5/20/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 20.05.2012

ஐ.பி.எல். மேட்ச் ஃபிக்ஸிங் கூத்துக்கள்
ஒரு மேட்ச் சம்பந்தமாக என்றென்றும் அன்புடன் பாலா எழுதியிருந்தார்,

1 பந்து 4 ரன்கள் தேவை. இப்போது கூட சென்னை ஜெயித்திருக்கலாம், அவர் ஒரு well directed short ball வீசியிருந்தால்! தோனி வந்து அறிவுறுத்தியும், ஹில்ஃபன்ஹாஸ் அந்த கடைசி பந்தை over pitch பண்ணியதால், காட்டான் ஸ்மித் காட்டுத்தனமாக அடித்ததில், பந்து பவுண்டரிக்கு பறந்தது. மும்பை என்ற மிகச்சாதாரண அணிக்கு இன்னொரு ஓசி வெற்றி! மும்பை வென்றது என்பதை விட சென்னை தோற்றது என்பது சரியாக இருக்கும்.

இது மேட்ச் ஃபிக்ஸிங் இல்லாமல் வேறென்ன என்பது எனக்குப் புரியவில்லை.  இப்போது ஷாருக்கான் அடிக்கும் கூத்து வேறு சகிக்கவில்லை. ஐ.பி.எல். இன்னும் நமக்குத் தேவைதானா?

இப்போதுதான் பாலா அவர்களுடன் இது பற்றி தொலை பேசினேன். அவரும் ஒரு மாதிரியான குழப்பத்தில்தான் இருக்கிறார். ஒரு போஸ்ட் போடப்போவதாகக் கூறினார். அதை படிக்க ஆவலாக உள்ளேன்.

ஜெயேந்திரர், நித்தியானந்தர், மதுரை ஆதீனம் போன்றவர்கள்.
ஜெயேந்திரருக்கு யாராவது டேமேஜ் லிமிட்டிங் பற்றி சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும். தன் மேல் இத்தனை குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டு அவர் தேவையில்லாமல் நித்தியானந்தர் விஷயத்தில் ஏன் கருத்து தெரிவிக்க வேண்டும்?

ஜெயேந்திரர் பற்றி நான் ஏற்கனவேயே பின்னூட்டம் ஒன்றில் எழுதியிருப்பதை இங்கே மீண்டும் தருகிறேன்.
//காஞ்சி பெரியவர் மீது அனு வைத்த குற்றச்சாட்டுகளை எவ்வாறு பார்க்கிறீர்கள் ...//
அனு பொய்யுரைப்பார் என்பதை நான் நம்பவில்லை. அதுவும் இம்மாதிரியான விஷயங்களை பெண்கள் ஜாக்கிரதையாகவே கையாளுவார்கள். ஏனெனில் இது சம்பந்தமாக அவர்கள்மீதும் சேறடிக்க முயற்சிகள் நடக்கும்.

இந்த விவகாரத்தை நான் இங்கு அடக்கி வாசிக்கும் காரணமே ஜெயேந்திரருக்காக இல்லை. காலஞ்சென்ற அனுவின் மேல் வேறு யாரும் அவதூறு செய்யக்கூடாது என்பதாலேயே. 

நீங்கள் யோக்கியமாக இருந்தால் மட்டும் போதாது, அவ்வாறான தோற்றத்தையும் அளிக்க வேண்டும் என்று பொருள் வருமாறு ஆங்கிலத்தில் It is not sufficient that you are honest, you should also appear to be honest ஒரு சொலவடை உண்டு. 

அதன்படி ஜெயேந்திரர் என்னைப் பொருத்தவரை தேறவில்லை. மீதி விஷயங்கள் கோர்ட்டில் இருப்பதால் இப்போதைக்கு இது பற்றி மேலே பேச விருப்பம் இல்லை.


நித்தியானந்தர் இன்னொரு காமெடி பீஸ். அவரை சீரியசாக பலர் எடுத்துக் கொள்வது ஒரு டிராஜெடியே. என்ன செய்வது? காமெடியும் டிராஜெடியும் கலந்து தருவதுதான் வாழ்க்கையே. நான் எனது முந்தைய பதிவு ஒன்றில் இவ்வாறு எழுதியிருந்தேன். 


ஆனால் (பெரியாரது பொருந்தா திருமணம் நடந்து) இவ்வளவு ஆண்டுகளுக்கு பின்னால் இப்போதேல்லாம் பெரியார் செய்ததற்கு சப்பைக்கட்டு கட்டுபவர்கள்தான் அனேகம். மனிதன்மனம் விசித்திரமானது. நம்ப விரும்புவதை ஏதேனும் செய்தாவது, தலையை கொடுத்தாவது நம்பும். அதே போல நித்தியானந்தருக்கும் சப்பைகட்டு கட்ட வருவார்களாக இருக்கும். அவரைப் பொருத்தவரை இதுவும் கடந்துபோகுமாக இருக்கும்.என்னைப் பொருத்தவரை மொத்தத்தில் சாமியார்கள் என்றாலே எனக்கு அலர்ஜிதான். நித்தியானந்தரும் அதற்கு விதிவிலக்கல்ல. நாமே நேரடியாக சாமி கும்பிடுவதை விடுத்து இது என்ன இம்மாதிரி புரோக்கர்களை தேடுவது?

அதற்கேற்றாப்போல் இப்போதே நித்தியானந்தருக்கான சப்பைக் கட்டுகள் ஆரம்பமாகி விட்டன.

இப்போது சீனியர் காமெடி பீஸான மதுரை ஆதீனம் என்ன சொல்றார்?

அதாகப்பட்டது, சிவபெருமானே என் கனவில் வந்து நித்தியானந்தாவை அடுத்த ஆதீனமாக அறிவிக்கச் சொன்னார் என்கிறார் மதுரை ஆதீனம்
டோண்டுவின் கேள்வி: இது சிவபெருமானுக்குத் தெரியுமா?

எனது ரோல் மாடல் யுவராஜ் சிங்தான்
சும்மா சொல்லப்படாது கேன்சர் ட்ரீட்மெண்டை முடித்துக் கொண்டு மீண்டும் கிரிக்கெட்டில் ஆழ்ந்து ஈடுப்டப்போவதாகக் கூறியுள்ளார். அவரே எனது ரோல் மாடல்.

தொடையில் ட்யூமர் ஆப்பரேஷனுக்கு பிறகு டியூமர் மலிக்னண்ட் எனத் தெரிய வந்தது. இது Sarcoma (cancer) of the soft tissues என டயாக்னஸ் செய்யப்பட்டது. 33 கதிரியக்க சிகிச்சைகள், ஆறு கீமோதெரபி என நடந்தன. நேற்றுத்தான் கடைசி கீமோதெரபி. இனிமேல் செக்கப்புக்கு வந்தால் போதும் என எனது டாக்டர் திரு. பூபாலன் அவர்கள் கூறிவிட்டார்.

சில நல்லதுகள் நடந்தன. முடி எல்லாம் கொட்டி விட்டது. ஹேர் கட்டிற்கான அறுபது ரூபாய் மிச்சம் :))). எல்லா உதவியையும் செய்யத் தயாராக வந்த உறவுகளுக்கும் நன்றி. கடவுள் புண்ணியத்தில் கடன் எதுவும் வாங்கவில்லை.

இனிமேல் பழைய வாழ்க்கைக்கு. முழுவீச்சுடன் திரும்ப வேண்டும், யுவராஜ் சிங்கைப் போல.

என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளுடனும் அதனால் பெறும் எனது தன்னம்பிக்கையோடும் வெற்றி பெறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்.
5/17/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 17.05.2012

கையில் ஒரு கோடி ஆர் யு ரெடி?
இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்காக கேள்வி கேட்கப்படும். விடையை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்.

சரியான விடை (மிகவுமே எளிமையான கேள்விகள்தான்)அனுப்பியவர்களில் நூறு பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும். அந்த வரிசையில் மார்ச் இறுதியில் நடந்த நிகழ்ச்சிக்கான பரிசு எனக்கும் கிடைத்தது. ஆனால் அந்தோ, அதை அறிவித்த பிறகு நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் கிணற்றில் கல் போட்ட நிலையில் இருக்கிறார்கள். எப்போது தருவார்கள், அல்லது தருவார்களா என்பதெல்லாம் புரிவதில்லை.பார்ப்போம்.

அப்ட்டேட்டட்: 1000 ரூபாய்க்கு செக் அனுப்பித்து விட்டார்கள். வாழ்க வளமுடன்.

தெனாவெட்டு காதெரின் பான்கோல் (தொடர்ச்சி)
காதெரின் அவர்களுக்கு நான் எழுதிய கடிதமும் அவருடைய பதிலும் இங்கே.

Madame,

Even though I would have loved to write to you in French, I am writing in English for two reasons. My keyboard is English and putting in the accents is a botheration. The second reason is I want to be free in expressing my thoughts and do not want to be spending time in drafting correct French and losing the thread.

The two books preceding the above book I have already read and was impatiently looking for the third of this triology.

I like Josephine as I too am a translator (cum engineer) (French, German,English, Tamil) and I was gratified to see that lady succeeding as one.

One question I want to pose. You have very frankly written about Shirley's mother and Father. Did you not get any trouble from England as implying something about their queen is just not tolerated, I think?

One suggestion. Please allow comments to your blog posts.

Regards,
Dondu N. Raghavanகாதரீனின் பதில் கீழே:
Hello !

Thank you for your message. It’s wonderful to know that you’ve loved reading what I’ve enjoyed so much writting !

Oups ! I’m sorry I should write in french !!

Pour ce qui est de la Reine d’Angleterre, je ne sais pas encore !

Je ne lui ai pas demandé la permission. Et peut-être sera t-elle choquée quand elle lire “The yellow eyes of the crocodiles” quand il sera traduit en anglais.

Pour le moment, il n’est pas encore sorti en langue anglaise et devrait être publié en 2013.

Nous verrons alors ce qu’en pensera sa Majesté mais j’espère qu’elle aura le sens de l’humour et qu’elle prendra cela comme un hommage. Car le personnage de la Reine est très aimable dans la trilogie...


Avec un grand sourire,
Katherine Pancolகிழிஞ்சது கிருஷ்ணகிரி. எலிசபெத் ராணியின் அனுமதி ஒன்றும் பெறவில்லையாம். நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் வரவில்லையாம். எலிசபெத் ராணி ஹாஸ்ய உணர்ச்சி உள்ளவர் என தான் நம்புவதாக வேறு எதிர்பார்ப்பு. 


என்ன செய்ய? அவருக்கு நான் போட்ட பதில்:
Thanks a lot. I would advise you to consult with your English translator. I am worrying for you. :)))
Junior is really out of this world and I love him!

நிஜமாகவே தெனாவெட்டுதான் காதெரினுக்கு.

ஸ்பெக்ட்ரம் ராசா
ஜாமீனில்தானே வந்திருக்கிறார்? அதற்கு ஏன் இவ்வாறு சீன் போடுகிறார்களாம்? தன் உயிருக்கு பயந்து இத்தனை நாள் உள்ளே இருந்தவருக்கு இப்போது ஏதேனும் த்னிப்பட்ட முறையில் ஆசுவாசம் கிடைத்திருக்குமோ?

எதற்கும் அவர் வாக்கிங் எல்லாம் தனியாக போகாமல் இருத்தல் நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/14/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 14.05.2012

அம்பேத்கர் நேரு கார்ட்டூனில் என்ன தவறு இருக்கிறது?
அதுதான் புரியவில்லை. அதுவும் அறுபது வருடங்களுக்கு முன்னால் இக்கார்ட்டூன் வந்தபோது யாரைய்ம் கோபப்படச் செய்ததாகத் தெரியவில்லை? இப்போது மட்டும் ஏன்? நேரு, அம்பேத்கர் ஆகியோரை அவரவர் சிஷ்யகோடிகள் தெய்வ நிலைக்கு உயர்த்திப் பார்ப்பதே காரணம் என நான் நினைக்கிறேன். அக்கார்ட்டூனைத்தான் கீழே பாருங்களேன்.

நேரு சாட்டையை நத்தை மீதுதான் குறிவைக்கிறார். அம்பேத்கர் மீதல்ல. உண்மை கூறப்போனால் அம்பேத்கரும்தான் சாட்டையை தன் கையில் வைத்துள்ளார். இரு சாட்டைகளுமே நத்தைக்காகத்தான். நேரு அம்பேத்கருக்கு உதவியாகத்தான் செயல்பட நினைக்கிறார் என்பது எனது புரிதல்.

தெனாவட்டு காதெரின் பான்கோல் (Katherine Pancol) இந்தப் பெண்மணி ஒரு பிரசித்தி பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர். அவர் ஒரு மூன்று நாவல்கள் வரிசையை (triology) உருவாக்கியுளார். அந்த நாவல்கள்:  
1. Les yeux jaunes des crocodiles (முதலைகளின் மஞ்சள் நிறக்கண்கள்)
2. La valse lente des tortues (ஆமைகளின் மெதுவான சுழல் நடனம்)
3. Les écureuils de Central Park sont tristes le lundi (மத்தியப் பூங்காவின் அணில்கள் திங்களன்று சோகம்)

முதல் நாவல் என் மூச்சையே நிறுத்தியது. அதன் கதாநாயகி ஜோசஃபின் தன்னம்பிக்கையற்ற, தன் திறன் அறியாத பெண்மணி. சந்தர்ப்பச் சூழலால் தனது அக்காவின் பெயரில் ஒரு நாவலை எழுத, அது உலகப்பிரசித்தி பெறுகிறது.

கூடவே பல பாத்திரங்கள், அவர்களிடையே எதிர்வினைகள் ஆகியவை ஒரு ரோலர் கோஸ்டரில் பயணம் செய்யும் மனநிலையை உருவாக்கின. முதல் நாவல் பிடித்துப் போனதில் மற்ற இரு நாவல்களையும் படித்து முடித்தேன் என வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவ்விரு நாவல்களும் அவ்வளவாக சோபிக்கவில்லை என்றுதான் நான் கூறுவேன்.

ஆனால் அந்த மூன்று நாவல்கள் வரிசையில் குறிப்பிடப்படும் Shirly என்னும் பாத்திரம் என் கவனத்தை ஈர்த்தது. அப்பெண்மணியின் தாயாராக சித்தரிக்கப்படுபவர் இங்கிலாந்தின் எலிஸபெத் மகாராணி. அவருக்கும் அரண்மனையில் பணிபுரிபவருக்கும் தவறான வழியில் பிறப்பவர்தான் இப்பாத்திரம். இது திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது.

எனது கவலை எல்லாம் இதை பிரிட்டிஷ் அரண்மணை வட்டம் எவ்வாறு எடுத்துக் கொண்டிருக்கும் என்பதே. இக்கேவியை அந்த பிரெஞ்சு எழுத்தாளரிடமே வைத்துள்ளேன். இதுவரை பதில் வரவில்லை.

எனக்குத் தெரிந்து இங்கிலாந்து அரசு பரம்பரை பற்றி அவ்வாறு அவதூறு செய்வது பொறுத்துக் கொள்ளப்படாது என்பதே. பார்ப்போம்.

சென்னை சூபர் கிங்ஸுக்கு சான்ஸ் இன்னும் இருக்கிறதா?
ஆம் என்றுதான் நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா கூறுகிறார். அது உண்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும்.

பை தி வே நம்ம காமெடி நடிகர் சந்தானத்தைப் பார்த்தால் டோனி ஞாபகத்துக்கு வருகிறார். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் இதுபற்றி இன்று ஓரிருவரிடம் பிரஸ்தாபிக்க அவர்களும் ஆமாம் என ஒத்துக் கொண்டனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/10/2012

ஈவேரா அவர்களது வழியை சரியாக பின்பற்றுபவர் அண்ணாவா அல்லது கலைஞர் வீரமணி முதலானோரா?

உண்மையைக் கூற வேண்டுமானால் கலைஞர் மற்றும் வீரமணிதான் ஈவேரா அவர்களை சரியாக பின்பற்றுபவர்கள் எனக்கூறுவேன். அது பற்றித்தான் இப்பதிவு.

முதலில் ஈவேரா அவ்ர்களின் செயல்பாடுகளைப் பார்ப்போம்.

1. உட்கட்சி ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாதவர்.

2. த்னது சீடர்கள் தன்னைவிட அதிக புகழ் பெறுவதை பொறுக்காதவர்.

3. தனது வாரிசுக்குத்தான் தனது அறக்கட்டளையின் மேனேஜ்மெண்ட் செல்ல வேண்டும் என்பதற்காகவே தனது 76-வது வயதில் அதுவரை தான் எதிர்த்த பொருந்தாத் திருமணத்தை செய்து, கட்சியினரின் முகத்தில் கரி பூசியவர்.

4. அதற்காக நான் அதுவரை பலருக்கு செய்வித்த சுயமரியாதை திருமணத்தை விலக்கி பதிவுத் திருமணம் செய்து கொண்ட்வர்.

5. தன்னைப் பின்பற்றுபவர்கள் பகுத்தறிவை கழட்டி வைக்க வேண்டும் என எதிர்பார்த்தவர்.

இப்போது அண்ணா அவர்களை அவதானிப்போம்.
1. உட்கட்சி ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவர். அவரது காலகட்டத்தில் திமுக ஒன்றில்தான் உட்கட்சி ஜனநாயகம் இருந்தது என்றால் அது மிகையாகாது.

2. அடுத்த கட்டத் தலைவர்களை ஊக்குவித்து அவர்களை அணைத்துச் சென்றவர்.

3. வாரிசா? மூச்? அவரது வளர்ப்பு ம்கன்களோ, மனைவியோ அவரது கால கட்டத்திற்கு பிறகு அரசியலிலேயே இல்லை.

4. தனது கொள்கைகளில் உறுதியாக நின்றவர். மதுவிலக்குக் கொள்கையை ரத்து செய்ய மறுத்தவர். அக்கால கட்ட்டத்தில் பலர் அவரிடம் கூறினார்கள், புதிதாக மதுவிலக்கு செய்தால் மத்திய அரசு கிராண்ட் கிடைக்கும், ஆனால் ஏற்கனவேயே மதுவிலக்கு அமலில் இருந்த மாநிலங்களுக்கு ஒன்றும் இல்லை. ஆகவே முதலில் மதுவிலக்கை ரத்து செய்து சிலகாலம் கழித்து அதை அமல்படுத்தினால் துட்டு கிடைக்கும் என்று. அப்படிப்பட்டப் பாவப்பணம் தமது மாநிலத்துக்கு வேண்டாம் என அழகாகக் கூறினார்.
 ஆக இவர் ஈவேரா வழியில் சென்றவர் அல்ல.

கருணாநிதி அவர்களை அவதானிப்போம்.
1. உட்கட்சி ஜனநாயகம் இல்லை.

2. எம்ஜிஆர், வைக்கோ போன்ற்அவர்கள் தன்னைவிட அதிகப் புக்ழ் பெற்றபோது அவர்களைக் கட்சியிலிருந்து விலக்கி வைத்தவர்.

3. வாரிசு அரசியலுக்கு புது இலக்கணங்கள் வகுத்தவர். தனது மூன்று மனைவியரின் குழந்தைகளுக்கும் கட்சியில் பல உயர் பதவிகளை அளித்தவர்.  அவர்களுக்கு இடம் தர மற்றவரை ஓரம் கட்டியவர். இப்போது முறை அன்பழகனுடையது.

4. கொள்கை? ஹா ஹா ஹா. மாநில சுயாட்சி, ஈழவிடுதலை இத்யாதி இத்யாதி ஆகியவை கால நேரத்துக்கு ஏற்ப வரும்.

வீரமணி அவர்களை இப்போது பார்ப்போமா?
1. உட்கட்சி ஜனநாயகம் கோவிந்தா.

2. அடுத்த கட்டத் தலைவர்களை ஓரம் கட்டியவர்.

3. தனது மகனையே வாரிசாக நியமித்தவர்.

ஆக அண்ணா அவர்கள் ஈவேராவை பின்பற்றவில்லை. கருணாதி, வீரமணி ஆகியோர் பின்பற்றுகின்றனர்.

பதிவு முடிந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/02/2012

சிட்டியும் சுட்டியும் - ஒரு சிறுகதை, குழந்தைகளுக்காக

சிறுகதைக்கு போகும் முன்னால் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தி விடுகிறேன்.

இக்கதையின் மூலம் ஆங்கிலத்தில் உள்ளது. இதை எழுதியவர் பெயர் சுந்தர். தனது குழந்தைகளுக்கு கூறவே பல கதைகளை உருவாக்கியுள்ளார். அவர் தன்னைப் பற்றிக் கூறிக்கொள்வது:

I am a passionate father, all-right, Wanted to grow my 
daughter right, Borrowed ideas from the Bright, Made up 
parables for her to fight; This World, And be a leading light, 
Took the effort to write, And share with equal delight, To do 
well, is beyond my might, Forgive me for my plight.

அதன்படி அவர் சில கதைகளையும் எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றை மொழிபெயர்க்க அவர் என்னை தொழில்முறையில் அணுகினார்.நானும் செய்து கொடுத்தேன். ஒரு சிறுகதையை தொழில்ரீதியாக நான் மொழி பெயர்ப்பது இதுவே முதல்முறை.

சுந்தர் அவர்களது மூலக்கதைக்கு சுட்டி கொடுத்துவிட்டு, அதன் மொழிபெயர்ப்பை எனது வலைப்பூவில் இடுவதற்கான அனுமதியை பெற்று இங்கு வெளியிடுகிறேன்.

இக்கதையின் மொழிபெயர்ப்புக்காக நான் சில லோக்கலைசேஷன் செய்து கொண்டேன், சுந்தரின் அனுமதியோடு. அதில் வந்த மீர்க்கட் என்னும் மிருகத்தை தமிழில் முயலாக்கினேன். இக்கதையின் தீம் பற்றி சுந்தர் கூறுவதையும் பார்ப்போம்:

A little girl gets inspiration from the story of a meerkat, who tries to solve a problem, by thinking up-side down. But you are encouraged to read right-side up.

இப்போது மொழிபெயர்ப்புக்கு செல்வோம். சிட்டியும் சுட்டியும் என்னும் தலைப்பு நான் சமீபத்தில் 1960-ல் பார்த்த ஒரு சோவியத் சிறுவர் திரைப்படத்தின் தலைப்பு. ஓவர் டு தி ஸ்டோரி.


சிட்டியும் சுட்டியும் 
ஆந்தையாருக்கு ஒரே ஆச்சரியம். “விளையாட்டு மைதானத்துல தனியா உக்காந்துண்டு அழற அந்தச் சின்னப் பெண் யாராக இருக்கும்? ஏன் பள்ளிக்கு போகாம இங்கே உட்கார்ந்திருக்கா அவள்” என்றெல்லாம் அவர் எண்ணம் ஓடியது..
அவள் அருகில் சென்று அமர்ந்த ஆந்தையார் அவள் கண்ணீரைக் கண்டு வருந்தினார்.

“ஏம்மா அழறே குட்டிப் பெண்ணே?”
“எனக்கு பள்ளிக்கு போகவே பிடிக்கல்லே” எனக் கேவினாள் அவள்.
“அதான் ஏன்?”
“யாருமே என்னைத் தங்கள் விளையாட்டுகளில் சேத்துக்கிறதில்லே.”
“ஏன்?”
“ஏன்னாக்க எனக்கு நண்பர்களே இல்லை.”
“அதான் ஏன்?”
“நான் இங்கே புதுசா வந்திருக்கும் மாணவி”
“அதுக்காகவா அழுதுண்டிருக்கே?”
“ஆமாம், என்ன செஞ்சு அவங்களை நண்பர்கள் ஆக்கிக்கிறதுன்னு தெரியல்லே.”
“சரி, உன் பேர் என்னம்மா?”
“என் பேர் மீரா”
“நல்லது! கவலை வேண்டாம் மீரா. இப்போ நான் உனக்கு ஒரு கதை சொல்லறேன். அதைக் கேட்டதும் உன் பிரச்சினை தீர என்ன பண்ணணும்னு நீயே தெரிஞ்சுப்பே.”
அந்தச் சின்னப் பெண் கண்களை துடைத்துக் கொண்டு குழந்தைக்குரிய ஆவலுடன் கதை கேட்கத் தயாரானாள். ஆந்தையார் கதை சொல்ல ஆரம்பித்தார்....

இந்தக் கதை ஏதோ ஒரு மோசமான தினத்திலோ அல்லது அழகில்லாத இடத்திலோ ஆரம்பிக்கவில்லை. அன்றைய தினம் அபாரமாக விடிந்திருந்தது. கதை துவங்கும் இடமும் அருமையானது..
இந்தக் கதை சிட்டி, சுட்டி எனப் பெயர்களையுடைய இரு சகோதரர்கள் பற்றியது. அவர்கள் முயல்கள் என்பதும் கதைக்கு முக்கியமே.
இக்கதை ஆரம்பிக்கும்போது அவர்கள் தூங்கிக் கொண்டோ, ஓய்வெடுத்துக் கொண்டோ, விளையாடிக் கொண்டோ இல்லை. அவங்க பள்ளிக்கு போவதற்கான ஆயத்தங்களில் இருந்தாங்க.

முயல்கள் பள்ளியில அன்னிக்கு என்ன சொல்லிக் கொடுத்தாங்கன்னு நினைக்கிறே? கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலா? கிடையவே கிடையாது. முயல்களுக்கான பொந்துகளை எவ்வாறு செய்வது என்பதைத்தான் அன்று கற்று கொண்டார்கள். அந்தப் பொந்துகள் முயல்கள் வசிக்க வசதியாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கிய ஷரத்து.
எல்லா முயல்களுக்குமே நல்ல மதிப்பெண்கள் எப்போதுமே கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. ஆனால் தேவையான உற்சாகங்களும் ஊக்குவிப்புகளும் தாராளமா கிடைக்கும். ஆனா அன்றைக்கு சுட்டி மட்டும் விதிவிலக்கு. அவன் உண்டாக்கிய பொந்து அபாரம். அவனுக்கு மட்டும் நல்ல மதிப்பெண் கிடைத்தது.

அன்றைக்கு அந்த முயல்கள் குடியிருப்பில் வசிக்கும் ஏனைய முயல்களுக்கு சீதோஷ்ண நிலை பற்றியோ தங்கள் அண்டைவீட்டார் பற்றியோ வம்பு பேச நேரமே இல்லை. எல்லோருமே சுட்டி உருவாக்கிய அழகான பொந்தைப் புகழ்ந்தனர். அவன் தோண்டும் அழகையும், பொந்தை அருமையாக வடிவாக்கிய திறமையையும் கண்டு வியந்தனர்.
அவனுக்கு இப்போ ராக்காவல் வேலையோ, குட்டி முயல்களை பாதுகாக்கும் வேலையோ தரவில்லை. அவன் வேலை காலனியில் எப்போதெல்லாம் பொந்துகள் தேவைப்படுகின்றனவோ அப்போதெல்லாம் அவற்றை உருவாக்க வேண்டியது என்றாயிற்று.


அவன் மேல் வைத்த நம்பிக்கை பொய்யாகவில்லை. மற்றவர்கள் எதிர்பார்த்தது போலவே அழகான மற்றும் உபயோகரமான பொந்துகளை அவன் உருவாக்கலானான்.

அவன் தம்பி சிட்டி என்ன செஞ்சான் அப்போன்னு நினைக்கிற? வெட்டியா விளையாடாம அண்ணனுக்கு துணையா அண்ணன் தோண்டத் தோண்டக் குவியற மணல்களை அப்புறப்படுத்தறது போன்ற சுற்று வேலைகளை செய்து வந்தான்.
வேலை ரொம்பவும் இல்லாத சமயங்களில் சிட்டி தூங்கியோ சோம்பி உட்காரவோ இல்லை. பொந்தின் சுவர்களை அழகுபடுத்துவதில் ஈடுபட்டான். அவற்றில் இலைகள், குச்சிகள், சிறு கற்கள் ஆகியவற்றை பொருத்தி அவற்றைச் சுற்றி ஒரு சட்டமும் பொருத்தினான். இதை கலை என அழைத்தான்.

முதல்ல இதையேல்லாம் காலனிக்காரங்க யாருமே கவனிக்கலை. ஆனாக்க மெதுவா அவர்கள் கவனம் சிட்டியின் வேலையால் ஈர்க்கப்பட்டது. யாரும் சிட்டியை அவன் முயற்சிக்காக கேலி செய்யவில்லைங்கறதையும் சொல்லியாகணும்..
இது சுத்தமா சுட்டிக்கு பிடிக்கவில்லை. “சிட்டி கஷ்டமான வேலையெல்லாம் செய்யறதேயில்லை. வெறுமனே காலிச் சுவரைப் பார்த்துக்கொண்டு மணிக்கணக்கா காலத்தைக் கழிக்கிறான் அவ்வளவுதான்” என்பது அவன் புகார். தம்பி மேல் மெதுவாக ஒரு பொறாமை உருவாயிற்று.

நாட்கள் கழிந்தன. சுட்டியின் பொறாமையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது,.
சிட்டி செய்யும் வேலைகளை அவன் புகழவில்லை. அதற்கு மாறாக அவன் தனது தம்பியை அவனது சோம்பேறித்தனத்துக்காக கண்டபடி திட்ட ஆரம்பித்தான்.

இந்த விஷயமும் அவர்களுக்குள்ளே அடங்கவில்லை. சுட்டி தன் தம்பி பற்றிய புகார்களை எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்தான். அவன் தம்பி ஒரு உதவாக்கரை, ஒரு வேலைக்கும் லாயக்கில்லாதவன் என்றெல்லாம் அவனைப் பற்றி ஏச ஆரம்பித்தான்.
கடைசியில் சிட்டி எல்லா பொறுமையயும் ஒரு நாள் இழந்தான். சவாலாக தன் அண்ணனை தன்னுடன் பொந்து அமைக்கும் போட்டிக்கு அழைத்தான்.
“நம்ம ரெண்டு பேருமே ஆளுக்கொரு பொந்தை உருவாக்குவோம். அவற்றில் எது மிக அழகான, உபயோகமான பொந்து என்பதை காலனிக்காரங்களே தீர்மானிக்கட்டும்” என்றான் அவன்.

சுட்டியும் தயங்காமல் சவாலை ஏற்றுக்கொண்டான்.
சகோதரர்களிடையே இந்தப் போட்டி பற்றிய செய்தி காட்டு நெருப்பு போல பரவியது. காலனி டிவி சேனலில் அன்றைய மாலை செய்தியில் இது பற்றி பேசப்பட்டது. செய்தி தொகுப்பாளர் கிண்டலுடன் கூறினார்,
“இதையே ஒரு சமையல் போட்டி என கற்பனை செய்து கொண்டால் ஒரு சமையல் நிபுணருடன் ஒரு வெத்துவேட்டு சாப்பாட்டு ராமன் போட்டி போடறது போல இருக்கும். சிட்டிக்கு சாப்பிடத்தான் தெரியும் அவன் போய் சுட்டியுடன் போட்டி போடுவதா?”

அடுத்த இரு நாட்களுக்கு சிட்டிக்கு தூக்கமே வரவில்லை.எவ்வாறு பொந்து அமைப்பது என்ற ஆலோசனையிலேயே அவன் நேரம் கழிந்தது. உண்மையைச் சொல்லணும்னா அது பற்றி ஒரு உபாயமும் தோணவேயில்லைதான்.
ஆலோசனையில் மூழ்கியிருந்த சிட்டி தன்னைக் கொல்லும் நோக்கத்துடன் ஒரு நரியார் வருவதைக் கூட கவனிக்கவில்லை. நரியார் என்ன அவனுடன் விளையாடவா வந்தார். அவனை உண்ணத்தானே வந்தார்.

சுற்றிலும் என்ன நடக்கிறயது என்பதைக்கூட கவனியாது இருக்கும் சிட்டியைப் பார்த்து நரியாருக்கு ஒரே ஆச்சரியம். அவருக்கு பசிதான், இருந்தாலும் சிட்டி அவ்வாறு இருப்பதன் காரணத்தை அறியும் ஆவல் அதிகமாயிற்று. அம்மாதிரி தான் வரும்போதே துள்ளிக் குதித்து தப்பித்து, ஒளிந்து ஓடாத முயலை இப்போதுதான் அவர் பார்க்கிறார் என்பதும் அவரது ஆவலைத் தூண்டியது.
“இதைத்தான் நம்ப பெரியவங்க மகிழ்ச்சியா சாப்பிடறதுன்னு சொல்லறாங்களோ?” எனச் சிந்திக்க ஆரம்பித்தார்.
இப்போ ஆவல் போய் குழப்பம் வந்தது.

“என்ன முயல் தம்பி! உன் பிரச்சினை என்ன?” என இப்போது நரியார் கேட்டார்.
சிட்டி தனக்கும் தன் அண்ணனுக்கும் இடையில் எழுந்த போட்டி பற்றிய முழு விவரங்களையும் கூறினான். கூடவே ஒரு நல்ல பொந்துக்கு தேவையான விஷயங்கள் பற்றிய தனது அறியாமையையும் ஒத்துக் கொண்டான்.
“என் அண்ணன் சொல்லறது போல நான் இந்த வேலைக்கே லாயக்கில்லாதவனேங்கறதுதான் நிஜம்” என சோகத்துடன் சிட்டி கூறினான். “நாளை போட்டியிலே இது எல்லோருக்கும் தெரியப் போகிறது” எனப் பெருமூச்சு விட்டான்.

“கவலை வேண்டாம்” என்றார் நரியார். “நான் உனக்கு உதவி பண்ணறேன். ஒரு அருமையான யுக்தி சொல்லித் தரேன் கேட்டுக்கோ. இதே யுக்தியை எனக்குத் தெரிஞ்ச கணக்கு வாத்தியார் தனது மாணவர்களுக்குச் சொல்லி நான் கேட்டிருக்கேன்.”
சிட்டியின் துயரம் பறந்தது. அவன் முகத்தில் பிரகாசம் ஏற்பட்டது.
“பிரச்சினையை தலைகீழாய் புரட்டிப் போடு, விடை கிடைக்கும் என்றார்” நரியார்.
“அது எவ்வாறு?” என மயங்கினான் சிட்டி.
“ஒரு உபயோகமில்லாத பொந்தை எப்படி அமைப்பது என்பது பற்றி யோசிக்க முடியுமா உன்னால்?”

சற்றே யோசித்த சிட்டி படாலெனக் கூறலானான், ஒரு மோசமான பொந்தில்
“ 1. ரொம்பக் குறைச்சலா வாசல்கள் இருக்கும்,
  2. அதுல உள்ளே ரொம்பக் குறைச்சலா வழிகள் மற்றும்.பூமிக்கு அடியில் சுரங்கப் பாதைகள் இருக்கும்,
  3. வாசல்களோ வழிகளோ ஒரு முயலுக்கு ஏற்ற அளவில் இருக்காது. இத்யாதி, இத்யாதி” ...
என சிட்டியின் பட்டியல் அவனால் நிறுத்த முடியாமல் நீண்டு கொண்டே போயிற்று.


மூச்சு வாங்க சிட்டி தன் பட்டியலை கூறி முடித்தான். நரியார் கூறினார்,
“இந்த மாதிரியான தவறான விஷயங்களை தவிர்த்தால் நீ உருவாக்கும் பொந்து அழகாக உபயோகமானதாக அமையும் அல்லவா.”
ஆசுவாசத்துடன் சிட்டி புன்முறுவல் செய்தான். நரியார் சொன்னதன் அர்த்தம் புரிந்தது அவனுக்கு. நேரத்தை வீணாக்காமல் பொந்து அமைப்பதில் ஈடுபட்டான்.

சகோதரர்களின் முயற்சிகளை அவதானித்து எது சிறந்தது எனத் தீர்மானம் செய்ய வேண்டிய நேரம் வந்த போது குடியிருப்புக்காரகளுக்கு ஒரு பிரச்சினை வந்தது. இரண்டு பொந்துகளுமே அருமையாக இருந்தன. ஒன்றுக்கொன்று சளைக்கவில்லை. ஆக, அவர்களில் ஒரு சகோதரன் தனது அனுபவத்தால் கற்றதை இன்னொரு சகோதரன் தான் எதைச் செய்யக்கூடாது என்பது பற்றி கற்பனை செய்து கற்றான் என்பது குடியிருப்புக்காரர்களுக்கு புரிந்தது.

ஆந்தையார் இவ்வாறு கதையை முடிக்க, குட்டிச் சிறுமி மீராவின் முகத்திலும் பிரகாசம் வந்தது,
“என்ன செய்யக் கூடாது என்பதை இப்போது அறிந்து கொண்டேன்” என்றாள் மீரா, “என் வகுப்புத் தோழர்கள் மனம் நோகாமல் நடந்து கொள்ள வேண்டும்”.
“அதே அதே, அப்போத்தான் நீங்க எல்லோருமே எப்போதுமே நண்பர்களாக இருப்பீங்க”.


மீண்டும் டோண்டு ராகவன். அனுமதி அளித்த சுந்தர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 


அன்புடன்,
டோண்டு ராகவன்


 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது