முதலில் ஆங்கிலத்தில் வந்த இந்த நேர்க்காணலின் தமிழாக்கம்
புகலியின் இந்த உரலில் வந்தது. விஷயம் முக்கியமானதாக எனக்கு பட்டது. ஆகவே இது இன்னும் பரவலாக அறியப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் புகலி ஆசிரியர் குழுவிடம் இதை எனது வலைப்பூவிலும் பதிவிட அனுமதி கேட்டிருந்தேன். அவர்களிடமிருந்து சற்று முன்னால் எனக்கு அந்த அனுமதி கீழே காணப்படும் மின்னஞ்சல் மூலம் கிடைத்தது.
from editors
to raghtransint@gmail.com
date Wed, May 27, 2009 at 5:54 PM
mailed-by puhali.com
5:54 PM (9 minutes ago)
தொடர்பு கொண்டமைக்கு நன்றி. எமது இணைப்பை வழங்கி பதிவிடுங்கள்.
புகலிஅவர்களுக்கு என் நன்றி. எனது கமெண்டுகள் பின்னால் வரும்.
முன்னால் வடக்கு கிழக்கு மாகான முதலமைச்சராக இருந்தவரும், EPRLF இன் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், தற்போது இந்தியாவில் வசித்து வருபவருமான தோழர் அ.வரதராஜப்பெருமாள் அவர்களுடனான நேர்காணலின் தமிழ் வடிவம்
கேள்வி: பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நீங்கள் நம்பிவிட்டீர்களா?வ.பெ: நிச்சயமாக. அது குறித்து எந்தச் சந்தேகமும் இல்லை. எல்லோரும் பார்க்கக்கூடியதாக புகைப்படங்கள் இருக்கின்றன. அடுத்து, கருணா அந்த இடத்திற்குச் சென்று பிரபாகரனுடைய உடலை அடையாளம் காட்டி இருக்கின்றார்.
கேள்வி: கருணா ஒரு காலத்தில் பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவராக இருந்தாரா?வ.பெ: 2004ம் ஆண்டுவரையும் அவர் விடுதலைப்புலிகளுக்கு 2வது தளபதியாக இருந்தவர். அத்துடன் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று பொய் சொல்லவேண்டிய எந்தக் காரணமும் இலங்கை அரசுக்கு இல்லை என்பதையும் சொல்ல விரும்புகிறேன்.
கேள்வி: இது உண்மை என்றால், விடுதலைப் புலிகள் இன்று அநாதையாகிவிட்டார்கள் என்று நீங்கள் சொல்வீர்களா?வ.பெ: இன்னும் 500 தொடக்கம் 600 வரையிலான விடுதலைப்புலிகளில் எஞ்சியவர்கள் கிழக்கு மாகாணத்திலும் வடக்கின் வன்னிக் காடுகளிலும் உலாவிக்கொண்டிருக்கின்றபோதும், விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் முடிந்துவிட்டார்கள்.
கேள்வி: அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றதா?வ.பெ: சில ஆயுதங்கள் இருக்கின்றன.
கேள்வி: அவர்களுக்கு ஏதாவது தலைமை இருக்கின்றதா?வ.பெ: அவர்களுக்கு அப்படி யாரும் இல்லை. எனவே இவர்கள் சில காலத்திற்கு ஆயுதக் குழுக்களாக இயங்குவார்கள். அதற்கு மேல்செல்லமுடியாது. ஏனெனில் அவர்கள் தங்கள் ஆயுதங்களைப் பராமரித்துக் கொள்ள எப்படி முடியும்?
கேள்வி: இந்த நிலையில் இலங்கைத் தமிழருக்கு யார் தலைமை கொடுப்பார்கள்?வ.பெ: இலங்கைத் தமிழ் மக்களிற்கு இவ்வளவு காலமும் விடுதலைப்புலிகள் தலைமை கொடுத்தார்கள் என்ற தப்பபிப்பிராயத்திற்கு நாங்கள் இடம் கொடுக்கக்கூடாது. உண்மையில் விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு. அது தமிழ்த் தலைமைகளைக் கொன்றொழித்தது. இது 1986இல் ரெலோ சிறீ சபாரட்ணத்தின் படுகொலையில் இருந்து தொடங்கியது. தொடர்ந்து அமிர்தலிங்கம் (தவிகூ), பத்மநாபா (ஈபிஆர்எல்எவ்), நீலன் திருச்செல்வம் (தவிகூ), கேதீஸ்வரன் (ஈபிஆர்எல்எவ்) போன்றோர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
1986ம் ஆண்டு தொடக்கம் விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புகளில் இருந்த தலைவர்களும் போராளிகளுமாக 10 000 க்கும் மேற்பட்டவர்கள் விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் எந்தவொரு அறிவுஜீவிகளின் அபிப்பிராயத்தையும் நசுக்கியே வந்தனர். விடுதலைப்புலிகள் தமிழ் மக்களிடையே திகிலைப் பரப்பினார்கள். அதாவது, எங்கு வாழுகின்ற தமிழ் மக்களாக இருந்தாலும் அவர்கள் மனத்தில் அச்சத்தைச் செலுத்தி இருந்தார்கள்.
கேள்வி: ஆனால் பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் கிடைத்த மக்கள் ஆதரவை, குறிப்பாக புகலிடத் தமிழர்கள் மத்தியில் கிடைத்த ஆதரவை, அதற்கான அடிப்படையை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?வ.பெ: நல்லது. நீங்கள் தமிழ் சமூகம் அப்படி இருக்கின்றதென்று கருதினால், அவர்கள் இந்த விடயங்களைத் தர்க்கரீதியாகவோ பகுத்தறிந்தோ பார்த்திருக்கவில்லை. தீவிரமான உணர்ச்சிப் பெருக்கினாலும் சிங்கள எதிர்ப்பு உணர்வினாலுமே அவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரித்தார்கள்.
புலம்பெயர் தமிழர்களை எடுத்துக் கொண்டால், இவர்கள் இலங்கைத் தமிழ் மக்களிடம் இருந்து தொலைந்து போன மக்கள். அவர்களுடைய சொந்த நலன்களும் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. தாங்கள் வசிக்கும் நாடுகளில் அவர்கள் தங்கியிருப்பதற்கு அவர்களுக்கு அகதி அந்தஸ்த்து தேவை. அது இலங்கையில் நடைபெறும் முடிவுறாத யுத்தத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த யுத்தம் அவர்களை நாட்டுக்குத் திரும்ப முடியாதிருப்பதை உறுதி செய்கின்றது.
கேள்வி: இனிமேல் இலங்கையில் என்ன நடக்கும்?வ.பெ: தமிழர்கள் ஜனநாயகப் பாதையில் முன்னேறிச் செல்வதற்கான முக்கியமான தடங்கல் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட்ட விடுதலைப்புலிகளின் படுகொலையுடன் அகற்றப்பட்டுவிட்டது. ஜனநாயகத்தை விரும்பும் தலைமைகள் இப்போது அங்கு சென்று தங்கள் மக்கள் மத்தியில் எந்த இடையூறும் இன்றி பணிபுரியக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்.
கேள்வி: ஆனால் இலங்கை அரசாங்கத்தின் குறிக்கோள் என்ன? விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தத்தில் அவர்கள் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லவா?வ.பெ: இலங்கை அரசின் குறிக்கோளும் அவர்களின் மனித உரிமை மீறல்களும் சந்தேகத்திற்கிடமில்லாமல் முக்கியமானவைதான். ஆனால் முதன்மையான விடயம் தமிழர்களின் பிரச்சினை. இன்றுவரை தமிழர் பிரச்சினையானது பிரிவினை என்ற பதாகையின் கீழ் விடுதலைப்புலிகளினால் திசைதிருப்பப்பட்டிருந்தது.
பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு பிரிவினை அல்லது தனியாகப் போதல், அதாவது ஈழம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்பது தெரியும். ஆனால் அவர்கள் எல்லோரும், விடுதலைப்புலிகள் போராடி சிங்களத் தலைமைகளிடம் இருந்து தங்களுடைய கோரிக்கைகளைப் பிடுங்கித் தருவார்கள் என்று நினைத்தார்கள். எப்படி இருப்பினும் விடுதலைப்புலிகளால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இன்னும் விளக்கமாகச் சொன்னால், தமிழ்த்தலைமைகளை படுகொலை செய்ததன் மூலம் எந்தத் தமிழத் தலைமை உருவாவதையும் தடைசெய்தது. விடுதலைப்புலிகளுடன் அணிசேராத எந்தவொரு அமைப்பபையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.
கேள்வி: ஈழம் சாத்தியமற்றது என்று சொல்கின்றீர்களா?வ.பெ: தனியே பிரிந்து போவதற்கான போராட்டம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் மறைந்து விட்டது. விடுதலைப்புலிகள் ரெலோ அமைப்பை 1986இல் தாக்கி அழித்தபோது பிரிவினைக்கான இயக்கம் அகால மரணத்தைத் தழுவியது.
கேள்வி: ஆனால் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு தடவை ஈழத்திற்கான கோரிக்கை எழமாட்டாதா?வ.பெ: விஷயம் என்னவென்றால், தமிழ்மக்கள் ஒரு சுயாட்சி முறையை அனுபவிக்கின்ற ஒரு அரசியல் சூழலை சிங்களத் தலைமைகள் உருவாக்காமல் இருந்தால் தமிழ் மக்களுடைய போராட்டம் தொடரும்.
கேள்வி: இனி வரும் காலங்களில் தமிழர்களின் போராட்டம் வன்முறை சார்ந்து இருக்குமா அல்லது ஒரு அகிம்சைப் போராட்டமாக இருக்குமா?வ.பெ: எதிர்காலத்தில் அநேகமாக வன்முறை சாராத அகிம்சைப் போராட்டமாகத்தான் இருக்கும். நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள மக்கள் எற்கனவே வன்முறை சார் போராட்த்தின் அனுபவங்களைக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை சிங்கள மக்கள் புரிந்து கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் அறவழியிலான போராட்டம் மட்டுமே வழிவகுக்கும்.
கேள்வி: 1990ம் ஆண்டு தொடக்கம் 1998ம் ஆண்டு வரை நீங்கள் முதலமைச்சராக இருந்திருக்கின்றீர்கள்? தமிழ்ப்பகுதிகளுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயத்தில் உங்கள் அனுபவம் எப்படியானது?வ.பெ: அந்த நேரத்தில் பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்தார். ஜனாதிபதி ஜயவர்த்தனா பதவியில் இருந்த காலத்தில், 13வது திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது. அது அதிகாரப் பகிர்வு தொடர்பான செயன்முறையைத் தடுத்தது. இந்த 13வது திருத்தச் சட்டம் நிறைய போதாமைகளைக் கொண்டுள்ளது. அதில் அதிகாரங்களுக்கான பற்றாக்குறை உள்ளது. அது ஒரு நல்ல சட்டமல்ல. அதில் தவறான அர்த்தப்படுத்தல்களுக்கு நிறைய இடம் இருக்கின்றது. அதேவேளை இது 1987இன் இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கும் அதிகாரப் பகிர்விற்கும் எதிராக இருந்தது. அந்த நேரம் அதிகாரப் பரவலாக்கத்தை அமுல்படுத்துவதற்கு எந்தச் சிங்களத் தலைமையும் அக்கறை காட்டவில்லை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் முதலமைச்சர்கள் இயங்கியது போன்று நிலைமை அந்தக் காலப் பகுதியில் எனக்கு அங்கு இருக்கவில்லை. எல்லா அதிகாரங்களையும் கொண்ட முதலமைச்சராக நான் இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அதிகாரப் பகிர்வுக்காக போராடுகின்ற முதலமைச்சராகத்தான் நான் இருந்தேன்.
எப்படி இருப்பினும் நேர்மையாகச் செயற்படும் ஒரு ஜனாதிபதி இருந்தால், அவரால் 13வது திருத்தச் சட்டத்தை அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தக் கூடிய விதத்தில் அர்த்தப்படுத்த முடியும். ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலத்தில் ஒரு புதிய அதிகாரப் பகிர்வுப் பொதி முன்வைக்கும் நோக்கம் இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒரு கூட்டாட்சி அமைப்புமுறையை ஏற்றுக் கொண்டிருந்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் 13வது திருத்தச் சட்டத்தை அதிகாரப் பகிர்வினைக் கொண்டு வருவதற்குப் பாவிக்க முடியும். உண்மையில், ஒரு தீர்வுப்பொதிக்கான சாத்தியத்தைக் காணுமாறு விஞ்ஞான தொழில்நுட்பத்துறை அமைச்சர் திஸ்ஸவிதாரண அவர்கள் தலைமையில் ஒரு சர்வகட்சிகள் குழு ஒன்று ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டது.
கேள்வி: ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அதிகாரப்பகிர்வை அமுல்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றதாக நீங்கள் நினைக்கிறீர்களா?வ.பெ: நிச்சயமாக. எதுவும் இன்னும் முற்றுப் பெறவில்லை.
கேள்வி: இதில் இந்திய அரசாங்கம் என்ன மாதிரியான அனுகூலமான பாத்திரத்தை வகிக்க முடியும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள?வ.பெ: இப்போது இலங்கை-இந்திய அரசுகளிற்கிடையில் நல்ல உறவொன்று இருக்கின்றது. இரண்டு அரசுகளும் தமிழ், சிங்கள, முஸ்லிம் தலைமைகளுடன் பேசி ஒரு ஒழுங்குக்கு வரவேண்டும். தமிழ்நாட்டுத் தலைமைகளும் இதில் கணிசமான பங்களிப்பை வழங்கும்படி பார்க்க வேண்டும.;
கேள்வி: பிரபாகரனின் மரணத்திற்குப் பின்னாக இப்போதிருக்கும் இந்தச் சூழலில், தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய பாதைகள் திறந்துவிடப்பட்டிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?வ.பெ: ஓம். வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப்புலிகள் தங்களுடைய வன்செயல்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும்வரை அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசுதல் சாத்தியமற்றது என்று இன்றுவரை சிங்களத் தலைமைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சாக்குப் போக்கு இப்போது இல்லாமற் போய்விட்டது.
தனிப்பட்ட முறையில் நான் உணர்வது என்னவென்றால் சிங்களத் தலைமைகளுக்கும் தமிழ்நாட்டுத் தலைமைகளுக்கும் இடையில் ஒருவிதமான நம்பிக்கை வெகுவிரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும். அது நிச்சயமாக இலங்கைத் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும்.
கேள்வி: விடுதலைப்புலிகளை அழிப்பதென்னும் பிரமாண்டமான ஒரு கடமையை எவ்வாறு மகிந்த ராஜபக்ச செய்து முடித்தார்? அவருக்கு முன்பிருந்தவர்கள் எல்லோரும் இந்த முயற்சியில் தோல்வியடைந்த பொழுது? நீங்கள் இது குறித்து என்ன கூறுகிறீர்கள்?வ.பெ: ஜனாதிபதி ராஜபக்சவிற்கு விடுதலைப்புலிகளை அழிப்தென்பதே ஒரே குறிக்கோளாக இருந்தது. அவருக்கு முதல் இருந்த ஜனாதிபதி சந்திரிக்காவும் உண்மையிலேயே தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்றும் சமாதானம் நிலவவேண்டும் என்றும் விரும்பிச் செயற்பட்டவர். ஆனால் அவர் பல்வேறு பிரச்சினைகளால் சூழப்பட்டிருந்தார்.
இன்னும் ஒரு விடயம், விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை.
கேள்வி: ஆனால் இந்திய அரசு இன்று இலங்கைத் தமிழர்களுக்கு முன்பிருக்கும் மனித அவலங்கள் பற்றிக் கவலை கொள்கின்றதா?வ.பெ: இந்திய அரசாங்கம் இலங்கைத் தமிழருக்கு மனிதாபிமான அடிப்படையிலான சகல உதவிகளையும் வழங்குவதைச் சாத்தியப்படுத்துகின்றது. இந்த அலுவல் இந்தியாவினால் மட்டுமல்ல முழு சர்வதேச சமூகத்தினாலும் முன்னெடுக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்த தமிழர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதிலும் அவர்களை மீள்குடியேற்றுவதில் பெருந்தன்மையாக இருக்கவேண்டும.;
கேள்வி: பிரபாகரனின் மரணத்துக்குப் பின்னர் இலங்கையில் பயங்கரவாதச் செயல்கள் ஊடுருவும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
வ.பெ: அது நீண்ட காலத்திற்கு இல்லை. இலங்கை அரசு கண்டிப்பாக இருந்தால் அப்படியான செயல்கள் நீண்ட காலத்திற்கு தொடர முடியாது.
கேள்வி: உங்களுக்கு பிரபாகரனை நீண்ட காலமாகத் தெரியும். நீங்கள் அவரை எப்படி விவரிப்பீர்கள்?வ.பெ: அவர் உலகின் மிகப் பெரிய ஈவிரக்கமற்ற பயங்கரவாதத் தலைவர்களில் ஒருவர். அதேநேரம் அவர் அரசியல் ரீதியாக கோழைத்தனமுடையவர்.
கேள்வி: தயவுசெய்து எப்படி என்று சொல்லுங்கள்?வ.பெ: அவர் எந்த ஒரு அரசியல்ரீதியான போட்டியையோ அல்லது விமர்சனங்களையோ எதிர்கொள்ளமுடியாதவராய் இருந்தார்.
கேள்வி: இன்று முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியின் 18வது ஆண்டு நினைவு தினம். அவர் பிரபாகரனின் கட்டளைப்படி 21.05.1991 இல் படுகொலை செய்யப்பட்டார் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். இப்போது பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் ராஜீவ் காந்தி குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட்டிருக்கின்றதென்று நீங்கள் சொல்வீர்களா?வ.பெ: ஓம் நிச்சயமாக. ராஜீவ் காந்தி பத்மநாபா கேதீஸ்வரன் மற்றும் பிரபாகரனினால் படுகொலை செய்யப்பட்ட ஏனையோர்களின் நண்பர்களுக்கும் குடும்பங்களுக்கும் கடவுள் தீர்பு வழங்கி இருக்கிறார்.
நான் இன்று ராஜீவ் காந்தியுடனான என்னுடைய பழைய நினைவுகள் எல்லாவற்றையும் மீட்டுப் பார்க்கிறேன். ஏனெனில் அவர் இலங்கையுடனான உறவில் அக்கறையாக இருந்த அதேவேளை இலங்கைத் தமிழர்களின் அரசியல் ரீதியான நன்மைகளைக் கொண்டு வரவும் தனிப்பட்ட முறையில் தன்னை அர்ப்பணித்திருந்தார். இலங்கை, இந்திய மக்களுக்கு இவ்வளவு துன்னப்தைக் கொண்டு வந்த பிரபாகரனின் அழிவை இன்று ராஜீவ்காந்தி இருந்து பாரத்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.
கேள்வி: இலங்கைத் தமிழர்கள் முன்னே உள்ள பணி என்ன?வ.பெ: அவர்கள் அதிகாரப் பகிர்வைக் கொண்டு வருவதற்கான ஒரு இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துப் போராடக்கூடிய தலைமைகளை இப்போது கண்டடைய வேண்டும்.
[
ஆங்கில மூலம் மொழிபெயர்ப்பு: லக்ஷ்மி]
மீண்டும் டோண்டு ராகவன். எல்லாம் நடக்கிறபடி நடந்திருந்தால் 1987-ல் வந்த ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இன்னேரம் நன்கு வேலை செய்ய ஆரம்பித்திருக்கும் என்னும் ஆதங்கத்தை என்னால் அடக்க இயலவில்லை. இதை கெடுக்க பிரேமதாசாவுடன் சேர்ந்து புலிகள் போட்ட ஆட்டம் மறக்கக் கூடியதா என்ன? எல்லாம் ஒரு தனி மனிதனின் ஈகோவுக்காக பலி கொடுக்கப்பட்டது என்பதில் எனக்கு ஒரு ஐயமுமில்லை.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்