12/31/2009

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட் - 11)

எபிசோட் - 11 (30.12.2009) சுட்டி - 1 & சுட்டி - 2
(முதல் சுட்டி சில நொடிகள் கழிந்த பின்னரே ஆரம்பிக்கிறது).
வசுமதியின் சோர்வான பேச்சு தொடர்கிறது. தெய்வமே கல்லாகப் போனபின்னர் அதை ஏன் வணங்க வேண்டும் என பேசுகிறாள். அடாடா இவர்கள் நாத்திகர்களாகி விட்டார்களே என சோவின் நண்பர் அங்கலாய்க்க, மனம் அதைரியப்படும்போது இவ்வாறெல்லாம் பேசுவது சகஜமே என சோ கூறுகிறார். ராமாயணத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். இந்திரஜித் மாய சீதையை கொன்ற போது லட்சுமணன் வசுமதி பேசுவதை விட கடவுளையும் தர்மத்தையும் கச்சாமுச்சா என திட்டுகிறான். பிறகுதான் விபீஷணன் வந்து அது மாயசீதையே என தெளிவுபடுத்துகிறான். ஆக, வசுமதி பேசுவது விரக்தியின் காரணமே, அதற்கு மேல் அதற்கு முக்கியத்துவம் இல்லை என சோ கூறுகிறார்.

வசுமதி நாதன் பேச்சு தொடர்கிறது. அசோக் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் என வசுமதியும் நாதனும் அலசுகிறார்கள். கோவிலில் இருப்பான், அங்கு நடை சாத்தினால் நடைபாதையில் படுப்பான், அங்கிருந்தும் அவனை போலீஸ் பிடித்து போகலாம் என்றெல்லாம் பேச்சு வருகிறது. மனம் வெறுத்துப்போகும் நாதன் தான் ஒரு நாள் இதயநோயால் தெருவிலேயே கீழே வீழ்வது உறுதி எனக்கூற, வசுமதி பதறிப் போகிறாள். பிறகு சாதாரணமாக் பேச ஆரம்பிக்க்றாள்.

ஆனாலும் அன்று அசோக்குடன் மல்லுக்கட்டியிருக்க வேண்டாம் எனவும் அபிப்பிராயப்படுகிறாள். நாதனுக்கும் இது குறித்து சற்றே குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது.

பாகவதர் வீட்டில் காலைநேர அமர்க்களம். ஆஃபீசுக்கு செல்லும் அவசரத்தில் சிவராமனும் ராஜியும், காலேஜுக்கு செல்லும் அவசரத்தில் ராம்சுப்பு. நடுவில் பாகவதர் வேறு தனது பகவத்கீதை புத்தகத்தை அவர்கள் பார்த்தார்களா எனக்கேட்டு வெறுப்பேர்றுகிறார். நாதன் வேறு வரப்போவதாக இருக்கிறார் என்று அவர் கூற, உடனே வீட்டைவிட்டு புறப்பட ராஜியின் அவசரம் அதிகரிக்கிறது.

வீட்டுக்கு வெளியே காரில் ஏறப்போகும் சந்தர்ப்பத்தில் நாதன் வந்து சேருகிறார். சிவராமனையும் ராஜியையும் சுருக்கமாக விசாரித்து விட்டு உள்ளே செல்கிறார். பாகவதருடன் முதலில் பொதுவான லௌகீக விஷயங்கள் பேசுகிறார். பிறகு அசோக் பற்றி பேச்சு திரும்புகிறது. அசோக்குடன் தான் வாதம் நடத்தியபோது பாகவதரும் இருந்ததை நினைவுபடுத்திவிட்டு நாதன் அன்றைக்கென பார்த்து நிகழ்ச்சிகள் நூல்பிடிகணக்காக ஒரு இறுதியான முடிவுக்கு சென்றன என பாகவதரை கேட்கிறார்.

அவரோ அசோக்கை கடற்கரையில் சந்தித்தது தெய்வாம்சம் பொருந்தியவராகத்தான் இருக்க வேண்டும், அசோக்குக்கு வேம்பு சாஸ்திரிகள் சவால் விட்டது தெய்வ நிர்ணயம், நாதன் தான் செய்த தானதர்மங்களை பட்டியலிட்டது தெய்வத்தின் திருவிளையாடல், அசோக் தன்னை யாருக்கு நாதன் தானமாக கொடுக்கப் போகிறார் எனக்கேட்டது லீலா வினோதம், நாதன் அவனை வேதபாடசாலைக்கு தானமாக கொடுப்பதாக கூறியது அடியார் மூலம் ஆண்டவன் தரும் அசரீரி என்று கூறுகிறார்.

இவ்வாறெல்லாம் தெய்வம் பேசவைக்குமா எனக்கேட்டதற்கு ஆம் என பதில் கூறும் சோ கும்பகர்ணன் நித்யத்துவத்தை வேண்டி வரம் கேட்க நினைக்க, சரஸ்வதி அவன் நாவில் அமர்ந்து விளையாடியதால் நித்ரத்துவத்தை அவன் கேட்டு வைக்க அவ்வாறே அவன் பெரும் உறக்கக்காரனானான்.

இதெல்லாம் தனக்கு ஏன் நடக்கிறது என நாதன் கேட்க, இதுதான் அவரது முந்தையப் பிறவிகளின் கர்மபலன் என பாகவதர் விடை தருகிறார். நாதன் திகைக்கிறார்.
(தேடுவோம்)

எங்கே பிராமணன் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் - 31.12.2009

அனானி (23.12.2009 காலை 07.59-க்கு கேட்டவர்)
டோண்டு குறளுக்கு பொருள் எழுதினால்?
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

பதில்: அகரம் முதல் தொடங்கும் எழுத்துக்கள் எல்லாம் மூல முதல்வோனாகிய இறைவனை முன்னிறுத்தியே உலகில் உள்ளன.

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

பதில்: ஒருவர் கல்வி கற்றும் இறைவனின் திருவடிகளைத் தொழவில்லை எனில், அவரது கல்வியினால் பயன் இல்லை, அவர் என்னதான் கற்றார்?

3.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
பதில்: நினைத்தவுடன் மனத்தே விளைகின்ற, மேவுகின்ற இறைவனது பாதங்களைத் தொடருவதால், மன அழுத்தங்கள் நீங்கப்பெற்று மனிதர்கள் இப் பூவுலகில் இசைந்தொழுகி நீண்ட காலத்திற்கு வாழ்வார்

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

பதில்: விருப்பு வெறுப்பே துன்பங்களுக்குக் காரணமாக இருப்பவை. ஆகையால் அவை இரண்டும் இல்லாத இறைவனின் பாதங்களை அடைந்தோருக்கு அவ்விதமே எங்கேயும், எப்போதும் எவ்வகைத் துன்பமும் இராது.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

பதில்: இரு வினைகளாகிய பாவ, புண்ணியம் அல்லது நல்வினை, தீவினை ஆகியவற்றுள் அறியாமைக் காலத்தில் சேர்ந்தவையானவை, இறைவனின் மெய்ப்பொருளை உணர்ந்து தெளிந்து நிற்போரைச் சேர்வதில்லை.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

பதில்: ஓசை, ஒளி, ஊறு, சுவை, நாற்றம் என இந்திரிய வாயில்கள் மூலம் பெறும் ஐந்து அவாவினையும் அறுத்தவனின் உண்மையான ஒழுக்க நெறியினைக் கடைப் பிடிப்போர் உலகில் நீண்ட வாழ்வினைப் பெறுவர்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

பதில்: தனக்கு இணையே இல்லாத, பேராற்றல் மிக்க இறைவனின் பாதார விந்தங்களைச் சேர்ந்து ஒழுகுபவருக்கு அல்லாது மற்றவர்களின் மனக் கவலை, துன்பம் போன்றவற்றைக் குணப்படுத்தும் சாத்தியம் அரிது

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

பதில்: அறக்கடலாகிய அகத்தே குளிருடைய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்து ஒழுகுபவரைத் தவிர மற்றவர்கள் மற்றைய கடல்களாகிய பொருட் கடலையும், இன்ப சாகரத்தையும் கடக்க இயலாது.

9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

பதில்: இயங்கு கோள் அற்ற பொறிகளினால் பயன் இராதே; அதைப் போன்றே எட்டுக் குணங்களைக் கொண்ட இறைவனின் தாளை வணங்கி ஒழுகாத தலையும் பயன் தராது.

10.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

பதில்: இப்பிறவி வாழ்க்கை என்பது பெருங்கடலைப் போன்றது. இறைவனைச் சார்ந்து அவன் பாதாரவிந்தங்களை ஒழுகுபவர்களால் மட்டுமே அக்கடலைக் கடக்க இயலும். இறைவனைச் சாராதோரால் அக்கடலைக் கடக்க இயலாது மூழ்கிவிடுவர்.
நன்றி: இந்த வலைப்பூவுக்கு
குறளுக்கு எல்லாம் பொருள் சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. ஆகவேதான் நான் ஏற்றுக் கொண்ட ஆங்கில மொழிபெயர்ப்பும் இன்னொருவர் எழுதியதை சரிபார்ப்பதாகவே அமைந்தது. மற்றப்படி குறள் ஒரு ஆழ்கடல்.


அனானி (32 கேள்விகள் கேட்டவர்)
1. இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது பற்றி?
பதில்: நேர்மையான ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடக்கும் என்னும் நம்பிக்கைக்கு சாவு மணி.

2. திமுகவின் அழகிரி வூயூகம் பொதுத்தேர்தலில் செல்லுமா?
பதில்: வெற்றிபெறக்கூடாது என்பதே விருப்பம். அது அன்ரியலிஸ்டிக்கா இல்லையா என்பது வேறு விஷயம்.

3. கறுப்பு எம்ஜிஆர் வி.காந்த்தின் கதை இனி?
பதில்: எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகமுடியுமா?

4. வேட்டைக்காரன் படம் எப்படி?
பதில்: அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என அல் கொய்தா பலருக்கு எஸ்.எம்.எஸ். அளித்திருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் கூறுகின்றன.

5. பி.எஸ்.என்.எல்- இங்கே என்ன பிரச்சனை(பாராளுமன்றத்தில் அறிக்கை)
பதில்: இந்தச் செய்தி பற்றி கேட்கிறீர்களா? சந்தையில் அதனுடைய பங்கை திட்டமிட்டே அழிக்கிறார்கள் என நினைக்கிறேன். அரசே அதில் தீவிரமாக ஈடுபடுகிறது. மற்றப்படி நியாயமான போட்டி என்றால் பி.எஸ்.என்.எல். சோடை போகாது.

6. பரவலாய் போலீஸ் என்றாலே பொது மக்கள் மத்தியில் ஒரு வித வெறுப்பு. இது மாறுமா?
பதில்: By definition போலீச்சர், வருமானவரி அதிகாரிகள், கம்பெனிகளில் எச்.ஆர். துறையில் இருப்பவர்கள் ஆகியோரை யாருக்கும் பிடிக்காது. வெறுமனே சகித்துக்கொள்ள மட்டும் முயற்சிப்பார்கள்.

7. நடக்கும் கூத்துக்களை பார்த்தால் நம்ம ஜனங்களுக்கு, அவுத்து விட்ட(ஃப்ரீ) ஜனநாயகம் சரிப்பட்டு வராதோ என்ற எண்ணம் ?
பதில்: TINA (There is no alternative) அமுலில் இருக்கும்வரை ஜனநாயகத்தை சகித்து கொள்ள வேண்டியதுதான். மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

8. தமிழகத்தில் பயபக்தியுடன் கடைபிடிக்கப்படும் மகாளயபட்ச விரதத்தின் மகிமையைப் பற்றி விரிவாக சொல்லவும்?
பதில்: இங்கு போய் பார்க்கலாமே.

9. அமெரிக்க பொருளாதாரம் சரி ஆகிவிட்டதா?
பதில்: அப்படி சிம்பிளாக எல்லாம் கூறிவிட இயலாது. அமெரிக்கர்கள் இம்மாதிரி பல பொருளாதார மந்த நிலையை கடந்து வந்துள்ளனர். இப்போதும் மீண்டு வருவார்கள் என நம்புகிறேன்.

10. அமெரிக்காவில் படிக்க வேண்டும்; அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டும்; அமெரிக்க பாய்/கேர்ல் ப்ரண்ட் வேண்டும் எனும் இளைஞர்களின் கனவு மீண்டும்?
பதில்: பல ஆண்டுகளாகக் கண்ட கனவு. அவ்வளவு சுலபத்தில் மறக்காது.

11. அரசின் சலுகைகள் தமிழ் மீடியத்திற்கு பல இருந்தும் ஆங்கில மீடியத்தையே மக்கள் நாடுவதற்கு காரணம் என்ன?
பதில்: தமிழ் மீடியத்துக்கு அரசு சலுகைகளா? எங்கே, எங்கே?

12. படித்தவர்கள் எல்லாம் அரசு வேலைக்கு ஆசைப்படும் அளவுக்கு அவர்கள் சம்பள விகிதம் உள்ளது உண்மையா?
பதில்: அரசு வேலை என்றால் பாதுகாப்பானது என்னும் எண்ணம் இருக்கும்வரை அதற்கான போட்டி இருக்கத்தான் செய்யும்.

13. அரசு ஊழியரின் பென்ஷன் வருங்காலத்தில் அரசுக்கு பெரும் நிதிச்சுமையாய்விடும் எனும் அரசின் கருத்து பற்றி?
பதில்: முதலில் எல்லாம் 55 வயதிலேயே ஓய்வு பெறுவார்கள். சில ஆண்டு காலம் பென்ஷன் வாங்கிய பிறகு பிராணனை விடுவார்கள். இப்போதெல்லாம் ஆயுட்காலம் எதிர்பார்ப்பு அதிகரிப்பதால் ஒவ்வொருவரும் பென்ஷன் பெறும் காலம் சராசரியாக அதிகரித்து கொண்டிருக்கிறது. 35 வயதில் ஓய்வு பெற்ற நானே 28 ஆண்டுகளுக்கு மேல் பென்ஷன் வாங்கி விட்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

இந்த நிதிச்சுமையால் யாராவது நினைக்கலாம் அல்லவா, ஓய்வு பெறும் வயதை உயர்த்தினால் அந்த அளவுக்கு தண்டச் சம்பளம் குறையும் என்று. அதுதான் இப்போதைய சிந்தனை என எனக்குப் படுகிறது. இல்லாவிட்டால் சிந்துபைரவி படத்தில் பென்ஷன் வாங்கும் பெரிசு கிட்டே ஜனகராஜ் பண்ணும் கலாய்த்தல் போலத்தான் செய்ய வேண்டியிருக்கும்.

14.ஸ்டேட்பாங்க் ஊழியருக்கு மட்டும் பென்ஷன் 3வ்து சலுகையாய் (பணிக்கொடை, ப்ரொவிடெண்ட் பணம், பென்ஷன்) இருப்பதை மற்ற வங்கி ஊழியர்கள் பொறுத்து கொள்ளுவது ஆச்சரியமான ஒன்றுதானே?
பதில்: எனது வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது என்னும் பதிவில் கிருஷ்ணமூர்த்தி இட்ட இந்தப் பின்னூட்டத்தை இங்கு தருவது பொருத்தமானதாக இருக்கும்.

ஸ்டேட் வங்கி, ரிசர்வ் வங்கியின் செல்லப் பிள்ளையாக இருந்த போது, எல்லாவற்றிலுமே கொஞ்சம் அதிகப்படியாகவே[அடுத்தவர்கள் இலையில் இருந்தும்] பெற்றுக்கொண்ட வங்கி. அங்கே மற்ற வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் திட்டம் வருவதற்கு முன்னாலேயே பென்ஷன் சலுகை இருந்தது. அதைக் காட்டி மற்ற வங்கி ஊழியர்களும் கேட்டபோது, பென்ஷன் இரண்டாவது சலுகையாக மட்டுமே வழங்கப்பட்டது. ஸ்டேட் வங்கியைப் போல மூன்றாவது சலுகையாக அல்ல.

அப்போதும் கூட, வலதுசாரி கம்யூனிஸ்ட் சார்பு சங்கம் பென்ஷன் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டது என்பதற்காக, இடது சாரி கம்யூனிஸ்ட் சார்பிலான BEFI பென்ஷன் ஒப்பந்தத்தில் அது சொத்தை, இது சொத்தை என்று எதிர்த்துப்பிரச்சாரம் செய்தது. அதை நம்பிய ஏராளமான ஊழியர்கள் நிர்வாகம் தரவேண்டிய PF தொகையை விட்டுக் கொடுத்துப் பென்ஷனை ஏற்க விரும்பவில்லை.

என்னுடைய நினைவில் இருப்பது சரி என்றால், அகில இந்திய ரீதியில் இந்த மாதிரி பி ஃஎப் ஐ விட்டுக் கொடுத்து, பென்ஷன் வேண்டும் என்று ஒப்புக் கொண்டவர்கள் வெறும் இருபத்திரண்டு சதவீதம் மட்டுமே. ஒரே ஒரு வங்கியில் மட்டும் இது முப்பத்தைந்து சதவீதம் என்றும் நினைவு.


15. முன்பு தனியார் நிறுவனங்கள் சிறிய ஜெட் விமானங்களை வாடகைக்கு விட்டார்களே இப்போது?
பதில்: வாடகைக்கு கிடைக்கலாம், ஆனால் அவRறை வாடகைக்கு எடுப்பதற்கு டப்பு வேண்டாமா? பல இடங்களில் அது தேவையான அளவுக்கு இல்லையே.

16. பொதுவாய் இப்போதெல்லாம் ஆண்களை, பெண்கள் மதிப்பதில்லையே என்ற குற்றச்சாட்டு ஆண்கள் மத்தியில்?
பதில்: இத்தனை ஆண்கள் ஆணாதிக்கத் திமிரில் இருந்தனர். பெண்கள் பல நிர்ப்பந்தங்களால் கட்டுப்பட்டு இருந்தனர். இப்போது ஆணாதிக்கத்துக்கு அடிபணிய மறுக்கின்றனர். அதனால்தான் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு.

17. அடிக்கடி மருத்துவர்களால் பேசப்படும் கருணைக் கொலை எந்த நாட்டிலாவது சட்ட வடிவில் உள்ளதா?
பதில்: இந்த உரலுக்கு போய் விரிவாக சொடுக்கிப் பார்க்கவும்.

18. நிலவும் சூழ்நிலைக்கேற்ப கருணைக் கொலை அனுமதிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா?
பதில்: கடைசி நிலையில் மருந்து எடுத்துக் கொள்ள மறுப்பதை நான் சில இடங்களில் கண்டுள்ளேன். “என்னை அமைதியாக போக விடுங்கள்” என எனது சித்தப்பாவின் பெரிய மாமனார் கூறி, இரண்டே நாட்களில் படுக்கையிலேயே உயிரை விட்டார்.

19. நல்ல தூய பண்பான நட்பின் இலக்கணம் என்ன?
பதில்: ஒருவரை ஒருவர் பாராமலேயே நட்பு பூண்ட கோப்பெருஞ்சோழனையும் பிசிராந்தையாரையும் விடவா சிறந்த நண்பர்கள் இருக்கவியலும்? எடுக்கவோ கோக்கவோ எனக்கூறிய துரியனும் அவன் நண்பன் கர்ணனும் சிறன்ம்த நட்புக்கு அடையாளமே. கடைசியாக எவ்வளவு மொக்கைகள் இருப்பினும் தொல்காப்பியன் அபியின் நட்பும் அதே லெவலைத்தான் சேர்ந்தது.

20. பெண்கள் உடுத்தும் உடையில் மடிசார், மாடர்ன் டிரஸ். இதில் பெண்களுக்கு உகந்தது எது? ஏன்?
பதில்: பெண்களையே கேளுங்கள்.

21. நியாயத்தை கொன்று வாழும் மனிதர்களுக்கு கடவுள் கொடுக்கும் தண்டனை எவ்வாறு இருக்கும்?
பதில்: தண்டனை அள்க்கும் காலக்கட்டத்தில் அவனது மனசாட்சி தூண்டப்படும். பிறகு அது அவனுக்கு கொடுக்கும் தண்டனையே போதும்.

22. கொண்டாடப்படும் விதத்தில் கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்து ஜெயந்தி ஒப்பிடுங்கள்?
பதில்: இருவர் பிறப்புக்கும் சாட்சி மிகவும் குறைவு. இருவருமே உலகை உத்தாரணம் செய்யப் பிறந்தார்கள். அவர்களது பிறப்பை சம்பந்தப்பட்டவர்கள் சிறப்பாகவே கொண்டாடுவார்கள். இரு பண்டிகைகளுமே நம்பிக்கையை தூண்டுபவன.

23. விரிவாய் விளக்குக: மாந்தருக்கு எது மயக்கம்? எது போதை?
பதில்: புகழ் ஒரு மயக்கம், புகழ்ச்சியோ போதை.

24. பொதுவாய் மக்கள் சட்டம் ஒரு கழுதை என ஏன் கழுதையோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்?
பதில்: வழக்குகளில் தீர்ப்பெழுதுபவர்கள் உணர்ச்சிகளுக்கு இடம் தரலாகாது. பொறுமையாக எல்லா விஷயங்களையும் தரப்புகளையும் ஆராய வேண்டும். அம்மாதிரியான பொறுமை கழுதையிடம் காணப்படுவதாக கருதப்படுகிறது, அவ்வளவுதான்.

25. ஜொலிக்கும் தங்கம் கண்டுபிடிப்பதற்கு முன்னால் பெண் எதனால் ஆபரணம் செய்து அணிந்தாள்?
பதில்: அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தகராறு என இருக்கும்போது ஆபரணமாவது ஒன்றாவது. அது சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்து விவசாய அடிப்படையில் வாழ்க்கை ஆரம்பித்தபோதுதானே முதலீடாக செல்வம் தேவைப்பட்டது. அதற்குள் தங்கமும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆகவே தங்கத்துக்கு முன்னால் ஆபரணம் வேறு உலோகங்களில் இருந்திருக்குமா? சந்தேகம்தான்.

26. இந்த கலிகாலத்தில் எப்படி அழைத்தால் கடவுள் வருவார்?
பதில்: கீதாஞ்சலியில் தாகூர் கதறுகிறார், “துன்பத்திலிருந்து விடுதலை தா என உன்னிடம் கையேந்தவில்லை, அவற்றால் மனம் பேதலிக்காமல் இருக்கும் அருளைத்தான் யாசிக்கிறேன்” என்று. அந்த அருள் வந்தால் போதாதா? கடவுள் தோன்ற வேண்டி ஏன் பிரார்த்திக்க வேண்டும்?

27. நிறைவேறாத உங்கள் நீண்ட நாள் ஆசை?
பதில்: நான் சிறுவனாக இருந்தபோது தெருக்களில் பசங்கள் சக்கரம் செலுத்திக்கொண்டே போவார்கள். அவற்றிலும் சைக்கிள் சக்கரத்தின் ரிம்கள் எல்லோருக்கும் பிரியமானவை. ஒரு குச்சியை அதன் பிளவில் வைத்து அழுத்தி ஓட வேண்டியது. எனக்கு அந்த சான்ஸ் கிடைத்ததே இல்லை. அவ்வாறெல்லாம் சக்கரம் விடும்பசங்கள் ரௌடிகளே என எனக்கு கூறப்பட்டது. ஆனால் இப்போது, என்னைத் தடுக்க யாரும் இல்லைதான். சைக்கிள் சக்கரத்தின் ரிம்மும் கிடைக்கும். ஆனால் இப்போது நான் அவ்வாறு செய்தால் பக்கத்து எதிர்வீட்டார்கள் “என்ன ராகவையங்கார் ஸ்வாமி இளமை திரும்புகிறதா” என கோட்டா செய்வார்களே. இந்த ஆசைதான் எனது நிறைவேறாத ஆசை.

28. நிறைவேறிய உங்கள் நீண்ட நாள் ஆசை?
பதில்: வெற்றிகரமாக மொழிபெயர்ப்பு பிராக்டீஸ் நடக்க வேண்டுமென நினைத்தேன். அது நிறைவேறியுள்ளது.

29. சொலவடையாய் ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என சொல்வார்களே அதன் விளக்கம்?
பதில்: உன் நான்கு பிள்ளைகளிலேயே மிக நல்லவன் யார் என ஒருவனைக் கேட்டபோது, வீட்டுக் கூரையின் மேலே அதை கொளுத்துவதற்காக நெருப்புப் பந்தம் வைத்திருகிறானே, அவனே என் பிள்ளைகளிலேயே நல்லவன் என்றானாம். எல்லாமே ஒப்பிட்டுச் சொல்லறதுதேன்.

30. அப்போ இலுப்பைப் பூ இல்லாத ஊருக்கு என்ன சொல்லுவார்கள்?
பதில்: வேற ஏதாவது பொருத்தமானதைத்தான் கூறவேண்டும்.

31. மாநிலப் பிரிவினை கோரிக்கைகள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பெரிய சவாலாய் மாறிவிடும் போலுள்ளதே?
பதில்: ஆம், கவலையளிக்கும் விஷயம்தான்.

32. இன்று இரவு 1200 மணி முடிந்ததும் பிறக்கும் 2010-ஐ எப்படி வாழ்த்தி கொண்டாடி என்ன எதிர்பார்ப்புடன் வரவேற்கிறீர்கள்?
பதில்: என் வீட்டுக்கருகிலேயே பட்டாசுகள் வெடிப்பார்கள்.


வெங்கட்
1. I see only 6 posts under your 'Nehru Legacy' folder. Where can i find the rest? Indra's 1975-1983 time period.
பதில்: தொடர்ந்து எழுத மூட் வரவேண்டும். அது இப்போதைக்கு இல்லை.


அனானி (26.12.2009 இரவு 08.46-க்கு கேட்டவர்)
1.What is your plan respecting the 2010 new year celebrations.
பதில்: வீட்டிலிருந்தபடியே டிவி நிகழ்ச்சிகள் பார்க்க வேண்டியதுதான்.

2. Have you seen the super hit english film avadhar?
பதில்: இல்லை, பார்க்கவில்லை. மொத்தத்தில் படம் பார்ப்பதே குறைந்து விட்டது.

3. Any new decisions for the new year?
பதில்: புத்தாண்டு சபதங்கள் செய்வதில் நம்பிக்கை இல்லை.

4. Any plan of meeting other chennai bloggers on new year day?
பதில்: இதுவரைக்கும் அப்படி ஏதும் ஐடியா இல்லை.

5. What will happen to the world in 2012?
பதில்: அது ஒரு ஞாயிற்றுக் கிழமையில் துவங்கி ஒரு திங்கட்கிழமையில் முடிவடையும் என்பதை மட்டும் என்னால் உடனேயே கூற முடியும்.

கந்தசாமி
டோண்டுவின் ஸ்பெசல் கமெண்ட்?
1.அரசு நலத்​திட்​டங்​களை பொது​மக்​கள் ​முழு​மை​யா​கப் பயன்​ப​டுத்​திக் கொள்ள வேண்​டும்​: மு.க.ஸ்டா​லின்---திமுகவுக்கு அப்பதானே ஓட்டை போடுவாங்க!

பதில்: முக்கியமா மத்தகட்சிக்கு ஓட்டுப் போடாம இருப்பாங்க.

2. பென்னாகரம் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு - --காங்-அதிமுக பக்கம் சாயுதா?
பதில்: உடனடி பாதிப்பு பென்னாகரம் மக்களுக்கு. பொங்கல் செலவுக்கு இந்தத் தேர்தலைத்தான் நம்பியிருந்தார்களாம். ஆகவே எரிச்சலில் உள்ளனர்.

3. டிச.30ல் வேலைநிறுத்தம்: தெலுங்கானா ஆதரவு கட்சிகள் முடிவு ---ஆந்திராவை ஒரு வழி பண்ணாமா விடமாட்டாங்களா?
பதில்: இதில பெரிய போட்டியே நடக்குது.

4. காங்கிரஸ் ஒரு தேசியப் புரட்சி: சோனியா - இது நல்ல ஜோக்!
பதில்: தேசீய புரட்டுன்னு சொல்ல நினைத்து வாய் தவறியிருக்கும்.

5. ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் - 2012 வரட்டும்!
பதில்: அப்போதும் அதே கும்பல் இருக்கும். யாராவது உலகம் அழியறதை 2022-க்கு தள்ளிப் போடுவாங்களா இருக்கும்.

6. எத்தனை இடையூறுகள் வந்தாலும் பென்னாகரத்தில் பாமக வெற்றி பெறும் ---வானம் ஏறி வைகுண்டமா!
பதில்: ஜாமீன் இழக்காமல் இருப்பதில் வேண்டுமானால் வெற்றி பெறலாம்.

7. ஆந்திர ஆளுநராக நரசிம்மன் பொறுப்பேற்பு-- யாரெல்லாம் வதம் செய்யப்படுவரோ!
பதில்: வதம் செய்யப்பட வேண்டியவர் மாற்றலில் சென்றுவிட்டாரே.

8. சாதிக்க முடியும் என்ற உறுதியோடு மாணவர்கள் படிக்க வேண்டும்- துணைவேந்தர் --மிகச் சரியா சொல்றார்!
பதில்: ஆமாம், அதில் என்ன சந்தேகம்? நேர்மறை எண்ணங்கள் மிகவும் முக்கியம்.

9. கராச்சியில் தற்கொலைப்படைத் தாக்குதல்:10 பேர் பலி - இவங்க மாறவே மாட்டாங்களா?
பதில்: அடுத்த தற்கொலைப்படைத் தாக்குதல் பெஷாவர்ல வச்சுக்கிறதுதான் அவங்களால ஆன மாற்றமா இருக்கும்.

10. தேர்தல் ஆணைய முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு -சொன்னதை கேட்டதற்கா?
பதில்: தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கும் பாஜகவுக்கும் என்ன வாய்ஸ் இருக்கிறது?

அடுத்த வாரம் சந்திப்போம். அப்போது கேள்விகளைத் துவக்குவது நக்கீரன் பாண்டியன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/29/2009

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 9 & 10)

எபிசோட் - 9 (28.12.2009) சுட்டி - 1 & சுட்டி - 2
சாம்பு சாஸ்திரிகளின் மனைவி அசோக்கிடம் அவன் அவசரப்பட்டு தன் முடிவை எடுத்ததாகக் கூறுகிறார். வைதிக பிராமணனாக வாழ்வதில் உள்ள கஷ்டங்கள் தனக்கு தெரியும் எனவும் கூறுகிறார். சாம்பு சாஸ்திரிகளும் அதை ஆமோதிக்கிறார். தான் பரம்பரையாகவே தொடர்வதால் அவ்வளவு கஷ்டம் உணரவில்லை, மேலும் தனக்கு வேறுவழியில்லை என்றும் ஆனால் அசோக் வசதியான குடும்பத்தில் பிறந்து கஷ்டமில்லாத வாழ்க்கை வாழ்ந்ததால் அவனால் இந்த கஷ்டங்களை சமாளிக்க முடியாது என சாம்பு சாஸ்திரிகள் கவலைப்படுகிறார். கடலில் நீந்துவதற்காக குதித்த பிறகு கரை தரும் பாதுகாப்பு பற்றி கவலைப்பட்டு என்ன பயன் என கேட்கிறான். அப்படியானால் அவனுக்கு ஆசி கூறுவதைத் தவிர தனக்கு வேறுவழியில்லை என சாம்பு சாஸ்திரிகள் கூறுகிறார். ஆச்சார்யனின் இலக்கணம் பற்றி அசோக் கேள்வி கேட்க, சாத்திரங்களை நன்கு கற்றுணர்ந்து, அவற்றை பிறருக்கு கற்பித்து, தானும் அவை கூறியதன்படி நடப்பன் எவனோ அவனே ஆச்சார்யன் என சாம்பு கூறுகிறார்.

அதாவது ஆச்சார்யன் மற்றவருக்கு உதாரணமாக இருக்க வேண்டுமா என சோவின் நண்பர் கேட்க, ஆம் என அழுத்தந்திருத்தமாக சோ விடையளிக்கிறார். சாம்பு சாஸ்திரிகள் சொன்னதையே அவரும் திரும்பக்கூறுகிறார். ஆனால் குரு என்பவர் ஒரு படி மேலே. அவர் தன் பார்வையாலும், தொடுகைஆலும் மனத்தாலுமெ சீடனுக்கு அருள் செய்ய முடியும் எனக்கூறுகிறார். அதற்கு உதாரணமாக சிஷ்யனுக்கு கடுமையான பரீட்சையை வைத்த ஒரு குரு அவன் எல்லாவற்றிலும் தேறியது கண்டு மகிழ்ந்து அவனுக்க் எல்லா அறிவையும் ஒரே ஸ்ட்ரோக்கில் அளிக்கிறார்.

குருகுலவாசம் பற்றியும் பேசுகிறார். அதன் நியமங்களை விவரிக்கிறார். பிட்சை எடுக்கச் செய்வதின் சூட்சுமத்தை விளக்குகிறார். இதே மாதிரி ஃப்ரீ மேசன்களும் செய்வதாக தான் கேள்விப்பட்டதைக் கூறுகிறார். புதிதாக வரும் அங்கத்தினர் நிஜமாகவே பிச்சை எடுக்க வேண்டும் என விதி இருப்பதாகவும் தான் கேள்விப்பட்டதாகக் கூறுகிறார். நண்பர் இலவசக் கொத்தனார் இதை உறுதி செய்யணும்னு கேட்டுக் கொள்கிறேன்.

அசோக் சாம்பு சாஸ்திரிகளை தனக்கு ஆச்சார்யனாக இருக்குமாறு வேண்ட, அவர் பதறிப்போய் தனக்கு அத்தகுதி இல்லை என மறுக்கிறார். ஆனால் அசோக் அவருக்கு தகுதிகள் உண்டு என வாதங்களை முன்வைத்து அவரைத் தன் கோரிக்கைக்கு ஒத்துக் கொள்ளச் செய்கிறான். அவரிடம் ஆசிபெறுகிறான்.

நாதன் வீட்டில் சமையற்கார மாமி அவரிடம் தயக்கத்துடன் தனக்கு அசோக் அவன் திருவண்ணாமலைக்கு செல்வதற்கு முந்தைய தினம் ஒரு அன்னபூரணி விக்கிரகத்தைத் தந்ததாகவும் உலகத்துக்கே அன்னம் அளிக்கும் அன்னபூரணியின் அந்த விக்கிரகத்துக்கு தினம் ஒரு பூவால் அர்ச்சனை செய்யும்படி கூறியதாகவும் சொல்கிறாள்.

அதென்ன அன்னபூரணி கதை, சோறு வேண்டும் என்றால் தருவாளா என என சோவின் நண்பர் கேட்க, அவரும் சோறுதான் வேண்டும் என இருந்து அதை பக்தியுடன் கேட்க அதையும் தருவாள் எனக் கூறுகிறார். ஆனால் ஆதி சங்கரர் வேண்டியதே வேறு ரேஞ்சில் எனவும் கூறுகிறார். அவர் ஞானத்தையும் வைராக்கியத்தையும் வேண்டிக் கேட்கிறார். அன்னை பார்வதி, தந்த சிவன், பந்துக்கள் சிவபக்தர்கள் என்றும் அவர் கூறுகிறார். சிவனுக்கே பிரும்மஹத்தி தோஷம் வர அதையும் அன்னபூரணிதான் நீக்கினார் என்றும் கூறுகிறார்.

நாதன் தன்னிடம் இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை என கோபிக்கிறார். அப்போது அவர் பம்பாயில் இருந்தார், ஆகவே சொல்லியிருந்தாலும் அவரால் என்ன செய்திருக்க முடியும் என சமையற்காரமாமி கேட்க, தான் என்னென்னவெல்லாம் செய்திருக்கக்கூடும் என்பதை நாதன் பட்டியலிடுகிறார். கோபத்துடன் கத்தி முடிந்தபிற்கு வசுமதிக்கு இதை தெரியப்படுத்தாமல் இருப்பதே நலம் என அவர் கூறுகிறார்.

பாகவதரை அவரது வீட்டில் சந்திக்கிறான் அசோக். நாதனும் அசோக்கைப் பார்த்து அவ்வாறு கூறியிருக்க வேண்டாம் எனவும், அசோக்கும் அதை அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு போயிருக்கக்கூடாது எனவும் பாகவதர் கூறுகிறார். மேலேயிருந்து ஒரு சக்திதான் தன்னை செலுத்துகிறது என அசோக் கூற, பாகவதரும் அதை புரிந்து கொள்கிறார்.

தன் முந்தைய பிறவிகளில் புண்ணியம் செய்ததாலேயே பாகவதர் தனக்கு இப்பிறவியில் ஆசானாகக் கிடைத்ததாகவும், அவர் தன்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் அசோக் கூறுகிறான். தான் துடுப்பில்லாத படகு போல இருப்பதாகவும் நல்லபடியாக கடலைக் கடந்து இலக்கை அடைய தனக்கு அவர் ஆசி தேவை என்றும் அவன் கூறுகிறான். உணர்ச்சிவசப்படும் பாகவதர் அவனுக்கு துடுப்புகள், வழிகாட்டிகள் ஆகியவை எப்போதுமே கிடைக்கும், அதற்காக தனது ஆசிகள அவனுக்கு எப்போதுமே உண்டு எனக்கூறுகிறார்.
(தேடுவோம்)

எபிசோட் - 10 (29.12.2009) சுட்டி - 1 & சுட்டி - 2
வேம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு அசோக் வருகிறான். அவர் மனைவி சுப்புலட்சுமிக்கு முதலில் அவனை அடையாளம் தெரியவில்லை. பிறகு புரிந்து கொள்கிறார். வேம்பு சாஸ்திரி அசோக்கின் மாற்றத்தைக் கண்டு திகைக்கிறார். அவருடன் உமாவின் சீமந்தத்தன்று தான் மேற்கொண்ட விவாதம்தான் தனது இந்தக் கோலத்துக்கு காரணம் என அசோக் கூற அவர் திடுக்கிடுகிறார். தான் அன்று ஏதோ ஆவேசத்தில் கூறியதாகவும் அதையெல்லாம் அசோக் சீரியஸாக எடுத்துக் கொல்ளக்கூடாது எனவும் கூறுகிறார். அசோக் தன்னிடம் கடற்கரையில் ஒரு சன்னியாசியும் தான் வர்ணரீதியான பிராமணனை வெளியில் தேடக்கூடாது என்றும் தனக்குள்ளேயே தேட வேண்டும் என்றும், அதை மனது ஒத்துக்கொண்டாலும் சற்றே தயங்கியதாகவும் ஆனால் வேம்பு சாஸ்திரிகள் சொன்னதுதான் தன்னை உண்மையிலேயே அந்தத் தேடல் பாதையில் செலுத்தியது என்றும் அசோக் கூறி வேம்பு சாஸ்திரிகளிடமிருந்து ஆசியும் பெறுகிறான்.

நாதன் சமையற்கார மாமியிடம் தான் அவளை கோபித்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்கிறார். பிறகு அவளது கணவரைப் பற்றி விசாரிக்க, அவர் ஏதோ ஹோட்டல் நடத்த நிச்சயம் செய்ததாகக் கூறுகிறார். தன்னுடனேயே வந்து ஹோட்டலில் சமையல் செய்ய வருமாறு அவர் கூப்பிடுவதாகச் சொல்ல, நாதன் திடுக்கிடுகிறார். அவளது சேவையை இழக்க விரும்பாததால் அவள் கணவருக்கு தன் ஆஃபீசிலேயே வேலை போட்டுத் தருவதாகவும் கூறுகிறார்.

அசோக் இப்போது சாரியாரின் வீட்டுக்கு செல்கிறான். அவரும் அவனிடம் இந்த மாற்றம் பற்றிக் கேட்கிறார். அசோக் கடற்கரையில் நடந்ததைக் கூறுகிறான். அவரோ யார் யார் சொல்வதையோ கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம், ஏனெனில் இந்த யுகத்தில் வர்ணரீதியான பிராமணனாக வாழ முடியாது எனக்கூறுகிறார். நடக்க முடியாததை முயற்சி செய்ய வேண்டாம் எனவும் கூறுகிறார்.

ஏன் முடியாது என்பதைத்தான் தான் காணப்போவதாக அசோக் கூற, கேள்வியிலேயே பதிலுமா என சாரியார் கேட்கிறார்.

அதெப்படி கேள்வியிலேயே பதில் வரவியலும் என சோவின் நண்பர் கேட்க, ஏன் முடியாது என்னும் எதிர்க்கேள்வியால் அது முடியும் என்னும் பதிலையும் இம்ப்ளை செய்கிறார். பிறகு ஸ்வேதகேது என்பவனுக்கு அவன் தந்தை உத்தாலகர் கேள்விகள் மூலமே உபதேசம் செய்ததையும் கூறுகிறார். ஆலம்பழவிதை, தண்ணீரில் கரைந்த உப்பு ஆகியவற்றை வைத்து ஆத்ம விசாரணையை விளக்குகிறார்.

அசோக் எடுத்த முடிவுக்கு அவன் பெற்றோர்கள் சம்மதம் தந்தார்களா என சாரியார் கேட்க, அதை எதிர்ப்பார்த்தால் பெரிய விஷயங்களைச் செய்யவியலாமல் போய்விடும் எனக் கூறுகிறான். ஆதிசங்கரரோ, விவேகானந்தனரோ தத்தம் பெற்றோரிடம் சம்மதத்துக்காகக் காத்திருக்கவில்லை என்றும் கூறுகிறான்.

சன்னியாசம் வாங்க ஏன் பெற்றோர் அனுமதி தேவை என சோவின் நண்பர் கேட்க, அது சம்பந்தமான யதார்த்தங்களை சோ ஆதி சங்கரர், மத்வர் ஆகியோரது உதாரணங்களுடன் விளக்குகிறார். சங்கரர் வேறுவழியில் அன்னையின் ஒப்புதலை பெற்றார் என்றும் கூறுகிறார்.

சாரியாரிடமும் அசோக் ஆசிகள் பெறுகிறான்.

நாதனும் வசுமதியும் பேசுகின்றனர். வசுமதி ரொம்பவும் மன உளைச்சலில் பேசுகிறாள். கோவிலுக்கு போய் ஒரு கல்லை ஏன் தெய்வம் என வணங்க வேண்டும் என்னும் அளவுக்கு பேச ஆரம்பிக்கிறாள். “அடாடா தெய்வ நம்பிக்கை போய் விட்டதே” என சோவின் நண்பர் குறிப்பிடுகிறார்.
(தேடுவோம்)

இந்த சீரியலை பொருத்தவரை எல்லா பாத்திரங்களுமே தத்தம் வேலையை கச்சிதமாக செய்கின்றனர். அசோக் ஒவ்வொரு வீட்டுக்கும் வரும்போதும் அவன் யாரை பார்க்க வருகிறானோ அவர் மட்டும் அசோக்குடன் பேச, மற்றவர்கள் தத்தம் வேலையை பார்க்கின்றனர். பம்மல் சம்பந்த முதலியார் தனது நாடக அனுபவங்களில் அதை பைப்ளே என்பார். மற்றவர்கள் அவல் மென்று கொண்டிருக்கக் கூடாது என்பார். இங்கு யாரும் அவல் மெல்லவில்லை. வெங்கட்டுக்கு ஒரு சபாஷ்.

எங்கே பிராமணன் பார்ட் - 2 ஜெயா டிவியில் வாரத்தில் திங்கள் முதல் வியாழன் முடிய (4 நாட்கள்) இரவு 8 முதல் 8.30 வரைக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/27/2009

சூரியின் ஜெஸ்டஸ் - ரோஜாக்களின் எழுச்சி - 1

மூன்றாம் அத்தியாயமும் மிகப்பெரியதுதான். ஆகவே அதையும் சில பகுதிகளாக பிரித்தாக வேண்டும். எத்தனை பகுதிகள் வரும் என்பது இப்போதைக்கு தெரியவில்லை. உண்மைத் தமிழனது பதிவுகள் போல இல்லாமல் சமாளிக்கக் கூடிய அளவுக்கு ஒரு பதிவு இருப்பது நலம். ஆகவே இந்த அத்தியாயத்துக்கு அதிக பாகங்கள் உண்டு.

முதல் அத்தியாயம் இங்கே
இரண்டாம் அத்தியாயம் முதல் பகுதி இங்கே
இரண்டாம் அத்தியாயம் இரண்டாம் பகுதி இங்கே
இரண்டாம் அத்தியாயம் மூன்றாம் பகுதி இங்கே
இரண்டாம் அத்தியாயம் நான்காம் பகுதி இங்கே

மூன்றாம் அத்தியாயம் (பாகம் - 1)

ரோஜாக்களின் எழுச்சி - 1

இந்த பாழாப்போன நகரத்தில் நான் புறாக்கூண்டு போன்ற ஒரு சிறுவீட்டில் வசிக்கிறேன். கீழ்நடுத்தர வகுப்பைச் சார்ந்த எனக்கு இதைவிட வசதியான வீடு வாடகைக்கு கிடைக்காது என்பதையும் மறுக்கவியலாதுதான். ஆகவே வீட்டினுள் உள்ள வசதியோ வசதியின்மையோ எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் வெளிப்புறம்? அதுதான் பிரச்சினை. என் வீட்டைச் சுற்றிலும் இருக்கும் வீடுகள் வெவ்வேறு அளவில் உள்ளவை. அவற்றுக்கும் எனது வீட்டுக்கும் நடுவில் மிகக்குறைந்த இடைவெளிதான், அதாவது மூன்றிலிருந்து ஐந்து அடிகள் வரை. அதனால் என்ன கஷ்டம் என்று கேட்கிறீர்களா? அதைத்தான் விளக்குவேன் இப்போது.

விடியற்காலை. ஆழ் உறக்கத்தில் நான். திடீரென கரகரவென உராயும் ஆண்குரல் எழும்புகிறது. “அடே கேனக்கூ, இன்னுமாடா தூக்கம், எழுந்திருடா நாயே”.
ஓரிரு விநாடிகளுக்கு எனக்கு தலைகால் புரியாது.
“இதப்பாரு, நீ பல் தேச்சியா, கால் கழுவிக்கிட்டியா, இல்லை குளிச்சியாங்கறது பத்தியெல்லாம் எனக்கு அக்கறை இல்லை”.
அடாடா, காலங்கார்த்தாலே என்னென்ன வாழ்த்துப்பாவெல்லாம் கேட்க வேண்டியிருக்கு?
“நேத்திக்கே அதை பண்ணி முடிச்சிருக்கணுண்டா டோமரு. இப்ப உடனே வெளியில போற, இல்லேன்னாக்க நான் ஒன் கையை முறிச்சு தூளில தொங்க விடுவேன்”.

எனக்குள் கோபம் மெதுவாக எழும்புகிறது. இப்பத்தான் இந்தக் குரல் பக்கத்து வீட்டுக்காரனுடையதுன்னு புரியறது. ஏதோ ஒரு விளங்காத கம்பெனியில அவன் ஒரு அதிகாரியா இருக்கான் போல. இந்த மாதிரி தன் வீட்டு பால்கனில வந்து நின்னுண்டு தினம் விடியற்காலை செல்போனில யார்கிட்டயாவது கத்தறதே அவனுக்கு வேலை. அவனோட மேலதிகாரி இவனை பிடிச்சு திட்டியிருப்பான் போல. இப்ப இவன் அந்தக் கோபத்தை தன்கீழ வேலை பாக்கறவன் மேல காண்பிக்கிறான். அவனை என்மனதுக்குள் திட்டியவாறே எழுந்து பல் தேய்க்கப் போறேன். (நான் சின்னவனா இருக்கச்ச, அமைதியான விடியற்காலத்துல எழுந்து, கடவுளை பிரார்த்திக்கிற வழக்கம் எல்லாம் இப்போ போயே போச்சு. இப்ப இதைத்தான் முன்னேற்றம்னு சொல்லியாகணுமா, எங்க அடிச்சுக்குறதுன்னு தெரியல்ல).

பாதி பல் தேய்த்திருப்பேன், திடீரென என் விட்டின் இன்னொரு பக்கத்திலிருந்து சைரன் ஒலிப்பது போன்ற குரலோடு அந்த வீட்டுப் பெண்குட்டி செல்போனுடன் ஆஜர். சைரனின் அதிர்ச்சியில் டூத்பிரஷ் பிசகி, ஈறைத் தாக்க செம வலி. (இந்த மாதிரித்தான் செல்ஃபோனில் பேச என் அண்டை வீட்டார்கள் வெளிலேதான் வராங்க. ஏதோ அங்கேதான் சிக்னல் சரியா ரிசீவ் ஆவுதாம். நாசமாப்போக).

“டீ ரீட்டா என்னடி அங்கே பண்ணிட்டிருக்க” – கிக்கிக்கீன்னு சிரிப்பு. இங்கே என் ஈறுல பயங்கர வலி. ரத்தம் வேற வந்திருக்குமோன்னு பயம். சைரனிடமிருந்து மறுபடி கேனத்தனமான சிரிப்பு.
“காப்பி குடிச்சியா”?
“நாஸ்தாக்கு என்ன சாப்பிட்டே”?
“என்னோட எஸ்.எம்.எஸ் கிடச்சுதா? அந்த ஜோக் நல்லா இருந்துச்சுல்ல”?

இந்த மாதிரியே கொஞ்ச நேரம் என்னை டரியலாக்கிட்டு அந்த சைரன் போய் சேருவாள். அப்பாடான்னு மூச்சு விடறதுக்குள்ளே இன்னொரு பக்க அண்டைவீட்டான் காலேஜ் மாணவனாம்-வந்து சேவையைத் தொடருவான், அவனோட செல்ஃபோனில்.
“டேய் மொட்டை நாயே எங்கேடா இருக்கே”?
“சீக்கிரம் வாடா, இன்னிக்கு மேட்னி ஷோ பார்க்கணுமே. அனிதாவும் வரா இல்லே? சரி, சரி காலேஜ் வாசல்ல காத்திருப்பேன். அங்கேயிருந்து ஒண்ணாப் போகலாம்”.

இப்படித்தான் தினமும் என்னுடைய காலை நேரம் ஆரம்பிக்கிறது. மாலை நேரங்களோ அதைவிட மோசம். அண்டை வீட்டாரை பார்க்க வருபவர்கள் வேறு தத்தம் செல்போனுடன் சேவைக்கு ஆஜராகிறார்கள். ஒரே நேரத்தில் பலர் எல்லா பக்கங்களிலிருந்தும் பேச, யார் யாருடன் பேசுகிறார்கள் என்ற குழப்பமெல்லாம் நேரிடும். ஆனால் இரவு நேரம்? ஐயோ, அது பற்றி பேசாமல் இருப்பதே நலம். அண்டைவீட்டாரின் இந்த செல்பேசி அலம்பல்கள் இரவு பத்து மணி வரைக்கும் தொடர்கின்றன. இரவு உணவு உண்டுவிட்டு அப்பாடா கண்ணசரலாம் என நினைத்து படுக்கையில் வீழ்ந்தால் நிம்மதியாகத் தூங்கவிடாமல் இந்த சப்தங்கள். ஆண்டவனே எங்காவது அமைதியாக வாழவகை செய்யும் ஜாகையை காட்டு என வேண்டினாலும் அவன் ஒன்றும் செய்ய மாட்டேன் என்கிறான்.

அன்னி ராத்திரிகூட பாருங்க, தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே என்னும் மனநிலையில் இருந்தபோது, பக்கத்து வீட்டு அந்த சோமாரி கம்பெனி அதிகாரியின் இடிபோன்ற குரல் கேட்டது.

“அடே விளங்காத பயலே, மனசுல என்னடா நெனைச்சுண்டிருக்கே? அந்த ரிப்போர்ட் இன்னிக்கே வேணும்னு நான் சொன்னேனே. என்ன இப்போத்தான் சாப்பிடறியா, சோறு கொட்டிண்டப்புறம் முதல்ல போய் அந்த ரிப்போர்ட்டை முடிச்சுட்டுத்தான் நீ தூங்கப் போறே. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா, உன்னோட வேலைக்கு நீ வாங்கற சம்பளத்துல பாதிக்கு வேலை செய்ய நிறையபேர் காத்துக்கிட்டிருக்காங்க”.

ஏதோ மின்சார ஷாக் பெற்றது போன்ற உணர்வு எனக்கு. தூக்கமெல்லாம் பறந்தே போச்சு. நான் தினசரி பிரயோகிக்கும் திட்டுக்களைத் தவிர புதிய திட்டுக்களை தேடி களைத்து போகிறேன். அதன் பலனாய் மெல்ல என்னையறியாமலேயே தூங்கிப் போகிறேன்.

ஒரு இனிமையான கனவு. என் கனவுக்கன்னி உர்சுலா ஆண்ட்ரூசுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். சுற்றிலும் சினிமாவில் வருவதுபோல கனவுலக் புகை மண்டலம். தூரத்தில் கடலோசை. உர்ஸூவின் கையில் ஒரு ரோஜாப்பூ. அதனால் என் கன்னத்தை வருடியபடியே பேசுகிறாள், “எனதருமை ஷான், எவ்வளவோ வருஷம் ஆச்சு நாம பாத்து”? எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால் ஒரு சிறு வருத்தம்.

நான் புன்னகையுடன் அவளிடம் கூறுகிறேன், “உர்ஸூ கண்ணே, நீதான் என்னோட கனவுக்கன்னி. ஆனாக்க என் பெயர் ஷான் இல்லையே” உர்ஸூ கூறுகிறாள், டார்லிங், என்னைப் பொருத்தவரைக்கும் நீ என்னோட ஷானேதான்”. நான் விடவில்லை, “ஆனா உர்ஸூலா, என்னோட பேரை ஏன் சொல்லம்ட்டேங்கற. ஷானோட பேரை ஏன் சொல்லணும்”?

அவள் கிக்கி கிக்கி என சிரிக்கிறாள். “என்னோட கையில என்ன இருக்குன்னு சொல்லு”?
“ஒரு ரோஜாப்பூ”
“பல வருஷங்களுக்கு முன்னாலேயே நம்ம செகப்பிரியர் சொல்லலியா, பேர்ல என்ன இருக்கு? ரோஜாவை என்னப் பேர் சொல்லிக் கூப்பிட்டாலும் அது ரோஜாதானே, அத்தோட மணம் அப்படியேத்தானே இருக்கு”
நான்: “ஆனாக்க உர்ஸூ, நீயும் சரி அந்த செகப்பிரியனும் சரி, ஒரு விஷயத்தை மறந்துடறீங்க. ரோஜா தன்னோட பேரை மாத்தி சொல்லறதுல கவலைப்படாமல் இருக்கலாம். ஆனாக்க மனுஷங்க கவலைப்படுவாங்கதானே”.

“அடப்போய்யா, என்னோட மூடெல்லாம் கெடுத்துட்டே”, உர்ஸூ ரோஜாவை கீழே போட்டு விட்டு உறுமியவாறே திரும்பி நின்றாள். “ஷான் எவ்ளோ அற்புதமான மனுஷன், அவன் பேர் உனக்கு பிடிக்கல்லியானா, நீயும் எனக்கு வேண்டாம்” என்றாள். எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல்ல. “உர்ஸூ, உர்ஸூ” என கத்துகிறேன்.

அவள் என்னை நோக்கி விஷமமாகக் கூறுகிறாள், “ஏய், என்னோட நாய் இப்ப வாலாட்டறது பார். திடுக்கிட்டு முழித்து கொள்கிறேன்.

நான்காம் வீட்டு பால்கனியில் உள்ள அந்த சுட்டிப் பெண் செல்போனில் மேலும் கத்துகிறாள், “நாய் இப்போ என்னோட காலை நக்கறது. ஏய், சும்மா இரு (இது நாயிடம்), ஆமா நீ எக்ஸாம் நல்லா பண்ணியா, சாப்டாச்சா, அப்பாவா, அவர் உள்ளே படுத்துண்டிருக்கார். அவருக்கு ஹை பிபி. எக்ஸாம் நல்லா பண்ணியா, சந்தோஷம்”.

அதானே, சந்தோஷமா இரு, கவலைப்படாதே. அவளுக்கென்ன அவள் சொல்லிவிட்டாள். அனுபவிக்கறது நானல்லவா. ராத்திரி பத்து மணிக்கு மேல அவளோட நாய் வாலாட்டறது பத்தியும், அவளோட அப்பாவின் ஹை பி.பி. பற்றியும் செய்தி கேட்கணும்னுங்கறது என்னோட தலைவிதி. நான் பெருமூச்சு விடுகிறேன். உர்ஸுலாவை மறுபடியும் கனவுல பிடிக்க ஆசைப்படறேன். ஆனாக்க முடியல்லியே. த்லையை பிச்சுக்கலாம்னா ரெண்டு காரணத்தால செய்யல்ல. ஒண்ணு என்னதான் இருந்தாலும் நான் ஒரு ஆப்டிமிஸ்ட். ரெண்டாவது காரணம் இருக்கறதே நாலு முடிகள்தான், அதையும் பிச்சுண்டா எங்கே போறது? எப்படியோ என்னையறியாமலே தூங்கியிருக்கிறேன் போல. கொஞ்ச நேரம் கழிச்சு இன்னொரு செல்போனில யாரோ பேசறதாலே மறுபடியும் முழிப்பு.

இப்படியே செஞ்சதில் நான் எதிர்பார்க்காமலேயே அடுந்த நாள் விடிந்தது. மறுபடியும் பக்கத்து வீட்டு அதிகாரி நாய் தன்னோட செல்போனில யார் கிட்டயோ கத்தறான். இந்த மாதிரித்தான் என்னோட பகல்களும் இரவுகளும் கழிகின்றன.

என்ன பண்ணறதுன்னு தெரியாமல் சோர்ந்து போகிறேன். சாதாரணமா இரவின் ஆழ்ந்த இருட்டில்தான் அடுத்த நாளின் விடியலுக்கான வெளிச்சம் மெதுவாகத் தெரியும்னு சொல்லுவாங்க. என்னோட விஷயத்திலும் அப்படித்தான். ஆனால் அது மெதுவாக எல்லாம் தெரியவில்லை. பளீரென மோட்டார் ஹெட்லைட் போல தெரிந்தது. திடீரென லாஃபன்ஷ்டைனின் நினைவு வந்தது. அவரைப் போய் பார்த்தால் என்ன? கொஞ்ச நேரம் அவரோட கழிச்சுட்டு வரலாமே. அவரோட கற்பனை கலந்த நிகழ்வுகள் எனக்கு ஆறுதலா இருக்குமே. கூடவே அவரோட விடாத சிரிப்பு வேற. அவ்ரைப் பற்றி நினைக்கும்போதே மனம் லேசாயிற்று.

விரைவாக வீட்டிலிருந்து வெளியேறினேன்.

(தொடரும்)

ஆன்லைனில் ஜெஸ்டஸின் ஆங்கில மூலத்தை வாங்க இங்கே செல்லவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/24/2009

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 7 & 8)

எபிசோட் - 7 (23.12.2009) சுட்டி - 1 மற்றும் சுட்டி - 2
சென்னைக்கு மாற்றல் பெற்று தன் பெற்றோருடன் ஒரே வீட்டில் இருக்கும் மகிழ்ச்சியில் பாகவதரின் மூத்த மகன் சிவராமன். அந்த உற்சாகம் சிறிதும் இல்லாத அவன் மனைவி ராஜி இருவரும் தங்கள் தனியறையில் அமர்ந்து பேசுகின்றனர். இந்த மாற்றம் பெறுவதற்காக தங்களில் ஒவ்வொருவரும் எவ்வளவு பேரைப் பார்த்து முகஸ்துதி எல்லாம் செய்ய வேண்டியிருந்தது என அவரவர் பேசுகின்றனர்.

கடவுளுக்கே கூட முகஸ்துதி தேவைப்படுகிறது என சிவராமன் குறிப்பிடுகிறான். உனக்கு நான் இதை செய்கிறேன், எனக்கு நீ அதைச் செய் என கடவுளிடம் டிமாண்ட் செய்யும் பக்தனை பற்றியும் சிவராமன் கூறுகிறான்.

“ஏன் சார் வேண்டிக் கொள்வது கேவலமா இல்லையா” என சோவின் நண்பர் கேட்கிறார். “கிடையவே கிடையாது” என சோ திட்டவட்டமாக மறுக்கிறார். மேலும் கூறுகிறார், “பக்தன் உங்களையோ என்னையோ கேட்கவில்லையே. கடவுளிடம் தனக்கு உரிமை இருப்பதாக நம்புகிறான். அவ்வாறே கேட்கிறான். கீதையிலேயே பகவான் தன்னை வணங்கும் பக்தர்களில் நால்வகையினரை அடையாளம் காண்கிறார். முதல் வகையினர் துயரத்தில் மூழ்கியவர்கள், இரண்டாம் வகையினர் ஒருவித தேடலில் ஈடுபடுபவர்கள், மூன்றாம் வகையினர் பொருட்களில் ஆசையுடையவர்கள், நான்காம் வகையினர் ஞானிகள்”. ஒவ்வொரு வகைக்கும் உதாரணமும் தருகிறார்.

அப்படியானால் நால்வகையினரும் ஒன்றுதானா என நண்பர் கேட்க, அவர்கள் நால்வருமே உயர்ந்த நிலையில் இருப்பவர்களே. ஞானிதான் தனக்கு மிக அருகாமையில் இருப்பதாக கடவுள் கூறினாலும் அவர் நால்வகையினரையும் சமமாகவே நடத்துகிறார் என சோ அவர்கள் பதில் தருகிறார்.

தான் கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் ஆசையில் சென்னைக்கு வரவில்லை என்றும், இங்கு கூட்டுக் குடும்பத்தில் அந்தரங்கம் இல்லை என ராஜி கூற, தாம் இருவரும் அதிக நேரம் அலுவலகத்திலேயே கழிப்பதாகவும், வீட்டிலும் இந்த அறைக்குள் வந்து கதவை ஆத்திக் கொண்டால் அந்தரங்கம் தானாகவே வந்து விடுகிறது என சிவராமன் அவளுக்கு எடுத்துரைக்கிறான். அதற்குள்ளாக அவன் தம்பி வெளியிலிருந்து கதவைத் தட்டி, டிவியில் ராமலீலா படம் போடுவதாகவும், சிவராமனும் ராஜியும் வெளியில் வந்து எல்லோருடனும் சேர்ந்து டிவி பார்க்குமாறு அப்பா கூறுவதாக சொல்கிறான். ராஜி சிவராமனை எகத்தாளமாகப் பார்த்து, இதுதானா ப்ரைவசி என நொடிக்கிறாள்.

அசோக் வீட்டில் சமையற்கார மாமி அவனுக்கு உணவு பரிமாறுகிறாள். நடந்து முடிந்த உமாவின் சிமந்தம் பற்றி அவள் பேசிக்கொண்டே அசோக்குக்கு உணவு பரிமாறுகிறாள். அசோக் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறான். அவனையே உண்மையான வர்ணரீதியான பிராமணனாக மாறுமாறு வேம்பு சாஸ்திரி அவனுக்கு சவால் விட்ட சொற்கள் திரும்பத் திரும்ப அவன் காதுகளில் ஒலிக்கின்றன. இதற்குள் ஃபோன் வர சமையற்கார மாமி அதை எடுக்கிறாள். பர்வதம் பேசுகிறாள். அவளிடம் மாமி சீமந்தம் நடந்தது பற்றி விசாரிக்கிறாள். நாதனும் வசுமதியும் அடுத்த நாள் காலை 7 மணி ஃப்ளைட்டில் வருவதாக கூற, பர்வதம் தான் அடுத்த நாள் காலை 10 மணிக்கு அங்கு வருவதாக கூறுகிறாள். இதற்குள் அசோக் சாப்பிட்டுவிட்டு கைகழுவுகிறான். மாமியிடம் அனேகமாக அந்தச் சாப்பாடுதான் அவன் தன் வீட்டில் மாமி கையால் பரிமாறப்பட்டு தான் சாப்பிடும் கடைசி சாப்பாடு என்று கூற மாமி ஒன்றும் புரியாமல் திகைக்கிறாள்.

அடுத்த நாள் காலை நாதனும் வசுமதியும் திரும்பும்போது அசோக் வீட்டில் இல்லை. நாதனும் வசுமதியும் அதனால் கோபப்படுகின்றனர். அதற்குள் அசோக்கிடமிருந்து ஃபோன் வருகிறது. தான் திருவண்ணாமலையில் இருப்பதாகவும், வருவதற்கு சில வாரங்கள் ஆகும் என்றும் கூறுகிறான். திருவண்ணாமலையில் அவன் எங்கு தங்கியிருக்கிறான் என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

வசுமதி அசோக் எங்குதான் இருக்கிறான் என கேள்வி கேட்க, சித்தன் போக்கு சிவன் போக்கு போல அசோக் என்ன செய்வான் என்பதை யாருமே கண்டறிய இயலாது என நாதன் அலுத்துக் கொள்கிறார்.

“இந்த சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதை நான் பல முறை கேட்டிருக்கிறேன், அதன் பொருள் என்ன”, என்று சோவின் நண்பர் கேட்கிறார். சோ அவர்கள் சித்தர்களை பற்றி விளக்குகிறார். அவர்களது சித்திகள் பற்றியும் பேசுகிறார். ஆனால் அவ்வாறான சித்திகளுடன் திருப்தியடையாது சித்தர்கள் கடவுளைத் தேடுவதையும் விடுவதில்லை. அவ்வாறு செய்யாது சித்திகள்லிலேயே ஆழ்ந்து போனால் அவர்கள் வெறும் மந்திரவாதிகளே என சோ கூறுகிறார்.

“நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே” என்று கூட ஒரு சித்தர் பாடியிருக்கிறாரே, அதுதான் பகுத்தறிவு என சிலாகிக்கிறார் சோவின் நண்பர். அதைச் சொன்னவர் சிவவாக்கியர் என்னும் சித்தர் எனக்கூறி முழுப்பாடலையும் சோ அவர்கள் சொல்கிறார்.

“நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”?

அதாவது கடவுள் உள்ளேயே இருக்கிறார், அவரைத் தேடுதல்தான் முன்னுரிமை பெற வேண்டும் என சிவவாக்கியர் கூறுகிறார், மற்றப்படி ‘பகுத்தறிவுவாதிகள்’ என தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர்கள் சொல்வது போன்று கடவுள் இல்லவே இல்லை என்ற நாத்திகவாதமாக அதைக் கொள்ளலாகாது என்வும் சோ அவர்கள் விளக்குகிறார்.

நாதன் வசுமதியிடம் எப்படியும் அசோக் திரும்ப வருவான். சில வாரங்கள் பொறுத்திருத்து பார்க்கலாம் எனக் கூறுகிறார்.

ஏழு வாரங்கள் கழிந்து ஒரு நாள். நாதன் வீட்டில் அவர், வசுமதி, நீலகண்டன் மற்றும் பாகவதர் அமர்ந்திருக்கின்றனர். பாகவதர் தன்னுடன் சில நாட்களுக்கு முன்னால் அசோக் ஃபோனில் பேசியதாகவும் தான் சிதம்பரத்தில் இருப்பதாகக் கூறியதாகவும், ஆகவே நாதன் கவலைப்படவேண்டாம் என்பதைச் சொல்லவே தான் வந்ததாகக் கூறுகிறார். நீலகண்டனும் தன்னுடனும் அசோக் பேசியதிக் கூறுகிறார். நாதனும் அதே அனுபவத்தைக் கூறுகிறார். அவன் தற்சமயம் எங்கிருக்கிறான் என்பதில் எல்லோரும் குழப்பமாக இருக்கிறார்கள்.

அசோக் தன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.

(தேடுவோம்)

எபிசோட் - 8 (24.12.2009) சுட்டி - 1 & சுட்டி - 2
அசோக் வீட்டுக்குள் பிரவேசிக்கிறான் வேட்டி, மேல் துண்டு, குடுமி சகிதமாக. சமையற்கார மாமி திகைக்கிறாள். உள்ளே நாதன், வசுமதி, பாகவதர், நீலகண்டன் ஆகியோரிடம் அசோக் வந்தது பற்றிக் கூற எல்லோரும் வெளியே ஓடி வருகின்றனர். அசோக்கைப் பார்த்து பிரமித்து நிற்கின்றனர் எனக்கூறுவது ஒருவிதமான understatement-ஆகத்தான் இருக்கும்.

இது என்ன வேஷம் என நாதனும் வசுமதியும் சீற மற்ற இருவரும் பிரமித்து நிற்கின்றனர். தப்பாக தான் எதுவும் பண்ணவில்லையே, குடுமிதானே வைத்துக் கொண்டிருக்கிறேன் என அசோக் திரும்பக் கேட்கிறான்.தான் எழுதப்போகும் பரிட்சைக்கு இது ஒரு பிள்ளையார் சுழி என்று வேறு கூறுகிறான். பாகவதராலேயே அசோக் செய்ததை ஜீரணிக்க முடியவில்லை. வர்ணரீதியான பிராமணனாக தான் வாழப்போவதாக கூறி அசோக் மற்றவர்களுக்கு மேலும் கிலி ஊட்டுகிறான்.

அதுக்கு எதுக்காக குடுமி தேவை என சோவின் நண்பர் கேட்க, சாதாரண மிலிட்டரியிலேயே தலையை க்ளோஸாக கிராப் செய்து கொள்ளவேண்டும் என சட்டம் இருக்கிறதே, இங்கும் அது போல ஒரு டிசிப்ளின்தான். கூடவே, பல சம்பிரதாயங்கள் இதில் அடங்கியுள்ளன. குடுமியை அப்படியே யாரும் இஷ்டத்துக்கு வைத்து கொள்ள முடியாது. அதற்கான சம்ஸ்காரங்கள் உண்டு, மந்திரங்கள் சொல்லப்பட வேண்டும். நாற்பது சம்ஸ்காரங்களில் ஒன்றான சௌரத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றெல்லாம் சோ அடுக்குகிறார்.

அசோக் வசிஷ்டர் அம்சமானாலும் அவன் இன்னும் அசோக்காகவே இருப்பதால் தனக்கு தோணினதை செய்கிறான். இதை ஆர்வக்கோளாறாகத்தான் பார்க்க வேண்டும். நிஜ வசிஷ்டர் இதையெல்லாம் செய்ய மாட்டார்.

அசோக் சொன்னதைக் கேட்டு What do you mean? என நாதன் ஆங்கிலத்தில் சீற, "I mean to say that I intend to live as a true Brahmin strictly according to the tenets of Brahminhood as prescribed by our ancient texts என அசோக் நிதானமாக சுத்த ஆங்கிலத்திலேயே பதிலளிக்கிறான். பிராமணன் செய்ய வேண்டிய கர்மாக்களையும் பட்டியலிடுகிறான்.

சோவும் அவற்றை பட்டியலிடுகிறார். எல்லாமே கேட்கும்போதே பயமுறுத்தும் நியமங்கள். அதையெல்லாம் செய்து பிரும்மச்சரியத்தைக் கடைபிடித்தால் அப்புறம் என்ன என சோவின் நண்பர் கேட்க, சாதாரணமாக கிருகஸ்தாஸ்திரமம்தான். ஆனால் சிலர் பீஷ்மரைப் போல எப்போதுமே பிரும்மச்சாரிகளாக இருப்பார்கள். அவர்கள் நைஷ்டிக பிரும்மச்சாரிகள் என சோ கூறுகிறார். ஆதி சங்கரர் நேரடியாக சன்னியாசமே பெற்றார் எனவும் அவர் கூறுகிறார்.

பிராமணனின் கடமைகளில் தானம் பெறுதல், தானம் செய்தல் என்றும் உண்டு. அதைக் கேட்டு நாதன் தான் ஏற்கனவே செய்த தானங்களை பட்டியலிடுகிறார். தான் இன்னும் என்ன தானம் செய்ய வேண்டும் என அவர் கேட்க, தன்னை அவர் யாருக்கு தானம் தருவார் என அசோக் புன்னகையுடன் கேட்கிறான்.

இது சாதாரண கேள்வி இல்லை, நசிகேதஸ் தன் தந்தையிடம் கேட்ட கேள்வி என சோ கூறுகிறார். நசிகேதசின் கதையையும் கூறுகிறார். அவனை யமனுக்கே தானமாகத் தருவதாக அவன் தந்தை கோபத்தில் வார்த்தைகள் விட, அவனும் யமலோகத்திற்கே செல்கிறான். அங்கு யமனுடன் நிகழ்த்தும் சம்வாதங்கள் இந்து ஆன்மீக எழுத்துக்களில் பிரசித்தி பெற்றவை. கடோபநிஷத்தில் அவை வருகின்றன. மரணத்தின் பிறகு என்ன நடக்கும் என்பதையும் நசிகேதஸ் யமனிடமிருந்து உபதேசமாகப் பெறுகிறான்.

நாதன் கோபத்துடன், “உன்னை ஒரு வேதபாடசாலைக்கு தானமாகத் தந்தேன்” எனக்கூற, “என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என அசோக் அவர் காலில் வீழ்ந்து வணங்குகிறான். பிறகு வீட்டை விட்டு புறப்படுகிறான். அவனை நிறுத்த எல்லோரும் முயற்சி செய்கின்றனர். ஆனால் பலனில்லை.

இப்போது டோண்டு ராகவன். இதுவரை இல்லாத பிராமணனைத் தேடிய அசோக், தனக்குள்ளிலிருந்தே வர்ணரீதியான பிராமணனை உருவாக்க முயன்று, அவனைத் தன்னுள்ளேயே தேடுகிறான். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என கருத்துகளை தாராளமாக அள்ளிவீசுபவர்கள் அவனது முயற்சிகளையும் பார்க்கட்டுமே. நானும் அவற்றைப் பார்க்க ஆவலுடன் உள்ளேன்.

(தேடுவோம்)

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் - 24.12.2009

இந்தவாரத்துக்கான கேள்வி பதில்களுக்கு செல்வோமா?

அனானி (32 கேள்விகள் கேட்டவர்)
1. வாழும் மனிதர்களுக்கு வாழ்கைக்குத் தேவையான அழகின் அளவீடு என்ன?
பதில்: அழகு என்பது பார்ப்பவர் மனோபாவத்துக்கு ஏற்ப மாறுபடும். இதில் அளவீடு என ஒன்று எவ்வாறு அமையும்?

2. பொதுவிழாக்களில் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கிறவர்கள் பற்றி?
பதில்: கலைஞரை வச்சு இங்கே காமெடி ஏதும் பண்ணல்லியே?

3. தமிழக காங்கரசாரின் சத்தியமூர்த்திபவனில் தற்போதைய செல்வாக்கு நிலவரம்?
பதில்: என்ன புடலங்காய் செல்வாக்கு? தமிழகத்திலேயே காங்கிரசாருக்கு செல்வாக்கு இல்லை. சத்தியமூர்த்தி பவன் மட்டும் என்ன ஸ்பெஷல்?

4. தமிழக அரசு அரசு உயர் அதிகாரிகளை அடிக்கடி பணிமாற்றம் செய்வது சரியா?
பதில்: பிறகு தண்ணீயில்லாக் காட்டுக்கெல்லாம் ட்ரான்ஸ்ஃபர் எப்படி செய்வதாம்?

5. அரசால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாதபோது கள் இற்க்குவோரின் கோரிக்கையை நிறைவேற்ற தயங்குவது ஏன்?
பதில்: நான் என்ன நினைக்கிறேன் என்றால் கள்ளுக்கு முதலீடு குறைவு. சாராயத்துக்கு பேட்டரி செல், பல்லி ஆகிய மூலப்பொருள்கள் தேவை. ஆகவே கள் இறக்க அனுமதித்தால் குடிசைத் தொழிலாகி போய் விடும் என அரசு பயப்படுகிறது போல தோன்றுகிறது.

6. புதுமுக நடிகர் ஷக்தி திரையுலகில் பிரகாசிப்பாரா?
பதில்: யார் அவர்? அவர் படங்கள் எதுவும் பார்த்ததாக நினைவில்லையே.

7. தமிழகத்தில் சீரியஸ் இலக்கியங்களையும் வாசகர்கள் படிக்க ஆரம்பித்துவிடது போல் தெரிகிறதே?
பதில்: எப்படி சொல்கிறீர்கள்?

8. தற்கால சூழ்நிலயில் இன்றைய கணவன்மார்களைப் பற்றி?
பதில்: செக்‌ஷன் 498-ஏ கண்டு அஞ்சுகின்றனர்.

9. தற்கால சூழ்நிலயில் இன்றைய மனைவிமார்களைப் பற்றி?
பதில்: 498-ஏ செக்‌ஷனை சகட்டுமேனிக்கு உபயோகிப்பது தங்கள் நலத்துக்கே ஊறு விளைவிக்கும் என்பதை இன்னும் சரியாக பலர் புரிந்து கொள்ளவில்லை.

10. தற்கால சூழ்நிலயில் இன்றைய ஆண்பிள்ளைகளைப் பற்றி?
பதில்: எல்லா துறைகளிலும் பெண்கள் போட்டியிடுவதால் ஆடிப்போயுள்ளனர்.

11. தற்கால சூழ்நிலயில் இன்றைய பெண்பிள்ளைகளைப் பற்றி?
பதில்: ஆண்களுடன் இடும் போட்டி சபாஷ் சரியான போட்டி எனச் சொல்ல வைக்கிறது.

12. தற்கால சூழ்நிலயில் இன்றைய மூத்த குடிமக்கள் பற்றி?
பதில்: குடி மக்கள் என்பதை எந்த அர்த்தத்தில் கேட்கிறீர்கள் எனத் தெரியவில்லை. சீனியர் சிடிசன்ஸ் என நினைத்தால் அவர்கள் தங்கள்பாட்டை தாங்களே பார்த்து கொள்வது நல்லது. கடை காலம் வரைக்கும் உழைப்பதே அவர்கள் நோய்வாய்ப்படாமல் இருப்பதற்கான ரகசியம் என்றால் மிகையாகாது.

13. குரு பெயர்ச்சி யோகத்தால் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வாய்ப்பு வருமா?
பதில்: மன்னிக்கவும் எனக்கு சோதிடத்தில் ஏதும் நம்பிக்கை இல்லை.

14. சொத்து மதிப்பாக மு.கருணாநிதி 43.8 கோடி, மாயாவதி 52 கோடி, ஜெயலலிதா 24.6 கோடி எனச் சொல்லப்படுகிறதே-இவர்கள் எப்படி இவ்வளவு சம்பாதித்தார்கள்?
பதில்: இவ்வளவு குறைவான சொத்தா? இது அவர்கள் டிக்ளேர் செய்ததாக இருக்கும். எப்ப்டி சம்பாதித்தார்களா? இது என்ன கேள்வி? குழந்தைக்கும் தெரியுமே.

15. வருமான வரித்துறை சட்டங்கள் கெடுபிடிகள் எல்லாம் சாமானியர்க்கு மட்டும்தானா?
பதில்: ஆமாம்

16. உப்பைத் தின்னவன் தண்ணீர் குடிப்பான் என்று சொல்கிறார்களே அது சும்மாவா?
பதில்: எந்த ஆட்டமானாலும் அது முடிவுக்கு வரத்தான் வேண்டும். வரும்.

17. லஞ்சம் வாங்கி பணத்தை குவித்து-தேர்தலில் மக்களிடம் பண விதையாய் விதைத்து-வெற்றியும் பெற்று சாதனை வெற்றி எனக் கொண்டாடும் போக்கு நாட்டை எங்கே கொண்டு போகும்?
பதில்: கவலைக்கிடமான நிலைமைதான்.

18. கைகள் கட்டப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் பாவம் இல்லையா?
பதில்: தலைமை தேர்தல் கமிஷனர் படவேண்டிய கவலை அது.

19. இந்தக் கலி நீங்க மீண்டும் ஒரு சேஷன் வருவாரா?
பதில்: வரவேண்டும் என யார்தான் விரும்ப மாட்டார்கள்? ஆனால் சந்தேகம்தான்.

20. செல்பேசியில் எஸ்.எம்.எஸ். என்ற பெயரில் இளைஞர் உலகம் நேரத்தை வீணாக்குகிறதே?
பதில்: இந்த கிரேஸ் தீர்ந்ததும் வேறுவிஷயங்களுக்கு தாவுவார்கள். ஆனால் நேரத்தை வீணாக்குவது மட்டும் குறையாது என அஞ்சுகிறேன்.

21. வாழும் அரசியல் தலைவர்களைவிட நாட்டில் சிறந்தப் பத்துப் பேரைச் சொல்லுங்களேன்?
பதில்: அப்துல் கலாம் முதலில் நினைவுக்கு வருகிறார். சோ அவர்களை அரசியல் தலைவராக பார்க்க மாட்டீர்கள்தானே. எழுத்தாளர்களில் ஜெயமோகன், இரா முருகன். எம்.எஸ். உதயமூர்த்தி,

22. உங்கள் பதிவுகளை(குறிப்பாக- சோவின் எங்கே பிராமணன்) படித்துவிட்டு தமிழ் திரையுலக கவர்ச்சிப்புயல் நமீதா உங்கள் வீட்டுக்கு வந்தால்?
பதில்: நமீதாவை வைத்து காமெடி ஏதும் பண்ணல்லியே?

23. புரட்சிப்புயல் வைகோவும் வழக்குகளும் ஒரு தொடர் கதையா?
பதில்: இஅகோ நல்ல மனிதர். உணர்ச்சிவசப்படுபவர். நன்றாக அழுவாr. வாலிபால் விளையாட்டில் நிபுணர். சிறையில் நிறைய வாலிபால் ஆடியுள்ளார். நன்றாக நடப்பார். பேசுவார். ஆனால் அவை எல்லாம் போதுமா? பேசக்கூடாத விஷயங்களை பேசிப்பேசியே காரியத்தை கெடுத்து கொள்கிறாரே. ஆகவே வழக்குகளும் தொடர்கதையாகத்தான் போயின.

24. மீண்டும் திமுகவிடம் லட்சிய (பதவி)உறவுகொள்ள எடுக்கபட்ட மருத்துவரின் முயற்சிகள்?
பதில்: கேலிக்குரியனவையாக உள்ளன.

25. போகிற போக்கை பார்த்தால் 2011இல் விஜயகாந்த்?
பதில்: இப்போதைக்கு திமுக தோற்கடிக்கப்படவேண்டியது முக்கியம். ஆகவே அதிமுகவுடன் கூட்டு சேருவது விஜயகாந்த்துக்கு காலத்தின் கட்டாயம். அவருkகுமே கூட மேலே வளர இது ஒரு வழி. ஆனால் அவரும் சரி, ஜெயும் சரி இதை உணர்ந்ததாகத் தெரியவில்லையே.

26. அரசால் போடப்பட்ட ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்குகள் எல்லாம் என்னவாச்சு?
பதில்: இழுபறியில் உள்ளன.

27.இடைத்தேர்தல் பரிசளிப்பை (மது,மாமிசம்) பார்க்கும் போது அடுத்து என்ன செய்வார்கள், வரவர இனி வாக்குரிமை?
பதில்: வரவர மாமியார் கழுதைப் போல ஆனாளாம்.

28.ஒரு ரூபாய் அரிசிதிட்டம், இலவச டீவி, இலவச கேஸ், இலவச வீட்டுமனை, பட்டா, கலைஞர் மருத்துவத்திட்டம், 50 ரூபாயில் பலசரக்கு, இட ஒதுக்கீட்டு கொள்கையில் 100 % உறுதி இவை எல்லாம் நம்மை காப்பாற்றாது என எண்ணி, இடைத்தேர்தலில் பணத்தை வாரி இறைக்கும் திமுக பற்றி?
பதில்: திமுக ஒரு குதிரையை மட்டும் நம்பி பணம் கட்டவில்லை என்பது தெரிகிறது.

29. அதற்கு சற்றும் சளைக்காமால் இதே பாணியில் செயல்படும் அதிமுக பற்றி?
பதில்: திமுகாவும் அதிமுகாவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என பெருந்தலைவர் எப்போதோ கூறிவிட்டாரே!

30. ஜனநாயகத்தை பணநாயகம் வென்று விட்டது எனப் புலம்பும் பிற கட்சிகள் பற்றி?
பதில்: தங்களுக்கும் அந்த சான்ஸ் கிட்டவில்லையே என்னும் காரணம்தான் இங்கு அந்த புலம்பலுக்கு மெயினாக உள்ளது.

31.ஒருவேளை அதிமுக வெற்றி பெற்றுவிட்டால் (அல்லது ஓட்டு வித்யாசம் குறைந்து விட்டால்) கலைஞர்/ஸ்டாலின்/அழகிரி என்ன சொல்லி சமாளிப்பார்கள்?
பதில்: ஸ்டாலின் அழகிரி என்ன சொல்லுவார்களோ தெரியாது. ஆனால் கலைஞருக்கு தமிழன் சோற்றால் அடித்த இண்டம் என்னும் உண்மை திடீரென மறுபடி நினைவுக்கு வந்து தொலைக்கும்.

32. உங்களின் ஆரம்ப கால பதிவுகளுக்கும், தற்போதைய பதிவுகளுக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: ஆரம்பத்தில் தமிழில் எழுதும்போது பல ஆங்கில சொற்களுக்கு சட்டென தமிழ் சொற்ககள் பிடிபடாமல் தயங்கினேன். இப்போது அந்தத் தயக்கம் போயே போயிந்தி.சைவகொத்துப்பரோட்டா
1. கேள்வி:கள்ள ஓட்டைத் தடுக்க, ஓட்டு போட வருபவர்களை போட்டோ எடுக்க தேர்தல்
கமிசன் எடுத்துள்ள முடிவு, கள்ள ஓட்டை தடுக்க வகை செய்யுமா?

பதில்: போட்டோ எடுக்கும் செயல்பாடு எம்முறையில் நடக்கும் என்பதை பொருத்தது அது.


எம்.கண்ணன்
1. தெலுங்கானா, ஆந்திரா போராட்டங்களினால் திரைப்படத்துறைக்கும், போக்குவரத்து மற்றும் வணிகத்துறைக்கு மிகுந்த நஷ்டமாமே? தமிழ் நடிக/நடிகர்கள், இயக்குனர்கள் இனி ஹைதராபாத் சென்று படம் எடுக்க யோசிப்பார்கள்தானே?
பதில்: கண்டிப்பாக யோசிப்பார்கள். இம்மாதிரி மாநிலங்களை பிரித்து கொண்டே போனால் கடைசியில் ஒன்றுமே மிஞ்சாது. வெங்காயம் உரிப்பது போலத்தான்.

2. கோபன்ஹேகனில் இன்று நிறைவுறும் Climate மாநாட்டில் எடுக்கப் போகும் முடிவுகளால் காமன்மேன் எனப்படும் இந்திய / தமிழக பிரஜைக்கு என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்? கார் / 2 வீலர் வாங்கக்கூடாது, ஜெனரேட்டர் உபயோகம் பண்ணக்கூடாது, ஏஸி உபயோகிக்கக்கூடாது என அன்றாட வாழ்வில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தும் முடிவுகள் ஏற்படுமா? மேலும் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கான தொழிற்சாலை / கட்டுமானம் கட்டுவதில் தடைகள் வருமா? இதனால் முன்னேற்றம் பாதிக்குமா?
பதில்: வளரும் நாடுகளை இவ்வாறு கட்டுப்படுத்துவது வேலைக்காகுமா எனத் தெரியவில்லை.

3. வைரமுத்துவும் வாலியும் இணைந்து கலைஞரின் பெண் சிங்கம் படத்துக்கு பாடல் எழுதப் போகிறார்களாமே? அடுத்த வருட விருது இருவருக்கும் பகிர்ந்து அளிப்பதற்காகவா இது? இல்லை யாருடைய ஜால்ரா அதிகம் என பார்ப்பதற்காகவா?
பதில்: ரெண்டும்தான்.

4. தமிழ்ப் பட ஹீரோயின்கள் இந்திக்கும் போய்விட்டதால், அனுஷ்காவின் ராஜ்ஜியம் இங்கு வருமா?
பதில்: அனுஷ்கா தெலுங்குதானே? அருந்ததீயில் பார்த்துள்ளேன். அப்படி யாருடைய ராஜ்ஜியமும் நடிகைகள் விஷயத்தில் நிலைப்பதில்லை.

5. குமுதத்தில் முதல்வாரம் கௌதமி பேட்டி, அடுத்த வாரம் வாணி கணபதி பேட்டி. வரும் வாரங்களில் சரிகா, சிம்ரன் பேட்டிகள் வருமா?
பதில்: வரவேண்டும். அப்போதுதானே கமல் பற்றி மேலதிக விவரங்கள் கிடைக்கும்?

6. இவர்களில் யார் யார் - இட்லிவடை குழாமில் உறுப்பினர் - எ.அ.பாலா, பா ராகவன், பத்ரி, தேசிகன், பெனாத்தல் சுரேஷ், ஹரன் பிரசன்னா, ரஜினி ராம்கி, பாஸ்டன் பாலாஜி, சு.க்ருபாஷங்கர், இதில் யார் சரக்கு மாஸ்டர்? எ.அ.பாலா?
பதில்: எனக்கு தெரியவில்லை. தெரிந்து கொள்வதில் ஆர்வமும் இல்லை.

7. அத்வானி ஆக்டிவாக நடமாடிக்கொண்டிருக்கையிலேயே (வாஜ்பாய் மாதிரி அல்லாமல்) அவருக்கு கடைசி நாள் குறித்து - அவரை ராஜினாமா செய்யவைத்து - போதும் உங்கள் இருப்பு என சொல்வது என்ன மாதிரியான ஆர்.எஸ்.எஸ். அரசியல்? அவராகவும் ஏன் தானே ஒதுங்காமல் இப்படி இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறார் (கட்சியில், பதவியில்)?
பதில்: பாஜகவில் நடக்கும் உட்கட்சி சண்டை அந்த கட்சிக்கு நல்லது அல்ல. நாட்டின் ஜனநாயகத்துக்குமே நல்லது அல்ல. வேறு என்ன சொல்ல?

8. நிதின் கட்கரி பாஜக தலைவரானால் - அவர் சொல்லுவதையெல்லாம் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள பாஜக தலைவர்கள், தொண்டர்கள் கேட்பார்களா ? மகாராஷ்டிரத்திலேயே சிவசேனா பிரச்னைகளில் அவரால் ஏதும் செய்து வெற்றி பெற முடியாத நிலையில் இந்தியா அளவிற்கு பஜக தலைவரானால் யார் கேட்கப்போகிறார்கள்?
பதில்: முந்தைய கேள்விக்கான பதில்தான் இங்கும்.

9. கூடாரவல்லி கொண்டாடுவது உண்டா? வைகுண்ட ஏகாதசிக்கு வழக்கமாக எந்த கோயில் விசிட்? திருவல்லிக்கேணியா? நங்கநல்லூரேவா?
பதில்: நங்கநல்லூர்தான். உள்ளூர் லட்சுமி நரசிம்மசாமி கோவிலில். கூடாரவல்லிக்கு அங்கு சர்க்கரை பொங்கல் தளிகை உண்டு. நானும் ஒரு உபயதாரர் மார்கழி நிகழ்ச்சிகளுக்கு.

10. சன் டிவியில் இரவு 10.30மணிக்கு 'விஜய் டிவியின் நடந்தது என்ன பாணியில்' காசியில் இருக்கும் அகோரிகள், நர மாமிசம் சாப்பிடுவதையும் காட்டினார்கள் (புதனன்று) - பார்த்தீர்களா?
பதில்: அறிவிப்பு/ட்ரைலரை பார்த்ததுமே குமட்டிக் கொண்டு வந்தது. ஜாக்கிரதையாக டைமிங்கை நோட் செய்து சன் டிவி போடாமல் இருந்தேன்.


கந்தசாமி
டோண்டுவின் ஸ்பெசல் கமெண்ட்?
1. இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக இந்தியா வர அனுமதிக்க வேண்டும்: பாஜக---மீண்டும் தமிழர் பாசம்!

பதில்: பாஜகவுக்கு பைத்தியம் பிடித்துள்ளது.

2. புலிகளின் ஆயுதக் கப்பலை கைப்பற்றியது இலங்கை---இது என்ன புதுக்கதை!
பதில்: செய்தி உண்மையா என்பது எனக்கு தெரியவில்லை.

3. தெலுங்கானா விவகாரம்: பிரதமர் நாளை முடிவு- --நல்லதா யாருக்கு!
பதில்: கண்டிப்பாக ஆந்திரர்களுக்கு நல்லதல்ல.

4. திருச்செந்தூர் தொகுதியில் 79.17% வாக்குப்பதிவு : பெண்களே அதிகம்---கொடுத்த பரிசுகள் கை கொடுத்துவிட்டனவா!
பதில்: விட்டன.

5. மக்களவை பாஜக துணைத் தலைவராக கோபிநாத் முண்டே நியமனம் ---இதுவாவது பலன் கொடுக்குமா!
பதில்: தலைக்குத் தலை நாட்டாமை என்றால் என்ன செய்வது?

6. கொட​நாடு எஸ்​டேட் பகு​தி​யில் வேலி அமைப்​பது தொடர்​பாக மோதல் --கொடநாடு செய்தி இல்லாத நாளும் இனி உண்டோ!
பதில்: செய்திகள் இன்னும் வரும்

7. இரண்டு மணி வரை உழைக்கிறேன்: மம்தா --பாராட்டுவோம்!
பதில்: கண்டிப்பாக.

8. ஜெ., வீடு முன் அ.தி.மு.க.,வினர் முற்றுகை --இது கொஞ்சம் ஓவராயில்லை!
பதில்: என்ன சொல்லி முற்றுகை இட்டார்களாம்?

9. இடையூறாக இருந்த சிலைகள் அகற்றம் __சபாஷ் தலைவருக்கு!
பதில்: எங்கே?

10. மம்தா புகாருக்கு லாலு பதில் --சிவப்பு சாயம் வெளுத்து போச்சா!
பதில்: இருவருமே லேசுப்பட்டவர்கள் இல்லை. சபாஷ் சரியான போட்டி.


கேள்விகள் இருந்தால் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/23/2009

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 5 மற்றும் 6)

எபிசோட் - 5 (21.12.2009) சுட்டி - 1 மற்றும் சுட்டி - 2

நீலகண்டன் வீட்டிற்கு உமாவின் வரவிருக்கும் சீமந்தத்துக்கு அவரையும் அவரது குடும்பத்தாரையும் அழைக்க அவரது சம்பந்திகள் வந்துள்ளனர். நீலகண்டனுக்கும் பர்வதத்துக்கும் மிக்க மகிழ்ச்சி. சீமந்தத்தை நடத்தவிருக்கும் புரோகிதர் சாம்பு சாஸ்திரிகளா எனக்கேட்க, இல்லை அவர் கிடைக்காததால் வேம்பு சாஸ்திரிகளையே ஏற்பாடு செய்ததாக உமாவின் மாமியார் கூறுகிறார். பிறகு நாதனையும் அழைக்க வேண்டும் என முடிவாகி, இரண்டு நாட்கள் கழித்து சம்பந்திகள் இரு தரப்பினருமே சேர்ந்து சென்று நாதனை அழைக்க முடிவு செய்கின்றனர்.

நாதன் வீட்டில் அவர் “என்ன நீலகண்டன் தாத்தாவாகப் போகிறீர்களா” எனக்கேட்க, “அவர் இப்போ வெறும் நீலகண்டர் இல்லை, திருநீலகண்டர்” என வசுமதி எடுத்துக் கொடுக்க ஒரே சிரிப்பு.

“யார் அது திருநீலகண்டர்” என நண்பர் கேட்க, 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்டரின் கதையை சோ சொல்கிறார். குயவராய் தொழில் புரிந்த அவர் சிவனடியார்களுக்கு திருவோடு செய்து தந்து சிவத் தொண்டு புரிபவர். பெண்சபலம் உடைய அவரை அவரது மனைவி ஒரு முறை கோபித்து “எம்மைத் தீண்டினால் திருநீலக்ண்டம்” எனச் சூளுரைக்க, “எம்மை என்று பன்மையில் கூறியதால், உன்னை மட்டுமல்ல, பெண்களையே தொடேன்” என அவர் எதிர் சூளுரைக்கிறார். பிறகு சிவபெருமானே அடியார் ரூபத்தில் வந்து தம்பதியர் நடுவில் இருந்த விலக்கத்தை நீக்கி அவர்களுக்கு இளமையை திரும்பத் தருகிறார்.

பர்வதம் சமையற்கார மாமியை சென்று பார்க்கிறாள். சீமந்தம் நடக்கும் தினத்தில் நாதனின் தங்கை பிள்ளைக்கு பம்பாயில் திருமணம் நடக்கவிருப்பதால் நாதன் வசுமதி சீமந்தத்துக்கு வருவது சந்தேகம் எனக்கூறிய சமையற்கார மாமி இது தான் சொன்னதாக வசுமதிக்கு தெரியவேண்டாமென கேட்டு கொள்கிறாள்.

சீமந்தத்தை ஆடம்பரம் இல்லாமல் செய்யலாம் என அசோக் ஆலோசனையை கூறியதௌ பற்றி அறிந்து கொண்டு “இவன் யார் அதைச்சொல்ல” என நாதன் பொறுமையின்றி பேசுகிறார். அங்கு வரும் அசோக்கிடமும் அது பற்றி கேட்க, அவன் விஸ்தாரமான விளக்கம் தருகிறான். வைதிக காரியங்களே பிரதானமாக இருந்தால்தான் பிறக்கப் போகும் குழந்தை நல்லபடியாக பிறக்கும் எனக் கூறி, தேவையற்ற ஆடம்பரங்களுடன் சடங்குகளை பணம் படைத்தவர்கள் செய்யும்ப்போது, அதை பார்த்து நடுத்தர வர்க்கத்தினரும் அவர்களை காப்பி அடித்து செலவுகளை தலைமேல் போட்டுக் கொள்வதையும் குறை கூறுகிறான் அவன். அசோக் அப்பால் சென்றதும் உமாவின் மாமனார் அசோக் சொல்வது நியாயமாகத்தான் படுகிறது எனக் கூறுகிறார்.

நீலகண்டன், பர்வதம், அவர் சம்பந்திகள் ஆகியோர் நாதனிடம் விடை பெற்று புறப்படுகின்றனர். அசோக் அவர்களிடம் புரோகிதம் பண்ணிவைக்கும் வேம்பு சாஸ்திரிகளுக்கும் பத்திரிகை வைப்பது நலம் எனக்கூற, உமாவின் மாமனாரும் ஏற்றுக் கொள்கிறார்.

செர்வீஸ்காரர்களுக்கும் ஏன் அழைப்பு தரவேண்டும் என சோவின் நண்பர் கேட்க, சோ அவர்கள் அதுதான் இந்துமத தர்மம் என விளக்குகிறார். தசரதர் யாகம் செய்யும்போது எல்லா வர்ணத்தவரையும் மரியாதையாக நடத்தி தக்க சன்மானங்கள் தந்து கௌரவித்ததையும் அவர் கூறுகிறார். ஆபஸ்தம்ப சூத்திரத்தில் இவை பற்றி சொல்லப்பட்டவையயும் விவரிக்கிறார்.

எல்லோரும் சென்றதும் வசுமதி கோபத்துடன் அசோக் இவ்வாறே நடந்து கொண்டிருந்தால் எல்லோரும் அவனை லூசு எனக் கூறுவார்கள் என கோபத்துடன் கூறுகிறாள். நாதன் அசோக்கிடம் தானும் வசுமதியும் பம்பாய்க்கு தன் தங்கை மகனது கல்யாணத்துக்கு போகப்போவதால் அசோக்தான் தங்கள் சார்பில் உமா வீட்டு சீமந்தத்துக்கு செல்ல வேண்டும் என அவனிடம் கூறுகிறார்.

சீமந்தம் நன்றாக வைதீக முறைப்படி நடக்கிறது. சீமந்தத்தின் காரணம் பற்றி சோவிடம் அவர் நண்பர் கேட்க, அவரும் பும்சவனம், சீமந்தம் ஆகியவற்றை விளக்குகிறார்.
(தேடுவோம்)

எபிசோட் - 6

(ஆறாம் எபிசோடுக்காக நோட்டு புத்தகம் பேனா சகிதம் காத்திருந்தால் ராபணா என எட்டாம் எபிசோட்டை போட்டு வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டனர் ஜெயா டிவியினர். கிட்டத்தட்ட கால் மணி நேரம் நடந்த கூத்துக்கு பிறகு மறுபடியும் டைட்டில்சாங் எல்லாம் போட்டு ஆறாம் எபிசோடுக்கு அசடு வழிய திரும்பி வந்தனர்).

சீமந்தம் பற்றி சோ விளக்குகிறார். கர்ப்பகாலத்தில் பெண்ணை எவ்வாறெல்லாம் நடத்த வேண்டும், அவளை எப்படியெல்லாம் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் ஹிந்து சாத்திரங்கள் சொன்னதை பட்டியலிட்டு விட்டு, அவை எல்லாம் இப்போது மருத்துவரீதியாகவும் தரப்படும் அறிவுரைகளே என்று முத்தாய்ப்புடன் முடிக்கிறார்.

சீமந்தத்தின் முக்கிய அங்கமான ராகாமகம் என்னும் மந்திரம் உச்சரிக்கப்பட்டு முள்ளம்பன்றியின் முள்ளால் உமாவுக்கு அவள் கணவன் வகிடு எடுப்பது போன்ற பாவனை காண்பிக்கப்படுகிறது. அது பற்றியும் சோ விளக்குகிறார்.

சீமந்தம் முடிந்து எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பர்வதம் உமாவின் மாமியார் ஸ்ரீமதியிடம் எல்லா ஏற்பாடுகளும் பிரமாதம், சாப்பாடும் பிரமாதம் எனக்கூறி, கேட்டரிங் யாருடையது எனக் கேட்க, உமாவின் மாமியாரும் கேட்டரர் பற்றி கூறுகிறார். நீலகண்டனின் மகன் ராம்ஜி கல்யாணத்துக்கு அந்த கேட்டரரையே வைத்துக் கொள்ளலாம் என அவர் சம்பந்தி கூற, கேட்டரர் கிடச்சுட்டார்னு கல்யாணம் வச்சுக்க முடியாது என நீலகண்டன் கலாய்க்கிறார். உமா தன் தம்பியிடம் அவனுக்கு பெண் பார்க்கலாமா எனக் கேட்க அவன் டன்டன்னாக அசடு வழிகிறான். ஏதோ காதல் விவகாரம் இருக்கு என உமா போட்டு கொடுக்க, கலகலப்பு இன்னும் அதிகமாகிறது. எது எப்படியானாலும் தனக்கு வரப்போகும் மாட்டுப்பெண் பக்தியுடன் இருக்க வேண்டும், ஆசார அனுட்டானம் தெரிந்தவளாக இருக்க வேண்டும் என நீலகண்டன் கூற பர்வதம் அவள் பங்குக்கு நொடிக்கிறாள்.

உமாவுக்கு பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் பண்ணிப் பார்த்தார்களா என வேம்பு சாஸ்திரிகள் கேட்க, அவ்வாறு செய்வது சட்ட விரோதம் என நீலகண்டனும் அவர் சம்பந்தியும் கூறுகின்றனர். ஆணோ பெண்ணோ நல்லபடியாக பிறந்தால் போதும் என பர்வதம் கூறுகிறாள்.

நுணலும் தன் வாயால் கெடும் என்னும் கணக்காக வேம்பு சாஸ்திரிகள் எல்லாம் தெரிந்த சிரோன்மணி அசோக் உமாவுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை கூறலாமே எனக் கிண்டலாகக் கேட்டு, சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்கிறார். அவர் முறைப்படி மந்திரங்கள் உச்சரித்திருந்தால், அவற்றின் அதிர்வுகளை உமாவின் கருவிலுள்ள குழந்தை பெற்றிருக்கும், அதையும் இவர் உணர்ந்திருந்தால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என வேம்பு சாஸ்திரிகளே கூறிடலாமே தான் எதற்கு என அசோக் வினயமாக பதிலளிக்கிறான். வேம்பு சாஸ்திரி திடுக்கிடுகிறார். தான் சொன்ன மந்திரங்களில் என்ன குறைவு என அவர் துணுக்குற்று கேட்க, எல்லோர் எதிரிலும் வேண்டாம், அவரிடம் தான் தனியாக கூறுவதாக அவன் தயங்க வேம்பு சாஸ்திரிகள் அவன் இப்போதே கூற வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார். அவரது மந்திரங்களில் ஸ்வரப்பிழை இருந்ததாக அசோக் கூறுகிறான்.

“ஸ்வரப்பிழையா, இது என்ன கச்சேரியா” என சோவின் நண்பர் வியக்க, கச்சேரியாக அமையக்கூடாது என்பதுதான் சரி என சோ விளக்குகிறார். வேதத்தின் ஸ்வரத்தை மாற்றல், அவசரப்படல், உணர்ச்சியின்றி அதை உச்சரித்தல், சொல் மாற்றிக் கூறுதல், அனாவசியமாக தலையெல்லாம் ஆட்டி சேஷ்டைகள் செய்தல் முதலியவை அடங்கிய ஆறு குறைகளை சோ அவர்கள் பட்டியலிடுகிறார். இந்திரனைக் கொல்லும் ஆற்றல் பெற்ற பிள்ளை பெறும் வரம் வேண்டி தவம் இருந்த ஸ்வஷ்டா என்னும் தேவத்தச்சன், தனது கோரிக்கையை ஸ்வரப்பிழையுடன் கூறியதில் இந்திரனால் கொல்லப்படும் மகன் என உருமாறி, அவனுக்கு பிறக்கும் மகனை இந்திரன் கையால் சாவதாக வரும் கதையையும் சோ கூறுகிறார். தினசரி வாழ்க்கையிலும் இம்மாதிரி தொனி மாறிய வரவேற்புரைகள் விபரீத பொருளை தருவதையும் உதாரணத்துடன் விளக்குகிறார்.

அசோக்கை வேம்பு சேலஞ்ச் செய்ய அவன் “ராகாமகம் சுகபாகாம்” எனத் துவங்கும் மந்திரத்தை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதை அவனே செய்து காட்டி வேம்பு சாஸ்திரிகள் தவறிய இடத்தையும் சுட்டிக் காட்டுகிறான். வேம்பு சாஸ்திரிகள் கூடவே வந்த இன்னொரு புரோகிதர் அசோக் சொல்வது சரியே என உறுதிபடுத்த வேம்பு ச்ச்ஸ்திரிகளின் கோபம் அதிகரிக்கிறது. லௌகீக நிர்ப்பந்தங்களினாலேயே தான் தவறியதாகவும், எங்கே பிராமணன் என அலையும் அசோக் அந்த தேடலை விட்டுவிட்டு அவனே வர்ணரீதியான பிராமணனாக உருவெடுக்க வேண்டியதுதானே என சேலஞ்ச் செய்கிறார்.

(தேடுவோம்)

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/21/2009

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்

நண்பர் நக்கீரன் பாண்டியன் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் திருப்பதி ஏழுமலையான் குறித்து பலருக்கும் தெரியாத சில விவரங்களை பார்த்தேன். இதை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு. இதில் உள்ள பல விஷயங்களை நானும் முதன்முறையாகத்தான் பார்க்கிறேன் என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன். நக்கீரன் பாண்டியனுக்கும், ஸ்ரீ ஆஞ்சநேயர் விஜயம் (செப்டம்பர் 2009) இதழுக்கும் என் நன்றி.

திருப்பதி செல்கிறோம், திருவேங்கடமுடையான் ஏழுமலைவாசனை வணங்கி மகிழ்கின்றோம். ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றில் சில தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன. அவற்றில் சில.........

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப்படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல்சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறன.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100 கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலர்மேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் “வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென்கலை சாத்துமுறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில்தான் உள்ளன.

நன்றி: ஸ்ரீ ஆஞ்சநேயர் விஜயம்(செப்டம்பர் 2009). டாக்டர்.இந்தர்சந்த்சுரானா


அன்புடன்,
டோண்டு ராகவன்

12/18/2009

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 3 மற்றும் 4)

எபிசோட் - 3 (16.12.2009) (சுட்டி 1) மற்றும் (சுட்டி 2)
சோ அவர்களது ஆழ்வார் பாசுரங்கள் பற்றி விளக்கங்கள் தொடர்கின்றன. பாச்சா கூறுவதாக சாரியார் கற்பனை செய்யும் பாசுரம் திருமங்கை ஆழ்வாருடையது. அது இவ்வாறு செல்கிறது.
“கருமாமுகிலுருவா கனலுருவா புனலுருவா பெருமால் வரையுருவா பிறவுருவா நினதுருவா திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து அருமாகடலமுதே உனது அடியே சரணாமே” (இப்பாடலை சேட்டில் வந்த எனது நண்பர் வரதகணேஷ் அனுப்பினார். அவருக்கு என் நன்றி).

அவர் ஒரு குறுநில மன்னர். வைணவபக்தியில் அவர் எல்லாவற்றையும் பெருமாள் கைங்கரியத்துக்கே செலவழித்தவர். கப்பம் கட்ட மறுத்ததால் சோழமன்னன் அவரை சிறையில் வைக்க, பெருமாள் அருளால் ஆற்றுமணலை நெல்லாக மாற்றி கப்பம் தர சோழமன்னனும் அவரை விடுதலை செய்கிறான்.

அதன் பின்னாலும் கோவில் திருப்பணிக்காக கொள்ளை அடிக்க, ஒரு மணமகன் மற்றும் மணமகளாக அவரை ஆட்கொள்ள வந்த பெருமாள் மற்றும் தாயாரிடமிருந்தே பணம் கொள்ளையடிக்க முயன்று, பிரும்மோபதேசமும் பெறுகிறார். மொத்தத்தில் ஒரு முரட்டு பக்தர்.

சாரியார் இரண்டாம் முறையாக ஓதும் பாசுரம் தொடரடிப்பொடி ஆழ்வார். அது இவ்வாறு செல்கிறது, “ஊரிலேன் காணியில்லை, உறவு மற்றொருவர் இல்லை, பாரில் நின் பாதமூலம் பற்றினேன் பரமமூர்த்தி, காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேனே, ஆருயிர் கடைக்கண் அம்மா அரங்கமாநகருளானே”.

அவர் இயற்பெயர் விப்ரநாராயணர். தனது நந்தவனத்திலிருந்து மலர்கள் பெருமாள் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தும் பணி செய்பவர். அவர் தேவதேவி என்னும் தாசியின் மையலில் வீழ்ந்து, எல்லா சொத்தையும் இழக்கிறார். கோவிலிலிருந்து ஒரு பாத்திரம் களவாடப்பட்டு விப்ர நாராயணர் அனுப்பியதாக கூறப்பட்டு தாசியின் வீட்டுக்கு வரும் பழியும் அவர் மேல் விழ, பிறகு எல்லாம் பெருமாளின் லீலை எனத் தெரியவந்து சுபமாக முடிகிறது.

நிலகண்டன் வீட்டில் பர்வதம் பூஜை செய்கிறாள். நாத்திகராக இருந்த நீலகண்டன் பரம ஆத்திகராக மாறியிருக்கிறார். அவர் பிள்ளை அவர் செய்து வந்த நாத்திகவாதத்தைத் தொடர்கிறான். நீலகண்டன் தனக்கு சகுனத்தடை ஏற்பட்டதால் பஸ்ஸில் பயணம் செய்ததை தவிர்க்க, அந்த பஸ் விபத்துக்குள்ளானதை கூறுகிறார். அவர் பையனோ அதே பஸ்ஸில் சென்ற மற்றவர்களுக்கு ஏன் அம்மாதிரி சகுனத்தடை வரவில்லை என வாதம் புரிகிறான்.

“அதானே” என்கிறார் சோவின் நண்பர். சோ அவரிடம் ஹிந்துக்களின் கர்மா தியரி பற்றி விளக்குகிறார். பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் இம்மாதிரி நல்லது நடக்கலாம், இல்லாவிட்டால் நடக்காது என்கிறார். உமாவுக்கு சீமந்தம் வைக்கப்போவது பற்றி பேச்சு வருகிறது. ஐந்தாம் மாதம் உமாவுக்கு கருப்புப் புடவை வாங்கித் தந்தது பற்றி உமா மகிழ்ச்சி தெரிவித்ததாக பர்வதம் கூறுகிறாள். அது சம்பிரதாயம் என நீலகண்டன் கூற, அந்த நம்பிக்கை அவர் தான் உமாவை கருவில் சுமந்த போது அவரிடம் இல்லாமல் போயிற்றே என சஞ்சலம் அடைகிறாள்.

தோட்டத்தில் அசோக் அங்குமிங்கும் நிம்மதியின்றி நடக்கிறான். அதைப் பார்த்து நாதனும் வசுமதியும் கவலையடைகின்றனர். வசுமதி அசோக் பீச்சில் சன்னியாசியை சந்தித்தது பற்றி கூற, அதைக் கேட்டு நாதனின் கவலை மேலும் அதிகரிக்கிறது. அப்போது பாகவதர் வருகிறார். அசோக் அவரை வணங்குகிறான். அவர் வேறு வந்து இப்போது அசோக்கை குழப்பப் போவதாக வசுமதி கோபப்பட நாதன் அவளை சமாதானப்படுத்துகிறார்.

பாகவதர் உள்ளே வந்து நாதனுடன் பேசுகிறார். அவர் மகனும் மருமகளும் சென்னைக்கே மாற்றல் வாங்கி விட்டதாகவும், அவரது இரண்டாம் மகனுக்கும் சென்னையிலேயே வேலை தேடப்போவதாகவும், ஆகவே எல்லோருமே ஒன்றாக சென்னைக்கே வந்து குடிபுகப்போவதாக பாகவதர் கூறுகிறார். இங்கு நல்ல ஜாகை தேடவே வந்ததாக அவர் கூற, நாதன் தனது ஃபிளாட்டை தர முன்வருகிறார். வசுமதி அதை நாசுக்காக தவிர்க்கிறாள். நீலகண்டன் வீட்டுக்கருகில் ஜாகை பார்க்கலாமா என நாதன் கேட்க, வேண்டவே வேண்டாம் என பாகவதர் மறுக்கிறார். தனக்கு ஏழரை நாட்டுச்சனி நடப்பதால் இம்மாதிரி விஷப்பரீட்சை வேண்டாம் என அபிப்பிராயப்படுகிறார்.

அது என்ன ஏழரை நாட்டுச்சனி என சோவின் நண்பர் கேட்க, அது பற்றி சோ விளக்குகிறார். ஒரு ஜாதகரின் ராசிக்கு முந்தைய ராசி, ஜாதகரின் ராசி, அவரது ராசிக்கு அடுத்த ராசி ஆகிய மூன்று ராசிகளிலும் சனி தலா இரண்டரை ஆண்டுகள் குடிகொள்வதாக கூறுவார்கள். இது ஒருவரது வாழ்நாளில் இருமுறை ஒரு சுழற்சியாக வருமாம். அதனால்தான் 30 ஆண்டுகாலம் வாழ்ந்தோரும் இல்லை, 30 ஆண்டுகாலம் தாழ்ந்தோரும் இல்லை என கூறப்படுகிறது.

எபிசோட் - 4 (17.12.2009)
(சுட்டி - 1) மற்றும் (சுட்டி - 2)
நீலகண்டன் வீட்டுப் பக்கத்தில் தனக்கு ஜாகை வேண்டாம் என பாகவதர் பதற, நீலகண்டன் இப்போது முழுக்க முழுக்க ஆத்திகராக மாறியதை கூறி அவரை நாதனும் வசுமதியும் சமாதானப்படுத்துகின்றனர். பாகவதர் ஆச்சரியப்படுகிறார். நீலகண்டன் இப்போது நீலகண்டன் ஐயர் ஆகிவிட்டானா என்கிறார். ஆனால் அவர் பிராமணன்னு அசோக் ஒத்துக்கலையே. அவன் உங்களையே பிராமணன் இல்லைன்னு சொல்ல வச்சுட்டானே என நாதன் கூறுகிறார். இதை அசோக் சொல்லவில்லையென்றும் தானே யோசித்து தான் வர்ணரீதியான பிராமணன் இல்லையென தெளிந்ததாகவும் பாகவதர் கூறுகிறார். அதோடு கூட சாரியார், சாம்பு சாஸ்திரிகள் ஆகியோரும் பிராமணர்கள் இல்லை என அவர்களையே ஒத்துக் கொள்ள வைத்து விட்டான் என நாதன் மேலும் கூறுகிறார். அதையெல்லாம் தான் சுயபரிச்சயம் என பார்ப்பதாக பாகவதர் கூறுகிறார். விளக்கில் ஒளி குறைந்தால் திரியை தூண்டிவிடும் செயல்தான் அசோக் செய்தது என்கிறார் அவர்.

அதனால் என்ன லாபம் என நாதன் திகைக்க, எல்லார் மனத்திலும் பகவான் குடிகொண்டுள்ளது உண்மைதான். அதே சமயம் மனிதர்களுக்குள் உள்ள வெளிச்சத்தின் தீவிரம் மனிதருக்கு மனிதர் மாறுகிறது. பலவித வாட்டேஜ் உள்ள பல்புகள் போலத்தான் என்கிறார் பாகவதர். அவரே அவ்வாறு கூறினால் தான் என்ன சொல்வது என நாதன் திகைக்க, இதில் பெரியவர் சிறியவர் என்ற பேதமே கிடையாது என பாகவதர் ஆணித்தரமாகக் கூறுகிறார். எல்லாமே கடவுள் அருளாலேயே நிகழும் என்றும் கூறுகிறார்.

சாரியார் வீட்டில் அவரைப் பார்க்க அவரது சம்பந்தி முதலியார் வந்திருக்கிறார். தனது மாட்டுப்பெண்ணின் பெருமைகளை சாரியார் அடுக்க அவளது தகப்பனார் முதலியார் மகிழ்கிறார். முதலியாரின் மகள் பார்வதி மற்றும் அவள் கணவன் நிரஞ்சனை பற்றி சாரியார் விசாரிக்கிறார். பார்வதிக்கு ரத்தப் புற்றுநோய் என்னும் செய்தியால் முதலியார் கலங்குகிறார். சாரியார் அவரைத் தேற்றுகிறார். தனது மாப்பிள்ளை பாச்சாவுக்கு ஒரு ஆடியோ கேசட் கடை வைத்துக் கொடுக்கும் தனது எண்ணத்தை முதலியார் தெரிவிக்கிறார். சாரியார் அதற்கு பாதி பணம் தான் போடுவதாகக் கூற, முதலியார் மறுத்து விடுகிறார்.

உமா வீட்டில் அவளது மாமியாரும் மாமனாரும் அவளுக்கு சீமந்தம் செய்ய வேண்டியது பற்றி பேசுகின்றனர். சீமந்தத்தை சிம்பிளாக ஆத்துலேயே வைத்துக் கொள்ளலாம் என அசோக் கூறியதாக உமா கூற, அந்த ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர். யார் யார் என்னென்ன செலவு செய்வது என்பது பற்றியும் பேசப்படுகிறது. அதற்கான சம்பிரதாயங்கள் அலசப்படுகின்றன. இது என்ன எதற்கெடுத்தாலும் சம்பிரதாயம் எனக்கூறுகிறார்கள், அதற்கெல்லாம் முடிவே கிடையாதா என சோவின் நண்பர் அலுத்துக் கொள்கிறார். மனிதனுக்கு தேவையான எட்டு ஆத்மகுணங்கள் அவனிடம் வந்ததும் சம்பிரதாயங்கள் தேவை இல்லை என்கிறார் சோ. சம்பிரதாயங்கள் அவற்றை அடைவதற்கான படிகளே என்றும் அவர் கூறுகிறார். இவை எல்லா சாதியினருக்கும் விதிக்கப்பட்டவை என்றும் அவர் கூறுகிறார்.

கௌதமர் எழுதிய தர்மசாத்திரத்தில் 40 சம்ஸ்காரங்கள் எட்டு ஆத்மகுணங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த எண்குணங்களாவன, தயை, சாந்தி, பொறாமையின்மை, சுத்தம், அலட்டிக்கொள்ளாமை, மங்களம், கருமித்தனம் இல்லாமை மற்றும் பற்றின்மை. ஒவ்வொன்றையும் அவர் சுருக்கமாக விளக்குகிறார்.

உமா சம்பந்தமாக அவள் மாமியார் தன் கணவனிடம் சற்றே சிடுசிடுக்கிறாள். அவர் அவளை அடக்குகிறார்.

கோவிலில் நீலகண்டனும் பர்வதமும் பாகவதரை சந்திக்கின்றனர். நாத்திகரான நீலகண்டன் ஆத்திகரானதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கிறார். பாகவதர். நாத்திகர் ஆத்திகராவது போலவே ஆத்திகர்களில் சிலரும்கூட நாத்திகர்கள ஆனதை பாகவதர் விளக்குகிறார். 100% நாத்திகரோ 100% ஆத்திகரோ கிடையாது என பாகவதர் கூற, சோவின் நண்பர் திகைக்கிறார்.

அதற்கு சான்றாக குமரிலபட்டரின் கதையை சோ அவர்கள் கூறுகிறார்கள். புத்தமதத்தரப்பு வாதங்களை பற்றி அறிய தானும் புத்தமதத்தில் சேர்வது போல நடித்த குமரில பட்டர், கடைசியில் புத்தபிக்குகளிடம் அகப்பட்டுக் கொள்கிறார். அவர்கள் அவரை உயரத்திலிருந்து கீழே தள்ள, “வேதம் பொய்யென்றில்லாமல் இருந்தால் அவை என்னைக் காக்கட்டும்” என்னும் கத்தலுடன் கீழே விழ, அவர் உயிர் பிழைக்கிறார். ஆனால் ஒரே ஒரு கண் மட்டும் பார்வையிழந்தது. அதற்கு காரணம் வேதம் பொய்யாக இல்லாமல் இருந்தால் என சந்தேகத்துடன் கூறியதற்கான கூலி என அசரீரி அவருக்கு சொல்கிறது. ஆக, துளி சந்தேகம் வந்தாலும் அது ஒருவகை நாத்திகமே என கூறப்படுகிறது.

(தேடுவோம்)

எங்கே பிராமணன் பார்ட் 2 ஜெயா டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை (நான்கு நாட்கள்) இரவு எட்டு மணி முதல் 08.30 வரை ஒளிபரப்பாகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/17/2009

சூரியின் ஜெஸ்டஸ் - வாரத்தின் எட்டாம் நாள் - 4

இரண்டாம் அத்தியாயம் மிகவும் பெரியதாக உள்ளதால் அதை சில பகுதிகளாகப் பிரித்தேன். மூன்று பகுதிகள் வரும் என முதலில்எண்ணினேன். ஆனால் அது நான்காக வந்துள்ளது.

முதல் அத்தியாயம் இங்கே

இரண்டாம் அத்தியாயம் முதல் பகுதி இங்கே
இரண்டாம் அத்தியாயம் இரண்டாம் பகுதி இங்கே
இரண்டாம் அத்தியாயம் மூன்றாம் பகுதி இங்கே

வாரத்தின் எட்டாம் நாள் (பகுதி - 4)
திருடர்கள் எங்கள் பார்வையிலிருந்து மறைந்ததும் பாக்ஸ்டன் கொரில்லாக்களை பார்த்துச் சொன்னார், “காட்டு ராஜாக்களே, ரொம்ப நன்றி. நீங்க என்னோட கற்பனைலேருந்துதான் வந்தீங்க, அங்கேயே போயிடுங்க”.

கொரில்லாக்கள் களிப்புடன் சத்தம் எழுப்பின. ஒன்றையொன்று பார்த்து தலையாட்டின. ஒரு கொரில்லா சுமார் எழுபது அடி தூரம் அப்பால் சென்று இன்னொரு கொரில்லாவை நோக்கி நின்று கொண்டது.

இன்னொரு கொரில்லா தன் வலிமையான கரங்களில் பாகஸை அலேக்காக தூக்கி பந்தை வீசுவது போல அவரை தூரத்திலிருந்த கொரில்லாவை நோக்கி எறிந்தது. பாகஸ் பல குட்டிக்கரணங்கள் அடித்தவாறே களிப்புடன் கத்திக் கொண்டே பறந்தார். அவர் தோலைத் துருத்தி நின்று கொண்டிருந்த எலும்புகளிலிருந்து சூரிய வெளிச்சம் பிரதிபலித்தது.

இரு கொரில்லாக்களும் அவரை பிடித்து ஒன்றுக்கொன்றை நோக்கி எறிந்தன. ஏதோ பந்து விளையாடுவது போல இருந்தது. நான் ஆச்சரியத்துடன் எல்லாவற்றையும் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தேன். இந்தப் பெரிசு ஆச்சரியம் மேல் ஆச்சரியமாய் காட்டுகிறதே என எண்ணினேன்.

அந்தரத்தில் அவர் உடல் பாரபோலா பாதையில் செல்ல, தரை மீது அவர் நிழலோ நேர்க்கோட்டில் சென்றது.

இம்முறையில் சிறிது நேரம் கொரில்லாக்கள் விளையாடின. பிறகு ஒரு கொரில்லா பாக்னோராமை குழந்தையை கீழே விடுவது போல மெதுவாக நிற்க வைத்தது. தலைசுற்றி கீழேவிழப்போக்றார் என நான் எண்ண, அவரோ ஸ்டெடியாக சிரித்தவாறே நின்றார். கொரில்லாக்கள் முன்னால் ஜப்பானியர் செய்வது போல குனிந்து வணங்கி,“மிக்க நன்றி ராஜாக்களே, என்னை இவ்வாறு கௌரவப்படுத்தியதுக்கு”என்றார்.

கொரில்லாக்களும் அதே முறையில் அவரை குனிந்து வணங்கின. பிறகு சட்டென அருகிலிருந்த மரத்தில் ஏறி அங்கிருந்து மரத்துக்கு மரம் கிளைக்குக் கிளை தாவி அப்பால் சென்றன. அவை கண்பார்வையிலிருந்து அகலும்வரை நான் பார்த்த வண்ணம் நின்றிருந்தேன். பிறகு நானும் அந்த பைத்தியக்கார கிழவரும் ஒருவரை ஒருவார் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தேன். அவர் என்னை புன்னகையுடன் பார்த்தார்.

“நல்லதொரு காட்சி”, என்னால் இதைக் கூறாமல் இருக்க முடியவில்லை.
அவர் சிரித்தார். “நீ நினைத்தாய், அவ்வாறே நடந்தது. இதிலென்ன அதிசயம்”?
நல்லா சொன்னாரையா, அதிசயம் இல்லையாம், ஹூம் என நான் நினைக்க, என் நினைப்பை காதால் கேட்டது போல அவர் சந்தோஷத்துடன் சிரித்தார்.

கானகத்தில் திடீரென எல்லாம் நிசப்தம் ஆயிற்று. பறவைகளின் ஒலி கூட கேட்கவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன். எங்கள் இருவரைத் தவிர யாரையுமே காணவில்லை.
“நாம் மறுபடியும் நமது பாறைக்கு போகும் நேரம் வந்துவிட்டது”, என்றார் ஜெஸ்டஸ்.

நான் சொன்னேன், “இப்போதைக்கு வேண்டும் அளவுக்கு அனுபவங்கள் வந்துவிட்டன. இதற்குமேல் என்னால் தாங்காது. நகரத்துக்கு செல்லும் ஹைவே இங்கேயிருந்து பக்கத்தில்தான். இங்கேயே நான் விடை பெற்று கொள்ளலாம் என நினைக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லைதானே”

“கண்டிப்பா திரும்பிப் போகத்தான் போறே. ஆனாலும் நாம தொடங்கின இடத்துக்கே திரும்பறதுதான் நல்லது. இன்னொரு ரகசியம் தெரிஞ்சுக்கோ, எதுவுமே ஆரம்பித்த இடத்தில்தான் முடியும். இதை யாரிடமும் சொல்லிடாதே”. சிறிது நேரம் சிரித்துவிட்டு மேலே சொன்னார், “நாம இதையெல்லாம் ஆரம்பிச்சது மூங்கில் புதர் கிட்டே இருக்கற அந்தப் பாறையில்தான். அங்கேதான் முதல்ல போகணும். அங்கே போய் எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்”.

நான் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டேன். அவரது மசங்கல்-கசங்கல் தத்துவத்தில் என்னால் ஒரு குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வளவு விஷயங்கள் நடந்தும் எனக்கு களைப்பு என்பதே சுத்தமாக இல்லை என்பதும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அதற்கு மாறாக என்னுள் சக்தி கொப்பளித்து எழுந்தது.

நான்காம் முறையாக அந்த வழியில் சென்று மூங்கில் புதர்களை அடைந்தோம். அதே வழமையான பாறைமீது அமர்ந்தோம்.

முந்தைய நாள் என்னை பாகஸிடம் அழைத்துவந்த அந்த கலப்பின நாய் வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. எங்களைச் சுற்றிச்சுற்றி வந்தது. பாக்ஸ்டனின் காலை நக்கியது. பாகஸ் கைநிறைய பிஸ்கட்டுகளை எடுத்து வீசினார். நாய் அவற்றின் பின்னே ஓடியது.

ஒருவருக்கொருவர் பேசாமல் நீண்ட நேரம் ஓய்வாக அமர்ந்திருந்தோம். முழு விழிப்பு நிலை மற்றும் தூக்க நிலைக்கு இடையில் நான் இருந்தேன். எண்ணங்கள் எனது மனதின் ஆழத்தில் உருவாயின. ஆனால் மேலே வந்து மிதக்கவில்லை. மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன்.
பாகஸ் மிருதுவாக முணுமுணுத்தார், “இப்படித்தான் கற்பனை வேலை செய்யும். கற்பனையும் யதார்த்தமும் அழகாக ஒன்றாகும்”.

அவரது இந்த வார்த்தைகள் எனக்கு புரியவில்லை. “என்ன சொல்லறீங்க”, என நான் துடிப்புடன் கேட்டேன்.
“கடந்த இருபத்திநாலு மணி நேரமாக சுவாரசியமான பல விஷயங்களை நான் கற்பனை செஞ்சேன் இல்லையா”, என்றார் அவர்.
“என்னது, எல்லாத்தையும் கற்பனை செஞ்சீங்களா? அப்போ நிஜமாகவே நடந்தது எல்லாத்தையும் என்னன்னு சொல்லுவீங்க”?
“அதெல்லாம் நடந்தாலும் சரி இல்லேன்னாலும் சரி, எல்லாமே நான் கற்பனை செஞ்சதுதான்.
“ஆனாக்க அதெல்லாம் உண்மையிலேயே நடந்துதே”, நான் விடவில்லை.
“அதெல்லாம் நடந்தா மாதிரி கற்பனை செஞ்சதும் நானே”
“ஆனால் நான் ஒரு தனி சாட்சியா அங்கேயே இருந்தேனே.
“உன்னையும் கூடத்தான் கற்பனை செஞ்சேன்”

மசங்கல்-கசங்கல் தத்துவத்துக்குக் கூட இது கொஞ்சம் ஓவராகத்தான் எனக்குப் பட்டது.

“சரிதான் நிறுத்துங்க சார். நீங்க என்னையும் கற்பனை செஞ்சிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நான் அப்போ அங்கே இருந்தேன். இப்போ இங்கே இருக்கேன்”.
ஒரு கேலியான புன்முறுவல் பூத்தார் அவர்.

“நீ அங்கே இருந்ததாக கற்பனை செஞ்சே. நீ என்னை கற்பனை செஞ்சே, நான் உன்னைக் கற்பனை செஞ்சேன்”.
என்னுள் எரிச்சல், ஆவேசம் கோபம் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தன. நான் கத்தினேன், “அப்படீன்னாக்க கடந்த 24 மணி நேரமா ஒண்ணுமே நடக்கலங்கறீங்களா”?

அவர் என்னவோ அமைதியாகத்தான் பேசினார், “ஒரு நிகழ்வை கற்பனை செய்து கொள்வதும், அதை பார்ப்பதும் வேறு வேறு அல்ல. இதுக்காவெல்லாம் அலட்டிக்கலாகாது. போகட்டும் விடு. அது சரி, நீ எந்த 24 மணி நேரங்களை பற்றி பேசறே”?

இந்தக் கேள்வியால் நான் மறுபடியும் கோபம் அடைந்தேன். “ஒங்களோட அந்த விளங்காத நாய், அந்த பாழாப்போன கருப்பு ஓட்டைகள், அந்த ஆணும் பெண்ணும், அந்தத் திருடங்க ஹாரியும் ஜக்கும், கொரில்லாக்கள், நாகப்பாம்பு எல்லாம்தான்”

பாக்னோமூரா தன் கையை உயர்த்தினார். என் மணிக்கட்டை தன் ஆள்காட்டி விரலால் சுட்டியவாறு கேட்டார், “இப்போ மணி என்ன சொல்லு கண்ணா”?

இத்தனை நேரம் கடிகாரத்தையே மறந்திருக்கிறேன். நேரம் பிற்பகல் இரண்டு மணி, தேதி 11, அதாவது நான் காட்டுக்குள் வந்த அதே நேரம், அதே தேதி. ஆடிப்போய் விட்டேன். நேற்று 11-ஆம் தேதி என்றால் இரவு காட்டில் தங்கிய பிறகு இன்று 12-ஆகத்தானே தேதி இருக்க வேண்டும், அது எப்படி? ஒரு வேளை கடிகாரம் நின்று விட்டதா எனப் பார்த்தேன். இல்லை, அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது. குழப்பங்கள் சுனாமி போல என் மேல் படர்ந்தன. கடந்த 24 மணி நேரங்களில் நடந்த விஷயங்கள் உண்மையே என் எனது மூளையின் ஒவ்வொரு செல்லும் உணர்த்தியது. அதன் நினைவுகளும் துல்லியமாகவே இருந்தன.

வழக்கம்போல பாகஸ் எனது எண்ண ஓட்டங்களை அனாயாசமாகப் படித்தார்.

“ஒரு கனவின் நினைவுகளும் தெளிவாகவே இருக்கறதுல ஆச்சரியம் இல்ல. ஞாபகசக்தியை வச்சுண்டு மட்டும் எதையும் நிரூபிக்க முடியாது. அது வெறும் மாயை. ஆனால் மாயை என்னங்கறதெல்லாம் புரிஞ்சுக்க உனக்கு இன்னும் வேளை வரல்ல. அதுக்காகவெல்லாம் கவலைப்படாதே. வருவது அத்தனையையும் அப்படியே சந்தோஷமா ஏத்துக்கோ”.

ரொம்ப நேரம் யோசித்தவாறே அமர்ந்திருந்தேன். ஒன்றும் தேறவில்லை.

கடைசியில் பாகஸ் சொன்னார், “ரொம்பவெல்லாம் யோசிக்காதே. அது நல்லதல்ல”. என் முதுகில் லேசாகத் தட்டினார். எல்லா கவலைகளும் என்னை விட்டகன்றன. இப்ப என்ன ஆயிடுத்து? கடந்த 24 மணி நேரம் நடந்த நிகழ்ச்சிகள் உண்மையே. ஆகவே என் கடிகாரத்தின்படி நேற்றிய தேதியிலேயே நான் இன்னும் இருந்தால், என் வாழ்நாளில் அதிகப்படியாக ஒரு நாள் கிடைத்தது. இதையெல்லாம் யோசித்தவாறே நான் உரக்கச் சிரித்தேன். எல்லா டென்ஷன்களும் என்னை விட்டு நீங்கின. பாக்ஸ்டனும் என் சிரிப்பில் கலந்து கொண்டார். காடு முழுக்க எங்கள் சிரிப்பொலிகள் எதொரொலித்தன.

“இந்த விஷயத்தை இங்கே முடிச்சுப்போம். முதலில் சாப்பிடுவோம், பிறகு டாட்டா சொல்லுவோம்” என்றார் அவர். நானும் சரி எனச் சொல்ல, அவர் கருங்குழியின் மூடியை விலக்கினார். தேவையான உணவு, பாத்திரங்கள், கப்புகள், தட்டுகள் ஆகியவற்றை எடுத்து கொண்டோம். கடைசியில் மதுவும் அருந்தினோம். அவ்வப்போது எதேச்சையாக பார்ப்பது போல கடிகாரத்தைப் பார்த்தேன். அது என்னமோ சாதாரணமாகத்தான் இயங்கியது. சாப்பிட்ட பிறகு மிகுந்த எல்லாவற்றையும் குழிக்குள் போட்டு மூடினோம் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

பாகஸ் இப்போது ஒரு மந்திரம் போல சொற்களை உச்சரித்தார்,“எல்லாமே கனவுதான். கனவு கண்டேன், காண்கிறேன், எப்போதுமே காண்பேன், கடவுளே உனக்கு என் நன்றிகள்”.

நான் புன்னகை செய்தேன். பாகஸ் பிரதிட்சணமாக தன்னைத்தானே சுற்றி ஒவ்வொரு திக்கை நோக்கியும் வணங்கினார். என் தோள்மேல் கையை வைத்து, “ஓக்கே, வா போகலாம். ஹைவே வரைக்கும் உன்கூடவே வரேன். அங்கே உனக்காக யாரோ காத்துட்டிருக்காங்க. அவங்களோட நீ உன் வீட்டுக்கு செல்லலாம்”.

மறுபடியும் வந்த வழியே சென்றோம். திருட்டு முயற்சி நடந்த இடத்துக்கு வந்தபோது ஆவலுடன் சுற்றும்முற்றும் பார்த்தேன். அம்மாதிரி நிகழ்ச்சி நடந்ததற்கான அடையாளமே இல்லை. “ஏன் சிரமப்படறே”, பாகஸ் கேலியாக சிரித்தார். நான் பேசாமல் இருந்தேன். ஒரு விஷயம் சந்தேகத்துக்கிடமின்றி கற்றுக் கொண்டேன். பாகஸோட பேசியோ விவாதித்தோ ஒண்ணும் சாதிக்க முடியாது. சாத்தியமற்றதை சாத்தியமாக்குவார், சாத்தியமானதை செய்ய முடியாததாகவும் ஆக்குவார்.

நெடுஞ்சாலையின் ஓரத்துக்கு வந்து நின்றோம். அங்கு ஒரு பென்ஸ் கார் ரிப்பேராகி நின்று கொண்டிருந்தது. அதன் சொந்தக்காரர் அருகில் செய்வதறியாது நின்றிருந்தார். அவரே ஓட்டி வந்திருக்கிறார், கார் ரிப்பேராகி இருக்கிறது. யாராவது உதவிக்கு வருவார்களா என்று நோக்கும் முகபாவத்தில் இருந்தார். பாகஸை பார்த்ததுமே அவர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. பாகஸ் விடவில்லை. “என்ன சார் ஏதாவது உதவி தேவையா” என்று கேட்டார்.

“என்னோட பென்ஸ் கார் நின்னு போச்சு”

“உங்க கிட்டத்தான் செல்போன் இருக்குமே. ஏதாவது மெக்கானிக்குக்கு ஃபோன் செய்யலாமே”. இது கூட எனக்குத் தெரியாதா, சரியான லூசுப்பயலா இருக்கானே கிழவன் என காரோட்டி எண்ணியது என்னாலேயே உணர முடிந்தது.

“அதெல்லாம் செய்யாம இருப்பேனா? மெக்கானிக் இங்கே வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்”.

“நான் கேட்டது அடிப்படையான கேள்வி, அதை தவிர்க்க முடியாது. ஒன்றன்பின் ஒன்றாகத்தான் வாதங்கள் முன்னேற வேண்டும் என்பதை தாங்கள் அறிய மாட்டீர்களா”, ஒரு பாஸ்டன் நகர கல்வியாளர் பேசும் உச்சரிப்பில் பாகஸ் பேச, நானே அசந்து விட்டேன்.

காரோட்டியின் கண்கள் வியப்பில் விரிந்தன. பாகஸை மேலும் கீழும் பார்த்தார். ஒரு முன்னாள் பேராசியர் இப்போது பைத்தியமாகி உள்ளார் என தீர்மானித்தது போல தோன்றியது. பாகஸ் என்னைச் சுட்டிக் காட்டியவாறே சொன்னார், “என்னோட பையன் ஒங்க காரை சரிப்படுத்துவான்”.

அந்தக் காரோட்டி இந்த பேக்காவது ரிப்பேர் செய்யறதாவது என்ற சந்தேகம் முகத்தில் தெரிய என்னை உற்றுப் பார்த்தார். அதில் தப்பேயில்லை. ஏனென்றால் எனக்கு நிஜமாகவே கார் ரிப்பேர் எல்லாம் தெரியவே தெரியாது. நன் தயங்கினேன். காரோட்டி முகத்தில் பொறுமையின்மை கூத்தாடியது. எல்லாம் உடனே நடக்க வேண்டும் என்ற பணக்காரர்களுக்கே உரிய அவா தெரிந்தது அவர் முகத்தில்.

பாகஸ் என்னை முன்னால் தள்ளினார். “போய்த்தான் பாரேன்” என்றார். நான் முட்டாளாக இருக்கும் உணர்வு எனக்குள். பென்ஸ் காரின் பேனட்டை திறந்து உள்ளே இருந்த காரேமோரே சமாச்சாரங்களை விழித்து பார்த்தவாறு நின்றேன். திடீரென என் கைகள் தாங்களாகவே என்னிச்சையின்றி செயல்பட ஆரம்பித்தன. சில ஒயர்களை இழுத்தேன், சில நட்டுகளை இறுக்கினேன். என்னென்ன செய்தேன் என்பதை சத்தியமாக இன்றுவரைக்கும் நான் அறியேன்.

பாகஸ் காரோட்டியிடம் சொன்னார், “சார், இப்ப இஞ்சினை ஸ்டார் பன்ணூங்க”.

அவரும் ஸ்டார்ட் கீயை இயக்க, இஞ்சின் உயிர்பெற்றது. நான் அவசர அவசரமாக ஆளைவிடு என்னும் மனநிலையில் பேனட்டை மூடினேன். மறுபடியும் உள்ளே பார்க்கும் தைரியம் இல்லை.

அந்த மனிதர் என்னைப் பார்த்தார். “நீங்க நகரத்துள் போகணுமா”
“ஆம்”, என்றேன்.
“ஏறிக்குங்க. நான் உங்களை கொண்டுபோய் விடறேன்".

காரை சுற்றி டிரைவரின் பக்கத்து சீட் இருக்கும் பகுதிக்கு சென்றேன். பாகஸ் என் முதுகில் செல்லமாக தட்டினார். பிறகு பார்ப்போம் என அந்த செய்கை தெளிவாகக் கூறியது. காரோட்டியின் அருகில் அமர்ந்தேன்.

“பை” என்றார் பாகஸ். நான் அவருக்கு டாட்டா காட்டினேன். பென்ஸ் கார் வேகமெடுத்தது. பாகசுக்கு லிஃப்ட் கொடுக்க அந்த மனிதர் ஏன் முன்வரவில்லை என நான் யோசித்தவண்ணம் இருந்தேன். காரில் செல்லும்போது அவர் என்னுடன் பேசினார்.

“என் பெயர் டோரியன் பிளாங்க்”.
பெயர் எனக்கு பரிச்சயமாக இருந்தது, “நீங்கள் நகரத்தின் சிறந்த வக்கீல் அல்லவா”?
நான் கேட்டது அவருக்கு மகிழ்சியாக இருந்தது. “அப்படித்தான்னு நினைக்கிறேன்”.
என் பெயர் “வைட் ஹார்ட்” என்றேன்.
“அந்த கிழவர் உங்கள் அப்பாவா”?
“அப்படியெல்லாம் இல்லை. எனது நெருங்கிய நண்பர் மாதிரி”
“நல்லா படிச்சவர் மாதிரி இருக்கார். பைத்தியமாவதற்கு முன்னால் பேராசிரியராக இருந்திருப்பாரோ.
“அவ்வாறே இருக்க சான்ஸ் இருக்கு”.
“உங்களுக்கு நிச்சயமா தெரியாதா”?
“அவருக்கு ஒரு மாதிரியான செலக்டிவ் அம்னீசியான்னு சொல்லலாம், தன்னோட வாழ்க்கையில சில விஷயங்கள் அவருக்கு ஞாபகத்துல இல்லை”.
“அடேடே. அவரை மாதிரி உச்சரிப்பில் பேச நான் எவ்வளவு ஆயிரம் டாலரும் கொடுக்கத் தயாரா இருக்கேன். அது சரி, நீங்க என்ன பன்ணறீங்க மிஸ்டர் ஹார்ட்"?
“ஒண்ணும் விசேஷமா இல்லை. நான் ஃப்ரீலேன்ஸ் எழுத்தாளன்”.
“அதுல பணம் வரதா”?
“ரொம்பவெல்லாம் இல்லை. உண்மையைச் சொல்லணும்னா, அப்பப்ப என்னோட மகிழ்ச்சிக்காக எழுதுவேன்”.
அவர் உதடுகளை சுழித்தார். என்னை நம்பாதது தெளிவாகத் தெரிந்தது.

“நான் கொஞ்சம் அதிர்ஷ்டம் செஞ்சவன். எங்க தாத்தா வச்ச சொத்து இருக்கு. அதை வச்சுண்டு சௌக்கியமா வாழ முடியும்”.
அவர் அதை ரசிக்கவில்லை என்பது தெளிவாகப் புரிந்தது. வாழ்வில் லட்சியம் ஏதும் இல்லாதவர்கள் அவருக்கு பிடிக்காது என்பதும் புலப்பட்டது.

ப்ரியாண்ட் சதுக்கத்தில் கார் சிவப்பு விளக்குக்காக நின்றது. “நான் இங்கேயே இறங்கிக்கிறேன். வீடு பக்கத்திலேதான்” என நான் கூறிவிட்டு இறங்கி அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன்.

பச்சை விளக்கு வந்ததும் பென்ஸ் கார் விருட்டென அந்த இடத்தை விட்டு அகன்றது. அது கண் பார்வையிலிருந்து நீங்கியதும் அருகிலுள்ள ஹோட்டலுக்கு சென்று காபி பருகினேன்

பிறகு வீட்டையடைந்தேன். வீடு என்பதை அதை ஒரு கூண்டு எனக்கூறுவதே பொருத்தமானது. குளித்தேன், உடை மாற்றினேன், பிறகு படுக்கையில் வீழ்ந்தேன். போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டேன். இன்னும் 24 மணி நேரம் விடாது தூங்கினாலும் பரவாயில்லை. ஏற்கனவே இந்த வாரத்தின் எட்டாவது நாள் கைக்கு வந்தாயிற்று என சம்பந்தமில்லாமல் தூங்குவதற்கு முன்னால் ஒரு எண்ணம் என் மனதில் ஓடியது.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக வெளியில் போடப்பட்டிருந்த பேப்பரை பிரித்து பார்த்தேன். தேதியை பார்த்தால் 13-க்கு பதில் 12 எனக் காட்டியது.

பல் தேய்த்தேன், முகம் கழுவினேன், காப்பி அருந்தினேன், குளித்தேன். இதெல்லாம் நிஜமாக செய்கிறேனா, அல்லது அவையும் கற்பனைதானா என மயங்கினேன். நான் இப்போ வசிப்பது அமெரிக்காவா, இங்கிலாந்தா இந்தியாவா என மயங்கும் ரேஞ்சுக்கு என்ணங்கள் என்னுள் அலைமோதின.

திடீரென பாகஸின் குரல் என் காதுகளில் “அப்படியே லூசுல உடுப்பா. வருவதை அப்பாடியே ஏர்றுக் கொள்” என எனக்கு கூறுவது போன்ற உணர்வு வந்தது. “தினசரி செய்யற வேலையை செய்தால், எல்லாம் சரியாகும். முக்கியமா நீ வழக்கமா செய்யற சுடோக்கு குறுக்கெழுத்து போட்டியை விடாதே” என்று வேறு எனக்கு அது சொல்வதாக ஒரு பிரமை.

பேப்பரை ஒரு எழுத்து விடாமல் படித்தேன். பதினோராம் பக்கத்தைப் பிரித்தேன். சுடோக்கு என்னை வரவேற்றது. மகிழ்ச்சியுடன் பேனாவைக் கையில் எடுத்தேன்.
(தொடரும்)

ஆன்லைனில் ஜெஸ்டஸின் ஆங்கில மூலத்தை வாங்க இங்கே செல்லவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் - 17.12.2009

கேள்விகள் ஏதும் வராததால் 10.12.2009-க்கான டோண்டு பதில்கள் பதிவு வரவில்லை. இந்த வாரக் கேள்விகளுக்கு செல்வோமா?

அனானி (32 கேள்விகள் கேட்டவர்)
1. உலகிலயே அழகிய பெண்களைக் கொண்ட நாடு நம் நாடா?

பதில்: ஆம். விளக்குகிறேன். பெண்களைப் பொருத்தவரை அவர்கள் அழகாகத் தெரியவேண்டியது ஆணகள் கண்ணில்தான். அப்போதுதான் இனவிருத்தியே நடக்கும் என்பது ஆண்டவன் சித்தம்.

ஆனால் ஒவ்வொரு ஊரிலும் ஆண்களின் ரசனை மாறுபடுகிறது. சீனாவில் சிறிய பாதங்களையுடைய, சப்பை மூக்குப் பெண்களே அன்னாட்டு ஆண்களின் கண்களுக்கு அழகாகத் தெரிகின்றனர். ஐரோப்பாவில் பருத்த மார்பகங்களையுடைய பெண்களை பசுக்களுக்கு ஒப்பிட்டு கேலி செய்கின்றனர். ஆனால் இந்திய துணைக்கண்டத்து ஆண்களுக்கு, குறிப்பாக ராஜ் கபூர், டோண்டு ராகவன் ஆகியோருக்கு அதுதான் பிடித்த விஷயமே.

ஆக, என்ன சொல்ல வந்தேன்? அவரவர் நாட்டுப் பெண்கள் சம்பந்தப்பட்ட ஆண்களின் கண்களுக்கு அழகாகத் தெரிவார்கள்.

2. பகல் தூக்கம் போடுகிறவர்களை பற்றி?
பதில்: கடந்த ரெண்டு நாட்களாக மொழிபெயர்ப்பு வேலை அதிகமானதால் பகலில் தூங்க நேரம் இல்லை. இக்கேள்விக்கு ஒரு பகல் தூக்கம் போட்டு விட்டு பதில் சொல்கிறேனே.

3. தமிழ் நாட்டில் எத்தனையோ கட்டுப்பாடுகள் இருந்தும், ‘பலான’ படங்கள் இன்னும் வருகின்றனவே. இது எப்படி?
பதில்: பட்டினப் பிரவேசம் என்னும் பாலசந்தரின் படம் ஒன்று Conquerors of the golden city" என்னும் ஆங்கிலப் படத்தின் தழுவல் என படித்திருக்கிறேன். அந்த ஆங்கிலப்படம் ஒரு திரைப்பட விழாவில் சமீபத்தில் அறுபதுகளில் சென்னைக்கு வந்த போது ஓடியன் தியேட்டரில் போட்டார்கள். அதில் வரும் சில பலான காட்சிகளுக்காக கூட்டம் அம்மியது. அடிதடி எல்லாம் நடந்தது.

தனது ஒரு சுற்றுப்பயணக் கட்டுரையில் இதயம் பேசுகிறது மணியன் இதே படம் அமெரிக்காவில் ஒரு தியேட்டட்ரில் பார்க்க ஆளின்றி ஈயடித்தது பற்றி எழுதினார். எதுவுமே குறைந்த சப்ளையில் இருந்தால் அதற்கு கிராக்கி இருக்கத்தான் செய்யும். அதுவும் பலான விஷயங்கள் பலான காரணங்களுக்காக பலான முறையில் எல்லாம் தடை செய்யப்பட்டால் இப்படித்தான் நடக்கும்.

4. பொதுவாய் வாழ்க்கையில் முன்னேற வயது ஒரு தடையா?
பதில்: இல்லை இல்லவே இல்லை. முதல் முத்லாக 56 வயதில்தான் கணினியை தொட்டிருக்கிறேன். இப்போது அதை கற்றுக்கொண்டு நான் இன்னும் அதிகமாக எனது மொழிபெயர்ப்புத் துறையில் முன்னேறுகிறேன்.

ஒரு சராசரி மனிதனான என்னாலேயே இதைச் செய்ய முடிந்தபோது மற்றவர்களுக்கு என்ன தடை? வயசெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

5. உலகில் உண்மையான பொதுநலவாதி யார்?
பதில்: ஏசு கிறிஸ்துவைத்தான் உண்மையான கம்யூனிஸ்ட் என பலரும் நம்புகின்றனர், நான் உட்பட.

நம்ம ஊர் பக்கம் வந்தால், தான் பெற்ற மந்திர உபதேசத்தை கோவில் உச்சியில் நின்று எல்லோருக்கும் உபதேசித்த ராமானுஜர் நினைவுக்கு வருகிறார்.

6. சிறந்த சேமிப்பு வழி முறைகள் எவை?
பதில்: சேமிப்பு நல்லதுதான், தேவைதான்.
அதற்காக ஒரேயடியாக சேமித்து கொண்டே இருக்க வேண்டுமா? என்ன சௌகரியங்களோ அவற்றையும் அனுபவிக்க வேண்டாமா? அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. அவை எந்த அளவில் பேலன்ஸ் செய்ய வேண்டும் என்பது அவரவர் வாழ்க்கை உள்விவகாரம். ஓரளவுக்குமேல் அதில் மற்றவர் தலையீடு இருக்க அனுமதிக்கலாகாது.

எனக்கு 12 வயதாயிருந்த போது, காங்கிரஸ் பொருட்காட்சிக்கு சென்றிருந்தேன். கூடவே என் அத்தை பிள்ளையும் (என் மனைவியின் அண்ணன்) வந்தான். எனக்கு என் அம்மா 70 பைசா தந்தார். அவனுக்கு என் அத்தை இரண்டு ரூபாய் தந்தார். அப்போதே டட்ச் ட்ரீட் முறைதான். உள்ளே செல்ல டிக்கட் 12 பைசா. பிறகு இரண்டு சித்திரக் கதை புத்தகம் ஒன்று 12 பைசா வீதம் வாங்கினேன். ஆக 36 பைசாக்கள் செலவு. வெறுமனே பொருட்காட்சியை சுற்றி வந்தேன். கூட வந்த அத்தை பிள்ளையோ அத்தனைப் பணத்தையும் செலவழித்தான். சில சமயம் எனக்கும் சில பொருட்கள் வாங்கித் தர முன்வந்தான். (அவனுக்கு எப்போதுமே தாராள மனசு). ஆனால் நான் மறுத்துவிட்டேன். பிறகு வீட்டுக்கு திரும்பினோம். போகவர நடை மட்டுமே. என் அம்மாவிடம் பெருமையாக நான் மீதம் பிடித்ததைக் காட்ட அவர் அதை எடுத்து வேறு செலவுக்கு உபயோகித்தார். அதற்காக அவரைக் குற்றம் சொல்ல இயலாது. வீட்டு நிலவரம் அப்படி. ஆனால் அதே சமயம் நான் 70 பைசாவையுமே செலவழித்திருந்தாலும் அவர் ஒன்றும் கூறியிருந்திருக்க மாட்டார்தான்.

இங்குதான் நான் நேரிடையாகவே ஒரு பாடம் கற்றேன். அதாவது செலவழிக்க வேண்டியதை செலவழிக்க வேண்டும் என்பதுதான் அது. மீதம் செய்தால் இம்மாதிரி கைமீறிப் போவதையும் எதிர்ப்பார்க்கத்தான் வேண்டும்.


7. தமிழா... இன உணர்வு கொள்! என்கின்றனரே... இது பற்றி?
பதில்: தமிழர் உணர்வு, ஈழத் தமிழர் உணர்வு, தெலுங்கர் உணர்வு, தெலிங்கானா உணர்வு என்று இப்போதெல்லாம் மாவட்டத்துக்கு மாவட்டம் ஆட்டம் போடுகின்றனவே. அவரவருக்கு ரொம்பவே நேரம் இருக்கிறது போல.

8. கோவில் விழாக்களில், சாமியாடுதல்' என்று கூறி, சாராயம் குடித்து, குறி சொல்வது தமிழர் பழக்கம்; மற்ற மாநிலங்களில் எப்படி?
பதில்: எல்லா மாநிலங்களிலும் இது உண்டு. ஹிந்திப் படங்களில் பார்த்ததில்லையா?

9. நாணம், பயிர்ப்பு, இவை எல்லாம்?
பதில்: ஆண்களின் மனவமைதிக்காக உருவாக்கப்பட்டவை. அவற்றையே பெண்களுக்கான அழகாக வைத்தது வேறு காம்ப்ளிகேஷன்களை வளர்த்தது வேறு விஷயம்.

10. வெளி மாநிலத்தவர்கள், காஷ்மீரில் நிலம் வாங்கவோ, காஷ்மீரிகள், வெளிமாநிலத்தாருக்கு விற்கவோ முடியாது என்பது பற்றி?
பதில்: சட்டப்பிரிவு 370 என நினைக்கிறேன். இந்த சலுகை நேருவால் காஷ்மீர மக்களுக்கு அவர்களது இணைப்பைப் பெறுவதற்காக தரப்பட்டது. அவர் செய்த பல சொதப்பல்களில் காஷ்மீரும் ஒன்று.

அவர் செய்த முதல் குளறுபடி காஷ்மீர பிரச்சினையை கையாண்ட விதமே. பட்டேல் உறுதியாக நடவடிக்கை எடுத்து பாக் படைகளை காஷ்மீரத்திலிருந்து துரத்திக் கொண்டிருந்த நேரத்தில் இந்த மனிதர் ராபணா என்று பாதுகாப்பு கவுன்சிலுக்கு போனார். அவர்கள் இட்ட ஷரத்துப்படி போர்நிறுத்த எல்லை என்று "தற்காலிகமாக" உருவாக்கப்பட்டது. அது இப்போதும் அப்படியே இருப்பதுதான் இந்த தற்காலிகத்தின் லட்சணம். காஷ்மீருக்கு தனி அந்தஸ்தெல்லாம் யாரும் கேட்காமலேயே இந்த மனிதர் கொடுத்துள்ளார். மக்கள் வாக்கெடுப்புக்கும் ஒத்துக் கொண்டார். அதாவது எல்லாமே இந்தியாவின் நலனுக்கு விரோதமாக அமைந்தது. இதில் என்ன துரதிர்ஷ்டமான நிலை என்றால். இவர் ரொம்ப நல்லவர். எல்லோரும் தன்னைப் போல என நினைத்தவர். ஆனால் இந்தியாவுக்கு தேவை நல்லவர் அல்ல, ஒரு வல்லவர். இவர் அது அல்ல.

11. உலகில் டிவி' ரிமோட் மட்டும் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால்...என்னவாயிருக்கும்?
பதில்: வீடுகளில் ரிமோட்டைக் கைப்பற்றுவதற்காக சண்டை இருக்காது.

12. மயக்கும் விழிப்பேச்சில் வல்லவர்கள் ஆண்களா, பெண்களா?
பதில்: பெண்கள் என்றால் அது அவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது என்னும் வகையில் அவர்கள் பெருமிதம் கொள்ளலாம். ஒரு ஆணை அவ்வாறு கூறினால், அவனா நீயி என தன்னை கேட்பதாக எண்ணிக் கொண்டு அவன் சண்டைக்கு வருவான்.

13. வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் இந்தியர்களின் தற்போதைய நிலை எப்படி?
பதில்: வெளி நாட்டினர் அதிகமாக வேலை செய்யும் எந்த நாட்டிலுமே அந்த வெளிநாட்டவர்களது நிலைமை நிலையானதில்லை. இந்தியர்கள் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்?

14. பசியால் ஒருவன் மாண்டு போவது போன்ற கொடுமைக்கு பொறுப்பு யார்?
பதில்: தனியொருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி.

15. ஊரை கலக்கும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் பார்ப்பதுண்டா?
பதில்: இல்லை, விஜய் டிவியெல்லாம் பார்ப்பதில்லை.

16. அமெரிக்க அதிபர் ஒபாமா உண்மையில் மாற்றங்களைக் கொண்டு வந்ததன் பலன் என்ன?
பதில்: ஒபாமா எனக்கு லிண்டன் ஜான்சனைத்தான் நினைவுபடுத்துகிறார். அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னால் நான் எழுதியது, “சமீபத்தில் 1964-ல் ரிபப்ளிக்கன் வேட்பாளர் கோல்ட்வாட்டர் தேவையானால் வட வியட்னாம் மேல் குண்டுகளும் வீசலாம் என்றார். லிண்டன் ஜான்ஸனோ வியட்னாம் யுத்தத்தை பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப் போவதாக எலெக்‌ஷன் மீட்டிங்குகளில் கூறி வந்தார். இப்போது இந்த ஒபாமா ஈராக் யுத்தத்தைப் பற்றிப் பேசுவதுபோல என வைத்து கொண்டால் தவறில்லை. ஜான்ஸன் வெற்றி பெற்றார். ஆனால் என்னாயிற்று? ஜான்ஸன் காலத்தில்தான் யுத்தமே கடுமை அடைந்து, 1968 துவக்கத்தில் டெட் தாக்குதல் நடந்து அமெரிக்காவின் மானமே கப்பலேறியது. அடுத்து வந்த நிக்ஸன்தான் வியட்னாமிய யுத்தத்தை முடித்து வைத்தார். நிக்ஸன் தவறே செய்யவில்லை எனக் கூற மாட்டேன். ஆனால் அவர் அமெரிக்காவின் நலன்கள் எனக் கருதுவதில் விட்டுக் கொடுக்காமல் இருந்தார். நிக்ஸனைப் பற்றி பல ஜோக்குகள் இருந்தாலும், வெளியுறவு விவகாரங்களில் ஒரு ஜோக்கும் அவரைப் பற்றி இல்லை என்பதை நிக்சனை மிகவும் எதிர்த்த பத்திரிகையாளர்களே கூறியுள்ளனர்”.

17. தேமுக தலைவர் விஜயகாந்தின் அரசியல் பாணி வெற்றி பெறுமா?
பதில்: இப்போதைக்கு வெற்றியடைவது போலவே தோன்றுகிறது. நடக்கப்போவதை யார் அறிவார்?

18. பொதுவாய் ஒருவன் அசடு வழிவது என்றால்?
பதில்: ஏதோ ஃபிகரிடம் மாட்டிக்கொண்டான் என்று கூறலாமே.

19. பரந்த உலகில் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வாழமுடியுமா?
பதில்: பத்திரமான வங்கிகளில் கொழுத்த கணக்கு இருந்தால் அவ்வாறு வாழலாம்.

20. ஆந்திராவில் காங்கிரஸ் நிலை?
பதில்: ஆப்பில் மாட்டிய குரங்கின் நிலைத்தான்.

21. பலர் கேள்வி கேட்பது, நீங்கள் பதில் சொல்வது இது பற்றி?
பதில்: கேட்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியேன். ஆனால் என்னைப் பொருத்தவரை இது ஒரு சேலஞ்சுதான். எந்தக் கேள்வி எங்கிருந்து வரும் என்பது தெரியாது, எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் இத்திறமை பற்றி நான் இட்டப் பதிவிலிருந்து சில வரிகள்:
எனது சட்டம் ஒரு கழுதை பதிவில் அனானி ஒருவரின் கமெண்ட் ஒன்று வந்துள்ளது. அதில், “ஒரு சில பதிவுலக நண்பர்கள் தற்சமயம் கேள்வி பதில் சுவை குன்றியிருப்பதாகவும் கேள்விகள் வரத்து குறைவாய் இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதை சுவை உடையதாய் மாற்ற ஒரு எளிய வழி. வெள்ளிக்கிழமை தொடங்கி-வியாழன் இரவு வரை நடக்கும் அரசியல், சமுக, கலையுலக நிகழ்வுகளை வைத்து தாங்களே ஒரு கேள்வி பதில் நிகழ்வினை நடத்தினால் அது நிச்சய்ம் அனைவரையும் விரும்பி படிக்க வைக்கும்”.

அவருக்கு பதில் கூறவே இப்பதிவு.

நன்றி அனானி. ஆனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை. நானே எனக்கு நானே கேள்வி கேட்பது எனக்கு நானே தண்ணீர் வாயில் ஊற்றிக் குடிப்பதற்கு சமம். அதுவே மற்றவர்கள் ஊற்றும்போது அந்த ஸ்பீட் என் கண்ட்ரோலில் இல்லை, இருப்பினும் அதை சமாளிப்பதுதான் சாதனை. மற்றவர்கள் எந்த கேள்வி கேட்டாலும் நான் பதிலளிக்க முயலுகிறேன்.

எனது துபாஷி வேலையும் கிட்டத்தட்ட அம்மாதிரிதான். விசிட்டரோ உள்ளூர் வாடிக்கையாளரோ என்ன பேசுவார்கள் என்று அறிய இயலாது. ஒரு சமயம் டி.சி. மோட்டார் ஸ்பீட் கண்ட்ரோல் பேசலாம், அடுத்த நிமிடம் காபரே பற்றிப் பேசலாம். விருந்தாளி மனைவியை அழைத்து வராததாதால் வரும் பிரச்சினைக்கு அவர் அதை கையில் எடுத்து கொண்டால் சரியாகி விடும் என்று கூறியதை முன்னாலேவா ரிகர்ஸ் செய்து கொள்ள முடியும்?

22. பலரால் சுட்டிக்காட்டப்படும் ஸ்விஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்புப்பணம் எவ்வளவு?
பதில்: 1500 பில்லியன் டாலர்கள் என இந்த உரலில் கூறியுள்ளனர்.

23. தலைவர் கலைஞர் - சன் டீவி மாறன் குடும்ப உறவு இப்போது?
பதில்: பரஸ்பர நம்பிக்கை எப்போதோ போயிற்று.

24. மதுரை அழகிரியாரின் நெருக்குதலுக்கு இந்தத் தடவை தலைவரின் உறுதியான முடிவு தொடருமா?
பதில்: எதையும் சொல்லும் நிலையில் தலைவரே இல்லை. நான் எப்படி சொல்வது?

25. வாழும் தமிழக அரசியல் தலைவர்களில் இலங்கைத் தமிழர்களின் மீது உண்மையான பாசம் கொண்டவர்?
பதில்: கலைஞர்னு சொன்னா ஒத்துண்டுடப் போறேளா?

26. வாழும் தமிழக அரசியல் தலைவர்களில் இலங்கைத் தமிழர்களின் மீது போலியான பாசம் கொண்டவர்?
பதில்: மேலே சொன்ன பதிலை கண்டிப்பா யாரும் ஒத்துக்கலைத்தானே?

27. தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் யார்?
பதில்: ஜே.பி. சந்திரபாபு

28.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்? தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு சாத்யமா?
பதில்: எங்கே தமிழகத்திலா? இப்போதைக்கு நோ சான்ஸ்

29. தற்சமயம் உள்ள தமிழ்த் தொலைக்காட்சிகளில் உருப்படியான நிகழ்ச்சி எது?
பதில்: ஜெயா டிவியில் சோவின் எங்கே பிராமணன் (திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 முதல் 8.30 வரை வாரத்துக்கு நான்கு நாட்களுக்கு)

30. உலகில் எதிரிகளே இல்லாதவர்கள் யாரேனும் உண்டா?
பதில்: எனக்குத் தெரிந்து அவுரங்கஜீப், அவர் இறக்கும் தருவாயில். ஏனெனில் எல்லா எதிரிகளையும் அவர் கொன்று தீர்த்து விட்டார்.

31. டெஸ்ட் போட்டி தர வரிசையில் முதலாம் இடத்துக்கு முன்னேறி விட்டதே இந்தியா?
பதில்: மிக்க மகிழ்ச்சி. டெண்டுல்கர், தோனி, சேவாக் ஆகியோர் தலா நிறைய கோல்கள் போட்டு இந்தியாவுக்கு இந்த இடத்தைத் தேடித் தந்துள்ளனர்.

32. பாரதி விழா( 11.12.2009) கொண்டாடங்கள் இந்த வருடம் எப்படி?
பதில்: மன்னிக்கவும்


எம். கண்ணன்
1. எங்கே பிராமணன் - 2ஆம் பாகம் திங்கள் (டிசம்பர் 14 முதல்) - கதையை எப்படி கொண்டு செல்வார் சோ ? உங்கள் யூகம் என்ன?
பதில்: ஜூலை 27, 2009 தேதியிட்ட எனது இப்பதிவில் நான் இவ்வாறு யூகத்தை வெளியிட்டிருந்தேன்.

“வர்ண ரீதியான பிராமணனை தேட அசோக்கால் முடியாமல் போன நிலையில், அம்மாதிரியான தேடலே அவசியமா என்பதுதான் எனது மனதில் எழுந்துள்ள இப்போதைய கேள்வி.

அதே சமயம், “அசோக் தேடிய ரேஞ்சுக்கு உண்மையான, வர்ணரீதியான பிராமணன் இப்போது இல்லை என்பது நிலைநிறுத்தப்பட்டாலும், அதை அடையும் பாதையில் இருப்பதாக நான் சாரியார், சாம்பு சாஸ்திரிகள், மற்றும் சிகாமணியை அடையாளம் காண்கிறேன்” என்றும் நான் சீரியலின் கடைசி பகுதிக்கான ரிவ்யூவில் எழுதியிருந்தேன். ஒரு வேளை இந்த சீரியலின் இரண்டாம் பகுதியில் இது சம்பந்தமாக ஏதேனும் சொல்லப் போகிறார்களா என்பதை அறிய நானும் ஆவலுடன் இருக்கிறேன்.

அதாவது, வர்ணரீதியான பிராமணன் என்னும் ஆதரிச நிலையை 100% அடைய முடியாவிடினும், அதை அடையும் முயற்சியில் யாராவது இருக்கிறார்களா என்பதையாவது பார்க்கலாம் அல்லவா? புத்தகமும் சரி சீரியலும் சரி நிறுத்தப்பட்ட இடம் முடிவான இடமா அல்லது வெறும் திருப்பு முனையா என்பதையும் இந்த எக்ஸ்டென்ஷன் - அது நிஜமாகவே வரும் பட்சத்தில் - ஆராயுமோ?

அசோக்கின் இந்த முயற்சியில் மாஜி நாத்திகர் நீலகண்டன் ஏதேனும் பங்கு வகிப்பாரா? சாம்பு சாஸ்திரிகள் முயற்சியில் வேத பாடசாலை நன்கு உருவானதா? இம்மாதிரி பல கேள்விகள் எனது மனதில் உள்ளன. மேலும் சாம்பு சாஸ்திரிகள், பிரியா, உமா, பாகவதர், சிகாமணி, சாரியார் ஆகியோரையும் பார்க்க மனம் விழைகிறது.

எது எப்படியாயினும் சோ அவர்கள் நினைப்பதுதான் நடக்கப் போகிறது”.

ஆனால் இரண்டாம் பார்ட்டின் முதல் எபிசோடிலேயே எனது ஊகங்கள் தவறானவை எனத் தெரிந்து விட்டது. நாரதர் கூறியபடி தன்னுள்ளேயே அசோக் வர்ணரீதியான பிராமணனைத் தேடப் போகிறான். தேவையானால் தன்னையே நல்ல பிராமணனாக உருவாக்கிக் கொள்ளப் போகிறான். அது மிகுந்த பிரயாசைகளுக்கு வழிவகுக்கும். என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளால் நானும் முரளி மனோகரும் மாற்றி மாற்றி பதிவுகள் போட்டு எல்லா எபிசோடுகளையும் கவர் செய்வோம். இப்போது நாவல் ஏதும் இல்லை படித்து கெஸ் செய்ய.

2. பூணூல் போடாத பிரபலங்கள் என விகடன் பொறுப்பாசிரியர் ரவிபிரகாஷ் சில பிரபலங்களை சுட்டியுள்ளார்.(ஆசிரியர் சாவி, ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன், ஹாய் மதன், பத்திரிகையாளர் ஞாநி) அவர் சொல்லியுள்ள காரணம் அவருக்குப்(ரவிபிரகாஷுக்கு) பொருந்தலாம். ஆனால் மற்ற பிரபலங்கள் ? http://vikatandiary.blogspot.com/2009/11/blog-post_30.html
பதில்: பூணல் போடுவதும் போடாததும் சம்பந்தப்பட்ட பார்ப்பனரின் விருப்பம். மற்றப்படி இதற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாதவர்கள் கருத்து கூற ஒன்றும் இல்லை. அவரவர் விருப்பம் பொருத்தவரை டோண்டு ராகவனும் சம்பந்தப்படாதவனே. அவனுக்கு தனது பூணல் பற்றி மட்டும்தான் பேசும் உரிமை உண்டு.

3. ஆந்திரா - தெலுங்கானா பிளவு பற்றி உங்கள் கருத்து என்ன ? இது மாதிரி ஒவ்வொரு மாநிலத்திலும் பிளவுகள் வந்தால் நாடு என்னாகும்?
பதில்: நண்பர் பத்ரி அவர்கள் தெலுங்கானா பற்றிய தனது பதிவில் இது குறித்து அற்புதமாக எழுதியுள்ளார். அதில் உள்ள கருத்துத்தான் என்னுடையதும்.

4. ஜூன் வரை வெயிட்டீஸ் என்கிறார் கருணாநிதி. குடும்ப உறுப்பினர்களின் தொல்லை மிக அதிகமாகிவிட்டதோ?
பதில்: எந்த ஜூன் என்று சொன்னார்? 2010-ஆ அல்லது 2011-ஆ?

5. பாமக நிறுவனர் ராமதாசின் மீதான கொலைவழக்கில் அவர் விடுவிப்பு - மீண்டும் மஞ்சள் துண்டு போர்த்தும் படலமா?
(http://lite.epaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=4&sectid=edid=&edlabel=TOICH&mydateHid=11-12-2009&pubname=Times+of+India+-+Chennai&edname=&articleid=Ar00402&publabel=TOI)
பதில்: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

6. டிசம்பர் சீசன் துவங்கிவிட்டதே. கச்சேரிகளுக்கு கூடிப் போகச் சொல்லி வீட்டம்மாவின் தொந்தரவு கிடையாதா?
பதில்: எங்கள் இருவருக்குமே அதில் ஆர்வம் இல்லை.

7. இந்த வருடம் சென்னையில் குறைந்த மழை - கோடையில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு வருமா?
பதில்: எப்போதுமே தென்மேற்கு பருவ மழையால் நமக்கு மழை அவ்வளவு இல்லை. வடகிழக்கு பருவ மழைதான் முக்கியம். இந்த ஆண்டு அது நன்றாகத்தான் உள்ளது என நினைக்கிறேன். எங்கள் தோட்டத்து கிணற்றில் நீர் தரை அளவுக்கு வந்து விட்டது.

எதற்கும் இருக்கட்டும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்துக்கு ஃபோன் (28271004) போட்டேன். இந்த ஆண்டு பருவ மழைகள் இரண்டுமே சென்னையில் நார்மல் என பதில் வந்தது.

8. லண்டனின் தேம்ஸ் நதி போல கூவத்திலும் படகில் செல்லும் பாக்கியம் நமது வாழ்நாளிலாவது கிட்டவேண்டும் என ஸ்டாலின் மெனெக்கெடுவது போல தெரிகிறதே? சாத்தியம் தானா?
பதில்: நல்ல நகைச்சுவை

9. குருவி, வில்லு, வேட்டைக்காரன் - எது பார்த்தால் தலைவலி குறையும் அல்லது கூடும் ? (3 படப் பெயர்களுக்கும் தொடர்பு இருப்பது போல உள்ளதே?) சன் டிவி குழுமத்தில் அடாவடிகளால் இனிமேல் விஜய் அந்தப் பக்கம் தலைவைத்துப் படுப்பாரா? இல்லை வேட்டைக்காரன் விளம்பரத்திற்காக தொடர்ந்து பல ஊர்களிலும், தியேட்டர்களிலும் வந்து ரசிகர்களுக்கு கை அசைக்க வைக்கப்படுவாரா?
பதில்: விஜய்க்கு இருக்கும் நிர்ப்பந்தங்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

10. புதிய தலைமுறை பத்திரிக்கை - யாருடையது ? சன் குழுமமா? இல்லை வேறு யாராவதா? எப்படி 5 ரூபாய்க்கு விற்க முடிகிறது? அதுவும் இவ்வளவு டிவி விளம்பரங்களுடன்?
பதில்: அது எஸ்.ஆர்.எம். குழுமத்தைச் சேர்ந்தது. ஆசிரியர் மாலன். மாணவர்களை குறிவைத்து லாபநோக்கின்றி வெளியிடப்படுகிறது. அடக்கவிலை 13 இருக்க, பத்திரிகையின் விலை 5 ரூபாய்கள் மட்டுமே.

விஷய்ம் தெரிந்த பதிவுலக நண்பருக்கு ஃபோன் போட்டு தெரிந்து கொண்டது. அவர் யார் என்பதை நான் சொல்லப்போவதில்லை. அவரே அதை பின்னூட்டத்தில் கூறினால் ஆட்சேபணையும் இல்லை.


வால்பையன்
1. மோடி பூணூல் போடாத பார்ப்பானா
பதில்: மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். நீங்கள் சொல்லும் தலித்துகள் மேல் வன்கொடுமை இந்தியாவின் எல்லா மாவட்டங்களிலும் நிகழ்கிறது. அதற்காக மோதியை கண்டித்தால், முகவையும் கண்டிக்க வேண்டியிருக்கும்.

அவரைப் போல தனக்கோ தன்குடும்பத்தாருக்கோ சொத்து சேர்க்காது, ஊழலின்றி ஆட்சி புரியும் ஒரு முதல்வரும் வேறு மானிலங்களில் தற்போது இல்லை என்பதுதான் நிஜம்.


கந்தசாமி
இவைகளுக்கு உங்கள்( ஸ்பெஷல்)சூப்பர் கமெண்ட்?
1. பெண்​கள் அசைக்க முடி​யாத சக்​தி​: மு.க.ஸ்டா​லின் -அப்போ ஜெயலலிதா!

பதில்: ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவர். அரசியல் விரோதி. அவ்ரை பெண்ணாக திமுகவினர் நினைக்கவில்லை, அவரும் அதை எதிர்பார்க்கவில்லை. உண்மையில் அவரது மந்திரிசபையில் அவர் மட்டுமே ஆண் என இந்திரா காந்தி, கோல்டா மையர், மார்க்கரெட் தாட்சர் ஆகியோர் பற்றி குறிப்பிட்டது ஜெயுக்கும் பொருந்தும்.

2. கூட்​டணி வைப்​பேன்:​ விஜ​ய​காந்த்-அதிமுகவுடனா?
பதில்: திமுக தோற்க வேண்டுமானால் இதுவும் நடக்க வேண்டும். ஆனால் இந்த மனப்பாங்கு விஜயகாந்திடமோ ஜெயலலிதாவிடமோ இருக்கும் எனத் தோன்றவில்லை.

3. திரைப்​ப​டத் தொழி​லா​ளர் நல​வா​ரி​யம் அமைப்பு​: முதல்​வர் கரு​ணா​நிதி-பாசம்ன்னா இதுதான்
பதில்: பந்தபாசமோ பாசம்.

4. வங்கி ஊழி​யர்​கள் இன்று வேலை​நி​றுத்​தம்?-இது ஓவராயில்லை?
பதில்: ஸ்டேட் பாங்கில் இருந்து ஓய்வு பெற்ற எனது நண்பனுடன் பேசினதில் இதில் பிரமோஷன் குழப்பங்கள் முக்கியப் பங்கு வகிப்பதை அறிந்து கொண்டேன்.

5. வேடிக்கை பார்க்​கும் அமைப்​பு​தான் தேர்​தல் ஆணை​யம்:​ ராம​தாஸ்-நெசமாலுங்களா!
பதில்: இப்போது இருக்கும் தலைமை தேர்தல் கமிஷனர் இருக்கும் நிலையில் ராமதாசர் கூறுவது முழுக்கவே புறக்கணிக்க முடியாதுதான். ஏதோ நரேஷ் குப்தா இருக்கிறாரோ, கமிஷனின் பேர் பிழைக்கிறதோ.

6. நெல்லை விடு​தி​க​ளில் போலீ​ஸôர் திடீர் சோதனை​: ரூ.​ 41 லட்​சம் பறி​மு​தல்; அதி​மு​க​-வினரி​டம் விசா​ரணை-பழி ஒரிடம் பாவம்!
பதில்: 41 லட்சத்தை பறிமுதல் செய்பவர்கள் 41 கோடிகளை கண்டுகொள்ளாமல் விடுவது விசித்திரமே.

7. பாடாய் படுத்​தும் ஏ.டி.எம்.கள்-மெசினை நம்பினோர்...
பதில்: அவற்றுக்கு நல்ல செக்யூரிடி தேவை. பல மெஷின்களில் இந்த விஷயம் புறக்கணிக்கப்படுகிறது. மற்றப்படி ஏடிஎம்மே வேண்டாம் என இருக்கும் என் போன்றவர்களுக்கு பல உள் விஷயங்கள் தெரியாது என்பதும் நிஜமே.

8.ஆலங்​கு​டி​யில் குருப் பெயர்ச்சி வழி​பாடு-நல்ல அறுவடை சாமிகளுக்கு!
பதில்: ஆலங்குடியில் மட்டும்தானா? தமிழகத்தின் மீதி கோவில்களில் இல்லையா?

9. தமி​ழ​கத்தை பிரிக்​கும் கோரிக்​கைக்கு ‘இந்​து​முன்​னணி’ எதிர்ப்பு-அப்படி போடு அறுவாளை
பதில்: இந்து முன்னணியினரோ பாஜக-வோ அடிமட்டத்திலிருந்து தங்கள் அரசியல் தளத்தை அமைத்து, பலம் இருக்கும் த்குதிகளில் மட்டும் போட்டியிட்டு மெதுவாக வளர வேண்டியவர்கள். தேவையில்லாத ஸ்டண்டுகள் எல்லாம் காரியத்துக்காகாது.

10. திரு​வண்​ணா​மலை நகைக் கடை​யில் 5 கிலோ தங்​கம் திருட்டு -கணக்கு இருக்கா!
பதில்: யாரிடம்?


மீண்டும் அடுத்த வாரம் கேள்விகள் வந்தால் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது