7/25/2008

டோண்டு பதில்கள் 25.07.2008

பாண்டிய நக்கீரன்:
1. தமிழக மின்வெட்டு அதிகமாகிக் கொண்டே போகிறதே (தினம் 4-5 மணி நேரம்?)
பதில்: இத்தனை நாட்களாக அதிகாரபூர்வமாக இல்லாது நடத்தப்பட்டது இப்போது வெளிப்படையாக வந்துள்ளது. ஒரு விதத்தில் நல்லதுக்குத்தான். வி.ஐ.பி. பகுதிகளுக்கும் மின்சார வெட்டு இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளலாம். அவ்வாறு ஷெட்யூலில் இல்லை என்றால் ஏன் இல்லை என தட்டிக்கேட்கலாம்.

2. சென்னையில் எப்படி?
பதில்: தலைநகரம், ஆகவே அவ்வளவாக வெட்டு இல்லைதான். எங்கள் ஏரியாவில் முற்பகல் 11 மணியிலிருந்து 12 மணி வரை. மாநிலத்தின் மற்ற இடங்கள்? மனதுக்கு கஷ்டமாகவே உள்ளது.

3. பருவ மழை போக்கு காட்டுகிறதே?
பதில்: நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என ஔவை கூறினாள். ஒருவர் கூடவா நல்லார் இல்லை? அவர்களில் யாரும் ஒருவர் கூடவா உளறவில்லை?

4. மின்வெட்டு போய் மின் சப்ளை 4 மணிநேரம்தான் ஆகும் போல் உள்ளதே?
பதில்: அவ்வளவு மோசமாகாது நிலைமை என நம்புவோமே.

5. யார் காரணம்? dmk or admk?
பதில்: சரியான திட்டமிடாமை, மின் திருட்டுக்களை அரசியல் நோக்கத்துக்காக அனுமதித்தல் ஆகியவையே காரணம். இதில் அதிமுக மற்றும் திமுக இரு கட்சிகளிலுமே வேற்றுமை ஏதும் இல்லை.

6. இந்த நிலைக்கு தள்ளியது அரசா? பயனீட்டாளர்களா? (பங்கு என்ன)?
பதில்: மேலே உள்ள கேள்வியின் பதில்தான் இதற்கும்.

7. பகலில் எரியும் தெருவிளக்குகளை அணைத்தாலே?
பதில்: அதற்கென்று ரிலே செட் செய்கிறார்கள். அதன் கஷ்டம் என்னவென்றால், மின்சாரம் வேலை செய்யாத போது ரிலேயின் கடிகார அமைப்பும் வேலை செய்யாது. மெதுவாக லைட் ஆன் ஆகும் நேரங்கள் தள்ளிப்போகும். ஆகவேதான் பகலில் விளக்குகள் எரிகின்றன.

8. பணியாளர்கள் பணி நேரம் தாண்டியும், அவர்கள் போன பிறகும் அலுவலக அறைகளில் பயன்படும் மின் சாதனங்களை நிறுத்தினாலே?
பதில்: கணக்கு போட்டு கொள்ளுங்கள். ஒரு ஃபேன் 100 வாட்டுகள், இரட்டை குழல் விளக்கு 80 வாட்டுகள். ஆக, ஒரு ஃபேன் மற்றும் ஒரு இரட்டைக் குழல் விளக்கு சேர்ந்து 180 வாட்டுகள். 12 மணி நேரம் விடாது எரிந்தால் இரண்டு யூனிட்டுகளுக்கு மேல். அம்மாதிரி லட்சக் கணக்கான ஜோடிகள். யோசியுங்கள்.

9. அணுஒப்பந்தம் கூட (to increase the power supply only 10 %) இதில் பெரும் பங்கினை அளிக்க முடியாதாமே?
பதில்: இப்போதைக்கு உடனே பலன் இல்லைதான். ஆனால் ஒப்பந்தம் போடாவிட்டால் எப்போதுமே பலன் கிடைக்காதே.

10. மின்பற்றாக்குறை நமது முன்னேற்றத் தடையாய் மாறுவது பற்றி?
பதில்: அதுதான் கொடுமை. அவசரம் அவசரமாக மொழிபெயர்ப்பை கணினியில் தட்டச்சிடும்போது மின்சாரம் போனால் என்னாவது? எரிச்சல்தான்.

11. மின் பகிர்மானத்தில் உள்ள குளறுபடி பற்றி?
பதில்: அத்துடன் சேர்ந்து மின்சார திருட்டும் நிலைமையை மோசமாக்குகிறதே.

12. இலவச மின்சாரம் (குடிசை, விவசாயம்) தவறாய் பயன்படுத்துவது பற்றி (ஒரு பகுதியினரால்)
பதில்: இங்கும் மோடி மாதிரி முதல்வர் தேவை.

13. தேவை இல்லா இடத்தில் ஒளி உமிழும் விளம்பர விளக்குகள் பற்றி?
பதில்: மின்சாரம் போவது மட்டுமல்லாமல், பல இடங்களில் போக்குவரத்தில் இருக்கும் காரோட்டிகளது கவனத்தை திசை திருப்பி விபத்துகள் நடக்கவும் காரணமாகி விடுகின்றன.

14. அரசியல் கட்சிகளின் (தலைவர்களின் வருகை, பிறந்த நாள் விழாக்கள், மாநாடுகள்) கண்சிமிட்டும் விளக்கு விளம்பரங்கள்?
பதில்: திருட்டு மின்சாரத்தின் ஊற்றுக் கண்கள்.

15. இதற்குப்பிறகும் தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என அறிக்கை விடுவது பற்றி/?
பதில்: அமைச்சருக்கே இது குறித்து நாணமாகி விட்டது போலிருக்கிறது. அதிகாரபூர்வமாகவே மின் வெட்டு வந்து விட்டது.

16 பிற மாநிலங்களில் (வட) நிலையென்ன?
பதில்: அங்கும் அதே நிலைகள்தான். நேரடி அனுபவம் இல்லை.

17. காற்றாலைகள் கண்ணில் நிறைய தெரிகின்றனவே?
பதில்: ஆனால் காற்று எங்கே?

18. தனியார்மயம் பகிர்மானத்தில் என்றார்களே?
பதில்: அதை செய்தால் மட்டும் போதாது. மின்பகிர்வு நியாயமானதாகவும் அரசியல் அச்சுறுத்தல்கள் இல்லாதும் இருத்தல் வேண்டும்.

19. பம்பாயில் இந்தக் குறைபாடில்லை என்கிறார்களே (அணுவின் /அம்பானியின் புண்ணியமா)
பதில்: தெரியவிலை. நான் சமீபத்தில் 1974-ல் பம்பாயை விட்டு வந்த பிறகு மூன்று முறைதான் போயிருக்கிறேன். மொத்த நாட்கள் 6. அங்கு பரவாயில்லையாகத்தான் இருக்க வேண்டும்.

20. மோடியின் குஜராத்தில் எப்படி மின் தடை) (as on 18-07-2008)
பதில்: கேள்வி 'நுனிப்புல்' ராமச்சந்திரன் உஷா அவர்களுக்கு திருப்பப்படுகிறது.

எழில் அரசு:
21. மாமியார் ஒடைச்சா மண் கொடம், மருமக ஒடைச்சா பொன்கொடமாம்!
"அப்போ நாத்தனார் உடைத்தால்" என்று இக்கேள்விக்கு ஏற்கனவே பதில் கூறியாகி விட்டது.

22. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்
அதற்காக சோம்பேறியாக இருக்கக் கூடாது.

23. அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்.

24. உப்பு தின்னவன் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும்
தண்ணி கிடைக்கல்லைன்னா என்ன செய்வது?

25. மகள் வாழ்கிற வாழ்க்கைக்கு மாசம் பத்து கட்டு விளக்குமாறாம்.
பிரிட்டனில் 1947-க்கு முன்னால் காலனி அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள் எண்ணிக்கை காலனிகள் எல்லாம் சுதந்திரமடைந்த பிறகு பல மடங்கு ஆனது பற்றி வயிரெறிந்து பார்க்கின்சன் விதியை உருவாக்கியவர் நினைவுக்கு வருகிறார்.

26. வழுக்கி விழுந்தவனுக்கு அரிவாள்மனை கூரை முட்டு கொடுத்த மாதிரி
அது சரி, அரிவாள்மனையினால் வெட்டப்படவில்லைதானே?

27. கழுதைக்கு வாக்கப்பட்டு கத்தாமல் இருக்க முடியுமா
கத்தலாம் பரவாயில்லை, உதையெல்லாம் வாங்காது இருந்தால் சரிதான்.

28. இடிச்சவன் பொடைச்சவன் இருக்க எட்டி பாத்தவன் கொட்டிகிட்டு போனானாம்.
காத்திருந்தவன் பெண்டாட்டியை கூட்டிட்டு போக நேத்து வந்தவனாக இருப்பானோ?

29. ரெண்டு வீட்டு விருந்தாடி கெண்டையேறி செத்தானாம்.
வேறு எது ஏறி செத்தால் பரவாயில்லையாம்?

30. ஈ கடிச்ச புண்ணுக்கு எழவு கொண்டாடினானாம்.
இது கொசுவுக்கு செய்யும் துரோகம் என்று கொசுக்களின் கொபசெ கோப அறிக்கை தந்துள்ளார்.


விக்ரம்:
1) Persons like komanakrishnan, luckylook etc., why without any logic, blindly support DMK, despite knowing that their leader is selfish, corrupt and take care of only his family and not 'thondars'?
இக்கேள்விக்கு அவர்கள்தான் பதிலளிக்க வேண்டும் அல்லவா?

2) on what basis they spew venom on brahmins?
அவர்கள்தான் எதிர்வினை தராது தன் வழி போகிறவர்கள். மற்றவர்களை கூறிவிட்டு யார் உதை வாங்குவதாம்?

3) any plan of starting counseling center for youths?
இல்லை.

4) why cant you use your blogging popularity by contesting in election?
டோண்டு ராகவன் திவாலாவதில் என்ன அப்படி ஆசை?

5) with the same reason, any plan of entering cini field?
நேரமில்லை என்று நான் புருடாவிட்டால் யாராவது கண்டுகொள்வார்களா?

6) when will our country be free of communists?
எப்போது கடலில் அலைகள் ஓயும்?

7) how will u compare the commerically popular restaurents with the old type (such as Iyer mess, mami mess etc) messes which serve tasty food? which one will u prefer?
எனக்கு மாமி மெஸ்ஸே போதும். ஆனால் என்ன சிலமெஸ்களில் சாப்பாடு ரொம்ப சுவையாக இருப்பதால் பெரிய கியூவே நிற்கும்.


ராமகிருஷ்ணஹரி:
Please give your answers in " dondu's style.(as on 19-07-2008)
1. A person who does not get what he wants or needs is a frustrated person and will be easily provoked to rage.
பதில்: கேட்கும் பொம்மை கிடைக்காது கோபத்துடன் கூச்சல் போடும் குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த விஷயத்தில் மட்டும் எல்லோருக்கும் பெரிய அளவில் முன்னனுபவம் இருக்கும்.

2. To choose between two equally bad alternatives in a serious dilemma
அதாவது வோட்டு திமுகாவுக்கா அதிமுகாவுக்கா என்று கேட்பது போல இல்லை?

3. When a person really wants to do something, he will find a way of doing it.
இதைத்தான் மனதிருந்தால் மார்க்கபந்து என்று வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். கூறியுள்ளார்.

4. A bad experience or a horrifying incident may scar one's attitude or thinking for a lifetime
சிறு வயதில் பாலியல் கொடுமைக்கு ஆளான ஒரு சுட்டிப் பெண் குழந்தை பிற்காலத்தில் கல்யாணம் என்றாளே பயந்தாள். அந்த நிகழ்ச்சிதான் என் நினைவுக்கு வருகிறது.

5. The first in line will be attended to first.
அன்று ஜி.ஜயராமன் முதலில் நின்றான். ஹிந்தி வாத்தியார் சேஷாத்ரி ஐயங்காரால் நன்றாக கவனிக்கப்பட்டு கையில் இரண்டு பிரம்படிகள் வாங்கினான்.

6. A friend who helps when one is in trouble is a real friend
இதை விட முக்கிய விஷயம் துன்பம் வந்த போது ஓடிவிடும் நண்பனை அவன் நண்பன் இல்லை எனக் கண்டு கொள்வது.

7. If you say discretion is the better part of valor, you mean that avoiding a dangerous or unpleasant situation is sometimes the most sensible thing to do
புலி பதுங்குவது பாய்வதற்காக அல்லவா? நீங்கள் சொல்லும் discretion is the better part of valor என்பது கூட மொண்டித்தனமாக போரிட்டு மடிவதைவிட அப்போதைக்கு பின்வாங்கி பிறகு வந்து சண்டை போடுவதே மேல் என்று நினைப்பதையே குறிப்பிடுகிறது.

8. A person's age is immaterial - it is only when he thinks and feels that he is ageing that he actually becomes old
என்னுடைய வயது ஆவதைப் பற்றிய உணர்வு பதிவை படித்து விட்டீர்கள் போலிருக்கிறதே.

9. Those people who talk a lot and are always teaching others usually do not do much work.
அவர்களும் என்னதான் செய்வார்கள்? மற்றவர்களுக்கு அறிவுறை கூறுவதிலேயே டைம் போவதால் சொந்த வேலைகளில் பின்னடைவு.

10. One who has nothing to do will be tempted to do many mischievous acts
சிரங்கு பிடிச்சவன் கை சும்மா இருக்காது என்பது இதுதானோ?

பாண்டிய நக்கீரன்:
1. ஒரு ஓட்டுக்கு 25 கோடியாமே?
சீப்பா இருக்கற மாதிரி இருக்கே!

2. பணநாயகமா, ஜனநாயகமா ?
பணக்கார ஜனநாயகம்.

3. லஞ்சத்தை இவர்களா ஒழிப்பார்கள்?
கண்டிப்பாக ஒழிப்பார்கள். இங்கு சில அனுமானங்கள் தேவை. அதாவது லஞ்சம் என்றால் லஞ்சப் பணம். அதை ஒழிப்பது என்றால் அதை செலவழிப்பது என்று பொருள்.

4. அத்வானிதான் அடுத்த பிரதமரா?
அதற்கு பி.ஜே.பி. ஜெயிக்க வேண்டுமே. காங்கிரஸ் இன்னும் சில முட்டாள்தனமான வேலைகள் எல்லாம் செய்ய வேண்டும் அதற்கு.

5. மதவெறி என்பது இருக்கா?(பா.ஜா.விடம்-இன்னும்)
யாரிடம் இல்லை?

6. இடதுசாரிகளும் பாஜாகாவும் ஒரே அணியில்? எப்படி?
எப்படி இருக்கும் என கேட்க எண்ணினீர்களா?

7. தவளையும், எலியும் கதையின் முடிவு இதில் மாறுமா?
இதில் யார் தவளை, யார் எலி, யார் கழுகு?

8. சோமனாத் சட்டர்ஜி செய்வது சரியா?
நல்ல சபாநாயகர், அப்படியே இருந்து விட்டு போகட்டுமே. கறைபடாத கைகளை உடையவர்களில் அவரும் ஒருவர் எனக் கேள்விப்படுகிறேன்.

9. அரசு கவிழ்ந்தால்?
நல்லவேளையாக கவிழவில்லை.

10. அணு ஒப்பந்தம் வெற்றி பெறாவிட்டால்?
இப்போதைக்கு விடை கூற இயலாது.

தென்காசி:
விடுகதைகள் டோண்டு அவர்களின் விடை என்ன
1. அடித்தால் விலகாது அணைத்தால் நிற்காது அது என்ன?

காற்று.

2. உணவை எடுத்தாலும் உண்ணமாட்டான் அவன் யார்?
உணவில் விஷம் வைப்பவன்.

3. கிளை இல்லாத மரம் வெட்ட வெட்ட வளரும் அது என்ன?
நகம்.

4. யாரும் விரும்பாத மீசைக்காரனுக்கு எங்கு சென்றாலும் அடி உதை அவன் யார்?
விடாது கரப்பு (நன்றி பெயரிலி).

5. தலையைச் சீவினால் தாகம் தீர்ப்பான் அவன் யார்?
இளநீர்

6. கையுண்டு காலில்லை, கழுத்து உண்டு தலை இல்லை, உடல் உண்டு உயிர் இல்லை அது என்ன?
சட்டை

7. பழகினால் மறக்காதவன் பயந்தோரை விடாதவன் அவன் யார்?
நாய்.

8. அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?
காஸ்ட்ரோவின் தம்பி.

9. சிவப்புப் பெட்டிக்குள் சிறிய பெரிய செய்திகள் அது என்ன?
விமானத்தில் உள்ள பிளாக் பாக்ஸ் என்று அழைக்கப்படுவது சிவப்பு நிறத்தில்தான் இருக்கும் என்று படித்துள்ளேன்.

10. ஊரார் கண்ட கோலம் உடையவன் காணாத கோலம் அது என்ன?மனைவியின் விதவைக் கோலம். ஆனால் அதையும் கவுண்டமணி ஒரு படத்தில் கண்டு விட்டார்.

11. பார்க்க அழகு பாம்புக்கு எதிரி அது என்ன?
மூங்கில் தடி.

12. உடன்வருவான் உதவிக்கு வரமாட்டான் அவன் யார்?
நிழல்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/24/2008

போலி டோண்டுவுடன் நேரடி சந்திப்பு

செந்தழல் ரவி, உண்மைத் தமிழன், ஓசை செல்லா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் மூர்த்தியின் மேல் புகார் அளித்து அது பத்திரிகைகளிலும் வந்தது தெரிந்ததே. அதற்கு ஒரு வாரம் கழித்து நானும் சென்றேன். எனது புகார் சைபர் கிரைமில் ஒரு உதவி ஆய்வாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவரிடம் என் பெயரில் மூர்த்தி தயாரித்த ஆர்க்குட் ஆபாச பக்கங்களை காண்பித்தேன். மொத்தம் 23 ப்ரொஃபைல்கள். எல்லாவற்றையும் பொறுமையாக அவர் ஸ்க்ரீன் ஷாட்டுகள் எடுத்தார். நேரம் ஆக ஆக மூர்த்தியின் மேல் அவரது கோபம் அதிகரிக்க ஆரம்பித்தது. போலி டோண்டு பற்றி நான் இட்ட பதிவுகள் எல்லாவற்றையும் பார்த்தார் அவர்.

முதல் காரியமாக ஆர்க்குட் பக்கங்களை அவர் கூகளுக்கு எழுதி அழிக்கச் செய்தார். டுண்டூ பதிவர் எண்ணில் போடப்பட்டிருந்த மூன்று வலைப்பூக்கள் அழிக்கப்பட்டன. வெளியில் சொல்லாமல் கமுக்கமாக விசாரணை நடத்தப்பட்டது. கூகள் நிறுவனம் ஒத்துழைத்தது. மலேஷியாவுக்கும் செய்திகள் பறந்தன. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக நேற்று ஒரு விஷயம் நடந்தது.

நேற்று சைபர் க்ரைமில் வைத்து போலி டோண்டு மூர்த்தியை நேருக்கு நேர் சந்தித்தேன். கேசை விசாரித்து வரும் அதிகாரிகளே மூர்த்தியின் செயல்பாடுகளைப் பார்த்து நொந்து போயினர். புகார் அளித்தவன் என்ற ஹோதாவில் என்னையும் அங்கு அழைத்ததால் நான் அங்கு சென்றிருந்தேன்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேர விசாரணை. மூர்த்தி இட்டிருந்த பதிவுகளின் அச்சடிக்கப்பட்ட காகிதங்களுடன் பதிவர் உண்மைத் தமிழனும் ஆஜரானார். என் தரப்புக்கு நானும் சைபர் கிரைம் அதிகாரியிடம் மூர்த்தியால் உருவாக்கப்பட்ட உரல்களை எடுத்து தந்தேன்.

மூர்த்தியுடன் அவரது வக்கீல் மற்றும் மைத்துனர் வந்திருந்தனர். தன் சகோதரியின் கணவன் இவ்வளவு கீழ்த்தரமாக செயல்பட்டதைப் பார்த்து அந்த இளைஞருக்கு பேச்சே வரவில்லை. அவமானத்தால் குனிந்த தலை நிமிரவே இல்லை.

மூர்த்திக்கு மலேஷியாவில் பார்த்த வேலை பறிபோயிற்று. பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. (அப்படியில்லை என செந்தழல் ரவி கூறுகிறார். இந்த வரியை சேர்த்த நேரம் 14.38 மணி, 25.07.2008)

இப்படியாக மூன்றாண்டுகளாக நடத்திய யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த மூன்றாண்டுகளாக என்னென்னவெல்லாம் நடந்து விட்டன! மூர்த்திக்கு சப்பைக்கட்டு கட்டியவர்கள் எத்தனை பேர்?

இன்னும் விசாரணை நடக்கிறது. அவருடன் சேர்ந்து செயல்பட்டவர்களின் லிஸ்டையும் தருமாறு சைபர் கிரைம் அதிகாரிகள் மூர்த்தியிடம் கூறியுள்ளனர். மூர்த்தியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு ஓர் அறிவிப்பு.

தன்னால் உருவாக்கப்பட்ட உரல்களை அழிப்பதாக அவர் வாக்கு தந்துள்ளார். ஆகவே சம்பந்தப்பட்ட பதிவர்கள் தத்தம் பெயரில் உருவாக்கப்பட்டிருந்த உரல்களின் லிஸ்டை தரலாம்.

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மூர்த்தி தனது மூர்த்தி மற்றும் விடாது கருப்பு வலைப்பூக்களில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

இப்போதைக்கு இவ்வளவுதான். இதற்கு மேல் எழுதினால் கோபத்தில் என்ன எழுதுவேன் என்று தெரியாது. மூர்த்திக்கு எதிராக இந்த யுத்தத்தில் பங்கு கொண்ட பதிவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/21/2008

கலைவாணர் அரங்கம் - ஒரு முழு சுற்று


வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தை இடிக்கப் போவதாக இன்றைய ஹிந்துவில் வந்த செய்தி எனக்குள் பல நினைவுகளை கிளப்பி விட்டுவிட்டன. (மேலே உள்ள படத்தை எடுத்தது திரு. வி.கணேசன் அவர்கள்) ஒரு புது சட்டசபை வளாகம் கொண்டு வருவதற்கான வேலை இது என அறியப்படுகிறது.

வரும் செப்டம்பர் மாதம் இடிக்கும் வேலை துவங்கும் என மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தப் புது சட்டசபை வளாகத்தை கட்ட மாநில அரசு முடிவு செய்தபோது இடிப்பதற்காக தெரிவு செய்த கட்டிடங்களின் பட்டியலில் கலைவாணர் அரங்கம் இல்லை. அரசு எஸ்டேட்டில் ராஜாஜி ஹால், கலைவாணர் அரங்கம், Tamil Nadu Public Services Commission Office மற்றும் புதிதாகக் கட்டப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் குடியிருப்பைத் தவிர்த்து மீதி எல்லாவற்றையும் இடிக்கப் போவதாகத்தான் முதலில் இருந்த திட்டத்தில் இருந்தது.

பிறகு கலைவாணர் அரங்கம் மற்றும் TNPSC அலுவலகத்தை நீக்க முடிவு அரசு செய்தது. காரணம் புது சட்டசபை வளாகத்துக்கு செல்லும் வழியை எளிதாக்குவதாகும். எப்படியாயினும் இப்புது சட்டசபை வளாகத்தின் ஒரு பகுதியாக ஓர் அரங்கமும் கட்டப் போவதாக திட்டம். அதன் பெயரும் கலைவாணர் அரங்கம் என்றுதான் இருக்கும் போலிருக்கிறது.

சிர்க்க வைத்து சிந்திக்கவும் வைத்த நகைச்சுவையை தாராளமாக வழங்கிய அமரர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பெயரில் இருந்த இந்த அரங்கத்தை ஜனவரி 1974-ல் திறந்து வைத்தவர் முதல்வர் கருணாநிதி அவர்கள். 1039 இருக்கைகள் கொண்ட இந்த அரங்கம் அவருக்கு எப்போதுமே பிடித்த ஒன்று.

இது வரை மேலே கூறப்பட்டது இன்றைய (21.07.2008) ஹிந்துவில் வந்த செய்தி.

என்ன வேடிக்கை பாருங்கள்! இக்கலைவாணர் அரங்கம் முதலில் பாலர் அரங்கம் (Children's Theater) என்னும் பெயரில் சமீபத்தில் 1959-ல் துவக்கப்பட்டது. அதற்கு முன்னால் அது பழைய சட்டசபை. இப்போது ஒரு முழு சுற்று வந்து சட்டசபை முன்பு கோட்டை விட்டதை இப்போது பிடிக்க எண்ணுகிறது போலும்!

பாலர் அரங்கம் துவங்கிய முதல் நாள் அனுமதி இலவசம். அரங்கம் முழுக்க குழந்தைகள் பாட்டாம்பூசிகள் போல அங்கும் இங்கும் பாய்ந்த வண்ணம் இருந்தனர். ஓரிரு அறுவை டாகுண்டரி படங்களுக்கு பின்னால் சில கார்ட்டூன் படங்கள். பிறகு சோவியத் படம் "சிட்டியும் சுட்டியும்" திரையிடப்பட்டது.

பிறகு ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறன்று பிற்பகல் மூன்றிலிருந்து நான்கு வரை கார்ட்டூன் படங்கள். கட்டணம் 12 பைசா சிறுவர்களுக்கு (16 வயது வரை), பெரியவர்களுக்கு 25 பைசா. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை ஆறு மணியளவில் டாகுமெண்டரி படங்கள் மற்றும் லேட்டஸ்ட் நியூஸ் ரீல். சனி அல்லது ஞாயிறன்று கையில் 12 பைசா எடுத்து கொண்டு திருவல்லிக்கேணி வெங்கடாசல செட்டித் தெருவிலிருந்து, பைக்றாஃப்ட்ஸ் சாலை, பெரியதெரு, வாலாஜா தெரு வரைக்கும் பொடிநடையாக வந்து படம் பார்ப்பதை நான் கல்லூரி செல்லும் காலக்கட்டம்வரை தவறவிட்டதே இல்லை.

பாலர் அரங்கம் கலைவாணர் அரங்கமாக உருவெடுத்தபிறகு ஒரே முறை டணால் தங்கவேலு அவர்களின் நாடகம் காணச் சென்றுள்ளேன். அவ்வளவே. அப்போதே பிடிப்பு விட்டுப் போயிற்று. இன்று இச்செய்தி.

இந்த விஷயத்தில் எனக்கு சில சந்தேகங்கள். அரங்கத்தை இடிக்க எவ்வளவு செலவாகும்? பிறகு மறுபடியும் வேறு இடத்தில் கட்ட இன்னும் எவ்வளவு செலவாகும்? இதெல்லாம் யார் பணம்? முதலில் அரங்கத்தை அப்படியேதானே விடுவதாக இருந்தது? பிறகு என்னவாயிற்று? இதை ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் வெளிவரலாம். நான் என்ன நினைக்கிறேன் என்றால் இந்த பிராஜக்டுக்கான ஏஜன்ஸிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லையென்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/19/2008

டோண்டு ராகவன் கிரிக்கெட் காமண்டரி செய்தால் எப்படி இருக்கும்?

தலைப்புக்காகவே இப்பதிவை மொக்கையில் வகைபடுத்துகிறேன். அதே கேள்வியை பதிவின் கடைசியிலும் மறுபடி கேட்கிறேன்.

கிரிக்கெட் பற்றி நான் ஏற்கனவே எனது எண்ணங்களை எழுதியுள்ளேன். இப்போது மேலும் சில எண்ணங்கள். முக்கியமாக நேர்முக வர்ணனைகள் பற்றி.

கிரிக்கெட் போட்டிகள் கன்னாபின்னாவென்று எண்ணிக்கையில் உயர்ந்து விட்டன. டெலிவிஷன் வேறு வந்துவிட்டது. ஆகவே அவற்றின் நேர்முக வர்ணனைகளை லைவ் ஆக பார்க்க/கேட்க இயலுகிறது. எல்லாமே முன்னேற்றம்தான், ஆனால் இது ஒரு வகையில் இழப்பே. சமீபத்தில் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இந்தியாவில் டெஸ்ட் மேட்சுகள்தான் பிரபலம். ஒரு நாள் ஆட்டங்கள் லீக் அளவில்தான் ஆடப்பட்டன. ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் கூடவே உண்டு. அத்துடன் மதறாஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடக்கும் கோபாலன் ட்ராஃபி அவ்வளவுதான். இதுவரை நான் மேலே குறிப்பிட்ட கிரிக்கெட் மேட்சுகளில் ஒன்றைக்கூட நேரடியாகப் பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் என்று தோன்றக்கூட இல்லை. நான் நினைக்கிறேன், எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் ரங்கா ராவ் அவர்கள் கூறிய ஒரு கருத்துதான் என்னை இந்த முடிவுக்கு தள்ளியது என்று.

அவர் கூறுவார், "ஆமாண்டா பத்து மணிக்கு மேட்சுக்கு காலங்கார்த்தாலேயே போய் உட்காருவாங்க, மேட்ச் எல்லாம் முடிந்து மாலை செங்குரங்கு மாதிரி மூஞ்சியோட வருவாங்க. எவ்வளவு டைம் வேஸ்ட்"! அம்மாதிரி செங்குரங்காக ஆகக்கூடாது (ஏற்கனவேயே மூஞ்சி பார்க்க சகிக்காது) என்று என் இளமனதில் எண்ணம் உருவாகிவிட்டது என நினைக்கிறேன். நிற்க.

ஆனால் காமெண்டரிக்கள் ரேடியோவில் வரும். Vizzy என்று செல்லமாக அழைக்கபடும் விஜயநகர மகாராஜா, ஆனந்தராவ் (ஹோட்டல் தாசப்பிரகாஷ் மேனேஜர் என்று சொல்லுவார்கள்), பாலு அளகன்னன், ஆர்.டி. பார்த்தசாரதி, நரோத்தம்பூரி, விஜய் மெர்சண்ட் ஆகியோர் ஆங்கிலத்தில் கமெண்டரி சொல்லுவார்கள். தமிழில் நம்ம சாத்தான்குளத்தாரின் தந்தை ஜப்பார் அவர்கள் போன்ற சிலர் தூள் கிளப்பியிருக்கிறார்கள். இம்மாதிரி ரேடியோ காமண்டரிகள் நமது கற்பனைக்கு அதிக வேலை கொடுக்கும். உதாரணத்துக்கு, "The batsman leans on the ball" என்று ஒரு வாக்கியம் வந்து என்னை அடிக்கடி படுத்தும். எங்காவது படக்கூடாத இடத்தில் பேட்ஸ்மேனுக்கு பட்டுவிடப்போகிறதே என அச்சம் வரும். மேலும், ஆனந்த ராவ் ஒரு மாதிரியான முகாரி ராகத்தில் கமெண்டரி சொல்வது கேட்கத் தமாஷாக இருக்கும். பாலு அளகன்னன் கமெண்டரி சொல்ல ஆரம்பித்தாலே இந்திய விக்கெட்டுகள் சரிகின்றன என கடுப்படிப்பார்கள் சிலர். பிறகு வேறுவிஷயங்களில் ஆர்வம் சென்றதில் கிரிக்கெட் காமெண்டரி கேட்கும் வழக்கமும் எனக்கு இல்லாது போயிற்று. ஆகவே தமிழில் நேர்முக வர்ணனைகள் கேட்டதில்லை.

சற்றே மலரும் நினைவுகள். சமீபத்தில் 1960-61 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஐந்து டெஸ்ட் மேட்சுகள் சில எக்ஸிபிஷன் மேட்சுகள் நடத்தப்பட்டன. சொல்லிவைத்தாற்போல அத்தனையும் டிரா. அதிலும் தில்லியில் நடந்த முதல் டெஸ்டில் பாகிஸ்தான் பேட் செய்யத் துவங்கி ஒரே ஒரு விக்கட் நஷ்டத்தில் 300 ரன்கள் எடுத்தபோது நமது டென்ஷன்கள் ஜிவ்வென்று ஏறின. ஹனீஃப் முகம்மது இப்போது ரன் அவுட் ஆனார். பிறகு மளமளவென்று சரிந்து 350 ஆல் அவுட். இதெல்லாம் கிரிக்கெட்டில்தான் சாத்தியம். அதிலேயே இரண்டு நாட்கள் போயின. பிறகு களமிறங்கிய இந்தியா பத்தாவது விக்கெட்டுக்கு நூறுக்கு மேல் பார்ட்னர்ஷிப் செய்து 450 ஸ்கோர் எடுத்தது. ஆனால் அது உலக ரிக்கார்ட் இல்லையாம். சமீபத்தில் 1888-ல் சிட்னியில் நடந்த டெஸ்ட் மேட்சில் பத்தாவது விக்கெட்டுக்கான பார்ட்னர்ஷிப் இதைவிட அதிகமாம். ஒழியட்டும். இதிலேயே நான்கு நாட்கள் காலி. அப்புறம் எப்படி இரண்டு இன்னிங்ஸ்கள் ஆட நேரம்? மேட்சு டிராதான். அதே சீரீஸில் சென்னை மேட்ச் "தேன் நிலவு" படத்தில் முதல் காட்சியில் வருகிறது என்பது அதிகப்படியான செய்தி.

கிரிக்கெட் காமண்டரிகளை பற்றி கூறினேன் அல்லவா. அதில் Vizzy செய்யும் காமெண்டரிகள் தனி ரகம். ஒரு டிபிகல் கமெண்டரியை இட்டுக்கட்டி கூறுகிறேன். ஆனால் அவ்வறுதான் அவர் கமெண்டரி தருவார்.

"Ramakanth Desai comes in and bowls... a bumper!!!! Hanif Mohammed swings but misses the line of ball completely. The wicket keeper fails to gather and the ball goes all the way for four runs. Umpire signals a bye. Way back in the thirties, Jardine instituted his famous bodyline and had Bradman caught. In the year 1936 Mushtak Ali handled such a bumper admirably and converted it to a six. In the meantime four more balls have been bowled and Hanif Mohammed is bowled. The next batsman Imtiaz Ahmed is retired hurt in the first ball. The fourth ball was a noball and yielded four runs as bye as the wicket keeper again failed to gather it. Talking of Jardine, I am forced to recall that he killed the spirit of the game. Once he was coming in to bowl, the runner had given a start and was away from the crease, wherupon Jardine struck the stumps at the bowler's end and appealed 'Hozatt". The runner had to be given out. It was just a school match played out in the year 1924, but you see the man is revealed in his true colours even when a kid. In the meantime A.G. Kripal Singh has bowled an over and gave away 12 runs".

மேலே உள்ள பத்தியில் தடித்த கோணல் எழுத்துக்களில் இருப்பவை Vizzy-யின் மலரும் நினைவுகள். இப்போது கூறுங்கள், டோண்டு ராகவன் கிரிக்கெட் காமண்டரி செய்தால் எப்படி இருக்கும் என்பதில் ஏதும் சந்தேகம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/18/2008

டோண்டு பதில்கள் 18.07.2008

பாண்டிய நக்கீரன்:
1. திடீரென்று எப்படி தங்கபாலு தமிழக காங்கிரஸ் தலைவரானர்?
பதில்: த.மா.கா. வை சேராதவர்கள் முறை போலிருக்கிறது. மேலும் இவருக்கென சொந்தபலமும் இல்லை என்கிறார்கள். இவர் மேல் விரோதமும் அவ்வளவாக இல்லை எனவும் கேள்வி. ஆனால் சிலமாதங்களிலேயே அது வேண அளவுக்கு வளரும் என்பதும் தமிழக காங்கிரசின் எழுதப்படாத விதி.

2. அவர் அம்மையார் விசுவாசியே?
பதில்: இப்போதைக்கு அதனால் என்ன பலன்? சோனியாவுக்கும் ஜெக்கும் முட்டுகிறதே.

3. கலைஞர் எப்படி ஒத்துக்கொண்டார்?
பதில்: அவர் சோகம் அவருக்கு. தில்லி கலாட்டாவிலே காங்கிரசால் பாமகாவை கைகழுவ முடியாமல் போயுள்ளதே என்று அவர் புலம்புவதாக துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன் வந்துள்ளது பொருத்தமே.

4. பா.ம.க. தலைவரும் அவர் சம்பந்தியும் (கி.சாமி) இப்போ ஒரே நிலையிலா?
பதில்: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி என்பது சமீபத்தில் 1970-களிலேயே டம்மியாக்கப்பட்டுவிட்டது. கிருஷ்ணசாமியோ, ராமசாமியோ, கோவிந்தசாமியோ யாராக இருந்தாலும் சில நாள் விருந்தாளிகள் அவ்வளவே.

5. வாலிழந்த நரிகள் என்ன செய்யும்?
பதில்: ஒப்பாரி வைக்கும்.

6. திடீரென்று விஜயகாந்த் பாசம் தி.மு.காவில், பார்த்தீர்களா?
பதில்: அப்படி என்றா சொல்கிறீர்கள்? அடுத்த கேள்விக்கு வரவும்.

7. அவரும் அடக்கி வாசிக்கிறாரே?
பதில்: எங்கு வாசிக்கிறார்? ஆளும் திமுகவினரை சுட்டுக் கொல்லுங்கள் என்று பேசுவது அடக்கி வாசிப்பது என்றால், அடக்காமல் வாசித்தால் என்ன ஆகும்?

8. திரை மறைவில் நடப்பது என்ன?
பதில்: பிற்கால பேரங்களுக்கு தயார் ஆதல்.

9. அ.தி.மு.க தலைவி தேர்தலுக்கு ரெடியாமே?
பதில்: அவர் செல்ல வேண்டிய தூரம் அதிகம், தன்னை முக்கியமாக மாற்றிக் கொள்ள வேண்டும். கருணாநிதி அவர்கள் மேலும் அசட்டு காரியங்கள் செய்ய வேண்டும். ஆனால் போகிற போக்கை பார்த்தால் ஜெயலலிதா அசட்டுத்தனம் செய்து கருணாநிதியை ஜெயிக்க வைத்து விடுவார் போலிருக்கிறது. அதில் இருவருக்கும் சரியான போட்டியே நிலவுகிறது.

10. ராமதாசுக்கு இடம் கொடுக்கக் கூடாது என மதுபான அரசரின் நெருக்கடியாமே?
பதில்: அடிமடியில் கைவத்ததால் வரும் கோபம்.

11. சிங் அரசு தப்புமா?
பதில்: அணு ஆயுத ஒப்பந்தம் வரைக்குமாவது இருப்பது நல்லது என சோ அவர்கள் கூறுவதை நானும் ஏற்கிறேன்.

12. ஒருவேளை தேர்தல் வந்தால் இடதுகள் என்ன செய்யும்?
பதில்: தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறதே. அவற்றுக்கே தெரியாது தாம் என்ன செய்யப் போகிறோம் என்று. எனக்கு மட்டும் தெரிந்து விடுமா என்ன?

13. ஆந்திர நாயுடுவுக்கு சிரஞ்சீவி கை கொடுக்கிறார் என்பது உண்மையா?
பதில்: தெரியவில்லையே. ஆந்திரா விஷயங்களை பற்றி நான் தற்சமயம் ஏதும் படிக்கவில்லை.

14. 3-வது அணி கோவிந்தோ! கோவிந்தோ!கோவிந்தோ!
பதில்: நானும் என் தரப்புக்கு ஒரே ஒரு கோவிந்தா போட்டுவிடுகிறேனே.

15. கடைசியில் கறுப்புபணத்துக்குத்தான் இறுதி வெற்றியா?
பதில்: எப்போதுமே. அது இல்லாமல் தேர்தல் ஏது?

16. இவர்கள் எல்லாம் துக்ளக் வாரிசுகள் போல் செயல்படுகிறார்களே?
பதில்: அது துக்ளக்குக்கு தெரியுமா?

17. இனி துக்ளக் சோவுக்கு நல்ல எழுத்து வேட்டை? இல்லையா?
பதில்: அவருக்கு எழுத விஷயத்துக்கு என்ன பஞ்சம்?

18. அம்பானிகளில் முந்துவது தம்பி போலுள்ளதே?
பதில்: ரொம்ப பணம் அளவுக்கதிகமாக சேர்வதும் நல்லதற்கல்லதான் போலிருக்கிறது.

19. அப்பாடி மீண்டும் அமிதாப்பச்சன் ராஜிவ் குடும்ப வளையத்துக்குள்?
பதில்: போன முறை போல இம்முறையாவது கசப்பான அனுபவம் கிட்டாதிருக்கட்டும்.

20. இந்தியா டுடேயின் மு.கருணாநிதியின் காவியப் பயணம் (june 2008-சிறப்பிதழ்) பற்றிய உங்கள் விரிவான, விளக்கமான விமரிசனம்?
பதில்: நான் அக்கட்டுரையை படிக்கவில்லை, இந்தியா டுடே வாங்குவதில்லை.


எழில் அரசு:
டோண்டு சார் இந்த( 11 to 20) பழமொழிகளுக்கு உங்கள் பாணியில் புதுவிளக்கம் கொஞ்சம் நகைச்சுவை கலந்து (தற்கால அரசியல்,பொருளாதார, சமூகநில ஆகியவற்றை சார்ந்து)
11. கேக்கறவன் கேனப்பயலா இருந்தா கேப்பையில நெய் வடியுதும்பானாம்!
பதில்: அவன் கிடக்கிறான் வெண்ணெய்.

12. வீடு பத்தி எரியும்போது சுருட்டு புடிக்க நெருப்பு கேட்டானாம்!
பதில்: அப்படி கேட்டு உதைவாங்கிய பிறகு, இல்லை என்பதை கோபமில்லாமல் சொல்வதுதானே என வருத்தம் வேறு பட்டானாம்.

13. வச்சா குடுமி செரச்சா மொட்டை!
பதில்: பெண்ணுக்கு கல்யாணம் செய்யணும்னு வரச்சே வரதட்சிணைக்கு எதிர்ப்பு, அதுவே பிள்ளைக்கு கல்யாணம்னு வரச்சே வரதட்சணைக்கு ஆதரவு.

14. ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை வெரட்டிச்சாம்!
பதில்: அழகிரி மற்றும் ஸ்டாலினை வைத்து காமெடி எதுவும் செய்யவில்லையே?

15. பெண்ணென்றால் பேயும் இறங்கும்!
பதில்: அதற்கு பேய் பூர்வாசிரமித்தில் ஆணாக இருந்திருக்க வேண்டும்.

16. ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்!
பதில்: அப்போ ஐந்து பிள்ளைகள் பெற்றால் அங்கிள் ஆவானா?

17. அரசனை நம்பி புருஷனை கைவிடாதே!
பதில்: இதற்கு நேர்மறையான பதில். அரச மரத்தை மட்டும் சுற்றினால் போதாது. பிள்ளை பெற புருஷன் தயவும் வேண்டும். அதுதான் ஒரிஜினல் அர்த்தம்.

18. மருந்தும் விருந்தும் மூணுநாளைக்குத்தான்.
பதில்: ஏனெனில் நாலாவது நாளைக்கு முறையே நோய் குணமாகும் மற்றும் உண்டாகும்.

19. ஜாதியறிஞ்ச புத்தி, குலமறிஞ்ச ஆசாரம்
பதில்: டோண்டு ராகவனுக்கு தர்ம அடி வாங்கித் தராமல் விடமாட்டீங்க போலிருக்கு.

20. ஆடுற மாட்ட ஆடித்தான் கறக்கணும்.
பதில்: அதுக்காக பிரேக் டான்ஸ் எல்லாம் ஆடினால் ஏதாவது பிரேக் ஆகிடும்.


குசேலன்:
1. Recently Tamil Nadu govt. gave Rs.7 lakhs subsidy for 70 films. The total amount of this wasteful subsidy comes near 5 crores. I think this is enormous waste of poor peoples' tax money. Do you think such blatant and wasteful spending in govt. can be controlled by any means?
பதில்: ஓட்டு சீட்டு எதற்காக தருகிறார்களாம்?


கேள்வி கந்தசாமி:
1. புஷ்பவனம் குப்புசாமி-அனிதா மற்றும் அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யா ராய் தம்பதிகளின் ஊடல்களுக்கு என்ன காரணம்? மீடியாவால் பெரிதுபடுத்தும் நடவடிக்கையா இல்லை நெசமாலுமே புகைச்சல்தானா?
பதில்: பொதுவாழ்க்கையில் வருபவரானாலும் அவர்தம் தனிவாழ்க்கையை பற்றிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இந்த விஷயத்தில் எனது ரோல்மாடல் சோ அவர்கள்.

2. களத்தூர் கண்ணம்மாவைவிட ஆனந்த ஜோதியில் கமல் ரெட்டைவேடத்தில் கலக்கலான நடிப்பு இல்லையா? அதெப்படி அந்த வயதிலேயே இவ்வளவு சூப்பர் நடிப்பு?
பதில்: ஆனந்த ஜோதியில் எங்கே இரட்டை வேடம்? இல்லையே. எனக்குத் தெரிந்து "பார்த்தால் பசி தீரும்" படத்தில்தான் இரட்டை வேடம்.

3. அதெப்படி இந்து என்.ராம் திடுமென அடுத்த பிரதமர் அத்வானிதான் என முதல் பக்கத்திலேயே பேட்டியுடன் வெளியிடுகிறார் (11-ஜூலை ஹிண்டு). கம்யூனிஸ்ட் தோழர்கள் கரத்தைவிட யெச்சூரி தான் பழக்கமா? யெச்சூரிக்கு வாபஸ் வாங்கியதில் உடன்பாடு இல்லாததால் இடதுசாரி மீட்டிங்குகளில் பங்கு கொள்ளவில்லையே? லண்டன் சென்று விட்டாராமே?
பதில்: ராமா அப்படி? அட ராமா?

4. கம்யூனிஸ்டுகளின் நட்பால் (நானே ஒரு கம்யூனிஸ்ட் என அடிக்கடி சொல்லும்) கருணாநிதி அரசுக்கு எதிராக வாக்களிக்க தங்கள் எம்.பிக்களை கட்டளையிடுவாரா? எப்படியும் அடுத்த பிரதமர் அத்வானிதான் என ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டு வரும் வேளையில் - ஒருக்கால் பாஜக பக்கம் சாய நினைத்தால்? இந்த மாதிரி சமயங்களில் முரசொலி மாறன் கருணாநிதிக்கு நல்ல பக்கபலமாய் இருந்திருப்பார். தற்போது யாரிடம் யோசனை கேட்பார் கருணாநிதி?
பதில்: தன் நலனுக்கு ஏற்ப செயல்படுவார், எல்லோரையும் போல.

5. குசேலன் ரஜினி போல நீங்களும் இளமையாய் காட்சியளிக்க வெள்ளை உணவுப் பண்டங்களை நிறுத்திப் பார்க்கும் எண்ணம் உண்டா?
பதில்: நான் இளமையாக உணர்வதையே முக்கியமாக நினைக்கிறேன். அவ்வாறே உணர்கிறேன். அது போதும்.

6. உங்களுக்குப் பேரப்பிள்ளைகள் உண்டா? அவர்களிடமிருந்து சமீபத்தில் என்ன கற்றுக் கொண்டீர்கள்?
பதில்: இல்லை.

7. 'அண்ணலும் நோக்கினான்' பதத்தில் 'அண்ணல்' என்பதற்கு என்ன பொருள்?
பதில்: தலைவன், இங்கு ஏகபத்தினிவிரதன் ராமன்.

8. துக்ளக் தவிர என்னென்ன தினசரி, வார, மாத இதழ்கள் காசு கொடுத்து வாங்கி படிக்கிறீர்கள்?
பதில்: விகடன், ஜூ.வி., குமுதம், குமுதம் ரிப்போர்டர், கல்கி, விகடன், பெண்மணி, கண்மணி ஆகியவை.

9. ஐயங்கார் வீட்டுப் பெண்கள் அழகா? ஐயர் வீட்டுப் பெண்கள் அழகா? ஏன்?
பதில்: பெண்கள் அழகு. ஆணுக்கும் பெண்ணுக்கும் முக்கியமான சில வேறுபாடுகள் உள்ளன, வாழ்க அந்த வேறுபாடுகள்.

10. ஹரிஹரன் என்றொரு மெலடி பாடகர் சுமார் 10 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் சிறந்த பாடல்களைப் பாடினாரே - அவர் பாடிய பாடல்களில் உங்களுக்குப் பிடித்த மெலடி எது?
பதில்: டி.எம்.எஸ்., எஸ்.பி.பி. பி.பி.எஸ். ஆகிய சிலரது பாடல்களைத்தான் பாடியவர் பெயருடன் கேட்டு அனுபவித்துள்ளேன். மற்றப் பாடல்கள் அவை நன்றாக இருந்தால் போதும். பாடியவர் யார் என்றெல்லாம் பார்ப்பதில்லை. ஆகவே ஹரிஹரனை கேள்விப்பட்டிருந்தாலும், குறிப்பாக அவர் பாடியது என பார்த்து ரசிக்கவில்லை.


தென்காசி:
1. உறவுகளில் ஏற்படும் விரிசல்கள் முன்பைவிட பரவலாய் தெரிவதன் காரணம்?
பதில்: எல்லாம் உடனுக்குடன் வெளியாகி தகவல் தொடர்பு வசதிகளும் பெருகியதால் அப்படி ஒரு தோற்றம். மற்றப்படி எல்லாமே அப்படியேதான் உள்ளன.

2. சமுக, பொருளாதார மாற்றங்கள் சுதந்திரத்தை கொடுத்த வேளையில் குடும்பங்களில் இணக்கமில்லாச் சூழ்நிலை நெருடலை தருகிறதே?
பதில்: பொருளாதார மாற்றங்களால் போன தலைமுறையில் கூட்டு குடும்பங்கள் அவற்றின் தேவை இல்லாமல் போனதால் அழிந்தன. இப்போது அவை மேலும் சின்னதாகின்றன. தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா, மாமா, மாமி என்ற உறவுமுறைகளின் அர்த்தமே மறந்து போய்விடும் போலிருக்கிறது.

3. மனிதர்களில் சுயநலப் போக்கு கூடிக் கொண்டே போகிறதே?
பதில்: இதில் புதிதாக ஒன்றும் இல்லை. கலிகாலம் இப்படித்தான் இருக்கும் என மகாபாரதம் முடியும் தருவாயிலேயே தருமபுத்திரர் கூறிவிடுகிறார்.

4. மனிதர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் தேவையற்ற பொருட்களுக்காக கடன் வாங்கி அல்லலுறுகின்றனரே? உதாரணமாக கார் வாங்கப் பணமில்லா விட்டாலும் கார் கடன் வாங்கி தவணை கட்ட முடியாமல் உள்ளவர்கள் பற்றி?
பதில்: கார் வாங்கத் தேவையேயில்லை என்று நான் ஏற்கனவே கூறியதை இங்கு மறுபடியும் கூறுவேன். அதை வாங்கிக் கொள், இதை வாங்கிக் கொள் என தொல்லை செய்யும் டெலிமார்க்கெட்டிங் என்னும் கூத்தை எப்படி சமாளிப்பது என்றும் எழுதியுள்ளேன்.

5. பரபரப்பு உலகில் வேலைக்குப் போகும் பெண்களின் மன அழுத்தம் பற்றி?
பதில்: அலுவலகத்தின் வேலைகளுடன் கூடவே வீட்டு வேலைகளும் அவர்தம் தலையில்தான் பாவம்.

ராமகிருஷ்ணஹரி:
1. ராகுகாலம் சும்மா o.k அப்போ எமகண்டம்? (ராகு கேது சம்பந்தபட்ட விசயம்)?
பதில்: அவை ஒன்றிலுமே நம்பிக்கை இல்லை.

2. பகுத்தறிவு பேசுகிறவர்களில் எத்தனை பேர் ராகுகாலத்தில்.எமகண்டத்தில் தனது, தனது வீட்டு நற்காரியங்களை செய்துள்ளார்கள், பட்டியல் தரவும்?
பதில்: சீர்திருத்தத் திருமணங்கள் ராகு காலத்தில்தான் சாதாரணமாக நடத்தப்படுவதாகக் கேள்வி. அப்போது நடத்தவேண்டும் என்னும் வற்புறுத்தலால் அவர்களை அறியாமலே அதற்கு முக்கியத்துவம் தருவதுதான் நிஜம்.

3. தேர்தல் சமயத்தில் அத்துனை கட்சிகளும் ஜோதிடர் வாசலில் தவம் இருப்பது உங்களுக்கு தெரியாத ஒன்றா? (நாத்திக கட்சிகள் உட்பட-திரை மறைவில்)
பதில்: தெரியும்.

4. கட்சிகளின் தேர்தல் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள யாகங்களை நடத்துவதில்(மறைமுகமாக- முற்போக்கு வாதிகள்) உள்ள உண்மையை மறுக்கமுடியுமா?
பதில்: யாகங்கள் நடத்துகிறார்கள் என்ற உண்மையை மறுக்க இயலாது.

5. அறிவியல் சம்பந்தத்துடன் நமது யோகிகளும்,ரிஷிகளும்,முனிவர்களும்,அவதார புருஷர்களாய் தனது ஞானத்தால் வானையும் வானில் உலாவும் கோள்களின் இயக்கத்தையும் மிகச் சரியாகக் கணக்கிட்டு உள்ளதை எப்படி மறுக்கிறீர்கள்?
பதில்: வானியலையும் ஜோசியத்தையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.

6. இதில் திருவாளர் முரளி மனோகருக்கு உடன்பாடா?அவர் கருத்து?
பதில்: அவனுக்கென்ன, நான் மறுக்கச் சொன்னால் மறுப்பான் இல்லையென்றால் பேசாமல் இருப்பான். அவன் வேறு நான் வேறல்ல.

7. கல்கியும் உங்கள் கட்சி போல் உள்ளதே?
பதில்: ஆமாம். அவர் என் கட்சி என்று கூறுவதை விட நான் அவர் கட்சி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும்.

8. இதேபோல் இறை நம்பிக்கை, பூஜை, புனஸ்காரம், மறுபிறப்பு, வேத உபநிஷத்துக்கள், மனு சாஸ்திரம் நம்பிக்கை உள்ளவர்களில் உங்கள் ஆணியில் இன்னும் யார் யார் உள்ளனர்? தெரிவிக்கவும்.
பதில்: இறை நம்பிக்கை மற்றும் மறுபிறப்பில் எனக்கும் நம்பிக்கை உண்டு. மீதி விஷயங்கள் பற்றி கருத்து ஏதும் லேது.

9. கோயில்களில் கூட்டம் குவிவதைப் போல் ஜோதிடப் புத்தகங்கள்,ஜோதிட வார,மாத இதழ்கள், செல்பேசிகள் கூட தினப் பலன் இப்படி களை கட்டும்போது தாங்கள் மட்டும்?
பதில்: என் வழி தனி வழி.

10. காக்கும் பெருமாள் மேல் மிகுந்த பக்தி உடையவரிடமிருந்து இப்படியா எனக் கேட்பவர்க்கு உங்கள் பதில்? (பக்தி வேறு, ஜோதிடம் வேறு எனும் பதில் தவிர்த்து - சான்றுகளுடன் தங்களின் பதில்) (துணை கேள்விகள் தங்களின் சான்று பூர்மான பதில்களை பார்த்த பிறகு)
பதில்: இதென்ன போங்கு? நீங்கள் விடும் எல்லா ஸ்டேட்மெண்டுகளையும் ஏற்று கொள்ள வேண்டுமா என்ன. பக்திக்கும் ஜோசியத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்றுதான் நான் அடித்து கூறுவேன்.


அவனும் அவளும்:
1. டோண்டு சார் ஆதரிக்கும் republican அரசாங்கம் மோடி அவர்களுக்கு விசா அளிக்க மறுக்கிறதே ? இதனால் தங்களுது ஆதரவின்றி US அரசாங்கம் கவிழும் அபாயம் உள்ளதா? இல்லை வரும் தேர்தலில் தோல்வியை சந்திக்க கூடுமா?
பதில்: :))))))

2) இந்தியாவில் இருந்து படிக்க செல்லும் மாணவனை போல் மோடி அவர்கள் மறுபடியும்/மறுபடியும் விசா அப்ளை செய்வதன் நோக்கம் என்ன? இதைதான் அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே என்று கூறுகிறோமா?
பதில்: மோடி அவர்கள் உண்மையிலேயே அவ்வாறு செய்திருந்தால் தவறுதான். மதிக்காதவர் இடத்துக்கு செல்லக் கூடாது என்பதை உணர்தல் நலம்.

3) தாங்கள் சமீபத்தில் குஜராத் சென்றது உண்டா?
பதில்: இல்லை.

4) சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த நெல்சன் மண்டேலாவுக்கான open air concert தொலைகாட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததா? Amy Whitehouse performance எப்படி இருந்தது?
பதில்: அடேடே தெரியாமல் போய் விட்டதே, எப்போது நடந்தது அது?

5) தாங்கள் தவறாக Translate செய்தமையால், என்றாவது contract இழந்தது உண்டா?
பதில்: கடவுள் புண்ணியத்தில் இதுவரை அவ்வாறு நடக்கவில்லை. அம்மாதிரி இனியும் நடக்காதிருக்கும் அளவுக்கு எனக்கு துல்லியத்தை என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் தருவான் என நம்புகிறேன்

6) Blog எழுத ஆரம்பித்த பிறகு தங்களின் கொள்கையை/நம்பிக்கையை பிறரின் பின்னூட்டத்தை பார்த்து என்றாவது மாற்றி கொண்டது உண்டா? இருந்தால் ஒரு எடுத்துக்காட்டு கூறுங்களேன்.
எனது ஆரவாரப் பேய்களெல்லாம் என்னும் பதிவே அதற்கு எடுத்து காட்டுதான். இன்னும் இரு பதிவுகளின் சுட்டிகளும் தருகிறேன், அதாவது யோம்கிப்பூர்-1 மற்றும் யோம்கிப்பூர்-2.

6௭) ஏன் எனக்கு உங்கள் எழுத்துக்களை படித்தால் generation gap எனும் வார்த்தைக்கு அர்த்தம் புரிகிறது?
பதில்: ஏன் என்னைவிட அவ்வளவு வயதாகி விட்டதா உங்களுக்கு?


பாண்டிய நக்கீரன்:
1. நோஸ்ட்ரடாமஸ் பற்றி?
பதில்: நோஸ்ட்ரடாமஸ் பற்றி பல கதைகள் உள்ளன. அவற்றில் பல அப்பட்டமான கட்டுக்கதைகள். உலகத்தில் நிகழப்போகும் உற்பாதங்களை பற்றி அவர் பல நாலடி செய்யுள்களாக எழுதினாராம். உதாரணத்துக்கு ஒரு தீபகற்ப பகுதி பெரிய சக்தி பெற்ற நாடாகும் என்று எழுதினாலும் எழுதினார், அது இந்தியாதான் என கூறுபவர்கள் உண்டு. அட்லாஸில் பார்த்தால் பல தீபகற்ப நாடுகள் உள்ளன. எல்லாம் வியாக்கியானம் கொடுப்பவரின் திறமை, அவர் நம்ப விழைவது ஆகியவை. கன்னா பின்னா தென்னா மன்னா பாடலுக்கு கம்பர் வியாக்கியானம் கொடுத்த மாதிரிதான்.

2. அவர் சொன்னதில் நடந்ததில் எது பெரிது?
பதில்: என்னைப் பொருத்தவரை இதற்காக சுலபமான பதில் தர இயலாது. பல அர்த்தமாக்கல்கள் சுற்றிவளைத்து செய்யப்படுகின்றன. அவர் எழுதியவை பிரெஞ்சில் இருந்தாலும் எனக்கென்னவோ அவற்றைப் படிப்பதில் ஆர்வமே இல்லை. எனக்கு ஜோசியத்தின் மீது அவ்வளவாக ஈடுபாடு இல்லை என நினைக்கிறேன். :)))

3. சொல்லி நடக்காதது?
பதில்: மேலே உள்ள கேள்வியிலேயே இதற்கும் பதில் உள்ளது.

4. இனி நடக்கப் போவது என்று உலகம் எதை எதிர்பார்க்கிறது?
பதில்: அதையெல்லாம் பார்க்க யாருக்கு நேரம் இருக்கிறதாம்?

5. "ஆண்டி கிரைஸ்ட்" என்றார்களே?
பதில்: Matter-anti matter, electron-positron என்றெல்லாம் ஜோடிகள் கிளம்புவது போல இதுவும் ஒன்றுதான்.

6. மிஸ்மர் பற்றி?
பதில்: மெஸ்மரிசம் என்னும் கோட்பாட்டின் தந்தை.

7. மெச்மரிசம் நம்புகிறிர்களா?
பதில்: தெரியவில்லை. இதில் பல போலிகள் உலாவும் ஆபத்து உண்டு. ஆகவே ஜாக்கிரதையாக இருப்பது நமது கடமை. பல மனோதத்துவ நிபுணர்கள் இதை உபயோகித்து பல நோயாளிகளை குணப்படுத்தியுள்ளனர்.

8. யூரிகெல்லரின் ஹிப்னாடிசம் பற்றி?
பதில்: அவர் ஏமாற்றுகிறார் என்று பலர் கூறுகிறார்கள். இந்த வீடியோவைப் பாருங்களேன். என்னைப் பொருத்தவரை இம்மாதிரி ஆசாமிகளை பற்றி எனது கருத்து மிகவும் எதிர்மறையானது. நான் கன்வின்ஸ் ஆக இன்னும் நிறைய பார்க்க வேண்டும். அதாவது they are guilty unless proven innocent.

9. நமது ஆரியப்பட்டரின் கருத்துகள் பற்றி?
பதில்: அவரைப் பற்றி இக்கேள்விக்காக நான் கூகளிட்டு கண்டது: "நூறுடன் நான்கை சேர்த்து, பிறகு அதை எட்டால் பெருக்கி, அத்துடன் 62000 சேர்த்து பிறகு 20000-ஆல் வகுத்தால் வரும் விடை ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்துக்கும் உள்ள விகிதமாம். சந்தோஷம். அதாவது 3.1416. இதைத்தான் ஆங்கிலத்தில் pi எனக் கூறுகிறோம். அதன் மதிப்பு தற்போதைய புரிதல்படி 3.14159. ஆனால் அவர் கண்டு பிடித்ததில் முக்கியமானது பூஜ்யம் என்பார்கள்.

10. நமது வராஹமிகிரர் பற்றி?
பதில்: ஆர்யபட்டரின் சீடர். அவரைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

11. கைரேகை அறிவியல் சார்ந்ததா?
பதில்: அப்படித்தான் அதை ஆதரிக்கிறவர்கள் கூறுகிறார்கள்.

12. விதியை மதியால் வெல்லலாம் -இது ஜோதிட சாஸ்திரத்தோடு ஒப்பிட்டு கருத்து சொல்லவும்?
பதில்: சத்தியவான் சாவித்திரி கதையை விடவா? சாவித்திரி எமதர்மராஜன் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டினாளே. சத்தியவான் உயிரைத் தவிர வேறு இரு வரம் கேட்கலாம் என அனுமதி தர அவள் முதல் வரமாக தனது மாமனார் அவர் இழந்த ராஜ்ஜியத்தை பெற வேண்டுமென கேட்டு பெற்றாள். அடுத்த வரமாக தனக்கு ஒரு நல்ல புத்திரன் வேண்டும் எனக் கேட்க அதற்கும் அப்படியே ஆகட்டும் என எமன் யோசியாது கூறிவிட, பிறகுதான் நாக்கைக் கடித்து கொண்டானாம். கணவன் இன்றி குழந்தை ஏது? அப்போது நாரதர் தோன்றி, சாவித்திரி தன் செய்த நோன்புகளால் ஏற்கனவேயே தன் கணவன் உயிரைக் காப்பாற்றிவிட்டதாகவும், ஆகவே எமனுக்கு அதைத் திருப்பித் தருவதை விட வேறு வழியே இல்லை என்றும் எடுத்து கூறுகிறார்.

நாரதமுனி:
1. உங்களுக்கு எழுத்தாளர் அழகாபுரி அழகப்பன் பற்றி தெரியுமா?
பழைய மாலைமதிகளிலே அவர் கதைகள் வாசித்ததுண்டு. நல்ல விறுவிறுப்பாக இருக்கும். அவரை பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமெனில் போஸ்ட் பண்ணுங்க.

பதில்: அமரர் அழகாபுரி அழகப்பனை எனக்கு மிகவும் பிடிக்கும். எழுத்தாளர் சுஜாதாவுக்கு உதவி செய்திருக்கிறார். அவரது நாவல் ஒன்று சக்களத்தி என்னும் பெயரில் சமீபத்தில் 1978-79 வாக்கில் படமாக வந்தது. சுதாகர், ஷோபா, அம்பிகா, ஒய். விஜயா, விஜயன் மற்றும் அழகாபுரி அழகப்பனே நடித்திருந்தனர்.
அழகப்பன் ஒரு சபல டாக்டராக வருவார். கணவனை பிரிந்து வாழும் ஒய். விஜயாவுக்கு பிராக்கெட் போடுபவராக வருவார். இடைவேளை நேரத்தில் சில இளைஞர்களுடன் பேசிய போது அவர் அவர்களது பள்ளி ஆசிரியராக இருந்திருக்கிறார் என அறிந்து கொண்டேன். என்ன பள்ளி என்பதை கேட்டுவைக்க மறந்துவிட்டேன். மாலைமதியில் அவரது பல நாவல்கள் படித்துள்ளேன். அடுத்த முறை நூலகம் செல்லும்போது பார்க்கிறேன். எனக்கு தெரிந்து ஆசிரிய பெருந்தகைகள் திரைப்படங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களைப் பற்றி பிறகு எப்போதாவது எழுதுகிறேன்.


ரவிஷா:
1. கோமணகிருஷ்ணன் போன்றவர்கள் தாத்தாவை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள்! ஒரு காலத்தில் எம்.ஜி.ஆரை. இப்படித்தான் பலர் கண்மூடித்தனமாக ஆதரித்தார்கள்! அப்போதெல்லாம் அதை கோமணகிருஷ்ணன் போன்றவர்கள் எதிர்த்தார்கள்! ஆனால் இப்போது தாத்தாவுக்கு ஜால்ரா காதை மட்டும் இல்லை டவுசரையும் சேர்த்து கிழிக்கிறது! Hypothetically, தாத்தா போன பிறகு இவர்களெல்லாம் யாரை ஆதரிப்பார்கள்!
பதில்: கோமணகிருஷ்ணன் என்று கேட்பதால் பதில் கூற முயற்சிக்கிறேன். தாத்தா போன பிறகு டோண்டு ராகவன் யாரை ஆதரிக்கிறானோ, அவரை எதிர்ப்பவரை மட்டும்தான் ஆதரிப்பார்கள்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/17/2008

மெதுவாக ஒட்டிக் கொண்ட திறமை என்பதைவிட அறியாமலே ஒட்டிக் கொண்ட திறமை என்றே கூறலாம்!

நான் ஏற்கனவே போட்ட மெதுவாக ஒட்டிக் கொண்ட திறமை பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தவை போல அன்றி இப்போது நான் குறிப்பிடப்போவது என் தரப்பிலிருந்து எந்த முயற்சியும் இல்லாது என்னுடன் ஒட்டி கொண்டது என்று கூறினால் மிகையாகாது. அதைப் பற்றி கூறுவதற்கு முன்னால் ஒரு சிறு புதிர்.

ஆம்புலன்ஸ்களில் முன் கண்ணாடியில் AMBULANCE என்னும் சொல் கீழே உள்ளது போல தலகீழாகக் காண்பிக்கப்படும்.


இது ஏன் என்பதுதான் கேள்வி. பயப்படாதீர்கள். விடை உடனேயே தரப்படும், ஏனெனில் இது புதிருக்கான பதிவு அல்ல. ஒரு ஆம்புலன்ஸ் சாலையில் செல்லும்போது முன்னுரிமை அதற்குத்தான். முன்னாலிருக்கும் வண்டிகள் ரியர் வ்யூ கண்ணாடிகளில் ஆம்புலன்ஸை பார்க்க நேர்ந்தால் அதற்கு வழிவிடவேண்டும். கண்ணாடி எழுத்துக்கள் முந்தைய காரின் பின்னோக்கு கண்ணாடியில் நேராகத் தெரியும். ஆகவேதான் ஆம்புலன்ஸ் என்பது தலகீழாக எழுதப்படுகிறது.

புதிர் எளியதுதான், ஆனால் பலர் அவர்களிடம் நான் இதை கேட்டபோது சரியான விடையைத் தர இயலாமல் போனார்கள். அவர்களுள் முக்கியமானவர்கள் சாதாரணமாக "எனது காரை" ஓட்டும் நபர்கள்தான். நான் விடையை கூறியவுடன் "அடேடே இது தெரியாமல் போயிற்றே", என ரொம்ப ஃபீலிங்ஸ்லாம் ஆவார்கள். ஒரு தடவை என் வாடிக்கையாளரது காரில் பூந்தமல்லியிலிருந்து காஞ்சீபுரம் செல்லும் சமயம் ஓட்டுனரிடம் நான் இதை கேட்க, அவர் விடையை சரியாக கூறியது மட்டுமின்றி, நான் நங்கநல்லூர் ஹிந்து காலனியில் வசிக்கிறேனா எனக் கேள்வியும் கேட்டார். எப்படி அவர் அதை அறிந்தார் என கேட்க, அவரது மச்சானும் டாக்ஸி டிரைவர் என்றும், தன்னிடம் இதே கேள்வியை பத்து நாட்களுக்கு முன்னால் கேட்டதாகவும் கூறினார். பிறகு அதே மச்சான் அவரிடம் நங்கநல்லூர் ஹிந்து காலனியில் வசிக்கும் ஒரு பெரிசு இதை தன்னிடம் கேட்டு ரொம்பவும் படுத்தினார் என்பதையும் இவரிடம் கூறியிருக்கிறானாம். சேச்சே, அப்படியா நான் படுத்துகிறேன்?

நிற்க. நான் இப்பதிவில் ஆரம்பத்தில் கூறிய திறமைக்கு வருவோமா? இந்த கண்ணாடி எழுத்துக்களை நான் மிகச்சுலபமாக எழுதுவேன். இத் திறமையை நான் முதலில் கண்டுகொண்டது சமீபத்தில் 1956-57 கல்வியாண்டில் நான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போதுதான். ஒரு நாள் தமிழாசிரியர் பூவாளூர் சுந்தரராமன் (எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த "தாய் மகளுக்கு கட்டிய தாலி" என்ற திரைப்படம் இவர் எழுதிய கதைதான்) தமிழ் பாடத்துக்கான நோட்ஸ் டிக்டேட் செய்ய நாங்கள் எல்லோரும் எழுதிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் விளையாட்டாக நான் கண்ணாடி எழுத்துக்களில் நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தேன். சரளமாக எழுத முடிந்தது. என்ன, பிறகு கண்ணாடியில் வைத்து பார்த்தால் நேராகத் தெரியும். ஆனால் அது எனக்கு தேவைப்படாது, ஏனெனில் அதை என்னால் அப்படியே படித்து உள்வாங்கி கொள்ள முடியும்.

இப்போது ஒரு சிறு சினோரியோ கூறுகிறேன். நான் முதல் பெஞ்சில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆசிரியர் வகுப்பறையின் எதிர்க்கோடியில் கடைசி பெஞ்சுக்கருகில் நின்று கொண்டு டிக்டேட் செய்கிறார். அவர் குரலைத் தவற வேறு சத்தமே இல்லை. டிக்டேட் செய்து கொண்டே அவர் பூனைபோல மெதுவாக நான் இருக்கும் திசை நோக்கி நடக்கிறார். நான் அஹ்டை கவனிக்கவில்லை. ஓரிரு நிமிடங்கள் கழிகின்றன. நாங்கள் எழுத்தில் மூழ்கியுள்ளோம். அப்போது சொடேரென்று என் பிடரியில் ஒரு பலத்த அடி விழுகிறது. ஆசிரியர் நோட்டு புத்தகத்தை பிடுங்கிப் பார்க்கிறார். "என்னடா கிறுக்குகிறாய்" என்னும் கேள்வி வேறு. பிறகு என் வகுப்பாசிரியர் ராமஸ்வாமி அய்யரிடம் வேறு நடந்ததைக் கூறி புகார் செய்கிறார். அவருக்கோ ஒருபக்கம் சிரிப்பு இன்னொரு பக்கம் சங்கடம், நான் அவருடைய செல்ல மாணவன் என்பதால்.

ராமசாமி அய்யர் பிறகு சுதாரித்து கொண்டு, "அதிருக்கட்டும் சுந்தரராமன், அவ்வளவு தூரத்தில் இருந்து கொண்டு இந்த ராகவன் பயல் செய்வதை எவ்வாறு கண்டு கொண்டீர்கள்" என்று கேட்கிறார். அதற்கு ஓர் அருமையான பதிலை சுந்தரராமன் தந்தார். அது என்னவாக இருக்கும்? நான் என்ன எழுதுகிறேன் என்பதை அவரால் அவ்வளவு தூரத்திலிருந்து படித்திருக்க முடியாது. பிறகு எவ்வாறு அவ்வாறு கண்டுகொண்டு அவ்வளவு தூரத்திலிருந்து பூனை மாதிரி வந்தார்?

இது புதிருக்கான பதிவு இல்லையென்று முதலில் கூறிய இந்த டோண்டு ராகவனே இக்கேள்வியை இப்போது முன்வைக்கிறான். உண்மையில் என்ன நடந்திருக்கும் என நினைக்கிறீர்கள்? சகமாணவர்கள் யாரும் போட்டு கொடுக்கவில்லை என்பதையும் கூறிட வேண்டியதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

என்ன திமிர் இந்த அமெரிக்கர்களுக்கு?

என்ன, டோண்டு ராகவனா இதைக் கூறுவது என்று ஓடிவருபவர்களுக்கு முதலில் நான் கூற விரும்புவது, இதை நான் கூறவில்லை. இப்பதிவில் நான் குறிப்பிட இருக்கும் முனிசிபல் கமிஷனர் ஜயராஜ் பாடக் (Jairaj Phatak) கூட இதை கூறினார் என்று கூறமாட்டேன். ஆனால் இதுமாதிரி சில எண்ணங்கள் அவரது மனதில் இருக்கும் என நான் நினைக்கிறேன்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். கனிகா தத்தா அவர்கள் எழுதிய Rain of terror என்ற கட்டுரைதான் இப்பதிவுக்கு காரணம். அதை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய ஜயகமலுக்கு நன்றி

மும்பையில் இருக்கும் அமெரிக்க கான்ஸுலேட் அமெரிக்கர்களை மழை காலத்தின்போது மும்பைக்கு வரவேண்டாம் என அறிவுரை கூறியுள்ளது நம்மவர்களின் பல எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. சிலருக்கு வேடிக்கையாக இருக்கிறது, சிலருக்கு எரிச்சலாக உள்ளது. இந்த அமெரிக்கர்களுக்கு வேறுவேலையே இல்லை. முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் அல்லது பயந்தாங்கொள்ளிகள் என்றெல்லாம் பலர் முணுமுணுக்கின்றனர்.

மும்பை நகராட்சி ஆணையாளர் அளிக்கும் எதிர்வினை கவனிக்கத் தக்கது. "மும்பையில் ஒன்றரை கோடி மக்கள் வசிக்கின்றனர், அவர்களெல்லாம் பத்திரமாகத்தானே இருக்கிறார்கள்" என்று கூறுகிறார் அவர். ஆனால் அதே சமயம் இன்னொரு பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் அவரே மழைகாலத்தில் தனது உறவினர்களை மும்பைக்கு வருமாறு அழைக்க மாட்டார் என்பதையும் கூறிவிடுகிறார். பேஷ்.

Phatak ஒரு முக்கிய விஷயத்தை கோட்டை விட்டார் (மும்பையின் ஜனத்தொகை அவர் சொன்ன அளவுக்கும் மேல் அதாவது ஒரு கோடியே எண்பது லட்சத்திலிருந்து ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் வரை என்பதை இப்போதைக்கு மறப்போம்). அமெரிக்க கான்சுலேட் இம்மாதிரி எச்சரிக்கையை அளிப்பது இரண்டாம் முறை. மும்பையின் கட்டுமான வசதிகளை சாடும் அறிவிப்பு இது. இன்னும் பார்க்கப் போனால் இந்தியாவின் நகர அபிவிருத்தியின் நிலையையும் அது பிரதிபலிக்கிறது என்றும் கூறலாம்.

மோசமான வானிலை என்பது உலகில் உள்ள பெருநகரங்களில் சர்வ சாதாரணமே. உலக அளவில் உள்ள இரு பொருளாதார மையங்களில் ஒன்றான லண்டனில் கிட்டத்தட்ட வருடம் முழுவதும் நசநசவென்று எரிச்சல் மூட்டும் மழை.

சரி, ஐரோப்பாவை பார்க்க வேண்டாம், ஆசியாவுக்கே வருவோமா? நவம்பர் மற்றும் டிசம்பரைத் தவிர்த்து சிங்கப்பூரில் எப்போதும் மோசமான வானிலைதான். மலேரியா காய்ச்சல் எப்போது வேண்டுமானாலும் மழைக்காலங்களில் பெருமளவில் வரும் அபாயம் உண்டு. துபாயில் கோடைகாலங்களில் வெப்பம் ஐம்பது செல்சியஸை சுலபமாகத் தாண்டும். பலர் சன் ஸ்ட்ரோக்கால் பாதிக்கபடுகிறார்கள். பெய்ஜிங்கில் குளிர்காலங்களில் பாலைவனத்திலிருந்து பனிக்காற்றும் பனிப்பொழிவுகளும் சகஜம். ஆனால், இதற்காகவெல்லாம் அங்குள்ள அமெரிக்க கான்சுலேட்கள் இம்மாதிரி அறிவுரைகளை தங்கள் குடிமக்களுக்கு தருவதில்லையே. அங்கெல்லாம் அமெரிக்கர்கள் அதிக அளவில் வந்து போகின்றனரே. ஏனெனில் அந்த நகர நிர்வாகங்கள் தேவையான நடவடிக்கைகள் எடுத்துமோசமான வானிலையிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன(ஏர் கண்டிஷன் என்ற வசதி இல்லாதிருந்தால் சிங்கப்பூருக்கு சங்குதான் என்று லீ க்வான் யூ கூறியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன!)

Phatak அவர்கள் மும்பையில் மக்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனர் என்று கூறினால், அவர் மேட்டுக்குடியினரை மட்டும்தான் பார்க்கிறார், அதே சமயம் அவரது ஞாபகசக்தியும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றுதான் எடுத்து கொள்ளவேண்டும். ஆனால் தாராவி போன்ற இடங்களின் நிலைமை என்ன. அம்மாதிரி இடங்களில்தான் அதிக மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் பத்திரமாகவே இல்லை. சாக்கடி அடைப்புகளினால் நீரின் மூலம் பரவும் நோய்களுக்கு அவர்களில் பலர் இரையாகின்றனர். இது எப்போதுமே இருக்கும் பிரச்சினை, மழைக்காலங்களில் கேட்கவே வேண்டாம். மழையின் சீற்றத்தில் வீடுகளை இழப்பவர்கள் தனி.
ஜூலை 2005-ல் பம்பாயே ஸ்தம்பித்தது. பலர் மின்சாரம் தாக்கி, மண்சரிந்து இறந்தனர். அவர்கள் எண்ணிக்கை அதற்கு சில மாதங்கள் கழித்து லண்டனில் நடந்த குண்டுவெடிப்புகளின் போது இறந்தவர்களை விட அதிகம்.

மும்பை நகரவாசிகள் இவற்றுக்கெல்லாம் பழக்கப்பட்டுவிட்டதால் தங்களை ஓரளவுக்கு பாதுகாத்து கொள்ள இயலலாம். ஆனல் வெளிநாடுகளிலிருந்து வரும் விசிட்டர்கள் இந்த பயங்கர அனுபவங்களுக்கு பழக்கமில்லாதவர்கள். அங்கெல்லாம் நகராட்சி செய்து தரும் வசதிகள் taken for granted. திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடிகள் ஒன்றே போதுமே ஆபத்தை விளைவிக்க.

மும்பை இந்தியாவின் வணிகத் தலைநகரம். ஆசியாவின் மூன்றாவது மற்றும் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார சந்தைகள் மும்பையில்தான் உள்ளன என்று நம்ம ப.சிதம்பரம் கூறுகிறார். ஆனால் மோசமான மாநகராட்சி சேவைகள் இவை எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகின்றனவே. மும்பை மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற நகரங்களிலும் இதுதான் நிலை. இந்தியாவின் பொருளாதார நிலை உயர உயர இந்த சேவைகளும் நிலையும் மோசமாகிக் கொண்டே போகின்றன.

இந்தத் தருணத்தில் அமெரிக்க கான்சுகேட்டின் அறிவுரையை நாம் இருவகைகளில் எதிர்க் கொள்ளலாம். Phatak மாதிரி பேசலாம். அல்லது சீர்திருத்தங்களுக்கான தூண்டுகோலாக அதை பார்க்கலாம். என்ன செய்யப் போகிறோம் நாம்?

இப்போது டோண்டு ராகவன். சமீபத்தில் 1971 -74-ல் மும்பைவாசியாக இருந்த நான் மேலே கூறியதெல்லாம் மிகைப்படுத்தப்படவில்லை என உறுதியாகக் கூறுகிறேன். நல்ல மழை பெய்யும் நாட்களில் high tide காரணங்களால் கடல் நீர் வேறு சாக்கடை குழாய்கள் வழியாக மும்பை நகருக்குள் வந்து நகரமே தண்ணீரில் மிதக்கிறது.

இன்னொரு விஷயம். நண்பர் ஜயகமலின் மின்னஞ்சல் போன மாதமே வந்து விட்டது. அதை பதிவாக்குவதற்காக வைத்திருந்தேன், இப்போதுதான் அதற்கு விமோசனம். இந்த ஒரு மாதத்தில் பாடக்கின் நிலையில் ஏதேனும் மாற்றம் அல்லது முன்னேற்றம் உண்டா என்பதை யாராவது மும்பைவாசிகள்தான் கூற வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/15/2008

சுட்டிப் பையன் பி. லட்சுமணன் ஜன்னலை உடைத்த ஒரு மொக்கை கதை

நண்பர் சந்திரசேகரன் அவர்கள் ஒரு சுவாரசியமான மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். உடைந்த ஜன்னல் பற்றிய கதையுடன் அவர் சுட்டும் கட்டுரை ஆரம்பிக்கிறது.

பட்டாம்பூச்சியால் சுனாமி வந்த கதையைப் போல இதுவும் ஆரம்பிக்கிறது.

Frederic Bastiat என்பவரால் எழுதப்பட்ட இக்கதை பொருளாதார மாணவர்களுக்கு மிகவும் பரிச்சயம் என்று இக்கட்டுரை கூறுகிறது. அது இப்போது எனது வார்த்தை மற்றும் உதாரணங்களில்:

பிரணதார்த்தி ஹரனின் மகன் பி. லட்சுமணன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, அடுத்த தெருவில் வசிப்பவனும் அன்றுதான் அவன் எனிமி விட்டிருந்தவனுமான ஆர். கோபாலசுவாமி கருவிக் கொண்டே பந்துவீச, பி. லட்சுமணன் சமீபத்தில் 1958-ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சென்னை டெஸ்டில் அணித்தலைவர் வினூ மன்காட் கில்கிரிஸ்டின் முதல் பந்தை அனாயாசமாக லேட் கட் செய்து பவுண்டரி அடித்தது போல அவனும் முயற்சி செய்ய, பந்து சட்டென்று மேலே எழும்பி அவன் வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைக்க, அவன் தாயார் பெரிய நாயகியால் அப்பளக்கட்டையுடன் துரத்தப்பட்டதால், அடுத்த பந்தில் பி.லட்சுமணன் மன்காட் அவுட் ஆனது போல க்ளீன் போல்ட் ஆனானா என்பதை நாம் அறிய முடியவில்லை. அது இப்பதிவுக்கு தேவையுமில்லை.

பிரணதார்த்தி ஹரன் வீட்டுக்கு வந்து பெரியநாயகி அளித்த புகாரின் பேரில் பி.லட்சுமணனை விசிறிக்கட்டையால் அடித்துவிட்டு, ஜன்னலுக்கு கண்ணாடி போடும் கோவிந்த ஆச்சாரியை கூப்பிட்டு ஜன்னல் கண்ணாடியை போடவைத்தார். அவர் தந்த பணத்தை வைத்து கோவிந்த ஆச்சாரி தன் மகன் ராம ஆச்சாரிக்கு ஸ்லேட் பலப்பம் வாங்கித்தந்தார். ஸ்லேட் வியாபாரி இல. ராமனாத செட்டியார் என்ன செய்தார் என்பதும் இப்பதிவுக்கு தேவையில்லை. அவர் மேலே செலவு செய்து இப்படியே தொடர் சங்கிலியாக பொருளாதார நடவடிக்கை சென்றதாக நிச்சயம் நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

ஜன்னல் மட்டும் உடையாமல் இருந்தால் கோவிந்த ஆச்சாரி பாவம்தானே என்று பொருளாதார நிபுணர்கள் கேட்பார்கள் என்ற தொனியில் அக்கதை செல்கிறது. அதுவும் இப்போதைக்கு நிற்க.

இப்போது நண்பர் சந்திரசேகர் சுட்டியிட்ட கட்டுரைக்கு வருவோம். ஜன்னலை உடைத்தது மேலும் செல்வத்தை பெருக்க உதவியது என்று இக்கதை கூறுவதை ஆசிரியர் மறுக்கிறார். ஜன்னல் உடையாதிருந்தால் என்ன ஆகியிருக்குமாம், அதன் ரிப்பேருக்கு தந்த பணத்தை வைத்து பிரணதார்த்தி ஹரன் திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் சாலையில் உள்ள துணிக்கடை ஸ்ரீராம் ஸ்டோர்ஸில் வேட்டி, சட்டை வாங்கியிருக்கலாம். அதன் முதலாளி ரங்கனாத ஐயங்கார் அகோபில மடத்தில் நடந்த அன்னதானத்துக்கு நன்கொடை அளித்திருக்கலாம், அதன் மூலம் அரிசி மண்டி ஹுஸேன் பாய் ஹஜ் போவதற்கு அதை உபயோகித்திருக்கலாம் என்றும் அடுக்குகிறது இக்கட்டுரை. அதாவது, ஜன்னல் உடைந்ததால், இழந்த செல்வம் மட்டும் சரி செய்யப்பட்டது. ஆனால் அது உடையாமல் இருந்ததால்தான் செல்வம் பெருகியது என்பது இக்கட்டுரையின் துணிபு.

காலங்கார்த்தாலே இப்படி குழப்பறயே என்று முரளி மனோஹர் கோபப்படுகிறான். ஆகவே மேலே கூற வருவதை சுருக்கமாகவே கூறிவிடுகிறேன்.

ஜன்னல் தியரியை உபயோகிப்பவர்கள் யுத்தம், சுனாமி ஆகிய வருவதால் வரும் பொருளாதார செயல்பாடுகளை பட்டியலிட்டு, மேற்படி யுத்தம் மற்றும் சுனாமி வந்ததும் நல்லதற்கே எனக் கூறுகிறார்கள். நம் பதிவர் உலகத்திலும் நன்றி சுனாமி என்றெல்லாம் பதிவு போட்டு அல்லோலகல்லோலப்பட்டதை பழைய பதிவர்கள் அறிவார்கள். ஆனால் அதற்கு எதிர்ப்பானவர்கள் யுத்தம் மற்றும் சுனாமியால் சொத்துக்கள் உருவாகவில்லை, அழிந்தது மட்டுமே பலன் எனக் கூறுகிறார்கள்.

இக்கட்டுரை ஆசிரியர் இரண்டாம் வகையைச் சார்ந்தவர், அதாவது உடைந்த ஜன்னல் கதையை ஏற்று கொள்ளவில்லை. யுத்த காலங்களில் பணப்புழக்கம் அதிகமாவது போலத் தோன்றுவது கூட ஒரு இல்யூஷன் என்றே கூறுகிறார் அவர். அரசாங்கங்கள் பேப்பர் பணத்தை நிறைய அச்சடிப்பதுதான் இத்தோற்றத்தின் முக்கியக் காரணம் என்றும், உண்மையிலேயே லாபம் என்று ஒன்றுமில்லை என்றும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இது பணப்புழக்கம் அல்ல, பணப் புழுக்கமே என்று இவரது அணி வாதாடுகிறது. "நல்ல வாதம்யா, எதிரணி என்ன சொல்லப் போவுதுன்னு பார்க்கலாம் என்று கூறுவது நம்ம சாலமன் பாப்பையா".

எதிரணியில் இப்போது வருவது பதிவர் டோண்டு ராகவன். அவன் என்ன கூறப் போகிறானோ, எவ்வளவு ஹைப்பர் லிங்குகள் தரப்போகிறானோ என எதிர் அணியில் இருப்பவர்கள் படும் டென்ஷனுக்கேற்ப முதலிலேயே ஒரு ஹைப்பர்லிங் தருகிறேன். சுனாமியோ, யுத்தமோ நாம் சொல்லி வருவதல்ல. அவை வந்து விட்டன, உலகமயமாக்கல் போல. இப்போது போய் அது வந்தது தவறா இல்லையா என்றா பேசுவது? மேலே என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம் ஐயா. அவனவன் உழைத்து, வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை கோட்பாட்டில் ஆழ்ந்துள்ளான். அதை எதிர்த்து பேசி மனித இயற்கைக்கு புறம்பான தத்துவத்தை வைத்து கட்டி அழுபவர்கள் அழட்டும், நாம் மேலே செய்வோம். "அது சரி இப்பதிவினால் நாம் பெறும் நீதி என்ன? நீ சொன்ன ஒரே ஒரு கேள்வியுடன் கூடிய நீதிக்கதை போல இருக்காது என நம்புகிறேன்" என்கிறான், கொட்டாவி விட்டபடியே முரளி மனோஹர்.

ஒரேயடியாக அப்படி கூற இயலாது. நான் கூற வருவது என்னவென்றால் சுனாமியோ, யுத்தமோ வந்து விட்டன, மனித இனத்திடமிருந்து ஏற்கனவே பெரிய விலையை பெற்று விட்டன. ஆகவே அதனிலிருந்து பெறும் லாபமான பொருளாதார நடவடிக்கைகளை ஏன் குறைத்து மதிப்பிட வேண்டும் என்பதுதான் என் கேள்வி. யுத்தங்களினால் அழிந்த ஜெர்மனி, ஜப்பான் போன்றவை மீண்டும் நிர்மாணிக்கப்பட்டன. அச்சமயம் நல்ல டவுன் பிளானிங்கில் கட்டிடங்கள் கட்டி, சாலைகளை அமைக்க முடிந்தது. யுத்தம் வராதிருந்தால் அவற்றை செய்திருக்க முடியாது. ஆக கெடுதல்களிலிருந்தும் நல்லதைப் பெறலாம் என்பதுதான் நான் கூறும் நீதி. "அப்பாடா, இப்போதாவது என்னிடம் பதிலளிக்குமாறு கேள்வி கேட்டு படுத்தவில்லையே" என்று கூறும் முரளி மனோஹருக்கும் மற்றவர்களுக்கும் இப்போது டோண்டு ராகவனின் கேள்வி. இந்த நிலைப்பட்டை டோண்டு ராகவன் எடுத்ததற்கு முக்கியக் காரணமே அவன் இப்பதிவர்கள் உலகில் பெற்ற அனுபவங்களே. அவன் என்ன கூற வருகிறான் என்பது புரிகிறதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/13/2008

டோண்டு ராகவனிடமிருந்து ஒரு ஜோசியப் பதிவு!

ஜோசியம் பற்றி பல பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன. சில ஆதரித்தும், பல எதிர்த்தும் வருகின்றன. டோண்டு ராகவனின் நிலை என்ன? அதைப் பற்றி கூறும் முன்னால் நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்த அமரர் கல்கியின் தங்கச் சங்கிலி என்னும் தலைப்பில் வந்த கதையை இங்கே குறிப்பிடுகிறேன். அது இவ்வார கல்கி இதழில் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. கல்கி இணைய பக்கத்தில் வந்துள்ள அக்கதையின் லிங்க் அப்படியே இருக்குமா என்ற சந்தேகம் உள்ளதால் அதை நகலெடுத்து இங்கே ஒட்டுகிறேன். முதலில் அமரர் பேராசியர் கல்கி!

"என்னுடைய மனைவியின் நற்குணங்களையெல்லாம் விவரிக்க வேண்டுமானால் விகடனில் இடம் போதாது. ஆகையால் துர்க்குணங்கள் இரண்டை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். அவளுக்கு நகைப் பைத்தியம் அசாத்தியம். ஜோதிடத்தில் பைத்தியமோ அதைவிட அதிகம். என்ன காரியமானாலும் நாள் நட்சத்திரம் பாராமல் செய்யமாட்டாள். அதிலும் அண்ணாசாமி ஜோசியர் நாள் பார்த்துச் சொன்னால்தான் அவளுக்குத் திருப்தி.

என் மனைவியின் கல்யாணத்தின்போது, அவளுக்குக் கழுத்தில் ஒரு வடம் தங்கச் சங்கிலி செய்து போட்டிருந்தார்கள். சென்ற வருஷத்தில் எனக்கு சம்பளம் 50 ரூபா யிலிருந்து 60 ரூபாய்க்கு பிரமோஷன் ஆனதும், ஒற்றை வடம் சங்கிலியை இரட்டைவடமாக்கிக் கொள்ள வேண்டுமென்று என் மனைவி பிரேரணை செய்தாள். அதை அவளே ஆமோதித்து, ஆதரித்தும் விட்டாள். வாக்கெடுக்கும்போது நான் நடுநிலைமை வகித்தபடியால் பிரேரணை நிறைவேறிவிட்டது. எனவே, அதைக் காரியத்தில் நடத்தி வைப்பதைத் தவிர, எனக்கு வேறு வழியில்லாமல் போயிற்று.

அதாவது, அந்த மாதம் முதல் மாதம் 10 ரூபாய் மீதி செய்து பாங்கியில் போட்டுவரத் தொடங்கினேன். சென்ற மாதத்தில் இது 120 ரூபாய்க்கு வந்தது. மற்றொரு வடம் சங்கிலிக்கு எட்டு பவுன் வேண்டும். பவுன் பதிமூன்றரை ரூபாய் வீதம் எட்டு பவுனுக்கு 108 ரூபாயும், கூலிக்கு பாக்கி 12 ரூபாயும் போதுமாகையால், ஒரு நாள் நகைக் கடைக்குப் போய் வருவதென்று தீர்மானித்தோம். செப்டெம்பர் 20ஆம் தேதி எனக்கு அவகாசமிருந்தது. “இன்றைக்குப் போகலாமா? பாங்கியில் போய்ப் பணம் வாங்கி
வரட்டுமா?” என்று கேட்டேன். “ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்கவில் லையா? நாலு நாள் போகட்டும்” என்றாள் என் மனைவி. எனக்கு இது மிகவும் அதிசயமாயிருந்தது. ஆனால், காலையில் அண்ணாசாமி ஜோசியர் வந்துவிட்டுப் போனது ஞாபகம் வந்ததும் அதிசயம்
போய்விட்டது. “ஓகோ! நாள் நன்றாயில்லையோ? என்றைக்குத்தான் நன்றாயிருக்கிறது?” என்று கேட்டேன். “அடுத்த வெள்ளிக்கிழமை நகை பண்ணுவதற்கு ரொம்ப நல்ல நாளாம்” என்றாள் என் மனைவி.

பத்திரிகை, கித்திரிகை படிக்கும் வழக்கம் என்னிடம் கிடையாது. யார் எப்படிப் போனால் என்ன என்று என்பாட்டில் இருப்பேன். எனவே, வியாழக்கிழமை பாங்கிக்குச் சென்ற போது, சென்ற நாலு நாட்களாக பாங்கி மூடியிருக்கிறதென்று அறிந்து திடுக்கிட்டுப் போனேன்.
‘பிச்சைக்காரன் குடிசையில் சனீசுவரன் புகுந்தது போல’ என்னுடைய சொற்பப் பணத்துக்கு மோசம் வந்துவிடுமோ என்று பீதி அடைந்தேன். நல்லவேளையாக மறு நாள் காலையில் பாங்கி திறந்து பணமும் கொடுத்தார்கள். முதல் நாள் இரவு கலங்கியிருந்த என் மனைவி இப்போது, “பார்த்தயளா? பார்த்தயளா? தட்டாமல் கிடைத்ததே! பெரியவாள் நாள் பார்த்துச் சொல்றது வீண் போகுமா?” என்று சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டாள்.

சாயங்காலம் நகைக் கடைக்குப் போனோம். எட்டு பவுனில் மனதுக்குப் பிடித்ததாய்ப் பார்த்து, என் மனைவியே ஒரு சங்கிலியை எடுத்துக்கொண்டாள். கடைக்காரன் பில் எழுதிக் கொடுத்தான். அதில் மொத்தம் 145 ரூபாய் போட்டிருந்ததைக் கண்டு நான் புன்சிரிப்புடன், “செட்டியாரே! கணக்கு தவறாகப் போட்டிருக்கிறீர்களே!” என்றேன். செட்டியார் வாங்கிப் பார்த்து விட்டு, “தவறு ஒன்றும் இல்லையே” என்றார். “தவறு இல்லையா? எட்டு பவுனுக்கு பதிமூன்றரை ரூபாய் வீதம் 108 ரூபாய் தானே. 136 ரூபாய் போட்டிருக்கிறீர்களே?” என்றேன். செட்டியார் சிரித்துவிட்டு, “பவுன் விலை 17 ரூபாய்” என்றார். “இது என்ன கூத்து?” என்றாள் என் மனைவி. “என்ன செட்டியாரே! என்னைப் பட்டிக்காட்டான் என்று நினைத்துக் கொண்டீரா?” என்று கோபமாய்க் கேட்டேன். “இல்லை... ஸார்! நீங்கள் பட்டணத்து மனிதர்தான். ஆனால், வாசலில் போர்டில் எழுதியிருக்கிறது. போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்” என்றார் செட்டியார்.
சங்கிலி வாங்காமலே நாங்கள் வீடு திரும்பவேண்டியதாயிற்று. வீடு சேரும் வரையில் வாயை மூடிக்கொண்டு வந்த என் மனைவி, வீட்டுக்குள் நுழைந் தோமோ இல்லையோ, தன்னுடைய ஆத்திரத்தையெல்லாம் அண்ணாசாமி ஜோசியர் மீது காட்டத் தொடங்கினாள். “அந்தக் கட்டேலே போற பிராமணன் இனிமேல் இங்கே வரட்டும். காப்பியா காப்பி! கழுநீரைக் கரைத்துக் கொடுக்கிறேன்” என்றும், இன்னும் பலவிதமாகவும் அவரை வசை மொழிகளால் அலங்கரிக்கத் தொடங்கினாள்.

“ஏன் இவ்வளவு ஆத்திரப்படுகிறாய்? நாளை தினம் வேண்டுமானால் 30 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு வருகிறேன். சங்கிலி வாங்கிக்கொண்டு வந்துவிடலாமே!” என்றேன்.

“நன்றாய்ச் சொன்னீர்கள், இதுதான் புருஷாள் அசட்டுத்தனம் என்பது. நேற்று பதிமூன்றரை ரூபாயா இருந்த பவுனை இன்றைக்கு 17 ரூபாய் கொடுத்து யாராவது வாங்குவார்களா? அப்படி என்ன வந்தது இப்போது? பாங்கியில் பணம் இருந்தாலும் வட்டியாவது கிடைக்கும்” என்றாள் என் மனைவி. அண்ணாசாமி ஜோசியரை என் மனதுக்குள் வாழ்த்தினேன்.

“இன்னொரு வடம் சங்கிலி இல்லை என்று என் கழுத்து ஒன்றும் காத்துக் கிடக்கவில்லை. பிழைத்துக் கிடந்தால் பார்த்துக் கொள்ளலாம். ஆனால், அந்தக் கட்டேலே போற பிராமணன் ஜோசியம் பார்க்கிறானே, ஜோசியம்? பவுன் விலை இப்படி ஏறப்போறது என்று ஜோசியத்தில் பார்த்துச் சொல்கிறதுதானே! அன்றைக்கு எட்டு பவுன் வாங்கி வைத்திருந்தால் இப்போது 28 ரூபாய் லாபத்துக்கு விற்கலாமே?” என்றாள்.

அப்பொழுதுதான், என்னுடைய மனைவி கேவலம் ஓர் ஆபீஸ் குமாஸ்தாவுக்கு வாழ்க்கைப்பட்டது பெருந்தவறு என்பதை அறிந் தேன். பெரிய பாங்க் முதலாளியையாவது, பொக்கிஷ மந்திரியையாவது அவள் மணம் புரிந்து கொண்டிருக்க வேண்டும்! - நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள்"?

இப்போது மீண்டும் டோண்டு ராகவன். எங்கோ இருக்கும் கிரகங்கள் நம் வாழ்க்கையை எப்படி பாதிக்க இயலும் என்பதுதான் எனக்குள் வெகு நாட்களாக இருக்கும் கேள்வி. அவற்றின் கதிரியக்கங்கள் வந்து தாக்குமாம். வாதத்துக்கு அப்படியே வைத்து கொண்டாலும் அது எந்த விதமாகத் தாக்கும் என்பதை கண்டறிந்தவர்கள் யார்? ஏதேனும் பரிசோதனை செய்து பார்த்தார்களாமா? சூரியனும் ஒரு பாதையில் நகர்கிறது. அது மூடிய பாதை என்பதையும் படித்துள்ளேன். ஆகவே சில ஆண்டுகள் வித்தியாசத்தில் அது பழைய இடத்தை அடையலாம். இது ஒரு சுழற்சி முறை என்று வைத்து கொள்ளலாம் என்பதே ஜோசியத்தின் அடிப்படையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது மிக குழப்பமான அடிப்படை என்பதே என் குழம்பிய மனதுக்கு படுகிறது. அதே பழைய கேள்விதான் மீண்டும். இந்த பாதையில் வெவ்வேறு இடங்களில் இருக்கும் சூரியனும் அதைச் சுற்றும் கிரகங்களும் தனிப்பட்ட மனிதர்களை எங்கனம் பாதிக்க இயலும்? அப்படியே பாதிப்பதாக வைத்து கொண்டாலும் அதை துல்லியமாக கணித்து சொல்வதாக கூறிக்கொள்ளும் ஜாதகத்தின் அடிப்படை ஞானம் எங்கிருந்து வந்தது? யாராவது எக்காலத்திலாவது அதை கண்டறிந்து குறித்து வைத்துள்ளார்களா?

மற்றப்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டுமே கிரகங்கள் இல்லை எனக் கூறினாலும் ஜோசியக்கலையில் அவற்றை கிரகங்களாகவே பாவிக்கின்றனர். உதாரணத்துக்கு சில மொழிகளில் எல்லா பெயர்ச் சொற்களுக்கும் ஆண்பால், பெண்பால் என்றெல்லாம் கூறுவார்கள் (ஹிந்தி, ஜெர்மன், பிரெஞ்சு முதலியன). ஆனால் அவற்றைப் பற்றிய குறிப்புகளிலேயே நிஜமான ஆணுக்கும் பெண்ணுக்கும் அச்சொற்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் கூறிவிடுவார்கள். அதே போல இங்கும் கிரகங்கள் எனப் பெயரிடுவதை கன்வென்ஷன் என்னும் பெயரில் ஏற்பதில் பிரச்சினை இருக்கக் கூடாது.

அதை விடுங்கள். இந்த எண்கணிதத்தை எடுத்து கொள்வோம். ஐயா நான் தெரியாமல்தான் கேட்கிறேன், இந்த தேதிகள் என்பது என்ன? இப்போதிருக்கும் தேதிகள் முறையும் 1600-ஆம் ஆண்டிலிருந்துதான் செல்லும். அது பற்றி நான் போட்ட மெதுவாக ஒட்டிக் கொண்டத் திறமை என்னும் பதிவின் ஒரு பின்னூட்டத்திலிருந்து சில வரிகள் இங்கே.

"சிலர் கேட்கலாம். அப்படியே கிறிஸ்துமஸ் கடும் கோடையில் வந்தால் என்ன என்று. அவர்களுக்கு கூறும் ஒரே பதில் காலண்டர் என்பது முதலில் விவசாயிகளை மனதில் இருத்தித்தான் உருவாக்கப்பட்டது என்று. பலான பலான தேதிவாக்கில் விதையிட வேண்டும் என்று இருப்பது சூரியன் பூமி சம்பந்தத்தை வைத்தே. ஆக, அது வேளை கெட்ட வேளையில் நடந்தால் கெட்டது குடி நிஜமாகவே.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரி 29 வருவது ஒரு ஃபைன் அட்ஜஸ்ட்மெண்ட்தான். நானூறால் வகுபடாத நூற்றாண்டுகள் லீப் வருடம் இல்லை என்பதும் சற்று finer adjustment என்று காண்க. எழுபதுகளில் 2000-க்கு பிப்ரவரி 30 நாட்கள் என்று கூறப்பட்டது. அது இன்னும் finer adjustment. ஆனால் அது நடைபெறவில்லை. அது வேறு விஷயம். எண்ணம் அதுதான், அதாவது விவசாய அடிப்படை அப்படியே உள்ளது".

அவ்வளவுதான் விஷயம். அதாவது தங்கள் சௌகரியத்துக்காக வைத்து கொண்டது காலண்டர். தேவையானால் அதை மாற்றவும் செய்யலாம். அதை வைத்து கொண்டு என்ன ஜோசியம் கூறுவதாம். இதில் நம்பர்கள் வேறு. ஒன்றாம் தேதி பிறந்தவர்கள், இரண்டாம் தேதி பிறந்தவர்கள் என்று இம்சைகள். ஐயாமார்களே, எனக்குத் தெரிந்து தேதிகள் சில விஷயங்களில் படுத்துகின்றன. உதாரணத்துக்கு ஒரு மாதத்தில் இரண்டாம் தேதி பிறந்த ஒரு அரசு ஊழியர் இப்போதைய சட்டப்படி ஓய்வு பெறும் மாதத்தின் கடைசி தேதி அன்றுதான் ரிட்டயர் ஆகிறார். அவர் ஜூலைமாதம் இரண்டாம் தேதி பிறந்தால் 31-ஆம் தேதி ரிட்டயர் ஆகிறார். ஆக, 29 நாட்கள் லாபம். இதுதான் அதிகப் பட்சம் அதுவே 31-ஆம் தேதி பிறந்தால் அதே தேதியில்தான் ரிட்டயர் ஆகவேண்டும். அதாவது 0 நாட்கள்தான் லாபம். ஆனால் இது குறைந்த பட்சம் அல்ல. ஒன்றாம் தேதி பிறந்தால் அதற்கு முந்தைய மாதத்தின் கடைசி தேதியிலேயே ரிட்டயர் ஆகவேண்டியதுதான். அதாவது மைனஸ் ஒரு நாள். நிஜமாகவே ஆப்புதாண்டி அவருக்கு. அதைத்தவிர தேதிகள் ஒன்றும் கழட்டாது என்பதே உண்மை. ஆனாலும் நான் மேலே சொன்ன பதிவில் கூறியிருந்தபடி எனக்கு மட்டும் இந்த தேதிகளும், அவற்றின் கிழமையைக் கூறும் திறமை மெல்ல வந்து ஒட்டிக்கொண்டதன் பலனை கீழ்க்கண்ட வரிகளில் கூறியுள்ளேன்.

"என் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகள் தேதி மற்றும் கிழமையுடன் எனக்கு ஞாபகம் இருக்கும். அதை வைத்து மற்றவர்கள் ஏதாவது தேதி சொல்லும் போது கிழமையைக் கூற ஆரம்பித்தேன். பலர் ஆச்சரியப்பட்டனர், சிலர் எனக்கு ஜோஸ்யம் தெரியும் என்று கூட நினைத்து விட்டனர். ஒரு 19 வயது ஃபிகர் தன் கையை நீட்ட அவளிடம் உண்மை கூற மனமில்லாது கையை சிறிது நேரம் பிடித்துப் பார்த்து, (மெத்து மெத்தென்று இருந்தது. கையைத்தான் கூறுகிறேன் ஐயா) பாவ்லா காட்டியதை இந்த நேரத்தில் மறந்து விடுவோம்".

கமல் இந்த நம்பர் மேட்டரை வைத்து வசூல்ராஜாவில் தூள் கிளப்பியதையும் பார்த்து ரிலேக்ஸ் ஆகிவிடுங்கள்.

நான் கூறுகிறேன், எனக்கு திடீரென நல்லது நடந்தால் சந்தோஷப்படுவேன். எதேச்சையாக கீழே 260 ரூபாய் கிடைத்தால் (நிஜமாகவே சமீபத்தில் 1996-ல் காஜியாபாத்தில் நடந்து கொண்டிருந்த போது கிடைத்தது) சந்தோஷப்படுவேன். அதையே நான் சில நாட்களுக்கு முன்னால் ஜோசியம் மூலம் தெரிந்து கொண்டிருந்தால் அவ்வளவு சந்தோஷப்படுவேனா என்பதை நிச்சயமாகக் கூற இயலாதுதானே.

ஜோசியம் பார்ப்பதற்கு ஆதரவான வாதங்களையும் பார்ப்போமா? பலர் கூறுகிறார்கள், ஜோசியம் என்பது பிற்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளுக்கான சாத்தியக்கூறுகளை கூறுகிறது என்று. அப்போது முன்கூட்டி நடவடிக்கை செய்து வைத்து கொண்டால் அவற்றின் விளைவுகளை குறைக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அதற்குத்தான் பரிகார பூஜைகள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவற்றின் அடிப்படை என்னவென்றால் மனதில் தன்னம்பிக்கை பெறுவதே.

மாமன் மகள் என்னும் படத்தில் ஜெமினி கணேசன் கோழையாக இருக்க, அவருடைய பாட்டி தனது கணவன் உபயோகித்தது என்று கூறி தாயத்து போன்ற ஒன்றை அவரிடம் தர, அவரும் தைரியம் பெற்று வெற்றி பெறுகிறார். கடைசியில்தான் பாட்டி அப்பொருள் தாத்தாவின் பொடி டப்பி என்ற உண்மையை போட்டு உடைக்கிறார்.

அதனால் என்ன, விளைவு என்னவோ நல்லதுதானே? ஆகவே, ஏதேனும் கோவில் பிரகாரங்களை குறிப்பிட்ட அளவுக்கு தினமும் சுற்றுங்கள் எனக் கூற அதை நம்பிக்கையுடன் நிறைவேற்றும்போது வாக்கிங் செய்த பலனும், அதனால் மூச்சுவிடுவது சீராகி, உடல் நலம் பெற்று தன்னம்பிக்கை வருவதும் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதனால் தைரியம் ஏற்பட்டு வெற்றியும் அடையலாம். கோவில், கடவுள் எனக் கூறினால் அதை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்னும் மனோதத்துவக் காரணமே இங்கு ஆட்சி செய்கிறது.

அதைவிடுத்து ஆயிரக்கணக்கில் பூஜைக்காக பணம் கேட்டு அதையும் தந்தால், பணம் பெறும் ஜோசியரைத் தவிர யாருக்கும் பிரயோசனம் இல்லை. அதனால் வரும் தன்னம்பிக்கையை ஜோசியம் கேட்டவர் காலணா காசு செலவின்றி உள்ளூர் கோவிலை சுற்றி வந்தே பெற இயலும்.

"நீ என்ன செய்தாய் உன் வாழ்நாளில், ஜோசியமே பார்த்ததில்லையா இதுவரை நீயி" என்று என்னைக் கைநீட்டிக் கேட்கும் முரளிமனோகருக்கு, "பார்த்துள்ளேன்" என்பதுதான் பதில். என்ன செய்வது, நான் ஒன்றும் பெரிய பகுத்தறிவுவாதி என்று பீற்றிக் கொண்டதில்லையே. என் அம்மாவழி தாத்தா பிரசித்தி பெற்ற ஜோசியர். எனது ஜாதகத்தை கணித்து பலன்கள் போட்டு 1970-லேயே என்னிடம் தந்து விட்டார். 2000-க்கு பிறகு நடக்கப் போகும் பலன்களையும் கூறியுள்ளார். பல சரியாகவே உள்ளன. இருப்பினும் எனக்கென்னவோ நான் மேலே கேட்ட பகுத்தறிவு கேள்விகள் அப்படியே இருப்பதாகத்தான் படுகின்றன.

எவ்வளவு பகுத்தறிவுவாதியும் ஒரு ஜோசியன் கெட்டது நடக்கும் எனக் கூறினால் மனம் கலங்குவது மனித இயற்கையே.

நம்புவதற்கு கஷ்டமான செய்தி ஒன்றை படித்தேன் என்னும் எனது பதிவில் இப்பின்னூட்டம் இட்டேன். "அறுபதுகளின் இறுதியில் விடுதலையில் ஒரு செய்தி வந்தது. அதாவது ஒரு ஜோசியர் விடுதலைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அக்கடிதம் கிடைத்த அடுத்த அமாவாசையன்று (அப்போது அமாவாசை வருவதற்கு இன்னும் பத்து தினங்கள் இருந்தன) பெரியார் அவர்கள் ஜாதகப்படி அவர்களுக்கு மாரடைப்பால் மரணம் என குறிப்பிட்டிருந்தது. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இக்கடிதத்தை விடுதலை பிரசுரித்து, ஜோசியரை கேலி செய்தது. என்ன, இக்கடிதத்தை அமாவாசைக்கு இரு தினங்கள் கழித்துத்தான் விடுதலையில் பிரசுரித்தார்கள். காரணம் என்னவாக இருக்கும் என உங்களால் கணிக்க இயலுமா DFC ? :)))"

ஆக, இப்போது மீண்டும் அமரர் கல்கி எழுதிய சில வரிகளை இங்கு நினைவிலிருந்து தருகிறேன், அவரது ஏட்டிக்கு போட்டி என்ற புத்தகத்திலிருந்து. "ஜோசியர்களே கவலைப்படாதீர்கள், இது போன்று இன்னும் 999 கட்டுரைகள் வந்தாலும், உங்கள் பிழைப்புக்கு பங்கம் வராது"

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/12/2008

டோண்டு பதில்கள் பற்றிய சில எண்ணங்கள்

இதை போட தேவையிருக்கும் என நினைக்கவில்லை. என்ன செய்வது, வேறு வழியில்லை.

ஒரு போர் அறிவிப்பாக நான் வெளியிட்ட இப்பதிவிலேயே கூறியிருந்தேன், தனிமனித தாக்குதல்கள் உள்ள பின்னூட்டங்கள் ஏற்கப்பட மாட்டாது என்று.

இப்போது சற்றே மாற்ற வேண்டியுள்ளது, கேள்விகள் விஷயத்தில். பொது வாழ்க்கையில் உள்ள சிலரது தனிப்பட்ட வாழ்க்கைகள் குறித்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவற்றை வெளியிடுவேன், ரொம்பவும் ஆபாசமாக இல்லாதிருந்தால். ஆனால் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி பேச இயலாது என்பது போன்ற பதில்கள்தான் அவற்றுக்கு. கலைஞரோ அல்லது வேறு தலைவரோ பலதாரங்களை மணந்து கொள்வது சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சினை. வெளி ஆட்கள் அதில் வந்து குழப்பம் செய்யாது இருத்தல் நலம்.

கேள்வி பதில்களை விளையாட்டாகத்தான் ஆரம்பித்தேன். இப்போது அவற்றில் ஒரு ஒழுங்கை கொண்டு வர நினைக்கிறேன். இந்த விஷயங்களில் எனது ரோல் மாடல் சோ அவர்களே. அவர் அளவுக்கு நேர்மையான பதில்கள் தர முடிந்தால் மகிழ்ச்சியடைவேன்.

அதற்காக கும்மிகள் இல்லை என அஞ்ச வேண்டாம். அவை உண்டு, ஆனால் மேலே சொன்ன கட்டுப்பட்டிற்குள்.

சிறு யோசனை. அனானியாக வந்தாலும் பெயரையாவது கூறுங்கள். இல்லாவிட்டால் பலான தேதி, பலான நேரம் கேல்வி கேட்ட அனானி என எழுத வேண்டியுள்ளது. பிளாக்கராகவே வந்து கேள்வி கேட்டால் உத்தமம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/11/2008

டோண்டு பதில்கள் - 11.07.2008

பாண்டிய நக்கீரன்:
1. தமிழ் புதின எழுத்தாளர்களில் தங்களை மிகவும் கவர்ந்தவர் யார்?
பதில்: ரமணி சந்திரன் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் முக்கியமானவர். நேர்மறை எண்ணங்களுடன், நிமிர்ந்த நடையும் கூர்மையான பார்வையும் கொண்ட அவரது கதாநாயகியர் எனக்கு மிகவும் பிடிக்கும். தார்மீக கோபம் கொப்பளிக்கும் ஜோகிர்லதா கிரிஜாவும் எனக்கு பிடித்தமானவரே. அதற்காக சுஜாதாவை மறந்துவிட முடியாதே, நாடோடி மட்டும் சாமானியமானவரா? இன்னும் பலர் உள்ளனர் யாரைக் கூற, யாரை விட?

2. பிடித்த புத்தகம்?
பதில்: தேவனின் மிஸ்டர் வேதாந்தம்.

3. தமிழ்வாணனின் துப்பறியும் கதையில் கல்லுரிக்காலத்தில் ஈடுபாடு உண்டா?
பதில்: உண்டு. ஆனால் கல்லூரிக் காலங்களில் அல்ல, எட்டாம் வகுப்பு காலம் வரைதான்.

4. அவர் ஆங்கில"சேஸ்" களை காப்பிஅடிப்பதாக சொல்வார்களே?
பதில்: சேஸை மட்டுமா காப்பியடித்தார், மற்றவ்ர்களையும் காப்பியடித்தார். முக்கியமானவர்கள் எட்கர் வேலஸ், செக்ஸ்டன் பிளேக் கதைகளை எழுதியவர்கள் ஆகியோர். அப்படியாயினும் தமிழில் சுவையாக எழுதியதை மறக்க இயலாது.

5. அந்த ஆங்கில "சேஸ்"களைப் படித்ததுண்டா?
பதில்: சில சேஸ் கதைகளை சமீபத்தில் அறுபதுகளில் படித்துள்ளேன், Soft center, World in my pocket etc. அவை என் மனத்தைக் கவரவில்லை. கெட்டவர்கள் ஜெயிப்பது போன்ற தீம்கள் எனக்கு பிடிக்காது.

6. ஆங்கில நாவல்களை தொடர்ந்து படித்த நண்பர்களின் ஆங்கிலப் புலமை இன்றும் ஜொலிக்கிறது?
பதில்: அப்படி ஒன்றும் தெரியவில்லையே. பலருக்கு சேர்ந்தாப்போல் நான்கு வரிகள் பிழையின்றி எழுத வரவில்லை என்பதைப் பார்த்துள்ளேன்.

7. இந்த வரிசையில் தாங்கள் உண்டா?
பதில்: ஏதோ ஆங்கிலம் எழுதுவேன், எழுதியாக வேண்டும். இல்லாவிட்டால் மொழிபெயர்ப்பாளனாக எங்ஙனம் குப்பை கொட்டுவதாம்?

8. தற்கால எழுத்தாளர்களில் யார் பிரபலம் (விற்பனை அடிப்படையில்)?
பதில்: யாரோ சேத்தன் பகத்தாம். இன்றுதான் பேப்பரில் பார்த்தேன். எனக்கு பிடித்த வெற்றிகரமான எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங். அவரது ஹாரி பாட்டரை யாரால் மறக்க இயலும்?

9. புத்தக விற்பனை படுஅமர்க்களப்படுகிறதே?
பதில்: ஒரு நல்ல புத்தகம் வெற்றியடைவதை யாராலும் தடுக்க இயலாது என்பதுதான் உண்மை.

10. அதிலும் பிரபல புத்தங்களின் "டூப்பிளிக்கேட்" மலிவான வில்லக்கு விற்கப் படுவதை பற்றி?
பதில்: காலத்தின் அலங்கோலம்.


எழில் அரசு:
டோண்டு சார் இந்த பழமொழிகளுக்கு உங்கள் பாணியில் புதுவிளக்கம் கொஞ்சம் நகைச்சுவை கலந்து (தற்கால அரசியல்,பொருளாதார, சமூகநில ஆகியவற்றை சார்ந்து)

1. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
கம்யூனிஸ்டுகள் எப்போதுமே திருந்த மாட்டாங்க. அஞ்சுலே அறிவுக்கு வேலை கொடுக்காதவங்க ஐம்பதிலேயா கொடுப்பாங்க?

2. மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம்.
நாத்தனார் உடைத்தால் என்ன குடம்?

3. நிறை குடம் நீர் தளும்பாது. குறை குடம் கூத்தாடும்
காலி குடமும் தளும்பாது, தெரியுமா?

4. ஆழம் பார்க்காமல் காலை விடாதே
பக்கத்து வீட்டு பையன் எதற்கு இருக்கான்? அவனை காலை விடச்சொல்லி பார்க்கோணும்னு சொல்ற ரேஞ்சுக்கு சில தலைவனுங்க இருக்காங்களே.

5. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்
கொஞ்சம் கையில் பிடிக்கிற அளவுக்கு முள் இருத்தல் நலம். இல்லாவிட்டால் இந்த முள் கையில் குத்தி சங்குதான்.

6. யானைக்கும் அடி சறுக்கும்
பிறகு சறுக்கவே செய்யாது, ஏனெனில் அதனோட எடைக்கு கால் முறிவு நிச்சயம்.

7. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
காக்கைக்குத் தெரியுமா பொன்னின் விலை?

8. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் (திருக்குறள்)
சில இன்னா செய்தவருக்கு அவர் நடுங்கும் அளவுக்கு உதைத்தால்தான் சரிபட்டு வரும் போலிருக்கிறதே.

9. புலி பசித்தாலும் புல்லை தின்னாது.
ஜாங்கிரி கூடத்தான் தின்னாது. அதுக்கென்ன இப்போ?

10. வெறும் கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம்.
12-B மாதிரி பஸ்களில் கடமையாற்றும் ஆஸ்தான ஜேப்படித் திருடர்களின் கூற்றா இது?


தென்காசி:
1. சென்னையில் நாடக சபாக்களின் தற்போதய நிலை என்ன?(வாசகர் வருகை, ஹைடெக் மாற்றங்கள்)
பதில்: நன்றாக இல்லை.

2. நாடகக் குழுக்களில் "பிசி"யாக உள்ள குழு யாருடையது?
பதில்: நண்பர் காஞ்சனா ராதாகிருஷ்ணனுக்கு இக்கேள்வி அனுப்பி வைக்கப்படுகிறது.

3. நாடகக் காவலர் மனோகர் வைத்திருந்த பிரமாண்ட அரங்க அமைப்புகளை என்ன செய்தார்கள்?
பதில்: அவர் பிள்ளை எடுத்து நடத்த முயல்வதாகக் கேள்வி. அப்படித்தானே ராதாகிருஷ்ணன் அவர்களே?

4. ரேடியோ நாடகங்கள் கூட தற்சமயம் சோபிக்கவில்லையே?
பதில்: ரேடியோவையே யார் கேட்கிறார்கள், எஃப்.எம். தவிர?

5. டீ.வி சிரியல்கள் எல்லோரையும் இழுத்துவிட்டதே?
பதில்: உண்மைதான். ஆனால் அவற்றில் வரும் கருத்துகள் பலரை பாதிப்பதால் அவற்றைத் தயாரிப்பவர்களின் கடமை அதிகரிக்கிறது. கோலங்கள் தொல்காப்பியனை இது சம்பந்தமாக நான் கேள்விகள் கேட்டேன்.

6. உங்களுக்கு சீரியல்கள் பார்க்கும் பழக்கம் உண்டா?
பதில்: ஆகா உண்டு.

7. அதை பற்றிய விமர்சனம் (பிடித்த அல்லது பிடிக்காத)
பதில்: நான் ஏற்கனவே கூறியபடி மிக நல்ல முறையில் எடுக்கப்படும் சீரியல்கள் உண்டுதான். ஆனால் அவற்றில் சொல்லப்படும் பல கருத்துகள் பொறுப்பின்றி டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக கூறப்படுவதுதான் கவலையளிக்கிறது.

8. திரைப்பட உலகம் பெரிய கார்பொரேட் கைகளில், செலவுகூட எகிறுதே?
பதில்: காலத்தின் கட்டாயம். போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் ஒரே இடத்தில் நிலைத்து நிற்பதற்கே ஓடி கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே. அவர்கள் என்னதான் செய்வார்கள்?

9. 4 படங்களை தவிர மற்ற எல்லாம் ஊத்திக் கொண்டதாமே? (அஞ்சாதே, சந்தோஷ் சுப்பிரமணியம், சண்டை, யாரடி நீ மோகினி)
பதில்: மேலே சொன்ன படங்களில் ஒன்றைக் கூட நான் பார்க்கவில்லை. நோ கமெண்ட்ஸ்.

10. அடுத்த வருங்கால முதல்வர் கனவை அப்பாவுக்காக காண முயலும் விஜய்-ன் குருவி கூட ("நாளைய சின்ன தளபதி" இரண்டின் தயாரிப்பு- அரசு செல்வாக்கு etc)பாக்ஸ் ஆபீஸில் சோபிக்கவில்லையே?
பதில்: செல்வாக்கு ரொம்பவுமே ஓவராக இருந்தாலும் கஷ்டம்தான். மக்களுக்கே வெறுப்பு வந்து வேணுமடா இவர்களுக்கு என மகிழ்ச்சி கொள்ளும் காலம் இது.


ராமகிருஷ்ணஹரி:
1. What will happen to leftists if congresss breaks the understanding?
பதில்: ஆதரவு வாபஸ் என்ற பூச்சாண்டி வாபஸ் ஆகும்வரைதான் செல்லும். வாபஸ் ஆன பிறகு அது புஸ்வாணமே. அதுதான் இப்போது நடந்துள்ளது.

2. Will West Bengal Govt get threats of dissolving, based on law and order in the famous "Nandigraam"
பதில்: மாற்று சக்தி வரும்வரை தெரிந்த பிசாசே மேல் என்ற கோட்ப்பாட்டின்படி அங்கு அரசு பிழைக்கிறது. மமதா போன்றவர்கள் உழைத்தால் அரசு வீழ்வது நிச்சயம்.

3. It is told that leftist forces (all) will get less seats if election is ordered?Is it true?
பதில்: அதை மட்டும் முன்கூட்டியே சொல்ல இயலாது. அவசர நிலை பிரகடனம் செய்து நாட்டை திவால் நிலைக்கு கொண்டு சென்ற இந்திராவே மூன்றே ஆண்டுகளுக்குள் திரும்ப வந்துவிட்டாரே.

4. By joining hands with congress the leftists lost their mass base? Is it ok
பதில்: இடதுசாரிகள் மக்களுடன் தொடர்பை இழந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.

5. It seems wind blows in favour of BJP and next PM is Sri Advani?
பதில்: பா.ஜ.க. ஏதேனும் அசட்டுத்தனமாக நடந்து கொண்டு காரியத்தைக் கெடுக்காமல் இருக்க வேண்டும், மோடி போன்ற ஊழலற்ற மந்திரிகளை அக்கட்சி தரவேண்டும். அப்போது நீங்கள் சொல்வது நடக்கும்.


ரமணாஸ்திரம்:
1. கடைசியில் சிவப்பு கோழிகளின் சாயம் வெளுக்கப் போகிறதா?
பதில்: எப்போதோ வெளுத்தாகி விட்டதே.

2. ஒரு சில பதவிகளுக்காக காட்டி கொடுக்கும் முலாயம்சிங் யாதவ் பற்றி உங்கள் கருத்து?
பதில்: அவரவர் அரசியல் நிர்ப்பந்தம் அவரவருக்கு.

3. அப்துல்கலாம் கூட எப்படி? யாரைத்தான் நம்புவதோ!
பதில்: ஏன், அவர் என்ன செய்தார்?

4. அணு ஒப்பந்தத்தை விட பயங்கரமான 123 (hide) பற்றி?
பதில்: அது பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. ஆகவே நான் இங்கு பேசாமல் இருப்பதே நல்லது.

5. சீனா கூட 123 ல் கையெழுத்து போடாமால் அணு ஒப்பந்தம் செய்த‌தாக தெரிகிறதே?
பதில்: தெரியாது, அப்படியா?

6. பா.ஜ.க. வின் நிலை தற்போது?
பதில்: அணுவிஷயத்தில் பாஜகவும் காங்கிரஸ் போன்றுதான் முடிவெடுக்க வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.

7. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதன் நிலைப்பாடு?
பதில்: மேலே கூறிய பதிலே இதற்கும்.

8. அமெரிக்காவில் பெரும் கூட்டம் வீட்டுக் கடனால் அல்லலுருகின்றனர் என்பது உண்மையா, மிகைபடுத்தப்படுகிறதா?
பதில்: உண்மை நிலைதான். செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு என்று ஒரு சொலவடை உண்டு. இருந்தால் பாதுஷா இல்லாவிட்டால் பக்கிரிஷா. அமெரிக்க தேசமே கடனில் மூழ்கியுள்ளது.

9. காருக்கு பெட்ரோல் போட தன்னையே கொடுக்கும் (பலான சுகம்) போக்கு உள்ளதாமே?
பதில்: இது நான் கேள்விப்படாத கொடுமை.

10. பிரதமருக்கு பெரும்பான்மை இல்லாதது போல் தெரிகிறதே?
பதில்: எப்போது பெரும்பான்மை இருந்ததாம்?


ரமணா:
1. சன் டீவி, கலைஞர் டீவி கோழிச் சண்டை எப்படியுள்ளது?
பதில்: ஆழமாகியுள்ளது.

2. அரசு டீவிக்கு மதுரையில் இடமில்லை பார்த்தீர்களா?
பதில்: அரசின் மைந்தர் டி.வி. ஒன்றையும் வர விடாது.

3. நெல்லையில் சிறப்பு கவனிப்பு அரசு டீவிக்கு, கரன் டீவியை ஒழித்துகட்டவா?
பதில்: கரன் டீவி?

4. சன் டீவியில் காட்டவில்லை (வை.கோ, வி.காந்த், ச‌.கு) எனக் குற்றம் சாட்டிய அத்துணை பேரும் இப்போ சன் டீவிக்கு வக்காலாத்து? இது எப்படி இருக்கு?
பதில்: எதிரிக்கு எதிரி நண்பன், அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா.

5. நிகழ்ச்சிகளின் அடிப்படையில் பார்த்தால் க.டீவி, ச.டீவிக்கு பின்னால்தான் இல்லையா?
அதில் எள்ளள்வும் ஐயம் இல்லை. கலைஞர் டி.வி. செய்வது அப்பட்டமான காப்பி. காப்புரிமை சட்டப்படி தண்ணி காட்டியிருப்பார்கள் இதுவே மேல் நாடாக இருந்தால்.

6. சன் டீவியின் டிடிஎச் சேவை வெற்றியா?
பதில்: இன்னும் அதன் விலை குறைய வேண்டும். அப்போதுதான் வெற்றி.

7. டாடா அதிபரை இதற்காகதானே மிரட்டியதாக செய்தி வந்தது?
பதில்: அது இப்போது பழைய கதையாகி விட்டதே.

8. மற்ற டீவிகளுக்கு முற்பகல் செய்தது (தீமைகள், இடையுறுகள்) இவர்களுக்கு இப்போ காலதேவன் அழகிரி வடிவில் கொடுக்கிறானா?
பதில்: அது என்னவோ உண்மைதான்.

9. இந்தியாவில் மூன்றாம் அணி கோவிந்தாவானாலும் இங்கே அது நடந்து விடும் போலுள்ளதே? (மருமகன் மாறன் பிள்ள‌களின் பணபலம்)
பதில்: இல்லை என்பது எனது அழுத்தமான கருத்து. மூன்றாவது அணி வெறுமனே ஓட்டுகளை மட்டும் பிளக்கும். அதனால் தொங்கு சட்டசபைகள் அல்லது பாராளு மன்றங்கள்தான் வரும்.

10. தொலைதொடர்பு மெஹா டெண்டரில் ஏதோ நடந்ததாக அரசல் புரசலாய் புய‌ல் கிளம்பியதே, அது மீண்டும் தூசு தட்டப்படுமா?
பதில்: தூசு தட்டினால் யாருக்கு லாபம் என்பதை பொருத்தது அது.


பாண்டிய நக்கீரன்:
1. இன்றைய பதிவுலக ஜாம்பவான்களில் முதல் பத்து பேரை வரிசைபடுத்தவும் (name with url)
பதில்: இது வேண்டாத வேலை. ஆளை விடுங்கள். முதல் ரேங்குகளில் நான் குறிப்பிடுபவர்களைப் பார்த்தால் வேறு வினையே வேண்டாம். ஏற்கனவே டோண்டு ராகவன் ரொம்பவும் பீற்றுகிறான் என்று பலர் எழுதி வருகின்றனர்.

2. தமிழ்மணத்தில் ஒரு சில நல்ல பதிவுகள் பலர் கண்ணில் படாமலேயே போகிறதே,ஏதாவது வழி உண்டா?
பதில்: மனம் இருந்தால் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுப்பது கடினமே அல்ல. அப்படி தேர்ந்தெடுத்த பதிவுகளுக்கு இணைப்பு தாருங்கள் அல்லது கூகள் ரீடரில் சேமியுங்கள்.

3. பாலுணர்வு சம்பந்த பதிவுகளுக்கு ஆதரவு குமிகிறதே?
பதில்: வயசுக் கோளாறு. இது எக்காலத்துக்கும் பொருந்தும்.

4. அதுவும் சமீபகாலமாக அவை கொத்து கொத்தாய் வந்து ஆலவட்டம் போடுகின்றதே? நல்லதற்கா?
பதில்: வரட்டுமே, பொழுது போகிறதல்லவா?

5. மலையாள சினிமா போஸ்டர் போல் தலைப்புகள் வைத்து வாசகர்கள் இழுக்கப் படுகிறார்கள் போலுள்ளதே
பதில்: கண் பார்த்து கை வேலை செய்யும் காலம் இது.

6. மலிவான தந்திர விளம்பர யுக்தியின் வெற்றி கண்டு சில நல்ல பதிவாளர் கூட அதை கையில் எடுக்க முயலுகிறார்களே?
பதில்: ஊரே சிரித்தால் கல்யாணம்.

7. இலைமறைவு காய்மறைவு என்பதெல்லாம் போய் பம்பாய் சிவப்பு விள‌க்கு கதைகள் போல் வலம் வருகிறதே?
பதில்: பாதியாவது மறைத்தால்தான் கவர்ச்சி. முழுக்க திறந்து காட்டினால் மிக சீக்கிரம் எல்லாமே கழண்டு வீழ்ந்து விடும்.

8. ஏற்கனவே இன்றைய இளைய தலைமுறையினர் இந்த சமாச்சாரத்தை"just like that " எனப் பாவிக்கும் போக்கு கண்கூடு.
பதில்: இன்றைய இளையதலைமுறை மட்டும் என்ன புதிதாகவா செய்கிறது. இது காலம் காலமாக நடப்பதுதான். ரோமானியர் காலத்து ஆர்ஜிகள் கேள்விப்பட்டதில்லையா?

9. திரைப் படங்கள், சின்னத் திரை ஆட்டங்கள், பத்திரிகைகளில் வரும் அந்த மாதிரிச் செய்திகள் இளைஞர்களுக்கு தூபம் போடுவது போலுள்ளதே?
பதில்: சமுதாயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிகள் அல்லவா அவை.

10. உங்கள் பதில்கள் ஒரு பொறுப்புள்ள பண்பாடு காக்கும் குடும்பத்தலைவன்
பார்வையில் இருக்க வேண்டும். (வழக்கம் போல் வசதியும் வாய்ப்பும் இருந்தால் அனுபவி ராஜா அனுபவி (skin to skin no sin) என்பது போல் பதில்கள் இருக்கவேண்டாம்‍‍. கொஞ்சம் சீரியஸ் டோண்டு ராகவன் சாராக‌‌)

பதில்: மொக்கை மன்னன் டோண்டு ராகவனிடம் ரொம்பவும் அதிகமாகவே எதிர்ப்பார்க்கிறீர்கள் ஸ்வாமி. என்னது? சீரியஸ் டோண்டு சாரா? எங்கே, எங்கே?

11. பா.ம.க வின் கதை கொஞ்சம் சிரமம் போலுள்ளதே?
பதில்: சற்றே அவசரப்பட்டு விட்டார்கள் போலிருக்கிறது.

12. காடுவெட்டியாரை சும்மா விட்டுவிடுவது போல் பாவ்லா காட்டி கட்சியில் கைது படலம் ஆரம்பம்?
பதில்: கொள்ளையில் கூட்டு என்பது எப்போதுமே நிலைக்காது. சம்பந்தப்பட்டவர்கள்தான் பக்குவமாக காலத்துக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.

13. அறிவிக்கும் போராட்டங்கள் பிசுபிசுப்பதாக செய்திகள்?
பதில்: அவர்கள் நலனுக்காகவே போராட்டங்கள் என்பதை சரியாக மறைக்கவில்லை. ஆகவேதான் அப்படி.

14. இதெல்லாம் பார்த்தால் அம்மையார் கூட பிகு பண்ணுவாரே?
பதில்: அம்மையார் சரியானபடி காய்களை நகர்த்தல் நல்லது. ஒரேயடியாக பாமகவை ஒதுக்கினால் அவருக்குத்தான் நஷ்டம்.

15. ஏற்கனவே கொடநாடு பங்களாவில் மணி அவர்களுக்கு (சட்டசபை கட்சித் தலைவர்) தரிசனம் மறுக்கப்பட்டுள்ளது?
பதில்: அம்மையாரின் பலவீனமே இம்மாதிரியான செய்கைகள்தான்.

16. விஜயகாந்த், சரத்குமார், மாறன் பிரதர்ஸ் யாரு கூடவும் சேர முடியாதே?(விமரிசனத்தின் விபரீதம்)
பதில்: ஏன் முடியாது? அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

7. மருத்துவர் ஐயா ஒரு கணக்கு போட்டால் அரசியல் வேறு ஒரு கணக்குப் போடுகிறதே?
பதில்: இப்படிப்பட்ட தருணங்கள்தான் ஜாதகங்கள் மேல் சம்பந்தப்பட்டவருக்கு நம்பிக்கை வரவழைக்கின்றன.

8. இந்த தடவை தனித்து விடப்படுவார் போலுள்ளது? (மகனும் கைவிடுவார்)
பதில்: நிலைமை அவ்வளவு மோசம் இல்லை போலிருக்கிறதே.

9. அவரது சம்பந்தியை கூட காங்கிரசின் தலைமையிலிருந்து தூக்கிவிட்டார்களே?முதலில் ராமதாசுக்கு கல்தா கலைஞரால், அடுத்து கிருஷ்ணசாமி சோனியா அம்மையாரால், அடுத்து யாருக்கு கல்தாவோ?
பதில்: வன்னியர்களுக்கு கொடுக்கப்படும் கரிசனம் அப்படியே உள்ளது போலிருக்கிறதே.

10. முலாயம்சிங் யாதவ் ஆதரவு கிடத்துள்ளதால் இனி அன்புமணி (அமைச்சர் பணி கோவிந்தாவா!(கலைஞர் அவர்களின் ராஜதந்திரம் மீண்டும்) கட்சிப் பணியாற்ற வேண்டியதுதான் போலுள்ளதே? உப்பை தின்னவர் தண்ணி குடிக்கவேண்டாமா!
பதில்: இப்போதாவது கட்சிப் பணியாற்றட்டுமே. அது ஒன்றும் செய்யாமல்தானே மந்திரியானார்? செய்யட்டும் செய்யட்டும்.


தென்காசி:
1. இன்று விற்கும் புத்தகங்களில் சோதிடம் சார்ந்த புத்தகங்களுக்குத்தான் கிராக்கி ஏன்?
பதில்: எப்போதுமே அம்மாதிரி புத்தகங்களுக்கு மார்க்கெட் உண்டு. இன்னமும் பஞ்சாங்கங்கள் அதிகம் வாங்கப்படுகின்றன. "பத்திரிகைகள், சினிமா போன்றவை காலப்போக்கில் இவ்வாறு மாறுவது தவிர்க்க முடியாதது. இன்றைய ‘வெகு ஜனப்’பத்திரிகைகளின் பழைய இதழ்களைப் புரட்டிப் பார்த்தால், மாற்றம் புரியும். மாறாத பத்திரிகை என்று தேடினால், ஸ்ரீரங்கம் கோயில் வாக்கியப் பஞ்சாங்கம் ஒன்றைத்தான் உடனே சொல்ல முடிகிறது" என்று சுஜாதா அவர்கள் கற்றதும் பெற்றதுமில் கூறியதில் அர்த்தம் உண்டு. பஞ்சாங்கத்தை மாற்ற நினைத்தாலும் அதன் தீவிர வாசகர்கள் கோபித்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

2. முக்கால்வாசி டீ.வி.களில் வாஸ்து, பெயர் மாற்றுதல், கல் அணிதல் களைகட்டுகிறதே? அதிகம் பேர் நம்புவதனால்தானே?
பதில்: மூட நம்பிக்கைகளுக்கு காலமோ, இடமோ ஒரு பொருட்டே அல்ல.

3. பகுத்தறிவு சிங்கங்கள் கூட யாகம்,சோதிடம் என் அலைவதாக தகவல், உண்மையில்லையா?
பதில்: உண்மையே.

4. ஒரு சில கட்சிகள் ஜாதகம் பார்த்தே வேட்பாளர்களை நிறுத்துகின்றனர் இல்லையா?
பதில்: சில கட்சிகள்தானா?

5. மனிதன் எவ்வளவு நாத்தீகம், பகுத்தறிவு பேசினாலும் 50 வயதுக்கு மேலே கோயிலே சரணம் என்றுதானே இருக்கிறார்கள்-பக்தி என்று வரும் போது ஜாதகம், சகுனம் பார்ப்பது, சூலம் பார்ப்பது, எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையதுதானே?
பதில்: பக்தி இருப்பதால் மட்டும் மூடநம்பிக்கைகள் இருக்கும் எனக் கூறுவது சரியில்லை. என்ன, வயதாக வயதாக மனமும் தளர்கிறது. வாழ்க்கையில் விழும் அடிகளும் அதிகம். எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்னும் நிலை.


அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/07/2008

நான் பிரிட்டனில் எப்போதுமே கன்சர்வேடிவ் கட்சியைத்தான் ஆதரிப்பவன்

அமெரிக்கா பற்றியும் ரிபப்ளிகன் கட்சி பற்றியும் பதிவு போட்டு படுத்தியாகிவிட்டது. இப்போது பிரிட்டனின் முறை ("யாரையும் விடமாட்டியா நீயி" என்று முரளி மனோஹர் கத்துகிறான்).

அப்பதிவில் உள்ளதுபோலவே இங்கும் என்னை ஒரு சராசரி ஆங்கிலேயனாக (John Bull) கற்பனை செய்து கொண்டுதான் எழுதுகிறேன். பிரிட்டனில் கன்சர்வேடிவ் மற்றும் லேபர் கட்சிகளைத் தவிர லிபெரல் கட்சியும் உண்டு ஆனால் அவ்வளவு பெரிய அளவில் அல்ல. அதன் தலைவர் ல்லாய்ட் ஜார்ஜுக்கு பிறகு அக்கட்சியிலிருந்து யாருமே அரசு அமைக்கவில்லை. ஆகவே அவர்கள் இப்பதிவில் இதற்கு மேல் வேண்டாம்.

நான் அமெரிக்கா விஷயத்தில் கூறியது போலவே கன்சர்வேடிவ் கட்சியினர் ஆட்சி காலத்தில்தான் பிரிட்டன் பல பெருமைகளை அடைந்தது. மனதுக்கு வருபவர்கள் சர்ச்சில் மற்றும் மார்கரெட் தாட்சர். சர்ச்சில் பற்றி கூறவே வேண்டாம், இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் அவர் பிரிட்டனுக்கு அளித்த திறமையான தலைமை சரித்திர புகழ் பெற்றது.

மார்கரெட் தாட்சர் பற்றி இப்போது கூறுவேன். அதற்கு முன்னால் சிறு டைவர்ஷன். "Yes Minister" "Yes Prime Minister" ஆகிய ஆங்கில சீரியல்களை பதிவர்களில் பலர் பார்த்திருப்பார்கள். அதில் மந்திரிகளுக்கும் சிவில் சர்வீசஸுக்கும் இடையில் நடக்கும் கயிறு இழுக்கும் போட்டி சுவையாகக் காட்டப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு மந்திரி ஒரு முற்போக்கு திட்டத்தை பிரேரேபித்தால் சிவில் சர்வீஸ் கொடுக்கும் பின்னூட்டங்கள் அவற்றின் உள்ளர்த்ததோடு:

"It is quite a novel idea, Mr. Minister" (ஏன் சார் இது மத்தவங்களுக்கும் தோணியிருக்காதா, அது சாத்தியம் இல்லைன்னுதானே உங்களுக்கு முன்னால் இருந்தவங்க விட்டு வச்சிருக்காங்க!)

"It is quite a courageous step, Mr. Minister" (உங்கள் கட்சிக்கு இதனால் குறைந்தபட்சமாக ஆயிரம் ஓட்டு இழப்புகள், அதிலும் உங்கள் தொகுதியில் நிச்சயம் டோமரு!)

"That was really brave of you Mr. Minister" (உனக்கு சங்குதாண்டி. ராஜினாமா கடிதம்தான் எழுத வேண்டியிருக்கும், அதற்கான வரைவை எழுத டோண்டு ராகவனை வேணும்னா கேக்கட்டுமா?)

அதுவும் சர். ஹென்றி இவற்றில் ஒவ்வொன்றாகக் கூற மந்திரி/பிரதம மந்திரியாக நடித்த பால் எட்டிங்டனின் முகபாவங்கள் இப்போதும் குபீர் சிரிப்பை விளைவிப்பவை.

ஓக்கே, விட்டால் இந்த டோண்டு ராகவன் அந்த சீரியலைப் பற்றி கூறிக்கொண்டே போவான், அதற்கென்று தனிப்பதிவு வரும் என்று உங்களையும் முரளி மனோஹரையும் எச்சரிக்கிறேன்.

இந்த நிலையில்தான் பிரிட்டன் தாட்சர் பதவி ஏற்றபோது இருந்தது. சாண் ஏறினால் முழம் சறுக்கியது. அப்போது மார்கரெட் தாட்சர் நெடிந்து எழுந்தார். அவர் எண்பதுகளின் முழுதிலும் பதவியில் இருந்தார். நீண்ட கால பிரதமர். தனது குறுகிய கால அரசியல் எதிர்க்காலத்தை நினையாது தடாலடியாகச் செயல்பட்டார். 1982 வாக்கில் அர்ஜண்டைனாவுக்கு எதிராக ஃபால்க்லேண்டை மீட்டு பிரிட்டிஷாரின் சுயமதிப்பை அதிகரித்தார். முற்றிலும் அரசியல் செயல்பாடுதான் இது ஆனால் அந்த நேரத்துக்கு தேவைப் பட்டது. பிறகு அரசு நிறுவனங்களை ஒவ்வொன்றாக தனியார் மயமாக்கினார். அதன் பலனாக அதுவரை வெள்ளை யானையாக செயல் பட்டு பொது பணத்தை முழுங்கிய அந்த நிறுவனங்கள் லாபம் ஈட்ட ஆரம்பித்தன. அவர் செயல்பட்ட முறை மற்றவர்களாலும் கடைபிடிக்கத் தக்கவை. என்ன, அதற்கு நல்ல தில் வேண்டும் அவ்வளவே. அது அவரிடம் அபரிதமாக இருந்தது. "இரும்பு பெண்மணி" என ரஷ்யர்கள் அவரை அழைத்தனர். அதே காலக் கட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்த ரீகனுடன் சேர்ந்து அவரும் சோவியத் யூனியன் அழியக் காரணமாக இருந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் கூறுவேன்.

அந்த அளவுக்கு லேபர் கட்சி சோபிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். பிரதமர் க்ளெமெண்ட் அட்லீயை பற்றி அச்சமயம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சர்ச்சில் கிண்டலுடன் கூறினார்: "Atlee is a very modest man, he has got a lot of things to be modest about"! (அட்லீ ரொம்பவும் அடக்கமான மனிதர். அடக்கி வாசிக்க வேண்டிய விஷயங்கள் அவரிடம் ரொம்பவுமே உண்டு)! அவரது காலத்தில்தான் பிரிட்டனின் சாம்ராஜ்யம் கரைய ஆரம்பித்தது. இதில் அவர் தவறு ஏதும் இல்லை என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன். ஆனால் ஒரு சராசரி ஆங்கிலேயன் இதை நினைத்து பார்க்காமல் இருக்க மாட்டான்.

சர்ச்சில், மார்கரெட் தாட்சர் அளவுக்கு லேபர் தரப்பிலிருந்து ஒரு பிரதம மந்திரியும் என் கண்ணில் படவில்லை. அப்படி இருந்தால் பதிவர்கள் பின்னூட்டத்தில் கூறலாம்.

பதிவை பப்ளிஷ் செய்த பிறகு இன்று வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு வேலை விஷயமாக செல்ல வேண்டியுள்ளது. சில மணி நேர வேலைகள், ஆகவே பின்னூட்டங்கள் வெளியிடப்படுவதில் தாமதம் வரலாம், மன்னிக்கவும். (என்னை அழைத்து செல்ல எனது கார் பத்து மணிக்கு வரும், அதுவரை கணினியை திறந்து வைக்க உத்தேசம்).

அது சரி, அடுத்து வரப்போகும் பதிவுகளில் ஜெர்மனியை பற்றி பேசும்போது டோண்டு ராகவன் எந்தக் கட்சியை ஆதரிப்பான் என்பதை ஊகிக்க இயலுமா?

வாழ்க மொக்கை!

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/04/2008

டோண்டு பதில்கள் - 04.07.2008

பாண்டிய நக்கீரன்
1. ஒருவேளை மாறன் சகோதரர்கள் செல்வி ஜெயலலிதாவிடம் சரணாகதி அடைந்தால்?
பதில்: அடுத்த தேர்தல் சுவாரசியமாகவே இருக்கும்.

2. கலைஞர் என்ன அறிக்கை விடுவார்?
(குறிப்பு:ஜெயலலிதாவும்,மாறன் மகன்களும்-பெரியாரின் பரம வைரிகளான இரு பிரிவுகளை சேர்ந்தவர்கள்)

பதில்: சூத்திரனான என்னை அழிக்கவே இவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர் என அறிக்கை விட்டால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

3. தினகரன் பத்திரிகை, அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு தினமலர், துக்ளக் பட்ட அவஸ்தையை அனுபவிக்கும் போல் உள்ளதே?
பதில்: எல்லா செயல்களுக்கும் எதிர்வினை ஒன்று இருக்குமல்லவா?

4. அண்ணா அவர்கள் சொன்னது போல் திமுகவை அவரது தம்பிகளே ......?
பதில்: தவறு, அவரது ஒரு தம்பியே என்று திருத்தி கொள்ளவும். அதுவும் பெரிய குடும்பஸ்தரான அந்த ஒரே ஒரு தம்பி!

5. மத்திய அரசில் அத்வானி பிரதமர் ஆனாலும் இதே கொள்கைகளைத்தான் கடைபிடிக்கப் போகிறார்கள்?
பதில்: எதை குறிப்பிடுகிறீர்கள்? அணு ஆயுத ஒப்பந்தம் அல்லது பொருளாதாரக் கொள்கைகள்? இரண்டுக்கும் பதில் ஆம்தான்.

6. புதிய மொந்தை பழைய கள் கதைதானே? மீண்டும்?
பதில்: ஆம்.

7. பா.ம.க.வை வெளியேற்றிவிட்டு விஜயகாந்த்தை காங்கிரஸ் துணையுடன் இழுக்க திமுக முயலுவதுபோல் உள்ளதே?
பதில்: கலைஞர் ஏதாவது இம்மாதிரி செய்து கட்சியை தேற்றினால்தான் உண்டு.

8. வை,கோ வின் எதிர்காலம் அவ்வளவுதானா?
பதில்: பாவம் அவர். புலிகளை அம்மாதிரி வெளிப்படையாக ஆதரிப்பதன் பலனை அறுவடை செய்கிறார்.

9. ஒருவேளை கலைஞருக்கு பின்னால் ஆட்சி அதிகாரம் மதுரை அழகிரியின் கைக்கு சென்றால்?
பதில்: திமுக தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மாதிரி நடக்கும் வாய்ப்பு அதிகம், ஏனெனில் திமுகவின் வெற்றிகள் பலவற்றுக்கு அழகிரிதான் காரணமாக இருப்பார்.

10. இலவு காத்த கிளி யாக மாறும் ஸ்டாலின் என்ன செய்வார்?
பதில்: சோகப்பாடல்?


ரமணா:
1. பணவீக்க விகிதம் மொத்த குறியீடு எண்ணின் அடிப்படையில் அதுவும் 1994 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொருள்களின் அடிப்படையில் தவறாகக் கணக்கிடப் படுவதாக சொல்வது பற்றி தங்கள் கருத்து?
பதில்: எனக்கு சற்றே தகராறான விஷயம் இந்த புள்ளிவிவரங்கள். ஒன்று நிச்சயம், பணவீக்கத்தின் அடிப்படைகள் வேகமாக அப்போதைய அரசின் சௌகரியத்துக்கு ஏற்ப மாற்றப்படுபவை. ஆகவே ஒரு ஒட்டுமொத்தமான பிக்சர் கிடைப்பது கஷ்டம். நான் தேர்ந்தெடுக்கும் முறை தங்கத்தின் விலை. ஒரு பவுன் தங்கத்துக்கு 1932-ல் எவ்வளவு மூட்டைகள் அரிசி கிடைத்ததோ அதே அளவு அரிசி இப்போதும் கிடைப்பதாக தெரிகிறது. சமீபத்தில் 1979-ல் ஆகஸ்டு மாத அளவில் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூபாய் 450. இன்று 9000-க்கும் மேல். ஆகவே 1979 விலைகளை போல இப்போதைய விலைகள் 20 மடங்குகள். அவ்வளவே எனக்கு சொல்லத் தெரியும்.

2. இந்தியாவின் இப்போதையை பணவீக்கம் (உண்மையாக 25% என்கிறது ஒரு தகவல்) நிலைமைக்கு காரணமான இரு மேதைகளும் வேறு ஒரு pay roll ல் உள்ளதாக வரும் தகவலில் உண்மை இருக்குமா?
பதில்: உண்மை இல்லை. அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் ரொம்பவுமே நேர்மையானவர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை அசைக்க முடியாமல் உள்ளது.

3. நிதி அமைச்சரை மட்டும் குறை கூறுவது உங்களுக்கு ஏற்புடையதா?
பதில்: இல்லை. அவரும் பாவம் இடதுசாரிகளால் ரொம்பவுமே பீடிக்கப்பட்டுள்ளார்.

4. பொதுவாக பங்கு வணிகம் சரிந்தால் முட்டுக் கொடுக்க கொள்கை பரப்புச் செயலாளர் போல வரும் நிதி அமைச்சர் இப்போது மெளனம் சாதிப்பது ஏன்?
பதில்: என்ன கூற வேண்டும் என்பதை தெரிந்து கொண்டா நம்மிடம் கூறாது வஞ்சனை செய்கிறார்? அவரே மூச்சு திணறுகிறார் இப்போது.

5. அரசின் தவறான (நியாயம், நேர்மை, தர்மம் இவையெல்லாம் பழங்கதையாய் ஆகிவிட்ட நம் பாரத தேசத்தில்) பொருளாதரக் கொள்கையினால் விலைவாசிகள் வெகுவாக ஏறி, உணவுக்காக உள் நாட்டு சண்டை, கலவரம், கொள்ளைகள் முதலிய நடந்தால் அதற்கு யார் காரணம்? (இது கற்பனையல்ல நடக்கப் போகும் நிதர்சனம்)
பதில்: இம்மாதிரி பொருளாதார நெருக்கடிகள் உலக பொருளாதாரத்தில் பல முறை நடந்து விட்டன. இந்தியாவும் உலகத்தின் ஒரு பகுதி அவ்வளவே.

7. கடைசியில் நமது கடலில் மீன் பிடிக்கும் உரிமையையும் பன்னாட்டு பகாசுர கம்பெனிகளுக்கு தாரை வார்க்க அரசு முயலுகிறதே?
பதில்: ஓரளவுக்கு மேல் தீவிரமாக மீன் பிடிப்பதை செய்தால் நமக்குத்தான் சுற்றுப்புற சூழல் கெட்டு நஷ்டம். நீங்கள் சொல்வது நிஜமா எனத் தெரியவில்லை. அது உண்மையாக இருந்தால் அரசு செய்வது கண்டிக்கத் தக்கது.

8. அரசு காண்டிரக்ட்களில் 30% கட்சிகாரங்களுக்கு,20% ஒப்பந்தக்காரருக்கு மீதம் உள்ள 50% ல் பணிகள் இவ்வளவு நடக்கும் போது கமிஷன் அற்ற ராம ராஜ்யம் இருந்தால் எப்படி இருக்கும்?
பதில்: மோடி பற்றிய இப்பதிவில் நான் எழுதியது இது. "மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு. இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட பூர்வமாக கலெக்ட் செய்வது மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239 கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகம் எனக் கூறினார் (எவ்வளவு காலக்கட்டம் என்பதை சரியாக கேட்க இயலவில்லை லௌட்ஸ்பீக்கர் சதி செய்தது). ஆனால் மிகவும் அதிகம் அது, சட்டப்படி என்னவெல்லாம் வருமானம் அரசுக்கு வரக்கூடும் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் செய்யாது விட்டால் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அதிகாரிகள், மந்திரிகள் ஆகியோரது தனிப்பட்ட பணப்பைதான் நிறைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்". ஒரு செக்போஸ்டுக்கே இப்படி என்றால் நாடு முழுக்க இதே மாதிரி நிலையிருந்தால் என்ன மாதிரி இருக்கும்?

9. திமுக அமைச்சர்களில் இந்த தடவை நல்ல அறுவடை யாருக்கு?
பதில்: இந்தியன் தாத்தாவோ ரமணாவோதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

10. கனிமொழியின் பதவி ஏற்பு (அமைச்சராக) தாமதம் என்ன காரணம் ( அழகிரியின் சுப்போர்ட் வேறு இருக்கே)?
பதில்: ஸ்டாலினை மறந்து விட்டீர்களே?


தென்காசி:
1. சைவக் கோவில்களைவிட வைணவக் கோயில்களில் கடவுளை வணங்கும் போது ஒரு பரவசம் வருவதன் காரணம்?
பதில்: அப்படி ஒன்றும் எனக்கு தெரியவில்லையே. பல கோவில்களை பார்த்தவன் என்ற முறையில் வேறொன்று கூறுவேன், அதாவது வைணவ கோவிகளில் வெகு சீக்கிரம் நடை சாத்தி விடுகிறார்கள். சைவ கோவில்கள் அப்படி அல்ல. நிறைய நேரம் திறந்திருக்கின்றன. மேலும் சன்னிதிகள் சாத்தியிருந்தாலும் பிரகாரங்களில் செல்ல இயலும். வைணவ கோவில்களை பற்றிய எனது இந்த விமரிசனத்தை இங்கே வைக்கிறேன்.

2. தென்கலை,வடகலை இடும் திருநாமம் தவிர வழிபாடுகளில் உள்ள வேறுபாடுகளை சொல்லவும்?
பதில்: தேசிகரை பின்பற்றுபவர்கள் வடகலை. ஆழ்வார்களை பின்பற்றுபவர்கள் தென்கலையினர். பின்னவர்கள் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள், திவ்யபிரபந்த பாராயணம் செய்து உற்சவருக்கு முன்னால் செல்பவர்கள். வடகலையினர் சம்பிரதாயமாக வேத பாராயணம் செய்வதற்கு முக்கியத்துவம் தருபவர்கள். உற்சவருக்கு பின்னால் வேத கோஷம் செய்த வண்ணம் செல்வார்கள். காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் உற்சவங்களில் இந்த வேறுபாட்டை நன்கு காணலாம். மற்றப்படி இருபிரிவினருமே ஐயர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்கள்.

3. சிவனை வழிபடுவர் பெருமாளை வணங்கும்போது வைணவர்கள் மாதிரி செயல்படுவது ஏன்?
பதில்: பெருமாளை வழிபடுபவர்கள் யாராக இருந்தாலும் அந்த நேரத்தில் வைணவ சம்பிரதாயங்களைத்தான் பின்பற்றுவர். அதுவே சிவனை வழிபடுபவர்களுக்கும் பொருந்தும். அச்சமயம் அவர்கள் சைவர்கள். வேதபாடசாலைகள் நடத்துவதில் ஐயர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது மனதுக்கு நிறைவாக உள்ளது.

4. ராமானுஜ சுவாமிகள் பிற ஜாதியினரையும் வைணவராக மாற்றினார் என்பது உண்மையா?
பதில்: அது என்னவோ உண்மைதான். திருவரங்கனின் சிலை மாலிக்காபூர் படையினர் வசம் போகாமல் இருக்க அதை எடுத்து கொண்டு ஊர் ஊராக அலைந்தபோது காட்டுவாசிகள் பலர் பக்தியுடன் உதவினர். அவர்களை எல்லாம் வைணவராக்கினார் அந்த மகான்.

5. பொதுவாகவே வைணவர்கள் முற்போக்கு கொள்கையுடன் இருக்கிறார்களே? இது பற்றி தங்கள் கருத்து?
பதில்: அப்படி ஒன்றும் பொதுப்படையாக கூற இயலாது.


ஆயிஷா LKG:
1) மதம் மாறினால் மரணதண்டனை என்று பதிவெழுதும் இஸ்லாமியர்கள் கட்டாய மதமாற்ற சட்டத்தை எதிர்த்தது எந்த அடிப்படையில் என்று ஒன்றுமே புரியவில்லை. இந்த குழப்பத்தை போக்குவீர்களா?
பதில்: மதமாற்றம் வேறுமதத்திலிருந்து தத்தம் மதத்துக்குத்தான் வரவேண்டும் என்று இசுலாமியர் மட்டுமல்ல போப்பாண்டவரே அந்த மனநிலையில்தான் இருக்கிறார்.

2) கட்டாய மதமாற்ற சட்டத்தை எதிர்த்து சாமியாடிய நமது அறிவுஜீவிகள் யாருமே "மதம் மாறினால் மரணதண்டனை" என்பதை பற்றி முணுமுணுக்க கூட செய்யவில்லை. இது பகுத்தறிவின்பாற்பட்ட கொள்கையா, அல்லது இன்டெலெக்சுவல் தொடை நடுங்கித்தனமா என்பதையும் விளக்கிடுங்கள் டோண்டு சாரே.
பதில்: தொடை நடுங்கித்தனமேதான்.


ரங்கன்:
1. மானுடம், மனிதநேயம், மனிதாபிமானம் போன்ற சொற்களை பற்றிய தங்கள் புரிதல் / வரையரை என்ன?
பதில்: கஷ்டப்படுபவர்களுக்கு தேவைக்கேற்ப உதவுதல் நலம். அதுவும் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவர் தன் முயற்சியையும் செய்தால்தான் உதவ வேண்டும். எல்லாமே பிறர் பார்த்து கொள்வார்கள் என விட்டேற்றியாக இருப்பவரை கஷ்டப்பட்டு கொள் என விட்டுவிடுவது நல்லதே. அவர்கள் தவிர்க்க வேண்டிய நபர்கள்.

ஏகே. சுந்தர்:
1. பல மதத்தவர்களும் ஒன்றாக வாழும் ஈவேரா பிறந்த மண் தமிழ்நாடு. ஆனால், இங்கே மதச்சார்பின்மையை பின்பற்ற மறுத்து, இந்து மதத்தின் உயர்வைப் பற்றிய தகவல்களை மட்டுமே வெளியிட்டு, மதவெறியைப் பரப்புகிற இணையதளம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: இசுலாமிய இணையதளங்கள், கிறித்துவ இணையதளங்கள் எத்தனை உள்ளன என்பதை அறிவீர்களா?

ரமணா:
1. வீதிகளில் கார்களில் தனியாகச் செல்பவர்களால் தான் பெட்ரோல்/டீசல் செலவு கட்டுபடுத்த முடியாமல் இருப்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?
பதில்: ஒரு தலைவனுக்கு பின்னால் ஆயிரம் கார்கள் பவனிவரும் நிலையைப் பார்த்தால் நீங்கள் சொல்பவர்கள் செய்வது ஜுஜுபியே.

2. இது மாதிரி பொருளாதார சுனாமிகள் வரும் போது நம்மவர்களும் கொஞ்சமாவது தியாகம் செய்ய முயலுவது மாதிரி தெரியவில்லையே?
பதில்: எதில் தியாகம் செய்ய வேண்டும் என்கிறீர்கள்?

3. அரசும் நியாயம் இல்லாமல் அதீதமான வரியை குறைக்க மறுப்பது தர்மமாகுமா? (ஒரு லிட்டருக்கு வரி இவ்வளவு என்று fixed ஆக வைக்கலாமே?
பதில்: போன பதிவிலேயே கூறிய பதில்தான் இங்கும். அரசுவரியை கணக்கில் எடுத்து கொண்டு பட்ஜட் போட்டாகிவிட்டது. இப்போது வரியை குறைத்தால் பட்ஜெட்டில் விழும் துண்டு வேட்டியாகும்.

4. அடித்தவரை லாபம் என்று அரசே நியாமில்லாமல் நடக்கும் போது இரும்பு. சிமிண்ட் வணிகர்களை கட்டுபடுத்த முயற்சி செய்வது "ஊருக்குதான் உபதேசம்" இல்லையா?
பதில்: ஊருக்கு மட்டும் உபதேசம் என்பது மனித இயல்புதானே.

5. இவர்களை தண்டிக்க யார் வருவாரோ?
பதில்: எத்தனுக்கு எத்தன் இல்லாமலா இருப்பான்.


அனானி (02.07.2008 காலை 06.06-க்கு கேட்டவர்):
1. What will happen to the world if the crude oil price goes above 200 dollars?.
விலைவாசிகள் தாறுமாறாக ஏறும். பணப்புழக்கம் குறைந்து வீடுகள் கட்டுவது குறையும். கட்டிடத் தொழிலாளர்கள் வேலை இழப்பர். வாங்கும் சக்தி குறைவதால் பொருட்களை வாங்குவது குறையும். அப்போது ஒன்று விலை குறையும் அல்லது சம்பந்தப்பட்ட பொருளின் உற்பத்தி குறையும். மேலும் வேலையில்லாத நிலைமை அதிகரித்து, வாங்கும் சக்தி மேலும் குறைந்து, விடுங்கள் மூச்சு விட்டு கொள்கிறேன்.

2. Is it true, due to on line trading ,the present condition (shortage) for crude oil price, as said by our mof?
அவர் உண்மையில் அவ்வாறு கூறினாரா என்பதை நான் அறியேன். மேலும் ஊகவணிகம் பற்றி எனது அறிவு கம்மி, லேது என்றே கூறிவிடலாம்.

3. When will the govt pull up the culprits?
குற்றவாளி யார் என்பதை பொருத்து அரசின் நடவடிக்கை இருக்கும்.

4. Onion for BJP fall and now petrol for congress?
அப்படித்தான் தோன்றுகிறது. இரண்டுமே ஓவர் சிம்ப்ளிஃபிகேஷன்கள்தான்.

5. It is feared that the inflation will not come down to single digit,in the near future for the following reasons: 1. 6th pay commission to central staff from 1.1.2006; 2. Equal pay to all state govts from 1.1.2006; 3. Pay revision to all psus from 1.1.2007; 4. Free schemes by state govts to remain in office; 5. Farmres not ready to do farming due to their heavy losses; 6. Free on line trading in all posssible ways.
அப்படித்தான் என நானும் அஞ்சுகிறேன்.


எம். கண்ணன்:
1. ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு (CBSE) என இரண்டு கல்வித்திட்டங்கள் இருந்தால் போதுமே. தமிழ்நாட்டில் இன்னும் எதற்கு ஆங்கிலோ இண்டியன், மெட்ரிகுலேஷன் என விதவிதமாக கல்வித் திட்டங்கள்? இவற்றில் என்ன வேறுபாடு? எதற்கு இவை தொடர வேண்டும்?
பதில்: ஒவ்வொரு கல்விமுறைக்கும் சரித்திர சமுதாயக் காரணங்கள் உண்டு. உதாரணத்துக்கு ஓரியண்ட்டல் பள்ளியிறுதித் தேர்வு. மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளிகள் சிறுபான்மையினர் திட்டங்கள் கீழ் வருவன. எல்லாம் அப்படியே இருக்கட்டுமே என்ன பிரச்சினை. யாருக்கு எது விருப்பமோ அதை கற்கட்டுமே.

2. உங்களுக்கு நீச்சல் தெரியுமா? ஆற்று நீரில் நீந்தியதுண்டா?
பதில்: நீச்சல் தெரியும். என் தந்தை திருவல்லிக்கேணி மெரினா நீச்சல் குளத்தில் வைத்து சொல்லிக் கொடுத்தார். ஆறுகளில் நீந்த பயம்.

3. நங்கநல்லூர் வீடுகள் எல்லாம் பெரும்பாலும் பெட்டி பெட்டியாக உள்ளனவே? ஏன் அப்படி ? உங்கள் வீட்டில் காற்றோட்டம், வெளிச்சம் நன்றாக வருவதுண்டா?
பதில்: நங்கநல்லூரில் முதலில் வீடுகள் கட்டியது நடுத்தரவர்க்கத்தினரே. அவர்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் காரியத்துக்காகும் வடிவமைப்பே போதுமானதாக இருந்திருக்கிறது. இப்போது வந்து பாருங்கள். பல பிரும்மாண்டமான அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனது வீடு தெற்கு பார்த்த வீடு. சமீபத்தில் 1969-ல் குடிவந்தபோது காற்று பிய்த்து கொண்டு போகும். ஜன்னல்கள் கதவுகள் எல்லாவற்றுக்கும் கொக்கிகள் போட்டு வைக்கும் நிலை. இப்போது சுற்றிலும் பெரிய கட்டிடங்கள் வந்து விட்டதால் அந்த அளவுக்கு காற்று இல்லாவிட்டாலும் நிலைமை பரவாயில்லைதான்.

4. சோ எழுதிய 'கூவம் நதிக்கரையினிலே' எம்.ஜி.ஆர்- கருணாநிதி காலத்திய அரசியலை வைத்து எழுதப்பட்டது. இன்றைய சூழ்நிலைக்கு ஜக்குவின் யோசனகள் பொருந்தி வருமா? 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' மாதிரி - கூவம் நதிக்கரையினிலேவிலிருந்து சிறப்புப் பகுதிகளை அவ்வப்போது பகிரமுடியுமா? இன்றைய பெரும்பாலான தமிழ்மண இளைஞர்களுக்கு அது ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும்
பதில்: அதில் ஒரு சுவையான இடம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு குடும்பத்தின் பட்ஜட்டை அரசால் நடத்த முடியுமா என்று கந்தசாமி என்பவர் கேட்ட கேள்விக்கு ஒரு வளவினுள் வசித்த சில குடும்பங்களின் நிர்வாகத்தை அரசு ஏற்று கந்தரகோளம் செய்கிறது. அதை துவங்கும் நிகழ்ச்சியில் குத்து விளக்கு ஏற்றுகின்றனர். அதை கிட்டே போய் ஊதி அணைத்து அபசகுனம் உண்டாக்கலாம் என்னும் ஆர்வத்தில் கலைஞர் குத்து விளக்கை நோக்கி கேஷுவலாக நகர, அவர் என்னவோ விஷமம் செய்யப் போகிறார் என்பதை உணர்வு பூர்வமாக உணர்ந்த எம்ஜிஆர், ஆனால் அது என்ன என்பது தெரியாது, கலைஞரை நோக்கி நகர்ந்து "என்ன சௌக்கியமா" என்று கேட்டு அவரை கட்டியணைத்து அந்தண்டை தள்ளிக் கொண்டு போகிறார். இதை படித்துவிட்டு பல நாட்களுக்கு எனக்கு நானே அவ்வப்போது சிரித்திருக்கிறேன். அவ்வப்போது பலமாக சிரித்து தில்லியில் பக்கத்துவீட்டு சர்தார்ஜியை துணுக்குற செய்திருக்கிறேன். அப்புத்தகம் கைவசம் இல்லை. வாங்கினால் நீங்கள் கூறுவது போல செய்தால் போயிற்று.

5. 'வியங்கோள் வினைமுற்று' பற்றி சொன்னீர்கள். தமிழ் இலக்கண விதிகளை சிம்பிளாக உதாரணங்களுடன் அவ்வப்போது பதிவுகளாக கொடுக்க முடியுமா ? உங்கள் உதாரணங்களில் மக்கள் மனதில் பச்சக் என்று பதியும்.
பதில்: அவ்வளவு இலக்கண ஆளுமை என்னிடம் இல்லை என அஞ்சுகிறேன்.

6. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலங்களில் அவருக்கு ஆட்சியை நடத்திச் செல்ல உதவிய முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் யார் யார் ? (உதா: பண்ருட்டி டெல்லி விஷயங்களை கவனித்துக்கொண்ட மாதிரி). எப்படி எம்.ஜி.ஆரால் அதிகாரிகளை நம்பி ஆட்சியை ஒப்படைத்து வெற்றியும் காண முடிந்தது?
பதில்: எம்.ஜீ.ஆர். அவர்களுடைய வக்கீல் அவருக்கு பல நல்ல ஆலோசனைகளை பின்புலத்திலிருந்து தந்ததாக படித்துள்ளேன். விஷயம் அதற்குமேல் தெரியாது. இக்கேள்விக்கு சரியான பதிலை நண்பர் உண்மைத் தமிழன் போன்றவர்கள் இன்னும் சுவைபட தர இயலும். ஆனால் ஒன்று ஆட்சியை நடத்துவது என்பது ஒருவர் மட்டும் ஆடும் ஆட்டம் அல்ல. சுற்றிலும் நல்ல ஆலோசகர்களை வைத்து கொள்ளல் நலம்.

7. இந்திரா காந்தி இப்போது இருந்திருந்தால் இந்த நியூக்ளியர் டீல் மற்றும் இடது சாரிகளை எப்படி கையாண்டிருப்பார்? (கூட்டணி ஆட்சி நிலையில்)
பதில்: இந்திராவிடம் பல தவறுகள் இருந்தாலும் நல்ல ஆளுமை இருந்தது என்பதை மறுக்க இயலாது. சோஷலிசத்தை கட்டிக் கொண்டு அழாமல் இருந்தால் இன்னும் சோபித்திருப்பார். இப்போது இருந்தால் அதை இன்னேரத்துக்கு விட்டிருப்பார் என கூற இயலாது. ஆகவே இக்கேள்விக்கு சரியான விடை கூற இயலவில்லை.

8. சென்னையில் அதிமுக வளர்ந்ததற்கு (அதிக எம்.எல்.ஏக்கள்) காரணம் - திமுகவின் அராஜகத்தின் மீது மக்கள் வெறுப்பா இல்லை ஜெயலலிதாவின் மழைநீர் சேகரிப்பு, வீராணம் நீர் மற்றும் அரசு அதிகாரிகளைக் கையாண்டதா ? தற்போது சென்னை மக்களுக்கு திமுகவின் மீது அபிமானம் எப்படி உள்ளது? (வேலை வாய்ப்பு பெருகியுள்ள நிலையில்)
பதில்: நீங்கள் சொன்ன காரணங்கள் எல்லாமேதான். இப்போதைய நிலை என்னவென்றால் கலைஞரின் குடும்ப அரசியலால் திமுக தொண்டர்களே துவண்டு போயுள்ளனர். ஜெயலலிதா சரியாக காய்களை நகர்த்தினால் அவருக்கு வெற்றி நிச்சயம். ஈகோ எல்லாம் பார்க்காது ராமதாசை வளைத்து போடுவது காலத்தின் கட்டாயம். செய்வாரா என்பது பெரிய கேள்விக்குறி. மொத்தத்தில் ஜெயும் சரி கலைஞரும் சரி தத்தம் தவறுகளால் எதிராளிக்கு அதிக ஆதாயம் தருவதிலேயே நிற்கின்றனர். கலைஞர் அதிக தவறுகள் செய்தால் ஜேயின் வெற்றி நிச்சயம் and vice versa.

9. தமிழ் வலையுலகில் காமம் பற்றி துவங்கிவைத்தது (சமீபத்தில்) ஜெயமோகனின் 'கம்பனும் காமமும்' பதிவுகள் தானே ? யாருடைய காமம் பற்றிய பதிவுகள் சுவையாக இருக்கின்றன?
பதில்: ஜெயமோகன் மிக அழகாக எழுதுகிறார். அதை எழுதுவதும் ஒரு கலையே. இது பற்றி நானும் சரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும் என்னும் தலைப்பில் பதிவு எழுதியுள்ளேன்.

10. வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலுவிற்கு உங்கள் ஓட்டு விழுமா ? ஆம் என்றால் ஏன் ? இல்லை என்றால் ஏன்?
பதில்: பா.ஜ.க. அல்லது அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்குத்தான் என் ஓட்டு.


பாண்டிய நக்கீரன்:
1. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எங்கும் இதே பேச்சு.இதன் பாதிப்பில் இந்தியர் கதை அதோ கதி எனும் இடதுகளின் வாதம் உண்மையாய் விடும் போலுள்ளதே. 1. வீட்டு வாடகை ஏற்றம்; 2. பணவீக்கவிகிதம் 25 % மேலே மேலே; 3. கச்சா எண்ணெய் விலை 140 டாலருக்கும் மேலே; 4. பங்கு வர்த்தகம் பாதாளம் நோக்கி; 5. விவசாயிகளின் கையறு நிலை; 6. பட்டினிச் சாவு வருமோ என பதறும் பத்திரிக்கைகள்.
தங்களின் விரிவான பதில் இன்றைய சூழ்நிலை அடிப்படையில், நடு நிலையுடன்:

பதில்: உலகமயம் வராதிருந்தாலும் இதற்குமேல் கெடுதல்கள் வந்திருக்கும். 1991-ல் திவாலாகியிருப்போம். இது பற்றி நான் கூறுவதை விட நண்பர் அதியமான் கூறுவதைப் பார்க்கலாம்.


வெண்பூ:
1. நீங்கள் வாழ்க்கையில் மிகவும் சந்தோசமாக உணர்ந்தது எப்போது?
பதில்: இப்போது இக்கேள்விக்கு பதில் எழுதும் இத்தருணத்திலும் சந்தோஷமாகத்தான் உணர்கிறேன். என்ன குறை எனக்கு? மிகவும் பிடித்த வேலை படிப்பது, மொழிபெயர்ப்பது. அவற்றை செய்ய செம துட்டு வேறு தருகிறார்கள். வாழ்க்கையே அற்புதமயமானது.

2. உங்களுக்கு பல மொழிகள் தெரிந்ததால் Translator வேலை செய்கிறீர்களா? இல்லை Translator ஆவதற்காக பல மொழிகள் கற்றீர்களா? (ஏற்கனவே மற்ற பதிவுகளில் இதைப் பற்றி எழுதியிருந்தால் தவறாக நினைக்க வேண்டாம். சுட்டி மட்டும் கொடுக்கவும்)
பதில்: இது பற்றி ஜெயா டி.வி.யில் நான் பேட்டியில் கூறியபடி, படிக்கும் ஆர்வத்தாலும், பல பன்மொழி புத்தகங்களை அந்தந்த மொழியிலேயே படிக்கும் ஆர்வத்தாலும் அன்னிய மொழிகளை கற்றேன். மொழிபெயர்ப்பு என்பது அதன் கூடவே பின்னால் ஒரு துணைப்பொருளாக வந்தது.

3. இந்தியா உண்மையாகவே ஜனநாயக நாடு என்பது சரியா? ஏனெனில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முறையில், ஒவ்வொரு படிக்கட்டும் ஜனநாயக ரீதியாகவே ஏறப்படுகிறது (Primary elections for candidate selection by each party, then general election etc.) இங்கு அது கண்டிப்பாக சாத்தியமில்லை, மாநிலத்திலும், மத்தியிலும்.
பதில்: அங்கு அப்படி, இங்கோ, ஸ்டாலினா அழகிரியா என்ற சர்ச்சை. அமெரிக்கா அளவுக்கு ஜனநாயகத்தை பெற இந்தியா போக வேண்டிய தூரம் இன்னும் மிகவும் அதிகம்.


ரமணா:
1. பல தான தருமங்கள் ,கடவுள் கைங்காரியங்கள் ஆலயத் திருப்பணிகள்,ஆன்மீக அமைப்புகளுக்கு தாராள பொருளுதவி, யோக அமைப்புகளுக்கு எல்லா உதவிகளும் அவர்களது வளர்ச்சிக்கு செய்து பெரும் பேர் பெறும் ஆலை அதிபர்கள், பெரும் வணிக பிரமுகர்கள், தொழிற்சாலை முதலாளிகள் பல்ர் தங்களது பணியாளர்களை அடிமைபோல் நடத்தியும் மிகச் சொற்ப சம்பளம் (தினக் கூலி 100 க்கு கீழ்) கொடுத்தும் பெரும் பணம் ஈட்டுகின்றனரே, இவர்கள் செய்யும் மேலே சொன்ன அந்த புண்ணியங்கள் இவர்கள் போகும் வழிக்கும் உதவிடுமா? கடவுளை, சமுதாயத்தை ஏமாற்ற முயலும் இந்த கபட சன்னியாசிகளை பற்றி தங்களின் கருத்து?
அதாவது "தென்னாடுடைய சிவனே போற்றி" என்று அவ்வப்போது கூவி, பக்தியை வெளிப்பட காட்டிக் கொண்டு 910 ரூபாய்க்கு மேல் சம்பளம் தராத, "அன்பே சிவம்" நாசர் போன்றவர்களை பற்றி கேட்கிறீர்கள். அவர்கள் செய்வது புண்ணியங்கள் என யார் சொன்னது? ஒரு கதை நினைவுக்கு வருகிறது. பூஜைக்காக ஒரு சீப்பு வாழைப்பழத்தை பக்தர் ஒருவர் தன் வேலைக்கார பையன் (பத்து வயதிருக்கும்) கையில் கோவிலுக்கு கொடுத்து அனுப்ப, பசியோடு இருந்த அச்சிறுவன் இரண்டு பழங்களை மட்டும் அதிலிருந்து பிய்த்து உண்ண, அதை கண்ட பூசாரி அப்பையனை நையப்புடைத்தார். பிறகு பூஜை நடந்தது. அன்று இரவு பக்தர் கனவில் வந்த கடவுள் அவரிடம், இரண்டு பழங்கள் மட்டுமே தன்னையடைந்ததாகக் கூறினார் என்று கதை போகிறது. இதை அப்படியே நம்பும் இந்த டோண்டு ராகவன் உங்கள் இக்கேள்விக்கு வேறு என்ன விடை தருவான் என நினைக்கிறீர்கள்?


பாண்டிய நக்கீரன்:
1. இந்தியாவை ஆண்ட மன்னர்களில் தங்களை கவர்ந்தவர் யார்?
பதில்: கிருஷ்ணதேவராயர்.

2. முக்கியமான காரணம்?
பதில்: இசுலாமிய மன்னர்களின் ஆக்கிரமிப்புகளை அடக்கியவர்.

3. அவர் செய்த பெரிய நன்மை?
பதில்: இந்து மதத்துக்கு தன்னம்பிக்கை தந்தார்.

4. அவரை மீறி நடந்த பெரிய தவறு?
பதில்: அரசியல் யதார்த்தம் புரியாது இசுலாமியரை தம் படைகளில் நல்ல பதவிகளில் நியமித்தது. அவரது காலத்தில் உடனடி பாதிப்பில்லை, ஏனெனில் அவரது ஆளுமை அப்படிப்பட்டது. அவருக்கு பின்னால் வந்த ராமராயர் காலத்தில் பெரிய வீழ்ச்சி அதனால் உண்டாயிற்று.
இதனால் நான் இசுலாமியரை குறை கூறுவதாக எண்ண வேண்டாம். அவர்கள் மதத்துக்கு அவர்கள் உண்மையாக இருந்தார்கள். அவர்களை நம்பியது இவர்கள் தவறு. இக்காலத்தில் மதசார்பற்ற அரசு நடப்பதால் அந்தக் கண்ணோட்டம் இப்போது பொருந்தாது.

5. அவரது நினைவாக எதைக் கருதுகிறீர்கள்?
பதில்: திருப்பதி கோவிலுக்கு அவர் பல திருப்பணிகள் செய்துள்ளார்.

6. மன்னராட்சிக்கும் ,இன்றைய போலி மக்கள் ஆட்சிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு?
போலியாக இருந்தாலும் மக்களாட்சியில் தேர்தல் மூலம் ஆட்சியாளர்களை மாற்ற இயலும். மன்னராட்சியில் அது நடக்காது.

7. இன்னும் முடியாட்சி மீது ராஜ விசுவாசம் உள்ளவர்கள் பற்றிய தங்கள் கருத்து?
பதில்: காலத்தோடு ஒட்டாதவர்கள்.

8. தங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றியோர் யாராவது இந்த உணர்வோடு உள்ளனரா? அவர்கள் பற்றிய தங்கள் கருத்து?
பதில்: இல்லை, நல்ல வேளையாக.

9. இதே மாதிரி தற்சமயம் உலகில் எங்கெல்லாம் மன்னாராட்சி தொடர்கிறது?
பதில்: இங்கிலாந்து, ஸ்பெயின், சவுதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகள்.

10. சுதந்திர இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் "super star" யார்?
பதில்: சூப்பர் ஸ்டார் என்றால் ஜவஹர்லால் நேரு அவர்களைத்தான் கூறுவேன்.

11. தாங்கள் சொல்லும் காரணம்?
பதில்: எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து அவர்தான் பிரதம மந்திரியாக இருந்திருக்கிறார். அவரது தலைமை ஒருபோதும் கேள்விக்குட்படுத்தப்படவில்லை. சொதப்பல்கள் பல செய்தார், காஷ்மீரத்தில் அவர் செய்த கந்தரகோளம் இன்னும் நம்மை வாட்டுகிறது என்பது உண்மையாயினும் அவர்தான் சூப்பர் ஸ்டார்.

12. அவரோடு அலுவலக விசயமாக (மொழிபெயர்ப்பு) தொடர்பு இருந்ததுண்டா? (அல்லது அவரது காரியதரிசியுடன்)அதில் ஏதாவது புதிய மகிழ்வான அனுபவம் உண்டா? கசப்பான அனுபவம் ஏதாவது? அதை (அந்த நெருக்கத்தை) நண்பர்கள் முன்னேற்றதிற்ககாக சிபாரிசுகள் செய்ய முயன்றதுண்டா? பழமா? காயா?
பதில்: அவர் சமீபத்தில் மே 27, 1964-ல் இறந்தபோது நான் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு விடுமுறையில் இருந்தேன். அன்னிய மொழி ஏதும் தெரியாது. ஆகவே உங்களது இது சம்பந்தமான ஒரு கேள்விக்கும் என்னிடம் பதில் லேது.

13. அவரையும் இப்போதைய பிரதமரை ஒப்பிட்டு கருத்து சொல்லவும். அவர் இப்போது இருந்தால் என்ன சொல்லுவார்? அது உங்களுக்கு ஏற்புடையதா?
பதில்: அவர் உண்மையிலேயே பிரதமர். இப்போதைய பிரதமர் பொம்மை பிரதமர். இப்போது இருந்தால் அவர் சொல்லக்கூடிய வார்த்தை ஒன்றுதான். அதுதான் "நான்சென்ஸ்". எனக்கு ஏற்புடையதே.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது