4/30/2006

நான் ஓர் இஸ்ரேலிய ஆதரவாளன்-4

நான் படித்த ஒரு ஜோக். இஸ்ரவேலர்களுக்கு திடீரென ஒரு விபரீத எண்ணம் வந்தது. அதாவது தங்கள் பெயர் இப்படி ரிப்பேராயிருக்கிறதே என்ன செய்வது என்று யோசித்தனர். ஒரு பப்ளிக் ரிலேஷன்ஸ் கம்பனியைத் தெரிவு செய்து அவர்களிடம் ஆலோசனை கேட்டனர். அவர்களும் சில நாட்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து ஒரு பெரிய அறிக்கை கொடுத்தனர். அதில் நூற்றுக் கணக்கானப் பரிந்துரைகள் இருந்தன. முதல் பரிந்துரை கூறியது: "இஸ்ரேல் என்றப் பெயருக்குப் பதிலாக இர்விங்க் என்றுப் பெயரைப் போடவும்." அவ்வறிக்கை குப்பைத் தொட்டிக்குப் போயிற்று.

இஸ்ரேல் என்றப் பெயரைக் கேட்டவுடன் பலருக்கு இங்கு ரத்தக் கொதிப்பே வந்து விட்டது. அதில் ஒரு புது மாப்பிள்ளையும் அடக்கம். அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை. எனக்கோ இஸ்ரேல் என்றப் பெயர் ஒரு புத்துணர்சியைக் கொடுக்கிறது.

சரி விஷயத்துக்கு வருகிறேன். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல 1948-ல் 2/3 பெரும்பான்மையுடன் பாலஸ்தீனத்தை இரு பாகங்களாகப் பிரிக்கும் தீர்மானம் நிறைவேறியது. யூதப் பகுதியில் வசிக்கும் யூதரல்லாதவர்களுக்கு பென் குரியன் அங்கேயே இருக்கும்படி வேண்டுகோள் விடுத்ததையும் கூறினேன். ஆனால் சுற்றியுள்ள் அரபு தேசங்கள் அவர்களுக்குத் தவறான வழி காட்டின. ஹிட்லர் செய்யத் தவறியதைத் தாங்கள் செய்து விடப் போவதாக ஆசை காட்டின. அவர்களும் அரபு படைகளுக்கு வழி விட்டு அகதிகள் முகாமுக்குச் சென்றனர். 1948 யுத்தம் இஸ்ரேலியர் வெற்றியுடன் முடிவடைந்தது. அகதிகள் முகாம்களில் மாட்டிக் கொண்டனர். மேற்குக் கரை பகுதி மற்றும் யூதரல்லதவர்காக ஒதுக்கியப் பகுதியில் அவர்களைக் குடியேற்றி ஒரு தனி நாட்டை அமைப்பதில் அரபு தேசங்கள் ஒரு அக்கறையும் காண்பிக்கவில்லை. அவர்கள் குறி இஸ்ரேலே. எல்லா யூதர்களையும் கொன்று விடுவதே அவர்கள் திரும்பத் திரும்பச் செய்த கோஷம்.

நிலைமை இவ்வாறிருக்க இஸ்ரேல் அகதிகளைத் திரும்ப உள்ளே விடும் என்று எவ்வாறு எதிர்ப்பார்க்கலாம்? அறுபது லட்சம் மரணங்கள் போதாதா?

ஜூல 31, 1971. ஜோர்டான் நதியின் இக்கரையில் காவல் காத்துக் கொண்டிருந்த இஸ்ரவேலர்களுக்குத் தங்கள் கண்களை நம்பவே இயலவில்லை. என்ன நடந்தது? ஜோர்டான் பக்கக் கரையிலிருந்து சிலரை ஜோர்டான் படையினரைத் துரத்தி வந்தனர். யார் அந்தச் சிலர்? அவர்கள் பாலஸ்தீனியத் தீவிரவாதிகள். துரத்தப்பட்டவர்கள் நேராக ஜோர்டான் நதிக் கரையில் குதித்து இஸ்ரேல் தரப்பை நோக்கி நீந்த ஆரம்பித்தனர். இக்கரைக்கு வந்து இஸ்ரவேலர்களிடம் தஞ்சம் புகுந்தனர். பிறகு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவர்கள் கூறினார்கள்: "இஸ்ரவேலர்கள் எங்களைக் கைதுதான் செய்வார்கள். ஆனால் ஜோர்தானியர்கள் கொன்று விடுவார்கள்" இந்த விஷ்யத்தில் பாலஸ்தீனியத் தலைமை மிகவும் அவமானப்பட்டது. இந்தச் செய்தி இங்கும் சகவலைப்பதிவாளர்கள் பலருக்குப் புதிதாக இருக்கும்.

1976-ல் என்டெப்பெயில் நடந்ததையும் எழுதியுள்ளேன். நம் அரசாங்கம் உட்படப் பலர் நடந்துக் கொண்டது ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரியில்லை. அதே மாதிரி நம் விமானம் ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்டப்போது நாம் என்ன செய்தோம்? மேற்கொண்டு ஒப்பிட எனக்கு மனதில்லை.

1982-ல் பாலஸ்தீனியர் லெபனானைத் தங்கள் முட்டியின் கீழ் வைத்திருந்தனர். அங்கு அரசாங்கம் இருக்கிறதா என்றச் சந்தேகம் பலருக்கு. புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி பாலஸ்தீனியர்களால் கொல்லப்பட்டார். அப்போது இஸ்ரவேலர்கள் பாலஸ்தீனியரின் முகாம்களைத் தாக்கினர். அவர்களுக்கு லெபனான் ரகசிய உதவி செய்தது. கொல்லப்பட்டவரின் தம்பி புதிய ஜனாதிபதி. அவ்வளவு அலுத்துப் போயிருந்தனர் அவர்கள் பாலஸ்தீனியரின் அட்டூழியங்களால். லெபனானின் பெரும் பகுதியில் இஸ்ரவேலர்கள். பாலஸ்தீனியரை என்ன செய்வது? அவர்களை ஏற்றுக் கொள்ள எந்த அரபு தேசமும் தயாராக இல்லை. அப்போது இன்னொரு அதிசயம் நடந்தது. அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று கூறினார் இஸ்ரேலியப் பிரதமர் மெனாசெம் பெகின். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. அவர்கள் இஸ்ரேலை எதிர்த்துப் போராடுவதை விட வேண்டும். இப்போது கூட இரு பாலரும் ஒத்துழைக்கலாம். வேறு வழியில்லாது அரபு தேசங்கள் பாலஸ்தீனியரை ஏற்றுக் கொள்ள முன் வந்தன.

சடில்லா முகாமைப் பற்றி. இஸ்ரவேலர்களுக்கு அதில் மறைமுகப் பங்கு இருந்தது என்று வெளிப்படுத்தியதே இஸ்ரேலியப் பத்திரிகைகள்தான். அதற்கானப் பொறுப்பை அவர்கள் சுமந்தே ஆக வேண்டும். ஆனால் ஒருவரும் அந்தப் படுகொலைகளுக்கு நேரடிப் பொறுப்புள்ளவரான லெபனானியரைக் கண்டிக்கவேயில்லை. அதுதான் உலகம். 1982-ல் இதையெல்லாம் குறித்து நான் ஹிந்துஸ்தான் டைம்ஸில் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அது அப்படியே ஒரு திருத்தமுமில்லாது வெளியாயிற்று என் முழு முகவரியுடன். அது சம்பந்தமாக எனக்கு வந்தக் கடிதங்கள் எல்லாமே ஆதரவுக் கடிதங்கள்தான். இப்போதும் எனக்கு மின்னஞ்சலில் ஆதரவுக்கடிதங்கள்தான் வருகின்றன. வெளிப்படையாக எழுதத் தயங்குகின்றனர். அவர்கள் தயக்கம் எனக்குப் புரிகிறது. எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.

அராஃபாத்துக்கு சமாதானப் பரிசு கொடுக்கப்பட்டதைப் பறைசாற்றுபவர்கள் கூடவே இஸ்ரேலியப் பிரதமருக்கும் வெளி உறவு மந்திரிக்கும் அதே பரிசு கொடுக்கப்பட்டதை சௌகரியமாக மறைத்து விடுகின்றனர்.

இன்னும் எழுதுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நான் ஓர் இஸ்ரேலிய ஆதரவாளன் - 3

இந்த மீள்பதிவுக்கு போகுமுன் ஒரு வார்த்தை, இதற்கு பின்னூட்டம் ஈட்டிய ஒருவரைப் பற்றி. அவர்தான் சங்கர நாராயணன் அவர்கள். இஸ்ரேலில் தங்கி படித்து வருபவர். என்ன வேடிக்கை பாருங்கள், இப்போது அவரும் தன் வலைப்பூவில் இஸ்ரேலை பற்றி எழுதி வருகிறார். நிற்க, இப்போது பதிவுக்கு செல்வோம். அதை அப்படியே மீள்பதிவு மட்டும் செய்யாது, தேவையானால் தெளிவாக்க வேண்டிய இடங்களில் அதையும் செய்வேன்.

எதிர்ப்புகள் வரும் என்று எதிர்ப்பார்த்ததுதான். ஆகவே அவற்றைப் பற்றிக் கவலையில்லை. சொல்லப் போனால் அவைதான் எனக்கு சக்தி தருகின்றன.

1948-ல் முறையான ஐ.நா. வாக்கெடுப்பில் பாலஸ்தீனப் பிரிவினை ஏற்பட்டது. அன்றிலிருந்து யுத்தம்தான். அப்போதுதான் பிறந்தக் குழந்தையை கழுத்தை நெறித்துக் கொல்ல சுற்றியிருந்த அரபு நாடுகள் தாக்கின. அதையும் எதிர்க்கொண்டது இஸ்ரேல். அந்த யுத்தத்தில் யூதர்களை ஒட்டு மொத்தமாகக் கொல்ல ஏதுவாக பாலஸ்தீனர்களை தங்கள் வீடுகளைக் காலி செய்து விலகிப் போகுமாறுக் கூறினர் அரபு நாட்டவர்கள். அவ்வாறு சென்றவர்கள்தான் பாலஸ்தீன அகதிகள். தங்கள் போராட்டத்தைத் தாங்களே நடத்திக் கொள்ளாமல் மற்றவர்கள் தோளில் சவாரி செய்தப் பாலஸ்தீனியர்கள் அந்த வழக்கத்தை விடவே இல்லை. அதுதான் அவர்கள் பிரச்சினை.

யூதர்களுக்கும் அவர்களை இவ்வளவு ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்திருப்பவர்களுக்கும் எதில் கருத்து வேறுபாடு? மற்றவர்கள் யூதர்கள் இறக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். அவர்கள் அவ்வாறு இறக்க விரும்பவில்லை.

இங்கோ கேட்கவே வேண்டாம். ஆ ஊ என்றால் பார்ப்பனியக் குணம் பற்றிய விமரிசனங்கள், சோ மேல் தாக்குதல்கள், தமிழ் மக்களை தான் எவ்வளவுக் கீழாக மதிக்கிறார் என்பதை வெளிப்படையாகவே பல முறை கூறியவர் காலிலேயே விழுந்துக் கிடப்பது ஆகியவை ஜாம் ஜாம் என்று நடந்து வருகின்றன. அதற்கெல்லாம் கவலைப்பட்டு ஆகப் போவதென்ன. நான் இப்பதிவில் கூறப் போவதாகச் முந்தையப் பதிவில் எழுதியதைக் கூறி விடுகிறேன்.

இஸ்ரேலுக்கு அங்கீகாரம் கொடுத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் என்ன, பம்பாயில் ஒரு கான்ஸுலேட் மட்டும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள கணிசமான முஸ்லிம்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ, அரபு தேசத்தவர்களுடன் வணிகம் பாதிக்கப் படுமோ என்ற யோசனைகள் பேரில் இதற்கு மேல் செய்ய இந்திய அரசு தயாராக இல்லை. அது புரிந்துக் கொள்ளக் கூடியதுதான். வெளியுறவுக் கொள்கைகளின் நாட்டின் நலப் பாதுகாப்பு என்பது ஒன்றுதான் முக்கியக் காரணியாக இருக்க வேண்டும். ஆனால் நிஜமாகவே இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்பட்டனவா என்றுப் பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். மற்றவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி அஞ்சியே காரியம் செய்ததில் இந்தியாவிம் கௌரவம் பாழாய் போனதுதான் மிச்சம்.

1956 அரபு-இஸ்ரேலிய யுத்தத்தில் பாகிஸ்தான் அரபு நிலைக்கு எதிர் நிலை எடுத்தது. ஏனெனில் அச்சமயம் அது அமெரிக்காவுடன் பல ஒப்பந்தங்கள் செய்துக் கொண்டிருந்தது. ஆனாலும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எப்போது பிரச்சினைகள் வந்தாலும் அரபு தேசத்தவர்கள் தங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்து வந்த இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானையே ஆதரித்து வந்திருக்கின்றனர். இதற்குக் காரணம் பாகிஸ்தான் இசுலாமிய நாடு என்பதுதான்.

ஆனால் என்ன அவமானம் பட்டாலும் இந்தியா ஒன்றும் செய்யும் நிலையில் இல்லை. நாயர் புலி வாலைப் பிடித்தக் கதையாய் விரும்பினால் கூட இஸ்ரேலுடன் தன் ராஜரீக உறவை அப்கிரேட் செய்யும் நிலையில் இல்லை இந்தியா.

இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமானங்கள் அனேகம். அறுபதுகளின் முடிவில் இஸ்ரேலியர் கட்டுப்பாட்டில் இருந்த ஜெருசலத்தில் ஒரு மசூதியில் யாரோ பயித்தியக்காரன் நாச வேலை செய்ய அரபு நாடுகள் ஒரு பெரியக் கூச்சல் இஸ்ரேலுக்கெதிராகக் கிளப்பின. அதைப் பற்றி விவாதிப்பதற்காக ராபாத்தில் ஒரு இஸ்லாமிய தேசங்களின் மகாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தானும் ஒரு இஸ்லாமிய நாடுதான், தன்னையும் அழைக்க வேண்டும் என்று நிஜமாகவே இந்தியா அடம் பிடித்துக் கெஞ்சியது. அது அவமானங்களின் ஆரம்பம். ரொம்பக் கெஞ்சியதன் பேரில் இந்தியாவுக்கு வேண்டா வெறுப்பாக ஓர் அழைப்பு அனுப்பபட்டது. பக்ருதீன் அஹ்மத் அவர்கள் இந்தியாவின் பிரதிநிதியாக ராபாட் விரைந்தார். ஆனால் என்னப் பரிதாபம். அதற்குள் பாகிஸ்தானும் ஜோர்டானுமாகச் சேர்ந்து நடவடிக்கை எடுத்து இந்த அழைப்பை ரத்து செய்வித்தனர். இந்தியப் பிரதிநிதி மாநாடு நடந்த ஹாலுக்கு வெளியேயே நிறுத்தப்பட்டார், பள்ளியில் வகுப்புக்கு வெளியே மாணவனை நிறுத்தி வைப்பது போல. பல முறை ஜாடை மாடையாக பெற்ற அவமானங்களுக்கு இது ஓர் சிகரமாக அமைந்தது. அக்காலக் கட்டத்தில் இதையெல்லாம் பத்திரிகையில் படித்து மிக வெட்கப்பட்டேன். இதுவும் இந்திரா அவர்களின் ஒரு சாதனை. ஏற்கனவே சொன்னது போல இந்திய பாகிஸ்தான் யுத்தங்கள் எல்லாவற்றிலும் பாக் ஆதரவு நிலையையே அரபு நாடுகள் செய்து வந்துள்ளன.

1972 ஒலிம்பிக் போது 11 இஸ்ரேலியத் தடகள வீரர்கள் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கொல்லப் பட்டனர். அது பற்றி இந்தியாவின் கருத்துக் கேட்கப் பட்டபோது இந்தியத் தொடர்பு அதிகாரி ஒன்றுமே பேசாமல் தோள்களைக் குலுக்கினார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலியர் ஒரு பாலஸ்தீனியத் தீவிரவாதிகள் முகாமைத் தாக்கியப் போது மட்டும் அதே அதிகாரி உரக்கவே தன் ஆட்சேபத்தை வெளியிட்டார்.

ஜூலை 1976. ஓர் ஏர் பிரான்ஸ் விமானம் உகாண்டாவுக்குக் கடத்தப்பட்டு அதில் இருந்த யூதப் பயணிகளை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு மற்றப் பயணிகளையும், விமானச் சிப்பந்திகளையும் விடுதலை செய்தனர் பாலஸ்தீனியத் தீவிரவாதிகள். இடி அமீனும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாய் செயல்பட்டார். அப்போதெல்லாம் இந்தியா அதைக் கண்டிக்கவில்லை. இஸ்ரேல் என்ன செய்தது? 4000 மைல்கள் பறந்துச் சென்று 53 நிமிடச் செயல்பாட்டுக்குப் பிறகு அத்தனைப் பேரையும் மீட்டு வந்தது, ஒரே ஒரு வயதானப் பெண்மணியைத் தவிர. ஏனெனில் அவர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவரை உகாந்தியர் கொன்று விட்டனர். இந்தியா இப்போது என்ன செய்தது? உகாந்தாவின் இறையாண்மை பாதிக்கப்பட்டது என்று கூப்பாடு போட்டது. தன்னைப் பாதுகாதுக் கொள்ள முடியாதக் கிழவியைக் கொன்றது பற்றி மூச்சுக் கூட விடவில்லை இந்தியா. என்ன வெட்கம்!

எண்டெப்பியைப் பற்றி பேசும்போது; அது நடப்பதற்கு முன்னால் நான் படித்த ஒரு கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு பயங்கரவாதியிடம் மூவர் அகப்பட்டுக் கொண்டனராம். ஒரு இந்தியர், ஒரு அமெரிக்கர், ஒரு இஸ்ரேலியர். அவர்களை கொல்ல முடிவு செய்த பயங்கரவாதி தத்தம் கடைசி ஆசையை கூறும்படி அவர்களை கேட்கிறார். இந்தியரும் அமெரிக்கரும் கடவுள் பிரார்த்தனை செய்ய ஆசைப்பட, இஸ்ரேலியரோ, பயங்கரவாதி தன்னை உதைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறார். அவனும் அவ்வாறே செய்ய, பந்து போல ப்ரூஸ் லீ ஜம்ப் செய்து, குட்டிக்கரணம் அடித்து, தன் கைத்துப்பாக்கியால் பயங்கரவாதியை சுட்டுக் கொன்று விடுக்கிறார். இதை முன்னமேயே செய்திருக்கலாமே என அமெரிக்கர் கேட்க, அவ்வாறு செய்திருந்தால் இந்தியர் பயங்கரவாதியைக் கொன்ற குற்றத்துக்காக தன்னை ஐ.நா. பொதுச் சபை முன் இட்டுச் சென்றிருப்பார் என இஸ்ரேலியர் கூறுகிறார்.

இதை நான் படித்தபோது, ரொம்பத்தான் மிகைபடுத்திக் கூறுகிறார்கள் என நினைத்தேன். ஆனால், எண்டெப்பி விஷயத்தில் இந்தியா நடத்திய கூத்தைப் பார்த்ததும் மனம் மாறி விட்டது.

இஸ்ரேல் செய்தப் பசுமைப் புரட்சியின் தொழில் நுட்பத்தை இந்தியாவுக்குத் தர முன் வந்தது. அரபு நாட்டவர் என்ன சொல்வார்களோ என்ற பயத்தில் இந்தியா அதை மறுத்தது. அதேபோல டேவிஸ் கப் போட்டியின் இறுதி ஆட்டம் இஸ்ரேலில் நடந்தது. நம் விஜய் அமிர்த்தராஜும் மற்ற வீரர்களும் சுலபமாக ஜெயித்திருக்க முடியும். ஆனால் நாம் போகாமல் இஸ்ரேல் வாக் ஓவரில் ஜெயித்தது.

இந்த அழகில் இஸ்ரேலின் முக்கிய எதிரியான எகிப்து அதற்கு ராஜரீக அங்கீகாரம் கொடுத்தது. அந்த நாடு தன் நலனுக்கேற்பச் செயற்பட்டது. ஆனால் இந்தியா? அதன் பிறகுதான் இஸ்ரேலுடன் தன் ராஜீய உறவுகளைப் பலப்படுத்தியது. என்ன வானமா இடிந்து விழுந்து விட்டது? முதலிலேயே செய்திருந்தால் நம் நிலைமை இன்னும் வலுவானதாக இருந்திருக்கும். பிறகு தேவையானால் அந்த உறவை அடக்கி வாசித்திருக்கலாம். அது ஒன்றுக்கும் இடமளிக்காமல் காரியம் செய்ததால் ஒரு பயல் நம்மை மதிக்கவில்லை.

இவ்வளவு ஆதரவு தெரிவித்தும் 1973-ல் மீண்டும் அவமானப்பட்டது. எண்ணை விலையை உயர்த்தி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே எண்ணை சப்ளை என்றன எண்ணை உற்பத்தி செய்த நாடுகள். அப்படி வெளியிட்ட லிஸ்டில் இந்தியா இல்லை. இம்மாதிரியாகத்தான் ஒரு கை ஓசையால் இந்தியா திரும்பத் திரும்ப அவமானத்தை சந்தித்தது.

அடுத்தப் பதிவில் இன்னும் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/29/2006

நான் ஓர் இஸ்ரேலிய ஆதரவாளன் - 2

இப்போது இரண்டாம் பதிவுக்கு செல்வோமா. அங்கு கூற மறந்தது இங்கே கூறிவிடுகிறேன். அதாவது, ஒரு பழைய பதிவை வகைபடுத்த வேண்டுமானால் மீள்பதிவைத் தவிர எனக்கு வேறுவழி தெரியவில்லை. வகைபடுத்தாவிட்டால் அவற்றிற்கான பின்னூட்டங்கள் வரும்போது தமிழ்மணத்தில் அவற்றை இற்றைப் படுத்தப்பட முடியவில்லை. இப்போது இரண்டாம் பதிவின் மீள் பதிவுக்கு செல்வோம்.

எவ்வளவு பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. ஐ.நா. பொதுச் சபையில் 1947-ல் பாலஸ்தீனத்தை யூதப் பகுதியாகவும், யூதரல்லாதப் பகுதியாகவும் பிரிக்க வந்தத் தீர்மானம் தேவையான 2/3 பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப் பட்டது. அதற்கு முக்கியக் காரணம் சோவியத் யூனியனும் அதன் ஆளுகைக்குட்பட்ட நாடுகள்தான். அறுபதுகளில் சோவியத் யூனியன் அரேபியர்களுக்கு ஆதரவாகப் போட்ட ஆட்டங்களைப் பார்த்தவர்களுக்கு இது நம்ப முடியாததுதான்.

என் நினைவுகளிலிருந்து எழுதுகிறேன். தீர்மானத்தை இந்தியா எதிர்த்தது. பிரிட்டன் நடு நிலைமை வகுத்தது. அமெரிக்கா ஆதரித்தது. சோவியத் யூனியனும் அதன் ஆளுமைக்குட்பட்ட நாடுகளும் ஆதரித்தன. சோவியத் யூனியன் ஏன் அவ்வாறு செய்தது?

எந்த நாடாயினும் சரி, ராஜரீக விஷ்யத்தில் தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்தல் அவசியம். "நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர விரோதியும் இல்லை, நிரந்தரம் நம் நாட்டின் நலனே" என்பதே தாரக மந்திரம். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தத் தருணம். சோவியத் யூனியனுக்கு மத்தியக் கிழக்கு ஆசியாவில் ஒரு நட்பு நாடு தேவைப்பட்டது. அது இஸ்ரேலாக இருக்கும் என்று நினைத்தது. ஏனெனில் இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் குரியனும் அவரது கட்சியும் சோஷலிசக் கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு. இஸ்ரேல் ஜனநாயகத்தைத் தேர்ந்தெடுத்தது. மெதுவாக சோவியத் யூனியன் அரேபியர்கள் பக்கம் சாய ஆரம்பித்தது.

1948-ல் இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டப்போது அமெரிக்கா அதற்கு de facto அங்கீகாரம்தான் கொடுத்தது, சோவியத் யூனியனோ de jure அங்கீகாரமே கொடுத்தது. முன்னதை விடப் பின்னது அதிக சக்தி வாய்ந்தது.

இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டப்போது பென் குரியன் இஸ்ரேலியப் பகுதியில் வாழும் யூதரல்லாதவர்களை அங்கேயே இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். எல்லோரும் புது தேசத்தில் சமக் குடியுரிமை பெற்று வாழலாம் என்றுக் கூறினார். ஆனால் சுற்றியிருந்த அரபு தேசங்கள் அவர்களை இடத்தைக் காலி செய்து தற்காலிகமாக வேறு இடங்களுக்குச் செல்லப் பணித்தனர். அப்போதுதான் யூதர்களைக் கடலுக்குள் தள்ளி ஒரேயடியாக இஸ்ரேல் இல்லாமல் செய்ய முடியும் என்று ஆசை காட்டினர். அப்போது வெளியேறியவர்கள்தான் பாலஸ்தீன அகதிகள். 1948 போரில் இஸ்ரேல் எதிர்பாராமல் வெற்றி பெற்று விட்டது. அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாக பாலஸ்தீனியர் அகதி முகாம்களில் மாட்டிக் கொண்டனர். இந்த அழகில் ஜோர்டான் வேறு யூதர் அல்லாதப் பகுதி என்று ஐ.நா. அறிவித்திருந்தப் பகுதியைக் கபளீகரம் செய்து தன்னுடன் சேர்த்துக் கொண்டது. அதுதான் மேற்குக் கரைப் பகுதி. 1948 போர் நிறுத்தத்துக்குப் பின்னால் ஜெரூஸலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பெரும் பகுதி ஜோர்டனிடமும், ஒரு சிறு பகுதி இஸ்ரேலியரிடமும் வந்தது. இஸ்ரேலியரால் அழுகைச் சுவர் என்றுப் பெயரிடப்பட்ட பயைய யூதக் கோவிலின் இடிபாடு ஜோர்டான் வசம். 1948-லிருந்து 1967 வரை யூதர்களுக்கு அங்கே அனுமதியில்லை. 1956-ல் சூயஸ் கால்வாயை எகிப்தியர் தேசீயமயமாக்கினர். அப்போதிலிருந்து இஸ்ரேலியக் கப்பல்கள் அதில் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இஸ்ரேலை எல்லாப் பக்கங்களிலிருந்தும் நசுக்கி அதை ஒன்றுமில்லாமல் செய்வதே அரபு தேசங்களின் நோக்கம்.

ஆனால் என்ன அக்கிரமம்! இஸ்ரேல் அழிய மறுத்தது. அது பாட்டுக்கு உலகெங்கிலிருந்தும் யூதர்களை வந்துக் குடியேறச் செய்துக் கொண்டிருந்தது. எந்த நாட்டிற்கும் இம்மாதிரி சந்தர்பங்களில் முழி பிதுங்கியிருக்கும். ஆனால் இஸ்ரேல் எல்லா சோதனைகளையும் தைரியமாக சமாளித்து வந்தது. இஸ்ரேலின் அந்த நாட்களை வர்ணிக்கும் லியோன் ஊரிஸ் என்னும் எழுத்தாளர் தன் நாவல் "எக்ஸோடஸ்"ல் இவ்வாறு எழுதுகிறார் (நினைவிலிருந்து எழுதுகிறேன், தமிழ் மொழி பெயர்ப்பு என்னுடையது):

"அவர்கள் (யூதர்கள்) எல்லா விதமாகவும் வந்தனர். சிலர் நடந்து வந்தனர். சிலர் கப்பல்களில் வந்தனர். சிலர் விமானங்களில் வந்தனர். சிலர் சைக்கிளில் வந்தனர். அவர்கள் 64 நாடுகளிலிருந்து வந்தனர்"

1956-ல் நடந்தப் போரில் இஸ்ரேல் சினாயை மிகத் துரிதமாகப் பிடித்தது. ஆனால் அமெரிக்காவின் வற்புறுத்தலால் அது சினாயைக் காலி செய்தது. அப்போது அமெரிக்கா இஸ்ரேலின் நலனைப் பாதுகாப்பதாக உறுதி கூறியது. இருப்பினும் இஸ்ரேலியக் கப்பல்கள் சூயஸ் கால்வாயில் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதிலிருந்து இஸ்ரேல் ஒரு பாடம் கற்றுக் கொண்டது. அதாவது தன் நலனைத் தானே பார்த்துக் கொள்ள வேண்டும். நட்பு நாடுகள் எப்போதும் உதவிக்கு வருவார்கள் என்றுச் சொல்ல முடியாது. இதற்கு முன்னால் இப்படித்தான் 1938-ல் செக்கொஸ்லோவாக்கியா பிரிட்டன் மற்றும் பிரான்ஸால் கைவிடப்பட்டது.

1967-ல் நிலை என்ன? இஸ்ரேலுக்கு மறுபடி நெருக்கடி. அதைச் சுற்றியுள்ளத் தேசங்கள் அதை அழித்தே தீருவது என்றுக் கங்கணம் கட்டின. அப்போரைப் பற்றி என் முந்தையப் பதிவில் எழுதியுள்ளேன். யுத்தத்துக்கு சில தினங்களுக்கு முன் வெவ்வேறு நாடுகளிலிருந்த இஸ்ரேலியத் தூதுவரகங்களுக்கு உள்ளூர் யூதர்கள் வந்து இஸ்ரேலுக்காக சண்டையிட விருப்பம் தெரிவித்தனர். "ஏற்கனவே 60 லட்சம் பேரை ஹிட்லரின் வெறிச்செயல் கொன்று விட்டது. இன்னொரு படுகொலையை எங்களால் தாங்க முடியாது. நாங்களும் உங்களுடன் சேர்ந்து இறக்கிறோம்" என்றுக் கூறினர். இஸ்ரேலியரோ அவர்களிடம் இவ்வாறுக் கூறினர். "இறப்பதா, அதற்கு வேறு ஆள் பாருங்கள். நாங்கள் வாழப் பிறந்தவர்கள்" என்றனர்.

இஸ்ரேலிய எழுத்தாளர் எஃப்ரைம் கிஷோன் (Ephraim Kishon) எழுதியதைப் பார்ப்போம். அவருடையப் புத்தகம் "மன்னியுங்கள் ஐயா, நாங்கள் வெற்றி பெற்றதற்கு". அதில் உள்ளக் கட்டுரைகள் அச்சமயத்தில் இஸ்ரேலியப் பத்திரிகை ஒன்றில் தொடராக வந்தது. ஆரம்பக் கட்டுரைகள் இஸ்ரேல் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகளை பற்றியவை. ஆகவே ரொம்ப ஸீரியஸாக இருக்கும். ஆனால் போருக்குப் பின்? ஒரே தமாஷ்தான். "நிர்பந்திக்கப்பட்ட அதிசயக் குழந்தை" என்றுத் தலைப்பிடப்பட்ட ஒரு படம். அதில் இஸ்ரேலை ஒரு பையனாகக் காண்பித்திருப்பார்கள். நாலா பக்கத்திலிருந்தும் வரும் தாக்குதல்களை தன் குத்துக்களால் எதிர்க் கொள்கிறான். இன்னொரு படத்தில் அவன் இஸ்ரேலியக் கொடியை ஏந்திக் கொண்டு ஒவ்வொரு ஊராகக் கைபற்றிக் கொண்டே செல்ல, அவன் பின்னால் சரித்திரம் ஒரு பெண் ரூபத்தில் கதறிக் கொன்டே வருகிறது: "இவ்வளவு வேகமாகப் போகாதே, எனக்கு மூச்சு வாங்குகிறது". இம்மாதிரிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அடுத்தப் பதிவில் இந்தியா இஸ்ரேல் பிரச்சினையை எவ்வாறு கையாண்டது என்பதைப் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நான் ஓர் இஸ்ரேலிய ஆதரவாளன் - 1

மிகுந்த யோசனைகளுக்கு பிறகு இஸ்ரேலைப் பற்றிய எல்லா ஐந்து பதிவுகளையும் மீள் பதிவு செய்யத் தீர்மானித்துள்ளேன். இதற்கு கடைசி தூண்டுதல் இஸ்ரேலில் இருக்கும் சங்கர நாராயணன் அவர்களின் பின்னூட்டம் கொடுத்தது. அதே நேரம் அவரும் இஸ்ரேலில் தன்னுடைய அன்றாட வாழ்க்கையை விவரித்து பதிவுகள் போட்ட வண்ணம் இருக்கிறார்.

அவரும் நானும் ஒரு விஷயத்தில் ஒத்துப் போகிறோம். இஸ்ரேலுடன் உறவை பலப்படுத்துவது இந்தியாவின் நலனுக்கு உகந்தது என்பதே அது. பாலஸ்தீனிய ஆதரவு நமக்கு என்ன பெரிதாகக் கொடுத்து விட்டது? எல்லா ஆதரவையும் அவர்கள் பெற்றுக் கொண்டனர், ஆனால் பாகிஸ்தானுடன் பிரச்சினை என்றவுடனேயே அவர்கள் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானையே ஆதரிக்கின்றனர். வெளி உறவு விஷயத்தில் தேசத்தின் நலன்கள்தான் நிரந்தரம், நண்பனோ அல்லது எதிரியோ அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது முதல் பதிவுன் மீள்பதிவு பழைய பின்னூட்டங்களுடன்.

ஜூன் 5, 1967. நாசர் இஸ்ரேலியத் துறைமுகத்துக்கு வழியை அடைத்தார். ஐ.நா. துருப்புகளை சினாய் பாலைவனத்திலிருந்து திரும்பச் செல்ல வைத்தார். அப்போதைய பத்திரிகைகக்ளில் உலகின் அப்பகுதியின் வரைபடம் காண்பிக்கப்பட்டது. அதில் அம்புக் குறிகள் எல்லாம் இஸ்ரேலுக்குள் சுற்றியுள்ள அரபு நாடுகளிலிருந்து அதன் உள்ளே செல்வது போலக் காண்பிக்கப்பட்டிருந்தன.

ஜூன் 6. யுத்தம் ஆரம்பம். அதற்கு முந்திய நாள் இஸ்ரேல் தங்கள் ரிஸ்ர்வ் படைகளைத் திரட்டியது. சில நிமிடங்களில் அழைப்புகள் அனுப்பப்பட்டு இஸ்ரேலிய வீரர்கள் தத்தம் யூனிட்டுகளுக்குப் பயணப்பட்டனர். போகும் வழியில் வண்டியிலேயே முகச்சவரம் செய்து கொண்டு, போர் உடைகளை அணிந்துச் சென்றனர். இஸ்ரேலிய அரசியல் மற்றும் ராணுவத் தளபதிகள் ஒருங்கிணைந்துத் துல்லியமாகத் திட்டமிட்டனர்.

முதல் இரண்டு நாட்களில் எகிப்தின் அத்தனைப் போர் விமானங்களும் தரையிலேயே அழிக்கப் பட்டன. மற்ற நாடுகளின் விமானங்களும் தப்பவில்லை. அரேபியர்கள் முட்டாள்தனமாக தாங்கள் வெற்றி பெற்று வருவதாக யுத்தப் பிரசாரம் செய்ய அவர்களின் புரவரலரான சோவியத் யூனியனும் ஏமாந்து விட்டது. கோலன் உயரங்களிலிருந்து இஸ்ரேலிய வயல்களைத் தாக்கி வந்திருக்கிறது சிரியா. அவற்றைப் பிடித்தது இஸ்ரேலியரின் இன்னொரு படைப் பிரிவு. அதுவும் சிரியர்கள் எதிர்ப் பார்க்காத கோணத்திலிருந்து வந்தது அவர்களைத் திகைப்பில் ஆழ்த்தியது. லெபனான் இரண்டு விமானங்களை இழந்து இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்று ஒதுங்கியது. ஜோர்டானுக்கு இஸ்ரேல் சண்டையிலிருந்து விலகி நின்றால் அதைத் தான் தாக்கப் போவதில்லை என்று செய்தி அனுப்பியது. அது கேட்காமல் யுத்தத்தில் கலந்துக் கொள்ள, மிக அதிக உதை அதற்குத்தான். சொல்லப் போனால் இஸ்ரேலியர் மற்ற எல்லா முனைகளை விட ஜோர்டான் முனையில் உயிரை வெறுத்து சண்டையிட்டனர். அவர்களை ஜோர்டானால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெரூசலத்தைப் பிடித்ததும்தான் நின்றனர் இஸ்ரேலியர். இதற்குள் யுத்தம் ஆரம்பித்து 5 நாட்கள் ஆகிவிட்டன. சோவியத் யூனியன் அரேபியர்களுக்குக் கொடுத்த ராணுவத் தளவாடங்களில் முக்கால்வாசி இஸ்ரேலியரிடம். இஸ்ரேலிய தளபதி மோஷே தயான் உலகப் பிரசித்திப் பெற்றவரானார். சோவியத் யூனியன் போர்நிறுத்தத்திற்கு வற்புறுத்த, போர் 6 நாட்களில் முடிவுக்கு வந்தது.

அது வரைக்கும் ஜெர்மானியர்கள் யூதர்களைப் படுகொலை செய்த விவரங்களைப் படித்து ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தேன். இஸ்ரேலின் இந்த வெற்றி எனக்கு மிகுந்த மன்நிறைவைக் கொடுத்தது.

கதையின் நடுவிலிருந்து ஆரம்பித்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். யூதர்கள் 2000 ஆண்டுகளுக்கு மேல் ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றனர். அவர்கள் வீறு கொண்டெழுந்து ஒரு நாட்டையே நிறுவியது உலகில் இதுவரை நடந்திராத சாதனை. இறந்த மொழி என்றுக் கருதப்பட்ட ஹீப்ரூவை மறுபடி ஒரு பேசுமொழியாக ஆக்கியது சரித்திரத்தில் ஒரு சிறப்பிடம் பெரும். இதையெல்லாம் அடுத்தப் பதிவுகளில் பேசத்தான் போகிறேன். அதற்கு முன் 1967 ஒரு ட்ரெயிலரே. இது எனக்குத் தனிப்பட்ட முறையில் நிறைவைத் தந்தது.

ஆறு நாள் போரைப் பற்றி சில ஜோக்குகள்:
1. இஸ்ரேல் உல்லாசப் பயணத் துறை விளம்பரம் செய்கிறது: "இஸ்ரேலுக்கு வாருங்கள், பிரமிட்டுகளைப் பார்க்கலாம்."
2. சினாய் பாலவனத்தில் ஒரு எகிப்தியப் படை தூரத்தில் ஒரு இஸ்ரேலியப் போர்வீரனைக் கண்டு, அவனைப் பிடித்து வருமாறு ஒவ்வொருவராக அனுப்ப, ஒருவரும் திரும்பவில்லை. கடைசியில் ஒரு எகிப்திய வீரன் தலைதெறிக்க ஓடி வந்து தன் தலைவனிடம் கூறுகிறான்: "நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம். அங்கு இரண்டு இஸ்ரேலியர்கள் உள்ளனர்."
3. நாசர் ராஜினாமா செய்தார். எஷ்கால் (அப்போதைய இஸ்ரேலியப் பிரதமர்) அதை ஏற்க மறுத்தார்.
4. நாசர் சோவியத் யூனியனிடம் அதிகத் தளவாடங்கள் கேட்டு எழுதுகிறார். அவருக்கு வந்த பதில்: "இஸ்ரேலியர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதற்கு லிஸ்ட் அனுப்பவும்."

இஸ்ரேலைப்பற்றி எழுத மறுபடியும் வருவேன்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

4/26/2006

படகில் மூவர், அதில் நாயை மறக்கலாகுமா? - 1

Three men in a boat, to say nothing of the dog என்னும் புத்தகம் உலகப் பிரசித்தி பெற்றது. அதைப் படித்து பல தலைமுறையினர் கெக்கெக்கே என்றெல்லாம் சிரித்து அதற்காக அந்த புத்தகத்தின் அருமை தெரியாதவர்களால் பைத்தியம் என்று அழைக்கப்பட்டனர். எழுதியது Jerome K. Jerome.

இப்புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்க்கலாம் என முடிவு செய்துள்ளேன்.

நாங்கள் நான்கு பேர் குழுமியிருந்தோம் - ஜார்ஜ், ஹாரிஸ் மற்றும் நான் மேலும் மாண்ட்மொரென்சி. என் அறையில் நாங்கள் உட்கார்ந்து கொண்டு புகைபிடித்தவாறு வம்பளந்து கொண்டிருந்தோம். எங்கள் உடல் நிலை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை பற்றி முக்கியமாக பேசிக் கொண்டிருந்தோம்.

நாங்கள் ரொம்ப களைப்பாக இருப்பதாக உணர்ந்தோம். அது எங்கள் மனச்சஞ்சலத்தை பெருக்கியது. தன் மேல் அவ்வப்போது களைப்புணர்வு அலையலையாகப் பாய்வதாக ஹாரிஸ் கூறினான். தான் என்ன செய்கிறோம் என்பதுகூட சில சமயம் தெரிவதில்லை என்றும் அவன் கூறினான்; ஜார்ஜும் தானும் அவ்வாறே உணர்வதாகக் கூறினான். என் விஷயத்தில் எனக்கு கல்லீரல் கோளாறு உண்டு. அது பற்றி எனக்கு சந்தேகமே இல்லை. ஏனெனில் அப்போதுதான் கல்லீரலுக்கான மருந்து ஒன்றின் கையேட்டை படித்து முடித்திருந்தேன். அதில் கல்லீரல் கோளாறுகளுக்கான அத்தனை குறிகளும் என் நிலைமையுடன் முழுக்க ஒத்துப் போயின.

அதிசயம் ஆனால் உண்மை. பேட்டண்ட் செய்யப்பட்ட மருந்துகளின் விளம்பரங்களைப் படிக்கும்போதெல்லாம் எனக்கும் சம்பந்தப்பட்ட நோய் இருப்பதாகவும் அதுவும் மிகக் கடுமையான அளவில் இருப்பதாகவும் எனக்கு எப்போதுமே தோன்றும். நோயின் அடையாளங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளவை என் உணர்வுகளுடன் எப்போதுமே ஒத்துப் போயுள்ளன.



ஒரு சமயம் நான் பிரிட்டிஷ் ம்யூசியம் சென்றிருந்தேன். எனக்கு வந்த உடல் நலக் குறைவுக்கான சிகிச்சை பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்தேன். அதற்கான மருத்துவப் புத்தகத்தை எடுத்து படித்தேன். அத்துடன் சும்மா இல்லாமல் வேறு பக்கங்களைப் புரட்டினேன். முதலில் எந்த நோயை பற்றி படித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் அது ஒரு பயங்கர நோய் என்பது மட்டும் நினைவிருக்கிறது. அந்த நோய் என்னுள் மிகக் கடுமையான அளவில் குடியிருந்ததைக் கண்டேன்.

சிறிது நேரம் அப்படியே உறைந்து போய் அமர்ந்தேன். பிறகு மற்ற பக்கங்களை புரட்ட ஆரம்பித்தேன். டைபாய்டு கடந்த ஆறு மாதங்கலாக என்னுள் இருந்திருக்கிறது. பிறகு ஒவ்வொரு நோயாக எழுத்துவாரியாகப் பார்க்க ஆரம்பித்தேன். 26 ஆங்கில எழுத்துக்களில் ஆரம்பிக்கும் எல்லா நோய்களும் என்னுடலில் பல ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்றன. காக்காய் வலிப்பு மட்டும் இல்லை. அந்த நேரத்திலும் அது மட்டும் என்னை ஏன் அலட்சியம் செய்தது என்ற விசனத்தில் ஆழ்ந்தேன். .

சட்டென்று ஓர் எண்ணம் உதயமாயிற்று. வைத்தியக் கல்லூரி ஒன்றுக்கு நாம் எவ்வளவு உபயோகமாய் இருக்கலாம்? நான் மட்டும் கிடைத்தால் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆஸ்பிடல்களையெல்லாம் சுற்ற வேண்டியதேயில்லை. நானே எனக்குள் ஒரு ஹாஸ்பிடல்தான். என்னை சுற்றி வந்தாலே மாணவர்களுக்கு மருத்துவ டிகிரி கிடைத்து விடும்.

சட்டென்று ஓர் என்ணம் உதயமாயிற்று. எல்லாவற்றிற்கும் உயிரோடிருந்தாலல்லவா? கை நாடியைப் பிடித்துப் பார்த்தேன். முதலில் நாடி அடிப்பதாகவே தெரியவில்லை. திடீரென்று அதிவேகமாக அடிக்கத் தொடங்கிற்று. எண்ணியதில் ஒரு நிமிடத்தில் அது 147 முறை அடித்ததாகத் தெரிந்தது. பிறகு நெஞ்சைத் தொட்டுப் பார்த்தேன். நெஞ்சு அடித்துக் கொள்ளவேயில்லை. இப்போது உயிரோடிருக்கிறேனா, செத்துப் போனேனா என்பதே சந்தேகமாகி விட்டது. தொடையில் கிள்ளிக் கொண்டேன்; கொஞ்சம் வலித்தது. உயிர் சிறிதளவு ஒட்டிக் கொண்டிருக்கிறதென்று தைரியம் பிறந்தது.

வாசக சாலையில் நுழையும்போது. சந்தோஷமானவனாக நுழைந்தேன். வெளியில் செல்லும்போது சொல்லிக் கொள்ளும்படியான நிலையில் இல்லை.



வெளியில் வந்து மெல்ல ஒரு குதிரை வண்டியைப் பிடித்து என் வைத்திய நண்பரிடம் சென்றேன். அவர் எனது நெடுநாள் நண்பர். அடிக்கடி கை பார்ப்பார்; தெர்மாமீட்டரில் வெப்ப நிலை அளந்து சொல்வார். தாகமாயிருந்தால் ஏதேனும் மிக்ஸர் கலந்து கொடுப்பார். என்னிடம் தற்சமயம் குடிகொண்டுள்ள நோய்கள் காரணமாக என்னை வைத்து அவருடைய பிராக்டீஸ் பெருகும் என்ற நல்லெண்ணத்தில் அவரிடம் சென்றேன். அவர் என்னை கேட்டார்:

"என்னய்யா, என்ன ஆச்சு உமக்கு?"

நான் சொன்னேன்: "எனக்கு வந்த வியாதியையெல்லாம் நான் உம்மிடம் கூறமுனைந்தால் நான் சொல்லி முடிப்பதற்குள் நீங்கள் செத்துப் போனாலும் போகலாம். ஆகவே எனக்கு என்ன வரவில்லை என்று கூறிவிடுகிறேன். காக்கைவலிப்பு எனக்கு வரவில்லை. ஏன் அது வரவில்லை என்பதை நான் அறியேன். அது வரவில்லை என்பது உண்மை. மற்ற எல்லா நோய்களும் எனக்கு வந்திருக்கின்றன" என்றேன்.

பின்னர் இதைக் கண்டுபிடித்த வரலாற்றைக் கூறினேன்.

அவர் என் கையைப் பிடித்துப் பார்த்தார். பிறகு நான் எதிர்ப்பார்க்காத நேரத்தில் கோழைத்தனமாக என் மார்பில் இரண்டடி அடித்தார். அது ஒரு வகைப் பரிசீலனை என்று சமாதானம் சொல்லி மருந்தும் எழுதிக் கொடுத்தார். அதை மடித்து என் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு மருந்துக் கடைக்குச் சென்றேன்.

சீட்டை நீட்டினேன். கடைக்காரன் சீட்டைப் படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தான். "இது மருந்துக் கடையல்லவா" என்று கேட்டேன். "ஆம்; இது மருந்து கடைதான். ஆனால் இதை மளிகைக் கடை அல்லது சாப்பாடு ஹோட்டல் என்று நீர் நினைத்தக் காரணம் என்ன?" என்றான் கடைக்காரன். சீட்டைப் பிரித்துப் படித்தேன்:-

1. காற்படி கைக்குத்தலரிசிச் சோறு (பருப்பு, நெய், மோர் உட்பட) இரண்டு வேளை.
2. ஓர் இளநீர், அகப்பட்டால் இரண்டு ஆரஞ்சும் சில திராட்சைப் பழங்களும்.
3. தினம் ஐந்து மைல் நடத்தல்.
4. தினம் ஒன்பது மணிக்குப் படுக்கை
5. தெரியாத விஷயங்களில் தலையிடாமல் வாலைச் சுருட்டிக் கொண்டிருத்தல்.

அவ்வாறே செய்தேன். அன்றிலிருந்து வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க் கொண்டிருக்கிறது


நான் மேலே கொட்டை சாய்வெழுத்துகளில் கொடுத்திருப்பது பேராசிரியர் கல்கி அவர்கள் தன்னுடைய "ஏட்டிக்கு போட்டி" என்ற புத்தகத்தில் எழுதியது. அவர் எங்கிருந்து அதை சுட்டிருப்பார் என்பதைக் கூறவும் வேண்டுமோ? வேண்டாம், வேண்டாம்.

இப்போது சற்றே மாறிய வேறு விஷயத்துக்கு வருவோம். சுந்தா அவர்கள் சமீபத்தில் ஜூலை 1974-ல் துவங்கி கல்கி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கல்கியில் "பொன்னியின் புதல்வர்" என்ற பெயரில் தொடராக வாரா வாரம் 1976 வரை எழுதி வந்தார். அவரிடம் நான் "Three men in a boat, to say nothing of the dog" என்ற இந்த புத்தகத்தை எடுத்துச் சென்று மேலே குறிப்பிட்டப் பகுதியைக் காட்டினேன். அது தனக்கும் தெரியும் என்றும் வாழ்க்கை வரலாற்றில் தான் கண்டிப்பாக அதைப் போடுவதாகக் கூறினார். அதை உன்னிப்பாகவும் கவலையாகவும் எதிர்பார்ப்பேன் என்று கூறி விட்டு வந்தேன். அவரும் சொன்னபடியே செய்தார். ரொம்ப நல்ல மனிதர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பு

சில நாட்களுக்கு முன்னால் ஒரு காலைப் பொழுதில் தொலை பேசி மணி அடித்தது. ஒலி வாங்கியை எடுத்துக் கேட்டால் சென்னைக்கு வந்திருக்கும் பி.கே.சிவகுமார் அவர்கள். பேசாப் பொருளைப் பேசத் துணிந்த அவருடன் பேச பல விஷயங்கள் எனக்கு இருந்தன. பலருக்கும் இருந்தன. ஆகவே ரஜினி ராம்கி அவர்கள் நேற்று (25.04.2006) மாலை உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன்னில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். மின்னஞ்சல் முகவரி தெரிந்தவர்களுக்கு அஞ்சல் அனுப்பினார். என் தரப்பிலிருந்து மரபூர் சந்திரசேகர் மற்றும் வைதிகஸ்ரீ ஜெயராமன் அவர்களை நான் அழைத்தேன். ரோசாவசந்த் தனக்கு அடுத்த நாள் செமினார் இருப்பதால் வர இயலவில்லை எனக் கூறிவிட்டார்.

சரியாக 6 மணிக்கு என் கார் ட்ரைவ் இன்னை அடைந்தது. பி.கே.எஸ் அவர்களை என்னை அடையாளம் கண்டு கொண்டு தன்னிடம் அழைத்துக் கொண்டார். அவருடன் அவர் நண்பர்கள் ரமேஷ் மற்றும் ஸ்வாமினாதன் இருந்தனர். மெதுவாக வலைப்பதிவாளர்கள் வர ஆரம்பித்தனர். மரபூர் சந்திரசேகர் நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தின் வெகு அருகில் பைக்கை நிறுத்தி என்னிடம் நான் எங்கே இருக்கிறேன் என்று செல் பேசியில் கேட்டார். பேசிக் கொண்டே திரும்பினால் பக்கத்திலேயே அவர் நிற்கிறார். 7 மணி வரை ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். கிட்டத்தட்ட 16 பேர் சேர்ந்து விட்டனர். வழக்கம் போல ரஜினி ராம்கி லேட்டாக வந்தார்!

நாலைந்து இடங்களைப் பார்த்து விட்டு பிறகு மரத்தடி ஒன்றில் (not the Yahoo group) டேரா போட்டோம். கடைசியாக வைதிகஸ்ரீ ஜெயராமன் வந்தார். வந்த வலைப்பதிவாளர்கள் என் நினைவிலிருந்து: பத்ரி, பி.கே.எஸ்., மரவண்டு கணேஷ், நிர்மலா, க்ருபா, மீனாக்ஸ், ரஜினி ராம்கி, ஐகாரஸ் பிரகாஷ், ஜெயராமன், சந்திரசேகர், சுபமூகா மற்றும் ஒரு ஆஜானபாகுவான மனிதர் (அவரைப் பற்றி பிறகு, ஆனால் நான் முதலிலேயே ஊகம் செய்து விட்டேன்.) ஏதேனும் பெயர் விட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பேச்சு எதிர்ப்பார்த்தபடி அதிகம் போலி டோண்டுவைப் பற்றித்தான். பல புதியவர்கள் என்னிடம் பிரச்சினையின் பின்புலனைப் பற்றி கேட்க எனக்குத் தெரிந்ததைக் கூறினேன். அவனை எதிர்க்கொள்ள சில அருமையான வழிகள் கிடைத்தன. கொடுத்தவர்களுக்கு நன்றி. அவன் யார் என்பதில் பெரும்பான்மையினருக்கு சந்தேகமே இல்லாததால் அது பற்றியப் பேச்சுக்கள் குறைவே. என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் அதிக நேரம் செலவழிக்கப்பட்டது.

சந்திப்பின் கடைசி தருணங்களில் பி.கே.எஸ். அவர்கள் எழுந்து நான் குறிப்பிட்ட அந்த ஆஜானுபாகுவான மனிதரை அறிமுகப்படுத்தினார். அவர்தான் வலைப் பதிவாளர் முகமூடி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/22/2006

ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு கற்ற கதை

இந்தப் பதிவு மூன்று பழைய பதிவுகளை ஒன்று சேர்த்து மீள் பதிவு. அவ்வாறு போடுவதற்கு காரணம், இரண்டு மொழிகளையும் வேகமாகக் கற்பதில் நான் ஒரே முறையையே கையாண்டேன். அதை எடுத்துக் காட்டவே இந்த மொத்தப் பதிவு. இன்னொரு காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பழைய பதிவுகளை வகைபடுத்த இந்த முறைதான் எனக்கு தெரியும்.

முதலில் ஜெர்மன் கற்று கொண்ட கதை

1969, ஜூலை 1. எல்லோரும் எங்கள் முதல் ஜெர்மன் வகுப்புக்காக உட்கார்ந்திருந்தோம். சரியாக 9 மணிக்கு மிடுக்காக உள்ளே நுழைந்தார் எங்கள் ஆசிரியர் சர்மா அவர்கள். சிறு அறிமுகம் - 1 நிமிடத்திற்கு, ஆங்கிலத்தில். அதில் அவர் கூறியதன் சாராம்சம் தான் இனி ஜெர்மனில்தான் பேசப் போவதாகவும் அம்மொழியிலேயே ஜெர்மன் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

உடனே பாடத்தை ஆரம்பித்து விட்டார். முதலில் பாடத்தை அவர் நிறுத்தி நிதானமாக உரக்கப் படித்தார். பிறகு எங்களை அதே உச்சரிப்புடன் படிக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம், தட்டுத் தடுமாறிப் படிக்க ஆரம்பித்தோம். பயிற்சி மிக உபயோகமாக இருந்தது. இது புது முறையைச் சார்ந்தது என்பதை அறிந்தோம். பிறகு டேப் ரிக்கார்டர் வழியே ஒரு ஜெர்மானியரின் உச்சரிப்பையும் பெற்றோம். எல்லாவற்றையும் கான்டக்ஸுடன் படித்துக் கேட்டதால் ஜெர்மன் மொழி எங்களை அறியாமலேயே எங்களிடம் குடி புகுந்தது.

கூடவே உரக்க நாங்களும் பாடத்தைத் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது. பலருக்கு உரக்கக் கத்துவதில் கூச்சம். ஆகவே உதட்டை மட்டும் அசைத்தனர். ஆனால் நான்? கூச்சமா? மூச், பேசப்படாது என்பது என் தாரக மந்திரம். என்னைப் பொருத்தவரை சர்மா தன் தெளிவானக் குரலில் ஜெர்மனில் எதைக் கூறினாலும் எனக்குப் புரிய ஆரம்பித்தது.

மெதுவாக வகுப்பில் மாணவர் நிலை ஒரு சமன்பாட்டுக்கு வரத் துவங்கியது. முதலில் வகுப்பறையில் உட்காரக்கூட இடம் இருக்காது. ஓரிரு வாரத்திலேயே சட சடவென்று பல மாணவர்கள் வகுப்புக்கு வருவதை நிறுத்தினர். மிஞ்சியவர்கள் அபார முன்னேற்றம் அடைந்தனர்.

நான் சேர்ந்தது Grundstufe - 1 வகுப்பில். ஒவ்வொருக் கல்வியாண்டிலும் இரண்டு செமஸ்டர்கள். முதல் செமஸ்டர் தேர்வு நவம்பர் 1969-லும், இரண்டாம் செமஸ்டர் தேர்வு ஏப்ரல் 1970-லும் நடப்பதாகத் திட்டம். அப்போது G - 1 சான்றிதழ் கிடைக்கும்.

இப்போது நான் ஒரு காரியம் செய்தேன். வாரத்துக்கு மூன்று வகுப்புகள், காலை 8-லிருந்து 9 வரை. மீனம்பாகத்திலிருந்து மாம்பலத்துக்கு மின் ரயில் வண்டியில் பயணம், அங்கிருந்து அண்ணா சாலை டி.வி.எஸுக்கு பேருந்துப் பயணம். ஆக, பயண நேரம் ஒரு மணிக்கு மேல். அப்போது விளையாட்டாக அடுத்தப் பாடங்களைப் படிக்க ஆரம்பித்து, அதில் கூறப்பட்டப் பயிற்சிகளைச் செய்யத் தலைப் பட்டேன். ஒரு வேளை ஏதாவது ஒரு நாள் வகுப்புக்குச் செல்ல முடியாவிடினும் சமாளித்துக் கொள்ளலாம் என்பதே இதற்குக் காரணம். ஆனால் நடந்ததென்னவென்றால் முதல் செமஸ்டர் முடியும் முன்னரே முழுப் புத்தகத்தையும் எல்லப் பயிற்சிகளையும் எழுத்தால் செய்து முடித்து விட்டேன். இப்போது ஜெர்மனில் நானே வாக்கியங்களை உருவாகிப் பேச ஆரம்பித்தேன். முதலில் என்னை வியப்புடன் பார்த்த சர்மா அவர்கள் என்னுடன் ஜெர்மனில் பேச ஆரம்பித்தார். நான் செய்தத் தவறுகளை நாசூக்காகத் திருத்தினார். மொழி வகுப்புகளில் எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய டிக்டேஷன் எனக்கு ஒரு ஒரு விளையாட்டாயிற்று.

நவம்பர் 1969-ல் ஒரு நாள் மாலை 7 மணிக்கு முதல் செமஸ்டர் தேர்வு. சித்ரா திரையரங்கில் பாமா விஜயம் பகல் நேரக் காட்சியைப் பார்த்து விட்டு, மாலை தேர்வுக்குச் சென்றால் எல்லா மாணவர்களும் கடைசி நேரக் கொந்தளிப்பில். நான் பாட்டுக்கு ஒரு ஜெர்மன் தினசரிப் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்து விட்டு இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மையரின் கட்சிக்குத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று என் நண்பர்களிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அவர்களுக்கோ வாழ்க்கையே வெறுத்து விட்டது. பரீட்சை முடிவு வந்தது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு எனக்கு முதல் பரிசு கிடைத்தது.

இன்னொரு போனஸ். முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவர்கள் அடுத்த வகுப்புக்கான முதல் மாதக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டது. (மாதக் கட்டணம் 12 ரூபாய்!). ஆனால் ஒரு நிபந்தனை. பின் வரும் எல்லா மாதத் தேர்விலும் முதல் வகுப்பு மதிப்பெண்களை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அம்மாதத்திலிருந்து கட்டணம் கட்ட நேரிடும். நான் முதல் செமச்டருக்காகக் கட்டிய நான்கு மாதக் கட்டணமான 48 ரூபாய்களுக்கு மேல் ஒரு பைசாவும் கட்டவில்லை. வெறுமனே பரீட்சைக் கட்டணம் (ரூ. 10) மட்டுமே கட்டினேன்.

நவம்பர் 1969-ல் இரண்டாம் செமஸ்டர். கல்யாணி ஜானகிராமன் என்ற ஒரு அருமையானப் பெண்மணி வகுப்பெடுத்தார். ஏப்ரல் 1970-ல் இரண்டாம் செமஸ்டர் தேர்விலும் தேறி அடுத்த வகுப்புக்கான கட்டணத்திலிருந்து விலக்குப் பெற்றேன். இப்போது G - 2 வகுப்பை ஒரே செமஸ்டரில் முடிக்கத் திட்டமிட்டு, வாரத்துக்கு 5 நாள் வகுப்பில் சேர்ந்தேன். ஆசிரியை சியாமளா அவர்கள். வயலின் வித்தகர் துவாரம் வெங்கடசாமி நாயுடுவின் பெண். (மாதக் கட்டணம் 18 ரூபாய்கள், நான் கட்டவில்லை). பாதி செமஸ்டரில் Mittelstufe - 1 வகுப்புக்கானப் புத்தகம் வாங்கி பயிற்சிகளைச் செய்யலாமா என்று தேசிகனுடன் ஆலோசனை செய்ததில் அவர் மிகுந்த உற்சாகத்துடன் எனக்கு உதவி செய்தார். அவ்வகுப்பில் கடைசி மாதத்துக்கு மட்டும் வகுப்புக்குச் சென்றேன். சர்மாதான் ஆசிரியர். பிறகு நடந்ததுதான் தமாஷ். இரண்டு பரீட்சைகளையும் சில நாட்கள் இடைவெளியில் எழுதி இரண்டிலும் முதல் பரிசு பெற்றேன். முதல் பரிட்சை (G-2) அன்றுப் பார்த்தப் படம் சிராக் என்ற ஹிந்திப் படம், அடுத்தப் பரீட்சை (M1) தினத்தன்றுப் பார்த்தது லட்சுமி கல்யாணம்!

தேசிகன் எனக்குச் செய்த உதவி அளவற்றது. எம்- 1 வகுப்பில் கடைசி ஒரு மாதம் படித்ததற்குக் கட்டணம் பெற மறுத்து விட்டார். ஆக நான் ஜெர்மன் வகுப்புக்களுக்காக கட்டிய மொத்தப் பணம் 48 ரூபாய்கள்தான்.

1971 ஜனவரியில் மத்தியப் பொதுப் பணித் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பதவி நியமனம் பெற்றேன். வேலை பம்பாயில். அங்கிருந்த மேக்ஸ் ம்யுல்லர் பவன் என்னைக் கவரவில்லை. தவறு என்னுடையதுதான். சென்னை மேக்ஸ் ம்யுல்லர் பவனை மறக்க இயலவில்லை. அவ்வாண்டு ஜூலையில் பூனா மேக்ஸ் ம்யுல்லர் பவனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். இந்தியாவிலேயே மிகச் சிறப்பானது அது. முழு நேரப் பாடங்கள் அங்கே. நான் எம்- 2 வகுப்புக்கானத் தேர்வை பிரைவேட்டாக எழுத முடியுமா என்றுக் கேட்டிருந்தேன். கடிதம் எழுதியது ஆங்கிலத்தில். அவர்கள் பதில் வந்ததோ ஜெர்மனில். இம்மாதிரி அவர்களுக்கு ஒரு கடிதமும் வந்ததில்லை என்பதைப் பிறகு அறிந்தேன். நானும் ஜெர்மனில் எழுத, அவர்கள் பதில் போட, ஆகஸ்டில் எம்- 2 எழுதி தேர்ச்சிப் பெற்றேன். இரண்டாம் ரேங்க்தான் கிடைத்தது. நவம்பரில் ஒரு டிப்ளொமா பரீட்சைக்குப் பணம் கட்டி நவம்பரில் அதிலும் தேர்ச்சி பெற்றேன். இது ம்யூனிக் சர்வகலாசாலைக்காக கதே இன்ஸ்டிட்யூட்டால் உலகெங்கும் உள்ள பல தேர்வு மையங்களில் நடத்தப் படும் தேர்வு. விடைத் தாள்கள் ஜெர்மனியில் மதிப்பீடு செய்யப் படும். பூனாவும் தேர்வு மையங்களில் ஒன்று.
அத்துடன் ஜெர்மன் பரிட்சைகள் என்னைப் பொருத்தவரை முடிவுக்கு வந்தன. பிறகு ஜெர்மனில் புத்தகங்கள் படிப்பதே வேலையாகப் போயிற்று. ஆனால் மொழி பெயர்ப்பு வேலைகள் ஒன்றும் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. அதைச் செய்ய 1975-ல் தான் வாய்ப்பு கிடைத்தது. 1974-ல் எனக்குச் சென்னைக்கே மாற்றல் வந்து விட்டது. தேசிகன்தான் வழக்கம் போல மொழி பெயர்ப்பு வேலைகள் பெறுவதற்கும் உதவினார். எப்போது அவரைப் பார்த்தாலும் என்னுடன் ஜெர்மனிலேயே பேசுவார்.

1975-ல் ஃபிரெஞ்சு கற்பதற்காக சென்னை அல்லியான்ஸ் ஃபிரான்சேஸில் சேர்ந்தேன் அந்தக் கதையை இப்போது பார்ப்போமா?

எந்தக் கோவிலில் வேண்டுமானாலும் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வேன். இந்த மொழியை பகுதி நேரத்தில் கற்றுக் கொள்ள அல்லியான்ஸ் ஃபிரான்சேஸை விடச் சிறந்த இடம் வேறில்லை. ஜே.என்.யூ. படிப்பை இதற்குச் சமமாகச் சொல்லலாம். ஆனால் அதில் படிக்க ரொம்ப மெனக்கெட வேண்டும். ப்ளஸ் 2 முடித்த பிறகு பி.ஏ. மற்றும் எம்.ஏ. (ஃபிரெஞ்சு படிக்க வேண்டும்). எல்லோராலும் முடிகிற காரியம் இல்லை.

ஜூலை 1975-ல் செர்டிஃபிகா வகுப்பில் சேர்ந்தேன். ஆசிரியை சாரதா லாற்டே. அவரைப் பற்றி ஏற்கனவே நான் முன்னொரு பதிவில் எழுதியதை இங்கே மறுபடியும் பதிக்கிறேன்.

"சாரதா அவர்கள் வகுப்பு எடுப்பதே கவிதை போன்று ஒரு அழகு. மாணவர்களின் சந்தேகங்களை மிக அன்புடன் தீர்த்து வைப்பார். மொத்தம் நான்கு நிலைகளில் மொழி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவை "செர்டிபிகா", "ப்ரே டிப்ளோம்", "டிப்ளோம்" மற்றும் "டிப்ளோம் ஸுபேரியேர்" ஆகும்.

வாரத்துக்கு நான்கு முறை மாலை வகுப்புகள். ஒவ்வொரு நிலைக்கும் வருடத்தை மூன்றாகப் பிரித்து பிரெஞ்ச் கற்பிக்கப் பட்டது. அவசரக் குடுக்கையான நான் ஆர்வக் கோளாறில் முதல் மூன்று மாதத்திலேயே முதல் நிலைப் புத்தகத்தில் உள்ள எல்லா பயிற்சிகளையும் எழுத்தில் செய்து முடித்து அதன் பின் இரண்டாம் நிலைக்கானப் புத்தகத்தையும் முடித்தேன்.

மூன்றாம் நிலைக்கானப் புத்தகத்தை வாங்கப் போனால் ஒரே ரவுஸுதான், முதல் நிலை மாணவன் மூன்றாம் நிலை புத்தகத்தை எப்படி வாங்குவதென்று. சாரதா அவர்கள் துணையை நாட அவர் அலட்டிக் கொள்ளாமல் தானே அப்புத்தகத்தைத் தன் பெயரில் வாங்கிக் கொடுத்தார். என் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தார்.

இரண்டாம் நிலைக்கான வகுப்பில் இரண்டாம் டெர்முக்கு வந்தபோது எங்கள் வகுப்பு மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் கலைக்கப்பட்டது. நாங்கள் வேறு வகுப்பு நேரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே என்று ஆலோசனை கூறப்பட்டது.

ஆனால் என்னால் அது முடியாத காரியமாயிற்று. மறுபடியும் சாரதா அவர்கள் உதவி செய்தார். இரண்டாம் நிலைக்கான மூன்றாவது டெர்மில் என்னை சேர்த்து விட்டார். அந்த ஆசிரியரோ ஒரே வாரத்தில் சாரதா அவர்களை அழைத்து இவனது முன்னேற்றம் ராட்சசத்தனமாக இருக்கிறது, மூன்றாம் நிலைக்கு அனுப்பலாம் என சிபாரிசு செய்தார். சாரதா அவர்களும் என்னை தன் கணவர் நடத்திய மூன்றாம் நிலைக்கான கடைசி டெர்ம் வகுப்பில் சேர்த்து விட்டார். இவ்வாறாக மொத்தம் 4 டெர்ம்கள் தாவல்.நானும் அவர் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்காமல் அத்தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன் (Tres honorable). இரண்டாம் நிலைத் தேர்வு எழுதவே இல்லை.

நான்காம் நிலைக்கான இறுதித் தேர்வு சமயத்தில் ஸாரதாவும் அவர் கணவரும் ஸ்பெயினுக்கு மாற்றம் பெற்றனர்.

ஏதோ ஒரு தேவதையைப் போல வந்து சாரதா அவர்கள் எனக்கு உதவிகள் செய்திராவிட்டால் நான் சாதாரணப் பொறியாளனாகவே ஓய்வு பெற்றிருப்பேன். வாழ்க்கை அற்புதமயமானது."

அங்கு தேசிகன், இங்கு சாரதா. அவர் வகுப்பில் வரிசைக் கிரமத்தில் கேள்விகள் கேட்பார். என் முறை வரும்போது மட்டும் என்னை அடக்கி விட்டு என் பக்கத்து மாணவருக்குத் தாவி விடுவார். முதல் முறை நான் திகைப்புடன் பார்த்தபோது என்னிடம் "மற்றவர்கள் முதலில் முயற்சிக்கட்டும், உங்கள் முறை எல்லோருக்கும் கடைசிதான். நீங்கள் விடை கூறி விடுவீர்கள். அதனால் மற்றவருக்குப் பயனில்லை" என்று வேகமாக ஃபிரெஞ்சில் கூறி விட்டார். அடுத்த நாள் ஒரு டெஸ்ட் வைப்பதாக ஒரு சமயம் கூறியபோது நான் அவரிடம் அன்று என்னால் வர இயலாது என்று வருத்தத்துடன் கூற, உடனே டெஸ்டை அதற்கு அடுத்த நாளுக்குத் தள்ளிப் போட்டார். இவரை ஆசிரியையாக அடைய முன் பிறவியில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

இப்போது திரும்பிப் பார்க்கும்போது நான் ஜெர்மனிலும் ஃபிரெஞ்சிலும் ஒரே யுக்தியைக் கையாண்டுள்ளேன் என்று புரிகிறது. எல்லாப் பாடப் பயிற்சிகளையும் எழுத்து ரூபத்தில் செய்து முடிக்க வேண்டும். சம்பந்தப் பட்ட மொழியில் பேசத் தயங்கவே கூடாது. பாடங்களை வகுப்புக்கு வரும் முன்னரே படித்து வைத்து விட்டால் ரொம்ப உத்தமம். உண்மையைக் கூறப் போனால் வகுப்பு என்னைப் பொருத்தவரை ஒரு விளையாட்டாயிற்று. இங்கும் டிக்டேஷன் ஒரு நண்பனாகவே இருந்தது. இரண்டாம் மாதத்திலேயே நூலகத்திலிருந்துப் புத்தகம் எடுக்க ஆரம்பித்தேன். அவற்றால் என் ஃபிரெஞ்சு இன்னும் கூர்மையடைந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இங்கும் போதனா மொழி ஃபிரெஞ்சுதான். அம்மாதிரி இத்தாலிய வகுப்பு இல்லாததால் நான் இப்போது திரிசங்குச் சொர்க்கத்தில் அதைப் பற்றிப் பின்னொரு பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/20/2006

வாடிகையாளரை அணுகும் முறைகள் - 10

இது ஒரு மீள்பதிவு. புது தமிழ்மணத்தில் பழையப் பதிவுகளை அப்படியே இற்றைப்படுத்த இயலாததால் அவ்வப்போது நான் முக்கியம் எனக் கருதும் பதிவுகளை மீள் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. இதில் நான் தற்சமயம் ஒரு குறுக்கு வழியை பாவித்திருக்கிறேன். வாடிக்கையாளர்களை அணுகும் பதிவுகள் போட்டது பத்து. அதில் இந்த பத்தாம் பதிவில் முந்தைய ஒன்பதின் சுட்டிகள் வந்து விட்டதால் இதை மட்டும் இற்றைப்படுத்தினால் போதும்.

பத்தாம் பதிவு
வேலை செய்தால் மட்டும் போதாது. வரவேண்டிய தொகைகளையும் வசூலிக்கத் தெரிய வேண்டும். இது சம்பந்தமாக பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் குறித்துப் இப்போது விரிவாகப் பேசுவேன்.

இதுதான் பிழைப்பு என்று வந்தாயிற்று. இந்தப் பணம் வந்துதான் உலை கொதிக்க வேண்டும் என்ற நிலையும் வந்தாயிற்று. பிறகு வர வேண்டிய தொகைகளை வசூலிப்பதில் என்ன தயக்கம்? இருந்தாலும் பலருக்கு இதில்தான் பிரச்சினை. வேலையை சூரத்தனமாக முடித்து விடுவார்கள். பில்லையும் அனுப்பி விடுவார்கள். பிறகு வசூல் செய்ய வாடிக்கையாளரிடம் தொங்க வேண்டிய நிலை.

அவ்வாறு இல்லாது கறாராக வசூல் செய்தால்தான் பிழைக்க முடியும்.

முதல் விதி: புதிய வாடிக்கையாளராக இருந்தால் முதலில் முன்பணம் பெற முயற்சிக்க வேண்டும். சில வாடிக்கையாளர்கள் மிகப் பெரிய அளவில் வேலை வைத்திருப்பதாக புருடா விட்டு ரேட்டை குறைக்க முயற்சி செய்வதைப் பற்றி ஏற்கனவே என் முந்தைய பதிவுகளில் எழுதியுள்ளேன்.

இப்போது குறிப்பிடும் வாடிக்கையாளர்கள் நிஜமாகவே பெரிய அளவில் வேலை வைத்திருப்பவர்கள். இதற்கு நான் கொடுக்கும் உதாரணம் தில்லியருகில் காஸியாபாத்தில் இருக்கும் ஸ்ரீராம் பிஸ்டன்ஸ். அவர்களிடம் நான் தினசரி வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது. 8 மணி நேரம் கொண்ட ஒரு நாளைக்கு இவ்வளவு ரூபாய் என்று பேச்சு. இங்கு நான் என்ன செய்தேன் என்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை பில் கொடுத்து விடுவேன். அதுவே ஒரு கணிசமான தொகை. பிறகு தொடர்ந்து வேலை செய்வேன். அவ்வப்போது இன்டெர்காம் வழியாக சம்பந்தப்பட்ட நிர்வாகப் பிரிவுகள் தலைவர்களுடன் பேசி பில்லை நகர்த்துவேன். இதற்குள் இன்னொரு 10 நாட்கள் கடந்திருக்கும். இன்னொரு பில். அதே மாதிரி செயல் முறைகள். செக்குகளை நேரடியாகவே பெற்று விடுவேன். அதிலும் தில்லி செக்குகளாகப் பெற வேண்டும். காஸியாபாத் செக்குகளுக்கு வங்கிக் கட்டணங்கள் உண்டு.

இவ்வாறு செய்யும்போது எல்லோருடனும் நல்ல நட்புறவு வைத்து கொள்வது முக்கியம். எல்லோருடனும் சுமுகமாகப் பேச வேண்டும். செக் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். இது மிக முக்கியம். காரியம் ஆனதும் நீ யாரோ நான் யாரோ என்று சென்று விடக்கூடாது. யார் எப்போது முக்கியம் என்று இப்போதே தெரியாது.

சென்னையில் நிறுவனங்கள் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். புது வாடிக்கையாளர் என்றால் நான் ஏற்கனவே கூறியபடி முன்பணம் கேட்டு பெறுவேன். கேட்கும் முறையில் கேட்டால் கிடைக்கும். நிறுவனம் என்றால் மொழிபெயர்ப்பை மின்னஞ்சலில் இணைப்பாக அனுப்புவேன். பிறகு பில்லை கூரியர் மூலம் அனுப்புவேன். தனியாராக இருக்கும் பட்சத்தில் பணம் பெற்று கொண்டுதான் மின்னஞ்சல் அனுப்புவேன். அதற்கு சம்பந்தப்பட்டவர் என் வீட்டிற்கு வருவர். பணம் கொடுத்ததும் அவர்கள் முன்னாலேயே அவர்களுக்கு இணைப்புடன் கூடிய மின்னஞ்சலை அனுப்புவேன். பிறகு அவர்கள் என் கணியிலேயே தங்கள் முகவரிக்கு மின்னஞ்சல் வந்து சேர்ந்து விட்டதா என்பதை சரிபார்க்கச் செய்வேன். பிறகு என்ன, அவர் தன்னிடத்திற்கு சென்று ப்ரின்ட் அவுட் எடுத்து கொள்ள வேண்டியதுதான்.

அவரால் நான் இருக்கும் இடத்துக்கு வர இயலவில்லையா? அதனால் என்ன. என் பெயருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிக் கொள்வேன். பிறகு வாடிக்கையாளர் இருக்கும் இடத்திற்கு சென்று பணம் பெற்றுக் கொண்டதும் அவர் கணினியிலேயே என் மின்னஞ்சலைத் திறந்து இணைப்பாகக் கொடுத்துள்ளக் கோப்பை அவருடைய வன்தகட்டில் இறக்கி விடுவேன்.

மறுபடியும் நிறுவனங்கள் பக்கம் வருவோம். பில்லை கூரியரில் அனுப்பிய பிறகு, அது வந்து சேர்ந்ததா என்பதை தொலைபேசியில் பேசி உறுதி செய்து கொள்ள வேண்டும். எப்போது பணம் கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அவ்வப்போது ஞாபகப்படுத்த வேண்டும். இவை எல்லாவற்றையும் சுமுகமான தோரணையில் செய்ய வேண்டும். செக் கூரியரில் வந்தவுடன் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் தொலைபேசி மூலம் நன்றி கூற வேண்டும்.

அவ்வளவுதான் விஷயம். நான் செயல்படும் கடந்த 30 வருடங்களாக ஓரிரு முறைகள்தான் பணம் வசூல் செய்வதில் பின்னடைவு.

இன்னொரு விஷயம். வருடம் 20,000 ரூபாய்களுக்கு மேல் பில் தொகை சென்றால், வாடிக்கையாளர் எனக்கு தரும் தொகையிலிருந்து வருமானவரி பிடித்தம் செய்யவேண்டும் என்பது சட்டம். அவ்வாறே செய்தும் விடுவார்கள். அதற்கான சான்றிதழ் படிவம் 16-ல் பெற்று, அதையும் நாம் வருமான வரி அதிகாரிகளிடம் நம் ரிடர்ன்ஸுடன் சமர்ப்பிக்க வேண்டும். பிடித்தம் செய்துவிடும் நிறுவனங்கள் சான்றிதழ் கொடுக்க அழும்பு செய்வார்கள். அவர்களிடம் விடாது அதைப் பெற வேண்டியதும் முக்கியம். அப்போது கூட சுமுகமாக நடந்து கொள்ள வேண்டும்.

பில் தொகையை கொடுப்பதில் சுணக்கம் காட்டும் வாடிக்கையாளர்கள் அவிழ்த்துவிடும் கதைகளைப் பற்றி இப்போது பார்ப்போமா?

மார்ச் 2001-ல் செய்த வேலைக்கு செக் நவம்பர் 2001-ல் தான் கிடைத்தது. வாடிக்கையாளர் சொன்ன காரணம்: அமெரிக்காவில் 9/11-ல் நடந்த குண்டு வீச்சினால் அவருக்கு அமெரிக்காவிலிருந்து வரும் செக்குகள் தாமதமாயினவாம், இது எப்படி இருக்கு? அதே வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு நான் போன் செய்து முதலாளியுடன் பேச வேண்டும் எனக் கேட்க, அவர் பாங்குக்குப் போயிருப்பதாகக் கூறப்பட்டது. அவர் மனைவி? அவரும் பாங்குக்குத்தான் அவருடன் சென்றிருக்கிறார் எனக் கூறப்பட்டது. அக்கௌண்டன்ட்? பாங்குக்குத்தான். அக்கௌண்ட்ஸ் க்ளர்க்? பாங்குக்கே. பாவம் பாங்க் மானேஜர். இத்தனை பேர் ஒன்றாக வந்தால் அவர் என்ன செய்வார்?

இம்மாதிரி புருடாக்கள் சர்வ சாதாரணம். இதையெல்லாம் மீறித்தான் நாம் குப்பை கொட்ட வேண்டும். என்ன செய்வது? அதுதான் வாழ்க்கை.

இத்துடன் இத்தொடர் முடிவுக்கு வருகிறது. இதுவரை இந்த விஷயத்தில் நான் இப்பதிவையும் சேர்த்து பத்து பதிவுகள் போட்டுள்ளேன். மீதி ஒன்பது பதிவுகளின் சுட்டி மற்றும் ஒவ்வொன்றுக்குமான சுருக்கமும் முதல் பகுதியில் கொடுக்கப்பட்டது. அவற்றில் கொடுக்கப்பட்ட வரிசை எண்கள் சுமாராக மற்றப் பகுதி எண்களுடன் ஒரு எண் வித்தியாசத்தில் ஒத்துப் போகின்றன. அவை இதோ:

1. எல்லாவற்றையும் விட முக்கியமானது புது வாடிக்கையாளரைப் பிடிப்பது. எவ்வாறு கடிதம் எழுத வேண்டும்? யாருக்கு எழுத வேண்டும் என்றெல்லாம் பார்க்கலாம். இதற்கு மட்டும் பின்னால் ஒரு தனிப் பதிவு தேவைப் படும்.

2. உங்களை நீங்கள் அறிய வேண்டும். அதாவது உங்களால் எது முடியும் எது முடியாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தேவையில்லாது வாக்குறுதிகள் அளித்து விட்டு அவற்றை நிறைவேற்றாது போனால் உங்கள் நம்பகத்தன்மை அடிபட்டு விடும். உதாரணத்துக்கு வேலை எப்போது முடித்துத் தரவேண்டும் அன்று வாடிக்கையாளர் கூறும்போது அது உங்களுக்குத் தோதுப்படுமா என்று பார்த்தே ஒத்துக் கொள்ள வேண்டும். பத்துக்கு ஒன்பதுத தருணங்களில் அவசரம் என்று வாடிக்கையாளர் கூறுவது உதாராகத்தான் இருக்கும். அவசரமான வேலை என்றால் ஒன்றரை மடங்கு விலை என்றுக கூறிப் பாருங்கள் அவசரம் என்பது அவசரமாகவே மறைந்து விடும். இது பற்றிப் பின்னால் மேலும் விவரமாகக் கூறுகிறேன்.

3. உங்கள் விலை என்ன என்பதில் தெளிவாக இருங்கள். மொழி பெயர்ப்பாளர்கள் பலர் இதில்தான் கோட்டை விடுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை வேலை சுலபமாகவே இருக்கலாம். அவர்களுக்கு மிகவும் பிடித்ததாகவே கூட இருக்கலாம். அதை எல்லாம் வாடிக்கையாளரிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. பிறகு அவர் உங்களுக்கு ஏதோ சலுகை காட்டுவது போலத் தோற்றம் வந்து விடும். இது பற்றியும் அடுத்த பதிவுகளில் மேலும் கூறுவேன்.

4. வாடிக்கையாளர்களின் வாக்குறுதிகளை அப்படியே நம்பி விடாதீர்கள். தங்களிடம் ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருப்பதாகவும் நிறைய வேலை கொடுக்க முடியும் என்றும் ஆசை காட்டுவார்கள். இதுவும் மேலே கூறியதை போன்று அனேகமாக ஒரு உதாராகத்தான் இருக்கும். அவர்களிடம் ஒரே ஒரு வேலை இருந்தாலும் அவ்வாறுதான் கூறுவார்கள். அவர்கள் அக்கறை முடிந்த அளவுக்கு விலையைக் குறைப்பதே ஆகும். இதை நான் என்னளவில் எவ்வாறு கையாண்டேன் என்பதையும் பின்னொருப் பதிவில் கூறுவேன்.

5. தேவையில்லாத விவரங்கள் கொடுக்காதீர்கள். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு முழு நேர வேலை வைத்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு என்பது பகுதிநேரவேலை. அவ்வேலைக்கான வாடிக்கையாளரிடம் நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை ஒரு போதும் கூறக்கூடாது. அவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை அடிக்கடி கேட்பார்கள். மரியாதையுடன் அதே நேரத்தில் உறுதியுடன் தகவல் தர மறுத்து விடவும். இது பற்றி நான் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பிறகு கூறுகிறேன்.

6. எப்போதும் உங்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக உங்கள் தகவல் வழிகளைத் திறந்து வைக்கவும். தொலைபேசி வைத்திருப்பது மிக முக்கியம். தொலைபேசி அழைப்புகளை நீங்களே கையாளுவது முக்கியம். குழந்தைகளைத் தொலைபேசியை எடுக்க விடாதீர்கள். அது முடியாது என்றால் உங்களுக்கென்றுத் தனியாக செல்பேசி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களிடம் மட்டும் இருக்க வேண்டும். செல்பேசி "யூனிவர்செல்"பேசியாக மாறக் கூடாது. இதில் பல சாத்திய கூறுகள் உள்ளன. அவை பற்றிப் பிறகு.

7. உங்கள் அப்போதைய நிலை எதுவாக இருப்பினும் அதன் சாதகமான அம்சங்களையே வலியுறுத்தவும். 2002 வரை என்னிடம் கணினி இல்லை. இப்போது உண்டு. இரண்டு நிலைகளையும் நான் எனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டேன். அது பற்றிப் பிறகு.

8. வேலை செய்தால் மட்டும் போதாது. வரவேண்டிய தொகைகளையும் வசூலிக்கத் தெரிய வேண்டும். இது சம்பந்தமாக பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் குறித்துப் பிறகு விரிவாகப் பேசுவேன்.

மேலே கூறியவற்றையும், மேலும் கூறப் போவதைப் பற்றியும் பேச என்னுடைய யோக்கியதாம்சங்கள் என்ன? சமீபத்தில் 1975-லிருந்து நானே உணர்ந்துக் கடைபிடித்ததைப் பற்றித்தான் கூறப்போகிறேன். நான் சென்னையில் வெற்றிகரமாகச் செயல் புரியும் ஒரு மொழி பெயர்ப்பாளன் என்றுக் கூறுவதைத் தடுக்க என்னிடம் பொய்யடக்கம் இல்லை.

இஃது எத்தனை பகுதிகளாக வரும் என்பதோ, விடாமல் ஒன்றன் பின் ஒன்றாக வருமோ அல்லது விட்டு விட்டு வருமோ என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. சோ, சுஜாதா, பெரியார், பார்ப்பனீயம், இஸ்ரேல், ஹைப்பர் லிங்குகள் ஆகியவையுங்கூட நடுவில் தேவைக்கேற்ப வரலாம் என்பதையும் கூறி விடுகிறேன்.

அதே போல வரவும் செய்தன என்று நான் இப்பதிவை இற்றைபடுத்தும்போது கூறுகிறேன்.


பகுதி - 9
பகுதி - 8
பகுதி - 7
பகுதி - 6
பகுதி - 5
பகுதி - 4
பகுதி - 3
பகுதி - 2
பகுதி - 1

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/19/2006

முரட்டு வைத்தியம் - 3

முரட்டுவைத்தியம் - 1
முரட்டு வைத்தியம் - 2 (என்னைப் புரட்டிப் போட்ட அந்த ஞாயிற்றுக் கிழமை)

முரட்டு வைத்தியம் - 2 ஏற்கனவே வேறு பெயரில் வந்து விட்டபடியால் அதற்கும் முதல் பகுதிக்கும் சுட்டிகள் கொடுத்துவிட்டு இப்பதிவுக்கு வருவேன்.

சமீபத்தில் 1986-ல் ஐ.டி.பி.எல் தலைமை அலுவலகத்தில் சீனியர் டிசைன் இஞ்சினியர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக வேலை பார்த்து வந்தேன். தலைமை அலுவலகமும் தொழிற்சாலையும் குர்கானில் ஒன்றுக்குப் பக்கத்தில் ஒன்றாக இருந்தன. திடீரென என்னைத் தொழிற்சாலைக்கு மாற்றி விட்டார்கள். ஆனால் தொழிற்சாலையிலோ என்னை தலைமை அலுவலகத்துக்கான மின் உபகரணங்களைப் பராமரிக்குமாறு ரிபோஸ்டிங் செய்து விட்டனர். அது பற்றி நான் இப்பதிவில் போட்டுள்ளேன்.

அதுவரை என்னுடன் நட்பு முறையில் பழகி வந்த தலைமை அலுவலகத்தார் என்னை வித்தியாசமாக நடத்த ஆரம்பித்தனர். தலைமை அலுவலகத்தில் வேலை செய்பவர்களை அழைத்துச் செல்லும் பஸ் தில்லியில் எங்கள் வீடு இருந்தத் தெரு வழியாகச் சென்றது. தொழிற்சாலையில் இருந்த நான் அந்த பஸ்ஸில் அலுவலகம் செல்வது வழக்கம். அதற்கு ஆட்சேபணை எழுப்பினர் தலைமை அலுவலக யூனியன்காரர்கள். தங்கள் கேட் மீட்டிங்கில் எஙளைப் போன்றவர்களைத் தடுக்கப் போவதாகக் கூறினர். (என்னைத் தவிர தொழிற்சாலையைச் சேர்ந்த இன்னும் பலரும் அதே பஸ்ஸில் வருவது வழக்கம்).

நான் என்ன செய்தேன் தெரியுமா? "நீ யாரடா ஜாட்டான் என்னை பஸ்ஸில் வர வேண்டாம் என்பது, நான் கூறுகிறேன் உன் பஸ் எனக்கு வேண்டாம்" என்று ஒரு சைக்கிள் வாங்கி அதில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். வீட்டிலிருந்து அலுவலகம் 20 கிலோமீட்டர். போக ஒரு மணி நேரம் வர ஒரு மணி நேரம் என்று 40 கிலோமீட்டர் பயணம் தினசரி. அப்போது எனக்கு வயது 42. ஆனால் சைக்கிளை கண்மண் தெரியா வேகத்தில் ஓட்டிச் செல்வேன். காற்றின் எதிர்த் திசையில் மனிக்கு 20 கி.மீ. வேகம், நேர்த் திசையில் 30 கி.மீ. வரை வேகம். திசம்பர், ஜனவரி மாதங்களில் அலுவலகம் அடைந்ததும் ஸ்வெட்டரைக் கழற்றி சட்டை வியர்வையால் உடம்பில் ஒட்டிக் கொள்ள நின்றவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன். பகல் நேர வெப்ப அளவு 15 டிக்ரி செல்சியஸ் போல இருக்கும்.

சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் தலைமை அலுவலகத்துப் பொது மேலாளர் P.G. Zalani என்னை நேஷனல் ஹைவேயில் வியர்வையுடன் சைக்கிள் செலுத்தி வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். என்னைக் கூப்பிட்டு விசாரிக்க நான் அவரிடம் யூனியன்காரர்கள் செய்ததைக் கூற, உடனே அவர் அவர்களைத் தன் அறைக்கு வரவழைத்துக் கேட்டிருக்கிறார். அவர்களோ தாங்கள் ராகவனைக் குறித்துப் பேசவில்லை அவர் எப்போது வேண்டுமானாலும் பஸ்ஸில் வரலாம் என்றுக் கூறினர்.

இருந்தாலும் நான் ஒத்துக் கொள்ளவில்லை. "இதை ஒரு உடற்பயிற்சியாகச் செய்துக் கொள்கிறேன், நன்றி" என்றுக் கூறி விட்டேன். அதனால் என் மதிப்பு பலமடங்கு உயர்ந்தது. அவ்வாறு செய்யாமல் நான் என்னை பஸ்ஸில் அனுமதியுங்கள் என்றுக் கேட்டிருந்தால் வெற்றியடைந்திருப்பேன் என்று நினைக்கிறீர்களா?

இந்த நிலைமை 1993 அக்டோபரில் 47 வயதில் நான் விருப்ப ஓய்வு எடுக்கும் வரை நீடித்தது. ஒரு நாளைக்கு சராசரியாக 40 கிலோமீட்டர் வீதம் ஒரு மாதத்தில் (25 நாட்கள்) 1000 கிலோமீட்டர், ஒரு வருடத்தில் 12000 கிலோமீட்டர், 6 வருடங்களில் 72000 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் விட்டிருக்கிறேன். பூமியின் சுற்றளவு பூமத்திய ரேகையில் 25000 கிலோமீட்டர்கள் என்று ஞாபகம். ஐ.டி.பி.எல்லில் எனக்கு "வன மானுஷ்" (காட்டு மனிதன் --> காட்டான்)என்று சிலர் பட்டப் பெயர் வேறு கொடுத்திருந்தனர்.

ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது, அதுவும் இப்பதிவைப் போட்ட பிறகு. சைக்கிள் ஓட்டும்போது கோமணத்தை இறுகக் கட்டியது ஒன்றுதான் நான் செய்து கொண்ட முன்ஜாக்கிரதை நடவடிக்கை. ஆனால் என்னுடன் 42 ஆண்டுகளாக இருந்த ஹெர்னியா என் உயிருக்கு அபாயத்தை உண்டு பண்ணாதது என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் போட்ட பிச்சையே. இந்த அழகில் என் அப்பனை பற்றி போன வருடம் மார்ச் மாதம்தான் தெரிந்து கொண்டேன். முதல் தரிசனத்தின் போதே பல ஆண்டுகளாகவே அவனுடன் பழகிய உணர்வு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/18/2006

முரட்டு வைத்தியம் - 1

பின் நோக்கிப் பார்க்கும்போதுதான் தெரிகின்றன, பல விஷயங்கள் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளன என்று. அவற்றில் ஒன்று நான் இரண்டாம் ஆண்டு பொறியியல் தேர்வில் மூன்று பாடங்களில் ஃபெயில் ஆனது.

வருடம் 1965. ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட வருடம். எங்களில் பலரின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டது அப்போராட்டம். ஜனவரி 25-ல் ஆரம்பித்த அது மார்ச் 15-ஆம் தேதிவாக்கில் ஒரு நிச்சயமற்ற முடிவுக்கு வந்தது. சாதாரணமாக இந்தக் காலக் கட்டம் கல்வியாண்டில் முக்கியப் பங்கு வகிக்கும். காலேஜ் இல்லாமல் போய் கட்டுப்பாடின்றி ஊர் சுற்றினோம். அவ்வருடப் பல்கலைக் கழகத் தேர்வுகள் மே மாத நடுவில் நடத்தப் பட்டன.

எங்களுக்கு மொத்தம் 10 பேப்பர்கள். ஒன்றில் தோல்வியடைந்தாலும் ஒரு வருடம் வீட்டில் உட்கார நேரிடும். நான் கணக்கு, பௌதிகம் மற்றும் ரசாயனத்தில் ஃபெயில். ஒரு வருடம் காலி. அது வரை தேர்வில் தோல்வியென்பதையே அறியாத எனக்கு இத்தோல்வி பயங்கர அதிர்ச்சியை அளித்தது.

ஊர் சுற்றியக் காலங்களில் நிறைய சினிமா பார்த்திருக்கிறேன் என்று தோன்றியது. ஒரு வெறுப்பில் இனிமேல் கோர்ஸ் முடியும் வரை திரைப் படம் பார்க்காமல் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். என்னால் முடியாது என்று என் நண்பர்கள் என்னை வெறுப்பேற்ற என் வெறி அதிகமாயிற்று. 1969 ஜூலை வரை ஒரு படமும் பார்க்காமல் இருந்தேன். கோர்ஸ் முடிந்தப் பிறகுதான் படம் பார்த்தேன். ("பார் மகளே பார்")

என் அப்பாவே என்னிடம் அம்மாதிரியெல்லாம் சபதம் செய்ய அவசியமில்லை என்று கூறினாலும் நான் பிடிவாதமாக இதை சாதித்தேன். எது எப்படியானாலும் இது எனக்கு ஒரு வித நிறைவை அளித்தது. பிற்காலத்தில் பல விஷயங்களுக்குப் போராடியிருந்தாலும் என்னுடைய இந்த முதல் போராட்டம் என் மனதில் இப்போதும் நிலைத்து நிற்கிறது. "உன்னால் முடியும் தம்பி" என்று கூறுகிறது. மற்றப் போராட்டங்களைப் பற்றி பிறகு கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/15/2006

ஈ.வே.ரா. கூறியது இந்த விஷயத்தில் 100% சரியே

இது ஒரு மீள்பதிவு. முக்கியக் காரணம் பழையப் பதிவுகளை வகைபடுத்த முடியவில்லை, புதிய தமிழ்மணமும் அவற்றில் ஏதேனும் புது பின்னூட்டங்கள் வந்தால் அவற்றை இற்றைப்படுத்த முடியவில்லை. ஆகவே இந்த மீள்பதிவு. பழையப் பின்னூட்டங்கள் அப்படியே இதிலும் வருகின்றன. மேலும் இம்மாதிரி பதிவுகள் மீள்பதிவாக்கம் செய்யப்படும் என்பதையும் கூறிவிடுகிறேன். இப்போது இன்ஹ்டப் பதிவுக்குப் போகலாமா. அதில் சற்று மாருதல் செய்து கீழே கொடுத்துள்ளேன்.

சிலப்பதிகாரம் கதை சம்பந்தமாக எனக்குள் பல கேள்விகள் உண்டு. அவற்றைப் பற்றி இங்கே சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன்.

முதலில் கோவலனைப் பார்ப்போம். அவனைப் பற்றி புலவர் கீரன் ஒரு சொற்பொழிவில் கூறினார்: "குறுமொழி பேசும் கோவலன்" என்று. அதாவது கெட்ட வார்த்தைகள். போலி டோண்டுவைப் போல என்று வைத்து கொள்ளலாமே. தன் நண்பர்களுடன் அவ்வாறு பேசிக் கொண்டே ஊர் சுற்றுபவன். அவனுக்கு கண்ணகி என்னும் உத்தமப் பெண்ணை மண முடிக்கின்றனர். திருமணத்துக்கு பிறகு அவன் மனம் மாதவியை நாடுகிறது. ஆணாதிக்க சமுதாயமல்லவா, யாரும் ரொம்ப அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. கண்ணகியும் அதில் அடக்கம். என்ன செய்வது, ஆணாதிக்கத்தை போற்றும் சமூகத்தில் பிறந்தவள் வேறு என்னதான் செய்திருக்க முடியும்?

பணம் எல்லாம் தொலைத்துவிட்டு வரும் கணவனை செருப்பாலடிக்காமல் வரவேற்றது கண்ணகி செய்த பெறும் குற்றம். இவள் இவ்வாறு செய்ததால்தான் இன்னும் நம் நாட்டில் கன்ணகியை ஒரு எடுத்துக் காட்டாக நினைக்கும் பல பெண்கள் கஷ்டப்படுகின்றனர்.

ஆம்பள இப்படி அப்படித்தான் இருப்பான் என்ற சப்பை கட்டு வேறு. அது ஒரு புறம். சிலப்பதிகாரத்திலேயே வருகிறதே. கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்களை கொன்று உண்ணும் நாளங்காடி பூதங்கள், சதுக்க பூதங்கள் என்று. பரத்தை வீடு செல்லும் ஆண்கள்? இந்த பூதங்கள் ஒரு வேளை அப்போது தூங்கப் போய்விடும் போல.

சரி, சிலப்பதிகாரத்தின் முக்கியக் கதைக்குத் திரும்ப வருவோம். கண்ணகி கோவலனைப் பின்தொடர்ந்து செல்கிறாள். போன இடத்தில் கோவலன் மரண தண்டனை பெறுகிறான். இதுவரை சாதுவாக இருந்தவள் புயலாக எழுகிறாள். மதுரையையே எரிக்கிறாள். எல்லோருக்கும் தெரிந்த கதை.

அதே நேரம் பூம்புகாரில் என்ன நடந்தது? கோவலன் மாண்ட செய்தி கேட்டு அவன் தாய் தந்தையர் உயிரிழக்கின்றனர். மாதவி துறவறம் பூணுகிறாள். இங்கு மதுரையில் பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்த்ததும் பட்டத்துக்கு வந்த அவன் மகன் இத்தனைக்கும் காரணம் ஒரு பொற்கொல்லனே என்பதைக் கண்டு அவனை மட்டும் தண்டிக்காமல் பல பொற்கொல்லர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுகின்றான். போகிற போக்கில் அதைக் கூறும் இளங்கோவடிகள் இந்தச் செயலின் அநீதியைப் பற்றி ஒன்றும் கூறியதாகத் தெரியவில்லை.

ஆனால் என் வருத்தம் என்னவென்றால் இத்தனை ஆவேசமும் ஒரு உபயோகமற்றக் கேவலனான கோவலனுக்காக என்பதுதான். இந்தக் கேனையனுக்கா இத்தனை பாடு?

கண்ணகி தைரியம் மிக்கவள்தான். அவள் செய்ததும் அவளைப் பொருத்தவரை சரிதான். அக்காலக்கட்டத்தில் ஒரு பெண் வேறு மாதிரி சிந்தித்திருக்க முடியாதுதான். ஆனாலும் இப்பாத்திரம் பெண்ணடிமையின் ஒரு வெளிப்பாடுதான்.

ஆகவே கூறுவேன், பெரியார் கண்ணகி பாத்திரப் படைப்பை பற்றியும், சிலப்பதிகாரம் பற்றியும் கூறியது 100% சரியே என்று கூறி அவருடன் இந்த விஷயத்தில் நானும் ஒத்துப் போகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/14/2006

ஒரு தமிழனின் பார்வை: எனக்கு யார் ரோல்மாடல்?

ஒரு தமிழனின் பார்வை: எனக்கு யார் ரோல்மாடல்?

மேலே சுட்டியுள்ள முத்து (தமிழினி)அவர்களின் இப்பதிவை நான் எனது தந்தையைப் பற்றி இட்ட அப்பா அன்புள்ள அப்பா என்றப் பதிவுடன் லிங்க் செய்ய நினைத்ததன் பலன், அந்த முயற்சியே தனிப்பதிவாக வந்து விட்டது. இம்மாதிரி தனிப்பதிவாக வந்ததையே நான் உணரவில்லை. திடீரெனப் பார்த்தால் என் இனிய நண்பர் நாட்டாமை அவர்கள் இட்டப் பின்னூட்டம் வந்திருக்கிறது. கூகள் டாக்கில் Nattamai has left a comment in your blog என்ற அறிவிப்பு மேலெழுந்ததும் முதலில் ஒன்றும் புரியாமல் விழித்தேன். பிறகு பார்த்தால் இந்தப் பதிவு.

முத்து அவர்கள் தன் தந்தையைப் பற்றி எழுதியிருந்தப் பதிவு நெஞ்சைத் தொட்டது. உடனே அவருக்கு டெலிஃபோன் செய்து பேசினேன். அப்போது அவர் கூறினார், நான் என் தந்தையைப் பற்றிப் போட்ட பதிவுதான் அவருடைய இந்தப் பதிவுக்கு இன்ஸ்பிரேஷன் என்று. இரட்டிப்பு மகிழ்ச்சி.

நான் எதிர்ப்பாராத வண்ணம் தமிழ்ப் புத்தாண்டன்று என்னுடையப் புதுப்பதிவு ஒன்று வந்திருக்கிறது. நாட்டாமை மற்றும் முத்து (தமிழினி) எனக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள் வேறு தெரிவிக்கின்றனர்.

தமிழ்மண சக வலைப்பதிவர்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: தலைப்பை மாற்றப் போவதில்லை. ஏனெனில் இப்பதிவு அந்தத் தலைப்பில் தமிழ்மணத்தால் திரட்டப்பட்டுள்ளது, இனிமேல் தலைப்பை மாற்றினால் ஏதெனும் 404 அண்ட் 403 என்று நம்பர்கள் வரலாம். எதற்கு வம்பு?

4/12/2006

கருத்து.காமுக்கு ஒரு கடிதம்

போலி டோண்டு என்ற இழிபிறவி இப்போது கருத்து.காமில் நேற்று காலை என் பெயரில் தன்னைப் பதிவு செய்து கொண்டுள்ளான். இப்போது இப்பதிவைத் தட்டச்சு செய்யும் வரை அவன் 24 பதிவுகள் போட்டுள்ளான். முக்கால்வாசி எல்லாம் என் ப்ளாகிலிருந்து திருடியுள்ளான். இது சம்பந்தமாக நான் கருத்து.காமுக்கு அனுப்பிய மின்னஞ்சல் கீழே தந்துள்ளேன். இது self explanatory.

From: Narasimhan Raghavan Mailed-By: gmail.com

To: karuthu@karuthu.com
Date: Apr 12, 2006 9:23 AM
Subject: Identity theft by your member vide http://www.karuththu.com/forum/index.php?showuser=219
Reply | Reply to all | Forward | Print | Add sender to Contacts list | Delete this message | Show original | Message text garbled?
Sir,

This is regarding the identity theft by your member vide http://www.karuththu.com/forum/index.php?showuser=219

I am Dondu Raghavan and am running a blog at http://dondu.blogspot.com/

The new member as shown in the subject column above has stolen my identity, photo etc and has joined your forum since yesterday. I request you to look into this and delete that membership. You can visit my blog that has been in existence since November 2004 and therin you can see my photo as well.

You can easily see that this is a clear case of identity theft with the sole aim of maligning me. Many of this new members' posts are a straight lift from my blog posts and malicious editing has been carried out in them before being published.

Now you are in an unenviable legal position. Kindly act before more damage is done. Let me hasten to add that this bogus person is not unknown to the Tamil blogging community. There is also article about him in the Kumudam Reporter issue dated 13.04.2006. For more information, see this post in my blog.

For the article in question, see this post.

Hope you will act soon.

Regards,
Dondu N.Raghavan

இந்தப் போலி டோண்டு ரொம்பத்தான் என்னையே நினைத்துக் கொண்டுள்ளான். தொழில் கடவுள் விஸ்வகர்மாவை நினைத்தாலாவது ஏதாவது தொழில் முன்னேற்றம் பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/10/2006

தமிழ் ரீலுக்கு நன்றி



நான் பாட்டுக்கு ஒரு மொழிபெயர்ப்பு வேலையில் (ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு) ஆழ்ந்திருக்க திடீரென யாஹூ தூதுவனிலிருந்து ஒரு மெஸ்ஸேஜ் வந்தது, "மாட்டிக் கொண்டீரா" என்று. ஒரு நிமிடத்திற்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் யார் என்பதைக் கூறவும் என்று கேட்க, "நீங்கள் போலி டோண்டுதானே, உங்கள் லீலையை நிறுத்திக் கொள்ளவும்" என்று செய்தி வந்தது. நான் உண்மையான டோண்டுவே என்று கூற உடனே அவர் மன்னிப்பு கேட்டார். அவர் மேல் தவறில்லை. போலி டோண்டு எல்லோரையும் அவ்வாறு குழப்பி வைத்திருக்கிறான். பிறகு அவர் குமுதம் ரிப்போர்டர் செய்தியை தன் மன்றத்தில் யூனிகோடில் போட்டதாகக் கூற, அங்கு போய் பார்த்தென். படத்துடன் வந்திருந்தது. அவர் அனுமதியுடன் அதை இங்கு ஏற்றுகிறேன். அவரது சுட்டி இதோ. அவருக்கு அங்கேயே பதிலளிக்க நினைத்தேன் முடியவில்லை. அதை இங்கே நகலெடுத்து ஒட்ட அனுமதி கேட்டுப் பெற்றேன். படத்தைப் போட விடாது ப்ளாக்கர் சொதப்புகிறது.

இப்போது தமிழ்ரீல் கொடுத்துள்ள குமுதம் ரிப்போர்டர் ரிப்போர்ட் இதோ:

காலையில் போய் கம்ப்யூட்டரைத் திறக்கிறீர்கள். இ.மெயிலை ஆர்வத்துடன் திறந்தால்..."தே.... மவனே... உன்னைக் கொன்னுடுவேண்டா..." என்று ஆரம்பித்து உங்கள் அப்பா, அம்மா, சகோதரி, பிள்ளைகள், நண்பர்கள் என்று எல்லோரையும் வக்கிரமாகத் திட்டி ஒரு அனாமதேய மெயில் வந்திருந்தால், உங்களுக்கு எப்படியிருக்கும்?

தமிழ் இணைய உலகில் 'பிளாக்' (blogspot) என்று சொல்லப்படும் தனிப்பக்கங்கள் வைத்து எழுதிக்கொண்டிருப்பவர்கள் இம்மாதிரி ஒரு அவஸ்தையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள். உலகளாவிய இணைய உலகில், யார் இந்த வேலையைச் செய்பவன் என்று தெரியாமல் பலர் மனம் நொந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் 'பிளாக்' எழுதுபவர்கள் சுமார் 1000 பேர் இருக்கிறார்கள். அதில் சுமார் 300 பேர் தீவிரமாக இயங்குகிறார்கள். தமிழில் எழுதப்படும் இந்த பிளாக்குகள் அனைத்தையும் திரட்டி 'தமிழ் மணம்' என்ற இணையதளம் வழங்குகிறது. இதற்கு போனால் யார் யார், என்னென்ன விவரங்களை புதிதாக தங்கள் பிளாக்கில் அப்டேட் செய்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும்.

இப்படி தமிழ் இணைய உலகில் தீவிரமாக இயங்குபவர்களில் 'டோண்டு' ராகவன் என்ற மொழிபெயர்ப்பாளரும் ஒருவர். இவர்தான் அந்த 'பயங்கரவாதியால்' கடுமையான பாதிப்புக்குள்ளானவர். இவரிடம் பேசினோம்.

"நான் 'டோண்டு' என்ற பெயரில் 'பிளாக்' எழுதி வருகிறேன். நான் எழுதிய ஒரு கருத்துக்கு நூறு பேர் வரை 'கமெண்டுகள்' எழுதுவார்கள். இது சாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சி. ஒருமுறை, நான் என்ன சாதி என்பதைக் குறிப்பிட்டு, அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதில் தவறில்லை; எதற்காக என் சாதியை நான் மறைக்க வேண்டும்? என்று குறிப்பிட்டேன். இதைத்தான் அந்த 'பயங்கரவாதி' பிடித்துக் கொண்டுவிட்டான். அதைத் தொடர்ந்து என் பிளாக்குக்கு வந்து கெட்ட வார்த்தைகளால் அச்சில் ஏற்றமுடியாத என்னை அர்ச்சித்தவன், என் 'பிளாக்' மாதிரியே வேறொரு 'பிளாக்'கை என் பெயரிலே 'டிசைன்' செய்ய ஆரம்பித்து, நான் எழுதும் எல்லாவற்றையும் திருடி அங்கே போட்டு, அதில் இடையிடையே சில வார்த்தைகளை மாற்றிப் (கெட்ட வார்த்தைகளை, குறிப்பாக பாலுறுப்புகள் தொடர்பான வார்த்தை) போட்டுவிடுவான். அதைப் பார்ப்பவர்கள், டோண்டு ராகவனுக்கு அறுபது வயதாகிறது. இவ்வளவு வக்கிரமான ஆளாக இருக்கிறாரே என்று நினைக்க ஆரம்பித்தார்கள். அது மட்டுமல்ல, என் பெயரில் இவன் மற்றவர்கள் எழுதும் தமிழ் பிளாக்குகளுக்கும் போய் கமெண்ட் எழுதவும் ஆரம்பித்தான். கமெண்டுகளா அவை? அய்யோ... படிக்கவே கண் கூசும் கடைந்தெடுத்த வக்கிர வார்த்தைகள் அவை... படிக்கும் ஆண்களுக்கே குமட்டும் என்றால் பெண்கள் என்ன ஆவார்கள்?

இந்த 'உவ்வே' சமாச்சாரத்தைக் கண்டுபிடித்த நான் பிறகு எல்லோருக்கும் அதைத் தெரிவித்தேன். நான் எழுதும் ஒரிஜினல் கமெண்டுகளைத் தொகுத்து ஒரு இடத்தில் போட்டேன். இதையும் அவன் மோப்பம் பிடித்து, அந்த கமெண்டுகளுக்கும் போலியாக தனி இடம் ஆரம்பித்து போலி கமெண்டுகளை என் போலவே தொகுக்க ஆரம்பித்துவிட்டான்.

இதோடு விட்டானா என்றால் இல்லை... என் பிளாக்கைப் படித்துவிட்டு யாராவது ஒரு சின்ன கமெண்டை எழுதிவிட்டால் போதும். அடுத்த நிமிடம் அதை எழுதியவரை ஆபாசமாக அர்ச்சனை செய்து... கொலை மிரட்டல் விட்டு அச்சுறுத்திவிடுகிறான்!" என்று மூச்சுவிடாமல் சொல்லி சற்று நிறுத்தினார் டோண்டு ராகவன்.

இதுபோன்ற வக்கிர செய்கைகள் நடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து நடந்திருக்கிறது. ஆனால், சமீபத்தில் ஒரு அறுபது வயதுப் பெண்மணி, தன் அமெரிக்க மகளுடன் பேசுவதற்காக இணைய தளத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தவர், அப்பாவித்தனமாக டோண்டுவின் பிளாக்கில் ஒரு கருத்தை எழுதிவிட்டார். அவ்வளவுதான். அவருக்கு வந்து சேர்ந்த மோசமான வார்த்தைகளை அவர் வாழ்நாளில் கேட்டதில்லை. இப்போது அவர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு கணிப்பொறியை பார்த்தாலே கை கால் நடுங்கும் அளவுக்குப் போய்விட்டார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, இதை இத்துடன் விடக்கூடாது என்று பாதிக்கப்பட்டவர்கள் முடிவெடுத்திருக்கிறார்களாம்.

இணைய உலகில் இயங்கும் பலரிடம் சாதி குறித்த பிடிமானம் அபரிமிதமாக உள்ளது. ஏனெனில், 'அங்கே முகம் காட்ட வேண்டாம். தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொள்ளலாம்' என்பது ஒரு வசதி. எந்தக் கருத்தையும் தன் பிளாக்கில் சுதந்திரமாக எழுதிவிடலாம். சில பிளாக்குகள் இதைப் பயன்படுத்தி இனவாதம், மதவாதம் பேசிவிடுவதும் உண்டு. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அவற்றை இந்த பிளாக்குகளுக்கு இடம் தரும் இணைய தளங்கள் நீக்கிவிடும்.

ஆனால் இந்த பயங்கரவாதி எப்படியோ ஒருவரின் சாதி, அவரது பின்னணி, அவர் வேலை பார்க்கும் இடம், அவரது கல்லூரித் தொடர்புகள் எல்லாவற்றையும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டுபிடித்துவிடுகிறான். பிறகு அவற்றை பப்ளிக்காக தன் 'போலி டோண்டு' பிளாக்கில் வெளியிட்டும் விடுகிறான். அமெரிக்காவில் வசிக்கும் திருமலைராஜன் என்பவரது முழுமுகவரி, அவர் எங்கோ, எப்போதோ எடுத்துக் கொண்ட ஒரு படம் ஆகியவற்றை வெளியிட்டு பெரிய சலசலப்பையே தமிழ் இணைய தள எழுத்தாளர்களிடம் ஏற்படுத்திவிட்டான் அவன்.

இதனால் தன் அறுபதாம் கல்யாணம் விமரிசையாக நடந்தும் ஒரு 'பிளாக்' எழுத்தாளர், தன் நண்பர்கள் வலியுறுத்தியும் அந்தப் படங்களை வெளியிடவே தயங்கிக் கொண்டிருக்கிறார். சென்னையிலிருக்கும் ஒரு மூத்த பெண் பத்திரிகையாளருக்கும் இந்தக் கிறுக்குப் பிடித்த பயங்கரவாதியிடமிருந்து ஆபாச மிரட்டல்கள் வர, அவரும் இப்போதெல்லாம் கம்ப்யூட்டரைப் பார்த்தாலே கை நடுங்க ஆரம்பித்துள்ளார்.

'தமிழ் மணம்' என்ற பிளாக்குகளைத் திரட்டும் தளம் நடத்துபவர் பெயர் காசி ஆறுமுகம். இவருக்கும் அந்த பயங்கரவாதிக்கும் இதனால் மோதல் வர, அவன் சகட்டு மேனிக்கு அவரைப் பற்றி எழுத ஆரம்பிக்க, அவற்றை ஏதேச்சையாகப் படித்துவிட்ட அவரது குடும்பத்தினர், "உங்களுக்கு இந்த இணையதள பிஸினஸே வேண்டாம்!" என்று பெரும் பிரச்னை செய்திருக்கிறார்கள்.

தமிழில் பிளாக் எழுதுபவர்களில் பிரபலமானவர்களான பத்ரிநாராயணன், பிரகாஷ் ஆகியோரிடம் இதுபற்றிக் கேட்டோம். 'தாங்களும் இவனால் பாதிக்கப்பட்டவர்களே' என்ற அவர்கள், தங்கள் கவலையை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.

"இணையத்தின் பயன்பாடு இப்போது உலகம் முழுக்க அதிகரித்துக்கொண்டே போகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இதைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் புதிதாக உள்ளே நுழைந்தவுடன் அவர்களை மீண்டும் இணையதளம் பக்கம் திரும்ப வராமல் செய்கிறான் இவன். எங்களுக்கும் இவனிடமிருந்து மிரட்டல் கடிதங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால் பெண்கள் இவனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவதைத்தான் சும்மா விட்டுவிட முடியவில்லை. சாதாரணமாக, வெளியுலகில் ஒரு தெருவில் ஒரு பைத்தியக்காரன், அவ்வழியாகப் போகும் பெண்களைத் தரக்குறைவாகப் பேசிக் கொண்டிருக்கிறான், அதைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்றால் என்ன செய்வார்கள்... பெண்கள் அந்தத் தெரு வழியாக வருவதையே நிறுத்திவிடுவார்கள். அதுதான் இப்போது நடக்கிறது. தமிழ் இணையத்தில் ஆர்வத்துடன் பங்கெடுக்க வந்த பல பெண்கள் இப்போது இவனது மிரட்டலால் காணாமலே போய்விட்டார்கள்.

இதே அமெரிக்காவாக இருந்தால், இவனை கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளில் பிடித்துப்போட்டு நொங்கு எடுத்துவிடுவார்கள். சைபர் கிரைம் தொடர்பாக சட்டங்கள் அவ்வளவு தெளிவானவையாக உள்ளன. ஆனால் இங்கே அப்படிக் கிடையாது. தமிழகத்தில் எங்கு சைபர் கிரைம் நடந்தாலும், அதை எங்கே புகார் கொடுப்பது என்பது பற்றிய தெளிவான விவரங்கள் இல்லை. இதை முறைப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் இன்னும் பயன்பாடுகள் அதிகரிக்கும்போது விபரீதங்கள் ஏற்படும்" என்று தெரிவித்தார்கள் இவர்கள்.

இப்படியரு குடைச்சலைக் கொடுத்துவரும் அவன் யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திறமையுடன் தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்திச் செயல்படுகிறானாம். அத்துடன் அவன் எழுதும் தமிழ்நடை, உண்மையிலேயே நன்றாக இருக்கிறது என்பதால் அவன் மெத்தப் படித்த அறிவாளி என்று ஒப்புக்கொள்ளும் இவர்கள், எங்கோ அவனுக்கு மனரீதியாக பாதிப்பு ஏற்பட்டு அவனொரு சைக்கோவாக ஆனதால்தான் இப்படி நடந்துகொள்கிறான் என்கிறார்கள். தற்போதைக்கு அவன் யாரென்று ஒருவிதமாக புரிந்திருக்கும் இவர்கள், அவனைப்பற்றி காவல்துறைக்கும் தெரிவித்திருக்கிறார்களாம். ஆனால், அவனைப் பிடிக்க சர்வதேச காவல் துறையின் உதவி தேவைப்படும் என்பதால் தமிழக போலீஸ் கூடுதல் சிரத்தையுடன் செயல்பட்டால்தான் பிடிக்க முடியும் என்கிறார்கள்.

இணையதளத்தில் தகவல்களைத் தேடித்தரும் மென்பொருட்கள் உள்ளன. இவன் பலரையும் பற்றி கன்னா பின்னாவென்று ஆபாசமாக எழுதிவருவதால், இவனால் பாதிக்கப்பட்ட யாரைப்பற்றியாவது தகவல்களைத் தேடினால், இவன் அவர்களைப்பற்றி எழுதிய அசிங்கமான விஷயங்களே வந்து விழுகின்றனவாம். இதுவே இணையதள எழுத்தாளர்களின் அச்சத்தைப் பன்மடங்கு பெரிதாக்கியிருக்கிறது!

தொழில்நுட்பம் வளர வளர எவ்வளவு பிரச்னைகளைத்தான் சந்திக்க வேண்டியிருக்கிறது!

நன்றி குமுதம் ரிப்போர்டர் 13.04.2006 தேதியிட்ட இதழ்

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/09/2006

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்

செப்டம்பர் மாதம், வருடம் 1981. ஐ.டி.பி.எல்லிலிருந்து வேலை உத்தரவு வந்திருந்தது. அச்சமயம் மத்தியப் பொதுப்பணித் துறையில் 10 வருடங்களாக ஜூனியர் இஞ்சினியராக இருந்தேன் (சம்பள விகிதம் 425-700). பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக வேலைக்கு விண்ணப்பித்து நேர்காணலுக்கு ஐ.டி.பி.எல். சென்ற என்னை இஞ்சினியர் வேலையும் செய்ய விருப்பமா எனக் கேட்டு, உதவி டிஸைன் இஞ்சினியர் மற்றும் பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளராக தேர்ந்தெடுத்து அந்த உத்திரவு வந்திருந்தது.

இந்த வேலையின் சம்பள விகிதம் 700-1300. அதாவது, ஒன்றின் அதிகப்பட்ச சம்பளம் இன்னொன்றின் ஆரம்ப சம்பளம். மத்தியப் பொதுப்பணித் துறையில் எனக்கு அடுத்த வேலை உயர்வு வர இன்னும் 10 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டிய நிலை. அப்படியே வந்தாலும் அதன் சம்பள விகிதம் 650-1200 மட்டுமே. எனக்கு அளிக்கப்பட்ட விகிதம் ஜூனியர் க்ளாஸ்-1 ஐச் சேர்ந்தது. ஆகவே நான் வேலையை உடனே எற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி தெளிவாக நிலைமை இல்லை. அப்போது என் அடிப்படை சம்பளம் 600 ரூபாய். ஆகவே நான் புது வேலையை ஒத்துக் கொண்டால் மொத்த ஊதிய உயர்வு 200 ரூபாயை விடக் குறைவுதான். மேலும் அப்போது நான் சென்னையில் இருந்தேன். புது வேலையோ குர்காமில் தில்லிக்கு அருகில். என் வீட்டம்மா அப்போது இந்தியன் வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு வேறு ட்ரான்ஸ்ஃபர் வாங்க வேண்டும். என் குழந்தைக்கு அப்போது 5 வயது கூட நிரம்பவில்லை. நாங்கள் இருவரும் வேலைக்கு செல்லும்போது என் அத்தை குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தார். தில்லியில் அதற்கு வேறு ஏற்பாடு செய்ய வேண்டும்.

சுற்றியிருந்த உறவினர்களில் பலர் சௌகரியமாக இங்கிருப்பதை விட்டு ஏன் அவ்வளவு தொலைதூரம் செல்ல வேண்டும் என்ற ரேஞ்சில் பேசினர். அதிலும் சிக்கல். சென்னைக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆன நிலையில் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் வரலாம் என்ற நிலை. ஏழு ஆண்டுகள் இருந்ததே மிகவும் அதிகம் என்றுதான் கூற வேண்டும். எங்கு போடுவார்கள் என்பதும் நிச்சயமில்லை. ஒரே குழப்பம். அப்போதுதான் என் வீட்டம்மா ஒரு விஷயத்தை என் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அவர் கூறினார். "நீங்கள் மொழிபெயர்ப்பு செய்வதில் விருப்பம் கொண்டவர். இப்போது அதற்கு வாய்ப்பு வந்துள்ளது. மேலும் இரண்டு வருடத்திற்கு மத்தியப் பொதுப்பணித் துறையில் லியன் வேறு (இது பற்றி இந்தப் பதிவு போட்டுள்ளேன்). ஆகவே போய் முயற்சிப்பதில் தவறே இல்லை. போனதும் முதல் இரண்டு மாதத்திலேயே மொழிபெயர்ப்பை முழு நேர வேலையாக எடுப்பதில் உள்ள சாதக பாதகங்கள் தெரிய வரும். அப்போது எழுதுங்கள், நான் தில்லிக்கு மாற்றம் பெற்று வருகிறேன். அப்படி வேலை பிடிக்கவில்லையென்றாலும் கவலயில்லை. லியனை உபயோகித்து மத்தியப் பொதுப்பணித்துறைக்கே வந்து விடலாம்."

ஐ.டி.பி.எல்லில் சேர்ந்த பிறகு என் மொழிபெயர்ப்பு வேலை பற்றி பாஸிடிவான முடிவெடுக்க எனக்கு சில நாட்களே தேவைப்பட்டன. பிறகு நான் சென்னைக்கு எழுதி என் மனைவி மாற்றம் பெற்றுக் கொண்டு வந்தது தானே நடந்தது. வீட்டைக் காலி செய்யக் கூட நான் சென்னைக்குப் போகத் தேவையிருக்கவில்லை. எல்லாவற்றையும் அவரே பார்த்துக் கொண்டு, ரயில்வே கண்டெய்னரில் சாமான்களை ஏற்றி, தில்லி வந்ததும் ரயில்வே ரசீதை என்னிடம் ஒப்படைக்க, சாமான்கள் வீட்டு வாசலில் இறக்கப்பட்டன.

வருடம் 1986. திடீரென என்னை குர்காம் தொழிற்சாலைக்கு மாற்றம் செய்து விட்டார்கள். வேலையையே விட்டுவிடலாமா என்ற ரேஞ்சுக்கு குழம்பிய போதும் என் வீட்டம்மாதான் சரியான அட்வைஸ் கொடுத்தார்.

"டியூட்டியில் சேருங்கள். சில நாட்கள் போகட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்ற ஆலோசனையை ஏற்றுக் கொண்டதில் பல விஷயங்கள் நடந்தன. தொழிற்சாலையில் என் ரேங்கில் இருந்த ஆனால் எனக்கு ஜூனியர் நிலையில் இருந்த சக இஞ்சினியர் பாலிடிக்ஸ் செய்ய என்னை கார்ப்பரேட் அலுவலக மேற்பார்வைக்கே அனுப்பி வைத்தனர். நான் பாட்டுக்கு சந்தோஷமாக என் வெளி மொழிபெயர்ப்பு வேலைகளை செய்ய முடிந்தது.

அக்டோபர் மாதம் 1993. ஐ.டி.பி.எல்.லில் பலர் விருப்ப ஓய்வு பெற்றுச் செல்ல, ஆட்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இந்த நிறுவனத்தின் எதிர்க்காலம் இருண்டதாக இருந்தது. என்னைப் போன்ற இஞ்சினியர்களை ரிஷிகேஸுக்கு மாற்றப் போவதாக ஒரே பேச்சுத்தான். நானும் விருப்ப ஓய்வு எடுக்கப் போவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். என் கைவசம் மொழிபெயர்ப்புத் திறமையை நம்பித்தான் செயல் புரிய வேண்டும். வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் வாடிக்கையாளர்கள் ஒழுங்காக வேலை கொடுக்காவிட்டால் என்ன செய்வது என்ற தயக்கம் வந்தது. ஏனெனில் அச்சமயம் என் வீட்டம்மாவும் வேலையில் இல்லை. குடும்பக் காரணங்களால் 1988-லேயே அவர் வேலலயை விட்டு விட்டிருந்தார்.

அப்போதுதான் வீட்டம்மாவின் அறிவுறை மறுபடி துணைக்கு வந்தது. யூ.டி.ஐ. மாதாந்திர வட்டித் திட்டங்களில் முதலீடு செய்திருந்தேன். அவற்றில் மாதத்துக்கு கணிசமான வட்டி வந்து கொண்டிருந்தது. ஐ.டி.பி.எல். வேறு விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு கணிசமானத் தொகை கொடுக்கும்.

ஆகவே அவர் சொன்னார்: "கவலைப்பட வேண்டாம். வாடகை போக என்னிடம் ஒரு நான்காயிரம் ரூபாய் மாதத்துக்கு இருந்தால் அதிலேயே குடும்பம் நடத்த இயலும். உங்கள் முதலீடுகளிலேயே அந்தத் தொகை கிடைக்கும். ஆகவே மொழி பெயர்ப்பில் சிறிது கிடைத்தாலும் தற்சமயம் அது போதும். கவலையின்றி விருப்ப ஓய்வுக்கு எழுதி கொடுங்கள்".

அவ்வாறே செய்ததில் முதல் வருடத்திலேயே நல்லப் பலன் இருந்தது. தில்லியில் இன்னும் எட்டு ஆண்டுகள் 2001 வரை இருந்து தொழிலை நன்கு அபிவிருத்தி செய்து கொள்ள முடிந்தது.

மே மாதம் 2001. நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் திடீரென வீட்டைக் காலி செய்ய சொல்லி விட்டார். தில்லியில் இருந்த கிட்டத்தட்ட 20 வருடங்களில் 7 முறை வீடு மாற்ற வேண்டியிருந்தது. அப்போதுதான் சென்னைக்கே திரும்பலாம் என்று என் வீட்டம்மா ஆலோசனை கூறினார். எனக்கும் சரி என்று பட்டது. அப்போதும் அவர் கூறினார். "நாம் சொந்த வீட்டுக்குப் போவதால் வாடகை மிச்சம்தானே. சென்னையில் மாதம் ஐயாயிரம் கையில் இருந்தால் போதும். சமாளித்துக் கொள்வேன்".

இத்தனை ஆண்டுகளாக என் வீட்டம்மாவின் ஆலோசனையால் பயன் பெற்ற நான் இம்முறை யோசிக்கக்கூட இல்லை. இத்தனை ஆண்டுகளாக என் நங்கநல்லூர் வீடு வேறு அடிக்கடி கனவில் வந்து கொண்டிருந்தது.

சென்னைக்கு வந்ததில் வாழ்க்கை அற்புதமயமானது எனப் புரிந்தது. நான் பயந்ததற்கு மாறாக என் மொழிபெயர்ப்பு வேலைகள் மிக வேகமாக அதிகமாயின. தில்லியில் இருபது வருட மொழிபெயர்ப்புத் தொழிலில் சம்பாதித்ததை சென்னைக்கு வந்த பிறகு முதல் மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே மிஞ்ச முடிந்தது. இங்கு வந்ததில் கணினி அறிவு பெற்று, தமிழ்மணத்தில் வந்து, தமிழ் மொழிபெயர்ப்பிலும் முன்னேற்றம் பெற்று, இணையத்தில் இணையற்ற நண்பர்களை பெற முடிந்தது. இப்போது வயது அறுபதாலும் மனதுக்கு என்னவோ 25 வயதுதான்.

ஆகவே நண்பர்களே, நான் அழுத்தம் திருத்தமாகக் கூறுவேன். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/08/2006

குமுதம் ரிப்போர்டருக்கு நன்றி

மூன்று நாட்களுக்கு முன்னால் குமுதம் ரிப்போர்டரிலிருந்து என்னிடம் போலி டோண்டுவைப் பற்றி ஒரு பேட்டி எடுத்தார்கள். பத்ரி, நாராயணன், இகாரஸ் பிரகாஷ், பாரா ஆகியோரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன. நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கொடுத்த பேட்டியை அழகாகச் சுருக்கி இன்று வெளியான லேட்டஸ்ட் குமுதம் ரிப்போர்டரில் (13.04.2006 தேதியிட்டது) "தமிழ் இன்டர்நெட்டில் ஒரு பயங்கரவாதி" என்னும் தலைப்பில் 10-ஆம் பக்கத்தில் அது வந்துள்ளது.

அதிலிருந்து ஒரு வரி: "இதனால் தன் அறுபதாம் கல்யாணம் விமரிசையாக நடந்தும் ஒரு பிளாக் எழுத்தாளர், தன் நண்பர்கள் வலியுறுத்துயும் அந்தப் படங்களையே வெளியிடத் தயங்கிக் கொண்டிருக்கிறார்." அது வேறு யாரும் இல்லை நான்தான்.

கடந்த ஒரு வருடங்களாக தமிழ் இணையத்தைப் பீடிக்கும் நோயாக உலவி வரும் போலி டோண்டு என்னும் இவனைப் பற்றி நான் கீழ்க்கண்டப் பதிவுகள் போட்டுள்ளேன்:

1. போலி டோண்டு

2. என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களைப் பற்றி - 2 (இதிலேயே இதன் முந்தையப் பகுதியின் சுட்டியும் உண்டு)

3. திருவிண்ணகர ஒப்பில்லா அப்பன்

4. மனம் பிறழ்ந்தவன் செய்யும் கூத்து இதன் பின்னூட்டங்களை தற்சமயம் மறைத்து வைத்திருக்கிறேன், அவ்வளவு ஆபாசங்கள் அவற்றில்!

5. வலைப்பதிவு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஆக, போன ஆண்டு மே மாதம் 25-லிருந்து இந்தப் பிரச்சினை ஆட்டிப் படைத்து வருகிறது. இப்போது குமுதம் ரிப்போர்டரிலும் வந்து விட்டது. என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் அருளால் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையும் உண்டு.

இந்தச் செய்கையில் ஈடுபட்டிருக்கும் போலி டோண்டுவைப் பற்றி பிரபல மனத் தத்துவ நிபுணர் டாக்டர் ஷாலினி அவர்கள் கூறியதையும் அதே குமுதம் ரிப்போர்டர் கட்டுரையில் படிக்கவும்.

பிரச்சினையை அழகாக அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றதற்காக குமுதம் ரிப்போர்டருக்கு நன்றி. அதே குமுதம் ரிப்போர்டரில் போன மே மாதம் வந்த இரண்டு செய்திகளைப் பற்றி நான் போட்ட இந்தப் பதிவில்தான் பிரச்சினையே ஆரம்பித்தது என்பதி நினைக்கவே வேடிக்கையாக இருக்கிறது. (இப்பதிவு போன அக்டோபர் மாதம் மீள்பதிவு செய்யப்பட்டது)

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/01/2006

டோண்டுவின் இரண்டாம் திருமணம் - 2

என்னுடைய சஷ்டியப்தபூர்த்தியை எதிர்நோக்கி நான் போட்ட இப்பதிவுக்கு நான் தட்டச்சு செய்யும் இத்தருணம் வரை 84 பின்னூட்டங்கள் வந்தன. அவற்றில் பல என்னுடையவை என்பதைத் தவிர்த்துப் பார்த்தாலும் கணிசமான நண்பர்கள் வாழ்த்து அனுப்பியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி. அதிலும் பல பெயர்கள் எனக்கு அறிமுகமில்லாதவை. இருப்பினும் ஏதோ மிகவும் தெரிந்தவர்களுடன் பேசுவது போலவே தோன்றுகிறது.

திருமணம் மிக நல்லபடியாக முடிந்தது. காலை 8-லிருந்து 9 மணி வரை முகூர்த்தம். பூர்வாங்க வேலைகள் 6.30 மணிக்கே ஆரம்பிக்கப் பட்டன. சரியாக நிர்ணயம் செய்திருந்த நேரத்தில் என் காதல் மனைவிக்கு இரண்டாவது முறை தாலி கட்டி என்னை அவருடையவராக்கினேன்.

சாப்பாட்டிற்காக நாங்கள் ஏற்பாடு செய்த கேட்டரர் (caterer) சென்னையில் மிகப் பிரசித்தி பெற்ற நரசிம்மன் அவர்கள். மயிலையிலிருந்து உணவுப் பொருட்களை வேனில் நங்கநல்லூர் வரை கொண்டு வந்து அழகாகப் பரிமாறினார். ஆனால் என்ன, நடுவில் சென்னையின் போக்குவரத்து நெருக்கடியால் இன்று அவர் வருவது சற்றே தாமதமானது. அடையாறிலிருந்து கத்திபாரா வரை ட்ராஃபிக் ஜாம். முகூர்த்தம் 9 மணிக்கே முடிவடைய, அவர் 10 மணிக்குத்தான் வர முடிந்தது. காலை 7.45-க்கு புறப்பட்டும் இந்த நிலை.

இணைய நண்பர்கள் முத்து (தமிழினி), ஜெர்மனி முத்து, டி.பி.ஆர்.ஜோசஃப், துளசி, நிலா, விச்வாமித்ரா, ஜாவா குமார், ராஜ் சந்திரா, ஸ்ரீகாந்த், முகமூடி, ரவிஷா, கோபி, சில்வியா, பி.கே.எஸ், நாட்டாமை, சுந்தர், மணியன், டைனோ, டி.ராஜ், இட்லி, வடை, கோபி, எஸ்.கே., தினகர், சிவஞானம்ஜி, சுபமூகா, குமரன், சதயம், அருண் வைத்தியனாதன், ரஜினி ராம்கி, திருமலை, பி.கே. சிவகுமார், பெனாத்தலார், முத்துக் குமரன், வெங்கடேஷ் சர்மா, முத்து, ஆறுமுகம், பறக்கும் பட்டம், பார்வை, தருமி, மனசாட்சி, மகேஸ், கீதா சாம்பசிவம், ஜி. ராகவன், இலவசக் கொத்தனார், சிவா, ரவி பால சுப்ரமனியன், ஆதிரை, ஸ்டேஷன் பெஞ்ச் ராம்கி, காலக்ரி சிவா, மஞ்சுளா சீமாச்சு, குமரன், ஜயஸ்ரீ, மாயக்கூத்தன், பரஞ்சோதி ஆகியோர், தொலைபேசி மூலமும், பின்னூட்டங்கள்/மின்னஞ்சல்கள் மூலமும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதில் யார் பெயராவது விட்டுப் போயிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.

இன்று நேரில் வந்து கடைசி வரை இருந்து கம்பெனி கொடுத்தவர்கள் என்றென்றும் அன்புடன் பாலா மற்றும் மாயவரத்தான். அவர்கள் இருவருக்கும் ஸ்பெஷல் நன்றி. நாங்கள் மூவரும் ஃபங்ஷன் முடிந்ததும் மண்டபத்திலிருந்து என் வீட்டிற்கு வந்து வெகு நேரம் தமிழ் இணைய உலகைப் பற்றிப் பேசினோம்.

எல்லோருக்கும் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருளை வேண்டுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது