6/30/2008

நம்புவதற்கு கஷ்டமான செய்தி ஒன்றை படித்தேன்

இன்று மூச்சடைக்கும் அளவுக்கு ஒரு பதிவைப் பார்த்தேன். அதாகப்பட்டது, சமீபத்தில் 1962-ஆம் ஆண்டுவாக்கில் வங்கிகளில் கணினியைப் புகுத்தினார்களாம். வங்கிப் பணிகள் விரைவாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகப் புகுத்தினார்களாம். அப்பொழுது நம்முடைய பொதுவுடைமைத் தோழர்கள், முற்போக்குச் சிந்தனைவாதிகள் இவர்களெல்லாம் முதலில் கடுமையாக அதை எதிர்த்தார்களாம்.

கணினியைப் புகுத்தாதே, வேலை வாய்ப்பைப் பறிக்காதே என்று சொல்லி எதிர்த்தார்களாம். எப்படி காந்தியார் தொழிற் சாலைகளுக்கு எந்திரம் கூடாதென்றாரோ, அதுபோலவே முற்போக்குச் சிந்தனையாளர்களும் கணினியைக் கடுமையாக எதிர்த்தார்களாம். எங்கே பார்த்தாலும் வேலை நிறுத்தம். தந்தை பெரியார் வீரமணி அவர்களைக் கூப்பிட்டு எதற்காக வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்று கேட்டாராம்.

கணினியைப் புகுத்துவதை எதிர்த்து என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார். இனி வீரமணி அவர்களின் வார்த்தைகளில்: (எவ்வளவு நேரம்தான் ராம் ராம் என்று எழுதுவதாம்)?

"என்ன இது பைத்தியக்காரத்தனம்? நாம் காட்டுமிராண்டிக் காலத்திலிருந்து நாகரிகமுள்ள ஒரு நாட்டைப் போல் முன்னேற விரும்புகிறோம். வெளி நாட்டைப் போல வளர விரும்புகிறோம். எனவே, கணினியை வரவேற்பதுதானே முறை. ஆகவே கணினியை ஆதரித்து எழுதும்படி அய்யா என்னிடம் சொன்னார்.

1962 இல் வெளியான விடுதலைத் தொகுப்பை பார்த்தீர்களேயானால், உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். அதில் நான் ஒரு தலையங்கம் எழுதினேன். கணினி பரவினால் வேலை வாய்ப்பு குறையாது. மாறாக வேலை வாய்ப்புகள் அதிகமாகும் என்று எழுதினேன்.

நான் எழுதியதை அன்றைக்கு ஏற்றுக் கொள்வதற்குக் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் கணினி அறிவுபற்றித்தான் பேச்சு. தெருவுக்குத் தெரு கணினி மையம், கணினிப் பயிற்சியகம் என்று வந்து விட்டது. இன்று யாராவது இவைகளை எதிர்த்துச் சொல்கிறார்களா?

மேலும் புதுப்புது வேலை வாய்ப்புகள்தான் அதில் வர வாய்ப்புள்ளது. இன்று கணினி அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது".
(திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் பெரியாரியல் நூல் 2 ஆம் பாகத்திலிருந்து ... ) தகவல்: இரா.கலைச்செல்வன், திருச்சி.

உண்மைதான் வீரமணி அவர்களே. எண்பதுகளில் (அதாவது பெரியார் அவர்கள் இறந்து பத்தாண்டுகள் கழித்து வங்கிகளில் கணினிகள் நிஜமாகவே புகுத்தப்பட்டபோது எதிர்ப்புகள் இருந்தது வாஸ்தவமே. ஆனால் 1962-ல்? இது கொஞ்சம் ஓவர் இல்லையா சார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/27/2008

டோண்டு பதில்கள் - 27.06.2008

கேள்வி கந்தசாமி:
1. தமிழக முதல்வர் கருணாநிதி டெல்லி சென்று இடதுசாரிகளுக்கும் பிரதமர்/காங்கிரசுக்கும் இடையே பூசலை தீர்க்கும் அளவிற்கு - டெல்லியில் பெரிய தலைகள் யாரும் இல்லையா ? இல்லை காமராஜருக்குப் பிறகு, மூப்பனார் (காங்கிரசில் மட்டுமே) செய்து வந்த அரசியல் சாணக்கியத்தின் உச்ச கட்டமா? இது நிச்சயம் தமிழகத்திற்குப் பெருமைதானே?
பதில்: கண்டிப்பாக பெருமை கொள்ளலாம் - கலைஞரின் ஆதரவாளர்கள். தமிழகத் தலைவர் அந்த நிலையில் இருப்பது பெருமைதான்.

2. ஜப்பானுக்கு சென்று ஜி- 8 கூட்டத்தில் புஷ்ஷை பார்க்க பேச மன்மோகன்சிங்கிற்கு தயக்கம் ஏற்பட்டு அவர் ராஜினாமா செய்தால் அடுத்த இடைக்கால (தேர்தல் வரை) பிரதமராக செயல்பட யாருக்கு சான்ஸ் கிடைக்கும் ? பிரணாப் முகர்ஜி, கருணாநிதி, ஜோதி பாசு ? (கருணாநிதி பிரதமரானால் - அது சிலமாதங்களுக்கே ஆயினும் சோனியாவிற்கு இந்த விலைவாசி திண்டாட்டத்தில் அது ஒரு நல்ல பகடை ஆட்டம்தானே?)
பதில்: யார் கண்டது, டோண்டு ராகவனின் இந்த இடுகையில் இந்தக் கேள்வியைக் கண்டால் கருணாநிதி அவர்களுக்கே அந்த ஆசை வரலாம். :))

3. கருணாநிதி பிரதமரானால் காவிரி, ஓகனேக்கல், முல்லைபெரியாறு, பாலாறு போன்ற பிரச்னைகளில் முன்னேற்றம் காண வழிவகுப்பாரா ? (இந்த சந்தர்ப்பத்திலாவது ஸ்டாலின் முதல்வராக சான்ஸ் உண்டா?)
பதில்: தண்ணீர் விஷயத்தில் உள்ள யதார்த்த நிலையை மீறி யாரும் எதுவும் செய்ய இயலாது. ஸ்டாலின் முதல்வராக வருவார் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை போய் விட்டது போல உங்கள் கேள்வி மனதுக்கு படுகிறதே.

4. 85 வயதில் இத்தனை அலைச்சல், உழைப்பு, ஞாபகசக்தி, அரசியல் முடிவுகள், அரசு முடிவுகள் போன்றவை நிச்சயம் ஒரு பாராட்டப்பட வேண்டிய விஷயம் தானே ? (ஜோதிபாசு, அச்சுதாநந்தன் கூடவே ஞாபகம் வருகிறது)
பதில்:கருணாநிதி அவர்களின் உழைப்பு பாராட்டுக்குரியதே. அவர் வயதில் நானும் அதே அளவுக்கு புத்தி கூர்மையுடனும் செயலுடனும் இருக்க என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்.

5. நீங்களே ஏன் ஒரு மாருதி ஆம்னியை வாங்கி அதை ஒரு கால்டாக்ஸி கம்பெனிக்கு வாடகைக்கு விடக்கூடாது ? (போலீசார் ஆட்டோ வைத்திருப்பதைப்போல). உங்களுக்கும் உபயோகமாகும் - நீங்கள் உபயோகிக்காத தருணங்களில் உங்களுக்கு பணமும் வரும்?
பதில்: அதற்கான தேவையான மனப்பாங்கு என்னிடம் இல்லை. கார் வாங்கி கால் டாக்ஸி வைத்து கொள்வது பணத்தை பொருத்தவரை பிரச்சினையில்லை. ஆனால் மீதி எல்லா விஷயங்களுமே பிரச்சினைதான். டிரைவர்களை வைத்து வேலை வாங்கத் தெரியவேண்டும். கார் மெகானிசம் ஒன்றுமே தெரியாத நிலையில் என் தலையில் சுலபமாக மிளகாய் அரைக்கப்படும். அது தேவையா எனக்கு? ஒரு தலைவலியும் இன்றி நான் மட்டும் ஈடுபடும் மொழிபெயர்ப்பு வேலையிலேயே நல்ல பணம் வரும்போது எனக்கு என்ன குறை?

6. மானாட மயிலாட - யாரின் தமிழ் கொஞ்சுகிறது - நமீதா? ரம்பா?
பதில்: எந்த நிகழ்ச்சியை கூறினீர்கள், மானாட மார்பாட நிகழ்ச்சியா? பேசும்போது வாயை எல்லாம் யார் பார்க்கிறார்கள்? இங்கே என்ன இலக்கியப் பேச்சா நடக்கிறது?

7. நீங்கள் ஏன் ஒரு மடிக்கணினி (லாப்டாப்) வாங்கி வைத்துக்கொண்டு பதிவர் மீட்டிங்குகளுக்கும் பிற நிகழ்ச்சிகளுக்கும் ஏன் உங்கள் வாடிக்கையாளர் சந்திப்புகளுக்கும் பயன் படுத்துவதில்லை. ரு.25000-க்கே இப்பொதெல்லாம் நல்ல மடிக்கணினி கிடைக்கிறதே?
பதில்: போன மாதம் எனக்கு ஹைதராபாத்தில் சில நாட்களுக்கு போகும் வேலை வர இருந்தது. அப்போது யோசித்தேன், மடிக்கணினி இருந்தால் இரவு நேரங்களில் ஹோட்டல் அறையில் என் வேலையை கவனிக்கலாமே என்று. ஆனால் அந்த வேலை பலிதமாகவில்லை. இருப்பினும் தீவிரமாக யோசித்து வருகிறேன். மடிக்கணினி மட்டுமல்ல, மோடமும் வாங்க வேண்டும், அதுவும் வைர்லெஸ் வகை. மற்றப்படி பதிவர் மீட்டிங்கிற்கெல்லாம் அதை கொண்டு போகும் எண்ணம் இல்லை. நோட்புக், பேனாவே போதும்.

8. அலுவலக ஆபீசர் ஒருவர், 35-40 வயது, அலுவல் வேலையாக வெளியூருக்கு/வெளிநாட்டுக்கு செல்ல நேரிடுகிறது. கூடவே அவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சுமாரான பெண்ணும் செல்லவேண்டும். வெளியூரில்/வெளிநாட்டில் இருவருக்கும் நெருங்க சந்தர்ப்பங்கள் அதிகம். இருவருக்கும் குடும்பம் (மனைவி அல்லது கணவன், குழந்தைகள் இருக்கின்றனர் - ஊரில்). இருவருக்கும் அவ்வாறான எண்ணங்கள் இது வரை அலுவலகத்தில் ஏற்படவில்லை. ஆனால் இந்த வெளியூர்ப் பயணத்தில் சந்தர்ப்பவசத்தால் இருவருக்கும் நெருங்க சான்ஸ் கிடைக்கும் போது என்ன செய்யவேண்டும் என உங்கள் அறிவுரையாக இருக்கும் ?
அ) சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இருவரும் சந்தோஷப்பட வேண்டும் ஆனால் பிறகு இது தொடரக்கூடாது; ஆ) வீடு, குடும்பம், மனைவியைக் கருத்தில் கொண்டு இருவரும் தங்களைக் கட்டுப் படுத்திக் கொள்ளவேண்டும்; இ) இவ்வாறு ஏற்படும் சந்தர்ப்பத்தையே தவிர்க்க முயலவேண்டும். எது உங்கள் பதில்? ஏன்? அப்படிப்பட்ட சந்தர்ப்பம் உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா?

பதில்: இம்மாதிரி தமக்கும் கிடைக்காதா என வயிற்றெரிச்சல்படுபவர்கள் மற்றவர்களுக்காக கடைசி இரண்டு ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுப்பார்கள். தங்களுக்கு என வரும்போது முதல் ஆப்ஷனைத்தான் தெரிவு செய்வார்கள். மொத்தத்தில் அறிவுரையெல்லாம் வேண்டாம், செயல்தான் என நான் கூறுவேன். வேண்டும் என தீர்மானிப்பதும் செயலே, வேண்டாம் என்பதும் அவ்வண்ணமே. அதெல்லாம் சம்பந்தப்பட்டவர்தான் செய்ய வேண்டும். எனக்கு தெரிந்து யாருக்கும் இம்மாதிரி சந்தர்ப்பம் கிட்டவில்லை.


அனானி (23.06.2008 மாலை 07.55-க்கு கேட்டவர்):
1. கடைசியில் பொருளாதர தாராளமயம் இந்தியாவை ஒருகை பார்த்துவிடும் போல் இருக்கிறதே?
பதில்: இச்சவாலையும் இந்தியா சமாளிக்க வேண்டியதுதான்.

2. என்ன திடீரென்று முலாயம் 3 வது அணியிலிருந்து காங்கிரஸ் பக்கம்?
பதில்: காலத்தின் கட்டாயம். மூன்றாம் அணி ஆரம்பத்திலிருந்தே நொண்டி அணிதான். அதிலிருந்து வெளியில் செல்ல சம்பந்தப்பட்டவர்கள் சமயம் பார்த்து காத்திருப்பார்கள். அதே போல இடது சாரிகள் மற்றும் மாயாவதியின் ஆதரவு இல்லாத நிலையில் காங்கிரசும் அகப்பட்ட இடங்களிலிருந்து ஆதரவு தேடுகிறது.

3. சோ அவர்கள் சொன்னது போல் இங்கே யாருக்கும் வெட்கம் இல்லையா?
பதில்: அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா (நன்றி: கவுண்டமணி)

4. பங்குவணிகத் தரகர் போல் செயல்படும் சிவகங்கை சிமான் திடீரென்று கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் யூக வணிகம் கூடாது என்கிறாரே? பார்த்தீர்களா?
பதில்: யூக வணிகம் பற்றி எனது அறிவு வேறும் யூகங்களினால்தான் நிரம்பியுள்ளது. ஆகவே இக்கேள்விக்கு பதில் என்னிடம் இல்லை.

5. இந்த வருடமாவது இடது சாரி பாம்பு கீரி சண்டையை நடத்துவார்களா?
பதில்: தேர்தல் இந்த ஆண்டு திசம்பரில் வரும் என்ற ஹேஷ்யம் எழுந்துள்ளது. நம்பும்படியாகத்தான் உள்ளது.


அனானி (இரவு 8.06-க்கு கேட்டவர்):
1. What will happen to congress govt if left withdraws support?
பதில்: உடனடியாக தேர்தல் நடத்துவதில் பாஜக அக்கறை கொண்டுள்ளது. அதுவே மற்ற கட்சிகள் காங்கிரசுக்கு ஆதரவை விலக்குவதை மேற்கொள்வதில் தயக்கம் காட்டச் செய்கிறது.

2. Will mulayam singh join with congress?
பதில்: அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

3. Already farmers are agitated about the non supply of diesel (ord)? what is your opinion?
பதில்: நிலைமை ரொம்ப குழப்பத்தில் இருக்கிறது. சாதாரண டீசலை அரசு நிர்ணையித்த விலைக்கு விற்க கம்பெனிகளுக்கு என்ன ஆர்வம் இருக்கும்? அவர்களுக்கு சப்சிடி தந்தால் யோசிக்கலாம். ஆனால் அரசால் அது முழுமையாக ஏலுமா?

4. All are becoming robbers citing the pertrol price hike? is it good?
பதில்: நல்லதோ கெட்டதோ அதையும் தாங்கப் போவது பொது மக்களே. இதில் நோ சாய்ஸ்.

5. Will share market see another Harshat Mehta again?
பதில்: ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு பஞ்சமே இல்லை.


வஜ்ரா:
1. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை படு பயங்கரமாக உயர்த்திடும் மத்திய அரசு ஏன் இன்னும் அதன் மீதுள்ள அபரிமிதமான (கிட்டத்தட்ட 30% த்திற்கு மேல்) வரியை குறைக்கவில்லை?
பதில்: எப்படி குறைக்க இயலும்? அதை வைத்து பட்ஜெட் போட்டாகி விட்டது. இப்போது அதை குறைத்தால் பற்றாக்குறை பட்ஜெட்டில் வராதா? எனக்கு புரிந்தது அவ்வளவுதான். நிதி நிர்வாக நிபுணர்கள் மேலும் கூற இயலும்.


அனானி (24.06.2008 இரவு 07.39-க்கு கேட்டவர்):
1. உண்மையில் அணு ஒப்பந்தம் இந்தியாவுக்கு நன்மையா? தீமையா? எது அதிகம?
பதில்: சீனாவின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. இது போதாதா இடதுசாரிகளின் எதிர்ப்புக்கு?

2. வாக்கு கொடுத்துவிட்டு அதை காப்பாற்ற முயலுவதுபோல் உள்ளதே பிரத‌ம அமைச்சரின் பரபரப்பு?
பதில்: மன்மோகன்சிங் பாராட்டுக்குரியவர் என இந்த வார துக்ளக் எழுதியிருப்பது எனக்கும் சம்மதமே.

3. சுப்பிரமணிய சாமி என்ன சொல்கிறார் இதைப் பற்றி?
பதில்: அவர் எப்போது என்ன சொல்லுவார் என்பது அவருக்கே தெரியாதபோது நீங்கள் என்னிடம் போய் அதை கேட்பது நியாயமா?

4. இடதுசாரிகள் பிடி இறுகுகிறாதா?
பதில்: காங்கிரஸ் பயப்படும்வரை அதுதான் நிலை.

5. ஆனால் அமெரிக்கா நம்மை விடாது போல் உள்ளதே?
பதில்: புஷ் தான் போவதற்குள் ஏதேனும் செய்ய நினைக்கிறார். அவருடைய கட்டாயங்கள் அவருக்கு.

6. ஒருவேளை பா.ஜ.க வெற்றி பெற்று வந்தால் இதை எவ்வாறு செய்வார்கள், ரத்து செய்ய முடியாதே?
பதில்: பா.ஜ.க. ஆட்சியில் இருந்திருந்தாலும் மன்மோகன் சிங் எடுத்த நிலையைத்தான் அவர்களும் எடுத்திருப்பார்கள். இதை அத்வானி ஒத்து கொண்டாலும் சரி, ஒத்து கொள்ளாவிட்டாலும் சரி.

7. லாலு அவர்கள் ஏதோ எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் இதை ஆதரிக்கிறாரே?
பதில்: அவருக்கு வாய்ப்பு சில ஆதாயங்களைப் பெற. இது அரசியல். அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி.

8. எல்லா கட்சிகளும் தங்கள் ஆதாயத்தைதான் பார்க்கிறார்கள்? இந்திய மக்கள் பாவம்தானே?
பதில்: கட்சிகளில் இருப்பவர்களும் இந்திய மக்களின் அங்கம்தானே. மற்றப்படி சொந்த நலனைப் பார்க்காதவர் யார்?

9. மீண்டும் கலைஞருக்கு யோகம் பார்த்தீர்களா? பெரியண்ணா அல்லவா?
பதில்: யோகம்தேன்.

10. பணவீக்கம் கூடும் போதெல்லாம் ஏன் பங்கு வர்த்தகம் சாமி ஆட்டம் ஆடுகிறது?
பதில்: பணவீக்கம் என்றால் என்ன? அளவுக்கு மீறிய பணப்புழக்கத்தின் விளைவுதானே? அதிகப் பணம் குறைந்த பொருட்களை துரத்தினால் அது வருகிறது. பொருட்கள் கிடைக்காதபோது பங்குகளை துரத்துகிறார்கள். வேறு வழியில்லை. வங்கிகளில் சேமித்தால் அதன் வட்டி பணவீக்கத்தின் சதவிகிதத்தை விட குறைவாக இருக்கும் நிலையில் பணத்தை சும்மாவும் வைத்திருக்க இயலவில்லையே.


கோமணகிருஷ்ணன்:
1) அய்.டி. போன்ற‌வ‌ற்றினால் பெண்க‌ள் அரைகுறை ஆடை அணிவ‌து, ஆண்க‌ளுட‌ன் குடித்து விட்டு கும்மாள‌ம் போடுவ‌து, பாய்பிர‌ண்டு டேட்டிங் என‌ அலைவ‌து என‌ த‌மிழ் க‌லாசார‌ம் சீர‌ழிந்த்துவிட்ட‌தே? உங்க‌ள் ப‌தில் என்ன‌? (ப‌ல‌முறை கேட்டும் நீங்க‌ள் ப‌தில் சொல்ல‌வில்லை!!)
பதில்: யானைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும் அல்லவா. முன்பு ஆண்கள் மட்டும் ஆட்டம் போட்டனர். பணத்துக்கு பெண்களை வரவழைத்தனர். இப்போது பெண்களுக்கும் "அத்தேவை" அதிகமாகியுள்ளது. பொருளாதார சுதந்திரம் வேறு. அதிக செலவில்லாமல் பார்ட்னர்கள் கிடைக்கும் நிலை. எல்லாம் சப்ளை அண்ட் டிமாண்ட்தான்.

2) ஏழைக‌ள் ச‌ம‌த்துவ‌ம் பெறுவ‌தை எதிர்க்கிறீர்க‌ள். இன்னொரு ப‌திவில் ஏன் நான் எழைக்கு உத‌வ‌ வேண்டும் என்றீர்க‌ள். ஏழைக‌ள் மேல் ஏனிந்த‌ வெறுப்பு?
பதில்: அவர்கள் மேல் எனக்கு என்ன வெறுப்பு இருக்க முடியும்? பொதுவாகவே தத்தம் நிலையை தாங்களேதான் உயர்த்தி கொள்ளவேண்டும். அது செய்யாது மற்றவர்களை எதிர்ப்பார்த்து இருப்பவர்கள் யாராக இருந்தாலும் இளப்பத்திற்கு உரியவர்களே.

3) பார்ப்ப‌ன‌ரின் த‌வ‌றுக‌ளை சுட்டிக்காட்டினால் குதிக்கிறீர்க‌ள். ந‌ன்கு யோசித்து பார்க்க‌வும். ப‌குத்த‌றிவாள‌ர்க‌ள் ஏன் ஒரு ச‌மூக‌த்தை ம‌ட்டும் குறிவைத்து விம‌ர்சிக்க‌ வேண்டும்? அவ‌ர்க‌ள் என்ன‌ பைத்திய‌மா? ஏதாவ‌து கார‌ண‌ம் இருக்க‌ வேண்டும‌ல்ல‌வா??!! பார்ப்ப‌ன‌ரிட‌ம் பல‌ த‌வ‌றுக‌ள் இருப்ப‌தானால்தானே?!!!
பதில்: இரண்டாயிரம் ஆண்டுகளாக யூதர்களை துன்புறுத்திய சரித்திரத்தில் வரும் கேள்விகள்தான் இவை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மேல் வர்ஜாவர்ஜமின்றி தாக்குதல் நடத்துவது மற்றவரது தாழ்வு மனப்பான்மையையும் பொறாமையையும்தான் குறிக்கிறது. இட ஒதுக்கீட்டை கட்டுப்படுத்தி திறமைக்கு முன்னிடம் கொடுக்கச் சொன்னால் அதனால் பார்ப்பனர் மட்டும் பயன்பெறுகிறார்கள் எனக் கூறுவது மற்றவர்களது தாழ்வு மனப்பான்மையே.

4) மத‌வெறிய‌ர்க‌ள் சோவுக்கும், மோடிக்கும் இவ்வ‌ள‌வு ஜால்ரா அடிப்ப‌து ஏன்?
பதில்: அதைப் பற்றிய எனது பதிவுகள் "சோ" என்னும் லேபலின் கீழே காணக் கிடைக்கின்றன. படியுங்கள்.

அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/23/2008

தாய் மொழி தரும் உற்சாகம் - 3

எனது தாய் மொழி தரும் உற்சாகம் -2 இடுகையில் குறிப்பிட்டிருந்த மகிழ்ச்சி மறுபடியும் கிட்டியது. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம், அது ஒன்றுக்கு மூன்று மடங்காகக் கிட்டியது. அப்பதிவில் நான் குறிப்பிட்டிருந்த அதே Proz.com ப்ளாட்டினம் உறுப்பினர் விஷயம்தான். போன ஆண்டு அதை ஒரு வருடத்துக்கு தந்தனர். அது அடுத்த மாதம் 13-ஆம் தேதி முடிவடைகிறது. இம்முறையோ அதை மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து தந்தனர். அதே மாதிரி காலணா செலவில்லாமல் எனது ப்ரௌனீஸ் புள்ளிகள் அடிப்படையில். இதற்காக நான் 60,000 (20000 x 3) புள்ளிகள் தர வேண்டியிருந்தது. அதனால் என்ன பரவாயில்லை. இதை எதிர்பார்த்துத்தானே நான் அவற்றை ஈட்டினேன்.

போன முறை போலவே இம்முறையும் இந்த மொழிபெயர்ப்பு தலைவாசலின் தமிழாக்கத்தில் ஈடுபட்டேன். அதில் கிடைத்தன இப்புள்ளிகள். மே மாதத்திலிருந்து எனக்கு உறுப்பினர் காலம் ஜூலையில் முடிவடையப் போவதை நினைவுறுத்தி, அதை புதுப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டேன். வழமையான சலுகை, அதாவது 4000 ப்ரௌனிஸ் புள்ளிகள் + 80 அமெரிக்க டாலர்கள், தரப்பட்டது. நானா அசருவேன். நானும் எனக்கு 20000 புள்ளிகள் பெற்று முழுச்சலுகை தருமாறு மிகவும் மரியாதையுடன் பதில் எழுதினேன். அவர்கள் முதலில் அதை கண்டு கொள்ளவில்லை. வழக்கம் போலவே அவர்கள் சாதாரணமாக தரும் சலுகையுடன் நினைவுறுத்தல்கள் வர ஆரம்பித்தன. நானும் எனது கடிதத்தையே தேவையான அளவுக்கு மாற்றி மாற்றி அனுப்பலானேன். இம்முறை சில கருத்துக்களை முன்வைத்தேன். அதாவது: 1) இச்சலுகையை நான் ஒரு கௌரவமாகவே பார்க்கிறேன். மற்றப்படி 80 டாலர்கள் என்பது பெரிய தொகையே அல்ல. 2) அப்படியே என் கோரிக்கை ஒத்துக் கொள்ளப்படாவிட்டாலும் எனக்கு இழப்பு அதிகம் இல்லை. என்னிடம் தேவையான புள்ளிகள் (66000-க்கும் மேல்) உள்ளதால் இத்தலைவாசலின் சிறப்பு சேவைகளை தேவையான போது 50 அல்லது 100 புள்ளிகள் தந்து பெற்று கொள்ள முடியும். 3) இன்னொன்றையும் தெளிவுபடுத்தினேன், அதாவது ஓர் ஆண்டுக்கு 20000 புள்ளிகள் என்பது அவர்களாக தீர்மானித்த விஷயம். அதன் அடிப்படையில்தான் நான் 60000 புள்ளிகள் மூன்றாண்டுகளுக்கு தரும் ஆலோசனை தந்தேன். ஆகவே அதற்கு மேல் புள்ளிகள் தர இயலாது. அப்படியே அடுத்த ஓர் ஆண்டுக்கு மட்டும் தந்தாலும் இதே கோரிக்கை மறுபடியும் அந்த ஆண்டு முடிவில் வைக்கப்படும். 4) தமிழ் < > ஆங்கில மொழி ஜோடிக்கு மட்டுறுத்துனர்கள் அவர்களிடம் இல்லை, என்னிடம் அப்பொறுப்பைத் தந்தால் அதை ஏற்று சிறப்பாக செயல்பட இயலும் என்றும் கூறினேன். மூன்றாண்டுகளுக்கு அது இருந்தால் இன்னும் விசேஷம். இந்த விஷயம்தான் அவர்கள் எடுத்த முடிவுக்கு காரணம் என நினைக்கிறேன். ("மூன்று ஆண்டுகளுக்காவது உனது இந்தப் படுத்தலிலிருந்து தப்பிக்கவே அவர்கள் இவ்வாறு செய்திருக்க வேண்டும்" எனக் கூறுவது முரளி மனோஹர்)

இரண்டு நாட்களுக்கு முன்னால் திடீரென எனது Google talk பலூனிலிருந்து இத்தலைவாசலிலிருந்து வந்த மின்னஞ்சல் பற்றிய அறிவிப்பு மேலே எழுந்தது. எனது உறுப்பாண்மை வரும் ஜூலை திங்கள் 13-ஆம் தேதியிலிருந்து அடுத்த மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அச்செய்தி அறிவித்தது. இச்செய்தி வந்ததுமே நான் அதை என் நண்பர் மா.சிவகுமார் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். தொலைபேசியிலேயே அவரது மகிழ்ச்சியை போன முறை போலவே இப்போதும் என்னால் உணர முடிந்தது.

இந்த இடுகையை நான் இங்கு பதிவு செய்வதன் நோக்கம் இன்னும் ஒன்று இருக்கிறது. அதாவது நமக்கு வேண்டியதை நாம்தான் கேட்டு பெற வேண்டும். விடாது முயற்சி செய்ய வேண்டும். அதே சமயம் நாம் யாரிடம் கேட்கிறோமோ அவர்களுக்கு நமது கோரிக்கையை நிறைவேற்றுவதால் அவர்களுக்கு என்ன பலன் என்பதையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என டேல் கார்னகி கூறியது திரும்பத் திரும்ப உறுதிபடுத்தப்படுகிறது. "கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்" என்று நான் சமீபத்தில் அறுபதுகளில் கேட்ட பாடலும் நினைவுக்கு வருகிறது. நம்மில் பலர் கேட்கக் கூச்சப்பட்டுக் கொண்டு பேசாமல் இருக்கிறோம். அது தவறு. நமகு தேவையானால் நாம்தான் கேட்க வேண்டும். ஆனால் எங்கே யாரிடம் எப்படி விஷயத்தைக் கொண்டுச் செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். கடிதம் எழுதும்போது உணர்ச்சி வசப்படாமல், யாரையும் மனம் நோகாமல் நம் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். கேட்டால் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். கேட்காவிட்டால் நிச்சயமாகக் கிடைக்காது. அப்படிக் கிடைப்பது எல்லாம் அம்புலிமாமா கதைகளில்தான் சாத்தியம்.

இத்தருணத்தில் தமிழில் நான் எழுத தூண்டுகோலாக இருந்த தமிழ்மணத்துக்கும் என் நன்றிகள் உரித்தாகும். தமிழ் வலைப்பூக்கள் மூலம் பல அரிய நண்பர்களை பெற்றுள்ளேன். எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்த அவர்களுக்கும் மிக்க நன்றி. இன்னும் தமிழ்மணத்திலேயே இருந்து படுத்துவேன் என்றும் கூறி வைக்கிறேன். (கிழிஞ்சுது கிருஷ்ணகிரி - முரளி மனோஹர்).

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/20/2008

டோண்டு பதில்கள் - 20.06.2008

மக்கள் குரல்:
1. கோமணகிருஷ்னன் போன்ற சிலர் தொடர்ந்து இந்துமத எதிர்ப்பாய் கருத்துக்களை உதிர்த்த போதிலும் அக்கும்பலின் தலைவர் பிறந்த நாளில் அவருடைய இல்லத்துக்கு அருகேயுள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் அவர் வீட்டு அம்மாள் உபயத்தில் சிறப்பு பூஜைகள் குறித்து உமது கருத்து என்ன?
பதில்: யாரை குறிப்பிடுகிறீர்கள்? கருணாநிதி அவர்களையா? அது அவரது வீட்டம்மாவின் சொந்த கருத்து, தான் ஒன்றும் செய்வதற்கில்லை எனக் கூறுவார் அவர்.
2. பகுத்தறிவு பார்ப்பன/இந்துமத எதிர்ப்பு எனப் பக்கம் பக்கமாய் பதிவு போடும் பதிவர்கள் கூட வீட்டு விசேஷங்களூக்கு புரோகிதர்களை அழைப்பதும், தமது பொண்டாட்டி பிள்ளை அல்லது அம்மாவை கோவிலுக்கு கூட்டிப் போவதும் ஏன்? உபதேசம் ஊருக்கு மட்டும்தானா?இவர்கள் ஏன் கேள்வி கேட்டால் வீட்டுப் பெண்கள் முந்தானைக்குள் ஒளிந்து கொள்கின்றனர். இவர்கள் வீட்டுப் பெண்கள் கொண்ட கருத்துரிமை மற்றவருக்குகில்லையா?
பதில்: அவர்கள் சொல்ல வந்ததை சொல்லிவிட்டு போகிறார்கள். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் நீங்கள் ஏன் அவர்கள் சொல்வதை பொருட்படுத்த வேண்டும்? உங்களுக்கு சரி என்று தோன்றுவதை செய்யுங்கள். ஆனால் ஒன்று. எல்லோருக்குமே உள்ளுக்குள் பயம் உண்டு. எதற்கும் இருக்கட்டும் என்று வீட்டுப் பெண்கள் கோவிலுக்கு போவதை கண்டுகொள்ளாமல் விடுகிறார்கள். தங்களுக்காக இல்லாவிட்டாலும் தங்கள் மனைவியருக்காகவாவது கடவுள் தம்மை பாதுகாப்பார் என நம்புகிறார்கள் போலும். பார்க்க "பாளையத்தம்மன்", "தாலி காத்த அம்மன்" ஆகிய காவியங்களை. :))))))
3. இந்தியா போக்ரானில் அணுவெடிப்பு சோதனை நடத்திய போது அதை எதிர்த்த கம்யூனிஸ்ட் கும்பல் இப்போது அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் அணுவெடிப்பு சோதனை உரிமை போய்விடும் எனப் புலம்புவது ஏன்?
பதில்: சீனாவின் நலனுக்கு எதிராக எதுவும் நடக்கலாகாது என்று அந்த (சீன) தேச பக்தர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
4. பெருந்தலைவர் மாதிரி மீண்டும் ஒரு தலைவர் தமிழகத்துக்கு கிடைப்பாரா? அப்படி கிடைத்தாலும் மக்கள் அவருக்கு ஓட்டுப் போடுவார்களா?
பதில்: ஏன் கிடைக்கக் கூடாது? வந்தால் நிச்சயம் ஓட்டு போடுவார்கள். குஜராத் உதாரணமே சாட்சி. லஞ்ச ஊழல் இல்லாத மோடியின் வெற்றியை மறந்து விட்டீர்களா?
5. சீனாவில் தோன்றிய நிலநடுக்கத்துக்கு காரணம் சைனா செய்யும் அட்டூழியம், சைனாவின் 'கர்மா' எனச் சொன்ன ஸ்ரன் ஸ்டோன் கருத்து பற்றி...
பதில்: அப்பட்டமான உளறல். இருண்ட நூற்றாண்டுகள் எனப்படும் காலக் கட்டத்தில் ஐரோப்பாவில் இம்மாதிரி பல கோஷ்டிகள் சொல்லி திரிந்தன. பூகம்பம் வெள்ளம் ஆகியவை ஏற்பட்டால் உலகில் பாவம் அதிகரித்து விட்டது என கதை கட்டி பாவிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்களை உயிருடன் எரித்தனர். என்ன இப்போதெல்லாம் எரிப்பதில்லை, ஆனால் அந்த முட்டாள்தனம் மட்டும் அப்படியே உள்ளது.

ரமணாஸ்திரம்:
1. தற்சமயநிலவரப்படி தமிழ‌கத்தில் லஞ்சம் லாவண்யம் கொடிகட்டி பறக்கும் துறைகளை வரிசை படுத்தவும்(வருமான அடிப்படையில்) rto, taluk office, sub registrar office, pwd, local administration, highways, taluk supply office, education dept, police dept,etc
பதில்: ஆளை விடுங்கள். இந்த விஷயத்தில் அவற்றுக்குள் பயங்கர போட்டி நிலவுவதாக ஒரு முக்கிய அதிகாரி காசு பெற்று கொண்டு செய்தி கூறினார்.
2. நேர்மையற்ற தன்மைக்கு நமது மக்களூம் அதிகாரிகளூம் பழகி கொண்டார்கள் போல் உள்ளதே?
பதில்: திடீரென ரயில் பிரயாணம் மேற்கொள்ளும் பட்சத்தில் டிடிஆரிடம் துட்டு தள்ளி பெர்த் பிடிப்பீர்களா மாட்டீர்களா என்பதை முதலில் கூறுங்கள்.
3. அரசியல் வாதிகளுக்கு ஏதிராக வருமானத்துக்கு மீறிய சொத்து குவிப்பு வழக்கு போல் இந்த அதிகாரிகளை வளைக்க ஏதாவது வழிஉண்டா?
பதில்: உண்டு, ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது? சாதாரணமாக வாங்கிய லஞ்சப் பணத்துக்கு உண்மையாக இருந்து காரியம் செய்து கொடுத்தால் யாரும் புகார் செய்வதில்லை. அதிலும் ஏமாற்றினால்தான் இம்மாதிரி பிரச்சினை வருகிறது.
4. அழகிரி &‍தயாநிதி கூட்டணி ‍மாறன் மக‌ன்களின் வியாபாரத்தை ஒரு வழிபண்ணிவிடுவார்கள் போலிருக்கிறதே? "இது தான் தெய்வ தண்டனையா" (முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்).
பதில்: சன் குழுமத்தின் நிகழ்ச்சிகளும் நன்றாக இருப்பதால் அவர்கள் தப்பித்தனர். ஆனால் கலைஞர் டிவி காப்பியடிப்பதைத் தவிர வேறு என்ன செய்கிறது? திமுக அடுத்த தேர்தலில் தோற்றால் அதுவும் காலிதானே.
5. பா.ம.க. தலைவரின் ஆட்டம் ஓவர் போல் உள்ளதே "நுணலும் தன் வாயால் கெடும்"
பதில்: அப்படித்தான் தோன்றுகிறது.

அனானி (13.06.2008 இரவு 09.11-க்கு கேட்டவர்):
1. What will be the fate of anbumanl ramadoss after one week?
பதில்: காத்திருந்து பார்ப்போம். அவர் மந்திரி பதவிக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை என்றுதான் தோன்றுகிறது.
2. On what grounds pmk leader dr.ramadoss has decided, to part with dmk in Tamil Nadu?
பதில்: முதலில் மிரட்டலை பயன்படுத்தி அடுத்த தேர்தலில் அதிக சீட்டுக்கு வழிவகுத்து கொள்ள நினைத்திருப்பார் போல. அது சற்று ஓவராக நடந்து விட்டது. நிலைமை இன்னும் தெளியவில்லை.
3. It seems admk is also not interested to have allaiance with this "kaariyakkaarrar"
பதில்: ஜெயலலிதா என்ன செய்வார் என்பது யாருக்குமே தெரியாது. முக்கியமாக அவருக்கே தான் செய்ய நினைப்பது இன்னும் தெளிவாகவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
4. It is learnt anbumani ramadoss also become " nalla aruvadai mannaR" using power in centre?
பதில்: பதவி வாங்கியதே வசூலுக்குத்தானே. பின்னே மக்கள் சேவை எனத் தவறாக எண்ணினீர்களா?
5. PMK leader Maruththuvar Aiya innumoRu vaikOvaa (vai.Gopalasamy,mdmk) aavaaraa?
பதில்: வைக்கோ திமுகாவையே தள்ளிக் கொண்டு போக முயற்சித்தார், ராமதாசு அவர்களுக்கு அந்தப் பேராசை எல்லாம் கிடையாது. இந்த மடம் போனால் சந்தைமடம் என வாழ்வது அவர் கட்சி.

எழில் அரசு:
1. சென்னை, மதுரை, திருச்சி, கோயம்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு மாநகராட்சிகளை போல் நகராட்சி பகுதிகளிலும் ஏன் சிறு கிராமங்களில் கூட காலிமனை விலை, வீட்டு வாடகை இவைகளின் அதீத உய‌ர்வு நடுத்தர மக்களை (lower middle class families - no software engineer sons) பிளாட்பார வாசிகளாய் மாற்றிவிடும்போல் இருக்கிறதே!
பதில்: பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்த்துள்ளன என்பதுதான் உண்மை. அப்போது சில மாறுதல்கள் வந்தே தீரும். அவற்றைத் தவிர்க்க இயலாது.
2. இந்த விபரீத உயர்வுக்கு பாகிஸ்தானின் கள்ள் நோட்டு பணப் புழக்கம் ஒரு காரணம் என்பது உண்மையா?
பதில்: அப்படி வேறு கதை போகிறதாமா?
3. நாடு பிடிக்க‌ மன்ன‌ர் ஆட்சிகால‌த்தில் ந‌ட‌ந்தது போல், போலி ஆவ‌ண‌ம் த‌யாரித்து பிற‌ர் நில‌ங்களை விற்கும் போக்கு கூடுகிற‌தே?
பதில்: இது பல காலமாக இருந்து வருவதுதானே.
4. துணை சார்ப‌திவாள‌ர் அதிகாரியின் சொந்த‌ சொத்துக்க‌ளை ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌வர் அவ‌ர‌து அலுவ‌ல‌க‌த்தில் விற்க‌வ‌ந்தால் அதையாவ‌து அவர் த‌டுப்பாரா? (யார் சொத்தை யார் விற்றால் என்ன‌ என‌து இன்றை‌ய‌ வ‌ருமான‌ம் குறைய‌க் கூடாது. ஒரு நாளைக்கு குறைந்த‌து ரூபாய் 500 முத‌ல் 1000 வ‌ரை கல்லாக் க‌ட்டிவிடுவார்.அதுவும் கூடிக் கொள்ளைய‌டி பின் ப‌ங்கு பிரி தத்துவ‌ம் வேறு.
பதில்: அம்மாதிரி நிஜமாகவே நடந்தால் யாரும் அனுதாபம் கூட காட்ட மாட்டார்கள்.
5. ஆடாத‌ ஆட்ட‌ம் போடும் இந்த ஊழல் அதிகாரிக‌ளுக்கு, "ஆடி அட்ங்கும் வாழ்க்கையடா, ‍ஆற‌டி நிலந்தான் சொந்த‌மடா" என்னும் க‌விய‌ரிசின் வ‌ரிக‌ள் புரியுமா?
பதில்: இறக்கும் தருவாயில் புரியும். அப்போது டூ லேட்.‍

அனானி (14.06.2008 இரவு 8.08-க்கு கேட்டவர்):
1. பஸ்ஸிலே கூட்டம், கடையில‌ கூட்டம், சினிமா தியேட்டர்ல கூட்டம். குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றி எனச் சொன்னது என்னவாயிற்று?
பதில்: குடும்பக் கட்டுப்பாட்டின் மேல் இவ்வளவு எதிர்பார்ப்பா?
2. இப்படியே போனால் மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் சாதாரண பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு வரும் போலிருக்கிறதே?
பதில்: எல்லாம் விற்று போனால் உற்பத்தி தானே அதிகரிக்கும் அல்லவா, அதுவும் நல்லதுதானே.
3. வயதானவர்கள் தங்கள் வீடு அன்றாட (வீடு சுத்தம் செய்தல்) வேலைக‌ளை செய்வதற்கு ஆட்கள் கிடைக்காமல் சிரமம்படும் போக்கு அதிகமாகிறது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் வேலைக்காரர்களுக்கு திருப்தி இல்லாச் சூழ்நிலை எங்கு கொண்டுபோய் விடும்?
பதில்: ஆலைகளில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்போது வீட்டு வேலைகளுக்கு ஆள் கிடைக்காது போவது புரிந்து கொள்ளக் கூடியதே. தேவையானால் அதற்கும் மேல் அதிக சம்பளம் கொடுத்து வைத்து கொள்ள வேண்டியதுதான்.
4. வரும் காலத்தில் கொத்தனார், சித்தாள், ஆசாரி, சுமை தூக்குவேலை,தோட்ட வேலை இவைகளுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரை கொம்பாகி விடும் போல் உள்ளதே. இவைகளுக்கு மாற்று ஏற்பாடு?
பதில்: என்ன புடலங்காய் மாற்று ஏற்பாடு? அந்த வேலைக்கானக் கூலியை உயர்த்தவேண்டியது காலத்தின் கட்டாயம்தானே. இது சம்பந்தமாக ஒரு அமெரிக்க ஜோக் படித்தேன். குழாய் ரிப்பேர் செய்பவர் ஒரு மருத்துவர் வீட்டில் வேலை முடிந்ததும் தனது பில்லை தர, மருத்துவர் பெருமூச்சு விட்டுக் கொண்டே கூறுகிறார். "என்ன செய்யறது. நான் ஒரு விசிட்டுக்கு வாங்கற ஃபீசை உட உங்களுக்கு அதிகம் தரவேண்டியிருக்கு". குழாய் ரிப்பேர்காரர் கூறுகிறார்: "நீங்க சொல்றது புரியறது சாட். நான் கூட முதல்ல மருத்துவரா இருந்த போது இதை பார்த்திருக்கேன்".

அனானி (15.06.2008 காலை 05.12-க்கு கேட்டவர்):
1. தசாவாதாரம் பார்த்தீர்களா? படம் எப்படி?
பதில்: பார்க்கவில்லை. என்னவோ பார்க்க வேண்டும் எனத் தோன்றவுஇல்லை. இத்தனைக்கும் எங்கள் வீட்டிலிருந்து சில நிமிட நடையில் இருக்கும் இரு ஏ.சி. தியேட்டர்களில் அது வெளியிடப்பட்டுள்ளது.
2. சுருக்கமான தங்கள் விமரிசனம்?
பதில்: விமரிசனம் ஏதும் இல்லை.
3. நாத்திக கருத்து ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை? பின் ஏன் அந்த களேபரம்?
பதில்: விளம்பரத்துக்காக தயாரிப்பாளர்களே கூட கேஸ் போட ஏற்பாடு செய்திருக்கலாம் என சில செய்திகள் உண்டு. இது ஒன்றும் முன்னால் நடக்காததில்லையே.
4. நீதிமன்றச் செலவும் மட்டும் 5 கோடியாம், தாங்குமா?
பதில்: தாங்கி விட்டது என்றுதான் தோன்றுகிறது. மீரான் தெரு திரை வியாபாரிகள் சரியான கணக்கு சொல்வார்கள்.
5. நடிப்பில் நடிகர் திலகத்தை மிஞ்சிவிட்டாரா?
பதில்: இருவருமே அவரவர் அளவில் க்ரேட். ஒப்பிடுதல் சரியாக வராது.
6. 10-ல் எதில் க‌மல் சூப்ப‌ர்?
பதில்: நான் கேள்விப்பட்டவரை நம்பிதான் எனக்கு பிடித்தவர்.
7. உல‌கநாய‌க‌ன் ப‌ட‌ம் த‌மிழ் திரையுல‌கை உல‌க‌ த‌ர‌த்துக்கு கொண்டு செல்கிற‌து த‌ங்க‌ள் க‌ருத்து?
பதில்: தொழில் நுட்ப விஷயங்களில் பெரிய வெற்றி எனக் கேள்விப்படுகிறேன்.
8. வ‌ழக்க‌ம் போல் ஆடைக் குறைப்பு, ப‌ண்பாடு மிஞ்சும் ஆட‌ல்க‌ள் தூள் கிள‌ப்புதா?
பதில்: கமல் படங்களில் அவை இல்லாமலா?
9. இந்திய‌ன், விருமாண்டி வ‌ரிசையில் க‌ம‌லின் திரை வாழ்வில் ஒரு மைல் க‌ல்லா?
பதில்: நிச்சயமாக.
10. அடுத்து 21 ம் நூற்றாண்டின் சிவாஜி க‌மலின் .....மர்ம‌ யோகி க‌ம‌லை இன்னுமொரு M.G.R ஆக‌ ஆக்குமா?
பதில்: இன்னுமொரு M.G.R. ஆவதில் என்ன பெருமை? நடிப்பு விஷயம் என்று வந்து விட்டபின் இன்னொரு சிவாஜி என்று சொன்னாலாவது அர்த்தம் உண்டு.

தென்காசி:
1. நெல்லை மாவட்டதிலுள்ள பிரசித்திபெற்ற அருவிகளில் நீராடிய அனுபவம் உண்டா?
பதில்: இல்லை
2. திருக்குற்றால அருவிகளின் தங்களை மெய்சிலிர்க்க வைத்த அருவி எது?
பதில்: எந்த அருவியிலும் குளித்ததில்லை.
3. பிரமுகர்களுக்கான பழத்தோட்ட அருவி சென்றதுண்டா?
பதில்: ஆளை விடுங்கள்
4. காரையார் அணைக்க மேலே உள்ள "பம்பாய்" திரைபட புகழ் ( சின்ன சின்ன ஆசை) பாணதீர்த்த அருவி பார்த்த்ருக்கிறிர்களா?
பதில்: பம்பாய் படத்தில் பார்த்ததோடு சரி.
5. சென்னை வெயில் பழகி விட்டு, மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் வீசும் மென்மையான தென்றல் காற்றின் அனுபவம் எப்படி?
பதில்: அனுபவித்ததில்லை.

ரமணா:
1. பொதுத்துறை பெட்ரோல் பங்க்களில் திட்டம் போட்டு "பிரிமியம் பெட்ரோல்" தான் விற்கின்றனர்? இது பகல் கொள்ளை இல்லையா?
பதில்: இதில் உள்ள எல்லா விஷயங்களுமே வெளியில் வந்ததாகத் தெரியவில்லை. மொத்தத்தில் சாதாரண பெட்ரோலில் லாபம் இல்லையென்றாலோ அல்லது நஷ்டம்தான் வரும் என்றாலோ வியாபாரி அதை ஏன் கொள்முதல் செய்யப் போகிறார்?
2. அவர்கள் விற்பது சாதாரணமா அல்லது செறிவூட்டிய ஸ்பீடா எப்படி தெரிந்து கொள்வது?
பதில்: அந்த கஷ்டங்களை எல்லாம் 'எனது கார்களின்' ஓட்டுநர்கள் பார்த்து கொள்வார்கள்.
3. எல்லா பெட்ரோல் பங்க்களிலும் அளவு குறைகிறதே? ஒரு லிட்டர் பெட்ரொலுக்கு 50 லிருந்து 100 மில்லி ஆட்டை போட்டு விடுகிறார்களே?
பதில்: சற்று விழ்ப்புடன் இருந்தால் இதைத் தவிர்க்க இயலும். முதலில் பூஜ்யம் செட்டிங்கை சரி பார்க்க வேண்டும். பம்பை நிறுத்தியவுடன் குழாயில் உள்ள அத்தனை பெட்ரோலும் வருகிறதா எனப் பார்க்க வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் அதை பங்க்-காரரிடம் கூறத் தயங்கக் கூடாது. குறைந்த பட்சம் உங்களை ஏமாற்றுவதை அவர்கள் தவிர்ப்பார்கள்.
4. சில புத்திசாலிகள் கலப்படம் வேறு செய்து விடுகிறார்கள்?
பதில்: இந்த விஷயத்தையும் 'எனது கார்களின்" டிரைவர்கள் கவனித்து கொள்கிறார்கள்.
5. பெட்ரோல் பங்க்களில் பெரிய யோக்கிய சிகாமணி மாதிரி நுகர்வோர் நலன் காப்பது போல் எழுதி வைத்துள்ளதை பார்த்தால்? படிப்பது ராமாயணம் இடிப்பது?
பதில்: அம்மாதிரி போலித்தனம் வாழ்வின் எல்லா தரப்பிலும்தான் உள்ளது. ஊராரை தமிழில் படிக்கச் சொல்லும் தலைவர்களின் குழந்தைகள் படிப்பது கான்வெண்டில். சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்கு கேடு, குடி குடியை கெடுக்கும் என்பனவும் அதில் அடங்கியதே.
6. இடதுசாரிக் கட்சிகளின் பெட்ரோல் எதிர்ப்பு ஆர்பாட்டம்,ஹர்த்தால், அனல் பறக்கும் பேட்டிகள் எல்லாம் அவ்வளவுதானா? சாயம் வெளுக்கிறதா?
பதில்: இடதுசாரி கட்சிகளும் இரு மாநிலங்களில் ஆளும் கட்சிகளே என்பதை மறந்தீர்களா?
7.அடுத்த விலை உயர்வு தவிர்க்க முடியாது என்பதை இப்போதே காங்கிரஸ் சொல்ல ஆரம்பித்துவிட்டதே?
பதில்: எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் விலைவாசியை தவிர்க்க முடியாதுதான். ஆனால் ஆட்சி சரியாக செய்ய வக்கில்லாது இலவச டி.வி. வர்ஜாவர்ஜமில்லாத கடன் தள்ளுபடிகள் ஆகியவற்றையாவது தவிர்த்தால் அவர்களை நானிலத்தவரும் வாழ்த்துவர்.
8. வழக்கமாக விலையேற்றிய பிறகு கொஞ்சம் விலை குறைப்பு நாடகம் உண்டே? குளிர் விட்டு போச்சா?
பதில்: கேஸ் விலை குறைந்ததே.
9. மத்திய அரசைக் குறைகூறும் எதிர்கட்சிகளின் அரசுகள் விற்பனை வரியை குறைக்க தயக்கம் காட்டும் இரட்டை வேஷம்? (சில அரசுகளின் கருணை பரவாயில்லை)
பதில்: மேலே உள்ள கேள்வி ஒன்றில் சொன்ன ப்தில்தான் இங்கும்.
10. எதிலும் சட்டங்களை தனக்கு சாதகமாக வளைத்து உலக கோடீஸ்வரா வரிசையில் நம்பர் 1 க்கு ஓடும் அம்பானியார் இதில் தோற்று பங்க்களை மூடி எதற்கு பாவ்லா காடுகிறார்? பெட்ரோல் விலை கட்டுப்பபாட்டிலிருந்து விடுதலை பெற முஸ்தீபா? ஆதாயம் இல்லாமல் அண்ணாச்சி ஆத்தோட போகமாட்டாரே?
இந்த விஷயத்தில் அம்பானியை குற்றம் சொல்ல இயலாது. ஒன்று சந்தையை அதன்போக்கில் விடவேண்டு, இல்லை சலுகைகள் தந்தால் எல்லோருக்கும் தரவேண்டும். அரசு நிறுவனகளுக்கு மட்டும் அல்ல. இந்த விஷயத்தில் அரசு ஆடுவது அழுகினி ஆட்டம்.
பாண்டிய நக்கீரன்:
1. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவையெல்லாம் அகராதியில் மட்டுமெ பார்க்கமுடியும் என பிரபல பத்திரிக்கையாளர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டது பற்றி தங்கள் கருத்து?
பதில்: இம்மாதிரி பலான விஷயங்கள் மனித நாகரிகங்கள் ஆரம்பித்த போதே துவங்கி விட்டன. இப்போது வெளிப்படையாக நடக்கிறது அவ்வளவே. புராணக் கதை ஒன்று உண்டு. ஒரு முனிவர் ஒரு பெண்ணை தன் கமண்டலத்தினுள் சிறை வைத்து தேவைப்பட்டபோது அவளை வெளியில் கொணர்ந்து அவளுடன் சுகித்தார். அவர் அந்தண்டை போனதும் அப்பெண் தன் மோதிரத்தில் ஒளித்து வைத்திருந்த தன் கள்ள புருஷனை வெளியில் வரவழைத்து அவனுடன் சந்தோஷமாக இருந்தால். இப்போது முனிவர் மேல் அனுதாபப்படுவீர்களா என்பதை மறைக்காமல் கூறவும், நன்றி.
2. முன்பு அரசல் புரசலா, மூத்த அரசியல் வாதிகளையும்,அதிகாரிகளையும்,பிர துறை வல்லுனர்களையும் குஷிபடுத்தி தங்கள் காரியத்தை சாதிப்பர் எனும் சொல்வது இப்போது பரவலாக்கப்பட்டு வருவது போல் உள்ளதே?
பதில்: மேலே சொன்ன பதில்தான் இங்கும்.
3. மென்பொருள் வல்லுனர்கள் மத்தியில் இதெல்லாம் (சோமபானம் சுராபானம் அருந்தி சொர்க்கபுரி வாழ்க்கை (free sex) சுசூபீயாக (just like that) இருப்பதாக செய்திகள் வலம் வருகிறதே? (please refer this week India today tamil version)
பதில்: வாய்ப்புகள் உள்ளன, அனுபவிக்கிறார்கள். மற்றவர்களுக்கு இல்லை அவர்களுக்கு எரிகிறது. முடிந்தால், வக்கிருந்தால் அவர்களும் மென்பொருள் நிபுணர்கள் ஆகவேண்டியதுதானே.
4. கொலையும் செய்வாள் பத்தினி என்பது வேறு திக்கில் பயணிப்பது போல் உள்ளதே? சுகம் சுகம் எதைக் கொடுத்தாவது, யாரைக் கொன்றாவது, எதைச் செய்தாவது சுகம், சுகம், சுகம் ..... இன்பசுகம்
பதில்: கொலையும் செய்வாள் பத்தினி என்பது பல நூற்றண்டுகளாகத் தெரிந்த உண்மை. இப்போது என்ன அதற்கு? அழகானப் பெண் மனைவியாக இருந்தாலும் குரங்கு மாதிரி வப்பாட்டி விரும்பும் ஆண்களுக்கு சரியான பதில்.
5. இதுவரை உப்பைத் தின்ன ஆணாதிக்க வர்க்கம் தண்ணீர் குடிக்கிறதா? (வேணும்யா இந்த பயலுகளுக்கு, என்னா ஆட்டம் போட்டாங்க - என பெண்ணிய ஆதரவாளார்கள் சொல்வது ஏற்புடையதா)
பதில்: இது பற்றி எனது பதிவுகளைப் பார்க்கவும்.
6. பண்டைய காலத்தில் மனிதர்கள் கூட்டமாக வாழும் போது கூட்டத்தின் தலைவி பெண்தான் எனவும், அவள் விருப்பப்படும் ஆனோடு அன்றைய இரவைக் கழிக்கும் உரிமை கொடிகட்டி பறந்ததாகச் சொல்வார்கள். நாகரிகச் சுழற்சி இதிலுமா?
பதில்: யார் கொடி உச்சியில் பறக்கிறதோ அவர்கள் அதன் பலனை எடுத்து கொள்வார்கள்தானே.
7. 20 வருடங்களுக்கு முன்னால் விழாக்களில்,பொருட்காட்சி அரங்குகளில் நடனம் அடும் நடன மங்கையர், சினிமா நடிகைகள் உப்யோகித்த பளபள என டால் அடிக்கும் சமிக்கிகள் (காக்க பொன் போன்றது) இல்லாத சேலைகளே (hand-woven sarees with glittering substances fixed) இன்று இல்லாச் சூழ்நிலை? நாம் எங்கே போகிறோம்? (கறுப்பு பர்தாவில் கூட சமிக்கி டாலடிக்குது)
பதில்: பேஷனின் சுழற்சியே இது.
8. அந்தக் காலங்களில் o.s.o வே அது பெரிய விசயம் இப்போ free show ?(எல்லாரும் கேரளாவாய் மாறிட்டாங்க!) கலாச்சாரப் புரட்சியா?
பதில்: அப்படியே வைத்து கொள்வோமே.
9. கலாச்சார கட்டுப்பாடற்ற சுதந்திரம் உள்ள அமெரிக்காவில் குடும்ப முறையே அழிந்துள்ளதைப் பார்த்த பிறகாவது நாமும் கண்ணை திறந்து பள்ளத்தில் விழ முயலலாமா?
பதில்: அவரவர் பட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
10. பழைய நகைச்சுவை துணுக்கு your children and my children are playing with our children என்பதை வரலாறாக்காமல் (இதெல்லாம் வாழ்ககையில் ஜகஜம் அப்பா!) தடுக்கப்படுமா? பாரதியும், பாரதிதாசனும் கனவு கண்ட பெண்ணுரிமை வேறு இலக்கை நோக்கிச் செல்கிறதே?
பதில்: பாரதியே தன் மனைவியை மட்டம் தட்டி பேசியதாக பாரதி சினிமாவில் பார்த்தேன். பெண்ணுரிமை பேசிய பெரியாரே தனது முதல் மனைவி ஆணாதிக்கத்தை அப்படி விழுந்து விழுந்து ஆதரித்தபோது வாய்மூடி அதன் அனுகூலங்களை எடுத்து கொண்டது பற்றி அவரே கூறியுள்ளார். இதில் என்ன கனவு காண்பது எல்லாம் பாழாகப் போகிறது?

பாண்டிய நக்கீரன்:
1. 1952 லிருந்து 2008 வரை இருந்த/இருக்கும் தமிழக முதல்வர்களில் முதன்மையானவர் யார்? காரணம்?
பதில்: ராஜாஜி அவர்கள். அவரளவுக்கு கட்சியை ஆட்சியில் தலையிட இயலாதபடி பார்த்து கொண்ட முதல்வரை பார்ப்பது அரிது. கூடவே திறமையான நிர்வாகி. லஞ்ச ஊழல் குற்றங்கள் கிஞ்சித்தும் அண்டமுடியாத நிலையில் தன்னை வைத்திருந்தவர். அடுத்து காமராஜ் அவர்கள்.
2. அவர்களை திறமை, நிதி நிர்வாகம், மக்கள் நலம், நேர்மை இவைகளின் அடிப்படையில் தர வரிசைபடுத்தவும்.
பதில்: அதே வரிசைதான், ராஜாஜி, காமராஜ்.
3.யாருடைய காலத்தில் மக்கள் ஒரளவுக்கு சுபிட்சமாக இருந்தார்கள்?
பதில்: காமராஜ் காலத்தில் என்று கூறலாம். ராஜாஜி ஆட்சி புரிந்த காலம் சரியாக இரண்டாண்டுகளே. அவையும் மிகவும் பிரச்சினைக்குரிய ஆண்டுகள்.
4. அரசின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் ஆண்ட/ஆளும் பிற சக அமைச்சர்களில் (1952 டூ 2008) முதல், இரண்டாம், மூன்றாம் பரிசு யாருக்கு?
பதில்: எனக்கு தெரிந்த ஒரே உதாரணம் கக்கன் அவர்கள்தான். இதில் என்ன வரிசைப்படுத்துவது?
5. கட்சி வேறு ஆட்சி வேறு மக்கள் நலமே என் பணி என 100/100 மார்க் யாருக்கு? (முதல்வர்களில் முதல்வர் யார்?-பாரபட்சமற்ற போக்குடன்)
பதில்: ராஜாஜி 100/100, காமராஜ் 98/100 (ஏனெனில் கட்சியில் உள்ளவர்களை அணைத்து செல்லவும் அவர் முயன்றார். அதுவும் தேவைதான். ராஜாஜி அவர்களது ஆட்சி வீழ்ந்ததே அது இல்லாததால்தான்).
6. பதவியில் இருந்தாலும் சாதி இரண்டொழிய வேறில்லை என்று அனைவரையும் சமமாக பாவித்தவர்களில் சத்யவான் யார்?
பதில்: ராஜாஜி, காமராஜ்.
7. முதல்வராய் கோலோச்சி பின் மறைந்தும் மறையாமல் வாழ்பவர் யார்?
பதில்: ராஜாஜி, காமராஜ்
8.தமிழகம் யாருடைய காலத்தில் உண்மையான பொருளாதார வளர்ச்சியில் திளைத்தது?
பதில்: காமராஜ்.
9. பத்திரிக்கை சுதந்திரம் இருக்கிறது ஆனால் இல்லை. இந்த புண்ணியத்தை முதலில் தொடங்கி வைத்தது யார்?
பதில்: கருணாநிதி அவர்கள். ஆனால் அதை பிஎச்டி அளவுக்கு கொண்டு சென்றது ஜயலலிதாதான்.
10. அரசியல் கட்சிகளில் ஜாதி ஆதிக்கம் இருந்த போதும் முதல்வர்கள் தேர்வில் அது இருப்பதில்லயே? எப்படி?
பதில்: ஒரு ஜாதிக்கு மட்டும் விசுவாசம் காட்டுபவர்கள் முதல்வர் பதவிக்கு லாயக்கற்றவர்கள். ஏஎனெனில் மாநில அளவில் ஆதரவு வேண்டுமென்றால் எல்லா ஜாதியினரிடமிருந்துதான் அதை பெற முடியும்.

ரமணா:
1. வாடகை ஏறிபோச்சு, விலைவாசி உயர்ந்து போச்சு, பணவீக்கம் பெருத்துப் போச்சு, நடுத்தர வர்க்கத்தின் எதிர்காலம் காற்றில் கரைஞ்சு போகுமா?
பதில்: செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அது முடியாவிட்டால் வருமானத்தை அதிகரித்து கொள்ள வேண்டும். வேறு வழிகளில்லை.
2. அரசின் மிரட்டல்கள் எல்லாம் வியாபாரக் கூட்டணிகளுடன் இனி எடுபடுமா?
பதில்: வியாபாரம் என வந்து விட்டால் கொடுக்கல் வாங்கல்கள் இல்லாமல் போகாது.
3. பெட்ரோல் விற்பனையில் வரி என்ற பெயரால் நடக்கும் கொள்ளை நாடு தாங்குமா? அடுக்குமா?
பதில்: அரசுக்கு வருமானமும் தேவைதானே. பின் எப்படி அரசு நடத்துவது? வரியில்லாமல் பெட்ரோல் விலை ரொம்ப குறைந்தால் அதன் உபயோகம் அதிகமாகி பிற்காலத்தில் பெட்ரோல் வறட்சி ஏற்படலாம், சுற்றுப்புறச் சூழலும் பாதிக்கப்படலாம் அல்லவா?
4. அமெரிக்காவுக்கு இந்தியா எடுபிடியாகுமா?
பதில்: ஏன் அமெரிக்கா இந்தியாவின் எடுபடி ஆகக்கூடாதா?
5. புதிய பொருளாதாரக் கொள்கை "புலி வால் புடித்த நாயரின் கதை போலவா"?
பதில்: ஆம்.

பாண்டிய நக்கீரன்:
1. பா.ம.க உறவு முறிப்பு தி.மு,காவின் முடிவு அ)சரியா ஆ)தவறா
பதில்: சரியோ தவறோ, காலத்தின் கட்டாயம்.
2. லாபம் யாருக்கு?(இருவரில்)
பதில்: யார் அடுத்த தேர்தலில் இதனால் வெற்றி பெருகிறாரோ அவருக்குத்தான் லாபம்
3. லாபம் யாருக்கு (இருவரைத் தவிர)
பதில்: விஜயகாந்துக்கு
4. பா.ம.க உடையுமா?
பதில்: அதில் உள்ள தலித்துகள் வேண்டுமானால் போகலாம், வன்னியர்கள் போக மாட்டார்கள் என நினைக்கிறேன்.
5. தி.மு.க வின் செல்வாக்கு சரியுமா வன்னியர் பகுதிகளில்?
பதில்: சரியாது என திமுகவில் உள்ள வன்னியர்கள் கருதுகின்றனர்.
6. ராஜஸ்தான் போல் பழங்குடியினராய் மாற்ற பா.மா.க போராட்டம் தொடங்குமா?
பதில்: அப்படி நடந்தால் தலித்துகள் அவர்களுக்கு சமமாக ஆகிவிடுவார்களே. ஆகவே அதை கேட்க மாட்டார்கள்.
7. காடுவெட்டி மீது அரசு..?
பதில்: வழக்கு போடாது என நினைக்கிறேன். கூட்டணியை வெட்ட ஒரு சாக்கு தேவைப்பட்டது. அதற்கு குரு பேசியது உதவியது, அவ்வளவே.
8. உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்ட இது எப்படி இருக்கு?
பதில்: சொன்னாலும் சொல்லுவாங்க.
9. அன்புமணி பாவமில்லையா?
பதில்: காடுவெட்டி குருவுக்கு மருத்துவர் அளித்த ஆதரவு அவருக்கு பிடிக்கவில்லை எனப் படித்தேன்.
10. அவர் திட்டமெல்லாம் கோவிந்தாவா?
பதில்: என்ன திட்டம்?
11. ரயில்வே வேலு அண்ணாச்சி கதை?
பதில்: அன்புமணியே பறக்கச்ச வேலு என்ன உசத்தி?
12. மக்கள் தொலைக்காட்சி மூடுவிழாவா? (அரசின் நெருக்கடி வருமே)
பதில்: வராது என நினைக்கிறேன்.
13. ராமதாசுக்கு 7.5 சனியா?
பதில்: ஏன், அவரைப் பார்த்தால் அவ்வளவு பாவமாகவா இருக்கிறது?
14. விஜய்காந்த் எந்த பக்கம் சாய்வார்?
பதில்: தனக்கு சாதகமான பக்கம்.
15. திருமால்வளவன் மீண்டும் அம்மா பக்கமா?
பதில்: தற்சமயம் இருக்குமிடத்திலேயே இருப்பார்.
16. காங்கிரஸ் வைகோவை கை கழுவியது போல் ராமதாசை..?
பதில்: ராமதாசின் ஆதரவு அடித்தளம் இன்னும் அகலமானது. ஆகவே சட்டென்று அப்படி நடக்காது என்றுதான் நினைக்கிறேன்.
17. ராமர் பாலம் இடிப்பு விவகாரம் தி.மு.க கூட்டணியை சிதைக்க..?
பதில்: ராமர் பாலம் இதில் காரணியாக இல்லை. இரண்டு குடும்பங்களின் நலன்கள் மாறுபட்டு போயின.
18. விடுதலைப்புலி விவகாரம் இனி சூடு பிடிக்குமா?
பதில்: அதனால் அரசியல் லாபம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே

19. ராமதாசு, வைகோ, கம்யுனிஸ்டுகள் கூட்டணி சாத்தியமா?
பதில்: அவர்களிலேயே அதை யாருமே அதை விரும்ப மாட்டார்களே.
20.ஆப்பை பிடிங்கிய குரங்கார் யார்?
பதில்: ராமதாசு என்கிறீர்களா?

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/18/2008

இலக்கில்லாத பாதை வெற்றிக்கு இட்டுச் செல்கிறது

சுவாமிநாதன் அங்கிலேஷ்வர் ஐயர் எழுதிய Path to nowhere leads to success என்னும் கட்டுரையை நண்பர் சந்திரசேகரன் (பொருளாதார மேதை ஹேயக்கின் விசிறி) அனுப்பியுள்ளார். அவருக்கு முதற்கண் நன்றி. இனி வரும் வரிகளில் நான் என்று வருவது சுவாமிநாதனை குறிக்கும்.

1991-ல் பொருளாதார சீர்திருத்தம் தொடங்கியபோது நான் தாராளமயமாக்கத்தின் தீவிர ஆதரவாளன். இது பற்றி ஒரு அரசியல்வாதியிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் என்னை நம்பாமல் கேட்டார், "இதனால் எந்தெந்த துறைகளுக்கு லாபம்" என்று. தெரியாது என்றதும், இலக்கிலாத பாதையில் போய்த்தான் தீர வேண்டுமா என கேலியாகக் கேட்டார்.

இப்போது எல்லாம் தெளிவாகவே உள்ளன. பல ஆண்டுகளாக ஆண்டுக்கு சராசரி 9% பொருளாதார முன்னேற்றம் இதே இலக்கில்லாத பாதையில் சென்றுதான் வந்துள்ளது. சீர்திருத்தங்கள் இருந்த பாதைகளை கிழித்தெறிந்து லட்சக்கணக்கான புதிய பாதைகளை அமைத்துள்ளன. இதையெல்லாம் எந்தத் திட்டநிபுணரும் கனவுகூட கண்டிருக்க இயலாது.

1991-க்கு முன்னால் கணினி மென்பொருளில் நாம் பெறவிருக்கும் முன்னேற்றத்தை யாரேனும் ஊகித்திருக்க இயலுமா? அதேதான் வெளியிலிருந்து சேவைகளை பெறுதல் (BPO), R&D, அல்லது மூளையை கசக்கி உற்பத்தி செய்தல் ஆகியவற்றுக்கும் பொருந்தும். கட்டுப்பாடுகளை நீக்கியதில் பல லட்சக்கணக்கான புதிய வாய்ப்புகள் வந்தன, புத்திசாலித்தனமாக ரிஸ்க் எடுப்பவர்கள் மீதியைப் பார்த்து கொண்டார்கள்.

தற்சமயம் கணினி மென்பொருள் கோலோச்சும் இந்தியாவில்தான் எண்பதுகளில் ஒரு தொலைபேசி தொடர்புக்கு இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது, ஒரு கணினியை இறக்குமதி செய்ய உரிமம் தேவைப்பட்டது என இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி கூறுகிறார். கணினிமயமாக்கலால் வேலைகள் பாதிக்கப்படும் என அரசியல்வாதிகளும், தொழிற்சங்க தலைவர்களும் கொடிபிடித்தனர். தாராளமயமாக்கம் ஆரம்பித்து இரண்டு கழித்துக் கூட 1993-ல் கையெழுத்திடப்பட்ட தொழிலாளர் ஒப்பந்தங்களில் கிளைகளில் கணினிமயமாக்கம் ஆண்டுக்கு 0.5-1% தான் அனுமதிக்கப்பட்டது. அதன்படி முழுமையான கணினிமயமாக்கத்திற்கு 200 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும்!

கணினிமயமாக்கம் உள்ளூரில் தாமதப்பட்டதால் இங்குள்ள மென்பொறியாளர்கள் தத்தம் திறமைகளை வள்ர்த்து கொள்ள இயலவில்லை என்பது நிஜம். இருப்பினும் அவர்கள் அமெரிக்காவுக்கு சென்று கொழித்தனர். நம்மவர் மென்பொருள் திறமை சிலிக்கன் பள்ளத்தாக்கில் கூர்மையடைந்தது. இதையெல்லாம் எந்த திட்ட நிபுணரும் முன்னமேயே ஊகித்திருக்க இயலாதுதான். வெறுமனே தொழில்முறை முயற்சிகளும் உலகத் தகவல் தொடர்பில் வந்த புரட்சியும் இது எல்லாவற்றையும் சாத்தியமாக்கின.

அதேபோல BPO இந்தளவுக்கு விரிவாக்கம் பெறும் என 1990-ல் யாருமே கற்பனை செய்திருக்க இயலாது. General Electric முதலில் இதை ஆரம்பித்து வைத்தது. பிறகு பன்னாட்டு கம்பெனிகள் க்யூவில் வந்தன.

துவக்கத்தில் மேல்நாட்டு நிறுவனங்கள் நம்மவர்களிடம் குறைந்த தொழில்நுட்பவேலைகளையே தர எண்ணியிருந்தன. ஆனால் நம்மவர்கள் தம் திறமையால் மேலே மேலே முன்னேறினர். Moody's and Standard and Poor's நிறுவனங்கள் என்னவோ நமது நாட்டின் கடன் பெறும் தகுதியை அதிகரிக்க காலம் எடுத்து கொண்டாலும், தங்களது செயல்பாடுகளில் சிலவற்றை இந்தியாவில் செய்வித்து கொள்வதில் மட்டும் சுணக்கம் காட்டவில்லை.

இந்தியா உலகளாவிய R&D யிலும் மத்திய இடத்தை பிடித்துள்ளது. இங்கும் General Electric தான் ஆரம்பித்து வைத்தது. Renault-Nissan பஜாஜுடன் சேர்ந்து சிறுகார் உற்பத்தியை டாட்டாவின் நானோவுக்கு போட்டியாக துவக்குகிறது. இதற்கான R&D வேலை பஜாஜுக்கு தரப்பட்டுள்ளது.

மூளையை உபயோகித்து உற்பத்தி செய்யும் வேலையில் இந்தியா இந்தளவுக்கு முன்னேறியது திட்டமிட்டு வந்ததல்ல. ஏனைய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் போல இங்கும் வேலையாளர்கள் ஏற்றுமதிதான் நடக்கும் என முதலில் எண்ணப்பட்டது. ஆனால் அது இங்கு நடக்கவில்லை. அதன் காரணம் கடுமையான தொழிலாளர் சட்டங்களே. அதற்கு பதிலாக மேலே குறிப்பிட்ட மூளையை உபயோகித்து உற்பத்தி செய்யும் வேலையில் இந்தியா முன்னேறி மருந்து துறை மற்றும் கார்கள் உற்பத்தியில் இந்தியா முன்னேறியுல்ளது.

மருந்து துறையிலுள்ள பெரிய இந்திய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாயின. அதற்கு பல மாறுதல்கள் தேவைப்பட்டன. பன்னாட்டு பேடண்ட் சட்டத்தை ஏற்று கொண்டது அவற்றில் ஒன்று. முதலில் இந்திய கம்பெனிகள் தாம் பன்னாட்டு நிறுவனங்களால் விழுக்கப்படுவோம் என பயந்ததற்கு மாறாக இந்திய நிறுவனங்கள் பல வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கத் துவங்கியுள்ளன. ஆக உலக பொருளாதாரத்திடம் பயப்பட ஒன்றுமில்லை. அது பல வாய்ப்புகளை அளிக்கிறது என்பதை நாம் புரிந்து கொண்டோம்.

கார் தொழிலும் உலகத் தரத்தை எட்டியுள்ளது. எப்படி? புது புது எண்ணங்கள் மாடல்கள் வந்த வண்ணம் இருந்தால்தான் அதில் முன்னேற்றம் வரும். அவற்றைத் தருவதில் இந்தியப் பொறியாளர்கள் சளைத்தவர்கள் இல்லை. Delphi அளவுக்கு மேல்நாட்டு பெரிய கம்பெனிகள் புது கான்சப்டிலிருந்து ப்ரோட்டோடைப் செய்து உற்பத்திக்கு போக மூன்று மாதங்கள் எடுக்கும் நிலையில் நமது Bharat Forge அதையே ஒரே மாதத்தில் செய்ய முடியும் என சவால்விடுகிறது. அதனால்தான் அது auto forgings-ல் உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்தியப் பொருளாதாரம் 1991-ல் திறந்து விடப்பட்டபோது நமது கம்பெனிகளுக்கு சங்குதான் என பலர் பயந்தனர். இப்போது பார்த்தால் Tata Steel அதைவிட ஆறு மடங்கு பெரிய Corus கம்பெனியை வளைத்து போடுகிறது. அதே போல Tata Motors Jaguar மற்றும் Land Roverஐ கையகப்படுத்துகிறது; Hindalco நிறுவனம் Novellis ஐ தன்வசமாக்குகிறது, இதையெல்லாம் யாரும் முதலில் நினைத்தும் பார்க்கவில்லை.

வெகுநாட்களுக்கு அரசு கல்வித் துறையில் தனியாரை அனுமதிப்பதில் சுணக்கம் காட்டியது. கல்வியில் லாபம் ஈட்டலாகாது என்ற என்ணம் ஆட்சி செலுத்தியது. அதையும் மீறி லாபமில்லாதது போல போக்குகாட்டி பல தனியார் பொறியியல் கல்லூரிகள் அரசியல்வாதிகளால் ஆரம்பிக்கப்பட்டு மறைமுக கட்டணங்களை வசூலித்தன. ஆனாலும் அவற்றால்கூட பல பொறியாளர்கள் நாட்டுக்கு கிடைத்தனர். அரசு கல்லூரிகள் ஆண்டுக்கு 45000 பொறியாளர்களை அளிக்கின்றன. தனியார் கல்லூரிகளோ அதற்கு ஒன்பது மடங்கு அதிகமாக பொறியாளர்களை அளிக்கின்றன.

முதலிலிருந்தே டெலிகாம் துறையில் அரசு ஏகாதிபத்யமே இருந்தது. 1980களில் செல்பேசிகள் பணக்காரருக்கு மட்டுமே உரியது என்ற ரேஞ்சில் பேசப்பட்டு வந்தது. 1990-க்கு பிறகு இப்போது? கேட்கவே வேண்டாம். மாதத்துக்கு 80-100 லட்சம் புது வாடிக்கையாளர்கள் உருவாகிறார்கள். காற்றுமூலம் மின் உற்பத்தி பற்றி முதலில் ரொம்பவும் பேச்சில்லை. இப்போது நிலைமை தலைகீழ். அதேபோல ப்ளாஸ்டிக் துறையிலும் முன்னேற்றம்.

என் மனதைக் கவர்ந்த ஒரு சுவரொட்டியிலிருந்து: "சிலர் இருக்கும் நிலைமைகளை பார்த்து ஏன் அவ்வாறு இருக்க வேண்டும் என்று மட்டும் கேட்கிறார்கள். ஆனால் நானோ இது வரை இல்லாத நிலைகளை கனவில் கண்டு அவை ஏன் உண்மையாகக் கூடாது என கேட்டுவிட்டு அவற்றை செயல்படுத்துவேன்"

இப்போது மீண்டும் டோண்டு ராகவன். செய்ய வேண்டிய வேலைகள் அனேகம். அவற்றைச் செய்ய முயலுவோம். அந்த வேலைகள் எல்லாம் வந்தது நல்லதா இல்லையா என்று கதைப்பதையெல்லாம் வெட்டியாக உட்கார்ந்திருப்பவர்களிடம் விட்டுவிடுவோம். அவர்களுக்கும் பொழுது போகவேண்டாமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/15/2008

தமிழ்மண நிர்வாகிகளுடன் தமிழ்ப்பதிவர் சந்திப்பு 15.06.2008

எனது கார் வீட்டிலிருந்து கிளம்பும் சமயம் டி.பி.ஆர். ஜோசஃப் அவர்களிடமிருந்து தொலைபேசி வந்தது. பார்வதி மினி ஹாலில் சந்திப்பு நடப்பதை உறுதி செய்து கொண்ட அவர் தானும் வரப்போவதாகக் கூறினார். எனது கார் பார்வதி ஹாலை அடைந்த போது மணி சரியாக 5.30. உள்ளே ஏற்கனவே ஜிங்காரோ ஜமீன் என்னும் தினேஷ், சோமன், பாலபாரதி, முரளி கண்ணன், வினையூக்கி, பைத்தியக்காரன், உண்மைத்தமிழன், ஆசிஃப் மீரான், நந்தா, சங்கரபாண்டி, லக்கிலுக், ஜே.கே., தமிழ்சசி மற்றும் இளா வந்திருந்தனர்.

எனக்கு பிறகு வந்து சேர்ந்தவர்கள் செல்வம், இகாரஸ் பிரகாஷ், லிவிங்க் ஸ்மைல் வித்யா, அதிஷா, ஆடுமாடு தன் நண்பர் மீரானுடன், மருத்துவர் ப்ரூனோ, பளபள யூல் ப்ரின்னர் மொட்டையுடன் இளவஞ்சி, ஜ்யோவ்ராம் சுந்தர், வளர்மதி, டி.பி.ஆர். ஜோசஃப், பத்ரி, வழக்குரைஞர் சுந்தரராஜன், சுகுணாதிவாகர், ஆழியூரான் ஆகியோர்.

மைக் அரேஞ்ச் செய்யப்பட்டவுடன் பாலபாரதி எல்லோரையும் வரவேற்று சுய அறிமுகம் செய்து கொள்ள வேண்டினார்.

தமிழ்மண நிர்வாகிகளை நோக்கி கேள்விகளை வினையூக்கி ஆரம்பித்து வைத்தார். பதிவர் விருது வழங்கும் திட்டம் எந்தளவில் நிற்கிறது என்பதைப் பற்றி கேட்டார். பதிலளித்தவர் சங்கரபாண்டி. அவர் கூறியதாவது: விருதுகள் வழங்கும் முறையை இன்னும் முடிவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் வரக்கூடும் என்றார்.

பதிவுகளை வகைப்படுத்தலை பற்றி கேள்வி கேட்டார் பைத்தியக்காரன். ஆன்மீகம் மற்றும் இலக்கியம் ஆகியவை ஒரே லேபலின் கீழ் வருவது பற்றி கேட்டார் அவர். மேலும் பலரும் இக்கேள்வியை வெவ்வேறு தருணச்த்தில் கேட்டனர். இதற்கு பதிலளித்த தமிழ்சசி அவர்கள் இந்த வகைபடுத்தலே மொத்தமாக நீக்கப்படும் தருவாயில் உள்ளது என்றார்.

பூங்கா பற்றி லக்கிலுக் கேட்டதற்கு, அது அதிகவேலை வாங்கும் விஷயம் என்றும், சீக்கிரமே ஒருங்கிணைக்கப்படும் என்றார் தமிழ்சசி.மேலும் அமெரிக்க விதிகளின்படி இன்னும் பல வேலைகள் செய்யவேண்டியதுள்ளன என்றும் கூறினார். பூங்கா பர்றி பாலபாரதி பேசுகையில் பூங்கா தேர்வுக்கென்றே சம்பந்தப்பட்ட பதிவுகளை தெரிவு செய்ய தனி பட்டனை தமிழ்மண கருவிப்பட்டையில் போட இயலுமா எனக்கேட்டார். அப்படி பூங்கா நல்லமுறையில் செயல்படுத்தப்பட்டால் அதில் வரவேண்டுமென்பதற்காகவே பலர் நல்ல பதிவுகளை எழுதுவார்கள் என்றும் அவர் கூறினார்.

ஐகாரஸ் பிரகாஷ் பேசுகையில் தமிழ்மணம் செர்வர் பழுதுபட்டால் அது பற்றி தெரிவிக்க சிலரை டெப்யூட் செய்யலாம் என ஆலோசனை கூறினார். அப்படி எம்மாதிரி தன்னார்வலரைச் சேர்த்தாலும் அவருக்கும் தமிழ்மணத்தில் அதிகார பூர்வ ஸ்தானம் தரவேண்டும் என்று சங்கரபாண்டி கூறினார். தமிழ்மணத்தில் சேர்க்காமல் இருக்கும் ஆப்ஷனில் டிக் செய்தாலும் அது சேர்க்கப்பட்டுவிடுவதாக பாலபாரதி கூறினார். பூங்காவில் நகைச்சுவை பதிவுகளை சேர்க்காதது பற்றி சாத்தான் குளத்தான் கேட்டார். தெரிவில் ஒட்டுமொத்தமாக இல்லாது வகைக்கு ஒவ்வொன்றாக தெரிவு செய்தால் இக்குறை இருக்காது என சங்கரபாண்டி கூறினார். பூங்கா வருவதற்கான டைஃப்ரேம் கேட்டார் சாத்தான்குளத்தான். இவ்வாண்டு முடிவில் என பதிலளித்தார் தமிழ்சசி.

இவ்வார நட்சத்திரம் ஜே.கே. அவர்கள் நிர்வாகக் குழு மற்றும் தொழில்நுட்பக்குழு என தனித்தனியே உள்ளனவா என கேட்க ஆம் என்ற பதில் வந்தது. தமிழ்மணத்தில் முன்னேற்றத்துஇக்கான யோசனை கூற வழிசெய்யுமாறு மருத்துவர் ப்ரூனோ கேட்டார். தமிழ்மண விவாஹ்டதளத்தைப் பற்றி வினையூக்கி கேட்க, அது எடுக்கப்பட்டுவிட்டது என பதில் வந்தது. நிர்வாகி பதிவு எழுதக்கூடாது என்று கட்டுப்பாடு உண்டா எனக்கேட்க, அப்படியெல்லாம் இல்லை என பதில் வந்தது. வழக்கறினர் சுந்தரராஜன் அவர்கள் தனது மக்கள் சட்டம் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க இயலவில்லை எனக் கூறியதற்கு அதை கவனிப்பதாக பதில் வந்தது.

பின்னூட்ட உயரெல்லை மீண்டும் வேண்டும் என லக்கிலுக் கூறினார். தற்காலிகமாகத்தான் அது நீக்கப்பட்டிருப்பதாக பதில் கூறப்பட்டது. ஏனெனில் 40 ப்ளஸ், 40 வரை என்றெல்லாம் வைப்பதால் தமிழ்மணப் பக்கம் திறக்க நேரமாகிறது என்று கூறப்பட்டது. இம்மாதிரி உயரெல்லையெல்லாம் காரியத்துக்காகாது என்று நான் கருத்து தெரிவித்தேன். மறுமொழியப்பட்ட பதிவுகள் இற்றைப்படுவது ஒரு ரெகுலரான செய்கையாக இல்லை என்றும், சில சமயம் எனது மறுமொழியப்பட்ட ஆக்கங்கள் சம்பந்தமேயின்றி சில நாட்களுக்கு பிறகு இற்றைப்படுவதை நானே கண்டதையும் கூறினேன். அதையும் கவனிப்பதாகக் கூறப்பட்டது.

ரொம்ப நாளைக்கு பிறகு சந்தித்த ஜோசஃப் அவர்களுடன் சிறிது நேரம் பேசினேன். அவர் தனது வங்கிவேலை பற்றி பேசினார். புது ஆட்களை எடுப்பது பல ஆண்டுகளாக இல்லாதது ரொம்ப பிரச்சினைகளை உண்டு பண்ணுவதாகக் கூறினார். அவரது "நாளை நமதே" மற்றும் :சூர்யா" கதைகள் திடீரென நட்டாற்றில் கைவிடப்பட்ட தோற்றம் தந்ததைக் குறிப்பிட்டு கேட்டேன். சில காரணங்கள் என சுருக்கமாகக் கூறினார். அதே போல அவரது 'திரும்பிப் பார்க்கிறேன்' தொடரும் பம்பாய் வந்ததும் நின்றது பற்றியும் பேசினோம்.

சற்று நேரத்தில் டீயும் பிஸ்கட்டும் வர எல்லோரும் அதை ஒருகை பார்த்தனர். மணி 7.30 ஆகிவிட்டது. என் நண்பன் மகன் கல்யாண ரிசப்ஷனுக்கு போக வேண்டியிருந்ததால் விடை பெற்று கொண்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சோ அவர்கள் எழுதிய 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' - 3

சோ அவர்கள் எழுதிய அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் -2 எழுதியதற்கு பிறகு வேறு பதிவுகள் கவனத்தை ஈர்த்ததால் இங்கு சற்று இடைவெளி ஏற்பட்டு விட்டது.

போன பதிவில் சொன்னதைப் போல இந்த பதிவிலிருந்து அடுத்த சில பதிவுகள் அவரது நாடகங்களை மையமாக வைத்துத்தான் வரும். இருப்பினும் இன்னும் ஒரு கொசுறு தகவல் அவர் வழக்கறிஞர் என்ற ஹோதாவில் செய்ததைக் கூறியே ஆக வேண்டும். அதுவும் அவர் நாடக அனுபவத்துடனேயே சேர்ந்துள்ளது.

அவரது முக்கியமான நாடகங்களில் ஒன்றுதான் "சம்பவாமி யுகே யுகே". எப்போதெல்லாம் பாபங்கள் இப்பூவலகில் அதிகரிக்கின்றனவோ அப்போதெல்லாம் தான் அவதரிக்கப் போவதாக கிருஷ்ணன் கீதோபதேசத்தில் அருச்சனனை நோக்கிக் கூறியதை மையமாக வைத்து சோ அவர்கள் இந்த நாடகத்தை எழுதினார். சாதாரணமாக எல்லா அவதாரங்களிலும் வெற்றி பெறும் பகவான் இதில் ரொம்பவும் கஷ்டப்படுவதாகவே நகைச்சுவையுடன் கூறியிருந்தார். இந்த நாடகத்துக்கு அப்போதைய பக்தவத்சலனார் அரசு போலீஸ் அனுமதி அளிக்க மறுத்தது. இந்த நாடகம் அரசியல்வாதிகளை ரொம்பவே கிண்டல் செய்வதால் அதை மேடையேற்றினால் சட்ட ஒழுங்கு பிரச்சினை வரும் என்பதே போலீசின் கூற்று.

அரசின் போதாத காலம் சோ அவர்களே வழக்கறிஞர். அவர் ஒரு ரிட் மனு தயார் செய்து போலீசுக்கும் அரசுக்கும் அனுப்பியிருக்கிறார்.ரிட் மனு வலுவானது என்பது பற்றி அவருக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. அன்றைய அட்வகேட் ஜெனரல் அரசால் கலந்தாலோசிக்கப்பட்ட நிலையில் பத்திரிகைகளில் இது பற்றி செய்திகள் வர ஆரம்பித்தன. தாமதத்துக்குப் பின்னால் சில வசனங்களை நீக்குமாறு போலீஸ் கேட்டது. சோ சுத்தமாக மறுத்து விட்டார். அட்வகேட் ஜெனெரல் வேறு சோவின் ரிட் மனு வலுவானது எனக்கூறிவிட அரசு வேறு வழியின்றி நாடகத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியதாயிற்று. இவாறாக சோ அவர்களுக்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பெறுமான அளவுக்கு அரசு தரப்பிலிருந்து இலவசமாக விளம்பரம் கிடைத்தது. (போலீசின் ஆட்சேபணைக்கு முக்கியக் காரணமே வில்லனுக்கு பெயர் முதலில் பக்தவத்சலம் என வைக்கப்பட்டதே என்று சில வட்டாரங்களில் செய்தி உலவியது எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை).

இந்த நாடகம் பலமுறை அரங்கேறியது. பாலமந்திர் என்னும் குழந்தைகள் அமைப்பின் நிதிக்காக இது ஒரு முறை நடத்தப் பட்டது. அந்த அமைப்பின் தலைவர் காமராஜர் அவர்கள். அவர் நாடகம் பார்க்க வந்திருந்தார். காமராஜரை வரவேற்று பேசிய ஜெமினி கணேசன் அவர்கள் யதார்த்தமாக மேலே சொன்ன பிரச்சினையை தொடப்போக அது என்ன விஷயம் என காமராஜ் அவர்கள் சோவை கேட்க அவரும் அரசு லைசன்ஸ் கொடுக்க மறுத்த விவகாரத்தை சொன்னார். இருவருக்குமிடையே ஒருவித தகவல் இடைவெளி ஏற்பட்டு மேடையிலேயே வாக்குவாதம் நடக்க, காமராஜ் அவர்கள் கோபித்து கொண்டு நாடகத்தை பார்க்காது வெளியில் சென்றார். இதைப் பற்றி சோ அவர்கள் இப்புத்தகத்தில் எழுதும்போது தன் மேலேயே அத்தனை குற்றமும் என்பது போல எழுதுகிறார். ஆனால் இந்த நிகழ்ச்சி நடந்த அறுபதுகளின் துவக்கத்திலேயே இது பற்றி செய்திகளை படித்த நான் இப்போது கூறுவது என்னவென்றால் சோ மற்றும் காமராஜ் ஆகிய இருவரின் அன்றைய மனோபாவ வேற்றுமைகள் இவ்விதமான நிகழ்ச்சியைத் தவிர வேறு எதையும் தந்திருக்க முடியாது என்பதே.

இந்த நிகழ்ச்சியால் சோ அவர்களுக்கு வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி பல தொல்லைகள் ஏற்பட்டன. டி.டி.கே. அவர்கள் தன் மகனிடம் சத்தம் போட காமராஜரிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் அலுவலகத்திலேயே வேலையில் தொடர முடியாத நிலை வந்தது. வீட்டிலோ அவர்து தந்தையே அவரை உதைக்க காத்திருந்தார். கடைசியில் காமராஜரே அதையெல்லாம் கேள்விப்பட்டு "இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அந்தப் பையன் கொஞ்சம் அதிகப் பிரசங்கியாக இருக்கான். அவ்வளவுதான், நடந்த நிகழ்ச்சியை நான் ஒண்ணும் தப்பா எடுத்துக்கலை" என்ற வகையில் கூறிவிட சோவும் 'பிழைத்தார்'. அதற்கு பிறகும் வாசு அவர்கள் வெகு நாளைக்கு அவரை அதிகப் பிரசங்கி என்றே அழைத்து வந்தார்.

இதற்கு சில வருடங்கள் கழித்து, துக்ளக் ஆரம்பித்த காலக்கட்டத்தில் அவர் சாவி வீட்டில் வைத்து காமராஜர் அவர்களுக்கு சாவியால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். காமராஜ் சிரித்துக் கொண்டே, "தெரியுமே. அதிகப் பிரசங்கியாச்சே" என்றார். சோ அசடு வழிந்தார்.

"என்ன? அந்த அதிகப் பிரசங்கித்தனம் அப்படியே இருக்குதா? அதை உட்டுற வேண்டாம். நல்லதுதான் அது" என்றார் பெருந்தன்மையுடன் காமராஜ். அதுதான் காமராஜ். அதன் பிறகு பல முறை சந்தித்தனர் அவ்விருவரும். காமராஜ் அவர்கள் அவருக்கு அளித்த முக்கியத்துவமும் உரிமையும் அவரது திறமைக்கும் அனுபவத்துக்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதது எனக் கூறுவது சோ. அப்படியெல்லாம் இல்லை ரொம்பவுமே தகுதியானவருக்குத்தான் காமராஜ் இந்த மரியாதைகளை அளித்துள்ளார் என அழுத்தம் திருத்தமாகக் கூறுவது இந்த டோண்டு ராகவன்.

அடுத்தப் பதிவுகளில் நிஜமாகவே அவரது நாடகங்களைப் பற்றி எழுதப் போகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/13/2008

லக்கியாருக்கு உடனடி பதில்கள்! என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு இன்ஸ்டண்ட் கேள்விகள்!!

சற்று முன்புதான் லக்கியிடமிருந்து ஃபோன் வந்தது. கேள்விகளைக் கேட்கலாமா என கேட்க, கேளுங்கள் என்றேன். அவரிடமிருந்து வந்த கேள்விகள் எனது பதில்களுடன். அவர் என்னைக் கேட்ட கேள்விகள் இப்பதிவில்.

1. சார்! சமீபத்தில் 1950களில் இருந்து தீவிர திரைப்பட ரசிகராக இருக்கிறீர்கள்? ”அந்த மாதிரி பலான படம்” ஏதாவது பார்த்ததுண்டா? பார்த்திருந்தால் அது பற்றிய குறிப்புகள் ப்ளீஸ்...
பலான படங்களைக் காணும் வாய்ப்பு எனக்கு 40 வயதுக்கு மேலேதான் கிடைத்தது. அதற்கு முன்னாலேயே பலான புத்தகங்கள் படித்து விட்டதால், படங்களின் இம்பேக்ட் அதிகம் இல்லை. அம்மாதிரி படங்களின் கதையை ஒரு தபால் ஸ்டேம்புக்கு பின்னால் எழுதி விடலாம். இரண்டு அல்லது மூன்று படங்களுக்கு மேல் பார்த்தவுடன் வெறுப்பு வந்து விடும். அம்மாதிரி பார்த்த படங்களுள் நினைவில் இருப்பது Confessions of an American housewife. மகள் வீட்டுக்கு வந்த ஒரு தாயார் தன் மகளும் அவள் கணவனும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் மனைவி மாற்றும் விளையாட்டில் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்டறிகிறாள். பிறகு மாமியாருக்கும் மாப்பிள்ளைக்கும் லிங்க் ஏற்பட்டு சீரியசாக கதை போகிறது. தன் பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அந்தத் தாயார் வீட்டை விட்டு விலகி வேறு ஊருக்கு சென்று தனது பஜனையைத் தொடருகிறாள்.

2. துக்ளக் பத்திரிகையை சோ ராமசாமி திடீரென்று நிறுத்திவிட்டால் நீங்களும் பதிவு எழுதுவதை நிறுத்தி விடுவீர்களா?
ஏன் நிறுத்த வேண்டும்? டோண்டு ராகவனின் அஜெண்டாவே வேறு. அவன் தமிழ் எழுதுவதே அவனது மொழிபெயர்ப்பு வேலையில் அது அவனுக்கு உதவியாக இருக்கும் என்பதால்தான். இதன் மூலம் பல புது வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றனவே.

3. உங்களுக்கு பிடித்த நாடு இஸ்ரேல் என்று இஸ்ரேல் பிரதமருக்கே தெரியும். (சோவியத் ருஷ்யா தவிர்த்து) பிடிக்காத நாடு எது? ஏன்?
இக்கேள்விக்கு பதில் அளிக்க டோண்டுதான் வரவேண்டுமா என்ன? இஸ்ரேலின் நலனுக்கு எதிராக (இந்தியா தவிர) எந்த நாடு இருந்தாலும் அது அவனுக்கு பிடிக்காத நாடுதான். இந்தியா கண்டிப்பாக இஸ்ரேலின் விரோதி இல்லை. ஐ.டி.பி.எல்.லில் சேர்ந்ததே ஃபிரெஞ்சு துபாஷியாகத்தான். அங்கு அவன் கழித்த ஆண்டுகள் இனிமையானவை எல்லா விஷயத்திலும். அதாவது அல்ஜீரியாவுக்கு போக வேண்டும். அங்கு ஐ.டி.பி.எல்லுக்கு ஒரு ப்ராஜக்ட். போயும் போயும் இஸ்ரேலுக்கு விரோதி நாட்டுக்கு வேலை செய்ய வேண்டியுள்ளதே என்பதுதான் அவன் குமைந்ததுக்கு காரணம். நல்ல வேளையாக அல்ஜீரியா வேலை இல்லை என ஆயிற்று.

4. சுஜாதாவின் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் உலகப் பிரபலம். அதுமாதிரி ஏதாவது சீக்ரெட் வெபன் வைத்திருக்கிறீர்களா? வைத்திருந்தால் அவிழ்த்து விடுங்களேன்.
அடர்ந்த காட்டின் நடுவில் சில ஆட்டிடையர்கள். அவர்களில் ஒருவனே நம்ம கதையின் கதாநாயகன். நல்ல கட்டுமஸ்தான வாலிபன். எல்லாம் இருந்தன பெண்கள் வாடையே இல்லாத இடம் அது. திடீரென அவனுக்கு காம வெறி தலைக்கேற அவன் திகைக்கிறான்.
அப்போது அவன் நண்பன் ஆலோசனை கூறுகிறான். அதாவது ஒரு கொழுத்த பெண் ஆட்டை பிடித்து கொள்வது என்பதே அது. இவனும் அவ்வாறு முயற்சிக்க, அவன் தேர்ந்தெடுத்த ஆடு ஒத்துழைக்க மறுத்து ஓடுகிறது. அதன் பின்னாலேயே அவன் ஓட, காட்டின் நடுவே ஒரு சிறு வெட்டவெளி. அங்கு ஒரு அழகிய பருவப்பெண்ணை நால்வர் சூழ்ந்து கொண்டு கற்பழிக்கும் முயற்சியில் உள்ளனர். நம் ஹீரோ அவர்கள் நால்வரையும் அடித்து உதைத்து துரத்துகிறான். இப்போது அப்பெண்ணுக்கு இவன் மேல் ஆசை. இவனும் நல்ல கட்டுமஸ்தாக இருக்கிறான் அல்லவா? இருப்பினும் பெண்ணல்லவா, ஓப்பனாக கேட்க இயலாதே, நாணிக் கோணிக் கொண்டே கூறுகிறாள், "நீங்கள் என்னை என்ன செய்யச் சொன்னாலும் செய்கிறேன் என்று". ஹீரோவுக்கு ஒரே சந்தோஷம். அந்த கொழுத்த ஆட்டை பிடித்து, அவளிடம், "சற்று நேரத்துக்கு இதன் கொம்புகளை பிடித்து கொள். ரொம்பவும் அசைந்து என்னைப் படுத்துகிறது" என்கிறான்.

சுடர் விளையாட்டு போல இந்த விளையாட்டையும் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டுமென்று லக்கியார் விரும்புவதால் நான் அடுத்த நான்கு கேள்விகளையும் கேட்க வேண்டியிருக்கிறது. கேள்வி கேட்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள்ளாக பதில் பதிவு போட வேண்டுமாம். கேள்விகளுக்கு பதில் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும், சூடாகவும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பதில் சொன்ன பதிவிலேயே இன்னொரு பதிவருக்கு சூடாக நாக்கை பிடுங்கிக் கொள்வதுபோல நான்கு கேள்விகளை கேட்கவேண்டும் என்பது மட்டுமே விதிமுறை. நான் கேட்க இருப்பது என் நண்பர் என்றென்றும் அன்புடன் பாலாவை. அவருக்கு எல்லாம் நாக்கை பிடுங்கிக் கொள்வதுபோல கேள்விகளை விளையாட்டுக்கு கூட கேட்க மனம் வராது. ஆகவே இன்ஸ்டண்ட் கேள்விகள் என்று மாற்றுகிறேன். பாலாவுக்கு நான் கேட்கும் கேள்விகள்:

1. சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம், இந்த டோண்டு ராகவன் தான் வலைப்பூவுக்கு வந்ததே உங்களால்தான் என்று கூவிக் கூவி வருவதை நினைத்து உங்கள் ரியேக்‌ஷன்கள் என்ன?

2. ஸ்கூலில் இம்மாதிரி வாத்தியார்களுக்கெல்லாம் செல்லப் பிள்ளையாக இருந்திருக்கிறீர்கள் (உதாரணம் டி ராமானுஜம் அவர்கள்). இதனால் மற்றப் பசங்களின் பொறாமை மற்றும் எரிச்சல் அதிகமாக இருந்திருக்குமே, இதை எப்படி சமாளித்தீர்கள்?

3. சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா இங்கிலாந்து (என்று நினைக்கிறேன்) கிரிக்கெட் டெஸ்ட் மேட்சில் இந்தியா ஃபால்லோ ஆன் வாங்கி, மேலே ஆடி மேட்சையும் ஜெயித்ததே. இதற்கு முன்னால் இரு முறை அவ்வாறு நடந்ததாகக் கேள்வி. அவற்றின் விவரங்கள் தர இயலுமா?

4. மனைவி/மகள்களின் பிறந்த நாளை மறந்து அசடு வழிந்தது உண்டா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் - 13.06.2008

எம். கண்ணன், பாங்காக்:
1) அழகிரி முதல்வராகக்கூடிய சான்ஸ் உண்டா? அப்படி நடந்தால் தமிழ்நாடு எப்படி இருக்கும்?
பதில்: நான் ஏற்கனவே கூறியபடி, "ஸ்டாலினும் அழகிரியும் முறையே ராஜீவையும் சஞ்ஜய்யையும் நினைவுபடுத்துகின்றனர். தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்தால், அழகிரிதான் அதிகம் பொருத்தமாக இருப்பார் என்பது எனது எண்ணம். இது சரியான நீதியாகுமா என்று கேட்டால், அது இந்த இடத்தில் ரெலெவண்ட் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

அடாவடிக்குத்தான் காலம் இது". அழகிரி முதல்வராவது தி.மு.காவுக்கு நல்லது. தமிழ்நாட்டுக்கு? வேறுவழியில்லை. அதற்காகவே தி.மு.க. தோற்பது நல்லது.

2) சமீபத்தில் (போன வாரம்தான் சார்!) அர்ஜுன் சிங் சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினாரே. பிறந்த நாள் வாழ்த்து சொல்ல எனக் காரணம் சொன்னாலும் அவரும் முதல்வரும் சுமார் 1/2 மணிநேரம் தனியே பேசியுள்ளனரே. அப்போது என்ன மொழியில் பேசிக்கொள்வார்கள் அல்லது முதல்வரின் உதவியாளர் சண்முகநாதன் உடன் இருந்திருப்பாரா ? முதல்வருக்கு ஆங்கிலம் தெரியும் என்றாலும் தடையற்று பேச உதவி தேவைப்பட்டிருக்கும் அல்லவா? இதுமாதிரி துபாஷி பொறுப்பு செய்திருக்கிறீர்களா?
பதில்: அர்ஜுன் சிங்கிற்கு கூட தடையற்று ஆங்கிலம் பேச வரும் எனத் தோன்றவில்லை. நிற்க. புத்திசாலிகளாக இருந்தால் ஹிந்தி மற்றும் தமிழில் பேசிக் கொண்டிருக்க வேண்டும். மொழிபெயர்ப்பாளர்கள் எதற்கு இருக்கிறார்கள்?

மற்றப்படி, கடந்த 2000-ஆம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனை சந்திக்க வந்த மொராக்கோ மந்திரிக்கு அவர் விருந்தளித்தார். பெரிய மேஜையை சுற்றி அவர், அவரது மனைவி, பிரதமர் வாஜ்பேயி, ராம் விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் அமர்ந்திருந்தனர்.

நாராயணன் அவர்கள் அருகில் மொராக்கோ மந்திரியின் மனைவி அமர அவர்கள் நாற்காலிகளுக்கு நடுவில் சற்றே பின்தள்ளி மொராக்கோ வெளியுறவு அமைச்சகத்திலிருந்து வந்த மொழிபெயர்ப்பாளர், மேஜைக்கு எதிர்ப்பக்கத்தில் மொராக்கோ மந்திரி திருமதி நாராயணன் அவர்கள் நடுவில் சற்றே பின்னால் வைக்கப்பட்ட நாற்காலியில் இந்தியத் தரப்பு துபாஷி டோண்டு ராகவன்.

மொராக்கோ மந்திரியிடம் நான் முதலிலேயே பிரெஞ்சில் பேசுமாறும், மொழிபெயர்ப்பு செய்யவே நான் வந்துள்ளேன் எனவும் கூறிவிட்டேன். விருந்து பாட்டுக்கு நடந்தது. எல்லோரும் உண்டனர், இரு துபாஷிகளும் வேடிக்கை பார்க்க வேண்டிய கட்டாயம். விருந்து முடிந்து எல்லோரும் போனதும் இரண்டு துபாஷிகளுக்கும் அத்தனை சர்வர்களுமாக சேர்ந்து அன்புடன் விருந்து பரிமாறினர், அதே ஐட்டங்கள் எங்களுக்கும் போடப்பட்டன.


3) த்ரிஷா கிழவி மாதிரி இருக்கிறார். அவரிடம் என்ன இருக்கிறது என விஜய், விக்ரம் போன்ற நடிகர்கள் ஜோடி சேர சிபாரிசு செய்கின்றனர்?
பதில்: இம்மாதிரி கேள்விகளுக்கு எனது பதில், முக்கியமான இரண்டு அம்சமாக உள்ளன என்பதே.


4) சமீபத்தில் 2004 ஆம் ஆண்டு பெட்ரோல், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை என்னவாக இருந்தது. தற்போதைய விலை என்ன என ஒரு பட்டியல் போடுவீர்களா? இதற்கு என கன்ஸ்யூமர் இதழ் ஏதேனும் உள்ளதா?
பதில்: தெரியாது. கூகளில் பார்த்தால் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.


5) சுப்பிரமணியன் சாமி யாரை நம்பி அரசியல் நடத்துகிறார்? அவருக்கு ஏன் யாராவது சப்போர்ட் செய்கிறார்கள். அவருக்கு அமெரிக்காவிலிருந்து சப்போர்ட் கிடைக்கிறதா?
பதில்: அவர் ஒரு சுயம்பு. 1976 நெருக்கடி காலக் கட்டத்திலிருந்தே அசத்துகிறார் அவர்.


6) ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேட்டி எடுக்க சந்தர்ப்பம் கிட்டுமானால் என்னென்ன கேள்வி கேட்பீர்கள் ? (கரன் தாப்பர் பேட்டியை நியாபகம் வைத்து பதில் சொல்லவும்)
பதில்: ஒரே ஒரு கேள்வியுடன் ஆரம்பிப்பேன், தர்மபுரி பஸ் எரிப்பு நிகழ்ச்சியை குறித்து. பேட்டியை முறித்து கொண்டு அவர் வெளியேறுவார். அப்புறம் காலி நாற்காலியைத்தான் கேள்வி கேட்க வேண்டும்.


7) நீங்கள் ஒரு நாள் முதல்வராக ஆனால் அந்த ஒரு நாளில் என்னென்ன முடிவுகளை அமல் படுத்துவீர்கள்? ஏன்?
பதில்: தேர்தலில் ஜெயித்து வரும் முதல்வருக்கு இருக்கும் அரசியல் நிர்ப்பந்தங்கள் எனக்கு இருக்காது ஆதலால் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம், ஆனால் நீண்டகாலப் பலன்கள் லேது, ஏனெனில் அவை அடுத்த நாளே திரும்பப் பெறும் அபாயம் உண்டு.


8) 'எங்கே பிராமணன்' கதையில் சோ சொல்லவருவது என்ன? முடிவு சரியாக அமையவில்லை என தோன்றுகிறது. சோ அவர்கள் அந்த நாவலில் அசோக் மூலமாக சொல்லியுள்ளபடி நீங்கள் தற்போதைய உங்கள் பழக்கவழக்கங்களை வைத்து பிராமணர் என சொல்லிக்கொள்ள முடியுமா?
பதில்: சோவின் இந்தக் கதையை பல தளங்களில் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு எண்ணம் மேலே எழுகிறது. உபநிஷத்தில் இம்மாதிரி முடிச்சு கதைகள் அதிகம். பலர் பலவிதமாக புரிந்து கொள்வார்கள். அதுதான் இதன் விசேஷமே.

மற்றப்படி நான் அசோக்கின் கூற்றுப்படி கண்டிப்பாக பார்ப்பனனாக முடியாது என்பதுதான் உண்மை.


9) யாகாவாராயினும் நா காக்க - காவாக்கால் சோ காப்பர் - சொல்லிழுக்குப் பட்டு. இந்த குறளில் உள்ள 'சோ' வுக்கு அர்த்தம் என்ன?
பதில்: 'அல்லாப்பர்', 'செம்மாப்பர்' என்பனபோலச் 'சோகாப்பர்' என்பது ஒரு சொல். அதன் பொருள் '(தாமே) துன்புறுவர்' என்பது.


10) உங்களுக்கு மிகவும் பிடித்த உணவு எது? ஏன்? (போண்டா என சொல்லவேண்டாம்)
பதில்: எல்லா உணவுமே பிடிக்கும்.


11) உங்கள் வீட்டில் காலையில் டிபனா? அல்லது 10- 11 மணி நேராக சாப்பாடா? டிபன் என்றால் தினமும் வெவ்வேறு வகையா இல்லை இட்லி, தோசை, உப்புமாதானா?
பதில்: நேரடியாக காலை சாப்பாடுதான்.


12) சன் டிவி திருவிளையாடலில் ஔவையார் வேஷத்திற்கு மனோரமா பொருந்தவில்லையே? இந்தக் கால நடிகைகளில் யார் அந்த வேஷத்திற்கு பொருந்துவர்?
பதில்: கே.பி. சுந்தராம்பாளைப் போலவே ஒரு நடிகை இருக்கிறாரே, பெயர் மறந்து விட்டது. அவர் ஒரிஜினலின் ஆசியும் பெற்றவர்.



அனானி (06.06.2008 இரவு 09.46 க்கு கேள்வி கேட்டவர்):
1. Kindly give details about the petrol pricing in india, like basic price, different state/centarl taxes.
பதில்: ஆளை விடுங்கள் சார். என்னிடம் கார் கிடையாது. ஆகவே நேரடியாக பாதிக்கப்படவில்லை. டாக்சி உபயோகிக்கிறேன் என்பது நிஜமே. ஆனால் அந்த பாதிப்பு மறைமுக பாதிப்புதான். தேவையானால் பஸ்ஸில் போய்க் கொள்வேன். இக்கேள்விக்கு பதில் சொல்ல நான் அடியைப் பிடிடா பாரத பட்டா என்று பல உரல்களை அலச வேண்டும். அதிலும் ஏதாவது ஓட்டையை கண்டுபிடித்து யாராவது எழுதுவார்கள்.


2. As all the polical parties know that petrol price raise is a must, even then agitations/hartal ..etc? are they not ashamed?
பதில்: அது அவர்களது அரசியல் நிர்ப்பந்தமே.


3. Who is stopping left parties to withdraw support to central government?
பதில்: ஆதரவை விலக்கினால் தேர்தல் வரும். அதிலும் இடதுசாரி கட்சிகள் இப்போதிருப்பது போன்ற பலத்துடன் திரும்ப வருமா என்பது சந்தேகமே. பி.ஜே.பி. வந்து விட்டால் கதை கந்தல்தானே அவர்களைப் பொருத்தவரை?


4. Your BJP is also doing the same polical game. is it good?
பதில்: பி.ஜே.பி.யும் ஒரு அரசியல் கட்சி என்பதை ஏன் மறக்கிறீர்கள். தங்களது கட்சியின் நலன்களுக்கு ஏற்பத்தான் செயல்படுவார்கள், செயல்பட வேண்டும்.


5. What about modi's gujarat state taxes on petrol? (less or more)
பதில்: குஜராத்தில் உள்ள நிலைமை நோக்க இங்கே சொடுக்கவும்.



இத்துப்போன ரீல்:
1. தனிப்பட்ட முறையில் கேட்கவில்லை தமிழ் கூறும் நல்லுலகத்திற்க்காக!கனிமொழி அதிபன் போஸ் ஆக இருந்தவர் கனிமொழி அரவிந்தன் ஆனது ஏன்? கனிமொழி அரவிந்தன் தற்போது கனிமொழி கருணாநிதி ஆனது ஏன்?
பதில்: கனிமொழி அவர்களது பெயர் மாற்றம் அவரது தனிப்பட்ட விவகாரம். இங்கே இக்கேள்விக்கு நான் பதிலளிப்பது நாகரிகம் இல்லை.


2. பாமரன் சூத்திரன் கீழோன் கடைசாதி என்று சொல்லிக்கொள்ளும் கருணாநிதி முன்பு ஆட்சிக்கு வ்ந்த காலத்தில் இருந்தே ஒரு அரசனும் இப்படி இருக்க முடியுமா? என்ற அளவிற்கு ஆடம்பர விழாக்களும்,பிறந்தநாள் கொண்டாட்டமாக இருக்க காரணம் என்ன?
1. மக்கள் இளிச்சவாயர்கள் என்பதாலா? 2. அதிகார போதையாலா? 3. இப்படி வாயும் சொல்லும் வேறு, வேறு என்று புரியாத முட்டாள்கள்தான் தன்னால் ஆளப் படப்போகிறவர்கள் என்பது தெரிந்ததாலா?

பதில்: மூன்று காரணங்களுமே இதில் வெவ்வேறு விகிதத்தில் கலந்துள்ளன.


3. இணையத்தில் மிக அதிகமாக பிராமண எதிர்ப்பு இருக்கக் காரணம் 1. மற்ற சாதியினர் தாமும் வளர்ந்து விட்டோம் என்பதைவெளிக்காட்டவா? அல்லது 2. நிஜமாகவே திக, திமுகவினர் அதிகமா? அல்லது 3. நிஜமாகவே பிராமணர்களால் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதாலா?
பிராமணர்கள் அதிகம் சீறாததும் ஒரு காரணம். அவ்வாறு சீறாததற்கு ஒரு காரணம் எதிர்ப்பாளர்கள் ஏதேனும் உளறுவதற்கு எல்லாம் பதிலளித்து தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கி கொள்ள வேண்டுமா என்று பலர் நினைப்பதே காரணம். எதற்கும் எனது வெளிப்படையான எண்ணங்கள் பதிவைப் பாருங்களேன்.


4. இப்போது இணையத்தில் திரு சோவைத் தாக்க பல கும்பல்கள் கிளம்பியுள்ளதைப் பற்றி?
பதில்: அவை முதலிலிருந்தே உள்ளன.


5. திரு ரஜினி அவர்களைப் பற்றி? (அரசியலாகட்டும் அல்லது அவரது தொழில் ரீதியிலாகட்டும்)
தொழில் ரீதியாகப் பார்த்தால் உழைப்பாளி. அரசியல் ரீதியாகப் பார்த்தால் 1996-ல் வந்த நல்ல வாய்ப்பை தவறவிட்டவர். இதில் கூட நான் என்ன நினைக்கிறேன் என்றால் அரசியலுக்கு வந்த பிறகு தனது ஆதரவாளர்கள் செய்யக்கூடிய சொதப்பல்கள் தன்னால் சமாளிக்க முடியாமல் போய்விடுமோ என்னும் பயமே கூட அவரை வந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வதிலிருந்து தடுத்தது என்பதே.


6. காங்கிரஸ் ஆட்சி போன பிறகு கருணாநிதி ஆட்சி கவிழும் வாய்ப்பு உண்டா?
போனால் என்ன, பி.ஜே.பி.க்கு ஆதரவு தந்தால் போகிறது.


7. இதுவரை கேட்ட மொக்கை கேள்விகளில் கடைசி... கலைஞர் டிவியின் தகவல் படி தமிழுக்கு 85 வயதுதான் ஆகிறது.இதனால் தமிழுக்கு செம்மொழி ஆகும் வாய்ப்பு பறிபோகுமா?
பதில்: இந்த இடத்தில் தமிழ் என்பது ஆகு பெயர், உயர்வு நவிற்சி அணி.



அனானி (07.06.2008 காலை 09.01-க்கு கேள்வி கேட்டவர்):
1. கலைஞரின் மருமான் பிள்ளைகள் கலாநிதி, தயாநிதி இவர்களின் அன்னை தஞ்சாவூர் அந்தணர்குலத்தை சேர்ந்தவர் எனச் சொல்கிறார்களே? உண்மையா, பொய்ச் செய்திகளின் புருடாவா?
பதில்: தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.


2. தயாநிதியின் மனைவி இந்து ராம் குடும்பத்தை சேர்ந்தவர் எனவேதான், இந்து பத்திரிக்கை ஜெயாலிதாவின் எதிர்ப்பில் திமுகாவிற்கு கண்முடித்தனமான ஆதரவு கொடுக்கிறது? உண்மையா? (மதுரை தினகரன் பிரச்சனையை முதலில் கையில் எடுத்தது ஹிந்து ராம் அவர்கள்தான்)
பதில்: அப்படியா, தெரியாது. நான் ஏற்கனவே கூறியது போல தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேச விரும்பவில்லை.


3. தயாநிதி, கலாநிதி வியாபார சாணக்கியத்தனங்கள் கலப்பு மணத்தின் கருணையா?
பதில்: கருத்து ஏதும் இல்லை.


4. அழகிரியின் வலிமையான பாதுகாப்பு கோட்டைகளை உடைத்து தாத்தா பேரன் சந்திப்பு மலருமா?
பதில்: அரசியலில் எதுவும் நடக்கலாம்.


5. தயாநிதி விவகாரம் - சம்பத், m.g.r, வை.கோ மாதிரிதானா இல்லை உண்மையில் கட்சியை வளைக்கப் பார்த்தாரா?
பதில்: சம்பத் அளவுக்கு தயாநிதி கட்சி பலம் இருந்தவராகத் தெரியவில்லை.


6. ஒருவேளை தயாநிதியின் கையில் திமுக போய்விட்டால் பெரியார் எதற்காக திராவிடர் கட்சி ஆரம்பித்தாரோ அது?
பதில்: திமுக ஆரம்பித்ததே பெரியாருக்கு தோல்விதானே. 1957-லேயே தேர்தலில் போட்டி போடலாகாது என்ற அவரது அடிப்படை கொள்கையே பறந்து விட்டதே. பிறகு என்ன?


7. ஜெயா டி.வி இப்போது உள்ள பரபரப்பில் "வாரிசு யுத்தம்"," யாருக்காக' மாதிரி ஒன்றையும் காணோமே பார்த்தீர்களா?
பதில்: எந்த வாரிசு யுத்தம் பற்றி பேசுகிறீர்கள், திமுகாவிலா அதிமுகாவிலா?


8. பா.மா.கா ஒரு எதிர் முடிவு எடுத்த பிறகும் கூட்டணி தொடரும், தொடர வேண்டும் என எப்படி சொல்ல முடிகிறது?
பதில்: சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்னும் தத்தம் நலன் கூட்டணியில் இருப்பதால் ஒட்டிக் கொண்டு இருக்கிறார்கள். நிஜமான தேர்தல் வந்தால்தான் நிலைமையில் தெளிவு வரும்.


9. விஜயகாந்த் கட்சி வன்னியர் மற்றும் திருமால்வளவன் கட்சியின் வாக்கு வங்கியை "சுவாகா" செய்து விட்டதால்தான் கலைஞர் பா.மா.க வை பற்றிய மோசமான விமர்சனத்தை பேச வைத்து அதை வெளிவிட்டுவிடுகிறாறோ?
பதில்: இந்த விஷயத்தில் மோசமான விமரிசனம் பெறுவதற்காக பா.ம.காவே மிகவும் உழைத்துள்ளது என்பதை மறப்பது ஆகாது.


10. உங்கள் பா.ஜா.க பாசத்தை மறந்து நடுநிலையோடு சொல்லுங்கள் சேது சுமுதிரத்திட்டம் உலகயமயமாக்கல் யுகத்தில் தமிழக பொருளாதார முன்னேற்றத்துக்கு நல்லதா ? இல்லையா? விளக்கவும்.
பதில்: சேது சமுத்திர பாதையில் பெரிய டாங்கர்கள் செல்ல இயலாது. மேலும் கடலின் நீர் ஓட்டத்தால் மணல் குவிந்து கொண்டுதான் இருக்கும். மணல்வாரி கப்பல்கள் விடாது செயல்பட்டு கொண்டேயிருக்க வேண்டும். அச்செலவை பாதையை உபயோகிக்கும் கப்பல்கள்தான் அதிகக் கட்டணம் என்னும் வழியில் தரவேண்டியிருக்கும். ஒரு நிலைக்குமேல் சுற்றிப் போவதே அவற்றுக்கு சாதகமானதாக முடியும். சேது திட்டத்தால் பவழப் பாறைகள் அழிக்கப்படும். சுற்றுப்புறச் சூழல் மிகுந்த அளவில் பாதிக்கப்படும். இன்னும் பல தொல்லைகள் உண்டு.



அனானி (08.06.2008 காலை 5.06-கு கேட்டவர்):
1. உலகில் நல்லவர்கள் கஷ்டப்படுவதும்,தீயவர்கள் ஆலவட்டம் போடுவதும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாகப் பார்த்து அனுபவுத்து வருகிறேம்.பெரியவர்களைக் கேட்டால் அது அவரவர் பூர்வ ஜெனமப் புண்யம் என்கிறார்? தங்கள் கருத்து யாது?
பதில்: ஏன் கடந்த 50 வருடங்கள் மட்டும்? 'நல்லதுக்கு காலமில்லை' என்னும் சொலவடை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழையது.


2. அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்வான் என படித்து கேட்டு இருக்கும் உலகில், நிதர்சனமாக நடத்தாக செய்தி இல்லையே?
பதில்: கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள ஹிந்துமத'த்தில் இதற்கான பதிலைத் தேடலாம்.


3. நமது பிள்ளைகளை கோவிலுக்குப் கூப்பிட்டால்,பெரியார் பக்தர்கள், இடது சாரி கட்சிகளின் புரட்சி சிந்தாந்தங்கள் பக்கமே செல்கின்றனர்(ஆனால் இது இந்து மதத்தில் மட்டும்தான்)?
பதில்: நாத்திக சிந்தனை உலகளாவியது.


4. ஐந்து முறை அல்லாவை தொழவில்லை என்றாலும்,ஞாயற்றுக் கிழ்மை சர்ச்க்கு வரவில்லை என்றாலும் அது பெரிய பாவமாக / நாகரிக மற்ற தன்மையாகக் கருதும்போது இந்து இளைஞர்கள், 25 வயதுக்கு உட்பட்டோர்?
பதில்: இந்து மதம் கட்டாயப்படுத்துவதில் நம்பிக்கை வைக்கவில்லை. அவரவர் கடவுள் அனுபவம் தனித்தனி. 'கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்'.


5. ஆனால் வடஇந்தியாவில் பக்தி பரவசம் எல்லாக் கோவில்களிலும் கொடிகட்டி பறக்கிறது. மதுரா, காசி, அயோத்தி போன்ற அடிக்கடி செய்திகளில் பேசப்படும் கோவில்களுக்கு செல்லும்போது அங்கு உள்ள பக்திநிலை நம் உடலுக்குள் ஒரு சக்தியை முடுக்கி கிவிடுவதாக தெரிவதன் காரணம்?
பதில்: அதுவும் தன் அனுபவமே. எல்லோருக்கும் அது கிட்டுவதில்லை. பலர் நீங்கள் சொன்ன ஊர்களின் அசுத்தங்களை மட்டுமே பார்க்கின்றனர்.


6. வடஇந்தியக் கோவில்களில் முருகப் பெருமான் வழிபாடு இல்லையே? காரணம் யாது?
பதில்: அங்கு கார்த்திகேயன் என முருகனுக்கு பெயர். அவர்தான் அண்ணன். அவர் பிரும்மச்சாரி. பிள்ளையாருக்கு சித்தி, புத்தி என இரு மனைவியர். கார்த்திகேயன் யுத்தக் கடவுள், கோபக்காரர்.


7. தமிழகத்தில் சிறு கிராமங்களான சிவைசலம், கடையம், மன்னார்கோவில், களக்காடு, நவத்திருப்பதி தலங்கள்... பெரிய பிரமாண்ட கோவில்களும்,அழகு சுவாமி சிலைகளும், சிற்ப மண்டபங்களும் இருக்கும் போது வட இந்தியாவில் சுவாமிகள் சிலைகள் அழகு ததும்பும் பொம்மைகள் போல் இருப்பது காரணம் யாது?
பதில்: தென்னகத்தில் ஸ்தபதிகள், சிற்பிகள் அதிகம். வட இந்தியாவில் அடிக்கடி நிகழ்ந்த ஆக்கிரமிப்புகளால் இந்த விஷயங்களில் கவனம் செலுத்தும் ஆட்கள் கிடையாது. தென்னகத்தில் உள்ள சிலைகளின் அழகு வட இந்திய சிலைகளில் இல்லைதான்.


8. சிவன் சொத்து குல நாசம் என்பர் ஆனல் கோவில் சொத்தை ஆண்டு அனுபவித்து வரும் அனைத்து பிரிவினரும் வளமாக வாழ்வதைப் பார்க்கும் போது?
பதில்: இதையெல்லாம் விளக்கத்தான் பூர்வஜன்ம விஷயங்கள் உள்ளன.


9. தென் மாவட்டங்களில் இந்துப் பெண்களை மதம் மாற்ற செய்யும் தந்திரம் வேகமாய் அரங்கேறுவது தெரியுமா?
பதில்: தெரியாதே. கேள்விப்பட்டதிலையே.


10. பக்தி இலக்கியங்களை அருளி சமயக் குரவர் நால்வர், பன்னிறு ஆழ்வார்கள், 64 நாயன்மார்கள் இவர்களின் தொடர்ச்சி இனி எப்போது மலரும்?
எப்போதெல்லாம் இந்துமதத்தில் பலவீன நிலை ஏற்பட்டதோ அப்போதெல்லாம் ராமானுஜர், சங்கரர், மத்வர் போன்ற பெரியவர்கள் பலர் தோன்றி தொண்டு செய்துள்ளனர். அப்போதும் பொது ஜனங்கள் தத்தம் வேலைகளை மட்டும் பார்த்தவண்ணம் இருந்தனர்.

திண்டுக்கல் சர்தார்:
1) சிங்கப்பூருக்குள் நுழையக்கூடாது என்று அந்நாட்டு அரசு கருணாநிதிக்குத் தடை விதித்திருக்கிறதாமே! இங்கு வந்து இங்குள்ள தமிழர்களையும் போராடுமாறு தூண்டிவிட்டுக் கெடுத்து விடுவார் என்ற காரணத்தினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாமே. உண்மையா?
பதில்: நான் இதுவரை கேள்விப்படாத செய்தி. ஆகவே கருத்து ஏதும் இல்லை.


2) மதுரையில் நேற்று(9/6/2008)ராயல் கேபிள் விசன் என்ற பெயரில் அழகிரி ஒரு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார்.அதன் எதிரொலியாக அவரது அடியாட்கள் மதுரையிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் இயங்கும் அறுநூறுக்கும் மேற்பட்ட தனியார் கேபிள் அலுவலகங்களில் புகுந்து சன் குழுமத்திலிருந்து வரும் எந்தத் தொலைக்காட்சியையும் ஒளிபரப்பக்கூடாது என்று மிரட்டிவிட்டு அழகிரியின் நிறுவனம் மூலமாகப் புது இணைப்பைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்களாம்."கலைஞர் டி.வி.யைப் பாருங்களேன். எதுக்கு எங்க எதிரியோட டிவியைப் பார்க்கவிட்றிங்க"என்று சொன்னார்களாம்! மதுரைப் பகுதியில் இனிமேல் சன் டி.வி., சன் நியூஸ், கே.டி.வி.எதுவுமே இனிமேல் ஒளிபரப்பாகாதாமே.இவிங்க அராஜகத்துக்கு எல்லையே இல்லையா? போலிசில் புகார் கொடுத்தால் வாங்க மறுப்பதோடு அல்லாமல்,ஏண்டா வீண்வம்பை விலைக்கு வாங்கறீங்க? என்று விரட்டிவிட்டார்களாம்.பத்திரிக்கைகளுக்குத் தகவல் தெரிவித்தால் பேச்சு மூச்சையே காணோம்.
பதில்: அழகிரியின் கை ஓங்கியுள்ள தருணம் இது. வேறு என்ன சொல்லமுடியும்?





அனானி (10.06.2008 மாலை 08.29-க்கு கேட்டவர்):
1. நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் கூட்டணியின் எதிர்காலம் பற்றிய தங்கள் கருத்து?
பதில்: விஜயகாந்தைத் தவிர்த்து மற்றவர்கள் ஐயோபாவம் ரேஞ்சுதான். அதிலும் கார்த்திக் ஐயையோ பாவம்.


2. தலித், வன்னியர் வாக்கு வங்கியில் பெரும் பகுதியை விஜயகாந்த் கவர்ந்துவிட்டாதால்தான் பா.ம.க.தலைவருக்கும், தி.வழவனுக்கும் அவர் மீது கோபமா?
பதில்: இருக்காதா பின்னே?


3. சரத் இதுவரை தென் மாவட்டங்களில் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக தகவல் இல்லையே?
பதில்: அடுத்த தேர்தல் வந்தால்தான் நிலைமை தெளிவாகத் தெரியும். இப்போது பார்க்கும் வரை சரத்துக்கு ஏதும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.


4. கார்த்திக் கதை இதற்குமேலே எடுபடுமா? (பாக்யராஜ், ராஜேந்தர் கதை ஊரறிந்த உண்மை)
பதில்: சிவாஜியை விட்டுவிட்டீர்களே.


5. பதவிப் பங்கீடு ஒரு சமாதானத்தை எட்டியுள்ளதாக தெரியவில்லை அதனால் தான் ஜுன் 3 -செப் 15-க்கா?
பதில்: கேள்வி புரியவில்லை.


6. அன்பழகனுக்கு கட்சியில் ஆதரவே இல்லாத நிலையிலும் இந்த அந்தஸ்து எப்படி தொடர்கிறது (கலைஞருக்கு பிராமினை தொடர்ந்து,முதலியாரையும் பிடிக்காது என்பர்)
பதில்: கலைஞருக்கு ஜால்ரா அடிக்க ஒரு பழம்பெரும் தலைவரும் தேவைதானே. முன்பு நெடுஞ்செழியன் இருந்த இடத்தில் பேராசிரியர்.


7. அழகிரியின் பிடிவாதம் சரியா, தயாநிதி, கலாநிதி விஷயத்தில்?
பதில்: அழகிரிக்கு அரசியல் விஷயத்தில் ஒரு உள்ளுணர்வு உண்டு. அதன்படி அவர் நடக்கிறார். அவர் தயாநிதியை நம்பவில்லை.


8. கனிமொழி அண்ணன் பக்கமா, தம்பி பக்கமா?
பதில்: தனக்கு சாதகமான நிலையைத் தருபவர் பக்கம்.


9. மூத்த அமைச்சர்கள் ஸ்டாலினை ஏற்கவில்லை என்கிறார்களே அவர்கள் யார்?
பதில்: யாருமே மனதளவில் ஏற்கவில்லை என்றுதான் படுகிறது. வெளியில் சொல்லி கொள்வது வேறாக இருக்கலாம்.


10. ஸ்டாலினைவிட, அதிமுக தலைவி செல்வி ஜெயலலிதாவின் அதிரடி அரசியலுக்கு அழகிரிதான் சரி என்பதால்தான் கலைஞர் .........
பதில்: அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது.



அனானி (11.06.2008 காலை 05.45-க்கு கேள்வி கேட்டவர்):
1. தமிழ்மண நிர்வாகிகளின் பெயர்கள் என்ன? அவர்களது நிர்வாகச் செலவை சமன் செய்வது எப்படி?
பதில்: ஜூன் 15 அன்றைக்கு வலைப்பதிவர் சந்திப்புக்கு வந்து நேரடியாகவே கேட்டுவிடுங்கள்.


2. பதிவர்களின் சில தளங்களில் உள்ள விளம்பரவருவாய் தமிழ்மணத்திற்கா?
பதில்: தமிழ்மணம் வெறும் திரட்டி மட்டுமே என்பதை ஏன் மறக்கிறீர்கள். பதிவர் தளங்களை வைத்து கொள்ளும் செர்வர் அல்ல தமிழ்மணம்.


3. பல ஒத்த கருத்து உள்ள பதிவாளர்களிடையெ லிங் உள்ளதுபோல் பிற தமிழ் திரட்டிகளுக்குகம் தமிழ்மணத்துக்கும் லிங் கொடுக்க முயற்சி செய்யலாமே?
பதில்: யார் தர வேண்டும் என சொல்கிறீர்கள்?


4. சில நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டம் இல்லாச் சூழ்நிலையும்,ஒரு சில பதிவாளரின் பதிவுகளுக்கு குவியும் (பரஸ்பர நல்லுணர்வு) பின்னூட்ட இஸம் ஏதோ சொல்வது போல் உள்ளதே? இங்கும் கொள்கைக் கூட்டணி அரசியலா?
பதில்: அரசியல் இல்லாத இடம் எது?


5. அநாகரிக,பண்பு கெட்ட வார்த்தைகளுடன் பவனிவரும் பின்னூட்டங்களை தடுக்கும் firewall வசதி இருந்தும் சில பதிவாளர்கள் அனுமதிப்பது ஏன்?
6. வாசிப்பவர்களை சுண்டி இழுக்க வேண்டும் என்பதற்காகவே வைக்கப் படும் தலைப்புகளை பார்த்தீர்களா?
பதில்: அவரவருக்கு ஆயிரம் காரணங்கள். நாம் யார் இதையெல்லாம் கேட்க. முடிந்தால் நீங்களும் செய்யுங்களேன்.

7.அ.தி.மு.க சார்ந்த பதிவர்களே இல்லாதது போல் உள்ளதே? காரணம் என்ன?
பதில்: அதிமுகாவை ஆதரிப்பது கடினம், ஏனெனில் அதன் தலைவி எப்போது என்ன பேசுவார் என்பது தெரியாது.


8. ஒருவரின் கருத்து,கொள்கை பிடிக்கவில்லையென்றால் கருத்து மோதல் செய்யாமல் ஜாதி, இன, தனிமனித துவேஷம் செய்வது?
பதில்: அவ்வாறு செய்பவர்களது பலவீனமே இதில் தெரியவருகிறது. கூடவே கருத்து வறட்சி.


9. ஒரு சில பதிவாளரின் பதிவுகளை படிப்பதற்கே நேரம் போதவில்லையே,உண்மைதமிழன் போன்றோருக்கு ஒரு நாள் 28 மணி நேரமா?
பதில்: ஒரு பதிவுபோட அதிகபட்சம் ஒரு மணி நேரம் தேவை. அவ்வளவே. அதையும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொள்ளலாம். உண்மையாகவே பிசியாக இருப்பவனுக்குத்தான் நேரம் அதிகம் கிடைக்கிறது, ஏனெனில் அவன் நேர மேலாண்மையில் தேர்ச்சி பெற்றவன்.


10. பதிவாளர், வாசகர், தமிழ் ஆர்வலர் பங்கு பெறும் அளவில் தமிழ் மாநில மாநாட்டிற்கான முயற்சிகளை செய்யும் எண்ணம் உண்டா?
பதில்: யாருக்கு எனக்கா? சரிதான், சாதாரண பதிவர் மீட்டிங்கிற்கே ஆள் கிடைக்க மாட்டேன் என்கிறது. தமாஷ் செய்கிறீர்களா?



கீ-வென்:
1. ஏன் இந்திய மக்களுக்கு மட்டும் சுத்தம், பொது நலம் என்ற மனப்பான்மை இருப்பதில்லை. இதுவே நம் தவறுகளுக்கு காரணமோ?
பதில்: தவறு செய்தால் தண்டனை, அதில் தனிப்பட்டவர் செல்வாக்கு உள்ளே புகக் கூடாது என்ற நிலையில் அதிகாரத்தில் உள்ளவர் நடந்து கொண்டால் தமிழகமும் சிங்கப்பூராக மாற இயலும்.

அனானி (11.06.2008 மாலை 7.07-க்கு கேட்டவர்):
1. அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார தேக்க நிலைக்கு வியட்நாம், இராக் இவைகளின் மேல் தொடுக்கப்பட்ட தேவையில்லாத யுத்தம்தான் காரணமா?
2. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் அமெரிக்காவில் ஆகியவை தோல்விமுகம் காணுகின்றனவா?
3. வேலையில்லாத் திண்டாட்டம், பாங்குகளில் தேக்க நிலை, வீட்டு வசதிகளில் மதிப்பு கீழிறக்க நிலை தென்படுகிறதே?
4. வளர்ச்ச்சி விகிதமும் கண்ணாமூச்சி காட்டுகிறதே? (3 % குறைவு)
5. உலக போலீஸ்காரரின் கைப்பிடி நழுவுகிறதா?
பதில்: எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். இப்போது அமெரிக்கா சந்திக்கும் எல்லா பிரச்சினைகளுக்குமே அளவுக்கதிகமாக கடன் வாங்கும் அவர்களது கலாச்சாரமே முக்கிய காரணம். திடீரென அமெரிக்க பொருளாதார நீர்க்குமிழி வெடிக்கப் போகிறது. அப்போது அவர்கள் மட்டும் மூழ்க மாட்டார்கள், கூட மற்றையோரும் கூட. பணம் போனால் உலக போலீஸ்காரரும் கப்பறை ஏந்த வேண்டியதுதான். ஆனால் பிச்சை போடுபவர்கள் யார் என்பதுதான் பிரச்சினை.



கீ-வென்:
1. ஏன் தலைவர் மு.க குடும்பதினரோட பெயர்களில் பணத்தின் பாதிப்பு (எல்லா பெரும் நிதியிலேயே முடியறது) இருக்கு ? விசேட காரணங்கள் ஏதும் உங்களுக்கு படுகிறதா?
பதில்: யதேச்சையாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் அவர் குடும்பத்தில் நிதியில் முடியும் பெயர்களையுடையவர்கள் எல்லோருமே கணிசமான வயதுடையவர்கள். சம்பந்தப்பட்டவர்கள் பிறந்தபோது பிற்காலத்தில் இப்படி சொத்து சேர்க்கும் நிலைக்கு வருவார்கள் என யாரும் எதிர்ப்பார்த்திருக்க இயலாது. என்னமோ பெயர்கள் அமைந்துவிட்டன. கமலஹாசன் குடும்பத்தில் பல பெயர்கள் ஹாசனில்தானே முடிவடைகிறது?

பெயரை வைத்து ஒரு ஜோக்: ஒருவன் தன் குழந்தைகளின் பெயரை வரிசையாகக் கூறுகிறான். ராமன், சந்திரன், கிருஷ்ணன், மாசேதுங். ஏன் கடைசி குழந்தைக்கு அந்தப் பெயர் என்பதற்கு ஒரு ஆங்கில கட்டுரையைக் காரணமாகக் காட்டினான். அதில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது. "China is the most populated country. Of the children born daily in the world, every fourth child is a Chinese child".

ரமணாஸ்திரம்:
1. தமிழக அரசு r.t.o சேவைகளுக்கு சேவைவரி விதித்திருப்பதற்கு மக்கள் கருத்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே வசூல் வேட்டை தொடர்கிறதே, நியாயமா?
பதில்: கருத்து எல்லாம் கேட்டுமுடிச்சுட்டு சேவை வரி வேண்டாம்னு சொல்லிட்டாங்கன்னா என்ன செய்யறதுன்னு யோசனையா இருக்குமோ?


2. ஓட்டுனர் உரிமம் புதிப்பதற்கு ரூபாய் 500 வரை ஆகிறது, முன்பு 30 to 50 ரூபாய்தான். (சேவை வரி மட்டும் 100)
பதில்: கேள்வி என்ன?


. புரோக்கர்கள் தயவில்லாமல் அங்கு ஒன்றும் நடக்காது போல் உள்ளதே?
பதில்: உள்ளே உள்ள செட்டிங்க்ஸே அப்படித்தான்னு நினைக்கிறேன்.


4. மக்கள் முணுமுணுத்துக் கொண்டே பணத்தை கொட்டுகின்றனர். அதிலும் ஏழை வாடகை ஊர்தி ஓட்டுனர்கள் நிலை பரிதாபம் இல்லையா?
பதில்: பரிதாபம்தான். அதைவிடப் பரிதாபம் அந்த வாகன ஒட்டிகள் பப்ளிக்கின் மேல் அந்த சார்ஜை போடுவது.


5. இவர்களை திருத்தி நேர்மையை நிலை நாட்ட எதிர்காலத்தில் வழி பிறக்குமா?
பதில்: கண்ணுக்கெட்டிய தூரம்வரை வழியேதும் லேது.

அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/11/2008

நான் தற்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியைத்தான் ஆதரிக்கிறேன்

உண்மையைக் கூறவேண்டுமானால் நான் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தல்களில் எப்போதுமே ரிபப்ளிகன் கட்சியைத்தான் ஆதரிக்கிறேன் என்றுதான் தலைப்பை வைத்திருக்க வேண்டும்.

அது என்னவோ தெரியவில்லை, நான் பார்த்தவரை ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த குடியரசுத் தலைவர்களது ஆட்சியின் கீழ்தான் அமெரிக்கா நன்கு முன்னேறியிருக்கிறது. ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய முக்கியக் காரணங்களுள் அவர் தனது நாட்டின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்பதே. அப்படிப் பார்த்தால் அமெரிக்காவில் ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த குடியரசுத் தலைவர்கள் கீழ்தான் அது அதிகம் நடந்துள்ளது.

டெமாக்ரடிக் குடியரசுத் தலைவர்கள் என்னைப் பொருத்தவரை விளக்கெண்ணெய்களே. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே பார்த்து வருகிறேன். ஃப்ராங்ளின் ரூஸ்வெல்டைத் தவிர்த்து வேறு எந்த டெமாக்ரடிக் தலைவரும் தேறவில்லை. தனது முயற்சியால் உருவாக்கிய லீக் ஆஃப் நேஷன்ஸில் அமெரிக்காவை சேர்க்கக் கூட உட்ரோ வில்சனால் முடியவில்லை. ரூஸ்வெல்டும் ட்ரூமனுமாக ரஷ்யாவிடம் சரியாக பேரம் பேச இயலாது ஐரோப்பாவின் கணிசமான பகுதியை கம்யூனிஸ்டுகளிடம் கோட்டை விட்டனர். அமெரிக்காவின் ஜன்ம விரோதியான கம்யூனிசத்தை ரிபப்ளிக்கன்கள் எதிர்த்த அளவு டெமாக்ரேட்டுகள் செயல்படவில்லை. இந்தியர்கள் இவ்வளவு விதந்தோதும் ஜான் கென்னடி மாஃபியாவுடன் வைத்திருந்த தொடர்புகள், அவரது மன்மத லீலைகள் ஆகியவை அவர் காலமானதற்கு பின்னால் வெளிவந்தன.

சமீபத்தில் 1964-ல் ரிபப்ளிக்கன் வேட்பாளர் கோல்ட்வாட்டர் தேவையானால் வட வியட்னாம் மேல் குண்டுகளும் வீசலாம் என்றார். லிண்டன் ஜான்ஸனோ வியட்னாம் யுத்தத்தை பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப் போவதாக எலெக்‌ஷன் மீட்டிங்குகளில் கூறி வந்தார். இப்போது இந்த ஒபாமா ஈராக் யுத்தத்தைப் பற்றிப் பேசுவதுபோல என வைத்து கொண்டால் தவறில்லை. ஜான்ஸன் வெற்றி பெற்றார். ஆனால் என்னாயிற்று? ஜான்ஸன் காலத்தில்தான் யுத்தமே கடுமை அடைந்து, 1968 துவக்கத்தில் டெட் தாக்குதல் நடந்து அமெரிக்காவின் மானமே கப்பலேறியது. அடுத்து வந்த நிக்ஸன்தான் வியட்னாமிய யுத்தத்தை முடித்து வைத்தார். நிக்ஸன் தவறே செய்யவில்லை எனக் கூற மாட்டேன். ஆனால் அவர் அமெரிக்காவின் நலன்கள் எனக் கருதுவதில் விட்டுக் கொடுக்காமல் இருந்தார். நிக்ஸனைப் பற்றி பல ஜோக்குகள் இருந்தாலும், வெளியுறவு விவகாரங்களில் ஒரு ஜோக்கும் அவரைப் பற்றி இல்லை என்பதை நிக்சனை மிகவும் எதிர்த்த பத்திரிகையாளர்களே கூறியுள்ளனர். வாட்டர்கேட் விவகாரம் கூட மற்றப் பல நாடுகளில் அக்காலக் கட்டங்களில் நடந்த அதிகார துஷ்பிரயோகங்களின் முன்னால் வெறும் சாதாரண மேட்டர்தான்.

டெமாக்ரடிக் குடியரசுத் தலைவர்கள் காலத்தில் அமெரிக்காவின் உதவிகளைப் பெற்றுக் கொண்டே அதை ஐ.நா. சபையில் எதிர்த்து ஓட்டளித்தன பல தேசங்கள். இந்தியாவும் அதில் ஒன்று. ரீகன் காலத்தில் அமெரிக்காவின் தூதுவராக ஐ.நா.வுக்கு வந்த ழான் கிர்க்பாட்ரிக் உதவி பெறும் நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் கடிதம் எழுதினார். அதில் அமெரிக்காவை இவ்வளவு எதிர்க்கும் அவர்களுக்கு அமெரிக்கா ஏன் உதவிகளை நிறுத்தக் கூடாது என்ற கேள்வி கேட்கப்பட்டது. பதறிப் போயினர் தலைவர்கள். பல சமாதானங்களை தத்தம் பதில்களில் கூறினர். ஆனால் சூடுபட்ட பூனைகளாக அமெரிக்க எதிர்ப்பை அடக்கி வாசித்தனர்.அதன் பிறகுதான் அமெரிக்கா தன் பலம் உணர்ந்து நடக்க ஆரம்பித்தது. ஈரானில் பயணக்கைதிகளை மீட்க வக்கில்லாது கார்ட்டர் நிர்வாகம் கையைப் பிசைந்தது. ரீகன் வந்து அம்மாதிரியான விளக்கெண்ணெய் வேலைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்தார்.

சோவியத் யூனியனை போண்டியாக்கி, அதன் பலத்தை குறைத்தவரும் ரீகனே. அதன் பலனாய் 1990-ல் கிழக்கு ஜெர்மனியும், 1991-ல் சோவியத் யூனியனும் உலக வரைபடத்திலிருந்தே மறைந்தன. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஈராக்கை தனிமைப் படுத்தி சதாம் ஹுசைனின் பல்லைப் பிடுங்கியது ஜார்ஜ் புஷ்தான். பிறகு வந்த டெமாக்ரடிக் குடியரசுத் தலைவர் க்ளிண்டன் மிகக் கேவலமான பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி, இம்பீச் ஆகும் அளவுக்கு போனார். அழமாட்டாக் குறையாய் தன் மனைவியின் காலில் விழுந்து, பிழைத்துப் போ என்ற அளவில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இம்பீச்மெண்டால் பதவி போகாமல் தப்பினார். இது வரை இம்பீச் செய்யப்பட்ட இரண்டு அமெரிக்க குடியரசுத் தலைவர்களுமே டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். நிக்ஸன் இம்பீச்மெண்ட் ப்ராசஸ் ஆகும்போதே ராஜிநாமா செய்து, அடுத்து வந்த ஜனாதிபதியின் மன்னிப்பையும் பெற்றார் என்பது உண்மையானாலும், நான் ஏற்கனவே மேலே கூறியபடி வாட்டர்கேட் விவகாரம் க்ளிண்டன் செய்த குற்றத்தின் எதிரில் ஒன்றுமேயில்லை என்றுதான் கூற வேண்டும்.

இப்போது ஒபாமாவையே எடுத்து கொள்வோம். இரண்டே இரண்டு ஆண்டுகள்தான் அமெரிக்காவில் செனட்டராக இருந்திருக்கிறார். அவரது ரிகார்டுகள் அதிகம் இல்லை. ஆனால் அவரது ஆதரவாளர்கள் சர்ச்சைக்குரியவர்கள். அது தெரிந்து தற்சமயம் அவர்களைத் தவிர்த்து வருகிறார். தான் எலெக்ட் ஆனால் அவர்களைத் திரும்ப அழைத்து கொள்ள மாட்டார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இஸ்ரேல் விஷயத்தில் அவரது நிலைப்பாடு சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது. இந்த டோண்டு ராகவனைப் பொருதவரை அது ஒன்றே போதும் அவரை எதிர்ப்பதற்கு. கூடவே டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர் வேறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சினிமா படங்கள் சில ஏன் இன்னும் மனதில் நிற்கின்றன? (தெய்வச் செயல்களால் நிகழ்த்தப்படும் அற்புதங்கள்)

குடும்பப் பாடல், பழைய நினைவுகள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக வருவன தெய்வச் செயல்களால் நிகழ்த்தப்படும் அற்புதங்கள்.

சமீபத்தில் 1977-ல் வந்த "அமர், அக்பர், ஆண்டனி" என்ற ஹிந்தி படத்தில் கதாநாயகர்களின் பார்வையற்ற அம்மா (நிரூபா ராய்) (படத்தின் ஆரம்ப காட்சியிலேயே, அதாவது இருபது ஆண்டுகளுக்கு முன்னாலேயே அவர்களை பிரிந்து விடுகிறார்) சாயிபாபா கோயிலுக்குள் வர, பின்னால் துரத்தி வந்த வில்லன்களை (ஜீவன், ரஞ்சீத்) மரத்தின் கிளையிலிருந்து கீழே தொங்கிய பாம்பு ஒன்று தடுக்கிறது. உள்ளே கடைசி பிள்ளை ரிஷி கபூர் (இஸ்லாமியர் ஒருவர் அவரை இசுலாமியராக வளர்க்கிறார்) ஷிர்டி சாயிபாபாவுக்கு பாடலால் ஆராதனை செய்ய, சாயிபாபா சிலையின் கண்களிலிருந்து அருள் ஒளி ஸ்லோ மோஷனில் வந்து, அப்பெண்மணி பார்வை பெற்றபோது மகிழ்ந்து கைதட்டியவர்களுள் நானும் ஒருவன். இப்போது கூட அப்படம் டி.வி.யில் வரும்போது அக்காட்சிக்காக காத்திருப்பது என் வழக்கமே.





இந்த கடவுள் அற்புதங்கள் விஷயத்தில் நம் தமிழ்ப் படங்கள் மட்டும் பின்வாங்குமா என்ன? சமீபத்தில் 1969-ல் வந்த துணைவன் படத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாத சௌகார் ஜானகி கணவனது திருப்திக்காக அவருடன் தங்கள் குழந்தை குணம் பெற வேண்டி அறுபடை வீடுகளுக்கும் யாத்திரை வருகிறார். எல்லா அற்புதங்களுக்கும் கட்டியம் கூறுவதுபோல அதுவரை கருப்பு வெள்ளையாக இருந்த படம் பளீரென கலரில் மாறியது கண்கொள்ளா காட்சி. மருதமலைக்கு வந்த இடத்தில் குழந்தைக்கு முன்னால் பாம்பு ஒன்று படமெடுத்து நிற்க, சௌகார் ஜானகி தன்னையும் மீறி முருகா குழந்தையைக் காப்பாற்று எனக் கதற, சற்று தூரத்தில் மரத்தின் மேலிருந்த மயில் ஒன்று ஜிவ்வென்று எழும்பி பறந்து நேராக வந்து பாம்பை கொத்திச் செல்ல, சௌகார் ஜானகியின் நாத்திக மனப்பான்மை தூள் தூளாகிறது. உடனேயே மருத மலையானே என்று துவங்கும் பாடல் கடைசியில் கிட்டத்தட்ட திருச்செந்தூரில் குழந்தை குணமடையும் போதுதான் நிற்கிறது. ஏ.வி.எம். ராஜன் உணர்ச்சி பொங்க நடித்ததை ஹிந்தியில் (படம்: மாலிக்) ராஜேஷ் கன்னா காப்பியடிக்க முயன்று படுதோல்வியடைந்து இருந்த பெயரையும் கெடுத்து கொண்டு போனார் என்பதை இங்கே போகிற போக்கில் காதில் போட்டுவிட்டு போகிறேன். எவ்வளவு முயன்றும் மயில் பாம்பை எடுத்து போகும் விஷ்வல் கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.

இதெல்லாம் கூறும்போது சமீபத்தில் 1959-ல் சென்னையில் திரையிடப்பட்ட சிசில் பி. டிமில்லியின் "பத்து கட்டளைகள்"படத்தில் செங்கடலை மூஸா பிளக்கும் அந்த அற்புதத்தை காட்டாமல் போவானா இந்த தீவிர இஸ்ரேலிய ஆதரவாளன் டோண்டு ராகவன்?



அந்தக் காட்சிக்கும் அவனும் எல்லோருடனும் சேர்ந்து கைதட்டினான் என்பதைக் கூறவும் வேண்டுமோ? எகிப்து மன்னனின் படைகளை நெருப்பு சுவர் தடுக்கும் சீனை பார்த்தால் "அமர் அக்பர் ஆண்டனி" படத்தில் நான் மேலே குறிப்பிட்ட பாம்பு வரும் சீனின் இன்ஸ்பிரேஷன் எது என்பதை புரிந்து கொள்வதில் என்ன சிரமம்? ஆனால் இங்கு யாஹ்வே தனது நகைச்சுவை உணர்வையும் காட்டியுள்ளார். இஸ்ரவேலர்கள் பாதிக் கடலைக் கடக்கும்ப்போது வேண்டுமென்றே நெருப்புச் சுவரை விலக்கிக் கொள்ள கடல் மட்டும் அப்படியே பிளந்த நிலையில் நிற்க, அதில் எகிப்து படைகள் உள்ளே செல்ல, எல்லா படைகளும் உள்ளே வந்ததும் கடல் மூடிக் கொள்ள, தனித்திருந்த அரசன் மட்டும் தலையில் கைவைத்துக்கொள்ள என்று சீன் மேலே செல்கிறது.

அடுத்ததாக மாயாஜாலக் கதைகளின் முறை (முக்கியமாக விட்டலாச்சார்யா என்பதை கூறவும் வேண்டுமோ, வேண்டாம், வேண்டாம்). அவற்றை அடுத்தப் பதிவில் பார்ப்போமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/10/2008

ஏன் இன்னும் இந்த அடிமை புத்தி?

சமீபத்தில் 1970-ல் வந்த மாட்டுக்கார வேலன் படத்தில் ஒரு காட்சி. எம்.ஜி.ஆர். படிக்காத கிராமத்தான் என்று நம்பிய லட்சுமியும் அவர் தோழிகளும் 'பட்டிக்காடா பட்டணமா' என்று பாடியவாறு கேலி செய்வார்கள். அது இரட்டை ரோல் படம். அவர்கள் கேலி செய்தது வக்கீலாக பிராக்டீஸ் செய்து கொண்டிருந்த எம்.ஜி.ஆர். அவர்களை. அவர் கோபத்துடன் "What nonsense is this"? என்று கத்தியவுடனேயே லட்சுமி "ஆகா நீங்கள் படித்தவரா" என்று மனம் உருகுவாராம், பிறகு காதலிப்பாராம். அதெல்லாம் எல்லா இரண்டாவது தமிழ் படங்களிலும் நடப்பதுதானே. ஆனால் அது இப்பதிவின் விஷயம் அல்ல. நான் குறிப்பிட நினைப்பது என்னவோ ஆங்கிலம் தெரிந்தவனே படிப்பாளி என்ற என்ணத்தைத்த்சான் சாடுகின்றேன்.

நான் சென்னை திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தவன். பத்தாவது வகுப்பு வரை தமிழில்தான் கல்வி. நல்ல ரேங்கில்தான் இருந்தேன். பத்தாம் வகுப்பில் பொறியியல் பாடம் எடுத்துக் கொண்டதால் எல்லாப் பாடங்களும் தமிழ் மொழிப் பாடத்தைத் தவிர ஆங்கிலத்தில்தான். ஆனால் நல்ல வேளையாக என்னுடையத் தாயாரும், என் எட்டாம் வகுப்பு ஆசிரியர் ஜயராம ஐயங்கார் அவர்களும் எனக்குக் கொடுத்த நல்ல ஆங்கில இலக்கண அடிப்படை என்னை ரொம்பக் கஷ்டப்பட வைக்கவில்லை. ரேங்கும் சிறிதுதான் குறைந்தது. ஆனால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முதலில் தயக்கமாகத்தன் இருந்தது. ஆங்கில மீடிய வகுப்புத் தோழர்கள் என்னுடைய இலக்கண சுத்தமான ஆங்கிலத்தை சிறிதே கேலி செய்தனர்.

பிறகு புதுக் கல்லூரியில் பி.யு.சி. படிக்கும்போதும், கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்தப் போதும் பிரச்சினை ஒன்றும் இல்லை. அதன் பிறகு ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் படித்தது ஒரு கனவு போல நடந்தது. ஆனாலும் ஒன்று. இப்போதும் எண்களைக் கூட்டும்போது அது என்னைப் பொறுத்தவரை தமிழில்தான் நிகழும். என்ன மொழியில் எந்தப் புத்தகம் படித்தாலும் என் மனத்திரையில் கருத்துக்கள் தமிழில்தான் வரும்.

இப்போது முக்கிய விஷயத்துக்கு வருகிறேன். பிரெஞ்சு அல்லது ஜெர்மன் பேசும் தொழில் நுட்ப வல்லுனர்கள் வரும் போது அவர்களுக்கு துபாஷியாக என்னைக் கூப்பிடுகிறார்கள். வந்தவர் அவருடைய நிறுவனத்தில் அடி மட்டத்தில் இருப்பார். ஆனால் அவருக்கு இங்கு அளிக்கப்படும் உபசாரங்கள்! வெள்ளைத் தோல் அல்லவா? ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குக் குறைந்து அவருக்கு ரூம் போட மாட்டர்கள். இந்திய நிறுவனத்தின் தலைமை நிர்வாகியே அவரை வரவேற்று அவருடன் குழைவார். எனக்கு சிரிப்புத்தான் வரும்.

நானும் சும்மா இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். என்னுடையத் தொழில் நுட்பப் பின்னணி எனக்கு நல்ல பலத்தைக் கொடுத்தது. வந்தவருக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை என்பதை உறுதியாக முதலிலேயே தெரியப் படுத்தி விடுவேன். வெளியூர்கள் சென்று அங்கு சில நாட்கள் தங்கும் நிலை வந்தால் நானும் வந்தவரின் அறைக்கு அடுத்த, அதே வசதிகளுடன் கூடிய அறையில்தான் தங்குவேன். இதைப் பற்றிப் பேசிய ஒரு வாடிக்கையாளருக்கு நான் இவ்வாறு நடந்துக் கொள்வதன் காரணத்தையும் கூறினேன். அவரும் என் கூற்றில் இருந்த நியாயத்தை ஒத்துக் கொண்டார்.

எர் இந்தியாவில் பயணம் செய்த என் நண்பன் அனுபவத்தை இப்போது குறிப்பிடுகிறேன். விமானப் பணியாளர்கள் வெள்ளைக்காரப் பயணிகளிடம் இளித்துக் கொண்டுப் பேசுவார்கள். இந்தியர்களை அலட்சியப் படுத்துவார்கள். ஏன் என்றுக் கேட்டால் அதுதான் நம் விருந்தோம்பல் என்றுக் கதை விடுவார்கள். புடலங்காய். வெளி நாட்டு விமான நிறுவனங்களிலும் இந்தியர்கள் என்றால் ஒரு அலட்சியம்.

அமெரிக்கத் தூதரகங்கள் வாசலில் தெருவில் நம்மவர்களைக் காக்க வைப்பார்கள். நாமும் வெட்கம் கெட்டு நிற்கிறோம். சென்னை ஜிம்கானாவில் இன்னும் தமிழ் நாட்டு வேட்டி சட்டைக்கு அனுமதியில்லை. நம் தமிழ் ஊடகஙளிலோ செய்திகள் வாசிப்பவர்கள் ஒரு முப்பது ரூபாய் கோட்டாவது (நன்றி சத்யராஜ்) போட்டுக் கொண்டுதான் வர வேண்டியிருக்கிறது. தமிழ்த் தலைவர்களில் ஜீன்ஸ்/கோட்டு சூட் போட்டுக் கொண்டு வரும் கோமாளிகளைப் பார்த்து அலுத்து விட்டது. பழைய தமிழ்ப் படங்களில் மேனேஜர் என்பவர் படபடக்கும் வெய்யிலிலும் சூட்டு, கோட்டு டை எல்லாம் கட்டிக் கொண்டுதான் காட்சி தருவார்கள். அதைப் பார்க்கும் எனக்கே வியர்த்து விறுவிறுக்கும். அவர்கள் எப்படித்தான் போட்டு கொள்கிறார்களோ. கேட்டால் அதுதான் அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கிறதாம். புடலங்காய்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது