Showing posts with label நேரு குடும்பம். Show all posts
Showing posts with label நேரு குடும்பம். Show all posts

5/13/2007

ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 6

4. 1971 மார்ச் முதல் 1975 ஜூன் வரை (அவசர நிலை பிரகடனம்)

நான் ஏற்கனவே கூறியபடி இந்த தேர்தலில் காங்கிரசுக்கு அதுவரை கிடைக்காத வெற்றி கிடைத்தது. தமிழகத்தில் முதல் முறையாக ஒரு மனமாச்சரியமும் இன்றி ராஜாஜி அவர்களும் காமராஜ் அவர்களும் ஒரே அணியில் நின்றனர். அவர்களுக்கு படுதோல்வி. இந்திரா காங்கிரசுக்கு தமிழகத்திலிருந்து நிறைய எம்.பி.க்கள் கிடைத்தனர். அசெம்பிளி தேர்தலில் ஒரு சீட்டிலும் நிற்கக் கூட வாய்ப்பு தரவில்லை கருணாநிதி அவர்கள். ஆக காங்கிரசுக்கும் நீண்ட காலத் திட்டத்தில் ஒரு பின்னடைவே. அதற்கு பிறகு இன்று வரை காங்கிரஸ் சிந்துபாத் கதையில் வரும் கிழவன் போல திமுக அல்லது அல்லது அதிமுகவின் முதுகிலேயே சவாரி செய்து வந்து கொண்டிருக்கிறது. ஒரு சிறு செய்தி இப்போதைக்கு. ரே பரேலியில் இந்திராவிடம் தோல்வியுற்ற ராஜ் நாராயண் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அது பற்றி அப்புறம்.

இங்கு ஒரு சிறு டைவர்ஷன். இதே சமயத்தில்தான் சோ அவர்கள் இயக்கி தயாரித்த முகம்மது பின் துக்ளக் படமும் வந்தது. அதில் துக்ளக் அடித்த கூத்துக்கள் பலரால் வெறும் மிகைபடுத்தப்பட்ட கற்பனையாகவே மக்களால் பார்க்கப்பட்டன. ஆனால் இப்பதிவின் காலக் கட்டத்திலேயே இந்திரா அவர்கள் துக்ளக் மாதிரி உருவாகும் எல்லா சாத்தியக் கூறுகளும் தெரிய ஆரம்பித்து விட்டன. அடுத்தப் பதிவில் அவசர நிலை பற்றி எழுதும்போது இன்னும் விரிவாக எழுதுவேன். இதில் என்ன விசேஷம் என்றால், அப்படம் வந்து 36 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை இப்போது பார்த்தாலும் காலத்துக்கு பொருத்தமானதாகவே இருப்பதுதான். ஏனெனில் மனித இயல்புகள் ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாக ஒருபோலத்தான் இருந்து வந்திருக்கின்றன.

1971 மார்ச்சிலேயே வங்கதேசப் பிரச்சினை ஆரம்பமாகி விட்டது. அதற்கு சற்று முன்புதான் (1970) பாக்கிஸ்தான் பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருந்தது. அப்போது கிழக்கு பாக்கிஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்த வங்க தேசத்தில் ஷேக் முஜிபூர் கட்சியான அவாமி லீகுக்கும் மேற்கு பாகிஸ்தானில் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் அதிக சீட்டுகள் கிடைத்தன. இருப்பினும் வங்க தேச எம்பிக்கள் முழுமையான பாகிஸ்தானில் பெரும்பான்மை பெற்றிருந்ததால் முஜிபூர்தான் பிரதமராகியிருந்திருக்க வேண்டும். ஆனால் பஞ்சாபியர் டாமினேட் செய்த பாக்கிஸ்தானுக்கு ஒரு வங்க தேசத்தவர் பிரதமராக வருவது அவர்களால் சகிக்க முடியாமல் இருந்தது.

ஆகவே மேற்கு பாகிஸ்தானியர் முஜிபூர் ரஹ்மானின் கட்சி பதவி ஏற்க முடியாதபடி அழுகினி ஆட்டம் ஆடினர். யாஹ்யா கான் முஜிபுரை மார்ச் 25, 1971-ல் கைது செய்து மேற்கு பாக்கிஸ்தானுக்கு கொண்டு சென்றார். அதற்கு அடுத்த நாளிலிருந்து கிழக்கு பாக்கிஸ்தானில் அகோர அடக்குமுறை ஆரம்பமாயிற்று. கிழக்கு பாகிஸ்தானின் கசாப்புக்காரன் என்று பெயர் பெற்ற டிக்கா கானின் அட்டூழியம் கொடி கட்டி பிறந்தது. மதத்தால் மட்டும் நாட்டை ஒன்றாக வைக்க முடியாது என்பது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப் பட்டது. இந்தியாவிலிருந்து இசுலாமியர் பாகிஸ்தானை பிரித்து சென்று 1947-48-ல் நடந்த கலவரங்கள் எல்லாமே தவிக்கப்பட்டிருக்கக் கூடியவை என்பதும் நிரூபணமாயிற்று. வெவ்வேறு நாடுகளில் இருந்த பாகிஸ்தான் தூதரகங்களிலிருந்து கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த அதிகாரிகள் சாரி சாரியாக வெளியேறி இந்தியத் தூதரகங்களில் அடைக்கலம் புகுந்தனர். பாகிஸ்தான் மானம் கப்பலேறியது. நாட்டைப் பிரிவினை செய்த இரு தேசக் கோட்பாடு அடிப்படையிலேயே தவறு என்று அப்போது அவர்களில் பலர் கூறினர்.

இசுலாமியரே இசுலாமியரைக் கொன்ற கூத்தும் நடைபெற்றது. இந்தியாவோ சுமார் 100-120 லட்சம் அகதிகள் வருகையால் மூச்சு திணறியது. இந்த தருணத்தில் இந்திரா அவர்கள் திறமையாகச் செயல்பட்டதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். யாஹ்யா கான் திமிருடன் வெளி நாட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தன் இந்திராவை நேரில் பார்த்தால், "வாயை மூடு பொட்டச்சி. எங்க அகதிகளை திருப்பி அனுப்பு" (shut up woman, and let my refugees return) என்று கூறப்போவதாகக் கூறினார். இதைவிட ஒருவர் ஆணாதிக்கத்துடன் பேசியிருந்திருக்க முடியாது. ஆனால் அதே திமிர் பிடித்த ஆண் இந்த வலிமையான பெண்மணியிடம் மண்டியிட நேர்ந்தது.

டிசம்பர் 4 அன்று ஆரம்பித்த யுத்தம், கிழக்கு பாகிஸ்தானில் 16-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. கிழக்கு பாகிஸ்தானின் இராணுவத் தலைவர் ஜெனெரல் நியாஜி இந்திய ராணுவத் தலைவர் அரோராவிடம் சரணடைந்தார். பாக்கிஸ்தானின் சுமார் 93000 துருப்புகள் இந்தியரிடம் போர் கைதியாக மாட்டிக் கொண்டனர். இப்போது இந்திரா காந்தி புத்திசாலித்தனமான காரியம் செய்தார். ஒரு தலைப் பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்தார். பாக்கிஸ்தான் மிகுந்த மனகிலேசத்திலும் அவமானத்திலும் இருந்தது. அதற்கு மேலே யுத்தம் செய்யும் தைரியம் இல்லை. ஆகவே போர் நிறுத்தம் கடைசியில் அமுலுக்கு வந்தது. அப்போதைய ஜெர்மானிய பத்திரிகையான Der Spiegel Niederlage gegen Indien (இந்தியாவிடம் படுதோல்வி) என்ற தலைப்பில் ஒரு இஷ்யூவே போட்டது.

ஷேக் முஜிபுர் ரஹ்மான் மேற்கு பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வங்க தேசம் இந்தியா வழியாக சென்றார். ஆக, வங்க தேசம் உருவாவதில் இந்தியாவின், முக்கியமாக இந்திராவின், பங்கு ஒரு சரித்திர உண்மை. இந்தியாவைப் பொருத்தவரை 1962-ல் சீனாவிடம் தோல்வி, 1965-ல் பாகிஸ்தானுடன் ஒரு மாதிரி குழப்பமான சண்டை. அதற்கு பிறகு முதன் முறையாக சந்தேகத்துக்கிடமேயில்லாத ஒரு வெற்றி. அப்போது இந்திரா அவர்கள் புகழ் உச்சியில் இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பேயீ அவர்கள் இந்திராவை துர்க்கா என்றார்.

ஜூலை 1972-ல் சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அது பற்றி விக்கிபீடியாவில் பார்க்கலாம். ஆனால் அக்காலக் கட்டத்தில் குமுதத்தில் வந்த ஒரு செய்தித் துணுக்கை இங்கே கூறுவேன். புட்டோவுடன் அவர் தூதுக் குழுவில் ஆகா ஷஹி (அல்லது இலாஹி?) என்ற ஒரு மந்திரி வந்தார். வந்தவர் சும்மா இல்லாமல் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. ராமமூர்த்தியைப் பார்க்க ஆவல் தெரிவித்திருக்கிறார். ராமமூர்த்திக்கோ ஒரேதிகைப்பு. இருந்தாலும் போய்ப் பார்த்திருக்கிறார். அந்த மந்திரிக்கு முகமன் கூறி ஹிந்தியில் பேச ஆரம்பித்து இருக்கிறார். (நம்ம தேசத்தவர் ஹிந்தி பேசினால் உருது பேசும் பாக்கிஸ்தானியர் எளிதில் புரிந்து கொள்வர். உருதுக்கும் ஹிந்திக்கும் அவ்வளவு ஒற்றுமை). அந்த மந்திரியோ ஹாஹாஹா என்று சிரித்து விட்டு, "என்ன சார் தமிழ் பேசணும்னு ஆசைப்பட்டு உங்களைக் கூப்பிட்டா, நீங்க ஹிந்தீலே பேசறீங்களே என்று ஸ்பஷ்டமானத் தமிழில் கூறினார். ராமமூர்த்திக்கு மூச்சே நின்று விட்டது. பிறகுதான் தெரிந்தது அவர் பிரிவினைக்கு முன்னால் திருவல்லிக்கேணியில் அக்பர் சாஹேப் தெருவில் குடியிருந்தார் என்று.

1971 முடிவில் இந்திரா அவர்கள் பாப்புலாரிட்டியின் உச்சத்தில் இருந்தார். ஆனால் அதன் பிறகு மெதுவாக அவரது புகழ் மங்க ஆரம்பித்தது. 1973 மற்றும் 74-ல் பணவீக்கம் தலைவிரித்தாடியது. மக்கள் சுதந்திரங்களில் கைவைக்கு வகையில் பல அரசியல் சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த நேரத்தில்தான் இந்திராவின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி அரசியலில் பங்கெடுக்க ஆரம்பித்தார். பதவி அதனால் வரும் பொறுப்பு ஒன்றுமில்லாமல் தான்தோன்றித்தனமாக நடக்க ஆரம்பித்தார். இந்திரா காந்தியே அவரைப் பார்த்து நடுங்கியதாகவும் கூறுவர்.

தமிழகத்தைப் பொருத்தவரை எம்ஜீஆர் திமுகாவிலிருந்து வெளியேற்றப்பட்டதால் அதிமுக உருவானது. அக்கட்சி முதன்முறையாகப் போட்டியிட்ட திண்டுக்கல் இடைதேர்தலில் அவர் கட்சி அமோக வெற்றி பெற்றது. காமராஜரின் பழைய காங்கிரஸ் இரண்டாம் இடத்திலும், திமுக மூன்றாம் இடத்திலும் இந்திரா காங்கிரஸ் நான்காம் இடத்திலும் இருந்தன. காமராஜ் தனது கட்சிப்பணிகளை செய்து வந்தாலும் பழைய உற்சாகம் எதுவில்லை. ராஜாஜி 1972 மற்றும் அவரது உயிர்த் தோழர் பெரியார் சரியாக ஓராண்டு கழித்து 1973லும் மறைந்தனர்.

1972 ம்யூனிக் ஒலிம்பிக்கில் இஸ்ரேலிய தடகள வீரர்கள் பாலஸ்தீனிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். அப்போது மௌனம் காத்த இந்தியா, இஸ்ரேலியர் எதிர் நடவடிக்கை எடுத்த போது மட்டும் கண்டித்தது. இம்மாதிரி வெளியுறவு விவகாரங்களில் பல சொதப்பல்கள் அவை பாட்டுக்கு நிகழ்ந்தன.

நாட்கள் சென்றன. நான் முதலில் குறிப்பிட்டிருந்த இந்திரா காந்தியின் தேர்தல் வழக்கு அது பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தது. 1975 ஜூன் மாதத்தில் இடி போன்ற தீர்ப்பு வந்தது. இந்திரா காந்தியின் தேர்வு ரத்து செய்யப்பட்டு ராஜ் நாராயண் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் அடுத்த 6 ஆண்டுகள் இந்திரா அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் நிற்க முடியாத நிலையும் ஏற்பட்டது. அதே காலக் கட்டத்தில் திமுகாவும் இந்திரா காங்கிரஸும் கருத்து வேறுபாடுகளால் ஒன்றை விட்டு இன்னொன்று தூரச் சென்றது. கருணாநிதியை ஊழல் ராஜா என்று இந்திரா வர்ணிக்க, அப்போது ஊழல் ராணி யார் என்று அவர் எதிர்க் கேள்வி கேட்டார். தமிழக அரசு கொண்டு வந்த விதவைகள் மறுவாழ்வுத் திட்டத்தில் இந்திரா காந்தி வேண்டுமானால் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. ஆக இரு கட்சிகளுக்குமிடையில் பூசல்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தன. மத்திய அரசை தாக்கி எழுதும் பத்திரிகைகளின் கைகள் கட்டப்பட்டன. அதே சமயம் தமிழக அரசைத் தாக்குபவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர்.

இந்த இடத்தில் நம்ம சோ ஒரு காரியம் செய்தார். எப்போது மத்திய அரசை எதிர்க்க முடியாமல் போயிற்றோ மானில அரசையும் தான் விமரிசனம் செய்யப்போவதில்லை என்று துக்ளக்கில் கொட்டை எழுத்தில் அறிவித்தார். அதனை நிகழ்ச்சிகளும் ஜூன் 12 முதல் ஜூன் 25 வரையிலானக் காலக்கட்டத்தில் ஏற்பட்டது.

ஜூன் 25-க்கு பிறகு நடந்தவற்றை அடுத்தப் பதிவில் காண்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/22/2007

ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 5

இப்பதிவின் ஐந்தாம் பாகத்துக்கு செல்லும் முன்னால் ஒரு சிறு டைவர்ஷன். நேருவின் திருமகள் இந்திரா காந்தி அவர்களின் லெகசியை இப்போதெல்லாம் இந்திய அரசு குடும்ப திருச்செல்வர் ராகுல் காந்தி நன்றாகவே உணர்த்தி வருகிறார். எப்படி? இசுலாமிய செண்டிமெண்டை வைத்து நாட்டைத் துண்டாடியவர்களுக்கு செருப்படி கொடுப்பது போல பாக்கிஸ்தானை இரண்டாக பிளந்தது தன் பாட்டி என்று பெருமிதப்பட்டு பாக்கிஸ்தான் மற்றும் பங்களா தேஷுடனான நமது உறவை ஓகோ என்ற லெவலுக்கு உயர்த்தியச் செம்மல் இவரே. அவர்தான் நம் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாம். எங்கு அடித்து கொள்வது? சரி அதை சரியான தருணத்தில் கவனிப்போம். இப்போது நமது வரிசைக்கு செல்வோம்.

1969-மே மாதத்திலிருந்து 1971 மார்ச் வரை

மே மாதம் 3-ஆம் தேதி 1969-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் அவர்கள் மறைந்தார். இந்தச் சம்பவம் இந்திய சரித்திரத்தில் ஒரு மைல்கல் என்றால் மிகையாகாது. இவருக்கு அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் செயலில்தான் காங்கிரசின் உட்கட்சிப் பூசல் வெளிச்சத்துக்கு வந்தது. இந்திரா காந்திக்கு சஞ்சீவரெட்டி குடியரசுத் தலைவராவதில் விருப்பம் இல்லை. ஆனால் மற்ற தலைவர்கள் பெங்களூரில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பெரும்பானமை பலத்தில் சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக தேர்ந்தெடுத்தனர். அவர் பெயரை இந்திரா காந்தியே பிறகு முன்மொழிய வேண்டியதாயிற்று.

இது இந்திரா அவர்கள் மனதை மிகவும் உறுத்தியிருந்திருக்கிறது. தற்காலிக ஜனாதிபதியாக இருந்த துணை ஜனாதிபதி வி.வி. கிரி அவர்களும் தானே ஜனாதிபதியாகலாம் என்ற தனது எண்ணத்தில் மண் விழுந்தது கண்டு மனம் புழுங்கினார். ஆகவே அவர் சுயேச்சையாக தேர்தலுக்கு நின்றார். கிரியை ஆதரிக்க முடிவு செய்தார் இந்திரா காந்தி. அது பற்றி பிறகு.

காமராஜ் அவர்களும் ஒதுக்கப்பட்டார். இப்போது மெதுவாக இந்திரா தனது அரசியல் நகர்வுகலை நிகழ்த்தத் துவங்கினார். அப்போதுதான் மன்னர்களின் மான்யத்தில் கை வைத்தார். ஒரேயடியாக அவற்றை ஒழித்தார். ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பல சுதேசி மன்னர்கள் தத்தம் ராஜ்ஜியங்களில் அதிகாரத்தில் இருந்தனர். அவர்கள் பிரிட்டிஷாரின் செல்லப் பிள்ளைகள். சுதந்திரம் வந்த சமயத்தில் பிரிட்டன் அம்மன்னர்களுடன் தான் போட்ட ஒப்பந்தங்களை ஒரு தலை பட்சமாக செல்லாக்காசாக்கி விட்டு பாக்கிஸ்தானுடனோ அல்லது இந்தியாவுடனோ சேருங்கள் அல்லது முடிந்தால் தனியாக இருந்து கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு பைய நழுவி விட்டது. பிறகு படேல் அவர்கள் பாடுபட்டு 600க்கும் மேலான சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கச் செய்தார். நேரு தன்னால் ஆன உதவியாக காஷ்மீர் விஷயத்தை சொதப்பி இன்னும் அது நமக்கு தலைவலியாக இருந்து வருவதை நான் முதல் பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

படேல் அவர்கள் மன்னர்களுக்கு மானியம், அந்தஸ்து எல்லாம் தர ஏற்பாடு செய்து, இந்தியாவில் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட செய்தார். அந்த மானியங்களும் மன்னர்களது ஒவ்வொரு தலைமுறையும் வயதுக்கு வரும்போது குறையும் அளவிதான் கணிக்கப்பட்டிருந்தது. ஆக, தானாகவே மறைந்திருக்க வேண்டிய இதை இந்திரா அவர்கள் திடீரென வெட்டினார். இதனால் அரசுக்கு மிச்சம் ஆனது என்று ரொம்பவெல்லாம் இல்லை. இந்தியாவின் வாக்கு நம்பிக்கையுரியதல்ல என்ற அவப்பெயர்தான் மிச்சம். இதை அவர் செய்ததும் அரசியல் காரணமே. ஏனெனின்ல் மன்னர்கள் அரசியலில் ஈடுபட்டு தமது தனி பலத்தில் பாராளுமன்ற மெம்பர்கள் எல்லாம் ஆனார்கள். சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஜயப்பூர் மகாராணை காயத்ரி தேவி 1962 தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற பத்து வேட்பாளர்களையும் டிபாசிட் இழக்கச் செய்தார். அதில் காங்கிரஸ் வேட்பாளரும் அடக்கம். ஒரிஸ்ஸாவிலோ மன்னர்களை உறுப்பினராகக் கொண்ட சிங் தியோவின் சுதந்திரக் கட்சி ஆட்சியையே கைபற்றியது.

ஆகவே மன்னர்களை மட்டம் தட்டவே அதை இந்திரா செய்தார். அதுவும் உச்ச நீதிமன்றத்தால் செல்லாதென அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசியல் சட்டத் திருத்த பிரேரணை ஒரெ ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது. அந்த ஒரு ஓட்டு லட்சிய நடிகர் என அழைக்கப்படும் நமது எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களுடையது (பூம்புகார், காக்கும் கரங்கள், அவன் பித்தனா ஆகிய படங்களில் நடித்தவர்). பாவம் மனிதர் வயிற்றுக் கடுப்பில் பாத்ரூம் சென்று திரும்புவதற்குள் பார்லிமெண்ட் கதவை சாத்தி விட்டார்களாம். Very costly stomach disorder indeed!

பிறகு ஏதோ படாத பாடுபட்டு அதை நிறைவேற்றினார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு காரியம் வங்கிகளை அரசுடைமையாக்கியது. அதற்கு ஆறு நாள் முன்னால் உதவிப் பிரதமர் மொரார்ஜி தேசாயிடமிருந்து ஒருதலை பட்சமாக நிதித் துறையை பறித்து கொள்ள, அவர் உடனடியாக உதவிப் பிரதமர் பதவியையும், மந்திரி பதவியையும் ராஜினாமா செய்தார். ஜூலை 21-ஆம் தேதி 1969-ஆம் ஆண்டு வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன.

வங்கிகள் நாட்டுடைமையாக்கியதையும் உச்ச நீதி மன்றம் நிராகரித்தது. அதற்காக மறுபடியும் அரசியல் சட்டத் திருத்தம் எல்லா கொண்டு வர வேண்டியிருந்தது. பல அரசு வங்கிகள் காங்கிரசுக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் கடன், வேலை எல்லாம் தரும் சத்திரங்களாகப் போயின. ஜனார்த்தன் பூஜாரி என்ற மகானுபாவர் இல்லாத சாமியாட்டம் எல்லாம் ஆடினார். என்ன செய்வது நாட்டின் தலைவிதி இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல் பட்டவர்களால் பாதிக்கப்பட வேண்டுமென்று. இந்தத் தருணத்தில் நம்ம ஜோசஃப் சார் இட்ட இப்பதிவையும் அதற்கு அடுத்தப் பதிவையும் பார்த்து விடுங்கள்.

இதிலெல்லாம் சங்கடங்களை சந்தித்த இந்திரா காந்தி அவர்கள் ஒரேயடியாக தனது அரசியல் எதிரிகளையெல்லாம் கட்சியிலிருந்து ஓரம் கட்ட நினைத்தார். அதற்கு அவர் எடுத்து கொண்ட அஸ்திரம் சுயேச்சையாக குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நின்ற வி.வி. கிரிக்கு ஆதரவளிக்க எடுத்த முடிவு. தானே முன்மொழிந்து கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக சஞ்சீவ ரெட்டியை நிறுத்திய இந்திராவே தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தத்தம் மனசாட்சியின்படி ஓட்டளிக்க சொன்னார். நிகழ்கால அரசியலில் இதற்கு முன்னால் நடக்காத நிகழ்ச்சி அது. காங்கிரஸ் கட்சியே இரண்டாகப் பிளந்தது. ஸ்தாபன காங்கிரஸ், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்று இரண்டானது. இரண்டாவதின் தலைவராக இந்திரா விளங்கினார். வெவ்வேறு துறையில் வேலை செய்த எளிய மக்களை வாடகைக்கு எடுத்த லாரிகளில் வரவழைத்து, பிரியாணி அளித்து தனது இல்லத்துக்கு முன்னால் தனக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் செய்ய வைத்தார். இச்செயல் முறை பிற்காலத்தில் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளாலும் வெவ்வேறு சமயங்களில் இன்னமும் நடத்தப்படுவதும் இந்திரா அவ்ர்களின் லெகசிதான் என்பதைக் கூறவும் வேண்டுமா? திடீரென 1971-ல் ஒரு ஆண்டுக்கு முன்னாலே பாராளுமன்ற தேர்தலுக்கு வழி செய்தார். இந்திராவின் தயவில் பதவிக்கு வந்த கிரி அவர்கள் இம்மென்றால் பத்து கையெழுத்துகள் போடவும் தயாராக இருந்தார். ரப்பர் ஸ்டாம்ப் என்ற செல்லப் பெயருக்கும் பாத்திரமானார்.

அதே சமயம் அவருடன் கூட்டு வைத்துக் கொண்டிருந்த தி.மு.க.வும் அதே மாதிரி சட்ட சபை தேர்தல் நடத்தும்படி பரிந்துரை செய்தது. இப்போது நடந்ததுதான் வேதனை தரும் செயல். சட்டசபை தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு ஒரு சீட்டு கூட இல்லை. பாராளுமன்ற தேர்தலுக்கான சீட்டுகளிலேயே இந்திரா குறியாக இருந்தார். இதற்கு பிறகு காங்கிரசோ மற்ற தேசீய கட்சிகளோ தமிழகத்தை பொருத்தவரை செல்லாக் காசாகவே போயின. இதற்கு முக்கியக் காரணமே இந்திராவின் அப்போதைய சுயநல அடிப்படையில் எடுத்த முடிவுகளே. ஆக, இந்த லெகசியும் தமிழ்நாட்டை பொருத்தவரை இந்திராவுடையதுதான்.

1971-ல் இந்திரா காந்தி பெற்றது அமோக வெற்றி. நேரு அவர்களின் காலத்தில் கூட இவ்வளவு பெரிய வெற்றியில்லை என்றுதான் கூறிட வேண்டும். இந்திராவால் காங்கிரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால் அதனால் இந்திராவின் செயல்பாடுகளில் முரட்டுத்தனம் ஏற்பட்டு அது அவருக்கே தீங்காக முடிந்தது பற்றி வரும் பதிவுகளில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/17/2007

ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 4

2. 1967 மார்ச் முதல் 1969ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் மறைந்த வரைக்கும்

இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்து சந்தித்த முதல் தேர்தல் 1967-ல்.
லோக் சபாவை பொருத்தவகையில் காங்கிரசுக்கு 40.78% ஓட்டுடன் 283 சீட்டுகள் கிடைத்தன.

இந்த ரிசல்டை முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிட்டால்,
1962-ல் பெற்ற ரிசல்ட் 44.72%, 361 சீட்டுகள்.
1957-ல் பெற்ற ரிசல்ட் 47.78%, 371 சீட்டுகள்
1952-ல் பெற்ற ரிசல்ட் 44.99%, 364 சீட்டுகள்.

ஆக, முதல் முறையாக, 300-க்கும் குறைவான சீட். ஓட்டுக்கள் எண்ணப்படும்போது காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைப்பதே சற்று சந்தேகமாகக் காணப்பட்டது. ராஜாஜி அவர்களின் சுதந்திரக் கட்சியின் ஆதரவை கேட்கலாம் என்ற ஹேஷ்ய செய்திகளும் வெளியாயின. ஆனால் கடைசியில் காங்கிரசுக்கு மெஜாரிடி கிடைத்தது. தமிழகத்தில் தி.மு.க.வுக்கு 25 சீட்டுகள் கிடைத்தன. இது பற்றி பின்னால் மேலும் எழுதுகிறேன்.

மாநிலங்களை பொருத்தவரை தமிழகம், ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் பதவி இழந்தது. வேறு சில மாநிலங்களில் கட்சித் தாவல்கள் காரணமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் கூடிய சீக்கிரம் பதவி இழந்தது. அச்சமயம் ஆ.கே. லக்ஷ்மண் அவர்களது ஒரு கார்ட்டூன் மிக பிரசித்தம். ஒரு சட்டசபை உறுப்பினர் உடம்பெல்லாம் கட்டுகளுடன் நின்று கொண்டிருப்பார். சுற்றிலும் நிற்கும் நிருபர்களுடன் கூறிக் கொண்டிருப்பார்: "Just as I was crossing the floor, he was crossing in the opposite direction".

இந்த தேர்தலில் இந்திராவுக்கு ஒரு ஆறுதல் என்னவென்றால், அவரை கட்டுப்படுத்தக் கூடியவர்களில் பலர் தேர்தலில் தோல்வியுற்றிருந்தனர். முக்கியமாக காமராஜ் அவர்கள். இம்முறை உள்கட்சி தேர்தல் இன்றி அவரால் பிரதமராக வர முடிந்தது. மொரார்ஜி தேசாய் அவர்கள் உதவிப் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் பதவி பெற்றார். காமராஜையும் மற்றவர்களையும் மெதுவாக அலட்சியப்படுத் துவங்கினார்.

அவருடைய தந்தைக்கு இயற்கையாகவே அமைந்த முகராசியை இவர் மெதுவாக உருவாக்கிக் கொண்டார். ஆனால் ஒன்று நினைவில் வைக்க வேண்டும். நேரு அவர்கள் என்னதான் முகராசியுடன் இருந்தாலும் மற்றவர்களையும் மதித்து அவர்களை தன்னுடன் அரவணைத்து சென்றார். இந்திராவிடம் அந்த அரவணைக்கும் தன்மை இல்லை. தன்னை சுற்றியிருப்பவர்களை சுத்தவிட்டு தனக்கு ஆதரவு தருபவர்களுக்கு மட்டும் பொறுப்புகள் தந்தார். சற்றே சுதந்திர மனப்பான்மையுடன் செயல்பட்டவர்களுக்கு அவர் மனதில் இடமில்லை. மெதுவாக அடுத்த சில ஆண்டுகளுக்குள் வெளிப்பட இருந்த சர்வாதிகாரி இப்போதுதான் உருவாகத் தொடங்கினார்.

இந்த காலக்கட்டத்தில் உலக அரங்கில் பல முக்கிய விஷயங்கள் நடந்தன.

1967-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரபு-இஸ்ரவேல ஆறு நாள் யுத்தம் நடந்தது. வழ்க்கம்போல இந்தியா பாலஸ்தீனியர்களுக்கு ஜால்ரா அடித்தது. இருப்பினும் இஸ்ரேல் உலகையே பிரமிக்க வைக்கும் வெற்றியைப் பெற்றது. அப்போது மட்டும் இந்தியா இஸ்ரேலுடன் ஒத்துழைத்திருந்தால் மிக நல்ல பலன் கிடைத்திருந்திருக்கும். ஆனால் எவ்வளவோ பல மாறுதல்களை அரசியல் அணுகுமுறையில் கொண்டு வந்த இந்திரா அவர்கள் இங்கு நேரு அவர்களின் செயல்பாட்டையே தொடர்ந்தார்.

அமெரிக்கா வியட்னாம் விவகாரத்தில் மேலும் மேலும் ஆழமாக சிக்க ஆரம்பித்தது. நடுநிலை கொள்கை என்ற பெயரில் இந்தியா அமெரிக்காவை சாடியது. அதனால் பல நலன்களை இழந்தது. அதே சமயம் 1968-ல் செக்கோஸ்லாவோக்கியாவை சோவியத் யூனியன் ஆக்கிரமித்த போது அதை கண்டிக்க வக்கின்றி இந்தியா விளக்கெண்ணெய் நிலையை எடுத்தது. இதனால் இந்தியாவின் தார்மீக நிலை கேலிக்குள்ளானதுதான் மிச்சம்.

நடுநிலைமை என்ற பெயரில் அமெரிக்காவை சாடி, சோவியத் யூனியனை துதிப்பதில் இந்தியா முன்னிலை வகித்தது. அதே சமயம் அமெரிக்காவிடம் உதவி கேட்பதும் நிற்கவில்லை. அதுபாட்டுக்கு தனியாக நடந்தது. சராசரி இந்தியர்கள் அரசின் இந்த இரட்டை நிலையை கண்டு வெட்கித் தலை குனிந்தனர். இந்தியாவைக் கண்டாலே வெளிநாடுகளில் இளப்பமாயிற்று.

சோஷலிசம் என்ற உருப்படாத தத்துவத்தை நேருவிடமிருந்து பெற்ற இந்திரா அவ்ர்கள் அதை இன்னும் கற்பனை செய்ய முடியாத அபத்தங்களின் உயரத்துக்கு கொண்டு சென்றார். நிதி மந்திரியாக இருந்த மொரார்ஜி அவர்கள் சொன்ன உருப்படியான யோசனைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. சோஷலிசம் என்ற பெயரில் பணக்காரர்களுக்கு அதிக வரி விதித்ததில் பல விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன. ஒரு காலக் கட்டத்தில் ஒருவருக்கு பத்து லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் இருந்தால் அவர் வரிகளுக்குப் பிறகு எடுத்து செல்வது வெறும் 35,000 ரூபாயாகவே இருந்தது. இதை இந்திரா அவர்கள் பெருமையாக வேறு கூறிக் கொண்டார். இருப்பவர் இல்லாதவர் இடையே உள்ள இடைவெளியை குறைக்க பணக்காரர்களை ஏழையாக்குவதுதான் நடந்தது. அதனால் யாருக்கும் உழைத்து அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணம் இல்லாமல் போனது.

இம்மாதிரியே நிலைமை சீர்குலைந்து போக, மே மாதம் 1969-ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுஸைன் மறைந்தார். இது ஒரு மைல்கல் இந்திய சரித்திரத்தில். இதன் பிறகு இந்திரா அவர்களின் சுயலாப செய்கைகள் அதிகரிக்க ஆரம்பித்தன.

அவற்றைப் பற்றி பின் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/11/2007

ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 3

இந்திரா காந்தி அவர்களது காலக் கட்டத்தை இம்மாதிரிப் பிரிக்கலாம்:
1. 1966 ஜனவரி முதல் 1967 மார்ச் வரை
2. 1967 மார்ச் முதல் 1969ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் மறைந்த வரைக்கும்
3. 1969-லிருந்து 1971 மார்ச் வரை
4. 1971 மார்ச் முதல் 1975 ஜூன் வரை (அவசர நிலை பிரகடனம்)
5. 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை (அவசர நிலை அத்துமீறல்கள்)
6. 1977 மார்ச் முதல் 1979 இறுதி வரை
8. 1980 ஜனவரி முதல் 1984 அக்டோபர் 31 வரை (கொலையுண்ட தினம்)

1. 1966 ஜனவரி முதல் 1967 மார்ச் வரை:
நான் ஏற்கனவே கூறியபடி மொரார்ஜி அவர்களுக்கு எதிராக இந்திராவை நிறுத்தி அவரை ஜெயிக்க வைத்தது காங்கிரஸ் மேலிடம். அதனுள் காமராஜ் அவர்களும் அடக்கம். அப்போதெல்லாம் இந்திரா காந்தி மிக அடக்கமான தோற்றத்துடன் இருந்தார். அவருக்கு மெழுகு மொம்மை என்ற பட்டப் பெயரும் இருந்தது. அவரை தங்கள் இஷ்டத்துக்கு வளைக்க இயலும் என தப்புக் கணக்கு போட்டனர் காங்கிரஸ் தலைவர்கள்.

முதலும் கடைசியும் முறை லோக்சபை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு ஓட்டெடுப்பு நடந்தது. இந்திரா காந்தி அவர்கள் சௌகரியமான மெஜாரிட்டியில் வென்றார்.

இந்திரா பதவி ஏற்ற சமயம் நாடு உணவுப் பஞ்சத்தை எதிர்க் கொண்டது. அமெரிக்காவிலிருந்து கோதுமை ரூபாய் வர்த்தகத்தில் வாங்கப்பட்டது. அன்னியச் செலாவணி இல்லை. என்ன நடந்தது என்று பார்ப்போம்.

லால் பஹதூர் சாஸ்திரி அவர்கள் 1966-ஜனவரியில் மரணமடைய இந்திரா அவர்கள் மேலே கூறியபடி பதவி ஏற்றார். முந்தைய ஆண்டு 1965-ல் பாகிஸ்தானுடன் யுத்தம் நடந்தது. அது தேசத்துக்கு 1966-ல் பொருளாதசர நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், 1965-ல் தென்/மேற்கு பருவக்காற்று வேறு பொய்த்தது. ஜூன் 6, 1966 இந்திரா அவர்கள் ரூபாயின் மதிப்பை 50 சதவிகிதம் குறைக்கும் நிர்பந்தத்துக்கு ஆளானார். மேலும் நிலைமையை மோசமாக்குவதாக 1966 பருவ மழையும் பொய்த்தது.

ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து கோதுமையின் இறக்குமதியை நம்பியிருந்த இந்தியாவின் நிலைமை ரொம்பவும் மோசமாயிற்று. வேறு வழியின்றி இந்தியா அமெரிக்காவை கோதுமைக்கு கெஞ்ச வேண்டியதாயிற்று. கோதுமையை அன்னியச் செலாவணி இல்லாது ரூப்பய்க்கு விற்குமாறு அமெரிக்காவை கேட்க வேண்டியிருந்தது.

ஆனால் அமெரிக்கா இந்தியாவின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்திருந்தது. அதுவும் வியட்னாம் விவகாரத்தில் இந்தியா அமெரிக்காவை ரொம்பவே கண்டித்து வந்தது. இருந்தாலும் என்ன செய்வது. இந்திரா அவர்களுக்கு வேறு வழியில்லை. அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜான்ஸனுக்கு இந்திரா காந்தி நேரடி டெலிபோன் செய்து கோதுமைக்காக வேண்டுகோள் விடுக்க வேண்டியிருந்தது. அப்போது இந்திரா அவ்ரது முகம் ரோஷத்தால் சிவந்து போயிருந்தது என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். எது எப்படியானாலும் தேவை என்றால் சுய கௌரவம் பார்க்க இயலாதுதானே. அந்த விஷயத்தில் சமயோசிதமாக நடந்த இந்திரா அவர்களை பாராட்டியே தீர வேண்டும்.

நல்ல வேளையாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பசுமைப் புரட்சி ஏற்பட, இந்தியாவுக்கு வரவிருந்த ஆபத்து நீங்கியது. இந்த பசுமைப் புரட்சி எப்படி வந்தது என்பதை விவரிக்கும் இந்தக் கட்டுரையை பாருங்கள்.

இந்திரா காந்தி அவர்களின் ஆட்சி காலத்தை மொத்தமாகப் பார்க்கும்போது இந்த முதல் காலக்கட்டம் பரவாயில்லை என்றுதான் கூற வேண்டும். இந்திரா காந்தி மெதுவாக அதிகாரத்தை தன்னுடன் தக்க வைத்துக் கோள்ள ஏற்பாடுகள் செய்து வந்தார். அதை அப்போது பலர் கவனிக்கவில்லை. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பட்டம் வேறு அவர் மேல் ஒரு வசீகரத்தை மக்களிடம், முக்கியமாக பெண்களிடம், ஏற்படுத்தி வந்தது. இந்தக் காலக் கட்டம் துரதிர்ஷ்டவசமாக வெறும் 13 மாதங்களே நீடித்தது.

1967 மார்ச் மாதம் பொது தேர்தல் வந்து பலவற்றைப் புரட்டிப் போட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy -2

ஜவஹர்லால் நேரு அவர்களது லெகஸி பற்றி எழுதிய முந்தையப் பதிவில் நான் இம்மாதிரி குறிப்பிட்டிருந்தேன்.

"அதிலும் இந்திரா இருந்தாரே, அபார திறமைசாலி. பல தனியார் துறையில் இருந்த நிறுவனங்களை தேசீயமயமாக்கி அவற்றின் செயல்பாடுகளை முடக்கியவர்". இந்த வரிகளுக்கு எதிர்வினையாக சில பின்னூட்டங்கள் வந்தன. அதில் ஒருவர் வேலை நேரத்தில் மொழிபெயர்ப்பு செய்து சம்பாதித்த எனது செயலை கேள்வி கேட்டிருந்தார். அதற்கு வேடிக்கையாக ஒரு பதில் கூறினேன் அப்போதைக்கு ஏனெனில் அப்பதிவு நேருவைப் பற்றியது. இப்போது சற்று சீரியஸாகவே பதில் கூறுகிறேன்.

அரசு நிறுவனங்களில் தேவைக்கதிகமாக ஆட்கள் வேலைக்கு எடுப்பது தெரிந்ததே. அதுவும் ஐ.டி.பி.எல். விவகாரத்தில் என்னெல்லாம் கந்திர கோளம் நடந்தது என்பதை எனது ஐ.டி.பி.எல். நினைவுகள் லேபல் கீழ் குறிப்பிட்டுள்ளேன்.

என்னை மேலே சொன்ன விஷயத்தை வைத்து கேள்வி கேட்டவர் சரியாகத்தான் கேட்டுள்ளார். ஆம், இந்த நிலைக்கும் இந்திரா காந்திதான் காரணம். ஆனால் ஒன்று. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு நெட்டி முறிக்கும் வேலை வந்தபோது ஐ.டி.பி.எல். வேலை மட்டுமே முக்கியமாக நடந்தது. அதுவும் வேலையில் சேர்ந்த புதிதில் என் தங்கைக்கு எழுதிய கடிதத்தில் வேலை நேரத்தில் சுறுசுறுப்பான பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளனாகவும், வீட்டில் இருக்கும் நேரத்தில் அதே அளவில் சுறுசுறுப்பான ஜெர்மன் மொழி பெயர்ப்பாளனாகவும் இருந்ததை வேடிக்கையாகவே குறிப்பிட்டேன்.

மறுபடியும் இந்திரா காந்தி. பொதுத் துறையில் இருந்த நிறுவனங்களின் பொற்காலமே எழுபதுகள் மற்றும் எண்பதுகள். 1966-ல் பதவிக்கு வந்து 1984-ல் கொல்லப்பட்ட இந்திரா காந்தி அவர்கள் 1977 முதல் 1980 வரையிலான குறுகிய காலக் கட்டத்தைத் தவிர்த்து பிரதம மந்திரியாக இருந்தார். சகட்டு மேனிக்கு நிறுவனங்களை தேசீய மயமாக்கினார்.

1966 ஜனவரியில் அவர் பிரதமராகத் தேர்வு பெற மொரார்ஜி தேசாயோடு போட்டி போட நேர்ந்தது. மொரார்ஜியிடம் அதிருப்தியுற்றவர்கள் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்தனர். அப்போது மொரார்ஜி பிரதமரானால் தங்கள் அதிகாரம் செல்லாது என அஞ்சினர். ஆகவே அரசியலுக்கு ஒப்பீட்டு அளவில் சற்றே புதியவராக இருந்த இந்திரா காந்தியை பிரதமராகத் தேர்ந்தெடுத்தால் தங்களுக்கு நல்லது எனத் திட்டமிட்டனர். அவர்களில் காமராஜரும் ஒருவர். இந்திரா காந்திக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டனர். நேருவின் மகள் என்ற லேபலும் இந்திரா காந்திக்கு சாதகமாக அமைந்தது.

இந்திரா காந்தி அவர்களது காலக் கட்டத்தை இம்மாதிரிப் பிரிக்கலாம்:
1. 1966 ஜனவரி முதல் 1967 மார்ச் வரை
2. 1967 மார்ச் முதல் 1969ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் மறைந்த வரைக்கும்
3. 1969-லிருந்து 1971 மார்ச் வரை
4. 1971 மார்ச் முதல் 1975 ஜூன் வரை (அவசர நிலை பிரகடனம்)
5. 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை (அவசர நிலை அத்துமீறல்கள்)
6. 1977 மார்ச் முதல் 1979 இறுதி வரை
8. 1980 ஜனவரி முதல் 1984 அக்டோபர் 31 வரை (கொலையுண்ட தினம்)

இந்திரா காந்தி அவர்கள் அதிகாரத்தில் இருந்த 15 ஆண்டுகள் நேரு அவர்கள் அதிகாரத்தில் இருந்த 18 ஆண்டுகள், ராஜீவ் அவர்கள் இருந்த 5 ஆண்டுகள், ராஜீவின் மனைவி பொம்மைப் பிரதமரின் சூத்ரதாரியாக இருந்து வரும் காலம் ஆகியவற்றைக் கூட்டினால் 40 ஆண்டுகளுக்கு மேல் வருகிறது. இப்போது நடக்கும் பல விபரீதங்களுக்கு காரணமாக விரும்பியோ விரும்பாமலோ நேருவின் குடும்பம் அமைந்து விட்டது. ஆகவே நேருவின் லெகஸியை குறித்து எழுதத் துவங்கினேன்.

முதலில் வெறுமனே மூன்று பதிவுகள்தான் போட இயலும் என்று பார்த்தால் இந்திரா காந்தியின் காலக்கட்டம் மட்டுமே 4 பதிவுகளுக்கு குறையாமல் வந்து விடும் போலிருக்கிறது. பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/10/2007

ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy -1

"விதியுடன் இந்தியாவின் சந்திப்பு" என்று பொருள்பட நேரு அவர்கள் 1947-ஆம் வருடம் நள்ளிரவு 12 மணிக்கு வானொலியில் உரை ஆற்றியதை நேரடியாகக் கேட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இப்போதுள்ள தலைமுறையினருக்கு சாதாரணமாக நேரு அவர்களை பற்றிய அறிமுகம் வாய் வார்த்தைகள் மற்றும் எழுத்துக்கள் மூலமுமே கிடைக்கிறது. அவ்வகை அறிமுகங்கள் அவற்றை வெளியிடுபவர் விருப்பு வெறுப்புக்கேற்ப வேவேறு வகை பிம்பங்களை அளிக்கின்றன.

நாடு விடுதலை ஆன சமயம் பிரிவினையால் அகதிகளின் பிரச்சினை தலை தூக்கி ஆடியது. முக்கியமாக பஞ்சாப், வங்காளம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் மக்கள் சுதந்திரத்தை கொண்டாடும் மனநிலையிலேயே இல்லை என்றுதான் கூறவேண்டும். முதல் சுதந்திர தினத்தன்று காந்தியடிகள் கிழக்கு வங்கத்தில் நவகாளியில் சமாதானப் பயணம் மேற்கொண்டிருந்தார். ராஜாஜி அவர்கள் வங்காள கவர்னராக இருந்து நிலைமையை திறமையாக சமாளித்து கொண்டிருந்தார்.

மேலே உள்ள இரு பத்திகள் இப்பதிவின் அறிமுகத்துக்காக அளிக்கப்பட்டுள்ளன.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் (சமீபத்தில் 1950) பிரதம மந்திரி என்றால் நேரு என்றே பல ஆண்டுகளாக எண்ணி வந்திருக்கிறேன். 1964-ல் அவர் இறந்தவரை அவரைத் தவிர வேறு யாரையும் யாரும் பிரதம மந்திரியாக நினைத்ததில்லை. 1962 தேர்தல் முடிவுகள் வெளியான சமயம் ஒரு தமிழ் பத்திரிகையில் நேரு ராஜினாமா என்று வர எல்லோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு அந்த பேப்பரை வாங்கிப் பார்த்தால். நேருவின் பழைய மந்திரிசபை மரபுப்படி ராஜினாமா செய்திருக்கிறது. ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அதை ஏற்று, மாற்று ஏற்பாடுகள் வரை நேருவையே பிரதமராக செயல்படச் சொல்லியிருக்கிறார். அவ்வளவே. அன்று மாலையே நேருவின் புது மந்திரி சபை பொறுப்பேற்றுக் கொண்டது. இப்போது கூட பல பதிவர்கள் அந்த டெக்னிக்கை பயன்படுத்தி பரபரப்பான தலைப்பை போட்டு விட்டு பதிவை க்ளிக் செய்து படிக்க ஆரம்பிக்கும்போது ஹி ஹி ஹி என்று கூறுவதைப் போல இல்லை?

நேரு அவர்கள் சோஷலி்சத்தில் ரொம்ப நம்பிக்கை கொண்டவர். சுதந்திரம் வந்த புதிதில் பலருக்கும் அந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆகவே சோஷலிச பாதையில் நாட்டைக் கொண்டு செல்ல அவர் முடிவு செய்ததை தவறாக எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் நாட்டில் கட்டமைப்புகள் ரொம்ப பலவீன நிலையில் இருந்தன. அவற்றை பலப்படுத்தத் தேவையான முதலீடுகளைச் செய்ய தனியாரிடம் நிதி இல்லை என்பதே நிஜம். நேரு அவர்கள் மிக துரிதமாக நாட்டில் முன்னேற்றத்தை கொண்டு வரத் திட்டமிட்டார். ஆகவே கனரகத் தொழில்களில் அதிக அக்கறை செலுத்தினார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒன்றுக்கும் உபயோகமில்லாத கம்யூனிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சோவியத் மாடலில் திட்டங்கள் தீட்டி, அகலக் கால் வைத்து நாட்டின் பொருளாதாரத்தையே குட்டிச்சுவராக்கினார். அதே காலக் கட்டத்தில் "அபார முன்னோக்கித் தாவல்" என்ற முயற்சியை செய்து கம்யூனிஸ்ட் சீனா காலை முறித்துக் கொண்டது. அந்த அளவுக்கு திவாலாகாவிட்டாலும் உள்ளூரப் புறையோடி புண்களுடன் இருந்து 1991-ல் உலக வரைபடத்திலிருந்தே காணாமல் போயிற்று சோவியத் யூனியன். அதற்கு ஒரு ஆண்டிற்கு முன்னால் கிழக்கு ஜெர்மனி மறைந்தது. ஆனால் இவையெல்லாம் ஐம்பதுகளில் எதிர்ப்பார்த்திருக்க முடியாத ஜவஹர்லால் நேரு அவர்கள் நம் நாட்டையும் அதே மாதிரி கோர்ஸில் நிலைநிறுத்தி விட்டு போய் சேர்ந்தார். அவரது மகளும் பேரனும் அந்தக் கூத்தை தொடர்ந்து நிகழ்த்தினர்.

அதிலும் இந்திரா இருந்தாரே, அபார திறமைசாலி. பல தனியார் துறையில் இருந்த நிறுவனங்களை தேசீயமயமாக்கி அவற்றின் செயல்பாடுகளை முடக்கியவர். இந்திரா மற்றும் ராஜீவ் பற்றி அடுத்த பதிவுகளில் பார்ப்போம். இப்போது நேருவின் ஆட்சிகாலத்தின் மீது கவனம் செலுத்துவோம்.

அவர் செய்த முதல் குளறுபடி காஷ்மீர பிரச்சினையை கையாண்ட விதமே. பட்டேல் உறுதியாக நடவடிக்கை எடுத்து பாக் படைகளை காஷ்மீரத்திலிருந்து துரத்திக் கொண்டிருந்த நேரத்தில் இந்த மனிதர் ராபணா என்று பாதுகாப்பு கவுன்சிலுக்கு போனார். அவர்கள் இட்ட ஷரத்துப்படி போர்நிறுத்த எல்லை என்று "தற்காலிகமாக" உருவாக்கப்பட்டது. அது இப்போதும் அப்படியே இருப்பதுதான் இந்த தற்காலிகத்தின் லட்சணம். காஷ்மீருக்கு தனி அந்தஸ்தெல்லாம் யாரும் கேட்காமலேயே இந்த மனிதர் கொடுத்துள்ளார். மக்கள் வாக்கெடுப்புக்கும் ஒத்துக் கொண்டார். அதாவது எல்லாமே இந்தியாவின் நலனுக்கு விரோதமாக அமைந்தது. இதில் என்ன துரதிர்ஷ்டமான நிலை என்றால். இவர் ரொம்ப நல்லவர். எல்லோரும் தன்னைப் போல என நினைத்தவர். ஆனால் இந்தியாவுக்கு தேவை நல்லவர் அல்ல, ஒரு வல்லவர். இவர் அது அல்ல.

இன்னொரு குளறுபடி சைனாவை அப்படியே நம்பியது. அதிலும் பாதுகாப்பு துறைக்கு தன் நண்பர் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக கிருஷ்ணமேனன் என்ற பிரயோசனமில்லாத மந்திரியை நியமித்து அவரை பாதுகாத்தும் வந்திருக்கிறார். இந்தக் குளறுபடியால் நாம் இழந்தது ஆயிரக்கணக்கான சதுர மைல் பரப்பில் உள்ள இந்தியப் பிரதேசங்கள்.

அணிசேரா நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கியவர் நேரு அவர்கள். இதனால் நாம் இழந்ததுதான் அதிகம். போகிறவர் வருவருக்கெல்லாம் தர்ம உபதேசம். எடுப்பது என்னவோ பிச்சை. அதுவும் அமெரிக்கா என்றால் தீவிரமாகத் தாக்குவார். அதுவே சோவியத் யூனியன் என்றால் விளக்கெண்ணை பேச்சுத்தான். 1956-ல் ஹங்கேரியை சோவியத் யூனியன் ரத்தக் களறியாக்கியபோது வாயடைத்து நின்றார். 1962-ல் சைனாவுடன் யுத்தத்தை சமாளிக்க முடியாத நிலை வந்த போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் துணைக்கு வந்தன. சைனாவும் தாக்குவதை நிறுத்திற்று. ஆனால் பேச்சு என்னவோ அமெரிக்காவுக்கு உபதேசம் செய்யும் ரேஞ்சுக்குத்தான் இருக்கும். இந்த ஆஷாடபூதித்தனத்தால் இந்தியாவை எல்லோருமே பரிகாசம் செய்தனர்.

1948-ல் இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்தது. ஆனால் கான்ஸல் அளவுக்குத்தான் பிரதிநிதித்துவம் கொடுத்தது. ஏனெனில் இசுலாமிய அரேபியர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்ற அச்சம். அப்போதே சூட்டோடு சூடாக இஸ்ரேலுக்கு முழு ராஜரீக அங்கீகாரம் தந்திருந்தால் பல நன்மைகள் விளைந்திருக்கும். இஸ்ரேல் செய்த விவசாயப் புரட்சிகளை நம்மூரிலும் கொண்டு வந்திருக்கலாம். தேவையில்லாமல் பயந்ததால் நமக்கு பல கெடுதிகள்தான் ஏற்பட்டன. அதே சமயம் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் சண்டை நடந்தால் சக இசுலாமியரான பாகிஸ்தானத்தைத்தான் பாலஸ்தீனர்கள் ஆதரித்தனர். அப்போதும் இந்தியாவுக்கு புத்தி வரவில்லை. பிறகு எகிப்தே இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதும்தான் இந்தியா விழித்து கொண்டது. அதற்குள் எவ்வளவு கால விரயம்? இதற்கான முதல் பொறுப்பும் நேருவுக்கே.

அவர் இறந்த பிறகு நடந்ததுதான் அபத்தத்தின் உச்சக் கட்டம். பிரதம மந்திரியின் இல்லமாகிய தீன்மூர்த்தி பவனை நேரு மியூசியமாக மாற்றினர். என்ன அபத்தமான செயல்? பிறகு பார்த்தால் இந்திரா காந்திக்கும் அதுவே நடந்தது. நல்ல வேளையாக ராஜீவ் காந்தி இறந்தபோது அவர் அதிகாரத்தில் இல்லை என்ப்து கடவுள் அருளே. இதற்கெல்லாம் நேருவை பொறுப்பாக்க முடியாது என்றாலும் இதுவும் அவரது லெகஸிதான். இதற்காக விளக்கெண்ணெய் சப்பைக்கட்டுகள் வேறு எனது இப்பதிவில் அளிக்கப்பட்டன..

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது