எனக்கு விஸ்வாமித்ரா அவர்களிடமிருந்து டிஸ்கியில் ஒரு மின்னஞ்சல் வந்தது. அதை யூனிகோடில் மாற்றிக் கீழே கொடுத்துள்ளேன். அவற்றில் சிலவற்றை நான் கேள்விப் பட்டிருந்தாலும் பல எனக்குப் புதியவையே. பகுத்தறிவுப் பகலவன் என்று அழைக்கப்படுபவர் செயல்பாடுகளையும் அதே பகுத்தறிவு கொண்டு ஆராய முற்படுவது தவிர்க்க முடியாது. ஆகவே விஸ்வாமித்ரா அவர்கள் கூறியதைப் பார்க்குமாறு இணைய நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஓவர் டு விஸ்வாமித்ரா:
"தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்!' -
சொன்னது யார்? ஆரியர்களா? தமிழை வெறுப்போர்களா? வட நாட்டுக்காரர்களா? சம்ஸ்கிருதுதத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஆடுபவர்களா? காஞ்சி மடாதிபதியா? மும்பை எக்ஸ்பிரஸ் எடுக்கும் கமலஹாசனா?
இல்லை ஐயா,. இல்லை, தமிழர்களின் தந்தை என்றும் பெரியார் என்றும் ஒரு கூட்டத்தினரால் அழைக்கப் படும் ஈ வெ ராமசாமி நாயக்கர் என்னும் கன்னடியர். இப்படிப் பட்ட ஒரு ஆசாமியை, தமிழர்களை கருங்காலிகள் என்று அழைத்தவரையே, தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று அழைத்தவரையே கொஞ்சம் கூட வெட்கமின்றி, மான ரோஷமின்றி, தமிழர் தலைவர் என்று ஒரு கூட்டம் அழைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றி வருகிறது. அவரது உண்மையான முகம் என்ன? அவர் தமிழர்களை பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருந்தார்? மேலே படியுங்கள்.
'தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்!' -
ஈ.வே.ரா.வின் முழக்கம்
தமிழ்மொழி பிற்போக்கான மொழி, மூவாயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழில்
பெருமை கொள்ளும்படி, மூடநம்பிக்கை இல்லாத ஒரு நூலுமில்லை,
தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர் போன்ற வான்புகழ் கொண்ட தமிழ்ப்புலவர்கள் எல்லாம் ஹிந்துமத வெறியர்கள், ஆரிய அடிவருடிகள், துரோகிகள் என்றெல்லாம் முத்துக்களை உதிர்த்துவந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரை எதிர்த்து மனசாட்சி கொண்ட ஒரு தமிழனும் கொதித்து எழவில்லையா என்று இன்றைய இளைஞர்கள், தன்மானத் தமிழர்கள் ஆச்சரியப்படலாம். அப்படிக் கொதித்தெழுந்த பலர் இருந்தனர். ஆனால் அவர்களின் நியாயமான பேச்சுகள் எதுவுமே இன்று கிடைப்பதில்லை. பெருவாரி பத்திரிகைகள் அவற்றைப் பிரசுரிப்பதும் இல்லை.
சொல்லப் போனால் ஈவேராவின் தமிழ்மொழி மற்றும் தமிழ்மரபு வெறுப்பினைக் காலப்போக்கில்
உணர்ந்து கொண்ட அவர் தொண்டரடிப்பொடிகளில் சிலரே அவருக்கு எதிராகக் கொந்தளித்து
எழுந்ததும் இன்று திரிக்கப்பட்டுள்ள திராவிட வரலாற்றில் பதிவு செய்யப் படவில்லை.
உதாரணமாய் ம.வெங்கடேசன் அவர்கள், தனது ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்னும் புத்தகத்தில், திரட்டியிருக் கொடுத்திருக்கும் மேலும் சில தகவல்களை இங்கு பார்க்கலாம். .
சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலம் அமையச் செய்த அறப்போராட்டங்களை அறவே வெறுத்து வந்தார் ஈவேரா. தமிழ்நாடு என்ற பெயரே அவருக்கு ஒவ்வாமல் இருந்தது. திராவிடநாடு என்ற பெயரைப் புறம்தள்ளிவிட்டு மபொசியின் தமிழரசுக் கழகம் 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' என்று முழக்கமிட்டு வந்தது ஈவேராவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இன்னதைத்தான் பேசுவது என்ற விவஸ்தை எப்போதும் இல்லாத நாயக்கர், மபொசியை மனதில் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாய்த் தமிழர்களைத் திட்ட ஆரம்பித்தார்.
11.4.1947 தேதியிட்ட விடுதலையில் ஈவேரா எழுதியது:
"தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழர் ஆட்சி, தமிழ் மாகாணம்
என்றும் பேசப்படுவனயெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்." தொடர்ந்து மேடைகளில் தமிழர் என்போர் கருங்காலிகள், பித்தலாட்டக்காரர்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்.
ஈவேரா இப்படி மனம்போனபடி பொதுவாய்த் தமிழர்களை வைதுவருவதைக் கண்டித்து திருச்சி
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார்.
யார் இந்த கி.ஆ.பெ.?
ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய முன்னாள் சீடர்தான் அவர்.
ஈவேராவுடன் ஒன்றாகப் பணியாற்றிப் பின்பு கட்சியின் கொள்கைகளில் இருந்து ஈவேராமசாமி நாயக்கர் நழுவி விட்டதாகக் கூறி வெளிவந்தவர். தமிழுக்காக அரும்பாடு பட்டவர்.
அவர் 25.1.1948 அன்று தமிழர்நாடு என்ற ஏட்டில் வரைந்த கட்டுரை பின்வருமாறு:-
அண்மையில் சென்னை கோகலே ஹாலில் திரு.சி.டி.டி.அரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற
கூட்டத்தில் 'தமிழர் என்பதும், தமிழர் கழகம் என்பதும், தமிழரசுக் கட்சி என்பதும், தமிழர் ராஜீயம்
என்பதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள்' என்று பெரியார் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார். இது ஏற்கனவே பத்திரிகைகளில் வெளி வந்திருக்கிறது.
இப்பொழுது 'தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்' என்று எழுதியும், பேசியும்
வருகிறார்கள். ஆகவே வேண்டுமென்றே திட்டம் போட்டு வைய முன்வந்திருப்பதாக நன்கு விளங்குகிறது.
இதனால் தமிழ், தமிழர், தமிழ்நாடு தமிழ் அரசு என்று கூறக்கூடாதென்றும், திராவிடம், திராவிடர்,
திராவிடக்கழகம், திராவிடநாடு, திராவிட அரசு என்றே கூறவேண்டுமென்றும் அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது தமிழ்நாட்டின் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து
வருகிறது. காரணம், ஆந்திர, மலையாள, கன்னட மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும்
திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும், நாட்டையுமே முன்னெடுத்துக் கூறிவரும்போது தமிழ்நாட்டு மக்கள் மட்டும் தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக்கூடாது? இதற்கு மாறுபட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்கவில்லை.
எவ்விதமாயிருந்தாலும் மாறுபட்ட கருத்தும், கொள்கையும் உடையவர்களை பித்தலாட்டக்காரர்கள்,
கருங்காலிகள் என்று கூற வேண்டியது அவசியம்தானா என்பதையும் பெரியாரே எண்ணிப் பார்க்க
வேண்டும். ஒரு கழகத்தின் தலைவர் வாயிலிருந்து இக்கடுஞ்சொற்கள் வருவது நேர்மையானதுதானா
என்பதைப் பொதுமக்களே கருதிப்பார்க்க வேண்டும்.
ஆந்திர நாட்டுக்குச் சென்று, ஆந்திரர், ஆந்திரநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?
கேரள நாட்டுக்குச் சென்று, கேரளர், கேரளநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?
கன்னடிய நாட்டுக்குச் சென்று, கன்னடியர், கன்னடநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?
இனியேனும் சொல்வாரா?
இதுவரை சொல்லவில்லையென்றால் தமிழர், தமிழ்நாடு என்று சொல்லுகிறவர்களை மட்டும்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று சொல்லுவானேன்?
பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று சும்மா சொல்லி விடுவது மட்டும் போதாது. காரணம் காட்டிக் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறாதது அவர்களுடைய ஆத்திரத்தைக் காட்டுகிறதே தவிர உண்மையைக் காட்டுவதாக அறிவாளிகளால் ஒப்ப முடியாது.
மற்றொரு நண்பர், கிராமணியார் (ம.பொ.சி) அவர்களைத்தான் அவ்வாறு கூறியிருக்கிறார் என்று நினைத்து நமக்கு எழுதி இருக்கிறார். இது உண்மையானால் நேரடியாக எழுதி இருக்கலாமே! அப்படி இருந்தாலும் கூட கிராமணியார் ஒரு மாறுபட்ட கருத்தினர் என்பதற்காக அவரது தமிழ்ப்பற்றும், தமிழ்நாட்டுப்பற்றும் நமக்குத் தேவையில்லாமல் போய்விடுமா?
இதற்காக அவரைப் பித்தலாட்டக்காரர் என்றும் கருங்காலி என்றும் கூறுவது முறையா என்பதையும் அன்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழர் கழகத்தையும், தமிழரசுக் கழகத்தையும் நேரடியாகத் தாக்கி, தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டுப் பற்றுள்ள மக்களை வேண்டுமென்றே வைதிருக்கிறார் என்று முடிவாகத் தெரிகிறது.
இதை மெய்ப்பிக்க கழகம் என்ற சொல்லை எடுத்துவிட்டு, தமிழர், தமிழரசு என்று சுட்டிக்காட்டி
வைதிருப்பதே போதுமான சான்றாகும்.
நம்மைப் பொறுத்தவரையில் பெரியாரின் தன்மைக்கு இச்சொற்கள் ஏற்றதல்ல என்றே கூறுவோம்.
இப்போது கூறியதை அவர் திரும்பப் பெற வேண்டும். இன்றேல் தாம் கூறியதைக் காரணம் காட்டி
மெய்ப்பிக்க வேண்டும். இதுவே தமிழர், தமிழரசு, தமிழ்நாடு தமிழருக்கே என்று கூறுகிற
'பித்தலாட்டக் கருங்காலி'களின் கோரிக்கையாகும்.
(நன்றி: புதிய தமிழகம் படைத்த வரலாறு - ம.பொ.சி)
இன்று ராமதாசையும், திருமாவையும் தமிழுக்காகப் பாடுபடுகிறவர்கள் என்று அழைக்கும் கூட்டம், தமிழர்களைக் கருங்காலிகள் என்று அழைத்த ஈ வெ ராவை எப்படி அழைக்கப் போகிறார்கள்? யார் தமிழ்நாட்டில் பித்தலாட்டக் கருங்காலிகள்? முறையாகத் தமிழ் படித்த அறிஞர்களை கருங்காலி என்று அழைத்தவரைப் போய் தமிழர் தந்தை என்று அழைப்பது அறிவீனம் அல்லவா? மூளைச்சலவை செய்யப் பட்டோரே சற்றே சிந்தியுங்கள்.
விஸ்வாமித்ரா"
அன்புடன்,
டோண்டு ராகவன்
சைவ சித்தாந்த அறிமுக வகுப்புகள்
-
சைவசித்தாந்த அறிமுக வகுப்புகளை நடத்த தகுதியான ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது
வணக்கத்திற்குரிய சாந்திகுமார அடிகளைப் பற்றி அறிந்துகொண்டோம். சைவசித்தாந்தம்
ஒரு ...
1 hour ago