Showing posts with label இலக்கிய நயம். Show all posts
Showing posts with label இலக்கிய நயம். Show all posts

10/27/2010

ராமாயணத்திலிருந்து ஒரு காட்சி - 3

இது ஒரு மீள்பதிவு. ராமாயணத்து காட்சிகளை ஒன்றுபடுத்துவதற்காகவும், இந்த இடுகை வகைப் படுத்தப்படுவதற்காகவும் இங்கு அதை கொண்டுவர துணிந்தேன். மீள்பதிவு செய்யப்படும்போது மாறுதல்கள் செய்வதும் சகஜமே. இப்போது இடுகைக்கு செல்வோம்.

ராமர் இலங்கை நோக்கிச் செல்லுமுன் சிவனுக்கு பூஜை செய்கிறார். அவருடைய இஷ்ட தெய்வமல்லவா சிவன். ராமரின் பூஜையை சிவனும் பார்வதியும் வானுலகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கீழிருந்த வண்ணம் ராமரும் அவர்களை அவ்வப்போது புன்முறுவலுடன் பார்க்கிறார். பூஜை முடிந்ததும் ராமர் அனுமனிடம் தான் பூஜை செய்த இடம் இனி ராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் எனக் கூறுகிறார். அந்தப் பெயரின் காரணம் குறித்து அனுமன் வினவ, ராமர் முதலில் ராமேஸ்வரன் பெயருக்கு பொருள் கூறுகிறார். அதாவது யார் ராமனுக்கு ஈஸ்வரனோ அவனே ராமேஸ்வரன் என்று.

அப்போது சிவன் பார்வதியை நோக்கிக் கூறுகிறார்: "உமா, பார்த்தாயா எவ்வாறு என் பிரபு ராமபிரான் ராமேஸ்வரனின் அர்த்தத்தை சாமர்த்தியமாக மாற்றி விட்டார்" என்று. விஷ்ணுவின் தங்கை பார்வதிக்கு அண்ணன் புகழ் கேட்டு ஒரே பெருமை. இருப்பினும் தெரியாதது போலக் கேட்கிறார்.

"அப்படியா சுவாமி, ராமேஸ்வரன் யார் என்று நீங்கள்தான் கூறுங்களேன்" என்று. அதற்கு சிவன் அவர்கள் கூறுகிறார். "யாருடைய ஈஸ்வரன் ராமனோ அவனே ராமேஸ்வரன்" என்று. உமை அவர்கள் "அப்படியா, உங்கள் இருவரில் யார் கூறுவது சரி" என்று கேட்க, சிவன் "நான்தான், ஏனெனில் நான் கள்ளம் கபடமற்றவன் (போலானாத்) அல்லவா என்று கூற, உமையின் புன்னகை இன்னும் விரிகிறது. சிவனின் திருவிளையாடல்கள் அவருக்கு ஞாபகம் வந்திருக்கும் போல.

ராமர் கீழிருந்து வானத்தை நோக்கி வணங்க, சிவன் வானத்திலிருந்து அவருக்கு பதில் வணக்கம் போடுகிறார். இவை அத்தனையும் ராமானந்த் சாகரால் எடுக்கப்பட்ட ராமாயணத் தொடரில் எண்பதுகளில் நான் பார்த்தேன். ஹிந்தி எனக்கு நன்றாகத் தெரியுமாதலால் நான் இக்காட்சியை முழுமையாக ரசித்தேன். கிளாக்ஸோ பேபி போன்ற தோற்றத்தில் சிவன் அம்சமாக இருக்கிறார். அதே ராமானந்த் சாகர் எடுத்த கிருஷ்ணர் தொடரிலும் அதே நடிகர் அதே ரோலில் வந்தார்.

அந்த வீடியோ காட்சி இதோ:


பரமசிவன், பார்வதியைப் பற்றிப் பேசும்போது எழுத்தாளர் நாடோடி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் நான் படித்தது நினைவுக்கு வருகிறது. வால்மீகியில் இது உண்டா எனத் தெரியாது. தன் மனைவியைத் தேடி ராமர் காட்டில் "சீதே, சீதே" என்று பிரலாபித்தவாறு அலைகிறார். செடி, கொடிகள், மான்கள், புலி, சிங்கங்கள் என்று எல்லோரிடமும் கேட்டுக் கொண்டு செல்கிறார். ஐயனின் துயரம் கண்டு பஞ்சபூதங்களும் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றன. மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் சிவன் ராமரைப் பரம்பொருளாக வணங்க, பார்வதிக்கு ராமரைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்ற என்ணம் திடீரென வந்தது. பூவுலகுக்கு வந்து சீதையைப் போல வேடம் தரித்து ராமர் முன்னால் வருகிறார். ராமரோ அவரைக் கண்டதும் வணங்கி "இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் பார்வதி அவர்களே, சிவன் அவர்களை விசாரித்ததாகக் கூறவும்" என்று கூறுகிறார்.

இன்னும் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/12/2010

உபபாண்டவம் - மிகப்பெரிய ஏமாற்றம்

சாரி, எனக்கு பொய் சொல்ல வராது. எஸ்ராவின் உபபாண்டவத்தை படித்து விட்டு நொந்து போனேன். பேசாமல் நூலகத்தில் இரவல் வாங்கி படித்து விட்டு திரும்பத் தந்திருக்க வேண்டியது, தெரியாமல் விலை கொடுத்து வாங்கியதில் பணம் 180 ரூபாய் தண்டம். நல்ல வேளையாக டிஸ்கவரி புக் பேலசில் 10% கழிவு கொடுத்தனர், இல்லாவிட்டால் 200 ரூபாய்கள் அல்லவா பழுத்திருக்கும்?

மகாபாரதத்துடன் அதை கம்பேர் செய்யக் கூடாது என்கிறார்கள். ஆனால் எப்படி செய்யாமல் இருக்க முடியும்? மூல நூலிலிருந்துதானே எடுத்து இவர் தனது வெர்ஷனை தந்திருக்கிறார்? ஆகவே மலை போன்ற வியாச மகாபாரடத்துக்கும் மடு போன்ற உபபாண்டவத்தையும் கம்பேர் செய்வதை தவிர்க்க இயலாது.

வியாச பாரதத்தில் துரியன், சகுனி, துசாசனன், கர்ணன் ஆகியோரை தீய சக்திகள் பக்கம் இருப்பதாகக் காட்டியிருந்தாலும் வியாசர் அந்தந்த பாத்திரங்களுக்குறிய பெருமைகளையும் கூறாமல் இல்லை. கிருஷ்ணர், அருச்சுனன், யுதிஷ்டிரன், பீமன் ஆகியோர் நல்ல சக்திகள் தரப்பில் இருப்பதாகக் காட்டினாலும் அவர்கள் தவறுகளையும் சாடாமல் இல்லை. மொத்தத்தில் ஒரு சமநிலை நிறைந்த நாவல். மனிதன் முழுக்க முழுக்க நல்லவனும் இல்லை, முழுக்க முழுக்க கெட்டவனும் இல்லை இரண்டும் கலந்தவனே அவன், அதுவும் ஒவ்வொரு மனிதனிலும் நன்மை தீமைகளின் கலவைகளின் விகிதங்கள் மாறிக் கொண்டே வந்துள்ளன என்றும், பிறகு எப்படி ஒட்டு மொத்தமாக ஒருவனை நல்லவனா அல்லது தீயவனா என்று கூறுவது என்பதையும் வியாசர் அழகாகக் கையாண்டுள்ளார்.

ஆனால் எஸ்ரா அவர்கள் அப்படியெல்லாம் மெனக்கெடவேயில்லை. துரியன் தரப்பை உயர்த்த வேண்டும் என்ற கட்டாயம் மட்டுமே அவருக்கு இருந்திருக்கிறது போன்ற தோற்றத்தை அவர் தருகிறார். அதை ஆரம்பத்திலிருந்தே செயலாக்குகிறார். அவரை பொருத்தவரை துரியன் செய்த ஒரே தவறு பாஞ்சாலியை துகிலுரித்தது மட்டுமே எனவும், அதுவும் பாஞ்சாலி அவனைப் பார்த்து கேலியாக சிரித்ததாலுமேயே என்று கூறுவதுபோலத்தான் அவரது வார்த்தைகள் செல்கின்றன.

வியாச பாரதத்தில் பாண்டவர்களின் ஒற்றுமையைப் போலவே கௌரவர்களுக்குள்ளேயும் இருக்கும் ஒற்றுமையும் எடுத்து கூறப்படுகிறது. ஆனால் எஸ்ரா அவர்களோ பாண்டவர்களுக்குள் ஒற்றுமையில்லாதது போன்ற தோற்றத்தைத் தர முயற்சிப்பதாகவே எனக்குப் படுகிறது. அரக்கு மாளிகையில் குந்தியும் பாண்டவர்களும் தப்பிக்கையில் வேடுவப்பெண்ணும் அவளது ஐந்து புத்திரர்களும் சகுனியின் கையாள் புரோசனனுடன் சேர்ந்து தீயில் மடிகின்றனர். அதற்கு குந்தியை குறைசொல்லும் எஸ்ரா சகுனி மற்றும் துரியனின் ஒரிஜினல் துரோகம் குறித்து இடிபோன்ற மௌனத்தையே தருகிறார். துரோணரை அசுவத்தாமன் என்ற யானை புரளி மூலம் கொன்றதை பேசும் அவர் துரோணர் அபிமன்யுவை கொன்றது குறித்து ஒன்றும் பேசுவதாகத் தெரியவில்லை. அதை போர் யுக்தி என்று கூறினாலும் கூறுவார் போல.

இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம். ஆனால் ஒன்றை மீண்டும் மீண்டும் கூற வேண்டும். வியாச பாரதத்தையும் எஸ்ராவின் உபபாண்டவத்தையும் ஒப்பிடக் கூட இயலாது. அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/06/2009

திருச்சி சம்பந்தம் அத்தானை திவான் என்னு சொன்னாங்க

சமீபத்தில் டிசம்பர் 1954-ல் கல்கி அவர்கள் காலமானதும் அவர் இடத்துக்கு மீ.ப. சோமசுந்தரம் கல்கி பத்திரிகையின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். வெகு குறைந்த காலமே அவர் அப்பதவியில் இருந்தார். அவருக்கு பிறகு சதாசிவம் அவர்களே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால் அது பற்றி இப்பதிவு அல்ல.

சோமு இருந்த குறைந்த காலத்தில் ரவிச்சந்திரிகா என்னும் தலைப்பில் ஒரு தொடர்கதை எழுதினார். பல நாட்டுப் பாடல்கள் அதில் ட்ச்ந்தர்ப்பத்துக்கு ஏற்ப நுழைக்கப்பட்டன. சட்டென உணர்ச்சி வசப்படும் ஒரு புல்லாங்குழல் வித்வான் ரவி. அவர் எடுத்து வளர்த்த ஒரு சுட்டிப் பெண் நாட்டியத் தாரகை சந்திரிகா. இவர்கள் இருவரை மையப் பாத்திரங்களாகக் கொண்ட அக்கதை ரவிச்சந்திரிகா என பொருத்தமாகவே பெயரிடப்பட்டது.

அதில் ஒரு நாட்டுப் பாடல் என் மனதில் இன்னும் அப்படியே இருக்கிறது. பொய்யுரைத்து தன் தகுதிக்கு மீறிய இடங்களில் சிலர் பெண்ணெடுக்கிறார்கள். அப்பொய்களை கூறுபவர்களில் முக்கியமானவர்கள் கல்யாணத் தரகர்கள். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணிவை என்னும் சொலவடையை வேதம் போல நம்பும் புரோக்கர்கள் பல. அம்மாதிரி பொய் சொல்லி வந்த பல மாப்பிள்ளைகளை பற்றித்தான் இப்பாடல்.

“திருச்சி சம்பந்தம் அத்தானை
திவான் என்னு சொன்னாங்க
திருச்சி போய் பார்த்தேன், அத்தான்
தீவட்டி பிடிக்க கண்டேனே”

“தாராபுரம் சம்பந்தம் அத்தானை
தாசிலாதாருன்னு சொன்னாங்க
தாராபுரம் போய்ப் பார்த்தென், அத்தான்
தமுக்கடிக்கக் கண்டேனே”

“கழுகுமலை சம்பந்தம் அத்தானை
கலெக்டர்னு சொன்னாங்க
கழுகுமலை போய் பார்த்தேன், அத்தான்
கழுதை மேய்க்கக் கண்டேனே”

“இலஞ்சிக்குளம் சம்பந்தம் அத்தானை
இஞ்சினியர்னு சொன்னாங்க
இலஞ்சிக்குளம் போய் பார்த்தேன், அத்தான்
இட்டிலி விற்கக் கண்டேனே”

இப்படித்தான் பல விஷயங்களில் முதலில் பார்க்கும்போது பந்தாவாகவெல்லாம் இருக்கும். கூர்ந்து கவனித்தால் ஒன்றுமே இராது. “மாய உலகில் ஆலிஸ்” என்னும் ஆங்கில புத்தகத்தில் ஒரு ராணி வருவாள். பார்ப்பவருக்கெல்லாம் எல்லாம் கழுத்தை வெட்டும் தண்டனை தருவாள். கடைசியில் ஆலிஸ் “உன்னையெல்லா யாரடி சீந்துவா, நீ ஒண்ணும் இல்லாத பிஸ்கோத்து, வெறும் சீட்டுக் கட்டு ராணி” எனக்கூறி அவளது முக்கியத்துவத்தை ஒன்றுமில்லாததாக்குவாள்.

உலகில் கிட்டத்தட்ட எல்லா விஷயங்களுமே மூடி மறைக்கும் வரைதான் மதிப்பு. முழு உண்மையும் தெரிந்தால் பலமுறை “பூ இவ்வளவுதானா” என்று கூறப்பட்டுவிடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/15/2007

கள்ளா வா புலியைக் குத்து

இப்பதிவில் என்னைத் தமிழ் தாத்தா என்று ஒருவர் அழைக்க, நான் அதற்கு, "தமிழ்த்தாத்தா ஒருவர்தான், அவர்தான் உ.வே. சாமினாத ஐயர். என்னைப் போன்ற துரும்புக்கெல்லாம் அந்த பெயரைத் தராதீர்கள்" என்று உறுதியாக மறுத்துவிட்டேன். பிறகு அவர்கள் என்னை தமிழ் தாதா என்று அழைத்ததெல்லாம் இப்பதிவுக்கு வேண்டாம். ஏனெனில் இது உ.வே.சா. அவர்களைப் பற்றியது. அந்தக் கிழவர் மட்டும் விடாமுயற்சியுடன் பழந்தமிழ்நூல்களை சேமித்திராவிட்டால் இங்குள்ள பல தமிழ்ப் பேச்சாளர்களுக்கு வேலையே இல்லாது போயிருக்கும்.

ஐயரவர்களால் பதிப்பிக்கப் பெற்ற நூல்களில் ஒன்றுதான் சீவக சிந்தாமணி. அதில் ஒரு காட்சி வருகிறது. அது பின்வருமாறு.

யாழ் மீட்டுதலில் தன் ஆர்வத்தைக் காட்டுவோருக்கு, தன் மகள் காந்தர்வதத்தையை மணம் புரிந்து தருவதாக அவளது தந்தை ஸ்ரீதத்தன் அறிவித்தான். காப்பியத்தலைவனான சீவகன் திறம்பட யாழிசைத்துப் போட்டியில் வென்றான். ஏற்கனவே சீவகன் மீது பொறாமை கொண்டிருந்த மன்னனான கட்டியங்காரன் மனம் புழுங்கி, சீவகனுடன் போரிட்டு வெல்பவர்களே காந்தர்வதத்தையை மணம் புரியத் தக்கவர் என்று யாழிசைப் போட்டிக்கு வந்திருந்த மன்னர்களிடம் அறிவித்தான். அவ்வறிப்பைக் கேட்ட மன்னர்கள் ஒன்று திரண்டு சீவகனுடன் போரிட்டனர். அவர்களைப் போரில் வென்று காந்தர்வதத்தையை சீவகன் மணம் புரிந்தான்.
பிற மன்னர்களை சீவகனுக்கு எதிராகத் தூண்டிய கட்டியங்காரனின் செயலை, "கள்ளரால் புலியை வேறு காணிய காவல் மன்னன்" என்று சிந்தாமணி குறிப்பிடுகிறது. இத்தொடர் இடம்பெறும் செய்யுளுக்கு நச்சினார்க்கினியர் "சீவகன், தத்தையை யாழும் பாட்டும் வென்றான், நல்லனென்று மாந்தர் ஆர்ப்ப அது பொறாதே கட்டியங்காரன் மனம் புழுங்கி அரசரைக் கொண்டு சீவகனைப் போர் காண வேண்டி, அரசர்க்கெல்லாம் சில தீமொழிகளைக் கூறினானென்க" என்று உரை எழுதியுள்ளார்.

உரை தெளிவாக இருப்பினும், "கள்ளரால் புலியை வேறு காணிய" என்னும் தொடருக்கு விளக்கம் ஏதும் இல்லை. உவேசா அவர்களும் எவ்வளவோ யோசித்துப் பார்த்தார். சீவகன் புலிதான். அதில் பிரச்சினையில்லை. அவனால் தோற்கடிக்கப்பட்ட அரசர்களை பசுக்கூட்டங்களோடு ஒப்பிடுவதுதானே முறை என்ற ரீதியில் அவர் கருத்து சென்றது. இருப்பினும் காலத் தட்டுப்பாடு வேறு. ஆகவே இத்தொடருக்கு விளக்கம் காண இயலாத நிலையில் உ.வே.சா சீவக சிந்தாமணி முதல் பதிப்பை வெளியிட்டார். பிறகு வேறு வேலைகள், வேறு பதிப்புகள் என்று அவரது கவனம் சென்றது.

ஒரு நாள் அவர் வீட்டுக்கு சாமப்பா என்னும் பெயருடைய ஒரு கிழவர் மிகுந்த கோபத்துடன வந்தார். வந்தவரது கோபம் இன்னொரு கிழவர் மேல். அவரைப் பற்றி கோபமாக உவேசாவிடம் பேச இவருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. வந்தவரிடமே விஷயம் என்ன என்று கேட்டார்.

தமக்கு வேண்டாத ஒருவர், தமக்கும் மற்றொருவருக்கும் இடையே சண்டை மூட்டிவிட்ட நிகழ்வைக் கும்பகோணத்தில் வசித்துவந்த உ.வே.சாவிடம் சாமப்பா என்னும் அந்தக் கிழவர் பின்வருமாறு குறிப்பிட்டார். "எப்படியாவது நாங்கள் முட்டி மோதிக்கொண்டு சாகட்டுமே என்பது அவன் அபிப்பிராயம். நாங்கள் இரண்டு பேரும் அவனுக்கு வேண்டாதவர்களே, அதற்குத்தான், கள்ளா வா, புலியைக் குத்து என்கிறான். நானா ஏமாந்து போவேன்"

அதுவரை ரொம்ப ரியேக்ஷன் இல்லாமல் கேட்டுவந்த உவேசாவோ தேள் கொட்டியது போல துள்ளி குதித்தார். "என்ன, என்ன, என்ன சொன்னீர்கள்" என்று பரபரப்பாகக் கேட்டார். சாமப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன சொன்னேன்" என்று அவரிடமே திருப்பி கேட்டார். "ஏதோ கள்ளன், புலின்னு சொன்னீர்களே" என்று உவேசா கேட்க, அவர் சாவகாசமாக, "ஓ அதுவா இது ஒரு பழமொழியாச்சே" என்று "கள்ளா வா, புலியைக் குத்து" என்று திரும்பச் சொன்னார். இப்பழமொழி ஒரு கதையை உள்ளடக்கியிருந்தது. அக்கதையை உ.வே.சா விடம் அக்கிழவர் பின்வருமாறு விளக்கினார்.

"ஒரு மனுஷ்யன் பண மூட்டையோடு சுடுகாட்டு வழிகாக போய்க் கொண்டிருந்தான். அப்போது ஒரு திருடன் அவனைக் கண்டு துரத்தினான். எதிரில் ஒரு புலி உறுமிக் கொண்டு வந்தது. இந்த இரண்டு அபாயங்களிலிருந்தும் தப்புவதற்கு அந்த வழிப்போக்கன் ஒரு தந்திரம் பண்ணினான். திருடனைப் பார்த்து "அதோ பார், அந்த புலியைக் குத்தி கொன்றுவிடு; நான் உனக்கே பண மூட்டையைத் தந்துவிடுகிறேன்" என்றான். திருடன் அப்படியே புலியை எதிர்த்தான். புலி அவனை அடித்து தின்று பசி தீர்ந்தது. அதற்குள் வழிப்போக்கன் தப்பி பிழைத்து ஓடிபோய்விட்டான். அவன் தனக்குப் பகையாக வந்த புலியையும் கள்ளனையும் முட்டவிட்டுத் தான் தப்பினான்.

இக்கதையைக் கேட்டதும் உ.வே.சாவிற்கு ஒரே மகிழ்ச்சி. அக்கிழவரிடம் அவர் தன் வீட்டிற்கு எப்போது வேண்டுமானால் அமுதுன்ண வரலாம் என பொது அழைப்பை விடுத்தார். பிறகு "கள்ளரால் வேறு காணிய" என்னும் சீவக சிந்தாமணி அடிக்கு "கள்ளர்களாகிய அரசர்களால் புலியாகிய சீவகனை வெற்றி கொள்ளுதலைக் காணும் பொருட்டு" என்று பொருள் விளங்கிக்கொண்டார். பின்னர் சீவக சிந்தாமணியின் இரண்டாம் பதிப்பில் மேற்கூறிய செய்யுளின் கீழ் "கள்ளா வா, புலியைக் குத்து என்பது பழமொழி" என்னும் குறிப்பைச் சேர்த்தார்.

இவ்வாறாக உ.வே.சா. அவர்கள் 91 நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்..... அவருடைய "என் சரிதம்' என்ற சுய சத்திர நூல் பழமைக்கும், புதுமைக்கும் ஒரு பாலமாக உள்ளது என்றால் மிகையாகாது. அவருக்கு சென்னை அரசு 1906-ல் அளித்த பட்டமாகிய "மஹாமஹோபாத்யாய'' அவரால் பெருமை பெற்றது; 1932-ல் சென்னைப் பல்கலைக் கழகமும் டாக்டர் பட்டம் அளித்து கௌரவம் அடைந்தது. இப்போதும் திருவல்லிக்கேணி மாநிலக்கல்லூரி முன்பு அன்னாருடைய சிலை உள்ளது. அவருடைய நினைவை நன்றியுடன் போற்றுவது தமிழ் கூறும் நல்லுலகத்தின் கடமை.

அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி:

1. நிலாச்சாரல்

2. காலச்சுவடு மார்ச் 2005 இதழ், திரு ஆ.சிவசுப்பிரமணியனின் "உ வே சா வும் நாட்டார் வழக்காறுகளும்" கட்டுரை பற்றி இங்கு வந்த குறிப்புகள்.

10/17/2006

ராமாயணத்திலிருந்து ஒரு காட்சி - 2

ராமர் அயோத்திக்குத் திரும்புகிறார். பட்டாபிஷேகம் நடக்கப் போகிறது. மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பதினான்கு ஆண்டு காலம் தங்கள் வீட்டுப் பிள்ளையாம் ராமனை காணாமல் இருந்தவர்கள் அல்லவா? ஏதோ அந்தப் பதினாலு ஆண்டுகளுக்கு ராமனுக்கு எவ்வகையிலும் குறைவில்லாத பரதாழ்வாரின் ராச்சியம் நடந்ததோ அவர்கள் பிழைத்தார்களோ. இருந்தாலும் தலைப் பிள்ளை என்பது தனிதானே. மக்களை முந்திக் கொண்டு பரதனும் அல்லவா ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறான்.

எல்லோரும் ராமனை பிரமிப்புடனேயே நோக்குகின்றனர். ஆனானப்பட்ட தசகண்டன் ராவணனை அல்லவா வெற்றி கொண்டு வந்துள்ளான் அவர்கள் வீட்டுப் பிள்ளை? ஒரு மலையையே பெயர்த்து எடுக்கக் கூடிய அனுமனே அவனைப் பணியும்போது தாங்கள் எம்மாதிரம் என திகைத்து நிற்கின்றனர்.

அப்போது கழியை ஊன்றிக் கொண்டு எல்லோரையும் விலக்கி உள்ளே ஓடி வருகிறான், அந்த வயதான தோட்டக்காரன். ராமனும் அவன் சகோதரர்களும் குழந்தைகளாக இருந்த போது ஓடி விளையாடி தூள் கிளப்பிய தோட்டத்தைப் பராமரித்தவன் அவன். அடேய் ராமா, லட்சுமணா, பரதா, சத்ருக்குனா, பூக்களை சேதப்படுத்தாது விளையாடுங்கள் என்று கூறி விட்டு அவர்களுடன் சேர்ந்து குழந்தை போல அவனும் விளையாடிய உரிமை உடையவன்.

அந்த தோட்டக்காரன் நேரே வந்து ராமரிடம் வந்து, பழக்க தோஷத்தில் "அடேய் ராமா, என்னை ஞாபகம் இருக்கிறதா" என்றுக் கூறிக் கொண்டு அவரைக் கட்டியணைத்துக் கண்ணீர் உகுக்க, பகவானும் அவனைக் கட்டிக் கொண்டு கண்ணீர் உகுத்தாராம். சுற்றியிருந்தவர்கள் திகைத்து நின்றனராம். அந்தத் தோட்டக்காரனைப் பொருத்தவரை ராமன் அதே பாலகனே. இந்தக் கதையை 19-ஆம் நூற்றாண்டில் வெளி வந்த "வினோத ரச மஞ்சரி" என்னும் புத்தகத்தில் சமீபத்தில் 1963-ல் முதன் முறையாகப் படித்தேன்.

இந்தக் கதை பின்னால் இந்திப் படம் "அதாலத்" பார்த்த போது ஞாபகம் வந்தது. அப்படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அதில் அமிதாப் பச்சன் அப்பா, மகன் என்று இரு வேடங்களிலும் வருவார். அது ஒன்றும் புதிது அல்ல. அதே போல, அதில் பிள்ளை அமிதாப்பைப் பற்றியும் இங்கே நான் பேச வரவில்லை.

அப்பா அமிதாப் பச்சனைப் பற்றி மட்டும் பேசப் போகிறேன்.

முதலில் கிராமத்தானாக வருவார். எளிய போஜ்பூரியில் பேசிக் கொண்டுக் கள்ளம் கபடம் இல்லாமல் இருப்பார். வில்லன்களின் சூழ்ச்சியால் சிறைக்குச் சென்று அதன் பிறகு காலத்தின் கோலத்தால் ஒரு பெரியக் கடத்தல்காரனாக உருவெடுப்பார்.

அது வரை போஜ்பூரியில் பேசி வந்தவர் மும்பை இந்திக்குத் தாவுவார். மிக நாசுக்கானவராக மாறி எல்லோரையும் கலங்கடிப்பார்.

ஆனால் அது எல்லாம் மற்றவர்களிடம்தான். தான் உயிரையே வைத்திருக்கும் தன் மனைவி வஹீதா ரெஹ்மானிடம் மட்டும் கடைசி வரை போஜ்பூரியே பேசுவார்.

அந்தப் படம் எழுபதுகளில் வெளி வந்தது. அப்போது அப்படத்தைப் பார்த்து இந்த ஒரு விஷயத்தைக் கண்டு மிக பிரமித்தேன். படம் என்னவோ வழக்கமான அமிதாப் கதைதான். இந்த ஒரு விஷயம் மட்டும் என்னை மிகக் கவர்ந்தது. என்ன காவிய ரேஞ்சில் அன்பு?

ராமன் மாறவேயில்லை!

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/16/2006

ராமாயணத்திலிருந்து ஒரு காட்சி

காகுத்தனுக்காக அன்னை சீதா பிராட்டியாரைத் தேடி அனுமன் கடலைத் தாண்டி இலங்கை வருகிறான். தடுத்த லங்கையின் காவல் தெய்வத்தை தோற்கடித்து உள்ளே பிரவேசிக்கிறான். ஒரு சிறு குரங்கு ரூபமெடுத்து ஒவ்வொரு இடமாக சீதா பிராட்டியார் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நாடுகிறான். கடைசியில் அசோக வனத்துக்கு வருகிறான். சீதா பிராட்டியாரை சந்தித்துப் பேசி, காகுத்தன் கொடுத்தக் கணையாழியை அவரிடம் அளித்து, பதிலுக்கு ராம பிரானிடம் "கண்டேன் சீதையை" என்று பின்னால் கூற ஏதுவாக சீதா பிராட்டியாரிடமிருந்து சூடாமணியை பெறுகிறான்.

வந்த வேலை முடிந்தது. ஆனால் ஒரு நெருடல் பாக்கி இருக்கிறதே. சீதா பிராட்டியாரைத் தான் விஸ்வரூபம் எடுத்து தன் முதுகில் ஏற்றி ராமபிரானிடம் சேர்ப்பிப்பதாகச் சொன்ன யோசனையை சீதா தேவி அது தன் கணவனுக்கு இழுக்கு என்று மறுத்து விட்டார். சற்றே கையறு நிலையில் இருப்பதாக உணர்கிறான் ராமதூதனாகிய அனுமன். "சரி, இந்த ராட்சஸப் பசங்களை சற்று விசாரித்து விட்டுச் செல்வோம்" எனத் தீர்மானிக்கிறான். சடசடவென்று மரங்களை முறித்துப் போடுகிறான். காவல்காரர்களை ஆத்திரம் தீர அடித்து விரட்டுகிறான். அவர்கள் குய்யோ முறையோ எனக் கத்திக் கொண்டு அரசனிடம் தகவல் சொல்ல ஓடுகின்றனர்.

ராவணனின் வீரர்கள் ஒவ்வொருவராக பரலோகம் செல்கின்றனர். ராவணனது அருமை மகன் அட்சயக் குமாரனும் மாள்கிறான். அப்போது போருக்கு வருகிறான், மேகநாதனாகிய இந்திரசித்து. அனுமன் மேல் விடும் அம்புகளை அனுமன் அனாயாசமாக தவிர்த்து பறக்கிறான். மேலிருந்து பாறை, பிடுங்கப்பட்ட மரங்கள் என்றெல்லாம் படையினர் மேல் போட்டு துவம்சம் செய்கிறான் அனுமன். இந்திரசித்து செய்வதறியாது திகைக்கிறான். பிறகு சுதாரித்து பிரும்மாஸ்திரத்தை விடுகிறான். வருவது பிரம்மாஸ்திரம் என்பதைக் கண்டு அனுமன் மரியாதையுடன் கைகூப்ப அவனை அஸ்திரம் கட்டிப் போட்டு தரையில் தள்ளுகிறது. அனுமனுக்குக் கிடைத்த வரத்தின்படி அது அவனை ஒரு முகூர்த்த காலம்தான் கட்டுப்படுத்தும். அது அவனைத் தவிர மற்றவருக்குத் தெரியாது. ஆகவே அவன் கவலையின்றி இருக்கிறான்.

அரக்கர்களுக்கோ கும்மாளம். அகப்பட்டுக் கொண்டது துஷ்டக் குரங்கு என்று ஆர்ப்பரித்து, அனுமனை மேஎலும் கயிற்றினால் கட்டுகின்றனர். அதைப் பார்த்த இந்திரசித்து தலையில் அடித்துக் கொள்கிறான். "அட இந்த முட்டாப் பசங்க செஞ்ச வேலைய என்னான்னு சொல்லுறது" என்று கவுண்டமணி ரேஞ்சுக்கு புலம்புகிறான். விஷயம் என்னவென்றால், பிரும்மாஸ்திரம் செயலில் இருக்கும்போது, அதன் மேல் வேறு அதிகப்படியான கயிற்றைக் கொண்டு வந்து கட்டினால், பிரும்மாஸ்திரம் தானே விலகி விடும் என்பதே. அனுமனுக்கும் அது தெரியும், இருப்பினும் பேசாமல் இருந்து இந்திரசித்தை மேலும் டென்ஷனாக்குகிறான்.

இப்போது இந்தக் காட்சி ஏன் என் ஞாபகத்துக்கு வரவேண்டும்?

ஏற்கனவே பலமான நிலையில் உள்ள ஆளும் கட்சிக் கூட்டணி தேவையில்லாமல் தேர்தலில் ஏன் தில்லுமுல்லு செய்ய வேண்டும்? இது 2006-க்கும் பொருந்தும், 2001-க்கும் பொருந்தும்? தேவையில்லாத தாம்புக் கயிற்றால் முக்கியமான பிரம்மாஸ்திரம் அல்லவா செயலிழந்து போகிறது?

சமீபத்தில் 1977-ல் பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் பிரதமர் புட்டோ நல்ல நிலையிலேயே இருந்தார். இருந்தாலும் பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற எண்ணி தேர்தலில் தில்லுமுல்லு செய்து, பேரைக் கெடுத்துக் கொண்டார். ஜியா உல் ஹக்கால் பதவியிறக்கப்பட்டு, கடைசியில் தூக்கில் தொங்கினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது