6/21/2012

லீனா மணிமேகலை விவகாரம்

பலரும் இது பற்றி எழுதி விட்ட நிலையில் நானும் எழுதலாம் என இருக்கிறேன். .

லட்சியம் எல்லாம் ஓக்கேதான். ஆனால் அவை பிழைப்புக்கு எதிராக வரும்போது அவற்றுக்காக ரொம்பவும் அலட்டக் கூடாது என்பதுதான் எனது கொள்கையும். லீனாவின் தொழில் என்ன? படம் எடுப்பது. அதில் அவருக்கு நல்ல பெயர் உண்டு. அவருக்கு ஓர் ஆஃபர் வருகிறது. அதன்படி எடுக்கிறார். ஸ்க்ரிப்டை அவராக எழுதினாரா அல்லது எழுதிக் கொடுத்த ஸ்க்ரிப்டை அவர் எடுக்க வேண்டியிருந்ததா என்று பார்த்தால் இரண்டுமே ஒன்றுதான். அவராகவே ஸ்க்ரிப்டை எழுதினாலும் அவர் என்ன எழுத வேண்டும் என்பது அவரிடம் கூறப்பட்டிருக்கும் என்பதே நிஜம்.


சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையாவை அங்கவை சங்கவை காமெடிக்காக சாடினார்கள். அப்போதும் நான் சொல்வேன் அவர் அப்படத்தில் நடிகர், எழுதிக் கொடுத்ததைத்தான் நடித்தார் என.  அவர் மாட்டேன் என்றால் என்ன நடக்கும். பேசாமல் அவரை தூக்கி விடுவார்கள். அதன் மூலம் வரும் பொருள் இழப்பை அவரை சாடிய சும்பன்களா கொடுப்பார்கள்? நல்லா வாயில வருது. 


இவங்களே வாய்ப்பு கிடைச்சா அவ்வாறு செய்யக் கூடியவங்கதான். எனக்கு தெரிஞ்ச ஒரு பிளாக்கர் அமெரிக்காவை கண்டபடி சாடுபவர். ஆனால் கிரீன் கார்டுக்கும் அப்ளை செய்தவர். சொந்தப் பெயரில் எழுத தில் இன்றி புனைப்பெயரில் எழுதுபவர். எப்படி எழுதுவார்? அவர் அவ்வாறு செய்யாது சொந்தப் பெயரில் எழுதியிருந்தால், அவற்றை மொழிபெயர்த்து அமெரிக்கர்களுக்கு தெரிவித்திருந்தால்? ஒன்றும் தலையை எல்லாம் எடுக்க மாட்டார்கள். போடா உன் ஊருக்கே மயிராண்டி என்றுதான் அனுப்புவார்கள். அதுவே இவருக்கு இடிதானே. 


கம்யூனிசத்தை விதந்தோதும் இரு பதிவர்கள் - அவர்கள் பெயர் வேண்டாமே - மல்டி நேஷனல் கம்பெனிகளில்தான் வேலை பார்க்கிறார்கள். ஒருவர் தான் செல்ஃப் அப்ரைசலில் 40% இன்க்ரிமெண்ட் பெற்றதை என்னிடம் சந்தோஷமாகக் கூறினார்.


நானே ஐடிபிஎல்-ல் வேலை பார்த்த சமயம் எல்லாமே மகிழ்ச்சியாகத்தான் இருந்தது, ஒன்றைத் தவிர. அதாகப்பட்டது அல்ஜீரியாவுக்கு சென்று பணி புரிய வேண்டும் என்பதே. இஸ்ரேலுக்கு விரோதியான அந்த நாட்டுக்கு பணி செய்ய வேண்டுமா என்ற கலக்கம் இருந்தது வாஸ்தவமே. ஆனால் அதற்காக கிடைத்த வாய்ப்பை விட்டுவிட முடியுமா? இது வேறு, அது வேறு. ஆனால் நல்ல வேளையாக அல்ஜீரியா வேலை வரவிலை என்பதில் போனஸ் மகிழ்ச்சிதான்.


சில ஆண்டுகளுக்கு முன்னால் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான தளம் ஒன்றிலிருந்து மொழிபெயர்ப்பு வேலை வந்தது. தயங்காமல் செய்து அனுப்பினேன். அவ்வளவுதான்.


ஆனால் சில இடங்களில் சட்டவிரோதம், பின்னால் மாட்டிக் கொள்ளலாம் என்பது தெரிந்தால் அவ்வேலைகளை ஏற்கலாகாது. ஆனால் அதுவும் சுயபாதுகாப்பில்தான் வரும்.

எது எப்படியானாலும் ஒரு செய்கையை மேற்கொள்ளும் முன்னால் எல்லாவற்றையும் பார்த்தல் நலம். ஆனால் அது சுய விருப்பத்தில் இருக்க வேண்டும். அவ்வளவே.

இதற்காக சாடும் மற்றவர்கள் நாசமாக போகட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்







6/17/2012

என் அப்பன் ராமபிரான் தவறு செய்திருப்பானா - 3

இடம்: அயோத்தி அரசர் மந்திரியை தனியாகச் சந்திக்கும் இடம். (ராமரின் ஆலோசனை தொடர்கிறது).
ராம்ர்: பரதா, நீ என்ன நினைக்கிறாய் என்பதைக் கூறு. 


பரதன்: அரசே, அரச நிந்தனைதான் இது இலக்குவன் கூறுவது போல. இருப்பினும் உங்கள் மேல் உயிரையே வைத்திருக்கும் பிரஜைகள் ஏன் இவ்வாறு பேச வேண்டும்? அதை நாம் முதலில் ஆராய வேண்டும்.


ராமர்: ஆம், அதுதான் சரி. சுமந்திரரே பரதன் கூறும் வழியில் விசாரியுங்கள். பிறகு சந்திப்போம். இலக்குவா, பரதா இது பற்றி நம் அன்னையரிடம் எதுவும் கூற வேண்டாம். ஜானகியிடம் கூறவே கூடாது.


சில நாட்கள் கழித்து சுமந்திரர் ராமரை சந்திக்கிறார்.கூடவே இலக்குவன், பரதன் மற்றும் சத்ருக்னன்.


சுமந்திரர்:அரசே எவ்வாறு கூறுவது எனத் தெரியவில்லை. இருப்பினும் கூற வேண்டிய கட்டாயம். வண்ணானின் அபிப்பிராயம்தான் பலருக்கும் உள்ளது.


(ஃபிளாஷ்பேக்)


சுமந்திரர்: கீர்த்தி வர்மா, சீதையின் மேல் தவறு இல்லை என அக்னியே சாட்சி சொன்னதைக் கேட்டுமா மக்கள் மனம் இவ்வாறு உள்ளது?


கீர்த்திவர்மன்: அதையும் கேட்டாகி வ்ட்டது அமைச்சரே. அக்னி பேசியதற்கு சாட்சிகள் குரங்குகளும், ஒரு கரடியும், அரக்கர்களும், ராம லட்சுமணரும்தானே. எங்களில் யாரும் அங்கு இல்லையே. நேரிடையாக சாட்சி இல்லாத நிலையில் நாங்கள் இதை எப்படி நம்புவது? மேலும் வண்ணானையும் வண்ணாத்தியையும் சிறை பிடித்தது பற்றியும் கசப்புடனே பேசினாகள். மனதில் பட்டதைக் கூறினால் தண்டனையா? இதற்கு பரத ராஜ்யமே மேல் என்றும் கூறினார்கள்


ராமர் சிந்தனையில் ஆழ்கிறார்.


ராமர்: சரி நாளை முழு அரசவை கூடட்டும். அங்கு எனது முடிவைத் தெரிவிக்கிறேன்.


மறு நாள் அரசவை. வந்திருப்போர் வசிஷ்டர், மந்திரிகள், அரச மாதாக்கள் மூவரும், ராமரும் அவரது மூன்று சகோதரர்களும்.


ராமர் மூத்தோர்களை வணங்கி விட்டு பேச ஆரம்பிக்கிறார். 


ராமர்: நான் ஒரு சங்கடமான நிலையில் உள்ளேன். இதுதான் நடந்தது.


ராமர் நடந்ததைக் கூறுகிறார். எல்லோருமே அதிர்ச்சியில் மௌனமாகின்றனர்.


கைகேயி: அருமை மகனே ராமா, இதென்ன அக்கிரமம். நம் குல மருமகளுக்கு இந்த அவப்பெயரா? மக்களுக்கு பைத்தியமா பிடித்து விட்டது?


சுமித்திரை: மகனே, மக்களின் அபிப்பிராயங்களை செவி மடுப்பதற்கும் ஓர் எல்லை உண்டு. இது அவ்வித எல்லா எல்லைகளையும் மீறியதாக உள்ளது. ராவண சம்ஹாரத்தைக் கூடத்தான் யாருமே நேரில் பார்க்கவில்லை. அதனால் அது நடக்கவேயில்லை எனக் கூறி விடுவார்களாமா? என்ன அபத்தம்? தெருவில் போகிறவன் சொன்னதையெல்லாம் பொருட்படுத்தினால் ராஜ்யம் நடந்த மாதிரித்தான்.


கோசலை: அதானே, அந்த வண்ணானுக்கு உன் ஆட்சி பிடிக்கவில்லை என்றால் தாராளமாக் வேறு நாட்டுக்கு செல்லட்டும். அவன் மாதிரி பேர்வழிக்கெல்லாம் நம் நாட்டில் இடமில்லை என்றுதான் கூற வேண்டும்.


ராமர்: அன்னைகளே, அமைதி வேண்டும். என்னை திட்டுவது உங்களுக்கு வருத்தம் தருகிறது என்பதை நான் அறிகிறேன். ஆனால் அதையெல்லாம் செயலாக்கினால் நான் அரசனே இல்லை. பிரஜைகளின் குறைகளையும் களைய வேண்டும். அதை செய்யத்தான் நான் இச்சபையை கூட்டியுள்ளேன். குலகுரு வசிஷ்டரே, நீங்கள் ஒன்றுமே கூறாமல் இருக்கிறீர்களே.


வ்சிஷ்டர்: ராமா, இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. அயோத்தி அரசின் விதிப்பயனும் இதில் கலந்துள்ளது. மேலும் பல தேவ ரகசியங்களும் உண்டு. அவற்றையெல்லாம் நான் இங்கு வெளியே கூறுவது முறையாகாது. 


ராமர் (யோசனையுடன்): தேவ ரகசியங்களா? என்னிடம் கூட தனியாகக் கூறக்கூடாதா? அப்படியென்றால் கூற வேண்டாம். பரதா, அருமை தம்பியே, நீ உனது கருத்தைக் கூறு.

பரதன்: அண்ணா, அன்னையரின் கருத்துத்தான் என் கருத்தும். உங்கள கடமை ஆட்சி செலுத்துவதே. அதில் கவனம் செலுத்துங்கள். 


இலக்குவனும் சத்ருக்னனும் பரதன் கூறியதற்கு வேகமாகத் தலையாட்டுகிறார்கள்.


திடீரென சீதை அரசவைக்குள் பிரவேசிக்கிறார்.


ராமர்: சீதே நீ இங்கு எப்படி? 


சீதை: அரசே உங்களுக்கு வந்த கெட்டப் பெயர் என்னால்தான் வந்தது. வண்ணான் கூறிய்து பற்றி நானும் அறிந்தேன். நாம் இருவரும் 14 ஆண்டுகளுக்கு முன்னால் காட்டுக்கு சென்றபோது அழுது ஆர்ப்பாட்டம் செய்த மக்களே இப்போது இவ்வாறு பேசுகிறார்கள் என்றால் அது யோசிக்க வேண்டியதே.


ராமர்: சீதே, என்ன கூறுகிறாய்?


சீதை: ஆர்ய புத்திரரே, மனதைத் தளர விடாதீர்கள். எனக்கு வனவாச ராசி உண்டு என என் தந்தை ஜனகர் கூறியிருக்கிறார். நான் மீண்டும் வனம் செல்வதே முறை.


சீதை சொன்ன சொற்களை மறுக்கும் வலிமை எவருக்கும் இல்லை. ஆகவே எல்லோருமே மௌனமாக இருக்க, ராமர் பேசுகிறார்.


ராமர்: எல்லோருமே வண்ணான் பேசியதைத்தானே கூறுகிறீர்கள்? அவன் மனைவி கூறியதை மறந்து விட்டீர்களா? வனவாசத்தில் இருந்திருந்தாலும் நான் அரசனே. எனது பிரஜையாகிய என் மனவியை மாற்றான் கவர்ந்து சென்றான் என்றால், நான் அரசனாக இருக்கும் தகுதியற்றவன் என்றுதானே ஆகிறது? 


அரசவையில் அதீத மௌனம் நிலவுகிறது. ராமர் அதை கவனியாது மேலும் பேசுகிறார்.


ராமர்: இஷ்வாகு குலத்தில் பிறந்த இந்த ராமன் கூறுகிறேன். நாட்டின் பொறுப்பை பரதனிடம் ஒப்படைக்கிறேன். நானும் சீதையும் வனவாசம் செல்வோம்.


(தொடரும்)


அன்புடன்,
டோண்டு ராகவன்








  

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 17.06.2012

கூகள் குரோம் ரொம்பவுமே படுத்துகிறது
இந்த உலாவி வந்தது முதல் நான் அதை பயன்படுத்தி வந்திருக்கிறேன். இதுவரை பிரச்சினை இருந்ததில்லை. ஆனால் (நிஜமாகவே) சமீபகாலமாக அது அவ்வப்போது திடீரென கிராஷ் ஆகி முழு கணினியே ரீபூட் ஆகிறது. அச்சமயம் ஏதேனும் வேர்ட் அல்லது பிற கோப்புகள் திறந்திருந்தால் சிக்கல் அதிகமாகிறது.

இது சம்பந்தமாக கூகளிட்டு பார்த்ததில் பலருக்கும் (63 லட்சங்கள் மேல் ஹிட்டுகள்) இதே பிரச்சினை இருந்து வந்திருக்கிறது. சரி என இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரை பாவிக்கலாம் என்றால் பிளாக்கர்தெளிவாகவே கூறுகிறது, ”வாணாம் அதை பிளாக்கர் இப்போது சப்போர்ட் செய்வதில்லை கூகள் குரோமுக்கே போ” என்று.

நெருப்பு நரியை நான் எனது பிசினெஸ் மின்னஞ்சலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். பிளாக்கருக்கான மின்னஞ்சல் வேறு. ஆகவே இரண்டையும் ஒன்றாக நெருப்பு நரியில் பயன்படுத்த இயலவில்லை. இப்பிரச்சினை சம்பந்த்மாக இங்கு கூறப்படுவது எனக்கு புரியவில்லை.

என்ன செய்வது?

புதுக்கோட்டை இடைதேர்தல்
எதிர்பார்த்தது போலவே அதிமுக வெற்றி. திமுக ஆட்சி காலத்தில் பர்கூர் தொகுதி இடைதேர்தலில் அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கியதற்கு என்ன காரணங்களோ அதே காரணங்கள்தான் இப்போது திமுக போட்டியிடாமல் போனதற்கும் கூறப்படுகின்றன.

ஒன்றுக்கொன்று ஊழலில் சளைத்தவை இல்லை, இவ்விரு கட்சிகளும்.

சந்தடி சாக்கில் டெபாசிட்டாவது கிடைத்ததே என சந்தோஷப்படுகிறது தேதிமுக.

ஆந்திராவில் இடைதேர்தல்
ஆளும் கட்சி படுதோல்வி அடைந்திருப்பது ஆறுதலாக உளளது. அதற்காக ஜெகன்மோகன் ரெட்டி நல்லவர் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். பொது தேர்தல் வரட்டும், இருக்கு தமாஷ்.

யாருடைய கலை?
ஜெயமோகனின் இது சம்பந்தமான பதிவு சிந்தனையைத் தூண்டுகிறது.

அவர் கூறுகிறார்:
கலையும் இலக்கியமும் மெய்யியலும் ஒரு சமூகத்தின் உச்சியில் நிகழ்பவை. ஏதோ ஒருவகையில் மூலதனம் மையத்தில் குவிந்து அதனால் உருவாக்கப்பட்ட ஒரு சமூகக்கட்டுமானமே அவற்றை உருவாக்கிப் பேண முடியும்.
அந்த மூலதனக்குவிப்பை சமூக உருவாக்கத்தின் இன்றியமையாத ஒரு செயல்பாடாக காணலாம். செல்வம் அவ்வாறு குவிக்கப்படுகையிலேயே அது மூலதனமாகிறது. மூலதனமே சமூகத்தை உருவாக்கமுடியும். நாமறியும் எல்லாமே அவ்வாறு உருவாகிவந்தவைதான்.
அதையே கீழ்மட்டத்தில் உழைப்பாளிகளால் உருவாக்கப்பட்ட செல்வம் அதிகாரத்தால் சுரண்டப்பட்டு மையத்தில் குவிக்கப்படுகிறது என்றும் சொல்லலாம். அந்தக்கோணத்தில் பார்த்தால் உலகில் உள்ள எல்லா கலைகளும் எல்லா சிந்தனைகளும் எல்லா சமூகக் கட்டமைப்புகளும் சுரண்டல் மூலம் உருவாக்கப்பட்டவைதான்.
இடதுசாரிகள் தங்களுக்குச் சௌகரியமான முறையில் இந்த பார்வையை விரித்துக்கொள்வார்கள். அதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். தங்களுக்குப் பிடிக்காத ஒன்றை, தாங்கள் அழிக்க விரும்பும் ஒன்றை அவர்கள் சுரண்டலின் சின்னம் என்பார்கள் தங்களுக்கு பிடித்தமானவையும் தாங்கள் உருவாக்குபவையும் எல்லாமே அதேபோல சுரண்டலின் மூலம் உருவானவை அல்லவா என சிந்திப்பதை வசதியாக விட்டுவிடுவார்கள்”.
அதானே. கம்யூனிசத்தை தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்றுதானே கம்யூனிஸ்டுகள் கூறிவந்தனர்? உக்ரைனில் நடந்த நிலப்புரட்சிக்கு பின்னால் எத்தனை லட்சக்கணக்கான சாவுகள்?

வினவின் கள்ள மௌனம்
இப்போது வினவின் இச்செயல்பாடு நினைவுக்கு வருகிறது.
வேலை வேண்டுமா கொலை செய் என்னும் பதிவில் உலகமயமாக்கலால் போட்டி மிகுந்து கொலைகள் அதிகமாகின்றன என பொருள்பட எழுதிய அப்பதிவில் நான் கம்யூனிச உதாரணத்துடன் பின்னூட்டமிட்டால், என் பின்னூட்டத்துக்கு பிறகு வேறு பின்னூட்டம் லேது.

அதே போல இந்திய நடுத்தர வர்க்கம் வீட்டு வேலைக்காரர்களை கொடுமைபடுத்துகிறது என்று கூறும் பதிவில் நான் இந்திய நடுத்தரவர்க்கத்தை மட்டும் ஏன் குறி வைக்கிறீர்கள், உங்கள் தலைப்பே தவறு என்று இட்ட பின்னூட்டத்துக்கும் பதில் இல்லை.

கம்யூனிச அரசுகள் ரொட்டீனாக செய்யும் உளவு வேலைகளை மறந்து, வீட்டு வாடகைக்காரகளின் தகவல்களை போலீசுக்கு தர வேண்டும் என அதிமுக அரசு ஆணையிட்டதை கண்டித்து அதை பாசிச அரசு என அழைத்த இப்பதிவில் நான் இட்ட பின்னூட்டங்களுக்கு வினவின் அல்லக்கைகளே பதிலளித்தனர். வினவு புத்திசாலித்தனமாக வழக்கம்போல கள்ள மௌனம் சாதித்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்





6/11/2012

என் அப்பன் ராமபிரான் தவறு செய்திருப்பானா - 2

இடம்: அயோத்தி அரசர் மந்திரியை தனியாகச் சந்திக்கும் இடம்.

பாத்திரங்கள்: அமைச்சர் சுமந்திரர், ஒற்றர் தலைவன் கீர்த்தி வர்மன், அரச்ர் ராமர், பரதன், இலக்குவன் ஆகியோர்.

கீர்த்தி வர்மன்: மகா மந்திரியாரே அரசரிடம் நீங்கள்தான் பேச வேண்டும், அவர் வரும் நேரம் நெருங்கி விட்டது.

சுமந்திரர் (பெருமூச்சுடன்): வேறு வழி? நானேதான் பேச வேண்டும்.

அரசர் வருவதை அவர் மெய்க்கீர்த்திகளுடன் கட்டியங்காரன் அறிவிக்கிறான்.

“ரவிகுல திலகன், கோதண்டபாணி, ராவண சம்ஹாரி அயோத்தி அரசர் மாண்புமிகு ராமபிரான் வருகிறார். நிசப்தம்!!!”

அரசர் ராமர் புன்னகையுடன் வருகிறார். மண்டபத்தின் வெளி வரை அவருடன் வந்த இலக்குவனும் பரதனும் வெளியேயே நின்று கொள்கின்றனர். இலக்குவனுக்கும் உள்ளே செல்லத்தான் ஆசை, ஆனா பரதன் அவனைத் தடுக்கிறார்.

பரதன் : கவனம் இலக்குவா. இப்போது அவர் நம் அருமை அண்ணன் என்பதைவிட அரசர் என்பதே முக்கியம். மந்திரிகளுடன் ஆலோசனையில் அவர் வேண்டுமானால் நம்மையும் அழைத்துக் கொள்ளலாம். அதுவரை பொறுமை காப்போம்.

இலக்குவன்: ஆம் பரதண்ணா, நீங்கள் சொல்வதுதான் சரி.

அரசர் ராமர்: வணக்கம் சுமந்திரரே. அடேடே கூட இருப்பது கீர்த்தி வர்மன் அல்லவா? எங்கே இவ்வளவு தூரம்? உன் மனைவி மக்கள் நலமா?

சுமந்திரர்: அரசே....

ராமர்: ஏன் தயக்கம் அமைச்சர் பெருமானே. தயங்காமல் கூறுங்கள். கீர்த்தி வர்மன் கொண்டு வந்த செய்தியில் ஏதேனும் குழப்பமா?

சுமந்திரர் மென்று விழுங்குகிறார்.

ராமர்: கீர்த்தி வர்மா உனக்கு ஆணையிடுகிறேன். விஷயத்தை நீயே சுருக்கமாகக் கூறு. அவனும் மென்று விழுங்கிக் கொண்டே அவ்வாறே கூறுகிறான்.

ராமர் சிந்தனையில் ஆழ்கிறார்.

ராமர்: வண்ணானையும் அவன் மனைவியையும் காராக்கிருகத்தில் அடைக்கும் அற்புத யோசனை எவருக்கு முதலில் வந்தது? அவர்களை உடனே விடுவித்து வீட்டுக்கு அனுப்பவும். இந்த முடிவை எடுத்த அதிகாரிக்கு எமது அதிருப்தியை தெரிவிக்கவும். இதென்ன நாடா அல்லது வேறு ஏதாவதா?

சுமந்திரர்: அரச நிந்தனை....

ராமர்: என்ன அமைச்சரே அரச நிந்தனை? பிரஜைகளின் உண்மைக் கருத்தை அறியாமல் நாட்டை எப்படி ஆட்சி செய்வதாம்? .... சரி இருக்கட்டும். கீர்த்தி வர்மனை அனுப்பி விட்டு  இலக்குவனையும் பரதனையும் உள்ளே அழைக்கவும்.

அவர்களும் உடனடியாக விரைந்து வருகின்றனர். அவர்களிடம் விஷயத்தை சுமந்திரர் கூறுகிறார்.

இலக்குவனின் முகம் கோபத்தால் சிவக்கிறது. பரதன் முகம் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறது.

இலக்குவன்: அண்ணா இது அப்பட்டமான அரச நிந்தனை. மரண தண்டனைக்கு உரியது.

ராமர்: பரதா நீ என்ன கூறுகிறாய்.

பரதன்: அரசே இலக்குவன் கூறியது போல இது அரச நிந்தனைதான், இருப்பினும் தண்டனை கொடுப்பதில் அவசரம் ஆகாது. இதன் பின்புலனை தீர ஆராய வேண்டும்.

ராமர்: சபாஷ் பரதா, அதுதான் எனது எண்ணமும். நீ ராஜ்ய பரிபாலனத்தில் அனுபவம் பெற்றவன் என்பதை நிரூபிக்கிறாய். இலக்குவா, பொறுமை தேவை.

(தொடரும்)

அன்புடன்,
டோண்டு ராகவன்






6/10/2012

என் அப்பன் ராமபிரான் தவறு செய்திருப்பானா - 1

முரளி மனோகர் - என்ன டோண்டு, திடீரென என்னை ஏன் கூப்பிட்டே?

டோண்டு ராகவன் - இப்பதிவை இட்டு விட்டு வெறுமனே உட்காரச் சொல்கிறாயா? சட்டுபுட்டென்று காரியத்தைத் துவக்க வேண்டாமா?

முரளி - இதானே வாணாங்கறது. நீயே முடிவு செய்துட்டுத்தானே என்னைக் கூப்பிடறே?

டோண்டு- அது எப்படி உனக்குத் தெரியும்?

முரளி - நானும் நீயும் ஒண்ணுங்கறதை அப்பப்போ மறந்துடறியே?

டோண்டு - அப்போ ஓக்கேதானே, நாடக ரூபமாகவே போட்டுடுவோம்.

=====================================================================

காலம்:
திரேதா யுகம், ராவண வதம் முடிந்து சில மாதங்கள் ஆகியுள்ளன.

இடம்:
அயோத்தியின் சரயு நதிக்கரையில் தென்மேற்கு கோடியில் உள்ள வண்ணான் துறை அருகே அவன் வீடு.

பாத்திரங்கள்:
வண்ணான், கழுதை, வண்ணாத்தி, வாடிக்கையாளன் ஒருவன்

வண்ணான் சின்னான் சிடுசிடுவென இருக்கிறான். வாடிக்கையாளன் வந்த நேரம் சரியில்லை என்றுதான் கூற வேண்டும்.

வாடிக்கையாளன்: என்ன சின்னான், என் துணியெல்லாம் தயாரா?

வண்ணான்: யோவ், காலங்கார்த்தாலே வ்ந்து தொந்திரவு பண்ணறியே. நேத்திக்கே என் வீட்டுக்காரி கிட்டே கொடுத்து அனுப்பிச்சேனே. கிடைக்கல்லியா?

வாடிக்கையாளன்: அடேடே நேத்திக்கா, நாங்கள் யாருமே வீட்டில் இல்லையே. கிராம அதிகாரி கூப்பிட்டனுப்பியிருந்தார் அவர் வீட்டு விசேஷத்துக்கு. அங்கே போய் விட்டோம்.

வண்ணான்: இரு பார்க்கிறேன். உள்ளே பல கூறுகளாக துணிமணிகள் கல் பலகை மேல் அடுக்கப்பட்டு இருக்கின்றன.

வண்ணான்: இதோ இருக்கே, எடுத்திட்டுப் போ.

வாடிக்கையாளன் செல்கிறான்.

வண்ணான் (தனக்குள்): எங்கே இவள். காலைலேருந்து பார்க்கல்லையே.

இவ்வாறு அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவன் மனைவி வெளியேயிருந்து வீட்டுக்குள் வருகிறாள்.

வண்ணான் (திடுக்கிட்டு): எங்கே போயிருந்தே, இப்போ வரே?

வண்ணாத்தி: நேத்திக்கு நீ எங்கே காணும்? வழ்க்கம் போல குடிக்கப் போயிட்டையா? என் அம்மாவுக்கு உடம்புக்கு சுகமில்லைன்னு த்கவல் வந்தது. உன் கிட்டே சொலிட்டுப் போலாம்னா உன்னை காணோம். ஆகவே பக்கத்து வீட்டில் சொல்லிட்டுப் போனேனே. அங்கே கேக்கலையா? ஹூம், எங்கே கேட்டிருப்பே, குடி போதையிலே இருந்துருப்பே. கவுந்தடிச்சு படுத்துட்டு கொஞ்ச நேரம் முன்னாலதான் எழுந்திருப்பே.

தன் மனைவி சொன்னதில் முழு உண்மை இருந்ததால் வண்ன்ணானுக்கு ஒரே கோபம்.

வண்ணான்: அது சரி, உன் அம்மா வீடு பக்கத்துலேதானே இருக்கு, போனோமா வந்தோமான்னு இல்லாம இதென்ன சாவகாசமா வரே? ரொம்பத்தான் திமிர் உனக்கு.

அவன் பேச, அவள் எதிர்ப் பேச்சு பேச சண்டை முற்றுகிறது. அண்டை வீட்டார் தரும் புகார் பேரில் அவர்கள் கிராம அதிகாரி முன்னால் நிறுத்தப்படுகிறார்கள்.

கிராம அதிகாரி: என்னடா சின்னான், ஒன்னோட இதே ரோதனையா போச்சு. இப்போ என்ன விவகாரம்.

அதற்குள் கோபம் தலைக்கேறியதில் சின்னானுக்கு தான் என்ன பேசுகிறோம் என்பதே புரிவதில்லை.

வண்ணான்: இந்தப் பெண் எனக்கு வேண்டாம், பேசாம எங்களை அத்து விட்டுடுங்க.

மனைவி: அப்படியே செய்யுங்க, இந்த ஆளோட ஒரே ரோதனையாப் போச்சு. குடிச்சுட்டு கண்மண் தெரியாம நடந்துக்கிறான். ஆளை விடுங்க என்னோட அம்மா வீட்டுக்கே போறேன். அங்கே போய் இன்னோரு கல்யாணம் செஞ்சுக்கிட்டு வாழ்ந்து காட்டறேன்.

இருவரையும் சமாதானப்படுத்த எல்லோரும் முயல்கின்றனர். வண்ணான் இப்போது பேசுகிறான்.

வண்ணான்: என்னை என்ன வெக்கங்கெட்டவன்னு நினைச்சீங்களா? எனக்குத் தெரியாம வெளியே போய் ராத்தங்கின மனைவியை வச்சுக்க நான் என்ன கூறு கெட்டவனா நம்ம ராசாவைப் போல?

வண்ணாத்தி (சீறுகிறாள்): சும்மா பசப்பாதே அய்யா, யாரை ராசான்னு சொல்லறே? பொண்டாட்டியைக் கூட காப்பாத்த முடியாதவரையா?

ஊரே திகைக்கிறது. அங்கிருந்த ஒற்றர் தலைவன் இந்த விஷயம் பற்றி எழுத்து மூலம் மந்திரி சுமந்திரருக்கு ஓலை எழுதி அனுப்புகிறான்.

அரச நிந்தனைக்காக வண்ணனும் வண்ணாத்தியும் ஊர் காராகிருகத்தில் அடைக்கப்படுகின்றனர்.அவர்கள் மேல் விசாரணை செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

(தொடரும்)

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/09/2012

என் அப்பன் ராமபிரான் தவறு செய்திருப்பானா?

வீடணன் மற்றும் கும்பகர்ணன் பற்றி நான் இட்ட இப்பதிவில் ஒரு பின்னூட்டத்தில் இவ்வாறு கூறியிருந்தேன்,

 dondu(#4800161) said...

"சீதை தீக்குளிப்பு, காட்டுக்கு கர்பிணியாக இருக்கும்போது துரத்தபடல் ஆகியவை பற்றி உங்கள் கருத்து என்ன?
என்னால் இவற்றை ஒத்துகொள்ள முடியவில்லை."ராமா நீ தவறு செய்துவிட்டாய்" என்று உரக்க குரல் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது"

என் நிலையும் அதுவேதான். சற்று விளக்கமாகக் கூறுகிறேன். 1 ஆண்டு தனியாக இருந்தது ராமரும்தானே, ஆதலால் அவரும் அக்கினிப் பரீட்சைக்கு உள்ளாகியிருக்க வேண்டும். ஆனால் அதை சீதையே கேட்கவில்லை என்பதுதான் சோகம். ஆணாதிக்கம் அக்காலத்திலேயே தலைவிரித்து ஆடியிருக்கிறது.

சீதை காட்டுக்கு தனியான போன நிகழ்ச்சியும் ஒத்துக் கொள்ள முடியவில்லை. சீதையை ராமரால் காப்பாற்ற முடியவில்லை என்பதும் நிஜமே. ஆகவே மன்னராக நீடிக்கும் தகுதி அவருக்கு இல்லை. அவர்தான் பதவியைத் துறந்திருக்க வேண்டும் என்று நான் என் டில்லி நண்பர் சர்மாவிடம் கூறிக் கொண்டிருந்த அன்றுதான் ராமானந்த் சாகரின் உத்திர ராமாயணத்தில் அன்று அந்த நிகழ்ச்சி காட்டப்பட்டது. என்ன ஆச்சரியம், சாகரின் ராமாயணத்தில் நான் சொன்ன அதே நிலைப்பாட்டைத்தான் ராமர் எடுக்கிறார். ஆனால் சீதைதான் அதை மறுத்து தானே காட்டுக்குச் செல்வதாக எபிஸோட் அமைந்திருந்தது. இதற்கு ஆதாரம் ராமாயணத்தில் உண்டா என்பது எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் என் மனதுக்கு அது ஆறுதலாக இருந்ததே”.


இது பற்றி இப்போது யோசித்துப் பார்க்கிறேன். ராமர் நிஜமாகவே அரச பதவியைத் துறந்து சீதையுடன் மீண்டும் வனவாசம் சென்றிருந்தால் கதையின் போக்கு எவ்வாறு சென்றிருக்கும்?

ராமாயணம் நம் எல்லோருக்குமே சொந்தம். அப்போது நானும் எல்லோரில் ஒருவனே. ஆகவே இதை மேலே விரிவுபடுத்தி எழுத எண்ணியுளேன். அதை நாடக ரூபத்தில் எழுதுவதா அலது கதை வடிவில் எழுதுவதா என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை.

முரளி ம்னோகருடன் பேசி ஒரு முடிவுக்கு வருவேன். எனது கற்பனை நல்ல முறையில் விரிவடைய என் அப்பன் ராமபிரான் அருள் புரியட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது