11/26/2006

பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் – 5

இதன் முந்தையப் பதிவில் குறிப்பிட்டபடி சோ அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்தே தொடர்கிறேன்.

இக்கால அரசியலை நேரில் கண்டுவரும் நாம் தமிழகத்தில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் அரசியலில் மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் விரோதம் பாராட்டுவதையும் பார்க்கிறோம். ஆனால் ஒரு ஆறுதல் இந்த அநாகரிகப் போக்கு தமிழகத்தில் மட்டும்தான், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் அவ்வளவாக இல்லை. இன்னும் கூறிக் கொண்டே போகலாம், ஆனால் இப்பதிவுக்குத் தேவையானது இவ்வளவுதான்.

தமிழக அரசியலில் காமராஜரும் ராஜாஜியும் இரு துருவங்கள் என்பது தெரிந்ததே. ராஜாஜி அவர்களும் சத்தியமூர்த்தி அவர்களும் எதிரெதிர் முகாம்களில் இருந்தவர்கள். சத்தியமூர்த்தி அவர்களைத் தன் குருவாக எண்ணியவர் காமராஜர் அவர்கள். ஆக ராஜாஜிக்கும் காமராஜருக்கும் கருத்து வேற்றுமைகள் அனேகம். ஆயினும் தனிப்பட்ட முறையில் இருவருமே ஒருவரை ஒருவர் மதித்தனர் என்பதையே இப்பதிவில் வலியுறுத்த விரும்புகிறேன்.

சோ அவர்கள் இது பற்றி குறிப்பிட்டது இதுதான்.

கடுமையான மோதல்கள், அவற்றால் ஏற்பட்ட மனகசப்புகளை மறுப்பதற்கில்லை. ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சி ராஜாஜியின் அரசியல் ஞானத்தையும் அவரது அறிவையும் மனதில் நிறுத்தி காமராஜர் அவரை வெகுவாக மதித்தார். ராஜாஜி ஒரு அறிவாளி என்பதை விட அவர் ஒரு மேதாவி என்பதே பொருந்தும். அரசியல் அறிவில் அவரை மிஞ்சக் கூடியவர்கள் வெகு சிலரே இருக்க முடியும். நிர்வாகத் திறமையிலும் அவ்வாறே. ஆனால், அறிவாளிகளுக்கெ உரித்தானப் பிடிவாதமும் ராஜாஜியிடம் உண்டு. அவர் ஒரு போதும் தனது கொள்கைகளுடன் சமரசம் செய்து கொண்டதில்லை. ஆகவே வளைந்து கொடுத்து, எதிராளியைத் தட்டி வேலைவாங்குவதில் அவர் அவ்வளவாக ஈடுபாடு செலுத்தவில்லை. ஆனால் காமராஜரோ விட்டுப் பிடித்து காரியத்தை நிறைவேற்றுவதில் வல்லவர்.

ஆகவே 1971 தேர்தலில் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் காமராஜரின் பழைய காங்கிரஸும் சேர்ந்து கூட்டமைத்ததுதான் அத்தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்குக் காரணமாக இருந்திருக்குமா என்பது சோ அவர்களின் ஐயம். ஆகவே இந்த நிலையிலாவது ராஜாஜியுடனான கூட்டை முறிச்சிக்கலாமே என்ற மெல்லிய எண்ணம். இதை அவர் மெதுவாக காமராஜ் அவர்களிடமே கேட்டு வைக்க, சீறி எழுந்தார் அவர். சோ அவர்களது வார்த்தைகளில்:

"காமராஜின் பெரிய மனது திறந்தது. காமராஜ் என்ற அரசியல்வாதிக்கு அப்பாற்பட்டு நின்ற காமராஜ் என்ற மனிதர் விஸ்வரூபம் எடுத்து நின்றார். பெருந்தன்மை வார்த்தைகளாக உருவெடுத்து என் முன்னே நர்த்தனமாடியது. 'தோத்துட்டோம்கிறதுக்காக எல்லாத்தையும் மறந்துடறதா? நம்ம தோத்ததுக்கு ஆயிரம் காரணம் இருக்கும். முதல்லே கையிலே பணம் இல்லெ. ஏமாத்தறவங்களைத்தான் ஜனங்க நம்புறாங்கன்னு ஆயிடுச்சு. எல்லாத்துக்கும் சேத்து ராஜாஜி தலை மேலே பழியைப் போடச் சொல்லறீங்களா? ஜெயிப்போம்னு நெனச்சு தானே அவரோட சேந்தோம்னேன்! ஜெயிக்கணும்னா வேண்டியவரு; ஜெயிக்காட்டி வேண்டாதவரா? அவர் என்ன கெடுதல் செய்துப்புட்டாரு? அவரும் நானும் நிறைய விஷயங்கள்லே ஒத்துப் போறதிலலே. ஆனா தேசம் நல்லா இருக்கணும், மக்கள் நல்லா இருக்கணும்னு அவருந்தானே விரும்பறாருன்னேன்? அதை ஒத்துக்கிட்டுத்தானே கூட்டு சேர்ந்தோம்?"

"இது எல்லாத்துக்குமா சேர்த்து ராஜாஜியாலேதான் தோத்துட்டோம்னு நினைச்சிக்கிட்டா யாரை ஏமாத்தப் போறோம்? அவரு நம்ம கூட இருக்காருங்கறத்துக்காவே, அந்த மரியாதைக்காகவேகூட நமக்கு அதிகமா ஓட்டு வந்திருக்கலாம் இல்லியா?"

"...காமராஜின் பரந்த உள்ளம் அலைகடல் போல் அங்கு பரந்து விரிந்து கிடந்தது. அந்தக் கடலோரத்தில் நின்று அரசியல் விமரிசகன் என்ற முறையில் நான் குறுகிய நோக்கோடு கூறிய வார்த்தைகளை நினைத்து வெட்கித் தலை குனிந்து அந்தக் கடலின் அலைகளில் என் கால்களை நனைத்து, பாவத்தைக் கழுவிக் கொண்டேன்."

1967 தேர்தலில் காமராஜர் தோல்வி கண்டார். தி.மு.க.வைச் சேர்ந்த பெ.ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார் அல்லவா. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்னமோ தான் பெரிய சாதனை படைத்ததைப் போல எண்ணிக் கொண்டு பீற்றிக் கொண்டு காமராஜரது நடவடிக்கைகளியெல்லாம் தரக்குறைவாக விமசரித்து வந்தார். அவரைத் தனியாகக் கூப்பிட்டு அண்ணா அவர்கள் கண்டித்தார். பிறகு அவர் தயாரித்த அமைச்சரவைப் பட்டியலில் அந்த வேட்பாளரின் பெயர் இல்லை. அந்த வேட்பாளர் ராஜாஜி அவர்களிடம் போய் தனக்காக அண்ணா அவர்களிடம் சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு மூதறிஞர் ராஜாஜி தெரிவித்தக் கருத்து இது:

"கென்னடி ரொம்ப ரொம்பப் பெரிய மனுஷன்தான. ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டு அந்த ஆளை கீழே சாய்ச்சுடுச்சு. அதுக்காக அந்த புல்லட்டை எடுத்து வெச்சி அங்கே எவனாவது கொண்டாடினானா என்ன?"

மேலும் இப்புத்தகத்திலிருந்து எடுத்து வரும் பகுதிகளில் பேசுவேன்.

சோ அவர்களது புத்தக விவரம்:
காமராஜை சந்தித்தேன்
அல்லயன்ஸ் கம்பெனி வெளியீடு
நான்காம் பதிப்பு மார்ச் 2002.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/25/2006

படகில் மூவர், அதில் நாயை மறக்கலாகுமா? - 4

முதல் பதிவு
இரண்டாம் பதிவு
மூன்றாம் பதிவு

இனிமேல் என்ன, மாண்ட்மொரென்ஸியை அலட்சியம் செய்து, வரைபடங்களை பிரித்து என்ன செய்யலாம் என்று திட்டமிட்டோம்.

வரும் சனிக்கிழமை மாலை கிங்ஸ்டனிலிருந்து புறப்படுவது என்று தீர்மானித்தோம். ஹாரிஸும் நானும் வரும் சனிக்கிழமை காலையில் புறப்பட்டு படகை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு செலுத்துவது, அங்கு ஜார்ஜ் எங்களுடன் சேர்ந்து கொள்வது என்று தீர்மானமாயிற்று. ஜார்ஜ் சனியன்று மதியம்தான் வர முடியும். (அவன் தினமும் காலை பத்திலிருந்து பிற்பகல் நான்கு வரை ஒரு பேங்குக்கு தூங்கச் செல்வான், சனிக்கிழமை தவிர, ஏனெனில் அன்றைக்கு அவனை பிற்பகல் இரண்டு மணிக்கே எழுப்பி வெளியில் துரத்தி விடுவார்கள்).

இரவுகள் எதில் கழிப்பது? சாவடிகளிலா அல்லது கூடாரம் அடித்து வெளியில் தங்கப் போகிறோமா?
எனக்கும் ஜார்ஜுக்கும் கூடாரம் அடிக்கும் யோசனை பிடித்திருந்தது. அது ரொம்ப சவால் நிறைந்ததாகவும் விடுதலை எண்ணத்தைத் தூண்டுவதாகவும் அமையும் என்று நாங்கள் இருவரும் அபிப்பிராயப்பட்டோம்.

மேகங்கள் சூரியனின் வெப்பத்தை மறந்த நிலையில் இரவு திருடன் போல வரும். உற்சாகம் இழந்த குழந்தைகள் போல் பறவைகள் பாடுவதை நிறுத்தி கூடுகளுக்குள் சென்று புகுந்து கொள்ளும். தூரத்தில் எங்கோ ஒரு சேவல் மாலையை காலையாக எண்ணி கொக்கரொக்கோ என்று கத்திப் பார்க்கும். மற்ற சேவல்கள் அந்தக் கத்தலை அலட்சியம் செய்ய, திகைப்புடன் கக் கக் என்று கத்திக் கொண்டே அது இங்குமங்கும் ஓடும். படகு நதியில் மெதுவாகச் செல்லும். துடுப்பு ப்ளக் ப்ளக் என்று தண்ணீரில் மூழ்கி எழ்ந்திருக்கும் ஒலி மட்டும் கேட்கும்.

நதியின் இரு கரைகளிலும் உள்ள மரங்கள் கையெழுத்து மறையும் அந்த வேளையில் பெரிய பூதங்கள் போலக் காட்சி தரும்.பிறகு நாங்கள் படகை ஒரு வாட்டமான இடத்தில் நிறுத்தி, கரையிலிருக்கும் ஒரு மரத்துடன் கட்டுவோம். பிறகு கூடாரம் அடிப்போம். எளிமையான உணவை சமையல் செய்து அமைதியான சூழ்நிலையில் உண்போம். பிறகு ஆளுக்கு ஒரு பைப் புகைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் மிருதுவானத் தொனியில் பேசிக் கொள்வோம். அவ்வப்போது எங்கள் பேச்சுடன் படகு அசைந்து தண்ணீரில் எழுப்பும் சளக் புளக் என்ற சப்தம் கேட்கும். மரத்தின் மேலிருந்து சிறுபழங்கள் தண்ணீரில் விழுந்து "குளுகு குளுகு" என்று சப்தம் எழுப்பும். இந்த நதியும் எவ்வளவு சரித்திர நிகழ்ச்சிகளுக்கு மௌன சாட்சியாக இருந்திருக்கிறது! அது மட்டும் கதை சொல்ல ஆரம்பித்தால்....

திடீரென ஹாரிஸ் கேட்டான், "ஆமா, மழை பெஞ்சா என்ன பண்ணறது?"

இந்த ஹாரிஸிடம் இதுதான் கஷ்டம். கவிதை என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்பான்.

"ஏனென்று கூற முடியாத மெல்லிய அழுகை" என்றால் என்ன என்று கேட்கக் கூடியவன் அவன். அவனுக்கு கண்ணீர் வந்தால் பயல் வெங்காயம் உரிக்கிறான் என்று பொருள்.அவனுடன் நீங்கள் கடற்கரையில் நின்று கொண்டிருக்கிறீர்கள். மாலை கையெழுத்து மறையும் நேரம். நீங்கள் கூறுகிறீர்கள், "கேள் ஹாரிஸ், தூரத்தில் அந்தக் கடல் கன்னி தன் காதலனை இசை ரூபத்தில் அழைப்பதைக் கேட்கவில்லையா. அந்த உருக்கமானக் கதையைக் கேட்டுள்ளாயோ? என்று".

ஹாரிஸ் உணர்ச்சிவசப்பட்டு உங்கள் கையைப் பற்றிக் கொள்வான். "மச்சி நான் பயந்தா மாறியே ஆச்சும்மா. உனக்கு ஏதோ ஜல்ப்பு பிடிச்சிருக்கு. இப்படியே இந்த ரோட்டோரம் போய் முக்கு திரும்பினா நமக்கு வேண்டப்பட்டவனோட சாராயக் கடை இருக்கு. ஆளுக்கு ஒரு கட்டிங்க் போட்டுக்கலாம், வா. உனக்கு உடனே குணமாயிடும்" என்பான். எந்த ஊருக்குப் போனாலும் அங்கே ஹாரிஸ் "முக்குத் திரும்பினா வரும்" சாராயக் கடையைக் கண்டுபிடித்து விடுவான். அவனை நீங்கள் சொர்க்கத்தில் சந்தித்தாலும் அங்கே உங்களைப் பார்த்து, "இப்படியே இந்த ஒத்தையடிப் பாதை வழியாப் போயி முக்குத் திரும்பினா அருமையான அமிர்தக் கடை ஒண்ணு இருக்கு" என்பான்.

எது எப்படியானாலும் இம்முறை ஹாரிஸ் கூறியதும் யோசிக்கத் தகுந்ததே. மழையில் மைதானத்தில் முகாமிடுவது ரொம்ப பேஜார் பிடித்த வேலையாக்கும்.

மாலை நேரம். எல்லோரும் களைப்பாக இருக்கிறீர்கள். நல்ல மழை. படகில் இரண்டு அங்குல உயரத்துக்குத் நீர் தேங்கியுள்ளது. எல்லாம் நனைந்த நிலையில். கரையில் சுமாராகத் தண்ணிர் தேங்காத இடத்தைக் கஷ்டப்பட்டு கண்டு பிடிக்கிறீர்கள். அந்த இடத்தில் கூடார சாமான்களை இறக்குகிறீர்கள். உங்கள் மூவரில் இருவர் கூடாரம் அடிக்கும் வேலையில் ஈடுபடுகிறீர்கள்.

அது நொசநொசவென்று ஈரத்துடன் இருக்கிறது. உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காது தொளபுளவென்று ஆடி உங்கள் மேல் அன்புடன் கவிந்து கொள்கிறது. மழையோ ஜோ எனப் பெய்கிறது. உங்களுக்கு கோபமாக வருகிறது. மழை இல்லாதபோதே கூடாரம் எழுப்புவது சள்ளையான வேலை. மழை இருந்தால்? சொல்லவே வேண்டாம். உங்களுக்கு உதவி செய்வதற்கு பதில் இன்னொருவன் வேண்டுமென்றே உங்களை வெறுப்பேற்றுகிறான். நீங்கள் உங்கள் பக்கம் ஒரு வழியாக ஆணி அடித்து பொருத்தினால், அடுத்தவன் அப்போதுதான் தன் பக்கம் வேகமாக இழுக்க, பொருத்தியது எல்லாம் பிடுங்கிக் கொண்டு வருகிறது.

"ஏய், என்ன பண்ணறே நீ!" என்று நீங்கள் கத்துகிறீர்கள்.

"நீ என்ன பண்ணறே, அதைச் சொல்லு முதல்லே?" என்று அவன் கத்துகிறான்; "கொஞ்சம் லூஸ் விடுப்பா, மாட்டியா?"

"நீ விடுப்பா; செய்யறதெல்லாம தப்பாயிட்டு், முட்டாளே!" இது நீங்கள்.

"நீதான் அது," அவன் பதிலுக்குக் கத்துகிறான்; "கொஞ்சம் லூஸு விடுடா கம்னாட்டி!"

அப்படியே எல்லாத்தையும் விட்டுட்டு, கூடாரத்தை சுற்றி எதிர்ப்பக்கம் போகிறீர்கள், அவனை ஒரு வழி பண்ண. அவனும் அதே ஐடியாவுடன் இருக்க, இருவரும் உறுமிக் கொண்டு கூடாரத்தை சுற்றி இரு முறை செல்கிறீர்கள்.

இதற்கிடையில் படகில் இருப்பவன் மூடும் சொல்லிக் கொள்வது போல இல்லைதான். பத்து நிமிடங்களாக விடாப்பிடியாக உலகில் உள்ள எல்லோரையும் திட்டிக் கொண்டிருக்கிறான் அவன். படகிலிருந்து தண்ணீர் இறைத்து மாளவில்லை அவனுக்கு. கூடாரத்துக்கு அருகில் வந்து இத்தனை நேரம் என்ன பிடுங்கிக் கொண்டிருந்தீர்கள் என்று அன்புடன் வேறு கேட்கிறான்.

ஒரு வழியாக கூடாரம் எழும்பியாயிற்று. கரையில் சாமான்களை இறக்கியாயிற்று. விறகடுப்பு ஏற்ற வழியில்லை. கெரசின் ஸ்டவ் ஏற்ற வேண்டியிருக்கிறது. இப்போது சாப்பாடு. முக்கிய உணவு மழைத் தண்ணீர்தான். பிரெட், பீஃப், ஜாம், வெண்ணை, உப்பு நீர், என்று எல்லாம் மழை மயம். ஏதோ கைவசம் புட்டி இருந்ததோ பிழைத்தீர்களோ. அதிலும் மழைநீர் புகுந்து கொள்ளும் முன்னமே வேமாக விழுங்கி வைக்கிறீர்கள். பிறகு படுக்கச் செல்கிறீர்கள். நடு இரவில் ஒரு யானை வந்து உங்கள் மார்பு மேல் அன்புடன் உட்கார்ந்து கொள்கிறது. எரிமலை வெடித்து நீங்கள் கடலுக்கடியில் செல்கிறீர்கள். சட்டென்று விழித்துப் பார்த்தால் கூடாரம் உங்கள் மேல் விழுந்து விட்டிருக்கிறது. அப்படியும் இப்படியும் குதித்து பார்த்தால் மெதுவாக உங்கள் தலை கூடாரத்தின் ஒரு ஒட்டையிலிருந்து வெளியே வருகிறது. உங்களுக்கு இரண்டடி தொலைவில் ஒரு ரௌடி நின்றிருக்கிறன். அவனை அடிக்கப் போகிறார்கள். அவனும் உங்களை அடிக்க வருகிறான். கடைசி நிமிடத்தில் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்கிறீர்கள்.

"நீயா", என்று ஒரு சேரக் கத்துகிறீர்கள்.

மூன்றாவது ஆளைத் தேடுகிறீர்கள, இருவரும் சேர்ந்து. சற்று பலவீனமாகக் கத்திக் கொண்டு அவன் தலையும் வெளியே வருகிறது. நீங்கள் இருவரும் சேர்ந்து கொண்டு வேண்டுமென்றே அவ்வாறு செய்துள்ளதசக அவன் பலமாக நம்புகிறான்.

அடுத்த நாள் காலை மூவருக்கும் பயங்கர ஜல்ப்பு. பேசக் கூட இயலவில்லை. அடித்தொண்டையில் ஒருவர் இன்னொருவரைத் திட்டுகிறீர்கள்.

ஆகவே, மழை இல்லாத நாட்களில் டெண்ட்டில் தங்குவது என்றும், மழை இரவுகளில் சத்திரங்களில் தங்குவது எனத் தீர்மானித்தோம்.

மாண்ட்மரன்ஸிக்கு இந்த முடிவு ரொம்பப் பிடித்தது. அதற்கு தனிமையின் இனிமை எல்லாம் புரியாது. ஏதாவது பூனை, எலி, அணில் ஆகியவற்றைத் துரத்துவதே அதற்கு சொர்க்கம். முதல் தடவை அது என்னிடம் வந்தபோது அதைப் பார்த்தால் ரொம்பப் பாவமாக இருந்தது. இந்தப் பாவப்பட்ட உலகில் தேவதை போன்றிருந்த இந்த நாய் எவ்வளவு காலம் வாழப் போகிறதோ என்ற சோகமான நினைவு மனதைக் கவ்வியது. கண்களில் கண்ணீர் பெருகியது.

ஆனால் அது வந்த சில நாட்களிலேயே அது ஒன்பது அணில்கள், எட்டு கோழிகள், இரண்டு சேவல்கள் ஆகியவற்றைக் கொன்றது. பக்கத்து வீட்டுப் பாட்டியம்மாவை இரண்டு மணி நேரத்துக்கு ஒரு மரத்தின் மேல் கிளையில் எறும்புகள் கண்ட இடங்களில் கடிக்க உட்கார வைத்து கீழே காவல் புரிந்தது. பலருக்கு தண்டம் அழுத பின்னால் இந்த நாய் அவ்வளவு சீக்கிரம் கடவுளிடம் சென்று விடாது என்றும், நமக்கெல்லாம் சமாதி கட்டாமல் அது போகாது என்றும் ஆசுவாசம் ஏற்பட்டது.

தெருக்களில் வலம் வருவது, ஒரு குழு ரௌடி நாய்களுடன் கூட்டு சேர்ந்து, குழந்தைகள், பெரியவர்கள், தபால்காரர் என்று எல்லோரையும் பாரபட்சமில்லாமல் துரத்துவது ஆகிய நித்தியக் கடமைகளை செய்து விட்டு தினமும் திருப்தியுடன் அதே தேவதை முகத்துடன் உறங்கச் செல்வதுதான் தன் ஜன்மக் கடன் என்று அது நினைத்து உள்ளது. ஆகவே சத்திரங்களில் தங்குவதை அது பலமாக ஆமோதித்தது.

இதெல்லாம் முடிவு செய்த பிறகு என்னென்ன எடுத்துச் செல்வது என்பதில் விவாதம் ஆரம்பித்தது. ஹாரிஸ் சற்று நேரம் பிரேக் எடுத்துக் கொள்ளலாம் என்று அபிப்பிராயப்பட்டான். அதே தெருவில் முக்கு திரும்பினால் ஒரு கட்டிங்க் கடை புதிதாக வந்திருப்பதாக அவன் சித்தப்பா பையன் கூறியதாகக் கூறினான்.ஜார்ஜும் தனக்கு ரொம்ப தாகம் எடுப்பதாகக் கூறினான். (ஜார்ஜுக்கு தாகம் இல்லாத நேரத்தை இதுவரை யாரும் கண்டிலர்); எனக்கும் சற்று ஏதேனும் அருந்தினால் தேவலை போல இருந்தது. ஆகவே எல்லோரும் தொப்பியை தலையில் போட்டுக் கொண்டு வெளியில் கிளம்பினோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/24/2006

இந்த ஹைப்பர்லிங்க் மீள்பதிவுக்கு இட்லி வடைதான் பொறுப்பு

இட்லி வடையின் இப்பதிவைப் பார்த்ததும் எனது பழைய ஹைப்பர்லிங்க் பதிவு ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.

விஜய நகர மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி என்று ஒரு மந்திரி இருந்தார். அவர் இதற்கு முன் கிருஷ்ணதேவராயருக்குக் கப்பம் கட்டும் ஒரு குறு நில மன்னரிடம் மந்திரியாக இருந்தார். அந்த மன்னர் ஏதோ காரணத்தால் வரிசையாக சில ஆண்டுகள் கப்பம் கட்ட இயலவில்லை. கிருஷ்ண தேவராயரின் கோபத்துக்கு அஞ்சினார். அவர் சர்வ சாதாரணமாக சம்பந்தப்பட்ட மன்னரை அழைத்து அவரைத் தனிமையில் வைத்து பிரம்பாலேயே அடிப்பார், பிறகு புண்மேல் உப்பு தடவச் செய்வார்.

அப்பாஜி அம்மன்னனை அழைத்துக் கொண்டு கிருஷ்ண தேவராயரைப் பார்க்க வந்தார். ஊருக்கு வெளியில் ஒரு சத்திரத்தில் மன்னனைத் தங்க வைத்தார். தான் தகவல் தெரிவிக்கும் வரை மன்னன் கிருஷ்ண தேவராயரின் முன்னால் வரக் கூடது என்றுக் கூறி விட்டு அவர் மட்டும் சென்று கிருஷ்ண தேவராயரை சென்று பார்த்தார். கிருஷ்ண தேவராயரும் அவரை வரவேற்று தன்னுடன் வைத்துக் கொண்டார்.

சில நாட்கள் கழிந்தன.கிருஷ்ண தேவராயரும் அப்பாஜியும் விஜய நகர சந்தை வீதியில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கிருஷ்ண தேவராயர் அப்பாஜியின் முகத்தைப் பார்க்காமல் அவரிடம் "ஆமாம், உங்கள் மன்னர் எங்கே? அவரை நான் பார்க்க வேண்டுமே" என்றார்.அப்பாஜியும் உரியன செய்வதாக வாக்களித்தார்.பிறகு தன் மன்னனிடம் ரகசியத் தூதனுப்பி தன் சொந்த நாடுக்கு உடனே விரைந்துச் செல்லுமாறுக் கூறினார். மன்னரும் ஓடி விட்டார்.

சில நாட்கள் கழித்து கிருஷ்ண தேவராயர் அப்பாஜியிடம் அவர் மன்னன் இன்னும் வராததற்கானக் காரணம் கேட்டார். அப்பாஜீ அவரிடம் நடந்ததைக் கூறினார்.கிருஷ்ண தேவராயர் ஆச்சரியத்துடன் அவரிடம் "நீங்கள் செய்தது உங்கள் மன்னனைக் காப்பாற்றி விட்டது. அவருக்குத் தக்கத் தண்டனை கொடுக்கவே எண்ணியிருந்தேன். ஆனால் இதை எப்படி உணர்ந்துக் கொண்டீர்கள்?" என்று கேட்டார்.அப்போது அப்பாஜீ "மகாராஜா, நீங்கள் என் மன்னனைப் பற்றிப் பேசும் போது உங்கள் பார்வைப் போன திசையைக் கவனித்தேன். அங்கு ஒரு கசாப்புக் கடையில் ஆடுகள் தோலுறிக்கப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்தவுடனேயே உங்களுக்கு எம் மன்னன் ஞாபகம் வந்தது. ஆகவே இது நல்லதுக்கல்ல என்று நான் உணர்ந்துக் கொண்டேன்" என்றார்.அதன் பிறகு அப்பாஜி மகராஜாவிடம் மந்திரியாக இருந்தார். அது வேறு கதை, சோக முடிவுடன். அரசர்களுடன் நெருங்கி பழகுவது எப்போதுமே கத்திமுனையில் நடப்பது போலத்தான். இது பற்றி மகாபாரதத்தில் அஞாதவாசம் துவங்கும் முன்னால் தௌம்ய முனிவர் யுதிஷ்டிரருக்கு விஸ்தாரமாகவே அறிவுரை கூறுகிறார். அது பற்றி பிறகு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/22/2006

சிக்கன் 65 எப்படி தயாரிப்பது?

எல்லோரும் அவரவர் சக்திக்கேற்ப சமையல் குறிப்புகள் தரும்போது நான் மட்டும் பின் வாங்கலாமா. அதான் ஏற்கனவே ஒரு குறிப்பு கொடுத்தாகி விட்டதே. அதை முன்னூட்டக் கயமை செய்து முன்னே தள்ளிக் கொண்டு வருவதுதான் நான் செய்யப் போவது. அதற்கு முன்னால் எனக்கு சமையல் கலையை சொல்லிக் கொடுத்த திரு. W:P:K: ஐயங்காருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர் திருவல்லிக்கேணியில் 15, வெங்கடாசல செட்டித் தெருவில் நாங்கள் குடியிருந்தப்போது அந்த வீட்டின் சொந்தக்காரர். சமீபத்தில் 1968-ல் எங்கள் வீட்டு சமையற்காரர் வேலையிலிருந்து நின்று விட நானும் என் தந்தையும் சரியான சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். W.P.K. அவர்கள் மிக நன்றாக சமைப்பார். அவரிடம் எனக்கு சமையல் கற்றுத் தரச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன்.

சமையலைச் சொல்லிக் கொடுத்ததில்தான் அவர் செய்தப் புரட்சி அடங்கியுள்ளது.

முதல் பாடம்: சமையல் கஷ்டமே இல்லை. இந்தப் பொம்மனாட்டிகள்தான் தேவையில்லாது பந்தா செய்கிறார்கள்.

இரண்டாம் பாடம்: சாமான்கள் போடும் அளவுகள் ஒரு தகவலுக்காகவே கொடுக்கப்படுபவை. சிறிது முன்னே பின்னே இருந்தால் ஒன்றும் குடி முழுகிப் போகாது. சுவையில் மாற்றம் ஏற்படும். சில சமயம் அதுவே நமக்குப் பிடித்தும் போகலாம்.

மூன்றாம் பாடம்: சமையல் ஆரம்பிக்கும் முன்னர் வெவ்வேறு நிலைகளை மனதில் ஒத்திகைப் பார்த்துக் கொள்ளல் நலம். அதாவது அடுப்பு பற்ற வைப்பது, அரிசி களைவது, பருப்பு நனைப்பது, அரிசி மற்றும் பருப்பை இட்லிப்பானையில் ஒன்றாகச் சேர்த்து வேக வைப்பது, இதற்கிடையில் புளியை ஊற வைத்துக் கொள்ளல், கறிகாயை நறுக்கிக் கொள்ளல் ஆகிய நிலைகள் மனதில் குழப்பமின்றி அதனதன் வரிசையில் இருக்க வேண்டும். வேகவைக்க வேண்டியிருந்தால் கறிகாயைழும் அரிசியுடன் கூடவே வேகவைத்துக் கொண்டால் நேரம் மிச்சமாகும்.

அக்காலக் கட்டத்தில் திரி ஸ்டவ்தான் உபயோகித்தோம். அதை எவ்வாறு பராமரிப்பது என்பதும் அவர் சொல்லிக் கொடுத்தப் பாடத்தில் அடங்கும். இதன் பலனாக நானும் என் தந்தையும் மிக விரைவாக சமையலில் தேர்ச்சி பெற்றோம்.

எல்லாவற்றையும் விட ஐயங்கார் அவர்கள் மனநிலையைத்தான் புரட்சிகரமானது என்றுக் குறிப்பிடுவேன். நங்கநல்லூரில் அப்பாவுடன் இருந்தக் காலத்தில் வீட்டில் எங்கள் இருவரில் யார் முதலில் வீட்டுக்கு வந்தாலும் சமையல் செய்து வைத்து விடுவோம். முக்கால் மணியளவில் ஒரு முழு சாப்பாடு தயார். ரேடியோவில் சினிமா பாட்டு கேட்டுக் கொண்டு, கையில் ஒரு ஜெர்மன் நாவலுடன் சமையல் செய்தக் காலம் நிஜமாகவே பொற்காலம்தான். உடம்பும் கண்ட ஹோட்டல் சாப்பாடு சாப்பிடாததால் பிழைத்தது.

இப்போது கூட அவ்வப்போது சமையல் செய்யும்போது அவரை நன்றியுடன் நினைத்துக் கொள்வேன். ஆனால் சமைக்கத்தான் வாய்ப்புகள் தருவதில்லை என் வீட்டம்மா.

இப்போது இப்பதிவுக்குரிய சமையல் குறிப்புக்குப் போவோமா. காலம் சென்ர அந்த ஐயங்கார் ஸ்வாமியின் ஆத்மா என்னை மன்னிக்கட்டும்.

எலிய முறையில் சிக்கன் 65 செய்வது பற்றிய இப்பதிவுதான் எனது இந்த இடுகைக்கு உந்துதல் அளித்தது.

சிக்கன் 65 செய்ய இயற்கையான், எளிய வழியை இப்போது இந்த 60 வயது இளைஞன் டோண்டு ராகவன் கூறுவான்.

1. குறைந்த பட்சமாக 65 கோழி முட்டைகளை எடுத்துக் கொள்ளவும்.

2. 7 கோழிகளாவது பிடித்துக் கொள்ளவும்.

3. ஒவ்வொரு கோழி அடியிலும் 9-10 முட்டைகளுக்கு குறைவில்லாமல் வைக்கவும்.

4. கோழிகளை இடம் மாற்றாமல் பார்த்துக் கொள்ளவும்.

5. சிக்கன் 65 வரும்.

6. மறுபடியும் குறைந்த பட்சமாக 65 கோழி முட்டைகளை எடுத்துக் கொள்ளவும்.

7. பழைய ஏழு கோழிகளையே வைத்துக் கொள்ளவும். ஏதாவது கோழி ஆட்சேபம் தெரிவித்தால் அதை எழுத்து ரூபத்தில் தரச் சொல்லவும்.

8. ஆட்சேபம் செய்த கோழிகளுக்கு சமமான எண்ணிக்கையில் மாற்றுக் கோழிகளை கூப்பிட்டுக் கொள்ளவும்.

9. ஆட்சேபம் செய்த கோழிகளை வைத்துக் குழம்பு செய்யவும்.

10. ஒவ்வொரு கோழி அடியிலும் 9-10 முட்டைகளுக்கு குறைவில்லாமல் வைக்கவும்.

11. கோழிகளை இடம் மாற்றாமல் பார்த்துக் கொள்ளவும்.

12. அடுத்த பேட்ச் சிக்கன் 65 வரும்.

மேலும் சிக்கன் 65 பேட்சுகள் எவ்வாறு செய்வது என்பதற்கு வழிமுறைகள் 6 முதல் 12 வரை பார்க்கவும். எவ்வளவு பேட்சுகள் தேவையோ அவ்வளவு முறை பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/21/2006

பீட்டா பிளாக்கர் செய்யும் சொதப்பல்கள்

பஜ்ஜி என்னும் பதிவாளர் இட்ட இந்தப் பதிவு என் கவனத்தைக் கவர்ந்தது. அவர் எனது பதிவு ஒன்றில் பின்னூட்டமிட முயன்றிருக்கிறார். அவர் பீட்டா பிளாக்கரில் தன் வலைப்பூவைத் திறந்திருக்கிறார் போல. அவரால் என் பதிவில் பின்னூட்டம் இட முடியவில்லை.

அது சம்பந்தமாக எனது இப்பதிவில் நடந்த விஷயங்கள்:

பஜ்ஜி என்பவர் போட்ட பின்னூட்டத்தை பிளாக்கர் ஏற்க மறுக்கிறது. ஆகவே கீழே அதை ஒட்டுகிறேன்.

"Bajji has left a new comment on your post "சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 19.11.2006":
ஒங்களைத் தவிர நீங்க ஏன் வேறு யாரையுமே போட்டோவோட பொருத்தி அடையாளம் காட்டல்லே?
ஹமீத் அப்துல்லா தான் எங்கே இருக்காருங்கறதை சொன்ன பிறகு தோணிய கேள்வி இது.
பஜ்ஜி
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.

Posted by Bajji to Dondus dos and donts at 11/21/2006 09:26:58 AM
# எழுதியவர்: dondu(#4800161) : November 21, 2006 9:46 AM

--------------------------------------------------------------------------------

மறுபடியும் பஜ்ஜி அவர்களின் பின்னூட்டத்தை பிளாக்கர் ஏற்க மறுத்து விட்டது. ஆனால் அது எனது ஜிமெயிலுக்கு என்னவோ வந்து விட்டது.

பீட்டா பிளாக்கர்கள் சாதா பிளாக்கர்களுக்கு பின்னூட்டம் இட முடியாதா? இது பற்றி மற்ற வலைப்பதிவாளர்கள் கருத்து என்ன?

Bajji(#07096154083685964097) has left a new comment on your post "சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 19.11.2006":

Thanks Dondu. As soon as I tried to publish my last comment, I got an error message. I am a beta blogger. Perhaps this involves a problem of interfacing.

Perhaps this time I succeed?

Bajji
http://bajjispeaks.blogspot.com/

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.
# எழுதியவர்: dondu(#4800161) : November 21, 2006 11:20


இம்முறையும் பஜ்ஜி அவர்கள் வெற்றி பெறவில்லை என்றுதான் கூற வேண்டும். என்னவாக இருக்கும்?

பை தி வே சில நாட்களுக்கு முன்னால் கட்டபொம்மன் என்பவர் எனது இப்பதிவில் போட்டப் பின்னூட்டத்தையும் ஏற்றாலும் பப்ளிஷ் செய்ய ஒயலவில்லை. அது சம்பந்தமாக நான் அங்கு குறிப்பிட்டது:

கட்டபொம்மன் போட்ட கமெண்டை என்ன செய்தாலும் பப்ளிஷ் செய்ய இயலவில்லை. ஆகவே அப்படியே நகலெடுத்துப் போடுகிறேன். நன்றி கட்டபொம்மன்.

கட்டபொம்மன் has left a new comment on your post "பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் – 4":

My opinions generally differ from Cho's. Yet I agree he is quite honest journalist. This cannot be said of others.

His writings are pungent but sincere. His views about Kamaraj are one of the few things I share with him. Difficult to believe that a person like Kamaraj was Tamil Nadu's chief minister.

Kattabomman

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.
# எழுதியவர்: dondu(#4800161) : November 18, 2006 5:01 PM


அன்புடன்,
டோண்டு ராகவன்

11/20/2006

புதிர்கள் புதுசு - 2

"புதிர்கள் புதிசு" போட்டு அஞ்சு நாளாச்சி. இன்னும் சில கேள்விகள் பாக்கி உள்ளன. அவற்றை கேரி ஓவர் செய்து, சில புது புதிர்களைச் சேர்க்கிறேன். கேரி ஓவர் செய்யும்போது, குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக சில மாறுதல்களை செய்துள்ளேன். என்ன கூறுகிறீர்கள்? முந்தைய புதிர்கள் பதிவின் பின்னூட்டப் பெட்டியை மூடி விடுகிறேன். விடைகள் இங்கு தந்தால் போதும்.

இப்புதிர்களை உங்கள் நண்பர்களிடம் விடை தெரிந்த பிறகு கேளுங்கள். அவர்கள் ரசித்தாலோ அல்லது ஏற்கனவே இப்பதிவில் நான் குறிப்பிட்டபடி மைதானம் முழுக்க துரத்தித் துரத்தி உதைத்தாலோ என்னை ஒண்ணும் கேக்கப்படாது.

1. ஆடிட்டர் கோவிந்தாச்சாரியின் மனைவி லேடி டாக்டர் கனகவல்லி தன் கணவர் கேட்டுக் கொண்டபடி கப்பலிலிருந்து நடுக்கடலில் அவரை வீசி எறிகிறார். ஆனால் ஆடிட்டர் கோவிந்தாச்சாரியோ திரும்பப் பறந்து வந்து கப்பலைச் சேருகிறார். என்ன நடந்தது? (அதாவது, அவர்கள் பறவை அல்ல சாமியோவ்).

2. இதன் பொருள் என்ன? --> --> --> --> --> --> --> --> --> -->

3. இதன் பொருள் என்ன?

4. ராமமூர்த்தி மோட்டல் ஒன்றில் தன் மனைவியுடன் தங்கியிருக்கிறார். அன்று இரவு வெளியே கார் பார்க்கிங் வரை செல்கிறார், சற்று நேரம் கழித்து கார் ஹாரனை அழுத்துகிறார், பிறகு ரூமுக்கு திரும்புகிறார்.

5. புது காலணிகளை அணிந்து வேலைக்கு போன பிரதீபா அதனாலேயே மரணம் அடைகிறார்.

6. டோண்டு ராகவன் ஜெயராமனிடம் கூறுகிறான்: நீங்கள் இந்த அறையில் உள்ள நாற்காலியில் உட்காருங்கள், உங்களை சுத்தி சுத்தி 3 முறை ஓடுவேன். அதற்குள் நீங்களாகவே சேரை விட்டு எழுந்து விடுவீர்கள்."
ஜெயராமன்: என்னை என்ன காதில் பூ வைத்தவன் என எண்ணி விட்டீரா? ஏதாவது குண்டூசி வைத்து குத்துவீர்.
டோண்டு: சத்தியமாக இல்லை உம்மை தொடவே மாட்டேன், நேரடியாகவும் சரி அல்லது ஏதாவது குச்சி அல்லது கயிற்றை வைத்தும் சரி.
அதே போல ஜெயராமன் உட்கார்ந்து கொள்ள, டோண்டு இரு முறை சுற்றியதும் ஜெயராமன் தானே எழுந்து விடுகிறார். என்ன நடந்தது? விடை கூற அங்கு டோண்டுவோ ஜெயராமனோ இல்லை. டோண்டு தப்பித்து மான் போல ஓட அவரைத் துரத்திக் கொண்டே ஜெய்ராமனும் ஓடி விட்டார்.

7. விடையில் மைனஸ் வராமல் 21-லிருந்து 2-ஐ எத்தனை முறை கழிக்கலாம்?

8. ஓடும் ரயிலில் கதவுக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தி ராவ் கையில் இருந்த வெள்ளைத் துணியை வீசி எறிந்து விட்டு, கதவைத் திறந்து வெளியே குதித்து தற்கொலை செய்து கொள்கிறான். ரயில் பெட்டியில் யாருமே இல்லை. அவன் மட்டும் ரெயில் பயணத்தில் இல்லாதிருந்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கவே மாட்டான். விளக்குக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/19/2006

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 19.11.2006

இன்று பாலபாரதி அவர்கள் ஆர்கனைஸ் செய்த வலைப்பதிவர் மகாநாடு எல்டாம்ஸ் சாலையில் கிழக்குப் பதிப்பகத்தின் எதிரே இருந்த பார்வதி மினிஹாலில் இனிதே நடைபெற்றது.

எனது கார் டி.டி.கே. சாலையிலிருந்து எல்டாம்ஸ் ரோடில் திரும்பும்போது மணி 4.08 ஆகி விட்டது. சற்றே தாமதம். காரிலிருந்து இறங்கி பார்வதி மினிஹாலில் நுழையும்போது உள்ளேயிருந்து பாலபாரதி வந்து வரவேற்றார். முதன் முறையாக அவரை நேரில் சந்தித்தேன். உள்ளே மா.சிவகுமார் தமிழ் வலைத்திரட்டிகளின் அடுத்த நகர்வு பற்றி தன் பேப்பரை வாசித்துக் கொண்டிருந்தார். முகுந்த், தமிழ்மணம் காசி இன்னும் பல ஆர்வலர்கள் நமக்கு போட்டுக் கொடுத்த வசதிகளில் நாம் ப்ளாக்கிங்க் செய்கிறோம். அவ்வாறு நாம் சுலபமாகச் செய்யும்போது வலைப்பதிவருக்கும் சில கடமைகள் உண்டு என்பதை அவர் தனக்கே உரித்தான மிருதுவான தொனியில் கூறினார். அவருக்குப் பின் பேசிய பாலபாரதி அவர்கள் தமிழ்மணத்துக்குள் போய் ஒரு குறிப்பிட்டப் பதிவரை சர்ச் செய்ய அவ்வளவாக வசதிப்படவில்லை என்று கூறினார். அப்படி செய்ய வேண்டுமானால் கூகளைத்தான் நாட வேண்டியுள்ளது என்றும் கூறினார். பூங்கா மகத்தான சேவை செய்வதாகவும் கூறினார்.

சமீபத்தில் டைடல் பார்க்கில் பொது வலைப்பதிவர் சந்திப்பை நடத்தியவர்களில் ஒருவரான விக்னேஷும் வந்திருந்தார். மா.சிவகுமார் அவர்கள் தமிழ்மணம் மூல கோட் ஓபன் சோர்ஸாக இருந்தால் ஏதேனும் செய்ய இயலும் என அபிப்பிராயப்பட்டார். அவர், விக்னேஷ், இன்னும் சிலர் சேர்ந்த ஒரு தொழில்நுட்பக் கமிட்டி அமைக்கப்பட ஒரு ஆலோசனை எழுந்தது. அது பற்றி மா.சிவகுமார் மேலே கூறுவது பொருத்தமாக இருக்கும். இராம.கி. ஐயா ஆடியோ மற்றும் வீடியோ ப்ளாக்கிங் செய்வது பற்றியும் கூறினார்.

மிகவும் மனதை கனக்கச் செய்தவர் ஸ்ரீலங்கா கிளிநொச்சியிலிருந்து வந்த அகிலன் என்னும் பதிவர். அவரும் அவருடன் கூட வந்த இன்னொரு பதிவர் நிலவனும்தான் கிளிநொச்சியில் பதிவர்கள் என்றும் அவர்களும் இப்போது சென்னைக்கு வந்து விட்டதாகவும் கூறினார். அவர் குண்டு வீச்சுகளைப பற்றிக் கூறும்போது எல்லோருமே உறைந்து போனோம். அதுவும் அனாதைக் குழந்தைகள் குண்டுவீச்சுகளுக்கு பலியானது எல்லார் மனத்தையும் உருக்கி விட்டது. நாமெல்லாம் தமிழ்நாட்டில் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு கதைத்துக் கொண்டிருக்கிறோம், வாழ்க்கையின் எல்லா கடுமைகளையும் இலங்கைவாழ் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அகிலன் அங்கு ஒரு பத்திரிகையில் உதவியாசிரியராக இருந்தார். ஆனால் பார்க்க ஒரு பள்ளி மாணவன் ரேஞ்சில் இளமையாக இருக்கிறார்.

சிவகுமார் பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே இன்னும் சிலர் வந்து சேர்ந்தனர். நான் உள்ளே நுழைந்த போது இருந்தவர்கள் மா.சிவகுமார், இராம.கி. ஐயா, மரபூர் சந்திரசேகர், லக்கிலுக், முத்து தமிழினி, சிமுலேஷன், எஸ்.கே. ஐயா, வரவனையான், வினையூக்கி, ஓகை, ஜயகமல், சரவணன், வி தி பீபிள், அருள்குமார், முகம்மது ரஃபி, பிரியன், தமிழ்நதி ஆகியோர். எனக்குப் பிறகு வந்தவர்கள் ஜோசஃப் சார், சிவஞானம்ஜி, பொன்ஸ், ரோசா வசந்த் ஆகியோர்.

முதல் பேப்பர் படித்து முடிந்ததும் எல்லோருக்கும் தேனீர் மற்றும் பிஸ்கட்டுகள் தரப்பட்டன. சற்று நேரம் கழித்து வலைப்பூவில் சாதீயம் பற்றிப் பேச பால பாரதி எழுந்தார். அவர் சுருக்கமாக ஒரு உரை நிகழ்த்தினார். வலைப்பூவில் ஏன் சாதீயம் பேச வேண்டும், அதனால் ஆகப்போவதென்ன என்பதுதான் கேள்வி. ரோசா வசந்த் அவர்கள் முதலில் இதை பற்றி விவாதித்தே ஆக வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பினார். அவர் கருத்துப்படி இது சம்பந்தமான விவாதங்கள் வெகு சீக்கிரம் சூடு பிடிக்கக் கூடும் என்று அஞ்சினார். அவர் கூறுவதும் நியாயமாகப்பட்டது. அது பற்றி ரொம்பப் பேசவில்லை. மேலே இது பற்றி மற்றவர்களும் எழுதுவார்கள் என நம்புகிறேன்.

இப்பதிவர் சந்திப்பு நடக்கும்போதே பொன்ஸ் அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நாமக்கல் சிபி அவர்கள் ஏற்கனவே இட்லி வடை பதிவில் படங்கள் வந்து விட்டன என்று கூறினார். இட்லிவடை அனுமதியை எதிர்பார்த்து அவரால் எடுக்கப்பட்ட படங்களையும் இப்பதிவில் ஏற்றுகிறேன். அனுமதி கேட்டு அவருக்கு பின்னூட்டம் இட்டுள்ளேன். அவர் அனுமதி ம்றுக்கும் பட்சத்தில் அவரிடம் மன்னிப்பு கேட்டு அவை இப்பதிவிலிருந்து நீக்கப்படும்.

பல ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு படைப்புகளை, முக்கியமாக காப்புரிமை இல்லாத பழைய நூல்களை தமிழில் மொழிபெயர்க்க இயலுமா என என்னிடம் பாலபாரதி அவர்கள் கேட்டபோது, நான் தொழில்முறை மொழிபெயர்ப்பாளன், யாராவது வேலையாக எனக்கு இதை அளிக்காவிட்டால் செய்வதற்கில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டேன. நானாகவே எனது பதிவில் 3 men in a boat புத்தகத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினேன். ஆனால் வேலை ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. என்னைப் போன்ற ப்ரொஃபஷனல்களிடம் இதுதான் பிரச்சினை. வேலை என்று வந்து, டெட்லைன் என்று வாடிக்கையாளர் தலைமேல் உட்கார்ந்தால்தான் வேலையே நகரும்.

மாலை 6.40 மணி அளவில் சந்திப்பு முடிவடையும் சமிஞைகள் வர நான் செல்பேசியில் என் காரை உடனே வரச் சொல்லிக் கூப்பிட்டேன். வண்டி வந்ததும் எல்லோரிடமும் விடை பெற்று சென்றேன்.

சந்திப்பை வெற்றிகரமாக நடாத்திய பாலபாரதிக்கும் மற்றவர்களுக்கும் மிக்க நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பிறகு சேர்க்கப்பட்டது: சந்திப்பை ஏற்பாடு செய்த பாலபாரதி அவர்கள் தன் பின்னூட்டத்தில் கூறியிருப்பதுவும் நியாயமே. அவர் கேட்டுக் கொண்டபடி படங்களை நீக்குகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இப்போது பாலபாரதி அவர்கள் அனுப்பியுள்ள படத்தை அவர் அனுமதியுடன் போடுகிறேன்.படத்தில் இருப்பவர்கள்: டோண்டு ராகவன் (உட்கார்ந்திருப்பவர்களில் நடுவில, கையில் புத்தகத்துடன்), ஓகை, பாலபாரதி, எஸ்.கே., வி தி பீபபிள், முகம்மது ரஃபி, மரவண்டு கணேஷ், வினையூக்கி, மா.சிவகுமார், சிவஞானம்ஜி, முத்து தமிழினி, அகிலன், சீனு மற்றவர்கள் (பெயர் தெரியவில்லை). பெயர்கள் ஒரு வரிசையில் இல்லை. குறிப்பாக அடையாளம் காட்டப்பட்டவர் டோண்டு ராகவன் மட்டுமே.

11/15/2006

புதிர்கள் புதுசு

புதிர்கள் போட்டு கொஞ்ச நாளாச்சு. என்ன கூறுகிறீர்கள்? இப்புதிர்களை உங்கள் நண்பர்களிடம் பிறகு கேளுங்கள். அவர்கள் ரசித்தாலோ அல்லது துரத்தித் துரத்தி உதைத்தாலோ என்னை ஒண்ணும் கேக்கப்படாது.

1. கோவிந்தாச்சாரியின் மனைவி கனகவல்லி தன் கணவர் கேட்டுக் கொண்டபடி நடுக்கடலில் அவரை எறிகிறார். ஆனால் கோவிந்தாச்சாரி திரும்பப் பறந்து வந்து கப்பலை சேருகிறார். என்ன நடந்தது?

2. சிறுவன் கிட்டுவை அவனுக்கு மிகவும் வேண்டிய ஒருவரே நாற்காலியுடன் சேர்த்து கட்டுகிறார். ஆனாலும் கிட்டு எதிர்ப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை.

3. நெருப்புக்குள் ஓடியவன் பிழைத்தான். நெருப்பில்லாத இடத்தில் இருந்தவன் இறந்தான், ஆனால் நெருப்பால் அல்ல.

4. ராமமூர்த்தி மோட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார். அன்று இரவு வெளியே செல்கிறார், சற்று நேரம் கழித்து கார் ஹாரனை அழுத்துகிறார், பிறகு ரூமுக்கு திரும்புகிறார்.

5. புது காலணிகளை அணிந்து வேலைக்கு போன பிரதீபா அதனாலேயே மரணம்

6. பெட்டியில் பத்து வெள்ளை சாக்ஸுகளும் பத்து கறுப்பு சாக்ஸுக்களும் உள்ளன. கும்மிருட்டில் இருக்கிறீர்கள். விளக்கு கிடையாது. வெளியே செல்ல வேண்டும் எவ்வளவு குறைந்த பட்ச சாக்ஸுகள் எடுத்தால் ஒரு ஜோடி நிச்சயம்?

7. தஞ்சையில் பிறந்து, திருச்சியில் வளர்த்து சென்னையில் இறந்தவரை என்னவென்று அழைப்பீர்கள்?

8. பத்தொன்பதிலிருந்து ஒன்றை எடுத்தால் இருபது ஆகிறது என்று உப்பிலி கூற ஆசிரியர் ரங்காராவ் அவனை பெஞ்சு மேல் ஏற்றுகிறார். ஆனால் உப்பிலி கூறியது சரியே.

9. டோண்டு ராகவன் ஜெயராமனிடம் கூறுகிறான்: நீங்கள் இந்த அறையில் உள்ள நாற்காலியில் உட்காருங்கள், உங்களை சுற்றி 3 முறை ஓடுவேன். அதற்குள் நீங்களாகவே சேரை விட்டு எழுந்து விடுவீர்கள்."
ஜெயராமன்: என்னை என்ன காதில் பூ வைத்தவன் என எண்ணி விட்டீரா? ஏதாவது குண்டூசி வைத்து குத்துவீர்.
டோண்டு: சத்தியமாக இல்லை உம்மை தொடவே மாட்டேன், நேரடியாகவும் சரி அல்லது ஏதாவது குச்சியை வைத்தும் சரி.
அதே போல ஜெயராமன் உட்கார்ந்து கொள்ள, டோண்டு இரு முறை சுற்றியதும் தானே எழுந்து விடுகிறார். என்ன நடந்தது?

10. மைனஸ் வராமல் 21-லிருந்து 2-ஐ எத்தனை முறை கழிக்கலாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

விடை கிடைக்காத புதிர்களை அடுத்தப் பதிவுக்கு கேரி ஓவர் செய்து, சில புதிர்களையும் புதிதாகச் சேர்த்துள்ளேன். எல்லா புதிர்களுக்கும் விடைகளை அங்கேயே அளிக்கவும். இப்பதிவின் பின்னூட்டப் பெட்டியை மூடி விடுகிறேன்.

11/14/2006

பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் – 4

இதன் முந்தையப் பதிவு இங்கே.

காமராஜ் அவர்களைப் பற்றி மேலே பதிவுகள் போட ஏதுவாக நூலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நான் கைதவறுதலாக என் வீட்டில் எங்கோ வைத்திருந்த “காமராஜை சந்தித்தேன்” என்னும் புத்தகம் – சோ அவர்கள் எழுதியது – கைக்குக் கிட்டியது. இது போதுமே அடுத்த சில பதிவுகள் போட, ஆகவே இப்போதே இந்த வேலையை தொடர்கிறேன்.

சோ அவர்கள் காமராஜருடன் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர். அவரைப் போலவே நேர்மை, நாணயம் மிக்கவர். நேர்மையான ஒருவரைக் குறித்து இன்னொரு நேர்மையானவர் எழுதும் போதுதான் உண்மையான செய்திகள் வரும் என்பது பதிப்பகத்தாரின் கருத்து. எனது கருத்தும் அதுவே.

காமராஜர் அவர்களுடன் அவ்வளவு நெருங்கிப் பழகியவர் சோ அவர்கள். ஆனால் அவர்களது முதல் சந்திப்பு மோதலில்தான் ஆரம்பித்தது என்று கூறினால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.

அறுபதுகளின் ஆரம்பம். காமராஜ் அவர்கள் முதலமைச்சர் அப்போது. சோ குழுவின் நாடகம் “பால மந்திர்”க்காக சென்னை ஆர்.ஆர். சபாவில் நடந்து கொண்டிருந்தது. நாடகத்தின் பெயர் இப்புத்தகத்தில் குறிப்பிடாவிட்டாலும் அது “சம்பவாமி யுகே யுகே” என்னும் விஷயத்தை நான் வேறொரு இடத்தில் படித்துள்ளேன். கிருஷ்ண பரமாத்மாவே அவதரித்து இந்தியாவில் ஊழலை ஒழிக்க முயலுவதாகவும், அதில் அவர் தோல்வியடைவதாகவும் எழுதப்பட்ட கிண்டல் நாடகம் அது. அந்த நாடகத்துக்கு போலீஸ் அனுமதி கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. பிறகு எப்படியோ சமாளித்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நாடகத்துக்கு காமராஜ் அவர்கள் தலைமை தாங்க அழைக்கப்பட்டிருக்கிறார். யார் அவரிடம் இந்த விஷயத்தைப் பற்றி அவரிடம் என்ன போட்டுக் கொடுத்தார்களோ, அது பற்றி மேடையிலேயே சோவுக்கும் அவருக்குமிடையில் வாத-பிரதிவாதம் எழுந்து, காமராஜ் அவர்கள் மேடையை விட்டு நீங்கினார்.

இந்த நிகழ்ச்சியை பற்றி வருத்தப்பட்டு சோ அவர்கள் பலமுறை பிறகு வெவ்வேறு தருணங்களில் குறிப்பிட்டுள்ளார். (என்னால் சோ அவர்கள் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது, அவர் இடத்தில் நானும் அவ்வாறுதான் நடந்து கொண்டிருப்பேன் – அடேய் அடங்குடா டோண்டு ராகவா) ஆனாலும் சோ அவர்கள் உண்மையாகவே வருத்தப்பட்டிருக்கிறார். காமராஜ் அவர்களோ இந்த நிகழ்ச்சியைப் பற்றி பிறகு சோ அவர்களிடம் பிரஸ்தாபிக்கவேயில்லை. அதில்தான் அவரது பெருந்தன்மை வெளிப்படுகிறது. நடந்ததை மறைக்காமல் எழுதியதில் சோ அவர்களும் பெருந்தன்மையில் குறைவில்லாதவர் என்பதைக் காட்டுகிறது. (அடேய் டோண்டு!!! சாரி, பாஸ், நான் விடு ஜூட்).

கோணலாக முடிந்த முதல் சந்திப்புக்குப் பிறகு சோ அவர்கள் காமராஜரை 1968-ல் சந்தித்திருக்கிறார். பிறகு 1971-ல், பொதுத் தேர்தல்களுக்குப் பிறகுதான் அடுத்த சந்திப்பு. அதன் பிறகு நடக்கும் நிகழ்ச்சிகள்தான் இப்புத்தகத்தில் வருகின்றன. இதில் சோ அவர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார். தான் கேட்டறிந்த ஒரு விஷயம் தவிர புத்தகத்தில் வருவன எல்லாம் அவரே நேரில் கண்டறிந்தவை என்று கூறியுள்ளார்.

கேட்டறிந்த விஷயம் சோ அவர்கள் தனது சித்தப்பாவிடமிருந்து கேட்டது. ரிசர்வ் பேங்க் எதிரே உள்ள சப்வேயை பற்றி. அது பற்றி சிறிய ஆலோசனைக் கூட்டம் ஒன்று. அதில் சோவினுடைய சித்தப்பாவும் ரயில்வேயின் சார்பில் கலந்து கொண்டார். சப்வே பற்றிய டெக்னிகல் விவரங்களைக் கூற வேண்டிய பொறுப்பு அவருக்கு. ஆங்கிலத்தில் கூறினால் காமராஜ் அவர்களுக்கு புரியுமோ புரியாதோ என்ற எண்ணத்தில் தட்டுத் தடுமாறித் தமிழில் அவற்றைக் கூற முயன்றிருக்கிறார். காமராஜ் அவர்கள் அவரை ஆங்கிலத்திலேயே கூறுமாறு பணித்து, எங்காவது சந்தேகம் ஏற்பட்டால் தான் கேள்வி கேட்டுக்கொள்வதாகக் கூற மீட்டிங் தொடர்ந்திருக்கிறது. அதே மாதிரி கூர்மையாக கவனித்து தேவையான விளக்கங்களையும் காமராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அப்போது மத்திய அரசு சார்பில் வந்திருந்த ரயில்வே ராஜாங்க மந்திரி திட்டத்துக்கு அதிகச் செலவாகும் ஆகவே அதைக் கைவிட வேண்டும் என்று பொருள்படக் கூற, காமராஜ் அவர்கள் ஆவேசத்துடன் “சப்வே வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அதை எப்படி நிறைவேற்றுவது” என்று மட்டும் பார்த்தால் போதும் என்றும், இது பற்றி பிரதம மந்திரியிடம் தாமே பேசப் போவதாகக் கூறி மீட்டிங்கை சரியான திசையில் போக வைத்திருக்கிறார்.

இதில் பல விஷயங்கள் தெரிய வருகின்றன.
1. தனக்கு ஆங்கிலம் புரியாது என்ற நினைப்பில் செயல்பட்ட அதிகாரியைக் கடுமையாகப் பேசாது அவரை ஆங்கிலத்திலேயே பேச ஊக்குவித்தப் பெருந்தன்மை,
2. தனக்குப் புரியாத இடத்தில் தயங்காது கேட்டு தெளிவுபடுத்திக் கொண்ட போலித்தனம் கலக்காத எளிமை,
3. முட்டுக்கட்டை போட முயன்ற மத்திய மந்திரியை சமாளித்து, மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றும் துடிப்பு,
4. பிரதம மந்திரியிடம் பேசுவேன் என்று கூறிய தன்னம்பிக்கை, அதாவது பிரதம மந்திரியை சம்மதிக்கச் செய்ய முடியும் என்ற நிச்சயமும் இதில் அடங்கும்,
5. சப்வேயை கட்டி முடித்த சாதனை.

காமராஜருடன் சோ நெருக்கமாகப் பழக ஆரம்பித்தது 1971 தேர்தலுக்கு முந்தைய மற்றும் அடுத்தக் காலக் கட்டம்தான். அது அடுத்தப் பதிவுகளில். அவற்றில் வரும் எல்லாமே சோ அவர்கள் கண்டறிந்தவையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

காமராஜர் அவர்களைப் பற்றி அடுத்த பதிவு போடுவதற்காக இணையத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது எனக்கு இந்த அருமையான இடுகை கிடைத்தது. சம்பந்தப்பட்டவர்களிடம் நான் காமராஜ் அவர்களைப் பற்றிப் போடும் பதிவுக்காக கண்ணதாசனின் இந்த கவிதையானப் பாடலைப் பற்றிய இடுகையை உபயோகப்படுத்த அனுமதி கோரி பெற்றேன். நிலா அவர்களுக்கு என் நன்றி.

முதலில் இந்த இடுகையில் கண்ட பொருளை பதிவுக்கு மேலோட்டமாகத்தான் உபயோகிக்க எண்ணினேன். பிறகு அருமையான இந்த இடுகையில் எதை எடுக்க, எதை விட என்று மயங்கியதால், இப்பதிவையே அதற்கு அர்ப்பணிக்கிறேன். மேலும் இத்தொடரின் தலைப்பின் வரியும் நான் முதல் பகுதியில் கூறியபடி கண்ணதாசன் பாடல்தானே. இப்போது இடுகைக்குப் போவோமா? இப்பாடல் ஒரு வரிசையில் வருவதால் சில முன்குறிப்புகள் மற்றும் பின் குறிப்புகள் உள்ளன. அவற்றைத் தவிர்த்து இடுகையைத் தருகிறேன். காமராஜர் அவர்களைப் பற்றி அடுத்த இடுகையில் தொடர்கிறேன். தலைப்பைக் கூட மாற்றியிருக்கிறேன்.

"நான் தெரிவு செய்த பாடல் டி.எம்.எஸ்., சுசீலா குரலில் ஒலித்த "அந்த சிவகாமி மகனிடமும் சேதி சொல்லடி" எனும் பாடலாகும். இதற்குக் காரணங்கள் இரண்டு. முதலாவது இந்த பாடல் பிறந்ததன் பின்னணியாகும்.காங்கிரஸ் கட்சியிலிருந்து கண்ணதாசன் பிரிந்த காலத்தில், கர்ம வீரர் காமராஜரிடத்தில் ஒரு தனி மரியாதை வைத்திருந்த கவியரசர், அவரை மனதில் நிறுத்தி எழுதிய பாடலாம். அதாவது காமராஜரின் அன்னையின் பெயர் சிவகாமியாகும். அத்தோடு அழகான காதல் வரிகள் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.

காதலனின் பிரிவால் காதலி வருந்துகிறாள். அவனை எண்ணி மிகவும் மனம் நொந்து போகிறாள். அங்கே பிறக்கிறது அந்த அழகிய தமிழ்ப்பாடல்:

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி?
வேலன் இல்லாமல் தோகை ஏதடி?

தோழியின் மூலம் தன் காதலனுக்குச் சேதி அனுப்புகிறாளாம். தன் தலைவனிடம் போய்த் தன்னை மணமுடிக்க நாள் குறிக்கும்படிக் கூறுகிறாள். அது மட்டுமா?

மயிலின் தோகை எவ்வளவு அழகானது? அதன் வர்ணங்கள் உயிர் பெறுவது அந்தத் தோகை விரிக்கப்படும் போதே. ஆனால் அந்த மயில் தனது முழு அழகையும் தன் தலைவனான அந்த முருகப் பெருமான், வேலன், அவனுக்கு முன்னால் தானே காட்சிக்கு வைக்கும், அவனில்லா விட்டால் எப்படி அங்கே தோகையின் அழகு பெருமை பெறும்? அதே போலத் தன் தலைவனின் முன்னால் மட்டுமே மலரும் தன் அழகிற்கு, மயிலின் தோகையை ஒப்பிடுகிறாள் அந்தத் தலைவி.

தொடருகிறாள் காதல் வேதனையில் துவளும் தலைவி,

கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணெனப் பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை

அவளுடைய விழிகள் பூ விழிகள் தானே, அவை மலர்வது எதற்காக? அவளது தலைவன் அவைகளைக் கோர்த்து மாலையாய் அணிந்து கொள்வதற்கே, அது மட்டுமா? கண் விழிகள் மலர்கள் என்றால் அவைகளைத் தாங்கி நிற்கும் கன்னங்கள் வேறென்ன சோலைதானே!

தன்மீது உள்ள காதலினால் உருகும் காதலியின் நிலையறிந்து காதலன் மனதில் உருவாகும் பாடல் வரிகள்

மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்

நிலப் பரப்புக்களிலே உயர்ந்ததாம் மலையின் உச்சியில் பிறந்த சந்தனம், அதனடியில் வாழும் மனிதனின் மார்புக்குத் தானே சொந்தமாகிறது. அத்தகைய உயரிய இதயத்தைக் கொண்ட அவன் காதலியின் இதயம் தனக்கே சொந்தம் என்று பெருமையில் பூரிக்கிறான் தலைவன்.

தலைவனின் பதில் கேட்டுப் பூரித்த மங்கையவள் மனதில் ஒரு சிறு சந்தேகம், தனது இதயத்தை மலையின் உச்சிக்கும், தன்னை அதன் அடிவாரத்தில் இருக்கும் மனிதனுக்கும் ஒப்பிட்ட அந்தத் தலைவனின் நிலை உயர்ந்து வசதி பெருகி விட்டால், ஒருவேளை தன்னை மறந்து விடுவானோ?தாம் நெருங்கி விட்டால் தமக்குள் இருக்கும் அந்தஸ்து பேதமே தம்மைப் பிரித்து விடுமோ? துடிக்கும் இதயத்துடன் வினவுகிறாள்!

நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ?
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ?

திடுக்கிட்டு விட்டான் அவன்! என்ன சந்தேகம் வந்து விட்டதோ தலைவிக்கு, தனது காதலின் மீது? அறுதியாகக் கூறுகிறான் தலைவன்

காலம் மாறினால் காதலும் மாறுமோ?
மாறாது! மாறாது இறைவன் ஆணை

கண்னுக்குத் தெரியாமல் காவல் இருக்கும் அந்த அனைவருக்கும் பொதுவான இறைவனைத் துணைக்கு அழைக்கிறான்.

மகிழ்ச்சியுடனே அவளும் இணைகிறாள்

என்றும் மாறாது! மாறாது! இறைவன் ஆணை

திரும்பவும் அவளுக்குத் தீர்மானமாகச் சொல்கிறான்.

இந்தச் சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி
இன்னும் சேர நாள் பார்ப்பதேனடி?
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி?
தோகையில்லாமல் வேலன் ஏதடி?

மிகவும் துணிச்சலாக மனதோடு சேர்ந்து விட்ட நீ என்னுடன் சேர்வதற்கு நாள் பார்க்க வேண்டுமா என்ன? என்னுடன் சேர்ந்து நின்றால் பிறகென்ன பிரிவு எனக் காதலன் எனும் அதிகாரத் தோரணையில் காதலிக்கு ஆறுதலளிக்கிறான்."

மேலும் சில தகவல்கள் இப்பாடலைப் பற்றி.

இப்பாடல் வந்த படம் "பட்டினத்தில் பூதம்", சமீபத்தில் அறுபதுகளில் வந்தது (1966?). ஜெயசங்கர், கே.ஆர்.விஜயா, நாகேஷ், ஜாவர் சீத்தாராமன் (ஜீபூம்பா) ஆகியோர் நடித்தது. நேயர் விருப்ப நிகழ்ச்சிகள் விடாமல் கேட்கப்பட்டப் பாடல். அறுபதுகள் சினிமாப்பாடல்களின் பொற்காலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/13/2006

பள்ளிச்சாலை தந்தவன் ஏழைத் தலைவன் - 3

இந்த வரிசையில் முந்தையப் பதிவு இதோ.

நமச்சிவாயம் அவர்களது புத்தகத்தில் நான் குமுதம் தொடராகப் படித்ததிலிருந்து சில நிகழ்ச்சிகள் விட்டுப் போனதாகத் தோன்றுகிறது. உதாரணத்துக்கு, உள்ளூர் தாதா ஒருவனால் துரத்தப்பட்ட ஒருவன் ஓரிடத்தில் ஒளிந்து கொள்ள, அந்த இடம் காமராஜ் அவர்களுக்கும் தெரியும். ஆயினும் தன்னை மிரட்டிக் கேட்ட தாதாவின் ஆட்களிடம் தனக்கு ஒன்றுமே தெரியாது என்று தைரியமாகச் சாதித்து ஒளிந்து கொண்டவரின் உயிரைக் காப்பாற்றினார். ஒரு வேளை நமச்சிவாயம் வேறு ஏதாவது புத்தகம் காமராஜரைப் பற்றி எழுதியதிலிருந்து நான் அதைப் படித்தேனா அல்லது, இப்புத்தகத்துக்கு ஏதேனும் தொடர்ச்சி உண்டா என்பது புரியவில்லை. ஏனெனில் 1921-ஆம் ஆண்டுக்குப் பிறகான நிகழ்ச்சிகள் காணப்படவில்லை.

அதாவது காமராஜ் அவர்களது 18-ஆம் வயதுக்குப் பிறகு நிகழ்ச்சிகள் இப்புத்தகத்தில் இல்லை. இருந்தாலும் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு பல ஆதாரங்கள் இப்புத்தகத்திலேயே காணப்படுகின்றன. முக்கியமாக மதிய உணவுத் திட்டத்திற்கான ஆதார நிகழ்ச்சியை நான் போன பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

இப்புத்தகம் அக்காலக் கட்டத்தில் தமிழகம் இருந்த நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அக்கால விலைவாசிகளைப் பார்த்து சுபிட்சமாக வாழ்ந்தார்கள் என்று எடை போடலாகாது. ரூபாய்க்கு 8 படி (10.2 கிலோ) அரிசி விற்றது என்று கூறுவார்கள். ஆனால் ஒரு ஆழாக்கு (8 ஆழாக்கு ஒரு படி, அதாவது 1400 கிராம்) அரிசி வாங்கக் கூட பணம் கையில் இருக்காது. சம்பளம் கூட 15-20 ரூபாய் அளவில்தான் இருக்கும். இவ்வளவும் ஏன் கூறுகிறேன் என்றால் காமராஜ் அவர்கள் சார்ந்த நாடார் குலத்தினர் தங்களை சுய முயற்சியால் முன்னேற்றிக் கொண்ட கதையை விளக்கத்தான். பணவசதி இருந்தவர்கள் ஒவ்வொரு பிடி அரிசியாக தானம் செய்து சொந்தப் பள்ளிக்கூடம் ஏற்படுத்திக் கொண்டனர். அதுதான் பிடியரிசிப் பள்ளி என்று அறியப்பட்ட, 1885-ல் துவக்கப்பட்ட க்ஷத்திரிய வித்தியாசாலையாகும்.

இந்தப் பள்ளியைத் துவங்க விருது நகர் வியாபாரிகள் தங்களது வியாபார மகமைப் பணத்தைக் கொடுத்துப் பெரிதும் உதவினர். மகமைப் பணத்தோடு ஊர்கூடித் தேர் இழுக்கப்பட்டது. ஊர் மக்கள் ஒவ்வொரு வீட்டுப் பெண்மணிகளும் பள்ளி நிலை பெற வேளைதோறும் வித்திட்டு உதவினர்.

பள்ளிக்கூடச் செலவுக்காக ஒவ்வொரு நாளும் வேளையும் சமையல் செய்ய உலையில் அரிசி போடும்போது முதலில் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துத் தனியாக ஒரு பானையில் போட்டு சேமித்தனர். இதை எல்லா வீட்டிலும் செய்தனர். சிறு துளி பெருவெள்ளமாகி மூட்டை மூட்டையாக அரிசி சேர்ந்தது. மலையென ஓங்கி உயர்ந்த அரிசி மூட்டைகள் விற்கப்பட்டன. பள்ளிச் செலவுக்கு பணம் கிடைத்தது. அதாவது தன் கையே தனக்குதவி என்று முனைப்புடன் செயல்பட்டால் என்னென்ன செய்யலாம் என்பதைக் குறிப்பிடவே இங்கே இதை கூறுகிறேன்.

பிடி அரிசியின் மகிமை பெரிது. மிகமிகப் பெரிது. இந்தப் பள்ளியில்தான் காமராஜ் படித்தார். ஆறாம் வகுப்பு வரை அப்பள்ளியில் அவர் பெற்ற அனுபவங்கள் அவரைப் புடம் போட்டன.

அப்போதே அவர் நடப்பு அரசியல்களை பற்றி தன் நண்பர்களுடன் விவாதிப்பார். ஜாலியன் வாலாபாக் படுகொலை அவர் மனதை மிகவும் பாதித்திருக்கிறது. அது பற்றி விவாதங்கள் நடந்து வந்த தருணத்தில் ஒரு சடு குடு போட்டி நடந்தது. ஒரு முரட்டுப் பையன் தன்னை வெள்ளைக்காரன் என்று பீற்றிக் கொண்டு போட்டிக்கு வந்ததற்காகவே அவர் அவனது எதிர்க் கட்சியில் சேர்ந்து அவனைப் புரட்டி எடுத்து விட்டார். நல்ல உழைப்பாளியாதலால் உரம் பாய்ந்த உடல்.

ஒருமுறை ஜல்லிக்கட்டு காளையின் கொம்புகளால் தாக்கப்பட்டு உயிரை இழக்க இருந்த ஒரு எட்டு வயது சிறுவனை தனது சமயோசித புத்தியால் காப்பாறினார் காமராஜ் அவர்கள். சிறுவனை அப்படியே கீழே தள்ளி, தான் அவன் மேல் படுத்துக் கொண்டு அவனைக் காளையின் பார்வையிலிருந்து மறைத்தார். அந்த சில நொடிகளுக்கு தனது உயிரையே பணயம் வைத்தார்.

அதே போல எல்லோராலும் ஒதுக்கப்பட்ட ஒரு பெருவியாதியால் பீடிக்கப்பட்ட சிறுவனை அறுவறுப்பின்றி தொட்டுத் தூக்கி ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்த்தவர் காமராஜ் அவர்கள். அதுவும் அக்காலக் கட்டத்தில் பெருவியாதி என்றால் எல்லோருமே அலறுவர். நமது காமராஜரிடம் அதன் பாச்சா பலிக்கவில்லை.

நமச்சிவாயம் அவர்கள் காமராஜ் அவர்களது அறிமுகத்தைப் பெற்றது ஒரு சுவையான கதை. 1957-தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசி முடித்து அடுத்தக் கூட்டத்துக்கு செல்ல இருந்தவர் முன்னால் இவர் தயங்கி நின்றிருக்கிறார். என்ன விஷயம் என்று கேட்ட காமராஜரிடம் தான் அடுத்த மீட்டிங்கிற்கும் கவரேஜுக்காக வரவேண்டியிருக்கும் என்று மென்று விழுங்கியபடி கூற, காமராஜர் அவரை எல்லா மீட்டிங்கிற்கும் தனது காரிலேயே அழைத்துச் செல்ல என்று ஆரம்பித்து நமச்சிவாயத்தை கடைசியில் காமராஜ் அவர்களின் பாஸ்வெல் ஆக்கி விட்டது. வாழ்க்கையில் இம்மாதிரி பல பெரிய விஷயங்களுக்கு அடிப்படையாக சாதாரண நிகழ்ச்சியே அமைந்து விடுவதை இங்கே கூறத்தான் வேண்டும்.

அடுத்தப் பதிவில் நான் சமீபத்தில் அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் காமராஜ் அவர்களைப் பற்றி கேட்டதையும் படித்ததையும் பற்றிக் கூறுவேன். சோ அவர்கள் கூட காமராஜருடன் நெருங்கிப் பழகியவர். அவர் எழுதிய புத்தகம் போன புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இப்போது தேடினால் கிடைக்க மாட்டேன் என்கிறது. அது கிடைத்தவுடன் அதிலிருந்து வேறு எழுத வேண்டும். பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழூர் கார்த்திக்கு கங்ராட்ஸ்

நம்ம பழூர் கார்த்தி (சோம்பேறி பையன்) திடீரென சிக்ஸர் அடித்துள்ளார். பூனாவில் நடந்த சிவாஜி பட ஷூட்டிங்கை நேரில் கண்டு அவர் வர்ணித்திருப்பது 19.11.2006 தேதியிட்டு, இன்று நியூஸ் ஸ்டாண்டுகளில் விற்பனைக்கு வந்துள்ள குங்குமம் இதழ் முதல் பக்கத்திலேயே வந்துள்ளது. அதே இதழின் ஐந்தாம் பக்கத்தில் நெற்றியில் விபூதியுடன் சிவப்பழமாகக் காட்சி அளிக்கிறார்.

கீப் இட் அப் பழூர் கார்த்தி அவர்களே. இந்தப் பழூர்தான் பழுவேட்டரையர்களின் ஊரா? வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/12/2006

எதெதில் சிக்கனம் தேவை?

நான் சில மாதங்கள் முன் இட்ட "நினைக்கத் தெரிந்த மனமே" என்ற பதிவு இன்று திடீரென நினைவுக்கு வந்தது. காலையில் உலாவச் செல்லுகையில் இப்பாட்டு காற்றினிலே மிதந்து என் செவிப்பறையில் மிருதுவாக மோதியது. கண்ணதாசனின் கவிதையின் இனிமையே இனிமை.

மேலே போவதற்கு முன்னால் ஒரு சிறிய degression. முழு பாட்டையும் போட்டுவிடுகிறேன். கூகுளாண்டவரே துணை. விளக்கம் கடைசியில்.

"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா

(நினைக்கத்)

மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா

(நினைக்கத்)

எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே உனக்கு மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா

(நினைக்கத்)

கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா

(நினைக்கத்)"

இப்போது இடுகை. சிக்கனம்மும் கருமித்தனமும் வெவ்வேறு. சிக்கனமாக இருப்பவரை கருமி என்று கூறுபவர்களும் உண்டு. நான் புரிந்து கொண்டது என்னவென்றால், ஒரு நல்ல வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதற்கான செலவு மட்டும் செய்து கொள்வதுதான் சிக்கனம் என்பதுவே. உதாரணத்துக்கு எனக்குக் கார் தேவையில்லை. வாடகைக் கார்கள் எல்லாம் என்னுடையதுதானே! (:))))

பக்கத்து வீட்டுக்காரன் வாங்கினான் என்பதற்காகவே நானும் கார் வாங்கினேன் என்றால் நான் சிக்கனமாக வாழவில்லை என்பதே பொருள். அதே சமயம், பொன்னான நேரத்தை பார்த்து செலவழிக்காது சிக்கனமாக நடந்து கொள்கிறேன் பேர்வழி என்று காரில் செல்லாது பஸ்சுக்காகக் காத்துக் கிடந்தால் நான் கருமி என்று பொருள்.

மேலே சுட்டிய எனது பதிவில் குறிப்பிட்டபடி எனது பெரியப்பா சிறு வயதில் பட்ட கஷ்டம் காரணமாக ரொம்பத்தான் சிக்கனமாக இருந்தார். டெலிஃபோனில் தேவையில்லாது பேச மாட்டார். அப்போதெல்லாம் வாடகை 75 ரூபாய்தான், 150 அழைப்புகள் இலவசம். ஆனால் மனிதர் 25 அழைப்புகளுக்கு மேல் செய்ய மாட்டார். என்னிடம் அதைப் பற்றி கூறியபோது, நான் ஒன்றே ஒன்றுதான் கூறினேன். மீதி 125 அழைப்புக்ளை செய்யாததால் அவருக்கு அதிக பலன்கள் ஏற்படவில்லை என்பதே அது. தேவையின்றி டெலிபோன் துறைக்கு அவற்றை தண்டமாக அழுவதில் என்ன லாபம்? ஆகவே இந்த இடத்தில் சற்று மாற்று சிந்தனை தேவைப்படுகிறது. ஒவ்வொரு பில்லின் போதும் அம்மாதிரி மிகுந்த அழைப்புகளை கேரி ஓவர் செய்யாத பட்சத்தில் அவற்றை உபயோகித்து விடுவதே மேல் என்பேன். நானாக இருந்தால் அனுமதிக்கப்பட்ட அழைப்புகளை சற்றே மீறுவேன். அதாவது முழு உபயோகம் சந்தேகத்துக்கிடமின்றி வரவேண்டும். ஒரு அழைப்பு கூட வீணாக திரும்பிப் போகக்கூடாது என்பதே குறிக்கோள். மேலே 5 கால்கள் செய்தால் என்ன, அதற்கான பணத்தைக் கொடுத்து விட்டுப் போகலாம். பரவாயில்லை.

ஆகவே சிக்கனமாக இருப்பதால் ஏதேனும் உருப்படியாக காரியம் ஆகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். நான் மத்தியப் பொதுப்பணித் துறையில் இருந்த போது மார்ச் 31-க்குள் அந்த வருடத்துக்கான பட்ஜெட் முழுக்க செலவழிக்க வேண்டும். அங்கு போய் சிக்கனமாக இருந்தால் வேலைக்காகாது. அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் சம்பந்தப்பட்ட டிவிஷனுக்கு சங்குதான். ஆக, இந்த சந்தர்ப்பத்திலும் சிக்கனம் பிரயோசனப்படாது.

நான் ஐ.டி.பி.எல்லில் இருந்தபோது ஏதேனும் எலெக்ட்ரிகல் ஐட்டம் வாங்க நேர்ந்தால் வேண்டுமென்றே சற்று அதிகமான தொகையை அட்வான்ஸாகக் கேட்பேன். ஒரு மெயின் ஸ்விட்ச் வாங்க 2000 ரூபாய் தேவை என்றால், 2500 ரூபாய் அட்வான்ஸாகப் பெறுவேன். விலை சற்றே முன்னே பின்னால் இருந்தாலும், உதாரணத்துக்கு 2100 ரூபாய் என்று ஆகிவிட்டாலும் கவலை இல்லை. பிறகு அக்கௌண்ட் சப்மிட் செய்வேன். வாங்கிய அட்வான்ஸ் 2500 ரூபாய், செலவு 2100 ரூபாய், ஆகவே என்னிடம் மீதியிருப்பது 400 ரூபாய். அதை திருப்பி கம்பெனி கணக்கில் செலுத்த தேவையான ஆணையைக் கோருவேன். பிறகு என்ன, என்னுடைய அக்கண்ட் உடனே சாங்ஷன் ஆகி 400 ரூபாய் செலுத்தச் சொல்லிவிடுவார்கள். நானும் செலுத்துவேன், தீர்ந்தது விஷயம்.

அவ்வாறு செய்யாமல் 1900 ரூபாய்தான் வாங்கியிருந்தேன் என்றால், எனக்கு ரி-இம்பர்ஸ் செய்ய வேண்டியது 200 ரூபாய் என்று போட வேண்டியிருக்கும். அக்கௌண்டண்ட் நம் கணக்கை சுலபத்தில் தொடமாட்டார், புரிகிறதா? ஆக, இம்மாதிரி அட்வான்ஸ் வாங்கும்போது சிக்கனம் பார்க்கக் கூடாது.

இப்போது நான் ஏன் இந்தப் பாட்டை முழுமையாக இங்கு போட்டேன் என்று கேட்பவர்களுக்காக:
1. நான் இன்று முழு பாட்டைக் கேட்டு சந்தோஷம் அடைந்தேன்.
2. அதை மற்றப் பதிவர்களும் பெறட்டுமே.
3. இதிலென்ன சார், காசா அல்லது பணமா?

என்ன நான் சொல்வது? அது இருக்கட்டும், இப்பாட்டு எம்.ஜி.ஆர். மற்றும் தேவிகா நடித்த ஆனந்த ஜோதி என்ற படம் என்று ஞாபகம். யாராவது கன்ஃப்ர்ம் செய்ய முடியுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/10/2006

Erle Stanley Gardener

அறுபதுகளில் மிகப்பிரபலமாக இருந்தவர் எர்ள் ஸ்டான்லி கார்டனர். அவர் சட்ட நிபுணர். அமெரிக்க கோர்ட் நடவடிக்கைகள் பற்றிய விஷயங்களுக்கு அவர் ஒரு அத்தாரிடி. அவர் யார் என்று இன்னும் புரியாதவர்களுக்கு இன்னொரு பெயரைக் கூறினால் உடனே புரிந்து கொள்வார்கள். பெர்ரி மேஸன். ஏதாவது ஞாபகம் வருகிறதா?

எர்ள் ஸ்டான்லி கார்டனர் உருவாக்கிய பாத்திரம்தான் பெர்ரி மேஸன் என்னும் வழக்கறிஞர். The Case of Vevette Claws என்ற நாவல் 1933-ல் வந்தது. அதற்கு அடுத்து வந்த நாவல்கள் வரிசைக்கிரமத்தில்: The case of sulky girl, The case of howling dog, The case of stuttering bishop". இதற்கப்புறம் தெரியாது. இந்த 4 நாவல்களை சொன்னது கூட முந்தைய நாவலில் அடுத்த நாவலைப் பற்றி ஒரு பாரா வரும். அதன் பிறகு கதாசிரியர் அந்த உத்தியை விட்டு விட்டார். மொத்தம் 80 சொச்சம் புத்தகங்கள் இந்த சீரீஸில் வந்துள்ளதாக அறிகிறேன்.

இந்த பெர்ரி மேஸன் இருக்கிறாரே, அவர் குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதாடும் எதிர்தரப்பு வக்கீல். அவருக்கு தன் கட்சிக்காரரின் நலந்தான் முக்கியம். அதற்காக அவர் என்னென்னவோ சாகசங்கள் எல்லாம் செய்வார். அவற்றைப் பற்றி வழக்கறிஞரான என் பெரியப்பாவிடம் கேட்ட போது அவர் அவ்வாறெல்லாம் ஒரு வக்கீல் இந்தியாவில் செய்தால் அவரது சன்னதை பிடுங்கி விடுவார்கள் என்று கூறி விட்டார்.

பெர்ரி மேஸனிடம் தோற்பதற்காகவே உருவாக்கப்பட்டவர் ஹாமில்டன் பர்கர் என்னும் அரசு தரப்பு வக்கீல். பெர்ரி மேஸனின் அந்தரங்கக் காரியதரிசி டெல்லா ஸ்ட்ரீட், நண்பர் தனியார் துப்பறியும் நிபுணர் பால் டிரேக். பெர்ரி மேஸனை காப்பியடித்து தமிழில் கதைகள் எழுதியவர் கலாதர் என்பவர். பெர்ரி மேஸனுக்கு மோகன் என்று பெயர், டெல்லா ஸ்ட்ரீட்டுக்கு புஷ்பா என்று பெயர், இதில் அவர் மோகனின் மனைவி. பால் டிரேக்குக்கு சுந்தர் என்று பெயர், புஷ்பாவின் தம்பி. ஆக நன்றாகத்தான் தமிழ்படுத்தியுள்ளார்கள் என்று கூறிடத்தான் வேண்டும்.

பெர்ரி மேஸனின் பல குண நலன்கள் என்னால் விரும்பி போற்றப்பட்டவை. அநியாயத்தை எதிர்த்துப் போராடும் பெர்ரி மேஸனின் குணம் எனக்கு பிடிக்கும். பெர்ரி மேஸனின் செயல்பாடுகள் என் நடவடிக்கைகளை பாதித்தன. அவரைப் போலவே எனக்கும் பிளாக்மெயிலர்களை பிடிக்காது. ஒரு நாவலில் அவர் பிளாக்மெயிலர்களை எப்படி எதிர்க் கொள்வது என்று கூறியிருப்பார். (The case of phantom fortune).

1. உங்களை பற்றிய ரகசியம் ஏதேனும் பிளாக்மெயிலரிடம் சிக்கி விட்டதா? உதாரணத்துக்கு ஒரு கதையில் ஒருவர் சிறு வயதில் குற்றம் செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு, பிறகு வெளியில் வந்து தன் உழைப்பால் பெரிய பணக்காரரானவர். அவர் பழைய வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்ட பிளாக்மெயிலர் ஒருவன், அவர் பழைய கதைகளை பத்திரிகைகளுக்குக் கொடுக்கப்போவதாக மிரட்ட, பெர்ரி மேஸன் அந்தப் பணக்காரருக்கு தரும் அட்வைஸ் என்னவென்றால், அவரே முந்திக் கொண்டு பத்திரிகைகளுக்கு தன்னை பற்றிய நியூஸை கொடுத்து விட வேண்டும் என்பதே. அதனால் பிளாக் மெயிலரின் ஆயுதம் மழுங்கி விடும்.

2. பிளாக் மெயிலரை டிராப் செய்து போலீஸிடம் மாட்டி விடுவது. அமெரிக்காவில் பிளாக் மெயிலர்களுக்கு தண்டனை ஏழாண்டு சிறையாகும்.

3. மூன்றாவது யோசனை அந்தத் தேவிடியாப் பையனை கொன்று விடுவதே ஆகும். (Kill that son of a bitch).

மிகுதியை புத்தகத்தில் காண்க.

எர்ள் ஸ்டான்லி கார்டனர் வேறு பெயர்களிலும் எழுதியுள்ளார். அவை: A.A. Fair, Charles M. Green, Grant Holiday, Carleton Kendrake, Charles J. Kenn(e)y, Robert Park, Robert Parr, Les Tillray. அவற்றில் A.A. Fair மட்டும்தான் நான் அறிவேன். மீதி பெயர்களில் எழுதியிருந்தது எனக்கே புதிய செய்திதான். A.A. Fair புத்தகங்களில் டொனால்ட் லாம் என்று ஒரு தனியார் துப்பறியும் நிபுணர் வருவார். அவர் முதலில் வக்கீலாகத்தான் தொழில் துவங்கினாலும் சன்னது பறிக்கப்பட்டு இந்த தொழிலுக்கு வருகிறார். நிறைய உதை எல்லாம் வாங்குவார்.

அதே போல எர்ள் ஸ்டான்லி கார்டனர் வெளியிட்ட DA series புத்தகங்களும் நன்றாக இருக்கும். அவற்றில் Doug Selby DA ஆக வருவார். இந்த சீரீஸில் மொத்தம் 9 புத்தகங்கள். அவை: The D.A. Calls it Murder, The D.A. Holds a Candle, The D.A. Draws a Circle, The D.A. Goes to Trial, The D.A. Cooks a Goose, The D.A. Breaks a Seal, The D.A. Takes a Chance, The D.A. Calls a Turn, The D.A. Breaks an Egg
இவையெல்லாம் (Retrieved from "http://en.wikipedia.org/wiki/Doug_Selby").

ஆனால் ஒன்று மட்டும் கூற வேண்டும். இந்த ஆசிரியர் பெர்ரி மேஸனுடனுடம்தான் அதிகம் சேர்த்து பார்க்கப்படுகிறார். சொந்த வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் "The court of last resort" என்ற அமைப்பின் மூலம் சேவை செய்துள்ளார்.

இப்பதிவை முடிக்கும் முன்னால் மறுபடி பெர்ரி மேசனிடம் வருகிறேன். சில வாக்கியங்கள் நெட்டுரு ஆகி விட்டன. உதாரணத்துக்கு: "Objected to as being incompetent, irrelevant and not proper cross examination" "Objection! Your honour" "Objection overruled/sustained". பெர்ரி மேசன் நாவல்கள் படிக்கும்போது தீயதை எதிர்த்து போராடி வெற்றி பெறும் மனோபாவம் வளரும்.

இத்தலைமுறையில் பலருக்கு பெர்ரி மேசன் அனுபவங்கள் இருக்காது என அஞ்சுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/09/2006

ஹைப்பர்லிங்குகளை மொழிபெயர்க்கக் கூடாது

முந்தைய ஹைப்பர்லிங்குகளுக்கு இப்பதிவை பார்க்கவும்.

இன்னொரு ஹைப்பெர்லிங்க் பற்றி இங்கு பேசப் போகிறேன். இதுவும் பழைய பதிவே. போன ஆண்டு ஜூலை மாதம் போடப்பட்டது.

நான் சமீபத்தில் 2001-ல் தில்லியிலிருந்து சென்னைக்கு நிரந்தரமாக குடிபெயர்ந்தபோது கணினி பற்றிய எனது அறிவு பூஜ்யம். ஹைப்பர்லிங்க் என்ற வார்த்தை கூட கேள்விப்பட்டதில்லை. அப்போது சென்னைக்கு எனது தில்லி வாடிக்கையாளர் ஒரு கோப்பை மின்னஞ்சல் இணைப்பாக அனுப்ப, எனது நண்பர் அதை ப்ரிண்ட் அவுட் எடுத்து எனக்கு தந்தார். பிறகு மொழி பெயர்ப்பை எழுதி அவரிடம் கொடுக்க, அவர் கணினியில் சேமித்துவைத்திருந்த அக்கோப்பின் நகலில் மொழிபெயர்ப்பை ஓவர்டைப் செய்ய ஆரம்பித்தார். அப்போது தான் அவரிடமிருந்து ஹைப்பர்லிங்க் என்ற வார்த்தையையே கேள்விப்பட்டேன். அதில் உள்ள ஹைப்பர் லிங்கை நான் மொழிபெயர்த்திருந்தேன். அது கூடாது என்று நண்பர் கூறினார்.

பிறகுதான் தெரிந்து கொண்டேன், ஹைப்பர்லிங்குகளை மொழி பெயர்க்கக் கூடாது என்பது மொழிப் பெயர்ப்பாளர்களின் முதல் தாரக மந்திரமாகும் என்று. மீறி மொழி பெயர்த்தால் என்ன ஆகும்? அவ்வாறு மொழிப் பெயர்க்கப்பட்ட ஹைப்பர்லிங்குகள் வேலை செய்யாது, அவ்வளவுதான்.

மனித மூளையைக் கணினியுடன் ஒப்பிடுவார்கள். ஆனால் மொழிப் பெயர்த்தாலும் இங்கு ஹைபர்லிங்குகள் வேலை செய்யும். உதாரணம்? இதோ என் வாழ்க்கையில் வந்த இன்னொரு ஹைபர்லிங்க்.

சமீபத்தில் 1982-ல் நான் டில்லியில் ஒரு பஞ்சாபியின் வீட்டில் (பண்டாரி) குடியிருந்தேன். ஒரு நாள் வீட்டிற்குள் நுழையும்போது தூர்தர்ஷனில் ஒரு நாடகம் நடந்துக் கொண்டிருந்தது. அதில் ஒருவன் இன்னொரு வீட்டில் இருந்துக் கொண்டுத் தன் வீட்டிற்கு ஃபோன் செய்துக் கொண்டிருப்பான். அவன் அருகில் ஒரு பெண்மணி நின்றுக் கொண்டிருப்பாள்.

ஃபோனில் இவன் தன் மனைவியிடம் "ஆஃபிஸில் வேலை அதிகம், ஆகவே நான் இன்று வீட்டுக்கு வர இயலாது" என்றுக் கூறுவான்.

உடனே விளம்பர இடைவேளை.

இதைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்த நான் வீட்டுக்காரரிடம் கூறினேன்:

"இப்போது அந்தப் பெண்மணி இவனை வீட்டைவிட்டு வெளியேற்றுவாள். நாடகமும் அத்துடன் முடிவடையும்." அவர் என்னைத் திகைப்புடன் பார்த்தார். பிறகு நான் நாடகம் எப்படி ஆரம்பித்தது என்பதை கூறி அந்த சீன் வரை என்ன நடந்தது என்பதையும் கூறினேன்.

அதற்குள் விளம்பர இடைவேளை முடிந்தது. நாடகம் தொடர்ந்தது. நான் கூறியபடியே நடந்தது. நாடகமும் முடிந்தது. பஞ்சாபிக்குத் திகைப்பில் பேச்சே வரவில்லை.

அவர்: "ராகவன் எப்படி இவ்வாறு சரியாகக் கூறினீர்கள்? இந்த நாடகம் எனக்கு தெரிந்து தூர்தர்ஷனில் முதன் முறையாக ஒளிபரப்பப்படுகிறது."

நான்: "பண்டாரி அவர்களே, சமீபத்தில் 1956-ல் இதே ஹிந்தி நாடகத்தின் தமிழாக்கத்தை அகில இந்திய ரேடியோ நாடக சம்மேளனத்தில் கேட்டிருக்கிறேன். அதிலும் ஃபோனில் அவன் இதையே தமிழில் கூறுவான். அந்தப் பெண்மணியும் அவனைத் தமிழில் திட்டி வெளியே அனுப்புவாள்.

இங்கு அதையே இந்தியில் செய்தாள் அவ்வளவுதான்."

ஆக இன்றைய ஹைபர் லிங்க்: "ஆஃபிஸில் வேலை அதிகம், ஆகவே நான் இன்று வீட்டுக்கு வர இயலாது". இது தமிழ் மற்றும் இந்தியில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/08/2006

இரண்டு ஆண்டுகள் முடிந்தன

சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 8.11.2004 அன்று எனது முதல் பதிவை வெளியிட்டேன். இது 321-வது பதிவு. அக்டோபரிலேயே பிளாக்கர் கணக்கைப் பெற்றாலும் முதல் இடுகையிட்டதைத்தான் நான் எனது வலைப்பதிவு வாழ்க்கையின் தொடக்கமாகப் பார்க்கிறேன்.

இப்போதுதான் முதலாம் ஆண்டு நிறைவு பகுதியை போட்டாற்போலிருக்கிறது, அதற்குள் ஒரு ஆண்டு ஓடிவிட்டது. அப்பதிவு 173-ஆம் பதிவு. அப்போது வெள்ளம் வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்தது. ஆகவே ஒரு நாள் முந்தியே போட்டு விட்டேன். போன ஆண்டு மூன்று முறை வெள்ளம் உள்ளே வந்தது. இம்முறை என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளால் இதுவரை தப்பித்தேன். பிறகு அவன் விட்ட வழி.

ஓராண்டுக்கும் மேலாக என்னைப் பீடித்த பிரச்சினையை புறங்கையால் ஒதுக்கி முன்னேற முடிந்ததும் அவன் அருளாலேயே. எனது தமிழ் சீரடைந்ததற்கு நான் எனது வலைப்பூவிலும் மற்றவர் பதிவுகளில் இட்டப் பின்னூட்டங்களிலும் தட்டச்சு செய்த லட்சக்கான சொற்களே காரணம். அவை பலரை சென்றடைய உதவி செய்த தமிழ்மணத்தின் சேவை மதிப்பிட முடியாத அருமையான சேவை.

இதில் எழுந்த விவாதங்களில் உற்சாகத்துடன் பங்கெடுத்தது எனது மனதின் வயதை என்றும் 25-லேயே இருக்க வைத்தது. கடவுள் கிருபை இருந்தால் இதையெல்லாம் தொடர்ந்து செய்து படுத்துவேன் என்பதை அன்புடன் கூறிக் கொண்டு இப்பதிவை இங்கு பூர்த்தி செய்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/07/2006

பள்ளிச்சாலை தந்தவன் ஏழைத் தலைவன் - 2

இப்பதிவின் வரிசையின் முதல் பதிவு

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். காமராஜ் அவர்கள் படிக்காதவர் என்று அவரை எதிர்ப்பவர்களும், படிக்காத மேதை என்று அவரை ஆதரிப்பவர்களும் கூறுவார்கள். விஷயம் அவ்வளவு எளிதல்ல. காமராஜ் அவர்கள் ஆறாம் வகுப்பு வரை ஆங்கில மீடியத்தில் படித்தவர். நல்ல மதிப்பெண்களும் பெற்றவர். அவர் சமூகத்தில் அக்காலக் கட்டத்தில் அரசு வேலைக்கெல்லாம் ரொம்ப அடிபோடாது சொந்த வியாபாரம் செய்வதுதான் வழமையான நடைமுறை. அதன் அடிப்படையில் அவர் தனது தந்தையின் கடையை கவனிப்பதற்காக வீட்டுப் பெரியவர்கள் கூறியதன் பேரில் படிப்பை அத்துடன் முடித்துக் கொண்டவர். ஆகவே அவருக்கு ஆங்கிலம் நன்கு படிக்க வரும். பிறகு வாழ்க்கை என்னும் பள்ளியில் படித்து ஏட்டுப் படிப்பு படித்தவர்களை விட அறிவில் சிறந்து விளங்கியவர். அதிகம் படித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையே தனது நிர்வாகத் திறனால் திணற அடித்தவர்.

காமராஜரை பற்றிய இப்பதிவின் வரிசைக்கு துணையாக நான் கொண்ட புத்தகம் திரு.நமச்சிவாயம் அவர்கள் எழுதியது. அவரை காமராஜரின் பாஸ்வெல் என்று கூறுவார்கள். (பாஸ்வெல் பிரபல ஆங்கிலமொழி எழுத்தாளரான சாமுவேல் ஜான்ஸனின் வாழ்க்கை வரலாறை எழுதியவர்). காமராஜ் அவர்கள் தனது செயல்பாடுகளின் உச்சக் கட்டத்தில் இருந்தபோது எழுதப்பட்டது அப்புத்தகம்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக பல நிகழ்ச்சிகள் காமராஜ் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்தன. அவற்றில் என் மனதைக் கவர்ந்தவற்றிலிருந்து ஒன்றை இதோ தருவேன்.

காமராஜ் அவர்கள் இரண்டாவது வகுப்பில் படித்தபோது அவருடன் படித்தவர் ரோசல்பட்டி பெருமாள். மதிய உணவுக்காக வீடுக்கு செல்லமுடியாத தூரத்தில் வீடு. ஏதேனும் சாப்பிடக் கொண்டுவருவதுதான். அதுவும் முடியாதுபோனால் தண்ணீர் குடித்து பசியாற்றிக் கொள்ள வேண்டியதுதான். காமராஜ் அவர்களின் உயிர்த்தோழனுக்கு இந்த நிலை. காமராஜ் இது பற்றி அறிந்ததும் தனது வீட்டாரிடம் தான் இனிமேல் மதிய உணவுக்கு வீட்டுக்கு வரமுடியாது என்றும் ஆகவே சாப்பாடு கட்டிக் கொடுக்குமாறு கேட்டு அதன்படியே பெற்றுவந்து தன் தோழனுடன் சேர்ந்து மதிய உணவு உண்ணுவது வழக்கமாயிற்று.

ஒரு நாள் பேரன் சாப்பிடும் அழகைப் பார்க்க பாட்டி வர உண்மை அறிகிறார். காமராஜ் பெருமாளின் கஷ்டத்தை எடுத்துக் கூறுகிறார்.

இப்போது புத்தகத்திலிருந்தே கோட் செய்கிறேன்.

"மகிழ்ச்சி! பெருமை! பெருமிதம்! ஒன்றும் பிடிபடவில்லை பாட்டிக்கு!

பேரனை நெருக்கமாகத் தழுவியபடியே, கீழே பழைய இடத்திலேயே உட்கார வைக்கிறாள்! தானும் எதிரில் சப்பணமிட்டு அமர்கிறார்!

சரி, சரி, அதுக்கென்ன? உங்களுக்கு - இரண்டு பேருக்குமே நானே ஊட்டி விடுகிறேனே!"

பிறகு காமராஜ் அம்மாவிடம் இது பற்றி எதுவும் கூறவேண்டாமென கேட்டுக் கொள்ள, ஓண்ணும் பயப்படவேண்டாம், அம்மாவிடம் மட்டும் அல்ல எல்லோரிடமும் கூறலாம் என்று கூறி பாட்டி சிறுவர்கள் இருவருக்கும் ஆளுக்கு காலணா கொடுத்து விட்டுப் புறப்படுகிறார்.

பாட்டியின் உருக்கப் பரவசப் பாசப் பெருமையைக் கண்டு, கேட்டு, உணர்ந்த இரண்டு சிறுவர்களுக்கும் மெய்சிலிர்க்கிறது.

வாஞ்சையோடு, மீண்டும் ஒருமுறை சிறுவர்களைப் பார்த்து முறுவலித்தபடி வீட்டுக்கு விரைகிறார் பாட்டி. பாட்டியின் பெருமித நடை! உணர்த்துவது என்ன? பகுத்துண்டு, பல்லுயிர் ஓம்பும் செல்லப் பேரன் காமராஜ்!

இந்த இளம் வயதிலேயே என்ன ஈவு இரக்கம்? அவரது மதிய உணவு திட்டத்துக்கு இதுவும் ஒரு முன்னோடிதானே.

இவ்வரிசைப் பதிவுகள் மேலும் தொடரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/06/2006

துள்ளும் இசை தரும் ஓ.பி. நய்யார்

அண்மைக் காலம் வரை லதா மங்கேஷ்கர் ஆட்சி ஹிந்தி திரையுலகில் நடந்து வந்தது. மாபெரும் இசை மேதையான அவரது மறுபக்கம் சற்று அதிர்ச்சியை தரக் கூடியது. இவ்வளவு இனிமையான குரலை உடைய அவருக்கு ஏனோ மற்ற பாடகிகள் முன்னுக்கு வருவது பிடிக்காமல் போயிற்று. பல இசையமைப்பாளர்களை அவர் பயமுறுத்தி தன்னைத் தவிர வேறு பாடகிகளுக்கு சான்ஸ் கிடைக்காமல் இருக்க ஆவன செய்தார். அவர்களில் அவரது சொந்த சகோதரி ஆஷா போன்ஸ்லேயும் அடக்கம்.

கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பாளர்களும் அவர் வார்த்தைக்கு கட்டுப்பட்டனர். நம்மூர் வாணி ஜயராம் அவர்களது ரிக்கார்டிங்கை ஒரு சமயம் நிறுத்தி வைத்தவர் இந்த புண்ணியவதி. (இசையமைப்பாளர் வசந்த தேசாய்). ஆனால் ஒருவர் மட்டும் அசையாமல் நின்றார். அவர்தான் ஓ.பி. நய்யார் அவர்கள்.

ஆஸ்மான் என்ற ஒரு படத்தில் மட்டும்தான் அவர் இசையமைப்பில் லதா பாடியிருக்கிறார். அதன் பிறகு ஒரு படத்திலும் அவர் லதாவை கூப்பிடவேயில்லை. அவரது சகோதரி ஆஷா போன்ஸ்லே, ஷம்ஷாத் பேகம், வாணி ஜயராம் ஆகியோரை வைத்துக் கொண்டே தனது இசை சித்து விளையாட்டுகளை நடத்தியவர் நய்யார் சாகேப்.

கிஸ்மத் என்னும் படத்தில் "கஜ்ரா மொஹப்பத்வாலா" என்னும் பாடலை ஆஷாவும் சம்ஷாத் பேகமும் அருமையாக பாடியிருப்பார்கள். பாடல் வரிகளுக்கு முன்னோடியான அவரது இசை அற்புதம். அதே போல சம்பந்த் என்னும் படத்தில் "அந்தேரே மே ஜோ பைட்டே ஹைன், நஜர் உன்பர் பீ குச் டாலோ, அரே ஓ ரோஷனிவாலோ" என்று சமீபத்தில் 1968-ல் நான் கேட்டப் பாடல் இன்னும் எனது உள்ளத்தை விட்டு அகலவில்லை. நயா தௌர், ஆர் பார் (பழையது மற்றும் புதியது), தில் அவுர் முஹப்பத், இன்ஸ்பெச்டர், சி.ஐ.டி. ஆகிய படங்கள் பாட்டுக்காகவே ஓடின.

ஆல் இந்தியா ரேடியோவில் நான் வெளிநாட்டு ஒலிபரப்பு சேவையில் பிரெஞ்சு ஒலிபரப்பை நடத்தியபோது ஓ.பி. நய்யார் பாடல்களை போடும்போது மட்டும் அறிவிப்பாளர் என்ற ஹோதாவில் ஓரிரு வார்த்தைகள் அவரை புகழ்ந்த பிறகுதான் போடுவேன்.

அவரது "சல் அகேலா, சல் அகேலா.." என்னும் பாட்டை கேட்ட பிறகும் ஒருவர் மனது துள்ளாட்டம் போடவில்லையென்றால், அவருக்கு சங்கீதக் காது இல்லை என்றுதான் நான் கூறுவேன். ஓ.பி. நய்யார் ஒரு அடாவடி நடவடிக்கையை எதிர்த்து போராடியதாலேயே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதே சமயம் அவரது இசையும் சூப்பர்.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் அவர் இசையமைத்த இரு படங்கள் அதிசயமாக வந்தன. அவை ஜித் மற்றும் நிஸ்சய். அதில் இரண்டாவதாக வந்த நிஸ்சய் (Nischay) பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வினோத் கன்னா ராக்கி அவர்களை கோச்சில் வைத்து வண்டியோட்டும் வேளையில் பாட ஆரம்பிக்கிறார். ஓ.பி. நய்யாரின் இனிய இசை தியேட்டரை நிரப்ப, ஒரே கரகோஷம் ஆடியன்ஸ் தரப்பில். கரகோஷமிட்டது இந்த டோண்டு ராகவனும்தான். திரையை பார்க்க முடியாமல் அவன் விட்ட ஆனந்த கண்ணீர் தடுத்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/05/2006

பள்ளிச்சாலை தந்தவன் ஏழைத் தலைவன் - 1

சமீபத்தில் 1978-ல் சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்த "என்னைப் போல் ஒருவன்" படம் வெளியானது. மூலக்கதை "Scapegoat" by Daphne du Maurier. அதே கருவில் அறுபதுகளிலேயே ஏ.வி.எம். ராஜன் இரட்டை வேடங்களில் நடித்த "தரிசனம்" படம் வந்து விட்டது. இப்பதிவு அப்படத்தைப் பற்றியதல்ல.

சிவாஜியின் இப்படத்தில் ஒரு துள்ளும் நடையில் அருமையான பாட்டு ஒன்று. அது இவ்வாறு ஆரம்பிக்கிறது:

"தங்கங்களே, நாளைத் தலைவர்களே,
நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே வாழும் தெய்வங்களே
நம் தேசம் காப்பவர் நீங்கள்"

அப்பாடலில் என்னைக் கவர்ந்த அடுத்த வரிகள் இதோ:
"நம் தாத்தா காந்தியும் மாமா நேருவும் தேடிய செல்வங்கள்
பள்ளிச்சாலை தந்தவன் ஏழைத் தலைவனை தினமும் எண்ணுங்கள்"

(இப்பாடல் வரிகள் சரியாக அமைய வேண்டும் என்பதற்காகவே பல்லவி புகழ் என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு போன் செய்து கேட்டதற்கு மிக அன்புடன் மேலே குறிப்பிட்ட என்னைக் கவர்ந்த அவ்விருவரிகளை ராகத்துடன் பாடிக் காட்டினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. பிறகு முதலில் விட்டுப்போன இரண்டு வரிகளையும் அன்புடன் எடுத்துக் காட்டினார். அவற்றையும் இணைத்து விட்டேன்).

காந்தியையும் நேருவையும் பெயர் சொல்லி சுட்டிய கவிஞர் (கண்ணதாசன்?) இரண்டாம் வரியில் பெயரிடாமலேயே விட்டாலும் தமிழருக்கு உடனே புரியுமாறுதான் எழுதியிருக்கிறார். அந்தப் பள்ளிச்சாலை தந்தவன் ஏழைத் தலைவன் காமராஜரை பற்றி ஒரு பதிவுகள் வரிசை போட வேண்டும் என்று பலகாலம் எண்ணி வந்தேன்.

மாமனிதர் ராஜாஜி அவர்களைப் பற்றி 5 பதிவுகள் போடுவதற்கு கல்கி அலுவலகத்தில் இரண்டு முழுதினங்கள் கழிக்க வேண்டியாதாயிற்று. ஆனால் காமராஜ் அவர்களைப் பற்றி எழுத நான் தேடியது ஒரே ஒரு புத்தகமே. அதுதான் பத்திரிகையாளர் மு.நமசிவாயம் அவர்கள் எழுதிய "காமராஜ் வரலாறு". இது குமுதத்தில் தொடராக வந்தபோது நான் படித்திருக்கிறேன்.

அந்த புத்தகத்தில் காமராஜ் அவர்களின் இளையபருவ நிகழ்ச்சிகள் விஸ்தாரமாக எழுதப்பட்டுள்ளன. எங்கு தேடியும் கிடைக்காத இப்புத்தகம் நேற்று திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரி ஸ்ரீனிவாசன் நூலகத்தில் அகஸ்மாத்தாகக் கிடைத்தது. "நற்றுணை ஆவது நமச்சிவாயவே" என்று முணுமுணுத்துக் கொண்டே புத்தகத்தை எடுத்து வந்து விட்டேன். இப்போது சாவகாசமாக அடுத்து வரும் தினங்களில் பதிவு போட உத்தேசம்.

1952-லிருந்து 1969- பிப்ரவரி வரை நான்கு சிறந்த நபர்கள் முதலமைச்சர்களாக இருந்தது தமிழகத்தின் பாக்கியமே. இவர்களில் ராஜாஜி அவர்களை பற்றி எழுதியாகி விட்டது. இப்போது காமராஜ் அவர்களைப் பற்றி.

1954-ல் காமராஜ் அவர்கள் முதல்வராக வந்தப்போது அவர் அதிகம் படிக்காதவர் என்ற கருத்தே மேலோங்கியிருந்தது. ஆனால் வாழ்க்கை என்னும் பள்ளியில் கற்று புடமிடப்பட்டவர் என்பது காலப் போக்கில்தான் தெரிய வந்தது. கூர்ந்த, அதே சமயம் தூரப் பார்வையும் ஒருங்கே அமைந்தவர் காமராஜ் அவர்கள். ஒவ்வொரு மந்திரிசபையும் ஜம்போ சைஸில் இருந்த காலத்தில் எட்டே எட்டு பேரை வைத்துக் கொண்டு அவர் சித்து விளையாட்டு காட்டினார். அவர் இருந்தவரை தமிழக காங்கிரஸ் என்றால் அது காமராஜைத் தலைவராகக் கொண்ட காங்கிரஸ் என்பதுதான் நிஜம்.

இவ்வரிசையின் அடுத்த பதிவுகளிலிருந்து திரு நமச்சிவாயத்தின் நூல் பெரிதும் உபயோகப்படுத்தப்படும். அவருக்கும் என் நன்றி உரித்தாகுக. அவரது புத்தகம் தவிர சமீபத்தில் 1960களில் நடந்த நிகழ்ச்சிகளும் எனது ஞாபகத்திலிருந்து சேர்க்கப்படும். விட்டுப் போகும் விஷயங்களை வாசகர்கள் நிறைவு செய்வார்கள் என நம்புகிறேன் - முக்கியமாக டண்டணக்கா அவர்கள்!

அன்புடன்,
டோண்டு ராகவன்

தவிர்க்க வேண்டிய நபர்கள் - 2

நான் எனது இந்தப் பதிவை பல மாதங்களாகவே முன்வரைவாக வைத்திருந்தேன். அதை எப்படி வெளியிடுவது என்பதில் சிறு குழப்பம்.

பிறகு அந்த இடுகையை இட்டதும்தான் புரிந்தது, இது சம்பந்தமாகப் பலரும் பலவிதமாக யோசித்து வந்திருக்கிறார்கள் என்று. நான் அதில் கூறியது மாதிரி நடந்து கொள்வது சுயநலமாகக் கருதப்படுமோ என்று சிலர் கேள்வி எழுப்பினர். அவ்வாறு எழும் கேள்விகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே இப்பதிவு.

இந்த உலகமே தன்னலத்தில்தான் இயங்குகிறது என்று எனது பிரெஞ்சு பேராசிரியர் லாற்டே கூறுவார். தாயின் அன்புகூட அதிலிருந்து தப்பவில்லை என்றும் அவர் கூறினார். அதுவும் ஒரு பார்வை கோணமே. அது பற்றிப் பேசவே இப்பதிவு.

தாழ்வு மனப்பான்மையில் இருப்பவருக்கு உதவுவது நமது கடமையில்லையா என்று ஒருவர் கேட்டார். நான் சுருக்கமாக அது என் வேலையில்லை என்று கூறி விட்டேன். சிலருக்கு என் மேல் கோபம் கூட வந்திருக்கும். அதைப் பற்றியும் விவரிக்க வேண்டும். ஆகவே இப்பதிவு.

பழைய ஏற்பாட்டில் "போ, போய் உன் இனத்தைப் பெருக்கிக் கொள்" என்று கடவுள் மனிதனிடம் கூறியதாக வரும். இந்த அறிவுறை எல்லா இனங்களுக்கும் பொருந்தும். மனிதன் தோன்றுவதற்கு பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமேயே பல ஜீவராசிகள் தோன்றின, அழிந்தன. மனிதனே இல்லாமல் போனாலும் இந்த வேலை நடக்கும். ஜீவராசிகள் அழிந்ததற்கு இனப்பெருக்கம் இல்லாததும் ஒரு முக்கியக் காரணமே. அந்த இனப்பெருக்க வேலையில் ஈடுபட்டபோது சம்பந்தப்பட்டவருக்கு இன்பமாக இருந்ததால்தான். அவர்கள் அந்த வேலையிலேயே ஈடுபட்டனர். ஒரு தாய் தனது குழந்தைக்கு பால் கொடுக்கும்போது அவளுக்கு அது மகிழ்ச்சியை தருவதாலும் அந்த வேலையும் விடாது நடக்கிறது.

ஒரு சிவசங்கரி நாவலில் படித்த ஞாபகம். ஒரு வயதான மூதாட்டி திருமணமே வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கும் இளம் பெண்ணிடம் "ஆம்பளை சுகம்னா என்னன்னு தெரியுமா? பால் கொடுப்பதன் சந்தோஷம் புரியுமா?" என்றெல்லாம் கேள்வி கேட்டிருப்பாள். அதே போல ஆண்களுக்கு பொம்பளைசுகம் இருப்பதால்தானே இனப்பெருக்கமே ஏற்படுகிறது?

ஆக, எல்லாவித வேலைகளுக்கும் ஒரு உந்துதல் சக்தி தேவைப்படுகிறது என்று கூறுவதற்காகத்தான் மேலே சற்று வெளிப்படையாக எழுதினேன்.

சுருக்கமாகக் கூறப் புகுந்தால். தன்னலமே எல்லாவற்றுக்கும் உந்துதல். மற்றவர்களது தன்னலத்தை சரியான பாதையில் செலுத்தி, தனக்கு சாதகமாகக் காரியம் செய்வித்து கொள்வதே புத்திசாலியின் அழகு. அதை மோட்டிவேட் செய்வது என்றும் கூறலாம். வாழு, வாழ விடு என்றும் கூறலாம். என்னிடம் உதவி கேட்பவனுக்கு உதவி செய்வதால் எனக்கும் நலம் ஏற்படும் என்று வெளிப்படையாகத் தெரிந்து விட்டால் நான் ஏன் மறுக்கப் போகிறேன்? என்னை மாதிரித்தானே மற்றவரும்?

ஆனால் இந்த மாசோகிஸ்டு ஆசாமிகள் இருக்கிறார்களே, அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். "என்ன அடிச்சாலும் இவன் அழல்ல, இவன் ரொம்ப நல்லவண்டா" என்பதற்காகவெல்லாம் ஃபீலிங்ஸ் ஆனால் வடிவேலு ரேஞ்சில் உதை வாங்க வேண்டியதுதான். ஆகவே நான் ரொம்ப கெட்டவன் என்று முதலிலேயே டிஸ்கி போட்டு விடுகிறேன். :))))

"என்னத்த, வேல, செஞ்சு" என்று சோம்பித் திரிபவர்கள் வேறு ரகம். அவர்கள் சோம்பலில் இன்பம் காண்பவர்கள். அவர்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் சில தியாக மனப்பான்மை உள்ள மாசோகிஸ்டுகள் உதவிக்கு வருவார்கள் என்று திமிரில் இருப்பவர்கள். அந்தத் திமிரை அடக்கவாவது அவர்கள் அண்மையைத் துறப்பது நலம்.

அதிலும் இந்த தமிழ் சீரியல்கள் செய்யும் அலம்பல்கள் ரொம்பத்தான் ஓவர். உதாரணத்துக்கு இந்தக் "கோலங்கள்" சீரியலையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அபி மாதிரி எரிச்சல் தரும் கேரக்டரை பார்க்கவே இயலாது. அவருக்கு மிக அண்மையில் இரண்டாவதாக வருபவர் தொல்காப்பியன். இதுகள் ரெண்டும் சேர்ந்து அடிக்கும் கூத்தைக் காணவே சகிக்கவில்லை. இவர்கள் பார்வையாளர்களின் மாசோகிஸ்ட் உணர்வுகளுக்கு தீனி போடுகிறார்கள். அவ்வளவே. இதில் சீரியல் தயாரிப்பாளர்கள் நல்ல பணம் பண்ணுகிறார்கள், ஆனால் பார்வையாளர்கள் தங்கள் மன தைரியத்தை இழக்கிறார்கள். "மெட்டி ஒலி" இன்னொரு கொடுமை! "அலைகள்" ஐயையோ.

சீரியல்களை பார்ப்பதை இப்போது நான் விட்டுவிட்டதில் மிக நிம்மதியாக இருக்கிறது. அந்த நேரத்தில் நான் பாட்டுக்கு என் அறையில் அமர்ந்து மொழிபெயர்ப்பு வேலைகளை செய்வதில் நல்ல லாபம். ஆனாலும் பக்கத்து அறையிலிருந்து வரும் வசனங்கள் அவ்வப்போது தொந்திரவு செய்கின்றனதான். இதில் என்ன கஷ்டம் என்றால், நான் குறிப்பிட்ட மூன்று சீரியல்களும் மிக நல்ல முறையில் படமாக்கப்பட்டவையே.அதுவே செவ்வாயன்று இரவில் வந்து கொண்டிருந்த மகா கண்றாவியான சென்னை தொலைக்காட்சி நிலைய நாடகங்கள் என்றால் இவ்வளவு பாதிப்புகள் இராது, ஏனெனில் அவற்றைப் பார்க்க அவ்வளவு பார்வையாளர்கள் இருக்க மாட்டார்கள் அல்லவா?

பல படங்களை நான் அவை தேவையற்ற அசட்டு தியாகத்தை வலியுறுத்தியதாலேயே பார்க்க மறுத்தவன். அவற்றைப் பற்றி பின்னொரு முறை பதிவு போடுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/03/2006

Recent ஹைப்பெர்லிங்க்

முந்திய ஹைப்பர்லிங்குகளுக்கு இப்பதிவைப் பார்க்கவும்.

I am refreshing another hyperlink. When I refreshed it last time, it had some existing comments and I was not sure that they would not be deleted in a straightforward changing of dates in the editing mode. Hence I reproduced this post along with comments replaced as one comment in the new comments box. I agree that it was clumsy of me. But now I know better. Over to the post being revived once more for the purpose of classification.

போன சனிக்கிழமை திருவல்லிக்கேணிக்கு சென்றிருந்தேன்.

"என்றென்றும் அன்புடன்" பாலா அவர்கள் வீட்டிற்கும் சென்றேன். என்னை வரவேற்று பேசிய அவர் தான் சமீபத்தில் தன் சித்தியின் மரணம் விஷயமாக பெங்களூர் சென்றிருந்ததாகக் கூறினார்.

நான் முதலில் சரியாகக் கவனிக்கவில்லை. அடுத்த முறை இப்பேச்சு வந்ததும் நான் மேல் விவரம் கேட்க, தன் சித்தி அவர் மருமானுடன் சில மாதங்கள் முன் வண்டியில் செல்லும் போது கீழே விழுந்துத் தலையில் அடிப்பட்டுக் கொண்டதாகவும் அதன் காரணமாகப் பிறகு காம்ப்ளிகேஷன்ஸ் வந்து அவர் மரணம் நிகழ்ந்தது என்றுக் கூறினார்.

உடனே என் மண்டைக்குள் வழக்கமான பல்ப் எரிய, அவர் சித்தியின் பெயர் வைதேகியா என்றுக் கேட்டேன். ஆச்சரியத்துடன் பாலா ஆம் என்றுக் கூற, அவருடையக் கணவர் தியாகுவா என்று கேட்டேன். பாலா மேலும் ஆச்சரியத்துடன் ஆமாம் என்றார். தியாகுவின் அண்ணா அண்ணா சந்தானம் என் ஷட்டகர் என்ற விஷயத்தைக் கூறினேன்.

பாலா உடனே தன் தாயிடம் சென்று இதைக் கூற அவர் பரபரப்பாக வெளியே வந்து என்னுடன் மேலே பேசினார். இது ஒரு சிறிய உலகம்தான்.

பாலாவுடனான என் பேச்சு அதுவரை என் வாழ்வில் வந்த ஹைப்பெர்லிங்குகளைப் பற்றி ஆரம்பித்தது. அவரும் தன் பங்குக்கு தன் வாழ்வில் வந்த ஒரு ஹைப்பெர் லிங்கைப் பற்றிக் கூறினார். Over to Bala for its description! (இது வரை அவர் அதைக் கூறவில்லை).

இது நடந்த சில மாதங்கள் கழித்து ரோசா வசந்துடன் சந்திப்பு நடந்தது. திடீரென மனிதர் ஒரு கேள்வி கேட்டாரே பார்க்கலாம். என் மச்சினியின் பெண்ணின் பெயரைக் கூறி அவர் எனக்கு என்ன ஆக வேண்டும் எனக் கேட்டார். அவள் எனக்கு மருமாள் என்று கூறி விட்டு விசாரித்தேன். அவள் கணவர் தனக்குத் தெரிந்தவர் என்று கூறினார். எல்லோரும் அப்போது டோக்கியோவில் இருந்திருக்கின்றனர். ரோசா வசந்தின் மனைவியின் பிறந்தகம் நங்கநல்லூரில் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட என் மருமாள் தன் மாமா ராகவன் அங்கு இருப்பதாகக் கூற, அவர் பெயர் டோண்டுவா என்று ரோசா கேட்க, என் மருமாள் ஆச்சரியத்தில் மயக்கம் போடாத குறை. ரோசாவிடம் அவருக்கும் ஹைப்பர் லிங்க்தான் வேலை செய்ததா என்று கேட்டேன். அவர் தந்த பதிலை அவரே இப்பதிவைப் பார்த்தால் பின்னூட்டமாகத் தரட்டும். ஆக, இந்த ஹைப்பர் லிங்க் என்பது ஒரு விசித்திர விஷயம்தான், எனக்கு மட்டும் அது நடக்கவில்லை, பலருக்கும் நடந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/02/2006

தவிர்க்க வேண்டிய நபர்கள்

தாழ்வுமனப்பான்மையில் இருப்பவர்களைத் தவிர்க்கவும். இவர்கள் தாங்களும் காரியம் செய்ய மாட்டார்கள் செய்பவர்களையும் அதைரியப்படுத்துவார்கள். ரீடர்ஸ் டைஜஸ்டில் பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஒரு துணுக்கு ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு மழை நிறைந்த இரவில் ஆற்றுப்பாலம் மீது ஒருவன் நிற்கிறான். வாழ்க்கையில் வெறுப்பு அவனுக்கு. அவனைக் காப்பாற்ற ஒருவன் விரைந்து சென்று அவனுடன் பேசிப் பார்க்கிறான். 10 நிமிடம் தீவிரப் பேச்சு. பிறகு இருவருமே அந்த மழை நிறைந்த இரவில் ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.

நண்பர் முகம்மது யூனுஸ் அவர்கள் ஒரு அருமையான பதிவு இட்டிருக்கிறார். சிறு சந்தோஷங்களையும் அனுபவித்து உணர்ந்து கொள்ளுமாறு கூறுகிறார். இங்கு நான் ஒன்று கூறுவேன். அவ்வாறு சந்தோஷங்களைச் சேமிப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர்களுடன் நட்பு கொள்வது மிகவும் நல்லது.

அதே சமயம் துக்கங்களாகப் பார்த்து சேமித்து அவற்றை அனுபவிப்பதிலேயே சுகம் காண்பவர்களும் உள்ளனர். அவர்களை masochist என்று அழைப்போம். அவர்களைத் தவிர்க்கவும். இல்லாவிட்டால் ஒரு மழை நிறைந்த இரவில் ஆற்றுப் பாலத்திலிருந்து தண்ணீரில் விழுந்து இறக்கக்கூட நேரிடலாம்.

"நான்" என்னும் படத்தில் ஒரு கேரக்டர், "என்னத்தே செஞ்சு, என்னத்தே சாதிச்சு" என்று வார்த்தைக்கு வார்த்தை புலம்பும் அந்த பாத்திரத்தில் நடித்தவர் என்னத்தே கன்னையா என்னும் பெயரில் பிரபலமானனர். அதனால் அவர் பணம் சம்பாதித்தார். அவரைப் பொருத்தவரை அவர் செய்தது அபார நடிப்பு, தவறில்லை. ஆனால் அதையே தமாஷாக நினைத்து நாமும் நிஜ வாழ்வில் பேச முடியுமா? பேசினால் அனர்த்தம் ஆகாதா? ஆனால் பலர் அவ்வாறுதான் உள்ளனர். எடுத்த உடனேயே ஒண்ணும் சரியா நடக்கப் போறதில்லை என்னும் நிலைப்பாடு எடுத்து விடுகின்றனர். அவர்களுடன் நாம் சேருவது தகுமா?

விமரிசகர் சுப்புடு அவர்கள் இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் பர்மாவிலிருந்து கால்நடையாகப் புறப்பட்டு இந்தியா வந்தடைந்தவர். அவருடன் ஒரு கும்பலே வந்தது. பலர் வழியிலேயே மாண்டனர். பயங்கரப் பசி. வழியில் வெறும் புதீனா மட்டும் கிடைத்தது. அப்போது அவர்களில் ஒருவர் "ஏய், எல்லோரும் சாகப் போறோம் இப்ப" என்று சவுண்டுவிட, சுப்புடு அவரைப் பொளேரென்று செவுளில் அறைந்தார். பிறகுதான் அந்த மனிதர் அடங்கினார். என்ன ஆயிற்று, எப்படியோ இந்தியா வந்து சேர்ந்தனர் கணிசமான நபர்கள். அவர் அவ்வாறு வந்ததற்காக சுமார் 30 ஆண்டுகள் கழித்து பல சங்கீத வித்வான்களும், நடனமணிகளும் வருத்தப்படப் போவது இப்பதிவுக்கு சம்பந்தமில்லாததால் அது பற்றிப் பேச வேண்டாம்.

இப்போது இஸ்ரேல் விஷயத்துக்கு வருவோம் (அதானே, டோண்டு ராகவனாவது இஸ்ரேலைப் பத்திப் புகழ்ந்து பேசாமல் இருப்பதாவது என்று யாரும் டென்ஷன் அடையவேண்டாம், ஏனெனில் டோண்டு ராகவன் அதற்காகவெல்லாம் இஸ்ரேல் பற்றி பேசாது விட்டு விடுவான் என எண்ணாதீர்கள்.)

வருடம் 1967. இஸ்ரேலை சுற்றிலும் அதன் எதிரிகள் வியூகம் அணிவகுத்து நிற்கின்றனர். உலக யூதர்களுக்குக் கலக்கம். தத்தம் நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களுக்குச் சென்று தாங்களும் இஸ்ரேலுக்கு ஆதரவாக சண்டையிடத் தயார் என்று கூறினர். "நம்மில் 60 லட்சம் பேரை ஏற்கனவே இழந்தோம், இப்போது இஸ்ரேல் அழிவதைப் பார்ப்பதைவிட சண்டையிட்டு மடிவதே மேல் என வந்துள்ளோம்" என அவர்கள் கூற, தூதரக அதிகாரிகள் "சாவதற்கு வேறு ஆளைப் பாருங்கள், நாங்கள் வாழப் பிறந்தவர்கள்" என்று மன உறுதியுடன் கூறினர். அவ்வாறே செய்தும் காட்டினர். நான் பலமுறை பல இடங்களில் கூறியபடி பைபிள் பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல இப்போர். அதுவரை யூத இனத்தையே கோழைகளாக 2000 ஆண்டுகளுக்கு சித்தரித்து வந்த எதிரி இனத்தவர்கள் வாயை இறுக்க மூடிக் கொண்டனர்.

அப்படிப்பட்ட மனிதர்களுடன் நட்பு கொள்வதுதான் நலம் தரும்.

மறுபடியும் யூனுஸின் பதிவுக்கே வருகிறேன். எனது சந்தோஷங்களைப் பட்டியலிட ஆசைப்படுகிறேன்.

பல சந்தோஷங்கள். அருமையான தாய் தந்தையர். காதல் மனைவி. அன்பான மகள். நல்ல இஞ்சினியரிங் மற்றும் மொழி பெயர்ப்பு அனுபவங்கள். நான் சந்தித்த அருமையான மனிதர்கள் - பள்ளி, கல்லூரி நண்பர்கள், மேக்ஸ் ம்யுல்லர் பவன் தேசிகன், அல்லியான்ஸ் பிரான்ஸேய்ஸின் சாரதா லாற்டே, ஐ.டி.பி.எல். பொது மேலாளர் ஜலானி, தமிழ்மண இணைய நண்பர்கள் - கருத்து வேறுபாடுகள் பல இருப்பினும் எனக்கு இன்னல் வந்தபோது ஆதரவு தெரிவித்தவர்கள், வலைப்பூவில் நான் இது வரை இட்ட முன்னூறுக்கும் அதிக தமிழ் இடுகைகள், அவற்றால் எனது தமிழில் மேம்பாடு, 56 வயதில் முதன்முறையாக கணினியுடன் சம்பந்தம் ஏற்பட்டு அதை கையாளுவதில் நான் பெற்ற வெற்றிகள், அவற்றால் வந்த பல மொழிபெயர்ப்பு வேலைகள் ... எதைச் சொல்ல, எதை விட? வாழ்க்கை இன்பமயமானது.

நினைவிருக்கட்டும், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவாகவே மாறுகிறீர்கள். வெற்றியடைவதைப் பற்றியே நினையுங்கள். அவ்வாறு நினைப்பவர்களுடன் சேருங்கள். தோல்வி பயத்தில் இருப்பவரது அண்மையை விட்டு நீங்குங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது