4/30/2008

ஜாக்கிசான் பந்தா காண்பித்தால் என்ன காண்பிக்காவிட்டால் என்ன?

தமிழ் இணையத்தில் மேலே தலைப்பில் உள்ளதை குறித்து சர்ச்சை கிளப்பப்பட்டு வருகிறது. என்னமோ ஜாக்கிசான் வந்தாராம், பந்தா காண்பித்தாராம் என்று அவரவர் எழுத ஆரம்பித்து விட்டனர்.

இதில் என்ன பிரச்சினை என்று புரியவில்லை. ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஜாக்கி சான் படங்களுக்கு இந்தியாவில் விநியோகஸ்தர். ஆகவே ஜாக்கி சானின் பார்வை கோணத்தில் ரவிச்சந்திரன் முக்கியமானவர். அவர் அழைக்கப்பட்டார், வந்தார், சென்றார். அவ்வளவே. இதில் சம்பந்தப்பட்ட எல்லொருக்குமே - ஜாக்கிசான் உட்பட - லாபம். இதில் என்ன பிரச்சினை? தசாவதாரம் படத்துக்கு நல்ல விளம்பரம். ஆஸ்கார் ரவிச்சந்திரன், கமல் ஆகியோர் மகிழ்ச்சி எய்தினர். ஜாக்கிசான் நேருக்கு நேராக இந்தியாவில் தனக்கு எவ்வகை தீவிர ரசிகர்கள் உள்ளனர் என்பதை கண்டு மகிழ்ந்தார். ஒரு கலைஞனுக்கு இம்மாதிரி புகழ் டோஸ்கள் தேவைதான். தமிழகத்தின் பத்திரிகைகளும் இது பற்றி எழுதி சர்குலேஷனை பெருக்கி மகிழ்ந்தனர்.

கேள்வி என்னவோ எழும்பி விட்டது. அதையும் பார்த்து விடுவோமே. சென்னைத் தண்ணீரை குடிக்கவில்லையாம், தான் கொண்டு வந்த மினரல் வாட்டரைத்தான் குடித்தாராம். இதில் என்ன தவறு? அவருக்கு அவரது ஆரோக்கியம் முக்கியம். இங்கு வந்து தண்ணீர் பந்தல் ஹோட்டல் தண்ணீரை குடிக்க வேண்டும் என்று அவருக்கு என்ன கட்டாயம்? இருந்த நேரமோ குறைவு. அந்த நேரத்துக்கு தேவையான தண்ணீரை தன் வசம் சேமித்து வைக்க இயலாதாமா?

தான் வந்தது குறித்து எழுந்த விவாதங்களை குறித்து கேள்விப்பட்டு அவரே தனது ஜாக்கி சான் வலைப்பூவில் அது பற்றி எழுதி பந்தா எல்லாம் காண்பிக்கவில்லை என காட்ட முயன்றுள்ளார்.

நான் என்ன நினைக்கிறேன் என்றால் அவரது நிலையில் இருப்பவர்கள் சிறிதளவாவது பந்தா காண்பித்தால்தான் எல்லோருமே மதிப்பார்கள். கசப்பான விஷயம்தான், ஆனால் அதில் நிறைய உண்மை உண்டு.

அவரது வலைப்பூவில் ஜாக்கி சான் எழுதுகிறார், "The premiere event was incredible. I saw so many friendly people, and so many famous faces! Many stars of Indian cinema were there and I recognized their faces, but I didn’t know how to pronounce their names (you know I’m much better with faces than with names)". இதில் என்ன வேடிக்கை என்றால் அவருக்கு ரமேஷ் பாபு, மல்லிகா ஷராவத், விக்ரம் லாம்பா என்ற பெயர்கள், தசாவதாரம் என்ற படத்தின் பெயர் எல்லாம் தெரிந்திருக்கிறது, ஆனால் கதாநாயகன் கமலஹாசன் என்ற பெயர் தெரியவில்லை. உச்சரிக்க வராவிட்டால் என்ன, மேலே பெயர்களை எழுத்தில் குறிப்பிட்டது போல கமலின் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாமே. அவரது மக்கள் தொடர்புக்கு பொறுப்பேற்றவர்கள் விட்ட கோட்டை அது. இதைக்கூட நான் இங்கு சொல்வதற்கு காரணம் நிகழ்ச்சிகளை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பார்க்க வேண்டும் என்பதாலேயே.

பந்தா விஷயத்துக்கு வருவோம். யார்தான் பந்தா காண்பிக்கவில்லை? அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களில் விருந்தினராக அழைக்கப்பட்ட விவேக், எஸ்.வி.சேகர் ஆகியோர் காட்டாத பந்தாக்களா? Please grow up!

இவை எல்லாமே திட்டமிட்டு செய்யப்பட்ட பி.ஆர். செயல்பாடுகள் என நினைக்கிறேன். நான் ஏற்கனவே கூறியது போல, சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே ஒரு லாபம்.

மேலும் ஒன்று கூறுவேன். டோண்டு ராகவன் போன்ற பதிவர்களும் இம்மாதிரி பதிவுகள் போட்டு மகிழ முடிவது அவர்கட்கு கிடைத்த லாபம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/26/2008

போலி சாமியார்கள் செய்யும் மோசடிகள்

கல்கி பகவான் என்று தன்னை அறிவித்து கொண்டிருக்கும் ஒரு ஏமாற்று பேர்வழியும் அவரைச் சார்ந்தவர்களும் செய்த லீலையால் இருபதுக்கும் மேற்பட்ட ஏமாளி பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் விட்ட நிகழ்ச்சி இப்போது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு முன்னோடியாக இந்த அறிவிப்பு வந்துள்ளது: "மிகவும் சக்தி வாய்ந்த சூரிய யந்திரத்தின் முப்பரிமாண வடிவில் அமைந்திருப்பதுதான் 'ஒன்னெஸ்' (எல்லாம் ஒன்றே) திருக்கோயில். ஸ்ரீஸ்ரீ (ரொம்ப முக்கியம்) அம்மா (?) பகவான் எழுப்பியிருக்கும் இந்தக் கோயிலுக்குள் சென்று வந்தாலே கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், பூரண குணத்துடன் வெளியே வருவார்கள். நம்மை மிகப்பெரிய செல்வந்தர்களாக்கி மேம்பட்ட பொருளாதார நிலையை அடையச் செய்யும் 'ஒன்னெஸ்' திருக்கோயில். அனைவரும் வருக, பேரானந்த நிலையை அடைக". (நன்றி ஜூனியர் விகடன்).

சுமார் 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கோவிலின் மகாகும்பாபிஷேகத்துக்கு லட்சக்கணக்கில் மக்கள் திரண்டுவர, கோயில் திறந்த சில மணித்துளிகளிலேயே நெரிசலில் சிக்கி பக்தர்கள் சிலர் உயிர் துறந்த பரிதாபம் நடந்திருக்கிறது. இப்போது கோயில் மூடப்பட்டுள்ளது.

கோயில் கட்டப்பட்டுள்ள இடம் ஆந்திர மாநிலம் தடாவுக்கு அருகில் காளஹஸ்திக்கு செல்லும் வழியில் பத்தலவல்லம் என்னும் குக்கிராமத்தில் எழுப்பப்பட்டுள்ளது. அது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட இடம் வேறு. இனிமேல் வனம் பாதுகாக்கப்பட்டாற்போலத்தான்.

இந்த நெரிசலில் சிக்கி பலரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க கல்கி பகவான் ஹெலிகாப்டரில் ஏறி எஸ்கேப் ஆனதுதான் கொடுமை.

இதெல்லாம் ஆன பிறகும் கோயிலின் உள்ளே தங்கியிருக்கும் ஏராளமான வெளி நாட்டினருக்கும், வி.ஐ.பி.களுக்கும் உயர்தர உணவு தயாரிப்பில் சென்னையைச் சேர்ந்த ஒரு நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம் ஈடுபட்டிருந்ததது என செய்திகள் தெரிவிக்கின்றன. என்ன கொடுமை ஐயா? மரணங்கள் நடந்த அதே இடத்தில் சாப்பாடா? அதென்ன வயிறா வேறு ஏதாவதா? எப்படி சாப்பாடு இறங்கும்?

கல்கி பகவான் என்று தன்னைத்தானே அறிவித்து கொண்டிருக்கும் இந்தப் பேர்வழியை பற்றி நான் முதலில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கேள்விப்பட்டேன். அவர்தான் மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி என்று அவரது பக்தர் ஒருவர் என்னிடம் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார். "எவ்வாறு அவ்விதம் கூறுகிறீர்கள்" எனக் கேட்க அந்த பக்தர் அதே குருட்டு பக்தியுடன் கூறினார் "அதை அவரே கூறினார்" நான் அவுட்டு சிரிப்பை வெளியிட, அபசாரம் அபசாரம் என்று அவர் தன் கன்னத்தில் போட்டு கொண்டு இடத்தை பைய காலி செய்தார்.

Dhangaa Fasaad (அடிதடி, வன்முறை) என்ற தலைப்பில் ஒரு ஹிந்தி நாவல். அதில் இம்மாதிரி பக்தியின் பெயரில் மக்களை மொட்டை அடிக்கும் போலி சாமியார்கள் பற்றி நிறையவே எழுதியுள்ளனர். அதுவும் பம்பாயில் ஒரு காலிமனையை இருவர் சேர்ந்து ஸ்வாஹா செய்ததைப் பற்றி சுவையாக எழுதியுள்ளார் ஆசிரியர். அதில் ஒருவன் ஹிந்து இன்னொருவன் முசல்மான் என்று தங்களை அறிவித்து கொண்டவர்கள். ஹிந்துவின் கனவில் ஒரு சூஃபி அறிஞர் வந்து அந்த இடத்தில் ஒரு தர்க்கா கட்டும்படி கூறினாராம். முசல்மான் கனவில் சிவபெருமான் வந்து தனக்கு அங்கு கோயில் கட்டுமாறு கூறினாராம். (இதில் குழப்பமே வேண்டாம், கதையில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டது) இருவரும் அந்த நிலத்துக்கு சண்டை போட - அதாவது ஹிந்து தர்க்காவை கட்டுவதற்கும் முசல்மான் சிவன் கோவில் கட்டுவதற்கும் - பிறகு ஒப்பந்தம் ஏற்பட்டு இருவரும் நிலத்தை பங்கு போட்டு கொண்டதாக கதை செல்கிறது. இதில் சூட்சுமம் என்னவென்றால் இருவருமே நண்பர்கள், தங்களுக்குள் பேசிவைத்து கொண்டு இந்த நாடகம் ஆடியுள்ளனர்.

ஆக கல்கி பகவான் போன்ற போலி சாமியார்களுக்கு பஞ்சமே இல்லை, ஏனெனில் காதில் பூவைத்த ஏமாளிகள் எண்ணிக்கை கோடிக்கணக்கில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/25/2008

டோண்டு பதில்கள் 25.04.2008

கிஷோர்:
1) மோடி போன்ற ஒரு மதவாதி என்னதான் ஒரு சிறந்த நிர்வாகி(எனக்கு இதில் ஆட்சேபணை இல்லை) என்றாலும். அவர் சார்ந்திருக்கும் மத அமைப்பின் சாயல் இருக்கும் வரை அவரை எப்படி ஒரு உதாரணபுருஷன் அளவிற்கு உயர்த்த முடியும்? (குஜராத்தில் பெற்ற வெற்றியை கூறாதீர்கள். அரசியல் வேறு நிர்வாகம் வேறு).
பதில்: நீங்கள் கூறுவதாலோ அல்லது பத்திரிகைகள் கூறுவதாலோ மோடி அவர்கள் மதவாதி ஆகி விடப்போவதில்லை. நீங்களாக ஒன்றை அனுமானமாகக் கொண்டு அதன் மேல் கேள்விகள் கிளப்புவது என்ன நியாயம்? மோடி மதவாதி என்றால், ராஜீவ் காந்தி சீக்கியக் கொலைகளை செய்தவர்களுக்கு மந்திரி பதவி தந்து அழகு பார்த்தவர். அவரை அவ்வாறு கூறுவீர்களா? சீக்கிய இனம் என்றாலே இந்தியாவை பிரதிநிதிப்படுத்துவதாக இருந்த நிலையை மாற்றி அவர்களை இந்திய நீரோட்டத்திலிருந்தே ஒதுக்கிவைத்தவர் அன்னை மாதா தாயார் இந்திரா காந்தி. அவர் மகன் ராஜீவோ சீக்கியக் கொலைகளை ஒரு ஆலமரம் வீழ்ந்தால் நஷ்டமாகும் பல சிறு செடிகளுக்கு ஒப்பிட்டு பேசியவர். மோடியைப் பற்றி கூறினால் அவரும் கவனத்தில் எடுத்து கொள்ளப்படவேண்டும். மோடி மதவாதி என்பதை 2002 தேர்தலிலேயே கூறித்தான் பிரசாரம் செய்தனர். அப்படியும் அவர் வெற்றி பெற்று விட்டார். பிறகு அடுத்த 5 ஆண்டுகளில் நல்ல நிர்வாகம். ஏதேனும் ஒரு மதக்கலவரமோ அல்லது தீவிரவாதத் தாக்குதலோ நடந்ததா குஜராத்தில்? 2007 தேர்தலின்போது இந்தியச் சரித்திரத்திலேயே முதல்முதலாக ஒரு பதவியில் உள்ள மந்திரி மீது ஒரு சிறிய ஊழல் புகார் கூடக் கூறமுடியாமல் போனது. மோடி மதவாதி என்பது ஒரு பிதற்றலாகவே இப்போது எனக்கு படுகிறது. என்ன, எல்லா மக்களையுமே அவர் சமமாகப் பாவிக்கிறார். இசுலாமியர் என்பதற்காக அவர்கள் ஓட்டைப் பெற அவர்களுக்கு அசட்டு சலுகைகள் தர மறுக்கிறார். எல்லோருக்குமே நல்ல நிர்வாகம். அதுதான் அவரது தாரக மந்திரம்.
2) அப்படி அவரை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் ஏன் பின்லேடனை மோடியை விட சிறந்த நிர்வாகியாக எடுத்துக்கொள்ளக்கூடாது? அவ்வளவு பெரிய நெட்வொர்க்கை தலைமறைவில் இருந்து கொண்டே கவனித்துக்கொள்கிறானே! நிர்வாகம் பற்றி மட்டுமே நான் பேசுகிறேன். அவனுடைய தீவிரவாதத்தை அல்ல.
பதில்: பின்லேடனை மோடியுடன் ஒப்பிடுதல் அபத்தமானது. ஹிட்லராக இந்திரா காந்தியே அவசர நிலை கொண்டு வந்து நாட்டைக் குட்டிச்சுவராக்கினாலும் அவரை அன்னை இந்திரா என்றும், அவரது மருமகள் மற்றும் ராஜீவ் காந்தியின் விதவை என்பதற்காக மட்டுமே இத்தாலியக்காரரை எல்லாம் அன்னை என்று அழைக்கும் நமக்கும் வெட்கமே இல்லை.
3) ஒரு இந்து அமைப்பு ஒரு முஸ்லீம் அமைப்பு இரண்டுமே ஒரே பஞ்சாயத்திற்கு மோடியிடம் சென்றால் அவரின் தீர்ப்பு என்னவாக இருக்கும்?
பதில்: அவரது தீர்ப்புக்கு ஏன் வரப்போகிறது? தீர்ப்பு என்பதை அளிப்பது கோர்ட் நீதிபதிகள், முதன் மந்திரிகள் அல்ல. அவர் என்ன கட்டை பஞ்சாயத்தா செய்கிறார்? அப்படியே செய்தாலும் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சினையை உணர்ந்துதான் நடவடிக்கை எடுப்பார் என்பதை இசுலாமியரும் அவருக்கு கணிசமாக ஓட்டு போட்டதிலிருந்தே தெரியவில்லையா?

கோமணகிருஷ்ணன்:
1. பிரியங்கா சிறையில் போய் நளினியை சந்தித்தது,விடுதலைப் புலிகளை 'அப்பீஸ்' செய்யவே என்ற ஒரு கருத்து நிலவுகிறதே,அது பற்றி? (இந்திய அரசு இலங்கை அரசுக்கு தார்மீக ரீதியாக தரும் பல ஆதரவு உதவிகள்,புலிகளை கோபமடையச் செய்திருக்கும் இந்தச் சூழலில்,இக்கருத்து முக்கியத்துவம் பெறுகிறது).
பதில்: இதில் பல உள்குத்துக்கள் அடங்கியுள்ளன. நிலைமை தெளிவாக இல்லை. ஆயினும் சோனியா காந்தி என்னமோ தான் தியாகபிம்பமாக விளங்க வேண்டும் என்பதற்காக காய் நகர்த்துகிறார் என்பது மட்டும் புலனாகிறது. ராஜீவ் கூடவே இறந்தவர்களது குடும்பங்களை பற்றி காங்கிரசின் ஓட்டு பொறுக்கும் அரசியலுக்கு என்ன கவலை? இது பற்றி நேற்று (24.01.2008) விற்பனைக்கு வந்த 30.04.2008 தேதியிட்ட துக்ளக் கூறியுள்ளவை கவனத்துக்குரியது. அதன் சுருக்கம்: 1.சிறைச்சாலை விதிகள் பல மீறப்பட்டு அரசின் துணையுடன் இது நடந்துள்ளது என்பது கவலைக்குரியது. 2. ராஜிவ் கொலை என்பது பிரியங்காவை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல. நாட்டின் முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதும், அப்போதைய தமிழகத்தில் அதற்கு சாதகமான நிலை இருந்ததும், இப்போது கூட அந்த கொலை கும்பலைச் சேர்ந்த பலர் தமிழகத்தில் உலவி வருவதும், அவர்களுக்கு இங்குள்ள சிலர் ஆதரவு தெரிவிப்பதும் பொதுப் பிரச்சினைகள். 3. ராஜீவ் கொலையில் உயிரிழந்தது இன்னும் பலர். அவர்கள் சார்பில் கருணை காட்ட சோனியா காந்திக்கு என்ன உரிமை இருக்கிறது என்று அப்போதே (நளினிக்கு மன்னிப்பு வழங்கியபோதே) துக்ளக் கேள்வி எழுப்பியது. இப்போது மகளின் முறையா, அவர் என்ன நீதி தேவதையா? 4. இத்தனை ஆண்டுகள் கழித்து பிரியங்கா இம்மாதிரி செய்வதற்கு மனிதாபிமானம் ஒரு போர்வையே தவிர உண்மைக் காரணம் அல்ல எனத் தோன்றுகிறது. நளினியின் கணவர் முருகன் ஒரு புத்தகம் எழுதுவதாகவும், அது பிரசுரமானால் சிலர் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்னும் அவசியம் வரும் என்று வேறு செய்தி வருகிறது.
2. வாங்கும் சக்தி உயர்ந்தால் மக்களுக்கு விலைவாசி பிரச்னை தெரியாது என்று 'கருத்து' உதிர்த்திருக்கும் மு.க.பற்றி?
பதில்: வெறுமனே அவர் குடும்பத்துக்குத்தானே வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது போலத் தோன்றுகிறது. மக்களுக்கு ரொட்டி கிடைக்காவிட்டால் அவர்கள் கேக்குகளை உண்ணட்டும் என்று திருவாய் மலர்ந்தருளின ஃபிரெஞ்சு ராணி ஆன்ட்வானெட் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்.

திண்டுக்கல் சர்தார்:
1. நேற்று(17.4.2008)ந்தேதி சட்டசபையில் பேசும்போது காந்தியைக் கொன்ற பாவிகளின் ஆட்சி வந்துவிடக்கூடாது.மீண்டுமொரு ராம ரதம்,அதவானியின் சுற்றுப் பயணம் எல்லாம் நடந்தால் நாடு காடாகி விடும்"என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளரே! இது தொடர்பாக நீதிமன்றத்தில் விரிவாக விவாதம் நடந்து காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்.க்குப் பங்கு இல்லை என்று தீர்ப்பு வந்தபின்னரும் கூட கருணாநிதி இவ்வாறு கூறுவதன் பொருள் என்னவாக இருக்கும்?
பதில்: இப்போதைக்கு திமுக பாஜக கூட்டு இல்லை. கருணாநிதி அவர்களுக்காக காங்கிரசே அவர்தம் உறவினருக்கு பதவி அளிக்கிறது. ஆகவே பாஜகவின் தயவு தற்சமயம் அவருக்கு தேவையில்லை. அதுதான் விஷயம்.
3. "இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில் கிரீமி லேயருக்கான தற்போதுள்ள இரண்டரை லட்ச ரூபாய் உச்சவரம்பைத் தளர்த்திப் பத்து லட்சமாக்க வேண்டும்"என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பாலு பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது.உண்மையிலேயே இவ்வாறு நடந்துவிட்டால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பே கேலிக்குள்ளாகி விடாதா? (உண்மையில் இவ்வாறு தளர்த்தப்பட்டாலும் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,எம்.எல்.ஏ.,உட்பட பஞ்சாயத்துக் கவுன்சிலர்கள் வரை யாருமே இந்த வரம்புக்குள் வர மாட்டார்களே.அவர்கள் வருமானம் இதை விட அதிகமல்லவா!)
பதில்: ஏதாவது செய்து பின்வாசல் வழியாக கிரீமி லேயர் வந்துவிடுமோ என அஞ்சுகிறேன்.

கூடுதுறை:
1) படிக்காத மேதை காமராஜர் ஆட்சியை விடவா மோடி சிறந்த முதல்வர் ஆகிவிட்டார்?
பதில்: காமராசர் ஆட்சியைப் பற்றி கூட 1957/1962/1967 தேர்தல்களில் ஊழல் புகார்கள் கூறப்பட்டன. 1962-ல் பக்தவத்சலனார் தான் தேர்வடைவதற்காக ஓட்டு பெறுவதில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார். 1967 தேர்தல் சமயத்தில் ரேஷன் கடைகளில் பொருள் கிடைக்கவில்லை. அந்த வகையில் மோதியின் ஆட்சி பற்றி 2007 தேர்தலில் ஒரு ஊழல் புகாரும் இல்லை.ஆகவே, .... .... (வாக்கியத்தை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளவும்).
2) உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்காதா? உங்கள் பதிவுகளில் அதன் வாடையே தென்படுவதில்லையே?
பதில்: கிரிக்கெட்டா? ஹா ஹா ஹா. டெண்டுல்கர் பத்து கோல்களாவது போட மாட்டாரா எனக் கேட்டு நண்பர் என்றென்றும் அன்புடன் பாலாவை டென்ஷன் ஆக்கியவன் நான். மேலும், சாரணர் இயக்கத்தில் இருந்தபோது டயரி எழுதும் பழக்கம் இருந்தது. இன்று ரன் எதுவும் எடுக்கவில்லை என்றே தினமும் எழுதிவர, ரன் ஏதாவது எடுத்தால் மட்டுமே அதை டயரியில் குறிப்பிடுமாறு எனது அன்னையால் அன்புடன் தலையில் குட்டப்பட்டு அறிவுறுத்தப்பட்டவன். இருப்பினும் கிரிக்கெட் பற்றியும் பதிவுகள் போட்டுள்ளேனே. பார்க்க: 1.
2.

அனானி (21.04.2008, 00.37 மணிக்கு கேட்டவர்)
1. Have you started buying Times of India - Chennai Edition
பதில்: முதல் நாள் மட்டும் வாங்கினேன். பிறகு வாங்கவில்லை. தில்லியில் இருந்தபோது கூட ஹிந்துஸ்தான் டைம்ஸ்தான் வாங்கினேன்.
2. What Newspapers, Magazines do you read regularly. Do you plan to subscribe to Times of India..
பதில்: ஹிந்து, விகடன், கல்கி, ஜூ.வி., குமுதம், குமுதம் ரிப்போர்டர் ஏல்லாவற்றையும் விட முக்கியமாக துக்ளக். டைஸ் ஆஃப் இந்தியாவுக்கெல்லாம் சந்தா கட்டும் எண்ணம் கிடையாது. அப்படி பார்க்கப் போனால் எல்லாவற்றையும் நேரடியாக கடைகளில் அன்றன்று வாங்குவதுதான் வழக்கம். சந்தாவெல்லாம் எதற்குமே கட்டுவதில்லை, ரீடர்ஸ் டைஜஸ்ட், பிசினஸ் டுடே மற்றும் டைம் ஆகிய மூன்று பத்திரிகைகள் தவிர. அதுவும் தற்சமயம் இல்லை.

சங்குமாமா:
1. பிரியங்கா நான் சொல்லித்தான் நளினியை சிறையில் சந்தித்தார் என்று மொக்கை போடும்..டி ஆர் மாதிரி லூசு அரசியல் செய்பவர்களை பற்றி டோண்டு சார் என்ன நினைக்கிறார்?
பதில்: தமாசு. இதற்கு பேசாமல் டி.ஆர். காமெடி டயலாக் போட்டு சண்டைக் காட்சிகளை அமைக்கலாம். ஒரு படத்தில் "வாடா என் மச்சி, வாழைக்கா பஜ்ஜி" என்று பாடியபடியே சண்டை போடுவதன் காவியத்தன்மையை கூறவும் இயலுமோ! :))) இன்னொரு காவியத்தன்மை வாய்ந்த டயலாக் ஒன்று சண்டைக் காட்சியில், "தாசு நீ க்ளோசு".

ஜாம்பஜார் ஜக்கு:
1. ஸாரே, இந்த மெட்ராஸ் பாஷைல இருக்கிற ஒரு இஸ்பீடு வேற தமிழ்ல ஏன் தலீவா வரமாட்டேன்னுது?
பதில்: இந்த மெட்ராஸ் பாசைலே இருக்கற கிக்கே தனிப்பா. அதாவது பாஷையோட கிராம்மர் எல்லாம் தாரவாந்துப் பூடுது. இன்னா நெனிக்கிறியோ அத்த அப்படியே பால்மாறாம பேசிக்கினே போகணும் அவ்ளோத்தான். இதுக்கெல்லம் டூஷன் அப்புசாமி சார் கிட்ட எடுத்துக்க வோணும் சொல்லிப்பிட்டேன். எந்த அப்புசாமியா? எந்த ஊர்ல கண்ணு இருக்கே. நம்ம சீதே கெயவியோட புருசனத்தாம்பா சொல்றேன்.

சாத்தப்பன்
Why do you waste your energy in fighting 'bramanical' things instead of accepting 'stone age fact of braminical' and take different topics for discussion , like......
1-Untold story of kushbu

பதில்: அவரைப் பற்றி எல்லோரும் பல தருணங்களில் பலான பலானது கூறிவிட்ட பிறகு அவருக்கு ஒன்றும் Untold story இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் முயற்சிக்கிறேன். சமீபத்தில் 1986-ல் மேரி ஜங் என்ற ஹிந்தி திரைப்படத்தில் அனில் கபூரின் தங்கையாக அவர் வந்து நன்றாக நடித்தார். அதற்கும் முன்னால் சுனில் தத்தின் தர்த் கா ரிஷ்தா படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்தார்.
2-What is your beauty rating of current TV actressss and which one do you like most.
எனக்கு பிடித்தவர் காயத்ரி (மெட்டி ஒலி சரோ) மற்றும் காவேரி
3-Have you seen Dr.Cockney's sex surveys?
இல்லை, இதுவரை பார்த்ததில்லை. நம்ம டாக்டர் மாத்ருபூதம் மாதிரித்தான் அவர் என கூகளிட்டு அறிந்தேன். பாலியல் அறிவீனம் மேல்நாடுகளிலும் உள்ளது என்பதைக் காண ஒரு அல்ப திருப்தி.

கண்ணன், பாங்காக்
1. தமிழகத்தைச் சேர்ந்த தற்போதுள்ள மத்திய அமைச்சர்களில் யார் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்? உங்கள் அளவில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு மார்க் போடுவீர்கள் (Out of 10) இந்தியா டுடே பாணியில்).
அப்படியெல்லாம் மதிப்பெண் தர எனக்கு ஒரு தகுதியும் இல்லைதான். இருப்பினும் ப.சிதம்பரமும் டி.ஆர். பாலுவும் அன்புமணியும் மனதைக் கவர்கின்றனர்.
2. மகர நெடுங்குழைக்காதன் இவ்வளவு ஃபேமஸ் ஆவார் இணையத்தில் (உங்கள் மற்றும் லக்கி பதிவுகளால்) என எதிர்பார்த்ததுண்டா?
பதில்: நானோ அல்லது வேறு யாரோ சொல்லியா என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் புகழடையப் போகிறான்? அவனால் நான்தான் பெருமை பெறுகிறேன். அதே போல என்னை கேலி செய்வதாக நினைத்து அவனை அசிங்கமாக எழுதும் அரைகுறைகளைப் பற்றி எனக்கு கவலை இல்லை. அதே சமயம் அவனுக்கும் எனது பாதுகாப்பு தேவையில்லை.
3. பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்கும் நீங்கள், ஐடி கம்பெனிகள் ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் (அவர்கள் பணியாளர்களுக்கு) சொல்லித்தர கூப்பிட்டால் செல்வீர்களா ? சென்னையில் உள்ள காக்னிசாண்ட் (CTS), இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ போன்ற கம்பெனிகளிடம் இந்த மாதிரி ஒரு கன்சல்டன்ஸி வேலையை ஏற்றுகொள்வீர்களா? அவர்களை தொடர்பு கொண்டதுண்டா?
டி.எஸ்.க்யூ. (இப்போது அது இல்லை. "எப்படியிருக்கும் நீ வேலை செய்தால் என கெக்கலி கொட்டுகிறான் முரளி மனோஹர்)), குமரன் சிஸ்டம்ஸ், எச்.சி.எல். ஆகிய கம்பெனிகள் எனது வாடிக்கையாளர்கள் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு. பிர்லா சாஃப்ட் கம்பெனிக்கு ஃபிரெஞ்சு தெரிந்தவர்களை இண்டர்வ்யூ செய்து பரிந்துரைகள் தர பல முறை அழைக்கப்பட்டு அவ்வேலையை செய்துள்ளேன். மற்றப்படி மொழி கற்றுக்கொடுக்க நான் ஆள் இல்லை. முக்கியமாக அதிக துட்டு அதில் இல்லை. துபாஷியாக வந்தோமா வேலை செய்து பணம் பார்ப்போமா என்று இருக்கும் நிலையில் சொல்லி கொடுக்கும் ஆப்ஷன் கவர்ச்சிகரமாக இல்லைதான்.
4. ஜெ. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?
தீவிரவாதிகளுக்கு எதிராக அதிக நடவடிக்கைகள் இருக்கும். மற்றப்படி அதிமுகவும் திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.
5. இந்தக் கோடையின் உக்கிரத்தை தணித்துக்கொள்ள என்னென்ன உத்திகளில் இறங்கியுள்ளீர்கள் ? ஊட்டி, கோடை டிரிப் உண்டா? இல்லை நங்கநல்லூர் மட்டுமேதானா?
பதில்: நான் விரும்பி தங்குவது நங்கநல்லூரில் மட்டுமே. மேலும் எனக்கெல்லாம் ஏது விடுமுறை? வாரத்துக்கு ஏழு நாட்களும் வேலைதான். எனது கணினி முன்னால் அமர்ந்து வேலை செய்வதைத்தான் விரும்புகிறேன்.
6. இந்தியாவின் மின்சார பற்றாக்குறையை தீர்க்க உடனடியாகவும், நீண்ட கால நோக்கிலும் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்?
பதில்: உடனடி தேர்வாக முதற்கண் மின்சாரத் திருட்டை ஒழிக்க வேண்டும். அவ்வாறு திருடுபவர்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும். என்ன, அதற்கு அரசியல் ரீதியான தைரியம் தேவை. அது செய்துதான் குஜராத்தில் ஜோதிகிராம் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. முக்கியமாக கட்சி மகாநாடுகளுக்கு கொக்கி போட்டு நேரடியாக லைனிலிருந்தே மின்சாரம் திருடுவதை நிறுத்த வேண்டும். நீண்ட கால நோக்கில் கரியோ எண்ணையோ நிரந்தரமாக இருக்க இயலாது என்பதை உணர வேண்டும். சூரிய ஒளியிலிருந்து, அலைகளிலிருந்து மின்சாரம் எடுக்கும் தொழில் நுட்பத்தை ஊக்குவிக்க வேண்டும்.

அடுத்த பதிவில் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/18/2008

டோண்டு பதில்கள் - 18.04.2008

அனானி (11.04.2008 அன்று 16.46 மணிக்கு கேட்டவர்)
1. தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருந்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இப்பொழுது பதிவெழுத வந்தவர்கள் கூட நட்சத்திரமாக முடிவதை நினைத்து வருந்தியிருக்கிறீர்களா?
பதில்: ஒரு முறை என்ன இரு முறைகள் நட்சத்திரமாக இருந்துள்ளேன். என்னைத் தவிர எனக்குத் தெரிந்து துளசி மேடம் மட்டும்தான் இரண்டு முறை நட்சத்திரமாக இருந்துள்ளார். இரண்டாம் முறையாக நட்சத்திரமாக இருந்த சமயம்தான் ஆண் பெண் கற்பு நிலைகள் பற்றிய சர்ச்சைக்குரிய பதிவுகள் சில போட்டேன். தேன்கூட்டிலும் என்னை சிறப்பு பதிவராக தேர்ந்தெடுத்தனர். ஆக, உங்கள் இரண்டாம் கேள்வி தேவையற்றதாகி விட்டது.

S.C.S. சுந்தர்
1) அம்பேத்கர் இயற்றிய சட்டம் தற்காலத்திற்கு சரியாக உள்ளது என நினைக்கிறிர்களா?
பதில்: அம்பேத்கரின் சட்டம் நமக்கு வரப்பிரசாதமே. ஆனால் அதை நம்ம அரசியல்வியாதிகள் போட்டு பிழிவதுதான் சகிக்கவில்லை. ஓட்டு பொறுக்கும் அரசியலுக்கு ஏதுவாக அதை ஒவ்வொருவரும் வளைப்பது நமது நாட்டுக்கு ஒரு சாபக்கேடு.
2) மோதி பிரதமர் ஆனால் இந்தியாவும் சிங்கப்பூர் போல கட்டுப்பாடான தேசமாக முடியும் என் நினைக்கிறிர்களா?
பதில்: ஏன் ஆகமுடியாது? என்ன மிகவும் அதிகமாக அதற்கு அவர் மெனக்கெட வேண்டும் அவ்வளவே. அவர் பதவிக்கு வரும் முன்னால் குஜராத்தும் எல்லா பிரச்சினைகளையும் தனக்குள் வைத்துத்தான் இருந்தது. நிர்வாகத்தில் பல ஓட்டைகள் வழியாக அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஆட்டைகள் போட்டு வந்தன. எல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளி வைக்கவில்லையா அவர்? வெறுமனே கையூட்டுக்கு இடம் தராது வரிவசூலை செய்தாலே வேணமட்டும் பணம் கிடைக்கிறது என்பதை அவர் எடுத்து காட்டினாரே. துக்ளக் ஆண்டுவிழா கூட்டதில் மோடி பேசியதைப் பற்றி நான் எழுதியதில் ஒரு பகுதி இதோ.
"அரசு மனம் வைத்தால் வருவாயையும் பெருக்க இயலும் என்றார். ஆனால் அது லஞ்சத்தை ஒழித்தால்தான் முடியும் என்றார். உதாரணத்துக்கு மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு. இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட பூர்வமாக கலெக்ட் செய்வது மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகம் எனக் கூறினார் (எவ்வளவு காலக்கட்டம் என்பதை சரியாக கேட்க இயலவில்லை லௌட்ஸ்பீக்கர் சதி செய்தது) (பிறகு அது ஓராண்டிற்கான கணக்கு என துக்ளக்கில் படித்து அறிந்து கொண்டேன்). ஆனால் மிகவும் அதிகம் அது, சட்டப்படி என்னவெல்லாம் வருமானம் அரசுக்கு வரக்கூடும் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் செய்யாது விட்டால் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அதிகாரிகள், மந்திரிகள் ஆகியோரது தனிப்பட்ட பணப்பைதான் நிறைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்".

வஜ்ரா:
1. நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் வெற்றி பெற்றுவிட்டால்?
பதில்: நேப்பாளத்துக்கு சங்குதான். இந்தியாவில் உள்ள சீன அடிவருடிகளுக்கு கொண்டாட்டம். வேறு என்ன சொல்வது.
2. கன்னூர், மற்றும் நந்திகிராம் பற்றி?
பதில்: கம்யூனிஸ்டுகள் தாங்கள் எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது மட்டும் மக்கள் கருத்து பற்றியெல்லாம் வாய்க்கிழிய பேசுவார்கள். அதுவே அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் கோவிந்தாதான். டைனாமென் சதுக்கம், முப்பதுகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஸ்டாலினால் கொலை செய்விக்கப்பட்டது ஆகியவை போதாதா?
3. 27% OBC இடஒதுக்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து?
பதில்:மற்றப் பிற்படுத்தப்பட்ட சாதியினரில் கிரீமி லேயர் எனப்படும் பணக்காரர்களை 27% இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கியது நீதிக்கு உட்பட்டே உள்ளது. அதிலும் தலித்துகளை வன்கொடுமை செய்வதில் பெரும்பாலான நேரங்களில் மேலே கூறப்பட்ட கிரீமி லேயர்களே இன்னமும் முன்னணியில் உள்ளனர். தத்தம் குழந்தைகளை மாண்ட்ஃபோர்ட் கான்வண்ட் மேட்டர்டே போன்ற நல்ல பள்ளிகளிலே படிக்க வைக்கின்றனர். ஆனாலும் இட ஒதுக்கீட்டிலும் பங்கு கேட்கின்றனர். தங்களுக்குரிய வாக்கு வங்கி பலத்தை வைத்து அட்டூழியங்கள் செய்கின்றனர். கிரீமி லேயர் என்று அழைக்கப்படுபவர்கள் ஆண்டு வருமான இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல இருக்க வேண்டும் என்றிருப்பதாகப் படித்துள்ளேன். அதாவது மாதத்துக்கு 20000 ரூபாய்க்கு மேல். எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் உட்பட பலர் இந்த இட ஒதுக்கீட்டுக்குள் வர இயலாது. நல்லது. அப்படியே ஆகட்டும்.
துரதிர்ஷ்டவசமாக இடதுசாரி சிந்தனையுடைய, நகரத்தில் பிறந்து வள்ர்ந்த அறிவுஜீவிகள் இந்த கிரீமி லேயரையே ஆதரிக்கின்றனர். கிராமங்களில் இந்த கிரீமி லேயர்கள் செலுத்தும் அதிகாரங்களை பற்றி இவர்களுக்கு சரியான பிரக்ஞை இல்லே என்றுதான் கூற வேண்டும்.
வன்கொடுமைகளுடன் சேர்ந்து இந்த கிரீமி லேயர்களால் இன்னொரு அநீதியும் நிகழ்கிறது. அதுதான் பிற்படுத்தப்பட்ட சாதியினரில் உள்ள ஏழைகள் இந்த இட ஒதுக்கீட்டை உபயோகிக்க முடியாமல் போகும் நிலை. அதில் வரும் சீட்டுகளையெல்லாம் இந்த கிரீமி லேயரே அனுபவித்து விடுகிறது. அதாவது நெல்லுக்கு போக வேண்டிய நீர் புல்லுக்கு மட்டுமே போகிறது. ஆகவேதான் களை பிடுங்கும் தருணம் வந்து விட்டது எனக் கூறவேண்டிய தருணம் வந்து விட்டது. சுப்ரீம் கோர்ட் அதைத்தான் செய்துள்ளது. இன்னும் சில பொது வார்த்தைகள் இது பற்றி கூறுவேன். தலித்துகளுக்கு மட்டும் அதுவும் பத்தாண்டுகளுக்கு லிமிட் செய்து கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு, இப்போது மண்டல் போன்றவர்களின் கைங்கர்யத்தால் ஓட்டு அரசியலுக்கு வழிவகுத்து விட்டது நாட்டின் துரதிர்ஷ்டமே. அதுவும் 1931-ன் சென்சஸ் அடிப்படையில் சாதிகளை வகுப்பதை நீதிமன்றமே முதலில் கேள்விக்குறியதாக்கி விட்டு பிறகு தீர்ப்பில் அதை கண்டுகொள்ளாமல் விட்டது போன்ற தோற்றம் வருவதை தவிர்க்க இயலாது. ஏதோ இந்த மட்டும் கிரீமி லேயரை ஒதுக்கினார்களே, அதற்கு நன்றி சொல்ல வேண்டும். இதையும் அரசியல்வியாதிகள் ஓரம் கட்டாது பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

4. சித்திரை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவீர்களா?
பதில்: இதில் என்ன பிரச்சினை. என்னைப் பொருத்தவரை தமிழ்ப் புத்தாண்டு என்பது ஏப்ரல் மாதம்தான் வரும். அன்றைக்கு கோவில்களில் பஞ்சாங்கம் படிக்கக் கூடாது என்றெல்லாம் கெடுபடி செய்தது நாதிகவாதத்தை ஆதரிக்கும் அரசு (சாய்பாபா காலில் விழுந்தது நாத்திகத்துக்கு எதிர்ச்செயல் அல்ல). இதன் பலன் என்னவென்றால் அன்றுதான் மக்கள் எல்லா இடங்களிலும் அதி தீவிரமாகப் பஞ்சாங்கம் படித்தனர். எனக்கு ஒரு சந்தேகம். மத சார்பற்ற அரசு எனக் கூறிக் கொண்டு அரசு ஏன் இந்துமதத்துக்கு மட்டும் அறத்துறை வைக்க வேண்டும்? வைத்தால் எல்லா மதங்களுக்கும் வைக்க வேண்டியதுதானே. யாராவது பொது நல வழக்கு தொடுத்தால் சுவாரசியமாக இருக்கும்.

பாலா:
1) "திராவிடீயம்" என்ற வெங்காய அல்வாவை வெற்றிகரமாக தமிழகத்தில் விற்ற தாடிக்காரருக்கு,அல்வாவை மற்ற தென் மாநிலங்களில் விற்க முடியாமல் போனதுக்கு,அந்தக் காலத்தில் தமிழன் மட்டும் தான் இளிச்சவாயனாக இருந்தான் என்பது தானே காரணம்?
பதில்: முக்கியக் காரணமே அவர் வடமொழியைத் தீவிரமாக எதிர்த்ததுதான். கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் தமிழிலிருந்து தோன்றினாலும், ஒவ்வொன்றின் அபிவிருத்தியிலும் வடமொழியின் கணிசமான பங்கும் உண்டுதானே. ஆகவே அவரது பப்பு தமிழகத்தைத் தவிர்த்து பிற இடங்களில் செல்லவில்லை.
2) இந்த வெங்காய மோசடி அல்வாவை இப்போது கூட கூவி கூவி விற்பனை செய்யும் மஞ்ச துண்டு,மானமிகு,ராசேந்திரன்,மீசை வீரபாண்டியன்(ஏன் வலையுலகத்தில் கூட கோவி.மு.க அய்யா,டி பி சி டி0,1,2,மற்றும் ம க இ க காமெடி வில்லன் பேர்வழிகள்)போன்ற அயோக்ய வியாபாரிகளின் வெற்றிக்கு காரணம், தமிழன் அப்போது மட்டுமல்ல இன்னும் கூட இளிச்சவாயனாகத்தான் இருக்கிறான் என்பதைத்தான் காட்டுகிறதா?
பதில்: நீங்கள் குறிப்பிட்ட நபர்களைப் பற்றி இங்கே தனியாகப் பேச விரும்பவில்லை. பொதுவான பதிலாக கூறுகிறேன். பெரியாரே ஓரிடத்தில் சொன்னது போல கன்னட பலிஜா வகுப்பைச் சேர்ந்த அவர் தமிழகத்தின் தலைவனானதற்கு காரணமே தமிழனுக்கு தலைவனாகும் யோக்கியதை இல்லையென அவனே நினைப்பதாலேயே. தமிழன் சோற்றாலடித்த பிண்டம் என்று அவ்வப்போது ஒரு தலைவர் இங்கு கூறுவதும் அதைச் சேர்ந்ததுதான்.

வால்பையன்:
சினிமா கேள்விகள்!
1.பிற மொழி படங்கள் அதாவது உங்களுக்கு தெரிந்த மொழி படங்கள் அடிக்கடி பார்ப்பதுண்டா?
பதில்: எங்கே, படங்கள் பார்ப்பதே குறைந்து விட்டதே. மேக்ஸ்ம்யுல்லர் பவனில் ஜெர்மானியப் படங்கள், அல்லியான்ஸ் ஃபிரான்ஸேஸில் பிரெஞ்சு படங்கள் பார்த்ததெல்லாம் இப்போது கனவு போல உள்ளது. அக்காலக் கட்டங்களில் சப் டைட்டில்களை அவாய்ட் செய்துதான் பார்ப்பேன்.
2.இன்றைக்கு நுழைவு கட்டணம் இருக்கும் நிலையில், திருட்டு விசிடியை ஒழிக்க முடியுமா?
பதில்: கஷ்டம்தான். மேலும் இப்போது இருக்கும் அவசர யுகத்தில் தியேட்டருக்கு போய் படம் பார்க்க யாரிடம் நேரம் உள்ளது? சினிமா வந்ததில் நாடகங்கள் பாதிக்கப்பட்டன. பிறகு டி.வி. வந்ததில் சினிமாக்கள் பாதிக்கப்பட்டன. இப்போது இத்தனை டிவி சேனல்களில் சினிமாக்களாக போட்டு தள்ளும்போது அவற்றின் மேல் உள்ள மோகமும் மறைந்து வருகிறது. ஆனால் ஒன்று, இப்போது பல தியேட்டர்களில் உள்ள ஒளி ஒலி ஏற்பாடுகளை வீட்டு டி.வி. திரைகளில் கொண்டு வருதல் இயலாது. அது வேண்டும் என்கிறவர்கள் தியேட்டருக்குத்தான் செல்வார்கள்.
3.சாத்தியமில்லாத விசயங்களை சினிமாவில் ஹீரோ செய்யும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
பதில்: அப்போதைக்கு மன ஆறுதலாக இருக்கும்.

பொது கேள்விகள்!
1.செண்டிமேன்டாக வைத்திருக்கும் பொருள்கள்?
(காதலியின் கைக்குட்டையை எதிர்பார்க்கிறேன்)

பதில்: காதலியே என்னுடன் இருக்கும்போது கைக்குட்டையை வைத்து என்ன செய்வதாம்?
2.மனதை அரித்து கொண்டிருந்த/கொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மைகள்?
பதில்: அவற்றை ஒழித்தேயாக வேண்டும். அதற்கு முதலில் சரியான கம்பெனி வேண்டும். அதை விட முக்கியமாக குறிப்பிட்ட சிலரைத் தவிர்க்க வேண்டும். அதிலும் முக்கியமாக அதே தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் மற்றவரைத் தவிர்க்க வேண்டும்.
3.வளர்ந்த நாடுகளில் கட்டாய ராணுவ பயிற்சி இருக்கும் பொது நம்நாட்டில் இல்லாதது பற்றி உங்கள் கருத்து?
பதில்: முக்கிய காரணம், ஜனத்தொகை. சும்மா கூப்பிட்டாலே 10 சீட்டுக்கு 10000 பேர் வருகிறார்கள் (வறுமையின் காரணமாக!), என ஏற்கனவே ஒருவர் பின்னூட்டத்தில் கூறியதில் அதிக உண்மை உண்டு. உதாரணது சி.ஆர்.பி.எஃப். வேலையில் சாதாரண கான்ஸ்டபிள் வேலைக்கு ஆள் எடுக்கும்போது, 100 காலியிடங்களுக்கு போட்டியிடுபவர்கள் எண்ணிக்கை லட்சக்க் கணக்கில் விண்ணப்பங்கள் இருக்கும். இன்னொரு காரணம் எதையுமே கட்டாயம் என ஆக்கினால் மொத்தமாகத்தான் குட்டிச்சுவராகும். உதாரணத்துக்கு நான் சமீபத்தில் 1963-ல் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த ஆண்டு என்.சி.சி.யை கட்டாயமாக்கினர். அதிலும் இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களும் அதில் இழுக்கப்பட்டனர். என்னவாயிற்று என்றால் நிஜமாகவே அதில் ஆர்வம் உள்ளவர்கள் அந்த ஆர்வத்தையும் இழந்ததேயாகும். நான் இரண்டாம் ஆண்டில் இருந்தபோது பரேடுகளுக்கு செல்வதை கட் செய்தவர்களே அதிகம். அதிலும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வந்ததும் ஹிந்தியில் ஆணைகள் தரும் இந்த அமைப்பு சுத்தமாகவே தனது ஆதரவை இழந்தது. மூன்றாம் வருடம் நான் வந்த போது இந்த கட்டாயத்தை நீக்கினர். இருப்பினும் அதில் முதலில் ஆர்வமாக இருந்தவர்கள் பெற்ற இழப்புகள் அப்படியேதான் இருந்தன. மேல் நாடுகளில் கூட கட்டாய மிலிட்டரி சேவைக்கு மாற்று ஏற்பாடுகள் உள்ளன. எனக்கு தெரிந்து நாடு முழுக்க மிலிட்டரி தயார் நிலையில் இருப்பது இஸ்ரவேலர்கள் மட்டுமே. அதுகூட இஸ்ரேல் ஆபத்தான எதிரிகளால் சூழப்பட்டு இருப்பதால்தான்.

விக்ரம்:
1) Why can't you start a special thread/post on self help topics (just like Norman Vincent Peale's Power of Positive thinking' etc) in Tamil, which will be helpful for youngsters?
பதில்: அவ்வப்போது பதிவுகள் போடுகிறேனே. தன்னம்பிக்கை, தவிர்க்க வேண்டிய நபர்கள், வாடிக்கையாளர்களை அணுகும் முறைகள் ஆகிய லேபல்களில் பாருங்களேன்.
2) what do you think of recent SC ruling on 27% quota?
பதில்: பதில் ஏற்கனவே யே மேலே தந்துள்ளேன்.
3) what do you think of recent 'balti' of our CM on Hogenakkal issue?
பதில்: ஏதாவது புதிதான விஷயமாகப் பேசுவோமே. இம்மாதிரி யாராவது பல்டி அடித்து கொண்டேயிருந்தால் அதைப் பார்த்தாலே எனக்கெல்லாம் தலைச்சுற்றல் வந்து விடுமப்பா.
4) whenever there is some topic/comment on DK Veeramani, why do you go soft on him, for all the misdeeds he has done or doing? (I am getting lot BP to think such an "Ayokkiyan" is still indulging in his misdeeds and living happily!!!).
பதில்: வீரமணி அவர்கள் பற்றி எனக்கு விமரிசனங்கள் உண்டு. ஆனாலும் அதே சமயம் அவர் வயதுக்கும் மரியாதை தரவேண்டியதுதானே. பழக எளிதானவர் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். முறை 1965-ல் ஹிந்தி போராட்டத்தை எதிர்த்தவர் பெரியார் அவர்கள். அதை நான் இப்போது கூறும்போது பல பெரியார் பக்தர்கள் அதை நம்பவில்லை. அந்த காலத்திய விடுதலை இதழ்களை பார்க்க நான் ஆவல் தெரிவித்தபோது, நண்பர் பத்ரி என்னை நேராக வீரமணியிடமே செல்லுமாறு அறிவுரை கூறினார். சிறிதும் தயங்காமல் என்னை பெரியார் நூலகத்தில் வரச்செய்து சம்பந்தப்பட்ட விடுதலை இதழ்களை காட்டச் செய்வார் அவர் எனக் கூறினார்.

மற்றக் கேள்விகளை அடுத்தப் பதிவில் பார்ப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/13/2008

சொல்லில் அடங்காத இசை

ஜெயமோகன் அவர்களால் தன் நண்பர் ஷாஜி அவர்கள் இசைபற்றி எழுதிய புத்தகத்தை வெளியிடும் விழாவுக்கும் கூடவே பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களால் மெஹ்தி ஹசனின் கஸல் அளிப்பு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை அவரது பதிவில் பார்த்ததுமே தீர்மானித்து விட்டேன் இதற்கு போயே ஆக வேண்டியதுதான் என்று.

அதற்கு இரு காரணங்கள். ஒன்று ஜெயமோகனை பார்த்தே ஆகவேண்டும், பார்த்து என்னை சங்கடத்தில் ஆழ்த்தியதைப் பற்றி கூறிடல் வேண்டும் என்பதே. இன்னொரு காரணம் அவரால் அன்புடன் ஒரு பதிவில் ஹென்பெக்டாக குறிப்பிடப்பட்டு அவரால் விளையும் 25 பிரச்சினைகளைப் பற்றியும் அறிந்த பிறகு அவரையும் பார்த்தே ஆக வேண்டும் என்பதாகும்.

நிகழ்ச்சி 12.04.2008 மாலை ஆறு மணிக்கு மயிலை லஸ் சர்ச் சாலையில் உள்ள சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடை பெற்றது. அதை ஸ்பான்சர் செய்தது St. Gobain கண்ணாடி தயாரிப்பாளர்கள். (அது சம்பந்தமான ஒரு விளம்பரத்தைத்தான் அன்பே சிவம் படத்தில் மாதவன் அதை தயாரித்ததாகக் கமலிடம் கூறுவார் என்பதை இங்கே போகிற போக்கில் கூறிவிட்டு போகிறேன்) நான் அங்கு போய் சேர்ந்த நேரம் மாலை 5.45 அளவில். அரங்கத்தினுள் 20 பேர் இருந்தால் அதிகம். பிரபஞ்சன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த ஒருவரிடம் ஜெயமோகன் வந்து விட்டாரா எனக் கேட்டேன். அவர் வரமாட்டார் என்ற பதில் கிடைந்து ஏமாற்றமே அடைந்தேன். ஆக நான் வந்த முதல் காரணம் நிறைவேறப் போவதில்லை. இருந்தாலும் இரண்டாவது காரணம் அப்படியே இருந்தது. ஆகவே இருந்து பார்த்து விடுவோம் என அரங்கத்தில் அமர்ந்தேன். அது நல்லதாக போயிற்று. எப்படி என்பதை பிறகு கூறுகிறேன்.

மாலை 6.10 ஆன பிறகும் நிகழ்ச்சி துவங்குவதாகத் தெரியவில்லை. இதற்கிடையில் முதல் வரிசையில் வந்து அமர்ந்த எம்.எஸ்.வி. அவர்களைப் பார்த்து ஒரு வணக்கமும் போட்டேன். சமீபத்தில் 1964-ல் வெளிவந்த சர்வர் சுந்தரம் படத்தில் காண்பிக்கப்பட்ட "அவளுக்கென்ன அழகிய முகம்" என்ற பாடல் ரிகார்ட் ஆகும் காட்சியை திரையில் காண்பித்திருந்தார்கள். அதில் வந்த எம்.எஸ். விஸ்வநாதன் எப்படி இளமைத் துடிப்போடு இருந்தாரோ அதே துடிப்புடன் இப்போதும் இருப்பதாகக் கூறினேன்.

சிறிது நேரம் வெளியில் வந்தேன். ஷாஜி அவர்களது புத்தகம் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். 120 ரூபாய்க்கான அந்த புத்தகத்தை 100 ரூபாய்க்கு தந்தார்கள். அதை வேகமாக வாங்கி, பிறகு அருகில் இருந்த ஷாஜி அவர்களிடம் புத்தகத்தில் கையொப்பம் வாங்கினேன். ஷாஜி அவர்கள் உயிர்மையில் ரெகுலராக இசை பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே அது. அவர் தமிழ் நன்றாக அறிந்தவர் என்றாலும் தான் ஆங்கிலத்தில் எழுதித் தந்த கட்டுரைகளை ஜெயமோகன் அவர்கள் தமிழில் மூலமே மொழிபெயர்ப்பு செய்து கொண்டார் என்பதை அறிந்த நான், "பேஷ், மனிதர் மேலாண்மையின் கோட்பாடுகளை நன்றாகவே கடைபிடித்துள்ளார்" என எண்ணினேன். அவரை அப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறேன் என்றாலும் அவர் ஜெயமோகனது பதிவின் மூலம் எனக்கு நிரம்பவே பரிச்சயமாகப் போனதை அவரிடம் குறிப்பிட்டேன். என்னுடன் கூடவே தான் வாங்கிய புத்தகத்தில் கையொப்பம் வாங்கிய வேணுகோபால் என்பவர் அறிமுகம் எனக்கு கிடைத்ததை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். இப்பதிவில் வரும் படங்களுக்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டவன். பிறகு நாங்கள் இருவரும் உள்ளே சென்று அமர்ந்தோம்.

ஒரு வழியாக மாலை 6.45-க்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. ஆனால் சும்மா சொல்லக்கூடாது. பிறகு விறுவிறென நிகழ்ச்சிகள் நடந்தன. தொகுப்புரை வழங்கியவர் வெங்கட் என்பவர். அழகான தமிழில் போடு போடென்று போட்டார். அரங்கத்தில் செல்பேசி வைத்திருப்பவர்கள் அவற்றை ஒலியில்லா செயல்பாட்டில் வைத்து கொள்ள சொன்னார். பிறகு நிகழ்ச்சிக்கு அறிமுகம் தந்து அதன் நிரலை சுருக்கமாகக் கூறினார். விருந்தாளிகள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். ஒவ்வொருவரை பற்றியும் அவரது திறமைகள் மற்றும் சாதனைகளை ஓரிரு வரிகளில் கூறி அழைத்தது மிக்க நன்றாகவே இருந்தது. அவ்வாறு மேடைக்கு அழைக்கப்பட்டவர்கள். எம்.எஸ். விஸ்வநாதன், பி.பி. ஸ்ரீனிவாஸ், நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், எஸ். ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன், ரமேஷ் விநாயகம், கார்த்திக் மற்றும் ஷாஜி அவர்கள்.

வரவேற்புரையை வழங்கியது வாய்ப்பாடகர் முரளீதர் அவர்கள். நேர்மையாக தான் ஆங்கிலத்தில்தான் பேசப்போவதாக கூறிவிட்டார். சிறப்பான உரையாற்றினார்.முரளீதர் உரையாற்றுகிறார். அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக: ஷாஜி, பிரபஞ்சன், எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், எம்.எஸ்.வி., பி.பி.எஸ்., பெயர் தெரியவில்லை, மனுஷ்யபுத்ரன்)

பிறகு வந்திருந்த விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகளை St. Gobain சார்பில் வந்திருந்த திரு ஆர். சுப்பிரமணியன் வழங்கினார்.

இந்த இடத்தில் நான் ஒன்றை குறிப்பிட வேண்டும். பேச்சுக்களை குறிப்பெடுத்து கொள்ள தயார் நிலையில் வரவில்லை. வீட்டை விட்டு கிளம்பும் நேரத்தில் டாட்ட இண்டிகாம் அகலப்பட்டை இணைப்பில் ஏற்பட்ட ஒருபிரச்சினை காரணமாக குழப்பமான மனநிலையில் இருந்தேன். ஆகவே நோட்டு புத்தகம் எதுவும் எடுத்து வரவில்லை. கடைசி நிமிடத்தில் சுதாரித்து எனக்கு முந்தைய வரிசையில் இருந்த நபரது கையிலிருந்த நிகழ்ச்சி நிரல் காகிதத்தை அவரிடம் கேட்டு வாங்கினேன். அவரிடம் நான் பதிவு போடப் போவதை கூறி அதை என்னிடமே வைத்து கொள்ள அனுமதி பெற்றேன். அவர் பெயரை கேட்க மறந்து விட்டேன். முதலில் அவருக்கு என் நன்றி. ஆகவே எல்லா பேச்சுக்களையுமே அப்படியே போடும் நிலையில் இல்லை. பதிவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.

பிறகு புத்தகத்தைப் பற்றிப் பேச ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். முதலில் உயிர்மை பதிப்பகத்தின் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசினார். பிறகு இசைமேதை எம்.எஸ்.வி. அவர்கள் வந்தார். புத்தகம் பற்றியும் ஷாஜி பற்றியும் பேசிவிட்டு தனக்கு வேலை இருப்பதால் சீக்கிரம் செல்ல வேண்டியிருப்பதாகவும், பிறகு நிகழப்போகும் கஸலுக்கு வந்து சேர்ந்து கொள்வதாகவும் கூறிவிட்டு புறப்பட்டார். (பிறகு நிஜமாகவே திரும்பியதையும் குறிப்பிட்டாக வேண்டும்).

பிறகு பேசிய பி.பி.எஸ். அவர்கள் சொல்லில் அடஙாத இசையை ஷாஜி அவர்கள் இப்புத்தகத்தால் சொல்லில் அடக்கியதை குறிப்பிட்டார். ஷாஜி அவர்களது இப்புத்தகத்தைப் பற்றி தான் இந்த நிகழ்ச்சிக்காக எழுதிய ஒரு கவிதையையும் அவரிடம் அளித்தார். கஸல் என்னும் பாடல் அமைப்பைப் பற்றியும் பேசினார். எம்.எஸ்.வி. க்கு தான் பட்ட நன்றிக்கடனை நெகிழ்ச்சியாகக் கூறினார். பிறகு தான் வேறொரு நிகழ்ச்சிக்கு சென்று பாடவிருப்பதால் சீக்கிரம் செல்ல வேண்டும் எனக் கூறி புறப்பட்டார். அப்போது அவரை சற்றே நிறுத்திய கார்த்திக் அவருக்கு புகழாரமாக "பறவைய்லே அவள் மணிப்புறா, பாடல்களில் அவள் தாலாட்டு" என்ற பல்லவியில்ருந்து ஆரம்பித்து ஒரு பத்தி பாடினார். சும்மா சொல்லக்கூடாது கார்த்திக்குக்கு நல்ல குரல் வளம்.

பிறகு "தலைகீழ் விகிதங்கள்" புகழ் நாஞ்சில் நாடனும் பேசினார். தனக்கு இசை பற்றி பேச தகுதி இல்லையென்றும் தான் பார்வையாளன் மட்டுமே என்றும் கூறிய அவர் தான் பம்பாயில் இருந்தபோது கச்சேரிகளுக்கு சென்று கேட்க பணமின்றி இருந்ததையும் கேட்டில் டிக்கட்டை கிழித்து உள்ளே அனுப்பும் நண்பன் துணையோடு பல கச்சேரிகளை கேட்க நேர்ந்ததையும் நினைவு கூர்ந்தார்.

பிறகு பேசியது பிரபஞ்சன் அவர்கள். எஸ்.ஜானகி மற்றும் ஏ.எம்.ராஜாவை வார்த்தைகளில் உறையச் செய்துள்ளார் ஷாஜி என்று குறிப்பிட்டார்.


பிரபஞ்சன் உரை நிகழ்த்துகிறார். அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக: கார்த்திக், ஷாஜி)

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இசை என்றால் தனது புரிதல் சினிமா இசையோடு நின்றுவிடுகிறது. அதுவும் இசை சத்தமாக இருக்க வேண்டும் என்றும் எண்ணினாராம். அவர் டி.எம்.எஸ். அவர்கள் நடித்த பட்டினத்தார் படத்தை பார்க்க்ப் போனபோது கூட இருந்தவர் "யாரப்பா இவர்? இவருக்கு போய் ஏன் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் மாறி மாறி பாடுகின்றனர் என்றாராம்.

பிறகு பேசியவர் இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம் அவர்கள்.

இப்போது தொகுப்புரை வழங்கிய வெங்கட் அவர்களைப் பற்றி சில வார்த்தைகளை கூறியே ஆக வேண்டும். ஒவ்வொருவர் பேசிமுடித்ததும் அவர்கள் பேசியதை ஓரிரு வாக்கியங்களில் சுவைபட சுருக்கி கூறிவிட்டு அடுத்தவரை பேச அழைத்தது அழகாக இருந்தது.

நன்றியுரை அளிக்க வந்தவர் புத்தக ஆசிரியர் ஷாஜி அவர்கள். மனுஷன் பெரிய லிஸ்டையே வத்திருந்தார். ஒவ்வொருவராக நன்றி கூறினார். ஆங்கிலத்தில்தான் பேசப்போவதாக முதலிலேயே கூறிவிட்டு பேச ஆரம்பித்தார். முதலில் ஜெயமோகன் வந்து பேச இருந்ததாகவும் பிறகு அவரை பற்றிய சர்ச்சைகளால் அவரால் வர இயலவில்லை என்றதும் தூக்கி வாரிப் போட்டது. "ஆகா இதுக்காகவே ரூம் போட்டு யோசித்து தொல்லை விளைவிக்க நினைச்சுருங்காங்கப்பூ" என எனக்குள் வடிவேலு பாணியில் கூறிக் கொண்டேன். எம்.எஸ்.வி. அவர்களை அவர் இசையமைப்பாளர் என்பதை விட நல்ல பாடகராகவே அதிகம் நினைப்பதாகக் கூறினார். பி.பி.ஸ்ரீனிவாஸ் பல்மொழிப்பாடகர் என்று குறிப்பிட்டார். மனுஷ்யபுத்திரனால்தான் தான் எழுதப் புகுந்ததாகவே கூறினார். சில சமயங்களில் சில கட்டுரைகளை தாமதமாகத் தரலமா என்று கேட்டபோது ஒப்பு கொள்ள மறுத்து தன்னை எழுத வைத்ததை நன்றியுடன் குறிப்பிட்டார்.

பிறகு டீ பிரேக் என்றார்கள். வெளியில் சென்றால் யாரை முதலில் பார்த்தேன் என்று கூறட்டுமா. ஜெயமோகன்தான் அது. நேரே அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன். அவருக்கு என்னை தெரியும். இருவரும் முதல் தடவையாக சந்திக்கிறோம். சர்ச்சைக்கு உள்ளான கட்டுரைகளை அவர் வாபஸ் பெற்றிருக்கக் கூடாது என்றும், வில்லிலிருந்த புறப்பட்ட அம்புகள் போன்றவை அவை என்றும் கூறினேன். ஆக, நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதை போல நான் காத்திருந்தது நன்மைக்கே. பிறகு எஸ்.ராமகிருஷ்ணனையும் பார்த்து பேசினேன். என்னை அவரிடம் இவர்தான் டோண்டு ராகவன் என்று ஜெயமோகன் அறிமுகப்படுத்தினார்.

இதற்குள் நேரம் ஆகிவிட்டபடியால் பிறகு நடந்த கஸல் நிகழ்ச்சிக்கு நான் இருக்க இயலவில்லை. அது பற்றி வரும் வரிகள் எனக்கு போட்டோக்கள் தந்துதவிய வேணுகோபால் அவர்கள். அவரை அதுபற்றி எழுதுமாறு நான் கேட்டதற்கிணங்க அன்புடன் தந்துள்ளார். அவருக்கு நன்றி. இப்போது அவரது சொற்களில் (ஆங்கிலத்தில் அவர் எழுதியதை நான் தமிழாக்கம் செய்துள்ளேன்):

"ஸ்ரீனிவாஸ் அவர்கள் சுமார் 5 அல்லது 7 கஸல்களை பாடினார் என நினைக்கிறேன். ஹரிஹரன் அவர்களால் லதா மங்கேஷ்கருக்காக எழுதப்பட்ட கஸலையும் அவர் பாடினார். ஷாஜி அவர்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்க மாட்டார், ஏனெனில் பாக்கிஸ்தானின் மெஹ்தி ஹசனின் மிகப்பெரிய விசிறி ஹரிஹரன் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார் அவர். பிறகு மராட்டிய மொழியிலும் ஒரு கஸல் பாடினார். எழுதியவர் யார் என்பது தெரியவில்லை. அவருக்கு பக்க வாத்தியம் வாசித்தவர்கள் நன்றாக வாசித்தனர். எல்லோருமே கேரளாவை சேர்ந்தவர்கள்".

இப்போது மீண்டும் டோண்டு ராகவன். நன்றி வேணுகோபால் அவர்களே.


ஸ்ரீனிவாஸ் அவர்களது கஸல் அளிப்பு

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/11/2008

டோண்டு பதில்கள் - 11.04.2008

கோவர்த்தனன்:
1. காந்தியின் அஹிம்சா கொள்கைகள் நடப்பு உலகிற்கு சாத்தியமா?
பதில்: காந்தியின் அகிம்சா முறையெல்லாம் வெற்றி பெற வேண்டுமானால் ஆக்கிரமிப்பாளர் நாடு ஜனநாயக அரசாக இருந்து பத்திரிகை சுதந்திரமும் அங்கு இருக்க வேண்டும். உதாரணத்துக்கு பிரிட்டனுக்கு பதிலாக நம் நாட்டை நாஜி ஜெர்மனியோ அல்லது ஸ்டாலினின் சோவியத் குடியரசோ ஆண்டிருந்தால் காந்தி அவர்கள் ஒரு பட்டினி முகாமில் சேர்க்கப்பட்டு தடயம் இல்லாமல் போயிருப்பார்.

நடராஜன்: (ஆங்கிலக் கேள்வி தமிழாக்கப்பட்டது)
1. உலகமயமாக்கல் பற்றி திரு. குருமூர்த்தி (துக்ளக்) மற்றும் அதியமான் (உங்கள் நண்பர்) எழுதியுள்ள கட்டுரைகளிலிருந்து அவர்களை ஒப்பிட இயலுமா?
பதில்: குருமூர்த்தி அவர்கள் உலகமயமாக்கலை அப்படியே எடுத்து கொள்ளலாகாது, அதை இந்தியமயமாக்க வேண்டுமெனக் கூறுகிறார். அவரது ஸ்வதேஷி ஜாக்ரண் மஞ்ச் இது சம்பந்தமாக வேலை செய்து வருகிறது. அதியமானும் சரி நானும் சரி உலகமயமாக்கல் வருவதால் நல்லதே நடக்கும் என நம்புகிறோம். குருமூர்த்தி அடுத்த தளத்துக்கு சென்று விவரங்களுக்குள் போகிறார். மொத்தத்தில் இரண்டு கோஷ்டியினருமே நேருவின் உருப்படாத கொள்கைகளை ஒழிக்க வேண்டும் என்பதில் ஒற்றுமையாக இருக்கிறோம் என புரிந்து கொள்கிறோம். ஆனால் ஒன்று, குருமூர்த்தி அவர்கள் கூறுவது போல நடக்கும் வாய்ப்புகள் குறைவு என்றுதான் படுகிறது. அதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும்.அது பலரது செயல் சுதந்திரத்தை பாதிப்பதாக எடுத்து கொள்ளப்படும் வாய்ப்பு உண்டு. மக்கள் எப்படி எதிர்வினை புரிகின்றனர் என்பதை பார்க்க வேண்டும்.

வால்பையன்
சினிமா கேள்விகள்
1.தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்கும் பழக்கம் உண்டா?
பதில்: தியேட்டருக்கு சென்று கடைசியாக எப்போது படம் பார்த்தேன்? சற்றே யோசிக்க வேண்டும். இம்சை அரசனை ஜூலை 2006-ல் பார்த்தேன். அதற்கு பிறகு ஏதும் தியேட்டருக்கு சென்றதாக நினைவில்லை. நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. சினிமா தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது என்பது தவிர்க்க முடியாத சடங்காகத்தான் என்னைப் பொருத்தவரை இருந்திருக்கிறது. 1981 வரையிலும் அப்படித்தான். டில்லி சென்ற பிறகு இம்மாதிரி படம் பார்ப்பது சற்றே குறைந்தது. ஆனாலும் ரொம்பவும் குறைந்தது என்றால் 1990-களில்தான். என்னவோ மனம் விட்டு போயிற்று. சின்னத்திரையில் அவை அதிகம் காணக்கிடைத்ததும் ஒரு காரணமே. 2001-ல் நான் சென்னைக்கு நிரந்தரமாகத் திரும்பியதும் இன்றுவரை நான் பார்த்த திரைப்படங்கள் கிட்டத்தட்ட எல்லாமே எங்கள் ஊர் வெற்றிவேல் மற்றும் வேலன் அரங்குகளில் பார்த்ததுதான். இங்கும் சின்னத்திரை இந்த நிலைக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று.
2.சிரிப்பு நடிகர்களில் உங்களுக்கு பிடித்தவர் அன்று, இன்று?
பதில்: அன்று நாகேஷ், தங்கவேலு. இன்று விவேக், வடிவேலு.
3.சினிமாவில் பாடல்கள் தேவையா? உங்கள் கருத்து!
பதில்: மனித சரித்திரத்தில் பாடல்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. எந்த நிகழ்ச்சிக்கும் பின்னணியாக நம் மனதில் இசை அதிர்வுகள் உண்டாகின்றன. அதை சரியாக உணர்ந்து பின்னணி இசை கொடுப்பவர்கள் மிகுந்த வெற்றி அடைகின்றனர். உதாரணத்துக்கு நான் இட்ட அன்புள்ள மான்விழியே, ஆசையில் ஓர் கடிதம் என்னும் பதிவில் கூறியது போல, நமது எண்ண ஓட்டங்கள் சரியான இசையின் பின்னணியில் அதிக பலம் அடைகின்றன. அதே பதிவில் நான் சுட்டிய அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் என்னும் பாட்டின் மெதுவான வெர்ஷனைக் கேளுங்கள். நான் சொல்வது புரியும்.
ஆக, இசை நம் வாழ்வோடு ஒட்டியிருக்கிறது. பழைய படங்கள் எல்லாமே என் நினைவில் இன்னும் இருப்பதற்கு காரணமா அவற்றில் வரும் பாடல்களால்தான் என்றால் மிகையாகாது. எல்லாவற்றிலும் இசை இருக்கிறது. அதுக்காக வடிவேலு படம் ஒன்றில் ஒரு பைத்தியம் கிட்ட டீக்கடையில் வைத்து மாட்டி அவனிடம் வடிவேலு இசை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டு மாத்து மாத்து என்று மாத்து வாங்கியதையெல்லாம் வைத்து இசை குறித்து பயப்பட கூடாது.
பொது கேள்விகள்
1.சமீபத்தில் நடந்த திரைப்பட துறையினரின் உண்ணாவிரதம் நீர் பங்கீட்டிற்காக நடந்ததா அல்லது தமிழ் படங்களை ஓடவிட மறுக்கிறார்கள் என்பதற்காக நடந்ததா?
பதில்: திரைப்படத் துறையினர் எதற்கும் எளிதாக உணர்ச்சிவசப்படுகிறவர்கள். நீங்கள் சொன்ன இரு காரணங்களுமே அவர்களில் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு அளவில் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
2.முதன் முதலில் கைபேசி வாங்கிய பொழுது அதை கையாள சிரமம் இருந்ததா?
பதில்: அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. கையேடு கொடுத்திருந்தார்கள். கணினியை இயக்கிய பழக்கம் இருந்ததால் ரொம்ப சிரமம் இல்லைதான். இருந்தாலும் பயிற்சி பெற பெற மெனுவை உபயோகிப்பதில் மேம்பாடு ஏற்பட்டுள்ளது.
3.மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய அனுபவம் உண்டா?
(எனக்குண்டு அதனால் கேட்கிறேன்)

பதில்: சமீபத்தில் 1973-ல் மாதுங்கா ரயில் நிலையத்தில் வைத்து விரைவு வண்டியில் மாட்ட இருந்தேன். ஒரு புண்ணியவான் சரியான சமயத்தில் காப்பாற்றினார். ஆனால் 42 ஆண்டுகளாக மரணத்தின் அருகாமையிலேயே இருந்தும் அதை உணராமல் இருந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது என் உள்ளம் கவர்கள்வன் என் அப்பன் மகரநெடுங்குழைகாதனின் அருளை நினைத்து என் மனம் விம்முகிறது.

எம்.கண்ணன், பாங்காக்.
1. வெளிநாடுகளுக்குச் செல்ல விருப்பம் இல்லாதது ஏன்? (பணம் காரணம் இல்லையென்று நீங்கள் சொன்னாலும் அதை ஏற்க இயலவில்லை). மும்பையிலும் டெல்லியிலும் வசித்ததால்தானே உங்களுக்கு அங்குள்ள நல்ல விஷயங்கள் தெரிய வந்தது. அதுபோல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தால் அங்கு உள்ள நல்ல விஷயங்களும் தெரிய வருமே ? எல்லாமே இணையம் வழி படித்து அனுபவிக்க முடியாது.
பதில்: பணமும் ஒரு காரணமே. ஆனால் அதை விடப் பெரிய காரணம் என் மனம் அதை கிஞ்சித்தும் நாடவில்லை என்பதுதான். விசித்திரமாக இருந்தாலும் அதுதான் உண்மை.
2. உங்களுக்கு மகன் உண்டா என தெரியாது. அப்படி இல்லையெனில் அதற்கான
வருத்தம் உண்டா ? இது பற்றி (ஆண் வாரிசு இல்லாததைப் பற்றி) உங்கள் எண்ணங்கள் என்ன?

பதில்: மகன் கிடையாது. ஆண்டவன் கொடுத்ததை வைத்து திருப்தியடைய வேண்டியதுதான்.
3. பதிவுகள் எழுதுவது, உங்கள் பழைய, தற்போதைய காண்டாக்ட்ஸ் தவிர உங்கள் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு எப்படி விளம்பரம் செய்கிறீர்கள்? புது கஸ்டமர்களை எப்படி பிடிக்கிறீர்கள்? இது மாதிரி வீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் சம்பாதிக்க என்னென்ன வழிகள் உண்டு (தற்போதைய இந்திய நிலையில்)?
பதில்: இது சம்பந்தமாக நான் பத்து பதிவுகளுக்கு மேல் போட்டுள்ளேனே. வாடிக்கையாளர்களை அணுகும் முறைகள் என்னும் லேபல் கீழ் பார்க்கலாம்.
இந்த வரிசையின் அறிமுகப் பதிவில் நான் இட்ட சில வரிகள்:
1. எல்லாவற்றையும் விட முக்கியமானது புது வாடிக்கையாளரைப் பிடிப்பது. எவ்வாறு கடிதம் எழுத வேண்டும்? யாருக்கு எழுத வேண்டும் என்றெல்லாம் பார்க்கலாம். இதற்கு மட்டும் பின்னால் ஒரு தனிப் பதிவு தேவைப் படும்.
2. உங்களை நீங்கள் அறிய வேண்டும். அதாவது உங்களால் எது முடியும் எது முடியாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தேவையில்லாது வாக்குறுதிகள் அளித்து விட்டு அவற்றை நிறைவேற்றாது போனால் உங்கள் நம்பகத்தன்மை அடிபட்டு விடும். உதாரணத்துக்கு வேலை எப்போது முடித்துத் தரவேண்டும் அன்று வாடிக்கையாளர் கூறும்போது அது உங்களுக்குத் தோதுப்படுமா என்று பார்த்தே ஒத்துக் கொள்ள வேண்டும். பத்துக்கு ஒன்பது தருணங்களில் அவசரம் என்று வாடிக்கையாளர் கூறுவது உதாராகத்தான் இருக்கும். அவசரமான வேலை என்றால் ஒன்றரை மடங்கு விலை என்று கூறிப் பாருங்கள் அவசரம் என்பது அவசரமாகவே மறைந்து விடும். இது பற்றிப் பின்னால் மேலும் விவரமாகக் கூறுகிறேன்.
3. உங்கள் விலை என்ன என்பதில் தெளிவாக இருங்கள். மொழி பெயர்ப்பாளர்கள் பலர் இதில்தான் கோட்டை விடுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை வேலை சுலபமாகவே இருக்கலாம். அவர்களுக்கு மிகவும் பிடித்ததாகவே கூட இருக்கலாம். அதை எல்லாம் வாடிக்கையாளரிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. பிறகு அவர் உங்களுக்கு ஏதோ சலுகை காட்டுவது போலத் தோற்றம் வந்து விடும். இது பற்றியும் அடுத்த பதிவுகளில் மேலும் கூறுவேன்.
4. வாடிக்கையாளர்களின் வாக்குறுதிகளை அப்படியே நம்பி விடாதீர்கள். தங்களிடம் ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருப்பதாகவும் நிறைய வேலை கொடுக்க முடியும் என்றும் ஆசை காட்டுவார்கள். இதுவும் மேலே கூறியதை போன்று அனேகமாக ஒரு உதாராகத்தான் இருக்கும். அவர்களிடம் ஒரே ஒரு வேலை இருந்தாலும் அவ்வாறுதான் கூறுவார்கள். அவர்கள் அக்கறை முடிந்த அளவுக்கு விலையைக் குறைப்பதே ஆகும். இதை நான் என்னளவில் எவ்வாறு கையாண்டேன் என்பதையும் பின்னொரு பதிவில் கூறுவேன்.
5. தேவையில்லாத விவரங்கள் கொடுக்காதீர்கள். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு முழு நேர வேலை வைத்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு என்பது பகுதிநேரவேலை. அவ்வேலைக்கான வாடிக்கையாளரிடம் நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை ஒரு போதும் கூறக்கூடாது. அவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை அடிக்கடி கேட்பார்கள். மரியாதையுடன் அதே நேரத்தில் உறுதியுடன் தகவல் தர மறுத்து விடவும். இது பற்றி நான் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பிறகு கூறுகிறேன்.
6. எப்போதும் உங்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக உங்கள் தகவல் வழிகளைத் திறந்து வைக்கவும். தொலைபேசி வைத்திருப்பது மிக முக்கியம். தொலைபேசி அழைப்புகளை நீங்களே கையாளுவது முக்கியம். குழந்தைகளைத் தொலைபேசியை எடுக்க விடாதீர்கள். அது முடியாது என்றால் உங்களுக்கென்றுத் தனியாக செல்பேசி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களிடம் மட்டும் இருக்க வேண்டும். செல்பேசி "யூனிவர்செல்"பேசியாக மாறக் கூடாது. இதில் பல சாத்தியக் கூறுகள் உள்ளன. அவை பற்றி பிறகு.
7. உங்கள் அப்போதைய நிலை எதுவாக இருப்பினும் அதன் சாதகமான அம்சங்களையே வலியுறுத்தவும். 2002 வரை என்னிடம் கணினி இல்லை. இப்போது உண்டு. இரண்டு நிலைகளையும் நான் எனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டேன். அது பற்றிப் பிறகு.
8. வேலை செய்தால் மட்டும் போதாது. வரவேண்டிய தொகைகளையும் வசூலிக்கத் தெரிய வேண்டும். இது சம்பந்தமாக பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் குறித்துப் பிறகு விரிவாகப் பேசுவேன்.
மேலே கூறியவற்றையும், மேலும் கூறப் போவதைப் பற்றியும் பேச என்னுடைய யோக்கியதாம்சங்கள் என்ன? சமீபத்தில் 1975-லிருந்து நானே உணர்ந்து கடைபிடித்ததைப் பற்றித்தான் கூறப்போகிறேன். நான் சென்னையில் வெற்றிகரமாகச் செயல் புரியும் ஒரு மொழி பெயர்ப்பாளன் என்றுக் கூறுவதைத் தடுக்க என்னிடம் பொய்யடக்கம் இல்லை.
மேலே கூறியவற்றை விரிவுபடுத்தி பத்து பதிவுகள் மொத்தம் போட்டுள்ளேன்.

4. எல்லா உணவு பொருட்களின் விலையும் ஏறி வருகிறதே? இதற்குக் காரணம் அமெரிக்க பொருளாதார நிலை மட்டுமா? இல்லை க்ளோபல் வார்மிங் எனப்படும் நிகழ்வால் வரும் நிலையா (பார்க்க: கோவி.கண்ணனின் சமீபத்திய சிங்கப்பூர் அரிசி தட்டுப்பாடு கட்டுரை)
பதில்: நீங்கள் குறிப்பிட்ட எல்லா காரணங்களும் சேர்ந்துதான் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.
5. உங்களுக்கு மிகவும் அதிக கோபம் வந்தது எப்போது? யார் மீது? ஏன்? இது மாதிரி கோபம் வரும் சமயங்களில் எப்படி உங்களை பழைய சகஜ நிலைக்கு கொண்டு வருவீர்கள்?
பதில்: கோபம் வராத மனிதர்கள் இருக்க முடியுமா என்ன? சமீபத்தில் 1971-ல் என்னைப் புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக்கிழமை வரை நான் கோபப்பட்ட தருணங்கள் அனேகம். காச்சு மூச்சென்று கத்தி ஊரைக் கூட்டி விடுவேன். அதன் பிறகு எனது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் அதை நிலைநிறுத்த நாம் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் மறுபடி கோபப்பட்டு சந்தியில் நிற்க வேண்டும். அம்மாதிரி ஒரு தருணத்தில் ஆரவாரப் பேய்களெல்லாம் ஆட்டம் போட்டபோது அவற்றை ஓட்டவும் தயங்கவில்லை.

அனானி (04.04.2008 மாலை 5.52-க்கு கேட்டவர்)
1. //ரோஜாவுக்கும் அதை விசேஷ உரமாகப் போடலாம். //சிலர் மனித உரம் போடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: மனித உரம் போடுவது கிராமங்களில் வயல்வெளிகளில் மிகவும் அதிகமாக இருந்தது. 33 ஆண்டுகளுக்கு முன்னால் என் பெரியப்பா பிள்ளையின் கல்யாணத்துக்காக பாண்டிச்சேரிக்கருகில் உள்ள வில்லியனூருக்கு சென்றபோது காலையில் வயல் பக்கம்தான் ஒதுங்கினோம். வயல் சொந்தக்காரர் எங்களை அனுமதித்தார். பிறகு கிணற்று பம்பு செட்டு குழாயில் வரும் நீரில் கால்கழுவி பிறகு குளித்து விட்டும் வந்தோம். மனிட உரம் நேரடியாக வேர்களில் படாமல் மணல் ஊடகத்தின் மூலம் செல்வது நல்ல உரம் என்று நினைப்பது விஷயம் தெரியாதவனின் எண்ணம் என்று கூட ஒதுக்கும் வாய்ப்பு உண்டு. நம் பதிவர்களில் விவசாயம் தெரிந்த யாராவது இதற்கு இதை விட சரியான பதிலை அளிக்க இயலும்.

பாலா:
1. அசுரன்,பனியன் தியாகு,ஜமாலன்,ஸ்டாலின்,ஸ்பார்டகஸ்,வலையுலக ஓ என் ஜி சி பெரியார் அய்யா,கொளத்தூர் மணி,தமிழ் குரல், போன்ற ம.க.இ.க/பெ தி க பொலிட் பீரோ ஆசாமிகள் வசதியாக வாழ்ந்து கொண்டே நக்சல் தீவிரவாதிகளாக இருப்பதற்கு காரணம்:
அ) சந்தா வசூல் செய்து ஓசியில் சிலி பீஃப்,விஸ்கி,கோல்ட் ஃப்ளேக் அடிக்கும் வாய்ப்பு இருப்பதாலா? அல்லது ஆ)நக்சல் தீவிரவாதத்தின் மூலம் ஆயிரக்கணக்கானவார்கள் வாழ்விழந்தும்,வன்முறையிலும் துடிதுடித்து மாளும் காட்சியைப் பார்த்து ரசிக்கலாம் என்ற குரூர எண்ணத்தாலா? விளக்கமா பதில் சொல்லுங்கய்யா
.
பதில்: நீங்கள் சொல்பவர்கள் எல்லோருமே தாங்கள் கூறுவதை அப்படியே நம்பிவிடுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. தானும் கஷ்டப்பட்டு மற்றவரையும் கஷ்டப்படுத்த வேண்டுமென ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் போலிருக்கிறது. மேலும் ஒரு தேவையில்லாத குற்ற உணர்ச்சியும் இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் அம்மாதிரி பேசும் பலர் மென்பொருள் நிபுணர்களாக இருந்து நன்கு சம்பாதிக்கின்றனர். தேவையற்ற குற்ற உணர்ச்சி.

வஜ்ரா:
1. இந்திய நகரங்கள் அனைத்துமே அழுக்கும் தூசுமாகவும், மழை பெய்தால் சேறும் சகதியுமாகவும் இருக்கின்றன. சுத்தமாக இருப்பதே இல்லை. இதற்கு என்ன காரணம்? அரசு மட்டுமே பொறுப்பாக முடியாது என்பது மட்டும் உறுதி.
பதில்: யாருக்குமே பொறுப்புணர்ச்சி இல்லை என்பதுதான் நிஜம். சிங்கப்பூரும் நம் ஊர்களைப் போலத்தான் முதலில் அழுக்காக இருந்தது. ஆனால் லீ வான் கியூ வந்து எல்லோரையும் செருப்பால் அடித்து வழிக்கு கொண்டு வந்தார். இதில் என்ன விசேஷம் என்றால் அவர் யாரையுமே தனக்கு வேண்டியவர்களாகக் கருதாது பாரபட்சமற்ற முறையில் நீதி அளித்தார். இம்மாதிரி விஷயங்களில் அடி உதவுவது போல அண்ணன் தம்பிகள் கூட உதவ மாட்டார்கள்.

அடுத்த வாரம் பார்ப்போமா? அதற்கான கேள்விகளை இப்பதிவில் இடவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/08/2008

நங்கநல்லூர் 1969 -ல் மற்றும் 2008-ல்

நண்பர் லக்கிலுக் ஒரு கேள்வி கேட்டு விட்டார். அது:
//நீங்கள் சமீபத்தில் 1960களில் பார்த்த நங்கநல்லூர் - தற்போதைய நங்கநல்லூர் ஒப்பிடுக. Infrastructure மட்டுமன்றி மக்கள் பெருக்கம், கலாச்சார மாற்றம் போன்றவற்றை பற்றியும் எழுதவும். (இதை கேள்வி பதில் பகுதியில் சொன்னால் ரொம்ப சின்னதாக போய்விடும் என்றால் தனிப்பதிவாகவே இடவும்).//

சரி அப்படியே செய்தால் போயிற்று.

முதன்முறையாக நான் நங்கநல்லூருக்கு வந்தது 1967-ல். எங்கள் வீடு கட்டுவதற்காக வாங்கிய நிலத்தைப் பார்க்க என் தந்தையுடன் வந்திருந்தேன். ஒன்றரை கிரௌண்ட் (3600 சதுர அடிகள்). 4500 ரூபாய் என் தந்தை அதற்காக ஹிந்து காலனி கூட்டுறவு சங்கத்துக்கு பணம் கொடுத்திருந்தார். அவ்வாண்டு செப்டம்பர் மாதவாக்கில் வீடுகட்ட காண்ட்ராக்டரை தேர்ந்தெடுத்தோம். சதுர அடிக்கு 21 ரூபாய் என்ற அளவில் அவரது சார்ஜ். பொருட்கள், ஆட்கள் எல்லாமே அவரது பொறுப்பில். 9 மாத அளவில் முடிப்பதாகப் பேச்சு. ஆனால் 18 மாதங்களுக்கு இழுக்கடித்தார் அந்த மனிதர். தனது சக்தி தெரியாமல் பல வீட்டு காண்ட்ராக்டுகளை ஏற்று எல்லாவற்றையும் இழுத்தடித்து கூத்தடித்தார். பிப்ரவரி 1969-க்குத்தான் நாங்கள் குடிவர இயன்றது. ஆக எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 30000 ரூபாய்கள் செலவு.

நான் அப்போது பொறியியல் கல்லூரியில் கடைசி ஆண்டு படித்து கொண்டிருந்தேன். புது வீட்டிலிருந்து காலேஜுக்கு சில நாட்கள்தான் சென்றிருப்பேன். அதற்குள் பல வகுப்புகள் எடுப்பதை நிறுத்தி விட்டார்கள். ப்ராஜக்ட் வேலைக்காக மெனக்கெட வேண்டியிருந்தது. ஒரு மாதிரி எங்களையெல்லாம் தண்ணி தெளித்து விட்டுவிட்டார்கள் எனத் தோன்றியது. காலேஜுக்கு ஒழுங்காகப் போனால்தான் படிப்பு என்ற மனநிலையில் இருந்த எனக்கு இதெல்லாம் பிடிபடவில்லை. கடைசி வருடப் பரீட்சைக்கு படிக்க வேண்டிய நேரத்தில் ஊர் சுற்றி நாவல்கள் படித்து டைம் வேஸ்ட் செய்து வந்திருக்கிறேன் என இப்போது புரிகிறது. சரி அதெல்லாம் இங்கே எதற்கு? நங்கநல்லூருக்கே திரும்ப வருகிறேன்.

ஹிந்து காலனியில் முதலில் வந்தவை தொழிலாளிகளுக்கான வீடுகள். ஒவ்வொன்றும் அரை கிரௌண்டில் கட்டப்பட்டிருந்தன. மொத்தம் 59 வீடுகள், நான்கு தெருக்களில். முதல் வரிசை வீடுகள் இருந்த தெருவில் அவற்றுக்கு எதிர்சாரியில் B- பிளாட்டுகள். எங்கள் வீடுதான் (B-23) அந்த வரிசையில் முதன் முதலில் கட்டப்பட்ட வீடு. கிட்டத்தட்ட அடுத்த 4 வருடங்களுக்கு அந்த நிலைமைதான். ஆக எங்கள் வீட்டின் பின்புறமும், பக்கங்களிலும் காலி நிலங்களே. சற்றே குறுகிய காலத்துக்கு முன்னால் அவை வயல்களாக இருந்தன என்று நினைக்கும்போது மனதுக்கு சிறிது சோகமாக இருந்தது.

எங்கள் தெருவில் எங்கள் வீட்டின் அருகிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்றால் ஒரு தெரு குறுக்கிடும். நாங்கள் வந்த அந்தக் காலக்கட்டத்தில் அந்த தெருவின் இரு ஓரங்களிலும் பனைமரங்கள் நீண்டு வளர்ந்திருக்கும். அதற்கு நாங்கள் பனைமரச்சாலை என்றே பெயரிட்டு அழைத்தோம். இப்போது அதற்கு பெயர் எம்.ஜி.ஆர். சாலை.

எங்கள் வீட்டுக்கு மேற்கே ஒரு பெரிய ஏரி இருந்திருக்கிறது. நாங்கள் குடிவருவதற்கு 3 ஆண்டுகள் முன்னால் 1966-ல் அது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பக்தவத்சலம் நகர் எனப் பெயரிடப்பட்டிருந்தது (அப்போதைய தமிழக முதன்மந்திரி பக்தவத்சலம் அவர்கள்). பக்தவத்சலம் நகருக்கு தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு திசைகளில் பெரிய மலை ஒன்று இருந்தது.

மழை பெய்யும் சமயங்களில் மலையில் பல குட்டி அருவிகளைக் காண முடிந்தது. அத்தனை தண்ணீருக்கும் வடிகால் பழைய ஏரிதான். அங்கு வீடுகள் வந்து விட்டதால் ஏரி வரப்புகளை உடைத்து விட்டனர். 15 நிமிடங்களில் தண்ணீர் விறுவிறுவென வந்து எங்கள் வீட்டை சூழும். எங்கள் வீட்டின் முனாலும் பின்னாலும் தண்ணீர் சலசலவென்று பாயும் காட்சி அருமையாக இருக்கும்.

பனைமரச்சாலையின் இரு புறங்களிலும் காலி மனைகள். இப்போது செல்லம்மாள் பள்ளிக்கூடம் இருக்கும் இடத்தினருகில் ஒரு பெரிய வயல் கிணறு இருந்தது. சிதம்பரம் ஸ்டோர்ஸுக்கு எதிரே செல்லும் முதல் மெயின் ரோட் வழியாக நேரே சென்றால் மேடவாக்கம் ரோட் வரும். இடது பக்கம் திரும்பினால் ஆதம்பாக்கம் ஜயலட்சுமி தியேட்டர் வழியே சென்று பறங்கிமலை ரயில் நிலையத்தை அடையலாம். இந்தத் தெருக்களின் இரு புறங்களிலும் காலி மனைகளை கற்பனை செய்து பார்க்க தற்சமயம் இயலாதுதான்.

ரங்கா தியேட்டர் 1969-ல் கிடையாது. பழவந்தாங்கல் ரயில் நிலையமும் கிடையாது. திரிசூலம் ரயில் நிலையமும் கிடையாது. மீட்டர் கேஜ் தடங்கள். மின்வண்டிகள் சோப்புப் பெட்டி ரேஞ்சில் இருக்கும். தெருக்களுக்கு தார் கிடையாது. எல்லாமே ஒருமாதிரியான செம்மண் பாதைகளே.

முக்கியமாக தண்ணீர் கஷ்டம் கிடையாது. சாதாரண கிணறுகள்தான். எல்லா வீடுகளுமே தனித்தனி வீடுகள்தான். முக்கால்வாசி வீடுகளுக்கு மொட்டை மாடிதான். (இப்போதும் எங்கள் வீட்டில் அந்த நிலைதான்). பஸ் போக்குவரத்து லேது. 1969-ல் மீனம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பொடி நடையாகத்தான் வீட்டிற்கு வரவேண்டியிருந்தது. சைக்கிள் ரிக்சாவோ ஆட்டோவோ கிடையாது. முதலில் சொன்னவை எழுபதுகளில்தான் வந்தன, அதுவும் பழவந்தாங்கலுக்கு மட்டுமே. ஆட்டோக்கள் நான் தில்லியில் 20 ஆண்டுகள் (1981 முதல் 2001 வரை) இருந்தபோது வந்திருக்கின்றன.

1971-ல் பம்பாயில் வேலை கிடைத்து போக வேண்டியிருந்தது. 1974 ஜூலை வரை பம்பாய் வாசமே. ஊருக்கு வருவது வருடத்துக்கு ஒரு முறைதான். அதுவும் சில நாட்களுக்குத்தான். அப்படியே வந்தாலும் காலை உணவுக்கு பிறகு சென்னைக்கு சென்று நண்பர்களுடன் பொழுது போக்கியதுதான் அதிகம். ஆக ரொம்ப மாற்றங்களைப் பார்க்க இயலவில்லை. 1974-ல் பம்பாயிலிருந்து மாற்றல் பெற்று சென்னை வந்ததிலிருந்து 1979-ல் என் தந்தை மறைந்தவரை நங்கநல்லூர் வாசம்தான். அப்போதுதான் மெதுவாக மாற்றங்கள் வர ஆரம்பித்தன. முதலில் 18C & 18D வழித்தடங்கள். நங்கநல்லூர் ஸ்டேட்பேங்க் காலனியிலிருந்து சைதாப்பேட்டை, பிறகு சிம்ஸன் வரை நீட்டிக்கப்பட்டன.

அப்போது வந்த மாற்றங்களில் என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது ரங்கா சினிமா தியேட்டர்தான். நான் பம்பாயில் இருந்தபோது அதை 1972-73-ல் நிறுவியிருக்கிறார்கள். அந்த தியேட்டர் அக்காலக்கட்டத்தில் ஒரு அருமையான ஏற்பாடு செய்திருந்தனர். அதாவது தினசரி 2 காட்சிகள். பகல் 12 மணி மற்றும் இரவு எட்டரை மணிக்கு. ஒவ்வொரு காட்சியிலும் இரு படங்கள், ஒரு பழைய படம் இடைவேளை வரை பிறகு ஒரு புதிய படம். ஒரே டிக்கட்டில் இருபடங்களையுமே பார்க்கலாம். நாங்கள் பகல் காட்சிக்கு சென்றால் திரும்பவர மாலை 5.30 போல ஆகி விடும். ஆனால் இரவுக் காட்சிக்கு சென்றால், முக்கால்வாசி பழைய படம் பார்த்த கையோடு வீடு திரும்பி விடுவோம். அதற்கே மணி இரவு 11.30 போல ஆகிவிடும். நாங்கள் திரும்பும்போது காவலாளி ஆச்சரியத்துடன் "என்ன சார் போறீங்களா"? என்று கேட்பான். ரங்கா தியேட்டரில் அப்போதெல்லாம் எனக்கு தெரிந்து ஹவுஸ்ஃபுல் ஆனதாக நினைவேயில்லை. நல்ல விசாலமான தியேட்டர். இரவுக் காட்சிகளில் கதவுகளை எல்லா திறந்து வைத்திருப்பார்கள். நல்ல காற்றோட்டமாக இருக்கும். என்ன அவ்வப்போது நாய்கள் வரும் அவ்வளவுதான்.

நாங்கள் வந்த புதிதில் சுற்றிலும் வெட்டவெளியாதலால் காற்று பிய்த்து கொண்டு போகும். எங்கள் வீட்டு ஹாலில் மட்டும் ஒரே ஒரு மின்விசிறி. மற்ற அறைகளில் கிடையாது. என் கல்யாணம் ஆனதும் கல்யாணப் பரிசாக வந்த மின்விசிறியை எங்கள் முன்னறையில் பொருத்தினோம். இக்காலத்தில் அது பற்றி நினைக்கும்போது ஆச்சரியமாக உள்ளது. இப்போது சுற்றிலும் கட்டடங்கள் வந்துவிட்டதால் காற்றுக்கு பஞ்சமாகி விட்டது.

நான் நங்கநல்லூரில் இருந்த காலக்கட்டங்கள் 1969-71, 1974-79 மற்றும் 2001-லிருந்து இன்றுவரை. இன்மேலும் இங்கேதான் இருக்கப் போவதாக எண்ணி கொண்டிருக்கிறேன். திருவல்லிக்கேணியிலிருந்து வந்த புதிதில் எம்ஜிஆர் சாலை வழியே சென்று சாலை முடிவில் மலைப்பாதை ஆரம்பிக்க, மலையில் ஏறுவது ஒரு பொழுதுபோக்கு. மலையில் மேலிருந்து பார்த்தால் தூரத்தில் எங்கள் வீடு தனியாகத் தெரியும். கிழக்கே தூரத்தில் கடல் கூட சில கோணங்களில் தெரியும். 1974-79 காலக் கட்டத்தில் மலைமீது ஏற முயற்சிக்கவில்லை. 2001-ல் வந்த புதிதில் ஒரே ஒரு முறை போய் பார்த்தபோது மலையின் கணிசமான பகுதிகள் காணாமல் போயிருந்தன. கல் குவாரிக்காரர்களின் கைங்கர்யம். பிறகு அந்தப் பக்கம் போகவே பிடிக்கவில்லை.

இப்போது? எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் செல்ல ஆட்டோக்கள் வந்து விட்டன. குறைந்தபட்ச கட்டணம் 20 ரூபாய். முன்னால் கன்னாபின்னாவென்று சைக்கிள்கள். இப்போது இருசக்கர வண்டிகள். கார்கள் எண்ணிக்கையும் பிரமிக்க வைக்கிறது. முன்பு ஒரு கிராமப்புற தோர்றத்தில் இருந்த நங்கநல்லூர் இப்போது நகரத் தோற்றத்தை வெகு வேகமாக அடைந்து வருகிறது. கிரவுண்ட் விலை? முதலில் கிடைக்கிறதா என்று பாருங்கள். பாதாளச் சாக்கடைகள் போடும் வேலைகள் ஜரூராக நடக்கின்றன. எல்லோரும் செல்பேசியை கையில் வைத்து பேசிக்கொண்டே போகின்றனர்.

07.09 AM 09.04.2008 சேர்த்தது
வந்தியத்தேவன் அவர்கள் கோவில்களை பற்றி கூறவில்லை என்பதை சுட்டிக் காட்டினார். நான் கோவில்களுக்கு அதிகம் செல்வதில்லை. வைஷ்ணவ திவ்யதேசங்களுக்கு சென்றதெல்லாம் என் வீட்டம்மா என்னையும் தரதரவென்று இழுத்து சென்றதால்தான். எனக்கும் சேர்த்து அவரே கோவில்களுக்கு சென்று விடுவார். ஆகவேதான் அவற்றை நான் குறிக்க மறந்து விட்டேன் என நினைக்கிறேன். நங்கநல்லூர் இப்போது கோவில்களின் ஊர் என்றே சொல்லலாம். பிரசித்தி பெற்ற கோவில்கள் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் ராஜராஜேஸ்வரி கோவில்கள். என் வீட்டம்மாவின் அபிமான கோவிலான லட்சுமி நரசிம்மர் கோவிலைப் பற்றி எனது இன்று பிரதோஷம், நாளை வாலண்டைன்ஸ் டே என்னும் பதிவில் ஏற்கனவே கூறியுள்ளேன்.

சில படங்கள், நண்பர் கமல் கேட்டு கொண்டதற்கிணங்க:

நங்கநல்லூர் ஆஞ்சநேயர், எனது கணினியில் Desktop wallpaper-ல் இருந்து கணினியை திறக்கும்போதே தைரியமாக இரு டோண்டு, தூள் கிளப்பு என எனக்கு அருள் புரிபவர்


லட்சுமி நரசிம்மர் (?) கோவிலின் கோபுரத் தோற்றம்

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/05/2008

உலகமயமாக்கல் பற்றி டோண்டு ராகவனின் சிந்தனைகள்

உலகமயமாக்கத்துடன் எனது அனுபவங்களைப் பற்றி எழுதிய இப்பதிவில் நான் குறிப்பிட்ட விஷயங்களை இங்கு மீண்டும் கூறிவிட்டு வேறு கோணங்களில் அது பற்றி எழுதுகிறேன்.

//சென்னையிலேயே பிறந்து 25 வயது வரை வளர்ந்த நான் 1971-ல் மத்தியப் பொதுப்பணித் துறையில் போஸ்டிங் பெற்று பம்பாய் சென்ற போது பலவித உனர்ச்சிகளுக்கு ஆளானேன். டிகிரி பெற்று ஒரு வருடம் காத்திருந்த பிறகு வேலை கிடைத்தது சந்தோஷம்தான் என்றாலும் சென்னையை விட்டு பிரிய வேண்டியிருக்கிறதே என்ற வருத்தமும் அடைந்தேன். எப்போது சென்னைக்கு மாற்றம் கிடைக்கும் என ஆவலுடன் எதிர்ப்பார்த்து 1974-ல் சென்னைக்கு மாற்றம் பெற்று வந்தபோது மிக மகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால் அதுவே 1991-ல் ஐ.டி.பி.எல்.லில் என்னை சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபரில் அனுப்ப முயன்றபோது மேலே விழுந்து அதைத் தடுத்தேன். அதற்குள் சென்னை பிடிக்காமல் போய்விட்டதா என்ன? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. விஷயமே வேறு. டில்லியில் என்னுடைய மொழிபெயர்ப்பு வேலைகள் அமோகமாக நடந்து கொண்டிருந்தன. தலைநகரானதால் இங்கு அன்னிய மொழிகள் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு அதிக சாத்தியக்கூறுகள் அவ்வளவுதான். சென்னையில் அந்தக் காலக் கட்டத்தில் அவ்வளவு வாய்ப்புகள் இல்லைதான். ஆகவே 1993-ல் விருப்ப ஓய்வு பெற்றாலும் டில்லியிலேயே 2001 வரை என் மொழிபெயர்ப்பு வேலைகளை மட்டும் நம்பி செயல்பட முடிந்தது.

2001-ல் சென்னைக்கு போகலாம் என்று முடிவெடுத்தபோதும் மனதுக்குள் சிறு உதறல்தான். சென்னையில் இவ்வளவு வேலை கிடைக்குமா என்ற ஒரு சிறு உறுத்தல். இருந்தாலும் சொந்த வீட்டுக்குத்தானே வருகிறோம், டில்லியில் கொடுத்த 5000 ரூபாய் வாடகை மிச்சம், மேலும் மாதம் 5000 கொடுத்தால், தான் சிக்கனமாகக் குடும்பம் நடத்திக் காட்டுவதாக என் வீட்டம்மா வேறு உறுதியளித்தார். இதே மாதிரி உறுதி மொழியை அவர் 1993-லும் கொடுத்ததன் பேரிலேயே நான் விருப்ப ஓய்வு எடுத்திருந்தேன். ஐ.டி.பி.எல்.-ல் கடைசியாக பெற்ற மாத சம்பளத்தை விட மிக அதிகமாகவே ஒவ்வொரு மாதமும் பொருள் இட்ட முடிந்ததை நினைவில் கொண்டு இப்போதும் செயல்பட்டேன். இம்மாதிரி விஷயங்களில் என் வீட்டம்மா என்னுடைய much much better-half.

இங்குதான் உலகமயமாக்கம் என் துணைக்கு வந்தது. நான் சென்னை போகப் போகிறேன் என்பதை என்னுடைய மிகப்பெரிய டில்லி வாடிக்கையாளரிடம் கூறியபோது அவர் அதிர்ச்சி அடைந்தார். "என்ன ராகவன் இவ்வாறு முடிவெடுக்கிறீர்கள், இப்போதுதானே ஒரு பெரிய ஆர்டருக்கு சான்ஸ் இருக்கிறது" என்று அவர் ஆதங்கத்துடன் கூற, அவரிடம் நான் மின்னஞ்சல் முகவரி பெற்று அவருடன் தொடர்பு கொள்வேன் என உறுதியளித்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் எனக்கு கணினி அறிவு அப்போது பூஜ்யமே. எலிக்குட்டியை பிடித்துக் கூட பார்த்ததில்லை.

சென்னைக்கு வந்த அரை மணிக்குள் என் மருமாள் எனக்கு தன் கணினியில் வைத்து yahoo முகவரி வாங்கிக் கொடுத்தாள். Raghavan Translator Interpreter என்ற சொற்களிலிருந்து raghtransint@yahoo.co.in என்ற முகவரியை பதிவு செய்தேன். டில்லி வாடிக்கையாளருக்கு அதை தெரிவிக்க அவரும் மூன்று நாட்களுக்குள் ஒரு பெரிய கோப்பை அனுப்பினார். எங்கள் குடும்ப நண்பரின் மகன் உதவியுடன் கணினியில் தட்டச்சு செய்வித்து டில்லி வாடிக்கையாளருக்கு அனுப்ப வேலை சூடு பிடித்தது. பிப்ரவரி 2002-ல் நானே கணினி வாங்கி, டயல் அப் இணைய இணைப்பை பெற்று என் வேலைகளைத் தொடர முடிந்தது. 2004 இறுதி வரை டில்லி வேலைகள்தான் பாதிக்கு மேல். சென்னை வாடிக்கையாளர்கள் லிஸ்ட் மிக மெதுவாகத்தான் வளர்ந்தது. டில்லி ஆதரவின்றி நான் சென்னை வந்திருந்தால் முதலில் மிகவும் கஷ்டப்பட்டிருப்பேன். இணையத்தின் தயவால் பிழைத்தேன். இணையத்தின் வளர்ச்சி உலகமயமாக்குதலுக்கு ஆதாரமா அல்லது உலகமயமாக்கல் இணயத்தின் வளர்ச்சிக்கு வழிகோலியதா என்று பார்த்தால், இரண்டு பக்கமாகவும் பேசலாம். ஆனால் எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. எது எப்படியானால் என்ன, முன்னேற்றம்தான் முக்கியம்.

இப்போது? அகலப்பட்டை இணைய இணைப்பு, Windows XP, பல மென் பொருள்கள், கூகள், ஆன்லைன் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலிய அகராதிகள், இத்யாதி இத்யாதி. உலகமயமாக்கலால் பல வேலைகள் இந்தியாவுக்கு வந்துள்ளன. அவற்றில் மொழிபெயர்ப்பு ரொம்பவும் முக்கியமானது. சில நாட்களுக்கு நியூயார்க்கில் உள்ள ஒரு பாகிஸ்தானியரால் நடத்தப்படும் ஏஜென்ஸிக்கு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தேன். பணத்தை அவர் இந்திய ரூபாயாக Money Gram-ல் அனுப்ப அடுத்த பத்து நிமிடத்தில் பணம் சென்னைக்கு வந்தது.

அயர்லாந்தில் உள்ள ஒரு நிறுவனம் தன்னுடைய ஜெர்மன் கூட்டாளியிடமிருந்து ஜெர்மன் மொழியில் வரும் மின்னஞ்சல்களை மொழிபெயர்க்க என்னைத் தேர்ந்தெடுத்துள்ளது. தினம் பகல் 2 முதல் 10 மணி வரை வேலை. மின்னஞ்சல்கள் வர வர அவற்றை ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கோ அல்லது எதிர்த்திசையிலோ மொழி பெயர்க்க வேண்டியிருக்கும். இதன் அர்த்தம் என்னவென்றால் அயர்லாந்து கம்பெனி ஒரு முழுநேர மொழிபெயர்ப்பாளரை வேலைக்கு வைத்துக் கொள்ளத் தேவையில்லை. எனக்கு என்ன பலன்? ஸ்டெடியான வேலை, அதற்கேற்ப சம்பளம். இருவருமே பயன் பெறுகிறோம். இதுதான் உலகமயமாக்கல். விளையாட்டாகத் தமிழ்மணம் பார்த்துக் கொண்டிருக்கும்போது கூகள் டாக்கிலிருந்து மின்னஞ்சல் வருவது பலூன் போல மேலெழும்ப உடனே அந்த வேலையை பார்க்க வேண்டியதுதான், அயர்லாந்துக்காரர்களும் அடுத்த சில நிமிடங்களுக்குள் மொழிபெயர்ப்பை பெற முடிந்ததில் மிக மகிழ்ச்சி அடைகின்றனர்.

இப்போது வரும் மெடிகல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன்ஸ்களும் இம்மாதிரி வேலைகளே. கால் செண்டர்களும் அவ்வண்ணமே. ஆகவே நாமும் நம்மை காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் நிகழ்வுகள் நம்மை ஓரம் கட்டிவிடும். இதை உணர்ந்து இப்போதே முன்னேறிய நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

ஜெர்மனியில் ஒரு தேர்தல் கோஷம் "Kinder statt Inder". (நிறையக் குழந்தைகள்தான் நமக்குத் தேவை, இந்தியர்கள் அல்ல). இதன் பின்புலன். ஜெர்மனியில் மென் பொருள் நிபுணர்களுக்கு பஞ்சம். இந்தியர்களுக்கு இதில் திறமை அதிகம். ஆகவே ஒரு ஜெர்மானிய மந்திரி இந்தியர்களுக்கு சலுகையளித்து கூப்பிட்டிருந்தார். இது அங்கிருந்த எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை, அவ்வளவுதான்.//

அறுபதுகளின் துவக்கம் வரை பொறியியல் கல்லூரியில் தேர்ச்சி பெற்று வெளியே வருபவர்களுக்கு வேலை கிடைப்பதில் அதிகம் பிரச்சினை இருந்ததில்லை. 1962-ல் பாஸ் செய்த எனது மாமா பிள்ளைக்கு உடனடியாக மாநில பொதுப்பணித்துறையில் இளம்பொறியாளராக சேருமாறு நேரடியாகவே வேலை உத்தரவு வீடு தேடி வந்தது. அவனோ தான் படித்த கிண்டி பொறியியல் கல்லூரியிலேயே லெக்சரராக சேர்ந்தான். அது இப்பதிவுக்கு தேவையில்லை. அதுவே 1963-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம்மாதிரி போஸ்டிங்க் வந்தது நின்றுபோனதாக அறிந்தேன். அந்த ஆண்டுதான் நான் முதலாம் ஆண்டு சேர்ந்திருந்தேன். அப்போதிலிருந்தே வேலையில்லா திண்டாட்டம் என்ற பிரச்சினை பொறியாளர்களை பயமுறுத்த துவங்கியிருந்தது. 1966-க்கு அப்புறம் பொறியியியல் கல்லூரிகளில் அட்மிஷன் கும்பலும் குறைந்தது. 1968-ல் எனது பெரியப்பா பிள்ளைக்கு பி.எஸ்.சி. சீட் கிடைக்கவில்லை. ஆனால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ.க்கு விண்ணப்பம் போட்டதுமே நேர்க்காணல் கூட இல்லாமல் வந்து பணம் கட்டி சேருமாறு அட்டை உடனடியாக வந்தது. நான் படித்து முடித்தது 1969-ல் (இரண்டாம் வருடம் ஃபெயிலானதில் ஓராண்டு வீட்டில் இருக்க வேண்டியதாயிற்று). வேலையில்லா திண்டாட்டம் பொறியாளர்களைப் பொருத்தவரை தலைவிரித்தாடியது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுக்கு பிறகே மத்தியப் பொதுப்பணித் துறையில் வேலை கிடைத்து போனதை பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

ஆக, எனக்கு தெரிந்து அறுபதுகள், எழுபதுகள் பொறியாளர்களுக்கு இந்தியாவில் மோசமான காலம். கேம்பஸ் தேர்வுகள் எனக்கு தெரிந்து அப்போதெல்லாம் நடந்ததாகத் தெரியவில்லை. வேலை இருந்தால்தானே தேர்வுகளுக்கு அவசியம்? ஒரு தொழிற்சாலையை ஆரம்பிக்கவே அரசின் பலதுறைகளிடம் சென்று தொங்க வேண்டிய நிலைமை. லைசன்ஸ் கோட்டா ராஜ்யம்தான் நடந்தது. எல்லாவற்றையும் நாட்டுடைமையாக்குகிறேன் பேர்வழி என்று இந்திரா காந்தி நாட்டை பாதாளத்துக்கு அழைத்து சென்றார். 1991-ல் சந்திரசேகர் அரசு வெளிநாட்டு செலாவணி கையிருப்பின்றி தங்கத்தை அடகு வைக்க வேண்டியிருந்தது. அப்போதுதான் நல்ல வேளையாக நரசிம்மராவ் அரசு உலகமயமாக்கலுக்கு இந்தியாவின் கதவுகளை திறந்து வைத்தார்.

மெதுவாக நாடு முன்னேற ஆரம்பித்தது. 1993-ல் நான் விருப்ப ஓய்வு பெற்று எட்டு ஆண்டுகள் தில்லியில் எனது மொழிபெயர்ப்பு வேலையை மட்டும் வைத்து நல்லபடியாக பிழைக்க முடிந்தது. டெலிஃபோன் கனெக்‌ஷனை பெற பல ஆண்டுகாலம் காத்திருப்பு என்பதெல்லாம் போய் கேட்டவர்களுக்கெல்லாம் கிடைத்தது. இப்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசிகளை கூவிக் கூவி விற்கிறார்கள். எல்லாமே பொருளாதாரக் கட்டுப்பாட்டை தளர்த்தியதாலேயே வந்தது. பழைய மகாபலிபுரம் சாலை தூங்குமூஞ்சி சாலையிலிருந்து பரபரப்பான சாலையாக மாறியதை இங்கு ஒரு சிறு உதாரணத்துக்கு மட்டும் கூறுகிறேன். சேவைத் துறையில் இந்தியா பெறும் பெரிய வெற்றிகள் உலகமயமாக்காமல் வந்திருக்க முடியாது.

இப்போது உலகமயமாக்கலை எதிர்த்து பலமுனகல்கள் கேட்க ஆரம்பித்துள்ளன. பழைய நிலைமைக்கே போகலாம் என்று நாஸ்டால்ஜியாவுடன் பேசுகின்றனர் சிலர். அரசு கட்டுப்பாட்டை ஆதரிக்கின்றனர் வேறு சிலர். நான் ஒன்று கூறுகிறேன். உலகமயமாக்கல் வந்தாகி விட்டது. இப்போது போய் அது சரியா தவறா எனப்பேசி என்ன பயன்? அவரவர் வேலைகளைப் பாருங்கள் ஐயா என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. சிலர் எதிர்ப்பதால் கடிகாரத்தை திருப்பி வைக்க இயலாது. இந்தப் பதிவில் அதியமானும் நானும் கூறியது இதைத்தான். இதில் என்ன வேடிக்கை என்றால் எங்கள் இருவரையும் எதிர்த்து பேசியவர்களே உலக மயமாக்கத்தால் பயன் பெற்று வருபவர்கள்தான். நான் என்ன நினைக்கிறேன் என்றால் ஏதோ பொழுது போகாமல் டைம் பாஸுக்காகத்தான் இப்படி பேசுகிறார்கள் என்று. தத்தம் அப்ரைசல் நேரத்தில் சுகுராக நோட் எல்லாம் போட்டு தங்கள் இன்க்ரிமெண்ட் 40% அளவுக்கு வருவது போல உழைத்து பெறும் இவர்களுக்கு ஒன்று புரிய வேண்டும், உலகமயமாக்கம் இல்லையென்றால் அவர்கள் வேலைகளே இல்லை. மின்வாரியம், பொதுப்பணித்துறை, வேலை வாய்ப்பு அலுவலகம் என்றுதான் படை எடுக்க வேண்டியிருக்கும்.

இன்னும் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மனித இயற்கைக்கு புறம்பான தத்துவமான கம்யூனிசம் கூறுவது போல ஒருவன் பணக்காரனாக இன்னொருவன் ஏழையாக வேண்டிய அவசியமே இல்லை. இதில ஈடுபடும் எல்லோருமே அவரவர் அளவில் வெற்றி பெற இயலும் அதாவது win-win situation என்று சொல்வார்கள். இன்னும் சிலர் மூட்டை தூக்குபவனுக்கு என்ன நன்மை என்று கேட்பார்கள். அவர்களை நான் திரும்பக் கேட்கிறேன், உலகமயமாக்கலுக்கு முன்னால் மட்டும் அவர்கள் சுபிட்சமாக வாழ்ந்தார்களாமா?

உலகமயமாக்கலால் ஒரு துறையில் ஏற்படும் வேலைவாய்ப்புகள் மேலும் புது வேலைகளை உருவாக்குகின்றன. அந்தப் புது வேலைகள் மேலும் புது வேலைகளை உருவாக்குகின்றன. உலகமயமாக்கலை எதிர்ப்பவர்களுக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும்? இருந்தாலும் பொழுதுபோகாது தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால்கள் என்று பேசும் இக்கால வயோதிக இளைஞர்களைக கண்டு 62 வயது இளைஞனான டோண்டு ராகவன் வியப்படைகிறான்.

எப்படியோ போங்கள். உலகமயமாக்கலை எதிர்த்து வாதம் செய்பவர்கள் வேறு வேலையின்றி அதையே செய்து கொண்டிருக்கட்டும். நான், அதியமான் போன்றவர்கள் எங்கள் வேலைகளைப் பார்த்து கொண்டு போகிறோம். முன்னேறுவதற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. வெட்டிப்பேச்சு பேசும் நேரம் இல்லை இது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/04/2008

டோண்டு பதில்கள் - 04.04.2008

இன்று எனக்கு பிறந்த நாள். இன்றுடன் 62 வயது நிரம்புகிறது. மனது என்னவோ 25 வயதை விட்டு வரமாட்டேன் என்கிறது. இப்போது கேள்விகளுக்கு செல்வோமா?

Radha Sriram
1)பூஜை புனஸ்காரங்களில் நம்பிக்கை உண்டா? அதாவது rituals?தினப்படி செய்யும் வழக்கம் உண்டா?
பதில்: இல்லவே இல்லை. அதில் இதுவரை மனம் ஒன்றவே இல்லை. பூஜைக்கு செலவழிக்கும் நேரத்தில் ஏதேனும் மொழிபெயர்ப்பு செய்யலாமே என்ற எண்ணம்தான் வருகிறது. என்னதான் இருந்தாலும் செய்யும் தொழில்தானே தெய்வம்?
2)Art Of Living பற்றி உங்கள் கருத்து?
பதில்: மனிதராகப் பிறந்த எல்லோருமே சிந்திக்க இயலும். ஆனால் அந்த சிந்தனைகளை ஒழுங்கு படைத்து சரியான பாதையில் தவறுகள் இன்றி கொண்டு செல்வதே தர்க்க சாஸ்திரத்தின் வேலை. அதைத்தான் இந்த Art Of Living-லும் பார்க்கிறேன். வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்களை எப்படி எதிர்க்கொண்டு வெற்றிகரமாக வாழ்வது என்பதை பல வழிகளில் கற்று தருகின்றனர். மற்றப்படி அந்த இயக்கத்துடன் அவ்வளவாக பரிச்சயம் இல்லை.

வேல்பாண்டி
1. கலைஞரிடம் பிடித்தது என்ன? (ஜெ மாதிரி குடும்ப பாசம் என்று சொல்ல வேண்டாம்.)
பதில்: அவரது சொல் சாதுர்யம், அயராத உழைப்பு. 10 ஆண்டுகள் எம்.ஜி.ஆரால் ஓரம் கட்டப்பட்டு இருந்தாலும் கட்சி உடையாமல் பார்த்து கொண்டவர் என்ற முறையில் நான் அவரை வியந்து பாராட்டுகிறேன்.

அனானி (28.03.2008 பகல் 1 மணிக்கு கேள்வி கேட்டவர்)
1. மிக அருமையான எழுத்துத் திறமை இருந்தும், வலைப்பதிவுகளில் இருந்து முற்றிலும் விலகி, எழுதுவதையே நிறுத்திவிட்டவர்களில் ஒருவரை மீண்டும் எழுதவேண்டும் என்று நீங்கள் அழைப்பீர்களேயானால் அவர் யாராக இருக்கும்?
பதில்: மா.சிவகுமார், நேசமுடன் வெங்கடேஷ்

நடராஜன்:
1. என்னை மாதிரி வேலையத்துப் போயி உங்க கேள்வி பதிலை/blog படிக்கும் - comment ஏதும் போடாதவர்களை பற்றி?
பதில்: Silent majority என்ற கான்சப்டை சமீபத்தில் 1969-70-களில் அமெரிக்க குடியரசு தலைவர் நிக்ஸன் பயன்படுத்தினார். அதாவது கருத்து ஏதும் வெளியில் சொல்லாது இருப்பவர்கள்தான் அதிகமாம். கருத்து இல்லாமல் இல்லை, ஆனால் வெளியில் சட்டென்று தெரிவித்து விட மாட்டார்கள் என்பதே அதன் பொருள். அவர்களில் ஒருவராக உங்களைப் பார்க்கிறேன்.

அனானி (28.03.2008 மாலை 6 மணிக்கு கேட்டவர்)
1. "Microsoft Encarta" தமிழர்கள் கீழ்சாதி மக்கள் என உள்ளதை பற்றி உங்கள் கருத்து?
பதில்: எல்லோருமேவா கீழ்ச்சாதி மக்கள் என்று கூறப்பட்டுள்ளது? நான் தேடியவரை அவ்வாறு கிடைக்கவில்லையே. நீங்கள் சொன்ன மாதிரி சுட்டிகளுக்கு போனேன், இருப்பினும் எனக்கு அது கிடைக்கவில்லை. நிற்க. அவ்வாறு நீங்கள் சொன்ன மாதிரி கூறப்பட்டிருந்தால் அதை நான் தெளிவாக மறுக்கிறேன். நான்கு வர்ணத்தவர்களும் இந்தியாவின் எல்லா பாகங்களிலும் இருந்து வந்திருக்கின்றனர். இதில் தமிழர்களுக்கான நிலை மாறுபட்டிருக்கவும் என நினைக்க இயலவில்லை. முடிந்தால் சிரமம் பார்க்காது சம்பந்தப்பட்ட வரிகளை இங்கு கூறவும். நீங்கள் புரிந்து கொண்டது சரியா என்பதைப் பார்க்கலாம்.
2. "Prof. Paul Courtright" என்பவரது புத்தகத்தில் விநாயகர் சொல்ல வியாசர் பாரதம் எழுதியதாக உள்ளதை பற்றி உங்கள் கருத்து?
பதில்: பக்கா உளறல் என்றுதான் கூற வேண்டும். மஹாபாரததில் வியாசரும் ஒரு பாத்திரமே. அவர் முக்காலமும் அறிந்த முனிவர். மஹாபாரதத்தை தான் சொல்லச்சொல்ல யாராவது எழுத வேண்டும் என்பதற்காக அவர் பிரும்மாவை பிரார்த்திக்க, விநாயகர் வந்து சேருகிறார். அவர் போட்ட நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். அதாவது வியாசர் சொல்வதை நிறுத்தக் கூடாது என்பதே. வியாசர் எதிர் நிபந்தனை போடுகிறார். அதன்படி விநாயகர் சொல்லப்பட்ட சுலோகங்களின் பொருளை முழுமையாக உணர்ந்த நிலையில்தான் எழுதவே வேண்டும். அதற்கு விநாயகரும் ஒப்புகிறார். நிலைமை இப்படி இருக்க சில வெளிநாட்டு அரைகுறைகள் எழுதினால் அதையெல்லாம் எப்படி ஒத்து கொள்வதாம்?
3. "Microsoft Encarta" சிவபெருமான் பிரும்மதேவரின் பிள்ளை என என உள்ளதை பற்றி உங்கள் கருத்து?
பதில்: எனக்கு தெரிந்து பிரும்மாதான் விஷ்ணுவின் பிள்ளை. இங்கே வரும் புதுக்கதையைப் பற்றி என்ன கூறுவது, அது பேத்தல் என்பதைத் தவிர?
காலை 10.43 மணிக்கு மேலே சேர்த்தது:
எந்த வேளையில் பேத்தல் என்று சொன்னேனோ நான் இந்த கேள்வி விஷயத்தில் சொன்னதுதான் பேத்தல் என்று நிரூபணம் ஆகிவிட்டது. பத்ரிக்கு நன்றி. அவர் கூறியதை கீழே தருகிறேன். மேலே இருக்கும் எனது தவறான விடையை அப்படியே வைத்திருப்பதன் காரணம் எனக்கு எதிர்க்காலத்தில் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தட்டுமே.
//ஸ்ரீமத் பாகவதம், பிரம்மாவின் மூச்சுக்காற்றிலிருந்து சிவன் உருவானார் என்கிறது. திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதி இப்படித் தொடங்குகிறது:

நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான் முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து//


ஜீரோ:
1) 2020ற்குள் இந்தியா வல்லரசு ஆகுமா?
பதில்: மோடி மாதிரி ஒரு பிரதம மந்திரியும், மாநில முதன் மந்திரிகளும் வந்தால் அவ்வாறு வல்லரசு ஆகும் வாய்ப்பு உண்டு. மற்றப்படி நேரு குடும்பத்தை வைத்து பஜனை செய்து கொண்டிருந்தால் காரியத்துக்கு ஆகாது.
2) இல்லையென்றால் நாம் எது எதில் பின் தங்கியிருக்கிறோம்?
பதில்: நமக்கு தன்னம்பிக்கை முதலில் வேண்டும். நாட்டு மக்கள் உழைப்புக்கு அஞ்சக்கூடாது. எந்தக் கொம்பனாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டிக்கும் மனோ தைரியம் வேண்டும். இதிலெல்லாம் நாம் பின் தங்கியுள்ளோம்.

அருண்மொழி
1. கர்ப்பிணி பெண்களை கூட கொன்றவர்கள் (அதை ஒப்புக்கொண்டப்பின்) கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடும் அளவிற்கு சில மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதே. இப்படி இருந்தால் இந்தியா எப்படி முன்னேறும்?
பதில்: ரிகார்ட் செய்தவன் என்ன கூறியிருந்தால் சம்பந்தப்பட்டவன் அவ்வாறு வாக்குமூலம் தந்திருக்க வேண்டும்? தானும் பலரை கொன்றதாகத்தான் கூறியிருக்க வேண்டும். எல்லாவற்றையும் டேப் செய்து போலீசிடம் கொடுத்தால் இவனும் கம்பி எண்ண வேண்டியிருக்கும். ஆகவே போலீசிடம் கொடுக்காது வெறுமனே தான் பேசியதையெல்லாம் எடிட் செய்து அழித்து விட்டு சம்பந்தப்பட்டவன் பேசியதை மட்டும் போட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல சந்தர்ப்பங்களில் தனித்தனியாகப் பேசியதை ஒன்றாக்கி புதிய டேப் உருவாக்கியிருக்க வேண்டும். ஆகவேதான் போலீசிடம் கொடுக்க வக்கின்றி இவ்வாறு செய்துள்ளனர் என நினைக்கிறேன்.
அது சரி, இது பற்றி காங்கிரசோ, திமுகவோ ஒன்றும் அதிகம் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லையே. ஏன் 1984 சீக்கிய படுகொலைகளோ, மதுரை சன் டீவி கலவரங்கள் பற்றியோ கேள்விகள் வரும் என்பதாலா? மற்றப்படி, இதெல்லாம் குஜராத் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே அஜெண்டாவில் செய்யப்பட்டது. அது காரியத்துக்கு ஆகவில்லை. இதில் என்ன வேடிக்கை என்றால், பல ஹிந்து ஓட்டுகள் இந்த டேப்புகளினாலேயே மோடிக்கு அதிகம் கிடைத்தன என சில கோஷ்டிகள் சொல்லித் திரிகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது சோனியா காந்தி மோதியை மரணத்தின் வியாபாரி எனக்கூற மோதி அவருக்கு பதிலடி கொடுத்தார். முதலில் மோதிக்கு மட்டுமே நோட்டீஸ் கொடுத்தது தேர்தல் கமிஷன். பிறகு சோனியாவின் பேச்சை குறிப்பிட்டு கேட்டதும் வேண்டாவெறுப்பாக அவருக்கும் நோட்டீஸ் தந்தது. பிறகு வந்த ரிப்போர்ட்டின்படி இருவருமே நன்னடத்தை விதிகளை மீறியவர்கள் என்று கூற வேண்டியதாயிற்று. அதிலும் மோதிக்கு சற்றே அதிகக் கண்டனம். இவ்வளவு பாரபட்சமாக தேர்தல் கமிஷன் நடந்து கொண்டால் நாடு எப்படி உருப்படும் என்று நினைக்கிறீர்கள்?
இன்னொன்றும் கூறுவேன். 2002-பிப்ரவரியில் நடந்ததை வைத்து அந்த ஆண்டு தேர்தலில் வேணமட்டும் பிரசாரம் செய்து விட்டனர். தலைமை தேர்தல் கமிஷனரும் தன்னால் முடிந்த அளவு மோடிக்கு விரோதமாக செயல்பாடு செய்து பார்த்து விட்டார். இருப்பினும் மோடி அப்போதே ஜெயித்தார். பிறகு 5 ஆண்டுகள் குஜராத்தில் ஒரு கலவரம் கிடையாது, ஒரு தீவிரவாதிகள் தாக்குதல் கிடையாது, அரசு யந்திரம் மிகத் திறமையாகவே செயல்பட்டு குஜராத் முன்னேற்றப் பாதையில் எல்லோரையும் மிஞ்சி சென்று விட்டது. அப்புறமும் பழைய கதைகளை பேசுபவர்கள் 1984 சீக்கியக் கலவரத்தையும் பற்றி பேசத் தயாராக வேண்டும்.

செந்தழல் ரவி:
1. சிங்கப்பூருக்கு இரண்டு டிக்கெட் இலவசமாக கிடைத்தால் பாஸ்போர்ட் எடுப்பீர்களா?
பதில்: சிங்கப்பூரோ அல்லது வேறு ஏதாவது வெளிநாட்டுக்கோ போகும் ஆசை அறவே கிடையாது. ஆக நான் போகாததற்கு காரணம் பணப் பற்றாக்குறையில்லை. என்னிடம் தேவையான பணம் உள்ளது. தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனுக்கு நன்றி.

வஜ்ரா:
1. நீங்கள் ஏன் ஒரு முறை கூட வெளி நாடு செல்ல முயற்சிக்கவில்லை?
பதில்: மேலே சொன்ன பதில்தான் இங்கும்.
2. ஜெர்மன், ஃப்ரெஞ்சு மொழிகள் கற்ற நீங்கள், அவர்கள் நாகரீகங்களைக் கற்காமல் மொழி பெயர்ப்பு செய்ய முடியாது என்பதை அறிவீர்கள். அவர்கள் நாகரீகங்களை நன்கு அறிய ஒரு முறையாவது ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்குச் செல்ல விருப்பம் ஏற்பவில்லையா?
பதில்: யார் சொன்னது அப்படி? நான் செய்யும் மொழிபெயர்ப்புகள் தொழில்நுட்ப விஷயங்கள். அதற்கு இஞ்சினியரிங் அறிவும் மொழி அறிவுமே எதேஷ்டம். மற்றப்படி ஃபிரெஞ்சு ஜெர்மன் நாகரிகங்களைப் பற்றி அம்மொழியில் வெளியாகும் புத்தகங்களிலிருந்து அறிந்து கொள்கிறேன். ஜெர்மனியும் ஃபிரான்ஸும் என் வீட்டுக்கே வரும்போது நான் ஏன் வெட்டியாக காசு செலவழித்து அங்கு செல்ல வேண்டும்? ஒரு சுவிஸ் நாட்டுக்காரருக்கு நான் ஜெர்மன் துபாஷியாக சென்றேன். அவர் நான் பேசும் ஜெர்மன் சுவிஸ் ஜெர்மன் என்று துண்டு போட்டு தாண்டினார். இந்தியாவை விட்டு எங்குமே போகவில்லை என்பதைக் கேட்டு நம்ப மறுத்து விட்டார்.

அனானி (29.03.2008 பிற்பகல் 3.42-க்கு கேட்டவர்)
1. தமிழ் மொழி கடவுளிற்கு புரியாது என்று கூறும் சோ ஏன் சமஸ்கிருதத்தில் பத்திரிகை நடத்தாமல் தமிழில் (அவரது கூற்றுப்படி நீச மொழியில்) நடத்துகிறார்?
பதில்: சோ எப்போது அவ்வாறு சொன்னார்? தமிழில் அவருக்கு இருக்கும் ஆளுமை அசாத்தியமானது. சும்மா ஏதாவது கேட்பதற்காகவெல்லாம் இவ்வாறு கேட்கக்கூடாது. என்னைப் பொருத்தவரை நானறிந்த ஆறு மொழிகளிலே தமிழ் மொழிபோல இனிதாவதெங்கும் காணோம்.

அனானி (சென்னைக்கு வந்தால் என்னைச் சந்திக்கலாமா எனக் கேட்டவர்)
1. தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு, அதுனால எல்லாரும் மூணு அங்குலத்துல கத்தி வச்சிருக்கணும், அத எப்படி யூஸ் பண்ணத் தெரிஞ்சிருக்கணும்னு தா. பாண்டியனும், நல்ல கண்ணுவும் சொல்லீருக்காங்களே? ஆயுதப்பயிற்சி வேணும்னு இப்படி கூவுறவுங்க, ஆர் எஸ் எஸ-ல் தற்காப்புக்காக சொல்லித் தருகிற தற்காப்புக் கலைகளை விமர்சனம் செய்யிறாங்களே? இது இவர்களின் இரட்டை நிலையை விளக்கவில்லையா? இதை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: ஆயுதம் எடுப்பவன் ஆயுதத்தாலேயே சாவான், கத்தியைத் தீட்டாதே தம்பி புத்தியைத் தீட்டு என்றெல்லாம் இவர்கள் கேள்விப்பட்டதில்லை என நினைக்கிறேன்.
ராஜகோபால் சடகோபன்:
1. Why Srivaishnavites (hardcore Iyengars) do not go to Shiva temples? (When you remove the Ego (basic thing) then only you can have Moksham. The moment Srivaishnavites say Lord Narayana is supreme, the Ego comes).
(If only Lord Narayana can give Moksham only Iyengars will be in Vaiguntam. This seems to be not alright).
Would you share your thoughts if you have any?

பதில்: நீங்கள் கூறுவது வீரவைஷ்ணவர்கள் எனக் கூறப்படுபவர்கள் விஷயத்தில் உண்மையே. ஐயங்கார்களில் சமாசனம் என்று ஒரு சடங்கு உண்டு. இரு தோள்களிலும் சங்கு சக்கர முத்திரைகள் நெர்ப்பால் பொறித்து கொள்வதாகும் அது. அதே போல அடுத்த கட்டமாக பரண்யாசம் என்ற சடங்கும் உண்டு. அதை செய்து கொண்டால் பல கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் சிவன் கோவிலுக்கு போகக் கூடாது என்பது. எனக்கு இக்கட்டுப்பாட்டில் ஒப்புதல் இல்லை. ஆனால் இன்னொரு விஷயம். வீர சைவர்கள் என்றும் இருக்கின்றனர். அவர்கள் பெருமாள் கோவிலுக்கு வரமாட்டார்கள். எல்லாமே தமாஷ்தான். சைவ வைஷ்ணவ சண்டைகள் அநபாய சோழன் காலத்தில் பிரசித்தம். ராமானுஜரை கொலை செய்யும் முயற்சி வரை போயிற்று.
07.04.2008 அன்று சேர்க்கப்பட்டது:
நான் மேலே சொன்ன சில விஷயங்களில் மாறுதல்கள் தேவையாகின்றன. சுட்டிக் காட்டிய என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு நன்றி:
நான் சமாசனம் என்று குறிப்பிட்டது "சமாஷ்ரயணம்" என்றிருக்க வேண்டும். ஸ்ரீமன் நாராயணனின் மேல் பக்தி கொண்டவர்கள் (அவனையே கதி என்று நம்பி வந்தவர்கள்) அனைவருமே ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆகிறார்கள், அவர்கள் அனைவருமே சாதி பேதமின்றி 'சமாஷ்ரயணம்' பெறுவதற்கு உகந்தவர்கள் ஆகிறார்கள் என்று வைணவ சாத்திரம் கூறுகிறது. பிரம்மோபதேசமும் அப்படியே !
"பரண்யாசம்" அல்லது 'பிரபத்தி' என்பது பூரண சரணாகதித்துவத்திற்கான வழிவகையைக் (means) குறிக்கிறது.
பரண்யாசம் = பரம் + ந்யாசம்
'nyAsam' means saraNAgathy
'Bhara' is Bhaaram - the burden.
BharanyAsam is to surrender one's self and one's bhaaram to Sriman Narayana.
One can be initiated to 'BharanyAsam' by a Guru. பரண்யாசம் எப்போது ஒரு சடங்கானது என்று தெரியவில்லை. அது போலவே, பரண்யாசத்திற்கும், சிவன் கோயில் செல்வதற்கும் சம்பந்தம் கிடையாது!!! நன்றி பாலா அவர்களே
.

வால்பையன்:
அரசியல் கேள்விகள்
1. தி.மு.கா.விற்கு அடுத்த தலைவராக நீங்கள் நினைப்பது யாரை?

பதில்: ஸ்டாலினை விட அழகிரிக்கு செயல் திறன் அதிகம். ஆனால் ஒன்று கலைஞர் குடும்பத்தைத் தவிர வேறு யாருமே கட்சியில் முன்னேறாதபடிக்கு அக்குடும்பம் கட்சியை குடும்பக் கம்பெனியாக்கியது விசனிக்கத் தக்கதே.
2. கட்சி மாறும் கோமாளிகளை பார்த்து நீங்கள் நினைப்பது என்ன?
பதில்: கட்சித் தலைவர்கள் தொண்டர்களை கோமாளிகளாக நினைக்கின்றனர். கட்சி மாறுபவர்கள் தலைவர்களை கோமாளிகளாக நினைக்கின்றனர். எல்லோரும் தத்தம் நலனைப் பாதுகாக்கின்றனர். தொண்டனும் அவ்வாறே செய்தால் பிழைப்பான். இல்லாவிடில் பலியாடாக தீக்குளிக்க வைக்கப்படுவான்.
3. சமீபத்திய பட்ஜெட் பற்றி உங்கள் கருத்து?
பதில்: தேர்தலை குறிவைத்து போடப்பட்ட பட்ஜெட். எல்லா ஸ்டண்டுகளையும் அடித்துள்ளனர். தாராளமாக பொதுப் பணத்தை தங்கள் அப்பன் வீட்டுப் பணம் போல வாரிவிட்டுள்ளனர். மொத்தத்தில் கோமாளித்தனமான பட்ஜெட்.
மொக்கை கேள்விகள்
4. மூன்று தலைமுறை வாழ்க்கையை மூன்று மணி நேர படமாக(படையப்பா) தரும் போது
சீரியலில் உங்கள் ஆர்வம் ஏன் அதிகமாக இருக்கிறது?

பதில்: மெகா சீரியல்களையும் கச்சிதமாக எடுக்க இயலும். என்ன, அதற்கு நிரம்பவே மெனக்கெட வேண்டும். கோலங்கள் சீரியலின் டைரக்டர் திருச்செல்வம் தனது சீரியலின் கடைசி எபிசோட் வரை தன் எண்ணத்தில் முழுமையாக உள்ளது என்று இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது கூறினார். அது உண்மையாக இருக்கும் என நம்புவோம். மற்றப்படி திரைப்படங்களோ, சீரியல்களோ அவற்றுக்கென்று தனி இடங்கள் உண்டு.
5. உங்கள் பழைய கணினியை எப்போது மாற்றுவீர்கள்? எதாவது சென்டிமென்ட்டா?
பதில்: இப்போதுதானே 2002-ல் முதல் முதலாக கணினியே வாங்கினேன். அதற்குள் பழசாகி விடுமா என்ன. திரை மட்டும் தட்டைத்திரை வாங்கி, பழைய திரையை மாற்றியுள்ளேன். அவ்வளவே.
6. ஜாதகம், நியுமராலஜி,வாஸ்த்து இவைகளில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா. ஏன்?
பதில்: சுத்தமாக இல்லவே இல்லை.
7. பயங்கர மொக்கை கேள்விகள்
ஜட்டி போடும் பழக்கம் யார் கொண்டு வந்தது? எந்த வருடம்?

பதில்: எல்லாம் பிராக்டிகல்் விஷயங்கள். லொங்கு லொங்கென்று வேட்டையில் மிருகங்களைத் துரத்தி ஓடுபோது தனி சேனல்களில் ஆடுவதை எல்லாம் கண்ட்ரோல் செய்யவில்லையேன்றால் பிற்காலத்தில் பாவ மூட்டை சுமக்க நேரிடும் என்று அக்காலத்திலேயே ஒரு மகரிஷி கூறியுள்ளார். ஆகவே வந்தன கோமணங்கள். அவற்றை பொருத்தும் முறைகள் ஆரம்பத்திலேயே வந்து விட்டன. இதற்கெல்லாம் ஆண்டு கணக்கெல்லாம் கூற முடியாது. சமீபத்தில் 330 B.C.? கோமணங்களே ஜட்டிகளாயின. அவ்வளவே.
8. மண்ணுக்கு மணம் உண்டு, நிறம் உண்டு, சுவையும் உண்டு பிறகு ஏன் அதை வைத்து டீ போட முடியாது?(பார்க்க த்ரீ ரோசஸ் டீ விளம்பரம்)
பதில்: மணம் நிறம் மற்றும் குணம் ஆகியவை தேவையான ஷரத்துகள். ஆனால் முழுமையானவை அல்ல. போதுமானவையும் அல்ல. ஆகவேதான் மொழியில் மண்வாசனை பற்றி பேசினாலும் உண்மையில் அதற்கு மேலும் யோசிக்கிறோம். இதெல்லாம் ஒரு சொலவடைதான்.

அனானி (31.03.2008, பிற்பகல் 2:37-க்கு கேட்டவர்)
1. தமிழ் வலைப் பதிவுகள் அனைத்தும் தமிழ்மணத்தில் இடம் பெறுமா? தமிழ் மணம் என்பது என்ன என்றே ஒன்றும் புரியவில்லை. வலைப்பதிவுலகத்தைப் பற்றிய அறிவில் ஒரு நிரட்சர குட்சி என்றே வைத்துக் கொண்டு பதில் கூறவும். (மற்றதில் மட்டும் என்ன வாழ்கிறதாம் என்று கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்)
பதில்: தமிழ்மணம் என்பது ஒரு திரட்டி மட்டுமே. என்ன புத்திசாலித்தனமாக திரட்டுகிறது. நமக்கெல்லாம் பயனளிக்கிறது என்பதையெல்லாம் ஏற்கனவே பலரும் கூறிவிட்டனர். நானும் கூறியுள்ளேன். ஆக, திரட்டி என்பதையும் மீறி இப்போதெல்லாம் எதை திரட்ட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் குப்பை அதிகம் சேரும் அபாயம் உண்டு.

அன்புடன் அனானி (இனிமேல் இப்படியே குறிப்பிடுவதாக கூறியுள்ளார்)
1. இதுவரை உங்கள் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஏதாவது கணக்கெடுத்து வைத்திருக்கிறீர்களா?
பதில்: அப்படியெல்லாம் பார்க்கவில்லை. பின்னூட்டங்கள் என்பவை வரும்போது அதற்கான எதிர்வினைகளைப் பெறுகின்றன. பிறகு ஒரு வலைப்பூவின் ஆவணங்களாக மாறுகின்றன.

அடுத்த கேள்வி பதிவு பதிவில் பார்ப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது