2/28/2009

சுவாரசியமாக தினங்கள் இப்போது செல்கின்றனவா சுஜாதா அவர்களே?

அதற்குள் ஓராண்டு ஆகிவிட்டது என்பது திகைப்பை அளிக்கிறது. பலரை பொருத்தவரையில் சுஜாதா அவர்களின் மறைவு சமீபத்தில் நடந்ததாகவேதான் தோன்றியிருக்கும் என நம்புகிறேன். சமீபத்தில் 1956-ல் என்ற ரேஞ்சில் எழுதும் இந்த டோண்டு ராகவனையும் சற்றே சுலபமாக புரிந்து கொள்ள இயலும் என நினைக்கிறேன்.

ஓராண்டு முடிந்ததற்கான பதிவை போட நினைத்து போன ஆண்டு இட்ட பதிவைப் பார்த்தால் அதுவே இப்போதும் பொருந்துகிறது என்றே நினைக்கிறேன். ஆகவே அதையே இங்கு சில சேர்க்கைகளுடன் மீள்பதிவு செய்கிறேன்.

தனக்கு சொர்க்கம் ஒரே நாளில் அலுத்துவிடும் என சுஜாதா ஓரிடத்தில் தீர்மானமாக எழுதியிருந்தார். ஏனெனில் அங்கு நடக்கும் அகண்ட பஜனை ஒரு நாளைக்கு மேல் தன்னால் பொறுத்து கொள்ள முடியாது என்பது அவரது துணிபு. ஆகவேதான் தலைப்பில் நான் கூறியபடி, “சுவாரசியமாக தினங்கள் இப்போது செல்கின்றனவா சுஜாதா அவர்களே”? என்ற கேள்வியையும் அவர் முன்னே வைக்கிறேன்.

முதலில் பழைய பதிவுக்கு செல்வோமா?

அறுபதுகளில் சில கதைகள் என் மனதைக் கவர்ந்தன. அவற்றில் ஒன்றுதான் "ஒரு கதையில் இரு கிளைக்கதைகள்". ஒரு கிளைக்கதை சரித்திரக்கதை, இன்னொன்று தற்காலக் கதை. இரண்டாவதில் வந்த கதாநாயகனை அவன் காதலிக்கும் பெண் நிராகரிக்கிறாள். முதல் கதையில் வந்த ராஜகுமாரி தனது முறைமாப்பிள்ளையை துரத்தி விட்டு பல்லக்கில் செல்கிறாள். திடீரென ஒரு உருவம் வந்து நிற்கிறது. பல்லக்கின் திரையை விலக்குகிறது. ராஜகுமாரி "யார் அது" என்று கேட்க, "ராஜகுமாரி, நான் பக்கத்துக் கதையில் நிராகரிக்கப்பட்டவன்" என்று கூறுகிறது. அவனை பல்லக்கில் ஏற்றிக் கொள்கிறாள் ராஜகுமாரி, பயணம் தொடர்கிறது. சர்ரியலிசம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் அக்கதையைப் படித்ததுமே என் மனதைக் கொள்ளை கொண்டது அது. எழுத்தாளர் பெயரை அப்போது கவனிக்கவில்லை.

அதே போல இன்னொரு கதை, தலைப்பு மறந்து விட்டது, ஆனால் கடைசி வரி ஞாபகத்தில் இருக்கிறது. "இஞ்சினியர்கள் நாசமாப் போக". ஹோட்டலில் ஒரு பெண்ணின் நெக்லஸைத் திருட திட்டம் போடுகிறான் ஒரு இளைஞன். விளக்கையெல்லாம் அணைக்க ஏற்பாடு செய்து விட்டு, நெக்லஸையும் வெற்றிகரமாக பறித்து ஓடுகிறான். ஆனால் திடீரென விளக்குகள் எரிகின்றன. கதையிலிருந்து சில வரிகள்: "நான் கோழிக்குஞ்சு மாதிரி ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆறடி உருவமும் மிகுந்த அகலமும் கொண்ட தர்வான் கைகளை விரித்து கொண்டு வந்து, என்னை தடுத்து, தமிழ் சினிமாவில் அப்பா மகனை அணைத்துச் செல்வது போல என்னைத் தூக்கிச் செல்கிறான்". விஷயம் என்னவென்றால், எமெர்ஜென்சி ஜெனெரேட்டர் தானாகவே செயல்படத் துவங்கியுள்ளது. அதனால்தான் "இஞ்சினியர்கள் நாசமாப் போக". இக்கதையின் எழுத்தாளர் பெயரையும் அச்சமயம் கவனிக்கவில்லை.

சமீபத்தில் 1971 ஜனவரியில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு மெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தேன். அப்போதெல்லாம் ரயில் வண்டிகளில் மூன்று வகுப்புகள் உண்டு. பிறகுதான் இரண்டாம் வகுப்பு நீக்கப்பெற்று, அப்போதைய மூன்றாம் வகுப்பு இப்போதைய இரண்டாம் வகுப்பாயிற்று. கம்பார்ட்மெண்டில் ஒரே கூட்டம். நால்வர் அமர வேண்டிய பெஞ்சில் ஏழு பேர் அமர்ந்திருந்தோம். என் பக்கத்தில் இருந்தவரை எங்கோ பார்த்த உணர்வு. அப்போது ஐ.ஓ.பி. மீனம்பாக்கம் கிளையின் மேனேஜர் திரு. கோபு அவர்களது முகஜாடை இருந்தது, ஆனால் அவர் இல்லை. ஆகவே அவரிடம் அவர் கோபு அவர்களது சகோதரரா எனக்கேட்க, அவர் அதை மறுத்து தான் எழுத்தாளர் சுஜாதா என்றார். எனக்கு ஒரே சந்தோஷம். இந்த நிகழ்ச்சி பற்றி நான் எழுதியிருந்த இந்தப் பதிவிலிருந்து சில வரிகள்.

"இதற்குள் சுஜாதா அவர்களும் சேட்டில் வந்தார். ஆங்கிலத்தில்தான் சேட் நடந்தது. அவரிடம் நான் சமீபத்தில் 1971-ல் அவரை நேரில் சந்தித்த நிகழ்ச்சியை தேதி, இடம் விவரங்களுடன் எழுதியிருந்தேன். தனக்கு ஞாபகமில்லை என அவர் எழுத, நான் அதற்கு "Of course it is difficult for you to remember. While I met a celebrity, you did not" என எழுத அவர் அதெல்லாம் இல்லை தன் வயது காரணமாக மறந்துவிட்டது என எழுதினார். ஹாரி பாட்டர் புத்தகம் பற்றியும் அவருடன் பேசினேன். அதியமான் வந்திருப்பதையும் கூறினேன். அதியமானை விசாரித்ததாக அவர் கூறினார்".

அப்பதிவின் ஒரு பின்னூட்டமும், என் எதிர் வினையும்:
//இருந்தாலும் உமக்கு ஜாஸ்திதான். சொல்லியிருக்கலாமே, உமக்கு 1950 என்ன அதற்கு முன்பு அல்லது நீர் பிறக்கும் முன்னர் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்கும் என்று!!!//
"ஓ, சொன்னேனே. ஆனால் அதை சமீபத்தில் 1971-ல் அவரை சந்தித்தபோது சொன்னேன். அவரது நைலான் கயிறு நாவலிலிருந்து எனக்கு பிடித்த வரிகளை கோட் செய்த போது அவருக்கு மிக்க மகிழ்ச்சி".

அந்த ரயில் பயணத்தின்போது திடீரென நான் மேலே சொன்ன கதைகள் ஞாபகத்துக்கு வர, ஒரு வேளை அவர்தான் அவற்றை எழுதியதோ எனக்கேட்க, அவரும் ஆமோதித்தார். ஆக, ஒரு நல்ல கதை எழுத்தாளர் யார் என்றே தெரியாத நிலையிலும் நினைவில் நிற்கும் என்பது நிரூபணம் ஆயிற்று.

அவரது ”ரத்தம் ஒரே நிறம்” என்ற கதை அக்காலக் கட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அது பற்றி நான் எழுதிய பதிவில் எனது அனுமானங்கள் சிலவற்றை வைத்திருந்தேன். அவற்றை சரி பார்த்துக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதே போல கணேஷும் வசந்தும் ஒருவரே என்பது பற்றியும் கன்ஃபர்ம் செய்து கொள்ள முடியவில்லை.

இனிமேலும் முடியாதாம். அவர் இறந்து விட்டார் என்றெல்லாம் கூறுகிறார்கள். நம்புவதற்கு கஷ்டமாக உள்ளது. அவருக்கெல்லாம் இறப்பு எப்படி வரலாம்?

அதுவும் அவர் மறைந்து ஓராண்டு ஆகிவிட்டதாம், அதை மட்டும் நம்ப முடிகிறதா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/27/2009

எங்கே பிராமணன் மெகா சீரியல் - பகுதி 16, 17, 18, 19 & 20

இப்பதிவை எழுதுவது முரளி மனோகர்.

நான் பெரிசு கிட்ட சொல்லிட்டேன், இம்முறை நான்தான் பதிவு போடப்போறேன்னு. அதுவும் சரிடா கண்ணா ஜமாய்னு சொல்லிடுத்து.

முதலில் 26.02.2009 அன்னிக்கு உருப்படியா ஒரு காரியம் பண்ணித்து அது. அதாவது “எங்கே பிராமணன்” புத்தகத்தை வாங்கிண்டு வந்தது. அதையும் ஒரு முறை முழுக்க படிச்சேன். துக்ளக்கிலேயே தொடர்கதையா படிச்சதுன்னாலும் மறுபடியும் படிக்க உற்சாகமாகவே இருந்தது.

16-ஆம் பகுதி
முதல் சீனில் வசுமதி அசோக் எங்கேயாவது சாமியாராகப் போய்விடுவானோ என்ற தன் கவலையை நாதனிடம் தெரிவிக்க, அவரும் தன்னிடம் பாகவதர் ஏற்கனவே இது பற்றி பேசும்போது தனக்கு தெரிவித்ததைப் போல, எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என கூறுகிறார். அவன் சன்னியாசியாக வேண்டும் என இருந்தால் யாராலும் தடுக்கவியலாது. அதேபோல ஆகக் கூடாது என விதி இருந்தால், அவனே முயற்சி செய்தாலும் சன்னியாசியாக ஆக இயலாது எனக் கூறுகிறார். தனது கட்டுப்பாட்டில் இல்லாத விதி போன்ற விஷயங்களை பற்றி சிந்தித்து நேரத்தை வீணாக்குவதை விட அவரவர் வேலையைப் பார்ப்பதே மேல் என அவர் கூறுகிறார்.

புத்தகத்தில் இல்லாத முக்கிய நிகழ்ச்சி ஒன்று இந்த எபிசோடில் ஆரம்பித்தது. முதலில் சமையற்கார மாமி அசோக்கை கல்லூரிக்கு வழியனுப்புகிறார். பூனை ஒன்று குறுக்கே போக, சற்று அமர்ந்து விட்டு போகுமாறு கூற, அசோக் அதெல்லாம் தேவையில்லை என சொல்லிவிட்டு போகிறான். அன்றிலிருந்து அவனைக் காணவில்லை. எல்லா இடத்திலும் தேடுகிறார்கள்.

இப்போது சோவும் நண்பரும் திரைக்கு வருகிறார்கள். பூனை குறுக்கே போவது பற்றிய நம்பிக்கை பற்றியும் பேச்சு வருகிறது. அதை நம்புவதும் நம்பாததும் அவரவர் மனநிலையை பொருத்ததே என சோ கூறுகிறார். அம்மாதிரியான சகுனங்கள் ஒரு எச்சரிக்கைக்குத்தான் என நம்புபவர்களும் உளர். திருஞான சம்பந்தர் அரசி மங்கியர்க்கரசியின் அழைப்பை ஏற்று மதுரை செல்ல முயன்றபோது, அவரை திருநாவுக்கரசர் கோள்நிலை சரியில்லை எனக்கூறி தடுக்க அப்போது திருஞான சம்பந்தர் பாடுகிறார்:

“வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே”

ஈசனடியாருக்கு கிரகக் கோளாறுகளால் பாதகம் இல்லை எனக் கூறிவிடுகிறார். மேலே உள்ளதைப் பாராயணம் செய்தாலே கிரகக் கோளாறுகள் அண்டாது என காஞ்சிப் பெரியவர் கூறியதையும் சோ நினைவுபடுத்த, நம்ம பெரிசு ஆவென பார்த்து கொண்டிருந்தது.

அசோக்கை காணாது போலீஸ் ஸ்டேஷனில் நாதன் புகார் கொடுக்கப் போனால், அவரது புகாரை ஏற்காது ஜூரிஸ்டிக்‌ஷன் எல்லாம் சொல்லி அலைக்கழிக்க, அவர் அரசியல்வாதி வையாபுரியை அழைத்து புகாரை ஏற்கச் செய்கிறார்.

நாதனின் நண்பர் நீலகண்டன் தன் தரப்புக்கு அருகில் உள்ள ஆட்டோக்காரர்களை விசாரிக்க சற்று தள்ளு முள்ளு ஏற்படுகிறது.

பகுதி - 17.
குழப்பம் தொடர்கிறது. நாதன் போலீஸ் ஸ்டேஷனில் போய் விசாரிக்க அங்கிருப்பவர் மார்ச்சுவரியில் 7 பிணங்கள் இருப்பதாகவும் அவற்றில் அசோக்கின் உடல் இருக்கிறதா எனப் பார்க்க வருமாறு அவரிடம் கூற அவர் அப்படியெலாம் இருக்க முடியாது என கூறிவிட்டு வந்து விடுகிறார்.

மீண்டு சோ மற்றும் நண்பர். இறந்ததுமே மனிதன் என்பது மறைந்து வெறும் பாடி என ஆவது பற்றி பேச்சு போகிறது. உயிர் என்றால் என்ன சோ அடுக்கடுக்கடுக்காக கேள்விகள் கேட்க நண்பர் திகைக்கிறார். குழப்பறீங்க என குறைபட்டு கொள்கிறார்.

நாதன் வீட்டில் நீலகண்டன், நாதன் மற்றும் வசுமதி பேசிக் கொண்டிருக்க, சமையற்கார மாமி நீலகண்டன் கோபம் அடையும் அளவுக்கு பேசிவிட, எல்லோராலும் எச்சரிக்கப்படுகிறார். பேப்பரில் விளம்பரம் கொடுக்கலாமா என பேச்சு வருகிறது.

மீண்டும் சோ மற்றும் நண்பர். சோ இப்போது ஒருவிஷயத்தை போட்டு உடைக்கிறார். இந்த பேப்பரில் விளம்பரம் கொடுப்பதை வைத்து எவ்வளவு எபிசோட்கள் இழுக்கலாம் என்றெல்லாம் கோடி காட்டுகிறார். இது என்ன சோவே இவ்வாறு சொல்றாரே என பெரிசிடம் கேட்க, அது பேசாம சீரியலைப் பார்னு சொல்லிடுச்சு.

காஞ்சீபுரத்தில் பாகவதர் வீட்டில் அவரும் அவர் மனைவியும் அசோக் காணாமல் போனது பற்றி பேசுகின்றனர். அசோக் இம்மாதிரி விட்டேற்றியா இருந்ததுக்கு பாகவதர்தான் காரணம் என அவர் மனைவி அவரிடம் கூற அவர் ஒப்பு கொள்ளவில்லை.

சமையற்கார மாமியும் நீலக்ண்டனின் மனைவி பர்வதமும் பத்திரிகையில் வந்த விபத்து பற்றிய செய்தியை விவாதிக்கின்றனர். அதில் கொல்லப்பட்டவரின் முகம் அசோக்குடையது போல இருந்ததாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பகுதி - 18
பேப்பரில் வந்த விளம்பரத்தைப் பார்த்து யார் யாரோ வந்து தாங்கள் அசோக்கை பார்த்ததாகக் கூறுகின்றனர். ஒருவன் நாதனிடமிருந்து ஏதோ கதை சொல்லி, 5000 ரூபாய் பணமும் பெற்று சொல்கிறான்.

சமையற்கார மாமியின் ஆலோசனை பேரில் ஒரு தேவி உபாசகரை பார்க்க நாதனும் வசுமதியும் செல்கின்றனர். பிறகு அவர் கூறியது பற்றி விவாதமும் நடக்கிறது.

இப்போது சீன் திருவண்ணாமலைக்கு செல்கிறது. அங்குதான் அசோக் இருக்கிறான். அசோக் ஒரு டீக்கடை முன்னால் நிற்க அந்த கடைக்காரர் அவனுக்கு டீயும் பிஸ்கட்டும் தருகிறார். இதென்ன ஓசியில் டீயும் பொறையும் இந்த பையனுக்கு கொடுக்கிறார்கள் என நண்பர் வினவ, அது கூட நாம் போய் நின்றால் கிடைக்காமல் போகலாம் என அவர் காலை வாருகிறார் சோ. அப்போது உதங்க மகாரிஷியின் கதையை கூறுகிறார். தாகத்துக்கு எப்போதும் குடிக்க நல்ல தண்ணீர் வேண்டும் என அவர் கிருஷ்ணரிடமிருந்து வரம் பெற்ருள்ளார். ஒரு சமயம் பாலைவனத்தில் நாவறள அவர் துன்பப்படும்போது அவர் எதிரில் அருவருக்கத்தக்க உடலோடு ஒரு வேடன் அவர் முன்னால் தோன்றி தனது தோல் பையிலிருந்த தண்ணீரை அவருக்கு தர முன்வர, அவர் அறுவறுப்புடன் மறுக்க, வேடனும் மறைந்து விடுகிறான். பிறகு வந்த கிருஷ்ணர் வந்தது இந்திரன் என்றும், அளித்த நீர் அமிர்தம் என்றும் அது தெரியாமல் உதங்கர் கோட்டை விட்டதையும் எடுத்து கூறுகிறார்.

நீலக்ண்டன் வீட்டில் அவர் வேலை விஷயமாக திருவண்ணாமலை போக வேண்டியிருக்கிறது. அவர் மனைவி தானும் வருவதாகக் கூற அவர் மறுத்து தனியாக செல்கிறார். ஈசனை தரிசனம் எல்லாம் செய்ய நேரமிருக்காது, அங்கு கேம்ப் போட்டிருக்கும் மேலதிகாரி ரொம்ப கண்டிப்பானவர் என கூறிவிட்டு அங்கு போகிறார். ஆனால் அங்கு போனதும் என்ன நடக்கிறதென்றால், அந்த அதிகாரி இவரையே தன்னை கோவில்களுக்கெல்லாம் அழைத்து போய் தரிசனம் செய்விக்கக் கூறி, ஸ்தல புராணங்களையும் கேட்டு, இவரும் விதியே என எல்லாவற்றையும் நெட்டுரு போட்டு ஒப்பிக்க வேண்டியதாகிற சீனை அவர் ஊருக்கு வந்ததும் வயித்தெரிச்சலுடன் தன் மனைவியிடம் விவரிக்க, விவரிக்க, நம்ம பெரிசுக்கு ஒரே ஆனந்தம், “நல்லா வேணும் இந்த நாத்திகனுக்குன்னு” குதிச்சுது.

பகுதி - 19:
நீலகண்டன் வீட்டில் நேற்று விட்ட இடத்திலிருந்து இன்றைய எபிசோட் ஆரம்பித்தது. இவ்வளவெல்லாம் தான் மேலதிகாரிக்கு செய்த பிறகு ஏதேனும் பிரமோஷன் கிடைக்குமோன்னு பார்த்தால் அவர் போகும்போது தனக்கு ஒரே ஒரு மூன்றுமுக ருத்திராட்ச கொட்டையை தந்து போனதாக நீலகண்டன் புலம்புகிறார்.

இப்போது திரைக்கு வரும் சோவிடம் அவர் நண்பர் இந்த ருத்திராட்ச கொட்டை பற்றி கேட்கிறார். இதெல்லாம் சிரத்தை உள்ளவர்களுக்கு நல்ல பலன் அளிக்கும் எனக் கூறிய சோ அவர்கள் பக்தி விஷயங்களும் வணிகமயமாக்கப்பட்டது பற்றி பேசுகிறார். அவனவன் ஆயிரக்கணக்கில் இம்மாதிரி மத சம்பந்தமான பொருட்களை புழக்கத்தில் விடுவதால் அவற்றின் நம்பகத் தன்மையும் குறைகிறது எனக் கூறுகிறார்.

திருவண்ணாமலையில் ஒருவீட்டின் வாசலில் அசோக் அமர, அந்த வீட்டு பெண்மணி அவனுக்கு உணவு அளிக்கிறார். அவர் சாம்பு சாஸ்திரிகளின் சகோதரி. அச்சமயம் அங்கு வந்த சாம்பு சாஸ்திரியும் அசோக்கை பார்க்கிறார், ஆனால் அடையாளம் கண்டு பிடிக்கவில்லை.

இங்கு சென்னையில் ஒரு கோவிலில் வசுமதி அமர்ந்திருக்க, பிரசாத வினியோகம் நடக்கிறது. சாம்பு சாஸ்திரிகளின் மகன் கிருபாதான் வினியோகம் செய்கிறான். வசுமதியுடன் அறிமுகம் ஏற்பட்டு வரும் வியாழக்கிழமை அவரது உபயமாக கோவிலில் அன்னதானம் செய்வதற்காக கோவில் அலுவலகத்தில் புக் செய்கிறான். பிறகு அவரை அவர் வீட்டில் கொண்டு விடுகிறான்.

நிவேதனம் செய்தால் பகவான் உண்மையாக சாப்பிடுவாறா என சோவின் நண்பர் அவரை கேட்க, நிவேதனம் என்றால் காட்டுதல் என்றுதான் பொருள். பிரசாதங்களை பகவானிடத்தில் காட்டிவிட்டு, அவர் ஆசியுடன் பக்தர்களே அதை உண்கிறார்கள். கடவுள் எல்லோரிடமிருந்தும் பிரசாதம் சாப்பிட மாட்டார். அதெல்லாம் கண்ணப்ப நாயனார் போன்ற உண்மை பக்தர்களால்தான் சாத்தியம் எனவும் கூறுகிறார்.

பகுதி - 20
தான் பிரார்த்தனை செய்து கொண்டதற்கேற்ப வசுமதி அங்க பிரதட்சணம் செய்கிறார். அது பற்றி சோவின் நண்பர் அவரை கேள்வி கேட்க, அவரும் கடவுளை முழுசரணாகதி அடைவதை அது குறிக்கிறது என்கிறார்.

சாம்பு சாஸ்திரிகள் திருவண்ணாமலையில் அசோக்கை இப்போது அடையாளம் கண்டு கொண்டு தன் மகனுக்கு ஃபோன் செய்து வசுமதி வீட்டில் சொல்ல ஏஏற்பாடு செய்கிறார். நாதனுக்கும் வசுமதிக்கும் சந்தோஷம். அசோக்கை அழைத்துவர நாதன் நீலகண்டனையும் பாகவதரையும் காரில் அனுப்புகிறார். நீலகண்டன் ஏடாகூடமாக பேசிபாகவதர் மனதை நோக அடிக்கிறார். அவரால்தான் அசோக் இம்மாதிரி பைத்திய நிலைக்கு தள்ளப்பட்டான் என்று குற்றம் சாட்டுகிறார். அவர் சொல்வதை கேட்பது தனது பிரரப்த கர்மா என பாகவதர் நொந்து கொள்கிறார்.

சோவின் நண்பர் அவரிடம் பிராரப்தம் என்றால் என்ன என கேட்க அவரும் பூர்வ ஜன்மாக்களின் பலன்கள் பற்றி விவரிக்கிறார்.

திருவண்ணாமலை வந்து பார்த்தால் அசோக் அங்கிருந்து வேறு எங்கோ சென்று விட்டிருக்கிறான். அடுத்து வரும் திங்களன்றுதான் பார்க்க வேண்டும்.

நான் என்னவோ நானே முடிவு செய்து இப்பதிவை எழுதியதாக நினைத்துக் கொள்ள பெரிசோ அதை ஏற்கனவே தீர்மானித்து தன்னுடன் ஃபோனில் பேசிய ஒரு சகபதிவரிடமும் அதை கூறி வைத்திருக்கிறது என்பதை இப்போதுதான் அறிந்து மனம் நொந்தேன்.

வணக்கம்,
முரளி மனோகர்

2/26/2009

டோண்டு பதில்கள் - 26.02.2009

அனானி (120 கேள்விகள் கேட்டவர்):
31. ஒபாமாவின் அதிரடி ஆட்சிபற்றி ஒரு வரியில் உங்கள் விமர்சனம்?
பதில்: இப்போதைக்கு கருத்து சொல்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை.

32. காங்கிரஸ் ஆட்சிபற்றி ஒருவரியில்?
பதில்: ஐயோ

33. கலைஞரது ஆட்சிபற்றி ஒர் வார்த்தையில்?
பதில்: ஐயையோ.

34. அரசுகள் வழங்கும் பென்சன் செலவு வரும் 10 ஆண்டுகளில் வேலைபார்க்கும் மாதச் சம்பள செலவைவிட கூடும் போது என்னவாகும்?
பதில்: பென்சன் உசர உசர சம்பளமும் உசருமே. நீங்க சொல்லும் நிலை எப்படி வருமாம்?

35. ஆளாளுக்கு பூமி வெப்பமேறலை சரி செய்யப் போகிறேன் என மரங்களை நட தடபுடல் பண்ணினார்களே? ரிசல்ட்?
பதில்: யாரெல்லாம் பண்ணினார்கள்?

36. தற்போது கொடுத்து சிவந்த கரம் யாருடையது?
பதில்: அப்படி யாரும் எனக்கு தெரியவில்லையே.

37. தேன் பானைக்குள் கைவிட்டவன் புறங்கை நக்குவது புதிதல்ல -சொன்னவர் (அரசியல்வாதி)யார்? உண்மையில் நடப்பது என்ன?
பதில்: சமீபத்தில் 1984 தேர்தலிலேயே அதை கூறித்தானே கலைஞர் அழுவாச்சி சீன் எல்லாம் போட்டார்!

38. மணல் கொள்ளை, மரக் கொள்ளை, கல்விக் கொள்ளை இதில் எது முந்துகிறது இப்போது?
பதில்: சீசனுக்கேற்ற கொள்ளை.

39. இலவச வேட்டி சேலை வழங்குவது மானம் காக்கும் செயலா அல்லது?
பதில்: அதில் வந்த ஊழலாம் மானம் போனது மட்டுமே நடந்தது.

40. நல்லாட்சியின் மாண்பு என்ன?
பதில்: தேனை மலருக்கு வலிக்காமல் தேனி எடுப்பது போல வரிவிதிப்பு இருக்க வேண்டும் என கௌடில்யர் கூறியுள்ளார்.

41. சுதந்திர இந்தியாவின் நிரந்தரக் குருடன், நிரந்தரச் செவிடன், நிரந்தர முடவன், நிரந்திர ஊமை, நிரந்தர உணர்வற்றவன் யார்?
பதில்: எல்லாமே வாக்காளர்தான் என சில அதைரியமாக உணரும் சமயங்களில் தோன்றுகிறது.

42. அரசு/தனியார் வங்கிகளில் போடும் பணம் எந்த இலக்கு வரை (லிமிட்) பாதுகாப்பானது? (வங்கிகளுக்கு அமெரிக்கா நிலை வந்தால்)
பதில்: ஒரு வங்கிக் கணக்குக்கு ஒரு லட்சம் ரூபாய் என கேள்விப்படுகிறேன்.

43. வங்கி லாக்கரில் வைத்துள்ள மதிப்பு மிகு பொருட்கள் திருடு போனால்?
பதில்: அவற்றை இன்ஷ்யூர் செய்திருந்தால் கிடைக்கும் தொகை மட்டுமே கிடைக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் லாக்கரில் வைத்திருப்பது பற்றி எங்குமே விவரம் கேட்பதுமில்லை கொடுப்பதுமில்லை. பிறகு எந்த அடிப்படையில் நஷ்ட ஈடு தருவதாம்?


44. ஒரு பக்கம் அரசுத்துறை வங்கிகளின் பங்கு விற்பனை மறு பக்கம் அரசின் பங்குத் தொகை கூட்டல் (செண்ட்ரல்,யுகோ,விஜயா வங்கி)இது ஏன்?( இதில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் எங்கே வருகிறார்)
பதில்: எனக்கும் புரியவில்லையே.

45. தங்கம் எங்கு போய் நிற்கும் ((ஆன்லைன்(வால்பையன்) புண்ணியத்தால்))
பதில்: இது பற்றி எனக்கு அறிவெல்லாம் லேது.

46. கம்பெனிகள் திரட்டும் டெபாசிட்களுக்கு இன்சுரன்ஸ் பாதுகாப்பு உண்டா?(deposit insurance corporation of india)
பதில்: These deposits are parri passu with unsecured liablities என்றுதான் அறிகிறேன். கம்பெனி திவாலாகும் பட்சத்தில் டிபாசிட்டுகளை திரும்பத் தருவதற்கான முன்னுரிமை ரொம்பவும் கடைசியில் உள்ளது.

47. 25 % 30% வட்டிக்காக தனது வாழ் நாள் சேமிப்பையெல்லாம் தனியார் நிதி நிறுவனங்களில் போட்டு ஏமாந்தவர் நிலை இன்று?
பதில்: ரொம்ப பரிதாபமே. பனகல் பார்க்கில் நடக்கும் பொதுக்கூட்டங்களே கதி.

48. தேக்குமர வளர்ப்புத் திட்டங்களின் இன்றைய நிலை?
பதில்: கிணற்றில் போட்ட கல் என்பது பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா, அதுதான் இது.

49. மக்களின் பேராசை குறைந்துள்ளதா?
பதில்: நாய் வால் நிமிர்ந்து விட்டதா?

50. உங்களின் நெருங்கிய உறவினர்கள்/நண்பர்கள் இந்த லிஸ்டில் உண்டா?(deposited heavy amount in private companies and lost all)
பதில்: ராயப்பேட்டை பெனிஃபிட் ஃபண்ட், கோத்தாரீஸ் ஆகிய கம்பெனிகளில் பணம் போட்டு ஏமாந்தவர்கள் பலரை நான் அறிவேன்.

51. இப்போ சென்னையில் பெனிபிட் பண்ட் கம்பெனிகள் நடமாட்டம் உண்டா?
பதில்: சில இருக்கின்றன.

52. இலவசம்,மான்யம் யாரால் எப்போது தொடங்கி வைக்கப் பட்டது?
பதில்: சரித்திரத்தின் இருள் நிறைந்த கடந்த காலத்திற்கு அல்லவா போய் தேட வேண்டியிருக்கும்.

53. இந்த உலகில் அதிசயங்களுக்குள் பேரதிசயமாய் திகழ்வது எது?
பதில்: நச்சுப்பொய்கை யட்சன் இதே கேள்வியை தரும புத்திரனை கேட்க, அவர் பதிலளிக்கிறார், உயிரினங்கள் தினந்தோறும் எமலோகம் சென்று கொண்டேயிருப்பதைப் பார்த்தும்கூட, மனிதர்கள் தங்களுக்கு மரணமில்லாதது போல் நினைத்துக் கொண்டு நல்ல கதியை அடைய முயற்சிக்காமலேயே வாழ்நாளைக் கழித்து விடுகிறார்களே - அதுதான் ஆச்சரியம்.

54. தமிழ்நாட்டுக்கு திருப்பூர் போல் ஆந்திராவுக்கு எது?
பதில்: தெரியவில்லையே. நண்பர் அதியமானை கேட்கலாம் என நினைத்து அவருக்கு ஃபோன் போட்டால் அவர் கிட்டவில்லை.

55. இப்போ நம்ம மில்கள் எல்லாம் ஆந்திராவை நோக்கியாமே?
பதில்: ஏன், ஏதேனும் மின்சார பிரச்சினையாமா?

56. தாராளமயமாக்கலுக்குப் பின் கிராமங்களின் பொருளாதார வளர்ச்சி, நகரம் போலுள்ளதா?
பதில்: தமிழகத்தின் பல பகுதிகளுக்கு காரில் செல்பவன் என்னும் முறையில் பார்த்தேன், கிராமங்களில் தார்ச்சாலைகள் அதிகம் தென்படுகின்றன. ஆட்டோக்கள் புழங்குகின்றன. கண்டிப்பாக தாராளமயமாக்கத்தின் பலன்கள் அங்கும் ஊடுறுவியுள்ளன.

57. பிராமணியத்தை எதிர்ப்பவரின் எண்ணிக்கை கணிசமாய் குறைந்துள்ளதா?
பதில்: எல்லாத்துக்கும் பாப்பானை திட்டுபவர்க்ளை பார்ப்பனரல்லாதவர்களும் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளதை பார்க்கிறேன்.

58. தமிழ் நாட்டில் உடையாத அரசியல் கட்சி ஏது?
பதில்: சொல்லிப்போமே காங்கிரஸ் என்று. ஏதோ கற்பனையாச்சும் பண்ணுவோமே.

59. பெரிய பொறுமைசாலி, மிகுந்த சகிப்புத்தன்மை இவைகளுடன் வாழும் அரசியல்வாதி யார்? வாழ்ந்து மறைந்த அரசியல்வாதி யார்? வருங்காலத்தில் இவர்கள இருவரையும் மிஞ்சுபவர் யாரும் உளரோ
பதில்: நல்ல வேலை தந்தீர்கள். ஒவ்வொருவரையாக நினைத்து பார்த்து ரிஜெக்ட் செய்தே ஓய்ந்து விட்டேன். யாரும் தேறவில்லையே. ஆளை விடுங்கள்.

(மன்னிக்கவும், மீதி கேள்விகள் அடுத்த பதிவுகளுக்கான வரைவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன)

அனானி (19.02.2009 பகல் 12.56-க்கு கேட்டவர்):
1. இளங்கோவன், வாசன் போன்ற மத்திய அமைச்சர்கள் இதுவரை தமிழ்நாட்டுக்கோ, இந்தியாவுக்கோ என்ன செய்துள்ளனர்? அவர்கள் துறையில் கடந்த 4 ஆண்டுகளில் என்ன நடக்கிறது என்பதாவது அவர்களுக்குத் தெரியுமா? இதுபோல தானே ராதிகா செல்வி, ரகுபதி போன்றோரும்? அன்புமணி, வேலு, பாலு, சிதம்பரம், ராசா தவிர மற்ற அமைச்சர்கள் எல்லாம் சும்மாத்தானே?

பதில்: செயல்படும் அமைச்சர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதுதானே பொது நிலை. இங்கு மட்டும் ஏதேனும் விதிவிலக்கா என்ன?

2. மாலன், சாரு நிவேதிதா, ஞாநி, இரா.முருகன் போன்ற பலரும் உங்களை விட 5 அல்லது 7 வயதே சிறியவர்கள். இவர்கள் எல்லோரும் இளமையுடன் காட்சியளிக்கின்றனரே? இவர்களிடம் டிப்ஸ் கேட்டதுண்டா?
பதில்: ஏன் கேட்க வேண்டும். எனக்கென்ன குறைச்சல், அதே இளமையான எண்ணங்களுடன்தானே இருந்து வருகிறேன்? மேலும் நான் டை (dye) எல்லாம் போட என் வீட்டம்மா என்னை அனுமதிப்பதில்லை.

3. உங்கள் வீட்டில் ஜெயலலிதாவின் சிறந்த திட்டமான - மழைநீர் சேகரிப்புத்தொட்டி கட்டியுள்ளீரா ? அதனால் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளதா?
பதில்: மிகவும் நல்ல முறையில் அது நங்கநல்லூர் முழுக்க நிறைவேற்றப்பட்டதில் ஓரளவு ஒரே ஒரு முறை நல்ல மழை பெய்தாலும் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் விர்ரென ஏறி விடுகிறதே. தண்ணீர் சுவையும் நன்றாகவே உள்ளது.

4. பேரன் பேத்திகளுடன் விளையாட நேரம் ஒதுக்குவீர்களா? அவர்கள் லெவலுக்கு இறங்கி அவர்களுடன் நேரம் போக்க முடிகிறதா?

பதில்: இல்லை, ஏனெனில் பேரன் பேத்திகள் இல்லை.

5. ஈழத்தமிழர்கள் தத்தளித்துக்கொண்டும், முத்துக்குமார் தியாகம் செய்த போதிலும், தானுண்டு வாராவாரம் ஓசி பாசில் புது படம் பார்த்து ப்ளாகில் விமர்சனம் - யாரு மனசுல யாரு - முதல் காதல் - முதல் முத்தம் என பதிவுகள் போடுவதுதான் வாழ்க்கையின் நிதர்சனம் இல்லையா ?
பதில்: சம்பந்தப்பட்டவர்களை கேட்டால் ஆயிரம் காரணங்கள் சொல்வார்கள். அவை உண்மையாகவும் இருக்கலாம்.

6. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக ஹிண்டுவின் ஸ்போர்ட்ஸ் எடிட்டராக, கிரிக்கெட் எடிட்டராக இருந்த (அசாருதீனின் மேட்ச் ஃபிக்ஸிங் சமயத்தில் ஹிண்டுவை விட்டு வெளியேற்றப்பட்ட) ஆர்.மோகன் தற்போது டெக்கான் க்ரோனிகிளின் சென்னை பதிப்பு ஆசிரியராக ஆகியிருக்கிறாரே? படிக்கிறீரா?
பதில்: ஸ்போர்ட்ஸ் செய்திகளெல்லாம் நான் படிப்பதில்லை. நீங்கள் குறிப்பிட்ட நபரை பற்றி கேள்விப்பட்டதில்லை. எது எப்படியானாலும் டெக்கான் க்ரானிக்கள் எல்லாம் வாங்குவதில்லை.

7. ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார் மகன்கள் திருமணத்தில் ஜெ. வாழ்த்திப்பேசியது சரி. சோ எதற்கு இந்தக் கூட்டத்தில் வாழ்த்திப் பேச போனார்? ஒரு சீரியல் ஸ்லாட்டுக்காக இவ்வளவா?
பதில்: அழைப்பு வந்து போயிருக்கலாம் அல்லவா? அதற்கும் சீரியல் ஸ்லாட்டுக்கும் என்ன சம்பந்தம்?

8. டெக்கான் கிரோனிக்கிள் தேர்தல் கணிப்பில் அதிமுகவுக்கு 15 சீட்கள் கிடைக்குமாமே ? ஆக அடுத்த மத்திய அரசுக்கு தலைவலிதானே?
பதில்: தலைகால் தெரியாமல் ஆடி, எதிர்க்கட்சிகளுக்கு சாதகம் தேடித் தருவதில் ஜெயும் சரி, கலைஞரும் சரி ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

9. காதலர் தினத்தில் மனைவியும் காதலியுமான வாழ்க்கைத் துணைக்கு என்ன பரிசு கொடுத்தீர்கள்?
பதில்: குமரன் சில்க்ஸில் ஒரு பட்டுப் புடவை, காதலர் தினத்துக்கு முந்தைய நாளன்று அவரது நட்சத்திர பிறந்த நாளுக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தாயார் சன்னிதியில் திருமஞ்சனம், ஆங்கில பிறந்த தேதியன்று திங்களூர், திட்டை, திருமயிச்சை லலிதாம்பிகை கோவில்கள் விஜயம், ஆகியவை. மற்றப்படி காதலர் தினம் பற்றி நான் எழுதிய இப்பதிவைப் பாருங்களேன்.

சேதுராமன்:
1. வைக்கோலுங்க சாரி வக்கீலுங்க செய்யறது சரியா?
பதில்: இல்லவே இல்லைதான், ஆனால் என்ன செய்வது?

2. அவங்க சட்டத்துக்கு அப்பாற்பட்டவங்களா?
பதில்: கண்டிப்பாக இல்லை. ரிங் லீடர்களது சன்னதை பிடுங்குவதுதான் சரியான தண்டனை.

3. உச்ச நீதிபதி பேச்சிலும் கொஞ்சம் வெண்டைக்காயும் விளக்கெண்ணையும் வாடை அடிக்கிறதே? வ்க்கீல்களை ஆதரித்துத்தான் அவர் பேச வேண்டுமா? மு.க். உண்மையிலேயே உண்ணாவிரதம் தொடங்குவாரா, அல்லது வழக்கம் போலக் கூத்துதானா?
உச்ச நீதிபதியை விடுங்கள். கேஸ் அவர் முன்னால் வந்தால் தான் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகக் கூட இப்படி பட்டும் படாமல் பேசியிருக்கலாம். ஆனால் ராமதாஸ் அவர்கள் கருணாநிதி அவர்களது லேட்டஸ்ட் உண்ணாவிரதம் பற்றி பேசியதை பாருங்கள். அது இதோ:
ராமதாஸ் கூறியதாவது: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்ட போதே இந்த இயக்கம் அரசியல் மற்றும் தேர்தல் ரீதியான பணிகளில் கவனம் செலுத்தாது என தெளிவாக தெரிவித்தோம்.
இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி பல தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த இயக்கத்துக்குப் பின்னால் தமிழக மக்கள் அணிவகுப்பதை பொறுக்க முடியாத முதல்வர் கருணாநிதி, தி.மு.க. ஆட்சியைக் கலைக்க நாங்கள் சதி செய்வதாகக் கூறுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் 35 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு நீடிக்கும் வரை தி.மு.க. அரசை யாராலும் கலைக்க முடியாது. இந்நிலையில் நாங்கள் எவ்வாறு சதி செய்ய முடியும் என்பதை கருணாநிதி விளக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலால் கொதித்துப் போயுள்ள வழக்கறிஞர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை ஒடுக்கவே, காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்பதை கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும்.
தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை மீது முடிவெடுத்து, தீர்வு காண வேண்டியவர் முதல்வர் கருணாநிதிதான்.
ஆனால் அவரே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறுகிறார். இது வெறும் நாடகம்.
இலங்கைப் பிரச்னையிலிருந்து தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர் முயல்கிறார் என ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
நன்றி தினமணி (24.02.2009)

4. முதலமைச்சர் திருவாயைத்திறந்து ஆஸ்கார் அவார்ட் தம்பி மதத்தைப் பற்றித்தான் பேச வேண்டுமா? சிறுபான்மை வாக்குகள் இல்லாமல் அவரால் தாக்குப் பிடிக்க முடியாதா?
பதில்: ஆஸ்கார் அவார்ட் வந்தது தமிழகத்துக்கே பெருமை. அதில் போய் அனாவசியமாக மதத்தை புகுத்துவது ஒரு வக்கிரமான செயலே.

5. புலிகளின் உண்மை ஸ்வரூபம் இப்போது நன்றாகத் தெரிகிறதே, போர் நிறுத்தம் வேண்டும், ஆனால் நாங்கள் ஆயுதம் கீழே போட மாட்டோம் என்றவுடன்!! புலிச்சார்பு கட்சிகளும் தமிழ் பத்திரிகைகளும் உண்மையிலேயே தமிழர்களின் நலம் கருதுவார்களாயின், புலித் தம்பிகளுக்கு அறிவுரை சொல்லுவார்களா?
பதில்: அகதிகளோடு அகதியாக கரும்புலியை அனுப்பி கொல்பவர்கள் இருக்கும்போது எல்லோரையும் சந்தேகத்துடனேயே பார்ப்பதும் தவிர்க்க முடியாதுதானே. எங்கு எதை செய்வது என்ற விவஸ்தை இல்லாது செய்பவருக்கு ஆதரவாக இன்னும் பலர். என்ன செய்வது.


எம். கண்ணன்:
1. ஒவ்வொரு விருது வழங்கும் விழாவிலும் (கோல்டன் க்ளோப், பாப்தா, ஆஸ்கர்) ஸ்ரீதேவி மைத்துனர் அனில் கபூரின் மன நிலை எப்படி இருந்திருக்கும் ? எப்படி அவரால் சிரித்துக் கொண்டு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்க முடிகிறது ? (ஸ்லம்டாக் மில்லியனரில் அவருடைய பங்களிப்பைப் பற்றி யாருமே எங்குமே பாராட்டாத நிலையில்)
பதில்: அனில் கபூர் எவ்வளவு பெரிய நடிகர் தெரியுமா? இந்த படத்தில் கெஸ்ட் ரோல் மாதிரித்தான் செய்துள்ளார் என்றாலும் அதற்காக இவரைத் தேர்ந்த்டுத்ததே அவருக்கு ஒரு சிறந்த பாராட்டு. அமிதாப் பச்சனின் ரோலைத்தானே அவர் செய்தார். மேலும் அவரது பல்லாயிரக்கணக்கான விசிறிகளுக்கு அவரைப் பார்ப்பதே போதும். இதை நான் நிச்சயமாகக் கூறுவேன், ஏனெனில் நானும் அந்த பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவனே.

2. தமிழ் பதிவுலக, பத்திரிக்கை, சினிமா மற்றும் இளைஞர்கள் சூழலில் - கவுண்டமணி, வடிவேல், விவேக் பேசிய சில வசனங்களே பெரும்பாலும் உபயோகப்படுத்தப் படுகிறதே ? இந்த அளவிற்கு அந்த வசனங்கள் தாக்கம் ஏற்படுத்தும் என வசனகர்த்தா யோசித்திருப்பாரா? இல்லை இதில் தொலைக் காட்சியின் பங்கு அதிகமா? ரிபீட்டட் டெலிகாஸ்ட்? (பின்னிப் பெடெலெடுப்பது, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, யாருமே இல்லாத டீக்கடையிலே சின்சியரா டீ ஆத்துறது.., பேஸ்மென்ட் வீக்..)
பதில்: தமிழ் திரையுலகின் ஸ்ட்ராங் பாயிண்டே காமடிதான். நீங்கள் சொன்ன வசனங்கள் இருக்கட்டும். மீதி உதாரணங்களும் பார்க்கலாமே. மன்னார் அண்ட் கம்பெனி, கேள்வியை நீர் கேட்கிறீரா, இல்லை நானே கேட்கட்டுமா, பாட்டெழுதி பிழைப்பவர்கள் சிலர், அதில் குற்றம் கண்டுபிடித்து வாழ்பவர் பலர், என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாமே. அதிலும் பழைய வசனங்களை இப்போது உள்ளது போல அடிக்கடி கேட்க இயலாது.

3. கலைஞர் டிவி சரத் - தற்போது நலம் அடைந்துவிட்டாரா ? இல்லை மலேசியாவில் செட்டில் ஆகிவிட்டாரா ? யாரை நம்பி 'சிரிப்பொலி' போன்ற அலைவரிசையை துவக்கியுள்ளார்கள் ? ஜூ.வி, ரிப்போர்டரில் செய்தி உண்டா?
பதில்: தெரியவில்லை. லக்கிலுக், கேபிள் சங்கர் ஆகியோரை கேட்டால் ஆதண்டிக்கான பதில் கிடைக்கும்.

4. தற்போதெல்லாம் ரயில், பஸ் பயணங்களில் - பல இளஞ்சோடிகள், காதலர்கள் - சுற்றி இருப்பவர்கள் பற்றி கவலையில்லாமல் கை போடுவதும், முத்தமிடுவதும் - பார்க்க பலருக்கும் ஒரு மாதிரியாக இருக்கிறதே? பொது இடங்களில் இவ்வாறு செய்வதற்கு தடை கொண்டு வருவது நல்லதல்லவா ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் பயணம் முழுவதும் இது மாதிரி ஒரு ஜோடி செய்து கொண்டிருந்தால் என்ன தோன்றும்?
பதில்: பாவம் வீட்டில் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை போலும் என நினைப்பேன். வேறு என்ன செய்வது?

5. குமுதத்தில் படிக்க ஒன்றுமே இல்லையே? 2 பக்கத்திற்கு ஒரு முறை ஏதோ சிகிச்சை பற்றிய விளம்பரங்களும், தமிழர், தமிழ்நாடு மக்களுக்குச் சம்பந்தமில்லாத ஏதோ சில படங்களையும் கட்டுரைகளையும் எங்கிருந்தோ எடுத்துப் போட்டு ஒப்பேற்றுகின்றனரே? என் இந்த வறட்சி?
பதில்: குமுதம், விகடன் ஆகிய இரு பத்திரிகைகளிலுமே அப்படித்தான். எனக்கு தெரிந்து துக்ளக் மட்டும்தான் அதே நிலையில் நல்ல தரத்தில் உள்ளது.

6. உங்கள் கேள்வி-பதில் பதிவுகளை புத்தகமாக வெளியிட உத்தேசமுண்டா?
பதில்: ஏன் இந்த கொலைவெறி?

7. தினமலர் அந்துமணி ரமேஷ் விவகாரம் என்ன ஆனது ? தாத்தாவும் பேரனும் சேர்ந்த பிறகும் தினமலர் இன்னும் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் ஆதரவு தோற்றத்தையே தருகிறதே?
பதில்: நான் தினமலர் படிப்பதில்லை.

8. இன்றைய வலைப்பதிவுகளுக்கெல்லாம் முன்னோடி சுஜாதாவின் கணையாழி கடைசி பக்கமும், தினமலர் வாரமலரில் அந்துமணியின் பா.கே.ப.வும் தான் என்கிறான் எனது நண்பன்? எவ்வளவு தூரம் உண்மை?
பதில்: இல்லை என்றுதான் தோன்றுகிறது.

9. கிரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமார் இன்னும் கதைகள் எழுதுகிறாரா? எந்தப் பத்திரிக்கைகளில்?
பதில்: வாராந்தர ராணியில் கேள்வி பதில் எழுதுகிறார். மற்றப்படி மாத நாவல்கள் எழுதுகிறார்.

10. சோவுக்குப் பிறகு துக்ளக்கை இதே மாதிரி கிண்டலுடன் நடத்த யாருக்கு துணிவு இருக்கும்? வழக்குகளையோ ஆட்டோக்களையோ சந்திக்கும் தைரியமும்?
பதில்: அதற்கான நேரம் வரும்போது சரியான ஆட்கள் தானே வருவார்கள்.

venki (a) baba:
1) பாஜக தற்பொழுது இலங்கை பிரச்சனைக்கு ஆதரவு (அத்வானி உட்பட) தெரிவிப்பதன் மூலமாக மறைமுகமாக விடுதலைபுலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. ஒரு வேளை பாஜக ஆட்சிக்கு வந்தால் இதே நிலயை கடைபிடித்து போரை நிறுத்துவதன் மூலமாக புலிகளுக்கு ஊக்கம் அளித்து தமிழகத்துக்கு தீராத துன்பத்தை தந்து விடுவார்களா?
பதில்: பாஜக செய்வது வேண்டாத வேலை. நான் ஆதரிக்கவில்லை.

2) நீங்கள் எந்த பாராளுமன்ற தொகுதியை சேர்ந்தவர்? உங்கள் தொகுதியில் பாஜக போட்டியிட்டாலும் அதிமுக- வுக்கு தான் வாக்களிபீர்களா?
பதில்: வாக்களிக்கும் நேரத்தில் அதை யோசிப்பேன். இப்போது too early என்றுதான் சொல்ல வேண்டும்.

3) அதிமுக தேர்தலுக்கு பிறகு (பெரும்பான்மை இருந்தால்) பாஜக-வுடன் கூட்டணி சேரும் என்று எந்தளவுக்கு நம்புகிறீர்கள். ஆங்கங்கே regional parties மற்றும் communists அதிக இடங்களை பெரும் பட்சத்தில் ஜெயலிதா மூன்றாம் அணி கூடாரங்களில் சேர்ந்து விட வாய்ப்பு இருக்கிறதல்லவா?
பதில்: ஜெயின் பழைய நடவடிக்கைகள் வைத்து பார்க்கும்போது, அவர் ஆதரவுடன் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் பாஜக என்றால் அக்கட்சி ரொம்பவுமே பாவம்தான். வேறு என்ன சொல்வது?


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/24/2009

சோ அவர்களது நேர்காணல்

ஐயா நம்புங்க சாமியோவ். நான் பாட்டுக்கு கூகளண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவசரநிலை பிரகடனம் சம்பந்தமாக சில தகவல்கள் தேவைப்பட்டன. திடீரென இந்த நேர்க்காணல் சிக்கியது. படித்தேன். பிறகுதான் தோன்றியது, என்னடா இதுபத்தி நம்ம தமிழ்மணத் தோழர்கள் ஒண்ணும் சொல்லலியே என்று. தேதி பார்த்தால் அந்த நேர்க்காணல் 2005-ல் எடுக்கப்பட்டதாம். இதப் பார்றா, இன்னைய தேதிக்கும் அது அப்படியே பொருந்தறதேங்கற ஆச்சரியம்தான், வேறென்ன? இத வச்சு என்னுடைய ஆங்கில வலைப்பூவில் ஒரு பதிவு இட்டேன். இப்ப தமிழில். இப்ப அந்த நேர்க்காணலை முதலில் பார்ப்போமா?

சோ ராமசாமி, அரசியல் விமரிசகர், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர். தமிழகத்திலேயே நெருக்கடி நிலையை வெளிப்படையாக எதிர்த்த பத்திரிகையாளர் அவர் ஒருவரே. இந்த நேர்க்காணலில் ஷோபா வாரியர் சோவுடன் பேசுகிறார். அந்த இருண்ட நாட்கள் பற்றிப் பேசும்போது அவர் முழு கிண்டலாகவே முக்கால்வாசி நேரத்தில் பேசுகிறார். அவருடைய மாறுபட்ட கண்ணோட்டங்களை காண்பது எப்போதுமே ஜாலியாகத்தான் உள்ளது என ஷோபா அபிப்பிராயப்படுகிறார்.

நெருக்கடி நிலை பிரகடன அறிவிப்பை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்? அது வரும் என்பதை ஏற்கனவே உணர்ந்தீர்களா?
நெருக்கடி நிலை வரக்கூடும் என எழுதிய ஒரே இந்திய பத்திரிகை என்னுடையதுதான். ஒரு கற்பனை கார்ட்டூன் கூட போட்டோம். அதில் ஜே.பி., கிருபலானி மற்றும் மொரார்ஜி போன்ற தலைவர்கள் சிறைபடுத்தப்பட்டதாகவும் காட்டியிருந்தோம். அடிப்படை உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தோம். எல்லாம் அச்சமயத்துக்கு மிகைபடுத்தி கூறப்பட்டவையே. (உண்மையிலேயே நெருக்கடி நிலை வந்தபோது அதெல்லாம் நடந்தன நிஜமாகவே என்பதை இந்த நேர்க்காணலில் வெளிப்படையாக கூறாவிட்டாலும் அதுதான் உண்மை-டோண்டு ராகவன்).

நெருக்கடி நிலை வரும் என ஏன் உங்களுக்கு தோன்றியது? அது வரை இந்தியாவில் இந்த மாதிரி வந்ததேயில்லையே?
சந்திரசேகர் போன்றவர்களுடன் நான் அதிகம் இது பற்றி விவாதித்தேன். நிகழ்ச்சிகள் போகும் போக்கைப் பார்த்தால் இந்திரா காந்திக்கு தான் தோற்றுப் போகிறோம் என்னும் உணர்வு ஜேபியின் போராட்டத்தால் தோன்ற ஆரம்பித்ததாகத்தான் எனக்கு தோன்றியது. அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு வேறு வந்தது.

நெருக்கடி நிலை வந்ததும் நீங்கள் சொன்னாப் போலவே வந்துவிட்டது என்ற உணர்வு உங்களுக்கு வந்ததா?
அப்படியெல்லாம் நினைத்து திருப்தி அடைய இதில் ஒன்றுமேயில்லை. வி.பி. சிங் பிரதமரானபோது கூட அவரை தூக்கி நிறுத்திய தேவிலாலே அவரை தூக்கி போட்டுவிடுவார் என்றும் கூறினேன். அப்படியே நடந்தது.

ஏதேனும் உள்ளுண்ர்வா?
இல்லை. நான் முன்கூட்டியே கணித்தவை பற்றிய பட்டியலையே என்னால் தரவியலும். ஒரு நேர்க்காணலில் இந்திரா காந்தியிடம் நான் கேட்டேன், எவ்வளவு நாளைக்குத்தான் பங்களாதேஷ்காரர்கள் நம்முடன் நட்பாக இருப்பார்கள் என்று. அவர்களால் தொல்லைதான் வரப்போகிறது என்றும் கூறினேன். நான் ஏன் அவ்வாறு கூறவேண்டும் என அவர் கேட்டார். அது எனது புரிதல் எனக்கூறினேன். அவர் அதை ஒத்து கொள்ளவில்லை. நான் மிகைப்டுத்துகிறேன் என அவர் அபிப்பிராயப்பட்டார்.

விடுதலைப் புலிகள் இந்தியாவில் காலடி வைத்ததுமே நான் கூறினேன், இவர்களால் தமிழகத்துக்குத்தான் தொல்லை, நாம் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என கூறினேன். அவர்களுக்கு எதிராக பிரசாரமும் ஆரம்பித்தேன். எல்லோரும் நான் ஒன்றுமேயில்லாததை மிகைபடுத்திக் கூறுவதாகக் சொன்னார்கள். கடைசியில் நான் சொன்னதுதான் நடந்தது.

ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் கூறினேன், சரண்சிங்கால் தொல்லை என. சஞ்சீவ ரெட்டி குடியரசுத்தலைவரானதும் அவரால் அரசுக்கு பிரச்சினை என்றும் கூறினேன்.

நெருக்கடி நிலை பிரகடனம் வந்தபோது நீங்கள் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர். அப்போது உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தனவா?
முதலில் நான் பதட்டமடைந்து தற்காலிகமாக துக்ளக்கை வெளியிடுவதை இரண்டு இதழ்களுக்கு நிறுத்தினேன். மறுபடியும் வெளியிட ஆரம்பித்தபோது கருப்பு அட்டையுடன் ஒரு இதழ் கொண்டு வந்தேன். சொல்லப்போனால் துக்ளக் சரித்திரத்திலேயே இருமுறைதான் கருப்பு அட்டை. இன்னொரு முறை பாப்ரி மசூதி இடிப்பின்போது.

இரண்டு இதழ்களுக்கு பிறகு ஏன் மீண்டும் ஆரம்பித்தீர்கள்?
நிலைமையை எப்படி சமாளிப்பது என்பதை முதலில் திட்டமிட வேண்டியதாயிற்று. தலைமறைவாக இயங்கிய பத்திரிகைகளில் எழுதுவது, கூட்டங்களில் பேசுவது என்றெல்லாம் செயல்பட்டேன். இது சம்பந்தமாக ஆர்.எஸ்.எஸ்.-உடன் தொடர்பு ஏற்பட்டது. இம்மாதிரி பத்திரிகைகளை மிகுந்த சிரமங்களுக்கிடையே அவர்களதான் நடத்தி வந்தார்கள். ரொம்ப சின்சியரானவர்கள் அவர்கள்.
பிறகு ராம்நாத் கோயங்காவுடன் பழக ஆரம்பித்தேன். என்னிடம் இழப்பதற்கு அப்போதே ஒன்றுமேயில்லை. தலையில் முடிகூட இல்லை என்றும் நான் கூறியதுண்டு. ஆனால் கோயங்காவை பற்றி அவ்வாறு கூற இயலாது. அவர் ஒரு பெரிய பத்திரிகை சாம்ராஜ்யத்தை நடத்த வேண்டிய நிலையில் இருந்தார். இரானி அவர்களது நிலைமையும் அவ்வாறே. இருந்தாலும் அவர்கள் நெருக்கடி நிலையை எதிர்த்து பேசினார்கள். அவர்களது தைரியம் என்னுடையதை விட பல மடங்கு பெரியதே. ஏனெனில் என்னிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லைதானே.

(அக்காலக்கட்டத்தில்) உங்களுக்கு எப்போதாவது பயமாக இருந்ததா?
என்னவோ தெரியவில்லை, எனது பாதுகாப்பு குறித்து நான் ரொம்ப அலட்டிக் கொள்ளவில்லை. நான் விதியை நம்புபவன். நான் போக வேண்டிய நேரம் வந்தால் யாராலும் என்னை காப்பாற்ற இயலாது. அதேபோல நேரம் வராவிட்டாலும் எந்த கொம்பனாலும் என்னை போட்டுத்தள்ள இயலாது (சிரிக்கிறார்).

பத்திரிகையை மீண்டும் துவக்கியதும் மக்களுக்கு ஏதேனும் செய்தி சொல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஐம்பதுகளில் வெளிவந்தது சர்வாதிகாரி என்ற ஒரு பழைய தமிழ்ப்படம். நெருக்கடி காலக்கட்டத்தில் மறுபடியும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருந்தது. அதுதான் சாக்கு என அத்திரைப்படத்தின் விமரிசனம் போட்டேன். அதிலும் சர்வாதிகாரத்துக்கு பின்னால் ஒரு பெண்மணிதான் இருந்தார்! இம்மாதிரியாக நெருக்கடிகாலத்தை மறைமுகமாக பலமுறை தாக்கினேன்.

தணிக்கையால் ஏதேனும் பிரச்சினைகள்?
பிரச்சினைகள் இருந்தன. நான் செய்ததைக் கண்டுகொண்டவர்கள் விளம்பரங்களையும் சென்சார் செய்ய ஆரம்பித்தார்கள். அவற்றின் மூலமாகவும் செய்திகள் செல்ல ஆரம்பித்திருந்தேன். நாட்டிலேயே எங்கள் பத்திரிகையில்தான் விளம்பரங்களும் சென்சார் செய்யப்பட்டன.

என்னுடைய பத்திரிகையை எடுத்து கொண்டு சாஸ்திரி பவனுக்கு அடிக்கடி செல்வேன். என்னுடைய சம்பளத்தையும் எடுத்து சென்று எடிட்டர் வேலையை சென்சாரே பார்த்து கொள்வதால் அதுவும் அவருக்கே உரியது என கூறலானேன்.

அவர்கள் அதை தமாஷ் என ரசித்தார்களா?
அவர்கள் அதிகம் சங்கடம்தான் பட்டனர். அவர்களும் என்னதான் செய்வார்கள்? ஆளுநரின் ஆலோசகர்கள் என்னை எச்சரித்தனர். அவற்றை நான் கண்டுகொள்ளவில்லை என நான் கூறினேன்.

ஒவ்வொரு இதழும் ஒரு பிரச்சினை. மீட்டிங்குகள் தடை செய்யப்பட்டாலும் பலவற்றில் நான் பேசினேன். பழைய காங்கிரஸ் அவற்றை ஏற்பாடு செய்திருந்தது.

என்னவோ நான் மட்டும் போராடினேன் என நினைத்து கொள்ளாதீர்கள்> மற்றும் பலரும் போராடினர். ஹிம்மத் பத்திரிகை ஆசிரியர் ராஜ்மோகன் காந்தி, கோயங்கா, இரானி ஆகியோரும் போராடினர்.

அதே நேரத்தில் நெருக்கடி நிலை கூடிய சீக்கிரமே எடுக்கப்பட்டுவிடும் என்றும் எல்லா மீட்டிங்குகளிலும் பேசி வந்தேன். ஏனெனில் அரசால் அதை சமாளிக்க இயலவில்லை.

தமிழ்நாட்டில் அச்சமயம் என்ன நிலை? ஏதேனும் அத்துமீறல்கள்?
கருணாநிதி அவர்களால் சட்டென ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அவர் இந்திரா அவர்களை புகழ்ந்த வண்ணம் இருந்தார். அவர் பதவி நீக்கத்துக்கு முன்னால் அவர் இந்திராவின் 20-அம்சத் திட்டம், சஞ்சய் காந்தியின் 5-அம்சத் திட்டம் ஆகியவற்றையும் ஆதரித்தார். இதெல்லாம் செய்து தப்பிக்கலாம் என நினைத்தார். தான் இந்திராவின் விரோதி அல்ல எனக் கூறும் அளவுக்கு அவர் போனார். இந்திராவுக்கு எதிராக செயல்படுபவர்கள் பற்றிய தகவலும் தர முன்வந்தார்.

MGR கூடத்தான் இந்திராவை ஆதரித்தார்.
ஆம், இந்திராவை பொருத்தவரை அவர் எம்ஜிஆரையே தேர்ந்தெடுத்தார். ஆக, கருணாநிதி அவர்கள் எதிர் தரப்புக்கு செல்ல வேண்டியிருந்தது. விருப்பமின்றியே நெருக்கடி நிலையை எதிர்க்க வேண்டிய நிலை அவருக்கு. அதே சமயம் ஜனதா கட்சியின் மேலும் அவருக்கு அதிருப்தி, ஏனெனில் அக்கட்சி சர்க்காரியா கமிஷன் அறிக்கையை வாபஸ் வாங்க சம்மதிக்கவில்லை போன்ற காரணங்கள்.

MGR தனது பேச்சுக்களில் நான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என எச்சரித்து வந்தார். ஆனால் நான் கைது செய்யப்படவில்லை.

நீங்கள் இவ்வாறெல்லாம் துக்ளக் பத்திரிகை மூலம் (மறைமுகமாகத்தான்) எதிர்ப்பு தெரிவித்த போதிலும் நீங்கள் எப்படி தப்பித்தீர்கள்?
நான் காமராஜ் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். இன்னொரு காரணம் எனது தந்தை மதிப்புக்குரிய காங்கிரஸ்காரர். மூன்றாவதாக இப்படியும் நினைப்பு இருந்திருக்கலாம். சோ ஒரு satirist மட்டுமே, மறைமுகமாகச் சொல்லும் வரையில் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்!" என்றும் விட்டிருக்கலாம்.

ராஜ்மோகன் காந்தி, கோயங்கா, இரானி ஆகியோர் கூட கைது செய்யப்படவில்லை. எல்லோருமே நெருக்கடி நிலைக்கு எதிராகவே வேலை செய்து வந்தனர்.

உங்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பயமுறுத்தல்கள் வந்தனவா?
ஆம், வந்தன. சஞ்சய் காந்திக்கு நெருக்கமாக இருந்த பலர் என்னைப் பற்றி அவரிடம் சொல்லி ஏதேனும் செய்ய வேண்டும் என கேட்டு கொண்டிருந்தனர். பல தொழிலதிபர்கள் என்னை எச்சரித்தனர். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. ஆகவே நான் நான் ரொம்ப அவதிப்பட்டேன் என்றெல்லாம் சொல்லிக் கொள்ள இயலாது.

இவ்வாறெல்லாம் நெருக்கடி நிலைக்கெதிராக காரியங்கள் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் த்ரில் இருந்ததா?
அப்படித்தான் இருக்க வேண்டும். அச்சமயம் எனது பத்திரிகை ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆகியிருந்தன. இப்போது யோசித்து பார்க்கையில் ஒரு பலமான அரசை எதிர்த்து போராடுகிறோம் என்ற எண்ணமே உற்சாகம் அளித்திருந்திருக்க வேண்டும்.

நெருக்கடி நிலை எடுக்கப்பட்ட போது நீங்கள் அதை ஆதரித்ததாகக் கூறினீர்கள். அது கடைசியாக எடுத்தபோது நிம்மதியாக உணர்ந்தீர்களா?
அப்படியெல்லாம் நிம்மதியாகவோ வலியாகவோ எடுத்து கொள்ளவில்லை. அதை நான் எனது போக்கிலேயே எடுத்து கொண்டேன், அவ்வளவுதான். அதே சமயம் ஜனதா கட்சிக்காக இந்தியா முழுவதும் எங்கெல்லாம் தமிழர்கள் இருந்தார்களோ அங்கெல்லாம் கூட்டங்களில் கலந்துகொண்டு பிரசாரம் செய்தேன்.

பொது மக்களின் கருத்து நெருக்கடி நிலை நீக்கப்பட்டபோது எவ்வாறு இருந்தது?
தமிழகத்தில் நெருக்கடி நிலை அவ்வளவாக எதிர்க்கப்படவில்லை. மக்கள் அதை வரவேற்றார்கள் என்றுகூட சொல்லலாம். இங்கு அதிகார துஷ்பிரயோகம் அவ்வளவாக இல்லை. ஒருவேளை எம்ஜிஆர் அவர்கள் நெருக்கடி நிலையை எதிர்க்காமல் இருந்ததும் காரணமாக இருக்கலாம். நாட்டின் நடுத்தரவர்க்கம் அதை வரவேற்றது என்றே நான் நினைக்கிறேன்.

உண்மை கூறவேண்டுமானால் சில நாட்கள் முன்னால் (2005-ல்) நான் ஒரு பிஜேபி கூட்டத்திற்கு சென்றிருந்தேன். நெருக்கடி நிலை (1975) ஒரு தவறான நபரால், தவறான நேரத்தில், தவறான காரணங்களுக்காக கொண்டுவரப்பட்டத்து. தவறான முறையிலும் நிர்வாகம் செய்யப்பட்டது. அச்சமயம் போர் அபாயம் ஏதும் இல்லை, உள்நாட்டு கலவரங்களும் இல்லை. லஞ்ச ஊழலுக்கு எதிரான ஜேபியின் போராட்டம் இருந்தது, அலகாபாத் தீர்ப்பு இந்திராவை பதவியிலிருந்து நீக்கியது.

ஆனால் இப்போதைய நிலையைப் (2005) பாருங்கள். நக்ஸலைட் குழுவினர் நாட்டின் பல பகுதிகளில் தலையெடுத்துள்ளனர். அவர்கள் மேலும் வளர்கின்றனர். விடுதலைப் புலிகள் தமது இந்திய எதிர்ப்பு செயல்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. காலிஸ்தான் இயக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. பங்களாதேஷ் அகதிகளின் ஊடுருவலால் நாட்டுக்கு பெரும் பிரச்சினை வரப்போகிறது. நாட்டின் வடகிழக்கு பகுதிகள். காஷ்மீர் ஆகிய இடங்களின் நிலைமையையும் பாருங்கள்.

ஆ ஊ என்றால் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். நெருக்கடி நிலை சமயத்தில் வேலை நிறுத்தம் பற்றி பேச்சு கூட இல்லை. எல்லா சீரமைப்பு நடவடிக்கைகளும் தடுக்கப்படுகின்றன. ஆக, இதுதான் நெருக்கடி நிலை பிரகடனத்துக்கு சரியான தருணம்.

இந்தத் தமாஷ்தானே வேண்டாம் என்கிறது!
இல்லை நான் தமாஷ் செய்யவில்லை. இப்போது யாருக்குமே தமது கடமைகள் பற்றிய புரிதல்கள் இல்லை. சட்டங்கள் உடைக்கப்படவுமே, விதிகள் மீறப்படவுமே, விதிமுறைகள் அலட்சியப்படுத்தப்படவுமே உள்ளன என்றே ஆகிவிட்டன. தேசத்தின் தற்போதைய மனநிலை இப்படித்தான் இருக்கிறது.

நம்மைவிட அதிக வேகமாக சீனா எப்படி முன்னேறுகிறது? அதற்கு காரணமே அவர்களது டிஸிப்ளினே. உலகிலேயே மிகக்குறைந்த அளவு டிசிப்ளினுடன் இருக்கும் ஜனநாயகம்தான் இந்தியாவில் உள்ளது.

ஜேபி காலத்தில் லஞ்சத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் இப்போது லஞ்சத்தின் திருவுருவமாக உள்ளனர். உதாரணம் லாலு பிரசாத் யாதவ்.

ஆக, இப்போது நேரம் சரியாகத்தான் உள்ளது ஆனால் இப்போது அதிகாரத்தில் இருக்கும் மனிதர் சரியில்லை. நான் குறிப்பிடுவது சோனியா காந்தியைத்தான். அவரிடம்தான் உண்மையான அதிகாரம் உள்ளது. அவர் இருக்கும்போது நெருக்கடி நிலை வந்தால் அது நிச்சயமாக துஷ்பிரயோகம் செய்யப்படும் என்பதை கூறிட இயலும். இந்த மத்திய அரசு நெருக்கடி நிலை பிரகடனம்செய்தால் அதை நான் வரவேற்க மாட்டேன். ஆனால் வாஜ்பேயி அல்லது போன்ற யாரேனும் - அவர்களேதான் வேண்டும் என்று கூறவில்லை - ஒரு காலக்கட்டத்தில் செய்தால் அதை நான் வரவேற்பேன். அதுதான் எனது இப்போதைய மனநிலை. எனது கருத்தை கூறும்போது நான் உண்மையான கருத்தையே கூறவிரும்புவேன்.

இப்போது மீண்டும் டோண்டு ராகவன். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சோ அவர்கள் கூறுவதை அலட்சியம் செய்ய இயலாது. சமீபத்தில் 1975-ல் என்ற ரேஞ்சில் பேசும் அளவுக்கு ஞாபகசக்தி உள்ள நான் கூறவிரும்புவது இதுதான். சரித்திர சம்பவங்களை சோ கூறியதில் எந்த தகவல் பிழையுமே இல்லை. முக்கியமாக நெருக்கடி நிலை காலக்கட்டம்.

அதே சமயம் இன்னொன்றையும் கூறுவேன். நெருக்கடி நிலை மீண்டும் வரவேண்டும் என்ற அவரது நிலைப்பட்டை நான் முழுமையாக எதிர்க்கிறேன். அவர் சொல்லும் காரணங்களை நான் அறிவேன்.ஆனாலும் கூறுவேன் நெருக்கடி நிலை இப்போதும் சரி எப்போதும் சரி கூடாது, கூடாது, அம்புடுத்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/21/2009

எங்கே பிராமணன் மெகா சீரியல் - பகுதி 15

20.02.2009 இரவு 8 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பான இப்பகுதியை நான் மிஸ் செய்ய வேண்டியதாயிற்று. அந்த முடிவை நான் தெரிந்தே எடுத்தேன். உறவினர் வீட்டு திருமணம். வீட்டம்மா ஏற்கனவே அங்கே ஆஜர். முதல் நாள் நிச்சயதார்த்தத்துக்கு போகாமல் நான் சமாளித்தாயிற்று, எல்லாம் சோவின் இந்த சீரியலுக்குத்தான். நேற்றைய கல்யாண ரிசப்ஷனை முதலில் அவாயிட் செய்யத்தான் நினைத்தேன். அதுதான் காலை திருமணத்துக்கு போயாயிற்றே என்ற சமாதானம் வேறு. ஆனால் அவர் தனியாக இரவு டாக்சியில் திரும்புவது பற்றி கவலை தெரிவிக்க, எனக்கும் மனது கேட்கவில்லை. ஆகவே ஒரு நாள் சீரியல் பார்க்காவிட்டால் பரவாயில்லை என எனது காரை மாலை 5 மணிக்கு வருமாறு ஏற்பாடு செய்தேன். ரிசப்ஷனுக்கு இருந்து விட்டு அவரை என்னுடன் திரும்ப அழைத்து வருவதாக பிளான். இருப்பினும் என்ன ஆச்சரியம், கிருஷ்ணன் என்பவரின் பின்னூட்டம் வந்தது. மனது அமைதியாயிற்ற்று. இப்போது நேற்றைய எபிசோடில் வந்ததைப் பார்ப்போமா?

14-ஆம் பகுதியின் கடைசி சீன் இங்கு முதல் சீன். சற்று முன்புதான் தன்னுடன் நேரடியாக பேசிவிட்டு சென்ற பாகவதர் அதற்குள் எப்படி காஞ்சீபுரத்திலிருந்து தனக்கு ஃபோன் செய்ய முடியும் என திகைப்படைகிறான் அசோக். அதை சமையற்கார மாமிக்கு சொல்ல, அவருக்கு உதறல்.

இப்போது சோவும் அவர் நண்பரும் திரைக்கு வருகின்றனர். பை தி வே ஒரு விஷயத்தை தெளிவு படுத்துகிறேன். நண்பர் இந்த சீரியலின் தயாரிப்பாளராம். பெயர்? டைட்டில்ஸில் பார்க்கலாம். இது பற்றி என்னை பலமுறை கேள்வி கேட்ட நண்பர் ஆவல் தீர்ந்திருக்கும் என நினைக்கிறேன். நண்பர் ஆச்சரியத்துடன் கேட்கிறார், அது பாகவதர் இல்லையென்றால் பின்னே யார் என கேட்கிறார். சோ கிண்டலுடன், “ஆமாம் சார், வில்லனுடைய கூடாரத்தில் ஹீரோவின் அப்பா பிரவேசிக்கிறார். திகைப்படையும் வில்லன் ஆட்கள் முன்னால் தனது மாஸ்க்கை கழட்டினால் அது உண்மையிலேயே வில்லன். அவன் ஆட்கள் பாஸ் பிரமாதம் என்கிறார்கள்”. நண்பர் முகத்தில் பிரகாசம், சீரியல் விறுவிறென போகிறதே என சந்தோஷப்பட, சோ அவரிடம், “அடப்போங்க சார், இந்த மாதிரி உத்தியெல்லாம் இக்கதையில் கிடையாது. பேசாம, சீரியலைப் பாருங்க” என அடக்கி விடுகிறார்.

சீன் மீண்டும் அசோக் மற்றும் மாமியிடம் செல்கிறது. “எல்லாமே மாயையா” என மலைக்கிறான் அசோக். அடுத்த நாள் நாதன் சமையற்கார மாமியிடம் தானும் வசுமதியும் பார்ட்டிக்கு சென்ற நேரத்தில் ஏதேனும் ஃபோன் வந்ததா என கேட்க, மாமி திகைப்புடன் பாகவதர் ஃபோன் விஷயத்தை கூறுகிறார். ஆச்சரியத்துடன் நாதன் அசோக்கை கூப்பிட்டு விசாரிக்க, அவனும் நடந்ததை கூறுகிறான். நாதன் பாகவதருக்கே ஃபோன் போட்டு விஷயத்தை கூற அவரும் திகைக்கிறார். அசோக் பார்த்தது வெறும் பிரமை என நாதன் சாதிக்க, அப்படி இல்லை என சொன்ன அசோக்கோ, பகவான் கிருஷ்ணர் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்ததை கூறுகிறான். பாகவதர் ஒன்றும் கிருஷ்ண பரமாத்மா இல்லையே என சீறுகிறார் நாதன். இப்போதைக்கு மர்மம் நீடிக்கிறது.

அடுத்த சீனில் வசுமதி வீட்டுக்கு வரும் ஒரு பைராகி பிட்சை கேட்க, வசுமதி அவரை பிட்சை போட மாட்டேன் எனக்கூறி விரட்டுகிறார். சமையற்கார மாமி சமயோசிதமாக பேசி, பிட்சை இடுகிறார். இதையெல்லாம் வெளியிலிருந்த வண்ணம் பார்த்த பாகவதர் வசுமதியிடம் நாதன் குடும்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் அவரது கொள்ளுத்தாத்தா காலத்தில் இம்மாதிரி அவாத்து மாமி பெண் துறவிக்கு பிட்சையிட மறுக்க, இனி அக்குடும்பத்தில் தலைமுறைக்கு ஒருவர் சந்நியாசியாக போவார்கள், அவ்வாறு போகிறவருக்கு என்னவோ புண்ணியம்தான், ஆனால் மற்றவருக்கு பிரிவுத் துயரமே என அருள்வாக்கு கூறி அத்துறவி செல்கிறார். இதை கேட்டு திகைப்படந்த வசுமதி நாதனிடம் பிறகு அது பற்றி கேட்க, அவரும் சில உதாரணங்களை கூறி அதை ஊர்ஜிதம் செய்கிறார்.

மீண்டும் சோவும் நண்பரும். எல்லாமே விதிப்படித்தான் என்றால் ஏன் முயற்சி செய்து நேரத்தை வீணாக்க வேண்டும் என நண்பர் கேட்க, சோ அது பற்றி நீண்ட விளக்கமே அளிக்கிறார். மழை வருவது விதி. அது வந்தால்தான் விளைச்சல் இருக்கும். ஆனால் அது மட்டுமே போதாது. மற்ற முயற்சிகளும் வேண்டும். இல்லாவிட்டால், மழை வந்தும் என்ன பலன்? அதே சமயம் எல்லா முயற்சிகளும் செய்து கடைசியில் எதிர்ப்பாராத காரணங்களால் கைகூடாமல் போவதும் உண்டு. அதுதான் விதி. ஆக, முயற்சி எப்போதுமே தேவைதான். அல்லாவை நம்பு, அதே சமயம் ஒட்டகத்தையும் நன்றாக கட்டிப்போடு என்னும் பொருளில் இசுலாமிய நண்பர்களிடையே ஒரு சொலவடை உண்டு. அதுவும் இதைத்தான் வலியுறுத்துகிறது. சோவுக்கு தயாரிப்பாளராக இந்த நண்பர் வரவேண்டும் என்பது விதி, ஆனால் அவரையும் அவ்வப்போது பதில்கள் மூலம் சமாளிப்பது சோவின் முயற்சிகள்தானே.

யாதவர்கள் அழிந்தனர். கிருஷ்ணர் யாதவ பெண்மணிகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லுமாறு அருச்சுனனை பணிக்க, அவனும் அவ்வாறே செய்கிறான். அப்போது அவனை தாக்கிய கொள்ளைக்கூட்டத்தாரை எதிர்த்து அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவனது காண்டீப வில்லும் பயன்படவில்லை. அப்போது திகைப்படைந்த அருச்சுனனுக்கு வியாசர் விளக்குகிறார், அருச்சுனனின் விதி முடிந்தது என்று. ஆக, அம்மாதிரி சந்தர்ப்பங்களில்தான் விதி பற்றிய விளக்கம் புரிந்து கொள்ள முடியும்.

கடைசியா முரளி மனோகர் ஒன்று கூற ஆசைப்படுகிறான். “அதானே, பாருங்களேன். பெரிசு சீரியலை துறந்தாலும் சீரியல் பெரிசை விடவில்லை. ஆகவே இப்பதிவு மற்ற பிளாக்கர்களையும் விடுவதாக. ஹூம், விதியின் விளையாட்டே தனி”.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/20/2009

எங்கே பிராமணன் மெகா சீரியல் - பகுதிகள் 11 & 12 (விட்டுப்போன பகுதியுடன் இற்றைப்படுத்தப்பட்டவை)

என் வீட்டம்மாவின் பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு திடீரென முடிவு செய்து, ஸ்ரீரங்கம், திருமயிச்சூர், திருவிண்ணகரம் ஆகிய இடங்களுக்கு போவதற்காக எனது காரில் எல்லோரும் சென்றோம். 16-ஆம் தேதி இரவு ஜெயா டி.வி.யில் எட்டு மணிக்கு வரும் இத்தொடர், இரவு 9 மணிக்கு சன் டிவியில் வரும் கோலங்கள் தொடர் ஆகிய இரண்டையுமே மிஸ் செய்யக் கூடாது என உறுதியாக இருந்து மாலை 6.50-க்கு ஹோட்டல் அறையை அடைந்து டி.வி.ஐ ஆன் செய்தவுடன் நிம்மதியாக இருந்தது. இப்போது எங்கே பிராமணன் தொடர் 16-ஆம் தேதிக்கான எபிசோட் பற்றி.

இதற்கு முந்தைய பகுதியில் நான் ஊகித்த ஒரு விஷயம் சரி என்பதை காண முடிந்தது. அதில் நான் இவ்வாறு எழுதியிருந்தேன்.

“பாகவதரின் பேரனை பார்க்க அவன் தாய் தந்தையர் முன்னறிவிப்பின்றி ஒரு ஞாயிறு அன்று வந்து பார்த்தால் அவன் ஹாஸ்டலில் இல்லை. அவன் ஒவ்வொரு ஞாயிறன்றும் ஹாஸ்டலை விட்டு சென்று மாலை லேட்டாகத்தான் வருவான் என அவன் நண்பன் கூறுகிறான். பாகவதரின் மகன் தனது தாய் தந்தையை காஞ்சீபுரம் சென்று பார்க்கும் விருப்பத்தைத் தெரிவிக்க அவன் மனைவி அதற்கு தடா போடுகிறாள். தாங்கள் வந்தது தம் பையனைப் பார்க்க மட்டுமே தனது மாமனார் மாமியாரை அல்ல என அழுத்தம் திருத்தமாக கூறுகிறாள். பையன் எங்கே போயிருப்பானென்பது தெரிந்தால் அந்த அம்மையார் குதிக்கப் போவதை வரும் திங்களன்றுக்கான பகுதியில் பார்க்கலாம். ஆனால் அதை யாருமே சுலபமாக ஊகித்து விட முடியும் என்று மட்டும் சொல்லி வைக்கிறேன். இந்தக் காட்சி நாவலில் வராவிட்டாலும் என்னால் ஊகிக்க முடிகிறது”.

ஆம், பிள்ளையாண்டான் தனது தாத்தா பாட்டியை பார்க்க அவர்கள் ஊருக்கு சென்றிருந்தான். அங்கு வந்து அவன் தாயார் ருத்ர தாண்டவமே ஆடுகிறார். பொறுமையாக இருக்கும் பாகவதருக்கே சற்று கோபம் வந்து பேரன் நல்ல சாப்பாட்டை பெறுவதில் தனக்கு இருக்கும் அக்கறையை தெளிவுபட கூறி விடுகிறார். சாதாரண பட்டை சாதத்துக்கா இந்த கூத்து என அன்னை வியப்பை தெரிவிக்க, சோ அவர்களும் அவர் நண்பரும் திரையில் வருகின்றனர்.

அதானே, ஆஃப்டர் ஆல் பட்டை சாதத்துக்கா இந்த கூத்து என நண்பர் கேள்வி கேட்க, சோ அவருக்கு அன்னத்தின் மகிமை பற்றி கூற ஆரம்பிக்கிறார். பட்டை சாதம் என்பது இறைவனின் பிரசாதம் எனக் கூறிவிட்டு சோறு இல்லாமல் யாரால் வாழ முடியும் என்ற கேள்வி போடுகிறார். அன்னத்தை இகழலாகாது என பெரியவர்கள் கூறுகிறார்கள். சோறு இல்லாமல் உன்ணாவிரதம் இருப்பவர்கள் பலரும் காலை மூக்கு பிடிக்க சாப்பிட்டு விட்டு மாலை வரைதான் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அல்லது முன்னமேயே பசி ஏற்பட்டு விட்டால் உண்ணாவிரதத்தையும் முடித்து கொண்டு விடுகிறார்கள்.

இது சம்பந்தமாக பகவத் கீதையில் ஒரு சுலோகமும் சோ சொன்னார். அவருக்கு பகவத் கீதை முழுக்கவும் தெரியுமா என நண்பர் வியக்க, ஏதோ சில சுலோகங்கள் அங்கங்கே தெரியும் என்றும், இந்த தேதியில் இந்த விவாதத்தை மனதில் வைத்து தயார் செய்து வந்ததுதான் சம்பந்தப்பட்ட சுலோகம் என்ற விஷயத்தையும் ராபணா என போட்டு உடைத்து விடுகிறார்.

பிறகு ஒரு கதையும் கூறுகிறார். ராஜா விரும்பி வேண்டிக்கொண்டபடியால் ராஜகுரு அவன் வீட்டில் விருந்துண்டார் என்றும், அவ்வாறு விருந்துண்டு செல்லும் சமயத்தில் திடீரென துராசை ஏற்பட்டு முத்துமாலை ஒன்றைக் களவாடிச் சென்று விடுகிறார். பிறகு அடுத்த நாள் அவர் சாப்பிடதெல்லாம் வாந்தி பேதியாக வெளியேற, புத்திவந்து முத்து மாலையை திரும்பத் தருகிறார். அவர் வேறு வேலையாள் ஒருவரை காப்பாற்றவே அம்மாதிரி முயற்சி செய்கிறார் என சந்தேகப்பட்ட அரசனை அவர் மிகுந்த சிரமத்துடன் கன்வின்ஸ் செய்கிறார். பிறகு விசாரித்ததில் அந்த அரிசி ஒரு கொள்ளைக்காரனிடமிருந்து கைப்பற்றப்பட்டது என்பது தெரிய வருகிறது.

இப்போது சோவின் நண்பருக்கு ஒரு சந்தேகம். அப்படியானால் யார் கொடுத்தாலும் தீர விசாரித்துத்தான் சாப்பிட வேண்டுமா? கொள்ளைக்கரனிடமிருந்து கைப்பற்ற அரிசி தீய எண்ணத்தை உருவாக்கும் என ஏன் தீர்மானிக்க வேண்டும்? (நாய் விற்றக் காசு குரைக்குமா என்று கேட்கவில்லைதான்).

நோய் வாய்ப்பட்டடவன் உணவை வினியோகம் செய்ய விட முடியுமா என்ற எதிர்க் கேள்வியை சோ எழுப்ப, அவர் நல்லாவே கதை விடுகிறார் என நண்பர் அலுத்து கொள்ள, நல்லது சொன்னா கதை விடுவதா என சோ அங்கலாய்க்க, முதல் விளம்பர இடைவேளை. இப்போது திடீரென ஆற்க்காட்டார் உபயத்தில் பவர் கட். ஹோட்டலில் என்னவோ ஜெனெரேட்டர் இருந்தது. ஆனால் கேபிள் டிவி அறைக்கு இணைப்பு இல்லாமல் போனதில், மிகுதி சீரியலை பார்க்க இயலவில்லை. யாரேனும் பார்த்திருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்களேன். உங்கள் உபயத்தில் போட்டு கொள்கிறேன்.

எதிர்பாராத இடத்திலிருந்து உதவி வந்தது, பின்னூட்ட ரூபத்தில். முதலில் பின்னூட்டம்.
“Dondu Sir,
You are doing a great job. I found a link to see this TV Serial, telecasted from 16t Feb. onwards. http://www.blog.isaitamil.net/?s=enge+brahman
Have a nice day,
Krishnan”

மிக்க நன்றி கிருஷ்ணன் அவர்களே. நிஜமாகவே நைஸ் டே தான் இன்று எனக்கு. உங்கள் உபயத்தில் தவறவிட்டதை பார்க்க முடிந்தது.

அதை தடித்த சாய்வெழுத்துகளில் கீழே சேர்க்கிறேன்.

விட்டுப்போன பகுதி ஆரம்பம் ஆகிறது.
விளம்பர இடைவேளை முடிந்ததும் மறுபடியும் சீன் பாகவதரின் வீட்டுக்கு செல்கிறது. அவரது மாட்டுப் பெண் அவரை எடுத்தெறிந்து பேசுகிறாள். பாகவதர் சமாதானமாக போக நினைத்தாலும் சண்டைக் கோழி மாதிரி சீறுகிறாள். அவள் கணவன் பாகவதரிடம் அழாக்குறையாக மன்னிப்பு கேட்கிறான். அப்பாவுக்கு உன்னால் ரத்த அழுத்தம் ஏறுது என்று அவளிடம் மன்னாட, அவரை அதுக்கான மாத்திரை சாப்பிடச் சொல்லும்படி அவள் எடுத்தெறிந்து பேசுகிறாள். அவன் தம்பிக்கும் மனைவிக்கும் நடுவிலும் வாக்குவாதம். இடிந்து போயிருக்கும் தன் மனைவி ஜானகியை பாகவதர் தேற்றுகிறார். எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள், லோகோ பின்ன ருசி என்கிறார்.

அடுத்த சீனில் நாதன் வீட்டுக்கு அரசியல்வாதி வையாபுரி தன் உதவியாளர் சிங்காரத்துடன் வருகிறார். அவரை தான் க்ளப் எலெக்‌ஷனில் ஜெயிக்க வைத்ததால், அவரிடமிருந்து ஒரு லம்ப்பாக பணம் எதிர்பார்க்கிறார். நாதனோ அவருடன் சாதாரணமாக பேசி நன்றி கூறிவிட்டு அப்பால் செல்கிறார். ஏமாற்றத்துடன் அவர் வீடு திரும்ப, அவர் அங்கு வருவதற்கு முன்னமேயே நாதன் அனுப்பிய பண சூட்கேஸ் வந்து சேருகிறது.

கடைசி சீனில் நாதன் வீட்டுக்கு அவர் உறவினர் நீலக்ண்டன், மனைவி மகள் சகிதம் வருகிறார். பாகவதர் அச்சமயம் நாதனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். நீலகண்டன் அவரை கிண்டலாக அவரது சௌகரியங்கள் பற்றி கேட்க, அவரும் எல்லாம் ஈஸ்வரகிருபை என கூறிவிட, இல்லை நாதன் கிருபை என அவரை நீலகண்டன் திருத்துகிறார். நாதன் தனக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்கு தந்ததே ஈஸ்வரனே என பாகவதர் சிக்ஸர் அடிக்க, வெறுப்பேற்றப்பட்ட கோபத்தில், தான் அவர் கையிலிருந்த காப்பியை தட்டிவிட்டால் அதுவும் ஈஸ்வர கிருபையா என கேட்டு யார்க்கர் போட, அப்படி நடந்தால் சனீஸ்வரன் நீலகண்டன் ரூபத்தில் வந்து உபத்திரவம் கொடுத்து சோதிக்கிறான் என தான் புரிந்து கொள்வதாக கூறி லேட் கட் மூலம் பவுண்டரிக்கு பந்தை ஒதுக்குகிறார் பாகவதர். நாதன் கலகலவென சிரிக்க, நீலகண்டன் முறைக்கிறார்.

விட்டுப்போன பகுதி முடிந்தது.

17.02.2009 காலை குடந்தையை விட்டு புறப்பட்டோம். டிரைவருக்கு ஒரே ஒரு இன்ஸ்ட்ரக்‌ஷன் மட்டும் தந்தேன். மாலை ஆறு மணிக்குள் சென்னையில் இருக்க வேண்டும். டிரைவரும் வண்டியை விரட்டி கொண்டு வந்ததில் மேகலா சீரியல் பார்க்க சரியான நேரத்துக்கு சென்னையை அடைய முடிந்தது

17.02.2009 மாலை 12-வது பகுதி காட்டப்பட்டது.
இதில் நாதனின் உறவினர் நீலகண்டன், பாகவதரை கிண்டல் செய்யும் முறையில் கேள்விகள் கேட்கிறார். அவரது கதாகாலட்சேப பிசினஸ் எப்படி நடக்கிறது என்று கேட்பதை நாதனாலேயே ஜீரணிக்க இயலவில்லை. அப்போது அங்கு வரும் அசோக் பாகவதர் பதில் தரும் முன்னரே பிசினஸ் என்றால், டாஸ்க் மற்றும் மிஷன் என்ற பொருளும் வருமெனக் கூறி, பாகவதரின் மிஷன் பக்தியை பரப்புவதே என்ன்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறான். எல்லாம் உடான்ஸ் என்ற ஒரேயடியாக நிராகரிக்கும் தோரணையில் நீலகண்டன் கூற, ராமாயணம், பாரதம் எல்லாம் கேட்பவர்கள் மூடர்களா என அசோக் கேட்க, ஆமாம் என்கிறார் நீலகண்டன்.

சோவும் நண்பரும் மீண்டும் திரையில். நீலகண்டன் கூறியதை ஆமோதிக்கும் நண்பர் ராமாயணம் மகாபாரதம் ஆகிய இரண்டுமே பார்ப்பனர்களை தூக்கி பிடிப்பனவையே என்று கூறுகிறார்.

அவுரங்கசீப் இருந்ததை நேரில் பார்க்காத நிலையில் இருப்பவர்கள் அது புத்தகத்தில் இருக்கிறது என்று சொல்லி ஏற்று கொள்கிறார்கள். அதே போலத்தானே ராமாயணமும் மகாபாரதமும் புத்தகத்தில் உள்ளன என கேட்கிறார் சோ. உங்க தாத்தாவுக்கு தாத்தா நல்லவரா என சோ கேட்க, ஆமாம் என நண்பர் கூறி அவர் தாத்தா கூறியதை ஆதாரமாகக் காட்டுகிறார்.

பிறகு பார்ப்பனர்கள் விஷயத்துக்கு வருகிறார் சோ. பாரதம் எழுதிய வியாசர் செம்படவ பெண்ணுக்கு பிறந்தவர், அவர் புகழ்வது கிருஷ்ணர் என்னும் யாதவரை. வால்மீகியோ வேடர் குலத்தில் பிறந்தவர். அவர் புகழ்வது ராமர் என்னும் ஷத்திரியரை. இங்கு பார்ப்பனர்கள் எங்கிருந்து வந்தனர்? அவ்வாறு பார்ப்பனர்களை புகழ வேண்டும் என்றால் ஒரு பார்ப்பனரை அரசராக சித்தரித்து அவர் எப்படியெல்லாம் நன்றாக நாட்டையாண்டார் என எழுதியிருக்கலாமே. சொல்லப்போனால் ராமாயணத்தில் பக்கா நாத்திகராக ஜாபாலி என்னும் பார்ப்பனர் முன்னிறுத்தப்படுகிறார்.

மேலும் ஒரு கதை என்று எழுதும்போது பொதுவாக கதாநாயகன் எல்லாவித கல்யாண குணங்களும் பொருந்தினவாக இருப்பான். வில்லனோ எல்லாவித கீழ்த்தரமான குணங்களின் உருவகமாக இருப்பான். ஆனால் வால்மீகியோ வியாசரோ அவ்வாறு செய்யவில்லை. கிருஷ்ணரை துரியன் மற்றும் சிசுபாலன் வாயிலாக தூற்றும்போது வியாசர் கடுமையான சொற்களை பிரயோகம் செய்கிறார். ஏனெனில் அவர் உண்மையை எழுதுபவர். யாருக்கும் அஞ்ச வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கில்லை. துரியன் கிருஷ்ணரை திட்டி முடிந்ததும் தேவர்கள் அவன் மேல் பூமாரி மழை பொழிவதாக காட்டியிருப்பது வியாசரின் நியாய உணர்ச்சிக்கு ஒரு பெரிய உதாரணமோ.

ராமாயணத்தில் ராவணன் எப்படிப்பட்ட பெருமை வாய்ந்தவன். ராமரே அவனைப் புகழ்வதாக வால்மீகி ஒரு காட்சியில் கூறுகிறார். அவன் ஒரு தீவிர சிவபக்தன். செல்லுமிடமெல்லாம் சிவலிங்கத்தை எடுத்து சென்று, சந்தர்ப்பம் அமையும்போதெல்லாம் பூசை செய்பவன். பகுத்தறிவுவாதிகள் சிலை மற்றும் சமாதிகளை மட்டுமே வணங்குபவர்கள். ராவணனோ சிவ பெருமானை வணங்குபவன்.

சேதுவைப் போல ஒரு கட்டுமானம் உலகில் எங்குமே இல்லை. அதன் பெருமையை ராமரே கூறுகிறார், அதை பார்ப்பவர்களுக்கு எல்லா புண்ணியமும் வரும் என்று. அதே போல துவாரகையில் கடலுக்கடியிலிருந்து கிடைக்கும் பல ஆதாரங்கள் துவாரகை அங்கு இருந்ததைக் காட்டுகின்றன. எல்லாமே facts. அவற்றையெல்லாம் வெறுமனே உடான்ஸ் என கூறும் தனது நண்பரை பார்த்து தான் பரிதாபப்படுவதாக சோ கூறுகிறார்.

இப்போது காட்சி அசோக் நீலகண்டன் விவாதத்துக்கு போகிறது. இப்போது நீலகண்டன் பாகவதரிடம் விசுவாமித்திரர் பலா அதிபலா என்னும் மந்திரத்தை ராமருக்கு சொல்லி கொடுத்து அவருக்கு, பசி, தூக்கம் ஆகியவை வராமல் இருக்கச் செய்த விஷயம் பற்றி கேட்கிறார். தனக்கு அந்த மந்திரத்தை சொலமுடியுமா என்றும் அவரை சேலஞ்ச் செய்கிறார்.

மீண்டும் சோ மற்றும் நண்பர். “ஆமா சார் எனக்கும் அதை சொல்லுங்களேன்” என நண்பர் கேட்க சோ அவர்கள் பேச ஆரம்பிக்கிறார். விசுவாமித்திரர் எப்படிப்பட்ட பிரம்மரிஷி. அதே சமயம் ராமர் எப்படிப்பட்ட அவதார புருஷன். தான் விசுவாமித்திரரும் இல்லை நண்பர் ராமபிரானும் இல்லை ஆகவே அதையெல்லாம் தன்னால் கூறமுடியாது என்று கூறுகிறார். இதே விடையை அமரர் கிருபானந்த வாரியாரே கூறியதாகவும் ஆகவே அதை கூறியதற்கான கிரெடிட்டும் தனக்கில்லை என்றும் சோ கூறுகிறார். அது சரி அப்படியாரேனும் அம்மாதிரி உணவு நீர் இன்றி யாரேனும் வாழ்ந்ததாக சரித்திரம் இருக்கிறதா என நண்பர் கேட்க 1953-ல் தனலட்சுமி என்ற பெண் அன்ன ஆகாரம் இன்றி பல நாட்கள் இருந்ததாகவும் மருத்துவர்களும் அவளை பரிசோதித்ததாகவும் சோ கூறுகிறார்.

மீண்டும் காட்சி அசோக், பாகவதர், நீலகண்டன், நாதன் ஆகியோர் இருக்குமிடத்துக்கு செல்கிறது. புராணங்களுக்கு பின்னால் இருக்கும் தத்துவங்களை புரிந்து கொள்ள நீலக்ண்டனுக்கு தீட்சண்யம் போதாது என அசோக் கூறுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் பத்திரிகைகளில் வருபவை எல்லாமே உடான்ஸ் என நீலகண்டன் கூற முந்தைய தினம் கூட ஆழ்வார்பேட்டை டைம்சில் நீலகண்டன் திறமையாவர் என வந்ததும் உடான்சா என கேட்க, நாதன் அவனைக் கண்டித்து அப்பால் போகும்படி கூறி விட அவனும் செல்கிறான். அசோக் அப்பால் சென்றதும் அவன் ஏன் எப்போதும் பாகவதரையே சப்போர்ட் செய்கிறான் என்னும் கேள்வியை நீலக்ண்டன் கேட்கிறார்.

இப்போது காட்சி அசோக்குக்கும் நீலகண்டனின் மகள் உமாவுக்கும் இடையில் நடக்கும் சம்பாஷணைக்கு செல்கிறது. அசோக் பாரதியாரை தான் ஆராதிப்பதாகக் கூற அவரிடம் அப்படி என்ன விசேஷங்கள் என்பதை கூறுமாறு உமா சேலஞ்ச் செய்கிறாள். அவரது விசேஷமே அவரது அசையாத தெய்வ நம்பிக்கை என ஆரம்பித்து அசோக் பேசுகிறான். அவர் வாழ்ந்த சிறிய கால அளவான 39 ஆண்டுகள் ஒரு அமர ஜீவித துளிகள். Why should I not worship such a multi-faceted personality என அழுத்தம் திருத்தமாகக் கேட்கிறான்.

கடைசி காட்சியில் பாகவதரும் அசோக்கும் பேசி கொண்டிருக்க அவன் தாயார் அவனைத் தேட, அவன் பாகவதருடன் இருப்பதை சமையற்கார மாமி கூறுகிறார். பாகவதரால் அசோக் கெடுவதாக அசோக்கின் அன்னை வசுமதி கூறுகிறாள்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/19/2009

எங்கே பிராமணன் மெகா சீரியல் - பகுதிகள் 13 & 14

13-ஆம் பகுதி:
நாதன் கிளப் தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ஒரு பார்ட்டி தர வேண்டும் என வசுமதி அபிப்பிராயப்பட, எதற்கு அதெல்லாம் என ஆரம்பத்தில் தயங்கிய நாதன் வழக்கம்போல வீட்டம்மா பேச்சைக் கேட்கிறார். ஆனால் பார்ட்டி வீட்டில் வேண்டாம் என்றும் 5-நட்சத்திர விடுதியில் வைத்து கொள்ளலாம் என்பதில் மட்டும் நாதன் உறுதியாக உள்ளார்.

இப்போது திரைக்கு சோவும் அவரது நண்பரும் வருகின்றனர். தேவர்களே சோமபானம் சாப்பிடலாமா என்னும் கேள்விக்கு சோ அவர்கள் ஏற்கனவேயே பல இடங்களில் அளித்த பதிலையே இங்கும் அளிக்கிறார்.

அதாவது, ஸோமபானம் என்பது போதை ஏற்றுவது அல்ல. "ஸுரா பானம்' என்பதுதான் அப்படிப்பட்ட பானம்; இதுவே "பானம்' என்றும் இலக்கியங்களில் குறிப்பிடப்படுவதுண்டு.

ஸோம என்பது ஒரு கொடி – ஸோமலதை; அதன் ரஸம் ஸோம ரஸம்; இது தேவர்களுக்கு உரியதாகவும், அமிர்தத்திற்கு ஒப்பானதாகவும் குறிப்பிடப்படுகிறது. இது யாகங்களில் முக்கிய இடம் பெறுகிறது. இது போதை தருகிற விஷயம் அல்ல.

ஆகையால் ஸோமபானம் அருந்துவது என்பது சடங்குகளுடன் கூடிய, புனிதமுடைய ரஸத்தை அருந்துவதே தவிர – போதை ஏற்றிக்கொள்கிற விஷயம் அல்ல. ஸுராபானம் என்பதுதான், குடி; போதை பானம்.

அதுகூடத் தெரியாமல் பலர் உளறுவதுதான் வேடிக்கை.

அதே போல நாதன் பார்ப்பனராக இருந்தாலும் அசைவம் சாப்பிடலாமா என கேள்வி எழ சோ அவர்கள் இது விஷயமாக அகத்திய முனிவர் கூறியதை எடுத்துரைக்கிறார். ஒரு காலத்தில் எல்லோருமே அசைவ உணவு உண்டவர்களே, பார்ப்பனர்கள் உட்பட. அகத்தியர் காலத்தில் வாதாபி, இல்வலன் என இரு அரக்கர்கள் இருந்தனர். வாதாபிக்கு ஒரு வரம். அதன்படி அவனை கொன்று சமைத்தாலும் அவனால் உயிர்பெற்று வரவியலும். ஆகவே அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு காரியம் செய்து வந்தனர். அதாகப்பட்டது வாதாபி ஓர் ஆடாக உருவெடுக்க. வில்வலன் அவனை வெட்டி கறி சமைப்பான். ஏதேனும் முனிவரை அழைத்து அவனை சமைத்த உணவை கொடுப்பான். முனிவரும் உண்டவுடன் இல்வலன் வாதாபி வெளியே வா எனக் கூற வாதாபியும் முனிவரின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவான். முனிவரும் மரிப்பார்.

இதே தந்திரத்தை அகத்தியரிடமும் முயற்சி செய்ய அவரோ கணபதியை துதித்து “வாதாபி ஜீரணமாகக் கடவது” என்று கூற அவனும் அழிந்தான். அது தெரியாத இல்வலனோ வாதாபியை வெளியே வருமாறு பலமுறை கூப்பிட்டும் வரவில்லை. அதன் பிறகுதான் பார்ப்பனர்கள் அசைவம் உண்ணக்கூடாது என்ற கட்டுதிட்டத்தை அகத்தியர் கொண்டு வந்தார். ஆனால் நாதன் போன்றவர்களோ மறுபடியும் அகத்தியரது முந்தின காலக்கட்டத்துக்கு சென்றுவிட்டனர் என சோ சீரியசாகவே கூறினார்.

இப்போது காட்சி கிருபா வீட்டுக்கு செல்கிறது. ஜ்ட்ஜாத்து மாமியை கொலுவுக்கு அழைத்தது பற்றி பேச்சு வருகிறது. அடுத்த நாள் மாமி மட்டும் வருவார், பிரியா வரமாட்டாள் என்பதை அறிந்த கிருபா ஆர்வம் இழந்தவனாக போகிறான். அதற்குள் பிரியாவிடமிருந்து ஃபோன் வருகிறது. அவன் தங்கள் வீட்டிற்கு வரும்போது ஹெல்மெட்டை அங்கேயே மறந்து வைத்து விட்டதாகவும் அதை ஆள்மூலம் கொடுத்தனுப்பி அவன் அப்பாவிடம் சேர்ப்பித்து விட்டதாகவும் அவள் கூறிவிட்டு ஒரு கடிதமும் அதில் வைத்திருப்பதாக கூறுகிறாள். அதை எடுத்து அவன் படிக்க, அவளுக்கும் தன்மேல் ஒரு அபிப்பிராயம் விழுந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி கொள்கிறான்.

நாதனுக்கு சொந்தமான ஒரு அபர்ட்மெண்டில் பாகவதர் தங்கியிருக்கிறார். அவருக்கு நாதன் சாப்பாடு எடுத்து வந்து அவருடன் பழைய கதைகளை நாதன் பேசுகிறார். அவரை பற்றிய சுவையான ஃப்ளாஷ் பேக் வருகிறது. பாகவதரை தனது friend, philosopher & guide என நாதன் அழுத்தம் திருத்தமாகக் கூறி அவரை நெகிழ வைக்கிறார். அசோக் தனக்கு மகனாக பிறந்ததே பாகவதர் சொற்படி தான் யாகம் செய்ததே காரணம் என்பதை நாதன் திடமாக நம்புகிறார்.

அசோக்கை பற்றி கவலைப்பட வேண்டாம் என பாகவதர் கூறுகிறார். அசோக் உள்ளே ஒரு பெரிய யக்யமே நடக்கிறது என்றும் அவர் கூறுகிறார். அவன் சித்தம் போக்கு சிவன் போக்கு என வாழ்வதாகக் கூறுகிறார். இப்போது அசோக் இருக்கும் கவலைக்கிடமான நிலைகூட வெண்ணெயை காய்ச்சும்போது அது நெய்யாக மாறும் முன்னால் வரும் துர்க்கந்தத்துக்கு சமம் எனவும் அவர் கூறுகிறார்.

பாகவதரின் பேரனுக்கு உடம்புக்கு முடியாமல் போக, அவர்து மகன் தனது அவரிடம் பேரனைப் போய் பார்க்குமாறு கூற அவரும் செல்கிறார். தாத்தா கையால் மந்திரித்து விபூதி இட்டால் தனக்கு குணமாகும் என அவர் பேரன் கூறியதாக அவன் நண்பன் கூற பாகவதர் நெகிழ்ந்து போகிறார்.

சோவும் அவர் நண்பரும் மீண்டும் திரையில். மந்திரிப்பதால் குணமாகுமா என நண்பர் சந்தேகத்தை கிளப்ப, எல்லாவற்றுக்குமே நம்பிக்கைதான் மூலாதாரம் என சோ அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். டாக்டர் உண்மையிலேயே டாக்டர்தானா என்பதை கூட விசாரிக்காது அவர் கொடுக்கும் மருந்துகளை உட்கொள்கிறோம். மருந்துகளால் பக்கவிளைவுகள் வரலாம். ஆனால் மந்திரத்தால் அப்படி ஒன்றும் நேராது. இருப்பினும் மருந்துகளையே நம்புகிறோம் ஏன் என சோ அவர்கள் கேள்வி எழுப்புகிறார்.

14-ஆம் பகுதி
அசோக்கும் பாகவதரும் ஹிந்து சட்டம் பற்றி பேசுகிறார்கள். அதில் மனுவின் சட்டம் பற்றியும் பேச்சு வருகிறது. அது பார்ப்பனருக்கு சாதகமாக இருக்கிறது என்பதை பாகவதர் ஆணித்தரமாக மறுக்கிறார். உடனே சோவும் நண்பரும் திரைக்கு வருகின்றனர். மனுஸ்ம்ருதிப்படி ஒரே குற்றத்துக்கு வர்ணப்படி வெவ்வேறு அளவில் தண்டனைகள் இருப்பது பற்றி சோ அவர்கள் உதாரணங்களுடன் விள்ச்க்குகிறார். எல்லோரையும் விட அதிக த்ண்டனை பார்ப்பனருக்கே. அதே சமயம் அவர்களுக்கிரிய நியமங்களும் கடுமையானவையே. உண்மை கூறப்போனால் தனது தர்மத்தை கைவிட்ட பார்ப்பனனுக்கு ஒரு சலுகையும் தரக்கூடாது என்பதையும் மனுஸ்ம்ருதி அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது. உண்மையில் அரசனுக்குத்தான் அத்தனை பெருமைகளும் சேருகின்றன.

கொலுவுக்கு வர ஏதுவாக பிரியா கேஷுவலாக தனது க்ளாசை கேன்சல் செய்து அன்னையுடன் கிருபா வீட்டுக்கு செல்கிறாள். அவள் வருகிறாள் என்பதை உணர்ந்த கிருபாவின் அர்ஜெண்ட் வேலைகள் எல்லாம் மாயமாக மறைகின்றன. கண்ணாலேயே பேச்சு நடப்பதை சுவைபட காட்டினார்கள். அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே என கிண்டல் செய்யும் முரளி மனோகர் அமைதி காக்க வேண்டும். இங்கு நான் சீரியல் பற்றி பேசுகிறேன், நீ என்ன வேறு கதையெல்லாம் பேசுகிறாய், பிச்சுடுவேன் பிச்சு.

பார்ட்டிக்கு செல்ல நாதனும் வசுமதியும் தயாராகிறார்கள். அசோக் வீட்டிலேயே இருக்கிறான். தோட்டத்தில் அமர்ந்து படிக்கிறான். இரவு 11 மணியளவில் அந்த பக்கமாக வந்த பாகவதர் வேலிக்கு வெளியிலிருந்தபடியே பேசுகிறார். உள்ளே வர மறுக்கிறார். அசோக் பார்ட்டிக்கு போகாதது குறித்து அவனை சீண்டும் வகையில் பல கேள்விகள் கேட்கிறார். பிறகு தான் அவன் ஸ்திதப்பிரக்ஞைனனா என்பதை சோதிக்கவே அவ்வாறு கேள்விகள் கேட்டதாகவும் அவர் கூறுகிறார். கடைசியில், தான் வெகுதூரம் செல்ல வேண்டும் அதற்கு முன்னால் அசோக்கை பார்க்கவே அங்கு வந்ததாக கூறியபோதே, எனக்கு வித்தியாசமாக பட்டது. நான் மட்டும் நாவலை படிக்காதிருந்தால் பாகவதர் அடுத்த எபிசோடில் காலி என முடிவு செய்திருப்பேன். பாகவதர் சென்றதும் உள்ளே வரும் அசோக்குக்கு பாகவதரிடமிருந்தே ஃபோன் வருகிறது. தான் காஞ்சீபுரத்திலிருந்து பேசுவதாக பாகவதர் கூற அசோக் திகைக்கிறான்.

மேலே நடப்பதை பார்க்க நாளைவரை காத்திருக்க வேண்டியதுதான்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் 19.02.2009

அனானி (15.02.2009 காலை 06.44-க்கு கேட்டவர்):
1. சன் டீவி நகைச்சுவை சேனல் ஆதித்யா பத்து தினங்களுக்குள்ளே போரடிப்பது போலிருக்கிறதே?
பதில்: அதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? விடாது எதை பார்த்தாலும் போர்தான் அடிக்கும். ஆகவே அவ்வப்போது பார்ப்பதே நல்லது. சன் டிவியின் கட்டண காமெடி சேனல் ஐடியா வெற்றியடையாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமே. ஆனாலும் கிராமப் பகுதிகளில் விளம்பரங்களில் நல்ல காசு பார்ப்பதாக கேள்விப்பட்டேன் (நன்றி லக்கிலுக்).

2. கலைஞர் டீவி சன் டீவின் ஜெராக்ஸ் காப்பி போல் இருப்பது மாறுமா?
பதில்: எப்படி மாறும்? அத்தனை கற்பனை வறட்சி அல்லவா கலைஞர் டிவியிடம் உள்ளது. அதுவும் கலைஞர் இன்னும் சற்று அதிகமாக நெஞ்சம் இனித்து கண்கள் பனித்தால் கலைஞர் டிவிக்கே சங்கு என்ற நிலையில் அதில் வேலை செய்பவர்களது ஊக்கம் எங்கேயிருந்து வரும்? எதற்கும் நண்பர் லக்கிலுக்கிடமும் கேட்ட போது அவர் சொன்னார் கலைஞர் டிவி சன் டிவிக்கு அடுத்த நிலையில் பிரபலமாக உள்ளது என கூறினார். விஷயம் தெரிந்த அவ்ர் கூறினால் சரியாகத்தான் இருக்கும்.

3. தரத்திலும் புதிய நிகழ்ச்சிகள் தருவதிலும் விஜய் டீவி நம்பர் ஒன் சரியா?
பதில்: எனக்கு எப்படி தெரியும்? நான் அதை பார்ப்பதில்லையே?

4. ஜீ தமிழ் டீவி போட்டியில் சோபிக்கவில்லையே?
பதில்: முதல் காரணம் அது கட்டணச் சேனலாக துவங்கியது. இரண்டாம் காரணம் எஸ்.சி.வி. அதற்கு ஸ்லாட் தரவில்லை. மூன்றாவது காரணம் டிடிஎச்சிலும் வரவில்லை. மொத்தத்தில் முதலும் கோணல் முற்றும் கோணல் (நன்றி லக்கிலுக்).

5. நீங்கள் மிகுதியான நேரம் பார்க்கும் டீவி ஜெயா டீவியா?
பதில்: கண்டிப்பாக இல்லை. எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு. அதற்கு மட்டும்தான் ஜெயா டிவி.

6. சுதந்திர இந்தியாவின் பெரிய சாதனையாக எதைச் சொல்லலாம்?
பதில்: இன்னமும் ஒரு ஜனநாயக நாடாக இருப்பதுதான் அதன் மிகப்பெரிய சாதனை.

7. சோவியத் ரஷ்யாவின் தற்போதைய பொருளாதார/அரசியல் நிலை?
பதில்: கவலைக்கிடமே என்று கூறுகிறது இந்த கட்டுரையை. பதிவர் ஹேயக் ஆர்டர் பார்த்தாரா என தெரியவில்லை. அவரது கருத்துகள் இங்கே வெல்கம்.

8. 1980 வரை ஒற்றுமையாய் ஒரே விவசாய சங்கமாய் சிவசாமி தலைமையில் இருந்த விவசாயிகள் இன்று?
பதில்: இது பற்றி நான் அதிகம் தெரிந்தவனில்லை.

9. உணவு உற்பத்தி குறைந்து கொண்டே போகிறதே?
பதில்: முதலீட்டு செலவுகள் அதிகரிக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் கணக்கில் எடுத்து விவசாயியால் அரிசி விற்கும் விலையை நிர்ணயிக்க இயலாது. அங்கு மட்டும் அரசு கழுத்தை நீட்டிக் கொண்டு வந்து விடும். யாருக்குத்தான் உற்சாகம் வரும்? இதில் உற்பத்தி பாதிக்கப்படுவது புரிந்து கொள்ளக்கூடியதே.

10. விவசாயத்தை தேசியமயமாக்கினால் என்னவாகும்?
பதில்: நேரு அக்காலக் கட்டத்திலேயே முயற்சித்தார். நல்ல வேளையாக கைவிட்டார். தேசீய மயமாக்கினால் அதோகதிதான்.

11. வைகோ மீண்டும் கழகத்தில் இணைய வாய்ப்பு வருமா?
பதில்: அதற்கு ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரின் பிடி கட்சி மீதிலிருந்து தளர வேண்டும்.

12. அப்படி ஒரு நிலை வந்தால் அவர் யார் பக்கம் சாய்வார்? 1.ஸ்டாலின் 2.அழகிரி 3.கனிமொழி 4தமிழரசு 5.தயாநிதி. 6.மு.க.முத்து
மு.க.முத்து எடுத்தவுடனேயே அன்செலக்டட். எனக்கென்னவோ அவர் கனிமொழியைத்தான் தேர்ந்தெடுப்பார் என தோன்றுகிறது.

13. திமுகவில் இப்போது யார் கை ஓங்கி உள்ளது?
பதில்: இப்போதைக்கு அழகிரி.

14. கலைஞர் குணமடைய நடக்கும் யாகங்கள் ?
பதில்: பகுத்தறிவுக்கு எதிரானதாக இருந்தாலும் இதை மட்டும் கண்கள் பனிப்பவரும் இதயம் இனிப்பவரும் தடுக்க மாட்டார் என பட்சி கூறுகிறது.

15. மருத்துவர் ஐயாவின் அரசியல் எதிர்காலம்?
பதில்: பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் எதுவும் கூற இயலும்

16. சுயமரியாதை இயக்கத்தின் தற்போதைய நிலை?
பதில்: சுயமரியாதைக்கு ஸ்பெல்லிங் தேடுகிறது.

17. ஜெ-வைக்கோ பிரிவு வந்து விடும் போலுள்ளதே?
பதில்: எனக்கு அப்படித் தோன்றவில்லையே. வைக்கோவுக்கு ஏதாவது மாற்று ஏற்பாடுகள் தெரியும் வரைக்கும் சுலபத்தில் இருக்கும் இடத்தை விட்டு அசைய மாட்டார் என தோன்றுகிறது.

18. இலங்கைப் பிரச்சனையில் பாஜகவின் திடீர் கரிசனம்? ஏன்?
பதில்: அதானே, ஏன்ன்ன்ன்னு ஜில்ஜில் ரமாமணி ரேஞ்சில் கேட்க வேண்டும் போல தோன்றுகிறது.

19. அறிவொளி இயக்கம் வெற்றியா? இல்லை வழக்கம் போல்?
பதில்: எது என்னவானாலும் சரி ஒரு விஷயத்தை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். என்னை கேள்விகள் கேட்பதன் நோக்கம் எதுவாக இருந்தாலும் என்னை பொருத்தவரை அது கற்கும் அனுபவமாகவே இருக்க வேண்டும் என விரும்புவேன். ஆகவே சில கேள்விகள் நான் அதிகம் அறியாத விஷயத்தை அடிப்படையாக கொண்டு கேட்கப்பட்டால், கூகளண்ணனை சரணடைவது என் வழக்கம். அப்படி பார்த்தது இந்த உரல். It was a pleasant surprise.

20. விவசாயிக்கு கட்டுபிடியாகும் விலை கிடக்காவிட்டால் உணவு உற்பத்தியின் கதி?
பதில்: ஒன்பதாம் கேள்வியைப் பார்க்கவும்.

21. சாதாரண மக்களிடையே 1000 ரூபாய் பழக்கம் அதிகமாயுள்ளதே?
பதில்: சந்தோஷமான விஷயம்தானே பணப்புழக்கம். அவர்களும் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா?

22. பணவீக்கம் குறைவதாய் சொல்வது உண்மையா?
பதில்: விலை உயர்ந்தது உயர்ந்ததுதான். அது உயரும் வேகம் மட்டும் அவ்வப்போது ஏறுகிறது அல்லது இறங்குகிறது. இப்போது இறங்குகிறது என படுகிறது.

23. மத்திய அரசு நோட்டாய் அடித்து தள்ளுகிறதே, பணவீக்கம் மீண்டும் வீங்குமா?
பதில்: back upஇல்லாது நோட்டுகள் அடித்தால் ஜிம்பாப்வேயின் கதிதான் நம் நாட்டுக்கும் வரும்.

24. ஏறிய விலைவாசி குறையாதபோது வங்கி சேமிப்பு வட்டி குறைப்பு நியாயமா?
பதில்: நம் ஜனங்களுக்கு சேமிக்கும் வழக்கம் அதிகம் உண்டு. ஆகவே நிறைய பணம் டிபாசிட்டுகளாக கிடைக்கும் போது அவற்றுக்கான டிமாண்ட் குறைவது ஒரு பக்கம். அதே சமயம் கடன்களும் வழங்கப்பட்டால்தான் வங்கிகளும் லாபம் பார்க்க இயலும். ஆகவே டிபாசிட் வட்டிவிகிதம் கிடைக்க இன்னொரு காரணமும் வந்துள்ளது.

25. வங்கிகளில் விவசாயி அல்லாதோரும் ( including bank staff and officers)
வேளான் கடன் பெறுவது தேசத் துரோகம் அல்லவா?(7 % interset bearing agri jewel loan)

பதில்: முதலில் ஒன்று எனக்கு புரியவில்லை. அது என்ன இந்த கடன்களை ஒருசாராருக்கு மட்டும் குறைந்த வட்டியில் தருவது என்ற நிலை? அது ஏன் என புரியாதபோது பலர் அதை பெறவும் முயற்சிப்பார்கள். இதில் என்ன தேச துரோகம் வரவியலும்? எனக்கு விளங்கவில்லை. இடுப்பில கூடை வச்சுண்டிருக்கிறவங்களுக்கு பெட்ர்ரொமாக்ஸ் லைட் கிடையாது என்று சொல்வது தவறுதான். அதே சமயம் இடுப்பில கூடை வச்சுண்டிருந்தால்தான் பெட்ரோமேக்ஸ் லைட் கிடைக்கும் என்று சொல்றதும் தப்புத்தேன். இது என்ன இழவு க்வாலிபிகேஷன்? யாராவது விளக்குங்கள் ப்ளீஸ்.

26. தேக்குமர வளர்ப்புத் திட்டத்தில் போட்ட பணம், கால்வாசியாவது யாருக்காவது தேறியிருக்குமா?
பதில்: யானை வாயில் போன கரும்பு கால்வாசியாவது எடுக்க முடிந்திருக்கிறதா?

27. விவசாயிகள் சங்கத்தின் இன்றைய நிலை எப்படி?
பதில்: எட்டாம் கேள்விக்கு செல்லவும்.


28.அன்றைய வெள்ளையன் ஆட்சிக்கும் இன்றைய கொள்ளையர்களின் ஆட்சிக்கும் உள்ள வேற்றுமை?
பதில்: லஞ்ச அளவில்தான் வேற்றுமை.

29. மீண்டும் விவேகானந்தர் பிறந்து வந்தால்?
பதில்: நினைக்கவே சுகமாக இருக்கிறது, கற்பனை.

30. தமிழக மந்திரிகளில் இருப்பதற்குள் யாரின் செயல்பாடு பரவாயில்லை?
பதில்: ஸ்டாலின், அது கூட அவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அளவால்தான்.
(மன்னிக்கவும் மீதி இருக்கும் 90 கேள்விகள் வாரம் 30 என்னும் கணக்கில் எதிர்காலத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன).

கமலக்கண்ணன்:
1. தன்னைவிட வயதில் முத்த பெண்ணை திருமணம் செய்வது இப்பெல்லாம் சர்வ சாதாரணமாய் உள்ளதாய் செய்திகள் வருகிறதே, இது பற்றி உங்கள் கருத்து?
பதில்: சாதாரணமாக பெண்கள் சீக்கிரம் மனமுதிர்ச்சி அடைவதால், வயதான பெண்ணை மணப்பவன் பாடு சற்றே கடினம்தான். மற்றப்படி உடல் ரீதியாக பிரச்சினை வரக்கூடாது.

2. பொதுவாய் அலுவலக்த்தில் பணிவில்லாமல் நடக்கும் உதவியாளர்களை பற்றிச் சொல்லும் போது "மூத்தவளை கட்டியது போல்" என்பார்களே?
பதில்: அவ்வாறான பணியாளர்கள் பிரமோஷன் வேண்டாம் என எழுதிக் கொடுப்பவர்கலாக இருப்பார்கள். வங்கி, எல்.ஐ.சி. ஆகிய நிறுவனங்களில் உள்ளது போல. அனுபவம் தரும் தைரியமே அது. அதிலும் அவர்களிடம் வேலை வாங்கும் அதிகாரி அவர்களைவிட குறைந்த அனுபவமும், வயதில் இளையவராகவும் இருந்தால் அதிகாரியின் பாடு சங்கடம்தான். அதைத்தான் மூத்தவளை கட்டியது போல என்று சித்தரிக்கிறார்கள் என நினைக்கிறேன்.

3. உடல் ரீதியாக பிரச்சனைகள் வராதா? தன்னைவிட வயது மூத்த பெண்களோடு தாம்பத்ய உறவு கொண்டால் ஆண்களின் இளமை கேள்விக்குறியாகும் என்பார்களே?
பதில்: ஆணுக்கு பிரச்சினை உடல் ரீதியாக இல்லை. ஆனால் மனரீதியான பாதிப்பு உண்டு.

4. உங்களுக்கு பிடித்த நடிகர் கமல்ஹாசன் கூட இந்தச் சிக்கலில் இருந்தார் என்பார்கள்?(முதல் மனைவி வாணிகூட) ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வயதுவித்யாசம் எது வரை சரி?
பதில்: வாணி கணபதி கமலைவிட பெரியவர் என நானும் கேள்விப்பட்டுள்ளேன். என்னைக் கேட்டால் பெண் ஆணை விட குறைந்தது ஏழு வயதாவது இளையவளாக இருத்தல் நலம்.

5. இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் -இது ஒரு பிரச்சனையாகுமா?
பதில்: எந்த சமன்பாடு குறைகளுமே பிரச்சினைதான். சில காலத்துக்கு பின்னால் மணம் செய்ய ஆண்கள் வரதட்சிணை தரவேண்டியிருக்கும்.


மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/14/2009

எங்கே பிராமணன் மெகா சீரியல் - பகுதிகள் 8, 9, 10

அவ்வப்போது சோ அவர்களும் அவர் நண்பரும் திரையில் தோன்றி சீரியலில் அப்போதுதான் பார்த்த விஷயத்தை விவாதிப்பது போன்ற காட்சியை என்னைப் பொருத்தவரை சீரியல்களில் அதிகம் பார்த்ததில்லை. அவரது “சரஸ்வதியின் சபதம்” என்னும் நாடகத்தை சமீபத்தில் 1972-ல் பம்பாய் ஷண்முகாநந்த சபாவில் வைத்து பார்த்த போது இம்மாதிரி உத்தியை கவனித்துள்ளேன். அது பற்றி பின் எப்போதாவது கூறுவேன்.

இந்த சீரியலைப் பற்றி இதற்கு முன்னால் வந்த பதிவில் கூறியிருந்த ஒரு விஷயத்துடன் எட்டாவது பகுதி ஆரம்பிக்கிறது. அசோக் ஒரு ஆட்டோ டிரைவரிடம் கூறிய விஷயம் பலித்தது பற்றி திகைப்புடன் பாகவதரிடம் அசோக் வீட்டு சமையற்கார மாமி பேசுகிறார். இதை அறிந்த அக்கம்பக்கத்திலிருந்து பலரும் தன்னை இது விஷயமாகக் கேட்டதாகவும் அசோக்கிடம் கூறி தங்களுக்கு ஜோசியம் சொல்ல ஏற்பாடு செய்யுமாறு கேட்டு படுத்துவதாகவும் அவர் கூறுகிறார். பாகவதரும் திகைக்கிறார். அத்துடன் பாகவதரால்தான் அசோக் இம்மாதிரி விசித்திரமாக நடந்து கொள்கிறான் என சில கோஷ்டிகள் பேசுவதாக வேறு சமையற்கார மாமி பாகவதருக்கு கூறுகிறார்.

அப்போது அப்பக்கமாக வந்த அசோக்கிடம் பாகவதர் கேட்க, ஒரு வெள்ளந்தியான புன்னகையை சிந்தி விட்டு அசோக் இது காக்கா உட்கார ஏதோ விழுந்த மாதிரி இருப்பதாகக் கூறி சற்றே நிறுத்த, மாமி பனம்பழம் என எடுத்து கொடுக்கிறார். அசோக் பாட்டுக்கு எதையும் கவனியாது அங்கிருந்து செல்கிறான்.

இது இப்படியிருக்க தனது தோப்பனாருக்கு பதிலாக ஜட்ஜாத்துக்கு புரோகிதம் செய்யப் போன அந்த இளைஞன் கிருபா இப்போது தனது வழக்கமான நவீன உடையில் பைக்கை ஓட்டிக் கொண்டு வர, ஜட்ஜினுடைய பெண்ணான பிரியாவைப் பார்த்து அவளுக்கு அவள் வீடு வரை லிஃப்ட் தருகிறான். அங்கு சற்று நேரம் அப்பெண்ணுடன் பேச்சு. ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகம் செய்து கொள்கின்றனர். அவனுக்கு கிரிக்கெட்டில் லயிப்பு என்றால், அவளுக்கு நடனத்தில். அப்போதுதான் அந்த சுட்டிப் பெண் கிரிக்கெட்டும் நடனத்துக்கும் பல ஒற்றுமைகள் உண்டு எனக்கூற, கிருபா திகைக்கிறான். கிருபா சில பேட்டிங் ஸ்ட்ரோக்குகளை காண்பிக்கிறான். உதாரணத்துக்கு பிட்சில் முன்னேறி பந்தை அடிப்பது, ஒரு முட்டி போட்டு பந்தை சுழற்றி அடிப்பது, ஹூக் ஷாட் அடிப்பது, பின்வாங்கி கட் செய்வது ஆகிய ஒவ்வொன்றையும் அவன் செய்து காட்ட காட்ட அப்பெண்ணும் அதற்கேற்ற நடன அசைவுகளைக் காட்டுகிறாள். ரொம்பவும் புத்துணர்ச்சியை தந்த காட்சி இது.

இந்த இடத்தில் ஒரு சிறு திசைமாற்றல். சமீபத்தில் 1968-ல் வெளி வந்த எம்.ஜி.ஆர். படம் காதல் வாகனம். அதில் ஒரு சீன். ஒய். விஜயா வெவ்வேறு மேற்கத்திய இசை ராகங்களை வாசித்து காட்ட, எம்.ஜி.ஆர். கர்நாடக இசையில் அந்தந்த ராகங்களுக்கான பெயரைக் கூறி வாசித்தும் காட்டுவார். இதை எடுத்து கொடுத்தது குன்னக்குடி வைத்தியநாதன் என்று படித்ததாக ஞாபகம். அதே போல சங்கராபரணம் படத்தில் சங்கர சாஸ்திரிகள் மேற்கத்திய இசையில் ஒரு ட்யூன் போட்டுக் காட்டி அவரை கேலி செய்தவர்களை வாயடைக்கச் செய்வார்.

இப்போது சோ அவர்களும் அவர் நண்பரும் வந்து பரத நாட்டியம் பற்றி பேசுகின்றனர். பரதம் தேவைதானா என நண்பர் கேட்க, அதன் பெருமைகள் ப்ற்றி சோ பேசுகிறார். பரத முனிவரால் வடிவமைக்கப்பட்டது இந்த மகோன்னதமான கலை. சிவபெருமானே அதன் போஷகர். பால சரஸ்வதி, சுதாராணி ரகுபதி போன்ற மேதைகளால் சீரமைக்கப்பட்ட வழிமுறைகள் கொண்டது அது. ஒரு கால்த்தில் கொச்சைப்படுத்தப்பட்டு வந்த அக்கலை இவரைப் போன்றவர்களால் சமுதாயத்தில் எல்லோரும் ஏற்று பலர் விரும்பிக் கற்கும் கலையாக வருகிறது. ஆனால் தற்போதைய வணிகமயமாக்கலில் சற்றே பாதிக்கப்பட்டுள்ளது.

நாதன் அவர்கள் தலைவராக இருக்கும் ஒரு கிளப்பில் தலைவருக்கான தேர்தல் வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தலைவராக நாதன் இருந்து வந்த நிலையில் இவ்வருடம் தலைவர் தேர்தலில் அவரை எதிர்த்து இன்னொரு பார்ப்பனர் போட்டி போடுகிறார். தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே நாதன் ஒரு பார்ப்பன வெறியர் என்றெல்லாம் உதார் விடுகிறார். வீட்டில் பூஜை புனஸ்காரம் என்றெல்லாம் வைத்து கொண்டு வெளியில் பார்ட்டிக்கு போவது, அசைவம் சாப்பிடுவது என்பது பற்றியெல்லாம் பேசப்படுகிறது.

ஒரு சாதாரண கிளப் எலெக்‌ஷனுக்கா இத்தனை பந்தா என்று கேட்கும் அளவுக்கு விஷயங்கள் போகின்றன. அது பற்றி சோ கூறுகையில் கேவலம் 40 பேர் மட்டுமே உறுப்பினராக உள்ள கிளப்புகளில் கூட இந்த தேர்தல் ஜுரம் விளையாடுவது பற்றி கிண்டல் அடித்தார். அரசியல் அவ்வளவு தூரம் நம் வாழ்வில் ஊடுறுவியுள்ளது என்றும் அவர் கூறி கவலை தெரிவித்தார்.

இந்த சீரியலின் ஒன்பதாம் பகுதி தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏமாற்றமே அளித்தது. கிருபா பேசும் சமயம் அவன் அம்மா குரலோ அண்ணா குரலோ வர, அப்பா கம்பர் ஜெயராமன் பேசும் போது தங்கை குரல் வர முதல் விளம்பர இடைவேளை வரும்வரை சொதப்பலாகி போயிற்று. ஜட்ஜ் வீட்டுக்குப் போய் தங்கள் ஆத்து கொலுவுக்கு அழைக்க வேண்டும் என கிருபா தூண்டில் போட, அவனும் அவன் தங்கையும் அங்கு போக, அவாத்து பெண்ணை இவன் தூரத்திலிருந்து ரசிக்க, இவன் ரசிப்பதை பார்க்கும் தங்கையும் அவனை குறும்பு பார்வை பார்க்க என சீன்கள் செல்கின்றன. காதல் இண்டெரஸ்டையும் மெதுவாக இந்த சீரியலில் நுழைக்கப் பார்ப்பது புரிகிறது.

பாகவதரின் பேரனுக்கு சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரியில் நாதனின் சிபாரிசால் அட்மிஷன் கிடைக்கிறது. பாகவதரின் மாட்டுப் பெண்ணுக்கு மாமனார் மாமியாரைக் கண்டால் ஆகாது என்பதை விளக்கும் காட்சிகள் வருகின்றன. பாகவதரும் அவர் மனைவியும் பேரன் ஹாஸ்டலுக்கு சென்று அவனை பார்க்கின்றனர். அவனும் அவர்களை கண்டு மகிழ்ச்சியடைகிறான். தலைமுறை இடைவெளிகள் காட்டப்படுவது மனதில் தைக்கும் வண்ணம் உள்ளன.

சீரியலின் பத்தாம் பகுதி அதற்கு முந்தைய பகுதியினை பார்த்ததும் தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்பட்ட ஏமாற்றத்தைப் போக்கியது. சோ அவர்கள் பார்ப்பனர் தமிழர்களா என்ற கேள்விக்கு பதிலளிப்பதுடன் இப்பகுதி ஆரம்பித்தது. பர்ப்பனர்கள் தமிழர்கள் இல்லையெனக் கூறப்படுவதை சோ அவர்கள் நையாண்டி செய்தார். இந்த அரசியல்வாதிகள் மட்டும் வீட்டில் தெலுங்கு பேசுவார்கள், உருது பேசுவார்கள் ஆனால் அவர்கள் எல்லாம் தமிழர்கள். ஆனால் வீட்டிலே தமிழ் மட்டுமே பேசும் பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை என ஏன் கூற வேண்டும்? ஏனெனில் அவர்கள் வடமொழியையும் ஆதரிக்கிறார்கள் அத்னாலா? அப்படியே வடமொழிக்கு என்னதான் ஆட்சேபணை இருக்கவியலும்?

வடமொழி இந்த நாட்டின் பொக்கிஷம். பல படைப்புகள், பொன்மொழிகள், நாடகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அந்த மொழியை ஒரு சாதியினருக்கு மட்டும் உரித்தாக பார்ப்பது வெறும் துவேஷம் அன்றி வேறொன்றும் இல்லை. இன்னொரு ஆட்சேபணை பார்ப்பனர்களது பேச்சு மொழி. அகத்துக்காரர், அகத்துக்காரி ஆகியவை மறுவி முறையே ஆத்துக்காரர், ஆத்துக்காரி என வருவதில் மற்றவருக்கு என்ன பிரச்சினை? அவர்கள் என்பது மறுவி அவாள் என வருகிறது. இதில் என்ன ஆட்சேபணை. வூட்டுக்காரி, வூட்டுக்காரன்னா பரவாயில்லை, அவுங்க, அவுக, அவுங்கன்ங்கன்னா பரவாயில்லை. என்ன நடக்கிறது நாட்டில்? தமிழை பிழையின்றி பேசுபவர்களிள் ஒரு குழுவினரான பார்ப்பனரைக் கண்டு மட்டும் ஏன் இந்த துவேஷம், என்றெல்லாம் விளாசினார் சோ அவர்கள். இதையெல்லாம் எடுத்து கூறும் நோக்கத்திலும் தான் கிளப் சீன்களை சேர்த்ததாக சோ அவர்கள் கூறினார்.

பாகவதரின் பேரனை பார்க்க அவன் தாய் தந்தையர் முன்னறிவிப்பின்றி ஒரு ஞாயிறு அன்று வந்து பார்த்தால் அவன் ஹாஸ்டலில் இல்லை. அவன் ஒவ்வொரு ஞாயிறன்றும் ஹாஸ்டலை விட்டு சென்று மாலை லேட்டாகத்தான் வருவான் என அவன் நண்பன் கூறுகிறான். பாகவதரின் மகன் தனது தாய் தந்தையை காஞ்சீபுரம் சென்று பார்க்கும் விருப்பத்தைத் தெரிவிக்க அவன் மனைவி அதற்கு தடா போடுகிறாள். தாங்கள் வந்தது தம் பையனைப் பார்க்க மட்டுமே தனது மாமனார் மாமியாரை அல்ல என அழுத்தம் திருத்தமாக கூறுகிறாள். பையன் எங்கே போயிருப்பானென்பது தெரிந்தால் அந்த அம்மையார் குதிக்கப் போவதை வரும் திங்களன்றுக்கான பகுதியில் பார்க்கலாம். ஆனால் அதை யாருமே சுலபமாக ஊகித்து விட முடியும் என்று மட்டும் சொல்லி வைக்கிறேன். இந்தக் காட்சி நாவலில் வராவிட்டாலும் என்னால் ஊகிக்க முடிகிறது.

நாதனின் தூரத்து உறவினர் நீலக்ண்டன் அசோக் ஒரு மடத்துக்கு செல்வதைப் பார்த்து நாதனிடம் போட்டு கொடுக்க, நாதன் அசோக்கை கூப்பிட்டு விசாரிக்கிறார். அவனோ தான் சில சந்தேகங்களுக்கு விடை பெறவே அங்கு சென்றதாகக் கூற அவர் கோபப்பட்டு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தன்னை கேட்குமாறு கூறுகிறார். அவனும் சீரியசாக் ‘ஆத்மானுபூதி’ என்றால் என்ன பொருள் என கேட்க, நாதன் பேய்முழி முழிக்கிறார். அசோக் தான் யார் என்னும் கேள்வியில் ஆழ்ந்திருப்பதால் இவரது ஆட்சேபங்களை சட்டை செய்யாது அங்கிருந்து செல்கிறான்.

இப்போது மீண்டும் சோவும் அவர் நண்பரும் திரையில் தோன்றுகின்றனர். நண்பர் சோவிடம் சீரியசாக ‘ஆத்மானபூந்தி” என்றால் என்ன என்று கேட்க, சோ அவரை நட்புடன் கலாய்த்து சாடுகிறார். “ஆமா ஆத்மானபூந்திதான், காராபூந்தி மாதிரின்னு வெச்சுக்கோங்களேன். தயிரில காராபூந்தி போட்டு தயிர் வடை பண்ணா இன்னும் பிரமாதமாக இருக்கும். ஏன் சார் படுத்தறீங்க? அது ‘ஆத்மானபூதி’ என விளக்குகிறார். தன்னை அறியும் முயற்சிகளின் அனுபவங்களையும் இந்த வார்த்தை குறிக்கிறது.

அசோக் ஏன் இப்படி இருக்கிறான், அவன் எதைத் தேடுகிறான், அவன் யார் ஆகிய விடைகளுக்கு பதிலளிப்பதே இந்த சீரியல்.

இப்போது டோண்டு ராகவன்.

ஆத்மானபூந்தி என்றதுமே என் நினைவுக்கு வந்தவர் நம்ம செந்தழல் ரவிதான். எனது சம்பவாமி யுகே யுகே என்னும் பதிவுக்கு அவர் இட்டப் பின்னூட்டம், “என்னாது, சாம்பார்ல பல்லி உழுந்துடுச்சா”?

அசோக் மடத்துக்கு செல்வது பற்றி நாதன் கவலைப்பட்டது போல எனது தந்தையும் நான் அடிக்கடி கதாகாலட்சேபங்களுக்கு விரும்பிப் போவதை மிகவும் கண்டித்தார். அதுவும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் வடமொழி ஆசிரியராக அச்சமயம் பணியாற்றிய பிரும்மஸ்ரீ ராமகிரூஷ்ண சாஸ்திரிகள் உபன்யாசம் என்றால் அடியேன் தவறாது ஆஜர் ஆகிவிடுவேன். அப்போது எனக்கு 9-10 வயது. இந்த வயசில் விளையாட வேண்டிய பையன் இம்மாதிரி சென்றால் அவன் எங்காவது மடம், சாமியார் என்றெல்லாம் போய்விடப்போகிறானோ என அவர் அக்காலக் கட்டத்தில் கவலைப் பட்டது இப்போது நினைவுக்கு வருகிறது. பாவம் அவர். அதே சிறுவன் தற்சமயம் 63 வயது ஆகப்போகும் நிலையிலும் நன்கு அனுபவித்து வாழும் ஆசையை விடாது இருக்கப்போகிறான் என்பதை சமீபத்தில் 1956-ல் உணரவில்லை.

இந்த சீரியலில் இன்னொரு விஷயமும் என் கண்ணுக்கு தெரிகிறது. அதுதான் பார்ப்பனர்களுக்குள் ஒற்றுமையின்மை. பெரிய வித்வத் விஷயங்களில் வார்த்தை உச்சரிப்பு முதற்கொண்டு ஒருவருக்கொருவர் அடித்து கொள்வார்கள். கோவில் யானைக்கு விபூதிப் பட்டை போடுவதா, நாமம் போடுவதா, நாமம் போட்டாலும் வடகலை நாமமா, தென்கலை நாமமா என்றெல்லாம் அடித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே ஒற்றுமையின்மையை வெளியிலிருந்து அடாவடியாக தாக்குதல்கள்கள் வரும்போதும் பிடித்து கொண்டு தொங்கலாமா என்று என்னை நானே பலமுறை கேள்வி கேட்டிருக்கிறேன். இந்த கிளப் எலெக்‌ஷன் சீன்கள் அக்கேள்வியை என்னுள் மறுபடியும் எழுப்பியுள்ளது. பிராம்மணாம் அனேகத்வம் (பார்ப்பனர்களுக்குள் கருத்து வேற்றுமைகள் உண்டு) என்ற வடமொழி சொலவடையும் இங்கு நினைவுக்கு வருகிறது.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கம்மல்களை தொலைப்பது போன்ற கடினமான விஷயங்களைச் செய்ய தங்கமணிகளுக்கு எளிய வழிகள்

பாப்பாவுக்கு இனி தங்க கம்மல் இல்லை என்னும் தலைப்பில் பதிவர் கவிதா அவர்களின் இடுகைதான் எனது இப்பதிவுக்கு இன்ஸ்பிரேஷன் என்பதை கூறிவிட்டு துவக்குகிறேன்.

அப்பதிவைப் படித்ததும் சமீபத்தில் 1968-ல் குமுதத்தில் படித்த ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. அதன் சாரத்தை சற்றே இற்றைப்படுத்தி இதோ தருகிறேன்:

கம்மல்/மூக்குத்திகளைத் தொலைப்பது மிகவும் கடினம். ரொம்ப மெனக்கெட வேண்டும். அதைச் செய்ய தங்கமணி கீழ்க்கண்ட ஸ்டெப்களில் செல்ல வேண்டும்.
1. ஒரு வெள்ளிக்கிழமையாக பார்த்து தேர்ந்தெடுக்கவும். மாதத்தில் கடைசி வெள்ளிக் கிழமையாக இருப்பது முக்கியம். கணவரது அலுவலகத்தில் நிதியாண்டு முடிவு களேபரம் இருப்பது அவசியம். ஏன் என்பதை கடைசியில் நீங்களே உணரலாம்.
2. சமையல் மேடையின் மேல் சிங்க் இருக்குமிடமாகப் பார்த்து பக்கத்தில் உட்காரவும். சேலைத் தலைப்பு மேடை மேல் பரவியிருக்க வேண்டும். சிங்க் குழாய் திறந்து தண்ணீர் உளே விழுந்து கொண்டிருக்க வேண்டும்.
3. அவ்வாறு பரவிய தலைப்பின் மேல் ஒரு கிண்ணியை வைக்க வேண்டும். அதில் மூக்குத்தி/கம்மலைக் கழட்டிப் போடவும்.
4. கையில் செல்பேசி இருப்பது அவசியம். தோழி குட்டி ரேவதி பற்றி எஸ்ரா அவர்கள் கூறியது, பக்கத்தாத்து கோமளம் மாமி அப்பளம் இடும்போது, அவாத்து மாமா நான்கைந்து அப்பள உருண்டைகளை லவுட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் மேற்படி கோமளவல்லி மாமியால் கையும் களவுமாக பிடிபட்டு அர்ச்சிக்கப்பட்டது போன்ற நாட்டுக்கே முக்கியமான விஷயங்களை செல்பேசியை தலையை காக்காய் மாதிரி ஒரு பக்கம் சாய்த்து தோளின் மேல் வைத்து கன்னத்தால் அழுத்திக் கொண்டே பேச வேண்டும்.
5. வேலைக்காரி ஜயகவுசல்யாவை விட்டு “அம்மா, பாத்திரம் தேய்க்க புளி போடு, புளி போடு” என்று காது புளிக்கும் வரை கத்தச் சொல்ல வேண்டும்.
6. பேச்சு தடைப்பட, “இதோ போட்டுத் தொலைக்கிறேன்” என கத்திக் கொண்டே விருட்டென எழுந்திருக்க வேண்டும்.
7. கிண்ணி சிங்கில் விழுந்து கவிழ, கம்மல் தண்ணீரில் விழுந்து சிங்க் வெளிக் பைப்புக்குள் செல்ல வேண்டும்.

ஆக இம்மாதிரி ஏழுக்கு குறையாத கஷ்டமான ஸ்டெப்புகள் தங்கமணிக்கு உள்ளன.

ரங்கமணி செய்ய வேண்டியதோ ரொம்ப சுலபமான வேலை. சிங்கிலிருந்து வெளியே சென்ற கம்மலை சாக்கடையில் கையை விட்டு நோண்டி அடுத்த சில மணிகளுக்குள் எடுக்கலாம், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு, அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு வேறு கம்மல் வாங்குவது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/12/2009

டோண்டு பதில்கள் 12.02.2009

காண்டீபன் தனஞ்செயன்:
முதலில் இவரது கேள்விகளை பற்றி சில வரிகள். அவை எனது தூங்கியது போதும் மாணவர்களே விழிமின், எழுமின் என்னும் பதிவுக்கான பின்னூட்டத்தில் கேட்கப்பட்டவை. பாவம், அவர் பாட்டுக்கு எதார்த்தமாக கேட்டு வைக்க நானும் அவற்றை மாட்டிக் கொண்டீர்களா என்ற ரேஞ்சில் இந்த பதில்கள் வரைவுக்கு கொண்டு வந்து விட்டேன். முரளி மனோகர் வேறு “இந்த பெரிசுக்கு வேறு வேலை இல்லை” என்றெல்லாம் கோட்டா செய்ய ஆரம்பித்து விட்டான். ஓக்கே இப்போது முதலில் அந்த பின்னூட்ட கேள்விகளுக்கு போவோமா?
1) இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகிட்ட எல்லாரையுமே முட்டாள்கள்னு சொல்லுகிறீர்களா?
பதில்: முட்டாள்களோ இல்லையோ, ஆனால் சொந்த நாட்டின் விடுதலைக்கு போராடினார்கள். சிலருக்கு தியாகி பென்ஷன் கிடைத்தது. பலருக்கு கிடைக்கவில்லை. பலரது படிப்பு பாதிக்கப்பட்டது. அவர்கள் முட்டாள்கள்னு அவங்களோட பிள்ளைகள் எல்லாம் இப்ப சொல்லறாங்க. நிறைய தியாகிங்களே பல சமயங்களிலே நொந்திருக்காங்க. இதுல கொடுமை என்னன்னா சுதந்திர போராட்ட காலத்துலே தன்னோட வேலையை பாத்துட்டு இருந்தவங்க சுதந்திரம் வந்ததுமே பெரிய பதவியெல்லாம் பெற்று செட்டில் ஆனாங்க. தியாகிங்க பாவம். இதெல்லாம் கூட பரவாயில்லை. சொந்த நாட்டுக்காக செஞ்சாங்க. ஆனால் எங்கோ சம்பந்தமே இல்லாது துருக்கியில் கிலாஃபத் போராட்டத்துக்கு நம்ம காந்தி ஆதரவு தந்து இங்கே கேரளாவிலே மாப்பிளா கலவரம் போன்ற இனக்கலவரமே நடந்தது. அதுகாக இன்னமும் காந்தியை பாதிக்கப்பட்ட எல்லோருமே எல்லாம் திட்டறாங்க.

2) பகத்சிங்க், வாஞ்சிநாதன் இன்னும் பலரெல்லாம் உயிர விட்டது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவுன்னு சொல்லுகிறிர்களா?
பதில்: வாஞ்சிநாதனின் விதவைக்கு அறுபதுகளில் பென்ஷன் தர முயற்சிகள் நடந்த போது அவர் பார்ப்பனர் என்பதற்காகவே திராவிடக் கழகம் தடுத்தது. அந்த ஏழைப் பெண்மணி, கணவனை இழந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் கஷ்டப்பட்டவர், பென்ஷன் பெறாமலேயே இறந்து போனார். இதுக்கென்ன சொல்வீங்க?

3) இதேபோல இந்திய சுதந்திர போராட்ட காலத்துல மாணவர்களைப் புத்தகங்களோட பூட்டி வெச்சிருந்தா இன்னைக்கு நாம சுதந்திர காற்றை சுவாசிக்க முடிந்திருக்கும்னு நினைக்கிறீங்களா?
பதில்: உங்களுக்கு வேணும்னா நீங்களும் இறங்கி போராடுங்களேன். யார் தடுத்தது? நான் கூறியது சராசரியான, உணர்ச்சிவசப்படும் மாணவர்களுக்கு அறிவுரை. அவ்வளவே. மற்றப்படி இரண்டாம் உலக மகாயுத்தத்திலே பிரிட்டன் பயங்கரமா சேதம் அடைந்தது. அவங்களாலே காலனிகளை சமாளிக்க முடியல்லைங்கறதுதான் நிஜம். உண்மையை சொல்லப் போனா 1947-லேயே அது கிடைக்கும்னு நம்மவங்களிலே யாருக்குமே அப்ப தெரியாது. நிறைய பேர் அதிர்ச்சியே அடைஞ்சாங்க. காலனி இந்தியா ஒரு உள்ளுக்குள் உளுத்த மரம். வெளியில் தெரியவில்லை. இரண்டாம் உலக மகா யுத்தம் வந்து அதுக்கு மரண அடி கொடுத்தது. அதெல்லாம் மேக்ரோ அளவுக்கான விஷயங்கள். இப்ப உங்க கேள்விக்கு வரேன். அப்படி சுதந்திரம் வந்த ஆண்டு அதை துக்க நாளாக அறிவித்தார் பெரியார் அவர்கள். குறைந்த பட்சம் தமிழகத்தையாவது வெள்ளைக்காரனே ஆள வேண்டும் என்ற பொருளில் கூட பேசியிருக்கார். அவர் உங்களோட கேள்விக்கு என்ன பதில் சொல்லியிருப்பார் என்பதை நினைத்து பாருங்களேன். சுவாரசியமான பொழுதுபோக்கு.

4) மாணவர்கள் அரசியலில் தலையிடக்கூடாதென்றால் அரசியலில் தலையிடும் உரிமை அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் உள்ளதா?
பதில்: வாழ்வில் அததுக்கு நேரம் என உண்டு. மாணவப்பருவம் என்பது திரும்ப வராது என்பதை மறக்காமலிருந்தால் சரி.


வஜ்ரா:
1. மங்களூரில் முதலில் பப் அம்னீசியா மீது குண்டர்கள் தாக்குதல் நடந்தது. எல்லா செய்தி சேனல்களும், செகுலர் பிளாக்குகளும் ஃபாசிசம் என்றே கத்தினார்கள். இது போல் சென்னையில் 5 நட்சத்திர ஓட்டல்களில் அடிக்கடி ரவுடிகள் புகுந்து தமிழ் பண்பாட்டைக் காப்பாற்றியுள்ளனர். அப்பொழுதெல்லாம் ஒரு செய்திச் சேனலும், இப்படி பின்னாடியே போய் லைவ் டெலிகாஸ்ட் செய்வது கிடையாது. ஏன்?
பதில்: அதற்காக ராம சேனையினர் செய்தது அட்டூழியம் இல்லை என ஆகிவிடாது. அதே சமயம் நீங்கள் சொல்வதிலும் உண்மை உண்டுதான். தமிழ்ப்பண்பாட்டை காப்பதாக புருடா விடுபவரை கண்டு கொள்வது குறைவுதான். தமிழ்த் தீவிரவாதம் செய்யும் வீரப்பரை ஆதரித்த முதல்வர் இருக்கும் நாட்டில் வேறு என்ன எதிர்ப்பார்ப்பது?

2. பா.ஜ.க ஆட்சி என்றாலே அதை கவிழ்ப்பதற்கு ஏன் இவ்வளவு வெறியுடன் திரிகிறார்கள் ? (பா.ஜ.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இப்படித்தான் நடக்கும் என்று ஓப்பன் ஸ்டேட்மெண்டை ஒரு பதிப்பக நிறுவனருமான பிரபல வலைப்பதிவர் எழுதுகிறார்) பா.ஜ.க மீது ஏன் இந்த கொலை வெறி?
பதில்: அது அவரது அரசியல் அஜெண்டாவாக இருக்கலாம். ஆளைவிடுங்கள்.


அரசு:
1. "ஸ்வீட் ட்ரீம்ஸ்" "வெட் ட்ரீம்ஸ் " விளக்கவும்?
பதில்: ஸ்வீட் ட்ரீம் ரொம்ப நேரம் ஓடினால் அது வெட் ட்ரீமாக மாறும் அபாயம் உண்டு.

2. உங்கள் அனுபவம் எப்படி?
பதில்: எல்லோருக்கும் வந்தது போன்ற அனுபவம்தான். இதில் ஸ்பெஷலாக சொல்ல ஒன்றுமில்லை.

3. எத்தனை வயது வரை மருத்துவ ரீதிரியாக இந்த வகைக் கனவுகள் சாத்தியம்?
பதில்: சாதாரணமாக கல்யாணம் ஆனவுடன் நிற்க வேண்டும். ஏனெனில் இயற்கையான வடிகால் கிடைத்து விடுகிறது (pun intended).

4.இதற்கு ஏதாவது ஹைபெர் லிங் உண்டா?
பதில்: இல்லை

5. அதிகாலை காணும் கன‌வுகளுக்கு நடக்கும் என பலன் சொல்வது உண்மையா?
பதில்: இதற்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை.

6. வானில் பறப்பது போல் கனவு காண்பவர் பொருளாதார உச்சிக்கு செல்லும் செய்தி சொல்வதாக உள்ளது மிகைபடுத்தும் செயலா?
பதில்: பல முறை பறப்பதாக நான் கனவு கண்டுள்ளேன். இதில் என்ன வேடிக்கை என்றால் ஒவ்வொரு முறையும் அக்கனவு வரும்போது, இத்தனை நாள் கனவாகக் கண்டது இப்போது பலிக்கிறது பார் என்ற உணர்வுதான். ஆனால் கடைசியில் எழுந்த உடனேயே இம்முறையும் இதுவும் கனவுதான் என்றவுடன் ஏமாற்றமாக இருக்கும். என்னைத் தொடர்ந்த கனவு ஒன்று மாதிரின்னு வச்சுக்கலாமே.

7. கனவுகளைக் கூட பதிவு செய்து பின் பார்க்கும் வசதி செய்யப்பட்டுவிட்டது பற்றி?
பதில்: என்னது? அப்ப எல்லோரும் பார்ப்பாங்களா? அப்புறம் எப்படி பேரறிஞர் கனவுல வந்ததெல்லாம் சொல்லி கப்சா அடிக்கிறதாம்?

8. கனவுகள் ஆழ்ந்த தூக்கமா? இல்லையா?
பதில்: கனவுகள் வந்தால் சரியான தூக்கம் இல்லை என ஒரு கோஷ்டி சொல்லித் திரிகிறது. என்னைப் பொருத்தவரை அது உண்மையில்லை. எனக்கு கனவு வராத நாளே கிடையாது. என்ன, முக்கால்வாசி கனவுகள் நான் முழித்த சில நொடிகளில் நான் அதை உணரும்போதே விலகிச் சென்று விடும். எனக்கு பல கிண்டலான கனவுகள் கூட வருவதுண்டு. அதெல்லாம் பற்றி ஒரு நாள் நான் பதிவாகப் போடலாம் என்று எச்சரிப்பது முரளி மனோகர். அவனுக்கு எனது எல்லா கனவுகளும் அத்துப்படி.

9. பகலில் காணும் கனவுக்கும் இரவுக் கனவுக்கும் விதியாசம் என்ன?
பதில்: எனக்கு அவற்றுள் ஒரு வித்தியாசமும் புலன்பட்டதில்லை. நான் கல்லூரி வகுப்புகளில் தூங்கும்போதும் கனவு கண்டுள்ளேன்.

10. சிலசமயம் கனவுகள் தடை பெற்ற பிறகும் சீரியல் போல் தொடர்வது எப்படி?
பதில்: இது ஆழ்மனதின் கைங்கர்யம்.


அனானி (09.02.2009 காலை 07.56-க்கு கேட்டவர்):
1. இவர்களில் யாரையெல்லாம் நீங்கள் கண்டிக்க விரும்புகிறீர்கள்.விளக்கத்துடன்?
1. தனது வேலைக்கரார்களை இந்த நூற்றாண்டிலும் கொத்தடிமை போல் நடத்தும் மூர்க்க முதலாளி; 2. அரசின் சலுகைகளை உரியவர்களுக்கு கிடைக்காமால் தனதாக்கி கொள்ளும் சுயநலம் மிகுந்தவர்கள்; 3. நல்ல மாமியார் மாமனாரை கொடுமை செய்து உணவு கூட கொடுக்காத கொடிய மன‌துடன் உலாவரும் மருமகள்கள்; 4. நல்ல மருமகளை மீண்டும் மீண்டும் பணம் கொண்டுவரத்தூண்டும் வ்டிவுக்கரசி/நளினி டைப் மாமியார்கள்; 5. கொழுத்த சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்ய கையேந்தும் அரசு பணியாளர்கள்; 6. யு.டி சட்டத்தை பிறர் மேல் தவறாய் பயன்படுத்துவோர்; 7. இட ஒதுக்கீட்டு சலுகையால் கிடத்துள்ள‌ அரசு வேலையை சரிவர நிறை வேற்றாதவர்கள்; 8.பொருட்களின் விலை குறையும் போதும் விலையை குறைக்க மன‌தில்லா பகல் கொள்ளை அடிக்கும் வியாபாரிகள்; 9. சொந்தங்களின் இயலாமையை பயன்படுத்தி பாலியிய‌ல் பலாத்காரம் செய்யும் ராவணவம்சம்; 10. அப்பாவி மக்களின் உண்ர்ச்சியை தூண்டி குளிர் காய நினைக்கும் அரசியல் வித்தகர்கள்

பதில்: இதில் என்ன சாய்ஸ் வேண்டியிருக்கிறது? எல்லோரையுமேதான் கண்டிக்க விரும்புவேன். 6-ஆம் நம்பர் கேள்வி தவிர, ஏனெனில் யு.டி. என்றால் என்ன எனக்கு புரியவில்லை.


எம். கண்ணன்:
1. வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு உங்கள் ஓட்டு? திமுக? அதிமுக? விஜய்காந்த்? டி.ஆர்.பாலு?
பதில்: அதிமுக

2. 'நான் கடவுள்' படத்திற்காக ஜெயமோகனுக்கு அரசு விருது (வசனத்திற்காக) கிடைத்துவிட்டால் சாரு நிவேதிதா என்ன செய்வார்? (மேலும் பல பட வாய்ப்புகள் கிடைத்து பணமும் அதிகம் ஜெமோவுக்கு கிடைக்கக் கூடும்)
பதில்: இதெல்லாம் ஒரு கேள்வியா? வயிறெரிவார், வேறு என்ன செய்வார் என நினைக்கிறீர்கள்?

3. சிவாஜி கணேசனின் படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த 10 படங்கள் யாவை? ஏன்?
பதில்: பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், தில்லானா மோகனாம்பாள், தேவர் மகன், என் தம்பி, எங்க மாமா, தங்கைக்காக... இதுக்கு மேல் தேறவில்லையே.

4. எந்த ஹீரோயின்களைப் பார்த்து அதிகம் (அந்தக் காலத்தில்) ஜொள்ளு விட்டிருக்கிறீர்கள் ? எந்த அழகிற்காக ? (கண்கள், முகம், எடுப்பான மார்புகள், இடை, நடனம், overall சூப்பர் ஃபிகர்...)
பதில்: தேவிகா, பத்மினி எடுப்பான மார்புகளுக்காக, அஞ்சலிதேவி, நக்மா கண்களுக்காக, பத்மினி, வைஜயந்திமாலா நடனம், ஜெயமாலினி ஓவரால் சூப்பர் ஃபிகர்

5. மருத்துவ இன்சூரன்ஸ் பிரிமியம் மிகவும் அதிகமாகிவிட்டதே? பல மருத்துவ மனைகளிலும் இன்சூரன்ஸ் இல்லாமல் உள்ளேயே விடுவதில்லையே? பெரும்பாலான மிடில் கிளாஸ் எப்படி சமாளிப்பது?
பதில்: அமெரிக்காவின் பிரச்சினையாக இருந்தது இப்போது இந்தியாவுக்கும் பரவி விட்டது. கடவுள் தயவால் இதுவரை அது எதுவும் இல்லாது நாட்களை ஓட்டி விட்டேன். இனிமேல் பார்ப்போம்.

6. லக்கிலுக், அதிஷா, கேபிள் சங்கர் போன்ற பதிவர்கள் முதல் நாள் முதல் ஷோ முறையில் பெரும்பாலான படங்களை பார்த்து விமர்சமும் உடனுக்குடன் எழுதுகின்றனரே - எப்படி டிக்கெட் கட்டுப்படியாகிறது ? Free PASSசா ? வலைப் பதிவில் எழுதுவதை விட, இவர்கள், பத்திரிக்கையில் எழுதினால் பணமும் கிடைக்குமே ? இவர்களின் விமர்சனம் பத்திரிக்கைகளின் விமர்சனத்தை விட மிக நன்றாக எழுதப்படுகிறதே ? பத்திரிக்கைகள் ஏன் இவர்களை(யும் அதைப் போல நன்றாக எழுதும் பதிவர்களையும்) பயன்படுத்திக் கொள்ளவில்லை?
பதில்: சினிமா பாஸ்கள் கிடைப்பதுவே காரணம். அதிஷா அவர்கள் பற்றீத் தெரியாது. கேபிள் சங்கர் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர். லக்கியின் கம்பெனியும் சினிமா தயாரிப்பில் அதிக செயல்பாட்டில் உள்ள நிறுவனம். அவர் சினிமா பார்ப்பது கூட அவர் வேலை சம்பந்தப்பட்ட விஷயமே.

7. ஜெயமோகன் வெளிநாடுகள் செல்லப் போகிறாராமே ? அவர் சென்றுவிட்டு வந்த பிறகு வாசகர்களுக்கு படிக்க நல்ல கட்டுரைகள் கிடைக்கும்தானே? அவரது 'எனது இந்தியா' கட்டுரை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: ஜெயமோகனுக்கென்ன. அற்புதமான எழுத்தாளர். நீங்கள் கேட்டது எல்லாம் கிடைக்கும். மற்றப்படி அவர் ‘எனது இந்தியா’ பற்றி எழுதியதுடன் கிட்டத்தட்ட முழுக்கவே ஒத்து போகிறேன்.

8. ஸ்டாலின் பதவியை வைத்து பல நல்ல காரியங்கள் செய்து வருகிறார். தன்னுடைய துறையை நன்றாகவே கையாள்கிறார். அழகிரி முதல்வரானால் தமிழ்நாட்டில் என்னவெல்லாம் நடக்கும்?
பதில்: பிரியாணி கிடைக்கும்.

9. (சசிகலா) நடராஜன் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? தேர்தல் நெருங்கினாலே அவர் சுறுசுறுப்பு ஆவாரே?
பதில்: பாஜகவுடன் நெருக்கமாகப் போவது போன்ற ஒரு தோற்றம் எனக்கு தெரிகிறது.

10. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பொறுப்பில் ஒரு பிராமண அதிகாரியை (மாலதி - ஹோம் செக்ரடரி) வைத்திருப்பது கலைஞரின் சாதுரியமா ? இல்லை ராஜ தந்திரமா ? இல்லை மாலதி அவர்களின் திறமையா?
பதில்: முழுக்க முழுக்க நிர்வாக சம்பந்தமுள்ள விஷயம். இதில் இருக்கும் பல உள்குத்துகள் எனக்கு புரியவில்லை.


அனானி (09.02.2009 பிற்பகல் 03.34-க்கு கேட்டவர்):
1. அதிமுகவில் இருக்காரா இல்லையா எனும் கேள்விக்கு விடை தெரியாச் சூழலில்,திடிரென பார்ப்பனர்களுக்கு 7 % இட ஒதுக்கீடு கலைஞர் தருவார் என புதுக் கோஷத்துடன் வரும் எஸ்.வி சேகர் திமுக பக்கம்?
பதில்: அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா.

2. திமுகாவின் இலங்கைத் தமிழர் காப்பு போராட்டம் ஒரு ஏமாற்று வித்தை என்பதை மக்கள் அறிவார்களா?
பதில்: முதற்கண் திமுகவினர் அறிவார்களா என்பதை யோசித்தல் சரியாக இருக்கும்.

3. நெல்லை மாவட்ட ஸ்டாலின் விசுவாசிகள் அழகிரியாருக்கு(தென் பகுதி காவலர்) அடிபணிய மறுப்பது சரியா? என்னவாகும்?
பதில்: அது என்னவோ தெரியவில்லை, முக அவர்களின் குடும்ப சண்டையில் கட்சி எடுக்காது இருப்பது கட்சியில் உள்ள மற்றவர்களுக்கு நல்லது. இல்லையானால் அடித்து கொள்பவர்கள் திடீரென ஒன்றுபட்டு, பெரியவருக்கு கண்கள் பனிக்கச் செய்து இதயத்தை இனிக்கச் செய்து விடுவார்கள். அது சரி என்ன கேட்டீர்கள்? அழகிரியின் கொத்தடிமையாக இல்லாமல் ஏன் ஸ்டாலினின் கொத்தடிமையாக இருக்கிறர்கள் என்றுதானே? சுயமரியாதை தத்துவத்தில் ஊறிய கட்சி என ந்சொல்லிக் கொள்ளும் ஒரு கட்சி ஆட்களுக்கு இதெல்லாம் தேவைதான்.

4. மு.க முத்துவின் வாழ்க்கை கதை குமுதத்தில் பார்த்தீர்களா? எப்படி? அழ்கிரியாரின் ஆடு புலியாட்டம் முன்னால் ஸ்டாலின் பாச்சா பலிக்குமா?
பதில்: மு.க. முத்து பற்றிய கதையை படிக்கவில்லை. மற்றப்படி ஸ்டாலின் அழகிரி மோதலில் அழகிரிக்கு சாதகமாக பல விஷயங்கள் உள்ளன.

அனானி (10.02.2009, மாலை 06.22-க்கு கேட்டவர்):
1. அரசு திட்டங்களில் மொத்தச் செலவில் 50 - 60 % அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கமிஷனாய் போய் விடுவதால்தான் அரசு வேலைகள் தரம் சொல்லிக் கொள்ளும் விதமாய் இல்லாமலிருக்கிறதா? இதற்கு விடிவு உண்டா?
பதில்: என்ன, மிகுதி 40 % நல்லபடியாகச் செலவாகிறதா? ரொம்பத்தான் ஆப்டிமிஸ்ட் சார் நீங்கள்.

2. திமுக அரசில் இது மாதிரி வேலைகள் கனஜோராய் நடப்பது பற்றி?
பதில்: ஊழல் விஷயத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கிடையில் பலத்த சரியான போட்டி. ஒரு கட்சியின் ஊழலை மட்டும் சிறப்பாகக் கூறி இன்னொரு கட்சியின் ஊழல் சாதனையை கூறாமல் விடுவது அநீதி. அவர்களுக்கும் கிரெடிட் வேண்டாமா?

3. திட்டங்கள் போடுவது கடன் வாங்கி கமிஷன் அடிக்கவா?
பதில்: பின்னே வேறு எதுக்காம்?

4. எந்த வேலையும் செய்யாமல் கோடீஸ்வர்களாய் சுற்றிவரும் அரசியல் வாதிகளின் மீது வருமானவரித் துறையின் நடவடிக்கை அவ்வளவு சொல்லிக் கொள்வதுமாதிரி இல்லையே?
பதில்: இத்தனைக்கும் வருமான வரிச்ச்ட்டங்கள் கடுமையானவை அதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பிராசிக்யூஷன் குற்றத்தை நிரூபிப்பதைவிட, குற்றம் சாட்டப்பட்டவர்தான் தன்னை நிரபராதி என்பதை நிறுவ வேண்டியுள்ளது. இருப்பினும் ஏன் இந்த மந்த நிலை? ஆனால் ஒன்று, கருப்புப்பணம் பல வருமான வரி ஆய்வாளர்கள் வீட்டில் ரெய்டுகளில் சிக்கியுள்ளது. ஏதோ புரிகிற மாதிரி இல்லை?

5. மத்திய மாநில பட்ஜெட்டில் சலுகை மழை கொட்டப்போகிறதா?
பதில்: கொட்டாவிட்டால்தான் ஆச்சரியம்.

6. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை,வக்கத்தவனுக்கு வாத்யார் வேலை என காமராஜ் ஆட்சியில் சொல்வார்களே இப்போது கலைஞர் ஆட்சியில்?
பதில்: குடுமத்தில் உள்ளவருக்கு மந்திரிப் பதவிகள்

7. அரசுப் பள்ளியில் வேலைபார்க்கும் செகண்டிகிரேடு ஆசிரியர்கள் கூட, அரசு பள்ளியின் கல்வியை நம்பாமல் தன் பிள்ளைகளை மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்ப்பது நியாயமா?
பதில்: அவர்களுக்குத்தானே அரசு பள்ளிகளில் உள்ல ஆசிரியர்களின் தரம் பற்றிய சுய தரிசனம் அதிகம்?

8. இன்று கணவன் மனைவி இருவரும் செகண்டிகிரேடு ஆசிரியர், ஆசிரியை என்றால் அவர்களின் மாத மொத்தவருமானம் பல ஆயிரங்கள், ஆனால் அவர்களின் கற்பிக்கும் திறமை?
பதில்: நல்ல ஆசிரியர்கள் எக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள். ஆனால் எப்போதுமே சிறுபான்மையினராகவே உள்ளனர்.

9. பல கிராமங்களில் இவர்கள் உபரிப் பனத்தை பிறருக்கு கந்து வட்டிக்கு கொடுப்பது பற்றி?
பதில்: கொடுமை, இது உண்மையாக இருக்கும் பட்சத்தில்.

10. அரிசி விலை ஒரு கிலோ 50 ரூபாய் ஆகப் போவது பற்றி?
பதில்: கூடிய சீக்கிரம் அந்த நிலை வந்து விடும்.

11. நதிகள் இணைப்பு திட்டம் எந்த நிலையில் உள்ளது?
பதில்: வரைபட அளவில்தான் உள்ளது.

12. அரசியல்வாதிகள் இதை நடக்கவிடுவார்களா?
பதில்: ஏன் மாட்டார்கள்? நிறைய கமிஷன் கிடைக்குமே?

13. விவசாயம் இதனால் பலன் பெறுமா?
பதில்: நல்லபடியாக திட்டமிட்டால் நிச்சயம் பலன் உண்டு.

14. பசுமைப் புரட்சியால் கிடைத்த நன்மைகள்?
பதில்: சௌகரியமான அளவில் உணவுப்பொருள்கள் கையில் இருப்பது. ஆனால் கடந்த சில காலமாக அதற்கும் ஆபத்து போலிருக்கிறதே.

15. நெல்லை மாவட்டத்தில் இதற்கு பிள்ளையார் சுழி போடப் போவது உண்மையா?
பதில்: எதற்கு? நதிநீர் இணைப்பு பற்றி கேட்கிறீர்களா, அல்லது பசுமைப் புரட்சி பற்றியா? நதிநீர் விஷயம் என்றால் ஒரு படத்தில் தாமிரபரணியில் எல்லா நதி நீர்களையும் இணிக்கிறேன் எனக் கூறி மக்களை கூட்டி, தாமிரபரணி நதியில் ஒவ்வொரு நதியின் நீரிலிருந்தும் ஒவ்வொரு பாட்டில் தண்ணீர் பிடித்து வந்து ஊற்றிய கஞ்சா கருப்பு மாதிரி செய்யாதிருந்தால் சரிதான். பை தி வே அந்தப் படம் தாமிரபரணிதானே? விஷால், நதியா, பிரபு ஆகியோர் நடித்தது?

16. தமிழ்நாட்டில் யாருடைய (அரசியல்,ஜாதி) சிலைகள் அதிகம்?
பதில்: தகவல் பெரும் உரிமை சட்டத்தை உபயோகித்து கேட்க வேண்டிய விஷயம்.

17. தினம் போற்றி பராமாரிக்கப்படுவது யாருடையது?
பதில்: அது என்ன வோ தெரியாது, ஆனால் அம்பேத்கர் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு உண்டு.

18. கவனிப்பு இல்லாமல் இருப்பது யாருடையது?
பதில்: மக்கள் கவனிக்காவிட்டால் என்ன, காகங்கள், புறாக்கள் ஆகியவை கவனிக்கின்றனவே.

19.பிற மாநிலங்களில் நிலவரம் எப்படி?
பதில்: தமிழகம் அளவுக்கு மோசமாக இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

20. வருங்காலத்தில் தமிழகத்தில் யாருடைய சிலைகள் அதிகம் நிறுவப்படலாம்?
பதில்: அண்ணா, ஏனெனில் அவரை ஆதரிப்பதில் வம்பு வராது.

21. மேல் மருத்துவத்தூர் பங்காரு அடிகளை நோக்கி இவ்வளவு கூட்டம் ?காரணம்?
பதில்: பெண்களை எல்லா உடல்நிலையிலும் கடவுள் சன்னிதியில் வந்து பூஜை செய்ய அனுமதிப்பது ஒரு முக்கியக் காரணம்.

22. இன்றைய நிலையில் நிரந்திர அடிமை யார்? 1.விவசாயக் கூலிகள் 2. விவசாயிகள் 3. கிராமக் கைத்தொழில்புரிவோர்
பதில்: மாறும் பொருளாதார நிலைக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்ளத் தெரியாதவர்களூம் அடிமைகளே. நீங்கள் மேலே சொன்ன மூவர் மட்டுமல்ல.

23. கோவை சத்குரு ஜக்கி வாசுதேவ்(ஈசா யோகா மையம்) அவர்களின் மகா சத்சங்கத்தில் கலந்த அனுபவம் உண்டா? 24. அவர் நடத்தும் மகாசிவராத்திரி பற்றி? 25.அவரது பசுமைக்கரங்கள், மக்கள் உடல் நலத்திட்டம், படிப்புதவி, கிராம முன்னேற்றம் இதில் எது முழு வெற்றியை நோக்கி?
பதில்: மூன்று கேள்விகளுக்கும் சேர்த்தே பதில் சொல்லி விடுகிறேனே. ஜக்கி வாசுதேவை விகடனில் படித்தது தவிர வேறு ஒன்றும் அவரைப் பற்றி எனக்கு தெரியாது.

சேதுராமன்:
1.கிரீன்வேஸ் ரோடின் பெயர் மாற்றம், வரும் லோக்சபா தேர்தல் சமயம் சிறுபான்மை கட்சி ஓட்டுகளுக்காக செய்யப்படுகிறதா?
இந்த செய்தியையா கூறுகிறீர்கள்? டி.ஜி.எஸ். தினகரனின் பெயரை ஏன் வைக்க வேண்டும்? ஒன்றும் புரியவில்லையே?

2. இன்று ஹிந்து பத்திரிகையில் நாலு பக்கங்களுக்கு மேலாக, மத்திய அரசு விளம்பரங்கள் உள்ளன. இரண்டு தவிர மற்றவை தமிழ் நாடு சம்பந்தமுள்ளவையல்ல! ஆனால் சேது மாவீரன் பாலு (2), ஸ்பெக்ட்ரம் ராஜா(2), ரெயில் வேலு (2) அவர்களுடைய புகைப்படங்களுடன் வெளி வந்துள்ளன - இவை தேவைதானா?
பதில்: மிக மிகத் தேவை, லாலுவுக்கு.

3. நேற்று ஹிந்துவில் ஒரு முழு பக்க விளம்பரம் பார்த்தீர்களா? பீஹார் சம்பந்தப்பட்டது - ரெயில் வேலு ஃபோட்டோவுடன். லாலுவின் கைங்கர்யம் இது - இந்த விளம்பரத்தில், பீஹாரின் மாஜி முதல்வர், மாஜி எம்.எல்.ஏக்கள்,அன்னை சோனியா உள்பட எல்லோரும் காட்சி தந்தனர் - தற்போதைய பீஹாரின் முதல்வரைத்தவிர! என்ன அரசியல் இது? ரயில்வே லாபத்தில் நடக்கிறது என்றால் அரசு பணத்தை இவ்வாறு ஊதாரித்தனமாக செலவு செய்யலாமா?
பதில்: வெறும் அரசியல் காழ்ப்பு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல இயலும்?


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது