6/27/2006

உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் வலைப்பதிவர் சந்திப்பு

நண்பர்களே,

வரும் ஞாயிற்றுக் கிழமை, ஜூலை மாதம் 2-ஆம் தேதி மாலை 6 மணியளவில் சென்னை உட்லேண்ட்ஸ் டிரைவ்-இன்னில் ஒரு சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பு வைக்க எண்ணியுள்ளோம் (டிபிஆர். ஜோசஃப் மற்றும் நானும்). சென்னை வலைப்பதிவாளர்கள், சென்னையில் தற்சமயம் இருக்கும் வெளியூர் வலைப்பதிவாளர்கள் ஆகியோரைக் கண்டு உரையாட ஆசை. சந்திப்பு சுமார் 2 மணி நீடிக்கலாம்.

போன முறையே செய்திருக்க வேண்டியது, ஆனால் செய்யவில்லை. மீட்டிங்கிற்கான செலவு பற்றி பேசுகிறேன். இம்முறை சந்திப்புக்கு வருபவர்கள் எல்லோருமே செலவை பகிர்ந்து கொள்கிறோம். செலவு என்ன பெரிய செலவு, போண்டா, காபி ஆகியவைக்கு ஆவதுதான். நிறைய பேர் வந்தால் ஒரு ஹாலை அங்கே இரண்டு மணி நேரத்துக்கு எடுக்க வேண்டி வரலாம். சாதாரணமாக இது தேவைப்படாது, பார்க்கலாம்.

This will be Dutch treat.

போன முறை குறைந்த அவகாச அறிவிப்பு விட்டதால் பலர் வர முடியவில்லை. ஆகவே இம்முறை போதிய அவகாசம் கொடுத்துள்ளோம். வர எண்ணம் உள்ளவர்கள் இப்பதிவின் பின்னூட்டமாக அதை வெளியிடலாம். தொலைபேசியிலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

டோண்டு ராகவன்: 9884012948
டி.பி.ஆர். ஜோசஃப்: 9840751117

என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/25/2006

எனக்கும் எம்.ஜி.ஆரு.க்கும் இடையில் என்ன பிரச்சினை?

தமிழ் பத்திரிகை உலகுக்கு சாவி அவர்களது பெயர் மிக்க பரிச்சயம். விகடன் ஆசிரியர் குழுவில் ரொம்பக் காலம் இருந்தார். ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளில் அவரும் மணியனும் விகடனில் தீவிரமாகச் செயல்பட்டனர். அக்காலக் கட்டத்தில் அவர் எழுதிய தொடர்கதைகள் மிகப் பிரசித்தம், உதாரணங்கள்: வழிப்போக்கன், வாஷிங்டனில் திருமணம், விசிறி வாழை முதலியன.

எழுபதுகளின் துவக்கத்தில் தினமணி கதிரின் ஆசிரியராக இருந்தார். மனிதர் ரொம்ப உணர்ச்சி வசப்படுபவர். கருணாநிதி அவர்களின் நெருங்கிய நண்பர், ஆகவே எம்.ஜி.ஆருடன் தனிப்பட்ட விரோதம் பாராட்டினார்.

சாவியிடம் உள்ள குறை இதுதான். நட்பில் தீவிரமாக இருப்பார், விரோதத்திலோ அதை விட. எம்.ஜி.ஆரை அவர் இவ்வாறெல்லாம் வர்ணித்திருக்கிறார். "கிழட்டு நடிகர்", "அட்டைக் கத்தி வீரர்". கேள்வி பதில்களில் எம்.ஜி.ஆர். அவர்களை மட்டம் தட்டும் வாய்ப்பை விட்டதே இல்லை. உதாரணத்துக்கு:

கேள்வி: எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?
பதில்: அட்டை கத்தியை கையில் எடுத்துக் கொள்வேன்

கேள்வி: எம்.ஜி.ஆர். ஏன் தொப்பி போடுகிறார்?
பதில்: அவருக்கு தலை வழுக்கை, அதை மறைக்கத்தான்

கேள்வி: எம்.ஜி.ஆரிடம் ஒரு நல்ல விஷயமும் இல்லையா?
பதில்: நானும் முயன்று பார்த்தேன், ஒன்றும் தேறவில்லை

கேள்வி: எம்ஜிஆர் பொய் சொல்வாரா?
பதில்: அவர் குண்டடிபட்டு மருத்துவ மனையில் இருந்தபோது நான் அவரைச் சென்று பார்க்கவில்லை. ஆனால் அதன் பிறகு அவரை சந்தித்தப் போது தான் ஆஸ்பத்திரி வரைக்கும் வந்ததாகவும் ஆனால் அவர் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறியதால் அவரைப் பார்க்க முடியவில்லை என ஒரு டூப் விட்டேன். ஆனால் எம்ஜிஆரோ, நான் வந்தது பற்றி அவரது உதவியாளர் அவர் தூங்கி எழுந்த பிறகு கூறியதாகச் சொன்னார். இப்போது நீங்களே கூறுங்கள். யார் சொன்னது பெரிய பொய்?

1971-ல் வெளிவந்த ரிக்ஷாக்காரன் படத்துக்கு 1974-ல் சுப்புடு அவர்களை விட்டு ஒரு விமரிசனத்தை தான் ஆசிரியராக இருந்த தினமணி கதிர் பத்திரிகையில் எழுதச் செய்தார். அதில் சுப்புடு அவர்கள் எம்.ஜி.ஆரை கிழி கிழி எனக் கிழித்திருந்தார். "ஊரார்" என்னும் தொடர்கதையில் "கிழட்டு நடிகன் போஸ்டர்களில் சிரித்துக் கொண்டிருந்தான்" (நினைவிலிருந்து கூறுகிறேன்) என்று எழுதியிருந்தார்.

ஏன் இந்த மாதிரி நடந்து கொண்டிருந்தார்? இதையெல்லாம் பற்றி அவர் சமீபத்தில் 1980 ஜனவரியில் சாவியில் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். கட்டுரையின் தலைப்பு: "எனக்கும் எம்.ஜி.ஆரு.க்கும் இடையில் என்ன பிரச்சினை?"

(அதுதான் இப்பதிவின் தலைப்பு, ஹி ஹி ஹி.)

கட்டுரையிலிருந்து:

அன்பே வா படப்பிடிப்பு சிம்லாவில் நடந்தபோது சாவி அங்கு விகடனால் அனுப்பப் பட்டிருக்கிறார். அப்போது அவருடன் எம்.ஜி.ஆர். அன்புடன் பழகியிருக்கிறார். ஆனால் அதெல்லாம் வேஷம் என்று சாவி மேலே கூறிய கட்டுரையில் குறிப்பிட்டார். பிறகு தினமணி கதிரில் வேலைக்கு சேர்ந்த புதிதில் அவர் எம்ஜிஆரிடம் அவர் முக ஜாடையில் ஒரு சாகச ஹீரோவை முன்னிருத்தி ஒரு படக்கதை தொடர் வெளியிட அனுமதி கேட்டிருக்கிறார். தனக்கே அந்த ஐடியா இருப்பதாகக் கூறிய எம்ஜிஆர் அனுமதி மறுத்திருக்கிறார். அதிலிருந்து சாவிக்கு எம்ஜிஆர் என்றாலே எரிச்சல் - இதை நான் கூறவில்லை, சாவியே கூறியது அது. எம்ஜிஆரை பொது நிகழ்ச்சிகளில் அதற்குப் பிறகு பார்த்திருக்கிறார். எம்ஜிஆர் அவருக்கு முகமன் கூற இவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு போயிருக்கிறார். அதையும் சாவியே பெருமை என நினைத்துக் கொண்டு அதே கட்டுரையில் கூறியது. சில சந்தர்ப்பங்களுக்குப் பிறகு, எம்ஜிஆரும் அவருடன் பேசுவதைத் தவிர்த்திருக்கிறார்.

இப்போதுதான் நிஜமான தமாஷ் வருகிறது. சஞ்சய் காந்தி அவர்கள் விமான விபத்தில் இறந்தபோது அங்கு எம்ஜிஆர் கருணாநிதி ஆகிய இருவரும் சென்றிருந்தனர். உடல் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டபோது எல்லோரும் அவரவர் காரில் சென்றுவிட கருணாநிதி தனித்து விடப்பட்டார். அப்போது எம்.ஜி.ஆர். அவரைத் தன்னுடன் காரில் ஏற்றிச் சென்றார். இது நடந்தது ஜூன் 1980-ல்.

அதன் பிறகு வந்த சாவி இதழில் வந்த கேள்வி-பதில்:
கேள்வி: எம்ஜிஆர் கருணாநிதியை தன் காரில் அழைத்துச் சென்றதைப் பற்றி?
பதில்: அது எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையைக் குறிக்கிறது (நிஜமாகத்தான் கூறுகிறேன்)

சாவிக்கே தன் பதில் ஒரு திடீர் பல்டி என்பது புரிந்ததால்தான் அந்த டிஸ்க்ளைமர். வாசகர்கள் தலை பிய்த்துக் கொண்டனர். ரொம்ப முடி கொட்டுவதற்குள் சாவியே இன்னொரு கட்டுரையில் அதை விளக்கினார்.

சாவி அமெரிக்கா செல்லவிருந்தார். அப்போது கருணாநிதி சட்டசபை தேர்தலில் நின்றார் (அண்ணாநகர் தொகுதி என்று நினைவு. சாவி தனக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வார் என எதிர்ப்பார்த்திருக்கிறார். ஆகவே அவர் அமெரிக்கா செல்லும் முன்னால் கருணாநிதி வீட்டிற்கு சென்ற போது அவர் சாவியுடன் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. அது சாவிக்கு சுருக்கெனப் பட்டிருக்கிறது. ஆகவே எம்ஜிஆரின் பெருந்தன்மையைப் பற்றி அந்த பதில். அதற்குப் பிறகு எம்ஜிஆரைப் பற்றியக் கட்டுரையின் தலைப்பு: "கொடுத்துச் சிவந்தக் கரங்கள்".

சாவி ஒரு உணர்ச்சிகளின் குவியல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/23/2006

ஆறே சொல்வாய், ஆரோ சொல்வார்

எதேச்சையாக இன்றுதான் $ல்வன் இப்பதிவைப் பார்த்தேன். இப்போதுதான் சமீப (!) சமீபத்தில் நான்குxநான்கு விளையாட்டு முடிந்த தருணத்தில் இது வேறா என்று தோன்றியதாலேயே அது சம்பந்தமான பதிவுகளை ரொம்ப கவனத்துடன் பார்க்கவில்லை, அதனால்தான் இந்தத் தாமதம்.

சமீபத்தில் அறுபதுகளில் வெளியான "ஆண்டவன் கட்டளை" என்னும் படத்தில் "ஆறு மனமே ஆறு" என்ற பாடல் டி.எம்.எஸ்சின் கம்பீரமான சிம்மக் குரலோன் குரலில் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும். நேயர் விருப்பத்தில் ஒவ்வொரு முறையும் கேட்கப்படும், ஆனால் ஒவ்வொரு முறையும் கேட்டவர்தம் பெயர்களை அறிவிப்பதிலேயே ஒரு பாடலின் நேரத்தை எடுத்துக் கொண்டு படுத்துவார்கள். பாடலைப் பார்ப்போமா?

ஆறு மனமே ஆறு - அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
படம் -ஆண்டவன் கட்டளை
இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி
பாடியவர் - டி.எம். செளந்தரராஜன்


"ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...."

மேலே கூறிய வரிகளில் "ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி" என்ற வரி எனக்கு மிகவும் பிடித்தது. இங்கு ஆறு சொல்ல வேண்டியிருப்பதுவே எனது இப்பதிவின் தலைப்புக்கு காரணம்.

எனக்குப் பிடித்த ஆறு தலைவர்கள்:
1. ராஜாஜி
2. மகாத்மா காந்தி
3. காமராஜ்
4. மொரார்ஜி தேசாய்
5. வல்லபாய் படேல்
6. அடல் பிஹாரி வாஜ்பேயீ

எனக்குப் பிடித்த பத்திரிகை சம்பந்தப்பட்டவர்கள்
1. சோ அவர்கள்
2. சி.பா. ஆதித்தனார்
3. எஸ்.எஸ்.வாசன்
4. எஸ்.ஏ.பி.
5. நாடோடி
6. அருண் ஷோரி

எனக்குப் பிடித்தத் தமிழ் எழுத்தாளர்கள்:
1. கல்கி
2. சோ அவர்கள்
3. ரமணி சந்திரன்
4. அனுத்தமா
5. அனுராதா ரமணன்
6. வாசந்தி

எனக்குப் பிடித்த ஐரோப்பிய/அமெரிக்க எழுத்தாளர்கள்:
1. Taylor Caldwell (for: Tender Victory, Dear and Glorious Physician)
2. J.K.Rowling (for:All the six books of Harry Potter)
3. Hans Bemmann (for: Hans Bemmann: Stein und Flöte ...und das ist noch nicht alles)
4. A.J. Cronin (for: Keys of the Kingdom, Citadel, Beyond this place etc.)
5. Lloyd C. Douglas (for: The beautiful obsession, The Robe etc.)
6. Harper Lee (for: To kill a mocking bird)

எனக்குப் பிடித்த நடிகர்கள்:
1. சோ அவர்கள்
2. கமலஹாசன்
3. ஜெமினி கணேசன்
4. சிவகுமார்
5. சூர்யா
6. விக்ரம்

எனக்குப் பிடித்தப் பதிவாளர்கள்:
1. டி.பி.ஆர். ஜோசஃப்
2. நாட்டாமை
3. $ல்வன்
4. என்றென்றும் அன்புடன் பாலா
5. ஜெயராமன்
6. ம்யூஸ்

நான் அழைக்கும் எட்டு பதிவாளர்கள்
1. டி.பி.ஆர். ஜோசஃப்
2. நாட்டாமை
3. தினகர்
4. என்றென்றும் அன்புடன் பாலா
5. ஜெயராமன்
6. ம்யூஸ்
7. கால்கரி சிவா
8. வஜ்ரா ஷங்கர்

$ல்வன் என்னை அழைத்து விட்டதால், அவருக்கு பதிலாக தினகர். அவர் பின்னூட்டங்கள் மட்டுமே இட்டிருக்கிறார். அவரும் இதற்காகவாவது பதிவு போடட்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/19/2006

தேன் கூட்டிற்கு மனமார்ந்த நன்றி

இப்போது சென்னையில் காலை 05.40. கண்விழித்ததும் வழக்கம்போல கணினியை ஆன் செய்து, இணைய இணைப்பைத் தர, கூகள் டாக்கில் ஜிவ்வென்று மேல் எழும்பியது மின்னஞ்சல் என் அருமை நண்பர் செல்வம்$ அவர்களிடமிருந்து. தேன் கூட்டில் இன்றைய வலைப்பதிவராக என்னை குறிப்பிட்டுள்ளார்கள் என்ற செய்தியை தெரிவிக்கிறார் அவர்.

தேன்கூட்டில் வந்த write up-ஐ கீழே கொடுத்துள்ளேன். நடு நடுவில் எனது கமெண்டுகளையும் இடாலிக்ஸ், தடித்த எழுத்தில் இட்டுள்ளேன்.

சென்னையை சேர்ந்த டோண்டு என்ற நரசிம்மன் ராகவன் அவர்களை அறியாதவர்களே வலைபதிவு உலகில் இல்லை எனலாம். (இது ரொம்ப ஓவர்)

தமிழ்நாட்டின் புகழ் பெற்ற மொழி பெயர்ப்பாளராக இருக்கும் டோண்டு மொழிபெயர்ப்பு துறையில் 30 ஆண்டு அனுபவம் பெற்றவர். பொதுத்துறையில் எஞ்சினியராக வேலை செய்து விருப்ப ஓய்வு பெற்ற டோண்டு 2004 முதல் வலைபதிவு செய்து வருகிறார்.

நேர்மைக்காக குரல் தர தயங்காத டோண்டு நகைச்சுவையுடன், அதே சமயம் வலிமையாக தன் கருத்தை சொல்வதிலும் தன் ஆதர்ச பத்திரிக்கையாளரான சோ அவர்களை போலவே இருக்கிறார்.(சோ அவர்களுடன் என்னை ஒப்பிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்)

இதுவரை டோண்டு பின்னூட்டமிடாத வலைபதிவுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.(ஆகவே போலி டோண்டு ஒவ்வொரு பதிவாகப் போய் என் பெயரில் தவறாக பின்னூட்டம் இட்ட போது வேலை பளு அதிகமானாலும், பின்னூட்டங்களே இடாது இருப்போம் என ஒரு நாளும் யோசிக்கக் கூட இல்லை)

தமிழ்மணத்தில் இரு முறை நட்சத்திரமானவர் என்ற பெருமையும் டோண்டுவுக்கு உண்டு. (காசி மற்றும் மதி அவர்களுக்கு மிக்க நன்றி).

தமது பிளாக்கர் எண்ணை கூட நினைவு வைத்திராத வலை பதிவர்கள் இவரது பிளாக்கர் எண்ணை தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சொல்லுவார்கள். (இந்த ஐடியாவைக் கொடுத்த மதி அவர்களுக்கு மீண்டும் என் நன்றி)

முற்போக்கு கருத்துக்களை கொண்ட சிறந்த பெண்ணியவாதியான டோண்டு சமூகத்தால் அடக்கப்பட்ட தலித்களுக்கும்,பெண்களுக்கும் குரல் தர தயங்கியதே இல்லை. இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க இவர் போட்ட பதிவுகள் அனைவராலும் விரும்பி வாசிக்கப்பட்டன.தலித் ஆபிசர்களை கட்டாய காத்திருப்பில் வைப்பதை கண்டித்து இவர் எழுதிய பதிவுகள் மிகவும் புகழ் பெற்றவை. கற்புநிலை பற்றி இவர் எழுதிய பதிவுகள் வலைபதிவு உலகையே அதிசயத்துடன் திரும்பி பார்க்க வைத்தவை.

பின்னூட்ட சூப்பர்ஸ்டார் என்றே இவரை வேடிக்கையாக சொல்லுவார்கள்.பிரையன் லாரா போல் சர்வசாதாரணமாக 400, 500 என்று பின்னூட்டம் வாங்குவார். இஸ்ரேல் ஆதரவு, (பூர்வ ஜன்ம பந்தம்) சோ ஆதரவு, ராஜாஜி மீது மாறாத அன்பு,மகரநெடுங்குழைகாதன் மீது எல்லை தாண்டிய பக்தி (அவன் அருளின்றி டோண்டு ஏது?), தலித்கள் மீது அன்பு,பெண்ணியம், வணிக ஞானம் என தம் கருத்தை துணிந்து வல்லமையோடும்,நெஞ்சு துணிவோடும் உரத்து சொல்லும் டோண்டுவை வலைபதிவு உலகின் சச்சின் டெண்டுல்கர் என்று அழைத்தால் மிகையல்ல. (மறுபடியும் ரொம்ப ஓவர்)

நன்றி: #வாசகர் பரிந்துரை (19/06/06)

தேன்கூட்டிற்கும், என்னை பரிந்துரை செய்த வாசகருக்கும் மிக்க நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/09/2006

என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் - 1

சமீபத்தில் 1954-ஆம் வருடம் நடந்த நிகழ்ச்சி ஒன்று இன்னும் நன்றாக ஞாபகத்தில் உள்ளது. வியாழனன்று கல்கி வரும், வெள்ளியன்று விகடன் வரும். எனக்கும் என் அக்காவுக்கும் இந்த இரண்டு நாட்களும் சண்டை மண்டை உடையும். அது ஒரு செவ்வாய்க் கிழமை. தீபாவளி இன்னும் சில நாட்களில் வர இருந்தது. வீட்டில் சாமான்களை ஒழித்து வைக்கும் வேலை மும்முரமாக நடந்து வந்தது. (ஒழிப்பது என்றால் இந்த காண்டக்ஸ்டில், தேவையானவற்றை எடுத்து அடுக்கி, தேவையில்லாதவற்றை தூக்கி எறிவது).

நான் சாதாரணமாக இந்த வேலைக்கு டிமிக்கி கொடுத்து ஓடிவிடுவது வழக்கம். அன்று வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததால் அவ்வாறெல்லாம் செய்ய முடியவில்லை. எங்கள் அன்னை எங்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒரு பரிசு கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். என்னவென்று கூற மறுத்தார். வேலை எல்லாம் முடிந்ததும் பரிசும் கொடுத்தார். கல்கி மற்றும் விகடனின் புது இதழ்கள். தீபாவளியை முன்னிட்டு அவை முன்பே வெளியாகியிருந்தன. எங்களுக்கு தெரியாமல் எடுத்து ஒளித்து வைத்திருந்தார்.

இங்கு ஏன் இதை கூற வந்தேன் என்றால் அக்காலக் கட்டத்திலிருந்தே பத்திரிகை தொடர் கதைகளை படிப்பதில் எனக்கு மிகப் பிரியம். அப்போது கல்கியின் அமரதாரா தொடர்கதை வெளியாகிக் கொண்டிருந்தது.

அதன் பிறகு இன்று வரை எவ்வளவோ மாறுதல்கள் நிகழ்ந்து விட்டன. இருப்பினும் புத்தகம் படிக்கும் ஆசை போகவேயில்லை. எனக்கு பல எழுத்தாளர்கள் பிடிக்கும். அவர்களை பற்றி ஒரு வரிசைக்கு பதிவுகள் போட எண்ணம்.

முதலில் நான் தேர்ந்தெடுப்பது ரமணி சந்திரன் அவர்கள். ஏன் என்று தெரியவில்லை, எனது அபிமான எழுத்தாளர்களில் பலர் பெண்கள். வரும் பதிவுகளில் வர இருப்பவர்கள் அனுராதா ரமணன், ஜோகிர்லதா கிரிஜா, லஷ்மி, அனுத்க்தமா, ராஜம் கிருஷ்ணன் ஆகியோர்.

இப்போது ரமணி சந்திரன். அவர் பல வருடங்களாக எழுதி வந்தாலும் சில ஆண்டுகள் முன்னால்தான் அவர் என் கவனத்தைக் கவர்ந்தார். குமுதத்தில் "வல்லமை தந்து விடு" என்ற தொடர்கதை. அப்போது தில்லியில் இருந்தேன். தமிழ் பத்திரிகைகள் ஒழுங்காகக் கிடைக்காது. துளி ஏமாந்தாலும் சில இதழ்கள் விட்டு போய் விடும். ஆனால் ரமணி சந்திரனின் இக்கதை வெளிவந்த காலத்தில் நான் ஒரு குமுதம் இதழைக் கூட மிஸ் செய்யவில்லை. அதே போல குங்குமம் பத்திரிகையில் அவர் தொடர்கதை வந்து கொண்டிருந்த சமயத்தில், பத்திரிகை நிர்வாகம் கொடுத்த தாராள பரிசு பொருட்களால் ஒரு இதழ் கிடைக்கவில்லை. எனக்கு ஒரே கோபம். பத்திரிகைக்கே போன் செய்து எனக்கு விட்டுப் போன தொடர் கதையின் பக்கங்களை ஃபேக்ஸ் செய்ய கேட்டுக் கொள்ள அவர்களும் அவ்வாறே செய்தனர்.

அதைப் பற்றி அறிந்த சக பதிவாளர்களுக்கு வேடிக்கையாக இருந்திருக்கிறது. எனக்கும் ஒரே ஆச்சரியம். ரமணி சந்திரனின் கதை பிடிக்காதவர்களும் இருக்கிறார்களா என்று. அவர் கதையில் வரும் கதாநாயகிகள் பாஸிடிவாக நினைத்து செயல் புரிபவர்கள். பிரச்சினைகள் வரும், அவற்றை அவர்கள் அழகாகச் சமாளிப்பார்கள். அவர் கதைகளின் டெம்பிளேட் ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் அல்ல. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த டெம்பிளேட் அது. கதா நாயகர்கள் வெறும் சப்போர்ட் ரோல்தான் செய்வார்கள். கதாநாயகிகள் எல்லோருமே தைரியம் மிக்கவர்கள். இப்போது வரும் சீரியல்கள் நாயகி மற்றும் வில்லிகள் போல இல்லை அவர்கள். அவர்கள் செயல்பாடுகள் உற்சாகம் விளைவிப்பவை. விதியே என்று அழுது கொண்டு உட்காராது ஆக்கம் புரிபவர்கள் அவர்கள்.

கவித்துவமான தலைப்புகள் கொடுப்பவர் ரமணி சந்திரன் அவர்கள். இப்போது அவள் விகடனில் வரும் தொடர்கதையின் தலைப்பு "வெண்ணிலவு சுடுவதென்ன". மற்ற கதைகளில் சில பின்வருமாறு:

"தவம் பண்ணி விடவில்லையடி", "கனவு மெய்ப்பட வேண்டும்", "கொஞ்சம் நிலவு, கொஞ்சம் நெருப்பு", "மை விழி மயக்கம்", "நேசம் மறக்கவில்லை நெஞ்சம்", "காத்திருக்கிறேன் ராஜகுமாரா", "எனக்காக நீ", "பொன்மானைத் தேடி", "விடியலைத் தேடி", "கானமழை நீ எனக்கு", "தரங்கிணி", "அழகு மயில் ஆடும்", "நாள் நல்ல நாள்", "இனி வரும் உதயம்", "கிழக்கு வெளுத்ததம்மா', "என் உயிரே கண்ணம்மா" போன்றவை.

அதெல்லாம் சரி, இப்போது என்ன திடீரென இந்தப் பதிவு என்கிறீர்களா? எதேச்சையாக பத்ரி அவர்களின் பதிவு ஒன்றைப் பார்த்தேன். அதன் சுட்டிகளைச் சொடுக்கியதில் நான் முதலில் கொடுத்த பதிவும் வந்தது. ஆகவே இப்போது இப்பதிவு. அங்கு போய் பின்னூட்டம் கொடுப்பதற்கு பதிலாக இங்கே புது பதிவு போடுவது அதிகம் உகந்தது எனப் படுகிறது. என்ன சரிதானே சுரேஷ் கண்ணன் மற்றும் கிருஷ்ணசைதன்யா அவர்களே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/05/2006

எனக்கும் இசாக் அசிமோவுக்கும் உள்ள ஒற்றுமை

பள்ளி நாட்களிலிருந்தே எனக்கு பிடித்த பாடம் கணிதம். ஆசிரியர் ஒரு முறை போர்டில் கணக்கு போட்டு விளக்கும்போதே புரிந்து விடும். ஏறுவரிசை, இறங்கு வரிசை, கடன் வாங்கிக் கழித்தல், தனி வட்டி, கூட்டு வட்டி, ரூபாய் அணா பைசா கூட்டல்கள், பெருக்கல்கள், வட்டம், வட்டத்தின் பரப்பளவு, வில்லின் நீளம், கால் வட்டம், அரை வட்டம், பந்து, நீள் வட்டம், undetermined coefficients, functional notations, ஜியோமிதி, பகுப்பாய்வு ஜியோமிதி, simultaneous equations, quadratic equations என்று எதை எடுத்தாலும் சுலபமாக வந்தது.

அது மட்டுமல்ல, பள்ளியை விட்டு 30 வருடங்கள் ஆன நிலையில் ஒன்பதாவது படிக்கும் மாணவர்களுக்கு கணக்கு பாடமும் சொல்லிக் கொடுக்க முடிந்தது. என்ன, சற்று நேரம் அவர்களது கணித புத்தகத்தை பார்க்க வேண்டியிருந்தது. பல கணிதக் கோட்பாடுகள் அப்போது நீண்ட காலம் சந்திக்காத பழைய நண்பர்களை போல என்னுடன் உறவாடின. "என்னடா டோண்டு, எப்படி இருக்கே" என்று அவை என்னைக் கேட்பது போன்று உணர்ந்தேன்.

ஐயகோ, பொறியியல் கல்லூரியில் இரண்டாம் வருடம் வந்த போது இண்டெக்ரேஷன் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். டிபெரென்சியேஷனை கூட ஊதித் தள்ளிய எனக்கு முதல் தடவையாக கணிதப் பாடங்கள் தண்ணி காட்டின. இந்த அழகுக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் மஞ்சள் காமாலை காரணமாக கல்லூரி செல்லாத நிலையில் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டத்கு போல இருந்தது. அது வரை வகுப்பில் ஆசிரியர் போடும் கணக்குகளை நோட்ஸ் எடுத்து படித்த நான் கல்லூரியில் பாடப் புத்தகம் கணக்குக்கு என்று தனியாக வாங்கியதில்லை. இப்போது அது பெரிய பாதகமாக முடிந்தது. அந்த வருடம் கணக்கில் பெயில். கூடவே இயற்பியலும் வேதியலும் அவுட். இருந்தாலும் கணக்கு ரிசல்ட்தான் என்னுடைய தன்னம்பிக்கையைக் குலைத்தது.

ஒரு வருடம் வீட்டில் இருந்தாக வேண்டிய நிலை. என் நண்பனிடமிருந்து கணித பாடப் புத்தகத்தை வாங்கினேன். அதில் உள்ள கணக்குகளை அடியைப் பிடிடா பாரதப்பட்டா என்ற ரேஞ்சில் போட ஆரம்பித்தேன். முதலில் கஷ்டமாக இருந்தது. இருப்பினும் பல்லை கடித்துக்கொண்டு போராடியதில் இண்டெக்ரேஷன் பிடிபட்டது. இருப்பினும் அது என்னுடைய ஆளுமையில் இல்லை. துளி ஏமாந்தால் காலை வாரும் நிலையில் இருந்தது. அக்டோபரில் மீண்டும் பரீட்சை. எழுதி பாஸ் செய்தேன். இருப்பினும் அடுத்த ஜூன் மாதம்தான் மூன்றாம் வருடம் செல்ல வேண்டும்.

இப்போது ஒரு காரியம் செய்தேன். மூன்றாம் வருடத்திற்கான கணக்கு பாடப் புத்தகம் வாங்கினேன். அதிலிருந்து கணக்குகள் போட்டு புத்தகத்தை முடித்தேன். மூன்றாம் வருடத்தில் கணக்கு பாடம் மறுபடியும் விளையாட்டாயிற்று. இந்த முறையை நான் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு பிற்காலத்தில் படிக்கும்போது பின்பற்றியதில் இரண்டு மொழிகளிலும் அபார வெற்றி பெற்றதை பற்றி ஏற்கனவே பதிவு போட்டுள்ளேன்.

அதே போல மூன்றாம் வருட விடுமுறையில் நான்காம் வருடத்திற்கான கணித பாடத்தை முடித்தேன். ஒரே வருத்தம் என்னவென்றால் ஐந்தாம் வருடம் கணிதம் கிடையாது. இதை என் உயிர் நண்பனிடம் கூறி வருத்தப்பட, அவன் என் தலையில் குட்டிவிட்டு அப்பால் சென்றான்!

இதில் இசாக் அசிமோவ் எங்கு வந்தார் என்று கேட்கிறீர்களா?

அவர் ஒரு புத்தகத்தில் எழுதியதை என் நினைவிலிருந்து மொழி பெயர்க்கிறேன்.

"பள்ளி நாட்களிலிருந்தே எனக்கு பிடித்த பாடம் கணிதம். ஆசிரியர் ஒரு முறை போர்டில் கணக்கு போட்டு விளக்கும்போதே புரிந்து விடும். ஏறுவரிசை, இறங்கு வரிசை, கடன் வாங்கிக் கழித்தல், தனி வட்டி, கூட்டு வட்டி, டாலர், செண்ட் கூட்டல்கள், பெருக்கல்கள், வட்டம், வட்டத்தின் பரப்பளவு, வில்லின் நீளம், கால் வட்டம், அரை வட்டம், பந்து, நீள் வட்டம், undetermined coefficients, functional notations, ஜியோமிதி, பகுப்பாய்வு ஜியோமிதி, simultaneous equations, quadratic equations என்று எதை எடுத்தாலும் சுலபமாக வந்தது.

ஐயகோ, ஒரு நாள் இண்டெக்ரேஷன் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். டிபெரென்சியேஷனை கூட ஊதித் தள்ளிய எனக்கு முதல் தடவையாக கணிதப் பாடங்கள் தண்ணி காட்டின."

இசாக் அசிமோவ் மேலும் எழுதுகிறார். "அதென்னமோ இண்டெக்ரேஷனுக்கு வரும்போது திடீரென குழாயை மூடியது போன்ற உணர்ச்சி." எனக்கு அவர் சொன்னது 100% புரிந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/01/2006

காக்க, காக்க

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்ற பதிவு போட்டதன் நோக்கமே புரியாது வழக்கம்போல திசைதிருப்பல்கள். வெளிநாடு செல்லும் இந்தியர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறேன். அதிலும் இந்துக்கள் கல்ஃப், சவுதி முதலிய நாடுகளைத் தவிர்க்கவும் என்று கூறினேன். ஏன்? அங்கு போனவர்கள் இந்துக்கள் என்பதால் பட்ட கஷ்டங்களை சம்பந்தப்பட்டவர்களால் கூறக்கேட்டதன் பலனாகக் கூறினேன். அதிலும் அது பதிவில் ஒரு சிறிய பகுதியே. ஏற்பவர்கள் ஏற்கிறார்கள், ஏற்காதவர்கள் தங்கள் நேரடி அனுபவங்களைப் பெறுகிறார்கள்.

அதையெல்லாம் விட்டார்கள். அரேபியர்களின் கொ.ப.செ. ரேஞ்சுக்கு பலர் வந்து விட்டார்கள். காக்க, காக்க என்றெல்லாம் பதிவு போட்டு விடுகிறார்கள். அதில் பின்னூட்டம் இட்டவர்கள் கூட சவுதியை ரொம்ப டிஃபண்ட் செய்வதாகக் காணோம். அப்பதிவை எழுதியவர் கூட அதைச் செய்யவில்லை. அதை சுட்டிக் காட்டினால் அவசரம் அவசரமாக வந்து சப்பைகட்டு கட்டுகிறார். அது இருக்கட்டும்.

பலர் தாங்கள் அமீரகத்தில் நல்ல நிலையில் இருந்ததாகவும் ஒரு கஷ்டமும் இல்லை எனக் கூறுகிறார்கள். அவர்களுக்காக நான் சந்தோஷப்படுகிறேன். ஆனால் கூர்ந்து பார்த்தால் அவர்களுக்கு நான் என்னுடைய முந்தைய பதிவில் சொன்ன சப்போர்ட் எல்லாம் இருந்திருக்கிறது. தங்கள் நிறுவனத்தால் ட்ரான்ச்ஃபர் செய்யப்பட்டு அங்கு சென்றவர்கள் அவர்களில் பலர். அவர்களைப் பற்றி என் பதிவு இல்லையே. என் பதிவு தங்கள் முயற்சியால் ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து சென்றவர்களுக்கான ஜாக்கிரதைப்படுத்தல்தானே.

இன்னொருவர் கூறுகிறார், சென்னை பாண்டிபஜாரில் கூட பலர் குறைந்த கூலிக்கு அதிக வேலை செய்கிறார்கள் என்று. அவருக்கு என்னுடைய எதிர்க் கேள்வி இதுதான். கடை முதலாளி அவர்கள் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துள்ளாரா? வேறுவேலைக்கு அவர்கள் போக முயன்றால், அவர்களை அவர் தடுக்க முடியுமா? இவையும் அதற்கு மேலும் கல்ஃபில் நடக்கிறது.

ஒரு விஷயம் நடந்தது, ஆகவே ஜாக்கிரதையாக இருங்கள் என்று நான் அபாயத்துக்கு உட்படுத்தப்படுபவருக்கு கூறுகிறேன். எங்களுக்கெல்லாம் அம்மாதிரி நடக்கவேயில்லை என்று கூறுகிறார்கள் சிலர். அவர்களை நான் கேட்கிறேன். ஒருவருக்கும் அம்மாதிரி நடக்கவேயில்லை என்று உங்களால் கூறிட முடியுமா? அவ்வாறு கூற உங்களுக்கு 100% விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

தர்க்க சாஸ்திரத்தை இங்கு துணைக்கழைக்கிறேன்.

இசுலாமிய நாடுகளில் சில இந்துக்கள் இந்துக்கள் என்பதால் துன்பப்பட்டனர் என்று எனக்கு அவ்வாறு துன்பப்பட்ட இந்துக்களே கூறியிருக்கின்றனர். நான் மற்றவர்களை ஜாக்கிரதை செய்ய எனக்கு அவை போதும். அதையே செய்தேன். அவ்வாறு எங்களுக்கு நடக்கவில்லை என்று சிலர் கூறியுள்ளனர். ஆகவே யாருக்கும் ஜாக்கிரதையாக இருக்கத் தேவையில்லை என அவர்கள் கூறிட இயலுமா? யோசியுங்கள் ஐயா.

If there are 100 events and to say one sequence of happening has taken place, you are required to know just one incident where it happened. If on the other hand, you want to say one sequence did not at all take place, you are required to know all the 100 events.

அவ்வளவுதான் சார் விஷயம்.

அது சரி என் பதிவில் வேறு பல விஷயங்கள் கூறியிருந்தேனே. அதைபற்றியெல்லாம் இவர்களுக்கு என்ன கவலை? அரேபியர்கள் பெயர் கெடாமல் இருந்தால் போதும் அவர்களுக்கு.

இன்னொரு விஷயத்தையும் இங்கே கூறி விடுகிறேன். முடிந்தால் சப்பைகட்டு கட்டவும்.

தொண்ணூறுகளில் சவுதியிலிருந்து வேலைக்கு ஆள் எடுக்க தில்லிக்கு வந்தார்கள் சில சவுதி அதிகாரிகள். வேலைக்கு இந்துக்கள் யாரையும் எடுக்கவில்லை. கிறித்துவர்கள், இசுலாமியர் மட்டும் தேவை என்று வெளிப்படையாகக் கூறி ஆள் எடுத்தனர். ஏர்போர்ட்டில் அவர்களில் இரண்டு கிறித்துவரை வடிக்கட்டினர். காரணம் அவர்கள் பெயர் இந்துக்கள் பெயர் போல இருந்திருக்கிறது. அவர்கள் தாங்கள் கிறித்துவர்கள் என்று கரடியாகக் கத்தியும் அவர்களை விமானத்தில் ஏற்றவில்லை. சவுதி விமானம் மேலே ஏறியது. கீழே இறங்குவதற்காக வந்த கஷக்ஸ்தான் விமானத்தின் மீது மோதி நூற்றுக்கணக்கானோர் அவுட். விடுபட்டுப் போன இரண்டு கிறித்துவர்கள் பிழைத்தனர். இந்த விஷயம் ஹிந்துஸ்தான் டைம்ஸில் அடுத்த நாள் செய்தியாக வந்தது. நான் எழுப்பும் பாயிண்ட் அதுவல்ல. நம் நாட்டுக்கு வந்து, மத அடிப்படையில் டிஸ்கிரிமினேட் செய்து போகின்றனர் திமிர் பிடித்த சவுதி அரேபியினர். அதைத் தட்டிக் கேட்க நம்மூர் அரசுக்கு ஒரு வக்கும் இல்லை. நம் உள்ளூர் மதசார்பற்றவர்களுக்கு பேச ஒரு வாயும் இல்லை.

நான் எழுதிய முந்தையப் பதிவில் ஒரு மாறுதலும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது