிறது ).


1949 நவம்பர் 15 அதிகாலை, தற்போதைய ஹரியாணா மாநிலத்தி லுள்ள அம்பாலா சிறைச்சாலையில் நாதுராம் கோட்ஸேயும் அவருடைய சகா நாரயண் ஆப்தேயும் தூக்கிலிடப்பட்டனர். நாதுராமின் தம்பி கோபால் கோட்ஸே, பஞ்சாபிலிருந்து தப்பி வந்த அகதி மதன்லால் ப?வா, தில்லி விடுதி உரிமையாளர் விஷ்ணு கர்கரே ஆகியோர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். ஆயுத வியாபாரி திகம்பர் பட்கே அப்ரூவராக மாறி சர்கார் தரப்பு சாட்சியம் கூறி, விடுதலையானார். பட்கேயின் பணியாள் சங்கர் கிஸ்தயா தண்டிக்கப்பட்டுப் பின் மேல் முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டார்.


ஆக, இது ஒரு கூட்டுச் சதி போலத் தெரிந்தாலும், நாதுராம் தாமே எடுத்த முடிவுக்கு மற்றவர்கள் துணையாக இருந்ததாகக் கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். மதன்லால் பருவா, தமது கண் எதிரில் தம் தந்தை முகமதியரால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதால் இதற்கெல்லாம் மூல காரணம் காந்தியே என ஆத்திரமுற்றுத் தாமும் காந்திஜியைக் கொலை செய்ய முடிவு செய்து எறிகுண்டு சகிதம் அலைந்து பின்னர் கோட்ஸேயுடன் சேர்ந்து கொண்டவர். எனவே இது கூட்டுச் சதியல்ல; ஒத்த சிந்தனையுள்ளவர்களின் ஒருங்கிணைப்பேயாகும். எனவேதான் நாதுராம் முழுக் குற்றத்தையும் தாமே ஏற்றுக் கொண்டார். அதற்கு இணங்கவே நானும் கோட்ஸே தாமாகவே எடுத்த முடிவு எனப் பதிவு செய்துள்ளேன்.


கோட்ஸே காந்தியைத் தவிர வேறு எவரையும் காயப்படுத்த விரும்பவில்லை. எனவே சுடுவதற்குமுன் காந்தியுடன் மிக நெருக்கத்தில் இருந்த ஆபா காந்தி, மனு காந்தி ஆகிய இருவரையும் தள்ளி, காந்தியைத் தனிமைப் படுத்தினார். நீதிமன்றத்தில் தமது மனச்சாட்சி தமது செயல் குறித்து உறுத்தவில்லை என்றும் தமது தரப்பு நியாயங்களை எதிர்காலத்தில் நேர்மையான சரித்திர ஆசிரியர் எரேனும் முறையாகப் பதிவு செய்வார்கள் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.


தீர்ப்பளித்த நீதிபதி கோஸ்லா, இங்கு அமர்ந்துள்ளவர்கள் ஜூரிகளாக இருப்பின் கோட்ஸே குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டியிருக்கும் எனத் தமது தீர்ப்பில் பதிவு செய்தார்.


கோட்ஸேயின் வாக்குமூலம் "மே இட் ப்ளீஸ் யுவர் ஹானர்' என்பதாகும். இது பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. இணைய தளத்திலும் படிக்கக் கிடைக்கிறது.கூகிள் மூலம் "கோட்ஸே' எனத் தேடினால் ஏராளமான விவரங்களும், நீதிமன்ற விசாரணை, கோட்ஸே வாக்குமூலம் ஆகியவை கிடைக்கும். இருபது ஆன்டுகளுக்கு முன் இந்த வசதி இல்லை. ஆகையால் நான் மிகவும் சிரமப்பட்டுத் தகவல்களை நேரில் திரட்ட வேண்டியதாயிற்று. எனினும் நாதுராமின் தம்பி கோபால் கோட்ஸே போன்றவர்களை நேரில் சந்திக்கும் அரிய வாய்ப்பும் பிறகு கடிதத் தொடர்பும் அதன் பயனாகக் கிட்டியது. கோபால் கோட்ஸே தற்சமயம் புணேயில் எண்பது பிராயம் கடந்தவராகப் புற்று நோயால் அவ்திப் பட்டுக் கொண்டும் போதிய பொருளாதார வசதியின்றியும், சாவின் நிழல் படிந்தவராக வாழ்ந்துவருகிகிறார்.


இது குறித்து இன்னொரு தகவலையும் பதிவு செய்ய விழைகிறேன், இதற்காக நான் தூற்றப்படுவேன் என்றாலும்!


காந்திஜி மறைவதற்குச் சில நாட்கள் முன்புதான் அவருக்கு உதவியாகத் தட்டச்சு எழுத்தர் ஒருவர் நியமிக்கப் பட்டார். தமிழரான அவர் பெயர் கல்யாணம். அவரை நான் அறிவேன் என்பது மாத்திரமல்ல, பிற்காலத்தில் சென்னை தி.நகரில் அவரது திருமண மண்டபம் ஆரோவில் ஊதுபத்தி முகவர் ஒருவரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தபோது கல்யாணத்திற்கு உதவியாக ஒரு சிறு குழுவுடன் இரவு பகல் திருமண மண்டபத்தில் தங்கியிருந்து, கல்யாணத்திற்கு எதிராகத் தாக்குதல் நடந்தபோதெல்லாம் அடிதடியில் பங்கு வகித்தேன்!


காந்திஜி சுடப்பட்ட போது அவரது அருகில் இருந்தவர்களில் கல்யாணமும் ஒருவர். குண்டு பட்டதும் முதியவரான காந்தி சிறு முனகலுடன் கீழே சாய்ந்தார். அந்த முனகலைத்தான் பிற்பாடு "ஹே ராம்' என்ற அழைப்பாகப் பதிவு செய்துவிட்டார்கள்! காந்திஜி "ஹே ராம்' என்றெல்லாம் சொல்லவில்லை என்பதற்கு கல்யாணம் சாட்சி! மக்கள் மத்தியில் காந்திஜியை ஒரு மஹானாக நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கற்பிதங்களுள் இந்த "ஹே ராம்' சமாசாரமும் ஒன்று!இந்திரா காந்தி படுகொலையின் போது அதனையும் காந்திஜி படுகொலையினையும் ஒப்பிட்டு துக்ளக்கில் ஒரு கட்டுரை வந்தது. நான் எனக்குத் தெரிந்த நியாயங்களைக் குறிப்பிட்டு அதற்குப் பதில் கட்டுரை எழுதி அனுப்பினேன். ஆனால் துக்ளக் அதனை வெளியிடவில்லை. எனது கட்டுரை ஒரு நல்ல ஆவணம்தான். இப்போது அது இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக அதன் நகல் என்னிடம் இல்லை.


இந்திரா கொலையையும் காந்திஜி கொலையையும் ஒப்பிடமுடியாது. உளவுத் துறையினர் பிரதமர் இந்திரா காந்தியிடம் அவரது மெய்க்காப்பாளர் குழுவில் சீக்கியர் இடம்பெறுவது வம்பை விலைக்கு வாங்குவது போலாகும் என்று வலியுறுத்திய போது, அப்படி அவர்களை ஒதுக்கி வைத்தால் சீக்கியர்களை நாம் புறக்கணிக்கிறோம் என நாமே ஒப்புக்கொள்வது போலாகிவிடும். எனவே எனக்குப் பாதுகாப்பு அளிப்பவர்களில் சீக்கியர்களும் இருக்கட்டும் என்று சொல்லித் துணிச்சலுடன் அதற்கு உத்தரவிட்டார், இந்திரா. அதற்குப் பரிசாக அவர் அவரது மெய்க் காப்பாளர்களாலேயே சுடப்பட்டு இறந்தார். இது கடைந்தெடுத்த பச்சை நம்பிக்கைத் துரோகமே அல்லவா? கோட்ஸே எனது செயலுக்கு மன்னியுங்கள் என்பதுபோல் முன்கூட்டியே காந்திஜியை வணங்கிவிட்டு காந்திஜிக்கு மட்டும் படுகிறாற்போல் சுட்டார். துவேஷமோ வெறியோ, இந்தக் காரியத்தை முடித்தால் உன் குடும்பத்தைக் காப்போம், இவ்வளவு சன்மானம் தருவோம் என்ற ஆசைகாட்டுதலோ ஏதுமின்றி, தமக்குத் தாமே எடுத்த சொந்த முடிவின் பிரகாரம்,


விளைவினை அறிந்தே கோட்ஸே வினையாற்றினார். இதனைச் செய்து முடித்தால் சுவர்க்கத்தில் பல அழகியர் பணிவிடை செய்ய, சுக போகம் அனுபவிக்கலாம் என்கிற ஆசைகாட்டுதலுக்கு மயங்கியதாலும் அல்ல! மேலும், எழுதிவைத்துக் கொள்ளுங்கள், இந்த வித்தியாசத்தை -- இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரியக்கமோ, ஹிந்து மஹா சபையோ, சாவர்கர்ஜியோ எடுத்த முடிவை அவர் செயல் படுத்தவில்லை. பழிவாங்கும் குரோதம் அவரது செயலுக்குப் பின்னணியாக இருக்கவுமில்லை. அரசாங்கத்தையே சங்கடப்படுத்திப் பணியச் செய்யும் அளவுக்கு முரட்டுப் பிடிவாதமும், தாம் செய்வதுதான் சரி, மற்றவர்கள் சொல்வதெல்லாம் தவறு என்று சாதிக்கிற சுபாவமும் கொண்ட ஒரு செல்வாக்கு மிக்க தலைவரை ஹிந்துக்களின் நலனை முன்னிட்டு அரசியல் களத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த இதைவிட்டால் வேறு வழியில்லை எனக்கருதியதால் கோட்ஸே தமக்குச் சரியெனப்பட்ட முடிவின் பிரகாரம் நிறைவேற்றிய செயல்தான் காந்திஜி படுகொலை (இந்தத் தகவலை நான் பதிவு செய்வதால் காந்திஜியின் கொலையை நியாயப்படுத்துவதாகக் கருதலாகாது. எந்த உயிர்க்கொலையையும் நியாயப் படுத்தும் மனப்போக்கு எனக்கு இல்லை. ஆனால் அதே சமயம், கீதையின் சாரம் தெரிந்தவனாய் இருப்பதால் எமது கீதாசாரியன் அறிவுரைப் பிரகாரம் இம்மாதிரியான நிலைமைகளைப் புரிந்துகொண்டு அவற்றை அவை உருவாகும் அவசியத்தின் பிரகாரம் ஏற்கவும் செயலாற்றவும் தெரிந்தவன்).


இந்திராவைக் கொலை செய்தவர்கள் விஷயத்தில் கோட்ஸேயின் செயலை ஒப்பிடுவது பொருந்தாது என்று நான் எழுதிய கட்டுரையை துக்ளக் ஏனோ நிராகரித்துவிட்டது.இன்னொரு விஷயமும் இப்போது குறிப்பிட விரும்புகிறேன்: நமது புண்ணிய தேசத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்து இந்திராவை உடனிருந்தே கொன்றவர்களை ஆண்டுதோறும் தியாகிகள் எனக் கொண்டாட அனுமதியுண்டு. ராஜீவ் காந்தியைச் சதி செய்து கொல்வதற்காக அவரை மட்டுமின்றி ஏராளமான அப்பாவிகளைக் கொன்றும், ஊனப்படுத்தியும் வினையாற்றியவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு மேடையேறிப் புகழ்ந்து பேச வாய்ப்பு உண்டு (பிற்பாடு அப்படிபட்டவர்களுக்கு மத்திய மந்திரிசபையிலேயே இடமும் கிடைத்தது!). ஆனால் கோட்ஸேவுக்கு மாத்திரம் வெளிப்படையாக நினைவு தினம் கொண்டாடவோ அவர் செயலை அவரது கோணத்தில் ஆராய்ந்து மேடை போட்டுப் பகிரங்கமாகப் பேசவோ அனுமதி கிடைக்காது!


காந்திஜி கொலைச் சம்பவம் இது நாள் வரை ஒருதரப்பிலிருந்தே அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. கொலையாளியை வெகு எளிதில் ஒரு மதவெறியராகச் சித்திரிப்பதோடு விஷயம் முற்றுப்பெற்றுவிடுகிறது. இதை வைத்துக் கொண்டு எவரும் எப்படியும் மனம் போன போக்கில் தூற்றித் திரிய முடிகிறது. இனியாகிலும் இவ்வாறான மேம்புல் மேய்தல் குறைந்த பட்சம் விவரம் மிக்க வாசகர்கள், வரலாற்றுப் பார்வை உள்ள பதிவாளர்களுக்கேனும் இருக்கலாகாது என்பதாலேயே மிக விரிவாக இதுகுறித்து எழுதினேன்.


சொந்தச் செலவில் தில்லியில் போய் காந்திஜி அமைதி நிறுவன விடுதியிலேயே தங்கியிருந்து ஆவணக்காப்பகங்களிலிருந்தும், நாதுராம் வினாயக கோட்ஸேயின் தம்பி கோபால் கோட்ஸேயிடம் உரையாடியும் திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் பதிவுசெய்யப்படும் தகவல்கள் இவை. வீட்டில் உட்கார்ந்துகொண்டு மேற்கொள்ளும் அரட்டை அல்ல. பாரதத்தின் பத்திரிகைகளுக்கு இம்மாதிரியான ஆய்வுகளை வெளியிடும் திராணியோ பொறுப்புணர்வோ இல்லாததால், ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இதழான ஆர்கனைசர் கூட 'காந்திஜி கொலையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்குப் பங்கு இருப்பதுபோல் கண்மூடித்தனமாக அவப் பெயர் கற்பிக்கப்பட்டு வருவதால் இது பற்றிய ஆய்வுக்கட்டுரையைப் பிரசுரிப்போமாயின் காந்திஜியின் கொலையை நாம் நியாயப்படுத்துவதாகத் திசை திருப்பி விடுவார்கள் என்று சொல்லி, என்னை ஊக்குவிக்கவில்லை. இந்த ஆய்வுக்காக நான் உழைத்துச் சம்பாதித்த பணத்தில், இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் பத்தாயிரம் ரூபாய்க்கும் அதிகமாகவே செலவழித்து என் குடும்பத்தைக் கஷ்டப்படவைத்தேன்! எழுத்துத் துறையில் பலவாறாக உழைத்து ஏராளமாகச் சம்பாதிக்கத் தெரி ந்தவன். ஆனால் அப்படிச் சம்பாதிப்பதைக் குடும்பத்திற்கு ஒதுக்காமல் இவ்வாறெல்லாம் செலவழித்துவிட்டுப் பிறகு

சிரமப்படுபவனுங்கூட!


இறுதியாக இன்னொரு தகவலையும் தந்து முடிக்கிறேன்:


காந்திஜி கொல்லப்பட்டபோது அவரது மறைவுக்கு அதிகாரப் பூர்வமாக இரங்கல் தெரிவிக்காத ஒரேநாடு ஸ்டாலின் ஆளுகையில் இருந்த சோவியத் யூனியன்தான். அந்த சோவியத் யூனியனுடன்தான் காந்திஜியின் அரசியல் வாரிசான நேரு கூடிக் குலாவி, பாரதத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதும், சர்வதேச அரங்கில் பாரதம் ரஷ்யாவின் எடுபிடி என்று ஏளனம் செய்யப்படுவதற்கு ஏற்றாற்போல் வினையாற்றுவதுமாக இருந்தார்!

மறுபடியும் டோண்டு ராகவன். மலர்மன்னனுக்கு மீண்டும் நன்றி. இக்கட்டுரை திண்ணையில் வந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/14/2006

துக்ளக் 36-ஆம் ஆண்டு நிறைவு

பகல் 10.30-க்கு டி.டி.கே. சாலையில் உள்ள நாரத கான சபாவில் துக்ளக் பத்திரிகையின் 36-வது ஆண்டு நிறைவு மீட்டிங் துவங்கியது. காலை 8.30-க்கே போய் இடம் பிடிக்க வேண்டியதாயிற்று. நல்ல வேளையாக போன ஆண்டு விழா கூட்டம் நடந்த மியூசிக் அகாடெமியை விட இந்த அரங்கு பெரியது. அவ்வளவு சீக்கிரம் சென்றதால் நல்ல வரிசையில் இடம் கிடைத்தது. 9 மணிக்கெல்லாம் அரங்கம் நிறைந்து விட்டது. இம்முறை பாரதியாரின் பாஞ்சாலி சபதம் கேசட் காத்திருப்பு நேரத்தில் போட்டார்கள். சோ குரலில் கேட்க முடிந்தது.

சரியாக 10.30-க்கு சோ மைக்குக்கு வந்து எல்லோருக்கும் வணக்கம் போட்டு மீட்டிங்கை ஆரம்பித்துவைத்தார். எடுத்தவுடன் ஹஜ் பயணிகள் பலர் நெரிசலில் சிக்கியதற்கு துக்ளக்கின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார். வழக்கம்போல தன்னுடன் துக்ளக்கில் பணியாற்றியவர்களை அறிமுகம் செய்வித்தார். பிறகு நேரத்தை வீணாக்காமல் சீட்டு குலுக்கி தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்கள் சிலர் பேச அழைக்கப்பட்டனர். அவர்களும் நேரத்தை வீணாக்காது கச்சிதமாக தங்கள் கேள்விகளை இட்டு நகர்ந்தனர். போன வருடம் போல இம்முறையும் நான் என் பார்வைக் கோணத்திலிருந்து எழுதுகிறேன். கையில் பேனா பேப்பர் ஏதும் இல்லா நிலையில், பக்கத்தில் இருந்தவரிடம் பேனா இரவல் வாங்கி, நான் பஸ்ஸில் படிப்பதற்காக கொண்டு சென்ற சுஜாதா அவர்களின் புத்தக உள் அட்டையில் குறிப்புகள் எடுத்தேன். கேள்வி கேட்ட வாசகர்கள் பெயர்களை குறிக்கவில்லை.

சோ அவர்கள் வெவ்வேறு வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலாகக் குறிப்பிட்டதை விஷயவாரியாக தருவேன்.

பாரதீய ஜனதா கட்சி
இக்கட்சிக்கு ஒரு மாதிரி டிப்ரஷன் வந்து விட்டது போலத் தோன்றுகிறது. தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது போல இடிந்து போயிருக்கிறார்கள். பீஹார் குஜராத் ஆகிய இடங்களில் பெற்ற வெற்றிகள் அவர்களுக்கு சுய நம்பிக்கையை வளர்க்க வேண்டும். காங்கிரஸுக்கு எதிராக எதிர்மறை எண்ணங்கள் உருவாகும் இந்த நேரத்தில் இக்கட்சி தன் சுய நம்பிக்கையை விடலாகாது. எப்போதும் ஆளும் கட்சிகளுக்கு எதிராக மக்கள் அபிப்பிராயம் உருவாகும் நேரத்தில் எதிர்க்கட்சி தன் கட்டுக்கோப்பை இழக்காமல் இருத்தலே தேர்தலில் வெற்றிபெற மிக அவசியமாகும். 1977-ல் நடந்தது இதுதான்.

பா.ஜ.க. வும் பத்திரிகைகளும்
பல பத்திரிககைகள் உண்மையாகவே பா.ஜ.க. மதவாதக் கட்சி என்று நினைக்கின்றன. இந்தத் தோற்றத்தை அகற்ற அக்கட்சி நல்ல பப்ளிக் ரிலேஷன்ஸ் வேலை செய்ய வேண்டும். பத்திரிகைக்காரர்களை அழைத்து அத்வானி, வாஜ்பேயீ அவர்கள் பேசவேண்டும். இம்மாதிரி விஷயங்களில் கருணாநிதி அவர்கள் ஜயலலிதாவை விட நல்ல முறையில் செயல்படுகிறார்.

தீவிரவாதம்
தீவிரவாதத்தின் முக்கியக் காரணம் பலவித நாசகார ஆயுதங்கள் சுலபத்தில் விலைக்குக் கிடைப்பதுதான். சோவியத் யூனியன் சிதறியதும் அதன் குடியரசுகளில் உள்ள ஆயுதங்கள் பல வேண்டாத சக்திகளிடம் போய் சேர்ந்தன. எப்படியாவது கலக சூழ்நிலைகளை பெருக்கி ஆயுதங்களை விற்க அமெரிக்கா போன்ற நாடுகளும் செயலாற்றுகின்றன. எப்படியும் வன்முறை என்பது மனிதனின் அடிப்படையிலேயே உள்ளது. அதற்கு தீனிபோடுகின்றனர் ஆயுதங்களை விற்பவர்கள்.

இஸ்லாமியத் தீவிரவாதம் என்று கூறுவதை விட தீவிரவாதம் என்றுதான் கூறவேண்டும். புலிகள் இஸ்லாமியர் அல்ல, காலிஸ்தானியர் இஸ்லாமியர் அல்ல, ஐரிஷ் தீவிரவாதிகள் இஸ்லாமியர் அல்ல. ஸ்ரீலங்காவில் அஹிம்ஸை போதிக்கும் புத்த மதத்தைச் சேர்ந்த பலர் செய்யாத தீவிரவாதமா? கூறப்போனால் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர் என்று பல மதத்தைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளாகவும் உருவாகின்றனர். ஆகவே இஸ்லாமியரை மட்டும் குறிவைப்பது நீதியாகாது.

ரஜனிகாந்த்
ரஜனிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை இல்லை. அதை பற்றி பேசுவதையும் தான் விட்டாயிற்று என்று சோ கூறிவிட்டார். உடனேயே, தான் கூறுவதை விட்டுவிட்டதால் ரஜனி வந்தாலும் வரலாம் என்றும் பொடி வைத்து பேசினார். ஒரே சிரிப்பு.

வாஜ்பேயிக்கும் மன்மோகனுக்கும் உள்ள வேறுபாடுகள்
முன்னவர் பிரதம மந்திரியாக இருந்தார். பின்னவரைப் பற்றி அவ்வாறு கூற முடியாது. உதவிப் பிரதமர் என்று வேண்டுமானால் கூறலாம். வாஜ்பேயி காலத்தில் நடத்திய போக்ரான் அணுபரிசோதனை அமெரிக்கர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்கள் உளவுத்துறைக்கு இது நிச்சயம் ஒரு பின்னடைவே. மன்மோகன் இப்போது இருக்கும் நிலையில் அதைக் கண்டிப்பாகச் செய்ய முடியாது. ஒவ்வொருவரிடமும் கேட்டு செய்வதற்குள் நொந்து விடுவார். சோனியா காந்தியைக் கேட்டால் அவர் க்வாட்ரோக்கியோடு ஆலோசனை செய்யச் சொல்வார், மு.க. அவர்கள் தயாநிதி மற்றும் கலாநிதியைக் கேட்கச் சொல்வார். லாலு அவர்கள் பாஸ்வான் மேல் அந்த குண்டைப் போட்டால் தனது ஆதரவு உண்டு என்று கூறுவார். அதற்குள் அமெரிக்காவுக்கு சாட்டலைட் கேமரா இல்லாமலேயே எல்லாம் தெரிந்து விடும். கம்யூனிஸ்டுகள் கடைசியில் கூடாது என்று கூறிவிடுவார்கள். ஆக முயற்சி கைவிடப்படும்.

அரசியல் நாகரிகம்
வெவ்வேறு கட்சியைச் சார்ந்தவர்கள் பொது இடங்களில் சந்திக்கும்போது தமிழ்நாட்டில் முகத்தைத் திருப்பிச் செல்கின்றனர். அதுவே வட இந்தியாவில் சுமுகமாகப் பேசிக் கொள்கின்றனர். இது பற்றிப் பேசுகையில் தமிழ்நாட்டில் இப்போதைய நிலைமைக்கு எம்.ஜி.ஆர். மற்றும் கருணாநிதி இடையில் நிலவிய விரோத மனப்பான்மையே காரணம் என்று கூறினார். அது மெதுவாக மறைந்து தமிழகத் தலைவர்களிடம் மனமுதிர்ச்சி வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜயலலிதா மற்றும் கருணாநிதியை பற்றி துக்ளக் எழுதும் முறை

கருணாநிதி அவர்கள் பலமுறை மிக நல்ல நகைச்சுவைக்கு இடம் அளிக்கிறார் என்று சோ குறிப்பிட்டார். உதாரணத்துக்கு தான் 2001-ல் கைதான நிகழ்ச்சியை குறிப்பிடுகையில் ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சிகளை மிகைபடுத்திக் கூற ஆரம்பித்தார். கடைசியில் தன் வீட்டுப் பெண்களிடமே போலிஸார் முறைதவறி நடந்தனர் எனவும் நூற்றுக்கணக்கானோர் தீக்குளித்தனர் என்றும் அவர் கூற ஆரம்பித்து விட்டார். இவ்வளவு தமாஷாக எல்லாம் கூறினால் அதற்கேற்பத்தான் தன் நடவடிக்கையும் இருக்கும் எனக் கூறினார். ஜயலலிதா இந்த விஷயத்தில் டெட் சீரியஸ் என்றும் கூறினார். மற்றப்படி இருவரையும் சமமாகவே பாவிப்பதாகக் கூறினார்.

கேள்விகள் எல்லாம் முடிந்த நிலையில் சோ அவர்கள் பேசினார்.

அத்வானி அவர்கள் ஜின்னாவைப் பற்றித் தேவையில்லாது பேசி சங்கடத்தை வரவழைத்துக் கொண்டார், மேலும் ஆர்.எஸ்.எஸ்ஸும் தன் பங்குக்கு சொதப்பியது என்றும் அவர் கூறினார். ஜின்னா அவர்களைப் பற்றி சோ மேலே பேசும்போது கிலாஃப்த் இயக்கத்தில் ஈடுபடவேண்டாம் என அவர் காந்தியடிகளுக்கு அறிவுரை கூறியதையும் கூறினார். அப்போது மதச்சார்பற்று இருந்த அவர் பாகிஸ்தானைப் பெறும்போது அவ்வாறு இல்லை என்பதையும் கூறினார். ஆக இது அத்வானிக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் இடையே கௌரவப்பிரச்சினையானதுதான், ஆகவே சங்கடத்துக்குரியது என்றும் கூறினார். இப்போதைக்கு வாஜ்பேயி மற்றும் அத்வானி ஆகிய இருவரும் தேர்தலைச் சந்திக்க கட்சிக்கு தேவை என்றும் அவர் பேசினார். துறவியான உமா பாரதி அவர்கள் நீதி முதலிய நல்ல பண்புகளையும் துறந்தார் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸைப் பற்றிப் பேசும்போது அதுவும் வலிமையான நிலையில் இல்லை என்று கூறினார். காஷ்மீர் தீவிரவாதத்தை பெங்களூர் வரை பரவ விட்டுவிட்டது காங்கிரஸ் என்றும் அவர் கூறினார். க்வாட்ரோக்கி அவர்கள் விஷயத்தில் லண்டனில் முடக்கிய அவர் வங்கிக் கணக்குகளை விடுவிக்க சட்ட மந்திரி முயன்றது கண்டிக்கத் தகுந்த செயல் என்றும் அவர் கூறினார். சோனியா காந்திக்கு அவர் வேண்டிவர் என்ற ஒரே காரணத்தால்தான் இத்தனையும் நடந்ததாகவும் அவர் கூறினார்.

மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு போக வேண்டியதே, ஆனால் இப்போதைக்கு அது போகாது என்றும் கூறினார். இன்னும் பல சொதப்பல்களை செய்து விட்டுத்தான் அது போகும் என்றும் அதுவே பி.ஜே.பி.க்கு சாதகமான நிலை வர வழி செய்யும் என்றும் அவர் கூறினார். பீஹாரில் கூட சட்டசபை கலைப்பால் பி.ஜே.பி. நிதிஷ் குமார் கூட்டணி அரசு இன்னும் நல்ல நிலை அடைய முடிந்தது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

தமிழகத்தை பொருத்தவரை இம்முறை யாருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று தான் கூறப்போவதில்லை என்று கூறிக்கொண்டே ஜயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் சாதக பாதகங்களை பட்டியலிட ஆரம்பித்தார். அவ்வாறு செய்யும்போது தான் ஒன்றும் பரிந்துரையெல்லாம் செய்யவில்லை என்பதையும் அவர் அடிக்கடி கூறி அரங்கத்தில் கலகலப்பை உண்டாக்கினார். ஆனால் கடைசியில் தீவிரவாத எதிர்ப்பு, தி.மு.க.வால் தூண்டப்பட்ட மத்திய அரசின் எதிர்ப்பு இருப்பினும் அரசை திறமையாக நடத்திச் சென்றது, அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கையாண்டது, தண்ணீர் பஞ்சத்தை சமாளித்தது எல்லாவற்றையும் அடிக்கோடிட்டு ஜெயலலிதாவுக்கு தன் ஆதரவை சூசகமாகத் தெரிவித்தார்.

போன வருடம் சங்கராச்சாரியாரை பற்றி மிகவும் பேசிய சோ அவர்கள் இம்முறை மிகச் சில வாக்கியங்களிலேயே பேசி முடித்தார். அதாவது தெருவில் நியூசன்ஸ் செய்தார் என்ற வழக்கைத் தவிர மற்ற எல்லா வழக்குகளையும் அரசு போட்டுப் பார்த்துவிட்டது என்று கூறினார். தேவையில்லாது குண்டர் சட்டத்தை இவ்வரசு பயனபடுத்தியதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

கடைசியில் நாடகக் காவலர் மனோஹர் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். பிறகு தேசீய கீதம் பாடப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது