2/28/2006

IDPL நினைவுகள் - 3

CPWD-யை விட்டு IDPL-க்கு வந்த போது. நான் வேலையை ராஜினாமா செய்யவில்லை. Lien என்பதை தக்க வைத்துக் கொண்டிருந்தேன். அதாவது இரண்டு வருடத்துக்குள் நான் விருப்பப்பட்டால் CPWD-க்கு திரும்ப செல்ல முடியும். அதை முழுவதும் பிரயோகம் செய்து IDPL-லிலேயே இருந்து விடுகிறேன் என 1983-ல் எழுதிக் கொடுத்தேன். CPWD வேலைக்கு பென்ஷன் பெற்றது பற்றி இன்னொரு பதிவில்.

இதை எல்லாம் செய்வதற்கும் அல்ஜீரிய வேலை கையை விட்டுப் போவதற்கும் சரியாக இருந்தது.

இப்போது சில பொதுப்படையான வார்த்தைகள் கூறுவேன். எழுபதுகளை அரசு நிறுவனங்களின் பொற்காலம் என்றே கூறலாம். மத்திய அரசின் முழு பட்ஜெட் ஆதரவு அவ்வகை நிறுவனங்களுக்குத் தரப்பட்டன. ஒப்பந்தப் புள்ளிகள் பெறுவதிலும் அவற்றுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன. லாப நோக்கு என்பது கெட்டவார்த்தையாக இருந்தது. சமூக நோக்கு என்ற மாயையை சிருஷ்டித்து மக்கள் வரிப்பணம் பாழாக்கப்பட்டது.

இதையெல்லாம் நான் இங்கே கூறுவது காரணமாகத்தான். இந்த பின்புலனில் ஐ.டி.பி.எல்லை பல அரசியல்வாதிகள் தவறாகப் பயன்படுத்தினர். வேண்டியவர்களுக்கு வேலை போட்டுக் கொடுப்பதில் யூனியன்கள் போட்டி போட்டன. விளைவு என்னவாயிற்றென்றால் தேவைக்கதிமாக ஆட்கள் வேலையில் அமர்ந்து குண்டுசட்டியில் குதிரை ஓட்டினர். சம்பளம் கொடுக்கத்தான் அரசு பட்ஜெட் என்ற ஊன்றுகோல் இருந்ததே. ஆனால் எவ்வளவு நாட்களுக்குத்தான் வெறும்கையால் முழம்போடுவது? பொருளாதார விதிகள் செயல்பட ஆரம்பித்தன. மெதுவாக ஐ.டி.பி.எல்லுக்கு வந்த ஆர்டர்கள் குறைய ஆரம்பித்தன. தான் வாங்கிய பொருட்களுக்கு உடனடியாக பில்களை செட்டில் செய்யமுடியாமல் ஐ.டி.பி.எல் திணற ஆரம்பித்தது. இந்த நிலையில்தான் அல்ஜீரிய வேலையும் கையை விட்டுப் போயிற்று. அது ஒன்றுதான் நல்லவிஷயம் என்பது பிறகுதான் எல்லோருக்கும் புரிந்தது என்பதை இங்கே போகிறபோக்கில் கூறி விடுகிறேன்.

இதனால் நான் அடைந்த பாதிப்புகளை மட்டும் இங்கு கூறுவேன், ஏனெனில் அவை எனக்குத் தெரிந்த முழு உண்மைகள். அல்ஜீரிய வேலை சென்றாலும் அவ்வப்போது ஏதாவது பிரெஞ்சு டெலக்ஸுகள் வந்து கொண்டிருந்தன. அவற்றை மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. நான் ஐ.டி.பி.எல்லில் சேர்ந்தபோது என்னை DDPE (Design Development and Process Engineering) துறையில் போஸ்ட் செய்தார்கள். நான் வேலைக்கு சேர்ந்த அடுத்த வருடமே அது ஹைதராபாத் மற்றும் ரிஷிகேஷ் தொழிற்சாலைகள் நடுவில் பங்கு பிரிக்கப்பட்டு விட்டது. நான் ஹைதராபாத் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தேன். என்னை என் மொழி பெயர்ப்பு வேலைகளுக்காக Gurgaon-லேயே (corporate office) (அதாவது தில்லியிலேயே) நிறுத்திக் கொண்டனர். அடுத்த வருடமே அல்ஜீரிய வேலைகள் இல்லையென்று போனாலும் நான் தில்லியிலேயே இருக்க முடிந்தது. அதுதான் நான் தில்லியில் பல நல்ல வாட்டிக்கையாளர்களை பெற உதவியது.

நல்ல வேளையாக ஜலானி அவர்களின் சமயோசிதத்தால் நான் தப்பித்தேன். என்னிடம் இப்போது மின் பொறியியல் வேலைகளும் வரத் துவங்கின. உதாரணத்துக்கு கார்ப்பரேட் அலுவலகத்துக்கு டீஸல் ஜெனெரேட்டர் போட வேண்டியிருந்தது. என்னை அந்த வேலையை செய்யுமாறு பணித்தனர். எனக்கு மிக்க மகிழ்ச்சி. அலுவலகம் முழுவதும் சென்று மின்சார லோட் எவ்வளவு என்பதை கணக்கெடுத்து ஜெனெரேட்டரின் அளவை நிர்ணயிக்க வேண்டியது முதல் வேலை. CPWD-யில் பெற்ற பயிற்சி மிகவும் கைகொடுத்தது. அளவை நிர்ணயம் செய்தபின் ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதற்கான கடிதம் வடிவமைத்து, பல கம்பெனிகளுக்கு அனுப்பிக்க வைத்து அவற்றின் கொட்டேஷன்களைப் பெற்று ஆராய்ந்து ஒரு ஒப்பந்தக்காரரை தேர்ந்தெடுத்து என்றெல்லாம் வேலைகள் செய்ய முடிந்தது. என்னை மானிட்டர் செய்த ஜலானி அவர்கள் என்னைக் கூப்பிட்டனுப்பி "என் பெயரைக் காப்பாற்றினாய்" என்று பாராட்டியதே எனக்குக் கிடைத்த பாராட்டுகளில் மிகப்பெரியதாக நான் இன்றும் மதிக்கிறேன்.

அது வரை என்னை நான் ஒரு மொழிபெயர்ப்பாளன் மட்டுமே, இஞ்சினியர் என்பது பெயரளவில்தான் எனப் பலர் கணித்திருந்தனர். ஜெனெரேட்டரை செயல்படுத்தி எல்லோரிடமும் சப்ளை அச்சமயம் ஜெனெரேட்டரிலிருந்தே வருகிறது என்று கூறும்போது எல்லோருமே பாராட்டினர். அப்போதுதான் நான் பொறியாளனும்கூட என்பதை அவர்களால் நேரடியாக உணர முடிந்தது.

மத்தியப் பொதுப்பணித்துறையில் நான் பெற்ற அனுபவம் பின்னால் வரப்போகும் சிக்கல்களையும் எதிர்பார்த்து செயல்பட உதவியது. உதாரணத்துக்கு எங்கள் கார்பரேட் அலுவலகத்தின் ஒரு பகுதியை ஸ்டேட் பேங்க் ஸ்டாஃப் காலேஜுக்கு வாடகைக்கு விட்டனர். அவர்களுக்கான சப்ப்ளையும் எங்கள் மெயின் போர்டிலிருந்தே சென்றது. ஆகவே ஜெனெரேட்டர் போட்டபோது அவர்களுக்கு தவறுதலாகக்கூட ஜெனெரேட்டர் சப்ப்ளை போகக்கூடாது என்று செயல்பட்டேன். அது பல சிக்கல்களை பின்னால் தவிர்க்க உதவியது. அவை இன்னொரு பதிவில்.

என்ன செய்து என்ன பயன். என்னை 1986-ஆம் ஆண்டு பக்கத்தில் உள்ள குர்காவுன் தொழிற்சாலைக்கு மாற்றம் செய்த்து விட்டனர். அதையும் சமாளித்தேன். அது பற்றி அடுத்தப் பதிவில்.

ஐ.டி.பி.எல்லின் வீழ்ச்சி மிக துரதிர்ஷ்டவசமானது. மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் அதை பதிவு செய்வது என் கடமை எனக் கருதுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/27/2006

புகார் கடிதங்கள் எழுதுவது பற்றி

டில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற்றைப்படுத்தக் கொடுத்தேன். நான் பணம் கட்டிய சலானின் ஸ்டப்பையும் (stub) கொடுத்தேன். புத்தகம் வாங்கிய வங்கி அதிகாரி ஸ்டப்பை வைத்து இற்றைப்படுத்த முடியாது என்றும் நான் அடுத்த நாள்தான் வந்து இற்றைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார். நான் அவரிடம் சம்பந்தப்பட்ட வவுச்சர் அவரிடம் சில நிமிடங்களிலேயே வரும் என்றும் அது வரைக்கும் காத்திருக்கத் தயார் என்று கூறியும் மனிதர் ஒத்துக் கொள்ளவே இல்லை. ஏன் என்று கேட்டால் அது ரிஸர்வ் பேங்க் ரூல் என்று கூறினார். அந்த ரூலை காண்பிக்குமாறு நான் அவரை சேலஞ்ச் செய்தேன். அதற்கெல்லாம் தனக்கு நேரம் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும்போதே வவுச்சர் அவரிடம் வந்தது. சரி இப்போதாவது இற்றைபடுத்துங்கள் என்று வேண்டிக் கேட்க, ஏதோ எனக்கு ஃபேவர் செய்வது போல பாஸ்புக்கில் கிறுக்கி என்னிடம் திருப்பித் தள்ளினார்.

அதில் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தேன். எண்ட்ரீக்கள் இருந்தன ஆனால் அவை இனிஷியல் செய்யப்படவில்லை. பேங்கிங் விதிகள்படி அவை செய்யப்பட்டிருக்க வேண்டும். நான் என்ன செய்தேன்? சம்பந்தப்பட்ட பக்கங்களை ஃபோட்டோகாப்பி எடுத்தேன். பிறகு தனியாக ஒரு காகிதத்தில் நடந்த விஷயங்களை நடந்தபடி எழுதி தபால் பெட்டி எண் 458, புது தில்லி - 110001 என்ற முகவரிக்கு புகார் அனுப்பினேன். போட்டோகாப்பி எடுக்கப்பட்ட பக்கங்களையும் அனுப்பினேன். நான் கேட்ட கேள்விகள் எளிமையானவை. அதாவது ரொக்கப் பணம் செலுத்தினால் அடுத்த தினம்தான் இறைப்படுத்தவேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா, பாஸ்புக் இற்றைப்படுத்தும்போது ஏன் இனிஷியல் செய்யவில்லை, அது தவறில்லையா என்பதே அவை. நான்கே நாட்களில் பதில் வந்தது. நடந்ததற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரி கண்டிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. அடுத்த தடவை நான் பேங்குக்கு சென்றபோது அந்த அதிகாரி அந்த கவுண்டரிலிருந்து மாற்றப்பட்டிருந்தார்.

இப்பதிவின் நோக்கமே நாம் எங்காவது சேவை குறைபாடுகளைக் கண்டால் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவேண்டும் என்பதே. புகார் கடிதங்களுக்கு வலு உள்ளன. முறையாக, காழ்ப்பில்லாமல் எழுதப்பட்ட புகார் கடிதங்கள் மேல் நிச்சயம் நடவடிக்கை எடுக்கின்றனர். அவற்றை எழுதுவதும் ஒரு கலையே.

1. புகார் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைக் குறித்தே இருக்க வேண்டும். அப்படியின்றி பொதுவாக எழுதினால் யாரும் கவனிப்பதில்லை. இடம், பொருள், காலம் எல்லாவற்றிலும் தெளிவாக இருத்தல் வேண்டும்.
2. எவ்வளவு கோபம் இருந்தாலும் அதை கடிதத்தில் வெளியே காட்டலாகாது. மரியாதையான தொனியில் எழுதவேண்டும். திட்டினால் நம் காரியம்தான் கெடும்.
3. சம்பந்தப்பட்டவர் பெயர், பதவியின் பெயர் எல்லாம் தெளிவாக குறிக்கவேண்டும். புகார் கடிதம் பெறுபவர் அம்மாதிரி பல கடிதங்களைப் பார்த்திருப்பார். ஆகவே ரத்தினசுருக்கமாக எழுத வேண்டும்.
4. நாம் எழுதுவதால் என்ன நடந்துவிடப் போகிறது என்னும் தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும்.
5. சில சமயங்களில் பொதுவாகவும் எழுத வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு பம்பாயில் வி.டி.ஸ்டேஷன் எதிரில் காபிடல் என்னும் சினிமா தியேட்டர் இருந்தது. அதன் அருகில் வண்டிகளுக்கு இடது பக்கம் திரும்பும் சிக்னல் பச்சை நிறத்தில் இருக்கும்போது தெரு நடுவில் உள்ள பாதசாரிகள் சிக்னலும் பச்சை நிறத்தில் வந்தது. இதை பற்றி நான் போக்குவரத்துக்கு பொறுப்பான போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதுகையில் இடத்தைத் தெளிவாகக் குறிப்பிட்டு அவரே நான் சொன்னதை சோதித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டேன். இரண்டே நாட்களில் பதில் வந்தது. அந்தத் திருப்பத்தில் இடது பக்கம் திரும்புவதையே ரத்து செய்திருந்தனர். அதுதான் நானும் வேண்டியது. இந்த இடத்தில் புகார் தெளிவாக இருப்பது முக்கியம்.
6. ஒரு புகாரில் ஒரு விஷயம்தான் இருக்கவேண்டும். வசவசவென்று பல புகார்களை அடுக்கலாகாது. தேவையானால் ஒவ்வொரு புகாருக்கும் ஒரு தனிக் கடிதம் எழுத வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு புகாரும் தனிப்பட்ட அலுவலகரிடம் செல்லும். தனித்தனி கடிதங்கள் இருப்பதுதான் சம்பந்தப்பட்ட கோப்புகளில் இடுவதற்கு தோதாக இருக்கும். இல்லாவிட்டால் ஒரு புகார் மட்டும் கவனிக்கப்பட்டு கடிதம் அதற்கான கோப்பில் சென்றுவிடும். நாமே தனித்தனியாகக் கொடுத்தால் மேற்பார்வை அதிகாரி சம்பந்தப்ப்ட்ட அலுவலகர்களுக்கு அல்லாட் செய்ய சௌகரியமாக இருக்கும்.

இப்படித்தான் பம்பாயில் இருந்தபோது மேக்ஸ் ம்யுல்லர் பவனில் சிலரால் மட்டும் உபயோகிக்க முடிந்த நூலகத்தை பொது மக்களுக்குத் திறந்து வைக்க முடிந்ததை பற்றி ஒரு பதிவு போட்டுள்ளேன். அதில் கூறியதுபோல எதுவும் முயற்சி செய்தால் நடக்கக் கூடியதே. கேட்டால் கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம் ஆனால் கேட்காவிட்டால் நிச்சயமாகக் கிடைக்காது என்றுதான் கூற வேண்டும். இதைத்தான் கேளுங்கள் தரப்படும் என்று கூறுகிறார்கள் போலும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/24/2006

IDPL - நினைவுகள் - 2

இதற்கு முந்தையப் பதிவில் சோம்பேறி பையன் அவர்கள் ஏற்கனவே படித்தது போன்ற உணர்வை அது தந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். உண்மைதான். ஒரு விஷயத்தைப் பற்றி முக்கியமாக எழுதுகிறோம். சில நாட்கள் கழித்து வேறு விஷயத்தைப் பற்றி எழுதும்போது மேலே கூறிய விஷயத்தையும் வேறு திருஷ்டிகோணத்திலிருந்து தொட வேண்டியிருக்கிறது. திரைப்படங்களில் ஒரே காட்சியை வெவ்வேறு காமெரா கோணங்களிலிருந்து காண்பதுபோலத்தான் இது.

ஐ.டி.பி.எல்லில் சேர்ந்த முதல் நாளன்றே ஒரு பெரிய ஆவணத்தைக் கொடுத்து அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்லிவிட்டனர். அலுவலக லைப்ரரிக்கு சென்று முதலில் பிரெஞ்சு<>ஆங்கில அகராதிகளை வாங்கிக் கொண்டேன். தலையணை சைஸ்களில் இருந்தன. பிறகு நேரடியாக மொழிபெயர்ப்பு வேலைதான். அல்ஜீரிய ஒப்பந்தத்துக்கான காகிதங்கள் அவை. அன்று மாலையே இந்தா பிடி என்று மொழிபெயர்ப்பை கொடுக்க, சம்பந்தப்பட்ட மேனேஜர் அசந்துபோனார். அவர் நான் மூன்று நாளாவது எடுத்துக் கொள்வேன் என எதிர்பார்த்திருக்கிறார். அக்கம்பெனியில் எனக்கு முன்னால் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்த பெண்மணியால் கம்பெனியில் பலரும் நொந்துப் போயிருந்தனர்.

அடுத்த நாள் ஆங்கிலத்தில் சாலை போடும் பணிகளை லிஸ்ட் செய்து அவற்றை பிரெஞ்சில் மொழிபெயர்க்கச் சொன்னார்கள். அப்படியே CPWD Shedule of Rates தான். மொத்தம் பத்து பத்திகள். முதலில் ஒரு சிவில் இஞ்ஜினியரிடம் சென்றேன். முதல் பத்தியில் தெருவுக்கான தளவரிசைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தனர். முதலில் மணல், பிறகு ஜல்லி, பிறகு செம்மண் என்ற ரேஞ்சில் குறித்திருந்தனர். எனக்கு பழக்கமான CPWD ஆங்கிலம். அந்த மனிதரிடம் சாலைக்கான செக்ஷனை வரைந்து காட்டி ஒவ்வொரு அடுக்கையும் அளவுகளுடன் காட்டி, இதைத்தானே கூறுகிறீர்கள் எனக் கேட்டவுடன் அவர் மிரண்டு விட்டார். அவருக்கு நான் பொறியாளர் என்ற விவரம் தெரிந்திருக்கவில்லை. ஏதோ சாதாரண மொழிபெயர்ப்பாளன் என்றே நினைத்திருந்தார். அவருக்கு விளக்கிக் கூறி அதே CPWD யில்ருந்துதான் வருகிறேன் என்று கூறியதும் என்னைக் கட்டியணைத்து கூத்தாடாததுதான் பாக்கி. பிறகு என்ன, விறு விறுவென அந்த வேலையும் முடிய, அதை தட்டச்சு செய்தார்கள். பிரெஞ்சு எழுத்துக்குறிகள் சிலவற்றை நான் கையாலேயே போட வேண்டியதாயிற்று. ஆனால் சும்மா சொல்லக்கூடாது தட்டச்சு செய்தவர் தனக்கு தெரியாத மொழி என்றாலும் தவறின்றி செய்திருந்தார்.

நான் பிரெஞ்சில் மொழி பெயர்த்ததை அல்ஜீரியாவுக்கு அனுப்பி விட்டு காத்திருந்தனர். கூடிய சீக்கிரம் ஒரு டெலக்ஸ் வந்தது. அதில் அல்ஜீரியர்கள் தொழில் நுட்பம் சம்பந்தமானக் கேள்விகளே கேட்டிருந்தனர், அதாவது மணலை இன்னும் அதிகம் போட வேண்டும், ஜல்லியின் சைஸை மாற்றவும் என்ற ரேஞ்சில் அவர்கள் எழுதியிருந்தனர். ஆக, நான் பிரெஞ்சில் மொழி பெயர்த்ததும் அவர்களுக்கு புரியும் வண்ணம் இருந்தது என்பதை நம்மவர்களும் உணர்ந்ததில் என்னுடைய மதிப்பு இன்னும் விர்ரென எழும்பியது. எனக்கும் மனதுக்குள் சிறிது உதறல்தான். ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு மொழி பெயர்த்தது அதுவே முதல் தடவை.

இந்தத் தருணத்தில் மொழிபெயர்ப்பு சம்பந்தமாக ஒரு விஷயம். சாதாரணமாக தாய் மொழியிலிருந்து அன்னிய மொழிக்கு மொழி பெயர்க்கக் கூடாது என்னும் எண்ணம் இப்போது கோலோச்சுகிறது. இக்கேள்வி என்னைப் பொருத்தவரை தமிழ் அல்லது ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன் அல்லது பிரெஞ்சுக்கு மொழிபெயர்ப்பதை குறிக்கும். தமிழ் ஆங்கிலம் இரண்டும் என்னைப் பொருத்தவரை தாய்மொழி ஸ்தானத்தில் உள்ளன. ஏன் அவ்வாறு செய்யக் கூடாது என்றும் சிலர் கேட்கிறார்கள். ஆனாலும் நான் அதைத்தான் செய்தேன். ஏன் என்பதைப் பார்ப்போம்.

தொழில் நுட்பங்களை உள்ளிட்டுக் கலைச் சொற்கள் மிகுந்த ஒரு கட்டுரையை மொழி பெயர்க்க மொழியறிவு மட்டும் போதாது. விஷய அறிவும் வேண்டும். அப்போது கூட ஒன்று கூறுவேன். மொழியறிவு மற்றும் விஷய அறிவும் சேர்ந்து அமையப் பெற்றால் தாய் மொழியில் மொழி பெயர்ப்பவர்கள் அதிகம் ஆதரிக்கப்படுவர்.

ஆனால் இங்கு விஷய அறிவுக்கு முக்கியத்துவம் அதிகம். என்னுடைய உதாரணத்தை எடுத்துக் கொண்டால் நான் 12 வருடம் வேலை செய்த ஐ.டி.பி.எல்லில் பிரெஞ்சுக்காரர்கள் கிடையாது. ஆகவே கம்பெனி இந்திய மொழி பெயர்ப்பாளர்களுடன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. அதில் எனக்கு முன்னால் இருந்தவரால் ஈடு கொடுக்க முடியவில்லை நான் ஈடு கொடுத்தேன். ஏனெனில் நான் ஒரு பொறியாளன் கூட. முன்னவர் வெறுமனே பிரெஞ்சில் எம்.ஏ. அவ்வளவுதான். என் மொழிபெயர்ப்பு எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தது. இது பற்றி நான் போட்ட இப்பதிவில் நான் இதை பற்றி இன்னும் விவரமாகவே கூறியுள்ளேன்.

பை தி வே, நான் பிரஞ்சில் செய்த மொழிபெயர்ப்பை பல ஆண்டுகள் கழித்துப் பார்க்க நேர்ந்தது. பிரெஞ்சு மொழிநடை சற்று தமாஷாக இருந்தது. ஆனாலும் புரிந்தது. இப்போது நான் அதை செய்வதாக இருந்தால் வேறு சொற்களைப் போட்டிருப்பேன். மொழிநடையை சற்று நகாசு செய்திருப்பேன், அவ்வளவுதான். ஆனால் அல்ஜீரியர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். அதுதான் முக்கியம்.

நான் கம்பெனியில் சேர்ந்த சில நாட்களுக்குள் கிட்டத்தட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நான் அறிமுகமானேன். நான் ஒரு பொறியாளர், மேலும் நானே ஒரு அதிகாரி வேறு என்பது பலருக்கு புதிதாகவே இருந்தது. பல நாட்கள் வேலை குவிந்து கிடந்ததால் தலை நிமிர முடியாத அளவுக்கு வேலை என்று ஆயிற்று. இஞ்ஜினியராக இருந்தாலும் அத்துறை வேலைகள் அளிக்கப்படவில்லை. அதை செய்ய ஏற்கனவே பலர் இருந்ததே காரணம். ஒரு நாள் விடுப்பு எடுத்தால் கூட அடுத்த நாள் ஏன் என்று பல தரப்பினரும் கேட்டனர். அது வரை சி.பி.டபிள்யூ.டி. யில் லூட்டி அடித்து கொண்டிருந்த எனக்கு மிகப் புதிய அனுபவம். நன்றாகவே இருந்தது. மனதுக்கு பிடித்த வேலை அல்லவா.

சென்னையிலிருந்து தில்லிக்கு கண்டைனரில் பொருட்கள் வருகின்றன அவற்றை இறக்கிவைக்க லீவு வேண்டும் என்று கேட்டபோது ப்ராஜக்ட் டைரக்டர் கையில் கொத்து பேப்பரை கொடுத்து "வீட்டில் மொழிபெயர்ப்பு செய்து அடுத்த நாள் கொண்டு வந்தால் போதும், இதை ட்யூட்டியாக வைத்துக் கொள், லீவ் எல்லாம் எடுக்க வேண்டாம்" என்று கூற எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். எனக்கும்தான்.

சாதாரணமாக மொழிபெயர்ப்பாளர்கள் வேலைக்கு விண்ணப்பம் பெறும்போது சம்பந்தப்பட்ட மொழியில் எம்.ஏ. பட்டம் வேண்டுமெனக் கேட்பார்கள். தொழில் நுட்ப விஷயங்களை மொழிபெயர்த்த அனுபவம் இருத்தல் நலம் எனக் குறிப்பிடுவார்கள். ஐ.டி.பி.எல். மட்டும் விதிவிலக்காக இருந்தது. அவர்கள் இந்த விஷயத்தில் பெற்ற அனுபவம் அப்படிப்பட்டது. நான் வேலையில் சேர்ந்தது எனக்கு மிக அனுகூலமாக இருந்தது. சி.பி.டபிள்யூ.டி.யில் சாதாரண மேற்பார்வையாளனிலிருந்து இங்கு அதிகாரியானது என் மொழியறிவால் வந்ததே ஆகும். கம்பெனிக்கும் ஒரு திறமை வாய்ந்த மொழிபெயர்ப்பாளர் கிடைத்ததில் திருப்திதான். அது வரை பல மொழிபெயர்ப்புகளை வெளியில் நிறைய பணம் கொடுத்து செய்ய வேண்டியிருந்தது. நான் சேர்ந்த்தும் ஒரு நயாபைசா கூட வெளியில் செல்லவில்லை. ஆக இருதரப்பினருக்கும் சந்தோஷமே.

ஆனால் எல்லாவற்றுக்கும் முடிவு வரும் அல்லவா. இரண்டே ஆண்டுகளில் வேறுபல காரணங்களால் அல்ஜீரிய வேலை இல்லை என்று ஆகிவிட்டது. அப்போது என்ன நடந்தது என்பதை அடுத்தப் பதிவில் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/23/2006

IDPL - நினைவுகள்-1

சிலரைப் பார்த்த உடனேயே பிடித்து விடும். அவர்களுக்கும் நம்மை அதே போல பிடித்து விடுவது மிக அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். அவர்களில் திரு. ஜலானியும் ஒருவர்.

வருடம் 1981. ஐ.டி.பி.எல்லுக்கு (Indian Drugs and Pharmaceuticals Limited) அல்ஜீரியாவில் சில ஒப்பந்தங்கள் கிடைக்கும் போலிருந்ததால் ஒரு பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டார். அதற்கான நேர்முகத் தேர்வுக் குழுவின் தலைவர் ஜலானி அவர்கள். ஜே.என்.யூ-விலிருந்து ஒரு பிரெஞ்சுப் பேராசிரியை இதற்காகப் பிரத்தியேகமாக வந்திருந்தார். நாங்கள் இருவரும் பிரெஞ்சில் சரளமாகப் பேசுவதை ஜலானியும் மற்றவரும் ஆர்வமாகப் பார்த்தனர். பிறகு வேலை சம்பந்தமாகப் பேசினோம்.

ஜலானி:"ராகவன், நீங்களோ ஒரு இஞ்சினீயர். அத்துறையை விட்டு ஏன் மொழித் துறைக்கு வர ஆசைப் படுகிறீர்கள்?"
நான்: "ஐயா, மொழி பெயர்க்கப் போவது என்னவோ இஞ்சினீயரிங் சம்பந்தப்பட்ட விஷயங்கள்தானே. என் இஞ்சினீயரிங் அறிவு தேனீரில் சர்க்கரைப் போல கரைந்திருக்கும். ஆகவே அத்துறை அறிவை இழக்க மாட்டேன்."

அவருக்கு இந்த பதில் பிடித்திருந்தது. இருந்தாலும் அவர் விடவில்லை.

ஜலானி:"எனக்கென்னவோ பிரெஞ்சு மொழி பெயர்ப்பு வேலை அதிக நாட்கள் நீடிக்கும் என்றுத் தோன்றவில்லை. இங்கு இஞ்சினியர் வேலை ஒன்றும் காலியாக உள்ளது. அதையும் எடுத்துக் கொள்ளுகிறீர்களா?"
நான்: "கண்டிப்பாக".

பிறகு இஞ்சினியர் மற்றும் பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளர் என்ற பெயரில் அங்கு நான் 12 வருடம் வேலை செய்தேன். ஜலானி அவர்கள் கூறியபடி 2 வருடங்கள் பிறகு அல்ஜீரியா வேலை இல்லை என்றாயிற்று. இங்குதான் அவரது தீர்க்க தரிசனம் வெளிப்பட்டது. அடுத்த 10 வருடங்கள் இஞ்சினியராக வேலை செய்தேன். பெரிய வேலை ஒன்றுமில்லை. நிறைய ஓய்வுதான். நான் பாட்டுக்கு சந்தோஷமாக வெளி மொழி பெயர்ப்பு வேலைகளை மேற் கொண்டு என் வாடிக்கையாளர்கள் வட்டத்தைப் பெருக்கிக் கொண்டேன். விருப்ப ஓய்வு பெற்று டில்லியிலேயே 8 வருடம் முழு நேர மொழி பெயர்ப்பாளனாக வெற்றிகரமாக உலா வர முடிந்தது.

"இஞ்சினியர் மற்றும் மொழி பெயர்ப்பாளர்" என்ற டெஸிக்னேஷன் எனக்குத் தெரிந்து இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை. இனிமேலும் யாருக்காவது அது கிடைக்கும் என்று தோன்றவில்லை. இத்தனைக்கும் மூல காரணங்களில் ஒருவராக இருந்த ஜலானி எப்போதும் என் நன்றிக்குரியவர்.

என்னைப் பொருத்தவரை எனக்கு முன்னேற்றமிருந்தாலும் ஐ.டி.பி.எல். என்னும் ஆலமரம் 1980-லிருந்தே தனது சரிவை சந்திக்க ஆரம்பித்து விட்டது என்பது பின்னோக்கிப் பார்க்கும்போது புரிகிறது. அரசு நிறுவனம் ஆதலால் மினிஸ்ட்ரியிலிருந்து பல தொல்லைகள். சாதாரணமாக விட்டிருந்தால் லாபம் இட்டியிருக்க வேண்டிய இந்த மருந்து நிறுவனம் ஆளும் கட்சியிலிருந்த அரசியல்வாதிகளால் அலைகழிக்கப்பட்டது. பொருளாதார நோக்கம் என்று ஒன்று இல்லாமல் பல முடிவுகளை அரசியல் காரணமாக எடுப்பதற்கு இந்த நிறுவனம் நிர்ப்பந்திக்கப்பட்டது. அவற்றில் ஒன்றுதான் இந்த அல்ஜீரிய வேலையும். அல்ஜீரியாவில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு கழிவு நீர் சுத்திகரிக்கும் டர்ண்கீ வேலை அது. இதற்கு ஒரு மருந்து கம்பெனி சரிப்படுமா என்பதைக் கூடப் பார்க்காது குருட்டுத்தனமாக முடிவு எடுக்கப்பட்டது. ஒரு மருந்து கம்பெனியின் கழிவுநீர் சுத்திகரிப்பு வேலை என்றால் பரவாயில்லை, ஆனால் இங்கே சம்பந்தமே இல்லாத வேலை.

நல்ல வேளையாக கடவுள் கிருபையால் அந்த வேலை ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் அந்த முடிவுக்கு வருவதற்கு கூட 2 ஆண்டுகள் தேவைப்பட்டன. அது தவிர, அக்காலக் கட்டத்தில் Rites மற்றும் Ircon-ஐ விடுத்து அல்ஜீரியா சென்ற எந்த அரசுக் கம்பெனியும் உருப்படவில்லை. நம்மூர் அரசியல்வாதிகள் உத்தமர்கள் என்று கூறும் அளவுக்கு அந்த ஊர் அரசியல்வாதிகள் லஞ்ச லாவண்யங்களில் டாக்டரேட் பட்டம் பெற்றவர்கள்.

12 வருடங்கள் எனக்கு ஆதரவு அளித்த இந்த நிறுவனம் சந்தித்த சரிவு என் மனத்தை மிகவும் பாதித்தது. இனி வரும் சில பதிவுகளில் இந்த நிறுவனத்தில் நான் பெற்ற அனுபவங்களைக் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/22/2006

சங்கிலி பதிவு-இளமுருகு மற்றும் ஜோசஃப்

எனக்கு பிடித்த 4 விஷயங்கள்:
1. பழைய விஷயங்களை நினைவுக்கு கொண்டு வந்து அசைபோடுவது. அதனால்தானோ என்னவோ சமீபத்தில் 1952-ல் என்றெல்லாம் வார்த்தைகள் விழுகின்றன. அவற்றை நினைவுக்கு கொண்டுவரும்போது அப்போதைய மனநிலைமை முதற்கொண்டு அப்படியே வருகின்றன. அதனால்தான் என்னுடைய அப்பா, அன்புள்ள அப்பா பதிவை எழுதும்போது உணர்ச்சிவசப்பட்டேன்.
2. பிடித்த புத்தகங்களில் கோடிட்டப் பகுதிகளை மறுபடி மறுபடி படிப்பது. அம்முறையில் கிருஷ்ணமணி சமீபத்தில் 1981-ல் விகடனில் எழுதிய "வேர்கள்" என்னும் தொடர்கதையில் வந்த ஒவ்வொரு அத்தியாயத்தையும் பலமுறை படித்தேன். இப்போது பத்தாம் முறையாகப் படிப்பது ஹாரி பாட்டரின் நான்காம் புத்தகத்தின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு.
3. மொழி பெயர்ப்பது. கூறவும் வேண்டுமோ. எனக்கு பிடித்த வேலை. அதற்கு பணம் வேறு கிடைக்கிறது. டபுள் ஓக்கே.
4. பதிவுகள் போடுவது. தமிழ் மணத்தில் ஏதாவது எழுதாவிட்டால் கை நடுங்க ஆரம்பித்து விடுகிறது. ஆகவேதான் அதற்கு இடையூறாக வரும் போலிகளை போடா ஜாட்டான் என்று புறம் தள்ளிவிட்டு போக முடிகிறது.

எனக்கு பிடித்த நான்கு படங்கள்:
1. படகோட்டி அதன் அத்தனை பாட்டுக்களும் பிடிக்கும்.
2. மன்மத லீலை. சமீபத்தில் 1976-ல் பார்த்த இப்படத்தைப் பிறகு பார்க்கவேயில்லை. இருந்தாலும் சீன் பை சீன் ஞாபகம் இருக்கிறது.
3. ஆட்டோகிராஃப். கதாநாயகன் என்னைப்போலவே உணர்ச்சிவசப்படுபவனாக இருக்கிறான்.
4. அன்பே சிவம். முதல் முறையாக கதாநாயகனும் கதாநாயகியும் சேராமல் போனதற்காக வருத்தப்படாத படம். வேறு எந்த முடிவுமே சாத்தியம் இல்லை என்ற உண்மை முகத்தில் அறையும்போது என்ன பேச முடியும்?

நான் வசித்த நான்கு இடங்கள்:
1. திருவல்லிக்கேணி. பிறந்து வளர்ந்த இடம். இப்போது கூட அதன் வீதிகளில் செல்லும்போது பழைய நினைவுகள் வந்து சூழ்ந்து கொள்கின்றன.
2. நங்கநல்லூர். என் அப்பா ஆசை ஆசையாய் இங்குதான் வீடு கட்டினார். அதை வாடகைக்கு விட்டு நான் டில்லியில் இருபது ஆண்டுகள் கழித்த போது இந்த வீடு அவ்வப்போது என் கனவில் வந்தது.
3. பம்பாய். மும்பையல்ல. பசுமையான நினைவுகள் 1, 2, 3, 4.
4. தில்லி. எனக்கு மொழிபெயர்ப்பு துறையில் பல கதவுகளைத் திறந்துவிட்ட இடம். தில்லி நினைவுகள் இனிமேல் போட்டு பிறாண்டுவேன்.

எனக்கு பிடித்த வலைப்பதிவாளர்கள்:

1. என்றென்றும் அன்புடன் பாலா. இவரது பதிவுகளைப் பார்த்துத்தான் நானும் பதிவுகள் போட ஆசைப்பட்டேன்.
2. டி.பி.ஆர்.ஜோசஃப். அவரும் நானும் சேர்ந்து அடித்த பெரிசுகளின் லூட்டி பலருக்கு ரத்த அழுத்தத்தை ஏற்றிவிட்டது, முக்கியமாக இட்லி வடைக்கு.
3.தருமி. இன்னொரு பெருசு. பினாத்தல் சுரேஷ் புலம்பியது எங்களைப் பார்த்துத்தான்.
4. முத்து (தமிழினி). இஅவரைப் பற்றி நான் பதிவு போட்டுள்ளேன்.

நான் tag செய்யப் போகிறவர்கள்:
1. முத்து (தமிழினி)
2. என்றென்றும் அன்புடன் பாலா
3. நாட்டாமை
4. சோம்பேறி பையன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/21/2006

என்னைத் தொடர்ந்த கனவு ஒன்று

இது ஒரு மீள்பதிவு. பழைய இடுகைகள புரட்டும்போது இது கண்ணில் பட்டது. வகைபடுத்த முயன்றேன், ஆனால் முடியவில்லை. அதற்காகவாவது மீள்பதிவு செய்யலாம் என முடிவெடுத்தேன். இதை நான் போன வருடம் இட்ட பிறகுதான் தெரிந்தது, பலருக்கும் இதே மாதிரி கனவுகள் வருவதுண்டு என்பது.

இப்போது நங்கநல்லூரில் நான் வசிக்கும் வீட்டிற்கு 1969-ல் குடிவந்தோம். சொந்த வீடுதான். 1979-ல் குடும்பச் சூழ்நிலை காரணமாக வீட்டை வாடகைக்கு விட்டு மாம்பலத்தில் குடி புகுந்தோம். பிறகு 1981-ல் ஐ.டி.பி.எல்லில் வேலை கிடைத்து தில்லி சென்றோம். தில்லியில் 20 வருடங்கள் வாசம். அந்தக் காலக் கட்டத்தில் அடிக்கடி எனக்கு ஒரு கனவு வரும்.

கனவில் நான் திரும்பவும் நங்கநல்லூர் வீட்டிற்கே குடி வருகிறேன். எல்லா அறைகளிலும் சுற்றுகிறேன். என் தந்தையுடன் பேசிய, விவாதித்தத் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. நீண்ட கனவுதான். திடீரென்று விழிப்பு வரும். தில்லியில்தான் இருக்கிறோம் என்பது புரிய சில நிமிடங்கள் ஆகும். அப்போது தீராத சோகம் என்னைக் கவ்வும். அடுத்த நாள் முழுக்க ஒரு வித மயக்கத்தில் கழியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், சில சமயம் கனவில் எனக்கு நானே கூறிக் கொள்வேன். "இது வரை கனவாக இருந்தது, நிஜத்திலேயே நடக்கிறது" என்று. அதுவும் கனவுதான் என்றுத் தெரிய, இரட்டிப்பு ஏமாற்றம்தான்.

தில்லியில் இருந்த 20 வருடங்களில் 7 முறை வீடு மாற்ற வேண்டியிருந்தது. 2001-ல் ஏழாவது முறையும் மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் வந்தப் போது, என் வீட்டம்மா சென்னைக்கே திரும்பலாம் என்று ஆலோசனை கூற அவ்வாறே செய்ய முடிவு செய்தோம். என்ன ஆச்சரியம் அம்முடிவு எடுத்த நொடியிலிருந்து விஷயங்கள் தன்னைப் போல விறு விறுவென்று நடந்தன. அது வரை மின்னஞ்சல் கூட வைத்துக் கொள்ளாத நான் என் வாடிக்கையாளர் கூறிய ஆலோசனை பேரில் யாஹூ அடையாளம் பெற்றுக் கொள்ள எல்லாம் நூல்பிடி கணக்காய் நடந்தன. இது எனக்கு தில்லி வேலைகளை சென்னையிலிருந்தே செய்து கொள்வதை சாத்தியமாக்கிற்று.

இரண்டு மாதங்களுக்குள் என் வீட்டில் இருந்தக் குடித்தனக்காரரை வீடு காலி செய்வித்து, மராமத்து வேலைகளை செய்து, நங்கநல்லூருக்குத் திரும்பக் குடி வந்தேன். ஒரு சிக்கலும் இல்லை. எல்லாவற்றுக்கும் என் தந்தையின் ஆசியே காரணம்.

வந்தப் புதிதில் சிறிது கலக்கம்தான், திடீரென்று விழித்துக் கொள்வேனோ தூக்கத்திலிருந்து என்று. அதிலிருந்து மீள மேலும் சில காலம் பிடித்தது. அக்கனவும் வருவதில்லை இப்போது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/16/2006

அப்பா, அன்புள்ள அப்பா

ரயில் அரக்கோணத்திலிருந்து கிளம்பி சென்னையை நோக்கி வேகம் எடுத்தது. பம்பாயிலிருந்து அது வரை பொறுமையாக இருந்த நான் இப்போது வண்டி சீக்கிரம் போகாதா என்று ஏங்க ஆரம்பித்தேன். வண்டி சென்ட்ரலை அடைந்தது. கையில் ஒரு சிறு பெட்டிதான். ஆகவே விறுவிறுவென்று பூங்கா ரயில் நிலையத்தை அடைந்து மீனம்பாக்கத்துக்கு 30 பைசா கொடுத்து டிக்கட் வாங்கினேன். பழவந்தாங்கல் ஸ்டேஷன் அப்போது இன்னும் உருவாகவில்லை. (வருடம் 1971). மீனம்பாக்கத்திலிருந்து பொடி நடையாக 8 நிமிடம் நடந்தால் வீடு. பம்பாயில் அவ்வருடம் ஜனவரியில் வேலையில் சேர்ந்து சில பொது விடுமுறைகள் கூடி வந்ததால், வெறுமனே நான்கு நாட்கள் கேஷுவல் லீவெடுத்து, 11 நாட்கள் மார்ச்சில் கிடைத்தன. ஜாலிதான்.

அப்போதெல்லாம் வழிகளில் வீடுகள் ரொம்பவும் இல்லை. வெகு தூரத்திலிருந்தே என் வீடு என் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தது. என் அப்பா தோட்டத்தில் ஒரு ஆவல் நிறைந்த புள்ளியாய் என்னை எதிர்நோக்கி நின்றார். தூரத்திலிருந்தே என்னைப் பார்த்து கையை வேகமாக ஆட்டினார். அவரைப் பார்த்த உடன் என் வயிற்றில் சுரீரென்று யாரோ ஒரு கத்தியை இறக்கியது போன்று தோன்றியது. எவ்வளவு ஆஜானுபாகுவான மனிதர், ஹிந்து பத்திரிகையில் நிருபராக பணியாற்றி, 1970ல் ஓய்வு பெற்றவர். அவரது சகநிருபர்களால் ப்ரிகேடியர் என்று மதிப்புடன் அழைக்கப்பட்டவர். ஆனால் இன்று? தளர்ந்த உடல் நிலை. "எப்படியிருக்கே அப்பா?" என்று கேட்க, "எனக்கு என்னடா குறைச்சல், நிம்மதியாக சொந்த வீட்டில் இருக்கேன்" என்று கூற என் கவலை அதிகரித்தது. குரல் தளர்ந்திருந்தது. அவருக்கு நான் மாதா மாதம் அனுப்பிய 100 ரூபாய் போதவில்லையோ என்ற எண்ணம் வேறு என்னைப்படுத்தியது. நேரடியாகக் கேட்டால் மனிதர் ஒன்றும் கூற மாட்டார். ஆகவே அவர் இல்லாத போது வங்கிக் கணக்குப் புத்தகங்கள் இரண்டையும் பார்த்தேன். பரவாயில்லை, கிட்டத்தட்ட 1000 ரூபாய் ஒவ்வொரு கணக்கிலும் நிலுவையில் இருந்தது. அவருக்கு பிக்ஸட் டிபாசிட்டுகளிலிருந்து வரும் மாத வட்டிகள் ஒழுங்காய் வருகின்றனவா என்பதையும் பார்த்து வைத்துக் கொண்டேன். செலவுகள் 500க்குள் அடங்குகின்றன என்பதையு அவரது கணக்குப் புத்தகத்தைப் பார்த்து தெளிவு செய்து கொண்டதும் மனதில் நிம்மதி.

பணக்கஷ்டம் இல்லை. ஆனால் மன நிம்மதி? நான் ஒரே பிள்ளை. என் அக்கா கல்யாணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் வசித்து வந்தார். என் அம்மா 1960லியே இறந்து விட்டார். அவரை விட்டு நான் பிரிந்து இருப்பது இதுவே முதன் முறை.

அவரை பார்த்து என்னென்னவெல்லாமோ கூற வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் ஒருவித கூச்சம் என்னை தடுத்தது. என் முகபாவத்திலிருந்து ஒரு விதமாக ஊகம் செய்து கொண்ட அப்பாவும் அவசர அவசரமாக "சீக்கிரம் குளித்து விட்டு வாடா, காப்பி போட்டு வைத்திருக்கிறேன். உடனே மாம்பலம் போக வேண்டும், உன் அத்தை வீட்டில் நமக்கு சாப்பாடு என்று கூற, அந்த இடத்தைவிட்டு அப்போதைக்கு அகன்றேன். அத்தையின் இரண்டாவது மகளை (இப்போது என் மனைவி) பார்க்கப் போகும் சந்தோஷத்தில் சற்றே மனம் தெளிந்தேன்.

பிறகு நான் வீட்டிலிருந்த அடுத்த சில நாட்களுக்கு அப்பாவுடன் மனம் விட்டுப் பேச விடாமல் ஏதோ என்னைத் தடுத்தது. அவரும் என் முகபாவ மாற்றங்களை அவ்வப்போது உணர்ந்து ரேடியோவை பெரியதாக வைத்துக் கொண்டு இஸ்ரேலைப் பற்றி என்னுடன் பேசி என் கவனத்தைத் திருப்பினார். அச்சமயம்தான் வீட்டிலிருந்த பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் ஒரு கட்டுரையைப் பார்த்தேன். தலைப்பு "To father with love". படித்தேன். அதில் கட்டுரையாசிரியர் சித்தரித்த நிகழ்ச்சிகள் என்னுடையதைப் போலவே இருந்தன. நினைவிலிருந்து தமிழாக்கித் தருகிறேன்.

//"அப்பா உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, அம்மா எனக்கு ஆறு வயதாயிருக்கும்போது இறந்து விட்டார். என்னை எவ்வளவு அருமையாக வளர்த்தீர்கள்? இருட்டைக் கண்டு அலறும் என்னை அன்புடன் அணைத்து ஆறுதல் கூறி இருட்டின் பயத்தை போக்கினீர்கள்? உங்களைப் போன்ற பல பெரியவர்கள் உலகத்தைத் திறம்பட நடத்துகிறீர்கள் என்ற உறுதியுடன் எங்களைப் போன்ற சிறியவர்கள் காலம் கழித்தோமே. இப்போது இப்படி பாதியாக ஒடுங்கி விட்டீர்களே" என்றெல்லாம் கூற நினைத்த என் முகத்தைப் பார்த்து அப்பா அவசர அவசரமாக வேலைக்காரனை என் பெட்டியை எடுத்து வருமாறு கூறிவிட்டு என்னை ஸ்டேஷனுக்கு வெளியே அழைத்து சென்றார்.

அவருக்கு உடம்பு சரியில்லை என்று அவர் நண்பர் அப்பாவுக்குத் தெரியாமல் எனக்குத் தகவல் தர நான் என் ஆறுவயது பையனை அழைத்து வந்திருந்தேன். குழந்தையும் தாத்தாவுடன் ஒட்டிக் கொண்டான். அவருடன் பேசவிடாமல் என் நாவை ஏதோ கட்டிப் போட்டது. அவரும் அம்மாதிரி சந்தர்ப்பங்கள் வரும்போதெல்லாம் ஏதோ அவசர வேலை நினைவுக்கு வந்து பைய நகர்ந்தார். புறப்படுவதற்கு இரண்டு நாள் முன்னால் எனக்கு திடீரென ஒரு பழைய நினைவு ஞாபகத்துக்கு வந்தது.

அப்போது எனக்கு எட்டு வயது. இருள் இன்னும் பிரியாத ஒரு விடியற்காலை பொழுது. திடீரென என் அறையில் ஒரு வெளிச்சம். அப்பாதான். வேட்டைக்கு செல்லும் உடையுடன் வந்து என்னை எழுப்பினார். "அடேய் குட்டிப் பயலே, வா நாம் இருவரும் வேட்டைக்கு போகலாம். சீக்கிரம் பல் விளக்கி விட்டு வா, ஜீப் காத்திருக்கிறது" என்று கூற நானும் தலைகால் புரியாத சந்தோஷத்துடன் பரபரப்பாக உடைகளை அணிய ஆரம்பித்தேன். அன்றைய வேட்டையில் ஒன்றும் பெரிதாகக் கிடைக்காவிட்டாலும் அந்த அனுபவமே நல்ல பரிசு.

என் பையனை இங்கு வந்ததிலிருந்து நான் கவனிக்கவில்லை எனத் தோன்றியது. அடுத்த நாள் விடிகாலையில் அவன் அறைக்கு சென்று விளக்கைப் போட்டேன். "அடேய் குட்டிப் பயலே, வா நாம் இருவரும் வேட்டைக்கு போகலாம். சீக்கிரம் பல் விளக்கி விட்டு வா, ஜீப் காத்திருக்கிறது" என்று நான் கூற, அவனும் தலைகால் புரியாத சந்தோஷத்துடன் பரபரப்பாக உடைகளை அணிய ஆரம்பித்தான். அச்சமயம் என் அப்பா உள்ளே வந்தார். ஒரு நிமிடம் அவருக்கு புரியவில்லை. திடீரென மலரும் நினைவுகளால் அவர் முகமும் மலர்ந்தது. தன் பிள்ளை (நான்), தன் பேரன் (என் மகன்) ஆகிய இருவரையும் பார்த்து "அடேய் குட்டிப் பயல்களா போய் நன்னா என்ஜாய் பண்ணுங்க" என்று கம்பீரமாக கூறினார். தான் ஆரம்பித்து வைத்த இந்த வழக்கம் பின்வரும் பரம்பரைகளிலும் வரும் என்பதை உனர்ந்த அவர் மனதில் சந்தோஷம் ஏற்பட்டது அவர் முகத்திலே புலப்பட்டது. கூறவேண்டியதை செயலில் காட்டிய திருப்தி எனக்கு.//


திடீரென்று எனக்குள் ஒரு ஒரு ஃப்ளாஷ். பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரைகளை இதழ்களிலிருந்து தனியாகப் பிரித்து அவற்றையெல்லாம் ஒன்றாய் சேர்த்து பைண்டிற்கு கொடுத்தேன். முதல் கட்டுரையே "To father with love" தான். நான் மறுபடியும் பம்பாயிற்கு செல்லும் நாள் வந்தது. அன்று அப்பாவிடம் அந்த பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தைக் கொடுத்து விட்டு ரயிலேறினேன்.

1974ல் சென்னைக்கு மாற்றலாகி வந்து தந்தையுடன் இருந்தேன். அப்போது எனக்கு கல்யாணமும் ஆகிவிட்டிருந்தது. சொந்த மருமகளே மாட்டுப்பெண்ணாய் வந்ததில் அப்பாவுக்கு ஒரே மகிழ்ச்சி. என் வீட்டம்மாவும் அவரை நன்றாகக் கவனித்து கொண்டார். தன் பேத்தியை பார்த்துவிட்டு, குழந்தையுடன் சில ஆண்டுகள் இருந்து விளையாடி விட்டு 1979ல் தன் அருமை மனைவியிடம் சென்றார் என் அப்பா.

அப்போதுதான் அவர் பெட்டியில் அடியில் வைக்கப்பட்டிருந்த அந்த பைண்ட் புத்தகத்தைப் பார்த்தேன். அதை புரட்டிப் பார்த்த போது அப்பக்கம் வந்த வீட்டு வேலைக்காரி "சாமி, நீங்க பம்பாயில் இருந்த போது தினம் இந்த புத்த்கத்தை ஒரு மணி நேரமாவது புரட்டாமல் இருக்க மாட்டார். அதுவும் புத்தக ஆரம்பத்தையே அதிகம் பார்த்தார்" என்று கூற, என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. நான் சொல்ல நினைத்ததை அவர் சரியாகவே புரிந்து கொண்டார் என்ற ஆனந்தத்தால் வந்தது அந்த கண்ணீர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/13/2006

எனக்கேற்பட்ட ஒரு விசித்திர italics அனுபவம்

இது ஒரு மீள்பதிவு என்பதை முதலிலேயே கூறிவிடுகிறேன்.

1982-ல் ஒரு ஆங்கில நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். பெயர் நினைவில் இல்லை. ஆனால் புத்தகம் இஸ்ரேலைப் பற்றி. அதுவே என் ஆர்வத்துக்குக் காரணம்.

படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு பத்தி திடீரென சாய்வெழுத்தில் (italics) வந்தது. அதைப் படித்துவிட்டு மேலே வாசிப்பைத் தொடர்ந்தேன். சில பக்கங்கள் கழித்து இன்னொரு பத்தியும் சாய்வெழுத்தில் வந்தது. அதையும் படித்து விட்டு மேலே வாசிக்க ஆரம்பித்தேன்.

சிறிது நேரம் கழித்து திடீரென ஒரு எண்ணம் வந்தது. இப்பத்திகள் ஏன் சாய்வெழுத்தில் வந்தன என்பது எனக்குப் புரியவில்லை. ஏனெனில் அதில் கூறப்பட்ட விஷயங்கள் இடாலிக்ஸ் போடும் அளவுக்கு விசேஷமானதல்ல.

பக்கங்களைப் பின்னோக்கிப் பார்த்தால் முதல் பத்தி ஜெர்மனிலும் இரண்டாம் பத்தி பிரெஞ்சிலும் இருந்தன. படிக்கும்போது மொழி மாறியதைக் கூடக் கவனிக்காமல் படித்திருக்கிறேன்.

இது எவ்வாறு நிகழ்ந்தது?

யோசித்துப் பார்க்கும்போது இவ்வாறாக இருக்குமோ என்றுத் தோன்றியது. முதல் காரணமாக எனக்குப் புலப்பட்டது எழுத்துருக்களில் மாற்றம் இல்லை என்பதே. இரண்டாவதாக எனக்குத் தோன்றியது படிப்பது எம்மொழியில் இருப்பினும் என் எண்ணங்கள் தமிழில்தான் உள்ளன. ஆகவே எனக்கு மொழிமாற்றம் முதலில் புலப்படவில்லை போலும். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.

இன்னொரு நிகழ்ச்சியையும் கூறி விடுகிறேன். 1988-ஆம் வருடம் டில்லி கன்னாட் பிளேஸில் ஒரு ஐரோப்பியரைப் பார்த்தேன். அவர் கூட அவர் மனைவியும் இருந்தார். கணவர் தன் கையில் இருந்த ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொண்டிருந்தார். பிறகு என்னிடம் அங்கிருந்து குதுப் மினாருக்கு எவ்வாறு செல்வது என்று ஆங்கிலத்தில் கேட்டார். நான் உடனே அவர் செய்ய வேண்டியதை ஜெர்மனில் கூறினேன். அவருக்கு ஒரே ஆச்சரியம். "நான் ஜெர்மானியன் என்பதை எவ்வாறு கண்டு கொண்டீர்கள்?" என்று என்னிடம் ஜெர்மனில் கேட்டார். அதற்கு நான் அவரிடம் "நீங்கள் நோட்டுக்களை ஜெர்மனில்தானே எண்ணினீர்கள்? ஒருவருக்கு எவ்வளவு மொழி தெரிந்திருந்தாலும் எண்களை மட்டும் தங்கள் தாய் மொழியில்தான் சாதாரணமாகக் குறிப்பிடுவார்கள்" என்றேன். அதை ஒத்துக் கொண்டார் அவர்.

நானும் அப்படித்தான். கூட்டல்களைத் தமிழில்தான் செய்வேன். நம் தமிழ் பசங்கள் தமிழைப் படிக்காது கூட்டல்களை ஆங்கிலத்தில் போடும்போது மிக வருத்தமாக உள்ளது. இவ்வாறு செய்யும் பலர் தமிழ் படிக்க இயலாதவர்கள். ஆங்கில அறிவும் அப்படி ஒன்றும் சொல்லிகொள்வது போல இல்லை. அரசனை நம்பிப் புருஷனை விட்டக் கதையாகத்தான் எனக்கு இது படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இனிமையான உருது மொழி

கார்க்கில் யுத்தம் வரும் வரைக்கும் பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண முடிந்தது. அவற்றில் செய்திகளையும் பார்ப்பதுண்டு. எல்லாமே இந்திய எதிர்ப்பு செய்திகளே, இருப்பினும் அவற்றையும் தெரிந்து கொள்வது ஒரு விதத்தில் உசிதமே. எதிராளி நம்மைப் பற்றி என்ன நினைக்கிறான் என்று தெரிந்து கொள்வதில் தவறேதும் இல்லை என்பது எனது கருத்து. ஆனால் அவற்றைப் பற்றி அல்ல இப்பதிவு.

நான் கூறநினைப்பது பாகிஸ்தான் நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் பற்றியே. அவற்றில் என்னைக் கவர்ந்தது அவற்றில் உருது மொழியின் உபயோகமே. ஹிந்தி உருது ஆகிய இரண்டு மொழிகளுமே ஒரே இலக்கண அடிப்படையைக் கொண்டவை. சொல்லாட்சிகளில் மட்டும் வேறுபாடுகள் தெரியும். ஹிந்தியில் வடமொழி வார்த்தைகளும் உருதுவில் அரேபிய மற்றும் பாரசீக வார்த்தைகளும் அதிகம் காணப்படும். அவ்வளவுதான்.

தனிப்பட்ட முறையில் எனக்கு உருது அதிகம் பிடிக்கும். காரணம் கூறத் தெரியவில்லை. அடிக்கடி உருது நிகழ்ச்சிகள் பார்த்ததில் தில்லியில் இருக்கும்போது நான் பேசிய ஹிந்தியில் உருது வார்த்தைகள் அதிகம் காணப்பட்டன. அப்படித்தான் ஒரு நாள் நான் என் கீழ் வேலை செய்த எலெக்ட்ரீஷியனிடம் "ஏதேனும் கையெழுத்து இடுவது போன்ற தேவை ஏற்பட்டால் எனக்கு தகவல் தெரிவிக்கவும்" என்பதை நான் "அகர் கோயீ தகல்லுஃப் ஹோ முஜே இத்திலாக் கர் தேனா" என்று கூற அவன் என்னை ஒரு முறை விழித்துப் பார்த்து விட்டு அவசரம் அவசரமாக பக்கத்தறைக்கு போய் வாய் விட்டு சிரித்து விட்டு அகன்றான். ஒரு மதறாசி உருது மொழியுடன் விளையாடுவது அவனுக்கு விந்தையாக இருந்திருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் அஞ்சுபவன் டோண்டு ராகவனாக இருக்க முடியாதே,

பாக்கிஸ்தானி சீரியல்களை பார்க்கும்போது அவை எனக்கு வட இந்திய சீரியல்களை விட அதிகம் பாந்தமாகப் பட்டன. காரணம், நம் தமிழ் சினிமாவில் முறைப் பெண், முறை மாப்பிள்ளை என்பது போல அந்த ஊர் நாடகங்களிலும் அவ்வாறே இருந்தது. தென்னிந்தியாவில் அத்தை மகளை திருமணம் முடிப்பது உரிமை என்பது போன்ற ரேஞ்சில் அந்த சீரியல்களிலும் அவ்வாறே வரும். ஆனால் சிறிது மாறுதல்கள் உண்டு. அதாவது இசுலாமிய வழக்கப்படி பெரியப்பா/சித்தப்பா மகளைக் கட்டலாம். அக்கா மகள் கூடவே கூடாது. அத்தை மகள் மற்றும் மாமன் மகள் விஷயம் நம் தென்னிந்தியர்களின் வழக்கமே அங்கும். ஆக இவை எல்லாவற்றையும் உரிமைக்காரன் அல்லது ஹக்தார் என்று பார்க்கும்போது பாகிஸ்தான் சீரியல்கள் எனக்கு அதிகப் பாந்தமாய் பட்டன. ஹிந்தி சீரியல்களிலோ அத்தை மகள், மாமன் மகள், அக்கா மகள், சித்தப்பா/பெரியப்பா மகள் ஆகிய எல்லா உறவுகளுமே சட்ட விரோதமானவையே. இந்த இடத்தில் நான் தவறு சரி என்ற பேச்சுக்கெல்லாம் போகவில்லை. ஒவ்வொரு முறைக்கும் ஏதாவது சமூகக் காரணங்கள் இருக்கும். விஞ்ஞான முறைப்படி பார்க்கும் வழக்கமும் வந்து விட்டது.

உருது மொழி சொல்விளையாட்டுக்கு மிகவும் ஏற்றது. கவிதைகளுக்கும் அவ்வாறே. உருது கவி சம்மேளனங்கள் காண்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சொல் விளையாட்டு என்றதும் எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. தன்னுடன் கூட வந்த பர்ஹார் என்பவரை கூட்டத்தில் தவறவிட்ட என் நண்பர் என்னைப் பார்த்தும் "யே பர்ஹார் கே பச்சே கோ கஹீன் தேக்கா? (இந்த பர்ஹார் பையனை எங்கேனும் பார்த்தாயா?) என்று என்னைக் கேட்க நான் என்னையறியாமலேயே "க்யோன், பர்ஹார் ஃபரார் ஹோ கயே?" (ஏன் கேக்கறீங்க பர்ஹார் கம்பி நீட்டி விட்டாரா?") என்று கேட்க நண்பர் தான் பர்ஹாரைத் தேடுவதையும் மறந்து வெடிச் சிரிப்பைத் சிதறவிட்டார்.

பாகிஸ்தானிய சீரியல் ஒன்றில் ஒரு அதிகாரி அரசு ஆணையை ஆங்கிலத்தில் டிக்டேட் செய்து விட்டு அதை உருது மொழியாக்கம் செய்து கோப்பிலிட்டப் பின்னால் ஆங்கிலக் கடிதத்தை மேலே அனுப்புமாறு கூறுகிறார். நம்மூர் நிகழ்ச்சிகளில் இதே இடத்தில் மொழிபெயர்ப்பு ஹிந்தியில் செய்யச் சொல்லுவார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

தூர்தர்ஷனில் "புனியாத்" என்ற சீரியல் வந்தது. இந்திய பாகிஸ்தான் பிரிவினைக் காலங்களில் இருந்து கதை ஆரம்பித்து, ஃப்ளாஷ் பேக்கில் 1915 லாஹூர் வந்தது. இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு தேசங்களிலுமே இந்த சீரியல் ரொம்ப விரும்பிப் பார்க்கப்பட்டது. அதிலும் லாஹூர்வாசிகள் அம்ருத்சர் தொலைக் காட்சி நிலையதிலிருந்து நேரடி ஒளிபரப்பே பெற முடியும். மற்ற பாகிஸ்தானியர் வி.சி.ஆரில் பதிவு செய்து கொண்டு பார்த்தனர். கதாநாயகன் ஹவேலி ராமும் லாஜோ அல்லது லாஜ்வந்தி என்று அழைக்கப்படும் அவன் மனைவியும் பிரிவினைக் காலத்தில் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து பிறகு மீண்டும் சேர்கின்றனர். அந்த குறிப்பிட்ட சீன் வந்த அன்று லாஹூர் மற்றும் அம்ருத்ஸர் ஆகிய இரு நகரங்களிலுமே தெருக்களில் ஈ காக்கை இல்லை. எல்லோரும் தத்தம் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர்.

அதே போல பல பாகிஸ்தானி சீரியல்களைக் கண்ட எனக்கும் ஒரு சராசரி பாகிஸ்தானியனுக்கும் இந்தியனுக்கும் இடையில் வேறுபாடு எதையும் என்னால் காண முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் நான் விரும்பும் உருது மொழியே காரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/12/2006

சென்னை ப்ளாக்கர் சந்திப்பு 12.02.2006

நியூசிலாந்திலிருந்து துளசி மற்றும் அவர் கணவர் கோபால் இருவரும் தற்சமயம் சென்னையில். அவர் சென்னை வருவதறிந்து என்னைத் தொடர்பு கொள்ளுமாறு மின்னஞ்சலிட்டிருந்தேன். அவரும் என்னை சென்னைக்கு வந்ததும் தொடர்பு கொண்டார். 3-ஆம் தேதி வெள்ளியன்று என் வீட்டிற்கு இருவரும் வந்திருந்தனர். நிறைய விஷயங்கள் பேசினோம்.

பிறகு அவர் மதுரை சென்று தருமி மற்றும் காக்கா பிரியனைக் கண்டு பேசியதைப் பற்றி தருமி அவர்களும் பதிவு போட்டுள்ளார். முதலிலேயே கூறுவேன். அதன் தலைப்பு INTERNATIONAL TAMIL BLOGGERS CONFERENCE 2006 (2) என்றுதான் இருக்க வேண்டும் ஏனெனில் INTERNATIONAL TAMIL BLOGGERS CONFERENCE 2006 (1) என் வீட்டிலேயே பிப்ரவரி 3 அன்றைக்கே நடந்து விட்டது, ஹி ஹி ஹி.

துளசி மற்றும் கோபால் என் வீட்டிற்கு வந்து சென்ற அன்றிரவே அடுத்த நாள் ஆப்பரேஷனுக்காக அட்மிட் ஆக வேண்டியதாயிற்று. அங்கு என்னை பிரமிப்பில் ஆழ்த்திய விஷயத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியாயிற்று.

இந்தப் பின்புலனில் நான் இன்று கலந்து கொண்ட சந்திப்பு மிக்க முக்கியமாயிற்று. முதலில் என் வீட்டம்மா போகவே கூடாது என்று கூறிவிட்டார். சர்ஜன் 10-ஆம் தேதி தையல் பிரிக்கப் போவதாகக் கூறியதால் நான் ஒருமாதிரி அவரைச் சரிக்கட்டியிருந்தேன். ஆனால் வெள்ளியன்று தையல் பிரிப்பதை திங்களன்று ஒத்திவைத்து விட்டார் கல்நெஞ்சுக்கார சர்ஜன். நானும் முதலில் சரி இந்த முறை போக முடியாது என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் ஒரு சான்ஸ் பார்க்கலாம் என்று நேற்று இரவு வரை அதைப் பற்றிப் பேசுவதையே ஒத்திப் போட்டேன். முகத்தை மட்டும் சோகமாக வைத்துக் கொண்டேன். நேற்று இரவு அவரே என்னிடம் இந்த சந்திப்பைப் பற்றிக் கேட்க, போக முடியாதுபோலிருக்கிறது என்று தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு கூற ஒன்றும் பேசாமல் அவ்விடத்தை விட்டு அகன்றார். இன்று காலை அவராகவே வந்து, என் தலையைக் கோதிக்கொண்டே "பரவாயில்லை, தேவையான முன்ஜாக்கிரதை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு காரில் போய் காரில் வாருங்கள்" என்று கூற அவர் முடிவுக்குக் கட்டுப்படுவதாக அடக்கத்துடன் கூறினேன்.

இப்போது ப்ளாக்கர் சந்திப்பு. அதற்கு வந்திருந்தது:
1. எஸ். கிச்சு
2. துளசி மற்றும் கோபால்
3. மதுமிதா
4. அருணா ஸ்ரீனிவாசன்
5. ஜோசஃப்
6. மரவண்டு கணேஷ்
7. கிருபாசங்கர்
8. சுவடுகள் சங்கர்
9. உருப்படாதது நாராயணன்
10. ச்டேஷன் பெஞ்ச் ராம்கி
11. ஐகாரஸ் பிரகாஷ்
12. அடியேன்.

அது சம்பந்தப்பட்ட போட்டோக்கள் இதோ. இவையும் துளசி அவர்கள் இன்று (10.03.2006) எனக்கு அனுப்பியவைதான். நன்றி துளசி அவர்களே.

ஐந்து மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய சந்திப்பு சரியான நேரத்தில் துவங்கியது. விறுவென்று எல்லோரும் வந்து சேர மீட்டிங்க் களைகட்டியது. பதிவுகளின் மூலமே அறிந்திருந்த மதுமிதா, ஸ்டேஷன் பெஞ்ச் ராம்கி, மரவண்டூ கணேஷ், ஜோசஃப் ஆகியோரை சந்திக்க முடிந்தது. ஜோசஃப் அவர்கள் தன்னுடைய "திரும்பிப் பார்க்கிறேன்" நிகழ்ச்சிகள் ரெகுலராக வந்துக் கொண்டிருக்கும் என்று உறுதி கூறினார். கிருபா நான் லைனக்ஸுக்கு மாறுவது நலம் எனப் பரிந்துரை செய்தார். அவரும், எஸ்.கேயும் நாராயணனும் பேசிக் கொண்ட பல தொழில்நுட்ப விஷயங்கள் என் அறிவுக்கு மீறியதால் அவற்றை வெறுமனே புரிந்தது போன்ற முகபாவத்தை வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தேன். மரவண்டு அவர்களுடன் எனக்கு வலைப்பதிவதில் ஏற்பட்ட சங்கடங்களைப் பற்றிப் பேச அவரும் அனுதாபத்துடன் கேட்டுக் கொண்டார்.

செவிக்குணவில்லாதபோழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதற்கேற்ப போண்டாவும் காப்பியும் அமர்க்களமான காம்பினேஷனாக அமைந்தன. மீட்டிங் ஆரம்பித்து சரியான இரண்டுமணி நேரத்தில் என் வீட்டம்மாவிடமிருந்து சீக்கிரம் வீடிற்கு வருமாறு செல் பேசியில் கூறப்பட, நல்ல பிள்ளையைப் போல் எல்லாரிடமும் விடை பெற்று நகர்ந்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/11/2006

கற்றனைத்து ஊறும் அறிவு

கிணற்று நீரை இறைக்க இறைக்கத்தான் அதில் தண்ணீர் சுரந்து கொண்டே வரும். அதே போல புதிதாகக் கற்றுக் கொண்டிருந்தால்தான் அறிவும் வளரும். இதுதான் இயற்கையின் நியதி. கல்விக்கு அளவே கிடையாது. நூறாண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்வின் கடைசி நாளன்று கூட ஏதாவது புதிதாகக் கற்க வேண்டியிருக்கும்.

சிலருக்கு கல்லூரியில் சேர்ந்து படித்து ஏதாவது பட்டம் பெற்றவுடனேயே தான் மிகுந்த அறிவு பெற்று விட்டதாக ஓர் எண்ணம் தோன்றி விடும். இது ரொம்ப ஆபத்தானது. உண்மையைக் கூறப்போனால் ஒருவன் பட்டப் படிப்பு முடித்ததும்தான் வாழ்க்கைக் கல்வியையே கற்க ஆரம்பிக்கிறான். அவ்வாறு அக்கல்வியை அவன் பெறத் தொடங்கியதும்தான் தனக்குத் தெரியாத இன்னும் பல விஷயங்கள் இருப்பதையே அவன் அறிகிறான்.

மேலும், ஒருவன் ஒரு விஷயத்தைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள ஆரம்பிக்கும்போதுதான் இத்தனை நாள் எத்தனை அறியாமையில் அவன் இருந்திருக்கிறான் என்பது அவனுக்கு புலப்படுகிறது. ஏட்டுக் கல்வி அவனுக்கு பல விதிகளைப் பற்றிச் போதிக்கிறது. ஆனால் வாழ்க்கைக் கல்வியிலோ அவன் பார்ப்பது பல விதி விலக்குகளை.

இதைத்தான் ஔவையார் கூறுகிறார், கற்றது கைம்மண்ணளவு, கல்லாததது உலகளவு என்று. இதை நிரூபிப்பது போலவே அவர் வாழ்விலும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு நாள் பட்டப் பகலில் நீண்ட தூரம் நடந்த களைப்பில் அவர் பசியுடன் ஒரு நாவல் மரத்தினடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். அப்பக்கம் சில ஆடுகளை ஓட்டிக் கொண்டு ஒரு 12 வயது பாலகன் வந்தான். ஔவையாரைப் பார்த்ததும் அவன் கேட்டான் "என்ன பாட்டி, மரத்திலேறி, பசிக்கு சில பழங்கள் போடட்டுமா" என்று. ஔவையும் சரி என்று சொல்ல, அவன் மரத்தில் ஏறிக் கொண்டே கேட்டான், சுட்டப் பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று. ஔவைக்கு அவன் சொன்னது புரியவில்லை, இருப்பினும் சமாளித்துக் கொண்டு கூறினார், "மகனே, நான் கிழவி, சுட்டப் பழம் சாப்பிடுவது கஷ்டம், சுடாத பழமே போடு" என்று. அவனும் சில பழுக்காத, மற்றும் பழுத்த நாவல் பழங்களைப் பறித்துப் போட்டான். ஔவை பழுத்தப் பழங்களாக தேடி எடுத்து, அவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணை வாயால் ஊதி விலக்கினார். அப்போது பையன் கேட்டான், "என்ன பாட்டி, பழம் சுடுகிறதா என்று. ஔவையார் அவனைப் பார்த்து, "என்னையே மடக்கிய நீ யார் அப்பா?" என்று கேட்க பாலகன் மறைந்து முருகப் பெருமான் தோன்றினார்.

அதே போல பொய்யாமொழிப் புலவர் என்ற பெயருடைய ஒருவர் "அம்மையப்பனைப் பாடும் வாயால் ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ" என்று கூறி, சிவன் பார்வதியைத் தவிர வேறு யாரையும், முக்கியமாக முருகனைப் பாட மறுத்துவிட்டார். இந்த அழகுக்கு எதுகை மோனையாக வந்ததென்ற சாக்கில் அவரை முட்டை என்றும் குறிப்பிட்டு விடுகிறார். விடுவாரா தமிழ்க் கடவுள். ஒரு நாள் அவர் முன்னால் ஒரு படிப்பறியாத இடையன் வேடத்தில் காட்சியளிக்கிறார். பேச்சு கொடுத்து பிறகு பேச்சுவாக்கில் தன்னைப் பற்றி ஒரு கவி பாடச் சொல்கிறார். புலவர் இடையனிடம் பெயரைக் கேட்க, அவர் "முட்டை" என்று கூற, இம்மாதிரி விசித்திரப் பெயரை வைத்தவரின் ரசனையை நொந்துக் கொண்டே (அவ்வாறு வைத்தது தானே என்பதைக் கூட உணராது) அவர் ஒரு பாடலை இயற்றுகிறார். அப்பாடலிலும் ஒரு பொருட்குற்றத்தைக் கண்டுபிடிக்கிறார் அந்த இடையன். தன் செருக்கை அடக்கிய அவ்விடையனை வியப்புடன் பார்க்க, முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். மன்னிக்கவும், பாடல் நினைவில்லை. ஆகவே அக்குறிப்பிட்டப் பொருட் குற்றம் என்னவென்றும் இப்போது கூற இயலவில்லை. ஏதோ சப்பாத்திக் கள்ளியை வைத்து அது கூறப்படும் என்று நினைவு. என்ன செய்வது, கற்றது கைம்மண்ணளவே. ஏதோ இதைப் படிக்கும் நண்பர்கள் யாராவது பாடலைக் கொடுத்து, பொருட் குற்றம் என்னவென்று கூறினால் நன்றாக இருக்கும்.

இதைப் பற்றித்தான் திருவள்ளுவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு.

மேலே நான் எழுதியவற்றில் பொய்யாமொழிப் புலவர் பற்றிய பத்தியைத் தவிர்த்து மீதியெல்லாம் என் இணைய நண்பர் ஒருவரின் குழந்தை தன் பள்ளியில் பேச்சுப் போட்டியில் பேசுவதற்காக நான் எழுதிக் கொடுத்தது. அந்த இணைய நண்பரும் நான் கூறியதை அழகாக மெருகேற்றி அவளைப் பேச வைத்தார். குழந்தையும் அழகாகவே அதை எடுத்துரைத்தாள். நானே அதை தொலைபேசியில் கேட்டேன். போட்டியின் விதிப்படி, 3-லிருந்து 5 நிமிடங்களுக்குள் பேச்சு இருந்திருக்க வேண்டும். அதை மனதில் நிறுத்தி, நண்பரும் வாக்கியங்களைச் செதுக்கி, குழந்தை எளிதாக உச்சரிக்குமாறு வார்த்தைகளைத் தேவையான இடங்களில் மாற்றினார். குழந்தையும் அற்புதமாகவே பேசியதைக் கேட்டு மகிழ்ந்தார். ஆனால் பரிசு? விதிகளுக்குப் புறம்பாக 10 நிமிடங்களுக்கு மேல் வளவன்று பேசிய மாணவன் ஒருவனுக்கே பரிசு. அது முன்பே தெரிந்திருந்தால் இன்னும் கூட எழுதியிருக்கலாம் என்றே தோன்றியது, என்ன செய்வது, கற்றது கைம்மண் அளவே.

அதே போல நான் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தபோது கண்டிப்பாக 6 வயது முடிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. (இப்போதும் அப்படித்தானோ?) ஆக, ஜூலைக்கு அப்புறம் பிறந்த குழந்தைகள் ஒரு கல்வியாண்டையே இழந்தனர். ஆனால் பல பள்ளிகளில் இவ்விதியைப் புறக்கணித்து குழந்தைகளை ஐந்து வயதிலேயே முதல் வகுப்பில் சேர்த்துக் கொண்டனர். பள்ளியிறுதித் தேர்வு முடிந்து சமீபத்தில் 1962-ஆம் வருடம் புகுமுக வகுப்பில் நான் புதுக்கல்லூரியில் சேர விண்ணப்பித்தப்போது, விண்ணப்பத் தாளில் இவ்வாறு வயது வரம்பைக் குறிப்பிட்டிருந்தனர்: "Those who were born after 15th January 1948 are not eligible to join P.U.C.". ஏப்ரல் 1946-ல் பிறந்த எனக்கு எப்படியிருந்திருக்கும்? அவ்விதியைப் புறக்கணித்து, சீக்கிரம் பள்ளியில் சேர்க்கப்பட்டவர்கள் புத்திசாலிகள் ஆனார்கள். விதியை மதித்த நாங்கள் சோப்ளாங்கிகள் ஆனோம். ஆக, இங்கு வாழ்க்கைக் கல்வி விதிவிலக்கை கற்றுக் கொடுத்தது! ஒரு வருட வித்தியாசம் என்பது என்ன இழப்பு என்பது 58 வயதில்தான் புரியும்.

பிறகு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். சில விதிகள் பைத்தியக்காரத்தனமானவையாகவே பட்டன. உதாரணத்துக்கு முழுநேர வேலையில் இருக்கும்போது பகுதி நேர வேலை எதையும் செய்யக் கூடாது என்ற விதியையே எடுத்துக் கொள்வோம். நான் இவ்விதியை முதலிலிருந்தே மதிக்கவில்லை. நான் பாட்டுக்கு என் மொழிபெயர்ப்பு வெலைகள் செய்து கொண்டே போனதில் என் career தலைகீழாக மாறி இப்போது ரிடையர்மெண்டுக்குப் பின்னாலும் வேலை செய்ய முடிகிறது. ஆக, நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் சில விதிகள் மீறப்படுவதற்காகவே உள்ளன. ஆக, கற்றனைத்து ஊறும் அறிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/09/2006

கைப்புள்ள கேட்ட கேள்விக்கு பதிலை உள்ளடக்கி

கைப்புள்ள அவர்கள் தன்னுடைய இப்பதிவில் ஒரு கேள்வி வைத்துள்ளார். அதாவது ராமு என்னும் மாணவன் கிருஷ்ணாவதாரக் கதையைக் கூறிய வகுப்பாசிரியரிடம் ""சார்! எட்டாவது குழந்தை தான் தன்னை கொல்ல போகுதுன்னு தெரிஞ்ச கம்சன் தேவகியையும்,வசுதேவரையும் என் சார் ஒரே ஜெயிலில வச்சான்?" என்று கேட்டதாக.

இந்த விஷயம் பற்றி நானும் ராமு வயசில் இருக்கும்போதே யோசித்து, பலரைக் கேட்டு பலரிடம் உதையும் வாங்கியிருக்கிறேன். அது பற்றிப் பிறகு.

இப்போது சீரியசாகப் பேசுவோமா? இந்த இடத்தில் திருமணத்தின் நோக்கம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். உயிரினங்களின் முக்கிய நோக்கம் இனப்பெருக்கமே. அதுவும் பகுத்தறிவு உள்ள மானிட இனத்திற்கு அந்த நோக்கம் சிறுவயதிலிருந்தே நினைவில் புகுத்தப்படுகிறது. ஆகவேதான் எல்லா மதங்களிலும் இது முக்கிய இடத்தைப் பெறுகிறது.

கம்சனுடைய அருமைத் தங்கை தேவகி. அவளையும் வசுதேவரையும் ரதத்தில் வைத்து கம்சனே ரத சாரதியாக வர ஒரு அசரீரி ராபணா என்று தேவகியின் எட்டாவது குழந்தையைப் பற்றி அவனிடம் போட்டுக் கொடுக்க, கதை ஆரம்பிக்கிறது.

முதலில் தேவகியைக் கொல்லத் துணிந்த கம்சனை அவனுடையத் தோழனும் தங்கையின் கணவனுமான வசுதேவனின் சொல்லைக் கேட்டு அவளைச் சிறையில் அடைக்கிறான் வசுதேவரையும் சேர்த்து. ஏன் சேர்த்து அடைத்தான் என்றுதானே கேள்வி?

கம்சன் இந்தத் தருணத்தில் மிகக் குழப்பத்தில் இருக்கிறான். அதுவரை சாதாரண ஆசாபாசங்கள் உள்ள ஷத்திரியனாக இருந்தவன் மனதில் அதுவரை உறங்கிக் கிடந்த அசுரத்தன்மை விழித்தெழுகிறது. ஆகவேதான் நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் அவன் மனதில் மாறி மாறி வருகின்றன. சிறையில் அடைப்பது என்று முடிவு செய்தாகி விட்டது. அருமைத் தங்கையைத் தனியாக அடைத்து வைக்கவும் மனதில்லை. ஏனெனில் தங்கை கன்னி கழிய வேண்டும். அக்கடமையை நிறைவேற்றாது தடுப்பவருக்கு பெரும் பாவம் சம்பவிக்கும் என்று உறுதியாக நம்பப்பட்டு வந்தது. ஆகவே தனியாக அடைத்து வைப்பதைப் பற்றி அவன் யோசிக்கவே இல்லையென்றுதான் கூறவேண்டும்.

வசுதேவராவது சும்மா இருந்திருக்கலாம் என்று யோசித்தாலும் அங்கும் இடிக்கிறது. ருதுவான மனைவியுடன் கூடுவது அவர் கடமை. அக்காலச் சட்டத் திட்டங்கள் இந்த விஷயத்திலும் மிக்க உறுதியானவையே.

கம்சன் இவ்வாறுகூட யோசித்திருக்கலாம். அதாவது எட்டாவது குழந்தைதானே, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று. நாம் சாதாரணமாக படிக்கும் பாரதக் கதைகளில் முதல் குழந்தை பிறந்ததுமே அதைக் கொன்று விடுகிறான் என்றும் இவ்வாறே முதல் 6 குழந்தைகள் கொல்லப்பட்டன என்றும் கூறப்படுகிறது. ஏழாவது குழந்தையாகிய பலராமர் தேவகியின் வயிற்றிக் கருவாக இருக்கும்போதே தெய்வ சக்தியால் வசுதேவரின் இன்னொரு மனைவி ரோஹிணியின் கருப்பைக்கு மாற்றப்பட்டு விடுகிறார். கம்சனிடம் ஏழாவது குழந்தை குறைப் பிரசவத்திலேயே இறந்து விடுகிறது என்று கூறப்பட்டு விடுகிறது. பிறகு எட்டாவது குழந்தையாக விஷ்ணு ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலனாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலாகிறார். அது பின்னால் வருவது.

அப்படியானால் முதல் 6 குழந்தைகளைக் கொல்லவேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி கேட்கலாம் - கேட்கலாம் என்ன நானே வாத்தியாரைக் கேட்டு அதற்காக, "ராகவையங்கார் பெஞ்சுமேல் ஏறும்" என்ற ஆணையை என்னுடைய இந்தப் பதிவில் வரும் அதே வாத்தியாரிடம் பெற்று பெஞ்சு மேல் ஏறி உதையும் வாங்க வேண்டியதாயிற்று. அது எதற்கு இப்போது. ஆனாலும் அக்கேள்வியும் முக்கியமே, அதற்கான விடை பின்னால் வேறொரு சந்தர்ப்பத்தில் (பெஞ்சு மேல் ஏறாமல், உதை வாங்காமல்) பெற்றேன். அதை இங்கே கூறுவேன்.

"யசோதா கிருஷ்ணா" எழுபதுகளில் ஓடிய, தமிழில் டப் செய்யப்பட்ட ஒரு தெலுங்குப் படம். அதில் ரங்காராவ் கம்சனாக நடித்தார். கம்சனிடம் தேவகியின் முதல் குழந்தையைக் கொண்டு வந்து வசுதேவர் கொடுக்கிறார். அக்குழந்தையைப் பார்த்த கம்சன் மனதில் மாமன் என்ற முறையில் பாசம் பொங்க, "முதல் குழந்தைதானே, இவன் என்னைக் கொல்லமாட்டான்" என்று தனக்குத்தானே கூறிக் கொண்டு அக்குழந்தையைக் கொல்லாமல் தன்னிடம் வைத்து வளர்க்கிறான். அதே போல முதல் ஆறு குழந்தைகளும் அவனிடம் வந்து சேருகின்றன. தேவகிக்கும் நிம்மதி. அப்போதுதான் கம்சனைப் பார்க்க வருகிறார் தேவரிஷி நாரதர். கம்சனிடம் அக்கறையாகப் பேசுவது போல செந்தில் குரலில் பேசுகிறார்:

"கம்சனே, எட்டாவது குழந்தை என்று எவ்வாறு எண்ணிக்கை செய்யவேண்டும் என்று ஒன்றும் இருக்கிறது அல்லவா, ஆக கடைசியிலிருந்து எட்டாவது என்றால் முதல் குழந்தைதானே அந்த எட்டாவது" என்று பேசி அவனைக் குழப்பிவிடுகிறார். இருப்பினும் தான் பாசத்துடன் வளர்த்த அந்த ஆறு குழந்தைகளையும் கொல்ல மனமில்லாது, "சரி அப்படியானால் முதல் குழந்தையை மட்டும் கொன்று, மற்றவர்களை விட்டுவிடுகிறேனே" என்று கவுண்டமணியின் குரலில் குழம்ப, "தங்கள் அண்ணனைக் கொன்ற உன்னை மீதி ஏழு பேர் எப்படி விட்டுவைப்பார்கள்?" என்று செந்தில் குரலில் நாரதர் கேட்கிறார். இப்போதுதான் கம்சன் அந்த ஆறுகுழந்தைகளையும் கொல்கிறான்.

அப்புறம்தான் அந்த ஆறுகுழந்தைகளும் அவன், தான் காலநேமி என்ற அரக்கனாக இருந்த முற்பிறவியில், அவனுடைய ஆறுபிள்ளைகள் என்றும் அவர்கள் தங்கள் தந்தை கையால் மரணமடைய வேண்டும் என்பது அவர்கள் பெற்ற சாபம் என்றும், ஆகவே இப்பிறவியில் அவன் தங்கை வயிற்றில் பிறந்தார்கள் என்பதை அறிந்து, "அடே கோபுரத்தலையா" என்ற ரேஞ்சில் கத்தி மேலும் நொந்து போகிறான்.

இதையெல்லாம் பார்க்கும்போது இக்கால மெகாதொடர்கள் எல்லாம் ஜுஜுபிதான். ஆனால் ஒன்று, கைப்புள்ள கேட்ட, கேட்காத என்று இரண்டு கேள்விகளுக்கு பதிலளித்தாகிவிட்டது என்றுதான் நான் நினைக்கிறேன். நீங்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/08/2006

முதல் வேலைஎன் இனிய நண்பர் ரவி பாலசுப்பிரமணியம் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை இங்கு பதிவிட அன்புடன் அனுமதி அளித்துள்ளார். அவருக்கு என் நன்றி.

ரவி அவர்கள் அனுப்பிய சில மின்னஞ்சல்கள் இங்கு ஏற்கனவே பதிவாக்கப்பட்டுள்ளன.
துணைவியின் பிரிவு
மென்பொருள் நிபுணராக விஜயகாந்த்
Palindrome (இரு வழி ஒக்குஞ்சொல்)

படத்தை பதிவில் ஏற்றிவிட்டு ப்ரெவ்யூ பார்த்தால் பக்கத்தில் உள்ள எழுத்துக்கள் பார்க்க முடியாத அளவில் சிறிதாய் உள்ளன. ஆகவே அவற்றை நான் கீழே தட்டச்சு செய்கிறேன்.

முதல் வேலை
என்ன இது வேலை,
எனக்கு பிடித்தவாறு
உடையணிய உரிமைதர மறுக்கும் வேலை!!!

என் தாய்மொழி,
என் நாவில்
எட்டிப்பார்க்கக்கூட தடைபோடும் வேலை!!!

போலியான புன்னகையொன்றை,
நிரந்தரமாய் என் முகத்தில்
ஒட்டிவிட்ட வேலை!!!

சரித்திரம் படைக்கவேண்டும்!
புரட்சியாய் புறப்படவேண்டும்!
தேசத்தை நிமிர்த்தவேண்டும்!
எனும் கனவையெல்லாம்
கம்ப்யூட்டரில் கட்டிப்போட்ட
வேலை!!!

காந்தி விரட்டிய
வெள்ளையன் இரவில் நித்திரை காண,
என் நித்திரை கலைக்கும் வேலை!

குவியலாய் இறுகிப்போன
இந்த வெறுப்பையெல்லாம் சுக்குநூறாய் சிதறடித்தது,
"இரு துளி" கண்ணீர்!

"ரொம்ப சந்தோசமா இருக்குடா"
முதல் மாச சம்பளத்தை நீட்ட,
தாயின் கண்களில் தோன்றிய
ஒரு துளி!!!

"ரொம்ப கஷ்டமா இருக்குடா"
வெகுநாளாய் வேலை தேடும்,
நண்பனின் கண்களில் தோன்றிய
மற்றொரு துளி!!!

- கெ. கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இட்டக் கவிதை இது

படிக்கப் படிக்க என் மனக்கஷ்டம் அதிகரித்தது.கால் செண்டர்களில் வேலை செய்வது ரொம்பக் கடினமே. அதிலும் திமிர்பிடித்த பல வெள்ளையர்கள் நம்மவர்களை தொலைபேசியில் தாறுமாறாக சாடுவதுபற்றி பல செய்திகள் வேறு வந்து விட்டன.

ஆனால் உடைவிஷயத்தில் ஏன் இந்தக் கட்டுப்பாடு வேண்டும் என்பதுதான் புரியவில்லை. அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஆங்கிலம் பேசவேண்டியது வேலையின் கட்டாயம். மற்றப்படி லைட்டாக பேன்ட், இன் பண்ணாத சொக்காய், டை இல்லை என்று ஏன் இருக்கக் கூடாது? வெய்யில் மிகுந்த நம்நாட்டில் சூட், கோட் மற்றும் டை கட்டி வலம் வருபவரை பார்க்கும்போதே எனக்கு வியர்வை வருகிறதே! மேலும் போனில்தானே ஆங்கிலம் பேசக்கூடாது, போன் இல்லாதபோது பக்கத்து சீட்காரனிடம் கடைசியாக போனில் வந்த வெள்ளைக்கார சாவுகிராக்கியை திட்டி நம் "சென்னைத் தமிழில்" நாம் பேசிக் கொண்டாலே பாதி டென்ஷன் குறையுமே! ஆனால் நமக்குள்ளேயே ஆங்கிலம் பேசுவதைத்தானே நாம் கௌரவம் என்று நினைக்கிறோம்?

இப்போது இப்பதிவை இடும் நான் வெறும் எட்டுமுழவேட்டியணிந்து, பனியன்கூடப் போடாமல் ஃப்ரீயாக இருக்கிறேன் என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/07/2006

புதிர்கள் பத்து - 2

வழக்கம்போலவே சில நாட்களுக்குள் விடை கிடைக்காத வினாக்கள் கேரி ஓவர் செய்யப்பட்டு அடுத்த கேள்விகள் பட்டியலில் சேர்க்கப்படும்.

1. எம்.ஜி. ஆர். அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் சிவாஜி அவர்களுக்குத் தெரியும். என்ன அது? இதில் பல விடைகள் வந்து குழப்பம் ஆனதால் இங்கொரு க்ளூ. இருவருக்கும் ஒரே விஷயம்தான் நடந்தது.

2. இமயமலை ஏறுவதற்காகச் அந்த மலையடிவாரத்துக்கு சென்றவன் காலை உணவுக்கு ஆம்லெட் எடுத்துக் கொண்டதால் மரணமடைந்தான். ஏன்? ஆம்லட்டை அவன் முகாமிலிருந்தே கொண்டு வந்ததால் அவன் அடுப்பு எதையும் மூட்டவில்லை என்பது நான் கொடுக்கும் ஒரு க்ளூ.

3. பாலைவனத்தில் வழி தவறிய ஒருவன் ஒரு சப்பாத்திக் கள்ளி அருகே வருகிறான். அதில் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி குத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை எடுத்துப் படித்த அவன் தன் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான்.

4. ஒரு பார்வையற்றவன் ஓர் ஆஸ்பத்திரி ரிசப்ஷனில் யாருக்காகவோ காத்திருக்கிறான். அவன் பக்கத்து நாற்காலியில் அவன் முன்பின் அறியாத இன்னொருவன் கையில் கூடையுடன் அமர்கிறான். அவனிடம் பேச்சுக் கொடுக்காமலேயே அவன் கூடையில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து, அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்கிறான். என்ன நடக்கிறது இங்கே?

5. டோண்டு ராகவன் ஸ்கூட்டரை ஓட்டிச் செல்லும்போது ஒரு திருப்பத்தில் எப்போதும் விபத்துத்தான். என்ன பிரச்சினை? முத்து (தமிழினி) அவர்களே தயவு செய்து நீங்கள் இதற்கு விடை அளிக்காதீர்கள்

6. திவான் பகதூர் ஆவுடையப்பர் ஒரு காரியம் செய்தார். அதிலிருந்து அவர் மேல் பெருமதிப்பு வைத்திருந்த சென்னை ராஜதானி கவர்னர் அவருடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். ஏன்? (1930-ல் இந்த நிகழ்ச்சி நடந்தது, ஆனால் 2006-லும் இது நடக்கக் கூடும்)

7. தான் பலான தேதி பலான கிழமை பலான மணிக்கு இறக்கப் போவதாக அறிவித்தார் ஒருவர். கீழே கொடுக்கப்பட்டுள்ள நால்வரில் அவர் யாராக இருக்கும்?
அ: கபீர்தாஸ் ஆ: சுவாமி விவேகானந்தர் இ: ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஈ: ராமமூர்த்தி.
விளக்கமும் கூற வேண்டும்.

8. ஒரு பணக்காரரின் பிள்ளையின் 10-ஆம் பிறந்த நாள் விழா 1988-ல் நடக்கிறது ஆனால் அப்பிள்ளையின் 20-ஆம் பிறந்த நாள் விழாவோ 1978-ல் நடக்கிறது. பிள்ளை பிறந்தது என்னவோ கி.பி.யில்தான்

9. ஒரு சித்திரச் சாலையில் சித்திரங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சைத்திரிகரின் பல சித்திரங்களை அடுக்க அவருக்கு ஒரே இடம்தான் கொடுக்கப்பட்டது. 2 மணியளவில் அவர் பார்வைக்கு மாட்டிய சித்திரத்தின் எண் 300, 9 மணிக்கு பார்வைக்கு வைத்த சித்திரத்தின் எண் 90 என்றால் 5 மணிக்கு அவர் பார்வைக்கு பொருத்திய சித்திரத்தின் எண் என்னவாக இருக்கும், ஏன்?

10. டோண்டு ராகவனும் பாராவும் ஒரு குறிப்பிட்ட 5 செட் டென்னிஸ் போட்டியில் ஆடினர். இருவருமே 3 செட்களில் வெற்றி பெற்றனர். என்ன கூத்து இது? வெற்றி பெற்றது யார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/06/2006

42 ஆண்டுகளாக மரணத்தின் அருகாமையில்

சமீபத்தில் 1964-ல் கிண்டி பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது வழமையாக நடக்கும் மருத்துவப் பரிசோதனையில் எனக்கு ஹைட்ரோசில் இருப்பதாக மருத்துவர் கூறினார். விறைகளில் நீர் கோத்துக் கொள்ளும் இந்த நிலை ஏன் வருகிறது என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. நானும் இன்று நாளை என்று சிகிச்சையைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்திருக்கிறேன்.

என் வீட்டம்மா பிடிவாதமாக ஒரு சர்ஜனிடம் போன புதன் அன்று அழைத்துச் சென்றார். அவர் ஒரு பார்வையிலேயே அறுவை சிகிச்சைதான் எனக் கூறிவிட்டார். வியாழனன்று அறுவை சிகிச்சைக்கு முந்தையச் சோதனைகள் எல்லாம் முடிந்து சனிக்கிழமை அன்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக வெள்ளி இரவு பத்து மணி வாக்கில் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன்.

அடுத்த நாள் அறுவை சிகிச்சை. முதுகுத் தண்டில் ஊசி போட்டு இடுப்புக்குக் கீழே உணர்ச்சியற்று போகச் செய்வதால் மொத்த மயக்க மருந்து கொடுக்கத் தேவையில்லை. அறுவை சிகிச்சை முழுவதும் நான் என்ன நடக்கிறது என்று கண்டுணர முடிந்தது. ஆபரேஷனுக்காக முதல் ஸ்டெப் எடுக்கும் போது சர்ஜன் மற்றும் மயக்க மருந்து நிபுணர் இருவர் முகத்திலும் அதிர்ச்சி கலந்தத் திகைப்பு. என்ன ஆயிற்று என்று கேட்க பெருங்குடலின் ஒரு பகுதி விறைக்குள் இறங்கியுள்ளது என்றும் இதற்குப் பெயர் ஹெர்னியா என்றும் கூற, திகைப்பு என்னுள்ளும் பரவியது. விரைக்குள் தேவையற்றத் திரவம் எதுவும் இல்லை என்று அறுவை சிகிச்சையைத் தொடர்ந்தனர். சரியாக ஒன்றரை மணி நேரம் ஆயிற்று, அறுவை சிகிச்சை முடிய. இந்த 42 ஆண்டு காலத்தில் எப்போது வேண்டுமானாலும் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்பதை உணர்ந்து எனக்குள் கடவுளின் கருணை குறித்து வியப்பே ஏற்பட்டது. என்னளவில் நான் எனக்குள்ளேயே "என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனே" என்றுத் திரும்பத் திரும்பக் கூறினேன். அவன் அருள் நிரம்பிய முகம் என்னுள்ளே மையம் கொண்டது.

பெருங்குடலை திரும்ப அது இருக்க வேண்டிய இடத்துக்குத் தள்ளி தையல் எல்லாம் போட்டு ஆபரேஷனை முடித்தனர். அப்போது கூட என்னிடம் அவ்வளவு எதிர்வினை இல்லை. அடுத்த நாளிலிருந்துதான் ரியேக்ஷன் துவங்கியது.

தன்னுடைய 70வது பிறந்த நாளன்று சுஜாதா அவர்கள் தன்னுடைய "கற்றதும் பெற்றதும்" தொடரில் எழுதியது இப்போதுதான் 100% புரிகிறது.

சர்ஜனுக்கு என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/03/2006

மலர் மன்னனுக்கு நன்றி

மின்னஞ்சல்கள் உபயோகமாகவே உள்ளன. எரிதங்கள் என்பது கூட அதனுடைய தவறான உபயோகத்தால் வருவதே. ஆனால் பெரும்பாலான நேரங்களில் உபயோகமானத் தகவல்களை அவை தருகின்றன. பழம்பெரும் எழுத்தாளர் மலர் மன்னன் அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்று இங்கே உங்கள் முன் பதிவாக வருகிறது. அவருக்கு என் நன்றி. இதை என் ஆங்கிலப் பதிவிலும் போட்டுள்ளேன். எங்கள் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலிலும் இது பற்றி பதிவு போட்டுள்ளேன்.

நல்ல உடல் நலன் - ஸ்ட்ரோக்கை அடையாளம் காணுங்கள்!

நீங்கள் தனிப்பட்ட முறையில் ஆரோக்கியமானவராகவே இருக்கலாம். இருந்தாலும் கீழே கூறப்பட்டதை கவனமாகப் படிக்கவும். இதன் மூலம் நீங்கள் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். அந்த உயிர் உங்கள் உறவினருடையதாகவோ, நண்பருடையதாகவோ அல்லது முன்பின் தெரியாதவருடையதாகவோ கூட இருக்கலாம்.

சென்னை கடற்கரையோரம் உள்ள ஒரு உல்லாச மையத்தில் திறந்த வெளியில் ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லக்ஷ்மி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நடக்கும் போது திடீரென கால் தவறி கீழே விழுந்தார். விழுந்ததும் உடனேயே வேகமாக எழுந்து விட்டார். தனக்கு ஒன்றும் இல்லை என்றும் திடீரென ஒரு கல் தடுக்கி கீழே விழுந்ததாகக் கூறி விட்டார். பிறகு தொடர்ந்து நடந்த விருந்திலும் அவர் கலந்து கொண்டார். ஆனாலும் அவர் ஒரு வித சங்கடத்தில் இருந்ததாகத் தோன்றியது.

அன்று இரவு அவர் கணவரிடமிருந்து நண்பர்களுக்கு தொலைபேசி வந்தது. அவர் மனைவி லட்சுமி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மாலை 6 மணியளவில் காலம் சென்றார். அவருக்கு வந்தது ஒரு ஸ்ட்ரோக், ஆனால் அந்தத் தருணத்தில் யாருக்கும் அது தெரியவில்லை. அது தெரிந்து, சில முன்ஜாக்கிரதை ந்டவடிக்கை எடுத்திருந்தால் அவர் இன்றும் உயிருடன் இருந்திருக்கலாம்.

கீழே குறிப்பிட்டுள்ளதைப் படிக்க உங்களுக்கு ஒரு நிமிடம் ஆகலாம், அவ்வளவுதான்:

ஸ்ட்ரோக் ஏற்பட்டு 3 மணி நேரத்திற்குள் தன்னிடம் நோயாளியைக் கொண்டு வந்தால் தன்னால் அவரை முழுக்கவே குணமாக்க முடியும் என்று ஒரு நரம்பியல் நிபுணர் கூறுகிறார். ஆம், முழுமையாகவே. இதில் செய்ய வேண்டியதெல்லாம் ஸ்ட்ரோக்கை அடையாளம் கண்டு, ஊர்ஜிதப்படுத்தி மூன்று மணி நேரத்திற்குள் ஒரு நரம்பியல் நிபுணரிடம் கொண்டு செல்வதேயாகும். இது கஷ்டமான காரியமே, இருப்பினும் செய்யப்பட வேண்டிய காரியம். அதிலும் முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவ மனையை அடைவது முக்கியம். "தங்க நேரம்" (Golden Hour) என்று குறிப்பிடப்படும் இதை பற்றி மருத்துவர்களுக்கும் மற்ற அவசர நிலை மருத்துவப் பணியாளர்களுக்கும் நன்றாகவே தெரியும்!

ஸ்ட்ரோக்கை அடையாளம் காண்பது

நீங்கள் இதற்கான "3" சோதனைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். மேலே படியுங்கள், அறிந்து கொள்ளுங்கள்!

ஸ்ட்ரோக்குகளை அடையாளம் காண்பது கடினமே, இருப்பினும் மருத்துவர்கள் கீழ்க்கண்ட சிறு சோதனைகளைப் பரிந்துரைக்கின்றனர்:

1. சம்பந்தப்பட்ட நபரை புன்னகை புரிய சொல்லவும்.

2. அவரை இரு கைகளையும் உயர்த்தச் சொல்லவும்.

3. அவரை ஒரு சாதாரண வாக்கியத்தைத் திருப்பிச் சொல்லச் சொல்லவும். (எடுத்துக்காட்டாக, "இன்னிக்கு வெய்யில் ரொம்பத்தான் அதிகம்)

மேலே கூறியதில் ஏதேனும் ஒன்றைச் செய்வதில் பிரச்சினை என்றாலும் அவசர மருத்துவ சேவையை தொலைபேசியில் கூப்பிட்டு நீங்கள் கண்டறிந்ததை விவரிக்கவும்.

மருத்துவத் துறையில் இல்லாதவர்களும் இம்மாதிரி ஸ்ட்ரோக்கின் அறிகுறிகளை கண்டு கொள்ள முடியும் என்றான பிறகு ஆய்வாளர்கள் இந்த மூன்று சோதனைகளை எல்லோருமே கற்றுக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகின்றனர். இதனால் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு மூளைக்கு பாதிப்பு உண்டாவதிலிருந்து தடுக்க இயலும்.

இந்தப் பதிவை படிப்பவர்கள் தங்கள் நண்பர்கள் பத்து பேருக்காவது அதை மின்னஞ்சல் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/02/2006

சினிமா சம்பந்தமாக சில விஷயங்கள்

விகடனில் அறுபதுகளில் மூன்று வகையான விமரிசனங்கள் வரும். சற்றுப் படித்த மக்கள் பார்க்கும், நகரங்களில் மட்டும் நன்றாக ஓடக் கூடிய நாசூக்கானத் திரைப் படங்களுக்கு சேகர் - சந்தர் விமரிசனம் செய்வர். குடும்பப் படங்களுக்கு ஒரு கணவன் மனைவி ஜோடி (பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை, ஒரு வேளை ஷண்முகம் பிள்ளை மற்றும் மீனாட்சி அம்மாள்?), கிராமீய மற்றும் பி, சி சென்டர்களில் ஓடக்கூடியப் படங்களுக்கு முனுசாமி மற்றும் மாணிக்கம் என்று விமரிசனம் செய்வார்கள்.

குமுதம் அதுபாட்டுக்குத் தூள் கிளப்பும்.

சில உதாரணங்களைப் பார்ப்போம்:

படம்: பாதகாணிக்கை (1961)
விமரிசனம்: முனுசாமி மற்றும் மாணிக்கம்
முனுசாமி:
"வீடு வரை உறவு,
வீதி வரை மனைவி,
காடு வரை பிள்ளை,
கடைசி வரை யாரோ?"
மாணிக்கம்:
"பாதி வரை பழசு,
பாதிக்கு மேல் புதுசு,
கடைசி வரை இருந்து,
பார்ப்பதுதான் யாரோ?"
அப்பாடலின் மெட்டிலேயே விமரிசனத்தைப் படிப்பது உத்தமம்.

படம்: தாயின் கருணை (விமரிசனம் குமுதம்): (1966)
படத்திலிருந்து இரண்டு ஸ்டில்கள்.
முதல் ஸ்டில்லில் முத்துராமன் அப்படத்தில் வரும் அம்மா நடிகையிடம் ஏதோ கெஞ்சுவது போன்ற முகபாவத்துடன் இருப்பார். இரண்டாம் ஸ்டில்லில் அப்பா நடிகர் ஒருவர் முத்துராமனின் கழுத்தில் துண்டு போட்டு இறுக்குவார்.

முதல் ஸ்டில்லின் கீழ் எழுதப்பட்டது: "தாயின் கருணை எப்படியிருந்தது என்று சொல்ல மாட்டாயா?"
இரண்டாம் படத்தின் கீழ்: "அந்தப் பேச்சை எடுத்தாலே கெட்ட கோபம் வரும் எனக்கு"

படம்:மணிமகுடம். விமரிசனம் குமுதத்தில் (1967)
இதற்காகப் படத்திலிருந்து மூன்று ஸ்டில்கள் உபயோகிக்கப்பட்டன.

முதல் படத்தில் விஜயகுமாரி தன் இடுப்பில் இரன்டு கைகளையும் வைத்துக் கொண்டு அதட்டும் முகபாவத்தில் இருப்பார், இரண்டாம் படத்தில் எஸ்.எஸ்.ஆர். ஜெயலலிதாவின் இடையை சுற்றி அணைத்துக் கொண்டு எதையோ காட்டுவது போல இன்னொரு கையை நீட்டியிருப்பார். மூன்றாம் படத்தில் நம்பியார் அதிர்ச்சியடைந்த முகபாவத்தில் காணப்படுவார்.

முதல் பட வசனம்: "ஓஹோ, நீர்தான் மணிமகுடத்தைத் திருடியவரோ?"
இரண்டாம் பட வசனம்: நான் இல்லை, அவர்தான்."
மூன்றாம் பட வசனம்: "நானா?" (நம்பியாரை மிமிக் செய்யும் விவேக் குரலில்)

ஸ்ரீவள்ளி படம் என்று நினைக்கிறேன். சிவாஜி, பத்மினி நடித்தது. குமுதம் விமரிசனம் ஒரு பக்கத்தில் வந்தது. அது முழுக்க முருகா முருகா முருகா என்றே எழுதப்பட்டிருந்தது. அதே குமுதத்தில்தான் என்று நினைவு. "தாய் மகளுக்குக் கட்டியத் தாலி" படத்துக்கு விமரிசனம் ஒரே சொல்லில் ஸ்டில் படத்துடன் வந்தது. "வெட்கக்கேடு".

மருத நாட்டு வீரனுக்கு விகடனில் வந்த முனுசாமி - மாணிக்கம் விமரிசனத்தில் மாணிக்கம் தான் அப்படம் பார்த்த போது முதலில் வந்த விளம்பரங்களிலிருந்து ஆரம்பித்து, காண்பிக்கப்பட்ட ஆங்கிலப் படத்தின் ட்ரைலர் பற்றிக் கூறி, பீஹாரில் வந்த வெள்ளம் பற்றி வந்த செய்திப் படத்தை உருக்கமாக விவரித்து விட்டு, "கடைசியில் எம்.என்.வீரனையும் காண்பித்தார்கள்" என்று கூறுவார். முனுசாமி "ஓகோ அப்படியா" என்று கேட்க விமரிசனம் அத்துடன் முடிவு பெறும்.

அதே போல அமுதவல்லி (1959) என்னும் படத்தைப் பற்றிய விமரிசனத்தில் கல்கியில் கடைசியாக கூறப்பட்டது; நினைவிலிருந்து தருகிறேன். "படத்தில் சந்திரகாந்த ரசம் அருந்தினால் பழைய ஞாபகங்கள் மறையும் எனக் கூறுகிறார்கள். அது கிடைத்தால் நாமும் இப்படத்தை மறக்க தோதாக இருக்கும்".

அதைவிட ஸ்வாரஸ்யமான விஷயம் பிற மொழி படங்களுக்கு தமிழில் போடும் தலைப்புகள். உண்மையாகவே வந்த தலைப்புகளைப் பார்க்கும் முன்னால் இதைக் கிண்டல் செய்து குமுதம் ப்ரபோஸ் செய்த தலைப்புகள் அடைப்புக் குறிகளுக்குள் ஒரிஜினல் டைட்டிலுடன்:

யாரோ அங்கே எட்டிப் பார்க்கிறார் (யாதோங்கீ பாராத்)
குப்தனின் ஞானம் (குப்த்க்யான்)
கோரமான காகம் (கோரா காகஜ்)
இஞ்சி (ஜஞ்சீர்)

இப்போது உண்மையாகவே வந்த தலைப்புகள்:
ஆறடி ஆழத்தில் அநியாயம் (தோ கஜ் ஜமீன் கே நீச்சே)
வந்தேன் உதை மாஸ்டர் (ஸ்பை ஸ்மாஷர்)
ஆயிரத்தில் ஒருவன் (க்ரிம்ஸன் பைரேட். இதில் பர்ட் லங்காஸ்டர் ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். போல கப்பல் தளத்தில் இடுப்பில் கைகளை வைத்து போஸ் கொடுத்ததால் வந்தது)
அன்பே வா (கம் செப்டம்பர் கதையிலிருந்து தழுவப்பட்டதால். தமிழக ராக் ஹட்ஸன் என்று எம்.ஜி.ஆரையும் ஹாலிவுட் எம்.ஜி.ஆர். என்று ராக ஹட்ஸனைக் குறிப்பிட்டதும் உண்டு. ஆனால் ஓரினச் சேர்க்கை காரணமாய் ராக் ஹட்ஸனுக்கு எய்ட்ஸ் வந்து அவர் இறந்ததும் இம்மாதிரி கூறுவது வேகமாக புழக்கத்திலிருந்து மறைந்தது.)
தம்புராட்டியின் முதலிரவு (தம்புராட்டி)
மாமனாரின் இன்ப வெறி (ஒரிஜினல் டைட்டில் தெரியவில்லை, யாராவது தெரிந்தால் கூறவும்)

இப்போதும் அம்மாதிரி தமிழாக்கத் தலைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் படங்கள் பார்க்கும் ஆசை குறைந்ததால் எனக்கு இவற்றை பற்றி அறியும் ஆசையும் போய் விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/01/2006

புதிர்கள் பத்து

சில நாட்களுக்குள் விடை கிடைக்காத வினாக்கள் கேரி ஓவர் செய்யப்பட்டு அடுத்த கேள்விகள் பட்டியலில் சேர்க்கப்படும்.

1. வேலு நாயக்கர் ரொம்ப எடை போட்டுவிட்டதாக மருத்துவர் (doctor) கூறிவிட்டார். தினமும் ஜாக்கிங் போய்விட்டு தினம் தினம் எடையை செக் செய்து கொள்ளுமாறு கூறி விட்டார். அவரும் மெனக்கெட்டு ஜாகிங்கிற்கான உடைகள், காலணிகள் எல்லாம் வாங்கி பார்த்திப ஆண்டு மார்கழி மாதம் கூடாரைவல்லி நாளன்று ஒரு நல்ல பிரும்ம முகூர்த்தத்தில் ஜாகிங்கை ஆரம்பித்து விட்டார். முதல் நாள் எடை பார்த்த போது அவர் எடை 1 கிலோ குறைந்திருந்தது. இருப்பினும் அவர் மேற்கொண்டு ஜாக்கிங் செய்வதை விட்டு விட்டார். ஏன்?

2. எம்.ஜி. ஆர். அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் சிவாஜி அவர்களுக்குத் தெரியும். என்ன அது?

3. ஒரு மேஜை மேல் ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தை டிஸ்டர்ப் செய்யாமல், தொடாமல் அதன் கீழ் ஒரு பேப்பரை வைக்க முடியுமா?

4. ஒரு 4 அடி நீளமான குறுகிய குழிக்குள் குட்டிப் பையன் விளையாடிய பந்து விழுந்து விட்டது. குழியைப் பெரிதாக்கவும் வழியில்லை. துரோணாச்சாரியாரும் பக்கத்தில் இல்லை. பந்தை பின்னே எப்படித்தான் எடுப்பது?

5. இமயமலை ஏறுவதற்காகச் அந்த மலையடிவாரத்துக்கு சென்றவன் காலை உணவுக்கு ஆம்லெட் எடுத்துக் கொண்டதால் மரணமடைந்தான். ஏன்?

6. பாலைவனத்தில் வழி தவறிய ஒருவன் ஒரு சப்பாத்திக் கள்ளி அருகே வருகிறான். அதில் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி குத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை எடுத்துப் படித்த அவன் தன் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான்.

7. ஒரு பார்வையற்றவன் ஓர் அறையில் யாருக்காகவோ காத்திருக்கிறான். அவன் பக்கத்து நாற்காலியில் அவன் முன்பின் பார்த்திராத இன்னொருவன் கையில் கூடையுடன் அமர்கிறான். அவனிடம் பேச்சுக் கொடுக்காமலேயே அவன் கூடையில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து, அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்கிறான். என்ன நடக்கிறது இங்கே?

8. டோண்டு ராகவன் ஸ்கூட்டரை ஓட்டிச் செல்லும்போது ஒரு திருப்பத்தில் எப்போதும் விபத்துத்தான். என்ன பிரச்சினை?

9. திவான் பகதூர் ஆவுடையப்பர் ஒரு காரியம் செய்தார். அதிலிருந்து அவர் மேல் பெருமதிப்பு வைத்திருந்த சென்னை ராஜதானி கவர்னர் அவருடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். ஏன்? (1930-ல் இந்த நிகழ்ச்சி நடந்தது)

10. தான் பலான தேதி பலான கிழமை பலான மணிக்கு இறக்கப் போவதாக அறிவித்தார் ஒருவர். கீழே கொடுக்கப்பட்டுள்ள நால்வரில் அவர் யாராக இருக்கும்?
அ: கபீர்தாஸ் ஆ: சுவாமி விவேகானந்தர் இ: ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஈ: ராமமூர்த்தி

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது