2/28/2007

எழுத்தாளர் நாடோடி - my favorite humor writer -1

சமீபத்தில் 1946-ல் பிறந்த நான் சிறு வயதில் ஆனந்த விகடன் மற்றும் கல்கி மட்டும் படித்து உள்வாங்கிக் கொண்டிருந்தேன். குமுதம் அவ்வப்போது திருட்டுத்தனமாக படிப்பதுண்டு. அப்போது பல எழுத்தாள ஜாம்பவான்கள் உண்டு. அவர்களில் நாடோடியும் ஒருவர். இப்பதிவு அவரைப் பற்றித்தான். இது பகுதி 1. பக்தி 3 வரைக்கும் அவரைப் பற்றி எழுதும் உத்தேசம்.

கூகளில் தேடினால் அவரைப் பற்றி அதிகம் கிடைக்கவில்லை. ஆகவே ஐம்பதுகள், அறுபதுகளில் பிரபலமாக இருந்த அவரைப் பற்றி என் நினைவுகளிலிருந்துதான் எழுத வேண்டும். அவர் அக்காலத்தில் எழுதியவற்றைப் பார்த்தால் இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது அவர் செயலாக இருந்திருந்தால் சுவையான வலைப்பதிவுகள் தந்திருப்பார். தன் மனைவி சரசு, மகள் அனு என்னும் அனுராதா, தம்பி அரட்டைக் கல்லி பாலு, அடுத்த வீட்டு அண்ணாசாமி ஐயர் ஆகியவர்கள் அவரது கட்டுரைகளில் அதிகம் வலம் வருபவர்கள்.

அவரது எழுத்துகள் ஆச்சரியம் அளிப்பதற்கு காரணமே தற்காலத்துக்கும் பொருந்தும் வண்ணம் அவை இருப்பதேயாகும். அவர் தனது மனோரதம் என்னும் தேரிலேறி நினைத்த இடங்களுக்கெல்லாம் போய் வருவார். அவர் அதிகம் செல்லும் இடம் அதிசயபுரி என்னும் ஊராகும். அப்போது சிறுவனாக இருந்த நான் அது ஒரு உண்மையான இடம் என்றெண்ணியிருந்திருக்கிறேன். இப்போதுதான் புரிகிறது. அவர் நம் நாட்டைத்தான், அதுவும் தமிழ்நாட்டைத்தான் குறிப்பிட்டுள்ளார் என்று.

ஒரு சமயம் திடீரென எல்லோரிடமிருந்தும் அவரவர் பணம் காணாமல் போய் விடும். முதலில் எல்லோரும் திகைக்கின்றனர். என்ன செய்வது, வேலைக்கு போக வேண்டுமே?திருதிருவென விழித்து கொண்டு பஸ் ஸ்டேண்ட், மின்ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு வருவார்கள். அங்கும் நிலைமை இன்னும் மோசம். அங்கு வேலை செய்பவர்கள், அலுவலகத்தில் உள்ள பணம் எல்லாமே மாயமாக மறைந்திருக்கும். பிறகு அவரவர் வேலை செய்யும் கம்பெனி முதலாளிகள் மூலம் விவரம் அறிந்து எல்லா சேவைகளையும் அளித்து அதற்கான பண விவரங்களை அளித்து, மாதக் கடைசியில் அவற்றுக்கு ஈடான வேறு சேவை பெறுவார்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு அட்டை கொடுக்கப்பட்டு அவர் மேற்கொண்ட விவகாரங்களின் தகவல் அதில் பொறிக்கப்பட்டு என்றெல்லாம் நாடோடி அவர்களின் கற்பனை போகும். இப்போது அதை படிக்கும்போதே உங்களுக்கு அந்த அட்டையை பற்றிய ஒரு ஐடியா வந்திருக்கும்தானே? நீங்கள் நினைப்பது சரியே. க்ரெடிட் கார்டுதான் அது. ஆனால் இது சம்பந்தப்பட்ட அக்கட்டுரை 1950-களிலேயே வந்து விட்டது.

அதே போல நாட்டில் எல்லோருக்கும் சம்பளம் குறைந்த பட்சம் ஆயிரம் (1955 விலைவாசி கணக்கில்) என்று அதிசயபுரியின் மந்திரி நிர்ணயிக்க, அது விளைவிக்கும் கூத்து பற்றி படிப்பவரை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார் நாடோடி. படிப்பவர்தான் சிரித்தனர். அனுபவித்தவர்? பணம் மட்டும் இருந்தது. வியாபாரிகளும் பணத்தை பார்த்ததும் உல்லாசமாக செலவழிக்க ஆரம்பித்தனர். உற்பத்தி குறைந்தது. விலைகள் விஷம்போல ஏறின. சம்பளம் மறுபடியும் உயார்த்தப்பட்டன. Too much money chasing too little goods என்ற நிலை உண்டாயிற்று. விளைவு? Inflation எனப்படும் பணவீக்கம்.

நாராயணன் என்னும் எழுத்தாளர் ரொம்ப ஏழை. அடித்து பிடித்து வைகுந்தம் போய் அந்த சாட்சாத் நாராயணனையே கேட்கிறார், தான் ஏன் வறுமையுடன் பிறந்தோம் என. முதலில் கடவுள் நாராயணனுக்கு இவர் சொல்வது விளங்கவில்லை. பிறகு ஞான திருஷ்டியை உபயோகித்து எழுத்தாள நாராயணன் பூலோகத்திலிருந்து வந்திருப்பதாக உணர்கிறார். அது எப்போதோ அழிந்து விட்டதாக இத்தனை நாள் அவர் நினைத்து கொண்டிருந்திருக்கிறார். இருந்தாலும் அது பற்றி பிறகு நாரதரை கேட்டுக் கொள்வோம் என சுதாரித்து கொண்டு எழுத்தாளரை பார்த்து "இங்கே பார்" என விரலை அசைக்கிறார். எழுத்தாளர் நாராயணன் முன்னால் பரம தரித்திரரான வெங்கட்ராம ஐயர் தோன்றுகிறார். எழுத்தாளரிடம் வெங்கட்ராம ஐயர் அழமாட்டாக் குறையாகக் சொல்கிகிறார்.

"ஐயா, நீங்கள் எழுதிய நாவல் "ஏழை படும்பாடு" என்னும் கதையில் நாயகன் நான். என் சிறு வயதிலேயே தந்தை இறந்து விட்டார். பிச்சையெடுத்து படித்து வேலைக்கு போய் என் தம்பி தங்கைகளை முன்னுக்கு கொண்டு வந்தேன். அவர்கள் எல்லோரும் நன்றி மறந்து என்னுடைய பணத்தை கொள்ளையடித்தனர். கடைசியில் நான் காச நோய் கண்டு இருமி இருமி உயிரை விட்டேன். எனக்கு ஏன் இத்தனை கஷ்டம் கொடுத்தீர்கள்" என சோகமாகக் கேட்கிறார். எழுத்தாள நாராயணன் அவர் மேல் எரிந்து விழுகிறார். இதென்ன எழவாப் போச்சு. உம்மேல் எனக்கு என்ன விரோதமா? ஏதோ கற்பனையில் ஒரு பாத்திரம் படைத்தேன். ஏழைக்கு உன் பெயரை வைத்து தொலைத்தேன். இல்லையென்றால் அண்ணாசாமி ஐயர் என்று கூட பெயரை வைத்திருக்க முடியும். ஆனால் அவர் வந்து கேட்பாரே, நடக்கும் காரியமாகப் பேசும் ஐயா" என்கிறார். வெங்கட்ராம ஐயர் மறைய கடவுள் நாராயணன் மறுபடியும் வருகிறார். "என்ன ஸ்வாமி, புரிந்ததா? நீங்கள் வெங்கட்ராம ஐயருக்கு சொன்னது உமக்கும் பொருந்தும். போய் வாரும் ஐயா" எனக் கூறுகிறார்.

இவ்வாறாக நாடோடி அவர்கள் வாழ்க்கையே அபத்த களஞ்சியம், இதில் பாவம் புண்ணியம் எல்லாம் அவரவர் மனநிலைக்குட்பட்டதே என்ற இருப்பியல் தத்துவத்தை சில வார்த்தைகளில் புரிய வைக்கிறார். உலகே மாயம் என்றும் கூறலாம்.

ஐம்பதுகளின் நடுவில் நாடோடி மறுபடி அதிசயபுரிக்கு மனோரதத்தில் ஏறி பயணிக்கிறார். தெருவில் பலர் நடக்கின்றனர். சிலர் கால்களில் பெரிய குண்டு கட்டப்பட்டுள்ளது. ஏன் என்று புரியாமல் விழிக்கிறார் நாடோடி. அங்கு அப்பக்கமாக வந்தவர் விளக்குகிறார். குண்டு கட்டப்பட்டிருப்பவர்கள் வேகமாக நடப்பவர்கள். மெதுவாக நடப்பவர்களுக்கு அவர்களைப் பார்த்து தாழ்வுணர்ச்சி ஏதும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர்களையும் மெதுவாக நடக்கச் செய்யும் முயற்சி இது என முழங்குகிறார் வந்தவர். "ஏன் மெதுவாகப் போகிறவர்களை வேகமாகச் செல்லலாமே" என்றபோது வந்தவர் இருகோடுகள் தத்துவத்தை விளக்குகிறார். புரியாதவர்கள் சமீபத்தில் 1969-ல் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான இரு கோடுகள் படத்தில் ஜயந்தி கூறும் விளக்கத்தை கேட்டுக் கொள்க. அதே லாஜிக்படி அதிகம் விற்பனையாகும் பத்திரிகைகளுக்கு பக்கங்கள் கட்டுப்பாடு. எல்லா நல்ல எழுத்தாளர்களும் அதிக சன்மானத்துக்கு ஆசைப்பட்டு அங்கு போவதால் அந்த சன்மானங்களுக்கு அதிக வரி என்றெல்லாம் அரசு தூள் பண்ணுகிறது.

இப்போது ஒரு சிறு டைவர்ஷன்.

இதில் இன்னொரு அபத்தமான தமாஷ் என்னவென்றால், 1970-களில் தமிழகத்தில் நிலவிய பயங்கர மின்சக்தி தட்டுப்பாட்டைக் குறித்து மேலே கூறப்பட்ட கட்டுரை வெளியான ஆனந்த விகடனிலேயே வெளியிடப்பட்ட ஒரு தலையங்கம்தான்.

அதன் சாரம் பின்வருமாறு. மின்சக்தி கிடைக்காது பல நிறுவனங்கள் நஷ்டம் அடைகின்றன. ஆனால் சில நிறுவனங்களோ ஜெனெரேட்டிங் செட்கள் போட்டு தாங்களாகவே மின் உற்பத்தி செய்து பொருள்களை உற்பத்தி செய்து லாபம் அடிக்கின்றனர். இதனால் அவ்வாறு ஜெனெரேட்டிங் செட்கள் இல்லாதவர் மனத்துயரம் அடைகின்றனர். ஏழைகளுக்கு ஆதரவான அரசு தாய்மை உணர்வோடு செயல்பட்டு, அந்த செட்களை பறிமுதல் செய்து, ஒரு பொது இடத்தில் நிறுவி மின்சாரத்தை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்.

மறுபடியும் நாடோடி அவர்களின் இக்கட்டுரைக்கே வருவோம்.

என்ன நடக்கிறதென்றால், வேகமாகச் செல்பவர்கள் அவர்கள் நலம் விரும்பும் நண்பர்களால் அடக்கி வாசிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஆகவே அவர்கள் வேண்டுமென்றே மெதுவாக நடக்கின்றனர்.குண்டு மாட்டப்படாமல் தப்பிக்கின்றனர். இதனால் உண்டாகும் வேறு பொருளாதார விளைவுகள் என்றெல்லாம் கட்டுரை அமர்க்களமாகப் போகிறது.

ஏன் என்று தெரியவில்லை. கடந்த சில நாட்களாக நாடோடியின் இக்கட்டுரை எனக்கு அடிக்கடி நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/26/2007

மச்சமச்சினியே

நான் சமீபத்தில் 1979-ல் இப்போது நான் இருக்கும் எனது சொந்த வீட்டிலிருந்து காலி செய்து தி.நகர், அங்கிருந்து தில்லி என்றெல்லாம் சென்று விட்டு திரும்பவும் 2001-ல் அந்த சொந்த வீட்டுக்கே வந்தது பற்றி இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் இப்பதிவு அதைப் பற்றியல்ல.

தற்காலிகமாக திரும்பி வந்ததும் ஒருமாதம் முழுக்க மராமத்து வேலை, பிறகு தில்லி சென்று வீடு காலி செய்து கண்டையனரில் வீட்டு பொருட்களை ஏற்றி விட்டு திரும்ப சென்னைக்கு வருவதற்கும், கண்டையனர் வந்து சேருவதற்கும் சரியாக இருந்தது. அதுவும் இப்பதிவில் கூறப்போவதில்லை. நான் கூறவந்தது மராமத்து வேலைகள் சமயத்தில் ஒரு மாதம் நங்கநல்லூரிலேயே நண்பர் வீட்டில் தங்கியபோது நடந்தது பற்றி.

தில்லியில் உள்ள வாடிக்கையாளர் மின்னஞ்சலில் மொழிபெயர்ப்புக்கான கோப்புகளை அனுப்ப, நண்பரின் இரு மகன்கள் அவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து என்னிடம் தர, நானும் மராமத்து வேலைகளை அவ்வப்போது மேற்பார்த்துக் கொண்டே மொழிபெயர்ப்புகளை கையால் எழுதியதை அவ்விரு இளைஞர்களும் கணினியில் தட்டச்சு செய்து முடிக்க, அதை கணினி திரையிலேயே படித்து நான் திருத்தங்களைக் கூற அவர்கள் அதை அனாயாசமாக நிறைவேற்றி பிறகு மொழிபெயர்ப்பை நான் மின்னஞ்சல் பெட்டி மூலம் அனுப்ப என்று விடாது வேலை. திங்கள் தெரியாது, சனி தெரியாது, கிழமைகளே தெரியாது அப்படி வேலை. என் அக்காவின் கணவர் கூட வேடிக்கையாகக் குறிப்பிடுவார், "நம்ம டோண்டு சென்னைக்கு வந்துட்டான்னுதான் பேரு. ஆனால் இப்பவும் அவனை தில்லி மூலமாகத்தான் பிடிக்க வேண்டியிருக்கு" என்று.

ஆக, மராமத்து, மொழிபெயர்ப்பு தவிர மீதி எல்லாம் கனவைப் போலவே இருந்தன. அப்போதுதான் இந்தப் பாட்டு அடிக்கடி எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் வரும்.

"மச்சினியே மச்சமச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டு நீயே
துள்ளி துள்ளி இங்கு விளையாடும் ...." அப்பாட்டை கீழே தருகிறேன்.



ஒரு நதி அருவி வழியாக வீழ்ந்து, சிற்றோடையாகச் செல்லும் அழகில் இப்பாட்டு செல்லும். நதியில் விளையாடி கொடியில் தலைசீவி என்ற உணர்ச்சி எனக்கு அப்பாட்டை முதலில் சின்னத்தரையில் கண்டு கேட்கும்போதே தோன்றியது. இப்பாட்டு அடிக்கடி வந்து, என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இப்பாடலுக்கு நடன அசைவுகளும் ஒரு வித மேன்மை கணித நேர்த்தியுடன் (advanced mathematical precision) இருந்ததும் என் மனதைக் கவர்ந்தது. அதுவும் நான் அந்த வீட்டில் கணினி இருந்த அறையில் அமர்ந்து மொழிபெயர்ப்பு வேலை செய்தது என் வேலைக்கு அது ஒரு பின்னணி இசை கொடுத்தது போலத் தோன்றியது.

இப்பதிவை எழுதும்போதும் அப்பாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படியே 2001-க்கு போன உணர்வு. அதுவும் சென்னையில் தில்லி போல நன்றாக மொழிபெயர்ப்பு வேலை நடக்குமா என்று சற்றே அஞ்சியபடி வந்தவன் நான். அப்படியெல்லாம் பயம் தேவையில்லை எனக்கு உணர்த்திய அந்த ஒரு மாதம் என் இனிய தருணங்கள் பலவற்றை அடக்கியுள்ளது. அவற்றில் ஒன்று இந்த மச்சமச்சினியே பாட்டு என்றால் மிகையாகாது.

பிறகு பிப்ரவரி 2002-ல் நானே சொந்த கணினியை வீட்டில் நிறுவிக் கொண்டதும் மேலே நான் குறிப்பிட்ட அந்த இரு இளைஞர்களது உதவியாலேயே நிகழ்ந்தது. பெரியவன் எனது கணினிக்காக பாட்டுகளை தெரிவு செய்ய, சின்னவன் கூவினான், "டேய் அந்த மச்சமச்சினியே பாடலை முதலில் லோட் செய். அந்தப் பாட்டு டோண்டு மாமாவுக்கு பிடிக்கும்" என்று சீரியசாகவே கூறினான். பெரியவனோ "அப்பாடல் மட்டுமென்ன அந்தப் படத்தில் வரும் மீதி பாட்டுக்களையும் லோட் செய்வேன்" என்றான். அப்போதுதான் அப்பாட்டு ஸ்டார் படத்தினுடைய பாட்டு என்பதை அறிந்து கொண்டேன். எல்லா பாட்டுக்களுமே அப்படத்தில் அருமைதான். ஆனால் இப்போதும் அவற்றுள் என் விருப்பப் பாடல் அந்த மச்ச மச்சினியேதான். இப்பாடல் மெட்டில் ஹிந்தியிலும் ஒரு பாடல் ஒரு முறை கேட்டேன். ஆனால் எந்தப் படம் எனத் தெரியவில்லை. இப்போது இதே பாட்டை ஹிந்தியில் கேளுங்கள், ருத் ஆ கயீ ரே எனத் துவங்கும் பாடல் எர்த் 1947 என்னும் படத்தில்.



ஆனால் அப்படத்தை முழுதாக இந்த ஆண்டுதான் சின்னத் திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படமும் அருமையாகத்தான் இருந்தது. வாழ்வின் செல்லும் போக்குக்கெல்லாம் செல்லும் பிரசாந்த ஜோதிகாவின் காதல் கிடைத்ததும் எப்படி தன் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறார் என்பது கதை. காதலின் சக்தி என்னவென்பதை அலட்டிக் கொள்ளாமல் காட்டியது. அப்படக்கதையை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

காசுக்காக மற்றவர் செய்யும் சிறு குற்றங்களை தான் ஏற்று அடிக்கடி சிறை செல்பவன் பிரசாந்த். சிறையே அவனுக்கு பிறந்த வீடு போலத்தான். அம்மாதிரி வாழ்க்கையை கவிதையாகக் காட்டுவது அப்படத்தில் முதலில் காண்பிக்கப்படும் இந்த மச்ச மச்சினியே பாடல்தான். உருதுவில் பிந்தாஸ் என்று கூறுவார்கள். அது ஒரு அலட்சிய, விட்டேற்றியான, அனாயாசமான பாணி. அப்படி வாழ்ந்தவன் பிரசாந்த். ஒரு முறை சாதாரண ஈவ்டீசிங் வழக்கு என நினைத்து குற்றத்தை ஏற்றுக் கொள்ள, அதில் பாதிக்கப்பட்ட பெண் கோமா ஸ்டேஜில் இருப்பதை பார்த்து வீறு கொண்டெழுந்து குற்றவாளியான திமிர் பிடித்த அந்தப் பணக்காரப் பையனைப் பந்தாடி போலீஸில் ஒப்படைக்கிறான். பிறகு ஜோதிகாவின் காதல் கிட்டுகிறது. ஜோதிகாவின் மாமா விஜயகுமார் பிரசாந்தை கொலை மிரட்டலுக்காளாகியிருக்கும் தன் மகனைக் காப்பாற்ற பிரசாந்தை தன் மகனாக நடிக்கக் கேட்டு கொள்கிறார். ஆனால் உண்மை காரணத்தை மறைத்து தன் மனைவி ஸ்ரீவித்யாவுக்காக அதை செய்வதாகவும், பிள்ளை இறந்து விட்டாலும் அவன் இறந்தது மனைவிக்கு தெரியாது என்று செண்டிமெண்ட் பேசி பிரசாந்தை இணைய வைக்கிறார்.

இதொன்றும் தெரியாத பிரசாந்த் ஸ்ரீவித்யா, விஜயகுமார் இருவரையுமே அன்னை தந்தையாக பாவித்து உருக, விஜயமுமாரின் உண்மை மகன் வில்லனுடன் சேர்ந்து கொள்ள என்றெல்லாம் கதை பல திருப்பங்களுடன் சென்று க்ளைமேக்ஸை அடைகிறது. ஆனால் ஒன்று. எல்லா திருப்பங்களுமே லாஜிக்கலாக காட்டப்பட்டுள்ளன.

இதற்கு மேல் கதையை இங்கு கூற விரும்பவில்லை. சான்ஸ் கிடைத்தால் பார்த்து கொள்ளுங்கள். முக்கியமாக சண்டைக் காட்சிகள் அபாரம் என்று கூறுவது இந்த 61 வயது இளைஞன் டோண்டு ராகவன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/24/2007

61 வயது இளைஞன் டோண்டு ராகவனைக் கேள்வி கேட்போமா?

சில நாட்களுக்கு முன்னால் நண்பர் சுபமூகா அவர்கள் இட்ட இப்பதிவை எதேச்சையாகப் பார்த்தேன். அதில் ஆரம்பத்திலேயே அவர் "டோண்டு, வீ மிஸ் யூ ;-)" என குறிப்பிட்டிருந்தது எனது ஆவலைத் தூண்டியது. என்னடா இது நான் என்னை அறியாமலேயே தமிழ் மணத்தை விட்டு நீங்கி விட்டேனா, இங்கேத்தானே பலரை படுத்திக் கொண்டு இருக்கிறேன் என்று யோசித்து கொண்டே மேலே பார்த்தேன். அதில் சுபமூகா அவர்கள் தனது இன்னொரு பதிவைக் குறிப்பிட்டிருந்தார். அதில்தான் அவர் கேள்வி பதில் பகுதியை திறந்திருக்கிறார் என தெரிந்தது. கேள்விகளை அப்பதிவில் பின்னூட்டமாக போடும்படி கேட்டிருந்தார். ஆனால் என்ன ஆச்சரியம்? ஒரு பின்னூட்டமும் இன்னும் பப்ளிஷ் ஆகவில்லை. என் பங்குக்கு நானும் சற்று விஸ்தாரமான கேள்வியை இட்டிருந்தேன். அதை மட்டும் அவர் தனிப்பதிவாகவே போட்டு விட்டார்.

இப்போது சிறிதே வேறு விஷயம் பற்றிப் பேசுவோமா? இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பலர் பெயர் பெற்றிருந்தனர். எனக்கு தெரிந்து அமெரிக்காவில் இது முதலில் பிரபலம் ஆயிற்று. சமீபத்தில் அறுபதுகளில் ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையில் "Ask Henry" என்னும் கேள்வி பதில் பதிவு பர்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதில் வந்த ஹென்றி அப்போது ஒரு பதின்ம வயதினர். ஆகவே தன்னால் தன் சம வயதுடைய இளைஞர் இளைஞிகளை பற்றி கேள்வி கேட்டால் உண்மையான பதிலை அளிக்க இயலும் என்று வேறு கூறியிருந்தார். பல கேள்வி பதில்களும் அக்கட்டுரையில் வெளியாகி இருந்தன. அவற்றில் ஒரு ஜோடியை மட்டும் இங்கு என் ஞாபகத்திலிருந்து தருகிறேன்.

கேள்வி: என் பத்து வயது மகன் ரொம்ப முரடன். அம்மாவாகிய நான் என்ன சொன்னாலும் கேட்காமல் எதிர்வாதம் எல்லாம் செய்வான். ஆனால் சில நாகளாக "அம்மா நீயில்லாமல் எனக்கு உலகம் ஏது" என்றெல்லாம் கவித்துவமாக பேசுகிறான். என்னுடன் ரொம்ப இழைகிறான். என்ன விஷயமாக இருக்கும்?

ஹென்றி: அந்தப் பையன் ஏதோ பெரிய விஷமம் செய்திருக்க வேண்டும். அதை நீங்கள் எப்போது வேணுமானாலும் கண்டு பிடிப்பீர்கள் என்ற பயம் அவனுக்கு இருந்திருக்க வேண்டும். ஜாக்கிரதை.

இந்தியாவுக்கு வந்தால் மதர் இந்தியாவின் ஆசிரியர் பாபுராவ் படேல் நினைவுக்கு வருகிறார். அவர் கேள்வி பதில்களிலிருந்து ஒரு சாம்பிள்.
Q: What is the difference between a lover and a non-lover?
A: A lover kisses a miss, whereas a non-lover misses a kiss.

தமிழ்நாட்டிலோ கேட்கவே வேண்டாம். தமிழ்வாணன், சாவி, மணியன், அரசு, தராசு, பராசக்தி, சோ ஆகியோர் முதலில் நினைவுக்கு வருகின்றனர். அதில் சாவி அவர்கள் கேள்வி பதிலில் ஒரு ஜோடி என் மனதை நெகிழ்ச்சியடையச் செய்தது.

எழுபதுகளில் அவர் குங்குமம் பத்திரிகையின் முதல் ஆசிரியராக இருந்தார். அப்போதெல்லாம் எல்லா குங்குமம் இதழ்களும் அட்டைப் படத்தில் குங்குமம் எப்படியாவது காட்டப்பட்டு விடும். ஆனால் ஒரு இதழில் அது வரவில்லை. அது பற்றி எழுந்த கேள்வி பதில் குறித்து பேசும் முன்னால் சிறிது பின்புலத்தை கூறவேண்டும்.

அச்சமயத்தில் நடந்த ஒரு விமான விபத்தில் சாவி அவர்கள் மகள் ஜயாவின் கணவர் இறந்து விட்டார். சில காலம் கழித்து சாவி அந்த மகளுக்கு மறுமணம் செய்வித்தார். அதே விமான விபத்தில் இறந்த ஒரு பெண்மணியின் கணவர்தான் சாவியின் மகளை மணந்தார். இப்போது கேள்வி பதிலுக்கு வருவோம்.

கேள்வி: இவ்வார இதழில் குங்குமம் பார்க்க முடியவில்லையே, எங்கே அது?
சாவி: அதை என் மகள் ஜயாவுக்கு வைத்து விட்டேன்.

என்னை மிகவும் நெகிழச் செய்தது சாவி அவர்களின் இந்த பதில்.

அரசு அவர்களுக்கு சமீபத்தில் 1976-ல் நான் இட்ட கேள்வி இது:
"Fiddler on the roof படம் பார்த்து விட்டீர்களா? அதில் கதாநாயகனாக வரும் எனது அபிமான இஸ்ரவேல யூத நடிகர் டோப்போலின் நடிப்பு எப்படி?

அதற்கு அரசு அவர்களின் பதில் (நினைவிலிருந்து தருகிறேன், வார்த்தைகள் சற்று முன்னே பின்னே இருக்கலாம்). "இஸ்ரவேலர்கள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் நாடின்றி அலைந்ததை இக்கதையின் மூலம் இயக்குனர் கூற முயன்றுள்ளார். டோப்போலின் நடிப்பு அபாரம்".

சோ அவர்கள் கேள்வி பதிலுக்காகவே இந்த டோண்டு ராகவன் தனிப்பதிவு போட உத்தேசித்துள்ளான். ஆகவே இங்கு ஒரு ஜோடி மட்டும் கூறுகிறேன்.

கேள்வி: தமிழ்நாட்டில் பசு அம்மா என்று கத்தும். 'தாய்'லாந்தில் என்னவென்று கத்தும்?
பதில்: 'சித்தப்பா' என்று கத்தும். தாய்லாந்து போனால் கேட்டு சொல்கிறேன்.

இப்போது சுபமூகா விஷயத்துக்கு வருவோம்.
அவரிடம் கேட்ட ஒரு கேள்வியும் அதற்கு அவர் பதிலும்:

கேள்வி: உங்கள் காரில் உங்களுடன் உங்கள் தந்தை, தாய், மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். காரில் இடம் இல்லை. போகும் வழியில் த்ரிஷா, அசின், ஷ்ரேயா, நமீதா அனைவரும் ஒரு சேர நின்று லிப்ட் கேட்டால் யாரை இறக்கி விட்டு விட்டு யாருக்கு லிப்ட் கொடுப்பீர்கள்?

சுபமூகாவின் பதில்: த்ரிஷாவை எனக்குப் பிடிக்கும் என்பதை விட என் மனைவி, மகளுக்குப் பிடிக்கும் என்பதால், வேண்டுமானால் என்னையே இறக்கிவிட்டுவிட்டு அவரை ஏற்றிக் கொண்டு விடுவார்கள்.
அசின் - அவருக்கு லிப்ட் கொடுக்கவில்லை என்றால் it is a sin!
ஷ்ரேயா - இவருக்குக் கொடுக்கவில்லை என்றால் பெய்யும் 'மழை'யும் நின்று விடாதா?
நமீதா - யார் தான் கொடுக்க மாட்டார்கள்?! நான் கொடுக்கவில்லை எனில், கடவுளின் சாபம் 'நம் மீதா' இல்லையா சொல்லுங்கள்.

அது சரி, என்னை என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? குடும்பத்தினரில் ஒருவரை இறக்கிவிட்டு, யாரையாவது ஏற்றிக் கொள்ளும் அளவுக்கு நான் இறங்கி விட மாட்டேன். குடும்பத்தினர் எல்லோரையும் பத்திரமாக வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டு, திரும்ப வந்து எல்லோரையும் ஏற்றிக் கொண்டு செல்வேனாக்கும்!

மேலும் சுபமூகா எழுதுகிறார்: //நீங்களும் சுவாரசியமான கேள்விகளை அனுப்பலாம். பின்னூட்டத்தில் உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.//

ஆனால் மேலே குறிப்பிட்டபடி ஒரு பின்னூட்டமும் இன்னும் பப்ளிஷ் ஆகவில்லை. என் பங்குக்கு நானும் சற்று விஸ்தாரமான கேள்வியை இட்டிருந்தேன். அதை மட்டும் அவர் தனிப்பதிவாகவே போட்டு விட்டார்.

இப்போது சுபமூகாவுக்கு நான் இட்ட கேள்வி:
////குடும்பத்தினர் எல்லோரையும் பத்திரமாக வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டு, திரும்ப வந்து எல்லோரையும் ஏற்றிக் கொண்டு செல்வேனாக்கும்! //

நீங்கள் திரும்பி செல்லும்போது அங்கு நீங்கள் எதிர்பார்க்கும் யாரையுமே காணும்.

அங்கிருந்த டீக்கடைக்காரர் அந்தப் பக்கம் தன் காரில் (!) வந்த டோண்டு ராகவன் என்னும் அறுபது வயது இளைஞன் அந்த நால்வரையும் தன்னுடன் காரில் தள்ளிக் கொண்டு போய்விட்டான் என்று கெக்கெக்கே என சிரித்து கொண்டும், பொறாமை பெருமூச்சுடனும் கூறுகிறார்.

அப்போது உங்கள் மனநிலை:
1. டோண்டு ராகவனைப் பற்றி
2. த்ரிஷா, அசின், ஷ்ரேயா, நமீதா ஆகியோர் பற்றி என்னவாக இருக்கும்?

இந்த சிச்சுவேஷனுக்கு:
அ. கண்ணதாசன் மற்றும்
ஆ. வாலி என்ன பாட்டு எழுதுவார்கள்?


யாராவது அக்கேள்விக்கு இந்தப் பதிவில் பின்னூட்டம் ரூபத்தில் பதிலளிக்க முயற்சி செய்யுங்களேன். மேலும் ஏதாவது உங்கள் தரப்பிலிருந்து என்னைக் கேள்வி கேட்டாலும் மகிழ்ச்சியே.

இது பற்றி பேசும்போது நாட்டாமை அவர்கள் எனக்கு வைத்த கேள்விகளும் அவற்றுக்கு எனது பதில்களும் இப்பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/20/2007

அருமை நண்பர் என்றென்றும் அன்புடைய பாலா

(நிஜமாகவே) சமீபத்தில் அக்டோபர் 1, 2004 அன்றைக்கு தமிழ் வலைப்பூக்களுடன் எனக்கு பரிச்சயம் ஏற்பட்டது. அன்றுதான் கூகளின் தயவால் tamil blogs என்று தேடுபெட்டியில் தட்டச்சு செய்து இந்த உரலைப் பிடித்தேன். தமிழ்மணம் செயலாக வரும்வரை இதுதான் எனக்கு தமிழ்ப்பதிவுகளை பிடிக்க உதவியது. அதில் அகர வரிசையில் வரும்போது இந்தப் பதிவு கிடைத்தது. அப்போதுதான் என்றென்றும் அன்புடன் பாலா அறிமுகமானார்.

அப்பதிவில் நான் முதலில் பின்னூட்டம் இட்டது ஆங்கிலத்தில்தான். நான் பிறந்து 23 வயது வரை வாழ்ந்த பார்த்தசாரதி பெருமாள் கோவிலை உள்ளடக்கிய திருவல்லிக்கேணியும், எட்டு ஆண்டுகள் படித்த ஹிந்து உயர்நிலைப் பள்ளியுமே எனக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமைகளில் முக்கியமானவை. ஒரு 18 ஆண்டுகால இடைவெளி எங்களுக்குள் இருந்தாலும் இருவருக்குமே இந்த இரண்டு விஷயங்களை பற்றி பசுமையான நினைவுகள் இருப்பது எனக்கு மிகவும் பிடித்தது. எனது இந்தப் பதிவில் அவரது பதிவுகள் பற்றி எனது எண்ணங்களை கூற ஆவல்.

முதலில் சிறுவயது சிந்தனைகள். அது சம்பந்தமாக அவர் போட்டவை என்னுள் உடனடியாக எனது நினைவுகளை எழுப்பின. அதுவும் ஹிந்து உயர்நிலை பள்ளியில் தன் நண்பன் வெகுண்டு பற்றி அவர் எழுதியது மிக அருமை. ஒரே முறைதான் வாத்தியாரிடம் அடிவாங்கியிருப்பதாக அவர் எழுதியதற்கு நான் இட்டப் பின்னூட்டம் இதோ (அப்போது அது ஒரு கற்பனை கதை என்று எனக்கு அப்போது தெரியாது):

"மிக அருமையான வலைப்பூ. நீங்கள் குறிப்பிட்டுள்ள ராமசாமி ஐயங்கார் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை 1962-க்குப் பிறகு நம் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்திருக்கலாம். நான் படித்த போது இருந்த ஆசிரியர்கள் உங்கள் காலத்தில் அனேகமாக எல்லோரும் ஓய்வுப் பெற்று சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒரே ஒரு முறைதான் அடிவாங்கியிருக்கிறீர்களா? ரொம்ப அதிர்ஷ்டம் உங்களுக்கு. என் எல்லா வகுப்புகளிலும் முதல் ஐந்து மாணவர்களுக்குள் நான் இருந்து வந்தாலும் தினசரி ஒரு முறையாவது பெஞ்சு மேல் நின்றிருக்கிறேன் அல்லது அடி வாங்கியிருக்கிறேன் அல்லது வெளியே அனுப்பப் பட்டிருக்கிறேன் அல்லது .... விடுங்கள் அதைப் பற்றி இப்போது என்ன!
Comment by dondu(#4800161) at 4:10 PM, November 21, 2004"

புத்தகம் எடுத்து வராத எல்லோரும் வெளியே செல்லும்படி ஆசிரியர் டி.ராமானுஜம் கூற, அவ்வாறு செல்பவர்களில் நம்ம பாலாவும் இருக்கக் கண்டு மேற்படி ஆசிரியர் எல்லோரையும் மன்னிக்க, அதைக் கண்டு மாணவர்கள் பொரும என்றெல்லாம் சுவாரசியமாக எழுதியுள்ளார் பாலா. சாதாரணமாக நான் படித்த காலங்களில் அம்மாதிரி மாணவனை பிறகு கிரௌண்டில் வைத்து மற்ற நண்பர்கள் அன்புடன் தர்ம அடி (செய்முறை கீழே கூறப்பட்டுள்ளது) கொடுப்பார்கள். பாலா இங்கு அது நடந்ததாக எழுதவில்லை. அதிர்ஷ்டக்காரர்.

அவர் நினைவுகூர்ந்த சிறுவயது சிந்தனைகள் எல்லாமே அருமை. அதிலும் ஒரு பேப்பர்கார பையன் செஸ் ஆடி எல்லோரையும் அசத்தியது மனதில் நிற்கிறது. அரும்பு மீசை காலத்திலேயே ஒரு காதல் கதையும் எழுதியுள்ளார்.

வைணவ திவ்யதேசங்கள் பற்றிய அவரது பதிவுகள், பிரபந்தம் பற்றிய பதிவுகள், மாமனிதர்கள் பற்றி எழுதியவை ஆகியவை பற்றி கூறவும் வேண்டுமோ.

பாலா அவர்கள் சமூக சிந்தனை நிரம்பியவர். இட ஒதுக்கீடு பற்றி அவர் போட்ட பதிவுகள், மற்றும் கிராமத்து அனானி பதிவுகள், ஏழை மாணவி கவுசல்யா, மற்றும் அவசர சிகிச்சை தேவைப்பட்ட குழந்தை லோகப்பிரியா ஆகியோருக்காக அவர் செய்த முயற்சிகள் ஆயிரம் அஸ்வமேத யாகங்களுக்கு சமம்.

அதற்காக பாலா அவர்கள் சீரியசான முகபாவத்துடன் இருந்து கொண்டு எல்லோரையும் அறுத்துத் தள்ளிவிடுவார் என நினைத்தால் அது மிகப் பெரிய தவறு. பிறருக்காக உருகும் அதே பாலா சில சமயம் இரக்கமின்றி நடந்து மற்றவர்களை தனது கடி பதிவுகளால் உசுப்பி விடுவதும் உண்டு.

அவர் இம்மாதிரியெல்லாம் ஹிந்து உயர்நிலை பள்ளியில் படிக்கும்போது நடந்து கொண்டிருக்க மாட்டார் என நினைக்கிறேன். அங்கெல்லாம் இம்மாதிரி நடத்தைக்கு மேலே நான் குறிப்பிட்ட தர்ம அடிதான். நான் படிக்கும் சமயம் அதன் செய்முறை பின்வருமாறு. அதை வாங்க வேண்டியவன் தேமேனென்று கிரௌண்டில் நின்று கொண்டிருப்பான். திடீரென புயல் வேகத்தில் ஒரு பையன் இவன் பின்னால் ஓடிவந்து தலைமேல் துண்டு போட்டு மூடி "தர்ம அடீஈஈ" என்று கத்த அங்கு ஓடிவரும் மற்ற மாணவர்கள் சரமாரியாக அடித்து விட்டு ஓடுவர். அடிவாங்கியவன் திக்குமுக்காடி பார்ப்பதற்குள் எல்லோரும் மாயமாக மறைந்திருப்பர்.

கிரிக்கெட் பற்றியும் பல பதிவுகள் போட்டுள்ளார். அதன் தொழில்நுட்பங்கள் என் அறிவுக்கப்பாற்பட்டவை. ஆகவே ஜூட் விடுகிறேன்.

இப்பதிவுகள் பாலாவின் மற்ற பரிமாணங்களைக் காட்டுகின்றன.

இப்போது நான் கொடுத்த பல சுட்டிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளைக் காட்டும். ஆகவே நான் சுட்டிய மொத்தப் பதிவுகள் 50-ஐ சுலபமாக தாண்டும். ஏன் இந்த எண்ணை குறிப்பிட்டேன் என்பதை நண்பர் பாலா அவர்கள் புரிந்து கொள்வார் அது போதும்.

என்னை பாலா கவர்ந்ததற்கு பல தனிப்பட்ட காரணங்கள் உண்டு. அவற்றில் பலவற்றை ஏற்கனவேயே தொட்டு விட்டாகி விட்டது. இன்னும் ஒன்றையும் கூறிவிடுகிறேன். நான் போடு ஹைப்பர்லிங்க் பதிவுகளை படித்தவர்கள் தங்கள் மனதுக்குள்ளேயே தங்கள் நம்பிக்கையின்மையை வைத்து கொண்டிருப்பார்கள். அவற்றில் ஒன்று பாலா வீட்டிலேயே நடந்தது என்பதற்கு அவரும் ஒரு சாட்சி என்பதால் அவற்றின் நம்பகத்தன்மை காக்கப்பட்டன என்பதாலேயே அவரை எனக்கு பிடிக்கும்.

இவ்வளவு நல்லபடியாக எழுதி விட்டு ஏதாவது குறை கண்டுபிடிக்கலாம் என நினைத்தால் ஒன்றும் கண்டு பிடிக்க இயலவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/18/2007

தவிர்க்க வேண்டிய நபர்கள் - 5

இந்த தவிர்க்க வேண்டிய நபர்கள் பற்றிய ஐந்தாம் பதிவில் ஒரு அடி மேலே எடுத்து வைக்கிறேன். சிலர் கேட்கலாம், ஐயா, நான் தவிர்க்க வேண்டிய நபர் எனக் கருதுபவர் என் அலுவலகத்தில் எனது டீமில் எனது சக உறுப்பினர். அவர் வேலை என்னவென்றால் எந்தப் பிரச்சினை வந்தாலும் தான் அதற்கு பொறுப்பில்லையென்றும், குழுவில் உள்ள மற்றவர்தான் காரணம் என்றும் எப்போதும் கூறிக் கொண்டேயிருப்பார். அவரது கூற்றுக்களில் சில உதாரணங்கள்:

1. பிரச்சினை வந்த அன்று நான் லீவில் இருந்தேன். நான் இருந்திருந்தால் அது நடக்காமல் தடுத்திருப்பேன்.

2. இந்த கோப்பு பற்றி பேசும்போது நீங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது என கூறினீர்கள். அதை நான் நம்பி விட்டேன்.

3. சரி நாந்தான் சொன்னேன் எல்லாம் சரியாக இருக்கிறது என்று. நீங்கள் அதை சரி செய்து பார்த்திருக்க வேண்டாமா? எனக்கு இந்த கோப்பை கொடுத்தவர் எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொன்னார். அவரை நான் நம்பி விட்டேன். (இது எப்படி இருக்கு?)

இந்தப் பதிவில் நான் அவரைப் பற்றி மட்டும் பேசப்போவதில்லை. அவர் தவிர்க்க வேண்டியவர்தான், ஆனால் முடியாது. அதை எப்படி சமாளிப்பது? இந்தக் கேள்விக்கு என்னிடம் முழு விடையில்லை. அதற்கு சகபதிவர்கள் ஏதாவது விடையளிக்கலாம் என்ற எண்ணத்தில் இப்பதிவை போடுகிறேன்.

இப்போது இப்பதிவை போடுவதற்கு முக்கியக் காரணமே நேற்று (17.02.2007) ஒரு கம்பெனியில் ஆன்சைட் மொழிபெயர்ப்பு வேலைக்கு போன இடத்தில் நான் எதிர்க்கொண்ட இந்த நபர்தான் காரணம்.

நேற்று நான் காலை 9 மணிக்கு மறைமலை நகரில் உள்ள அவரது அலுவலகத்துக்கு பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு சிலவரைபடங்களை மொழிபெயர்க்க வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். நான் முதலிலேயே கூறினேன், செக்யூரிடியிடம் நான் வருவதை எழுத்துமூலமாகத் தெரிவிக்கும்படி. ஏனெனில் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற அக்கம்பெனியில் அவ்வளவு சீக்கிரம் உள்ளே சென்று விடமுடியாது. கம்பெனியிலிருந்து சம்பந்தப்பட்ட நபர் வந்து அழைத்து செல்ல வேண்டும். உள்ளே நடமாட்டமும் மிகக்கட்டுப்பாட்டில் இருக்கும். இவரும் சரி என்று கூறி காலை ஒரு செக்யூரிட்டியிடம் கூறியுள்ளார். ஆனால் எனது கார் சரியாக 8.55க்கு கம்பெனி வளாகத்தின் உள்ளே வந்தபோது அந்த செக்யூரிட்டி இல்லை. ஆகவே உள்ளே செல்வதில் தாமதம். உள்ளே போனதுமே அவர் என்னிடம் தான் ஏற்கனவே கூறியிருந்ததாகவும், ஆனால் செக்யூரிடியினர் சொதப்பினர் எனக் கூறினார். நான் இது குறித்து கவலைப்படவில்லை. அது கம்பெனியின் உள்பிரச்சினை என விட்டுவிட்டேன். (அரைமணி மீட்டர் அதிலேயே ஓடிவிட்டது).

பிறகு கணினியை ஆன் செய்து வரைபடத்தைத் திரையில் வரவழைத்தார். அதன் மென்பொருள் அருமையானது. A0 அளவு வரைபடத்தில் கனினி திறையில் முழுமையாக A4 அளவில் சுருக்கி காண்பிக்கும். பூதக்கண்ணாடி ஐக்கானை அழுத்தி, குறிப்பிட்ட பகுதியை தெரிவுசெய்து க்ளிக் செய்தால் அந்த இடம் பலமடங்கு பெரிதாக்கப்பட்டு, படிக்க முடியும். பிறகு டெக்ஸ்டை உள்ளிடும் ஐக்கானை அழுத்தி, டெக்ஸ்ட் பாக்ஸ் போல செய்து, அதில் ஆங்கில மொழிபெயர்ப்பை தட்டச்சு செய்ய வேண்டியதுதான் பாக்கி. இதில் நான் வேலை செய்வது ஐந்தாம் முறை. அருமையான மென்பொருள். சங்கடம் என்னவென்றால், அவ்வாறு மொழிபெயர்ப்பதை சேமித்து வைப்பதுதான். 'சேமி', 'இப்படிச் சேமி' என்பது போல எளிதானதில்லை அது. எல்லோரும் மன்றாடிப் பார்த்து விட்டார்கள். ஆக என்ன நடந்ததென்றால், ஒவ்வொரு முறையும் ஒரு பக்கத்தை நான் தட்டச்சு செய்து முடித்ததும் அதை சேமிப்பதற்கென்றே ஒருவர் வரவேண்டியிருந்தது. இந்த அழகில் அக்கம்பெனியில் அது பல கணினிகளில் வெவ்வேறு வெர்ஷன்களில் இருந்தது. அவற்றை சேமிக்கும் முறையும் வெர்ஷனுக்கேற்ப மாறுபட்டது. ஒரே கலாட்டாதான்.

நானும் அதைபற்றி எனது மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் ஒரு பதிவு போட்டு சக மொழிபெயர்ப்பாளர்களிடம் உதவி கேட்டிருந்தேன். இன்றுவரை அதற்கு பதிலில்லை. நான் கூறிய ஆலோசனை என்னவென்றால் அந்த வரைபடங்களை அனுப்பியவரையே அதை கேட்கலாமேயென்று. கடைசியில் அப்படித்தான் நடந்திருக்கிறது. நேற்று நான் போய் பார்த்தவர் எனக்கு சேமிப்பு எப்படி செய்வது என்பதைக் காண்பித்தார். அவருக்கும் தடுமாற்றம்தான். அதிலேயே ஒரு மணி நேரம் போய்விட்டது. பிறகு வேலை ஆரம்பித்தது. செய்து முடித்தேன் என வைத்து கொள்ளுங்கள்.

ஆனால் இப்போது இந்த மனிதரை பற்றி கூறவேண்டும். என்னிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கூறியதையும் எனது எதிர்வினைகளையும் இப்போது பாருங்கள்.

அவர்: நீங்கள் ஐந்தாம் முறையாக இதில் வேலை செய்கிறீர்கள் என்பதால் உங்களுக்கு இதில் நிபுணத்துவம் உண்டு என நினைத்து விட்டேன்.
நான்: என்ன சார் விளையாடுகிறீர்களா? செய்தவேலையை எப்படி காப்பாற்றுவது என்பதுதானே இத்தனை முறையும் உங்கள் கம்பெனியில் எல்லோருக்குமே பிரச்சினையாக இருந்திருக்கிறது? இதில் எனக்கு மட்டும் நிபுணத்துவம் எப்படி வந்திருக்க முடியும்?

அவர்: சரி வேலையை ஆரம்பியுங்கள். ஆனால் இணைய தொடர்பு கிடையாது.
நான்: அது அவசியம் ஆயிற்றே. இல்லையெனில் ஆன்லைன் அகராதி, எனது மொழிபெயர்ப்பு தலைவாசலுக்கு சென்று ஆன்லைன் உதவி பெறுவது எல்லாம் பாதிக்கப்படுமே?
அவர்: இணையத் தொடர்பு வேண்டுமென்று நீங்கள் கூறவேயில்லையே?
நான்: அதுபற்றி எனது ஆஃபர் லெட்டரில் குறித்துள்ளேனே. மேலும் இத்தனை முறையும் அதை கொடுத்துத்தானே வந்திருக்கிறீர்கள்?
அவர்: நான் ஆஃபர் லெட்டரை பார்க்கவேயில்லை
(இது முழு பொய். எனது அக்கவுண்டை முழுமையாக டீல் செய்யும் எனது தொடர்பு அதிகாரி அவர் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை).
நான்: பரவாயில்லை. என்னிடம் எனது பேப்பர் அகராதிகள் உள்ளன. என்ன, அவை சற்று பழையவை. ஆன்லைன் அகராதி இற்றைப்படுத்தப் பட்டிருக்கும். மொழிபெயர்ப்பின் தரமும் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கும்.

அவர்: நீங்கள் இன்றைக்கு எவ்வளவு வார்த்தைகள் மொழிபெயர்த்தீர்கள் என்பதை கூட்ட வேண்டும்.
நான்: அவ்வாறு செய்வது சரியாக இருக்காது. நேரடியான வெறுமனே மொழிபெயர்ப்பு என்னும் போதுதான் வார்த்தை எண்ணிக்கை கணக்குக்கு வரும். அது நான் வீட்டில் எனது கணினியில் செய்யும் டெக்ஸ்டை மொழிபெயர்ப்பு செய்யும்போது. இங்கு உங்கள் நிறுவனத்துக்கு வந்து வேலை செய்தபோது, உங்கள் மென்பொருள் என்னவெல்லாம் தன்ணிகாட்டியது என்பதைப் பார்த்தீர்கள்தானே. அந்த நேரவிரயத்துக்கெல்லாம் யார் ஜவாப்? மேலும் இங்கு மணிக்கு இவ்வளவு என்ற கணக்கில்தான் ரேட். இந்த இடத்தில் வார்த்தைகள் அடிப்படையில்லை.
அவர்: அப்படியா எனக்கு அதை யாரும் கூறவில்லையே.
நான்: என்ன சார் எனது இம்மாதிரியான வேலைகளுக்கெல்லாம் பில்களை உங்களிடம் நேரடியாகத்தானே கொடுத்துள்ளேன். அதில் இவ்வளவு மணி நேரம் என்றுதானே இருந்திருக்கிறது. நீங்களும் நான் குறிப்பிட்ட மணியளவு சரியாக இருக்கிறது என்பதை உறுதி செய்துதானே அனுப்பினீர்கள்? அதன் பக்கத்திலேயே மணிக்கு இவ்வளவு ரூபாய்கள் என்று இருக்குமே? பார்க்கவில்லை?
அவர்: பார்க்கவில்லை. நான் வெறுமனே மணி நேரம் சரியாக உள்ளதா என்றுதான் பார்த்தேன். மீதியயெல்லாம் பார்க்கவில்லை. ஆனாலும் நீங்கள் சொல்லுவதை நம்புகிறேன்.
நான் (மனதுக்குள் 20 வரை எண்ணிவிட்டு): நம்பிக்கைக்கு நன்றி சார். எனது பழைய பில்களின் போட்டோ காப்பிகளை என்னிடம் காட்டினீர்களே, அவற்றை எடுத்து பாருங்களேன்?
அவர் (அவசரம் அவசரமாக): நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

அவர் மாலை 5.30 க்கு வேலை இன்றைக்கு இதற்கு மேல் வேண்டாம் எனக் கூறினார். நானும் அவரிடம் வேலை முடித்த வரைபடங்களின் நகலைக் கொடுத்து வேறு ஏதாவது இருக்கிறதா எனப் பார்க்குமாறு கேட்டேன். பார்த்தாகி விட்டது எனக் கூறினார். நானும் 8 மணி நேரத்துக்கான பில்லை போட்டு விட்டு (அரை மணி நேரம் லஞ்ச் நேரம் பில்லில் இடவில்லை) கிளம்பும் ஆயத்தங்கள் செய்தேன். அவர் மறுபடியும் லிஸ்டை பார்த்து விட்டு தேள் கொட்டிய பாவனையில் துள்ளிக் குதித்தார்.

அவர்: ஐயையோ, முக்கியமாக இரு வரைபடங்கள் விட்டுப் போய் விட்டனவே. எல்லாம் முடிந்ததாக நீங்கள் கூறியதை நம்பிவிட்டேன்.
நான் இதற்கு பதில் சொல்லாது அவரைக் கூர்ந்து பார்த்தேன். அவருக்கே தான் சொன்னது ஓவர் எனப் பட்டது போலிருக்கிறது.

அவர்: சரி, இப்போது நீங்கள் அவற்றையும் மொழிபெயர்க்கிறீர்களா?
நான்: சார் அவை பெரிய வரைபடங்கள். மொழிபெயர்க்க இரண்டு மணிகளுக்கு மேல் ஆகும். என்ன செய்யலாம்? இப்போதே மணி 5.45.
அவர்: பரவாயில்லை சார் தயவு செய்து செய்யுங்கள்.
நான்: சரி செய்கிறேன். இப்போது நான் கொடுத்த பில்லை திருப்பித் தாருங்கள். வேறு பில் வேலை முடிந்ததும் தருகிறேன்.

அவரும் அதைத் தந்தார். பிறகு என்ன அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு புயல் வேலைதான். எல்லாம் முடிந்து 10 மணிநேரத்துக்கு பில். பிறகு ஒன்றாக கிளம்பி வெளியில் வந்து அவரை எனது காரில் குரோம்பேட்டை வரைக்கும் அழைத்து சென்று டிராப் செய்தேன்.

இவரைப் போன்றவர்கள் தமது கீழே, அதே நிலையில், மேலே வேலை செய்யும் எல்லாறுக்குமே தலைவலி தருபவர்கள். அதாவது பொதுவான ஒருபிரச்சினைக்கு தாங்கள் பொறுப்பில்லை என்று நிலைநிறுத்துவதிலேயே துடியாக இருப்பார்கள். அத்துடன் மற்றவர்கள்தான் பொறுப்பு என்பதையும் சமயம் வரும்போதெல்லாம் கூறிக் கொண்டிருப்பார்கள். இவர்களை தவிர்க்கவோ இயலாது. ஆகவே எதிர்க் கொள்ள வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/13/2007

மொழிபெயர்ப்பாளர் - பொறியாளர்

சாதாரணமாக ஃபிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் எம்.ஏ. செய்திருப்பவர்களை பார்த்தால் அவர்கள் ஏதாவது பல்கலை கழகத்தில் (உதாரணத்துக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்) ப்ளஸ் டூவுக்கு பிறகு மூன்றாண்டு காலம் பி.ஏ. பிறகு எம்.ஏ. என்று படிக்கிறார்கள். இதன் தாக்கம் என்ன? பின்னால் பார்ப்போம். அதற்கு முன்னால்:

பல கம்பெனிகளில் ஜெர்மன், பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக ஆள் எடுக்கும் போது, வேலைக்கான விளம்பரங்களில் முக்கியமாகக் கேட்பது சம்பந்தப்பட்ட மொழியில் எம்.ஏ. பட்டம் இருக்க வேண்டும் என்பதுதான். பிறகு வேண்டா வெறுப்பாக தொழில் நுட்ப சம்பந்தமான கட்டுரைகளை மொழிபெயர்த்த அனுபவம் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுவார்கள்.

இது பல விபரீதங்களுக்கு வழி வகுத்தது. ஜெர்மனிலோ ஃபிரெஞ்சிலோ முதல் ரேங்கில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்கள் பல கம்பெனிகளுக்கு மொழிபெயர்ப்பாளர்களாக வந்தனர். வந்த சில நாட்களிலேயே அவர்கள் சாயம் வெளுத்தது. ஏனெனில், பொது அறிவில் அவர்கள் நிலை ப்ளஸ் டூ மாணவனது நிலையாகவே இருக்கும். அதுவும் அந்த இரண்டு ஆண்டுகள் ஆர்ட்ஸ் க்ரூப் எடுப்பவர்கள்தான் சாதாரணமாக மொழிகளை கற்க செல்வார்கள். சுத்தம்.

ஐ.டி.பி.எல்லில் என்னை மொழிபெயர்ப்பாளனாக எடுக்கும் முன்னால் அப்படித்தான் ஆயிற்று. எனக்கு முன்னால் அம்மாதிரி ஜே.என்.யூ. வில் எம்.ஏ. பிரெஞ்சு வெற்றிகராமாக முடித்த ஒரு பெண்மணியை செலக்ட் செய்தனர். அவரது திறமைக் குறைவு சில நாட்களிலேயே வெளிப்பட்டது. பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு அகராதி எல்லாம் வைத்து ஒப்பேற்றி விட்டார். ஆனால் ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கு தொழில் நுட்ப சம்பந்தப்பட்ட பேப்பர்களை மொழி பெயர்க்கும்போது முழி பிதுங்கியது. முதலில் அல்ஜீரியாவுக்கு அனுப்பிய பேப்பர்கள் எல்லாம் அவற்றில் உள்ள பிரெஞ்சு அபத்தமாக இருந்தது என முகத்தில் அடிக்காத குறையாகத் திருப்பினர். பிறகு ஐ.டி.பி.எல். அம்மாதிரி ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கான மொழிபெயர்ப்புகளை மார்க்கெட்டில் அவுட்சோர்சிங் முறையில் செய்வித்தனர், ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவில். எல்லோருக்கும் ஒரே கோபம். அப்பெண்மணியின் நிலைமையோ பரிதாபம். பிறகு அவர் திருமணம் முடிந்து சென்னைக்கு போய் விட்டார், வேலையையும் விட்டார்.

இப்போதுதான் நான் தளத்திற்கு வந்தேன். செலக்ட் ஆனேன். என்னை இஞ்சினியராக வேறு எடுத்து கொண்டார்கள். அது பற்றி இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். எனது பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் ஒன்றுகூட புரியவில்லை என திருப்பப்படவில்லை. அது பற்றி இப்பதிவில் விவரமாக கூறியிருக்கிறேன். இங்கு நான் இதையெல்லாம் சொல்வதற்கு காரணமே டெக்னிகல் விஷயங்களை மொழிபெயர்க்க முக்கியமாக டெக்னிகல் பின்னணி அவசியம் என்பதே. அவற்றை படித்து புரிந்து கொள்ள ஒரு தனி மனநிலை தேவைப்படுகிறது. ஆகவே இம்மாதிரி வேலைகளுக்கு தொழில்நுட்ப அறிவுடையவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களுக்கு மொழியறிவும் தேவை என குறிப்பிடுதல் அவசியம்.

ஆனால் நான் மொழிபெயர்ப்பாளன் மட்டும் அல்ல பொறியாளரும் கூட. அதுவும் க்ளாஸ் 1 அதிகாரி. என்னை எப்படி நடத்துவது என்பதில் முதலில் குழப்பம். பிறகு சுதாரித்து கொண்டு மிக்க மரியாதையுடன் நடத்தினர். இத்தனைக்கும் காரணம் இந்த டபிள் டெசிக்னேஷனே. CPWD யில் இருந்தபோது எனது மொழியறிவு எனக்கு எனது மேலதிகாரிகளிடமிருந்து மரியாதையைத் தேடித் தந்ததென்றால், ஐ.டி.பி.எல்.லிலோ நிலைமை தலைகீழ்.

துபாஷி வேலையில் இது இன்னும் அதிக அளவில் உணரப்பட்டது. பிரெஞ்சு அல்லது ஜெர்மன் மட்டும் பேசும் பொறியாளர்களுக்கு ஈடு கொடுக்க முடிந்தது. ஒரு முறை ஒரு சிறு டெஸ்ட் சம்பந்தமாக மண்டை உடைந்தது. அவரவர் தங்கள் வேல்யூக்களை கம்பேர் செய்து கொண்டிருந்தனர். ஒரு சைட் 98 என்று கூறிய இடத்தில் இன்னொரு கட்சி 7 என்று கூறியது. நான் சட்டென்று பேப்பர்களை தரச்சொல்லி பார்த்தேன். பிறகு கேஷுவலாக கூறினேன், ஒரு சைட் கிலோக்ராம்/சதுர செண்டிமீட்டரில் குறித்திருந்தது, இன்னொரு சைட் பவுண்ட்/சதுர அங்குலத்தில். ஆனால் இரு சைடுகளுமே நம்பர் மட்டும் எழுதி வைத்துக் கொண்டிருந்தனர். ஆகவே, இரண்டுக்கும் ஒரே மதிப்புதான் என்று. 1Ksc = 14 lbs-sq.inch.

இப்போதுதான் நான் எதிர்பார்க்காதது நடந்தது. கம்பெனியின் சேர்மன் அகர்வால் என்னை ஓரமாக அழைத்து சென்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார். அவர் சொன்னார், "என்ன ராகவன், அது எங்களுக்கு தெரியாதா? அதை வைத்து கிட்டத்தட்ட அரை மணியாவது கழிக்க எண்ணியிருந்தோம், ஏனெனில் அவர் இன்னொரு அசௌகரியமான விஷ்யத்தை துறுவி பார்க்க இருக்கிறார். இன்று தப்பித்துவிட்டு நாளை ஒப்பேற்றி விடலாம் என்று நினைத்தேனே" என்று புலம்பினார். நான் அசடு வழிய வேண்டியதாயிற்று. அவர் பயந்தபடியே நடந்தது. அவ்வப்போது பத்தவச்சுட்டியே பரட்டை என்ற ரேஞ்சில் என்னை பார்த்து மானசீகமாக புலம்புவதை பார்த்தேன். விசிட்டரின் பேச்சை கவனிப்பது போன்ற முகபாவத்தை வைத்து கொண்டு அவரது பார்வையை தவிர்த்தேன்.

ஆனால் மனிதர் நல்லவர். அவரே, "நீங்கள் என்ன செய்திருக்க முடியும்? உங்களுக்குள் இருந்த பொறியாளன் சமய சந்தர்ப்பம் தெரியாது வந்து விட்டான்" என்று சமாதானமும் செய்தார். ஆனால் இதில் தமாஷ் என்னவென்றால், நான் பொறியாளன் என்பதாலேயே நான் கேட்ட தொகையை கொடுத்து என்னை நியமித்திருந்தனர். இதுதான் சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்வது என்பதோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/12/2007

ஆரவாரப் பேய்களெல்லாம் - டோண்டுவின் யோம்கிப்பூர்

கடந்த ஒருவாரமாக மனதில் ஒரு போராட்டம். அது என்ன என்பது தமிழ்மண பக்கங்களை இந்த காலக் கட்டத்தில் பார்த்தவர்களுக்கு புரியும்.நானாக தேடிக் கொண்டதுதான் அது என்பதை முதற்கண் கூறிவிடுகிறேன். திடீரென முரளி மனோஹர் வெளிப்பட்டு விட்டான். நல்ல வேளையாக அவன் தேவை இனிமேல் இல்லை என்ற நிலையெடுத்து எனது வலைப்பூவில் மாறுதல் செய்து கொண்ட அடுத்த நாள். எனக்கு ஆதரவளிக்கவே நான் இந்தப் பதிவில் கொடுத்த ஆலோசனையின்படி வந்த நண்பர்களின் ஆலோசனை பெற்று கொண்டு செய்த முடிவு அது. அதற்கு முன்னால் முரளி மனோஹர் வெளியே வந்திருந்தால் கதை கந்தர கோளமாக ஆகியிருக்கும். நல்ல வேளை.

இப்போது டோண்டு ராகவனது மூன்றாம் யோம் கிப்பூருக்கு செல்லும் முன்னால் சில வார்த்தைகள்.

சமீபத்தில் 1962-ல் வெளிவந்த "ஆலய மணி" படத்தை இன்றும் கூட யாரும் மறக்கவில்லை. அப்போது பிறந்திராதவர்களின் குழந்தைகள் கூட இப்படத்தின் பாடல்களை இன்றும் விரும்பி கேட்கின்றனர். முதலில் அதை இங்கு முழுமையாக போடுகிறேன்.

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து
பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து
ஆட்டி வைத்ததடா

ஆட்டி வைத்த மிருகம் இன்று
அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில்
கோயில் கொண்டதடா

ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா

தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா

எறும்புத்தோலை உரித்துப் பார்க்க
யானை வந்ததடா - நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க
ஞானம் வந்ததடா

பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்
இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி
வந்து விட்டதடா!

என்ன அருமையான பாடல், சிம்மக்குரலோன் சிவாஜியின் நடிப்புடன்! சகபதிவர் SP.VR.சுப்பையா அவர்கள் இப்பாடல் பற்றிய இந்த அருமையான பதிவுக்கும் நன்றி. இப்பாடலில் வரும்

ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா

தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா

என்ற அடிகளே இப்பதிவின் அடிப்படை. இதுவும் கடந்து போகும் என்றாலும், அது நல்லபடியாக கடந்து போக வேண்டாமா. அந்த வேலையில்தான் எனது வலைப்பூ நண்பர்கள் சிலர் குதித்தனர்.

தமிழ்மணம் நன்கு அறிந்த ஒரு பதிவர் முந்தாநேற்று திடீரென சேட்டில் வந்தார். அருமையான ஆலோசனை தந்தார். அதிலும் இந்த சேட் அனுபவம் வேறு வகையிலும் புதிதாக இருந்தது. அவர் பேச நான் ஸ்பீக்கர் மூலம் கேட்டேன். ஆனால் என்னால் மைக்கை என்னுடைய தட்டுமுட்டு சாமான் குவியலிலிருந்து கண்டு பிடிக்க இயலவில்லை. ஆகவே அவர் இன்னொரு ஆலோசனை தந்தார். தான் பேசுவதாகவும், நான் தட்டச்சு செய்து பதிலளிக்கலாம் என்பதுதான் அது. அவர் தந்த ஆலோசனையும் இந்தப் பதிவுக்கு ஒரு காரணம். அவருக்கு என் நன்றி.

நேற்று பிற்பகல் இன்னொரு பதிவர் வந்து அதே ஆலோசனையைத் தந்தார். அவருக்கும் என் நன்றி. அதைவிட முக்கியம் எதிர்த்தரப்பில் இருந்தாலும் என்னிடம் அன்பாக பழகிய ராஜா வனஜ் அவர்களிடம் வெற்றிகரமாக எனது நிலையை சொல்லி அவரது மனவருத்தத்தை போக்கியது ஆகும். அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது கடைசியில் 'எனது கார்' வலைப்பதிவர் மீட்டிங்கிற்கு என்னை அழைத்து செல்ல எப்போது வேண்டுமானலும் வரலாம் எனக் கூற வெடிச்சிரிப்புடன் முகமன் கூறி போனை வைத்தார். இந்த முழு முரளி மனோஹர் விவகாரத்தில் எனக்கு மிக வருத்தம் அளித்தது இந்த மனவேற்றுமைதான். அதுவும் சற்று பொறுமையுடன் செயல்பட்டதின் மூலம் தீர்த்து கொண்டது நான் போடவிருக்கும் இந்தப் பதிவை உடனே போடும்படி செய்துள்ளது. நல்ல காரியத்தை தள்ளிப் போடுவானேன். இந்த விஷயத்தில் நான் முரளி மனோஹராக இருந்து செல்வன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் போட்ட பின்னூட்டத்தை அப்படியே தேவையான சுட்டிகளுடன் தனது ஜிமெயிலில் வந்ததை எனக்கு அப்படியே நான் கேட்டு கொண்டதின் பேரில் அனுப்பி வைத்தார். அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து செல்வன் அவர்களுடைய மின்னஞ்சல் ஐடியை மட்டும் மறைத்து (சூடு கண்ட பூனை) நான் ராஜா வனஜுக்கு அனுப்பித்ததுநிலைமை சரியாக பெரிதும் உதவியது. அந்தச் சொல்லின் செல்வனுக்கும் நன்றி.

(சீக்கிரம் விஷயத்துக்கு வருமாறு முரளி மனோஹர் கூச்சலிடுகிறான்). இதோ வந்தேன்.

முதற்கண் என்னால் மனவருத்தம் அடைந்தவர்கள் எல்லோரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். முக்கியமாக எனக்கு பிரச்சினை ஆரம்பித்ததிலிருந்து பின்னூட்டம் இட்டு அதனால் அசிங்கமாக தாக்கப்பட்டவர்கள் என்னை மன்னிக்குமாறு கேட்டு கொள்கிறேன். அவற்றில் முக்கியமானவர்கள் கோபமான இளைஞன் முத்துக்குமரன், பதிவர் தமிழச்சி, நாமக்கல் சிபி (என் வருத்தத்தை உணர்ந்து ஒரு பதிவையே எடுத்தவர்), செந்தழல் ரவி (அடையாறிலிருந்து ட்ரைடெண்ட் ஹோட்டல் வரை நான் எனது காரில் செல்லும்போது என்னிடம் தொலைபேசியில் எஸ்.டி.டி. பேசியவர்), டி.பி.ஆர்.ஜோசஃப், லக்கிலுக், பால பாரதி, என்றென்றும் அன்புடன் பாலா (என் நண்பன் கிருஷ்ணன் என்னும் செர்வாண்டஸ் செய்த ஒரு அசட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்), துளசி மேடம், ஜெயராமன், ஓகை, மரபூரார், தன் விடாத முயற்சியால் என்னை போலியிடமிருந்து காப்பாற்றிய முத்து தமிழினி (அவர் பற்றிய பதிவு படித்திருப்பீர்கள்) ஆகியோர்.

அழையா விருந்தாளியாய் நான் வந்து என்னால் படுத்தப்பட்ட வரவனையானும் என்னை மன்னிக்க வேண்டும். மிதக்கும் வெளியிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.

எனக்காக மெனக்கெட்டு களத்தில் வந்த நாட்டாமை, தினகர், அறவாழி அந்தணன், வெங்கடேஷ் ஷர்மா, பிரகாஷ், நெப்போலியன், புதியவன், வரதன் ஆகியோருக்கும் நான் மிக்க கடமைப்பட்டவன். யாராவது விட்டு போயிருந்தால் அது எனது ஞாபகசக்தியின் குறைபாடு என்று எண்ணி மன்னிக்கவும்.

மாசிவகுமாருக்கு தனிப்பட்ட நன்றி. அவர் நான் சரியான மனப்பக்குவத்துடன் இருந்த சமயத்தில் சொன்ன ஆலோசனைதான் முதல் யோம் கிப்பூர் பதிவுக்கு காரணம் என்பதையும் இவ்விடத்தில் கூறி விடுகிறேன்.

சாதி பற்றி நான் எழுதிய இப்பதிவின் முதல் பாதியை கிட்டத்தட்ட எல்லோரும் ஏற்று கொண்டனர். ஆனால் அத்துடன் நில்லாது கலப்புத் திருமணத்தை எதிர்த்து சில கருத்து வெளியிட்டது ஒரு புயலைக் கிளப்பியது. பாரத சமூகத்தை பிரிக்கும் விதமாக எந்த முயற்சியும் செய்யக்கூடாது என்பதை தங்கள் பதிவுகளின் மூலம் உணர்த்திய அரவிந்தன் நீலகண்டன், ஐயன் காளி ஆகியோரது கருத்தை ஏற்று, இனி இம்மாதிரி சாதி உணர்வை பற்றி எழுதியே ஆகவேண்டும் என்னும் பட்சத்தில் ரொம்பவும் டிஸ்கிகள் போட்டு எழுதவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். அளவுக்கு மீறி ஒரு பதிவில் டிஸ்கிகள் போட வேண்டியிருந்தால் அதற்கு அப்பதிவையே கைவிடுவதும் உத்தமமே. (அது சம்பந்தமாக வேறு பதிவர் யாராவது போடும் இடுகையில் பின்னூட்ட கும்மி அடித்தால் போயிற்று - "டோண்டு இப்போதாவது சீரியசாக இருடா என்று கூறுவது முரளி மனோஹர்).

கடைசியாக, ஆனால் முக்கியமாக, வளர்ந்த குழந்தையாக (நன்றி மாசிவகுமார்) செயல்பட்டு, தமிழ்மணம் யுத்த பூமியாக மாறுவதற்கு காரணமாக இருந்து படுத்திய இந்த டோண்டு ராகவனை முதலிலிருந்தே சகித்து வந்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கு எனது மனப்பூர்வ நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

இப்போது மேலே என்ன?

பல விஷயங்களில் கருத்து சொல்லி எனது நிலையை தெளிவாக்கி விட்டேன். அக்கருத்துக்களில் மாற்றம் இல்லை. ஆனால் இனிமேலும் அதை சொல்லித் திரிய வேண்டாம் என்றே நினைக்கிறேன். ஆகவே இனிமேல் நடேசன் பூங்காதான். டோண்டு ராகவையங்காரும் வரமாட்டான் (ஓசை செல்லா அவர்கள் கவனிக்க).

ஆனால் டோண்டு ராகவன் மட்டுமே வந்து ஹைப்பர் லிங்குகள் எல்லாம் போட்டு தீவிரமாகப் படுத்துவான். இஸ்ரேல், ராஜாஜி, சோ, வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை ஆதரவாளன் டோண்டு ராகவனும் அப்படியே இருப்பான். வாடிக்கையாளர்களை படுத்தும் டோண்டு ராகவன் வேறெங்கே செல்ல முடியும்.? வாடகைக் கார் முதலாளிகள் எனது பதிவுகளைப் படிக்காது மன அமைதியுடன் இருப்பார்களாக. லாலு ப்ரசாத் யாதவும் பயப்பட வேண்டாம். புதிர்கள் பலவும் போடும் டோண்டு ராகவன் அப்படியே இருப்பான் என்பதை கூறவும் வேண்டுமோ.

ஆனால் ஒரு விஷயம். எந்தப் பழைய பதிவுகளையும் இப்போது எடுக்கும் முடிவுகள் காரணமாக திருத்தவோ நீக்கவோ போவது இல்லை. சொன்னவை சொன்னதுதான். வில்லிருந்து விடுபட்ட அஸ்திரங்களை பெறுவது அர்ஜுனனால்தான் முடிந்தது. அஸ்வத்தாமனால் முடியவில்லை. நான் இந்த விஷயத்தில் அஸ்வத்தாமா. அடேடே பரவாயில்லையே இந்த அர்ஜுன அஸ்வத்தாமன் கதையையும் பதிவாக பிற்காலத்தில் போடலாமே.

அவை எனது பழைய அணுகுமுறையால் உருவானவை.அப்படியே ஃப்ரீஸ்தான். சரித்திரத்தை ஏன் திருத்த வேண்டும்? வேண்டாத வேலை. அவை எனது அசட்டுத்தனத்துக்கு சான்றாக அப்படியே இருக்கட்டும்.

இப்போது கூற நினைத்ததையெல்லாம் கடந்த இரண்டு மணி நேரம் மனம் விட்டு கூறியதால்,

ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா

தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/11/2007

மினிவலைப்பதிவர் சந்திப்பு

என் கார் நடேசன் பூங்காவை (பதிவின் கடைசியில் விளக்கம்) அடையும் சமயத்தில் மணி சரியாக 5.25. மரபூர் சந்திரசேகர் அவரிடமிருந்து செல்பேசியில் கால் வந்தது. தான் ஏற்கனவே உள்ளே வந்து விட்டதாகக் கூறினார். இருவராக சேர்ந்து ஒரு வட்ட பெஞ்சை தேடினோம். பிறகு மற்றவர்களுக்காகக் காத்திருந்தோம். ஓகை அவர்கள் 6 மணிக்கு வந்து விடுவார் என சந்திரசேகர் தெரிவித்தார். சிறிது நேரம் கழித்து ஜயராமன் அவர்களுக்கு போன் செய்ய, அவர் தான் வந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

சந்திரசேகரன் அவர்கள் தங்கள் குழு பழவேற்காடு அருகில் பெருமாள் கோவில் நடத்திய சுத்திகரிப்பு நிகழ்ச்சியை சுவையாக விவரித்தார். உள்ளே புதர் மண்டி கிடந்ததாகவும், தங்கள் குழு அவற்றை எல்லாம் வெட்டி எடுத்ததாகவும் கூறியது சுவாரசியமாக இருந்தது. ராமாயண காட்சிகள் தத்ரூபமாக செதுக்கப்பட்டிருந்தது கண் கொள்ளா காட்சி என்றும் கூறினார். பிறகு பதிவர் உலகில் தான் எப்படி பிரச்சினையை கையாள்கிறார் என்பதையும் தெரிவித்தார். தெரிவு செய்த சில குறிப்பிட்ட பதிவுகளுக்கே போவதாக கூறினார். துவேஷத்தை வளர்க்கும் பதிவுகள் தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார். பிடிக்கிறதோ இல்லையோ எதையும் படித்துவிடும் எனக்குள் அவரது இந்த செயல்பாடு சற்று சிந்தனையை தூண்டியது.

முந்தைய தடவை பார்த்ததை விட இளமையான தோற்றத்துடன் ஜயராமன் வந்து சேர்ந்தார். அவரை பார்க்கும் ஆவலில் இருந்த நான் அவருடன் விட்ட இடத்திலிருந்து விஷயங்களை பேசத் தொடங்கினேன். சந்திரசேகருக்கு சில இடங்களை விளக்கினோம். பிறகு நான் அவரிடம் எடுத்த ஓய்வு போதும், வலைப்பதிய மறுபடியும் வர வேண்டும் என கேட்டுக் கொண்டேன். சந்திரசேகரனும் என்னுடன் இந்த விஷயத்தில் சேர்ந்து கொண்டார். என்னுடைய வழமையான தாரக மந்திரத்தை இங்கும் பிரயோகித்தேன். அதாவது, எந்த முடிவையும் நாமே எடுக்க வேண்டும், மற்றவ்ர்கள் நமது செயலை தீர்மானிக்க விடக்கூடாது என்பதுதான் அது. குறைந்த பட்சம் எனது மீட்டிங் பற்றிய பதிவுக்கு அவரது அழ்கான நடையில் பின்னூட்டம் இடவேண்டும் எனவும் நான் கேட்டுக் கொண்டேன். சென்னையில் ஜயராமன், பங்களூரில் ம்யூஸ் ஆகியோரது மீட்டிங் பர்ரிய பின்னூட்டங்கள் எனது மெயின் பதிவை விட மிக அழகாகவே அமைந்து விடுகின்றன. அந்த முறையில் இப்போதும் அவர் பின்னூட்டம் இடுவது தேவை என்பதையும் வலியுறுத்தினேன்.

பிறகு ஜயகமலும், அவரது இணைபிரியா நண்பர் சரவணனும் வந்து சேர்ந்தனர். ராம லட்சுமணர்கள் போல இந்த இருவரும் ஒன்றாக வந்தது மகிழ்ச்சிக்குரியதே. இன்று காலைதான் ஜெய் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் ஒரு சுவாரசியமான கட்டுரை ஆங்கிலத்தில். அதை நகலெடுத்து பிளாக்கர் புது பதிவு பக்கத்தில் ஒட்டி, முன்வடிவாக சேமித்திருந்தேன். அதை பின்னர் பதிவாக எழுதி வெளியிட அவரது அனுமதியும் பெற்றேன். போன மீட்டிங்கிற்கு இருவரும் தாமதமாக வந்திருந்தனர், ஏனெனில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்களாம். ஆனால் இந்தத் தடவை அவர்கள் கிரிக்கெட் ஆடவில்லை. ஆனால் இந்தியா ஸ்ரீலங்கா குழுக்கள் ஆடிக் கொண்டிருந்தன. அதை டிவியில் பார்த்துவிட்டு லேட்டாக வந்திருக்கின்றனர். குழந்தை மனதுடையவர்கள். இந்தியா 4 ரன்களில் தோல்வி.

கடைசியாக ஓகை வந்து சேர்ந்தார். அவர் நான் பதிவு போடும் ஸ்டைலில் மாறுதல் செய்வது பற்றி சில அரிய ஆலோசனைகள் அளித்தார். நானும் ஏற்கனவே செய்து வைத்திருந்த முடிவின்படி இந்த மீட்டிங் பதிவுக்கு அடுத்ததாக வேறு ஸ்டைலில் பதிவிடப்போகும் என் எண்ணத்தை கூறினேன். ஓகை அவர்கள் ஜயராமனுடன் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். அது பற்றி நான் கூறுவதை விட அவர்கள் கூறுவதே பொருத்தமாக இருக்கும். பின்னூட்டங்களில் அவற்றை எதிர்பார்க்கிறேன்.

சேது சமுத்திரத்த்ஜில் ராமர் பாலம் விஷயம் பற்றியும் பேசப்பட்டது. அவ்வளவு கஷ்டப்பட்டு கட்டினாலும் பொருளாதார ரீதியாக ஏதேனும் பலன் இருக்குமா எனத் தெரியவில்லை. இது ஒரு அரசியல் முடிவாகத்தான் பட்டது.

அதற்குள் மணி 7 போல ஆகிவிட்டது. மரபூரார் அர்ஜண்டாக வீட்டுக்கு செல்ல வேண்டும் எனக் கூறிவிட்டு கிளம்பி விட்டார். பிறகு நாங்கள் பார்க்கிலிருந்து கிளம்பி ரத்னா கஃபே சென்றோம். ஓகை போண்டா மட்டும் ஆர்டர் செய்தார். ரத்னா கஃபேக்கு போய்விட்டு ஒரு பிளேட் இட்டலி ஒரு பக்கெட் சாம்பார் சாப்பிடாத நாவும் நாவோ என்று நான் கூற, மீதி 4 பேரும் ஆளுக்கு அவ்வாறே ஆர்டர் செய்தோம். பிறகு டோண்டுவும் போண்டாவும் பிரியலாமோ என்ற லாஜிக்கின்படி போண்டாவும் ஆர்டர் செய்தோம். பிறகு ஒரு மசால் தோசை என்று நான் கேட்க, மற்றவர்கள் எல்லாம் வேகமாக தலையைஆட்டி வேண்டாம் என மறுத்து விட்டனர். சரி ஆளுக்கு ஒரு கப் காப்பியாவது சாப்பிடலாம் என ஐடியா கொடுத்தேன். ஓகை அவர்கள் ஒரு ரோஸ் மில்க், நான், ஜயகமல், சரவணன் ஆகியோர் காப்பி எடுத்து கொண்டோம். ஜயராமன் காப்பி வேண்டாம் என கூறி விட்டார்.

ஜயராமன் எடுத்து கொண்ட காமெராவில் போட்டோ எடுத்து கொண்டோம். ரத்னா கஃபே சர்வர் ஒருவர் எங்கள் ஐவரையும் வைத்து எடுத்தார். அவர் எனக்கு பிறகு அனுப்புவதாக கூறினார். இந்த இடத்தில் ஒரு விஷயம். போட்டோவை போடுவதா வேண்டாமா என்று ஓகை, ஜயராமன், ஜயகமல் மற்றும் சரவணன் கருத்து கூறட்டும். நான் போடுவதில் விருப்பமாக உள்ளேன். இருப்பினும் இது மீதி எல்லோரும் ஒத்துக் கொண்டால்தால் நடக்கும். ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தாலும் போடுவதில்லை என தீர்மானித்துள்ளேன். ஆகவே இந்த நால்வரும் தங்கள் அபிப்பிராயத்தை பின்னூட்டம் மூலமோ, மின்னஞ்சல் அல்லது டெலிஃபோன் மூலமோ எனக்கு தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

ஒரே ஒரு ஃபோட்டோதான் எடுக்கப்பட்டது. அதை போடுகிறேன். ஏனெனில் எல்லோரும் ஏக மனதாக ஒத்து கொண்டுள்ளனர். அது இப்போது தரப்பட்டுள்ளது.


இடமிருந்து வலம்: ஜயகமல், சரவணன், டோண்டு, ஓகை, ஜயராமன்
மரபூரார் அவசர வேலை என்று முதலிலேயே சென்று விட்டார்.

பதிவின் கடைசியில் ஒரு விளக்கம் கூறுவதாகக் குறிப்பிட்டிருந்தேன். On second thoughts, let it wait till my next post tomorrow.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வலைப்பதிவர்கள் மீட்டிங் 11.02.2007

பிப்ரவரி 11, 2007 ஞாயிறன்று சென்னை வலைப்பதிவர்கள் மீட்டிங்கை கூட்டலாம் என்று நான் எண்ணுகிறேன். அதன் அறிவிப்புதான் இந்தப் பதிவு.

மாலை 6 மணியளவில் வழமையான உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் மீட்டிங். வர விருப்பம் உடையவர்கள் இங்கு பின்னூட்டம் இட்டு விட்டு எனது செல்பேசியிலும் தகவல் அளித்தால் நன்றி. எனது செல்பேசி எண் 9884012948. வழக்கம்போல செலவு டட்ச் முறையில் பகிர்ந்து கொள்ளப்படும்.

வழமையான உட்லேண்ட்ஸ் வேண்டாம் என்றால் தி.நகர் வெங்கடநாராயணா ரோடில் உள்ள நடேச முதலியார் பார்க்கிலும் சந்திக்கலாம். பக்கத்திலேயே இட்லி சாம்பார் புகழ் ரத்னா கஃபே உள்ளது. கண்ணதாசன் மெஸ் வேறு.

மூன்றாவது இடம் தி.நகர் சோமசுந்திரம் பார்க். அறுசுவை நடராஜன் அவர்கள் ஹோட்டல் அருகிலேயே உள்ளது.

எது அப்படியானாலும் டட்ச் முறை மாறாது.

பின்னூட்டமிடுபவர்கள் நடேச முதலியார் பார்க்கா, உட்லேண்ட்ஸா அல்லது சோமசுந்திரம் பார்க்கா என்று விருப்பத்தைத் தெரிவித்தால் பெரும்பான்மை முறையில் தெரிவு செய்து கொள்ளலாம். நிறைய நேரம் உள்ளது.

பேச வேண்டிய விஷயங்கள் அங்கு கூடுபவர் விருப்பத்திற்கேற்ப தீர்மானிக்கப்படும். ஆனால் வழக்கமாக பேசும் ஒரு விஷயம் மட்டும் இம்முறை பேசப்படாது. அது என்ன என்பது எல்லோருக்குமே தெரியும். தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்த அறிவிப்பை சென்னையில் வசிக்கும், பிப்ரவரி 11-ஆம் தேதி அங்கு இருக்கப் போகும் எல்லா தமிழ் வலைப்பூ நண்பர்களுக்கும் பொதுவான அழைப்பாகக் கருதுமாறு கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11.02.2007 அன்று சேர்க்கப்பட்டது
கடைசியில் தி.நகர் நடேச முதலியார் பூங்காவில் (நடேசன் பூங்கா) மீட்டிங்கை வைத்து கொள்வதாக தீர்மானிக்கப் பட்டுள்ளது.

1. நேரம்: மாலை 5.30, ஞாயிறு 11.02.2007
2. இடம்: வெங்கடநாராயணா சாலை, தி.நகர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் அருகில், க்ரெஸண்ட் பூங்கா எதிரில். இந்த சாலை பனகல் பூங்காவையும் நந்தனம் சிக்னலையும் இணைக்கிறது.

2/08/2007

ஐயன் காளி அவர்களுக்கு நன்றி

ஐயன் காளி அவர்கள் தனது இந்தப் பதிவு மூலம் நான் செய்ய நினைத்து ஆனால் செய்ய மறந்ததை நினைவுபடுத்தினார். அவருக்கு முதற்கண் என் நன்றி.

//2005ம் ஆண்டு ஒரு நாள் யூரோப்பா கண்டத்திலுள்ள அரசியல், சமூக, மதத் தலைவர்கள் எல்லாம் நாட்ஸி அடையாளங்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார்கள். காரணம்: ஆங்கில அரச பரம்பரையின் மூன்றாவது வாரிசாக அறியப்படுகின்ற இளவரசர் ஹாரி ஒரு வினோத ஆடை அணியும் நிகழ்ச்சி ஒன்றில் நாட்ஸி அடையாளங்கள் கொண்ட ஆடையை அணிந்தது.//

இதை எதற்கு என் சம்பந்தப்பட்ட பதிவை குறிக்கும்போது சொல்கிறீர்கள்? நாஜிகள் எனது முதல் எதிரிகள் அல்லவா? தீவிர இஸ்ரேலிய ஆதரவாளனான இந்த டோண்டு ராகவனை அவர்களுடன் சம்பந்தப்படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆனால் வேறொரு சின்னம் உலக அரங்கில் நாஜிகளின் அழிவுக்கு பிறகு உலக அரங்கில் பெருமிதம் கொண்டு எழுந்தது. தாவூதின் நட்சத்திரம் அது. இஸ்ரேலிய கொடியில் உள்ளது. ரெட் கிராஸுக்கு பதிலாக இஸ்ரேலிய ஆம்புலன்சுகளில் உள்ளது. அதை பார்க்கும்போதெல்லாம் என்னை பரவசம் செய்வதில் அது நம் மூவர்ண கொடிக்கு மட்டுமே அடுத்ததாக என்னை பொருத்தவரை உள்ளது. அந்த மறுமலர்ச்சி எப்படி நடந்தது என்பதை அறிவீரா ஐயன் காளி அவர்களே?

யூதர்கள் கிட்டத்ததட்ட 2000 ஆண்டுகள் பலதுன்பங்களுக்கு ஆளாக்கப் பட்டனர். அவர்கள் மறுமலர்ச்சி பெற்றதில் அவர்களது மதத்தை பற்றிய பெருமிதமே ஆகும்.

//எந்த ஜாதி வெறியை ஹிந்து சமுதாயத்தின் இழிவாக எம் அண்ணல் அம்பேத்கார் "பார்ப்பனீயம்" என்கின்ற அடையாளப் பெயரால் அழிக்கத் துடித்தாரோ, அந்த வார்த்தைக்கு வடிவு கொடுக்க வந்திருப்பவராக தோன்றுபவர் இந்த "ராகவ ஐயங்கார்". கலப்புத் திருமணத்தால் பிரச்சினைகள் உண்டாம். அதுபற்றி விளக்கமாய் ஒரு கட்டுரை எழுதப் போவதாயும் ஒரு அறிவிப்பு - விளம்பரம் எனலாமா இஃதை?//
விளம்பரம் இல்லை. ஒரு முன்னறிவிப்பே. இது கவனத்தை விட்டு போயிருந்தது. அதை நினைவு படுத்தியதற்கு மீண்டும் நன்றி.

//பெரும் புகழ் எடுக்கும் விருப்பத்தால் பிரச்சினைகள் எழாதா?//
என்ன உளறல். கல்யாணம் என்பது யோசித்து செய்ய வேண்டிய விஷயம். பல பிரச்சினைகளை உள்ளடக்கியது. இப்போது இளமை ஜோரில் முடித்து விட்டு, பிற்காலத்தில் வருத்தப்படுபவர் எத்தனை பேர் என்பதை அறிவீரா? அவர்கள் குழந்தைகளுக்கு மணமுடிக்க முடியாமல் வெம்புவரை அறிவீரா?

//ஸ்மார்த்தனாய் பிறந்த ராமானுஜன் வைணவம் ஸ்தாபித்தான். அதன் வழித் தோன்றல் இதைத் தவறு என்கின்றார்.//
எனது இப்பதிவில் அது சம்பந்தமில்லாததுதான். இருப்பினும் கூறுகிறேன். ராமானுஜர் செய்தது மிகவும் பாராட்டத் தக்கது. 12 ஆழ்வார்கள் அத்தனை பேரையும் நான் பூஜிக்கிறேன். இதில் எத்தனை பேர் பார்ப்பனர் என எண்ணுகிறீர்கள்?

//கலப்பு மணம் பிரச்சினைகள் உள்ளது எனும் இம்முதியவர், அந்தண ஆண்டாள் ஆயனை மணம் புரிந்ததை எதிர்ப்பாரா? ஆயன் என்பதால் வணக்கமில்லை. எம் தெய்வம் அந்த மகர நெடுங்குழைக்காதனன்றி வேறில்லை என்பீரெனில், அந்த திருமால் தங்கையின் கணவன் சுடுகாட்டில் அலையும் சூத்திரன் அன்றோ?//
என்ன உளறல் இந்த இளைஞனைப் பற்றி? சூடிக்கொடுத்த சுடர்க்கொடியோ, அவளை ஆட்கொண்ட பாம்பணை மேல் படுத்திருப்பவனோ என் தெய்வங்கள் அல்லவா.

இருந்தாலும் இங்கு ஒரு வார்த்தை சொல்வதால் எனது அப்பன் அரங்கநாதனோ, மகர நெடுங்குழைகாதனோ, திருவிண்ணகர ஒப்பில்லா அப்பனோ, ஒப்பற்ற மாதர்கள் வாழும் திருவல்லிக்கேணியில் அருள் பாலிக்கும் மீசைக் கடவுள் பார்த்தசாரதியோ கோபித்து கொள்ள மாட்டார்கள். ஆண்டாள், அவள் ஆண்டாள். ஐயனுடன் ஐக்கியமானாள். ஆனால் திரும்ப வந்து குடும்பம் நடத்தவில்லை. ஆனால் நான் இங்கு குறிப்பிடும் விஷயம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் ஆரம்பிக்கிறது சுவாமி.

//அத்தனை சாதியிலும் அரியின் காதலர் அனைவரும் வைணவரே என்று பறையரையும், பள்ளரையும் பார்ப்பனராக்கியதில் உண்டானதன்றோ ஐயங்கார் எனும் குலம்? உமது மரபணுக்களில் இந்தச் சூத்திரர்களின் ஜீன் சுருண்டுள்ளதென்பது சுகமான உண்மையன்றோ?//
அப்படியிருக்க உங்கள் ஜீன்களுடன் தொடர்பு கொண்டவரை மட்டும் ஏன் துவேஷிக்கிறீர்கள்?

//கற்பென்பது கற்பனை என்பீர். ஆயினும் கலப்பு மணம் எனில் கடினம் கடினம் என்கிறீர். அடுக்குமா?//
கற்பு என்பது கற்பனை என்று நான் எங்கு சொன்னேன் ஐயா? ஆனால், கலப்பு மணம் கடினம் என்றுதான் மறுபடியும் கூறுவேன்.

//பதிலாய், "இது எம் சொந்தக் குரல். வைணவத்தின் கூற்றை வெளியிட அடியேனுக்கு பாத்தியம் இல்லை" என்பீர்.//
எப்போது அவ்வாறு சொன்னேன்?

//தனி மனிதரின் குரல் ஒரு சமூகத்தின் தவறுக்கு ஆதரவாகும்போதும் அது தனிமனிதக் குரலாகுமோ? அப்படியே ஆயினும் உம் குரலை ஊருக்கு முன் உரத்துச் சொல்லல் அவசியம் ஏனோ? உமக்கு மட்டும் கேட்கும்வரைதானே உம் குரல்? ஊர்ச்சந்தியில் உரத்து உளறுவது உமக்கு மட்டும் கேட்கவேண்டும் என்பதற்கா? டோண்டு ராகவனாய் சொல்லுவதற்கும், ராகவ ஐயங்காராய் சொல்லுவதற்கும் வேறுபாடு உண்டல்லவா.//
உளறுவது யார் என்பதை இப்போது பார்க்கத்தானே போகிறோம்? ராகவையங்கார் என்று கூறிக்கொண்டது பற்றி பல முறை எழுதியாகி விட்டது. இங்கு மறுபடியும் கூறுவதாக இல்லை.

//"எம் கருத்து இஃது, யாரும் ஏற்றுக்கொள வேண்டும் எனும் எதிர்பார்ப்பு எமக்கில்லை" என்பீர்.//
நான் கூறுவதாக அதை நீங்கள்தான் சொல்கிறீகள். ஆனால் நீங்கள்தான் பார்ப்பன துவேஷம் என்ற அழுக்கு ஆடை அணிந்துள்ளீர்கள்.

//நன்மை செயவே நான் நினைதேன் என்பீராயின், விட அறைக்குள் யூதர்களின் பிண அறை காணப் பணித்த நீதிபதியே தான் அவர்களுக்கு நன்மை செய்ததாகத்தான் நம்புவதாகக் கூறினான் - படித்திருப்பீர்//.
என்ன சிறுபிள்ளைத்தனமாக இருக்கு. நாஜிகள் எனது ஜன்ம விரோதிகள். அவர்களை நான் ஏன் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்?

//பரந்தாமன் மெய்தழல் பற்றியதன்றி பற்றுவது ஏதுமிலை எனச் சொல்லி சாதியில் கடையராயினும் பக்தர்கள் தாள் தூசியைத் தலையில் தரித்து, உண்மை பலம் அருளும் உணவாய் கொண்ட தொண்டரடிப்பொடியனும் வைணவனே. வைணவனாய் இருப்பதைவிட தனிமனிதனாய் இருப்பதே சிறந்தது என்பது உம் வாதம் எனில், உமது முன்னோருக்கல்லவா இழுக்கு.//
எனது வைணவ பக்தியில் என்ன குறை கண்டீர்கள்? அப்படி ஏதேனும் இருந்தால் தக்க உதாரணத்துடன் நிரூபியுங்கள்.

//கலப்பு மணத்தால் காழ்ப்புகள் உண்டு. நன்மைகளோடு, தீமைகளுமுண்டு. அவற்றை உரத்துச் சொல்லுவதை சாதி வெறி என்பீரோ?" என்றும் நீங்கள் கேட்கலாம்.//
தீமைகள் என்ன என்பதையும் அறிந்தால்தானே, அவற்றுக்கு சரியான எதிர்வினை தரமுடியும்? அதை பற்றி பேசவே கூடாது என்றால் எப்படி ஐயா?

//தொல்லைகள் இருப்பதாலேயே நன்மைகளை நசுக்கிவிடவேண்டுமா?//
நான் அப்படி சொல்லவில்லையே?

//கலப்பு மணத்தின் கனிகளை கண்டதுண்டா? சாதி சங்கிலிகளை தூளாக்கி மணம் புரிந்தவர்களின் மகவுகளைக் கொஞ்சியதுண்டா தாங்கள்?//
இல்லை என்பதை கண்டீர்களா? எனது மனைவியின் அத்தை கலப்பு மணம் புரிந்தவர். அவர் குழந்தைகள் என் செல்ல பிள்ளைகள். நீங்களாகவே அனுமானம் செய்து உளறக்கூடாது.

//அன்பு கொண்டுவிட்டவள் முகம்மதிய வாரிசு என்று அழித்தா விட்டனர் வைணவர்கள்? அரங்கனுக்கு அருகில் துலுக்க நாச்சியாராய் துணை வைத்ததன்றோ நம் சமயம். அபச்சாரம் செய்துவிட்டீர் எனப் புரிந்து துலுக்க நாச்சியாரிடம் அபராதம் செய்வதன்றோ மனவலிமையின் அடையாளம்.//
துலுக்க நாசியாரை ஏன் இங்கு இழுக்கிறீர்கள்?

//பார்ப்பான் நான் எனப் பகல்வதால் பற்றி எரியப்போவதென்ன? ஒன்றுமில்லை. கொங்கணனுக்காவது கொக்கிருந்தது//

//"என் சாதி இதுவென இயம்புவதை எதிர்க்கிறார். அன்பற்று அழிக்கவும் துடிக்கிறார். இவர் முன் இறுமாந்திருப்பதற்கு இரும்பு இதயம் வேண்டும்" என்பீராயின் அது வெறும் பம்மாத்து என்பதை யாம் பகலவும் வேண்டுமோ? ஐயங்கார் என்று எடுத்தும்பியவது ஏளனத்திற்குரியதுதான் எல்லோர்தம் பார்வையிலும். முதியவரின் மீசைமுடியை முற்றிப் போன கனவுக் கயிறுகளால் முறுக்கப்பெறும் முயற்சி என்பதுதான் தங்களை எள்ளாதவரின் எண்ணம். அற்றை இரவு அருந்திய கூழ் பட்டு மீசையை முறுக்கிய கதையை நீங்கள் சொல்லலாம். கூழ் குடித்த பெருமை உங்களுக்கு. குறை காணும் வாய்ப்பு மற்றோருக்கு.//
என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே புரியவில்லை.

//தன் சாதி இதுவென்று கூறி தன் பலம் காட்டும் தரணியில் எம் சாதி இதுவென்பதில் நேர்வழி ஏற்றம் எதேனும் உண்டா?//

சரி, நான் கூற நினைத்ததை கூறிவிட்டு போகிறேன். நீங்கள் கூறுவதெல்லாம் ஆதர்சம். யதார்த்தம் என்று ஒன்று உண்டு. உம்மை மாதிரி பலர் இம்மாதிரி ஊருக்கெல்லாம் அறிவுரை கூறிவிட்டு தத்தம் முறை பெண்ணை மணப்பர். அவர்கள் பேசியதை கேட்டு கலப்பு மணம் செய்தவர் படும் கஷ்டங்கள் முன்னவருக்கு ஒரு பொருட்டல்ல.

திருமணம் என்பது ஆணும் பெண்ணும் மட்டும் சேர்வதல்ல. அவரவர் குடும்பங்களும் நல்ல உறவில் இருக்க வேண்டும். இது சாதாரணமாக நடப்பதில்லை. என் நண்பர் ஒருவர். அவர் பர்ர்ப்பனரில்லை, ஒரு மேல் சாதி என்று அழைக்கப்படும் சாதியை சேர்ந்தவர். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சாதி பெண்ணை மணந்தார். இருவருமே நன்கு படித்தவர்கள். நண்பரின் தாய் இத்திருமணத்தை ஒத்து கொள்ளவேயில்லை. இன்னும் தன் பேரக் குழந்தையை பார்க்கக் கூட இல்லை. இந்த குழந்தை தந்தை வழி பாட்டியின் அன்பில்லாமல் வளரப் போகிறது. அது பெரியவளாகி, திருமண வயதை எட்டும்போது மணமகன் தேடும்போது எழப்போகும் பிரச்சினை பூதாகாரமாகப் போகப் போகிறது. அவ்வாறு நடக்கக் கூடாது என்பதே எனது வேண்டுகோள். இது காதல் திருமணம். அவர்கள் ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். ஆனால் இரு வழி உறவினர்களுக்குள் சுமுகமான போக்குவரத்து இல்லை. கலப்பு திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு காதல் திருமணம்தான் முக்கிய வழி. தாய் தந்தையர் நிச்சயம் செய்யும் திருமணம் கடினம். எல்லா பத்திரிகைகளிலும் வரும் திருமண விளம்பரங்களையே பாருங்கள் நான் சொல்வது புரியும்.

கலப்பு திருமணத்தின் இன்னொரு பிரச்சினை வேறுபடும் உணவு பழக்கங்கள். காதல் மயக்கத்தில் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் சில நாட்களிலேயே மோகம் மறைந்து விடும். பிறகு இல்லாத பிரச்சினைகள் எல்லாம் வரும். மற்ற பழக்க வழக்கங்களும் மாறும்.

உண்மை காதல் இவற்றையெல்லாம் முறியடிக்கும் என கூறுவது கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் நடைமுறைக்கு வருவது அபூர்வம்.

//குற்றப் பரம்பரையாய் ஆங்கிலக் கொள்ளையர் கூறிய வனஜாரி சாதியில் பிறந்த கோபினாத் முண்டே ஒரு மாநில முதல்வராவது ஈ வே ரா பிறந்த மண்ணில் என்றாவது நிகழுமோ? கோபினாத் முண்டேயை மணந்தது ஒரு பார்ப்பனப் பெண் என்பதறிவீரோ? இவர்களது கலப்பு மணத்தால் என்ன பிரச்சினை வந்தது?
காந்தி கிராமம் கண்ட பார்ப்பனப் பெண்ணின் கணவர் தலித் என்பதை அறிவீரோ? அங்கு சுயமாய் தொழில் செய்து வளமாவாய் வாழ்வோருக்கு இந்த கலப்பு மணத்தால் நேர்ந்த கடுமை என்னவோ?
அரசியல் மேதையாய் ராவும் பகலும் ஆராதனை செய்கிறீர்கள் ராஜாஜியை. அவர் தன் மகளை மணமுடித்தது வைசிய காந்தியின் மகனுக்கன்றோ?//
ஐயா நீங்கள் கூறுபவை அளவில் சிறியவை. அதை பார்த்து எல்லோருக்கும் முடியும் என மனப்பால் குடிக்காதீர்கள். கலப்பு திருமணம் வேண்டாம் என கூற நான் யார். பிரச்சினைகளை உணர்ந்து முடிவெடுக்க சொல்கிறேன். நீங்கள் என்னவோ பிரச்சினைகள் என்னவென்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று சொல்வது போல படுகிறது. அது உண்மையாயின் அது தவறே.

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். கல்யாணம் செய்து கொள்பவரை பற்றி மட்டும் சிந்தித்தால் போதாது. அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும். சொந்த சாதியில் திருமணம் செய்தலில் நான் மேலே பட்டியலிட்ட அபாயங்களின் சாதியக்கூறுகள் குறைவு. கலப்புத் திருமணங்களில் அவை அதிகம்.

இதை உணர்ந்து, சாதக பாதகங்களி ஆராய்ந்து மணம் புரிவதே புத்திசாலித்தனம்.

//வாழும் முறைகளும், வாழ்வின் நோக்கங்களும் சாதி அடிப்படையைச் சாராது இருக்கும்போது ஒத்த வாழ்நெறியும், ஒன்றிற்கு மற்றொன்று உவமையாய் அமையும் நோக்கங்களும் கொண்டவர் கலந்தால் எதிர்த்து விண்டுவது டோண்டுவிற்குத் தகுமோ?//
எனக்கு வேறு வேலையில்லையா? இரண்டு வகை திருமணங்களிலும் உள்ள சாதக பாதகங்களை பார்த்து செயலாற்றுதல் நலம் என நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

//ஐயங்கார் எனச் சொல்லுவதில் இருக்கும் பாதுகாப்பும் சமூகப் பெருமையும் ஹிந்து என்பதில் இல்லை என்பதை சமத்காரமாய் தாங்கள் புரிந்துகொண்டிருக்கலாம். ஆனால், இதை வெளிப்படையாய் சொன்னால் வாழ்க்கையை அழிப்பார் என்பதறிந்து குறுகிய பானையில் குதிரையோட்டுவதில் குன்றா பாதுகாப்பு இன்று மட்டும் உண்டுதான். ஐயங்கார் என்று சொல்லி குறுகிய வாழ்க்கை வாழ்வதைவிட இன்பம் நல்கும் ஹிந்துவே நான் எனச் சொல்லுவதற்கு வீரமும், தீரமும், விவேகமும் வேண்டும்தான்.//
இது பற்றி ஏற்கனவே அதிகம் பேசியாகி விட்டது.

இப்பதிவுக்கு பின்னூட்டமிடுபவர் தாங்கள் பரிந்துரைப்பதை தாங்களே செய்கிறார்களா அல்லது உபதேசம் எல்லாம் மற்றவருக்குத்தானா என்பதை சுய பரிசோதனை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

மறுபடியும் கூறுகிறேன், திரும்ணம் என்பது சம்பந்தப்பட்டவரது சொந்த விஷயம். முடிவு அவர்கள்தான் எடுக்க வேண்டும். அதில் அவர்கள் பார்க்க வேண்டிய பல பிரச்சினைகளை பற்றி பேசவே இப்பதிவு. இதில் என் கருத்ஹ்துக்களை கூறியுள்ளே. படிப்பவர்கள் அவரவர் விரும்புவதை எடுத்து கொள்ளட்டும் அல்லது மொத்தமாகவே நிராகரிக்கட்டும்.

அது சரி, இந்துக்கள் மற்ற மதத்தினரில் பெண் எடுப்பது பற்றி என்ன கருத்து கொண்டுள்ளீர்கள்? இங்கு கூட நீங்கள் துலுக்க நாச்சியாரை விடுத்து வேறு மதக்கலப்புகளை பற்றி பேசாமல் தவிர்த்து விட்டீர்கள் போல?

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/06/2007

துபாஷி வேலையில் இன்னிக்கு தமாஷ்

இன்று காலை பேங்கில் இருந்தபோது, என் செல்பேசி அதோ அந்த பறவை போல வாழவேண்டும் என்று ட்யூன் விட ஆரம்பித்தது. ஒரு புது வாடிக்கையாளர் லைனில் வந்தார். அர்ஜண்டாக பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளர் வேண்டும் என்றார். நான் என் ஒரு மணி நேரத்துக்கான ரேட் (600 ரூபாய்) எல்லாம் சொல்லி, மினிமமாக இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்வேன் என்றேன். ஒரு மணி நேரம்தான் வேலை என்றால் என்று போனில் பேசிய பெண் இழுக்க, 1200 ரூபாய் என்று மண்டயிலடித்தற்போல் கூறினேன். மேலும் டாக்ஸி சார்ஜ் மற்றும் டீ, காபி, லஞ்ச் எல்லாம் அந்தந்த நேரத்தில் வேண்டும் எனக் கூறினேன்.

எல்லாவற்றுக்கும் ஒத்துக் கொண்டு, கார் அனுப்பி வைத்தார்கள். கீழ்க்கட்டளையில் ஒரு கம்பெனி அது. என் கார் (:))))))))) கம்பெனி போனதும் ரிசப்ஷனில் உட்காரச் சொல்லிவிட்டு அந்த பெண் அதிகாரி சேர்மன் ஆஃபீசில் நுழைந்தார். அதற்கு முன்னால் ஒரு கூல் ட்ரிங்க் வேறு எனக்களிக்க ஏற்பாடு செய்தார்.

ரிசப்ஷனில் இரண்டு அழகிய இளம் பெண்கள். ஒருவர் உருது நன்றாகப் பேசினார். அவருடன் உருதுவில் கதைத்து விட்டு, பிறகு கையில் எடுத்து போன நாவல் ஒன்றை பிரித்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

ஒரு மணி நேரம் சென்றது. என்னடா என்று பார்த்தால் அந்த ஆஃபீசர் வெளியில் வந்து தனது கேபினுக்கு அழைத்து சென்றார். பிறகு ஆரம்பித்தார் ஒரு கதை. அதாவது பிரெஞ்சுக்காரருக்கு ஆங்கிலம் நன்கு தெரியுமாம். ஆகவே நான் தேவையில்லையாம். என்ன செய்யலாம் என்று என்னைக் கேட்டார். நான் ஒன்றும் பேசாமல் கைப்பையிலிருந்து என் பில் புக்கை எடுத்தேன். இரண்டு மணி நேரத்துக்கு பில் போட்டுவிட்டு காரில் ட்ராப் செய்வார்களா என்று கேட்டபோது தெரியாது என்றார். ஓக்கே திரும்பப் போகும் டாக்ஸி சார்ஜ் 150 ரூபாய் சேர்த்து போட்டு கொள்கிறேன் என்றேன்.

அவர் ஒரு நிமிடம் என்னை நிறுத்தி விட்டு வெளியில் சென்றார். திரும்ப வரும்போது அவர் கூடவே பெர்சனல் ஆஃபீசர், வாய் நிறைய புன்னகையுடன் வெந்தார். என்னை தன் அறைக்கு அழைத்து சென்றார். பிறகு என்னைப் பற்றி விசாரித்தார். என் கதையெல்லாம் சொல்ல அரை மணி நேரம் ஆயிற்று. பிறகு மெதுவாக நான் என்ன செய்ய உத்தேசிப்பதாகக் கேட்டார். எனது பில்லை நீட்டினேன். கார் டிராப் இல்லையென்றால் என்று ஆரம்பித்ததுமே, இல்லை கார் டிராப் உண்டு என அவசர அவசரமாகக் கூறினார். ஓக்கே என்று பில்லை பூர்த்தி செய்து கையில் கொடுத்தேன்.

இப்போதுதான் தமாஷ் ஆரம்பம்.

அவர்: சார் இது சரியில்லை, நீங்கள் வேலை செய்யவேயில்லை.
நான்: அந்தக் கதை வேண்டாம் சார், என்னை 2 மணி நேரம் வைத்திருந்தது நீங்கள்தான் (அப்போது 2 மணி நேரம் ஆகி முடிந்திருந்தது).
அவர்: இல்லை என்று சொல்லவில்லையே சார். இருந்தாலும் நியாயம் என்று ஒன்று உண்டல்லவா?
நான்: (கோபமாக இருப்பது போல காட்டிக் கொண்டு) என்ன சொல்கிறீர்கள்? பில் பே பண்ண மாட்டீர்களா?
அவர் (பதறிப் போய்) அதில்லை சார், ஆனால் ஒரு மணி நேரத்துக்கு வாங்கிக் கொள்ளுங்கள்.
நான்: இந்தக் கதையே வேண்டாம் சுவாமி. எனது பில்லை முழுமையாக செட்டில் செய்யுங்கள்.
அவர்: இப்போ மத்தியானம் 3 மணிக்குத்தான் நீங்கள் தேவைன்னு மேலேயிருந்து தகவல் வந்தது. உங்களை ரீடெய்ன் செய்யலாமா?
நான்: தாராளமா, அப்போ பில்லை திரும்பக் கொடுங்க. வேலை முடிந்ததும் இப்போதிலிருந்து எத்தனை மணி ஆகிறதோ அதையும் சேர்த்துவிடுகிறேன்.
அவர்: சார் நீங்க வேலை செய்யவேயேயில்லையே.
நான்: அது என் தப்பா சார்?

இப்படியே பேச்சு போக, திடீரென சொன்னேன். இன்னும் நேரம் கடத்தினால் பில் 3 மணி நேரத்துக்கு போய் விடும் என்று. வேக வேகமாக வவுச்சர் போட்டு, என்னிடம் கையெழுத்து வாங்கி 1200 ரூபாய் எண்ணி கொடுத்தார்கள். பிறகு காரில் வீடு வரை வந்து டிராப் செய்தார்கள். இதில் என்ன தமாஷ் என்றால், என் கார்டுகளையும் வாங்கிக் கொண்டார்கள். இப்போதும் நான் சொன்னேன். எப்போது கூப்பிட்டாலும் எல்லாம் சரி பார்த்து கூப்பிடச் சொல்லி.

ஆக ஒரு மணி நேரம் நீல பத்மனாபன் நாவல் படித்து, கடலை போட்டதற்கு 1200 ரூபாய் கிடைத்தது. அதை விடுங்கள். இப்படி கூடவா இருப்பார்கள்? வெளிநாட்டு விருந்தாளி வருகிறாரென்றால், முதலில் அவர்களுக்கு ஃபேக்ஸ் அனுப்பி, வருபவர்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? இல்லையெனில் மொழிபெயர்ப்பாளர் தேவையா என்றெல்லாம் கேட்க வேண்டாமா? இந்த அழகில் இது ஒரு ஐ.எஸ்.ஓ. 9000 சான்றிதழ் பெற்ற கம்பெனியாம். தரக் கட்டுப்பாடாம் இன்னும் லொட்டு ல்லொஸ்காம். என்னன்னு சொல்றது போங்கோ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/03/2007

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 03.02.2007

எனது எலெக்ட்ரிக் ட்ரெயின் மாம்பலம் ஸ்டேஷனை அடைந்த போது மணி மாலை 4.50. கும்பலை விலக்கிக் கொண்டு ரங்கநாதன் தெரு, ராமேஸ்வரம் தெரு, ராமநாதன் தெரு, மோதிலால் தெரு, தண்டபாணித் தெரு, ஹென்ஸ்மென் சாலை ஆகியவற்றை கடந்து நடேச முதலியார் பூங்காவுக்கு வந்த போது மணி கிட்டத்தட்ட 5.15 ஆகி விட்டது. நடுவில் செந்தழல் ரவி அவர்களின் ஃபோன்கால் வேறு. அப்போதே கணிசமான அளவுக்கு பதிவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். க்ரெஸண்ட் பார்க்கை தாண்டும் போது மரபூர் சந்திரசேகர் ஃபோன் வேறு. அவர் தான் பூங்காவுக்கு வந்து விட்டதாகக் கூறினார். நானும் இன்னும் சில நொடிகளில் வருவதாகக் கூறி விட்டு உள்ளே போன போது ஒரு பெரிய வட்டமாக பதிவர்கள் அமர்ந்திருந்தனர். நான் அங்கு போன போது இருந்தவர்கள் பாலபாரதி, மரபூரார், செந்தழல் ரவி, லக்கிலுக், வரவனையான், மிதக்கும் வெளி, மா.சிவகுமார், சுந்தர், பாலராஜன் கீதா, முத்து தமிழினி ஆகியோர். சிறிது நேரம் கழித்து வந்தார் சிவஞானம்ஜி அவர்கள். ஹைதராபாத் பிளாக்கர் மதுசூதன் அவர்கள் வருவதாக இருந்தது. கடைசி நிமிடத்தில் அவரிடமிருந்து ஒரு துரித செய்தி வந்தது. தான் ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டதாகக் கூறினார். அவரால் வர இயலவில்லை.

மேலே குறிப்பிட்டவர்கள் தவிர எஸ். சங்கர், பிரியன், பூபாலன், விக்கி, சோமி ஆகியோரும் இருந்தனர். இன்னும் தாமதமாக வந்து சேர்ந்து கொண்டவர்கள் ஓகை மற்றும் நம்ம ரோசா வசந்த் அவர்கள். மீட்டிங்கிற்கு அஜெண்டா ஒன்றும் இல்லை. அவரவர் ரேண்டம் முறையில் பேசிக் கொண்டோம். திடீரென பாலபாரதிக்கு அழைப்பு செல்பேசியில் வர அவர் பரபரப்புடன் சற்று தூரம் தள்ளிப் போய் பேசினார். பொட்டீக்கடை அவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டே செல்பேசி மூலம் லக்கிலுக், முத்து தமிழினி ஆகியோரிடம் பேசினார். நான் வந்திருப்பதை அறிந்து என்னிடமும் பேசினார். மனிதருக்கு செல் பேசி சார்ஜே கணிசமாக எகிறியிருக்கும் எனத் தோன்றியது.

சிவஞானம்ஜி தனது கணினி படுத்தும் விவரத்தைக் கூறினார். அவர் கூறியபடி பார்த்தால் மானிட்டரில்தான் பிரச்சினை எனத் தெரிந்தது. அவர் Windows 98 பாவிப்பதாகத் தெரிகிறது. முதலில் தட்டைத் திரை மானிட்டர் வாங்குமாறு அவரிடம் யோசனை நான் கூறினேன். சிவக்குமார் அவர்கள் அதற்கு கணினி வன்பொருளையும் இற்றைப்படுத்த வேண்டும் என அபிப்பிராயப்பட்டார். இம்முறை விண்டோஸ் எக்ஸ்.பி. க்கு போவதே சிறந்தது என்று நான் ஆலோசனை கூறினேன்.

பூபாலன் அவர்கள் என்னிடம் மனம் விட்டு பேசினார். தான் ஐயங்கார் என்றுகூறிக் கொள்ள முடியுமா என்று கேட்டார். தாராளமாகக் கூறிக் கொள்ளலாம் இதில் என்ன சந்தேகம் என்று பதிலளித்தேன். இதற்காகப் போய் யாரிடமும் அனுமதி பெறத்தேவையில்லை என்றும் கூறினேன். நான் எழுதிய சாதிப் பெயர் சம்பந்தமாக எழுதிய விஷயங்களை அவர்கள் வீட்டு பெரியவர்களிடம் காட்டி கருத்து பெற்று கொள்ளுமாறு கூறினேன். பல விஷயங்கள் அவர் தெரிவித்தது ரொம்ப பெர்சனல் என்பதால் மேல் விவரங்களை பூபாலன் அவர்கள் விருப்பப்பட்டால் பின்னூட்டமாக இடலாம். நான் கூறுவது சரியாக இருக்காது.

நான் பீட்டா பிளாக்கருக்கு மாறிய சூழ்நிலை பற்றி பேசும்போது, என்னை வலுக்கட்டாயமாக அது இழுத்து சென்றது எனக் குறிப்பிட்டேன். ஒரு நிலைக்கு மேல் அது பழைய பிளாக்கருக்கு login செய்வதை முழுமையாகத் தடுத்துவிடுகிறது என்று கூறி ஒரு வார்த்தைப் பிரயோகம் செய்தேன். நல்லவேளையாக பெண்பதிவர்கள் யாரும் வரவில்லை. நான் கூறியதை எல்லோரும் ரசித்தனர். நான் மேலும், அம்மாதிரி பிளாக்கர் ஒரேயடியாக வற்புறுத்தும் நிலை வரும்வரை புது பிளாக்கருக்கு மாற வேண்டாம் என்றும் ஆலோசனை கூறினேன். நான் அவ்வாறு செய்ததால் தமிழ்மண இணைப்புடன் பீட்டா பிளாக்கர் அப்படியே வந்து உட்கார்ந்து கொண்டது என்றும் கூறினார். மேலும் எனது 350-க்கும் அதிகமான அத்தனைப் பதிவுகளும் வெண்ணெய் போல வழுக்கிக் கொண்டு வந்து உட்கார்ந்தன.

தெருக்களில் சாதிப்பெயர் எடுத்தது பற்றி மேலும் பேசப்பட்டது. வலைப்பூக்களில் அவரவர் வெளிப்படுத்திய நிலைப்பாட்டிலேயே அவரவர் இருந்தாலும் விவாதம் சுமுகமான சூழலிலேயே சென்றது. நேருக்கு நேர் ஒருவர் இன்னொருவரை பார்க்கும்போது பேச்சில் கடுமை குறைவது மனதுக்கு நிறைவாக இருந்தது. இதற்காகவே இம்மாதிரி மீட்டிங்குகள் அடிக்கடி போட வேண்டும்.

எனது பிளாக்கர் பிரச்சினை தீர்ந்ததற்காக சிவகுமார் அவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்தேன். எனது ஹிட் கவுண்டர் மட்டும் மறைந்து விட்டது என்றும் கூறினேன். பழைய டெம்பிளேட்டில் சேமித்து வைத்ததிலிருந்து அதற்கான மீயுரையை எடுத்து புது டெம்பிளேட்டில் போட்டால் பழைய எண்ணிக்கையுடன் அப்படியே வரும் என்று அவர் கூறினார். வீட்டுக்கு வந்ததும் அதை முதலில் முயற்சி செய்தேன். வெற்றி பெறவில்லை. பிறகு பார்க்கலாம் என வைத்து விட்டேன்.

சுமார் 7 மணியளவில் எல்லோரும் பார்க்குக்கு பின் கேட் வழியாக சென்று ஒரு டீக்கடையில் டீ குடித்தோம். பா.க.ச.வில் நானும் உறுப்பினராக சேர்ந்து நம்ம பால பாரதீஐ எனது தரப்பில் கலாய்த்தேன்.

பிறகு தீர்த்த பார்ட்டிக்காக ஒரு கோஷ்டி கிளம்பியது. தி. நகர் பேருந்து நிலையத்துக்கு அருகில் ஒரு பாரில் மீட் செய்வதாகப் பேச்சு. நான் ஓகை சார் அவர்களது காரில் ஏறிக் கொண்டு சென்றேன். ஒரு பியர் (கிங்ஃபிஷர் ஸ்ட்ராங்), சற்று கொறிக்க சில ஐட்டங்கள் கிடைத்தன. பிறகு ஒரு சிக்கன் பிரியாணி. வயிற்றுக்குணவில்லாத போது சிறிது செவிக்கும் ஈயப்பட்டது. அதற்குள் வீட்டிலிருந்து இரண்டு அழைப்புகள் வந்து விட்டன. சுமார் 10 மணியளவில் எல்லோரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு மாம்பலம் ஸ்டேஷன் வந்தேன். உடனேயே ரயிலும் வர, மீனம்பாக்கம் வந்து சேர்ந்தேன்.

வழக்கம்போல நான் எழுதியதில் விட்டுப் போனதை ஏனைய பதிவர்கள் எழுதுவார்கள் என எதிர்பார்க்கிறேன். ஏனெனில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் உருவாகி சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

இன்றைய பதிவர் மீட்டிங் பல மன அழுத்தங்களைக் குறைத்தது என்பதே நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சுவனப்பிரியன் அவர்களுடன் சந்திப்பு

புது பிளாக்கர் பிரச்சினை ஒரு வழியாக மா.சிவக்குமார் அவர்கள் தயவால் தீர்ந்தது. அது வரை எடிட்டும் செய்ய இயலவில்லை பப்ளிஷும் செய்ய இயலவில்லை. ஆனால் பின்னூட்டங்கள் மட்டும் இடவும் மட்டுறுத்தவும் முடிந்திருக்கிறது.

முந்தா நேற்றையிலிருந்து சுவனப்பிரியனை சந்தித்ததை பற்றி பதிவு போட முயற்சித்து கொண்டே இருந்திருக்கிறேன். இபோதுதான் போட முடிந்தது. அதுவரை ஆகவே நான் போட நினைத்த பதிவை எனது பிளாக்கர் பிரச்சினைஅ பற்றிய பதிவில் பின்னூட்டமாகப் போட்டிருந்தேன். சுவனப்பிரியன் இப்பதிவை தாமதமாக இப்போது போடுவதற்கு மன்னிப்பாராக.

இப்போது பதிவுக்கு செல்வோமா?

சில நாட்களுக்கு முன்னால் சுவனப்பிரியன் அவர்கள் என்னுடன் தொலை பேசினார். அது பற்றி இப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அவர் அப்போது தன் ஊரில் இருந்தார். சென்னை வரும்போது என்னை தொடர்பு கொண்டு பேசும்படி கூறியிருந்தேன்.

முந்தா நேற்று (01.02.2007) அவரிடமிருந்து காலை 7.15 அளவில் ஃபோன் வந்தது. தான் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு வருகைகள் அருகில் வெளியே நிற்பதாகவும் தன்னை வந்து நான் பார்க்க முடியுமா என்று கேட்டார். அவர் தனது அன்னை வழி தாத்தாவை ரிசீவ் செய்ய நிற்பதாகவும் கூறினார். எங்கள் வீட்டிலிருந்து ஏர்போர்ட் ரொம்ப தூரம் இல்லை, 5 கிலோமீட்டர்கள் சாலை வழியே, 2 கிலோமீட்டர்கள் மட்டுமே, நீங்கள் காக்கையாக இருக்கும் பட்சத்தில்.

ஆட்டோ எடுத்து சென்று அவரைச் சந்தித்தேன். அப்போது மணி காலை 7.30. சுவனப்பிரியன் என்னை அடையாளம் கண்டு கொண்டார். மனிதர் ஆறடி உயரத்துக்கு நல்ல ஆஜானுபாகுவாக இருந்தார். சவுதி ஃப்ளைட் வந்து விட்டிருந்தது. அதில்தான் அவர் தாத்தா தனது ஹஜ்ஜை முடித்து கொண்டு வந்திருந்தார். ஆனால் உள்ளேயே பல ஃபார்மாலிட்டீஸ்கள். கிட்டத்தட்ட 2 மணி நேரம் போல ஆகிவிட்டது. அவர் வெளியே வரும்போது மணி 9.30.

அது வரையில் ஒரே பேச்சுத்தான். அவர் தான் சவுதியில் வேலை செய்வதாகக் கூறினார். ப்ளஸ் டூ படித்து விட்டு கணினியில் பாடம் படித்திருக்கிறார். வேர்ட், எக்ஸெல், டால்லி எல்லாம் கற்றிருக்கிறார். குடும்ப சூழ்நிலையில் உடனே வேலைக்கு போகும் நிர்ப்பந்தம். நல்ல வேளையாக தெரிந்தவர்கள் மூலமாக ரியாத்தில் உள்ளூர் கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்தது. போன இடத்தில் இவரது கணினி அறிவைப் பார்த்து ஆஃபீசில் வேலை கொடுத்து பதவி உயர்வும் அளித்திருக்கிறார்கள். மனிதர் சும்மா இராது அராபிக், உருது கற்று தேர்ந்திருக்கிறார்.

அங்கு போனதும்தான் அவர் தாத்தா ஹஜ் முடித்து விட்டு வருகிறார் எனத் தெரிந்தது. அவரைப் பார்க்காமல் வருவதில்லை என முடிவு செய்தேன். ஹாஜிகளை பார்த்து ஆசி பெறுவது நல்லது. நம்மூரில் அதே போல தீர்த்த யாத்திரை முடித்து விட்டு வருபவர்களையும் பார்த்து விட்டு அவர்கள் ஆசி பெற்று வருவோம்.

அந்த முதியவர் வரும்போதே அவர் முகத்தில் இசுலாமியருக்கான ஒரு முக்கியக் கடமையை முடித்த திருப்தி தெரிந்தது. அவரிடம் ஆசி பெற்றேன். அவரும் அன்புடன் பேசினார். ஆனால் பயணக் களைப்புடன் இருந்தார்.

சுவனப்பிரியன் அவர்களிடம் காத்திருக்கும் நேரத்தில் பல விஷயங்களை பற்றி பேசினேன். முத்தலாக் பற்றியும் பேச்சு வந்தது. அது செல்லாது என்று நான் படித்து அறிந்ததை அவரும் உறுதி செய்தார். இருப்பினும் சமீபத்தில் நான் இட்ட இப்பதிவை மனதில் வைத்து கேட்ட போது அவர்கள் குரானை இண்டெர்ப்ரெட் செய்பவர்கள் செய்யும் தவறு என்றும், பல ஜமாத்துகள் இத்தவற்றை செய்கின்றன என்றும் கூறினார்.

அதே போல மார்க்க அறிஞர்கள் இசுலாமிய இளைஞர்களை ஆங்கிலம் கற்க விடாமல் செய்து பெரிய அநீதி இழைத்து விட்டனர் என்றும் கூறி வருத்தப்பட்டார்.

சோ அவர்களை பற்றி மிக உயர்வாக பேசினார். அவருடன் நாம் ஒத்து போகிறோமோ இல்லையா அது வேறு விஷயம். ஆனால் அவர் அரசியல்வாதிகள் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமரிசனம் செய்தைல்லை என்று நான் கூறியதை ஒத்துக் கொண்டார்.

பிறகு அவர் தனது ஊரைப் பற்றி கூறினார். காவிரியின் கிளை நதிகளான குடமுருட்டி அரிசிலாறு அருகே அவர் வீடு இருப்பதாகக் கூறினார். பத்தடி ஆழத்தில் இளநீர் போன்று தண்ணீர் கிடைப்பதாகவும் கூறினார். எனது ஊர் சருக்கை பற்றியும் அறிந்திருக்கிறார். இதற்கு நடுவில் இரு முறை லெமன் டீ அருந்தினோம். போளியும் வாங்கி சாப்பிட்டோம். அது வரை அவருக்கு போளி என்று ஒன்று இருப்பதாகவே தெரியாது என்று கூறினார். பொல்லாத மனிதர் ஒரு முறை கூட என்னை பே செய்ய விட மறுத்து விட்டார்.

கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் பேசி விட்டு விடை பெற்றேன். உடனே பதிவும் போடுவேன் என்று கூறினேன். ஆனால் இரண்டு நாட்களும் பிளாக்கர் என்னை பதிவு போடவே விடவில்லை. பிளாக்கர் சப்போர்ட்டுக்கு புகார் செய்ததில் சரியாகி விட்டதாக பதில் கூறப்பட்டது. மா. சிவக்குமார் அவர்கள் பல முயற்சிகள் செய்து தவறு எங்கே என்பதை கண்டுபிடித்து கூறினார். இப்போதுதான் பதிவு போட முடிகிறது. அவருக்கு என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது