Explain with reference to context (ERC) என்று அழைக்கப்படும் சில வினாக்கள் நான் பள்ளியில் படித்த காலத்தில் மொழி பாடங்களில் கேட்பார்கள். ஒரு வாக்கியத்தை கொடுத்து அதன் இடம் பொருள் ஏவலுடன் விவரிக்கச் சொல்வதே அக்கேள்விகளின் நோக்கம்.
மகத்தான நோக்கம்தான் அது என்பதை நான் இன்றுதான் முழுமையாக உணர்ந்தேன். அதை உணர்த்தியது ஜெயமோகனின் நூறு நாற்காலிகள் கதை சம்பந்தமாக அவரது வலைப்பூவில் வந்த கடிதம்தான்.
தியாகையரின் எந்தரோ மகானுபாவுலு என்னும் கீர்த்தனை மிக பிரசித்தம். பஞ்சரத்ன கீர்த்தனைகளில் ஒன்று. தியாகையர் ஆராதனை உற்சவத்தில் திருவையாற்றில் பல இசைமேதைகள் ஒன்றாக இருந்து பாடுவதைக் காணக் கண்கோடிகள் வேண்டும். அதே பாடலை மேற்சொன்ன ஜயமோகன் பதிவில் கொடுக்கப்பட்ட யூ ட்யூப் சுட்டியை இங்கு தருவித்து எம்பெட் செய்திருக்கிறேன்.
நாகய்யா தியாகய்யாகவே மாறி இருப்பதை இதைக் கண்டுதான் அனுபவிக்க வேண்டும். 1946-ஆம் ஆண்டு வெளி வந்த அப்படத்தில் இப்பாடல் வந்த பின்னணியை இப்படம் காட்டுகிறது. இங்குதான் அந்த erc என்றால் என்ன என்பது புரிகிறது.
இதற்கு முன்னாலும் இதை பல தருணங்களில் பார்த்துள்ளேன். உதாரணத்துக்கு நடிகர் ராஜேஷ் திருவள்ளுவராக நடித்த சீரியல். அது திருவள்ளுவரின் சரிதம், பொதிகை டிவியில் வந்தது என நினைக்கிறேன். அதில் ஒரு காட்சி. அவரது நண்பனே அவருக்கு நஞ்சளிக்க அவரும் அதை அறிந்தே உண்ணும் காட்சியில் அதற்கான குறளை கூறுவது மிக இயல்பாகவே வந்தது (நானும் தேடிப் பார்த்து விட்டேன், இக்கணம் அக்குறள் சட்டென பிடிபட மாட்டேன் என்கிறது. தெரிஞ்சால் யாராவது சொல்லுங்கப்பூ).
அது போலவே ஒரு சீரியல் மிர்ஜா காலிப். சீரியல் முதல் சுதந்திரப் போர் தோல்வியுற்ற காலத்தில் (1857) இருந்து மிர்ஜா காலிப்பின் பழைய நினைவுகளுடன் ஆரம்பிக்கிறது. அவரது அமரத்துவம் வாய்ந்த பல கவிதைகள், அவரால் கூறப்பட்ட பல வாக்கியங்கள் ஆகியவை அவை இயல்பாக வந்த முதல் தருணங்களை குல்ஜாரின் இந்த சீரியல் அமர்க்களமாக காட்டுகிறது.
ஆயிரக்கணக்கானவர் வெள்ளை அரசால் தூக்கிலிடப்பட்டனர். அப்போது காலிப் மனம் கசந்து கூறினார், “பல பிணங்களை நான் சுமந்தேன். இப்படியே நிலைமை நீடித்தால் நான் இறக்கும்போது என்னைச் சுமக்க யாருமே மிஞ்ச மாட்டார்கள் என அஞ்சுகிறேன்”. இதன் erc-யை இங்கு காணலாம்.
1946-ல் தியாகய்யர் படம் வந்ததாக நான் சொன்னேன் அல்லவா. அப்படத்தைக் காண தன் கணவர் மற்றும் சுமார் மூன்று வயது பெண், 10 மாதங்களே நிரம்பியிருந்த மகன் ஆகியோருடன் சென்றார் ஒரு பெண்மணி. குழந்தைகள் இருவரும் படத்தைப் பார்க்க விடாமல் அழுது ரகளை செய்ய, அப்பெண்மணியின் கணவர் அவற்றை வெளியே அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று. அப்பெண்மணிக்கு இது பற்றி கழுத்து மட்டும் குறை. அக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அதை அவர்களிடம் கூறியுள்ளார். அப்படத்தின் நல்லனுபவத்தை அனுபவிக்க விடாமல் அந்த துஷ்டப் பையன் எவ்வளவு படுத்தினான் என்பது இப்போதுதான் புரிகிறது.
இந்த டோண்டுவை மன்னித்துவிடு அம்மா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இரா.முருகன் விமர்சனப்போட்டி
-
விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம்
விருது இரா.முருகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி ஒரு கட்டுரைப் போட்டி
அறிவிக்கிற...
10 hours ago