4/30/2012

எனக்கும் இசாக் அசிமோவுக்கும் உள்ள ஒற்றுமை - 2

இதன் முந்தையப் பதிவு போட்டு சற்றே  (2000 சொச்சம்) நாட்கள் ஆகி விட்டன. இப்போ என்னவாயிற்று எனக்கேட்கிறான் முரளி மனோகர். பொறு அப்பனே கூறாமலா போகப்போகிறேன். மேலும் நான் வேறு நீ வேறா என்ன?

ஐசக் அசிமோவ் ஒரு டிராமாவுக்கு போயிருக்கிறார் தன் மனைவியுடன். நாடகம் முடிந்ததும் அவர்கள் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அதே ஹோட்டலுக்கு அந்த நாடகக் குழுவினரும் வந்திருந்தனர். அவர்களுடன் பேச வேண்டும் என அசிமோவின் மனைவுக்கு நப்பாசை. “எனது மனைவிக்கு என் பிரசித்தம் மேல் அபார நம்பிக்கை”என விரக்தியுடன் எண்ணிய அசிமோவ் வேறு வழியின்றி தன் மனைவியுடன் சென்று அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் பயந்தது போலவே அசிமோவ் என்னும் பிரசித்தி பெற்ற எழுத்தாளரை அவர்கள் அறிந்திருக்கவிலை. நான் அசிமோவ் எனக் கூறிக்கொள்ள, அதுக்கு இப்போ என்ன செய்யணுங்கறீங்க என்னும் முகபாவத்தில் இருந்திருக்கின்றனர்.

அசிமோவுக்கு முகத்தில் டன் டன்னாக அசடு வழிய ஆரம்பித்திருக்கிறது. பேசாமால் பின்வாங்க எண்ணும் போது திடீரென நாடகக் குழுவின் தலைவர் அசிமோவின் மனைவியைப் பார்த்து “ நீ ஜேனட்தானே, இங்கே எங்கே வந்திருக்கே எனக் கேட்க ஆரம்பித்திருக்கிறார். பிறகுதான் அவரது அத்தையின் நாத்தனார் பெண் ஜேனட் என்பதையும் கூறினார்.

பிறகென்ன, இருவரும் தெரிந்தவர்கள் என்னும் முறையில் ஜேனட்டும் அவரும் பேச ஆரம்பித்தனர். ஜேனட் அசிமோவை தனது கணவர் என அறிமுகப்படுத்த அவரையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது பற்றி அசிமோவ் எழுதுகிறார், “ஒரு பிரசித்தி பெற்றவரது கணவராக இருப்பதன் அருமையை அறிந்து கொண்டேன்” என.

இப்போ என் கதை. சமீபத்தில் 1981-ல் ஐடிபிஎல்-ல் சேர்ந்த போது எனது மனைவி சென்னையில் இந்தியன் வங்கியில் வேலை செய்து வந்தார். எங்கள் ஐடிபிஎல்-ன் அக்கவுண்ட் இந்தியன் வங்கியிலும் இருந்திருக்கிறது. எங்கள் சம்பளங்களை கணக்கில் ஏற்றி எங்களுக்கு மாதா மாதம் சம்பளம் கொடுப்பதற்கெனவே இந்தியன் வங்கியின் விரிவாக்க சேவை கவுண்டர் எங்கள் ஐடிபிஎல் டவுன்ஷிப்பில் இருக்கிறது.

அந்த கவுண்டரின் தலைமை அதிகாரி என் மனைவிக்கு தெரிந்தவர். ஆகவே என் மனைவி சென்னையிலிருந்து ஒரு அக்கவுண்ட் திறக்கும் படிவத்தில் தன் பெயரையும் என் பெயரையும் நிரப்பி என்னிடம் கொடுத்து அனுப்பினார். நானும் குர்காவுனுக்கு வந்ததும் அந்த அதிகாரியைப் போய் பார்த்து அக்கவுண்ட் ஓப்பன் செய்தேன். என் மனைவியின் பெயரும் கையெழுத்தும் இருந்ததால் எனது அக்கவுண்ட் ஸ்டாஃப் அக்கவுண்டாக நிர்ணயிக்கப்பட்டு வட்டியும் அதிகமாகத் தந்தார்கள்.

பிறகு என் மனைவி தில்லிக்கே மாற்றிக் கொண்டு வந்து விட்டார். .எனக்கு ஸ்டாஃப் ஆகவுண்ட் ஸ்டேட்டஸ் கிடைத்ததால் குர்கான் இந்திய வங்கிக் கிளைக்கு நான் எப்போது சென்றாலும் எங்கிருந்தோவெல்லாம் என்னை விஷ் செய்வார்கள். என்னுடன் கூட வந்திருக்கும் சக ஐடிபிஎல் அதிகாரிகளுக்கு அது எப்போதுமே வியப்பைத் தோற்றுவிக்கும்.

இதைத்தான் செலிப்ரட்டியின் கணவனாக இருப்பதில் உள்ள சௌகரியம் என இசாக் அசிமோவைப் போலவே நானும் கூறிக் கொள்கிறேன்..

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/26/2012

டிஃபன்சிவ் டிரைவிங்

வண்டியோட்டிகள் கற்க வேண்டிய முதல் பாடம் சுயபாதுகாப்புடன் கூடிய வண்டியோட்டம். அதாகப்பட்டது சாலையில் உள்ள மற்ற வண்டியோட்டிகள், பாதசாரிகள் ஆகியோர் இடியட்ஸ், சும்பன்கள் என்ற உணர்வுடன் அவர்களது சொதப்பல்களையும் அவதானித்து ஒரு மார்க்கமாக செல்ல வேண்டும் என்பதே அது.

இது சம்பந்தமாக சீயட் கம்பெனியினரின் விளம்பரங்கள் நல்ல கற்பனை திறத்துடன் உள்ளன. முதல் படத்தைப் பாருங்கள்.

எச்சரிக்கைப் பலகை வைப்பவன் சொதப்பினாலும் வண்டியோட்டுபவர் சாக்கிரதையாகவே செயல்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாம் படத்தில் இரண்டு மாது சிரோன்மணிகள் வம்புப் பேச்சில் ஈடுபட குழந்தை ஸ்கூட்டரில் மாட்டிக் கொள்வதில் இருந்து தப்பிக்கிறது, சீயட்டின் உபயத்தால். இப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் என் மனைவிக்கு ஆத்திரம் வரும் பாருங்கள், “ஒவ்வொருத்தியையும் கன்னம் கன்னமாக இழைத்து அறைய வேண்டும்” என்பார்.

 

இன்னொரு நாதாரி செல்போனில் பேசிக் கொண்டே குழந்தையின் வண்டியை தள்ளிக் கொண்டு செல்லும் கூத்தையும் பாருங்கள்.

 

மற்றவர்களுக்கான பச்சை விளக்கை கவனிக்காமல் சென்றாலும் சம்பந்தப்பட்டவர் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் விதிதான்.ஆனால் ஒன்று, இந்த விளம்பரங்கள் சீயட் கம்பெனிய்ன் டயர்களுக்காத்தான் என்றாலும், கூடவே பொது நலன் பாதுகாக்கப்படுவதும் வெள்ளிடை மலை. சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனத்துக்கு பாராட்டுகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/24/2012

எந்த வேளையில் சாதியின் அவசியம் பற்றி பதிவு போட்டேனோ, தெரியவில்லை

சற்று நேரம் முன்னால் பிரபாகரன் என்பவர் ஃபோன் செய்தார். சற்று நேரம் கழித்து அஞ்சா சிங்கம் செல்வின் என்பவரும் ஃபோன் செய்தார்.

இருவருமே சொன்னது என்னவென்றால் நாளை காலை 9 மணிக்கு சத்யம் தொலைகாட்சியில் ஒரு கலந்துரையாடல் என்றும், லைவாக ஒளிபரப்பப்படும் என்றும் அதற்கு நானும் வரவேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது. நானும் ஒத்துக் கொண்டேன். பத்ரி அவர்களும் கலந்து கொள்கிறார்.

தலைப்பு: மக்கள் கணக்கெடுப்பு சாதிவாரியாகவும் செய்வது சரியா? நான் சரியே என வாதிடப் போகிறேன். நேரமிருப்பின் பார்க்கவும்.

எந்த வேளியில் சாதிகளின் அவசியம் பற்றி பதிவு போட்டேனோ தெரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/23/2012

சாதிகளின் அவசியம்சாதிகளின் அவசியம் என்னும் தலைப்பில் திண்ணை டாட் காம்-ல் மலர்மன்னன் அவர்கள் எழுதிய கட்டுரை


மலர் மன்னன் எனது நண்பர். அடிக்கடி ஃபோனில் பேசிக் கொள்வோம். அண்ணா பற்றிய அவரது இரு பதிவுகள் மற்றும் கோட்ஸே பற்றிய அவரது பதிவுகள் ஆகியவற்றை நான் அவரது அனுமதியுடன் எனது இந்த வலைப்பூவிலும் இட்டுள்ளேன். இப்போது இடவிருக்கும் அவரது கட்டுரை திண்ணையில் வந்தது. அதை அவரது அனுமதியுடனேயே இங்கேயும் இடுகிறேன்.

முதலில் மலர் மன்னன். இங்கு வரும் ”நான்” அவரையே குறிக்கும்.
சாதிப் பிரிவுகள் எதுவும் ஹிந்து சமய ஸ்ருதிகளிலோ ஸ்மிருதிகளிலோ குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஹிந்து சமூகத்தில் எப்படியோ பல நூறு சாதிகள் உட்பிரிவுகளுடன் காலங் காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றன. வருணாசிரம தர்மத்துக்கும் சாதிகளின் கட்டமைப்புக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று திரும்பத் திரும்ப நிரூபித்தாலும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இரண்டையும் ஒன்று படுத்திக் காட்டும் போக்கு இருந்துகொண்டுதான் உள்ளது.
ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் இருப்பதிலேயிருந்தே குண கர்ம விசேஷப் பிரகாரம் பிரிவுகள் அமைந்த வர்ணாசிரமத்துக்கும் சாதி அமைப்பிற்கும் சம்பந்தமில்லை என்பது உறுதியாகிறது. சில சாதிகள் குறிப்பிட்ட தொழில்களில் தேர்ச்சியுள்ள குழுக்கள் ஒருங்கிணைந்தமையால் தனி அடையாளம் பெற்று உருவாகியிருக்கின்றன. ஆனால் எல்லா சாதிகளுமே குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளதையொட்டி உருவானவையாகக் கொள்வதற்கில்லை. தமிழ்நாட்டில் இருந்த வலங்கை இடங்கை சாதிகள் தொழில்களின் அடிப்படையில் இனம் காணப்படவில்லை. 

ஒரு சாதி செய்யும் தொழிலை வைத்து அது வலங்கையிலோ இடங் கையிலோ சேர்க்கப்படவில்லை. சமூகத்தில் அவ்வப்போது நிகழும் கொந்தளிப்பின் விளைவாக சாதிகளின் மேலாதிக்கம் இடம் மாறி அதன் தாக்கம் வலங்கை, இடங்கைப் பிரிவுகளில் பிரதிபலித்திருக்கிறது. 

சாதிக் கட்டமைப்பு செங்குத்தாக மேலிருந்து கீழ் என்றில்லாமல் படுக்கைவாட்டில் அமைந்தமையால் அவ்வப்போது எதன் கை ஓங்குகிறதோ அது வரிசைக் கிரமத்தில் முன்னோக்கி நகர்வதும் பின்னுக்குப் போவதும் நிகழ்ந்திருக்கிறது. சாதிகள் அனைத்தும் சரிசமமான சமூக அந்தஸ்துள்ளவையாக இருந்தாலும் வரிசைக் கிரமத்தில் முதலாவது இரண்டாவது என்று அவ்வப்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப இடமாற்றம் செய்து வந்துள்ளன. 


ஒரு விளையாட்டில் நிகழ்வதுபோல் இது ஆரோக்கியமான போட்டியாக இருந்து சமயங்களில் விளையாட்டுகளிலுங்கூட பகைமையும் பொறாமையும் எப்படியும் முதல் இடத்தைக் கைப் பற்றியே தீர வேண்டும் என்கிற வெறியும் தோன்றிவிடுவதுபோலவே சாதிகளிடையேயும் வரிசைக் கிரமத்தில் முதலிடத்தைக் கைப்பற்றுவதில் தொடங்கும் போட்டி பகைமை வெறியில் முடிவதுமுண்டு.

சாதிகளிடையே வரிசைக் கிரமப்படி நிலைகளில் இடமாற்றங்கள் நிகழ்வதுதான் சாத்தியமாகியிருக்கிறதேயன்றி ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் இன்னொரு சாதிக்கு மாறுவது வெகு அரிதாகவே நிகழ்ந்துள்ளது. கள்ளர், மறவர், அகமடியர் மெள்ள மெள்ள வெள்ளாழர் ஆனாரே என்று ஒரு சொலவடை உண்டு. ஆனால் எல்லா சாதிகளிலும் இப்படி ஒட்டு மொத்தமாக சாதியை மாற்றிக் கொள்வது சாத்தியமாகியிருப்பதாகக் கூறுவதற்கில்லை.


உணவு விடுதியில் சமையற்காரராகவோ பரிசாரகராகவோ ஒரு பிராமணர் இருக்கையில் அந்த விடுதியின் உரிமையாளர் நாடார், ரெட்டியார் என எந்த சாதியினராகவும் இருக்கும் நிலை இன்று மாநகரங்களீல் உள்ளது. இந்த நிலவரத்தை எந்தத் துறையிலும் காணக் கூடிய நிலைதான் இன்று உள்ளது. முக்கியமாகத் தகுதியும் திறமையும் பொருளாதார மேம்பாடும் செல்வாக்கும் குறிப்பிட்ட ஒரு நபரை அவர் எந்த சாதியைச் சேர்ந்தவரானாலும் உயர் நிலைக்குத் தூக்கிக்கொண்டுபோய் விடுகிறது. அதுபோலவே ஒருவர் எந்த சாதியினராக இருந்தாலும் கீழ் நிலைக்குப் போய் விட நேர்கிறது. இத்தகையோர் வெறும் வறட்டு ஜம்பமாகத் தாம் உயர்சாதி என்று வேண்டுமானால் பெருமை பாராட்டிக் கொள்ளலாமேயன்றி உயர் சாதி என்று தலை நிமிர்ந்து நடமாடிக் கொண்டிருப்பது சாத்தியமில்லை. 


ஹிந்து சமுதாயத்தில் காலத்திற்கு ஏற்ப இயல்பாக நிகழ்ந்துள்ள மாற்றங்களுள் இதுவும் ஒன்று. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வு உணர்வை காணாமலடிக்கும் மந்திரக் கோல் இது. .காலப் போக்கில் சாதிகளிடையே உயர்வு தாழ்வு மனப்பான்மை மறைய இந்த மாற்றம் உதவும். ஆனால் உத்தியோகப் பதவிப் படிநிலைகள், பொருளாதாரம், அரசியல் முதலான காரணிகள் சமுதாயத்தில் உயர்வு தாழ்வு உணர்வைத் தோற்றுவித்துக் கொண்டுதான் இருக்கும். வாலு போச்சு கத்தி வந்தது என்கிற கதைதான்!
வர்ணாசிரமப் பிரிவில் உயர்வு தாழ்வு எதுவும் கற்பிக்கப்படவில்லை. சமூகத்திற்கு அந்தந்தப் பிரிவுகள் ஆற்ற வேண்டிய கடமைகளையே அது பேசுகிறது. மனித உடலில் எந்த உறுப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். உறுப்புகளுக்கிடையே உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்வது அறியாமை. அதேபோல் கடமை களிடையே ஏற்றத் தாழ்வென்பதும் இல்லை சமூகம் சீராக இயங்கிவர எல்லா உறுப்புகளும் நல்லபடியாக கவனித்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதோடு அவை ஆற்றும் கடமைகளும் சரிவர நிறைவேற்றப்பட வேண்டும். சமூகத்தை ஒரு விராட் புருஷனாகக் கற்பிதம் செய்து கடமைகளின் நிர்ணயம் சிரசு, தோள்பட்டை, வயிறு, கால்கள் எனக் குறியீடாகக் காட்டப் பட்டுள்தேயன்றி ஆரிய சமாஜத்தைத் தோறுவித்த சுவாமி தயானந்த சரஸ்வதி சொன்ன மாதிரி அவரவரும் பிறப்பது அவரவர் அன்னை யின் யோனியிலிருந்துதான். சமூகத்தின் சிறிதாக்கபட்ட வடிவமே குடும்பம். அதன் சிறிதாக்கப்பட்ட வடிவம் மனிதன். ஆகவேதான் சமுகத்தை ஒரு விராட் புருஷனாக, பிரமாண்ட மனித சரீரமாக உருவகித்துக்கொள்கிறோம்.


ஆக, உயர்வு தாழ்வு என்கிற பிரக்ஞையே சாதிகளின் கட்டமைப்பில்தான் அவற்றுக்கிடையிலான போட்டா போட்டிகளிருந்துதான் வருகிறது.இந்த சாதிகளுக்கிடையிலான உயர்வு தாழ்வு மனப்பான்மையை எப்பாடுபட்டாவது அகற்றிவிட்டால் எல்லாரும் ஓர் நிறை என்கிற நிலவரம் உருவாகிவிடும். இதற்காக மூட்டைப் பூச்சித் தொல்லைக்குப் பயந்து வீட்டையே கொளுத்துவதுபோல் சாதி களையே இல்லாமற் போகச் செய்ய வேண்டியதில்லை. அது சாத்தியமும் இல்லை.
நமது ஆன்மிகத் தத்துவ விசாரங்களின் விஷயத்திலும் இதுதான் எனது வழக்கமாக உள்ளது. ஒருமுறை மாயையை அறிதல் பற்றி எனது சாமானிய அறிவுக்கு எட்டியவாறு ஒரு கட்டுரை எழுதினேன் ஒரு தத்துவப் பேராசிரியர் அதற்கு எதிர்வினை செய்கையில் ஒரு கோணத்தில் என் கருத்து சரியாகத் தோன்றினாலும் தத்துவ வரம்புக்கு அது உட்பட்டதல்ல, தவறான புரிதலுக்கு இடமளித்து விடும் என்ற கருத்துப்பட எழுதியதாகச் சொன்னார்கள். பேராசிரியர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும், அவர்கள் இலக்கண பூர்வமாக ஒரு வரம்புக்கு உட்பட்டுத் தாம் கற்ற சூத்திரங்களுக்கு ஏற்பவே பாடம் நடத்துபவர்கள்; ஆதலால் எந்தவொரு பொருளைப் பற்றி அவர்கள் பேசினாலும் அதன் இலக்கண வரம்புக்கு உட்பட்ட தாகத்தான் இருக்கும், நான் சொல்வது என் சாமானிய அறிவுக்கு எட்டிய பிரகாரம் இருப்பதால் தவறாகப் போய்விட வாய்ப்புண்டு என்று சொன்னேன். அதேபோல இப்போது நான் வெளியிடும் சாதிகளைப் பற்ரிய என் கருத்தும் பகிர்ந்து கொள்ளப்படுவதற்காகவே யன்றி, எதையும் புகட்டுவதற்காக அல்ல.


எவ்வித நியாயமோ காரணமோ இன்றித் தலைவிரித்தாடும் சாதி வெறியைச் சில பகுதிகளில் கண்டு எரிச்சலடைந்து இந்த உயர்சாதி கீழ்சாதி உணர்வு போனால்தான் ஹிந்து சமுதாயத்திற்கு விடிவு பிறக்கும் என்று சொல்வதற்கு மாறாக சாதிகளே ஒழிந்து போய்விட வேண்டும், அது இருப்பதால்தான் உயர்வு தாழ்வு என்கிற பேத உணர்வு தலையெடுக்கிறது என்று நானும் பேசியதும் எழுதியதும் உண்டுதான். ஆனால் யோசிக்கும் வேளையில் ஹிந்து சமுதாயத்தின் நலனைக் காப்பதற்கான வழி சாதிகளிடையே காணப்படும் உயர்வு தாழ்வு உணர்வு பாராட்டும் போக்கை ஒழிக்கப்பதுதானே யன்றி, சாதிக் கட்டமைப்பை அல்ல என்கிற விவேகம் வருகிறது..


சாதி ஒழிப்பு சாத்தியமாகப் போவதில்லை என்றாலும் அப்படியொரு மாற்றம் வலுக் கட்டாயமாக நிகழ்வதாயின் அது சீனாவில் நடந்த கலாசாரப் புரட்சியைப் போல மோசமான பின்விளைவுகளைத் தருவதாகவே இருக்கும்..


சாதிக் கட்டமைப்பு இருந்து அவற்றுக்கிடையே நிலவும் உயர்வு தாழ்வு பேதம் அகன்றுவிட்டால் சமுதாயம் பல வண்ணப் பூக்கள் மலரும் நந்தவனமாகத் தோற்றமளிக்கும்.


சமுதாயம் ஒரே கட்டமைப்பாக இல்லாமல் பல்வேறு சாதிப் பிரிவுகளாக இருப்பதால் ஒவ்வொரு சாதியும் மொத்த சமுதாயத்தைக் காட்டிலும் சிறியதாக இருக்கும். ஆகையால் அதில் காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள், முன்னேற்றங்கள் யாவும் எளிதாக சாத்தியமாகும். இதைக் குறிப்பிடுகையில் எனக்கு உடனடியாக நினைவுக்கு வருவது நாடார் சாதியினர்தான். இந்தச் சாதி குறுகிய காலத்தில் பல்வேறு துறைகளிலும் கால் வைத்து ஓசைப்படாமல் பெரும் முன்னேற்றங் கண்டிருப்பது சாதாரண விஷயம் அல்ல. சமுதாயம் ஒட்டு மொத்த அமைப்பாக இல்லாமல் பல்வேறு சாதிப் பிரிவுகளாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது ஆரோக்கியமான பார்வையாக இருக்கும். ஒவ்விரு சாதியும் தன்னளவில் ஒன்றுபட்டு தனது முன்னேற்றத்திற்கான ஆக்க பூர்வ வழியைத் தேடுவது மற்ற சாதியுடன் சச்சரவிட்டுக் கொள்ளும் மோதலை மாற்றி சுமுகமான சமூகச் சூழல் உருவாவது மிகவும் இயல்பாக நடந்தேறிவிடும்.
ஆனால் ஒருவருடைய வர்ணம் என்பது அவரது குணவியல்புகளுக்கும் ஈடுபாடுகளுக்கும் ஏற்ப மாறக்கூடிய, மாற்றிக் கொள்ளக் கூடிய தன்மை வாய்ந்தது என்றுதான் வர்ணாசிரம தர்ம இலக்கணம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. வர்ணம் பிறவியினால்.வருவது அல்ல என்று அது மிகவும் உறுதிபடச் சொல்கிறது. ஆனால் சாதிகளின் சமாசாரம் அப்படியில்லை. ஒரு சாதியில் பிறந்தால் பிறந்ததுதான் தனி நபர் எவராலும் தாம் பிறந்த சாதியை மாற்றிக் கொள்ள முடியாது. சில சாதிக் குழுக்கள் வரிசைக் கிரமத்தில் தமக்கு முன்னால் உள்ள இடத்தைப் பெறுவதற்காக அந்த இடத்தில் உள்ள சாதியுடன் சேர்ந்து அதனோடு இரண்டறக் கலந்து போவது வேண்டுமானால் சாத்தியமாகியிருக்கலாம். இது குறிப்பாக பொருளாதார அடிப்படையில் சாதிகள் முன்னேறுகையில் நிகழ்வதாக இருக்கலாம். ஆனால் வர்ணாசிரமத்தில் மாற்றம் சாத்தியமாவது குழப்பமற்றுத் தெளிவாகவே சாத்தியமாகிறது. அவரவர் தத்தம் குணவியல்புகளுக்கும் ஈடுபாடுகளுக்கும் இணங்க நடந்து கொள்கிற போதும் சமூகத்தில் தமக்குரிய கடமை இன்னதென்று தேர்ந்துகொள்ளும்போதும் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வர்ணத்தை இயற்கையாகவே மாற்றிக் கொண்டவராகின்றனர்.
சாதிகளை இல்லாமல் செய்தாலொழிய ஹிந்து சமுதாயத்திற்கு விமோசனம் இல்லை என்று மிகுந்த நல்லெண்ணத்துடனும் அக்கரையுடனும் கருதுபவர்கள் இருக்கிறார்கள். சாதி அமைப்பைக் கண்டித்து மிகவும் தீவிரமாகப் பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். 
ஆனால் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இன்று சாதி உணர்வு பன்மடங்கு அதிகரித்து மேலும் மேலும் உக்கிரமாக வளர்ந்து வருவதாகத்தான் நிலைமை இருக்கிறது.. சாதி அடிப்படை யிலான இட ஒதுக்கீடுக் கொள்கையின் விளைவு இது. என்று எல்லாருக்கும் தெரியும் ஆனால் ரொம்பப்பேர் வெளியே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் வெளீப்படையாக இதனை ஒப்புக் கொண்டுவிட்டால் அங்கீகாரமோ மரியாதையோ ஆதரவோ கிடைக்காமல் போய் விடும். இவை பற்றிய கவலை இல்லாதவர் களுக்குப் பிரச்சினை இல்லை.
நான் சமூகவியலாளனோ மானிடவியல் ஆய்வாளனோ அல்ல. பண்டிதர்கள் மிகவும் காரண காரியங்களுடன் இவை பற்றி விளக்கக் கூடும். ஆனால் எனக்கு இருக்கிற சாமானிய அறிவுக்கு இணங்கவே எனக்குத் தோன்றுகிற கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள முடியும். நான் சொல்வதுதான் சரி என்கிற பிடிவாதமும் எனக்கு இல்லை. சொல்லப் போனால் பண்டிதர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று என்று ஒதுங்கிப் போய்விடுவதுதான் எனது வழக்கம். வெற்றுப் பிடிவாதமான தர்க்கங்களால் கால விரையம் தான் மிச்சம். அந்த நேரத்தில் எவ்வளவோ ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடலாம். 
இருவேறு சாதிகளிடையே திருமணம் செய்துகொள்வதன் மூலம் சாதிகளை ஒழித்துக்கட்டிவிடலாம் என்கிற கருத்து மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்தப்படுகிறது. நான் அறிந்தவரையில் இப்படி இரு வேறு சாதிகளுக்கிடையிலான திருமணம் ஒரு புதிய சாதியை உற்பத்தி செய்து சாதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத்தான் பயன் படுகிறது. மேலும் வேறு சாதியில் மணம் புரிய விழைபவர் களில் பெரும்பாலோர் தமது சாதியை விட உயர்ந்தது என்று வழக்கில் உள்ள மேல்சாதியில் மணம் புரிவதிலேதான் அதிக நாட்டம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதிலும் இரு வேறு சாதிகளுக்கிடையிலான திருமணத்தில் தம்பதிகள் ஒன்றுபட்டு வாழ்க்கையைத் தொடங்கும்போது முற்றிலும் அந்நியமான சாதி நடைமுறைக்குத் திடீரென அறிமுகமாகும் மனைவிதான் தனது சாதி அடையாளங்களை விட்டுக் கொடுத்துக் கணவரது சாதியின் நடைமுறைகளுக்குக் கட்டுப் பட்டுப் போவதாக இருக்கிறது.
ஒவ்வொரு சாதிக்கும் சில பிரத்தியேகமான கலாசாரக் கூறுகள் உள்ளன. வீட்டுக்கு வீடு வித்தியாசப்படுகிற நடைமுறைகள்கூட உள்ளன. இவை மிகுந்த சுவாரசியத்துடன் விவாதிக்கப்படுவதுண்டு. அதுவே ஒரு. மகிழ்ச்சிகரமான தகவல் பறிமாற்றமாக இருக்கும். ரசனை உள்ள மனம் .அவற்றை அனுபவிக்கவே விரும்பும். எல்லாவற்றையும் ஒரே அச்சில் வார்த்த பொம்மைகளாகப் பார்த்துச் சலிப்படைய ரசனையுள்ள மனம் விரும்புவதில்லை. இரு வேறு சாதிகளுக் கிடையிலான திருமணம் நடக்கும்போது ஒரு சாதியின் கலாசாரக் கூறு அழிந்துபோகிறது. ரசனையுள்ள மனம் இதற்காக வருந்தவே செய்யும்.
ஹிந்து சமுதாயம் சாதிப் பிரிவுகள் இன்றி ஒரே கட்டமைப்பாக இருந்திருந்தால் பாரசீக சமுதாயம்போல் ஒட்டு மொத்தமாக வலுக் கட்டாய மத மாற்றத்திற்கு இலக்காகித் தனது பாரம்பரிய கலாசார அடையாளத்தை எப்போதோ இழந்துவிட்டிருக்கும். எத்தனையோ நெருக்குதல்கள், வன்முறைகள், மோசடிகள், ஆசை காட்டல்கள் இருந்தும் ஹிந்து சமுதாயம் இன்றளவும் தனது பாரம்பரிய கலாசாரத்தையும் இறைக் கோட்பாட்டையும் தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் சாதிப் பிரிவுகள்தான் என்பதை மறந்துவிடலாகாது. ஒரு குரு பீடம் ஒரு புத்தகம் என்கிற நிலைமை இங்கு இருந்திருந்தால் மத மாற்றங்கள் பெருமளவில் வெகு எளிதாக நடந்தேறியிருக்கும்.
இன்று சாதிகளிடையே நிலவும் அமைதி ஒருவிதத்தில் எரிமலை குமுறி வெடிப்பதற்கு முன் நிலவும் அமைதியைப் போலவே உள்ளது. இட ஒதுக்கீட்டில் இடம் பிடிக்கும் தாபம் ஒவ்வொரு சாதியிலும் ததும்பிக்கொண்டிருக்கிறது. இடஒதுக்கீட்டுப் பட்டியலில் சாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, தனது வாய்ப்புக் குறைவதாக ஒவ்வொரு சாதியும் கவலைப்பட ஆரம்பித்துச் சாதிகளிடையே பகைமை உணர்வும் பொறாமையும் வளரும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு சாதி இன்னொரு சாதியை இட ஒதுக்கீடு பட்டியலில் சேர்க்க்க் கூடாது என்று போராடத் தொடங்கி கடைசியில் சம்பந்தப்பட்ட சாதிகளுக்கிடையிலான மோதலாக வெடிக்கும் அளவுக்குப் பதட்ட நிலை முற்றிவிடும்.. வம்பை விலைக்கு வாங்குவது போன்ற சாதி அடிப்படையிலான இட ஒதுக்கிட்டுக் கொள்கை எவ்வளவு துரிதமாகக் கைவிடப்படுகிறதோ அவ்வளவுக்கு சாதிகளிடையிலான பூசல் தவிர்க்கப்படுவது சாத்தியமாகும். நான் உயர்ந்த சாதி நீ தாழ்ந்த சாதி என்று சச்சரவிட்டுக்கொள்வதைவிட சமநிலையில் உள்ள சாதிகளே தமக்குள் நீயா நானா என்று சண்டை போட்டுக் கொள்ளும் நிலை தோன்றிவிடும். மாறாக, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்குமானால் சாதிகளிடையே சுமுக உறவு கெடுவதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.
மீண்டும் டோண்டு ராகவன். நான் ஏற்கனவேயே பலமுறை கூறியதுதான். சாதி அமைப்பு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. அதன் உபயோகம் இல்லாமலிருந்தால் அது நீடித்திருக்க இயலாது என்பதுதான் நிஜம். சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலாது எனக் குறிப்பிட்ட எனது பதிவில் உள்ள விஷயங்களை அலட்சியம் செய்ய முடியாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

4/19/2012

அரசியல்வாதிகளும் கார்ட்டூன்களும்

அரசியல்வாதிகள் பயப்படும் ஒரு விஷயம் கார்ட்டூன்கள் மற்றும் நையாண்டி சித்திரங்களே.

சமீபத்தில் எண்பதுகளில் எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, விகடன் அட்டைப்பட ஜோக் ஒன்றில் அமைச்சரையும் எம் எல் ஏ ஐயும் கேலி செய்ததற்காக விகடன் ஆசிரியர் பால சுப்பிரமணியம் மூன்று நாட்கள் சிறைதண்டனை பெற்றார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அந்த ஜோக்:
மேடையில் இருக்கிற இரண்டு பேர்ல, யாரு எம்.எல்.ஏ., யாரு மந்திரி...?

ஜேப்படித் திருடன் மாதிரி இருக்கிறவர் எம்.எல்.ஏ., முகமூடிக் கொள்ளைக்காரன் மாதிரி இருக்கிறவர்தான் மந்திரி...!

ஆனால் ஒன்றை சொல்லியாக வேண்டும். அரசியல்வாதிகள் கேலிச்சித்திரங்களுக்கு பொங்குவது காலம் காலமாக நடந்து வருகிறது. ஹிட்லரை கிண்டல் செய்து டேவிட் லோ என்னும் கார்ட்டூனிஸ்ட் போட்ட கேலிச்சித்திரங்களுக்கு பொங்கியது ஹிட்லர். அவரது சில கார்ட்டூன்கள் கீழே:

தற்சமயம் மமதா பானர்ஜியின் முறை எனத் தோன்றுகிறது. கல்கத்தா பேராசிரியர் ஒருவரை அரெஸ்ட் செய்யும் அளவுக்கு அது சென்றுள்ளது. அது பற்றி இங்கே பார்க்கலாம்.


அங்கிருந்து ஒரு சாம்பிள்: (மீதி கார்ட்டூன்களை அங்கேயே பார்த்து கொள்ளவும்)


ஒரு சராசரி அரசியல்வாதி தன்னைப் பற்றி மிக உயர்வாகவே நினைத்துக் கொண்டிருப்பவர். அவரை கிண்டல் செய்வதன் மூலம் ஒரு கார்ட்டூனிஸ்ட் அரசியல்வதி அப்படி ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்பதைக் காட்டிவிடுவதை எந்த அரசியல்வாதியாலும் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை என்பதே அடிப்படை உண்மை.


அன்புடன்,
டோண்டு ராகவன்

4/17/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 17.04.2012

ஞாநியின் வலைப்பூ
இந்த வலைப்பூவை பார்க்க முன்னெல்லாம் மெனக்கெட வேண்டும். ஒவ்வொரு முறையும் கடவுச்சொல்லை இட்டால்தான் உள்ளேயே நுழைய முடியும். அவ்வாறு எத்தனை கடவுச் சொற்களை நினைவில் வைத்துக் கொள்வது என்ற அலுப்பாலேயே நான் அங்கெல்லாம் போகாமலிருந்தேன். இன்று எதேச்சையாக அவரது சுட்டியில் க்ளிக் செய்தால் நேரடியாகவே உள்ளே செல்ல முடிந்தது. உடனே அவரது வலைப்பூவை எனது பிளாக் ரோலில் போட்டு விட்டேன்.

இப்போதுதான் நன்றாக இருக்கிறது. எக்காரணத்துக்காக கடவுச் சொல் குழப்பங்களை கொண்டு வந்தாரோ தெரியவில்லை. ஆனால் அதை ஒரு வலுவான காரணத்துகாகவே நீக்கியது புரிகிறது.

ஜெயமோகனின் வலைப்பூ
ஜெயமோகன் வலைப்பூவில் ஒரு குறை இருக்கிறது. அதுதான் பின்னூட்டங்களை அனுமதிக்காமல் இருப்பது. முன்னொரு முறை அவரிடம் அது பற்றி கேட்டதற்கு அவர் வசைகள் அதிகம் வருவதாலும், அவற்றை மட்டுறுத்த நேரம் இல்லாததாலும் தான் அதை அனுமதிப்பதில்லை எனக் கூறினார். ஆனாலும் அதன் பிறகு சில காலம் பின்னூட்டங்களை அனுமதித்திருக்கிறார். அதை மீண்டும் எடுத்து விட்டார்.

இதனால் ஒரு முக்கிய இழப்பு வருகிறது. இப்போதெல்லாம் அவருக்கு தனியாக மின்னஞ்சல் அனுப்ப வேண்டியிருக்கிறது. எப்போது பதில் போடுவார் என்பது தெரியாது., போடுவார் என்பதும் நிச்சயமில்லை. ஆகவே இது ஒரு பெரிய குறையாகவே உள்ளது. மட்டுறுத்துவது நம் கையில்தானே உள்ளது. வசைகளை தாட்சண்யம் இன்றி மறுத்தால் போயிற்று. அதற்கு நேரம் இல்லை என அவர் சொல்வது ஏற்கக் கடினமாக உள்ளது.

சாருநிவேதிதாவின் வலைப்பூ
இங்கு பிரச்சினையே இல்லை. அவர் பின்னூட்டங்களை அனுமதிப்பதேயில்லை. அதனால் பிரச்சினையில்லை என்னைப் பொருத்தவரை.

அவரது வலைப்பூவை நான் எப்போதாவதுதான் படிப்பேன். படித்தால் தேவையற்ற மெண்டல் டிப்ரஷன். ஆகவே பூனை வலம் போனால் என்ன இடம் போனால் என்ன மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்று நிம்மதியாக இருந்து விட முடிகிறது.. ஆகவே அவர் பின்னூட்டங்களை அனுமதித்தாலும் அனுமதிக்கா விட்டாலும் எனக்கு ஒன்றுதான்.

வலைப்பூவை பாவிப்பதில் சில குறைபாடுகள்
பலர் கன்னாபின்னாவென்று விட்ஜெட்டுகளை சேர்த்து விடுகிறார்கள். அதனால் என்ன ஆகிறதென்றால், அம்மாதிரியான வலைப்பூக்களை திறக்கவே நேரம் பிடிக்கிறது.கூடவே ஏதேனும் விட்ஜெட்டில் வைரஸ் இருந்தால் ஒட்டுமொத்தமாக உங்கள் வலைப்பூவையே பிளாக்கர் மங்களம் பாடிடும் நிலையும் வந்து தொலைக்கிறது.

இன்னும் சில வலைப்பூக்களில் சில விளம்பரங்கள் மேலே வந்து பிறாண்டுகின்றன. அவற்றை மூடுவதற்கான ஐக்கான் சட்டென கண்ணுக்கு புலப்படுவதில்லை. சில விளம்பரங்கள் பிடிவாதமாக வேறு பக்கங்களுக்கு இழுத்துச் சென்று விடுகின்றன.

பிளாக் ரோலிலும் பிரச்சினை உண்டு. எஸ் ராமகிருஷ்ணனின் வலைப்பூவில் மால்வேர் வர எனது வலைப்பூவை திறக்க முடியவில்லை. ஆகவே நான் என்ன செய்தேன் என்றால் பிளாக்கர் ப்ரொஃபைல் பக்கத்துக்கு போய் அங்கிருந்தே அந்த வலைப்பூவை பிளாக்கர் ரோல் லிஸ்டிலிருந்து தூக்கினேன்.

ட்விட்டரால் மொழிபெயர்ப்பாளர்களுக்கு நஷ்டமா?
இது சம்பந்தமாக ஒரு பிரெஞ்சு இடுகையைப் பார்த்தேன். அதன் சாராம்சம் இதோ.
அவரை ஒரு புது வாடிக்கையாளர் தொடர்பு கொண்டுள்ளார். இவருக்கு அந்த வாடிக்கையாளர் யோக்கியமானவரா என்பதில் குழப்பம்.அதை ட்விட்டரில் தனது சகமொழிபெயர்ப்பாளர்களிடம் கூறியுள்ளார். வாடிக்கையாளர் பெயரை எல்லாம் எழுதவில்லை ஆனாலும் அவரை பற்றி விவரித்துள்ளார். அதுவே மற்றவருக்கு போதுமானதாக இருந்திருக்கிறது.

பிறகு அந்த வாடிக்கையாளர் யோக்கியமானவர் என்பதையும் தெரிந்து கொண்டு அதையும் ட்விட்டரில் கூறியுள்ளார். ஆனால் அந்தோ அவரது முதல் ட்விட்டரை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் பார்த்து தொலைத்து விட்டார். ஆகவே அவர் கோபித்துக் கொண்டு இவருக்கு ஆர்டர் எதுவும் தரவில்லை. ஆகவே இப்பதிவை போட்டு எல்லோருக்கும் வார்ணிங் தந்துள்ளார், அதாவது ட்விட்டரில் எழுதும்போது ஜாக்கிரதை என.

அப்பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இதோ.
Clients are a species apart. As one says, the customer is always right.
I bring to your notice this proz thread initiated by me, where I led with my chin and got knocked out deservedly. 
I am a person tending to crack jokes at the drop of a hat but I was cautioned by my wife to refrain from this practice when dealing with clients and she is right.
Regards,
Dondu N. Raghavan
Auteur : Dondu N. Raghavan ; Date : 7 avril 2012 3h12.

அவரும் பதிலளித்தார்:
@Dondu: Keep cracking jokes (carefully)!


என்ன செய்வது வாடிக்கையாளர்களிடம் ஜாக்கிரதையாகத்தான் பழக வேண்டியுள்ளது.


அன்புடன்,
டோண்டு ராகவன்
4/11/2012

திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை

திருக்குறள் பலரால் பலசமயங்களில் வெவ்வேறு பார்வைகளில் விமரிசனம் செய்யப்பட்டுள்ளது. மேலாண்மைக்கு உதாரணமாக பல குறள்கள் உள்ளன. இருக்கவே இருக்கின்றன நேரடியான உரைகள். உதாரணத்துக்கு எனது உறவினர் புலவர் விஸ்வநாதன் அவர்கள் பரிபேலழகர் உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இப்போதுதான் வெளியிட்டுள்ளார் அந்த முயற்சியில் நானும் எனதளவில் ஒரு சிறு பங்கை அளித்துள்ளேன். ஆனால் இப்போது எனது பார்வையில் வந்திருக்கும் இந்த இடுகை திருக்குறளை முற்றிலும் ஒரு புதிய கோணத்தில் அணுகியுள்ளது. நண்பர் என்ற்றென்றும் அன்புடன் பாலா தனது நண்பர் வெங்கடாசலம் சார்பில் அதை இட்டுடுள்ளார். இதை பலரும் பார்க்க வேண்டு என்ற நோக்கத்தில் நான் உரிமை எடுத்துக் கொண்டு பாலா அவர்களின் பதிவை அவரது அனுமதியுடன் இங்கும் இடுகிறேன்.

முதலில் பாலா அவர்கள் கூறுவதைக் கேட்போம்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பேராசிரியராக, பல ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்ற, எனது நண்பர் முனைவர் திரு.வெங்கடாசலம் அவர்கள், இந்த இடுகைக்கு இடப்பட்ட தலைப்பில் ஒர் நூல் எழுதியிருக்கிறார். நூல் விரைவில் வெளி வர உள்ளது. நண்பர் எனக்கு நூலின் சிலபல பகுதிகளை வாசிக்க அனுப்பியிருந்தார். ஒரு புதிய கண்ணோட்டத்தில், சிந்தனையைத் தூண்டுவதாக, நான் படித்த குறள் உரைகளிலிருந்து வித்தியாசமான ஒன்றாக, முக்கியமாக வாசிக்க ஆர்வமாக இருந்தது! முழுதும் வாசித்த பின்னர், ஒரு மதிப்புரை எழுத திட்டமிருக்கிறது. இப்போது, திரு. வெங்கடாசலமே எழுதி அனுப்பிய நூல் அறிமுக முன்னுரையில் நான் சில நூல் குறிப்புகளை சேர்த்ததில் விளைந்த கட்டுரை கீழே! 

என்றென்றும் அன்புடன் பாலா

இப்போது ஓவர் டு வெங்கடாசலம் அவர்கள்:
என்னுடைய நண்பர் தமிழ் பேராசிரியர் ஒருவரிடம் நான் இப்புத்தகத்தை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன் என்று கூறிய போது . . . ஹும் நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தமிழில் எதாவது எழுதவேண்டும் என நினைப்பவர்களெல்லாம் எழுதுவது திருக்குறளைப் பற்றித்தான். நூற்றுக்கணக்கில் வந்தாகிவிட்டது இனியும் என்ன எழுதப்போகிறீர்கள் என்றார். சில மணித்துளிகள் என் நா என்னுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டது! ஒருவாறாக சக்தியைத் திரட்டிக்கொண்டு தொண்டையைச் சரி செய்து கொண்டு பேசலானேன். . . . என்னுடைய தடுமாற்றத்தைக் கண்ணுற்ற அவர் இளம் சிரிப்புடன் என்னை நோக்கியவாறு இருந்தார்.

திடீரென்று என்னுள் ஒரு உத்வேகம். சரி சார். . . தோன்றின் புகழொடு தோன்றுக அஃதில்லார் தோன்றலின் தோன்றாமை நன்று 236 என்ற குறட்பாவுக்கு என்ன பொருளென்று கூற இயலுமா என்றேன். இக்குறள் எல்லா மேடைப் பேச்சாளர்களும் பயன்படுத்தும் குறளாயிற்றே என்றவர் ஒரு துறையில் பணி புரியும் ஒருவன் அத்துறையினரின் பாராட்டுதல்களை பெறும் வண்ணம் பணி புரியவேண்டும் இல்லையென்றால் அவன் அத்துறையில் பணி புரியாதிருத்தல் நலம் என்று பொருள் என்றார். முதலில் பரிமேலழகர் ஒருவன் புகழ்பட வாழவில்லை என்றால் அவன் பிறவாதிருத்தலே நலம் என்று கூறி உள்ளார் என்று தொடர்ந்தார்.

நான் அவரை இடைமறித்துக் கேட்டேன்: புகழ் என்றால் என்ன பொருள் என்று கூறமுடியுமா? பேராசிரியர்க்குக் கொஞ்சம் எரிச்சல். புகழென்றால் பாப்புலர். . . பேரும் புகழும் பாராட்டும் பெற்றிருப்பது என்றார்.

மன்னியுங்கள் திருவள்ளுவர் புகழ் என்றசொல்லை அந்தப்பொருளில் பயன்படுத்தவில்லை. புகழ் என்பது ஒரு கலைச்சொல். அதன் பொருள் அதிகாரத்தின் முதல் குறட்பாவில் உள்ளது. அந்தக்குறள்: ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை உயிர்க்கு 231 இவ்வதிகாரம் ஒப்புரவு மற்றும் ஈகை அதிகாரங்களுக்குப் பிறகு வருவது. ஒருவனுடைய ஆன்மாவிற்கு (உயிர்க்கு) இவ்வுலகில் கிட்டும் ஊதியம் என்னவென்றால் இவ்வுலக வாழ்க்கை அவனுக்கு பிறருக்கு ஈகை புரியவும் ஒப்புரவு செய்யவும் ஒரு வாய்ப்பை நல்கி இருக்கிறது என்பதாகும் என்றேன்.

இப்படி ஒரு பொருளை அவர் அறிந்திருக்கவில்லை. மேலும் திருவள்ளுவர் சிறப்பான நூல்களை எழுதுவோரெல்லாம் தம் நூல்களுக்கு தேர்வு செய்யும் கருப்பொருள் அவ்வாறு ஈகை புரிந்து வாழ்ந்தவரின் வாழ்க்கையாகும் என்று தனது இரண்டாவது குறளில் கூறுகிறார் ஆகவே புகழ்(இசை) என்றால் ஈகை மற்றும் ஒப்புரவு செய்து அதன்மூலம் பயனாளிகளின் மனதில் பாராட்டையும் மதிப்பையும் பெறுவது மட்டுமே என்றேன்.

சற்றே அசந்து போன பேராசிரியர் அதனால் ஆன்மாவுக்கு என்ன லாபம் என்றார் பிறருக்கு மனமுவந்து தமக்கு அசௌகர்யம் ஏற்படுத்திக்கொண்டும் கூட உதவுவதென்பது ஒருவன் அவனுடைய ஆன்மாவில் நின்று செயல்படும்போது மட்டுமே சாத்தியம். (ஈகோவில் இருக்கும்போது சாத்தியமே இல்லை.) ஆகவே அப்படிச்செயல்படும் ஒருவன் புகழப்படும்போது அவன் மேலும் மேலும் தன்னுடைய ஆன்மாவில் திளைப்பதற்கு ஊக்கம் பெறுகிறான். அப்படி ஆன்மாவில் நிலைத்திருக்கும் ஒருவனுடைய ஆன்மா மெல்ல மெல்ல மேம்பாடு அடையும். முற்றிலும் மேம்பாடு அடைந்த ஆன்மா பிறப்புச்சங்கலி அறுந்து கடவுள் உலகில் நிரந்தரமாகக் குடிபுகும்.

இவ்வாறு ஆன்ம மேம்பாடு அடைவதே இவ்வுலக வாழ்வின் பொருள் என்பதை பரிபூரனமாக உணர்ந்தவனை வித்தகன் என்ற சொல்லால் அதிகாரத்தின் ஐந்தாவது குறளில் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர் என்று கூறி நிறுத்தினேன். பேராசிரியர் ஆச்சரியப்பட்டு, வித்தகர் என்றால் ஆங்கிலத்தில் wise என்று கூறுகிறோமே அதுதான் என்றல்லவா நினைத்திருந்தேன் . . . அப்படியானால் அக்குறளுக்கு என்ன பொருள்? மிக ஆவலாகக் கேட்டார் அவர். அந்தக்குறள்: நத்தம்போல கேடும் உளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது அதாவது வாழ்க்கையில் செழிப்பும் வறட்சியும் அல்லது இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவன. இவ்விரண்டு நிதர்சனங்களை மனதளவில் ஒப்புக் கொண்டு துன்பம் வரும்போது அதனை convert the problem into opportunity எனப்படுவதைப் போல அதை தன் மீது ஒரு நல் அழுத்தமாக எடுத்துக்கொண்டு அயராது தன்னால் இயன்ற அளவில் மற்றவர்களுடைய வளர்ச்சிக்கு ஒத்துழைப்பவனை வித்தகன் என்று அழைக்கிறார் திருவள்ளுவர் என்றேன்.

பேராசிரியர் மௌனமானார். ”இது மாதிரி 584 குறட்பாக்களுக்கும் 33 அதிகாரங்களுக்கும் புதுப்பொருள் இத்துணை நூற்றாண்டுகளில் வராத பொருள் கண்டுள்ளேன். திருக்குறள் ஒரு அருமையான ஆற்றுப்படுத்தும் மன நூல். அதன் முழுப்பயனும் தற்போது உள்ள உரைகளால் கிட்டாது என நான் மனதாற நம்புவதால் இந்நூலை எழுதினேன்” என்று கூறினேன். பேராசிரியர் நெகிழ்ந்து போனார். என்னுடைய முயற்சிக்கு தன்னுடைய இதயபூர்வ இல்லை இல்லை ஆன்ம பூர்வ வாழ்த்துகளென்றார்.

மேப் லித்தோ சைசில் 570 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.285. புத்தகம் வேண்டுவோர் 09886406695 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். அல்லது prof_venkat1947@yahoo.co.in என்ற முகவரிக்கு எழுதவும். நூலிலிருந்து சில குறிப்புகள்: ஒவ்வொருவருக்கும் அவருடய பின்னணி எதை ஒன்றையும் புரிந்துகொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும். சரித்திர ஆசிரியர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் அவரவரின் சார்பினைப்பொறுத்து ஒரே செய்தியை வேறு வேறு விதமாக விவரிப்பதை நாமெல்லாரும் அறிவோம். அவ்வகையில் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் உளவியல் துறையில் ஆசிரியராகப் பணியாற்றியதும் ஆய்வுகளை வழி நடத்தியதும் என்னை திருக்குறளை ஒரு உளவியல் புத்தகமாகப் பார்க்க வைத்துவிட்டது. அந்தப்பார்வையில் சொல்வதற்கு புதிய செய்திகள் நிறைய உள்ளதாக எனக்குப்பட்டதாலேயே நான் இம்முயற்சியில் இறங்கினேன்.

இல்லையென்றால் தமிழை நன்றாகக் கல்லாததோடு இலக்கணப்பிழை, எழுத்துப்பிழை இல்லாமல் எழுதவும் தெரியாத நான் இம்முயற்சியில் இறங்குவேனா? முப்பதுக்கும் மேற்பட்ட அதிகாரங்களுக்கும் ஐநூற்று எண்பதுக்கும் மேற்பட்ட குறட்பாக்களுக்கும் புதிய பொருள் இத்தனை நூற்றாண்டுகளில் நானறிந்தவரை யாரும் கூறாத விளக்கங்களையும் பொருள்களையும் தரத்துணிவேனா?

ஆகவே வாசகர்களும் தமிழன்பர்களும் இந்நூல் ஒரு உளவியல் மாணவனின் பார்வை, அந்தப்பார்வையில் கிட்டும் விளக்கம் என்று மட்டுமே இம்முயற்சியை எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். திருவள்ளுவர் காட்டும் மனநல அடையாளங்கள்:
 தம்முடைய வாழ்க்கை, தொழில் மற்றும் காதல் ஆகியனவற்றின் செயல் மற்றும் முயற்சிகளை சமூக நலன் மற்றும் தம்முடைய நலன் ஆகிய இரண்டினையும் ஒரு சேர மேம்படும்படி அமைத்துக் கொள்ளுதல்,

 எல்லா உயிரிகளிடமும் அன்பு பாராட்டுவதில் அசாதாரன எல்லைக்குச் செல்வது , தேவைப்படின் அருள் செய்வது அதாவது ஒருவருடைய உரிமையை அவர் துய்ப்பதற்கு பக்க பலமாகச் செயல்படுவது, அந்தச் செயல்பாட்டில் பெரும் துன்பம் மற்றும் பொருள் இழப்பு ஆகியவற்றை மனம் உவந்து ஏற்றுக் கொள்ளுதல்,

 எல்லா உயிர்களிடமும் ஒப்புரவு கொண்டு ஒழுகுவது அதாவது தன்னளவில் பொருள் உதவி, உழைப்புதவி, திறனேற்றல் ஆகியனவற்றை தகுதியானவர்க்குத் தருதல்,

 தமது உரிமையை விட்டுவிடாமலும் பிறர் உரிமையைப் பறிக்காமலும் செயல்படுவது,  பிறருடைய பிரச்சனைகளை அவர்களிடத்தில் தம்மை வைத்து அறிந்து கொண்டு ஆவன செய்வது, இச்செயல்பாட்டில் அடுத்தவரைத் தணடனைக்கு உட்படுத்த நேரினும் அதனைச் செய்வது (கண்ணோட்டம்),

 எந்த சூழலிலும் உண்மையை அதையும் புரை தீர்ந்த நன்மை பயக்கும் வண்ணம் பேசுவது,

 கோபம், ஆசை, பொறாமை வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளை அறவழியில் நிர்வகிப்பது  தன்னுடைய பொறி (aptitude/strength) இன்னதென அறிந்து அதற்குத்தக திறன்களை ஏற்படுத்திக் கொண்டு தான் தேர்ந்த துறையின் அறிவுக்கு விசுவாசமாக தாளாது உழைப்பது,

 எப்பொருள் யார் வாய்க்கேட்பினும் (தம்மையும் சேர்த்து) அப்பொருளின் உண்மைத் தன்மையை அறிந்து அதனைக் கடைப்பிடிப்பது,

 எல்லாப் பணிகளிலும் அப்பணிக்கு ஆதாரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள சிறந்த நடை முறைகளை மேற்கொண்டு ஒழுகுதல் (following evidence based best practices of a given profession),

 தன்னுடைய தனிப்பட்ட வாழ்விலும், பணி சார்ந்த வாழ்விலும், பொது வாழ்விலும் தம்முடைய செயல்களனைத்தையும் மேற்கண்ட கொள்கைகளின் வழி நடாத்துவது,

 “நான் ஒரு மனிதன் என்ற அடிப்படையில் குற்றம் புரியும் ஏது உள்ளவன். பல சமயங்களிலும் விழிப்பின்றி இருப்பின் பல்வேறான குற்றங்களைப் புரியக்கூடும். ஆகையால் சதா சர்வகாலமும் விழிப்புடன் நான் இருக்கவேண்டும். அதையும் மீறி நான் தவறு செய்துவிட்டால் என்னுடைய தவறுக்கு வருந்தி என்னால் பாதிக்கப்பட்டவருக்கு தக்க இழப்பு மீட்பினை ஈந்து சமாதானம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நான் குற்ற உணர்வில் ஆழ்ந்து விடாமலிருக்க வேண்டும். அரசு நீதி பரிபாலனம் செய்யும்போது தரும் தண்டனையையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு தண்டனையை எனக்குப் பயனுள்ளதாக மாற்றிக்கொண்டு தண்டனைக்குப் பிறகு மறுவாழ்வு வாழ்வதற்கு ஆவன செய்ய வேண்டும்” என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டு அதனைச் செயல் படுத்துதல் ஆகியனவாம்.

 மொத்தத்தில் எந்த செயலையும் சிந்தனையையும் ஒருவன் தன்னுடைய ஆன்மாவினை கடவுளர் உலகம் புகுவதற்குத் தகுதியடையும் வண்ணம் செம்மைப்படுத்துவதற்கு உறுதுணையாக அமைத்துக் கொள்வது உயர்ந்த மனநலத்தின் அடையாளம். இந்த வகையில் திருக்குறள் ஒரு ஆன்மிகப்பயண வழி காட்டி. இவ்வடையாளங்களெல்லாம் Cognitive Psychology மற்றும் Humanistic Psychology ஆகிய உளவியல் துறைகளின் கருத்துக்களோடு ஏற்புடையவையே. கடவுள் மனிதருடைய இவ்வுலக வாழ்வில் தலையிடுவதில்லை என்பது திருவள்ளுவருடைய கொள்கையாக உள்ளது. ஆகையால் உளவியலருக்கு திருவள்ளுவர் வழியில் மனிதர்களை ஆற்றுப்படுத்துவதில் பிரச்சனை இருப்பதற்கு வாய்ப்பு இல்லை..

திருவள்ளுவர் ஒரு எதார்த்தவாதி. பல சமயங்களில் அவர் வகுத்தளித்துள்ள கோட்பாடுகளை முற்றிலும் பிறளாது கடைப் பிடித்தல் மிகக்கடினம் என்பதனை உணர்ந்துள்ள அவர் எல்லாரையும் ஊக்குவிக்கிறாரே ஒழிய யாரையும் நீ தவறி விட்டாய் இனி உனக்கு வாழ்வில்லை என்று சபிப்பதில்லை. கடவுளின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்று கூறுவதில்லை. தப்ப விரும்பினால் செய்ய வேண்டிய பரிகாரம் இதுவென எதையும் கூறுவதில்லை. சரியாகச் சொல்வதானால் கடவுள் தண்டிப்பார் என்ற கருத்து திருக்குறளில் இல்லை. ஆனால் அறம் தண்டிக்கும் என்று உறுதி படக்கூறுகிறார்.

அது எவ்விதம் என்பதை நூலில் பல இடங்களில் விளக்கி உள்ளேன். மன நலத்துடன் (அறவழியில் வாழும் வாழ்வு) கூடிய வாழ்வினைத் தேர்ந்தெடுத்து வாழாதார்க்கு கடவுளர் உலகில் குடிபுகல் என்ற இலக்கை நோக்கிய பயணம் நீண்ட நெடிய பாதையாக முடிவே இல்லாமல் இருக்க மன நலத்துடன் வாழ்வோர்க்கு அது மிகக் குறுகியதாக இருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம். சிறிதளவே அப்பாதையில் ஒருவர் முன்னேறினாலும் முன்னேற்றம் தானே ஒழிய பின்னேற்றமில்லை.

ஒரு பிறவியில் ஆன்ம பலம் பெரிதும் குன்றும் அளவுக்கு அறம் பிறழ்ந்த வாழ்வு வாழ்வோருக்கு பின் வரும் பிறவிகளில் இழந்த ஆன்ம பலத்தை மீட்டு எடுப்பதற்கே பல காலம் பிடிக்குமென்பதும் ஆன்ம பலம் அதிகமாக உள்ளவர்க்கு பின் வரும் பிறவிகளில் அவர்கள் அறவழியில் வாழ்வதற்கு அவ்வான்ம பலம் உறுதுணையாக இருக்குமென்பதும் மிகவும் ஆறுதல் அளிப்பதும் நம்பிக்கையூட்டுவதுமான செய்தியாகும். கர்மா கொள்கையை (Theory of karma) இந்தக்கோணத்தில் திருவள்ளுவர் அணுகி உள்ளார் என்றே தோன்றுகிறது. கடவுள் கொள்கையைப் பொருத்தமட்டில் கடவுள் இருக்கின்றாரா அல்லது இல்லையா என்ற கேள்விக்கே செல்லாமல் ஒருவர் திருக்குறளால் பயன்பெறலாம் என்பதுவும் கண்கூடு. இந்தக் கருத்தின்படியும் உளவியலருக்கு திருவள்ளுவருடைய கடவுள் கொள்கையின் பால் குழப்பம் இருக்கமுடியாது. மேலும் எனது நூலில் நான் கூறி உள்ள புதிய விளக்கவுரைகளில் சில அல்லது பல பிறராலும் கூறப்பட்டும் இருக்கலாம்.

அப்படி கூறப்பட்டு இருக்கும் உரைகளை என் கவனத்துக்குக் கொண்டுவந்தால் நான் அவற்றை இப்புத்தகத்தின் அடுத்த பதிப்பில் குறிப்பிட்டு அவர்களுடைய பங்களிப்பை ஏற்று உலகுக்கு அறிவிப்பேன் எனக்கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

அருஞ்சொற்பொருள் விளக்கம் அதிகாரம் மற்றும் குறட்பாக்கள் ஆகியவற்றின் பொருளடக்கம் புத்தகத்தின் இறுதியில் உள்ளன. நூலிலிருந்து, மாதிரிக்காக, ஒரு குறளுக்கான விளக்கவுரையை தந்துள்ளேன். இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு 5 புதிர்: குறளில் நான்கு புதிர்கள் உள்ளன. இருள் என்றால் என்ன பொருள்? இருவினைகள் யாவை? இறைவன் பொருள்சேர் என்றால் என்ன பொருள்? புகழ் புரிந்தார் மாட்டு என்றால் என்ன பொருள்? விளக்கம்: இருள் என்றால் குழப்பம் அல்லது மயக்கம். அதாவது ஒன்றை இன்னொன்று எனப்பொருள் கொள்வது. சற்று இருள் நிறைந்த ஒரு இடத்தில் கிடக்கும் கயிற்றினைப் பாம்பு எனத் தவறுதலாகப் பொருள் கொண்டு விடுகிறோமல்லவா?

இவ்வுலக வாழ்க்கை ஒரு பயிற்சிக்களம், இவ்வுலகத்தில் நாம் துய்ப்பன யாவும் பயிற்சிக்கான பொருள்கள். பயிற்சியின் நோக்கம் உயிரை அல்லது ஆன்மாவை கடவுளர் உலகில் வசிப்பதற்கு தகுதியானதாக மேம்படுத்துவது. ஏனெனில் கடவுள் ஒருவரே உண்மையான பொருள். இதைப் புரிந்து கொள்ளாமல் இவ்வுலகமும் அதன்பொருள்களும் உண்மையானவை என மயங்கி நிற்றலே இருளாம். இரு வினைகளாவன, சிந்தனையும் மற்றும் செயலாம். (சிந்தனையும் ஒரு செயலே. சிந்தனைத் தொழிலாளிகள் என்ற கருத்தினை நாம் அறிவோம்.) அடுத்து இறைவன் பொருள் சேர் என்றால் இறைவன் மட்டுமே உண்மைப்பொருள் என்பதைச் சார்ந்த ஒன்று என்று பொருள். அந்த ஒன்று எது? இந்தக்கேள்வி நாம் நான்காவதாக எழுப்பிய புதிர்வினாவுக்கு நம்மை இட்டுச்செல்கிறது. புகழ் புரிந்தார் மாட்டு என்று சொல்வதன் மூலம் புகழ் என்ற சொல்லை புகழுக்குரிய செயலைக் குறிப்பதாக திருவள்ளுவர் கையாண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது அல்லவா?

திருக்குறளில் புகழ் என்ற சொல் ஒரு கலைச்சொல்லாக சிறப்பாக வரையறைக்கப்பட்டுள்ள ஒரு சொல். ஒருவருடைய, சமூகத்துக்குப் பெரிதும் பயன்படும், உள் நோக்கமில்லாத செயலின் அருமை கருதி அவர் பால் அவருடைய பயனாளிகளிடத்தும் அவரை அறிந்தவர்களிடத்தும் தோன்றும் மதிப்புதான் புகழ் (231). பிரபலம்(stardom, celebrity, popularity) அல்லது பொரும் புள்ளி என்பது போன்ற பொருளில் புகழ் என்ற சொல் திருக்குறளில் பயன்படுத்தப் படவில்லை. உரை:இறைவன் ஒருவனே உண்மையான பொருள். இதை உணர்ந்தவர்களிடத்தில் இவ்வுலகமும் அதன்பொருள்களும் உண்மையானவை என்ற அறியாமை இருட்டு இராது.

அதேபோல் அவர்கள் பிறிதொரு உண்மையையும் அறிவர். அஃதாவது, தங்களுடைய உழைப்பு, நேரம், திறன், முயற்சி மற்றும் பொருள் ஆகியனவற்றை மனமுவந்து தேவைப்படும் நலிந்தோருக்கும் தகுதியான பிறருக்கும் ஈவதன் மூலம் தங்களுடைய ஆன்மா மேம்பாடு அடையும், முற்றிலும் மேம்பாடு அடைந்த ஆன்மா கடவுளர் உலகம் புகும் என்பதே அது. ஆகவே கடவுளர் உலகு புக சித்தம் கொண்டு அருளாளர்களாக ஒழுகுபவர்களிடம் தீயன சிந்திக்கும் செயலும் தீமை புரியும் செயல்பாடும் இராது. வேறு விளக்கமும் உரையும்: இதல்லாமல் ”இறைவன் பொருள்சேர்” என்பதை இறைவனின் எட்டுத் தன்மை களைச் சார்ந்த என்று பொருள் கொள்ளவும் இடமுள்ளது. அவ்விதம் கொண்டால் இறைவனின் எட்டுக் குணங்களில் மனிதர்கள் தம் வாழ்வில் கடைப்பிடிக்க இயலக்கூடிய,வேண்டுதல் வேண்டாமை இலாதிருத்தல், ஐம்புலன்களின் செய்தியை நெறிப்படுத்திப் அறவழிப் பயன்பாட்டுக்குள்ளாக்குதல் மற்றும் எல்லா உயிரிகளிடத்தும் கருணையுடன் இருத்தல் ஆகியவற்றை தம் வாழ்வில் மேற்கொண்டு வாழ்வோரிடத்தில் இவ்வுலகம்தான் உண்மையானது என்ற மயக்கம் காரணமாகத் சிந்தை மற்றும் செயலில் தோன்றும் தீமைகள் இரா என்ற பொருள்கிட்டும்.

பின் குறிப்பு:
இக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறியது போல, உண்மையில் தமிழ்ப்பேராசிரியர் எவரையும் நான் சந்திக்கவில்லை. தங்களுக்கு சற்று ஆர்வம் ஏற்படச்செய்ய கற்பனையாக ஒரு பேராசிரியரை உருவாக்கினேன். பிழையை அன்புடன் பொருத்தருள்வீர் என நம்புகிறேன்.
நன்றி வணக்கம்.

அன்பன் அர. வெங்கடாசலம்

மீண்டும் டோண்டு ராகவன்:

வெங்கடாசலம் அவர்களின் ஆய்வு பிரமிக்க வைக்கிற்து. கடைசி பாரா வெறும் குறும்புதான், ஆனால் ரசிக்கும்படித்தான் உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/08/2012

பார்ப்பான் தமிழனா? புதிய த​லைமு​றை விருதுகள் பற்றி செல்​லையா முத்துசாமியின் உளறல்கள்

செல்லையா முத்துசாமிக்கு எரிகிறது, பாப்பானுக்கு விருது வழங்கி விட்டார்கள் என. அதற்கு பக்கா வயிற்றெரிச்சல் என்பதை விட வேறு காரணம் இருக்க முடியாது.

உமக்கு ஏன் ஐயா எரிகிறது?

//இப்​போது புதியத​லைமு​றை தமிழன் விருதுகளில் 4 பச்​சைப்பார்ப்பனர்கள். இவர்கள் தமிழ​ரே அல்ல என்று எவனாவது புதியத​லைமு​றை​யைக் கண்டித்தீர்களா? (​இனி ​வேறுவழியின்றி ​முகநூலில் மட்டும் கண்டித்ததாக காட்டிக்​கொள்வார்கள்)

பார்ப்பான் ஆண்டாண்டு காலமாக நமது இனஇழிவுக்குக் காரணம் என்கி​றோம். அவ​னை இந்த பி​ழைப்புவாதிகள் எதிரியாக நி​னைப்பதில்​லை. பார்ப்பானின் இந்துமதம் வருண​பேதங்க​ளைக் காக்கிறது என்கி​றோம். இவர்களுக்கு அ​தை எதிர்க்கத் துணிவில்​லை. இதில் ஒருபடி ​மே​லே​​போய் இந்துத்துவ ​வேட்பாளருக்கு ​தேர்தல் பரப்பு​ரையில் ஈடுபட்டார் நாம் தமிழர் என்று ​சொல்லிக்​கொள்ளும் சீமான். இவர் ​தன்​னை ​பெரியாரின் ​பேரன் என்று நாகூசாமல் ​சொல்லிக்​கொள்கிறார். ஆனால் திராவிடத்தால் வீழ்ந்​தோம் என்கிறார்.//

இப்போது ஜாதி வெறியுடன் நடந்து ஹரிஜனக் கொலை/வன்கொடுமைகளைச் செய்பவர்கள் பிசி மற்றும் ஓபிசி மற்றும் பார்ப்பனரல்லாத ஆளும் சாதியினரே. அவர்கள்தான் வருணபேதங்களைக் காக்கிறார்கள். கீழ்வெண்மணியில் கோபாலகிருஷ்ண நாயுடு என்னும் நிலச்சுவான்தார் 44 தலித்துகளை உயிருடன் எரித்த செயலை கண்டிக்கத் துப்பில்லாதச் ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்னும் கன்னட பலீஜா நாயுடு அதற்கு கம்யூனிஉஸ்டுகளை குறை கூறி ஒரு சொதப்பல் அறிக்கை விட்டது எதில் சேர்த்தி?

சரி அந்தக் கருமாந்திர விஷயங்கள் பற்றி வேணது எழுதியாகி விட்டது. உதாரணத்துக்கு ஒன்று இங்கே.

ஒரு சிறு டைவர்ஷன். பிராமண் ஆற்றல் என்னும் பதிவில் ஜெயமோகன் எழுதியதை இங்கே கோட் செய்கிறேன்.
//தமிழகத்தில் உள்ள பிராமணவெறுப்பு என்பது பிற்படுத்தப்பட்டவர்கள் தங்கள் சொந்தச் சாதிவெறியை மறைக்க, அதன் பழியை மடைமாற்றம் செய்ய, கண்டுபிடித்த ஒரு தந்திரம் மட்டுமே//.

இப்போது செல்லையாவின் வயிற்றெரிச்சல் பற்றி பேசுவோம்.விருது பெற்ற நான்கு பாப்பான்களுக்கு அதற்கான த்குதியில்லை என்றால் அதை ஆதாரத்துடன் நிரூபியுங்கள். அதை விடுத்து அவர்கள் பார்ப்பனர்கள் ஆகவே தரக்கூடாது என்பதைக் கூற உமக்கு ஒரு அருகதையும் இல்லை. வயிற்றெரிச்சலுக்கு ஜெலூசில் நல்லது என்கிறார்கள். அதை வேண்டுமானால் பாவியுங்கள்.

நான் சமீபத்தில் 1962-63 கல்வியாண்டில் சென்னை புதுக்கல்லூரியில் புகுமுக வகுப்பில் படித்த சமயம் அங்கு தமிழ்த்துறையின் பேராசிரியர் பாலூர் தூ. கண்ணப்ப முதலியார் அவர்கள். அவருடன் என் தந்தை ஒரு மீட்டிங்கில் டிஸ்கஸ் செய்த விவரத்தை எனது தந்தையா அமரர் நரசிம்மன் அவர்கள் எனக்கு கூறியுள்ளார். கண்ணப்ப முதலியார் எனது தந்தையிடம் பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல எனக்கூறியதும், “தமிழகத்திலேயே பிறந்து, அங்கேயே படித்து, வளர்ந்து அங்கேயே சாகப்போகும் தன்னைப் போன்றவர்களுக்கு தமிழன் என சர்டிஃபிகேட் கொடுக்க முதலியார்களுக்கு ஒரு உரிமையும் இல்லை எனக்கூறி விட்டார். நானாக இருந்திருந்தால் இன்னும் ஒரு வரி சேர்த்து கூறியிருப்பேன். ஆதாகப்பட்டது, முதலியார்களில் பல பேருக்கு தெலுங்குதான் தாய் மொழி. வீட்டில் என்னவோ ஒரு கண்ணறாவித் தெலுங்கு பேசுவார்கள். வெளியில் மட்டும் தமிழ் தமிழ் என போலியாகக் கூச்சல் போடுவார்கள். யார் கண்டது கண்ணப்ப முதலியாரும் வீட்டில் தெலுங்குதான் பேசியிருப்பாரோ என்னவோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

பிற்சேர்க்கை: செல்லையா முத்துசாமியின் உளறல்கள் நிறைந்த எதிர்வினை:

//(இதில் விமர்சிக்கப்பட்டிருக்கும் சாந்தா, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகி​யோர் தமிழர்களல்ல என்ப​தோடு, விருதுக்குத் தகுதியற்றவர்கள். ​மேலும் மற்ற பார்ப்பான்களுக்கும் விருது வழங்கிய​தை விமர்சிக்கக் காரணம் தமிழன் விருது என்று அறிவித்ததனால்தான். புதியத​லைமு​றை விருது என்று அறிவிக்கப்பட்டிருந்தால் நாம் ​கேள்வி ​கேட்கப்​போவதில்​லை. இ​தைக்கூட புரிந்து​கொள்ள இயலாத ​டோண்டு பாப்பான் எந்த வ​கையில் விருதுக்கு தகுதியில்​லை என்று ​கேள்வி எழுப்பியுள்ளான். நமக்கு வயிற்​​றெரிச்சல் என்கிறான். கூட​வே ​​ஜெய​மோக​னையும் து​ணைக்கு அ​ழைத்திருக்கிறான். இந்துத்துவவாதிகள் எதற்​கெடுத்தாலும் எடுத்தாளும் ப​டைப்புகள் ​ஜெய​மோகனு​டைய​வை.)//

பாப்பான் தமிழன் இல்லை எனக்கூற யாருக்கு ஐயா அதிகாரம் இங்கே உண்டு? அதையும் நான் கண்ணப்ப முதலியார் உதாரணத்தில் கூறிவிட்டேனே. சாந்தா மற்றும் சுவாமிநாதன் தமிழரில்லை என்று கூற இந்த செல்லையா முத்துசாமி யார்? அதுதான் எனது இப்பதிவின் அடிநாதம். அது கூட புரியாமல் செல்லையா உளறுகிறார். இந்த அழகில் டோண்டு பாப்பான் கூறுகிறான் என்று ஒருமையில் வேறு பேச்சு. அந்த அடிப்படை மரியாதைகூட தெரியாத செல்லையா எல்லாம் ஒரு மனிதரா?

அம்புடன், (எழுத்துப் பிழை இல்லை)
டோண்டு ராகவையங்கார்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது