1/31/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 24 & 25)

எபிசோட் - 24 (27.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
(முதல் சுட்டி சரியாக இல்லை).
கிரகணத்தின்போது குழந்தை பிறப்பதை தவிர்க்க சிசேரியன் செய்து கொள்வதா வேண்டாமா என குழம்பும் உமா வழக்கம்போல அசோக்குக்கு போன் போட்டு ஆலோசனை கேட்க, அவன் No operation, no caesarian" என்று தெளிவுடன் கூறிவிடுகிறான். கடவுள் அனுக்கிரகத்தால் குழந்தை காலை ஐந்தரை மணிக்கு முன்போ அல்லது ஏழரை மணிக்கு அப்புறமோதான் பிறக்கும் என அவன் கூறியதை உமாவும் அவள் கணவனும் அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். முன்ஜாக்கிரதையாக முந்தைய நாள் இரவே ஆஸ்பத்திரியில் அவளை சேர்த்து விட்டு இரவு முழுவதும் அவளது பெற்றோர்களும், மாமனார், மாமியார் மற்றும் கணவன் விழித்திருக்கின்றனர். காலை ஏழு மணிக்கு வலி தொடங்கி ஏழு நாற்பதுக்கு, கிரகணம் விட்டு பத்து நிமிடம் கழித்துத்தான் குழந்தை பிறக்கிறது. எல்லோரும் மகிழ்கின்றனர்.

அசோக் ஒரு வீட்டில் பவதி பிக்ஷாந்தேஹி என பிட்சை கேட்க, அப்பக்கம் காரில் வரும் ஜட்ஜ் ஜகன்னாதனின் மகள் பிரியா மற்றும் அவளது சீனியர் அட்வகேட் அனந்தராமன் ஆகியோர் அதை பார்க்கின்றனர். அனந்தராமன் நாதன் கம்பெனிகளுக்கு லீகல் அட்வைசர். பிரியா அசோக்கிடம் அவன் செய்வது உஞ்ச விருத்தித்தானே என கேட்க, இல்லை தான் எடுப்பது பிட்சை என அவன் அவளை திருத்துகிறான்.

சோவின் நண்பர் அவரிடம் இது பற்றி கேட்க அவர் விளக்குகிறார். பிட்சை என்பது பிரம்மச்சாரிக்கு நியமிக்கப்பட்டது. உஞ்சவிருத்தி என்பது சம்சாரம் செய்யும் பிராமணர்கள் செய்ய வேண்டியது. அதாவது வயல்களில் நெர்ல் போர் அடிக்கும்போது கீழே சிந்தும் நெல்மணிகளை சேகரிப்பது, அல்லது நெல் மண்டிகளில் கீழே கிடக்கும் நெல்மணிகளை எடுத்து சமைப்பது ஆகிய கடுமையான நியமங்கள் அவர்களுக்கு உண்டு என்பதையும் சோ விளக்குகிறார்.

அப்பக்கம் வரும் ஒரு பிச்சைக்காரி பசி என தானம் கேட்க, அசோக் தனக்கு கிடைத்த பிட்சையை அப்படியே அவள் பையில் இடுகிறான். பிரியா திகைக்க, ஈவது விலக்கேல் என அவள் கேள்விப்படவில்லையா என அசோக் கேட்கிறான். கூடவே ஏற்பது இகழ்ச்சி என்றும் வருகிறதே என அவள் சீனியர் கேட்க, சோவின் நண்பர் அப்படியா என கேட்கிறார்.

தானம் வாங்குவதில் சில சங்கடங்கள் உண்டு என சோ கூறுகிறார். அதை விளக்கும் வண்ணம் தானம் பெறுபவர் தானம் தருபவரின் பாவத்தையெல்லாம் ஏற்கிறார் என கூறுகிறார். உதாரணத்துக்கு பசுவை தானமாக பெறும் ஒரு புரோகிதர் அதற்கு பிராயச்சித்தமாக லட்சம் முறை காயத்திரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்கிறார். ஆகவே தானம் பெறுவது என்பது சந்தோஷகரமான செயல் அல்ல எனவும் அவர் சொல்கிறார். கல்யாணத்துக்கு வரும் பரிசுகளை வாங்குவதும் தவறா என விடாமல் நண்பர் கேட்க, அதெல்லாம் தானம் அல்ல பேரம், வியாபாரம் என்கிறார் சோ. மொய் எழுதுபவருக்கு எதிர் மொய் எழுத வேண்டிய கட்டாயம் அங்கு உண்டு என்பதையும் அவர் நகைச்சுவையுடன் விளக்குகிறார்.

(தேடுவோம்)

எபிசோட் - 25 (28.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
(இங்கும் முதல் சுட்டி சரியாக இல்லை. இரண்டாம் சுட்டியிலோ முதல் சில நிமிடங்கள் கவர் ஆகவில்லை).
அசோக் பிரியா பேச்சு தொடர்கிறது. அசோக் செய்த தானத்தை அவள் சிலாகிக்க குருக்ஷேத்திர போர் சமயத்தில் தானம் செய்த ஒரு உஞ்சவிருத்தி பிராமணனின் செயலுக்கு முன்னால் தான் செய்தது மிகவும் அல்பமான செயலே என அவன் கூறிவிடுகிறான்.

இங்கு அசோக் கூறியதில் ஒரு தவறு இருப்பதை சோ எடுத்துரைக்கிறார். அது குருட்சேத்திர போர் நடக்கும் போது நடந்த நிகழ்வு அல்ல, போர் முடிந்தபின்னால்தான் மகாபாரதத்தில் தருமர் செய்யும் யாகத்துக்கு வரும் ஒரு கீரிப்பிள்ளை அக்கதையை கூறுகிறது. தனக்கென இருப்பதையும் அப்படியே தானம் செய்வதுதான் உயர்ந்த செயல் எனவும் அவர் கூறுகிறார். அதே போல தானம் செய்த ரந்தி தேவன் என்னும் அரசனின் கதையையும் அவர் கூறுகிறார்.

சாரியாரின் மகன் பாச்சா நடத்தும் ஆடியோ கேசட் கடைக்கு பாகவதர் வருகிறார். பாச்சாவும் அவர் மனைவியும் அவரை மரியாதையுடன் வரவேற்கின்றனர். கதாகாலட்சேபங்களுக்கான ஆடியோ கேசட்டுகள், டிவிடி ஆகியவற்றின் சந்தைப்படுத்தல் பற்றியும் பேசுகிறார். கிடைக்கக் கூடிய ராயல்டிகள் பற்றியும் கேட்கிறார்.

சாம்பு சாஸ்திரி வீட்டில் உமாவுக்கு குழந்தை நல்லபடியாக பிறந்ததை அவருக்கு அவரது மனைவி மகிழ்ச்சியுடன் கூறுகிறாள். ஆஸ்பத்திரிக்கு போகப் போவதாக கூற, வீட்டில் வந்து ஸ்நானம் செய்ய வேண்டும் என சாம்பு சாஸ்திரிகள் சொல்கிறார். மேல் நாட்டிலெல்லாம் இம்மாதிரி தீட்டு எல்லாம் பார்ப்பதில்லையே என சாம்பு அவர்களின் இரண்டாம் மகன் கேள்வி எழுப்ப, அந்த நாடுகள் நம்ம பாரத தேசத்தை விட ஆன்மீக விஷயங்களில் பின்தங்கியிருப்பதாக அவர் கூறுகிறார்.

நாதனின் அலுவலகத்துக்கு பிரியாவும் அவள் சீனியர் வக்கீலும் வருகின்றனர். பிரியாவின் தந்தை எவ்வளவு பெரிய நீதிபதி, அவரது மகளுக்கு சீனியராக அனந்தராமனை அவர் தேர்ந்தெடுத்ததில் இருந்து அனந்தராமனின் நாணயம் பளிச்சிடுகிறது என நாதன் கூறுகிறார். பேச்சு இப்படியே விரிந்து தொழிலை தர்மத்துடன் செய்ய வேண்டும் என்பதை வக்கீல் எடுத்துரைக்கிறார். ஆனால் இக்கலிகாலத்தில் அதர்மம் அதிகரித்து விட்டது பற்றியும் அவர் கூறுகிறார்.

முந்தைய யுகங்களில் எல்லாம் அதர்மம் இருந்ததே இல்லையா என சோவின் நண்பர் கேட்க, தருமம் நாளாவட்டத்தில் மெதுவாக பலவீனமடைந்து வந்ததை குறிப்பிடுகிறார். கலியுகத்தின் துவக்கத்தில் கலிபுருஷனை கொல்லப் போவதாக பரீட்சித்து என்னும் அரசன் கூற, அவன் தான் தங்குமிடமாக சிலவற்றை அவ்வரசனே கூற வேண்டும் எனக் கேட்டு அவ்வாறே பல இடங்களை பெற்றுக் கொண்டதாக சோ அவர்கள் மேலும் கூறுகிறார்.

பிரியா, வக்கீல் அனந்தராமன், நாதன் ஆகியோரின் பேச்சுக் தொடருகிறது. பாவம் செய்யும் அளவைக் குறைக்க அவ்வப்போது சில தருமங்கள் செய்யலாமே எனவும், அது ஒன்றும் சாத்தியமாகாவிட்டாலும் இன்னுரையாவது கூறலாமே என அவள் திருமூலர் கூறியதை எடுத்துரைக்கிறாள்.

இன்னுரை கூறினால் மட்டும் போதுமா என சோவின் நண்பர் திகைப்புடன் கேட்க, அது மட்டும் போதும் என சொல்லவில்லை, அதையாவது செய் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என சோ எடுத்துரைக்கிறார். திருமூலரின் அது சம்பந்தமான பாட்டையும் தருகிறார். பாட்டும் அதன் பொருளும் பின்வருமாறு.

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. (திருமந்திரம்)

பொழிப்புரை:
காலையில் இறைவனுக்கு பச்சிலை இட்டு வணங்கியும், பசு, நாய், பூனை, காகம் போன்ற பிராணிகட்கு சிறிது உணவளித்தும், வறியார்க்கு சோறிட்டும், மற்றவர்கட்கு இன்சொல் கூறியும், நாம் வாழ்வோமாக. இதனால் எல்லா நலங்களையும் அடையலாம். உலகிற்கு நாம் உதவினால் உலகம் நமக்கு உதவுகிறது


சாத்திரங்களிலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளதா என நண்பர் கேட்க, ஆம் என பதில் அளிக்கிறார் சோ அவர்கள். அதற்கான ஒரு வடமொழி சுலோகமும் சொல்கிறார். பிறகு பாரதியாரின் ஒரு வசன கவிதையும் இதையே வலியுறுத்துவதாக வேறு அவர் கூறுகிறார். அக்கவிதை இதோ:

இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமையுடைத்து; காற்றும் இனிது.
தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று; திங்களும் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது
கடல் இனிது. மலை இனிது. காடு நன்று.
ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும், செடியும், கொடியும், மலரும்
காயும், கனியும் இனியன.
பறவைகள் இனிய. ஊர்வனவும் நல்லன. விலங்குகளெல்லாம்
இனியவை. நீர்வாழ்வனவும் நல்லன.
மனிதார் மிகவும் இனியர்.
ஆண் நன்று. பெண் இனிது.
குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று.
உயிர் நன்று. சாதல் இனிது.


(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/28/2010

டோண்டு பதில்கள் - 28.01.2010

அனானி (20.01.2010 காலை 09.10-க்கு கேட்டவர்)
1. அழகிரியாரின் ராஜினமா மிரட்டல்-ஜூவி செய்தி -இனி என்ன ஆகும் ?
பதில்: இம்மாதிரியெல்லாம் இனி அடிக்கடி எதிர்பார்க்கலாம். ஒரு உறைக்குள் இரு கத்தி இருக்க முடியாது. அரசியல் அதிகாரம் என்பது ஒருவரிடம் மட்டும் தெளிவாக இருப்பதே ஒரு கட்சியின் நிலைத்தன்மைக்கு உகந்தது.

2. மீண்டும் சகோதர மோதலா?
பதில்: அது எப்போதுமே இருப்பதுதான். என்ன, உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது வெளியே வருகிறது.

3. தயாநிதி இன்னும் போட்டியில் இருக்கிறரா?
பதில்: தொண்டர் பலம் இல்லாதவர். இப்போட்டியில் அவர் இருப்பது கடினம்.

4. ஸ்டாலின் திமுக-அழகிரி திமுக-கனிமொழி திமுக-மாறன் திமுக இது நடந்துவிடுமோ?
பதில்: அப்படியாவது ஒரு தீய சக்தி ஒழியட்டுமே.

5. இது வரை உப்பை தின்னுவிட்டு ஜீனி சாப்பிட்டது போல் நடந்தவரின் கதி இனி?
பதில்: யாரைச் சொல்கிறீர்கள்? எனக்கு புரியவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல ஒருவர் நடந்தால் மருத்துவ ரீதியாக பிரச்சினைகள் வரும், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவை.

அரசியல் தலைவர்கள், பிரபல நடிகர்,நடிகைகள் வீடுகளில் வருமான வரி ரெய்டு,ஆவணங்கள் பறிமுதல்.
6.இதற்கும் அரசியல் சாயம் சிலரால் பூசப்படுவதில் உண்மை உண்டா?

பதில்: நெருப்பில்லாமல் புகையுமா?

7. திமுகவில் பிளவு போது கூட இந்த ஆயுதம் எம்ஜிஆர் மேல் பாய்ந்ததது என் சொல்லபட்டதே?
பதில்: வருமான வரி பிரச்சினை வந்தது. அதனாலேயே பிறகு அவர் மத்திய அரசில் யார் பதவியில் இருந்தாலும் அவர்களை அனுசரித்தே நடந்தார்.

8. ஜெ மீது போடப்பட்ட வழக்குகளின் கதி?
பதில்: அவற்றை சீக்கிரம் நடத்தவிடாமல் தடுப்பது எது என எனக்கும் புரியவில்லை.

9. திமுக இந்த செயலுக்காக இந்தத்துறையில் துணை மந்திரியாவது தொடர்ந்து வைத்துள்ளது பற்றி?
பதில்: வைத்ததில் ஏதேனும் பிரயோசனம் இதுவரை கண்டார்களாமா?

10. இந்தத் துறையில் இதுவரை இருந்தவர்களில் சிறப்பான நடுநிலையான செயல்பாடு யாருடையது?
பதில்: என்னைப் பொருத்தவரை யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.

//தமிழகத்தில் முதன் முறையாக 3 ஜி மொபைல் போன் சேவை அறிமுகம் : கோவையில் மத்திய அமைச்சர் ராஜா துவக்கினார்//
11. நலிவடைந்திருந்த ஜவுளித்துறையை பொலிவுள்ளதாக்கும் தயாநிதி வகித்துவந்த துறையின் நலிவான நிலைக்கு இவரது தன்னாலமான செயல்பாடுகள் காரணம்?
பதில்: புத்திசாலித்தனமாக தனது தலைவரின் நலத்தையும் பார்த்து கொள்வதால் அவர் பிழைக்கிறார்.

12. நாளைய பிரதமர் ராகுல் காந்திக்கு இவரை பிடிக்கவில்லை அதனால் இவரை செக் வைக்க பைலட் அவர்களை இணை அமைச்சர் போட்டுள்ளார் எனற தகவல் பலன் கொடுத்ததாய் தெரியவிலையே?
பதில்: கடலில் மிதக்கும் ஐஸ் கட்டியின் ஒன்றின் கீழ் பத்தின் பாகம்தான் வெளியே தெரியும் என்பது தவிர்க்க முடியாத விஷயம்.

13. இவர்மீது ரெய்டுகள் எனத் தகவல் கடைசியில் புஸ்வானமாய் மாற்றவது யார்?
பதில்: ஐஸ் கட்டியின் மறைந்துள்ள பாகம்

14. தயாநிதி காலத்தில் 2 ம் இடத்தில் இருந்த பி.எஸ்.என்.எல் செல் சேவையை இன்று 6 ம் இடத்துக்கு வர வைத்துவிட்டு பெரிய சாதனை செய்தவர் போல் பேசும் இவரது கித்தாப்பு பேச்சு பற்றி?

பதில்: அதுதான் நோக்கம் என நினைத்து செயல்பட்டிருந்தால் அவர் அதில் வெற்றியடைந்தார் என்றுதானே கொள்ள வேண்டும்?

15. கருணாநிதி இவருக்கு கொடுக்கும் சிறப்பு சலுகைக்கு, அதீத பாதுகாப்புக்கு வெளியே பேசப்படும் பத்திரிக்கைகளில் எழுதப்படும் கிசு கிசுக்கள் உண்மையா?(பிளட் இஸ் திக்கெர் தேன் வாட்டெர்)
பதில்: ஒரு பழைய பாட்டு ஏனோ நினைவுக்கு வருகிறது. “மாப்பிள்ளை டோய், மாப்பிள்ளை டோய், அழகான மதராசு மாப்பிள்ளை டோய்”. ஆனால் அது ஏன் நினைவுக்கு வர வேண்டும் என எனக்கு சொல்லத் தெரியவில்லை.


maddy73
1) "ஊனமுற்றவர்களுக்கு பல திட்டங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் எனது மனம் பெரியது", இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். அது பற்றி?
பதில்: அதே உரலில் வந்த கருத்துக்களில் ஒன்று மாத்யூ என்பவருடையது, அது இதோ. அதுதான் எனது பதிலும்.
என் மனம் பெரியது என்ற சொல்லினாலே உங்கள் மனம் சின்னது என்று உறுதிபடுத்தி விட்டீர்கள். ஏனென்றால் குறுகிய மனம் படைத்தவர்களால் மட்டுமே தன்னை தானே புகழ்ந்து கொள்ள முடியும். மக்கள் உங்களுக்கு vote போட்டு முதல் அமைச்சர் ஆக்கினதே அவங்கள் நலன் காப்பதற்கு தான். அது உங்களுக்கு தெரியும் போது (?!) நீங்களும் விழா எடுப்பை நிறுதிகொள்ளுவீர்கள் அவர்களும் உங்களுக்கு வஞ்ச புகழ்ச்சி பாடுவதை நிறுத்துவார்கள்! அது வரை இந்த கேவலம் தொடரத்தான் செய்யும். ஒரு கேள்வி, நம்ம முன்னால் குனிஞ்சு கும்பிடு போடறவன் எல்லாம் முதுகுக்கு பின்னால் கேவலமா திட்டற ஆட்கள்தான் என்று என்னைக்காவது உங்கள் மூளைக்கு (?!) எட்டினது உண்டா?
by S Mathew,Toronto,Canada 1/22/2010 9:20:17 PM IST

2) ஒரே வாரத்தில் 4வது தாக்குதல்: ஆஸி.,யில் இந்தியர்கள் பரிதாபம்; இனவெறியில்‌‌‌லை என கெவின் ருட் மறுப்பு.
பதில்: இது ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்கக்கூடிய பிரச்சினை அல்ல. இன்னும் தகவல்கள் தேவை. நம்மவர்கள் நடத்தையும் அம்மாதிரி தாக்குதல்களுக்கு அழைப்பு தருகின்றன என்னும் ரேஞ்சிலும் பேசுகின்றனர். உண்மையறிந்து கருத்து சொல்வது நலம்.

3) விலைவாசியை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசின் அறிவிப்பு, "ரேஷன் கார்டுதாரர்களுக்கு கூடுதலாக 10 கிலோ அரிசி : 2 மாதங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு"
பதில்: 2 மாதங்களுக்கு அப்புறம் என்ன செய்வதாம்? வயிற்றில் ஈரத்துணிதானா?

4) 44 நிகர் நிலை பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தினை ரத்து செய்ய பரிந்துரை, "நாட்டின் இன்றைய கல்லூரிக்கல்வியின் நிலை"
பதில்: அவற்றுக்கு முதலில் அங்கீகாரம் ஏன் வழங்கப்பட்டது என்பதுதான் முதலில் எழும் கேள்வி? அவர்றில் பெரும்பான்மை தமிழகத்தில்தான் உள்ளன என்பது வெட்கக்கேடான விஷயம்.

5) சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட எனது வலைப்பூவின் மணம் உங்களை வந்தடைந்ததா? என்னைபோன்ற இளம் வ(க)லைஞர்களை நீங்களும் ஊக்குவிக்கலாமே.
பதில்: பார்த்தேன். நன்றாக உள்ளது.


கந்தசாமி
டோண்டுவின் ஸ்பெசல் கமெண்ட்?
1. வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் வீட்டைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் -தமிழன் சோத்தால் அடித்த பிண்டம் அல்ல!

பதில்: சோற்றால் அடித்த பிண்டம் என்னும் சொலவடைக்கு காப்புரிமை வேறு யாரிடமோ இருப்பது போலத் தோன்றுகிறதே?

2. ராணுவ ஆட்சியை ஏற்படுத்த ராஜபட்ச திட்டம்: ரணில் -இலங்கை ஜெ வா?
பதில்: இலங்கை அரசியல் எனக்குத் தெரியாது.

3. கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி புழக்கத்தை தடுப்பதில் மக்கள் ஒத்துழைப்பு அவசியம் -சும்மா உதார் விடுதலா?
பதில்: கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஒரு வித ஒத்துழைப்புத்தானோ?

4. நிகர்நிலை பல்கலை.​ முடிவிலிருந்து மத்திய அரசு பின்வாங்கக் கூடாது:​ மாணவர் பெருமன்றம் -மத்தளத்துக்கு இரண்டுபக்கம் இடியா?
பதில்: இடியாப்பச்சிக்கல்தான். மாணவர்களின் நலம் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம்.

5. யாருடைய பரிந்துரையும் இன்றி ​வங்கிகள் கடன் வழங்க வேண்டும்: பழநிமாணிக்கம் -ஆனா கடனை திருப்பி கேட்கக்கூடாது!
பதில்: அடுத்தவீட்டுக்காரன் நெய்யே என் பெண்டாட்டி கையே.

6. திரு​மங்​க​லம் இடைத்​தேர்​தல் வெற்​றி​தான் அமைச்​சர் பத​வி​யைப் பெற்​றுத் தந்​தது -உங்களை டெல்லிக்கு அனுப்பாட்டா இங்கே?
பதில்: டில்லி ட்ரான்ஸ்ஃபர் பிடிக்கல்லைன்னா என்ன செய்வதாம்?

7. உரிமையாளர் கண்ணெதிரே ரூ.5 லட்சம் பணத்துடன் பைக் அபேஸ்! -இதைத்தானே அரசியல்வாதிகளும் செய்கிறார்கள்!
பதில்: திருட்டு நடப்பதோ, அரசியல்வாதிகள் கொட்டம் அடிப்பதோ புதிதொன்றும் இல்லையே.

8. கட்டாய ஹெல்மெட்டில் இருந்து இளம்பெண்களுக்கு விதிவிலக்கா? -சொள்ளர்கள் வேறு என்ன செய்வார்கள்!
பதில்: பெண்கள் உயிரென்றால் கிள்ளுக்கீரையா?

9. தமிழகம், புதுவையில் தற்பொழுது தகுதிநீக்கம் செய்யும் அளவுக்கு மோசமாக உள்ள 17 கல்வி நிலையங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து கொடுத்த நடவடிக்கை சரிதானா? - பொறவு தேர்தல் செலவுக்கு யார் காசு தருவாக!
பதில்: அதுக்காக மாணவர்களது எதிர்காலத்தை பணயம் வைக்கும் உரிமையை யார் இவர்களுக்கு தந்தது?

10. தமிழகத்தில் மர்மக்காய்ச்சல், விஷக்காய்ச்சல் இல்லை: பொது சுகாதாரத்துறை இயக்குநர் தகவல் -முழுப்பூசணிக்காய் சோற்றில் மறையுதுங்கோ!
பதில்: பின்னே என்னவாம்?


அனானி (32 கேள்விகள் கேட்பவர்)
1. இலங்கை தேர்தலில் பொன் சேகா - ராஜபக்சே யார் வெற்றி பெற்றால இந்தியாவுக்கு நல்லது?
பதில்: யாராக இருந்தாலும் அவர்கள் மீது ராஜரீதியாக நிர்ப்பந்தம் வைக்க வேண்டியது இந்திய அரசின் கடமை. அப்போதுதான் இந்தியாவின் ந்நலனை பாதுகாக்க இயலும். ஈழத்தமிழர்களின் நலனை புறக்கணிப்பதுவும் இந்திய நலனுக்கு உகந்தது அல்ல.

2. தமிழக அரசின் குண்டர் சட்டத்தால் திரைஉலகை காப்பாற்ற முடியுமா?
பதில்: தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கெதிராக எவ்வளவுதான் செய்ய முடியும்?

3. சம்பள உயுர்வு கேட்டு போராடும் இந்திய ஹாக்கி அணியினரின் தகராறு நியாயம் தானே?
பதில்: நியாயம்தான். அத்துடன் கூட சம்பளத்தையே பாக்கி வைத்திருப்பது அநியாயத்திலும் அநியாயம்.

4. வரும் 2011 சட்டமன்றத் தேர்தலில் பொதுத் தேர்தலில் பா.ம.க.வின் வியூகம் எப்படி இருக்கும்?
பதில்: எவ்வளவு டிபாசிட்டுகள் முடியுமோ அத்தனை டிபாசிட்டுகளையாவது காத்துக் கொள்ள வேண்டும்.

5. வரும் 2011 சட்டமன்றத் தேர்தலில் பொதுத் தேர்தலில் தே.மு.தி.க.வின் வியூகம் எப்படி இருக்கும்?
பதில்: தாம் மூன்றாம் சக்தியாகவாவது இருப்பது என்னும் நிலையை மட்டும் மனதில் கொண்டால் அவ்வாறே இருந்துவிட வேண்டியதுதான். நோக்கத்தில் தெளிவு வேண்டும்.

6. வரும் 2011 சட்டமன்றத் தேர்தலில் பொதுத் தேர்தலில் காங்கிரஸின் வியூகம் எப்படி இருக்கும்?
பதில்: மத்தியில் ஆட்சி செய்தால் போதும் என்னும் மனநிலை இருக்கும்வரை தமிழகத்தில் அவர்களுக்கு ஆப்ஷன்கள் கம்மி.

7. பெரும் குழப்பத்தில் இருக்கும் ஆந்திரப் பிரச்னை பற்றி?
பதில்: எது எப்படியானாலும் தெலுங்கானா அமைவது நாட்டில் பல விபரீதங்களுக்கு முன்னுதாரணமாகி விடும் நிலைமைதான் உள்ளது.

8. சகலருக்கும் விருதுகள் வழங்கி சாதனை புரியும் திமுக அரசு?
பதில்: கலைஞருக்கு விருதுகளின் புரவலர் என்னும் புது விருது தந்து விடுவோமா?

9. விஷமாய் ஏறியுள்ள அரிசி,பருப்பு விலை குறையும் எனச் சொல்லுவது?
பதில்: Wishful thinking.

10. மொத்த விலையில் ஏற்படும் சரிவு சில்லறை விற்பனையில் தெரியவில்லையே?
பதில்: இடையில் இருக்கும் இத்தனை இடைத்தரகர்களை மறந்து விட்டீர்களா?

11. கருணாநிதியின் தந்திரத்தால் நிதி நெருக்கடி இல்லாத் தமிழகம் எனும் கழகத்தின் பேச்சு?
பதில்: வெந்த புண்ணில் வேல் வீச்சு.

12. தமிழகத்தில் தங்கபாலு காங்கிரஸ்; ஜி.கே.வாசன் காங்கிரஸ்; ப.சிதம்பரம் காங்கிரஸ்; ஈ.வெ.கி.ச. இளங்கோவன் காங்கிரஸ்- இவைகளின் இன்றைய நிலவரம்?
பதில்: இன்னும் கொஞ்சம் காத்திருந்தால் திருநாவுக்கரசு காங்கிரசும் வந்து சேர்ந்து கொள்ளும்.

13. பரபரப்புடன் வெளிவந்த ஜக்குபாய் திரைப்பட சி.டி பார்த்தீர்களா?
பதில்: இல்லை, பார்க்க மனம் இல்லை.

14. ராகுல் புண்ணியத்தால் ப.சிதம்பரம் தமிழ்க முதல்வராய்?
பதில்: ராகுலுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதான் என்ன?

15. கருணாநிதியின் சமத்துவபுரம் திட்டம் செயல்பாடு எப்படி
பதில்: ஆரம்ப சூரத்தனம்.

16. கருணாநிதியின் காங்கிரீட் வீட்டு வசதித்திட்டம் திமுகவின் வாக்கு வங்கியை வளமாக்க எனும் குற்றச்சாட்டு?
பதில்: அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே.

17. தற்காலத்தில் வாழும் இன்றைய பெண்களை யாரோடு ஒப்பிடலாம்?
பதில்: இதற்கு பதிலளிப்பது முரளி மனோகர்.
ஏன் ஓப்பிட வேண்டும்? பெண்களோ ஆண்களோ அவரவர் இடங்களில் இருக்கட்டுமே. இருவருக்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் உண்டு. வாழ்க அந்த வித்தியாசங்கள்.
ஆமென். நன்றி முரளி மனோகர் (எனக்கூறுவது டோண்டு ராகவன்).

18. நடக்கும் அரசு திரைப்பட விருது வழங்கும் விழாக்க்கள் ஆள்சேர்க்கும் செயலாய் இருக்கிறதே?
பதில்: எதற்கு ஆள் சேர்க்கிறார்களாம்? கொள்ளையில் பங்கு பெறவா? இருக்காதே.

19. அட்ரஸ் தேடும் கம்யூனிஸ்டுகள் வரும் தேர்தலில் என்ன செய்வார்கள்?
பதில்: கூகளில் தேடினால் அட்ரஸ் கிடைக்கலாம்.

20. பம்பாய் தீவிரவாதி அஜ்மல் கசாப்பின் பாதுகாப்புக்கு இதுவரை 31 கோடி ரூபாய் செலவாகியுள்ளதை பார்க்கும் போது?
பதில்: சட்டுபுட்டென வழக்கை முடித்து அவனை தூக்கில் போடாமல் ஏன் இந்த ஆர்ப்பாட்டங்கள்? அவனை வைத்து பயணக் கைதிகளை பிடிப்பார்கள். இதெல்லாம் தேவையா?

21. வாழும் மக்களின் தன்னம்பிக்கை குறைவது போல் செய்திகள் வருகிறதே?
பதில்: நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்-னு ஒரு சீரியல் ஏ.வி.எம். பேனரில் வந்தது. அதுதான் உண்மை. எல்லாமே நம்ம சாய்ஸ்தான்.

22. மாநில அளவில் அடுத்த அறுவடை கூவம் நதியைச் சீரமைப்பா?
பதில்: மாநில அளவிலா? குடும்ப அளவில் எனச் சொல்லுங்கள்.

23. மாவட்ட அளவில் அடுத்த அறுவடை செம்மொழி மாநாடா?
பதில்: தனிப்பட்ட அளவில் பாராட்டுகள்தான் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் என நினைகிறேன்.

24. அகில இந்திய அளவில் அடுத்த அறுவடை எது என நினைக்கிறீர்கள்?
பதில்: ஸ்பெக்ட்ரம் அடுத்த தலைமுறை ஏதேனும் வராமல் போய் விடுமா என்ன?

25. பொருளாதாரத்தை சீரழிக்கும் கள்ள நோட்டும் பெருகிவிட்டதை பார்க்கும் போது?
பதில்: இந்தோநேசியாவில் சுகர்ணோவின் சோஷலிச அரசு ஆட்சி செய்தபோது அன்னாட்டு நாணயத்தை கள்ளத்தனமாக அச்சிட ஆட்கள் கிடைக்கவில்லை, ஏனெனில் அதன் மதிப்பு அதல பாதாளத்தில் இருந்தது. பிறகு தனியார் பொருளாதாரம் வந்ததும் ஒரு கட்டத்தில் கள்ள நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. அதாவது அவற்றை அச்சிடுவது கள்ளநோட்டு வியாபாரிகளுக்கு கட்டுப்படியானது என்று பொருள். அம்மாதிரி பார்த்தால் இந்திய ரூபாயை இன்னும் கள்ள நோட்டாக தயாரிக்கிறார்கள் என்றால் என்ன யோசிக்கலாம்? இது ஒரு பார்வை கோணம் மட்டுமே. நான் படித்தவற்றிலிருந்து தொகுத்த எண்ணங்களை சார்ந்தது அது. அது உண்மையா என்பதை பொருளாதாரம் நன்கு கற்றறிந்தவர்கள் யாரேனும் கூறலாம்.

26. மக்களிடம்பெரும் வரவேற்பு பெற்று உள்ள கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு
அரசின் கஜானா எவ்வளவு காலி?

பதில்: மேலோட்டமாக பார்த்தால் இது நல்ல திட்டம்போலத்தான் தெரிகிறது. ஆனால் சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். புரூனோ போன்றவர்கள் இன்னும் ஆதண்டிக்கான பதில்கள் தரலாம்.

27. தனியார் மருத்துவமனைகள் இந்த திட்டத்தை ஆதரிக்கும் செயலை பார்த்தால் ஆதாயம் யாருக்கு?
பதில்: மாதம் ஆறாயிரம் ரூபாய் வருமான வரம்பாக கொண்டால் எத்தனை பேச்ருக்கு பலன் வரும்? அதுவும் தனியார் மருத்துவமனைகளுகு ஏன் முன்னுரிமை? எங்கேயோ இடிக்கிறது.

28. அழகிரியின் கோபம் இந்ததடவை தலைவர் எப்படி சமாளிப்பார்?
பதில்: தெரியவில்லை, கஷ்டம்தான்.

29. கல்கத்தா தமிழ் சங்கத்தின் தமிழ்த் தலைமகன் விருது கலைஞருக்கு?
பதில்: கல்கத்தா என்ன டாக்காவில் ஏதேனும் தமிழ்ச்சங்கம் இருந்தால் அவர்களிடமும் விருதுகள் பெற ஏற்பாடு செய்து கொள்வார் அவர்.

30. மக்களிடம் சமச்சீர் கல்விக்கு வரவேற்பு எப்படி?
பதில்: இம்மாதிரி முயற்சிகள் எல்லோரையும் ஒரு common lower factor-க்குத்தான் கொண்டு செல்கின்றன என்பதால் ரொம்ப நம்பிக்கை எல்லாம் இல்லை.

31. பாடம் கற்றுக் கொடுக்கும் ஒரு சில ஆசிரியர்களின் சில்மிஷங்களை பார்க்கும் போது?
பதில்: அவ்வாறு செய்பவர்களுக்கு சவுதி அரேபியா முறைப்படி எதையாவது வெட்டிவிட வேண்டியதுதான்.

32.மதியூகம் -தலைவிதி -விளக்க்மாய் கதை சொல்லி விளக்கவும்?
பதில்: அம்புலிமாமா எல்லாம் படித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கைவசம் கதை ஏதும் லேது.

அடுத்த வாரம் முடிந்தால் மீண்டும் சந்திப்போமா?


அன்புடன்,
டோண்டு ராகவன்

1/26/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 22 & 23)

எபிசோட் - 22 (25.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
முதல் சுட்டி இன்னும் கிடைக்கவில்லை. இப்போதைக்கு டெக் சதீஷ் சுட்டியை வைத்துத்தான் செயல்பட வேண்டியுள்ளது. இசைதமிழுக்கு என்னவாயிற்று எனத் தெரியவில்லை.

வேம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு அவரது பென்ணின் மாமியார் வந்திருக்கிறார். தன் பிள்ளையுடன் சண்டை போட்டுக் கொண்டு பிறந்த வீட்டிற்கு வந்து தங்கியிருந்த தனது பெண்ணுக்கு நல்ல வார்த்தைகள் சொல்லி அவளது புக்ககத்தில் கொண்டு வந்து விட்டதற்காக நன்றி கூறவே அவர் வந்திருக்கிறார். இரு சம்பந்திகளும் ஒருவரை ஒருவர் சிலாகித்து பேசிக் கொள்கின்றனர். பேச்சுவாக்கில் நல்ல வேளையாக சம்பந்தி மாமி சீக்கிரமே வந்திருக்கிறார். 15 நிமிடங்கள் தாமதமாக அவர் வந்திருந்தாலும் தானும் தன் மனைவியின் பிரதோஷத்துக்காக சிவன் கோவில்லுக்கு போயிருந்திருப்பார்கள் என வேம்பு கூறுகிறார்.

பிரதோஷம் என்றால் என்ன என சோவின் நண்பர் கேட்க, அதன் மகிமைகளை விளக்குகிறார் சோ. பாற்கடலை அமுதத்துக்காகக் கடையும்போது முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டதாகவும் அதை சிவபெருமான் உட்கொண்டு தனது தொண்டையுடன் நிறுத்திக் கொண்டதால் உலகம் பிழைத்தது என்பதையும் சோ விளக்குகிறார். அவ்வாறு விஷத்தை உட்கொண்ட நேரம் சந்தியா வேளை என்றும் கூறுகிறார். அந்த நேரத்தில் சிவபெருமான் நந்திதேவரின் கொம்புகளுக்கிடையில் நின்று கொண்டு நடனம் ஆடுவதாக ஒரு ஐதீகம். பிரதோஷ காலத்தில் கோவில் தெய்வங்களை பிரதட்சிணமாகவும் அப்பிரதிட்சணமாகவும் சுற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார். விநாயகருக்கு ஒரு சுற்று, சூரியனுக்கு இரண்டு சுற்றுகள், சிவனுக்கு மூன்று சுற்றுகள் மற்றும் விஷ்ணு & அம்பிகைக்கு நான்கு சுற்றுகள் சுற்ற வேண்டும் என்ற கணக்கும் உண்டு.

பை தி வே லட்சுமி நரசிம்மர் கோவிலில் கொண்டாடப்படும் பிரதோஷம் நரசிம்மாவதாரத்தில் ஹிரண்யகசிபுவை கொன்ற நேரம் எனக் கருதப்படுவதாக என் வீட்டம்மா கூறினார்.

சாரியாரின் பிள்ளை பாச்சாவுக்கு அவன் மாமனார் ஆடியோ கேசட் கடை வைத்து கொடுத்துள்ளார். அவனும் அவன் மனைவியும் கடையில் வியாபாரத்தைக் கவனிக்கின்றனர்.

நீலகண்டன் பாச்சாவின் மாமனார் நடேச முதலியாரை பேங்கின் வாடிக்கையாளர் சந்திப்புக்கு வருமாறு அழைக்கிறார். பிறகு பேச்சு பாகவதர் சமீபத்தில் நடத்திய காலட்சேபம் பற்றி பேச்சு வருகிறது. அது பிரமாதமாக இருந்தது என முதலியார் கூற, அதில் என்ன விசேஷம் என சோவ் இன் நண்பர் கேட்கிறார்.

சோ அவர்கள் பௌராணிகர்கள் பற்றி பேசுகிறார். அவர்கள் சொல்வதில் அவர்களுக்கே நம்பிக்கை இருப்பது மிக உத்தமமான விஷயம் என்றும், அம்மாதிரியானவரது காலட்சேபம் கேட்பது நல்ல பலன்களைத் தரும் எனவும் அவர் கூறுகிறார். பிறகு வேதங்கள், புராணங்கள் மற்றும் காப்பியங்களுக்கிடையே உள்ள துல்லியமான வேறுபாடுகளையும் விளக்குகிறார்.

பாகவதர் கொடுத்த பிரசங்கங்களின் ஆடியோ சிடி ஏதேனும் கிடைக்குமா என பார்க்க அப்போதைக்கு அப்படி ஒன்றும் இல்லை எனத் தெரிகிறது. நீலகண்டனும் முதலியாரும் ஆவன செய்து பாகவதரது சிடிக்களை வெளியிட முடிவு செய்கின்றனர். அவற்றில் வரும் லாபத்தை பாகவதருக்கே தரலாம் எனவும் முடிவு செய்கின்றனர்.

கோவிலுக்கு வந்திருக்கும் பாகவதரிடம் பலர் வந்து அவரது காலட்சேப நிகழ்ச்சியை சிலாகிக்கின்றனர். இங்கே அவரது வீட்டுக்கு நீலகண்டன் பாகவதரை பார்க்க வருகிறார். அவரது மூத்த மகன் சிவராமன், மருமகள் ராஜி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். அவர்களது மகன் ராமசுப்புவையும் பார்க்கிறார். லௌகீக விஷயங்களை பேசிக் கொள்கின்றனர். ராஜி நீலகண்டனிடம் முன்னொரு முறை தான் தனது மாமனார் பற்றி நீலகண்டனிடம் கூறியது பற்றி குறிப்பிட்டு, அது குறித்து தான் வெட்கப்படுவதாகக் கூறுகிறாள். நீலகண்டனும் தனது தரப்பிலிருந்து தான் அதே தருணத்தில் பாகவதர் பற்றி ராஜியிடம் தப்பாக பேசியதற்காக வருந்துகிறார். நீலக்ண்டன் வந்திருப்பதாக பாகவதரிடம் சொல்லிவிட்டு வருமாறு சிவராமன் தனது தம்பியை அனுப்புகிறான்.

கோவிலில் சிங்காரம் பாகவதரிடம் வந்து நாதன் அவருக்கு கொடுக்கச் சொன்னதாகக் கூறி ஒரு கடிதத்தைத் தருகிறான். பாகவதர் அதை பிரித்துப் படிக்கிறார். சிங்காரம் அவரிடம் கோவிலுக்கு வெளியே அவரது இரண்டாம் மகன் அவருக்காகக் காத்திருப்பதாகக் கூறுகிறான்.

கோசாலையில் அசோக் சாம்புவின் பசுவுக்கு கீரைக்கட்டை கொடுக்க வருகிறான். அங்கு வேம்பு சாஸ்திரிகளை பார்த்து பேசுகிறான். சாத்வீக குணமுடைய பசுவுடன் பழகினால் மனிதருக்கும் சாத்வீக குணம் வரும் என அசோக் கூற, வேம்பு சாஸ்திரிகளும் முதலில் சாதுவுடன் காலம் கழித்த ஒரு கிளி சத் விஷயங்களையே பேசிக் கொண்டிருந்ததாகவும், பிறகு அதே கிளி கசாப்பு கடைக்காரனிடம் போக, வெட்டு, குத்து என்றெல்லாம் பேச அரம்பித்ததாகவும் இக்கதையை ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியதாகவும் கூறுகிறார்.

இது பற்றி தனது நண்பருடன் பேசும் சோ அவர்கள் ஆதி சங்கரர் வாது புரிவதற்காக மண்டனமிகிரரைத் தேடிச்செல்ல அவர் வீட்டைக் காட்டுமாறு தெருவில் தான் சந்திக்கும் சிறுமிகளிடம் கேட்க, அவர்கள் எந்த வீட்டு வாசலில் கிளிகள் ஆத்மவிசாரத்தில் ஈடுபட்டு விவாதம் புரிகின்றனவோ அந்த வீடுதான் மண்டன மிகிரரின் வீடு எனக் கூறுவதையும் எடுத்துரைக்கிறார்.

(தேடுவோம்)

எபிசோட் - 23 (26.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
இங்கும் முதல் சுட்டி இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்தால் போடுகிறேன்.
அசோக் வேம்பு சாஸ்திரிகளின் பேச்சு தொடருகிறது. அசோக் அம்மாதிரி ஆனதற்காக அவனது தாயார் தன்னை குற்றம் சாட்டுவதாகக் கூறும் வேம்பு சாஸ்திரிகள் அசோக் திரும்ப தன் வீட்டுக்கே செல்ல வேண்டும் எனக்கேட்டுக் கொள்ள அவன் மரியாதையுடன் மறுக்கிறான். தான் தனக்குள்ளேயே வர்ணரீதியான பிராமணனை தேடும்படி கடவுளே வேம்பு சாஸ்திரிகள் மூலமாகத் தனக்கு கூறியதாகவே தான் அதை கருதுவதையும் அசோக் குறிப்பிடுகிறான்.

பிறகு பேச்சை மாற்றி அந்த கோசாலைக்கு நிதி உதவி பெறவேண்டி தாங்கள் செய்யக்கூடிய காரியங்கள் பற்றி பேசுகிறான்.

பாகவதர் வீட்டுக்கு வந்த நீலகண்டன் அவரது காலட்சேபத்தை புகழ்ந்து பேசுகிறார். அவரும் நாதனும் தனக்கு இது சம்பந்தமாகக் கடிதம் எழுதியதை குறிப்பிடுகிறார். பிறகு நீலகண்டன் பாகவதருடன் அவரது உபன்யாசங்களை சிடியாகத் தொகுக்க ஏற்பாடு செய்வதாக கூறி அவரது அனுமதியை கேட்டு பெறுகிறார். பணம் முதல் போடுவது நடேச முதலியார் என்றும் வரும் லாபத்தை பாகவதரும் முதலியாரும் சரிபாதியாக எடுத்து கொள்வது என்று பேசி முடிவு செய்யப்படுகிறது.

உமா வீட்டில் அவளது பிரசவம் பற்றி பேசுகிறார்கள். அடுத்த நாள் காலையில் குழந்தை பிறக்கும் என்றிருக்க, அன்று சூர்ய கிரகணம் ஆயிற்றே என எல்லோரும் கவலைப்படுகிறார்கள்.

கிரகணத்தில் குழந்தை பிறக்கக்கூடாதா என சோவின் நண்பர் கேட்க, அதனால் பிரச்சினை இல்லை என சோ அவர்கள் தான் விசாரித்து அறிந்த விஷயமாகக் கூறுகிறார். ஆனால் கிரகண சமயத்தில் உடலுறவு நடக்காது பார்த்துக் கொள்தல் நலம் எனவும் அபிப்பிராயப்படுகிறார்.

உமா வீட்டில் ஆஸ்பத்திரிக்கு சென்று கிரகணத்தின்போது குழந்தை பிறக்காமலிருக்க என்ன வழி எனப் பார்க்கிறார்கள்.

கிருபாவின் மாமனார் ஜட்ஜ் வீட்டில் நாதன் வந்து பேசுகிறார். அங்கு அவரிடம் ஜட்ஜின் மனைவி அசோக் பிட்சை எடுப்பது பற்றி பேச அவர் மனம் நொந்து அங்கிருந்து செல்கிறார். ஜட்ஜ் தன் மனைவியிடம் இங்கிதமின்றி பேசியதற்காக கோபித்துக் கொள்கிறார்.

ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்க வேண்டிய லேடி டாக்டர் கிரகணத்துக்கு முன்னாலேயே சிசேரியன் செய்து விடலாமா என கேட்க அது பற்றியும் உமாவின் புக்ககத்திலும் பிறந்த வீட்டிலும் ஆலோசனை நடக்கிறது.

அப்போது மட்டும் குழந்தைக்கு ஒன்றும் ஆகாதா என சோவின் நண்பர் கேட்க, சோ அவர்கள் பகவான் இச்சை என்று இருப்பதை பாஸ்கராச்சாரியார் லீலாவதி விஷயத்தை உதாரணமாக எடுத்து கூறுகிறார்.

உமா தான் அசோக்கிடம் ஆலோசனை கேட்க முடிவு செய்கிறாள். சாம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு போன் போட்டு அசோக்கை டெலிஃபோனுக்கு வரவழைக்கிறாள்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சூரியின் ஜெஸ்டஸ் - ரோஜாக்களின் எழுச்சி - 3

மூன்றாம் அத்தியாயமும் மிகப்பெரியதுதான். ஆகவே அதையும் சில பகுதிகளாக பிரித்தாக வேண்டும். எத்தனை பகுதிகள் வரும் என்பது இப்போதைக்கு இன்னும் தெரியவில்லை.

முதல் அத்தியாயம் இங்கே
இரண்டாம் அத்தியாயம் முதல் பகுதி இங்கே
இரண்டாம் அத்தியாயம் இரண்டாம் பகுதி இங்கே
இரண்டாம் அத்தியாயம் மூன்றாம் பகுதி இங்கே
இரண்டாம் அத்தியாயம் நான்காம் பகுதி இங்கே
மூன்றாம் அத்தியாயம் முதல் பகுதி இங்கே
மூன்றாம் அத்தியாயம் இரண்டாம் பகுதி இங்கே

மூன்றாம் அத்தியாயம் (பாகம் - 3)

ரோஜாக்களின் எழுச்சி - 3

நான் வீட்டுக்கு வரும்போது இரவு ரொம்பவே நேரமாகி விட்டது. வீட்டின் பூட்டை சாவி போட்டு திறக்கும்போது பக்கத்து வீட்டு அந்த ஜீனா லோலிட்டா சைரன் செல்பேசியில் தன் தோழியுடன் வழமை போல கத்திப் பேசிக்கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் இகழ்ச்சியுடன் உதட்டை சுழித்து சத்தத்தை அதிகப்படுத்தியது. இன்னொரு பக்கத்து வீடு கம்பெனி அதிகாரி சண்டியனும் தனது செல்பேசியில் யாருக்கோ “காதல்” மொழிகளை கூறிக்கொண்டிருந்தான். பாவம் அவன் கீழ் வேலை செய்பவன் என நினைத்துக் கொண்டேன்.

கண்டுக்காத, என எனக்கு நானே கூறிக் கொண்டேன். ஜெஸ்டஸ் உன்னை இதுவரையில் கைவிட்டதே இல்லை. இப்போதும் ஏதேனும் செய்வாராக இருக்கும் என்றும் சொல்லிக் கொண்டேன். எனது வழமையான வேலைகளை செய்து முடித்தேன். எல்லாம் முடிந்து படுக்கையில் விழ நள்ளிரவாகி விட்டது. ஆனாலும் அந்த செல்பேசிகளின் சேர்ந்திசை முடிந்தபாடில்லை. என்னால் முடிந்த அளவுக்கு அதை அலட்சியப்படுத்திப் பார்த்தேன். களைப்புதான் மிச்சம். ஜெஸ்டஸின் சில்லுகள் தம் வேலையைச் செய்யும் என்பதில் எனக்கு இப்போது சந்தேகம் வந்தது. ஓக்கே, இன்னும் சில நாட்கள் பார்ப்போம். சமாளிக்க முடியவில்லையானால் இந்த ஊரை விட்டே காலி செய்து போக வேண்டியதுதான் என எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன்.

இம்மாதிரி எண்ணங்களில் ஆழ்ந்து தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையே ஊசலாடினேன். அண்டை வீட்டார்களை பொருத்தவரை நள்ளிரவு என்பது மாலை. இரவு என்பது அவர்களை பொருத்தவரை விடியற்காலை இரண்டுக்கு முன்னால் அது வருவதில்லை போலும். ஒரு வழியாக அத்தருணத்தில் கூச்சல்கள் ஓய்ந்தன. தூரத்தில் ஒரு நாயின் ஊளை மட்டும் கேட்டது. படுக்கையிலிருந்து எழுந்து மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டேன் (இந்த ஊரில் பவர்கட்டுகள் சகஜம்). கண்களை மூடியவாறு ஜெஸ்டஸ் தந்த நான்கு சில்லுகளையும் கையில் வைத்துக் கொண்டேன். ஓசைப்படாமல் கதவைத் திறந்து, வெளியே வந்தேன். வீட்டின் ஒரு வெளிப்புறச் சுவரில் ஒரு சில்லை வைத்து அழுத்தினேன். சுவர் அதை சுலபமாக ஏற்றது. ஜெஸ்டஸ் சொன்ன மாதிரியே சில்லு சபக் என ஒட்டிக் கொண்டது. மற்ற மூன்று வெளிப்புறச் சுவர்களிலும் அவ்வாறே சில்லுகளை பொருத்தினேன். பிறகு ஸ்லோ மோஷனில் உள்ளே வந்து கதவை சார்த்திக் கொண்டேன். படுக்கையில் விழுந்ததுதான் தெரியும். தூக்கமும் கண்களைத் தழுவியது.

விடியற்காலை என்ன நடந்ததென நான் அறியமாட்டேன். ஏனெனில் நான் எழுந்திருக்கும் போதே காலை ஒன்பதைத் தாண்டி விட்டது. வேகவேகமாக காலைக்கடன்களை முடித்து விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை எனக்கு.

அன்று இரவு பரவுவதற்குள் வீடு திரும்பினேன். குளித்துவிட்டு ஒரு கப் காப்பியுடன் லுட்லமின் ஒரு நாவலை எடுத்து விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. திடீரென வெளியில் கெகெகெக்கே என்ற சிரிப்பு லாஃபன்ஷ்டைனின் குரலில் கேட்டது. ஒரு நிமிடம் தூக்கிவாரிப் போட்டது. அவர்தான் வந்து விட்டாரோ என. எழப்போன என்னை சட்டென நானே நிறுத்திக் கொண்டேன். அப்படியெல்லாம் ஒரு முறைகூட ஜெஸ்டஸ் வீட்டுக்கு வந்தது கிடையாது. உள்ளிருந்தபடியே வெளியே நடப்பதை காதால் கேட்கத் தயாரானேன். லோலிடா சைரனின் குரல் கார்றில் மிதந்து வந்தது. “என்ண்டீ ஹெலன், இவ்ளோ கீக்கிரமா தூங்கப் போயிட்டையா? என்னது சாயந்திரம் நாலு மணிக்கே தூங்க போயிட்டையா, என்ன கேடுகாலம்”?

திடீரென ஜெஸ்டசின் கேலிக்குரல் அவளை இடைமறித்தது. நான் பொருத்திய சில்லுகள் ஒன்றிலிருந்து அக்குரல் வருகிறது என்பதை நான் இப்போதுதான் கவனித்தேன். கேலிக்குரலுடன் கூடவே ஒரு பலத்த சிரிப்பு வேறு. அது ஹெலனுக்கும் கேட்டிருக்க வேண்டும். அவளுக்கு பதிலாக லோலிடாவின் குழ்ப்பத்துடன் கூடிய குரல் கேட்டது. “யாருன்னு தெரியல்லியே. ஏதோ ஜோக்கர் மாதிரி இருக்கு. பார்க்க முடியல்லியே”.
“பாவிகளே, உங்களால் என்னை பார்க்க முடியாது” என ஜெஸ்டசின் குரல் கெக்கலி கொட்டியது. குழப்பத்துடன் ஒரு கவலையும் சேர்ந்து கொண்டது. “இரு, இரு.. எவனோ ஒரு பொறுக்கியாகத்தான் இருக்கணும். கண்டுபிடிக்கிறேன். இங்கதான் எங்கியோ இருக்கணும். பிறகு ஒன்னைக் கூப்பிடறேன், பை பை”.

லோலிடா தன் தந்தையைக் கூப்பிட்டிருக்க வேண்டும். அவரும் வந்து குட்டையைக் குழப்பினார். அவர்கள் குழப்பத்துடன் பேசிக் கொண்டது பின்னணியில் கேட்டது. சற்று நேரம் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவள் தந்தை உள்ளே சென்றிருக்க வேண்டும். சைரன் மீண்டும் செல்பேசியில் ஹெலனுடன் பேச ஆரம்பித்தாள். “ஹெலன், நான் எங்கே விட்டேன்”?
“இன்னா கண்ணு மறந்துட்டியா, படிக்கட்டு கிட்டேதான் விட்டே” பதில் சொல்லுவதில் சில்லுக்கு சந்தோஷம். அதுவும் பக்கத்து வீட்டு அதிகாரி சண்டியனின் பக்கத்திலிருந்த சில்லிலிருந்து அவனது குரல் துல்லியமாக வெளிப்பட்டது. அதானே, ஜெஸ்டசா கொக்கா என நினைத்து கொண்டேன். சைரன் சுதாரித்துக் கொள்வதற்குள் கெக்கலிக் குரல்கள், சீட்டியொலி எல்லாம் கூடவே வந்தது. தூரத்திலிருந்து ஆந்தையின் ஒலியும் சேர்ந்து கொண்டது. சைரன் அலறிக் கொண்டே வீடிற்குள் ஓடினாள். அங்கு சிறிது நேரத்துக்கு ரகசிய குரலில் பேச்சு கேட்டது. பிறகு நிசப்தம் பரவியது.

ஒரு விக்கெட் அவுட். ஜெஸ்டஸ் தரப்பிலிருந்து அருமையா இன்ஸ்விங்கர் பந்து. க்ளீன் போல்ட். இப்போ வெளியில் வந்தது கம்பெனி அதிகாரி சண்டியன். அவனது செல்பேசி அவனுடைய காதுடன் ஒட்டிக் கொண்டு கூடவே வந்தது.

“ஏய் ஜானி மொட்டை நாயே, இன்னிக்கு வாடிக்கையாளரோட மீட்டிங் இருக்குங்கறது ஒனக்கு நினைவிருக்கா இல்லையா”, என செல்பேசிக்குள் அவன் கத்தினான்.
“அதிருக்கட்டும்டா டோமரு, இன்னியோட ஒன்னோட ஆட்டம் க்ளோசுங்கறது ஒனக்குத் தெரியுமாடா”? என்று சில்லு நம்பர் 1-லிருந்து லோலிட்டா சைரனின் குரலில் வந்தது பதில். சைரனின் சொந்தக் குரலை விட இது அதிக தத்ரூபமாக இருந்தது. எந்த மிமிக்ரி ஆர்டிஸ்டாலும் எட்ட முடியாத சாதனையாக அது அமைந்தது. அவன் இருந்த ஜோரில் சண்டியன் முதலில் இக்குரல் தனது கீழ்நிலை அதிகாரியிடமிருந்து வந்தது என நினைத்து கொண்டான். “என்னடா சொல்லறே அடீங்கோத்தா”, என அவன் செல்பேசிக்குள் கத்தினான்.
“அட முட்டாக்கூ யார் பேசறாங்கறதை கண்டுட்டு பேசுடா முதல்லே”, சைரனின் குரலில் இழுத்து இழுத்து பேசியது சில்லு. சண்டியனுக்கு ஒரே ஷாக். அவன் செல்பேசி கீழெ விழுந்தது (அது என் காதில் கேட்டது). அவன் குனிந்து அதை எடுத்தான் (அப்படித்தான் அவன் அதை செய்திருக்க வேண்டும்). இதெல்லாம் நடக்கும்போது சைரனும் அவள் அப்பாவும் வெளியே வந்து அவனை முறைத்து பார்த்திருக்க வேண்டும் (நீங்க நினைப்பது சரியே). சண்டியன் அவன் தரப்புக்கு அவர்களை விழித்துப் பார்த்தான். (மரத்தின் மேல் அமர்ந்திருந்த ஆந்தையே அதற்கு சாட்சி). முதலில் சுதாரித்து கொண்டது சண்டியன். அவர்களைப் பார்த்து அவன் கத்தினான்,
“என்னன்னு நெனச்சிட்டிருக்கீங்க? எதாவது நாடகத்துக்கு ஒத்திகை பாத்துட்டிருக்கீங்களா”?
“இந்தக் கேள்வியை நாங்கத்தான் ஒங்க கிட்டே கேட்கணும்”, இது சைரனின் தந்தை.
“அப்பூ நீங்க யாருமே இல்லை, இது நான்தேன்” என்ற பக்கத்து வீட்டு மாணவனின் கழுதைக் குரலில் அவன் பக்கத்து சில்லுவிலிருந்து கெக்கலி வந்தது. சொல்லிவைத்தாற்போல அவனும் தனது செல்பேசியுடன் அங்கு ஆஜர் ஆனான். அவனை நோக்கி மூன்று ஜோடி கண்கள் தீப்பார்வையை பொழிந்தன. ஒரு நிமிடம் திடுக்கிட்டாலும் அவன் சுதாரித்துக் கொண்டான். அவன் காலேஜில் அவன் பார்க்காத சண்டியர்களா? அவர்கள் பார்வைக்கெதிராக தனது பார்வையை செலுத்தினான்.

“என்னப்பா சொன்னே” ஒரே சமயத்தில் மூவரிடமிருந்து கேள்விக்கணை பாய்ந்தது. “எதை எப்போ சொன்னேங்கறீங்க”? என்று ஒரு கேள்வியை அவன் எழுப்பினான். அவனுடன் செல்பேசியில் தொடர்பு கொண்டிருப்பவர் ஏதோ கேட்டிருக்க வேண்டும்,
“என்னன்னு தெரியல்லியேப்பா, மூணு பைத்தியங்கள் என்னை ஏதோ கேக்கறாங்க, நீ கொஞ்சம் வெயிட் பண்ணு, என்னன்னு விசாரிச்சுட்டு வரேன்”.
பிறகு மூவரையும் நோக்கி கேட்டான்“யாரு யார்கிட்டே என்ன சொன்னதா சொல்லறீங்க”?

எனது ஆவல் எல்லை மீறியதால், மெதுவாக கதவை சிறிதளவே திறந்து பார்த்தேன். மூன்று பார்ட்டிகளும் ஒருவரை நோக்கி ஒருவர் கோபப்பார்வைகளை வீசிய வண்ணம் இருந்தனர். ஏதோ குண்டு வெடிக்கப்போவது போல சூழ்நிலை நிலவியது. நான் மெதுவாக ரிவர்ஸ் கவுண்டிங் ஆரம்பித்தேன், “பத்து, ஒன்பது, எட்டு, ஏழு...”. அவரவர் கையில் துப்பாக்கி இருந்திருந்தால் வெஸ்டர்ன் படத்தில் வருவது போல சுட்டுக் கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம். எனது எண்ணிக்கை ஒன்றுக்கு வரவும் கடைசி சில்லுவிலிருந்து ஜெஸ்டசின் குரல் கிரீச்சிடவும் சரியாக இருந்தது.

“சுடுங்க எஜமான் சுடுங்க. இத்தனை நாளா வாயினாலே சுட்டீங்க, இப்ப, போங்க போய் துப்பாக்கி எடுத்துட்டு வந்து சுடுங்க எஜமான் சுடுங்க”, கூடவே அவரது கெக்கெக்கே என்னும் சிரிப்பு. ஜன்னல் பலகைகள் அதிர்ந்தன. இப்போது நால்வரும் நாலா பக்கங்களிலும் கழுத்தைத் திருப்பி யார் பேசுவது என்பதை பார்க்க ஆரம்பித்தனர்.

பிறகு அவரவர் தத்தம் கூட்டுக்குள் தஞ்சம் புகுந்தனர். வெளியில் வழக்கமான செல்பேசி கூச்சல்கள் மிஸ்ஸிங். நானும் பேசாமல் வீட்டைவிட்டு வேகமாக வெளியே சென்றேன்.

(தொடரும்)

ஆன்லைனில் ஜெஸ்டஸின் ஆங்கில மூலத்தை வாங்க இங்கே செல்லவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/23/2010

வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு நன்றி

எதேச்சையாக திண்ணை வார இதழில் மலர்மன்னன் அவர்கள் எழுதிய புத்தகம் பற்றி நண்பர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் எழுதிய 2-பகுதி கட்டுரையொன்றைக் கண்டேன். அவற்றிலுள்ள விஷயங்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் கருதுவதால் அவரது அனுமதியுடன் முதலில் கீழே அப்படியே ஒட்டி நகலெடுத்ததை தருவேன்.

நண்பர் வெங்கட் சாமிநாதனின் இங்கே சுட்டப்பட்டுள்ள கட்டுரைகளின் சுட்டிகள் கீழே தரப்பட்டுள்ளன.

திமுக உருவானது ஏன்? - மலர்மன்னன் கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில
(வெங்கட் சாமிநாதன்)

நடந்த சரித்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால் அது பற்றி பக்ஷபாதம் இல்லாது நடு நிலையில் நின்று ஆராய்வதும் எழுதுவதும் கருத்து சொல்வதும் இயலாது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அது நேர்மையான, தள்ளி நிற்கும் பார்வையாளர்கள் கூற்று. ஒப்புக்கொள்ளவேண்டிய கருத்து தான். ஆனால் தமிழ் நாட்டின் விவகாரமே வேறு. அதிலும் கடந்த ஐம்பது அறுபது வருட கால சமூக சித்திரம் மிகவும் மாறிய ஒன்று. மிகவும் மாறியது என்றால் தலைகீழாக மாறியது என்று கொள்ள வேண்டும். சுமார் எட்டு ஒன்பது வருடங்களுக்கு முன் கருணாநிதியின் 77வது பிறந்த நாளை ஒட்டி, அவர் பற்றி எழுத என்னைக் கேட்டார்கள். அக்கட்டுரையின் கடைசியில் "இன்றைய தமிழ் நாட்டின் சரித்திரத்தை உருவாக்கியவர்கள் என்று ராஜாஜி, ஈ.வே.ரா. காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். கருணாநிதி ஆகிய அறுவரைச் சொல்லவேண்டும். இந்த ஆறு சரித்திர நாயகர்களைப் பற்றிய நிர்தாக்ஷண்யமற்ற சரித்திரம் எழுதப்படவேண்டும். அது கட்சி சார்ந்தவர்களாலோ, அல்லது அதற்கு எதிர்முனையில் இருப்பவர்களாலோ எழுதப்படக் கூடாது." என்று எழுதியிருந்தேன். தமிழில் இதுகாறும் நேர்மையான, உண்மையான வரலாறுகள் எழுதப்பட வில்லை. எழுதப்படும் என்ற சாத்தியக் கூறுகள் கூட இப்போது காணப்படவில்லை.

இரண்டு நேர் எதிர்கோடிகளை சுட்டிக் காட்டினால் போதும். முதலில் சொல்லப்பட்ட ராஜாஜி, இது பற்றிக் கேட்டபோது தன் சுயசரிதையை எழுதுவதில் தனக்கு விருப்பமில்லை என்று மறுபேச்சுக்கு இடமில்லாமல் கூறியவர்.கடைசியாக வரும், நம்மிடையே ஜீவித்திருக்கும் இன்னமும் சரித்திர நாயகனாகவே வாழும் கருணாநிதியோ, தானே தன் நாயக வரலாற்றை தன்முனைப்போடேயே நிறையவே எழுதி வருகிறார். வரலாறு காணாத எழுத்துப் பிரவாஹம் அது என்று அவருக்கு மிகவும் பிடித்த வர்ணணையிலேயே தான் அதைக் குறிப்பிட வேண்டும். . காலம் சொல்லிக்கொள்ளட்டும் என்று ஒருவர் நிராகரிக்க, மற்றவர் காலம் என்ன சொல்லவேண்டும் என்னும் தன் நிர்ணயத்தை எழுதி வருகிறார்.

தமிழ் சமூகம் இரண்டு எதிர் எதிர் முனைகளில் நின்று ஒரு முனையைச் சேர்ந்தவர் மற்றவரைச் சாடுவதும் அல்லது ஸ்தோத்திர மாலை பாடுவதுமாகப் பிரிந்து கிடக்கிறது. ஈ.வே.ரா என்றோ, கருணாநிதி என்றோ அவரவர் பெயரிலேயே குறிப்பிடுவது பண்பாடற்ற செயலாக தமிழர்களுக்கு தெரியப் படுத்தப் பட்டுள்ளது. மனிதர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு பட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. பட்டங்களைத் தாண்டி மனிதர் அறியப்படுவது தடைப்பட்டுள்ள சூழலில் சரித்திரமும் உண்மையும் செலாவணியற்றுப் போயுள்ளன. யாரும் எப்படி அறியப்படவேண்டும் என்பது நமக்குச் சொல்லப்படுகிறது.

1949-ல் தமிழக அரசியலில் எரிமலையின் கொந்தளிப்பு போன்ற ஒரு நிகழ்வு. ஒரே குடைக்கீழ், குருவும் சிஷ்யனும் போல, தந்தையும் மகனும் போல நாம் கண்ட பகுத்தறிப் பகலவன் என்றும் தந்தை பெரியார் என்றும் அறியப்பட்ட ஈ.வே.ராவும், பேரறிஞர் என்று அறியப்பட்ட அண்ணாதுரையும் திடீரெனப் பிரிந்து எதிர் எதிர் முனைகளாயினர்.

இது எப்படி நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது? என்பது நமக்குச் சொல்லப்பட்டது. நமக்குச் சொல்லப்படுவது தான் நிகழ்ந்ததா என்பது தான் சுவாரஸ்யமான விஷயம். ஆனால் தமிழ் சமூகத்தில் தமிழக அரசியலில், சொல்லப்படுவது சரித்திரமாக எழுதப்பட்டாலும், அது உண்மையா என்பதை அறிவதற்கான சுதந்திர சூழல், இல்லாமல் போய்விட்டது

ஒரு நாள் திடீரென்று பெரியார் திருவண்ணாமலைக்கு வந்த அன்றைய கவர்னர் ஜெனரலும் தன் நெடுங்கால அரசியல் எதிரியும், அதற்கும் நீண்ட நெடுங்காலமாக தன் சொந்த நண்பர் என்றும் சொல்லிக்கொள்ளும் ராஜாஜியை ரகசியமாக, திருவண்ணாமலைக்கே சென்று சந்தித்துப் பேச, அண்ணா அது பற்றி பொது மேடையில் கேட்க, "அது என் சொந்த விஷயம்" என்று சொல்லி பதிலைத் தவிர்த்துவிடுகிறார். 72 வயதாகும் பெரியார் தன் உதவிக்காக சில வருஷங்களாகத் தன்னுடன் இருந்து வரும் 26 வயது மணி அம்மையை பதிவுத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்து அது நடந்தும் விடுகிறது. வாழ்நாள் முழுதும் பெண்ணுரிமை பற்றியும் திருமணம் என்ற சடங்கை எதிர்த்தும் பிரசாரம் செய்த பெரியார் இப்போது தன் முதுமையில் இளம் பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டது கழகத்தில் பெரும் எதிர்ப்பைக் கிளப்புகிறது. அதற்கு பெரியார் சமாதானம் சொல்கிறார். "எனக்கோ வயதாகிறது. முன்னைப் போல என்னால் கழக வேலைகளைக் கவனிக்கமுடியவில்லை. எனக்குப் பின் பொறுப்பேற்க ஒரு வாரிசை ஏற்படுத்தி என் பொறுப்புக்களை கவனிக்கவே இந்த ஏற்பாடு. சில வருஷங்களாக தன்னுடன் பழகி தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான இயக்க நலனில் உண்மையான பற்றும் கவலையும் கொண்ட மணியம்மையை வாரிசாக்கிக்கொண்டு இயக்க நலனுக்கும் பொருள் பாது காப்புக்குமான ஒரு டிரஸ்ட் ஏற்பாடு இது," என்று விளக்கம் தருகிறார்.

ஜூலை 9, 1949 அன்று ஈ.வே.ரா.வுக்கும் மணியம்மைக்கும் பதிவுத் திருமணம் நடந்தது. இதன் எதிர்வினையாக, திராவிடர் கழகத்திலிருந்து அனேக தலைவர்கள் அண்ணாதுரையின் தலைமையில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்குகின்றனர். இது நாள் வரை அவருடைய தலைமையில் கழகத்தை வளர்த்த அவருக்கு அடுத்த படியில் இருந்த தலைவர்கள் யாரையும் ஈ.வே.ரா நம்பவில்லை. சில வருஷங்கள் முன்னதாக வந்து தலைவருக்கு அன்றாட காரியங்களில் உதவியாக இருக்க வந்த ஒரு இளம் வயதுப் பெண் தான், அவரது நம்பிக்கக்குப் பாத்திரமானவர் என்றும், இயக்கத்திற்கும் கழக சொத்துக்களுக்கும் வாரிசாக இருக்கத் தகுதியானவர் என்றும் தலைவர் நம்புகிறார். அதை வெளிப்பட அறிக்கையாகவும் உலகம் அறியத் தருகிறார். தலைவரின் இத்தகைய நடவடிக்கை, நம்பிக்கையின்மை, கழகத்தில் பெரும்பாலோரை கழகத்திலிருந்து வெளியேற வைத்துவிடுகிறது. அவ்வருட செப்டம்பர் மாதம் 18-ம் தேதி ராபின்ஸன் பார்க்கில் கூடிய ஒரு கூட்டத்தில் அண்ணாவின் தலைமையில் வெளியேறியவர்கள் புதிய கட்சி ஒன்றைத் தொடங்குகிறார்கள், திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில். அக்கூட்டத்தில் பெரியாரின் அண்ணன் மகன், ஈ.வி.கே.எஸ் சம்பத், மதியழகன், இரா.நெடுஞ்செழியன், இரா.செழியன், என்.வி.நடராசன், கே.கே நீலமேகம் அன்பழகன் சி.பி.சிற்றரசு போன்ற முன்னனணி தலைவர்கள் இருந்தனர்.

ஆனால், திமுக தொடங்கப்பட்ட அன்றைய கூட்டத்தில், அக்கட்சியில் இன்று பெரியாருக்கும் அண்ணாவுக்கும் அடுத்த மாபெரும் பெரிய தலைவராகக் கருதப்படும் கருணாநிதியின் பெயர் இருக்கவில்லை. அவர் இக்காலகட்டத்தில் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸில் சினிமா கதைவசனம் எழுதுபவராக வேலை பார்த்து வந்தார் மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில். வசனம் கருணாநிதி என்ற பெயரையும் கூட திரையில் காணமுடியாத ஆரம்ப நாட்கள் அவை. தன் குடும்பத்தோடு அங்கு சேலம் இடம் பெயர்ந்து தங்கியிருந்தார் அவர். அவருடன் இருந்தது கண்ணதாசன். அவர்கள் இருவரும் இக்கூட்டத்திற்காக சேலத்திலிருந்து வந்து விருதுநகர் நாடார் லாட்ஜில் தங்கியதாகவும், அண்ணா 'உன்னை பிரசாரக் குழுவில் சேர்த்திருக்கிறேன்" என்று சொன்னதாகவும், மறு நாள் காலை தானும் கண்ணதாசனும் சேலம் திரும்பிவிட்டதாகவும் கருணாநிதி நெஞ்சுக்கு நீதியில் எழுதியிருக்கிறார். அக்காலங்களில் அவர் அவ்வளவாக பிரபலமாகியிருக்கவில்லை. நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத் போன்றோர் வரிசையில் அவரும் ஒரு முன்னணித் தலைவராக இருக்கவில்லை. இந்த வரிசையில் எங்கோ ஒரு கோடியில் இருந்தவர், அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அரசு கட்சி இரண்டையுமே தன் தலைமைக்குக் கீழ் கொணர்ந்து இப்போது நாற்பது வருஷங்களா, எவ்வித எதிர்ப்பும் இன்றி, அத்தலைமையில் நீடிக்கிறார் என்றால், தன் முன் இருந்த அத்தனை பேரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு தன்னை முன்னால் நிறுத்திக்கொண்டது அவரது அசாத்திய சாமர்த்தியத்துக்கும், திட்டமிட்டுச் செயல்படும் திறமைக்கும், கையாண்ட யுக்திகள் நிறைந்த மூளைக்குமான அடையாளங்கள்.

திராவிடர் கழகத்தை விட்டு நீங்கி திராவிட முன்னேற்ற கழகம் என்று புதுக் கட்சி தொடங்கிய போது, பெரியாரைத் தவிர, பேச்சாற்றலும், செயல் ஊக்கமும் கொண்டவர் என வேறு யாரும் பெரியாரிடம் இல்லை. திராவிட கழகம் பெரும் மக்கள் கூட்டத்தை ஈர்த்ததும், கல்லூரிகளிலும் பல்கலைகழகங்களிலும் திராவிட கழகம் பரவி மாணவர்களையும் இளம் தலைமுறையினரையும் கவரக் காரணமாக இருந்தது அண்ணாதான். 'பாப்பான் ஒழிக' என்ற ஒற்றைக் கோஷத்துடன் பாமர அளவிலேயே அர்த்தப்படுத்தப் பட்டிருந்த திராவிட கழகத்தை பிரிட்டீஷ் அரசாங்கத்தின் அடிவருடிகளின் கட்சி என்று பெயர் பெற்றிருந்த நீதிக்கட்சியிலிருந்து விடுவித்து, படித்தோர் மத்தியிலும் 'பாப்பான் ஒழிக' கோஷத்துக்கு ஒரு வரலாற்று, தத்துவார்த்த பின்னணிகளும் கூட என்ற தோற்றத்தையும் கொடுத்தது அண்ணாதான்.அதாவது, பெரியாரின் வெற்றுக் கோஷத்துக்கு தமிழக அரசியலில் விலை போகக்கூடிய, மக்களைக் கவரும் packaging செய்து கொடுத்தது அண்ணா. வெகு சீக்கிரத்திலே திராவிட கழகத்தை வெகுஜனங்களிடையே ஒரு இயக்கம் என்ற தோற்றத்தையும் தந்தது அவர்தான். இப்போது அத்தனை சாதக அம்சங்களும் அண்ணாவோடு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே போய்ச்சேரும். அத்தோடு பெரியாரது கூடாரமே காலியானது. கோபம் வராதா பெரியாருக்கு?

கோபம் வந்தால் ஈ.வே.ராவிடமிருந்து எப்படிப்பட்ட வார்த்தைகள் வந்து விழும் என்பது சொல்ல முடியாது. ஆத்திரத்தில் பேசுகிறார் என்று சமாதானம் கொள்ளலாமே தவிர பகுத்தறிவின், நியாயத்தின் பாற்பட்டதாக, இராது. புதிய கட்சி தொடங்கியவர்களையெல்லாம் 'கண்ணீர்த்துளிகள்' என்று கேலி பேசினார். அது பல ஆண்டு காலம் தொடர்ந்தது. அனேகமாக, அண்ணா முதல் அமைச்சராக பதவி ஏற்று, தன் தலைவர் ஈ.வே.ராவிடம் ஆசி பெறச் சென்ற கணம் வரை. பிறகு தான் 'கண்ணீர்த்துளிகள்' என்ற கேலி நின்றது. பதவியில் இருக்கும் யாரையும் ஈ.வே.ரா. பகைத்துக்கொள்ள மாட்டார். திமுக காங்கிரஸை எதிர் கட்சியாக தாக்கிய போது, ஈ.வே.ரா.காமராஜ் ஆட்சியைப் புகழ்ந்தார். 'பச்சைத் தமிழர்' என்றார் காமராஜை. ஏனெனில், காமராஜ் அமைச்சரவில் ஒரே ஒரு பாப்பான் தான் அமைச்சர். ஈ.வே.ராவின் அரசியல் தர்க்கத்திற்கு வேண்டியது அவ்வளவே தான். பல சமயங்களில் காங்கிரஸ் சார்பில் நின்ற 'பாப்பானை' ஆதரித்து பிரசாரம் செய்திருக்கிறார். இதே ஈ.வே.ரா. தான் ஆகஸ்ட் 15, சுதந்திர தினம் அல்ல. துக்க தினம் என்றார். வெள்ளைக்காரன் இடத்தில் காங்கிரஸ் உட்கார்ந்து கொள்ளும். 'திராவிட மக்கள் தொடர்ந்து அடிமைகளாகத்தான் இருப்போம்,' என்றார். ஆனால் அண்ணா இது சுதந்திர தினமாகக் கொண்டாடவேண்டும் என்றார்.

வெளித்தெரிந்து இது தான் அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இடையேயான முதல் கருத்து பேதம். வெளித்தெரிந்தது என்பது மட்டுமல்லாமல், திராவிட கழகமும் சரி, திமுகவும் சரி, அல்லது இன்னும் இதன் மற்ற கிளைக் கட்சிகளும் சரி எல்லோரும் இக்கருத்து பேதம் இருந்ததை ஒப்புக்கொள்வார்கள் ஆனால் அண்ணாவுக்கும் அவர் கடைசி வரை தனக்கும் தன் கட்சிக்கும் தலைவராக மதித்த ஈ.வே.ரா.வுக்கும் இடையேயான வேறுபாடுகள் கருத்தளவிலும் சரி, மனித உறவுகளிலும் சரி, குண முரண்பாடுகளும் நிறைய இருந்தன. அது அனேகமாக, அண்ணா பெரியாரின் அழைப்பின் பேரில் கட்சியில் சேர்ந்த வெகு சீக்கிரத்திலேயே இருவருக்கும் அவரவர் சுபாவங்களும் சில முரண்பாடான போக்குகளும் ஒத்துவராமை வெளிப்பட்டு விட்டது. ஆனாலும் அண்ணா தொடர்ந்து 1949 வரை இருந்ததற்கும், பின்னர் பிரிந்து வேறு கட்சி ஆரம்பித்த பின்னரும் அதன் தலைவர் பெரியார் தான் என்றும் தான் கட்சியின் செயலாளர் தான் என்று பிரகடனம் செய்தது மட்டுமல்லாமல், கடைசி வரை அவ்வாக்கைக் காப்பாற்றவும் செய்தார் என்றால், அதற்கு அண்ணாவின் இயல்பான தாராளமனத்தை, கனிவை, முதியவருக்கு மரியாதை தரும் பண்பை, மன்னித்துவிடும் சுபாவத்தை யெல்லாம்தான் காரணங்களாகக் காண வேண்டும்.

இது வரை சொன்னது அத்தனையும் அச்சில் வெளிவந்தவை. எல்லோருக்கும் தெரிந்தவை. என்ற போதிலும் இன்று, பெரியாரின் போக்கை ஏற்கமுடியாது பிரிந்து வந்த திமுக விலும் சரி, அதனிலிருந்து பிரிந்த அதிமுகவிலும் சரி, பின்னர் கிளைவிட்டுத் துளிர்த்துள்ள இன்னும் பல திக, திமுக, கிளைகளிலும் சரி, பெரியாரும் அண்னாவும் தான் வணங்கப்படும் தெய்வங்கள். அவரவர் நினைவு தினங்களில் மாலை சார்த்தி வணங்கி நின்று போட்டோ பிடித்துக்கொள்ளும் சடங்குகளுக்கு உரியவர்கள். எல்லோருக்கும் ஈ.வே.ரா தந்தை பெரியார் தான். பகுத்தறிவுப் பகலவன் தான். அன்ணா பேரறிஞர் தான். இருவர் காட்டிய பாதையில் தான் எல்லா கழகங்களும் செல்வனவாகச் சொல்லிக்கொள்கின்றன.

ஆனால் அவ்வளவோடு சரி. மற்றபடி, பெரியாரின் இன்றைய திராவிடர் கழகமும், திமுகவும் அதிமுகவும் பெரியார், அண்ணா பற்றிய கடந்த கால சரித்திரத்தைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் பெரும் தணிக்கைக்குட்பட்டதாகவே இருக்கும். அந்தந்தக் கால கட்சி சார்பில்லாத செய்திப் பத்திரிகைகளில் வந்த செய்திகளை என்ன, விடுதலை, திராவிட நாடு, முரசொலி பத்திரிகைகளில் வந்த செய்திகளைக் கூட அவர்கள் இருட்டடிப்பு செய்யவே விரும்புவார்கள். அது பற்றி அவர்கள் பேசமாட்டார்கள் என்பது ஒரு புறம் இருக்க, இத்தகவல்களை அக்கால கட்டத்தில் அறிந்தவர்களோ, பத்திரிகைகளிலிருந்து தகவல்கள் திரட்டி யாரும் எழுதக் கூடுமானால், அவர்கள் எதிரிகளாகவே பாவிக்கப்படுவார்கள். எம்மாதிரியான எதிர்வினைகளை அவர்கள் சந்திக்கக் கூடும் என்பது சொல்லமுடியாது.

முதலில் அண்ணாவே இப்போது உயிருடன் இருந்திருந்து தம் அந்நாளைய அனுபவங்களை எழுதக் கூடுமானால், அவர் கூட தன் தலைவர் பெரியாரைப் பற்றிய உண்மை விவரங்களை எழுதமாட்டார் தான். காரணங்கள் பல. அண்ணாவின் சுபாவம் அது. சுபாவத்தில் சாது. தலைவரிடம் கொண்ட மதிப்பும் மரியாதையும். தனக்கு இழைக்கப்படும் தீங்குகளை, அவமானங்களை மறக்கும் மன்னிக்கும் சுபாவம். ஆக, அண்ணா எழுதாமல் இருந்ததைப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் எல்லா திராவிட வாரிசு கழகங்களும் கூட இதில் சாதிக்கும் மௌனம் பற்றி என்ன சொல்வது?. They don't want to wash their party's dirty linen in pubic. நியாயந்தானே. அவர்களுக்கு தந்தை பெரியார் அப்பழுக்கற்ற பகுத்தறிவுப் பகலவன். அவர்கள் அவர் பற்றி மக்களுக்குக் கொடுத்துள்ள சித்திரத்தில் சுருக்கங்களே, கறுப்புக் கோடுகளே இருக்கக் கூடாது. அப்படியும் இது சிக்கல்கள் பல நிறைந்த காரியம் தான். எப்படி?

தந்தை பெரியாரைப் பற்றி தீட்டி வைத்துக்கொண்டுள்ள உருவத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற நினைத்து நடந்த உண்மைகளை மறைத்தால், அது அவர் அன்ணாவைக் கேவலமாக நடத்தியதை மறைத்து அண்ணாவுக்கு துரோகம் இழைத்ததாக ஆகும். பெரியாரிடம் அண்ணா பட்ட அவமானங்களைப் பற்றி உண்மையை எழுதினால் அது பெரியாரைப் பற்றிய கற்பனைச் சித்திரத்தை கோரமாக்கியதாகும். பெரியார் வழியில் அண்ணா வழியில் ஒரு சேர நடப்பவர்களுக்கு இது இக்கட்டான நிலை தான். இரண்டு பேரும் மரித்தாயிற்று. இனி இருவரது கற்பனையான உருவச் சித்திரத்தைக் காப்பாற்றி கட்சியை வளர்ப்பது தான் செய்யக் கூடிய காரியம். அதைச் செய்து வருகிறார்கள் எல்லா திராவிட கட்சியினரும். இவர்கள் எல்லாமே உண்மைக்கும் உண்மையாகவிருக்கவில்லை. அவர்கள் துதித்துத் போற்றி வணங்கும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா இருவருக்குமே கூட உண்மையாக விருக்கவில்லை.

திமுக உருவானது ஏன்? - மலர்மன்னன் - கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில. (கடைசிபகுதி)
By வெங்கட் சாமிநாதன்

ஆனால் நடந்த சரித்திரத்துக்கு உண்மையாகவிருப்பது என்று ஒன்று இருக்கிறது. சரித்திரம் எழுதுபவனது தலையாய கடமை அது. இருவருமே இரு வேறு விதங்களில் முரண்பாடுகளின் சொரூபங்கள். தமக்குள்ளேயே முரணகளைச் சுமந்த இவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டவர்கள் வேடிக்கையான குரு சிஷ்யர்கள் தான். அதுவே இருவரையும் மிக சுவாரஸ்யமான மனிதர்களாக்குகிறது. இந்த முரண்கள் ஒரு கட்டம் வரை சகித்துக்கொள்ளப்பட்டு, அதன் உச்சத்தை எட்டியபோது பிளவு தவிர்க்க முடியாததாகியது. அக்கட்டத்திலும் அண்ணா தவிர்க்க முயன்றவர் தான். அவரது விஸ்வாசமும் சாத்வீகமும் அத்தகையது தான். ஆனால் அதையும் தன் முரட்டு சுபாவத்தால் முறித்துக் கொண்டவர் ஈ.வே.ரா. இவ்வளவையும் மீறி, இருவருமே தமிழ் நாட்டின் வரலாற்றை உருவாக்கியவர்கள். இவர்களது குணநலன்களை, கொள்கைகளை, சரித்திரத்தை, எதையும் மறைக்காது எழுதுவதனால் இவரகளது வரலாற்றுப் பங்களிப்பு எதுவும் குறைபடாது. அவரவரது குணநலன்களே அவர்கள் படைத்த வரலாற்றின் குணநலன்களையும் கட்டமைத்தது என்பதையும் அறிந்து கொள்ளச் செய்யும்.

இவையெல்லாம் அதிகாரபூர்வமாக இக்கட்சியினர் வாயிலாக வெளிவருவதற்கில்லை. ஆனால் ஆரம்ப காலத்திலிருந்து இத்தலைவர்களை நெருங்கி அறிந்தவர்கள் எழுதியவற்றிலிருந்து நாம் கொஞ்சம் இச் சொல்லப்படாத, இவர்கள் மறைக்க விரும்பும் பல தகவல்களை அறியலாம். சில பெயர்கள் உடன் ஞாபகத்துக்கு வருகின்றன. கோவை அய்யமுத்து, பி. ராமமூர்த்தி, திரு.வி.க. சாமி சிதம்பரனார், மா.இளையபெருமாள் போன்றோர் தம் அனுபவங்களை எழுதும் சந்தர்ப்பத்தில் பல தகவல்களைச் சொல்லிச் செல்கின்றனர். பழைய விடுதலை, திராவிடநாடு இதழ்களிலிருந்தும் இன்று கட்சியினரும், தலைவர்களும் அங்கீகரிக்க மறுக்கும் உண்மைகள் பெறப்படும். ஏன், கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதியிலிருந்தும் பெறலாம். ஒரு உதாரணத்திற்கு ஒரு சம்பவம். கருணாநிதி விடுதலை பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில், ஒரு நாள் காலை ஈ.வெ.ரா, "எங்கே கருணாநிதி?" என்று கேட்க, "கருணாநிதி குளிக்கப் போயிருக்கிறார்," என்று பதில் வரவே, கோபமுற்ற ஈ.வே.ரா. 'அவன் இங்கே வேலை செய்யவந்தானா, இல்லை குளிக்க வந்தானாய்யா?" என்று கேட்கிறார். ஒவ்வொரு தடவையும் கட்சி வேலைக்கே அவரிடமிருந்து காசு பெறப்படும் பாடு பெரும் பாடாக விருந்தையும் கருணாநிதி பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

ஈ.வே.ராவின் சிக்கனம் உலகம் அறிந்ததே. சிக்கனமாக இருப்பது என்பது வேறு. அதில் அவரது சிக்கனம் ஒரு தனி ரகம். அது பணம் வீணாகச் செலவாவதைத் தடுக்கும் சிக்கனம் அல்ல. பணத்தின் மீது கொண்ட அதீத பற்றுதலில் விளைந்த சிக்கனம் அது. இரண்டாவது தன்னிடம் வந்து சேர்ந்தவர்களை மதிக்காத போக்கு. இது அன்ணாவுக்கு வெகு ஆரம்பத்திலேயே தெரிய வந்த ஒன்று. அடிக்கடி ஈரோடிலிருந்து திருச்சிக்குப் பயணம் செய்யும் ஈ.வே.ரா திருச்சிக்கு டிக்கட் எடுக்க மாட்டார். கரூர் வரை ஒரு டிக்கட். பின்னர் கரூரில் இறங்கு கரூரிலிருந்து திருச்சிக்கு டிக்கட். இப்படி இரண்டு முறை குறைந்த தூரத்துக்கான டிக்கட் எடுத்தால் அதில் கொஞ்சம் காசு மிச்சமாகும். இப்படி ஒரு முறை அண்ணாவையும் கூட அழைத்துச் சென்றவர், அண்ணாவைத் தான் கரூரில் இறங்கி திருச்சிக்கு டிக்கட் வாங்க அனுப்பி, அண்ணா டிக்கட் வாங்கி வர தாமதமாகவே, ஆத்திரமடைந்த பெரியார், "சோம்பேறி, வக்கில்லாதவன், ரயில் டிக்கட் வாங்கக் கூட முடியாதவனால் ஒரு கட்சியை எப்படி நடத்தமுடியும்," என்றெல்லாம் விழுந்த அத்தனை வசைகளையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டவர் அன்ணா.

இது தான் தந்தை பெரியார், தனக்கு தளபதியாக, தன் பெட்டிச் சாவியைத் தந்துவிட்டதாக பட்டம் சூட்டிய அண்ணாவை, தன் கழகத்திற்கு பெரிய ஜனத்திரளையே தேடித்தந்த அண்ணாவை, கழகத்தில் தனக்கு அடுத்த படியாகவிருந்த தலைவரை, தனக்கு முப்பது நாற்பது வயது இளையவரை நடத்திய முறை. கழகத்தில் அண்ணா தன் இனிய சுபாவத்தினாலும், பேச்சாற்றலாலும், கழகத்தின் கொள்கைகளுக்குத் தேடித்தந்த கௌரவத்தாலும், மக்களிடையே பெற்ற புகழாலும், கழகத்தில் அவருக்கு தானே வந்தடைந்த இரண்டாம் இடத்தை, தந்தை பெரியாரால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். அவர் மட்டுமில்லை. வயதிலும் கழகத்திலும் அண்ணாவுக்கு மூத்தவர்களாக இருந்தோருக்கும், குத்தூசி குருசாமி, டி.பி.வேதாசலம் போன்றோருக்கும் அண்ணாவுக்கு கழகத்தினுள்ளும் வெளியே மக்களிடமும் இருந்த செல்வாக்கைக் கண்டு பொறுக்கமுடியாதுதான் இருந்தது. அன்ணாவின் இளைய தலைமுறை திராவிட கழகத் தலைவர்களும் தொண்டர்களும் அண்ணாவிடமே நெருக்கமாக உணர்ந்தனர்.

அதோடு கழகத்தை தன் விருப்பு வெறுப்புக்களையே கொள்கைகளாகவும் நடைமுறை யாகவும் ஆக்கியிருந்த தந்தை பெரியார், எவ்வளவு தான் தனக்கு கட்டுப்பட்டிருந்தாலும், தனக்கென ஒரு பார்வையும் கொள்கைகளும் கொண்டிருந்த அண்ணாவை உள்ளூர வெறுக்கத் தொடங்கியிருந் தார் என்றும் சொல்லவேண்டும். மற்றவர்களையும் தூண்டி அண்ணாவை கேலியும் வசையும் பேசத் தூண்டவும் செய்திருக்கிறார் பெரியாரும் திராவிடத் தந்தையுமான ஈ.வே.ரா. குறிப்பாக பாரதிதாசன், அழகரிசாமி போன்றோர். அப்படி வசை பாடிய அழகிரிசாமி உடல் நிலை கெட்டு மரணப் படுக்கை யில் இருந்த அழகிரிசாமிக்கு நிதி திரட்டித் தந்தவர் அண்ணா. பாரதி தாசனுக்கும் தான். நிதி திரட்டித் தராமல், "பாட்டுப் பாடறவனுக்கெல்லாம்" திரட்டித் தரானே என்று ஆத்திரப்பட்டவர் தந்தை பெரியார். அழகிரி சாமியும் பின்னர் தன் செய்கைகளுக்கெல்லாம் வருந்தவும் செய்தார்.

அண்ணாவுக்கு கருப்புச் சட்டை அணிவது என்றாலே பிடிக்காது. கறுப்புச் சட்டைப் படை என்று ஒரு வாலண்டியர் அணி உருவாக்குவது என்ற தீர்மானத்தில் பிறந்த வழக்கம் தான் திராவிட கழகத்தவர் கருப்புச்சட்டைக்காரன் என்றாக வழி வகுத்தது. இதை தந்தை பெரியார், பகுத்தறிவுப் பகலவன் மேடையிலேயே குறிப்பிடும் போது என்ன சொல்கிறார்? "வெள்ளைச் சட்டை அணியும் குள்ள நரிகள் என்று அவர்களைச் சொல்வேன்" அண்ணா குள்ள உருவினர் என்பது எல்லோரும் அறிந்தது. தனக்கு அடுத்த தலைவரை 'குள்ள நரி" என்று மேடையில் தந்தை சொல்வாரானால், இவருக்குமிடையே யான உறவு எத்தகையது?

நீதிக் கட்சியைச் சேர்ந்த ராஜா சர் அண்ணாமலை செட்டியார் தன் அறுபதாம் ஆண்டு நிறைவை சம்பிரதாய சடங்குகள், புரோகிதருக்கு பசு, பொற்காசு போன்ற தானங்கள், வேள்வி என ஏராளமான செலவில் நடத்தவே, ஈ.வே.ரா வுக்கு கோபம். தன்னைக் கண்டு கொள்ளாமல், பார்ப்பனருக்கு தானம், பூஜை என்று செலவழிக்கிறாரே என்று. அண்ணாமலைச் செட்டியாரின் இச்செய்கையைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் ஒன்று எழுதும்படி தந்தை பெரியார் அண்ணாவிடம் பணிக்க, அண்ணாவுக்கும் இதில் ஒப்புதல் இருந்ததால் அவரும் எழுத, இடையில் அண்ணாமலைச் செட்டியாரிடமிருந்து ஆயிரம் ரூபாயோ என்னவோ அன்பளிப்பாக வரவே, செட்டியார் பணம் அனுப்பியிருக்கிறார், ஆதலால் ஏதும் அவரைக் கண்டித்து எழுதியதை நிறுத்தச் சொல்கிறார் பெரியார். ஆனால், அன்ணாவோ, "நான் எழுதியது எழுதியது தான். இனி அதை மாற்ற இயலாது" என்று சொல்ல, பெரியார் நன்கொடைக்கு நன்றி சொல்லி ஒரு குறிப்பு எழுதினார் என்பது நடந்த கதை.

இது போலத் தான் சேலம் மகாநாட்டில் திராவிடர் கழகம் என்ற புதிய நாமகரணமும், நீதிக்கட்சிப் பெருந்தலைகள் தம் பட்டம் பதவிகளைத் துறக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றியது அண்ணாவின் வலியுறுத்தல் காரணமாகத்தான். பெரியாருக்கு நீதிக்கட்சியினர் தரும் ஆதரவையும் பண உதவியையும் இழக்க வேண்டி வருமே என்ற கவலையும் அரித்துக்கொண்டிருந்தது. மிகுந்த ஊசலாட்டத்துக்குப்பின் தான் அண்ணாவுக்கு இளைய தலைமுறையினரிடம் வளர்ந்து வரும் கவர்ச்சியையும், கழகத்தின் பிராபல்யம் கருதியும் அண்ணாவின் தீர்மானத்துக்கு இயைந்தார். அண்ணாவின் இத்தகைய பார்வையின் தொடர்ச்சி தான் இந்திய சுதந்திர தினத்தை பெரியார் சொன்னது போல் துக்க தினமாக அல்ல, சுதந்திர தினமாகக் கொண்டாட வேண்டும் என்று பகிரங்கமாக அண்ணா எழுதியது. நிலமை கட்டுக்கு மீறிப் போகிறது என்று பெரியாருக்குத் தோன்றத் தொடங்கிவிட்டது. முதலில் பெரியார் கருத்தை ஒட்டி எழுதி பின்னர் சில மாதங்களுக்குள் அண்ணா தன் கருத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டது,

இருப்பினும் அவருக்கு அண்ணா வருங்காலத்தில் கழகத்திலும் மக்களிடையேயும் ஒரு சக்தியாக வளர்ந்து வருவது உவப்பாக இருக்கவில்லை. தனக்கும் வயதாகிக்கொண்டிருக்க, தன் பாரம்பரிய குடும்ப சொத்தும், கழகத்தின் பேரில் பைசா பைசாவாக சேர்த்து வைத்திருக்கும் சொத்தும், கழகமும் அண்ணாவிடம் போய்ச் சேராதிருக்கவேண்டுமே என்ற கவலை அவரை பீடிக்கத் தொடங்கியது. தனக்கோ மகன் இல்லை. மனைவியும் இல்லை. குடும்ப சொத்து ஈ.வி.கே. சம்பத்துக்குப் போய்விடும். கழகச் சொத்தோ, தனக்குப் பின் வரும் தலைமையிடம் போய்விடும். இதைத் தடுப்பதற்கு உடனடியாக ஒரு வழி தேடியாக வேண்டுமே. தன்னிடம் சில வருஷங்களாக உதவியாக இருக்கும் பெண்ணை மணந்து கொண்டால் தான் கவலைப் படும் இரண்டு விளைவுகளையும் தவிர்த்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தவர் தந்தை பெரியார். தன் சொத்துக் கவலைகளுக்குத் தீர்வாக, ஒரு சிறு வயதுப் பெண்ணின் வாழ்க்கையை பலியாக்குவதில் அவருக்கு தயக்கம் இருக்கவில்லை. சமூக சீர்திருத்தம் என்றும் பெண்ணின் விடுதலை என்றும் வாழ்நாள் முழுதும் பேசி வந்த எழுபது வயது புரட்சிக்காரருக்கு வந்த கவலைகளும் அதற்கான தீர்வுகளும் இப்படியாகிப் போனது பரிதாபம் தான்.

ஆக, கொள்கைகள் அல்ல, சொத்து பற்றிய கவலைகள், தன் விருப்பு வெறுப்புகளுக்கும் தன்னிச்சையான சுய தீர்மான போக்குகளும் தான் என்றும் தெரிந்ததென்றாலும் அதன் பட்டவர்த்தன மான வெளிப்பாடாக நிகழ்ந்த பெரியார் மணியம்மை திருமணம், அதுவும் பார்ப்பனராகிய எந்த ஆச்சாரியார் தன் சாதிக்கு சாதகமாகத்தானே சிந்திப்பார் என்று காலமெல்லாம் சொல்லி நிந்தித்து வந்தாரோ அந்த ஆச்சாரியாரிடமே, தன் கழகம், சொத்து, நம்பிக்கையான வாரிசு போன்ற கவலைகளுக்கு ஆலோசனை கேட்டது, அதுவும் ரகசியாமகச் சந்தித்துக் கேட்டது, பின் இதெல்லாம் 'என் சொந்த விஷயம், உங்களுக்கு சம்பந்தமில்லை' என்று உதாசீனமாகப் பேசியது எல்லாம் கழகத்தவர்க்கு பெரும் அடியாக விழுந்தது. பெரியாருக்கும் சரி, கழகத்தவர்க்கும் சரி இது தான் ஒட்டகத்தின் முதுகு தாங்காத சுமையாகச் செய்த கடைசி வைக்கோற் புல். இரு தரப்பாருக்கும் பெரியார்-மணியம்மை திருமணம் ஒரு சௌகரியமான சாக்காகிப் போனது. அந்த சாக்குதான் வெளிச் சொல்லப்பட்டது, திரையின் பின்னிருந்த நீண்ட காலப் புகைச்சல் பற்றி எல்லோருமே மௌனம் சாதிக்கத் தான் செய்கின்றனர்.

கடந்த காலப் புகைச்சல் மட்டுமல்ல. பின் எழுந்த புகைச்சல்களும் கூடத்தான். அண்ணா 'கண்ணீர்த் துளிகள்' தலையங்கம் திராவிட நாடு பத்திரிகையில் எழுதியதும், 'கண்ணீர்த் துளிகள்' என்று புதிய கட்சியினரை பெரியார் கிண்டலும் வசையுமாக தொடர்ந்து இருபது வருட காலம் பேசித் தீர்த்ததும் தெரிந்தது தான். ஆனால், பதவி ஆசை பிடித்துப் போய் பிரிந்தார்கள் என்று சொன்னார். பெரியாரைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும், கட்சி சொத்துக்களுக்காக வழக்கு தொடர வேண்டும் என்றெல்லாம் கட்சியில் எழுந்த கொந்தளிப்பை அடக்கி, பழைய கட்சி என்ன, புதிய திமுகவின் தலைமை நாற்காலி கூட பெரியாருக்காகவே காலியாகவே வைக்கப்பட்டுக் கிடக்கும் என்று கட்சியனரின் கோபத்தை அடக்கிய அண்ணாவின் பெருந்தன்மையையோ, அதற்கு எதிராக, பதவி ஆசை பிடித்துப் போய் பிரிந்தார்கள் என்று கழகத் தந்தை பெரியாரின் பழிச் சாட்டல் வசை பிரசாரம் எதையும் இன்று எந்த கழகத்தவரும் பேச விரும்பமாட்டார்கள்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கடைசியாக தந்தை பெரியார் விடுத்த பிரம்மாஸ்திரம் தான், 1949 ஜூலை 13-ம் தேதி விடுதலை பத்திரிகையில் வெளியிட்ட அறிக்கை. அதில் தான் திருமணம் செய்துகொண்டதற்கான ஒரு புதிய காரணத்தைச் சொல்கிறார். அறிக்கையின் தலைப்பு:"திருமண எண்ணத் தோற்றத்துக்கு காரணமும், அவசர முடிவும்." அதில் யாரோ (மறைமுகமாக அண்ணாவைக் குறித்து) தன்னைக் கொலை செய்ய சதி செய்து வருவதாகவும் அதற்கு சம்பத் உதவி வருவதாகவும்" ஒரு குற்றச் சாட்டு. உடனே அண்ணா, தந்தை பெரியார் தன்னைத் தான் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாக, அவதூறு வழக்கு தொடர்கிறார். நீதி மன்றத்தில் ஆஜரான பெரியார், தான் அண்ணாவைக் குறிக்கவில்லை என்று சொல்கிறார். அவ்வாறு வாக்குமூலம் அளித்தால் தான் வழக்கை வாபஸ் வாங்குவதாகச் சொல்லவே, வழக்கு தள்ளுபடியாகிறது. சம்பத்தும், ஈ.வே.ரா மணியம்மை இருவர் மீதும் அவதூறு வழக்குத் தொடர்கிறார். நீதி மன்றத்தில் ஈ.வே.ரா, மணியம்மை இருவருமே வருத்தம் தெரிவிக்கவே, வழக்கு வாபஸ் ஆகிறது.

ஆக, கடைசியில் இதனால் பெறப்படும் நீதி என்னவென்றால், இது சொத்து பற்றிய கவலைகள். கட்சியில் தனக்கு இளையவரின் புகழ் மீது கொண்ட பொறாமை உணர்வுகள். இதற்கெல்லாம் கொள்கைப் பூச்சு முலாம் பூசப்பட்டு பளபளக்கச் செய்கிறார்கள். மேலிருக்கும் முலாமை யாரும் கீறி விடாமல் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. ஆகவே இந்த பழைய கதைகளை எந்த திராவிட குடும்பத்தினரிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் வசமே இருக்கும் பத்திரிகைகளை அணுகுவதும் கஷ்டம். பெரியார் திடல் போய் ஒரு பழைய விடுதலை இதழைப் பார்க்க முயன்றவர்களுக்கு தெரியும். "எதுக்கு? யார் நீங்க? என்ன வேணுமோ எழுதிக்கொடுத்துப் போங்க. தேடிப்பார்த்து வைக்கிறோம்." என்று பதில்கள் வரும்.

40-களில் 50-களில் விவரம் தெரிந்தவர்களுக்கு எவ்வளவு நினைவில் தங்கி யிருக்குமோ அவ்வளவே வாய்மொழியில் வரச் சாத்தியம் உண்டு. அவர்களே இச்சரித்திரத்தை பதிவு செய்யக் கூடும். இவையெல்லாம் அதிகமாக பரவலாக வெளித்தெரியாத, மனவை ரெ.திருமலைசாமி நகர தூதன் இதழில் எழுதியது, எஸ் கருணானந்தத்தின் அண்ணா நினைவுகள், அரங்கண்ணலின் அண்ணா நினைவுகள், அண்ணா பேரவை இணைய தளம், டி.ம். பார்த்த சாரதியின் தி.மு.க வரலாறு. பி.ராமமூர்த்தி திராவிட கட்சிகள் பற்றி எழுதிய புத்தகம் ஒன்று, போன்றவற்றிலிருந்து உதிரி உதிரியாகக் கிடைப்பவை. விடுதலை, திராவிட நாடு இதழ்களிலிருந்தும் கூடத்தான். தேடி அலைபவர்கள் யாரிருக்கக் கூடும். மலர் மன்னன் எழுதியிருக்கிறார், இச்சம்பவங்களை மையமாகக் கொண்டு. மற்றவர்கள் தம் நினைவுகளை எழுதும் சந்தர்ப்பத்தில் இவை பற்றியும் குறிப்புகள் வரும். ஆனால் மையம் இதுவல்ல.

மலர் மன்னன், மற்றவர்கள் இது காறும் பயணிக்காத பிரதேசத்தில் கால் வைத்திருக்கிறார். அவர் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியவர். அண்ணாவைப் பற்றி, நல்ல அபிப்ராயங்களும் மதிப்பும் கொண்டவர். அந்த நட்பும் நல்லெண்ணமும், அந்நாட்களில் அண்ணா, மூன்று மாத கால இடைவெளியில் முற்றிலும் நேர்மாறான நிலைபாட்டை வெளியிடுவதைக் குறிக்கத் தவறவில்லை. அண்ணா கனிவும் பாசமும் நிறைந்தவர். விரோதிகளுடன் கூட சினேகம் கொள்ளும் மனத்தவர். அவரது குணத்திற்கும், பார்வைகளுக்கும், முற்றிலும் எதிரிடையான குணங்கள் கொண்ட வயதில் மூத்த ஈ.வே.ரா வுடன் இவ்வளவு காலமாக, எல்லா அவமதிப்புகளையும் சகித்துக்கொண்டு இருந்ததன் காரணமென்ன என்பது ஒரு புதிர். அதே போல, கடுமையான விருப்பு வெறுப்புக்களையே கொள்கைகளாக பிரசாரம் செய்து வந்த, பேச்சில் முரட்டுத் தனமும் நயமின்மையும் கொண்ட தந்தை பெரியார், தனிப்பட்ட முறையில் தன்னைச் சந்திக்கும் எந்த சாதி மனிதரிமும், பெண்களிடமும், சிறுவர்களிடமும் கூட கனிவும் சாத்வீகமும் அளவுக்கு மீறிய மரியாதையும் காட்டும் மனிதராக இருந்ததன் புதிர். இத்தனிப்பட்ட நாகரீகமும் மேடையில் காணும் கொச்சையும் குரோதமும் ஒரே மனிதரிடத்தில் குடி கொண்டிருப்பதும் ஒரு விந்தை தான்.

தமிழ் தான் எங்கள் உயிர் மூச்சு என்று கோஷமிடும் இயக்கத்தின் தந்தை தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று பறைசாற்றியவர். பாப்பானை ஒழிப்பது தவிர வேறு சமூக சிந்தனை அற்றவர் சாதியை ஒழிக்கக் கிளம்பிய புரட்சிச் சிந்தனையாளர். "சமூகத்தில் இழிதொழிலாக இருக்கின்ற இந்தத் தொழில்களை ஒழிப்பதற்கு அரசியல் வாதிகள் முன்வருவதில்லை. சமூக சீர்திருத்த வாதிகளும் முன்வரவில்லை. ஏன், பெரியார் அவர்களே கேட்டார். இந்தத் தொழில்களை வேறு யார் செய்வது? இளையபெருமாள், நீயே ஒரு மாற்றுக் கூறு என்று கேட்டார்." (சித்திரை நெருப்பு - மா. இளைய பெருமாள் - பக்கம் 41). இதுதான் பெரியார். அவர் சாதியை ஒழிக்கப் பிறந்த பகுத்தறிவுப் பகலவன். தந்தை பெரியார். இந்தப் பெருமைகள் எல்லாம் இல்லாத காந்தி என்ன செய்தார், என்ன கற்பித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இருப்பினும், தமிழ் நாட்டின் வரலாற்றையே மாற்றியவர்கள் பெரியாரும் அண்ணாவும், இன்னும் சிலரும். இதை எப்படிப் புரிந்து கொள்வது?

(திமுக உருவானது ஏன்? - மலர்மன்னன்: கிழக்கு பதிப்பகம், ப. 158: விலை ரூ.80)


இப்போது மீண்டும் டோண்டு ராகவன். நான் வெசா அவர்களிடம் தொலைபேசி கேட்டதற்கு அன்புடன் அனுமதி கொடுத்தார். ஆகவேதான் இப்பதிவும் போட முடிந்தது. முதற்கண் அவருக்கு என் நன்றிகள் உரித்தாகுக.

அவர் குறிப்பிட்டது போல இப்போதெல்லாம் பெரியார் திடலுக்கு போய் சட்டென பழைய விடுதலை இதழ்களை பார்க்க இயலாததுதான். அது பற்றி நான் இட்டப் பதிவில் வந்த பெரியார் ஜால்ரா பின்னூட்டங்களில் ஒன்றுகூட வீரமணியின் இந்த மறுப்பு பற்றி ஒன்றுமே கூறாது கள்ள மௌனம் சாதித்தனர். வேறு என்னதான் செய்ய முடியும் அவர்களால்?

மற்றப்படி வெசாவின் கட்டுரைகளில் வரும் கருத்துகள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 20 & 21)

எபிசோட் - 20 (20.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
முதல் சுட்டி இன்னும் கிடைக்கவில்லை. இப்போதைக்கு டெக் சதீஷ் மட்டுமே.
நாதன் வீட்டுக்கு மீண்டும் பூஜைக்கு வருகிறார் சாம்பு சாஸ்திரிகள். அவரிடம் தான் கோபப்பட்டதற்கு மன்னிப்பு கேட்கிறாள் வசுமதி. பிறகு அவர் வீட்டிலேயே அசோக்குக்கு சாப்பாடு போட முடியாதா, பிட்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டுமா என கேட்க, அவர் அசோக் அதற்கு கண்டிப்பாக ஒத்துக் கொள்ளமாட்டான் என்றும் மற்றப்படி அவனுக்கு சாப்பாடு போட தனக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும் என கேட்கிறார்.

தன்னிடம் ஒரு கோவில் நன்கொடைக்காக வரும் நீலகண்டனுடன் நாதன் பேசுகிறார். அசோக்கின் இந்த செயல்பாடுகளால் அவரது ஆத்திக நம்பிக்கை சற்றே ஆட்டம் கண்டுள்ளது புரிந்து கொள்ள முடிகிறது. வையாபுரியின் தம்பி நல்லத்தம்பிக்கு வாரிசு சான்றிதழ் கிடைக்க அவர் உதவி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ள நீலகண்டனும் சம்மதிக்கிறார்.

காலம் சென்ற வையாபுரியின் எல்லா சொத்துக்களும் நல்ல்த்தம்பியின் கைகளுக்கு வந்ததும் சிங்காரம் அவரிடம் அவர் முதலில் கூறியபடியே தனக்கு வந்த அந்த சொத்துக்களில் பாதி தர்மத்துக்கு போக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். அவ்வாறு தான் சொல்லவேயில்லை என அவர் மறுக்கிறார். அவர் நல்லத்தம்பியே இல்லை, செத்துப்போனாதாக கருதப்பட்ட வையாபுரியே என சிங்காரம் கூறுகிறான்.

இதென்ன சார் ஏதோ கூடுவிட்டு கூடு பாயும் வித்தை மாதிரி இருக்கிறதே என சோவின் நண்பர் வினவுகிறார். அவரிடம் சோ அவர்கள் இம்மாதிரி கூடு விட்டு கூடு பாயும் விஷயங்கள் பற்றி பல இடங்களில் எழுதப்பட்டதை எடுத்துக் கூறுகிறார். முக்கியமாக திருமூலர் நிகழ்த்திய சில அற்புதங்களையும் அவர் உதாரணங்களுடன் கூறுகிறார். பாம்பாட்டிச் சித்தர் என்பவர் பற்றியும் பேசுகிறார்.

ஒருமுறை, அரசன் ஒருவனை பாம்பு தீண்டிவிட, அவன் மரணித்துவிட்டான். அவனைக் கடித்த பாம்பையும் அடித்துக் கொன்று விட்டனர். அதைக் கண்ட பாம்பாட்டி சித்தர், ஓர் உபாயம் செய்தார். இறந்த பாம்பை எடுத்து, உயிருடன் இருப்பவர்கள் மேல் வீசி வேகமாக எறிய, அவர்கள் பயந்து ஓடினர். தங்களுக்கு உயிர் மேல் இருக்கும் பற்றினை அந்த நொடி வெளிக் காண்பித்தனர்.

அந்த நொடியில்…..உருமாறல் மூலம் அரசன் உடம்புக்குள் புகுந்த பாம்பாட்டி சித்தர், உயிர்த்து எழுந்து அமர்ந்தார். செத்த பாம்புக்கும் உயிர் தந்து, ‘உம் ஆடு’ என்றார்... அதுவோ உயிர் பிழைத்த ஆச்சரியத்தில் ஓடத் தொடங்கிற்று. அரசர் எப்படிப் பிழைத்தார்? அவரால் செத்த பாம்பை எப்படிப் பிழைக்க வைக்க முடிந்தது?

போன உயிர் எப்படித் திரும்பி வரும்? என்றெல்லாம் எல்லோரும் கேள்விகளில் மூழ்கிக் கிடக்க, அரசி மட்டும் சூட்சமமாக அரசரை வணங்கி, ‘‘என் கணவரை உயிர்ப்பித்து நிற்கும் யோகி யார்?’’ என்று கச்சிதமாய்க் கேட்டாள். பாம்பாட்டியாரும் அவளது தெளிவைக் கண்டு வியந்து, தான் யார் என்று உரைத்ததோடு, ‘‘அரவம் தீண்டி இறந்து போகுமளவு ஒரு கர்ம வாழ்வு இருக்கலாமா? இது எவ்வளவு நிலையற்றது... எவ்வளவு அச்சமுள்ளவர்களாக, உயிராசைமிக்கவர்களாக இருந்தால், செத்த பாம்பு மேலே விழுந்ததற்கே இந்த ஓட்டம் ஓடுவீர்கள்..!?’’ என்றெல்லாம் கேட்க, அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர்.

அப்படியே அரசனின் உடலில் இருந்த வண்ணமே, வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார். எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, அகத்துக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார்.

மேலும் இவர் எழுதிய பாடல்கள் புகழ் பெற்றவை. அதில் ஒன்று உடம்பை பற்றி இவர் சொல்லும் ஒருபாடல் இதோ:

" ஊத்தை குழிதனிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
வறையோட்டுக்கும் ஆகாது என்று ஆடுபாம்பே"

தன் தோழி மைதிலி வீட்டுக்கு செல்லும் வசுமதி அவளுடன் பேசிக் கொண்டிருக்க அங்கு அசோக் வந்து பிட்சை கேட்கிறான். அதைக்கண்டு திடுக்கிடும் மைதிலி அவனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டு பிட்சை போட மறுக்கிறாள். பிறகு வசுமதி அவளைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவனுக்கு பிட்சை போடுகிறாள்.

(தேடுவோம்)

எபிசோட் - 21 (21.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
அசோக் பிட்சை எடுப்பதை நேரிலேயே பார்த்து விட்ட நிலையில் வசுமதி நாதனிடம் பொருமுகிறாள். அவள் மனதுக்கு சாந்தி தர நாதன் அவளை பல இடங்களுக்கு வருமாறு கூப்பிட அவள் மறுக்கிறாள். அங்கு வரும் நீலகண்டனும் தன் தரப்புக்கு அவளையும் நாதனையும் பாகவதர் செய்யும் கதாகாலட்சேபத்துக்கு கூப்பிட அப்போதும் அவள் மறுக்கிறாள். பிறகு நீலக்ண்டன் தன் மனைவி பர்வதத்தை போனில் அழைத்து வசுமதியுடன் பேசச்செய்கிறார். அவள் ஏதோ தான் எடுத்த புது புடவை பற்றிப் பேச, வசுமதியும் பழைய புடவை புதிய புடவை ஆகியவற்றைப் பேச ஆரம்பிக்கின்றனர்.

பாகவதர் நரசிம்மாவதாரம் பற்றி பேசுகிறார். அது பற்றி சோவின் நண்பர் கேட்க, அவரும் பாகவதர் போன்றவர்கள் டிரமாடிக்காக சில நிகழ்வுகளை கூறுவதை உதாரணங்களுடன் கூறுகிறார். நரசிம்மாவதாரத்தின் பல நுணுக்கமான விஷயங்களைக் கூறுகிறார்.

காலட்சேபத்துக்கு அசோக்கும் வந்திருக்கிறான். அவனை சாம்பு வீட்டுக்கு தான் காரில் டிராப் செய்வதாக நாதன் கூற அவன் அதை மரியாதையுடன் மறுத்து நடந்தே அவர் வீட்டுக்கு சென்றுவிடுவதாகக் கூறி விட்டு விடைபெறுகிறான்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/21/2010

டோண்டு பதில்கள் - 21.01.2010

அனானி (13.01.2010 காலை 05.40-க்கு கேட்டவர்)
தமிழ் புத்தாண்டை தைமாதம் முதல் நாள் என் தமிழக அரசு அறிவித்த செய்கை பலப் பல விவாதங்களை உருவாக்கிய நிலையில்:
1.மக்களில் பெரும் பகுதியினர் ஏற்றுக் கொண்டனரா? இல்லையா?

பதில்: நிலைமை தெளிவாக இல்லை.

2. அதிமுகவின் நிலை இதில் தெளிவாக இல்லையே?
பதில்: அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய நிலை கொண்டுவரும் வாய்ப்பு உண்டு.

3. எழுத்துச் சீர்திருத்தம் போல் இதற்கும் வரும் காலத்தில் முழு ஆதரவு கிடக்கும் போல் உள்ளதே?
பதில்: எழுத்துச் சீர்த்திருத்தம் ஏற்படுவதற்கு பல காலம் பிடித்தது. இதற்கும் அவ்வாறே அவகாசம் தேவைப்படுமாக இருக்கும்.

4. முற்பட்ட சாதியினர் மட்டும் எதிர்ப்பதாய் கூறப்படும் புகார்கள் பற்றி?
பதில்: பேசாமல் ஓட்டெடுப்பு எடுத்து பார்த்து விடலாம்.

5. கடவுள் நம்பிக்கை இருந்தாலும் ஜாதகம் மேல் நம்பிக்கை கிடையாது எனும் எண்ணம் உள்ள தங்களின் கருத்து இதில்?
பதில்: தமிழ்ப்புத்தாண்டு என்பது முக்கியமாக தமிழ் இந்துக்களின் நம்பிக்கை பேரில் உள்ளது. அதில் நோண்டுபவர்கள் தமிழகத்துக்காக தனி ஹிஜிரா கணக்கு, ஆங்கில காலண்டர் ஆகியவற்றை கொண்டுவர துணிவார்களா?

அரசின் இலவச திட்டங்கள் மக்களை சோம்பேறி ஆக்குகிறது எனும் எதிர்க்கட்சிகளின் குற்ற்ச்சாட்டு
6. இலவசம்தான் ஓட்டுகளை அள்ளுகிறது எனத் தெரிந்தபிறகும் இந்த நிலை மாறுமா?

பதில்: நாட்டு மக்களையே சோம்பேறியாக்கும் இம்மாதிரி திட்டங்கள் கண்டிப்பாக அவர்தம் நலனுக்கு உகந்ததாக இருக்காது என்பதே நிஜம்.

7. வாங்கிய கடன்கள் ரத்து இதில் சேர்த்திதானே?
பதில்: கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் ஜனார்த்தன் பூஜாரிகள், கருணாநிதிகள் ஆகியோர் இருக்கும்வரை இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.

8. உணவு, உடை, உறைவிடம் மூன்றும் இலவசமாய் கொடுத்து பொழுது போக டீவியும் கொடுத்த அரசு அடுத்து மக்களை கவர என்ன செய்யும்?
பதில்: டாஸ்மாக்கில் இலவசம்?

9. ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் என ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மையானல் அடுத்த தேர்தலுக்கு எவ்வளவு பணம் கைமாறும்?
பதில்: ஓட்டர்கள் எண்ணீக்கையை வைத்து பெருக்கிப் பார்த்து கொள்ளுங்களேன். பெருக்கல் வாய்ப்பாடு ஸ்கூலில் சொல்லித் தரவில்லையா?

10. திமுக ஆட்சியில் தமிழக வளர்ச்சி விகிதம் சரிவு எனும் அதிமுக தலைவியின் குற்றச்சாட்டு உண்மையா? புள்ளிவிபரம் சரியா?
பதில்: அவர் என்ன புள்ளிவிவரங்கள் தந்தார் எனத் தெரியாது. ஆனாலும் பொதுவாக குறைகிறது என்பது சரியே.

எம்ஜிஆர் முயற்சியால் முதல்வர் ஆனேன் அதை கடைவரை மறக்க மாட்டேன் என கலைஞரின் உருக்கமான பேச்சு
11.இந்த நினைப்பு கூட அதிமுக தலைவி ஜெயலலிதாவுக்கு இல்லாதது சரியா?

பதில்: இந்த உருக்கமெல்லாம் புருடா. முதற்கண் எம்.ஜி.ஆரிடம் இவர் பட்ட தோல்வி அனுபவங்கள் மறக்க முடியாதவை. அதுவும் வேறு தருணத்தில் எம்.ஜி.ஆர். இந்திராவிடம் 1980-ல் தோற்றபோது தானே அத்தோல்வியை வரவழைத்தவர் என்ற மாயைக்கு உள்ளாகி மனிதர் அவரது மந்திரி சபையைக் கலைக்கச் செய்து பரிதாபகரமாக மண்ணைக் கவ்வினார். எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை அவர்தான் முதன்மந்திரி.

மற்றப்படி எம்ஜிஆர் பெயரை உபயோகித்துத்தான் ஜெயலலிதா பதவிக்கு வந்தார் என்பது உண்மையானாலும்,. கூர்ந்து பார்த்தால் கடைசி காலத்தில் எம்ஜிஆரே ஜெயலலிதாவை தவிர்க்கப் பார்த்திருக்கிறார். அவர் உயிருடன் இன்னும் சில காலம் இருந்திருந்தால் ஜெ பதவிக்கே வந்திருந்திருக்க முடியாது. இதுவும் நிஜமே.

12. அதிமுக உள்கட்சி தேர்தலில் குழம்பியுள்ள தொண்டர்களை மேலும் குழப்பவா?
பதில்: அதிமுகவில் உட்கட்சி தேர்தலா, அதுவும் சுதந்திரமான தேர்தலா? இது என்ன புதுக்கதை?

13. இவ்வளவு கரிசனம் உள்ள திமுக தலைவர் ஏன் எம்ஜிஆரை கடசியை விட்டு நீக்கினார்?
பதில்: அது அவர் தன் வாழ்நாளிலேயே செய்த பெரிய தவறு. அதற்கான விலை 13 ஆண்டுகளுக்கு மேல் வனவாசம். எம்.ஜி.ஆரை தோற்கடிக்கவே முடியாத அவரது ஆயாசம்.

14. அண்ணாவின் மறைவுக்கு பின்னால் நடந்த திமுக தலைவர் தேர்தலில் எம்ஜிஆரின் திடிர் அணி மாற்றம் உண்மையில் என்ன நடந்தது?
பதில்: நான் அறிந்தவரை முதலியார்களின் ஆதிக்கத்தை கட்சியில் தவிர்க்க அவர் எண்ணினார் என்பதே. மேலும் நெடுஞ்செழியனுக்கு கருணாநிதிக்கு இருந்த அளவுக்கு அடிமட்ட தொண்டர்கள் ஆதரவு அதிகம் கிடையாது.

15. இன்னும் எம்ஜிஆரின் ஓட்டு வங்கி அப்படியே உள்ளது என்ற தகவல்-தலைவரின் இந்தப் பேச்சு தொடர்பு உண்டா?
பதில்: எம்ஜிஆரையே பார்க்காத புதிய தலைமுறை வந்து விட்டது. இன்னமும் அவரது ஓட்டு வங்கியின் சதவிகிதம் அப்படியே இருக்கும் என நான் நம்பவில்லை.

14-01-2009 லிருந்து 13-01-2010 வரை நடந்த செயல்கள், சாதனைகள், குறைபாடுகள், பேச்சுக்கள், சாதனைகள், வெற்றிகள், சந்தித்த இடர்கள், குணநல மாற்றங்கள் இவற்றின் அடிப்படையில் இவர்களை ஒப்பிடுக?
16. திரு மோடி-திரு கருணாநிதி
பதில்: மலை-மடு. சாதனையாளரையும் வேதனையாளரையுமா கம்பேர் செய்வது?

17. திரு அத்வானி-திரு மன்மோஹன்சிங்
பதில்: அத்வானி பிரதமராக வந்திருந்தால் மற்றவர் மாதிரி பெயரளவுக்கே பிரதமராக எல்லாம் செயல் பட்டிருக்க மாட்டார்.

18. அதிபர்அனில் அம்பானி-அதிபர் முகேஸ் அம்பானி
பதில்: ஒரு முகேஷ் அம்பானி கிட்டத்தட்ட ரெண்டு அனில் அம்பானிக்கு சமமா இருப்பார் போல தோணறதே?

19. உலக நாயகன் கமல்-சூப்பர் ஸ்டார் ரஜினி
பதில்: திறமை-முகராசி

20. தேமுதிக வி.காந்த்-சமதா சரத்
பதில்: புள்ளிவிவர அலம்பல்-சித்தப்பா

21. சன்டீவி-கலைஞர்டீவி
பதில்: நிஜம்-பின் தொடரும் நிழல்

22. தமிழக அரசு-கேரள அரசு-நதிநீர் பிரச்சனை
பதில்: கெஞ்சல்-மிஞ்சல்

23. சீனா-இந்தியா-எல்லை பிரச்சனை
பதில்: மிஞ்சல்-கெஞ்சல்

24. முற்போக்கு பதிவர் “ர”-பிரபல பதிவர் “க”
பதில்: யார்-யார்???

25. டோண்டு-பெரியார் கொள்கை காக்கும் பதிவர்கள்
பதில்: மொழிபெயர்ப்பு - முழிபெயர்ப்பு

26. தமிழ்மணம் திரட்டி-தமிழிஷ் திரட்டி
பதில்: சீனியர் - ஜூனியர்

27. துணை முதல்வர் ஸ்டாலின் -மத்திய அமைச்சர் அழகிரி
பதில்: ராஜீவ் காந்தி - சஞ்சய் காந்தி

28. அமைச்சர் ராஜா-அமைச்சர் தயாநிதி
பதில்: ஒரே குட்டையில் ஊறிய எஃபக்ட்

29. சிபிஎம்வரதராஜன் -சிபிஐ தா.பாண்டியன்
பதில்: அவ்வளவா இருவர் பற்றியும் தெரியாது, ஆகவே ஒப்பிடல் இல்லை

30. சினிமா பழைய பிரபல சினிமா இயக்குனர்கள்-சாதனை புரியும் புது இளம் இயக்குனர்கள்
பதில்: திரைக்கதையில் கவனம் - தொழிற்நுட்பத்தில் அக்கறை

31. கனிமொழி கருணாநிதி - சசிகலா நடராஜன்
பதில்: சேர்த்துக் கொள்ளலாம் - கொள்ளலாகாது

32. பின்னுட்டபுயல்கள்-வால்பையன் -உ.தமிழன்
மற்றவர்கள் பதிவில் சரமாரியான பின்னூட்டம்-தனது பதிவில் பின்னூட்டங்களுக்கு சரமாரியாக தனிப்பட்ட முறையில் பதில்கள்


அனானி (17.01.2010 காலை 06.47-க்கு கேட்டவர்)
ஒரு கற்பனை.சோவும் டோண்டுவும் சந்தித்தால். சோ கேட்கும் கேள்விகளுக்கு டோண்டு என்ன பதில் சொல்லுவார். (மாலை 5 மணிக்கு சந்திப்பு என் ஏற்பாடு. நங்கநல்லுரிலிருந்து டோண்டுவின் கார் புறப்பட்டு சோவின் இல்லத்தை 0530க்குதான் அடைகிறது. பரஸ்பர நமஸ்காரம் தெரிவித்து பேட்டி ஆரம்பமாகிறது).

சோவின் கேள்விகள்:
1.வணக்கம். வழக்கம் போல் லேட்டா ஏன்?

பதில்: (பதில் உங்களுக்கு). கேட்கவே முடியாத கேள்வி. சோவுக்கு என் வழக்கம் என்னவ்ன்று தெரியாது. மேலும் எனது பலமே நேரத்துக்கு செல்வதுதான்.

2. துக்ளக் எத்தனை வருசமா படிக்கிறீங்க?
பதில்: நாற்பது ஆண்டுகளாக.

3. அதுலே உங்களுக்கு புடித்த பகுதி,பிடிக்காத பகுதி?
பதில்: கேள்வி பதில் அதிகம் பிடிக்கும், பிடிக்காததுன்னு ஒண்ணுமே இல்லை.

4. என்ன மாற்றம் செய்தால் பழைய சர்குலேசன் வரும்?
பதில்: இருக்கும் சர்குலேஷனுக்கு என்ன குறைவு?

5. துக்ளக் ஆண்டுவிழாவில் யாருமே துக்ளக் பற்றி பேசவில்லையே ஏன்?
பதில்: இல்லையே பேசினார்களே. ஒருவர் கூட இந்து மகாசமுத்திரத் தொடர் வரும் பக்கங்களில் காகிதத்தின் தரத்தை உயர்த்தினால் பைண்ட் செய்து வைத்துக் கொள்ளலாம் எனக்கூறினாரே.

6. இதுவும் கருணாநிதியின் சதியா?
பதில்: இதுக்கெல்லாம் அவருக்கெங்கே நேரம் இருக்கு? மானாட மயிலாட பார்க்கவே நேரம் போதவில்லையே.

7. உங்கள் பிளாக்கில் என்னப் பற்றிய தனிப் பதிவுகள் தொடராய் வந்தது முன்பு .இப்போது எழுதாதற்கு காரணம் உண்டா?
பதில்: எங்கே பிராமணன் பதிவுகள் எல்லாவர்றிலும் சோ என்னும் லேபலும் உண்டே.

8. எங்கே பிராமணன் தொடர் இரண்டுவுக்கு வரவேற்பு எப்படி?
பதில்: அற்புதமான சீரியல்.

9. இணையத்தில் அல்லது குறுந்தகட்டில் என் நாடகம் பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில்?
பதில்: இல்லை

10. அடுத்த துக்ளக் ஆண்டு விழாவில், அரசியல், நாடகம், சினிமா, சட்டத்துறை,
இதழியல்துறை, கம்பெனி நிதி நிர்வாகம் என மாறுபட்ட ஆறு கேள்விகள் கேட்கும் வாய்ப்பு கொடுத்தால் என்ன கேட்பீர்கள்?

பதில்: நான் கேட்க நினைக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். அது பின்வருமாறு: சமீபத்ட்ய்ஹில் 1972-ல் வெளிவந்த யாருக்கும் வெட்கமில்லை என்னும் நாடகத்தில் sita சட்டம் பற்றி கூறி அதன் குறையையும் குறிப்பிட்டிருந்தீர்கள். அதை வைத்து ஏதாவது பொதுநல வழக்கு போட இயலுமா?

ராமானுஜம்:
1. What about the long leftist rule by com jothi basu in west bengal?
பதில்: அது அந்த மாநிலத்தின் துர்பாக்கியம். தொழில்கள் எல்லாம் மேற்கு வங்கத்தை விட்டு ஓடச்செய்தது இந்த ஆட்சிதான்.

2.Who has prevented him from becoming p.m of Indian at that time?
பதில்: வேறு யார், அவருடைய மார்க்சிஸ்ட் கட்சியினரேதான். பிறகுதான் அவர்களுக்கு தாங்கள் செய்த மடத்தனம் பற்றி புரிந்தது. ஆனால் ஒன்று, நாட்டைப் பொருத்தவரை நல்ல மடத்தனம்.

3. It is repeatedly told by vaiKo that he is very close to jothi basu. is it true or political trick?
பதில்: க்ளொசாக இருந்தேன் என்கிறாரா அல்லது இருக்கிறேன் என்கிறாரா?

4.Will it be possible for left communists to regain the political strength in parliament in future in the light of changed feelings of indian people?
பதில்: இடது கம்யூனிஸ்ட்களுக்கு போக்கிடம் குறைவே. 2004-ன் நிலை அடிக்கடி திரும்ப வராது. அப்போது தங்கள பயங்காட்டலை அவர்கள் அளவுக்கதிகமாக செய்ததில் அவர்களுக்குத்தான் நட்டம். இப்போது அந்த சௌகரியமான நிலை கிடைக்காது. கண்டிப்பாக அவர்கள் பி.ஜே.பி.யிடம் செல்ல இயலாது. காங்கிரசுடனும் சுமுக உறவு இல்லை.

5. Because of left support the bank employees' unions are achieving all high demands (When pension is denied for government employees, the same is allowed to bank staff and they can give revised option for pension. This benefit is extended to retired people also) form government of india by simple one or two day strike.Why it is not possible for others who is also backed by these communists?
பதில்: வங்கிகளின் நிலைமையே வேறு. முதற்கண் வீ.ஆர்.எஸ். மூலம் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டது. மேலும், வங்கிகள் பணம் செய்யும் மையங்கள். மற்ற அரசு துறைகள் (உதாரணம் மத்தியப் பொதுப்பணித் துறை) பணம் செலவழிகும் மையங்கள். ஆகவே இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. வங்கி யூனியன்கள் முதலிலிருந்தே விழிப்பாகச் செயல்பட்டு வந்துள்ளன. ஆகவே நீங்கள் சொல்வது வியப்பளிக்கவில்லை.

மற்றப்படி அரசு ஊழியர்களுக்கு பென்சன் மறுக்கப் படுகிறதா? இது என்ன புதுக்கதை?

கந்தசாமி
1. தொழிற்சாலைகளுக்கு மாலை நேரத்தில் கூடுதல் கட்டணத்தில் மின்சப்ளை -ரயில்வே தத்கால் மாதிரியா!
பதில்: இந்திய மின்சார விதிகள்படி இது செல்லுமா எனத் தெரியவில்லை. அவ்வாறு அதிகக் கட்டணம் வசூலிக்க வழிமுறை ஒன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை. நிற்க. மின்சாரம் ஒழுங்காக தர வக்கில்லாதவர்களெல்லாம் ஆட்சிக்கு வந்தால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.

2. அறுவடை இயந்திரத் தரகர்களால் சம்பா நெல் விவசாயிகள் பாதிப்பு -தரகனும் பிழைக்கவேணாமா!
பதில்: ஏன் கூடாது, மிகப்பெரிய தரகனான அரசியல்வாதியே பிழைக்கும்போது சின்னத் தரகன் ஏன் பிழைக்ககூடாது?

3. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வெற்றிடம்: ஜெயலலிதா-அதிமுக வழியிலா!
பதில்: ஏற்கனவேயே அதிக அளவில் வெற்றிடங்கள் இருக்கும் அந்த இயக்கத்தில் புதிதாக என்ன வந்து விட்டது?

4. மதவாதத்துக்கு எதிராக போராடியவர்: சோனியா இரங்கல் -இந்த டயலாக்க விடமாட்டார்களா!
பதில்: மேற்கு வங்கத்தை பொருளாதாரப் படுகுழியில் தள்ளியவர் என்பதையும் சேர்த்து சொல்ல வேண்டும்.

5. அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட நரசிம்ம ராவ் வகுத்த ரகசிய திட்டம்!-வெறும் வாய்க்கு அவலா!
பதில்: ராமர் கோவிலும் வேண்டாம், மசூதியும் வேண்டாம், நைட்கிளப் அங்கு ஆரம்பியுங்கள் ஓகோன்னு வரும்னு ஒரு உள்ளூர்க்காரர் கூறியதாக சமீபத்தில் 1993-ல் படித்தது நினைவுக்கு வருகிறது.

6. ஜோதி பாசுவின் கை நழுவிய பிரதமர் பதவி! -கைக்கு எட்டியதை தட்டி விட்டது யாரு!
பதில்: இதே பதிவில், மேலே உள்ள கேள்வி ஒன்றில் இதற்கான பதில் வந்து விட்டது.

7. மூன்றரை ஆண்டு டாக்டர் படிப்பு: மத்திய அரசு விரைவில் அறிமுகம் -ஷார்ட் கட் டாக்டரா!
பதில்: ஏதாவது எல்.எம்.பி. படிப்பாக இருந்து தொலைக்கப் போகிறது.

8. ரிசர்வ் வங்கிக்கு பெண் கவர்னர்: பிரணாப் - இனி எல்லாம் சக்தி மயமா!
பதில்: இது என்ன பெண்கள் வகிக்கக்கூடாத பதவியா என்ன?

9. சப​ரி​மலை உண்​டி​யல் வசூல் ரூ.119 கோடி - நல்ல வேளை கோவில் கேரளத்தில் இருக்கு!
பதில்: தமிழகத்தில் நான்கைந்து பங்குகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.

10. ஏழைகள் மீது அக்கறை காட்டும் நிதிக் கொள்கைகள் தேவை: மன்மோகன் சிங் - இப்படி பேசவாவது செய்தால் தானே வண்டி ஓடும்!
பதில்: வழக்கமாக உலகெங்கும் அரசியல் வாதிகள் பேசுவதுதான், இதிலென்ன அதிசயம்?

அடுத்தவாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/20/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 18 & 19)

எபிசோட் - 18 (18.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
தாய் தந்தையரை துக்கப்படுத்தக் கூடாது எனக் கூறாத வேதமும் வேதமா என சிங்காரம் கேட்கும் கேள்வியை ஆமோதிக்கிறார். சோவின் நண்பர்.

சோ பேச ஆரம்பிக்கிறார். யுத்தத்தில் போர் செய்யும் வீரன் வீர சொர்க்கம் அடைந்தாலும் அவன் தாய் தந்தையர் வருந்தத்தானே செய்கின்றனர்? அப்போது படையில் சேரவே கூடாதா? தாய் தந்தையரை வருத்தினாலும் சில உயரிய கடமைகளை ஒருவன் செய்ய நேரிடும்போது அதற்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது. மாதா, பிதாவுக்கு அப்புறம்தான் குரு வருகிறார். இருப்பினும் ஒரு மாணவன் ஞானப்பாதைஅயை தேடும் நிலை வரும்போது அவன் குரு சொல்லும் வழியில்தான் செல்ல வேண்டும். பெற்றோரால் ஞான தரிசனம் தம் மகனுக்கு செய்விக்க இயலாது.

அசோக்கின் விஷயத்தில் அவனது பெற்றோர்கள் அவனை கட்டுப்படுத்தும் நிலை கடந்து விட்டது. ஆனாலும் தாயின் ஸ்தானம் எப்போதுமே காக்கப்பட்டுள்ளது. பெற்றோரைத் தவிர தன் பூர்வாசிரம் உறவினர்கள் யார் இறந்தாலும் ஸ்நானம் செய்ய வேண்டியதில்லை சன்னியாசி. அவன் தந்தையே அவனை வணங்க வேண்டிய நிலை வந்தாலும், அவன் தாயை அவன் வணங்கியே ஆக வேண்டும். ஆக, எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று முடிக்கிறார் சோ.

சிங்காரத்துடன் தனது பேச்சை தொடருகிறான் அசோக். அன்றொரு நாள் கடற்கரையில் சிங்காரம் தனக்கு அவனையறியாமல் உபதேசம் செய்ததை அவனுக்கு எடுத்துரைக்கிறான். அவனது அந்த உபதேசத்துக்கு பிறகுதான் தனது தேடுதல் துவங்கியது என்றும் கூறுகிறான். சிங்காரத்துக்கு எதுவும் புரியவில்லை. இருப்பினும் அசோக் தன்னுடன் வீட்டுக்கு வரவேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறான்.

வேதம் படிக்கும் அசோக்கை தொந்திரவு செய்வதாக சாம்பு சிங்காரத்தை கண்டிக்கிறார். வெறும் புத்தகம்தானே அதை எப்போ வேணும்னாலும் படிச்சுக்கலாமே என சோவின் நண்பர் கேட்கிறார்.

அதுவே தவறு என்கிறார். வேதம் என்பது காதால் கேட்டு வருவது. அப்போதுதான் ஸ்வரம் மாறாமல் அவற்றை ஓதவியலும். தான் ஏற்கனவே பல முறை சொன்னது போல, அசோக் செய்யும் இக்காரியமும் அரைகுறையானதுதான் என சோ கூறுகிறார். பிறகு வேத அத்தியயனம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் அவர் விளக்குகிறார்.

இப்போது சாம்புவுடன் வாதம் செய்யும் சிங்காரம் வசுமதி அவரை பூஜை செய்ய வரவேண்டாம் எனக்கூறிவிட்டதை சொல்லிவிட, அசோக் திடுக்கிடுகிறான். சிங்காரம் சென்றபிறகு சாம்புவிடம் இது பற்றி விசாரித்து உண்மையை அறிந்து கொள்கிறான். தனது தந்தைக்கு இது அவசியம் தெரிய வேண்டும் என்று அவன் கூறிவிட்டு நாதனை சந்திக்க அவரது அலுவலகம் செல்கிறான்.

முதலில் அசோக்கை அலுவலகத்தில் வைத்து சந்திக்கத் தயங்கும் நாதன் பிறகு அவனை உள்ளே அனுமதிக்கிறார். அசோக் சாம்பு சாஸ்திரிகளை அவனது அன்னை அவமானம் செய்ததைக் கூறுகிறான். இந்த விஷயத்தைத் தான் அன்றுதான் சிங்காரத்திடமிருந்து தெரிந்து கொண்டதையும் கூறுகிறான். அவரது பிழைப்புக்கு உலை வைத்தது பற்றி நியாயமும் கேட்கிறான். வசுமதி செய்தது தவறு என நாதனும் ஒத்துக் கொள்கிறார். தான் ஆவன் செய்வதாகவும் கூறுகிறார்.

பிறகு அவனது குருகுலவாசம் எவ்வாறு போகிறது என்பது பற்றியும் கேட்கிறார். மிகவும் மனவமைதி தருவதாக அது உள்ளது என்பதை அசோக் விளக்குகிறான். வாழ்க்கையின் எளிமையான பல விஷயங்கள் புதிய கருவிகளால் செயற்கையாக்கப்பட்டதையும் உதாரணங்களுடன் விளக்குகிறான்.

இதற்காக புதிய கண்டுபிடிப்புகளை குறை சொல்லலாமா என சோவின் நண்பர் ஆதங்கப்பட, பல கண்டுபிடிப்புகள் ஏற்கனவே நமது புராணங்களில் உண்டு என்பதை சோ அவர்கள் வேறு உதரணங்களுடன் விளக்குகிறார்.

நாதன் விடாமல் ஆர்க்யூ செய்தாலும், அசோக் எல்லா வாதங்களையும் அனாயாசமாக எதிர்கொள்கிறான். பிறகு சாம்பு சாஸ்திரிகளை மறுபடியும் பூஜைக்கு கூப்பிட வேண்டும் என்றும், அதனால் ஒரு வைதீக குடும்பம் பிழைக்கும் என்றும் கூறுகிறான். அவ்வாறு செய்யப்படும் பூஜா பலன்கள் நாதனின் குடும்பத்துக்கு கிட்டும் என்பதையும் அவன் கூறிவிட்டு அவரிடமிருந்து விடை பெற்றுச் செல்கிறான்.

நாதன் அசோக்கைக் குறித்து குழப்பமான யோசனைகளில் ஆழ்கிறார்.

(தேடுவோம்)

எபிசோட் 19 (19.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
வீட்டுக்கு வரும் நாதன் வசுமதியுடன் வாதம் புரிகிறார். அவள் தன்னிடம்கூட சொல்லாமல் அவரை பூஜைக்கு வரக்கூடாது என நிறுத்தியதை குறை கூறுகிறார். வசுமதியும் தான் செய்ததே சரி என வாதிடுகிறாள். அவள் தானே போய் சாம்புவை அழைத்துவரப்போவதாக அவர் கூறிவிடுகிறார். வசுமதி பொருமுகிறாள்.

கோசாலைக்கு செல்லும் அசோக் வேம்பு சாஸ்திரிகளின் வீட்டின் வழியாக செல்ல, அவர் மனைவி சுப்புலட்சுமி அவனை உள்ளே அழைக்க அவனும் செல்கிறான். தனது கணவர் அவனை சீண்டிவிட்டதால்தானே அவன் இவ்வாறு கோலம் பூண்டான் என அவள் ஆதங்கப்பட, அவன் லட்சுமணன் கோட்டை சீதை தாண்டாமல் இருந்தால் ராமாயணமே நடந்திருக்காது என சிலர் சொல்வது போல இருக்கிறது என புன்னகையுடன் கூறுகிறான்.

இது பற்றி சோவின் நண்பர் பிரஸ்தாபிக்க, வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம் துளசி ராமாயணம் ஆகிய எந்த ராமாயணத்திலும் லட்சுமணன் ரேகை என ஒரு நிகழ்ச்சி நடந்ததாகக் கூறப்படவே இல்லை என ஒரே போடாக போடுகிறார். பிறகு சீதையின் அபகரிப்பு பற்றி இந்த மூன்று ராமாயணங்களும் என்ன கூறின என்பதையும் சுருக்கமாகக் கூறுகிறார்.

வேம்புவின் மனைவியும் அவரது தமக்கையும் அசோக்குடன் மேலே பேசுகின்றனர். தனது தம்பி செய்தது தவறுதான், ஆனால் அதற்காக அசோக் இந்தக்கோலம் பூண்டது தனது மனதை புண்படுத்துகிறது எனக்கூறும் அவரது தமக்கை அசோக் பேசாமல் எல்லாவர்றையும் விட்டுவிட்டு தனது வீட்டுக்கு செல்வானா எனக் கேட்கிறாள். கங்கையைப்போய் கங்கோத்ரிக்கே திரும்பச் சொல்லவியலுமா என அசோக் திருப்பிக் கேட்கிறான். தான் வேம்பு மாமாவிடம் இது குறித்து பேசி விட்டதாகவும், அவர் மேல் எத்தவறும் இல்லையென்றும் கூறி விட்டு அசோக் அவர்களிடமிருந்து விடை பெறுகிறான்.

சாம்புவின் வீட்டுக்கு நாதன் வருகிறார். அசோக் சாம்புவின் வேட்டியை துவைத்து கொடியில் காயப்போட்டு கொண்டிருப்பதை பார்த்து திகைக்கிறார். அவனுடன் குரு சிஷ்ய உறவு பற்றி கேள்விகள் கேட்டு பதில்களும் பெறுகிறார்.

பிறகு வீட்டுக்குள் சென்று சாம்புவுடன் பேசி தனது மனைவி செய்த காரியத்துக்கு மன்னிப்பு கேட்கிறார். மறுபடியும் அவர் பூஜைக்கு வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார். முதலில் தயங்கும் சாம்பு அவரது மனைவியும் அவர் நாதன் கூறுவதை ஏற்கவேண்டும் எனக்கேட்டுக் கொள்ள சம்மதிக்கிறார்.

நாதன் கார் செல்லும் தெருவில் அசோக் ஒரு வீட்டில் பிட்சை எடுப்பதை சிங்காரம் அவருக்கு காட்டுகிறான். அசோக்கின் கண்ணில் படாமல் காரை திருப்பிச் செல்லுமாறு நாதன் அவனிடம் கூற, காரும் அதே போல செலுத்தப்படுகிறது.

(தேடுவோம்)


சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/15/2010

துக்ளக் ஆண்டுவிழா கூட்டம் 14.01.2010 பகுதி - 3

இப்போது பேச வேண்டியது சோவின் முறை. எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்தோம். பை தி வே சோவின் இம்முறைக்கான செயல்பாடு பற்றி நான் பஸ்ஸில் வீடு திரும்பும்போது மீட்டிங்கிற்கு வந்தவரோடு பேசினேன். சோ இவ்வாறு நான்கு பேரை அதிகமாகப் பேசச் செய்ததால் ஒரு மணி நேரம்போல அதிகமானதை குறை கூறினேன். ஆனால் அவர் ஒரு விஷயம் சொன்னார், சோவால் இப்போதெல்லாம் விடாமல் பேச இயலவில்லை, ஆகவே அவருக்கு ஓய்வு தரும் நோக்கமும் இதில் உண்டு என்றார். மனதுக்கு கஷ்டமாக இருந்தது. சோவைப் போன்றவர்கள் இன்னும் பல ஆண்டுகள் செயலாக இருக்க வேண்டும். அந்த மனிதர் கூறுவது தவறாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.

பழகருப்பையாவை சிலாகித்து பேசியதும் சோ அவர்களது சம்மிங் அப் ஆரம்பித்தது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என இருவர் மட்டுமே களத்தில் இருக்கும்போது நமக்கு என்ன சாய்ஸ் என அவர் கேட்டார். விஜயகாந்த் தேறுவார் என்பது யதார்த்த நிலையை அலட்சியம் செய்வதற்கு சமம் என்றார்.

முருகன் குறிப்பிட்டது போல ஜனங்களும் கரப்ட் ஆகிவிட்டனர் என்பது கவலைக்குரியதே. விஜயகாந்தை முன்னர் ஆதரித்த பத்திரிகைகள் இப்போது அவரை ஆதரிப்பதில்லை. என்னவோ விஜயகாந்த் நிலையில் சரிவு ஏற்பட்டது போன்ற தோற்றம் இப்போது தரப்படுவது தவறே. அவர் அப்படியே இருக்கிறார். அவர் பற்றிய முந்தைய மதிப்பீடுகள்தான் அதிகப்படுத்தி கூறப்பட்டன என்றார். இப்போது திமுகாவுக்கு மாற்று வேண்டுமா வேண்டாம என அவர் கேட்ட போது வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழுந்தன. அப்படியானால் ஜெயலலிதாதான் மாற்று என்றார் அவர்.

கருணாநிதி மேற்கொள்ளும் சுயபுகழ்ச்சி முயற்சிகள் காணச் சகிக்கவில்லை. எங்கிருந்து பாராட்டு வந்தாலும் ஆவலுடன் ஓடுகிறார். அரசியல் நிர்ப்பந்தங்களுக்கேற்ப அவரது செயல்பாடுகள் உள்ளன. முல்லை பெரியார் அணை நிலை பற்றி மீட்டிங் போட நினைத்ததும் ராசா மேல் சி.பி.ஐ. ரெயிட் வந்தது. உடனே தனது போராட்டத்தைக் கைவிட்டார்.

சாதி அரசியல் தலைவிரித்தாடுகிறது. ஜெயலலிதா எம்ஜிஆர் படப்பாடலான “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” அடிகளை பாடிய போது வெட்கமேயின்றி அதில் வரும் தலைவன் சொல் தன்னைக் குறிக்கிறது என்றார். அது அண்ணாவை குறிக்கிறது என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். நல்ல வேளையாக “திருடாதே பாப்பா திருடாதே” என ஜெ பாடியிருந்தால் அதுவும் தன்னைத்தான் குறிக்கிறது என அவர் மயங்கியிருப்பார் என்றார்.

ஆலடி அருணா வழக்கில் விடுதலையானவர்களுக்கு எதிராக அரசு அப்பீல் செய்து இரட்டை ஆயுள் தண்டனையை வாங்கித் தரமுடிந்தது. ஆனால் தினகரன் எரிப்பு மற்றும் கொலை வழக்கில் அத்தனை குற்றவாளிகளுமே விடுதலையாக, அரசு அப்பீல் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது.

தமிழீழ விஷயத்தில் அவர் அடித்த ஸ்டண்டுகளையும் அவர் பட்டிலலிட்டார். சேது விவகாரத்தில் ராமர் பற்றி கூச்சமே இன்றி மாற்றி மாற்றிப் பேசுகிறார். பஸ் டெர்மினசுக்கு அவரது பெற்றோர் பெயரை வைக்க அவர்கள் என்ன தியாகம் செய்தார்கள் எனக்கேட்டால், தன்னையே நாட்டுக்காக தியாகம் செய்தார்கள் என கூறுகிறார்.

சிறுதொழில்களுக்கு அளித்த முன்னுரிமைகளை அவர் விலக்கிக் கொள்ள, அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அவற்றை மீண்டும் அளித்தார். ஜெ காலகட்டத்தில் தொழிற்துறையில் முன்னேர்றம் ஏற்பட்டது. இப்போது அதெல்லாம் இல்லை.

பீஹார், ஜார்க்கண்ட் ஆகிய பின்தங்கிய மாநிலங்களின் வளர்ச்சி விகிதம் தமிழகத்தை விட அதிகமாக இருப்பது நமக்கு வெட்கக்கேடு என்றார். காங்கிரஸ் ஆதரவு இருக்கும் வரையில் திமுகவின் ஒட்டுக்கலாச்சாரத்தை ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

ஜெயலலிதா கூட்டணி கட்சிகளுடன் சரியாக மூவ் செய்வதில்லை என ஒருவர் அரங்கத்திலிருந்து கூற, கருணாநிதியின் ரிகார்ட் மட்டும் என்ன வாழ்ந்தது என்றார். அரசியல்வாதிகளில் தான் பாராட்டும் நிலையில் ராஹுல் காந்தி மட்டுமே இருக்கிறார் என்பதையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு போனார்.

தமிழகத்தையே தனது குடும்பத்தாரிடம் பங்குபோட்டு தந்த கருணாநிதியின் ஆட்சி போக வேண்டியதே என்றார். ஆகவே அதிமுகவுக்கே வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தை சிறப்பாக நடத்த உதவிய எல்லோருக்கும் நன்றி கூறினார். பிறகு தேசீய கீதம் பாடப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

துக்ளக் ஆண்டுவிழா கூட்டம் 14.01.2010 பகுதி - 2

நான் ஏற்கனவேயே சொன்னமாதிரி நான்கு நிபுணர்களையும் சோ அவர்கள் நான்கு பொருட்கள் பற்றி பேசச்சொன்னார். இதனால் என்ன ஆயிற்றென்றால் சாதாரணமாக இர்ண்டு மணிநேரத்தில் முடிந்திருக்க வேண்டிய கூட்டம் மூன்று மணிகளுக்கு மேல் எடுத்துக் கொண்டது. கூட்டம் முடியும்போது இரவு ஒன்பதரைக்கு மேல் ஆகிவிட்டது. அதன் பிறகு நங்கநல்லூருக்கு போக வேண்டும் என்றதில் சற்றே டென்ஷன் ஆனது.

செல்பேசியை எடுத்துச் செல்லவில்லை, போலிசார் அதை வெளியே வைடா என்றால் என்ன செய்வது என்ற பயம். வீட்டம்மாவுக்கும் என் மகளுக்கும் காய்ச்சல் வேறு. நான் மீட்டிங்கிற்கு போவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தபோது வீட்டம்மா தைரியம் கொடுத்து போகச் சொன்னார். எது எப்படி இருந்தாலும் டென்ஷன் டென்ஷனே. வீடு திரும்பும்போது இரவு பத்தேமுக்கால் தாண்டி விட்டது. ரொம்ப களைப்பாக இருந்ததால் அப்படியே படுத்துத் தூங்கிவிட்டேன், சில மெயில்களை பார்த்த பிறகு.

இன்று காலையிலிருந்து எனக்கும் கணகணவென காய்ச்சல் அடிக்கிறது. ஆகவே இன்றைய வேகமும் குறைவு பட்டது.

வக்கீல் விஜயன் பேச்சு:
முப்பதாண்டுகளாக பிராக்டீஸ் செய்யும் அவர் தனது தனிப்பட்ட அப்சர்வேஷன்களையே உபயோகித்து பேசினார். தனது பிராக்டீஸ் 1978-ல் ஆரம்பித்தது என்றும், முதல் பத்தாண்டுகளுக்கு யார் நீதிபதியாக இருந்தாலும் கவலை இன்றி அவர் முன்னால் வாதம் புரிந்திருக்கிறார். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சம்பந்தப்பட்ட நீதிபதியின் விருப்பு வெறுப்புக்களை பார்த்து வாதம் புரிய வேண்டியிருந்தது. கடைசி பத்தாண்டிலோ நீதியைத் தவிர வேறு விஷயங்களே தீர்ப்புகளை தீர்மானிக்கின்றன என்றார்.

வழக்கறிஞர்களில் பத்து சதவிகிதம் பேர் அடாவடி செய்து மிகுதி 90 சதவிகிதம் மௌனமான மெஜாரிட்டிக்கு கெட்ட பேர் வாங்கித் தருகின்றனர். 1980-லிருந்து சட்டத்தை நிலைநிறுத்தும் தீர்ப்புகளுக்கு பதில் சமரச தீர்ப்புகளே வருகின்றன. நீதிபதிகளின் தேர்வில் இடஒதுக்கீடு இல்லையென்று கூறப்பட்டாலும் அது இப்போது கோரப்படுகிறது என்றார் விஜயன். அது கூடவே கூடாது என சொன்னவர் காமராஜர். ஆனால் மருத்துவர் ராமதாஸ் தனது சாதியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு நீதிபதிகள் என்ற ரேஞ்சில் பேசுகிறார்.

நீதித்துறை நேர்மையாக இருக்க வேண்டுமெனில் வக்கீல்கள் திருந்த வேண்டும். இந்த ஆண்டு துவக்கத்தில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட வக்கீல்கள் மேல் ஒரு ஆக்‌ஷனும் இல்லை. இப்போது நீதிபதிகளும் சொத்துக் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதிர்க்கப்படுகிறது. பார் கவுன்சில் சுத்தப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதில் வரும் தேர்தல் ஊழல்கள் சொல்லி மாளாது.

விஜயன் எதிர்க்கொண்ட அராஜக தாக்குதல் பற்றி சோ குறிப்பிட்டார். இருப்பினும் அவர் தொடர்ந்து செயல்பட்டார், அது பாராட்டுக்குரியது என்றார்.

ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அது வரை அமர்ந்திருந்த சோ அவர்கள் மைக் அருகில் சென்ற ஒரு நிமிடத்துக்குள் அவரவர் பேச்சை முடித்து கொண்டது ஆறுதலாக இருந்தது. அப்படியும் இட்லிவடை பதிவில் உள்ள ஆடியோ டேப்பின்படி குருமூர்த்தியும் பழ கருப்பையாவும் சேர்ந்து 33 நிமிடங்களுக்கு மேலே பேசியுள்ளனர். பேச்சுகள் நன்றாக இருந்தாலும் நேற்று அவை கால அட்டவணையில் பொருந்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சோ இதை அடுத்த ஆண்டு கூட்டங்களில் தவிர்ப்பார் என நம்புகிறேன்.

முருகன் அவர்கள் பேச்சு
முருகனின் தைரியம் பற்றியும் சோ அவர்கள் சிலாகித்தார். முருகன் அவர்கள் தனது வேலைகாலத்தில் நடந்த விஷயங்களை பட்டியலிட்டார். ஆனால் அவை இப்போது புறக்கணிக்கப்படுகின்றன. அரசு ஊழியர்களிடம் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் சுத்தமாகவே இல்லை.

நிர்வாகத் துறை நன்றாக இருந்தால், அரசியல் அமைச்சரவைகள் அடிக்கடி கவிழ்ந்தாலும் நாட்டின் நிர்வாகம் நன்றாகவே நடக்கும் என்பதற்கு அவர் பிரான்சின் உதாரணத்தை எடுத்து கொண்டார். கனடாவிலிருந்து வந்த ஒருவர் தான் வாங்கிய நிலத்தை விற்க முயன்றபோது முந்தைய சொந்தக்காரர் அரசுக்கு பாக்கியாக 9000 வைத்திருக்க, இவருக்கு வில்லங்கம் சான்றிதழ் கிடைக்கவில்லை. அந்தத் தொகை, அதற்கான வட்டி ஆகியவை சேர்ந்து ஐம்பதாயிரத்துக்கு வந்திருக்க, அதைக் கட்டுவதாக இவர் கூறினாலும், அரசு அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. அதற்கு பதிலாக அதே தொகையை லஞ்சமாக கொடுத்திருந்தால் ஒரு நொடியில் வேலை முடிந்திருக்கும் என்று முருகன் குறிப்பிட்டார்.

சாவு சான்றிதழ் இறந்தவர் பெயரை ஒரு குமாஸ்தா தவறாகக் குறிப்பிட்டதால் கிடைக்காமல் போன கதையையும் அவர் சொன்னார்.

தான் வேலையில் இருந்தபோது சர்ப்ரைஸ் செக் எல்லாம் செய்ததாகவும் இப்போது யாரும் அதை செய்வதில்லை எனவும் அவர் கூறினார். ஒரு தபால் வந்தால் அதை எப்படி திறக்க வேண்டும் என்பதற்கெல்ல்லாம் விதிமுறைகள் இருக்க அவை இப்போது அலட்சியம் செய்யப்படுகின்றன என்றார் அவர்.

ஒவ்வொரு அலுவலகத்திலும் புரோக்கர்கள் ராஜ்ஜியம்தான் நடக்கிறது என்றார். நெல்லையில் ஒரு எஸ்.ஐ. அடிப்பட்டு தெருவில் கிடந்தபோது இரு மந்திரிகள் அதை வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்திருக்கின்றனர். தனது கால கட்டத்தில் அதற்கே enquiry வைப்பார்கள் என முருகன் கூற, இப்போது கூட அது நடக்கும், ஆனால் வீடியோ எடுத்து எல்லாவற்றையும் வெட்டவெளிச்சம் ஆக்கியது யார் என்ற ரேஞ்சில்தான் அது இருக்கும் என சோ கிண்டலாகக் கூறினார்.

ட்யூடி சார்ட்படி போலீசார் செல்லாது விளங்காத வி.ஐ.பி.களுக்கு பந்தோபஸ்துக்கே எல்லோரும் பயன்படுத்தப்படுகின்றனர். இப்போது நடந்த இந்த நிகழ்ச்சியை கூறினால் மகாமகம் குளம் விஷயத்தை எடுத்து ஜேயை குறை கூறுகின்றனர். அதுவும் கண்டிக்கத்தக்க செயலே என்பதை சோ ஒத்துக் கொண்டார்.

குருமூர்த்தி பேச்சு
சோ முதலிலேயே தன்னை பொருளாதாரம் பற்றி மட்டும் பேசும்படி கேட்டு கொண்டார் என குருமூர்த்தி கூறினார். இப்போது சென்செக்ஸ் பழைய குறியீட்டு எண்ணில் இருப்பதை காட்டி பொருளாதார ரிகவரி வந்து விட்டது எனப் பேசுவது அபத்தம் என்றார். அவர். பிரச்சினை அமெரிக்காவிலிருந்து ஆரம்பிக்கிறது. நமது நாட்டில் இருப்பதுபோல குடும்ப சேமிப்பு அங்கு ஊக்குவிக்கப்படவில்லை என அவர் கூறினார். குடும்பப் பொறுப்புகளை அரசே ஏற்றுக் கொண்டதால் அரசு நடத்துவது தனியார்மயமாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். டெர் ஷ்பீகல் (Der Spiegel) என்னும் ஜெர்மானிய வாரப்பத்திகை ஐந்து பொருளாதார நிபுணர்களை இச்சரிவு பற்றி கேட்டதற்கு நோபல் பரிசு பெற்ற அந்த ஐவரும் ஒருமித்தக் கருத்தை கூறவில்லை. இதற்கு என்ன செய்யலாம் என்பதற்கும் தெரியாது என்றே பதில் வந்தது என்றார். பிரச்சினை பொருளாதாரச் சரிவா அந்த பொருளாதார விஞ்ஞானத்தின் சரிவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அமெரிக்கா தனது தவறுகளைத் திருத்திக் கொள்வதாகத் தெரியவில்லை. அவர்கள் இன்னும் கடன் வாங்குவதிலேயே உள்ளனர் எனவும் அவர் கூறினார். இந்தியாவுக்கு அயல்நாட்டு முதலீட்டு தேவை இல்லை என தான் 1993 வாக்கில் சொன்னபோது எல்லோரும் தன்னை தேசத் துரோகி போல பார்த்தார்கள், ஆனால் இப்போது பார்த்தால் நமது தொழில் மேம்பாட்டில் அன்னிய முதலீடுகள் 2 சதவிகிதமே பங்கு வகிக்கின்றன. பாக்கி 98% இந்தியர்களின் சேமிப்பிலிருந்தே வருகின்றன.

இந்த அழகில் நாம் அமெரிக்காவை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எதனால் இத்தனை பிரச்சினைகள் வந்தனவோ, அதையே தீர்வாகக் கொள்வது மதியற்றச் செயல். நமது பொருளாதாரம் நமது செமிப்புகளால் அதிகம் பாதிக்கப்படாமல் உள்ளது. அதை நாம் மறக்கலாகாது.

குருமூர்த்தியின் பொருளாதார அறிவை சோ அவர்கள் சிலாகித்து பேசினார். அவருடன் தனக்கு பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரது தேசபக்தி சந்தேகத்துக்கப்பாற்பட்டது என்றார் அவர்.

பழகருப்பையா பேச்சு:
நான்கு பேச்சுகளில் இதற்குத்தான் கலகலப்பு அதிகம். அவரது தனித்தமிழையும் சோ நட்புரீதியாக கலாய்த்தார்.

தனது சோவுடனான 40 ஆண்டுகள் பரிச்சயம் பற்றி பேச ஆரம்பித்த வர் பல உதாரணங்களை அடுக்கினார். கருணாநிதிக்கு எதிராக அவர் ஒற்றை மனித எதிர்க்கட்சியாக செயல் படுகிறார் என்றார். கருணாநிதியும் எழுச்சியும் சோவின் எதிர் எழுச்சியும் ஒரே கோட்டில் இருக்கிறது என்றவுடன் ஒரே சிரிப்பு. தீமை அதிகமாக ஆக, அதை எதிர்க்கும் சோவின் பெருமையும் அதிகரிக்கும். காந்தி அரசியலுக்கு இளைஞர்களை அழைத்தபோது யோக்கியர்கள் வந்தார்கள், அயோக்கியர்கள் வரவில்லை. ஆனால் இப்போது கருணாநிதி அதையே செய்யும்போது நேரெதிராகவே நடக்கிறது.

மதுரை மீனாட்சி கோவிலில் செருப்பு பாதுகாக்கும் வேலைக்கு டெண்டர் போடுவது போல பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனமும் அதே போல டெண்டர் போடும் வேலையாயிற்று. தான் கடந்த சிலமாதங்களாக துக்ளக்கில் எழுதுவதை தனது தந்தை பார்க்க உயிருடன் இல்லை எனவும் அவர் குறைபட்டார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் கருணாநிதியை எதிர்க்க கன்ணதாசன், ஜெயகாந்தன் மற்றும் சோ பேனா எடுத்தனர். இப்போது ஜெயகாந்தனின் பேனா முறிந்து விட்டது என்றதுமே ஒரே சிரிப்பு. ஆனால் அதுவே நாற்பதாண்டுகளுக்கு முன்னால் முறிந்திருந்தால் வைரமுத்து ரேஞ்சுக்கு அவர் ஓகோன்னு இருந்திருப்பார என்று மேலும் கூற சிரிப்பு அதிகரித்தது. சோவின் பேனா மட்டுமே முறியவில்லை என்றார் அவர்.

பழகருப்பையாவின் தனித்தமிழை கலாய்த்தது தனது இயலாமையாலேயே என சோ ஒத்து கொண்டார்.

சோ அவர்களது பேச்சு அடுத்தப் பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது