Showing posts with label டி.வி. சீரியல்கள். Show all posts
Showing posts with label டி.வி. சீரியல்கள். Show all posts

11/18/2007

நம்பிக்கை நட்சத்திரம் ரஜனி

ஒரு வேலைக்கான நேர்க்காணலுக்காக பலர் வந்துள்ளனர். காலை 10 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நேர்க்காணல் 11 ஆகியும் துவங்கவில்லை. அதற்கான அதிகாரி இன்னும் வரவில்லை. அவர் வருகிறார் ஆடி அசைந்து கொண்டு 12 மணிக்கு. கூடவே ஒரு பெண்ணும் வருகிறார். உள்ளே போய் பேசுகின்றனர் இருவரும். எந்த வேலைக்கான நேர்க்காணல் நடக்கவுள்ளதோ அதே வேலைக்காக சிபாரிசுடன் வந்திருக்கிறார் அப்பெண்.

"கவலை வேண்டாம் பிரீத்தி, உனக்குத்தான் அந்த வேலை" என்று சொன்ன அதிகாரி, பியூனை அழைத்து நேர்க்காணல கேன்சல் என்று வெளியில் காத்திருப்பவர்களுக்கு அறிவிக்கச் செய்கிறார். எல்லோரும் நொந்து கொண்டே அங்கிருந்து கிளம்ப, அவர்களில் ஒரே ஒரு பெண்மணி யாரையும் போக வேண்டாம் எனக் கூறுகிறார். இவ்வளவு நேரம் எல்லோருடைய நேரத்தையும் வீணடித்ததற்கு கம்பெனி பொறுப்பேற்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு எல்லோரையும் அப்படியே அமரச் செய்கிறார். வெளியில் அந்த அதிகாரியும் அவருடன் உள்ளே சென்ற அப்பெண்ணும் வெளியில் வருகின்றனர். இந்தப் பெண்மணி நேரடியாகவே அப்பெண்ணிடம் "நாங்கள் இவ்வளவு நேரம் காத்திருக்க, நோகாமல் வந்த உனக்கு வேலை, இது நியாயமா" எனக்கேட்க, அப்பெண் பேய்முழி முழிக்கிறார்.

இதற்குள் அந்த அதிகாரிக்கு வேண்டாத இன்னொரு ஊழியர் ஓசைப்படாது தலைமை நிர்வாகிக்கு ஃபோன் போட்டு அவரைப் போட்டுக் கொடுக்க, அவரும் துரிதமாக அந்த இடத்துக்கு வருகிறார். அவரிடமும் நியாயம் கேட்கிறார் இப்பெண்மணி. சம்பந்தப்பட்ட அதிகாரி முகத்தில் டன் டன்னாக அசட்டுக்களை. தலைமை நிர்வாகியிடம் அப்பெண்மணி "முறையான நேர்க்காணல்" நடத்துமாறு கேட்டுக் கொள்கிறார். இத்தருணத்தில் தான் வேலை பெறுவது பிரச்சினையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே தன்னைத் தேர்ந்தெடுக்கத் தேவையில்லை என கூறி விடுகிறார். பிறகு நடக்க வேண்டியவை நடந்து சரியான தேர்வு நடக்கிறது.

இதைக் கண்ட பொது மக்கள் நிமிர்ந்து உட்கார்ந்தனர். அடுத்து வந்த வாரங்களில் இதே பெண்மணி பல அவதாரங்கள் எடுக்கிறார். அடாவடி செய்யும் டாக்சிக்காரருக்கு பாடம் கற்பிக்கிறார். கேஸ் சிலிண்டர் அளிப்பதில் இருக்கும் நிர்வாகக் கோளாறுகளை சரி செய்கிறார். போலிச் சாமியாரை பொதுமக்களுக்கு அடையாளம் காட்டுகிறார். தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை அவள் விருப்பத்துக்கு மாறாக அவள் தந்தையை வற்புறுத்தி மணம் செய்ய நினைத்தவன் பக்கத்தில் அவனை விட 20 வயது அதிகம் உள்ள பெண்மணியை உட்கார வைத்து அவனை அவமானப்படுத்துகிறார். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது நடக்கும் டொனேஷன் கெடுபிடிகளை அம்பலமாக்குகிறார். வெறும் மலச்சிக்கலுக்கு இல்லாத டெஸ்டுகளையெல்லாம் இவரது மாமியாருக்கு செய்வித்து சம்பந்தப்பட்ட சோதனைச் சாலைகளிடம் கமிஷன் அடித்த டாக்டரை பதம் பார்க்கிறார்.

பிறகு சில மாதங்கள் ஓய்வு. இம்முறை திரும்பவரும்போது அவர் சமாளிக்கும் பிரச்சினைகள் அதிக சிக்கல்களாக ஆகின்றன. அப்போதைக்கப்போது தீர்த்துவைக்க இயலாத அவற்றை தீர்க்க சில வாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். உதாரணத்துக்கு தங்கள் காருக்கு முன்னால் சென்ற கார் ஒருவனை மோதித் தள்ளிவிட்டு விரைவாக சென்றுவிட, இவரும் இவர் கணவரும் அடிப்பட்டவனை மருத்துவமனையில் சேர்ப்பிக்க படும் கஷ்டங்கள். போலீஸ் வந்து அவரது கணவனையே சந்தேகத்தின் பெயரில் கைது செய்து தெரியாத்தனமாக போயும் போயும் இவரிடம் லஞ்சம் கேட்க, அவர் பொங்கியெழுந்து ருத்ரதாண்டவம் ஆடி சம்பந்தப்பட்ட போலீஸ்காரனுக்கு பாடம் கற்பிக்கிறார். ஆனால் இதை செய்ய மூன்று வாரங்கள் ஆகின்றன. ஆனால் மொத்தமாக நிகழ்ச்சிகள் நடக்கும் காலக்கட்டமோ சில மணிகளே.

சற்று குழப்பமாகத் தோன்றுகிறதா? நான் இத்தனை நேரம் குறிப்பிட்டது சமீபத்தில் 1985-ல் தொலைக்காட்சியில் வந்த "ரஜனி" என்னும் ஹிந்தி சீரியலே. ரஜனியாக வந்து போடுபோடென்று போட்டவர் ப்ரியா டெண்டுல்கர். அவரது கணவராக நடித்தவர் கரண் ராஜ்தான் என்பவர். உண்மை வாழ்க்கையிலும் அவரது கணவர் அவர். இந்த சீரியல் அமோக வெற்றி பெற்றது. ப்ரியாவை எல்லோரும் ரஜனி என்றே அழைத்தனர்.

இந்த சீரியலை எடுத்தவர் பாசு சாட்டர்ஜி என்பவர். இந்த சீரியல் பலரை வேவ்வ்று முறையில் பாதித்தது. அதற்கு ஒரு உதாரணம் நசீருத்தின் ஷா நடித்த ஜல்வா என்னும் திரைப்படம். நசீருத்தின் ஷாவும் அவர் நண்பரும் ஒரு டாக்சியில் ஏறுகிறார்கள். டிரைவருக்கு முன்னால் ஒருவருடைய புகைப்படம். அது யாருடையது என்று யதார்த்தமாகக் கேட்க டாக்சி ட்ரைவர் பொங்கி எழுகிறார். "அது பாசு சாட்டர்ஜியின் படம். ரஜனி சீரியல் எடுத்தவர். டாக்சி டிரைவர்களை ரொம்பவே தாக்கி அதில் ஒரு எபிசோட் வருகிறது. டாக்சி டிரைவர்களின் கஷ்டங்களைப் பற்றி அதில் ஒரு வார்த்தையும் இல்லை. ஆகவே அவரை நேரில் பார்த்தால் செருப்பால் அடிக்க வேண்டும்" என்றெல்லாம் அவர் உணர்ச்சி வசப்படுகிறார். இப்போதுதான் வேடிக்கை. இவர்கள் சேர வேண்டிய இடம் வர இறங்கிக் கொள்கின்றனர். அப்போது அப்பக்கம் வந்து டாக்சியில் இன்னொருவர் ஏற யார் என்று பார்த்தால் நிஜமாகவே பாசு சாட்டர்ஜிதான் அது. ஒரு நிமிடம் டாக்ஸி டிரைவர் திகைக்கிறார். நசிருத்தீன்ஷாவும் அவரது நண்பனும் பேச்சு வராமல் தவிக்கின்றனர். அடுத்த காட்சியில் டாக்சி டிரைவர் கையில் செருப்பை எடுத்து கொண்டு பாசு சாட்டர்ஜியைத் துரத்துகிறார். அவர் குதிகால் பிடரியில் பட ஓடுகிறார். அதை நினைத்து நினைத்து நண்பர்கள் சிரிக்கின்றனர்.

இந்த சீரியல் பல விஷயங்களைக் கூறுகிறது. நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. கேளுங்கள் தரப்படும், புகார் எப்படி செய்வது என்பதையெல்லாம் சுருக்கமாகக் காட்டுகின்றனர். இது சம்பந்தமாக நான் போட்ட பதிவுகள்:
1
2
3

ரஜனி அவர்களோ, நேரடி நடவடிக்கைதான்.

ப்ரியா டெண்டுல்கர் 2002-ல் மாரடைப்பில் காலமானார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/05/2007

கோலங்கள் தொல்காப்பியனை நான் கேட்ட கேள்வி

தலைப்புக்கு பிறகு வருகிறேன். நான் ஏற்கனவே இப்பதிவில் கூறியது போல, சீரியல்களை அவ்வளவு சுலபமாக அலட்சியம் செய்துவிட முடியாது. அதிலும் மிகச் சிறப்பாக எடுக்கப்படும் சீரியல்கள் விஷயத்தில் நான் கூறுவது அதிகமாகவே பொருந்தும். கடந்த 25 வருடங்களாக நான் பார்த்த சீரியல்களை வைத்துத்தான் பேசுகிறேன். இப்போது கூட ஹிந்தி சீரியல்களான நுக்கட், ஹம்லோக், புனியாத், தர்பண், கதா சாகர், யே ஜோ ஹை ஜிந்தகி ஆகியவை மனதில் நிற்கின்றன. அதே போலத்தான் விழுதுகள், சித்தி, மெட்டி ஒலி, மலர்கள் ஆகியவையும். இப்போது ஓடும் சீரியல்களில் முக்கியமான கோலங்கள் பற்றித்தான் இப்பதிவு பேசுகிறது.

நேற்று யதேச்சையாக சன் மியூசிக் சேனல் ஆன் செய்ய அதில் திருச்செல்வம் அவர்களை நேயர்கள் கேள்வி கேட்கலாம் என ஒரு டெலிஃபோன் எண்ணை திரையில் தந்தனர். நானும் அதை டயல் செய்ய கனென்க்ஷனும் கிடைத்தது. "தயவு செய்து காத்திருக்கவும்" என்ற அறிவிப்பு அடுத்த 20 நிமிடங்களுக்கு வந்து கொண்டிருந்தது. நிஜமாகவே லைவ் ப்ரொக்ராம்தான். நிகழ்ச்சி அது பாட்டுக்கு சென்று கொண்டிருந்தது. திருச்செல்வம் அவர்களும் நேயர் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரும் அவரை தொல்காப்பியன் என்றே குறிப்பிட்டுப் பேசினர். எனது முறை வந்தது.

எனது பெயர், இடம், நான் என்ன செய்கிறேன் ஆகியவற்றை சம்பிரதாயமாகக் கேட்டு அவற்றுக்கு நான் பதிலளித்தவுடன் எனது கேள்விக்கு வந்தேன்.

முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்தினேன். அதாவது சீரியல் நல்ல முறையிலேயே படமாக்கப்படுகிறது, ஆகவே பெரும்பான்மையான நேயர்கள் இதில் ஈடுபாட்டுடன் இருக்கின்றனர். ஆகவே சீரியல் தயாரிப்பாளர்களுக்கும் சில கடமைகள் உள்ளன. அந்த வரிசையில் இந்த சீரியல் ஆணாதிக்கத்தை நிலை நிறுத்துகிறதோ என்ற எனது அச்சத்தை வெளியிட்டேன். உதாரணமாக பாஸ்கர் விவாகரத்து கேட்டு அபியிடம் தான் இன்னொரு மணம் செய்து கொள்ள அவளுக்கு ஆட்சேபணை இல்லை என எழுதி வாங்குகிறான். அதே மாதிரி கடிதத்தை அபியும் கேட்டு வாங்குவதாக ஏன் கதையில் காண்பிக்கவில்லை என்பதுதான் என் கேள்வி. அதற்கு தொல்காப்பியன் அபி என்ற பாத்திரம் மறுமணத்தில் நம்பிக்கை வைக்கவில்லை என்றே பதிலளித்தார். ஆனால் எனது பார்வை வேறுவிதமாக இருந்தது. பாஸ்கர் அவளுக்கு மறுதாலி கட்டப்போவதாகத்தான் கதையை இப்போது கொண்டுபோகிறார்கள். ஆகவே அவள் பாஸ்கருக்காகவே புனிதமாக வைக்கப்படுகிறாள் என்ற எண்ணத்தையும் கேள்வியாக வெளிப்படுத்தினேன். அப்படியெல்லாம் பிரெடிக்ட் செய்ய முடியாது என்று மட்டும் கூறினார் தொல்காப்பியன். அதற்குள் எனது நேரம் முடிந்து விட்டது.

இப்போது இங்கு சற்று விஸ்தாரமாக பேசுவோம்.

நான் ஏற்கனவே இப்பதிவில் எழுதியதுதான். ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் உணர்ச்சிகள் பொதுதான் என்பதை தைரியமாக ஒத்துக் கொள்ள பலருக்கும் மனம் இல்லை. சீரியல்களில் ஆணுக்கு சர்வசாதாரணமாக இரு மனைவியர் வைப்பவர்கள், ஒரு பெண் மனவேறுபாட்டில் கணவனைப் விவாகரத்து செய்து இன்னொருவனை மணப்பதாக வந்தால் முக்கால்வாசி அப்பெண் வில்லியாகத்தான் கதையில் வருவாள். (உதாரணம் "வரம்" என்னும் சீரியல்). கோலங்கள் சீரியலிலும் அபிக்கு அவளுக்குத் தெரியாமலேயே அவள் மாஜிக் கணவனை விட்டு மறுத்தாலி கட்ட வைப்பதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. எவ்வளவு அபத்தம்? அபி என்னும் பெண் தன் மனவுறுதியால் முன்னுக்கு வருபவள். பாஸ்கர் என்பவன் சரியான சோம்பேறி, நல்ல வேலையில் கூட இல்லை. அவனுக்கு இப்பெண்ணை கட்டிவைக்க அப்பெண்ணின் தாய் முதற்கொண்டு ஏற்பாடு செய்கின்றனர். அந்தத் தாய் சொல்லும் காரணங்கள் குழந்தைத்தனமாகவே உள்ளன. பக்கா ஆணாதிக்கத்தை வலியுறுத்துகிறது இந்த சீரியல். அதே சமயம் எல்லோருமே அற்புதமாகவும் சுவையாகவும் நடித்து சீரியலும் நன்றாக உள்ளது. ஆகவேதான் சீரியல் தயாரிப்பாளர்களின் பொறுப்பு அதிகமாகிறது. நேயர்களுக்கு பல தவறான சமிக்ஞைகள் தரப்படுகின்றன. இவற்றில் பல டிஆர்பி ரேட்டிங் என்ற மாயபிம்பத்துக்காகவே உள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: இப்பதிவை தமிழ்மணத்தில் சேர்க்க இயலவில்லை. ஆகவே அதுவாகவே சேரும்போது இதை விவாத மேடையில் வகைப்படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்.

12/24/2006

நான் ரசித்த ஹிந்தி சீரியல்கள் - 1

ஹம்லோக்:
சமீபத்தில் 1984-85 ல் நான் தில்லியில் வசித்து வந்த போது திடீரென ஃபோன் அடித்தது. சென்னையிலிருந்து எஸ்டிடி. என் மைத்துனன் பேசினான். "டோண்டு, எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டுமே" என்று ஆரம்பிததான். நான் சட்டென்று கூறினேன், இங்க பாருடா, டிவி-லே ஹம்லோக் காண்பிச்சிட்டிருக்கான். இப்போ பேச நேரம் இல்லை. உன் தங்கையுடன் பேசிக் கொள் அவள் எனக்கு விஷயத்தை பின்னால் கூறுவாள்" என்று கூறி, ஒலி வாங்கியை என் வீட்டம்மாவிடம் கொடுத்துவிட்டு சீரியலை பார்க்கச் சென்றேன். அவன் அதற்காகக் கோபித்துக் கொண்டு அடுத்த முறை சென்னை சென்றபோது ரொம்ப நேரம் (5 நிமிடங்கள்) பேசாமல் இருந்துவிட்டு பிறகுதான் பேசினான்.

இங்கே எதற்கு இதை கூறினேன் என்றால், ஹம்லோக் என்ற சீரியலை நான் எந்த அளவுக்கு பார்த்து வந்திருக்கிறேன் என்பதைக் கூறவே. வாரத்துக்கு மூன்று நாள் ஹம்லோக் காட்டப்பட்டது. அது ஒளிபரப்பாகும் நேரங்களில் தில்லி தெருவெல்லாம் வெறிச்சோடி கிடக்கும். அடுத்த நாள் பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் முந்தைய நாள் காட்டப்பட்ட எபிஸோடை பற்றி எல்லோரும் காரசாரமாக விவாதம் புரிவார்கள். ஒவ்வொரு எபிசோட் முடிந்ததும் திரைப்பட நடிகர் அசோக் குமார் நடந்து முடிந்த பகுதியை அலசுவார். அடுத்த எபிசோடில் என்ன காட்டப் போகிறார்கள் என்பதையும் கோடி காட்டுவார். (அதே சமயம் சென்னையில் முதல் சில எபிசோடுகளில் ஜெமினி கணேசனும், பிறகு வி.எஸ்.ராகவனும் எபிசோடுக்கு முன்னால் அதில் வரப்போகும் நிகழ்ச்சிகளை பற்றி கதை சுருக்கம் அளிப்பார்கள். சீரியல் என்னவோ ஹிந்தியில்தான் வரும்).

பசேஸர் ராமுக்கு மூன்று பெண்கள், பட்கி (பெரிய சகோதரி்), மஜ்லி (நடு சகோதரி), சுட்கி (குட்டி சகோதரி), இரண்டு பிள்ளைகள், லல்லு, நன்னே. பசேஸர் ராமின் மனைவி, பாட்டி, தாத்தா (பசேஸர் ராமின் அம்மா மற்றும் அப்பா). பசேஸர் ராம் ஏற்கனவே ஒரு மனைவியை இழந்தவர். அவர் வழியில் இரண்டு பெண்கள், ஏற்கனவே மணமானவ்ர்கள். ஆனால் முதல் சில எபிசோடுகளுக்கு பிறகு காணாமல் போனவர்கள்.

மேற்கண்ட குடும்பத்தினரை சுற்றியே கதை போகிறது. பாட்டி கூட சில எபிசோடுகளுக்கு பிறகுதான் கதைக்கே வருகிறார். அதே போல வெளிநாட்டு சித்தப்பா (பசேஸர் ராமின் தம்பி), சித்தி மறறும் அவர் குழந்தைகள் ஆகியோரும் நடுவில் வந்து சேருகின்றனர். குடும்பத் தலைவிக்கு திடீரன ஒரு தம்பியையும் அவரது குடும்பத்தினரையும் வேறு கதையில் புகுத்தினர். அதாவது ராக்கி சகோதரன் (உடன்பிறவா சகோதரன்). இந்த குடும்பம் தமிழ்க் குடும்பம். அவ்வப்போது தமிழில் வேறு டயலாக் வரும். தமாஷாக இருக்கும்.

மேலே கூறியவை எல்லாம் கதையில் மிக நாசுக்காகச் சேர்க்கப்பட்டன. தில்லியில் பொருளாதார ரீதியில் கீழ் நடுத்தர குடும்பம். இருப்பது வாடகை வீடு. இந்த குடும்பத்தில் நடக்கும் தினப்படி நிகழ்ச்சிகள். அதுதான் சீரியல். ஒவ்வொரு பாத்திரத்தையும் சிற்பி செதுக்குவதுபோல நன்றாகவே செதுக்கியிருந்தனர். இன்னொரு விசேஷம், இதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. அதாவது, ஒவ்வொரு எபிசோடிலும் வரும் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும் தேதியன்றே நடை பெறுவதாகக் காட்டியிருப்பார்கள். உதாரணத்துக்கு 1985 ஜனவரி 26-ஆம் தேதி அன்று ஒளிபரப்பப்பட்ட எபிசோடில் அன்று காலை லைவாக காட்டப்பட்ட அணிவகுப்பை காட்டி, அதை குடும்பத்தினர் பார்ப்பதுபோல அமைத்திருந்தார்கள். திடீரென பாட்டி கத்துவாள், "பார் உங்கள் தாத்தாவும் அணிவகுப்பில் போகிறார்" என்று. (அப்பாத்திரம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர், அவரும் அந்த பரேடில் மார்ச் செய்ததாக நிகழ்ச்சி). அதே போல அந்த ஆண்டு தீபாவளியின் போது ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியிலும் அதே உத்தி. பல எபிசோடுகளில் தினசரி காலண்டரை ஏதாவது ஒரு ஷாட்டில் காட்டுவார்கள். அது எபிசோட் ஒளிபரப்பாகும் தேதியையே காட்டும். இதனால் என்ன ஆயிற்றென்றால், பார்வையாளர்களுக்கு நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பாகப் பார்க்கும் உணர்ச்சியைத் தரும். இந்த விஷயமும் அந்த சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.

அக்காலக் கட்டத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸில் சுதீர் தார் அவர்களது கேலிச் சித்திரம் ஒன்று வந்தது. அதில் மீட்டிங் நடக்கும் ஹாலில் அமைப்பாளர்களைத் தவிர பார்வையாளர்கள் இல்லாமல் ஈ அடிக்கும். ஒரு அமைப்பாளர் இன்னொரு அமைப்பாளரைப் பார்த்து பல்லைக் கடிப்பார், "எந்த முட்டாப்பயபுள்ள ஹம்லோக் சமயத்துல இந்த மீட்டிங்கின் நேரத்தை வச்சான்?"

சீரியலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், பார்வையாளர்கள் கொடுத்த எதிர்வினைகளுக்கேற்ப பிந்தைய எபிசோடுகளை மாற்றி வடிவமைத்ததுதான். முக்கியமாக இந்த பட்கியின் பாத்திரத்தையே எடுத்துக் கொள்வோம். எல்லோருக்கும் நல்லது சொல்லும் இந்த பாத்திரம் தனக்கு என்று வரும்போது மட்டும் சுயநலமாக நடந்து கொள்ளும். மக்களுக்கு அந்த பாத்திரத்தின் மேல் ஒரு எரிச்சலே பிற்காலத்தில் வந்தது. அதற்கேற்ப ஒரு எபிசோடில் பக்கத்து வீட்டுக்காரி அப்பாத்திரத்தின் பலவீனங்களைத் தாக்கி, கிழி கிழி என்று கிழித்து தோரணமிடுவார். இதெல்லாம் பார்வையாளர்கள் கொடுத்த எதிர்வினையின் பலனே.

100வது எபிசோடில் பட்கியின் திருமணம் காட்டப்பட்டது. அன்று தில்லி தெருக்களே ஈயடித்தன. கடைக்காரர்கள் கூட கடைகளைப் பூட்டிக் கொண்டு வீடு போய் சேர்ந்தார்கள். அவ்வப்போது லாஹூருக்கு பெரிய மனிதர்கள் யாராவது வரும்போது வேண்டுமென்றே ஹம்லோக்கில் சுவாரசியமான நிகழ்ச்சிகளை அமிர்த்தசர் டிவியில் காண்பித்து லாஹூர் நிகழ்ச்சிகளை பிசுபிசுக்க செய்துவிடுவதாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் வேறு அவப்போது பொருமுவார்கள். அதே அரசு அதிகாரிகளில் அதற்குப் பின் வந்த "புனியாத்"தில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டபோது, அவ்வாறு பொருமாமல் அவர்களும் அந்த எபிசோட்டைப் பார்த்தனர். அது பற்றி அடுத்த பதிவில் மேலும் விவரமாக.

இம்மாதிரி சீரியல்களை முழுதும் ரசித்து பார்க்க எனது ஹிந்தி அறிவு மிகவும் பயன்பட்டது. தில்லியில் இருந்த 20 வருடங்களுமே, வெளியூரில் இருக்கும் எண்ணமே வராதவகையில் கழிந்தன என்பதையும் இப்போது மகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/10/2006

சீரியல்கள், சங்கடங்கள்

சோப் ஆபெரா என்று செல்லமாக அழைக்கப்படும் மெகா சீரியல்கள் முதலில் அறிமுகமானது அமெரிக்காவிலேதான். ஐம்பது, அறுபது, எழுபதுகளில் பிரபலமான சீரியல்கள் I love Lucy, Dennis the menace, I love Jeannie, Bewitched, Dallas, Dynasty ஆகியவை. நான் இங்கு பேசப்போவது முழுக்கவும் அவற்றைப் பற்றியல்ல. அவற்றை எடுக்கும்போது எழுந்த சங்கடங்களைப் பற்றியே. உதாரணத்துக்கு Dennis the menace. இது சுமார் மூன்று வயதுடைய சிறுவனின் விஷமங்களை விவரிக்கும். ஆனால் இதெல்லாம் கார்ட்டூன்களில் மட்டுமே சாத்தியமாயிற்று. டைரக்டர் சொல்வதை சரியாக உள்வாங்கி பல எபிஸோட்கள் ஷூட் செய்ய தேவையான குழந்தையைக் கண்டுபிடிப்பது கடினமே. ஆகவே ஒரு வேலை செய்தார்கள். டென்னிசுக்கு வயது 11 என்று கதையை மாற்றினார்கள்.

இது முதல் மாடிஃபிகேஷன். இந்த சீரியல்கள் எல்லா எபிஸோடுகளிலும் வருபவர்கள், டென்னிஸ், அவன் தந்தை, தாய், பக்கத்து வீட்டுக்காரர் மிஸ்டர் வில்ஸன் அவர் மனைவி மார்த்தா வில்சன் ஆகியோரே. பிற முக்கிய பாத்திரங்கள் ஜோயீ என்ற சிறுவன், டென்னிசுக்கு சிஷ்யன், மார்க்கரெட் என்னும் சிறுமி வயதுக்கு மீறிய அறிவு மற்றும் படிப்புடன், அவ்வப்போது வரும் ஜீனா என்னும் இத்தாலியச் சிறுமி, இவளை மட்டும் டென்னிசுக்கு பிடிக்கும். மார்க்கரெட் போன்ற இதர சிறுமிகள் அவனுக்கு பிடிக்காது.

சில வருடங்களுக்கு முன்னால் ஐம்பதுகளில் வந்த இந்த சீரியலின் எபிசோட்களை மறுபடி டெலிகாஸ்ட் செய்தார்கள், ஹிந்தி டப்பிங்கில். திடீரென் வில்சன் பாத்திரத்தில் வந்த நடிகர் ஷூட்டிங்கிற்கு வரமுடியாமல் போக, வில்சன் வெளியூருக்கு சென்றிருப்பதாகவும், அவர் அண்ணா வேலை விஷயமாக வில்சன் வீட்டுக்கு வந்து தங்குவதாகவும் கதைகள் எடுக்கப்பட்டன. திடீரென அவ்ரும் ஒரு எபிசோடில் இல்லாமல் போக உள்ளூர் மளிகைக் கடைக்காரர் பாத்திரத்தை இந்த பாத்திரத்துக்காக ஒப்பேற்றினர்.

நான் கூற வருவது என்னவென்றால், இம்மாதிரி நடிக நடிகையர் மாற்றம் வரும்போதெல்லாம் மெனக்கெட்டு சிரமம் எடுத்து கதையை எல்லாம் மாற்றினர்.

அதே போலத்தான் ஹிந்தி சீரியல்களிலும். எண்பதுகளில் வந்த "யே ஜோ ஹை ஜிந்தகி" என்ற சீரியலில் முக்கிய நடிகர் ஷாஃபி இனாம்தார் சீரியலை விட்டு சிலகாலத்துக்கு விலக, அந்த பாத்திரம் வெளிதேசத்துக்கு போனதாக கதையை மாற்றி ஒப்பேற்றினர். இன்னொரு சீரியல் "டைகர்". கதாநாயக நடிகரை மாற்ற கையாளப்பட்ட உத்தி தமாஷானது. அதாவது ஒரு விபத்தில் கதாநாயகனின் முகம் சிதைக்கப்பட, பிளாஸ்டிக் சர்ஜெரி செய்கிறார்கள். இப்போது இருக்கும் முகம் புது கதாநாயக நடிகருடையது.

இன்னும் அதிகக் கொடுமை "ஒரு பெண்ணின் கதை" என்னும் சீரியல். அதில் நடித்த நடிகர் பாரி வெங்கட் பஸ் விபத்தில் இறந்துவிட (சீரியலில் அல்ல, நிஜமாகவே), கதையை மேலே எப்படி எடுத்து செல்வது என்ற குழப்பம். சீரியலில் பாத்திரமும் விபத்தில் இறப்பது போலவே காட்டிவிடுகின்றனர். ஆனால் மனைவியாக நடித்த பாத்திரத்துக்கு புத்தி பிசகி விடுகிறதாம். துக்கம் விசாரிக்க வந்தவர்களில் ஒருவரது முகம் அவர் கண்ணுக்கு மட்டும் பாரி வெங்கட்டின் உருவமாகத் தெரிகிறதாம். ஆகவே கணவர் இறக்கவில்லை என்று கூறி அவருடன் வாழப்போவதாக பிடிவாதம் பிடித்து, மருத்துவ ஆலோசனைப்படி மற்றவரும் இந்த நாடகத்துக்கு ஒத்துக் கொண்டு,... இப்படி போகிறது கதை. அதற்குமேல் அந்த சீரியலை பார்க்க பொறுமையில்லை எனக்கு.

ஆனால் இப்போது? சர்வசாதாரணமாக திடீரென ஒரு நாள் பழைய நடிகரின் முகத்தை க்ளோஸ் அப்பில் காட்டிவிட்டு மார்ஃபிங் செய்து புது நடிகரின் முகமாகக் காட்டுகின்றனர். கீழே ஒரு அறிவிப்பு: "இவருக்கு பதில் அவர்". தீர்ந்தது பிரச்சினை.

எனக்கென்னவோ இதுவே சரியான, நேர்மையான உத்தியாகத் தெரிகிறது. இம்மாதிரி பல சீரியல்களில் செய்து விட்டார்கள், செய்தும் வருகிறார்கள். உதாரணத்துக்கு: வரம், மலர்கள் (நடிகை வைஷ்ணவியின் மரணத்தால்), அலைகள், கோலங்கள், பல்லாங்குழி, முதலியன.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/22/2005

மெட்டி ஒலி - என் பார்வை

இத்தொடரை நான் ஏறக்குறைய முழுமையாகப் பார்த்தேன் என்றுதான் கூற வேண்டும். சுமார் 810 தொடர்களில் ஒரு 40 தொடர்கள் மட்டும் பார்க்காமல் விடப்பட்டிருக்கும். சில சமயம் காட்சி ரொம்ப மனக்கிலேசம் அளிப்பதாகவிருந்தால் என் கணினி இருக்கும் அறைக்கு சென்று என் மொழி பெயர்ப்பு வேலைகளில் ஈடுபடுவேன். சில நேரங்களில் தமிழகத்தில் சொந்த விஷயமாகச் சுற்றுப்பயணம் செல்லும்போது ஹோட்டலுக்கு காரில் செல்வதற்குள் 9.30 மணி ஆகியிருக்கும். ஆனால் ஒன்று அந்த 40 சொச்சத் தொடர்களில் சிலவற்றை ஜெமினியில் தெலுங்கில் பார்த்து விட்டேன். ஆகவே நான் கூறப்போவது ஓரக்கண்ணால் பார்த்து அல்ல, இரண்டு கண்களையும் திறந்து வைத்துக்கொண்டு பார்த்ததின் பலனே.

மெட்டி ஒலி பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/01/even-scene-in-mega-serial-can-be.html
அதில் கூறிய கருத்தை இப்போதும் உறுதி செய்கிறேன். ஒருவர் விடாமல் அடிக்க மற்றொருவர் பொறுமை என்ற பெயரில் விடாமல் தாங்கிக் கொள்வது ஒரு அலுப்பையே கொடுக்கிறது. ஒரு தலை யுத்தத்தை எவ்வளவு நேரம்தான் பார்ப்பது? கடைசியில் ஒரு முறை மன்னிப்பு கேட்டு விட்டால் செய்ததெல்லாம் மறந்து விடுமா என்ன? "ஒறுத்தாருக்கு ஒரு நாளை இன்பம், பொறுத்தாருக்கு பொன்றும் துணையும் புகழ்" என அய்யன் அவர்கள் எழுதி வைத்தாலும் வைத்தார், சீரியல்காரர்கள் இதையே பிடித்து கொண்டு தொங்குகிறார்கள். சிறுமை கண்டு பொங்கச் சொன்ன பாரதியே எனக்கு அதிகச் சிறப்புடையவராகத் தோன்றுகிறார். ஒரு கன்னத்தில் அறைந்தால் அறைந்தவன் இரு கன்னத்திலும் மாறிமாறி அறைவதுதான் எனக்கு பிடிக்கும். வாழு வாழ விடு என்பதே என் கொள்கை.

ஒருவரே செயலாற்றுவது மற்றவர்கள் அதைப் பேசாமல் ஏற்றுக்கொள்வது அல்லது பலவீனமாக எதிர்வினை ஆற்றுவது என்பதையே அதிகம் காட்டினால் திகட்டி விடும். எல்லா தளங்களிலிருந்தும் செயல் வந்து அதை எதிர்த்து செயல் புரிதல் என்ற அளவில் காட்சிகள் அமைத்தால் அவை விருவிருப்பாக அமையும்.

மெட்டி ஒலி அந்த வகையில் தோல்வி அடைந்துள்ளது. சரோவின் மாமியாரும் கணவனும் கடைசி வரை அராஜகம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பல கொடூர மனதுடையோருக்கு மேலும் ஐடியாக்கள் கொடுப்பதாகவே அமைந்தன அவ்வகைக் காட்சிகள். ரவியின் கதையும் அஃதே. திருந்துவது கூட சீரியலை முடிக்க வேண்டுமே என்பதற்காகத் திணிக்கப்பட்டக் காட்சிகளே. செயற்கையாகவே தோன்றுகின்றன. ஆணாதிக்கம் போற்றப்பட்டிருக்கிறது. வேலி தாண்டிய மாணிக்கம் பலமுறை மன்னிக்கப்பட்டிருக்க ஒரு முறை அறியாமையில் கணவனைப் பிரிந்த அருந்ததி மிகக் கொடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார். செல்வத்தையும் அருந்ததியையும் சேர்த்து வைத்திருந்தால் அது நியாயம். சக்தியின் பாத்திரப்படைப்பு தேவையற்ற ஒன்று. எபிஸோடுகளின் எண்ணிக்கையை பலப்படுத்துவதற்கே அது திணிக்கப்பட்டுள்ளது. திருமுருகனால் நிச்சயமாக இம்மாதிரி செல்வத்தையும் அருந்ததியையும் சேர்த்து வைத்திருக்க முடியும். அவருள் இருக்கும் ஆண் அதை செய்யவிடவில்லை. இதே பலவீனம் மற்ற எல்லா இயக்குனர்களிடமும் உள்ளன என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்.

இவ்வளவெல்லாம் இருந்தாலும் ஏன் நான் இந்த சீரியலை விடாது பார்த்தேன்? சீரியல் விருவிருப்பாக எடுக்கப்பட்டிருந்தது. நடிக நடிகைகள் தேர்வு அபாரம். எல்லோரும் பாத்திரங்களாகவே மாறிவிட்டிருந்தனர் ஆகியவையும் சீரியலின் புகழுக்கு காரணம்.

ஆனால் ஒன்று. அடுத்து வரும் முஹூர்த்தம் சீரியலை பார்க்க வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறேன். கொஞ்ச நாளைக்காவது சீரியல் போதையிலிருந்து விடுபட ஆசை.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது