6/30/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 109 & 110)

எபிசோடு 109 (28.06.2010) சுட்டி - 2
அசோக்கை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்னும் நோக்கத்திலேயே வக்கீல் கடைசியாக அந்த அஸ்திரத்தைப் பிரயோகம் பண்ணவிருக்கிறார், எல்லாமே நல்லபடியாக முடியும் என நாம் நம்புவோம் என நீலகண்டன் கூற, அந்த பிரும்மாஸ்திரத்துக்கு தனது நமஸ்காரம் என காதம்பரி கூறியதைக் கேட்கும் சோவின் நண்பர் பிரும்மாஸ்திரம் பாக்கி எல்லா அஸ்திரங்களிலும் பெரிதா என்னும் கேள்வியை வைக்கிறார்.

அந்த மாதிரி பொது புத்தியில் அமைந்து விட்டது என சோ கூறுகிறார். ஆனால் இன்னும் பல அஸ்திரங்கள் உள்ளன. உதாரணத்துக்கு நாராயணாஸ்திரம். அது பிரும்மாஸ்திரத்தை விடவும் பெரிது எனக்கூறாவிட்டாலும் அது பற்றிய வர்ணனைகள் அவ்வாறு நினைக்கவும் தூண்டலாம். அதே போல பிரும்மசிரஸ் என்ற இன்னொரு அஸ்திரமும் இருக்கிறது. அதை செலுத்தினால் அணு ஆயுதப்பிரயோகத்தின் அத்தனை கெட்ட பலன்களும் விளையும் என்பதும் கூறப்பட்டுள்ளது என்றெல்லாம் கூறும் சோ உதாரணமாக அஸ்வத்தாமனும் அருச்சுனனும் ஒருவரையொருவர் அழிக்கவிட்ட அந்த பிரும்மசிரஸ் அஸ்திரம் சம்ப்பந்தமாக இன்னும் கூறுகிறார்.

சிறையில் அசோக்கைப் பார்க்க வருகிறாள் காதம்பரி. ஒரு வேளை அசோக்தான் அக்கொலையை செய்திருப்பானோ என்ற தனது சந்தேகத்தையும் அவள் வெளிப்படையாகக் கேட்க, அசோக் திட்டவட்டமாகவே தான் அக்கொலையைச் செய்யவில்லை எனக்கூறுகிறான். எல்லாம் கடவுள் செயல் என அவன் மேலும் கூற, அதை புரிந்து கொள்ளமுடியவில்லை என அவள் கூறுகிறாள். அவன் திருவிளையாடலை யார்தான் அறியவியலும் என்றும் அசோக் கூறுகிறான்.

அசோக் எவ்வளவு வேதங்கள் படிச்சிருக்கான், அவனே அதை புரியவில்லை என்றால் என்ன அர்த்தம் என நண்பர் கேட்க, ஒருவன் தனக்கு எல்லாம் புரிந்தது எனக்கூறினால் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை எனப் பொருள் என்று சோ பதிலளிக்கிறார். ஒருவன் ஒரு விஷயம் தனக்குப் புரியவில்லை என்று கூறினால் அவன் அதைத் தேடி புரிந்து கொள்ள இயலும். அந்த அடக்கம்தான் தேவை, அது அசோக்கிடம் இருக்கிறது என்கிறார், சோ.

அது இருக்கட்டும், இந்தப் பெண் காதம்பரி அசோக்கைப் பற்றி என்ன நினைக்கிறாள் என சோவின் நண்பர் கேட்க, ஒரு பெண்ணீன் மனத்தை அறிய தேவர்களாலும் இயலாது என்னும் பொருள்பட அவர் ஒரு ஸ்லோகத்தைச் சொல்கிறார்.

திருமணத்துக்கு முன்னால் அவன் ஒரு விசித்திரப்பிறவி என்றே தானும் பலரைப் போலவே நினைத்ததாகவும், ஆனால் இப்போதுதான் அவன் எப்படிப்பட்ட ஞானஸ்தன் என்று தான் உணர்ந்ததாகவும், அவனுக்கு மனைவியானது தான் செய்தச் பெரும்பாக்கியம் என்றும் காதம்பரி உணர்ர்ச்சி பொங்கக் கூறுகிறாள்.

தான் தண்டனை அனுபவிக்க வேண்டியது அவன் சித்தம் என்றால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், அப்படியின்றி இந்த நாடகத்தின் உச்சக்கட்டத்தில் அவன் ஏதேனும் அற்புதங்கள் நிகழ்த்தினாலும் அது பற்றியும் தான் ஒன்றும் செய்யவியலாது என்றும் அசோக் கூற, காதம்பரி அன்றைய தினலம் கோவிலில், கொட்டும் இடிமழையில் தங்களை ஆசீர்வதித்த அந்த தெய்வீக சன்னியாசி பற்றிக் பேசுகிறாள். அன்று விடியற்காலை அவர் தனது கனவில் வந்து எல்லாமே நல்லபடியாக முடியும் எனக்கூறிச் சென்றதாகவும் அவள் கூறுகிறாள்.

இதற்குள் பார்வையாளர் நேரம் முடிய, அசோக் செல்ல வேண்டியதாகிறது. அவன் சென்றதும் அவனுக்கே தெரியாமல் அவன் பற்றிய அந்த முயற்சியை அவனது வக்கீல் எடுக்கவிருப்பதையும், தான் உட்பட எல்லோருமே அத்ற்கு ஒப்புதல் தந்ததையும் எண்ணி அதற்காக அவனிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்கிறாள்.

(தேடுவோம்)

எபிசோடு - 110 (29.06.2010) சுட்டி - 2
அசோக்கின் வக்கீல் இப்போது தனது பிரும்மாஸ்திரத்தை எடுத்து வீசுகிறார். நான் எதிர்பார்த்ததுதான் என்றாலும் அது தேவையின்றி ஏதெனும் அற்புதம் நிகழ்ந்திருக்கலாகாதா என ஆதங்கப்பட்ட எனக்கு இப்போது மன்ம் சஞ்சலமடைவதை தவிர்க்க இயலவில்லை. அதாவது அசோக் மனநலம் குன்றியவன் ஆகவே அவனது செயல்களுக்கு அவன் பொறுப்பில்லை என்பதே அவர் வாதம். ஒரு தேர்ச்சி பெற்ற திறமையான வக்கீலுக்கு ஏற்ப அவர் தனது வாதங்களை முன்வைக்கிறார்.

அசோக் பணத்தையும் மண்ணையும் ஒன்றாக பாவித்து பணத்தை வீசி எறிந்தது, புத்தகங்களால் பலன் இல்லை என காலேஜ் புத்தகங்களை எரித்தது, தெருவில் போகும் ப்சு மாட்டை நந்தினி என அழைத்து அதனுடன் பேச முயன்றது (இதைக்கூடவா சேர்த்தார்கள் எனப் பொங்கிய என்னை முரளி மனோகர் தடுத்து பேசாமல் பாரு சீரியலை, இல்லாவிட்டால் இந்த எபிசோடுக்கு நான் பதிவு போடுகிறேன் எனச்சொல்லி என்னை அடக்கினான்), பணக்காரன் மகனாக இருந்தும் பிட்சை எடுத்தது, மனநல மருத்துவர்கள் அவனுக்காக எழுதித் தந்த மருந்துகளின் லிஸ்ட், இன்னும் பல விஷயங்களை வக்கீல் அடுக்கிக் கொண்டே போக கைலாயத்தில் உமா, நாரதர், விஸ்வாமித்திரர் புடை சூழ் வீற்றிருக்கும் பரமசிவன் இதெல்லாம் கேட்டு எல்லோருடனும் சேர்ந்து சிரிப்பது எனது மனதுக்கு ஆறுதலாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டு விடுகிறேன்.

வக்கீல் கூறக்கூற காதம்பரி, வசுமதி, நீலக்ண்டன் ஆகியோர் மனம் புழுங்குவதை காண முடிகிறது. நடுவில் இதை மேலும் காண இயலாத சாம்பு சாஸ்திரிகளோ வேம்புவை வெளியில் இழுத்துச் சென்று தனது ஆற்றாமையை அவரிடம் சொல்லி பிரலாபிக்கிறார். வேம்பு மிகவும் கஷ்டப்பட்டு அவரை சமாதானம் செய்கிறார். வர்ண ரீதியான பிராமணனாக வாழ முயன்றால் பைத்தியம் என்றுதான் பட்டம் கட்டுவார்களா என அவர் பொங்க, அவரை மிக சிரமப்பட்டு சமாதானம் செய்து வேம்பு கோர்ட்டுக்குள் இழுத்துச் செல்கிறார்.

அசோக்கை அரசு மனநல மருத்துவர் மூலம் பரிசோதிக்கச் செய்து பிறகு என்ன செய்வது என்பதை ஆராயலாம் என கோர்ட் கூறி கலகிறது. நாதன் டிஸ்சார்ஜ் ஆகலாம் என நீலக்ண்டன் கூற, அவரோ அசோக் கேஸ் பற்றி விசாரிக்க, நடந்ததைக் கூறுகிறார் நீலகண்டன்.

சாம்புவின் மகள் கருவுற்றிருப்பதை செல்லம்மா வீட்டில் உள்ளோருக்கெல்லாம் கூறி சர்க்கரை வழங்க அந்த சந்தோஷத்தில் சாம்புவால் பங்கு கொள்ளவியலவில்லை. அசோக்குக்கு நடந்த அநீதியை நினைத்து மனம் குமைகிறார் அவர். வர்ணரீதியான பிராமணன் என்றால் அவன் பைத்தியம்தானா என செல்லம்மா ஆதங்கத்துடன் கேட்க, சோவின் நண்பரும் அதே கேள்வியை வைக்க அவர் ஆமோதிக்கிறார். பாரதியாரை எல்லோரும் பைத்தியம் என்றுதானே கூறினார்கள், ஆனால் அவரோ மற்றவர்களை விட வித்தியாசமாகத்தானே வாழ்ந்தார்.

தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாட பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலெ - நான்
வீழ்வேன் னென்று நினைத்தாயோ!

என்றுதானே கடைசிவரை நின்றார். அதே போல அசோக் இங்கே ஆன்மீக உலகில் நிலைகொண்டு இருக்கிறான். அவனை பைத்தியமாகப் பார்ப்பவர்களுக்குத்தான் பிரச்சினை அவனுக்கல்ல என சோ அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறர்.

அர்த்த சாத்திரம் எழுஹிய சாணக்கியர் முக்கிய மந்திரி பதவியை வகித்தவர். ஆனால் அவர் வாழ்ந்தடோ ஒரு சிறு குடிசை. ஆனால் அதே போல இப்போது ஒரு மந்திரி நிஜமாகவே குடிசையில் இருந்தால் யாருமே அவரை மதிக்க மாட்டார்களே. அதுதான் உலகம்.

இருப்பினும் செல்லம்மாவுக்கு ஆறவேயில்லை. என்னதான் இருந்தாலும் ஒரு வக்கீலே தன் கட்சிக்காரர் பற்றி இவ்வாறு கூறலாமா எனக் கேட்க, சாம்புவோ அசோக்கை தூக்கு தண்டனையிலிருந்து தப்புவிக்க அவருக்கு வேறு வழி தோன்றவில்லை என்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/27/2010

எங்கே பிராமணன் சீரியலில் அசோக்காக நடிக்கும் அஃப்சரின் பேட்டி

தினமலர் 27.06.10 தேதியிட்ட வாரமலரில் வந்த இச்செய்தி/பேட்டியை அப்படியே எடுத்துப் போடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி தினமலர்.

ஜெயா, "டிவி'யில் திங்கள் முதல் வியாழன் வரை, இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும், "எங்கே பிராமணன்?' தொடரை, பெரும்பாலானோர் பார்த்திருக்கலாம். வேதங்களில் சொல்லப்படும் வகையில், முழுமையாக வாழும் பிராமணன் எங்கு இருக்கிறார் என்று, இத்தொடரின் முதல் பாகத்தில் தன் தேடலை நடத்தும் அசோக் என்ற அந்த இளைஞன், இரண்டாம் பாகத்தில், முழு பிராமணனாக தானே வாழ்ந்து காட்டினால் என்ன என்ற சவாலை ஏற்று, அதன்படி வாழ்கிறார்.

இந்துக்கள் மட்டுமின்றி, எல்லா சமயத்தினரும் தொடர்ந்து, இந்த தொடரைப் பார்த்து, ரசித்து வருகின்றனர். "அசோக்' பாத்திரத்தில் ஒன்றி, எந்தவித அலட்டல், ஓவர் ஆக்டிங் இல்லாமல், அந்த தனித்தன்மை வாய்ந்த பாத்திரத்திற்கு சிறப்பு செய்கிறார். அசோக்காகவே மாறி விட்ட நடிகர் அப்சர், ஒரு இஸ்லாமிய இளைஞர். பேட்டியிலிருந்து:

திருநெல்வேலியைச் சேர்ந்த என் தந்தை ஷாகுல் ஹமீது, தமிழக அரசில் இன்ஜினியராகப் பணியாற்றினார். தமிழ் மீது அவருக்கு அபார பற்று. தாய் மொழியில் ஞானம் இருந்தால் தான், வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதில், முழு நம்பிக்கை கொண்டவர். எனவேதான், ஓரளவு வசதி இருந்தும், கான்வென்ட் பள்ளிகளில் எங்களை சேர்க்காமல், தமிழ் மீடியத்தில் தான் நாங்கள் படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.

பள்ளி, கல்லூரி மாணவராக இருக்கும் போதே நடிகனாக, கலைத்துறையைச் சேர்ந்தவனாகத்தான் உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். பள்ளியில் படிக்கும் போதே, தூர்தர்ஷனில் அங்கீகரிக்கப்பட்ட நடிகனாக, ஆண்டுக்கு ஓரிரு, "டிவி' நாடகத்தில் நடித்தேன்.

பிரபல நடிகர் வி.கோபால கிருஷ்ணனின் கோபி தியேட்டர்ஸ்காக நாடகங்கள் எழுதும் பிரபல நாடக ஆசிரியர் விவேக் சங்கரின், "நித்தம் ஒரு யுத்தம்' மேடை நாடகத்தில் நடித்தேன். அந்த நாடகத் தின் அரங்கேற்றத்திற்கு வந்திருந்த நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, "வேதம் புதிது' கண்ணன், இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் என்னைப்பற்றி சொல்ல, ஏவி.எம்.,மின், "நிம்மதி உங்கள் சாய்ஸ்' தொடரில், கதாநாயகியின் தம்பி மணி பாரதி பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அடுத்து, 2000த்தில், இயக்குனர் வெங்கட் இயக்கத்தில், ஏவி.எம்., மின், "சொந்தம்' 260 எபி சோடுகள் தொடரில், அண்ணிக்கு (மோனிகா) சப்போர்ட் பண்ணும், "பிரபா' என்ற பாத்திரத்தில் நடித்தேன். விகடன் டெலிவிஸ்டாசின், சுந்தர் கே. விஜயன் இயக்கிய, "அலைகள்' ஹிட் தொடரில், 400 எபிசோடுகளுக்கு மேல் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

"எங்கே பிராமணன்?' தொடரில் எனக்கு நடிக்க சான்ஸ் எப்படி கிடைத்தது என்பதற்கு என்னை விட, இயக்குனர் வெங்கட் பதில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

"எங்கே பிராமணன்?' தொடரில், அசோக் பாத்திரத்தில் நடிக்க, அப்சரை எப்படி செலக்ட் செய்தீர்கள்? என்று டைரக்டர் வெங்கட்டை கேட்டபோது...

அசோக் ஒரு அசாதாரணமான இளைஞன். இளம் வயதிலிருந்தே, ஒரு குறிக்கோளோடு வேதங்களில் குறிப்பிட்டிருப்பது போன்று, எல்லா நியதிகளையும் கடைபிடித்து, முழு பிராமணனாக வாழ முயற்சிப்பவன். சாந்தமான முகம்; அலட்டிக் கொள்ளாத சுபாவம் கொண்ட இளைஞன்தான் அந்த காரெக்டருக்கு பொருத்தமாக இருக் கும். அப்சரின் முகம், குறிப்பாக அவரது கண்கள் ரொம்ப பவர்புல் லாக, பொருத்தமாக இருந்ததால், அவரை செலக்ட் செய்தேன்.

தன்னுடைய பாத்திரத்தை நன்கு உணர்ந்து, சீரியல் முழுவதும் நன்றாக நடித்திருக்கிறார். நிறைய ஹோம் ஒர்க் பண்ணினார். ஓவர் ஆக்டிங் செய்யாமல், கச்சிதமாக நடித்திருக்கிறார். வசனங்களை எளிதில் மனப்பாடம் செய்து, காட்சிக்கு ஏற்ப குரல் மாடுலேஷனோடு, தேவையான எக்ஸ் பிரஷனோடு பேசியிருக்கிறார். நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ளவர் அப்சர்.
இந்த தொடரின் மற்றொரு ப்ளஸ் பாயின்ட் - ஒவ்வொரு எபிசோட்டிலும் சோ தோன்றி அளிக்கும் விளக்கங்கள்... வேதங்கள், உபநிஷத்துக் கள், ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பகவத் கீதை மற்றும் தமிழில் தெய்வீகப் பாடல்கள் ஆகியவற்றிலிருந்து ஸ்லோகங்களை சொல்லி, விளக்கம் தருகிறார்.

இந்து கலாசாரத்தில் கடைபிடிக்கப்படும் பல வழக்கங்கள், விரதங்கள், சடங்குகள், பூஜை முறைகள், நம்பிக்கைகள் உள்பட பல விஷயங் களுக்கு கேள்வி பதில் பாணியில், பலருக்கும் தெரியாத விளக்கங்களை எளிய நடையில் தருகிறார்.

சோவை சந்தித்து பேசியிருக்கிறீர்களா? என்று அப்சரை கேட்டதற்கு, "நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு இதுவரை கிட்டியதில்லை. டைரக்டர் வெங்கட், தொடருக்கான படப் பிடிப்பு ஆரம்பிக்கும் போது, தொலைபேசியில் சோவை அழைத்து, அவரோடு என்னை பேசச் சொன்னார். "உங்க ஆசிர்வாதம் வேணும் சார்!' என்றேன். "ஆல் தி பெஸ்ட்; நல்லா பண்ணுபா...' என்று, வாழ்த்தினார். "உன் காரெக்டருக்கு வேஷ்டியை, கணுக்காலுக்கு மேலே தூக்கி கட்டணும்; தழைய, தழைய கட்டறது மரியாதை இல்லை...' என்றார். ஒரு டயலாக்கை அவர் எடுத்துச் சொல்லி, எப்படி குரலை மாடுலேட் பண்ணி, ஏற்றி இறக்கி பேசணும்ன்னு சொல்லிக் கொடுத்தார்.

மிகவும் தூய்மையான, வியக்கத்தக்க இளம் பிராமணராக நீங்கள் நடித்திருப்பது பற்றி, உங்கள் சமுதாயத்தினரின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது?

"இஸ்லாம்' என்ற சொல்லுக்கு சமாதானம், சகோதரத்துவம் என்று தான் அர்த்தம். 2008ல் இருந்து இரண்டு ஆண்டுகளாக எங்கே பிராமணன் முதல் பாகம், இரண்டாம் பாகங்களில் நடித்து வருகிறேன். எந்த ஒரு முஸ்லிம் சகோதரரோ, சகோதரியோ இந்த தொடரில் நான் நடித்ததற்கு ஆட்சேபம் தெரிவிக்க வில்லை; மாறாக, ஏராளமான முஸ்லிம் நண்பர்கள், சகோதரிகள் என் நடிப்பை, மனதார பாராட்டியிருக்கின்றனர்.

சகிப்புத் தன்மை, இஸ்லாமின் முக்கிய அங்கம். 99.99 சதவீதம் இஸ்லாமியர்கள் அப்படித்தான் வாழ்கின்றனர்; நினைக்கின்றனர். 0.01 சதவீதத்தினர் மாற்றுக் கருத்து கொண்ட வர்களாக இருக்கலாம்; வாழலாம். அதை வைத்து, முஸ்லிம் சமுதாயத்து மக்கள் எல்லாரும் அப்படித் தான் என்று நினைப்பது, வருந்தத்தக்க விஷயம்.

இந்த தொடரில் நடிப்பதன் மூலம், இந்து, இஸ்லாம் இரு மதங்களிலும், பொதுவாக எவ்வளவு விஷயம் இருக்கிறது என்று பார்க்க முடிகிறது.

கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே; வெற்றி வரும் போது பெருமகிழ்ச்சியும், தோல்வி ஏற்படும் போது துவண்டு போகவும் கூடாது என்று வேதங்களும், உபநிஷத்துக்களும் சொல்கின்றன. நடப்ப தெல்லாம், இறைவன் நாட்டப்படி தான் நடக்கிறது என்கிறது இஸ்லாம். "ஒருமித்த கருத்துக்கள், வேறு வேறு வார்த்தைகளிலே இந்து மதத்திலும், இஸ்லாமியத்திலும் சொல்லப்படுகின்றன.

பிரார்த்தனைகள், ஹோமங்களில், "ஓம் சாந்தி, ஓம் சாந்தி!' என்று சொல்கின்றனர். "சலாம் அலைக்கும்' என்று இஸ்லாமியர்கள், ஒருவரை ஒருவரை வரவேற்கும் போதும், முகமன் கூறும் போதும் சொல்கின்றனர்; அதற்கு சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும் என்று அர்த்தம்.
நம் சொந்த மதத்தையும், பிற மதங்களைப் பற்றியும் அக்கறையாக தெரிந்து கொண்டால், மக்களிடையே வேறுபாடுகளே இருக்காது.

இந்த தொடரில் நடித்ததன் மூலம் நீங்கள் கற்றது என்ன?நிஷ்காம கர்மா. வேலையையும் சரி, வேறு எதையும் சரி... எமோஷன் இல்லாமல், பற்று இல்லாமல் செய்யணும். வாழ்க்கையில் தினமும் செய்யும் வேலைகளில் இந்த சிந்தனையை நான் கடைபிடிக்கிறேன்; டென்ஷன் இல்லாமல், ரிலாக்ஸ்டாக இருக்கிறேன்.

நாம் விரும்புகிற மாதிரி நடக்க வில்லை; அதற்கு எதிராக நடந்தாலும், கடவுளின் விருப்பம் தான் நடந் திருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு வந்திருக்கிறது. எல்லாம் நடந்தது, நான் ஒரு கருவி மட்டும் தான், நாம் இல்லை யென்றாலும் அது நடந்து விடும். நம்மால் தான் சாதிக்க முடியும் என்பதில்லை; நாம் இல்லா விட்டாலும், இன்னும் சிறப்பாக நடக்கும் என்று உணர்ந்தால், நம் ஈகோ பிரச்னை தீர்ந்துவிடும். வாழ்க்கை எளிதாகி விடுகிறது.


இந்த சீரியலில் வரும் எல்லோருக்குமே வேஷப்பொருத்தம் பிரமாதம், அதிலும் அசோக் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் அஃப்சர் அற்புதமாக நடிக்கிறார். எனது கேள்வி பதில் பதிவுகளில் ஒன்றில் இது சம்பந்தமாகக் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும் இதோ:

கேள்வி: பிராமண அசோக் வேடத்தில் (கதாநாயகன்) நடிக்கும் நடிகர் ஒரு இஸ்லாமியர். தெரியுமா?
பதில்: நடிப்புத்தானே! இதில் என்ன பிரச்சினை? சோப்ராவின் மகாபாரதத்தில் அர்ஜுனனாக நடித்தது ஒரு இசுலாமியர். அதற்கென்ன இப்போது? பம்பாய் படத்தில் இசுலாமியராக கிட்டியும் இந்துவாக நாசரும் நடித்தனர். அதற்கு என்ன கூறுவீர்கள்?


இப்போது மனப்பூர்வமாகவே கூறுகிறேன், அஃப்சரைத் தவிர இப்போது வேறு யாரையும் இந்தப் பாத்திரத்திற்கு என்னால் கற்பனை கூட செய்ய முடியாது. அவருக்கு எனது பாராட்டுகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாஆஆஆஆஆ பிரமிக்க வைத்தப் படம்



தில்லியில் இருக்கும்போதே கேபிள் டீவி வந்ததும் தூர்தர்ஷனுக்கு குட்பை கிட்டத்தட்டச் சொல்லிவிட்டேன், டிடி-5 தமிழ் சேவைகள் தவிர. இங்கு சென்னைக்கு வந்ததும் அதுவும் போயிந்தி. எல்லாமே கேபிள் சேனல்தான்.

அதே போல முழுநீள ஹிந்திப் படங்கள் பார்ப்பதும் கிட்டத்தட்ட போயே போயிந்தி. ஆகவே தேசீய தூர்தர்ஷனில் இந்த முழுநீள ஹிந்திப் படத்தைப் பார்த்தது ரொம்பவுமே தற்செயலான நிகழ்வுதான். விஷயம் என்னவென்றால் எங்கள் கேபிள் கனெக்‌ஷனில் கோளாறு, வெறுமனே தூர்தர்ஷன் தேசீய சேனல் மட்டுமே வந்தது. ஏதோ கேஷுவலாக சேனலைப்போட, அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் நடித்தா பாஆஆஆஆ படம் என்று பார்த்ததும் சரி அதில் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என ஒரு ஆர்வத்தில் பார்க்க அம்ர்ந்தேன்.

இப்படம் பற்றி நான் கேள்விப்பட்ட விஷயங்கள் என்னை இதற்கு முன்னால் பார்க்க விடவில்லை. Progeria ennum நோயின் பாதிப்பால் 12 வயது கூட நிரம்பாத வோரோ என்னும் சிறுவன் 90 வயது கிழவனின் வளர்ச்சி மற்றும் சிதைவுகளைப் பெறுவது என்பது கொடுமையான செயலே. ஆகவே முதலிலேயே இது மனதை பாதிக்கும் படம் என்பது தெரிந்ததால் இதை நான் பார்க்காமலேயே தவிர்த்தேன். அம்மாதிரி தவிர்த்த படங்கள் பல, உதாரணத்துக்கு அங்காடித்தெரு, சுப்பிரமணியபுரம், பருத்திவீரன், விருமாண்டி ஆகியவை.

ஆனால் இன்று என்னவாயிற்று எனத் தெரியவில்லை. முதல் சீனில் படம் பார்க்க ஆரம்பித்த நான் அப்படியே ஆழ்ந்து அமர்ந்து விட்டேன். அப்படியே கேபிள் கனெக்‌ஷன் சரியானாலும் இப்படத்தை முடித்தபிறகுதான் மீதி சேனல்கள் என்பதையும் என் வீட்டம்மாவிடம் ஸ்ட்ரிக்டாகக் கூறிவிட்டு அமர்ந்தேன்.

தந்தையும் தாயும் திருமணமாகாமலே பிரிய, மகன் பிறந்ததையே தந்தை அறியாது பிற்காலத்தில் அவனைக் கண்டு ஏதோ ஒரு பாசத்தில் அவனுடன் இணைவது போன்ற கதைகள் சாகுந்தல காலத்திலிருந்தே வந்து விட்டது. இந்த பிளாட்டில் எண்ணற்றத் திரைப்படங்கள் பல மொழிகளில் வந்து விட்டன. அதற்கென்றே ஒரு தனி அப்பீலும் இருக்கிறது. ஆனால் பிறந்த மகன் இவ்வளவு பெரிய ஊனத்துடன் பிறப்பது அதிகம் முறை வந்ததில்லை என்றே கூறலாம். அப்படிப்பட்ட குழந்தையாக வருவது நமது ஒன் அண்ட் ஒன்லி அமிதாப்தான்.

ப்ரொஜேரியா நோயால் பீடிக்கப்பட்ட இக்குழந்தை வோரோ முதலிலிருந்தே இளம் அரசியல்வாதியான அமோலைக் கவர்ந்து விடுகிறான். ஆனால் அவன்தான் தனது சொந்த மகன் என்பதை அவன் அப்போது அறியவில்லை. அக்குழந்தையின் அன்னை வித்யாவுக்குத் தெரியும் ஆனால் அவளோ அவனிடம் தன் பிள்ளையைக் காட்டுவதாக இல்லை. மற்றப்படி கதை சாதாரணமாக இம்மாதிரி பிளாட்டுகளில் உள்ளபடியே செல்கிறது. இருப்பினும் எங்குமே தேவையற்ற மெலோட்ராமாக்கள் இல்லை.

ஓரோதான் தன் மகன் என்பதை அமொல்ல் அறிந்து காட்சி ஒரு கவிதை என்றால், கடைசிக் காட்சியில் தன் அன்னை தந்தையை வோரோ சப்தபதி செய்ய வைக்கும் காட்சி ஒரு காவியம் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படம் முடிந்து டைட்டில்ஸ்கள் ஓடி முடிந்தவரை பிரமித்துப் போய் அமர்ந்திருந்த நான் சற்று நேரத்துக்கு வேறு எந்தக் காட்சிகளையும் காண விரும்பாமல் டிவியை ஆஃப் செய்து விட்டு இப்பதிவை ஒரே மூச்சில் போட்டு முடித்தேன்.

இந்த வேஷத்துக்கான மேக்கப் போட்டுக் கொள்ள அமிதாப் பட்ட கஷ்டங்களைக்காண இந்த வீடியோவைப் பார்க்கலாம். இம்மாதிரி ஒரு படத்துக்காக உயிரைக் கொடுத்து மேக்கப்புகள் போட்டு நடிக்கும் அமிதாப், கமல் (ஔவை ஷண்முகி), விக்ரம் (சேது), சூர்யா (பேரழகன்) ஆகிய கலைஞர்கள் இருக்கும்போது இந்தியத் திரைப்படத்துக்கு ஏது குறை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

தண்டனைகள் பல ஆனால் அவற்றை அனுபவிப்பது ஏககாலத்தில்!!!

ஜூனியர் விகடன் 30.06.2010 தெதியிட்ட இதழில் 6-7-ஆம் பக்கங்களில் வந்த செய்தியே என்னை இப்பதிவுக்கு தூண்டியது. செய்தி பின்வருமாறு:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினம் அருகே உள்ள மோரணஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவருக்கும் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த, நாமக்கல் மாவட்டம் மல்ல சமுத்திரம் அருகேயுள்ள மொரங்கம் கிராமத்தைச் சேர்ந்த சேதுபதி ராமலிங்கத்தின் புதல்வரும் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகவும் பணியாற்றும் ராஜவேல் சேதுபதிக்கும் 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.

அதன் பிறகு மனைவியை சேலத்தில் தன் வீட்டிலேயே விட்டுவிட்டு, ராஜவேல் மட்டும் அமெரிக்கா சென்றார். அந்த சமயத்தில் இந்த “பல்கலைக்கழக துணைவேந்தர்” தன் மருமகளிடமே தவறாக நடந்து கொள்ள முயன்றார் என சங்கீதாவே குற்றம் சாட்டினார்.

அந்த வழக்கில், சேலம் ஜுடீஷியல் நான்காவது நீதிமன்ற நீதிபதியான மரியாதைக்குரிய ஸ்ரீவித்யா அவர்கள் “சேதுபதி ராமலிங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப் பட்டதால், அவருக்கு இ.பி.கோ. 498-A சட்டப் பிரிவின்படி பெண்ணைக் கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கிறேன். மேலும், நம்பிக்கை மோசடி செய்த குற்றத்துக்காக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கிறேன். அதோடு, பெண்ணை மானபங்கப்படுத்தி வந்த குற்றத்துக்காக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கிறேன். இந்தத் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சங்கீதா அவர்கள் கூறிய விவரங்கள்:

1. மாப்பிள்ளை நல்ல வேலையில் இருக்கார், அவரது அப்பா துணைவேந்தர், அம்மாவும் வேலையில் இருக்காங்க, படிச்சக் குடும்பம் என்று கருதித்தான் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க.

2. என் கணவர் ஏற்கனவே மணமாகி விவாகரத்து செய்து கொண்டவர் என்பதை மறைத்துத்தான் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டார்கள்.

3. அதைக்கூட பெரிசாக நான் எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் புக்ககத்தௌக்கு சென்று வாழ் முற்பட்ட என்னை அப்பா ஸ்தானத்தில் இருந்த மாமனாரே கைஅயைப் பிடித்து இழுத்தார்.

4. என் கணவருக்கு இதை நான் தெரியப்படுத்தியும் அவர் என்னை நம்பவில்லை, மாமியார் நாத்தனார் யாருமே பொருட்படுத்தவும் இல்லை.

5. மாமனாரது செக்ஸ் டார்ச்சர் தொடரவே நான் போலீசுக்குப் போனேன்.

6. நீதிபதி கற்பகவினாயகம் என்னையும் என் கணவரையும் பேசவைத்து, எங்களுக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணிவைத்தார். மாப்பிள்ளைக்கு அறிவுரையும் கூறினார்.

7. எனக்கு விசா ஏற்பாடு செய்வதாகச் சொல்லி அமெரிக்கா சென்ற கணவர் பிறகு திரும்ப வரவே இல்லை, நான் செய்த போன்களையும் அட்டெண்ட் பண்ணவில்லை.

8. அவர் அங்கு வேறு திருமணம் செய்து கொண்டு வாழும் விஷயத்தை விசாரித்து அறிந்தேன்.

9. இனிமேலும் இந்தக் குடுமபத்தை நம்பலாகாது என்னும் முடிவில் மீண்டும் கோர்ட்டுக்கு சென்றேன்.

10. சேதுபதி ராமலிங்கத்துக்கு தண்டனை கிடைத்தாலும் அவருக்கு உடந்தையாக இருந்த எனது மாமியார், நாத்தனார் அவர் கணவர் மற்றும் என் கணவர் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். அதை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளேன்.


இப்போது மீண்டும் டோண்டு ராகவன். முதலில் பொதுவாக ஒரு கருத்தைக் கூறிவிடுகிறேன். 3 + 3 + 2 = 8 ஆண்டுகள் என்பது பொது புத்தி. ஆனால் மூன்று தண்டனைகளையும் “ஏககாலத்தில் அனுபவிப்பது” என்று தீர்ப்பு கூறினால் 8 வெறுமனே மூன்றாகி விடுகிறதே. என்ன செய்ய? இம்மாதிரி ஏககாலத்தில் பல தண்டனைகளை அனுபவித்தல் எல்லாவற்றையுமே கேலிக்கூத்தாக்கி விடுகிறதே. ஏன் இவ்வாறாக தண்டனைகளை நீர்க்கச் செய்யும் விஷயங்கள் வருகின்றன என்பதை யோசிக்க வேண்டும்.

இதைக் காலையில் படித்ததிலிருந்தே எனக்கு ஒரே எரிச்சலாக இருக்கிறது. ஆகவே இப்பதிவு.

முதலில் பதிவர் வழக்குரைஞர் சுந்தரராஜனுக்கு போன் போட்டுக் கேட்டேன். அவர் கூறியதாவது நமது சட்டங்கள் அளிக்கும் தண்டனைகள் குற்றவாளையைத் திருத்தும் நோக்கத்தில்தான் தரப்படுகின்றன, தண்டிக்கும் நோக்கத்தில் அல்ல. இன்னொன்றும் கூறினார். செய்த ஒரே குற்றத்துக்கு பல சட்ட ஷரத்துகளை பிராசிக்யூஷன் உபயோகிக்கிறது. ஒன்றிலிருந்து தப்பித்தாலும் இன்னொன்றில் பிடிபடலாம் என்பதுதான் அதற்கு முக்கியக் காரணம். ஆனால் ஆதே சமயம் எல்லா ஷரத்துக்களும் ஏற்கப்படும் பட்சத்தில் ஒரே குற்றம் என்னும் விஷயத்தை கருத்தில் கொண்டு ஏககால விஷயத்தைச் செய்வது ஒருவித balancing act என்றும் இருக்கலாம் என்றார்.

இத்தருணத்தில் நான் இந்த உரலில் படித்த விஷயத்தைப் பாருங்கள்:

“Seven years or less is maximum term of imprisonment for a host of offences like attempt to commit culpable homicide (Sec 308), robbery (Sec 393), cheating (Sec 420), death caused by negligence (Sec 304A), breaching the modesty of women, voluntarily causing grievous hurt (Sec 325), and the much talked about mental and/or physical torture of brides by any member(s) of in-laws family covered under sec 498A of Indian Penal Code (IPC)”.

அதாகப்பட்டது சேதுபதி ராமலிங்கம் குற்றவாளி என அறியப்பட்ட மூன்று பிரிவுகள் ஒவ்வொன்றிலும் அதிகப்பட்ச தண்டனை ஏழாண்டுகள் என அறிகிறேன். அவ்வாறு ஒவ்வொன்றிலும் அதிகப்பட்ச தண்டனை வழங்கிவிட்டாவது ஏககாலம் என்று சொல்லியிருக்கலாம். அதன்றி ஒவ்வொன்றிலும் தண்டனையை குறைத்துக் கூறி, அதிலும் ஏககால தண்டனை எனக்கூறுவது எனக்கு நியாயமாகப் படவில்லை. ஆக 21 ஆண்டுகள் அதிகப்பட்ச தண்டனை இங்கு நடைமுறையிலே வெறுமனே 3 ஆண்டாகி விட்டது.

மேலும் அபராதம் 5000 ரூபாய்தானா? இதே ராமலிங்கத்துக்கு சிறையில் ஏ கிளாஸ் வகுப்புத்தானே பெரும்பாலும் தருவார்கள்? அதற்கு பலகாரணங்களில் ஒரு காரணமாக அவரது சமூக அந்தஸ்தும்தானே இருக்கும்? அபராதம் விதிக்கும்போது மட்டும் ஏன் அதை அடக்கி வாசிக்க வேண்டும்? அவரது செல்வநிலைக்கு ஏற்ப அபராதம் விதிப்பதுதானே சரியான தண்டனையாக இருக்கும்? குறைந்தபட்சம் 5 லட்சமாவது அபராதம் இருந்திருக்க வேண்டாமா?

ருசிகாவை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி அப்பெண்ணின் தற்கொலையைத் தூண்டிய முன்னாள் போலீஸ் அதிகாரி ராத்தோடுக்கு அளிக்கப்பட்ட தண்டனையைத்தான் எனக்கு சேதுபதி ராமலிங்கத்தின் கேஸ் நினைவுபடுத்துகிறது.

மேலே சொன்னவையெல்லாம் எனது கருத்துக்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/26/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 105, 106, 107 & 108)

எபிசோடு - 105 (21.06.2010) சுட்டி - 2

(முதன்முறையாக இந்த சீரியலின் எபிசோடுகளை போடுவதில் மனச்சங்கடம் எனக்கு ஏற்படுகிறது. விஷயம் வேறொன்றுமில்லை. அசோக் சந்திக்கும் சோதனைகள்தான் மனதைக் கலக்குகின்றன. எல்லாமே கதைதானே என இருக்கவியலவில்லை. அசோக்குக்கு தெய்வ அனுக்கிரகம் கிட்டும், வசிட்டராகிய அவனுக்கு கிட்டாது யாருக்குக் கிட்டும் என்பதெல்லாம் புரிந்தாலும் தற்போதைய நிகழ்வுகளின் பாரம் மனதை அழுத்துகிறது. இருப்பினும் பல்லை கடித்துக் கொண்டு பதிவுகளை இடுவேன். இந்த மனப்பான்மைதான் என்னை 4 எபிசோடுகளாகச் சேர்த்து போட வைத்ததற்கு அடிப்படையான காரணம் என நினைக்கிறேன்).

அசோக்குக்காக வக்கீல் வைத்து வாதாடப்போவதாக நாதன் அவனிடம் கூற அவனோ வக்கீல் என்பவர் நியாயத்துக்காக மட்டுமே வாதாட வேண்டும் எனக் கூறுகிறான்.

சாம்பு வீட்டில் சந்துரு அப்பா அம்மாவிடம் ஆர்த்தி வீட்டில் சண்டை நடப்பதைக் கூறுகிறான். தான் உள்ளே போக பயந்து வந்து விட்டதாகவும் கூறுகிறான். ஆர்த்தி என்ன கஷ்டத்தில் இருக்கிறாளோ, தங்களாத்துக்கு வந்து விடப்போகிறாள் கோபத்துடன் என சாம்பு, சந்துரு, செல்லம்மா நினைக்க வந்து
நிற்கிறான் மாப்பிள்ளை. தனது பிறந்த வீட்டில் கோபித்துக் கொண்டு பெட்டியை எடுத்துக் கொண்டு மாமனார் வீட்டுக்கு வரும் நவீன மாப்பிள்ளை.

கேட்டரிங் வேலைக்கு தன்னையும் ஆள்குறைகிறது எனக்கூறி அப்பா அழைத்ததாகவும் தான் மறுக்கவே சண்டை வந்ததாகவும் கூற, சாம்புவுக்கு அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. பின்னாலேயே புயலென வரும் ஆர்த்தி கணவனை கண்டித்து வீட்டுக்கு இழுத்துச் செல்கிறாள். அதிலும் தவறுதலாக தன் பெட்டியை மாப்பிள்ளை எடுத்து வந்ததாகக் கூற, அவன் முகத்தில் டன்டன்னாக அசடு வழிகிறது.

கோவிலில் வந்திருக்கும் செல்லம்மா நாதனை பார்த்து அறுதலாக விசாரிக்கிறாள். அசோக்குக்கு காலசர்ப்ப தோஷம் இருப்பதாகவும் திருநாகேஸ்வரத்துக்கு பிள்ளையை அழைத்து வந்து அஎச்சனை செய்வதாக வேண்டிக் கொள்ள வேண்டும் என சாம்பு கூறியதை செல்லம்மா நாதனிடம் கூறுகிறாள்.

நாதனைப் பார்க்க கைலாஷ் நகர் அசோசியேஷன் செயலாளர் வந்து விசாரிக்க நாதன் அவர் அசோசியேஷன் சம்பந்தப்பட்ட விஷயத்தால்தான் அசோக்கே இந்த வழக்கில் சிக்கியிருப்பதாகவும், அவரைப் பார்க்கவே தனகு வெறுப்பாயிருப்பதாகவும் கோபமாகப் பேசி நாதன் அவரை வெளியே போகச் சொல்கிறார்.

வக்கீல் கோபாலையரிடம் நாதன் அசோக் கேசை ஒப்படைக்கிறார். அவரும் வசுமதியும் பேசிக் கொண்டிருக்கும்போது சமையற்கார மாமி காப்பி கொண்டுவந்து வைக்கிறாள். நாதன் அவளை போலீசிடம் எல்லாவற்றையும் உளறியதற்காக சாடுகிறார்.

அந்தம்மா உண்மையைத்தானே சொன்னாங்க என சோவின் நண்பர் கேட்க, சில சமயங்களில் பொய்பேச வேண்டியதன் அவசியத்தை சோ உதாரணங்களுடன் விளக்குகிறார். மேலும் அந்தம்மா நேரில் எதையுமே பார்க்காது சிங்காரம் சொன்னதைக் கேட்டு பேசியது ஹியர்சே எவிடென்ஸ் ஒத்துக் கொள்ளமுடியாதது என்றும், அதைத் தர அவளுக்கு எந்த பிரமேயமும் இல்லையென்றும், நாதன் வீட்டு உப்பைத் தின்றுவிட்டு அவள் செய்தது தவறே எனவும் சோ கூறுகிறார்.

சமையற்கார மாமியை அனுப்பிவிட்டு நாதன் வசுமதியிடம் பேசும்போது அசோக்கே தன்னையுமறியாமல் இச்செய்கையை செய்திருக்கலாம் என்ற தனது சந்தேகத்தையும் வெளியிடுகிறார்.

கோவிலில் சாம்பு நாதனை சந்தித்து அசோக்குக்கு காலநேரம் சரியில்லையெனவும், அவனுக்கு சோதனை வரும் ஆனால் கடைத்தேறுவான் எனவும் அவனை வழிநடத்தும் சாமியார் கூறியதைக் கூறிவிட்டு மேலே பேசுகிறார். நாதனுக்கே பேசுவது சாம்பு சாஸ்திரிகள்தானா என்னும் ஐயம் வருகிறது. அவரிடமே kஏட்க, தனக்குள்ளிலிருந்து யாரோ பேசுவதாகவே தனக்கும் தோன்றுவதாக இருக்கும். சோதனை வரும், ஆனால் கடைத்தேறலும் நடக்கும் என அவர் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 106 (22.06.2010) சுட்டி - 2
அசோக்கின் கேஸ் ஆரம்பிக்கிறது. பிராசிக்யூஷன் வக்கீல் கேஸை சமர்ப்பித்தப் பிறகு அசோக்கின் வக்கீல் பேச ஆரம்பிக்கிறார். அசோக் ஒழுக்கமானவன், தர்மசிந்தனை உடையவன், பாரம்பரியம் மிக்க உயர்குலத்தைச் சேர்ந்தவன் என அவர் கூறுகிறார்.

பார்ப்பனர்கள் உயர்குலமா என நண்பர் ஆட்சேபிக்க, சோ அவர்கள் இந்த இடத்தில் குலம் என்பது குடும்பத்தைத்தான் அதாவது நாதனின் குடும்பத்தையே குறிக்கும் எனவும், சாதியில்லை எனவும் தெளிவுபடுத்துகிறார். பிறகு குலதர்மம் என்பதையும் பேசுகிறார். யுகதர்மமும் பேச்சில் வருகிறது. சம்பந்தப்பட்ட வீடியோவைக் காண்தலே சிறப்பாக இருக்கும்.

நாதனுக்கு கோர்ட்டிலேயே மைல்ட் அட்டாக் வர அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்கிறார் நீலகண்டன். ஐ.சி.யு.வில் அவரை சேர்க்கிறார்கள்.

சாம்புவும் வேம்புவும் பேசுகின்றனர். அசோக் மாட்டிக் கொள்ளாமல் புத்திசாலித்தனமாக நடந்திருக்கலாம் என பேச்சு வருகிறது. நண்பரும் அது உண்மைதானே என ஆமோதிக்க, சோ அவர்கள் அசோக் ஞானப்பாதையில் செல்கிறான். அவனது செயல்கள் வித்தியாசமாகவே இருக்கும் எனக்கூறிவிட்டு, மனிதன் என்பவன் எப்போதுமே தனிதான். சுற்றி எவ்வளவு பேர் இருந்தாலும் அவன் தனியேதான். அவனவன் செய்த காரியங்களின் பலனை அவனவனே அனுபவிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

நீங்கள் நல்ல அறிவாளராகத் தோற்றமளிக்கிறீர்கள் என நண்பர் விதந்தோத, சோ சுயகிண்டலுடன் பேசுகிறார். பார்வைக்கு மட்டுமே குயிலும் காகமும் ஒரே நிறம், வசந்தகாலம் வந்தால் உண்மை வெள்ளிடைமலையாகும். அதே போல தன்னை அறிஞர்கள் நிறைந்த சபையில் நிறுத்திப் பேசவைத்தால் தனது லட்சணம் தெரியும் என்கிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 107 (23.06.2010) சுட்டி - 2
அசோக் பற்றி சுப்புவும் அவள் நாத்தனாரும் வேணமட்டும் இளப்பமாகப் பேசிய பிறகு சுப்பு வசுமதிக்கு ஃபோன் போட்டு அசோக்கை பற்றி அங்கலாய்ப்பாகவும், புகழ்ந்தும் பேசி சீன் காட்டுகிறாள். அவள் கணவர் வேம்பு அவளை இதற்காகக் கண்டிக்கிறார். அசோக் அவன் அப்பாவிடம் சொல்லி இந்த வீட்டை அவர்களுக்கு வாங்கித் தரவில்லையானால் அவர்கள் நடுத்தெருவில்தான் நின்றிருப்பார்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்ட, சுப்புவின் நாத்தனார் அதையும் புறம் தள்ளுகிறாள். பாத்திரமறிந்து பிச்சையிட்டிருக்க வேண்டும் அசோக் என வேம்பு நொந்து கொள்கிறார்.

சாம்பு அப்போது வர அவரிடம் நாதன் பற்றி விசாரிக்கிறார்கள். ராமர் காட்டுக்குப் போனார் என்பதையறிந்ததுமே தசரதர் உயிர்துறந்தார் என வேம்பு கூற அப்படியா எனக் கேட்கிறார் சோவின் நண்பர். வால்மீகி ராமாயணத்தில் அப்படியில்லை என சோ விளக்குகிறார். ராமர் காட்டுக்கு சென்ற சில நாட்கள் கழித்துத்தான் அவர் உயிர் துறக்கிறார் எனவும், அதுவும் அவர் அத்தனை நாட்கள் புத்திர சோகத்தை அனுபவிப்பதே அவருக்கு முன்னால் ஒரு ரிஷியால் இடப்பட்ட சாபம் என்பதையும் அவர் விளக்குகிறார்.

மரத்திலிருந்து விலகும் பழம் கீழே விழ வேண்டும் என்பது புவி ஈர்ப்பு விதிப்படி நடப்பது, ஆனால் யாராவது அதை கையால் தாங்கிப் பிடித்தால் அது விழாது அல்லவா? அசோக் இப்போது கீழே விழும் பழம், ஆனால் கடவுள் அருள் இருந்தால் அவன் விழ மாட்டான் என்று சாம்பு பூடகமாகச் சொல்கிறார்.

அசோக் வீட்டிற்கு வக்கீல் கோபாலையர் வருகிறார். அசோக்கைக் காப்பாற்ற ஒரு உபாயம் சொல்கிறார். ஆனால் அதைக் கூறும்போது வாய்ஸ் ஓவர் ஆகிறது. இதற்கு நாதன் ஒத்துக் கொள்வாரா என வசுமதியும் நீலகண்டனும் கவலைப்படுகின்றனர். எதற்கும் காதம்பரியையும் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

(தேடுவோம்)

எபிசோடு - 108 (24.06.2010) சுட்டி - 2
காதம்பரி, அவள் அக்கா மற்றும் அத்திம்பேர் அசோக்கைக் காப்பாற்ற வக்கில் கொடுத்த உபாயம் பற்றிப் பேசுகின்றனர். இந்த உபாயம் ரொம்பக் கொடூரமானது ஒத்துக் கொள்ள முடியாது என காதம்பரி கூறுகிறாள். கடவுளின் சோதனை என அத்திம்பேர் கூற, அம்மாதிரி கொடூர மனதுடைய கடவுளை ஒதுக்கி வைக்குமாறு காதம்பரி கோபமாகக் கூறுகிறாள்.

எங்கள் போன்றவர்களை விடுங்கள் சார், உங்களைப் போன்ற தெய்வ நம்பிக்கையுடையவர்களை கடவுள் ஏன் சோதிக்கிறார் என சோவின் நண்பர் கேட்க, சோ அவர்கள் இதெல்லாம் கர்மபலன் என்றே கூறுகிறார். மகாபாரதத்திலிருந்து கௌதமி என்னும் பென்ணின் மகனை சர்ப்பம் தீண்டி மகன் இறக்க, அப்போது வந்த விவாதங்கலை உதாரணமாகத் தருகிறார். பிறகு அசோக் பற்றி பேசுகையில் அசோக் வசிஷ்டர். ஆனால் இங்கு நாதனின் புதல்வர்’ ஆகவே இம்மாதிரி சோகங்கள் அனுபவிக்க வேண்டியது நாதன் மர்றும் அவர் குடும்பத்தாரின் கர்ம பலனாகக் கூட இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

வக்கீல், நீலகண்டன் மர்றும் வசுமதிஉ நாதனைப் பார்க்க வருகின்றனர். அவர் அசோக் கேஸ் விவரம் குறித்து ஆவலோடு கேட்க, அவரிடம் வக்கீல் தான் யோசித்து வைத்த உபாயம் பற்றிக் கூறுகிறார். வேறு வழியில்லையா என நாதன் கேட்டுவிட்டு, மனமின்றி சம்மதிக்கிறார்.

காதம்பரியின் சம்மதத்தை பெற நீலக்ண்டன் முயலுகிறார். அவளோ இது பற்றி அசோக்கின் அபிப்பிராயம் என்ன என்று கேட்க, அசோக் கண்டிப்பாக இதற்கு ஒத்துக் கொள்ளமாட்டான் எனவும், ஆகவே அவனை கேட்கவில்லை என்றும் பதில் வருகிறது. வேறு வழியின்றித்தான் வக்கீல் இந்த உபாயத்தை கையில் எடுக்க க்க நேர்ந்தது எனக் கூற, வக்கீல் கையில் எடுத்துக் கொண்டதும் மிக அழிவுகளை தரக்கூடியதுமான அந்த பிரும்மாஸ்திரத்துக்கு தன் நமஸ்காரங்களை காதம்பரி தெரிவிக்கிறாள்.

அதென்ன சார் பிரும்மாஸ்திரம், அவ்வளவு அழிவைத் தருமா என சோவின் நண்பர் கேட்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சுப்பிரமணியன் சுவாமி, கக்கன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி

நண்பர் திருமலை ராஜனிடமிருந்து வந்தது இம்மின்னஞ்சல்.

Dondu Sir

If possible can you please announce the below event in your web blog. Your readers from our area may attend if they come to know through your blog.

Thanks
Rajan

Bharati Tamil Sangam (BATS)

Invites you to a lecture by
Dr. Subramanian Swamy
Professor of Economics, Harvard University

Chief Guest
Thiru.Viswanathan Kakkan
(Brother of Late Shri.P.Kakkan, Home minister, Tamil Nadu)

June 26 (Saturday) @ 1.30 PM
Bay Area Vaishnav Parivar, 25 Corning Avenue, Milpitas 95035
(408-586-0006)


அன்புடன்,
டோண்டு ராகவன்

6/21/2010

நிதிஷ் குமாருக்கு பைத்தியம்தான் பிடித்திருக்கிறது

அரசியலில் விவஸ்தை ரொம்பக் குறைவுதான் என்பதை நானும் அறிவேன். ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் செய்யும் அலம்பல்களால் யாருக்கு விவஸ்தை இருக்கிறதோ இல்லையோ அவருக்கு அது சுத்தமாக லேது என பிரகடனப்படுத்தி விட்டார்.

உதாரணத்துக்கு இந்த உரலில் வந்த இச்செய்தியைப் பாருங்கள்.

பாட்னா: பிகார் வெள்ள நிவாரண நிதியாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கொடுத்த ரூ. 5 கோடியை திருப்பி அனுப்பியுள்ளார் பிகார் முதல்வர் நிதிஷ்.

பிகாரில் பாஜகவின் தயவோடு தான் கூட்டணி அரசு நடத்தி வருகிறார் நிதிஷ்குமார். ஆனால், அடுத்தாண்டு அந்த மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பாஜகவிடமிருந்து விலக அவர் முயன்று வருகிறார்.

கடந்தமுறை லாலு பிரசாத் தோற்றதற்கும் நிதிஷ்குமார் ஆட்சிக்கு வரவும் முக்கியமாக இருந்தது அந்த மாநிலத்தின் சிறுபான்மையினரின் வாக்குகள். இந்த வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள இப்போதே தனது முயற்சிகளை ஆரம்பித்துவிட்டார் நிதிஷ்.

இதற்கென சமயம் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு சமீபத்தில் பாட்னாவில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் வசதியாக அமைந்துவிட்டது.

அதில் பங்கேற்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிகார் பத்திரிக்கைகளில் குஜராத் அரசு சார்பில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் தந்திருந்தார்.

பாட்னா கூட்டத்தில் பங்கேற்கும் தனக்கு அந்த பத்திரிக்கைகள் நல்ல கவரெஜ் தரும் என்பது தான் இதற்குக் காரணம். அதில் நிதீஷ்குமாரும் நரேந்திர மோடியும் கைகோர்த்திருப்பதைப் போன்ற படம் இடம் பெற்றிருந்தது.

மேலும் பிகாரில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்துக்கு குஜராத் ரூ. 5 கோடி தந்து உதவியதையும் அந்த விளம்பரம் பெரிதாக விளக்கியது.

இதனால் முஸ்லீம்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதால் இந்த விளம்பரத்துக்கு நிதிஷ்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அன்றைய தினம் பாஜக தலைவர்களுக்கு தர இருந்த விருந்தையும் ரத்து செய்தார். இதனால் கூட்டணி உடையப் போகிறது என்று செய்தி பரவியது. ஆனால், பாஜக அதை பெரிதுபடுத்தவில்லை. மாநிலத் தலைவர்கள் லேசான கண்டனம் தெரிவித்ததுடன் அமைதி காத்துவிட்டது. மூத்த பாஜக தலைவர்கள் யாரும் நிதிசுக்கு எதிராகப் பேசவில்லை.

இந் நிலையில் நேற்று பிகார் வெள்ள நிவாரணத்திற்காக குஜராத் அரசு வழங்கிய ரூ. 5 கோடியை திருப்பி அனுப்ப நிதிஷ்குமார் உத்தரவிட்டார். இதன்மூலம் பாஜகவிடமிருந்து தான் விலக விரும்புவதை நிதிஷ் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

ஆனால், பிகாரில் தனித்துப் போட்டியிடும் நிலையி்ல் பாஜக இல்லை. இதனால் பாஜக அமைதி காத்து, கூட்டணியை தக்க வைக்க முடிந்தவரை முயலும் என்றே தெரிகிறது.

ஒரிஸ்ஸாவில் பாஜக உதவியோடு ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளத் தலைவர் முதல்வர் நவீன் பட்நாயக் , சட்டமன்ற-மக்களவைத் தேர்தலின்போது கடைசி நேரத்தி்ல பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு தனித்துப் போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஸ்டைலை நிதிஷ் குமாரும் பின்பற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.


அரசியல் காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். அதற்காக அரசியல் நாகரிகத்தை மறக்கலாமா என்பதுதான் எனது கேள்வி.

அதை விடுங்கள். வெள்ள நிவாரணத்துக்கு வரும் உதவியை இம்மாதிரி தனது கட்சியின் அல்ப நலன்களுக்காக ஒரு கட்சித் தலைவர் இம்மாதிரி திரும்ப அனுப்புவது எந்த வகையில் புத்திசாலித்தனம் என்பது தெரியவில்லை? மத்திய அரசுடன் சண்டை வந்தால் மத்திய உதவியையும் மறுப்பாரோ?

உங்கள் கட்சியுடன் ஒட்டு உறவு இல்லை என முறித்து கொள்ள எல்லா கட்சியினருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதை இன்னும் நாகரிகமாக செய்திருக்கலாம். இந்த அழகுக்கு இந்த மகானுபாவர்தான் பீகாரிலேயே மிக ஜெண்டில்மேன் அரசியல்வாதியாகக் கருதப்படுபவர் என்று வேறு பேச்சு இருக்கிறது. அப்போது மீதிப்பேரின் யோக்கியதை பீகாரில் என்னவாக இருக்கும்?

ஆனால் ஒன்று, இதற்கு ராஷ்டீரிடிய ஜனதா தளம் தலைவர் லல்லுபிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“நிதிஷ்குமாரின் நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. ஒரு மாநிலத்தில் பிரச்சினை ஏற்படும்போது மற்ற மாநிலங்கள் உதவுவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அந்த வகையில் குஜராத்தும் உதவி இருக்கிறது. அந்த பணத்தை திருப்பி அனுப்புவது குஜராத் மக்களை அவமதிப்பதாகும்.

நரேந்திரமோடி தனது சொந்த பணத்தில் இருந்து தரவில்லை. அது மக்களின் பணம். அதை திருப்பி அனுப்பியது மோசமான செயல்’’என்று தெரிவித்துள்ளார். லாலுவே பரவாயில்லை போலிருக்கே.

ஆ வூன்னாக்க மோடியை திட்டு என்பதை விட்டு அவர் மாதிரி திறமையான மாநில நிர்வாகத்தை அளிக்க யாருக்குமே நேரம் இல்லை என்பதுதான் விசனத்துக்குரியது.

நம் தமிழ் நாட்டில்தான் எம்.ஜி.ஆர் - கருணாநிதி மற்றும் ஜெ-கருணாநிதி மோதல்கள் தனிப்பட்ட தாக்குதல்களாகப் போய் தமிழ் நாட்டின் மானத்தை வாங்குகின்றனர் என்றால், தானும் அநாகரிகத்தில் குறைந்தவன் அல்ல என பீகார் முதல்வரும் களமிறங்கியிருப்பது வருந்தத்தக்கதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/18/2010

பெரியாரின் பெயர் ரிப்பேர் ஆகப்போவதை இனிமேலும் வீரமணியால் தடுக்கவியலாது

இன்று எதேச்சையாக இப்பக்கத்தைப் பார்த்தேன். அதிலிருந்து சில வரிகளை முதலில் பார்ப்போம். (இது 2008-ல் வந்தது என நினைக்கிறேன்)


‘குடியரசு’ இதழில் பெரியார் எழுதிய கருத்துக்கள் யாருக்குச் சொந்தம்?’ என்ற வழக்கின் கோர்ட் உத்தரவு பகுத்தறிவுவாதிகளிடையே பரபரப்பாகப் பேசப்பட்டு, உணர்ச்சிபூர்வமான விவகாரமாக உருவெடுத்துள்ளது. திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகங்களின் இந்த ஆடு-புலி ஆட்டம் முற்றுப்பெறவேண்டும் என்கிறனர் பெரியார் பற்றாளர்கள்.

தந்தை பெரியாரின் பகுத்தறிவு, சமூகச் சீர்திருத்த கருத்துக்களை சாதாரண மக்களிடம் கொண்டு செல்லும் அமைப்பாகத் திராவிடர் கழகம் இயங்கி வருகிறது.

தாய் கழகத்துடன் ஏற்பட்ட மோதலில் பெரியார் கருத்துக்கள், எண்ணங்கள் சரியாகச் சொல்லப்படவில்லை என்ற கோபத்தில் அங்கிருந்து பிரிந்தவர்கள், பல புதிய அமைப்புகளை தொடங்கினர். அப்படித் தொடங்கப்பட்ட அமைப்புகளில் ஒன்றுதான் பெரியார் திராவிடர் கழகம். ‘குடியரசு’ இதழில் பெரியார் எழுதியவற்றை புத்தகமாக பல தொகுதிகளாகத் தொகுத்து வெளியிட முயற்சி மேற்கொண்டது இந்த அமைப்பு.

அதற்கு வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போதே இந்த வழக்கு விவகாரம், பகுத்தறிவாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.

உப்புமாவுக்குக்கூட தகுதி பெறாத பல நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டபோதும் பெரியாரின் கருத்துக்கள் நாட்டுடமையாக்கப்படவில்லை. இதற்குப் பகுத்தறிவுவாதியான கலைஞரும் முன்வரவில்லை. இதற்குக் காரணம் வீரமணிதான் என்கிறது எதிர்தரப்பு.

எனவே வழக்கின் தீர்ப்பைத் தெரிந்துகொள்வதில் பகுத்தறிவாளர்கள், பெரியார் தொண்டர்கள் உள்பட பலரும் ஆர்வமுடன் எதிர்நோக்கியிருந்தனர். காரணம், பணபலம் இல்லாத ஆனால், பெரியாரின் கருத்துக்களை துண்டறிக்கை அல்லது சிறு புத்தகமாக வெளியிட நினைத்தவர்களும்கூட, அப்படி வெளியிட்ட பிறகு எங்கே திராவிடர் கழகம் நம்மீது வழக்கு தொடர்ந்துவிடுமோ.. பிறகு கோர்ட் படிக்கட்டுகளில் யார் ஏறி இறங்குவது? என்ற தயக்கம் அவர்களுக்கு ஏற்பட்டதுதான்.

தற்போது ‘குடியரசு’ இதழிலில் இருந்து பெரியாரின் கருத்துக்களை எடுத்து வெளியிட இனி யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை என்கின்றனர் பகுத்தறிவுவாதிகள். காரணம், ஜூலை 27--ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புதான்.

தந்தை பெரியார் ‘குடியரசு’ நாளிதழில் 1925--ம் ஆண்டு முதல் 1938--ம் ஆண்டு வரை பல்வேறு சீர்திருத்தக் கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். அதில் மதம், அரசியல், பொருளாதாரம், சமூகம், சுயமரியாதை, பகுத்தறிவு, பெண்ணுரிமை போன்ற பெரியாரின் புரட்சிகர கருத்துகள் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவரது இந்தப் படைப்புகள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் பெரியார் திராவிடர் கழகம் 27 தொகுப்புகளாக வெளியிட முடிவு செய்தது. இதற்கான பணியில் தீவிரமாகக் களமிறங்கினர் பெரியார் தி.க.வினர். கடந்த ஆண்டு இத்தொகுதிகளை வெளியிட தடைகோரினார் திராவிடர் கழக தலைவரும், பெரியார் சுயமரியாதை பிரசார இயக்கத்தின் செயலாளருமான கி.வீரமணி. அவரது மனுவின் பெயரில் பெரியார் திராவிட கழகத்தின் இந்த முயற்சிக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டது.

“பெரியார் சுயமரியாதை பிரசார இயக்கத்தைத் தொடங்கி, அதன் சொத்துக்களை என்னிடம் ஒப்படைத்தார். ‘குடியரசு’ இதழில் வெளிவந்த அவரது எழுத்துக்கள், பேச்சுகள் அனைத்தும் சுயமரியாதை பிரசார இயக்கத்திற்கு உரியது. இதற்கான பதிப்புரிமையும் சுயமரியாதை பிரசார இயக்கத்திடம் உள்ளது. எனவே, பெரியாரின் எழுத்துக்களை பெரியார் தி.க. வெளியிட தடைவிதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவின் மீது சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு அளித்த அதிரடி உத்தரவுதான், பகுத்தறிவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை என்று பிரசாரம் செய்தவர் தந்தை பெரியார். சமூகத்தில் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் அவர். தன்னுடைய கருத்துக்களை அவர் ‘குடியரசு’ பத்திரிகையில் எழுதியுள்ளார்.

தன்னுடைய எழுத்தும், கருத்துக்களும், பேச்சும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். நூறு ஆண்டுக்குப் பிறகும் இந்தச் சமுதாயத்தினர் அவருடைய கருத்துக்களை தெரிந்து கொள்வது நல்லது.

எனவே, பெரியாரின் கருத்துக்களுக்கும் எழுத்துக்-களுக்கும் யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது. வழக்கு ஆவணங்களுக்கு நடுவே அவரது கொள்கைகளை அடைத்துவிடக் கூடாது.

வீரமணி தனது அமைப்புக்குத்தான் இந்த உரிமை உள்ளது என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டார். எனவே, பெரியாரின் கருத்துக்களை நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுகிறது.

2009--ம் ஆண்டு பெரியாரின் 130--வது பிறந்த நாள் வருகிறது. அவரது எழுத்துகளுக்குக் காப்புரிமை கேட்டு சட்ட யுத்தம் நடத்துவது வேதனையாக உள்ளது. இந்தப் பிரச்னையால் பெரியாரின் எண்ணங்கள் பரவுவது தடைபட்டுவிடக் கூடாது. நூறு பூக்கள் பூக்கட்டும், ஆயிரம் எண்ணங்கள் மலரட்டும் என்பதுதான் நமது குறிக்கோள்” என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.


ஆனால் அத்தீர்ப்புக்கு தடையுத்திரவு அப்போதே வாங்கினாரே வீரமணி. அதைத்தானே இப்போது நீக்கியுள்ளார்கள்? இக்கேள்விக்கு விடை தேடி பின்புலனை பார்த்ததில் இப்பக்கம் கிடைத்தது. அதிலிருந்து சில வரிகள்.

அத்தனை சொத்துக்களையும் அபகரித்தாகி விட்டது - பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக்
அனைத்தையும் வசப்படுத்தியாகி விட்டது - எதிர்ப்பவர்களை எல்லாம் வெளியேற்றியாகி விட்டது.

அடுத்த வாரிசாக தன் மகனையே நியமித்தாகி விட்டது - தந்தை பெரியாரின் பேச்சுக்களையும்,
எழுத்துக்களையும் ஏற்கெனவே வியாபாரப் பொருளாக்கி பெரும் பணம் பண்ணி வரும் வீரமணி அவர்கள் - பெரியாரின் எழுத்துக்கள் மற்றவர் மூலம் வெளிவருவதை தடுக்க உயர்நீதி மன்ற தடை பெற்றும், மேல்முறையீடு செய்தும் சட்டபூர்வமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னால் ஆன மட்டும் முயன்று வந்தது யாருக்கும் தெரியாதது போல- நேற்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம்
தலைகுப்புற கீழே விழுந்த தன்மானத்தலைவர் (!) வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை -
———————
“குடியரசு இதழில் வெளிவந்த பெரியாரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களை பெரியார் திராவிட கழகம் புத்தகங்களாக வெளியிடுவதை எதிர்த்து திராவிட கழகத்தினர் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

ஆனால் பெரியாரின் படைப்புகளை புத்தகமாக வெளியிடுவதற்காக நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

“பெரியாரின் படைப்புகளை அறக்கட்டளையின் அனுமதி பெற்று” யார் வேண்டுமானாலும் புத்தகமாக
வெளியிடுவதற்கு எப்போதும் தடை கிடையாது
——————

“அறக்கட்டளையின் அனுமதி பெற்று” என்று இவர் மீண்டும் எல்லாரும் தன்னை அனுமதி கேட்க வேண்டும் போல் அறிக்கை விடுகின்றார். பெரியாருடைய எழுத்துக்களையும், பேச்சுக்களையும் வெளியிட யாருடைய அனுமதியும் தேவை இல்லை என்பதுதான் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பே!


இந்தத் தருணத்தில் ஞாநியின் லேட்டஸ்ட் ஓ பக்கங்களில் அவர் குறிப்பிடுவதையும் பார்க்க வேண்டும். அதாகப்பட்டது பெரியார் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டமேட்டிக்காகவே அவரது எழுத்துக்கள் பொதுவுடைமையாகி விட்டன, அதாவது 1998-லேயே. கடந்த 12 ஆண்டுகளாக அதை வீரமணி தன் பக்கம் பிடித்து வைத்திருக்கிறார். அரசுக்கு அதன் சட்டத்துறை ஏன் இது சம்பந்தமாக ஆலோசனை கூறவில்லை எனவும் அவர் எழுதியிருப்பதும் சிந்திக்கத் தகுந்ததே. வீரமணி கம்மென்று இருந்திருந்தால் கலைஞர் அரசு பெரியார் எழுத்தை நாட்டுடைமையாக்கி இருக்கும் பட்சத்தில் கணிசமான தொகை தந்திருக்கும், இப்போது நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னால் அதுவும் போச்சு என்ற நிலைதான்.

ஆக அடாவடி செய்தது, அதிலும் புத்திசாலித்தனமாக செயல்படாது, வரக்கூடிய பண வரவை இழந்தது ஆகியவற்றைப் பார்த்தால் வீரமணிக்கு காலநேரம் சரியில்லை என்றுதான் கொள்ளவேண்டும். அவருக்கு கால சர்ப்ப தோஷம் / யோகம் என நினைக்கிறேன்.

“பாவம்பா இவரு. ஏதாவது இந்த விஷயத்தில் அவருக்கு சாதகமாக நீயாவது எழுது பெரிசு” என முரளிமனோஹர் என்னைக் கேட்டுக் கொண்டதால் நிறைய யோசித்து மண்டையைக் குடைந்து நான் கண்டுபிடித்த ஒரே ஒரு வீரமணி-ஆதரவு கருத்து இதுதான்.

ஏற்கனவேயே பெரியாரின் எழுத்துக்களை வர்ஜா வர்ஜமின்றி தமிழ் ஓவியா, சங்கமித்திரன் ஆகியோர் போடுவதைப் படிக்கும்போதே பெரியார் என்ற மனிதரின் முரண்பாடுகள் இப்படி பல்லிளிக்கும்போது இப்போது குடியரசு பத்திரிகை கட்டுரைகள் வேறு சேர்ந்து கொண்டால் அவருக்கு ஓவர் எக்ஸ்போஷர் ஆகி ஜனங்களும் மொக்கைக் கருத்துக்களால் சூழப்படுவார்களாக இருக்கும். இத்தனை ஆண்டுகள் வீரமணி அதைத் தடுத்துப் பார்த்தார்.

இனிமேல் என்ன செய்வது? ஈஸ்வரோ ரக்ஷது (கடவுளே பெரியாரின் பெயரை காப்பாற்றுங்கள்) என்றுதான் அவர் இருக்க வேண்டியிருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 103 & 104)

எபிசோடு - 103 (16.06.2010) சுட்டி - 2
இரவு 12 மணிவரை அசோக் வீட்டுக்கு வராததால் காதம்பரி கவலைஅடைகிறாள். அப்போதுதான் அசோக்கும் உள்ளே வர அவன் எங்கே போயிருந்தான் என அவள் கேட்கிறாள். மனம் சரியில்லாததால் பீச்சில் போய் உட்கார்ந்திருந்ததாக அவன் பதிலளிக்கிறான்.

அடுத்த நாள் காலை வையாபுரி கொலை செய்யப்பட்ட செய்தியை சிங்காரம் வந்து நாதனிடம் கூற அவர் ஸ்தம்பித்து நிற்கிறார். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என வசுமதி கவலையுடன் கேட்க, எல்லாமே தலையெழுத்து என அவர் சைகை காட்டுகிறார்.

வையாபுரி வீட்டில் அவனது பி.ஏ.வை போலீஸ் விசாரிக்க அவன் அசோக் வையாபுரியுடன் இரண்டு நாட்கள் முன்னால் சண்டை போட்டதை எடுத்துரைக்கிறான்.

இப்போ பாத்தீங்களா, போலீஸ் எல்லாரையும் முறையாகவே விசாரிக்கிறாங்க, முன்காலம் போல இல்லை என நண்பர் சிலாகிக்க, சோ அவர்களோ எவிடென்ஸ் ஆக்ட் பற்றி மனுஸ்மிருதியில் விரிவாகவே கூறப்பட்டதை எடுத்துரைக்கிறார். சுந்தரமூர்த்தி நாயனாரை சிவபெருமான் தடுத்தாட்கொண்ட கதையை கூறுகிறார். அதில் சாட்சிகள் மூவகைப்படும், அவையாவன, ஆட்சி, ஆவணம் மற்றும் அயலார் கண்ட சாட்சி என்கிறார். அவற்றையும் ஒவ்வொன்றாக விளக்குகிறார். அப்படியே சுந்தர மூர்த்தி நாயனார் கதையையும் சுவைபடக் கூறுகிறார். அதை அனுபவிக்க வீடியோவைக் காண்க.

அசோக் வீட்டில் வந்து இன்ஸ்பெக்டர் சமையற்கார மாமி, சிங்காரம் ஆகியோரை ஒவ்வொருவராக விசாரிக்கிறார். என்ன வேண்டுமானாலும் ஆகட்டும் பார்த்துக் கொள்வோம் என விரக்தியாகப் பேசுகிறார் நாதன். அசோக் மேலுள்ள சந்தேக வலை மெதுவாக இறுகுகிறது.

(தேடுவோம்)

எபிசோடு - 104 (17.06.2010) சுட்டி - 2
சிங்காரத்தை விசாரித்ததும் காதம்பரியை விசாரிக்க ஆரம்பிக்கிறார் இன்ஸ்பெக்டர். அதற்குள் அசோக்கே வந்து விட அவனை விசாரித்து விட்டு பிறகு ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார். தன் அக்காவிடம் ஆறுதலுக்காக வருகிறாள் காதம்பரி. அசோக் இந்தக் கொலையை செய்திருக்கவே முடியாது என அவள் அக்கா உறுதியாகக் கூற, காதம்பரியோ தயங்குகிறாள்.

ஸ்டேஷனில் அசோக்கை மேலும் விசாரிக்க, அவனோ பதட்டமேயில்லாது பதிலளிக்கிறான். நடந்ததை நடந்தபடி கூறுகிறான். சம்பவம் நடந்த இரவு 9 மணிக்கு தான் பீச்சில் இருந்ததாக அவன் கூற, இன்ஸ்பெக்டர் அதை நம்ப மறுக்க, அவனோ அதற்காக தான் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிடுகிறேன். பிறகு அவனை லாக்கப்பில் வைக்கிறார்கள்.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் அவரும் செல்லம்மாவும் அசோக் கேஸ் பற்றி விவாதிக்கிறார்கள். அசோக்கின் ஜாதகத்தை பார்க்கும் சாம்பு அவனுக்கு கால சர்ப்ப தோஷம் இருக்கிறது எனவும், திருநாகேஸ்வரத்துக்கு சென்று அர்ச்சனை செய்தல் நலம் என சாம்பு கூற, அது என்ன கால சர்ப்ப தோஷம் என சோவின் நண்பர் கேட்கிறார். சோ தான் இதுபற்றி பம்மல் சந்தான குருக்கள் என்ற சோதிட வல்லுனரை கேட்டதாகவும், அவர் இதற்கு சரியான பெயர் கால சர்ப்ப யோகம் என்று சொன்னதாகவும் கூறுகிறார். ராகு கேது ஆகிய இரு சர்ப்பங்களுக்கிடையில் மீதி கிரகங்களின் வீடுகள் அமைந்தால் இது நடக்கும் எனக் கூறிக்கேட்டதாகவும் அவர் கூறுகிறார். இதற்கு மேல் எனது சோதிட அறிவு போதாமையால், நண்பர்கள் சுப்பையா, சித்தூர் முருகேசன் ஆகியோர் இந்த எபிசோடுக்கான வீடியோவைப் பார்த்து விட்டு ஏதேனும் பின்னூட்டமிட்டால் நன்றாக இருக்கும்.

செல்லம்மாவிடம் சாம்பு சாஸ்திரிகள் அசோக்குக்காக கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யுமாறு கூற, அந்த உத்தமப் பெண்மணியும் அவ்வாறே செய்வதாக மனசாரக் கூறுகிறார். அசோக்கின் நலத்தில் உண்மையாகவே அக்கறை கொண்டுள்ள இந்த எளிய தம்பதியரின் நிலைப்பாடு மனதுக்கு நிறைவாக உள்ளது.

லாக்கப்பில் அசோக்கைப் பார்த்து நாதனும் வசுமதியும் கலங்குகின்றனர். சத்தியத்துக்கு சோதனை வருவது ஒன்றும் புதிதில்லையே என அசோக் கூற, சத்தியம் என்பது அபாயகரமான விஷயம், அதனுடன் சங்காத்தம் வைத்துக் கொண்டதால்தான் அசோக்குக்கு இந்த சோதனை என நாதன் கோபப்பட்கிறார். ஒரு வேளை ஒரு நொடிநேர ஆவேசத்தில் இவனே வையாபுரியை கொலை செய்திருப்பானோ என்ற தனது ஐயத்தையும் அவர் அவனிடம் கூறுகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/17/2010

கடைசியில் தயங்கியது சரியாகவே போயிற்று

எனது இப்பதிவை போட்டபோது இருந்த எனதுதயக்கங்களே வேறு. ஆனால் நிஜமாகவே நடந்தது முற்றிலுமே எதிர்பார்க்காததே. நான் முதலில் ஏன் தயங்கினேன் என்றால், சொன்ன தேதிக்கு நேர்காணல் ஒளிபரப்பப்படுமா என்பதே. மேலும் இது மூன்றாவது நேர்காணலாக வேறு அமைந்து விட்டதா, ஆகவே இது கொஞ்சம் ஓவரோ என்ற எண்ணம் வேறு சேர்ந்து கொண்டது. இருந்தாலும் நடப்பது நடக்கட்டும் என பதிவை போட்டேன். பதிவரல்லாத நண்பர்கள் யாருக்குமே ஃபோன் போட்டு சொல்வதாக இல்லை. இருந்தாலும் நேற்று இரவு அதையும் செய்து வைத்தேன்.

ஆனால் நடந்ததென்னவோ சிறிதும் எதிர்பாராதது. விளக்குகிறேன்.

இன்று காலை செய்த்களின் போதே டிவியை ஆன் செய்து விட்டோம். அது முடிந்ததும் காலை மலர் என அதற்கான இசையுடன் வந்தது. ஆகா என நிமிர்ந்து உட்கார்ந்தால், ஆரோக்கிய சமையல் பற்றி ஒரு பெண்மணி விஸ்தாரமாக பேசினார், எருமை மாடுகள் ஏன் சேற்றில் மூழ்கிய வண்ணம் காணப்படுகின்றன என்று இன்னொருவர் பேசினார். ராசி பலன்களும் வந்தன. அதற்குள் நண்பர்களிடமிருந்து ஃபோன் கால்கள் வர ஆரம்பித்தன. எருமை மாடுகளின் நிழற்படத்தில் நான் எங்கே இருக்கிறேன் என எனது பாபிஷ்ட நணபன் ஒருவன் நக்கலாகக் கேட்டான்.

நானே பொறுக்க முடியாமல் தயாரிப்பாளருக்கு ஃபோன் போட அவர்தான் காலை மலரின் கான்சப்டின் மாற்றம் பற்றி விளக்கினார். காலை 08.10-க்கு மேல்தான் எனது பேட்டி வரும் எனக் கூறினார். பிறகுதான் மனம் அமைதியாயிற்று. தவறு என் மேல்தான். கான்சப்ட் மாறியிருக்கும் என தோன்றவேயில்லை என்பதுதான் நிஜம்.

பேட்டியும் ஆரம்பமாயிற்று. எனது பெயரை டோண்டு ராகவன் எனக்குறிப்பிடுமாறு கூறியிருந்தேன். டோண்டு என்னும் பெயர் ஏன் என்பதுடன் கேள்விகள் தொடங்கின. மிக கவனத்துடன் முந்தைய இரு நேர்காணல்களில் கூறப்பட்டவற்றைத் தவிர்க்க எண்ணினாலும் சில விஷயங்கள் ரிபீட் ஆவதைத் தடுக்கவியலவில்லை. முக்கியமாக “எந்தக்கடையில் அவள் பூ வாங்கினாளோ” எனத் தொடங்கும் வாக்கியத்துக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றிப் பேசும்போது உள்ளுக்குள் இருந்து வந்த அழுகையை அடக்க போனமுறை போலவே இப்போதும் சிரமப்பட்டேன்.

ஆனால் திருக்குறள் பற்றி நான் கூறியது முழுக்கவே வந்ததில் எனக்கு திருப்தியே. வாடிக்கையாளாரை அணுகும் முறைகள் பற்றி நான் இட்ட சில பதிவுகளிலிருந்து பல விஷயங்கலைக் கூறினேன். பெண்கள் இத்துறையில் ஆற்றும் பங்கு பற்றியும் கேட்டார்கள். சொலவடைகளை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகளையும் குறிப்பிட்டேன். அரை மணி நேர நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எடுத்த ஷூட்டிங்கிலிருந்து மிக சிறப்பாகவே நிகழ்ச்சிகளை தொகுத்திருப்பதும் பாராட்டுக்குரியதே. நிகழ்ச்சி முடிவடைந்ததும் அதன் தயாரிப்பாளருக்கு போன் போட்டு நன்றி கூறினேன்.

எனது மச்சினி ரிகார்ட் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறாள். சிடி கைக்கு வந்ததும் யூ டியூப்பில் ஏற்றுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/16/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 101 & 102)

எபிசோடு - 101 (14.06.2010) சுட்டி - 2
அரசியல்வாதி நல்லத்தம்பியிடம் ஒரு தொழிலதிபர் தான் துவங்க விரும்பும் பொறியியல் கல்லூரியை நிறுவ அவரிடம் அரசியல் உதவிகள் எதிர்பார்க்கிறார். ஆகவே கணிசமான சூட்கேஸ் கைமாறுகிறது.

சாம்பு வேம்பு வீட்டில் மின்சார பில் குறித்து சர்ச்சை எழுகிறது. வேம்பு வீட்டை இரண்டாகப் பிரிக்கும் யோசனையை முன்வைக்கிறார்.

காரடையார் நோன்பு காதம்பரியின் அக்கா காஞ்சனா செய்து விட்டு கணவனுடன் பேசுகிறாள். அது பற்றி கணவர் கேட்க சுமங்கலிகள் தத்தம் கணவர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்கான பிரார்த்தனை அது என விளக்குகிறார். கூடவே வாய்க்கு ருசியான உப்பு மற்றும் வெல்ல அடை கிடைப்பதால் அவளது கணவனுக்கு அது டபுள் ஓக்கே.

சோவின் நண்பர் அவரிடம் காரடையார் நோம்பு பற்றி கேட்க, அவர் அதன் அடிப்படை சாவித்திரி சத்தியவான் கதையிலிருந்து வருவதாக கூறியவர் மற்றப்படி வேறு ஏதும் பலமான சாத்திர அடிப்படை இல்லையெனவும் கூறுகிறார்.

பொறியியல் கல்லூரி துவக்க பணம் தந்தவரை நல்லத்தம்பி ஏமாற்ற, அவரும் கருவிய வண்ணம் செல்கிறார். இங்கு அசோக் நாதனிடன் தான் போய் நல்லத்தம்பியைப் பார்ப்பதாக சொல்ல அவர் அவனை செல்ல வேண்டாம் எனக்கூறுகிறார். ஆனால் அவன் கேட்பதாக இல்லை.

(தேடுவோம்)

எபிசோடு - 102 (15.06.2010) சுட்டி - 2
அரசியலில் நல்லத்தம்பி போன்றவர்கள் ஏமாற்றுவது சகஜம் எனக்கூறிய நாதனிடம் அசோக் தன்னைப் போன்ற ஒருவர் போய் அவனைக் கேட்பது அவசியம் எனக்கூறி செல்கிறான். எதற்கும் இருக்கட்டும் என நாதன் சிங்காரத்தையும் கூட அனுப்பி வைக்கிறார். நல்லத்தம்பி அசோக்கிடம் அலட்சியமாகப் பேச அவன் பொங்கி எழுகிறான். ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு செய்த அபசாரம் ஒரு வேளை தீய பலனைத் தராது போகலாம் ஆனால் ஒரு ஜனசமூகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் செய்பவன் மேலேயே திரும்பும் என அசோக் கூறுகிறான்.

அப்படியா சார் என நண்பர் கேட்க, தனக்கு ஆதரவாக இருந்த ராஜதர்மா என்னும் கொக்கைக் கொன்று, செய்நன்றி மறந்த கௌதமன் என்னும் பார்ப்பனனின் கதையை சோ கூறுகிறார். விரூபாட்சன் என்னும் அரசனால் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொலையுண்ட அந்த நன்றி மறந்தவனது பிணத்தை உண்ண ஓநாய்கள், கழுகுகள் கூட மறுத்தன எனக்கூறும் சோ செய்நன்றி மறப்பதின் தீமையைக் கூறுகிறார்.

அசோக் பேசுவதை கேட்டு நல்லத்தம்பியும் கத்த ஆரம்பிக்க உள்ளே வரும் சிங்காரம் இருவரையும் சமாதானம் செய்ய முயல்கிறான். அப்போது நல்லத்தம்பி வாய் தவறி தான் வையாபுரியே என்னும் உண்மையை உளறிவிடுகிறான். கார் விபத்தில் அவன் தப்பித்த கதையையும் கூறுகிறான். அசோக் கடைசியில் அவனுக்கு கோபத்துடன் சாபமிட்டுச் செல்கிறான். அவனது ஆவேசத்தைக் கண்டு சிங்காரம், நல்லத்தம்பி, அவன் பிஏ ஆகியோரும் அசந்து போய் நிற்கின்றனர்.

நாதனிடம் நடந்ததைக் கூறும் சிங்காரம் வையாபுரிதான் நல்லத்தம்பி எனக்கூற அவரும் திடுக்கிடுகிறார். இருப்பினும் இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் கூறுகிறார். சிலவாரங்களுக்கு முன்னால் நடந்த காரடையார் நோன்பு அன்றைக்கு காதம்பரி தனது புடவை தலைப்பு பற்றிக் கொண்டது பற்றிக் கூற வசுமதி கவலையில் ஆழ்கிறாள்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/15/2010

இந்தப் பதிவை போடுவதா வேண்டாமா என எனக்குள்ளேயே தயக்கங்கள்

போனவாரம் ஒரு நாள் திடீரென செல்பேசியில் அழைப்பு வந்தது. ஜெயா டிவியிலிருந்து பேசினார்கள். அடுத்த நாள் காலைமலருக்கான நேர்காணலுக்கான ஷூட்டிங்குக்காகக் கூப்பிட்டார்கள். எனக்கு ஒரே திகைப்பு. ஏற்கனவே இருமுறை இது விஷயமாக ஜெயா டிவியில் இதே காலை மலருக்கு பேட்டி அளித்திருக்கிறேன் என்பதை அவருக்கு நினைவுபடுத்தினேன். அவர் தனக்கும் அது தெரியும் எனக் குறிப்பிட்டார்.

இருந்தாலும் முதலிரண்டு நேர்காணல்களில் கூறப்படாத செய்திகள், கூறப்பட்ட சில விஷயங்களுக்கான் இற்றைப்படுத்தல்கள் ஆகியவை இருக்கும் என்றார். எனக்கென்ன, சரி என்று கூறிவிட்டேன்.

அடுத்த நாள் காலை என் காரில் ஜெயா டிவி வளாகத்தில் சரியாக 11.30-க்கு வந்து என்னை டிராப் செய்து விட்டு, என் வீட்டம்மாவும் மகளும் வடபழனியில் இருக்கும் எனது உறவினர் வீட்டுக்கு விரைந்து விரைந்து சென்றனர்.

போன முறை வந்த அதே ப்ரொட்யூசர்தான் இபோதும். சும்மா சொல்லப்படாது. ஏற்கனவேயே கூறியதைத் திரும்பக்கூறாது தவிர்க்க நிஜமாகவே பாடுபட்டார். நானும்தான். பேட்டி காண வந்தது முதல் இருமுறை வந்தவர்களல்ல. நல்ல வேளையாக வேறு இருவர் - ஓர் ஆண், ஒரு பெண் வழக்கம் போலவே.

ஆனாலும் என்னதான் முயன்றாலும் சில விஷயங்கள் ரிபீட் ஆவதை தடுக்கவியலவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஷூட்டிங் எடுத்தனர். கூறப்பட்ட எல்லா விஷயங்களையுமே காட்டுவார்களா எனத் தெரியவில்லை. இம்முறை மறக்காமல் திருக்குறள் மொழிபெயர்ப்பு பிராஜக்டில் எனது பங்கையும் கூறினேன். ஆகவே பேட்டியைக் காண நானும் ஆவலோடு இருக்கிறேன்.

ஷூட்டிங் முடிந்ததும் காரை வரவழைத்து வீட்டுக்குச் சென்றேன்.

வரும் வியாழனறு, அதாவது ஜூன் 17 அன்றைக்கு காலை செய்திகளுக்குப் பிறகு காலை மலரில் எனது நேர்காணல் வருகிறது என்பதை அறிந்தேன்.

இந்தப் பதிவைப் போடுவதா வேண்டாமா என எனக்குள்ளேயே தயக்கங்கள். இருந்தாலும் போட்டு விட்டேன்.

முடிந்தால் ஜெயா டிவியில் வியாழனன்று காலை மலரில் பேட்டியைப் பார்க்கவும்.

அதாவது காலை 7 மணியளவில் செய்திகள் ஆரம்பிக்கும். அது ஏழரை மணியளவில் முடிந்ததுமே காலை மலர்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/13/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 99 & 100)

எபிசோடு - 99 (09.06.2010) சுட்டி - 2
உமாவின் மாமியார் ரமேஷ் நாதனை சந்திக்கும் விஷயத்தை அவளுடன் விவாதிக்கிறாள். நாதன் உதவி செய்வாரா என அவள் மனம் மயங்க, கண்டிப்பாக செய்வார் என உமா உறுதியாகக் கூறுகிறாள்.

நாதன் அலுவலகத்தில் ரமேஷ். உமாவையும் குழந்தையையும் தான் பிரிய நேர்ந்தது விதியே என அவன் கூற, விதிதான் அவனை உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கச் சொன்னதா என நாதன் கேள்வி கேட்கிறார். பிறகு சாந்தமடைந்து அவன் எங்கும் வேலைக்கு போக முடியாது என்பதை சுட்டிக் காட்டுகிறார். கெட்டவன் என முத்திரை குத்தப்பட்ட அவனைப் போன்றவர்களுக்கு வாழ்க்கை கடினமே என நாதன் மேலும் கூறுகிறார்.

இது பற்றி நண்பர் சோவிடம் கேட்க அவர் யதார்த்த உலகில் அதுவே நிலை எனக்கூறுகிறார். மாரீசனின் கதைஅயையும் கூறுகிறார். மனந்திருந்தி வாழும் மாரீசனை ராவணன் கட்டாயப்படுத்தி மாயமானாக வரச்செய்து சீதையைக் கவருகிறான். இருப்பினும் மாரீசனுக்குத்தான் கெட்டப் பெயர் என சோ கூறுகிறார்.

சாம்பு வேம்பு வீட்டில் அவர்களது மனைவியரிடையே மன வேறுபாடுகள் ஆரம்பமாகின்றன. கோலம் போடுவதில் சண்டை ஆரம்பிக்கிறது. பின்னால் வரப்போகும் சண்டைகள் குறித்தும் கோடி காட்டப்படுகிறது.

நாதனிடம் அசோக் நீலக்ண்டனுக்கு வாக்களித்தப்படி அவரது மாப்பிள்ளை ரமேஷுக்கு உதவி செய்யுமாறு வலியுறுத்துகிறான். நாதன் அதை மனமேயின்றி செய்ய முற்படுகிறார். அசோக்கினது உபதேசம் தன்னைப் போன்றவர்களுக்குத்தானா, நல்லத்தம்பி கூடத்தான் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என அவர் சுட்டிக்காட்ட, அவரும் நல்லத்தம்பியும் ஒன்றல்லவே என அசோக் மிருதுவாகக் கூறுகிறான். அவனது ஹிதோபதேசம் தன்னைப் போன்றவர்களுக்குத்தானா என நாதன் கேட்க, அதென்ன ஹிதோபதேசம் என சோவின் நண்பர் கேட்கிறார்.

நல்ல உபதேசங்களே ஹிதோபதேசம் எனக்கூறும் சோ விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திரக் கதைகள் பற்றி விவரிக்கிறார். விசுவாசம், துரோகம் ஆகியவற்றை விளக்கும் கதைகளையும் சொல்கிறார்.

நீலக்ண்டன் தன் வீட்டுக்கு மகளையும் மாப்பிள்ளையையும் வரச்சொல்லி, நாதன் ரமேஷுக்கு ஒரு சிறுதொழில் செய்யத் தேவையான கடனுக்கான செக்கை தன்னிடம் கொடுத்ததை மாப்பிள்ளையிடம் தர, உமாவும் ரமேஷும் மனம் நெகிழ்கின்றனர். இப்போதெல்லாம் அசோக் கைகாட்டுபவர்களுக்கு நாதன் தயங்காமல் உதவி செய்வதாக நீலக்ண்டன் தான் கண்டறிந்த விஷயத்தைக் கூறுகிறார். மகளையும் மாப்பிள்ளையையும் கோவிலில் செக்கை வைத்து பிரார்த்தனை செய்யச் சொல்கிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 100 (10.06.2010) சுட்டி - 2
நாதன் ஆஃபீசில் அசோக் எவ்வாறு வேலை செய்கிறான் என வசுமதி கேட்க, அங்கு வந்து அவன் எல்லோரையும் சிக்கனம் என்னும் பெயரில் படுத்துகிறான் என அவர் அலுத்துக் கொள்கிறார். இது பற்றி அசோக்கிடம் வசுமதி விசாரிக்க, அவனோ நாதனே திகிலடையும் வண்ணம் அவரது கம்பெனி செய்யும் பல தில்லுமுல்லு காரியங்களைப் பட்டியலிடுகிறான்.

கோவிலில் வைத்து சாம்பு ரமேஷ் மற்றும் உமாவுக்காக பூஜை செய்து ஆசிகள் வழங்குகிறார். தனது காரியங்களை ஈசனின் துணையுடன் செய்யுமாறு அவர் தன் பங்குக்கு அறிவுரை கூறுகிறார். ரமேஷும் ஒத்துக் கொள்கிறான்.

வேம்பு சோர்வாக படுத்திருக்க, சுப்புலட்சுமி அவரை விசாரிக்கிறாள். தான் ஒரு வீட்டுக்கு சென்று நவக்கிரக ஹோமம் செய்து வந்ததால் சம்பந்தப்பட்ட வீட்டினர் நன்மையடைந்தாலும் அதை செய்து வைக்கும் புரோகிதர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் என்றும், அது தொழில்சார்ந்த உடல் உபாதை என்றும் கூறி விளக்குகிறார். மற்றவர்கள் எளிதாக நினைப்பதுபோல வெறுமனே மணியடித்து பிச்சை எடுப்பதுபோல உண்மையான பிராமணனது நிலை இல்லை. அவர்களுக்கான விதிமுறைகள் கடுமையானவை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

அசோக்கும் உமாவும் கோவிலில் சந்திக்கின்றனர். ரமேஷ் பற்றி அசோக் விசாரிக்கிறான். உமா விடைபெற்று சென்றதும் நாரதர் தனது வழமையான சன்னியாசி வடிவில் அசோக்கை பார்க்க வருகிறார். அவனுக்கு இன்னும் பல சோதனைகள் வருமெனவும் ஆனால் சூறாவளியிலும் அசையாது நிற்கும் விளக்குச் சுடரையா நீர் என அவர் கூறுகிறார்.

அது எப்படி சார் சூறாவளியில் விளக்குச் சுடர் நிற்கும் அசையாமல் என நண்பர் கேட்க, இவ்வரிகள் பகவத் கீதையை ஒட்டி வருகின்றன எனவும் ஆனால் அதில் கூட சூறாவளி பிரஸ்தாபம் வரவில்லை என்றும், இங்கே சும்மா டிராமடிக்காக கூறுவதற்காகவே சேர்க்கப்பட்டது என சோ கூறுகிறார்.

அசோக்குக்கு சோதனை வரும் எனவும் ஆனால் அவனுக்கு ஈசன் அருள் உண்டெனவும் கூறிவிட்டு அப்பால் செல்கிறார். அசோக் திகைப்புடன் பார்க்கிறான்.

[என்னை மிகவும் உணர்ச்சிவசப்படச் செய்த காட்சி இது. அதை நான் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆகவே வேண்டுமெனவே தட்டையான வரிகளில் கூறி முடிக்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்துக் கொள்ளட்டும். நான் கூறியவை வெறும் ஜூஜூபி என்பது தெரியவரும்].

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/11/2010

பாப்பானை திட்டணும்னா பகுத்தறிவையும் மறக்கலாம், தப்பில்லை போலிருக்கே - 2

இப்பதிவின் முதல் பகுதி இங்கே

இரண்டாம் பகுதியையும் போடுவதாக முதலில் ஐடியா இல்லை. ஆனால் எனது கேள்விக்கு பகுத்தறிவு திலகங்கள் கொடுத்த பதிலே என்னை இதை செய்ய வைத்து விட்டது.

முதலில் ஒரு சிறு கதை சுருக்கம்.

கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்ற சரித்திர பிரசித்தி பெற்ற கேள்வியை பற்றி நான் மூன்றாண்டுகளுக்கு முன்னால் ஒரு நையாண்டி பதிவு போட்டிருந்தேன். இப்போது பகுத்தறிவு பகலவரின் சின்சியரான சிஷ்யர் சங்கமித்திரன் பல திடுக்கிட வைக்கும் துணிபுகளுடன் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டவை பின்வருமாறு:

1. தருமி ஒரு பார்ப்பனர்,
2. சிவபெருமான் பார்ப்பனராக வந்தார்
3. நக்கீரர் தகுதியற்ற பார்ப்பன தருமிக்கு பரிசு கொடுப்பதை எதிர்த்தார். ஏனெனில் தருமியின் பாட்டில் பொருட்குற்றம் இருந்ததாம். அதாவது கூந்தலுக்கு இயற்கை மணமில்லை என்பதை தருமியும் சிவபெருமானும் ஒத்துக் கொள்ளாது விதண்டாவாதம் புரிந்தனர்.
4. பார்ப்பனர்களே இப்படித்தான்.

நான் எனது நையாண்டி பதிவில் எழுப்பிய கேள்விகள்:
1. கூந்தல் ஒரு ஆர்கானிக் பொருள்.
2. பருவமடையும் இளம் பெண்களின் உடலில் நிகழும் மாறுதல்களாலும், மாறும் வியர்வை மணத்தாலும் கூந்தலும் மணம் பெறுகிறது, ஆணை உடலுறவுக்கு தூண்டுகிறது.
3. ஆக பொருட் குற்றம் செய்தது நக்கீரனே.
4. சங்கமித்திரன் வார்த்தைப்படியே பார்ப்பனர்கள் தவறாக வாதிக்கவில்லை.

இவற்றையெல்லாம் பின்னூட்டமாக போட்டாலும், சங்கமித்திரன் வகையறாக்கள் நேரடியாக பதிலளிக்கவில்லை. அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை. பார்ப்பனருக்கும் பகுத்தறிவுக்கும் தொடர்பு உண்டா என்னும் தலைப்பில் இன்னொரு பதிவை போட்டு, பதிலளிக்கிறேன் பேர்வழி என மேலும் உளறி தங்களது பகுத்தறிவர்ற தன்மையை மேலும் பிரகடனப்படுத்துகின்றனர்.

அவ்ர்களது வாதம்:

1. தேவநாதன் பகுத்தறிவை கர்ப்பகிரகத்தில் பயன்படுத்தினான்.
2. லோக குரு பகுத்தறிவை தாம்பரம் லலிதாவிடம் பயன்படுத்தினார்.
3. கவிஞர் வாலி எவ்வளவு பகுத்தறிவு பேசி திராவிட இயக்க தலைவர்களுடன் தொடர்பு கொண்டு இருந்தாலும் கந்தபுராணத்தை புதுக்கவிதையில் தரவில்லையா?
4. ஒரு பார்ப்பான் பூணூல் குடுமியுடன் இந்த பூமியில் வருணாசிரமம் பேசி திரியும் வரை பெரியார் கருத்து கட், பேஸ்ட் செய்யவேண்டியே வரும்.

ஆனால் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலே இல்லை. ஏனெனில் அவை கேள்விகளே இல்லையாம்.

ஐயா சங்கமித்திரரே, நான் கூந்தலுக்கு இயற்கை மணம் எவ்வாறு உருவாகிறது என்பதை படிப்படியாக கோர்வையாகவே குறிப்பிட்டுள்ளேன். அந்த பாயிண்டுகளை மறுக்க ஏதேனும் உங்கள் மண்டையில் மசாலா இருந்தால் பதிலளிக்கவும். தேவநாதனோ ஜயேந்திரரோ என்ன செய்தால் என்ன, அவை இப்பதிவில் எங்கே வருகின்றன?

ஆக, பாப்பானை திட்டணும்னா பகுத்தறிவையும் மறக்கலாம், தப்பில்லை போலிருக்கே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/09/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட் - 97 & 98)

எபிசோடு - 97 (07.06.2010) சுட்டி - 2
அசோக் வேலைக்கு செல்லும் நாள். தந்தையின் நிறுவனத்திலேயே ஒரு நல்ல உத்தியோகம். எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். சாம்பு சாஸ்திரிகள் பூஜை முடிந்து எல்லோருக்கும் கற்பூரத் தட்டை நீட்ட எல்லோரும் கண்ணில் ஒற்றிக் கொள்கின்றனர். காதம்பரியும் நாதனும் நடந்ததை மறந்து சுமுகமாகின்றனர். நாதன் ஆஃபீசுக்கு காரில் கிளம்ப, அசோக்கோ பஸ்ஸிலேயே செல்கிறான். காதம்பரி கஷ்டப்பட்டு அவனை ஒரு ஷர்ட் போட்டுக் கொள்ள செய்கிறாள். பேண்ட் போட மறுத்து வேட்டியிலேயே செல்கிறான்.

சாம்பு விடைபெற்றுச் செல்ல, மாமியாரும் மருமகளும் அவர் சென்ற பிறகு அவரை இகழ்கின்றனர். அலுவலகத்தில் ரமேஷ் அசோக்கைப் பார்க்க வருகிறான். உமாவுடன் பேசி தன்னுடன் வந்து வாழக் கூறுமாறு கேட்டுக் கொள்ள, அசோக்கும் சம்மதிக்கிறான். தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்து தான் படும் சிறுமைகளை குறிந்து மனம் நொந்து பேசுகிறான். அசோக் அவனுக்கு ஆறுதல் சொல்கிறான். அவனையும் உமாவையும் சம்பந்தப்படுத்தி தான் சந்தேகித்ததை குறித்து மன்னிப்பும் கேட்கிறான். ஒரு சலவைத் தொழிலாளி எழுப்பிய சந்தேகத்தால் சீதையே அக்கினிப் பிரவேசம் செய்ய நேர்ந்ததை அசோக் குறிப்பிடுகிறான்.

சோவின் நண்பர் இது பற்றிக் கேட்க, சோ முதலிலேயே ஒன்றை தெளிவுபடுத்தி விடுகிறார். அக்கினிப் பிரவேசம் என்பது யுத்தம் முடிந்த உடனேயே நடந்து விட்டது. அலவைத் தொழிலாளியின் கதையோ பின்னால்தான் வருகிறது. அதுவும் வால்மீகி ராமாயணத்தில் சலவைத் தொழிலாளி என குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நாட்டில் பலரும் சந்தேகப்பட்டனர். இதெல்லாம் கூறிவிட்டு உத்திர ராமாயணத்தில் வரும் அந்த நிகழ்வுகள் பற்றி மேலும் பேசுகிறார். எப்போதுமே என் மனதை சஞ்சலம் செய்யும் இந்த விஷயங்களும், அதுவும் என் அப்பன் ராமபிரானா இவ்வாறு அநியாயமாக நடந்து கொண்டானே என்ற எனது ஆதங்கமும் இது பற்றி மேலே பேச விடாமல் என்னைத் தடுக்கின்றன.

ரமேஷ் விடைபெற்று செல்கிறான். அசோக் கோவிலில் உமாவை சந்தித்துப் பேசுகிறான். அவளோ அவன் கூறும் அறிவுரைகளை சுலபத்தில் ஏற்றுக் கொள்வதாக இல்லை. இவ்வளவு இரக்கம் பற்றிப் பேசும் அவன் முதலில் ஏன் ரமேஷை போலீசில் காட்டிக் கொடுக்கும்படி தனக்கு உபதேசித்தான் என கடைசியாக அவனை கேள்வி கேட்கிறாள்.

(தேடுவோம்)

எபிசோடு - 98 (08.06.2010) சுட்டி - 2
உமாவின் கேள்விக்கு புன்னகையுடன் அசோக் பதிலளிக்கிறான். சட்டம் நாமே போட்டது அதை நாம்தான் மதிக்கணும். ஆகவேதான் ரமேஷ் சட்டத்தை மீறியதற்காகாக போலீசில் புகார் கொடுக்கும்படி அறிவுரை அச்சமயம் தரப்பட்டது. அவ்வாறே கைதும் செய்யப்பட்டு, வழக்கை சந்தித்து இப்போது வேளியே வந்து விட்டான் ரமேஷ். அவன் இப்போது உமாவிடம் வந்து காலில் விழாத குறையாக தன்னை மன்னிக்குமாறு கேட்கிறான். இப்போது அவனுக்கு ஒரு வாய்ப்பைத் தருவதன் மூலம் அவன் திருந்தும் சந்தர்ப்பம் வந்திருக்கிறது. சட்டம் தண்டிக்க மட்டும்தான் செய்யும், அது திருத்துவது என்பது சந்தேகத்துக்குரியதே. ஆனால் சட்டம் இல்லாவிட்டால் எல்லோருமே துணிந்து தவறுகள் செய்வார்கள். நாடே அழியும் என்கிறான் அசோக்.

அப்படியா சார் எனக்கேட்கும் நண்பருக்கு 90% கேஸ்களில் இதுதான் யதார்த்தம் என்கிறார் சோ. போக்குவரத்து விதிகளை போலீஸ்காரர் இருக்கும்போதுதான் சாதாரண ஜனங்களே மதிக்கிறார்கள். ஒருவரும் அருகில் இல்லாத போது போக்குவரத்து விளக்குகளின் சமிக்ஞைகளை சுலபமாகவே மீறுகிறார்கள். தண்டனை அளிப்பது அரசனின் கடமை. சத்திரியனால்தான் அது முடியும். ஒரு பார்ப்பனனால் முடியாது. ஆகவேதான் பார்ப்பனர்கள் எப்போதுமே அரசர்கள் ஆகவியலாது. இதையெல்லாம் மனுவே அழுத்தந்திருத்தமாகவே கூறிவைத்துள்ளார் என்கிறார் சோ.

ரமேஷை கைது செய்த சட்டமே அவனை விட்டதற்கு முக்கியக் காரணமே அக்குற்றத்தின் மூல வேரை அவன் காட்டிக் கொடுத்து அப்ரூவராக மாறியதாலேயே என்கிறான் அசோக். அதை அடிப்படையாக வைத்துத்தான் அவனுக்கு விடுதலை கிடைத்தது என்றும் அவன் கூறுகிறான். இப்போதும் சட்டத்தை மதித்து நாமும் நடக்க வேண்டும் என்கிறான் அசோக். வீடணன் சரணாகதி அடைந்தது போல அவன் உமாவிடம் சரணடைந்தான் என அசோக் கூற, இந்த இடத்தில் சிடியை நிறுத்திப் பேச ஆரம்பிக்கிறார் சோ. விபீஷண சரணாகதியும் ரமேஷ் இங்கு சரணடைந்ததும் ஒன்றே அல்ல. ஆகவே இவ்விரண்டையும் சேர்த்து அசோக் பேசியது ஒத்துக் கொள்ள முடியாது என்கிறார் சோ. பிறகு வீடணன் சரணாகதி படலத்தையும், அது குறித்து ராமரின் சகாக்கள் பேசியதையும் எடுத்துரைக்கிறார். கடைசியில் ராமரின் சுயதருமம் யார் சரணாகதி அடைந்தாலும் அவனைக் காப்பாற்றுவதே என்பதையும் கூறுகிறார். இதெல்லாம் கூறியபிறகு இப்போதெல்லாம் சரணாகதி என்ற கோட்பாடு எப்போது முன்னுக்கு வந்தாலும் வீடணனின் உதாரணமே தரப்படுவதையும் கூறுகிறார்.

அசோக்கின் வாதங்களை ஏற்று உமா தன் தந்தையுடன் ரமேஷ் வீட்டுக்கு செல்கிறாள். ரமேஷ் மனம் மகிழ்கிறான். இப்போது ரமேஷின் பொருளாதார நிலை பற்றிப் பேச்சு வருகிறது. அவனுக்கு வேலை இல்லை. அவனை வெளியே அழைத்துவர வீட்டையும் அடமானத்தில் வைத்திருக்கிறார்கள். இப்போது உமா ரமேஷிடம் அவன் நாதனை பார்க்கச் செல்ல வேண்டும் எனவும் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறாள். முதலில் மிகத் தயங்கும் அவன் கடைசியில் அவ்வாறே செய்ய ஒத்துக் கொள்கிறான்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாப்பானை திட்டணும்னா பகுத்தறிவையும் மறக்கலாம், தப்பில்லை போலிருக்கே

பதிவர் சங்கமித்திரன் இட்ட தகுதியற்ற தருமிக்குப் பரிசு என்ற ஒரு பதிவு சில நாட்களுக்கு முன்னால் வெளியானது.

நான் கூட தமிழ்மண பக்கத்தில் இப்பதிவின் தலைப்பைப் பார்த்த போது அடேடே சிங்கைப் பதிவர்கள் வைத்த போட்டியில் வெற்றி பெற்ற பதிவர் தருமி மேல் இவருக்கு என்ன கோபம் என ஒரு கணம் துணுக்குற்றேன். பிறகுதான் தெரிந்தது அவர் மண்டபத்தில் எழுதிக் கொடுத்த பாட்டை எடுத்துக் கொண்டு வந்த ஒரிஜினல் தருமியைத்தான் குறிப்பிடுகிறார் என்று. அதிலிருந்து சில வரிகளைப் பார்ப்போம்.

(அரசன், அரசி) அவர்களைச் சுற்றிலும், இவ்வளவு மலர்கள் நறுமணம் வீசிக்கொண்டிருந்த போதிலும், மன்னனுக்குத் தன் அருகில் இருந்த அரசியின் கூந்தலில் தனியொரு நறுமணம்_மாறுபட்ட மணம் கமழ்வதாக உணர்ந்தான்.

“திரும்பித்தன் தேவிதன்னை நோக்கினான்
தேவி அய்ம்பால்
இரும்பித்தை வாசமாகி இருந்தது
ஈண்டுஇவ் வாசம்
சுரும்புவிற்குத் தெரியா தென்னா
சூழ்ந்து இறும்பூச தொண்டீது
அரும்பித்தைக் கியல்போ செய்கையோ
வெனஅய்யம் கொண்டான்’’

அரசனல்லவா? உடனே தனக்கு ஏற்பட்ட ஐயத்தை அறிவித்து, தீர்த்துவைப்பவருக்கு ஆயிரம் பொன் பரிசு எனக் கூறினான்.

இங்கே நாம் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். தமிழன் எங்கே தாழ்ந்தான் வீழ்ந்தான் என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை. மங்கையின் கூந்தலுக்கு இயற்கை மணமா? செயற்கை மணமா என்று ஆராய்வது தான் ஒரு அரசனின் வேலையா? இந்த லட்சணத்தில் அவனது ஆட்சி எந்தப் போக்கில் இருந்திருக்கும்.

அறிவிப்பைக் கேட்டவர்களில், தருமி என்கிற திருமணமாகாத பார்ப்பனப் பையனும் ஒருவன். நேரே கோயிலுக்குப் போனான். புலம்பினான். நான் வேதம் படித்தவன், இல்லற வாழ்வின்றி உன்னை நான் அர்ச்சனை செய்ய முடியவில்லை. நான் திருமணம் செய்துகொள்ள உதவிட வேண்டும். இது பதமான நேரம். ஒரு பாடல் தந்தால் மன்னன் கருத்துக்கிசைய நான் பிழைத்துப் போவேன் என்று கேட்டான்.

உடனே, கம்ப்யூட்டர் பிரிண்டரில் இருந்து வந்து விழுவது போல ஓலைச் சுவடிப் பாட்டு ஒன்று வந்து விழுந்தது.

அவ்வளவுதான், தருமி அப்போதே தனக்கு ஆயிரம் பொன் கிடைத்து விட்டது போல மகிழ்ந்தான். இப்படிப்பட்ட நேரத்தில், இயல்பாகவே ஒரு செருக்குத் தோன்றும். அப்படிப்பட்ட செருக்கோடு, நாவலர் கழகம் நண்ணினான்!

கவிதையைக் காட்டினான். அங்கிருந்த புலவர்கள், கவிதையைப் பார்த்துவிட்டு ‘பேஷ் பேஷ்’’ என்றனர். அரசனும் ஏற்றான். தருமிக்கு ஆயிரம் பொன் வழங்க ஆணையிட்டான்.
பேராசைக்காரனான பார்ப்பான், வாங்கப் போன போது, ஒரு குரல் ‘நில்’ என்றது. ‘நேர்ந்து கீரன் நில்லென விலக்கினான். குற்றம் உள்ளது இக்கவி என்று கூறினான். இதில் ஒரு உண்மை விளங்கும். அந்த அவையில் அக் கவிதையை ஆழ்ந்து பார்த்தவர் நக்கீரர் ஒருவரே என்பது.

அவ்வளவுதான்! தருமிக்கு எப்படி இருக்கும்? கைக்கு எட்டியது வாய்க்கு எட்டும்முன் தட்டிவிட்டானே என்று தானே இருக்கும்.

தலையைத் தொங்கபோட்டுக் கொண்டு, மீண்டும் பரமசிவனிடம் போனான். அங்கே,....

“பெறுபொருள் இழந்தேன் என்றுப் பேசிலன்
யார்க்கும் மேலாம்
கறைகெழு மிடற்றோய் நின்றன் கவிக்குற்றம்
சில்வாழ்நாட்சிற்
றறிவுடைப் புலவர் சொன்னால் யாருனை
மதிக்க வல்லார்’’ என்கிறான்.

இந்தப் பாட்டின் நுட்பத்தைக் கவனிக்க வேண்டும். வந்து கேட்ட போது இந்தப் பார்ப்பனன் கெஞ்சிய கெஞ்சலும், கிடைக்காதபோது தூக்கி எறிந்து பேசுவதையும் கவனிக்க வேண்டும்.

“யோவ் கதியல்லாத எனக்குத்தப்பான
பாட்டைக் கொடுத்தாயே’’ என்று வசைபாடுகிறான்.

உடனே, மனித உருவில் பார்ப்பனப் பரமசிவன் வெளிப்பட்டான்; அவன் எப்போதும் புராணங்களில் பார்ப்பானாகத்தான் வெளிப்படுவான்.

‘நூலாய்ந்தோர் வைகும் திருந்தவைக் கனத்தைச் சேர்ந்தான். அங்கிருந்தவர்களைப் பார்த்து,

‘யாரை நம்கவிக்குக் குற்றம் இயம்பினாரென்றான்’
அஞ்சாது நானே கிளத்தினேன் என்றான் கீரன்.

(இங்குதான் பெரியார் தெரிகிறார்) பின் குற்றம் யாதெனக் கீரன் சொற் குற்றம் இல்லை, வேறு பொருள் குற்றம் என்றான்

‘பொருட் குற்றம் என்ன?’’ என்றான்
“புனை மலர்ச்சார்பாலன்றி
அற்குழற்கு நாற்றமில்லை’’ என்றான்.

நீ வணங்கும் காளத்தி ஞானப் பூங்கோதைக்குமா என்கிறான் பரமசிவன். அவருடைய கூந்தலுக்கும் இயற்கை மணம் இல்லை என்கிறான். (கோயில் சிலை கல். அதற்கு இயற்கைக் கூந்தல் ஏது)

உடனே பரமசிவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. நெற்றிக்கண்ணைத் திறந்தானாம்.

‘முற்றும் நீர் கண்ணானாலும்
மொழிந்த நும்பாடல் குற்றம்’ என்றான்.

தீயின் வெப்பம் தாளாது கீரன் குளத்தில் வீழ்ந்தான். பரமசிவன் ஓடிவிட்டான்; மறைந்துவிட்டான் இதுகதை.

பரமசிவன் என்பவன், தான் எழுதிய பாட்டு குற்றமற்றது என்று விளக்கம் சொல்லிக் கேட்டவரையும், அவை யையும் ஏற்க வைத்திருக்க வேண்டும். அவனால் கீரனின் கேள்விக்குச் சரியான பதில் சொல்ல முடியவில்லை. உடனே பார்ப்பனருக்கே உரிய வன்முறையில் இறங்கிவிட்டார்கள். பார்ப்பானுக்குக் கிடைக்க இருந்ததைக் கெடுத்துவிட்ட நக்கீரனைத் தீயிட்டுத் கொளுத்திவிட்டார்கள்; கொளுத்திவிட்டு ஓடிவிட்டார்கள்; இதுதான் மறைந்துவிட்டான் என்பதன் உட்பொருள்.

தருமி ‘கல்லாதவன்’ கல்லாதவனுக்கு அந்தப் பரிசு கிடைக்க உதவலாமா? பார்ப்பானுக்கு என்றால் எல்லா விதி முறைகளும் செயல்படாது. தகுதி திறமை பேசுகிற கூட்டம் தகுதியில்லாதவனுக்குக் கொடுக்க ஆசைப் படலாமா?

இறுதியில், மறைந்து இருந்து கீரனின் தமிழோடு விளையாட வந்தோம் என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம், தப்பாட்டம், பார்ப்பனப் பம்மாத்து!.
ஆனாலும், இறுதியில் தகுதியற்ற தருமிக்கே பரிசு வழங்கப்படுகிறது. இதுதான்
பார்பனியம்; மனுதர்மம் கோலோச்சுவது ஆகும்.

இதுதான் புராணங்களின் கொள்கை. மொத்தத்தில், புராண இதிகாச, ஆகம, ஸ்ருதி, ஸ்மிருதி வேதங்கள் எல்லாம் ஒரு மையத்தை - பார்ப்பன நலத்தை முக்கியமாகக் கொண்டு எழுதப்பட்டனவாகும்.


இது சங்கமித்திரனின் வாதம்.

இந்த நிகழ்வை குறித்து நானும் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்பது குறித்து ஒரு பதிவை ஏற்கனவேயே போட்டுள்ளேன். அதிலிருந்து சிலவரிகளையே சங்கமித்திரன் பதிவில் பின்னூட்டமாக போட்டு அதுவும் வெளிவந்துள்ளது சில நாட்கள் முன்னால். அதை இங்கே மீண்டும் தருகிறேன்:

சமீபத்தில் 1970-ல் நான் திருவிளையாடல் படம் பார்த்த போது யோசித்த சில விஷயங்களை இங்கு பதிவிடுகிறேன்.

கூந்தல் என்பது ஒரு ஆர்கானிக் பொருள். அதற்கு மணம் உண்டு என்று ப்ளஸ் டூ படிக்கும் மாணவன் கூடக் கூறிவிடுவான். பிறகு ஏன் நக்கீரன் இல்லை என்றார்? ஏனெனில் அப்போது ப்ளஸ் டூ கிடையாது என்று கூறி விடலாமா?

உண்மை ஏறத்தாழ நான் மேலே கூறியதுதான். அதாவது அக்காலத்தில் இந்த அறிவு பரவலாக இல்லை. கண்டிப்பாக ஆயுர்வேத வைத்தியர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் ஒரு நொடியில் விடை கூறியிருப்பார்கள். அதாவது ஒரு பெண்ணின் உடலில் பருவம் செய்யும் மாறுதல்களில் அவளது வியர்வை மணமும் மாறும். தலையில் இருக்கும் வியர்வையின் மணம் கூந்தலுக்குப் பரவும். முடிகள் வாசனைகளை நிறுத்திவைத்துக் கொள்ளும் ஊடகங்கள். ஐந்தறிவு கொண்ட நாய் கூட அதை அறியும். பெண் நாயை அது முகர்ந்து பார்ப்பது அதில் அடங்கும். உடல் உறவுக்குத் தயாராகும் ஆண் பெண் உடல்களில் வரும் மாற்றங்கள் மணங்களாக உருவெடுத்து கூந்தல் இயற்கை மணம் பெறுகிறது.

இங்கு இயற்கை மணத்திற்கும் ஒரு வரையறை செய்கிறேன். அதாவது எது செயற்கை மணம் இல்லையோ, அதுவே இயற்கை மணம். ஆக, வாசனாதி திரவியங்கள் கொடுக்கும் மணம் இல்லை.

ஆனால் கேனத்தனமாக அரசன் புலவர்களிடம் போய்க் கேட்டு வைத்தான். பாருங்கள், "இதனை இவனால் முடிக்கும் என ஆய்ந்து அதனை அவன்கண் விடல்" என்பது போல வரும் குறளை மன்னன் மறந்திருப்பானோ?

எது எப்படியோ, புலவர்களிடம் கேட்டு அவர்கள் விழிக்க, தண்டோரா போடச் செய்து தருமி வந்து புலம்பி, சிவபெருமான் மண்டபத்தில் இருந்து கொண்டு எழுதித் தந்ததை கொண்டு போய் கொடுத்து, சிவபெருமானிடம் மீண்டு வந்து, "உதைக்காம விட்டாங்களே" என்று அல்ப திருப்திப்பட்டு என்றெல்லாம் கதை போகிறது.

என்னமோ சொற்குற்றம் பரவாயில்லையாம், பொருள் குற்றம்தான் தவறு என்று கூறி, இருப்பதிலேயே பெரிய பொருள் குற்றம் செய்கிறார் நக்கீரர், ஏனெனில் அவர் ப்ளஸ் டூ படிக்கவில்லை.

இப்போது இக்கதையை நான் கீழ்க்கண்டவாறு மாற்றுகிறேன்.

சிவபெருமான்: ஆக, உயர்குல மாதரின் கூந்தலில் கூட இயற்கைமணம் இல்லையா?
நக்கீரன்: இல்லை
சிவபெருமான்: தேவலோகப் பெண்டிர்கள்?
நக்கீரன்: இல்லை, நான் வணங்கும் பார்வதி தேவியிடமும் இல்லை
சிவபெருமான்: நக்கீரா இப்போது என்னைப் பார்.
நக்கீரன்: நீர் முக்கண் முதல்வனே ஆனாலும் குற்றம் குற்றமே.

அடுத்த சீன் பொற்றாமரைக் குளத்தருகில்.
பாண்டிய மன்னன்: சொக்கேசரே என்ன இது விளையாட்டு.
சிவபெருமான்: ஷண்பகப் பாண்டியனே, உமது நக்கீரன் தேவலோகப் பெண்டிர் கூந்தல் கூட இயற்கை மணம் கொண்டதில்லை என்று கூறுகிறான். அவன் என்ன நேரில் பார்த்தானா? நேரில் பார்த்தவனான என்னிடமே இவ்வாறு விதண்டாவாதம் செய்தால் என்ன செய்வது. சரி உனக்காக நக்கீரனை பிழைக்கச் செய்கிறேன்.
நக்கீரன்: மன்னிக்க வேண்டும் சிவபெருமானே நீங்கள் வளர்த்த தமிழில் பிழை இருக்கலாகாது என்பதால்தான் வாது புரிந்தேன்.
சிவபெருமான்: அதற்காக விதண்டாவாதம் செய்தால் எப்படி? நீர் ஏதேனும் தேவலோக மங்கையரைக் கண்டீரா? நான் கண்டவன். என்னிடமே கேட்டுத் தெரிந்து கொள்வதுதானே முறை? இல்லையென்றால் உமது புலமைச் சக்தியால் பார்வதி தேவியிடமே பிரார்த்தித்து அவரை வரச் செய்து அவரைக் கேட்பதுதானே முறை. இல்லாமல் அனுமானத்தில் பேசினால் எப்படி?
பாண்டியன்: (தலையைப் பிய்த்துக் கொண்டு) ஐயோ கூந்தலுக்கு இயற்கைமணம் உண்டா இல்லையா?
சிவபெருமான்: அது தெய்வ ரகசியம் பாண்டியனே.
பாண்டியன்: பிறகு எப்போதுதான் தெரிந்து கொள்வது?
சிவபெருமான்: பல நூறாண்டுகள் கழித்து தமிழ்மணத்தில் டோண்டு ராகவன் என்பவர் இது பற்றி எழுதிடுவார். பிழைத்துக் கிடந்தால் அப்போது படித்து தெரிந்து கொள்.

இப்போது டோண்டு ராகவன் பேசுகிறேன்:
ஷண்பகப் பாண்டியனே எழுதி விட்டேன். முடிந்தால் படித்துக் கொள்.


அப்பின்னூட்டம் அப்படியே இருக்கிறது. சங்கமித்திரனிடமிருந்தோ அவரது சகபாடிகளிடமிருந்தோ ஏதும் எதிர்வினை இல்லை. அவர்கள் எல்லோருமே எல்லா இடங்களிலிருந்தும் பெரியார் சமீபத்தில் 1927 வாக்கில் பேசியதை எல்லாம் கட் அண்ட் பேஸ்ட் செய்வதில் பிசியாகி விட்டார்களோ என்னவோ யார் அறிவார்?

நான் இங்கு வாதத்தை முன்வைக்கிறேன்.

எனது பின்னூட்டம் தவறு என்றால் அதை எடுத்துரைக்கலாம். அது உண்மை நிலையையே பிரதிபலிக்கிறது என்றால், பார்ப்பன பரமசிவனும் தருமியும் சொன்னது சரி என்றாகிறது. பார்ப்பனனுக்கு பரிசு போவதா என்ற பார்ப்பனனல்லாத நக்கீரன் வயிற்றெரிச்சல்படுகிறான் என்றாகிறது. ஆனால் ஒன்று எப்படிப் பார்த்தால் பொழுது போகாது இக்கேள்வியை எழுப்பி, பலரது நேரத்தை வீணாக்கிய பார்ப்பனனல்லாத அரசன் மக்கு மடையனே என்றாகிறது.

ஒரு பகுத்தறிவு சார்ந்த விவாதத்தை அதை முன்வைத்தது டோண்டு ராகவன் என்னும் பார்ப்பனன் என்பதாலேயே பதில் கூறத் தயங்குவது பகுத்தறிவு பகலவனின் சீடரான சங்கமித்திரனின் பகுத்தறிவுக் குறைவைக் கட்டுகிறது.

ஆனால் இந்தச் செயல்பாட்டிலும் அவர் தனது குரு பெரியாரையே பிரதிபலிக்கிறார். அப்படித்தான் சமீபத்தில் 1949-ல் நடந்த அவரது பொருந்தாத் திருமணத்தில் அரங்கண்ணல் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க இயலாது அதை அலட்சியம் செய்கிறார்.

பெரியார் எவ்வழி, அவர்கள் சீடர்களும் அவ்வழியிலேயே.

இப்படிப்பட்டவர்களுடன் இம்மாதிரி விவாதம் புரிவதே ஒரு மொக்கையான காரியம் என்பதாலேயே இப்பதிவை மொக்கை என வ்கைப்படுத்தியுள்ளேன் என்பதை அறிக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/07/2010

வினவு கும்பலின் அடாவடி பழக்கங்கள்

ஜூன் 5-ஆம் தேதி 2010 என்று நடந்த பதிவர் சந்திப்பு பற்றி நான் இட்ட இப்பதிவில் அதியமான அவர்களது பின்னூட்டம் ஒரு பதிவுக்கான விஷயங்களையே தன்னுள் அடக்கியுள்ளது. ஆகவே அதை உள்ளது உள்ளபடி இங்கு வெளியிடுகிறேன். ஓவர் டு அதியமான்:

K.R.அதியமான் said...
வினவு குழுவை சேர்ந்த ‘தளபதி’ என்ற தோழரும் பதிவர் சந்திப்பிற்க்கு வந்திருந்தார். ஆனால் தான் ஒரு வாசகன் என்று மட்டும்தான் என்று தெரிவித்தார். அவர் வினவு குழுவை சேர்ந்தவர் என்பது, டீக்கடையில் அவருடன் சூடான விவாதம் செய்த போதுதான் தெரிந்தது. சில ஆண்டுகள் முன்பு இளம் கவிஞர் சங்கர ராமசுப்பிரமண்யன் எழுதிய ஒரு (ஈராக் போர் பற்றிய) கவிதையின் ‘அரசியல்’ பற்றி ‘விளக்கம்’ கேட்க அவருடைய வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, அவரை மிரட்டி ம.க.இ.க அலுவலகத்திற்க்கு ‘அழைத்து’ சென்ற விவகாரம் குறித்து சூடான விவாதம். நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தரும் கலந்து கொண்டார்.

தோழர் தளபதி அந்த அத்துமிறலை நியாயப்படுத்தினார். புதிய ஜனனாயகம் இதழில் திருமாவின் பொறுக்கி அரசியல் என்று எழுதியதற்க்காக, ’அறச்சீற்றம்’ அடைந்த வி.சிறுத்தைகள் சிலர் ம.க.இ.க அலுவலகத்தில் நுழைந்து ‘விளக்கம்’ கேட்டதை ஒப்பிட்டேன். அது தவறு என்றால், இவர்கள் ச.ர.சுப்பிரமண்யன் விசியத்தில் செய்ததும் தவறுதான். அல்லது இரண்டும் சரிதான். ஒன்றை மட்டும் நியாயப்படுத்த முடியாது என்றேன். இல்லை என்றார்.

மேலும் அ.மார்க்ஸின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அறிவுஜீவிகளின் ‘வெறுப்பு’ பற்றி பேசினார். செம்புரட்சிக்கு பின் லீனா மணிமேகலை, அ.மார்க்ஸ் போன்றவர்களின் நூல்களை தடை செய்வீர்களா என்று கேட்டேன். அதை அப்போது ஒரு மக்கள் கமிட்டிதான் முடிவு செய்யும் என்றார். கவனிக்கவும். தடை செய்யமாட்டோம் என்று சொல்லவில்லை. கமிட்டி முடிவு செய்யும் என்றார். இதுதான் இவர்களின் கருத்து சுதந்திரம் மற்றும் ஜனனாயகம் பற்றிய கோட்பாடு.

சுகுணா திவாகர் உங்களின் உண்மையான ’தோழர்’. அவரை போய் இப்படி தாக்குதவது மூடத்தனம் என்றேன். மிக முக்கியமாக, அவர் வேலை செய்யும் பத்திர்க்கையின் பெயர் மற்றும் சுகுணாவின் இயற்பெயரை வேண்டுமென்றே உங்கள் பதிவில் சுட்டிக்காட்டி அவருக்கு வீண் பிரச்சனை செய்ய முயல்கிறீர்கள். இதனால் என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்றேன். பைத்தியாரன் வேலை செய்யும் துறை பற்றி அவருக்கு ஒரு முறை பின்னூட்டம் இட்ட போது, வேண்டாம் என்று அவர் என்னை தடுத்தார். ஆனால் சுகுணாவிற்க்கு மட்டும்….

கிட்டதட்ட இரண்டு மணி நேரம் விவாதம். நேரமாகிவிட்டதால் விடை பெற்றேன்.
வினவு குழு ‘தோழர்’ ஒருவரை முதன் முறையாக நேரில் சந்தித்த ’பாக்கியம்’.
இவர் என்ன ’பெயரில்’ அங்கு ’பின்னூட்டம்’ இடுகிறவர் என்று யோசித்தபடியே வீடு திரும்பினேன்.
June 07, 2010 3:41 PM


வினவு/ம.க.இ.க கும்பலுக்கு நிஜமாகவே அதிகாரம் கிடைத்து ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்? இதற்கெல்லாம் கற்பனையே தேவைடில்லை. கிழ்க்கு ஐரோப்பாவில் உள்ள பல தேசங்களில் கம்யூனிஸ்டுகள் சிறுபான்மையினராகத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் ஆட்டை கடித்து எப்படியோ ஆட்சிக்கு வந்ததும் மீதி எல்லா கட்சிகளையும் அழித்ததே விதிவிலக்கில்லாமல் நடந்தது. அதாவது ஆட்சிக்கு வரும் வரையில் ஜனநாயகம் எல்லாம் பேசி அது தரும் சுதந்திரங்களையெல்லாம் பயன்படுத்திக் கொள்வார்கள். பிறகு ஆட்சிக்கு வந்ததும் ஜனநாயகத்துக்கு ஆப்புதான்.

என்ன வினவு/ம.க.இ.க அராஜக கும்பல் அதற்குக் கூட பொறுமை இன்றி இப்போதே அராஜகச் செயல்களை ஆரம்பிக்கிறார்கள்.

தளபதி வினவு என்ன பெயரில் பின்னூட்டமிடுகிறார் என அதியமான் கேட்கிறார். அவரது இந்தச் செயல்பாட்டை வைத்து அவர் என்ன பெயரில் பின்னூட்டமிட்டிருப்பார் என்பதையும் ஊகிக்க முயற்சிக்கலாமே நாம் எல்லோரும். ஆனால் அசிங்கமான பெயர்கள் வேண்டாமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/06/2010

சென்னை பதிவர்கள் சந்திப்பு 05.06.2010

எனது கார் காந்திச் சிலையை அடைந்தபோது மாலை 05.30 ஆகிவிட்டது. போகும் வழியில் வந்திருக்கக் கூடிய பதிவர்களை ஊகித்து, பெயரை எழுதி வைத்துக் கொள்ளலாம் என எண்ணி, முதலில் கேபிள் சங்கர் பெயரை எழுதினேன். ஆனால் நான் அங்கு சென்று ஏற்கனவே வந்த பதிவர்களுடன் சேர்ந்து கொண்டபோது பார்த்தால் கேபிள் சங்கர் இன்னும் வரவில்லை. பிறகுதான் வந்தார். அது மட்டுமல்ல, எப்போதும் லேட்டாக வந்து, டீக்கடையில் சேர்ந்து கொள்ளும் மருத்துவர் ப்ரூனோ ஏற்கனவேயே வந்து அமர்ந்திருந்தார். மழை ஏதேனும் வந்து விடக்கூடாதே என லேசாக கவலை எழுந்தது நிஜம். ஆனால் நல்ல வேளையாக அப்படி ஒன்றும் ஆகவில்லை.

பேசாமல் எனது நோட்டுப் புத்தகத்தை பாஸ் செய்து வந்தவர்கள் தத்தம் பேரை குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டேன். அதன்படி பதிவு செய்தவர்கள் மற்றும் பிறகு நானே கண்டறிந்தவர்கள் பின்வருமாறு.

அன்பழகன், காவேரி கணேஷ், கே. ரவிசங்கர், டி.வி. ராதாக்ரிஷ்ணன் (வலைப்பூவை விட்டு விக வேண்டாம் என நான் அவரை கேட்டுக் கொண்டேன்), தண்டோரா, பலாபட்டறை ஷங்கர், ஜாக்கி சேகர், சிறில் அலெக்ஸ், ப்ரியன், பி. சரவணன், ஸ்ரீ, நரேந்த்ரகுமார், (பதிவர் பெயரை படிக்க இயலவில்லை என்னவோ Fefli என்பதுபோல இருக்கிறது), ப்ரூனோ, சங்கர், லக்கிலுக், பாலபாரதி, விக்கி, அதிஷா, அதியமான், ஆனந்த் (பேநாமூடி), தமிழ்துரை, ஜ்யோவ்ராம் சுந்தர், விஜய், அப்துல்லா.

மேலே குறிப்பிட்டுள்ளது முழுமையான பட்டியல் அல்ல. பிற்கும் பலர் வந்தனர். எல்லார் பெயரையும் போட்டுக் கொள்வது பிராக்டிகலாக முடியவில்லை. ஆகவே பெயர் விட்டுப் போனவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இன்னொரு விஷயம். வழக்கம் போலவே நேற்றும், பலகுழுக்கள் தன்னாலேயே உருவானதால் எல்லோரையும் கவர் செய்ய முடியவில்லை.

அமெரிக்கா மேரிலாந்திலிருந்து சிறில் அலெக்ஸ் இந்தியாவுக்கு நிரந்தரமாகவே வந்து விட்டார். அவர் வேலை செய்த கம்பெனியிலேயே சென்னை ஆஃபீசுக்கு மாற்றல் பெற்று வந்ததால், இங்கு வேலை தேடவேண்டிய சங்கடம் இல்லை. ஜெயமோகனின் பக்கம் இருக்கும் தள்த்துக்கு அவர்தான் மேனேஜர் என்பதால் ஜெ இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லை எனக்கேட்டேன். தளத்தின் வைரஸ் பிரச்சினை பற்றியும் கேட்டேன். அது ஒரு மால்வேர் பிரச்சினை என கரெக்ட் செய்தார் அவர். ஜெயமோகன் அவரது இச்சைப்படியே இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை என்றும் குறிப்பிட்டார். சிறில் அலெக்ஸ் போலி டோண்டு விவகாரம் பற்றியும் பேசினார். அவருக்கு அது சம்பந்தமாக நான் பல தகவல்கள் கொடுத்தேன்

பிறகு கூட்டம் மணலுக்கு ஷிஃப்ட் ஆனது. முதலில் எல்லோரும் வரிசையாக தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

அதியமான் சிறில் அலெக்சுடன் அமெரிக்காவில் ஒரு கேலன் பெட்ரோல் விலையை கேட்டறிந்து, அப்பணத்தை வைத்துக் கொண்டு அங்கு ஒரு வேளை உணவுகூட கிடைக்காது என்பதை நிறுவினார். ஆனால் இந்தியாவில் அப்படியில்லை எனக்கூற, சிறில் விலைவாசிகள் பல காரணிகளால் பாதிக்கப்படுகின்றன என்றார். செல்பேசி சேவை இந்தியாவில் அமெரிக்காவை விட மிக மலிவு, ஆனால் அதே நேரம் அமெரிக்காவில் பல குறிப்பிட்ட தினங்களில் டாக்டைம் இலவசம் என்றும் இந்தியாவில் அப்படியில்லை என்றும் கூறினார்.

வரும் செம்மொழி மகாநாட்டுக்கான ஏற்பாடுகளில் ஒன்றாக ஒரு பொருட்காட்சி நடக்கும் எனவும், அதில் பதிவர்களுக்காக சில ஸ்டால்கள் ஒதுக்கப்படும் என்றும் லக்கிலுக் கூறினார். அங்கு வரும் பொதுமக்களுக்கு இணையத்தில் தமிழ் எவ்வாறு எழுதுவது என்பது போன்ற விஷயங்களை புதிதாக வருபவருக்கு சொல்லித்தர சுமார் 50 தன்னார்வலர்கள் தேவை எனவும், இதுவரை 30 பேர் சேர்ந்துள்ளனர் என்றும் லக்கிலுக் கூறினார். இப்போதே சொன்னால் அவர்களை அழைத்து செல்லும் ஏற்பாடுகலை செய்யவும் தோதாக இருக்கும் என்றும் கூறினார்.

பாலபாரதி பேசும்போது இகலப்பை, என்.எச்.எம். ஆகிய இலவச தமிழ் எழுதிகள் இருப்பதைகூட தெரிந்து கொள்ளாத பலர் மெனக்கெட்டு விலை கொடுத்து வேறுபல எழுதிகலை வாங்குவதையும் குறிப்பிட்டார். இம்மாதிரி இலவச எழுதிகளின் சிடிக்களை நிறைய காப்பி எடுத்து வினியோகிக்கலாம் என்றும் கூறினார். இணையத்திலிருந்தே அவற்றை தரவிறக்கிக் கொள்ளலாமே என ஒரு வர் கூற, கணினி வைத்திருப்பவர்கள் பலர் இணையத்தை இன்னும் போட்டுக் கொள்ளவில்லை என பதில் கூறினார்.

திடீரென யாரோ ஒருவர் டோண்டு ராகவன் ஏதேனும் ஒரு விஷயம் பற்றிப் பேசலாம் என வெள்ளந்தியாக கூறிவிட, அவனோ இதுதான் சாக்கு என்பது போல, இஸ்ரேலை பற்றிப் பேசலாமா என கேட்டு வைக்க பலர் எழுந்து ஓடத் தயாராயினர். அவர்கள் மேல் இரக்கம் கொண்டு அவன் மேலே பொஏசவில்லை. இருப்பினும் ஒருவர் இஸ்ரேலுக்கு வந்த சமாதான கப்பலை இஸ்ரேல் தடுத்த விவகாரம் பற்றி கேட்டார். இஸ்ரேலுக்கு வேறு வழியே இல்லை என நான் கூறினேன். வந்தவர்களில் யாரேனும் மனித வெடிகுண்டாக இருந்தால் என்ன செய்வது என்பதுதான் என் கேள்வி.

இப்பதிவை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் காலை 8.10. காவேரிகணேஷிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. சந்திப்புக்கான படங்கள் அவரது இப்பதிவில். அதிலிருந்து நானும் இருக்கும் ஒரே ஒரு படத்தை நான் இங்கே போடுகிறேன். அவர் ஆட்சேபிக்க மாட்டார் என நம்புகிறேன். மீதி படங்களை அங்கு சென்று பார்த்து கொள்ளவும்.


அவருக்கு என் நன்றி.

நர்சிம் விவகாரம் பற்றி பேச அங்கு பலர் தயாராக இல்லை. ஆகையால் அது பற்றி நான் பேச நினைத்ததை முழுமையாகக் கூற முடியவில்லை. அது பற்றிய எனது எண்ணங்கள் என் இரு பதிவுகளில் உள்ளன. 1
மற்றும் 2.

பிறகு எல்லோரும் டீக்கடைக்கு சென்றோம். அங்கு செல்லும் வழியில் ஜ்யோவ்ராம் சுந்தர் வந்து சேர்ந்து கொண்டார். அங்கும் இன்னும் அதிக குழுக்கள் உருவானதால் பலாபட்டறையான விஷயங்கள் பேசப்பட்டன. அதற்குள் இரவு எட்டு மணி ஆகியபடியால் என் காரை வரவழைத்து, எல்லோரிடமும் விடை பெர்றுக் கொண்டு சென்றேன்.

இது முதல் டிராஃப்ட் மட்டுமே. வேறு ஏதாவது நினைவுக்கு வந்தால் எழுதுகிறேன். நேற்று வீட்டுக்கு செல்ல இரவு பத்து மணிக்கு மேல் ஆனதால் இன்று காலைதான் பதிவு போட முடிகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/05/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 95 & 96)

எபிசோடு - 95 (02.06.2010) சுட்டி - 2
காதம்பரியின் குத்தல் பேச்சு தொடர்கிறது. இது கற்பனை கதைதான் என்றாலும் சாம்பு படும் துயரம் கண்முன்னால் விஸ்வரூபம் எடுக்கிறது. வார்த்தைகளால் எப்படி கொல்ல முடியும் என்பதை காதம்பரி காட்டும் இடம் அந்த நடிகையின் திறமையையே காட்டுகிறது.

சாம்பு வேம்பு வீட்டில் காதம்பரி நடந்து கொண்டது பற்றி விவாதம் தொடர்கிறது. நாதன் வீட்டில் இருக்கும் ஆண்களின் பெருந்தன்மை அவர் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இல்லை என வேம்புவின் மனைவி சுப்புலட்சுமி அபிப்பிராயப்படுகிறாள். வீட்டுப் பத்திரத்தை திருப்பித் தரவேண்டியதுதான் என வேம்பு கூற அது நாதனை அவமானப்படுத்துவதாகாதா என சாம்பு குழம்புகிறார். வேம்புவின் சகோதரியோ இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் எனக்கூற, அவளை சாஸ்திரிகளின் மனைவிகள் அடக்கிவிடுகின்றனர். ரொம்பவும் யதார்த்தமாக அதே சமயம் இம்மாதிரி காட்சிகளில் வந்திருக்கக்கூடிய மெலோடிராமாக்கள் ஏதுமின்றி இரு வைதிகர் குடும்பங்களுக்கு நேர்ந்த அந்த அவமானம் விஸ்வரூபமெடுக்கிறது.

சாம்பு தன் மகள் ஆர்த்தியை கோவிலுக்கு வரவழைத்து அவளிடம் நடந்ததை கூறி அவள் கையில் அந்த வீட்டுப்பத்திரத்தை தந்து நாதனிடம் கொடுத்துவிட்டு வருமாறு கூறுகிறார். அதே கோவிலுக்கு வந்திருக்கும் வேம்புவிடம் ஆர்த்தி இது பற்றிக் கூற அவர் சாம்புவிடம் வந்து பத்திரத்தை தங்களிடம் தந்தது அசோக், ஆகவே தாம் இருவருமே அவனிடம் சென்று கூறுவதுதான் மரியாதை எனக்கூறுகிறார். சாம்பு இதன் நியாயத்தை ஒத்துக் கொண்டாலும் இந்த சங்கடமான நிலையில் விவேகமாக செயல்படும் திறமை ஆர்த்திக்கே உண்டு என்பதால் அவளே செல்லட்டும் என்கிறார். சரஸ்வதிகளையுடன் இருக்கும் அந்த உத்தமப் பெண் தனது தந்தைக்கு ஏற்பட்ட துயரத்தை உள்வாங்கிக் கொண்டு செல்லும் காட்சியும் அற்புதம்.

(வால்மீகி ராமயணம் கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் சீதையை தேடுவதில் தாமதம் செய்வதால் கோபமுற்ற ராமன் வாலியின் மேல் பாணம் செலுத்திய ராமனின் அம்புறாத்தூணியில் மேலும் பாணங்கள் உள்ளன என சுக்ரீவனுக்கு தெரியப்படுத்துமாறு லட்சுமணனை அனுப்ப அவனும் அண்ணனின் முழு கோபத்தையும் தன்னுள் வாங்கிக் கொண்டு செல்லும் காட்சிதான் எனக்கு இங்கே நினைவுக்கு வந்தது).

அசோக் கையில் பத்திரத்துடன் நிற்கிறான். தனது குரு சாம்பு சாஸ்திரிகளை அவமதித்த ஆர்த்தியிடம் அவள் ஏன் அப்படி செய்தாள் என கேட்க, வசுமதி வந்து தனது நாட்டுப்பெண்ணுக்கு பரிந்து பேசுகிறாள். அசோக் அவளை சில வார்த்தைகளில் அடக்கி, காதம்பரியிடம் அவளிடம் தன் மேல் இன்னும் ஏதேனும் மரியாதை பாக்கியிருந்தால் அவளே சாம்பு சாஸ்திரிகளிடம் அந்தப் பத்திரத்தை திருப்பித் தரவேண்டும் என கட்டளையிடுகிறான். அவளும் அதை எடுத்து கொண்டு செல்கிறாள், தன் அக்கா வீட்டிற்கு.

அவளது அக்காவோ அவள் அவசரப்பட்டு விட்டதாகவும் இதனால் அவளது மதிப்பு புக்ககத்தில் அதல பாதாளத்தில் விழுந்து விட்டது என்றும் எடுத்துரைக்கிறாள். அவளோ கேட்பதாக இல்லை.

சோவின் நண்பர் காதம்பரியின் இச்செய்கை பற்றி சோவிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் பத்ம புராணத்திலிருந்து ஒரு கதையை கூறுகிறார். கணவனை சிறிது மதிக்காது இருக்கும் பெண்ணொருத்தி அடுத்த பிறவியில் படும் கஷ்டங்கள் விவரிக்கப்படுகின்றன.

(தேடுவோம்)

எபிசோடு - 96 (03.06.2010) சுட்டி - 2
காதம்பரி பிடிவாதமாக அக்காவின் வீட்டிலேயே இருக்கப் போவதாகக் கூறுகிறாள். வீட்டுப் பத்திரத்தை சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் நேரில் போய் தரவும் மறுக்கிறாள். ஆகவே வேறு வழியின்றி அவளது அக்காவே அதை எடுத்துக் கொண்டு சாம்பு சாஸ்திரிகளின் வீட்டுக்கு செல்கிறாள். அங்கு சாம்புவோ வேம்புவோ இல்லாததால் செல்லம்மாவும் சுப்புலட்சுமியும் அதை வாங்கிக் கொள்ள தயங்குகின்றனர். பிறகு வேம்புவின் செல்பேசிக்கு ஃபோன் செய்து அவரிடம் தகவல் தரப்பட, அவர் சாம்புவிடம் கலந்து பேசி பத்திரத்தை வாங்கிக் கொள்ளுமாறு சொல்ல, அவர்களும் அதை ஏற்கின்றனர்.

இதற்குள் அசோக்குடன் காதம்பரியின் அக்கா சாம்பு வீட்டிலிலிருந்தே பேசி அவனிடம் விஷயத்தைக் கூறுகிறாள். சாம்பு வீட்டுக்கு காதம்பரியை நேரிலேயே போகுமாறு தன் கூறியிருக்க அவளோ அக்கா மூலமாக அதை கொடுத்து விட்டது அவன் மனதை உறுத்துகிறது. காதம்பரியை அவள் அக்கா வீட்டுக்கே சென்று சந்திக்கிறான். அவளை வீட்டுக்கு வருமாறு அழைக்க அவள் தனக்கு நாதன் வீட்டில் அவமானம் ஏற்பட்டதாகக் கூறி வர மறுக்கிறாள்.

இப்போது ஃப்ளாஷ்பேக்.
காதம்பரியை தீவிரமாக கண்டிக்கிறார் நாதன். சாம்புவுக்கு தான் தந்த வீடு தன் சுயசம்பாத்தியத்தால் வந்ததெனவும் அதை யாருக்கு வேண்டுமானாலும் தரும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என்றும், வேறு யாரும், வசுமதி உட்பட, அதில் தலையிட முடியாது எனவும் அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார். வசுமதி அவரை சமாதானப்படுத்தும் முகமாக. காதம்பரி அவரை தந்தையாக நினைத்ததாலேயே அத்தனை உரிமை எடுத்துக் கொண்டாள் எனக் கூற, நாதன் தானும் அவளை மகளாக நினைத்ததாலேயே இந்த புத்திமதி கூறுவதாக சொல்லிவிடுகிறார்.
ஃப்ளாஷ்பேக் முடிந்தது.


அவர் கூறியதில் தவறு என்ன என அசோக் கேட்கிறான். இப்போது காதம்பரி வேறு கோணத்திலிருந்து பேசுகிறாள். தான் தர்மபத்தினியாக இருக்க முழு முயற்சிகள் செய்வதாகவும் ஆனால் அசோக்கொ உண்மையான கிருஹஸ்தனாக செயல்படவில்லை எனவும், தனது சம்பாத்தியத்தில்தான் தன் மனைவியை காப்பாற்ற வேண்டும் எனக் கூற, அசோக் இதன் நியாயத்தன்மையை உணர்ந்து சிறிது நேரம் அமைதி காக்கிறான். பிறகு தானும் ஒரு நல்ல வேலை தேடிக்கொள்ளப் போவதாக அவன் கூறுகிறான்.

என்ன சார் அசோக் இப்படி சொல்லி விட்டான்? இது வர்ணரீதியான பிராமணனுக்கு விதிக்கப்பட்ட கிரஹஸ்தாஸ்ரமப்படி சரியா எனக் கேட்க, சோ நிதானமாக ஆனால் அழுத்தமாகக் கூறுகிறார் சரியில்லை என. பிறகு வர்ணரீதியான பிராமணனுக்கு விதிக்கப்பட்ட கடுமையான விதிகளை விவரிக்கிறார். ஆனால் அவை இக்காலத்தில் முழுமையாகக் கடைபிடிக்க முடியாதவை எனவும் அவர் கூறுகிறார். இப்போது அசோக் செய்வது வர்ணரீதியான வைசியன் செய்வது என்கிறார். ஆனாலும் தற்காலத்தின் நிதர்சனங்களால் அவனது ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைகின்றன என்றும் கூறுகிறார். அவ்வப்போது சமரசங்கள் தவிர்க்க முடியாதவையாக ஆகின்றன, இம்முறையும் அப்படித்தான் என அவர் கூறுகிறார்.

அசோக் சொன்னதைக் கேட்டு காதம்பரி மனம் மகிழ்ந்து அவனுடன் தனது புக்காத்துக்கு கிளம்புகிறாள். அசோக் கேட்டுக் கொண்டபடி அடுத்த நாள் காலையே அவள் சாம்பு சாஸ்திரிகளிடம் ஃபோனில் பேசி மன்னிப்பு கேட்கிறாள். சாம்பு வீட்டில் காதம்பரியின் மனமாற்றம் பற்றி பேசுகிறார்கள். அசோக் வேலைக்குப் போகப்போவது பற்றியும் பேசுகிறார்கள்.

அசோக்காக உருமாறி வந்திருக்கும் வசிஷ்டர் எவ்வாறு மேலே செயல்படப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/03/2010

சாதியே கூடாது என்னும் பதிவர்கள் அடிக்கும் கூத்து

சாதி என்பதே ஏதோ சொல்லக்கூடாத வார்த்தை என கூத்தடிக்கும் பதிவர்களுக்காகவே இப்பதிவு.

எதற்கு இந்த ஆஷாடபூதித்தனம்? சாதி என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏதேனும் ஒரு முறையில் இருந்து வந்திருக்கிறது என்றால், அதற்கு பலமான சமூக காரணங்கள் இருந்திருக்க வேண்டும்தானே. அதையெல்லாம் மனதில் கொள்ளாது அதனால் விளையும் சில சங்கடங்களை மட்டும் மனதிலிருத்தி, அதை அப்படியே ஒழிக்க வேண்டும் எனக்கூறுவது தவறு என்பதை விட பிராக்டிகல் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

நான் ஏற்கனவேயே பலமுறை கூறியபடி அவரவர் வீட்டில் கல்யாணம் வீட்டுப் பெரியவர்களால் நிச்சயம் செய்யப்படும்போது சுய சாதியில்தான் வரன் தேடுகின்றனர். அப்படியின்றி ஆரம்ப ஜோரில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள் படும்பாடு அக்குழந்தைகள் கல்யாண வயதுக்கு வரும்போது வெளிப்படையாக தெரிகிறது. அதையெல்லாம் கூட விட்டு விடுவோம், ஏனெனில் பலமுறை கூறப்பட்டுள்ளவை, ஆகவே இன்னொரு முறை கூறி எப்பயனும் இல்லை.

அதே போல சாதி ஒழிப்புக்காக பாடுபடுவதாக பொய்யுரைக்கும் கட்சிகளும் கூட தேர்தல் சமயத்தில் தங்கள் வேட்பாளர்களின் சாதி அவர்கள் கேட்கும் தொகுதிக்கு மேட்ச் ஆகிறதா என்றுதான் பார்க்கின்றனர்.

அதே சாதி மேட்டர் நமது பதிவுலகில் படுத்தும் பாட்டையும் பார்ப்போம்.

பார்வதி அம்மாள் மேட்டரில் டோண்டு ராகவன் பதிவு போட்டானா? அவ்வளவுதான் சீறி எழும் சாதி எதிர்ப்பு செம்மல்கள் முதலில் அடையாளப்படுத்துவது அவனது பார்ப்பன சாதியைத்தான். இது ஒன்றும் ரகசியமில்லைதான், ஆனால் அவர்களது பார்ப்பன வெறுப்புதான் அப்படி வெளியே வருகிறது. அதற்கு முக்கியக்காரணமே அந்தந்த சாதியினர் தம் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுத்ததுதான். பாப்பானுங்களெல்லாம் அப்படித்தான் என சர்வ சாதாரணமாகக் கூறிவிடும் அம்மாதிரி சாதிபுத்தியுடன் செயல்படும் பெரியவர்களை பார்த்து வளர்ந்த அக்குழந்தைகளில் பலர் இப்போது பதிவர்கள். அவர்கள் வேறு எப்படி எழுதுவார்கள்?

பார்ப்பனர் யாரும் தளத்தில் அப்போது இல்லை என்றால் என்ன செய்வார்கள்? பதிவர் வளர்மதி செய்தது போல செய்வதும் உண்டு. சுகுணா திவாகரிடமிருந்து கடனாக வாங்கிய கணிசமான தொகையை திருப்பித்தர மனமில்லையென்றால் என்ன செய்யலாம்? ஆகா கிடைத்து விட்டதே சாக்கு? சுகுணா பிள்ளைமார் சாதியை சார்ந்தவர். அவர் சாதிப்புத்தியைத்தான் காட்டுகிறார். கூடவே போனசாக சுகுணாவின் தோழர் வரவனையானும் பிள்ளைமார் என உண்மையுரைத்தால் வம்புக்கு அலைபவர்கள் வேண்டாம் என்றா கூறப்போகிறார்கள் என்பதும் அவரது அனுமானமாக இருக்க வேண்டும். (இன்னும் க்டன் திருப்பித் தரப்படவில்லை).

அதுவரை தெரியாது இருந்த சுகுணா திவாகர் மற்றும் வரவனையானின் பிள்ளை சாதி வேர்கள் தெரிந்ததுதான் மிச்சம். மற்றவரை வாய் கூசாது பாப்பான், பாப்பார புத்தி என்றெல்லாம் ஏசும், போலி டோண்டு தன் வீட்டுப் பெண்களையும் திட்டினால் கூட அவனுக்கு கருத்து சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றெல்லாம் பேசிய சுகுணாவே தன்னையும் சாதிபுத்தி எனத ஒருவன் திட்டியபோது மனம் ஒடிந்து பதிவுலகையே விட்டுப் போகிறேன் என்று கூத்தும் நடந்து முடிந்ததில் அவரது இரட்டைநிலை வெளியில் வந்ததுதான் மிச்சம். அதே சமயம் உத்தபுரம் விவகாரத்தில் தனது சாதியினர் செய்த வன்கொடுமை பற்றி அவர் பேசியதாகத் தெரியவில்லையே என்ற உண்மையும் மனதில் படுகிறது.

சமயம் கிடைக்கும்போதெல்லாம் பாப்பான் பாப்பான் என திட்டிய அருள் என்னும் பெருந்தகை ஒரு படையாச்சி என்பது வினவு பதிவு ஒன்றில் அவர் இட்ட பின்னூட்டங்களிலிருந்து தெரிய வர, நான் அதுகுறித்து போட்ட இப்பதிவில் வந்து மேலும் தனது வன்னிய பாசத்தை வெளிப்படுத்திய அவரது வண்டவாளம் மேலும் தண்டவாளமேறியது இன்னொரு தமாஷ்.

நர்சிம் சந்தனமுல்லை விவகாரம் இன்னொரு eye opener. அது பற்றிய வினவின் பதிவில் நர்சிம் பார்ப்பனர், பைத்தியக்காரன் என்னும் சிவராமன் இன்னொரு பார்ப்பனர், ஜ்யோவ்ராம் சுந்தர் பார்ப்பனர் (ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்), சாருநிவேதிதாவின் மனைவி பார்ப்பனர், இன்று நர்சிம்முக்கு ஆதரவு தரும் யுவகிருஷ்ணா, அதிஷா, இரும்புத்திரை… ஆகியோர் சாருநிவேதிதாவின் அபிமானிகள் என்ற காரணத்திற்காகவே நர்சிம்மை வெட்கம், நேர்மை, சுரணையின்றி ஆதரிக்கிறார்கள் என்றெல்லாம் தாராளமாக ‘உண்மைகள்’ அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

ஆனால் சந்தனமுல்லையின் சாதியை கூறாது கவனமாக தவிர்த்துவிட்டது வினவின் அப்பதிவு. அதனால் என்ன அவர் வன்னியர் என்பதை எதிர் கேம்ப் போட்டுக் கொடுத்தது மட்டுமின்றை ஆர்கூட்டில் வன்னியர்கள் குழுவிலும் இருக்கிறார் என்றும் கூறிவிட்டதே. சிவராம் பார்ப்பனீய சிந்தனைகள் இல்லை என வினவு கூறினாலும் அப்படியில்லை என சுகுணா திவாகர் பிள்ளைவாள் அழுத்தம் திருத்தமாக கூறிவிடுகிறார்.

இப்போது என்னவென்றால் யார் யாரை தாக்குகிறார்கள் என்பதே புரியவில்லை. இந்த அழகில் சிவராமன் நர்சிமிடம் கணிசமான கடன் வாங்கியுள்ளார் என்பது வேறு தெரிய வருகிறது. நர்சிம்மின் முதுகில் குத்திய பின்னால் அவர் அந்தக் கடனையெல்லாம் கொடுத்துவிடுவாரா அல்லது இன்னொரு வளர்மதியின் கதை வருமா என்பதை பார்க்க வேண்டியுள்ளது. தன் ந்ண்பரானாலும் அவரை கண்டித்தேன் என பெருமையாகக் கூறிக்கொள்ளும் சிவராமன் தனது நண்பனுக்கு சந்தனமுல்லையால் ஓராண்டுக்கும் மேலாக வந்த டார்ச்சர் பற்றி கணமேனும் நினைத்துப் பார்த்ததாகத் தெரியவில்லை.

மேலும் உதாரணங்கள் கொடுத்துக் கொண்டே போகலாம், ஆனால் எனக்கே போர் அடிக்கிறது. ஆகவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஒரே ஒரு வார்த்தை. சாதியே பார்க்காதவர்கள் என கூறிக்கொள்ளும் பெருந்தகைகள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்


பின்சேர்க்கை
நான் இப்பதிவை இட்ட பிறகுதான் ஜ்யோவ்ராம் சுந்தர் மற்றும் பைத்தியக்காரனின் லேட்டஸ்ட் பதிவுகளை படித்தேன்.

சிவராமுக்குத்தான் எத்தனை இழப்புகள்? தேவையா பைத்தியக்காரன் உங்களுக்கு இதெல்லாம்? நர்சிமிடம் பணம் ‘கடனாக வாங்கியதை’ குறிப்பிட்டதும் நீங்களே. நர்சிம் இதுவரை எங்கும் அதை சொன்னதாக நான் அறியவில்லை. இப்போது அதை நீங்கள் திருப்பித் தருவதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கு வினவோ சந்தனமுல்லையோ உங்களுக்கு உதவப் போகிறார்களா?

ஒரு சகபார்ப்பனரை இகழ்வதில் அப்படி என்ன மகிழ்ச்சி? அதனால் எல்லாம் உங்களுக்கு இணைய தாசில்தார்கள் ஏதேனும் சான்றிதழ் தந்துவிடப் போகிறார்களா? ஆனால் ஒன்று உங்களை திட்டவும் அதே இணைய தாசில்தார்கள் நீங்கள் பார்ப்பான் என்பதை உபயோகப்படுத்திக் கொள்ளுவார்கள். ஆணாதிக்கம் பார்ப்பனருக்கு மட்டும் உரியதா? மற்ற சாதிக்கார ஆண்கள் அத்தனைபேரும் பெண்ணிய வாதிகளா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது