அனானி (120 கேள்விகள் கேட்டவர்)101.நம்மிடயே வாழும் பலர் எதையோ பறிகொடுத்துபோல் எப்போதும் இருக்கும் போது ஒரு சிலர் சிரித்துக் கொண்டே வாழ்வில் வலம் வரும் வாழ்வியல் ரகசியம் தெரிந்தவர்களில், தாங்கள் சமீபத்தில் சந்தித்த நபர் யார். அவரைபற்றி சொல்லவும்?பதில்: இந்த விஷயத்தில் பளீரென நினைவுக்கு வருபவர் ஜெயமோகன் அவர்களே. அவர் வாழ்வியல் ரகசியத்தை கண்டுணர்ந்த, நான் அறிந்த சிலரில் முக்கியமானவர். அவரைபற்றி நான் கூறுவதைவிட அவரது
இப்பதிவே கூறும். இதுபோல அவர் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறார்.
102. திருமங்கல இடைத் தேர்தலில் அதிமுகவை விட, திமுக ஆள் பலம், அதிகார பலம்,பண பலம்,பிரச்சார பலம், செய்து ஊடக பலம் போன்றவற்றை பெற்று, தெம்பாய் இருப்பது அங்குள்ள மக்கள் மனநிலையை தனக்கு சாதகமாக்கி கொள்ளுமா? கவுத்து விடுமா?பதில்: மன்னிக்கவும் இக்கேள்வியின் முறை வருவதற்கு முன்னாலேயே தேர்தல் வந்து முடிந்து விட்டது. இது பற்றி சோ அவர்கள் துக்ளக் ஆண்டுவிழா மீட்டிங்கில் சொன்னதை எனது அதற்கான பதிவுகளில் பார்த்து கொள்ளுங்கள். எனது கருத்தும் அதுதான்.
103. திருநெல்வேலி என்றால் அல்வா,மதுரை என்றாலே மல்லிகைப் பூ இப்படி பிற நகரங்களின் சிறப்பை எழுதவும்? பதில்:
பொன்னு வெளையற பூமியடா வெவசாயத்தை பொறுப்பா கவனுச்சு செய்யுறோமடா
உண்மையா உழைக்கிற நமக்கு எல்லா நன்மைகளும் நாடி வந்துகூடுதடா..
மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு
ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு செல்லக்கண்ணு
கருதை நல்ல வெளையச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு செல்லக்கண்ணு
( என்றா.. பல்லக்காட்ட்ற... அட தண்ணிய சேந்து...)
பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு செல்லக்கண்ணு
சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு
படம் : மக்களைப் பெற்ற மகராசி; வருடம் : (சமீபத்தில்) 1957; பாடலை இயற்றியவர் : மருதகாசி; பாடலைப் பாடியவர் : T.M.சவுந்தர்ராஜன்; பாடலுக்கு இசை அமைத்தவர் : கே.வி.மகாதேவன்; ராகம் : சிந்து பைரவி; இயக்கியவர் : ஏ.பி.நாகராஜன்; நடித்தவர் : நடிகர் திலகம் சிவாஜி கணேசன்; தயாரிப்பு : நடிகர் வி.கே.ராமசாமி
104. பொதுவாய் காதல் திருமணங்கள் முதலில் இனித்து பின் கசக்கிறது.காதல் திருமணம் செய்து முழுவதும் இனிப்பாய் வாழ்ந்த தம்பதியினர் யார்?பதில்: சாதாரணமாக காதல் திருமணம் என்பது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ஆரம்பிக்கிறது. அதனால்தான் சிறிதளவு ஏமாற்றம் வந்தாலும் தாங்க முடிவதில்லை. எப்படிப்பட்ட காவிய காதலாயினும் தினசரி உப்பு மொளகாய் பிரச்சினையில் மங்குவது சகஜமே. பிறகு பிரச்சினைகளில் ஆழ்ந்து ஒன்றாகப் போராடி முன்னுக்கு வரும் நிலையிலேயே எம்மாதிரி திருமண வாழ்க்கையுமே இனிக்கும். அம்மாதிரி வாழும் பலரை எனக்கு தெரியும். ஆனால் அவர்கள் பெயரை சொல்வது அவர்களது ப்ரைவசியை பாதிக்கும்.
105. தமிழ் இலக்கிய உலகில் ஒரு ஜாம்பவானாய் இருந்து, கம்பராமயணத்திலும் சீறாப்புராணத்திலும் நல்ல ஆளுமை பெற்றிருந்தை போல் இன்றய இலக்கிய உலகில் இனம், மதம் தாண்டி இலக்கியச் சேவை ஆற்றும் பண்பாளர் யாரும் உள்ளனரா?பதில்: உங்கள் கேள்வியில் நீங்கள் யாரையோ உதாரணம் காட்ட நினைத்து விட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன். அது நீதியரசர் மு.மு. இஸ்மாயில் என்பது என் யூகம். கலையுலகில் ஜேசுதாஸ் (அய்யப்பன் பாடல்கள், குருவாயூர் கோவில் பாடல்கள்), ஷேக் சின்னமௌலானா சாஹேப் (திருவரங்கம்) ஆகியோரை கூறலாம்.
106. இந்தியாவில் குடி அரசு தினம், சுதந்திரம் தினம் முதலிய கொண்டாட்டங்களில் ஆண்டுக்கு ஆண்டு ராணுவப் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் கூடி கொண்டே போகிறதே? இப்படியே போனால்?பதில்: கவலை கொள்ள வேண்டிய நிலைமைதான். ஆனால் வேறு வழியில்லை.
107. சென்னையில் தற்சமயம் மின்தடை எப்படி உள்ளது. இன்வெர்ட்டர் வசதி உங்கள் இல்லத்தில் உண்டா?பதில்: இப்போது அவ்வளவாக இல்லை. பொதுவாக சென்னை என எடுத்து கொண்டால் தமிழகத்தின் மற்ற ஊர்களைவிட இங்கு மின்வெட்டு குறைவு என்றுதான் கேள்விப்படுகிறேன். எங்கள் வீட்டில் இன்வெர்டர் கிடையாது.
108. குடும்ப சூழ்நிலையில் வாழும் பேரிளம் பெண்களும் பூயுட்டி பார்லருக்கு படையெடுப்பது பற்றி கமெண்ட் என்ன? காலம் மாறி காசை கரைக்கிறாதா? இது சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்கள் புண்ணியமா?பதில்: இதில் பெண்ணென்ன, ஆணென்ன. வசதி உள்ளவர்கள் போகிறார்கள். நமக்கு என்ன கமெண்ட் இது பற்றி இருக்க இயலும்?
109. மாமியார் vs மருமகள் சண்டை போல் மாமனார் vs மருமான் சண்டை வருவதில்லையே?பதில்: மாமனும் மருமகனும் தத்தம் மனைவியரிடம் வாங்கும் உதை பற்றி பேசி ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்வதால் வேண்டுமானால் நீங்கள் சொல்வதுபோல இருத்தலுக்கு காரணமாக இருக்கலாம்.
110. செய்தி மற்றும் ஊடகத்துறையின் அபாரவளர்ச்சியின் பயனாய் வந்து விழும் தகவல்கள், சில சமயம் பல தீமைகளை அள்ளித் தெளித்து விடும் பாதகச் செயல் நடந்துவிடுகிறதே?பதில்: எல்லா முன்னேற்றத்திலும் சாதகம் மற்றும் பாதகம் உண்டு.
111. இலங்கைதமிழர் பாதுகாப்பு நிதிக்கு மொத்தம் சேர்ந்த தொகை எவ்வளவு? அதிகத் தொகை அள்ளிக் கொடுத்தவர் யார்?பதில்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு பெற வேண்டிய தகவல்.
112. தமிழ் திரைப்பட பாடல் எழுதும் கவிஞர்களில் இப்போது படுபிசி யார்?பதில்: வைரமுத்து என நினைக்கிறேன். நம்ம பிளாக்கர்களிலேயே ஒரு பாடலாசிரியர் இருக்கிறார். மெட்டி ஒலி சீரியலில் வரும் “மன்சே மனசே” என்னும் பாடலை எழுதியவர். அவர் பெயர் மறந்து விட்டேன். அவரைக் கேட்டால் இதற்கு விடை தெரியலாம். இல்லாவிட்டால் லக்கிலுக் அல்லது உண்மைத் தமிழனை கேட்கலாம்.
113. இந்தியத் திரையுலகில் இன்று 'நம்ப்ர் ஒன்' இயக்குனர் யார்? திறமையும், வெற்றியும், வருமானமும், புகழும் ஒருங்கே பெற்றவர்பதில்: என் மனதுக்கு தோன்றுவது கே. பாலச்சந்தர்தான். இன்னும் அதிக பெயர்களுக்காக இக்கேள்வி லக்கிலுக், கேபிள் சங்கர், பாலபாரதி ஆகியோருக்கு அனுப்பப்படுகிறது. பின்னூட்டங்களில் இவை வந்தாலும் ஏற்புக்குரியதே. (இக்கேள்வி பதில் கூறாமல் விட்டுப் போனதை சுட்டிக் காட்டியவருக்கு நன்றி).
114. தற்கால மக்களில் படிக்காத பாமரர்களிடம் கூட விழிப்புணர்வு கூடியுள்ளதே?பதில்: எளிய மக்களும் பத்திரிகை படிக்கும் அளவுக்கு எளிமையாக தந்த சி.பா. ஆதித்தனார் தயவில் ஒரு தலைமுறையே செய்திகளை படித்து அறிந்தது. இப்போது அதே எளிமையுடன் தொலைக்காட்சி செய்திகள் அதிகரித்து விட்டன. விழிப்புணர்வு கூடுவதற்கு கேட்பானேன்.
115. அரசியலில் முதியவர்கள் இளைஞர்களுக்கு தானாக வழிவிடமாட்டார்கள் போலிருக்கே?பதில்: யார் யாருக்கு வழிவிடுவது? முன்னேறுவதற்கான ஊக்கம் இருப்பவர்கள் இதையெல்லாம் எதிர்பார்க்கலாகாது.
116. விரசமும் ஆபாசமும் கொடிகட்டி பறக்கும் திரைப் படப்பாடல் வரிகளுக்கு தணிக்கை இருக்கிறதா?பதில்: இருக்கிறது என சொல்லி கொள்கிறார்கள். உதாரணத்துக்கு சுமைதாங்கி படத்தில் வரும் “எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி” எனத் துவங்கிய பாடலை ரேடியோவில் கேட்டிருப்பீர்கள். அதையே சினிமாவில் பார்க்கும் போது “எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி” என்று வருவது சென்சார் செய்த பிரச்சினையால்தான். இந்த மாதிரி பல உதாரணங்கள் சொல்லலாம். ஆனால் ஒன்று இம்மாதிரி சில படங்களுக்கு மட்டும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்ப்பார்கள். அதே சமயம் “குருவி கடைஞ்ச கொய்யாப்பழங்களை” விட்டு விடுவார்கள்.
117. டைரக்டர் சிகரம், டைரக்டர் இமயம் ஒப்பிடுக?பதில்: இருவரும் சேர்ந்து நடிக்கும் ரெட்டச்சுழி என்னும் படத்தை பார்த்து ஒப்பிடலாமே.
118. காஞ்சி மட வழக்கு எந்த நிலையில் உள்ளது? தீர்ப்பு எப்போது?பதில்: இப்போதுதான் சாட்சிகளை பதிவு செய்வது முடிந்து அவர்களை விசாரணை செய்வது ஆரம்பித்திருப்பதாக இம்மாதிரி விஷயங்களை அதிகம் தெரிந்து வைத்திருக்கும் ஒரு இணைய நண்பர் எனது இது சம்பந்தமான கேள்விக்கு பதில் கூறியுள்ளார். அவர் யார் எனப்தை அவர் அனுமதி இல்லாமல் கூறுவதற்கு இல்லை.
119. சினிமா இயக்குனர்களில் நடிக்க வந்தவர்களில் பெரும் வெற்றி பெற்றது யார்?பதில்: மணிவண்ணன், ராமராஜன், ஆர். சுந்தரராஜன், பார்த்திபன், பாக்கியராஜ், சுந்தர் சி. என பெரிய பட்டியலே உள்ளதே. மேற்கொண்டு பெயர்களை பின்னூட்டங்களில் பதிவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். (ஆண்பாவம் பாண்டியராஜனின் பெயரை சேர்க்கிறேன்.மேலும் பெயர்கள் வரவர இம்மாதிரி சேர்க்கப்படும். அவ்வாறு சொல்பவர்களுக்கு நன்றி).
120. நெஞ்சு வலியின் அடையாளங்களும், வாயுத் தொல்லையின் அறிகுறிகளும் ஒன்றாமே? இசிஜி தான் நல்ல பதிலாம்?பதில்: அந்த இசிஜியும் Treadmil சோதனைக்கு பிறகு நிற்க வைத்து எடுக்க வேண்டும். சாதாரணமாக படுக்க வைத்து எடுக்கப்படும் ஈசிஜீ நார்மலாக இருப்பதாகவும் ஆகவே பிரச்சினை இல்லை என்று சொன்ன ஒருவர் இரண்டே மாதங்களில் மாலை போடப்பட்ட படத்தை அலங்கரித்ததது பற்றி சுஜாதா அவர்கள் எழுதி விட்டார்.
சகதமிழ் மொழிபெயர்ப்பாளர் பொன்னன் (மின்னஞ்சல் மூலம்) கேட்டது (இவரும், இன்னொருவரும் நானும் சேர்ந்துதான் ப்ரோஸ்காம் தலைவாசலை தமிழுக்கும் கொண்டு வந்தோம்): 1. தமிழ்ப் பெயரை சூட்டிக்கொள்வதை குறித்து பொது இடங்களில் கருணாநிதி பேசியிருப்பதை குறித்து உங்கள் கருத்து?பதில்: அவர் இது பற்றி எங்கு எப்போது என்ன கூறினார் என்று கூற இயலுமா பொன்னன் அவர்களே?
2. வாழ்க்கையில் பெண்கள் எதை சாதிக்க வேண்டும்?பதில்: இதில் ஆணென்ன, பெண்ணென்ன? மனதுக்கு நிறைவான செயலாக்கத்துடன் வாழ வேண்டும்.
3. உங்கள் வாழ்க்கையில் இந்த புளோக் என்ற ஒன்று இல்லாவிட்டால்?பதில்: பிளாக் என்ற ஒன்றை அறியும்போது எனது வயது 58-க்கும் மேல். ஆகவே அதை நான் பார்க்காதிருந்தால், அந்த 58 ஆண்டுகள் வாழ்ந்ததை போல வாழ்ந்து கொண்டிருப்பேனாக இருந்திருக்கும். என்ன, தமிழ் மொழிபெயர்ப்பு வேலைகள் என் வாழ்வில் வந்திராது. அனைத்துலக மொழிபெயர்ப்பு தலைவாசலாம் ப்ரோஸ் காமின் ப்ளாட்டினம் உறுப்பினர் ஆகியிருக்க இயலாது. உங்களை நண்பராக பெற்றிருக்க மாட்டேன்.
4. வாழ்க்கையில் எதை சாதித்தாலும் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறதே. அது இறைசிந்தனை இல்லாததுதானே?பதில்: இறை சிந்தனை என்பதை விட ஒருமுனைபட்ட சிந்தனை எனக் கூறுவது பொருத்தமாகும். சாதனைகளை பொருத்தவரை போதுமென்ற மனம் பொன் செய்யும் மருந்தல்ல. ஒரு சாதனை அடைந்தாயிற்றா, அடுத்த இலக்கு என்ன என்பதை உடனடியாக தீர்மானித்தல் அவசியம். முடிந்தால் ஒரு சாதனை எட்டுவதற்கு சற்று முன்னாலேயே அடுத்த இலக்கை தீர்மானித்து வைத்திருப்பது உத்தமம்.
5. தற்பொழுது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?பதில்: ஈழத்தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் “இப்ப அங்க என்ன நேரம்” என்னும் கட்டுரை தொகுப்பு. பா. ராகவனுக்கு நன்றி. அவர் பதிவில்தான் முதல்முதலாக இவரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
ராபின்ஹூட்:1. திரு.கருணாநிதி,ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆட்சியில் செய்த நல்ல விசயங்கள் சிலவற்றைக் கூறுங்கள்.பதில்: என்ன ஒப்பிடுதல் இது? போயும் போயும் பன்னீர்செல்வத்தையா நம்ம கலைஞருடன் ஒப்பிடுவது? கருணாநிதி அரசு செய்த காரியங்களில் எனக்கு பிடித்தவை சமத்துவபுரம் மற்றும் உழவர் சந்தை.
2. தாங்கள் வருமான வரி செலுத்துவது உண்டா? பதில்: கண்டிப்பாக. அது இல்லாமலா? செலுத்திவிட்டால் கிடைக்கும் நிம்மதியே அலாதிதான்.
எம். கண்ணன்:1. கடந்த 2- 3 வருடங்களாக இந்திப் படங்களின் வெளியீடுகள் மிகவும் அலப்பரையாக இருக்கிறதே ? ஓவ்வொரு படம் ரிலீசாவதற்கு சில வாரங்கள் முன்பிருந்தே ஒரேயடியாக ஆங்கில / இந்தி டிவி சேனல்களில் ஓவர் கவரேஜ் செய்கிறார்களே?பதில்: எல்லாம் பணம் செய்யும் மாயம். முன்னேல்லாம் கருப்பு வெள்ளை படங்களில் இருக்கும் எளிமை இப்போது இல்லை என்றெல்லாம் கூற மனம் விழைந்தாலும் முடிவதில்லை. இந்திப் படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் உண்டு. ஆகவே அங்கு எதையும் செய்தாவது தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தேவைப்படுகிறது. ஆகவேதான் அலப்பரைகள் அலம்பல்கள் உதார்கள் எல்லாம். மலையாளப் படங்கள் எளிமையாக இருப்பதன் காரணம் அங்குள்ள பணப்போக்குவரத்து குறைபாடுதான் காரணம் என்கிறார்
ஜெயமோகன். அக்கட்டுரை ஆழ்ந்து கவனிக்கத் தக்கது.
2. ஒரு சில படங்கள் தவிர இந்திப் படங்கள் எல்லாமே மேல்தட்டு மல்டிபிளக்ஸ் ஆடியன்ஸை வைத்தே எடுக்கப் படுகிறது போலுள்ளதே ? உ.பி, பீகார், ம.பி,ராஜஸ்தான், போன்ற பீமாரு பிரதேச இந்திக்காரர்களின் கதைக்களத்தில் எந்தப் படமும் வருவது போல் தெரியலையே?பதில்: உபி, மத்தியப்பிரதேசம் ஆகிய இடங்களுக்குள் போய் பார்த்திருக்கிறீர்களா? அங்கெல்லாம் ஓடும் படங்களே அலாதிதான். ஜய் சந்தோஷி மா என்னும் படம் சமீபத்தில் எழுபதுகளில் ஓடி வசூலை அள்ளியது. அதைப் பார்த்தால் ரொம்பவுமே குழந்தைத்தனமாக இருக்கும். நம்மூர் ஏ.பி.நாகராஜன் அவர்களது தரம் எல்லாம் அப்படத்தை எடுத்தவர்களுக்கு எட்டாக்கனி. அதை விடுங்கள் ஜய் ஷாகும்பரி மாதா என்னும் படம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? காய்கறிகளுக்கெல்லாம் அதிபதியாம். சுகேது மேத்தாவின் Maximum City என்னும் புத்தகத்தில் அப்படம் பற்றி எழுதியிருக்கிறார். அப்படம் பம்பாய்க்கு கூட வரவில்லை (இங்கு காய்கறிக்கு இறைவி தேவை இல்லை. வாடகைக்கு வீடு கிடைக்கச் செய்யும் இறைவிதான் தேவை என அவர் கிண்டலடித்துள்ளார். வட இந்திய பி அண்ட் சி செண்டர்களிலேயே ஓடி பணம் சம்பாதித்து விட்டது. ஆக நீங்கள் குறிப்பிடும் படங்கள் நகர்வாழ் பார்வையாளர்களுக்கு கிடைக்காது.
3. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் கூட இல்லாத நிலையில் அத்வானி ஏன் இன்னும் கூட்டணி உருவாக்குவதில் வேகம் காட்டவில்லை? கூட்டணி வைத்தால் தான் வெற்றி என்ற நிலை நாடு முழுவதும் வந்து விட்ட இந்தக் காலத்தில்?பதில்: அகில இந்திய நிலை பரவாயில்லை. தமிழகத்தில் என்னவோ பாஜக ஐயோ பாவம் கேஸ்தான். அவர் என்ன கூட்டணிக்கு மாட்டேன் என்றா கூறுகிறார்? தமிழக கட்சிகள்தான் பாஜக என்றாலே தூர ஓடுகின்றன. ஒரு வேளை மத்தியில் பாஜக ஜெயிக்க வேண்டும் என இங்குள்ள கட்சிகள் எதிர்பார்க்கின்றனவோ என்னவோ, நான் அறியேன். இதற்குத்தான் தமிழில் ஒரு சொலவடை உண்டு, “கல்யாணம் ஆனாத்தான் பைத்தியம் தெளியும், பைத்தியம் தெளிஞ்சாத்தான் கல்யாணம் நடக்கும்” என்று.
4. அனில் அம்பானியும், சுனில் மிட்டலும், ரத்தன் டாட்டாவும் மோடி பிரதமராக வந்தால் நல்லது என விளம்பி இருக்கின்றனரே?பதில்: இந்த எலெக்ஷனில் அது சாத்தியமில்லை. மோடிக்கு இன்னும் நேரம் இருக்கிறது. முதலில் மத்திய மந்திரியாகி தனது அமைச்சகத்தை கன் பாயிண்டில் வைக்க வேண்டும். ஆனால் அதற்கு பிரதமர் ஆதரவு தேவை. இப்போதைக்கு அவர் சேவை குஜராத்துக்குத்தான் அதிகம் தேவை என நான் நினைக்கிறேன்.
5. வலைப்பதிவு உலக கிசுகிசு ஒன்று சொல்லுங்களேன்?பதில்: மேலே சங்கராச்சாரியார் சம்பந்தப்பட்ட கேள்விக்கு எனக்கு விவரம் தந்தவரின் பெயரை நான் கூறவில்லை. அதையே கிசுகிசுவாக வைத்து கொண்டு அவர் யார் என கண்டு பிடியுங்களேன். கார்த்திகேயன் அருள் இருந்தால் கண்டு பிடிக்கலாம்.
6. உங்களின் அன்றாட உணவு வகைகள், நேரங்கள் என்னென்ன? நடைபயிற்சி தவிர உணவுக்கட்டுப்பாடும் உண்டா?பதில்: பசித்து உண்பதுதான் சரி. உணவு உண்ணும் வேளை வரும்போது பசிக்காமல் இருந்தால் அந்த வேளை உணவை தியாகம் செய்வது நலம். ஆனால் ஒன்று, இம்மாதிரி பசியின்மை தொடர்ந்து வந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
7. டாக்டர் பிரகாஷ் விவகாரத்தில் ஒரு பிரபலத்தின் மகளும் சிக்கிக் கொண்டதால்தான் அவருக்கு அவரச அவசரமாய் திருமணம் நடத்தப்பட்டதாமே?பதில்: தெரியாது, தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை.
8. டி.எம்.எஸ் பாடிய பாடல்களில் பிடித்த 5 பாடல்கள் எது? ஏன்?பதில்: ரொம்ப கஷ்டமான கேள்வி. இருந்தாலும் முயற்சி செய்கிறேன். 1.
நூறாயிரம் பார்வையிலே (படம் வல்லவனுக்கு வல்லவன்)
2.
நல்ல பேரை வாங்க வேண்டும் (படம் நம்நாடு. இரு குழந்தைகளில் சின்ன குழந்தை யார் என்று தெரிகிறதா)?
3. கொடுத்ததெல்லாம் கொடுத்தான் (படம் படகோட்டி)
4. அவள் பறந்து போனாளே (படம் பார் மகளே பார்)5. கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா (படம் ஆலயமணி)காரணம்? அப்பாடல்களை நீங்களே கேளுங்களேன்.
9. ஜப்பான் சென்றுள்ள லாலு பிரசாத் புல்லட் ரயிலில் சென்று வந்துள்ளாரே ? இந்தியாவிலும் புல்லட் ரயில் விடப்போகிறாராமே? நிஜமாகவே நடக்குமா?பதில்: லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சகத்துக்கு ஒரு pleasant surprise. அவர் மனது வைத்து, அரசும் ஒத்துழைப்பு தந்தால் நிஜமாகவே நடக்கும். இந்த திறமை விஷயத்தில் அவர் மோடியுடன் ஒப்பிடக் கூடியவர். ஆனால் லஞ்ச ஊழல் புகார்கள் அவருக்கு இழுக்கு தருகின்றன.
10. ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள நம் தமிழக அரசியல்வாதிகள் - அதை எவ்வாறு ஆப்பரேட் செய்கின்றனர்? பணத்தேவை ஏற்படும் போது எந்த ரூட்டில் அந்தப் பணம் இங்கு வருகிறது ? டெபாசிட் செய்யும் போது எப்படி ஸ்விஸ்க்கு செல்கிறது?பதில்: கிழிஞ்சுது லம்பாடி லுங்கி என ஒய்.ஜி. மகேந்திரன் ஒரு படத்தில் கூறுவார். என்னைப் போய் இந்த கேள்வி கேட்கலாகுமா? எனக்கு எப்படி தெரியும்? பாஸ்போர்ட் கூட கிடையாது என்னிடம். (பை தி வே நான் சொன்ன அந்த மகேந்திரன் படம் ரஜனிகாந்த், ராதிகா, கார்த்திக், சங்கராபரனம் துளசி ஆகியோர் நடித்தது. “என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்த மானே” என்ற இனிமையான பாடல் அதில் வரும். படத்தின் பெயர் தெரியவில்லை. யாராவது கூற இயலுமா)?
விஜய்:1. ஒபாமாவின் பதவியேற்பைப் பார்த்தீங்களா?பதில்: லைவாக பார்க்கவில்லை. மறந்து விட்டேன். அடுத்த நாள் காலை செய்திகளில் பார்த்தேன்.
2. பதவியேற்பு உரை பிடித்ததா?பதில்: ஒரு கருத்தும் இல்லை, ஏனெனில் பார்க்கவில்லை.
3. என்றைக்கு நம் நாட்டு பிரதமரும் இப்படி உணர்ச்சி பூர்வமாகப் பேசும் (யாரோ எழுதிக் கொடுத்ததைப் பார்த்துப் படிக்காமல்) தருணம் வரும்? பதில்: அப்படித்தான் என்பதை நீங்கள் அறிவீர்களா? அப்படியே பார்த்து படித்தாலும் என்ன தவறு? அவர் என்ன சொல்கிறார் என்பதுதானே முக்கியம்?
4. நம் நாட்டு தொல்லைக் காட்சி சானல்கள் அனைத்தும் கறுப்பு அதிபர் கறுப்பு அதிபர் என்று ஏன் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்? ஆனால் CNNஓ, BBC'ஓ அப்படிச் சொல்ல வில்லையே?பதில்: இல்லையே சொன்னார்களே, ஆங்கிலத்தில். The first Black to be a president என்று சொல்வதை நானே கேட்டேனே.
5. இன்னமும் ஒபாமா மீதான காண்டு தீரவில்லையா?பதில்: அவர் மேல் எனக்கு என்ன காண்டு இருக்க முடியும்? அவருடன் எனக்கு ஏதேனும் வாய்க்கால் வரப்புத் தகராறா என்ன? ஆனால் நான் ஏற்கனவே கூறியபடி
அமெரிக்காவில் நான் ரிபப்ளிகன் கட்சியைத்தான் எப்போதுமே ஆதரிப்பது அப்படியேதான் உள்ளது. பார்ப்போம். இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கு பிறகு நான் அதிகமாக விரும்பும் நாடு அமெரிக்கா. அது நன்றாக இருக்க வேண்டுமெனத்தான் நான் விரும்புகிறேன். அப்படியே ஒபாமா அமெரிக்காவை முன்னுக்கு கொண்டு வந்து நான் கூறியது தவறு என நிறுவப்பட்டால் அதற்காக என்னைவிட வேறு யாருமே மகிழ்ச்சி அடைய இயலாது.
6. பதவியேற்கும் போது முதல் இரண்டு வார்த்தைகள் ஒழுங்காக வராமல் தடுமாறினாரே கவனித்தீர்களா? பதில்: என்னதான் இருந்தாலும் மேடை பயம் யாரை விட்டது?
[நான்கு பதிவுகளாக 120 கேள்விகள் கேட்ட அனானியின் கடைசி 20 கேள்விகளுக்கு இப்பதிவில்தான் பதிலளித்தேன். அவரேதான் இப்போது புதிதாக 25 கேள்விகள் கேட்டுள்ளார் என நினைக்கிறேன். எது எப்படியிருந்தாலும் அக்கேள்விகளை அடுத்த பதிவுக்கு அனுப்புகிறேன்].
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்