4/30/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 75 & 76)

எபிசோட் - 75 (28.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
அசோக் ஏன் திரும்பி வந்தான் என்பதை அறிய எல்லோருமே ஆவலாக உள்ளனர். சிங்காரம் அவனை கோவிலில் வைத்து கேட்கிறான். புன்முறுவலுடன் அசோக் நேரம் வரும்போது கூறுவதாக கூற அவன் சற்றே பேஜார் ஆகிறான். திருவிளையாடலில் தருமி சிவபெருமானை பார்த்து கேட்பது போல இங்கும் எதற்கெடுத்தாலும் தெய்வீகச் சிரிப்புதானா என்றும் அவன் கேட்கிறான்.

சாம்பு சாஸ்திரிகள் திரும்பவும் நாதன் வீட்டுக்கு பூஜை செய்ய வருகிறார். அசோக் சொல்லித்தான் அவருக்கு இந்த வேலை திரும்பக் கிடைத்ததாக வசுமதி கூறுகிறாள். அவரிடம் அவள் அசோக் ஏன் திரும்ப வந்தான் என்பதை அவனிடமே கேட்டு சொல்லுமாறு கூறுகிறாள். தன் பிள்ளை தங்களாத்திலேயே நிரந்தரமாக இருக்க ஏதேனும் ஸ்பெஷல் பூஜை செய்யலாமா என அவள் கேட்க, சாம்புவும் செய்யலாமே என்கிறார்.

கோவிலில் வைத்து சாம்பு அசோக்குடன் பேசுகிறார். வசுமதி அவனை இது சம்பந்தமாக கேட்குமாறு சொன்னதாக வேறு கூறுகிறார். “நீங்கள் என் குரு, உங்களுக்கு சொல்லாததா” என்று சொல்லிவிட்டு, அசோக் அவருடன் மேலே பேசுகிறான். இங்கு வாய்ஸ் ஓவர் ஆகி அவன் பேசுவது கேட்கவில்லை. ஆக, இப்போதைக்கு அது ரகசியம் என புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தான் சொன்னது அவர் மனசோடவே இருக்கட்டும் எனக் கேட்டுக் கொள்கிறான்.

அசோக் வந்தது பற்றி விசாரிக்க நீலகண்டனும் பர்வதமும் வருகிறார்கள். அவன் எங்கே என நீலகண்டன் கேட்க, மாடியில்தான் இருக்கிறான், சுயம்பாகம் செய்து கொண்டு என பதில் வருகிறது. மாடிக்கு செல்ல அங்கு அசோக் சமையல் செய்து கொண்டு இருக்கிறான். அவன் எவ்வளவு நாளுக்குத்தான் இவ்வாறு சமையல் செய்து கொண்டு இருக்கப் போகிறான் என நீலகண்டன் கேட்க, தனக்கென மனைவி வரும்வரை என அவன் கூறுகிறான்.

எங்கோ குத்தி விட்டது போல துள்ளி குதிக்கும் நீலகண்டன் வேகமாக கீழே வந்து நாதனிடம், அசோக் குண்டுக்கு மேல் குண்டாக வீசுகிறான் என பூடகமாக கூற, அவன் தீவிரவாதியாகி விட்டானா என்ன என நாதன் கேட்க, அவன் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான் என நீலு கூற, நாதனும் மேலே ஓடுகிறார்.

நிஜமாகவே அவனுக்கு கல்யாண ஆசை வந்து விட்டதா என அவர் ஆவலுடன் கேட்க, தனது பிரும்மச்சரிய வாழ்க்கை வெற்றிகரமாக முடிந்தது என அவன் கூறுகிறான். அவன் கண் முன்னால் நாரதர் வந்து அவனோடு பேசிய காட்சி விரிகிறது. அப்போது அவன் கோவிலில் இருக்கிறான். திடீரென சன்னியாசி ரூபத்தில் வந்த நாரதரை கண்டு வணங்குகிறான். அவர் அவனுக்கு கடற்கரையில் வைத்து உபதேசம் செய்தபடி அவன் பிரும்மச்சரிய வாழ்க்கை துவங்கி ஓராண்டு பூர்த்தியாயிற்று என கூற, அவரோ அவனை பொருத்தவரை அது வெற்றிகரமாகவே முழுக்கவே பூர்த்தியானது என்கிறார். அதெப்படி ஓராண்டுக்குள்ளாகவா என அவன் கேட்க, இதில் காலம் ஒரு பிரச்சினையே இல்லை என்கிறார். அவனது தீவிரமே இதில் முக்கியமாக பார்க்கப்பட வேண்டியது என்கிறார். ஆன்மீக தோட்டத்தில் அவன் ஒரு குறிஞ்சி மலர் என்றும் அவர் கூறுகிறார். இனிமேல் அடுத்த கிரமமான கிருகஸ்தாஸ்ரமத்துக்கு செல்ல வேண்டும் என்றும், அவன் தனது வீட்டுக்கு திரும்பி பெற்றோர்களை மகிழ்விக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அவ்வாறே செய்வதாக அசோக் கூற, அவர் சட்டென மறைந்து போகிறார்.

இங்கு டோண்டு ராகவன். அசோக் ஒரே ஆண்டில் பிரும்மச்சரியத்தை பூர்த்தி செய்ததை புரிந்து கொள்ள முடிகிறது. சுண்டைக்காய் பேர்வழியான டோண்டு ராகவனே அதி வேகத்தில் பிரெஞ்சு ஜெர்மன் கற்று, குறைந்த காலத்தில் எல்லா பரீட்சைகளையும் எழுத முடிந்த போது, வசிஷ்டரான அசோக்குக்கு இதெல்லாம் இடது கை விளையாட்டுதானே.

மனிதனுக்கு நான்கு கிரமங்கள் உண்டு. அவையாவன பிரும்மச்சரியம், கிருகஸ்தாஸ்ரமம், வனப்பிரஸ்தம் மற்றும் சன்னியாசம் என அசோக் நாதனிடம் கூறுகிறான்.

வனப்பிரஸ்தமா என சோவின் நண்பர் கேட்க, அவரோ முதலில் அசோக்கின் உச்சரிப்பு தவறு என்றும் அது வானப்பிரஸ்தம் என்றும் கூறுகிறார். பிறகு எல்ல கிரமங்களையும் ஒவ்வொன்றாக வர்ணிக்கிறார். சுவாரசியமான இந்த வர்ணனைகளை வீடியோவில் காண்க.

(தேடுவோம்)

எபிசோட் - 76 (29.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
அசோக் பேசுகிறான். நான்கு கிரமங்களையும் கூறி அவன் இப்போது இரண்டாம் கிரமத்துக்கு வந்துள்ளதாக கூறுகிறான். அவனிடம் அவனுக்கு வழிகாட்டியாக முதலில் வந்த சாமியாரே இதை கூறியதாகவும், அவர் சொல்லித்தான் தான் வீட்டுக்கே வந்ததாகவும் அவன் கூற, இதை ஏன் முதலிலேயே கூறவில்லை என வசுமதி கேட்கிறாள். அவன் வெறுமனே புன்னகை பூக்கிறான். அப்போ திருமணத்துக்கு வரன் பார்க்கலாமா என நாதன் கேட்க, பிரயத்தினம் பண்ணிப் பாருங்கோ என அவன் மையமாகக் கூறுகிறான். எல்லோரும் துள்ளலுடன் கீழே வருகின்றனர். சமையற்கார மாமி ஸ்வீட் செய்திருக்கிறாள். எல்லோருமே சந்தோஷமாக அதை எடுத்து கொள்கின்றனர்.

நாதனின் உறவினர் எல்.ஐ.சி. ஏஜெண்டின் மனைவி தன் தங்கை காதம்பரி சென்னைக்கே வரப்போவதாக காதம்பரியின் தோழி பிரியாவிடம் ஃபோனில் கூறுகிறாள். காதம்பரி ஒரு அல்ட்ரா மாடர்ன் பெண். அவள் பி.பி.ஏ. முடித்து விட்டு எம்.பி.ஏ. செய்யலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறாள். அவளை அசோக்குக்கு அவள் அக்கா சிபாரிசு செய்ய, அந்தக் குடுமியா, எனக்கு சரிப்பட்டு வராது என அவள் எடுத்த எடுப்பிலேயே மறுக்கிறாள். பிறகு அவளை சரிக்கட்டி பிரியாவிடம் அசோக் பற்றி விசாரித்து மேல் விவரங்கள அறிந்து கொள்ளுமாறு கூறுகிறாள்.

ஏன் சார் இந்தப் பெண் இப்படி மாடர்னாக இருக்கிறாள், அவள் போய் குடுமி அசோக்கை திருமணம் செய்ய ஒத்துக் கொள்வாளா என சோவின் நண்பர் கேட்க, சிலர் மாட்டார்கள், ஆனால் வேறு சிலர் ஒப்புக் கொள்வார்கள் என கூறும் சோ இப்போது அகத்தியர் கதையை கூறுகிறார். உயரத்தில் குறைவாகவும், அவ்வளவு அழகும் இல்லாத அகத்தியர் லோபமுத்திரை என்னும் அரசிளங்குமரியை பெண்கேட்டு அவள் தகப்பன் அரசனிடம் வர, அவனோ தயங்குகிறான், தனது அழகான மகளுக்கு இப்படி ஒரு அழகில்லாதவர் மாப்பிள்ளையாவதா என. லோபமுத்திரையோ அகத்தியரின் பெருமைகளை உணர்ந்தவள். அவர் செய்த பல அற்புதங்களை அறிந்தவள், ஆகவே அவரை மணம் செய்து கொள்ள மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறாள்.

அகத்தியரின் பெருமை பற்றி மகாகவி பாரதியாரே,

ஆதிசிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்


என்று பாடுகிறார்.

பிரியாவுடன் அசோக் பற்றி விசாரிக்க காதம்பரி அவள் வீட்டுக்கு செல்கிறார். பரஸ்பர க்ஷேமலாபங்களை விசாரித்து கொள்கின்றனர்.

கேட்டரர் மனைவியிடம் காதம்பரியின் அக்கா வந்து தனது நாத்தனார் கௌரிக்கு சினிமாவில் பாட சான்ஸ் வந்ததால் இப்போதைக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை எனக்கூறுகிறாள். கேட்டரர் மனைவியிடம் பட்டாபிக்கு ஆர்த்தியை பெண் பார்த்ததும் கௌரிக்கு தெரிந்து விட்டது என்றும், அது வேறு அவலது ஆட்சேபணைக்கு காரணம் எனவும் கூறுகிறாள். சாம்பு வீட்டார்தான் இதை அவளுக்கு எழுதிப் போட்டிருக்க வேண்டும் என பட்டாபியின் அன்னை கோபப்பட, முக்கால்வாசி பட்டாபியே அதை செய்திருப்பான் என காதம்பரியின் அக்கா கூறிவிட்டு அப்பால் செல்கிறாள்.

பேசாமல் ஆர்த்தியையே பட்டாபிக்குப் பார்க்கலாம் என கேட்டரர் மனைவி கூற, எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு அவர்களுடன் பேசுவது என கேட்டரர் ஆட்சேபிக்கிறார். வைர நெக்லஸ் என்னவாயிற்று என அவர் கிண்டலுடன் கேட்க, ஆர்த்தி கட்டிய புடவையுடன் வந்தால் போதும் என அவள் கூறிவிட்டு, அவரே சாம்பு வீட்டுக்கு ஃபோன் செய்து பேச வேண்டும், தனக்கு சங்கடமாக இருக்கிறது என்றுக் கூறுகிறார். அவருடன் சாம்புவுடன் பேசி அவரிடம் மன்னிப்பு கோருகிறார். வைர நெக்லேஸ் எல்லாம் வேண்டாம் எனவும் கூறி விடுகிறார்.

தனது மகன் ஆர்த்தியுடன் பேசி பேசாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆலோசனை கூற, அந்த உத்தமப் பெண்ணோ அதற்கு சிறிதும் இடம் கொடுக்காது, தனது பெற்றோர் மனதை குளிரச் செய்ததைக் கூறி, அப்படிப்பட்ட குலவிளக்கு தனக்கு மருமகளாக வர தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். தனது மனைவியின் பேராசைக்கு நல்ல பாடம் கிடைத்தது என அவர் மேலும் கூற, அவள் அவ்விடத்திலிருந்து பைய நழுவுகிறாள்.

சாம்பு வீட்டில் எல்லோரும் மகிழ்கின்றனர்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/29/2010

கடந்த காலத்தையே நினைத்து நிகழ்காலத்தை கோட்டை விடலாமா?

சில மாதங்களுக்கு முன்னால் பார்த்த ஒரு பதிவை இப்போது எதேச்சையாக மீண்டும் பார்க்க நேர்ந்தது. அது எந்தப் பதிவு, அதை எழுதியது யார் என்ற விஷயங்களெல்லாம் இப்பதிவுக்கு அனாவசியம். இந்தப் பதிவுக்கு அது தூண்டுதலாக இருக்கிறது என்பதைத் தவிர அதற்கு ஏதும் முக்கியத்துவம் இல்லை. அப்பதிவில் கூறப்பட்ட ஒரு விஷயத்தை மட்டும் கூறிவிடுகிறேன்.

அவர் படிக்கும் காலத்தில் வகுப்பில் முதல் ரேங்கில் வருபவர் வகுப்பு லீடராக பதவி ஏற்க வேண்டுமாம். இப்பதிவரும் இன்னொருவரும் போட்டி போட்டு படித்து மாறி மாறி முதல் ரேங்கில் வருவார்கள். இவர் முதல் ரேங்கில் வந்தால் இவர் லீடர். ஆனால் இரண்டாம் ரேங்கில் வந்து அந்த இன்னொருவர் முதல் ரேங்கில் வந்தால் அவரது பெற்றோர்கள் வந்து டீச்சரிடம் பேசி அந்த இன்னொருவருக்கு லீடர் பதவி தராது இருக்க வழி செய்து விடுவார்களாம். அவரும் ஹாய்யாக இருப்பாராம். ஆனால் இரண்டாம் ரேங்கில் வந்த இவர்தான் லீடராக இருந்து அவதிப்பட வேண்டுமாம்.

இந்த குறையை அப்பதிவர் இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நான் அவரை ஒரே ஒரு கேள்வி கேட்டேன், ஏன் நீங்களும் மறுத்திருப்பதுதானே என்று. அப்படியெல்லாம் டீச்சர் விட்டுவிட மாட்டார் என பதில் கூறினார். முக்கியமாக அவர் தரப்பிலிருந்து வீட்டு மனிதர்கள் யாரும் வந்து பேசவில்லை என நான் நினைக்கிறேன்.

இதைக்கூட நான் இங்கே ஏன் சொல்கிறேன் என்றால் அந்த விஷயம் அவர் மனதை இத்தனை ஆண்டுகளாக உறுத்தி வந்திருக்கிறது. அவர் இடத்தில் நான் இருந்தால் என்ன செய்திருப்பேன் என யோசிக்கிறேன்.

முதற்கண் இம்மாதிரி முதல் ரேங்கில் வருபவர்கள் லீடராக இருக்க வேண்டும் என்பதே எனக்கு ஏற்பில்லாத விஷயம். பள்ளிகளில் முதல் ரேங்கில் வருபவர்கள் சாதாரணமாக புத்தகப் புழுக்களாக இருப்பார்கள், அல்லது தங்களுக்குள்ளேயே முடங்கிக் கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் லீடராக செயல்படுவது ரொம்பவே கஷ்டம்.

நானே அனுபவப்பட்டிருக்கிறேன். ஏழாம் வகுப்பில் நான் படிக்கையில் அதே காரணத்துக்காக என்னை லீடராக ஆசிரியர் நியமிக்க, ரொம்பவுமே லோல்பட்டேன். பசங்களை கண்டிப்பாக நடத்தி அவர்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் திறமை எனக்கு சுத்தமாகவே லேது. யாரும் அடங்கவில்லை. ஆசிரியரிடம் ரிப்போர்ட் செய்தாலும் பிரயோசனமில்லை. அந்த நல்ல மனிதரும் என்னை பிறகு சப்போர்ட் செய்யவில்லை. வகுப்பில் சலசலப்பு அதிகமாகி ஹெட் மாஸ்டர் வந்து “யாரடா லீடர்” எனக் கேட்க, அப்போது மட்டும் எல்லோரும் என்னை ஒற்றுமையாக கையைக் காட்ட நான் அவரிடம் உதை வாங்குவதுதான் அதிகம். நான் இப்பதிவில் ஏற்கனவேயே சொன்ன நேற்று நடந்தது போன்ற அந்த விஷயமும் இதில் அடங்கும்.

இத்தனையும் ஏன் சொல்கிறேன் என்றால், முதல் ரேங்க் பெறுபவர்கள் எல்லோருமே தலைமைப் பண்புகளுடன் இருப்பார்கள் என முடிவு கட்டுவது படு முட்டாள்தனமான செயல். அதை பல பள்ளிகளில் செய்கிறார்கள்.

அதெல்லாம் சரி, இந்த விஷயங்கள் ஏற்கனவேயே நடந்து முடிந்து விட்டன. அவற்றை பின்னால் நோக்கிப் பார்க்கும்போது தமாஷாகவே இருக்கின்றன. ஆனால் மேலே நான் குறிப்பிட்ட பதிவரின் மனதை அது இன்னும் உறுத்தியவாறே இருந்திருக்கிறது. அவர் இடத்தில் நான் இருந்தால் என்ன செய்திருப்பேன்?

1. நானும் என் அப்பாவிடம் போய் சொல்லி எனக்காக டீச்சரிடம் பேசச் சொல்லியிருக்கலாம். ஆனால் இதில் என்ன பிரச்சினையென்றால், அவர் வந்திருக்க மாட்டார். ஏற்றுக் கொள்வதோ மறுப்பதோ நானே செய்து கொள்ள வேண்டும் எனக் கூறிவிடுவார். ஆக அந்த ஆப்ஷன் அவுட்.

2. இதை மட்டும் பிறகு செய்தேன். அதாவது ரேங்க் வாங்கினால்தானே வம்பு. வாங்காமல் பார்த்து கொள்ள வேண்டியதுதானே. நான்காம் ஐந்தாம் ரேங்க் வாங்கினால் என்ன குறைந்தா போய் விடுவோம்? அதைத்தான் சொல்கிறேன்

3. ஓக்கே இப்போது போய் அதையேலாம் செய்ய முடியுமா என்றால் முடியாதுதான், கடந்த காலத்துக்குள் நாம் போகவா முடியும்?

4. ஆனால் இப்போது திரும்பிப் பார்க்கையில் இன்னொன்றையும் இங்கே சொல்வேன். அந்த இன்னொருவரின் பெற்றோர் அவருக்கு தீங்கையே இழைத்துள்ளனர். சவால் நிறைந்த லீடர் பதவியை அவர் ஏற்று, முயன்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள அவருக்கு வாய்ப்பளிக்காமல் செய்து விட்டனர். ஆனால் நான் மேலே குறிப்பிட்ட பதிவரோ அதையெல்லாம் ஏற்று இப்போது ஒரு கம்பெனியில் நல்ல பொறுப்பில் வெற்றிகரமாக செயல்படுகிறார். ஆகவே அவரது வீட்டார் அவருக்கு நல்லதையே செய்தனர் என சந்தோஷப்பட்டால் அந்த உறுத்தல் தானே மறையும்.

ஆனால் அப்பதிவர் அந்த உறுத்தலை வெளியில் சொன்ன காரணமே அந்த இன்னொருவர் பார்ப்பனர் என்பதால்தான். ஆகவே இவருக்கு பார்ப்பனரை பிடிக்காமல் போனதுக்கு ஒரு ஆழ்மனதுக் காரணம் வந்து விட்டது.

இதுவரை நான் இங்கு குறிப்பிடாத வேறொரு பதிவரோ தனது பார்ப்பன வெறுப்புக்கு சொன்ன முக்கியக் காரணமே அவர் எல்.கே.ஜி. படிக்கையில் அவரது சக மாணவன், ஒரு பார்ப்பனன், அவர் மேல் எச்சில் உமிழ்ந்ததுதானாம். இவரும் உடனே அவன் மூக்கில் சரியாகவே குத்து விட்டிருக்கிறார். அவனும் இவர் மேல் எச்சில் உமிழ பின்னால் நிச்சயமாகவே பயந்திருக்க வேண்டும். இருவருக்கும் சுமார் ஐந்து வயது வயது இருக்கும்போது நடந்த அந்த நிகழ்ச்சி அவரை இன்னும் உறுத்தி வந்திருக்கிறது என்பது அவரது பதிவிலேயே தெரிய வந்தது. அப்பதிவு அவருக்கு ஏன் பார்ப்பனர்களை பிடிக்காது என்பதற்கு ஒரு விளக்கமாக அமைந்திருந்ததுதான் எனது கவனத்தை ஈர்த்தது.

அப்படியென்றால் எனக்கு மீனவர்களை பிடிக்கக் கூடாது. திருவல்லிக்கேணியில் கடற்கரையில் நாம் பட்டம் விட முடியாது. எங்கிருந்தோ குப்பத்திலிருந்து பல சிறுவர்கள் ஓடிவந்து நம் கையிலிருந்து பட்டத்தையே பிடுங்கி விடுவார்கள். ஓரிரு முறை அவ்வாறு பாதிக்கப்பட்ட பின் நான் அங்கு பட்டம் விடுவதை தவிர்த்து விட்டேன். ஆனால் அதை இப்போது எனது இளமைப் பருவத்தில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியாகத்தான் பார்க்கிறேன். ஆகவே பிரச்சினை இல்லை.

தெரியாமலா சொன்னார்கள் “நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்” என்று?

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/28/2010

முதல்வர் முன்னிலையில் வக்கீல்களுக்கு விழுந்த அடி

நான் இந்தப் பதிவில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்.

நீதி மன்றங்களால் தேடப்படும் போலீஸ் குற்றவாளிகள் என்னும் தலைப்பில் பதிவர் வினவு இட்ட இடுகையை பார்த்து யோசனையில் மூழ்கினேன்.

அது எப்படி செலக்டிவாக எழுத மனம் வருகிறது? பிரச்சினைக்கு மூல நிகழ்ச்சியான சுப்பிரமணியம் சாமி மேல் தாக்குதலை பற்றி எழுதும் இதே பதிவர் என்ன எகத்தாளமான தொனியில் வக்கீல்களின் அராஜகத்தை ஆதரித்து எழுதினார்? ஆனால் நீதி மன்றங்களால் தேடப்படும் வழக்கறிஞர் குற்றவாளிகள் பற்றி பேச்சு மூச்சு இல்லை. அவருக்கு பின்னூட்டம் இட்ட விசிலடிச்சான் குஞ்சுகள் தத்தம் வெறுப்பை வெளியில் கொட்டினர்.

சட்டக்கல்லூரியில் போலீசார் நின்று வேடிக்கை பார்த்தது இப்போது நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வாறு தாக்கப்பட்ட மாணவன் முதலில் கத்தியை எடுத்து கொண்டு வந்து தாக்க முற்பட்ட ரௌடி. அவனைப் போட்ட அடி அவனுக்கு தேவைதான். அடுத்த முறை வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டால் போலீசார் மரம் போல நின்று பார்த்தால், வக்கீல்கள் மேல் ஒருவரும் அனுதாபப்பட மாட்டார்கள்”. 


நான் எந்த வேளையில் அவ்வாறு எழுதினேனோ, அது இப்போது உண்மையாகவே நடந்து விட்டது. அம்பேத்கர் சிலையை திறந்து வைக்க முதல்வர் வந்த போது, அவர் அதை செய்யக்கூடாது என சில வழக்கறிஞர்கள் கருப்புக் கொடி காட்ட, அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் நன்கு உதைக்கப்பட்டனர். இச்சம்பவங்கள் 10 நிமிடத்துக்கும் மேல் நடக்க, முதல்வர் பாட்டுக்கு கருமமே கண்ணாக தன் பேச்சை தொடர்ந்திருக்கிறார். போலீசாரும் கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.

அடி வாங்கி காயம் அடைந்தவர்கள் “மனித உரிமை பாதுகாப்பு மைய” வழக்கறிஞர்கள். ஆனால் அவர்களை அடித்தவர்கள் போலீசார்கள் அல்ல, அவர்கள் வெறுமனே கைகட்டிக் கொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள் என ஜூவியில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இதெல்லாமே முதல்வர் முன்னிலையில் நடந்தது என்றால் நாம் அதுபற்றி என்ன நினைப்பது?

வழக்கறிஞர்களில் பலர் தங்களை சட்டத்திற்கும் மேற்பட்டவர்களாகவே கருதி வந்துள்ளனர் என்பது அனைவருக்கும் இன்னேரம் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிபதி சந்துரு முன்னிலையிலேயே சுப்பிரமணியம் சுவாமிக்கு எதிராக முட்டை வீசிய வழக்கறிஞர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருப்பார்களே. அவ்வாறு ஏதும் நடக்கவில்லை அல்லவா?

அதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் பல பதிவர்களால் மகிழ்ச்சியோடு பதிக்கப்பட்ட ஒரு முக்கியக் காரணமே தாக்கப்பட்ட சுப்பிரமணியம் சுவாமி ஒரு பார்ப்பனர் என்பதே. ஆனால் அந்தோ, கலைஞர் பார்ப்பனர் இல்லை என்பதை மறந்தார்களே? அவர்களுக்கு உதை கிடைத்ததில் என்ன ஆச்சரியம்? இனிமேல் யாரை தாக்க நினைக்கிறோமோ அவர் பார்ப்பனரா என்பதைப் பார்த்து சூதனமாக நடந்துகொள்ளணும்னு சொல்லணுமோ?

மீடியாக்காரர்களும் தாக்கப்பட்டுள்ளனர். இது ஒவ்வொரு முறையும் நடந்துள்ளது. அவர்களும் ஒன்று செய்யலாம், சற்றே தூரத்தில் நின்று ஜூம் கேமராவை பயன்படுத்தலாம். ரொம்ப கிட்டே போய் குளோசப் காட்சிக்கெல்லாம் ஆசைபடக்கூடாது என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/27/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 73 & 74)

எபிடோட் - 73 (26.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
காஞ்சீபுரம் வீட்டை விற்கும் முயற்சியில் பாகவதரின் மகன் சிவராமன் புரோக்கருடன் வருகிறான். அவனை சந்த்திக்கும் அவன் வீட்டு குடித்தனக்காரர் பாகவதர் வீட்டின் பேரில் ஏற்கனவேயே 5 லட்சம் கடன் வாங்கியுள்ளதாகவும், அது அடமானத்தில் இருப்பதாகவும் கூற, அவன் திகைக்கிறான்.

சாம்பு சாஸ்திரி கூப்பிட்டதால் அவர் வீட்டுக்கு வரும் பிரியாவுக்கு சரியான வரவேற்பு இல்லை. அவள் கேட்டரரின் மனைவியுடன் வரதட்சணை சட்டம் பற்றிப் பேசியதால் அந்தாத்து மாமி சம்பந்தத்தை முறித்து விட்டுப் போனதாக செல்லம்மா அவளிடம் கூற அவள் திகைக்கிறாள். ஆர்த்தியும் தன் திருமணம் நின்றுபோன துயரத்தில் அவளிடம் கடுமையாகப் பேசுகிறாள். அவளிடம் இம்மாதிரியெல்லாம் வார்த்தைகளை கொட்டினால் அவற்றை அள்ள முடியாது என அவள் அன்னை கடிந்து கொண்டு ஆர்த்திக்கு எடுத்துக் கூறுகிறாள்.

அப்படியா சார் என சோவின் நண்பர் கேட்க, அவரும் ஆமாம் என ஆமோதிக்கிறார். மகாபாரதத்திலிருந்தே உதாரணம் கூறுகிறார். பாஞ்சாலி சபதம் வரும் சமயம் தாறுமாறாக வார்த்தைகளை விட வேண்டாம் என துரியன் விதுரரால் எச்சரிக்கப்படுகிறான். இக்கட்டத்தை வியாச பாரதம் மற்றும் பாரதியாரின் பாஞ்சாலி சபதத்திலிருந்தே முறையே வடமொழி மற்றும் தமிழில் மேற்கோள்களை சோ காட்டுகிறார்.

நான் இந்த வீட்டின் மருமகள் என்னும் ஹோதாவில் நல்லதை நினைத்தே பேசினேன், அது இம்மாதிரி முடியும் என நினைக்கவில்லை எனப் பிரியா கண் கலங்கிக் கூறி விடை பெறுகிறாள்.

பாகவதர் வீட்டில் அவர் எல்லாரது கேள்வி கணைகளுக்கும் ஆளாகிறார். ராஜி தன்னை பேரனுக்காக ஒன்றும் சேர்த்து வைக்கவில்லை என குத்திக் காட்டியதாலேயே தான் ஷேர் மார்க்கெட்டில் பணம் ஈட்ட எண்ணியதாக பாகவதர் கூற, அவரை எல்லோருமே கண்டித்துப் பேசுகின்றனர்.

பிரியா தன் வீட்டில் யோசனையில் ஆழ்ந்திருக்க, அங்கு வரும் அவள் கணவன் கிருபா விஷயம் அறிந்து கோபப்படுகிறான். மன்னி என்ற மரியாதை இன்றி ஆர்த்தி நடந்து கொண்டதற்கு அவளை நான்கு வார்த்தைகள் கேட்டு வருவதாகக் கூறி அப்பா வீட்டுக்கு கிளம்புகிறான். பிரியா வேண்டாம் எனத் தடுத்தும் அவன் கேட்கவில்லை.

தந்தை வீட்டுக்கு வரும் கிருபா தன் தங்கை ஆர்த்தியை கடிந்து கொள்கிறான். அவளும் தன் குற்றம் உணர்ந்து மன்னிப்பு கேட்கிறாள். கேட்டரரின் மனைவி இந்த சம்பந்தத்தை எப்படியுமே கைவிட முடிவு செய்து விட்டதாகவும், பிரியா பேசியதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டதாகவும், ஆகவே இதில் பிரியாவின் குற்றம் ஏதுமில்லை என்றும் சாம்பு முத்தாய்ப்பாக கூறுகிறார். பிரியாவை சமாதானம் செய்ய செல்லம்மா புறப்படுகிறாள். ஆர்த்தியையும் தன்னுடன் வந்து பிரியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென அவளையும் அழைத்துக் கொண்டு புறப்படுகிறாள்.

நாதனும் வசுமதியும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வீட்டிலிருந்து புறப்படுகின்றனர். அவர்கள் அந்தண்டை போனதும் அசோக் உள்ளே வருகிறான். தான் இனிமேல் தன் வீட்டிலேயே வசிக்கப் போவதாக அவன் கூற, சிங்காரம் மகிழ்கிறான். இதைக்கூற நாதனை செல்பேசியில் அழைக்க, அவரோ தான் இப்போது பிசியாக இருப்பதாகவும் எதுவானாலும் வந்தவுடன் பேசிக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டு போனை கட் செய்கிறார்.

(தேடுவோம்)

எபிசோட் - 74 (27.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
இருந்தாலும் விடாது சமையற்கார மாமி வசுமதியின் செல்லுக்கு ஃபோன் செய்ய, அவளோ பர்வதத்துடன் பேசுகிறாள். ஆகவே லைன் கிடைக்கவில்லை. சிங்காரம் விடாது கார் டிரைவரின் செல்லுக்கு ஃபோன் செய்ய, அவன் சிங்காரம் ஃபோன் செய்வதாக நாதனிடம் கூற, ஃபோனை கட் செய்யச் சொல்கிறார் நாதன். ஆனால் வசு இம்முறை டிரைவரின் போனில் பேசுகிறாள்.

அசோக் நிரந்தரமாகவே வீடு திரும்பிவிட்டான் என்னும் செய்தியை கேட்டு அவள் மகிழ்கிறாள். ஆஸ்திரேலியாவது மண்ணாவது, எனது குழந்தையை பார்த்தே ஆக வேண்டும் எனக்கூறிவிட்டு, வண்டியை நிறுத்தச் சொல்லி, ஆட்டோ பிடித்து வீடு திரும்புகிறாள். அசோக்கைப் பார்த்து மிகவும் மகிழ்கிறாள். ஏன் அவள் டிரிப்பை கேன்சல் செய்தாள் என அசோக் கேட்க, அவளோ அசோக்கை விட வேறு எதுவும் பெரிதில்லை எனக் கூறுகிறாள். பின்னாலேயே நாதனின் காரும் வந்து சேருகிறது. அவரும் டிரிப்பை கேன்சல் செய்துவிட்டார். எப்படி இந்த அற்புதம் என அவர் அசோக்கைப் பார்த்து கேட்க, அவனோ நேரம் வரும்போது சொல்வதாகக் கூறிவிடுகிறான்.

அசோக் வந்திருப்பதால் இரவு சமையல் தடபுடலாக இருக்க வேண்டும் என வசுமதி சமையற்கார மாமியிடம் கூற, அசோக் தான் ஸ்வயம்பாஹம் செய்தே சாப்பிடப்போவதாகக் கூறுகிறார்.

அது என்ன ஸ்வயம்பாஹம் என நண்பர் கேட்க, சோ முதலில் அதை சுயம்பாம் என உச்சரிக்க வேண்டும் (கந்தனில் வரும் க வைப் போல) எனக் கூறுகிறார். பிறகு அது என்ன என்று அவர் விளக்குகிறார். ஒருவர் தனது சாப்பாட்டுக்குத் தேவையானதை தானே சமைத்து சாப்பிடுவது என்றும், சாப்பாடு ருசிக்காக இல்லை, பசிக்காக மட்டுமே என்பதையும் அவர் விளக்குகிறார். வர்ண ரீதியான பிராமணனுக்கு போஜனத்தில் பிரியம் இருக்கலாகாது. அவன் உடலுக்கு விதிக்கப்பட்டது சௌகரியங்கள் இல்லை, துன்பங்கள் மட்டுமே. அப்போதுதான் வேதங்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறுகிறார். மீதி விளக்கங்களை வீடியோவில் காண்க.

அசோக் நீலகண்டன் வீட்டுக்கு ஃபோன் செய்து தான் நிரந்தரமாகவே வீட்டுக்கு வந்து விட்டதைக் கூற, அவரும் மகிழ்கிறார். அது ஏன் என்னும் காரணத்தை பர்வதம் கேட்க, முக்கால்வாசி பிட்சை எடுப்பதில் உள்ள கஷ்டத்தால் இருக்கும் என ஒரு அனுமானத்தை வைக்கிறார். பர்வதமும் அவ்வாறே இருக்கும் என ஆமோதிக்கிறாள். உமா கோவிலுக்கு போயிருப்பதால் அவளுக்கு ஃபோன் செய்து கூற முயல்கிறாள். செல் வீட்டிலேயே அடிக்கிறது.

நாதன் வீட்டுக்கு போய் அசோக் வந்தது பற்றி விசாரிக்க வேண்டும் என நீலகண்டன் கூற, அதெல்லாம் வேண்டாம், ஏனெனில் தங்களது மாப்பிள்ளை இருக்கும் நிலையில் இது பல சங்கடங்களை வரவழைக்கும் என பர்வதம் தடுக்கிறாள். இருப்பினும் நீலகண்டன் கேட்பதாக இல்லை.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் செல்லம்மா அசோக் திரும்பி வந்தது குறித்து பேச, அவர் அசோக்கே தனக்கு ஃபோனில் சொன்னதாகவும், வசுமதியும் தன்னுடன் சகஜமாகவே பேசினாள் என்றும் கூறுகிறார். துணிகளை உலர்த்த மொட்டை மாடிக்கு போனால் அங்கு பட்டாபி ஆர்த்தியுடன் பேசிக் கொண்டிருகிறான். தனக்கு கௌரியை மணக்க விருப்பம் இல்லை என்றும், பேசாமல் இருவருமாக போய் பதிவுத் திருமணம் செய்து கொண்டு விடலாம் என்னும் ஆலோசனை கூற ஆர்த்தி அதை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிறாள். பட்டாபியை தனக்கு சில நாட்களாகத்தான் தெரியும் என்றும், தன் பெற்றோரையோ தன் பிறந்ததிலிருந்தே தெரியும் என்றும், அவர்களை தலைகுனிய வைக்கும் எந்தக் காரியமும் தான் செய்வதாக இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறுகிறாள்.

இதை கேட்ட செல்லம்மா மகிழ்ச்சியுடன் ஆர்த்திக்கு தெரியாமல் படியிறங்கி சாம்பு சாஸ்திரிகளிடம் விஷயத்தைக் கூறுகிறாள். இந்த சாம்பு சாஸ்திரி ஒரு ஏழை பிராமணன் எந்த சொத்தையும் சேர்த்து வைக்கவில்லை என இனி யாருமே கூறவியலாது. தன் மகள் ஆர்த்தி என்னும் பெரிய சொத்துக்கு முன்னால் எல்லாமே தூசுதான் என மனப்பூரிப்போடும் நெகிழ்ச்சியோடும் கூறுகிறார்.

இங்கு டோண்டு ராகவன்.

அசோக் திரும்பியது நிஜமாகவே எதிர்ப்பாராத திருப்பம். ஆர்த்தி, சாம்பு ஆகிய பாத்திரங்கள் பேசியது அவர்களது பாத்திரப் படைப்புக்குப் பெருமையே சேர்க்கிறது. இந்த 74-ஆம் எபிசோடின் சுட்டிக்காக அடுத்த நாள்வரை காத்திராது போட்டது என்னையும் மீறி நிகழ்ந்தது.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/25/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 25.04.2010

வங்கியில் ஒரு அனுபவம்
நேற்று ஒரு தபால் கார்ட் வங்கியிலிருந்து வந்தது. வேலை நேரத்தின்போது அவசியம் வந்து தொடர்பு கொள்ளவும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் வேறு விவரங்கள் இல்லை. எரிச்சலுடன் சென்று விசாரித்தால், எங்களது ஃபிக்சட் டெபாசிட்டுகள் அக்கவுண்டில் PAN எண் கோட் செய்யவில்லை என அந்த பெண் அதிகாரி கூறினார். அவரிடம் நாங்கள் ஏற்கனவேயே அந்தக் கணக்கிலும் அதை கோட் செய்ததை அவர்களது ரிகார்டிலிருந்தே எடுத்துக் காட்டினேன்.

மன்னிக்கவும் தவறுதலாக அனுப்பி விட்டோம் என அவர் மென்மையாக கூறினார். அதனால் என்ன பரவாயில்லை எனக் கூறி விட்டு, அதென்ன மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான் என்னும் ரேஞ்சில் இக்கடித வாக்கியம் அமைந்தது எனக் கேட்க, அவர் ஒரு விஷயம் கூறினார்.

பல அக்கௌண்ட்காரர்கள் வீட்டுக்கு தெரியாமல் ஃபிக்சட் டிபாசிட்டுகள் போடுகிறார்கள். நாங்கள் பலான ஃபிக்சட் டிபாசிட்டு அக்கௌண்ட்களில் இன்னின்ன விவரங்கள் தேவை எனக் கூறினால், வீட்டிலுள்ள மற்ற மெம்பர்கள் சம்பந்தப்பட்டவரிடம் அந்த ஃபிக்சட் டெபாசிட்டிலிருந்து பணம் எடுத்துத் தருமாறு அவரை நெருக்குவார்கள் என்பதால் இம்மாதிரி மையமாக எழுதுவதாக குறிப்பிட்டார்.

யோசித்துப் பார்த்தால் அந்த முன்ஜாக்கிரதையும் நியாயமாகவே படுகிறது. இம்மாதிரி ஏற்கனவே பல முறை நடந்திருக்கும் என நினைக்கிறேன். பரவாயில்லை வங்கிகளில் இம்மாதிரி மனிதாபிமான நடவடிக்கைகளும் நடக்கின்றன.

தபால்களில் முகவரி எழுதுதல்
மேலே கூறியதைப் பார்த்து தபால்துறையில் தனது அனுபவங்கள் பற்றி ஒரு போஸ்ட் மாஸ்டர் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு வாரப்பத்திரிகையில் எழுதியது இப்போது நினைவுக்கு வருகிறது.

பெறுநரின் பெயரை இட்டு விட்டு அவரது முகவரியையும் எழுதியிருக்கிறார்கள். அதன் கீழேயே, (அங்கில்லாவிட்டால்) என எழுதி பக்கத்துத் தெருவில் உள்ள இன்னொரு முகவரியையும் எழுதியிருக்கிறார்கள். இது எப்படி இருக்கு?

இதைவிட வினோதமாக முகவரி இவ்வாறு எழுதியிருக்கிறார்கள். மிஸ். கோகிலா (அவள் அப்பாவுக்குத் தெரியாமல்), கூடவே முகவரியின் மீதி விவரங்கள். கண்டிப்பாக அப்பெண்ணின் காதலன் எழுதியிருக்க வேண்டும் (பை தி வே அவ்விரு கடிதங்களும் கேட்டுக் கொண்ட முறைப்படியே பட்டுவாடா செய்யப்பட்டதாக அந்த போஸ்ட் மாஸ்டர் எழுதியுள்ளார்).

மோசக்காரனுக்கு மோசக்காரன்
கந்துவட்டிக்காரர்களிடமே கொள்ளை அடித்த ஒரு பலே கும்பல் பற்றிய செய்தியை இங்கு பார்க்கலாம்.

அதன்படி கோவை நகரில் கடனளிப்பு முறையில் கந்துவட்டி பணம் தினமும் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக புழங்குவதாக, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பதிவு செய்யப்படாமல் நடத்தப்படும் மறைமுக பைனான்ஸ்காரர்கள், சமீபகாலமாக பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

கந்துவட்டிக்காரர்களை, ‘மனித உரிமை அமைப்பு’ பெயரில் மிரட்டி பணம் பறிப்பது அதிகரித்துள்ளது. சமீபத்தில், காந்திபுரத்தைச் சேர்ந்த கந்துவட்டி பைனான்சியரின் வீட்டுக்குச் இரவில் சென்ற கும்பல், அங்கிருந்த கணக்கு ஆவணங்களை பறித்துள்ளது. ‘நாங்கள், மனித உரிமை ஆணையத்துடன் நேரடி தொடர்புடையவர்கள். உங்கள் மீது கந்துவட்டி புகார்கள் வந்துள்ளன’ என மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, கந்துவட்டிகாரரிடம் 15 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றனர்.

இதே போன்ற மற்றொரு பணம் பறிப்பு சம்பவம், சுந்தராபுரம் பகுதியிலும் நடந்துள்ளது. பதிவு செய்யப்படாமல் பைனான்ஸ் நடத்துவோர், பணம் பறிப்பால் பாதிக்கப்பட்டாலும் கூட போலீசில் புகார் அளிக்க அச்சப்படுகின்றனர். கந்துவட்டி தடைச் சட்டத்தில் தங்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவார்களோ, என்ற அச்சமே இதற்கு காரணம். இது, பணம் பறிக்கும் கும்பலுக்கு வசதியாக போய்விட்டது. இதைத்தான் திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி என்பார்களோ.

குருபிரசாதின் கடைசி தினம்
இக்கதை ஒருவித பாசாங்கும் இல்லாமல் எழுதப்பட்டது. நைட்ஷிஃப்டில் செரெப்ரல் ஹெமரேஜால் மயங்கி, மெதுவாக கோமா நிலைக்கு சென்று கொண்டிருந்த அந்த குருபிரசாதின் கடைசி தினம் மிக நுட்பமாக ரன்னிங் காமெண்டரி போல காட்டப்பட்டிருந்தது.

நைட்ஷிட் சமயத்தில் கம்பெனி ஆஸ்பத்திரியில் டியூட்டியில் இருந்திருக்க வேண்டிய லேடி டாக்டர் ராஜலட்சுமி வீட்டில் மீன்கறி வதக்கிக் கொண்டிருக்க, அவளை பிக் அப் செய்ய வந்த வேனில் முதலில் தனது இரு மகள்கள் சென்றிருக்கும் வீட்டுக்கு போய் அவர்களிடம் வீட்டுச் சாவியை கொடுத்து விட்டு ஆடி அசைந்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்து, மேலோட்டமாக பார்த்துவிட்டு ஃபுட் பாயிசனிங்காக இருக்கும் என குருட்டுத்தனமாக யோசித்து ஜெனெரல் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து விட்டு, நோயாளியுடன் அதே ஆம்புலன்சில் போய் தனது இரு மகள்களையும் பிக் அப் செய்து கொண்டு தன் வீட்டில் இறங்கிக் கொள்ள என காமசோமாவென நடவடிக்கைகள் தொடர்கின்றன.

அவ்வப்போது குருபிரசாதின் ஹெமெராஜால் அவன் உடலில் ஏற்படும் சரிசெய்ய முடியாத செல் இழப்புகள் ரன்னிங் காமெண்டரி ரூபத்தில் சொல்லப்படுகின்றன.

ஆம்புலன்ஸில் வந்த குருபிரசாத்தை ஜெனரல் ஆஸ்பத்திரிக்காரர்கள் இன்னொரு ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போகுமாறு சொல்ல, அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் தனக்கு அவ்வாறு செய்யும்படி கம்பெனி டாக்டர் சொல்லவில்லை எனக்கூறி கம்பெனிக்கே கொண்டுவர என ரோலர் கோஸ்டராக நிகழ்வுகள் நடக்கின்றன.

கடைசியில் குருபிரசாத்திற்கு சரியான ட்ரீட்மெண்ட் தர முயற்சிக்கும் சமயத்தில் எல்லாமே கையை மீறி விட்டன.

அவன் மரணத்துக்கு பிறகு கம்பெனியில் பெரிய ஸ்ட்ரைக் வெடிக்க, கம்பெனி டாக்டர் ராஜலட்சுமி டிஸ்மிஸ் செய்யப்பட (அவளுக்கு அது இன்னும் தெரியாது, அச்சமயம் தன் அக்கா வீட்டில் தனக்கு கம்பெனியில் பிரமோஷன் கிடைக்கப் போவதாக அவளிடம் கூறிக் கொண்டிருக்கிறாள்), ஆம்புலன்ஸ் டிரைவருக்கு யூனியன் பாதுகாப்பு இருப்பதால் அவனுக்கு வேறு பிரிவுக்கு மாற்றல் வருகிறது.

எல்லா தொழிலாளர்களும் குருபிரசாத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏதுவாக கம்பெனியே பஸ்கள் ஏற்பாடு செய்ய, அவர்கள் நகரில் தத்தம் வீடுகள் இருக்கும் ஏரியாக்களில் இறங்கிக் கொள்ள, கடைசியில் ஆஸ்பத்திரிக்கு உள்ளே மூன்று யூனியன் லீடர்கள் மட்டும் செல்கின்றனர். அதில் ஒருவன் கேட்கிறான், “செத்தவன் பெயர் என்னவென்று சொன்னார்கள்”? என்று.

எவ்வளவு பேர் சுற்றி இருந்தாலும் இறப்பவன் என்னவோ தனியாகவே இருக்கிறான். ஒரு முறைக்கு மேல் இக்கதையை என்னால் படிக்க முடியவில்லை. உடம்பை என்னவோ செய்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/23/2010

விஜயின் வரவிருக்கும் 50வது படமான சுறாவின் கதை

என் கணினி குரு முகுந்த அனுப்பிய மின்னஞ்சல் கீழே. வேற யாராச்சும் போட்டுட்டாங்களான்னு தெரியல்ல. எதுக்கும் இங்கேயும் இருக்கட்டுமே.

கதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் "நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்" எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு போடுகிறார். கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார். அது என்னவென்றால்

"அட நாயே ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு"


விஜய் ஏன் ரொம்ப கோவமா இருக்காரு....
அவரோட 50வது படத்த டிஸ்கவரி சேனல் வாங்கப் போறாங்களாம்....
---------------------------------------------------

.நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னவர் விஜய்

நல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - சொல்வது மக்கள்.

-------------------------------------------------------------------

தமிழ் ஹீரோக்களும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் ஒரு ஒப்பீடு.


ரஜினி = சச்சின் (ரெண்டு பேரும் எப்பவும் டாப்தான்)
கமல் = கங்குலி (திறமை இருக்கு ஆனா ஹிட் ஆக முடியல)
சூர்யா = யுவராஜ் (லக் மட்டும் தான்)
விக்ரம் = தோனி ( ஹிட் ஆனா பயங்கரம்தான் ஆனா ஹிட் மட்டும் தான்)
மாதவன் = சிரீ சாந்த் ( மெகா பிளாப் ஆனாலும் இன்னும் கவர்ச்சி இருக்கு)
அஜித் = சேவாக் ( அடிச்சா சிக்ஸ் இல்லன்னா அவுட்)
விஜய் = அட இவன் பால் பொறுக்கிப் போடுற பயங்க........

அன்புடன்,
டோண்டு ராகவன்

இலாப நோக்கமற்ற அமைப்புகள்

தில்லியில் இருந்தபோது ஒரு வாடிக்கையாளர் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வேலைக்கு கூப்பிட்டனுப்பியிருந்தார். தினசரி 3 மணி நேரம் வந்து மொழிபெயர்ப்பு வேலைகளை செய்ய வேண்டும் என்றார். இப்போதைய நிலையில் நான் அன்றிருந்திருந்தால் பிரச்சினையே இருந்திராது. மேலே செல்லும் முன்னால் அதுபற்றி ஒரு சிறு டைவர்ஷன்.

இங்கு சென்னையில் ஒரு நிறுவனத்துக்கு ஜெர்மனில் மின்னஞ்சல்கள் வரும், அவற்றை நான் ஆன்லைனில் மொழி பெயர்க்க எனக்கு ஃபார்வோர்ட் செய்வார்கள். நான் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பை மின்னஞ்சலாக சென்னை நிறுவனத்துக்கே அனுப்ப, அவர்கள் அதற்கான பதிலை ஆங்கிலத்தில் எனக்கு அனுப்ப, நான் அவற்றை ஜெர்மனுக்கு மொழிமாற்றி அவர்களுக்கு திருப்பியனுப்ப, அவர்களும் அதை ஜெர்மன் வாடிக்கையாளருக்கு அனுப்புவார்கள். ஒரு சுற்று முடிய ஓரிரு மணி நேரங்களே பிடிக்கும். அதில் எனது மொழிபெயர்ப்புக்கான நேரமோ சில நிமிடங்களே பிடிக்கும்.

இதில் எல்லோருக்குமே லாபம். ஜெர்மானியரை பொருத்தவரை அவர்கள் வேலை ஜெர்மன் மொழியிலேயே நடந்து விடுகிறது. அவர்களது இந்தியப் பிரதிநிதிக்கும் அவரது தகவல் தொடர்பு வேலை சுளுவாக முடிந்து விடுகிறது. எனக்கோ ரெகுலராக மொழிபெயர்ப்பு வேலைகள் அதுவும் சுலபமான வேலைகள் வருவதால் நானும் பணம் ஈட்டுகிறேன்.

இந்த ஏற்பாட்டுக்கு என்ன மாற்று இருக்கவியலும்? இந்திய நிறுவனம் ஒரு முழு நேர மொழிபெயர்ப்பாளரை தனது இடத்தில் வேலை செய்யுமாறு வைத்து கொள்ளலாம். ஜெர்மானியருக்கோ அதை நினைத்துக்கூட பார்க்கவியலாது, ஏனெனில் அந்த ஊர் சம்பளங்கள் மிக மிக அதிகம். அதே சமயம் இந்தியாவிலும் முழுநேர பணியாளருக்கு சம்பளம், டி.ஏ., விடுமுறை சம்பளம், வார விடுமுறைகள், மருத்துவ படிகள், எல்.டி.சி. ஆகிய செலவுகள் எல்லாம் வரும்.

எனக்கோ வீட்டிலிருந்தவாறே விளையாட்டாக வேலை செய்யலாம், இணையத்தில் மேயலாம், ஒரு கொம்பனும் என்னை கேள்வி கேட்க முடியாது.

டைவர்ஷன் முடிந்தது. மேலே சொன்னதெல்லாம் பின்னால் வரப்போகும் விஷயங்கள். அவற்றை நான் அச்சமயம் அறிந்திருக்கக்கூட முடியாது. அப்போது கணினியை எப்படி இயக்குவது என்று கூட நான் அறியேன் (அது தொண்ணூறுகளின் இறுதி காலம்). ஆகவே நேரிலே நிறுவனத்துக்கு போவதைத் தவிர வேறு வழியில்லை. நேர்காணலுக்கு என்னைத் தவிர வேறு பலரும் வந்திருந்தனர். எல்லோருக்கும் ஒரு டெஸ்ட் வைத்தனர். ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்ப்பு. என்னுடன் போட்டி போட்ட பலர் இளைஞர்கள். அப்போதுதான் ஜே.என்.யூ.வில் எம்.ஏ. பிரெஞ்சு முடித்திருந்தனர்.

டெஸ்ட் பேப்பர்களை ஒரு ஜே.என்.யூ. பேராசிரியர் திருத்தியிருக்கிறார். எனது பேப்பரை மட்டும் தனியாக எடுத்துக்காட்டி, இவரது தரம் மிக உயர்ந்தது, மற்றவர்கள் பரவாயில்லை ரகமே எனக் கூறியிருக்கிறார். (இதை சம்பந்தப்பட்ட அந்த பேராசிரியரே பிற்காலத்தில் என்னை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்த்தபோது கூறினார்).

இப்போது நெகோசியேஷன். தினசரி 3 மணி நேரம் வருவதெல்லாம் கட்டுப்படியாகாது, ஏனெனில் நிறுவனம் எங்கள் வீட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது, போக வரவே 4 மணி நேரம் பிடிக்கும். ஆகவே வாரத்துக்கு 3 நாட்கள் வருகிறேன் என்றேன். அவர்களும் சரி என்றார்கள். சராசரியாக மாதத்துக்கு 13 நாட்கள் நிச்சயமாக வேலை தரவேண்டும், இல்லாவிட்டால் அதற்கான தொகை தரவேண்டும். 13 நாட்களுக்கு மேல் ஒரு மாதத்தில் வேலை செய்தால் ஒரு நாளைக்கு இவ்வளவு என்னும் கணக்கில் எக்ஸ்ட்ரா தரவேண்டும் எனக் கூறி விட்டு, ஒரு மாதத்துக்கு 20,000 ரூபாய், எக்ஸ்ட்ரா நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் என கோட் செய்தேன்.

இப்போதுதான் தமாஷ் நடந்தது. நான் சொன்னதை கேட்டு திடுக்கிட்ட தலைமை அதிகாரி தங்கள் நிறுவனம் இலாப நோக்கற்ற அமைப்பு என்றும் ஆகவே நான் எனது டிமாண்டை குறைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். நானா அசருவேன். அவர்கள் என்னவாக இருந்தாலும் எனது வேலையின் சுமை அப்படியேதான் இருக்கும். நான் இலாப நோக்குடையவன் எனக் கூறினேன். தன்னால் அவ்வளவு பெரிய தொகையை சேங்ஷன் செய்யவியலாது எனக் கூற, அது அவர் பிரச்சினை என உறுதியாகக் கூறினேன்.

பிறகு ஒரே ஒரு கேள்வி கேட்டேன். டெஸ்ட் நடந்து இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டதே, ஏன் இந்த தாமதம் என்று. அதற்கு அவர் முந்தைய நாளன்றுதான் தான் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் உள்ள பல நாடுகளுக்கு வேலை சம்பந்தமாக சென்றிருந்த டூரிலிருந்து திரும்பியதாக கூறினார்.

அவர் தனது சொந்த செலவிலா அங்கெல்லாம் சென்றார் எனக் கேட்க, அதெப்படி சாத்தியம் என அவர் கேட்டார். இலாப நோக்கமற்ற அமைப்பால் அவரது ஐரோப்பிய டூரை தாங்க முடியுமா என கேட்க, அவற்றுக்கான பட்ஜெட் உண்டு என அவர் விடை கூறினார். அதே மாதிரி எனது சேவை வேண்டுமானால் நான் கேட்ட தொகைக்காக பட்ஜெட் போட்டுக் கொள்ளுமாறு கூறிவிட்டு விடை பெற்று வந்தேன்.

பிறகு அதே நிறுவனத்துக்கு வேலைகளை பீஸ் ரேட்டில் செய்தேன் (எனது சேவையை அவர்கள் இழக்கத் தயாராக இல்லை). அவை ஒரு வார்த்தைக்கு இவ்வளவு என்னும் கணக்கில், அது வேறு விஷயம்.

எனக்கு முதலிலிருந்தே இலாப நோக்கற்ற நிறுவனங்கள் பற்றி நல்ல அபிப்பிராயம் கிடையாது. அவற்றில் பலவற்றின் வரி ஏய்ப்புகள், கருப்புப் பணத்தை வெளுப்பாக்குவது ஆகிய விஷயங்களை பெர்ரி மேசன் நாவல்கள், மற்றும் ஏனைய பிற புத்தகங்களில் அறுபதுகளில் படித்ததின் பாதிப்பாகத்தான் அவற்றைப் பற்றிய எனது ஆடிட்ட்யூட் இருக்கிறது. என்னை பொருத்தவரை இம்மாதிரி இலாப நோக்கற்ற நிறுவனங்கள் are presumed guilty unless proven innocent beyond all reasonable doubt.

ப்ரோஸ்.காம் தலைவாசலில் பல வேலைக்கான விளம்பரங்களில் கொட்டேஷன்களை ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம் கேட்கிறது என்று பார்த்தாலே அவற்றைத் தவிர்த்து விடுவேன். அவற்றில் பெரும்பான்மையான கேஸ்களில் அதில் நிர்வாகியாக வேலை செய்பவர்கள் கொழுத்த சம்பளம் எல்லாம் பெறுவார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் மட்டும் கொத்தடிமைகளாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தாங்கள் இலாப நோக்கமற்றவர்கள் என்பதற்கு அவர்கள் செய்யும் அலம்பல்கள் பார்க்க சகிக்காது.

அறுபதுகளில் இந்தியாவில் குறைந்த பட்ச போனஸ் 4 % என ரூல் வந்தபோது, அரசு நிறுவனங்களுக்கு மட்டும் முதலில் விலக்களித்திருக்கிறார்கள். காரணம்? அரசு நிறுவனஙகள் சமூக மேம்பாட்டு நோக்குடையவையாம், இலாப நோக்கு இல்லாதவையாம். அது சம்பந்தமாக கேஸ் கோர்ட்டுக்கு வந்தபோது ஜட்ஜ் அரசின் வாதத்தை ஏற்க மறுத்தார். இலாப நோக்கு என்பது ஒரு கமெர்ஷியல் நிறுவனத்துக்கு அவசியம், அது இல்லை என்று கூறுவது பொறுப்பற்றத்தனம் என்பதுதான் அதற்கு அவர் சொன்ன காரணம்.

ஆக நான் கூறவருவது இதுதான். எனது புது வாடிக்கையாளர் யாராவது தான் இலாப நோக்கற்ற நிறுவனம் என கூறினால், அவர்களுக்கு வேண்டுமென்றே அதிகமாக கோட் செய்வேன்.

இந்த அழகில், “Biggest comedy of IPL is... it's a "Taxfree charity organization" according to the Govt, despite there are thousands of Crores involved” என்று இட்லிவடை பதிவு ஒன்றில் ஒரு பின்னூட்டம் கூறுகிறது. ஏண்டாப்பா மயிராண்டிமார்களே, நீங்களா வரி விலக்கு பெற்ற அறக்கட்டளை அமைப்பு?

They are all presumed guilty, unless proven innocent!!!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 71 & 72)

எபிசோட் - 71 (21.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
(முதல் சுட்டியாக வரும் blog.isaitamil தளத்தில் வைரஸ் இருப்பதாக செய்தி வருகிறது).

நாதன் வீட்டுக்கு பிச்சுமணி வருகிறான். தனக்கு வேலை போட்டுத் தந்ததற்கு நன்றியும் தெரிவிக்கிறான். அசோக்கை திரும்ப வீட்டுக்கு அழைத்து வரும் வேலையை நாதன் அவனிடம் ஒப்புவிக்கிறார். அவனும் அதை ஏற்றுக் கொள்கிறான்.

பிச்சுமணி அசோக்கிடம் பேசுகிறான். அவன் தந்தைக்கு வயதாகி விட்டது என்றும், அவருக்கு துணையாக அவன் அவருடனேயே இருக்க வேண்டும் என அவன் கூறுகிறான். வயதாவது இயற்கை. அப்படி வயதானதும் மீண்டும் இளமையை பெற அவர் என்ன யயாதியா என அசோக் கேட்கிறான்.

யார் இந்த யயாதி என சோவின் நண்பர் கேட்க, சோ யயாதியின் கதையை கூறுகிறார். சாபத்தால் யயாதி முதுமை எய்த, அவன் என்ன விமோசனம் என தன்னை சபித்த சுக்ராச்சாரியாரை கேட்கிறான். அவரோ அவன் மகன்களில் யாரேனும் ஒருவர் அவனது முதுமையை வாங்கிக் கொண்டு தனது இளமையைத் தரலாம் எனக் கூறுகிறார். அவனும் தன் எல்லா மகன்களையும் கேட்க, கடைசி மகன் மட்டும் ஒத்துக் கொண்டு முதுமையை ஏற்றுக் கொள்கிறான். பிறகு பல ஆண்டுகள் இளமையை அனுபவித்தாலும் மனம் திருப்தியடையவில்லை என்பதை உணர்ந்து மகனுக்கு அவனது இளமையை திரும்பத் தந்து முதுமையை ஏர்று, பிறகு நல்ல காரியங்கள் பல செய்து நற்கதியடைகிறான் என்று கதை போகிறது.

பிச்சுமணி இதெல்லாம் பிராக்டிகல் இல்லை என மறுக்கிறான். தாய் தந்தையரை பேணுவதுதான் மகனின் கடமை என்கிறான். மகான்கள் கூட கடைசி காலத்தில் தத்தம் பேற்றோரை பேணினர் என்று பிச்சுமணி சுட்டிக் காட்டுகிறான்.

தன்னை பிச்சுமணி ஒருபோதும் மகான்களுடன் ஒப்பிடக் கூடாது என்பதை வினயத்துடன் கூறி மறுக்கிறான். தாய் தந்தையருக்கும் ஆற்றும் கடனை விட தெய்வத்துக்கு ஆற்ற வேண்டிய கடமை பெரிது என்கிறான்.

இது என்ன என நண்பர் கேட்க, அசோக் சன்னியாசி மாதிரி பேசுகிறான். ஆனால் அச்சமயம் அவன் பிரும்மச்சாரி மட்டுமே. மேலும் அவனது வாதங்களில் பிழை இருக்கிறது. தாய் தந்தையரை புறக்கணித்தல் மகா பாவம் என்று சோ கூறுகிறார். மேலும் அவன் செய்யும் வேறு விஷயங்களும் ஒத்துக் கொள்ளக்க்கூடியனவாக இல்லை. அவன் கற்றல் நிலையில் இருக்கும் பிரும்மச்சாரி, அவனுக்கு மற்றவர்களுக்கு வேத பாடம் எடுக்கும் அதிகாரம் இல்லை. மேலும் பல உதாரணங்களை அடுக்குகிறார்.

அசோக் வேதபாடசாலைக்கு செல்ல, பிச்சுமணி it's a hard nut to crack என தனக்குள் முணுமுணுக்கிறான்.

இங்கு டோண்டு ராகவன் ஒன்று கூற விரும்புகிறேன். இந்த சீரியலில் ஏதோ ஒரு விதி எல்லாவற்றையும் ஒரு திசையில் செலுத்துவது போலத்தான் தோன்றுகிறது. எங்கே பிராமணன் என்பதைத் தேட பூலோகம் அனுப்பிக்கப்பட்ட வசிஷ்டர் முதல் பகுதியில் தற்சமயம் வர்ணரீதியான பிராமணன் என்று எவருமே இல்லை என்பதைக் கண்டு கொண்டார். ஈசன் அருளால் அவர் அசோக்காகிய தனக்குள்ளேயே வர்ணரீதியான பிராமணனை தேடத் துவங்குகிறார். அதுதான் அவரது இருப்பின் முக்கிய நோக்கம். அது கூட அவருக்கு உள்ளுணர்வாகத்தான் தெரிகிறது. ஆகவே தேடலில் தீவிரமாக இருக்கிறார்.

இத்தருணத்தில் போய் அவர் தாய் தந்தையர் வீட்டுக்கு செல்வது சரியாக வராது என்பதை அவர் உள்ளுணர்வால் உணர்ந்திருப்பதாலேயே அவ்வாறு நடந்து கொள்கிறார் என்றுதான் எனக்கு படுகிறது. அதுவும் வேதபாடசாலையின் பண்டிட்டே அவனை டெஸ்ட் செய்யப் போய் அவன் ஞானத்தைக் கண்டு மிரள்வதும் ஏற்கனவே காட்டப்படுகிறது. சோ இதையெல்லாம் அடக்கியே வாசிக்கிறார். காரணம் அவரே அறிவார்.

(தேடுவோம்)

எபிசோட் - 72 (22.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
(இரண்டுமே இன்னும் வரவில்லை. வந்தால் போடுகிறேன்)
கேட்டரர் வீட்டில் பிரியா ஆர்த்தியின் கல்யாணம் சம்பந்தமாக பேசிப் பார்க்கிறாள். பலவிதமாக தாஜா செய்து பார்க்கிறாள். கேட்டரர் முதலிலேயே தனது டிமாண்ட் எதுவும் இல்லை எனக் கூறிவிட, அவர் மனைவி மட்டும் வைர நெக்லசில் விடாப்பிடியாக இருக்கிறாள். பிரியா லேசாக வரதட்சணை தடை சட்டத்தை பேச்சில் இழுக்க அவள் இன்னும் சூடாகிறாள். தான் அவளை பயமுறுத்தவில்லை எனவும் எப்படியாவது தங்களாத்து ஆர்த்திக்கு வாழ்க்கை தரும்படியும் அப்படி செய்தால் பஹவான் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுத் தரட்டும் எனவும் கூறுகிறாள்.

அது யார் சார் பஹவான், விஷ்ணுவா, சிவனா, விநாயகரா என சோவின் நண்பர் கேட்கிறார். சோ அவர்கள் முதற்கண் பஹவான் என சொல்லக் கூடாது, பகவான் என்றுதான் சொல்ல வேண்டும், அதே போல பலர் நமஷிவாய என உச்சரிப்பதால் வடமொழி சரியாக பேசப்படுகிறது என்னும் என்ணத்தில் உள்ளனர். அது தவறு, நமச்சிவாய என்றுதான் சொல்ல வேண்டும் எனவும் கூறுகிறார்.

பகவான் யார் என பார்த்தால், அவனே பிரும்மா, அவனே சிவன், அவனே விஷ்ணு என்றும் கூறப்படுகிறது. ஒரு வைதிக காரியத்தை பரமேஸ்வர பிரியர்த்தத்தம் எனக் கூறி ஆரம்பிக்கிறோம். அதை ஜனார்த்தன பிரியர்த்தத்தம் எனக் கூறி முடிக்கிறோம். பகவான் ரஜோகுணத்தால் சிருஷ்டி செய்கிறான், சாத்வீக குணத்தால் சிருஷ்டிகளை காப்பாற்றுகிறான், தமோ குணத்தால் எல்லாவற்றையும் அழிக்கிறான் என்று கூறுகிறார்.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் கேட்டரர் மனைவியின் ஃபோன் வருகிறது. செல்லம்மாவிடம் அவள் பிரியா வந்து தங்களை சட்டத்தைக் காட்டி மிரட்டியதாகவும், தங்களுக்கும் வக்கீல்கள் பலரைத் தெரியும் என்றும், எது எப்படியானாலும் அவர்கள் வீட்டு சம்பந்தம் வேண்டாம் எனக் கூறி பேச்சை முறிக்கிறாள். மன்னி இப்படி செய்து விட்டாளே என ஆர்த்தி கண் கலங்க, செல்லம்மாவோ பிரியாவை கூப்பிட்டு விசாரிப்போம், கேட்டரர் மனைவி சொல்வதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறிவிடுகிறாள்.

பாகவதர் வீட்டில் ராஜியும் சிவராமனும் தாங்கள் வாங்க வேண்டிய அபார்ட்மெண்டுக்கு முன் பணமாக தர காஞ்சீபுரம் வீட்டை விற்றுவிடலாம் எனக்கூற, பாகவதர் பேய்முழி முழிக்கிறார். வீடு ஏற்கனவே கைமீறிப் போனதை கூற மனமில்லாமல் வீட்டின் ஒரிஜினல் பத்திரம் வங்கி லாக்கரில் இருப்பதாகவும், சாவியை எங்கோ கைமறதியாக வைத்து விட்டதாகவும் கூறி சமாளிக்கிறார்.

என்ன சார் இப்படி பொய் மேலே பொய்யாக அடுக்கிக் கொண்டே போகிறாரே பாகவதர், இதுதான் அவர் சாத்திரம் அறிந்ததன் பலனா என சோவின் நண்பர் ஆவேசமாகக் கேட்க, சோ புன்முறுவலுடன் பாகவதர் செய்வது மிகப்பெரிய தவறு என்பதை ஒத்துக் கொள்கிறார். பொய் என்பது மகாபாவம் என்பதை அவர் அகத்தியர், கஸ்யபர், நாரதர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர் ஆகியோரை வைத்து ஒரு நிகழ்ச்சியை கூறுகிறார். அதில் வெவ்வேறு வகையான பாவங்கள் பட்டியலிடப்படுகின்றன. அவர்றில் மிகப்பெரிய பாவமாக எப்போதும் பொய் கூறுவது வகைபடுத்தப்படுகிறது.

இவை எல்லாம் தெரிந்த பாகவதர் ஏன் பொய் சொல்லணும் என நண்பர் விடாது கேட்க, சுய அறிவு இல்லாதவன் எவ்வளவு சாத்திரம் கற்றும் பிரயோசனமில்லை என ஆணித்தரமாகக் கூறுகிறார்.

இங்கே பாகவதர் மேலே என்ன செய்வது எனத் தெரியாது திணறுகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/22/2010

யயாதி - சில எண்ணங்கள்

யயாதி
மகாபாரதத்தில் வரும் இக்கிளைக்கதை என்னை மிகவும் கவர்ந்த கதைகளில் ஒன்றாகும். நேற்றைய எங்கே பிராமணன் எபிசோட் - 71-ல் அக்கதை பற்றிய விவரம் வந்தது. அதில் அக்கதையும் விஸ்தாரமாகக் கூறப்பட்டது. ஆனால் பதிவின் கதைபோக்குக்கு ஏற்ப அதை வெகுவாக சம்பந்தப்பட்ட பதிவில் சுருக்கியுள்ளேன்.

இங்கு அது பற்றி விஸ்தாரமாக பேச ஆசை. மகாபாரதத்தில் கிளைக்கதையாக இருந்தாலும் யயாதியின் கதைக்கு பல வெர்ஷன்கள் ஏற்கனவேயே வந்துள்ளன. இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது வி.ச. காண்டேகரின் யயாதி. மராத்தியில் ஒரிஜினலாக எழுதப்பட்ட யயாதியை மொழிபெயர்த்தது அவரது தமிழ் மொழிபெயர்ப்பாளர் கா.ஸ்ரீ. ஸ்ரீனிவாசாச்சாரியார் அவர்கள்.

சமீபத்தில் 1986-ல் அதை ரொம்ப சுவாரசியமாக படித்து கொண்டிருந்தேன். திடீரென பொசுக்கென நின்று விட்டது. பார்த்தால் முதல் பாகம் முற்றும் என வந்திருந்தது. அப்போது தில்லியில் இருந்தேன். ஆகவே அங்கு அதை வாங்க இயலவில்லை. அந்த ஆண்டு சென்னைக்கு விடுமுறையில் வந்தேன். நேராக கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்கள் வீட்டிற்கே சென்றேன். கலைமகள் காரியாலயத்தில் முகவரி கிடைத்தது. வரவேற்று பேசிக் கொண்டிருந்தவரிடம் இரண்டாம் பாகம் எங்கும் கிடைக்கவில்லை என கூறினேன். அதை தான் எழுதி முடிக்கவேயில்லை என சாவகாசமாகக் கூறினாரே பார்க்கலாம்.

என்ன செய்வது என புரியாது திகைத்தேன். தில்லிக்கும் திரும்பியாயிற்று. எங்கள் ஐ.டி.பி.எல். நூலகத்தில் சில கதைபுத்தகங்களும் வைத்திருப்பார்கள். அங்கு சென்று யயாதியின் ஹிந்தி மொழிபெயர்ப்பு கிடைக்குமா எனப் பார்த்தேன். நல்ல வேளை, அது கிடைத்தது. பிறகென்ன? தமிழில் விட்ட இடத்திலிருந்து ஹிந்தியில் தொடர்ந்து படித்தேன். ஆக ஒரு புத்தகத்தை இரு மொழிகளில் படித்தேன். வி.ச. காண்டேகரின் யயாதி மூலமொழி மராத்தி. அது எனக்குத் தெரியாது. ஆகவே வேறு வழியின்றி ஹிந்தி மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படிக்க வேண்டியதாயிற்று. நல்ல வேளையாக ஹிந்தியும் தெரிந்ததால் அப்புத்தகத்தை முழுக்க படிக்க முடிந்தது. இன்னொரு விஷயம், இந்திய மொழிகளில் எந்த மொழியில் படித்தாலும் மகாபாரதத்தில் வந்த கிளைக்கதையான யயாதி விசித்திரமாகவே தோன்றியிராது.

யயாதி இப்போது தமிழிலும் முழுக்கவே வந்துள்ளதாக இப்போது அறிகிறேன். பின் ஏன் அவர் தான் பாதியிலேயே அதை விட்டு விட்டதாகக் கூறினார் என்பது எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை அப்புறமாக அவர் அதை செய்திருக்கலாமோ என்னவோ அறியேன். இல்லை வேறு யாரேனும் அதை செய்திருப்பார்களோ என்பது கூட எனக்குத் தெரியாது.

யயாதி நகுஷனின் மகன். சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானியை திருமணம் செய்தவன். தேவயானியின் கூடவே அவளுக்கு பணிப்பெண்ணாக அசுரகுல இளவரசி சர்மிஷ்டை வருகிறாள். அவள் தேவயானிக்கு பணிப்பெண்ணாக ஆனது விதியின் விளையாட்டு.

முதலில் தேவயானியும் சர்மிஷ்டையும் தோழிகள். ஒரு முறை அவர்களுக்குள் சண்டை ஏற்பட, தேவயானி தனது தந்தையும் அசுர குலகுருவுமான சுக்ராச்சாரியாரிடம் அவர் அரசனிடம் தனது மகள் தேவயானிக்கு சர்மிஷ்டையை பணிப்பென்ணாக அனுப்புமாறு கேட்கச் சொல்கிறாள். அவரும் புத்திரி மேல் உள்ள பாசத்தால் இந்த அதர்மமான காரியத்தை செய்கிறார். சுக்ராச்சாரியாரின் தயவின்றி அசுரகுலமே பலவீனமடைந்து விடும் என்னும் நிலையில் அசுர மன்னன் நாட்டு நலனுக்காக இதற்கு ஒத்து கொள்கிறான். சர்மிஷ்டையும் அதே காரணத்துக்காக இதை ஏற்கிறாள்.

இப்போது தேவயானி சர்மிஷ்டை ஆகிய இருவருமே யயாதியின் அரண்மனையில் இருக்கின்றனர். தேவயானி தான் சுக்கிராச்சாரியாரின் மகள் என்னும் கர்வத்தில் அரசனை அவமதிக்கிறாள். ஆனால் சர்மிஷ்டையோ தன் அன்பால் அவனுக்கு ஆறுதல் அளிக்கிறாள். அவளுடனும் அவன் சேர, அவளுக்கும் குழந்தைகள் பிறக்கின்றன.

இந்த விஷயம் அறிந்த தேவயானி தன் தந்தையிடம் புகார் செய்ய அவரும் அதே புத்திர பாசத்தால் விஷயத்தின் பரிமாணங்களை அறியாது யயாதிக்கு அவன் முதுமையடைய சாபம் இட்டு விடுகிறார். சாபவிமோசனமே கிடையாதா என அவன் கேட்க, அவன் மைந்தர்களில் யாரேனும் ஒருவன் தானாகவே விரும்பி தனது இளமையை அவனுக்கு அளிக்கலாம் என்றும், ஆனால் அப்போது முதுமை அவனுக்கே வரும் எனக்கூறுகிறார்.

தேவயானியின் பிள்ளைகள், மற்றும் சர்மிஷ்டையின் முதல் இரு பிள்ளைகள் இந்த விஷயத்தில் அரசனுக்கு உதவ மறுக்க, சர்மிஷ்டையின் மூன்றாவது பிள்ளை புரு மட்டும் தந்தைக்கு தனது இளமையை அளிக்கிறான்.

யயாதியும் பல ஆண்டுகாலம் அந்த இளமையை அனுபவிக்கிறான். திடீரென ஒரு நாள் ஞானோதயம் பிறக்கிறது. ஆசைக்கு எவ்வளவு தீனி போட்டாலும் அது அழியவே அழியாது. அவ்வாறு அழிக்க நினைப்பது நெருப்பை அணைக்க மேலும் மேலும் நெய்யை ஊற்றுவதற்கு சமம் என்பதை உணர்கிறான். தன் மகன் புருவிடம் வந்து அவனது இளமையை அவனுக்கு திரும்பத் தருகிறான். ராஜ்ஜியத்துக்கு அவனையே அரசனாக்குகிறான். அந்த புரு அற்புதமாக ராஜ்ய பரிபாலனம் செய்து அவன் வம்சமும் தழைக்கிறது.

யயாதியின் கதை பலரது கற்பனைகளை வெவ்வேறு விதமாகத் தூண்டுகிறது. இக்கதையில் வரும் கிட்டத்தட்ட எல்லா பாத்திரங்களுமே மனித பலவீனங்களால் பீடிக்கப்பட்டுள்ளனர். தேவயானி என்னும் பெண் சுயநலம் பிடித்த கர்வமுடைய பெண்ணாக வருகிறாள். அவர் தந்தை சுக்கிராச்சாரியாரோ தனது மகளுக்கு புத்தி சொல்வதற்கு பதில் அவள் சொற்படி ஆடுகிறார். இதில் சுக்கிராச்சாரியாரின் குற்றம் மன்னிக்க முடியாதது.

அசுர குலத்தவராக இருந்தாலும் அசுர அரசனும் அவன் மகள் சர்மிஷ்டையும் நாட்டு நலனுக்காக தியாகம் செய்கின்றனர். அவர்களை கதை உயர்வாகவே கூறுகிறது. யயாதியின் கடைசி மகன் புருவின் தியாகம் பிரமிக்க வைக்கிறது. யயாதியோ விதியின் வேகத்தில் இழுத்துச் செல்லப்படும் துரும்பாகவே இருக்கிறான். கடைசியில் அவன் ஞானம் பெறுவது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

யயாதியின் கதை முடிச்சு பல திரைப்படங்களில் பல விதமாக வந்து விட்டது. ஒரு படம் பெயர் மறந்து விட்டது. அதில் ராம்கி, ஊர்வசி மற்றும் குஷ்பு ஆகியோர் நடித்திருந்தனர். (அதன் ஹிந்தி வெர்ஷன் ஜுதாயி, அதில் அனில் கபூர் நடிக்கிறார்). அதில் முதல் மனைவியின் கேரக்டர் தேவயானியையும் இரண்டாம் மனைவியின் கேரக்டர் சர்மிஷ்டையையும் நினைவுபடுத்துகின்றன. மீதி விஷயங்கள் மசாலாவுக்காக சேர்க்கப்பட்டன. முக்கிய தீமே அன்பில்லாதாருக்கும் அன்புடையாருக்கும் இடையில் நடக்கும் வினைகள் மற்றும் எதிர்வினைகளே.

யயாதியின் கதை எல்லா காலத்துக்குமே ஏற்றது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/21/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 69 & 70)

எபிசோட் 69 (19.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சாரியாரின் மகன் பட்டாபியிடம் அவன் மனைவி ஷோபனா அவனும் எலெக்சனில் நிற்க வேண்டும் என்கிறாள். அவனோ அது தன்னால் ஆகாது என மறுக்கிறான். அசோக் சரியான வழியில்தான் போகிறான் என கருத்து தெரிவிக்கிறான். அசோக் சப்போர்ட் செய்யும் நல்லத்தம்பியே வரட்டும் என்கிறான்.

வேதபாடசாலையில் நல்லத்தம்பி அசோக்கை சந்தித்து பேசுகிறான். தான் சுயேச்சையாக நிற்கவில்லை என்றும், ஒரு பலத்த கட்சியின் சார்பில் நிற்பதால் கோவில்களின் திருப்பணி விஷயத்தில் சட்டென தன்னால் வாக்கு தரவியலாது என்றும் நல்லத்தம்பி கூறுகிறான்.

பிறகு தனக்கு ஏற்பட்டுள்ள சில சந்தேகங்களை நல்லத்தம்பி வெளியிடுகிறான். அசோக்கும் அவனைப் போன்றவர்களும் (இந்த இடத்தில் அவன் குறிப்பிடுவது பிராம்மணர்களைத்தான் என எனக்குப் படுகிறது) ஏன் ஒரு வேலையும் செய்யாமல் மற்றவர்களையே சார்ந்து வாழ் வேண்டும் என கேட்கிறான். சமூக சேவை ஏதும் செய்யாமல் ஏன் தேவையின்றி மற்றவர்களிடமிருந்து கெட்ட பெயர் சம்பாதிக்க வேண்டும் எனவும் கேட்கிறான். இதெல்லாம் தனது சந்தேகங்களே, தவறாக நினைக்கலாகாது எனவும் டிஸ்கி தந்து விடுகிறான்.

அசோக் கூறுகிறான்: நல்லத்தம்பி அரசியல்வாதி. அவர் அரசியலில் சேர்ந்து நன்றாகவே சம்பாதிக்கிறார். ஆனால் அத்தனையும் அவருக்காகவேவா செல்கிறது. கூட இருப்பவர்களுக்குத்தான் அதிகம் போகிறது. பிறகு சேர்க்கும் ஆஸ்திகளும் அவருக்கு பிறகு எவரெவருக்கோத்தான் போகப் போகிறது. யாருமே அவர் தந்ததை வைத்துக் கொண்டு திருப்திப்படப் போவதில்லை. இன்னும் தந்திருக்கலாம் என்றுதான் கருத்து சொல்வார்கள்.

ஆனால் தனதும் தன்னைப் போன்ற மற்ற சன்னியாசிகளின் நிலையோ வேறு. தங்களுக்கு பணம் பொருள், புகழ் எதிலுமே நாட்டம் இல்லை. எதையும் போய் தேடுவதில்லை. உடல் தேவைக்கு மிக குறைந்த அளவு உணவு கிடைப்பதை வைத்து உண்ண வேண்டியது. அதே சமயம் கிடைக்காவிட்டாலும் அதையும் உபவாசமாக மாற்றிக் கொள்வது என்றுதான் இருக்கிறோம் என்கிறான்.

ஒண்ணும் புரியல்ல என நல்லத் தம்பி கூற சோவின் நண்பரும் அதை ஆமோதிக்கிறார். அசோக் இன்னும் பரிசோதனை நிலையில்தான் இருக்கிறான். இன்னும் ஞானத்தை அடையும் பாதையை நிர்ணயிப்பதிலும் அதற்கான முயற்சி நிலையிலேயே இருக்கிறான். ஆகவே அவன் சொல்வது அதனையையும் அப்படியே ஏற்க வேண்டியது இல்லை. அவனது பரிசோதனை நிலையை மனதில் நிறுத்துவது தேவை என்கிறார்.

அப்போ அசோக் என்ன சொல்றான் சும்மா இரு என்கிறானா? அதே போல கீதையிலும் என்னைச் சரணடை வேறு ஏதும் செய்ய வேண்டியதில்லை என கிருஷ்ணர் கூறுகிறாரே என நண்பர் கேட்க, சோ முதலில் அசோக் சொன்னதுக்கு வருகிறார். அசோக் கூறியது போல வால்மீகியும் இந்த நிலையை சந்தித்திருக்கிறார். அவர் பல பாவ காரியங்களை வேடனாக இருந்து செய்ய நேர்ந்ததை தனது குடும்பத்துக்காக செய்வதாக புரிந்து கொண்டிருக்க, அவர் குடும்பத்தினரோ அவரது செயல்களின் பலன் மட்டுமே தங்களது, பாவம் வால்மீகிக்கே என இருந்ததையும் கண்டறிந்து ஞானம் பெறுகிறார்.

கீதையிலோ கண்ணன் சும்மா இரு என எங்குமே கூறவில்லை. கடமையைப் பற்றின்றி செய் என்று மட்டும் கூறப்படுகிறதே தவிர செய்யவே செய்யாதெ எனக்கூறவே இல்லை எனக் கூறுகிறார். கீதையை உபதேசித்தவனும் சன்னியாசி இல்லை, உபதேசம் பெற்றவனும் சன்னியாசி இல்லை, உபதேசம் நடந்த இடமும் சன்னியாச மடம் இல்லை என சோ தெளிவுபடுத்துகிறார்.

சமூக சேவை பற்றி நல்லத்தம்பி கூறுகிறாரே அது பற்றி சாத்திரம் ஒன்றும் சொல்லவில்லையா என நண்பர் கேட்க, அவர் பல உதாரணங்களிலிருந்து சாத்திரம் சமூக சேவை பற்றிக் கூறியதை பட்டியலிடுகிறார். சமூக சேவை என்பது ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக வற்புறத்தப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.

அசோக் கடசியாக நல்லத்தம்பியிடம் ஆண்டவனிடம் பிரார்த்திக்குமாறு கூறிவிட்டு விடை பெறுகிறான்.

(தேடுவோம்)

எபிசோட் 70 (20.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
பாகவதரின் ஷேர் மார்க்கெட் நண்பர் ஜீனி வந்து பாகவதர் சமீபத்தில் வாங்கிய ஷேர்களின் விலைகள் சரிவால் அவை காலணாவுக்கு பிரயோசனமில்லாமல் போயின என குண்டை தூக்கி போடுகிறார். இத்தனை ஆண்டுகள் பார்க்காம இருந்த அந்த நண்பனை எந்த வேளையில் தாம் பார்த்தோமோ என பாகவத்ர் நொந்து கொள்கிறார். (நான் பயந்தது நடந்து விட்டது).

உன்னைப் பார்த்த வேளை என பாகவதர் கூறுகிறாரே, அவரது பேராசையால்தானே இந்த நஷ்டம் என சோவின் நண்பர் கேட்க, அவரும் அதை புன்முறுவலுடன் ஆமோதிக்கிறார். திருப்தியடையாத பிராமணனும், திருப்தி சுலபத்தில் அடைந்து விடும் அரசனும் சீக்கிரமே அழிவார்கள் எனவும் அவர் கூறுகிறார்.

ஜீனி தன்னை டிஃபண்ட் செய்து கொள்கிறார். தான் நல்லது நினைத்தே செய்ததாகவும் அது இவ்வாறு முடியும் என நினைக்கவும் இல்லை எனவும் அவர் கூறுகிறார். ஆனால் பணம் போனது போனதுதான்.

அசோக், சாரியார் மற்றும் ஜட்ஜ் நல்லத்தம்பிக்கு கைலாஷ்நகர் வாசிகள் ஆதரவு கொடுப்பது பற்றி பேசுகிறார்கள். அசோக்கும் சாரியாரும் நல்லத்தம்பிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என அபிப்பிராயப்பட, ஜட்ஜ் தயங்குகிறார். ஒரு முடிவும் எடுக்காமலேயே மீட்டிங் கலைகிறது.

பாகவதரின் மகனும் மருமகளும் சேலையூரில் ஃப்ளாட் வாங்க எண்ணூகின்றனர். விஷயம் தெரியாமல் ஜானகி முதல் பேமெண்டுக்கு காஞ்சீபுரம் வீட்டை விற்கலாம் என ஐடியாவை முன்வைக்க பாகவதர் திகைக்கிறார்.

உமாவின் கணவன் ரமேஷின் வழக்கை எடுக்க வக்கீல் அனந்தராமன் முடிவெடுக்க, பிரியா அதை எதிர்க்கிறாள். ரமேஷ் செய்தது அதர்மம் என அவள் கூற அவ்வாறெல்லாம் பார்த்தால் கேஸ் கிடைக்காது என அனந்தராமன் கூறுகிறார். அவளிடம் சர்றே கடுமையாகவும் பேசுகிறார்.

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/19/2010

பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுத்த விஷயம்

விடுதலைப் புலி பிரபாகரனின் அன்னை பார்வதி அம்மையாரை தமிழகத்துள் வரவிடாது பிளேனிலேயே திருப்பி அனுப்பிய விவகாரம் இங்கு பல எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. அவரவர் தத்தம் முந்தைய நிலைக்கேற்ப எதிர்வினை புரிகின்றனர்.

வயது முதிர்ந்த அந்த அம்மையாரை அனுமதிப்பதில் என்ன கெடுதல் வந்துவிடப்போகிறது என்பது இங்குள்ள பலரின் வாதங்களில் முக்கியமானது. முதலில் அதைப் பார்ப்போம்.

அப்படியே உள்ளே வந்தால் என்ன செய்திருப்பார்கள் புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள். தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார். பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும். ஒரு முறை உள்ளே வந்தவரை வெளியில் அனுப்பவும் முடியாது முழி பிதுங்கியிருக்கும்.

எது எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம். நல்ல வேளையாக பிரபாகரனின் பிணத்தைக் கூட கண்ணில் காட்டாது எரித்து விட்டார்கள். இல்லாவிட்டால் அவருக்கு நினைவாலயம் அமைக்கும் கூத்தெல்லாம் நிறைவேறியிருக்கும்.

நாட்டின் நலனுக்கு இவை எதுவுமே உகந்ததில்லை. ஆகவேதான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். மாநில அரசு தன்னிச்சையுடன் இதை பின்பற்றியதோ அல்லது வேறு வழியின்றி பின்பற்றியதோ எதுவாயினும் ஒரு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது.

வெறுமனே சிலரது நாடகத் தன்மை மிக்க செயல்பாடுகளுக்கு தீனி போட்டதாக அமைந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது நல்லதுக்குத்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/16/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட் - 68)

எபிசோட் - 68 (15.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
வேம்பு வீட்டிலிருந்த சாமான்களை வீட்டுக்காரரின் ஆட்கள் வீட்டுக்கு வெளியே எடுத்து வீசுகிறார்கள். அவர் இடிந்து போய் உட்கார்ந்து அழுகிறார். சிங்காரம் ஆறுதல் சொல்கிறான்.

சுகமோ துக்கமோ சமமாக பாவிக்க வேண்டும் என சாத்திரம் கூறுகிறது, ஆனால் அதை படித்தும் இந்த பிராமணர் ஏன் அழுகிறார் என சோவின் நண்பர் கேட்கிறார்.

ஞானம் அதைத்தான் சொல்கிறது. ஆனால் அதற்காக, “ஐயா சாமான்களை தூக்கி வெளியே போட்டுட்டாங்க, ஜாலி” அப்படீன்னு அவர் சொல்லணும்னு எதிர்பார்க்கவும் முடியாதல்லவா? சற்று நேரம் கழித்து அவர் படித்த படிப்பு எல்லாமே அவருக்கு துணை வரும், சுதாரித்து கொண்டாலும் வியப்பதற்கில்லை. ஆனால் அப்போதைய சோகத்தின் தாக்கம் நிஜமே. அதை குறைத்து மதிப்பிட முடியாது என்கிறார் சோ. ஆனானப்பட்ட ராமனே சீதை காணவில்லை என்றும் கையறு நிலையில் பிரலாபிக்கிறான். நாமெல்லாம் எந்த மூலைக்கு என கேட்கிறார் சோ.

சிங்காரம் வேம்புவுக்கு ஆறுதல் அளித்து தன் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறுகிறான்.

பாகவதர் அவரது பள்ளி சினேகிதனை சந்திக்கிறார். அவர் இப்போது நல்ல நிலையில் இருக்கிறார். எல்லாம் ஷேர் மார்க்கெட்டில் தான் விளையாடி சம்பாதித்தது என அவர் கூற, பாகவதருக்கும் சபலம் தட்டுகிறது. அவரும் ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட தீர்மானம் செய்கிறார்.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் பிரியா தன் மாமனாரிடமும் மாமியாரிடமும் பேசுகிறாள். கேட்டரர் மனைவி கேட்பது அடாவடி என தீர்மானிக்கப்படுகிறது. அவளிடம் தங்களுக்கு வைர நெக்லஸ் போடுவதெல்லாம் கட்டுப்படியாகாது என கூற பிரியா முடிவு செய்து, அவளுக்கு போன் செய்ய முயற்சிக்கும்போது ஆர்த்தி தடுக்கிறாள். பட்டாபி தன்னையே கல்யாணம் செய்து கொள்வதாய் வாக்கு தந்திருப்பதாகவும், அவசரப்பட வேண்டாம் எனறும் அவள் கூறுகிறாள். பிரியாவே நேரில் போய் கேட்டரர் வீட்டில் பேசுவது என முடிவு செய்யப்படுகிறது.

பாகவதர் ஷேர் மார்க்கெட்டில் இறங்க தனது பூர்வீக சொத்தான வீட்டை விற்க ஏற்பாடுகள் செய்கிறார். இந்த சீரியலில் இரண்டாம் முறையாக என் மனதுக்கு பிடிக்காத சீன் அது. முதல் சீன் பாகவதர் அதிக காசுக்கு ஆசைப்பட்டு கேசட் விஷயத்தில் ஏமாந்தது. இரண்டு சீனிலும் இவ்வாறு பாகவதர் இன்வால்வ் ஆகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/15/2010

சுயமரியாதையின் அவசியம்

உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிக் கொண்டீர்களானால் போகிறவன் வருகிறவன் எல்லோரும் உங்களை குதிரையேறத்தான் செய்வார்கள். இதை ஒரு போதும் மறக்கலாகாது. அதுவும் தொழில் முறையில் செயல்பட்டு பணம் ஈட்டுபவர்கள் அதை மறக்கவே கூடாது. இப்பதிவின் நோக்கம் என்ன என சிலர் கேட்க முற்படலாம். ஆகவே விளக்குகிறேன்.

சாரு நிவேதிதாவின் பல எழுத்துக்கள் அவர் ஏற்கனவேயே பல முறை சொன்னதாகத்தான் இருக்கும். தன்னை ஒண்ணுமே தெரியாத பாப்பா ரேஞ்சுக்கு வைத்துக் கொண்டு உதார் விடுவதும், மற்றவர்கள் அதை நம்புவார்கள் என நம்புவது போல காட்டிக் கொள்வதும் பல முறை நகைச்சுவையாகவே இருக்கும்.

உதாரணத்து அவரது இந்த லேட்டஸ்ட் பதிவையே எடுத்துக் கொள்வோம். அதில் தன்னை லயோலா கல்லூரிக்கு பேச அழைத்துவிட்டு வெறுமனே சாம்பார் சாதம் கொடுத்து அனுப்பி விட்டார்கள் என பிரலாபித்திருக்கிறார். அதிலிருந்து சில வரிகள்.

சமீபத்தில் நான் லொயோலா கல்லூரிக்கு சில தடவைகள் சென்று வந்த அனுபவத்தைச் சொல்ல வேண்டும். ஒரு தடவை கூட லொயோலா நிறுவனம் நான் அங்கே சென்று உரை நிகழ்த்துவதற்குப் பணம் கொடுத்ததில்லை. சென்ற வாரம் நான் அங்கே ஊடகத்துறை நண்பர்களால் அழைக்கப் பட்டிருந்தேன்.

அது ஒரு திரைக்கதைப் போட்டி. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட போட்டி. கடைசிச் சுற்றுக்கு இயக்குனர்கள் பாக்யராஜ், வசந்த, திருமாவளவன் மற்றும் நான் ஆகிய நால்வர் நீதிபதிகள். காலை ஒன்பது மணிக்கே கிளம்பி விட்டேன். அங்கே பத்து மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரை சிறந்த திரைக்கதைக்கான போட்டி நடைபெற்றது. இரண்டரை மணிக்குக் கிளம்பும்போது கொஞ்சம் சாம்பார் சாதமும், தயிர் சாதமும் கொடுத்து காரில் அனுப்பி வைத்தார்கள்.

ஆக மொத்தம் எனக்கு ஆறு மணி நேரமும் நூறு ரூபாயும் செலவு. வீட்டிலிருந்து லொயோலாவுக்கு ஆட்டோ செலவு 100 ரூ.

லொயோலோ கல்லூரியில் அழைத்தால் அங்கே சென்று வருவது பாக்யராஜ் போன்ற ’முருங்கைக்காய்’ இயக்குனர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாமே தவிர எனக்கு அது பெருமை அல்ல. லொயோலா கல்லூரிக்குச் செல்வதால் எனக்கு எந்த ஆதாயமும் இல்லை. என்னுடைய இலக்கும் நோக்கமும் வேறு. மேலும், 24 மணி நேரமும் நான் இலவசமாகவே பணி புரிய வேண்டுமென்றால் நான் எப்படி பூவா சாப்பிடுவது? லொயோலா கல்லூரியில் மாணவர்களுக்கு இலவசமாகவா கல்வி தரப் படுகிறது? கல்லூரிகள் என்றாலே அதன் கணக்கு வழக்குகள் கோடிகளில்தானே நடந்து கொண்டிருக்கின்றன? எத்தனையோ லட்சங்களை செலவு செய்தல்லவா ஒரு பட்டப்படிப்பை முடிக்க வேண்டியிருக்கிறது? அவ்வளவு ஏன், பல ஏக்கர்களில் பரந்து கிடக்கும் பிரம்மாண்டமான லொயோலா கல்லூரியைச் சுத்தப்படுத்துவதற்கும், பராமரிப்பதற்குமே மாதம் லட்சக் கணக்கான ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்குமே? அப்படியிருக்கும் போது என் போன்ற எழுத்தாளர்களை மட்டும் ஓசியில் வேலை வாங்குவது எந்த விதத்தில் நியாயம்?

எழுத்தாளன் என்றால் அவ்வளவு மலிவாகப் போய் விட்டதா? எல்லாவற்றுக்கும் லட்சங்களில் விலை; எழுத்தாளன் என்றால் மட்டும் ஓசி ஃபக்கிங்? ஒரு பிரபல சினிமா பாடலாசிரியர் ஒரு விழாவில் கலந்து கொள்ள வாங்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சம் ரூபாய். அதுவும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை. ஜவுளிக் கடை திறப்பு விழா போன்றவற்றுக்கு மூன்று லட்சம்.

என்னுடைய நண்பர் ஒருவர் சொன்னார். அவர் ஒரு பிரசுரகர்த்தர். பத்திரிகையாளர். கவிஞர். இரவு முழுவதும் வேலை செய்து விட்டு, காலையில் இரண்டு மணி நேரமே தூங்கி விட்டு மீண்டும் எழுந்து வேலை செய்து மதியம் இரண்டு மணிக்கு முடித்திருக்கிறார். அப்போது பார்த்து ஒரு வாசகர் கவிஞரிடம் முன்கூட்டியே சொல்லக் கூட இல்லாமல் போய் உட்கார்ந்து கொண்டு மாலை நான்கரை மணி வரை பிளேடு போட்டிருக்கிறார். அதுவும் எப்படி? இந்த வாசகர் தன் வாழ்நாளிலேயே ஒன்றிரண்டு புத்தகங்கள் மட்டுமே படித்திருக்கிறார். அப்படிப்பட்டவர், கவிஞருக்கு முன்னால் சரிக்கு சரியாக உட்கார்ந்து கொண்டு கவிஞருக்கு சமூகவியல், உலக அரசியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகியவற்றில் பாடம் எடுக்கிறார். அந்த இரண்டரை மணி நேரமும் கவிஞரைப் பேசவே விடவில்லை. குறுக்கே புகுந்து பேசினாலும் அதை அறுத்துக் கொண்டு பேசுகிறார். பேச்செல்லாம் பிளாட்ஃபாரங்களிலும் டீக்கடைக்களிலும் பேசப்படும் அரைவேக்காட்டுப் பேச்சு.

ஒரு மருத்துவ நிபுணரிடம் ஐந்து நிமிடம் பேசுவதற்கு மூன்று மணி நேரம் காத்திருந்து 500 ரூ. கன்ஸல்டேஷன் கட்டணம் கொடுத்துப் பார்க்கிறார்கள் அல்லவா? அப்படியிருக்கும் போது எழுத்தாளனை மட்டும் ஏன் இப்படி ஓசியிலேயே —— நினைக்கிறார்கள்?

நான் கவிஞரைத்தான் திட்டினேன், ஏன் இந்த மடையர்களுக்கு இடம் கொடுக்கிறீர்கள் என்று. இந்த விஷயத்தில் எனக்கு தர்மு சிவராமுவை ரொம்பப் பிடிக்கும். ஒரு நிமிடம் கூடப் பொறுக்க மாட்டார். கடுமையாக அவமானப்படுத்தி அனுப்பி விடுவார். நான் அந்த அளவுக்குப் போவதில்லை. இப்படிப்பட்ட ஓசி ஓலுக்கு இடம் தர மாட்டேன்.


அதுவும் கடைசி வரிதான் டாப். இப்படிப்பட்ட ஓசி ஓலுக்கு எல்லாம் இடம் தரமாட்டாராம். பிறகு என்ன பிரச்சினை. ஒரு வேளை அதற்கு சற்றே குறைச்ச அளவில்தான் ஓசி ஓலுக்கு இடம் தருவாராக இருக்கும் என நினைக்கிறேன்.

இப்படித்தான் விஜய் டீவி நீயா நானா நிகழ்ச்சிக்கு அவர் போன கதையை எழுதி பிரலாபித்திருந்தார். அது பற்றி நான் போட்ட பதிவு வாடிக்கையாளரை அணுகும் முறை - 11 இதோ. அதிலிருந்து சில வரிகள்.

இதெல்லாம் ஏன் நடந்தன. என்ன ஏது என்பதை முதலில் பேசிக் கொள்ளாது நிகழ்ச்சிக்கு சென்றது சாருவின் தவறு.

//ஒருவேளை அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கோபிநாத்தும் இலவச சேவையே செய்கிறார் போலிருக்கிறது என்று அதை விட்டுவிட்டேன்.//
கோபிநாத்தையும் சாரு தன்னை மாதிரி இளிச்சவாயராக நினைத்து கொண்டது முதல் தவறு. சரி, பிறகு ஏன் போனாராம்? டி.வி.யில் முகம் காட்டும் ஆசைதான் வேறென்ன? அப்ப்டியானால் அதுதான் உனக்கு கூலி என்று விஜய் டிவியினர் சொல்லாமல் சொல்லி செயலில் கட்டியுள்ளனர் என்பதே நிஜம். அப்படியே அந்த நிகழ்ச்சிக்கு போகாமல் இருந்திருந்தால் வேறு ஏதாவது படைப்புகள் செய்திருப்பாரா? இக்கேள்விக்கு சாருதான் பதில் சொல்ல வேண்டும். எனது ஊகம் முழுதும் சரியானதாக இருக்கலாம் என்றாலும் அதை நான் இங்கே கூறுவது முறையல்ல. :))

மீடியேட்டரை விடுங்கள். அவரை எல்லோருமே விட்டுக் கொடுத்து விட்டனர். அவரைக் கேட்டால் வேறு ஏதாவது கதை சொல்வாராக இருக்கும்.

தயாரிப்பாளர் ஆண்டனி கூறுவதை பார்ப்போம்.

முதலில் கூறுகிறார், பணம் தருவது இல்லை என்று. பிறகு கூறுகிறார் பணப்பட்டுவாடா சுந்தரராஜன் மூலம் நடப்பதாக. என்ன முரணான பேச்சு, ஒரே பாராவில். பிறகு கூறுகிறார் நளினி ஜமீலாவுக்கு தன் சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்ததாக. ஐயோ உள்ளமே உருகி விட்டது, இந்த கேழ்வரகிலிருந்து நெய் வடியும் பேச்சைக் கேட்டு. சரி ஒரு வாதத்துக்கே வைத்து கொள்வோமே, மீடியேட்டர் ஏமாற்றினார் என்று. அவரை நியமித்து, பிறகு என்ன நடக்கிறது என்ற கண்ட்ரோல் இல்லாமல் இந்த மனிதர் இருந்திருக்கிறார். இவரெல்லாம் தயாரிப்பாளராம். யார் காதில் ஐயா பூ சுற்றுகிறார் இவர்?

ஆக, மேலே உள்ள விஷயத்தில் எல்லோருமே முழு உண்மையைக் கூறவில்லை. இப்போது சாருவுக்கு பணம் வருமா என்பது என் கவலையில்லை. அது அவர் பாடு, விஜய் டி.வி.யின் பாடு. இதெல்லாம் ஏன் நடந்தன என்பதை இப்போது பார்ப்போம்.


இந்த கூத்தேல்லாம் நடந்து முடிந்தபிறகு மீன் டும் சாரு விஜய் டீவியின் அதே நீயா நானா நிகழ்ச்சிக்கு போயிருக்கிறார். அது பர்றி நான் எனது மேலே சொன்ன பதிவிலியே இட்ட பிற்சேர்க்கை பின்னூட்டம்:

dondu(#11168674346665545885) said...
ஒரு அப்டேட்:
மீண்டும் நீயா நானா நிகழ்ச்சிக்கு சாரு செல்கிறார். பார்க்க: http://charuonline.com/Jan2010/arivippu.html

அவருக்கு நான் இட்ட மின்னஞ்சல் கீழே:

அன்புள்ள சாரு,

மகிழ்ச்சி. பேமெண்ட் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்ததா? அரியர்ஸ் கிடைத்ததா?

இது சம்பந்தமாக நான் இட்ட பதிவு இதோ:
January 17, 2010 8:29 AM


அந்த மின்னஞ்சலுக்கு பதில் இதுவரை இல்லை. சாருவின் அந்தப் பதிவும் இல்லை. அழிக்கப்பட்டு விட்டது போலிருக்கிறது.

இந்த லயோலா கல்லூரி விவகாரத்தையே எடுத்து கொள்ளுங்கள். ஊடகத்துறை நண்பர்கள் கூப்பிட்டதாக கூறுகிறார். அதற்கு லயோலா கல்லூரி நிர்வாகம் எப்படி பொறுப்பாகும்? இவ்வளவு கசப்பான அனுபவங்கள் பெற்றிருப்பவர் முதலில் அதைத்தானே ஊர்ஜிதம் செய்திருக்க வேண்டும். இவர் பணம் கேட்டிருந்தால் இவரை கூப்பிட்டிருக்கவே மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். அது அவருக்கும் தெரிந்திருக்கும். ஆகவே போய் விடுவோம், பிறகு கேட்டுப் பார்ப்போம் என அவர் செயல் பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதைதான். ஒரு தொழில்காரன் ஒரு சமயத்திலும் செய்யக் கூடாதது. ஆனால் அதைத்தான் அவர் திரும்பத் திரும்பச் செய்கிறார்.

உப்பு புளி செலவுகளுக்கும் நண்பன் கையை எதிர்பார்க்கும் நிலையில் தன்னை வைத்திருப்பவரின் சுயமரியாதை பர்றி என்ன கூற இயலும். எனது கேள்விபதில் பதிவு ஒன்றில் வந்த ஒரு கேள்வியும் அதன் பதிலும் கீழே:

எம். கண்ணன்
9. ஜெயமோகன் ஆஸ்திரேலியா சென்றாலும் சரி, கனடா சென்றாலும் சரி, அமெரிக்கா சென்றாலும் சரி - நாடு முழுவதும் சுற்றிக் காட்ட, விருந்தோமல் செய்ய பல வாசகர்கள், நண்பர்கள் செய்கிறார்கள். ஆனால் பலமுறை கேட்டு, வேண்டுகோள் விடுத்தும் சாருவை யாரும் எங்கும் கூப்பிட்டு (வெளிநாடுகளில் வசிப்பவர்கள், தமிழகத்துக்குள்ளேயே வசிப்பவர்கள் கூட) விருந்தோம்புவது இல்லையே? ஏன் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில்: மடிப்பாக்கத்தில் வசிக்கும் எனது எழுத்தாளர் நண்பர் வீட்டுக்கு அமெரிக்கவாழ் பதிவர் ஒருவருடன் சென்றிருந்தேன். அப்போது அவர் சாரு பற்றி பேசும்போது, அவருடன் ஒரு அளவுக்குள் பழக வேண்டும் என கூறினார். கடன் கேட்டுவிடுவார் என்றார்.

அவருடைய வலைத்தளத்திலேயே பார்க்கலாமே, தனது வங்கிக் கணக்கு எண்ணைக் குறிப்பிட்டு அதற்கு பணம் அனுப்புமாறு கேட்டு கொள்கிறார். அப்படி பெறும் பணத்தை ரொம்ப காஸ்ட்லி பார்களில் குடிக்கத்தான் பயன்படுத்துகிறார் என்பதையும் அவ்வப்போது எழுதி வருகிறார். இந்த விஷயங்களெல்லாம் படிப்பவர் மனதில் ஓர் அவெர்ஷனை உருவாக்கிவிடுகிறது.

இவையெல்லாம் ஜெயமோகன் விஷயத்தில் மிஸ்ஸிங். தனது தினசரி தேவைகளுக்கு அவர் யாரிடமும் கையேந்துவதில்லை, அவரது புத்தகங்கள் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவரது எழுத்துக்களில் சுய இரக்கம் கிடையாது. ஆகவேதான் அவரை அழைக்க ஆட்கள் அனேகம் உண்டு. நன்றாக வேறு அவர் எழுதுகிறார் என்பது கூடுதல் போனஸ்.


பை தி வே, இப்போது அவர் தளத்தில் தனது வங்கி என்ணை அவர் தருவதில்லை. ஓக்கே, அதுவே ஒரு முன்னேற்றம்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/14/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 66 & 67)

எபிசோட் - 66 (12.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
நாதன் வீட்டில் அவரும் வசுமதியும் ஒருவருக்கொருவர் தகவல்களை இற்றைப்படுத்துகின்றனர். நீலகண்டனும் பர்வதமும் ரமேஷ் விஷயத்தில் நாதன் செய்தது சரி என்பதை உணர்ந்து கொண்டு அவர்களுடன் இயல்பாக பழகுகின்றனர். ஆனால் ரமேஷின் தாய் தந்தையர் அவர் மேல் கசப்புடன் இருக்கின்றனர். சாம்பு சாஸ்திரிகளின் பெண்ணின் திருமணம் நிச்சயமானது பற்றியும் பேசுகின்றனர். சஷ்டியப்தபூர்த்திக்கு அவர் வரவில்லை என வசுமதி குறை கூற நாதன் அவளை சமாதானப்படுத்துகிறார்.

வேம்பு சாஸ்திரிகளின் வீட்டு சொந்தக்காரர் செய்யும் கெடுபிடியை அறிந்த நாதன் அவருக்கு நன்றாக வேண்டும் என்ற ரேஞ்சுக்கு பேசுகிறார். அசோக் அவருக்கு உதவி செய்ய முயன்றதை குறித்து அவர் வெகுண்டெழுகிறார். (இந்த விஷயத்தில் அசோக்கைவிட வேம்பு சாஸ்திரிக்கே அவனது தாய் தந்தையின் மனநிலை நன்கு புரிந்திருக்கிறது எனக் கூற வேண்டும்). ரமேஷின் வேலையை பிச்சுமணிக்கே தந்து விடலாம் என நாதன் முடிவு செய்ததை வசுமதி வரவேற்கிறாள்.

பிச்சுமணியின் அக்கா புருஷன் அந்த எல்.ஐ.சி. ஏஜெண்டும் அவன் மனைவியும் பிச்சுமணிக்கு நாதன் வேலை போட்டுக் கொடுத்தது பற்றி மகிழ்கின்றனர். எல்.ஐ.சி. ஏஜண்டின் தங்கை மனம் மாறி பட்டாபியையே கல்யாணம் செய்து கொள்வதாக தன் அண்ணாவுக்கு கடிதம் எழுத அவனும் கீழே கேட்டரரிடம் அது பற்றி பேச முயல்கிறான். அவனது மனைவி சாம்பு சாஸ்திரியின் மகளோடு ஏற்கனவேயே நிச்சயம் ஆனதை கூறி, இப்போது அங்கு போய் குழப்பம் விளைவிப்பது மகா பாவம் எனக்கூறியும் அவன் கேட்கவில்லை. கேட்டரரிடம் போய் பேச, அவர் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனல் அவரது மனைவிக்கு சற்றே சபலம், தன் பிள்ளைக்கு அதிக சீர் கிடைக்குமென. சாம்புவிடம் போய் வேண்டுமென்றே ஆர்த்திக்கு ஒரு வைர நெக்லேஸ் போடச் சொல்லலாமென என கணவனை விட்டு சொல்ல உத்தேசிக்கிறாள்.

வேம்பு சாஸ்திரியை பார்க்க அசோக் சொல்லி அட்வொகேட் அனந்தராமன் வருகிறார். அவர் வீட்டை அவ்வலவு அவசரமாக காலி செய்ய வேண்டியதில்லை என அவருக்கு அட்வைஸ் செய்கிறார். தனது வீட்டுக்கு ஒவ்வொரு அமாவாசைக்கும் வந்து தர்ப்பணம் பன்ணித் தர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறார்.

பாகவதர் வீட்டில் ராமசுப்பு தன் அம்மாவிடமிருந்து சமையல் கற்றுக் கொள்கிறான். அவன் இஞ்சினியராகாமல் இது என்ன பெரிய நளமகா சக்கரவர்த்தியாக முயற்சிக்கிறான என பாகவதர் கேட்கிறார்.

சமையல்னா நளன் என ஏன் எல்லோரும் பேசுகிறார்கள் என சோவின் நண்பர் அவரைக் கேட்க, அவரும் நளமகாராஜாவின் கதையைக் கூறுகிறார்.

(தேடுவோம்)

எபிசோட் - 67 (13.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
பாகவதர் வீட்டில் ராமசுப்பு சமையல் கற்றுக் கொள்வது பற்றி சர்ச்சை தொடர்கிறது. பெண்கள் மட்டும் சமையல் செய்ய வேண்டுமா, ஆண்கள் செய்யக்கூடாது என ஏதேனும் சட்டம் இருக்கா என ராஜி ஆணித்தரமாகக் கேட்கிறாள். சோவின் நண்பரும் அதை கேட்க, அவரும் சட்டம் இருக்கிறதா என ஓப்பனாக கேட்டால், இருக்கிறது எனக்கூறி சுக்ர நீதியை கோட் செய்கிறார். இதெல்லாம் ஒரு டிவிஷ ஆஃப் லேபர் என்றும், ஆனால் இக்காலகட்டத்தில் அதை பின்பற்றுகிறார்களா என்றால் அது வேறுவிஷயம் என்று கூறுகிறார்.

ராஜி தொடர்ந்து பேசுகிறாள். தன் கணவனுக்கு ஆத்திர அவசரத்திற்கு கூட சமையல் செய்யத் தெரியாது எனவும், தன் மகனுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் பிற்காலத்தில் வரப்போகும் தனது மருமகள் தன்னை வாழ்த்துவாள் எனவும் கூறுகிறாள். ராஜியின் மாமியார் அவளை இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க ஆதரிக்கிறாள்.

கேட்டரரின் மனைவி சாம்பு சாஸ்திரியின் மனைவியிடம் வந்து அவர்கள் ஆர்த்திக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு வைர நெக்லஸ் செய்து போட வேண்டும் எனக் கூறி விட்டு செல்கிறாள். செல்லம்மா திகைக்கிறாள்.

வேம்புவிடம் அவர் மனைவி வீட்டை காலி செய்ய வேண்டிய பிரச்சினையில் சாம்புவின் உதவியை கேட்குமாறு ஆலோசனை கூற அவரும் அவரை பார்க்க புறப்பட்டால் அவரே இவரை பார்க்க வருகிறார். வைர நெக்லஸ் டிமாண்டை பற்றிக் கூறிவிட்டு இது சம்பந்தமாக கிருபாவையும் பிரியாவையும் வரவழைத்து ஆலோசனை கேட்பதாக உத்தேசித்திருப்பதை கூறுகிறார். சாம்புவுக்கே பிரச்சினை என இருக்க, தனது பிரச்சினை பற்றி கூற மனமில்லை வேம்புவுக்கு.

வேம்பு வீட்டிலிருந்த சாமான்களை வீட்டுக்காரரின் ஆட்கள் வீட்டுக்கு வெளியே எடுத்து வீசுகிறார்கள். அவர் இடிந்து போய் உட்கார்ந்து அழுகிறார். சிங்காரம் ஆறுதல் சொல்கிறான்.

சுகமோ துக்கமோ சமமாக பாவிக்க வேண்டும் என சாத்திரம் கூறுகிறது, ஆனால் அதை படித்தும் இந்த பிராமணர் ஏன் அழுகிறார் என சோவின் நண்பர் கேட்கிறார். சோவின் பதில் அடுத்த எபிசோடில்.

இப்போது டோண்டு ராகவன். சோவின் பதில் இன்னும் தெரியாத நிலையில் நான் முயற்சி செய்கிறேன். நான் படித்த கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஓர் அரசன், அவனுக்கு ஒரே ஒரு மகள். அவள் இறந்து விட்டாள். அவன் அழுகிறான். அவனது மந்திரி ஆறுதல் கூறுகிறான். “அரசே, ஆண்டாண்டு அழுதாலும் மாண்டார் மீளார் என்பதை அறிய மாட்டீர்களா” என. அதனால்தான் அழுகிறேன் என்கிறான் அரசன்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/13/2010

எமக்கு இது ஹாஸ்யமாகப் படவில்லை

தலைப்புக்கு பின்னால் வருகிறேன்.

ஜெயமோகன் தனது மகள் மங்கலம், கம்பனும் காமமும் - 6 என்னும் இடுகையில் இவ்வாறு எழுதுகிறார்.

பண்டைய கோயில்களை கூட்டுக்குடும்பமாகப் பார்த்துச்செல்பவர்களைக் கவனித்தால் சிற்பங்களுக்கு முன்னால் அவர்கள் அடையும் தர்மசங்கடங்கள் வேடிக்கையாக இருக்கும். குடும்பத்தலைவர்கள் விசித்திரமான கடுகடுப்புடன் விலகிச்செல்வார்கள். பெண்கள் அவசர அவசரமாக குழந்தைகளை ஏதாவது சொல்லி அதட்டுவார்கள். இளம்பெண்கள் கழுத்தை இறுக்கமாக வைத்துக்கொள்வார்கள். அழகர்கோயில் கோபுரச்சிற்பத்தின் முன்னாலிருந்து குழந்தைகளை அதிவேகமாக ‘பத்தி’க் கொண்டுசெல்லும் அப்பா அம்மாக்களை ஆர்வத்துடன் கவனித்திருக்கிறேன்.

என் வாசகர் ஒருவர் சஞ்சலத்துடன் ‘மத்தகம்’ ‘ஊமைச்செந்நாய்’ இரு கதைகளையும் அஜிதன் வாசித்தானா என்று கேட்டிருந்தார். ‘ஏன், யானை பற்றிய கதை என்றால் அவன் முதலியே வாசித்துவிடுவானே” என்றேன். அவருக்கு ஒரு மௌனம். பின்னர் ”பையன்களுக்குக் கொஞ்சம் ஜாஸ்தியான கதை இல்லையோ?” என்றார். நான் அதைவிட நேரடியாகவே பல விஷயங்களை அவனிடம் பேசுவதுண்டு என்றேன். அவர் மேலும் ஆழ்ந்த அமைதியை அடைந்தார்.


அவருக்கு மூச்சே நின்று போயிருக்குமாக இருக்கும். நிற்க.

நமது சங்க இலக்கியங்களில் கள்வியல் பற்றி தாராளமாகவும் வெளிப்படையாகவுமே பேசுகிறார்கள். திருக்குறள் காமத்துப்பால் சொல்லாத விஷயங்களா? ஆனால் ஒன்று கவனித்தீர்களா? காமத்துப்பாலை எனக்கு அறிந்து தமிழ்பாடங்களில் வைக்கவில்லை. நான் பி.யு.சி. வரை தமிழ் படித்திருக்கிறேன். ஒரு வகுப்பிலும் காமத்துப்பால் இல்லவே இல்லை.

சர்வசாதாரணமாக புழங்கிய காமம் பற்றிய இலக்கியங்களை பிற்காலத்து கண்ணோட்டத்தில் லென்ஸ் வைது கண்டித்தவர்களில் அண்ணாதுரையும் ஒருவர். அவரது கம்பரசத்தில் இவ்வாறு எழுதுகிறார்:


"வெண்ணிலா தன்னொளி பரப்பிற்று; இராமனுடைய தூயமனம் போலவா - தசரதனுடைய வெண்கொற்றக் குடைபோலவா - அல்ல, அல்ல, காமம் மிக்கு ஒழுகிற்று என்ன என்று அறிவிக்கிறார் அரிதாசர், பளிச்செனப் புரியவேண்டும் என்பதற்காக, காமம் மிக்கு ஒழுகிற்று என்று கூறியதுடன் கள் வெள்ளம் புரண்டு வருவதுபோல என்றார்.

வெப்பம் கொண்டு இருபாலரும் விடுதி திரும்பினர் - அவர்களை நிலவு மகிழ்விக்க வந்தது - அந்த நிலவொளி எங்ஙனமிருந்ததென்றால், காமம் மிகவும் வெளிப்பட்டது போலவும், கள்வெள்ளமாக ஓடியது போலவுமிருந்தது, மதி நிறைந்தது, மதுக்குடம் தெரிகிறது. காமுற்ற இரு பாலரிடம் கட்குவளைகள்! உண்டாட்டுப் படலத்தில் முதற் பாடலே இது; அவர்கள் இனி உண்ணப் போவது என்ன, ஆடப் போவது எவ்விதம் என்பதை எடுத்துக்காட்டுவது போல, இனி அவர்கள் கள்ளைக்குடித்துவிட்டு காமக் கூத்தில் ஈடுபடப் போகிறார்களென்பதைச் சுட்டிக் காட்டியாகிவிட்டது - முதற்பாட்டிலேயே; அந்தக் கூத்து நடந்து தொலைக்குமட்டும் கவி, வேறு பொருள்பற்றிக் கூறிடலாகாது; இதை இனியும் காணவல்லேன் அல்லேன்; என்று கூறியபடி மதி எனும் மங்கை நல்லாள் மறைந்திடக் கண்டான், சுடுகிறேன் அவர் தமை என்று சூளுரைத்துமே கதிரவன் எழுந்தான் காணீர் - என்று ஒரே பாடலோடு முடிந்திடலாகாதா! நம்மைக் கூறுவர், சரியப்பா! காமச் சுவை இருக்கிறது என்று ஒரு வரியோடு விட்டுத் தொலைக்காமல், துளைத்துத் துளைத்துக் காட்டுவதா - என்று வெட்கத்தால் தாக்குண்டவர்கள். கம்பர் இந்த உண்டாட்டுப் படலத்தில் 67 பாடல்கள் பாடி இருக்கிறார். அவ்வளவும் ரவிவர்மா கை வண்ணத்தோடு வெளிவந்தால், உலக உல்லாசக்கூடக் கண்காட்சியில் முதலிடம் பெறும். அவ்வளவு ‘ரசம்’!!

மகளிர் கள்ளைக் குடிக்கும்போதே, வழி நடந்த களைப்புத் தீரவேண்டும் என்றோ, அலுத்து உறங்க வேண்டும் என்றோ எண்ணவில்லை! பஞ்சைகளன்றோ அவ்விதம் எண்ணுவர்! இவர்கள் கொஞ்சுமொழிப் பாவையர், எனவே, தங்களை ‘யுத்தத்துக்கு’த் தயாரித்துக் கொள்ளவே, குடிக்கிறார்கள்.

குடித்தார்கள், குடித்தார்கள் என்று குறை கூறாதே, அவர்கள் குடித்தது, தேன் அல்லது, மலரும் வாசனைப் பொருள்களும் சேர்ந்த சுவைமிகு பானம் - கள் அல்ல! என்று வாதாடிப் பார்க்கிறார்கள் சிலர்.

பைத்தியக்காரி! இது ஏதோ உடலுக்குக் கெடுதல் என்று எண்ணுகிறாள்! இது அவ்வளவும்! பிளட் (க்ஷடடிடின) டானிக்!" என்று, ‘இழந்த காதல்’ நாடகத்தில் ஒரு கட்டம் வரும்; அதுபோலச் சிலர், அயோத்தி அணங்குகள் போதை சாப்பிடவில்லை என்று கூறுவர்! உள்ளதை மறைக்க வெகு பாடுபடுகிறார்கள்!!

கண் சிவக்கிறது, நிலை தடுமாறுகிறது, ஒரு பொருள் மற்றொன்றாகத் தெரிகிறது, எதிரில் இருப்பது இன்னது என்று தெரியவில்லை, பாத்திரத்தில் பானம் இருப்பதும் தீர்ந்து போனதும் புரியவில்லை. நிலவுக்கும் கள்ளுக்கும் மாறுபாடு தெரியவில்லை. நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. நாக்குக் குழறுகிறது. வார்த்தைகள் பொருளற்று உருள்கின்றன. காரணமற்றுச் சிரிப்பு, கைகொட்டி ஆடுவது - இது தேன் உண்டதின் இலட்சணமா!!

இவ்வளவு வருகிறது, கம்பர் கவிதையில் தெளிவாக, உண்டாட்டுப் படலத்தில்.

மலரணை! மலர் சூடிய மங்கையர்! மதுக்குடம் இப்படித்தான் ஆரம்பமாகிறது; உண்டாட்டுப் படலம் ஆறாம் பாடல். களவிப்போரில் நாம் தோற்றுவிடக் கூடாது, களித்திடவேண்டும் என்ற கருத்துடனேயே பருகுகிறார்கள் - பஞ்சை பராரிகள் அல்ல. எனவே புளித்துப்போன கள்ளை மண் பாண்டத்தில் வார்த்துக் குடிக்கவில்லை - பொற்கிண்ணத்தில் புதிய மதுவை ஊற்றிக் குடிக்கிறார்கள். உண்ட கள் காமத்தை மூட்டுகிறது! கவிதை 9. ஓமகுண்டத்திலே நெய்யை ஊற்றினதும் தீ மேலே எழுவது போல, உள்ளே மது சென்றதும், மூண்டு கிடந்த காமம் மேலே எழுகிறது.

வெம் காமம் கனலினை
கனற்றிக் காட்டிற்று


அண்ணாதுரை அவர்கள் தமிழை ஆழ்ந்து படித்தவர். கம்பராமாயணம் மட்டுமல்ல, ஏனைய நூல்களிலும் இம்மாதிரியான வர்ணனைகள் உண்டு என்பதை அறியாதவரல்ல. ஆனாலும் கம்பராமாயணத்தை மட்டும் தேர்ந்தெடுத்தது வேறு ஒரு அஜெண்டா காரணமாகத்தான்; அது இங்கே வேண்டாம்.

திடீரென நம்மூரில் என்ன நடந்தது, இவ்வாறு நமது புரிதல்களில் மாற்றம் வந்ததற்கு காரணம் என்ன என்று பார்ப்போம். இதெல்லாம் ஆங்கிலேயர்கள், கூடவே மிஷனரிகள் ஆகியோர் வந்த பிறகு மெதுவாக நடந்தேறியவை. இது பற்றிய ஒரு புரிதலை ஜெயமோகனின் மேலே குறிப்பிடப்பட்ட பதிவே தந்து விடுகிறது. அதிலிருந்து சில வரிகளை பார்ப்போம்:

நம் காவியங்களைப் பார்க்கும்போது வாழ்வு சிறந்திருந்தது என்று சொல்ல வருமிடங்களில் எல்லாம் காமம் சிறந்திருந்தது என்று சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம். சமண, பௌத்த ஞானியரால் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை போன்ற காப்பியங்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக சீவகசிந்தாமணி காமத்தைக் கொண்டாடும் ஒரு காப்பியம்.

ஒரு சமணர் அக்காப்பியத்தை எழுதியது பற்றி பலவகையான ஊகங்களும் கதைகளும் உள்ளன. எளிமையான விளக்கம் இதுதான், இக்காப்பியங்கள் அன்று பொதுசாபையில் வாசிக்கப்பட்டன. குறிப்பாக இரு பருவங்களில். நான்கு மாசம் நீளும் மழைக்காலத்திலும் நடவு தொடங்கும் இளவேனில் காலத்திலும். மழைக்காலம் என்பது பழங்காலத்தில் மரணத்தின் காலம்.நோயும் பட்டினியும் ஆட்சி செய்யும் பருவம். அப்போது மரணத்துக்கு எதிரான வாழ்க்கையின் அறைகூவலாக இந்தக் காமச்சித்தரிப்புகள் வாசிக்கப்பட்டன. இவற்றை வாசிக்கும் இடத்தில் நோயும் மரணமும் அண்டாது என்று நம்பபப்ட்டது

அதேபோல வயல்வேலைகள் தொடங்கும் நாட்களில் இந்நூல்கள் வாசிக்கப்படுவது நிலவளம் பெருகச்செய்யும் என்ற நம்பிக்கை இருந்தது. சமீபகாலம் வரைக்கூட குமரிமாவட்டத்தில் ராமாயண மகாபாரதத்தில் காமச்சித்தரிப்பு கொண்ட பகுதிகளை மட்டும் சாவடிகள் படிக்கும் வழக்கம் இருந்தது. ஆகவே அந்த வழக்கத்தை ஒட்டி அந்நோக்கத்தை நிறைவேற்ற உருவானதே சீவகசிந்தாமணி. சீவகசிந்தாமணியை சமணர்கள் கூடி விழாவாக வாசித்ததை உ.வே.சா. பதிவுசெய்கிறார். குருத்து தென்னை ஓலையும் பூக்களும் மாந்தளிர்களும் தோரணம்கட்டி ஒரு ‘வளச்’ சடங்காகவே அந்த வாசிப்பு நிகழ்ந்தது என்கிறார்.

ஆகவேதான் வளம் என்று எங்கே சொல்லப்படுகிறதோ அங்கே உடனடியாக காமச்சித்தரிப்பு வந்துவிடுகிறது நம் காப்பியங்களில். சொல்லப்போனால் நிலவளம் செல்வ வளம் இரண்டும் காமம் சார்ந்த உவமைகள் வழியாகவே சொல்லப்படுகின்றம்ன. இதில் காளிதாசனும் கம்பனும் அதன் உச்சத்தையே தொடுகிறார்கள். காமம் என்பது ஒரு சமூகம் உயிர்ததும்பப் பொலிந்துகொண்டிருக்கிறது என்பதற்கான சான்று.

நம் ஆலயங்களில் காமச்சித்தரிப்புகள் நிறைந்திருப்பதற்குக் காரணம் இதுவே. அதிலும் குறிப்பாக கோயில்களில் உள்ள வசந்த மண்டபம், பலி மண்டபம் போன்றவற்றில் காமச்சிற்பங்கள் நிறையவே காணப்படும். மலர்மரங்களும் தேவர்களும் வனயட்சிகளும் காதலர்களுடன் இணைந்து காணப்படுகிறார்கள். மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ சிற்பங்களும், ஆந்திராவில் ராமப்பா கோயில் முகமண்டபச்சிற்பங்களும் மிகச்சிறந்த உதாரணங்கள்.

ஆனால் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மெல்ல மெல்ல நம் பண்பாட்டில் விக்டோரிய ஒழுக்கவியல் புகுத்தப்பட்டது. விக்டோரிய ஒழுக்கவியல் என்று பொதுவாகச்சொல்லப்படும் மனநிலையை வரலாற்று ரீதியாக இவ்வாறு விளக்கலாம். கிட்டத்தட்ட இந்து மரபில் உள்ளதுபோன்ற இயற்கைவழிபாட்டு மனநிலையே ஐரோப்பிய பாகன் மதங்களில் நிலவியது. வளச்சடங்குகள்[விருஷ்டியாசாரங்கள்] அவர்களிலும் பலவகையில் இருந்தன. அவற்றுக்கு எதிரான சக்தியாக ஆபிரஹாமிய மதமான கிறித்தவம் அங்கே பரவியது.

கிறித்தவத்தின் அடிப்படைக் கருதுகோளில் ஒன்று ‘ஆதிபாவம்’ என்பது. மனிதர்களை இறைவன் காமம் இல்லாத தூயவர்களாகப் படைத்தார் என்றும் அவர்கள் இறைவனால் விலக்கப்பட்ட கனியை உண்டு காமம் என்ற பாவ உணர்வை அடைந்தார்கள் என்றும் சொன்னது அது. காமத்தை ஒரு பெரும்பாவமாகப் பார்க்கும் நோக்கு கிறித்தவம் மூலம் ஐரோப்பாவில் வேரூன்றியது. காமத்தைக் கோண்டாடிய கிரேக்க ரோம பண்பாட்டுக்கூறுகளும் பிற பாகன் பண்பாட்டு அம்சங்களும் கடுமையாக ஒடுக்கி ஒழிக்கப்பட்டன.

பின்னர் கிறித்தவத்துக்குள் கடுமையான புலன்மறுப்பு கொண்ட பலவகையான இயக்கங்கள் உருவாயின. அவற்றின் மேலாதிக்கம் நிலவிய மத்திய காலகட்டம் என்பது ஒழுக்கம் என்பது ஒரு ரத்தவெறி கொண்ட தெய்வமாக மக்களை வேட்டையாடிய காலம் என்று சொல்லலாம். ஆனால் இக்காலகட்டத்தில் பாகன் பண்பாட்டின் பல கூறுகளை கிறித்தவமரபு உள்வாங்கிக் கொண்டது. காரணம் அவை ஆசாரங்களாகவும் கலைகளாகவும் மக்களிடையே வேரூன்றியிருந்தன. அவ்வாறு உள்வாங்கிக்கொள்வதன் மூலமே கிறித்தவம் ஐரோப்பாவெங்கும் முழுமையாக பரவ முடிந்தது.


எது எப்படியோ இப்போது செக்ஸ் என்பதே ஒரு கெட்ட வார்த்தையாக போய் விட்டது. ஜெயமோகனின் அப்பதிவுக்கு நான் இட்ட இப்பின்னூட்டத்தையும் பாருங்கள்.

விக்டோரியா மகாராணி காலத்துக்கு முன்னால்கூட இங்கிலாந்தில் பாலுறவுகளை ஆங்கிலேயர் எளிதாகவே நோக்கி வந்திருக்கின்றனர் என்று படித்துள்ளேன். பின்பு ஏன் விக்டோரியா மகாராணி காலத்தில் இவ்வாறு மாறியது?

விக்டோரியா என்னும் அப்பெண்மணி மகா அவலட்சணமான பெண். அவள் கணவன் ஆல்பர்ட் விதியே என்றுதான் அவளிடம் உறவு கொண்டிருக்க முடியும். மற்றப்படி ஆண்களின் ரசிக்கும் பார்வையை அப்பெண்மணி அறிந்திருக்க மாட்டாள். தனக்கு கிட்டாதது வேறு யாருக்கும் கிட்டக்கூடாது என்ற நல்லெண்ணமமே அவள் செக்ஸை வெறுத்ததற்கு காரணம்.

மேலும் அப்பெண்மணிக்கு ஹாஸ்யரசனை சுத்தமாக லேது. ஏதாவது ஜோக் சொன்னாலும் புரியாது, “எமக்கு இது ஹாஸ்யமாக ப்படவில்லை” (We are not amused) என்று கூறுவது அவள் வழக்கம்.

மொத்தத்தில் இந்த விஷயத்தில் அவள் இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு பெரிய சாபக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும்.


அப்பாடா, இப்பதிவின் டைட்டிலையும் ஜஸ்ட்ஃபை செய்தாகி விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/12/2010

உபபாண்டவம் - மிகப்பெரிய ஏமாற்றம்

சாரி, எனக்கு பொய் சொல்ல வராது. எஸ்ராவின் உபபாண்டவத்தை படித்து விட்டு நொந்து போனேன். பேசாமல் நூலகத்தில் இரவல் வாங்கி படித்து விட்டு திரும்பத் தந்திருக்க வேண்டியது, தெரியாமல் விலை கொடுத்து வாங்கியதில் பணம் 180 ரூபாய் தண்டம். நல்ல வேளையாக டிஸ்கவரி புக் பேலசில் 10% கழிவு கொடுத்தனர், இல்லாவிட்டால் 200 ரூபாய்கள் அல்லவா பழுத்திருக்கும்?

மகாபாரதத்துடன் அதை கம்பேர் செய்யக் கூடாது என்கிறார்கள். ஆனால் எப்படி செய்யாமல் இருக்க முடியும்? மூல நூலிலிருந்துதானே எடுத்து இவர் தனது வெர்ஷனை தந்திருக்கிறார்? ஆகவே மலை போன்ற வியாச மகாபாரடத்துக்கும் மடு போன்ற உபபாண்டவத்தையும் கம்பேர் செய்வதை தவிர்க்க இயலாது.

வியாச பாரதத்தில் துரியன், சகுனி, துசாசனன், கர்ணன் ஆகியோரை தீய சக்திகள் பக்கம் இருப்பதாகக் காட்டியிருந்தாலும் வியாசர் அந்தந்த பாத்திரங்களுக்குறிய பெருமைகளையும் கூறாமல் இல்லை. கிருஷ்ணர், அருச்சுனன், யுதிஷ்டிரன், பீமன் ஆகியோர் நல்ல சக்திகள் தரப்பில் இருப்பதாகக் காட்டினாலும் அவர்கள் தவறுகளையும் சாடாமல் இல்லை. மொத்தத்தில் ஒரு சமநிலை நிறைந்த நாவல். மனிதன் முழுக்க முழுக்க நல்லவனும் இல்லை, முழுக்க முழுக்க கெட்டவனும் இல்லை இரண்டும் கலந்தவனே அவன், அதுவும் ஒவ்வொரு மனிதனிலும் நன்மை தீமைகளின் கலவைகளின் விகிதங்கள் மாறிக் கொண்டே வந்துள்ளன என்றும், பிறகு எப்படி ஒட்டு மொத்தமாக ஒருவனை நல்லவனா அல்லது தீயவனா என்று கூறுவது என்பதையும் வியாசர் அழகாகக் கையாண்டுள்ளார்.

ஆனால் எஸ்ரா அவர்கள் அப்படியெல்லாம் மெனக்கெடவேயில்லை. துரியன் தரப்பை உயர்த்த வேண்டும் என்ற கட்டாயம் மட்டுமே அவருக்கு இருந்திருக்கிறது போன்ற தோற்றத்தை அவர் தருகிறார். அதை ஆரம்பத்திலிருந்தே செயலாக்குகிறார். அவரை பொருத்தவரை துரியன் செய்த ஒரே தவறு பாஞ்சாலியை துகிலுரித்தது மட்டுமே எனவும், அதுவும் பாஞ்சாலி அவனைப் பார்த்து கேலியாக சிரித்ததாலுமேயே என்று கூறுவதுபோலத்தான் அவரது வார்த்தைகள் செல்கின்றன.

வியாச பாரதத்தில் பாண்டவர்களின் ஒற்றுமையைப் போலவே கௌரவர்களுக்குள்ளேயும் இருக்கும் ஒற்றுமையும் எடுத்து கூறப்படுகிறது. ஆனால் எஸ்ரா அவர்களோ பாண்டவர்களுக்குள் ஒற்றுமையில்லாதது போன்ற தோற்றத்தைத் தர முயற்சிப்பதாகவே எனக்குப் படுகிறது. அரக்கு மாளிகையில் குந்தியும் பாண்டவர்களும் தப்பிக்கையில் வேடுவப்பெண்ணும் அவளது ஐந்து புத்திரர்களும் சகுனியின் கையாள் புரோசனனுடன் சேர்ந்து தீயில் மடிகின்றனர். அதற்கு குந்தியை குறைசொல்லும் எஸ்ரா சகுனி மற்றும் துரியனின் ஒரிஜினல் துரோகம் குறித்து இடிபோன்ற மௌனத்தையே தருகிறார். துரோணரை அசுவத்தாமன் என்ற யானை புரளி மூலம் கொன்றதை பேசும் அவர் துரோணர் அபிமன்யுவை கொன்றது குறித்து ஒன்றும் பேசுவதாகத் தெரியவில்லை. அதை போர் யுக்தி என்று கூறினாலும் கூறுவார் போல.

இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம். ஆனால் ஒன்றை மீண்டும் மீண்டும் கூற வேண்டும். வியாச பாரதத்தையும் எஸ்ராவின் உபபாண்டவத்தையும் ஒப்பிடக் கூட இயலாது. அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/10/2010

சென்னை பதிவர்கள் சந்திப்பு 10.04.2010

இதைத்தான் எனது ஆயிரமாவது பதிவாக இட எண்ணியிருந்தேன். ஆனால் முத்துராமன் அவர்களது உதவிக்கான கோரிக்கைப் பதிவின் அவசரம் அதிகம் ஆகவே அதையே 1000-வது பதிவாக இட்டு விட்டேன்.

எனது கார் காந்தி சிலையை அடைந்தபோது மணி கிட்டத்தட்ட மாலை 6 ஆகி விட்டிருந்தது. நான் அங்கு சென்றபோது ஏற்கனவேயே சிவப்பிரியன், ஸ்ரீ, தண்டோரா, பாஸ்கர், சிவராமன், வெங்கடரமணன், சினேகன் ஆகியோர் வந்திருந்தனர். பிறகு வந்தவர்கள் பாலபாரதி, காமேஷ், சிவகணேஷ், லக்கிலுக், விஸ்வநாதன் ஆகியோர்.

பிறகு எல்லோரும் அருகில் உள்ள புல்வெளிக்கு சென்று வட்டமாக அமர்ந்தோம். யாரும் முதல் வரிசையில் அமர்ந்ததாக யாரும் குற்றம் சாட்ட முடியாது. முதலில் இருட்டாவதற்குள் அவரவர் சுய அறிமுகம் செய்து கொள்ளலாம் என பாலபாரதி கூற, அவ்வாறே செய்தோம்.

விஸ்வநாதன் என்பவர் தமிழ் காமிக்ஸ் உலகம் என்னும் வலைப்பூவை நடத்துவதாக அறிந்தேன். பேச்சு அப்படியே விக்கிபீடியாவுக்கு திரும்பியது. தமிழில் வரும் ஒவ்வொரு படத்துக்கும் முக்கியமான விவரங்களை கொடுத்தாலே பிற்காலத்தில் அதுவே ஒரு பெரிய ஆவணமாக உருவெடுக்கும் என பால பாரதி அபிப்பிராயப்பட்டார்.

திருநங்கைகளுக்குத்தான் இட ஒதுக்கீடு தேவை என்னும் எனது பதிவை நான் குறிப்பிட்டு பேச, செய்யலாமே என்பது போன்ற விட்டேற்றியான பதில்கள் வந்தன. பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்றதும் துள்ளி குதித்து ஆதரவு தெரிப்பவ்ர்கள் இதற்கு மட்டும் பம்முகின்றனர் என்பது இந்த சிறிய வட்டத்திலேயே பார்க்க முடிகிறது. அப்பதிவுக்கு பின்னூட்டமும் ஒன்றே ஒன்றுதான் வந்துள்ளது, அதுவும் அனானி ரூபத்தில். நாளையாவது ஏதாவது வருகிறதா என பார்க்கலாம். சற்று நேரம் கழித்து வந்த லாயர் சுந்தர்ராஜ் நான் பெண்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லையென ஒரு தோற்றம் இருப்பதாக தெரிவிக்க, நானோ தோற்றமா, கண்டிப்பாக நான் அதை ஆதரிக்கவில்லை என அவரிடம் தெளிவுபடுத்தினேன். திருநங்கைகள் விஷயத்தில் ஒரு சட்ட நிபுணராக அவரது பின்னூட்டம் கேட்டேன். போடுவதாக கூறினார். போடுகிறாரா என பார்ப்போம்.

சோவின் எங்கே பிராமணன் சீரியலை மிஸ் செய்யும் எபிசோடுகளை எனது பதிவில் பார்த்து கொள்வதாக ஒருவர் கூற, அவர் முக்கியமாக சம்பந்தப்பட்ட எபிசோடின் வீடியோவையும் நான் தந்திருக்கும் சுட்டிகள் மூலம் பார்ப்பது அதிக விசேஷமாக இருக்கும் என கூறினேன்.

சற்று நேரம் கழித்து அதிஷா, கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், நர்சிம் ஆகியோர் வந்தனர். அதற்குள் போலீசாரும் வந்து நாங்கள் புல்வெளியில் அமரலாகாது என விரட்டிவிட நடைபாதைக்கு வந்தோம். பிறகு மெதுவாக வழமையான டீக்கடைக்கு சென்றோம். அங்கு ப்ரூனோ நேரடியாக வந்திருந்தார். தமிழ் குரலும் வந்தார். அங்காடித் தெரு திரைப்படத்துக்கு எதிர்வினையாக ப்ரூனோ இட்டப் பதிவு பற்றி பேச்சு வந்தது. உடனடி பணலாபம் இல்லாவிடினும் வக்கீல்களின் ஜூனியர்கள், உதவி இயக்குனர்கள், மளிகைக் கடைகளில் வேலைக்கு சேருபவர்கள் தங்களது எதிர்கால லாபத்தை கருத்தில் கொண்டுதான் கொத்தடிமை ரேஞ்சுக்கு பணிபுரிகின்றனர் என்ற பதிவின் கருத்து பற்றியும் பேசப்பட்டது. எது எப்படியாயினும் சரவணா ஸ்டோர்ஸ் போன்ற டெக்ஸ்டைல் கடைகளில் வேலை செய்பவர்கள் அவ்வாறெல்லாம் முன்னேற முடியாது என்றும் கூறப்பட்டது.

பல குழுக்களாக மொக்கை போட்டதில் மற்றவ்ர்கள் போட்ட மொக்கைகள் பற்றி கூற இயலவில்லை. நேரமும் எட்டை தாண்டிவிட, என் காரை செல்பேசி மூலம் பேசி வரவழைத்தேன். எல்லோரிடமும் விடை பெற்று சென்றேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆயிரமாவது பதிவு - முத்துராமனுக்காக வேண்டுகோள்

நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரது இந்தப் பதிவை சுட்டுகிறேன்.

அதிலிருந்து சில வரிகள்.

அடுத்து, ஒரு தாழ்மையான வேண்டுகோள்!

முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.

அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

இதுவரை சேகரித்த தொகையின் ஒரு பகுதி, அறுவை சிகிச்சை தள்ளிப் போன காரணத்தால், பரிசோதனைகளுக்கும், டயாலிஸிஸுக்கும் செலவாகி விட்டது. இருந்தும், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கைவசமுள்ளது, நம்பிக்கை அளிக்கிறது. மேலும், இரண்டரை லட்சம் தேவை என்பதாலேயே இந்த வேண்டுகோள்.

எழுத்தாளர் பாராவின் மனம் நெகிழவைக்கும் இவ்விடுகையையும் வாசிக்கவும்.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450
அன்புடன் பாலா - balaji_ammu@yahoo.com

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்குப் பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் இந்தச் செய்தியை வெளியிட்டு அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம்.


அன்புடன்
டோண்டு ராகவன்

இட ஒதுக்கீடு திருநங்கைகளுக்குத்தான் உண்மையாகத் தேவை

பெண்கள் இட ஒதுக்கீடு என்னும் தேவையில்லாத கூத்து என்னும் எனது இப்பதிவுக்கு பின்னூட்டங்கள் வந்த வண்ணம் உள்ளன.

நான் எதிர்பார்த்தது போலவே இந்த இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் பொலிடிகலி கரெக்ட்-ஆக பேசுவதாக எண்ணிக் கொண்டு பேசுகிறார்கள் என்றுதான் எனக்கு படுகிறது முதலில் சட்டத்தை கொண்டு வருவோம் பிறகு பார்ப்போம் என்றெல்லாம் பேசுபவர்கள், அப்படி சரியாக விவாதிக்காது சட்டத்தை கொண்டு வந்து அதன் பின்விளைவுகளை நீக்க முடியாமல பலமுறை அவதி பட்டதை நினைவுகூற மறுக்கின்றனர். என்னமோ இந்த சட்டத்தால் ஏழை எளிய மக்களைச் சேர்ந்த பெண்கள்தான் நன்மை பெறுவார்கள் என்ற மாயக் கற்பனையில் ஆழ்ந்துள்ளனர். அவர்களுக்கு நான் பதில்களை போடுகையில் இப்பின்னூட்டமும் இட்டேன்.

“அது சரி, யாராவது இதில் இட ஒதுக்கீடு பெற வேண்டுமானால் திருநங்கைகள்தான் அதற்கு பொருத்தமானவர்கள். வேறு யாரும் இல்லை. அதை சொல்லிப் பாருங்கள், பெண்களும் அதை எதிர்த்து பொங்கி எழுவார்கள்”

பின்னூட்டத்தை ஒரு வேகத்தில் போட்டு விட்டேன். யோசிக்க, யோசிக்க அதன் தேவையின் உண்மை மனதை அறைகிறது. கழிப்பறைகளில் கூட அவர்களுக்கென தனியாக இல்லை, போகுமிடமெல்லாம் இழிவுபடுத்தப்படுகின்றனர். ஆகவே அவர்களை பார்லிமெண்ட் மெம்பர்கள் ஆக்கினால் அவர்களுக்கு மரியாதை கூடும் அல்லவா? சட்டங்களின் வரைவிலும் அவர்களது தேவைகளும் கவனத்தில் கொள்ளப்படும் அல்லவா.

இந்த யோசனைக்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்க இயலாது என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ராஜ்ய சபாவிலாவது அவர்களுக்கு பிரதிநிதித்துவம் தரலாமே. இப்போதைய சட்டப்படி வாக்காளர் பட்டியல்களில் கூட திருநங்கை என தனிப்பிரிவு இல்லை என்றுதான் நினைக்கிறேன். நிஜமாகவே அப்படித்தான் என்றால் அது எவ்வளவு கேவலம்?

தமிழக அரசு தொட்டில் திட்டம் கைவிடப்படும் பெண்குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்டது. அதே போல திருநங்கைகளுக்கும் திட்டம் வரலாம். அவர்களில் பலர் பிறக்கும்போது இது வெளிப்படையாக தெரியாமல் போய் பிறகுதான் அவர்களது நடத்தையிலிருந்து தெரிய வருகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு ஹாஸ்டல் மாதிரி ஏற்பாடு செய்யலாம். அவர்களது படிப்பு, வேலை ஆகிய விஷயங்களையும் கவனிக்கலாம். இவை எல்லாவற்றிலும் அவர்களது சுயமரியாதைக்கு பங்கம் வராமல் இருப்பது முக்கியம்.

இன்னும் பல விஷயங்களில் இது பற்றி யோசிக்கலாம். ஆனால் இதையெல்லாம் நிறைவேர்றிக் கொள்ள திருநங்கைகளுக்கு அரசியல் அதிகாரமும் தேவை. அதற்குத்தான் பாராளுமன்ற மற்றௌம் சட்டசபை தொகுதிகளுக்கு அவர்களுக்கு நிஜமாகவே இட ஒதுக்கீடு வேண்டும். அது எவ்வளவு என்பதை பேசி தீர்த்து கொல்ளலாம். அவ்வாறு வருபவர்கள் மந்திரி சபையிலும் இடம் பெற வேண்டும்.

இது பற்றி இன்றைய பதிவர் மீட்டிங்கில் பேசலாம் என்றிருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்குறிப்பு: இது எனது இந்த வலைப்பூவின் 999-வது பதிவு. பதிவு எண் ஆயிரம் பிழைத்துக் கிடந்தால் பதிவர் மீட்டிங் பற்றி இருக்கும்.

4/09/2010

பெண்கள் இட ஒதுக்கீடு என்னும் தேவையில்லாத கூத்து

Disclaimer: This is a politically incorrect post.

சில விஷயங்களை செய்யும் முன்னால் அனேகம் முறை யோசிக்க வேண்டியிருக்கும். அவ்வாறு யோசிக்கும்போது எமோஷனல் எண்ணங்களை புறந்தள்ள வேண்டியிருக்கும். ஏனெனில் செய்த பிறகு சரி செய்வது என்பது நடக்காது. அவற்றில் ஒன்று இந்த பெண்களுக்கான இட ஒதுக்கீடு. எப்படி யோசித்தாலும் அதை நியாயப்படுத்த முடியவில்லை.

ஆணோ பெண்ணோ அவரவர் செயல்பாட்டில்தான் அரசியலில் பிரகாசிக்க வேண்டும். பொதுவாக பெண்களுக்கு பல பொறுப்புகள் ஆகவே அவர்கள் பொதுவாக அரசியலில் இறங்கத் தயங்கலாம். அதை புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம் அவை எல்லாவற்றையும் மீறி அவர்கள் அரசியலில் பிரகாசிப்பதும் நடக்கத்தானே செய்கிறது. யாரும் அவர்களை பெண்கள் என்பதற்காக தேர்தலில் நிற்கக்கூடாது எனச் சொல்லவில்லையே? இந்திரா காந்தி, ஜெயலலிதா, சுசேதா கிருபளானி, ராஜாத்தி குஞ்சிதபாதம், ஜோதி வெங்கடாச்சலம், அனந்தநாயகி, கௌரி தாமஸ் என அரசியல் வானவில்லில் பலரும் பல தளங்களிலிருந்து வந்திருக்கிறார்களே. அவர்கள் எல்லாம் இட ஒதுக்கீடு பெற்றா வந்தார்கள்?

விஷயம் என்னவென்றால் எல்லோருக்கும் இது தெரியும். ஆனால் சொல்லத்தான் தைரியம் இருக்காது. அதை பார்ப்பதற்கு முன்னால் இது விஷயமாக பலருக்கு சரியான புரிதல் இருக்கிறதா என்பதை பார்ப்போம். சிலருக்கு அது இல்லை. பெண்கள் இட ஒதுக்கீடு பற்றிய புரிதல்கள் என்னும் எனது பதிவில் நான் இவ்வாறு எழுதியுள்ளேன்.

செல்வராஜ் என்னும் பதிவர் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்பதற்கு கீழ்க்கண்ட வாதங்களை முன்வைக்கிறார்.

“இந்திய அரசியல் சட்டத்தின்படி பெண்கள் எல்லா தொகுதிகளிலுமே போட்டியிட உரிமையுள்ளது. அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளில் பெண்கள் போட்டியிட வாய்ப்பளிக்கபட்டிருக்கும் போது எதற்காக முப்பத்திமூன்று சதவிகிதம் கேட்டு போராட வேண்டும்? இது இருக்கின்ற உரிமையை தானாக கேட்டு குறைபதல்லாமல் வேறென்ன”!

“சிலவேளை இந்த 33 சதவிகிதம் அமலுக்கு வந்தால், நாளைய பெண்கள் சமூகத்திற்கு அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முடியாதபடியாகும். நிச்சயமாக ஒருநாள் பெண்கள் அரசியலையும் ஆக்ரமிப்பார்கள். அதற்கு ஒருவேளை ஐம்பதோ நூறோ வருடங்கள் ஆகலாம். அப்படி வரும்போது. இந்த முப்பதிமூன்று சதவிகிதம் என்பது அவர்களுக்கு பெரிய தடைக்கல்லாக இருக்கும்”.

அவருக்கு நான் இட்ட பின்னூட்டம்:
“பெண்கள் கேட்கும் இட ஒதுக்கீட்டை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. பஸ்களில் லேடீஸ் சீட் என தனியாக இருப்பது போலத்தான். அதாகப்பட்டது 33% தொகுதிகளில் அவர்கள் மட்டும்தான் நிற்க முடியும். அதனால் 67 % ஆண்கள் தொகுதிகளாகி விடாது. அவற்றிலும் பெண்கள் நிற்கலாம், தடை ஏதும் இல்லை.
பஸ்களில் பெண்கள் சீட்டில் ஆண்கள் உட்கார இயலாது, ஆனால் பொது சீட்டுகளிலும் பெண்கள் தாராளமாக உட்காரலாம். ஆண்கள் சீட் என்று ஒன்றும் கிடையாது”.

அவரது பதில்:
“வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராகவன்!
இப்போது 100% சதவிகித தொகுதிகளிலும் போட்டியிட உரிமையுள்ளதே பெண்களுக்கு”.

அப்போ அவரது புரிதலின்படி தலித்துகளுக்கும் மற்றவருக்கும் கூடத்தான் இட ஒதுக்கீடு தேவையில்லை. அட ஆண்டவா?

வேறென்ன செய்வது, பெருமூச்சு விடுவதை விட?


(அப்பதிவுக்கு போய் பார்த்தால் பின்னூட்டங்கள் எல்லாமே நீக்கப்பட்டுள்ளன என்பது வேறு விஷயம்).

சோ அவர்கள் ராஜ்ய சபாவில் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசிய ஒரே உறுப்பினர். மீதி எல்லோருமே ஆதரித்தார்களாம். ஆனால் பின்னால் என்ன நடந்ததென்றால் நீங்க கட்சி சார்பற்று இருக்கீங்க, நீங்க பேசிட்டீங்க, ஆனா நாங்க பேசமுடியல்லியே என கல்யாண பரிசு தங்கவேலு ரேஞ்சுக்கு அலுத்துக் கொண்டார்களாம்.

இவ்வளவு ஆண்டுகள் இது தொங்கலில் இருப்பதிலிருந்தே இதை புரிந்து கொள்ள முடிகிறது. வெளிப்படையாக எதிர்க்க முடியாதவர்கள் உள் ஒதுக்கீடு எல்லாம் கேட்கின்றனர். இதை ஆதரிக்கும் எந்தக் கட்சியுமே தங்கள் வேட்பாளர்களில் 33% பெண்களாக இருக்கும்படி கூட இதுவரை செய்யவில்லையே, அதிலிருந்தே இதற்கு மனப்பூர்வமான ஆதரவு இல்லையென்று தெரியவில்லையா?

ஆனால் இந்த எதிர்ப்பை ஒத்துக் கொள்ளத்தான் முடியவில்லை. ஒரு வேட்பாளராக இப்போதெல்லாம் எல்லோராலும் வர முடியாது. பல காரணிகள் ஆதரவாக இருந்தால்தான் வேட்பாளராகவே வரவியலும். அவர்றில் முக்கியமானது பணபலம். அப்படி பலத்துடன் வரும் வேட்பாளர் பெண்ணாக இருந்தால் அவரே தனது பலத்தில் வர வேண்டியதுதான். இட ஒதுக்கீடு எதற்கு? இந்த நியாயம் எல்லோருக்குமே தெரிந்தாலும் ஒத்துக் கொண்டால் தங்களை பெண்ணீயத்துக்கு விரோதிகள் என முத்திரை குத்தி விடுவார்களோ என்றுதான் கட்சிகள் பயப்படுகின்றன. இம்மாதிரி தற்காலிக சங்கடங்களை எதிர் நோக்க பயந்து மசோதாவை நிறைவேற்றினால் இதனால் கெடுதல்கள்தான் அதிகம் விளையும். அரசியல்வாதிகள் பெண்களை தங்கள் பினாமிகளாக வைத்துக் கொள்வதுதான் நடக்கும். அதுதான் பஞ்சாயத்துகளிலேயே பார்க்கிறோமே. பஞ்சாயத்து தலைவியின் கணவர்தானே மீட்டிங்குகளை நடத்துகிறார் பல இடங்களில்!

அன்புடன்,
டோண்டு ராகவன்

கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி

ஸ்டாலின் அழகிரி விவகாரம்


மேலே உள்ள கார்ட்டூன் 14.04.2010 தேதியிட்டு ஏழாம் தேதிக்கே கடைகளுக்கு வந்து விட்ட துக்ளக் பத்திரிகையின் அட்டைப்பட கார்ட்டூன். அதில் விஷயம் இருப்பது போலத்தான் எனக்கு படுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா, இந்திரா காந்தி ஆகியோரிடம் ஒரு பொதுத் தன்மை உண்டு. கட்சியை விட தாங்கள் பெரியவர்கள் என்ற எண்ணம்தான் அது. தனது கட்சியின் அடுத்த மட்டத் தலைவர்களுக்கிடையே தேவைக்கதிகமின்றி ஒற்றுமை வந்து விடாமல் பார்த்துக் கொள்வது அவர்களுக்கு முக்கியம். மகாபாரதத்தில் கூறப்படும் கணிக நீதியை ஏறக்குறைய மாற்றமேயின்றி அப்படியே பாவிப்பவ்ரகள் அவர்கள். அந்த நீதியின் சில அம்சங்கள் இதோ.

தண்டனை வழங்க எப்போதும் தயாராக இருக்கும் அரசனைக் கண்டு குடிமக்கள் அஞ்சுவார்கள். அதே போல எதிரிகளை ஒழிப்பதில் தாட்சண்யமேயின்றி நடந்து கொள்ள வேண்டும். எதிரி முழுமையாக அழிக்கப்படவேண்டும். எதிரி மிக பலவானாக இருந்தால் சமயம் பார்த்து அவனை கொல்ல வேண்டும். அதற்கு சாம, தான, பேத, தண்ட முறைகளை முறையாக பிரயோகிக்க வேண்டும். அம்முறையில் எதிரியை அழித்த பிறகு, அவர்கள் சாவுக்கு வருந்துவது போன்ற பாவனை செய்ய வேண்டும். அம்மாதிரி செய்தால் எதிரியின் நண்பர்கள் இவன் பக்கமே இருந்து விடுவார்கள். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் எதிரிகள் என்பது உறவினர்களையும் சேர்த்து, உள் எதிரிகளையும் குறிக்கும். ஆக மனிதாபிமானம் என்பதை சுத்தமாக கண்பித்தலே கூடாது. இந்த ரீதியிலேயே இந்த கணிக நீதி கூறிக்கொண்டு செல்கிறது.

மேலோட்டமாக பார்க்கும்போது இவை அக்கிரமமாகத் தோன்றினாலும் பல நேரங்களில் அவை இன்றியமையானவை கூட. அதே கணிக நீதியானது சம்பந்தப்பட்ட அரசன் பிரஜைகளின் நலனுக்கு எந்த கெடுதலும் செய்யக்கூடாது என்பதிலும் தெளிவாக உள்ளது. மேலே சொன்ன செயல்பாடுகள் அரசவையில் உள்ளவர்களது பவர் பாலிடிக்ஸை கையாளத்தான் பயன்படுதல் வேண்டும்.

ஆனால் நம்மூர் தலைவர்கள் கணிகநீதியை பாவிக்கும்போது கொடுக்கும் முதல் காவு நாட்டின் நலனே. அந்த விஷயத்தில் கணிக நீதியையும் சரியாக செயல்படுத்தவில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது.

இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவியானதும் செய்த முதல் காரியம் மாநிலங்களில் உள்ள உள்ளூர் தலைவர்களின் செல்வாக்கை அழித்ததே. முதல் இலக்கு காமராஜ்தான். அவரிடமிருந்து ஆரம்பித்து பல உள்ளூர் தலைவர்கள் செல்லாக்காசாக்கப்பட்டனர். இப்போது நிலைமை என்னவென்றால் எல்லாவற்றுக்கும் காங்கிரஸ்காரர்கள் டில்லியின் ஆணைக்கு காத்திருக்க வேண்டியிருக்கிறது.

இப்போது அழகிரி ஸ்டாலின் விவகாரத்தை கருணாநிதி எவ்வாறு கையாளுகிறார் என்பதை பார்ப்போம். அவரது பிரச்சினைகளுக்கு மூலகாரணமே அவரிடம் குவிந்த அபரிதமான செல்வமும் அரசியல் அதிகாரமும். கூடவே எல்லாவற்றையும் தனது வாரிசுகளுக்கே விட்டுச் செல்லவேண்டும் என்ற பேராசை வேறு. இதில் கட்சி நலன் என்பது கவனிக்கப்படவே இல்லை. ஆனால் அதே சமயம் தான் செயலாக இருக்கும்போதே அவற்றை வாரிசுகளுக்கு பங்கீடு செய்யவும் மனமில்லை. ஒரு பெண்டுலம் ரேஞ்சில் அவரது எண்ணங்கள் செல்கின்றன என நினைக்கிறேன். கணிக நீதியை அவர் வாரிசுகளுக்கிடையேயும் பிரயோகிக்க ஆரம்பித்துவிட்டது போலத்தான் தோற்றம் வருகிறது.

மேலே குறிப்பிட்ட துக்ளக் இதழில் ஒரு கேள்வி பதிலைப் பார்க்கலாம்.

கேள்வி: “நீங்கள் எல்லாம் ஸ்டாலினை துணைமுதல்வர் என பாராட்டுகிறீர்கள். ஆனால் எனக்குத் துணையாக இருக்கின்ற அமைச்சர் என்றுதான் கருதுகிறேன்” - என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது பற்றி?

பதில்: அவர் இப்படியெல்லாம் மாற்றி மாற்றிப் பேசினால் என்னதான் செய்வது? இவரேதான் ஸ்டாலினை “துணை முதல்வர்” என அறிவித்தார். இவரேதான் இப்போது இப்படிப் பேசுகிறார்! வெற்றிகளைப் பெற்று வருகிற கட்சி என்பதால், தன்னைக் கேட்பார் இல்லை என்பது அவருக்குத் தெரிகிறது. இஷ்டத்திற்குப் பேசுகிறார். பத்திரிகைகள் பாராட்டுகின்றன.


அதே சமயம், எல்லா சொத்துக்களையும் வாரிசுகளுக்கு எழுதித் தந்துவிட்டு பிறகு சந்தியில் நின்றவர்கள் அனேகம். உதாரணத்துக்கு விசுவின் பல படங்கள் அதை தெளிவாகக் காட்டுகின்றன. அவற்றையெல்லாம் இவர் பார்த்திருக்க வேண்டும் அல்லது இவரே பல நிகழ்ச்சிகளை அந்த ரேஞ்சில் பார்த்திருக்க வேண்டும். சினிமா கதாசிரியர் அல்லவா, பார்க்காமலா இருந்திருப்பார்? நானே கூட இதையும் ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேனே.

சிலசமயம் இப்படி கூட சிந்தனைகள் போகலாம். “நான் இருக்கும்வரை அனுபவித்துவிட்டு போகிறேன். இருக்கவே இருக்கின்றன மானாட மயிலாட நிகழ்ச்சிகள், பாராட்டு விழாக்கள், விருதுகள் வாங்குதல்/அளித்தல். என் காலம் முடிந்த பிறகு என்ன ஆனாலும் அது என்னை பாதிக்கவா போகிறது”?

ஆனால் அவரது சிந்தனைகளின் விளைவுகள் குழப்பத்தையே ஏற்படுத்தும். ஏற்கனவேயே ஜெயலலிதா இம்மாதிரி சகட்டுமேனிக்கு கணிக நீதியை பாவித்ததால் அதிமுக கிட்டத்தட்ட அழும் ரேஞ்சுக்கு வந்து விட்டது. இப்போது திமுகவின் முறை என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இரண்டுமே தற்காலத்தில் தமிழகத்தின் முக்கியக் கட்சிகள். மாற்று என எக்கட்சியை பார்ப்பது? கண்டிப்பாக மதிமுகாவோ, பாமகாவோ அல்லது விஜயகாந்தின் கட்சியோ இல்லை. பாஜகா ஏற்கனவேயே தமிழகத்தில் பூட்ட கேஸ். காங்கிரசுக்கோ எதிரிகள் கட்சியின் உள்ளேயே இருக்கின்றனர்.

இப்போது கூட கருணாநிதி சுதாரித்துக் கொள்ளாவிட்டால் அவருக்கு பிறகு கட்சி நிச்சயம் உடைய வாய்ப்புகள் அதிகமே. ஆனால் செய்வாரா?

அன்புடன்,
டோண்டு ராகவ
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது